கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  இலக்கணமும் சமூக உறவுகளும்  
 

கார்த்திகேசு சிவத்தம்பி

 

இலக்கணமும் சமூக உறவுகளும்

கார்த்திகேசு சிவத்தம்பி

++++++++++++++++++++++++++++++++

இலக்கணமும் சமூக உறவுகளும்
கார்த்திகேசு சிவத்தம்பி

++++++++++++++++++++++++++++++++

சமர்ப்பணம்

தமிழிலக்கணத்தை வெறும் நெட்டுருப்
பாடமாகக் கொள்ள வேண்டியதில்லை
என்பதை முதன் முதலில் எனக்குணர்த்திய
எனது தந்தையார்
பண்டிதர், சைவப்புலவர்
த.பொ. கார்த்திகேசு (1901-1965)
அவர்களை நினைவுகூர்ந்தவனாய்,
தமிழ்ப் பாரம்பரியம் முழுவதையும்
சர்வதேசியப் பொதுமைப் பின்னணியில் நோக்கி
அதன் தனித்துவமான
வரலாற்று அசைவியக்கத்தைக்
கண்டு தெளிவுபடுத்துவதையே
தமது வாழ்க்கைப் பணியாகக் கொண்டிருந்த
தோழமையுள்ள பேராசிரியர்
நா.வானமாமலை (1917-1980)
அவர்கள் நினைவுக்கு
இந்நூலை அர்ப்பணிக்கின்றேன்

கா.சி

++++++++++++++++++++++++++++++++

முதல் பதிப்பின்

பதிப்புரை

டாக்டர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் எழுதிய இலக்கணமும் சமூக உறவுகளும் எனும் இந்நூல், விஞ்ஞான ரீதியில் இயங்கும் சமூகவியல் மாற்றங்களுக்கு ஏற்ப, மொழியியல் மாற்றங்கள் எவ்வாறு சமுதாயத்தில் உருவாகின்றன என்பதனை விளக்கிக் கூறுகிறது.

மனித சமுதாயத்தில் உற்பத்தி உறவுகளும், உற்பத்திச் சக்திகளும் மாற்றங்களைக் காணும்போது பழைய இலக்கண மரபுகள் எவ்வாறு மொழியிலே எதிரொலித்து, பின்னர் எவ்வாறு புதிய இலக்கியங்களில் இடம் பெற்று அங்கீகாரம் பெறுகின்றன என்பதனை மிக அழகுற எடுத்துக் கூறப்பட்டுள்ளது இந்நூலில்.

டாக்டர் கா. சிவத்தம்பி அவர்கள் தமது தமிழ் அறிவை நன்கு பயன்படுத்தி, வரலாற்றுப் பொருள் முதல்வாத அணுகுமுறையுடன் இந்நூலைப் படைத்துள்ளார்.

இலங்கை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகவிருக்கும் டாக்டர் கா. சிவத்தம்பி அவர்கள் பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதிப் புகழ்பெற்ற தமிழறிஞர். அத்தகு சிறந்த அறிஞரின் இந்நூலை வெளியிடுவதில் எமது நிறுவனம் பெருமிதம் கொள்கிறது.

-பதிப்பகத்தார்

++++++++++++++++++++++++++++++++

முதற் பதிப்புக்கான முன்னுரை

இவ் ஆய்வு, பேராசிரியர் நா.வானமாமலை அவர்களது மணிவிழா மலரில் வெளியானது. "சொல்லிலக்கணம் சுட்டும் சமூக, உற்பத்தி உறவுகள்" எனும் தலைப்பில் அதில் வெளியிடப்பெற்றிருந்தது (1978).

சமூக அசைவியக்கத்தை விஞ்ஞான முறையில் விளக்கிக் கொள்வதற்கான அறிவு நோக்கினை மார்க்சீயம் தருகின்றது. மார்க்சீயம், வரலாற்றுப் பொருளியல் வாதம், இயக்கவியற் பொருளியல் வாதம் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டது. சமூக அமைப்பையும், சமூக மாற்றத்தையும் விளங்கிக் கொள்வதற்கான இத்தரிசனத்தின் அடிப்படையில் மனிதனின் சிந்தனைகளையும், கண்டுபிடிப்புகளையும் விளங்கிக் கொள்ளும் ஆய்வு மரபு இன்று பல்கிப் பெருகியுள்ளது. பௌதிகவியலாளர் முதல் கணிதவியலாளர் வரை, கட்டடவியலாளர் முதல் தொழினுட்பவியலாளர் வரை இலக்கிய விமர்சகர் முதல் மொழியாராய்ச்சியாளர் வரை பலர் மார்க்சீயக் கருத்து நிலையினை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

ஆனால் அவர்கள் எல்லாரும் மார்க்சீயத்தின் அரசியல் அமிசங்களை ஏற்றுக் கொள்வதில்லை. உண்மையில் மார்க்சீயம் என்பது சமூக அசைவியக்கத்தையும் சமூக மாற்றத்தையும் விளங்கிக் கொள்வதற்கான விஞ்ஞான நிலைப்பட்ட சாதனமாகும். மார்க்ஸ் அவர்களே கூறியது போன்று "தத்துவ ஞானிகள் உலகத்தை வியாக்கியானமே பண்ணியுள்ளனர். முக்கியமானது, அதனை (உலகத்தை) மாற்றுவது தான்" அந்த மாற்றத்தைச் செய்வதற்கான அரசியல் ஆற்றுப்படைதான் மார்க்சீயம். அத்தகைய அரசியல் ஆற்றுப்படையாக அமைவதற்கு வழிவகுக்கும் வகையில் அது புலமை சார்ந்த ஓர் அணுகுமுறையை முன் வைத்துள்ளது. அந்த அணுகுமுறையைக் கையாண்டு நாம் அறிவுத் தெளிவினைப் பெற்றுக் கொள்ளத் தயங்குபவர்களும் இன்று மார்க்சீயத்தின் வழியாக வரும் அணுகுமுறையைப் பயன்படுத்துகின்றனர். சிலர் தெரிந்து பயன்படுத்துகின்றனர். பலர் தெரியாமாற் பயன்படுத்துகின்றனர். இதனால் திரிபுகளும் மயக்கங்களும் ஏற்பட்டுள்ளன.

தமிழ்ப் பாரம்பரியத்தினை மார்க்சீயக் கண்ணோட்டத்தில் விளங்கும் விளக்கும் முறைமை முதன் முதலில் இலக்கியத் துறையில்தான் ஏற்பட்டது. ஆக்க இலக்கிய எழுத்தாளர்கள் பலரின் மார்க்சீய நிலைபாடும், அவர்களுக்கு உதவியாளர்களாகவும், சில வேளைகளில் அவர்கள் மேற்கொண்டு செல்ல வேண்டிய இலக்கியப்பாதைகளின் தன்மையை எடுத்துக் காட்டுபவர்களாகவும் விளங்கிய, விளங்கும் விமரிசகர்களது மார்க்சீய நிலைபாடும், தமிழ் இலக்கியத்தை மார்க்சீய நோக்கில் பார்க்கும் பண்பினைத் தோற்றுவித்து அதற்கு வலிவூட்டிற்று. முதலிற் சமகால, நவீன இலக்கியங்களை விளங்கிக் கொள்வதற்குப் பயன்பட்ட மார்க்சீயம் இப்பொழுது தமிழின் பண்டைய இலக்கியங்களை விளங்கிக் கொள்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றது.

அந்த ஒரு செல்நெறியின் விஸ்தரிப்பாகவே இந்த ஆய்வு அமைகின்றது. இதனை 'ஆய்வு' எனக் கூறுவதிலும் பார்க்க, ஆய்வுக்கான அறிமுகம்' என்று கூறுவதே பொருத்தமானதாகவிருக்கும். ஏனெனில் இவ்வாய்வு, இத்துறையில் நாம் செய்ய வேண்டியனவற்றை உணர்த்தும் ஓர் ஆய்வே. அந்த ஆய்வினை அத்துறையினைத் தமது பிரதான ஆராய்ச்சித் துறையாகக் கொள்பவர்கள் மேற்கொள்ளல் வேண்டும்.

தமிழரின் சமூக வரலாறு, தமிழரிடையே தொடர்பியல் தமிழ் நாடகம் என்பனவற்றையே பிரதானமான ஆராய்ச்சித் துறைகளாகக் கொண்டுள்ள எனக்கு இவ்வாய்வு அவசியமானது தான். ஆனால் அதனை நுணுகி ஆராய வேண்டுவோர் அத்துறை போகிய அறிஞர்களே. இக்கட்டத்தில் இவ்வாய்வு சமூகவியலின் ஆய்வுக் கட்டுக்கோப்பினை அடிப்படையாகக் கொண்டே செய்யப்பட்டுள்ளது என்பதனை எடுத்துக் கூற விரும்புகின்றேன். மொழியியல் என்னும் பயில் துறையின் வரம்பு வரையறைகளுக்குள் நின்று இவ்வாய்வினை மேற்கொள்ளும் பொழுது, இவ்வாய்வின் வழியாகக் கிடைத்த பயன்பாட்டிலும் பார்க்க அதிக பலன் ஏற்படும்.

இன்னும் நம்மிடையே கனதியான மொழியியல் ஆய்வுகள் இத்தகைய கண்ணோட்டத்திற் செய்யப்படுவதற்குத் தொடங்கப் பெறவில்லையாதனால், இந்த அணுகுமுறையின் அறிவியற் சாத்தியப்பாட்டினை எடுத்துக் கூறுவதற்காகவே இவ்வாய்வினை மேற் கொண்டேன். முதலில், கட்டுரையாகவே வெளிவந்த இதனை இப்பொழுது சிறு நூலாக வெளியிட விரும்புவதற்கும் அதுவே காரணமாகும். மணிவிழா மலர் பெற்றிருந்த வாசகர் வட்டத்திலும் பார்க்கச் சற்று அகலமானதொரு வாசக வட்டத்திடையே இதனை உலவ விடுதல் வேண்டும் என்னும் ஒரேயொரு நோக்குக் காரணமாகவே இன்று இது நூலாக வெளி வருகின்றது.

இது கட்டுரையாக வெளிவந்த பொழுது, பேராசிரியர் நா.வா. இதனைப் பாராட்டினார் என்பதனை, மணிவிழா மலரில், இக்கட்டுரையின் அறிமுகவுரையாக அமைந்த பகுதியிலிருந்து அறிந்து கொண்டேன். இத்தகைய நோக்கில் தமிழ்ப் பாரம்பரியத்தினை விளக்குவதில் நாம் நன்கு தொழிற்படவேண்டும் எனப் பல்வேறு தடவைகளிற் கடிதங்கள் மூலம் எனக்கு எடுத்துக் கூறியிருந்தார். எனவேதான் அவரது மணிவிழா மலருக்கான எனது கட்டுரையை இப் பொருள் பற்றி அமைத்தேன். எனவே அவர் வழங்கிய பாராட்டு உண்மையில் அவரிடத்தேயே செல்லுதல் வேண்டும்.

மணிவிழா மலரில் வந்த கட்டுரையில் அடிப்படை மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இரண்டொரு இடங்களிற் சிறிது விரித்துக் கூறியுள்ளேன். நூலின் தேவைக்காக அத்தியாயங்களாக நிரற்படுத்தியுள்ளேன்.

மணிவிழா மலர் ஆசிரியர்களாகிய தோழர்களுக்கு என் நன்றியுரித்து.

இதனைக் கட்டுரை வடிவில் வாசித்துக் கருத்துக்கள் கூறிய மொழியியல் அறிஞர்கள் கலாநிதி சு. சுசீந்திரராஜாவுக்கும் கலாநிதி பொன். கோதண்டராமனுக்கும் என் நன்றி.

இந்த நூலைத் தனது சொந்த நூலினை மேற்பார்வை செய்வது போன்ற அக்கறையுடன் கவனித்து அச்சேற்றிய நண்பர் டாக்டர் மே.து ராசுகுமாருக்கு எனது நன்றியுரித்து.

இச்சிறு நூலை வெளியிட முன்வந்த நியூ செஞ்சரி புக் ஹவுஸ் நிறுவனத்தினருக்கு என் நன்றி.

கார்த்திகேசு சிவத்தம்பி

நடராஜ கோட்டம்.
வல்வெட்டித்துறை
இலங்கை

++++++++++++++++++++++++++++++++

இரண்டாம் பதிப்புக்கான முன்னுரை

இச்சிறுநூலின் இரண்டாம் பதிப்பு வெளிவருவது எனக்கு ஒரு புலமைத் திருப்தியைத் தருகின்றது.

எனது எழுத்துக்களிலே மிகவும் கவனிக்கப்படாது போய்விட்ட எழுத்து இது தான் என்ற ஓர் உணர்வு என்னிடம் இருந்ததுண்டு.

இந்த நூலிலே எடுத்துக் கூறப்பட்டுள்ளவை தமிழிலக்கணம் பற்றிய ஆழ்ந்த சிந்திப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்தினை எனது பெருமதிப்பிற்குரிய நண்பர்கள் பேராசிரியர் செ.வை. சண்முகம் பேராசிரியர் இராம.சுந்தரம் போன்றோர் வற்புறுத்தி வந்துள்ளார்கள் அவர்களுக்கு என் நன்றி.

இந்நூல் உண்மையில் மொழியியல் வழிவர வேண்டியது. ஆனால் நான் இதற்கு மார்க்சியப் பாதை வழியாகவே வந்து சேர்ந்தேன். இந்நூல் வெளிவந்து (1982) பதினாறு வருடங்களுக்குப் பின்னும் கூட நான் மொழியியலாளன் அல்லன். அத்துறை வளர்ச்சி பற்றிய மேலோட்டமான பரிச்சியம் மாத்திரம் உடையவனே.

ஆயினும் ஒரு முக்கிய எண்ணத் துணிவினை இங்கு பதிவு செய்து கொள்ளல் அவசியம்.

நமது இலக்கணம் அதன் அடி உயிர்ப்பில் நமது சமூகத்தைப் பற்றிப் பேச வேண்டுமென்பது தவிர்க்க முடியாத ஒரு நியதியாகும். நமது மொழி நமது சமூக இருப்பின் வெளிப்பாடே. அந்த இருப்பை மொழி உணர்த்தியே தீரும். அவ்வுணர்த்துகைதான் இலக்கணவிதியாக்கப்படும் (ஆகும்).

சமூக இருப்புப் பற்றிய புலமைச் சிரத்தையே எனக்கு இலக்கணம் பற்றிய ஆய்வுக்கு காலாகவுள்ளது.

மொழியியலின் இன்றைய வளர்ச்சிகள் பல இத்தகைய பார்வைகளை நியாயப்படுத்துகின்றன. மானிடவியல் மொழியியல் (Anthropological Linguistics) என்பது ஒரு சுவாரசியமான வளர்ச்சியாகும். வரலாற்று மொழியியல் சமூக மொழியியல் ஆகிய கிளைகளுடன் மானிடவியல் மொழியியலும் இணைகின்ற பொழுது, மொழிக்கூறுகள் சமூகத்தை விளக்கும் ஆவணங்களாகி விடுகின்றன.

இருபதாம் நூற்றாண்டுப் பிற்கூற்றில் நடந்துள்ள சமூக அறிவியற் சிந்தனைகளில் மொழி முக்கிய இடம் பெற்றுள்ளது. அமைப்பியல்வாதம் மொழியியலின் வழியாகவே வருகிறது.

மொழி மூலமே நாம் சமூகப் பிராணிகளாகின்றோம். நாம் மொழியைக் கையாள்கிறோம் என்று சொல்வதிலும் பார்க்க, நாம் மொழியினால் கையாளப்படுகிறோம் என்பதே உண்மை என்பர் சிலர். மொழி நம்மைத் தீர்மானிக்கின்றது. ஒரு சமூகப்புரட்சி என்பது சில மொழி நியதிகளுக்கு எதிரான புரட்சியுமாகவே அமைந்து விடுகிறது. அதன்பின் ஒரு புதிய மொழி நியதி வந்துவிடுகிறது.

எனவே சமூக வரலாற்றில் ஈடுபாடு கொண்டுள்ளவர்களுக்கு மொழியாய்வு பற்றிய ஆய்வு மிக அவசியமாகும்.

பிற செல்வாக்குகளுக்கு ஆட்படுகின்ற பொழுதுதான் நாம் நம்மை உற்று, உன்னிப்பாக நோக்க முடிகிறது. அத்தகைய நோக்குத் தொழிற்படுகின்ற பொழுதே இலக்கணம் தோன்றுகின்றது. வெளியிலிருந்து வருவோர் அல்லது வெளிச் செல்வாக்குகளுக்கு உட்பட்டோர், இப்புறநிலை நோக்கைச் செயற்படுத்த முடிகிறது. தொல்காப்பியர், புத்தமித்திரர், பவணந்தி முதல் போப் ஆர்டன் வரை இதனைக் காண்கிறோம். இன்றைய நமது மொழியியலாளர்களே இதற்கான நல் உதாரணங்களாவர்.

சமூக வித்தானத்தின் சாரமே அது சமூகத்தைப் புறநிலைப்படுத்திப் பார்ப்பதே.

அந்த அளவில் இலக்கணமும் சமூக விஞ்ஞானத்தின் பாற்பட்டதே. இந்த நூல் முதலில் வெளிவந்த பொழுது, இந்நூலிற் பெரும் சிரத்தை காட்டிய தோழர் பி.ஈ.பாலகிருஷ்ணனை நினைவு கூர்கின்றேன்.

இந்நூலினை இரண்டாம் பதிப்பாக வெளிக்கொணரும் என்.சி.பி.எச்.நிறுவனத்துக்கு எனது நன்றி.

இதன் இரண்டாம் பதிப்பில் ஆர்வம் காட்டிய அறிஞர்கள் செ.வை.சண்முகம் முதலியோருக்கும், மதுசூதனன், டாக்டர் வீ.அரசு முதலாம் நண்பர்களுக்கு நன்றி

கார்த்திகேசு சிவத்தம்பி

2/7, நாம்ஸ்கேட்
58,37வது ஒழுக்கை
வெள்ளவத்தை
கொழும்பு-06
இலங்கை

++++++++++++++++++++++++++++++++

பொருளடக்கம்

1. ஆய்வுப் பொருளும் அணுகுமுறைவும் 1
2. உற்பத்திமுறைமை, சமூக உறவுகள், மொழி 4
3. மொழியும் உற்பத்தி முறைமையும் 8
4. ஆய்வுக்குரிய தமிழிலக்கண நூல்கள் 12
5. திணைவகுப்பு 17
6. பால், எண் 26
7. வேற்றுமை 33
8. வினையமைப்பு 40
9. முடிவுரை 54
பின் இணைப்பு 56

++++++++++++++++++++++++++++++++

1
ஆய்வுப் பொருளும் அணுகுமுறையும்

வரலாற்றுப் பொருள் முதல் வாதம் என்னும் தத்துவக் கோட்பாடு, சமூக வளர்ச்சி பற்றி மார்க்சீயம் நிலைநிறுத்தும் அடிப்படைக் கோட்பாடாகும். இத்தத்துவத்தின் அடிப்படையில், தமிழ்ச் சொல்லிலக்கண அமைப்பும், அவ்வமைப்பின் வரலாறும் சுட்டி நிற்கும் சமூக, உற்பத்தி உறவுகளையும் அவற்றின் கால நிலைப்பட்ட மாற்றங்களையும் ஒரு சிறிது எடுத்துக் கூற முயல்வதே இச்சிறு நூலின் நோக்கமாகும். தொல்காப்பியர் விவரித்த தமிழ் இலக்கியப் பொருளின் இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ் மக்களின் சமூக வரலாற்றினைப் பலர் எடுத்துக் கூறியுள்ளனர். இலக்கண வகுப்பு முறையினையும், இவ்வகுப்பு முறை முகிழ்த்துள்ள வகையினையும் அறிவதன் மூலம் தமிழ் மக்களிடையே நிலவிய சமூக, உற்பத்தி உறவுகளை அறிந்து கொள்ளலாம். ஆயினும் இத்தகைய முயற்சி, இதுவரை விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சி முறைகளின் படி செய்யப்படவில்லையென்பது உண்மையாகும். இத்தகைய ஓர் ஆய்வினைச் செய்வதற்கு நாம் புதிய மொழி வரலாற்று மூலங்களைத் தேடிச் செல்ல வேண்டுவதில்லை; ஏற்கனவே எம்மிடமுள்ள மொழி வரலாற்று மூலங்களைப் புதிய சில வினாக்களை மனதிற் கொண்டு நோக்கும்பொழுது இது வரை கண்டறியப்படாத உண்மைகள் வெளிவரும். ஆராய்ச்சி மூலங்கள் சான்றுகளே. அணுகப்படும் முறைமைக்கேற்ப அவை ஒளியைக் காணும்.

தமிழ்ச் சொல்லிலக்கண அமைப்பும், வகைப்பாடுகளும், வரலாற்று வழி நின்ற தனி மனித - சமூக உறவுகளையும் தனி மனித (பொருளியல்) உற்பத்தி உறவுகளையும் எவ்வாறு காட்டுகின்றன என்பதை அறிவதற்கு வரலாற்று இலக்கணம் அத்தியாவசியமானதாகும். தமிழ் மொழியமைப்பு, இலக்கண வகுப்பு முறைகள் பற்றி வரலாற்றுக் கண்ணோட்டத்தில் ஆராய்ந்துள்ள தரமான தமிழ் நூல்கள் எம்மிடையேயுள்ளன.1 அவற்றுள் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் எழுதியுள்ள 'தமிழ் வரலாற்றிலக்கணம்' ஒன்றாகும். அது, அதற்கு முன்னர் வெளிவந்துள்ள நூல்களின் விளக்கங்களையும் பங்களிப்புக்களையும் நூலாசிரியரின் சரசனவியலறிவுடன் இணைத்துத் தொகுத்துத் தருகின்றது.

தமிழ் இலக்கணம் மூலம் அறியப்படத்தக்கதாகவுள்ள சமூக உறவுகள், உற்பத்தி உறவுகள் பற்றி அறிவதற்கு

அ. உற்பத்தி முறைமை என்பது யாது?

ஆ. உற்பத்தி முறைமைகள் உற்பத்தி உறவுகளுக்கு எவ்வாறு வழி வகுக்கின்றன?

இ. இவற்றுக்கும் மொழிக்குமுள்ள தொடர்பு யாது?

என்பனவற்றைப் பிராரம்பமாக அறிந்து கொண்டு அப்பின்னணியில்

ஈ. தமிழ் இலக்கண நூல்கள் அவற்றின் காலங்கள் அந்நூல்களுக்கான உரைகள்; அவ்வுரைகளின் காலங்கள்.

___________________________


1 (அ) வரதராசன், மு.,மொழிநூல் (திருத்திய பதிப்பு) சென்னை, 1958.

(ஆ) வேலுப்பிள்ளை, ஆ., தமிழ் வரலாற்றிலக்கணம், சென்னை, 1966.

(இ) சீனிவாசன், ரா., மொழியியல், சென்னை, 1960.

....

ஆகியனப்பற்றித் தெளிவுபடுத்திக்கொண்டு, இறுதியில் தமிழ் இலக்கண அமைப்பின்

(உ) திணை

(ஊ) பால், எண்

(எ) வேற்றுமை

(ஏ) வினையமைப்பு

ஆகியன மக்களிடையே நிலவிய உறவுகளை எவ்வாறு புலப்படுத்துகின்றன என ஆராய்தல், இத்தகைய முன்னோடி முயற்சிக்கு ஏற்ற அமைப்பாகவிருக்குமெனக் கருதலாம்.

தமிழ்ச் சொல்லிலக்கணத்தைச் சமூக வரலாற்றுச் சான்றாகக் கொள்ளும் இம்முயற்சிக்குப் பேரறிஞர்களின் நேரடி ஆய்வுகள் எதுவும் கைக்கெட்டவில்லையாதலாலும், இலக்கணத்திலும் பார்க்கச் சமூக வரலாறு, இலக்கிய விமரிசனம், நாடகம் ஆகியனவே எனது விசேட ஆய்வுத் துறைகளானமையாலும், இச்சிறுநூல், முதல் முயற்சிகளுக்குள்ள இயல்பான குறைபாடுகளைக் கொண்டிருக்குமென்பதில் ஐயமிருத்தல் முடியாது. ஆனால் இங்குக் கடைப்பிடிக்கப்பட்டுள்ள 'வரலாற்றுப் பொருள் முதல்வாத ஆராய்ச்சி நெறி" சமூக வரலாற்றுண்மைகளைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்கான சிறந்த முறைமையென்பது இன்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் உண்மையாகும்.

++++++++++++++++++++++++++++++++

2
உற்பத்திமுறைமை, சமூக உறவுகள்,

மொழி 1

ஒரு சமூகத்தினரின் அல்லது குழுவினரின் பொருளியல் நிலைப்பட்ட உற்பத்தி முறைமையே அச்சமூகத்தில் அல்லது குழுவினுள் நிலவும் சமூக உறவுகளுக்கான திறவுகோலாகும். பொருளாதார அமைப்பினைத் தனியே விவரிப்பதிலும் பார்க்க உற்பத்தி முறைமையை விவரிப்பதனால் நாம் மனித இயக்கங்களின் தன்மைகளையும் செயல் நெறிகளையும் நன்கு விளங்கிக் கொள்ளலாம்.

'உற்பத்தி முறைமை' என்பது மூன்று அங்கங்களைக் கொண்ட ஓர் அமைப்பு ஆகும்.

(அ) பொருளாதார அடித்தளம்.

(ஆ) சட்டவியல் - அரசியலமைப்பு.

(இ) கருத்துநிலை மேற்கட்டுமானம்.

வரலாற்று முறைப்படி நோக்கும்பொழுது இரண்டாவது முதலாவதனடியாகவும், மூன்றாவது இரண்டாவதனடியாகவும் தோன்றும். வளர்ச்சியுற்ற நிலையில், அல்லது ஸ்திரமான நிலைபாடு காணப்படும்பொழுது இவை ஒன்றுடன் ஒன்று

_______________________________________

1. முதற்பகுதியில் வரும் கருத்துக்கள், எம்மனுவேல் ரெறே, Marxism and Paimitive Societies (மொ. லாமேறிக்ளொப்பா), Monthly Review Press, நியூயோக், 1972 எனும் நூலைப் பார்க்க.

.....

இணைந்தே நிற்கும். மானிடவியலாராய்ச்சிகள் இவ்வுண்மைகளை நிலை நிறுத்தியுள்ளன. (ஆ), (இ) ஆகிய இரண்டிற்கும் (அ) வே அடிப்படையானதாகும். அதில் மாற்றமேற்படும் பொழுது மற்றையவற்றிலும் மாற்றங்கள் தென்படத் தொடங்குகின்றன.

பொருளாதார அடித்தளம் இரு அமிசங்களை இணைத்து நிற்கும்.

அ. உற்பத்திச் சக்திகள் (மூலப் பொருட்கள், கருவிகள், இயந்திரங்கள் முதலியன.)

ஆ. உற்பத்தி நிலை நின்ற உறவுகள் (உற்பத்தியாளர்கள் தத்தம் தொழிலினை (கடமை'யினைச் செய்யும் பொழுது, ஏற்படும், ஏற்படுத்திக்கொள்ளும் உறவுகள்.)

முதலாவது மனிதன் இயற்கைவளத்தைத் தனதாக்கிக்கொள்ளும் முயற்சிக்கானதொழில், தொழிநுட்ப ஆற்றல்கள் பற்றியன வாகும். இரண்டாவது அவற்றினடியாகத் தோன்றும் சமூக உறவுகள் பற்றியதாகும். இவையிரண்டும் தனித்தனியே நிற்பனவல்ல. ஒரு நாணயத்தின் இரு புறங்கள் போன்றவை. ஒன்றில்லாது மற்றது வழங்காது: தொழிற்படாது. உற்பத்தி முறைமை என்பது இவற்றின் கூட்டு மொத்தமான பரிணமிப்பேயாகும்.

உற்பத்தி முறைமையிற் பேசப்பட்டுள்ள உற்பத்தி உறவுகள், குறித்த சமுதாயத்தின் அல்லது குழுவின் சமூக அமைப்பைத் தீர்மானிக்கும். இதே உண்மையை இன்னொரு வகையிலும் கூறலாம்-குழுவின் அல்லது சமூகத்தின் அமைப்பு மூலம் இவ்வுற்பத்தி முறைகள் பரிணமிக்கும். அக்குழுவினரிடையே நிலவும் சட்டங்கள் ( அவை எழுதப்பட்டனவாகவோ, அன்றேல் எழுதாக்கிளவிகளாகவோ இருக்கலாம் ) இவ்வுறவுகளை நெறிப்படுத்தும். அங்குத் தோன்றும் ஆட்சியமைப்பும் அதிகார அமைப்பும் அந்த அடிப்படை உறவுகள் பேணப்படுவதை நிலைநிறுத்தும். அன்றேல் அவற்றை நிலைநிறுத்துவதற்கான வகையில் ஆட்சியும் அதிகாரமும் அமையும். சமூக நிறுவன இயக்கத்துக்கும் ஆட்சியமைப்புக்கும் அச்சாணியாக அமையும் இவ்வுற்பத்தி உறவுகள், இறுதியில் சமூகக்கொள்கைகளாக, நடைமுறைகளாக, பண்புகளாகக் கருத்துநிலை உருவம் பெறும். அதாவது அவை பேணப்படவேண்டிய அல்லது ஒதுக்கப்பட வேண்டிய, அற அல்லது மறக் கோட்பாடுகளாக, அழகான அல்லது அழகற்ற விடயங்களாக, நல்லவை அல்லது கெட்டவையாக எடுத்தோதப்பெறும். இக்கருத்துநிலை மேற்கட்டுமானம் கடமைகள் உரிமைகள் பற்றிய, ஒழுக்கம் பற்றிய, தத்துவம், சிந்தனை பற்றிய பரிணமிப்பாக விளங்கும்.

குறிப்பிட்ட குழுவின் அல்லது சமூகத்தின் உற்பத்திக் கட்டத்துக்கேற்ப இவ்வுறவுகள் அமையும். உற்பத்திக்கட்டம் நிலமானிய அமைப்பு, கைத்தொழில் அமைப்பு என வரும் பொருளாதார அமைப்புகனைக் குறிக்கும். உற்பத்திக் கட்டத்திலே மாற்றம் ஏற்படும்பொழுது-அதாவது பொருளாதார அடித்தளத்தை மாற்றும்பொழுது ( அல்லது அது மாறும்பொழுது ) உற்பத்திச் சக்திகளும் உற்பத்தி உறவுகளும் மாறும். அதனால் கருத்துநிலை மேற்கட்டுமான மாற்றங்கள் ஏற்படும்.2 அது புறமுரண்பாடுகள் மூலம் ஏற்படும் வேறுபாடுகளாகவும் சமூக, அரசியல், கலை, இலக்கிய இயக்கங்களாகவும் முகிழ்க்கும்.

திட்டவட்டமான சமூக உறவுகளின் பரிணமிப்பே இங்கு அதிகாரப்பட்டு நிற்கும் விடயமாதலால், அந்த உறவுகள் எவ்வாறு தெரியப்படுகின்றன என்பதை நோக்குவோம். ஒரு சமூகத்தில் நிலவும் சமூக உறவுகள் மூன்று காரணிகளிலே3 தெரிய வருமென்பர்.

___________________________________________________________

2 Ideological Superstructure.

3. Factors

....

அ. உற்பத்திக் கட்டங்களினதும், உற்பத்தி முறைமைகளினதும், கூட்டுமொத்தத் தாக்கத்தின் விளைவுகள்.

ஆ. (ஒரே சமுதாயத்திற் காணப்படும் ) பல்வேறு உற்பத்தி முறைமைகளும் கட்டங்களும் ஒன்றினையொன்று பாதித்து ஏற்படுத்தும் உறவுகள்.

இ. பல்வேறு காரணிகளின் இணைப்பு நிலையாகக் காணப்படும் உறவுகள் (வேறுபடும் பொருளாதார முறைமைகளையும் பண்பாடுகளையும் கைகொள்ளும் பொழுது ஏற்படுத்திக் கொள்ளும் இணைப்பு நிலையை உதாரணமாகக் கொள்ளலாம்.).

வரலாற்று நிலைப்பட்ட ஆய்வில், மாறும் உற்பத்தி முறைமையினை,

1. பொருளாதாரக் குழுக்கள்

2 (குடும்ப) உறவு முறைகள், உறவுப் பெயர்கள்

3. நண்பர்கள் குழாம்

4. பண்பாட்டு, மத நிறுவனங்கள்

5. ஒழுக்க நெறிகள்

ஆகியன மூலம் ஓரளவு அறிந்து கொள்ளலாம்.

++++++++++++++++++++++++++++++++

3
மொழியும் உற்பத்திமுறைமையும்

மேலே எடுத்துக் கூறப்பட்ட உற்பத்தி முறைமைக்கும் மொழிக்குமுள்ள தொடர்பினை வலிந்து விளக்க வேண்டியதில்லை.

மொழியே மனிதனின் பிரதான தொடர்புவழி: மொழி கருத்தைத்தெரிவிப்பதற்கான சாதனம் என்பது ஒரு பக்கச் சார்பான கூற்றே. மொழியைச் சமூக நிறுவனமென்ற முறையில் நோக்கும்பொழுது அதாவது சமூக அமைப்பின் ஓர் அங்கம் என்று நோக்கும் பொழுது அது முழுச் சமுதாயத்தினதும் தொடர்பு வாயிலாக அமைகின்றது.

இம்மட்டத்தில் மொழி, பொருளாதார அடித்தளத்தினால் தீர்மானிக்கப்படும் மேற்கட்டுமானத்தைச் சார்ந்ததா அல்லதா என்னும் பிரச்சினை பற்றிச் சிறிது நோக்குதல் பயன் தரும். இலக்கியம் மேற்கட்டுமானத்தைச் சார்ந்தது என்பது பலவிடங்களிலும் பலராலும் எடுத்துக் கூறப்படும் உண்மையாகும்.

"மொழி மனிதனின் உற்பத்தி நடவடிக்கையுடன் நேரடித் தொடர்புடையது. உற்பத்தி நடவடிக்கையுடன் மாத்திரமல்லாது அவனது தொழில் சம்பந்தப்பட்ட சகல துறைகளிலுமுள்ள நடவடிக்கைகளுடன் உற்பத்தி முதல் அடித்தளம் வரை, அடித்தளம் முதல் மேற்கட்டுமானம் வரையுள்ள சகல நடவடிக்கைகளுடனும் அது நேரடித் தொடர்புடையது. இதன் காரணமாக, உற்பத்தியில் ஏற்படும் மாற்றங்களை மொழி, உடனடியாகவும் நேரடியாகவும், அடித்தளத்தில் மாற்றம் ஏற்படும் வரை காத்திராமலும் தெரிவிக்கின்றது. இதன் காரணமாக, மனித நடவடிக்கையின் சகல அம்சங்களையும் தழுவி நிற்கும் மொழியானது மேற்கட்டுமானத்தாற் சுட்டப் பெறும் நடவடிக்கைகளிலும் பார்க்க விசாலமானது. அவற்றிலும் இது முற்று முழுதான அமைப்பைக் கொண்டது."1

மொழியின் அசைவியக்கம் பற்றிய வரலாற்று முக்கியத்துவத்தை இவ்வாறு குறிப்பிட்ட அவ்வாசிரியர் மொழி, குறிப்பிட்ட ஒரு அடித்தளத்துக்கோ அன்றேல் இன்னொன்றுக்கோ உரியதாகாது என்பதைப் பின்வரும் முறையிலும் வற்புறுத்துவார்.

"மொழி, ஒரு குறிப்பிட்ட பொருளாதார அடித்தளத்தின்-அது புதிய அடித்தளமாகவோ பழைய அடித்தளமாகவோ இருக்கலாம்-பெறுபேறு அன்று. அது அச்சமுதாயத்தின் வரலாற்றுக் காலம் முழுவதினதும், பல நூற்றாண்டுகள் காலமாக (அச்சமுதாயத்தினரிடையே காணப்பட்ட) பல்வேறு பொருளாதார அடித்தளங்களின் வரலாறு முழுவதினதும் பெறுபேறு ஆகும். அது குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தினாலே, தோற்றுவிக்கப்பட்டதன்று. அது முழுச் சமுதாயத்தினாலும் அச்சமுதாயத்திலுள்ள சகல வர்க்கங்களினாலும் நூற்றுக்கணக்கான பரம்பரைகளின் முயற்சிகளினாலும் தோற்றுவிக்கப்பட்டதாகும்."2

இவ்வாறு மொழி, முழுச் சமுதாயத்தினதும் நடவடிக்கைகளை முற்றுமுழுதாகப் பிரதிபலிப்பதற்கு, அதன் தோற்றத்திலும்,

____________________________________________

1. ஸ்ரானன், ஜே.வி,Marxism and the Problem of Linguistics மாஸ்கோ, 1954, ப.9.

2. ஷெ ப.5.
...

வளர்ச்சி வியாப்தியிலும், அது தொழிலுடன் கொண்டுள்ள இன்றியமையா உறவே காரணமாகும்.

இவ்வுண்மை பற்றி ஏண்ஸ்ற் ஃவிஷர் கூறுவது முக்கியமானதாகும்.

" மனிதன் தொழிலில் ஈடுபடாது....கருவிப் பிரயோகம் பற்றிய அனுபவமில்லாது, மொழியை இயற்கையின் அநுகரணமாகவும், நடவடிக்கைகளையும் பொருட்களையும் குறிக்கும் சின்னமாகவும், கருத்துநிலையில், தோற்றுவித்திருக்க முடியாது. ஆற்றல்மிக்க ஒன்றிலிருந்து மற்றது வேறுபட்டதான சொற்களை மனிதன் தோற்றுவித்தற்குக் காரணம் அவன், வருத்தம், மகிழ்ச்சி, ஆச்சரியம் முதலிய மெய்ப்பாடுகளுக்கு ஆட்படுபவன் என்பதால் மாத்திரமன்று; அவன் தொழில் செய்யும் உயிரினம் என்பதாலுமாகும்."3

மொழியின் தோற்றம் பற்றிய ஆய்வுகளுள், மொழியை மனிதரின் கூட்டுத் தொழிலினடியாகப் (Collective Labour) பிறந்ததாகக் கொள்ளும் கருத்து மிக முக்கியமானதாகும். உழைப்பும், ஒத்திசைவும் எனும் கருத்துப்படும் Arbeit and Rhythmus எனும் நூலில் புய்கர் (Bucher) என்பவர் இக்கருத்தினை விளக்கியுள்ள முறையினைப் பேராசிரியர் தொம்சன் எடுத்துக் கூறியுள்ளார். கூட்டுத் தொழிலில் இரு அமிசங்கள் உள்ளன. ஒன்று உடல் நிலைப்பட்டது, மற்றது வாய்வழி வருவது. உடல் நிலைப்பட்ட அசைவியக்கம் நடனத்துக்கும், வாய் நிலைப்பட்டது மொழிக்கும் காலாகவமைந்தது என்பர். கூட்டுத் தொழிலுக்கும் மொழிக்கும்

__________________________________________________

3 எண்ஸ்ற்ஃபிஷர், The Necessity of Art, பெங்குயின் நூல், 1963, பக். 27-8, இதுபற்றி ஜோர்ஜ் தொம்சனின் Studies in Ancient Greek Society முதலாவது பாகத்தைப் பார்க்க. Lawrence & Wishort, London, 1956.

....

(குறிப்பாக ஒத்தியைபான ஒலிக்கும்) உள்ள உறவை அறிந்து கொள்வதற்கு உதவுவனவாக அமைவன ஏலேலோ பாடல், ஏற்றப் பாடல் ஆகியனவாகும்.

மொழியின் தோற்றத்துக்குப் பொருள் முதல்வாத அடிப்படையினைக் காட்டும் இவ்வுண்மையை வேறொரு வழியால் நிறுவிக் கொள்ள முடியுமென்பர்.

குழந்தைகளின் மொழி வளர்ச்சி பற்றி ஆராய்ந்துள்ளவர்களால், உடல்சார் நடவடிக்கை (Physical Activities)களில் அதிகம் ஈடுபடும் குழந்தைகளின் மொழி வளர்ச்சிச் சாத்தியப்பாடு அதிகம் என்பது நிறுவப்பட்டுள்ளது. உடல் சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள குழந்தைகளிடத்தே காணப்பெற்ற மொழி ஆற்றலையும், அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடாத, அன்றேல் குறைவாக ஈடுபட்ட குழந்தைகளிடத்தே காணப்பெற்ற மொழி ஆற்றலையும் ஒப்பு நோக்கிய பொழுது இவ்வுண்மை தெரிய வந்தது என்பர்.

உற்பத்தி முறைமையின் தேவைகளுக்கு ஏற்ப, குறிப்பாக உற்பத்தி உறவுகளின் தேவைக்கு ஏற்பவே மொழியின் ஆற்றல், அதன் ஆழ, அகலமான வளர்ச்சி காணப்படுமென்று கொள்வது ஏற்புடைய ஒரு கூற்றாகும்.

++++++++++++++++++++++++++++++++

4
ஆய்வுக்குரிய தமிழிலக்கண நூல்கள்

ஒரு மொழியின் "இலக்கணமென்பது அம்மொழியில் உரூபன்களும் தொடர்களும் கருத்துத் தரும் முறையில் அமையும் தன்மைகள் பற்றிய விதிமுறைக் கோவையாகும்.

" இலக்கணமென்பது சொற்கள் வாக்கியங்களாக அமைகின்றபொழுது அவை அமைக்கப்படுகின்ற முறைமையும் ஒன்றுடன் ஒன்று இணைகின்ற முறைமையுமாகும். மொழி என்னும் மேலுறையினுள் மனித சிந்தனையைப் பொதிந்து வைப்பது இலக்கணத்தின் மூலமே ஏற்படுகின்றது".

இதே கருத்தினை 1867இல் ஸ்ருவாட் மில் அவர்களும் எடுத்துக் கூறியிருப்பது இங்கு நோக்கத்தக்கது.

"இலக்கணம் என்பது யாது என்பது பற்றி ஒரு கணம் சிந்தியுங்கள். அதுதான் தருக்கத்தின் மிக முக்கியமான மூலக்கூறு ஆகும். சிந்தித்தலாகிய நடைமுறையைப் பகுப்பாய்வு செய்வதற்கான ஆரம்பமாகும். இலக்கணத்தின் மூலகங்கள், விதிகள் மூலம் தான் மொழியின் உருவ அமைதிகள் உலகப் பொதுவான சிந்தனையுடன் இணைக்கப் பெறுகின்றன"2 என அவர் கூறியுள்ளார்.

__________________________________


1 ஸ்ராலின், ப.22.

2 "Consider for a moment what Grammar is. It is the most elementary part of logic. It is the beginning of the analysis of the thinking pocess. The principles and rules of grammar are the means by which the forms of language are made to correspond with universal thought."

ஜெஸ்பேர்சன், ஓட்டோ எழுதிய The Philosophy of Grammar,லண்டன், 1958, ப. 47இல் வரும் மேற்கோள்.

....

மேலும் இலக்கணம் ஒரு மொழிக்கூட்டத்தின் உளவியலம்சங்களை, அதாவது அது சிந்திக்கும் முறைமையினை உள்ளடக்கியுள்ளது என்ற கருத்தினை மொழியியல், இலக்கணம் பற்றி ஆராய்ந்துள்ள அறிஞர்கள் எடுத்துக் கூறியுள்ளனர் என்பதையும் இங்கு நினைவுறுத்திக் கொள்ளல் அவசியமாகும்.3

இலக்கணத்துக்கும் சிந்தனைக்குமுள்ள தொடர்பும் மொழிக்கும் உற்பத்தி, சுமூக உறவுகளுக்குமுள்ள தொடர்பும் இலக்கணத்தைச் சமூக வரலாற்றின் சமூக உளவியற்சிந்தனை வரலாற்றின்-கருவூலமாக்கிவிடுகின்றது.

தமிழில், இத்தகைய ஆய்வுக்குரிய முக்கிய இலக்கண நூல்களாக அமைவன தொல்காப்பியமும் நன்னூலுமே. இவற்றுள் தொல்காப்பியம் தோன்றிய காலம் பற்றிக் கருத்து வேறுபாடுகள் நிறையவுள்ளன. வையாபுரிப்பிள்ளையவர்கள் தொல்காப்பியத்தின் காலம் கி.பி. 4-5ஆம் நூற்றாண்டு என்பர். தொல்காப்பியம் முழுவதையும் ஒருங்கு நோக்கும்பொழுது இக்கருத்து ஏற்புடையதாகவே தோன்றுகின்றது. ஆயினும் தொல்காப்பியத்திற் சுட்டப் பெற்றுள்ள வழக்காறுகள் பலவற்றை நோக்கும் பொழுது, அவற்றுள் காலத்தால் முந்திய வழக்காறுகளும் சங்க காலத்துக்குப் பிந்தியவையெனக் கருதப்படத் தக்க வழக்காறுகளும் காணப்படுகின்றன என்பது தெரிய வரும். ஏறத்தாழ கி.மு. முதல் நூற்றாண்டு முதல் கி.பி 4-5ஆம் நூற்றாண்டுகட்குரியனவான பல வழக்காறுகள்

______________________________________

3. ஜோஷ“வா வற்மோ, Language, மென்ற்றோர் நூல், 1956.ஜேர்ஸ் டீஸ், Psychoinguistics. பொஸ’ற்றன், 1970. ஜெஸ்பேர்சன், The Pschology of Grammar. P.29

...

இருப்பதால், அந்நூல் பல்வேறு காலகட்டங்களில் இயற்றப்பெற்று. கி.பி.4-5 நூற்றாண்டில் அது இன்று கொண்டுள்ள இறுதி நிலையினைப் பெற்றிருக்கலாமென்ற கருத்துப் படிப்படியாக வளர்ந்து வருகின்றது.

இக்கருத்தினைக் காலஞ்சென்ற பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை கூறியே முதற்கேட்டதுண்டு. பல்வேறு ஆராய்ச்சி அறிஞர்கள் தம் ஆராய்ச்சித் தொழிற்பாடுகளின் பொழுது ஐயுற்ற இந்தக் கருத்தினைப் பேராசிரியர் காமில் ஸ்வெலபில் மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.4

பவணந்தியாரால் இயற்றப்பெற்ற நன்னூல் 13 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததென்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதாகும். இவ்விரு நூல்களுமே சமண மரபில் வருவன.

தொல்காப்பியத்தினைப் பழந்தமிழ் மொழியமைதிக்கான எடுத்துக்காட்டாகவும் நன்னூலை இடைக்காலத் தமிழ் மொழியமைதிக்கான எடுத்துக்காட்டாகவும் கொள்ளலாம்.

தொல்காப்பியத்துக்கு எழுதப்பெற்ற உரைகள், அவை எழுதப்பெற்ற காலம் வரை ஏற்பட்ட மொழி மாற்றங்களை முதனூல் மரபுக்கேற்ப அமைத்துக் கூறுவனவாகவுள்ளன என்று கொள்வார். எனவே நன்னூலார் எடுத்துக்கூறும் மொழி மரபு மாற்றங்களை நன்கு விளங்கிக் கொள்வதற்கும் வரலாற்று ரீதியான விளக்கத்தைப் பெற்றுக் கொள்வதற்கும் இளம்பூரணர் உரை (10 ஆம் நூற்றாண்டு), சேனாவரையர் உரை ( ஏறத்தாழ 12 ஆம் நூற்றாண்டு), நச்சினார்க்கினியர் உரை (ஏறத்தாழ 13-14

___________________________________________

4 காமில் ஸ்வெலபில், The Smile of Murugan, ஹேக், 1973 பார்க்க.

....

ஆம் நூற்றாண்டு) ஆகியவற்றை அறிந்திருத்தல் அவசியமாகின்றது. அதே போன்று நன்னூலுக்கு எழுதப்பட்ட உரைகளும் (மயிலைநாதருரை, சங்கர நமச்சிவாயர் உரை, சிவஞான முனிவர் உரை, ஆறுமுக நாவலரின் காண்டிகையுரை) நன்னூலார் காலத்துக்குப் பின்னர் தோன்றிய தொல்காப்பிய உரைகளும் (தெய்வச்சிலையார், கல்லாடர், சிவஞான முனிவர் (பாயிரவிருத்தி) முக்கியமாகின்றன.

உரைகளைவிட, நன்னூல் தோன்றுவதற்கு முன்னர் தோன்றிய, வீரசோழியம், நேமிநாதம் (முறையே 11ஆம், 12ஆம் நுற்றாண்டுகள்) ஆகிய இலக்கண நூல்கள் பற்றிய பரிச்சயமும் தெளிவும் அத்தியாவசியமானவையாகும். இவற்றும் வீரசோழியம் மிக முக்கியமானதாகும். ஏனெனில் இந்நூல் தமிழ் இலக்கணத்தை சமஸ்கிருத மொழியமைதிகட்கேற்பக் கூற முயன்றது மாத்திரமல்லாமல், அக்காலத்திற் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் காணப்பட்ட வழக்குகள் பலவற்றுக்கு இலக்கணம் கூறுவதாக அமைந்துள்ளது.

மேலும், பதினேழாம் நூற்றாண்டில் தோன்றிய பிரயோக பிவேகம், இலக்கண விளக்கம், இலக்கணக் கொத்து ஆகிய நூல்களும் முக்கியமானவையாகும்.

மேனாட்டார் எழுதியுள்ள தமிழ் இலக்கண நூல்களுள் முக்கியமாக விளங்குபவை வீரமாமுனிவர், போப் ஆர்டன், முதலியோர் எழுதியுள்ள இலக்கண நூல்களாகும்.5 அண்மைக்

________________________________________________

5 பெஸ்கி, A Grammar of the Common Dialect of Tamil Language. ஆர்டன், A.H., A Progressive Grammar of Common Tamil, சென்னை, 1910.

போப், G.U., A Handbook of the Ordinary Dialect of the Tamil Language ஒக்ஸ்ஃபோட், 1926.

....

காலத்திலே வெளிவந்துள்ள விவரண மொழியியல் சார்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் இன்றைய நிலையை விளக்குவனவாகவுள்ளன.

இலக்கண நூல்களையும், உரைகளையும் ஆதாரமாகக் கொண்டு சமூக உறவுகளைக் காண முனையும்பொழுது, இலக்கண ஆக்கங்கள் யாவும் பழைய மரபுகளைப் பேணுவதையே தமது முக்கிய நோக்கமாகக் கொண்டிருப்பனவென்பதையும், புதிய அபிவிருத்திகளுக்கும், மாற்றங்களுக்கும் இடமளிக்கும் பொழுது அவை மரபு நெறிப்பட்டனவெனக் காட்டத் தவறா என்பதையும் நாம் மனங்கொளல் வேண்டும். மேலும் இலக்கண ஆசிரியர்கள் பெரும்பாலும் எத்தகைய மொழி நிகழ்வுகளையும் வகை மாதிரிகளாகவோ6 தொகுத்துக் கூற முனைவர் என்பதையும் மனத்திருத்தல் வேண்டும்.

இலக்கண நூல்களின் இக்குறைபாடுகள் பற்றி ஆழ்ந்த கவனமெடுக்காது, முன்னர் கூறிய நோக்கில், ஓரளவுக்குத் தெற்றெனத் தெரிய நிற்கும் சமூக உறவுகளையே இங்கு ஆராய்வோம்.

++++++++++++++++++++++++++++++++

5
திணைவகுப்பு

சொற்களை, உயர்திணை, அஃறிணை என வகுக்கும் முறைமை தமிழின் முக்கிய பண்புகளில் ஒன்று என்றும், இம்முறைமை தெலுங்கிலும் (மஹத், அமஹத்) காணப்படுகின்றதென்றும் கூறுவர். இலக்கணத்தின் இன்றைய பயில் நிலையினை நோக்கும்பொழுது இது முற்றிலும் இலக்கண நிலைப்பட்ட ஒருவகை முறையாகவே காணப்படுகின்றது.

'திணை' எனும் இக்கோட்பாடு சொல்லிலக்கணத்தில் மட்டும் பேசப்படுவதன்று. அது தொல்காப்பியப் பொருளதிகாரத்தின், சங்க இலக்கியங்களின் அச்சாணியான இலக்கியப் பண்புமாகும். திணை என்னும் கோட்பாடு இலக்கியங்களிலே தொழிற்படுமாற்றினைத் தொல்காப்பியர் இலக்கண நிலை நின்று வகுத்தும் தொகுத்தும் கூறுவர். இவ்வாறிருப்பினும் சொல்லதிகாரத்துள் பேசப்படும் திணையையும் பொருளதிகாரத்துட் பேசப்படும் திணையையும் இணைத்து நோக்கும் இலக்கண ஆசிரியர்கள் இலர் என்றே கூறவேண்டும்.

சொல்லிலக்கணத்தின் அடிப்படைக் கோட்பாடான 'திணை' பற்றிய உண்மையை அறிந்துகொள்வதற்குப் பொருளிலக்கணத்துத் திணை பற்றிய உண்மைகளை அறிந்துகொள்வது அவசியமாகின்றது.

திணைக் கோட்பாட்டின் சமூக அடிப்படைகள் என்ற எனது கட்டுரையில் நான் கண்ட முடிவினை இங்கு மீட்டும் தருவது அவசியமாகின்றது.1

_________________________________________________

1 சிவத்தம்பி, கா.,திணைக்கோட்பாட்டின் சமூக அடிப்படைகள் (மொழிபெயர்ப்பு), ஆராய்ச்சி, தொகுதி 3, யூலை, 1971.

....

நச்சினார்க்கினியர்"ஒழுக்க விதி' என்றும், இளம்பூரணர் 'பொருள் அல்லது உள்ளடக்கம்' என்றும் இச்சொல்லின் (திணை) பொருளைக் குறிப்பிடுவதை நாம் ஏற்கெனவே பார்த்தோம்.....ஆயினும் மேலும் சில இயல்களில் 'திணை' என்ற சொல் இடம் பெற்றுள்ளது. குடும்பம், கணம், குடியிருப்பு என்னும் பொருளைத்தரும் குடி என்னும் பெயர்ச் சொல்லைக் குறிக்கத் திணை என்னும் சொல் பயன்படுவதற்குச் சங்க இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன ( புற நானூறு 74,77,159,373; பதிற்றுப்பத்து 14,31,72,82; குறுந்தொகை 45 ). இச்சொல் மதுரைக் காஞ்சியிலும் (326) குறிஞ்சிப்பாட்டிலும் (255) இடம் பெற்றுள்ளது. இவ்விரண்டு பாடல்களுக்கும் உரையெழுதியுள்ள நச்சினார்க்கினியர், மதுரைக் காஞ்சியில் 'நிலம்' என்றும், குறிஞ்சிப்பாட்டில் 'குலம்' அல்லது 'குடும்பம்' என்றும், உரையெழுதுகிறார். குழு (கணம்) அல்லது குடியிருப்பு என்ற பொருளில் திணைநிலைப் பெயர் என்ற சொற்றொடர் வருகிறது. திணை என்ற சொல்லுக்கு ஆரம்பத்தில் 'குழு' (கணம்), 'குடும்பம்', 'குடியிருப்பு" என்ற பொருள் உண்டு என்பது அதன் மூலம் தெளிவு பெறுகின்றது. பெயர்ச் சொல்லின் பிரிவுகளைச் சுட்டிக்காட்டத் திணை என்ற சொல்லைப் பயன்படுத்துவதானது இச்சொல் 'பிரிவு' அல்லது 'குழு' என்ற பொருளையுடையது என்பதற்குச் சான்றாகும்.....சங்க இலக்கியத்தில் 'குடி' என்ற சொல் 'குடும்பம்' அல்லது குடியிருப்பு என்ற பொருளிலேயே பொதுவாகக் கையாளப்படுகின்றது. எனவே ஆதியில் குடியிருப்பைக் குறித்த இந்தச் சொல் காலக்கிரமத்திற் பொருள் மாறுதலடைந்து குடியிருப்பிலுள்ள மக்களின் ஒழுக்க வடிவங்களைச் சுட்டுவதாக மாறியிருப்பதும் சாத்தியமே."

திணை என்னும் சொல்லுக்குச் சூடாமணி நிகண்டு,

"திணை நிலங்குல மொழுக்கம்"2

______________________________________________

2 சூடாமணி நிகண்டு-மூலமும் உரையும், தா. கந்தசாமி முதலியார் பதிப்பு, சென்னை, 1931.

....

என்று கூறும். இது மேலே கூறியவற்றை நிலைநிறுத்துவதாக அமைந்துள்ளது.

தொல்காப்பியர் சொல்லதிகாரம் கிளவியாக்கத்தில்,

"உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே

அஃறிணை என்மனார் அவரல பிறவே

ஆயிரு திணையினும் இசைக்குமன சொல்லே"

என்பர்.

நில அடிப்படையில் மக்கள் கூட்டத்தை 'திணை'யாகக் கொண்ட மரபினை அடிப்படையாகக் கொண்டு, சொல்லிலக்கணத்துக்கு வேண்டிய பெயர்ப் பாகுபாட்டைச் செய்ய முனையும் பொழுது, மக்களை (மனிதரை), அதே சொல் வழக்கால் 'உயர் திணை' என்று கொள்வது தர்க்க ரீதியான முடிபாகவே அமைகின்றது.

பொருளிலக்கணத்திலே வரும் திணையின் அங்கங்கள் மனிதனை முதன்மைப்படுத்துவதைக் காணலாம். திணை வகுப்பில் முதல், கரு, உரி என்பன பேசப்படும். முதல் நிலமும் பொழுதும் ஆகும்; கரு தெய்வம், உணா, மா, மரம், புள், பறை, செய்தி, யாழின் பகுதி முதலாயின: உரி புணர்தல், பிரிதல் இருத்தல், இரங்கல், ஊடல் ஆகியன. நிலம் முதல் ஒழுக்கம் வரை யாவுமே மனித வாழ்க்கையை மையமாகக் கொண்டே இலக்கியத்திற் பேசப்படுகின்றன. மனிதனை மையமாகக் கொண்டு பெயர்ச் சொற்களை வகுக்க முடியும் பொழுது மனிதன் உயர்திணையாகக் கருப்படுவது ஆச்சரியமன்று.

மக்களை உயர் திணையாகவும், மக்கள் தவிர்ந்தவற்றை அஃறிணையாகவும் கொள்ளும் மனோநிலை குழுநிலை (கணவாழ்க்கை நிலை)க்குப் பொருந்தும் சிந்தனையேயாகும். கணவாழ்க்கையில் தெய்வம் பற்றிய தத்துவக் கோட்பாடுகள் பெரிதும் வளர்ந்திராது. அந்நிலையில் மதம் என்பது நம்பிக்கையும் சடங்குமே. தெய்வம் பற்றிய கருத்துருவக் கோட்பாடு சமூக வளர்ச்சியின் பின்னரே ஏற்படுவதாகும். இதனாலேயே கிளவியாக்கம் நான்காம் சூத்திரத்தில்.

"பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்

ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்

தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்

இவ்வென அறியும் அந்தம் தமக்கிலவே

உயர்திணை மருங்கிற்பால் பிரிந்திசைக்கும்"

எனத் தெய்வம் பற்றிய கோட்பாட்டைப் பின்னர் கூறுகின்றார் அச்சூத்திரத்தில் எடுத்துக் கூறப்படும் பால், குணவேறுபாடுகள் பல காலச் சமுதாய வளர்ச்சியின் பின்னர் மாத்திரமே கண்டறியப்படும் கருத்துநிலைக் கோட்பாடுகள் என்பதை நாம் மனத்திருத்தல் வேண்டும்.

தொல்காப்பியத்தில் உயர்திணைபற்றிக் கூறப்பட்டுள்ளனவற்றை நோக்கும்பொழுது, மக்களை உலகின் முக்கிய (உயர்ந்த) சீவத் தொகுதி எனக்கொள்ளும் அக்கருத்து கணவாழ்க்கையிற் (குலக் குழுக்கள் நிலையிற்)காணப்படும் மனித சமத்துவத்தை உயர்த்துகின்றதெனலாம். ஆனால் சமுதாயங்கள் நிலைபேறுடையனவாகி குடும்பம், சமூகம், அரசு எனும் நிறுவனங்களும் தொழில் வேறுபாடுகளால் ஏற்படும் குழு நிலைகளும், இவற்றைவிட வரலாற்றுத் தொடர்பு பற்றிய பிரக்ஞையால் ஏற்படும் மரபு, பாரம்பரியம் எனும் உணர்வுகளும் ஏற்படுகின்றபொழுது இப்பூர்வீக சமத்துவம் உடைந்துபோவது இயற்கையே. அத்தகைய ஒரு மாற்று நிலைமைக் காலத்துச் சிந்தனைகளைத் தொல்காப்பியம் பிரதிபலிக்கின்றதெனலாம். அத்தகைய பூர்வீக மாற்ற நிலையில் இலக்கணம் போன்ற வகுநெறி, அதாவது வகுத்துப்பார்க்கும் கருத்தோட்டங்கள், நோக்குக்கள் அந்தச் சமூகத்தின் சமூக சிந்தனைத் தேவைகளினடியாகவிருக்க முடியாதென்பர். புறத்தாக்கங்களினாலேயே அத்தகைய விடயநோக்குத்3 தோன்றும். தொல்காப்பியர் சமண சமயத்தவர் என்பது இவ்வுண்மையை வலியுறுத்துகின்றது. தொல்காப்பிய இலக்கணம் குறிக்கும் பெயர் வகுப்பு முறையினை நோக்கும் பொழுது தொல்காப்பியம் போன்ற ஓர் இலக்கண நூல், புறத்தாக்கமெதுவுமின்றி முற்றிலும் அச்சமூகத்தின் அகத் தேவைகளுக்கான வெளிப்பாடாகத் தோன்றியிருத்தல் முடியாது என்றே கூறவேண்டியுள்ளது.

சொல்லிலக்கணத்திற் பேசப்படும் திணைக்கும் பொருளிலக்கணத்திற் பேசப்படும் திணை மரபுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டென்பதைத் தொல்காப்பியச் சொல்லதிகாரப் பெயரியற் சூத்திரமென்று (145) நிறுவுகின்றது. பாலறிவந்த உயர் திணைப் பொருள்களுள் நிலப்பெயர், குடிப்பெயர், குழுவின் பெயர், திணைநிலைப் பெயர் முதலியன வருமென்பர். இவை பற்றிப் பொருளதிகாரத்திலும் நேரிடையாகவும் மறைமுகமாகவும் குறிப்பிடுவர்.

உயர்திணையை மக்கட் சுட்டாகக் கொள்ளும் பண்பு, கணவாழ்க்கையின் முக்கிய அமிசமான கூட்டு வாழ்க்கையின் (எனவே சமத்துவத்தின்) நினைவு வழியாகவே ஏற்படுத்தப்பட்டது என்பது தெளிவாகின்றது. ஆனால் நன்னூலில் வரும்,

"மக்கள் தேவர் நரகர் உயர்திணை

மற்றுயிருள்ளனவும் இல்லனவும் அஃறிணை"

என்னும் சூத்திரத்தில், மக்கள்பற்றிய இலக்கண மரபு பேசப்படும்பொழுது மத நிலைப்பட்ட கருத்துக்கள் பெரு மாற்றமடைந்துள்ள நிலைமையினைக் காணலாம். தொல்காப்பியம் சுட்டும் இலக்கிய மரபுகளும் வாழ்க்கை முறைகளும் முற்றிலும் மாறியிருந்த சோழர் காலத்தில் மக்கள் யாவரையும்

__________________________________

Objective Out look

....

வேறுபாடின்றி உயர்திணையெனக் கொள்ளல் வெறும் மரபுதான் என்பதும், இலக்கணத்துள்ளேயே மக்களின் சமூக வேறுபாடுகள், ஏற்றத் தாழ்வுகள் துல்லியமாக எடுத்துக் கூறப்படுகின்றன என்பதும் பின்னர் தெரியவரும்.

தொல்காப்பியம் புறத்திணையியலை நோக்கும்பொழுது அங்கு எடுத்துக் கூறப்படும் அரசு அமைப்பும் ஆட்சி முறையும் கண வாழ்க்கையினையும் கண வாழ்க்கையிலிருந்து விடுபட்டு நிலமான்ய அமைப்பினைச் சுட்டும் குடியிருப்புக்களாகவும் அதற்குரிய ஆட்சியமைப்புக்களைக் கொண்டதாகவும், அவற்றுக்கும் மேலாக-சிறப்பாக ஆற்றுப்படுகையைச் சார்ந்த இடங்களில்-வேந்தர்களது ஆட்சி முறைமையை உடையனவாகவுமிருப்பதைக் கவனிக்கலாம். எனவே சமூக வாழ்க்கையைப் பொறுத்தவரையில், கண வாழ்க்கையிலிருந்து கிராமவாழ்க்கை நிலைக்குமாறும் தன்மையினைத் தொல்காப்பியம் சுட்டுகின்றதெனலாம். தொல்காப்பியத்திற் கூறப்படும் சொற்களுக்கான திணை விவரங்கள் இந்நிலைமையைப் பெரிதும் பிரதிபலிக்கின்றன எனலாம் (கிளவியாக்கம், சூத். 11,41, பெயரியல் 165 முதலியன).

தொல்காப்பியத்திற் கூறப்படும் விரவுத்திணையென்னும் வகை மிகவும் சுவாரசியமான ஒரு சமூக உண்மையினை எடுத்துக்கூறுகின்றது. கூத்தன், முடவன் போன்ற சொற்கள் உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாக வருவதைக் கண்டு அவற்றினை விரவுத்திணை என்றனர். "பழந்தமிழர் ஆவையும் எருதையும் அவற்றின் பயன்பாடும் உழைப்பும்பற்றி, அருமையாய்ப் பேணி, அவற்றுக்குச் சாத்தி, சாத்தன் என்னும் மக்கட் பெயரையே இட்டு அழைத்து வந்திருக்கின்றனர். விரவுத்திணைப் பெயர்களுற் பெரும்பாலான, மாடுகளுக்கு மனிதப் பெயர்கள் வைத்தமையால் ஏற்பட்டவையே,"4

____________________________________

4 வேலுப்பிள்ளை, ப.130.

....

'இயற்கையோடியைந்த வாழ்வு' எனப் பழந்தமிழ் இலக்கியம்பற்றி எடுத்துக் கூறப்படும் பண்பின் ஓர் அமிசமிது. உழைப்பு அடிப்படையில் தம்முடன் இயைந்து, தமக்கு உதவியாக நின்ற மாடு, எருமைகளை மனித உறவுடன் நோக்கும் தன்மை இதிலே தென்படுவதை நோக்குதல் வேண்டும்.

தொல்காப்பியத்தில் எடுத்துக் கூறப்படும் திணையமைப்பு மார்க்ஸ் எடுத்துக்கூறிய மூல உற்பத்தி முறைமைகளில் ஒன்றான ஆசிய முறைமை5க்குப் பொருத்தமான உதாரணமாக விளங்குகின்றதென்பதையும் நாம் மனங்கொளல் வேண்டும்.6

உயர்திணை, அஃறிணைப் பகுப்புக்குப் பகுத்தறிவே உரைகல்லாக அமைந்தது எனக் கொள்ளும் வழக்கம் இன்று பெரிதும் காணப்படுகின்றது.7 இக்கருத்து சேனாவரையரின் உரையிலேயே மிகத் தெளிவாக எடுத்துக் கூறப்படுகின்றதெனலாம்.

"ஈண்டு மக்களென்பது மக்களென்னுமுணர்வை, எனவே மக்களேயாயினும் மக்களென்று சுட்டாது பொருளென்று சுட்டிய வழி உயர்திணையெனப் படாதென்பதாம்."8

தாம் மக்களென்னுமுணர்வற்ற 'மகவு', 'குழவி' போன்றவற்றை உயர்திணையாற் கூறாது அஃறிணையாற் கூறல் வேண்டுமெனும் மரபினைச் சுட்டிக்காட்டி மெற்கூறிய கருத்தினை அவர் வலியுறுத்துவர்.9 இக்கருத்தினை

________________________________________

5 Asiatic mode

6 சிவத்தம்பி, கா. Early South Indian Society ;and Economy; Social Scientist, தொகுதி 3, இல. 5, திருவனந்தபுரம், டிசம்பர், 1974

7 வேலுப்பிள்ளை, ப. 153. வரதராசன், ப.153.

8. தொல்காப்பியம், சொல்லதிகாரம், கந்தசாமியாரவர்கள் குறிப்புரையுடன், கழகப் பதிப்பு, சென்னை, 1923, ப.5.

9 தொல். சொல், சூத்திரம் 56.

....

கால்டுவெல்லும் வற்புறுத்தியுள்ளார்.10 அவர் உயர் சாதிப்பெயர்கள் சாதியற்ற பெயர்கள் என உயர்திணை, அஃறிணையை மொழி பெயர்த்துப் பகுத்தறிவே இவற்றினிடையேயுள்ள வேறுபாடு என்பர். இவ்விளக்கங்கள் இலக்கண, தத்திவத்தின் பாற்பட்டவை. குறித்த மொழிக் கூட்டத்தின் சமூக பொருளாதாரப் பின்னணியையும், சிந்தனை நெறியையும் மனதிற் கொண்டு இத்தகைய பகுப்பு முறைகளுக்கு நியாயங்காண முனைதல் வேண்டும். பகுத்தறிவு பற்றிய கருத்துத் தெளிவு சமூக வாழ்க்கையினடியாகவே மக்கள் உணர்ந்துகொள்ளும் ஒரு பண்பு என்பதனை நாம் மனங்கொளல் வேண்டும். பண்டு தொட்டே பகுத்தறிவினை அடிப்படையாகக் கொண்ட இப்பகுப்பு நிலவவில்லை என்பதை வரலாற்றிலக்கணம் எழுதியுள்ளோர் யாவரும் எடுத்துக் கூறுவர்.11 தொல்காப்பியச் சொல்லதிகாரத்து 56 ஆம் சூத்திரம் பற்றிக் குறிப்பிடும் பொழுது,

"மிகப் பழங்காலத்தில் திராவிட மொழியிலும், சித்திய மொழியில் இருப்பனபோல, எல்லாச் சொற்களும் ஒரே வகையாக-அஃறிணையாகக்-கருதப்பட்டு வந்தநிலை இருந்தது"12

என்று வரதராசனார் கூறுவர். வேலுப்பிள்ளை இது பற்றிக் கூறும்பொழுது,

"தமிழ் முதலிய திராவிட மொழிகளில், பெயர்ச்சொற்கள் திணைபால் பாகுபாடற்ற நிலையிலிருந்து இரு திணை ஐம்பாற்

___________________________

10 கால்டுவெல், றொபேட்,1 A Comparative Grammar of the Dravidian or South Indian Family of languages, சென்னைப் பல்கலைக் கழகம், 1961, ப.220.

11கால்டுவெல், ப.220; வேலுப்பிள்ளை, ப, 135; வரதராசன் ப. 154; சீனிவாசன் ப.134.

12 வரதராசன், ப.154.

...

பகுப்பு படிப்படியே வளர்ந்து அமையப் பெற்றுள்ளன எனலாம்"

என்பர்.13

அதாவது இது தொல்காப்பியர் காலத்துக்கு முற்பட்ட நிலையாகும். கண வாழ்க்கையிலிருந்து நிலமானிய அமைப்புக்கு மாறும், மாறிய நிலையினைத் தொல்காப்பியஞ் சுட்டுகின்றதென மேலே கண்டோம். எனவே மேலே குறிப்பிடப்படும் திணை பால் பாகுபாடற்ற நிலை, முற்று முழுதான கண வாழ்க்கை நிலையைக் குறிக்கின்றதெனலாம். சேனாவரையர் கூறும் தத்துவ விளக்கம் இங்குப் பொருந்தாது நிற்பதனையும் நாம் கவனித்தல் வேண்டும். மொழியானது "அச்சமூகத்தின் வரலாற்றுக் காலம் முழுவதினதும், பல நூற்றாண்டுகள் காலமாக (அச்சமுதாயத்தினரிடையே காணப்பட்ட) பல்வேறு பொருளாதார அடித்தளங்களினது வரலாறு முழுவதினதும் பெறுபேறு ஆகும்" எனும் உண்மை இங்கு நிலை நிறுத்தப்படுகின்றது.

________________________________

13 வேலுப்பிள்ளை, ப.135

....

++++++++++++++++++++++++++++++++

6
பால், எண்

திணை பற்றிய இந்த நோக்கு தமிழ் மொழியின் 'பால்' 'எண்' பற்றிய பாகுபாட்டிற்கு எம்மை நேரே இட்டுச் செல்கின்றது.

"திராவிட மொழிகளில் திணை, பால் பாகுபாடும் எண் பாகுபாடும் தனிப்பட்டு வேறு நிற்பன அல்ல. திணை, பால் பாகுபாட்டிலேயே எண்ணுங்கலந்து அமைகின்றது."1 உயர்திணை, அஃறிணை ஒருமையில் மாத்திரம் ஆண்பால், பெண்பால் என்ற பாகுபாடு உண்டு. உயர்திணைப் பன்மையைப் பொதுப் பால் என்று கொள்வர். அஃறிணைப் பொருட்களை ஒருமையிலும் பன்மையிலும் ஆண்/பெண் அடிப்படையிற் பிரித்துக் கூறுவதில்லை. ஒன்றன்பால் பலவின்பால் என்றே கூறுவர். இங்குப் பால் என்பதும் எண் என்பதும் வேறுபடுத்தப்படவில்லை.

உயர்திணைக்கு 'ஆடுஉ அறி சொல்', 'மகடுஉ அறிசொல்','பல்லோரறியுஞ்சொல்' எனவும் அஃறிணைக்கு 'ஒன்று அறிசொல், 'பல அறிசொல்' எனவும் வகுத்துவிட்டு, மேற்கொண்டு அவற்றின் அமைதி விகற்பங்களைத் தொடர்ந்து கிளவியாக்கத்திலும் பின்னர் பெயரியலிலும் தொல்காப்பியர் விரிப்பர். நன்னூலாரோ 'ஆண்பால்,' 'பெண்பால், பலர்பால்,'

_______________________________

1 வேலுப்பிள்ளை, ப.135.

....

'ஒன்று,' பல'வென்று வகுத்துவிட்டு அவற்றின் அமைதி விகற்பங்களைப் பெயரியலிலும் பொதுவியலிலும் விரிப்பர்.

பால், எண் பற்றிய இப்பாகுபாட்டின் சமூக அடிப்படையைச் சமூக உளவியற்2 பின்னணி கொண்டே விளங்கிக் கொள்ள வேண்டும். அதாவது இவ்வாறு பிரித்து நோக்குவதற்கான சிந்தனை மரபின் சமூகப் பின்னணி யாது என்பதனையும் அச்சிந்தனை மரபு எத்தன்மைத்து என்பதனையும் விளங்கிக் கொள்ளல் வேண்டும். அதாவது உற்பத்தி முறைமையின் 'கருத்துநிலை மேற்கட்டுமானத்'தினை விளங்கிக் கொள்ளல் வேண்டும்.

பால், எண் வகுப்பின் அடிப்படைச் சமூக சிந்தனைகள் யாவை?

முதலாவதும் முக்கியமானதும் பின்வருமாறு: மக்களின் தனிப்பட்ட உறவுகளின்பொழுதே, சம்பந்தப்பட்டவர்களின் பால் வேறுபாடு3 முக்கியமானதாக அமைகின்றது. மக்களைத் தொகுதியாக நோக்கும்பொழுது அப் பால் வேறுபாடு முக்கிய மற்றதாகின்றது. அதாவது அவர்கள் முழுக் குழுவாகவே கருதப்பட்டார்களேயன்றிக் குழுவின் பிரிநிலைக் கூட்டங்களாக எண்ணப்படவுமில்லை, கருதப்படவுமில்லை.

முதலிற் பலர்பாற் பொதுமைக்கு வரலாற்றுப் பொருளியல்வாதம் காட்டும் காரணத்தினை நோக்குவோம். உலக வரலாற்றின் மூலஉற்பத்தி முறைமைகள் பற்றிக் குறிப்பிட்ட மார்க்ஸ், அவை ஆசிய முறைமை, சிலாவோனிக் முறைமை, புராதனத் தொல்சீர் முறைமை என வகுத்துக் கூறிவிட்டு இவற்றின் அடிப்படைப் பண்பைக் கூறும்பொழுது,

______________________________________

2. Social Psychology.

3. Sex differences.

....

"இவ்வுற்பத்தி முறைமை ஒவ்வொன்றிலும் தனி மனிதன் கணத்தினது அன்றேல் குழுவினது அங்கமாகவே கருதப்பட்டான்"4 என்று கூறிவிட்டு, ஆசிய முறைமைபற்றிக் குறிப்பிடும் பொழுது,

"மற்றைய உற்பத்தி முறைமைகளிலும் பார்க்க இது நீண்ட காலம் வலிவுடன் நின்று நிலைக்கும். இதற்குக் காரணம் அதன் அடிப்படையாக அமைந்துள்ள மூலக் கொள்கையே. அதாவது தனி மனிதன் சமூகத்திலிருந்து விடுபட்டு நிற்பதில்லை என்னும் கொள்கையே.5 என்று கூறப்பட்டுள்ளது

அதாவது தனி மனிதத் தொடர்புகள் (மகன், தந்தை, கணவன், மகள், தாய், மனைவி போன்றவை) தவிர்த்த மற்றைய சமூகப் பொதுவான உறவுகளில் அவன்/அவள் பொதுவாகவே கருதப்பட்டான்/ள் என்பதே உண்மையாகும். குழுநிலை விவாகம் (குலத்திற்குள் வரையறையற்ற புணர்ச்சி) எனும் வரலாற்றுக் கட்டத்தின் பின்னர் இத்தகைய உறவே நிலவியது எனலாம்.6 இந்த பாலியற்றொடர்புகள் தனிப்பட்ட நடவடிக்கைகளாக முகிழ்ப்பதற் குமுந்திய நிலைமையினைத் திணை, பாலற்ற நிலைமை சுட்டுகின்றதெனலாம். இந்த இரு வளர்ச்சிக் கட்டங்களும் தமிழ் மொழியிற் பேணப்படுகின்றன.7

_______________________________________

4 டானியேல் தோணர், "Marx on India and the Asiati Mode of Production, "Indian Sociology, இல.IX, 1966.

5 ஷெ

6 பிரடெரிக் ஏங்கெல்ஸ், குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் (மொழிபெயர்ப்பு), மொஸ்கோ

7 அவ்வாறாயின் பிற மொழிகள் இவற்றை ஏன் பேணவில்லை எனில், அதற்கு அம்மொழிக் கூட்டத்தினரின் வரலாற்றுப் பின்னணியையும், பூர்வ வரலாற்றையும் இலக்கணம் வகுக்கப்பட்டபொழுது நிலவிய நிலைமையையும் ஆராய்தல் வேண்டும்.

....

எனவே உயர்திணை ஒருமைக்கு மாத்திரம் ஆண், பெண் பால் வகுக்கும் முறைமையும் பன்மையைப் பாற்பொதுவாகவே கூறும் முறைமையும் தமிழ் நாட்டில் நிலவிய கணவாழ்க்கையினடியாகவே வருகின்றதெனலாம். பிற்கால இலாக்கண ஆசிரியர்கள் இம்முறையினை மரபு காரணமாக 'இறுக்கமாக'வே போற்றி வந்தனர். எனினும் கால வளர்ச்சி காரணமாகவும் அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்கள் காரணமாகவும் இன்று ஆண்பால் ஒருமை, பெண்பால் ஒருமை, ஆண்பாற் பன்மை பெண்பாற் பன்மை, ஆண் பெண் பன்மை எனப் பாலறிகிளவிகள் பலவகைகள் தோன்றியுள்ளன. இவற்றினைத் திரு. முத்துச் சண்முகம் அவர்கள் தொகுத்துத் தந்துள்ளார்கள்.8 பெண் கல்வி, சர்வஜன வாக்குரிமை, பெண்கள் எழுச்சி இயக்கங்கள் என வரும் பல சமூக அரசியற் காரணிகளால், பாரம்பரியமாக வந்த ஆண்-பெண் உறவுகள் மாற்றமடைந்துள்ளன. அவை மொழியிற் பிரதிபலிக்கப்படுவது இயல்பே.

அஃறிணைப் பொருட்களை ஒன்று, பல எனப் பகுப்பது பற்றிக் கூறப்பட்டிருப்பினும், இலக்கிய வழக்கிலும் பேச்சு வழக்கிலும் அவற்றினை ஒருமையிலேயே கூறும் முறைமையுண்டு. பால்பகா அஃறிணை என்னும் இக்கோட்பாடும் அஃறிணைத் தொகுதி பற்றிய மக்களது நோக்கு நெறியினை எடுத்துக் காட்டுகின்றதெனலாம். அதாவது அஃறிணைப் பொருட்களைத் தம்முள் விசேட வேறுபாடுகள் கொண்ட, தனித்தனியானவையாகக் கருதவில்லை. ஆனால் சில

________________________________________

8 முத்துச் சண்முகம், காலப்போக்கில் தமிழ்-இருபதாம் நூற்றாண்டு, தெ.பொ.மீ. மணி விழா மலர், கோவை, 1961, ப235. அந்திரனோவ், M.A., Standard Grammar of a Modern and Classical Tamil, சென்னை, 1969.

...

வேளைகளில் தம்முடன் உழைக்கும் மாட்டையோ எருமையையோ தனித்துவமுடையதாகக் கருதினர்.

தன்மை முன்னிலை படர்க்கை ஆகிய இடங்களிலும் வரும் மாற்றுப் பெயர்களின் பன்மை வடிவங்களுள் தன்மைப் பன்மை வடிவமொன்று "உளப்பாட்டுத் தன்மைப் பன்மை'எனப்படுவதாகும். "யாம் என்பது முன்னிலையை உளப்படுத்தாது. நாம் என்பது முன்னிலையை உளப்படுத்தும். அதனால் தான் இருவகை வடிவங்கள் ஏற்பட்டன.9 'யாம்' என்பது யானின் பன்மை. நாமின் ஒருமையாக நானைக் கொள்வது களப்பிரர் காலம் முதலே வழக்குக்கு வருகின்றது. எனவே 'நாம்' என்பது சிறப்பான பன்மை நிலையொன்றினைக் குறிக்கின்றதெனலாம். கண வாழ்க்கையில் உளப்பாட்டுத் தன்மைப் பன்மையாகிய 'நாம்' முக்கியம் பெறுவது இயல்பே.

தமிழ் நாட்டில் இவ்வழக்குப் பேச்சு மொழியில் உள்ளது. இலங்கையில் யாழ்ப்பாண வழக்கில் மாத்திரமே காணப்படுவதில்லையென்றும் மட்டக்களப்பு வழக்கில் இவ்வேறுபாடு உணர்த்தப்படுவதாகவும் சுசீந்திர ராஜா கூறுவர்.10

தமிழகத்துச் சமுதாயக் கூட்டமைப்புப் பெரும்பாலும் கணங்களே (குலக்குழுக்கள்) சாதிகளாக அமைந்துள்ளதால் நாங்கள்-நாம் என்ற பன்மை வேறுபாடு அப்பேச்சு வாக்கிலே தொடர்ந்து நிலவுவது, சமூக மானிடவியலாளனுக்கு ஆச்சரியத்தைத் தராது. கணநிலையில் வாழ்வோரிடத்து இவ்வேறுபாடு வினைச்சொற்களிலும் காணப்படுகின்றதென்பதற்குத் தொதுவர் மொழி உதாரணமாகும்.11 யாழ்ப்பாணத்திலே
__________________________________________

9 சீனிவாசன், ப.145.

10 கசீந்திரராஜா, S.A., Study of Pronouns in batticalo Tamil-Anthropological Linguistics, ஏப்ரல், 1973.

11 ஷெ கட்டுரை அடிக்குறிப்பு 6.

....

இது காணப்படாததற்கு அங்குச் சாதியமைப்பு குலக்குழு, கண அமைப்பிலல்லாது தொழிலடிப்படையிலேயே அமைந்திருத்தல் காரணமாகலாம். இலங்கைத் தமிழ் வழக்கிலும் மட்டக்களப்பில் இது நிலவிற்று என்பதற்குச் சான்றாகலாம். இந்த நாம், நாங்கள் வேறுபாடு ஆப்பிரிக்க மொழிகள் பலவற்றிலும் காணப்படுகின்றதென யெஸ்பேர்சன் கூறுவார்.12 அங்குக் குலக்குழு நிலைமை பேணப்பட்டமையை அவதானிக்கும் பொழுது, இதுவரை கூறப்பட்டதன் உண்மை விளங்கும்.

மரியாதைப் பன்மை (நீர், நீங்கள்) சமுதாயத்தில் தோன்றிய உறவுப் பேதங்களைக் காட்டி நிற்பதாகும்.

"ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்

ஒன்றினைக் கூறும் பன்மைக் கிளவியும்

வழக்கினாகிய உயர் சொற் கிளவி

இலக்கண மருங்கிற் சொல்லாறல்ல"

என வரும் தொல்காப்பியக் கிளவியாகச் சூத்திரம் இப்பண்பு தொல்காப்பியர் காலத்திலேயே தொடங்கி விட்டதென்பதை உயர்த்துகின்றது. பெயரியற் சூத்திரங்கள் 186,187 கூறுவனவற்றிலிருந்து பழைய நிலையில் மரியாதை காரணமாகப் பன்மைக் குறியீடு பயன்படுத்தப்படாத நிலைமையைக் காட்டுகின்றது. சமூக ஏற்றத் தாழ்வுகளின் வளர்ச்சி காரணமாக இப்பிரயோகம் தோன்றிற்றெனலாம். மரியாதைக் குறியீட்டின் அத்தியாவசியம் காரணமாக அஃறிணைக்கேயுரிய 'கள்' என்னும் பன்மை ஈறு உயர்திணையில் அந்தஸ்து வேறுபாட்டையுணர்த்த, முன்னிலை, படர்க்கை ஆகிய இரு இடங்களிலும் பயன் படுத்தப்படுகின்றது. (நீங்கள், தலைவர் அவர்கள்). மேலும்
___________________________________

12 யெஸ்பெர்ஸன், ப 192.

...


இவ்வுறவு மாற்றம் காரணமாகச் சில சொற்கள் ஒருமையிலும் அன், அள்/இ விகுதிகளுடன் பேசப்படுவதேயில்லை ( உம்: முதல்வர், பிரதமர், பேராசிரியர்).13

நீ, நீர், நீங்கள் என்ற மாற்றுப் பெயர்கள் இன்று பயன்படுத்தப்படும் முறைமையில், முன்னிலையாளரின் சுமூக அந்தஸ்தினை நாம் உய்த்துணர்ந்து கொள்ளலாம்.

++++++++++++++++++++++++++++++++

7
வேற்றுமை

வேற்றுமை என்பது ஒரு பெயர்ச் சொல்லின் பொருள், அதனை அடுத்து வரும் உருபால் அல்லது சொல்லால் (இதனை அண்மை நிலை என்று கூறுவர்) வேறுபடுதலாகும். இப்பொருள் வேறுபாடு உண்மையில் பெயரின் 'உறவுநிலை'யினை உயர்த்தி நிற்பதாகும்.

வேற்றுமை என்னும் இலக்கணக் கோட்பாடு பற்றிச் சேனாவரையரும், தெய்வச்சிலையாரும் தரும் விவரண விளக்கங்களை முதலில் நோக்குவோம்.

(அ) 'செயப்படு பொருள் முதலாயினவாகப் பெயர்ப் பொருளை வேறுபடுத்துணர்த்துதலின் வேற்றுமையாயின."1

-சேனாவரையர்

(ஆ) (வேற்றுமை என்பது) "பொருள்களை வேறுபடுத்தினமையாற் பெற்ற பெயர். என்னை வேறுபடுத்தியவாறு எனின் ஒரு பொருளை ஒருகால் வினைமுதலாக்கியும், ஒருகாற் செயப்படு பொருளாக்கியும், ஒருகாற் கருவியாக்கியும், ஒருகால் ஏற்பது ஆக்கியும், ஒருகால் நீங்க நிற்பது ஆக்கியும், ஒருகால் உடையது ஆக்கியும், ஒருகால் இடம் ஆக்கியும் இவ்வாறு வேறுபடுத்துவது என்க."2

-தெய்வச்சிலையார்

______________________________________________________

1 தொல். சொல்லதிகாரம் (சேனாவரையம்), ப.70.

2 தொல்காப்பியம் சொல்லதிகாரம், தெய்வச்சிலையார் உரை, கழக வெளியீடு, சென்னை 1963, ப.36.

......

நாம் கைக்கொண்டுள்ள அணுகுமுறையின்படி இதனை எவ்வாறு எடுத்துக் கூறலாம் ?

ஒரு பொருள் அல்லது ஒருவர், இன்னொரு பொருளுடனோ அன்றேல் இன்னொருவருடனோ, யாதானும் ஒரு வகையில் பௌதிக நிலைப்பட்ட அல்லது சமூக நிலைப்பட்ட அல்லது கருத்து நிலைப்பட்ட உறவினை ஏற்படுத்திக் கொள்ளும் பொழுது அவ்வுறவின் தன்மையைச் சுட்டும் வகையில் அப்பொருளினை அன்றேல் அவ்வொருவரினைக் குறிக்கும் பெயர்ச் சொல்லில் ஏற்படும் வேறுபடு நிலையே வேற்றுமையாகும். அதாவது ஏற்படும் உறவின் தன்மையை அப்பெயர்ச் சொல் சுட்டி நிற்கும்.

ஒரு பொருளுக்கும் இன்னொரு பொருளுக்கும், அன்றேல் ஒருவருக்கும் ஒரு பொருளுக்கும், அன்றேல் ஒருவருக்கும் இன்னொருவருக்கும் ஏற்படக்கூடிய உறவு, குறித்த சமுதாயத்தின் நடைமுறைப் பௌதீக, பொருளாதார, சமூக, ஆன்மீகத் தேவைகளுக்கு அப்பாற்பட்டதாக இருத்தல் முடியாது.

வேலுப்பிள்ளையின் கூற்று மிகப் பொருத்தமான ஒன்றாகும். 'ஒரு மொழியில் எத்தனை வேற்றுமைகள் உள்ளன என்பதை அந்த மொழியின் அக்கால நிலைமையுணர்ந்தே கூறவேண்டும்."3

தமிழில், பெயர்ச்சொற்கள் உறவுகளினை ஏற்படுத்திக் கொள்ளும்பொழுது அந்த உறவைப் புலப்படுத்த அச்சொற்களின் இறுதியில் உருபோ சொல்லோ வரும். வடமொழி, லத்தீன் போன்ற மொழிகளில் பெயர்ச் சொல்லின் ஈற்றில் வரும் உருபு உறவின் தன்மையை ஐயந்திரிபின்றித் தெளிவாக உணர்த்தும். தமிழிலும் உருபுகள் பெயரின் இறுதியில் வரும். ஆனால் வரும் உருபின் பயன்பாட்டுக்கேற்பப் பொருள் மாற்றம் ஏற்படுவதில்லை. அதாவது ஒரு வேற்றுமைக்கு உரியது என்று

_______________________________________________________

3 வேலுப்பிள்ளை, ப.266.

....

குறிப்பிடப்படும் உருபு வந்தாலும், அதனோடு சம்பந்தப்படுத்தபடாத ஒரு உறவினை அது குறிக்கலாம். எனவே தமிழில் உருபால் உறவு நிர்ணயம் செய்யப்படுவதில்லை.

தமிழில் 'பெயர் தோன்றுநிலை' எழுவாய் வேற்றுமை எனப்படும். பெயர்ச் சொல்லினிறுதியில் வரக்கூடிய உருபுகளைப் பற்றிக் கூறும்பொழுது தொல்காப்பியரும், நன்னூலாரும் ஒவ்வொரு உருபும் பல்வேறு பொருட்களை (உறவுகளை) உணர்த்தும் என்பர். அந்த அடிப்படையில் உறவு முறைகளை வகுக்க முனைந்த இவ்விரு இலக்கண ஆசிரியர்களும் உருபுகள் உணர்த்தக்கூடிய உறவுகளை நிரற்படுத்திக் கூறிய பின்னர், இலக்கிய வழக்கிலும் பேச்சு வழக்கிலும் அவ்வாறு எக்காலத்தும் வருவதில்லை என்பதனையுணர்ந்து, இறுதியில்

யாதனுருபிற் கூறிற்றாயினும்

பொருள் செல்மருங்கில் வேற்றுமை சாரும்

எனக் கூறி முடிப்பர். தொல்காப்பியர் ஒவ்வொரு உருபு மூலமும் எவ்வெவ்வுறவுகள் உணர்த்தப்படலாமென்பதை விவரமாக எடுத்துக் கூறுவர். அவர் கூறியவை அவர் காலத்து மொழி வழக்கில் (எனவே சமுதாய உறவிற்) காணப்பட்டவையெனலாம். ஆனால் "நன்னூலார் முதலிய பிற்கால இலக்கண நூலாசிரியர் தொல்காப்பியர் விரிவாகக் கூறியதைத் தாம்சுருக்கிக் கூற வேண்டுமென்ற எண்ணத்தால்" வகைபாடுகளுக்கும் சீரான அமைப்பு நெறிக்கும் முக்கிய இடம் கொடுக்க முனைந்தனர் எனலாம். உதாரணமாகத் தொல்காப்பியர், தொழிலின் முதனிலைகளை வகுத்துக் கூறுவர். அவர் கருத்துப்படி தொழிலானது செயல், வினைமுதல், செயப்படுபொருள், நிலம், கருவி முதலிய ஆறையும், இன்னதற்கு, இது பயனாக என்பவை பற்றிய விளக்கத்தையும் தரலாமென்பர். இத்தகைய விரிவான வகைப்படுத்தலை நன்னூலிற் காணமுடியாது.

நன்னூலில், காலத்தின் மாற்றங்கட்கிடையே அதிக உறவுகளும் எடுத்துக் கூறப்படுகின்றன.

நாகரிகம் வளர, சமுதாயம் முன்னேற, அன்றாட வாழ்க்கையிற் புதுப்புதுச் சக்திகள் தொழிற்படத் தொடங்க, புதிய உறவு முறைகள் ஏற்படுவது இயற்கை. அவற்றை நாம் வேற்றுமை மூலம் உணர்த்துகின்றோம். உதாரணத்துக்கு மூன்றாம் வேற்றுமையை எடுப்போம். தொல்காப்பியர் இவ்வேற்றுமை வினைமுதலையும் கருவியையும் உணர்த்தும் என்பர். நன்னூலாரோ கருவி கருத்தா உடனிகழ்வு ஆகியனவற்றை இவ்வேற்றுமை உணத்துமென்பர். கருவிகள் யாவை என்பதற்கு மயிலைநாதர் தரும் உரை பொருளியல், அறிவியல் உறவுகளை எடுத்துக்காட்டுகின்றன. அவர் காரகக்கருவி, ஞாபகக்கருவி என்பர். இவற்குப் பின்வந்த சங்கரநமச்சிவாயர் முதற் காரணம், துணைக்காரணம் என விரித்துக் கூறுவர்.

"வனைந்தானென்புழிக் குடமாகிய காரியத்திற்கு அதுவதுவாகிய மண் முதற்காரணம்: குலாலனது அறிவும் அந்தக் கரண முதலாகிய ஞாபகக்கருவியுங் தண்டசக்கர முதலாகிய காரகக் கருவியும், அம்முதற் காரணத்துக்குத் துணையாய் நின்று காரியத்தைத் தருதலின் துணைக்காரணம். குலாலனிமித்தமாக அக்காரியம் தோன்றுதலின் அவன் நிமித்த காரணம். ஞாபகக் கருவியென்பது அறிதற் கருவி காரகக்கருவி என்பது செய்தற்கருவி."4

கருவி பற்றிய இவ்விளக்கத்தில், பொருளியலாளர் கூறும் மூலப்பொருள், உற்பத்திக் கருவிகள், உழைப்பின் தன்மை ஆகியன யாவுமே எடுத்துப் பேசப்படுவதை உணரலாம். தொல்காப்பியர் காலத்திலும் பார்க்க, நன்னூலார் காலத்திலும், அதற்குப் பின்னர் சங்கரநமச்சிவாயர் காலத்திலும் பொருளாதார

___________________________________________

4 நன்னூல் மூலமும் சங்கரநமச்சிவாயருரையும், சாமி நாதையர் பதிப்பு சென்னை, 1925, ப.145.

....

உறவுகளின் தன்மை ஆழமாகச் செல்வதும், ஆழமாகச் செல்லும் அவ்வுறவுகள் தெரிந்து தெளிக்கப்படுதலும் இவ்வுதாரணத்தால் துல்லியமாகின்றன. பொருளாதார அடித்தளத்தின் இரு அமிசங்களென முன்னர் எடுத்துக் கூறப்பட்ட உற்பத்திச் சக்திகள் உற்பத்தி நிலை நின்ற உறவுகள் இரண்டுமே இவ்வேற்றுமை விளக்கத்தின் மூலம் தெளிவாகின்றன.

இவ்வேற்றுமைக்குரிய கருத்தாப் பொருள் பற்றிய விளக்கம் இலக்கண ஆசிரியரது அன்றேல் உரையெழுதியவரது காலத்தில் நிலவிய உறவு முறைகளைத் தெளிவுபடுத்தும் முறையினைப் பார்ப்போம். கர்த்தாப் பொருளை மயிலைநாதர் ஏவுதற் கர்த்தா என்றும் இயங்குதற் கர்த்தா என்றும் பிரிப்பர்.

"தச்சனாலியற்றப்பட்ட வையம், கடவுளாலாக்கப்பட்ட விமானம், புலியால் விழுங்கப்பட்டான், சுறவால் ஏறுண்டான்: இவை செய்யும் வினைமுதல். அரசனாலியற்றப்பட்ட தேவகுலம், தேவராலாய திரு: இவை ஏவல் வினை முதல்."5

ஒரு பொருளின் ஆக்கத்தில் உழைப்பவனுக்கும் அத்தொழிலைச் செய்விப்பவனுக்குமுள்ள பொருளாதார வேறுபாட்டை(employer-employee difference) ஏவுதற் கர்த்தா, இயங்குதற் கர்த்தா என்ற கோட்பாடு நன்கு புலப்படுத்துகின்றது. பல்லவ சோழ சாம்ராச்சியங்களின் பின்னர் இத்தகைய கருத்து தொடங்குவதில் ஆச்சரியமில்லை.

தச்சனாலாகிய கோயில்

அரசனாலாகிய கோயில்

என வரும் பிற்கால உதாரணங்கள் தொழிற்பிரிவின் உண்மை ரூபத்தை எடுத்துக் காட்டுகின்றன.

பெயர் நிலப்பட்ட (ஒரு பொருளின் அல்லது ஒருவரின்) உறவுகளை மொழி எவ்வாறு காட்டுகின்றது என்பதற்கும், அது

_____________________________________________

5 நன்னூல் மூலமும் மயிலைநாதருரையும், சாமிநாதையர்பதிப்பு, சென்னை, 1946, ப.147.

....

காட்டும் முறையிலுள்ள தருக்கரீதியான வரன்முறையையும் வேற்றுமையியல் மூன்றாஞ் சூத்திரத்திற்குத் தெய்வச் சிலையார் எழுதியுள்ள உரை அழகாக விவரிக்கின்றது.

"யாதானும் ஒரு தொழிலும் செய்வான் உள்வழி அல்லது நிகழாமையின் அது செய்து முடிக்கும் கருத்தா முன் வைக்கப்பட்டான். அவன் ஒரு பொருளைச் செய்து முடிக்குங்கால் செய்யத் தகுவது இது எனக் குறிக்க வேண்டுதலின் செயப்படுபொருள் இரண்டாவது ஆயிற்று அவ்வாறு அப்பொருளைச்செய்து முடிக்குங்கால் அதற்காங் கருவி தேடுமாதலின் அக்கருவி மூன்றாவதாயிற்று. அவ்வாறு செய்துமுடித்த பொருளைத்தான் பயங்கோடலேயன்றிப் பிறர்க்கும் கொடுக்கும் ஆதலின் அதனை ஏற்று நிற்பது நான்காவது ஆயிற்று. அவ்வாறு கொடுப்புழி அவன் கையினின்றும் அப்பெர்ருள் நீங்கி நிற்பது ஐந்தாவது ஆயிற்று. அவ்வாறு நீங்கின பொருளைத் தனதென்று கிழமை செய்தலின் அக்கிழமை ஆறாவது ஆயிற்று. ஈண்டுக் கூறப்பட்ட எல்லாவற்றிற்கும் இடமும் காலமும் பொதுவாக நிற்றலின் அவை ஏழாவது ஆயின. இவையிற்றோடு ஒத்த இயல்பிற்று அன்றி எதிர்முகம் ஆக்குதற் பொருட்டு ஆதலின் விளி என்பது எல்லாவற்றினும் பிற்கூறப்பட்டது."6

உரையாசிரியர்களுக்கே இயல்பான வலிந்து அமைதி காணும் பண்பு இவ்வுரைப் பகுதியிற் காணப்படுவதுண்மையெனினும், இலக்கண மரபிலும் பொருளாதார உறவுகளை விதந்தோத வேண்டிய தேவையினையும், அவ்வுறவுகளின் தன்மையினையும் இங்கு நாம் காணலாம்.

சொல்லுரு மாற்றத்தால் வேற்றுமையுணர்த்தும் மொழிகளிலேகூட, மனிதர்கள் தாம் எடுத்துணர்த்த விரும்பிய உறவுகளையெல்லாம் ஐயந்திரிபற எடுத்துக் காட்டுவதற்கு வேற்றுமை வகைகள் போதா. எனவே வேற்றுமையமைப்பில்

_____________________________________________

6தொல், தெய்வச் சிலையாருரை, ப.38.

....

நெகிழ்ச்சி ஏற்படுவது தவிர்க்க முடியாதென எச்.ஆர்.ஸ்ரொக்கோ கூறுவர்.7 தமிழில் வேற்றுமையமைப்பு வடமொழியமைப்பினைப் பின்பற்றியதென்றும் அது மொழியின் இயல்பான அமைப்புக்கு அந்நியமானது என்றும் கால்டுவெல் கூறுவர்.

"தமிழில் ஒரு பெயர்ச் சொல்லுக்குப் பின்வரும் அண்மைநிலையிலும் உண்மையில் புதிய ஒரு வேற்றுமையாகின்றது. எனவே இத்தகைய ஒற்றுமைகளின் எண்ணிக்கை பேசுபவரின் தேவைகளையும் அவர் எடுத்துக் கூற விரும்பும் கருத்து வேறுபாடுகளையும் பொறுத்தது."

கால்டுவெல்லின் இக்கூற்று தமிழில் வேற்றுமையின் தன்மையை நன்கு விளக்குகின்றது.

++++++++++++++++++++++++++++++++

8
வினையமைப்பு

செயல், தொழில், உழைப்பு நிலைமை ஆகியனவே மனித சமுதாயத்தில் உறவுகளின் ஊற்றாக அமைகின்றன என்பதை இதுவரை கூறியவற்றால் உய்த்துணரக் கூடியதாகவிருக்கும். இவற்றினைச் சுட்டுவது வினைச் சொல்லாகும். எனவே சமூக உற்பத்தி உறவுகள்பற்றி ஆராயும் நாம் வினைச்சொல்லின் அமைப்புப்பற்றியும் பரிணமிப்புப் பற்றியும் அறிந்துகொள்வது அவசியமாகின்றது. அவற்றின் மூலம் சமூக உறவின் அடிப்படைப் பண்புகளைக் காணக்கூடியதாகவிருக்கும்.

வினைச்சொல்லுக்குத் தொல்காப்பியரும் நன்னூலாரும் தரும் வரைவிலக்கணங்களை நோக்கும்பொழுது, சில அழுத்த வேறுபாடுகள் இருப்பதை உணரக்கூடியதாகவிருக்கின்றது. தொல்காப்பியர் தமது வரைவிலக்கணத்தில்,

'வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது

நினையுங் காலைக் காலமொடு தோன்றும்"

என்று கூறி, மூன்று காலங்களையும் கூறி, மூன்று காலங்களொடும் பொருந்துமெனக் கூறிப் பின்னர்

"குறிப்பினும் வினையினும் நெறிப்படத் தோன்றிக்

காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம்

உயர்திணைக் குரிமையும் அஃறிணைக் குரிமையும்

ஆயிரு திணைக்கு மோரன்ன உரிமையும்

அம்மு வுருபின தோன்ற லாறே"

என்றுங் கூறுவர். இவ்விளக்கத்தினை நோக்கும்பொழுது,

"செயல் பற்றிப் பிறப்பதை வினையென்றும், பொருளின் தன்மை சுட்டி வருவதைக் குறிப்பென்றும், இவை இரண்டும் வினைச் சொல்லென்றும் தொல்காப்பியர் கொண்டிருக்கிறார் போலத் தெரிகிறது."1

தொல்காப்பியர் குறிப்புவினையென்னாது 'குறிப்பு' என்று சொல்வதை நோக்கல் வேண்டும். இதனைக் கூர்ந்து நோக்கும்பொழுது 'குறிப்பு' என்பதன் மூலம் தொல்காப்பியர் 'ஆகி நிற்கும் நிலை'யினைக் குறிக்கின்றார் என்பதையும் அதனைச் செயல்போன்ற வினைத்தன்மையுடையதாகக் கூறுகின்றார் என்பதும் தெரியவருகின்றது.

நன்னூலோ

"செய்தவன் கருவி நிலம்செயல் காலம்

செய்பொருள் ஆறும் தருவது வினையே"

என்று கூறி அடுத்துக் குறிப்பு வினைப்பற்றிக் குறிப்பிடும் பொழுது.

"பொருண்முத லாறினுந் தோன்றிமுன் னாறனுள்

வினை முதல் மாத்திரை விளக்கல் வினைக்குறிப்பே"

என்பர்.

இங்குக் காலத்தை வெளிப்படையாகக் காட்டுவனவும் குறிப்பாகக் காட்டுவனவுமென்ற பாகுபாடே எடுத்துக் கூறப்படுகின்றது.2 பிற்காலத்தில் வினைமுதலுக்கு அதாவது

____________________________________

1 வேலுப்பிள்ளை, ப.159.

2 ஷெ

....

தொழிலைச் செய்பவனுக்கே அழுத்தங் கொடுக்கும் வகையில் விளக்கம் அமைந்திருப்பதையும், தொல்காப்பியத்தில் செயல் அன்றேல் 'உளதாம் நிலை' அழுத்திக் கூறப்பட்டிருப்பதையும் ஓரளவு உய்த்துணர்ந்து கொள்ளலாம். இந்நிலை ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதெனின், இது சுட்டி நிற்கும் சமுதாய அமிசங்கள் முக்கியமானவையாகும். முந்திய நிலையில் 'சாதனை'அல்லது செயல்நிலை பெரிதும் வற்புறுத்தப்பட, பிற்காலத்தில் செயல், செய்பவனோடு இணைந்து நோக்கப்படுவதைக் காணலாம். வினைமுற்றுக்கள் பால் பிகுதி பெறாமலும் இன்னொரு காலத்தில் நின்றன என்ற வரலாற்றுண்மையும் இக்கருத்துக்குச் சிறிது அரண் செய்கின்றது.

உற்பத்தி முறைமைகளும், அதன் காரணமாகத் தொழில் உழைப்பு முறைமைகளும், ஊதிய முறைமைகளும், சமுதாய அமைப்பும் மாற மாற வினைகளின் தன்மையும் அவை இயற்றப்படும் முறைமையும் மாறுவது இயல்பே. இம்மாற்றங்கள் காரணமாக வினைப்பொருள் உணர்த்தப்படும் தன்மையும் மாறத் தொடங்குகின்றது. இதனால் வினைச்சொற்களின் வகையும் படிப்படியாக மாறத் தொடங்குகின்றன.

இம்மாற்றம் ஏற்பட்ட முறைமைகளை அறிந்து கொள்வதற்கு முன்னர், தமிழ்நாட்டில் இம்மாற்றம் வேகம் அடைந்த முறைமையினை அறிந்து கொள்வது அத்தியாவசியமாகும். தமிழ்நாட்டினை-பொதுவாக இந்தியாவினை-எடுத்து நோக்கும் பொழுது, இம்மாற்ற வேகம் மிகக் குறைந்ததாகவே காணப்பட்டது. அத்துடன் சமுதாயத்தின் சில பகுதிகளில் வளர்ச்சி வேகம் (பொருளாதார மாற்ற வேகம்) கூடுதலாகயும் சிலவற்றில் மிகக் குறைவாகவும் அமைந்திருந்தது. இத்தகைய பொருளாதார வளர்ச்சியை

______________________________________

3 Uneven development.

....

'சமனற்ற வளர்ச்சி' என்பர். சமனற்ற வளர்ச்சி விதியை விளக்கப் புகுந்த வில்லியம் வார்ட் அதனைப் பின்வருமாறு எடுத்துக் கூறுவர்.

"மனித வளர்ச்சியின் பிரதான ஊற்றுக் கண்ணாக அமைவது, உற்பத்திச் சக்திகளின் மீது மனிதனுக்குள்ள ஆதிக்கமே. வரலாறு முன்னேற முன்னேற, சமூகத்தின் பல்வேறு துறைகளில், உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி வேகம் சிலவற்றிற் கூடுதலாகவும் சிலவற்றிற் குறைவாகவும் காணப்படும். இவ்வேறுபாடு இயற்கைவள நிலைமை, வரலாற்றுப் பின்னணி, சமுதாயத் தேவை ஆகியன கொண்டு தீர்மானிக்கப் படும். இதனால் வளர்ச்சி வேகம் சமனற்றதாகவிருக்கும். அதன் காரணமாக அச்சமுதாயத்திலுள்ள பல்வேறு மக்களின் அல்லது பல்வேறு துறைகளின், அல்லது பல்வேறு வர்க்கங்களின், அல்லது பல்வேறு சமூக நிறுவனங்களின் வளர்ச்சி கூடியும் குறைந்தும் அமையும்,"4

இந்தியா இத்தகைய சமனற்ற வளர்ச்சி விதிக்கு ஆட்பட்ட ஒரு நாடாகும்.

"தமிழ்நாடு புவியியல் ரீதியிலும் சமூக ரீதியிலும் சமனற்ற தன்மையைக் கொண்டுள்ளது. பழனிமலை, நீலகிரி, மேற்கு மலைத் தொடர் முதலிய மலைப் பகுதிகளும், தஞ்சாவூரிலுள்ள நன்செய் பகுதிகளும், திருச்சிராப்பள்ளி, மதுரை, சேலம், கோயம்பத்தூருக்கிடைப் பட்ட புல்வெளிப் பகுதிகளும் திருநெல்வேலியின் தேரிப் பகுதிகளும் எனச் சமுதாய ரீதியிலும், பூகோள ரீதியிலும், தமிழ்நாடு சமனற்ற, நிலப் பகுதிகளையும் சமுதாய நிலையிலுள்ள குழுக்களையும் கொண்டுள்ளது."5

__________________________________________

4 மேற்கோள் 21-இல் குறிப்பிடப் பெற்ற கட்டுரையில்.

5 ஷெ

....

மேலும் தமிழ்நாட்டின் பொருளாதார வரலாற்றினை ஆராய்ந்தால், ஆங்கில ஆட்சியின் பின்னரும் சிறப்பாகக் சுயாட்சியின் பின்னருமே கைத்தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதென்பது தெரியவரும். அக்காலம்வரை பாரம்பரியப் பொருளாதார முறைமையே போற்றப்பட்டும், பேணப்பட்டும் வந்தது, ஆங்கில ஆட்சிக் காலத்தில் நிலவிய சமீன்தாரி, றயற்வாரி முறைமைகள் காரணமாக அடிநிலையில் பொருளாதார உறவுகள் மாற்றப்படாமலே இருந்தன. இவை காரணமாக சில இடங்களில் வளர்ச்சி தவிர்க்கப்பட்டது. பலவிடங்களில் வளர்ச்சி வேகம் தடைப்படுத்தப்பட்டுமிருந்தது.


இந்நிலை பல்லவர், சோழர், விசயநகர நாயக்க மன்னர் காலத்திலும் நிலவிய ஒன்றே. சாதி வழிவரும் நிலவுடைமை வளர்ச்சி வேகத்தைக் கட்டுப்படுத்தி வந்தது.6

இவை காரணமாகத் தொழில், உழைப்பு, செயல்வகை ஆகியனவற்றைக் குறிக்கும் வினை வகைகளில் பெரு மாற்றம் ஏற்படாதிருந்தது எனலாம். ஏற்பட்ட மாற்றங்கள் அசமந்த வேகத்தில்ஏற்பட்டனவே. ஆயினும் ஆட்சிய திகாரமுடையோர் சம்பந்தப்பட்ட மாற்றங்கள் இயல்பான வேகத்தில் ஏற்பட்டன. அவற்றைப் பிரதிபலிக்கும் வினையமைப்புக்களும் அவற்றுக்கேற்ற முறையில் மாறின.7

ஆட்சியதிகார முடையோர் சம்பந்தப்பட்ட, சிறப்பாக அவர்களது சமூக அந்தஸ்து சம்பந்தப்பட்ட, ஒரு வினை வகை, ஏவல்-வியங்கோள் வினைவகையாகும்.

ஏவல், வியங்கோள் அதனை பற்றிய பின்வரும் தகவல்கள் அவ்வினையமைப்பின் சமூக உறவு நிலைப்பட்ட முக்கியத்துவத்தையுணர்த்தும்.

_______________________________________________

6 இதுபற்றிய பேராசிரியர் நா. வானமாமலையின் கட்டுரைகளைப் பார்க்க.

7 வேலுப்பிள்ளை, ப.205.

....

வா, போ என்னும் சொற்களில் உள்ள ஏவும் கடுமை நீக்கி, வேண்டுகோளாக ஏவும் முறை அமைந்தவற்றை வியங்கோள் என்பர்."8

"வியங்கோளினை மரியாதை ஏவல் என்றும் குறிப்பர். ஏவல் முன்னிலையாருக்கு இடும் கட்டளையாகவோ, வேண்டுகோளாகவோ அமைய வியங்கோள் வாழ்த்தல் வைதல், விரும்பல் முதலிய பொருள்களில் வரும். ஏவல் முன்னிலையில் மாத்திரம் வர வியங்கோள் இரு திணை ஐம்பால் மூவிடங்களிலும் வரும். நன்னூலார் ஏவல் வினையையும் வியங்கோள் வினையையும் இந்த அடிப்படைகளிலேயே வேறுபடுத்தி, வெவ்வெறாகக் கூறுவர்."9

தொல்காப்பியர் வியங்கோள் படர்க்கை இடத்துக்கு உரியது என்று கூறினும், தன்மை முன்னிலையில் வியங்கோள் பயன்படுத்தப்பட்டுள்ளமைக்குச் சங்க இலக்கியச் சான்றுகள் உள்ளன. வியங்கோளுக்குரியனவாகக் கொள்ளப்படும் வாழ்த்தல், விதித்தல், வேண்டிக்கோடல், வைதல் ஆகியன உயர்மட்ட மக்களின் நிலைகொண்டு வகுக்கப்பட்டுள்ளவையே. வியங்கோள் உயர்நிலை வழக்காக, கீழ்நிலைப்பட்டோரை ஏவற் கடுமை'யுடன் ஆணையிடுவது ஏவல் வினையாயிற்றென்ப நெருங்கிய உறவுள்ளோரிடத்தும் இம்முறையைப் பயன்படுத்தலாமெனினும், ஏவல் வினையின் சமூக முக்கியத்துவம் மரியாதையற்ற ஏவலுக்கு இலக்கணங்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளமையையே எடுத்துக் காட்டுகின்றன. அதாவது சமூக ஏற்றத்தாழ்வினை இலக்கணம் பிரதிபலிக்க வேண்டியதாயிற்று.

சமுதாய அந்தஸ்து ரீதியில் மேற்கூறியது முக்கியமானது. ஆனால் தொழிலமைப்பினைப் பொறுத்தவரையில் தன்வினை/பிறவினை என்ற பாகுபாடே முக்கியமானதாகும்.

__________________________________________________

8 வரதராசன், ப.273.

9 வேலுப்பிள்ளை, ப.205

"வினைச்சொல்லில் உணர்த்தப்படும் வினையைத் தான் செய்தல் தன்வினை: பிறரைச் செய்வித்தல் பிறவினை"10 ஆகும். தன்வினை பிறவினை என்ற பாகுபாடு தொல்காப்பியரால் சுட்டப் பெற்றுள்ளதெனினும் (சொல்.சூத்.213) இப்பெயர்களை முதன்முதலில் இலக்கணக் கொத்து ஆசிரியரே வகை முறையாக எடுத்தோதினார்.11 நன்னூலார் பிறவினையை ஏவல் வினையென்பர்.(சூத்.137.)

தன்வினை, பிறவினைபற்றி ஆராயுமிடத்தில், சீனிவாசன் தன்வினை, பிறவினை இயக்குவினை என மூன்று வகைகளாகக் கூறுவர்.12 ஆனால் வேலுப்பிள்ளை இயக்குவினை பிறவினையென்றும் பெயர்பெறும் என்பர்.13

சொத்துரிமை வளர்ச்சி, உடைமையினடியாகத் தொழில்கள் பிரிக்கப்படுதல், தொழிற்பிரிவு ஆகியன நிலையான பொருளாதார அமிசங்களாகப் பரிணமித்ததன் பின்னரே தன்வினை பிறவினை (இயக்குவினை) என்ற பாகுபாடு தோன்றியிருக்கலாம். சங்க காலத்திலேயே இத்தகைய சமூகப் பாகுபாடு படிப்படியாக முகிழ்ப்பதைக் காணக்கூடியதாகவிருக்கின்றது. 'கிழான்', 'வினைவலர்' எனும் பதப் பிரயோகங்கள் இதற்குச் சான்றாகும்.14 நிலையான சாம்ராச்சியங்கள் நிறுவப்பட்டுப் பொருளாதார அமைப்புப் பூரண நிலமானிய அடிப்படையில் இயங்கத் தொடங்கியபொழுது இதற்கு இலக்கண அங்கீகாரம் கொடுப்பது இன்றியமையாததாகி விடுகின்றது.
________________________________________________

10 வரதராசன், ப.252.

11 வேலுப்பிள்ளை, ப.231

12 சீனிவாசன், ப.200

13 வேலுப்பிள்ளை, ப.229.

14 இதுபற்றிய பூரண விளக்கத்துக்கு-சிவத்தம்பி, கா., Development of Aristocracy in Ancient Tamilnad. Vidyodaya Journal of Art Science and Letters. தொகுதி 4 இல் 1-2 பார்க்க.

....

ஆயினும் தமிழ்நாட்டின் வரலாற்றில் இந்நிலை ஆரம்பத்திலிருந்து இருக்கவில்லையென்பதனை நன்கு எடுத்துக்காட்டுகின்றது சீனிவாசனின் கூற்று.

" மிகப் பழங்காலத்தில் தன்வினைக்கும் பிறவினைக்கும் பொதுவான வடிவம் இருந்துள்ளது. இது சங்க காலத்திலும் தொடர்ந்து அமைந்துள்ளது.15

கணவாழ்க்கை நிலையில் தொழில் கூட்டுத் தொழிலாகவே விளங்குமாகையால் அங்குத் தன்வினை என்றும் பிறவினை என்றும் இயக்குவினை என்றும் தொழில்களை வகுத்தல் முடியாது. பிறவினை/இயக்குவினை என்ற பாகுபாடு பொருளாதார அடிப்படையைப் பொறுத்தவரையில், உண்மையாகத் தொழிலை ஆற்றுபவனை, தொழிலின் பயனிலிருந்து அந்நியப்படுத்தும் முயற்சியே. செயப்படுபொருள் குற்றியவினைக்கும், குன்றாவினைக்கும், தன்வினை பிறவினைக்குமிடையிலுள்ள தொடர்புகள் பற்றிய மயக்கத்துக்கும் இதுவேகாரணமாகும்.

பெயர்ச்சொல் பற்றிய இலக்கண அமைதியில் ஏவுதற்கர்த்தா இயக்குதற்கர்த்தா என்ற பாகுபாடு ஏற்பட்ட பின்னர் தன்வினை, பிறவினை (இயக்குவினை) என்ற பாகுபாடு ஏற்படுவது தர்க்கரீதியான முடிவேயாகும்.

அடுத்து, செயலின் தோற்றநிலை, அதன் தாக்கம் பற்றிய விவரங்களைச் சூசகமாக எடுத்துணர்த்தும் செய்வினை-செய்யப்பாட்டுவினை எனும் வினை வகை முக்கியமானதாகும்.

உ-ம் அவன் அடித்தான்

அவன் அகப்பட்டான்

இவ்வினை வகை இன்று பெருவழக்கிலுள்ளது.

______________________________________

15 சீனிவாசன், ப.202.

....

தொல்காப்பியம் இவ்வாறு வினைகளை வகுக்காவிட்டாலும் செய்யப்படுபொருள் என்னும் கோட்பாடு அக்காலத்தில் நிலவியதென்பது சொல்லதிகாரத்தில் வரும்,

"செயப்படு பொருளைச் செய்தது போலத்

தொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபே" (246)

எனும் வினையியற் சூத்திரத்தாலே தெளிவாகும். நன்னூலாரும் தொல்காப்பியத்தை அநுசரித்து, இவ்வினை வகையைக் குறிப்பிடாது. அதே சூத்திரத்தைச் சிறிது மாறுபடுத்தி,

"செயப்படு -ப்‘ருளைச் செய்தது போலத்

தொழிற்படக் கிளத்தலும் வழக்கினுள் உரித்தே" (399)

என்று கூறுவர். இலக்கணச் சுருக்கமே இவ்வாறு வினைகளைச் செய்வினை, செய்யப்பாட்டுவினையெனப் பாகுபாடு செய்கின்றதென வேலுப்பிள்ளை கூறுவர்.16 இலக்கணச் சுருக்கத்தை எழுதியவர் ஆறுமுக நாவலர். இவர் வாழ்ந்த காலம் 1822-1879 ஆகும். எனவே பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவர் இவ்வினை வேறுபாட்டைத் தெளித்துக் கூறுவதற்கான காரணத்தினை நாம் அறிதல் அவசியமாகின்றது.

தமிழ் இலக்கணத்தை மேனாட்டு மொழி இலக்கணப் பாரம்பரியத்துடன் ஒப்புநோக்கி இலக்கணமெழுதிய வீரமாமுனிவர், தாம் இலத்தீனில் எழுதிய தமிழிலக்கண நூலில் இதுபற்றி ஆராய்ந்துள்ளார். இந்நூல் A Grammar for the common dialect of the Tamil Language என ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்நூல் பற்றி ஆராய்ந்துள்ள தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், வீரமாமுனிவர் Passive form என ஆங்கிலத்திற் குறிப்பிடப்பட்டதற்குத் தமிழ்ச் சமனாக விளங்கும் செயப்பாட்டுவினை தமிழில் உண்மையில் இல்லையென்றும்

____________________________________________

16 வேலுப்பிள்ளை, ப.212.

....

கால்டுவெல் அவர்கள் வீரமாமுனிவரை ஆதாரமாகக் கொண்டே திராவிட மொழிகளிலேயே இவ்வினையமைப்பு இல்லையென்று கூறினாரென்றும், எடுத்துக்காட்டியுள்ளார்.17

ஆங்கிலத்தில் Passive (பஸ’வ்) என்று கூறப்படும் வினையமைப்புத் தமிழில் இருந்திருக்கவில்லையெனினும் அது வேறுபல வழிகளில் உணர்த்தப்பட்டதென்பதை எல்லா ஆசிரியர்களும் எடுத்துக் கூறுவர்.18 அப்படியிருப்பினும் தமிழ் மரபைப் பொன்னே போல் போற்றிவந்த ஆறுமுக நாவலர் இவ்வினை வகைகளை விதந்தோதியமைக்கான முக்கிய காரணங்கள் இருந்திருத்தல் வேண்டும். அதனை அறிவதற்கு முன்னர் செயப்பாட்டுவினை வழங்கும் இடங்கள் பற்றி ஜெஸ்பர்சன் கூறுவனவற்றை வரதராசன் வாயிலாகப் பார்ப்போம்.

"செயப்பாட்டுவினை வழங்கும் இடங்களை ஆராய்ந்து பின்வரும் காரணங்களை குறிக்கின்றார் ஜெஸ்பர்சன்.

1. செய்தவன் (கருத்தா) தெரியாநிலை.

2. செய்தவன் பேசுவார் மனத்தில் இடம் பெறுநிலை.

3. செய்தவன் சொல்லாமலே தெரியும் நிலை.

4. செய்தவனைக் கூறாமல் விடுதலை நாகரிகமாகவோ நன்மையாகவோ விளங்கும் நிலை

5. செயப்படுபொருளை எழுவாயாக்கிக் கூறுமாறு அதற்கு அமையும் சிறப்பு நிலை.

__________________________________________

17 மீனாட்சிசுந்தரன், தெ.பொ., Collected Papers. An Eighteenth Century Tamil Grammar, அண்ணாமலைநகர், 1961, ப.216.

18 வேலுப்பிள்ளை. ப.214; வரதராசன், ப. 259 முதல்; சீனிவாசன், ப.222.

....

6, முன்னும் பின்னும் உள்ள வாக்கியங்களின் தொடர்பு காரணமாகச் செயப்படுபொருள் முன்நிற்பதால் பேச்சு எளிதாகும் நிலை அல்லது அழகாகும் நிலை."19

இவற்றுள், சமுதாய உறவுநிலை நின்று நோக்கும்பொழுது முதல் நான்கும் மிக முக்கியமானவையாகும். இன்றைய சமூக, அரசியல் வாழ்க்கையில், அன்றாடம் வெளிவரும் புதினப் பத்திரிகைகளையோ, வானொலிச் செய்திகளையோ, அரசாங்க அறிவித்தல்களையோ வாசிக்கும்பொழுதும் கேட்கும்பொழுதும் செயப்பாட்டுவினை அதிகமாகப் பயில்வது தெரிய வரும்.

"வங்கி நாளை திறக்கப்படும்."

"சூறாவளி வீசுமென அறிவிக்கப்படுகின்றது."

"விலை குறைக்கப்படுமென உத்திரவாதமளிக்கப்படுகின்றது."

"கொல்லப்பட்டவரின் உடலிற் காயங்கள் காணப்பட்டன."

என வரும் வாக்கியங்களில் மேற்கூறிய அமிசங்களின் சொற்பாட்டைக் காணலாம். இங்கே, நிர்வாக அமைப்புக்களினால் மக்களுடன் நேரடித் தொடர்பற்ற, தனிமனித உறவழிந்த20 ஒரு நிலை காணப்படுகின்றது. முதலாளித்துவச் சமுதாய அமைப்பில் தனி மனித உறவுகள் பராதீனப் படுத்தப்படுதல் உக்கிர நிலையெய்தும் என்பது மார்க்சீய சித்தாந்தம்.21 இந்நிலமை நிலமான்யக் கட்டம் முதலே தொடங்குவதாகும்.

___________________________________________

19 வரதராசன், ப.263.

20 Impersonal

21 Alienation of the individual.

....

மேலும் Passive என்பதன் மூலக்கருத்தைச் சிறிது நோக்குவோம். "செயப்பாட்டு வினைக்குரிய ஆங்கிலப் பெயராகிய Passive என்பதற்கே படுபவர், துன்பப்படுபவர் (Sufferer) என்பது பொருளாகும்.22 உண்மையில் Passive எனும் வினையமைப்பில், எழுவாயாக அமைபவர் அல்லது அமையும் பொருள் இன்னொருவரின் அல்லது இன்னொரு பொருளின் செயலொன்றினால் தாக்கப்படும் நிலையை உணர்த்துவதேயாகும்.

இத்தகைய சமூகப் பராதீன நிலைமை தமிழ் நாட்டின் வரலாற்றில் உக்கிரநிலை எய்தியது ஆங்கில ஆட்சி நிறுவிய குடியேற்றவாட்சி (கொலோனியலிச ஆட்சி) அமைப்பின் பின்னரேயாகும். அவ்வாட்சியுடன் பல்வேறு தொடர்புகள் கொண்டிருந்த நாவலர், கண்டதுண்டு கேட்டதில்லையாகவிருந்த இவ்வினை வகைக்கு நிலையான இலக்கண வகுப்புமுறை அளித்தது வியப்பாகாது.23

தமிழின் இயல்பான வினையமைப்பை மீறியும் செயல்கள்/வினைகள் எடுத்தோதப்பட வேண்டிய நிலைமை தோன்றுவதுண்டு. முன்னர் எடுத்துக் கூறப்படாத பல புதிய விசயங்களை எடுத்துக்கூற வேண்டிய தேவையேற்படுவதுமுண்டு. அத்தகைய நிலையில் கூட்டுவினைகள், துணைவினைகள் எனும் வினையாக்கங்கள் அப்புதிய செயல்களை-சமுதாயச் சிந்தனைகளை-லாவகமாக எடுத்துக்கூற உதவுகின்றன. இத்தகைய வினைவடிவங்களில் கூட்டுவினை வடிவம் சங்க காலம் முதலே இருந்து வருவதாகக் கூறுவர்.24 ஆனால் இவற்றுள் துணைவினை என்பது மிக முக்கியமானதாகும். இவ்வினை

______________________________________________

22 வரதராசன், ப.261- அடிக்குறிப்பு.

23 ஆறுமுக நாவலர் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல்களைப் பார்க்க.

24 வேலுப்பிள்ளை, ப.138.

....

வகை பற்றிய கீழ்க்காணும் மேற்கோள்கள் இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும்.

"எழு என்பது தன்னிலும் இழிந்தவர்க்கும் குறைந்தவர்க்கும் ஒத்தவர் சிலருக்குமுரிய ஏவலாக வழங்க, எழுந்திரு என்பது அவையல்லாதாருக்குரியதாக வேண்டுகோட் பொருளை உணர்த்துகின்றது. செய் என்பதில் இல்லாத துணிவுப் பொருள் செய்துவிடு என்பதில் காணப்படுகிறது............இறப்பு,நிகழ்வு, எதிர்பு என்ற முக்காலங்களிலிருந்து பல வேறுபாடுகளுடன் தோன்றிய காலங்களை உணர்த்துவதில், தமிழ் துணைவினைகளைப் பயன்படுத்துகிறது................இரு என்ற துணைவினையை முதல் வினையின் இறந்தகால வினையெச்சத்தோடு சேர்த்தலினால் எத்தனையோ கால வேறுபாடுகள் தோன்றுகின்றன:- வந்து இருந்தேன், வந்து இருக்கிறேன், வந்து இருப்பேன், வந்து இருக்க வந்து இருந்து, வந்து இருந்த வந்து இருக்கிற, வந்து இருக்கும், வந்து இருக்க வேண்டும், வந்து இருக்கலாம்."25

"காலப் போக்கில் வளரும் கருத்துக்களைத் தடையின்றி உணர்த்துதற்கு இவை பெரிதும் பயன்படுகின்றன."26

"தற்காலத் தமிழில் துணைவினைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அவ்வாறு அதிகரித்தல் அவசியமானது. மொழிகள் வளர்ந்து செல்லும்பொழுது மயக்கமின்றிக் கருத்துக்களைத் திட்டவட்டமாக எடுத்துக் கூறுவதற்குத் துணைவினைகள் அவசியமாகின்றன."27

________________________________________________

25 வேலுப்பிள்ளை ப.24.

26 வரதராசன், ப.280

27 போப், ப.67.

.....

தற்காலத் தமிழிலக்கியத்தில் சிறப்பாக நாவல், சிறுகதை வடிவங்களில் துணைவினைகளின் பெருக்கத்தைக் காணலாம். பழந்தமிழ் இலக்கண அமைப்பில் வினையின் தொடர்ச்சியைக் குறிக்க வினைவடிவம் இல்லை. இன்றோ 'கொண்டு' எனும் துணைவினை இதற்குப் பயன்படுகின்றது.

"டெலிபோன் மணி அடித்துக் கொண்டே இருந்தது."

இந்தக் 'கொண்டு' எனும் துணைவினை வடிவம் எத்தகைய நவீன சமூக, உற்பத்தி உறவுகளைச் சுட்டி நிற்கின்றதென்பது சிறிது ஆழமாகச் சிந்திக்கும்பொழுது புலனாகும்.

செயல்கள் எழுவாய் செயப்படுபொருள் வழியாக மாத்திரமல்லாது தாமாகவே சுட்டப்பெறும் நிலைமையும் மொழியிலேற்படுவது இயல்பே. தொழிற்பெயர் என்பது அத்தகைய நிலையே. வினைகொண்டு ஒன்றினைச் சுட்டுதல் சமுதாயக் கூட்டமைப்புக்கும் அதன் இயக்கத்திற்கும் அத்தியாவசியமானதே. தொழிற்பெயர், வினையடிப்பெயர் என வரும் பாகுபாடுகள் இந்நிலையை உணர்த்துவனவே.

++++++++++++++++++++++++++++++++

முடிவுரை

தமிழ்ச் சொல்லிலக்கணத்தில் எடுத்துக் கூறப்படும் முக்கிய கூறுகள் சிலவற்றின் சமூக அடிப்படையினை எடுத்து நோக்கும்பொழுது அவை முதன் முதலில் உற்பத்தி உறவுகளினடிப்படையாகத் தோன்றிச் சமூக உறவுகளினை விளக்குவனவாக அமைவதைக் கண்டோம்.

இலக்கணத்துக்கும் சமூக உறவுகளுக்குமுள்ள இவ்வியைபு முதலில் அன்றாடப் பேச்சு வழக்கிலேதான் தென்படும். பின்னர் இலக்கியங்களிலும் (ஆக்க இலக்கியங்களிலும் பிற எழுத்துக்களிலும்) இடம் பெறும். அதன் பின்னர்தான் அவை இலக்கணத்திலே இடம் பெறுகின்றன.

சில மொழி வழக்காறுகளை விதிமுறையாக எடுத்துக் கூறி அதன் பின்னர் அவ்விதிமுறை சம்பந்தமாகத் தோன்றும் மாற்றங்களையும் புதிய வழக்காறுகளையும் அவ்விதிமுறைக்குள்ளேயே வைத்து விளக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையை நாம் உரையாசிரியர்களிடத்தே காணலாம். மரபு (Tradition) என்பதன் பண்பே இதுதான். பழைய நடைமுறைகளையும் புத்தாக்கத்தையும் ஒருகுறிப்பிட்ட வாழ்க்கை முறைமைக்குள் அமைத்து நோக்கும் பண்பின் வெளிப்பாடுதான் மரபு. இத்தகைய முயற்சிகளினாலே தான் பாரம்பரியங்களின் தொடர்ச்சி பேணப்படும் முயற்சிகள் ஏற்படுகின்றன.

இச்சிறு நூலில் சமூக உறவுக்கும் இலக்கண அமைதிகளுக்குமுள்ள இணைவு சில இலக்கணக் கூறுகளின் அடிப்படையிலே எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இது மேலும் விரிவாக எடுத்து ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்.

ஒரு குறிப்பிட்ட மொழியின் அமைப்பையும் வழக்காறுகளையும் வகுத்தும் தொகுத்தும் நோக்கும் இலக்கண ஆய்வுமரபு இன்று நெகிழ்வடைந்து, உலகப் பொதுவாக, மொழியின் தொழிற்பாடு. அத்தொழிற்பாட்டின் பல்வேறு மட்டங்கள், விகசிப்புகள், இவற்றினூடாகத் தெளிந்தறியப்படும் மொழியமைதிகள் பற்றி ஆராயும் மொழியியல் எனும் ஆய்வுத்துறை வளர்ந்துள்ளது. இது சமூக விஞ்ஞானத் துறையின் ஒரு வளர்ச்சிப் பரிமாணமாகும். அவ்வியலின் வழி நின்று நோக்கும்பொழுது இவ்வுண்மைகள் மேலும் தெளிவடையலாம்.

++++++++++++++++++++++++++++++++

பின்இணைப்பு

(பேராசிரியர் நா. வானமாமலை அவர்களின் மணிவிழா மலரில் இந்நூல் ஒரு கட்டுரையாக வெளியிடபட்டபோது, அம்மலரின் ஆசிரியர் குழுவினர் எழுதிய குறிப்புரை இங்கு தரப்படுகின்றது.)

இக்கட்டுரை ஆராய்ச்சித் துறையில் ஒரு புது வழி வகுக்கிறது. மொழியியலில் சமூக மானிடவியல் பிரச்சினைகளை ஆராய்கிற முறையியல் புதிதாகப் பிறந்துள்ளதை நாம் அறிவோம்.மொழியியல் மாற்றங்கள், சமூகவியல் மாற்றங்களுக்கேற்ப உள்ளன என்பதை விளக்குகிற சில கட்டுரைகள் வந்துள்ளன.

ஆனால் நமது பழமையான இலக்கண மரபுகள் புதிய நூல்களில் மாற்றம் பெறுவதற்கான காரணங்களை நமது ஆய்வாளர் சிவத்தம்பிக்கு முன்னர் ஆராய்ந்தவர் எவருமிலர்.

இவர் தொல்காப்பிய இலக்கண மரபுகளை, நன்னூல் இலக்கண மரபில் காணப்படும் விதி மாற்றங்களோடு ஒப்பிட்டு ஆராய்கிறார். மனித உறவில் புலப்படுத்துகிற, மொழி வடிவங்களைத் தேர்ந்தெடுத்து இருவேறுபட்ட காலங்களில், அவற்றில் ஏற்பட்ட மாறுதல்களுக்கு காரணங்களை ஆராய்கிறார்.

1) திணை 2) பால் 3) வேற்றுமை 4) வினையமைப்பு ஆகிய நான்கு இலக்கணக் கருத்தமைப்புக்களை ஒப்பிட்டு ஆராய்கிறார்.

இவற்றைத் தொல்காப்பிய சூத்திரங்களில் இருந்து கண்டறிந்து, வேறு சான்றுகளையும் கொண்டு சமுதாய அமைப்பை யூகித்து அறிகிறார். மீண்டும் குறிப்பிட்ட உற்பத்தி உறவு நிலையில் மொழியின் பணியை ஆராய்கிறார். திணைக் கோட்பாடு பற்றி முந்திய ஒரு கட்டுரையில் ஆராய்ந்த ஆசிரியர், இக்கட்டுரையில் தமது கருத்துக்கு மேலும் சிறந்த சான்றுகளைக் காட்டியுள்ளார். பிற்காலவழக்கான ஏவுகர்த்தா, இயங்குகர்த்தா, செய்வினை, செயப்பாட்டுவினை முதலிய வினைப் பாகுபாடுகள் சமுதாயப் பிரிவுகளைச் சுட்டுகிறதென ஆசிரியர் காட்டுகிறார்.

"சமுதாயத்தில் நிலவும் உறவுகளுக்குச் சுட்டும் மொழியமைதிகளுக்கு, இலக்கணம் விதிமுறைகளைக் கூறிச் செல்லும் புதிய உறவுகள் தோன்றத் தோன்ற அவை மொழியிலே உடனே பிரதிபலித்துப் பின்னர் இலக்கண ஆசிரியர்களின் அங்கீகாரத்தைப் பெறுகின்றன."

இவ்வுண்மையை ஆய்வாளர் தமது மார்க்சீய அறிவையும் தமிழ் இலக்கண அறிவையும் பயன்படுத்தி மிக நுணுக்கமாக ஆராய்ந்துள்ளார்.

பேராசிரியர் நா.வா இதைப் படித்துப் பார்த்துவிட்டு மார்க்சீய சமூக மாற்றம் பற்றிய அறிவைத் தமிழர் சமுதாய வரலாற்றிற்குப் பொருத்தி இதுவரை எழுதப்பட்ட கட்டுரைகளில், ஆய்வுத் தரத்தில் மிகச் சிறந்த கட்டுரை என்று புகழ்ந்தார்கள்.

* * *

ஆசிரியரின் பிற நூல்கள்

மார்க்கண்டன் வாளபிமன் நாடகம் (பதிப்பு) 1963
தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் 1967,1978,1980
இலக்கியத்தில் முற்போக்குவாதம் 1977
நாவலும் வாழ்க்கையும் 1978
ஈழத்தில் தமிழ் இலக்கியம் 1978
தனித்தமிழியக்கத்தின் அரசியற் பின்னணி 1979
இலங்கைத் தமிழ் நாட்டார் வழக்கியல் (பதிப்பு) 1981
இலக்கியமும் கருத்து நிலையும் 1982
The Tamil Film as Medium of Political Communication 1981
Drama in Ancient Tamil Society 1981,
தமிழ் கற்பித்தலில் உன்னதம்
கற்கை நெறியாக அரங்கு.

++++++++++++++++++++++++++++++++