கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  கிட்கிந்தை  
 

சி. சிவசேகரம்

 

கிட்கிந்தை

சி. சிவசேகரம்

-------------------------------------------------------------

கிட்கிந்தை


சி. சிவசேகரம்


தேசிய கலை இலக்கியப் பேரவை


--------------------------------------------------------------------------


தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடு -93

நூற்பெயர் : கிட்கிந்தை
பதிப்பு : ஓகஸ்ட், 2002
வெளியீடு : தேசிய கலை இலக்கியப் பேரவை
அச்சிட்டோர் : கௌரி அச்சகம்
முகப்போவியம் : இரா. சடகோபன்
மூலப்படங்கள் : சாஓ ஹுங்-பென், சியென் ஷியாஓ-டாய்
விநியோகம் : சவுத் ஏசியன் புக்ஸ், வசந்தம் (பிறைவேற்) லிமிTட்,
44, மூன்றாம் மாடி,
கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத்தொகுதி,
கொழும்பு -11.
தொலைபேசி : 335844.
விலை : ரூபா. 75/=


Title : Kitkinthai
Edition : August, 2002
Publishers : Theshiya Kalai Ilakkiyap Peravai
Printers : Gowry Printers
Cover Design : R.Shadagopan
Pictures Courtesy : Chao Hung-ben, Chien Hsiao-tai
Distributors : South Asian Books,
Vasantham (Pvt) Ltd,
No. 44, 3rd Floor,
C.C.S.M. Complex,
Colombo -11.
Tel : 335844.
ISBN No : 955-8637-08-4
Price : Rs.75/=


------------------------------------------------------------------------------

பதிப்புரை

தமிழில் நல்ல நாடகச் சுவடிகட்கான போதாமை தொடர்கிறது. இடையிடையே பழைய நாடகச் சுவடிகள் நூல் வடிவம் பெற்றுள்ளன. புதிய சுவடிகள் என வருவனவற்றின் எண்ணிக்கை போதுமானதல்ல. நா. சுந்தரலிங்கம், குழந்தை ம. சண்முகலிங்கம், மஹாகவி, இ. முருகையன், சி. மௌனகுரு போன்றோரது சுவடிகள் சில நூல்வடிவு பெற்றுள்ளன. இவை சித்திரித்த விடயங்களின் சமூக முக்கியம் அவை குறித்த கால எல்லைக்கும் அப்பால் அவற்றைப் பயனுள்ள நாடக நூல்களாக நம்முன் வைத்துள்ளன.

அண்மைக் காலங்களில் கவிஞர் சிவசேகரத்தின் சில நாடகச்சுவடிகட்கு நாம் நூல் வடிவங் கொடுத்தோம். “பாட்டும் கூத்தும்” சிறுவர் நாடகங்கள் பரவலான வரவேற்பைப் பெற்றன. “அபராதி நானல்ல” சாதகமான விமர்சனக் கருத்துக்களைக் கண்டது. இப்போது “சமூக விரோதி” வெளியீட்டு வேலைகளும் நடைபெறுகின்றன. “கிட்கிந்தை” என்ற சுவடி அவரது மற்றச் சுவடிகளினின்றும் வேறுபட்டது. கூத்து வடிவத்தில் ஒரு மரபுக் கதையை எடுத்துச் சமகாலச் சிந்தனைகளை அவர் அதனூடு வழங்கியுள்ளார்.

ஈழத்துக் கூத்து முறைகள் பற்றிய அறிவும் அனுபவமும் கொண்ட நாடறிந்த நாடகத் தயாரிப்பாளர் இ. தாசீசியஸ் அவர்களது உதவியுடன் தெரிவு செய்யப்பட்ட பாடல் வடிவங்களுடனும் அவரது ஆலோசனையின் பேரில் அமைத்த காட்சி ஒழுங்கும் இந்தச் சுவடியின் ஆக்கத்துக்கு மிகவும் முக்கியமானவை என்று நூலாசிரியர் எம்மிடங் கூறியுள்ளார்.

இச்சுவடியைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு நாடக மேடையேற்றத்தின் பின்பு வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. இச் சுவடி பரவலாகக் கிடைப்பது வேறு தயாரிப்பு முயற்சிகட்கும் உதவும் என்பதாலும் நாடகச் சுவடி என்ற வகையிலும் இசைப்பாங்கான பாடல்கள் கொண்ட நூல் என்ற வகையிலும், அனைத்திலும் முக்கியமாக, சமூக முக்கியமுள்ள செய்தியொன்றைக் கூறுகிற காரணத்தாலும் இதை இன்று நூலாக்குவது அவசியம் என்று கருதுகிறோம்.

இந் நாடகச் சுவடியின் பயன் பற்றிக் கவிஞர் முருகையன் விரிவான ஒரு மதிப்புரை வழங்கியுள்ளார். காட்சிகள் பற்றிய குறிப்புக்களும் நூலிற் சேர்க்கப்பட்டுள்ளன. நாடகாசிரியரது முன்னுரையும் நூலின் பின்னணி பற்றி விரிவாகவே கூறுகிறது. எனவே அவற்றை இங்கு மீளக் கூறத் தேவையில்லை. இச்சுவடியிற் சேர்க்கப்பட்டுள்ள சீனமரபுச் சித்திரங்கள் பிறிதொரு நூலிலிருந்து எடுத்து மாற்றப்பட்டவை. அவற்றின் பொருத்தம் தற்செயலானது எனினும் சிறப்பானது என்பது எமது எண்ணம். அவற்றுள் ஒன்றுக்கு வண்ணந் தீட்டி முன் அட்டையை ஓவியர் சடகோபன் அழகு செய்துள்ளார்.

இச்சுவடியின் நூலாக்கத்திற்குத் துணை நின்ற அனைவருக்கும் எமது நன்றிகள் உரியன. இதனைப் படித்துத் தமது விமர்சனங்களை எமக்கு எழுதுமாறும் கூறுமாறும் வாசகர்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறோம். இதை மேடையேற்றுவதில் ஆர்வமுடையோருடன் கலந்துரையாடவும் நாம் விருப்புடன் உள்ளோம்.

நூல் வெளியீட்டில் எமக்குத் தொடர்ந்தும் ஆதரவாக உள்ள புத்தகப் பண்பாட்டு ஆர்வலர்களுக்கும், அச்சிட்டு உதவிய கௌரி அச்சகத்தினருக்கும், நண்பர் எஸ். இராஜரட்ணம் அவர்களுக்கும், அட்டை அமைப்பிற்குப் பொறுப்பாய் செயலாற்றிய ஓவியர் இரா. சடகோபன் அவர்களுக்கும், கணனி வடிவமைத்த சிந்தியா, சோபனா ஆகியோருக்கும் எமது நன்றிகள்.


தேசிய கலை இலக்கியப் பேரவை

44, மூன்றாம் மாடி
கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத்தொகுதி
கொழும்பு -11.

----------------------------------------------------------------------------


மதிப்புரை

இலங்கையின் நவீன நாடக இயக்கத்துடன் கைகோத்தவாறே நாட்டுக் கூத்து மோடிகள் பற்றிய விழிப்பும் 1970 களில் விருத்தி பெற்றது. இது வரலாறு, இந்த விழிப்பு, தமிழ் நாடகத் துறையிலே சில முன்னெடுப்புக்களை அறிமுகம் செய்து வைத்தது.

நாடகமும் அரங்கியலும் ஒரு கற்கை நெறியாக மலர்ச்சி பெற்ற காலகட்டங்களில், தமிழ்க் கூத்துக்கள் மீது அக்கறை கொண்டவர்கள் இரு வேறு போக்கிலே அவற்றை அணுகலாயினர். ஈழத்தின் பழைய கூத்துக்களைச் சுருக்கியும் உடுப்பு, வேடப்புனைவு, மேடையமைப்பு ஆகியவற்றிலே 'திருத்தங்கள்" செய்தும் அமைக்கும் முயற்சி ஒரு வகை. சு. வித்தியானந்தன் அவர்கள் இதில் முழுமூச்சாக முனைந்திருந்தார். சி. மௌனகுரு பக்கபலமாக நின்று உதவினார். புத்தாக்கத்திலே முதன்மையான அக்கறை பூண்ட சிலர், உத்திச் செழுமையின் பொருட்டு, கூத்துவழி வந்த மரபுக் கூறுகளைத் தம் படைப்புக்களிலே இடமறிந்து பயன்படுத்திக் கொண்டனர். இவ்வாறான செயற்பாடுகளினால், உடனிகழ்கால அக்கறை முனைப்புள்ள நாடகக் கலையிலும், நாட்டார் மரபுக்கூறுகள் கணிசமான பங்களிப்பினைச் செய்யக்கூடிய வாய்ப்பொன்று உருவாயிற்று.

இந்தப் புதிய வாய்ப்பினை இனங்கண்டு அதன் சாத்தியப்பாடுகளைப் பரிசீலனை செய்யும் ஆர்வமும் திறனும் கொண்ட ஒருவராகச் சிவசேகரம் அவர்களை நாம் இன்று அடையாளம் காட்டலாம். தமிழ் எழுத்துலகில் இவரை ஒரு விமரிசகராகவும், கவிஞராகவும், சமூக-அரசியல்-பண்பாட்டுப் பகுப்பாளராகவுமே நம்மிற் பெரும்பாலானோர் அறிந்துள்ளோம். முன்பெல்லாம் புலப்பட்;டு முனைப்பாகத் தோன்றாத ஒரு புதிய பரிமாணத்தினை இவர் தம் துணைவியாருடன் இணைந்து வெளியிட்ட ‘பாட்டும் கூத்தும்’ என்ற புத்தகம் நமக்கு உணர்த்தி வைத்தது. அது சிறுவர் சிறுமியர்க்கான நாடகங்கள் சிலவற்றைக் கொண்டதாய் விளங்கிற்று. அதிலே நாட்டார் கூத்து மரபுகளும் இடையிடையே கையாளப்பட்டிருப்பதை நாம் கண்டோம். இப்பொழுது, ‘கிட்கிந்தை’ என்னும் நாடக நூல் வெளியாகிறது. இதிலே, கூத்து மரபுகளை ஊன்றிய அக்கறையுடன் பழக்கப்படுத்தி, அவற்றைப் பயின்று பயன் கொள்ளும் கலை உந்தலை நாம் மேலும் தெளிவாகவே சிவசேகரத்திடம் காணுகிறோம்.

‘கிட்கிந்தையின்’ நோக்கம் ‘அயலார் வருகை’ பற்றிய ஒரு பரிசீலனை; மூன்றாம் தரப்புக் குறுக்கீடு பற்றிச் சில வினாக்களை எழுப்புவது. எனவே தான், ‘அவையோர் வணக்கம், தொட்டுக்கும்பிடு, காப்பு, கிட்கிந்தை வாழ்த்து ஆகிய முகப்புப் பகுதிகளைத் தொடர்ந்து வரும் ‘தோடையத்தில்’ “சொல்வம் ஒரு சேதிஃகொள்மின் அதன் நீதி” என்று அழுத்தம் திருத்தமாக எடுத்துரைக்கப்படுகின்றது. கூத்தர்கள் தாம் ஆடும் இந்தக் கூத்து வாயிலாகச் சொல்ல முற்படும் ‘நீதி’ தான் யாது?
“அண்ணன் தம்பி பகைதனிலே / அந்நியரின் தலையீடு / வந்திடுதல் வெகு தீது” என்பதுதான் அந்த நீதி.

இதனை இக்கூத்து எவ்வாறு உணர்த்தி வைக்கிறது? இராமாயணத்தில் வரும் வாலி-சுக்கிரீவன் முரண்பாட்டில், தம்பியாகிய சுக்கிரீவன் சார்பாக நின்று வாலியை இராமன் வதைத்த கதைப்பகுதிக்குப் புதியதொரு வியாக்கியானத்தைத் தருவதன் வாயிலாகச் சிவசேகரம் இதனைச் சாதித்துள்ளார். இராமாயணத்தில் ‘வாலி வதை’ என்பதன் நியாய-அநியாயங்கள் கம்பன் முதலான காவிய கருத்தாக்களுக்குக்கூட, பலவாறு பார்க்கப்படக் கூடிய ஒரு பிரச்சினையாக விளங்குவதை நாம் காண்கிறோம். எனவே தான், பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்கள், சுழலும் சொற்போர்கள் என்றெல்லாம் நூற்றுக் கணக்கான அலசல்கள் இது வரை எங்கள் இலக்கிய மேடைகளில் இடம் பெற்றிருக்கின்றன. அதாவது, புராண இதிகாச காப்பிய உலகில் இடம் பெற்றுள்ள சிக்கல் மையங்களில் ஒன்றாக, ‘வாலி வதை’ விவகாரம் அமைந்துள்ளது.

இந்த மையத்தினைப் புதியதொரு கோணத்தில் அணுகுவதன் வாயிலாக, நமக்கு மிகவும் நெருக்கமாயுள்ள பிரச்சினை ஒன்றின்மீது, ‘வேறான நோக்கும் வெளிச்சமும்’ படும்படியாக, சிவசேகரம் இந்தக் கூத்தினை இயற்றியுள்ளார். இதிற் காட்டப்படும் இராமனுடைய ‘அறம்’ அவனுடைய தேவையிலிருந்து எழுகிறது. இன்னும் சரியாகச் சொல்லப்போனால், இலங்கைப் படையெடுப்புக்கு யாருடைய உதவி உகப்பானதாய் அமையும் என்ற ஒரே ஒரு கேள்விதான் இராமனுக்கு முக்கியமாகிறது.

நாடகத்தில் மூன்று காட்சிகள் வருகின்றன. முதலாவது, இராம-இலக்குமணர் அனுமனைச் சந்திப்பது; இரண்டாவது, சுக்கிரீவனை அனுமன் சந்தித்துச் சேதி சொல்வதும் சுக்கிரீவன் தன்னவர்களான அனுமன், சாம்பவன், நீலன் ஆகியோருடன் ஆலோசனை கலப்பதும்; மூன்றாவது, இராமனும் இலக்குமணனும் தாம் செய்யக் கருதும் ‘வாலி வதை’ பற்றி யோசிப்பதும் அதன் நலந்தீங்குகளைச் சீர்தூக்கிப் பார்ப்பதும் வாலியை மறைந்து நின்று கொல்ல முடிவுசெய்வதும், இவற்றுள் முதலாவது காட்சி கள நிலைமையை எடுத்து விளக்குவது. இரண்டாவது காட்சியிலே சில வாக்குவாதங்களும், ஐயங்கள், நியாய அநியாயங்கள், நய நட்டங்கள் பற்றிய சர்ச்சைகளும் இடம்பெறுகின்றன. இந்த வகையில், இரண்டாம் காட்சியே நாடகத் தன்மைக்கு அதிக இடம் தருவதாயும் பார்வையாளரின் சிந்தனைக்கு இரை தருவதாயும் உள்ளது. நாடக உள்ளடக்கம், பிரதானமாக பாட்டு வடிவில் அமைந்த உரையாடல்களின் வாயிலாகவே உணர்த்தப்படுகிறது. (இது கூத்து ஆகையால், பாட்டுகளுக்குத் தோதான ஆட்டங்களும் இடம்பெறும் என்பது வெளிப்படை.) கூத்தாட்டத்தை அரங்கிலே காண்போர் தான், அந்த ஆட்டங்களின் பொருத்தப்பாட்டையும் அவை கூத்தின் முழுமைக்கு எவ்வாறு பங்களிக்கின்றன என்பதையும் தீர்மானிக்கக் கூடும். அது ஆற்றுகை பற்றிய தீர்மானிப்பாகும்.

புத்தகமாக இப்பொழுது வரும் சுவடியை நோக்கும் போது, முதற் காட்சியில் வரும் இராமனின் நோக்கும் இரண்டாவது காட்சியில் வரும் சுக்கிரீவனின் நோக்கும், நீலன், சாம்பவன் நிலைப்பாடுகளும், மூன்றாம் காட்சியில் வரும் இராமன் கூற்றுகளும் இறுதியில் வரும் விருத்தங்களும் கவனிக்கத்தக்கன.

முதலாம் காட்சியில், கிட்கிந்தைச் சூழலை விசாரித்து அறிந்து கொண்ட இராமன் என்ன சொல்லுகிறான்? “வாலியுடன் நாங்கள் போர் தொடுப்போம்-நீவிர் / ஆள ஒரு வழி வகுப்போம் - ஆயின் / கூலியென நீர் எமக்கே- தேடும் / லங்கை வழி நடப்பீரோ” தான் செய்யும் உதவிக்கு, இன்ன இன்னபடி கூலி தரவேண்டும் என்று பேரம் பேசுகிறான். அதாவது, குரங்குகளைக் கூலிப்படையாக்கி இலங்கைக்குக் கொண்டு போகும் நோக்கம் இங்கு வெளிப்படுகிறது.

அடுத்த காட்சியில், சுக்கிரீவனின் கேள்விகள் எப்படிப்பட்டவை என்பது கவனிக்கத் தக்கது. இராம-இலக்குமணரின் தகுதிகள் பற்றியவை, அந்த வினாக்கள். “நல்லவர் தாமோ நட்புடையோரோ / நம் பகை சாய்க்கும் திறலுடையோரோ..../ தம் நலன் பேண வந்தவர் தாமோ / நம்மிடம் எதனை நாடுகின்றாரோ” என்றவாறு அந்தக் கேள்விகள் அமைகின்றன. ஒவ்வொரு தரப்பாரும் தத்தம் நலன்களில் அக்கறை கொண்டோராய் இருப்பார்கள். அது இயல்பு தான். ஆனால், நீலன் எழுப்பும் வினாக்கள் சில, நியாயமான ஐயங்களின் அடியாகத் தோன்றுகின்றன. “வல்லமை கூறிடும் அந்நியர்-நமை/ வந்து நயந்துரை பேசுவார்/ சொல்லில் மயங்கிடல் ஞாயமோ”- ஏமாற்றப்படக் கூடாது என்ற அக்கறையினால் எழுவது இந்த வினா. “அந்நியர் புகுந்தபின் விளைந்திடும் பிழை பல/ புகுந்தபின் தடுத்திட வழியிலை அறிவிரே” என்ற நீலன் கூற்றும்,
அந்நியர் தயவிலே ஆள வந்தவர்
என்றுமே பணிந்தடி பேண நேருமே”
என்ற சாம்பவன் கூற்றும் சுக்கிரீவனுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கைகள்.

ஆனால், சுக்கிரீவன் அந்த எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தவில்லை. அவன் இராமனைச் சரணடைந்து அவன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கிறான். இராமனின் உதவி தன் பக்கம் உள்ளது என்ற துணிவோடு அண்ணன் வாலியை மற்போர் புரிய வருமாறு அறைகூவல் விடுக்கிறான். சூதறியாத வாலி, சுக்கிரீவனுடன் மற்போர் புரிகிறான். அப்பொழுது மறைந்து நின்று அம்பெய்கிறான் இராமன்.
“ஆளுடன் ஆள் மோதுகையில் மறைந்து நின்றே
அம்பெறிந்து வாலி உயிர் ராமன் கொண்டான்
கீழான செயலிதனைத் தருமம் என்றே
கூறுகிற கதையினிலே நீதி இல்லை”
இது தான் இந்தக் கூத்தின் நிலைப்பாடு.

சுக்கிரீவன் தான் ஆட்சிபீடம் ஏறும் பொருட்டு அன்னியரான இராமன் தரப்பாரின் சதி வாயிலாக வெற்றியினை ஈட்டிக் கொண்டான். தான் பெற்ற வெற்றிக்குக் கூலியாக, இலங்காபுரியில் இடம்பெற்ற இராம-இராவண யுத்தத்திலே, தன் நாட்டின் மைந்தர்களை - வானரர்கள் என்று இழித்துரைக்கப்பட்ட அந்தப் போராளிப் பெரும் படையை பலிகொடுத்தான்.
“என்றேனும் அயலவரின் தயவில் ஆண்டோர்
தீங்கன்றி மக்களுக்குச் செய்த தென்ன?”
ஒன்றும் இல்லை. இது தான் ‘கிட்கிந்தை’ என்னும் கூத்து வாயிலாகச் சிவசேகரம் சொல்லியுள்ள ‘சேதி.’ இந்தச் செய்தியை எடுத்துக் கலாபூர்வமாகத் தெளிவு படுத்துவதே இங்கு நாடகாசிரியரின் நோக்கம் என்பது கவனிக்கத்தக்கது.

இந்தக் கூத்தினைச் சிவசேகரம் முதலிலே உரை நாடக வடிவிலும் பின்னர் பாநாடகமாகவும் எழுதுவதற்கு முயன்றுள்ளார். இப்பொழுது இதனைக் கூத்து வடிவில் அமைத்துள்ளார். அவ்வாறு அமைந்த இக்கூத்துக்கு ஒரு மேடையேற்றமும் நடந்தேறியுள்ளது. இக்கூத்தின் உரிப்பொருள் இவர் தம் உள்ளப் புலத்திலே கணிசமான அளவு காலம் கிடந்து வளர்ந்து வெளிப்பட்டுள்ளது. நெடுநோக்குள்ள கலைஞர்கள் இவ்வாறான நெடிய ‘அடைகாப்பு’க்களைச் செய்து பார்ப்பது இயல்பு. தமக்கு முழுமையான மனநிறைவு வரும் வரையில் அவர்கள் முயன்றுகொண்டே இருப்பார்கள் என்பது அனுபவ சித்தாந்தம்.

கலையம்சம் தொடர்பான இந்தச் சித்தாந்தங்களுக்கு அப்பால், தாம் சொல்ல வரும் ‘நீதி’ பற்றிய பெறுமதி உணர்வும் இப்படிப்பட்ட பரிசோதனைகளுக்கு ஏதுவாகிறது.

‘வெளியார் குறுக்கீடு’ என்ற பண்டம் பற்றிய பரிசீலனைகள் இன்னும் பற்பல தளங்களிலும் களங்களிலும் வைத்து மீண்டும் மீண்டும் செய்யப்பட வேண்டியவை. இதனை நாம் நிகழ்கால வரலாறு என்னும் ஆசானிடம் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறோம்.

இதனை ஒத்த புத்தாக்கங்களைச் சிவசேகரம் இன்னுமின்னும் நமக்குத் தருவார் என்பது உறுதி.


இ. முருகையன்

-----------------------------------------------------------

அயலார் மீளவும் நுழைவாரோ?

1982ம் ஆண்டளவில் என்று நினைவு. பேராதனை எந்திரவியற்பீடத்தின் அரங்கில் நாடகமொன்றை நடத்த அவைக்காற்றுக் கலைக் கழகத்தினர் வந்திருந்த வேளை. மேடைத் தயாரிப்புக்கு ஒரு சில உதவிகள் தேவைப்பட்டதால் அவற்றுக்கு ஒழுங்கு செய்துகொண்டிருந்தேன். இந்தியாவின் குறுக்கீட்டின் மூலம் தமிழீழத்தை வெல்லலாம் என்ற நப்பாசை கணிசமானவர்களிடையே தோன்றியிருந்த காலமும் அது. திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. நாடகம் முடிந்த பின்பு அவைக்காற்றுக் கலைக் கழகத்தில் முக்கியமான ஒரு உறுப்பினரான நிர்மலாவிடம் ‘வாலி-சுக்கிரிவன் சண்டையால் லாபம் அடைந்தவன் ராமன் தானே. இதை மையமாக வைத்து ஒரு நாடகம் தயாரித்தால் என்ன?’ என்ற யோசனையை முன் வைத்தேன். நல்ல யோசனை தான் என்றாலும் யார் எழுதுவது என்ற அளவில் அது கைவிடப்பட்டது. அதன் பின்பு நாட்டிற் பலதும் நடந்து விட்டது.

இலங்கை-இந்திய ஒப்பந்தம் 1987ல் கைச்சாத்திடப்பட்டபோது நான் லண்டனில் இருந்தேன். வாலி-சுக்கிரிவன் சண்டை மனதில் வந்து போகிற விதமாக, இயக்கங்களிடையிலான மோதல்களும் தேசிய இனப்பிரச்சினையும் பற்றிய செய்திகள் அதன் பின்னும் வந்தபடியே இருந்தன. எனினும் நாடகச் சுவடி ஒன்றைத் தயாரிப்பதற்குப் போதுமான ஆர்வமோ ஆவலோ என்னிடம் இருக்கவில்லை. பாலேந்திரா கேட்டுக் கொண்டதற்கு இணங்கச் சிறுவர்கட்கான நாடகச் சுவடி ஒன்றைத் தயாரித்த பின்பு, 1995 அளவில் வாலி-சுக்கிரிவன் சண்டை பற்றிய கதையை ஒரு பா நாடகமாக எழுத யோசித்தேன். வாலிக்கும் சுக்கிரிவனுக்கும் இடையில் உள்ள மோதலை அனுமன் மூலமாக அறிந்த ராமனும் இலக்குமணனும் யார் தரப்பில் தலையிடுவது என்று தம்முள் வாதிப்பதையும் இலக்குமணரின் ஆதரவைப் பெறுவதன் நன்மை தீமைகளை சுக்கிரிவன் அவையில் விவாதிப்பதையும் ராமாயணத்தில் தரப்பட்ட கண்ணோட்டத்திலிருந்து விலகி நின்று வழங்குவதே நாடகத்தின் சாராம்சம்.

என்னுடைய ராமன், அவதாரம் அல்ல. கவர்ந்து செல்லப்பட்ட தன் மனைவியை மீட்கப் படை உதவி தேடும் ஒரு இளவரசன். ராமனுடைய அறம் ராமனுடைய தேவையிலிருந்து எழுவது. வாலி-சுக்கிரிவன் மோதலின் சரிபிழைகளை விட, சுக்கிரீவன் பாதிக்கப்பட்ட தரப்பினன் என்பதே பிரச்சினைக்கு மையமாகிறது. தாம் இழந்ததைப் பெறுவதற்காக இருவரிடையே ஏற்படும் இணக்கத்தின் அடிப்படைகள் வேறுபடுகின்றன. முரண்படுகிற இரு சகோதரரின் அலுவலில் வலிய ஒரு அயலவனின் குறுக்கீடாகவே வாலி-சுக்கிரீவன் மோதலில் ராமனின் தலையீட்டை நான் காண்கிறேன். அனுமன்-ராமலக்குமணர் சந்திப்பு, சுக்கிரீவன் அவையில் விவாதம், ராமலக்குமணர் விவாதம் எனும் மூன்று காட்சிகள் கதையைக் கூறுகின்றன.

அன்று எழுதிய போது, இயக்க மோதல்களையும் தமிழ்-முஸ்லிம் மோதல்களையும் பேரினவாத அரசு தனக்குச் சாதகமாகப் பாவித்த சூழலும் இந்தியா இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையில் குறுக்கிட்டதும் மனதிற்கு வர இடமிருந்தது. இன்று அமெரிக்கா பற்றிய எண்ணம் மனதில் ஓங்குகிறது. உண்மையில், இந்த நாடகக் கருத்து உலகின் எத்தனையோ நாடுகளில் உள்ள அகமுரண்பாடுகளில் அயலார் தலையீட்டின் விளைவுகள் பற்றிய ஒரு விளக்கமாகவே தோன்றுகிறது.

1995ல் மீளவும் இலங்கையில் போர் உக்கிரமடைந்த பின்பு, மூன்றாந்தரப்புத் தலையீடு பற்றிய பேச்சுக்கள் தோன்றியவாறே இருந்தன. எனவே எனது சுவடியை நாடகமாக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. அவைக்காற்றுக் கலைக்கழகத்தினர் அதைச் செய்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் இசை நாடகம் அவர்களது வாய்ப்பு வசதிகட்குட்பட்ட ஒன்றாக இருக்கவில்லை. எனினும், ஒரு பிரதியை நண்பர் பாலேந்திராவின் பார்வைக்காக அனுப்பி வைத்தேன். இன்னொரு பிரதியைக் “களரி” என்ற அமைப்பை வழிநடத்தி வந்த நண்பர் தாஸீஸியஸிடம் அனுப்பி வைத்தேன். சில காலம் கழித்துத் தாஸீஸியஸிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ‘பாட்டு நன்றாகத் தான் இருக்கிறது, ஆனால் ஆட்டத்துக்கு இடமில்லையே’ என்றார். அதன் பிறகு அவரை அவரது பணிமனையிற் சந்தித்துச் சுவடியைக் கூத்துக்கு ஏற்றபடி மாற்றி அமைக்கும் முயற்சியில் இறங்கினேன்.

அது வரை கூத்து பற்றி எனக்கிருந்த அறிவு பூச்சியம் எனலாம். தாஸீஸியஸுடனான ஒவ்வொரு சந்திப்பும் கூத்துப் பற்றிய எனது அறிவில் ஒரு பெரும் வளர்ச்சியாக அமைந்தது. கூத்து மெட்டுக்களைப் பிடித்துக் கொள்வதிலோ சந்தம் பிசகாமல் எழுதுவதிலோ எனக்குச் சிரமம் இருக்கவில்லை. என்றாலும் கூத்துப் பாட்டுக்கட்கு ஏற்றவிதமாக எழுதுவதற்குச் சில மேலதிகமான நிபந்தனைகளையும் சேர்த்தே பாடல்களை அமைக்கவேண்டியிருந்தது. என்னுடன் இருந்து, பாட்டுக்களை தாஸீஸியஸ் பாடிப் பார்த்து உடன்பட்ட பிறகு, ‘அந்தச் சத்தம் இந்த இடத்துக்கு ஒத்து வராது’ என்று பாட்டை மாற்றிய சந்தர்ப்பங்கள் பல. சில சமயங்களில், தன் வாதத்தை நிலைநிறுத்தத் தாஸீஸியஸ் ஆடியும் காட்டுவார்.

மட்டக்களப்புக் கூத்து, மன்னார்க் கூத்து, யாழ்ப்பாணக் கூத்து, மலையகக் கூத்து, வன்னிக் கூத்து என்றெல்லாம் வகை பிரிக்காமல் ஈழத் தமிழ்க் கூத்து என்ற ஒரு பார்வையுடன் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கூத்து மெட்டுக்களையும் விருத்தப் பா வடிவங்களையும் பயன்படுத்தி ஒரு பொதுவான கூத்து வடிவத்தை உருவாக்குவது நல்லது என்பது தாஸீஸியஸின் எண்ணம். எனவே இந்தச் சுவடியில் பல வேறு கூத்துக்களிற் பயன்பட்ட மெட்டுக்களின் அடிப்படையில் சந்த விருத்தப் பாடல்களும் எழுதப்பட்டுள்ளன. மலையகக் கூத்து மெட்டுக்களுடன் பரிச்சயமின்மை காரணமாக எதையும் உள்ளடக்க முடியவில்லை. அது மட்டுமன்றி, மன்னார்க் கூத்து மெட்டுக்கள் அதிகளவில் சேர்ந்துள்ளமைக்கு எனக்குக் கிடைத்த மெட்டுக்களில் அதிகம் பிடித்தமாயும் பொருத்தமாயும் அவற்றுட் பல அமைந்தமையே காரணம்.

சில கூத்துப் பாடல்கள் போகப், பெரும்பாலானவை பொதுவாகவே பலராலும் அடையாளங் காணப்பட இயலாதவை என்பதால் அப்பாடல்களைப் பேர்சொல்லி மெட்டுக்களை அடையாளப்படுத்துவது பயனற்றது என்றே நினைக்கிறேன். அது போக, நான் கருதியன அல்லாத மெட்டுக்களையும் போட முடியும் என்பதையும் கருத்திற் கொண்டு எனது ஆலோசனைகளை இந்தச் சுவடியில் முற்றாகவே தவிர்க்கிறேன். பாடல்களது சந்த ஒழுங்கு தெட்டத் தெளிவாகவே உள்ளதால் தாளக் கட்டுக்களை எழுத வேண்டிய தேவை இல்லை என்று நினைக்கிறேன். எவ்வாறாயினும் மெட்டுக்களைப் பரிந்துரை செய்யுமாறு எவரேன் வேண்டினால் அவற்றை வேறாக ஒலிப் பேழையிற் செய்து தரலாம் என்பது ஒரு யோசனை. இந்தச் சுவடியின் பகுதிகளைத், தாஸீஸியஸ், களரியின் கூத்துப் பட்டறை நிகழ்ச்சிகளின் போது பயிற்சிக்காகப் பாவித்தாலும், கூத்தாக மேடையேற்றுவதற்கான வசதி அவரிடம் இல்லாத போதே அவருடனான தொடர்பு எனக்கு ஏற்பட்டது என்பதால் லண்டனில் மேடையேற்றம் இயலாது போயிற்று.

இலங்கையில் இதை மேடையேற்றுவதற்கு நண்பர் தேவராஜா இருமுறை முயன்றார். முதன்முறை மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் சிலரைச் சேர்த்துச் செய்;ய எடுத்த முயற்சி அவர்களது நேரமின்மை போன்ற காரணங்களால் தவறிப் போயிற்று. அடுத்த முயற்சி, இரண்டு ஆண்டுகள் முன்பு கொழும்புப் பல்கைலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தினரின் வேண்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்டது. நேர அவகாசத்தைக் கணிப்பிலெடுத்துச் சுவடியைக் கணிசமாகச் சுருக்கி ஒத்திகைகள் தொடங்கியபோது, தேவராஜா யாழ்ப்பாணம் சென்று சில வாரங்கள் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவருக்கு உதவி தருவதற்காக வந்த நண்பர் பிரான்ஸிஸ் ஜெனம் நாடகம் பயிற்சிக்கான முழுப்பொறுப்பையும் ஏற்று மிகச் சிறப்பான முறையில் மாணவர்களைப் பாடவும் ஆடவும் பயிற்றுவித்தார். எனினும் மேடையேற்றத்தின் போது ஒலிபெருக்கி உபகரணம் செயற்படாததால் அவரதும் மாணவர்களதும் கடும் முயற்சி பயனிழந்தது. எனினும் அதனால் அவையில் ஏற்பட்ட சலசலப்பின் நடுவிலும் மாணவர்கள் அச் சலசலப்பாற் சிறிதும் பாதிக்கப்படாமல் பாடி ஆடிச் சென்றதை என்னாற் பாராட்டாமல் விட இயலாது.

இந்தச் சுவடியின் சமூக-அரசியல் முக்கியத்துவம் இது பற்றி இருபது ஆண்டுகள் முன்பு மனதில் யோசனை எழுந்த போது இருந்ததை விட, இதைத் தாஸீஸியஸ{டன் அமர்ந்து ஒவ்வொரு பாட்டாக வாசித்துச் செப்பனிட்ட போது இருந்ததை விட, இதன் முதலாவது மேடையேற்றத்தின் போது இருந்ததை விட, இன்று மிக அதிகமாக உள்ளது. எனவே தான் இது மேடையேறுவதும் வாசிப்புக்காக மக்களைச் சென்றடைவதும் முடிந்தால் ஒலிப் பேழையாகத் தயாரித்து விநியோகிக்கப்படுவதும் நல்லது என்று தேசிய கலை இலக்கியப் பேரவையில் உள்ள நண்பர்கள் சொன்னதை ஏற்று, இதை நூலுருவாக்குவதற்கான முயற்சியில் என் பங்கைச் செலுத்துகிறேன். இச் சுவடி, கலை-இலக்கியப் படைப்பாக மட்டுமன்றி ஒரு சமூக-அரசியற் கூற்றாகவும் வாசிக்கப்பட்டு விமர்சிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன். இதை இதன் இன்றைய வடிவில் நூலாக்குவதற்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள் தாஸீஸியஸ், தேவராஜா, பிரான்சிஸ் ஜெனம், சிவஜோதி, கொழும்புப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்க மாணவ நண்பர்கள் ஆகிய அனைவருக்கும் என் நன்றிகள்.


சிவசேகரம்
02.04.2002.

------------------------------------------------------------------------------

காட்சிகளும் பாடல்களும் படங்களும்
பற்றிய சில குறிப்புக்கள்

காட்சிகள்

கதைமாந்தர் வரவு

இப்பகுதியில் கூத்து மரபுக்குரிய அவையோர் வணக்கம், தொட்டுக் கும்பிடு, காப்பு என்பன தொட்டுத் தோடையம் வரையிலான பகுதிகளைக் கையாள்வதில் மரபு சார்ந்த பாடல் முறைகள் அல்லது சற்று நவீனமான முறையில் அமைந்த பாடல் வடிவங்கள் பயன்படலாம். கிட்கிந்தை வாழ்த்து ஆட்டத்துக்கும் பொருத்தமானது.

அனுமன் பாத்திரம் ஓரளவுக்குக் கட்டியக்காரனது பாங்கிலேயே முதலில் அமைகிறது. கதை மாந்தர் அனைவரும் அனுமனால் அறிவிக்கப்படுகின்றனர். அடுத்து வரும் பாத்திரங்கள் அனுமனுடன் உள்ள உறவின் அடிப்படையிலேயே தம்மை அறிமுகப்படுத்துகின்றனர். பிற்பகுதியில் உள்ள பாடல்கள் பெரும்பாலும் ஆட்டத்துக்கு ஏற்ற சந்தத்திற்கே எழுதப்பட்டுள்ளன. பாத்திரங்களின் குண இயல்பைப் பாடல்களின் சொற்களும், மெட்டும், ஆட்டமும் அவையோருக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்பதே பிற்பகுதியின் நோக்கமாகும்.

காட்சி 1

அனுமன், கிட்கிந்தைக்கு வெளியே மாதங்க மலைப் பகுதியில், சுக்ரீவனுக்காகக் காவலுக்கு நிற்கிறான். அயலில் வரும் எவரையும் தடுத்து மறிப்பதே அவனது நோக்கம். எனவே ராம லக்குமணர் அவ்விடம் வரும்போது அவர்களை மறிக்க முற்படுகிறான். (இது மூலக்கதையினின்றும் ஒரு முக்கியமான விலகல். இதன் அடிப்படையிலேயே மற்ற இரு காட்சிகளையும் அமைக்க இயலுமாகிறது).

அனுமன் ராம லக்குமணரை மறிக்க முற்படும் போது நிகழும் உரையாடலின் மூலமே ஒருவரை ஒருவர் அறிய முடிகிறது. பகைமையாகத் தொடங்கும் உரையாடல் ஒரு நட்புக்கான அத்திவாரமாக முடிகிறது. லக்குமணன் அனுமனில் ஒரு எதிரியைக் காண, ராமன் அனுமனில் ஒரு கூட்டாளியைக் காண முடிவது காரணமாக, மூன்று பாத்திரங்களுக்கும் இடையே மும்முனை மோதலாகப் பாடல்கள் அமைகின்றன. ராமனுடைய பாட்டும் ஆட்டமும் தன்மை வழமையாகவும் லக்குவனுடையவை முன்கோபிக்கு உரியனவாகவும் அனுமனுடையவை உள்ளே நிச்சயமின்மையுடன் வெளியே வீறாப்புப் பேசுகிற ஒருவனுடையனவாகவும் அமைவது பொருத்தமாயிருக்கும்.

காட்சி 2

இக்காட்சி, சுக்கிரீவனது அவையில் நிகழ்வது. அவளது மலையோரத்து இருப்பிடம் ஒரு அரண்மனையாக இல்லாவிடினும் அரசவைக்குரிய முறையிலேயே பாத்திரங்கள் நடந்து கொள்கிறார்கள். சுக்கிரீவன் அரச மிடுக்குடன் அவையில் இருக்கையில் அங்கு ஓடோடி வரும் அனுமனைக் கண்டிக்கிறான். அனுமன் மன்னிப்புக் கோரித் தான் வந்த காரணத்தை விவரிக்கிறான். ராம லக்குமணரின் உதவி மூலம் சுக்கிரீவன் வாலியை வென்று மீண்டும் நாடாளலாம் என்ற ஆலோசனை குறித்து விவாதம் நடைபெறுகிறது.

சாதகமாக அனுமனும் பாதகமாக நீலனும் சாம்பவனும் வாதிடுகின்றனர். சுக்ரீவன் நடுநிலையில் தோன்றினாலும், உள்ளே அரசபதவி பற்றிய ஆவல் இருப்பதைப் பாடல் வரிசைகள் வலியுறுத்துகின்றன. இக்காட்சியும் ஒரு மும்முனைப் போராட்டமே. இது முன்னைய காட்சியை விட உக்கிரமான மோதலாக வேகமடைகிறது. இறுதியில் சுக்ரீவன் தன் அரச அதிகாரம் கொண்டு மற்றவர்களைத் தன்னுடன் உடன்படச் செய்கிறான். பாட்டும் ஆட்டமும் முன்னைய காட்சியைவிடத் தீவிரமான உணர்ச்சிகளைக் காட்ட இடமுண்டு.

காட்சி 3

இக்காட்சியில் ராமனும் லக்குமணனும் சுக்ரீவன் சார்பாக ராமன் குறுக்கிடுவது பற்றி விவாதிக்கின்றனர். சுக்ரீவன் வலிமையற்றவன் என்பதால் அவன் நட்பு பயனற்றது என்பது லக்குமணனின் வாதம். சுக்ரீவனின் பலவீனமே தனக்குப் பலமாகும் என்பது ராமனின் வாதம். இந்த விவாதம் இரு நண்பர்களிடையிலான சூடான விவாதமாகத் தொடங்கி இறுதியில் உடன்பாடாக முடிகிறது. ராமனுக்குக் கடமைப்பட்ட சுக்ரீவன் தனது நாட்டு மக்களை ராமனுக்காகப் போராட இலங்கைக்கு அனுப்ப நேர்ந்தது என்பதை இக்காட்சி வலியுறுத்துகிறது. அத்துடன் வழமையான மங்களம் தொடரத் தொட்டுக் கும்பிடலுடன் கூத்து நிறைவு பெறுகிறது.

பாடல்கள்

பாடல்கள் யாவும் பாடுவதற்கு வசதியான முறையில் தரப்பட்டுள்ளன. ஒன்றாகச் சேர்த்து வாசிக்க வேண்டிய பகுதிகள் ஒன்றாகத் தரப்பட்டுள்ளன. இதனால் இடையிடையே சொற்கள் இரண்டு பதங்களிடையே பிரிவுபட நேருகிறது. இது சுவடியை நாடக நூலாக வாசிக்க விரும்;புகிறவர்களுக்குச் சிரமம் தரும். எனவே, ஒரு பதத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களோ அல்லது ஒரு சொல்லும் இன்னொன்றின் பகுதியுமோ வரும் போது இடைவெளி விடப்பட்டுச் சொற்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இதனால் வாசிப்புக்கும் பாடலுக்கும் ஒரே சமயத்தில் வசதி உள்ளது என நம்புகிறோம்.

படங்கள்

அட்டைப் படமும் உள்ளே தரப்பட்டுள்ள படங்களும் “குரங்கு வெள்ளெலும்புப் பிசாசை வென்றது” என்ற சீனக் கதைக்காக வரையப்பட்ட படங்களிற் சில மாற்றங்கள் செய்து உருவாக்கப்பட்டவை. மூலப்படங்களை சாஓ ஹ{ங்-பென், சியென் ஷியாஓ-டாய் ஆகியோர் வரைந்தனர். அட்டைப்படத்திற்கு வண்ணந் தீட்டியவர் கவிஞரும் ஓவியரும் பத்திரிகையாளருமான இரா. சடகோபன் அவர்கள்.

-------------------------------------------------------------------------

கிட்கிந்தை

கூத்து மாந்தர்
ராமன்
லக்குமணன்
அனுமன்
சுக்கிரீவன்
நீலன்
சாம்பவன்

-------------------------------------------------------------------------

அவையோர் வணக்கம்
(வெண்பா)
நல்ல கதையொன்று நாமுவந்து நுங்களுக்கே
சொல்லவென வந்தோம் அவையோரே - கல்விமிக
வல்லீர் வழக்கறிவீர் வந்தெம் பிழைதாங்கி
நல்லனவே கொள்வீர்; நயந்து

தொட்டுக்கும்பிடு
தொட்டுக்கும்பிடு தொட்டுக்கும்பிடு
தொட்டுக்கும்பிடு தொட்டுக்கும்பிடு
தொட்டுக்கும்பிடு தொடர்ந்து கும்பிடு
தொட்டுக்கும்பிடு தொட்டுக்கும்பிடு

மானுடர் ஒற்றுமை யாலுயர் வுற்றிட
மானுடம் உய்வுற வே பணி செய்வரை
(தொட்டுக் கும்பிடு)

அன்னையர் தந்தையர் அன்பைக் கும்பிடு
உன்னை வ ளர்த்தமண் உய்திடக்; கும்பிடு
மன்னரை விட்டிட்டு மக்களைக் கும்பிடு
நன்மதி யாளரை நல்லோரைக் கும்பிடு
(தொட்டுக் கும்பிடு)
பாடுபடுந் தொழில் மாந்;தரைக் கும்பிடு
ஓடி வ ழிகிற வேர்வையைக் கும்பிடு
நீதிக்குப் போரிடுங் கைகளைக்; கும்பிடு
பேதமி லாத நன் நெஞ்சரைக் கும்பிடு
(தொட்டுக் கும்பிடு)

நல்ல இ யலிசை நாடகக் கூத்தினைச்
சொல்லு ச தங்கையை கைதொட்டுக் கும்பிடு
இன்னும் ப ணிவுடன் மேடையைக் கும்பிடு
அன்புமிகும் அவை மாந்தரைக் கும்பிடு
(தொட்டுக் கும்பிடு)
காப்பு
(அறுசீர்; விருத்தம்)
இந்தியத் துணைக்கண் டத்தின் இலக்கிய சாட்சி யென்ன
வந்ததோர்; ராம காதை வழங்கிடுங்; கதையுட் கண்ட
சிந்தனை ஒன்றை நாமும் சிறப்புடன் கூத்தில் இங்கு
தந்திடச் சான்றோர் போற்றும் தருமமெங் காப்புத் தானே


விருத்தம்
மாநகராங் கிட்கிந்தை மன்னன் வாலி மாயாவியாம் பகைவன் பின்னே சென்று
நாள்நகர்ந்தும் வாராமை கண்டு தம்பி
சுக்ரீவன் முடிசூடி ஆண்ட காலை
தானொருநாள் வாலிநகர் மீண்ட போது
நாடிழந்தான் நகரிழந்தான் சுக்கி ரீவன்
தானிழந்தான் தாரையெனுந் தாரந் தன்னை தோழருடன் வதிந்திருந்தான் மலையோ ரத்தே

தென்னிலங்கை மன்னவனும் சீதை யென்னும்
பெண்ணழகைக் களவாடிக் காவிச் சென்றே
தன்தேயம் போயினதால் எங்குந் தேடி
தம்பியிலக் குவனோடு திரியுங் காலை
சென்றதிசை சடாயுவெனும் நண்பன் கூற
தெரியாத ராவணனின் தேசந் தேடி
வந்தவழி நெடியமலைச் சாரல் தன்னை
வந்தடைந்த பின்நடந்த கதைநீர் கேண்மின்

சீரிலங்கை ராவணனின் நாடு காண
போர்முடித்துச் சீதையுடன் வீடு மீள
ஆரொருவர் துணையென்றே ராமன் தேடி
அண்ணனுடன் பகைகொண்ட சுக்கி ரீவன்
பாராள வகைசெய்வேன் என்று சொன்னான்
பக்குவமாய் மறைந்திருந்தே அம்பை எய்தான் பாராண்டான் சுக்ரீவன் ஆனால் நாட்டின்; புதல்வரெலாம் அந்நியர்க்காய் மாய்ந்தார் வீணே

கிட்கிந்தை வாழ்த்து
(பல்லவி)
கீர்த்தியில் மி குந்தநாடு - எனின்
கிட்கிந்தை யென்றுபாடு
(அநுபல்லவி)
வன்னமுகில் கண்டுமயில் வட்டமிட்டுத் தோகையெழ
மின்னுமணி நற்பரிசு பொங்குநதி அள்ளிவீச
(கீர்த்தியில் மிகுந்தநாடு)

நின்றுநிமிர்; கின்ற மலைக் குன்றுகள் வ ழிமறித்து
கொண்டலில் ம ழை பறித்துச் சிந்த நதி விம்மிப்பாய
(கீர்த்தியில் மிகுந்தநாடு)

கொம்பினில் அ ணிற்குலங்கள் கொஞ்சுகையிற் கண்டகிளி
சொன்னகதை கோகிலங்கள் சொந்தக்கவி செய்துபாட
(கீர்த்தியில் மிகுந்தநாடு)

வானுறையுந் தேவரெனும் வானவர்க் கி னியதென
காணுவர் பு கழுரைகள் கேட்டுச் சலிப் புற்றநாடு
(கீர்த்தியில் மிகுந்தநாடு)

வானவர் இ வரெனுஞ்சொல்; வாய்தவறி யாரியரும்
வானரரென் றே மொழிந்து வாலுமொன்று வைத்தவாறு
(கீர்த்தியில் மிகுந்தநாடு)
தோடையம்
அம்மையரே தந்தையரே அன்புடைய நண்பர்களே
செம்மைமிகு நாட்டினரே
சொல்வம் ஒரு சேதி
கொள்மின் அதன் நீதி

லங்கைநகர் ராவணனை ராமன்வெல்லத் துணைவேண்டி
சங்கைகெட மறைந்திருந்தே அம்பெறிந்த தறிவீரே
அங்கதன்பின் போரினிலே அந்நியர்பின் அனைவருமே
லங்கைசென்ற கதைதனிலே
சொல்வம் ஒரு சேதி
கொள்மின் அதன் நீதி

அந்நியரின் தயவினிலே ஆளவந்த குலத்தவரை
மந்திகளென் றிகழ்ந்தாரே நிந்தனையை அறிவீரே
அண்ணன்தம்பி பகைதனிலே அந்நியரின் தலையீடு
வந்திடுதல் வெகுதீது
சொல்வம் ஒரு சேதி
கொள்மின் அதன் நீதி

சின்னச்சின்ன மாற்றமென செய்தனவும் மிகவுளவே
என்னபிழை இருப்பினுமே எண்ணமதிற் பிழையிலையே
சொன்னபிழை சகிப்பீரே செய்தபிழை பொறுப்பீரே
அன்புடைய அவையோரே
சொல்வம் ஒரு சேதி
கொள்மின் அதன் நீதி

கதைமாந்தர் வரவு
அனுமன் வரவு
அழகுள்ள மலைமுகில் சூடும் - இந்த
அயல்வந்து திரிகின்ற அனுமனென் பேரே
பழகிட இனியவன் நானே - ஆயின்
பகைமுன்னே கனலென நின்றிடு வேனே
கிட்கிந்தை தேசத்து ராசன் - அந்த
சுக்ரீவற் கே நல்ல தாசனும் நானே
வாலியின் பகை வந்த தாலே - நாடு
விட்டொரு குன்றிடை வாழ வந் தோமே
(அழகுள்ள மலைமுகில் சூடும்)
தூதுகள் செல்லவும்; காவல்கள் செய்யவும்;
வாதங்கள் செய்யவும் வல்லமை உள்ளவன்
ஆள்நெறி போர்முறை அரசியல் கற்றவன்
தோள்வலி மிக்கொரு வாயுவின் புத்திரன்
(அழகுள்ள மலைமுகில் சூடும்)

கேடு நி கழ்ந்தது வாலியாம் - அண்ணன்
நாடு தி ரும்பிய காலையே
நாடியே வந்தது துன்பமே - நல்ல
கிட்கிந்தை மாநகர் நீங்கியே
ஓடிய சுக்ரீPவ ராசனே - அஞ்சி
இம்மலை தன்நிழல் நாடினான்
கூட அ னுமனும் நீலனும் - இன்னும்
சாம்பவ னும் துணை சேரவே
(அழகுள்ள மலைமுகில் சூடும்)

நாடு து றந்திட ஆணையே- கொண்டு
காடு ந டந்திடு வேளையே
கூட ந டந்துடன் வந்திடு - நங்கை
சீதையை ராவணன் கொள்ளவே
தேடிய லைகிற ராமனே - அங்கு
சேர்ந்தனன் தென்மலைக் குன்றமே
நாடுந் தி சைவழி காணவே - தம்பி
லக்குவன் நற்றுணை யாகவே
(அழகுள்ள மலைமுகில் சூடும்)
சுக்கிரீவன் வரவு
(சந்த விருத்தம்)
மாத மூன்று மாரி பெய்து மண் வ ளஞ் சி றந்திட
நீதி மிக்க ராச னென்று நாவ லர்கள் போற்றிட
நாத கீத ஓசை மேவ நடன மாதர் ஆடிட
பாத மீது பகைவர் சாரும் பெருமை யோடு ஆளுவேன்

நானு மெந்தன் நண்ப ரோடு நாடு நீங்கி ஓடவே
வானி றங்கி இடிய தொன்று வாலி யாக வந்ததே
மான மோடு போரில் வென்று மீள நாடு சேருவேன்
யானு மெந்தன் அரசு தன்னை உரிமை யோடு ஆளுவேன்

(தேர் வரவு)
விண்டுரைக்க வே கொடிய வார்த்தைபல வாலிசொல்லி
தண்டுதடி தானெடுத்து கண்டபடி தானடிக்க
பாடிப்பல பொய்புனையு பாவலர்கள் நாவலர்கள்
நாடிமிக நன்மைசொன்ன பேர்களெல்லாம் போயகல

வந்தான் வ னங்கடந்து வந்தான் - சுக்ரீவ ராசன்
வந்தான் வ னங்கடந்து வந்தான் - கிஷ்
கிந்தா நகரினின்று
நொந்தே மனமுடைந்து
வந்தான் வ னங்கடந்து வந்தான் - சுக்ரீவ ராசன்
வந்தான் வ னங்கடந்து வந்தான்

நீலன், சாம்பவன் வரவு
வாலியவன் தான்பறித்த வீடுதுணை மீடுபெற
மீளவும்தன் நாடுபுக ஏதுவழி என்றுரைக்க
நாலுவகை நீதியிடை நல்லவழி தான்வகுக்க
காலஇடச் சூழல்தமைக் கற்றறிந்து பாதைசொல்ல
நீலன் து ணையெனவே வந்தான்
வந்தான் வ னங் கடந்து வந்தான்
சாம்பவ னும் உடன் வந்தான்

வந்தார் வ னங்கடந்து வந்தார் - நீலன்
சாம்பவன்;; தாமிருவர் வந்தார்

அனைவரும் பாடல்
வந்;தோம் வ னங் கடந்;து வந்தோம்
வந்;தோம் ம லையடிக்கு வந்தோம்
வந்;தோம் மி க நலிந்;து வந்தோம்
வந்;தோம் உ யிர் பிழைத்;;து வந்தோம்

ராமன், லக்குமணன் வரவு
(அறுசீர் விருத்தம்)
தந்தையின் ஆணை கேட்டே தம்பியும் பின்னே சேர
தன்துணை சீதை யோடு சென்றவன் தாரந் தன்னை
மன்னவன் ராவ ணேசன்; தன்னுடன் கொண்டு போன
தென்னகர் தன்னை அந்த இருவருந் தேடு வாரே

(எண்சீர் விருத்தம்)
தந்தையுரை சிற்றன்னை வாயாற் கேட்டே
சீதையுடன் சீராமன் நாடு நீத்தே
பின்தொடர்ந்த தம்பியொடுங் காடு சேர்ந்தே
பதினான்கு ஆண்டுகளில் மீளும் முன்னே
மன்னவனாம் ராவணனும் கவர்;ந்தே போக
மறித்துதிரஞ் சிந்தியவன் வழியிற் கண்டே
சொன்னதிசை தன்னிலெழிற் தென்னி லங்கை
தேடியொரு மலைச்சாரல் நாடி னாரே

ராமன் வருகை
(அறுசீர் விருத்தம்)
தென்னவன் ராவ ணேசன் தன்துணை கவர்ந்து செல்ல
அன்னவன் உறையும் ப10மி அதனையே அறிந்து சென்று
இன்னல்கள் வென்று லங்கை அடைவதே நினைவு மாக
மன்னவன் மைந்தன் ராமன் வருகிறான் அவையிற் தானே
வருகிறான் ராமன் - வனத் திடை
வருகிறான் ராமன்
(வருகிறான் ராமன்;)
தென்னிலங்; கை ராயன் சீதையு டன்சென்ற
நன்னகர் சென்றிடும் பாதை அ றிந்திட
(வருகிறான் ராமன்;)
இன்னல் இ டர் வென்று லங்கை பு குந்திட
சென்று வ ர வழி சொல்லுந் து ணை பெற
(வருகிறான் ராமன்;)
வந்தவன் கையிலே கோதண்ட வில்லொலி
அந்தர மேகத்தை ஆட்டி ந டுக்கிட
(வருகிறான் ராமன்;)
மின்னலி டியொடு வில்லில் மி தந்திட
கங்கை க டந்தவன் இந்த அ வை முன்னே
(வருகிறான் ராமன்;)
லக்குமணன் வருகை
அன்னையெனுங் கைகேயி அண்ணனவன் முடிபறிக்க தென்னிலங்கை ராவணனும் சீPராமன் துணைபிரிக்க
இன்னுமவன் பொறுக்கின்றான் இளையவனோ கொதிக்கின்றான்
என்னவிதம் நிகழ்ந்தாலும் இணைபிரியாத் துணைவனென
இலக்குவன் வந்தான் - அவை முன்னே
இலக்குவன் வந்தான்
இந்த அ வையிடை அண்ணன் து ணையென
வெந்துயர் தன்னிலே ஆறுதல் தந்திட
(இலக்குவன் வந்தான்)
அண்ணன் து யரிலும்; பங்கு த னதென
எண்ண ம னைத்துமே அண்ணன் ந லனென
எந்தப் ப கைவரும் அஞ்சி ந டுங்கிட
வந்து ப டமெழச் சீறும் அ ரவென
(இலக்குவன் வந்தான்)
காட்சி 1

விருத்தம்
தம்முயிர் காக்க வேண்டி தாம்மறைந் துறையு குன்றை
அண்டையைக் காவல் செய்ய அரணென அனுமன் நின்றே
தென்திசை தேடி வந்த இருவரை அயலிற் கண்டே
அண்மினன் நெஞ்சில் அச்சம் ஒருபுறம் ஒதுக்கி வைத்தே

அனுமன்
(சந்ததம்)
வாலியின் ஒற்றரை நீள ம றித்தொரு
காவல் பு ரிந்திருப்பேன்;
நாலு பு றத்து நள் ராப்பொழு தாயினுங்
கண்கள் தி றந்திருப்பேன்
காசு ப ணம் பெறக் காட்டிக் கொ டுப்பவர்
நேச மொ ழி சொல்லி நாசம் வி ளைப்பவர்
(வாலியின் ஒற்றரை)
எந்தன் அயலினில் வந்து தெ ரிகிற
அந்நியர்தா மெவரோ
சொந்தம் உறவறு சாமிக ளோ இல்லை
தேசசஞ் சாரிகளோ
சிந்தை கு ழம்பித்தம் சொந்த ம திகெட்டு
இந்தத் தி சைவழி வந்து த றிகெட்டு
(எந்தன் அயலினில்)

வந்த வ ழி தடு மாறிய லைகிற
காரணஞ் சொல்லுவரோ
அந்தக் கொ டியவன் வாலியின் ஒற்றரும்
மெய்யினை ஓதுவரோ
இந்த இ ருவர்தம் சொந்தம் உறவயல்
வந்த தி சைவழி மெய்யினை யென்னிடம்
(வந்த வழி)
விருத்தம்
தென்னவன் ஆளி லங்கை தேடியே வந்த ராமன்
தன்னருந் தம்பி யோடு தன்துயர் பேசு வேளை
அன்னவன் இளவல் நல்ல ஆறுதல் மொழிகள் சொல்ல
அன்னவர் தம்மை மெல்ல அனுமனும் அணுகு வானே

ராமன்
சீதையைக் க வர்ந்து சென்ற ராவணனின் நாடிலங்கை
சேருவது எந்த விதம் தம்பி தம்பி - சென்று
சேருவது எந்த விதம் தம்பி தம்பி
மாதினைச் சி றைப் பிடித்த மன்னவனின் சேனைதன்னை
மீறுவது எந்த விதம் தம்பி தம்பி - தடை
மீறுவது எந்த விதம் தம்பி தம்பி

லக்குவன்
நீளமதில் கள் தகர்க்க தோளுறையில் அம்பிருக்க
வாடுவது எந்த விதம் அண்ணே அண்ணே - மனம்
வாடுவது எந்த விதம் அண்ணே அண்ணே
சூழுகடல் கள் கடக்க நெஞ்சினில் உ ரம் இருக்க
கேடுவரல் எந்த விதம் அண்ணே அண்ணே - ஒரு
கேடுவரல் எந்த விதம் அண்ணே அண்ணே

ராமன்
தென்னிலங்கை ராவணனின் தேசமது உள்ளவிடம்
தேடுவது எந்த விதம் தம்பி தம்பி - வழி
தேடுவது எந்த விதம் தம்பி தம்பி
மன்னனந்த ராவணனின் மாபெரிய சேனை கண்டு
மீளுவது எந்த விதம் தம்பி தம்பி - வென்று
மீளுவது எந்த விதம் தம்பி தம்பி

லக்குவன்
தூதனுப்பி ராவணனை போரிடுத லைத் தவிர்க்க
சூது செய்ய மாட்டோமோ அண்ணே அண்ணே - நல்ல
சூது செய்ய மாட்டோமோ அண்ணே அண்ணே
மோதலைத் த விர்த்திடுதல் ஆவதில்லை என்று வரின்
போரிடுதல்;; ஏலோமோ அண்ணே அண்ணே- கடும்
போரிடுதல் ஏலோமோ அண்ணே அண்ணே

அனுமன்
ஐயகோ. யார்; இவர்;கள்? பார்த்தால் அந்நியர் போலவே தெரிகிறது. வாலியின் ஓற்றர்களா என எவ்வாறு அறிவேன். அவ்வாறு இல்லாவிடினும் இவர்;களது நோக்கத்தை எவ்வாறு அறிவேன். மிரண்டால் ஒரு வேளை மீறுவார்கள். மிரட்டினால் ஒரு வேளை மோதவும் வருவார்கள். எனவே கொஞ்சம் நயமாயும் கொஞ்சம் பயமாயும் பேசித் தான் பார்ப்போமே.

வந்தவர் ஆரென்று கூறுக - நீர்
வந்ததன் எண்ணமும் ஓதுக - கிஷ்
கிந்தையின்; வாலியின் தூதரே - எனின்;
வந்த வ ழி விரைந் தோடுக
லக்குவன்
சொந்தம்; உ றவுகள் கூறவோ - கந்தல்
சொத்தையி டங் கதை பேசவோ - இவன்;
நிந்தை மொ ழிகளைக் கேட்கவோ - இந்த
நீசனை இங்கிருந் தோட்டவோ
ராமன்
கொஞ்சம் பொ றுத்தருள் தம்பியே - நீ
கோபப்ப ட ஏதும் இல்லையே - பார்
அச்சமு டையவன் காணுவாய் - சற்று
ஆறுதல் கொள்ளுதி தேறுவாய்
அனுமன்
உண்மையை என்னிடம் ஒப்புக - வழி
சொன்னவ ராரென்று செப்புக - இங்கு
வந்ததன் காரணஞ் சொல்லுக - உமை
ஆரென்றி னங்கண்டு கொள்ளுக
லக்குவன்
வெந்து; கொ திக்குதென் அண்ணனே - கெட்ட
வம்பன் மொ ழிசுட்ட நெஞ்சமே - நீ
தந்திடு வாயுந்தன் ஆணையே - வெகு
துட்டனின் நாவினை வெட்டவே
ராமன்
மூக்கை அ ரிந்தபின் மூண்டதே - வினை
முற்றியெ மை வந்து சூழ்ந்ததே - இனி
நாக்கை அ ரிந்தெது நேருமோ - தம்பி
நல்ல மு றையினிற் பேசுவோம்

அனுமன்
சொந்தம் ப ரம்பரை தேசமும் - நும்;
ஊர் உற வென்னிடம்; கூறுக - இல்லை
எந்தன் பு யவலி காணுக - இந்த
அனுமனெ மனெனத் தேருக
லக்குவன்
இன்னும் பொ றுத்திட லாகுமோ - இவன்
சொன்னதன் மேலினி வேணுமோ - இனி
என்னை அ னுமதி அண்ணனே - நான்
என்னை எ வனெனக் கூறவே
ராமன்
இந்தவிடம் சொந்த இட மில்லை - நாம்
வந்ததொலை நீமறந்த தேனோ - நாம்
அந்நியராய் வந்த தரை யீதை - நீ
சொந்த நக ராய் நினைக்க லாமோ
வந்தவனைக் கேட்கமுன்னம்
வம்பு தக ராறெதற்கு
இங்கிதமாய்ப் பேசிடுவோம்
உண்மைதனைக் கேட்டறிவோம்

தம்பி இலக்குமணா, கோபிக்கவும் கொதித்தெழவும் வேண்டிய நேரங்கள் உண்டு. கொஞ்சம் பணிந்து போகிற நேரங்களும் உண்டு. இவனுடைய நோக்கத்தை முதலில் அறிவோம். பின் இவன் யாரெனக் கேட்டறிவோம். இவனை எம் நண்பனாக்குவதால் இழக்க ஏதுமில்லை. எனவே முதலில் எம்மை இவனுக்கு அறிமுகப்படுத்திக் கொள்வோம்.

லக்குவன்
மெத்த வய தானதாலே - கிழவன்
புத்திகெட்டுப் போனதாலே - இளைய
பத்தினியின் மொழியாலே - பட்டம்
போன கதை மொழிவாயோ
சத்தியங்கள் ரெண்டு என்று
வித்தை செய்து வம்பு பண்ணி
கட்டிலிற் பு ரண்டழுது
தட்டியே ப றித்த விதம்
(மெத்த வயதானதாலே)

ராமன்
தந்தை சொல்லைத் தட்டுதலாகாது - இது
உந்தனுக்கேன் இன்னும் விளங்காது
எந்தனுடன் காடுவந்த போது - சொன்னேன்
கொந்தளித்தல் கொஞ்சமுந் தகாது
தந்தை சொல்லை நான் மறுத்து
எந்தவித மும் பதவி
வந்துவிடின் போதுமென்ன
நின்றிருந்தால் ஊர் பழிக்கும்
(தந்தை சொல்லைத்)
லக்குவன்
மானுமொன்று வந்ததாலே - பின்னே
போனவன் வ ராததாலே - வீணே
நானுனைத் தொ டர்ந்ததாலே - மங்கை
போன கதை மொழிவாயோ
நானும் பல நூறுமுறை
பன்னிப்பன்னிச் சொன்ன கதை
தானவளும் மீற அவன்
தான் கவர்ந்த கதை சொல்லு
(மானுமொன்று)
ராமன்
எம்மிடையில் ஏனோ தகராறு - தம்பி
வெஞ்சினமும் போதும் இனி ஆறு
வந்தவிடஞ் சூழல் உணராது - சும்மா
கொந்தளித்துச் சீறுவது தீது
லங்கை வழி தானறிந்து
சொல்லி வழி காட்டிடவும்
இங்கிவனின் நல்லுறவில்
நன்மை வர வாய்ப்பிருக்க
(எம்மிடையில்)
லக்குவன்
அண்ணா நீ இந்த மூர்க்கனுடன் பேசிக் காலத்தை வீணாக்குகிறாய். இவனுக்கு அடி உதவுமாப்போல அண்ணன் தம்பி கதை எல்லாம் உதவாது. இவன் இனியும் எம்மை அவமதிக்க நீ அனுமதிக்கக் கூடாது. இவன் மீளவும் அவ்வாறு செய்வனே என்றால் நீ என்னை மறிப்பது தகாது ஐயனே.

ராமன்
(ஆசிரியப்பா)
வீரியம் சொல்வோர் வலியரு மல்லர்
கூரிய மொழியோர் பகைவரு மல்லர்
ஆருட னேனும் அவசர வார்த்தை
தீராத் துயரந் தருவது கூடும்
சற்றே ஆறுக சினமும் அடங்குக
குற்றங்க ளில் முன் கோபங் கொடியது
உற்றதை நாமும் உணர்ந்து உரைப்பது
வெற்றியு மாகும் வீரமும் அதுவே

லக்குவன்
ஆளரவம் அற்றமலைச் சாரலுக்குச் சொந்தஞ்சொல்லி
ஆணையிட வந்ததேனோ - இவன்
வாலியென்ற ராசனுக்கு அஞ்சிவந்து இங்குறைந்து
வீரமொழி சொல்லலாமோ
அனுமன்
வீடிழந்து நாடிழந்து சுக்கிரீவ ராசரிங்கு
வாடுவதைச் சொல்லுவேனோ - மிக்க
கேடுவரு முன் மறிக்கக் காவலுக்கு நிற்கிற என்
பேருரைப்பன் அனுமானே
ராமன்
நாடயோத்தி நன்னகரம் ராம லக்கு மணர் பெயர்
தந்தை தச ரதராசா - நாமும்
தேடுகின்ற தென்னிலங்கை நாடு செல்லு வழி தன்னை
நீரெமக்கே சொல்லுவீரோ

லக்குவன்
வாலியவன் பகையிவர்க்கு - லங்கை
ராவணனின் பகை நமக்கு - தேவை
ஆளவொரு நாடிவர்க்கு - சீதை
மீளுகிற வழியெமக்கு
ராமன்
வாலியுடன் போர்தொடுப்போம் - நீவிர்
ஆளவொரு வழிவகுப்போம் - ஆயின்
கூலியென நீரெமக்கே - தேடும்
லங்கை வழி நடப்பீரோ
அனுமன்
தேவி சென்ற திசையறியும்; - உங்கள்
தேவையெண்ணி உரைப்பீரே - வாலி
கூவியுமைப் போர்க்கழைப்பின்; - காற்றில்
தூசெனவே மறைவீரே
லக்குவன்
மோது புயல் போல் வலியான்; - இந்த
லக்குவனின் வலியறியான் - வீணே
வாது செய்ய வேண்டுகிறான் - எந்தன்;
வல்லமையை இவன் அறியான்
அனுமன்
வாலி வலி யறியீரே - வீரம்
வல்லமைகள் அறியீரே - தீய
காலனவன் பேர் கேட்பின்; - கைகள்
கட்டி நிற்பன்; அறியீரே
ராமன்
சீதை தனை மணம் புரிய - சிவனார்
சீரிய வில் நான் முறித்தேன் - பாராய்
ஈதை நிகர் வில் எதுவோ - நாணின்;
ஓசையினில் வான் அதிரும்

அனுமன்
வல்லமை பேசுகிறீர்; - ஆயின்
வெஞ்சமர் புரிவீரோ - இடர்
தொல்லைகள் மீறிடினே- நீவிர்
தூர அ கல்வீரோ
லக்குவன்
சொல்வன செய்வோமே - யாம்
சொன்னவை மாறாவே - நம்
வல்லமை அறியாதே - சும்மா
வாதுகள் செய்குவதேன்
அனுமன்
வெல்லும் முறையினையே - எங்கள்
வேந்தருங் கேட்பாரே - மிக
நல்லன சொன்னீரே - அவரும்
நம்புவ தெவ்விதமே

ராமன்
ஏழு ம ரந் துளைத்தே - அம்பை
மீள வ ரவழைப்பேன் - அந்த
வாலியு யிர் பறித்தே - எந்தன்
வில்லுக் கி ரையளிப்பேன்
அனுமன்
வல்லமை சொன்னீரே - ஆயின்
வாலி வ லியவனே - நீரும்
சொல்வன பொய்ப்படினே - மேலும்
தீமைகள்; நேர்ந்திடுமே

ராமன்
வாலியை வீழ்த்துவது எம் பொறுப்பு. நாம் இலங்கை போக வழி காட்டுவது உம் பொறுப்பு. அது உனக்குச் சம்மதமெனின் இவ்விதமாக நீ எம்மீது ஐயுற்று வீணே வாதிப்பதிற் பயனேதுமில்லை. வாதிடலை விடுத்து நீ சென்று சுக்கிரீவ ராசரின் எண்ணமறிந்து அவர்தம் ஒப்புதலைப் பெற்று வருவாயாக.
(வஞ்சி விருத்தம்)
இன்னும் அனும நானும்
என்ன சொல்ல வேண்டும்
சென்று வருக நீயும்
வென்று தருவம் நாமே


அனுமன் போதல்
சுக்ரீவர் அவைதனுக்கே அனுமனிவன் தானும் - ஒரு
சேதியுடன் போறனல்லோ அவையினரே காணும்
தக்கது ணையறிந்தே அனுமனிவன் தானும் - ஒரு
தகவலுடன் போறனல்லோ அவையினரே காணும்
வித்தை அ றிந்துமெல்லோ அனுமனிவன் தானும் -அந்த
வாலியினைத் தான்விழுத்த அவையினரே காணும்
புத்தி உ ரைத்திடவே அனுமனிவன் தானும் -நல்ல
புதினமுடன் போறனல்லோ அவையினரே காணும்

காட்சி 2

விருத்தம்
தம்பியாஞ் சுக்கி ரீவன் தனதுயிர்; காக்க வேண்டி
நம்புதற் கேற்றோ ரான நண்பர்கள் சில பே ரோடு
தங்கியே தரணி தாங்கும் தனதர சவையாய்க் கொண்டு
அங்கமர் இடமே வந்து அனுமனும் வணங்கு வானே

சுக்ரீவன்
(சந்த விருத்தம்)
எண்டிசை ராசரு மெந்தனை ஏத்திய
கால மொ ழிந்ததுவே
கண்டு ப ணிந்தவர்; சென்று ம றைந்திடு
கையறு நிலையிதுவே
வந்து பு குந்தது என் அவை தன்னிடை
வாலியெ னும்வடிவே
எந்தனை அண்டிய என் பகை நோவனோ
என் வினை நோவேனோ

அண்ணனே ஆயினும் என் துணை கொண்டது
ஆகுவ தென்பேனோ
திண்ணமி தென் மொழி வாலியை வென்றொரு
நாள் நகர் மீளுவனே
வெந்துயர் தந்திடு வேதனை சூழினும்
வஞ்சமே தீர்ப்பேனே
சிந்தையி லே மிகு வன்மை மி குந்தவன்
சீரியனும் நானே

அதோ பாருங்கள். அனுமன் ஓடோடி வருகின்றானே. வாலியின் ஒற்றரைக் கண்டானோ. அச்ச மிகுதியால் தனது காவலை மறந்து அவன் ஓடோடி வருகிறானோ. எவ்வாறாயினும் தனது கடமை நீங்கி அவன் இவ்வாறு வரலாமோ? சொல்லுவீர் அவையோரே.
நீலன், சாம்பவன்
சகமும் புகழ முடியை யணிந்தவா
பகை வலிமை மிகினும்
தகைமை யுடனே தரணி ஆண்டவா
மிகு தடைமுன் துணிந்தே
புகழி னுடனே புவியை வென்றவா
நின் துயர்கள் பெரிதே
எனினும் அதனில்
தளர்வு தவிர்ந்து
மனதின் வலுவில்
மிகவும் உயர்ந்த
நினது மகிமை
தனையே அறிந்து
பணிவம் நிதமும்
உனையே அரசே

அனுமன்
நலமும் மொழிய அனுமன் வந்தனே
பல துயரின் மிகுந்த
நிலைமை மாற அவை பு குந்தனே
வலி உடைய துணையை
உலகில் அடைய வழி பு கல்வனே
உம் விடிவும் வரவே
பணிவு மிகுந்த
அனுமன் உமையே
வணங்கி இனிய
புதினம் இதனை
மனது மகிழ
மொழிய நினைந்து
அனுமன் புகுவன்
அவையுள் அரசே

சுக்ரீவன்
(தரு)
இப்படியுஞ் செய்யலாமோ - கடமை தப்பி
இவ்விடத்து வரலாமோ
எப்பொழுதும் நீங்கலாமோ - தலை தெ றிக்க
ஓடியிங்கு வரலாமோ
தப்பிதம் பு ரியலாமோ
தேடியிங்கு வரலாமோ
இப்பொழுதே உரைப்பாயோ
என்னிடத்திற் கதைப்பாயோ

காவலி னை விட்டுக்; காணவென் ன வந்த
காரணத் தை வந்து சொல்லு - அங்கே
யாவரை நீ கண்டு காவலை விட்டனை
ப10ரண மும் இங்கு சொல்லு - வந்த
தேவையென் ன இங்கு தேடிவந் த தென்ன
நீ அவை யின் முன்பு சொல்லு - மீண்டு
போவதற் கு முன்னம் ஞாயமெ து என்று
பேசிவிட் டு அங்கு செல்லு

அனுமன்
விஞ்சு பு கழ் கிஷ் கிந்தை அரசாரே - இங்கே
வந்தனன் அனுமன்நல்ல சேதியொடே
நெஞ்சு கு ளிர் க தையும் சொல்வேனே - நானும்
நல்ல பு தினமிக சொல்வேனே
மிஞ்சு தி றல் உ டைய அரசாரே - நல்ல
மித்திரர் வந்தாரென்றே சொல்வேனே
அஞ்சியு றை நி லைமை முடிவாமே - நீங்கள்
அரியணை ஏறும்விதம் சொல்வேனே

சுக்ரீவன்
(ஆசிரியப்பா)
தொல்லைகள் தீரும் வழியினை நீயும்
சொல்லுக அனுமா துணிவுடன் இங்கே
வல்லவர் யாரோ வலியவர் யாரோ
நல்லவர் தாமோ நட்புடை யோரோ
நம் பகை சாய்க்கும் திறலுடை யோரோ
செம்மையின் மிக்க சீருடை யோரோ
தம்நலன் பேண வந்தவர் தாமோ
நம்மிடம் எதனை நாடுகி றாரோ

அனுமன்
தந்தையின் ஆணை மீறாத் தனயன்
வந்து வ னத்திடை வாழ்ந்திடும் போது
அந்நியன் அவனது தாரங் கவர்ந்தமை
முந்தையில் நினது நல்வினைப் பயனே
வில்லினில் வலிய வீரன் ராமனின்
நல்லுற வாலே நன்மைகள் விளையும்
தொல்லைகள் யாவும் தொலைந்திட லாகும்;
வல்லவர் இருவர் வாலியை மாய்ப்பர்

(கட்டளைக்கலித்துறை)
பொங்கு புகழ் வட நாட்டவன் பொன்நல்கும் ப10மி மீது
தங்கும் அயோத்திய ராசன்தன் நன்மைந்தன் ராமனென்பான்
லங்கை எனும்பெயர்த் தேயத்தே செல்தற்கு வேண்டுகின்றான்
எங்கள் துணையினுக் கீடென்ன எந்துன்பம் நீக்குவிப்பான்
சுக்ரீவன்
(அறுசீர் விருத்தம்)
நம்மவை நடுவே வந்து நவின்றனன் அனுமன் அன்னான்
எம்மிடஞ் சொன்ன வார்;த்தை இனியன ஆயின் இங்கே
எம்மிடை உள்ளோர் உள்ளம் அறியவும் ஆவ லுள்ளேன்
நன்றுதீ தெல்லாம் எண்ணி நாமொரு முடிவு கொள்வோம்

உண்மை யெ ன எது கண்ணிற்; தெ ரியினும்
எண்ணித் து ணிகுவமே - சகலமும்
எண்ணித் து ணிகுவமே
நீலன்
மன்னர வையிடை முன்வந் த னுமனும்
சொன்ன மொ ழியிவை சத்திய மாயினும்
என்ன வி தமெமை முன்பின் அ றிகிலா
அந்நிய ரும் வந்து இன்னல் க ளைவது
(உண்மையென எது)
சாம்பவன்
பொன்வயல் நெல்லு பொழியு மயோத்திய
நன்னக ரார் நமை நாடி வ ருதலும்
என்ன நி னைவினில் என்று அ றிவமோ
நன்மை வி ளைகுமோ துன்பம் பெ ருகுமோ
(உண்மையென எது)
அனுமன்
மன்னவன் ராவணன் மாதினை யே கொண்டு
தன்வய மாக்கிடத் தான் கவர்ந் தேகிட
தென்னிலங் கை வழி தேடத் து ணையன்றி
சொன்ன வி லை என ஏதுமி லை ஐயே
(உண்மையென எது)
நீலன்
பொங்கு பு கழ் வட தேயத்து ராயனும்
லங்கை பு கு வழி யாதெனச் சொல்லிடின்
எங்களுக் காகவே போரில் இ றங்குவன்
என்கிற தை எந்த மூடனோ நம்புவன்
(உண்மையென எது)
சாம்பவன்
தென்னகர் தன்றிசை தாமறி யா வட
மன்னவர் எவ்விதம் வாலியை வெல்வரோ
என்ன வி தம் அந்த ராவண சேனையை
வென்று தம் மங்கையை மீட்டுயிர் மீள்வரோ
(உண்மையென எது)
சுக்ரீவன்
நல்லவ ராயினும் நம்மிட மே வந்து
வல்லமை சொல்லிடும் வேந்தர் கு மாரரும்
வெல்லத் த வறிடின் வேதனை அல்லவோ
அல்லல் மி கவுற ஆகும் அ னுமனே
(உண்மையென எது)
அனுமன்
வில்லையே வளைத்திட எழுமரம்
வீழவே செயுமென உரைத்தவை
வல்லமை மொழியல என அவர்
செயலாக வினை புரி வாரே
பகைபல சரித்திட அவர் வலி யோரே
வகைவழி என அவர் மிக அறி வாரே
(வில்லினை)
நீலன்
வல்லவர் ஆயினும் அயலவர்
வந்தெம தலுவலில் நுழைவது
அல்லலே தருமென அரசரும்
உணராத மனதின ராமோ
வாலியை வென்றபின் அவரகல் வாரோ
மேலுமெஞ் சுமையென அவர் தொட ராரோ
(வல்லவர்)
சுக்ரீவன்
வீராதி வீரர்கள் இருவரும்
வாலியின் பகையது முடித்திட
போராலே எமதர சமைவுறும்
விதமேதான் புரிந்திடு வாரோ
வாலியின் முடிதனை அவர் பறிப் பாரோ
காலினில் விழும்வரை அவர் வதைப் பாரோ
(வீராதி)
சாம்பவன்
தமையனும் தம்பியும் முரண்படின்;;
தர்மமோ அயலவர் நுழைவது
எமதிடை மோதல்கள் வளரினும்;
என்றேனும் அதுமுறை யாமோ
வெகுதவ றிதன் பயன் பிறரடை வாரே
மிகுபிழை எனப்பலர் எமையிகழ் வாரே
(தமையனும்)
அனுமன்
ஆபத்திற் தோஷமென் றில்லையே - சொல்லு
அந்நியர் உதவியும் பாவமோ
கோபமி குந்திடு வாலியை - அவர்
கொல்ல உதவுதல் தீமையோ
நீலன்
வல்லமை கூறிடும் அந்நியர் - நமை
வந்து நயந்துரை பேசுவார்
சொல்லில் மயங்கிடல் ஞாயமோ - மிக
மின்னுவ பொன்னென ஆகுமோ
அனுமன்
என்ன நிறத்தொரு ப10னையும் - தேடி
எலிபிடித் தாலது போதுமே
அந்நிய ராயிலென் வந்தவர் - எங்கள்
அடிமை அறுத்திடின் போதுமே
நீலன்
வந்து நு ழைந்தபின் ப10னையே - வீட்டில்
வைத்துள்ள பாலையுங் கொள்ளுமோ
வெந்து கொ திக்கிற பானையின் - தப்பி
வேகும் நெ ருப்பிடை வீழ்வொமோ

சாம்பவன்
அண்ணன் தம்பி சண்டை யீதல்லோ - இதிலே
அந்நி யருஞ் சேர லாவதோ
கண்ட வரும் உள்நு ழைவதோ - எம்மைக் கூறு செய்து நன்மை கொள்வதோ
சொந்தம்உற வென்றிருக்கச் சோதரர்க்குட் சண்டைதன்னை
எந்தவித மாயெனினும் பேசித்தீர்த்தல் ஆகுமல்லோ
(அண்ணன் தம்பி)
அனுமன்
என்ன கதை சொல்கி றாயடா - வாலி
எங்க ளுடன் பேசுவா னோடா
இன்னு மென்ன சொல்ல உண்டடா - அங்கே
என்ன சொல்லி ஆவ தென்னடா
அண்ணனிடம் தம்பிபட்ட அத்தனையும் நீமறந்து
அண்ணனவன் தாள்பணிந்து கீழ்படிந்து போவதற்கோ (என்ன கதை)
சாம்பவன்
சொந்த பந்தம் எங்கட் கில்லையா - ஞாயம்
சொல்ல வல்ல பேர்க ளில்லையா
மண்டி யிடத் தேவை என்னடா - பிழையை
மன்னித் திடும் நெஞ்ச மில்லையா
கொந்தளிக்கும் நெஞ்சங்களின் கோபங்கொஞ்சம் ஆறவிட்டு
சென்றதை ம றந்துவிட்டுச் சொந்தமுற வென்றிருக்க
(சொந்தபந்தம்)
அனுமன்
வாலிக் கு நீ நேய னோ அடா - வேண்டின்
வாலி யிடம் ஓடு வாயடா
காலில் விழப் போகி றா யோடா - எம்மைக்
காட்டித் தரப் போகி றா யோடா
சுக்கிரீவ னோடுவந்து பட்டதுயர் போதுமென்று
மிக்கவச தி பொறுக்கி வாழுகிற எண்ணமெனில்
(வாலிக்கு நீ)
சாம்பவன்
கண்ட படி பேசு றாயடா - அனுமா
கண்க ளைத் தி றந்து பாரடா
சண்டை யிடத் தேவை என்னடா - நம்முள்
சாந்த முடன் தீர்க்க லாமடா
புத்திமிக நீ குழம்பி நல்லமொழி சொல்லபவரை
மெத்தவுமே நிந்தைசொல்லி ஏசிட ம னந்துணிந்து
(கண்டபடி)
சுக்ரீவன்
அனுமா, சாம்பவா, இனி இந்த விதமாகச் சச்சரவு செய்வதாலே பயனில்லை. நான் இதுவரை பட்டது போதும். இனி மீண்டும் அரசாள வழி தேட வேண்டும். வந்துள்ள இருவரும் வாலியை விழுத்திட வல்லோரா என்று அறிந்த பின் அவர்;களது துணையை நாட எண்ணுகிறேன். வாலி எனது அண்ணனே. எனவே அவனைக் கொல்வதை நினைக்கவே வருந்துகிறேன். ஆயினும் இன்று அவன் எனது எதிரி. எதிரியைக் கொல்வதை யல்லாது வேறு வழியுண்டோ சொல்லுவீரே.
(தாழிசை)
பகைவனாய் வாலி யோடு பொருதவோ இயல மாட்டேன்;
வகையிலேன் ஆகை யாலே வருமொரு துணையை நாடி
மகிழ்விலா மனதி னோடு மாற்றொரு வழியு மின்றி
புகுவனே இந்த மார்க்கம் பகையென மனது வாட்ட

சாம்பவன்
(அறுசீர் விருத்தம்)
ஆளவே வளநா டுள்ள அயோத்திமா நகரத் தாரும்
வாலியை வீழ்த்தி யும்மை வேந்தராய் அமரச் செய்து
நாளைதாம் லங்கை சென்று நடத்திடும் போரி லெம்மை
மாளவே வேண்டித் தம் பின் சேரவே அழைத்தி டாரோ

அனுமன்
(அறுசீர் விருத்தம்)
ஆழிசூழ் லங்கை நாடு உளவிடம் அறித லன்றி
நாளைதாம் செய்யும் போரில் நமைவரக் கேட்க வில்லை
மூளுமோர் போரில் நம்மை முனையவே கேட்ப ராயின்
நாளை நா மதனைப் பார்ப்போம் இன்று நம் வேலை பார்ப்;போம்

(வேறு)
(கழிநெடில்)
அலைகடல் நடுவே இலங்கிடு தீவை
அறிந்திடக் கேட்டனர் வழியை
வலியவ ரன்னார் போரினிற் புகவே
வருகெனக் கேட்டிலர் எம்மை
மெலியவ ரானோம் வாலியை வெல்ல
முறையினை யறிவதெம் தேவை
கலவரம் வேண்டா நாளைய நிகழ்வை
காணுவம் வருமொரு வேளை

நீலன்
அண்ணலே சுக்ரீவ ராசரே நீவிர்
கண்ணுற வேண்டிய காரியம் உள
அந்நியர் புகுந்தபின் விளைந்திடும் பிழைபல
வந்தபின் தடுத்திட வழியிலை அறிவிரே
(அண்ணலே)
சாம்பவன்
அந்நியர் தயவினில் ஆள வந்தவர்;
என்றுமே பணிந்தடி பேண நேருமே
இனிவரு முலகெமைப் பலகுறை உரைத்திட
அனைவரும் பழிசொல வழிசெயல் முறையல
(அந்நியர்; தயவினில்)
சுக்ரீவன்
அந்நியர் உதவியில் ராசன் ஆகுவன்
மன்னவ னானபின் மாந்தர் புகழுவர்
சரித்திரம் உரைப்பவர் அனைவரும் இறுதியில்
அரசினர் மொழிவன அதனையே எழுதுவர்
(அந்நியர்; உதவியில்)
சாம்பவன், நீலன்
ஆள்வதற்கு ஆசைமிக்க தாலே - நாமும்
அந்நியர்க்குக் கீழ்ப்படிய லாமோ
வாழு திரு நாடிதனைச் சூதில் - ஒரு
காயெனவே வீசிவிட லாமோ
ஆழமறி யாமலெங்கள் காலை - விரி
ஆழ்கடலி லே விடுதல் ஆமோ
நாளை இந்த நாட்டுநிலை தன்னை - இங்கு
நாம் மறந்து போவதுவும் ஆமோ
சுக்ரீவன்
நாலுவகை நீதியறி வேனே - என்னை
நீர்மறித்துப் பேசுவதும் என்னே
வாலியினை வெல்லவகை இன்றி - நாமிப்
பாழிடத்தில் வாடுவது நன்றோ
போரையன்றி வேறுவகை உண்டோ - யானும்
பேரரசன் ஆகுவதும் என்றோ
ஆருமென்னை யே மறிக்க வேண்டா - போவோம்
ராமனைத் து ணைக்கழைக்க ஒன்றாய்
அனுமா, சாம்பவா, நீலா, நாம் எல்லாரும் அந்த ராம லக்குமணரிடம் போய் அவர்களது வலிமையை அறிந்து அவர்களது உதவியுடன் வாலியை விழுத்த வழி தேடுவோம். வருவீரே.

(வேறு)
(தரவு கொச்சகக் கலிப்பா)
ஆருமினி வாலியிடம் அஞ்சிடவும் வேண்டாமே
சேருவமே வலியவரைத் தோழரெனப் பேணுவமே
வாருமினி வழி நடப்பம் வெல்லுவழி தேடுவமே
பாரிலினி நானரச பாலனமும் செய்திடவே

விருத்தம்
பகைவனாய் வந்த அண்ணன் தன்னையே போரில் வென்று
மிகநலங் கொண்டு இந்த மேதினி போற்ற ஆளும்
வகைதனைத்; தேடி நாளை வருவதை மறந்த தாலே
மிகவுமே தவறு செய்தார் முடிவினை முடிவிற் காண்போம்

காட்சி 3

விருத்தம்
வில்லினால் வாலி தன்னை வீழ்த்துவன் என்று அண்ணன்
சொல்லிய வார்த்தை தன்னில்; தன் மனம் இணங்கி டாது
செல்கிற பாதை தன்னில் வலிந்தொரு சண்டை தேடல்
நல்லதோ என்று தம்பி நயமுடன் வினவு கின்றான்

லக்குவன்
தென்திசை - லங்கை செல்கின்ற போதிலே
தேடியே - வந்த வம்பிது வேண்டுமோ
மன்னவன் - அந்த வாலியுடன் தம்பி
மோதலால் - நமக் காவதும் என்னவோ

ராமன்
தம்பியே - நாங்கள் தேடிடும் லங்கைக்கு
செல்லவே - வழி தன்னையே சொல்வரே
நம்முடன் - அந்த ராவணன் போரிட
வந்திடின் - துணை யாரெவர் உள்ளரே

லக்குவன்
மன்னவன் - அந்த ராவணன் எங்களை
அஞ்சியே - மனம் சோரவும் வேண்டிடின்
குன்றிடை - அஞ்சி வாழுமிக் கூட்டமும்
கூடவே - வந்து ஆகுவ தென்னவோ

ராமன்
கங்கையை - அன்று தாண்டிடு போதிலே
வந்ததே - குகன் தன்சிறு தோணியே
மங்கையை - அவள் காவலின் மீட்கவே
போதுமோ - இரு பேர்களின் வில்லுமே (வேறு)
(எண்சீர் விருத்தம்)
கங்கை நதி கடக்கையிலே தோழ னாக
குகனிருந்தான் தோணியொடு மறந்தி டாதே
லங்கை செலக் கடல் கடந்து போக வேண்டின்
எங்களுக்குத் துணையெனவிங் குள்ளார் யாரே
பொங்கு புய ராவணனை இருவர் சென்றே
போரிடவும் இயலுவதோ சொல்வாய் தம்பி
இங்கெமக்குக் கிட்கிந்தை வயமாய் உண்டு
இதைவிடவும் அரியதொரு வாய்ப்பும் உண்டோ

லக்குவன்
போரினில் வென்றிடத் தோழர்கள் வேண்டின்
வீரர்கள் உறவினை நாடுதல் ஞானம்
ஆருமி லாத மலையடி வாரம்
சோருவர் சேருதல் எதுவித லாபம்
ராமன்
ஆரு மிலாத பேர்களே அல்லால்
ஆருமே அயலவ ரிடம்வரு வாரோ
வீரர்நம் உறவினை நாடுவ ராயின்
போரிலெம் தலைமையைப் பணிந்திடு வாரோ

லக்குவன்
போரிலெம் சொல்வழி நடப்பவ ரேனும்
பயமிகு மனதினர் சமர் புரி வாரோ
வாலியின் உறவினை நாம் பெற லாமே
வலியவன் துணையுடன் சமர் செய லாமே

ராமன்
வலியவன் உறவினை நாடிடு வோமேல்
மெலியவர் என எமை அவமதி யானோ
எமையவன் சமமெனக் கருதுவ னாயின்;
சமரிலெம் ஆணையை நிறைவு செய்வானோ
லக்குமணா, வாலிக்கு நாம் ஒரு பொருட்டடல்ல. நாம் அவனை நாடும் போது அவனுக்கு நாம் அடங்கிப்போக நேரும். சுக்கிரீவனோ நம் தயவை நம்பி இருப்பவனாவான். வாலியை வீழ்த்தி அவனது நாட்டாரை நம்மைப் பணியுமாறு செய்வதே நல்ல உபாயமென அறியாயோ.

லக்குவன்
(அறுசீர் விருத்தம்)
சொல்வதில் ஞாய முண்டு ஆயினும் வாலி தன்னை
வெல்வதும் எளிய தாமோ கொல்வதும் இயல்வ தாமோ
வெல்லினும் வென்ற பின்னர் வாலியின் இளவல் எங்கள்
சொல்வழி செய்கு வானோ தன்வழி செல்கு வானோ

ராமன்
மற் பொருத வாலியிடம் - தம்பி
மாரிற் தட்டிப் போர்க்கழைப்பான்
வில் வளைத்து அம்பெறிவேன் - அந்த
வாலியுயிர் நான் கவர்வேன்
லக்குவன்
நன்றிக்கடன் என்றவர்க்கே - நானும்;
ஞாபகங்கள் கூறிடுவேன்
சொன்னவிதம் செய்யாரெனின் - அண்ணன்
தோளில் அம்பைக் காட்டிடுவேன்
ராமன்
என் தயவில் வென்றவனை - அன்பாய்;
அச்சம் கொள்ளச் செய்திடுவேன்
என்னுடைய தம்பி என்பேன் - அவனை
ஏவலன் போல் வைத்திடுவேன்
லக்குவன்
மன்னன் எங்கள் தாள் பணிவான் - நாட்டின்;
மைந்தர் படை நாம் பெறுவோம்
தென்னிலங்கை சென்றிடுவோம் - வென்று
சொந்த நகர் மீண்டிடுவோம்

விருத்தம்
சீதையைச் சிறையின் மீட்க சீர்மிகு லங்கை சேர
மாதினைக் கவர்ந்து சென்ற மன்னனைப் போரில் மாய்க்க
மோதிடும் தம்பி அண்ணன் பகைமையின் விளைவ தாக
ஏதுவாய்ச் சேனை யொன்று எளிதிலே வாய்த்த தன்றே

சூளுரைத்து அறைகூவி வாலி தன்னை
சுக்ரீவன் போருக்கே அழைத்த போது
மூளுமொரு கொடிய சதி அறியா னாகி
மற்பொருத உடன்பட்டே களத்தில் வந்தான்
ஆளுடனாள் மோதுகையில் மறைந்து நின்றே
அம்பெறிந்து வாலிஉயிர் ராமன் கொண்டான்
கீழான செயலிதனைத் தரும மென்றே
கூறுகிற கதையினிலே நீதி யில்லை

அந்நியரின் உதவியுடன் அரச பீடம்
ஏறியதாற் கிட்கிந்தை நாட்டு மன்னன்
தென்னிலங்கை மன்னனுடன் மூண்ட போரில்
தன் நாட்டின் மைந்தர்களை மாளு மாறு
சென்றிடவே அனுப்பியதை மாற்றி ஆங்கே
செத்தவர்கள் உயிர்த்தரெனக் கதைகள் சொன்னார்
என்றேனும் அயலாரின் தயவில் ஆண்டோர்
தீங்கன்றி மக்களுக்குச் செய்த தென்ன
மங்களம்

வாழ்கநீடு வாழ்கவென்று மங்களங்கள் கூறுவோம்
உரிமைபெற்று உயர்வுஎய்தி உலகமக்கள் யாவரும்
சரிநிகர் ச மானமாக வாழ்கவென்று வாழ்த்துவோம்
நாடகம் ந யக்க வென்று நாடிவந்த சுவைஞரை (வாழ்கநீடு வாழ்கவென்று)

மேடைதந்து உபசரித்து அன்புசெய்த மாந்தரை (வாழ்கநீடு வாழ்கவென்று)

தேடிவந்து ஆர்வமோடு துணை புரிந்த நண்பரை (வாழ்கநீடு வாழ்கவென்று)

கூடநின்று வலிமை தந்து ஊக்குவித்த உங்களை (வாழ்கநீடு வாழ்கவென்று)

பாடல் செய்த நண்பரோடு இசையமைத்த தோழரை
பாடியாடிக் கதையுரைக்கும்; பாங்கு சொன்ன கூத்தரை
ஆடையணிகள் ஒப்பனைகள் அழகுசெய்த கலைஞரை
மேடைபொலிவு பெற்றிலங்கு முறைமைசெய்த வினைஞரை
(வாழ்கநீடு வாழ்கவென்று)

என்றுமெம்மை அறிகிலாதும் உதவிசெய்த அன்பரை
நன்றிசொல்ல நாம்மறந்தும் நன்மைசெய் நல்நெஞ்சரை
இங்கிலாத போதும் எம்மை எண்ணிவாழ்த்தும் நேயரை
எங்கிருந்த போதும் அன்பு கொண்டுவாழும் மாந்தரை
(வாழ்கநீடு வாழ்கவென்று)

(தொட்டுக்கும்பிடு)

தொட்டுக்கும்பிடு தொட்டுக்கும்பிடு
தொட்டுக்கும்பிடு தொட்டுக்கும்பிடு