கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  ஒட்டுறவு  
 

நீலாவணன் கதைகள்

 

ஒட்டுறவு

நீலாவணன் கதைகள்

++++++++++++++++++++

ஒட்டுறவு

நீலாவணன் கதைகள்

நன்னூல் வெளியீடு

+++++++++++++++++++

நூல் : ஒட்டுறவு - நீலாவணன் கதைகள்
முதற்பதிப்பு : செப்டம்பர் 2003
நூல் ஆசிரியர் : நீலாவணன்
பதிப்புரிமை : எஸ். எழில்வேந்தன்
வெளியீடு : நன்னூல் பதிப்பகம்,
48/3, புனித மரியாள் வீதி,
கொழும்பு. 15, இலங்கை.
அச்சிடுபவர் : யுனி ஆர்ட்ஸ் (பிரவேட்) லிமிடெட்,
கொழும்பு 13.
விலை : ரூபா 200/=


Name of Book : OTTURAVU - Neelavanan Kathaikal
First Edition : September 2003
Author of the Book : Neelavanan
Copy right : S. Elilventhan
Publication : Nannool Pathippaham
48/3, St Mary's Road
Colombo 15, Sri Lanka.
Tel: 2526495
E-mail:seventhan@yahoo.com
Printer : Unie Arts (Pvt) Ltd.,
Colombo 13.
Price : Rs. 200/=
ISBN : 955-97461-1-1

+++++++++++++++++++


நல்ல தமிழை
நயக்கத் தெரிந்தோர்க்கு
இந்நூல் சமர்ப்பணம்

+++++++++++++++++++

பதிப்புரை


வணக்கம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எனது தந்தையாரின் "ஒத்திகை" என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டபோது இலங்கயில் நூல் வெளியீடுபற்றியும் அவற்றின் தாம்பற்றியும் ஓரிரு வார்த்தைகள் கூறியிருந்தேன். இரண்டு ஆண்டுகளாகி விட்டபோதும் அந்த நிலயில் இன்றுவரை மாற்றங்கள் எதுவும் பெரிதாக நிகழ்ந்ததாகத்

+++++++++++++++++++

வாக்குமூலம்

1947ஆம் ஆண்டு மருதமுனை அரசினர் ஆண்கள் பாடசாலையில் நான் ஐந்தாம் வகுப்பில் மாணவன். தற்போது அப்பாடசாலை அல் - மனார் மத்திய கல்லூரியாக இயங்குகிறது. பெரிய நீலாவணையைச் சேர்ந்த ‘நடராசா’ எஸ்.எஸ்.ஸி. ஆரம்ப வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். நடராசாவின் பதிவுப்பெயர் சின்னத்துரை என்பது. இடாப்பில்தான் சின்னத்துரை இருந்தார். ‘நடராசா’ என்ற மாற்றுப் பெயரால்தான் அதிபர், ஆசிரியர், மாணவர், பெற்றோர், மற்றவர்களால் அவர் அழைக்கப்பட்டார்.

தலைமையாசிரியர் திரு கே.எஸ் வைரமுத்து அவர்களே எஸ்.எஸ்.ஸி வகுப்புக்கும் 5ம் வகுப்புக்கும் வகுப்பாசிரியர். முழுப்பாடங்களையும் அவரே கற்பித்தார். இருக்கையும் சரிந்த மேசையும் ஒன்றாய் அமைந்த நீளமான வாங்குகள் அக்கால வகுப்பறைத் தளபாடம். கொம்பு வாங்கு என்பது அதன் செல்லப்பெயர். தலைமையாசிரியரின் மேசை கதிரை, முன் மண்டபத்தில் பிரதான பாதையை நோக்கிப் போடப்பட்டிருக்கும். அவருக்கு வலப்பக்கமாகப் போடப்பட்டிருந்த இரு நீள வாங்குகளில் எஸ்.எஸ்.ஸி வகுப்புகளின் மாணவர் அமர்ந்திருப்பர். தலைமையாசிரியரின் மேசைக்கு முன்னால் மேற்கு முகமாக போடப்பட்டிருந்த இரு நீளவாங்குகளில் ஐந்தாம் வகுப்பு மாணவர் அமர்ந்திருப்பர். இந்த நான்கு வாங்குகளுக்கும் இயந்திர கதியில் சுழற்சி முறையில் தலைமையாசிரியர் பாடம் நடாத்துவார். ஆக 20’ஒ20’ பரப்பில் இந்தக்கல்விச் சங்கமம் நிகழ்ந்தது.

நடராசாவுக்கும் இஸ்மாயிலுக்கும் அறிமுகம், நெருக்கம், நட்பு, அண்ணன் தம்பி என்கின்ற பாந்தவ்யம் எல்லாம் அப்பொழுதே ஆரம்பமாயிற்று. திரு வயிரமுத்து இளைப்பாறிப்போக ஜனாப்.ஆ.மு.ஷரிபுத்தீன் தலைமையாசிரியரானார். திரு நடராசா எஸ்.எஸ்.ஸி. இறுதி வகுப்பை அவரிடம் பயின்று தேறினார். நானும் எஸ்.எஸ்.ஸி. வகுப்பை ஆ.மு.ஷ. அவர்களிடமே பயின்று தேறினேன். ஷரிபுத்தீனிடமும் (புலவர்மணி ஆ.மு.ஷ) அவரது குருநாதர் திரு கே.எஸ் வைரமுத்துவிடமும் பாடங்கேட்ட பேறு எம்மிருவருக்கும் சித்தித்தது.

திரு.நடராசா மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக்கல்லூரியில் ஆசிரிய பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தப்போது நான் எஸ்.எஸ்.ஸி மாணவனாக இருந்தேன். யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த வரதராசன் எஸ்.எஸ்.ஸி வகுப்பில் என் உடன்மாணவனாகப் பயின்றார். இவரது தந்தையார் ஓர் ஆசிரியர். பெரிய நீலாவணை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் படிப்பித்தார். அப்பாடசாலை விடுதியிலேயே தங்கினார். வரதராசனும் தந்தையுடன் தங்கியிருந்தார். இவருக்கும் நடராசாவுக்கும் நெருக்கம் உருவாகியது. எனது ஊரைச்சேர்ந்த எம்.வை.எம்.முஸ்லிமும் என்னுடன் எஸ்.எஸ்.ஸி படித்தவர். நாம் மூவரும் பாடங்களிலும் சுட்டிகள். கலை இலக்கிய ஆர்வம் மிகுந்தவர்கள். வாசிப்புப் பயிற்சியும் மிக்கவர்கள்.

நாம் மூவரும் விடுமுறையில் ஊர் வரும் நடராசா அண்ணனுடன் பெரிய நீலாவணையில் பகலின் பெரும் பொழுதைக் கழிப்போம். கலை இலக்கியம், திராவிட இயக்கம், பகுத்தறிவு வாதம், சினிமா, இலங்கைத் தமிழரசுக்கட்சி அரசியல் செயற்பாடுகள் எல்லாவற்றிலும் உடன்பாடும் ஈர்ப்பும் உள்ளவர்களாக நாம் நால்வரும் இருந்தோம். பெரிய நீலாவணைப் பாடசாலை வானொலிப் பெட்டி முன்னமர்ந்து உதயகீதம், நீங்கள் கேட்டவை, ஒருபடப்பாட்டு நிகழ்ச்சிகளைக் கேட்டு இரசிப்போம். மாலைப் பொழுதுகளில் கடற்கரை, ஒல்லிக்கேணி, குளவெளியென்று நெய்தலும் மருதமும் மயங்கிக்கிடந்த பெரிய நீலாவணையின் எழிலைச் சுவைத்து உலாவுவோம். நண்டு வேட்டை, முயல் வேட்டை எல்லாம் நடாத்தியதும் உண்டு.

திரு.நடராஜாவின் இலக்கிய ஆக்க முயற்சி அவரது ஆசிரிய பயிற்சிக் காலத்தில்தான் ஆரம்பமாயிற்று. தான் எழுதிய கதை, கவிதைக் கையெழுத்துப் பிரதிகளைத்தந்து எங்களைப் படிக்கச் சொல்வார். அபிப்பிராயம் கேட்பார். அவரது ஆக்கங்களை ரசித்தோம். மகிழ்ந்தோம். உற்சாக மூட்டினோம். அப்பொழுது புனை பெயரில் அறிமுகமாகும் ஆர்வத்தை அவர் கொண்டிருந்தார். யாழ்ப்பாணம் வே.சிவக்கொழுந்து ‘யாழ்ப்பாணன்’ என்ற புனைபெயரில் எழுதிக்கொண்டிருந்தார். நடராசா அதில் நேயம் கொண்டார். யாழ்ப்பாணன் என்பதன் மூலம் புனை பெயரில் தனது ஊர்ப்பற்றைச் சிவக்கொழுந்து வெளிப்படுத்திய பாங்கு, ஊர்பற்றுமிக்க நடராசாவையும் கட்டிப்போட்டது. எனவே நடராசா என்கின்ற சின்னத்துரை, நீலாவணன் ஆனார். நீலாவணனின் படைப்புக்கள் பத்திரிகைகளில் பிரசுரமானபோது அவருக்கு நிகராக நாம் மூவரும் மகிழ்ந்து பூத்தோம்.

தந்தையார் ஓய்வு பெற்றதால் வரதராசன், பரீட்சை எழுதுவதற்கு முன்பே நல்லூர் சென்று விட்டார். நானும் முஸ்லிமும் 52ல் எஸ்.எஸ்.ஸி தேறினோம். 53ல் நாமிருவரும் சுதந்திரன் இதழில் கட்டுரைகள் எழுதினோம். நீலாவணன் கொழும்பில் படிப்பித்துக் கொண்டிருந்தார். எங்களைப் பாராட்டிக் கடிதம் எழுதுவார். விடுதலை காலத்தில் சந்தித்துக் கொள்வோம். ஆசிரிய நியமனம் பெற்று கண்டிக்குப் போன முஸ்லிம் அங்கு வாழ்க்கைத் துணைபெற்று கண்டி வாசியாகிவிட்டார். நீலாவணனை விட்டு பிரியாத பாக்கியம் எனக்குத் தொடர்ந்தது.

நீலாவணனின் இலக்கிய சாதனைகளில் கல்முனைத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் ஒன்று. அந்தச் சங்கம் மூலமாக பல ஊற்றுக் கண்களைத்திறந்து பொங்கும் பிரவாகம் ஆக்கினார் நீலாவணன். கல்முனைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தொடர்பாக தப்பும் தவறுமான தகவல்களைப் பலர் பல சந்தர்ப்பங்களில் வெளியிட்டுள்ளனர். சரியான தகவல்களை சொல்லவேண்டிய பொறுப்பு எனக்கிருக்கிறது. என்னுடைய சுயசரிதையில், அல்லது கல்முனைத் தமிழ் எழுத்தாளர் சங்க வரலாற்றில் அவற்றைச் சொல்லலாம் என்றே மௌனம் காத்தேன். நோய்வசப்பட்டிருக்கும் எனக்கு அப்படியொரு வாய்ப்பு இனிக் கிடைக்காமலும் போகலாம். ஆதலால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். ஆகவே இதையொரு அத்துமீறலாக யாரும் எடுத்துக் கொள்ளாமல் இருப்பார்களாக.

60ல் நுஃமானும் சத்திய நாதனும் நீலாவணனைச் சந்தித்தார்கள். சஞ்சிகை வெளியிடும் ஆர்வத்தை அவரிடம் வெளிப்படுத்தினார்கள். நீலாவணன் அவர்களை அழைத்துக் கொண்டு என்வீட்டுக்கு வந்தார். விஷயத்தை விளக்கினார். நீயே சஞ்சிகையின் ஓவியப்பணியை ஏற்றுக்கொள் என்றார். ‘வசந்தம்’ என்ற பெயரில் சஞ்சிகை வெளியிடுவதாக தீர்மானமாயிற்று. அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலைக்கும் சென்று ஆதரவு திரட்டினோம். நுஃமான் கல்முனையி;ல் பெரிய இடத்துப்பிள்ளை. மூலதனம் வைத்திருப்பார் என நினைத்தோம். அந்த அரும்புமீசை இளைஞர் இருவரும் ஆர்வத்தையே மூலதனமாகக் கொண்டிருந்தனர் என்பதும், நீலாவணன் என்ற ஆளுமை காரியம் சாதித்துவிடும் என நம்பியிருந்தனர் என்பதும் தெரியவந்தது. பத்திரிகை முயற்சி கைவிடப்பட்டது. ஆனாலும் சந்திப்புகள் நீண்டன. நுஃமான் ஒரு கவிதைப் பிரதியை ஒருநாள் நீலாவணனிடம் கொடுத்தார். படித்தவருக்கு அது பிடித்துவிட்டது. சில திருத்தங்களைச் செய்து கொள்ளுமாறு கூறினார்.

II

இந்நிலையில் இப்பிரதேசத்திலுள்ள எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்களை ஒன்று கூட்டி ஓர் அமைப்பாகச் செயல்பட்டால் காரியங்கள் சாதிக்கலாம், காலப்போக்கில் சஞ்சிகைக் கனவும் கனியலாம் என்று முடிவானது. நாம் நால்வரோடு அப்பொழுது எழுதி அறிமுகமாகி இருந்த ஜீவா ஜீவரத்தினம், துறையூர் செல்லத்துரை, மு.சடாட்சரம், பாண்டியூரன் ஆகியோரை அணுகினோம். பாண்டியூரன் நழுவிவிட்டார். அன்பு முகையதீனைச் சந்திக்க முயன்றோம். முடியவில்லை. அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலையில் அறிமுகமான யூ.எல்.ஏ.மஜீத் (இப்பொழுது நீதிபதி) ஏ. இக்பால், பஸீல் காரியப்பர், அ.ஸ.அப்துஸ்ஸமது, எஸ். முத்துமீரான் ஆகியோரையும் கல்முனையில் உத்தியோகம் பார்த்த வண்ணை சிவராஜா, சம்மாந்துறையில் படிப்பித்துக் கொண்டிருந்த கிண்ணியா ஆலங்கேணி ஊர் மு.சோமசுந்தரம் ஆகியோரையும் அணுகினோம். மருதமுனை பொது நூலகத்தில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடாத்தினோம்.. அ.ஸ., பஸீல் தவிர்ந்த ஏனையோர் வந்திருந்தனர். நம்பிக்கையோடு கலைந்தோம். ஏ.இக்பால், நீலாவணனுக்கு ஒருமடல் எழுதினார். ‘நீங்கள் எழுத்தாளர்கள் என்று யாரைக் கருதுகிறீர்களோ அவர்களை எனக்குப் பிடிக்கவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார். அக்கரைப்பற்றில் ‘மட்டக்களப்பு தெற்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ அ.ஸ.வின் தலைமையில் இயங்கிக் கொண்டிருந்தது. அதில் இக்பால், பஸீல்காரியப்பர் முக்கிய பங்காளிகளாக இருந்தனர். அதனால் அம்மூவரும் இந்த அமைப்பில் சேரத்தயங்கியிருக்கலாம் என்று விட்டுவிட்டோம். எழுத்தாளர் சங்கம் எனப் பேரமைந்தாலும் பல்துறைக்கலைஞர்களின் ஒன்று கூடலாக அமைப்போம் என்று முடிவெடுத்தோம். சாய்ந்த மருது புகைப்படக்கலைஞர் யூ.எல்.அபூபக்கர், கலமுனை தினகரன் நிருபர் எம்.எஸ்.கணபதிப்பிள்ளை, கல்முனை நாடகக் கலைஞர் ம.பீதாம்பரம் ஆகியோரையும் சேர்த்துக் கொண்டோம். அதுவரை எதுவும் எழுதாவிட்டாலும் எதிர்காலத்தில் பிரகாசிக்கக் கூடியவர்கள் என நான் அவதானம் செய்திருந்த மருதமுனையைச் சேர்ந்த மூவரையும் இணைத்துக் கொண்டோம். யூ.எம்.ஹனிபா, ஈ.எம்.றாசிக், செய்யிது ஹஸன் மௌலானா ஆகியோரே அம்மூவரும்.

1961ம் ஆண்டின் ஆரம்பத்தில் பெரிய நீலாவணை விஷ்ணு கோயில் வெளிவளவில் புளிய மர அயலில் ஒருமாலை வேளையில் ஒன்று கூடிக் கல்முனைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தை அமைத்தோம். தலைவராக நீலாவணனும், உபதலைவராக யூ.எல்.ஏ.மஜீதும், இணைச்செயலாளராக நானும், ஜீவாஜீவரத்தினமும் பொருளாளராக எம்.ஏ.நுஃமானும் தெரிவு செய்யப்பட்டோம். மு.சடாட்சரம், மு.சோமசுந்தரம், வண்ணை.கே.சிவராஜா, துறையூர் செல்லத்துரை, எம்.எஸ்.கணபதிபிள்ளை, ம.பீதாம்பரம், ஈ.எம்.றாசிக், செய்யிது ஹஸன் மௌலானா, யூ.எம்.ஹனிபா (மருதூர்க்கனி), எஸ்.முத்துமீரான், யூ.எல்.எம்.அபூபக்கர் ஆகியோர் ஏனைய உறுப்பினர்கள். இந்தப் பதினாறு பேரையும் கொண்டு அமைக்கப்பட்டதுதான் ஆரம்பகாலக் கல்முனைத் தமிழ் எழுத்தாளர் சங்கம்.

சங்கத்தின் முதல் நடவடிக்கையாக இலங்கைக் கலைக்கழக நாடக எழுத்துப் போட்டியில் ‘முதல் முழக்கம்’ நாடகத்துக்காக இரண்டாம் பரிசு பெற்ற எஸ்.பொன்னுத்துரையைப் பாராட்டிக் கௌரவித்ததை அவ்வளவாக விரும்பாத ஜீவா ஜீவரத்தினம், சங்கத்திலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு, துறை நீலாவணை இலக்கியப் பேரவையை ஆரம்பித்துத் தலைமை தாங்கி நடாத்தினார். துறையூர் செல்லத்துறையும் அதில் இணைந்துகொண்டு சங்கத் தொடர்பற்றுப் போனார். யூ.எல்.ஏ.மஜீத் உயர்கல்விக்காகக் கொழும்புக்கு இடம் மாறிச் சென்றதோடு சங்கத்திலிருந்தும் இலக்கிய வாழ்விலிருந்தும் ஒதுங்கிக் கொண்டார். எஸ்.முத்துமீரானும் வெளிய10ரில் உத்தியோகம் பார்க்கச் சென்றதோடு தொடர்பற்றுப் போனார். ஈ.எம்.ராசிக்கும் சங்க நடவடிக்கைகளில் ஒட்டாது விலகிச் சென்றார். இவர் சிறந்த கவிதா ஆற்றல் உள்ளவர். இவரது சில கவிதைகள் அக்கால பத்திரிகைகளில் வெளிவந்தன. பதினொருவர் சங்க உறுப்பினர்களாக எஞ்சி நின்று துஞ்சாது துவளாது உழைத்தனர்.

ஜீவாவின் விலகலோடு இணைச் செயலாளர் முறை ஒழிக்கப்பட்டது. என்னைப் பொதுச் செயலாளராக இயங்கச் சங்கம் தீர்மானம் எடுத்தது.

62ல் இலங்கையர்கோன் நினைவுச் சிறுகதைப்போட்டியை நாடளாவிய ரீதியில் நடாத்தி இலங்கையர்கோன் நினைவு விழாவையும் நடாத்திச் சங்கம் தலைநிமிர்ந்தது. இருநாள் விழாவாகச் சிறப்பாக நடைபெற்றது. கல்முனை நகர மண்டப வாயிலும் மண்டபமும் மகரதோரணங்கள் அலங்காரங்கள் சூடி அழகு மங்கையாகக் காட்சியளித்தது. முதல் நாள் நிகழ்வு மங்கள கைங்கரியங்களுடன் ஆரம்பமாகி ஆரம்ப வைபவங்கள், பாராட்டும் கௌரவிப்பும், கவியரங்கமும் என்று நடந்து முடிந்தது. கலைக்கழக நாடகப் போட்டியில் முதலிடம் பெற்ற அன்புமணி, வானொலி நாடகப்போட்டியில் முதல் பரிசைப் பெற்ற ஏ.எம்.ஹுசைன் இருவரும் பதக்கம் சூட்டிக்கௌரவிக்கப்பட்டனர். இந்த ஹுசையின் சாய்ந்த மருதைச் சேர்ந்தவர். கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் அதிபராக அமைந்தவர். இரண்டாம் நாள் நிகழ்வு உரையரங்கம், கவியரங்கம், கலையரங்கம் என நடந்தேறியது. நீலாவணனின் ‘மழைக்கை’ கவிதை நாடகமும், எனது ‘தந்திக் கலம்பகம்’ நகைச்சுவை நாடகமும் வெற்றிகரமாக மேடையேறின. இந்த விழா நீலாவணனுக்கு நிறைந்த மனநிறைவைத் தந்தது. இலங்கையர் கோன்; கல்முனையில் டி.ஆர்.ஓவாக இருந்த காலம், இருவரும் மிக மிக நெருங்கி அன்பு கலந்து உறவாடினர். நீலாவணனுக்கு வால்ட் விட்மனையும், யூஜீநோ நைல்ஸையும் இலங்கையர்கோன் அறிமுகம் செய்தார்.

விழா முடிவின் பின் சி.கனகசூரியமும், ஏ.எம்.ஹுஸைனும் சங்கத்தில் இணைந்து கொண்டனர். விழாவின் போது மாஸ்டர் மஜீத் பெரும் பயன்பாடு நல்கினார். அவரது ‘டிரேம்ப்’ மோட்டார்சைக்கிள் சங்கத் தேராகத் தொழிற்பட்டது. ஆனாலும் அவர் சங்கத்தில் அங்கத்துவம் பெறாது நழுவி விட்டார். விழாவைத் தொடர்ந்து சங்கக் கூட்டம் கல்முனைக் கடற்கரையில் ஒரு மாலையில் கூடியது. புது வருட உத்தியோகத்தர் தெரிவு நடந்துது. எல்லாரையும் நிருவாகப் பொறுப்புக்களுக்குப் பயிற்றுவிக்க நீலாவணன் விரும்பினார். புதியவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்க முடிவெடுத்தார். அது நீலாவணனின் விருப்பமாக இருந்தபடியால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தலைவராக ஹஸன் மௌலானாவும், செயலாளராக சி.பி.சத்திய நாதனும் பொருளாளராக மு.சடாட்சரனும் தெரிவு செய்யப்பட்டனர். எழுத்தால் ஹஸன் மௌலானா வெளியுலகுக்கு அறிமுகமாகாதவராக இருந்தபோதும், சங்கச் செயற்பாடுகளில் அவர்காட்டிய ஆர்வம் எல்லார் மனங்களையும் கவர்ந்திருந்தது.

சங்கம் அடுத்ததாக உமறுப்புலவர் நினைவு விழாவை நடாத்தவேண்டும் என்றும், உமறுப்புலவர் நினைவுக் கவிதைப்போட்டியை நாடாத்த வேண்டுமென்றும் பிரேரித்தார். அது தீர்மானமாகியது. நான் விழாக் காரியதரிசியாகத் தெரிவு செய்யப்பட்டேன். கவிதைப் போட்டிக்கான தலைப்பும் விதிகளும் தேசியப் பத்திரிகைகள் வாயிலாக அறிவிக்கப்பட்டு கவிதைகளும் வந்து குவிந்துவிட்டன. முதல் கட்டப்பரிசீலனைக்காகக் கவிதைகள் புலவர்மணி ஆ.மு.ஷ.விடம் ஒப்படைக்கப்பட்டன. இந்தக் கட்டத்தில் வெளியிலிருந்து சங்கத்துக்குள் கலகலப்பு உருவாக்கப்பட்டது. இலங்கையர்கோன் விழாவின்போது நான் படித்த அறிக்கையில் அடுத்ததாக விபுலாநந்த விழாவைச் சங்கம் எடுக்கும் என அறிவித்திருந்தேன். அறிக்கை பத்திரிகைகளிலும் வந்தது. இப்படியிருக்க உமறுப் புலவர் விழா ஏன்? அவர் நம் நாட்டவரும் அல்லவே! என்ற வினாவும் விழிப்பும் சங்கத்துக்குள் ஏவி விடப்பட்டன. நீலாவணன், நான் உட்பட எல்லோரும் பெரும் சங்கடத்துக்காளானோம். சங்க உறுப்பினர் ஒருவர் இந்த விஷயத்தை பெரிதாக முன்னெடுத்தார். விஷயம் அறிந்த ஹஸன் மௌலானா வேதனையும் விசனமுமுற்று சங்கத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். சங்கம் தேங்கிவிட்டது. திட்டமிட்டபடி விழா நடைபெறவில்லை. கூட்டத்தில் எடுத்துரைக்க வேண்டிய விஷயம் திரை மறைவில் எடுத்துரைக்கப்பட்டதால் நீலாவணன் பெரும் மனவேதனைப்பட்டார். சைபர் ஸ்ரீ பூஜ்யம் அல்ல என்பதுபோல, இரண்டும் சரி ஸ்ரீ இரண்டும் பிழை என்றாகிச் சங்கம் களங்கத்தைச் சுமந்து கொண்டது.

65ந்தில் சங்கம் மீண்டும் புனரமைக்கப்பட்டது. சண்முகம் சிவலிங்கம், பஸீல் காரியப்பர் இருவரும் சங்கத்தில் இணைந்து கொண்டனர். நீலாவணன் தலைவராகவும், எம். ஏ. நுஃமான், மு.சடாட்சரம் ஆகியோர் இணைச் செயலாளராகவும், சண்முகம் சிவலிங்கம் பொருளாளராகவும், பெறுப்பேற்க வைக்கப்பட்டனர். பாரிய விழாக்களைச் சங்கம் செய்யாவிட்டாலும் காத்திரமான பல நிகழ்வுகளைச் சங்கம் நிகழ்த்தியது. மீண்டும் சங்கம் சோதனை வசப்பட்டது. கூட்ட அழைப்புக்காக அச்சிடப்பட்ட தபாலட்டைகளில் ‘கல்முனை எழுத்தாளர் சங்கம்’ என அச்சாகிவிட்டது. ‘தமிழ்’ என்ற பதம் இடம்பெறவில்லை. நுஃமானும் சடாட்சரமும் வேண்டும் என்று இதைச் செய்திருக்கமாட்டார்கள். இதுவும் கலகலப்பை உருவாக்கியது. ஆனாலும் சங்கச் செயற்பாடுகள் தொடர்ந்தன. ஆனால் சங்கத்துக்குள் இஸ்லாமிய வாதம் தலைதூக்கிச் சீரழித்துவிட்டது என்று பின்னர் எழுத வந்தவர்கள் எல்லாரும் எழுதித்தீர்த்து விட்டார்கள். நுஃமான், கனி, பஸீல், நான் ஆகிய நால்வரும் இலக்கியத்தில் இஸ்லாமிய வாதத்தை என்றைக்கும் ஆதரித்தவர்கள் அல்லர். ‘இஸ்லாமிய தமிழிலக்கியம்’ என்ற பிரயோகத்தை இன்றும் நான் ஏற்றுக் கொள்ளாதவன். தமிழில் செய்யப்படும் இலக்கியங்கள் தமிழிலக்கியங்களே என்ற நிலைப்பாட்டை உடையவன். வரலாறும் விமர்சனமும் கூற வருபவர்கள் சரியான மூலாதாரங்களிலிருந்து தகவல்களைப் பெற்று நிதானித்து எழுத வேண்டுமாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

70தில் சங்கம் மீண்டும் சோதனைக்குள்ளானது, சித்தாந்த வடிவில் மாக்ஸீய முன்னெடுப்பு சங்கத்தைத் தேக்கிவிட்டது. நுஃமான், சசி, கனி, சடாட்சரம், நான் ஆகியோர் மாக்ஸீய வருஷிப்புக்குள்ளான போது நீலாவணன் ஒதுங்கிக் கொண்டார். இந்த ஒதுக்கத்தை,

“கூடிய கூட்டமொன்றும் குற்றமில்லை
நான்தான் ஒரு மோடி! - அதனால்
முடியவில்லை வந்து விட்டேன்’
நாடியிலே நம்பிரிய
நண்பர் விட்ட குத்துகளைத்
தாடிக்குள் மூடித் தனியாய் ஒதுங்கி விட்டேன்!”
என்று கவிதையாகப் பாடினார். நீலாவணன் உயிரோடிருந்தவரை அவரை ஒதுக்கிவிட்டுச் சங்கம் செயற்படவில்லை. பிரச்சினை வந்தபோது செயலிழந்து கிடந்தது என்பதுதான் உண்மை.

எழுபத்தைந்தில் அவர் மறைவுக்குப் பிறகு எனது தலைமையில் சங்கம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. முதலில் மருதூர்க்கனியும் பின்னர், க.இரத்தினவேலும் செயலாளராகச் செயல்பட்டனர். க.நவம், பாலமுனை பாறுக், அன்புடீன், முல்லை வீரக்குட்டி, வி.ஆனந்தன், சம்மாந்துறை அஸீஸ், யு.பாறுக், எச்.எம்.பாறுக், மருதூர் அலிக்கான், கே.எம்.நியாஸ், ஏ.எம்.எம்.நஸீர், ஏ.நூர்தீன், சபா சபேசன், அரு. கணேஷ் என்று உறுப்பினர் தொகையும் விரிவடைந்தது. எண்பதுக்குப் பிறகு சண்முகம் சிவலிங்கம் தலைமையேற்றார். மருதூர் அலிக்கான் செயலாளரானார். சில ஆண்டுகள் சங்கம் செயல்பட்டது. எந்தப் பிரச்சினையும் உருவாகாத நிலையிலும் ஏனோ சங்கம் உறங்கு தசைக்குச் சென்று விட்டது.

III

நீலாவணனின் முற்போக்குத் தனம் பற்றிப் பேசியே ஆக வேண்டும். முற்போக்கு அணியினர் அவரை ஒரு பிற்போக்கு வாதியென்று பட்டைநாமம் சூட்டி மகிழ்ந்தது, ஈழத்து இலக்கிய உலகில் நடந்த மாபெரும் பகிடியாகும்.

நீலாவணனின் படைப்புகளைப் படிப்பவர்கள் அவரது முற்போக்குத் தனத்தைச் சந்தேகமற ஏற்றுக்கொள்வர். சமூகத்தில் புரையோடிப் போயுள்ள ஊழல்களையும், சுரண்டல்களையும், நாட்டாண்மைக்காரர்களின் நயவஞ்சகத்தையும், பின் தங்கிய மக்களின் வாழ்க்கை அவலங்களையுந்தான் அவர் பாடினார். கதைகளாகவும், உருவகமாகவும், நடைச்சித்திரமாகவும் நாடகமாகவும் எழுதினார். அவரது சொந்த வாழ்க்கையும் தூய்மையானதாகவும், பணம் பண்ணும் சித்துவிளையாட்டு கிஞ்சித்தும் இல்லாததாகவும் அமைந்தது. ஒருதரம் அவர் மருதூர்க்கனியைப் பார்த்து,

“தம்பி கனிபா! நீ புரியாணி சாப்பிடுகிற சோஷலிஸ்ட், நான் திராய்ச்சுண்டலோடு சோறு தின்னுகிற கெப்பிடலிஸ்ட் என்று கூறினார். என்ன? ‘எடு சுத்தியலை! தூக்கு அரிவாளை!! புறப்படு பாட்டாளி யுகம் படைக்க!! என்று கூறவில்லை. மாறாக, வர்க்க முரண்பாடுகள் நிறைந்த சமூக யதார்த்தத்தை இயல்பு குன்றாத மண் மணத்தோடு பாடினார். தனது ஆன்மீக தரிசனங்களைத் தத்துவக் கவிதைகளாக வெளிப்படுத்தினார். பற்றுறுதி மிக்க பேணுதல் மிக்க இந்துவாக வாழ்ந்தார்.

எஸ்.பொன்னுத்துரையோடு கொண்டிருந்த நட்பே முற்போக்காளர்களை விசனத்துக்குள்ளாக்கியது. எஸ்.பொ.ஒரு முற்போக்காளராக இருந்த வேளையில்தான், நீலாவணன் அவரோடு தொடர்பு கொண்டார். பின்னர் எஸ்.பொவின் போக்குகள் பிடிக்காமல் ஒருதலைப்பட்சமாக அவருடனான தொடர்புகளை முறித்துக் கொண்டார். தொடர்பைப் புதுப்பிக்க எஸ்.பொவும், எம்.ஏ.றகுமானும் எடுத்துக்கொண்ட முயற்சிகளை அவர் நிராகரித்தார்.

எஸ்.பொ.மட்டக்களப்பில், ‘முற்போக்காளர், ஒரு கொம்யூனிஸ்ட், இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கெதிராகத் தேர்தல் மேடைகளில் முழங்கியவர்’ என்ற காரணங்களுக்காக அங்கிருந்த இலக்கிய சனாதனிகளினால் ஒதுக்கப்பட்டுவந்தார். இது நீலாவணனை உறுத்தியது. கலைக்கழக நாடகப்பரிசை முதல் முதலில் வென்று மட்டக்களப்பு மண்ணுக்குப் பெருமைசேர்த்த அவரை ஓரங்கட்டுகிறார்களே என்று மனம் புழுங்கினார். எஸ்.பொவுடனான முதலாவது சந்திப்பு சம்மாந்துறையில் நடந்த ஒரு கூட்டத்தில் மோதலுடனேயே நிகழ்ந்தது. இருந்தும் எஸ்.பொவுடன் தொடர்பாடி சங்கத்தின் முதல் நிகழ்வாக எஸ்.போவைக் கொளரவித்து பொற்பதக்கம் சூட்டி மகிழ்ந்தார்.

மட்டக்களப்பில் நிலைமை இப்படியென்றால் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும், பேராதனையிலும் இருந்த முற்போக்கு இயக்க நண்பர்களோடு எஸ்.பொ முரண்பட்டுக் கொண்டதும், நற்போக்குச் சித்தாந்தத்தை முன்வைத்து அவர் அணி சேர்த்ததும், பின்னாளில் நடந்த நிகழ்வுகள். நற்போக்குச் சித்தாந்தத்தின் பிரகடனமாக மட்டக்களப்பில் நடந்த இலக்கியப் பெருவிழாவின் போதுதான் எஸ்.பொ, றகுமான் ஆகியோருடன் நீலாவணன் முரண்பட்டு விலகி வந்தார்.

டானியல், கல்முனைக்கு வந்தபோதும் டொமினிக் ஜீவா கல்முனைக்கு விஜயம் செய்தபோதும் நீலாவணன், அவர்களைத் தன் வீட்டுக்கழைத்து உபசரித்தார். இளங்கீரன் மரகதத்திற்குச் சந்தா திரட்டக் கல்முனைக்கு வந்தபோதும் அவ்வாறே செய்தார். இளங்கீரன், ராமநாதன், றகுமான் முக்கூட்டில் மரகதம் வெளிவந்தவேளையிலும் எஸ்.பொ. கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோர் மரகதத்தின் பக்கங்களை தத்தம் படைப்புகளால் அலங்கரித்த வேளையிலும்தான் நீலாவணன் எஸ்பொ நட்பு உருவானது.

நீலாவணன் ஆரம்ப காலத்தில் திராவிட இயக்கத்தால் கவரப்பட்ட ஒரு பகுத்தறிவுவாதியாகவே இருந்தார். பெரியநீலாவணையில் பகுத்தறிவுக் கழகத்தை நிறுவினார். அதில் இஸ்லாமியன் ஆகிய நானும் யாழ்ப்பாணத்தவரான வரதராசனும் அங்கத்தவராக இருந்தோம். ‘பணம்’ திரைப்படம் வெளிவந்த காலை அதில் இடம்பெற்ற பாரதியார் பாடலான

“ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்,
எதனூடும் நின்றோங்கும் அறிவொன்றே தெய்வம்
என ஓதி அறியீரோ!
மாடனைக் காட்டனை வேடனைப் போற்றி
மகிழும் மதியிலிகாள்!”

என்ற பாடலை நீலாவணன் தினமும் மனம் விட்டுப்பாடுவார்.

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவானபோது நீலாவணன் கொழும்பில் படிப்பித்துக் கொண்டிருந்தார். இ.மு.எ.சங்க ஆரம்ப உறுப்பினராகவும் செயற்குழு உறுப்பினராகவும் நீலாவணன் இருந்தார். பிரேம்ஜி ஞானசுந்தரத்தோடு மிக நெருக்கமாக இருந்தார். முற்போக்கு இயக்கம் பிற்காலத்தில் நீலாவணனை ஓரங்கட்டியிருக்கக் கூடாது என்றாலும் நீலாவணன் தனக்குத்தானே சுத்தமான முற்போக்கு வாதியாகவும், பக்திமிக்க ஆன்மீக வாதியாகவும் வாழ்ந்து மறைந்தார்.

IV

நீலாவணன் ஐம்பதுகளில் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதிக்கொண்டிருந்தார். ‘பட்டமரம்’, ‘பிராயச்சித்தம்’ ஆகிய சிறுகதைகள் சுதந்திரன் இதழில் பிரசுரமாகின. ஐம்பதுகளின் பிற்பகுதியில் ‘மூன்றாவது காதலன்’ என்ற சிறுகதையை சுதந்திரனுக்கு அனுப்பினார். அந்தக்கதை அவர் எதிர்பார்த்தபடி விரைவாகப் பிரசுரமாகவில்லை. இதுபற்றிச் சுதந்திரன் ஆசிரியர் திரு.எஸ்.ரி.சிவநாயகம் அவர்களுக்கு எழுதினார். சிவநாயகம் அவருக்கு உடனே பதில் கடிதம் போட்டார். அதில் அவர், ‘நீங்கள் நூறுபேரில் ஒருவனாக இருப்பதை விட பத்துப் பேரில் ஒருவனாகப் பிரகாசிப்பதையே நான் விரும்புகிறேன். ஆகவே தொடர்ந்து கவிதைகளே எழுதுங்கள்’ என்று ஆலோசனை கூறியிருந்தார். அன்று மகாகவி, நீலாவணன், முருகையன், பரமஹம்ஸதாஸன், சில்லையூர் செல்வராசன், புரட்சிக்கமால், அண்ணல், யுவன், அ.ந.கந்தசாமி, வி.சி.இராஜதுரை சிலரே காத்திரமான கவிஞர்களாக எழுதிக்கொண்டிருந்தனர். ஆற்றல் மிக்க ஓர் அருங்கவிஞன் திசைமாறி விடக்கூடாது என்ற கரிசனம் காரணமாக திரு.சிவநாயகம் இந்த ஆலோசனையைக் கூறினார். நீலாவணன் அதைத் தேவவாக்காகக் கொண்டு சிறுகதை எழுதும் முயற்சியைக் கைவிட்டார்.

இந்தத் தொகுதியில் நீலாவணனால் யாக்கப்பட்ட பதினைந்து உருவகக் கதைகளும் பத்துச் சிறுகதைகளும் ஆறு விருத்தாந்த சித்திரங்களும் இரண்டு குறும்புக் கதைகளும் இடம் பெற்றுள்ளன.

கவிதையை அணி செய்யும் அலங்காரங்களுள் உருவகம் முக்கிய இடத்தை வகிக்கிறது. உருவகத்தை உத்தியாகக் கொண்டு கதைகளைப் படைக்கும் போது உருவகக் கதைகள் உருவாகின்றன. நிகழ்வுகளை நேரடியாச் சொல்லாமல் உருவகமாகச் சொல்லும் போது தனி அழகு கூடுகிறது. கலைத்துவம் கொடிகட்டிப் பறக்கிறது. நீதி போதனைகள் செய்வதற்கு உருவகக் கதையைப் போன்ற சிறந்த ஊடகம் கிடையாது.

‘வென்றதே என்ற போதும்’, ‘சூரியரேகை’, ‘சொர்க்கத்துக்கு’, ‘உடலும் உயிரும் உமக்கே’, ‘பற்றுக்கோடு’, சுதந்திரத்திற்காக’, ‘படைப்பு’, ‘வாரிசு’, ‘விழிப்பு, ‘சுதந்திரம்’, ‘பயன்’, ‘’ஊகம்’, ‘இரசிகர்’, ‘அஞ்ஞானம்’, ‘பக்குவம்’, என்ற பதினைந்து உருவகக் கதைகளும் நீலாவணனின் உருவகக் கதைவல்லமையையும் அவரது அகநோக்கையும் அறிக்கை செய்கின்றன. இவை உயர்ந்த கலாபரிணமுள்ள சிறந்த கதைகள்.

‘வென்றதே என்ற போதும்’ என்ற முதலாவது கதை தரம் தாழ்ந்தவர்களுடன் போட்டிக்குப் போவதன் சங்கைக் கேட்டைத் தொனிப் பொருளாக கொண்டுள்ளது.

‘தோற்றாலும் எனக்குத்தான் அவமானம்….
என்னிலும் தாழ்ந்தவர்களை… சின்னஞ்சிறியவர்களை வென்றாலும்… முதல் பரிசு பெற்றது அதைவிட அவமானம்’ என்று குயில் தனக்குள்ளாக வெட்கப்பட்டு மூச்செறிந்து விநயமாகச் சிரித்துக் கொண்டது? என்று கதை முடிகிறது. அறிவு குறைந்தவர்கள் மத்தியில் புகுந்து சண்டப் பிரசண்டம் பண்ணும் மேதைகளையும் பொருள் கிடைக்கிறதே என்பதற்காகச் சிறுவர் பங்கு பற்றும் போட்டிகளிலும் பரிசு தட்டிச் செல்லும் பென்னம் பெரியவர்களையும் மனதில் கொண்டு யாத்த கதையாக இதைக்கொள்ளலாம்.

தமது சொந்த நலன்களுக்காகச் சுதந்திரத்தின் பேரால் மற்றவர்களை அடிமை கொள்ளும் - வெற்றிகொள்ளும் செயல்முறை மிக நீண்ட காலமாகவே நாடுகளும், குழுக்களும் தனிப்பட்டவர்களும் கையாண்டு வரும் உண்மையாகும். அதனை மனிதர்களையும் சுறாமீன்களையும் வைத்து நீலாவணன் உருவகம் செய்துள்ளார். அமைதி வழி செல்பவர்களும் நிர்ப்பந்தம் காரணமாக வன்முறையைத் தலைக்கொள்ள ஆற்றுப் படுத்தப்படுவர் என்ற உண்மையையும் சுதந்திரத்துக்காக என்ற கதை கூறுகிறது.

‘அன்று முதல் சுறாமீன்கள் மட்டுமல்லாமல் கடலில் வாழும் பெரிய மீன்களெல்லாம் சிறிய மீன்களைப் பிடித்துத்தின்ன ஆரம்பித்தன.’ என்று ஆசிரியர் கதையை முடிக்கிறார். சுறாமீன்கள் அதுவரை பாசியையும் கழிவுகளையும் உண்டுவந்தன என்று ஆசிரியர் கூறியது அமைதி வாழ்க்கையின் உருவகமே. ‘படைப்பும்’ ஒரு முக்கியமான கதை. கடவுள் தன் சொரூபத்தில் தனது பிரதி நிதிகளாக இரு ஆண் மனிதர்களைப் படைத்து உலகில் உலவ விடுகிறார். அந்த இருவரின் வாழ்க்கையில் அவர்களுக்கும் சுவாரசியம் கிட்டவில்லை. கடவுளுக்கும் களிப்பைக் கொடுக்கவில்லை. கடவுள் அவர்களை அழித்துவிட்டு, ஒரு ஆணையும் பெண்ணையும் படைக்கிறார். அந்தச்சோடி ஆனந்தமாகச் சல்லாபிக்கின்றது. தனது படைப்பில் கடவுளுக்கும் திருப்தியேற்படுகிறது. உலக வாழ்வின் இயங்குதசையே சந்ததி உற்பத்திதான். அந்தச் சங்கிலிதொடரின் விளைவால்தான் உலகம் நித்திய இளமையாக இருக்கிறது. எதிரும் புதிருமான இரு சக்திகளின் தாக்கத்தால் ஏற்படும் எதிர்விளைவுதான் உற்பத்தியின் - சிருஷ்டியின் சூட்சுமம் என்பதை நீலாவணன் அழகாகச் சொல்லுகிறார்.

“வானில் கோற்களும் நட்சத்திரங்களும் வட்டவரையில் நீந்திக் கொண்டிருக்கின்றன. அவை ஒன்றையொன்று முந்தவும் முடியாது. நெருங்கவும் முடியாது. சிந்திப்பவர்களுக்கு இதில் நிறைய அத்தாட்சிகள் உண்டு” என்று திருக்குர் ஆன் கூறுகிறது. பிரபஞ்ச அமைப்பு என்பது நிர்ணயிக்கப்பட்ட நியதிக்குள் உள்ளது என்பது தான் உண்மை. இந்த உண்மையைப் புலப்படுத்தும் உருவகந்தான் நீலாவணனின் ‘அஞ்ஞானம்’ என்ற உருவகக் கதை. கடவுள் அந்தஸ்துக் கோரும் சூரியனைப் பார்த்து, உனக்கு முன்னால் உள்ள இருள் என்ற எதிரியை வென்று வா! அதன்பின் நீ கேட்கும் கிரீடத்தை உனக்குச் சூட்டுகிறேன் எனக்கடவுள் கூறுகிறார். சூரியன் இருளைத் துரத்திச் செல்கிறான். துரத்தல் தொடர்கிறது முடிவை நெருங்காமல் புவியை ஒளியும், இருளும், மழையும், வெப்பமும் வருஷிக்க உயிரினங்கள் வாழ்வு பெறுகின்றன. குதூகலிக்கின்றன.

கடைசிக்கதை ‘பக்குவம்’ என்பது. இது ஒரு முக்கியமான கதாசம்பவ விந்துவையும் பிரகரண ஒலியையும் கொண்ட கதை எனலாம். ‘கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது’ என்பார்களே! அதன் உருவகம் தான் இக்கதை. போட்டிகளில் ‘பினாமி’ களின் பெயரில் எழுதி, நடுவர்களையும் வளைத்துப்பிடித்துப் பரிசைத் தட்டிச் செல்லும் அமங்கலம் இலக்கிய உலகில் நிறையவே நடந்ததுண்டு. மலர்கண்காட்சியில் கண்ணைப்பறிக்கும் அதிசய மலர் ஒன்றும் வைக்கப்பட்டிருக்கிறது. நடுவர் ஒருவர் முகர்ந்து பார்த்து அதன் துர்நாற்றத்தால் மயங்கிவிழுகிறார். மற்றைய நடுவர்களும் இந்த அசிங்கத்தை உணர்கின்றனர். நடுவர்கள் ஏற்பாட்டாளரைக் கண்டு முறையிடுகின்றனர். பிரதம அமைப்பு நிருவாக - அதிகாரி சொன்னார் -

“இந்தப்பூ என் வீட்டுக் கட்டாந்தரையிலே விளைந்த பூ. அதனை அனுபவிக்கக்கூடிய பக்குவம் நீதிபதிகளிடம் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் ஒன்றும் கிடையாது…. ஆனால்;… அந்தப்பூ என்வீட்டு அந்தரங்க வேலையாளும் மித்திரனுமான ஒருவன் பெயரில் காட்சிக்கு வைக்கப்பட்டது என்ற பகிரங்க ரகசியத்தையாவது நீங்கள் தெரிந்து கொண்டிருக்கலாம் நீதிபதிகள் உண்மையின் முகத்தில் கறுப்புத் துணியைப் போர்த்தினர்.
அவர்கள் பக்குவப்பட்டவர்கள்
என்று பக்குவம் உருவகக் கதை முடிகிறது.

‘நெருஞ்சிமுள்’, ‘ஆறாவது குழந்தை’, ‘முத்துலிங்கம் மேலே போகிறான்’, ‘நிராசை’, ‘நாணயம்’, ‘தெளிவு’, ‘ஒட்டுறவு’, ‘பட்டமரம்’, ‘பிராயச்சித்தம்’, ‘? கேள்விக்குறி’ ஆகிய பத்துச்சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. நீலாவணன் எழுதிய இன்னொரு சிறுகதை விடுபட்டுப் போய்விட்டதென நினைக்கிறேன். ‘மூன்றாவது காதலன்’ என்ற அந்தச் சிறுகதை நீலாவணன் எழுதிய மூன்றாவது சிறுகதை அது. ஏலவே பிராயச்சித்தமும், பட்டமரமும் பிரசுரமான நிலையில் சுதந்திரன் இதழுக்கு அனுப்பப்பட்ட கதை. அந்தக் கதைதான் நீலாவணனைக் கவிதை யாக்கத்தில் முழுமூச்சாக ஈடுபட ஆற்றுப்படுத்திய கதை. கதை சுதந்திரனில் பிரசுரமாகவில்லை. கதைப்பிரதி திருப்பி அனுப்பப்படவில்லை. அதன் மூலப்பிரதி நீலாவணனிடம் இருந்து தவறிப் போயிருக்கலாம்.

கிராமத்தில் பெருங்காயம் இருந்த பானை என்ற மாதிரி பெயரளவில் போட்டித்தனம் மிக்க குடும்பத்து தட்டுவாணித்தனம் மிக்க ஒரு பெண் முதல் இரு கணவன்களும் ஆளைவிட்டால் போதும் என்று ஓடி மறைய மூன்றாவது காதலன் ஒருவனை வலை விரித்துப் பிடிக்கும் கதா சம்பவத்தைக் கொண்டது. வாழும் பாத்திரங்களைக் கொண்டது இக்கதை என்பதும், இதனால் நீலாவணன் சிக்கல்களை எதிர்க்கொள்ளலாம் என்பதும் உணர்ந்துதான் திரு. சிவநாயகம் அக்கதையைப் பிரசுரிக்காமலும் விட்டிருக்கலாம். எழில் வேந்தன் அனுமதித்தால் அந்தக்கதையை என்னால் மீள எழுத முடியும்.

இத்தொகுப்பில் உள்ள பத்துச் சிறுகதைகளில், ‘பட்டமரம்’, ‘பிராயச்சித்தம்’ ஆகிய இருகதைகளும் ஏனைய கதைகளிலிருந்து உரையாடல் மொழியாலும் விவரணத்தாலும் வித்தியாசப்படுகின்றன. அவை எழுதப்பட்ட காலத்தின் பண்பை பிரதிபலிக்கின்றன. இவ்விரு கதைகளும் ஐம்பதுகளில் எழுதப்பட்டவை. ‘சுதந்திரன்’ வாராந்திரியில் பிரசுரமானவை. அக்கால நீலாவணன் பகுத்தறிவு வாதியாகவும் திராவிட இயக்கச் சார்புடையவராகவும் இருந்தார். தி.மு.க. எழுத்தாளர்களின் கதைப்பாங்கில் இருப்பதை அவதானிக்கலாம்.

கந்தசாமி, அவனும் மனிதன்தான். என்றாலும் ஏழை. பண்ணையார் பரசுராமரிடம் கணக்குப் பிள்ளையாக இருந்தான். பட்டமரத்தில் வரும் விவரிப்பு வசனங்கள் இவை. ‘பண்ணையார்’ என்ற பதம் தமிழகத்தில் நில உடைமையாளர்களைக் குறிக்க வழங்குவது. தி.மு.க எழுத்தாளர்கள் அப்பதத்தைப் பெருவழக்காகப் பிரயோகித்தார்கள். பண்ணையாருக்கு நேரடியான மட்டக்களப்புப் பிராந்திய வழக்காற்றுச் சொல் போடியார் என்பதாகும். மட்டக்களப்பில்; எந்தப் போடியார் காணியிலும் தனியாகப் பூந்தோட்டம்; அமைக்கும் வழக்காறும் இல்லை. இந்தியாவில் பூ உற்பத்தி பணமீட்டும் தொழில். சமய சமூகக்காரணங்களால் பூக்களுக்குச் செவாணி அதிகம். அதனால் நிலஉடமையாளர்கள் பூப்பண்ணையும் வளர்ப்பர். இக்கதையில் வரும் பண்ணையார் பரசுராமரும் பூந்தோட்டம் அமைக்கிறார்.

ஏழையான கணக்குப்பிள்ளை கந்தசாமியை பண்ணையார் மகள்; காதலிக்கப்போய், அதைப் பொறுக்க முடியாத பண்ணையார் தன் அடியாட்களைக் கொண்டு அவனைக் கொன்று பூந்தோட்டத்தில் உள்ள மரத்தடியில் புதைத்துவிடுகிறார். இதைப் பொறுக்காமலோ என்னவோ மரம் பட்டுவிடுகிறது. பட்டமரம் பேசுவதாகத்தான் கதை நகர்கிறது.

பொருளாதாரமே சமூக உறவுகளைத் தீர்மானிக்கின்றன என்ற பொருள் முதல் வாதக்கருத்து கதையில் அடித்துச் சொல்லப்படுகிறது. வர்க்க முரண்பாட்டைக் கதை இனம் காட்டுகிறது.

‘பண்ணையார் பரசுக்கு - இல்லைப் பணக்கார இனத்தின் பவுசுக்குப் பங்கம் விளைவிக்கவிருந்த ஏழைக் கந்தசாமியின் உயிரற்ற உடலை என்னிடம் ஒப்படைத்தனர் என்று பட்டமரம் கூறுகிறது. நீலாவணனின் அதீதமான கற்பனை வளத்தைக் கதையில் தரிசிக்கலாம்.

பிராயச்சித்தம் கதையில் பாத்திரங்கள் உரையாடல் பேச்சுவழக்கு மொழியாக இல்லாமல் எழுத்து வழக்கு மொழியாகவே உள்ளது. அக்காலகட்டத்தில் சிறுகதை, நாவல், நாடகம் எழுதிய இலங்கை எழுத்தாளர்கள் அனைவரும் இவ்வாறே எழுதினர் என்பது பிரசித்தம். சிலர், கதை நிகழும் களத்தையும் தமிழ் நாட்டு இடப்பெயர்களைக் கொண்டே எழுதினர். இதற்கு இலங்கையர்கோன் ஓரளவுக்கு விதிவிலக்காயமைந்தார்.

பிராயச்சித்தம் கதையில் வரும் பாத்திரங்களின் உரையாடல் மொழியை நீக்கிப் பார்த்தால் கதை இயல்பானதாக, யதார்த்தப் பண்பு கொண்டதாக இருக்கிறது. அவரது ஆசிரிய கலாசாலை அனுபவத்தை கருப்பொருளாகக் கொண்டு பிற்பகுதி கற்பனை பண்ணப்பட்டு எழுதப்பட்ட கதையாகும். மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலை, மட்டக்களப்புப் பிராந்தியப் பாடசாலையொன்று என்பன கதையின் பகைப்புலமாக அமைந்துள்ளன. கதையின் கதை நாயகனும் நடராஜனே.

“அன்று அந்தச் சிறு கடிதத்தை அதிபரிடம் காட்டி என்மானத்தை வாங்கினாயே! இன்று நீ எழுதிய இக்கடிதத்தை அதே அதிபர் கண்டால்…? இது சமூகத்தின் காதுகளுக்கெட்டினால்…? என்று என் உடன் மாணாக்கர்கள் எனக்கு முட்டாள் பட்டம் கட்டினார்களே!! காவாலி என்றார்களே!...” இப்படி நடராஜன் நல்லம்மாவிடம் உரையாடுகிறான். இவ்விரு கதைகளும் காலத்தின் பண்பைப் பிரதிபலித்த தரமான கதைகள். நீலாவணனின் மற்றைய கதைகளைப் படிக்கின்றபோது காலத்தோடு ஒட்டி வளர்ந்த கதாசிரியன் என்பது புலப்படும்.

தொகுதியிலுள்ள மற்றையக்கதைகள் எட்டுமே அறுபதுகளின் பின் எழுதப்பட்டவை. மண்வளமும் மட்டக்களப்புக் கிராமிய வழக்காற்றுச்; சொற்களும், கிராமிய சமய சடங்கு சம்பிரதாயங்களும், சொத்துடமையின் அடிப்படையிலான சமூக உறவுகளும் முரண்பாடுகளும் என்று மட்டக்களப்புத் தமிழர் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் காலத்தின் கண்ணாடியாய் அமைந்தவை. இயல்புத்தன்மை குன்றாத யதார்த்தமான படைப்புகள் மட்டக்களப்புப் பேச்சு வழக்கின் கம்பீரத்தையும் மொழி இனிமையையும் உரைக்கும் ஒலிநாடாக்கள், இந்தக் கதைகள். மட்டக்களப்பு வாழ்வியலை ஆராயப்புகும் சமூக விஞ்ஞான ஆய்வாளர்களுக்கும், மொழியியல் ஆய்வாளர்களுக்கும் நீலாவணனின் இக்கதைகள் உசாத்துணையாக அமையக்கூடியவை. பல்கலைக்கழக மொழியியல், பண்பாட்டியல், கலைப்பீடங்களில் பாடநூலாக அமையக்கூடியவை.

இதில் வரும் ‘ஒட்டுறவு’ என்ற சிறுகதைமிக நேர்த்தியான கலையாக்கப் பண்பு பெற்றதாக உள்ளது. ஈழத்தில் வெளிவந்த மிகச் சிறந்த முப்பது சிறுகதைகளில் ஒன்றாக அமையக்கூடியது. கதையின் கருவும் முடிவும் உள்ளத்தை உருக்கும் வண்ணம் வாய்ந்தன. கதையின் விபரிப்பும், கதைமொழியும், மிக இயல்பான கலா சாமார்த்தியம் வாய்ந்தவை. பாத்திர வார்ப்பு நேர்த்தியானது. தகப்பன் சவடால்ற சாமித்தம்பி, கதாநாயகி அரியம், குழந்தை கௌரி, ஆசிரியர், ஆசிரியரின் மனைவியான ஆசிரியை என்கின்ற நிஜவாழ்வில் வாழும் பாத்திரங்கள் படிப்பவர் மனதில் கல்லில் வடித்த படிமங்களாக நிலைத்து விடுவர். எல்லாக்கதைகளையும் வாசகர்களே படித்து முடிவு செய்யட்டும் என்பதற்காகவும் விரிவஞ்சியும் மற்றக்கதைகளைத் தொடாது விடுகிறேன்.

தொகுப்பில் இடம்பெற்றுள்ள விருத்தாந்த சித்திரங்கள் ஆறும், ஈழத்து தமிழ் உரை நடை இலக்கியத்துக்கான புது வரவாகும். நீலாவணன் வழங்கிய அருஞ்செல்வமாகக் கொள்ளத்தக்கன. நடைச்சித்திரத்தின் பண்பிலிருந்து சற்று விலகிய கலாபரிமாணமாகும். கதையில் வரும் ஒற்றைப் பாத்திரம் தனது விருத்தாந்தத்தையும், இழிதகைமை வாய்ந்த குணவியல்புகளையும், ஊழல் நிறைந்த புல்லுருவித் தனத்தையும் தானே தன்வாயால் கூறும் பண்புடையதாகும். கோயில் சொத்துகளை சுயாதீனமாக உண்டுவயிறு வளர்க்கும் கிராமிய நாட்டாண்மைகள், தகுதியற்றும் பதவிபெற்று ஊழல் சேற்றில் உழன்று புரளும் சமூக இழிஞர்கள், உழைக்காமலே உடல்வளர்க்கும் - கலப்படம் புரிந்து ஏமாற்றிப் பிழைக்கும் வாய்ச்சவாடல் பேர்வழிகள், பழம் பெருமை பேசி, உழைக்க மறுத்துப் பிறரைச் சுரண்டி வாழும் சோம்பேறிகள், கிராமிய அரசியல் நடாத்தும் ஊழல் உத்தமர்கள் என்று சமூகத்தின் அவமானங்களாகவும் உலவும் மனிதர்களின் செயற்பாட்டைத் தர்மாவேச உணர்வோடு இச்சித்திரங்கள் சித்தரிக்கின்றன. மட்டக்களப்புப் பேச்சுமொழியின் வீரியம் தேரோட்டமிடுகின்றது. சமூகவியல், மொழியியல், ஆய்வாளர்களுக்கான விருந்து மேசைகள் இந்தச் சித்திரங்கள் என்பதுதான் என்கணிப்பு.

இவை ஆறிலும், இரண்டு - ‘பாடும் மீன்’ சஞ்சிகையில் ‘அம்மாச்சி ஆறுமுகம்’ என்ற புனைபெயரில் பிரசுரமானவை. அவை போடிமகள் பொன்னம்மா, வி. ஸி. மெம்பர் காசிநாதர் என்ற இரண்டாக இருக்கலாம் என்பது என் ஞாபகம்.

குறும்புக்கதைகள் இரண்டும் நகைச்சுவை வருஷிக்கும் குறும்புத்தனக் கதைகள். இவற்றில் வரும்பாத்திரங்களும் விருத்தாந்த பாத்திரங்களின் குணவியல்பைக் கொண்டனவே.

நண்பர் என்பதற்காக ஓஹோ வென எழுதிவிட்டேன் எனப் பெருவிமர்சகர்கள் குறைபடா திருக்கக் கடவர்!

உள்ளதை உள்ளபடி, மிகைபடாமல், இயல்புபடச் சொல்ல முயன்றிருக்கிறேன். ‘விமர்சனம் என்பது படைப்பவனின் ஆத்ம தரிசனத்தைப் படிப்பவன் அடைய இட்டுச் செல்வதே - சஹ்றுதயம் தோன்றச் செய்வதே’ என்கின்ற அ.சிறிநிவாசராகவனின் கருத்தை வழிபாடு செய்பவன் நான்.


‘மருதூர்க்கொத்தன்
(வி.எம்.இஸ்மாயில்)

மருதம்’
மஷூர் மௌலானா வீதி, .
மருதமுனை - 3.
13.05.2003

++++++++++++++++++++++++++

உள்ளே .....

++++++++++++++++++++++++++

நெருஞ்சி முள்

பள்ளிக்கூடம் கலைந்து வந்து பகல் சாப்பாட்டை முடித்துக் கொண்டபின் அன்றைய தினசரிப் பத்திரிகையோடு சாய்மணைக் கதிரையிலே விழுந்து சாய்ந்து கொண்டார் ஆசிரியர் சதாசிவம்.

கையில் பிடித்திருந்த தினசரித்தாள் நெஞ்சிலே வழுவி விழுந்து காற்றிலே படபடக்க வாயில் கௌவிப் பிடித்திருந்த சுருட்டு அணைந்துபோய் சரிந்து விழுந்து கடைவாயில் உறங்க அவற்றைப் பற்றிய நினைவுகளைத் துறந்து ஊமை நினைவுளின் இதமான தாலாட்டிலே கண்மூடித் தூங்கிப் போனார் அவர்.

ஆருக்கு வேட்டை?..
எனக்கு வேட்டை..
வேட்டையைக் காட்டு?...
ஐயோ டோச்சீ இ….

திடுக்கிட்டு விழித்துக்கொண்ட சதாசிவம் எழுந்து வாசலை எட்டிப் பார்த்தார். வெறும் சாப்பாட்டு மயக்கப் பகல் கனவுதான்! ரவியும் நளினியும் வாசலில் விளையாடிக் கொண்டிருப்பதாக ஒரு பிரமை. வீட்டில் குழந்தைகள் இல்லை என்பது தெரிந்துங்கூட ஏனோ ஒரு அசட்டு நம்பிக்கையோடு மீண்டும் ஒரு முறை வாசலை எட்டிப் பார்த்தார். பங்குனிமாத நெருப்பு வெயில் துளிகள் போல வாசல் வேளியோரமாக தீண்டுவார் இன்றிச் சொரிந்து கிடக்கும் புனமுருக்கம் பூக்கள் அவரை என்னவோ செய்தன.

காரணமில்லாத ஏமாற்றத்தோடு கதிரையை விட்டு எழுந்து திண்ணை வரை நடந்து போய் படலையை பார்த்தபடி சிறிது நேரம் நின்றார் சதாசிவம். வாசல் மாமரத்தில் தன்னிச்சையாக அமர்ந்து சீட்டியடித்துச் சல்லாபம் செய்யும் சோட்டு மாம்பழக் குருவிகளைப் பார்க்க அவருடைய மனக்குருவியும் சிறகு விரித்துப் பறக்க ஆரம்பித்தது.அதை முந்திக் கொண்டே இணையாக இருந்த மாம்பழக்குருவிகளில் ஒன்று எங்கோ பறந்து செல்ல அந்த இடத்தை விட்டு அறைக்குத் திரும்பினார் அவர்.

கொடியில் கிடந்த துண்டை எடுத்து உதறி கழுத்திலும் முகத்திலும் அரும்பியிருந்த வியர்வையைத் துடைத்து விட்டு குவளையில் தண்ணீர் எடுத்து ஒரு மடக்குக் குடித்து வாயைக் கொப்பளித்துக் கொண்டு மீண்டும் கதிரையில் போய் சாய்ந்துகொண்டார் அவர். கதிரைக் காலோரமாக விழுந்து கிடந்த சுருட்டை எடுத்து சாம்பல் தட்டி தம் பிடித்து அதை மூட்டிக் கொண்டபின் தினசரியை திரும்பவும் கையில் எடுத்துக் கொண்டார்.

பார்த்து முடித்த செய்திகளையே திரும்பவும் ஒருமுறை மேலோட்டமாகப் படித்து முடித்து விட்டு அலுப்போடு பத்திரிகையைக் கீழே போட்டார். கதவின் ஊடாக வாசல் பக்கம்பார்வை சென்றது. வேலியோரமாகப் புன முருக்கம் பூக் குப்பை. அவற்றையெல்லாம் கூட்டி அள்ளி வைத்துக் கொண்டு சோறு கறி ஆக்கவும் கடை வைத்து விளையாடவும் ரவியும் நளினியும் அங்கே இல்லை. சதாசிவம் மக்களைப் போய்ப் பார்த்து இரண்டு வாரங்கள் இடையில் ஊருக்குப் போக முடியவில்லை.

புனமுருக்கம் பூக்களோடு மாம்பழக் குருவிகளும் சேர்ந்துகொண்டு குழந்தைகளின் நினைவைக் கிளறி விட உடனேயே ஊருக்குப் போக வேண்டும் போல சதாசிவத்தின் மனம் குறுகுறுக்க ஆரம்பித்தது.

ரவியும் நளினியும் சேர்ந்து கொண்டு செய்யும் ஆர்ப்பாட்டங்களும் அடிதடி சண்டை - வம்புவழக்குகளும் சில வேளைகளில் சதாசிவத்தைச் சங்கார மூர்த்தியாக மாற்றி விடுவதும் உண்டு. அவர்களை அவர் சம்காரம் பண்ணாது விட்டாலும் சனியன்கள் என்று அலுத்துக் கொள்வதும் உண்டு. அவர்கள் இல்லாமல் இந்த வீடும் வாசலும் களை இழந்து செத்துக்கிடக்கிறது என்பது அவரைப் பொறுத்தவரை நூற்றுக்கு நூறு உண்மைதான்.

‘வாத்தியார் ஐயா’..

யார்? என்று கேட்பதற்கிடையில் வாசலைத்தாண்டி திண்ணையில் வந்து நின்ற மரகதத்தைக் கண்டதும் சதாசிவத்திற்கு ‘திக்’ என்றது. யார்… மரகதமா! என்று கேட்டவாறே கதிரையை விட்டு எழுந்து வா மரகதம் என்ன வேணும்? என்றார். உடம்பைக் கோணலாக்கிச் சிரித்தபடியே ஒன்றும் இல்லை வாத்தியார் ஓர் அவசரதேவை. கூப்பன் எடுக்க வேணும் நாளைக்கு கடை திறக்க மாட்டார்கள். இரண்டு ரூபா கைமாற்று வேணும். திங்கட்கிழமை திருப்பித் தரலாம் என்றாள் மரகதம்.

ஒரு நாளும் வராதவள் வந்து இப்படிக் கேட்டுவிட்டாளே! பெரியதோர் சங்கடத்தில் மாட்டிக் கொண்டு தவித்தார் சதாசிவம். நாளை வெள்ளிக்கிழமை. பள்ளிக்கூடம் விட்டதும் ஊருக்குப் புறப்பட வேண்டும். பஸ் செலவுக்கு என்று வைத்திருந்த இரண்டு ரூபாவைத் தவிர வேறு பணம் எதுவும் அப்போது அவர் கைவசம் இல்லை. மரகதமோ நம்பிக்கையோடு அவரை எதிர்பார்த்து நின்றாள். யோசித்துக் கொண்டிருக்க நேரமில்லை. பணம் இல்லை என்று கூறித் தப்பித்துக்கொள்வதற்கும் அவருடைய சுயகௌரவம் இடந்தரவில்லை. கொடியில் தொங்கிய வாலாமணிப் பையுள் கையை விட்டு மணிபர்ஸை வெளியே எடுத்து அதற்குள் செருகியிருந்த அந்த இரண்டு ரூபா நோட்டை எடுத்து வந்து மரகதத்திடம் நீட்டினார்.

கண்ணின் கருமணிகளை மேல் இமைகளுக்குள் தூக்கிவிட்டு அவற்றைக் கீழ் இமைகளுக்குள் விழுத்தும் பிரயத்தனத்தோடு மரகதத்தை உற்றுப் பார்த்துச் சிரித்தவாறே பணத்தை அவள் கையில் வைத்த சதாசிவம் தன்னுடைய அப்போதய மனநிலையில் விரும்பியோ விரும்பாமலோ அவளுடைய விரல்களை தன் நகத்தால் நிமிண்டினார். சட்டென்று பணத்தை வாங்கிக் கொண்ட மரகதம் நாணிக் கொண்டே பதிலுக்குச் சிரித்தாள். அந்த நன்றிச் சிரிப்பு சதாசிவத்தை ஏதோ செய்ய அதற்கு அர்த்தத்தை நிச்சயத்துக் கொள்ளவேண்டி அவர் மன அகராதியின் பக்கங்களைப் புரட்டுகையில் அவரும் வீட்டில் இல்லை. நான் தான் கடைக்கு போகவேணும் வருகிறேன் வாத்தியார்.. என்ற மரகதத்தின் குரல் வாசலில் மெதுவாக ஒலித்து மறைகிறது.

உடம்பு சில் என்று வியர்க்க சதாசிவத்தின் நெஞ்சுக்குள் கணப்பு மூண்டு எரிய ஆரம்பித்தது. அதன் வேக்காட்டை அவரால் தாங்க முடியவில்லை. அறைக்குள் குறுக்கும் மறுக்குமாக நடந்தார். சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும் அவர் மனைவி மனோன்மணியின் புகைப்படத்தைப் பார்க்க அப்போது அவர் விரும்பவில்லை என்றாலும் அந்தப் படம் தன்னையே உற்றுப் பார்ப்பதைத் தவிர்த்துக் கொள்ள விரும்பியவராக வெளியே தி;ண்ணைக்கு வந்தார். வாசல் மாவில் சீட்டியடிக்கும் ஒற்றை மாம்பழக்குருவியோடு போட்டியாக மாவின் மற்றொரு கிளையில் கறுபுறுத்துக் கரையும் அண்டங்காக்கை. அதைத் துரத்திவிட சதாசிவம் எடுத்துக் கொண்ட முயற்சி தோற்றுப்போக காக்கையின் அவலக்குரலோடு போட்டிபோட முடியாது தோற்றுப் போன மாம்பழக்குருவி எழுந்து எங்கோ பறந்து போகிறது. அதை உற்றுப்பார்த்தபடியே சிறிதுநேரம் நின்றார் சதாசிவம்.

நாலாவது பிரசவம் காரணமாக ஊரிலே தங்கியிருக்கும் தன் மனைவி மனோன்மணி தன்மீது சிரத்தை எதுவும் இன்றி கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தாய் வீட்டில் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருப்பதாக ஒரு வஞ்சக எண்ணம். அந்த ஒரு கணத்திலே சதாசிவத்தின் மனப்பொந்தில் உயிர்த்து மூச்செறிய திரும்பி அறைக்குள் சென்று மனைவியின் புகைப்படத்தை வெறித்துப்பார்த்தார் அவர். படத்தில் தெரியும் மனைவியின் குழந்தைத்தனமான குறுஞ்சிரிப்பு தன்மீது சிரத்தையற்ற அலட்சியச் சிரிப்பல்ல என்று அவருக்குத் தெரியும். அந்தச் சிரிப்பின் கண்ணாடியில் சதாசிவத்தின் மனதில் ஒரே நொடியில் தோன்றிப் படிந்து விட்ட கறையின் நிழல் தெளிவாகவே தெரிந்தது.

இனி ஊருக்கு நாளை போக முடியாது. அடுத்தவாரம் சம்பளம் கிடைத்து விடும் எடுத்துக் கொண்டு போக வேண்டியதுதான் என்று தீர்மானத்துக்கு வந்தவராக திரும்பவும் சாய்மணையில் போய்ச் சரிகிறார் சதாசிவம். அவருடைய நினைவு நாய் மறுபடியும் மரகதத்தின் அடிச்சுவடுகளை மோப்பம் பிடிக்க ஆரம்பித்தது.

பயித்தியம் பொன்னி மனுஷிக்கும் இந்த வட்டாரத்தில் எங்கோ உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்த யாரோ பறங்கித்துரைக்கும் ஏற்பட்டிருந்த அந்தரங்க உறவின் தார்ப்பர்யந்தான் இந்த மரகதம்! என்பதாக ஊரில் இரகசியம் பேசிக் கொள்வதை சதாசிவமும் அறிந்திருந்தார். இது எவ்வளவு தூரம் உண்மை என்பது ஒன்றும் அவருக்குத் தெரியாது. அதை அறிந்து கொள்ளவேண்டிய அவசியமும் இதுவரை அவருக்கு நேர்ந்ததில்லை.

அகன்று பருத்த பூனைக்கண்கள். செம்பட்டையான சிவப்புத் தலைமயிர். சதுரமான சதைப்பிடிப்புள்ள முகம். சப்பை இல்லாத மூக்கு. சரியாது தடித்துக் கனத்த மார்பகம். இவற்றின் ஜிகினா வேலைப்பாடாக அமைந்துவிட்ட சிவப்புத் தோல்! மரகதத்தைப் பார்த்தால் யாருக்கும் பழிக்கத் தோன்றாது. உடம்புக்குப் பொருத்தமான பெயர்தான் மரகதம். அவளுக்குப் பொருத்தமான கணவன்தான் சின்னான்.

கோவிலடி ஆலமர நிழலில் குந்தி பகல்முழுதும் சீட்டாடி வீண் பொழுது போக்கும் சின்னான் மரகதத்துக்கும் இரண்டு குழந்தைகளுக்கும் சோறு சீலை கொடுத்து எப்படி இல்லறம் நடாத்துகிறான்? என்று சில வேளைகளில் சதாசிவம் எண்ணிப்பார்ப்பதுண்டு. ஒருமுறை இது பற்றி அவர் தமது மனைவியிடம் பிரஸ்தாபித்த பொழுது ஆர்வீட்டுச் சேதியோ உங்களுக்கு எதற்கு? என்று அவள் அலுத்துக்கொண்டதற்கு அர்த்தம் தேடிய அவருக்கு ஊரில் கிடைத்த தகவல்கள் வியப்பாக இருந்தன.

‘மரகதம் ஒழுக்கம் கெட்டவள் அவள் பரம்பரையே அப்படித்தான் வெளியூரில் எங்கேயோ வேலைக்கென்று போயிருந்த வீட்டில் கல்யாணமாகாதிருந்த இவள் தாய் பொன்னி ஆண்பிள்ளை ஒன்றைப் பெற்றெடுத்தாளாம். அதை அங்கேயே ஆருக்கோ வளர்ப்புக்குக் கொடுத்துவிட்டு திரும்பினாளாம். முதல் பிள்ளையை பெற்றெடுத்த சொந்த அநுபவத்தை வைத்துக் கொண்டு ஊருக்குத் திரும்பி இங்கே மருத்துவம் பார்த்து பிழைத்தாளாம். இரண்டாம் முறையாகவும் பொன்னி தனக்குத்தானே மருத்துவம் பார்;த்து பெற்றெடுத்த பெண்தான் மரகதமாம். அதற்குப்பின் பொன்னி மனுஷி யாருக்குமே மருத்துவம் பார்க்கவில்லையாம். தான் உண்டு தன் பைத்தியம் உண்டு என்று அவள் அலைந்து திரியும் பொழுது தனது மூத்த மகன் அவன் படிப்பு பவுசான வாழ்க்கை எதிர்கால உத்தியோகம்.. பற்றியெல்லாம் பெரிதாகப் பிசத்திக்கொள்வாளாம்.’

‘தன்னுடைய வாரிசுகளை இப்படியாக இந்தப்பரந்த உலகில் நிலைநிறுத்தி விட்டு பொன்னி மனுஷி இறைவன் திருவடி நிழலிலே சேர்ந்து ஆறுதல் பெற்றுக்கொண்டது முதல் இந்த மரகதம் எப்படியோ தனியாக வாழ்ந்து தானாகவேதான் சின்னான் என்ற சின்னத்தம்பிக்கு வாழ்க்கைப்பட்டாளாம். சின்னான் மரகதத்திற்கு உழைத்துக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லையாம். பக்கத்து ஒழுங்கை ஓரத்துக் கல்வீட்டிலே குடியிருக்கும் யாரோ ஒரு பிரம்மச்சாரியான ஓவசியர் சின்னான் குடும்பத்திற்கு உதவி செய்து கொண்டிருக்கிறாராம். சின்னான் ஓவசியர் வீட்டில் எடுபிடி வேலையாளாம். வெளியிடங்களிலும் இரந்து மரகதத்தைத்தேடி யார் யாரோ வருவார்களாம். அவர்களோடு மரகதம் காரிலும் வெளியே போய் வருவாளாம். இப்படியான வருவாய்களை வைத்துக்கொண்டு தான் சின்னானும் மரகதமும் வாழ்க்கையை வாழ்ந்து இரண்டு பிள்ளைகளை வேறு பெற்றெடுத்துக் கொண்டிருக்கிறார்களாம்.

ஒழுக்க சிந்தையரான சதாசிவம் இவற்றையெல்லாம் தெரிந்து கொண்ட ஆரம்பத்தில் மரகதத்தையிட்டு அருவருக்கத்தான் செய்தார். நாளாக நாளாக இந்த ஊரைப்போலவே அவரும் இவைகளை மிக அற்பமான சாதாரண நிகழ்ச்சிகளாகக் கருதப்பழகிக் கொண்டார்.

* * *

இந்த ஊர்ப்பாடசாலைக்கு மாறி வந்தது முதல் இந்தக் கடைசி நிமிடம் வரை மரகதம் பற்றி தனது மனத்தாளில் எழுதி வைத்துக்கொண்டிருந்த கதையை மீண்டும் ஒரு முறை வாசித்துப் பார்த்தார் சதாசிவம். தனிமையில் சுடுகாட்டு வெக்கையில் ஏலவே மரகதம் பற்றி அவர் எழுதி வைத்திருந்த கடுமையான தீர்ப்பையும் மீறிய ஒரு கருணை அனுதாபம் கதையின் கடைசி வரியைப் படித்தபோது அவருக்கு ஏற்பட்டது. நேரம் ஆக ஆக அந்த அநுதாபத்தின் வேகம் அதிகரித்துக் கொண்டே வந்து இரவு வேளையானதும் சதாசிவத்தை முன் பின் அறியாத எங்கேயோ கொண்டுபோய் நிறுத்தியது.

வானக் குளத்தில் ஒளி வெள்ளம் வற்றிவரண்டு போக திராய்ப் பூண்டுகள் படர்ந்து மொய்யெனப் பூத்ததுபோல தாரகைப் பூக்கள் மலர்ந்து கண் சிமிட்டும் முன் இரவு வேளை.

வெறும் உட்சட்டையோடு குழந்தையை அணைத்து பாலூட்டியபடி பாயில் படுத்துகிடந்த மரகதம் தூங்கிப்போன குழந்தையை ஒழுங்காக வளர்த்திப் போர்த்திய பின் கொட்டாவி விட்டபடியே எழுந்தாள். கைகளைப் பிடரியில் கோர்த்து இடுப்பை முன்னுக்கு வளைத்து நெஞ்சை நிமிர்த்தி கொட்டாவி முறித்துக்கொண்டே திண்ணையில் அரவம் கேட்டு எட்டிப் பார்த்தாள். அங்கே விளக்கு வெளிச்சத்தில் தன்னையே உற்றுப்பார்த்துக் கொண்டு இருந்த சதாசிவத்தை ஆரென்று அடையாளம் காண அவளுக்கு அதிக நேரம் ஆகவில்லை. ஆரது என்று கேட்டவள் உடனேயே வாத்தியார் ஜயாவா? வாருங்கள் வந்து நேரமாகிறதா? என்று வியப்போடு வரவேற்றாள். உட்சட்டையை மீறி வெளியே பிதுங்கிக் கொண்டு நின்ற மார்பை கைகளால் மறைக்க முயன்று சட்டென்று கொடியிலே கிடந்த சேலையை இழுத்து அள்ளி உடம்பை மூடிக்கொண்டாள். திண்ணையில் கிடந்த வாங்கொன்றை சுட்டிக்காட்டி சதாசிவத்தை உட்காரச் சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்று மறைந்தாள் மரகதம்.

மரகதத்தின் வரவேற்பு மேலும் தைரியம் ஊட்ட ‘திகு திகு’ என்று அடித்துக் கொண்டிருந்த சதாசிவத்தின் மனத்தறி… திக்… திக்கு என்று சற்று ஆறுதலாக வேகம் குறைந்து அடிக்க ஆரம்பித்தது. சின்னானும் வீட்டில் இல்லை என்று நினைக்க அவருடைய பயப் பிராந்தியின் பெரும் பகுதி பெருமூச்சாக வெளியேற வாங்கில் அமர்ந்து கொண்டு ஊமைக் கற்பனைகளின் மெல்லிய கணப்புச் சூட்டிலே குளிர்காய ஆரம்பித்தார் அவர்.

‘கோப்பி குடியுங்கள் வாத்தியார் ஐயா’

குரல் கேட்டுத் தலை நிமிர்ந்த சதாசிவம் தனக்கு முன்னால் வந்து நின்ற மரகதத்தை அடையாளம் புரிந்து கொள்ள சிறிது நேரமாயிற்று. மரகதந்தானா அது?

ஒழுங்காகச் சேலை உடுத்து தலை முடித்து முகத்தில் வாசனைப் பவுடரும் பூசியிருந்தாள் மரகதம். நெற்றியில் குங்குமம் கூட நேர்த்தியாய் இட்டிருந்தாள். அவள் அழகாக இருந்தாள். அந்த அழகை அள்ளி அனுபவிக்க முடியாத ரசிக ஞான சூனியமல்லர் ஆசிரியரான சதாசிவம். ஆனாலும் உட்சட்டையோடு கைகளைப் பிடரியில் கோர்த்து இடுப்பை முன்னுக்கு வளைத்து நெஞ்சை நிமிர்த்தி நெட்டை முறித்து நின்ற அந்த போதையூட்டும் அழகுக்கு ஈடாக இதை ஒப்புக்கொள்ள ஏனோ அவரால் முடியவில்லை. அந்த ரசனையில் மூழ்கியவராய் மரகதத்தை அரைக்கண்களால் அள்ளி விழுங்கியபடியே மடக்கென்று கோப்பியின் முதல் மடக்கை விழுங்கினார் அவர். அவரைப் பார்த்து அவருடைய தாபம் ததும்பும் பார்வையைப் பார்த்து ரசித்து நகைத்தபடியே அறைக்குள் திரும்பினாள் மரகதம்.

திரும்பி வந்த அவள் மாலையில் எனக்குத் தெரிந்த ஒரு வீட்டில் பிள்ளைப் பேறு. மருத்துவத்துக்கு அழைத்துப் போனார்கள். ஆண் குழந்தை பிறந்தது. முதல் குழந்தை. அங்கே எனக்கு ஐந்து ரூபா சந்தோஷம் கிடைத்தது என்று சதாசிவத்தைப் பார்த்துச் சொன்னாள். தனக்கு கிடைத்த அந்தப் பணத்திலே ஒரு ரூபாவைப் பறித்துக்கொண்டு சின்னான் பட்டினத்துக்குப் படம் பார்க்கப் போய்விட்டதையும் ஒரு வித அநுதாபத்தோடு சிரிப்புக்கிடையே சொன்னாள் மரகதம். அவள் கையிலே புதிய இரண்டு ரூபா நோட்டு ஒன்று விளக்கு வெளிச்சத்தில் நன்றாகத் தெரிந்தது.

எனக்கு முன்பே தெரியாதே! உனக்கு மருத்துவமும் தெரியுமா? அப்படி என்று அசடு ஒழுகி வழிய வாயைப் பிளந்தார் சதாசிவம்.

அடிக்கடி ஆட்கள் வந்து அழைத்துப் போவது அடுத்த வீட்டிலிருக்கும் உங்களுக்கு தெரியாதோ? மருத்துவம் எங்கள் பரம்பரைத் தொழில்… என்று பெரு மூச்சு விட்ட மரகதம் அந்த இரண்டு ரூபா நோட்டை இதோ உங்கள் கைமாற்று என்று கூறி சதாசிவத்திடம் நீட்டினாள். நீட்டிய அவள் கையை ஒருவித வெறியோடு பிடித்துக்கொண்ட சதாசிவம் அந்த ரூபா நோட்டை எடுத்து மரகதத்தின் உள்ளங்கையில் திணித்து விட்டு இதற்காக நான் வரவில்லை… மரகதம்.. என்று மிகவும் பரிதாபகரமாக இளித்தார். கையை இழுத்துப் பறித்துக்கொண்டே பின் எதற்காக வந்தீர்களோ? என்றாள் அவள்.

‘பின் எதற்காக வந்தீர்களோ?’

‘உரோச உணர்ச்சி பொங்கிய மரகதத்தின் இந்தக் கேள்விக்கணை சதாசிவத்தின் அறிவோடு கூடிய ஆண்மையைக் குத்திக் குடைய அந்த அவமானத்தைத் தாங்கிக் கொள்ள முடியாதவராக தலையைக் குனிந்து கொண்டார் அவர். அவருடைய தன்மான உணர்ச்சியானது குமுறிப் பொங்கியது.

‘அதுதான் அந்த ஓட்டு வீட்டுக்கார ஓவசியர் மாசிலாமணி வருகிறானே அதற்குத்தான்!.. பெரிய கற்பரசி மாதிரி!... இந்த ஊரைக் கேட்டால் தெரியும் உன் யோக்கியதை!...’

தான் வந்த நோக்கத்தையே மாற்றிக்கொண்டு ஆவேசமாக - அழுத்தமாகப் பதில் சொல்லிவிட்டு எழுந்து வெளியேறிய சதாசிவம் இருட்டில் படலைப்பக்கமாக யாரோ வருவது கண்டு வேலியோரமாக நின்ற தென்னை மரத்தில் மறைந்து கொள்கிறார்.

மரகதம்…. என்று கூப்பிட்டவாறே திண்ணையில் ஏறிய ஓவசியர் மாசிலாமணி அழுதுகொண்டு நிற்கின்ற மரகதத்தைக் கண்டு திடுக்கிட்டவராக ஏன் மரகதம்…. என்ன நடந்தது? எதற்காக அழுதுகொண்டிருக்கிறாய்? என்று கேட்டபடியே அவளை உற்றுப் பார்க்கிறார்.

ஒன்றுமில்லை என்ற மரகதம் அடக்கி கொள்ள முடியாமல் ஓ….வென்று கத்தியபடியே நீ.. இனிமேல் இங்கு வரக்கூடாது! போய் விடு! போ.. என்று பொரும ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டு அவளையே உற்றுப்பார்க்கும் மாசிலாமணியை பார்த்து அவள் மேலும் சொன்னாள்.

ஊர் தேசம் அறிய உடப்பிறப்பாக வாழமுடியாத நம் உறவைப் பற்றி ஊரார் எப்படியெல்லாம் பேசிக்கொள்கிறார்கள் என்று உனக்குத் தெரியாது! உனக்கும் எனக்கும் தொடுப்பாம்! ஒரு தாய் பெற்ற அண்ணனுக்கும் தங்கைக்கும் தொடுப்பு! ஆம் இனிமேல்.. நீ.. இங்கு வரக்கூடாது! போய் விடு!...

'ஊரைப்பற்றி என்ன அது எப்போதும் இப்படித்தான்.உண்மையை அறிய முடியாமல் யார் யாரையோ இட்டு இல்லாததையும் பொல்லாததையும் பேசிக் கொண்டிருப்பதுதான் ஊருக்குப் பொழுதுபோக்கு. எல்லாம் எனக்குத் தெரியும். எனக்கு மாறுதல் கிடைத்துவிட்டது. அதைச் சொல்லத்தான் வந்தேன். நான் இந்த ஊரை விட்டு போனபின் பைத்தியம் பொன்னி மனுஷியின் மூத்த மகன் நான் தான் என்பதை இந்த ஊர் அறிந்து கொண்டால்..'
மேலே பேச முடியாமல் மாசிலாமணியின் தொண்டை கரகரக்க கண்கள் பனிக்கின்றன. அவன் கால்களைக் கட்டிக் கொண்டு விம்முகிறாள் மரகதம்.

தென்னை மரத்தில் மறைந்து நின்ற சதாசிவத்தின் காதில் மரகதத்தின் அழுகை ஒலி தெளிவாகக் கேட்கிறது. இனியும் அங்கு நிற்க முடியாதவராகப் படலையை நோக்கி நடக்கிறார். காலில் நறுக்கென ஏறிய நெருஞ்சிமுள்ளைக் கையினால் தடவி எடுத்து வீசி எறிந்து விட்டு இருட்டில் வேகமாக நடக்கிறார் அவர்.

(பாடும் மீன் - மாசி 1967)
'வேதாந்தன் என்ற புனைபெயரில்'

++++++++++++++++++++++++++

ஆறாவது குழந்தை


கார்த்திகை மாதத்து அந்திப்பொழுது வாடைக்காற்றின் கொடுங்கோன்மைக்கு ஆற்றாது அழுது புலம்பிக் கொண்டிருந்தது வங்காளக்கடல். கடலின் அழுகை ஒலிக்கு கடற்கரை ஓரத்தில் செழித்து வளர்ந்;திருந்த தென்னையின் கீற்றுக்கள் ‘சலசல’ என்று பக்கவாத்தியம் வாசித்துக்கொண்டிருந்தன!

காவல் குடிசைக்குள் கொட்டிப் பரவி வைத்திருந்த வெள்ளை மணலுக்குள் மார்பைப் புதைத்தபடி கண்ணுக்கெட்டிய தூரம் வரை தோப்பாகக் காட்சிதரும் தென்னை மரங்களையே உற்றுப் பார்த்தபடி படுத்துக்கிடந்தான் வீரக்குட்டி.

வீரக்குட்டியின் முகத்திலே சூழ்ந்திருக்கும் கவலை மேகங்களை தள்ளிக் கொண்டு செல்ல வாடைக்காற்றினால் முடியவில்லை!

குடிசைக்கு முன்னால் பாத்திகளில் காயும் பிஞ்சுமாக பூத்துக்குலுக்கும் கொச்சிச் செடிகள் காற்றின் உதவியால் ஒன்றை ஒன்று கட்டித் தழுவி காதல் செய்து கொண்டிருந்தன. அவைகள் மீது தன் கவனத்தைத் திருப்பிய வீரக்குட்டி ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டான்.

பங்குனி மாதத்திலே பசுமாடுகளைக் கொண்டு வந்து கட்டி பசளை உண்டாக்கி வைகாசி மாதத்தில் கொச்சிக் கன்றுகளை நட்டு ஆடி - ஆவணி - புரட்டாதி ஆகிய மாதங்களில் மட்டும் பயன் பெற்று ஐப்பசி தவறினால் கார்த்திகையில் மாரி வெள்ளத்துக்கு காலையை (தோட்டத்தை) பலிகொடுக்கும் ஒல்லிக்கேணி கமக்காரர்களின் வாழ்க்கையை எண்ணி வீரக்குட்டி கவலைப்படவில்லை. தொடர்ந்து பத்து வருடங்கள் தோன்றாத கவலை இன்று மட்டும் வருவதற்கு நியாயமில்லை!..

இரக்க உணர்ச்சி இல்லாத ஒருவனுக்கு கருணாகரன் என்ற பெயர் எப்படியோ வெறும் மலட்டு மணலான கடற்கரைத் தோணாவுக்கு ‘ஒல்லிக்கேணி’ என்ற பெயரும் அப்படியே!

ஒல்லியும் இல்லாமல் கேணியும் இல்லாமல் வெள்ளைச் சீனியைக் கொட்டி வைத்தது போன்று வங்காளக் கடலருகே தோன்றும் இந்தப் பசையற்ற நிலப்பரப்புக்கு பெரிய நீலாவணை மக்கள் ‘ஒல்லிக்கேணி’ என்று பெயர் வைத்து அழைக்கும் காரணம் இதுவரை எவருக்குமே தெரியாது! மாரிகாலங்களில் காட்டு வெள்ளம் நிரம்பிக் கடலுக்கு ஓடிச்செல்லும் இந்தத் தோணாவை அடுத்து கடலுக்கும் ஒல்லிக்கேணிக்கும் இடையில் ஒருசிறு கேணி. அதற்கு பெயர் ‘வண்ணான் கேணி’ இங்கும் ஒல்லி கிடையாது! என்றாலும் ஒல்லிக்கேணி என்ற பெயருக்கு ஒரு சிறு ஆதாரமாகக் காட்சி கொடுத்துக் கொண்டிருப்பது இந்த வண்ணான் கேணிதான்!

வைத்த பெயரை காப்பாற்றிவிட வேண்டும் என்ற வைராக்கியத்தினாலோ - ‘பாடுபடுபவனுக்கு எந்த நிலமானாலும் சரிதான்’ என்ற பரந்த தொழில் ஞானத்தினாலோ பெரியநீலாவணைக் கிராமத்து உழவர்கள் இன்று ஒல்லிக்கேணியை பயிர்க்குலங்கள் நிறைந்திருக்கும் பசுமைக்காடாக மாற்றி அமைத்திருக்கிறார்கள்!

என்னதான் பாடுபட்டு உழைத்த போதிலும் வருடா வருடம் வடகீழ்ப் பருவக்காற்று வீச ஆரம்பித்து விட்டால் அது கொண்டு வந்து கொட்டுகிற மழை வெள்ளமெல்லாம் சேர்ந்து ஒல்லிக்கேணியை குளமாக மாற்றிவிடும். இதற்காக தான் இதற்குக் கேணி என்று பெயர் வந்ததோ தெரியவில்லை….

போதிய அளவு பூமி இருந்தும் இக்கிராமத்தில் உள்ள பலர் வெள்ளக் கொடுமைக்கு அஞ்சி, காலை (தோட்டம்) செய்யத் துணிவதே இல்லை. அப்படி யாராவது துணிந்து விட்டால் ஐப்பசி மாதம் ஆரம்பமாகும் முன்னரே அவர்களைக் கவலையும் பீடித்துக் கொள்ளும்.

இறந்து போனவர்களின் பூத உடல்களைப் புதைக்க மட்டும் உபயோகமாய் இருந்து வந்த மணல் தரையிலே சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் முதன்முதலாகத் துணிந்து பயிர்விதைகளைப் புதைத்து காலை நிலமாக மாற்றி அமைத்த பெருமை “ஒல்லிக்கேணி” கந்தப்போடிக்கு சொந்தமானது!

ஒல்லிக்கேணி கந்தப்போடி என்றால் பெரிய நீலாவணைக் கிராமத்தில் மிகப்பிரசித்தமான பெயர்! அந்தக் கந்தப்போடியின் ஏக புத்திரன் தான் வீரக்குட்டி!

உலக முட்டையை அடைகாத்து சூரியன் குஞ்சை பொரிக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தது இரவு என்ற கரும்பேடு!

கிழக்கு வேலி ஓரம் துலாவடிப் பக்கமாக கட்டி வைத்திருந்த காவல் நாய் பப்பியின் அனுகல் ஓசை வீரக்குட்டியின் நீண்ட எண்ணத் தொடருக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆமாம்! அது பப்பி நாயின் குரல் தான்.

வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்த வீரக்குட்டி துலாவடிப் பக்கமாக வந்தான்.

பனை வடலிகளின் கூடாரத்துக்குள் காலை நீட்டியபடி அனுகிக்கொண்டு படுத்துக் கிடந்தது பப்பி. ஏன் பப்பி…. என்ன..? என்றான் வீரக்குட்டி. தன்னைக் கண்டதும் ஓடிவந்து காலை நக்கியபடி வாலாட்டும் பப்பி இப்படி படுத்துக் கிடக்கிறது! ஏன் அதற்கு என்ன வந்து விட்டது இன்று?

அடிபட்டவன் போல அனுகிக் கொண்டிருக்கும் பப்பியை நெருங்கி உற்றுப் பார்த்தான் வீரக்குட்டி. அடடே பப்பி குட்டி போட்டிற்றியா’… என்று அவனுடைய ஆச்சரியக் குரலைக் கேட்டு தன்முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டே பலமாக அனுகியது பப்பி. வீரக்குட்டியைப் பார்க்க அதற்கு வெட்கமாக இருந்திருக்க வேண்டும்! நாய் என்றாலும் பப்பி இப்பொழுது தாய்…!

பப்பியின் அருகில் படுத்துக்கிடந்த மூன்று குட்டிகளும் பெண் குட்டிகள் என்பதைக் கண்ட வீரக்குட்டி இது நான் வளர்த்த நாயல்லவா..! என்று பெருமூச்சு விட்டபடியே மறுபக்கம் திரும்பினான். தன்னுடைய மனைவி தங்கத்துக்கும் பப்பிக்கும் வித்தியாசமே இல்லை! தங்கம் பெற்ற குழந்தைகள் ஐந்தும் பெண்கள்! பப்பி போட்ட மூன்றும் பெண் குட்டிகள்! வீரக்குட்டியின் அதிஷ்டம் பப்பிக்கும் அடித்துவிட்டதோ…?

இன்றோ நாளையோ தங்கம் ஆறாவது குழந்தைக்கும் தாயாகப் போகிறாள். இதை நினைத்துக் கொண்ட போது வீரக்குட்டியின் முகத்தில் பழையபடி இருட்டு விழுந்து விட்டதே! ஏன்?

ஐந்தோடு ஒன்றாக ஆறாவதையும் பெற்று அள்ளிக்குடிக்கும் கஞ்சியையும் கிள்ளிக்குடிக்க வைக்கப் போகிறாளோ தங்கம் என்றெல்லாம் வீரக்குட்டி கவலைப்படவில்லை. ஆறு என்ன நூறு பிறந்தாலும் சோறு போட அவன் கையில் மண்வெட்டி ஆயத்தமாக இருக்கிறது. ஆனாலும்…

தங்கத்துக்குப் பிறக்க இருக்கும் ஒரே ஆண்குழந்தை - ஆறாவது குழந்தை போயும் போயும் இந்த அடைமழை காலத்தில் ஓலை கட்டாமல் ஒழுகிக் கரையும் ஓட்டை வீட்டுக்குள் தான் பிறக்க வேண்டுமா..?

பெண்ணாக ஐந்து பிள்ளைகளைக் கொடுத்த ஆண்டவன் இந்த ஆறாவது குழந்தையை என்றாலும் ஆணாகத் தரமாட்டானா…? … தருவான்!

இப்படி ஒரு நம்பிக்கை வீரக்குட்டிக்கு!

ஆண்குழந்தையை நினைக்க வீரக்குட்டியின் ஆசையுள்ளம் ஊமைக்கற்பனையின் மெல்லிய சூட்டிலே குளிர்காய ஆரம்பித்தது! ஆசைக்கு என்று இல்லாவிட்டாலும் கூட மகன் என்ற பெயரிலே எள் இறைத்து நீர் வார்த்து கொள்ளிவைத்துக் குடம் உடைத்து நரகத்துக்குப் போகாது காப்பாற்றவாவது வீரக்குட்டிக்கு ஒரு புத்திரன் வேண்டாமா?

வேலியில் நின்ற பனை வடலிகளில் ‘படக் படக்’ என்று விழுபவை கற்கள் அல்ல. மழைத்துளிகள்! வீரக்குட்டியின் மண்டையை உடைத்து நொருக்கும் சம்மட்டிகள் அவை!! திடீரென்று ஏதோ நினைவுக்கு வந்தவனாக பப்பியைத் திரும்பிப் பார்த்தான் வீரக்குட்டி.

நாலாவது குட்டியையும் ஈன்று விட்ட களைப்பில் தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருந்தது பப்பி. கண்களுக்குள் இருட்டு விழுந்துவிட்டாலும் கடைசியாகப் பிறந்திருந்த அந்தக்குட்டியை கூர்ந்து கவனித்தான் வீரக்குட்டி.

ஆமாம்! அது ஆண்குட்டி! அழகான மறைக்குட்டி!! தன் அக்காமாருடன் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தது.

வீரக்குட்டியின் உள்ளத்திலே நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சுவது போல “பளிச்” சென்று மின்னல் வெட்டியது! அவசர அவசரமாக துலாவடியில் கிடந்த ஓலைமட்டைகளை எடுத்து வந்து பப்பிக்கும் குட்டிகளுக்கும் பாதுகாப்புச் செய்துவிட்டு குடிலுக்குள் நுழைந்தான் வீரக்குட்டி.

ஊர்ப்பக்கமாக குரவை ஒலியும் அதைத்தொடர்ந்து சீன வெடிச்சத்தமும் கேட்டன. பப்பி ஆண்குட்டி போட்ட மகிழ்ச்சியினால் யாரும் அங்கே குரவையிட்டு வெடி கொழுத்தவில்லை. வட்ட விதானையார் சேத்திரப் பிள்ளையின் மகள் நாச்சியம்மா பெரியபிள்ளையான “சாமத்திய”க் கல்யாணந்தான் நடந்து கொண்டிருக்கிறது.

வாய்க்காற் கட்டிலே பொழுதோடு கிண்டி எடுத்து வைத்திருந்த “மையோரிக்” (மரவள்ளிக்) கிழங்குகளை ஒரு குடத்தில் போட்டு வலது கையில் பிடித்துக்கொண்டு வேலியில் உதிர்ந்த காயான் சுள்ளிக் கட்டைத் தலையில் வைத்து இடது கையால் பிடித்தபடி ஊர்ப்பக்கமாக நடக்கத் தொடங்கினான் வீரக்குட்டி.

‘அடேயப்பா விளக்கும் வச்சிற்றாங்க..’ என்ற வீரக்குட்டியின் குரலைத் தொடர்ந்து “கட்டியகாரனும் வந்து களரியில் தோற்றினானே….ஏ…. ஏ……ஏ…” என்ற விருத்தமும் கேட்டது.

மேற்கே கிராமத்தின் மத்தியில் கிழக்குமுக வாயிலோடு கம்பீரமாகக் காட்சிதரும் விஷ்ணு ஆலயத்தில் கபடாக்கார கணபதி அண்ணண் விளக்கேற்றி இருந்தார். கோயிலுக்கு முன்னால் வட்டமாய்ப் படர்ந்து வளர்ந்து நிற்கும் கிழட்டுப்புளிய மரத்தின் கீழ் மேடை அமைத்து பாரதப்போர் “பதினேழும் பதினெட்டும்” நாட்டுக் கூத்துப் பழகிக் (ஒத்திகை) கொண்டிருக்கிறார்கள். மாலையானதும் ஆரம்பித்து நடைபெறும் ஒத்திகைக்கு கூத்தின் முதல் பாத்திரமான கட்டியகாரனுடைய வரவு விருத்தந்தான் இப்பொழுது கேட்ட அந்தப் பாட்டு!

வீரக்குட்டியின் கால்கள் இயந்திரம் போல அசையத் தொடங்கின! அப்படியென்றால் ஊருக்கும் ஒல்லிக்கேணிக்கும் இடையில் உள்ள கூப்பிடு தூரத்தை நொடியில் அவன் கடந்து விடுவான் என்பது கருத்து!

மழையின் தூறல் துமியாக மாறியது. தலையில் இருந்த கொள்ளிச் சுள்ளி ஒன்று வீரக்குட்டியின் கைக்குள் அகப்பட்டு “படீர்” என்று ஒடிந்தது! அது வீரக்குட்டியின் உள்ளத்தின் எதிரொலியா?

‘ஐயோ கடவுளே.. பொறுத்தது தான் பொறுத்தது இன்னும் ரெண்டு நாள் பொறுக்கக் கூடாதா இந்த மழைக்கி..? கொச்சிக்கா யாவாரி குலசேகரத்தார் வியாளக்கிழமைக்கி காசி கட்டாயம் தாறன் எண்டாரே! இண்டைக்குச் செவ்வா. இடயில ஒரு நாள் தானே….’

‘ஐப்பசியில தாண்டு போற கால. காத்தியல் கடசாகியும் தாளல்ல எண்டு மத்தக் காலக்காறன் எல்லாம் சந்தோசப்படுறானுகள்! நாம மழையக் கோவிக்கிறம்!... இம்.. நானும் பத்து வரிசமா இந்தக் காலப் புளப்பச் செய்யிறன். ஒரு வரிசமெண்டாலும் இப்பிடி ஒரு மட்டுப் பாட்ட விடல்ல அந்த ஆண்டவன்! இந்த வருசம் எனக்கு காலம் பகச்ச பகைய நினைச்சாத்தான் வகுறு பத்தி எரியுது….’

‘சீதனமெண்டு போட்டு மாமன் மாமி அள்ளித்தராட்டியும் பள்ளவெளி வயலுக்க குண்டு மறஞ்ச முத்தட்டில இருபது மரக்கால் விதபூமி காணுமே! எண்ட சீதேவி விளஞ்சால் அதிர செப்பம் என்ன! அது என்னெண்டாலும் அயின பூத்திரிக்க.. பதர் எண்டும் மண்ணாங்கட்டி எண்டும் வகுத்துப் பாட்டக் கொண்டு ஒப்பேத்தி இருக்கும்… கையுட்டுதே! சீ…! மூதேவிப் புள்ள வகுத்தில உற்பத்தியான நாளைக்கி…..?’

‘சீச்சீ! இது என்ன நினைப்பு?’ வீரக்குட்டி நாக்கைக் கடித்துக் கொண்டான். எண்ணக் கூடாததை எண்ணிவிட்டது போன்ற இரக்க உணர்ச்சி அவனை உலுக்கியது. ஆமாம். பிறக்கப் போவது ஆண்குழந்தை என்ற நப்பாசையின் பிரதிபலிப்புத்தான் அது!

மழையின் வேகம் வரவர அதிகரித்தது. கூரை இறந்து போன ஓட்டை வீட்டின் களித்தரையில் குழிகளை உண்டாக்குவது போல வீரக்குட்டியின் இதயத்தரையிலும் மழைத்துளிகள் குழி;பறிக்க ஆரம்பித்தன!

ஆவீன மழை பொழிய இல்லம் வீழ அகத்தடியாள் மெய்நோக… எப்பொழுதோ தன்னுடைய கடன்காரன் ஒருவன் சொல்லிக்காட்டிய பாட்டின் அடி வீரக்குட்டியின் காதுக்குள் ரீங்காரமிட்டபடி இருந்தது.

‘நான்தான் என்ன செய்யிற..? பஞ்சுபடாப் பாடு பதினெட்டுப் பாடும் பட்டன். வீட்டுக்கு ஓலைமேஞ்சு (கட்டிப்) போடலாம் எண்டு! முடியாமப்; போச்சு. நிறமாதமும் கிழமையுமா மாரிமழை காலம் தங்கத்துக்கு வகுத்துக்க வாய்க்க நொந்திற்றெண்டால் என்ன செய்வன் கடவுளே! கல்முனை ஆசுபத்திரிக்கெண்டாலும் கொண்டுபோய் சேத்திருவம் எண்டு கெஞ்சாத மாதிரிக் கெஞ்சிப் பாத்தன். அவள் கேட்டால்தானே!’

‘ஐஞ்சு புள்ளைகளையும் வீட்டில பெத்த நான் வெக்கமில்லாம அதுக்கு மாத்திரம் ஆசுபத்திரிக்குப் போகவா? எனக்கொண்ணாப்பா! வெள்ளமெண்டான தண்ணியெண்டான கழுத்தில கத்தி வச்சாலும் வரமாட்டன்’

தங்கத்தின் இந்த வார்த்தைகள் வீரக்குட்டியின் ஆண்மையைக் கிண்டல் செய்வன போலும் அதே நேரத்தில் அறியாமை நிரம்பிய கிராமியப் பெண்மைக்கு ஈடுகொடுப்பது போலும் இருந்தன!

‘கல்முனை ஆசுபத்திரிக்கு இப்ப வந்திருக்கிற டாகுத்தர் ஐயா நல்ல கெட்டிக்காற மனிசனாம்! குணமும் தங்கக் கட்டியாம்! எல்லோரும் சொல்லுறாங்க. இவள்தான் பெரிய ராசாத்தி மாதிரி ஒண்ணாதாம்… அவள்ற சாதிசனத்திர உதவிகள அவளுக்கு இன்னுந் தெரியல்லப் போல… அண்ணன் அண்ணன் எண்டு உசிரவிடுவாள்…. வாத்தி வேலைக்குப் படிக்க தாலிக் கொடியக் காண ஈடு வச்சிக் குடுத்தாள்! இண்டைக்கு இவளுக்கு வந்திரிக்கிற இக்கட்டுக்கு உதவி செய்ய அந்த வாத்தியார் அண்ணன் வந்தானா….’

‘நேத்து நடுச்சாமம் பேயும் குறுக்கு வையாத நேரத்தில அவண்ட வீட்டுக்குப் போய்…. மச்சான் தங்கம்மா வகுத்திலயும் வாயிலயுமா இரிக்கி. வீடு ஒழுகுது. ஒலை மேஞ்சுக்க இல்ல! நீ சம்பளம் எடுத்திருப்பாய் அம்பது ரூபா மாறித்தா மச்சான். கொச்சிக்கா யாவாரி வியாழக்கிழம தந்திருவான். திருப்பித் தந்திருவன்… எண்டு கேட்டா…….அவர் தம்பி கதிர்காமத்துக்குக் காத்தியல் திருவிழாவுக்கு வெளிக்கிட்டுட்டு நிக்கிறார்!’

‘ஐயோ கதிர்காமக் கந்தா! தங்கராசா வாத்தியார் மச்சானும் அவர்ர பொண்டாட்டிப் புள்ளயும் தவறாம ஆறு வருசம் வந்திற்றாங்க. இந்த வரிசம் வந்து ஏழாவது கல்லையும் து{க்கி வைக்கப் போறாங்க! கோயில் கொளத்துக்குப் போகாமல் மருந்து மாயம் செய்யாம வீட்டில சும்மா கிடக்கிற தங்கம் ஐஞ்சு பெத்து ஆறாவது பெறப்போகுது! தங்கராசா எண்டபேர் தங்கம்மா எண்டு உண்ட காதில விழுந்துதோ என்னவோ! முருகா! எல்லாம் உண்ட சோதினதான்…..’

‘இது கடைசி முறயாம்! வாடகக் காறுக்கும் அச்சவாரக் காசி குடுத்திற்றாராம். அதுக்கு மட்டும் நூறு ரூபாயாம்! அம்மோய்!! நூத்தியறுபது கட்டையெண்டா காறுக்காரன் கேப்பாந்தானே! “இனிமத்தச் செலவுகள் காரியம் கணக்குகள்…. நான் எங்க போற மச்சான்? வேற ஆருட்டயாவது பாத்து வாங்குங்க…” எண்டு சொல்லுறான் தங்கராசா.’

‘வேற ஆருட்டயும் பாத்து வாங்கட்டாம்!’

‘இந்தப் பெரிய ஆலோசனையக் கேக்கத்தானா அவரிட்டப் போனநான்? வாத்தியாரல்லவா… உபதேசம் சொன்னார்! அது போதாதா?’

“அருச்சுனா என்முன்னே நில்லடா - உந்தன்
ஆண்மையைக் காட்டி நீ வெல்லடா!!
அக்கினி பாணங்கள் அனுப்பியுன் உயிர்தனை
அரைநொடி தனிலே முடிக்கிறேன் பாரடா!
தா..ததிங்கிண தோம்!

கூத்துக் களரியில் அருச்சுனனுக்கும் கன்னனுக்கும் கடுமையாக போர் நடந்து கொண்டிருந்துது.

'அன்னம்மா…!' வழக்கம் போல மூத்த பெண்ணைக் கூப்பிட்டுக் கொண்டே தலையில் இருந்த சுள்ளிக் கட்டை அடுப்படியில் போட்டான் வீரக்குட்டி. ‘அப்பன் வந்திற்றா..ரே..!’ மூன்றாவது பெண்தான் கத்தினாள். மஞ்சு வீட்டுக்குள் நுழைந்த வீரக்குட்டிக்கு “திக்” கென்றது!

தூற்றல் மழைக்கு மட்டும் தாக்குப் பிடிக்கக் கூடிய மூலை ஒன்றில் ஐந்து பெண்களும் கொடுகிக் கொண்டே அருகில் குந்திக் கொண்டிருக்க நடுவிலே படுத்துக் கிடந்தாள் தங்கம்.

‘அப்பா. அப்போ… அம்மாக்கு.. வகுத்துக்க குத்துதாம் அப்பா! சோறு தின்னாட்டித்தானே வகுத்துக்க கீரப்புச்சி குத்தும் என்னப்பா? அக்கா அம்மாக்கு கருக்கல் போட்டுக் கொடுத்தப்பா…! பாவம்!.. அம்மா குழறுதப்பா…’ மூன்றாவது பெண் கனகம்மா தான் வீரக்குட்டியின் கால்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க சொல்லி முடித்தாள்.

‘ஏங்கா புள்ள… மெய்தானா அன்னம்?’ மூத்தமகள் அன்னம்மாவிடம் கேட்டான் வீரக்குட்டி.

அடுப்புக்குள் இருந்த பொச்சி மட்டையை எடுத்து ஊதி விளக்கைக் கொளுத்திக் கொண்டிருந்த அன்னம்மா .. ‘ஓமப்பா அம்மாக்கு வாய்வாம்..’ என்று கூறிக்கொண்டே வீட்டுக்குள் வந்தாள். அன்னம்மாவின் முகத்திலே அடக்கமான ஒரு புன்னகை நெளிந்து மறைந்தது!

மனைவி பக்கம் திரும்பிய வீரக்குட்டி ‘ஏன் தங்கம் உனக்கு மாதக்கணக்குச் சரியாத் தெரியுந்தானே..? ஏதும் வாய்வு கீய்வோ நோக்காடுதானோ…?’ என்றான் அவனுடைய குரலில் நடுக்கம் தோய்ந்திருந்தது.

உடம்பை எட்டாக வளைத்து சோம்பல் முறித்துக் கொண்டே ‘நோக்காடு போலதான் கிடக்கு! இப்பதான் அன்னம் கருக்கல் போட்டுத் தந்து குடிச்சனான்… சுணங்கிப் பாப்பம்.. எதுக்கும் நீங்க போய் மருத்துவிச்சி பொடிச்சாத்தை மனிஷியையும் பரிசாரி சின்னத்தம்பியாரையும் கூட்டிற்று வாங்க.. கைய ஒருதரம் காட்டிப்பாப்பம்’ என்றாள் தங்கம்.

‘ஏன் தங்கம் மத்தியானம் நீ ஒண்டும் தின்னல்லயா?’ துண்டைக் கையில் எடுத்து உதறிக் கொண்டே கேட்டான் வீரக்குட்டி.

‘ஓமப்பா.. மத்தியானம் அம்மா சோறு தின்னல்லப்பா! மையோரிக் கிழங்குக்கறி கூடாதாம்.. அதுதான் பூச்சிக் குத்துது.. என்னப்பா..!’ குழந்தை அன்னம்மா தன் சொந்த அநுபவத்தை வலியுறுத்திக்கேட்டாள்..

அதற்கு விடையாக வீரக்குட்டியின் வாயில் இருந்து இம்…! என்று பெருமூச்சு வெளியேறியது. ‘அய்யோ…! அம்மா..!!’ தங்கம் அனுக ஆரம்பித்தாள். விடுவிடு என்று வெளியேறி நடந்தான் வீரக்குட்டி. ஏனோ தெரியவில்லை வீரக்குட்டிக்கு பப்பி கடைசியாகப் போட்ட மறைக்குட்டியை ஆண்குட்டியை அடிக்கடி ஞாபகம் வந்தது. “பளிச்” மின்னல் வெட்டியது. அந்த வெளிச்சத்தில்…

* * *

தங்கராசா வாத்தியாரின் கடப்புக்குள் (படலைக்குள்) தெரு ஓரமாக கருப்பு நிறக் கார் ஒன்று நின்றது. காரைச்சுற்றி சிறு சனக்கூட்டம்! அவர்கள் எல்லாரும் அக்கம் பக்கத்தில் இருக்கும் உறவினர்கள். தங்கராசா வாத்தியாரையும் மனைவியையும் கதிர்காமத்துக்கு வழியனுப்பக்கூடி இருந்தார்கள். ‘அரோஹரா..! அரோஹரா..!!’ வழி அனுப்ப வந்தவர்கள் தான் பிரியாவிடை கூறினார்கள் வாத்தியார் தம்பதிகளுக்கு!

எழுந்துபோய் அண்ணனுக்கும் மச்சாளுக்கும் பிரியா விடை கொடுக்க முடியவில்லையே! என்ற ஏக்கத்தோடு படுத்துக்கிடந்த படியே ‘அரோஹரா! அரோஹரா!!’ என்று விடைதந்தாள் தங்கம்! தங்கத்தோடு சேர்ந்து பிள்ளைகளும் அரோஹரா.. சொன்னார்கள்.

தெருவில் நடந்து கொண்டிருந்த வீரக்குட்டியும் தன்னை மறந்துவிட்ட நிலையில் ‘அரோஹரா! அரோஹரா!!’ என்று கத்திவிட்டான்.

‘பூம்..! பூம்…!!பூம்..!!!’ கார் புறப்பட்டுப் போனது.

ஐயோ பாவம் பொன் வேண்டிப் புகழ் வேண்டியா போகிறார்கள் கதிர்காமத்துக்கு? ஆறு வருடம் போய்… ஏழாம் வருடம் இப்பொழுதும் போகிறார்கள். பிள்ளை வரம் கேட்டு! பிள்ளையே இனிமேல் வேண்டாம். போதும் என்று மூக்கால் அழுத வீரக்குட்டி தவறாமல் இரண்டு வருடங்களுக்கு ஒரு தரம் மருத்துவிச்சியிடம் போய்க் கொண்டிருக்கிறான்.

‘இதுதான் உலகம்! இம்….’ என்று பெருமூச்சுவிட்டான் வீரக்குட்டி.


* * *

தங்கத்துக்கு குளிசை கொடுக்க சுடுநீர் வைத்துக் கொண்டிருந்தான் வீரக்குட்டி. அதுவரை தூறிக் கொண்டிருந்த மழை சளசள என்று ஒரேடியாகக் கொட்ட ஆரம்பித்ததும் அடுப்பெல்லாம் நனைந்து அவிந்துவிட்டது. நகச்சூடு சுட்டிருந்த நீரை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடினான் வீரக்குட்டி.

வீடெல்லாம் ஒழுக்கு நீர்! ஒரு மூலையிலே கிடந்த சாக்குத் துண்டுகளை எடுத்து உதறித் தங்கத்தின் கால்மாட்டில் போட்ட வீரக்குட்டியிடம்..

‘தம்பி நீ புள்ளயளயுங் கூட்டிற்று வெளியால போ பாப்பம். அதுகளக் கொண்டு அடுத்த வீட்டிலயாவது விட்டிற்று கெதியா வாம்பி! பன்னீர்குடமும் உடைஞ்சி போச்சி…! பரிசாரி சின்னண்ணனை வெத்திலயத் தேங்காய ஓதச்சொல்லு!’

‘ஏனம்பீ வீட்டுக்கு ஓலகட்டாம விட்டுற்றாய்! மாரிகாலம். மாதஞ்செண்ட புள்ளத்தாச்சியையும் வச்சிற்று என்ன செய்யப் போறா..? ஆசுப்பத்திரிக் கெண்டாலும்… கொண்டு போகாமல்… இதென்ன மழையப் பெய்யுதப்பனே..! இண்டைக்கெண்டு இந்த மழையும் காத்திற்று இருந்ததானா? தாயே பத்திர காளி! நீதான் எல்லாத்துக்கும்… துண. சுவர் ஓரமா படுக்காத புள்ள தங்கம். இஞ்சால கொஞ்சம் தள்ளிப் படுகா… காளித்தாயே வில்லங்கம் வராமல் காப்பாத்து!’

ஊர்பொது மக்களின் அழுக்கு உடைகளைச் சுத்தம் செய்யும் பழக்கத்தினால் தன்னுடைய உள்ளத்தையும் வெள்ளையாக வெளுத்து வைத்திருந்த மருத்துவிச்சி பொடிச்சாத்தைதான் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

பரிசாரியார் கையில் வெற்றிலையை எடுத்து ‘ஓம்! ஓம்!! அரி அரி காளி அட்சரகாளி பத்திரகாளி பறந்து நீ வாடீ!’ என்று மந்திரத்தை ஆரம்பித்தார்.

‘ஆ! அம்மா….!!’ தங்கத்தின் முனகலைத் தொடர்ந்து மழையின் ஆவேசமும் கூடியது! சுளீர்! சுளீர்..!! என்ற மின்னல் சவுக்குகள் வானத்தை ஓங்கி ஓங்கி அறைந்தன! நெடுமலை ஒன்று உடைந்து சரிந்து வீழ்ந்தது போல இடி இடித்து முழங்கியது! பேய்க்காற்று தென்னங் கீற்றுக்களைப் பீய்த்து வீச ஆரம்பித்தது!

‘குவா..! குவா..!! கு…வா…ஆ!!!’ குழந்தை! ஆமாம். முதன் முறையாக உலகத்தின் பயங்கரங்களைப் பார்த்துவிட்ட குழந்தை வீறிட்டு அலறியது!

‘உலக்கை எறியம்பி வீரக்குட்டியே! ஆம்பிளப் புள்ள!!’ என்று உரத்துக்கத்திய மருத்துவிச்சியின் வாய்மூடுவதற்குள் கூரைக்கு மேலால் பறந்தது பாலை உலக்கை ஒன்று! ஐந்து முறைகள் விளக்கு மாற்றைத் தூக்கி எறிந்து அலுத்துப்போன வீரக்குட்டியின் கைகளுக்கு இன்று பெருமை பிடிபடவில்லை!

வீடெல்லாம் வெள்ளம் பரவி ஓடியது. குளிர் தாங்க மாட்டாமல் குழந்தையும் தாயும் “வதவத” என்று நடுங்க ஆரம்பித்தனர். பல்லோடு பல் மோதிக் கொள்ள இ…ம்.. இம்… என்று அனுக ஆரம்பித்தாள் தங்கம். கீச்சிட்டு அலறியது குழுந்தை..

‘மாலை விளக்கெரிய மணவாளன் சோறுதின்ன
பாலன் விளையாட ஒரு பாக்கியந்தா ஆண்டவனே…!’

தங்கம் அடிக்கடி பாடி ஏங்கிய கிராமியக்கவிதான் இது. இநதக் கவியைப் பாடிப்பாடி அவள் கண்ட கனவு பலித்துவிட்டது! ஆனால்…

‘ஐ… ஐ…… ஐ….. யோ… யோ…யோ…’ தங்கத்தின் பற்களுக்கிடையிலே பட்டு ‘ஐயோ’ என்ற சொல்லு இப்படி அரைபட்டுக் கொண்டிருந்தது! இடுப்பிலே “படீர்” என்று ஒரு வெட்டு! உடம்பெங்கும் ஈட்டி எறிந்தாற் போல வலி! காய்ச்சல் நெருப்பாக கொதித்தது. வாயில் வந்தவற்றையெல்லாம் பிசத்த ஆரம்பித்துவிட்டாள் தங்கம்!

‘இனியும் இஞ்ச வச்சிற்று இரிக்கிறது எனக்குப் பிடிக்கல்ல மச்சான் வீரக்குட்டி! சுவரும் விழத் தொடங்கீத்து! மெல்லவாக தாயையும் புள்ளயையும் தூக்குங்க பாப்பம். தங்கராசா வாத்தியார் குசினித் திண்ணைக்கயாவது கொண்டு போய் சேர்ப்பம்.’

குடையை விரித்துப்பிடித்தபடி திண்ணையில் நின்று கொண்டிருந்த பரிசாரியார் சொன்னவற்றை பொடிச்சாத்தை மனிஷியும் தலையை ஆட்டி ஆமோதித்தாள்.

கொடுங்கைக்குள் தங்கத்தை தூக்கி எடுப்பதற்குக் குனிந்த மருத்துவிச்சி.. திடுக்கிட்டுப் பரிசாரியாரைப் பார்த்தாள்! ‘உடம்பெல்லாம் ஓடிக் குளுந்து போச்சி! கைகாலெல்லாம் விறச்சாப்பலகிடக்கு.. கையப் புடிச்சிப் பாரண்ணே’ என்றாள்.

மழையும் கொஞ்ச கொஞ்சமாகக் குறைந்து கொண்டு வந்தது. தலையை ஒருபக்கமாகச் சாய்த்துப் பிடித்துக் கொண்ட பரிசாரியார். தங்கத்தின் கை விரல்களை நெட்டிமுறித்துவிட்டு நாடியைப் பரிசோதிக்கத் தொடங்கினார். பரிசாரியாரின் முகத்திலே உணர்ச்சியின் கோடுகள் பின்னிப்பின்னி விழுந்தன! அவருடைய கைகள் திடீரென்று நடுங்க ஆரம்பித்தன.. பரிசாரியாருடைய கைகளிலிருந்த தங்கத்தின் கை மெல்ல மெல்லக் கீழே வந்து கொண்டிருந்தது! கண்களிரண்டும் தாமாகவே மூடிக் கொண்டு விட்டன! தங்கம் செத்துக் கொண்டிருந்தாள்! அவளுடைய உதடுகள் எதையோ சொல்லத் துடித்தன! அவள் இனிமேல் எதையும் சொல்ல முடியாது! ஆமாம். அவளுடைய தலை சாய்ந்து விட்டது! தங்கம் ஆவியோடு ஆவியாகக் கலந்து விட்டாள்!

‘தாயே பத்திரகாளி!’ என்று கத்தினாள் தாய்க்கு தாயாக அங்கிருந்த பொடிச்சாத்தை மனுஷி! ‘குளிர் சன்னிவாத சுரம் அடிச்சிப் போட்டுது’ என்றவாறே சால்வையை முகத்தில் போட்டுக்கொண்டு விக்கினார் பரிசாரியார்!

‘ஐயோ… தங்கம்..!’ வீரக்குட்டியைத் தொடர்ந்து குழந்தைகள் கதறினார்கள். அவர்களோடு சேர்ந்து கொண்டு ஆறாவது ஆண்குழந்தை - அப்பொழுதான் பிறந்த அந்தக் குழந்தையும் அலறியது!

* * *

பூம்…! பூம்..!! பூம்….!!! வெள்ளிக்கிழமை மாலை நேரம் தங்கராசா வாத்தியார் தம்பதிகளை கதிர்காமத்திலிருந்து அபாயம் எதுவும் இன்றி வீட்டுக்குக் கொண்டு சேர்த்து விட்ட பெருமையைப் பறைசாற்றிக் கொண்டே தன் இடத்துக்குப் பறந்து சென்றது கார்… வீட்டுக்குள் நுழைந்த வாத்தியாரையும் மனைவியையும் வீறிட்டு அலறி வரவேற்றது ஒரு பிஞ்சுக்குரல்!

குசினித் திண்ணையிலே வீரக்குட்டியின் ஆறாவது குழந்தையை கைகளில் ஏந்திக் கொண்டு நின்ற பரிசாரியார் சின்னத்தம்பியைக் கண்டு தம்பதிகள் திடுக்கிட்டனர்.

‘பரிசாரியார் அது யாருடைய பிள்ளை..’ வாத்தியார் கேட்டார்.

‘உங்கட தங்கச்சி.. தங்கம்மா பெத்த புள்ள தம்பி! ஆம்பிளப் புள்ள. நீங்க கதிர்காமத்துக்கு போன அண்டு ராவுதான் பிறந்தது! என்ன செய்யிற வளத்தெடுக்க தாய் குடுத்து வைக்கல்ல..! …தங்கம்…’ என்றவாறே அழ ஆரம்பித்துவிடார் பரிசாரியார்.

கைகளை நீட்டியபடி குழந்தையிடம் ஓடி வந்தாள் வாத்தியார் மனைவி. ‘மச்சாள்…!’ என்று கேவியவாறு குழந்தையை பரிசாரியாரிடம் வாங்கிக் கொண்டாள். இதைக் கண்ட தங்கராசா வாத்தியார் கண்களைக் கைக்குட்டையால் துடைத்து விட்டுக் கொண்டார். ஒன்று விட்ட தங்கையான தங்கத்தின் பிரிவுக்கு ஆற்றாதுதான் கண்கனை அவர் துடைத்திருக்க வேண்டும்.

‘புள்ளய உங்களிட்டத் தாறத்துக்கு வீரக்குட்டிக்கு அடியோட விருப்பம் இல்ல. கொடிக்கி காய் பாரமா எண்டு கேக்கான்… நான் பேசிப் போட்டன். மடத்தனமாக இந்த அழகான ஆம்பிளப்புள்ளய கெடுத்துப் போடாத எண்டு! உங்களுக்கும் புள்ளகுட்டி இல்ல.. இதுகும் கதிர்காமக் கடவுள்ற கட்டளதான். கேட்டவரம் ஏழாம் வரிசத்தோட கையில கிடச்சிருக்கு! கவனமாக வளத்தெடுங்க புள்ள. நான் வாறன்.’ சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டு வெளியேறினார் பரிசாரியார். போன தாயை எண்ணி ஏங்கியோ.. புதியதாயைக் கண்டு பயந்தோ தெரியவில்லை குழந்தை கத்தியது.


* * *

ஒல்லிக்கேணிக் காலைக்குள் பப்பி பலமாக ஊளையிட்டது! தூரத்தே வந்து கொண்டிருக்கும் தன் எசமான் வீரக்குட்டியைப் பலநாள் கழித்துப் பார்த்த மகிழ்ச்சியில் நிச்சயமாக அது ஊளையிட்டு உறுமவில்லை!

பப்பி.. ஆம்.. அது தான் பெற்ற பெட்டைக்குட்டி மூன்றையும் வெள்ளத்துக்குப் பலிகொடுத்துவிட்டு நான்காவது பிறந்த ஆண்குட்டியை பசி பொறுக்க முடியாது கடித்துத் தின்று விட்ட வெறியிலே குரைக்கிறது என்பது வீரக்குட்டிக்குத் தெரியாது..!

++++++++++++++++++++++++++

முத்துலிங்கம் மேலே போகிறான்!


பொழுது விடிந்தது முதலே முத்துலிங்கம் பரபரப்பாக காணப்பட்டான். இன்றைக்கு அவனுக்கு நேர்முகப் பரீட்சைக்கு அழைப்பு வரும். தொழிற்கந்தோர் நேற்றே கடிதங்களைத் தபாலில் சேர்த்துவிட்டதாக அடிக்கடி அங்கு போய்வரும் அவனுடைய நண்பன் அழகையா நேற்றே சொல்லியிருந்தான். இரவு அவனுக்கு தூக்கமே வரவில்லை.

இன்னும் ஐந்து நாளில் நேர் முகப்பரீட்சை. அதற்குப் பின் ஆஸ்பத்திரியில் அரசாங்க ஊழியம். அதற்குப் பின் அவனால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அப்பாடா என்று பெருமூச்சு விட்டான்.

காலைக் கடன்கள் முடிந்தன. அம்மா சங்குபதி அடுப்படியிலே பிட்டு அவித்துக் கொண்டிருந்தாள். பிட்டு வாங்க வருவோர் போவோர் அடுப்படியிலே அமர்ந்து காலை பசியாறுவோர் என்று அம்மாவைச் சுற்றி அடிக்கடி ஆட்கள் வந்து போனார்கள். அடுப்படி ஆரவாரம் அடங்கும் மட்டும் பொறுமையாக காத்திருந்தான் முத்துலிங்கம். அதற்கிடையில் தன் காலை உணவாகக் கிடைத்த புட்டை வெட்டி முடித்து ஏப்பம் விட்டான்.

தலைமுதல் உள்ளங்கால்வரை சரத்தால் இழுத்துப் போர்த்தியபடி திண்ணையில் வெயில் விழுவதையும் கவனிக்காமல் இன்னமும் தூங்கிக் கொண்டிருந்தார் முத்துலிங்கத்தின் அருமை அப்பன் ஆறுமுகம். திண்ணை இறப்பிலே இவருடைய தளைக்கயிறு நிம்மதியான அவரைப் போலவே தூங்கிக் கொண்டீருந்தது.

என்ன இன்றைக்கு அப்பாவுக்கு லீவு நாளோ? இதுவரை தொழிலுக்குப் போயிருக்க வேண்டியவர். இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறாரே! உடம்பு சரியில்லையோ? பாவம்! அவரும் அவருடைய மரமேறும் தொழிலும் நாளெல்லாம் தேங்காய் பறித்தாலும் நான்கு ரூபா தேறாது. மரமேறி என்று ஊருக்குள் பட்டம் மட்டும் பெரிதாக இருக்கிறது.

மரமேறப் போகாதே என்று எத்தனை முறை சொல்லியாயிற்று. மனுஷன் கேட்டால் தானே! எனக்கு எவ்வளவு அவமானம்!

முத்துலிங்கம் இப்படி நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே போர்;வையை விலக்கி கொட்டாவி விட்டவாறே எழுந்து சுவரில் சாய்ந்து கொண்டு ‘அடேயப்பா நல்ல மதியமாப் போச்சு!’ என்றார் ஆறுமுகம்!

‘முகத்தைக் கழுவிற்று வாவன் புட்டு ஆறப் போகுது’ என்றாள் சங்குபதி. கிணற்றடிக்குப் போய்த் திரும்பி வந்த ஆறுமுகம் அடுப்படியில் உரலில் உட்கார்ந்தவாறே உதிர்ந்த பிட்டையும் பழங்கறியையும் பதம் பார்க்க ஆரம்பித்தார்.

முத்துலிங்கம் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தவன் தொண்டையைச் செருமிக் கொண்டான்.

‘அம்மா சங்கதி தெரியுமா?’

‘என்ன கண்டறியாத சங்கதி’ என்றாள் அம்மா..?

‘எனக்கு உத்தியோகம் ஒண்டு வரப்போகுது!’

‘இரிக்கிற உத்தியோகத்தையே ஒழுங்காகப் பாக்கேலாது. புது உத்தியோகம் வேறயா? எந்தக் கச்சேரியில ஏசண்டு வேலைக்குப் போகப் போறயாம்?’

‘ஏசண்டு வேல பாக்கிறவனும் என்னப் போல மனுஷன் தான் தெரியுமா? என்னையும் படிப்பிச்சிருந்தா நானும் போகலாந்தான்!’

‘அறுத்துக் கொட்டு! அஞ்;சாந் தரத்தோடயே ஆலடிக் காட்டுக்குள் ஒழிஞ்சாக்கள்தான் ஏசண்டு வேல பாக்கிறண்டா நீயும் பாக்கலாம் தான்! அடி செருப்பால! படிப்பிக்கல்லயாமே!’ கழுத்தை ஒரு வெட்டு வெட்டிக் கொண்டாள் சங்குபதி!

‘இண்டைக்கு கடிதம் வரும்.’

‘என்ன கடிதம்?’

‘நேர்முகப் பரீட்சைக்குக் கூப்பிட்டுக் கடிதம்!’

‘எங்கட வாத்தியார்ர படம் ஓடுறாப்பல எனக்கு படிப்போடுதில்ல எண்டுதானே ஏழாந்தரம் வரையும் ஏறிப்போட்டு இடையில் படிப்ப விட்ட நீ? பரீச்சையெண்டால் சோதினதானே? படிப்போடாத உனக்குப் பரீச்ச எப்பிடி ஓடும்?’

‘மருந்து கலக்கிற உத்தியோகம் அதுவும் கல்முனை ஆஸ்பத்திரியில. தொழிற்கந்தோரில பதிஞ்சு எவ்வளவு நாள் காத்திருந்த நான் தெரியுமா?’

‘அதுதான் இண்டைக்கு நெசவுக்குப் போகல்லையோ? வகுத்தில இரிக்கிற புள்ளய நம்பி மாடு மேச்ச புள்ளயக் கொண்டாளாம்! சண்டாளி.’

‘சைக்! நெசவும் ஒரு தொழிலா? பகலைக்கெல்லாம் கிடந்து சக்குச் சக்கெண்டு அடிச்சு மூலச் சூடு பிடிச்சிற்று! கைகால்ல இறுக்கமே இல்ல. எத்தனை நாளைக்கு அந்தத் தறியில ஏறி மாரடிக்க ஏலும்!’

‘உடம்பு தேறத்தான் மருந்து கலக்கப் போறாய் போல!’ இதுவரையில் பொறுமையாக இருந்த அப்பா ஆறுமுகம் இப்படிக் கேட்டதும் முத்துலிங்கத்திற்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

‘நீ உண்ட வேலயப் பாத்திற்று நடவன் நான் அம்மையோட கதைக்கன்!’

‘ஓம்..! ஓம்..! நெசவிலே வாற காசு வாத்தியார்ர படம் பார்க்கவும் சோக்குப் பண்ணவும் காணாது! போய் மருந்து கலக்கு! சனங்கள் கைக்குள்ள வைக்கிறதும் வரும்! ஆனமானதெல்லாம் ஆலோசனப்படுதாம்……..’
இதற்கு மேல் ஆறுமுகம் அங்கு நிற்கவில்லை. கையைக் கழுவி வாயைத் துடைத்துக் கொண்டு இறப்பிலே தொங்கிய தளைக்கயிறை எடுத்து புயத்திலே மாட்டிக் கொண்டவராகப் படலையைத் தாண்டித் தெருவிலே நடந்தார். ‘உருப்படாத வாருவக் கட்டு…’ என்று அவருடைய வாய் முணுமுணுத்தது.

திண்ணையிலே கொடியிலே தொங்கிய சிவப்பும் கறுப்புமாகக் கட்டம் விழுந்த சேட்டை எடுத்து உதறிப் போட்டுக் கொண்டான் முத்துலிங்கம்.

‘அம்மோ அஞ்சாந் திகதி நேர்முகப் பரீட்சை தெரியுமா? அதற்குப் போட்டுப் போக நல்ல சேட் இல்ல. நேரத்தோடு சொல்லிப் போட்டன். எனக்கு ஐம்பது ரூபா வேணும். வேல கெடச்சதும் முதல் சம்பளத்திலேயே தந்து போடுவன்.’

முத்துலிங்கம் சொல்லியதைக் கேட்ட தாய் சங்குபதிக்கு பற்றிக் கொண்டு வந்தது. ஆவி அடங்காத பிட்டுப் பானையை அடுப்பிலிருந்து இறக்கி ‘டக்’ என்று கீழே போட்டவள் பெருங்குரல் எடுத்து பேசினாள்.

‘அம்பது ரூபாயா? அறுத்துக் கொட்டு! நான் மாப்பிள கொண்டு போட்டுத் தான் ஆரிட்டயும் வாங்கி தரவேணும்! அம்பது ரூபா! நெசவுக்கு போறன் போறன் எண்டு போட்டு நேரத்துக்கு வந்து விழுங்கிறதுக்கும் அவிச்சுக் கொட்டவேணும்! இவளவு நாளும் நெசவால உழைச்ச பணமெல்லாம் எங்க? அடுப்படியில கிடந்து நெருப்புத் திண்டு திண்டு எண்ட மண்ட மயிரும் பழுத்து வாணாளும் தேஞ்சி போச்சி! இருபத்தாறு வயது இளந்தாரிக்கு இன்னும் இன்னும் கேக்கிற நேரமெல்லாம் கொட்டித் தள்ள கொப்பன் ஒண்டும் கொண்டு குமிக்கல்ல கண்டயோ. உண்ட அப்பன்ட உழைப்ப நம்பி ஆறு சீவன் காலத்த ஓட்டேலாமத்தான் இந்தப் புட்டுப் பானையைப் புகையவச்ச நான். அதக் கொண்டு தான் அரவயிறு கால்வயிறு குடும்பம் நடக்குது. அம்பது ரூபாயோட அஞ்சு சதத்துக்கும் வழி கிடையாது? நானும் நேரத்தோடயே சொல்லிப் போட்டன்.’

ஷேட் கைகளை மடித்த பாதி மடியாத பாதியாகப் படலை வரை வந்து நின்ற முத்துலிங்கம் பெரிதாகச் செருமிக் கொண்டு சொன்னான்.

‘அப்ப பின்ன வாறன். ஒண்ணேகால் ரூபா போதும். ஒரு போத்தல் ரன்பக். சொன்ன வேல செய்யும். சாவீடு கொண்டாட ஒரு இருநூறு ரூபா ஆயத்தம் பண்ணு! போயிற்று வாறன் அம்மோ!’

படலையைத் தாண்டி விசுக்கென்று வீதியால் நடந்தான் முத்துலிங்கம்.

* * *

வீட்டிலிருந்து வெளியேறிய முத்துலிங்கம் நேரே நெசவு முதலாளி மரைக்காரின் வீட்டுக்குப் போனான்.

‘என்ன வாப்பா.. இப்பிடி நேரங்காலம் கழிச்சு வந்து தறியில ஏறி என்ன செய்யப் போறியள்? ஒவ்வொரு நாளும் இப்பிடித்தானே வாறயள். உடனொத்த புள்ளயள் ரெண்டு பா முடிச்சுப் போட்டு மற்றப் பாவும் ஏத்தப் போகுதுகள். நீங்க என்னடாண்டால் ரெண்டு மாதமா ஒரு பாவப் போட்டுட்டு மெனக் கெடுத்திக் திரியுறயள். கையில கால்ல சவி இருக்கக்குள்ள தான் வாப்பா சம்பாதிக்க வேணும். புறகு என்னசெய்யப் போறயள்.’

தறி மாலில் சாய்ந்து கைகளை பிசைந்து கொண்டு நின்ற முத்துலிங்கத்தைப் பார்த்து ‘என்ன வாப்பா இண்டைக்கு நெசவல்லையே?’ என்றார் முதலாளி.

இல்லையென்று தலையசைத்த முத்துலிங்கம், ‘அம்மாவுக்குச் சுகமில்லை. ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகவேணும். அவசரமாக ஐம்பது ரூபா வேணும். அதுக்குத் தான் வந்த நான்.’

‘இப்ப என்னிட்ட ஏது வாப்பா காசி? யாவாரி கொண்டு போன சரக்கு இன்னும் பேத்தியாகி திரும்பல்ல. நூல் வில ஏறிப் போய்க் கிடக்கு! நேரத்தோட உங்கிட பேரில மேலதிக பற்று நூற்றம்பதுக்கும் மேல நிக்குது. இனி யாவாரி வந்தாத்தான் காசி. என்ன செய்யச் சொல்றயள் வாப்பா? திடீரெண்டு கைக்கு செய்யேலாமக்கிடக்கு. வேறெங்கயும் பாத்துப் புரட்டி பொறுப்பக் கழத்துங்க. புறகு பாப்பம்!’

‘அப்ப பின்ன நான் வாறன் முதலாளி’ என்றவாறு அங்கிருந்து வெளியேறினான் முத்துலிங்கம். காலை 9.30 மணியாகி இருந்தது. பிரதான வீதிச் சந்திக்கு வந்த முத்துலிங்கம் அலியாரின் தேநீர் கடையுள் புகுந்தான்.

‘ஆரம்பம் இன்றே ஆகட்டும்…. விரும்பிக் கேட்டிருப்பவர்கள் பெரியநீலாவணை - முத்துலிங்கம், சங்குபதி, ஆறுமுகம், அழகையா, வைத்திலிங்கம், நிர்மலா, கமலாராணி, சத்தியலிங்கம்,…’

வானொலியில் வர்த்தக ஒலிபரப்பு முழங்கியது. தான் விரும்பிக் கேட்ட பாடல் ஒலிபரப்பாகிறது என்றதும் காலையில் நடந்து முடிந்த சம்பவங்களை அப்படியே மறந்துபோய் பாடலை ரசிக்க ஆரம்பித்தான் முத்துலிங்கம்.

பாடல் முடிந்தது. தனக்கு முன்னால் ஆவி பறந்து கொண்டிருக்கும் ரீயை ஊதிக் குடித்துவிட்டு திறீறோசஸ் பற்ற வைத்துக் கொண்டு அலியார் கடைக் கொப்பியில் கணக்கெழுதி விட்டு வெளியே வந்தான் முத்துலிங்கம். ஆரம்பம் இன்றே ஆகட்டும் அவன் வாயிலிருந்து சிகரெட் புகையும் சீக்காவும் கலவையாக வெளியேறின.

இனி இந்த தபால்காரனைத் தேட வேணும். சரியாகப் பதினொரு மணிக்கு கிராம சபைக்குள்ள வந்து சேர்வான் பாவி. கிளாக்கர் ஊர் முழுவதுக்கும் வந்திருக்கிற கடிதங்களையெல்லாம் வாங்கிப் பார்த்து உடைக்க வேண்டியதை உடைத்து கிழிக்க வேண்டியதைக் கிழித்து எல்லாம் கிளியர் பண்ணிக் குடுத்த பிறகுதான் ஊருக்குள்ள கடிதம் வரும். நேர்முகப் பரீட்சைக் கடிதத்தைக் கூட வாங்கி கிளாக்கன் உடைச்சாலும் உடைச்சிப் போடுவான்.

இப்படி நினைத்துக் கொண்டே கிராமசபைக் கந்தோர் சந்திக்கு வந்து சேர்ந்தான் முத்துலிங்கம். நேரம் ஆக ஆக தபால்காரன் மீது அவனுக்கு ஆத்திரம் பொங்கியது.

சாராயத் தவறணைக்குள் வந்து இறங்கினார் தபால்கார கந்தையா. தவறணைக்கு கடிதம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் அந்த இடத்தில் இறங்கித் தான் ஏறுவார். அதோ தவறணையை விட்டு தபால்காரர் புறப்பட்டு விட்டார் அவர் வாயில் இருந்து கிளம்பும் டீசல் புகை அதற்கு அத்தாட்சி.

கிராம சபைக் காரியாலயத்திற்குள் தபால்காரர் நுழைவதற்கு முன்னே அவரை வழியில் மறித்து தனக்குரிய கடிதத்தை அவசர அவசரமாக உடைத்து வாசித்து நண்பன் கூறிய திகதி சரிதானா என்பதை நிச்சயித்துக் கொண்டு அதை உறையுள் போட்டு பெருமையாக சட்டைப்பையில் பலருக்கும் தெரியும் படியாக வைத்துக் கொண்டான்.

‘உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல…..’ சீழ்க்கை அடித்தபடியே… தன் காதலி கமலா வீட்டுக்கு நடையைக் கட்டினான் அவன்.

கடிதத்தை வாசித்த கமலா ‘ஆஸ்பத்திரிச் சிப்பந்தி என்டால் கூட்டித் துடைத்துக் கழுவித் துப்பரவு செய்யிற வேலை தானே!’ என்று உதட்டைப் பிதுக்கிக் கொண்டே சொன்னாள்.

‘சிலவேளை மருந்து கலக்கவும் கட்டவும் விடுவாங்க. இந்தக் காலத்தில இதுவே பெரிய புண்ணியம். அதுவும் நேர்முகப் பரீட்சையில் எடுபட வேணும். ஒரு எம்.பீயைப் பிடிச்சால்தான் காரியம் ஆகும். அதுக்கும் காசு வேணுமே! பார்ப்பம்.’

கடிதத்தைக் கண்ட கமலா ஒரு பிளேண்டி தானும் தரவில்லை. இது முத்துலிங்கத்துக்கு பெரிய ஏமாற்றமாகவே இருந்தது.

‘லோங்ஸ் போடாத உத்தியோகம்’ என்றுதான் கமலா இவ்வளவு அலட்சியமாக நடந்து கொண்டாள் என்று அவனால் அனுமானிக்க முடிந்தது.

கமலா வீட்டிலிருந்து புறப்பட்ட முத்துலிங்கம் காந்தி லொண்ட்றிக்கு வந்து சேர்ந்தான். நண்பன் காந்தியைக் கண்டு கடிதத்தைக் காட்டினான். ஐந்தாந் திகதி நேர்முகப் பரீட்சைக்குப் போக ஒரு நல்ல பிற் லோங்ஸ் தேவை என்பதைச் சொல்லி விட்டு காந்தி கொடுத்த பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு நடந்தான் முத்துலிங்கம்.

இன்று முழுவது தன் நண்பர்களைத் தேடித் தேடி அந்தக் கடிதத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் போதே பொழுது போய்விட்டது. அன்றிரவு வீட்டிற்குப் போவதில்லை என்று தீர்மானித்துக் கொண்ட முத்துலிங்கம் பெரியம்மா வீட்டில் இரவு தங்கினான்.

* * *

விடிந்ததும் விடியாததுமாக தெருவில் யாரோ பேசிக் கொண்ட செய்தி கேட்டு சங்குபதிக்கு சல கண்டமாக வேர்த்துக் கொட்டியது. பிட்டுக் குழலில் ஆவி வராமல் அடைத்துக் கொண்டது. பச்சை ஈக்கிளை விட்டு பிட்டுக் குழலை குடைந்தாள் அவள்.

‘சுடலையில் யாரோ நஞ்சு குடித்துக் கொண்டு கிடக்கிறானாமே’

நேற்று முழுவதும் முத்துலிங்கம் வீட்டுக்கு வரவில்லை. நேற்றுக் காலையில் வீட்டை விட்டுப் புறப்பட்டபோது அவன் சொல்லிவிட்டுப் போனது அவளுடைய ஞாபகத்துக்கு வந்துது.

‘அப்ப பின்ன நான் வாறன்;. ஒண்ணேகால் ரூபா போதும். ஒரு போத்தல் ரன்பக். சொன்ன வேல செய்யும். சாவீடு கொண்டாட ஒரு இருநூறு ரூபா ஆயத்தம்பண்ணு. போயிற்று வாறன் அம்மோ’

‘ஒரு வேளை சுடலையில் கிடப்பது முத்துலிங்கம்தானோ!’ இப்படி நினைக்க நினைக்க பிட்டு குழலில் வரவேண்டிய ஆவி அவளுடைய நெஞ்சுக்குள் ஏறி அடைத்தது.

‘நாசமறுவானுக்குக் காலமும் சரியில்ல. அட்டமத்துச் சனியன் புடிச்சாட்டுது என்று கோயில் குருக்கள் குறிப்புப் பார்த்துச் சொன்னவர். மாதக்கணக்காக அர்ச்சனையும் பண்ணி கோயிலுக்கு எண்ணெயும் வார்த்து வாறன். எண்ட பேச்சித்தாயே! அப்படி ஒண்டும் நடக்க உட்றாத தாயே!’

இப்படி நினைத்துக் கொண்ட சங்குபதி திண்ணையில் இன்னமும் குறட்டைவிட்டு தூங்கும் கணவனைப் பார்த்துச் சப்புக் கொட்டிக் கொண்டாள்.

‘இஞ்ச உன்னத்தான் நல்ல மதியமாகப் போச்சு. இன்னமும் என்ன வெறுவாக்கிலம் கெட்ட நித்திர உனக்கு?’

‘ஆ…. என்னது?’ என்று உடம்பை அட்ட கோணமாய் ஆக்கி நெட்டை முறித்துக் கொண்டே எழுந்து திண்ணையில் சாய்ந்தார் ஆறுமுகம்.

‘இவன் முத்து நேத்து முழுக்க சோறு தின்னவும் இந்தப் பக்கம் வரல்ல. ராவும் காணல்ல. ஆரோ சுடலையில நஞ்சு குடிச்சித்துக் கிடக்கானாம்! எனக்கெண்டா ஒண்டும் விளங்கல்ல. அவடத்த போய் எட்டிப் பாத்திற்று வாவன். எனக்கு அடுப்படியும் ஒழியுதில்லை.’

‘உண்ட மூத்த குமாரனா? அவனுக்கேது அவளவு ரோசமும் மானமும்! அது அவனா இரிக்காது. அவனெண்டா ஒரே முழுக்கா முழுகிக் கற்பூரம் கொழுத்திப் போடுவன்! நீ உண்ட வேலயப் பாரன். நான் போகல்ல!’

‘கனக்கத்தான் உழச்சிக் குடுத்து நட்டப்பட்டுப் போனாய் போ! நான் முன்னம் முன்னம் கண்ட எண்ட ஆம்பிளப்புள்ள.. ஆண்டவனே!’

அம்மாவின் அழுகையைக் கண்டு நிர்மலாவும் தம்பிமாரும் அண்ணன் முத்துலிங்கத்தை நினைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தனர்.

‘ஏன் மூதேசிகளே கத்துறயள். நீங்க பள்ளிக்குப் போறதெண்டால் வெளிக்கிட்டுப் போற தானே! கொம்மைக்குப் பைத்தியம்! கொண்ணனாவது சாகிறதாவது உருப்படாத வாருவக்கட்டு’ என்று முனிந்தார் ஆறுமுகம்.

‘அதாரோ வருத்தக்காறக் கிழவன் செத்துப் போய்க் கிடக்கானாம். நீங்க என்னத்துக்கு மல்லம் பாயுறயள்?’

சுடலைக்குப் போய் நேரில் பார்த்துவிட்டு வந்த பக்கத்து வீட்டுக்காரி, சங்குபதிக்கு ஆறுதல் கூறினாள். பிட்டுக் குழலில் ஆவி பறந்தது.

பிள்ளைகளைப் பள்ளிக்கனுப்பிய பின் அடுப்படியை ஒதுங்கப் பண்ணிய சங்குபதி மகன் முத்துலிங்கத்தை தேடி புறப்பட்டுவிட்டாள்.

‘மடிப் புள்ளயத் தேடித் திரியிறாவுகா’ ஊராரின் கிண்டலையும் பொருட்படுத்தாமல் நெசவு முதலாளி வீடுமுதல் ஊரில் எங்கெல்லாம் முத்துலிங்கத்திற்கு உறவுண்டோ அங்கெல்லாம் போய் அவனை விசாரித்தாள் சங்குபதி.

கடைசியாகத் தான் சிலகாலம் பேசாமல் விட்டுவிட்ட தனது ஒன்றுவிட்ட தமக்கையின் வீட்டுக்கு போனாள். தலையை அண்ணாந்தபடி படுத்துக் கிடந்த முத்துவைக் கண்டாள். அவனுடைய தலைமாட்டில் அமர்ந்து கொண்டே கேட்டாள்.

‘ஏன்டா தம்பி நீ என்னதான் எண்ணித்து இப்பிடியெல்லாம் வீடு வாசலத்துக்கு திரியிறாய். உன்ன என்னத்தால குறைய விட்ட நான்? முந்தி முந்தி கண்ட ஆம்பிளப் புள்ள எண்டு நான் நெருப்புத் திண்டாலும், கேட்ட நேரம் கேட்டது தந்து வளத்த என்ன இப்பிடியெல்லாம் போட்டு ஏன்தான் வதைக்கயோ?’

‘கேட்ட நேரம் கேட்டது தந்த படியாத்தான் நேர்முகப் பரீட்சைக்குப் போக ஒரு ஐம்பது ரூபா தர ஏலாது என்ன? சும்மா புளுகி அடிக்காமல் எழும்பித்து நடபாப்பம். எனக்கு எல்லாம் தெரியும்!’ என்று சட்டைப் பையைத் தடவி சீல் வைத்திருந்த ரன்பக் போத்தலை வெளியே எடுத்துப் பார்த்துவிட்டு மீண்டும் பைக்குள் திணித்துக் கொண்டான் முத்துலிங்கம்.

‘எண்ட முருகையோ!’ என்றவாறே சட்டைப்பைக்குள் கையைப் போட்டு அதை எடுக்க முயன்றாள் சங்குபதி!

செழும்பு பிடித்த வெண்கல விளக்கிலிருந்த தேங்காயெண்ணெயை “ரன்பக்” என்று பெயர் சூட்டி விற்பனைக்கு அனுப்புவார்களா? என்பது கூடச் சங்குபதிக்கு தெரியாதா? என்ன?

சங்குபதியின் முயற்சி தோற்றுப் போகவே அவள் ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டாள்.

இருவருக்கும் இடையில் பெரியம்மா வந்து சமாதானம் செய்ய வேண்டியதாயிற்று. பெரியம்மாவின் சமாதான ஒப்பந்தத்திற்குக் கட்டுப்பட்டு முத்துலிங்கம் தான் வைத்திருந்த திடீர் ‘ரன்பக்” போத்தலை அவளிடம் கையளிக்க வேண்டியதாயிற்று. சங்குபதியின் வயிறு குளிர்ந்தது.

சிறிது நேர அமைதிக்குப் பின் சங்குபதி சொன்னாள்

‘ஏண்டா மகனே முத்து. ஆஸ்பத்திரியில் மருந்து கலக்கிற கறுமம் புடிச்ச வேல உனக்கென்னத்துக்கு. போத்தலையும் மருந்தெழுதின துண்டையும் வாங்கி ஆஸ்பத்திரி மோட்டப் பாத்திற்று கழகழண்டு கலந்த தண்ணியில ஊத்தி ஊத்தி குடுக்கான், அந்தக் கையழுகி ஒழுகிப் போவான். அவன்ட கைக்குள்ள என்னவும் வச்சாத்தான் துண்டில எழுதின மருந்தில ஒரு துள்ளி எண்டாலும் உட்டுத்தாறான். அவனுக்குச் சனம் திட்டுறாப்போல தானேடா மனே உனக்கும் திட்டும்.’

தாயின் பேச்சை பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த முத்துலிங்கம் நான் நல்ல மருந்து கலந்து குடுத்தால் சனம் ஏன் திட்டப்போகுது! உத்தியோகத்தில பிழையில்ல. அதப் பாக்கிறதிலதான் பிழை. நான் கைக்கூலி ஒண்டும் வாங்க மாட்டன். எனக்கு வாற சம்பளமே போதும் என்றான்.

‘என்னவோ நீ நல்லா வந்தா சரிதான். ஐஞ்சாந் திகதியா சோதினைக்குப் போறாய்? இன்னும் ரெண்டு நாள்தானே கிடக்கு!’ என்று கூறிக் கொண்டே நாலு பக்கமும் திரும்பிப் பார்த்தவளாக இடுப்பிலிருந்து சேலைத் தலைப்பின் முடிச்சை அவிழ்த்து அதிலிருந்து ஒரு ஐம்பது ரூபா நோட்டை எடுத்து மகனிடம் தந்தாள்.

‘போய் உடுப்பை வாங்கி வை. மத்தியானம் சாப்பிட வீட்டவா மனே’ என்று கூறியவளாக எழுந்து வீட்டை நோக்கி நடந்தாள் சங்குபதி.

முத்துலிங்கம் கடைக்குப் புறப்பட்டான்.

* * *

ஐந்;தாந் திகதி அதிகாலையிலேயே எழுந்து விட்டான் முத்துலிங்கம். தூரிகை கொண்டு பல் விளக்கிக் குளித்தான். தாய் ஆசீர்வதித்து வழங்கிய ஒரு குழல் பிட்டையும் வெட்டி முடித்தான்.

புத்தம் புதிய வெள்ளைச் சேட்டை அணிந்து கையை முழங்கைக்கு மேல மடித்து விட்டுக் கொண்டான். காந்தி லொண்ட்றியின் உபயமாக வந்த கறுப்பு நிற பிற் லோங்சை அணிந்து அதற்கு மேல் நண்பன் அழகையாவின் பெல்டைக் கட்டிக் கொண்டு கண்ணாடி முன் வந்து நின்றான். முகம் மாத்திரம் பார்க்கக் கூடியதாகத் திண்ணைச் சுவரில் அழுது வடிந்தபடியே தொங்கும் அந்தக் கண்ணாடியில் தன் முழு உருவத்தையும் பார்த்துக்கொள்ள முடியவில்லையே என்ற ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு முகத்துக்கு பவுடர் பூசினான்.

தராதரப் பத்திரம் நற்சாட்சிப் பத்திரங்கள் அடங்கிய நீளமான கடித உறை வலது கையிலும் கறுப்பும் சிவப்புமாக கட்டம் விழுந்த கைலேஞ்சி மற்றொரு கையிலும் ஆக தன் முன் வந்து நின்ற முத்துலிங்கத்தின் உடையலங்காரத்தைக் கண்ட சங்குபதி அப்படியே பூரித்துப் போனாள்!

கிறுதாவும் பிடரி மயிரும் லோங்சுமாக அலங்காரம் செய்து கொண்டு நிற்கும் அண்ணனைக் கண்டு அவன் தங்கையும் தம்பிமாரும் கூட பெருமைப்பட்டுக் கொண்டார்கள். அம்மா நான் போயிற்று வரட்டா? என்றான் முத்துலிங்கம்.

இந்தா இதை வைத்துக்கொள் என்று ஒரு பத்து ரூபாத் தாளை அவனுடைய கைக்குள் திணித்த சங்குபதி சில்லரையாக ஒரு ரூபாவை எடுத்து நீட்டி இதைப் பேச்சம்மாளுக்கு கற்பூரம் கொளுத்திப் போட்டுப் போ! என்று ஆசீர்வதித்து விடை தந்தாள்.

முத்துலிங்கம் வீதியால் நடந்து செல்லும் கம்பீரத்தை அவனுடைய தங்கை நிர்மலாவும் தம்பிமார் இருவரும் வெகு நேரமாகப் பார்த்துக் கொண்டு நின்றனர்.

* * *

விண்வெளியில் ஏறி அமெரிக்கன் சந்திரனைக் கொண்டு வந்தானாம். நான் தென்னை மரத்தில் ஏறித்தான் இந்த தேஞ்ச நிலவைப் பிடிச்சுக் கொண்டு வாறன் தெரியுமோ.. என்பது போல வலது கையில் பூசணிக்காய் கீறை ஏந்தியவராக ஆறுமுகம் மாலையில் வீடு திரும்பினார்.

படலைக்குள் வேகமாக வந்து நின்ற வாடகைக் காரின் பேரிரைச்சலைக் கேட்டு வளவுக்குள் துள்ளி விழுந்தார் ஆறுமுகம். அப்பொழுதும் கூட பூசணிக்காய் கீறு மட்டும் அவர் புயத்துக்கு நேரே ஏந்திய படியேதான் இருந்தது.

சமாளித்து எழுந்து நின்று கார்ச்சாரதியை ஒருவித எச்சரிக்கையாக நோக்கிய அவர் விழிகள் காரில் இருந்து இறங்கிய முத்துவைக் கண்ட வியப்பில் இறங்கின. ‘முத்துலிங்கமும் ஒரு துரைபோலத்தானே வாறான்!’

சட்டைப் பைக்குள் கையை விட்டு ஒரு ஐந்து ரூபாவை எடுத்துச் சாரதியிடம் கொடுத்த கையாலேயே கைலேஞ்சியை எடுத்து கழுத்தையும் துடைத்து முகத்தையும் சரிசெய்து கொண்டபின் வளவுக்குள் நுழைந்தான் முத்துலிங்கம்.

முருகையன் படத்துக்கு விளக்கேற்றிக் கும்பிட்ட அம்மா சங்குபதி வெளியே வந்து எட்டிப் பார்த்தாள்.

முத்துலிங்கம் புன்முறுவலோடு வழியில் இருந்த மல்லிகை இலையைப் பிய்த்து வீசியபடியே தனது அபிமான திலகம் அரண்மனை நோக்கி படத்தில் வருவது போல வாசலில் வருகிறான்.

கண்குளிர அந்தக் காட்சியைக் கண்டு மனம் குளிர்ந்தது சங்குபதிக்கு! ‘பின்னாலேயே அதுகும் வருகுது! பாரன் அதிர கோலத்தையும் ஒசிலயும்! தலையொரு கோலம் உடலொரு கோலம் தளைக் கவுறும் சுரக்காய் துண்டுமாகப் பாரன். ஆள்ற வடிவ.’ வந்த கோபத்தை மகனுக்காக அடக்கிக் கொண்டாள் சங்குபதி!

திண்ணையில் ஏறிய முத்துலிங்கம் கண்ணாடியில் முகம் பார்த்துக் கொண்டான் கட்டிலில் கால்களைத் தொங்க விட்டுக் கொண்டு வசதியாக உட்கார முடியாமல் சிறிது சிரமப்பட்டான்.

வாசலில் ஆறுமுகம் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். பூசணிக்காய் துண்டத்தை சங்குபதி இன்னும் வந்து வாங்கிக் கொள்ளவில்லை. அவரும் அதை ஏந்திய கை கீழே விடவில்லை.

‘என்ன செய்யிறாய் அங்க இப்ப?’

‘செய்யிறது தான் செய்யிறன்…விளக்குக் கொளுத்திறன் எண்டு தெரியாமத்தானா கேக்காய்? இப்ப..’

‘இம்… இம்… தெரியுது. தெரியுது?…

‘நீ காவி வந்த காவை இறக்கி வைக்க வரலெண்டுதானே இப்ப உனக்கு அவியாயம்! அயின அடுப்படியில போடன் கிடக்கட்டும்! எப்ப வெண்டான உனக்கு கறி கிடைக்கிற தெண்டால் இந்தச் சுரக்காத் துண்டுதான் கிடைக்கும்!’

ஆறுமுகம் ஆம்பிளையானார். பூசணிக் காய்க்கீறு அரிவாளாய் மாறிற்று. ஆத்திரத்தோடு அரிவாளை சங்குபதியின் கழுத்தில் வீசினார் ஆறுமுகம். ஆபத்து எதுவுமே இன்றிப் பிழைத்துக் கொண்டாள் சங்குபதி. தேய்ந்த நிலா உடைந்து இரண்டு துண்டாகி நிலத்தில் கிடந்தது.

‘பறத் தட்டுவாணீ - வே…… சை….’ வெளியேறி நடந்தார் ஆறுமுகம்!

சனியன் தொலைந்த பின் மகனிடம் நேர்முகப் பரீட்சை பற்றிக் கேட்டாள் சங்குபதி.

‘தராதரம் கூடியவர்கள் நன்றாக உடுத்து வரவில்லை. தவிரவும் அவர்களெல்லாம் பஸ்ஸிலேயே வந்திருந்தார்கள்! அவர்கள் எடுபடுவது கஷ்டம்! நான் நன்றாக உடுத்துக் காரில் போய் இறங்கினேன். பரீட்சிக்க இருந்த மூவரும் என்னையே பார்த்துப் பார்த்துச் சிரித்தார்கள். தராதரப் பத்திரத்தைப் பற்றி கவலையில்லை என்று பேசியும் கொண்டார்கள். நான் நிச்சயம் எடுபடுவன்.’

‘மதியம் சாப்பிட்டயா மனே’

‘அதெல்லாம் ஹோட்டல் டீ கோயாவில் சுதியான புரியாணி போடுறான்..?’

‘அதென்னடா மனே புரியாணி?’

‘அதெல்லாம் ஒரு சாப்பாடு! அஞ்சி ரூபா…’! விசுக்கென்று வீட்டுக்குள் நுழைந்தான் முத்துலிங்கம்.

உடை மாற்றிக் கொண்டு கிணற்றடிக்குப் போனான். சாறத்தினாலேயே முகத்தைத் துடைத்தபடி திரும்பினான்.

தலையைச் சீவிக் கொண்டே ‘சோத்தெடன். நான் படத்துக்கு போக வேணும். காத்திற்று நிப்பானுகள்.’

‘கறியொண்டும் இல்லடா மனே! குளமெல்லாம் அலஞ்சன்! ஒரு மீன் குஞ்சு வாங்கேலாமல் போய்த்து!’

‘இருக்கிறத்த எடன் பின்ன!...’

‘கறியில்லாம என்ன சோறாக்கிறது. எண்டு போட்டு புள்ளயளுக்குப் பாண் வாங்கி வச்சிருக்கு! அதில நீயும் தின்னன்!’

‘நமக்கு ராவில கட்டாயம் சோறு வேணும்… பாண் என்னத்துக்குக் காணும்?’

‘ஒனக்கு மட்டுந்தான் சோறு வேணுமெண்டு இல்ல. எல்லாருக்கும் அதுதான், சோறுதான் விருப்பம்!’

‘ஏன்பின்ன ஆக்கல்ல..?

‘அரிசி இல்லையே.’

‘என்ன.?’

‘சத்தியமா ஒரு சிறங்கையும் இல்லை.’

‘இண்டைக்குத் தானே கூப்பன் அரிசி எடுக்கிற நாள்.’

‘அது கூப்பனுக்குத் தானே தருவாங்க.’

‘ஏன் நம்மட ஆறு கூப்பனும் எங்க?’

‘அதத்தான் எதிர் வீட்டில ஈடு வச்சென்ன?

‘என்ன பணியாரத்துக்காகக் கூப்பன ஈடு வச்ச நீ?’

‘இல்லாட்டி நேர்முகப்பரீட்சைக்கு நீ எப்பிடிப் போற? எழுபத்தஞ்சி ரூபா வாங்கி அதில உனக்கு மட்டும் அறுபது.. பதினஞ்சயும் கடன் குடுத்தன்.’

‘அப்ப… சரி பின்ன வாறன்’

பதினைந்து சதம் கொடுத்து பஸ்ஸில் கல்முனைக்கு வந்தான் முத்துலிங்கம். ஹோட்டல் டீ கோயாவில் ஒரு நண்பனோடு சேர்ந்து சாப்பிட்டான்.

தன் அபிமான நடிகரின் படத்தை ஐம்பதாவது நாளாகவும்; ஒரு நாள் ஓட்டி விடுவதற்காகச் சினிமாவுக்குப் போனான். கலரிஇ இரண்டாம், ஒன்றாம் வகுப்புகளில் இடமில்லாமல் போனால் என்ன..? மேலே பல்கனியில் முத்துலிங்கத்திற்கு டிக்கற் கிடைத்தது.

++++++++++++++++++++++++++

நிராசை


கல்முனை பஸ்நிலையத்திலிருந்து சரியாக காலை 5.30 மணிக்கு தலை பஸ் புறப்பட்டது.

பஸ் புறப்பட்ட ஆரவாரத்தில் பிரயாணிகள் தங்கும் மண்டபத்திலே சீமென்ற் தரையில் சுருட்டி முடக்கிக் கொண்டு கிடந்த சாகிப் நானா கண்விழித்துக் கொண்டார். கோயில் கிணற்றுக்குச் சென்று முகம் கழுவி விட்டு வந்து பக்கத்திலே இருந்த தேநீர்க்கடையிலே ஒரு கிளாஸ் தேநீரை வாங்கி சூடாக உறுஞ்சும் போதுதான் சாகிப் நானாவுக்கு சங்கரன் தாத்தாவுடைய நினைவு வந்தது.

சாகிப் நானாவும் சங்கரன் தாத்தாவும் தொழிலில் பங்காளிகள். அப்படியென்றால்; பெரிய தொழிலகத்து முதலாளிகள் என்று கருத்தல்ல. இருவரும் பிச்சைக்காரர்கள்.

தொழில் முறையில் சங்கரன் தாத்தாவுக்கு சேவைக்காலம் ஏழு வருடங்கள். சாகிப் நானா இப்பொழுதான் தொழிலுக்குப் புதியவர். அவர் தொழிலில் இறங்கி இன்னும் 6 மாதங்கள் கூட ஆகவில்லை..

சாகிப் நானாவின் கையிலிருந்த தேநீர்க் கோப்பை காலியாகியது. மீண்டும் அவர் சங்கரன் தாத்தாவை நினைத்த பொழுதுதான் நேற்று மாலை அவர் சொல்லியிருந்தது ஞாபகத்துக்கு வந்தது.

அடேயப்பா… நேற்று சங்கரன் தாத்தாவைப் பார்க்க வேணுமே! 67 வயதுக்கிழவன் போலவா இருந்தார் அவர்? ஒரு வாலிபனைப் போல எவ்வளவு சுறுசுறுப்பாய் இருந்தார். விடிந்தால் என் பேத்திக்கு திருமணம். இரண்டு மூன்று நாட்களாக வருமானம் பெரிய கம்மி! ஒன்றும் செய்யமுடியாவிட்டாலும் பேத்திக்கும் மாப்பிள்ளைக்கும் ஏதாவது கையில் வைக்க வேண்டாமா? இந்த மூன்று நாளும் மொத்தமாகச் சேர்த்து இந்த மூன்று ரூபாய்தான் என்று கொட்டைப் பெட்டியிலே தாளாக மாற்றி பத்திரமாக மடித்து வைத்திருந்த ரூபாய் நோட்டுக்களை எவ்வளவு மகிழ்ச்சியோடு தூக்கிக் காட்டினார்? அவர் கண்களிலே பிரகாசித்த ஒளி பிச்சைக்காரனுக்கும் பரிசு கொடுக்கும் பண்புள்ளம் இருக்கிறது என்பதையல்லவா எடுத்துக் காட்டிற்று!

பேத்தியின் கல்யாணத்துக்கென்று… மகன் ஒலிபெருக்கி வேறு ஒழுங்கு பண்ணியிருக்கிறான் என்று சொல்லும் பொழுது தாத்தாவின் ஆசையைப் பார்க்க வேண்டுமே. இன்று சங்கரன் தாத்தா பிச்சைக்கு வரமாட்டார். பேத்தியின் கல்யாணச் சாப்பாட்டிலே வஞ்சகமில்லாமல் ஒரு பிடிபிடித்துவிட்டு நிம்மதியாக தூங்குவார் மனிதர் என்று சாகிப் நானா நினைத்த பொழுது தான் சங்கரன் தாத்தாவின் கதை அவர் மனக்கண்ணுக்குள் நிழலாடியது.

சங்கரன் தாத்தா அப்படியொன்றும் பரம்பரைப் பிச்சைக்காரனல்ல. 60 வயது வரை தன் உடல் உழைப்பையும் சில நாட்கள் மக்களின் அரவணைப்பையும் நம்பியிருந்துவிட்டு முடியாது என்ற நிலையில் கையில் ஒரு பேணியையும் ஊன்று கோலையும் நம்பி புறப்பட்டு விட்டவர் தான் அவர். கடந்த 7 வருடமாக இதே தொழிலைச் செய்து கொண்டு வருகிறார்.

ஒரு நாள் வெள்ளிக்கிழமை எங்கள் தொழிலுக்கு சிறப்பாக குறிப்பிட்ட நாள். நன்றாக இருட்டி விட்டது கூடவே மழையும் பிடித்துக் கொண்டது. சங்கரன் தாத்தா அலுத்துக் கொண்டார். இந்த இருட்டிலும் மழையிலும் இரண்டு மைல் தூரத்தைக் கடந்து எப்படி ஊருக்குப் போவது? சனியன் மழையாவது விட்டபாடில்லை. சரி சரி இன்று சாகிப்போடு தான் படுக்கை. வீட்டில் என்னபாடோ பெருமூச்சுவிட்டுக் கொண்டே என் அருகில் வந்து உட்கார்ந்தார்.

அது ஒன்றும் எனக்குச் சீதனம் தரப்பட்ட வீடல்ல. பஸ் பிரயாணிகள் தங்கும் மண்டபம்.! இத்தனை நாளும் மாடுகள் துணையாகப் படுத்துக் கிடந்தன. இன்றைக்காவது மனிதன் துணையாக படுக்கட்டுமே என்ற மகிழ்ச்சி எனக்கு!

சங்கரன் தாத்தாவை உட்கார வைத்துவிட்டு தலையில் துண்டை உதறிப் போட்டுக் கொண்டு போய் பக்கத்துக் கடையில் பாணும் வாழைப்பழங்களும் வாங்கிக் கொண்டு வந்தேன். அன்றைக்கு சங்கரன் தாத்தாவுக்கு சாப்பாடு என் கணக்கு!

பாணை ஒரு கடி கடித்துக் கொண்டே வாழைப்பழத்தை உரித்த சங்கரன் தாத்தா

‘பழம் அழுகலாய் இருக்கே? ஏது? கடையிலே சும்மா கொடுத்தார்களா?’ என்றார்.

அவருக்கென்ன தெரியும் பிச்சைக்காரன் காசு கொடுத்துக் கேட்டாலும், கெட்டுப் போன பொருட்களைத்தான் கொடுக்கிறார்கள் என்று!

ஏதோ சாப்பிட்டதாய்ப் பெயர் பண்ணிக்கொண்டு வயிற்றை நிறைத்துவிட்டோம்! நான் பீடி ஒன்று பற்ற வைத்து சுவாரஸ்யமாக அதன் புகையை உள்ளே இழுத்தபடி

‘தாத்தா வெற்றிலை இருக்கிறதா?’ என்று கேட்டேன்.

‘ஆமாம் அப்பா.. இனிப்படுத்துக் கொள்வோமா? வீட்டிலே தான் என்ன பாடோ…ம்…’ என்று பெருமூச்சு விட்டபடியே… வெற்றிலையைக் கைக்குள் எடுத்துக் கசக்கத் தொடங்கினார் தாத்தா.

பாவம்! வீடு வீடு என்று சாகிறான் மனிதன். சாகப்போகும் வயதில் கூட மனைவியிடம் எவ்வளவு பாசம் - ஆசை!

‘சரி சரி அவர்கள் எப்படியோ பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் படுத்துக் கொள்ளுங்கள் தாத்தா’ என்றேன்.

‘முருகா! உன் செயல்’ என்றபடியே துண்டைத் தலைக்கு வைத்துக் கொண்டு தூங்க ஆரம்பித்தார் தாத்தா.

நித்திரை வரவில்லை. சங்கரன் தாத்தாவுக்காவது எண்ணிக் கொண்டு கிடக்க ஒரு வீடு இருக்கிறது. அங்கே இவருக்காக ஒரு மனைவி காத்துக் கொண்டிருக்கிறாள். எனக்கு வீடா மனைவியா..? சீச்சீ.. நித்திரையே வரமாட்டேன் என்கிறதே. புரண்டு படுத்தேன்.

‘என்னப்பா நித்திரை வரவில்லையா…!’ என்றார் தாத்தா.

‘இல்லைத் தாத்தா உங்களுக்கும்.. வரவில்லையே… ஏன் வீட்டு நினைவு வந்துவிட்டதா’ என்று சிரித்தபடியே எழுந்து பீடி ஒன்றைப் பற்றவைத்தேன்…

பீடிப் புகையை ஊதிக்கொண்டே.. ‘ஏன் தாத்தா இத்தனை நாள் பழகிவிட்டோம் ஆனால் உங்களைப் பற்றி இதுவரை நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே’ என்றேன் நான்….

‘என்னைப்பற்றி என்னப்பா இருக்கிறது சொல்ல ஒரு பிச்சைக்காரப் பயலுக்கு சரித்திரமா எழுதி வைத்திருக்கிறேன்!’

தாத்தாவின் வார்த்தைகளில் நிறைந்திருந்த விரக்தியும் வேதனையும் அவரிடம் ஏதோ சுவையான சோகக்கதை இருக்கிறது என்பதை காட்டின.

‘சும்மா உங்கள் கதையை சுருக்கமாகச் சொல்லுங்கள் தாத்தா’ என்றபடியே கைவிரல் வரையும் எரிந்து வந்துவிட்ட பீடித்துண்டை வெளியே வீசினேன் நான்.

தாத்தா புரண்டு படுத்தக் கொண்டார்….. கூடவே செருமலும் வந்தது. செருமிக் கொண்டார்

‘சாகிப் நானொன்றும் பரம்பரையாக இந்தத் தொழிலை ஏற்றுக் கொண்டவன் அல்ல….’ தாத்தா கதையை ஆரம்பித்தார்.

‘அதுதானே கேட்டேன்! சொல்லுங்கள்’ என்று உற்சாகப்படுத்தினேன் நான்.

‘இப்பொழுது 67 வயது.. என் வயசுப் பயல் யாராவது எழுந்து நடமாடி இப்படி என்னைப்போல திரிகிறானா? எல்லாம் இளமையில் அம்மா போட்ட சாப்பாடுதான் சாகிப்.. இந்த வயசிலும் இப்படி இருக்கிறேன்.’

‘ஆமாம் தாத்தா எனக்கே இப்பொழுது நாற்பது வயதுதான் ஆகிறது. உங்களைப் போலவா இருக்கிறேன்? என்னைப் பார்த்தால் எனக்கே ஆச்சரியமாக இருக்குத்… தலையும் நரைத்து…. சரி மேலே சொல்லுங்கள்’ என்றேன்.

‘அறுபது வயது வரையும் என் கையைக் காலைக் கசக்கி குடும்பப் பாரத்தைச் சமாளித்துவிட்டேன்! அதற்குமேல் தோட்டஞ் செய்யவோ கூலி வேலைக்குப் போகவோ என்னால் முடியாமல் போய்விட்டது. உடம்புக்கு உழைப்பு ஒத்துப் போகவில்லை. கொஞ்சநாள் மக்களை நம்பி ஒதுங்கிப் பார்த்தேன்.’

‘அடடே தாத்தாவுக்கு மக்கள் வேறு இருக்கா?’

‘மலைபோல வளர்ந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இருக்கிறார்கள்.’

‘அவர்கள் உயிரோடு இருக்கும் போதுதான்… இந்தத் தொழிலுக்கு வந்தேன். என்ன செய்வது அவர்களே அரைப்பட்டினியாகச் சாகும் பொழுது… நம்மையும் சுமக்கமுடியுமா! சோம்பேறிப் பிள்ளைகளாக வளர்ந்து தொழில் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.’

‘ஏன் தாத்தா மலைபோல உடம்பையும் வைத்துக் கொண்டா தொழிலில்லாமல் கஷ்டப்படுகிறார்கள்! எனக்கு இந்த வலக்கை மாத்திரம் இருந்திருந்தால் இந்த தொழிலுக்கு வருவேனா…ம்.. சொல்லுங்கள்.’

‘அதை ஏன் கேட்கிறாய் சாகிபு.. நாம் தான் கஷ்டப்பட்டாலும் அவர்களை படிக்க வைத்து சுகமாக வாழச் செய்யவேண்டும் என்று எவ்வளவோ ஆசைப்பட்டேன். என் ஆசை நிறைவேறவில்லை. தொழில் இல்லையே தவிர இருவருக்கும் மனைவி மக்களுக்கு குறைவில்லை. மூத்தவனுக்கு ஆறு குழந்தைகள். மூத்தபெண் பெரியவளாகி விட்டாள். அவளுக்கு கல்யாணம் கூடக் கேட்டிருக்கு. மாப்பிளைப் பயல் பிச்சைக்காரன் பேத்தியை நான் கட்டிக் கொள்ள மாட்டேன் என்று ஓரேயடியாக மறுத்துவிட்டான். அவன் மறுத்துவிட்டதற்கு நான் பிச்சையெடுப்பது தான் காரணமல்ல. என் பேத்தி பெண் கொஞ்சம் கறுப்பு. இவன் வேண்டாம் என்றால் என்ன… இன்னொரு பையனைக் கேட்டு வைத்திருக்கிறோம்.’

‘இளைய மகனுக்கு வாழைப்பழம் போல மூன்று ஆண்குழந்தைகள். மூத்தவனாவது ஒரு கால்பட்டினியை கட்டிக் கொண்டான். இவன் முழுப்பட்டினிதான். மூத்தவன் எப்பவாவது கூலிப் பிழைப்புக்குப் போவான். இவனோ சுத்த சோம்பேறி முண்டம். என்னை எதிர்பார்த்துக் கொண்டிருந்து ஏதாவது நான் கொண்டு போனால் அதிலே முழுப்பங்கு - முதல்பங்கு எடுத்துக் கொள்வான்.’

‘மூன்றாவது பிள்ளையும் ஒருவன் இருந்தான். நல்ல அழகு. அவன் தாயைப் போலவே இருந்தான். எங்கள் ஊர்ப்பள்ளிக் கூடத்தில் ஒன்பது வரை படிக்க வைத்தேன். தங்கராசன் மிகவும் கெட்டிக்காரன் என்று இந்தத் தலைமை வாத்தியார் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். ஒன்பதாம் வகுப்புச் சோதனைக்கு அப்பிளிகேஷன் அனுப்பியிருந்தான். அவனையும் எங்கள் எதிர்காலத்தையும் நம்பிக்கையோடு எதிர்பார்த்து நானும் சந்தோஷப்பட்டேன். அவன் படித்து பாசாகி ஒரு உத்தியோகம் கிடைத்துவிட்டால்… எல்லாப் பிள்ளைகளுக்கும் சேர்த்து அவனே நம்மை பாதுகாப்பான் என்று நம்பிக்கை! எல்லாம் ஒரு நாள் நாசமாகப் போயிற்று! விடியற்காலையில் எழுந்து தோட்டத்துக்குப் போன அவனைப் பாம்பு கடித்துவிட்டது. அவன் எழுந்திருக்கவேயில்லை. நான் கட்டிய கோட்டைகள் தரைமட்டமாயிற்று.’

‘தமிழ் சினிமாப் படம் போல இருக்கிறதே.. ஏன் தாத்தா உண்மையாகத்தான் இப்படி நடந்ததா?’

‘ஏன் அப்பா பொய் சொல்லுகிறேன். எல்லாம் நடந்த கதைதான். கடவுள் என் எளிய ஆசைகளைக்கூட நிறைவேற விடவில்லை. தலைவிதி!’

‘எனக்கும் பார்வதிக்கும் கல்யாணம் சிறப்பாக நடக்கவில்லை. என் மக்களும் மனம் போன போக்கில் இரண்டு பெண்களைத் தேடிக்கொண்டார்கள். எல்லாக் குறையும் சேர்த்து பேத்தியின் கல்யாணத்தையாவது சிறப்பாக செய்து விடலாம் என்றால் பிச்சைக்கார தொழில் குறுக்கே தடையாக நிற்கிறதே! இந்த தொழிலை வேண்டுமானால் நாளைக்கே தலைமுழுகி விடலாம். பிச்சைக்காரன் என்ற பட்டத்தை யாரும் அழித்துவிட முடியுமா?’

‘என்ன இருந்தாலும் நீங்கள் இந்தத் தொழிலுக்கு வந்திருக்கக் கூடாது தாத்தா. என்னைப் போல தனிமனிதன் என்றால் பரவாயில்லை வலது கை கூடக் கிடையாது எனக்கு. அப்படி இருந்தும் இந்தப் பிச்சைத் தொழிலுக்கு இறங்கும் கடைசி நிமிடம் வரை என்மனம் எவ்வளவு துயரப்பட்டது தெரியுமா? ஆமாம்.. இந்தத் தொழிலுக்கு முதன்முதலாக எப்பிடி அறிமுகமானீர்கள் தாத்தா!’

‘அறிமுகமா…? இல்லை துணிவு. பசிபடுத்திய பாடுதான் அப்பா! டாகுத்தர் ஐயா வீட்டுத் தோட்டத்தில புல் கொத்தி வந்தேன். ஒருநாள் என்னுடம்பை உற்றுப்பார்த்துவிட்டு கிழவன்! நீ இனிமேல் வேலை செய்ய முடியாது. வீட்டுக்குப் போ என்று சொல்லிவிட்டார் டாக்குத்தர்.’

‘இலைக்கறிச் சட்டியிலே இடிவிழுந்தது போல இருந்தது டாக்குத்தர் ஐயா சொல்லியது. கல்முனையில் வேறெங்காவது வேலை கிடைக்குமா என்று அலைந்துவிட்டு மாவடிக்கடை மரநிழலில்; களைப்போடு வந்து நின்றேன். கடையிலே சுட்ட தோசையின் மசாலை மணம். நான் ஏதாவது சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆகின்றன என்பதை ஞாபகப்படுத்தியது. இந்த நேரத்தில் ஒரு தோசையும் தேநீரும் குடித்தால்.. எப்படியிருக்கும். கடைக்காரனிடம் கடனாகக் கேட்கலாம். என்னை அவனுக்கு முன்பின் தெரியாது. நம்பித் தருவானா…’

‘கடைக்குள் இருந்து எங்கள் ஊர் வாலிபன் ஒருவன் வெளியே வந்தான். என்ன இதிலே…? என்றான் அவன். சும்மா வேலைக்கு வந்தநான் தம்பி என்று ஒரு பொய்யைச் சொன்னேன். உண்மையில் கடைக்கு யாரும் தெரிந்தவர்கள் வரமாட்டார்களா என்றுதான் அங்கு போய் நின்றேன். அந்த வாலிபனிடம் ஒரு பதினைந்து சதம் கேட்டால் என்ன? சீச்சீ… அவன் என்ன நினைப்பானோ.. பசி வயிற்றை பிசைந்தது! அந்த வாலிபன் நடந்து கொண்டிருந்தான். தோசையின் வாசனை மூக்கைத் துளைத்தது… கால்கள் வாலிபனை நோக்கி நடந்தன.’

‘தம்பி ஒரு பதினைந்து சதம் இருந்தால் கொடுக்க முடியுமா? நாளைக்கு தந்து விடுவேன் என்று கையை நீட்டினேன். சீச்சீ.. என்னிடம் சில்லறை ஒரு சதமும் கிடையாது என்று முகத்தைப்பாராமலே கூறிவிட்டு நடந்தான் வாலிபன். நீட்டிய என் கைக்குள் ஒரு பத்து சத நாணயம்! பக்கத்திலே நடந்து வந்த ஒரு நல்ல மனிதர் போட்டுவிட்டுப் போனார். அந்த நாணயந்தான் அறுபது வருடமாக நான் கட்டிக் காப்பாற்றி வந்த என் நாணயத்தை அழித்த முதல் நாணயம்! அதைத்தொடர்ந்து பலநாணயங்கள் என் கையில் விழுந்தன. ஆமாம். இந்தப் புதிய தொழிலுக்கு முதலாளியாக அன்றுதான் மாறினேன் சாகிப்.’

சாகிப் நானா அதற்குமேல் சங்கரன் தாத்தாவை ஒன்றுமே கேட்கவில்லை.


* * *

காலை ஒன்பது மணியாகிவிட்டது. சங்கரன் தாத்தா அன்று தொழிலுக்கு வராமல் இருந்தது சாகிப் நானாவுக்கு என்னவோ போல் இருந்தது. அப்படியே அவர் ஊருக்குப் போய் பார்த்து பேத்தியின் கலியாணச் சாப்பாடும் சாப்பிட்டுவிட்டு புதுத்தம்பதிகளுக்கு ஏதும் அன்பளிப்பு கொடுத்து விட்டு வரலாம் என்று எண்ணினார் சாகிப். புறப்பட்டுவிட்டார்.

சங்கரன் தாத்தாவின் ஊர்க்கோடியில் வரும் போதே ஒலிபெருக்கியின் ஓசை காதைப் பிளந்தது. தாத்தாவின் பேத்திக்கு இவ்வளவு தடபுடல் கல்யாணமா? நேற்றுச் சொன்னாரே மாப்பிள்ளை தாலி கூறையெல்லாம் கொண்டு வருகிறான். அதற்கேற்ற சிறப்பு நாமும் செய்யத்தானே வேண்டும் என்று அவருடைய நிறைவேறாத ஆசைகள் இந்த கல்யாணத்தின் மூலம்தானே நிறைவேறப் போகின்றன என்று நினைக்க எனக்கும் ஏதோ சுகமாகத் தான் இருந்தது.

ஒலிபெருக்கியின் ஓசைவந்த திக்கில் பார்த்தேன். அது ஒரு பெரிய கல்வீடு. பலகார்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அடடா ஏழைச் சங்கரன் தாத்தா வீடா இது. இல்லை இல்லை! யாரோ பெரிய பணக்காரர் வீட்டுக் கல்யாணம் என்பதை யாரும் சொல்லத் தேவையில்லை. கார்களே சொல்லுமே! சாகிப் நானாவுக்கு சிறு ஏமாற்றம்!

அதோ வருகிறதே ஊர்வலம்.. அதுதான் தாத்தாவின் கல்யாண மாப்பிள்ளை ஊர்வலம் போல தெரிகிறது. என்ன தேர் போல எதையோ தூக்கி வருகிறார்களே! ஊர்வலம் கடற்கரை பக்கமாக திரும்பியது. எதிரே தெரிவது தான் சுடலையா! சாகிப் நானாவுக்கு மனத்தை என்னவோ செய்தது. எதிரே வந்த சைக்கிள்கார வாலிபனிடம் கேட்டார்.

‘தம்பி அது என்ன ஊர்வலம்?’

‘அந்த பிச்சைக்காரச் சங்கரன் தாத்தா கார்மோதி இறந்து போனார்.’ சாகிப் நானாவுக்கு பகீர் என்றது.

‘என்னதம்பி! அவர் பேத்திக்கு இன்றைக்கு கல்யாணம் அல்லவா?’

‘எல்லாம் பாழாய் போச்சு! பேத்தியின் கல்யாண விருந்துக்கு வாழை இலை வெட்டிக் கொண்டு வந்த தாத்தா. ஒலிபெருக்கியின் சத்தத்தில் கார் வந்ததைக் கவனிக்கவில்லை! தெருவைக் கடக்கும் போது….’

‘ஐயோ…அல்லாஹ்!’ என்றவாறே சாகிப் நானா ஊர்வலத்தைத் திரும்பிப் பார்த்தார்! அது சுடலையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.

அது கல்யாண ஊர்வலமல்ல… நிராசையின் கடைசி ஊர்வலம் என்று நினைக்கும் பொழுது சாகிப் நானாவினால் அழுகையை அடக்க முடியவில்லை!

+++++++++++++++++++++

நாணயம்


‘என்ன மனே இந்நேரத்தில! பெட்டியும் தலகாணியோடயும் வந்தெறங்கிறாய். ஒனக்கு லீவுக்கு இன்னம் ரெண்டு மாத்தயக் காசு கட்ட வேணுமே?’

இரவு ஏழரை மணி பஸ்ஸில் பெட்டி படுக்கை சகிதம் திடுதிப்பென்று வந்து குதித்துவிட்ட சுந்தரத்தை பார்த்து ஆச்சரியத்தோடு கேட்டாள் நாகம்மாள்.

‘ஆமாம்! முதல் மாதக் காசு மாத்திரம் கட்டிப் போட்டயள். இனி ரெண்டு மாசந்தான் பாக்கி! அம்மா… தூக்க ஏலாத சுமயத் தூக்கப் போனா இப்பிடித்தான் வரும். நான் அப்பவே சொன்னன். அந்தக் கள்ளுக் கடக்காறனுக்குக் கணக்கெழுதிற்றுக் கிடந்தாப் போதுமெண்டு. கேட்டீங்களா! மாதம் முப்பது ரூபா காசு கிடைக்கும் ஏதோ வயித்தக் கழுவிற்றுக் கிடக்காமல்… “எண்ட மகனும் றெயினிங்கு சூலுக்குப் போய் வாத்தி வேலை எடுக்கப் போறான்” என்று ஊருக்குள்ள மேளம் அடிச்சாப் போதுமா? மாதா மாதம் சாப்பாட்டுக் காசுதானும் கட்டிக்க வழியில்ல… வாத்தியார் வேலை கிடைச்சாப்பலதான்.’

‘சை! எல்லாரும் வாத்தி வேலைக்குப் படிக்கிறாங்க எண்டு நானும் ஒருவன் போனதைச் சொல்ல வேணும்….’

கமுக்கட்டுகள் வேர்த்து வடிந்ததால் கொஞ்சம் காவி ஏறிப் போயிருந்த நாலாயிரம் யப்பான் பப்ளின் வாலாமணியை அடியிலே பிடித்து அவசரமாகத் தலைக்கு மேல் இழுத்தபடி நாகம்மாவை பார்த்து வார்த்தைகளை ஆத்திரத்தில் தோய்த்து அள்ளி வீசினான் சுந்தரம்.

நாகம்மாவுக்குச் சங்கதி விளங்க அதிக நேரமாகவில்லை.

‘நாளைக்கி தலையக் கொட்டப்பாக்காக வச்செண்டாலும் ஆரிட்டயும் பாத்துப் பிரட்டி அனுப்பத்தானே இருந்தனான். அதுக்குள்ள இப்ப என்னடப்பா… வந்து சத்தம் போடுறாய்….’

நாகம்மாவின் சொற்களால் சுந்தரத்துக்கு மேலும் கோபந்தான் பொங்கியது.

‘ஓ..ஓ! சத்தம் போடப்படாது.. நீங்க செய்த சதிக்கு. கழுத்தில கயிறுதான் போடவேணும். நான் றெயினிங்கு போய் இது கடைசித் தவணை. இந்த ஆறு தவணையில ஒரு தவணையாவது என்ர சாப்பாட்டுக் காசு ஒழுங்காகக் கட்டினது கிடையாது! அவங்களும் எத்தனை நாளைக்கு பாப்பாங்க! பெட்டியக் கட்டிற்று போய் வா எண்டுமட்டும் சொல்லியிருந்தால் நான் துக்கப்பட்டிருக்க மாட்டன்.’

‘நூற்றுசொச்சம் பிள்ளையள் - பிள்ளையளில்ல வாத்திப்பட்டாளம். ஆம்பிளையள் மட்டுமெண்டாக் காரியமில்ல பாதிக்கு மேலே பொம்புளப் புள்ளயள்! அத்தனையாயிரம் பேருக்குள்ள வச்சு ஐஞ்சாந் திகதியும் போய் ஆறாம் திகதியுமாகுது… முதலாந் திகதி கட்டவேண்டிய போடிங் காசு கட்டாதவங்க எழும்பி நில்லுங்க எண்டு அதிபர் சொல்ல நான் மாத்திரந்தானே எழும்பி நிண்டவன்! நான் உப்பு சிரட்டைக்குள்ள விழுந்து சாக வேணும்!’

கண்களில் தளும்பி நின்ற நீரை மகன் காணாமல் வழித்து முந்தானையில் பூசிக் கொண்டாள் நாகம்மா.

‘நான் என்ன செய்வண்டா தம்பி. ஓடாத இடமெல்லாம் ஓடி கேளாத இடமெல்லாம் கேட்டுப்பாத்தன். ஒருபக்கமும் வாய்க்கல்ல. நாளைக்கு…’ என்று இழுத்தபடியே சுந்தரத்தின் முகத்தில் எதையோ தேடுவது போலப் பார்த்தாள் தாய்.

‘நாளைக்கு மட்டும் புதையல் கிளப்பப் போறாய்போல’ என்று அலட்சியமாகக் கூறிய படியே கிணற்றடிப் பக்கமாகப் போனான் சுந்தரம்.

அவனுக்கு தெரியும் தன்வீட்டில் இன்று எல்லோரும் பட்டினி என்று. தண்ணீரை அள்ளி கைகால் அலம்பிவிட்டு அப்படியே வயிறு நிரம்ப அதில் ஐந்தாறு மடக்குக் குடித்துவிட்டு உள்ளே வந்த சுந்தரம் பெட்டியைத் திறந்து அவசர அவசரமாக ஏதோ புத்தகத்தை வெளியில் எடுத்தான்.

‘இம். பைனலுக்கு இன்னமும் ரெண்டுமாதந்தான் இடையில கிடக்கு எல்லோரும் இரவு பகலா விழுந்து விழுந்து படிக்கிறாங்க.. நான் மட்டும் இஞ்ச விருந்து சாப்பிட வந்தாச்சு.’ புத்தகத்தை இடது கையில் பிடித்தபடி மூலையில் கிடந்த கிழிந்தபாயொன்றை விரித்து அதிலே தான் கொண்டு வந்திருந்த வெள்ளை கலையாத தலையணையைத் தூக்கிப் போட்டுக் கொண்டே முணுமுணுத்தான் சுந்தரம்.

தலையணையில் சாய்ந்து கொண்டே பக்கத்தில் செங்கல்லி;ன் மேல் அழுது வடிந்துகொண்டிருந்த தகர விளக்கை எடுத்துக் காதுக்கு நேராக பிடித்து ஆட்டிப் பார்த்த சுந்தரம் தாயின் பக்கமாகத் திரும்பி

‘போத்தலுக்குள்ள லாம்பெண்ணை ஏதும் கிடக்கா….?’ என்றான்.

‘அதுக்க கிடந்த எண்ண அவ்வளவுந்தான். ஏன் பத்திப்போச்சா?’ தொண்டையை விட்டு வெளியேறப் பயந்த வார்த்தைகளை வலோற்காரமாக வெளியே பிடித்துத் தள்ளினாள் தாய்..!

‘தரித்திரம் பிடிச்ச வீட்டில வந்து பிறந்து நான் படுற பாடு ஐயோ கடவுளே…’ கையிலிருந்த புத்தகத்தைத் தூக்கி பெட்டியின் மேல் வீசினான் சுந்தரம். புத்தகத்தின் ஒற்றைகள் உண்டாக்கிய காற்றமுக்கத்துள் சிக்கி இப்பவோ பின்னையோ என்று மினுங்கிக் கொண்டிருந்த அந்தத் தகர விளக்கும் ‘பக்’ கென்று அணைந்தது.

வீடெங்கும் இருள். அந்த இருளுக்குள் சங்கமமாகிக் கிடந்த சுந்தரத்தின் தாய் நாகம்மாவின் உள்ளத்தின் உள்ளும் சுந்தரத்தின் இதயத்துள்ளும் ஏன் அவனுடைய எதிர்காலத்திலுந்தான் அந்த இருள் மெல்ல மெல்லக் கவிந்து கொண்டிருப்பதாகச் சுந்தரம் நினைத்தான்.


* * *

நாகம்மா சுந்தரத்தின் தாய். ஆமாம். அந்தக் கைம்பெண் கடந்த இருபத்தொரு மாதங்கள் எவ்வளவு நம்பிக்கையோடும் மன உறுதியோடும் போராடிக் கொண்டு வருகிறாள்!

கணவன் வருத்தப் படுக்கையாகக் கிடந்த போது ‘வளவு உறுதியை ஈட்டுறுதியாக மாற்றி வாங்கிய இருநூறோடு சேர்த்து, தொள்ளாயிரமாக இன்னும் எழுநூறு தரலாம். காணுமா உன்ர மகன் வாத்தியார் வேலைக்குப் படிச்சுவர?’ என்று பணம் படைத்தவர்களுடைய வழக்கமான பீடிகையோடு ஆரம்பித்து கொஞ்ச நஞ்சம் கூட்டி தரலாம் என்ற சம்பிரதாய விதிகளைக் கடைப்பிடித்து கடைசியாக ஆயிரம் ரூபாவுக்கு உறுதியை முடித்துக் கொண்டு மாதம் ஐம்பது ஐம்பதாக பதினான்கு மாதத்தவணைகளில் கொடுத்து முடித்தார் போடியார் பொன்னம்பலம். இவ்வளவாவது செய்தவர் நல்லவர்தான் என்பது நாகம்மாவின் அசையாத நம்பிக்கை. குறிப்பிட்ட திகதிக்குப் பிந்திக் கொடுத்தாலும் கூட!

சுந்தரத்தின் பதினான்கு மாத ஆசிரியப் பயிற்சிக்கு குடியிருந்த வளவு வட்டிக்கென்றாலும் வாங்கிக் கொடுத்தது. நாம் என்ன செய்யலாம் என்று சிந்தித்த ஒரு புரன் வளவுத்துண்டு - காரையும் கள்ளியும் மண்டிக் கிடந்தாலும் ‘தெருவோரம்’ என்ற அந்தஸ்த்தால், அழகால் கடைக்காரர் கதிரமலையை மருட்டி சுந்தரத்தின் ஏழுமாதப் பயிற்சிக்கு உதவியது.

மண் புரிந்த பேருதவியைத்தானும் மனித உருக்கள் செய்ய முன் வரவில்லையே என்று நினைக்க நாகம்மா திகைத்தாள்.

சுந்தரம் மட்டும் ஒரே மகனாகப் பிறந்திருந்தால் அவள் தன் கைகளைக் கொண்டே பிரச்சனையைச் சமாளித்திருப்பாள். சுந்தரத்தின் சாதகத்தில் பிற் சகோதர விருத்தியுண்டு என்று பெருமாள் சாஸ்த்திரியார் இருபது வருடங்களுக்கு முன்பே எழுதி வைத்துவிட்ட காரணத்தினாலோ என்னவோ அவனுக்கு மூன்று சகோதரிகளும் கடைக்குட்டித்தம்பியும் இருந்தார்கள்.

ஆண்துணையே அற்ற - ஐந்தாறு தென்னைமரங்களையும் துரைவந்திய மேட்டுக் களிமண்ணையும் வைத்துக் கொண்டு ஐந்து சீவாத்மாக்களின் வயிற்றுக்கும் றெயினிங் கொலீச்சுக்கும் காசு கட்டுவதென்றால் நடக்கக் கூடிய காரியமா என்ன?

மண்டை மயிர் உதிர மாதத்துக்கு நூறு களிமண் உருண்டை சுமந்தாலும் முப்பது ரூபாவுக்கு மேல் சட்டிபானை விற்கமுடியாத நிலையில், சுந்தரத்தின் கடைசி மூன்று மாதப் பயிற்சி பூதாகார வடிவில் நாகம்மாவுக்கு முன் நின்று தன் கோரைப்பற்களை மூடிக்கொண்டு சிரித்தது!

‘சுந்தரம் இன்னும் மூணுமாசத்தால் வெளிக்கிட்டு வருவான். வெளிக்கிட்டதும் வேலை கிடைச்சிரும். எப்பிடியும் ஆறுமாசத் தவணைக்குள்ள தந்திருவன் ஒரு பதினைஞ்சு பவுண் காசி தாங்க’ என்று பென்சன் வாத்தியார் பெரியதம்பிப் பிள்ளையிடம்;; கெஞ்சியதன் பேரில் ‘வாங்கின இடத்திலேயே மொத்தமாய் வாங்கிக் கட்டுங்க என்னிட்ட இப்ப ஒண்டும் வசதியில்ல’ என்ற அருமையான ஆலோசனையைத் தெரிவித்த போது நாகம்மா அழுதாள்.

‘மகனுக்குக் கட்டக்கட்ட எண்டு வாங்கி வகுறு வளக்குதுகள். பின்ன இவ்வளவு காசும் வாங்கிக் காணாமல் போக அதென்ன கண்டறியாத “றெயினிங்கி சூல்’’ .

மற்றொரு போடியார் வீட்டில் கெஞ்சிவிட்டுத் திரும்புகையில் போடியாரின் மனைவி பூலோக நாச்சியார் உதிர்த்த பொன்மொழிகள் அவை.

‘தாலி அறுத்ததுகள் எல்லாம் தராதரம் தேடப்பாக்குதுகள் இம்.. காலம் போன போக்கு..’ எட்டு முறை எஸ். எஸ். ஸி. பரீட்சையோடு போராடி கடைசி முறையிலும் முட்டை வாங்கி மூக்கறுபட்ட ஒரு விவேக சிகாமணியை பெற்றெடுத்த வைரத்தாலி பூட்டிய ஒரு வீரத்தாய் நாகம்மாவின் பணம் தேடும் படலத்துக்கு வழங்கிய விமர்சனத்தின் தொகுப்புரை இது.

இவை மாத்திரந்தானா! இன்னும் எத்தனையோ இத்தனைக்கும் மத்தியில்… ‘சுந்தரத்தின் படிப்பைக் கவனி.. அவன் உன்னையும் புள்ளைகளையும் காப்பாத்துவான்’ என்று சுந்தரத்தின் தகப்பனார் இறக்கும் பொழுது கடைசியாக விட்ட மூச்சு! அது உள்ளத்தை உறுத்த உறுத்த நாகம்மா துரைவந்திய மேட்டுக் களிமண்ணோடு போராட்டத்தைத் தீவிரப்படுத்தினாள்.

‘இந்தச் சூளை உடைவு - வெடிப்புப் போய் எக்கேடு கெட்டாலும் மூணரைப்பவுண் - முப்பத்தைஞ்சு ரூபாய்க்குப் போகும். சட்டிபானை யாவாரிற்றையும் ஒரு பதினைஞ்சு மேல் மிச்சமா வாங்கி, புரட்டாதி மாசக் காசக் கட்டிப் போடலாம். ஓட்டை உடசலை வித்து கூப்பன் கொட்டை எடுத்தா உப்போட தண்ணியோட எண்டாலும் நாம சமாளிச்சுக் கொள்ளலாம்.’

நாகம்மாவின் நம்பிக்கைக்கு சவால் விட்டபடி கடந்த ஏழெட்டு நாட்களாக அடைத்துக் கொண்டு வெயிலுமில்லாமல் மழையுமில்லாமல் கண்ணாமூச்சி விளையாடும் இந்த இருண்ட வானத்தைத்தான் புலவர்கள் கொடைக்கு எல்லையாகப் பாடி வைத்திருக்கிறார்கள் என்று இலக்கியம் தெரியாத நாகம்மா எப்படி அறிவாள்! பாவம்.

உண்மைத் தெய்வத்தோடு மட்டும் நின்று விடாமல் மனிதன் படைத்து வைத்த பால், முட்டை, கோழி, இறைச்சி, சாராயம் போன்ற புஷ்டி வாய்ந்த உணவுகளையும் ஊட்டிப் பாதுகாத்து வரும் அந்தத் தெய்வங்களையுந்தான் வேண்டினாள். இந்த மழையை ஒரு நாள் மட்டும் தடுத்து வைக்கும்படி! தெய்வங்களின் உடல் மாத்திரமல்ல அவைகளின் செவிகளும் கல்லால் ஆனவையே என்பதையெல்லாம் எண்ணிப்பார்க்க நாகம்மாவுக்கு அப்பொழுது அவகாசமில்லை. ஐப்பசிமாதம் இங்கிலீசுக்கு முதலாம் திகதி அன்றே கட்டிமுடிக்க வேண்டிய சுந்தரத்தின் புரட்டாதி மாதச் சாப்பாட்டுக் காசு தான் அவள் உள்ளமெலாம் உறைந்து நிறைந்து ஒப்பாரி பாடிக்கொண்டிருந்தது.

சுந்தரம் புரண்டு படுத்தான்.

குசினிக்குள் தட்டுமுட்டுச் சாமான்கள் மெதுவாக ஓசை எழுப்பின. அதைத் தொடர்ந்து கிணற்றடியில் கயிற்று வாளியின் கடகடப்பு. குறிப்பிட்ட நேரத்திற்குச் சாப்பிட்டுப் பழகிப் போன சுந்தரத்தின் வயிற்றிலும் கடகடப்பு எப்பொழுதோ ஆரம்பித்திருந்தது. விளக்குக்கே எண்ணெய் இல்லை. சோற்றுக்கு யார் விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு பேசாமல் கிடந்த சுந்தரத்திற்கு, குசினி ஆரவாரம் ஏதோ கொஞ்சம் நம்பிக்கை ஊட்டியது.

‘தீஞ்சோறு கீறு கிடக்க வேணும். அதுதான் மனுஷி ஆயத்தப்படுத்துறா’
என்று நினைத்துக் கொண்டு கிடந்த சுந்தரத்தை ‘இந்தா தம்பி எழும்பு இதுக்க ஒரு கோழிமுட்ட இரிக்கி இண்டைக்குத்தான் நம்மட கோழி விட்டது. கன்னிக் கோழி முட்ட. ஆருக்கும் மருந்து மாயத்துக்குத் தேவைப்படும் எண்டு வச்சது. வெறும் வகுத்தோட படுக்காமல், இதைத் திண்டு தண்ணி குடிச்சிற்றுப்படு. சீனி ஒள்ளுப்பம் கிடக்குத்தான். அதுக்கு தேயிலைத்தூள் இல்ல…’ என்ற தாயின் உருக்கமான வேண்டுகோள் சுந்தரத்தை உருக்கிப் பிழிந்தது.

கண்களை தலையணையில் ஒற்றி எடுத்துக் கொண்டு எழுந்தான் சுந்தரம். முட்டை தொண்டைக்குள் இறங்க மறுத்தது. எழுந்து வாசலுக்கு வந்த அவனிடம் தண்ணீர்ச் செம்பை நீட்டினாள் நாகம்மா. நீட்டிய கரங்களில் இரண்டு நெருப்புத் துளிகள் சுந்தரத்தின் விழிகளில் இருந்து உதிர்ந்தன.

* * *

காலைப் பொழுது வேகமாக வருகிறது.

குழந்தைகள் ஒவ்வொருவராக விழிக்கிறார்கள். கடைக்குட்டிப் பையன் ‘அம்மா’ என்று எழுந்து நாகம்மாவை காணாத ஏமாற்றத்தோடு அழுத வண்ணம் தமக்கையின் பக்கமாகப் போகிறான்.

‘டேய் அண்ணன் படுக்குதுடா குளறாத’ என்று அவனை அரவணைக்கிறாள், சுந்தரத்தின் பன்னிரண்டு வயது தங்கை. அன்றிரவு அண்ணன் வந்திருக்கும் சங்கதி அவளுக்கு மட்டுந்தானே தெரியும்.

* * *

பலபலத்து விடியுமுன்னே காசுக்கு வந்து நிற்கும் நாகம்மாவை எரிச்சலை மனதுக்குள் கட்டிக் கொண்டே வரவேற்ற சட்டிபானை வியாபாரி செல்லையா.. மூன்று பத்துரூபாய் நோட்டுக்களை கொண்டு வந்து கொடுக்கிறார். அதை வாங்கி எண்ணியபடியே அவரை வினாக்குறியோடு பார்க்கிறாள் நாகம்மா.

‘இதுக்குமே இப்ப வசதியில்லை. நிலுவைக் காறன் ஒருவனும் காசு தரல்லை.. நானென்ன செய்யட்டும். மிச்சம் இருவதையும் வேறெங்கையும் பாத்துப் புரட்டு. ரெண்டு மூண்டு நாள் கழிச்சுப் பாப்பம்..’

வியாபாரி செல்லையாவிடம் அவள் வைத்திருந்த கடைசி நம்பிக்கை படீர் என்று உடைந்து சரிகின்றது. இனிக் கெஞ்சினாலும் அவனா கொடுக்கப் போகிறான். குறிப்பிட்ட விலைக்கு சட்டிபானையை வாங்கிப் போய் நல்ல இலாபத்துக்கு விற்று விட்டு வந்து, ‘சட்டிபானை சந்தையிலே குவிஞ்சு போய்க்; கிடக்கு இனி இந்த புளப்பெல்லாம் சரிக்கட்டாது’ என்ற தனது வாலாயமான மந்திரத்தைச் செபித்து அதன் சக்தியினால் குறிப்பிட்ட விலையிலும் கழிவு வைத்துக் காசு கொடுக்கும் செல்லையா முற்பணமாய் முப்பது கொடுத்ததே ஆச்சரியந்தான்! ஒரு வேளை இந்த அடைமழை இன்றைக்கு விட்டாலும் விடுமோ!!

நாகம்மா வீட்டை நோக்கி நடந்து கொண்டிருக்கிறாள். பளீர் என்று மின் வெட்டுகிறது. அவள் எண்ணத்திலும் ஒரு மின்னல் கீற்றுச் சுடர் பாய்ச்சுகிறது. அதன் ஒளியிலே வட்டிக்கடையில் ஈடாகக் குடிபுகுந்திருக்கும் வெள்ளைக்கல் தோடு மின்னி மறைகிறது. அதை விற்று விட்டால்…?

‘இங்கே வட்டிக்கு பணம் கொடுக்கிறதே ஒழிய நகையை வாங்கிக்கிற வழக்கமில்லீங்க. போய் வர்றீங்களா?’ செட்டியார் சிவராசன் நாகம்மாவைப் பார்த்துத்தான் கூறுகிறான்…

அப்பிடியெண்டால் தோட்டை மீண்டுதான் பிறகு விற்கவேண்டும். கையிலிருக்கும் முப்பது ரூபாவைக் கொண்டு நாற்பத்தைந்து ரூபாவுக்கு ஆறுமாதங்களுக்கு முன் வைத்த தோட்டை எப்படி மீள்வது.

ஏமாற்றத்தோடு திரும்பி வந்து கொண்டிருக்கும் நாகம்மாவின் மனதிலே கடைசி முயற்சியாக முளையொன்று அரும்புகிறது.

‘அடுத்த ஊருக்குப் போய் வரப்போறணெண்டு நாச்சி மனுஷியிர தோட்ட இரவல் வாங்கிப் போட்டிற்றுப்போய், அத ஈடு வச்சுப்போட்டு, இருபது ரூபாய் எடுத்து, இந்த முப்பதோட போட்டு, நம்மட தோட்ட மூண்டுகொண்டு போய், கைமனையில வித்தால் எழுபத்தைஞ்சி ரூபாய்க்கு விக்கலாம். அதில இருபதக் குடுத்து நாச்சி மனிஷிர தோட்ட மூண்டு குடுத்திரலாம்… இது தான் வழி.’

திட்டம் செயலாகிறது.. செயல் வெற்றி பெறுகிறது. தன்னுடைய சாமர்த்தியத்தை எண்ணும் பொழுது நாகம்மாவுக்கு மனதை ஏதோ உறுத்துகிறது. என்றாலும் அன்றைக்கே மகனைப் பணத்தோடு பள்ளிக்குத் திருப்பி அனுப்பியதில் ஒரு நிறைவு ஏற்படத்தான் செய்கிறது.

* * *

கார்த்திகை மாதம் இருபத்தெட்டாம் திகதி சுந்தரம் ஆசிரிய பயிற்சி இறுதிப் பரீட்சையை எழுதிவிட்டு, தப்பினேன் பிழைத்தேன் என்று வீட்டுக்கு வந்து சேர்கிறான். நாகம்மாவும் குழந்தைகளும் சுவர்க்கத்தின் தலைவாசலை அடைந்து விட்ட மகிழ்ச்சியில் அவனை வரவேற்கிறார்கள்.

சுந்தரத்தைச் சுகம் விசாரிக்க பென்சன் வாத்தியார் பெரியதம்பி முதல் நாச்சி மனுஷி வரை வந்திருக்கிறார்கள்.

வந்திருந்தவர்கள் கைம் பெண்ணாய் இருந்து கொண்டே மகனை ஒரு தமிழ்ச்சட்டம்பி ஆக்கிவிட்ட நாகம்மாவின் சாமர்த்தியத்தை என்னவெல்லாமோ சொல்லிப் பாராட்டுகிறார்கள்.

‘நீங்க என்ன சொன்னாலும் சொல்லுங்க.. நாகம்மாட நாணயந்தான் பொடியன இந்த நிலைக்குக் கொண்டு வந்தது. வேறொருவர் இப்பிடிப் புரட்டி அலுவல் பாப்பாங்க என்டதை மட்டும் நான் நம்பமாட்டன் ஓ..! அவள் பெட்ட நாணயகாறிதான்.’

நாச்சி மனுஷியின் இந்த பாராட்டுரை நாகம்மாவின் இதயத்தைக் குத்திக் கிழித்ததோ என்னவோ அவள் இருமித் துப்பிய எச்சிலோடு வெளியில் வந்தவை மஞ்சாடி விதைகளல்ல என்பது அங்கிருந்தவர்களுக்கு நன்றாகத் தெரிந்த சங்கதி!

++++++++++++++++++++++++

தெளிவு


கந்தோருக்குப் போக வேண்டியதில்லை. காலிமுகக் கடற்கரைக்கு காற்று வாங்கப் போகலாம் என்பதாலோ, புதிதாக திரையிடப்பட்டிருக்கும் தமிழ்ப்படம் பகல் காட்சியைப் பார்த்துவிடலாம் என்பதாலோ, ஞாயிற்றுக்கிழமை அவனுக்கு சந்தோஷநாள் ஆகி வரவில்லை.

காலையில் எழுந்ததும், வளமான நிலத்திலே முளைத்து நிற்கும் ஊசிப்பயிர் வேளாண்மை போல, என் முகத்திலே வளர்ந்து நிற்கும் இந்த மீசை மயிர்களையும் வழித்து ஒதுக்கிச் சுத்தம் பண்ணவேண்டுமே என்ற கவலை இன்றைக்குக் கிடையாது! அதனால் ஞாயிற்றுக் கிழமை என்றால் ஷேவ் எடுக்காத சந்தோஷ நாள் என்பது என் கருத்து!

தடிப்பான முரட்டுத் துணிக்குள்ளே உரிமட்டைகளை உயிரோடு புதைத்து மெத்தையென்ற பெயரிலே என் கட்டிலை சரண்புகுந்திருக்கும் படுக்கை. அதிலே சோம்பேறி நித்திரை செய்கிறேன்.

காலை பத்து மணி!

ஆகட்டுமே! நான் என்ன இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்புக்கு தமிழ் அறிவிப்பாளரா?

கடையில் தோசை ஆறி அவலாகிக் கிடக்கும். அதற்கு மேல் இனி என்ன காலைச்சாப்பாடு? ஒரு கிளாஸ் தேனீர் போதும். இன்றைக்கு இறைச்சி போடுகிற நாள். காலை இழப்பையும் சேர்த்து வஞ்சகமில்லாமல் ஒரு பிடி பிடித்தால் சரி. இனி எழும்ப வேண்டியது தான்.

மாடியிலிருந்து இறங்குகிறேன் ‘கடார்! புடார்!! தடார்!!! படிகளா இவை? பாட்டனார் பற்களுக்குப் போட்டியாகப் போலும்? வெறும் நொய்ந்த கட்டிடம். கொம்பனித் தெருவிலே இப்படி ஓர் இடம் கிடைத்ததே நான் முற்பிறப்பிலே செய்த புண்ணிய பலன் என்று என் காரியாலய நண்பர்கள் சொல்லிக் கொள்ளுகிறார்கள். அப்பாடா! இறங்கியாயிற்று.

பல்லை விளக்கிக் கொண்டே பாத் ரூம் பக்கமாகப் போகிறேன். என்னை இழுத்துத் தள்ளிக் கொண்டு, எனக்கு முன்னால் பாய்ந்து போய், பாத்ரூமை மூடிக்கொள்ளுகிறான் பக்கத்து அறை நண்பன். இனிக் குளித்த மாதிரித்தான்.

பக்கத்திலிருந்த குழாய்த் தொட்டியில் முகத்தை மட்டும் அலம்பிக் கொண்டு மாடிப்படிகளில் காலை வைக்கிறேன்.

‘மாத்தயாட்ட தந்தி ஒண்டு இரிக்கி.. இப்பதாங் குடுத்துட்டு போறாங்…’ அப்புஹாமி தந்தியைக் கையில் பிடித்துக் கொண்டு என்னிடம் ஓடிவருகிறான்.

‘என்ன? எனக்கா? தந்தியா?’

அப்புஹாமியிடமிருந்து பதட்டத்தோடு தந்தியை வாங்கி உடைக்கிறேன். யாருக்கு என்னவோ?

சீச்சீ! தந்தி என்றாலே ஆபத்து - அபாயம் - நோய் - மரணம் இந்த எண்ணங்கள் தான் முன்னுக்கு ஓடிவர வேண்டுமா? நன்மையை மறந்து தீமையைப் பேசிக் கொண்டிருக்கும் மனிதர்களைப் போல!

பிறப்பு - திருமணம் வாழ்வு - புதுமனை இப்படி மனிதனுடைய வாழ்விலே மகிழ்வும் இல்லையா? வாழ்வும் தாழ்வும் மனிதனுக்கு இருக்கும் பொழுது தாழ்வினை மட்டுந்தான் தந்தி சொல்லுமா?

‘பெண்குழந்தை பிறந்திருக்கிறது. தாயும் குழந்தையும் நலம்’

என்னவோ என்று பயந்து விட்டேன். உள்ளத்துடிப்பின் ஒலி மாறிக் கேட்கிறது. நான் தந்தையாகி விட்டேன்! பத்துமாதங்களுக்கு முன் நட்ட வித்து முளைத்துக் கிளைத்துச் செழித்து வளர்ந்து பூத்துக் காய்த்து கனிந்து விட்டதா? என் இல்லற வாழ்வு பூரணத்துவம் அடைந்துவிட்டதா? என்னையே நான் கேட்டுக் கொள்ளுகிறேன்.

‘மாத்தயாட்ட புள்ள கிடச்சதா? மாத்தயா மிச்சங் சந்தோஷம்!’

ஏன் என் முகத்திலே எழுதியிருக்கிறதா அப்படி? தந்தியை ஏலவே உடைத்துப் பார்த்துவிட்டானா அப்புஹாமி! சீச்சீ அப்படி இருக்காது. அவனும் ஒரு முன்னை நாள் தந்தை. அவ்வளவு தான்.

கடைப்பெட்டிப் பக்கம் ஓடிப்போன அப்புஹாமி அன்னாசிப் பழத்துண்டு ஒன்றை எடுத்துக் கொண்டு ஓடிவந்து என் வாய்க்கு நேரே நீட்டுகிறான்.

யாருக்கோ குழந்தை பிறந்திருக்கிறது என்றதும் ஐந்து சதத்தை நட்டக்கணக்குப் பாராத தந்தையுள்ளம், தணியாத பாச உள்ளம், அதற்கும் மேலான ஒரு மனித உள்ளம், கேவலம் இந்தச் சிங்கள வியாபாரிக்குக் கூட இருக்கிறதா?

‘சீக்கிரம் குழந்தை பிறக்கட்டும்’ என் திருமணத்தின் போது அப்புஹாமி அனுப்பிய வாழ்த்துத் தந்தி நினைவுக்கு வருகிறது. கையில் இருந்த தந்தியை அப்புஹாமியின் பக்கம் திருப்பிக் காட்டுகிறேன். என் கைகளை இறுக்கமாகப் பற்றி முதுகிலே தட்டி தன்னுடைய மகிழ்ச்சியைக் காட்டிக் கொள்கிறான் அப்புஹாமி. அதற்கும் மகிழ்ச்சியோ என்னவோ கூய் என்று கத்திக் கொண்டே கோட்டையை நோக்கி விரைகிறது கரையோரப் பாதையில் புகைவண்டி ஒன்று.

தந்தி கையில் படபடக்கிறது. என் உள்ளமும் அப்படித்தான் கிளுகிளுக்கிறது. மேலே போகிறேன். மட்டக்களப்பு ரெயில் வண்டி புறப்பட இன்னும் ஒன்பது மணித்தியாலங்கள்! ஒவ்வொன்றும் ஒவ்வொரு யுகத்தின் நீளம். எப்படிப் பொறுத்திருப்பது. கடைத்தெருவுக்குப் போய் வரலாம். பேவ்மெண்ட்டில் வாங்கியதென்றாலும் கொழும்பிலே வாங்கிய சாமான் என்று சொல்லிக் கொள்வதில் என் மனைவிக்கு மாத்திரமல்ல மாமியாருக்குந்தான் பெருமை! காசு…?

அப்புஹாமியின் கல்லாப் பெட்டிக்கு அப்படி ஒன்றும் இரும்பு இதயம் கிடையாது. ‘அம்பதுங் போதுமா மாத்தயா?’

அறையொன்றையும் வாடகைக்குத் தந்து வெற்றிலை, சிகரட், சோடா, பழம் என்றும் கடனுக்குத்தந்து, மாதம் முடியும் வரை பொறுமையோடு காத்திருந்து, மொத்தக் கணக்கில் மூன்றில் இரண்டை எக்கவுண்ட் என்ற சம்பிரதாய மனப்பான்மையோடு ஏற்றுக் கொண்டு, அந்தரம் ஆபத்துக்கு கைமாற்றுத் தரும் பொழுதுங்கூட மாத்தையா என்று மரியாதையாக அழைக்கிறானே! இந்த ஏழை பழவியாபாரியின் மனம் பெரிதாகத் தான் இருக்கவேண்டும்!

நன்றியோடு காசைப் பெற்றுக் கொண்டு கடைத் தெருவுக்குப் போகிறேன். சட்டைத்துணி; நாலைந்து வகையில், பனிக்குத் தொப்பி, கம்பளிச்சப்பாத்து, மெரிக்கோ றவுண்ட், கிறேப்ஸ், ஆப்பிள், இடியப்பப்பார்சல், பொழுது போக்க வார இதழ் ஒன்று, ஒரு பக்கற் திறிறோசஸ் பன்னிரண்டு ரூபா மிச்சம்! ரெயில் செலவுக்கு போதும்.


* * *

புகைவண்டிக்குள் நெருக்கமில்லை. இன்று தூங்கிக் கொண்டே பிரயாணம் செய்யலாம். கைப்பையை மேலே வைத்துவிட்டு யன்னல் பக்கமாக உட்காருகிறேன்.

‘என்ன இது பெண்கள் பகுதிக்குள் ஏறி மடையன் போல உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்? எழும்பும்! எழும்பும்!!’ ஆங்கிலத்தில் வார்த்தைகள் வெடித்துச் சிதறி என் காதுச் சவ்வைப் பிய்க்கின்றன. குரல் வந்த பக்கமாக திரும்புகிறேன்.

பேசியவர் ஒரு பெண் பிரயாணி. தமிழ் ஸ்டைலில் உடுத்திக் கொண்டு பின்னே நிற்கும் தன்னுடைய சினேகிதிகளுக்குத் தலைமை வகுத்து நிற்கும் அந்த அம்மணியின் நெற்றிக்கண் போல வட்டவடிவான குங்குமப் பொட்டு மின்னுகிறது. மகளிர் மாத்திரம் என்ற பாழாய்போன அந்த அறிவித்தலை முறைத்துப் பார்த்தபடி, மன்னிக்கவும் என்று கூறிக்கொண்டே என் கைப்பையைத் தூக்கிக் கொண்டு அடுத்த பெட்டிக்குள் போகிறேன். நான் வேட்டி கட்டிக் கொண்டிருந்தாலும் எனக்கு ஆங்கிலம் தெரியும் என்று கண்டுபிடித்து அந்த அம்மணி எழுப்பிய உரிமைக்குரல், அன்றையப் பிரயாணத்தில் முதலாவது நிகழும் அற்புதம்!

‘இதுவும் மட்டக்கொழும்புப் பெட்டிதான். ஒக்காருங்க புள்ளே! மட்டக்கொழும்புக்கா? முன்பின் தெரியாத அந்த சிங்களக் கிழவரைப் பார்த்ததும் அப்புஹாமியை நினைத்துக் கொள்ளுகிறேன். புகைவண்டி புறப்படுகிறது.

‘நீங்களும் மட்டக்களப்புக்கா?’ கைப்பையை ஆசனத்துக்கு மேல் தட்டில் வைத்துவிட்டு கிழவரைப் பார்த்து சிறுகச் சிரித்தபடி உட்காருகிறேன். அவரும் சிரிக்கிறார். பல்லில்லாவிட்டால் என்ன? சிரிப்பு வெள்ளையாகத்தான் இருக்கிறது. அவர் உள்ளத்தால் சிரிக்கிறாரா?

‘மிச்சங் சந்தோஷம் புள்ளே! நாமளும் அங்கதான் போறாங்!’ கனகலிங்கம் கட்டைச் சுருட்டில் ஒட்டியிருந்த லேபலைப் பிரித்து சன்னலுக்கூடாக வீசிவிட்டு வாயில் கௌவி நெருப்பு மூட்டுகிறார் கிழவர்.

மனித யந்திரத்தின் அவசரம் இந்த புகைவண்டி யந்திரத்துக்கு எங்கே தெரிகிறது! எவ்வளவு நேரமாக ஓடுகிறது. இன்னும் மருதானையை கடக்கவில்லை!

சாறனை மாற்றிக் கொள்ளுகிறேன். நான் தமிழனாக இருந்தாலும் இரவில் அதுவும் பிரயாணத்தில் சிங்கள உடையை உடுத்திக் கொள்வதால் தமிழ் பண்பாட்டுக்கு நட்டமா வந்துவிடப் போகிறது?

பசி வயிற்றைக் கிள்ள இடியப்பப் பார்சலை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு எதிரே சுருட்டுப் புகைத்துக் கொண்டிருந்த கிழவரைப் பார்க்கிறேன்.

‘இன்னங் சாப்பிடங் இல்லையா புள்ளே! நம்கிட்ட தண்ணிப் போத்தல் இரிக்கிறாங்.. சாப்பிடுங்கோ புள்ளே! நாம்ம கடயிலேங் சாப்பிட்டதுங்’ தண்ணீர்ப் போத்தலை எடுத்து நீட்டுகிறார் கிழவர்.

இடியப்பப் பார்ச்சல் காலியாகி அதிலிருந்த இலையும் கடதாசியும் வெளியே காற்றில் பறக்கின்றன. சாப்பிட்டாயிற்று. ஒரு சிகரெட். புகையை விட்டுக் கொண்டே பத்திரிகையைப் புரட்டுகிறேன்.

‘பூரித்தாள்’ பாட்டென்று கண்டதும் ‘பட்’டென்று மறுபக்கத்தைத் தட்டிவிட தமிழுக்கு அவ்வளவு விகாரத் தோற்றமா? நான்தான் அப்படி பயந்தாங் கொள்ளியா? நெஞ்சில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கவிதையைப் படிக்கிறேன்.

கடைசிக் கவிதை என்னை மிகவும் கவருகிறது.
“பட்டபாடுகள் யாவிலும் என்னுயிர்,
விட்டுப் போக இருந்தது இதோ ஒரு,
பட்டு மேனிப் பயலெனக் காட்டியே,
மட்டிலா மகிழ்வால் மனம் பூரித்தாள்”

பயலுக்கு பதில் மகளை என்னிடம் சுட்டிக் காட்டி என் மனைவியும் இப்படித்தான் பூரிப்பாளோ?

* * *

காலை 7.30. படலைக்குள் இறங்குகிறேன். விறாந்தையிலிருந்து பெண்கள் என்னைக் கண்டதும் குசுகுசுத்துக் கொள்ளுகிறார்கள். ‘அன்னா கிளாக்குப் பொடியனும் வந்திற்றுகா. ஞாயித்துக் கௌம தந்தி கெடையாதெண்டயளே!’ என்கிறாள் என் பெத்தாக் கிழவி.

‘ரெட்டச் சாரிசி கட்டி அடிச்சா ஏங்கா கெடைக்காமப் போகுது?’ தனக்கும் கொஞ்சம் தபால் இலாகாவில் சங்கதி தெரியும் என்பது போலப் பெரிதாகப் பீற்றிக் கொள்கிறாள் என் மாமி. வந்திருந்த பெண்களின் வாய்களைப் பனங்காய் கொசுக்கள் மூடச் செய்கின்றன.

மஞ்சு வீட்டுக்குள் நுழைகிறேன். திடீரென்று என்னைக் கண்டதும் அவளுடைய கண்கள் படபடத்து அடித்துக் கொள்ளுகிறாள். ஏன்? இன்றைக்குப் புதுவெட்கமாகத்தான் வந்திருக்கிறது!

திரும்பிக் குழந்தையைப் பார்க்கிறாள். சட்டையிலிருந்த முடிச்சை அவிழ்த்துக் கொண்டே குழந்தையை அணைக்கப் போனவள் ஒருவித கருவத்தோடு என்னைப் பார்த்துப் புன்னகை செய்கிறாள். அவளுடைய கண்கள் ஏதோ பரிபாஷையில்…. ஆகா ஒரு கவிதை பாடலாம் போல இருக்கிறது! முடியவில்லையே…?

‘பட்டபாடுகள் யாவிலும் என்னுயிர்…’ கவிதையை மீண்டும் ஒரு முறை அழுத்தமாகச் சொல்லிப் பார்க்கிறேன்.

* * *

‘கோப்பி… வடேய்! கோப்பீ… வடேய்!!’

என்ன இது மாகோ இல்லையா? ஒன்பதரை மணிதானே! பொல்காவலைச் சந்தி! எதிர் ஆசனத்தில் கிழவர் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கிறார்.

அடுத்த பெட்டிக்குள் ஒரு குழந்தை வீறிட்டு அழுகிறது. தாய் அரவணைக்கிறாள். என்னுடைய குஞ்சு மகளும் இப்படித்தான் பிஞ்சுக் குரலில் கீச்சிட்டு அழுவாளோ? அவள் இந்நேரம் தாயின் அணைப்பிலே அமைதியாகத் தூங்கிக் கொண்டிருப்பாளோ? அழுவதற்கு இப்போது அவளுக்கு நேரம் எங்கே இருக்கப் போகிறது? உள்ள பொழுது பால் குடிக்கவும் நித்திரை செய்யவும் காணாது!

பெரியவர்களானதும் நிறைய அழவேண்டியிருக்கும் என்பதை அறிந்துதான் போலும் குழந்தையாக இருக்கும் பொழுது மனிதனால் நிம்மதியாக தூங்க முடிகிறதோ! நமக்கெதற்கு இந்தத் தத்துவ விசாரமெல்லாம்.

‘குழந்தை என்னைப் போல வண்டுக் கறுப்பாக இல்லாமல் தாயைப் போல மா நிறமாக இருந்தால் போதும். எது எப்படி இருந்தாலும் தலைமயிர் என்னைப் போல முள்ளான் பன்றி சிலிப்பியது போல இருந்துவிடக்கூடாது. தாய்க்கு வாய் கொஞ்சம் அகலந்தான். அது குழந்தைக்கும் அப்படியே இருந்துவிடுமோ?

கண்களை மூடிக்கொள்ளுகிறேன். பனிக்காற்று நெஞ்சில் மோதிவிட்டுப் போகிறது.

கோச்சு நிற்கிறது. கண்களைத் திறந்து எட்டிப் பார்க்கிறேன். இருட்டில் பெயர்ப்பலகை மறைந்து நிற்கிறது.

‘என்ன டேசன் தம்பி இது? கல்முனையோ… களுதாவளையோ… நல்லாத் தெரியுதில்ல…?’

அடுத்த அடைப்புக்குள் தூக்கக் கலக்கத்தி;ல் இருவர் பேசிக் கொள்ளுகிறார்கள். இதைக் கேட்டுவிட்டு விழித்துக் கொண்டிருந்த மற்றொரு பிரயாணி… ‘இல்ல… இல்ல இது களுவாஞ்சிக்குடி!’ என்று சொல்லிவிட்டு கெக்கலி கொட்டிச் சிரிக்கிறார். கல்லிளையைத்தான் தூக்கக் கலக்கத்தில் கல்முனை என்று வாசித்திருக்கிறார் அவர் என்பதை அறிந்து கொண்டு சகபிரயாணிகள் எழுப்பிய சிரிப்பொலி தூங்கிக் கிடந்தவர்களையெல்லாம் எழுப்பி விடுகிறது. சின்னஞ் சிறிய விஷயம். அந்த பெட்டியில் வந்தவர்கள் எல்லோரும் (சிங்களக் கிழவரைத் தவிர) சிரிப்பை வளர்க்க லாயக்குள்ளவர்கள்தான் என்பதையல்லவா எடுத்துக் காட்டிவிட்டது!

இத்தனை நேரமாக தூங்கி வழிந்த அந்தப் பெட்டி இப்போது கலகலப்பாக இருக்கிறது. நித்திரையை சங்கரிப்பதற்காக பீடி, சிகரெற், சுருட்டு ஆகிய பீரங்கிகளில் இருந்து அணுகுண்டுகள் புகையைக் கக்குகின்றன.. யாரோ ஒருவன் புதிதாக வந்த திரைப்படப்பாடல் ஒன்றை மெதுவாக பூனைக்குரலில் முணு முணுக்கிறான். அதற்குச் சுருதி கூட்டுகிறது ஓட்டமாவடிப்பாலம்.

வாழைச்சேனை! வண்டியில் இருந்து இறங்கிய மனித உருவங்கள் குமரி இருட்டுக்குள் சங்கமமாகி மறைகின்றன.

‘இடையிலே இருபத்தைந்து மைல்கள் இன்னும் சிறிது நேரத்தில் மட்டக்களப்பு’

முகத்தை அலம்பிக் கொண்டு வேட்டியைக் கட்டிக்கொள்ளுகிறேன். கால்களில் செருப்பை மாட்டிக் கொண்டு எனக்கு முன்னால் இருந்து வந்த அந்தச் சிங்களக் கிழவரைத் தேடுகிறேன். அவர் ஏறாவூரில் இறங்கிப் போய்விட்டாரோ?

‘கல்முனை! கல்முனை!!’

வேன் சாரதிகள்தான் கடலைக் கொட்டையை விலை கூறுவது போல கல்முனையையும் விலை கூறுகிறார்கள். கல்முனைக்கு ஒரு ரூபா! புது வானாகப் பார்த்து உள்ளே ஏறிக் கொள்கிறேன். வான் புறப்படுகிறது.

‘ஹோல்டோன்! றைட்…’ என்னை இறக்கி விட்டு விட்டு உறுமிக் கொண்டே புறப்பட்டுப் போகிறது வேன்.

படலையைத் திறந்து கொண்டு உள்ளே நுழைகிறேன். ‘ம்கூம்! தம்பியும் வந்திற்றே! புள்ள ஆஸ்பத்திரியிலதானம்பி. ஒங்க மாமியாரும் இப்பதான் ஆசுபத்திரிக்குப் போறவு. இந்தாரிக்கித் துறப்பு.

பக்கத்து வீட்டு மாரிமுத்து நீட்டிய திறப்பை வாங்கிக் கொள்கிறேன். அறையைத் திறந்து கைப்பையை வைத்துப் பூட்டி விட்டு ஆஸ்பத்திரிக்குச் சைக்கிளில் புறப்படுகிறேன்.

ஆஸ்பத்திரி வாசலில் பேரிண்டிச்சி போல காவல்காரன் மறிக்கிறான். அவனுக்கு என்னுடைய அவசரம் எங்கே தெரிகிறது! நித்திரை நமைச்சல். கண்கள் எரிகின்றன. அவனைப் பார்த்து அசடு வழியச் சிரிக்கிறேன். பாவம் அவன் கடமையைச் செய்கிறான். அவனுடைய கடமை உணர்ச்சியை ஒரு ரூபாவில் பிடித்துக் கட்டி வைத்துவிட்டு உள்ளே போய்விடலாம் என்ற நினைப்பில் சட்டைப்பைக்குள் கையை நுழைக்கிறேன்.

‘அதெல்லாம் தேவல்ல. என்ன செய்யிற நம்மட ஆளாக்கிடக்கு. டாகுத்தர் ஐயா வரமுன்னம் பாத்திற்று கெதியா வாங்க…ம்… போங்க… கடமையைக் காசுக்கு முன்பே கருணை வென்றுவிட்டதா?

‘அதுதான் ஆறாம் வாட்டு’ என்று சுட்டிக் காட்டுகிறான் அவன். உள்ளே போகிறேன். என்னைக் கண்டதும் கட்டிலில் படுத்துக்கிடக்கும் மகளிடம் ஏதோ முணுமுணுத்துவிட்டு விறாந்தைப் பக்கமாக நழுவுகிறாள் என் மாமியார்.

‘மகேஸ்!’ என்று மெல்லக் கூப்பிட்டுக் கொண்டே கட்டிலோரமாக வந்து நிற்கிறேன்.

வெள்ளைச் சீலையில் நீட்டிக் கொண்டு கிடந்த அவள் என்னை அண்ணார்ந்து பார்க்கிறாள். அந்தப் பார்வையிலே…. புன்னகையும் கோபமும் கலந்து காட்சி தருகிறது. இப்படிக் கூர்ந்து பார்க்கிறாளே! நான் புது மனிதனாகவா தெரிகிறேன்! தொட்டிலின் பக்கம் அவள் பார்வையைத் திருப்புகிறாள். ஆவலோடு எட்டிப் பார்க்கிறேன். அங்கே…

செக்கச் சிவந்த நாயின் நாக்குப் போன்ற இரு பஞ்சு பாதங்கள் ஒன்றை ஒன்று முத்தமிட்டபடி, இருட்டுநிறச் சுருட்டைத் தலைமயிர் காலை இளங்காற்றில் அசைந்து கொடுக்க, பருத்துத் திரண்ட தக்காளிப் பழம் போலப் படுத்துத் தூங்கும் இதுதான் என் குழந்தையா? வியப்பிலே இமைகள் விரிகின்றன. மேலும் மேலும் கூர்மையாகப் பார்க்கிறேன்.

குழந்தை என்னையே உரித்து வைத்திருக்கவில்லை! அப்படியானால் தாயைப் போலவா இருக்கிறாள்? அதுவும் இல்லை! முகத்திலே பரவிய ஏமாற்ற உணர்ச்சியோடு மகேஸைத் திரும்பிப் பார்க்கிறேன். அவள் சரியாகத்தான் இருக்கிறாள். அவளுடைய அங்க அடையாளங்களில் ஒன்று கூடக் குழந்தையிடம் இல்லை.

அப்பனைப் போலவும் இல்லை. அம்மையைப் போலவும் இல்லை. அப்படியானால் குழந்தை யாரைப் போல இருக்கிறது. என் குடும்பத்தில் உள்ள எல்லாரையும் உள்ளத்திலே கொண்டு வந்து நிறுத்தி ஒவ்வொருவராக ஒப்பிட்டுப் பார்க்கிறேன். இல்லை குழந்தையைப் போல குடும்பத்தில் யாருமே இல்லை.

இத்தனை அழகான குழந்தை பிறந்திருப்பதை நினைத்து ஆனந்தப்பட வேண்டிய என் உள்ளம் ஏனோ இப்படி அலை மோதுகிறது? அவளைப் பார்க்கிறேன். என் முகத்தில் எதையோ தேடி ஏமாற்றம் அடைந்தவள் போல் அவளும் என்னைப் பார்க்கிறாள். மெலிந்து போன குரலில் என்னவெல்லாமோ கேட்கிறாள். பெருமூச்சுக் கிடையில் குழந்தையைப் பார்த்துக் கொண்டே பதில் கூறுகிறேன். கடமைக்காக நானும் எதையெதையோ அவளிடம் கேட்டு வைக்கிறேன். அவள் சொல்லும் மறுமொழிகள் ஒன்றுமே எனக்கு விளங்கவில்லை! வெளியில் வந்து விட்டால் போதும் என்றிருக்கிறது.

‘இம்… இம்.. டாகுத்தர் ஐயா வரப்போறார் கெதியாப் பாத்திற்று வெளியால வாங்க பாப்பம்…’

என்னுடைய நிலைக்கு இரங்கி கடவுள் தான் இப்படிக் காவல்காரன் உருவத்தில் வந்து விறாந்தையில் நிற்கிறாரா?

குழந்தையில் பதிந்திருந்த பார்வையைப் பிடுங்கி எடுத்துக் கொண்டு மத்தியானம் வந்து பார்க்கிறேன் என்று மனைவியிடம் சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திராமல் வெளியே வந்து சைக்கிளில் ஏறி;க் கொள்ளுகிறேன்.

கண்ணோடு சேர்ந்து கொண்டு உள்ளமும் எரிகிறதே! ஏன்? ஆத்திரத்தையெல்லாம் சேர்த்து சைக்கிள் மிதியில் செலுத்துகிறேன். ஆத்திரம்! எதற்காக…?

* * *

‘ஓங்கா… நானும் நேத்து ஆசுபத்திரிக்குப் போய் பாத்தகா. புள்ள தாயிர சாங்கமும் இல்ல. தகப்பன்ட சாங்கமும் இல்ல. ‘களுக்கு முளு’க்கெண்டு வெள்ளக் குண்டாக உறுட்டித் தெரட்டி எடுத்தாப்பல கையும் காலும் தொட்டிலுக்க கெடக்கு… புளைச்சுப்போகட்டும்… இந்தப் பொடியனும் இப்பதான் வந்து ஆசுபத்திரிக்கு ஓடிப்போறானாக்கும்…. பொட்ட பட்ட பாட்டில காளி கோயிலுக்கு நெய் விளக்கு ஏத்துவம் எண்டு தாய்க்காறி நேர்த்திக்கடனும் வச்சவள்…’

பக்கத்து வீட்டுக்காரி மாரிமுத்து இடியப்பக்காரி வயிராத்தையோடு சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

விறாந்தையில் காலைத் தட்டிக் கொண்டு அறைக்குள் நுழைகிறேன். ‘ புள்ள தாயிர சாங்கமும் இல்ல தகப்பண்ட சாங்கமும் இல்ல?’ மாரிமுத்து மனுஷியின் வார்த்தைகள் மேலும் உள்ளத்தைப் பிழிகிறது. தொப்பென்று கட்டிலில் சாய்கிறேன்.

‘காளி கோயிலுக்கு நெய் விளக்கு! நேர்த்திக்கடன்!’ நெய் - விளக்கு. நெய்யில் விளக்கு. பசுவில் இரத்தம் பாலாகி, பால் தயிராகி, தயிர் வெண்ணெயாகி, வெண்ணெய் நெய்யாக, நெய்யே விளக்கில் ஒளியாகி… ஒன்று மற்றொன்றாகி உருமாறும் உலகியலின் தத்துவம் மனிதனுக்கும் உண்டா? உண்டென்றால்… ‘அப்பனை அப்படியே உரித்து வைத்துக் கொண்டு பிறந்திருக்கிறது’ தாயைப் போல பிள்ளை’ என்பதெல்லாம் வெறும் வார்த்தைக் கோவைகளா? மனிதனுக்கும் மாற்றம் உண்டு என்றால் நான் பெற்ற மாற்றத்தின் தோற்றந்தான் குழந்தையா? அது பெற்ற குழந்தை தான் அது உற்ற மாற்றமா, இப்படியே மாற்றம் அடைந்து, முடிவில் எல்லாம் அதுவாகி, அதுவே எல்லாம் ஆகி ஒளிர்கின்ற மெய்ச்சுடர்தான் தெய்வமா? தெய்வந்தான் குழந்தையா? என் வீட்டிலும் தெய்வம் குடியேறிவிட்டதா?

அந்தத் தெய்வம் - என் குஞ்சுமகள். என்னைப் போல் இல்லைத்தான். தாயைப் போலும் இல்லை! பின் யாரைப் போல் இருக்கிறது? பக்கத்துவீட்டு பொன்னையா மாஸ்டரைப் போல இல்லையா?...

சிவப்பு நிறம். குவிந்த அழகான உதடுகள். சுருட்டை மயிர். நீண்ட விரல்கள். இவையெல்லாம் பொன்னையா மாஸ்டரின் அடையாளங்கள் இல்லையா? யார் யாரோ இருக்க மாஸ்டருக்கும் என் மகளுக்கும் ஒற்றுமை வேற்றுமை காண்கிறதே என் உள்ளம்..! எதனால்..?

மாஸ்டர் என் மனைவிக்கு மச்சான் முறை என்பதாலா? மகேசுக்கும் மாஸ்டருக்கும் ஒரு காலத்தில் கல்யாணம் நடைபெற ஏற்பாடுகள் இருந்தன என்பதாலா? அதை வைத்துக் கொண்டு இவர்கள் பழகி தனியான சந்திப்புகள் நடந்து கொண்டிருக்கையிலே, காணிச்சண்டை ஏற்பட்டு, கல்யாணம் நின்று போக, வாத்தியார் இல்லாவிட்டால் கிளாக்கர் மாப்பிள்ளை என்று சபதம் கூறி, ஆதனத்தைத் தாராளமாகச் சொல்லி, என் பெற்றோரை ஏமாற்றி, அவசர அவசரமாக கொழும்பிலிருந்து என்னைக் கூப்பிட்டு, என் தலையிலே கட்டிவிட்டிருக்கலாம் என்பதாலா? சிவ பூசையில் நான் கரடியாக நுழைந்து விட்டேனா?

கொழும்பிலே நான்! கல்முனையிலே அவள். எங்களுக்கிடையிலே மாஸ்டர். மாஸ்டருக்கும் மனைவிக்கும் இடையிலே விட்டுப் போன தெய்வீக உறவு மீண்டும் ஒட்டிக் கொண்டிருந்தால்…?........?

கல்யாணமான புதிதில் நான் அடிக்கடி ஊருக்கு ஓடிவரத் தலைப்பட்ட சமயங்களில் ‘வீண்செலவு - சம்பளம் கோச்சுக்குத்தான் காணும்’ அது இது என்றெல்லாம் பொருளாதாரப் பாடம் புகட்டினாளே? அதன் பொருள் தான் இதுவா?

‘படீர்’ என்று மண்டையிலே கருங்கல்லால் அடி விழுகிறது! அப்படியானால் பரவாயில்லை. உடனே இறந்து போய்விடலாம். நான் அனுபவிக்கும் இந்த உணர்ச்சிக்குப் பெயர்…?

* * *

இரவு வந்து வெகு நேரமாகிறது. நித்திரைதான் வர மறுக்கிறது. படுக்கையில் புரள்கிறேன். மாஸ்டரும் குழந்தையும் மாறி மாறி மனத்திரையில் கண்கட்டி விளையாடுகிறார்கள். மகேஸ் ஏமாற்றுக்காரி! நம்பிக்கைத் துரோகி! பெண்மை, தாய்மை என்பதெல்லாம் வெறும் பேச்சு!!

கல்யாணமான நாட்களில் ஊராரின் குசுகுசுப்பைக் கேட்டு சமாதானம் சொல்லிக் கொண்ட மனந்தான் இன்று இப்படிக் கொதிக்கிறது. இனிமேல் நான் வாழக் கூடாது! சாக வேண்டும் என்று தாரகம் சொல்கிறது. எதற்காக வாழ வேண்டும்.

கணவன் என்ற பெயரில் ஊருக்குமுன் தலை குனிந்து வாழவா? கிளறிக்கல் சேவிஸில் பதவி உயர்வு பெற்று பெரிய உத்தியோகம் பண்ணவா? மனைவிக்காகவா? மகளுக்காகவா? மாஸ்டர் இருக்கும் பொழுது அவர்களுக்கு நான் எதற்கு?

நெஞ்சுக்குள் பிறந்த விம்மல் தொண்டைக்குள்ளேயே நின்றுவிடுகிறது! இருளுக்குள் இருளாகி.. கண்களைத் தலையணையில் அழுத்துகிறேன். அழவில்லை!

‘கீச்.. கீச்…’ தொப்பென்று கட்டிலில் ஏதோ விழுகிறது எலியா?

நெருப்புப்பெட்டியைத் தேடுகிறேன். அதற்குள் சீறிக் கொண்டு திடீர் என்று அறைச்சுவரில் இருந்து கீழே பாய்கிறது. அதைத்தொடர்ந்து ‘பளாஸ்’ என்ற ஓசையோடு ஏதோ கண்ணாடி நொருங்கும் சத்தம்! அறைக்குள் ஒரே அமர்க்களம்!

கீழே அறைக்குள் விழுந்து கிடப்பது எலியைத் துரத்தி வந்த பூனையா? பாம்பா? சற்று நேரத்துக்கு முன்தான் சாகத்துணிந்த என் வீர உள்ளம், பயத்தால் படபடக்க, நடுங்கும் கையால் நெருப்புப் பெட்டியைத் தேடி எடுத்து விளக்கை ஏற்றுகிறேன்.

மூலையிலே பூனை முழுசிக் கொண்டிருக்கிறது. அதன் பக்கத்தில் கட்டிலுக்கு நேரே கண்ணாடிப் படம் ஒன்று குப்புற வீழ்ந்து சிதறிக் கிடக்கிறது.

கண்ணாடித் துண்டுகளை ஒதுக்கிக் கொண்டே படத்தை எடுத்து விளக்கின் முன்னால் பிடிக்கிறேன்! அது ஒரு ‘கவ் அன்ட் கேட்’ பேபியின் அழகான வர்ணப்படம்! படத்தை உற்றுப் பார்க்கிறேன். அதற்குள்…. என்மகள்! நேற்றுத்தான் எனக்குப் பிறந்திருக்கும் என் சின்னமகள் என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கிறாளா? முகமெல்லாம் குப்பென்று வியர்த்துக் கொப்பளிக்கிறது.

மனதில் மின் வெட்டுகிறது. அங்கே மனைவியும் மகளும் நிம்மதியாக உறங்குகிறார்கள். பொன்னையா மாஸ்டரைத் தேடுகிறேன். பாவம் அவர் என்மனதை விட்டு வெளியேறி வெகுதூரத்தில் போய்க்கொண்டிருக்கிறார். அவருடைய வெள்ளை நாலாயிரம் பப்ளின் சட்டையைப் போல என் உள்ளமும் தெளிந்திருக்கிறது.

+++++++++++++++++++

ஒட்டுறவு


‘நான் ரெண்டு மாசத்துக்கு முந்தியே சொல்லிப் போட்டன். கணக்கு முடியவந்து கூட்டித்துப் போயிருவன் எண்டு! பெட்டேய் அரியம்.. என்ன செய்யிறாய்? ஐயாட்ட அம்மாட்டச் சொல்லிப் போட்டு… கெதியா வெளிக்கிடு பாப்பம். இருட்ட முந்தி போய்ச்சேர வேணும்!’

என்றோ ஒரு நாள் சவடால்ற சாமித் தம்பி வந்து இப்படித் தான் செய்யப் போகிறான் என்பது ஏலவே தெரிந்த விஷயந்தான்! அது நடக்கப் போகிறது.

‘கௌரி.. இஞ்ச பாருங்க… அச்சாக் கௌரி! கண்ணக் காட்டுங்க.. இஞ்சப் பாருங்கவன் அக்கா… ஐயா.. ஐயா.. ஓடி வாருங்கவன். கௌரிக் குஞ்சு வடிவு காட்டுங்க… கோவங் காட்டுங்க.. கௌரி டாட்டா காட்டுங்க… ஆ…ஆ.. காட்டுங்க. வணக்கம் சொல்லுங்க.. சாமியக் கும்பிடுங்க… அரோகரா.. அப்பிடித்தான்.. நல்ல பிள்ள… அச்சாப் பிள்ள… முத்தல் பிள்ள…’

தகப்பனுடைய அதட்டலைக் கேட்டு குழந்தையை விறாந்தையில் விட்டு விட்டு அறைக்குள்ளே நுழைந்து ஊருக்குப் போக ஆயத்தமாகும் அரியத்தைப் பார்க்க வாய்விட்டு அழவேண்டும் போல இருக்கிறது.

அரியத்தைப் பெற்ற அப்பன் சவடால்ற சாமித்தம்பியை எனக்குப் பிடிக்காது. வருமானவரிப் பத்திரம் போல நேரம் காலமில்லாமல் அடிக்கடி வந்து நிற்கும் அவன் வரும் போதெல்லாம் ஏதாவதொரு சோக வரலாற்றோடு தான் வருவான். ஒரு நாளாவது ஒரு நல்ல சேதியோடு அவன் வந்ததில்லை.!

‘ஐயா கூரை எல்லாம் ஒழுகிச் சுவரும் கரையுது. எங்க விழுந்து தொலைஞ்சிருமோ எண்டு விடிய விடிய நித்திரையும் இல்ல. பெரிய அவதி.. ஐயா குந்தி இருக்கிற குடிலும் விழுந்து போச்செண்டால் குமரும் குட்டிகளுமாக எங்க போவன்… அதுதான் வந்த நான். ஒரு நாலுமாதக் காசு வேணும். அதுவும் காணாது! கிடுகு கட்ட வேணும் மாரி மழ காலம்… எனக்கும் பிளைப்புக் கிடைக்குதில்ல… பாத்துக் கழிச்சுக்கலாம்… உதவி செய்யுங்க ஐயா….’

‘ஒரேயொரு ஆம்பிளப் புள்ள. ஆறு பெட்டயளுக்குப் பிறகு ஆண்டவன் தந்தது. தோஷம் பிடிச்சுத் தளரா வியாதியாக் கிடந்தது. அதிர சீவன் ராவு முடிஞ்சு போச்சையா… சவம் அடக்கம் பண்ண வேணும்… என்னவெண்டாலும் பாத்துச் செய்யுங்க…’

‘மூணாம் பெட்டையும் ராவு சமைஞ்சு போனாள். அவளுக்குத் தண்ணி வாக்க வேணும். சதக் காசும் கையில கிடையாது. ஒரு இருபத்தைஞ்சு வேணுமய்யா.. பிறகு பாத்துக்கலாம். வீட்ட வெத்தில பாக்குக்கும் வழியில்ல…’

இப்படி எத்தனை எத்தனை! சாமித்தம்பிக்கு மாதத்தில் இரண்டு மூன்று விபத்துக்கள் குறையாது! தேவைகள் திருப்திகள் விபத்துக்கள் யாவும் உழைப்பவர்களுக்கு மட்டுந்தானா? அவை சவடால்ற சாமித் தம்பிக்கும் இருக்கத்தான் செய்தன.

‘ஐயா கதிர்காமம் போய் வரப் போறன்… காசு வேணும்! நான் சாகக் கிடந்த நேரத்தில வச்ச நேர்த்திக் கடன்… கட்டாயம் போக வேணும்!”

சாமித்தம்பியின் கழுத்தை நெரித்துக் கொல்ல வேண்டும் போல் ஆத்திரம் வருகிறது. பொறுத்துக் கொண்டு ‘நீ கதிர்காமம் போகத்தான் வேணும் ஆனால் ஒரு பெட்டைக் குட்டி பாடுபட்ட பணத்தில் அல்ல. உன்னுடைய சொந்த உழைப்பில் போக வேணும். உதவாக்கரை உலக்கை! நீயும் ஒரு தகப்பனா?’

‘சோறு வேணும். வேட்டி வேணும். கூரைக்கு ஓலை வேணும். சாச் செலவும் சமைஞ்ச செலவும் வேணும்! சிவ மூலியும் வேணும்! கடைசியாக நீ கதிர்காம யாத்திரையும் போக வேணும்! இதற்கெல்லாம் நீ உழைக்க வேணும்!’

‘தூ…! உனக்கு வெட்கமாக இல்லை? ஒரு பெட்டைக் குட்டியின் உழைப்பிலே… உன்னுடைய தேவைகளும் திருப்திகளும்… உதவாக்கரை… கேடு கெட்டவன்!’

‘ஒரு பெண் குழந்தை எத்தனைக்கென்று உனக்கு உழைத்துப் போடுவாள். இன்னும் எத்தனை காலத்திற்கு நீ அவளைக் கொண்டு உழைக்கலாம். நாளைக்கோ இன்றைக்கோ அவளும் பெரியவளாகி… வீட்டோடு வந்து குந்தி விட்டால்.. “நாலாம் பெட்டையும் சமைஞ்சு போச்சு” என்று யாரிடம் போய் ஒப்பாரி வைப்பாய்? நீ கொஞ்சம் கூட இரக்கம் இல்லாதவன்! பிள்ளைகளை பாடுபட்டுழைத்துக் காப்பாற்றத்தான் முடியவில்லை! அந்தப் பெட்டைக்குட்டியின் உழைப்பிலே… கஞ்சாவும் புகைத்துக் கொண்டு கதிர்காம யாத்திரையும் போக வேண்டும். சீ!’ வாயைத் திறந்து இப்படியெல்லாம் பேசிவிட்டால் அவ்வளவு தான் சங்கதி. சாமித்தம்பி துண்டை உதறிப் போட்டுக் கொண்டு “அரியம் புறப்படு” என்று மகளை அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டால்..? நான் ஒரு மாத முன் பணம் கொடுக்காவிட்டால் என்ன? இன்னொருவனைத் தேடிப் போய் ஆறுமாத முன்பணம் வாங்கவும் அவனால் முடியாதா என்ன? அரியம் போய்விட்டால்…. பழையபடி காவடி எடுக்க யாரால் முடியும்!

மனைவியும் நானும் அரசாங்க ஊழியம். அந்தப் பெரும் பேற்றினை அனுபவித்து பென்ஷன் என்ற ஜீவன் முத்தியடையும் வரை அரியம் போன்றவர்களை இழப்பது சாமான்யமான இழப்பா?

கடைசிக் குழந்தை உரித்த கோழிக் குஞ்சுபோல ஏழு மாதத்திலே உலகைக் காணத் துடித்துப் பிறந்து விட்ட முற்றல்! ஏழு மாதத்தையான் குஞ்சு கௌரிக்குத் துணையாக வந்தவள் தான் இந்த அரியம் என்ற அரியமலர்! ஒன்றரை வருடத்தில்… கௌரி குறைமாதக் குழந்தை போலவா இருக்கிறாள்!

‘ஆயோம்….! ஆயோம்….? ....!’

தாயின் மடியை விட்டுத் தன்னை விடுவித்துக் கொண்டு அரியத்திடம் ஓடிப் போகத் திமிறுகிறாள் கௌரி.

அரியம் புறப்படுகிறாள். தன்னுடைய உடைகளையெடுத்து கடதாசியில் சுற்றி வைத்து விட்டாள். தலையை வாரி பவுடரும் பூசியாயிற்று. கடைசியாக வாங்கிக் கொடுத்திருந்த அந்தப் புதிய சட்டையைக் கையில் வைத்துக் கொண்டு என்ன யோசிக்கிறாள்?

‘போட்டுக் கொள் உன்னுடைய சட்டை தானே!’

‘ஆயோம்… ஊக்கு ஆயோம்…!’

‘அரியம் ஊருக்குப் போகப் போறாள்… அவங்கட அப்பா அவளக் கூட்டிப் போகப் போறார். அரியம் இனி இல்ல. கௌரி அச்சாப் பிள்ள … அழக் கூடாது.’ குழந்தையைச் சமாதானம் செய்யும் மனைவியின் விழிகள் கௌரியை முகம் கழுவுவானேன்…!

‘அவளைக் கூட்டிக் கொண்டு போய் பட்டினி போட்டுக் கொல்லப் போறாய்.. என்ன?’

‘ஏனம்மா கொல்ல…? அதுகள் வயலுக்க போகும்.. கதிர் கப்பியைப் பொறுக்கும். கொண்டு வாறது தாராளமாகக் காணும். என்ட மனுஷியும் குமர்களும் வயல் வெளிய கிடந்து வாற நேரம்.. என்னவும் காச்சி வைக்க வேணும். எனக்கு அதுக்கும் ஏலாது…! இவள் பெட்ட வீட்டில நிண்டாள் எண்டால் அதுகளுக்கும் ஆறுதல்.. எனக்கும் நல்லம்.’

‘மூத்த பெட்டையிர புருஷனும் பேசுறான். அவன் கார் மெக்கானிக்கர். நல்ல உழைப்பாளி. வயது வந்த பிள்ளைய வீட்டு வேலைக்கும் விடுவானா ஒரு அப்பன்? எண்டு கேக்கான். அவன்ட பெண்டாட்டி அதுதான் எண்ட மூத்த மகள்.. அதுவும் ஒரே நோய்க்குடுகு! அவள் பெட்டைக்கும் உதவிக்கு ஆள் வேணும். நான் என்னம்மா செய்ய? ஒண்ணர வரிஷமாகுது… காணாதா?’

‘எனக்கு லீவு விட்டபிறகு நீ போனால் என்ன? இப்பவே போகப் போறியாடி அரியம்? இன்னும் ஐந்து நாள் பொறுத்துப் போக முடியாதா உனக்கு?’

வீட்டுக்காரியின்.. அதுதான் அரசாங்க ஊழியம் பார்க்கும் என் சகதர்மினியின் கேள்விகள் எதுவும் அரியத்திற்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை. அந்தக் கேள்விகள் தனக்குக் கேட்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை. எங்கே தனது விடுதலை தாமதமாகி விடுமோ! பயம்…பரபரப்பு..!

ஆறு மாசங்களுக்குப் பிறகு…

நாளைக்கு.. தன் சிநேகிதிகளோடு புட்டி ஆற்றில் அரியம் நீந்தி நீந்திக் குளித்து விளையாடப் போகிறாள்!

சுழியோடி வந்து தண்ணீரில் நிமிர்ந்து நிற்கும் மலராத தாமரை மொட்டுகளை நிமிண்டி கசக்கி அழகு பார்க்கும் காவாலிப் பையன்களோடு, ஆபாசமாகத் திட்டிச் சண்டை பிடித்துக் கொண்டே, அரியமும் அவள் சிநேகிதிகளும் சந்தோஷமாகக் குளிப்பார்கள்! பிள்ளையார் கோவில் பின்புறம் வம்மி மரத் திரையில் மறைந்து, குளிக்கும் போது அணிந்திருந்த ஈரச்சட்டையைக் கழற்றிப் பிழிந்து விட்டு மீண்டும் ஈரத்தோடு அதனையே அணிந்து கொண்டு தலையை விரித்து விட்டபடியே தண்ணீர்க் குடத்தோடு வீடு திரும்புவாள் அவள்.

‘துறையடியிலே தான் எவ்வளவு புதினங்கள்!’

‘பகலெல்லாம் சனங்கள் போறதும் வாறதும்.. பார்த்துக் கொண்டிருந்தாலே பசிக்காது. கூத்தும் கும்மாளமும்…. வெறியும்!’

‘மாரியம்மன் சடங்கும் வருகுது. கோவிலடியில… எவ்வளவு பிள்ளையள். நிலவில வயல் வெளியெல்லாம் விடிய விடிய விளையாட்டு! சோறில்லாட்டி என்ன? ஒரு நாள் இல்லாட்டி இன்னொரு நாளைக்குக் கிடையாதா என்ன? அம்ம மோட்டு வட்டைக்குள்ள மூணு மாத்தயான் கதிர் பொறுக்கி வந்து, பச்சையாக்குத்திச் சோறாக்கி, குறட்டை மீனும் திராயும் சுண்டி, எல்லாரும் வளைச்சிருந்து ஆவிபறக்கப் பறக்க என்ன ருசியான சோறு… அது’

‘அரியம்… போய்ச் சாப்பிடு… நீ இனி இங்கே நிற்கமாட்டாய்… அது தெரிகிறது போ… முதலில் சாப்பிடு…’

குசினிக்குள் நுழைந்தவள் சாப்பிடுவதாக ஒரு பாசாங்கு. அவசரமாக வெளியே வருகிறாள்?

‘ஆயோம்… ஊக்கு… ஆயோம்!’ கௌரி கைகளைச் சிறகு விரிக்க ஓடி வந்து அவளை வாங்கிக் கொள்கிறாள் அரியம். இனி உன்னை விடமாட்டேன் என்பது போல அவளுடைய கைகள் அரியத்தின் கழுத்தைக் கட்டிக் கொள்ள சிரித்தபடியே குழந்தையை நிமிர்த்தி மாறி மாறி கன்னங்களில் கொஞ்சுகிறாள். குழந்தை சிரிக்கிறாள். அந்த அழகான சிரிப்பு நெஞ்சைப் பிழிகிறது.

முதன்முறையாக அரியம் வீட்டுக்கு வந்த அன்று தனக்கும் படிக்கத் தெரியும் என்பதை வாசல் மணலில் எழுதினாளே சா. அரியமலர் என்று. அவளுடைய பற்களைப் போலவே வரிசை பிசகாத அழகான கையெழுத்து. மூன்றாம் தரம் வேறு. அவளுடைய புத்திக் கூர்மை வேறு தான்.

ஓரிரு நாட்கள் போல இருக்கிறது. ஒன்றரை வருடங்கள் கௌரி அவளோடு ஒட்டிக் கொண்டாள். வேறு வழி?

குழந்தையின் அலுவல்கள்.. இரவில் தாயோடு உறங்குவது தவிர அனைத்தையும் அரியமே கவனித்தாள். பால் ஊட்டும் அவளே மருந்தையும் முறைப்படி ஊட்டுவாள். குளிப்பாட்டி அலங்கரிப்பாள். நானும் மனைவியும் உத்தியோகத்திற்கு கிளம்பிப் போய் திரும்பி வரும் வரை மட்டுமல்ல.. இரவு கௌரி தூங்கும் வரை அவளுடைய காலில் படுத்து ஆடாவிட்டால் தூங்க மாட்டாளே! குழந்தையின் முழுப்பொறுப்பையும் அரியமே ஏற்றுக் கொண்டாள். அத்தோடு..

ஏதோ சோறு சமைப்பாள்… கற்கள் கிடந்து விட்டால் கடவுளே என்பாள். உள்ளதைக் கொண்டு கறிகளும் சமாளிப்பாள். எங்களிடம் வரும் போது இவையெல்லாம் அவளுக்குப் புதிய பாடங்கள். பார்த்துப் படிக்க அவள் கெட்டிக்காரி.

இங்கு வரும் முன்பு அரியம் ஒரு டாக்டர் வீட்டில் இருந்தாள். எட்டு வயதிலேயே அவள் அங்கு போய்விட்டாள். குழந்தையைப் பராமரிக்கும் ஆயா ஒருத்திக்கு இவள் கையுதவிக்காக அமர்த்தப்பட்டாள். டாக்டர் ஐயாவும் மனைவியும் நல்லவர்கள் தான். இல்லாவிட்டால் இவளுக்கென்று தனியாகச் சாப்பாடு தயாரித்துக் கொள்ள இவளை அனுமதித்திருப்பார்களா! அவள் எங்களிடம் வரும் போது அவளுக்குப் பன்னிரண்டு வயது என்று யாருமே சொல்ல மாட்டார்கள். அவள் மிகவும் குச்சியாக இளைத்திருந்தாள். சுருளான அவள் கூந்தல் மொட்டையாக வெட்டி விடப்பட்டிருந்தது.

அரியத்திற்கு எங்களைப் பிடித்துவிட்டது. எங்களுக்கும் அவளை அப்படியே. கட்டையாய் வெட்டியிருந்த தனது தலைமயிரை சர்வ சுதந்திரமாக நீளமாக வளர்க்க ஆரம்பித்தாள். அவளுடைய தலையிற் பேன்கள் என் மனையாளின் பொழுதுபோக்கு! கொஞ்சம் வாய் நீளம் என்பதைத் தவிர... கடைக்குப் போனாள். மா இடித்தாள். வாசல் பெருக்கினாள். விறகும் கொத்தினாள். சமைத்தாள். குழந்தையை வளர்த்தாள். வீடும் வாசலும் அழகாய் இருந்தன. மாவும் முருங்கையும் எலுமிச்சையும் காய்த்தவை காய்த்தபடி கணக்காய் இருந்தன.

அரியத்தைப் பற்றி அடுத்த வீட்டுக்காரர்கள் எங்களிடம் கூறும் முறைப்பாடுகள். அவர்கள் அது இது கேட்டுவரும் வேளைகளில் அரியம் நடந்து கொள்ளும் கண்டிப்பின் கசப்புகள் என்று எங்களுக்குத் தெரியும். நாங்கள் வீட்டிலிருக்கும் பொழுதில் கூட எங்களுக்கான பதிலை அவளே சொல்லி அவர்களைத் திருப்பி அனுப்பி வைப்பாள். அவளுடைய துடுக்கான பதிலை எனக்குப் பிடிக்காவிட்டால் என்ன? வீட்டுக்காரிக்கு அது பிடிக்கும். ஒரு ஈ காக்கை நெருங்க முடியாது.

சில வேளைகளில் எங்கள் மூத்த பெண்பிள்ளைகள் இரண்டையும் அரியம் அடித்துவிடுவாள். காரணம் கேட்டால் ஏதோ சொல்லிச் சமாளித்து அழுவாள். இந்த இடத்தில் மட்டும் அவள் கொஞ்சம் அதிகம் என்று மனைவி அதட்டுவாள். மகளுக்கு மேலும் இரண்டு மூன்று தாயிடமிருந்து கிடைக்கும். ‘ஒத்த வயதுப் பிள்ளைகள். எப்படியும் போகட்டும். அக்கா தங்கை சண்டை போட்டுக் கொள்வதில்லையா?’ என்று இரகசியமாக மனைவியைச் சமாளிப்பது… ஒரு மெல்லிய செருமல் செருமிக் கொள்வது அவ்வளவோடு நான் சரி..

அவளிடம் திருட்டுப் புத்தி ஒன்றுமே கிடையாது. ஒர் சிறு உணவுப் பண்டத்தைத் தானும் அவள் திருடியதாக இல்லை. வாசலைப் பெருக்கும் போது ஏதாவது சில்லறைகளைப் பொறுக்கினால் கூட என்னிடமோ மனைவியிடமோ கொண்டு வந்து கொடுத்து விடுவாள்.

யாராவது எங்களோடு தகராறுகளுக்கு வந்தால்… அரியம் அவர்களைச் சும்மா விடமாட்டாள். எல்லாம் அவளுக்குத் தெரியும்.

‘கிழடன்! அவர்ர ஒசிலப்பாரன்….! கறிச்சட்டிப் புறத்தி மாதிரி முகமும் ஆளும்! ஐயாவோட இவனுக்குச் சரியான எரிச்சல்! தாலிக் கொடிக் கள்ளன்! இவனைப் பொலிசில் குடுத்து இடிப்பிக்க வேணும்! கண்ணாடிப் புடையன்!’

வாய்க்கு வந்தபடி திட்டுவாள். காறாப்பித் துப்புவாள்! எட்டிப் பார்த்தால் தெருவிலே எங்களோடு வயல் வழக்காடிக் கொண்டிருக்கும். மனைவியின் உறவினர் போய்க் கொண்டிருப்பார். அவருக்கு கேட்காமல்தான் இது நடக்கும். நான் அதட்டிக் கூப்பிடும் வரையும் நடக்கும். இப்படிப் பலபேர் அரியத்திடம் வாங்கிக் கட்டிக் கொண்டவர்கள்.

‘இவளுக்கு இனிமேல் செண்ட நாள் செல்லாது பிள்ள. இண்டைக்கு நாளைக்குச் சமைஞ்சு போவாள் பெட்ட. ஆளப்பார்! திமுக்குத் திமுக்கெண்டு! குமருகள் மாதிரி நல்ல கொழுப்பு வச்சித்து. இவள்ற நெஞ்சையும் நெளிப்பையும் பாரன்.!?’

பக்கத்து வீட்டுக்காரி அரியத்தைப் பற்றி இப்படி சொன்னால்… நல்ல பரிசு கிடைக்கும்.

கிழவியைப் பார்த்து உதட்டை மடித்து ‘வவ்வவ்வே.. உனக்கென்ன கிழடி! நீ உன்ட வேலயப் பார்! அவக்கு கோப்பித்தூள் குடுத்தாத்தான் நல்லம்… இல்லையெண்டால் எரிச்சல்!’

கிழவிக்கு அசடு வழிய அதை மனைவி துடைக்க நான் சாடையாகச் செரும அத்தோடு முடியும் அது.

கிழவி சொன்னது சரிதான். இனிமேல் சென்ற நாள் செல்லாது. அரியம் சமையப் போகிறாள். அவள் பெரிய மனுஷியாகப் போவதை எண்ணிக் கிழவியும் நாங்களும் ஏன் வருத்தப்பட்டுக் கொள்ளவேண்டுமோ? சந்தோஷப்படவும் முடியவில்லை. சமைந்ததும் அவளை அழைத்துப் போய் விடுவான் சாமித்தம்பி. அவள் போய் விட்டால்… உத்தியோகம்.. குழந்தை.. வீடு..? இன்னொருத்தியைத் தேடி பழையபடியே காவடி…

‘கௌரி… டாட்டா… காட்டுங்க டாட்டா’ குழந்தைக்கு விளங்கி விட்டது? அரியத்தை இறுகப் பற்றுகிறாள்… சிணுங்கல் சிக்கி சிக்கி வெளி வருகிறது.

‘எங்கட பிள்ள நல்ல கௌரிக் குஞ்சு - ராசாத்தி… ஆயோம் போயிற்று வாறன் ஆ.. குளப்படி பண்ணாமல் அச்சாப் பிள்ளையா இருக்க வேணும்… சரியோ.. எங்க பாப்பம்… டாட்டா காட்டுங்க… வணக்கம் காட்டுங்க…?’

‘ஆ… ஆ… போதும் புறப்படு… பொழுது போகுது!’ சாமித்தம்பி அரியத்தை துரிதப்படுத்துகிறான்.

‘அரியம் சட்டையெல்லாம் எடுத்துக் கொள். சம்பளக்காசு பாக்கி கிடையாது! நீ பெரியவளான பிறகு தான் போவாய் என்று நினைச்சம். அதுக்குள்ள உன்ர அக்காட புருஷன் மெக்கானிக்கருக்கு மானம் போகுதாம். அதுக்கென்ன நீ போகத்தானே வேணும். ஆனால் இப்படித் திடுதிப்பென்று உன்ர அப்பன் செய்வான் என்று நாங்கள் நம்பியிருக்கல்ல…. கௌரிக்குத் தான் துணை இல்ல.. அவள் ஏங்கிப் போவாள்… ஆயோம்.. ஆயோம்… என்று உன்னத் தேடுவாள்! சரி சரி நீங்க கௌரியை அரியத்திடம் வாங்கி எடுங்க…?’

இதற்கு மேல் மனைவியால் பேசமுடியவில்லை.. அரியத்தைக் கட்டிக் கட்டிப் பிடிக்கும் கௌரியை வலுவில் பறித்தெடுக்கிறேன். அதைப் பார்த்து அவள் விம்முகிறாள். அதைப் பார்த்த நான்…?

கௌரியைத் தேற்றிக் கொண்டே அறைக்குள் போகிறேன். அறையில் மூசு;சு முட்டுகிறது. சட்டைப் பையுள் நுழைந்த கை வெளியேற விறாந்தைக்கு விரைகிறேன்.

கையில் பார்சலோடு தகப்பன் அருகில் விடை பெறக் காத்து நிற்கிறாள் அரியம். குழந்தை ஆயோம் என்று கூப்பிட்டுக் கொண்டே அவளிடம் தாவத் துடிக்கிறாள். இப்பொழுது அரியம் கௌரியை என்னிடமிருந்து வாங்கிக் கொள்ளவில்லை. மனைவியிடம் அவளைக் கொடுத்துவிட்டு…

‘அரியம் இதை வைத்துக் கொள். சந்தோஷமாகப் போய்வா! நீ நல்லபடியாக வாழ வேண்டும். கௌரிக்கும் எங்களுக்கும் நல்ல துணையாக இருந்தாய்….! இனிமேல் கௌரி புதிய துணை தேட வேண்டும்… அவள் ஏங்கிப் போவாளே…!’ மேலும் பேச முடியவில்லை. நிலையில் சாய்ந்த படியே கண்ணீர் பெருக்கும் மனைவி. அவளைப் பார்த்து விம்மும் குழந்தைகள். இடையில் அவர்களுக்கு ஒத்தாக நான்….

அரியத்தின் முகத்தில் எவ்வித உணர்வும் இல்லை. அவள் கண்களிலும் கலக்கம் கிடையாது. அசைவற்று நிச்சலனமாக நின்ற அவள் தாயிடம் இருந்து குழந்தையை அணைத்து கடைசியாகக் கொஞ்சுகிறாள்.

‘கௌரிக் குஞ்சு இஞ்சப் பாருங்க.. வடிவு காட்டுங்க… கவனம்! கோவங் காட்டுங்க.. அச்சாப்பிள்ள! டாட்டா.. வணக்கம்..! ஆயத்துக்கு டாட்டா காட்டுங்க… காட்ட மாட்டீங்களா…?’

…………………………………………………………..
திமிறி அழும் கௌரியை மார்போடு அணைத்தபடி விக்கி விக்கி அழுகிறாள் மனைவி.

சாமித்தம்பி வாசலில் இறங்கி நடக்கிறான்.

‘கௌரி டாட்டா… டாட்டா…’ சிரித்தபடியே கைகளை அசைத்து அரியம் கௌரியிடம் விடை பெற்றுக் கொள்கிறாள்!

‘ஐயா.. போயித்து வாறன் ஆ…’

‘நளினி.. வினு… ஊஜ்ஜி… எல்லாருக்கும் போயித்து வாறன்…ஆ…’

ஒரு ஞானியைப் போல எவ்வித நெஞ்ச நெகிழ்வும் இல்லாமல் அரியம் எங்களிடம் விடை பெறுகிறாள். வாங்கிய பணத்துக்கு அவள் கடமை முடிகிறது. பணத்திற்காகத்தான் அவள் எங்களோடு ஒட்டி இருந்தாளா? அதற்கு மேல்….. அந்தப் பணத்திற்கு மேல் இந்த உலகில் வேறு ஒன்றுமே இல்லையா?

தனது பிஞ்சுக் கரங்களை அசைத்து அசைத்து ‘ஆயோம்… ஆயோம்’ என்று கௌரி அரியத்தைக் கூப்பிடுகிறாள். திரும்பிப் பார்த்து கைகளை ஆட்டிச் சிரித்தபடியே தெருவில் இறங்கிய அரியம் - அந்த இளவரசி தன் ஊரை நோக்கி - தனது விதியை நிச்சயித்தவளாக, உறுதியாக நடந்து அவள் அப்பனைப் பின் தொடர்கிறாள்.

அரியம். அவள் போகவேண்டியவள்தான் என்பதை இன்னும் சில நாட்களில் கௌரியும் தெரிந்துகொள்வாள். அதுவரை..?

பட்டமரம்

உலகிலே நல்லவர்கள் ஒரு சிலர் தான் வாழ்ந்தார்களாம் அன்பு கருணை சமத்துவம் சகோதரத்துவம் ஆகியவை தான் அவர்களுடைய வாழ்க்கை இலட்சியங்களாம். பொல்லாத காலம் அவர்களுக்குக் கல்லறைகளைப் புகலிடமாக அளித்துவிட்டதாம்!

நான் ஒரு இரட்டைமரம். பட்டுப்போயிருக்கிறேன். இன்று பெருமைக்காக உளறவில்லை. மேலே குறிப்பிட்ட நல்லவர்கள் பட்டியலில் நானும் ஒருவன். ஆனால் எனக்காக எவரும் கல்லறைகள் கட்டமாட்டார்கள். உயிரோடிருக்கும் பொழுது உலகுக்கு வேண்டியவர்களை ஆதரித்து அவர்களை வாழச் செய்யாத இந்த மனித இனம் அவர்கள் செத்து மடிந்தபின் ஞாபகச் சின்னம் உருவாக்கித் தங்கள் நன்றி கெட்ட செயலை நாட்டுக்குத் தெரிவிக்கிறார்கள். அது எனக்கு வேண்டாம்.

நல்லவர்கள் அட்டவணையில் என்னையும் சேர்த்துக் கொண்டேனே. அப்படி என்னதான் பெரிய தியாகம் புரிந்து விட்டேன்? இன்னும் இரண்டொரு நாட்களில் நான் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடுவேன். அதற்குள் அந்தக் கதையைச் சொல்லிவிடத்தான் வேண்டும்.

கந்தசாமி அவனும் மனிதன்தான். என்றாலும் ஏழை. பண்ணையார் பரசுராமரிடம் கணக்குப்பிள்ளையாக இருந்தான். அவன் அதிகம் படித்தவனல்ல. இயற்கையை ரசித்து ரசித்து தன்மன எழுச்சியை அப்படியே கோவை செய்து கவிதையாக்கிக் களிப்பது அவனுக்கு ஒரு பொழுபோக்கு. அவன் ஒரு இளம் கவிஞன்!

கணக்கெழுதி ஓய்ந்த நேரங்களில் அவன் இந்தப் பூந்தோட்டத்தையே சுற்றிச் சுற்றி வருவான். என்னுடைய நிழல் அவனுக்கு மிகவும் விருப்பமான ஒன்று. சில நேரங்களில் அவன் என்னையே உற்றுப்பார்த்த வண்ணம் ஆடாமல் அசையாமல் அப்படியே கற்சிலையாக காட்சி தருவான்.

‘ஆஹா! உயர்வு தாழ்வு பாராட்டும் இந்த உலகில் ஒட்டி வளர்ந்திருக்கும் இந்த எட்டியும் அரசம் ஒரு பகுத்தறிவு மன்றம். சமத்துவத்தையேப் போதிக்கும் சங்கம்’ என்று அவன் வாயிலிருந்து வார்த்தைகள் வெடித்துச் சிதறும். அதைக் கேட்டு நான் எத்தனையோ தடவைகளிற் பூரித்துப் போயிருக்கிறேன் தெரியுமா?

அழகைத் தேடி அலையும் அவன் தன்னுடைய அழகையிட்டு அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை. வயது இருபது இருக்கும் நல்ல வாட்ட சாட்டமான உடல். சுருள் சுருளாக வாரிவிட்ட தலை மயிர் காற்றிலகப்பட்டுக் கன்னங்களில் ஊஞ்சலாடும் பொழுதும் அந்திச் சூரியன் தன் மஞ்சட் கதிர்களை அவன் உடம்பிலே விளையாட விடும் பொழுதும் கந்தசாமியின் அழகு பன் மடங்கு சோபிக்கும். அவனைப் பற்றி ஓர் அழகான கவிதையே எழுதிவிடலாம். அவன் ஒரு எழுதாக்கவிதை.

கவிதையென்றால் பத்மாவுக்கு உயிர். பணத்தை விட வேறு எதையுமே ரசிக்க முடியாத பண்ணையார் பரசுராமர் மகளாகப் பிறந்தாலும் புதுமை இலக்கியப் பூஞ்சோலையிற் கவிதைத் தேன் உண்ணும் வண்டு அவள். ஓய்வு நேரங்களிற் கந்தசாமியைப் போல அவளும் இந்தப் பூந்தோட்டத்தில் புதுப்புது அழகைத் தேடி ரசிப்பாள். அவளுக்கும் என்னுடைய நிழல் பிடித்திருந்தது.

ஒரு நாள் மாலை நேரம். வழக்கத்தை விட அதிக நேரம் என்னருகே உட்கார்ந்திருந்தான் கந்தசாமி. சூரியன் மேற்கு மலைகளை நாடி விரைந்து கொண்டிருந்தான். இந்தப் பூந்தோட்டம் முழுவதிலும் ஒருவித நிச்சலனம் நிரம்பியிருந்தது. சிறு அசைவினாற் கூட அந்த அமைதி கலைந்து விடுவதை அவன் விரும்பவில்லை.

இந்தக் கனவுப் போதையில் அவன் மூழ்கியிருக்கும் போது ஏதோ பாட்டொன்றை முணுமுணுத்தவாறு அங்கு வந்தாள் பத்மா. அந்த முணுமுணுப்பு கந்தசாமியின் கனவுலகைத் துண்டித்துவிட்டது. திடீரென்று திரும்பிப் பார்த்தான். என்ன ஆச்சரியம்! அவன் தன் கற்பனையுலகில் இத்தனை நாட்கள் கண்ட அத்தனை அழகும் ஒருங்கே திரண்டு வந்து பத்மாவாகக் காட்சியளித்தது. அவள் ஆச்சரியம் நிறைய அசையாமல் கந்தசாமியின் முகத்தையே கூர்ந்து கவனித்த வண்ணம் நின்று கொண்டிருந்தாள்.

உயிர் சாவதைப் போல அவனுடைய உள்ளம் படபட வென்று அடித்துக் கொண்டது. அந்த இடத்தைவிட்டு எழுந்து போக முயன்றான் அவன். பத்மா அழகாகவும் அமைதியாகவும் தோன்றியதால் அவனுடைய முயற்சி தோல்வியடைந்தது. ஆகா! நான் மட்டும் ஒரு ஓவியனாக இருந்திருக்க வேண்டும். அவளுடைய நீண்ட வட்டமான முகத்தையும் பசுமையான மரவள்ளித்தண்டிலே படர்ந்திருக்கும் இளம் சிவப்பைப் பறித்து வைத்துக்கொண்டிருக்கும் பட்டுப் போன்ற கன்னங்களையும் சங்கு போன்ற களுத்திலே கரும்பாம்புகள் சண்டை பிடிப்பது போல ஆடி அசைந்து கொண்டிருக்கும் நீளமாகப் பின்னி விடப்பட்ட கூந்தலையும் மென் கொடி போன்ற பொன்னிகர் மேனியில் பட்டும் படாமலும் ஒட்டிக்கொண்டிருக்கும் அந்த தூய வெண் சேலையும் வைத்துக் கொண்டே அவளை ஓர் உயிரோவியமாக்கி விடுவேன்… இப்படித் தன் மனதுக்குள்ளே நினைத்துக் கொண்டான் கந்தசாமி.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். அந்தச் சிரிப்பிலே சமத்துவமும் அன்பும் கலந்திருந்தது. பத்மா அசையாமல் நின்றவள் திரும்பித் தான் வந்த வழியே மெதுவாக நடந்து கொண்டிருந்தாள். அவள் உள்ளத்தில் எதையோ? பறிகொடுத்து விட்டாற் போன்ற பரிதவிப்பு! ஒரு முறை கந்தசாமியைத் திரும்பிப் பார்த்தாள். அவனும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் கிளி போலப் பறந்து சென்று விட்டாள்.

நாட்கள் பல நகர்ந்தன. கந்தசாமியின் உள்ளம் சதா எதையோ எண்ணிக் குழம்பிக் கொண்டிருந்தது. ஏக்கமும் தவிப்பும் கவிதையின் பிறப்பிடந்தான்! ஆனால் பத்மாவை கண்டது முதல் அவனால் கவிதை எழுதுவதே முடியாத காரியமாகி விட்டது.

‘பாசத்தை ரோஜாமேற் படரவிட்டால்
பணக்கார முள்ளுன்னை விடாது! குத்தும்:
ஆசைக்கு அணைகட்டி வாழவுன்னால்
ஆகாது பறந்து விடு இங்கு நின்று”

பத்மா ஒரு ரோஜா மலர். அவளைச் சுற்றி அவள் தந்தை பணம், அந்தஸ்து அவைகளைப் பந்தோபஸ்தாக வைத்திருக்கிறார். அந்த மலரைப் பறிக்க முயன்றால் ஆபத்து வருவது நிச்சயம். எனவே ஓடிவிடு இங்கிருந்து.

சீ.. நீ ஒரு விசித்திரமான மனிதன். கவிஞனுக்கே புதிய வரவிலக்கணம் வரையத் தொடங்கி விட்டாயே? அழகு யாரிடமிருந்தாலென்ன. அது எல்லோருக்கும் பொதுவான பொருள். அதை யாரும் பார்த்து அனுபவிக்கலாம். கவிஞன் அழகைத் தேடி அலையும் பொழுது நீ மட்டும் அதைக் கண்டு பயந்து ஓடப் பார்க்கிறாய்.

கந்தசாமியின் உள்ளத்திலே இவ்வாறு மனப்போர் நடந்து கொண்டிருந்தது. அந்த நான்கு வரிப் பாட்டை மீண்டுமொருமுறை படித்தான். அதை அப்படியே கசக்கி எறிந்தான். அது அந்த ரோஜாச் செடி அருகிற் போய் விழுந்தது. அவன் எழுந்து போய்விட்டான்.

பத்மா வந்தாள். அந்த ரோஜாச் செடியைப் பார்த்தாள் அதில் ஒரே ஒரு பூ மட்டும் மலர்ந்திருந்தது. அதை எட்டிப் பறித்தாள். கையிலே குத்திவிட்டது முள். அந்தக் காயத்திலிருந்து ஒரு சொட்டு ரத்தம் வெளியேறியது. பக்கத்திலே கசங்கிக்கிடந்த வெள்ளைக் காகிதம் அவள் கண்ணிற்பட்டது. ரத்தத்தைத் துடைக்கவென்று அதைக் குனிந்தெடுத்தாள். அதிலேதோ எழுதப்பட்டிருந்தது. விரித்துப் படித்தாள்.

“பாசத்தை ரோஜாமேற் படரவிட்டால்
பணக்கார முள்ளுன்னை விடாது! குத்தும்:
ஆசைக்கு அணைகட்டி வாழவுன்னால்
ஆகாது பறந்து விடு இங்கு நின்று”

மீண்டும் ஒரு முறை படித்தாள். ஆகா! அழகான கவிதை. கந்தசாமி கணக்குப்பிள்ளை மட்டுமல்லக் கவிஞனுங்கூட. இதை இத்தனை நாட்களாக அவன் யாரிடமும் வெளியிடவில்லையே.

கையிலே படிந்திருந்த ரத்தத்தையும் பொருட்படுத்தாது கவிதையை எடுத்துக் கொண்டு கந்தசாமியின் அறையை நோக்கி நடந்தாள் பத்மா. கணக்குப் புத்தகத்தில் தன் கவனம் முழுவதையும் வேகமாக எழுதிக் கொண்டிருந்தான் கந்தசாமி.

‘மிஸ்டர் சாமி!.....’ ஜன்னலருகே நின்று கூப்பிட்டாள் பத்மா. எழுதுவதை நிறுத்திக் கொண்டு சத்தம் வந்த திசையை நோக்கினான் கந்தசாமி. அவன் உள்ளத்தில் மின்சாரத்தின் அதிர்ச்சி ஊடுருவிப் பாய்ந்தது. அவசரமாக எழுந்து ஜன்னலண்டை வந்தான் அவன்.

‘என்னவேண்டும் பத்மா? அப்பா ஏதாவது சொல்லி அனுப்பினாரா?.....’ நடுங்கும் குரலிலே ஜன்னற் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு கேட்டான் கந்தசாமி.

‘அப்படியொன்றுமில்லை… இந்த ரோஜா மலரைக் கொடுத்துவிட்டுப்…. போகலாம்….’ என்று இழுத்தாள் பத்மா.

‘நான் என்ன குழந்தையா? எதற்காக இந்த மலர்….?’
‘அதுதான் “ரோஜாவைப் பறித்தால் முள் குத்திவிடும் இங்கிருந்து ஓடிவிடு” என்ற தங்கள் பாட்டைக் கண்டதும் எனக்குப் பரிதாபமாகவிருந்தது. முள் குத்தினாலும் பரவாயில்லையென்று அதைப் பறித்தேன். முள் உண்மையாகவே குத்தியும் விட்டது. அதற்காக நான் அதைப் பறிக்காமலும் விடவில்லை. இதோ அந்த மலர்!’ என்று கந்தசாமியின் முன் ரோஜாவை நீட்டினாள் பத்மா. அவள் கையிலே ரத்தக்கறை காணப்பட்டது. கந்தசாமி பதறிப்போனான்.

‘பத்மா! நான் எதையோ நினைத்துக் கொண்டு அதை எழுதினேன். நீ அதை புரிந்து கொள்ளாமல் முள்ளிலே கையை மாட்டிக் கொண்டாயே. அப்பா பேச மாட்டாரா என்ன?’ கந்தசாமியின் குரல் கம்மியிருந்தது.

‘அப்பா பேசினாற் பேசட்டும். நீங்கள் எதை நினைத்துக் கொண்டு கவிதை எழுதினீர்கள். இந்த ரோஜா மலரையிட்டுத்தானே’ என்று மீண்டும் அவனுக்கு முன் நீட்டினாள் அந்த மலரை.

தன் கையை நீட்டி அந்த மலரை வாங்கினான் கந்தசாமி. பத்மா அந்த கையைப் பற்றிக்கொண்டாள் கந்தசாமியின் உடல் புல்லரித்தது. அவள் அவனுடைய கையை வருடிக்கொண்டிருந்தாள்.

‘பத்மா, நான் குறிப்பிட்ட ரோஜா இதுவல்ல. இதை பறிக்கும்போது வேண்டுமானால் முள் கையிலே குத்தலாம். ஆனால் விபரீதம் எதுவும் விளைந்துவிடாது. ஆனால் நான் குறிப்பிட்ட இந்த ரோஜாவைப் பறிக்க முயன்றால் உன் தந்தை பணம் பவுசு என்ற முட்களால் குத்தி என் வாழ்வையே அழித்துவிடுவார். அதைத்தான் குறிப்பிட்டேன் அந்தக் கவிதையில்’ என்று கூறித் தன் மறுகையினால் அவள் கன்னங்களைத் தடவினான்.

‘நான் கூட இன்றிருந்து நாளை வாடி உதிர்ந்து போகும் இந்த ரோஜாவைத் தங்களுக்கு தருவதற்கு வரவில்லை. ஒரு கவிஞனுக்கு கேவலம் இந்த அற்பமான பரிசையா அளிப்பது? ஆம் என் இதய ரோஜாவை விட வேறு எந்தப் பரிசும் தங்களை திருப்திப்படுத்தாது. அதையேதான் அளிக்க வந்தேன்’ என்று அழுத்தந்திருத்தமாகக் கூறினாள் பத்மா!

கந்தசாமியின் அப்போதைய நிலை மரமான என்னையே உருகச் செய்துவிட்டது. ‘அதே நேரத்தில் அன்பரே! ஒளியின் முன் இருள் நிற்பதில்லை. அதுபோல உண்மைக் காதலுக்கு முன் பணம் பரம்பரை அந்தஸ்து இவைகள் நிற்பதில்லை. அதோ பாருங்கள் அந்தப் பூந்தோட்டத்தை. எட்டியும் அரசுமாக ஒட்டி வளர்ந்திருப்பதை. பகுத்தறிவேயில்லாத மரங்களே அப்படியிருக்கும் பொழுது நாம் மாத்திரம் இப்படி நடந்து கொள்வதில் தவறென்ன இருக்க முடியும்?’ என்று கேட்டாள் பத்மா.

பத்மா கூறிய வார்த்தைகளைக் கேட்டதும் நான் அப்படியே பூரித்துப் போனேன். மரமாக இருந்தாலும் பகுத்தறிவுள்ள மனிதரைவிடச் சமத்துவத்தைச் செயலிலே காட்டியிருக்கிறேன் நான் என்று நினைத்ததும் என்னுடைய கிளைகளெல்லாம் ஒருமுறை ஆனந்தமேலீட்டால் ஆடி அசைந்து ஓய்ந்தன! ஆரம்பத்தில் நான் நல்லவர்களின் அட்டவணையில் இடம் பிடித்துக் கொண்டதற்கு இப்பொழுதாவது காரணம் புரிகிறதா?

அதற்குமேல் கந்தசாமியால் எதுவும் கூற முடியவில்லை. ‘வெள்ளத்தினோடொரு வெள்ளமுமாய் நல்ல வீணையும் நாதமும்' ஆகிவிட்டார்கள்.

* * *

காலம் கனவேகமாகக் கரைந்து கொண்டிருந்தது. இப்பூந்தோட்டம் அப்பொழுதும் புதிய பொலிவுபெற்று விளங்கியது. நான் கூடப் பண்ணையார் பரசுராமர் போலப் பருத்துக் கொண்டே போனேன். கந்தசாமியும் பத்மாவும் எனக்கு என்றும் கடமைப்பட்டவர்கள் போலிருந்தனர். என்னைக் காட்டித் தானே பத்மா கந்தசாமியின் காதலியானாள்!

எவ்வளவோ பணத்தைக் கொட்டியிறைத்து இந்த அழகான பூந்தோட்டத்தை ஆக்குவித்தார் பண்ணையார் பரசர். ஆனால் ஒரு நாளாவது இந்தப் பூந்தோட்டத்தில் அவர் வந்து உலவியதே கிடையாது. தினமும் பணத்தைச் சுற்றிப் பறந்து திரியும் அவருக்குப் பூந்தோட்டம் அழகு - அமைதி இவைகளை அனுபவிக்கத்தான் நேரமேது?

இருந்தாற்போலிருந்து ஒரு நாள் பண்ணையாருக்கு பூந்தோட்டத்தைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை பிறந்துவிட்டது. கையிலே உல்லாசத் தடி சகிதம் பூந்தோட்டத்திற்குள் நுழைந்தார். வந்ததும் வராததுமாக அவர் கண்ட அந்தக் காட்சி கதிகலங்கச் செய்துவிட்டது அவரை.

கந்தசாமி பண்ணையார் மகள் பத்மாவைத் தன் கரங்களால் அணைத்தவாறு என்மீது சாய்ந்து கொண்டிருந்தான். பண்ணையார் அங்கு வருவதை அவன் கவனிக்கவில்லை.

பண்ணையாரின் கண்களிற் தீப்பொறி பறந்தது. அவர் உடம்பு பேய்பிடித்தாடியது. ஆத்திரம் அவரை மிருகமாக்கிவிட்டது. ‘அடே! நன்றி கெட்டவனே. வளர்த்தவன் மார்பிலே பாயத் தொடங்கிவிட்ட செம்மறியே! என் உப்பை தின்று வளர்ந்து எனக்கா துரோகம் செய்தாய். துரோகி உன்னை என்ன செய்கிறேன் பார்!’ என்று கூறிக் கொண்டே ஓடிவந்து கையிலிருந்த தடியினாற் கந்தசாமியின் தலையிலே ஓங்கியடித்தார். ‘ஐயோ பத்மா!’ என்று அலறிக்கொண்டே பத்மாவின் மடியிற் சாய்ந்தான் கந்தசாமி.

‘சீ! அவள் பெயரைச் சொல்லக்கூட உனக்கு யோக்கியதையில்லயடா’ என்றவண்ணம் மீண்டும் மீண்டும் அவன் தலையிலே ஓங்கி ஓங்கி அடித்தார் பண்ணையார்.

கந்தசாமியின் தலையிலிருந்து ரத்தம் ஆறாகப் பெருகியது. ‘அப்பா அவரை அடியாதீர்கள். அவர் ஒன்றுங் குற்றஞ் செய்யவில்லை அவரை அடியாதீர்கள்!’ பண்ணையாரைக் கட்டிக் கொண்டு கதறினாள் பத்மா.

‘குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் கொம்பே மூடு வாயை. அப்பா என்றழைக்கிறாள் வெட்கம் கெட்ட விபசாரி. நட உன்னை..’ என்று பத்மாவின் கைகளைப் பிடித்துப் பரபரவென்று இழுத்துக் கொண்டு போனார் பரசுராமர். இந்தக் காட்சியைக் காணச் சகிக்காமலோ என்னவோ மேற்கு மலைக்குள்ளே தன் மேனியை மறைத்துக் கொண்டான் பகலவன்.


* * *

நள்ளிரவு பண்ணையார் பரசுராமரின் உள்ளத்தைப் போல உலகை ஒற்றையாட்சி செய்து கொண்டிருந்தான் இருள் அரக்கன். உறைந்து கிடந்த ரத்தவெள்ளத்தில் மரணத்தின் கோரப்பிடியிற் சிக்கி முனகிக்கொண்டு கிடந்தான் கந்தசாமி. தரையிற் கைகளை ஊன்றியவாறு எழுந்திருக்க முயன்றான் அவன். முடியவில்லை. ‘ஐயோ பத்மா!’ என்று கூறிக்கொண்டே மீண்டும் தரையிற் சாய்ந்தான்.

அவன் கடைசியாக என்னை ஒருமுறை அண்ணார்ந்து பார்த்தான். அந்தப் பார்வை மரமே இதற்கெல்லாம் நீயுந்தான் காரணம் என்பது போலிருந்தது. ‘ஆ! பத்மா……..’ என்றான் அதுதான் அவன் விட்ட இறுதி மூச்சு! அவன் தலை பூமியிற் சாய்ந்தது. அதே நேரத்தில் பண்ணையாரின் துரோகச் செயலுக்குத் துக்கந் தெரிவிப்பது போல எங்கிருந்தோ ஒரு கோழி சோகத் தொனியிற் கூவியது. அது ஏழையின் காதலுக்கு ஈடேற்றமேயில்லையா என்று இறைவனிடம் கேட்பது போலிருந்தது.

இந்தப் பரிதாபக் காட்சி என்னை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது என் கிளைகளையெல்லாம் ஒரு முறை சல சலவென்று அசைந்து கந்தசாமியின் மரணத்துக்காகக் கோழியோடு சேர்ந்து நானும் துக்கம் தெரிவித்துக் கொண்டேன். அதைவிட என்னால் வேறு என்ன செய்ய முடியும்?

அந்த நள்ளிரவிலே என்னை நோக்கி மூன்று உருவங்கள் சந்தடியின்றி வந்துகொண்டிருந்தன. வேறுயார் வருவார்கள். பண்ணையார் பரசரும் அவரிடம் கூலி வேலை செய்யும் இரு குண்டர்களுந்தான் அவர்கள்.

வந்தவர்களின் ஒருவன் கந்தசாமியின் பிணத்தைத் தொட்டுப் பார்த்துவிட்டு ‘முடிந்துவிட்டான்’ என்று முணுமுணுத்தான். சரி நடக்கட்டும் என்றார் பண்ணையார்.

‘மரத்தருகே மடுவெட்ட வேர் விடாதே’ யென்றான் ஒருவன்.

‘வேர் என்ன நம்மை மிஞ்சியா போயிடும்” என்றான் மற்றவன். கந்தசாமியின் விதி எனக்கும் நேரப் போவதை நினைக்க நான் உண்மையாகத் திடுக்கிட்டுவிட்டேன். என்றாலும் இன்னும் உயிரோடு வாழ்ந்து இப்படியான கொடுமைகளைக் காணாமல் கொன்று விடட்டும் என்று ஆறுதல் கூறிக் கொண்டு அசையாமல் நின்றேன் நான். ‘ஏய்! சந்தடியில்லாமல் வேலையை முடியுங்கள்’ என்றார் பண்ணையார்.

பண்ணையார் பரசருக்கு - இல்லைப் பணக்கார இனத்தின் பவுசுக்குப் பங்கம் விளைவிக்கவிருந்த ஏழைக் கந்தசாமியின் உயிரற்ற உடலை என்னிடம் ஒப்படைத்தனர் அந்தக் குண்டர்கள். ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சி வாழும் பண்ணையார் கந்தசாமியின் ஊனத்தை எனக்கு உரமாக அளித்தார். பாவம் அவர் தன்னைப் போல என்னையும் எண்ணிக் கொண்டாரோ? அல்லது நான் இன்னும் சில நாட்களில் இறந்து பட்டுப்போய் விடுவேன் என்று தெரிந்து கொண்டாரில்லையோ? யாருக்குத் தெரியும்.

எடுத்துக் கொண்ட காரியம் எளிதாக முடிந்துவிட்டதை நினைக்க மட்டில்லா மகிழ்ச்சியடைந்தார் பண்ணையார். இல்லையென்றால் பசை முறியாத இரண்டு பச்சை நோட்டுக்களைத் தன் பண்ணையாட்களுக்குப் பரிசளிப்பாரா என்ன?

பணத்தைப் பெற்றுக் கொண்டு அந்தத் தடியர்கள் இருளோடு இருளாக எங்கோ சென்று மறைந்து விட்டார்கள். பங்களாவை நோக்கி மிகவிரைவாக நடந்தார் பண்ணையார். இரவின் சுடுகாட்டு அமைதியைக் கலைத்து மீண்டும் அதே கோழி மிகவும் பரிதாபமாகக் கூவியது.
000
பத்மா அணிந்திருந்த நகைகளெல்லாம் படுக்கையிலே வைக்கப்பட்டிருந்தன. அதோடு கூட ஒருசிறு கடிதமும் காட்சியளித்தது. இரக்கமற்ற இவ்வுலகின் பந்தங்களையெல்லாம் அறுத்துக் கொண்டு தன் அன்னையும் ஆருயிர்க்காதலனும் சென்ற இடத்தை நாடிப் பறந்துவிட்டது அந்தச்சிறைப் பறவை. கொல்லைக் கிணற்றிலே குதித்துத் தன் காதலன் கந்தசாமியோடு கை கோர்த்துக் கொண்டாள் அந்தக் கன்னி. அதைத்தான் அச்சிறு கடிதத்திலும் குறிப்பிட்டிருந்தாள். பண்ணையாருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டாற் போலிருந்தது. என்ன செய்வதென்று தெரியாது ஏங்கி ஏங்கி அழுது கொண்டிருந்தார் அவர்.

இரண்டு நாட்களுக்குப் பின் ‘பண்ணையார் மகளின் பரிதாப மரணம். காதலிக்கிறேன் என்று ஏமாற்றிக் கர்ப்பவதியானதும் கம்பி நீட்டிய காதலன் கணக்குபிள்ளை கந்தசாமியைக் காணவில்லை’ என்ற செய்தி “பணம்” என்ற பத்திரிகையில் கொட்டை எழுத்துக்களிற் பிரசுரமாகியிருந்தது.

அதைப் பார்த்ததும் நான் சிரித்தேன்! சிரிக்காமல் என்ன செய்வது. உண்மையை அறியாத இந்த உலகத்தை அந்தச் செய்தி ஏமாற்றிவிடலாம். எல்லாவற்றையும் நேரிற் பார்த்துக் கொண்டிருந்த என்னையும் அவ்வளவு இலகுவாக ஏமாற்றி விட முடியுமா?

பிராயச்சித்தம்

அன்று முழுவதும் கடமைக்காக வகுப்பில் அரட்டை அடித்துவிட்டுத் தன் விடுதிக்குச் சென்றான் நடராஜன். சாப்பிடக்கூட மனமின்றிச் சாய்ந்தான் ஒரு நாற்காலியில்.

அன்று காலை தலைமை ஆசிரியர் கூறிய வார்த்தை அவன் காதுகளிற் சதா முழங்கிக் கொண்டேயிருந்தது. ‘நல்லம்மா என்ற பெண்ணாசிரியை ஒருத்தி நாளை கடமையை ஏற்க பள்ளிக்கூடத்திற்கு வருகிறார்’

வரப்போகும் ஆசிரியையின் பெயரையும் ஊரையும் கேட்ட அளவில் நடராஜனது உள்ளத்தில் ஏதோ ஓர் இனந்தெரியாத அதிர்ச்சி. பேயறைந்தவன் போல நாற்காலியில் பேசாதிருந்தான் அவன். சிந்தனை சுமார் மூன்று வருடங்களுக்கு முன் தான் நடாத்திய கலாசாலை வாழ்க்கையை நோக்கிச் சென்றது.

* * *


நினைத்தாலே பயங்கரமாயிருக்கிறது. அன்று வெள்ளிக்கிழமை. அடுத்த நாள் தைப்பொங்கலுக்காகக் கலாசாலையில் விடுதலை கொடுக்கவிருந்தார்கள். மகிழ்ச்சியில் எல்லா மாணவர்களும் சேர்ந்து விடுதியில் வம்பளந்து கொண்டிருந்தனர்.

இரவு பத்துமணியாகிவிட்டது. விடுதியெங்கும் விளக்குகள் அணைக்கப்பட்டு விட்டன. அதுவரையும் வம்பளந்து கொண்டிருந்த மாணவரெல்லாரும் தத்தம் படுக்கைகளிற் சென்று படுத்துக் கொண்டனர். எங்கும் ஒரே அமைதி. அதன் பிரதிபலிப்பாக இருளும் வரவர அதிகரித்துக் கொண்டிருந்தது. அதே போல நடராஜனது உள்ளத்தையும் இருள் சூழ்ந்து கொண்டது. அங்கு நிலவிய அந்த அமைதி அவனுள்ளத்தில் மட்டும் பயங்கரமான புயலாக வீசிக் கொண்டிருந்தது. அவனுள்ளத்தில் ஒரே போராட்டம்.

நாளை விடிந்தால் எல்லாம் தெரிந்துவிடும். அவளைக் காணுந்தோறும் என் மனதில் ஏற்படும் அர்த்தமற்ற அதிர்ச்சி? அவள் என்னை இலேசாகக் கவர்ந்து விட்டாள். ஆனால் என்னை அவள் விரும்புகிறாளா? ஏன் இல்லை. அப்படியானால் வகுப்பில் அவள் என்னிடம் காட்டும் பரிவுக்கு அர்த்தம்? அதை அறிந்து கொள்ளத்தானே அவளுக்கு எழுதினேன்.

ஒருவேளை அவள் அந்தக் கடிதத்தை, என் அன்பை வரவேற்காது விட்டால்……..? என்னை அதிபரிடம் காட்டிக் கொடுத்துவிட்டால்…..? என்றெல்லாம் அவன் நினைத்த போது நெஞ்சு வெடித்துவிடும் போலிருந்தது.

அப்படிச் செய்ய மனித ஹிருதயம் அற்றவளா அவள்? மனச்சாட்சியெங்கு போய்விடும்.? காதற்பாதை நேர் வழியல்ல என்று அவள் அறிவாளா? இப்படியான போலிச் சமாதானங்களின் பேரில் நிம்மதியடைந்தான்.

‘ஒரு வாலிபன் ஒரு கன்னியைக் காதலிக்கலாம். அதே போல் அக்கன்னியும் அவ்வாலிபனைக் காதலிக்கலாம். எப்படியோ இருவரில் ஒருவர் அதை வெளிப்படுத்தித்தானேயாக வேண்டும். இல்லையென்றால் ஊமை கண்ட கனவாகுமல்லவா அவர்கள் காதல். நீ உன் எண்ணத்தை அவளுக்குரை. அது உன் கடமை அவளுடைய மனக்கருத்தை அறிவிக்க அவளுக்கும் பூரண உரிமையுண்டு. அதற்காக அவளுன்னைக் காட்டிக் கொடுத்து என்ன பயன்?’

இதுதான் நடராஜனின் நண்பன் தியாகு நடராஜனுக்கு கூறிய உபதேசம். இந்த உபதேசமும் சேர்ந்து தான் அவளுக்கு அந்தக் கடிதத்தை எழுதும்படி நடராஜனைத் தூண்டியது. அதே உபதேசம் தான் அன்றிரவு அவனுக்கு ஆறுதலும் அளித்தது.

* * *

தீர்ப்பையறிய நீதிபதியின் வரவை எதிர்பார்த்துச் சிறையினுள் ஏங்கும் குற்றவாளிபோல அவள் வரவுக்காக வகுப்பில் வாடிக்கிடந்தான் நடராஜன்.

அவள் வந்தாள். அனலிற்பட்ட மாந்தளிர் போலிருந்தது அவள் முகம். எந்தப் புன்சிரிப்பை அவளிடம் எதிர்பார்த்திருந்தானோ அதை அவளிடம் காணவில்லை. காதலிக்கிறேனென்று கடிதமெழுதுவாளென எதிர்பார்த்த அவன், அவளது நடத்தையைக் கண்டு பேதலித்துவிட்டான். தாமரையிலைத் தண்ணீரெனத் தத்தளித்தது அவன் சித்தம்.

வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்துவதையும் மறந்து மனதிலிருந்த நம்பிக்கையையும் வைராக்கியத்தையுமிழந்து களையிழந்த முகத்துடன் வெறிச்சென்று எதையோ பார்த்துக் கொண்டிருந்தான் நடராஜன்.

‘நடராஜனை அதிபர் அழைத்து வரும்படி சொன்னார்’ என்ற குரல் கேட்டுத் திரும்பினான் நடராஜன். அதிபரின் அந்தரங்க வேலையாள். அசடு வழிய நின்று கொண்டிருந்தான். குழம்பிய நெஞ்சிற் கோடாரி கொண்டு கொத்துவது போலிருந்தது நடராஜனுக்கு. வேலையாள் முன்னே செல்ல நடைப்பிணம் போல் அவனைப் பின் தொடர்ந்தான் நடராஜன்.

அதிபரின் அந்தரங்க அறை ஜன்னல்கள் கதவுகளெல்லாம் தாளிடப்பட்டிருந்தன. காளி கோயிற் பலிபீடத்திலே வெட்டுவதற்காக நிறுத்தப்பட்டிருக்கும் ஆடுபோல உடலெல்லாம் வெலவெலத்து நடுங்க அதிபரின் முன் நின்று கொண்டிருந்தான் நடராஜன்.

‘நல்லம்மாவுக்கு இதையெழுதியது நீதானே?’ என்று ஒரு காகித உறையை எடுத்து நடராஜனிடம் நீட்டினார் அதிபர்.

உறையை கையில் வாங்கியவாறு ‘ஆ…….ம்’ என்றானவன். அவன் குரல் கம்மிவிட்டது. கை நடுங்கியது.

‘கலாசாலை வாழ்வில் இவ்விதக் கெட்ட நடத்தைகள் கூடாது என்ற அதிபரின் ஆணையை மீறி நடந்த உனக்கு என்ன தண்டனை தெரியுமா?’ அவர் குரலில் அதிகாரம் தொனித்தது.

‘எனினும் உண்மையைக் கூறிவிட்டாய். ஆகையால் உன்னை மன்னிக்கிறேன். யாருக்கு இதையெழுதினாயோ அவளிடம் என் முன்னிலையில் நீ மன்னிப்பு கோரவேண்டும்.’

அதிபர் கூறிய வார்த்தை தலையிற் சம்மட்டி கொண்டு தாக்குவது போன்றிருந்தது அவனுக்கு. அந்த அறையே அந்தரத்தில் ஆடுவது போன்றிருந்தது. மனச்சாட்சி அவனைக் கேலி செய்தது. அவன் கண்களிலிருந்து கணக்கிலா நீர்த் துளிகள் சிந்தின.

நல்லம்மா அதிபரின் அறைக்கு அழைக்கப்பட்டாள்.

‘ஆகட்டும்’ என்றார் அதிபர்.
‘நல்லம்மா… நான் .. உன்..னை.. நேசி…த்தே..ன்.. அது என் த…ப்பா..யின்.. என்னை மன்னி..த்துவிடு…’ என்று கூறியவாறு பொங்கியெழுந்த உள்ளக் குமுறலை அடக்க முடியாமல் குழந்தைபோல் அழுதுவிட்டான்.

குனிந்த தலை நிமிராமல் கோணிக் கொண்டு நின்றாள் நல்லம்மா. ‘இருவரும் வகுப்பிற்கு போகலாம்’ என்றார் அதிபர்.

கன்னத்தில் வழிந்திருந்த நீரைத் துடைத்த வண்ணம் வகுப்பில் நுழைந்தான் நடராஜன். வகுப்பு உடன் மாணவ மாணவிகள் தன்னைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பது போன்றிருந்தது அவனுக்கு. எவரையுமே ஏறெடுத்துப் பார்க்காது மேசையில் முகத்தை வைத்துக் குனிந்து படுத்துக் கொண்டான். என்னவோ குனிந்து படுத்துக் கொண்டானேயொழிய நாசகாரச் சமுகத்தின் நயவஞ்சகக் குசு குசுப்புக்கு அவனாற் தப்பமுடியவில்லை.

* * *

இது நடந்து இன்று வருடங்கள் மூன்று முற்றுப் பெற்றுவிட்டன. இப்பொழுது நடராஜன் பயிற்றப்பட்ட ஒரு தமிழாசிரியன். கள்ளங்கபடமற்ற இளம் பிள்ளைகளோடு பழகுவதால் தன் உள்ளக் கவலையை மறந்திருந்தான் அவன். மீண்டும் தன் வாழ்க்கையில் நல்லம்மா குறுக்கிடுவாளென அவன் கனவிற் கூடக் கருதவில்லை. இந்த நிலையிற் தான் மீண்டும் அவன் வாழ்விற் குறுக்கிட்டாள் நல்லம்மா.

அன்று காலை பள்ளிக்கூடத்திற்குப் போனதும் முதன்னாள் தலைமையாசிரியர் கூறிய உண்மை ஊர்ஜிதமாயிருப்பதைக் கண்டான் நடராஜன். ஆம் நல்லம்மா பள்ளிக்கூடத்திற்கு அதிகாலையிலேயே வந்திருந்தாள். சந்தேகமில்லை. சுமார் மூன்று வருடங்களுக்கு முன் ஆசிரிய கலாசாலையில் அதிபரின் முன்னிலையில் வைத்து நடராஜனின் மன்னிப்பை ஏற்றுக் கொண்ட அதே நல்லம்மாதான். இன்று அவன் உடன் ஆசிரியையாகக் கடமையாற்ற வந்திருந்தாள். கண்டான் நடராஜன். அவனாற் தன் கண்களையே நம்ப முடியவில்லை. நன்றாக உற்றுப் பார்த்தான். அவளும் பார்த்தாள். இருவர் கண்களும் மோதின அந்த மோதலிலே பழைய ஞாபகங்கள் எத்தனையோ பட்டுத் தெறித்தன. காணாதவள் போலத் தலையைக் குனிந்து கொண்டாளவள்.

* * *

நல்லம்மா அந்தப் பள்ளிக்கூடத்திற்கு வந்து நாட்கள் பதினைந்து பறந்து விட்டன. நடராஜனோடு ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. எப்படிப் பேச முடியும்? ஆனால் நடராஜனைக் காணும் போதெல்லாம் ஏதோ ஓர் இனந்தெரியாத குழப்பம் அவள் மனத்திரையில் மண்டியிட்டுக் கொள்ளும்.

நடராஜனிடம் நேரிற் சென்று பேசவேண்டும். தன்னிடம் அவன் கொண்டுள்ள தப்பான அபிப்பிராயத்தைப் போக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணுவாள். ‘சீ… அவன் என்னை ஓர் வேடதாரியென்றல்லவா நினைப்பான்’ என்ற அச்சமும் அதே நேரத்தில் அவளைப் பிடித்துக் கொள்ளும். கடமைக்காக பள்ளிக்கூடம் போவதும் வருவதுமாயிருந்தாளே ஒழிய நிம்மதியாக ஓர் இரவு கூட நித்திரை செய்ய முடியவில்லை.

இடை விடாது அவள் சிந்தித்துச் சிந்தித்துக் கண்ட முடிவு நடராஜனுக்கு ஓர் கடிதம் வரைவது அல்லது அவனிடம் நேரிற் பேசுவது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தன் உள்ளக் கருத்தை வெளியிட்டு ஓர் கடிதம் வரைத்தாள். அதைப் “பெண் உள்ளம்” என்னுமோர் புத்தகத்தினுள் வைத்து அடுத்த நாள் பாடசாலை ஓய்வு நேரத்தில் ஒரு பையன் மூலம் அதனை நடராஜனிடம் சேர்ப்பித்தாள்.

புத்தகத்தைப் பெற்றுக் கொண்ட நடராஜன் ‘இது என்ன புது நாடகம்’ என்றெண்ணியவனாய் நேராகத் தலைமை ஆசிரியரின் அறைக்குட் சென்றான். “பெண்ணுள்ளம்”! இதை அவள் அனுப்பவேண்டிய காரணம்…? என்றெண்ணியவாறே புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டினான். அவனுக்கு விடையளித்தது அதற்குள்ளிருந்த அந்தக் கடிதம். கைகள் நடுங்க அவசர அவசரமாகப் பிரித்துப் படித்தான்.

‘நீண்ட நாட்களின் பின் தங்களுக்கு இதை வரைகிறேன். இது தங்களுக்கு ஆச்சரியமாக ஏன் விசித்திரமாகக் கூட இருக்கலாம். நீண்ட நாட்களாக என் நெஞ்சிற் புதைந்து கொண்டிருந்த, தங்கள் நெஞ்சைப் புண்படுத்திய, அந்த இரகசியத்தை வெளியிட்டு, நீங்கள் என்மேற் கொண்டிருக்கும் தப்பான எண்ணத்தைக் களைந்தெறிய வேண்டுமென்னும் ஆசையின் பேரில் இதையெழுதுகிறேன்.’

‘அன்று வியாழக்கிழமை. என் தந்தையின் சுகவீனம் காரணமாகப் பொங்கலுக்கு ஒரு நாள் முந்தியே நான் வீட்டிற்கு போய்விட்டேன். எதிர்பாராதவிதமாக நடந்தது அது. பொங்கல் முடிந்ததும் மீண்டும் நான் விடுதிக்கு வந்தேன். என்னுடன் மாணவிகள் மிஸ்ஸிஸ் நடராஜன் என்று என்னைக் கிண்டல் செய்தனர். எனக்கு இந்தப்; புதிர் ஒன்றும் விளங்கவில்லை. சிறிது நேரத்தின் பின் விடுதித் தலைவி என்னிடம் ஓர் கடிதத்தைக் கொடுத்தார். வாங்கினேன். அது ஏற்கனவே உடைக்கப்பட்டிருந்தது. என் உடன் மாணவிகள் என்னைக் கிண்டல் பண்ணும் காரணமும் அதை நீங்கள் தான் எழுதியிருந்ததையும் உடனே அறிந்து கொண்டேன். அதை நான் ஏற்றுக் கொண்டு வாளாவிருந்தால் என்னைப்பற்றிச் சமூகம் என்ன கதையெல்லாம் கட்டிவிடுமோ? அதனால் என் படிப்புக்கு என்ன பங்கம் நேருமோ? என்ற பயத்தின் பேரில் நான் நல்லவளாக நடிக்கத் தங்களை விரும்பாதவள் போல் வேஷம் போடவேண்டியேற்பட்டது. நான் தங்களைக் காட்டிக் கொடுத்தாலும் தங்கள் அன்பை மனதார வரவேற்கிறேன்.’

‘நீங்கள் என்னை வேடதாரி, பச்சோந்தி, சாகசக்காரி என்றெல்லாம் நினைக்கலாம். அது தங்கள் குற்றமல்ல! என் தப்புமல்ல! எனவே என்னை மன்னித்து நான் செய்த குற்றத்திற்கு பிராயச்சித்தமாக என்னையே மணந்து கொள்ளவேண்டுகிறேன். அப்பொழுதுதான் நாமிருவரும் வாழலாம். இதை நீங்கள் நிராகரிக்கமாட்டீர்கள் என்றே எண்ணுகிறேன். கூடிய விரைவில் தங்கள் பதிலையும் எதிர்பார்க்கிறேன்.
இப்படிக்கு, தங்களிடம் மன்னிப்புக் கோரும் நல்லம்மா.’

கடிதத்தைப் படித்து முடித்ததும் அவள் மேல் ஒருபுறம் அனுதாபமும் மற்றொரு புறம் ஆத்திரமாகவுமிருந்தது நடராஜனுக்கு. நல்லம்மாவிடம் நேரிலேயே சென்று பேசுவதென்றெண்ணியவனாய் அவளிருந்த இடத்திற்கு விரைந்தான்.

நடராஜன் எதிர்பாராதவிதமாய்த் தன்னிடம் வருவதைக் கண்ட நல்லம்மா செய்வதொன்றும் தெரியாது திகைத்து தலை குனிந்த வண்ணம் எழுந்து நின்றுகொண்டிருந்தாள். இருவரும் சிறிது நேரம் மௌனம் சாதித்தனர். நல்லம்மாவை நெருங்கியதும் தொண்டையைச் சற்று கனைத்தவாறு பேசத்தொடங்கினான் நடராஜன்.

‘நல்லம்மா! இன்று நீ எழுதிய கடிதத்தை நான் சுமார் மூன்று வருடங்களுக்கு முன் எதிர்பார்த்தேன். அதற்கு நீ தந்த பரிசில் நான் சமூகத்தின் கண்களுக்குச் சாக்கடை நீரானதே. நான் உன்னை உண்மையாக நேசித்தேன். நீ என்னை விரும்புகிறாயா? என் காதலை வரவேற்பாயா என்றறியவே அன்று உனக்கு அந்தச் சிறு கடிதத்தை எழுதினேன். அதன் பலன் சமூகத்தால் தூற்றப்பட்டேன் ஏன்? என் மானத்தையே காற்றில் பறக்கவிட்டேன். என் எண்ணம் நிறைவேறவில்லை.’

‘அதற்குபின் இவ்வளவு காலமும் ஆசிரியத் தொழிலிற் புகுந்து பச்சிளங் குழந்தைகளின் ஊடாட்டத்தினால் அந்த நினைவையே மறந்து நிம்மதியாகக் காலம் கழித்து வருகிறேன். சென்ற பதினைந்து நாட்களுக்கு முன் நீ மீண்டும் என் வாழ்க்கையில் குறுக்கிடுவாய் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இங்கு வந்தாய். சலனமற்றிருந்த என் நெஞ்சில் மீண்டும் பழைய ஞாபகங்களைப் பறக்கவிட்டாய்.’

‘அன்று அந்தச் சிறு கடிதத்தை அதிபரிடம் காட்டி என் மானத்தை வாங்கினாயே! இன்று நீ எழுதிய இந்தக் கடிதத்தை அதே அதிபர் கண்டால்…? இது சமூகத்தின் காதுகளுக்கெட்டினால்? அன்று என் உடன் மாணவர்கள் எனக்கு முட்டாள் பட்டம் கட்டினார்களே!! காவாலி என்றார்களே! இன்று அதே மாணவர்கள் இந்தக் கடிதத்தைக் கண்டால்….? என்ன நினைப்பார்கள்? நீ ஒரு முறை அந்தச் சண்டாளச் சமூகத்தின் வாயில் அகப்பட்டாலல்லவா நான் பட்ட மனோ வேதனை உனக்குத் தெரியும்.’

‘கடந்த விடயங்களைப் பற்றிப் பேசியென்ன பயன்? நான் உன்னை நேசிக்கிறேன். ஆனால் அன்று என்மேல் ஏற்படுத்தப்பட்ட தப்பான அபிப்பிராயம் உன்னாலேயே அகற்றப்படவேண்டும். எனக்கு நீ எழுதிய இதே மன்னிப்புக் கடிதம் அதிபருக்கும் எழுதப்பட வேண்டும். அப்பொழுது அவர் உண்மையை உணர்ந்து என்னை மன்னித்தாலொழிய உன்னை நான் மணந்துக் கொள்ள முடியாது. இதுதான் என்னாற் செய்யக்கூடியது என்று கூறிவிட்டு விர் என்று தன்னிருப்பிடத்திற் சென்றமர்ந்துகொண்டான்.’

* * *

அடுத்த திங்கள் அதிபரிடமிருந்து நடராஜனுக்கு ஓர் கடிதம் வந்தது. நடராஜனின் பெருந்தன்மையை தான் மெச்சுவதாகவும் நல்லம்மாவை மணக்க முன்வந்ததற்காக என்றும் தான் நன்றி செலுத்துவதாகவும் கூடிய விரைவில் உங்களிருவரது திருமணம் நடந்தேறி இன்பவாழ்வு வாழ்வீர்களாக என்றும் அதிற் கண்டிருந்தது.

நடராஜனுக்கு ஆனந்தம் தாங்கமுடியவில்லை. ஓட்டமாகச் சென்று அக்கடிதத்தை நல்லம்மாவிடம் காட்டினான். அப்போது அவள் பார்த்த பார்வை நம் திருமண வைபவம் எப்போ என்று கேட்பது போலிருந்தது. கூடிய விரைவிலென்று கூறுவதுபோல் நடராஜனும் பார்த்தான்.

* * *

ஆம் அன்று தைப்பொங்கல் மகிழ்ச்சிமிக்க அந்தப் பொங்கற் புதுநாளன்று நடராஜனும் நல்லம்மாவும் வாழ்க்கை ஒப்பந்தம் செய்துகொண்டனர். அவர்களது தோழர்களும் தோழியரும் இருவரையும் என்னவெல்லாமோ சொல்லி வாழ்த்தினர்.


சபலம்

வாருகலால் கோலமிட்ட அந்த வாசல் அப்படியே அழியாமல் குலையாமல்.. அழகாகத் தான் இருந்தது. ஆளில்லா மங்கையிடம் அழகிருந்து ஆருக்கு என்ன பயன்?

குழந்தைகளின் மென்பாதங்கள் முத்தமிடாத அந்த வாசலின் அழகு யாருக்கு வேண்டும்!

சாய்மான நாற்காலியில் கால்களை நீட்டியபடி உடம்பைச் சாய்த்துக் கிடந்த நல்லதம்பி மாஸ்டர் சிந்தனையை முறித்துவிட நினைத்தவர் போல மறுபக்கம் சாய்ந்து படுத்தார்.

மேற்கே ஒழுங்கை ஓர வேலியில் நிற்கும் புன முருங்கையின் கீழ் பொன்தோடுகள் போல பூக்கள் சொரிந்து கிடந்தன. என்றோ ஒருநாள் பண்டித பரீட்சைக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்த புண்ணியத்தின் காரணமாக ஏதோ ஓர் இலக்கியப் புத்தகத்தில் படித்திருந்த பாட்டல்ல, அதன் கருத்து மாஸ்டருக்கு ஞாபகம் வந்தது.

காதலனைப் பிரிந்திருக்கும் கன்னியின் உடம்பில் எங்கோ அவள் கண்ணுக்கெட்டிய இடத்தில் பசலை படர்ந்திருந்ததாம் பொன்னிறமாக.

குழந்தைக் காதலர் பாதங்கள் கொஞ்சாத காரணத்தால் வாசல் அழகிக்கும் பசலை படர்ந்திருக்கிறதோ? காதலர் வந்ததும் பசலை மறைந்துவிடும். குழந்தைகள் வந்து சேர்ந்தால் வாசல் குமரியின் பசலையும் தீர்ந்து போய்விடும். ஒரு நல்ல கவிதை எழுதக் கருத்து கிடைத்து விட்டது என்ற நம்பிக்கையோடு துள்ளி எழுந்தார் நல்லதம்பி மாஸ்டர்.

அறைக்குள் நுழைந்து மேசையில் கிடந்த பாடக் குறிப்புக் கொப்பியின் பின்புறத்தில் கிறுகிறு வென்று எழுத ஆரம்பித்தார் அவர்.

‘குழந்தை குறுநடைப் பதமலர் கொஞ்சாக் குமரி வாசல் பெண்ணே..’ ஒருவரிதான்… அப்பால் சொற்கள் வெளிவருவதற்குத் தடுமாறித்; தத்தளித்தன. இன்னும் ஒரே வரி எழுதிவிடலாம் என்று எவ்வளவோ முயற்சித்தார் மாஸ்டர். கவிதை ஒரே ஒரு துளிதான் ஒழுகியது.

“ஆருக்கு வேணும் - எனக்கு வேணும்
வேட்டையைக் காட்டு! - ஐயா டோச்சி”

இவர்கள் வந்துவிட்டார்களா? சன்னலுக்கூடாக ஆவலோடு எட்டிப் பார்த்தார் மாஸ்டர். சீச்சீ! என்ன பைத்தியக் காரத்தனம். தாயோடு போயிருக்கும் கலைவாணனும், நளினியும் எப்படி இங்கே திடீர் என்று வரமுடியும்? பக்கத்து வீட்டுக்காரப் பூபாலனும் பொன்மணியும் ஒழுங்கையில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

படார் என்று சன்னலை இழுத்துச் சாத்திவிட்டு வெளியே திண்ணையில் போய் உட்கார்ந்தார் நல்லதம்பி மாஸ்டர்.

* * *

நினைத்தால் நேற்றுத்தான் நடந்தது போல இருக்கிறது. ஏழு வருடங்கள் எங்கள் திருமணத்துக்கு வயது! இல்வாழ்க்கைப் பாதையில் இரண்டு மைல் கல்கள் போல நளினியும் கலைவாணனும். வாழ்வின் இறுதி அந்தத்தை அடையும் வரையில் அதன் ஆரம்பத்தை திரும்பித் திரும்பிப் பார்த்துச் செல்லும் இலட்சிய வாதியைப் போல ஏனோ இந்த மனமும் அடிக்கடி எங்கள் வாழ்வின் ஆரம்ப அத்தியாயத்தை, சுவையான அதன் தொடக்கத்தை எண்ணியே ஓடுகிறது. அதை மறந்துவிடக் கூடிய சக்தி மாத்திரம் எனக்கிருந்தால் தனிமையில் சுடுகாட்டு வாழ்வைச் சமாளித்துக் கொண்டிருக்கலாம். வாழ்வுப் பயணம் தொடங்கிவிட்டால் தனிமையின் இரவுகளைத் தாண்டிச் செல்வது எத்தனை பயங்கரமாக அமைந்து விடுகிறது.

‘உங்களைத்தான் மாஸ்றர் இஞ்சோடிவந்து பாருங்க… தம்பிர அம்மைக்கி…..’

மாஸ்டர் துணுக்கிட்டுவிட்டார். ‘என்ன மாணிக்கம் மனிசிக்கு என்ன வந்திற்று?’

நடுங்கி அவசரப்பட்டுக் கொண்டு தன் எதிரே சொல் குறை நின்ற மாணிக்கத்தை ஆச்சரியத்தோடு கேட்டார் மாஸ்டர்.

‘நீங்க ஒருக்கா வந்து பாருங்க மாஸ்றர்’ என்றவாறே வாசலில் ஓடிக்கொண்டிருந்த மாணிக்கத்தைத் தொடர்ந்து நல்லதம்பி மாஸ்டர் வேகமாக நடந்தார்.

‘உள்ளுக்கு வந்து பாருங்கையா கைகால் எல்லாம் குளுந்து போச்சி’ என்று குடிசைக்குள் இருந்து கொண்டு மாணிக்கம் அழுதான். தன்னுடைய நெட்டை உடம்பை அவதிப்பட்டு மடக்கிக்கொண்டு குடிசைக்குள் வந்த மாஸ்டர் திடுக்கிட்டே போனார்.

கைவிரல்கள் கொடுகிச் சுரண்டபடி கிடக்க கண்கள் நெற்றியை நோக்கித் தவத்தில் இருக்க கொப்பளிப்பான் பொக்களங்கள் போல வியர்வை முகமெல்லாம் பொங்கிப் பெருக கால்கள் இரண்டும் கத்தரிக்கோல் விரித்துப் பிடித்தது போல அகட்டிப்போட்டபடி மல்லாந்து ஒரு பீற்றல் பாயில் விழுந்து கிடந்தாள் சின்னப்பிள்ளை.

என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து நின்ற மாணிக்கம் ஆசிரியரின் முகத்தை வினாக்குறியோடு பார்த்தான். அவன் கண்கள் கலங்கியிருந்தன.

மாஸ்டர் எதையோ நினைத்து கொண்டவர் போல திடீரென்று குனிந்து சின்னப்பிள்ளையின் கை நாடியை தொட்டுப் பார்த்தார்.

‘மாணிக்கம் இந்தச் சட்டை உடுப்புகளை கொஞ்சம் நுகைத்துவிடு. நான் வீட்ட போயிற்று ஓடிவாறன்’ என்று சொல்லிக் கொண்டே அவசரமாக வெளியேறினார் அவர். குடிசையின் வளைக்கம்பு தலையில் மோதியதையும் பொருட்படுத்தாமல் இடதுகையால் தலையைக் கசக்கி விட்டுக் கொண்டே ஓட்டமாக ஓடினார் ஆசிரியர். இரண்டே நிமிடத்தில் திரும்பி வந்து ‘மாணிக்கம் ஓடிப்போய் சாராயம் வாங்கி வா…ம்! சீக்கிரம் வா…’ என்று சொல்லி மாணிக்கத்தின் கைக்குள் ஒரு ஐந்து ரூபாய் நோட்டை திணித்தார்.

மாணிக்கத்துக்கு ஒன்றும் விளங்கவில்லை. மாஸ்றர் எல்லாம் தெரிஞ்சவர்… மறுகணம் கூப்பிடு தூரத்தில் இருந்த சாராயக் கடையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தான் மாணிக்கம்.

பாவம் இந்த இடத்திலே ஒரு பெண்துணை கிடையாது இம்… என்று பெருமூச்சு விட்டபடி செம்பில் இருந்து தண்ணீரை எடுத்து சின்னப்பிள்ளையின் முகத்திலே மெதுவாகத் தெளித்தார் மாஸ்டர். (அப்பொழுதான்) சின்னப்பிள்ளை நெஞ்சுச் சீலை தோளால் சரிந்து சட்டையின் மேல் ஊசி இன்றி சின்னப்பிள்ளை படுத்துக்கிடந்த அந்தக் காட்சி மாஸ்டரின் உடம்பில் ஓர் ஊசியைப் பாய்ச்சி உஷ்ணம் உண்டாக்கியது. குடிசைக்குள் நிற்பதற்கு மாஸ்டரின் மனச்சாட்சி விடவில்லை. வெளியே வந்தார். மெல்லிய அனுகல் ஒலி குடிசைக்குள் குளறியது. ஏதோ! என்னவோ!!.. உபகார சிந்தை மீண்டும் மாஸ்டரை குடிசைக்குள் தள்ளியது. பாயின் அருகே செத்தைப் பக்கம் கிடந்த பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைப் புத்தகத்தின் மட்டையை எடுத்து மெல்லக் குனிந்து நின்று விசிறத் தொடங்கினார் மாஸ்டர். அவர் உடம்பில் நிமிடத்துக்கு நிமிடம் சூடு அதிகரித்துக் கொண்டே வந்தது.

மாஸ்டரின் சூடான சுவாசம் பட்டதனாலோ மாணிக்கம் சாராயம் கொண்டு வந்து சின்னப்பிள்ளையின் உடம்பில் தேய்த்துச் சூடேற்றுவதற்கு முன்பே அவள் கண்களை மெல்லத் திறந்து பார்த்தாள். அவளுடைய முகத்தில் பொங்கி உருளும் வியர்வைத்துளிகளைத் துடைத்து விட வேண்டும் போல இருந்தாலும் மாஸ்டருக்கு துணிவு வரவில்லை நெஞ்சு கனத்தது.

மறுபக்கம் புரண்டு படுத்தாள் சின்னப்பிள்ளை. ஆமாம். அவளுக்கு உணர்வு வந்துவிட்டது.

‘நமக்கு காலம் சரியில்ல மாஸ்றர். சும்மா நிண்ட கோழிச்சாவலை அடிச்சுப் போட்டுப்போறான் வேன் காறன்?’ குடிசைக்கு வெளியே எட்டிப் பார்த்தார் நல்லதம்பி மாஸ்டர். இடதுகை கமக்கட்டுக்குள் சாராயப் போத்தலோடு வலது கையில் இரத்தம் தோய்ந்த பாணிச்சேவலை காலில் பிடித்துக் கொண்டு மாணிக்கம் வந்து கொண்டிருந்தான்.

மாணிக்கனுடைய சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள் சின்னப்பிள்ளை. நித்திரையால் எழும்பியவள் போல கண்களை கசக்கி கொண்டு மாஸ்டரைக் கண்ட சின்னப்பிள்ளை தனக்கும் வெட்கம் இருக்கிறது என்பதை நிரூபிப்பது போல மேலாக்கை எடுத்துச் சரிப்படுத்திக் கொண்டு கற்பைப் புதுப்பித்துக் கொள்வது போல ‘சுப்பிரமணியம்’ என்று தன் மகனைக் கூப்பிடுவதற்கும் மாணிக்கன் குடிசைக்குள் நுழைவதற்கும் சரியாக இருந்தது.

‘இந்தாருங்க மாஸ்டர்…சாராயம்…’ மாஸ்டரிடம் சாராயப் போத்தலை நீட்டினான் மாணிக்கம்.

‘இனி இது தேவையில்லை.. எண்டாலும் கொஞ்சம் எடுத்து உடம்பெல்லாம் தேய்த்துவிடு. நான் விளக்கு வைக்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டு வெளியேறினார் மாஸ்டர்.வண்ணக்கர் கண்ணாப் போடி

தவறணைக்குள்ள பிறந்து குடிகுடியெண்டு குடிக்கயள்… இன்னும் போத்தலோட அண்ணாந்து ஊத்தத் தெரியுதில்ல.. நீங்கெல்லாம் என்ன குடிக்கயள்…சை..!

நடுச்சாமத்தில - கோயிலுக்குப் பின்னால இந்தச் சூரப்பத்தக் காட்டுக்குள்ள.. கிளாசுக்கும் கோப்பைக்கும் எங்க போறது? எனக்கெண்டால் அந்த மண்ணாங்கட்டி ஒண்டும் தேவல்ல! ஆறு போத்தலையும் அண்ணாந்து ஊத்திப் போட்டு அசையாமல் இருப்பன்.

இந்தப் பனம்பழ மூளுக்குள்ள ஊத்தி அடியுங்க. சோக்கான சாமான்! ஒரு போத்தல் கொள்ளும். எப்பிடி எண்ட மூள? வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். என்ன ரெட்டத்தலையன் எண்டு சொல்றது இதுக்குத்தான் கண்டியளோ! எதுக்கும் ரெட்டமூளயப் போட்டுத்தான் செய்வன்.

என்னகா பூசாரிச் சின்னப்பா பொங்கலுக்கும் நேரமாகுது. பூசக்காறன் தேடப் போறான். எடன் எடன் பனங்கா மணத்தால் மணக்கட்டும் ஊத்தியடியன். நான் வீட்ட ஒள்ளுப்பம் பொயித்து வரப் போறன். துள்ளுமா நேத்திக்கடனாக வந்த மாக்கும்பம் புளிச்சுப் போகும். மூட்டகட்டி வச்சிருக்கன். நேரத்துக்குக் கொண்டு வீட்ட போட்டால்… அதுகள் புட்ட இடியப்பத்த அவிச்சிப் பேத்தியாக்கிப் போடுங்கள். அரிசும் ஒரு சாக்குக் கட்டி வச்சிற்றன். அது பூசாரிச் சின்னப்பனுக்குத் தான். புறகு கொண்டு போகலாம். இப்ப இந்த மாவக் கொண்டு போய்ப் போட்டுத்து வாறன்.

இந்தக் காலத்தில நம்மட விருப்பத்துக்கு ஒண்டும் செய்ய முடியாமக் கிடக்கு. அஞ்சாறு குட்டி இளந்தாரிமார் தலைப்பட்டு ஊரப் பழுதாக்கத் தொடங்கீற்றானுகள். அம்மன் கோயிலுக்கு வாற வருமானத்தப் பத்திக் கேக்கிறதுக்கு இவயளுக்கு அதிகாரம் குடுத்தது ஆரெண்டு கேக்கிறன்? அதெல்லாம் கணக்கு வழக்கும் பாக்கத்தானே குடி வண்ணக்குமார் நாங்க இரிக்கம். பூசாரிச் சின்னப்பன் இரிக்கார்! இந்த இளந்தாரிமார் எத்தினையாம் ஆண்டில முளைச்சாக்கள்? வண்ணக்குமாரப் பத்தி அதிலயும் என்னப் பத்தித்தான் கண்ட கண்ட மாதிரிக் கதகாலுகள் உண்டாகுது! இஞ்ச.. நானும் பாத்துப் பாத்து வாறன் கண்டயோ… ஒரு நாளைக்கு இவியளக் கொண்டு பூட்டுற மாதிரிப் பூட்டாட்டி நானும் வண்ணக்கு கண்ணாப்போடி இல்ல! வளிசல்கள்…

அம்மாளுக்கு சாராயப் போத்தல் எத்தின வந்தது. கள் எத்தின கலன்? கோழி எத்தின? முட்ட எத்தின? சேல புடவ எத்தின?

இதெல்லாம் இவியளுக்கு சொல்ல வேணுமாக்கும்? நாய்க்கேன் தோல் தேங்காய்? இல்ல இவியதான் ஊரா?

அடேய் நாய்ப் பயலுகளே… சாராயம், கள்ளு, கோழி, முட்ட எங்கட கோயிலுக்குத் தாண்டா இந்தச் சிலோன் தேசத்திலேயே ஏராளமாக வாறது!

வந்தா… அது அம்மாளுக்கா வாறது. அம்மாள ஆட்டுக் காட்டிப் பாட்டுப் பாடுறவனுகளுக்கு தான் வாறது. எட்டு நாளைக்கு இரவு பகலா நெஞ்சுடைக்கிற பூசாரியும் வண்ணக்குமாரும் நெஞ்சு நோவுக்குக் கொண்டு போய் முட்டயக் குடிக்காம என்ன செய்வான். அதக் கேக்கிறதுக்கு நீங்கெல்லாம் ஆருடா?

நல்ல வடிவு வடிவான பட்டுச் சீலயள்.. கண் கொண்டு பாக்கொண்ணாத சீலயள். கூறச்சீலயள் தான் அதெல்லாம்… வருஷத்தில ஒண்ட ரெண்ட வண்ணாக்குப் பூசாரி கொண்டு போறத்தில இவியளுக்குக் கடுக்குது? இந்தக் கோயில நம்பிக் கிடக்கிறவன் கோயிலுக்கெண்டு வாறத அனுபவிச்சால் என்ன? அம்மாள் குடுக்காவு.. நான் எண்ட புள்ள குட்டிக்குக் கொண்டு கொடுக்கன். அதப்பத்தி நீங்க கேட்டால்.. செருப்பால அடிப்பன்!

கோயில் ஆதன பாதனம் கொம்மையும் கொப்பனுமா குடுத்தவங்க...? எண்ட குடியான் குடுத்தவன். கோயில் தோட்டத்தில கள்ளன் காவாலி தேங்கா களவெடுக்காமல் காலிப் புள்ளயள் இளனி பிய்யாமல் ஆடு மாடு வராம பார்க்கிறவன் நான்… கோயில் தேங்காயெல்லாம் நான்தான் ஆயிறன்… தின்னுறன்.. ஓம்.. ஆயிறந்தான். பாத்து மேச்ச எனக்குச் சொந்தமில்லாம எண்ட முன்னோன் குடுத்த முதுசத்தில காய்க்கிற தேங்காய் வேற ஆருக்குடா உரும… சாமி காவல் பாத்தவரா..? கோயிலுக்குக் குடுக்க…

புள்ளயார் கோவிலக்கட்டிப் புளுத்தப் போறம் எண்டு ஆயிரம் கல்ல வாங்கி அடுக்கிப் போட்டுப் போனாப்பல போதுமா? கல்லுகள அவனும் இவனும் தூக்கிற்றுப் போறானே எண்டு போட்டுத்தான் நான் மொத்தமாக் கொண்டுபோய் எண்ட வீட்டுக்கு அத்திவாரம் போட்டிருக்கன். நீங்க கோயில் வேலயத் தொடங்குங்கவன்.. கல்ல வாங்கித் தாறன்….

கல்லக் களவெடுத்துப் போட்டான் அப்பிடி இப்பிடி எண்டு உங்கட வீட்ட இருந்து கதச்சால்… பல்லக் கழட்டிக் கையிலதான் தருவன்!

இடிஞ்சுபோய்க் கிடக்கிற கந்தசாமி கோயில் கல்லையும் கழட்டப் போறன். ஏனெண்டால் அதுவும் எண்ட ஒரு மலட்டுப் பெத்தா கட்டிக் குடுத்த கோயில்தான். அந்தக் கோயிலுக்கு அவ எழுதின காணியத்தான் நான் குத்தகைக்குக் குடுத்து வாங்கித் தின்னுறன் நாப்பது வருஷமாக!... கோயில் இடிஞ்சி விழுந்தா கட்டுங்கவன்.. காணி தாறன். வயல் குத்தகையப் பத்தி உங்களுக்கென்னடா பேச்சு! அது என்ட பெத்தாட ஆதனம்!... சொத்தய உடைப்பன்! ஆரும் இனிமேல் கேட்டால்…?

இந்த அம்மன் கோயிலுக்கு ஏழு குடிக்கும் ஏழு வண்ணக்குமார் இரிக்காங்க எண்டு பேர்தான். உண்மையாக எண்ட குடிதான் ஊரில பெரியகுடி. கோயில்லேயே சீர்தூங்கிற வண்ணக்கு நான் ஒருவன் தாண்டா!

உங்களப் போல ஏதாவது ஒரு தொழில் பாக்கத் தெரியாமல் இல்லை. தொழில் பாத்தா கோயிலப் பாக்கொண்ணா எண்டு போட்டுத்தான் இந்தப் பெரிய குடும்பக்காறன் நான் ஒரு தொழிலுக்கும் போறல்ல. எங்கட குடிக்கு மட்டுமில்ல இந்தக் கோயில் பெரிய வண்ணக்கும் நான்தான். பூசாரிச் சின்னப்பன் என்ட கைக்குள்ள இரிக்குமட்டும் நாங்க நினைச்சதுதாண்டா சட்டம்! அந்தாளும் என்னப் போல கோயில் முழு நேர ஊழியகாறன்தான்.

எங்கட குடிக்குள்ள என்னப்பாக்கப் படிச்சவன் உத்தியோக காறன் எல்லாம் இல்லையா?

இரிக்கான்தான்.

பணக்காறன், படிச்சவன், எல்லாரும் இரிக்கான். வயது போன எத்தினையோ பேர் இரிக்கான். அவியளையெல்லாம் வண்ணக்குமாராக்காமல் நான் எப்படி வண்ணக்கா வந்தன் எண்டு தானே கேக்கயள். அதுதான் நம்மட ரெட்ட மூள தோழே.

ஆர்ர கோயில் எண்டு யோசிச்சுப் பேசுங்க. அம்மாளையும் தூக்கிற்றுப் போயிருவன். புண்ணியத்துக்கு கும்பிட்டுட்டுப் போகட்டும் எண்டு பாத்தன்..

கோயிலத் தின்னுறனாம் எண்டு சந்தில நிண்டு குசுகுசுக்கானுகளாம். கொண்டு போய்ப் பூட்டுறமாதிரிப் பூட்டிப் போடுவன். ஆரெண்டு தெரியுமா…? நான் தான் வண்ணக்கர் கண்ணாப்போடி! கவனம்!தலம வாத்தியார் தம்பிராசா

தலம வாத்தியார் வேல பாக்கிற தெண்டால் அது லேசான காரியம் இல்லப் பாருங்க. பெரும் பொறுப்பு! உங்கட ஐடியா என்னவோ எனக்குத் தெரியாது. என்னப் பொறுத்தவரையில சொல்றன் அது பெரும் பொறுப்பான ஒரு பதவி!

ஒரு சில தலம வாத்திமார் சொல்றாங்க.. அது மிச்சம் சிம்பிள் எண்டு! அது சிலவேளையில உண்மையாகவும் இருக்கும். அப்படிச் சொல்றவங்க கொஞ்சம் அறிவு ஆற்றல் அது இது எண்டு கொஞ்சம் மூளையும் உள்ளவங்க. இவங்கட அறிவும் ஆற்றலும் மூளையும்.. இந்தக்காலத்தில செல்மதியாகாது கண்டீங்களோ! இப்ப உத்தியோகம் - அதுவும் வாத்தியார் வேலை பாக்கிறதெண்டால் சுழிக்கத் தெரியவேணும்!

அந்தக் காலத்தில ஒரு வாத்தியாராக வாறதெண்டால் பெரும்பொறுப்பு! அதுவும் றெயின் ரீச்சரெண்டால் என்ட கடவுளே… அவன் பெரிய ராசா! குறைஞ்சது ரீச்சர்ஸ் சேட்டிபிகற் இருக்க வேணும்! இல்லாட்டி பிறிளிம் சோதினை பாசு பண்ணினாலும் வாத்தியாராகேலா! அது பெரும் பொறுப்பு!

அப்படியான காலத்திலேயே பிறிளிம் சோதனையோட வாத்தியார் வேல பாத்தவன் நான். ஏன் நான் ரீச்சர்ஸ் சேட்டிபிக்கற் சோதனையும் ஒருதரம் ரெண்டுதரமில்ல. ஒன்பதுதரம் மோதிப்பாத்துப் போட்டு விட்டெறிஞ்சு போட்டுத் திரியக்குள்ளதான்.. மிஷன்காறங்கள் எங்கட ஊர்ல பள்ளி கட்ட வளவொண்டு வேணுமெண்டு வந்து பட்டாங்க… வாச்சாலும் வந்து வாச்சுது! என்ர மாமன்காறன் கணபதிப் போடிதான் அப்ப பொலிஸ் தலமக்காரன்! அவர்ர படிப்புக்காக கிடைக்கல்ல பொலிஸ் தலமக்காரன் உத்தியோகம்! அவர்ர உடம்புக்காகத் தான் கிடைச்சது!

வெள்ளக்கார ஏஜென்ட் விண்ணப்பம் அனுப்பியிருந்த ஆக்களுக்கு நேர்முகப் பரீட்சையொண்டு வச்சு நியமனம் கொடுக்கத்தான் வந்தவன். அந்தக் காலத்தில அஞ்சாந்தரம் படிச்சவன் தான் பெரிய படிப்பாளி! எங்கட ஊரான் மூணு பேர் அப்பிளிக்கேஷன் போட்டாக்கள். அஞ்சாந்தரமும் படிக்காதாக்கள் பொலிஸ் தலமக்காறன் நியமனத்த புதுனம் பாக்கப் போனவர்தான் எண்ட மாமன் கணபதிப்போடி! அப்பிளிக்கேசன் காரனுகள் ஆக்கள் தோற்றம் காணாது. என்ர மாமன அண்ணாந்து பாத்தான் வெள்ளக்காறன். நீதான் சரியான ஆள். பொலிஸ் தலமக்காறன் நீதான் என்டானே! மாமன் கணபதிப்போடி ஆள் பெரிய மாமலை! எனக்கு கை ஒப்பம் வைக்கவும் தெரியாய்யா.. நான் எப்பிடி உத்தியோகம் பாக்கிறது. வேணாமய்யா எண்டாராம்! வெள்ளக்காறன் விடல்ல! அவர்தான் பொலிஸ் தலம!

மாமன் கொடுத்த ஒரு புரன் வளவுத் துண்டுக்குள்ள மிசன்காறன் பள்ளி கட்டிப் போட்டான். அப்பதான் ஒரு ராத்திரி சாப்பிட்டுப் போட்டுப் படுக்கன்… பத்து மணியிருக்கும்… அந்நேரத்திலதான் எனக்கு மூள நல்லா வேல செய்யும்.

அடுத்த நாள் மாமன் பொ.த.கணபதிப் போடியாரிட்ட உடைச்சன் சங்கதிய. அவர் போய் மனேச்சரக் கண்டு பள்ளி கட்ட வளவு தந்தவன் நான். எண்ட மருமகப் பொடியன் ஒருவன் பிறிளிம் பாசு பண்ணிற்று வேலல்லாமத் திரியுறான். நம்மட பள்ளியில பாத்து படிப்பிக்க ஒரு இடம் குடுக்க வேணும் துர! எண்டார். இடந்தரலாம் அவர் மதம் மாற வேணும் எண்டான் வெள்ளக்காற மனேச்சர். திருநீறு சாத்திறத்த விட்டன். வாத்தியார் வேல.. கையோட கட்டளை!

பள்ளிக்குப் போனால்… அவர் ஒரு கண்டறியாத தலம வாத்தியார். குடும்பியும் ஆளும்! எல்லாத்துக்கும் பெரிய லோ! பள்ளிக்குள்ள நிண்டாப்பல அவசரமாக ஊருக்குள்ள ஒரு அவசரத்துக்கு போகப்படாதா? அதுக்கும் அவரிட்டக் கேக்கவேணும். பெரிய கண்டறியாத லோ! ஒருநாள் அவரிட்ட சொல்லாம ஊருக்குள்ள போய்த் திரும்பி வந்தா பெரிய அட்டகாசமும் லோவும் பேசுறார்! கொஞ்சம் பாவிச்சுற்றுத்தான் வந்தனான்! அதுக்குத்தானே போனதும்! போறபோக்கில பிடிச்சன் தலம வாத்தியார்ர குடும்பியில அவ்வளவுதான்… சங்கதி. மூணாம் நாள் வேலைக்குத் தொப்பி போட்டுட்டான் தலம வாத்தி! வேலயில நிப்பாட்டியிருக்கெண்டு கடிதம்! ஆக மூணுமாசம்! உத்தியோகம் அற்பாயுளா போச்சு!

இனியென்ன? என்னோட கொளுவி - வேலயையும் அறுத்துப்போட்டு எண்ட சொந்த ஊர்ல.. அதுவும் என்ர மாமன் கொடுத்த வளவுப் பள்ளியில இவர் தலம வாத்திவேல பார்த்துப் போட்டுப் போகவா?
ஒவ்வொரு ராவும் கண்முழிப்புத்தான்! விடிஞ்சால் பயிரப்பிடுங்கிப் போட்டானுகள். மேடையில ரெண்டுக்குப் போயிருக்கானுகள் மேச கதிரயக் காணல்ல! இதுதான் தலம வாத்தியாருக்கு ஒப்பாரி!

ஒருநாள் தலம வாத்தியார் ஊர்ல இல்ல. மனிசியும் பிள்ளையளுந்தான் தனிய பள்ளிக்குள்ள. மனிசியெண்டால் நல்ல வடிவு. தாலிக் கொடியெண்டால் தாமரக்கிழங்கு மாதிரி!

பள்ளி அறைக்குள்ள யன்னலோரம் கட்டில். மனிசி கட்டில்ல கால் நீட்டியிருந்து பிள்ளைக்குப் பால் கொடுக்கிற சமயம்! யன்னலுக்குள்ளால கழுத்தில போட்டன் கைய! அவ்வளவுதான் தெரியும் நாய் கடிச்சாப்போல! நாசமத்துப் போவாள். பிள்ளையையும் விட்டுப் போட்டு… புறங்கைய பிடிச்சுச் சப்பிப் போட்டாள்! கையப் பறிச்செடுத்துக் கொண்டு ஓட… கள்ளன் கள்ளன் எண்டு கத்தத் தொடங்கிற்றாளே..வே…!

அடுத்த நாள் தலம வாத்தி வந்திறங்கிற்றான். மாமன் பொ.த. அறிஞ்சால் என்ன கதி! பெண்ணும் தரமாட்டானே மனிசன் எண்டு பயந்து போய் காச்சலோட பொத்திற்று படுக்கிறன். வாத்தி லொக் என்றியும் போட்டுத்து மாமனையும் தேடி வந்திற்றான். என்னில தான் சந்தேகம் எண்டு சொல்லிப் போட்டானே! மாமன் கூப்பிட்டு வரக்காட்டி கையைக் காட்டச்சொன்னா..! எப்பிடிக் காட்டுவன். உலக்கையை எடுத்தான் மனிசன் அண்டைக்கு நான் செத்திருப்பன். நானும் தலம வாத்தி வேல பாக்கவேணும் எண்டு தலையில எழுயிருக்கக்குள்ள எப்பிடிச் சாகிறது? மாமன் வாத்தியிர கால்ல விழுந்து கிழுந்து ஒருமாதிரியா என்னக்கழட்டிப் போட்டார். படியாட்டியும் அவர்

அதுக்குப்பிறகு பத்துவருசம் கழிச்சு திருக்கணாமலை டொக்கியாட்டுக்குள்ள ஒரு ஒவிசர் வேல பாத்துக் கொண்டு திரியக்குள்ளதான். சீனியர் பாஸ் பண்ணின ஆக்களை வெங்காய வாத்தியாராகப் போடுறாங்களாம் எண்டு கேள்விப்பட்டு ஒரு ஆளப்பிடிச்சு நானும் ஒரு அப்பிளிக்கேசன் போட்டன்…

பணிக்கன்காமத்துப் பள்ளிக்கு வெங்காய வாத்தியாராகப் போட்டாங்க. அது ஒரு ஆனக்காட்டுக்குள்ள பள்ளி! பொழுது போறதெண்டால் பெரும் பொறுப்பு. என்ட மனிசியும் அப்ப அந்தப் பள்ளியிலதான் படிப்பிக்கிறாவு. அவ ஆள் ஒரு றவ்வாணம்! பொழுது போக வேணுமே.. கதைக்கப் பேசத் தொடங்கினம்! அங்கால தெரியாதா.. கொளுவிற்று! தலம வாத்தியாரும் ஒரு நல்ல மனிசன்! பெட்ட றெயினிங் ரீச்சர்.. என்றாலும் இணங்கிற்றாள். ஆள் எலும்பும் தோலும் எண்டாலும்.. நல்ல குணம்.. கடசி வரையும் நம்பிற்றாள்! இனியென்ன செய்யிற கச்சேரிக்குப் போனதான்!

கலியாணம் முடிச்ச நாளைக்கு எடுக்கிறன் எடுக்கிறன். கொல்லு கழுத்தறு! எங்கட மூணாம் பெட்ட பிறந்திற்றாள் நான் றெயினிங் கொலிச்சுக்குப் போகக்குள்ள. அதுவும் எத்தின சுழிப்புகள். எம்.பி. தான் உதவி செய்தவர். மனிசி காசு கட்டிக் கிட்டி செட்டிபிக்கற்றோட வெளியால வந்திற்றன். றெயின் ரீச்சராக வாறெண்டா சும்மாவா? அது பெரும் பொறுப்பு! …அதுக்குப் பிறகுதான் இவள நான் கலியாணம் முடிச்சிருக்கப்படாது எண்ட எண்ணம் வந்தது. நான் றெயினிங் ரீச்சரான பிறகும் ஏதும் சண்ட கிண்ட வந்தால் இண்டைக்கும் கூட நான் ஒரு தலம வாத்தியெண்டு மதியாமல் வெங்காயம்! வெங்காயம்! எண்டுதான் பேசுறாள்! இனியொண்டும் செய்ய ஏலாது பாருங்க.. பென்சனுக்கும் போகப் போறன்!

மிசன் பள்ளியெல்லாம் அரசாங்கம் எடுத்த பிறகு எண்ட சொந்த ஊர் பள்ளியில தலம வாத்தியார்ர இடம் காலியெண்டு கேள்விப்பட்டன்! வெங்காய வாத்தி றெயின் ரீச்சர் சேவிஸ் எல்லாம் ஆகப்போகப் பதின்மூன்று வருஷந்தானே! சேவிஸ் காணாது எண்டானுகள்!

ஒரு எம்பியை பிடிச்சு கயிறு குடுத்து ஒரு சுழிசுழிச்சன். எங்கட ஊர்ல ஒரே ஒரு வாத்தியார் நான்தானே! ஏன் தலம வாத்தியா வரக்கூடாது எண்டு ஒரு போடு போட்டன். ஊராக்களையும் பிடிச்சு உடைச்சன் ரெண்டு மூணு! தம்பிராசா சேவை எங்கட ஊருக்கு உடனடியாகத் தேவை! போய் இறங்கிற்றானுகள் டிப்பிட்டேஷன். பிறகென்ன பாருங்க ஊரோட தலம வாத்தியாராக வந்திற்றன். சும்மாவா அது பெரும் பொறுப்பு!

நான் தலம வாத்தியாராக வந்தது இந்த உதவி வாத்திமாருக்கு கொஞ்சம் கறுப்புத்தான். என்னப்பாக்கச் சேவிஸ்காரன் ஒருவன்! சம்பளமும் அவனுக்குத் தான் கூட. ஆள் ஒரு பண்டிதரும் கூட! அதக்கு நான் என்ன செய்யலாம்! சுழிக்கத் தெரியாத ஆக்கள் பண்டிதமில்ல. பட்டதாரியெண்டாலும் இருக்கவேண்டியது தான். பென்சன் வரையும் உதவி வாத்தியாராக!

என்ர சுழி மூளையால நான் தலம வாத்தியாராக வந்தவன். தகுதி வேறபாருங்க பதவி வேறதான். நான் ஒரு தலம வாத்தி.

‘பசுநெய்’ விசுவலிங்கம்

நீங்க என்னப் பற்றி என்ன நினைச்சாலும் சரிதான் அதப்பற்றி எனக்கொண்டும் கவல கிடையாது.

ஏன்? எண்டு கேப்பியள். அது தான் தெரியுமே நம்மட போக்கு ஒரு தனிப்போக்கு எதுக்கும் கவலப்படாத போக்கு!

அண்டைக்குப் பாருங்க ஏறாவூர்ச் சந்தியில ஒரு கடக்காறன் வாற வரத்தில… வஸ்ஸ_க்குள்ள இருந்த என்ன வெளியால இழுத்துப் போட்டு மொங்கு மொங்கெண்டு மொங்கிப் போட்டான். நீங்கெண்டால்.. இன்னேரம் சவம்! நிண்டு பிடிச்சனா இல்லையோ? இந்த மண்ணாங்கட்டி உடம்பையும் தந்து இந்தப் பூமியில ஆண்டவன் நம்மப் படச்சுட்டது என்னத்துக்குத்தான் பின்ன? ஆரும் சோட்டப்பட்டவனுகள் அடிச்சு ஆசையத் தீர்க்கட்டுமே! நமக்கென்ன அதால குறஞ்சு போறது? நானோ ஒரு ‘விசினஸ் மன்’ இதுகளுக்கெல்லாம் பயந்துவிட்டால் தமிழண்ட பொருளாதாரம் எப்பிடி எழும்பும்? துணிஞ்சு இறங்கிற்றன். வாறதப் பாப்பம்!

வியாபாரம் எண்டால் வெறுமனே வேண்டி விக்கிற வேல மட்டும் அல்ல. உற்பத்தியும் நாமதான் விற்பனையும் நாமதான். அதால ஏதும் டேஞ்சர்கள் நடந்தாலும் நாமதான். ஆசுபத்திரிக்குப் போக வேண்டிய அலுவல்கள் ஏதும் நடந்து போனாலும் அதுக்கும் பொறுப்பு நாமதான்! ஆண்டவன் காவலாக இன்னும் அப்பிடி ஒண்டும் நடக்கல்ல. எட்டில தப்பில ஆரும் கைவச்சாலும் காயம் கீயம் கிடையாது! வியாபாரத்தில பொறுமைதான் முக்கியம் பாருங்க. நம்மட விஸ்னஸ் பிழையில்ல.

எங்கட ஊராக்கள் இருக்காங்களே அவங்க மண்ணில தயிலம் வடிச்சுத்தான் காலம் ஓட்டுறாங்க. அப்பா என்னயும் மாடு மேச்சு மணல்ல தயிலம் வடிக்கிற வேல தான் பழக்கப் பாத்தார். அது அவர்ர குலத் தொழில். மரக்கறித் தோட்டம் (காலை) நாட்டவும் வயலுக்குள்ள போய் வேலவெட்டி செய்யவும் தான் இவனுகளுக்குத் தெரியும்.

‘மாடுகள் மேய்த்து மடயனாய்ப் போகாமல்’ எண்டு எங்க பெத்தப்பா எண்ணச் சிந்து பாடிக் காட்டி இருக்கார் எனக்கு. அப்பனும் இவர்ர காலயும்! விட்டெறிஞ்சு போட்டு வெளிக்கிட்டு வந்திற்றன்.

வெம்பு மணலும் வேகாவெயிலும் மனிசர உயிரோட கருவாடாக்கிப்போடும். வெம்பு மணலுக்க வேகாவெயில்ல குடம் தூக்கி தண்ணி ஊத்தவேணும். துலாக் கால்ல நிண்டு பகலைக் கெல்லாம் தூங்கவேணும். கால செய்யிறவனுகளப்பாத்தா அது விளங்கும். அவனுகள் நடக்கக்க பாக்க வேணும் முதுக. கூனி பூமியக் கொஞ்சப் போறாப்ப இருக்கும். மனிசச்சாங்க பாங்கமும் இல்ல! அது போனா வயலுக்க சுரிக்குள்ள போய் நிண்டு மாயவேணும்! எங்கட ஊரான் அரவாசிப்பேர் கசம் பிடிச்சுத்தான் செத்தவனுகள்! மணல்ல தயிலம் வடிச்சால் நமக்கும் அதுதான்!

இதெல்லாம் நமக்குப் பிடிக்கல்ல. நம்மட போக்கு ஒருதனிப் போக்கு எதுக்கும் கவலைப்படாத போக்கு! விட்டெறிஞ்சு போட்டு வெளிக்கிட்டன்.

கோயிலடிச் சந்தி. தேத்தண்ணிக்கட வாசல். நல்ல சுதியான இடம். ஆலமர நிழலும் அதுக்குக்கீழ மணலும் கடதாசிக் கூட்டமும் நல்ல தொழில். கொசுகடிச்சாலும் வருமானம் பிழையில்ல. வாறவன் போறவன் பாத்திற்று ஒரு தேத்தண்ணிய வீடிய வாங்கித்தராமப் போகமாட்டன். சில வேளையில திறீறோசுகளும் வந்து எண்படும். அது அண்டைக்கு நம்மட முழிவிசளத்தப் பொறுத்தது. கடையடிப் பிளைப்பு துவங்கின புதுசில ஒரு நாளைக்கு ஒரு இருபது முப்பது தேத்தண்ணி வீடி சுறுட்டு வெற்றிலை பாக்கு எண்டு ஆப்பிடும். போகப் போக ஒரு நாளைக்கு ஒரு பிளேன்டீ கிடைக்கிறதும் பொறுப்பு. நாம பாத்திற்று இருக்கக்குள்ளேயே கோழிச் சூடன் வாழப்பழமும் கேக்கும் துதளுமாத் திண்டு போட்டு பால் தேத்தண்ணியும் குடிக்கானுகள்! என்ன விசுவம் இவடத்த இருக்கிற எண்டு கேக்கான் இல்ல! முன்னாலயெல்லாம் வாங்கித் தந்தவங்கள்தான். போகப் போக நம்மட யாவாரம் படுத்துப் போச்சு! கடக்காறனும் முகம் தந்து கதைக்கிறல்ல. நானும் ஒரு ரோசக் காரன் கண்டயளே. அவடத்த விட்டு எழும்பியாச்சு.

என்ன செய்தாலும் அம்மா அம்மாதான். அப்பன் தோட்டத்துக்கு போன பிறகு தனியா இருப்பாவு. அந்நேரம் போய் பிடிப்பன் சரியான பிடி. காசு தாறயோ இல்லக் கடல்ல சாகட்டோ! எண்டாக் காணும். ‘அது வெம்பு மணல்ல தயிலம் வடிக்கிற காசி எனக்கென்னத்துக்கு? எண்டு ஏசிப் போட்டும் முடிச்சவுட்டுத் தருவாவு. ஆணெண்டும் அம்மைக்கு நான் ஒருவன் தானே! அதுதான் செல்லம்! அப்பனுக்கு என்னக் கண்ணில காட்ட ஏலாது. அவர் கிடக்கார்! எந்நேரம் பார்த்தாலும் மண்தோண்டுற தான் வேல!

காச வாங்கிற்று அவடத்த கிராம முன்னேற்றம் சங்க மண்டபத்துக்குள்ள போனா… என்னப் போல தோட்டம் துரவு செய்யாத நாகரிகமான நாலுபேர் வருவானுகள். கூடிற்றமோ… கந்தண்ட கமுக்கட்டுக்குள்ள தானே கடதாசிக் கூட்டம்! வெட்டுத்தான் நடக்கும்! வெண்டுத்தமோ… வெறியுந்தான், படமுந்தான், விருந்து வேடிக்கையுந்தான். அது பெரிய தடபுடல். ஒரு நாள் வெண்ட காசிலதான் இந்த நைலோன் சேட்டும் மணிக்கூடும் வாங்குன நான். நல்ல தொழில் தான். சில நாளையில கொண்டு போய் கொட்ட நூத்துப் போடும். நான் நைலோன் சேட்டும் மணிக்கூடும் கொம்பு மீசையும் கொண்டு திரியிறது எங்கட ஊரான் பகுதியானுக்குப் பிடிக்கல்ல. பொலிசில போய்க் குத்தி விட்டுத்தானுகள்! ஒருவன் நல்லாருக்கிறது மற்றவனுக்கு எரிச்சல்! அதுதான் இந்த ஊர் ஒருநாளும் நல்லா வரமாட்டாது கண்டயளோ! ஊரவன் ஒண்டுக்கும் விடமாட்டான்.

அவங்க பொலிசில சொன்னாப்பல நாங்க சும்மா இருந்திருவமா? குத்திக் குடுத்தவங்கட வீடுகள்ள மட்டும் இல்ல அவங்கட இனசனம் எண்டிருக்கிற ஆக்கள்ற வீடுகளிலயும் தான் இப்ப ஒரு கோழிக்குஞ்சுக்கும் வழியில்ல! ராவோட ராவா எல்லாம் புறக்கிப் போட்டம்! அதயும் பொலிசுக்குச் சொல்லிப் பாத்தாங்க. சொன்னாக்களத் தெரியும். அடுத்த நாள் ஆக்கள்ற கால வழிய மையோரிக் கிழங்கெல்லாம் மாயமாக மறஞ்சுது! ஏதும் தொழிலத் தொடங்கினா அதுக்கெல்லாம் விறேக்குப் போட்டா நாங்க என்னதான் தொழில் செய்யுற? ‘கிழங்கெல்லாம் கொண்டு போயித்தானுகள் வம்பில புறக்கிகள்!’ எண்டு கொம்பினாப்பல எங்களுக்கென்ன? நாங்க தொழில் செய்யிறம்! இந்த ஊர்ல அந்தத் தொழிலையும் பெருப்பிக்க வழியில்ல. கோழி - மரவள்ளிக் கிழங்கு - தேங்காய் - உரல் - உலக்க - அம்மி - குளவி - துருவில - அருவாக்கத்தி இப்பிடி என்னவுந்தான் கிடைக்கும். இதக்கொண்டு காலத்த எப்பிடி ‘றோள்’ பண்ணுற? நகநட்டு காசுபணம் உள்ள ஊரா இது? களிசர ஊர்! காஞ்ச பயலுகள்! கோழி வளக்கவும் பயப்படுறானுகள். எனக்கெண்டால் கடும் பொறுப்பு!

இடையில ஒரு நாள் அம்மையிர முறிஞ்சி போய்க்கிடந்த அட்டியலக் கிளப்பிற்று மட்டக்களப்பில கொண்டுபோய் வித்துப்போட்டு மலநாடு - மன்னார் யாப்பாணம் திருகோணமலையெல்லாம் ஒரு றவுண் அடிச்சன். இந்தப் பகுதிகள்ள மட்டக்களப்புப் பசு நெய்ணெ;டால் நல்ல மானம் எண்டு கேள்விப்பட்டன். காசெல்லாம் முடிஞ்சு போச்சு.

ஊருக்குத் திரும்பி வந்து சேரக்க எண்ட நைலோன் சேட் பக்கற்றுக்குள்ள சிங்கமார்க் வீடி ஒரு கட்டுக் குறையாக் கிடக்கு! காசு பச்சநாவி ஒரு சதமும் இல்ல! எப்படி நெய் விஸ்னஸ் தொடங்குற? கோயிலடிக் கடயில குந்திற்று இருந்து லயின் பண்ணிப்பாத்தால் ஒரு வழியும் இல்ல!

அம்மைய வளஞ்சு பாத்தன். இந்த முற அதெல்லாம் பலிக்கல்ல! தண்ணி குடிக்கிற செம்பத் தூக்கிக் கமுக்கட்டுக்குள்ள வச்சன். அப்ப வாறன் எண்டு போட்டு கடப்படிக்குப் போறத்துக் கிடயில சேல முடிச்சவிள் பட்டுத்து! ஆக ரெண்டு ரூபாய்க்கு மேல தரமாட்டாங்க. செம்பத்தூக்கி எறிஞ்சு போட்டு றோட்டுக்கு வந்தா படவிளம்பரம் சொல்றான். புதுமுகம் நிருவாண தேவி நடிச்ச படம்! அதப் பாக்க இந்த நெய்யாவாரம் எனக்குப் பெரிசில்ல கண்டயளோ!

கலரிக்கு டிக்கட் தேத்தண்ணிச் செலவும் போக அம்ம தந்த காசில ஒரு ரூபா மிச்சம்!

படம் ஓடி முடிஞ்ச பிறகுதான் நெய் விஸ்னஸ் நினைப்பு வருகுது. நாளைக்கு எப்பிடியும் தொடங்க வேணும்.

கடையில போய் ரெண்டரை றாத்தல் கூப்பன் மாவும் அஞ்சாறு கனிஞ்ச கதலி வாழப்பழமும் மஞ்சள் பவுடரும் வாங்கி எடுத்தன். இனி அதுக்கு உயிர் குடுக்க எரும நெய் அரப்போத்தல், ஒரு ஆளப்பிடிச்சு எடுத்தன். அலுவல் முடிஞ்சாப்பலதான்.

கூப்பன் மாவ பச்சத் தண்ணியில கொட்டி கையால நல்லாக் கரச்சுப் போட்டு வாழப்பழத்தையும் மஞ்சள் பவுடரையும் போட்டுப் பினைஞ்சு அரிதட்டால சக்க போக வடிச்சு பதமாக்கி நாலு போத்தல் வார்த்துப்போட்டன். எரும நெய் அரப்போத்தலையும் நல்லா உருக்கி மஞ்சள் பவுடரும் கலந்து நாலு போத்தலும் கழுத்து மறய ஊத்தி குடுதி போட்டன். கிளம்பிற்றன்.

தொழில் செய்யிறம் எண்டால் ஆரும் வஸ்ஸ_க்கு கைமாற்றுத் தருவான். ஒரேயடியா மட்டக்களப்பு அப்புக்காத்துப் பெருக்கிளாசிமார்ர வீடுகளப் பாத்து விசாரிச்சன். பசு நெய் நல்ல சுத்தமான படுவான்கர நெய்! எங்கட மாட்டில எடுத்ததையா எண்டு போட்டன் கணக்கு. பன்ரெண்டு மணிக்குள் ஏழர ரூபா மேனிக்கு முப்பது ரூபா எழும்பிற்று. இனி அந்தப் பக்கம் தலவச்சும் படுக்கொண்ணா! கண்டு பிடிச்சாங்களோ… ஆறு மாசமோ ஒரு வரிஷமோ.. அனுப்பியே போடுவாங்க.. முழுப்பேரும் பெருக்கிளாசிமார்! எத்தின சாதி வழக்குகள வெண்டாக்கள நான் வெண்டுத்தன். அடுத்த றிப்தான் ஏறாவூர். அதிலயும் பிழையில்ல. ஒரு இருபத்தஞ்சு ரூபா. அவன் கடக்காறன் தனக்கும் அதில ஆதாயம் வச்சுத்தானே வாங்குவான். போத்தல் ஆறேகால் மேனிக்குக் குடுத்தன். எண்டாலும் குற்றமில்ல.

எண்ட பசுநெய்ய வாங்கி கண்ணாடி அலுமாரிக்குள்ள ஷோவுக்கு அடுக்கி வச்சிருக்கான் அந்தக் கடக்காற மடப்பயல். அது கூப்பன் மாவும் வாழப்பழமும் ரெண்டு மூண்டு நாளயால புளி புளியெண்டு புளிச்சி நுரை நுரையெண்டு நுரைச்சி கேஸ் எழுப்பித்து. பொங்கி… போத்தல் மூடி சக்கெண்டு எழும்பிக் கண்ணாடி அலுமாரி தூள்! நாத்தம் தாங்க ஏலாம போச்சாம். அந்தக் கோபத்த வச்சுத்தான் திருகோணமலை றிப் போய்வரக்குள்ள கடக்காறன் இழுத்துப் போட்டு கும்பித் தள்ளிற்றான். கடவுள் காவலாக் காயம் கீயம் இல்ல. நல்ல உடம்பு. தாங்கிற்று!

பசுநெய் விஸ்னஸ் நல்ல தொழில்தான். ஆனா.. இண்டைக்குப் போன பக்கம் இன்னொரு நாளைக்குத் தல காட்ட ஒண்ணா. புதுப்புது ஊர்கள் உண்டுபடுமெண்டால்…. இந்தத் தொழில தொடந்து கொண்டு போகலாம்!

போக வேண்டிய இடமெல்லாம் போய் முடிஞ்சு! இந்தத் தொழில விட்டு இனி வேற தொழில்தான் தேட வேணும். ஏமாந்தவனுகள் கண்டு பிடிச்சானுகளோ எலும்பெலும்பாகக் கழத்தி எண்ணி எண்ணி வைப்பானுகள். அதுதான் டேஞ்சர்!

கையில இருந்த முதலெல்லாம் கரஞ்சு போச்சு. இனி என்ன செய்யலாம் எண்டு யோசிக்கன். எங்கட ஊருக்குக் கிழக்கால கிடக்கிற வங்காள விரிகுடாவப் பத்தித்தான் அதிகமாக இப்ப ஆராட்சி பண்ணுறன்.

இந்தக் கடல நான் நினைக்கிறாப் பல ஒருநாளைக்கு சாராயமா மாத்திர வித்தையக் கண்டு புடிச்சிப் போட்டுத்தான் உடுவன். அதுக்குப் புறகு பாருங்க இந்த இலங்கத் தேசத்தில நானும் ஒரு மனிசனாத்தான் சீவிப்பன். நம்மட இனத்துக்கும் ஏதும் உதவி செய்யாமல் விடமாட்டன். கட்டாயம் செய்வன்.

உப்புத் தண்ணியோட என்னத்த என்னத்தக் கலந்தால் சாராயமாகுமோ? அதுதான் இப்ப தலைக்குள்ள இடி! குடச்சல் எல்லாம்.

நான் விசுவலிங்கம்! பசு நெய் விசுவலிங்கம் எண்டால்.. ஊர் தேசத்துக்குத் தெரியாது. ஏனெண்டால் ஓரோர் ஊருக்கு ஓரோர் பேரும் விலாசமும் எனக்கு! அதுகள இப்ப விட்டுத்தன் பாருங்க.

கடல சாராயமாக்கிற வரையும் என்ன நீங்க பசுநெய் விசுவலிங்கம் எண்டு கூப்பிடலாம். பரவாயில்ல! கூப்பிடுங்க!


வி.ஸி.மெம்பர் காசிநாதர்!

ஆரெண்டு தெரியுமா…? என்ன விளங்கல்லப் போல.. ஓம் ஓம். எங்கட படுவான் கரையில பேரான கிராமச்சங்கம்;. அதில ஒம்பதாம் வட்டாரத்துக்கு நான்தான் நம்பர்!

அதென்னத்தப் பேசி ஏதெண்டு சொல்லுவன்? ஒரு எலச்சன் நடத்தி முடிக்கிறத்துக்குள்ள மனிசண்ட சீவன் போயிரப் பாக்குது. பின்னென்ன பின்ன… எத்தின நாளா எடுத்த எடுப்பிது சோறாஇ தண்ணியாஇ வீடாஇ வாசலாஇ நித்திரையாஇ நிமையா? நாயோட்டம்! தொங்குகால் பாச்சல்! கடப்பேறி ஏறி கால் பாதி தேஞ்சு போச்சி! ஹ_ம்…

என்னவோ ஆண்டவன் கண்ண முழிச்சான். இல்லாட்டிப் பின்ன அந்த ஆண்டவனும் பட்டினிதான் கிடக்க வேணும்! எலியும் வெளவாலும் ஏறி நிறஞ்சு அரசாச்சி நடத்தின கோயில் கதவு துறபடுமா? இல்லக் கேக்கிறன் வாற வையாசிப் பூரணைக்கு கதவு துறந்து பூச நடக்கப் போகுது. எலச்சனுகள்ள நான் தோத்துகள் இருக்கவேணும். கடவுளும் இல்ல கச்சடாவும் இல்ல. எனக்குப் பெருங்கடலும் கைதரமாட்டாது! ஊர்க்கோயில் பூச புனற்காரம் இல்லாமக் கிடக்கே எண்டு போட்டுத்தான்… அதுக்கு மட்டும் சுளயா ஐந்நூறு!

நான் எப்படி வெல்லாமப் போற…? என்ட சாதி என்ன சனமென்ன… குலமென்ன கோத்திரமென்ன… ஊரெல்லாம் எண்ட அப்ப மச்சான் சாதியான் ஓய்! பருப்புப்போல முன்நூறு வோட்ட வச்சுப்போட்டு அந்தக் கோப்பி குடியானுக்கு வி.சி. கதிரயக்குடுத்தா நானும் எண்ட பணியாரந்தின்னிக் குடியானும் உசிர வச்சிருக்கிறதப் பாக்க உப்புச் சிரட்டைக்குள்ளதான் விழுந்து சாகவேணும்!

இடையால ராக்குடிச்ச குடியாருக்கும். அந்த வி.ஸி கதிரயில இருந்து பாத்திரவேணுமெண்டு ஒரு சோட்டை! வாருகல்கட்டுக்குக் குஞ்சம் கட்டுனாப்பலதான்! அவியிர குலத்தில ஆர்ரா… தோழே ஊர் உத்தியோகம் பாத்தாக்கள்? கட்டுக் காசும் சுவாகா!

எண்ட இனசனம் சத்தா சமுத்திரம்! இது தெரியாமல் வாறானுகள் போட்டிபோட! விடுவனா… இல்ல எண்ட சாதியான்தான் விடுவானோ? இல்லக் கேக்கிறன்.

பத்துப் பத்து ரூவா பசமுறியாத பச்சப் பச்சத்தாளாக் கொண்டு நீட்டிப் பல்லக் காட்டிப் பாத்தாங்களே! என்ன பலனக் கண்டாங்க? எண்ட பணியாரந்தின்னிக் குடியானிட்டயும் இந்தப் பாச்சாவுகள் பலிக்குமாடா தோழா! கொல்லு களுத்தறு எண்டு சொல்லிப் போட்டானுகள்!

இந்த ஊருக்கு வீ.ஸி. நம்பராப் போறவன் ஒரு சாதி மகனாக இருக்க வேணுமெண்டு இந்தக் கஞ்சாங் கொத்திப் பஞ்சான் பயலுகளுக்கு இன்னும் விளங்கல்ல. போட்டி போட வாறானுகளாம் போட்டி! அடேய்… நீங்கெல்லாம் என்னப்பத்தி என்னதான் நினைச்சுக் கொண்டு திரியுறயள்?

கட்டெண்டாக் கட்டி அடியெண்டால் அடிச்சி வெட்டெண்டால் வெட்டி விளையாட்டுக் காட்டின சாதியாண்டா நான்? என்னோடதானேடா இந்த ஊர்ப் பெரிய கையெல்லாம்!

சற்குணம் தறுமலிங்கம் மாய்ற்றர். அந்தாள் ஒரு பெரிய தலம வாத்தி. இருபத்தஞ்சு வருசமாக இந்த ஊர்ப் பள்ளியிலே சறுவிஸ்! அந்தாள் படிப்பிச்ச பொடியனுகள்தானே கல்லோயா பாமில இண்டைக்கு மாசம் மாசம் சுளசுளயாச் சம்பளம் எடுக்கானுகள். காடு வெட்டுறது தொடக்கம் கட்ட நாட்டிக் கம்பியடிக்கிற வேல ஈறாக எல்லாம் அவனுகள்தானே. தறுமலிங்கம் வாத்தியார்ர சகுனி மூளய உங்களுக்கென்னடா தெரியும்! வாத்தியார் எண்ட வலது கை!

இனி விதானையார் வீரசிங்கம். தறுமலிங்கம் வாத்தியார்ர கைப் பிரம்பு! எனக்கு இடது கை!

அது மாத்திரமா உடையார்ர உடும்பன் கணபதி! அவன மாட்டுக்கள்ளன் எண்டு நீங்கள் சொன்னாப்பல அவனுக்கு என்ன குறஞ்சு போச்சு? அவன் குப்பையில கிடக்கிற குண்டுமணி! ஒரு முட்டிக் கள்ளு சொன்ன வேல செய்யும்! அடிடா எண்டால் இடிப்பான்! கட்டெண்டால் வெட்டுவான்! அவன் பெரிய சண்டியன்.

ஈர்த்தலையன் இளையான் எண்டு பகிடி பண்ணுறயள். பண்ணுங்கவன்! அவன்ட தோலுக்கு பூந்திருமா அது? இல்லக் கேக்கிறன். இவன் தானேரா கோயில் துரத்தினகாறன்! நீங்க ஊர் கூடிக் குடுத்த வேலையா இது? அவனாக எடுத்த வேல! ஆரக் கேக்கிற?

இவ்வளவு பேரும் ஒரு கையில திரண்டு நிக்கானுகள் என்னோட! இதிர காரிய பாகம் கணக்கு வழக்குகள் தெரியாம நீங்களும் வீ. ஸி. நம்பர் போட்டிக்கு வாறயள்! ஆரெண்டு நினச்சயள் இந்தக் காசிநாதன?

சொல்லி அடிச்சன்! ஒரே ஒரு துண்டால! ஒரு துண்டுக்குள்ள தானே தோழா வெத்தியும் தோல்வியும் வெண்டு போட்டன்! இப்ப என்ன சொல்றயள்? இல்லக் கேக்கிறன்….

போடிமகள் பொன்னம்மா

ஓமெண்றன்….

ஓலகங் கெட்ட கேட்டுக்கு!

எனக்கிந்தக் கத காலுகள் புடிக்காது கண்டயளோ!

என்ன கண்டறியாத கதகாலுகள்….

சொறிஞ்சிக்க நகமில்லாமக் கெடந்ததுக்கெல்லாம் ஒள்ளுப்பம் தராதலம் வந்திற்றெண்டாப்பல… இதுகளும் சந்தி சவையில பந்தி பாவாடையில மனிசன் மாஞ்சாதியெண்டு ஏறத்துவங்கிற்றாப்பல. இந்த ஊர உண்டாக்கினவன் ஆரு…? இதக்கட்டியாண்டவன் ஆரு..? நெனச்சிப் பாக்குதுகளா… ஓங்கா… காலங்கெட்ட கேட்டுக்கு! அதுகளுக்கு வந்த பவுசும் தாக்கத்தும்! ஓமெண்றன்…

வெள்ளக் காச்சட்டையும் வீடு வளவும் வெள்ளாமையும் வந்திற்றெண்டாப்பல… இதுகள் பட்ட சிறுமானியங்கள் ஒண்டும் எங்களுக்குத் தெரியாதாகா… நாங்க எந்தச் சிங்கப்பூர் சீமையில இருந்து வந்தகா…ஆ? நான் லேசில வாயத் துறக்க மாட்டன்! துறந்தனோ… புறகு இவய சீலைக்க புடவைக்க ஒண்டையும் வச்சிரிக்கத் தேளுவல்ல! புட்டு புட்டு வச்சிருவன் வெட்டயால! இவியிர பொட்டுக் கட்டுகள் ஆருக்குத் தெரியாகா… கதைக்க வந்தித்துகள்! ஓங்கா… காலங்கெட்ட கேட்டுக்கு ஓமெண்றன்…

களமுதறிக் கஞ்சி குடிச்சதுகள்;, எங்க பெத்தம்மையிர கோடி வேலி கட்டிக் கொண்டு போய்ப் புளச்சதுகள், அவண்ட இவண்ட கச்ச புளிஞ்சி காச்சி குடிச்சதுகள் எல்லாம் இப்ப மனிசனாப் போச்சிதுகள். சோறு தின்ற வட்டியையும் சேருவக்காலயும் கொண்டு குடுத்துப் போட்டு, பல்லக் காட்டி எண்ட மாமன் மானாகப் போடி பட்டற துறந்து அளந்து குடுக்க… திண்டு புளச்சதுகளெல்லாம்.. அதுகள் கக்குன வெண்ணொரைய மறந்து போய்.. பேசுற பேச்சுகள்ற தராதலத்தப் பாரு… ஒலகம் கெட்ட கேட்டுக்கு! ஓமெண்றன்

நான் இவியளுட்டயெல்லாம் என்ன கேட்டுப்போற… எட்டில தப்புல… ஒரு காக்கொத்து அரக்கொத்தரிசி கேட்டுப் போனாப்பல… இவியளுக்கு தாறத்துக்கென்ன? சும்மாவா… கடனக் கட்டப் பட்டு இறுக்காம செத்தா போயிருவன்…?

“என்னத்த நம்பி உனக்குக் கடன் தாறது? அரிசி அரிசியெண்டு வாங்கித்துப் போனாப்பல போதுமா? வாங்கினத்தத் திருப்பித்தர வேணுமே! உன்னப் போல பொண் புரசுகள் உளைச்சிப் புளைக்கல்லயா? ஏன் நீயும் என்னவும் தொழிலச்செய்தா என்ன?” எண்டு புது நாணயமான புத்தி சொல்லுதுகள்! அந்தக் காலத்தில எண்ட அப்பன் இதுகளுக்குச் சொன்ன கதயளப் பாடமாக்கி வச்சிருந்து இப்ப நமக்குச் சொல்லுதுகள் ஓங்கா!... ஒலகங் கெட்ட கேட்டுக்கு ஓமெண்றன்….

எண்ட அம்ம என்ன அப்பிடி இப்படியா வளத்தவள்… அடல அடலயா சோத்தில பேத்து வச்சி, இள உறத் தயிர்ல… ஆடையோட வெட்டி வச்சி, கதலி வாழப்பழம் ஒண்டொண்டு முன்னங்கைப் பருப்பம் உரிச்சிப் போட்டு, சக்கரப் பாணியிலயும் கொட்டுவா அம்ம! ஆசையில போட்டு பினைஞ்சி போட்டு அப்பிடியே வட்டியோட போட்டுத்து எழும்பிருவன்! ஏங்கா… இந்த நசுக்குத்தீன் திண்டுதானாகா நீ ஆளாச் சங்கையா ஆகிற எண்டு கேப்பாவு அம்ம. நானுட்டுத்து எழும்பின வட்டிய வழிச்சி நக்குனதுகள்… நண்டியத்துப் பேசுதுகள். திண்டு கழிச்சதுகளிட்ட போக வேணும் கடன் கேக்க எண்டு முன்னுள்ளவன் சொன்னது பொய்யாகா பின்ன…? அறங்கையும் அத்துக் கிடந்ததெல்லாம் இப்ப பெரிய எடுப்படிக்குதுகள் ஓங்கா….! ஒலகங் கெட்ட கேட்டுக்கு ஓமெண்றன்!

அவர் ஒராள்.. அவர்ர வீட்ட வேலகாறிக்கு வரட்டாம். சோறுஞ் சீலயுமா நல்ல சொகமா இரிக்கலாமாம் மாதா மாதம் சம்பளமுந்தாறாராம்…! கொள்ளி கொத்துறவன் எண்டும் கோடிக்கு தண்ணி வைக்கிறவன் எண்டும் தட்டு வேலி கட்டுறவன் எண்டும் எங்கப்பண்ட அடும வேல வெட்டி செஞ்சி புளைச்சதுகள்… எத்தின ஆயிரம் பேர்… அப்பன் குடுத்த சோத்துக்கு கணக்கென்ன… சம்பளம் சாடிக்குக் கணக்கென்ன? அதெல்லாம் மறந்து போயுத்துகள்! இப்ப என்னடாண்டா அதுகள்ற அடுப்படி வேலைக்கு நம்மக் கூப்புடுதுகள்!

வெடியரசிப் போடியெண்டால் குடியெல்லாம் நடுங்கும். எண்ட அப்பன் அப்படி இப்பிடிப் போடியாகா…? அவர் ஊர்ப்போடி! போடி மகன் போடி… பரம்பரப் போடி! அவர் இந்த ஊரக் கட்டியாண்டாப்பல இன்னும் ஒருவர் பாக்கயா…? அதில வேலல்ல! சுதந்திர நெல்லு மட்டும் வாசல்ல அஞ்சி அட்டுவம். அட்டுவம் எண்டா அப்பிடி இப்பிடி அட்டுவமில்லக் கண்டயோ… அட்டுவத்துக்கு மேல நாடாங்கொடி ஏறிப்படந்து காய்ச்சிச் சொலிச்சுட்டுக் கிடக்கும்! வயிரவனுக்கு அடுக்கச் சாத்தின பொல்லுகள் போல அங்க கண்கொண்டுகள் பார்க்கொண்ணா… அதிர பசுந்து!

மாரி மழ வந்து அடச்சிப் புடிச்சிர வேணும்… கருத்தலப் பஞ்சம் வந்திரும். எங்கட வளவு வாசல் தாங்காது சனம்! அதுகள்ற பட்டிணியக் கேட்டு அப்பன் சிரிச்சிப் போட்டு அட்டுவம் துறந்து அவர் அளந்து குடுத்த நெல்லுக்கு ஒரு கணக்கா வழக்கா…!

நெல்லு வித்துக் காசுகள் கையில வந்திர வேணும். அப்பன் தட்டார மாங்குட்டிக்கி வியளம் சொல்லிக் கூப்புடுவாரு. ஒரு வரிசம் போட்ட நகை அடுத்த வரிசம் போடமாட்டம். அழிச்சி அழிச்சி வண்ணத்துக்கொண்டு செஞ்சி தருவார். அம்மையும் நாங்களும் பொன்காச்ச மரந்தான்! கோயில் கொண்டாட்டம் கூத்துக் கீத்தெண்டு வெட்டக்கிறங்கிற்றாப் பாக்கவேணும்… ஊர் தேசம் ஒதுங்கி நிண்டு… பாக்கும் அம்மையிர காசி மேசன் பட்டுப் புடவ நக நட்டயெல்லாம். எண்டம்ம இந்த ஊர்ல ஒரு ராசாத்தி மாதிரி இருந்து அரசாண்டவள்! இண்டைக்கு கழுத்தில கீர மணிக்கும் காதில ஓலச்சுருளுக்கும் வழியில்லாமக் கிடந்ததெல்லாம் இப்ப தராதலத்தில நிக்குதுகள்! நகயள இரவல் வாங்கிப் போட்டு போட்டு ஊரார் தேச்சுத்தள்ளுன எத்தின விராகன் பொன் எண்டு உங்களுக்கென்னடி தெரியும்! நேத்து நீ கண்ட தங்க நகய நாய் வாற கடப்பில கட்டு! நாயிர….. தேன் வச்சா நாய்தான் திரும்பி நக்கவேணும்! இயின திரியுறாரே மாய்ற்றரோ… ஓய்ற்றராம்! இவருக்கென்ன நான் சும்மா கிடந்தா..? சட்டி பானை வைக்கட்டாம்! பொட்டி சுளகு இளைக்கட்டாம்! இடியப்பம் புட்டவிச்சி விக்கட்டாம்… அதுகள்ல ஈனமில்லையாம்! ஓங்கா… ஒலகம் கெட்ட கேட்டுக்கு… ஓமெண்றன் எண்டப்பன் வெடியரசிப்போடி! நான் கெட்டாலும் செட்டி கிழிஞ்சாலும் பட்டு! இதுகள எண்ட சாதி சனம் சந்தானம் அறிஞ்சா நஞ்சத் திண்டு நாண்டுருவான்கள்! நான் பட்டினி கிடந்து செத்தாலும்… எண்ட குலத்துக்கு ஈனம் உண்டாக்க மாட்டன். எங்கட தகுத்துகள் இதுகளுக்கென்ன தெரியும்! அதுகள் செய்து புளைச்சத நமக்கும் சொல்லிப் பாக்குதுகள்!

ஊர்ல காசு தெண்டி எண்டப்பன் கட்டிக்குடுத்த கோயில் கிணத்தில தண்ணியள்ளிக் குடிச்சிற்றுக் கிடந்ததுகள்… நாம ஒள்ளம் தண்ணியள்ளப் போனா வக்கணம் கதைக்குதுகள். ஏன் எனக்குக் கிணறில்லாமயா… துலாந்து துலாக்கால் கழண்டு போய்த்து. ஆண் துணை இல்ல…அதப்போட்டுக்க. மண்ணுக்க கிடந்தா இறந்து போகுமெண்டு போட்டு வண்ணானுக்கு கொள்ளிக்கு வித்துப் போட்டன். அப்பிடி இப்பிடி துலாந்தா அது? திருக்கொண்ட வயிரம்! அப்பன் தேடிப்போட்டுக் கிடந்த படியா போன மாரிக்கு வித்துத் திண்டன். அதெல்லாம் இதுகளுக்கொரு பகுடி. துலாந்தையும் வித்துத் தின்றதா? எண்டு கேக்குதுகள்! கைவாளி கிணத்துக்க.. அது ஆறேழு மாசத்துக்கு முந்தி விழுந்த! மாரி மழ… எடுத்துக்கல்ல. அதுக்காக அடுத்த வீட்ல தண்ணி அள்ளுறல்லயா?...

இடியப்பக்காறி கடன் கேப்பாளே எண்டு போட்டு நித்திரக்காறி போல படுக்கன்… புட்டுக்காறி நேரத்தோட வந்து… தந்தாள். வாங்கிப் போட்டன். இடியப்பக் காறிக்கும் புட்டுக்காறிக்கும் போட்டி! இந்த விடியச் சாமத்தில அடுத்த ஊர்ல இருந்து… மழ தண்ணியெண்டு பாராம.. புட்டும் இடியப்பமும் அவிச்சிக் கொண்டு வந்து விக்காளுகள். இதுகளும் ஒரு புளைப்பா! இடியப்பக்காறி வாறாள் போல…. ஓ…ஓ…! அவள்தான். பேசாமப் படுப்பம்… அதுக்குள்ள இந்த நாசமத்த கொட்டாவி…. கோயில்ல சங்கூதுறாப் பல!...

கடங்காறர் நடயா நடந்தாப்பல நான் என்ன செய்யிற? கடனக் கட்டப் பட்டுத் திண்டத கடனக் கட்டப்பட்டுத்தான் இறுக்கவேணும். அதுக்காக… அப்பச் சட்டி வைக்க… அவியளுக்கு இவியளுக்கு ஊழியம் செய்யப் போகலாமா? அதெல்லாம் எண்ட குலத்துக்கு ஈனமெண்டு தான் சிவனே விதியே எண்டு… கிடக்கன். அதப்பாத்து இந்த ஊர்ல இரிக்கிற கஞ்சாங் கொத்திகள் என்னெல்லாம் கதகாலுகள் கதைக்குதுகள்… ஓங்கா…! ஒலகம் கெட்ட கேட்டுக்கு!.... ஓமெண்றன்!

வெடியரசிப் போடியெண்டால் குடியெல்லாம் நடுங்கும்! எண்டப்பன் என்ன அப்பிடி இப்பிடிப் போடியா? அவர் ஊர்ப்போடி! போடி மகன் போடி! பரம்பரப் போடி! அவர்ர மூத்தமகள் நான்! போடி மகள் பொன்னம்மா!

என்னப் பாத்துக் கதகாலுகள் கதைக்குதுகள்… ஓங்கா… ஒலகங் கெட்ட கேட்டுக்கு… ஓமெண்றன்.


எழுத்தாளர் எலிக்குஞ்சனார்

என்ன மாஸ்டர் இப்படி? எங்கே போய்விட்டு வருகிறீர் ஓ..! இன்றைக்கு வெள்ளிக் கிழமையா.. சரிதான்…

எனக்கும் இன்று கயிறுதிரிக்கிற வேலை கிடையாது.. அதுதான் இப்பிடி வாசிகசாலைப் பக்கம் போய்விட்டு வரலாம் என்று புறப்பட்டேன். இப்பொழுது வாசிகசாலை பலே ஜோர்! ஏனென்று கேட்டால் அங்கு இப்பொழுதான் தரமான ஏடுகள் தருவிக்கப்பட்டு வருகின்றன. அதாவது ‘வல்லி’ ‘நஞ்சருவி’ ‘ஜல்தி’ ‘குறுக்குவழி’ ‘அலம்பல்’ ‘அரட்டை’ ‘நஞ்சு’ போன்ற பத்திரிகைகள் சுடச்சுடக் கிடைக்கின்றன. கடைசியாய் வந்த ‘ஜல்தி’யி;ல் ஆசிரியர் புளுகு நாவியார் பக்கத்தில் எனது கண்டனச் சிறுகதை ஒன்று வெளியாகியுள்ளதே! கவனித்தீர்களா? கண்டனச் சிறுகதை என்றதும் உமக்கு விளங்கவில்லை போலும்? அதுதான் ஓய்…! யாராவது ஏதாவது எழுதி அது பத்திரிகையிலும் வந்துவிட்டதோ.. அதைத் தொடர்ந்து ஏதாவது ஒரு பத்திரிகையில் என் கண்டனச் சிறுகதையும் எங்கோ ஒரு விளம்பர மூலைக்குள் பிரசுரமாகியிருக்கும் என்பது வெகு உண்மை.

இவர்களெல்லாம் பெரிய எழுத்தாளர்களாம் என்னடா என்று பார்த்தால்… பொன்மொழிகளைத் திருடிக் கதை பண்ண வந்து விட்டார்கள். கதை இவர்களையெல்லாம் காட்டிக் கொடுக்காமல் விடலாமா மாஸ்டர்? நானும் எழுத்தாளனாகி விட்டேன்…

சுமார் எட்டு ஆசிரியருக்கு கடிதங்கள். அதுதான்.. கண்டனச் சிறுகதைகள் இதுவரை வெளியாகி வந்துவிட்டன. ‘ஜல்தி’ உண்மையிலேயே ஒரு நல்ல ஏடு. திறமை எங்கிருக்கிறது என்று தெரியாவிட்டாலும் திருட்டு என்றால் அதைத் தாங்கவே அதனால் முடியாது! ஆசிரியர் கடிதத்தில் வந்துவிடும் என் கண்டனச் சிறுகதை!

அதுமட்டுமா?

‘விடியா மூஞ்சி’ இதழில் இன்றைக்கு என் கட்டுரை ஒன்று வந்திருக்கிறது.

கவிதையா? ஓ..! ஓ..! மன்னியுங்கள் கவிதைதான் வாய்தவறிச் சொல்லிவிட்டேன். அதிலும் குற்றமில்லை. ஒரு நல்ல இலக்கியப்படைப்பு அப்படித்தான் இருக்கும். எப்படியென்று கேட்டால் ஒரு நல்ல இலக்கிய படைப்பானது கட்டுரை படிப்பவனுக்கு கட்டுரையாகவும் கவிதை படிப்பவனுக்கு கவிதையாகவும் கதை படிப்பவனுக்கு கதையாகவும் இவை எல்லாம் படிப்பவனுக்கு எல்லாமாகவும் தெரிய வேண்டும் மாஸ்டர். அதுதான் உண்மையான கலா சிருஷ்டி. அப்படித்தான் அந்தக் கட்டுரையை நோ..நோ.. கவிதையை இல்லையில்லை இரண்டையுமே நான் படைத்திருக்கிறேன்.

எவ்வளவோ எழுதலாம் மாஸ்டர் எங்கே இந்தக் கயிறு திரிக்கிற வேலையிலே ஒழிவே இல்லை. காலையில் எழுந்தால்.. ஓட்டமும் நடையும் கம்பனி. பகல் ஒரு மணிவரையும் கயிறு திரிப்பு. அப்புறம் சாப்பிடக் கொஞ்சம் ஓய்வு. சில வேளை சாப்பிடாமலேயே வாசிகசாலைக்குள் குந்திவிடுவேன். அதெங்கே அந்தப் ‘பீப்பொறி’ப் பத்திரிகைக்கு என் சக தொழிலாளிகள் போட்டி! கிராக்கி.

வேலைக்குத் திரும்பினால் மாலை ஆறுமணிக்கு ஓய்வு. குளிப்பு சாப்பாடு நித்திரை எல்லாம்.

வெள்ளிக்கிழமை போட்டி கிடையாது. ஆறுதலாக வாசிக்கலாம் என்று போகிறேன்.

வரட்டுமா மாஸ்டர்…. ஒரு பத்திரிகை நடத்தும் நோக்கம் உண்டு. நீங்களும் உதவி செய்ய வேண்டும். யோசித்துக் கொண்டிருக்கிறேன். விசயதானங்கள் வந்து கொண்டிருக்கின்றன. நீங்கள் பயப்படவேண்டியதில்லை. ஒரே ஒரு சந்தா எடுத்தால் போதும்.

ரகசியம் (குறும்புக் கதை)

மாசிலாமணி ஆசிரியர் என் கூடப் படிப்பிக்கும் வயதான ஆசிரியர். மகா உத்தமர்.

உலகத்திலே நடைபெறும் குழப்பம் குத்து வெட்டுக்களுக்கெல்லாம் மதுவும் மாதருமே காரணம் என்று அடித்துப் பேசும் அவர் தனது ஐம்பது வருட உலக வாழ்வில் ஒரு நாளாவது மதுவைத் தீண்டியது கிடையாது.

மனைவியை அன்றி மறு மாதரை மனத்தாலும் நினைத்துப் பார்த்ததுகூட இல்லை. “இவர் குரூபியாக பார்த்த பெண்கள் அருவருக்கக்கூடிய அவலஷ்ணமாக இருப்பதே அவர் இப்படி யோக்கியராக இருக்கக் காரணம்” என்று அவருடைய எதிரிகள், அதாவது மதுவும் மாதரும் ஆண்டவன் வழங்கிய பெரும் இன்பம் என்று கருதும் போகிகள், அவரைப்பற்றி கூறிக் கொண்டார்கள்.

எது எப்படியானாலும் இதுபற்றி மாசிலாமணி ஆசிரியரை நேரில் கேட்டுவிடுவதென்று துணிந்து அவர் என்னோடு தன் ஒழுக்க வாழ்வுபற்றி பெருமையாகப் பேசிக்கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் “ஏன் மாஸ்டர் உங்களுடைய ஒழுக்க வாழ்வின் ரகசியமென்ன?” என்று அவரைக் கேட்டு வைத்தேன். “இதிலென்ன இரகசியம் இளமையிலேயே எனக்கு நீரழிவு வியாதி வந்துவிட்டது!” என்றார் ஆசிரியர்.பாவம் மாஸ்டர் (குறும்புக் கதை)

“பிள்ளைகளே. இன்று நான் சொல்லப்போகும் குறும்புக் கதையைக் கேட்டுவிட்டு உங்களில் யாராவது சிரிக்காமல் இருந்தால் முதுகுத் தோலை.. உரித்து விடுவேன்! கவனம்!”

இவ்வாறு காப்புக் கூறிக் கதையைத் தொடங்கினார் க .க. க. ஆசிரியர். முதலாம் கானாவுக்கு கறுப்புச் சுறுட்டு என்றும், இரண்டாம் கானாவுக்கு கடலைக் கொட்டை என்றும், மூன்றாங் கானாவுக்கான கந்தப்பர் என்ற அவரது இயற்பெயரையும் கூட்டினால் கறுப்புச் சுறுட்டுக் கடலைக் கொட்டைக் கந்தப்பு மாஸ்டர் என்று அவரை நாம் அழைப்போம்!

ஆசிரியர் க.க.க. சிரிக்காத விஷயம் இந்த உலகத்தில் எதுவுமே கிடையாது.

ஒருநாள் அவரது மனைவி செத்துப்போய்விட்டதாகத் தந்தி கிடைத்தது. தந்தியை வாசித்தாரோ இல்லையோ. வகுப்பிலிருந்த பிள்ளைகளைப் பார்த்துச் சிரிக்கத் தொடங்கினரே மனுஷன். அது பெரிய பரிதாபம் போங்கள்! நல்லதோ கெட்டதோ! அவர் அப்படித்தான் சிரிப்பார். அதனால் சதா சுருட்டுக் குடிப்பதற்காக கறுப்புச் சுருட்டுப் பட்டமும், கடலைக் கொட்டை கொறிப்பதற்காக கடலைக் கொட்டையென்றும் பட்டமளித்துக் கௌரவித்த மாணவர் பட்டாளம் அவருக்குச் ‘சிரிப்புச் செல்வர்’ என்றும் பட்டம் தருவார்கள் என்று எதிர்பார்த்தார். பாவம் மாணவர்களுக்கு அது விளங்கவில்லை. அதனால் என்ன? அவர் தனக்குத் தானே ‘சிரிப்புச் செல்வர்’ பட்டம் கட்டிக்கொண்டு வெகுகாலம்!

தான் பென்ஷனுக்குப் போவதற்கு முன்னால் ஒருமுறையாவது இந்த மாணவர்களைச் சிரிக்கப் பண்ணிவிட்டுத்தான் போவேன் என்ற ஒரு வைராக்கியத்தோடுதான் அவர் கதை சொல்லி வருகிறார்… கதைகள் சோக்கான கதைகள்! ஆனால் அதைக் கேட்டுவிட்டு இந்தப் பயல்கள் அம்மிக் குழவிகள்போல இருந்து விடுகிறார்கள்! இன்றைக்கு அவர் சொல்ல வந்த கதை, ஆங்கிலக்; குறும்புக் கதை.

“தங்கச்சுரங்கத்திலே, தோண்டிக் கொண்டிருந்தான் ஒரு தொழிலாளி. அவனுக்கு அன்று ஆயுள் முடிவு. அவனுடைய உயிரை எடுக்க எமன் வந்தான். (எருமையில் அவன் வரவில்லை. ஏன் என்றால் அவன் ஆங்கில எமன்.)

தொழிலாளி எமனைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினான். எமன் கழுத்தைப்பிடித்து நசித்துக் காண்பித்தான்.


“உனக்கு வேண்டிய மட்டும் தங்கந்தருகிறேன். என்னை விட்டுவிடு” என்றான் தொழிலாளி. தங்கத்தை வாங்கிக்கொண்டு வந்தவழியே பேசாமல் திரும்பி நடந்தான் எமன்!”

நல்ல குறும்பு! எப்படிக் கதை? ஏன் சிரிக்காமல் இருக்கிறீர்கள்? சிரியுங்கள்! சிரியுங்கள்! என்று சிரிப்பாகச் சிரித்துத் தள்ளினார், நமது சிரிப்புச் செல்வர் க.க.க. அவர்கள்.

ஒருவரும் சிரிக்கவில்லை. ஆசிரியருக்குக் கெட்ட கோபம் வந்து விட்டது. பிரம்பை எடுத்து விளாச ஆரம்பித்தார் அவர்.

தடியன் சூரசங்காரன் - அவனும் ஒரு மாணவன். துணிவோடு எழுந்தான்.

“இந்த மக்குக் கதையைக் கேட்டுச் சிரிக்க நாங்கள் என்ன மடையரா சேர்?” என்றான் அவன்.

“என்னடா சொல்கிறாய்?” என்றார் கு.சி.க.க.க (கூனாவென்றால் குறும்புக் கதை - சிரிப்புச் செல்வர் கறுப்புச் சுறுட்டுக் கடலைக் கொட்டைக் கந்தப்பு மாஸ்டர்)

“ தங்கமிருந்த இடத்துக்குப் போன அந்தத் தடிப்பயல் எமன், தானே வேண்டிய மட்டும் அள்ளிக்கொண்டு போகலாமே! கைக்கூலியாகச் சிறிது தங்கத்தைப் பெற்றுக்கொண்டு கடமையைச் செய்யாமல் திரும்பிய அந்த எமன், ஒரு மக்கு எமன்தான்! மக்குக் கதை சேர். அதைக் குறும்பென்று சொல்ல வந்தீங்களே. நீங்கள் ஒரு..” என்று நிறுத்தினான் சூரசங்காரன் .

“ஒரு மக்கு” என்று முடித்தார்கள் மற்ற மாணவர்கள்.

அதைக் கேட்டுவிட்டு அன்று முழுவதும் விழுந்து விமுந்து சிரித்தார் நமது மதிப்புக்குரிய குறும்புக் கதை, சிரிப்புச் செல்வர், கறுப்புச் சுறுட்டுக், கடலைக் கொட்டைக் கந்தப்பு மாஸ்டர்.வென்றதே என்ற போதும்


தாமரை தளுக்கிக் குலுக்கும் தடாகம். அதனை அடுத்து, மேற்கே கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரந்து கிடக்கும் பசுமையான வயல்நிலம்.

தடாகத்திற்கும் வயலுக்கும் இடைப்பட்ட மண்திட்டு! ஆத்திமேடு என்று அதற்குப் பெயர். ஆத்திமேட்டிலே, வளர்ந்து வாழிப்பாகக் காட்சி தரும் தென்னைகள். தென்னஞ்சோலை. வெண்ணிறமான ஓலைகள். காக்கைகள் இட்ட எச்சம். ஒவ்வொரு தென்னையும் வெண்கொற்றக்குடை!

துர்நாற்றத்திற்கு அஞ்சிய சோலையின் சொந்தக்காரனுக்கு காக்கைகளின் குடியிருப்பை அங்கிருந்து கலைக்கமுடியாமற் போகவே, காக்கைகளின் விருப்பத்திற்குக் குறுக்கே நிற்க அவன் விரும்பவில்லை. அது காக்கைகளின் ஏகபோக வாழ்விடம்.

ஆத்திமேட்டில் வாய்க்கால் வரம்பின் ஓரமாக நிழல் பரப்பி நின்றது ஒரு வம்மி மரம்! வெண்கொற்றக் குடைகளுக்கு மத்தியில் ஒரு கருங்குடை போன்று பச்சைப் பசேல் என இருண்டு கிடந்தது அந்த மரம். அதில் நீண்ட காலமாகவே வாழ்ந்து வரும் ஒற்றைக்குயில். கேட்போர் நெஞ்சு நெக்குருக மிகவும் இனிமையாகவே பாடியது அந்தக்குயில். அதனைக் காக்கைகள் பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டிருந்தன. வரட்டுக் கௌரவம் பிடித்த சில காகங்கள் மட்டும் இதை இரகசியமாகவே வைத்திருந்தன.

அந்த வட்டாரத்தில் வாழ்ந்த எல்லாக் காகங்களும் கூடி, ஒரு பூரணைத் தினத்தில் ஒரு சங்கீதக் கச்சேரி நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்தன. குயிலும் தங்களோடு ஒருவனாக நீண்டகாலம் சேர்ந்து வாழ்வதனாலும், ஒப்பற்ற இசைக்கலைஞன் என்பதாலும், குயிலையும் அந்தக் கச்சேரியில் கலந்து கொள்ளுமாறு கௌரவமாக அழைத்தன. குயில் மறுத்து விட்டால் நல்லது என்று எதிர்பார்த்த காக்கைகளுக்கு, குயிலின் சம்மதம் ஏமாற்றத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் தந்தது.

கச்சேரியில் குயிலுக்கே முதற்பரிசு. தங்களுக்கு இந்த முடிவு முன்பே தெரியும் என்று சில காக்கைகள் தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டன.

‘குயிலுக்கு இயற்கை அன்னை வழங்கியுள்ள இனிய குரலை வெல்ல முடியுமா’? என்றன சில காக்கைகள்.

‘மத்தியஸ்த்தர்களில் இரு குயில்களும் இருந்தன. அதுதான் குயிலுக்குப் பரிசு கிடைத்தது.’ குறுகிய வர்க்கபேதம் கொண்ட வாயவிந்த இரண்டு காகங்கள் தம் ஆற்றாமையை இப்படி அழுது தீர்த்தன.

பக்கத்து வம்மி மரத்தில் இவற்றையெல்லாம் அவதானித்துக் கொண்டிருந்த குயில் எண்ணியது.

‘கௌரவமாய் அழைத்தார்கள் என்று மறுக்காமல் போனால்.. இப்படியெல்லாம் அவியாயப்படுகிறார்கள். நான் குயில். காக்கைகளோடு போட்டியில் கலந்து கொண்டதே தவறுதான். அப்படிக் கலந்து கொள்ளாவிட்டாலும் பரம்பரையாகவே வித்துவான்களாக இருந்து வரும் எங்கள் குலத்துக்கே அவமானம் என்று அஞ்சித்தான் போனேன்.’

‘வாயைத்திறந்து நாலு வார்த்தை ஒழுங்காக பேச முடியாதவர்களோடு பாட்டுப் போட்டிக்குப் போனேனே! சீ.. வெட்கம்.’

‘தோற்றாலும் என்குலத்துக்கு அவமானம்….’

‘என்னிலும் தாழ்ந்தவர்களை.. சின்னஞ்சிறியவர்களை.. வென்றாலும் முதல்பரிசு பெற்றது அதைவிட அவமானம்’ என்று குயில் தனக்குள்ளாக வெட்கப்பட்டு மூச்செறிந்து விநயமாக சிரித்துக் கொண்டது.


சூரியரேகை

பெயர் பெற்ற ரேகை சாஸ்திர நிபுணர் அவர். வாழ்க்கை முழுவதும் வறுமையோடு போராடிக் கொண்டிருந்த இவரை, மற்றொரு ரேகை சாஸ்திர நிபுணர் அகஸ்மாத்தாகச் சந்தித்தார்.

முதலாமவரைப் பார்த்து மற்றவர் கேட்டார்; ‘ஏன் சேர் உங்கள் கையில் சூரிய ரேகை இத்தனை காம்பீரீயமாக விழுந்திருக்கிறதே? நீங்கள் பெரிய பணக்காரராக இருக்க வேண்டுமே?’

‘நான் ஏழையாகத்தான் இருக்கிறேன்.’ சிரித்துக் கொண்டே பதில் கூறினார் முதலாமவர்.

‘அப்படியானால் ரேகை சாஸ்திரம் பொய்யா?’ இரண்டாமவர் கேட்டார்.

‘சாஸ்திரம் பொய்ப்பதில்லை… நான்தான்..’

‘விபரமாக சொல்லுங்கள்.’
‘சூரிய ரேகை உள்ள கைகளை அதிகம் பார்த்திருக்கிறேன். அநேகமாக அப்படியான கையுள்ளவர்களெல்லாரும் பணக்காரர்களாகத்தான் இருந்தார்கள்.’

‘அப்படியானால்.. நீங்கள் மட்டும்..?’

‘சூரிய ரேகை இருந்தபடியால்தான் அவர்கள் பணக்காரர் ஆனார்கள் என்று நான் நினைத்தேன். அது தவறு. பணமிருந்தபடியால்தான் அவர்களுக்குச் சூரிய ரேகை தோன்றியிருக்க வேண்டும்.’

‘அப்படியானால் உங்களிடம் முன்பே பணம் இருந்ததோ?’

‘பணமா அதைப்பற்றி யார் நினைத்தார்கள்? என் கையிலும் சூரியரேகை இருந்தால்..? என்றல்லவா நான் சதா நினைத்துக் கொண்டிருக்கிறேன்’ என்று கூறிச் சிரித்தார் அவர்.


சொர்க்கத்துக்கு

‘பச்சைப்புல்! அது ஒரு கனவாகி விட்டது! குளிர்ந்த சலம் அதுவும் ஒரு பழங்கதை!’

‘எப்பொழுது பார்த்தாலும் இதே பல்லவிதானா? ஏன், ஒரு காலத்திலே பசும்புல்லை வயிறார மேய்ந்து, பளிங்கு போன்ற தண்ணீரைப் பருகி, விலாப்புடைத்து வேலை எதுவும் இன்றி மருத மரத்தின் இனிய நீழலிலே சுகமாக தூங்கிக் கிடந்ததில்லையா நாம்?’
‘அந்தப் பசுமையான நாட்களை நினைந்துதான் இந்த வறுமையான வாழ்வைத் தாங்கிக் கொண்டு கிடக்கிறேன். இல்லையானால்..’

‘இறந்துதான் போயிருப்பாய்! இல்லையா? நீ நன்றி மறந்தவன்! மழை இல்லை. எவர் செய்த இன்னாவோ வானம் வரண்டு பொய்த்துப்போயிற்று. உழவன், நம் எஜமானன் எவ்வளவு கருணையுள்ளவன். அவனுக்கு வயலில் உழவு இல்லை. வளரும் பயிர் இல்லை. வாழ்வு இல்லை. வண்மையும் கலையும் இல்லை! ஆயினும் தாயினும் சாலப் பரிந்து சிறிதளவு வைக்கோலும், நீரும், சில வேலைகளில் தவிடும் தர மறந்ததில்லை அவன். வேலையே இன்றி வெட்டிப் பொழுதுபோக்கும் நமக்கு அந்த உணவு எவ்வளவு பெரியது. உயர்ந்தது. அன்பினால் இயைந்தது அமிழ்தினும் சீர்த்தது. அக்கரையை நோக்கி நோக்கி நம் எஜமானைத் திட்டாதே. அவன் இரக்க சிந்தையன்!’

‘நீ ஒரு சோம்பேறி! முயற்சியில் நம்பிக்கையே இல்லாதவன். கண்டதைக் கொண்டே திருப்தி கொள்பவன். காணாதன காணவும், புதியனவற்றை அனுபவிக்கவும் ஆர்வம் துளியும் அற்றவன். வயிறு காயும் போதும் நீதி பேசுகிறாய். வளர்ச்சியை விரும்பாத வரட்டு வேதாந்தி நீ!’

‘என்ன செய்யலாம். உன் வயிற்றுப் பசி. இப்படியெல்லாம் நினைப்பதாலும் பேசுவதாலும் நீ ஆசிக்கும் அந்த வாழ்வு கிடைத்து விடுமா என்ன? உழவனை ஏசாதே. அவன் உருக்கமுள்ள நம் எஜமானன்’

‘போயும் போயும் உன்னோடு என்னைப் பிணைத்தானே!. இந்தப் பிணை கயிறு, அதுவே எனக்கு விதி, விலங்கு, எமன், சாவு எல்லாம்!’

எருதுகள் இரண்டும்;; இவ்வாறு உரையாடிக் கொண்டிருக்கையில், வயல் வரம்புகளில் உழவன் நடந்து வந்து கொண்டிருந்தான். அவன் பின்னால் வரம்பில் புழுதியைக் கிளப்பி நடந்து வருபவன் அணிந்திருந்த பச்சை மஞ்சள் நிற அங்கியும், சிவப்பு நிறக்குல்லாயும் எருதுகளைச் சற்று மிரள வைக்கின்றன. தங்கள் வாழ்க்கையில் பெரியதோர் மாற்றம் நிகழப்போவதை எருதுகள் உணர்ந்து கொண்டனவோ என்னவோ, இரண்டுமே எழுந்து நின்றன.

‘இளைத்து மெலிந்து இருக்கின்றன’ என்றான் வியாபாரி.

‘பாவம்! உணவு போதாது’ என்றான் உழவன்.

பேரம் முடிந்தது. எருதுகளைக் கைமாறினான் வியாபாரி. உழவனைக் குறை கூறிக் கொண்டிருந்த முதல் எருது, மகிழ்ச்சியோடு முன்னே முன்னே நடக்க ஆரம்பித்தது. இரண்டாவது எருதோ கொஞ்சம் முரண்டு பண்ணியது. எங்கு போகப் போகிறோம் என்று தெரியாமல் விழித்தது. மிரண்டு தன் எஜமானை, உழவனை உருக்கமாக உற்றுப் பார்த்தது. கண்ணீர் வழியும் அதன் முகத்தைத் தடவிக் கொடுத்து போய் வா என்றான் உழவன். நீண்ட பெருமூச்சு விட்டது எருது. சுளீர் என்று அதன் முதுகிலே கயிற்றால் சாடினான் வியாபாரி. எருதுகள் நடந்தன.


0-0-0
புதிய நண்பர்களோடு புதிய சூழ்நிலையில், பசும்புல்லை மேய்ந்து, பூரித்து நின்ற முதல் எருது, தன் தோழனைப் பார்த்துச் சொன்னது..

‘பார்த்தாயா அந்த உழவனே கதியென்று கிடந்தோமானால்.. இப்படிப் பசும்புல் கிடைத்திருக்குமா? அதோ அந்த ஆற்றைப் பார்! எவ்வளவு குளிர்ச்சி. எங்கும் பசுமை. புதிய வாழ்வு எத்துணை இனிமை வாய்ந்தது.’ என்று

இரண்டாவது எருது மௌனமாக எதையோ நினைந்து பெருமூச்சு விட்டது.

சிலகாலம் சென்றபின், ஒருநாள்.

வியாபாரி ஒரு பெரிய பட்டியாக மாடுகளைச் சாய்க்கத் தொடங்கினான். பட்டினத்துப் பேர்பாதையில் மாடுகள் நடக்க ஆரம்பித்தன. அவை புதிய புதிய கிராமங்கள், சிறிய பட்டினங்கள் யாவற்றையும் கடந்து நடந்து கொண்டிருக்கையில்…

‘ஆஹா! என்ன அழகான பாதை. சோர்வே தோன்றவில்லை. புதிய புதிய ஊர்கள், நகரங்கள், வண்ண விளக்குகள், வண்டி வாகனாதிகள், கடைகள், மனிதர்கள் இவைகளையெல்லாம் நமது பழைய எஜமானன் நமக்குக் காட்டினானா? தொடர்ந்து அவனிடமே கிடந்திருந்தால் இந்த அரும்பேறுகள் சித்தித்திருக்குமா நமக்கு? புதிய எஜமானன் புண்ணிய சீலன்!’ என்று அவன் புகழ் பாடியது முதல் எருது. இப்பொழுதும் இரண்டாவது எருது மௌனமாகவே நடந்தது.

மோட்டார் லொறியிலும், புகைவண்டியிலும் பயணம் பண்ணி, கடைசியாக மாடுகள் தலைநகரம் வந்தடைந்தன.

‘ஆகா அற்புதம்! இதுதான் தலைப்பட்டினமாம்! எவ்வளவு முன்னேற்றமான நாகரிக நடன சாலைகள். கடற்கரை, பாராளுமன்றம், வியாபார மாளிகைகள், புதுமையான கலைக்கட்டிடங்கள்! நாம் பாக்கியசாலிகள்! அந்த ஏழை உழவன் இவற்றையெல்லாம் காட்ட முடியுமா நமக்கு? உழைக்கும் அடிமைகளாக வைத்திருந்தான் அவன். எங்கள் புதிய எஜமான் இரக்கமுள்ள மகான்! கருணை வாரிதி.’ என்று வியாபாரிக்குத் துதிபாடிக் கொண்டே நடந்தது முதல் எருது.

பட்டினத்தின் ஒரு மூலையிலே இருந்தது அந்த மாடறுக்கும் தொழிற்சாலை. மாட்டுப்பட்டியை அங்கு கொண்டு சேர்த்தான் வியாபாரி. மாடுகள் நிறுக்கப்பட்டன. அவற்றுக்கான கிரயத்தைப் பெற்றுக் கொண்டு வீடு திரும்பினான் வியாபாரி.

அடுத்த நாள்..

மாடறுக்கும் இயந்திரம் உறும ஆரம்பித்தது. மாடுகள் இயந்திர வாயிலண்டை நிறுத்தப்பட்டன. காணாத அதிசயத்தைக் கண்டுவிடத் துடிக்கும் பேரார்வத்தோடு, தலையை உற்சாகமாக ஆட்டிக் கொண்டது முதல் எருது.

‘நமது மூன்றாவது எஜமான் இன்னும் நல்லவன் போல இருக்கிறதே. ஆமாம் இப்பொழுது நாம் எங்கு போகப்போகிறோம்?’ என்று தன் தோழனைப் பார்த்துக் கேட்டது அது.

‘சொர்க்கத்துக்கு!’ என்று எரிச்சலோடு கத்தியது இரண்டாவது எருது.

அதற்குப்பின் எருதுகள் பேசிக்கொள்ளவில்லை!.

உடலும் உயிரும் உமக்கே

புள்ளிக் கோழிக்குஞ்சு, பருந்து காலில் இறாஞ்சிக் கொண்டு போகையில் பரிதாபமாகக் கீச்சிட்டுக் கத்தியது. அந்தச் சோகம் வானத்தில் ஓர் சிற்றலையை எழுப்பி ஓய்கையில்…

கோழிக்குஞ்சு கீழே விழுந்தது. தனக்கு வாய்த்த சுவையான உணவைத் தவற விட்டுவிட்ட மூடப்பருந்து, மீண்டும் அதை நோக்கித்தாவும் முன்னரே அந்த மனிதன் வந்து விட்டான். அவன் கோழிக்குஞ்சின் இரட்சண்யன்.

வருத்தம் ஆறிய பின், அந்த மனிதன் வீட்டில் மகிழ்ச்சியாய் வாழ்ந்து வளர்ந்தது. சேவலாகி சிவத்துக் கொழுத்தது கோழிக்குஞ்சு.

சேவல் கூவிற்று!

பொழுது புலர்ந்தது. மனிதனைத் தேடி விருந்தாளிகள் வந்தார்கள். அருமையாக வந்த விருந்தை உபசரிக்க, அந்தச் சேவலைப் பயன்படுத்தலாம் என்று நினைத்தான் மனிதன். பாவம். பருந்திடம் இருந்து காப்பாற்றி, அபயம் தந்து, வாஞ்சையால் வளர்த்த அந்தக் கோழியை அறுப்பதா? அவன் இரக்கத்தோடு சேவலைப் பார்த்தான்.

சேவல் மனிதனுக்கு முன்னே வந்து நின்றது.

‘கருணை மிகுந்த எசமானே பருந்து கொண்டுபோய் பச்சையாய்க் கீறிக் கிழித்துக் கொத்திக் குதறிக் கொல்லாமல் காப்பாற்றினீர்களே. அந்த நன்றியைச் செலுத்தி விட வேண்டும் என்பதற்காகவே நான் கொழுத்து வளர்ந்தேன். நீங்கள் தந்த உயிர், நீங்கள் தந்த உணவுண்டு கொழுத்த இந்த உடல், ஏன் உங்கள் விருந்தினர்களுக்கு உணவாகக் கூடாது? அப்படியானால்.. நான் மிகுந்த மகிழ்ச்சியோடு காத்திருக்கிறேன்’ என்று கூறிற்று.

‘காப்பாற்றப்பட்ட உடலும் உயிரும் எனக்குச் சொந்தமானவை. அதையே எனக்குக் காணிக்கை வைத்தால்.. நன்றி என்று பின் எதைக் குறிப்பிடுகிறாய்?’ என்று கேட்டான் மனிதன்.

‘அதோ உங்கள் வீட்டுக்கு விருந்தாக வந்திருக்கும் புலவர் கூட்டம், மிகச் சுவையாய் இருந்தது என்று சுவைத்துச் சுவைத்து உண்ணும்படியான நறுஞ்சுவை நல்குவன்’ என்றது சேவல்.

இதை மிகவும் கவனமாக ஊகித்த விருந்தினர்கள், - புலவர் கூட்டம் - மனிதன் யாவரும் மரக்கறிக்காரரானார்


பற்றுக்கோடு

தவம் கைகூடிற்று.

ஊழியின் கோர வடுக்கள் மறைந்தன. பழமைபோல உலகம் பசுமையாயிற்று. தென்றலும், தீயும், நீருமாக.. திசையெங்கும் அழகின் திருக்கோலம்!

காலையின் ஒளிவெள்ளம். கனவுலகின் அமைதியினூடு அவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள்.

அவர்கள் இருவரும்.. மனிதர்கள்.
சிருஷ்டியின் மிக அற்புதமான, சிரிக்கும் சிந்தனைப் பிராணிகள். இறைவனின் சாயலில் இணையாக நடக்கும் இருவரும் ஆண்கள்.

கால்கள் போன திசையில் அவர்கள் நடந்தார்கள். அலைந்தார்கள். போகும் வழிகள் எங்கும் புதிது புதிதாகக் கனி மரங்கள் காய்த்துக் குலுங்கின.

கனிகள் வயிற்றுக்குத் தூபமிட, அவற்றைப் பறித்துப் புசிக்கத் திராணியற்று மனிதர்கள் நடந்தார்கள். மேலும் நடந்தார்கள். தரித்து நின்றார்கள்.

‘இந்த மரத்தினைப் பார்த்தாயா. எத்தனை உயரமாக ஓங்கிச் செழித்திருக்கிறது. அதன் உச்சிக்கிளையில்.. அடடா.. எவ்வளவு அழகான கனி. ஒரே ஒரு கனி. இதுவரை இப்படியொரு கனி இருப்பதாகத் தெரியவே இல்லை. விந்தையான கனி! பெரிதாகவும் தெரிகிறது. எனக்கு அதைப் பறித்துப் புசிக்க வேண்டும் போல இருக்கிறது’.

‘எவன் நட்ட மரமோ? வளர்த்தவன் விடுவானா?’
‘யாரவன்? எங்கே இருக்கிறான்.’
‘அகண்ட நிலப்பரப்பின் எங்கோ ஒரு மூலையில் அவன் தனது புதிய கனிமரங்களை நட்டுக் கொண்டிருக்கலாம்!’

‘என்னால் இதனை நம்பவே முடியவில்லை. இங்கு நம்மைத் தவிர வேறு யாருமே இருப்பதாகத் தெரியவில்லை. இது நம் உலகம். நாமே இதற்குத் தலைவர்கள்! சர்வ அதிகாரிகள்!’
‘உன் வார்த்தைகள், ஆணவத்தின் வெறும் கூய்ச்சல்! நாம் நட்டு வளர்க்காத மரத்தின் கனி, எப்படி நண்பா நமக்குச் சொந்தமாகும்?
‘நீ ஒரு கோழை! மாநிலத்தின் சர்வாதிகாரிகளில் ஒருவனாய்ப் பிறந்தும்.. அஞ்சுகிறாய். அதற்கு நீ தகுதியற்றவன். பார் அந்தக் கனியை.. பறிக்கிறேன்.
‘நீ வீரன் என்பது உண்மையாகவும் இருக்கலாம்! உச்சாணிக் கிளையில் போகிறாய். கவனமாகப் பிடித்துக்கொள்.’
‘இன்னும் ஒரே தாவல். கனி என் கைகளில்.இருவரும் சேர்ந்து புசிப்போம்!
‘ஆ.. என்ன காரியம் செய்தாய் அந்தோ சொன்னேனே. கேட்டாயா.. உன் சென்னியிலே கொப்பளிக்கும் செந்நீர்.. எங்கிருந்து எழுகிறது. பேசு நண்பா உன் பேச்சு எங்கே? மூச்சு எங்கே? உன் உடம்பு ஏன் விறைத்துப் பருத்து வீங்குகிறது?’
வீழ்ந்து கிடந்த தன் நண்பனை விட்டுப் பிரியாமல் அவன் அருகிலேயே இருந்தான் அவன். என்றோ ஒருநாள், நண்பன் விழித்து எழுந்து வருவான் என்ற நம்பிக்கை அவனுக்கு.
இரவும் பகலும் வந்து போயின. நண்பன் எழுந்திருக்கவே இல்லை.
நம்பிக்கை நொடிந்தது!
துர் நாற்றம் மூக்கைத் துளைக்க இருகைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு, விரல் இடுக்கின் வழியாக நண்பனை உற்றுப்பார்த்தான் அவன்.
ஆ.. வென்று பிளந்து கிடந்த நண்பனின் வாயில் நெளியும் முல்லை அரும்புகள்! உடலை அருவருப்போடு நோக்கி, கூனிப்போய் நின்ற அவன், வெறிபிடித்தவன் போன்று நண்பனின் வாயில் மண்ணை வாரி, அதை மூடிவிட்டு, எங்கோ ஓடிவிட எழுந்தான்.
‘களுக்’!
கனி சிரித்தது.
‘நண்பா போய் வருகிறேன்’ என்று விடைகோரி, நீட்டிய கரங்களுக்குள் கனி. அருமை நண்பனை பிரித்து விட்ட கனியையும், அது தொங்கிய கிளையையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே, அருவருப்போடு கனியை வீசி எறிந்தான் மனிதன்!
‘நண்பா! போய் வருகிறேன்.’
“களுக்’.. கனி சிரித்தது. மனிதன் திரும்பிப் பார்த்தான். ‘யார்?..கனியா? என்றான்.
‘இல்லை; கன்னி!’ என்றது கனி
கனியின் இனிய சுவையிலே.. நண்பனையும், அவன் பிரிவின் கொடுமையையும் மறந்தான். மீண்டும் உலகம் அவனுக்கு அழகாகத் தோன்றலாயிற்று.


சுதந்திரத்திற்காக

நடுக்கடலில் சுறாமீன்கள் ஒன்று திரண்டு பெரும் கூட்டமாகக் காட்சியளித்தன. ஒரு பென்னம் பெரிய கிழச்சுறா தன் தலைமை உரையை நிகழ்த்த ஆரம்பித்தது.

‘தோழர்களே! நாம் சுதந்திரமாக வாழவே ஆசைப்படுகிறோம்.. நம்மை மனிதர்கள் பிடித்து கொன்று வருவதை, மேலும் நாம் அனுமதிக்க முடியாது!’
இப்படிக் கிழாச்சுறாமீன் சொன்ன போது கூட்டத்தில் பலத்த கரகோஷமும், இலச்சினைச் சுலோகங்களும் முழங்கின. இந்த நேரத்தில், கடலில் மற்றொரு பக்கத்தில் இருந்து பேரிரைச்சல் ஒன்று சுறாமீன்களின் கூட்டத்தை நோக்கி வருவதாகப்பட்டது. கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

‘அதோ அந்த மனிதர்கள் வருகிறார்கள். நேற்றுவரையில் படகுகளில் வந்தவர்கள், இன்று கப்பல் கொண்டு வருகிறார்கள். நம்மையெல்லாம் கட்டிச் சுருட்டி அள்ளிப்போவதற்கு!’

இப்படிக் கூறிக்கொண்டே சுறாமீன்கள் நாலாதிசைகளிலும் சிதறி ஓட ஆரம்பித்தன.

தலைமை தாங்கிய கிழச்சுறாவும், மற்றொரு வாலிபச் சுறாவும் ஒரு பாறையின் பக்கத்தில் பதுங்கி இருந்தன. வாலிபச்சுறா கூறியது.

‘எவ்வளவு கஷ்டப்பட்டு நம்மவர்களையெல்லாம் ஒன்று திரட்டினோம். ஒரு தீர்மானத்துக்கு வருமுன்பே, அந்தப் பாழாய்ப் போன மனிதன் கப்பலோடு வந்து, எல்லாவற்றையும் குட்டிச்சுவராக்கி விட்டான்.’
‘மனிதன் நம்மைப் பிடிக்கவா கப்பலில் வந்தான்..? அவனுடைய நாட்டைப் பிடிக்க வந்திருக்கும் எதிரியைத் துரத்தியடிக்கத்தான் அந்தப் போர்க்கப்பல் போய்க்கொண்டிருக்கிறது. தங்கள் சுதந்திரத்துக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தை முறியடிக்கவே அதில் மனிதர்கள் போகிறார்கள். என்ன இருந்தாலும் மனிதரைப் போன்று சுதந்திர தாகம் - வேட்கை - கேவலம், சுறாமீன்களாகிய எம்மிடம் இல்லை. சுதந்திரத்திற்காகத் தன் உயிரைத் தியாகம் செய்யக் கூடத் தயங்காத வீரமும், துணிவும், உலகில் வேறு எந்த உயிருக்கும் இருக்கமுடியாது.’என்று கிழச்சுறா உணர்ச்சியோடு கூறிப் பெருமூச்சு விட்டது.

‘ஏன் நாமும் அந்த மனிதர்களைப் போல சுதந்திர உணர்ச்சியோடு வாழமுடியாதா?’ என்று இளஞ்சுறா கேட்டதும் கிழச்சுறா உரத்துச் சிரித்தது. அது இளஞ்சுறாவைப் பார்த்துக் கூறியது.
‘அதெப்படி முடியும்? நாம் கடலில் விளையும் பாசி முதலிய தாவரங்களையும், இங்கு வந்து சேரும் அழுகிப் போன பொருட்களையும் சாப்பிட்டு வருபவர்கள். மனிதன் அப்படியா? அவர்கள் சுதந்திரத்துக்காகத் துடிக்கும் ஏனைய உயிர்களைப் பதைக்கப் பதைக்கக் கொன்று, அவற்றின் இரத்தம் தோய்ந்த பச்சை மாமிசங்களைப் புசிக்கிறார்கள். அதனால் அவர்களுக்குச் சுதந்திர வேட்கை அதிகம். பொங்கிக் குதிக்கும் ஆழியிலே எதிரியோடு போரிட்டுத் தமது சுதந்திரத்தைக் காக்கப் போவதைப் பார்த்தாலே இது தெரியவில்லையா?’

உடனே இளஞ்சுறா ஒரு துள்ளுத் துள்ளி ‘ஏன் நாமும் அவர்களைப் போல் உயிர்களைக் கொன்று தின்றால் நமக்கும் சுதந்திர தாகம் ஏற்படாதா?’ என்று கேட்டது. பாறையில் பதுங்கியிருந்த ஏனைய சுறாமீன்களும் இதை ஆமோதிப்பது போல் வெளியில் வந்து துள்ளிப் பாய்ந்து கரகோஷம் செய்தன.

அன்று முதல், சுறாமீன்கள் மட்டுமல்லாமல் கடலில் வாழும் பெரிய மீன்களெல்லாம் சிறிய மீன்களைப் பிடித்துத் தின்ன ஆரம்பித்தன. சிறிய மீன்களை அவை உண்ண ஆரம்பிக்கும் பொழுது ‘இது எங்கள் சுதந்திரத்திற்காக’ என்று சொல்லத் தவறுவதே இல்லை.

படைப்பு

கடவுள் தனியாக இருந்தார்.
உலகத்தை ஊடுருவிப் பார்த்தார்
கண்ணுக் கெட்டிய தூரம் - அதற்கு அப்பாலும்இ திரும்பியதிசையெல்லாம் சாம்பல் மேடு! மலட்டு மேடு!
பார்த்துப் பார்த்து அலுப்புத்தட்டிய பின் ஒரு நாள் கடவுள் கொஞ்சம் யோசித்தார்.அதன் முடிவுஇ படைப்பு ஆரம்பமாகியது. பூமியில் பல்வேறு ஜீவராசிகள் தோன்றின.

கடைசியாக இரண்டு மனிதர்கள். ஆனால்.. சிருஷ்டியின் ரகசியத்தைஅறிந்து வைத்திருந்தும் கூட ஏதோ தவறு நடந்துவிட்டது. மனிதர் இருவரும் கடவுளின் சாயலில் ஆண்களாக இருந்தார்கள்.

என்றாலும் கடவுளுக்கு ஒரு திருப்தி. துணைக்கு இரண்டு மனிதர்கள் கிடைத்து விட்டார்கள் என்றோ?

மனிதர்கள் உண்டார்கள் உறங்கினார்கள் பேசிப் பொழுது போக்கினார்கள். உடல் உளைச்சல் எடுத்த பொழுது ஒருவரை ஒருவர் ஆலிங்கனம் செய்து கொண்டார்கள்.

ஆண்டுகள் பல கடந்தன. ஆனாலும் அந்த மனிதர்களின் வாழ்க்கையில் துளியும் மாற்றமில்லை.

கடவுளுக்கு அலுப்புத்தட்டியது. இது தான் சிருஷ்டியின் ஆனந்தமா?

கடவுள் யோசித்தார்.

ஏதோ தவறு நடந்து விட்டதாகவே அவர் நினைத்தார். சிந்தனை நீடித்தது.

சிந்தனையில் விடுபட்டு விழித்தார் கடவுள் அந்த மனிதர்கள் பிடி சாம்பல் ஆனார்கள்.

மீண்டும் படைப்பு ஆரம்பமாயிற்று. இரண்டு மனிதர்கள்.
ஒன்று ஆண் மற்றது.. பெண்.

கடவுளுக்கு மகா திருப்தி. சிருஷ்டியின் நிறைவை அவர் உள்ளம் ஒப்புக் கொள்கிறது.

வெற்றி! கடவுளுக்கு முழுவெற்றி.!!


வாரிசு

அமுதம் விளையும் புனித பூமியில் நஞ்சென முளைத்து வானுற ஓங்கி வளம்பெற வளர்ந்து நின்றது அந்த ஒற்றைப்;பனை.

பசுமை போர்த்து பனி வாந்தி எடுத்து மசக்கை நோயில் கிடந்தது வேளாண்மை.

வேளாண்மையின் தாய்மைப் பேறு கண்டு பனைக்குப் பற்றி எரிந்தது. உழவனிடம் தன்னைக் குத்தகைக்கு பெற்று கள் வடிக்கும் தன் கணவனை நினைத்து பெருமூச்செறிந்தது அது.

தாழ்வுச் சிக்கல். உணர்ச்சியை வம்பில் விரயஞ் செய்துவிட்ட நோஞ்சான் மலட்டு மனச்சுமையின் ஒரு பகுதியை கீழே இறக்கிவிட எண்ணியது பனை.

‘சலார்’ என்ற ஒலியோடு ஓலையொன்று உதிர்கிறது. குடலை ஏந்தி குமட்டலோடு நின்ற வேளாண்மையின் ஒரு பகுதி நசிந்து போனதில் பனைக்கு மஹா திருப்தி.

‘என் மீது உனக்கு இத்தனை அழுக்காறு!’ என்று பனையை அண்ணார்ந்து பார்த்தது வேளாண்மை.

‘என்ன சொன்னாய். இன்றிலிருந்து நாளை கத்தரியப்பட்டு மாளப் போகும் உன்னிடம், ஆண்டாண்டு காலமாக இந்த வயல்வெளியின் ஒற்றை வாரிசாக நிலைத்து நிற்கப் போகும் நான் எதற்காகப் பொறாமைப்பட வேண்டும்? நீதான் சிலநாட்களாக ஒரு மாதிரி! தாய்மை எய்திவிட்டோம் என்ற கருவம் உனக்கு. தனக்கே உரிய “சொந்தத் திருப்புகழை” வசையோடு வடியவிட்டது பனை.’

‘உன்னை யார் தாயாக வேண்டாம் என்று தடுத்தார்கள்? ஆண்டவன் உனக்கு அருளியிருக்கும் மேலான தாய்மைச் செல்வத்தை தினமும் சீவிச்சீவி சிசுஹத்தி செய்கிறான் உன் கணவன்;. நீ அதற்கு உடந்தையாக…!’ என்றது வேளாண்மை.

‘கொண்ட கொழுநன் திருப்திக்காக - அவன் நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும் பொருட்டாக தன்னைத் தியாகம் பண்ணாத பெண்டிரும் உண்டுகொல்? நீ மாத்திரம் இங்கே பெற்றுப் பெருவாழ்வா வாழ்ந்துவிடப்போகிறாய்?. என் கணவன் கருவில் சீவுகிறான். உன் கணவனோ முற்றிக் கதிராக விளைந்த பின் அரிகிறான். நீ நாளையோ, நாளை மறுநாளோ மடிந்து பொய்யாய்ப் பழங்கதையாய்ப்; போகவேண்டியவள்தானே. நான் இந்த வயல் நிலத்தின் ஒற்றை வாரிசாக நிலைத்து நிற்பேன். குலமகள் நான். உன் மீது ஏன் பொறாமைப்பட வேண்டும்’ என்றது பனை.

‘ஆமாம் நீ தியாகி! கணவனுக்கு மாத்திரந்தானா? இரவில் வயலுக்குக் காவல் வரும் வாலிபன்கூட உன் தியாகத்தைப் பாராட்டினான். காசாசை வேசியும் தன்னைத் தியாகி என்றுதானே எண்ணிக்கொண்டிருக்கிறாள். தியாகியாக இருந்து விட்டுப் போ. ஆனால் வயல் நிலத்தின் வாரிசு நான் என்று மட்டும் பீற்றிக் கொள்ளாதே.’

‘யாரோ ஒருவன் எப்பொழுதோ சூப்பிவிட்டு இந்த மருதத்தின் மத்தியிலே விட்டெறிந்தான் உன்னை. வீங்கிக் கிடந்த நீ வயலின் வண்டலை வாரி உண்டு வானுற ஓங்கி வளர்ந்தாய். அதனால் மருதத்தின் வாரிசு ஆகிவிட்டதாக மனப்பால் குடிக்காதே. உனக்கு இங்கே மரபு இல்லை. நீ மரபாகவும் முடியாது. நீ வாரிசும் இல்லை.’

‘நாளை இறந்தாலும் நயத்தகு நாகரிகம் வேண்டுபவள் நான். மடியினும் என்? ஈன்று புறந்; தருதல் ஒன்றே என்றலைக்கடன். மக்களைச் சான்றோனாக்குதல் என் தலைவன் - உழவன் கடன். நாகாPகம் ஓம்பல் என் நன்மக்கள் கடன். இவை யாவும் என் தாய்மையின் பயன்! நீ நினைப்பது போல நான் காலத்தின் பேழ்வாய்க்கு இரையாகிக் கனவாகிப் போக மாட்டேன். ஏனென்றால் இதேயிடத்தில் நாளை தலை நிமிர்ந்து நிற்கப்போகும்; வாளிப்பான என் இளம் வாரிசுகள் எனக்குச் சாவில்லை என்பதை உனக்கு உணர்த்தவே செய்வார்கள்’ என்றது வேளாண்மை.

‘அடி வேளாண்மை சிறுக்கியே! வேசியென்றா சொல்கிறாய் என்னை?. உன்னுடைய நாகாPகத்தால் உலகத்தில் துளியேனும் மகிழ்ச்சி உண்டா? உன் நாகாPகம் தெவிட்டிப் போகலாம். என் மது தரும் மகிழ்ச்சி - இன்பம் தெவிட்டியதாக வரலாறு கிடையாது தெரிந்து கொள்!’ என்றது பனை.

‘அப்படிச் சொல்லடி.. குட்டி!’ என்று பாடிக் கொண்டே முட்டியோடு மேலே போய்க்கொண்டிருந்தான் பனையின் ஆசை அத்தான்.

‘ஐயோ ஞான சூனியமே!’ என்று தனக்குள் கூறி அடக்கமாகச் சிரித்தது வேளாண்மை.

விழிப்பு

உணவுண்டு படுக்கைக்குச் செல்லும் முன்இ அன்று பகல் முழுவதும் தனக்கிருந்த முக்கிய அலுவல்களை நினைத்துக் கொண்டுஇ தனது தினசரிக் குறிப்பை எழுத உட்கார்ந்தான் அவன்.

மேசையி;ல் குந்தி நாட் குறிப்பு புத்தகத்தை விரித்துக் கொண்டு பேனாவைத் திறந்தான். அவ்வளவுதான் படுக்கையில் கிடந்த அவனுடைய மனைவி மெல்ல எழுந்தாள். பூனை போலப் பதுங்கி அவன் பின்னால் வந்து நின்றுகொண்டு அவன் எழுதுவதை வாசிக்க ஆயத்தமானாள். இது அவளுடைய தினசரிக் கடமையில் முக்கியம் வாய்ந்த அலுவல்! இதில் ஒரு விசேடம் என்னவென்றால் இப்படி ஒவ்வொருநாளும் தான் மறைந்துநின்று தினக்குறிப்பைப் படித்துவரும் சம்பவம் தன் கணவனுக்குத் தெரியாது என்று அவள் நினைத்துக் கொண்டிருப்பதுதான்!.

அவள் நாட்குறிப்பை வாசிப்பதில் எவ்வித ஆட்சேபனையும் அவனுக்கு இல்லை. அவள் அறிந்து கொள்ளக்கூடாத ஆகாத எந்த ஓர் இரகசியமும் அவனிடம் இல்லை.

கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக அவன் கவிதைகள் எழுதி வருகிறான். தன்னுடைய கவிதைகளில் ஒரு சிலவற்றையாவது தன் மனைவிக்கு அவன் வாசித்துக்காட்ட முயன்றிருக்கிறான். அவளும் கேட்பதாக பாசாங்கு பண்ணிக் கொண்டே தூங்கிப் போயிருக்கிறாள். அப்பொழுதெல்லாம் அவன் ஆத்திரப்பட்டதும் உண்டு. வேறு எந்த ஒரு சந்தர்ப்பத்திலாவது அவள் அவனுடைய கவிதைகளை விரும்பிப் படிப்பதும் இல்லை. ஆனால் -

நாட்குறிப்பை வாசிப்பதில் மட்டும் அவள் பொல்லாத இரசிகையாக இருப்பதைக் காண அவனுக்குப் பொறாமையாக இருந்தது. அதையே அவன் தனது கவிதைகளிடத்து அனுதாபமாகச் செலுத்தப் பழகியிருந்தான்! அவளை ஒரு நாள் பழிவாங்கிவிட ஏற்ற சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தான் அவன்.

அன்றைய குறிப்பை எழுத ஆரம்பித்தான். அவளுடைய தலையும் தாராத் தலையாகி முன்னே முன்னே நீளத் தொடங்கியது.

“எனது சொந்த விஷயங்களை அதாவது மனைவிக்கு அப்பாற்பட்ட அந்தரங்க குறிப்புகளை என்னைத் தவிர இந்த வீட்டில் வேறு யாருமே அறிந்துகொள்ள முடியாதபடி பாதுகாப்பான இடத்திலே எழுதி வருவதால் அவை பற்றி என் மனைவி அறிந்திருக்கக்கூடும் என்று பயப்படவேண்டியதில்லை. ஏனென்றால் அவளுடைய கைபடாத ஒரே பொருளான என்னுடைய பெரிய கவிதைப் புத்தகத்தில்தான் அவற்றை நான் எழுதி வருகிறேன்.”

எழுதி முடித்துவிட்டு பின்னால் திரும்பிப் பார்த்தான் அவன். வழமை போல துணைவி தூங்கிப்போயிருந்தாள். அவனும் எழுந்து போய்ப் படுத்துக்கொண்டான்.

சில நாட்களின் பின்னர் இரவு நேரங்களில் அவன் துணைவி தூக்கத்தில் ஏதோ பேசவும் பிதற்றவும் ஆரம்பித்திருந்தாள்.

ஒரு நாள் முழுவதும் தூங்காமல் விழித்திருந்து அவள் என்ன சொல்லிப் பிதற்றுகிறாள் என்று கவனித்தான் அவன்.

கடந்த இருபது வருடங்களாக அவன் தன்னுடைய கையெழுத்தில் எழுதி வைத்திருந்த அவளுக்கு ஒரு சிறிதும் விளங்காத தத்துவார்த்தக் கவிதைகள் ஒவ்வொன்றையும் ஒழுங்காக சொல்லிக் கொண்டிருந்தாள் அவள்.


சுதந்திரம்

கோடை அரசு கட்டில் ஏறியது.

வெய்யோன் தெறு கிரணம் பூமி வருந்தும்படியான சர்வதிகாரப்போக்கிலே ஆட்சியை நிறுவியது.

ஆறு குளங்கள் யாவும் மெல்ல மெல்ல நீர் வற்றின. அவை வறண்டு சுரியாகி காய்ந்து கணம் வெடித்து நிலவாய் பிளந்து கிடந்தன. சுவறிய நிலத்தின் பேழ்வாய்களின் அடியிலே தவளைகள் தங்கி வாழ்ந்தன.

முன்னர் நீர் நிலைகள் தண்ணீர் நிரம்பியிருந்த காலை அவைகளில் ஆனந்தமாக நீந்தி விளையாடி தாம் நடாத்திய சுதந்திர வாழ்வினை எண்ணி தவளைகள் ஏங்கின. மனச்சுமை உணர்ச்சி வெள்ளமாகப் பொங்கி தொண்டைக் குழிவரையும் வந்து ‘கபக் கபக்’ என்று அடித்துக்கொண்டிருந்தது.

வினை உலப்ப வேறாகி கொற்றமும் கோட்டையும் இழந்து கானகம் புகுந்து அஞ்ஞாத வாசம் புரியும் மன்னர்களின் தலைவிதி தவளைகளுக்கும்!

கோடை ஆட்சியின் குரூரத்தை எதிர்த்து தவளைகள் மௌன சத்தியாக்கிரகம் செய்ய ஆரம்பித்தன.

ஒருநாள் -

திடீரென ஆகாயத்தில் ஒரு புதிய குரல் கேட்டது. தனது சுதந்;திரமான வாழ்க்கையில் அனாவசியமாகக் குறுக்கிட்டு குழப்பம் பண்ணவந்து தோன்றிய கருமுகில் சைனியங்களை எதிர்த்து ஆவேசம் பொங்கியது. சுழல் காற்று சுதந்திர சங்கநாதம் முழங்கியது. அதனைக் கேட்ட தவளைகளின் தொண்டைக் குழிகள் வேகமாக வீங்கிச் சுருங்கி, தமது வேட்கையையும் வெளிக்காட்டிக் கொண்டன.

காற்றோடு தோற்றுப்போன கருமுகில்கள் கதறிப் புலம்பி கண்ணீர் வடித்தது.

கோடை மழைக்கு குளங்குட்டைகளின் பள்ளமான கிடங்குகளில் நீர் தேங்கி நின்றது.

நிலவெடிப்புகளில் மறைந்திருந்த தவளைகள் வெளியில் வந்தன. தங்கள் சத்தியாகிரக மகிமை காரணமாக மீண்டும் தமக்கு சுதந்திரம் கிடைத்து விட்டதை எண்ணி அவை மேனி புளகித்தன.

‘தொப்.. தொப்.. தொப்..’

‘ஆடுவோமே.. பள்ளுப் பாடுவோமே..’

ஆனந்த சுதந்திரகீதம் இசைத்து தவளைகள் கொண்டாடிக் குதூகலித்தன.

கிழத்தவளை ஒன்று இந்தக் கொண்டாட்டங்கள் ஒன்றிலும் கலந்து கொள்ளாமல் ஊமையாய் நிலவெடிப்புக்குள்ளேயே இருந்தது. அதைப்பார்த்துவிட்ட ஏனைய தவளைகள் -

‘சுதந்திரத்தை அனுபவிக்கத் தெரியாத சோம்பேறி’
‘குருட்டு முண்டம்’
‘கிழட்டு மண்டு’
‘மடையன்’
என்றெல்லாம் கிழத்தவளையை வாய்க்கு வந்தபடி வைதன. கிழத் தவளை அப்பொழுதும் மௌனமாகவே இருந்தது.

இரவெல்லாம் தவளைகள் தாளக்கட்டு வைத்துப் பாடிக்கொண்டே இருந்தன.

அடுத்த நாள் சூரியோதயத்தின் போது குளம் குட்டைகளில் வெண்துயில் பொட்டலங்களாக இரவெல்லாம் பாடி வயிறு வீங்கிச் செத்துப்போன தவளைகளின் பிரேதங்கள் மிதந்தன. நீரின் பெரும் பகுதி காலையிலேயே வற்றிப்போய்விட்டபடியால் எஞ்சிக்கிடந்த ஒரு சில தவளைகளும் நீர்ப்பாம்பு, பறவை இனங்களுக்கு விருந்தாயின.

தன் சுற்றத்துக்கு நேர்ந்த பரிதாப முடிவை எண்ணி கிழத்தவளை மௌனமாகவே அழுதது.

மாரி அரசு மணிமுடி புனைந்தது. முன்னொருகால் காற்றினிடம் தோற்றுத் துயரப்பட்ட கிழட்டுக் கருமுகில்கள் ஆனந்தக் கண்ணீர் பொழிய ஆரம்பித்தன.

ஆற்றிலே வெள்ளம் கரைபுரண்டோடியது. குளம் குட்டைகளில் நீர் தழும்பி வழிந்தது.

இதுவரை நிலவெடிப்பில் பதுங்கி வாழ்ந்த கிழத்தவளை வெளியே வந்தது. சுதந்திர தேவியைத் தொழுதது. ஆரவாரம் எதுவும் செய்யாமலேயே நிறைந்து பொங்கும் நீரில் நீந்தி மகிழ்ந்தது அது.


பயன்

வயல்வெளி.

வானை முட்டவும் நின்ற சூடுகள் அடிபட்டு ஒழிந்தன.

மதியக் கொண்டல் பெயர்கையில் உழவன் அவுரியில் ஏறினான்.

அலுவலாளர்கள் கைப்பெட்டிகளில் நெல்லைக் கோலிக் கொடுக்க அவன் தூற்ற ஆரம்பித்தான்.

காற்றின் கனதியை எதிர்த்து பொன் மணியாம் நென் மணிகள் பொல பொலவென்று களத்தில் பொலிந்து கும்பமாகிக் கொண்டிருந்தன.

மலையாகக் குவிந்தது பதர்!

பதரை ஒதுக்கி நென்மணிகளை மூட்டையாக்கி அவற்றை வண்டிகளில் ஏற்றிக்கொண்டிருந்தான் உழவன்.

‘அக்கா… அக்கா! கூடிப்பிறந்த எங்களைவிட்டுவிட்டா உழவனோடு போக ஆயத்தப்படுகிறாய்?

பதர்க் கும்பத்தில் இருந்து பரிதாபமாகக் குரல்கள் கிளம்பின.

நெல்மணிகளால் பதர்களைப் பார்க்கவே முடியவில்லை.

பதர்களே! உங்களைப் பார்க்கமுடியவில்லை. ஆனாலும் ரத்த பாசத்தின் புளுக்கத்தை நாங்கள் அனுபவித்துக்கொண்டு தான் உழவனோடு போகிறோம். கூடிப்பிறந்தோம். சமதையாக - கடைசிவரை பிரியாமல் வாழ்ந்தோம் உம் பிரிவை எண்ணி எண்ணி அழுகிறோம். ஆனாலும் எங்கள் பிரிவு தவிர்க்க முடியாதது. நீங்கள் பயனற்றவர்கள் என்று உழவன் அறிவான். அவன் மனிதன். பயனையே நேசிப்பவன். நெல்மணிகள் இப்படிக் கூறிக்கொண்டிருக்கும் போதே வண்டி புறப்பட்டது.

அதற்குமேல் பதர்களுக்கு எதுவுமே கேட்கவில்லை.
ஊகம்

யானை வேட்டைக்காகப் பதுங்கிக் கொண்டிருந்தான் அந்த வீரன்.

அவனைப் பார்த்து ஆத்திரம் கொண்ட பன்றிஇ உர்ர்.. என்று உறுமியது.

கையில் ஏந்திய துப்பாக்கியைஇ அலட்சியமாகப் பார்த்துஇ “அழுக்குண்ணும் அசிங்கப் பிறவியே! ஏன் வீணாக என் மீது அழுக்காறு கொள்கிறாய்?” என்று கேட்டான் அவன்.

“நீயும்இ அந்த அழுக்கைத் தேடித்தானே இப்படிப் பதுங்கி அலைகிறாய்! என் உணவில் பங்கு விழைந்துஇ போட்டிக்கு வந்து நிற்கும் உன்னைப் பார்த்துஇ நான் சந்தோஷப்பட வேண்டும் என்கிறாயா? நான்இ என் சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க முடியாது!” என்றது பன்றி.

“சுதந்திரத்தில் நீ கொண்டிருக்கும் ஈடுபாட்டை - காதலை வரவேற்கிறேன். ஆனாலும்.. உன் குற்றச்சாட்டுஇ அஞ்ஞானத்தின் அவாவில் தோன்றியது! நான் மனிதன்இ” என்றான் அந்த வீரன்.


இரசிகர்

சீந்துவார் இன்றி நெடுநாட்களாகக் கண்ணாடிப் பெட்டியுள் வயிரக்கல்லாக இருந்தது அந்தக் கற்கண்டுக்கட்டி

ஒருநாள் எங்கிருந்தோ வந்தது ஓர் எறும்பு. கண்ணாடிப்பெட்டியை எட்டி எட்டிப் பார்த்தது. ‘ஆகா! எவ்வளவு சுவையான இனிப்பு’ என்று வாயூறி வடிந்தது அதற்கு.

கற்கண்டு கட்டிக்குப் பெருமை பிடிபடவில்லை. தன்னையே ஏக்கத்தோடு உற்றுப் பார்த்து வாயூறும் எறும்பினைக் கட்டி அணைத்து முத்தமிடவேண்டும் போல இருந்தது. ‘என் அன்புக்குரிய இரசிகனே இப்படி உள்ளே வா’ என்று எறும்பினை ஆதூரம் பொங்க அழைத்தது கற்கண்டு.

முனைந்து பெற்ற முயற்சியின் வெற்றிப் பெருமிதத்தில் எறும்பும் கண்ணாடிப் பெட்டியுள் நுழைந்தது.

‘ஆகா! எவ்வளவு சுவையான இனிப்பு’ கற்கண்டைக் கட்டி அணைத்து மூசு மூசென்று முத்தம் பொழிந்தது எறும்பு. தன்னையும் முத்தமிட்டு இரசிக்க ஒரு மேதை இரசிகன்! கற்கண்டுக் கட்டிக்குப் பேரானந்தம். பரம திருப்தி!

திடீரென்று எதுவும் சொல்லிக்கொள்ளாமல் எறும்பு புறப்பட்டது. பெட்டியை விட்டு வெளியேறியது அது. வேகமாக எங்கோ ஓடிப்போனது. கற்கண்டு கட்டிக்கோ பலத்த ஏமாற்றம்!

சிறிது நேரத்தில் எறும்பு திரும்பியும் வந்தது. அதைத் தொடர்ந்து மாலை மாலையாக அணி அமைத்து எறும்புகள் முன்னேறி வந்துகொண்டிருந்தன.

இலட்சக் கணக்கில் பெட்டியை வியூகம் அமைத்து நின்ற எறும்புகளைப்பார்த்து இறும்பூதெய்தியது கற்கண்டு. ‘உள்ளே வாருங்கள்’ என்று உவகையால் எறும்புகளை உற்சாகத்தோடு வரவேற்று ‘நீங்கள் எல்லோரும் என் இரசிகர்கள் தாமே’ என்று பெருமையோடு தலை நிமிர்ந்து கேட்டது அது.

‘ஆமாம் ஆமாம்!’ கூச்சலிட்டுக்கொண்டே எறும்புகள் நான் முந்தி நீ முந்தி என்று பெட்டியுள் நுழைய ஆரம்பித்தன.

கற்கண்டு இருந்த இடத்திலே கரியதோர் எறும்புத்திரளை காட்சியளித்தது. எறும்புகள் கற்கண்டை முத்தமிட்டு இரசிக்கத் தொடங்கின.

எறும்புகளின் இரசனையில் மெய்மறந்து தன்னை இழந்து இளகி உருகி கிடந்தது கற்கண்டு.

சிறிது நேரத்தில் முதலில் வந்த பெரிய எறும்பு பெட்டியை விட்டு வெளியேறியது. தன்பாட்டில் வந்த வழியே திரும்பிப் போய்க்கொண்டிருந்து அது. அதைத் தொடர்ந்து ஏனைய எறும்புகளும் சாரி சாரியாக வெளியேறி வந்தன. முதல் எறும்பின் அடிச்சுவட்டில் அவை பவனி அமைத்தன.

கற்கண்டு இருந்த இடம் காலியாகிக் கிடந்தது!
அஞ்ஞானம்

உலகம் இருளி;ன் அமுக்கத்திலே மூச்சுத் திணறி திக்குமுக்காடியது.

இரவின் நான்கு சாம எல்லைகளும் குறுகி தேய்ந்து திரைந்து கழிந்தன. இரவி இன்னும் உதயமாகவே இல்லை.

‘கடவுளே! இரவின் அந்தகார இருட்டிலே நீண்ட காலம் சிக்கி நாங்கள் மெல்ல மெல்ல இல்லையாகிக் கொண்டிருக்கிறோம். இரவியை விரைந்தனுப்பி வைத்து எங்களை இரட்சித்து அருள்புரியவேண்டும் கருணாநிதியே!’

உலகின் உருக்கமான இந்தக் கதறலைக் கேட்ட கடவுள் திடுக்கிட்டு விழித்தெழுந்தார். வானுற ஓங்கி வளர்ந்து நின்ற தனது பொன்மாளிகையின் படுக்கையறைச் சன்னலைத் திறந்து கிழக்கே எட்டிப் பார்த்தார் கடவுள்.

‘இரவியே இன்னுமா தூங்கிக் கொண்டிருக்கிறாய்! எழுந்திரு உன்வரவுக்காக- ஒளி மழை அருவிக்காக ஏங்கிக் கிடக்கும் இந்த உலகத்தைப் பார். இருட்டின் கொடுமைக்கு ஆற்றாது அது கண்ணீர் வடிக்கிறது. இரவியே எழுந்திரு!’

கிழக்கு நோக்கி நின்று கடவுள் தன்னைக் கூவி அழைப்பதைக் கேட்ட இரவி வெறுப்பின் விகாரம் தோய்ந்த தன் முகத்தைப் படுக்கையின் மறுபுறம் திருப்பிக் கொண்டான்.

‘கடவுளே! இனிமேல் என்றுமே நான் எழுந்திருக்கப் போவதில்லை உலகம் இருட்டிலே நன்றாகத் தவிக்கட்டும் வெறுப்போடு வார்த்தைகளைக் கொட்டினான் இரவி.

கடவுள் திகைத்தார்.

‘என்ன! இரவியா இப்படிப் பேசுகிறாய்? இன்று உனக்கு என்ன வந்துவிட்டது? உலகம் இருட்டிலே புலம்புகிறது. எழுந்திரு!’

‘இ;ல்லை நான் எழுந்திருக்கப்போவதி;ல்லை! நீரே உலகத்தின் பிதா. உம்மை அந்த உலகம் துதிக்கிறது. நீரே அதை இரட்சிக்க வேண்டியவர்!’ இப்படிக் கூறிக்கொண்டே படுக்கையில் புரண்டு படுத்தான் இரவி.

உலகின் அபயக் குரல் பெருகிக் கொண்டே போவதைக் கேட்ட கடவுளின் கையறு நிலை பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

‘இரவியே! இன்று உனக்கு என்ன வந்து விட்டது? ஏன் இந்தப் பிடிவாதம்? என்ன வேண்டும் உனக்கு? உலகம் இருளில் அல்லாடுகிறது எழுந்திரு!' காலில் விழாத குறையில் கடவுள் கெஞ்சி நின்றார்.

‘நான் கடவுளாக வேண்டும்! உம் சிங்காசனத்தில் அமர்ந்து, பொன்னும் மணியுமாக மின்னிப் பொலியும் உம் அரசகிரீடத்தை என் தலையிலே புனைந்து, அறமெனும் செங்கோல் பிடித்து, இந்த அவனி முழுவதையும் அரசாள வேண்டும்! இதற்கு நீர் இசைவு தந்தால் எழுந்து வருகிறேன். என்ன சொல்கிறீர்?’

இரவி தன் கோரிக்கையை கடவுள் முன் விநயமாக எடுத்து விளம்பினான்.

‘என் சிங்காசனத்திலே நீ அமர வேண்டுமா? என்ன உளறுகிறாய்? உனக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா இன்று? '

கண்களில் கனல் சிந்த, கடவுள் இரவியை உற்றுப் பார்த்தார்.

‘ஏன் நான் அமரக்கூடாதா? ஊழி ஊழிகாலமாக உமக்கு ஊழியம் செய்கிறேனே! நான் மட்டும் இல்லையென்றால் உம் தொழில் நடக்குமா? உம்மால் உலகத்தைப் படைக்கவும் பாதுகாக்கவும் அழிக்கவும் முடியுமா? நான் இன்றி நீர் இல்லை! என் கடமைக்கேற்ற தகைமை வேண்டும். உரிமையைத்தான் கோருகிறேன். நான் கடவுளாக வேண்டும்!’ - இரைந்து முழங்கினான் இரவி.

மீண்டும் உலகின் கதறல்!

இருட்டு அந்தகாரம் - பிரளயம் - அழிவு - முடிவு! உலகின் நாலா திசைகளிலும் ஒரே கூக்குரல். அமளி!

‘இரவியே! உனக்கு ஏன் இந்தப் பேராசை! தகுதியற்ற உரிமைக்காக வாதிடுகிறாய். அறியாமை! நானே கருத்தா! நீ என் கருவி. ஆணைக்கு அடி பணிதல் உன் கடமை. இருளின் பயங்கரத்தில் உலகம் செத்துக் கொண்டிருக்கிறது. உடனே எழுந்திரு!’ கடவுள் ஆணையிட்டார்.

‘ஒளியாகவும் வெப்பமாகவும் இருக்கும் நானே, மாரியாகவும் அதன் மலிவளமாகவும் இருக்கிறேன். உலகின் வாழ்வாகவும் அதற்கு வழியாகவும் நான் ஊழியம் செய்யவில்லை என்றால் உம்மை அந்த உலகம் மதிக்குமா? நினைக்குமா? என்னால் வாழும் உலகம் என்னையே துதிக்கவும் வேண்டும். நான் கடவுளாக வேண்டும்.

மீண்டும் மீண்டும் தன் கோரிக்கையையே வலியுறுத்திக்கொண்டிருந்தான் இரவி.

கடுங்கோபம் கொண்ட கடவுள் கேட்டார்இ ‘நான் கருத்தா. நீ கருவி. எனக்கு நீ நிகராவாயா?

‘நான் உம்மை ஜெயிப்பேன்! நிகரென்று நிலைநாட்டுவேன். அதற்கு ஆரம்பந்தான் இது. என்னோடு போட்டியிட ஆயத்தமா?’

ஆணவத்தின் செருக்கிலே கடவுளுக்கு சவால் விட்டான் இரவி.

கடவுள் கெக்கலிகொட்டிச் சிரித்தார். ‘போட்டியா? உன்னோடு நானா? சமதையானவர்களுக்குள் நடப்பது தானே போட்டி! நீ எனக்கு சமதையாக இல்லாதபோது.. போட்டியில் எவ்வாறு கலந்து கொள்ள முடியும்? உனக்கிணையானவனையே உன்னால் வெல்ல முடியவில்லை! முதலில் அதைச் செய். அப்புறம் வேண்டுமானால் என்னோடு போட்டியிடலாம்.’

கடவுளின் வார்த்தைகள் நாராசமாக இரவியின் காதைக்குடைந்தன. ‘எனக்கு நிகராக இன்னும் ஒருவனா? யார் அவன்? எங்கே இருக்கிறான்? இரவி அட்டகாசமாகச் சிலம்பினான். ‘அதோ’ என்று எங்கும் நிறைந்து வியாபித்திருக்கும் இருளைச் சுட்டிக்காட்டினார் கடவுள்.

‘இருட்டு’.. எக்காளமிட்டுச் சிரித்தான் இரவி. ‘எனக்குச் சமதையாவானா அந்த இருட்டு! கடவுளே நீர் என்ன சொல்கிறீர்? குதர்க்க வாதம் பண்ணி என்னை வென்றுவிட நினைப்பா? எப்படி அந்த இருள் எனக்குச் சமதையாக முடியும்?’

‘இரவியே! இந்த சாதாரண உண்மை கூட உனக்குப் புலனாகவில்லை! அதற்குள் கடவுளாக மாத்திரம் ஆசை வந்துவிட்டதே! இருள் இல்லையேல் ஒளியாகிய உனக்கு மதிப்பு ஏது? அதனாலேயே உனக்கு இவ்வளவு தலைக்கனம் ஏறி இருக்கிறது. இருட்டு இல்லையேல் நீ இல்லை. எனவே இருள் உனக்கு இணையானவன்தான். அவனைக் கொன்றொழித்து உலக உருண்டை முழுவதையும் ஒரே நேரத்தில் ஒளியாக்க முடியுமா உன்னால்? இந்தப் போட்டியில் நீ ஜெயித்துவிட்டால் நான் சூடியிருக்கும் இந்த இரத்தின கிரீடம் உன் தலையில் புனையப்படும்! நீ கடவுளாவாய்!’

சவாலை ஏற்றுக்கொண்டு படுக்கையினின்றும் துள்ளி எழுந்த இரவியைப் பார்த்து போட்டியின் சட்ட திட்டங்களை விளக்கினார் கடவுள்.

“இரவியே! எக்காரணம் கொண்டும் பின்னால் திரும்பி ஓடக் கூடாது. நேராக ஒரே பாதையில் ஓடி இருளைப் பிடித்துக் கொல்லவேண்டும். விதியை மீறினால் ஆட்டம் பிழைக்கும். உடனே உன் தலை சுக்கல் சுக்கலாக வெடித்துப் பூமியில் உதிரும். உலகம் சாம்பராகும்.”

இதை ஏற்றுக்கொண்ட இரவி கிழக்கு மேற்காக இருளைத் துரத்தி ஓட ஆரம்பித்தான்.

உலகின் பயங்கரமான அபயக்குரலும் ஓய்ந்து ஒடுங்கியது.+++++++++++++++

பக்குவம்


தேசிய மலர்க்காட்சி நடைபெற்றது.

எண்ணித் தொலையாத எண்ணிக்கையில் வண்ண வண்ணப் பூக்கள் காட்சிக்கு வந்திருந்தன.

காட்சியில் மிகச் சிறந்த மலரைத் தெரிவு செய்யும் நீதிபதிகள் மூவரும் கடமையில் கண்ணாக இருந்தனர்.

காட்சிக்கு மலர் கொண்டு வைத்த பூந்தோட்டக்காரர்கள் நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தனர். ஒவ்வொரு தோட்டக்காரனும் ‘பரிசு தனக்கே’ என்று நம்பினான். அவர்கள் பாடுபட்டு மலர்களை உற்பத்தி செய்தவர்கள்.

நீதிபதிகள் ஒவ்வொரு மலராகப் பார்வையிட்டுக் கொண்டு வந்தனர். குறிப்பிட்ட ஓர் இடத்தில் அவர்கள் திகைத்து நின்றனர்.

அது ஒரு பூ!

அந்தப் பூவைப் போன்ற மாயக் கவர்ச்சி வாய்ந்த ஒரு பூவை அவர்கள் இதுவரையில் பார்த்ததே இல்லை. அந்தப் பூ தோற்றத்தில் பெரியதாக பொலிவுள்ளதாக இருந்தது.

நீதிபதிகள் தீர்மானித்து விட்டனர். ‘முதல் பரிசு அந்தக் கவர்ச்சிப் பூவை உற்பத்தி செய்த தோட்டக்காரனுக்கே’ என்பது ஏகோபித்த முடிவாகிவிட்டது.

நீதிபதிகளில் ஒருவர் அந்தப் பூவை ஆவலோடு கையில் தூக்கினார். தன் மூக்குக்கு நேரே பிடித்துப் பார்த்தார். அடுத்தகணம் அவர் கையிலிருந்த பூ திடீரென்று கீழே வீசப்பட்டது. அதை மோந்து பார்த்த நீதிபதி மயங்கி கீழே விழுந்தார். ஏனைய நீதிபதிகள் எதுவும் புரியாமல் விழித்தனர். ஒருவர் மயங்கிய நீதிபதியைத் தாங்கித் தூக்கினார். மற்றவர் அந்தப் பூவை நெருங்கி மூக்கால் பரிசோதித்தார்.

மலரா? மலமா? அந்தப் பூவில் இருந்து இப்படியான துர்நாற்றத்தை அவர் எதிர்பார்க்கவே இல்லை. எவ்வளவு அழகான பூ! என்ன பயன்? மனிதனையே மயக்கி வீழ்த்தும் துர்நாற்றம். பூவிலும் புழுக்கள் நெளியுமா?

மயங்கிய நீதிபதி தெளிவு பெற்று எழுந்தார். காட்சியில் இருந்து அந்தப் பூவை அகற்றவும் முடியவில்லை. பரிசுக்கான பூவை இறுதியாகத் தெரிவு செய்யும் மலர்க் காட்சி பிரதம அமைப்பு நிருவாகியிடம் அந்தப் பூவை எடுத்துக் கொண்டு போயினர் நீதிபதிகள்.

அதிகாரி நீதிபதிகளை வரவேற்றார். ‘இது என்ன விசித்திரமான பூ! அற்புதமாக இருக்கிறதே!’ என்றார் பிரதம அமைப்பு நிருவாகி. நீதிபதிகள் ஒருவர் முகத்தை மற்றவர் ஏமாற்றத்தோடு பார்த்துக் கொண்டனர்.

‘அழகாய் இருக்கிறது.ஆனால்.. அதன் துர்நாற்றம்.. சகிக்கவில்லை’ என்றார் மயங்கிய நீதிபதி.

‘உமக்கு ஏதோ கோளாறு. அந்த மலரை நானே பரிசோதிக்கிறேன்.’

இவ்வாறு கூறிய அதிகாரி சாகித்தியப் பரிசுக்கு ஏடுகளை எடைபோடும் பாங்கிலே….

ஏதோ கிடைத்தற்கரிய நறுமலரின் வாசனையைப் புல்லி நுகர்ந்து அனுபவிப்பது போல் பாசாங்கு பண்ணினார்.

‘அருமையான பூ! இதற்கே முதற் பரிசு!’ என்ற பிரதம அமைப்பு நிருவாகியின் முடிவை நீதிபதிகள் ஆட்சேபித்தனர்.

அதிகாரி சொன்னார்.

‘இந்தப் பூ என் வீட்டுகட்டாந்தரையிலே விளைந்த பூ. அதனை அனுபவிக்கக் கூடிய பக்குவம் நீதிபதிகளிடம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஒன்றும் கிடையாது…. ஆனால்… அந்தப் பூ என் வீட்டு அந்தரங்க வேலையாளும் மித்திரனுமான ஒருவன் பெயரில் காட்சிக்கு வைக்கப்பட்டது என்ற பகிரங்க இரகசியத்தையாவது நீங்கள் தெரிந்து கொண்டிருக்கலாம்.’

நீதிபதிகள் உண்மையின் முகத்தில் கறுப்புத் துணியைப் போர்த்தினர்.

அவர்கள் பக்குவப்பட்டவர்கள்!

***முற்றும்***