கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  நதிக்கரை மூங்கில்  
 

சிவசேகரம்

 

நதிக்கரை மூங்கில்

சிவசேகரம்

---------------------------------------------------------------------------------------------------

நதிக்கரை மூங்கில்

சிவசேகரம்


தேசிய கலை இலக்கியப் பேரவை

சவுத் ஏசியன் புக்ஸ்

---------------------------------------------------------------------------------------------------

Nathikkarai Moongil
Sivasekaram
First published : December 1983
Second Print : Apirl 1995
Printed at : Suriya Achagam Madras
Published in Association with
National Ary & Literary Association
by
South Asian Books
6\1 Thayar Sahib II Lane
Madras - 600 002

Rs. 10.00


நதிக்கரை மூங்கில்
சிவசேகரம்
முதல் பதிப்பு : டிசம்பர் 1983
இரண்டாம் அச்சு : ஏப்ரல் 1995
அச்சு : சூர்யா அச்சகம், சென்னை-41
வெளியீடு : தேசிய கலை இலக்கியப் பேரவையுடன்
இணைந்து
சவுத் ஏசியன் புக்ஸ்
6|1, தாயார் சாகிப் 2ஆவது சந்து,
சென்னை - 600 002

ரூ. 10.00

---------------------------------------------------------------------------------------------------

உள்ளே

பக்கம்
நுழைவாயிலில் 9
ஒரு பெரு மழைக்குப் பின் 27
சித்திரையில் மாவலி 29
வசந்தம் 30
மறுப்பு 31
நிழல் 32
வெட்டிப பேச்சு வீரர்கள் 33
நெல் 34
சவாரி 34
சாகாத சரித்திரங்கள் 35
எழுச்சி 35
பணயம் 36
இலையுதிர்கால அரசியல் நினைவுகள் 37
மாவலியின் மார்கழியில் 38
ஆற்றங்கரையின் அந்தியும் மூங்கிலும் 40
நாங்கள் விமர்சகர்கள் 42
வீரசூரிய : வேறொரு கோணம் 45
ஒரு சமகாலச் சிறுவர் கதை 48
அதிசயங்கள் 50
எங்கள் குருN~த்திரம் 53
உன் மண்ணும் என் மண்ணும் 55
ஒரு மேதின மாலைப் பொழுது 57
அகலிகை 58
தபால் தலை 59
பேரில் என்ன இருக்கிறதாமோ? 61
ஓரிரவு 64
ஏகாதிபத்தியமும் வலது சந்தர்ப்பவாதமும் 66
எங்கள் இயக்கம் 67
பாட்டன் பரம்பரை 69
52 70
ஹிற்லர் டயரிகள் 71

---------------------------------------------------------------------------------------------------


நுழை வாயிலில்

இக்கவிதைத் தொகுதி உருவானதற்கான பழியை முதலில் அதற்குரியவரான பத்மநாப ஐயர் தலையில் போட்டுவிட்டு விஷயத்துக்கு வரலாம் என்று நினைக்கிறேன். இரண்டு வருஷங்கட்கு-மேலாக அவர் என் கவதைகளைத் தொகுத்து வெளியிடலாம் என்ற யோசனையை அகப்பட்ட சந்தர்ப்பத்தில் எல்லாம் கூறிவந்திருக்கிறார். நானும், நல்ல காரணங்கட்காகத் தட்டிக் கழித்து வந்திருக்கிறேன். இரண்டு வருஷங்கள் முன்னால் என்றால், நான் இன்று முதல் தடவை பிரசுரித்ததைப் பற்றியே வெட்கப்படவேண்டிய சில கவிதைகளையும் என் கவிதைத் தொகுப்பில் சேர்த்திருக்க வேண்டும். ஏனெனில் நான் அதிகம் கவிதைகள் எழுதியவன் அல்ல. சிறுவயதில் கவிதை என்று எண்ணி எதையோ எல்லாம் எதுகை மோனை என்று அடிமட்டத்தால் அளந்து அடுக்கி எழுதியதும், மாணவனாக இருந்தபோது ஓன்றிரண்டு பிசுரமானதும் உண்மை. விரைவிலேயே, இதெல்லாம் கவிதை இல்லை என்ற உணர்வில் எல்லாவற்றையும் எரித்ததும், அம்மா (அம்மா மட்டுமே என் கவிதைகளை எல்லாம் படித்துச் சகித்த ஒரே ஜீவன், நான் சுபாவத்தில் அப்போது கொஞ்சம் சங்கோஜி.) அதற்காக என்னைத் திட்டியதும் நினைவிருக்கிறது. பிறகு கவிதை எழுதுவது என்று ஏதோ இடையிடை முயற்சித்தாலும் மனது அதில் ஈடுபட மறுத்தது.

1970 இல் தான் மறுபடியும் கவிதையில் ஈடுபாடு ஏற்பட்டது. அப்படியும் நான் மனதில் படும் கவித்துவமான எண்ணங்கள் எல்லாவற்றுக்கும் கவிதை ரூபம் கொடுக்க முனைந்ததில்லை. கலையும் இலக்கியமும் அரசியல், சமுதாயச் சார்பு உடையன என்ற உணர்வும் என் இளமைக் காலத்தின் 'தீவிர தமிழ் இன உணர்வின்' பிடிப்பினின்று மீட்சியும் மார்க்ஸியச் சிந்தனையின் ஈர்ப்புமே என்னை எழுதத் தூண்டின என்று நினைக்கிறேன். 1970 இன் பின் முதல் தடவையதகப் பிரசுரமான கவிதை இந்தோ சீனத்துக்கு பின்பு 'நதி' என்ற சிறு சஞ்சிகையில் ஈடுபட்டிருந்தேன். கண்டி கலாசாரக்குழுவில் ஒருவனாக அதில் பங்கு பற்றினேன். நதி ஆறே இதழ்களுடன் நின்று போயிற்று. அது விரைவில் நின்று போக உதவிய நபர்கள் நதிக்கு 'உதவ' முன்வந்த சில இலக்கிய 'நண்பர்கள்' நதி ஒன்றும் உயர்தரமான பத்திரிகை அல்ல. அது காலப் போக்கில் நின்று போயிருக்கவேண்டிய ஒன்றுதான். நதிக்கு எழுதிய முதல் இரு கவிதைகள் (ஒக்டோபர் புரட்சி நினைவாக, உலகப்படத்தில் ஆப்பிரிக்கா) அன்றைய உலக அரசியல் நிகழ்வுகள் மனதில் எழுப்பிய உணர்வுகளின் உந்துதலால் உருவானவை. டானியலின் பஞ்சமர் (பாகம்-1) பற்றிப் பேராதனைப் பல்கலைக்கழத்தில் விமர்சனக் கூட்டம் ஒன்றின்போது பங்குபற்றிய சில 'விஷயம் தெரிந்த' பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அதைப் போற்றித் துதிபாடியபோது நான் மட்டுமே வேறுபட்டேன். நேர்மையற்ற விமர்சன அணுகுமுறை என் மனதில் ஏற்படுத்திய தாக்கமே நாங்கள் விமர்சகர்கள் என்ற கிண்டல். எப்போதோ படித்த புதுமைப் பித்தன் கவிதைகளின் தாக்கம் அதில். இருப்பதாகச் சிலகாலம் பின்பு அதைப் படித்தபோது என்னால் அவதானிக்க முடிந்தது. இச்சூழலில் என் அரசியல் சிந்தனைகள், சிலகாலம் முன்றைய, அதிதீவிர இடதுசாரிப் பாதிப்புக்களின்று சற்தே விடுபட்டு வந்தாலும், கலை இலக்கிய விஷயத்தில் கொள்கை யளவில் நான் ஏற்றுக்கொண்ட நிலைப்பாடு என் எழுத்துக்களில் முற்றாகப் பிரதிபலிக்கவில்லை. மனதில் எழும் எண்ணங்களில் இயல்பாகவே படிந்திருந்த என் அரசியல் சிந்தனைக்கும் மேலாக, வலிந்து, அப்பட்டமாகவே அரசியல் சிந்தனையைத் திணித்துக் கவிதைகளை எழுதினேன். களனியில் நான்கு கவிதைகள், நதியில் வந்த 'அழகிய பெண்ணே', 'குமரனில்' வந்த பொங்கல் போன்றன சில உதாரணங்கள். இவற்றைவிட ஒன்றிரண்டு, தீவிரமான அரசியல் உணர்வுடன், ஆனால் செயற்கையான கிணிப்பு இல்லாமல் எழுதப்பட்டன. அவை பிரசுரமாயின, ஆயினும் எனக்கு அவை பற்றி அதிகம் திருப்தி இருக்கவில்லை. களனி நின்று போன சூழ்நிலை, குமரனின் இலக்கியக் கொச்சைத்தனம், மற்றப் பத்திரிகைகட்கு எழுத ஆர்வமின்மை என்பன, மீண்டும், எழுத்து முயற்சியைத் தடுத்தன. இந்தக் கட்டத்தில் முன் குறிப்பிட்ட என் கவிதைகளின் குறைபாடுகளைப் பற்றிச் சிறிது எழுதலாம் என்று நினைக்கிறேன். வெளிச்சம் என்ற தலைப்பில் (நான் தலைப்புத் தர மறந்தால்) களனியில் வெளியானதை (எங்கள் இயக்கம்) நீங்கள் கவனியு;கள். அதில் கருத்துக்கள் திணிக்கப்பட்டுள்ளமையை உணர அதிகம் சிரமமிராது. இத்தனைக்கும் இது களனியில் வந்த மற்ற மூன்றிலும் தரத்தில் சற்றே உயர்வானது. களனியில் வந்து வானம்பாடி (டிசம்பர், 1962) ஈழத்துக் கவிதைச் சிறப்பிதழில் மறுபிரசுரமான மக்களைப் பிரிந்த அறிவாளிகள் என்ற கவிதையாக வரவில்லை என்பதை நான் உணரவே செய்தேன். ஆனால் அக்கவிதைத் தேர்விலோ அல்லது வெளிவரவுள்ள ஈழத்துக் கவிதைத் தொகுப்பில் உள்ள என் சில கவிதைகளின் தெரிவிலோ நான் குறுக்கிட விரும்பவில்லை. ஏனெனில். அவை ஈழத்துத் தமிழ்க் கவிதையின் நிலையைப் பிரதிபலிக்கும் கவிதைகள். எனவே கவிதைகளைத் தெரிவு செய்தவர்களிடமே அச் சுதந்திரத்தை விட்டுவிட்டது மிக நியாயமானது. மேற்குறிப்பிட்ட கவிதை 'கவிதை'யாக அமையவில்லை என்பதை எனக்குச் சொன்ன ஒரே விமர்சகர் தமிழவன் தான். மற்றவர்கள் மனதுக்குள் என்ன நினைத்தார்களோ!

போராட்டம் (களனி) என்ற கவிதை
நீல நிற ஆழ்கடல் நீர்
நிலையிழந்த பாயுமலை

என்று நன்றாக ஆரம்பித்து

இரவின் கொடியகுளிர்
கரைவிலகி நெடுந்தொலைவு
நூலனைய நீளடிவான்
வான் கடலில் விழுமெல்லை
தாண்டிச் சிறுதோணி
இயற்கைக்கு எதிராக
மனிதன் துணிகின்றான்.

என்று தொடர்ந்து, இறுதியாக, எங்கே யாரும் அரசியல் முக்கியத்துவத்தைக் கவனிக்கத் தவறி விடுவார்களோ என்ற விதமாக, வாசகனில் நம்பிக்கை இல்லாதது போலப் பின்வருமாறு முடிகிறது.

வாழ்வுக்காய்ப் போராட்டம்
அனுபவத்தின் வழியறிவு
வளர்ச்சிக்காய்ப் போராட்டம்
வர்க்கச் சுரண்டலுக்கு
எதிரான போராட்டம்
ஓயாமல் நடக்கிறது
சமுதாயம் மாறுகுது
வரலாறு வளர்கிறது.

இதற்கும் மேலாக உதாரணந் தந்து முன்குறிப்பிட்ட குறைபாடுகளையும் விளக்க அவசியமில்லை. எனினும் இவ்வாறு பலவீனப்பட்ட ஒரு கவிதைக்கு ஜீவனூட்ட முயற்சித்த ஒரு சந்தர்ப்பத்தையும் கூறிவிட்டு அடுத்த கட்டத்துக்கு நகரலாம் என நினைக்கிறேன். ஒரு மலையகத்து ஏழைச் சிறுமியைக் கண்டி நகர வீதியோரம் கண்டபோது எழுந்த நினைவை 'அழகிய பெண்ணே' என்ற கவிதையில் எழுதினேன் (நதி-5). முற்பகுதி என் மன உணர்வுகளின் உடனடியான பிரதிபலிப்பு என்றால் பிற்பகுதி அதையொட்டிய சிந்தனைகளின் விகாரமான பிரச்சார வடிவம். விளைவு: ஒரு கவிதையின் இழப்பு, ஒரு சிந்தனையின் இடிபாடு.

குறுகத் தறித்த குலைந்த கூந்தல்
தெருவிற் பற்க்கும் தூசி படிந்திடக்
கூரிய விழிகள் கானிடைக் சேற்றைக்
குத்திக் கிளறக், கைகள் கந்தல்
உடையை இழுத்து இடையில் செருக,
கால்விரல் கொண்டு பூமியைக் கிண்டிப்
பசியை, ஏழ்மையை ஒருகணம் மறந்து
கலகல வென்று ஒலிமிகச் சிரிக்கும்
சின்னஞ்சிறிய அழகிய பெண்ணே!

தொலைவிருந் துன்றன் தந்தையைத் தாயை
சுரண்டும் அந்நியப் பகைவனை, அன்னான்
காலடி கழுவும் ஏவலர் தம்மைக்,
காவல் நாய்களை, பழைய உலகின்
கொடுமைகள் பேணப் பழங்கதை பேசிப்
பெண்களை ஒடுக்கும் முறைகளைக் காக்கும்
வஞ்சரை, அன்னார் சிந்தனை முறையைக்
கண்டறிந்துந்தன் கைகள் உயர்த்தி
ஆயுத மேந்திய போரிடு வாயே!
கூரிய விழிமுன் பகைவர் நடுங்க
கைக ளிரண்டில் பழையன நொறுங்க
உழைப்பில், போரில் சமத்துவம் கண்டு
நாறிடும் சிந்தனை காலடி நசுக்கிக்
கலகல வென்று ஒலிமிகச் சிரிப்பாய்,
நாளைய உலகின் அழகிய பெண்ணே!

பிற்பகுதியைப் பன்முறை திருத்தி எழுதியும் அண்மையில் பின்வருமாறு அமைத்ததும் என்னால் திருப்தி அடைய முடியவில்லை. அக்கவிதையின் மரணத்தை ஏற்றுக் கொண்டேன். அதைக்கொன்ற என்னால் அதனை உயிர்ப்பிக்க முடியவில்லை.

குருதி உறுஞ்சும் கொள்ளையர், கொடியோர்,
கூரிய நின்விழி கண்டு நடுங்க,
கைகளிற் பழைமைக் கொடுமை நொறுங்க,
போரில், உழைப்பில் சமத்துவம் கண்டு
புதிதோர் உலகம் படைப்பாய், காற்றில்
அலையாய்க் கூந்தல் நெளிந்து மிதக்கக்
கலகல வென்று ஒலிமிகச் சிரிப்பாய்
நாளைய உலகின் அழகிய பெண்ணே!

கவிதை பிரசாரம் செய்யாது என்றோ செய்யக்கூடாது என்றோ என்றுமே நான் சொன்னவனல்ல. எல்லா எழுத்துமே கருத்துப் பரிமாறலாக உள்ளபோது மனதில் தீவிரமாக உள்ள உணர்வுகள் எழுத்தில் வெளிப்படவே செய்கின்றன. அது உணர்வுபூர்வடான பிரசாரமாக இல்லா விடினும், பிரசாரமாக அமைவது தவிர்க்க முடியாதது. சத்திய வேட்கை, ஆன்மிகத் தேடல் என்றெல்லாம் வடிவம் பெறும் போது அதை வரவேற்பவர்கள், அதுவே அரசியலாக வரும்போது (அதிலும் மாக்ஸிய அரசியலாகி விட்டால்) மிகவும் கோபித்துக் கொள்கிறார்கள். மனதில் தோன்றும் கவித்துவமான சிந்தனைகளைக் கவிதைகளாக வழங்குவதில் ஒவ்வொரு கவிஞரும் ஒவ்வொரு முறையைப் பின்பற்றலாம்;. என்னளவில் இக்காரியத்தின் பெரும்பகுதி மனதிற்குள்ளேயே நிகழ்ந்து விடுகிறது. காகித்தில் எழுதிய பின்பு மனப்பதிவுகளுடன் அதை ஒப்பிட்டுவிட்டுச் சில நாட்களோ வாரங்களோ போனபின்பு, சமயம் அகப்படும்போது எழுதியதை மெருகிடுகிறேன். (முன்பு இந்த மெருகிடும் காரியம் கருங்கல் சிற்பத்துக்கு வர்ணம் பூசுகிற விதமாக, என் எழுத்தில் நம்பிக்கையில்லாத விதமாக, நிகழ்ந்திருக்கிறது. இதை உணர்ந்த பிறகுதான் என் எழுத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் நேர்ந்தது. இந்த உணர்வின் அடிப்படையிலேயே 1976க்கு முன் எழுதிய பலவற்றை நான் நிராகரிக்க நேர்ந்தது). இதை நான் எல்லாருக்கும் போதிக்கும் நீதியாகவோ விதியாகவோ வழங்கவில்லை. இது என்னளவில் இன்று நான் கடைப்பிடிக்கும் ஒரு விதியுமல்ல. ஒரு வழிகாட்டல். அவ்வளவே. இதன் விளைவாகச் சில கவிதைகள் நீண்ட காலமாக, அரை குறையாக எழுதப்பட்டு உயிர் மனத்திலும் உடல் காகித்திலுமாக இழுபட்டதும் உண்டு.

எப்போதோ எழுதி எங்கோ போட்டு வைத்த கவிதைகள் நெல்லும், வெட்டிப் பேச்சு வீரர்களும். முன்னையது உலகின் புரட்சிகர இயக்கங்களின் வீரர்களது தியாகங்களின் பாதிப்பு என்றால் பின்னையது மாக்ஸிய-லெனினிஸக் கட்சிக்குள் பிளவுகளை ஊக்குவித்த சில வாய்ச்சவடால்காரர்கள் பற்றிய வெறுப்பின் வெளிப்பாடு. அலை ஆசிரியர் குழுவில் உள்ள யேசுராசா எனக்கு நண்பர். நீண்டகாலம் விட்டுப்போன தொடர்பை, இக்கவிதைகளை அலைக்கு அனுப்பிய புதுப்பித்துக் கொண்டேன். அலைக்கும் எனக்கும் அரசியலில் உடன்பாடு சற்றும் இல்லை எனலாம். கால நகர்வில் அலையின் பிரிவினைவாதப் போக்கும் தேசிய ஒருமைப் பாட்டில் என் நம்பிக்கையும் நம் வேறுபாடுகளை வலியுறுத்திய போதும், யேசுராசா பற்றிய என் நல்லெண்ணமும் அலை என் எழுத்துக்களைத் தணிக்கையின்றிப் பிரசுரிக்குமென்ற நம்பிக்கையும் அலையில் தொடர்ந்து என்னை எழுத வைத்தன.

அலை மறுபடி வெளிவரச் சிறிது முன்னர் 1976இல் மாஒசேதுங் கவிதைத் தொகுதி மொழிபெயர்ப்பு ஒன்றைச் செய்யும்படி கண்டி கலாசாரக் குழுவின் நண்பர்கள் கேட்டனர். என் மொழிபெயர்ப்பின் பல குறைபாடுகளை இன்று என்னால் உணர முடிகிறது. ஆயினும் முடிந்தவரை மூலகத்துக்கு விசுவாசமாக இருக்க முனைந்தேன் என்பது எனக்கு ஆறுதல் தரும் விஷயம். இம்மொழிபெயர்ப்பு அனுபவம் எனக்கு என் கவிதைகளின் குறைபாடுகளைத் தெளிவாக உணர்த்தியது என்றால் மிகையாகாது. 'நதி' யில் (நதி-6) பிரசுமாக இருந்த என் மொழிபெயர்ப்புக்கள் (ஹோ சி மின் கவிதைகள் மூன்றும் 'இன்டர்னேஷனாலி' ன் மெட்டுக்கே எழுதிய அதன் தமிழாக்கமும்) நதிக்கு 'உதவ' வந்த 'நண்பர்'களால் ஒதுக்கப்பட்டுப் பிரதிகளும் தொலைக்கப்பட்டன. அவர்களால் அசுத்தப்படுத்தப்பட்ட நதியும் ஏமாற்றப்பட்ட கண்டி கலாசாரக் குழுவும் ஸ்தம்பித்து விட்டன. அதன்மூலம் நான் கற்ற பாடம், அனுப்பும் விஷயங்களுக்கு எல்லாம் பிரதி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே. ஆனாலும் பல சமயம் சோம்பேறித்தனம் என்னை வென்றுவிடுகிறது.

அலையில் என் கவிதைகள் வெளிவந்தபின்பு அவை பற்றிய நண்பர்களது கருத்துக்கள் மீண்டும் என்னை எழுதத் தூண்டின. மூன்று சிறு கவிதைகள் (சாகாத சரித்திரங்கள், எழுச்சி, சவாரி) எழுதிக் கணையாழிக்கு அனுப்பினேன். பிரசுரமாயின. 'எழுச்சி' மனதில் உருவான சமயம் இருந்த திருப்தி அச்சில் கண்ட மறைந்து விட்டது. அதில் என் பழைய குறைபாடு சற்றே தலை நீட்டியிருந்தது. இதை அடுத்து என் எண்ணத்தில் கிட்டத்தட்ட இரண்டு வருஷகாலமாக உருவாகி முழுமைபெறாது சித்திரையில் மாவலி கவிதையை எழுதிக் கணையாழிக்கு அனுப்பினேன். பிரசுரமாகவில்லை. அதன் பின்னரே கணையாழிக்கும் கவிதை மதிப்பீட்டுக்கும் வெகுதூரம் என்ற உண்மை கொஞ்சம் தெளிவாயிற்று, சப்தம் கொஞ்சம் ஒழுங்காக இருக்கத் தெரிந்தால் கணையாழியில் வராது என்று அறிந்த பிறகு கணையாழிக்கு எழுத முயற்சிக்கவில்லை. அதே கவிதையை அலையில் யேசுராசா பிரசுரித்தார். சொற்பிரயோகத்தைப் பொறுத்தவரை எனக்கு மிகவும் சிரமம் தந்த கவிதை அதுவேதான். என் ஊர் திருகோணமலை ஆழ்க்கடல், நீளக்கடற்கரை, வெள்ளைமணல், கடலில் க்hலூன்றும் கோணேசாமலை.... அழகான ஊர், பல இனத்து மக்கள். ஆனாலும் பேராதனையில் மாவலிகங்கை என் மனதைப் பாதித்த அளவு எந்த இயற்கைப் பொருளும் என்னைக் கவரவில்லை. மாவலி இன்று ஆழம் கெட்டு நோயுண்ட நதி. மழை காலத்தில் வெள்ளம். வெய்யில் காலத்தில் வறட்சியின் மிரட்டல் அடிக்கடி தன்னையும் தன் சுற்றாட லையும் சீரழித்துக் கொள்ளும் மாவலி எனக்குள் பலவிதமான உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மாவலி பற்றிய என் முதலாவது கவிதையில் என்னால் மாவலிரய மிகவும் பரிவுடனேயே அணுக முடிந்தது. கோடையில் மாவலி மணலில் தேங்கிய நீரைத் 'தழும்பு' என்றுதான் முதலில் குறிப்பிட்டேன். பிறகு 'தேமல்' என்று மாற்றிவிட்டேன். முன்னைய சொல் பார்வைக்கு அதிகம் உண்மையாக இருந்தபோதும் கூட பின்னையது என் உணர்வுகட்கு அதிகம் நெருக்கமாக இருந்தது.

இந்தக் கவிதைக்குப் பிறகுதான் எனக்கு என் எழுத்தாற்றலில் சிறிது நம்பிக்கை ஏற்பட்டது என்று நினைக்கிறேன். ஆயினுங் கூட என்னால் என் மனதில் உதிக்கிற கவிதையை உடனடியாகக் காகித்தில் எழுதிவிட முடிவதில்லை. 1981இல் வருடகாலம் இங்கிலாந்தில் நின்றபோது உருவான நினைவுகளே இலையுதிர்கால அரசியல் நினைவுகள், வஸந்தம் எனும் இரண்டும். முன்னது என் மனதில் முழுவடிவம் பெற இரண்டு வருடங்கட்குக் கிட்ட எடுத்தது.

ஓரிரவு, அகலிகை என்ற இரண்டுமே நான்கு வருடங்கள் முன்பு எழுதியவை. ஆனால் அவை எனக்குத் திருப்தி தரத் தவறின. 'வஸந்தம்' எழுதிய பின்பு 'ஓரிரவி'ன் அவசியமற்ற வார்த்தைகளை நீக்கிப் புதிதாக வார்ப்பது மிகவும் எளிதாக இருந்தது. இவற்றின் உள்ளடக்கங்கள், ஓசை எதுவுமே ஒற்றுமையுடையன அல்ல. 'அகலிகை'யும் மிக அண்மையில் தான் மெருகு படுத்தப்பட்டது.

'உன் மண்ணும் என் மண்ணும்' நீண்டகாலமாக மனதிலிருந்த ஒன்று. 'ஆண்ட பரம்பரைக் கவிஞர்கள்' எழுதியதற்கு மறுப்பாக எழுந்த எண்ணங்களை எழுதத் தூண்டியது சேரனின் 'எனது நிலம்' (இரண்டாவது சூரிய உதயம் கவிதைத் தொகுதி) கவிதையின் இறுதிவரிகள்.

............
எங்கும் ஒலிக்கிறது காற்று-
'எனது நிலம்,
எனது நிலம்'.

சேரனின் கவிதை வரிகள் ஆண்ட பரம்பரைக்காக ஏங்கும் உணர்ச்சிக் கவிஞர்களின் போலித்தனத்தை உடையளவல்ல. அவரது அரசியற் பார்வையை அவர் தனது நேரடி அனுபவங்களது வரையகட்குள் குறுக்கிக் கொண்டுள்ளார் என்றாலும் அவரது கவிதை நெஞ்சிலிருந்து வருகிறது என்பதாலேயே என் கவிதையை அக் கணத்தில் வருவிக்கும் ஆற்றல் அவரது வரிகட்கு இருந்தது.
எங்கள் குருN~த்ரம் பிரிவினை கேட்ட பாராளுமன்ற அரசியல் வாதிகளைப் பற்றிய அப்பட்டமான கிண்டல் என்றால், பேரில் என்ன இருக்கிறதாமோ? என் கவிதைகளிலும் கிண்டல் வேறுபடும் அளவுகளில் தலைகாட்டவே செய்கிறது. அது தனி மனிதர்களைப் பற்றியதல்ல. மனிதச் செயல்கள் பற்றியது. (அதுபற்றி நான் யாரிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டியது மில்லை!)
தனிமனிதர்கள் பற்றியோ என் தனிமனித உணர்கள் பற்றியோ உறவுகள் பற்றியோ எழுதுவதில் எனக்கு எப்போதுமே தயக்கம் இருந்துள்ளது. வரலாற்றில் முக்கிய பங்கு வகித்த தனிமனிதர் களை, அவர்களது வரலாற்றுப் பணிக்காக, மதிக்கிறேன். மா ஒ சேதுங் பற்றி எழுதிய ஒரே ஒரு கவிதை (காணாமற் போய்விட்ட ஒன்று) மட்டுமே இதுவரை ஒரு தனிமனிதரைப் பற்றி நான் எழுதியது. இனியும் எழுதமாட்டேன் என்ற உத்தரவாதமோ அல்லது எழுதக்கூடாது என்ற நிர்ப்பந்தமோ இல்லை. ஆனால் என் சுபாவம் அப்படியாகி விட்டது. என் அந்தரங்கமான உணர்வுகள் பிறர் அறியக் கூடாதபடி புனிதமான விஷயங்களும் அல்ல்பயங்கர ரகஸியங்களு மல்ல. ஆனால் நெருங்கிய நண்பர்களுடன் தனிப்பட்ட முறையில் பகிரும் விஷயமல்ல பிரசுரமாகும் கவிதை. அது ஒரு பொது விஷயம். சகமனிதன் என்ற முறையில், அந்த உரிமையுடன் வாசகனை அணுகும் செயல் என்பதால் எனக்கே உரிய விஷயங்களைப் பிறர் மீது திணிக்கக் கொஞ்சம் கூச்சமாக இருக்கிறதோ என்னவோ! ஆற்றங்கரையின் அந்தியும் மூங்கிலும் (படிகள்-17, 19 3) நான் எழுதிய கவிதைகளுள் எனக்குப் பிடித்த மிகச் சிலவற்றுள் ஒன்று. நீண்ட காலத் தயக்கத்தின் பின்பு அதை வெளியிட முடிவு செய்தேன்.

தனிமனிதர் ஒருவரின் பேர் குறிப்பிட்ட கவிதை வீரசூரிய : வேறொரு கோணம். 1977ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதச்திரக்கட்சி ஆட்சியின்போது, பேராதனைப் பல்கலைக்கழக வளாக அதிபருக்கும் அவரது நடவடிக்கைகளால் தனிப்பட்ட முறையில் பாதிப்பிற்குள்ளான் சிலருக்குமான மோதலைத் தொழிற்சங்கப் போராட்டம், மாணவர் போராட்டம் என்று திசை திருப்பியதால் ஏற்பட்ட குழப்பத்தின் விளைவாக 'வீரசூரிய' என்ற மாணவர் மரணமானார். வீரசூரியவுக்குத் தியாகிப்பட்டம் சூட்டித் தங்களது பிழைகளை மூடிக்கட்ட 'புரட்சி' பேசிய சந்தர்ப்பவாதக் கூட்டம் வேறு போலிகளும் முயன்றனர் ஆதாயம் என்னவோ தீவர வலதுசாரிக் கட்சியான யூ. என். பி. க்கே சேர்ந்தது. 1977இல் தேர்தலில் அவர்கள் அமோச வெற்றியீட்டினர். 1976-1977 காலத்தில் வந்த வீரசூரிய அஞ்சலிக் கவிதைகள் சொல்லத் தவறிய கதையை நான் சொன்னேன். 1982இல் நான் எழுதிய இக்கவிதையும் நீண்டகாலம் மனதில் அசைபோடப்பட்ட ஒன்றுதான். யேசுராசா தனக்குப் பிடித்திருந்தது என்று கூறியபோதிலும் இது பிரிவினைவாதிகட்குப் பாதகமான கருத்தக்கட்கு (?) இடமளிக்கும் என்ற காரணத்தால் அலையில் பிரசுரமாக வில்லை. என் விஷயத்தில் அலை (யோசுராசா அல்ல) ஏமாற்றமளித்த முதற் சம்பவம் இதுவே. கவிதையின் தரம் பற்றிய கேள்விய எழவில்லை என்பதும் கவிதையின் உண்மை சார்ந்த தன்மையும் மறுக்கப்படவில்லை என்பதுமே எனக்கு ஏமாற்றமளித்தன. இக்கவிதை இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி (இடது) நடத்தும் செம்பதாகையில் பின்னர் வெளியானது.

இலங்கைத் தமிழ்க் கவிதைகள் பற்றி இந்தியாவில் நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டுள்ளது என்பதற்கு இலங்கையில் (புதுக்கவிதை என்ற பேரில் வரும் பிதற்றல் கட்கும், வாய்ப்பாடு ஒப்பிப்பது போல ஒப்பிக்க மட்டுமே தகுந்த மலபுக் கவிதைகட்கும் காரணமாக உள்ளோர் போக) கவிஞர்கள் ஒரு வலுவான கருத்து வாகனமாகக் கவிதையைக் கருதுவது ஒரு காரணமாக இருக்கலாம். இந்தியத் தமிழ்க் கவிதையின் நலிவு இன்னொரு காரணமாகவும் இருக்கலாம். எனினும் என்னளவில் இலங்கைத் தமிழ்க் கவிதையின் எதிர்காலம் பற்றி அதிகம் உற்சாகம் இல்லை. பல கவிதைகளைப் படிக்கும்போது நிமிர்ந்து உட்காரச் செய்பவை அவை கூற முனையும் சம்பவங்களாக மட்டுமே தோன்றுகின்றன. அரைவேக்காட்டுத் தத்துவங்கள் உரைநடையிலே கூட அருவுருப்புத் தருகின்றவை. அவை கவிதையில் வரும்போது முழுமை இன்மை. குழப்பம், முரண்பாடு ஆகியன மனதை வெறுக்கச் செய்கின்றன. நல்லவேளையாக தொகையில் மிகவும் குறைவாகவே உள்ளன.

நான் ஈழத்துக் கவிஞர்கள் எல்லாரினதும் படைப்பிலும் எதையாவது படித்தேன் என்றோ ஏவராவது ஒருவரின் எல்லாப் படைப்புக்களைமோ (தவிர்க்க முடியாமல், என்னுடையவை தவிர) பெரும்பாலானவற்றையோ படித்தேன். என்றோ கூறமுடியாது. மஹாகவி, முருகையன், நுஃமான் போன்றவர்களின் கவிதைகளில் சில மனதுக்கு மிகவும் பிடித்தவை, பல படித்து ரசித்தவை. என்னளவில், சண்முகம் சிவலிங்கம் செய்தது போன்ற திறமையுடன் அயற்கையைக் கையாண்ட சமகால ஈழத்துக் கவிஞர் எவரும் இல்லை. அதை நான் படித்த ஒரு சில கவிதைகளை வைத்தேதான் சொல்கிறேன். அவருடைய நண்டும் முள்முருக்கும் கவிதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தும் வெளியிட முடியாமற் போய்விட்டது. என் மொழிபெயர்ப்பின் குறைபாடுகளையும் மீறி, அக்கவிதையைப் படித்த பல தமிழ்ப் பேசாத நண்பர்கள் அதை மிகவும் பாராட்டினர்.

யேசுராசாவின் சில கவிதைகளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தேன். சண்முகம் சிவலிங்கத்தின் கவிதை கட்கு நேர்ந்த கதியே இவற்றுக்கும் நேர்ந்தது. ஏனோ, யேசுரசாவின் முன்னைய காலக் கவிதைகளில் உள்ள கவித்துவம் பின்னைய காலத்தினவற்றில் எனக்குப் புலனாகவில்லை. சேரன் எழுதிய கவிதைகளில் பலவும் வ.ஐ.ச. ஜெயபாலனின் ஆரம்பகாலக் கவிதைகளும் நான் ரசித்தவை ஜெயபாலனின் சில அண்மைக்காலக் கவிதைகளில் தென்படும் போலித்தன்மை சற்று மிகையாகவே உறுத்துகிறது.
நான் முன்னர் குறிப்பிட்ட குறைகள் எல்லாம் நல்ல கவிதைகளை எதிர்பார்த்த இடங்களில் நேர்ந்த ஏமாற்றங்களே. பேர் குறிப்படாதவர்களிடையே நான் ரசித்த கவிதைகள் பலவற்றை எழுதியோர் உள்ளனர். இது முழுமையான விமர்சனக் கட்டுரை அல்ல, ஈழத் தமிழ்க் கவிதை பற்றி என் சில எண்ணங்களைத் தெளிவுபடுத்தும் முயற்சியே இது என்று இங்கு நினைவூட்டுவது போதுமானது என நம்புகிறேன்.

இலங்கைத் தமிழ்க் கவிதை பற்றி எனக்குச் சில அச்சங்களும் ஐயங்களும் இருக்கின்றன. கவிதையின் பல்வேறு பரிமாணங்களையும் சாத்தியக் கூறுகளையும் துணிவுடன் அலசி ஆராய்வதில் உள்ள போதாமை, 'சாதனைகள்' பற்றிய சுயதிருப்தி, விமர்சனங்களை ஏற்பதில் தயக்கம், பரஸ்பரம் புகழ்மாலை சூட்டும் குறுகிய வட்டங்கள், எல்லா இலக்கியத் துறைகளையுமே பாதிக்கும் கிணற்றுத் தவளை மனோபாவம் போன்ற பலவற்றை என்னால் உணர முடிகிறது. இடதுசாரி அரசியல் கோஷங்களையே கவிதையாக்கும் பலவீனத்தை எளிதாகக் கண்டு கொள்ளும் பலரால் சிந்தனைத் தேக்கத்தை அடையாளங் கண்டுகொள்ள முடியவில்லை. அலங்கார வார்த்தைகளும் படிமங்களும், குறியீடுகளும் கொண்டு சிந்தனைத் தேக்கத்தை யாருக்கும் தெரியாமல் மூடுவதில் ஒருவரது கவிதை வெற்றி காணலாம். ஆனால் கவிதையின் வளர்ச்சியைச் சிந்தனையின் வளர்ச்சியினின்று பிரிக்க முடியாது. முடங்கிய சிந்தனைச் சூழலில் கவிதையும் முடங்கியே போகும்.

அளவுக்க அதிகம் எதிர்பார்க்கிறேனோ என்று பல தடவை என்னையே கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் மற்ற எல்லா இலக்கிய வடிவங்களையும் போலன்றி நீண்டகால மரபு (முறிவுகளுடன் தான்) உள்ள தமிழ்க் கவிதையின் பின்னணியில் அதிகமாக எதிர்பார்க்க எல்லாரையும் போல் எனக்கும் உரிமை உண்டு. இன்று கவிதைத் துறையில் பலரும் புதுக்கவிதையை ஒரு இலகுவான மார்க்கமாகப் பயன்படுத்த முனைந்துள்ளார்களே ஒழிய மரபின் குறைபாடுகட்கு ஈடுகட்டும் ஒரு வலிய ஆயுதமாகப் பயன்படுத்தவில்லையோ என்ற கேள்வி சில சமயம் பயனுள்ள பதில்களைத் தரலாம். ஒருவேளை நம் கவித்துவம் மரபின் விறைப்பினின்று விடுபட்டதாக எண்ணிப் புதுக்கவிதையில் சோம்பேறித்தனமாக முடங்கி விட்டதா?

கவிதை எப்படி அமைய வேண்டும் என்பது பற்றி அபிப்பிராயங்கள் பலவாறாக இருக்கலாம். எல்லா இலக்கிய வடிவங்கள் விஷயத்திலும் உள்ளவாறே கவிதை விஷயத்திலும் கருத்து முரண்பாடுகள் அமைகின்றன. கவிதை என்பது ஒருவர் தனக்காகவே எழுதுவது என்ற விதமாகவும் சில கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. (இவ்வாறான கருத்தைச் சிறுகதை விஷயத்திலோ நாவல் விஷயத்திலோ யாராவது சொன்னால் அபத்தமாகத் தோன்றுமென்று நினைக்கிறேன்) ஒருவர் எழுதுவது தன்னுள்ளே எழும் உந்துதல் காரணமாக என்ற அளவில் அது தனக்கான விஷயம். அதை எழுதும் காரியம் அதைப் பிரசுரித்து வெளியிடும் முயற்சியாக வரும்போது அவர் தன் எண்ணத்தை வேறு யாருக்கோ கூறும் செயலாக, அனுபவ மொன்றைப் பகிரும் முயற்சியாக ஆகி விடுகிறது. எனவே கவிதை முற்றிலும் தனிப்பட்ட ஒருவர் சார்ந்த விவகாரம் அல்ல.

கவிதையின் நோக்கு கவிஞனின் சிந்தனை சார்ந்தது. ஒருவர் முற்போக்குவாதி என்பதால் அல்லது புரட்சிவாதி என்பதால் அவரது கவிதைகள் எல்லாமே ஒரே விதமானவையாக ஒரே இலட்சியம் தழுவியனவாக அமைவதில்லை. மனித சிந்தனை பன்முகப்பட்டதாக இருக்கிறது. என்வே கவிதையும் பல்வேறு விஷயங்கள் தழுவியதாகவும் வாழ்வின் வௌ;வேறு அம்சங்களையும் வௌ;வேறு கொணங்களினின்றும் காண்பதாகவும் அமைகிறது, அது பிறர்க்கு வழங்கப்படும் ஒன்று என்பதால், வழங்குவர் அதைத் தன் சமுதாயப் பிரக்ஞைக்கு ஏற்ப, படிப்பவர்களுக்கும் தனக்குமுள்ள உறவின் அடிப்படையில் வழங்குகிறார். இதன அர்த்தம், படிப்பவர்களை மகிழ்விக்கவோ அவர்கள் மறுப்பின்றி ஏற்றுக்கொள்ளு மாறோதான் கவிதை அமையவேண்டும் என்பதல்ல. தான் சொல்ல நினைத்தது வாசனைச் சரியாகச் சென்றடைகிறதா, தான் சித்திரிக்க நினைத்தது செவ்வனே சித்தரிக்கப்பட்டுள்ளதா என்பன பற்றிய அக்கறை முக்கியமானது. கவிதையை மெருகிடுவது சாத்தியமில்லை என்பவர்கள் சரியான வார்த்தையைத் தேடுவது பற்றிய உடன்படுகிறார்கள். சரியான வார்த்தை, வார்த்தை அமைப்பு என்பன ஒருபுறம் கவித்துவம் சார்ந்தவை, இன்னொருபுறம் கூற நினைத்த கருத்துச் சார்ந்தவை. வேறொருபுறம் ஓசைநயம் (சில சமயம் ஜடத் தன்மையான இலக்கண விதிகள்) சார்ந்தவை. இவையெல்லாம் கவிஞர் எவருக்கும் எல்லாச் சந்தர்ப்பங்களிலுமே ஒரேயடியாகச் சரியாக அமைந்து விடுவதில்லை.

கவிதை என்பதே மொழிசார்ந்த விஷயம். சொல்லாற்றல், சிந்தனைத் தெளிவு என்பன பயிற்சியுடனும் அனுபவத்துடனும் வருபவை. மனதிலுள்ள எண்ணங்கள் ஒரே வீச்சில் சரியான வார்த்தையமைப்பில் எப்போர்மே அமைந்துவிடுவதில்லை. எனவே சொற்கள் சிந்தனையுடன் சரியான பொருந்துகின்றனவா என்று கவனித்துச் செப்பனிடும் தேவை ஏற்படலாம். மெருகு படுத்தல் என்பது மூலச் சிந்தனையையோ அதன் கவித்துவத்தையோ சிதைக்கும் காரியம் அல்ல. அண்ணளவாக உருவான ஒரு சிற்பந்தை மேலும் நுட்பமாகச் செது க்கும் காரியம் போன்றது. ஒரே மூச்சில் அழகான, வலிமையான கவிதைகளை வார்க்கக்கூடிய கவிஞர்கள் இருக்கலாம். அவர்களுள் நான் ஒருவனில்லை. அதற்காக நான் வெட்கப்படவும் இல்லை. என் மொழியாற்றிலின் குறைபாடுகளை நான் உணர்கிறேன். அதற்குட்பட்டே என்னாலானவரை என் எண்ணங்கட்கு எழுத்துவடிவம் தருகிறேன்.

நன்றி, வணக்கம் என்கிற வார்த்தைகள் ஆங்கிலப் பண்பாட்டின் தாக்கத்தின் விளைவாகவே நம் சமுதாயத்தில் பரவலான புழக்கத்திற்கு வந்துள்ளன. இருபது வருடங்கள் முன்பு என் நெருங்கிய உறவினர் ஒருவர் என்னைப் புகைளயிரத நிலையத்துக்குக் காரில் கொண்டு போய் விட்டசமயம், கொழும்பில் ஓரிரு வருஷம் வாழ்ந்து பழகிவிட்ட காரணத்தால், 'நன்றி' என்று ஆங்கிலத்தில் சொன்னேன். 'இதென்ன, அந்நியர்களிடம் சொல்வது போல இந்தச் சம்பிரதாயங்கள் எல்லாம்...' என்று மன வருத்தப்பட்டுக் கொண்டார். நம் மத்தியில் நன்றி, வணக்கம் என்ற வார்த்தைகளைவிட அவை குறிக்கும் உணர்வுகளை உணர்த்தும் முகபாவம், 'வாருங்கள்' 'வருகிறேன்' என்பது போன்ற குளிர்ந்த சொற்கள் கூடுதலான வலிமையுடன் உபயோகப்பட்டு வந்திருக்கின்றன. அதையெல்லாம் சமகாலச் சமுதாய மாற்றங்கள் மெல்ல மெல்ல அரித்து அகற்றி வருகின்றன. அவைபற்றி அழுது கொண்டிருக்க நமக்கு அவசியமும் இல்லை, அவகாசமும் இல்லை. அந்த உணர்வுகள் மட்டும் மனதில் முழுமையாக நின்றால் எந்த மாற்றுவார்த்தையும் ஒன்றேதான். நேரில் நன்றி கூற முடியாத இடத்தில், முகத்தில் மட்டுமே காட்டக் கூடிய உணர்வுகட்கு வார்த்தைகள் ஈடுசெய்ய முடியாது.

பத்மநாபனு க்கு இந்த விஷயத்தில் நன்றி தெரிவிக்கிறது அபத்தமான காரியம். தொகுப்பு விஷயத்தில் இப்போது எழுதப்படும் இந்த முன்னுரைபோகக் கிட்டத்தட்ட முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டவர் அவர். ஆரம்ப காலத்தில் உற்சாகப்படுத்திய நண்பர் யேசுராசா பற்றி முன்பே குறிப்பிட்டேன். அண்மைக்காலத்தில் எனக்கு மிகுந்த ஊக்கமளித்தவர் நண்பர் கே. ஏ. சுப்பிரமணியம். இவர்கள் சம்பந்தப்பட்ட அலை, செம்பதாகை, தாயகம் ஆகிய ஏடுகளிலேயே தொகுப்பிலுள்ள பெருவாரியான உருப்படியான கவிதைகள் வந்தன, அல்லது வரவுள்ளன. நதி ஆசிரியர் குழு நண்பர்களுள் பலருடன் இன்று தொடர்பு விட்டுப்போய் விட்டது. ஆயினும் கந்தையா, ராஜாங்கம், தங்கவேல், இராசு, விசுவானந்த தேவன்' போன்றோரை நான் இப்போது நினைவுகூராமல் இருக்க முடியாது. களனியுடன் தொடர்பு அரசியல் முரண்பாடுகளால் நின்றுபோனது. களனியும் அப்போதே நின்றுபோனது. புயுருபுநு என்ற பேராதனைப் பல்கலைக்கழக ஏந்திரவியற்பீட மாணவர் சஞ்சிகையிலே இந்தோசீனத்துக்கு வெளியானது. சமீபத்தில் 'கீற்றுக்கு' அனுப்பிய 'ஒரு பெருமைக்குப் பின்' அதில் வெளிவரவுள்ளது. என் கவிதை ஒன்றின் குறைகளைச் சுட்டிக்காட்டிய தமிழவனை ஆசிரியர் குழுவில் கொண்ட 'படிகள்' என் கவிதைகளை மிகையாகவே பாராட்டி (படிகள் - 17) உற்சாகப படுத்தியுள்ளது. கணையாழி என் மூன்று சிறு கவிரைதகள் வெளியிட்டமை என்னை அன்று உற்காசப்படுத்தியதையும் நாம் மறப்பதற்கில்லை. இப்பத்திரிகைகள் சம்பந்ப்பட்டவர்கட்கு என் நன்றிகள் உரியன.

இறுதியாக, இக்கவிதைத் தொகுதிக்கு (முதல் பதிப்பு) நூல்வடிவம் தருவதற்குப் பெரிதும் துணைநின்றதற்காக தமிழவனுக்கும், டாக்டர் சண்முக சுந்தரத்துக்கும், காவ்யாவெளி யீட்டகத் திற்கும் என் நன்றிகள்.

சி. சிவசேகரம்

1983ஜுன் 25,


---------------------------------------------------------------------------------------------------


ஒரு பெருமழைக்குப் பின்

பொழிதல் ஒழிந்து
மழை
ஒரு பொழுது ஓயும்.
தூசு துடைபட்ட காற்று
கண்ணாடிபோற் துலங்கும்.
கழுவுண்ட கார்மேகம்
வெளிறி வெளுத்து
வான்மூட விரிந்திருக்கும்
மேக நெடுந்திரையில்
பொத்தல்களின் ஊடாக
நீலமாய்
வானத்தின்
துண்டு சில தெரியும்.
மேற்கே தலை நீட்ட
முயல்கின்ற சூரியனை
ஏமாற்றம் காற்று.
வரமறுக்கும் வானவில்.

மேல்வானம்
மெலிதாய்ச் சிவந்து,
மேகங்கள் படைபடையாய்க்
கரிதாகிக்,
குளிர்மிகுமோர் இருளுக்குக்
காவலாய் நிற்க,
இரவு வரும்.

கூரைகட்கீழ் ஜன்னல்கள்
ஒவ்வொன்றாய் ஒளியேறும்.
மேனிகளைச் சூழப்
போர்வைகளாய் வேலி எழும்.
ஒவ்வொன்றாய் விளக்கணையும்.

கை கால்கள் உடல் இறுக்கத்
தெருமருங்காய்க்
கடைவாசற்படியேறிக்
குறுகிக் கிடக்கின்ற
மானுடரின் கண் விழிகள்
மூடிக் கடமை செயும்.

என்றும் போல்
ஆனாலும் வேறொன்றாய்க்
காலைவிடியும் நாளைக்காய்
சிறுதூறல் மின்ன
ஈசற்படை மொய்க்க
வீதி விளக்கு நிரை
காத்திருக்கும்
கண் விழித்து.

---------------------------------------------------------------------------------------------------

சித்திரையில் மாவலி

மார்கழி மேக மழைநீர்ப் பெருக்கில்
மூழ்கி அமிழ்ந்த மாவலி இன்று
சித்திரை வெயிலில் மேனி உலர்த்தும்

ஆழங் குன்றிய அகண்ட ஆற்றின்
இருகரை மேலும் இறந்த மரங்கள்,
பூமிச் சிறையைப் பெயர்த்த வேர்கள்.
கழுவித் தேய்ந்த கரைகள் மீது
காய்ந்த வண்டற் தூசியில் மாதம்
நான்கு முந்திய சுவடுகள் தெரியும்.

ஆற்றின் பழுப்பு உடலின் மீது
தேமல் போன்று தேங்கிய நீரில்
பகலில் மண்ணும் பாசியும் கல்லும்
மெல்லச் சறுக்கும் மீனும் தெரியும்.

பள்ளத் தாக்கிற் பரவிய மணல்மேல்
மௌ;ள ஊரும் மெலிதோர் கோடு
இந்த மாவலி இரவிற் தவழும்
மெகுளிர் காற்றில் மேனி நடுங்க,
நீரில் விழுந்த நிலவு நொறுங்கும்;
மூங்கில் மரங்கள் முறிந்தே தெரியும்.

மணக்கண் நோக்கில் மாவலி மணல்மேல்
ஒருநூறாண்டுகள் முன்னம் ஓடிய
மாநதி மீண்டும், மீண்டும் தெரியும்

---------------------------------------------------------------------------------------------------

வசந்தம்

நூறு நீல நிறங்களில் வானம்,
நீலம் வேறொரு நூறினில் ஆழி.
கோடி நிறத்தினில் பூக்கள் விரிக்கும்.
கொம்பர் மீது இலைகள் துளிர்க்கும்
போன் கடுங்குளிர்க் காலத்து மேகம்.
பூத்துப் பரப்பிய வெண்பனி தன்னைக்
காற்று நினைத்துடல் கொஞ்சம் சிலிர்க்கும்
ஆடும் கிளைகளின் பூக்கள் பறக்கும்.

நேரம் நகர்வதை நெஞ்சு வெறுக்கும்
கோடைத் திசையினிற் காலம் சறுக்கும்.

---------------------------------------------------------------------------------------------------

மறுப்பு

வானிற் சாம்பல் முகில் ஊரும்
மழையும் இடையிடை வீழும்
காற்று
ஈரமும் குளிரும் சேர வீசும்.
சூரியக் கரங்கள் நாலு திங்களில்
ஆற்றுப் படுக்கையில் அமைத்த சாலை
சேற்று நீரில் மூழ்கி மறையும்.
காலடி நொறுங்கும் காய்ந்த புல்லில்
சிறுதணல் செய்த கரிய கோலம்
பசும்புல் தரையின் பின்னால் ஒளியும்.
இலைகள் அழிந்த பெருமரக் கிளைகளில்
காய்ந்து கிடந்த நீண்ட கழிகள்
புதிய தளிர்களின் உள்ளே பதுங்கும்.

பட்டை வறண்டு வெடித்த நிலையில்
செத்தும் சாயா நெடுமரப் பிணமோ
மாறாய் ஏதோ கூறிட முனையும்.

---------------------------------------------------------------------------------------------------

நிழல்

காலைமுதல் நின்றேன்
கீழைக் கடற்கரையில்.
நீளமான எனது நிழலுடன்
சூரியன் எழுகை நிகழ்ந்தது.
மெல்ல மேற்கினின்று
நிழலின் தலை என்னை
அண்மிப் பணிந்து
என் அடியுள் அடங்கியது.

ஒழிந்தது நிழலென
எண்ணி என்கால்
ஓங்கி மிதித்தேன்.

நிழலின் தலையென்
காலின் நழுவிட
மீண்டும் நீண்டு
வளர்ந்த என்நிழல்
கீழைத் திசையை
நோக்கிப் பாய்ந்து
கடலுள் விழுந்தது.
ஒழிந்தது நிழலென
எண்ணியிருந்தேன்.
இருளாய் மூடி விழுங்கியது
என்னை-நிழல்.

---------------------------------------------------------------------------------------------------

வெட்டிப் பேச்சு வீரர்கள்

காற்றுக் களைப்புடனே
கொட்டாவி விட்டபடி
நெட்டைப் பனைவிரலை
நெட்டி முறித்தபடி-
சில்வண்டு சூள்கொட்டிச்
சலிப்பை உரைத்தபடி

திண்ணையிலே பாய்விரித்துத்
தெருவோரம் உட்கார்ந்து
அண்டை அயல்முதலாய்
அந்தரத்து வெளிவரையும்
அலசிப் புதினமெதும்
இல்லாக்கால் உண்டாக்கிக்
கண்டதுபோற் கதைபேசிக்
கால் நாளைத் தின்படி-

விண்தொலைவின் வெற்றிடமும்
பெருமூச்சு விட்டபடி!

---------------------------------------------------------------------------------------------------

நெல்

முளைந்து எழுந்து தளிர்த்து வளர்ந்து
செழித்து வளைந்து சரிந்து விழுந்து
இறந்து கிடந்த நெல்லின் தலையில்
இருந்தன நாளைய பரம்பரை நூறு.

---------------------------------------------------------------------------------------------------

சவாரி

துள்ளியெழுந்து தாவிப்பாய்ந்து
தூரப்பயணம் முடியும் தறுவாய்
கரையை நெருங்கி வெண்ணுரை சிந்துவ
ஆழக் கடலின் கோடிப் புரவிகள்.
கடல்மேற் கவிந்த இருளைப் பொருத
அடிவான் கடந்த படையினர் காலை
விடியலில் வென்று வீடு திரும்புவர்
கோடிப் புரவிகள் குலுக்கிடும் தேர்மேல்.

---------------------------------------------------------------------------------------------------

சாகாத சரித்திரங்கள்

கரை மீது அலைவந்து
அடிபதித்த மணற்சுவடு.
காற்றடித்து மணல்வீசும்.
கடலிருந்தோர் அலைவந்து
அலைபதித்த அடிச்சுவட்டை
அழித்தங்கோ சுவடமைக்கும்
அலையடங்கும், அலையெழும்பும்:
சுவடழித்த சுவடழியும்.
மறுபடியும், மறுபடியும்.

---------------------------------------------------------------------------------------------------

எழுச்சி

வானை நோக்கி முஷ்டி உயர்த்தி
வீர கர்ஜனை செய்தது ஆழி.
சீறி எழுந்த கைகள் விரிந்து
பாறை மேனியில் பாய்ந்து அறைந்தன.
கடிய பாறையின் பசிய போர்வையைப்
பிராண்டிப் பிய்த்தன வெண்ணுரை நகங்கள்.
கடலைப் பாறை நெரிக்கும் வரைக்கும்
கடலின் கரங்கட் கேது ஓய்ச்சல்!

---------------------------------------------------------------------------------------------------

பயணம்

பகலின் நலிவு, இருளின் வலிவு.
இன்னும் ஒருமுறை இரவு வெல்லும்.
ஓங்கும் மரங்கள், இலைகளில் இரவு
காயத், தீய்ந்து கரியாய் மாறும்
நெடிய தென்னை தலையை விரிக்கப்
பேய்கள் அஞ்சி ஒடுங்கி நிற்கும்.
சின்ன வண்டுகள் சில்லென அலறத்
தவளைகள் மேனி நடுக்கங் கேட்கும்.
வான வெளியில் நிலவு தடுக்கி
மேகக் குளத்தில் வீழ்ந்து மூழ்கும்.
இருளோ இன்னும் இன்னும் சூழும்.

நீண்ட பயணம் போகவே வேண்டும்-
விழிகள் மெல்லக் குருடாய் மாற
இடறுங் கால்கள் வழியைத் தேடும்.
நாளைக் காலை விடியக் கூடும்,
விடியலிற் பாதை தெரியக் கூடும்
கால்கள் விரைவாய்ப் போகவுங் கூடும்
இருளை மீறி இரண்டு அடிதான்
முன்னே போக முடியினும் போவேன்.
விடியலைக் காத்து நிற்குமோ காலம்?

---------------------------------------------------------------------------------------------------


இலையுதிர்கால அரசியல் நினைவுகள்

உலர்ந்து காற்று மரங்களை உலுப்பும்.
மெலிந்த கிளைகளில் முளைத்துப் பழுத்த
இலைகள் மெல்ல மரத்தின் நீங்கி
வலிய காற்றின் வழியில் ஓடும்.
பிரிந்த இலைகள் தரைமேல் வீழ
மரங்கள் மேலும் செழுமை நீங்க
விழுந்த இலைகள் சருகாய் மாறப்
பூங்கா மெல்ல இடுகா டாகும்.
பறவைகள் போவன. அணில்கள் அகல்வன.
இரவில் மரங்கள் பேய்கள் கையில்
ஏந்தி நிற்கும் துடைப்பம் போல.....
இலையுதிர் காலம் இத்தனை கொடியதோ?

நாட்கள் குளிர்மிக, மரங்கள் மீதும்
மண்ணின் மீதும் வெண்பனி வீழ,
வெண்பனிப் படலம் பூமியை மூட,
பறவைகள் இன்றி, அணில்கள் இன்றி
மரங்கள் மட்டும் நேராய் நிற்கக்
கம்பனி உடைக்குள் மேனி நடுங்கினும்
வெண்பனி அழகை மறுத்தற் கில்லை.

மீண்டும் மலர்கள் மண்ணைகப் பெயாக்கப்
பறவைகள் மெல்லப் பாடத் தொடங்க
அணில்கள் தாவ வஸந்தம் வந்தது.
மரங்கள் மீது இலைகள் போர்த்தன.

இலையுதிர் காலம் கொடியது தானோ?

---------------------------------------------------------------------------------------------------


மாவலியின் மார்கழியில்

மாவலியின் மார்கழியில்
நீருயரும் கரை அமிழும்
கரையமர்ந்த புல் அழுகும்
சேறாக ஓடுகிற
மாவலியில் மாமலைகள்
மெதுவாகக் கடல் தேடும்.

நேற்றிரவு
நீரருந்தும் பாவனையில்
கரையோரம் குனிந்திருந்த
பசுமூங்கிற் புதரொன்று,
வேரறுந்து,
வெகுதொலைவில்
பாறையிடைப் பிணமாகப்
படுத்திருக்கும்
துண்டுகளாய்.

நேற்றிரவு
ஆற்றினிலே காலூன்றி
நின்றதொரு நிழல்வாகை
கால் முறிந்து,
கரையோரம்
சேற்றினிலே சரிந்திருக்கத்
தூர அலைகளிடை
தலைநீட்டும் கிளையொன்று.
அதிவிரைவாய் ஆறோடும்.

அரசாங்க வாகனங்கள்
ராப்பகலாய் ஓடும்
யாழ்ப்பாண வீதிகளில்
வீதிக் கரையோரம்
நேற்றிரவு நின்றவனோ
இன்று
மதகடியில்
இல்லையெனில்
வாய்க்காலில்
பிணமாக-
ஒன்றாயோ துண்டாயோ.

ஊர்தேயும்.
ஆனாலும்,
வீதிவழி
விரைந்தோடும் வாகனங்கள்,
ஓ!
நோய்மிகுந்த மாவலியே,
கரையோரப் புதர்மூங்கில்
கையசைக்க நேசமுடன்
நிழல்வாகை மலர்சிரிக்க,
காற்றினிலே புல்வளைய,
மலைகிடக்க,
மார்கழியில் நீ நடக்க-
நாம் உலகை மாற்றிடுவோம்.

---------------------------------------------------------------------------------------------------

ஆற்றங்கரையின் அந்தியும் மூங்கிலும்

ஆற்றின் விளிம்பில் அடர்ந்து செறிந்த
மூங்கில் மரநிரை ஆற்றுடன் வளையும்

பருத்த இலைகள் பற்றிப் பிடித்து
மண்ணிற் பதித்த ஈட்டிகள் தம்கூர்
முனைகள் வானை நோக்கியவாறு
இளமை முறுக்குடன் நிமிர்ந்து நிற்கும்.

சீராய் வளர்ந்த மஞ்சள் வனப்பு,
மேலே மெலிந்து வளைந்த மேனி,
நீரின் பரப்பில் சிறிதே நெளியும்
மேனிச் செழிப்பைக் குனிந்த மூங்கில்
காணும், நிமிரும், மீண்டும் குனிந்து
மெலிந்த முனையால் நீரை அளைந்து
நிழலைக் கலைத்து நீர்த்துளி சிதறும்
மூங்கில் முதுகு நிமிரும் போது
இலைகள் குலுங்கிக் காற்றை அலைக்கும்.

சாயும் ஒளியும் இலைகளின் நிழலும்
மூங்கிற் தண்டின் கணுக்கள் இடையே
தீட்டிய பச்சைப் படைகள் மேலாய்த்
தாவிப் பாய்ந்து தம்முள் மகிழும்.

வானம் வியந்து வாயை விரிக்கும்.
காற்றும் நதியும் ஒருகணம் ஓய
நேரம் நிற்கும். அழிந்த நினைவு
உயிர்க்கு முன்னம் நேரம் தாவும்.

நானும் மூங்கிலும் நதியும் காற்றும்
ஒளியும் நிழலும் வானும் யாவும்
கல்லாய் விறைத்த உறைதல் உருக
நெஞ்சில் உனது நினைவு ஊரும்.
வானம் சிவந்து எரிந்து கருகும்.

---------------------------------------------------------------------------------------------------

நாங்கள் விமர்சகர்கள்

நாங்கள் விமர்சகர்கள்.
நமக்குத் தொழில் கவிதை
நயமான கட்டுரைகள்
பாட்டுப் புன்னகதைகள்
நாடகங்கள் திரைப்படங்கள்
பார்த்தவைகள் அத்தனையும்
பலபேர் அறிந்திடற்காய்
ஏட்டில் எழுத்தில்
பேச்சில்

எம் கருத்தை
எடுத்து விளம்பி
நாலைந்து பாராட்டு
காதிரையக் கைதட்டல்
கேட்டு மகிழ்வதுதான்-
வேறென்ன கண்டபயன்?

காக்காய் பிடித்தொருகால்
வானொலியில் சான்ஸ் வாங்கி
நாலைந்து கதை பேசின்
நயமான காசுவரும்
ஆனாலும் நாலைஞ்சு
ஆட்சனத்தின் முன்னாலே
பேசிப் பகிடி விட
சனஞ் சிரித்துக் கைதட்ட
நாளைக்கு ஓரொருத்தன்
கூட்டத்தில் பேசவரக்
கூப்பிடுதல் போல மனக்
குளிர்ச்சி அதில் உண்டோ?

புத்தகத்தை வெளியிட்டால்
விற்பனையில் வல்லவர்கள்
வெளியிடவும் விமர்சனக்கும்
வைக்கிறது வெகுகூட்டம்.
செத்தவரைப் பாராட்டக்
கூட்டங்கள் வெகு சகஜம்
ஆரென்றும் பாராதீர்
ஆளனுப்பமு; நாம் வருவோம்.

முன்னைப் பிறவியினில்
சின்னப் பருவத்தில்
பிழைக்கத் தெரியாமல்
மாக்ஸ்வாதம் யதார்த்தமெனச்
சொன்னதெல்லாம் ஓரயலில்
மூட்டைகட்டி வைத்துவிட்டுத்
தளையசிங்கன் போலவொரு
முற்போக்கன் இல்லையென
டானியல்முன் மாஓவும்
எம்மூலை நிற்பரென
கைத்தட்ட ஆளிருப்பின்
கதை சொல்ல நாமிருப்போம்

மூடரையும் மேதையென
முகத்துதிகள் கூறிடுவோம்.
என்றாலும் ஒருதவி-
மேடையிலே நாமேறிப்
பேசவர முன்னாலே
மறவாமல் நீரெமக்குக்
கூட்டம் நடக்குமிடம்
புத்தகத்தின்பேர்

முடிந்தால்
புத்தகத்தின் ஒருசுருக்கம்
தந்துவிட்டுப் போனீரேல்
அந்த ஒரு உதவி
மெத்தப் பெருமுதவி
மறந்தாற்போல,
மற்றொன்று-

தப்பியொரு நாள் நாங்கள்
செத்தாலும்
நாம் பிறர்க்குச் செய்ததுபோல்
நம்மீது புகழ்பாட
நாலைந்து நினைவுதினம்
கொண்டாடிக் கூட்டங்கள்
கட்டுரைகள் வழியாக
இவன்போல எழுத்தாளன்
இல்லையெனப் புளுகிவைத்துக்

கட்டிங்ஸைக் கத்தரித்துக்
'கேர் ஒஃப் எமனுலகம்'
முகவரிக்கு அனுப்பிவிடும்.
ஏனென்றால், சில நேரம்
எமனுலகில் கூட ஒரு
வேளையிலே பாராட்டுக்
கூட்டம் சில நடக்கும்,
பேசவொரு சான்ஸ் கிடைக்கும்

மற்றப்படி, நாங்கள்
உயிரோடு உள்ளவரை
மறந்தேனும் முன்னாளில்
நாமுரைத்த மாக்ஸீயக்
கலைநோக்கை நினைவூட்டி
நச்சரிக்க வேண்டாமே!
நாங்கள் விமர்சகர்கள்
நமக்கேனாம் வீண்வம்பு!


---------------------------------------------------------------------------------------------------

வீரசூரிய :
வேறொரு கோணம்

பாரத மண்ணில் பம்பாய் நகரில்
பார்ஸி இனத்தவர் கிடத்தும் பிணத்தை
இடுகாட்டுறையும் கழுகுகள் தின்னும்.

வளாக மாணவன் வீரசூரிய
எல்லாரையும் போல் இன்னொரு பிள்ளை.
விரும்பிய வேளை விரிவுரை கேட்கும்
விரும்பாவிட்டால் வேறெதும் செய்யும்
எல்லாரையும் போல் இன்னொரு பிள்ளை.
வேலைநிறுத்தம் என்றாற் சமயம்
வீதி வழியாய் ஊர்வலம் போவான் :
அலுப்பாயிருந்தால் அறையிற் கிடப்பான்;
ஒரொரு சமயம் ஊர்போய்ச் சேர்வான்.

எல்லாரையும் போல்,
பாPட்சை தேறி வேலையிற் தொற்றும்
உன்னத லட்சியம் ஒன்று போக,
பல்கலைக் கழக மாணவர் தங்கள்
காலங் கழிக்கப் பேசும் லட்சியம்
பலதில் சிலது பேசியுமிருப்பான்.
என்னவாயினும் வீரசூரிய,
பொதுவாய்ச் சொன்னால், எனது கருத்தில்
எல்லாரையும் போல் நல்லொரு பிள்ளை.

ஊழியர் செய்த வேலை நிறுத்தம்
எழுபத்தாறாம் வருஷம் வந்தது

மாணவர் அதற்கு ஆதரவென்று
செனெற் மண்டபத்தைச் சூழ்ந்து நின்றனர்.
குழப்பம் வந்து, கூடி, வலுத்தது.
காக்கிச் சட்டைக் கூட்டம் வந்தது.
குண்டாந்தடிகள் தலைகளைத் தடவக்
கண்ணீர்ப் புகைமணம் காற்றை நிறைத்தது
ஈயக்குண்டுகள் பாயத் தொடங்கின.
காலை நேரம் தேனீர் அருந்தப்
போன பையன் வீரசூரி
புதினம் பார்க்கப் போனான் என்றார்.
வீரசூரிய விழுந்து கிடந்தான்
எல்லாரையும் போல்? இல்லை, இறந்து.

தமிழகத் தலைநகர் சென்னை நகரில்
வீதி மருங்காய் கிடக்கும் பிணத்தின்
கிரியைகட் கென்று
கைகள் நீட்டி வழிப்பறி நடக்கும்
பிணத்தைக் காட்டி இதுவொரு பிழைப்பு.
வீரசூரிய பிணமாய்க் கீழே
விழுந்து கிடக்க காரணமானோர்
பாதிப்பேர்கள் பழியைச் சுமக்க
பாதிப்பேர்கள் பிணத்தைச் சுமந்தனர்.
சுமந்த பேர்கள் பிணத்தின் மீது
சிவப்புச் சீலை போர்த்தி மூடினர்.
மூடிய துணியால் குருதிபடிந்த
தங்கள் கைகளை மெல்ல மறைத்தனர்.
ஒருசில மாதம் தேர்தல் நடக்க
அரசியல் சந்தையில் விற்பனை செய்யப்
பிணத்தைக் காவித் தெருவில் இறங்கினார்.

லங்கைத் தலைநகர்ப் பாராள்மன்ற
மண்டப நடுவே பிணத்தைக் கிடத்தி,
நீண்ட வரிசையில் சனங்களை நிறுத்தி,
பத்துத் தினங்கள் விற்பனை செய்து
அரசியல் லாபம் மெத்த உழைத்த
கூட்டமொன்று குறுக்கே வந்தது;
பிணத்தை தங்கள் உடைமை என்றது;
சிவப்புச் சீலையைத் தூக்கி எறிந்தது;
பச்சைக் கொடியாற் பிணத்தைப் போர்த்தது;
பிணத்தை விற்று வோட்டு சேர்த்தது.

வீரசூரிய நினைவாய் இன்று
நிற்பது கொங்கிரீற் குச்சி உன்று.
ஓரிரு வருடம் அமர்க்களமாக
அஞ்சலி நடந்த நினைவும் உண்டு.

எண்பத்திரண்டில் மாணவர் தேர்தலில்
மண்டைகள் பிளந்த கதையைக் கேட்டேன்.
பாராள்மன்றத் தேர்தலும் வரலாம்
என்ற கதையும் காதிற் கேட்டேன்.
வீரசூரிய நினைவு வந்தது.
அடுத்து யாரது பிணத்தை விழுத்தி
அதன்மேல் எந்நிறக் கொடி போர்த்துவாரோ?
பம்பாய் நகரின் இடுகாட்டுறையும்
பிணத்தைத் தின்னும் கழுகுகள் என்றும்
மனிதரைக் கொன்று தின்றுள்ளனவோ!

---------------------------------------------------------------------------------------------------

ஒரு சமகாலச் சிறுவர் கதை

பூமிவரண்டு காய்ந்து கிடந்தது
வானம் மேலே வெறிதாய் இருந்தது.
நீல வானின் நெடுந்தொலை நின்று
வெண்முகில் போலப் பறவைகள் கூட்டம்
நெருங்கி ஊரின் மேலாய் மிதந்தது.
வெள்ளைப் பறவைகள் கீழே இறங்கின:
மண்மேற் பல பெரும் பொதிகளை வைத்தன.
மானுடர் விழிகள் வியப்பில் விரிந்தன.
விரிந்த விழிகள் மூடிடு முன்னம்
சிறகுகள் விரித்துப் பறவைகள் சென்றன.

மானுடர் பயத்துடன் பொதிகளை அண்மினர்,
தயங்கித் தயங்கிப் பொதிகளை அவிழ்த்தனர்.
வகைவகையான உணவுகள், துணிகள்
வேறும் பொருட்கள் நிறையைக் கிடந்தன.
வெள்ளைப் பறவைகள் மீண்டும் மீண்டும்
பொதிகள் கொண்டு வந்து போயின.

கருமுகில் வரவைக் காத்திருந்தவர்கள்
பறவைகள் வரவைப் பார்க்கத் தொடங்கினர்.
கரங்கள் மெல்ல உழைப்பின்றி ஒதுங்கின.
காலம் ஊர்ந்து விரைந்து கடந்தது.

பறவைகள் நடுவே கழுகுகள் தோன்றின.
கழுகுகள் உணவாய்ப் பிணங்களைக் கேட்டன.
வெள்ளைப் பறவைகள் பரிந்துரை கூறின.
காலப்போக்கில்

கழுகுகள் உணவாகய் உயிருடன் கொண்டன.
எதிர்த்தனர் பலபேர் இசைந்தனர் சிலபேர்.
வலிதாய் எதிர்த்தவர் சிலரை இரையாய்
வீசிடு மாறு யோசனை கூறி,
கழுகுகள் இன்றேல் பொதிகளும் இல்லை
என்றே வெள்ளைப் பறவைகள் வெருட்டின.
கழுகும் வேண்டாம் பொதியும் வேண்டாம்
என்றனர் சில பேர்.
பொதிகள் இன்றேல் அழிவோமென்று
அஞ்சினர் சிலபேர்.

சேற்றை மீண்டும் உழுவோம் என்று
மறுத்தரை செய்தனர் எதிர்க்கத் துணிந்தோர்.
மயங்கினர் சிலபேர், தயங்கினது சிலபேர்.
கலகம் மூண்டது, கழுகுகள் மகிழ.

காலச் சுவடு மாறிச் சென்றது.
கழுகுகள் மீதும் கணைகள் பாய்ந்தன.
வெள்ளைப் பறவைகள் எல்லாம் மெல்லக்
கொடுங்கூர் அலகுக் கழுகுகளாயின.
கடும்போர் ஒன்று மூண்டு முடிந்தது.
வானம் மேலே வெளிச்சென்றி ருந்தது.
மானுடர் கீழே மண்ணைக் கிளறினர்.
வெள்ளைப் பறவைகள் வருகையை நோக்கிக்
காத்திருந்தார்கள் மனதரிற் சிலபேர்
கைகளில் ஏந்திய கணைகளி னோடு.

---------------------------------------------------------------------------------------------------

அதிசயங்கள்

அவனது கிராமத்துப் பட்டிக்காட்டுக்குத்
தார் வீதி வரவில்லை.
அம்மாவுக்கு சொல்லாமல் பையன்களுடன்
போய் வாய்க்காலில் குளித்துவிட்டுக்
கொல்லை வழியாய் வீடுவந்து
கிணற்றில் வாளியால் இரண்டு
தலைமேல் ஊற்றியபின்
அம்மாவுக்குக் குரல் கொடுத்துத்
தலை துவட்டும் நேரம்
வாசலில்
மாடு இழுக்காத வண்டி நின்றது.
அது அவனுக்கு அதிசயமாய் இருந்தது.

பக்கத்துப் பட்டணத்தால்
ஒன்றுவிட்ட சிற்றப்பா வந்திருந்தார்.

அடுத்த வருஷம்
அப்பா கூடவர
வாடகைக்குக் கார் பிடித்துப்
பக்கத்துப் பட்டணத்தில் படிக்கவென
ஒன்றுவிட்ட சிற்றப்பா வீட்டில் அமர்த்தியதும்
தெருவில் பைப் தண்ணீர்,
புகையிரதம், ஸ்டேஷன்மாஸ்டர்
ஊற்றுப்பேனா, டைப்ரைட்டர்,
தபாற்கந்தோர், ஆஸ்பத்திரி,
பாண், பணிஸ், மாவுமில்,
ஐஸ்சர்பத், சோடா,
வீட்டில் எரிந்த மின்விளக்கு
எல்லாம் வியப்பாய் இருந்தன.

கால்கள்
வேட்டியின் விடுபட்டு
காற்சட்டை நீண்டு
செருப்பு வளர்ந்து சப்பாத்தாய்
நாட்போக்கில் அவன் ஒருநாள்
புகையிரதமேறிக்
கொழும்பு நகர் வந்தடைய-
அடுக்கடுக்காய்க் கட்டிடங்கள்,
ஆலைகளில் புகைக்கூண்டு,
கக்கும் புகைப்படலம்,
மேலோடும் ஏரோப்ளேன்,
மேக்கூரித் தெருவிளக்கு,
கண்ணாடிக் கூடுகளில்
கலர்கலராய் விளக்கொளிகள்,
ரெடிமெட் ஷேட்,
மின்விசிறி, கூலிங்கிளாஸ்,
குளியலறை, வாளியிலாக் கக்கூசு.
வாகனங்கள் பேரிரைச்சல்,
இவையும் இன்னமும்
பெருவியப்பாய் இருந்தன.

(தோளில்
கோட்மேலே கோட்டணிந்து
விமானத்தில் ஏறுகையில்
அம்மா அழுதது வியப்பில்லை.)

விமானம் லண்டனில் இறங்கியதும்-
ஊர்ந்துயரும் படிக்கட்டு.
தரையின்கீழ் மின்ரயில்கள்,
பனியுரையும் குளிர்,
சென்ற்றல் ஹீற் சூமேற்றும் வீடு,
இன்ஸ்ற்றன்ற் சுப், நெஸ்கNஃப,

மினிஸ்கேட்,
டெலிவிஷன்.
ஹிப்பி, மொட், ஸ்கின்ஹெட்
எல்லாமே வினோதமாயிருந்து
பழகிப்போய் விட்டன.
நா@hந்து,
நெஞ்சில்
சொந்த ஊரென்ற நினைவுநெருடி
ஒருமாத லீவில் ஊர் வந்தான்.

பட்டிக்காட்டில்
சைக்கிள் வந்து
தார் ரோட்டில் நாளுக்க மூன்று பஸ்,
அப்பா வீட்டில் மின் விளக்கும்
(அவர் கிராமசபைத் தலைவர்)
அவர் வயலில் ட்ராக்டரும்
இருந்தாலும்
ஊர் வயலில் எருமைகளும் உழுதன.
அடுப்புகளில் விறகும் எரிந்தது.
சோறும் மண்பானைகளில் வெந்தது.
கிணற்றில் நீர்மொண்ட பெண்கள்
வாய்க்காலில் குளித்தார்கள்.
ஆண்களும் தான்- கொஞ்சம் அப்பால்.
இவர்கள் இன்னமும்
உற்சாகமாக
உயிருடன் இருப்பதை நினைக்க
அவனுக்கு
நம்பமுடியாமலே இருந்தது.

---------------------------------------------------------------------------------------------------

எங்கள் குருக்ஷேத்திரம்

நாட்டிலொரு பாதிதர மாட்டோ மென்றார்
நாமாள ஊரைந்தும் இல்லை என்றார்
கேட்டசில குடிசைகளும் இல்லை என்றார்
கூறுகிற சாமமொடு பேத தானம்
நாட்டாத நீதிதனைக் தண்டம் நாட்டும்
நல்லோர்கள் நம் சார்பாய்க் களத்தே வந்தார்
காட்டுகிறேன் கைவண்ணம் அங்கே: இங்கே
காணுகிறீர் காண்டீபம் கையில் என்றான்.

சம்பளத்தின் மேலாக மன்றம் செல்லும்
நாட்படிக்குச் சரியாக அலவன்ஸ் காசு,
காரியங்கள் செய்துதர வேறுங் காசு,
பதவியொழிந் தொருகாலம் பென்ஷன் காசு,
பெற்றோலும் வாகனமும் ரயிலில் போகப்
படுக்கையுடன் முதல்வகுப்பு பாஸ்கள்ரெண்டு
தந்திதபால் தொலைபேசி எல்லாம் ஓஸி
பட்டணத்தில் தங்குமறை மலிவு, ஏ. ஸி.
போகவரக் கதவடியில் காவல் நின்று
கண்டவுடன் கும்பிடவும் கூட்டம் வேறு,
பாராளுமன்றத்துப் பதவிப் பேற்றை
நான்விடினும் மனைவி விடாள், மக்கள் கேளார்.

விடுதலைக்கு விடுதலைக்கு என்றுபேசி
வருடங்கள் ஐந்தோடிப் போயிற் றின்னும்
ஓராண்டின் முடிவிற்குள் ஆக வேண்டி
அலறுகின்ற காரியங்கள் ஒன்றா ரெண்டா?
மனைவியுடன் பிறந்தவரின் இம்போட்லைஸன்ஸ்
அண்ணருக்கு மறுபடியும் பதவியே ற்றம்
பணவுதவி செய்கின்ற பிஸினஸ் நண்பர்
பலதடவை கேட்டழுத கோட்டா, இன்னும்
பஸ்தரிப்பு நூல்நிலையம் பாடசாலை,
கச்கூசு கடைக் கெல்லாம் அத்திவாரம்,
கண்துடைப்பாய் நாலைந்து வேலைவாய்ப்பு,
வெல்ல முதல் வாக்களித்த வேலைமாற்றம்......

பார்த்தன் கைக் காண்டீபம் நழுவும், நண்பன்
பரந்தாமன் வாய் திறந்தால் வேலை போகும.;

---------------------------------------------------------------------------------------------------

உன் மண்ணும்
என் மண்ணும்

'என் மண், என் மண்' ணென்று
எப்போதும் நீ சொல்வாய்
கோடேறி வழக்குரைப்பாய்.
மண்ணுக்கும் நீருக்கும் வேலி,
மதிற்சுவர் எழுப்பி
வாராமல் நீ மறிப்பாய்.

இப்போதோ,
'இது நம் மண்' என்கின்றாய்
'எழுக' என ஆர்க்கின்றாய்.

நன்று. ஒரு சிறு கேள்வி.
நீ கூறும் 'நம் மண்' இது
ஆண்டோய்ந்த பரம்பரையார்
மீண்டொருகால் ஆளவர
வேண்டிநமை வேள்வியிலே
ஆடாகப் பலியிடவும்
அந்நியருக்; கெல்லாமே
அடமானம் வைத்திருந்து
அவர் தயவில் ஆளுதற்கு

ஆசையுறும் மண்ணாமோ?
இல்லையெனில்,
விடுவிக்கப் படை கொணர்ந்த
ரட்சகரின் காலடியின்
விடுபடற்கு மறுபடியும்
வெகுண்டெழுந்த காம்போஜம்,
ஆப்கனிஸ்தான் போல் ஒன்றோ?
எல்சல்வடோர் போன்றோ?
பறிபோன பலஸ்தீன மண்போன்றோ?

மாறாக,
ஸியொனிஸத்தின் இஸ்ரேலோ?
ஆப்ரிக்கத் தென்முனையில்
வெள்ளை நிறவெறி உரிமை
கொண்டாடும் மண்போன்றோ?
அடியடியாய் முடியாண்டோர்
நீண்டநெடு வரலாற்றில்
குடுமிபிடிச் சண்டைகளில்
குருதியினாற் சேறான
செம்மண்ணோ. எம் மண்ணோ?

நீகூறும் மண் அதனை
உழுபவனின் மண்ணென்றால்
அவனுக்கே சேரட்டும்
முன்னாலே நிற்கின்ற
ஆண்டைகளின் பங்கென்ன?

---------------------------------------------------------------------------------------------------

ஒரு மேதின
மாலைப்பொழுது

மாலை நேர வெள்ளி முகில்கள்
பொன்னாய் எரிந்து அவிந்து அடங்கி
மேலை வானம் மெலிதாய்ச் சிவக்கும்
கிழக்கின் மலையிலும் செம்மை தெறிக்கும்
சாயும் சூரியன் மெல்ல இறங்கும்.
சாகும் சூரியன் சிவந்து விரிந்து
சாவிற் கூட அழகுடன் மிளிரும்.
மூளிவானம் மேலும் சிவந்து
மூன்று நாழிகைக் கிரவை மறுக்கும்
வானில்
மெல்லவொரு வெள்ளியும்
என் நெஞ்சில்
போராளித் தோழர்களின் நினைவும்
எழும்.

---------------------------------------------------------------------------------------------------

அகலிகை

கற்கள்.
மண்மேலும் மண்கீழும்
குன்றாய் நெடுமலையாய்த்
துண்டாய்த் துணிக்கையாய்
நின்றுங் கிடந்துங்
கற்கள்.

முனிவன் கணவன் கல்.
தேவன் கயவன்
ஆனாலும் அல்லன், கல்,
கபித்துப் பிழைத்திட்ட
ஆண்பிள்ளை.
கல்லாக வாழ்ந்து
கணநேரம் உயிர்த்தவளோ
கல்லாகவே ஆனால்

பின்னாளில்
கடல கடந்து மீட்டதொரு
காதலியைத் தீப்பிழம்புட்
தள்ளியவன்,
ஊரர் சொல் அஞ்சித்
தூர ஒதுக்கியவன்
கல்தொடவும் தகுதியிலாக்
கடவுள் அவதாரம்
காலிடறக்,
கல்மாறிக் கல்லோடு
கல்லாக வாழ்வதற்காய்க்
காரிகையாய் ஆகாமல்
கல்லாய் இருந்திருந்தால்
காலத்தால் அழியாத
நெடுமலையாய் நிலைத்திருப்பாள்.

---------------------------------------------------------------------------------------------------

தபால் தலை

மாதம் சில முன்பு
மரணித்த ஒரு மரபின்
மரணித்த சின்னமாய்
பாசி நிறத்தில்
பாராளுமன்றத்தின்
பழையமனை.

அதன்பின்னால்
மண்ணுள் ஒரு பகுதி
அமிழ்ந்தாற் போல்
தர்மச் சக்கரத்தின்
பொன் வடிவம்
மண்ணுள்
மேலும் அமிழ்வதுபோல்
ஒரு நினைவு.

மேலே,
மூன்று மொழிகளிலும்
மூன்று லிபிகளிலும்
'தார்மீக சமுதாயம்'
கனமற்ற
வெற்று வார்த்தைகளாய்
மிதக்கும்

கீழே,
பன்னாட்டு நிறுவனங்கள்
குறைக்குப் பலியான
என்னுடைய நாட்டின் பேர்
நெஞ்சில் கனக்கும்.

வல மேலை மூலையில்
50 என முத்திரையின்
குறித்த விலைமட்டும்
நிசமென்று நினைத்திருக்க
ஏறும் விலைவாசி.

---------------------------------------------------------------------------------------------------

பேரில்
என்ன இருக்கிறதாமோ?

யாழ்ப்பாணத்து வண்ணார்பண்ணை
யோகலிங்கம் சங்கரப்பிள்ளை
செல்லநாச்சியார் சங்கரப்பிள்ளை
(இளமையில் இ. செல்லநாச்சியார்
தம்பதியார்கள் நெடுநாள் தவத்தின்
பின்பு பிறந்த ஏக புத்திரன்
பிறந்த நிகழ்வைப் பதிந்தபோது
எஸ். செல்வராஜயோகலிங்கரத்னம்.

தாத்தா-
யோகலிங்கம், அப்பருக்கப்பர்.
பாட்டா-
இராசரத்தினம், அம்மாக்கையா.
ஆரது பேரை முன்னால் வைப்பது
என்ற வாதம் முடிந்தபோது
இராசயோக லிங்கரத்தினம்
என்ற பேரன் பேருள் தாத்தா
பாட்டார் பேரை இரண்டாய்ப் பிளந்தார்.
ரா, யோ, லி, ர, அ, இ, உ, எதும்
முதலில் வருவது கேடெனச் சொன்னார்
சோதிட நிபுணர் கணவதிப்பண்டிதர்.
ளௌ, ஙா, ஞே, செ
நாலில் ஒன்று நல்ல விசேஷம்.
பேரில் செல்வம் வலிய நுழைந்தது.
(திகரம் அகன்றதும், ச, ஜ, ஆனதும்
வழுவல், கால வகையினனானே).

வீட்டில் அம்மா ராசா எனவும்
அப்பர் மாறாய் யோகம் எனவும்
தொடங்கிய ஆட்டம்

தோல்வி வெற்றி இல்லாதொழியவும்
செல்வம் என்று அழைக்கும் முடிவு
கொழும்பு மாமி பெட்டைப் பேர் எனத்
தம்பி என்று கெட்டுப் பிறகு
பள்ளியில் மறுபடி செல்வம் மீண்டது.
பட்டப் பேர்களும் வந்து போயின.
படிப்புக் கொஞ்சம் ஏற மறுத்தது.
இடையிடை தடிமல் காய்ச்சல் வந்தது.
சாதகம் பொதுவாய் நல்லது எனினும்
கிரகம் சிலது கோளாறென்று
செவ்வாய், சனிக்கு ஏதேன் செய்தால்
நிலைமை திருந்தும் என்றார் சாத்திரி.
மேலும் ஏழு கிரகம் இருப்பதைப்
கோயிற் குருக்கள் எடுத்துக் காட்டக்
கிரக பூசை மாதா மாதம்
நடந்தது. அத்துடன்
டியூசன் செலவும் இருந்தது.
கொஞ்சம்
மருந்துச் செலவும் இடையிடை போனது.
கிரகப் பலனை மாற்றேலாது,
பிறந்த நேரம் தன்னை அந்தப்
பிரமாவாலும் மாற்றேலாது,
மருந்துவிச்சிக்கும் மாற்றேலாது.

ஊழ் முந்துறுமே என்ற போதிலும்
நியூரோலஜி கூலி தரும்மே!
தம்பிக் கிலக்கம் எட்டுமிரண்டு
பேரில் கொஞ்சம் எழுத்தை மாற்றச்
சாதக பலனும் சரியாய்த் திரும்பும்.
பாட்டா தாத்தா பங்கில் கையை
வைப்பது தவிர்த்துப் பேரின் முதலில்
Selvam மாறிச் Chelvam ஆனது.

இடங்கள் மாநின வேறிரு எழுத்து,
புதிதாய் ஒரு 'O' வந்து முளைத்தது.
காலையும் மாலையும் ஐம்பது தடவை
ஆங்கில எழுத்தில் புதிய முறைக்கு
மூன்று மாதம் விடாது எழுதியும்
போதிய திருத்தம் இல்லை என்பதால்
மறுமுறை கையில் ரேகையும் பார்த்து
இருந்த கிரகம் ஒன்பதின் பலனும்
புளூட்டோ நெப்டியூன் யூரேனஸ் உடன்
செயற்கைக் கோள்கள் நிலையும் பார்த்து
வள்ளுவராண்டும் சாலிவாஹன
வருஷம் மாதம் தேதியும் எல்லாம்
போட்டுச் சரியாய்க் கூட்டிப் பார்க்க
வண்ணார் பண்ணை டபிள்யூ என்று
பேரின் முன்னால் வந்து நின்றது.
படிப்பு மட்டும் மாட்டேன் என்றது.

லங்கைப்படிப்பு போ போ என்றது.
லண்டன் படிப்பு வா வா என்றது
பட்டம் மட்டும் வரவே இல்லை,
ஆனாற் சிறிதோர் வேலை வந்தது.
காலப் போக்கில் பேரும் மாறி
டபிள்யூ. எஸ். ஸி. ரட்ணமானது.
விம்பிள்டன் அவன் ஊருமானது.

ராசியும் எண்ணும் பேருடன் சேரின்
லண்டன் சீமை யோகம் கூடும்
(ஈடு வைக்க வீடு இருந்து
அம்மா அப்பா இரங்குவரென்றால்).
பேரில் என்ன இருக்கிறதென்று
எவனாம் சொன்னான்? பேயன்.

---------------------------------------------------------------------------------------------------

ஓரிரவு

மாலையிலே முத்தரும்பும்
என் பவளமல்லிகையில்
இரவிரவாய் பூவிரிந்து
விடியலிலே மணம்பரவும்
மணம்பரவு முன்னாலே
மலர்கள் சிதறிவிழும்
மண்ணோடு மண்ணாகும்.
ஆனாலும் என் பவள
மல்லிகையோ மறுபடியும்
மாலை அரும்பி
ராவிரிய மொட்டுவிடும்

வெள்ளி மலர் விரிந்து
வானவெளி எங்கும்
இரவிரவாய் மலர்குவியும்
அள்ளமுடியாமல்
வாயு சலித்திருக்கும்,
கடல் கதறும், சேவலழும்,
கதிரோன் துயில்களையும்
வானம் கனல்கொள்ளும்
பூக்கள் எரிந்தொழியும்
ஆனாலும் வான்மேட்;டில்
பூச்சொரியும் என்மரமோ
இன்னோர் இரவுக்காய்
இரகசியமாய் மொட்டுவிடும்.

இருளில் இரவிரவாய்
இறங்கிவரும் பனிமலர்கள்,
பின்னிரவில் மலர்குவிந்து
விடியலிலும் மீந்திருக்கும்.
காலைத் தணல் நெருப்பில்
கண்முன்னே மலர் அழியும்.
ஆனாலும் பணியுதிர்க்கும்
என்வாண நெடுமரமோ
மறுநாள் மலர்பொழிய
முழுநாள் நீருறுஞ்சும்.


---------------------------------------------------------------------------------------------------

ஏகாதிபத்தியமும்
வலது சந்தர்ப்பவாதமும்

குண்டடிபட்டுக் குற்றுயிராகச்
சாய்ந்த வேங்கையின் சாவுக் கூச்சல்
கேள், கேள் வேங்கையின் வீரிய உறுமல்
உயிர்க்குடிக்குமென உடம்பு நடுங்கினான்.

நோயிற் குலைந்த பலநாட் பகைவன்
மேனி வீங்கிச் சரிந்து கிடந்தான்.
பார்பார் பனைவனின் தசைகளின் அழகை
வலியவன் என்று வாழ்த்தி வணங்கினான்.

மேற்குக் கடலில் வீழும் சூர்யன்
முகிலில் செம்மை மூட்டி முடங்க,
உதயபானு ஜோதி மீறுது
என்று கூறி வீழ்ந்து போற்றினான்.

---------------------------------------------------------------------------------------------------

எங்கள் இயக்கம்

நமது இயக்கம்
ஓரிரு வழிகளில்
மலையிற் பிறந்த
மாநதி போன்றது.
எங்கெங்கிருந்தோ
வழி வழி வந்து
இணைவன பிhவான
உயர்வன வழிவன
நீர்த்துளி பற்பல
தனித் தனியாக
இனங் கண்டறியோம்
நதியென்றறிவோம்.
கடலெனுங் குறிக்கோள்
தரையெனும் யதார்த்தம்
காலத்துடனே
வழிசில மாறினாலும்
குறிக்கோள் மாறா
நதியும்-
நம்முடைய இயக்கமும்
ஒரு சில வழிகளில்
ஒன்றுபோல்வன!
ஒன்றுபோல்வன!!

நமது இயக்கம்
ஓரிரு வழிகளில்
நதியின் கரையின்
மூங்கில் போன்றது
ஆத்திரம் கொண்டு
சீறிடும் காற்றில்
வளைந்து பின்னர்
வானுற் நிமிரும்
தவறி முறிந்து
போயினுங் கூட
மண்ணிற் பிறந்து
வேர்களைப் பரப்பிய
மூங்கில் மறுபடி
தழைத்துச் செழிக்கும்.
நிலைமை உணர்ந்து
நடப்பதில், சொந்தம்
நிலத்தை நம்பி
இருப்பதில் எங்கள்
இயக்கமும் மூங்கிலும்
ஒன்றுபோல்வன!
ஒன்றுபோல்வன!!

நமது இயக்கம்
ஓரிரு வழிகளில்
காலை வானில்
காரிருள் பிளந்து
செங்கொடி எழும்பும்
சூரியன் போன்றது
தொடரும் விடிவை
வருமுன்கூறும்
இத்துணை மங்கிய
ஒளியில் உலகம்
விடியுமோ எனச்
சிலர் ஐயுறினும்,
உறுதி கொண்டு
வளர்ந்து புதிய
நாள் செயும் வகையில்
எங்கள் இயக்கமும்
எழும் சூரியனும்
ஒன்றுபோல்வன!
ஒன்றுபோல்வன!!


---------------------------------------------------------------------------------------------------

பாட்டன்
பரம்பரை

பலநூறு ஆண்டுகள் முன்
பண்ணிவைத்த கோபுரத்தை
அண்ணாந்து பார்த்து அதை
அதிசயித்து உன்மனதுள்
பாட்டனுக்குப் பாட்டனுக்குப்
பாட்டனுக்குப் பாட்டனெவன்
பண்ணியவன் என்றெண்ணிப்
பரவசித்து நிற்பவனே,
பழைய பரம்பரையில்
பாட்டன்மார் பலபேர்காண்.
கல்லுடைத்த பாட்டன்மார்
கல்சுமந்த பாட்டன்மார்
பேருனக்குத் தெரியாது.

ஆராரோ தேரேறி
வீதிவலம் வருவதற்காய்க்
கையிழந்த பாட்டன்மார்
கண்ணிழந்த பாட்டன்மார்
காலொடிந்த பாட்டன்மார்
கதையுனக்குத் தெரியாது,
கதைமுடிந்த பாட்டான்மார்
கணக்குனக்குத் தெரியாது.

கோபுரத்தில் பேர்பொறித்துக்
கொலுவிருந்த மன்னரிடை
பாட்டன் உனக்கொருவன்
எவனிருப்பான் என்றெண்ணிச்
செல்லரித்த ஏடுகளைத்
தேடுகிற பைத்தியமே!
பணக்கார உறவுகளைப்
பழமையிலும் நாடுகிறாய்.

---------------------------------------------------------------------------------------------------

52*

சற்றே விலகி
நந்தி வழி விட்டதுபோல்
வெலிக்கடையின் சிறைக்கூட
இருப்பு நெடுங்கதவம்
தானே திறக்கும்
அங்கே
காவலர்கள் அறியாமல்
கற்சுவர்கள் சூழ்கின்ற
அறைகட்குள் கொலை நடக்கும்

பகுத்தறிவு ஆளுகிற
புதிய யுகம்
அற்புதங்கள்
ஒருக்காலே நடந்தாலோ
ஒப்பார்கள் என்பதனால்
இருகால நடந்தேறும்
கண்டு அலுத்த
கற்சுவரோ மௌனிக்கும்.

*25-7-83, 28-7-83 ஆகிய தேதிகளில் வெலிக்கடை (கொழும்பு) சிறைச்சாலையில் கொலை செய்யப்பட்டோர் தொகை.

---------------------------------------------------------------------------------------------------

ஹிற்லர்
டயரிகள்

இலங்கை, 1983 ஆகஸ்டு

ஹிற்லர் டயரிகள்
அண்மையில் வந்தவை போலிகள்,
உண்மை, ஆனால்
ஹிற்லர் டயரிகள்
செயலாய் நிஜமாய்
இன்னுந் தொடர்ந்து எழுதப்படுவன.

இன்று இந்த இலங்கை மண்ணில்
ஹிற்லரின் சொற்கள் உயிர்த்துத் தங்கள்
நிழலுரு நீங்கி நிஜங்களாவன
அக்னி தோய்த்து எழுதிய சொல்லாய்
எரியும் கடைகள் வீடுகள் மனிதர்

வெட்டுவாள்களும் வெடித்துவக்குகளும்
வரிக்குவரி கீழ்ச்செங் கோடிடுவன

இந்த மண்ணில்
தமிழர்வாழும் ஒவ்வொரு தெருவிலும்
வீடு, தோட்டம், பள்ளிக்கூடும்,
பல்கலைக்கழகம், பணிமனை, கோயில்,
பெருஞ்சிறைக் கூடம்-ஒவ்வோரிடத்தும்
குருதியும் தசையும் நிணமும் எலும்பும்

தோலும் மயிரும் தாளாய் விரியும்
வாளும் துவக்கும் தீவட்டிகளும்
இனவெறி உந்தும் ஆயிரம் கைகள்
ஏந்த அழுத்தி எழுதிச் செல்லும்

திரையின் மறைவில் இருந்து இறக்கி
எரிகிற வீட்டில் விறகு பொறுக்கும்
அரசு, முதலைக் கண்ணீர் உகுக்கும்
அல்லது புண்ணில் முள்ளால் செதுக்கும்

---------------------------------------------------------------------------------------------------