கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  குறுங்கதை : நூறு  
 

செம்பியன் செல்வன்

 

குறுங்கதை : நூறு

செம்பியன் செல்வன்

--------------------------------------------------

குறுங்கதை : நூறு

செம்பியன் செல்வன்

நான் வெளியீடு

---------------------------------------------------

முதற்பதிப்பு : 27 டிசம்பர் 1986
விலை : ரூபா 10|-
வெளியீடு : 07'நான் வெளியீடு
அ. ம. தி. குருமடம்
கொழும்புத்துறை,
யாழ்ப்பாணம்.


PRICE : Rs. 10
PAGES : iv +82

KURUNKATHAI : NOORU - An anthology of one hundred short stories, By 'Chempian Selvan' (c) 10, New Road, Athiyady, Jaffna, Sri Lanka.
First Edition 27 December, 1986 | Publisehed by 'NAAN' Publications, Oblate General Delegation, Colombogam, Jaffna, Sri Lanka. || Printed at Mani Osai, 12, Patrick's Road, Jaffna Sri Lanka.

--------------------------------------------

முன்னுரை

புனைகதைத்துறையில் குறுங்கதை 'வாமனாவதாரம்' போன்றது. அணுவின் வடிவமும். ஆற்றலும் கொண்டது, அணுவின் வடிவமும், ஆற்றலும் கொண்டது. எடுத்துக் கொண்ட அனுபவச் சிதறலை அதன் 'கருப்' பொருளாலும், தொனிப் பொருளுக்கு ஊட்டும் அர்த்தச் செறிவுமிக்ககூர்மையாலும், இறுக்கமானதொரு கவிதா நடையாலும், கணப்பொழுதில் 'சுருக்'கென குத்த வைக்கும் நையாண்டிப் பண்பினாலும் குறுங்கதையின் விசுவரூபம் விண்ணையும் மண்ணையும் அளந்து நிற்கிறது.

குறுங்கதையின் 'கரு'ப்பொருளானது, வீறார்ந்த எழுச்சியுடன் 'தொனி'ப்பொருளை சங்கநாதமாக்கி, உயிர்மூச்சாக வெளியேற்றுகையில், பாரியபகைப்புலங்களும், கால-வெளிப் பரிமாணங்களையும் உள்ளடக்கும் சம்பவவிஸ்தரிப்பகளும், சொற்கள் கடந்து சேவகம் செய்ய, உருவம் மீறிய உள்ளடக்கம் கொண்டதான இலக்கிய வடிவமாக அதனைக் காணலாம்.

இயக்கவியற்பண்பு கொண்ட வாழ்வியலில்-அரசியல், பொருளாதார சமூக நிலைகளில் விநாடிக்கு விநாடி எழும் பற் பல முரண்பாடுகள், 'இயக்கப்' பற்சக்கரங்களுடன் மோதி நெருப்புப் பொறி பறக்கச் செய்கின்றன. அத்தகைய மின்னற் தெறிப்புகளின் ஒளியில் வாழ்க்கையின் 'தேடலை' நடாத்தும் முயற்சி இது.

ஆதியில், அறியாமை என்னும் இருட்டுவிழித் தடத்தின் மோதலிலே இத்தகைய தேடல்கள் நடந்தன ஆனால் இன்றோ, அதீத அறிவொளியின் திறந்த விழிக்குருட்டில் நிகழும் மோதல்களாகின்றன. இது வேதனையான வேடிக்கை அல்லவா? பாரசீக அறிஞன் சா-அதி பட்டப் பகலில் மனிதனைத் தேட விளக்கேந்தியதும் இத்தகைய முரண் முனைப்புகளால் தானா?

பலராலும் கவனிக்கத் தவறுகின்ற, அற்பமென ஒதுக்கப்படுகின்ற சமுதாய முரண்முளைகள் நம்முள் எழுப்பும் குறு குறுப்புகள் குறுங்கதைகளாகின்றன. காலிலேறி ஒடிந்த முள்முனைகளை இலாவகமாக வெளியேற்றி, ஆசுவதமாக பெருமூச்சுவிடவைக்கும் முயற்சி.

ஆயினும், 'குறுங்கதை' புதிய முயற்சியுமல்ல: காலாதி காலமாக சான்றோர்களும், அறிஞர்களும், சமயப் புனிதர்களும் தமது கொள்கை விளக்கங்களுக்காக இந்தக் கலை வடிவத்தைக் கையாண்டு வந்துள்ளார். மக்களிடம் சென்றடையவேண்டிய கருத்துக்களைக் கூற இதனைப்பயன் படுத்தினர். யேசு, நபி (ஸல்), புத்தர், பரமஹம்சர் போன்றோரின் போதனைகளில் இத்தகைய கதைகளைக் காணலாம். டொன்நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது போன்ற பாரிய நாவல்களை எழுதி நோபல்பரிசு பெற்ற சோவியத் எழுத்தாளரான மிகயீல் ஷோலகோவ் எழுதிய சின்னமீன், பரமஹம்சர் கூறிய பால்தொட்டி மீன் இரண்டுமே தத்தம் பணியில் வேறானவையல்ல.

அந்த வழியில் பிறப்பது தான் இந்தக் 'குறுங்கதை: நூறு'

ஆயினும் ஏனைய பதிப்பகத்தார். வர்த்தகாPதியில் வெளியிட, அதிகம் முன்வரத்துணியாத இத்தகைய இலக்கியப் பரிசோதனை முயற்சியை நூலுருவில் வெளியிட்டு, ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பணியினை செய்திருப்பவர்கள்-'நான்' வெளியீட்டினர். 'நான்-உளவியல் மஞ்சரி' மூலம்; அவர்கள் பெறும் அனுபவமும், பிரபல்யமும் இந்த நூலையும் சிறப்பிக்கும் என நம்புகிறேன். 'மணி ஓசை' அச்சகத்தார் இந்நூலைக் கலையழகுடன் வெளியிட எடுத்துக்கொண்ட பிரயாசையை நூலின் பக்க அமைப்புக்களும், அச்சுவகையும் எடுத்துக்காட்டுகின்றன. இதற்கு உறுதுணையாக இருந்த ஜோசப் பாலாவுக்கு நன்றி சொன்னால் கோபிக்கப்போகிறார். அனைவருக்கும் என் நன்றிமறவா நெஞ்சம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.

10, புதிய வீதி, அத்தியடி. - செல்வன் -செம்பியன்

-------------------------------------------

1
சர்வ தேசியம்

அவன் ஒரு நீக்ரோ.

தான் சொந்த நாட்டிலே,-மண், பெண், பொன் அனைத்தையும் சுரண்டிப் போக வந்த வெள்ளையருக்கான திரைப்படம் ஒன்றினைப் பார்க்கப் போயிருந்தான்.

என்ன ஆச்சரியம். படத்தின் கதாநாயகி அவன் காதலியைப் போலவே யிருந்தாள்.

குறைந்த ஆடையுடன் நீச்சலடித்தாள். அதுவுமின்றி படுக்கையில் கதாநாயகனுடன் கட்டிப்புரண்டாள்.

அவன் தன்னை மறந்தான். அவன் கதாநாயகனாகக் கற்பித்துக் கொண்டான்.

உட்லெங்கும் புல்லரித்தது. அவளைத் தொட்டான். உரையாடினான். அவள் அங்கங்களெல்லாம் அவன் கைகள் ஊறலெடுத்துப் படர்ந்தன. அந்தச் சில மணித்துளி நேரங்கள். இன்பக் கொள்ளை. ஒரு வெள்ளைக் காரப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட திருப்தி.

படம் முடிந்து வாசலுக்கு வந்தான்.

'வெள்ளைக்காரப் பெண்ணைக் காலித்த குற்றத்திற்காக, கறுப்பர் சுட்டுக் கொவை!'

-மாலைத் தினசரி விற்கும் பையன் கூவிக்கொண்டு போனான்.

-அவன் மறைந்து, மறைந்து அஞ்சி, வீட்டை நோக்கிப் போய்க்கொண்டிருந்தான்.

2
வல்லரசுகள்

பாரதப் போருக்கு நான் குறித்தாகி விட்டது.

கண்ணின் பொய்யுறக்க நாடகம்-

'கண்ணனின் படை-துரியோதனாதிகட்கும்; கண்ணன் பாண்டவருக்கும்' என ஒப்பந்தம் எழுதிற்று.

ருக்மணி ஓடி வந்தாள்.

'என்ன இப்படிச் செய்துவிட்டீர்கள்? உங்கள் தர்மம் தோற்கப்போகிறதே?'

மாயவன் சிhத்தான்.

'நான் எங்கே நிற்கிறேன் என்று பாhத்தாயா? நானில்லா என் படை பாண்டவருக்குத் தூசிக்குச் சமானம். அதுமட்டுமல்ல் என் பார்வையில் வெற்றிமட்டும் கருத்தல்ல் அதன் பின் உள்ள நீண்ட காலப் பெயனம் கூட'

'என்ன சொல்கிறீர்கள்? -வியப்பில் வினா புதைந்தது.

'பாண்டவர் பக்கம் நிற்பதுதான் நல்லது. போரில் நிச்சயம் கௌரவர் தோற்பர். அப்படி வென்றாலும் என்னை மதியார்கள். பார்த்தாயல்லவா? உன் எதவி தேடி வந்த போதே இறுமாப்புடன் தலைமாட்டில் அமர்ந்தவன் துரியோதனன். வென்றுவிட்டால் இடையன் என ஒதக்கிவிடுவான். பாண்டவர்களோ வென்றாலும், தோற்றாலும் என் சொல் கேட்பவர்கள்... வெற்றியின் பின் ஆட்சி அவர்கள் கையில்.... ஆனால் ஆளப்போவது உண்மையில் நான்தான்.... நான் மன்னர்களை, உருவாக்குவேன்.... ஆனால் உரிமைமை என் கையினின்றும் விடமாட்டேன்'

ருக்மணியிக் விழிகள் வியப்பால் விரிந்தன. அவன், ஆற்றல், ராஜதந்திரம் அனைத்தும் தன் முன்னால் பேதைமையுடன் கூடிய குழந்தையாக உருவெடுத்து நிற்கும் காட்சி பெண்மைக்கே உரித்தான பெருமிதத்துடன் மனதில் எழுந்த' போது தன்னுள் அவன் புதைந்தவிடும் வேட்கையுடன், புல்லி இறுக அணைத்தாள். அந்தக் கணத்தில் கண்ணன் மனித நிலைக்கு விரும்பிக் கீழிறங்கினான்.

3
பிரிவினை

புவியியல் ஆசிரியர் ஒருவர் படிப்பித்துக் கொண்டிருந்தார்.

'உலகை 360 பாகை நெடுங்கோடுகளாலும், 90 பாகை அகலக்கோடுகளாலும் பிரித்திருக்கிறார்கள். இவை யாவும் கற்பனைக் கோடுகளே. இந்தக் கற்பனைக் கோடுகளால் உலகைப் பிரித்து.......'

மாணவன் இடை மறித்துக் கேட்டான்.

'மனிதர்களைத்தான் பிரித்தார்களென்றால்.... பூமியையுமாக பிரிக்க வேண்டும்? மனிதனின் பிரிவினைக் குணம் ஒன்றைக்கூட விட்டு வைக்கவில்லை.........'

4
ரேஷன்

ஹம்ச தூளிகா மஞ்சத்தின் பஞ்சணையில் சாய்ந்தவாறு ருக்மணியின் துகிலைனைக் கையால் பற்றி இழுத்து, பெண்மை வெட்கத்தால் கனிந்து குழைந்து திரளும் விந்தையை வியந்தவாறு சிரித்துக்கொண்டிருந்தான் மாயக் கண்ணன்.

புல்லாங்குழலாக, ருக்மணியா?
பிரமதேவனே நீ அற்புத ரசிகனா?
கலைஞனா?
இந்தக் கலையழகெல்லாம் உன் கை
பட்டுப்பட்டு எழுந்தது-
வேதனையா? ஆராதனையா?
'போதும் விடுங்கள்!' - செல்லச் சிணுங்கல்.
போதை தலைக்கேறும் மதுச் சொற்
'கண்ணா அபயம்!' - கண்ணின் உணர்ச்சி சுழிப்புகள்
ஸ்தம்பித்தன.
எங்கிருந்து கேட்கின்றது? யார் அபயம்?
அஸ்தினாபுரம். திரௌபதி.
துவாரகையின் துணிமணிகள் அஸ்தினா
புரிக்குப் போகட்டும்.
கண்ணனின் கருணை - துவாரகையின்
செல்வம் - அகில உலகப் புகழ்பெற்றன.
ஆனால்-

துவாரகை மக்கள் துணிப் பஞ்சத்தால் 'ரேஷன்' காட்டுக்கும் 'கறுப்புச் சந்தைக்'குமாக அலைந்து கொண்டிருந்தார்கள் சில நாளில்.

5
வெள்ளைப் பறவை

இரு நாடுகளும் பகைமையை வளர்த்துக்கொண்டன.

நடுநிலை நாடுகள் இர நாட்டுப் பிரதிநிதிகளையும் தத்தம் நாடுகளுக்கு அழைத்தக் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு வழிகோலின. விளைவு?

பிரச்சனைகள் தீவிரமடைந்தன் பகைமை முற்றியது.
திடீரென ஒரு நாடு-தனது பகைமை நாட்டு அதிபரை தம் நாட்டிற்கு நட்புறவு விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தது.

உலகே வியப்பிலாழ்ந்தது. இரு துருவங்களின் சந்திப்பின் முடிவை ஆவலுடன் எதிர்பார்க்கலாயிற்று.

அதபிர் பகை நாட்டின் விமானத்தளத்தில் வந்திறங்கினார். நாடே திரண்டிருந்தது. அவர் மனம் பெருமிதத்தால் விம்மியது.
மகத்தான இராணுவ மரியாதை வழங்கப்பட்டது.
'டாங்கிகள் நகர்ந்தன..... ஏவுகணைகள் ஊர்வலம் வந்தன......... அணுகுண்டு......... ஜலவாயுக் குண்டு.... கண்டம் விட்டுக் கண்டம் பாயும் குண்டுகள்......... பவனிவந்தன. குதிரைப்படை..... காலாட்படை........ எண்ணிக்கை ஏராளம்.

மகிழ்வால் மலர்ந்திருந்த அதிபரின் முகம் சிவந்து சுருங்கலாயின. நெஞ்சு படபடக்கலாயிற்று.

வெளிநாட்டு விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரம்பிய அதிபர் சில நாட்களில் எல்லாம் சமாதானப் பறவைழயப் பறக்க விட்டார்.

அரசியல் அவதானிகள் காரணத்தைத் தேடிக் கொண்டிருந்தனர்.

6
மகத்தான தொழில்

'ஒரு ஜனநாயக நாட்டின் பிரதான தொழில் என்ன?' - என ஆசிரியர் வினாவினார்.

'முதலாளிகள் நடாத்தும் பொதுசனத் தேர்தல்' எனப் படீரெனப் பதில் வந்தது.

7
கையுறை

குசேலர் தன் மனைவியைக் கூப்பிட்டார்.

"சுசி........ நான் கிருஷ்ணனைச் சந்திக்ப் போகவேண்டுமே........ எதனைத் தந்துவிடப் போகிறாய்?......."

'சுவாமி! உங்கட்குத் தெரியாமல் என்னிடம் ஏது இருப்பு?..... அடுத்த வீட்டில் கடனாகப் பெற்ற ஒரு படி அவல்தான் என்னிடம் இருக்கிறது.......'

'அவலா........ அவனுக்கு நிறையைப் பிடிக்குமே........ அதுவே போதும்..........'

'சுவாமி...... பிள்ளைகள் பசியால் கத்துகின்றனவே....... கிருஷ்ணன் தங்கள் நண்பன்தானே..... அவருக்கு நீங்கள் கையுறை கொண்டுபோக வேண்டுமா?'

'அடி பேதாய்... கண்ணன் என் நண்பன் மட்டுமல்ல....... ஒரு பெரிய அதிகாரி என்பதனை மறந்தா போய்விட்டாய்....'


8
நீதி

உலகின் ஜனத்தொகை நாளுக்கு நாள் பெருகவே, மக்கள் காடுகளை அழித்து, குடிபெயரத் தொடங்க, மிருங்கள், இருக்க இடமில்லாமல் தவிக்கலாயின, அலையலாயின. நகரத்தில் மிருகங்கள் அலைவது ஆபத்தானது, அவற்றை நடமாடவிடக் கூடாது என்று மனிதன் அவைகளை அழிக்கத் தொடங்கினான்.

9
மன்னர்கள்

நாட்டு மக்களைத் தியாகம் செய்து, நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவுமாறு கேட்டுக்கொண்ட ஆட்சியினரின் மந்திரி சபை அங்கத்தவரின் - மந்திரிகளின்- எண்ணிக்கை மட்டும் அதிகரித்துச் சென்றது.

'மந்திரிசபையை இப்படி விருத்தி செய்தது என்ன பயன்?செலவைக் குறைக்க மந்திரிமாரின் எண்ணிக்கையைக் குறைத்தல் நல்லதல்லவா?" என்று பொதுமக்கள் கேட்டார்கள்.

"முன்பு ஒரு மன்னன் இருந்தான். சில மந்திரிகள் போதும். இப்போது நீங்கள் எல்லோருமே மன்னர்களாச்சே! உங்கள் அனைவருக்கும் இந்தச் சில மந்திரிகள் எப்படிப் போதும். எண்ணிக்கை குறைந்தால், உங்கள் கௌரவம் என்னாவது" என்று பதில் வந்தது.

பொதுமக்களும் திருப்தியுடன் அவர்களை வாழ்த்தியபடி திரும்பினர்.

10
அரசியல்

காட்டுராஜா சிறுத்தையை அடித்துக் கொன்றது. அது வழக்கம்போல், சிறுத்தையின் ஈரலை மட்டும் உண்டுவிட்டு அப்பால் சென்றது. அதனை மறைவிலிருந்து, அச்சவிழிகளால் பார்த்துக்கொண்டிருந்த குள்ளநரி ஒன்று, விரைந்து சென்று, மீதமிருந்த சிறுத்தையின் எச்சில் மாமிசத்தைப் புசிக்கலாயிற்று.

வயிறு நிறைந்த மகிழ்ச்சியில், பெரிதாக ஊளையிட்டது.

மரக்கிளை வழியாக தாவிவந்த மந்தி ஒன்று, இதனைப் பார்த்துவிட்டு வியப்புடன் வினாவியது.

'சிறுத்தையை நீயா கொன்றாய்?'

குள்ளநரிக்கு மின்னலென மூளையில் பொறி தட்டியது. பலமாகத் தலையசைத்தபடி, இதென்ன கேள்வி?.......... பார்த்தாலே தெரியவில்லையா?..... கொன்றேன்..... தின்றேன்.... உனக்கும் பங்கு வேண்டுமா?' எனக்கேட்டது.

மந்தி, அச்சப் பயத்துடன் கிளைகளில் தாவியது.

குள்ளநரியின் தீரச்டிசெயல் காடெங்கும் பரவியது.

அவ்வழியால் மீண்டும் வந்த காட்டு ராஜா கூட நரிக்கு மரியாதை செய்து, பாதைமாறிப் போகத்தொடங்கியது.

11
வழிகாட்டி

இறைவன் உலகைப் படைத்தான்.

உயிர்கள்-

ஊர்ந்தன........ உலவின......... பறந்தன........ பாய்ந்தன....... மனிதர்கள்-

எத்தனை...... எத்தனை........ வகையினர்....... வண்ணத்தினர்.

குருடன்...... முடவன்...... செவிடன்...... ஊமை...... ஏழை....... பணக்காரன்..... அழகன்..... குரூபி...... நோயாளி...... சுகதேகி.....

இதனால்-

பூவுலகின் ஒரே பூசல்....... போட்டி....... பொறாமை................ இரத்தக்களரி.............

இறைவன் உதட்டில் குமிண் சிரிப்பு.

இறைவிக்கு எரிச்சல். விழியில் சிவப்புப் பூத்தது.

'இறைவா...... இதுவென்ன விளையாட்டு? இதில் மகிழ்ச்சிவேறா.......?

ஏனிந்தப் பிரிவினைகள்........ ஏற்றத்தாழ்வுகள்........ முரண்பாடுகள்........?

'தேவி....... உன் கருணை விழிகளுக்கு என் தத்துவங்கள் புலப்படா. இவ்வேற்றுமைகள் உயிர்களின் தகுதிகள்.......... உலகமென்னும் உலைக்களத்தின் அக்கினித் துண்டங்கள்...... அவற்றின் வடிவங்கள் என் தத்துவங்களே!'- இறைவன் புரியாத தத்துவத்தில் புதிர்ச் சிக்கல் விடுத்தான்.

தேவிக்கு ஆத்திரம்.

பூவுலகத்தில் இருந்து மீண்டும் பேரிரைச்சல் எழுந்தது.

எட்டிப் பார்த்தார்கள்.

பூவுலகில்-

கடவுளரைப் பலராக்கி, மனிதர் மோதவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இறைவன் மௌனியானான்.


12
தற்கொலைப்படை

கடற் பறவைகள் தாழப்பறந்து மீன் வேட்டையாடின.

பச்சை இரத்த வாடை வீச, புழுவுடன் தூண்டில் நீரிடையே துடித்தன.

'வேண்டாம்..... வேண்டாம்..... எங்களை வாழவிடுங்கள்'

-மீன்கள் அலறின.

'உங்கள் வாழவிட்டால்..... எங்கள் வாழ்வு...? கடற் பறவைகள் எக்காளமிட்டுச் சிரித்தன.

மீன்கள் ஒன்று திரண்டன. 'இவர்களுக்கு இரையாகி அழிந்து போவதைவிட எதிர்த்து நின்று இவர்களில் சிலரையாவது கொன்றழித்துவிட்டுச் சாவது மேல்.....'

புரட்சிக்குரல் எழுந்தது எப்படி....? நீரின் மேல் துள்ளி விழுந்த வெள்ளி மீனொன்று கடற்பறவைக்கு ஆசை காட்டியவாறு தூண்டிலை நெருங்கியது. 'விர்' ரென்று கடற்பறவையும் நீரைக் கிழித்துக்கொண்டு நெருங்கியது.

'கடக்' தூண்டில் சுண்டியிழுக்கப்பட்டது.

தூண்டில் முள்ளில், மீனுடன் கடற்பறவையும் துடித்தது.


13
முதலடி

வைகை பெருக்கெடுத்தது.

தொழிலாளர் வர்க்கம் ஒன்று திரண்டது.

இயற்கைக்கும், மனிதனுக்கும் மாபெரும் போராட்டம்,

'அழிக்க வந்த வெள்ளத்தையே, ஆக்கத்திற்குப் பயன்படுத்துவோம்!'

உழைப்பு...... உழைப்பு......உழைப்பின் வெற்றி உயர எழுந்தது.

நிஷ்டையில் ஆழ்ந்திருந்த பரமனின் செவிகளில் உழைப்பின் கீதம் விழுந்து, என்றுமில்லாக் குறுகுறுப்பை ஊட்டிற்று.

மண்வெட்டியுடன் மண்ணில் இறங்கினான்.

உழைப்பு...... உணவு........ ஓய்வு.........

ஆ! என்ன சுகம்..... தபசினைவிட மோனமான நிம்மதி.....

உழைப்பின் பின் கிட்டிய உணவு தேவாமிர்தத்தை மிஞ்சியது. அதன் பின் ஏற்பட்ட ஓய்வோ.......

நிறைவான உழைப்பில் எழும் முழுமையான அமைதிதான். ஓய்வா?.....

அவன் ஆனந்தம் அளவு கடந்தது.
புதுத் தத்தவம் கிட்டிய மகிழ்ச்சியில் ஆடினான்...... பாடினான்...... கைலையை மறந்து விளையாடினான்.

தொழிலாளியின் ஆனந்தம் பாண்டியன் கண்ணை மறைத்தது.

கைப்பிரம்பு சுழன்றது.

உலகின் தொழிலியக்கம் ஒரு கணம் தம்பித்தது. ஒவ்வொரு தொழிலாளியும் தமக்கு விழுந்த அடியாக, குரல் கொடுத்தனர்.

பாண்டியன் கைப்பிரம்பு நழுவியது. தொழிலாள ஒற்றுமை பின் பலத்திற்கு பாண்டியன் தலைகுனிந்தான்.


14
போட்டி

'அதோ!...... சந்திரோதயம்' - என்றது பூமி.

'பூமியோதயம், அற்புதமே'- என வியந்தது மதி.

புவிக்குப் பொறுக்க முடியவில்லை.

'என்னால் அழகும், ஒளியும், மதிப்பும் பெறும் நீ எனக்குச் சமமாக கேலி பேசி ஏளனமா செய்கிறாய்?...'-சீற்றம் சொற்களாயின.

'ஆஹஹ்ஹா! என்னால் அல்லவா நீ பெருமையடைகிறாய்? அதை விட்டு இறுமாப்பு வேறா?....-மதி எதிர்த்தாக்கலில் கொதித்தெழுந்தது.

இரண்டும் ஒன்றையொன்று நெருங்கி வழி மறித்து நின்றன. மோதிக் கொண்டன.

கிரகணங்கள் மாறி மாறித் தோன்றலாயின.

'கறுப்புச் சூரியன்' சிரித்துக் கொண்டேயிருந்தான்.


15
பொறுக்கி

அவன் வீட்டு வாசற்படியில் உட்கார்ந்திருந்தான்.

தெருவோரமாகக் கிடந்த மணிக்கற்களை எடுத்து, விட்டெறிந்து கொண்டிருந்தான்.

அவன் கரங்கள்........ வேலை......... உழைப்பு........ எனத் துடித்தன.

வயிறும் பசியால் அழுதது.

'இதிலிருந்து கொண்டு வீணாக ஏன் கற்களை எறிகின்றாய்? ஆற்றங் கரைகளில் போய் சிறு மணிக்கற் களைப் பொறுக்கி வா! பணம் தருகிறேன்' -என்றது ஒரு குரல்.

'ஏன்?'

'கேள்வி கேட்காதே!......... சொன்னதைச் செய்.............. கூலியைப் பெற்றுச் செல்!
-பதில் கடுமையாக வந்தது.
2

அவன் சோற்றிற்காகக் காத்திருந்தான்.
மனைவி அரிசியைக் களைந்து கொண்டிருந்தாள்.
'ஏய்......... இன்னுமா சோறு காச்சவில்லை....... பசியால் பிராணன் போகுது!'.

3
அவன் ஆவலோடு சோற்றை வாயிலிட்டான்.
'நறுக்'-வாயில் கல் கடிபட்டது.
அடுத்தவாய்-

'நறுக்!'
அவன் வாயில் கடிபட்ட கல்லை எடுத்துப் பார்த்தான். ஆச்சரியத்தால் அதிர்ந்து கூவினான்-

'கண்டுகொண்டேன். இவை நான் பொறுக்கிய கற்களல்லாவா?'


16
பயன்

அது ஒரு பொங்கு முகம்.

நதியும், கடலும் சங்கமிக்கும், புகார் படுக்கை.

நதியின் நீரினால் அதன் பின்னணி நிலங்கள் பச்சைப் பயிர்க் கதிர்களால் எழிற்கோலம் தீட்டின.

கடல் துன்பச் சூழலில் சிந்தை நொந்தது.

'நதியால் மக்களுக்கு வாழ்வுண்டென்றால்...... பரந்த நீர்ப் பரப்பையுடைய என்னால் யாருக்கும் பயனில் லையா...... இது வென்ன சோதனை'

மனிதன் இரங்கினான்.

பாத்தி கட்டி, வரம்புயர்த்தி, கடல் நீரைப் பாய்ச்சினான்.

சூரியன் அக்கினி விதைகளைச் சிந்தி விதைத்தான்.

வெண்மணிப் பூக்கள்...... உப்புப் பளிங்குகள்

முத்தம் சிந்தின.

உணவுக்கு உயிராயின.


17
அடிக்கல்

தொழிலாளர்கள் காலையிலிருந்து, அந்த உச்சிப் பொழுதுவரை காத்திருந்தார்கள்.

அவர்கள் வெட்டிய அத்திவாரத்தின் ஈர மண் கூட உலர்ந்து சொரிந்து விழுந்து கொண்டிருந்தது.

சீமெந்துக் கலவை ஈரம்வற்றி, உலர்ந்து கொண்டிருந்தது.

அவர்கள் தங்கள் சாந்தகப்பை, மட்டத்தடி, நீர்மட்டம், மண்வெட்டி என்பனவற்றுடன் நீண்ட நேரமாகக் காத்திருந்தனர்.

வேலை தொடங்கவில்லை.

தந்தையுடன், வேலைக்குத் துணையாக வந்திருந்த சிறுவன் கேட்டான்:

'அப்பா, ஏன் இன்னும் வேலையை நீங்கள் தொடங்கவில்லை'

'மகனே, அடிக்கல் நாட்டுபவர் இன்னும் வரவில்லை'

'அடிக்கல் மிகப் பெரிதா அப்பா? உங்களால். அதை நாட்ட முடியாதா?'

'அப்படியல்ல மகனே. அடிக்கல் பெரிதல்ல: அதனை நாட்டுபவர் பெரிய மனுஷன்'

'உங்களைவிட அவர் பெரிய உழைப்பாளியா? இந்தக் கட்டிடம் கட்டும்வரை உழைப்பாரா? அப்படியான உழைப்பாளி ஏன் இன்னும் வந்து சேரவில்லை'

'இல்லையடா மகனே. அவர் உழைப்பாளியல்ல. பதவிக்காரன். அவரால் இந்த அடிக்கல்லை தூக்கவும் முடியாது. தூக்கவும் மாட்டார். அது அவருக்குக் கௌரவக் குறைவு. நாங்கள் தூக்கிக் கொடுக்க அவர் அதனை ஆசீர்வதிப்பதுபோல் தொட்டுக் கொண்டு நிற்க புகைப்படங்கள் பிடிப்பார்கள். வெயிலிலும் மழையிலும் நாங்கள்தான் உழைத்துக் கொடுக்கவேண்டும்,

'அப்படியானால் அவருக்கு எதற்கா இதில் பங்குகொடுக்கவேண்டும். அடிக்கல்லில் அவர் பெயரைப் பொறிக்க வேண்டும்'?

'பாவம்..... வருங்கால சமுதாயம் அவர்மீது குற்றம் சாட்டாமல், அவரும் உழைப்பில் பங்கு கொண்டார் என நாம் வழங்கும் பிச்சைக்காரத்தனமான சான்றிதழ்' அதுமட்டுமல்ல, மகனே! இந்தக் கட்டிடம் கட்டி முடிந்ததும் திறப்புவிழாவுக்கென இன்னொரு பதவிக்காரன் பட்டு நாடா ஒன்றை வெட்டுவான். அவன் செய்த மாபெரும் உழைப்புக்காக அவன் பெயரும் பொறிக்கப்படும்'

'இதெல்லாம் ஏன் இப்படி?'

'நம் தலைவிதி என்றுதான் இவ்வளவு நாளிருந்தோம்' இப்போது நாம் விழித்துக் கொண்டோம்' அவன் முடிக்கவில்லை.

மாபெரும், நீண்ட கப்பல் போன்ற கார் ஒன்று, ஒருவனை மட்டும் சுமந்தவாறு, அலுங்காமல் குலுங்காமல் சப்தம் எதுவுமின்றி வந்து நின்றது.


18
காக்கைகள்

அவர் விசித்திர மனநோய் ஒன்றினால் பீடிக்கப்பட்டவர். ஆனால் வெளியே இருக்கிறார். பணக்காரர். அவர் மனநோய் ஒரு மனோபாவம் எனக் கொண்டு பிறரால் பாராட்டப் பட்டுக் கொண்டிருந்தார்.

வெறொன்றுமில்லை.

எப்பொழுதும் தன்னைச் சுற்றி நாலுபேர் நிற்கவேண்டும்.

கொடை என்ற பேரில் பணத்தை வாரியிறைத்தார். நான்கு பேரொன்ன? நாலாயிரம் பேர் சூழ்ந்து கொண்டனர், அவர் பூரித்தே போனார்?

வள்ளல் என்ற பெயர் பெரிதாகப் படர்ந்து.

செல்வம் கரையக் கரைய, கூட்டமும் குறையலாயிற்று.
பைத்தியக்காரன்..... விசரன் என்ற பெயர் அவருக்குச் சூட்டப்பட்டது.

இந்த அவமானங்களைவிட, தன்னைச் சூழ்ந்திருந்தவர்கள் இல்லையே என்ற கவலை அவரை வாட்டியது. திடீரென ஒரு சிந்தனை பிறந்தது.

சோற்றை வாரியிறைத்தார்.

"கா....... கா...... கா......" - காகக் கூட்டம் அவரைச் சூழ்ந்தது.

அவருக்கு மீண்டும் மகிழ்ச்சி.

காகக் கூட்டங்கள் பறந்து சென்றன.

இப்போது அவர் தலை, தோள்..... முதுகு, முகம் எங்கும் காகங்களின் எச்சங்கள்.

முதன்முதலாக சிந்திக்கத் தொடங்கினார்.


19
ராஜதர்மம்

நாட்டில் ஊழல்கள் மலிந்தன.

ஆட்சியாளர்கள் மக்களைக் கொள்ளையடித்தனர். வதைத்தனர். உயிர்ப்பலி கொண்டனர்.

மக்களின் அபயக்குரல் உலகளாவிய எழுந்தது.

அயல்நாடுகள் மக்களுக்காக அனுதாபம் காட்டின.

"மக்களைக் கொல்லாதே!"

"இது உள்நாட்டு விவகாரம். இதில் பிற நாடுகள் தலையிடுவது உலக அரசியலுக்கு முரண்"

அந்த நாடுகள் வாயை மூடிக்கொண்டன.
உயிர் போகும் வேளையில் போராடாது மடிவதை விட, போராடி மடிவதை மேல் மக்கள் எண்ணினர்.

ஆயுதங்களைக் கையில் எடுத்தனர்.

அச்சமடைந்த ஆட்சினர் வெளிநாடுகட்கு அவரத் தந்தி அனுப்பினர்.

'புரட்சி வெடித்து விட்டது. ஆயுதங்களை அனுப்பி எங்கள் ஆட்சியைக் காப்பாற்றுங்கள்.'


20
காலமாற்றம்

"காலங்கள் தோறும் சொற்களின் கருத்துக்கள் மாறிக்கொண்டே வருகின்றன. உதாரணமாக நாற்றம் என்ற சொல் பண்டைய நாட்களில் நறுமணம் என்ற பொருளில் வழங்கி வந்தது. ஆனால் இன்று அது "கெட்ட வாசனை"யைக் குறிக்கிறது...... இதற்கு இன்னொரு உதாரணம் சொல்"-என்றார் ஆசிரியர்.

'அரசியல்!' - என்றான் மாணவன்.

'எப்படி?'

'இன்று அரசியல் என்றால் ஊழல், லஞ்சம், மோசடி, நாணயமின்மை, பக்கச் சார்பு என்று தானே பொருள் நினைவுக்கு வருகிறது.......'

ஆசிரியர் மாணவனைக் குருவாகப் பாவனை செய்து வணங்கினார்.


21
விக்கிரகங்கள்

'விக்கிரக வழிபாடு மனிதனை மந்தையாக்குகிறது' என்று குரல் எழுந்தது.

விக்கிரக உடைப்பு புரட்சியாக உருவெடுத்தது.

மக்களிடையே கருத்துப் புரட்சி. இரத்தக் களரி.

இரத்த வெள்ளத்தில் -புரட்சி வென்றபின்,

புரட்சித் தலைவர்களே

விக்கிரகங்களாக

வீற்றிருக்கக் கண்டனர்!


22
கோபுரக்கூடு

சிட்டுக் குருவி ஒன்று தன் கூட்டை அழகு படுத்திக் கொண்டிருந்தது.

அதனைக் கண்டு மனிதன் சிரித்தான்.

"குருவி கூடு கட்ட வேண்டுமேயொழிய, பெரிய கோபுரம் கட்ட முயலைக் கூடாது."

"ஏன்?"
"உன்னால் அது முடியாது..."

"பார்க்கிறாயா?.... முயற்சியால் முடியாதது, மதியால் இயலாதது எதுவுமேயுல்லை..... பந்தயம் கட்டுகிறாயா?" என்றது குருவி.

மனிதன் சவாலை ஏற்றான்.

அவன் மீண்டும் அவ்விடம் வந்தபோது

"சிட்டுக் குருவியின் கூடு கோபுரம் நுனியில் அழகாக ஆடிக்கொண்டிருந்தது.


23
வினா

'உப்பு நீரில் பயிர்கள் விளையா!' என்று புத்தகப் பூச்சியான ஆசிரியர் படிப்பித்துக் கொண்டிருந்தார்.

உலகியல் படித்த மாணவன் எழுந்து நின்று உரத்துக் கேட்டான்:

'உப்பு நீரில் பயிர் விளையதென்றால், விவசாயியின் வியர்வையில் உப்பு இல்லையா?'

ஆசிரியர் யோசனையில் ஆழந்தார்.

'சிந்திக்க வேண்டிய கேள்வி?'- வழுக்கையை கை தடவி விட்டுக்கொண்டது.


24
வியர்வைச் சித்திரங்கள்

எழிலார்ந்த கலா மண்டபம்.

உலகக் கட்டிடக் கலைஞர்களின் கனவுகளுக்கோர் உருவம். நாகரிக முதிர்ச்சியின் சின்னம். உழைப்பின் உயிரோவியம்.

சிற்பிகளின் உளிகள் தூண்களை கலையாக்கியிரந்தன.

ஓவியங்களின் தூரிகைகள் சுவர்களை இயற்கையால் திரையிட்டிருந்தன. எனினும் சில பகுதிகள் இன்னும் பூர்த்தியாகவில்லை.

சொந்தக்காரர் பெருமிதத்துடன் எல்லாவற்றையும் பார்வை யிட்டவாறு சென்றுகொண்டிருந்தார். அவர் அழகு மகள்- சின்னஞ் சிறுமியும் துள்ளிக் குதித்தவாறு அவருடன் வந்துகொண்டிரந்தான்.

திடீரென அவள் வேகம் தடைப்பட்டது.

"அப்பா..... அப்பா...... அந்தச் சித்திரங்கள்தான் எல்லாவற்றையும் விட இருக்கின்றன இல்லையாப்பா.....!" என்றாள்.

பூர்த்தி செய்யப்படாத பகுதியில் நடந்துகொண்டிருந்த அவர் வியப்புடன் திரும்பிப் பார்த்தார்.

அங்கே-
கட்டிடத் தொழிலாளர்கள் ஓய்வு வேளையில் சுவரில் சாய்ந்து சாய்ந்து... வியர்வைக் கறை ஏறி...ஏறி..... படர்ந்து விரிந்து......

இன்னதென்று விளக்க முடியாத ஓவியம் போல் மின்னியது.


25
தானவிழிகள்

உலக சுகாதார நிறுவனம் விழிப்புலனற்றோர் குறையைப் போக்குமாறு உலக நாடுகளுக்கு விண்ணப்பித்துக் கொண்டது.

கருணை உள்ளம் கொண்ட அந்த நாடு ஏராளமான விழிகளை அனுப்பி வைத்தது.

உலகெங்கும் பெரும் பாராட்டு.

"உங்கள் நாட்டு மக்கள் பரந்த உள்ளம் கொண்டவர்கள். தாங்கள் இறந்த பின் தம் கண்களைத் தானம் செய்யும் பண்பு கொண்டவர்கள்"

"என்ன? தானமா? நல்ல கதை. நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு அவர்களைக் கொலை செய்து கண்களைப் பிடுங்கி அனுப்ப பாராட்டு அவர்களுக்கா?"

- ஆட்சியாளர் பொருமினர்.


26
சட்டமறுட்பு

ரயில் ஓடிக்கொண்டிருந்தது,
இரு நண்பர்கள் அப்போதுதான் நடந்துகொண்டிருந்த சட்டமறுப்பு இயக்கம் பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

திடீரென ஒருவன் சொன்னான்: 'மச்சான் நானும் இப்போ சட்டமறுப்பில் தான் இருக்கிறேன்'

'என்ன சொல்லுகிறாய்?......'

ரெயிலுக்கு டிக்கட் எடுக்கேல்ல மச்சான்!.....'


27
பொருள் - ஆதாரம்

திருமணம் ஆகுமுன் காதலி, கலங்கிய கண்களுடன் கேட்டாள்.

"ம்..... ம்...... உங்களுக்கு என்னைவிட பணம்தானே பெரிசாப் போச்சு..... இல்லாட்டி வீட்டாற்றை பேச்சைக் கேட்டு இப்படித் தயங்குவியளா?"

அவன் உற்றார். பெற்றோரைப் பகைத்து, அவள் கரம் பற்றிய சில நாளில் அவள் மீண்டும் கேட்டாள். -

"இஞ்சருங்கோ...... நீங்களும் இருக்கிறியளே ஆம்பிளை யெண்டு! உங்கட நண்பர் எப்படியெல்லாம் சம்பாதிக்கிறார்...... நீங்கள் எண்டால் வீட்டுக்குள்ள அடைஞ்சு போய்க் கிடக்கிறியள்....."

அவன் கேட்டான்-
"அப்படியெண்டா......... உமக்கு என்னைவிட பணம்தான் பெரிசாப்போச்சு......

அவள் பதில் தயங்காமல் வந்தது.

"பணமில்லாமல்.... எப்படி வாழுறது..... பணமிருந்தாத் தான் நீங்களும்..... நானும்...... அதுக்குப் பிறகு தான் மற்றதெல்லாம்..... விசர்க்கதைகளை விட்டுப்போட்டு ஏதும் சம்பாதிக்கப்பாருங்க....."


28
முதலைகள்

பொதுத் தேர்தலில் இரு கட்சிகள் போட்டியிட்டன.

ஒரு முதலாளியிடம் ஒரு கட்சி தேர்தல் நன்கொடை கேட்டது.

முதலாளி சிரித்த முகத்துடன் அவர்களை வரவேற்று, உபசரித்து பெருந்தொகையான பணத்தையும் நன்கொடையாக வழங்கினார்.

சில நாட்களின் பின் மறுகட்சியும் சென்று தேர்தல் நிதி, நன்கொடை கேட்டது.

அவர்களுக்கும் முதலாளி முன்போலவே நன்கொடைவழங்கினார்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த அவரது மகன் கேட்டான்.
"அப்பா! இப்போது வந்தவர்கள் பதவிக்கு வந்தால் நமக்கு ஆபத்தல்லவா?"
"அம்மா, மகனே!"
"அப்படியானால் எதற்காக அவர்களுக்கு உதவினீர்கள்?"
"அவர்கள் பதவிக்கு சந்தால, நமதுதவியைக் காட்டிச் சலுகை பெறலாம் அல்லவா?"
"அதுசரி.. முதல் கட்சியினருக்கு உதவாமல் விடலாமே?"

"தேர்தல் முடிவு நிச்சயமானதல்லவே?
'இரு கட்சிக்கும் வழங்கியதால் பெருஞ் செலவல்லவா?'
'இல்லை மகனே இல்லை........நான் கொடுக்க இருந்த பணத்தை இரண்டாகப் பிரித்துத்தான் இரு கட்சிகளுக்கும் வழங்கினேன். எந்தக் கட்சி வெல்லுமோ என்ற அச்சமோ கவலையோ கூட எமக்கில்லை. எது வென்றாலும் நமக்கு ஆபத்தில்லை. ஒரு கட்சிக்கு வழங்கினால்தான் ஆபத்து......... நாம் எப்போதும் நீரிலும் நிலத்திலும் வாழப் பழகவேண்டும் புரிகிறதா...........?

'புரிந்தது'.


29
பொன்னாடு

உலகெங்கும் சுற்றிப் பறந்து, களைத்துத் திரும்பி வந்து கிளைகளில் அக் காக்கைகள் அமர்ந்து கொண்டன.

"அற்புதமான உலக யாத்திரை. எத்தனை நாடு. எத்தனை மனிதர். எத்தனை காட்சிகள்........ ஆஹா......." ஒரு காக்கை வியந்துகொண்டது.

"ஆனாலும், எல்லா நாடுகளையும் விட என் தாய்நாடுதான் மிக உயர்ந்தது"-என்றது மற்றக் காக்கை.

"எப்படி?"

"எங்கள் நாட்டில் தானே நாளுக்கு நாள் அகதிகள் முகாம்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஈரநெஞ்சம் கொண்ட ஆட்சியல்லவா?" என்றது மறு காக்கை.

"உண்மைதான்!" - என்றபடி கா.... கா..... கா..... என உலககெலாம் பறையடிக்க சிறகடித்தவாறு வானில் பறக்கத் தொடங்கியது.


30
பரிணாமம்

தொழிற்சாலையின் புகைபோக்கி வழியாக வெளியேறுவது, தொழிலாளிகளின் உயிர் மூச்சா?
மூச்சிழந்த தொழிலாளிகளின் உடல்கள் வற்றலாயின வயிறு ஒட்டியுலர-

முதலாளி பஞ்சுத் திண்டுகளில் தன் கனத்த உடலைச் சாய்க்கமுடியாமல், திணறிக்கொண்டிருக்க-

தொழிலாளிர்கள் புரட்சிக்காரர்கள் ஆயினர்.

அமைப்பு மாறியது.

வாழ்வு விடிந்தது என்ற எண்ணத்தில் தொழிற்சாலை ஏகினர் புரட்சியின் புதல்வர்கள். அங்கே-

முதலாளித்துவம், பதவியதிகாரமாய்,

அதிகாரிகளின் வடிவில்,

காளான்களாய் பூத்திருக்கக் கண்டனர்.


31
பழம் பெருமை

கலைக்கூடம் ஒன்று நீண்டகாலமாக இயங்கி வந்தது.

கலைப் பொருட்களும், சிற்ப வேலைப்பாடு அரங்க நிர்மாணிப்புகளும்-கூடமும், பொருட்களும் அபூர்வக் கலைகளின் உரைகல்லாக மீளிர்ந்தன. ஆனால்,

மக்கள் அதனைப் பொருட்படுத்தவேயில்லை.

ஒருநாள்-

இடியொன்று தெறித்து, கட்டிடத்தின்மேல் விழ

கட்டிடம் உருக்குலைந்து,

சிற்பங்கள் மூளியாகி, சிதிலமாகி......

மக்கள் திரள்திரளாக........ கூட்டம்கூட்டமாக கலைக்கூடம் நோக்கி வரலாயினர்.

கலைக்கூடத்தின் பழம்பெருமையையும், சிற்பங்களின் சிறப்பையும், இயற்கையின் அரக்கத்தனத்தையும் வாயுனையாமல் பேசிக்கொண்டே-

"இழப்பின் மகிமை"யை இரசிக்கலாயினர்.


32
முரண்பாடுகள்

அவர் ஒரு பொருளியல் பேராசிரியர். விடுமுறைக் காலங்களில் கிராமத்திற்கு வந்து வீடுவார். வீட்டின் முன்னால் கோடையிலும் குளிர் காற்றிறைக்கும் வேப்ப மரத்தின் கீழ், சாய்வு நாற்காலியில் படுத்து, உண்ட களைப்பிற்கு ஆயாசமாகப் புகைத்துக் கொண்டிருக்கும் வேளையிலும்-

உச்சி வெயில் மண்டையைப் பிளக்க, வியர்வையில் மேனி பளபளக்க-

அந்தக் கரடுபாய்ந்த கற்பூமியில் விளைநிலத்தை அணுவணுவாகத் தேடிச் சேமித்துக்கொண்டிருப்பான். அவன் உழைப்பில் வாழைத் Nதூட்டம் ஒன்று உருவாகிக் கொண்டிருந்தது.

உழைப்பு - உற்பத்தி - கேள்வி - விலை.

"ஒரு பொருளின் விலை அதனை உற்பத்தி செய்ய எடுத்த தொழிலின் மதிப்பினாலும், மக்களின் தேவை நிலையினாலும் நிர்ணயிக்கப்படுகிறது" பொருளியல் தத்துவத்தின் அடிப்படைகளில் ஒன்றை அவர் மனம் ஏனோ நினைக்கின்றது.

மறுநாள்-

அவன், அவர்முன் ஒரு வாழைக்குலையுடன் நிற்கிறான்.

"ம்..... கடைசியா என்ன விலை சொல்லுறாய்?...."

"ஐயாவுக்குத் தெரியாதா..... பட்டணத்தால வாறனியள்..... உங்களுக்குத்தான்..... சந்தை நிலாபரம் எங்களவிட நல்லாத்தெரியும்..... ஐயா..... கொடுக்கறதைக் கொடுங்க....."

"இஞ்ச.... இந்தக் கதையொண்டும் வேண்டாம்..... நீ உன்ர விலையைச் சொல்..... சரி....... மூண்டு ரூபா தரட்டே?"

"என்ன! அடாத்து விலை கேக்கிறியள்..... கொஞ்சம் சிரமத்தை பாராம சந்தைக்குக் கொண்டு போனா கத்தாழை முள்ளுப்போல பத்து ரூபாவுக்கு விக்கலாம்"

"அப்ப போறது தானே?...." ரோசம் முகம் சிவக்க வைக்கிறது.

"இல்ல ஐயா.... அந்தப் போய்வாற நேரத்தில கொஞ்சம் கல்பிரட்டி, கழனியாக்கலாம் எண்டு தான் யோசிக்கிறன்"

"சரி..... சரி.... ஐஞ்சு ரூபா தாறன்.... விருப்பமெண்டா வைச்சிட்டுப்போ!....."

-அவன் போகிறான். அவர் மனைவி வருகிறாள்.

"மெத்த மலிவா வேண்டிப் போட்டியள்..... கண்டியில ஒரு பழமே இருபத்தைந்து சதமெல்லே....."

அவருடன் சேர்ந்து, தத்துவமும் சிரிக்கிறது.


33
பார்வை

கழுகு ஒன்று மேலாகப் பறந்து கொண்டிருக்கிறது.
அதன் பார்வைத் தெறிப்பில்-
எங்கும் வர்ணக் காட்சிகள்.

பச்சை வயல்கள் - செங்கனித் தோட்டங்கள்.

நெற்போர்கள்-கரும்புக் குவியல்கள்

கழனித் தோட்டக் கோலங்கள்.

கழுகு, தாழத்தாழப் பறந்து பார்த்தது. ஏமாற்றம் உதட்டைப் பிதுக்கிற்று.

"பிச்சைக்காரத் தேசம்.... சே..... ஒரு அழுகிய பிணம் கூட இல்லாமல் ஒரு நாடா....."

கழுகு மீண்டும் உயரப் பறக்கலாயிற்று.


34
கேள்வி

"அம்மா! அம்மா!.... ஏனம்மா என்னோட அப்பாவும் நீயும் பாடசாலைக்கு வந்தனீங்கள்?"

அம்மா பதறிக்கொண்டே கேட்டான்:

ஏன்?.... நாங்க வந்தது உனக்குப் பிடிக்கேல்லியா?"

மகள் சலித்துக்கொண்டே சொன்னாள்.

"நீங்க ரெண்டுபேரும் என்னோட பாடசாலைக்கு வந்த தாலதான் எங்களை அகதிகதிளெண்டினம்..... பாடசாலைகளையும் அகதிகள் முகாம் எண்டினம்"

அம்மா பெருமூச்சு விட்டாள்.

"உண்மைதான் மகளே!"


35
விடைகள்

இடம் பெயர்ந்த மாணவன் பாPட்சைக்கு விடை எழுதினான்.

கே: சனநாயகம் என்றால் என்ன?

வி: பெரும்பான்மையினர் சிறுபான்மையினரைக் கொள்ளையடிப்பது, கொன்று குவிப்பது, சுட்டெரிப்பது
என்பவற்றைச் சட்டத்தால் அங்கீகரிப்பது.

கே: சோசலிசம் என்பது என்ன?

வி: நாட்டினின்றும் சிறுபான்மையினரை இல்லா தொழிப்பது

கே: குடியரசு என்று எவ்வமைப்பைக் கொள்வர்?

வி: வாக்களித்துத் தன்னை ஆட்சிபீடமேற்றிய மக்களை அகதிகளாக்கும் தன்மையைக் கொண்ட அமைப்பைக் கூறலாம்.
வினாத்தாள் திருத்தும் ஆசிரியர் விடைகள் சரியா, தவறா என்பதனைத் தீர்மானிக்க முடியாமல் உறைந்து போனார்.


36
மதில்

"பாத்தியா.... இதுக்குத்தான் பாடசாலைக்குப் பக்கத்தில வீடு பார்க்கவேணும் எண்டு சொல்லுறது.... எவ்வளவு நல்லாதப் போச்சு!"

"நீங்கள் என்னதான் சொல்லுறியள்? எனக்கு ஒண்டுமாப் புரியேல்ல!"

"எடி மடைச்சி..... பாடசாலைக்குப் பக்கத்தில எண்டதாலதான் மதிலால குதிச்சு விழுந்து அகதிமுகாமுக்கு வந்திட்டம்..... இல்லாட்டி எவ்வளவு கரைச்சல்... வாற வழியிலேயே...." அவள் இடைமறித்தாள்.

"ஓம்!.... ஓம்!... மேல சொல்லிப் பயப்படுத்தாதீங்க.... ஆனா ஒண்டைக் கவனிச்சியளே?"

"என்னத்தையப்பா சொல்லிறாய்?.."

"இந்த மதிலுக்கு அங்கால இருந்தா நாட்டின் சகல உரிமையுமுள்ள சுதந்திரப் பிரசை. இங்கால வந்திட்டா நாடற்ற பிரசை... அகதி என்னப்பா...."

மௌனம் கனத்து இடியென இறங்கியது.


37
பெருமை

வெளிநாடு ஒன்றில் பலநாட்டு மாணவர்கள் சந்தித்துக் கொண்டனர். ஒவ்வொரு மாணவனும் தத்தமது நாட்டினைப் பற்றிப் பெருமையுடன் கூறிக் கொண்டனர்.

"எங்கள் நாடுதான் முதன்முதலில் 'உலகத் தொழிலாளரே ஒன்றுபடுங்கள்!' என்று குரல் கொடுத்து நவீன உலகை விழித்தெழச் செய்தது" என்றான் ரூஷிய மாணவன்.

'தனிமனித வளர்ச்சிக்கு தடையாக எதுவுமே இருக்கக் கூடாது என்ற தத்துவத்தால் உயர்வடைந்த நாடு நமது நாடு" என்று கூறினான் அமெரிக்கச் சிறுவன்

"அஹிம்சையே நமது நாட்டின் சொத்துடமை!" என்றான் பாரதச் செல்வன்.

"நாட்டின் எவ்வித உயர்ச்சிக்கும் அந்நிய நாட்டிடம் கையேந்தலாகாது என்று மனித சக்தியின் பலத்தை உலகறியச் செய்த நாடு எங்கள் நாடு!" என்றான் சீனப் புதல்வன்.

"இலவச அரிசி மூலமும், இனக் கலவரங்களாலும் நாட்டு மக்களை பிச்சைக் காரர்களாகவும், அகதிகளாகவுமிக்கி, அந்நிய பிச்சைக் காரர்களாகவும், அகதிகளாகவுமாக்கி, அந்நிய நாடுகளிடம் கையேந்தி நிற்கும் பிச்சைக்கார நாடு என்று கூறுவதா எனக்குப் பெருமை?" என எண்ணிய அவன் தலைகுனிந்தான்.


38
பார்வைகள்

ஆங்கில மொழியில் மட்டும் கல்வி கற்பிக்கும் பாடசாலை. அங்கு மாணவர்களிடம் பின்வரும் வினா கேட்கப்பட்டது.

கீறிட்ட இடத்தை நிரப்புக.
இலங்கை ................................ வடிவமாகும்.

"இலங்கை தாமரைப்பூ வடிவமாகும்" பறங்கி மாணவன் பதில்

"இலங்கை தீச்சுடர் வடிவமாகும்" சங்கள மாணவன் பதில்

"இலங்கை கண்ணீர்த்துளி வடிவமாகும்" தமிழ் மாணவன் பதில்.

ஆசிரியர் இங்கையின் வடிவம் பற்றி முதன்முதலாகச் சிந்திக்கத் தொடங்கினார்.


39
நெற்றிக்கண்

சமாதானப் புறாக்கள் வெண் பஞ்சுக் கூட்டமென நடந்தன.

அழகு-மென்மை-அமைதி.

'க்கும்.....க்கும்......க்கும் உலகிற்கு அவை எதையோ போதித்துக்கொண்டிருந்தன.

அது யோகம். ஞானம் சிந்திக்க கூட்டையடைந்தன.

வேடன் வந்தான்.

கீழே நெருப்பு வளர்த்தான்

வெப்பப் புகையில் புறாக்கள் தவித்தன. சில சுருண்டன நெருப்பில் விழுந்தன.

ஒரு புறா பொறுமையை இழந்தது; விண்ணில் எழுந்தது.

'விர்ரென்று கீழிறங்கியது.

நெருப்புத் துண்டுடொன்றை தூக்கிச் சென்று வேடனின் குடிசையில் போட்டது.

அவன் குடிசை

வெந்தழலில் வேகியது.


40
வேலி

நீண்ட நாட்களாக நட்பு உவமை சொல்லிக் கொண்டிருந்த அயலவர்கள் அவர்கள்.

ஒரு நான் வேலி அடைக்கும் போது, ஒரு கதியால் தள்ளிப் போனதில், விவகாரம் சமாதானமாக ஆரம்பித்து, கிண்டல், ஆவேசம், கத்திவெட்டு என்று வளர்ந்ததில், தன்மானப் பிரச்சனை பூதாகாரமாகியது.

நீதிமன்றங்கள் பலவற்றின் பல படிகளை ஏறி இறங்கினர். நீண்ட நாட்களின் பின். சமாதானமாகப் போகும்படி நீதி வழங்க, இருவரும் சமாதானமாகி வீட்டிற்குத் திரும்பினர்.

ஆனால்,
இருவரது வீட்டுவாசலில் வாதி, பிரதிவாதிக்கு ஆஜராகி வழக்கு நடத்திய வழக்கறிஞர்களின் பெயர்கள் மின்னிக்கொண்டிருந்தன.


41
அரசு

வீட்டின் தெற்குச் சுவரும்-எல்லைச் சுவரும் ஒன்றாக இருந்தன. வீட்டின் சுவருடன் இணைத்து காம்பவுண்ட் சுவர் நீண்டிருந்தது.

ஆரம்பத்தில் பிரச்சினை எதுவுமே யிருக்கவில்லை.

ஒரு பெருமழையின் பின் சுவர்கள்; நன்றாக ஊறி நனைந்து, வெயிலில் காயத் தொடங்கியபோது-

வீட்டுச் சுவரும் காம்பவுண்ட் சுவரும் இணையுமிடத்தில் ஒரு அரசாங்கன்று தளிர் இலை நீட்டி தலைகாட்டியது.

அதனை ஒருவரும் பொருட்படுத்தவில்லை.

சில காலம் வெளியூர் மாற்றம் கிடைத்துப் போய்விட்டுத் திரும்பியபோது-

அரசமரம் வளர்ந்து வீட்டின் சுவர்கள் வேரோடி வெடித்திருந்தன. கண்டு இடுக்குகளில் பூச்சி புழுக்கள்.... விஷ ஜந்துக்கள் ஊர்ந்துகொண்டிருந்தன.

எல்லா-இந்த அரசால்தான்.

கோடரியுடன் விறகுவெட்டி வந்தான்.

வீட்டைப் பாதுகாக்க மரத்தைத் தறிக்க முதல் வெட்டைப் போட்டான்.

அந்த சப்தத்தில் அரச மரம். தறிக்கக் கூடாது. சட்டவிரோதம். அரசால் வீடு சிதைந்தால் வீட்டைவிட்டு எழும்பவேண்டுமேயன்றி அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கக்கூடாது. அரசின் எல்லைக்கு அப்பால் ஓடி பாதுகாப்புத் தேடு"

வீட்டை நொருக்கிப் பிளந்து மரம் வளர்ந்தது.


42
விசாரணைக் குழு......

ஐந்து நடசத்திர ஹோட்டல்.

ஐக்கிய நாடுகள் தாபனத்திலிருந்து நாட்டின் நிலையை, சமாதானத்தை, ஆட்சியினரின் நிர்வாகத்தை பரிசீலிக்க ஒரு குழு வந்து தங்கியிருக்கிறது.

அக்குழு போகுமிடம் -சந்திக்கும் நபர்கள்- எல்லாமே திட்டமிடப்பட்டு முன்னெச்சரிக்கையாக நிகழ்கிறது.

எங்கும் தர்மோபதேசம், தார்மீகம்.

சிறுபான்மையினர் பாதிக்கப்படவேயில்லை. மோசமான பொய்ப் பிரசாரம்.

குழு முடிவுக்கு வந்துவிட்டது.
குழு நட்சத்திர ஹோட்டல் வாசலுக்கு வருகிறது. தெருவுக்கு அப்பால் நடைபாதையில் ஒருவன் பழைய புத்தகக்கடை விரித்திருக்கிறான்.

பழைய-புராதனப் பண்டங்களைச் சேகரிக்கும் அந்தக் குழு அங்கு விரைகிறது.

பழைய புத்தகங்களை மேய்கிறது.

"ஒரு வரலாற்றுப் புத்தகம்-தமிழில் அரசினாலேயே சமீபத்தில் அச்சிடப்பட்டது. ஏராளமான புகைப் படங்களுடன்"

அதனை எடுத்து விலை கேட்கிறார் ஒருவர். அவர் எண்ணப்படி புதுப்புத்தகம் புத்தகத்தில் இடப்பட்ட விலை முப்பது ரூபா.

அவன் முன்னூறு சொல்கிறான்.

"ஏனப்பா... இது பழைய புத்தகம் கூட இல்லை. புதியது. அரசு வெளியிட்டது. அப்படியிருக்க ஏன் இந்த விலை?"

"உண்மைதான். ஆனால் இப்போது எங்கே தமிழர். தமிழர் புத்தகங்கள் இருக்கு..... எல்லாவற்றையும் தான் எரித்து அழித்துவிட்டோமே. இது புதுப்புத்தகம். ஆனாலும் தமிழருக்கு எரியாமலிருக்கிற அருஞ்செல்வம் அது தான் இந்த விலை."

-குழு முதன்முதலாக தன் பணிபற்றிச் சிந்தித்தது.


43
விளையாட்டுப் பொம்மை

செல்வந்தக் குடும்பம். இளந்தம்பதிகள்.

நீண்டகாலமாக குழந்தைச் செல்வம் இல்லாமலிருந்து, ஆண்குழந்தையொன்றிற்கு பெற்றோராயிருந்தனர்.

குழந்தையை மகிழ்விக்க ஏராளமான பொருட்செலவில் பல விளையாட்டுச் சாமான்களை வாங்கிக் கொடுத்தனர்.

குழந்தையை மகிழ்வூட்ட அவர்கள் பொம்மையை வைத்து விளையாடுவார்கள். குழந்தையைத் தொடவிட மாட்டார்கள். குழந்தை பொம்மைகளை உடைத்துவிடுமாம். மற்ற நேரங்களில் ஷோ-கேஹில் அலங்காரமாக பூட்டபட்டிருக்கும். குழந்தை ஒரு நாள் கேட்டது.

"அப்பர் அம்மாவுக்கு விளையாட ஒண்டு நான் வேணும்: இல்லாட்டி பொம்மை வேணும்"


44
தூது?

கண்ணா! துரியோதனனிடம் சென்று நமக்குரிய பாதி ராஜ்யம் கேள்!"

"ஆஹா! பொதுவுடமை"-என்று மகிழ்ந்தான் கண்ணன்.

"அது தர மறுத்தால், ஐந்து நாடு கேள்!"
"சோஷலிசம்!" என்றான் முகமலர்ச்சியுடன் கண்ணன்.
"அதுவுமில்லையெனில் ஆள ஐந்து நகர் கேள்!"
"முதலாளித்துவ சோஷலிசம்!" என்றான் மலர்ச்சி நீங்க.
"கௌரவர் அதனையும் மறுத்தால் ஐந்து ஊர்....

"ஜனநாயக சோஷலிசமா.......?" அவன் வாய் முணுமுணுத்தது.

"துரியோதனன் அதனையும் இழப்பாகக் கருதினால் ஐந்து வீடாவது தரும்படி கேள்!"

"ஜனநாயகமா.....?" கண்ணனின் எண்ணங்கள் எங்கோ நீந்தின.

"கண்ணு! இவை ஒன்றிற்கும் கௌரவர்கள் உடன்படார்களாயின் போர் வேண்டு! அடுபோர் வேண்டு! என்றான்.

வாய்மையின் புத்திரன்.

"புரட்சி! அடிப்படை மாற்றம்.... அடித்தளமே மாற்றப்படும் மாற்றம்..... போர்...... போர்...." எனச் சிரித்தான் சக்கராயுதன்.

சிறிது யோசனையின்பின் கண்ணனைக் கேட்டான் தர்மன்.

"எல்லாம் சரிதான் கண்ணா! நான் ஒவ்வொன்றாக தூதுப் பொருளைச் சொல்லி வருகையில்-நீ ஏதேதோ சொல்லி வந்தாயே-என்ன அவை? எனக்குப் புரியவில்லையே"

"உனக்கு மட்டுமல்ல...... வேறு எவருக்கும் புரியாது..... இவை யாவும் வரப்போகும் யுகங்களின் சமூக மாற்றங்கள்..... அதற்கு நீ அடியெடுத்துக் கொடுத்திருக்கிறாய்!" என்றான் பரமாத்மா.


45
விமர்சனம்

இரு அறிஞர்கள் கழனிப் பக்கமாக காலாற நடந்;து கொண்டிருந்தனர்.

வயலில் விதைப்பு நடந்துகொண்டிருந்தது.

சூரியன் மெல்லமெல்ல உச்சியை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தான்.

"ஆஹா!..... விதையில்லாட்டி விளைவு ஏது?" என்றார் ஒருவர்.

"விளைவில்லாமல் விதையேது...... விதைப்பேது?" என்றார் மற்றொருவர்.

விவாதம் ஓய்வின்றித் தொடர்ந்தது.

சூரியன் உச்சிக்கு வந்ததுகூடத் தெரியமால், வெயிலில் வாதிட்டுக்கொண்டிருந்தனர்.

விவசாயி தனது கஞ்சிப் பானையுடன் மரநிழலில் வந்து அமர்ந்தான். உலகம் எவ்வளவோ பொருளோடு தெரிந்தது.

"பைத்தியக்காரர்களே!... வெற்றுச் சொற்களை விதைத்து விதைத்து எதனை அறுவடை செய்யப் போகிறீர் கள்? உச்சிப் பொழுது வந்து விட்டதே! எதை உண்ணப் போகிறீர்கள்?....... வாருங்கள்! என்னுடன் கூடி ஒரு வாய் கஞ்சி குடியுங்கள்!......" என்றான்.
முடிவற்ற வாதத்தின் அர்த்தம் அப்போதுதான் முற்றுப் பெற்றதாகத் தெரிந்தது-அவர்களுக்கு


46
தேர்தல் விற்பனை

பெருங் கூட்டம் அமைச்சரைக் 'கேரோ' செய்தது.

"உங்கள் கொரிக்கை என்ன?" அமைச்சரின் வினாவில் அற்பனின் பவிசு ஆதிக்கம் செலுத்தியது.

"எங்கள் கோரிக்கையை அல்ல..... உங்கள் தேர்தல் பிரகடனத்தை அமுல்படுத்துங்கள் போதும்!"

"எந்தப் பிரகடனம்?!" அரசியல்வாதியின் தேர்தல் வாக்குறுதிகளைச் சத்தியப் பிரகடனமாகக் கருதினால் அதற்கு அவர்தான் என்ன செய்வார்?

"மறந்து விட்டதா? சந்திர மண்டலத்திலிருந்துகூட அரிசி கொண்டு வருவோம் என்றீர்களே. எங்கே அரிசி?"

"அட மூடச் சனங்களே, சந்திர மண்டலத்தில் நெல் பயிராகிறதா, என்ன?.... அப்படிப் பயிரானாலும் கொண்டுவர அரசாங்கத்தில் ஏது பணம்? சென்றகால ஆட்சியினர் திறை சேரியை முற்றாகக் காலிசெல்து விட்டுப் போயிருக்கிறார்களே!"

"இது தெரியாமல் எங்களுக்கு ஏன் பொய் வாக்குறுதிகள் அளித்தீர்கள்?"

"இதெல்லாம் எங்களுக்குத் தெரிந்திருந்தால் ஏன் இந்த வியாபாரத்துக்கு வருகிறோம். பெரிய பொருளாதார நிபுணர்களாகவல்லவா வாழ்க்கை நடத்தியிருப்போம்..... பொய்கள்தானே இங்கு விற்பனைப்பண்டங்கள்!"

மக்கள் கூட்டம் மந்தையாகக் கலைந்து சென்றது,


47
கூண்டுக்கிளி

தங்கக் கூண்டு.

கிளி அதனுள்ளே சிறகடித்துக்கொண்டிருந்தது.

பாலும் பழமும் நிறைந்திருந்தன.

தோப்புகளோ வெளியெயிருந்தன.

கிளி மனிதர் மொழி பேசியது. அவர்கள் மொழிதான் எத்தனையோ?

பலமொழி பேசியது.

எல்லோரும் மகிழ்த்தார்கள்.

கூண்டுக்கு வெளியிலிருந்து உணவுகளை நீட்டினார்கள்.

கிளிக்கு வயிறு நிறைந்திருந்தது.

தெருநாய் ஒன்று அவ்விடத்திற்கு ஓடி வந்தது.
"லொன்!.... லொன்!.... லொன்!...."

"அப்பப்பா!..... என்ன கொடூரமான ஓசை!"

அடித்து விரட்டினார்கள்.

எல்லோரும் கலைந்து போனபின், நாய் அந்த இடத்திற்கு வந்தது.

கிளிக்குப் பெருமை தலையைக் கனக்க வைத்தது.

"உனது குரல் எவ்வளவு கொடூரம். மொழி எவ்வளவு அபசுரம் கேட்டாயா, என் குரலை? கிளி கொஞ்சுகிறது என்று தான் அழகுக்கு.... இனிமைக்கு..... உவமை சொல்வார்கள். ஆனால் உன்னையோ அடித்து விரட்டுவார்கள்...." என்றது.

"நீ சிறையிலிருந்து அந்நிய மொழியைப் பேசுகிறாய்..... உன் தாய்மொழியை மறந்துவிட்டாயா?.... கூண்டிற்குள் சிறகடிக்கிறாய். உனக்கு சுதந்திரம்.... விடுதலை.... தாய்மொழி என்பது பற்றி எதுவுமே புரியாது..."


48
போதகர்கள்

புயற்புரவி பூட்டியதென விரைந்து வந்த, போர் இரதத்தின் கடிவாளத்தைச் 'சடார்' எனச் சொடுக்கி இழுத்து குருN~த்திர மையத்தில் கொண்டுவந்து நிறுத்தினான் கிருஷ்ணன்.

பாஞ்சசன்யம் காலை இளங்கதிரில் பளபளத்தது.

அர்க்ஷுனன் பார்வை கௌரவ சேனையைக் கௌவியது. மனம் அதிர்ந்தது.

உறவுகள் பகையாகிப் போர்க்கோலம் பூண்டிரந்தன.

அவன் அழிக்கப்போவது

உறவுகளின் உயிரையா?

பகையின் உருவங்களையா?

காண்டீபம் கைநழுவி விழுந்தது.

மாயச் சிரிப்புடன் 'அர்க்ஷுனா!' என்றான் சாரதி.

'கண்ணா! என் கண்ணானவர்களின் உடல்களைப் புண்ணாக்கவா, நான் காண்டீபம் எடுத்தேன்'

அர்க்ஷுனா! காண்டீபம் கடமையைச் செய்யவே அருளப்பட்டது. உறவுகள் மாயை, கடமையைச் செய். பலனை எதிர் பார்க்காதே.

பகவான் கீதோபதேசத்தை குருக்ஷேத்திர மண்ணில் விரித்தான்.

அதில் மனம் தோய தேறிய அர்ச்சுனன் கேட்டான்

எல்லாம் சரிதான் கண்ணா! நீ என்னுடன் நிலவில்..... தேனாற்றங்கரையிகளில்.... மாடமாளிகைகளில்.... சோலைகளில் எல்லாம் இருந்திருக்கின்றாய்..... அப்போதெல்லாம் செய்யாத உபதேசத்தை, அந்த குருக்ஷேத்திரக்களத்தில் விரித்ததென்ன?"

'கர்மவீரனே அது என் அவதார ரகசியம்.

மனிதர்களுக்குப் பிரச்சினைகள் தோன்றும்போது.....
அப்பிரச்சினைகளைத் தீர்க்க வழியோ, வகையோ தெரியாதபோது, அப்பிரச்சினைகளையே தர்மம், தியாகம் என நியாயப்படுத்தி போதிப்பதே இந்த ரகஸ்யமாகும்....'

'எனக்குப் புரியவில்லையே?'

'உனக்குப் புரியாதுதான்....... இதனை நன்கு புரிந்து கொள்ளக்கூடியவர்கள் கலியுகத்தில் தோன்றுவார்கள்.

'யாரந்தத் திறமைசாலிகள்.....?'

'நீ இன்று பாசத்தீயில் அகப்பட்டுத் தவிக்கையில் நான் வீசிய ஆறுதல் காற்று அதனை அடக்கிவிட்டது, கலிகாலத்தில் ஆட்சியாளரின் அநியாயத்தால் மக்கள் பசி பட்டினி, வறுமை, நோய் எனத் துடிக்கையில், வார்த்தைகளாலேயே அவர்கள் துன்பத்தினைத் துடைத்துக்கொள்பவர்கள் தோன்றுவார்கள். அவர்கள் என்னைவிடப் பெரியவர்கள். அவர்கள் இருப்பதால் என் அவதாரம் கூலிகாலத்தில் இருக்கமாட்டாது. தேவையுமற்றது.'

'யாரவர்கள?'

'அரசியல்வாதிகள்' எனப் பாஞ்சசன்யம் ஒலித்தது.

49
'ம்...... பிறகு.......'

கண்ணன் கதை சொல்லத்தொடங்கினான்.

சுபத்திரை கதை கேட்டவாறே உறங்கிப்போனான்.

'ம்..... பிறகு.....ம்.....பிறகு.....'


அந்த ஆர்வக் குரலுக்கு அடிபணிந்துபோன கண்ணன், கதை சொல்லும் சுவாரஸ்யத்தில் எதையும் கவனிக்கவில்லை.

பாரதப் போர்- முன்னோட்டமாக, இரவு முழுவதும் விரிந்து கொண்டிருந்தது.

'ம்.......பிறகு......'

சுபத்திரையின் வயிற்றிலிருந்து அந்த வீரக்கரு 'ம்' கொட்டிக்கொண்டிருந்தது.

கதை முடிந்தது. கண்ணன் திரும்பிப் பார்த்தான். சுபத்திரை ஆழ்ந்த உறக்கத்திலாழ்ந்திருந்தாள். அப்படி யானால்..... என்னிடம் கதை கேட்டது யார்?
மாயாக் கள்ளனே மயக்கம் காட்டினான்.
'கண்ணா! மணிவண்ணா!..... என்னை உனக்காக தயார்செய்கிறாய். எனது தந்தைக்கு போர்க்காலத்தில் உன்னால் உபசேதம்தான் செய்யமுடியும் என்பதால், என்னைக் கருவிலேயே பாசமறுத்து 'கடமையைச் செய்.' என வீரிய வித்தாக மற்றுகிறாய் என்பதனைக்கூட நான் புரியாதவனா என்ன? கரு உள்ளிருந்து கேட்டது.

அன்றிரவு மாயவன் நீண்ட நேரமாக தனது புல்லாங் குழலை வாசித்துக்கொண்டிருந்தான்.

50
திட்டங்கள்

கரையோ மீனவப் பகுதி.

புயற்காற்றும் பேலையும் கரையோரத்தில் மணற்றடையை ஏற்படுத்தியது.

வள்ளங்களும், கட்டுமரங்களும் கரையேறாமல் ஆழப் பகுதியில் தள்ளாடின.

தொழில் தொடர்ந்து நடக்க, மணல் தடை நீக்கப்பட வேண்டும். அவர்கள் கணக்குப் போட்டாகள். பெருந் தொகை தேவைப்பட்டது.

அரசாங்க அதிபருக்கு மனுப்போட்டார்கள்.

சில வாரம் கழித்து பொறியியல் துறையினர் வந்து பார்வையிட்டனர். அவர்கள் அதற்கென ஒரு பைலை தயாரித்தனர். அது-

திட்டமிடல் பகுதி, சமூக சேவைப் பகுதி, மீன்பிடிக் கூட்டுத்தாபனம் பகுதி, கணக்காய்வாளர் பகுதி என சிவப்பு நாடாவில் பயணம் செய்து முடிக்க, ஆறு மாதமாயிற்று.

அதிபர் கைக்கு வரும்போது ஐந்து இலட்சம் செலவைக்காட்டிற்று. அவரால் அத்துணை செலவழிக்க அதிகாரமில்லை

மீனவர்களை அழைத்து "இது ஒரு பெருந்திட்டம். கடற்றுறை அமைச்சினால் மட்டுமே முடியும். அதற்கு மனுச் செய்யுங்கள்" என்றார்.

"இதைச் சொல்ல உங்களுக்கு ஆறு மாதமா தேவைப்பட்டது? தயவுசெய்து எங்களுடன் வந்து பாருங்கள்
இடத்தை" என்றனர். அதிபரும் சென்றார்.

அங்கு மணற்றடை சுத்தமாக நீக்கப்பட்டு மீன் பிடித்தொழில் நடந்துகொண்டிருந்தது.

"உங்களை நம்பியிருந்தால் எங்கள் குடும்பம் இந்த ஆறு மாதத்தில் பசியால் அழிந்திருக்கும். எங்களுக்கு இருபதாயிரம் மட்டுமே செலவு. இயலுமானால் அதைத் தர ஏற்பாடு செய்யுங்கள்!" என்றனர்.

அரச அதிகாரி-அதிபர் திகைத்தார்.

51
உண்மை

பாரபட்ச ஆட்சி உணர்வைத் தோற்றுவித்தது.

-"அவர்களுக்கு நாடேது? எல்லாம் எம்மவருக்கே சொந்தம். ஓரடி நிலம் கூடக் கொடுக்க முடியாது"-என்று கொக்கரித்தார் அந்த மாண்பு மிகு.

"நாட்டில் இனக் கலவரம் தோன்றிவிட்டது. அவர்களை நம்மவர்கள் கண்டகண்ட இடங்களில் வெட்டிக் கொலை, கொள்ளை, தீவைப்பு செய்கிறார்கள். அவர்கள் தப்பிச்செல்ல முடியாதவாறு எல்லாப் பாதைகளும் தகர்ந்து போயின....."
-தகவல் வந்தது.

-"நன்று நன்று. போரென்றால் போர். சமாதானமென்றால் சமாதான......" -என்று மகிழ்ந்தார்.

-"ஆனால் உலக நாடுகள் இந்த இனப்படுகொலையைப் பற்றிக் கேள்வி கேட்டால்?.... அவை போராயுதங் களையும் பிற உதவிகளையும் வழங்க மறுத்துவிட்டால்..."

-"ஆமாம்..... ஆமாம். உண்மை..... உண்மை. அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அழிக்கவேண்டும். மிஞ்சியவர்களைப் பத்திரமாகப் பாதுகாத்து, கப்பல் மூலம் அவர்கள் பகுதிக்கு அனுப்பிவிடு.....!" என்று கூறிச் சாய்மனையில் சாய்ந்தார்.

52
இரத்த அட்டை

தொழிலாளியின் காலிலேறிய அட்டை, வலியோ சப்தமோ அற்று வேகம் வேகமாக இரத்தத்தை உறிஞ்சிக்கொண்டிருந்தது.

முகத்தில் எரிச்சல், கோபம் தோன்ற மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் இரத்தம் கொதித்தது.

அவன் தோல்வி கண்டதாக எண்ணிய அட்டை வெற்றிக்களிப்புடன் மேலும் உறிஞ்ச உறிஞ்ச....

"படீர்!"

இரத்தத்துளிகள் சிதற அட்டை உருவழிந்தது.

53
பயன்

விடை காண முடியாததாக விவாதம் வளர்ந்துகொண்டிருந்தது.

"எழுத்தால் என்ன பயன்? அதனால் யாராவது திருந்தியிருக்கிறார்களா? திருந்தி இருந்தால் உலகின் கொலை, கொள்ளை, அக்கிரமங்கள், பசி, பட்டனி, வறுமை, ஏகாதி பத்தியங்கள் என்றோ இல்லாதழிந்திருக்கும் அல்லவா?"

அந்த விவாதத்தை நீண்ட நேரமாகக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவர் எழுந்து கூறினார்:

"எழுத்தால் யார் திருந்துகிறார்களோ, இல்லையோ? எழுதுபவன் திருந்துகிறான். புத்தன், யேசு, காந்தியால்

மக்கள் திருந்தினார்களோ இல்லையோ, அவர்கள் திருந்தினார்கள். மகான்களானார்கள். சொந்த முதுகின் தூசிகளைத் தட்டுவது தான் பயன்."

விவாதகாரர் தம் சிந்தனை வழிகளைப் பற்றிச் சுய விமர்சனம் செய்யவேண்டுமேயென அயர்ந்தனர்.

54
கலையும் வயிறும்

காலைவேளை. விறாந்தையில் மடியில் குழந்தையுடன் அமர்ந்திருந்தார்.

முன்னால் எலுமிச்சை பூத்துச் சிலிர்த்திருந்தது.

சிட்டுக் குருவிகளும்;, பிலாக்கொட்டைக் குருவிகளும், கரிச்சான் குருவிகளுமாக ஒரே கிலுகிலுப்பு. கிளைக்கு கிளைதாவுவதும், மண்ணில் குதிப்பதும், அசொண்டினால் கிளறுவதும்..... மீண்டும் மரத்திற்குத் தாவுவதும்..... தேடுவதும்......

-அவர் பரவசத்திலாழ்ந்திருந்தார்.

"இயற்கை.... அழகு.... கலை....."

குழந்தை படீரெனக் கேட்டது-

"அப்பா.... குருவி அரிசி போட்டா சாப்பிடுமா....?"

-குழந்தை ஏனோ கேட்டது.

"அப்பாவின் பரவசம் கலைந்து, நிதர்சனம் உதயமாக முகத்தில் கவலை ரேகைகள் படரலாயின.

55
தரிசனம்

வயோதிபம் அவள் உடலில் தளர்ச்சியைத் தந்திருந்தது. பார்வை கிடையாது. செவிகள் அடைத்துப் போயின. நாக்குகள் தடம் புரண்டு மிகச் சிரமத்துடன் உருவழிந்த சொற்களைச் சிந்தும். எதிர்நின்று பேசுபவரின் உதடுகளில் தனது சுட்டு விரலை வைத்து, அவற்றின் அசைவினாலே பேச்சின் பொருளைப் புரிந்துகொள்வாள்.

ஆனாலும் பிடிவாதமாக, ஞாயிற்றுக்கிழமை தோறும் தேவாலய பூஜைப் பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு வந்து போவான்.

எல்லோருமே வியந்து போவார்கள்.

ஒருநாள் உபதேசியாரே அவள் முன் வந்து நின்று கேட்டார்:

"தாயே! உனக்கு கண்ணுல் எதனையும் பார்க்க முடியாது. காதால் கேட்க முடியாது. ஆண்டவனின் திருநாமத்தைக் கூட ஒழுங்காக உச்சரிக்க முடியாது. ஏன்? இங்கே என்னதான் நடந்துகொண்டிருக்கிறது. என்பதனைக் கூடப் புரிந்துகொள்ள முடியாது. அப்படியிருக்க நீ தவறாது இங்கே வருவதன் அர்த்தம் என்ன?....."
"கடவுளின் சந்நிதியில் நிற்கிறேன் என்ற நினைப்பும், அவன் புகழ் பாடப்படுகின்ற எண்ணமும், அந்த எண்ணத்தில் பிறக்கும் உதடுகளின் அசைவும்-எனக்கு விழிகளாக, சொற்களாக, குரல்களாகின்றன"-எனப் பதில் சொன்னாள்.

உபதேசியார் புதிய பக்தி மார்க்கத்தைப் புரிந்துகொண்ட நிலையில் பிரமித்துப் போய் நின்றார்.

56
செர்னோபில்

சிவன் உணர்ச்சி மயமானவன். அனற்பிழம்பு.

அவனே-

தன்முன் தவக் கனலாகக் கொழுந்துவிட்டெரியும் அந்த அசுரனைக் கண்டு மனம் கசிந்து போனான்.

"அன்பனே! நீ வேண்டும் வரம் யாது?"

"சுவாமி! நான் யார் தலையில் கை வைத்தாலும் அவன் பஸ்பமாகி விடவேண்டும்."

"தந்தோம் வரம்!"

"சுவாமி.... உன் வரத்தை உன் தலையிலேயே கை வைத்துப் பாPட்சிக்க...."

சிவன் ஓடத் தொடங்கினான்.

மக்கள் சிதறத் தொடங்கினர்

57
ஏகமனம்

முப்பத்தாறு மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக நடந்த விவாதத்தின் பின்,பாதி அங்கத்தவர்கள் செயற்குழுக் கூட்டத்தினின்றும் வெளிநடப்புச் செய்தபின்-

அடுத்த நாள் காலை. வானொலி அறிவித்தது:

"நேற்றைய விவாத முடிவில் தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது."

58
தீர்ப்புகள்

நீண்ட நாட்களின் பின் நரியின் ஆசை நிறைவேறியது. அதன் வாயில் சேவற்குஞ்சு ஒன்று படபடத்தது.

சேவல் ஓடி வந்தது.

"அநியாயம்;! அநியாயம்... கொலை செய்வது அக்கிரமம். என் குஞ்சு உனக்கு என்ன கெடுதல் செய்தது?"
"எனக்கொரு கெடுதலும் செய்யவில்லை. ஆனால் என்வயிற்றுப்பசிக்கு அதுதானே ஆகாரம். அறைவன் படைப்பில் இதுதானே நியதி."

சேவல் மௌனமாகியது.
நரித் தோலுக்காக வேடன் விரித்த வலையில் அது மாட்டியது.

"என்னைக் கொல்லாதே!" -நரி கெஞ்சியது.

"எனக்கு உடையும் நீ... உணவும் நீ.... எல்லாம் உன்னைக் கொன்றால் தான் எனக்குக் கிடைக்கும்...."

"உலகில் அஹிம்சையே கிடையாது. கொலைகார உலகம் இது"- என்று நரி அலறியது.

59
புலமைப்பரிசில்

மூன்றாம் அகில நாடுகளில் ஒன்று அது.

இயற்கைவளம் அங்கு நிறைந்திருந்த பொழுதும், அங்ள்ள குறைபாடு போhதிய கல்வியின்மையே இதனால் அங்கு உழைப்பு, உற்பத்தி. சேமிப்பு. தொழில் வாய்ப்பு, மூலதனம் என்பன அறவே ஏற்படாதுபோக நித்திய வறுமையே நிலவியது.

இதனைப் போக்க அந்த நாட்டு அரசாங்கம், வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி, தனது வரவு செலவுத் திட்டத்தில் பெருமளவு தொகையைக் கல்வி வளர்ச்சிக்கென ஒதுக்கியது.

நாட்டில் மக்கள் நன்கு கல்விகற்கத் தொடங்கினர். ஓரளவு முன்னேற்றமும் தென்படலாயிற்று அது-

முதலாம் அகில நாட்டின் கண்ணை உறுத்தியது.

'அந்த நாடு இப்படியே வளர்ச்சிபெறுமானால், அந்நாட்டிலிருந்து நாம் மிகமிகக் குறைந்த விலைக்குப் பெறும் மூலப் பொருட்களை இழந்து விடுவோமே!' இதற்கு என்ன வழி? யோசித்தது.

அவசரம் அவசரமாக உள்ளே நுழைந்தது.

'மேலதிகப் பட்டப்படிப்பிற்கும்...... உயர் கல்விக்கும்..... அறிவியல் ஆய்விற்கும் நாம் புலமைப்பரிசில்கள் வழங்குகிறோம்!' -என அறிவித்தது.

வறிய நாட்டிற்குப் பெருமகிழ்ச்சி, வளர்ச்சி பெற்ற நாட்டிலே பெறும் அறிவு தாய் நாட்டை வளர்க்கப் பெரும் உதவி புரியும் என எண்ணியது.

தன் நாட்டில் மேதைகளாக வரும் அறிகுறி கொண்டோரைத் தெரிந்து முதலாம் அகில் நாட்டிற்கு அனுப்பியது.

ஆனால்-

அங்கு சென்ற திறம் மேதைகளின் ஆய்வுகளனைத்தும், முதலாம் அகில நாடுகளின் பொருளாதார, வைத்திய, தொழினுட்ப - மருத்துவ- அறிவியல் சார்ந்தனவாகவேயிருந்தன.

வறிய நாடோ மேலும் மேலும் அடிப்படைக் கல்விக்கு தனது செல்வத்தை ஒதுக்கிக்கொண்டிருந்தது.

60
பாசம்

பிள்ளைகளை நன்றாகத்தான் வளர்த்துப், படிப்பித்து ஆளாக்கி விட்டார்.

என்ன பயன்?
வயோதிப காலத்தில் ஆதரவளிக்காமல் துரத்தி விட்டனர்.

அவர் ஆண்டிகள் மடத்தில் ஒண்டினார்.

ஒருநாள் அவர் பிச்சைக்குப் போய் வரும் வழியில் அவர் மகன் அவரைத் திருவோடும் கையுமாகக் கண்டு, கண்கலங்கி நின்றான்.

"என்ன கோலமப்பா இது? உடைந்துபோன திருவோடும் கையுமாக...." தந்தைக்குப் பெருமகிழ்ச்சி.

சதை ஆடுகிறதா?

"கொஞ்சம் பொறுங்களப்பா... இதோ வருகிறேன்" என்று எங்கோ விரைந்தான்.

அவர் இரத்த, பாச உறவுக் கனலில் கனியாகி.....

"இந்தாருங்கள் அப்பா!

-அவர் கனவு கலைந்து பார்த்தபோது, மகன் கையில் அளவில் பெரிய புத்தம்புதிய திருவோடு காட்சி யளித்தது.

61
அமைதி

பரந்த, விரிந்து கண்டம் போன்ற, அமைதியான நாடு சுபிட்சம் நிறைந்திருந்தது. மக்கள் தொகையோஏராளம். "அங்கு மட்டும் கடையை விரிக்கச் சந்தர்ப்பம் கிட்டினால்...."

-வல்லரசு நாட்டிற்கு நாக்கில் நீர் சொட்டிற்று.

"உங்கள் நாட்டின் சுபிட்ச வாழ்வுக்கான சமூக உளவியலை ஆராய வரும் எங்கள் ஆராய்ச்சிக் குழுவுக்கு அனுமதி வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம்" என்று கடிதம் அனுப்பியது.

சில நாட்களின் பின் அந்தக்குழு வந்து போனபின்-

நாட்டில் கலங்கள் ஆங்காங்கே தோன்றாயின.

வல்லரசுகளின் ஆயுதங்கள் வெகு வேகமாக கள்ளச் சந்தையில் விற்பனையாகத் தொடங்கின.

62
அடையாளம்

"கனனசபை அவர்களின் வீடு எது?"

"கனகசபையா? அப்படி யாரும் இந்தத் தெருவில் இல்லையே?"

"பெரிய கல்வீடு.... மேல்மாடியெல்லாமிருக்கு...."

"இங்கினேக்க இப்ப எல்லாம் கல்வீடுதான். ஆனா...."

"அவர் றோட்டரி சங்கக் கவர்ணரும் கூட...."

"அவர் போன மாதம் கூட கோயிலொண்டுக்கு மண்டபம் கட்டிவிட்டவர்..."

"இப்ப கோயில்களில் திருத்த வேலைகள் நடைபெறுதுதான்.. அதுகளை ஆர் ஆர் செய்யினம் எண்டு ஆருக்குத் தெரியும்..."

"ரவுணில நாலைஞ்சு கடையளிருக்கு.... மொத்த வியாபாரம்.... அரிசி... மா...."

"ஓ!..... எட! உவன் கல்லரிசிக்காரன் வீடே? இது தான் தம்பி... போ.... நீ ஏதேதோ கேட்க பயந்து போனன்....."

63
சுதந்திரம்

அவர்கள் ஊர்சுற்றிகள். சுதந்திரக் காற்றைச் சுத்தமாகச் சுவாசிப்பவர்கள். திறந்த வெளியில் அவர்கள் கூடாரம் வானத்தில் வண்ணப்புறாக்கள் வட்டமிட்டன.

"ஆஹா! இறக்கைகள் எங்களுக்குமிருந்தால்.... சுதந்திரத்தை எவ்வளவு ஆனந்தமாக அனுபவிக்கலாம்....."

மத்தியான வேளை,

"உணவுக்கு என்ன செய்வது?......"

"துப்பாக்கியை எடு. அந்தப் புறாக்களை...."

64
வெள்ளெலி

புதியதொரு மருந்து, ஏராளமான பொருட் செலவில் கண்டுபிடிக்கப்பட்டது.

அற்புதமான மருந்து. நோய் மாறும். ஆனால்-

பக்க விளைவுகள் காலம் செல்லச் செல்ல பயங்கர நோயாக மாறிவிடும் அபாயமுண்டு.

அரசாங்கம் தடைசெய்தது.

கம்பனி-வர்த்தக ஏற்றுமதி இலாகா அமைச்சர் சந்தித்தது.

வெளிநாட்டு ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

முதல் கப்பல் மூன்றாம் உலகநாடு நோக்கிச் சென்றது.

65
ஆகாச இரக்கம்

காரிலிருந்து இறங்கி, காலைத் தடுமாற வைக்கும் நடைபாதை வாசிகளில் இடறி, அசுத்தங்களைக் கண்டு காறித்துப்பி, அருவருத்து ஒதுங்கி, ஆங்கிலத்தில் வசைமாரி பொழிந்து. எஸ்கலேட்டரில் ஏறி ஆகாசக் கணடையின் உச்சியை அடைந்து

ஸ்கொட்ச் விஸ்கியுடன், ஒம்லட்டுடன் அமர்கையில்..... கடற்காற்று முகத்திலடித்து போதை ஏற்றுகையில்-

பிளாட்பார வாசிகளின் பசி அவன் கண்ணீரை வரவழைத்தது,

66
முரண்

தொல்பொருள் ஆராய்ச்சிக் குழுவொன்று புதையுண்ட நகரொன்றைக் கண்டுபிடித்தது.

"அதன் அமைப்பு... தொல்பொருட்கள் மூலம் அது ஒரு புனித நகராக இருக்க வேண்டும்..... புராதன காலத்திலேயே அது மானிட நாகரிகம் மிக்கதாக இருந்திருக்க வேண்டும்" என்ற செய்தியை தினசரிகளுக்கு மிகுந்த பெருமையுடன் வழங்கியிருந்தது.

அடுத்தநாள் செய்தித் தாளில்-

அந்த பெருமை மிகுந்த தலைப்புச் செய்தியினருகேயே, கட்டமிட்ட இன்னொரு செய்தியும் பிரசுரமாகியிருந்தது

"நேற்றைய இராணுவத் தாக்குதலில் சின்னஞ்சிறு விவசாயக் கிராமம் ஒன்று முற்றாக சிதையுண்டது."

67
ஜாதி

நண்பனை வலுக்கட்டாயமாக அந்த "ரெஸ்ரோண்ட்" டுக்கு இழுத்துப் போய் ஒரு மேசையில் இடம் பிடித்து 'பேரரு'க்கு 'ஓடர்' கொடுத்து விட்டு நிமிர்ந்தபோதுதான், முன்னால் மேசையிலிருந்தவனைக் கண்டான்.

"மச்சான்..... வெரி சொரி.... எழும்பு.... வேறொரு நல்ல ரெஸ்ரோண்டிற்குப் போவம்" -என்றபோது 'பேரர்' டிரேயில் போத்தல்களும், கிளாஸ்களும் மோத, 'உருளைக்கிழங்கு டெவில் பிறைற்' எண்ணையில் மின்ன வைத்துப் போக, எல்லாம் நிலை குலைந்துவிட்டது.

"என்னடா விசயம்.... இங்க என்ன...?"

"இல்ல மச்சான்... முன்னால் மேசையிலை இருந்து குடிக்கிறவன் எங்கட ஊர் குடிமகனின்ர மகன் எனக்கு முன்னால் சரிசமமாக இருந்து குடிக்கிறது தான்..... நாளைக்கு ஊரில போய் என்னால் தலைகாட்ட முடியுமே!"

" நீ கொழும்புக்கு வந்தும்... இவ்வளவு பேரோட பழகியும் உன்ர பரம்பரைப் புத்தி போகேல். எனக்கு உன்னை நண்பன் என்று சொல்ல வெட்கமாக இருக்கு..."

நண்பனின் கண்டிப்புடனும், சாராயம் உள்ளே போன போதையுடனும் அவன் மௌனமாகி விட்டான்.

நீண்ட நேரமாகிவிட்;டது.

எழுந்து எதிர் மேசைக்குப் போனான்;.

அவன் கண்கள் கலங்கின. நா தழுதழுத்தது.

"ஹாய் பிறதர்.... நான் மிஸ்டர் கனகசபை... கிளாட்டு மீட் யூ... பேரர்... ரூ டிரிங்ஸ் கொண்டு வா.... தோழர் நான் உம்மட ஊர் தான்... என்னைத் தெரிகிறதா?...."

68
கொடி

ஆறடி உயரப் பட்டம் அழகழகான வண்ணத் தாள்களில் வண்ணங்கள். மின்சார வர்ண பல்புகள்.

கொடி ஏற்றப்பட, அது வட்டமடித்து மண்டையை உடைத்துக்கொண்டது. வால் எவ்வளவோ நீண்டும் பயன் இல்லை.

முச்சை பிழை.

முச்சைக் கயிறு அடிக்கடி அறுந்து, திருத்தித்திருத்தி முண்டும் முடிச்சுமாக....

கொடி ஏறியது.

69
உழைப்பு

உழைப்பாளிகள் தேசத்திலிருந்து நாட்டிற்குச் சில தோழர்கள் விஜயம் செய்தனர்.

அரசாங்கம் நாட்டைச் சுற்றிப் பார்க்க ஒழுங்கு செய்திருந்தது. "ஏழு மாடி கொண்ட இது பராக்கிரமபாகுவின் ஆயிரம் அறை கொண்ட மாளிகை.... இது சத்மல் பிரசதாய.... சிகிரியா குன்று ஓவியம்... இசுறுமுனியா சிற்பங்கள் இது தாதுசேனன் கட்டிய குளம்..... மகாசேனன் கட்டிய கால்வாய்... பராக்கிரபாகு கட்டிய நீர்த்தேக்கம்" என்று காட்டிக் கொண்டு போனான் வழிகாட்டி.

வந்தவர்கள் கேட்டார்கள்.

"எல்லாம் சரிதான்... இப்ப நீங்கள் கட்டிய குளம்.... கால்வாய் ஏதாவது இருந்தால் காட்டுங்கள். இல்லாவிட்டால் வாகனத்தைத் தங்குமிடம் திருப்புங்கள்"

வாகனம் திரும்பியது.

70
சர்வாதிகாரிகள்

சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்தது.

சர்வாதிகாரி ஏராளமான பணத்தை தங்கம், வைரம் ஆடம்பரப் பொருட்களாக கலைப்பொருட்களாக மாற்றி அந்நிய நாட்டுக்கு ஏற்கெனவே அனுப்பித் தப்பிவிட்டிருந்தான்.

நாட்டை மீட்ட மக்கள் அந்நிய நாட்டுடன் போராடி அந்தச் செல்வங்களை மீட்டுவந்து ஒரு அரும் பொருட்காட்சிக் கூடம்' அமைத்தவர்.

கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து பார்த்துச் சென்றனர். ஒரு நாள் பாடசாலைச் சிறுவர்கள் அந்த இடத்திற்கு வந்தனர். எல்லாவற்றையும் பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு வியப்புக்குப் பதிலாக ஆச்சரியமே ஏற்பட்டது.

"முன்னைய ஆட்சியிலும் இந்தச் செல்வங்கள் மக்களுக்குப் பயன்படவில்லை. இந்நாள் ஆட்சியிலும் அப்படியே..."

"யாரது மக்களாட்சியைப் பற்றி முணுமுணுப்பது!' என்று கடுமையான குரல் ஒன்று எழுந்தது.

71
அன்பளிப்பு

அவன் கடமையில் சத்தியவந்தன், நேர்iமாளன், கறைபடாத கரங்கள் கொண்டவன். அவனை எவரும் விலை கொடுத்து வாங்கிவிட முடியாது.

அதனால் அவன் பதவிமேல் பதவியாக உயர்ந்து வந்தான். செல்வச் செழிப்பிலும் மிதந்து வந்தான்.

இது எப்படி?

ஒருவருக்கும் இந்த மருமம் புரிபடவில்லை.

ஆனால் அவன் தனக்குள் சிரித்துக் கொண்டான். "மூடர்களே! எங்கள் வீட்டில் மாதம் தவறாமல் மனைவி, பிள்ளை குட்டிகள், மாமன், மாமி, மைத்துனன், சித்தப்பா, பெரியப்பா என்று பிறந்தநாள் கொண்டாடுவது என்ன அவர்கள் மீதுள்ள பாடத்தாலா... நீங்கள் கொண்டுவரும் அன்பளிப்புகளுக்காகவா...?

72