கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  ஈழத்து நவீன இலக்கியம்  
 

செல்லையா யோகராசா

 

ஈழத்து நவீன இலக்கியம்

செல்லையா யோகராசா

--------------------------------------------------

இலங்கைத் தமிழர்: வாழ்வும் வகிபாகமும்

இலக்கியத் தேட்டம் :
ஈழத்து நவீன இலக்கியம்

செல்லையா யோகராசா

கொழும்புத் தமிழ்ச் சங்கம்
7, 57வது ஒழுங்கை
கொழும்பு - 6
இலங்கை
2000

---------------------------------------------

பதிப்பு : கார்த்திகை 2000
மீள் அச்சு : ஆடி 2002, தை 2003
தலைப்பு : இலக்கியத் தேட்டம்: ஈழத்து நவீன இலக்கியம்
ஆசிரியர் : செல்லையா யோகராசா ©
வெளியீடு : கொழும்புத் தமிழ்ச் சங்கம்
விலை : ரூபா 125.00

Edition : November 2000
Re Print : July 2002, January 2003
Title : Literary Heritage : Modern Tamil Literature
Author : Dr. Selliah Yogaraja ©
Published by : Colombo Tamil Sangam

இது ஒரு நூலகக்குழுச் செயற்திட்டம்
தமிழ்ச் சங்க வெளியீடுகளிலுள்ள கருத்துக்கள் அவ்வவ் ஆசிரியர்களுடையவை.
அவை சங்கத்தின் கருத்துகளல்ல.

----------------------------------------

இலக்கியத் தேட்டம்:

ஈழத்து நவீன இலக்கியம்

'இலக்கியத் தேட்டம்' என்ற நோக்கிலான இக்கருந்தரங்குத் தொடரில் ஈழத்து நவீன இலக்கியம் பற்றிக் கவனிக்க முற்படும் இவ்வேளையில், முதலில், 'ஈழத்து நவீன கவிதை' பற்றி அவதானிப்பது பொருத்தமானதென்று கருதுகின்றேன். (சிறுகதை, நாவல் என்பனவற்றைவிட 'நவீன கவிதை' பற்றிய கவனிப்பிற்கு முதலிடம் கொடுத்தமைக்கான காரணத்தை எனது உரையின் இறுதியில் கூறுவது பொருத்தமானது.)

1

'நவீன" கவிதை என்ற தொடர் குறிப்பது யாது?

ஈழத்து நவீன கவிதை முன்னோடிகளுள் முதன்மை இடம்பெறுகின்ற மஹாகவியின் வார்த்தைகளில் கூறுவதானால் (பழைய நிலப் பிரபுத்துவ வாழ்க்கைக் கண்ணோட்டத்திலிருந்து காவியப் பிரபந்த இலக்கிய வடிவங்களிலிருந்து - மாறுபட்ட)

"இன்றைய காலத் திருப்புகள் எதிர்ப்புகள்
இன்றைய காலத் திக்கட்டுகள்......"

என்பவற்றை உள்ளடக்கமாகக் கொண்டதே நவீன கவிதை. அதுமட்டுமன்றி, அத்தகைய நவீன உள்ளடக்கத்திற்கமைவாக, வடிவ அமைப்பிலும் - மொழிப் பிரயோகம், ஓசை ஒழுங்கு, வெளிப்பாட்டுமுறை முதலானவற்றிலும் - நவீன தன்மைகளைப் பெற்றுள்ளதுமாகும்.

ஈழத்தில் நவீனத்தன்மை (Modernity) வேர்கொண்டதில் மேற்கத்தைய மயமாக்கம் (Westernization) காரணமாயிருந்த அதேவேளையில் அந் நவீனத்தன்மை தனது கிளைகளைப் பரப்பியதில் இந்திய, தமிழ்நாட்டுத் தொடர்பு முக்கிய செல்வாக்குச் செலுத்தியுள்ளது. இந்நிலையில் ஈழத்து நவீன கவிதையின் தேட்டம் பற்றிய அவதானிப்பு தமிழ்நாட்டு நவீன கவிதை வளர்ச்சியை மனத்திலிருத்திக்கொண்டு நிகழ்வது பொருத்தமானதும் தவிர்க்கவியலாததுமாகின்றது. இவ் அவதானிப்பினைக் காலகட்ட அடிப்படையில் அமைத்துக் கொள்ளலாம். (ஈழத்தில் பிரக்ஞை பூர்வமாக நவீன கவிதை தோற்றம் பெற்றது, நாற்பத்தைந்துகளாதலின் இக்காலகட்டம் அக்காலப் பகுதியிலிருந்து தொடங்குகின்றது.)

1945 தொடக்கம் 1960 வரையான காலகட்டம்

இக்காலகட்டத்தில் தமிழ் நாட்டுக் கவிதைப் போக்கு பின்வருமாறு காணப்படுகிறது :

திராவிட இயக்கப்போக்கு

தமிழ் இனமொழிப் பற்றினை உணர்ச்சித் தீவிரத்துடன் வெளிப்படுத்தல். பண்டைய பொற்காலம் பற்றிக் கனவு காணுதல்.

வாய்ப்பாடுகளைப் பின்பற்றி எழுதுகின்ற போக்கு

நிலவு, ஆறு, தாமரை போன்ற தலைப்புக்களில் கவிதைகளை உற்பத்தி செய்தல்.

வெற்றோசைப் போக்கு :

ஒருவிதத்தில் மேற்குறித்த போக்குகளுடன் தொடர்புபட்ட இப்போக்கினை விளங்கிக் கொள்ள பின்வரும் கவிதைப்பகுதி பயன்படும்:

"சாவின் வசீகரச்சன்னிதி வாசலைச்
சாடி உடைத்தது யார்?
பூவின் மனேகரப் புன்னகைச் செவ்வியிற்
புத்துயிர் தந்தது யார் ? "

புதுக்கவிதைப் போக்கு

மணிக்கொடிக்குப் பிற்பட்ட - எழுத்துக்கு முற்பட்ட - இயற்கை, காதல், ஆன்மீகம் முதலானவற்றைப் பாடுபொருளாகக் கொண்ட புதுக்கவிதைப் போக்கினை இது கருதுகின்றது.

மேற்கூறிய விதங்களில் (விதிவிலக்காக, ந. பிச்சமூர்த்தி தவிர, தமிழ்நாட்டு நவீன கவிதைப் போக்குகள் சமகால வாழ்க்கை ஓட்டத்திலிருந்து விலகிக்கொண்டிருந்த வேளையில் ஈழத்திலே நவீனகவிதை தோற்றம் பெற்று வலுவுடனும் வனப்புடனும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முற்படுகின்றது. இவ்விதத்தில் குறிப்பிடத்தக்க ஈழத்துக் கவிஞருள் மஹாகவி, நீலாவணன், முருகையன், சில்லையூர் செல்வராசன் ஆகியோர் கவனத்திற்குரியவர்கள். இவர்களுள் மஹாகவி முதன்மையானவர்.

மஹாகவி தமது சமகாலக் கவிதை ஓட்டத்தினைச் சரியாக இனங்கண்டு கொண்டு பின்வருமாறு குறிப்பிட்டுள்ளமை மனங்கொள்ளத்தக்கது:

"நவீன வடிவங்களான சிறுகதை நாவல் ஆகியன நவீன உரிப்பொருளைக்கையாண்ட வேளை கவிதை மட்டும் பழைய பொருள்மரபைப் பற்றியே சுழன்றமையால் அருகிவரும் கலை எனக்கருதுமாறாயிற்று. நிகழ்காலச் செய்திகளையும் பிரச்சனைகளையும் கவிதையில் ஆண்டு அதனை இன்றைய யுகத்துக்கு இழுத்துவரல் அவசியமாகும்."

மஹாகவி தமது கவிதைகளுக்கூடாக பின்வருவனவற்றை சாதித்துக் கொண்டார்.

1. சாதாரண கிராம மக்களினதும் நகரஞ்சார்ந்த மத்திய தர வர்க்கத்தினரதும் நாளாந்த வாழ்க்கையைக் கவிப் பொருளாக்கியமை.
(எ-டு : மீண்டும் தொடங்கும் மிடுக்கு)

மப்பன்றிக் கால மழை காணா மண்ணிலே
சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது
ஏர்ஏறாது காளை இழுக்காது,
எனினும் அந்தப்
பாறை பிளந்து பயன் விளைப்பான்
என் ஊரான்
ஆழத்து நீருக் ககழ்வான்
நாற்று
வாழத்தான் ஆவி வழங்குவான்
ஆதலால்
பொங்கி வளர்ந்து பொலிந்தது பார்
நன்னெல்லு.

நகர வாழ்க்கைச் சித்தரிப்பு பற்றிய கவிதைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது 'திருட்டு'.

ஐந்தடிக்கவும்
அலுவலகங்களின் அந்தப்
பொந்துகள் திறந்தன.
புறப்பட்டனர் மக்கள்
வந்து நின்றனர் வரிசையில்.
வண்டிகள் வரவும்
முந்துமா? விழி நோக்கி விழிபிதுங்கினரே
ஆதலால் அவர்
அழுதிடும் குழவியோடருகில்
மாதொருத்தி மன்றாடல் கண்டிலர்.
ஒரு மனிதர்
பாதி கண்டவர்
பழக்கமில்லாதவர் கொடுத்து எப்
போதும் இத்தொல்லை பொறுக்கவொண்ணாது
எனப் பகன்றார்.

உய்யவே விழைந்து
இரப்பதற் கொருப்படும் உளத்தள்
கையில் ஏந்திய குழந்தையின் கண்குருடு
அறியார்
வெய்யதே விதி!
என விளம்பினர்கள்
அக்கனவான்
ஐயையே! என அருவருத்து 'அகல்'
எனக் கடிந்தார்
இட்டு வாழ்பவர்
இருந்திடில் இந்த நிலத்தினில் அம்
மட்டும் வாழ்ந்திடும் இரப்பெனும்
இழி தொழில்; ஒற்றைத்
துட்டும் ஈந்திடல்
துர்ச்செயல். துயரிடைச் சிலரை
விட்டு வைத்திட விரும்பிடுவோர்
செயல் என்றோ
ஏது வண்டியும்
வந்தது? அவ்விடுக்கினில் ஏறும்
போதிலே. பறிபோயின தவர் பணம்
பொருந்தாத்
தீது என்பார்கள் இத் திருட்டினால்
வாழ்வது பிற பேர்
ஈதலால் எனில்
இறப்பதல்லால் விளைவுளதோ?

2. யாப்புவழிச் செய்யுள் ஓசைக்குப் பதிலாக பேச்சோசையை அறிமுகப்படுத்தியமை கவிதைப் பகுதிகள். (எ-டு : மேலுள்ளவை)

3. கருத்து உணர்ச்சி அழுத்த வேறுபாடுகளுக்கு ஏற்ப, தேவைப்படும் இடங்களில் செய்யுளடிகளை உடைத்து எழுதியமை.
எ-டு : முன்னர் தரப்பட்டுள்ள 'மீண்டும் தொடங்கும் மிடுக்கு, அடுத்துத் தரப்பட்டுள்ள 'தேரும் திங்களும்'.

4. காட்சிப்படுத்தல் :

தேரும் திங்களும்

ஊரெல்லாம் கூடி ஒருதேர் இழுக்கிறது
வாருங்கள் நாமும் பிடிப்போம் வடத்தை
என்று
வந்தான் ஒருவன்
வயிற்றில் உலகத்தாய்
நொந்து சுமந்திங்கு நூறாண்டு வாழ்வதற்காய்ப்
பெற்ற மகனே அவனும்
பெரும் தோளும்
கைகளும் கண்ணில் ஒளியும் கவலையிடை
உய்ய விளையும் உளமும் உடையவன் தான்
வந்தான் அவனோர் இளைஞன்
மனிதன் தான்
சிந்தனையாம் ஆற்றல் சிறகசைத்து வானத்தே
முந்தா நாள் ஏறி முழு நிலவை தொட்டு விட்டு
மீண்டவனின் தம்பி
மிகுந்த உழைப்பாளி
ஈண்டு நாம் யாரும் இசைந்தொன்றி நின்றிடுதல்
வேண்டும் எனும் ஓர் இனிய விருப்போடு
வந்தான் குனிந்து வணங்கி வடம் பிடிக்க

5. கற்பனாவாதத்திற்கு (Romanticism) பதிலாக யாதார்த்த வாதத்தை கையாண்டமை (மேலுள்ள கவிதைகள் எடுத்துக்காட்டுக்களாகக் கூடியன).

நீலாவணன் மஹாகவியிலும் பார்க்க சமகாலச் சமூகப் பிரச்சினைகளுக்கு அழுத்தம் கொடுத்ததுடன் (எ-டு : அடிபறை அடிசடையா) ஆன்மீக நோக்குடைய கவிதைகளையும் அறிமுகப்படுத்தினார்.

(எ-டு : பசும்பாலை)

முருகையன் புதிய பாடுபொருள்களான (அ) மனித நடத்தைகள் பற்றிய விமர்சனம்; பகுத்தறிவுப்பார்வை, (ஆ) அரூபமான நுண்பொருள்களைப்பாடுதல், (இ) பரிசோதனை நோக்குடன் புதிய புதிய செய்யுள் வடிவங்களைக் கையாளல், (ஈ) சமூக முரண்பாடுகளினடியான அங்கதம் என்ற விதங்களில் தமிழ்க் கவிதைப் பரப்பினை அகலப்படுத்தினார்.

தமது பல்துறை இலக்கிய ஆளுமையை ஏனைய துறைகள் போன்று கவிதைத்துறையிலும் முழுமையாக வெளிப்படுத்தாத சில்லையூர் செல்வராசன் தமது கவிதைகளின் அங்கத நோக்கிற்காக மட்டுமே தமிழ்க் கவிதைப் போக்கில் விதந்து கூறப்பட வேண்டியவராகின்றார்.

(எ - டு)
ஐயா பணிஸ் மாமா
அஞ்சலித்தேன், இப்போது
பையன்கள் காலையிலே
பள்ளி செலக்காரணமே
மெய்யாகச் சொல்லுகிறேன்
மேதகையே நீ எங்கோ
கையேந்திப் பெற்றளிக்கும்
கடன் மா பணிஸ் இரண்டும்.....

மேற்குறிப்பிட்ட நான்கு கவிஞர்களும் தமது கவிதைகளில் பேச்சோசைப் பண்புகளை நன்கு வெளிப்படுத்தியவர்களாவர்.

மேற்குறிப்பிட்ட நான்கு கவிஞர்களுள் மஹாகவி, நீலாவணன் ஆகிய இருவரும் தமக்குப்பிற்பட்ட தலைமுறையினரிடத்தில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கால கட்டத்தில் குறிப்பாக ஐம்பதுகளின் பிற்பகுதியிலிருந்து ஈழத்தில் மொழி உணர்ச்சிக் கவிதைகளின் வளர்ச்சி வெள்ளமெனப் பெருக்கெடுத்தது. முற்கூறப்பட்ட தமிழ் நாட்டுத் திராவிட இயக்கக் கவிதைப் போக்கினை ஒத்துள்ள பண்புகள் கொண்ட இக்கவிதைப் போக்கு ஈழத்துக் கவிதை வளர்ச்சியின் ஒரு முக்கிய போக்கு என்ற விதத்தில் கவனத்திற்குரியது. (இத்தகைய போக்கின் தலைசிறந்த எடுத்துக்காட்டு என்ற விதத்தில் மட்டுமே காசி ஆனந்தன் படைப்புக்கள் நினைவு கூறப்பட வேண்டியனவாகின்றன.)

1960 தொடக்கம் 1970 வரையிலான காலகட்டம்

இக்காலக்கட்டத் தமிழ் நாட்டுக் கவிதைப் போக்கு பொதுவாக பின்வருமாறு அமைகிறது:

புதுக்கவிதைப் போக்கு

'எழுத்து' சஞ்சிகையூடாக பிரக்ஞை பூர்வமான முறையில் வேரூன்றிய தமிழ்நாட்டுப் புதுக்கவிதை அக உலகு சார்ந்த விடயங்கள், வாழ்க்கை பற்றிய நம்பிக்கையீனம், படிமம், குறியீடு ஆகிய உத்திகளுக்கு அதி முக்கியத்துவம், அவற்றின் அந்நியப்பட்ட தன்மை இருண்மை முதலான பண்புகளுக்கு முதன்மையளித்தது.

முற்போக்குக் கவிதைப் போக்கு

பொதுவுடைமைச் சிந்தனை வழிப்பட்ட இத்தகைய கவிதைகள் (எ-டு: தாமரையில் வெளியானவை) பொதுவாக பிரச்சாரப் பாங்குடையனவாக விளங்கின.

மேற்கூறிய கவிதைப் போக்குகள் ஈழத்தில் வெளிப்பட்டபோது அவை நவீன தமிழ்க் கவிதையை வளம்படுத்துவனவாக அமைந்தமை கவனத்திற்குரியது.

முற்குறிப்பிட்டது போன்று எழுத்துக் குழுவினர் அக உலகிற்கு முக்கியமளிக்க ஈழத்தில் தா. இராமலிங்கம் புற உலகிற்கு - மக்களது வாழ்க்கை பிரச்சினைகளுக்கு - முக்கியத்துவம் கொடுக்கின்றார். ஈழத்தின், குறிப்பாக யாழ்ப்பாணச் சமூகத்தவரின் வாழ்க்கைப் பிரச்சினைகள் - இதுவரை பேசாப் பொருள்கள் (எ-டு: பாலியல் நடத்தைகள்) - கவிப் பொருளாகின்றன. படிமங்களும் குறியீடுகளும் தேவையையொட்டி இடம் பெறுகின்றன. இவை தமிழ்ச்சூழலுக்கு அந்நியப்படாதனவாகவுமுள்ளன. இருண்மைப் பண்பிற்கும் இடமிருக்கவில்லை.

எ-டு
(அ) தூக்கட்டும் தூக்கட்டும்

'கற்புக் கரசியாய்
வாழ் என்று வாழ்த்திச்
சிலப்பதிகாரமும்
சீதனம் தந்தார்
பாத்தி பிடிப்பார்
அள்ளி இறைப்பார்
பிஞ்சுமாதுளை
வெள்ளை மணிகளில்
இரத்தம் பிடித்திடும்
பொதிந்த ஆசைகள்
முற்றும் பலித்திடும்
என்ற கனவுடன்
கைப்பிடித்தேகினேன் .....
மெய்புகழ்ந்து மெய் தொட்டு
நாணம் உரித்துவிட்டு
சுளைதின்னத் தெரியாது
கசக்கும் என அறியான்
தோலோடு சப்பிவிட்டான்
பூட்டைத் திறப்பதற்குத்
திறப்பினைத் தேர்ந்தெடுக்கான்
இடித்துப் பிளந்து விட்டான்
இரத்தம் கசிந்ததம்மா'

(ஆ)
சிலை எழுப்பி என்ன பயன் ?
கொளுத்தக் கொளுத்த
விளக்கும் நூருது
பெட்டியிலோ குச்சில்லை
ஆராய்ந்து என்ன பயன் ?
கிலுக்கினால் .....
வெறும் பெட்டி
தடவினால் .....
குறங்குச்சு

ஆரம்பத்தில் படிமக் கவிஞராக இனங்காணப்பட்ட தருமு சிவராம் தமது முதிர்ச்சி நிலையில் மொழிப் பிரயோகச் சிறப்புகள், பாலியல் உணர்ச்சிகளை லாவகமாகக் கையாண்டுள்ளமை போன்ற காரணங்களால் நவீன தமிழ்க் கவிதை வளர்ச்சியில் முக்கிய இடம் பெற்றுள்ளார். (விக்கிரமாதித்யன் போன்ற சிலர் பாரதிக்குப் பிற்பட்ட சிறந்த கவிஞராக தருமு சிவராமைக் காண்கின்றமை மிகையானதே.)

எ-டு
கருகாத தவிப்புக்கள் கூடி
நாவின் திரி பிளந்து
அணையாது எரியும் ஒரு பெயர்
நீ.....
புதுநெருப்பில் இடை புதைந்து
வெளியில் எரியும் வகிடெடுத்து
திரண்டு சிவந்தவள்
நீ.....
என்நரம்பு வலை தொறும்
விரியும்
உன் தீத் தளிர் வடிவுகளை
என் தழுவல்கள் கவ்வி
மின் நதியை புணரும்
சர்ப்பச்சுருணைகளாய்
எரிந்து சிந்த
மீண்டும் என்
பஸ்மத்தில் இருந்தே படம் புடைத்தெழுகின்றேன்
உன் மீது சரிகிறேன்.....
எரிவின் பாலையிலிருந்து
மீண்டு
உன் தசைப் பசுந்தரையில்
என் வாய் பாதம் பதிகிறது.
பற்கள் பதிந்ததால்
இதோ உன்மீதென்
முதிராத யுவ நடையில்
தத்தளித்த முத்தங்கள்
நீ தரும் முத்தங்களின்
மதுர வெளியில் மீண்டும் என்
உதிரம் அலைகிறது..............
பாலையில் படர்கிறது
பசுந் தரை

மு.பொன்னம்பலம் மனித இருப்பிற்கான விடுதலை பற்றியும் விடுதலைக்கான இருப்பு பற்றியும் தான் கூறிக் கொள்கின்றதொரு ஆத்மார்த்ததளத்தில் நின்று எழுதுவதன் காரணமாக வித்தியாசமான உணர்வுகளை, படிமங்கள், குறியீடுகள் கொண்ட கவிதைகளைத் தருபவர். இது காரணமாக தமிழ் கவிதை வளர்ச்சியில் இடம் பிடித்துள்ளவர்.

முற்குறிப்பிட்டது போன்று தமிழ் நாட்டில் முற்போக்கு கவிதைகள் பிரச்சாரப்பாங்குடன் அமைய ஈழத்திலும் முற்போக்கு கவிஞருள் ஒரு சாரரிடத்தில் - பசுபதி- (ஆரம்பகால) சுபத்திரன் போன்றோரிடத்தில், அவ்வாறு காணப்பட்டாலும் இன்னொரு சாராரிடத்தில் கலைத்துவம் பொருந்த அவை வெளிப்பட்டன. இவ்விதத்தில் நுஃமான், சண்முகம் சிவலிங்கம் ஆகியோர் முக்கியமானவர்கள். இவ்விருவருள் முதன்மையிடம் பெறுபவர் நுஃமான்.

நுஃமான் கவிதைகளில் நாடகப் பாங்கு, நாட்டார் பாடலின் (சில) இயல்புகள், (திரைப்படப்பாணியிலான) காட்சிப்படுத்தல் முதலான பண்புகள் இடம் பெற்றமையால் அவரது கவிதைகளின் கலைத்துவம் தனித்துவம் மிகுந்ததாகவும் புதுமை மிக்கதாகவும் விளங்கியமை குறிப்பிடத்தக்கது.

தவிர ஆரோக்கியமான விதத்திலான ஈழத்துக்கவிதை மஹாகவி, நீலாவணன், முருகையன் ஆகியோரிட்ட தடத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் அதில், குறிப்பாக வடிவ ரீதியில், திருப்பத்தை ஏற்படுத்தியவராகவும் அவ்விதத்தில் புதிய தலைமுறையினரில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய முன்னோடியாகவும் நுஃமான் விளங்குகின்றமை இன்று ஆழ்ந்து நோக்கும் போதுதான் புலப்படுகிறது. இவ்விதத்தில் பின்வரும் கவிதை கவனத்திற்குரியது: (தேவை கருதி, கவிதை முழுமையாகத் தரப்படுகின்றது)

1
ஹோசிமின் நினைவாக
வேட்டை விமானம் விண்ணில் இரைத்தன
விசப்புகைக்குண்டுகள்
வீழ்ந்து வெடித்தன
எகிறிப் பறந்தன
பீரங்கிக் குண்டுகள்
சடசடத்தன மெஷின் துப்பாக்கிகள்
ஓலம் .....
அழுகை .....
கூக்குரல் ஒலிகள் .....
வயற் புறங்களிலும்
வாசற் படிகளிலும்
ஓடிய இரத்தம் மறைந்துகிடந்தன குடிசைகள்

2
கரும் புகை
மிக மெதுவாக விண்ணிற் கலந்தது
அடர்ந்த காட்டில் அமைதி துயின்றது
இடைக்கிடை எங்கோ இருண்டபகுதியில்
காட்டுப் பூச்சிகள் கத்தல் கேட்டது
மூங்கில் புதர்கள் மூடிய ஆற்றின்
கரையில் மெதுவாய்க் காற்று வீசியது
தண்ணீர்ப்பையில் தண்ணீர் நிரப்பிய
வீரன் நிமிர்ந்து மேலே நோக்கினான்
மூங்கிலில் வண்ணப் பூச்சிகள் மொய்த்தன
பதுங்கி இருந்த படையினை நோக்கி
முதுகுச் சுமையுடன்
அவன் முன் நடந்தான்
மரங்களின் கீழே
மடியில் வளர்த்திய
துவக்குடன்
ரொட்டியைச் சுவைத்தவாறு
வீரர் இருந்தனர்.....
மிக மெதுவாக
வானொலிக் கருவி வழங்கிய மெல்லிசை
நின்றது .....
சிறிது நீண்ட மௌனம் .....
ஹனோய் வானொலி கம்மிய குரலில்
ஒலிபரப்பியது .....
ஹோசிமின் இறந்தார்.....
ரொட்டித்துண்டுகள் மண்ணில் வீழ்ந்தன
நிசப்தமான மரங்களின் நிழலில்
மௌன அஞ்சலி நீண்டு வளர்ந்தது .....
'உன் நரம்புகளில் ஓடிய உணர்வின்
சிறுதுளி எனினும் சேர்க எம் குருதியில் .....
இன்னும் இன்னும் இழக்கிலோம் எங்கள்
மண்ணிலே சிறிய மணலையும் நாங்கள் .....
கொமாண்டர் அடங்கிய குரலில் கூறினான்
காட்டுப் பறவைகள் கத்திப் பறந்தன
மீண்டும் வேட்டை விமானம் இரைந்தன
அடர்ந்த காட்டின் மரங்களின் அடியில்
விசப் புகைக் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன .....
பதுங்கி இருந்த படையினர் கரங்களில்
மெஷின் துப்பாக்கிகள் வெடிக்கத் தொடங்கின
ஓங்கி வளர்ந்த உயரமான
மூங்கில் புதர்கள் மூடிய இருளில்
மீண்டும் விமானம் வீழ்ந்து நொறுங்கின.

(தவிர முற்போக்கு கவிஞர்கள் காதல் இயற்கை முதலியன சார்ந்த தன்னுணர்ச்சிக் கவிதைகளை எழுதுவது தவறு என்று தமிழ் முற்போக்காளர் மத்தியிலே எழுதாத யாப்பாக இருந்த தடையுத்தரவை மாற்றி அமைத்தவரும் நுஃமான் என்பது நினைவு கூரப்படவேண்டியது.)

மற்றொரு முற்போக்குக் கவிஞரான சண்முகம் சிவலிங்கத்தின் கவிதைகளின் தனித்துவம் அடிப்படையில் அவரது பொழிப்பிரயோகம் சார்ந்தது. அதாவது அவரது கவிதைகளில் அமையும் சாதாரண எளிமையான சொற்கள் கனதியான அர்த்தங்களை தருவது குறிப்பிடத்தக்கதாகிறது. சில கவிதைகளின் ஆரம்பம் பின்வருமாறு :

எ - டு :
நீ வந்திருக்கிறாய்
நான் எழுத வேண்டும்
ஏன் ?
நீயே எனது மையமா ?

எ - டு :
அற்ப நிகழ்வும்
அர்த்தமற்றதும்
என்னுடன் வருக

எ - டு :
எல்லாம் முடிந்தது
இனி என்னநாம் நடப்போம்
சந்தியில் நிற்கிறேன்
பகல் சாய்கிறது

பிரக்ஞை பூர்வமாக மலையகக் கவிதைகள் முகிழ்ப்பதும் இக்காலகட்டமே. இம் மலையகக் கவிதைகள் இரு சிறப்புகளுடையன :
(i) நாட்டார் பாடல் தன்மை மிகுதியாக அமைதல். (எ-டு: தமிழோவியன் அல்ஸ{மத்)
(ii) தொழிலாளர் வர்க்கக் கவிஞர்களின் உருவாக்கம். (எ-டு: குறிஞ்சித் தென்னவன்)

1970 தொடக்கம் 1980 வரையான காலகட்டம்

இக்காலகட்டத் தமிழ் நாட்டுக் கவிதைப் போக்கில் வானம்பாடிக் குழுவினரின் ஆதிக்கம் இடம்பெறுகின்றது. இவர்களது கவிதைப்போக்கு பின்வரும் பண்புகள் பெற்றிருந்தது :

(i) (எழுத்துக் குழுவினர் போலன்றி) இவர்களது கவிதைகளில் புற
உலகம் சார்ந்த விடயங்கள் அதாவது சமூகச் சார்பு முக்கியம் பெற்றிருந்தது.)
(ii) பொதுவுடமைச் சிந்தனைகள் முதன்மை பெற்றிருந்தன.
(iii) கற்பனாவாதப் (சுழஅயவெiஉளைஅ) பண்புகள் முதன்மை பெற்றிருந்தன.
(iஎ) வடமொழிப் பிரயோகங்கள் வலிந்து இடம்பெற்றிருந்தன.
(எ) பெரும்பாலானோரது படைப்புகள் கலைப் பெறுமானமும் கலைத்துவமும் குன்றிக் காணப்பட்டன.

ஈழத்திலும் வானம்பாடிக் குழுவினரின் செல்வாக்கு பெருமளவு காணப்பட்டது. ஈழத்தின் மூலை முடுக்குகள் எங்கணுமிருந்து புதுக்கவிதை எழுதுவோர் புறப்பட்டனராயினும், இவர்களில் கணிசமானோரது படைப்புகள் கலைப்பெறுமானமும் கலைத்துவமும் குன்றியே காணப்பட்டன. ஆயினும், விதிவிலக்கான கவிஞர் சிலர் தமிழ்க் கவிதை வளர்ச்சிக்கு வளம் சேர்த்தனர். இவ்விதத்தில வ. ஐ. ச. ஜெயபாலன், சிவசேகரம், வில்வரெத்தினம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சமூகச் சார்புடைய இவர்களது கவிதைகளில் முதலிரு கவிஞர்களது படைப்புகளிலும் முற்போக்குச் சிந்தனையின்பாற்பட்ட சமூகச்சார்பும் வில்வரத்தினத்தின் கவிதைகளில் அவ்வழிச்சாராத சமூகச்சார்பும் இடம் பிடித்துள்ளன. (பின்னர் கவிதை எழுதாது விடினும்) அ. யேசுராசாவின் இக்கால கட்டக் கவிதைகளும் தனிமனித சொந்த அனுபவங்களை கவிதையாக அளித்தன என்றவிதத்தில் ஓரளவு கவனத்திற்குரியன.

மேற்கூறியோருள் வ. ஐ. ச. ஜெயபாலன் கவிதைகளில் இயற்கைச் சூழல், உள்ளார்ந்த இன்னோசை, புதிய மொழிப் பிரயோகங்கள், அணிப்பிரயோகங்கள், சர்வதேச நோக்கு என்பன தனித்துவப் பண்புகளாக அமைந்துள்ளன. (இங்கு இடம்பெறுவது அவரது ஆரம்பகாலத்துக் கவிதையே.)

எ-டு :
துணை பிரிந்த குயில் ஒன்றின்
சோகம் போல
மெல்ல மெல்லக் கசிகிறது
ஆற்று வெள்ளம்
ஊற்றாடும் நாணலிடை
மூச்சுத்திணறி
முக்குளிக்கும் சரால் மீன்கள்
ஒரு கோடை காலத்து மாலைப்பொழுது அது
என்னருகே
வேம்மணலில்
ஆலம் பழக்கோதும்
ஐந்தாறு சிறுவித்தும்
காய்ந்து கிடக்கக் காண்கிறேன்
என்றாலும்
எங்கோ வொரு தொலைவில்
இனியகுரலெழுத்து
மாரிதனைப்பாடுகிறான்
வன்னிச்சிறான் ஒருவன்

சிவசேகரத்தின் கவிதைகளில் இயற்கைப் பின்னணி என்பனவற்றின் பயன்பாடு குறிப்புப்பொருள், சொற்செறிவு, பழந்தமிழ்க் கவிதை, நாட்டார்பாடல், முதலிய பண்புகள் தனித்துவப் பண்புகளாக இடம் பெற்றுள்ளன. இவ்விடத்தில் 'இலையுதிர்கால அரசியல் நினைவுகள்' என்ற கவிதைபற்றி தமிழ்நாட்டு ஆய்வாளரொருவர் கூறியுள்ளமை நினைவுக்கு வருகின்றது.

இலையுதிர் கால அரசியல் நினைவுகள் என்ற சிவசேகரத்தின் கவிதைத் தலைப்பு மாத்திரமே 'அரசியல்' என்ற பிரயோகத்தைக்கொண்டுள்ளது. ஆனால் மேலோட்டமாய் படிக்கும் வாசகனுக்கு இது சிறந்த டுலசiஉ கவிதையாகக் கூடும். இயற்கை நிகழ்வுக்கான ஆழ்ந்த பிரக்ஞையும் பருவகால மாறுதல்களைப் பதிவு செய்யும் கவனமும் இக்கவிதையின் ஸ்தூலமான சித்திரிப்புக்களைத் தந்துள்ளன. பருவ மாறுதல்களும் கால மாறுதல்களும் சமூக மாறுதல்களை உணர்த்தும் படி இயல்பாய் எழுதப்பட்டிருக்கின்றன.

'மீண்டும் மலர்கள் மண்ணைப் பெயர்க்க
பறவைகள் மெல்லப் பாடத் தொடங்க
அணில்கள் தாவவசந்தம் வந்தது
மரங்கள் மீது இலைகள் போர்த்தன
இலையுதிர் காலம் கொடியதுதானோ?'

கடைசிவரியின் கேள்வி நம்மை மீண்டும் வரிவரியாய் படிக்கச் செய்து, தலைப்புக்குக் கவனம் தாவி, மீண்டும் வரிவரியாகப் படிக்கச் சொல்கிறது. அரசியல் கவிதைகள் வரட்டுத் தன்மையாகத் தான் இருக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை என்பதைத் சிவசேகரத்தின் 'நதிக்கரை மூங்கில்கள்' தொகுதி நிரூபணம் செய்கிறது தவிர, உள்ளடக்கத்திற்கு மிகப்பொருந்தி வருகின்ற வடிவ நேர்த்தியும், பரிசோதனை முயற்சிகளும் (எ-டு : வடலி தொகுப்பு) அண்மைக்காலமாக சிவசேகரத்தின் கவிதைகளில் முக்கிய கவனிப்பிற்குரிய விடயங்களாகியுள்ளன. முதலில் கூறிய விடயத்திற்கு எடுத்துக்காட்டாக பலி, பஞ்சமர் பாட்டு, தேவி எழுந்தான், காளி முதலியன உள்ளன.

வில்வரத்தினத்தின் கவிதைகளில் வேறேந்தத் தமிழ்க்கவிஞர்களையும் விட தமிழ் மரபிலிருந்து சாரம்சங்களை உறிஞ்சுதல் என்ற விதத்தில் சங்ககாலக் கவிதை தொடக்கம் பாரதி காலம் வரையிலான நீண்ட தமிழ்க்கவிதைப் பாரம்பரியத்தின் ஆரோக்கியமான விதத்திலான பாதிப்பு மிகுதியாக வெளிப்படுகின்றமை விதந்துரைக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

எ-டு : அண்மையில் வெளிவந்த பின்வரும் கவிதை :

பறம்புமலை
பாரிமறைந்து
பரிதியும் மறைந்த இருளில்
அகதிகளாயினர்
அங்கவையும் சங்கவையும்

வென்றெறி முரசம் வீழ்ந்த கையோடு
குன்றிலே
தோய்ந்த முழுநிலவின் சோகம்
படர்கின்ற ஒற்றையடிப் பாதையினூடே
பாரிமகளிர் நடந்தனர்
மலையில் இறங்கிப் பெயர்ந்து
தானும் தளர்நடை நடந்தது நிலவும்
தள்ளாத வயதின் கபிலர் துணைபோல

நடந்து, இளைத்து, தேய்ந்து
நரைவிழுந்து போனது
வெண்ணிலவும்தான்
கபிலரும்தான்;
பாரிமகளிரும்தான்;
பறம்பு மலை வாழ்வும்தான்;

பாவம்,
அன்றைத்திங்கள் அவ்வெண்ணிலவின்
பறம்பு மலைக்குன்றும்
வென்றெறி முரசும்
அந்தப்புரத்து அடிமைகளாகிவிட்ட
அங்கவையும் சங்கவையும்
இரங்கி அழுதவையெல்லாம்
இற்றைத்திங்கள் இவ்வெண்ணிலவிலும்
எதிரொலிக்கின்றனவே.

1980 தொடக்கம் 1990 வரை

வானம்பாடிக்குழுவினரின் 'பிரிவினை'க்குப்பின்னர், எண்பதுகளுக்குப் பின்னர் - தமிழ்நாட்டுக் கவிதை வளர்ச்சியில் பொதுவாக தேக்கநிலையே நிலவிவந்துள்ளது எனலாம்.

இதே காலகட்டத்தில் ஈழத்தில் நவீன கவிதை வளர்ச்சியில் புதிய போக்குகள் இடம்பெறுகின்றன. இப்போக்குகள் நவீன தமிழ்க்கவிதை வளர்ச்சியில் முதன்முதலாக முகிழ்க்கின்றவை ஆகும்.

அரசியல் எதிர்ப்புக்குரல்:

பேரினவாத ஒடுக்குமுறை முன்னைய காலங்களைவிட இக்காலகட்டத்திலிருந்து அதிகரித்த சூழலில் தமிழ்கவிஞர் எல்லோரும் அதற்கு எதிர்ப்புக் குரல் கொடுக்க முற்பட்டனர். இத்தகையோர் இருவகையினர்.

- தமிழ்த்தேசிய உணர்;ச்சிகாரணமாக எதிர்ப்போர் சிறந்த எடுத்துக்காட்டு புதுவை இரத்தினதுரை.
- வர்க்க நோக்கில் எதிர்ப்போர். நுஃமான், சிவசேகரம்.

மேற்கூறிய எதிர்ப்புக்குரலினை புதியதலைமுறை கவிஞர்கள் புதிய முறைகளில் வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. இவ்விதத்தில் சேரன் முக்கியமானவர். புதிய படிமம், புதிய குறியீடு, புதிய மொழிப்பிரயோகம், அடி அமைப்பு மாறுபாடு, நுண்மையான உணர்வு வெளிப்பாடு முதலானவிதங்களில் கவனத்திற்குரியவர். இவ்விதங்களில் பின்வந்த தலைமுறையினரிடம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியவர்.

எ- டு
இரண்டாவது சூரிய உதயம்
அன்றைக்குக் காற்றே இல்லை
அலைகளும் எழாது செத்துப் போயிற்று.
கடல்.
மணலில் கால் புதைத்தல் என
நடந்து வருகையில்
மறுபடியும் ஒரு சூரிய உதயம்.
இம்முறை தெற்கிலே
என்ன நிகழ்ந்தது?
எனது நகரம் எரிக்கப்பட்டது.
எனது மக்கள் முகங்களை இழந்தனர்;
எனது நிலம் எனது காற்று
எல்லாவற்றிலும்
அந்நியப்பதிவு

கைகளைப் பின்புறம் இறுகக் கட்டி
யாருக்காகக் காத்திருந்தீர்கள் ?
முகில்கள் மீது
நெருப்பு
தன் சேதியை எழுதியாயிற்று
இனியும் யார் காத்துள்ளனர்
சாம்பல் பூத்த தெருக்களிலிருந்து
எழுந்து வருக

விமலதாசன் அண்ணாவுக்கு

நாங்கள்
உயிர்வாழ்வதற்கான
நிகழ்தகவு
அச்சம் தரும்வகையில்
குறைந்து போய்விட்டது

யமன்

மரணம்
காரணம் அற்றது.
நியாயம் அற்றது.
கோட்பாடுகளும்
விழுமியங்களும்
அவ்விடத்தே
உறைந்துபோக
முடிவிலா அமைதி.

மேற்கூறிய காலகட்ட அரசியல், சமூக நிலைமைகளையும் தனிமனித உணர்வு சார்ந்த விடயங்களையும் முற்றிலும் புதிய முறையில் நோக்கி, நவீன தமிழ்க்கவிதை வளர்ச்சியில் முக்கியமான இடத்தினைப் பெற்றுள்ளவர் சோலைக்கிளி. அவர் ஏற்படுத்திய மாற்றங்களுள் முதன்மையானது அஃறிணைப் பொருட்களின் செயற்பாடுகளூடாக, முற்கூறிய விடயங்களை அணுகியமையாகும்.

எ- டு: 1

நிலவுக்கு வேலியிடு
சூரியனையும் பங்கு போட்டுப் பகிர்ந்து கொள்
வெள்ளிகளை எண்ணு
இனவிகிதாசாரப்படி பிரி
நாகாPக யுகத்து மனிதர்கள் நாம்
கடலை அளந்து எடு
வானத்தைப் பிளந்து துண்டாடு
சமயம் வந்தால் காற்றைக் கடத்து
எறும்புக்கும்
இன முத்திரையிடு
சாதி சமயத்தைப்புகட்டு
புறாமுக்கட்டும்
இன்னொரு இனத்தை நகைத்து

எ - டு : 2

'மாமி,
என்னை தெரிகிறதா உங்களுக்கு
நான்தான்
வெயில் மங்கி நிலா விதைக்க, இருள்
வானம் விழும் நேரம்
ஊர் இருந்து பறந்து வந்து
இந்தப் பெருங் கொப்புள் குந்தியிருக்க
தினம் வரும் குருவி
நீங்கள் என்னைக் கக்கத்தில் இடுக்கி
இருப்பதுபோல இருக்கும்
உங்கள் கொப்புக்குள் இருந்தால் நான்
பார்ப்போருக்கு.
மாமி,
ஆமி வந்து உங்களைத் தமது
படைவளவுள் சிறைப்படுத்த
அறுந்தது நமது தொடர்பு
ஆரம்பத்தில்
காற்றில்
இரண்டொரு கடிதம்
பூக்கேட்டு
வேரில்
சப்பாத்துக்காலால் உதைக்கிறான் என்ற
சொல்லி
அழுததெல்லாம்
பின் காற்றும் இறந்தது
காற்றில்; எழுதி வாசிக்கும் எழுத்துக்களும்
மறந்தன
மாமி, என்னைத் தெரிகிறதா உங்களுக்கு ?

எ - டு : 3

'இன்று அவன் சொன்ன ஒரு பொய்க்கு
நான்கு தலை
பதினெட்டுக் கண்கள்
வால் இருபத்து மூன்று
கழுத்துகள் பதினாறு
அந்தப் பொய்தான் எனது பற்களிலும்
கெட்டியாய் எட்டியது
யாவரும் இங்கு சமமென்ற பழைய
பெரும் பொய்யைப்போல்
நாற்றத்துடன்

எ - டு : 4

'புல்லை இனிநான் உண்கிறேன்
கொடி வேலியிலே தழைத்துள்ள சிசிலியாக்
கம்பை இனிநான் காருகிறேன்
ஆலங்கொத்தைப் புசிக்கிறேன்
யார் கையை நீட்டினாலும்
துள்ளுகிறேன்
குதிக்கிறேன்
எவரும் தூக்கினால்
இரண்டு கைகளுக்குள்ளும் இருந்து
மே என்கின்றேன்
என் ஆட்டுக்குட்டி
என் ஆத்மா!'

பெண் நிலைவாத நோக்கு

பெண் என்ற நிiலியிலிருந்து பெண்கள் தங்கள் உணர்வுகளையும் கருத்துக்களையும் வெளிப்படுத்துகின்ற நிலையானது பொதுவாக நீண்ட தமிழ்க்கவிதை வளர்ச்சிப்போக்கில் முதன்முதலாக ஈழத்துக் கவிஞர்களிடமே முகிழ்கின்றது. (இவ்விடத்தில் சங்கரி, ஊர்வசி, அவ்வை, மைத்ரேயி, சிவரமணி, சுல்பிகா என நீண்டதொரு பட்டியலை தரமுடியுமே தவிர இவர்கள் பலரும் தொடர்ந்து அதிகம் எழுதாமை காரணமாக இவர்களுள் குறிப்பிட்டதொரு கவிஞரை இனம்காண முடியாதுள்ளது. பொதுவாக இவர்களது கவிதைகள் ஆணாதிக்க எதிர்ப்பு, பெண்கள் விழிப்புணர்ச்சி, குடும்பச்சுமை, பண்பாட்டு ஒடுக்குமுறை என்பன பற்றியதாக அமைந்துள்ளன. பெண்களது கல்விப் பிரச்சினை, சீதனப்பிரச்சினை முதலியன பெரும்பாலும் பேசப்பட்டு வந்த சூழலில் (அவையும் ஆண்களால் பேசப்பட்ட நிலையில்) மேற்கூறிய விடயங்கள் அன்றைய காலம்வரை 'சொல்லாத சேதிகளாக' விளங்கியமை வியப்பிற்குரியதன்று.

'சொல்லாத சேதி'களின் தாற்பரியத்தை விளங்கிக் கொள்ள பின்வரும் கவிதை உதவுகின்றது :

அவர்களின் பார்வையில்

எனக்கு
முகம் இல்லை
இதயம் இல்லை
ஆத்மாவும் இல்லை
அவர்களின் பார்வையில்
இரண்டும் மார்புகள்
நீண்ட கூந்தல்
சிறிய இடை
பருத்த தொடை
இவைகளே உள்ளன
சமையல் செய்தல்
படுக்கையை விரித்தல்
குழந்தை பெறுதல்
புரிந்து நடத்தல்
இவையே எனது கடமைகள் ஆகும்
கற்பு பற்றியும்
மழை பெய்யெனப் பெய்வது பற்றியும்
கதைக்கும்
அவர்கள்
எப்போதும் எனது உடலையே
நோக்குவர்
கணவன் தொடக்கம்
கடைக்காரன் வரைக்கும்
இதுவே வழக்கம்

-சங்கரி -

புகலிடப் பெண் கவிஞர்களும் பெண் நிலைவாத நோக்கில் குறிப்பிடத்தக்க பல கவிதைகளை எழுதிவருகின்றமை குறிப்பிடத்தக்கது
(எ-டு : றஞ்சினி, மல்லிகா)

புகலிட அனுபவங்கள்

எண்பதுகளளவில் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா முதலிய நாடுகளில் வாழுகின்ற தமிழ்க் கவிஞர்களது கவிதைகளுடாக ஓரளவு உள்ளடக்க ரீதியில் நவீனகவிதை அகலமும் ஆழமும் பெறத்தொடங்கியது.

புகலிடக் கவிதைகள் ஆரம்பநிலையில் ஈழத்துடன் தொடர்புபட்ட விடயங்கள் பற்றியே பேசின. இவ்விதத்தில் முக்கியமாக குறிப்பிடவேண்டியதொரு விடயம் அரசியல் விமர்சனக் கவிதைகளாகும். அதாவது விடுதலை இயக்கங்களின் போராட்ட நடைமுறைகள் பற்றிய விமர்சனக்குரல்கள் முதன்முதலாக புகலிட நாடுகளிலிருந்தே ஒலித்தன எனலாம்.

குறுகிய கால ஓட்டத்தின் பின்பே புகலிடக் கவிதைகள் புகலிட நாட்டு அனுபவங்கள் பற்றி (அகதியம், அந்நியம், புதிய தொழில் உலகம் நிறத்துவம், அரசுகளின் கெடுபிடிகள், பண்பாட்டு முரண்கள் முதலியன பற்றி) ஓரளவு பேசமுற்பட்டன.

கவிதா நிகழ்வு முன்னர் முக்கியம் பெற்றிருந்த கவியரங்கு என்பது 'கவிதாநிகழ்வு' ஆக பரிணமித்து செல்வாக்குப் பெறுவது இக்காலகட்டக் கவிதை ஊடக வளர்ச்சியில் ஏற்பட்ட முக்கியமான - ஆரோக்கியமான - மாற்றமாகும்.

இங்கு அழுத்தியுரைக்கப்பட வேண்டிய தொன்றுள்ளது. கூறப்படவேண்டியுள்ளது. மேற் கூறிய இன ஒடுக்குமுறைக்கெதிரான கவிதைகளும், போராட்டம் சார்ந்த கவிதைகளும், பெண் நிலைவாதக் கவிதைகளும,; ஓரளவு புகலிடக் கவிதைகளும் ஈழத்துக் கவிதை வளர்ச்சியை மூன்றாமுலக நாட்டுக் கவிதைப் போக்குடன் சங்கமிக்கச் செய்துள்ளமையே அதுவாகும்.

1990 களிலிருந்து இன்றுவரை

தமிழ்நாட்டுக் கவிதை வளர்ச்சியில் இக்காலப்பகுதியில் புதிய போக்குகளாக பெண் நிலைவாதக் கவிதைகளையும் (எ - டு : கனிமொழி, தாமரை), தலித்திலியக் கவிதைகளையும் இனங்காணலாம்.

ஈழத்தில் முற்காலகட்டப் போக்குகள் புதிய பரிமாணங்களுக்குள்ளாவதையும், சில புதிய போக்குகள் உருவாவதையும் அவதானிக்க முடிகின்றது அவையாவன :

அரசியல் விமர்சனம்

விடுதலை இயக்கங்களின் போராட்ட நடைமுறைகள் பற்றி முன்னர் புகலிடக் கவிஞர்களால் எழுப்பப்பட்ட விமர்சனக்குரல்கள் இப்போது இங்கிருந்து எழுகின்றன. (எ-டு: ஜெயபாலன், சிவசேகரம், ஆத்மா).

முஸ்லீம் தேசியம்

முஸ்லீம் தேசிய உணர்ச்சி வெளிப்பாடு கவிதைகளுடாக இப்போது பரவலாக ஒலிக்கத் தொடங்குகின்றது. (எ - டு : ஆத்மாவின் கவிதைகள்)

போராளிகளின் கவிதைகள்

விடுதலை இயக்கப் போராளிகள் தமது கள அனுபவங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த முற்பட்டுள்ளனர்.

'எழுதாத கவிதை'

'எழுதுங்களேன்
நான்
எழுதாது செல்லும்
என் கவிதையை
எழுதுங்களேன்
எழுதுங்களேன்
ஏராளம்
ஏராளம் ..... எண்ணங்களை
எழுத
எழுந்துவர முடியவில்லை
எல்லையில்
என் துப்பாக்கி
எழுந்து நிற்பதால்
எழுந்து வர என்னால் முடியவில்லை
எனவே
எழுதாத என் கவிதையை எழுதுங்களேன்
சீறும்
துப்பாக்கியின் பின்னால்
என் உடல்
சின்னா பின்னப்பட்டுப் போகலாம்
ஆனால்
என் உணர்வுகள் சிதையாது
உங்களைச் சிந்திக்க வைக்கும்
அப்போது
எழுதாத என் கவிதையை
எழுதுங்களேன்

- வானதி -

என் தேசம்

என் இனிய தேசமே
குறிப்பெடுத்துக்கொள்
எரியுண்டு
சிதையுண்டு போன
என் தேசத்தின்
காப்பகழி ஒன்றில்
எழுகின்ற
உணர்வு அலைகளைக்
குறிப்பெடுத்துக்கொள்
இந்தத் தேசத்தை எப்படி நான்
நேசித்தேன் என்று
தெரியுமா உனக்கு?
கீழ்வானம் எமக்கு
எப்போது சிவக்கும் ?
என் இதயத்தின் துடிப்பிது
கேட்கிறதா உனக்கு?
என்னால்
விளங்கப் படுத்தமுடியவில்லை
ஆனாலும்
என் தேசமே
குறிப்பெடுத்துக்கொள்.

- பாரதி -

மெல்லிசைப் பாடல்

ஈழத்து நவீன கவிதை மெல்லிசைப் பாடலுக்குரிய பண்பினை உள்வாங்கி, அவ்வழி, கவிதையை ஆரோக்கியமான முறையில் ஜனரஞ்சகப்படுத்துவதனை - பொதுமக்களை நோக்கித்திருப்புவதனையும் -இக்காலப்பகுதியில் அவதானிக்க முடிகின்றது.

புதிய தலைமுறை

குறிப்பாக தொண்ணூறுகளின் நடுப்பகுதியிலிருந்து வன்முறைச் சம்பவங்கள், பரஸ்பரமோதல்கள், இடம்பெயர்வுகள், அகதிமுகாம் வாழ்க்கை என்பவற்றுள் ஒன்றையோ ஒன்றிற்கு மேற்பட்டனவற்றையோ நாளாந்த வாழ்வாகக் கொண்டு விட்ட ஈழத்தமிழ்ச் சூழலில் புதிய இளந்தலைமுறைக் கவிஞர் பலர் உருவாகத் தொடங்கினர். நாளாந்தம் நடப்பனவற்றை இவர்கள் தமது பிரதேச சூழலுக்கேற்ப உள்வாங்கி, முற்பட்ட கவிஞர்களது (எ - டு : சேரன், சோலைக்கிளி) ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, தமது கவிதா ஆளுமைக்கேற்ப தத்தம் உணர்வுகளை வெளிப்படுத்தினர். இவ்விதத்தில் (யாழ்ப்பாணப் பிரதேசம்) நட்சத்திரன் செவ்விந்தியன், அஷ்வகோஷ், அகிலன், கருணாகரன்; (வன்னிப் பிரதேசம்) அமரதாஸ், கருணாகரன்; (ஓட்டமாவடி) ஓட்டமாவடி அரபாத்; (மட்டக்களப்பு வாசுதேவன், மலர்ச்செல்வன்; (காத்தான்குடி) ஆத்மர் (அக்கரைப்பற்று) றஸ்மி, மாரிமுத்து யோகராசர் (கொழும்பு) நட்சத்திரன் செவ்விந்தியன், றஸ்மி; (மண்டூர்) மண்டூர் தேசிகன் ஆகியோர் கவனிப்பிற்குரியவர்கள். அசாதாரண எளிமை, நேரடியான உரையாடல், வாழ்கின்ற சூழலின் பிரதிபலிப்பு, (அளவான) படிமக்குறியீட்டுப் பிரயோகம், செறிவு என்பன இவர்களது கவிதைகளின் இயல்புகளாயின.

பெண்நிலைவாதம் :
பொருள்விரிவடைதல். இவ்விதத்தில் பின்வரும் விடயங்கள் கவனத்திற்குரியன.

(i) பாலியல் வல்லுறவுச் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு

(எ - டு : கலாவின் 'கோணேஸ்வரிகள்', கல்யாணியின் தலைப்பிடப்படாததொரு கவிதை, ஓளவையின் 'என்சிறு பெண்ணும் அச்சம் தரும் உலகும் நானும்")

பின்வருவது 'கல்யாணி'யின் கவிதை :

நான்
உயர்ந்தவன், உன்னதமானவன்
தனித்துவமானவன்
நான் ஆண்

ஆண் என்பதால்
ஆற்றல் உள்ளவன்
அனைத்தும் அறிபவன்
குற்றம் செய்ய முடியாதவன்

குற்றம் இருந்தாலும்
மன்னிக்கப்பட வேண்டியவன்
ஏனெனில்
நான் ஆண் குறியை உடையவன்
எனது ஆண்குறி
எப்போதும் எங்கு வேண்டுமானாளும்
யாரைக் கண்டாலும்
விறைக்கக்கூடியது
சகோதரியோ மகளோ
யாரும் விதிவிலக்கல்ல
எனது ஆண்குறி விறைக்கக்கூடியது
அது இயற்கை

(ii). காதல் உணர்ச்சியை நுண்மையாக வெளிப்படுத்தல்

கண்கள்

எனது கண்ணெதிரே
இருண்டு கவிந்த வானமும்
ஓரிரு நட்சத்திரங்களும்
உனது பெரிய கண்களும் மாத்திரம்
உலகின் மீதியெல்லாம்
எனது ஆடைகளைப்போல்
அப்புறமாய்,
எனது புலன்களுந்தான்
எனது கண்களில் ஒடுங்கின.
பார்வையும்
ஸ்பரிசமும் மாத்திரம்
உயிர்ப்புடன்

உனது கண்கள்
என்னுடன் பேசுவது அதிகம்
உனது தொடுதல்
பேசுவதைவிட
கண்களை விபரிக்க முயன்று
எப்போதும் தோற்றுப்போகிறேன்
நட்சத்திரங்கள் எனவோ
கயல் எனவோ
கடல் எனவோ
என்னால் கூற முடியாது,
எனது கண்கள்
என்னைப் பார்க்கின்றன்
தேடுகின்றன்
அணைக்கின்றன்
முகர்கின்றன
சிலசமயம்
எனதும் உனதும்
கண்கள் இடம் மாறுகின்றன
கண்கள் இல்லாவிடின்
எமது சேர்க்கை எப்படியிருக்கும்?

எனது கண்கள் இல்லாவிடின்
உலகின் பாதியை அறிந்திரேன்
எனது கண்கள் இல்லாவிடின்
காதலையும் அறிந்திரேன்
இந்தக் கணத்தில்
எஞ்சியிருந்த
வானமும் ஓரிரு நட்சத்திரமும் மறைய
உனது கண்களும்
நானும்
எனது காதலும் மாத்திரம்

- சங்கரி -

(iii) பெண்நிலைவாதச் சிந்தனைகள் பரவலடைதல்
முன்னைய காலத்தைவிட, இப்போது பெண்நிலைவாதச் சிந்தனைகள் புதிய தலைமுறையினரிடத்திலே பரவியமையாலும், தெளிவு ஏற்பட்டமையினாலும் பெண் என்ற உணர்வுநிலை நுட்பமாக வெளிப்படுத்தப்படுதல் :

எ - டு: 1

இருப்பு

எனது இயக்கம்
எனது ஆற்றல்
எனது திறமை
அனைத்தும் எனக்கே
இருக்கக் கூடியவை
யாரிடமாவது இருந்து
இவற்றைப் பெற்றால்
நான் பெண்ணாக
இருக்க முடியாது
நீங்கள் உருவாக்கிய பெண்மை
எனது அடையாளமல்ல
நான் பெண்
பிறக்கும்போதே
- றஞ்சி -

எ - டு : 2

என் ஆதித்தாயின்
முதுகிற்பட்ட
திருக்கைச் சவுக்கடி
நான்காணும் ஒவ்வொருவனது
முகத்திலுரும்
தழும்பாய் தேமலாய்
படர்ந்து கிடக்கிறது

அடையாளத்தை
உணரும் போதெல்லாம்
வீரியங் கொண்ட
ஊழிச் சவுக்கின் ஒலி
மீளவும் என்னை
வலிக்கப் பண்ணும்

என்னைப் பிளந்து
ரத்த உடுக்கள்
வெடித்து பறந்து
தனித்துச் சிதறிக் கொட்டும்
தனித்து
அவை ஒவ்வொன்றும்
கிரகங்கள் என
உருப்பெறும்
தன்னிச்சையாய் சுற்றிவரும்
தாள லயத்துடன்
ஆங்கு
எனக்கென
ஒரு பிரபஞ்சம்
என்னால் உருவாகும்
அப்போது உயிர்பெறும்
எனக்கான
வரிவடிவங்களுடன் கூடிய
என்மொழி

அதன் பின்
தேமல் படர்ந்த எவனாயினும்
உரையாடட்டும் அப்போது
கூறுகிறேன் பதிலை,
என்மொழியில்
என் ஆதித் தாயின்
பெண் மொழியில்
அது வரை நீ காத்திரு

- ஆழியாள் -

(iஎ) புகலிடக்கவிதை :

இக்காலகட்டப் புகலிடக் கவிதைகளிலும் பொருள் விரிவு ஏற்பட்டுள்ளது. புகலிடத் தமிழர் தம்மை அடையாளங் காணல் பற்றி அதிகம் சிந்திக்க முற்படுகின்றனர். கி. பி. அரவிந்தனின் கவிதைகள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகின்றன. (உ- ம் : சொல், யாராக இருக்கலாம் நான்). அதுவும் சர்வதேச நோக்கிலான அடையாளங்காணலாக அது பரிணமித்துள்ளது. 'அதிசயம் வளரும்' என்ற கவிதை இதற்குச் சிறந்த உதாரணமாகும்.

அதிசயம் வளரும்

ஆணையல்ல ஒழுங்கு
உத்தரவல்ல, கோட்பாடு
கட்டளையல்ல, கட்டுப்பாடு

இதிலெதையும் எப்பவும்
அவரவர்க்கு ஏற்றாற்போல்
எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால் பொருள் ஒன்றேதான்
குரலால் இட்ட பணியைத்
தலையால் சுமப்பது
உழைப்பொன்றையே ஏற்பது
அதற்கு இயைபாவது

வாழையைப் பயிரிடலாம் என்றால்
வாழையை மட்டுமே
பழக்குலைகளை அனுப்பினால்
தோல்கள் தானமாய் திரும்பிவரும்
வாழைத்தேசமாகலாம் நீவிர்.

நெல்லைப் பயிரிடலாம் என்றால்
நெல்லை மட்டுமே.
அரிசிமூட்டைகளை அனுப்பினால்
உமியும் தவிடும் உங்களுக்காகும்
நெல் நாடாகலாம் நீவிர்

கரும்பைப் பயிரிடலாம் என்றால்
கரும்பை மட்டுமே.
சீனி வெல்லத்தை அனுப்பினால்
சக்கைகள் நிறையவே மிதமாகும்
கரும்புத் தேசமாகலாம் நீவிர்

உயிர்தனை ஓம்பும்
நுகர்பண்டம் மெல்ல
தேசங்களாகி
உயர்திணையாகிடும்
நும்மொத்த மானிடர்
சுமைத்திட்ட தேசங்கள்
நுகர்பொருளாகி
அஃறிணையாகிடும்

தேசங்கள் கடந்து உலகத்தை அளந்து
அடிமுடி அறிந்த வல்லமையாலே
ஆத்மாக்கள் புசித்து மகாத்மாக்களாகி
உண்ணவும் உடுக்கவும் உறையவுமான
ஆதி உயிரின் டைனோசர்களின்
சாம்பலில் உயிர்த்து உலவிடுமிந்த
புதிய உலகக் கோட்பாட்டாளரே
வாழ்க நீவிர்!
உங்கள் பாத திருவடி போற்றி
பாடல்கள் புனைந்து
ஒருவெண்கொற்றக்
குடைநிழலில்
இவ்வுலகாள் வேந்தன் வாழியவே என்று
ஒழுங்காய் கோட்பாடாய் கடப்பாடாய்
நிமிர்ந்து இசைப்பீர்
ரொபோக்கோள்களாய்
ஆணைகளேற்று
என்னெற்றைக்குமாய்
அதிசயம் வளரும்

இவ்வாறே புகலிடப் பண்பாட்டால் உருவாகும் புதிய உறவுமுறைகள் பற்றியும் புகலிடக் கவிதைகள் பேசத் தொடங்குகின்றன (எ-டு: - கொய்யனின் கீறிப்பிளக்கப்பட்ட உணர்வுகள்). தவிர, புகலிடக் கவிதைகளில் சர்;றியலிசைப்பண்புகளும் ஓரளவு தலைகாட்ட ஆரம்பிக்கின்றன. (எ - டு : 'திசோ' என்பவரின் தலைப்பிடாத கவிதை; சங்கமம் 14, 1991).

அண்மைக்கால புதிய போக்கு:
பூகோள மயமாக்கத்திற்கெதிரான எதிர்ப்புக்குரல்

இன்றைய உலகினை நெருக்கமாக்கிவிட்டுள்ள 'பூகோளமயமாக்கம்' குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளைப் பலவிதங்களில் பாதித்து வருகின்றமை கண்கூடு; ஒருவிதத்தில் நவகாலணித்துவத்தின் உச்ச வெளிப்பாடாகி மிக அண்மைக்காலமாகவே கவிஞர்களது கவனத்தை ஈர்த்து வருகின்றது. இது இவ்விதத்தில் மூத்த தலைமுறையினருள் சிவசேகரமும், இளைய தலைமுறையினருள் ஜெயசங்கரும் குறிப்பிடத்தக்கவர்கள்.

பின்வருவது ஜெயசங்கரது கவிதையின் ஆரம்பப்பகுதி:

பிரதி செய்யப்பட்ட வெள்ளைத்திமிரர்
காட்டுமிராண்டித்தனமாகவும் நயவஞ்சகமாகவும்
தோற்கடிக்கப்பட்டனர் எம் முதாதையர்
தலைமுறை தலைமுறையாகப் புதுப்புது வழிகளில்
சூறையாடியே ஆயினும்
கனவான்களாகவும் கோமகன்களாகவும்
எங்களில் தங்களைத் திணித்துக்கொண்டனர்
அச்சுயத்தை உருவிவீசி
தம்சேவகச் சடங்களாய்
பதனிட்டுப் போயினர் வெள்ளைத்திமிரர்.

புதியவர் வந்தனர் கறுப்புத்தோலில்
பிரதிசெய்யப்பட்ட வெள்ளைத் திமிரராக
செய்மதிவிடுவதும் ஏவுகணை சுடுவதும்
அவர் செய்வார்
வாரீர் எம்புதல்வர் புதிய கூலியராய்
அவர் செய்வார்
வாரீர் எம் புதல்வீர் புதிய கூலியராய்

உல்லாசப் பயணம் வரும்
வெள்ளைத் திமிரருக்கு பரிசாரகர் ஆகலாம்
நோயுற்று வீழுகையில் பரிகரிக்கும் தாதியரும் ஆகலாம்
வாரீர் எம்புதல்வர் ஏற்றுமதி ஆகலாம்
என்று கூவிப் புதியவர் வந்தனர்.
குலையாத கேசமும் குறையாத செல்வமும்
அதிகாரத்துவத்துடன் ஓர் கபடுவாராத நட்பும் பூண்ட
புதியவர் வந்தனர் கறுப்புத்தோலில்.

முடிவுரை
1. தமிழ் நாட்டு நவீன கவிதை வளர்ச்சி பாரதிதாசனுக்கு பின்னர் (வானம்பாடிக் குழுவினர் காலம் வரை) சமூகத்திலிருந்து விலகிய சூழலில், ஈழத்து நவீன கவிதை தோற்றம் பெற்றது தொடக்கம் இன்றுவரை சமூகச்சார்புடையதாகவே இருந்து வந்துள்ளது.

2. எண்பதுகளில் ஈழத்துக் கவிதை பெருமளவிற் புதுக்கவிதை அடைந்துள்ள பரிணாமம் (அரசியல் எதிர்ப்புக் குரல், பெண்நிலை வாதம், புகலிட அனுபவம், ஈழத்துக் கவிதையை உலகப்பொதுவான, குறிப்பாக மூன்றாம் உலக நாடுகள் சார்ந்த கவிதை சட்டத்துள் சங்கமிக்கச் செய்துள்ளது.

3. தமிழ்நாட்டு முற்போக்குக் கவிதையில் இடம்பெறாத கலைத்துவப் பண்பு ஈழத்துக் கவிதையிலுண்டு.

4. தமிழ்நாட்டில் பாரதிவழிவந்த நவீன கவிதை வெளிப்பாட்டு ரீதியில் தளர்ச்சிகண்டபோது ஈழத்து நவீன கவிதை பேச்சோசை, காட்சிப் படுத்தல், செய்யுளடி இடமாற்றம்பெறல், யதார்த்தப்பாங்கு முதலான பண்புகளைப் பெற்று வளர்ச்சி கண்டுள்ளது.

5. தமிழ்நாட்டில் எழுத்து வழி வந்த புதுக்கவிதை சமூகத்திலிருந்து விலகியபோதும் வானம்பாடி வழிவந்த புதுக்கவிதை குறுகிய காலத்தின் பின் தளர்ச்சி கண்டபோதும் ஈழத்துப் புதுக்கவிதை சமூகத்திலிருந்து விலகாதது மட்டுமன்றி தமிழ்நாட்டுப் புதுக்கவிதையில் இடம்பெறாத ஆரோக்கியமான பண்புகளையும் (எ-டு: உள்ளார்ந்த ஓசைப்பாங்கு, தேவையுடனான - அந்நியப்படாத படிமம், குறியீடு, இருண்மையின்மை, பெற்றுள்ளது.

6. பாரதி வழிவந்த நவீனகவிதை வடிவமானது ஈழத்தில் குறிப்பாக எழுபதுகளிலிருந்து மூத்த தலை முறைக் கவிஞர்களாலேயே பின்பற்றப்பட்டு வருகின்றது. (அண்மைக்காலங்களில் அவற்றை திறம்படக் கையாள்பவருள் சோ. பத்மநாதன் குறிப்பிடத்தக்கவராகின்றார்.) அதேவேளையில் புதுக்கவிதை எழுதுவோர் சிலரும் அவற்றைத் தேவையை ஒட்டிச் சிறப்புறக்கையாள்வதும் குறிப்பிடத்தக்கது (எ-டு: சேகரம்).

7. ஈழத்துக்கவிதை பொருள் ரீதியில் அரசியல் சார்ந்த விடயங்களுக்கு அப்பால் சமூகச்சார்ந்த விடயங்களில் (எ-டு : வெகுசனத்தொடர்பு ஊடக வளர்ச்சியினால் ஏற்பட்டு வரும் பாதிப்புகள், சூழலியல், செலுத்துகின்ற அக்கறை போதியதன்று.

8. ஈழத்துக் கவிதை நாட்டார் இலக்கிய பாரம்பரியம், தமிழ்க்கவிதைப் பாரம்பரியம் என்பனவற்றிலிருந்து பெற்றுக்கொள்கின்ற ஆரோக்கியமான அம்சங்களும் அரிதாகவே உள்ளன. ஈழத்தில் நாட்டார் பாடல் பாரம்பரியத்தைப் பெருமளவு பின்பற்றுகின்ற கவிஞரென்று குறிப்பிட்டு எவரையும் கூறமுடியாதுள்ளது. ஆயினும் சு.வில்வரெத்தினம், சிவசேகரம் ஆகியோரது கவிதைகள் தமிழ்க்கவிதைப் பாரம்பரியத்திலிருந்து நல்ல சில அம்சங்களைப் பெற்று வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

9. புகலிடக் கவிதைகளின் எதிர்காலம் சர்ச்சைக்குரியதாயினும் நிகழ்காலத்தில் அது பொருள் விரிவையும் வெளிப்பாட்டு ரீதியிலான மாற்றங்களையும் தந்து நிற்கிறது.

10. தவிர ஈழத்து கவிதை வளர்ச்சி நிலையில் எண்பதுகளுக்குப் பிற்பட்ட மொழிபெயர்ப்புக் கவிதைகள், எழுபதுகளுள் அளவிலான கவியரங்குகள், ஈழத்துக் கவிதைச் சஞ்சிகைகள் என்பனவும் ஒப்பீட்டுரீதியில் விதந்துரைக்கப்பட வேண்டியவை; தனித்துவம் கொண்டவை. சுருங்கக்கூறின் ஐம்பத்தைந்தாண்டுகால ஈழத்து நவீன கவிதை வளர்ச்சி அவ்வப்போது ஏற்ற இறக்கங்களைச் சந்தித்திருப்பினும் தமிழ்நாட்டு நவீன கவிதை வளர்ச்சிப் போக்கினைவிட பல விதங்களில் முதன்மை பெறுகிறது என்பது தெளிவு பெற்றுள்ளது. இவ்விதத்தில் நவீன கவிஞர்களுள் பின்வருவோர் மிக முக்கியமானவர்களாகின்றனர் மஹாகவி, நீலாவாணன், இ.முருகையன், சில்லையூர் செல்வராசன், நுஃமான், தா. இராமலிங்கம், தருமசிவராம், மு. பொன்னம்பலம், சண்முகம் சிவலிங்கம், சிவசேகரம், வ.ஐ.ச. ஜெயபாலன், சு. வில்வரத்தினம், புதுவை இரத்தினதுரை, சேரன், சோலைக்கிளி. (எண்பதுகளுக்குப் பிற்பட்ட முற்கூறிய இளந்தலைமுறைக் கவிஞர்கள் பலர் கவனிப்பிற்குரியவர்களென்பதில் ஐயமில்லை; ஆயினும் அவர்கள் எழுதியுள்ளவை மதிப்பீட்டிற்குப் போதியனவல்ல. அத்துடன் அவர்களுட் பலர் இப்போது எழுதிக்கொண்டிருக்கின்றனர். ஆயினும் எண்பதுகளுக்குப் பிற்பட்ட முக்கியபோக்குகள் என்ற விதத்தில் அவர்களது படைப்புகள் விதந்துரைக்கப்பட வேண்டியனவே.


2

ஈழத்துச் சிறுகதைத் தேட்டம் பற்றிக் கவனிப்பதற்கு முன்னர் தேவை கருதி ஈழத்துச் சிறுகதையின் எழுபதாண்டுக்கால வரலாறு பற்றி மிகச்சுருக்கமாக நினைவு கூர்வது பயனுடையது.

ஈழத்தில் தமிழ்ச் சிறுகதையின் தோற்றம், முப்பதுகளளவில் தமிழ்நாட்டுச் சிறுகதை மணிக்கொடிக்குழு எழுத்தாளர்களுடாக உலகச் சிறுகதைத் தரத்தினை எட்டமுனைந்திருக்கும் வேளையில் நிகழ்கின்றது. இக்காலகட்ட 'ஈழகேசரி' எழுத்தாளருட் பெரும்பாலானோர் கற்பனவாதப் பண்புடைய கதைகளையே எழுதினர். ஒரு சிலர் ஈழத்துச் சமூகப் பிரச்சினைகளுக்கு (எ-டு: சாதிப்பிரச்சினை) முக்கியத்துவம் கொடுத்து எழுதியதாக அண்மைக்காலத்தில் அறியப்பட்டுள்ளது.

நாற்பதுகளளவிலே 'மறுமலர்ச்சி' எழுத்தாளர்களது சிறுகதைகளில் ஈழத்து மக்களது, குறிப்பாக யாழ்ப்பாண மக்களது வாழ்க்கை ஓரளவு கலாபூர்வமாக வெளிப்படத் தொடங்கியமையும் தற்போதைய ஆய்வுகளுடாகப் புலப்படுகின்றது.

யாழ்ப்பாணம் என்ற எழுத்து வட்டத்தினை, ஐம்பதுகளளவில் மட்டக்களப்பு எழுத்தாளரும் (எ-டு: பித்தன்) மூதூர் எழுத்தாளரும் (எ-டு: வ.அ.இ) விரிவுபடுத்தினர். மேற்கூறிய விதங்களில் இவர்கள் பின்னைய 'முற்போக்கு' எழுத்தாளர்களுக்கு தடமமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏறத்தாழ அறுபதுகளில் முற்போக்கு எழுத்தாளர் சங்கச் செயற்பாடுகளுடனேயே பிரக்ஞை பூர்வமாக ஈழம் பற்றிய சிறுகதைகள் எழ ஆரம்பித்தன. அதுகாலவரையான தமிழ்நாட்டு எழுத்துகளின் தாக்கம்பற்றி அக்கால எழுத்தாளரொருவர் பின்வருமாறு கூறியுள்ளமை மனங்கொள்ளத்தக்கது :

"..... அப்போது கதைகள் இந்தியப் பின்புலத்தில் இந்திய தமிழ் மக்களது வாழ்க்கைப் பின்னணியில் எழுதுவதே வழக்கமாக இருந்தது. நான் இந்தக் கதை நிகழிடங்கள் கல்முனை, திருகோணமலை என்றும், நூர்ஜஹானின் தந்தை போடியார் இப்றாகீம் என்றும் மற்றும் காரியாலயம், லிகிதர் மாவட்டம் என்ற சொற் பிரயோகங்களும் கதையில் வந்தன. ஆனால் பிரசுரமான கதையில் வந்தன. ஆனால் பிரசுரமான கதையில் கதை நிகழிடங்கள் செங்கல்பட்டு, வித்தியமலை என்றும் மற்றும் ஜமீன்தார் இப்றாகீம் என்றும், ஆபீஸ், குமாஸ்தா, ஜில்லா என்றும் சொற் பிரயோகங்கள் மாற்றப்பட்டன. இலங்கைக் கதைகளின் தன்மை அப்போது எவ்வாறு இருந்தது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும். (அப்துஸ் ஸமது)

மேலும் இம்முற்போக்கு எழுத்தாளர் சங்கச் செயற்பாடுகள் காரணமாக ஈழத்துச் சிறுகதையுலகினுள் ஈழச் சமூகத்தின் அடி நிலை மட்டம் சார்ந்த எழுத்தாளரது பிரவேசம் நிகழ்ந்தது. (எ-டு: டொமினிக் ஜீவா, டானியல்) இவர்களுடாக ஈழத்துச் சிறுகதை வலுவான சமூக, அரசியல் உள்ளடக்கத்தையும் வளமான பேச்சு மொழி நடையையும் (இக்காலகட்ட 'பண்டிதர்கள்' வார்த்தையிற் கூறினால் 'இழிசனர் வழக்கு') பெற்றுக் கொண்டது.

இதே அறுபதுகளில் ஈழத்தில் உயர்கல்வி முறையிலே ஏற்பட்ட மாற்றங் காரணமாக பேராதனைப் பல்கலைக்கழகம் சென்றோருள் சிலர் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களாக பரிணாமம் பெற்றுக் கொண்டனர். தென்னிலங்கை (முஸ்லிம் எழுத்தாளர்கள்) மலையகம் ஆகிய பிரதேசங்களிலிருந்து எழுத்தாளர்கள் உருவானதும் இக்காலமே.

எழுபதுகள் தொடக்கம் ஈழத்துச் சிறுகதை உள்ளடக்கத்திலும் வெளிப்பாட்டு முறைகளிலும் மாறுபடத் தொடங்கியது (எ-டு : தனிமனித அக உளைச்சல்கள் ; அகவய அனுபவத்தின் ஊடாக புற உலகப் பிரச்சினைகள்; 'கதை' கூறும் பண்பு முதன்மையிழத்தல்; உருவ மாற்றம் ; மொழிநடை மாற்றம் ; கலைத்துவம்)

எண்பதுகள் தொடக்கம் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியிலே பல பாய்ச்சல்கள் நிகழ்ந்து வந்துள்ளன. இன ஒடுக்குமுறையும் ஆயுதப் போராட்டமும் போர்க்கால வாழ்க்கையும் புலப் பெயர்வினால் ஏற்பட்ட புகலிட நாட்டு வாழ்க்கை அனுபவங்களும் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சிப் போக்கிலே உள்ளடக்க விசாலிப்பையும், உருவ, உத்தி, மொழிநடை மாற்றங்களையும் ஏற்படுத்தி வந்துள்ளன ; ஏற்படுத்தி வருகின்றன.

மேற்கூறிய எழுபதாண்டுக்கால ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் இடம்பெற்றுள்ள எழுத்தாளர்களுள் இன்று வரையான ஆய்வாளர்கள் குறிப்பிடத்தக்கவர்களாகக் கருதுகின்ற அனைவரையும் இங்கு குறிப்பிடுவது அவசியமானதன்று. அது என் நோக்கமுமன்று. அவர்களுட் சிலரை மட்டுமே கவனத்திற்குரியவர்களாகக் கருதுகின்றேன். இவ்வாறு கருதுவதற்கு இரு காரணங்களை அடிப்படையாகக் கொள்கின்றேன்.

அவற்றுளொன்று, சமூக நோக்குடைய உள்ளடக்கம், இவ்வடிப்படையில் பின்வரும் எழுத்தாளர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். (இத்தகைய எழுத்தாளர்களையும் பொருத்தம் கருதி இருவகைப்படுத்துகின்றேன்) :

(அ) முற்போக்கு அணி சார்ந்த சமூக நோக்குடைய எழுத்தாளர்கள்:

டொமினிக்ஜீவா, செ. கணேசலிங்கன், டானியல், என்.கே. ரகுநாதன்,
காவலூர் ராஜதுரை, நீர்வை பொன்னையன், அகஸ்தியர்,
செ. யோகநாதன், செ. கதிர்காமநாதன், யோ. பெனடிக்ற் பாலன், மருதூர்க் கொத்தன், தெணியான், நந்தினிசேவியர், டானியல் அன்ரனி, சாந்தன், மாத்தளை சோமு

(ஆ) முற்போக்கு அணிசாராத சமூக நோக்குடைய எழுத்தாளர்கள் :

அ.செ. முருகானந்தன், கு. பெரியதம்பி, பித்தன், எஸ். பொ., வ. அ. இராசரத்தினம், என். எஸ். ராமையா, நந்தி, மு. தளையசிங்கம், கே. வி. நடராஜன், அ. முத்துலிங்கம், தெளிவத்தை ஜோசப், சண்முகம் சிவலிங்கம், செங்கை ஆழியான், மு. பொன்னம்பலம்,பவானி ஆழ்வாப்பிள்ளை, அ, யேசுராசா, குப்பிளான் ஐ. சண்முகம், திக்வெல்லை கமால், எஸ். எல். எம். ஹனிபா, சட்டநாதன், உமா வரதராஜன், சண்முகம் சிவலிங்கம், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், கவிதா, மொயின்சமீம், ரஹீம், தெளிவத்தை ஜோசப், என். எஸ். எம். ராமையா, மு. பசீர், ராஜ்கபூர், கோகிலா மகேந்திரன், சுதாராஜ், மண்டூர் அசோகா, அருண் விஜயராணி, ரஞ்சகுமார், திருக்கோயில் கவியுவன், பொ. கருணாகரமூர்த்தி, கலாமோகன், கலைச் செல்வன், ஷோபா சக்தி, சக்கரவர்த்தி, ந. பார்த்திபன், ஓட்டமாவடி அரபாத், கௌரிபாலன், திரேசா, அம்ரிதா ஏயெம், மலர்ச்செல்வன்.

ஆயினும் சிறுகதையுட்பட எந்த நவீன இலக்கியங்களிலும் அதன் உள்ளடக்கம் அல்லது சமூக நோக்கு மட்டுமே முக்கியமானது என்பதற்கில்லை. அதற்குச் சமமாக அப்படைப்பின் கலையாக்க முறையும் முக்கியமானது. ஒருசேர இவ் இரண்டினதும் முக்கியத்துவம் பற்றி மாக்சிய அழகியல் விற்பனர் அடோனோ (Adorno)கூறும் கருத்துக் கவனத்திற்குரியது அவர் கூறுவதாவது :

"கலையாக்கம் என்பது, அவ்வாக்கத்தின் எழுவாயான (அதாவது அது எழுகின்ற இடமான) அகநிலைப் பொருள் (அதாவது மனிதன்) தன்னை வெளிப்படுத்திக் கொள்வதான, தன்னைப் புற நிலைப் படுத்திப் பார்த்துக் கொள்வதான, இவற்றால் தன்னை இனம் கண்டு கொள்வதான ஒரு பருப்பொருளாகும். (அதாவது புற நிலையில் வைத்துப் பார்க்கக் கூடியதான, பிண்டப் பொருளான, ஒரு படைப்பு ஆகும்)........................... மனிதன், தன்னுள்ளிலிருந்து தான் வெளியே வருவதன் மூலமும், தன்னை முனைப்புறுத்தி நோக்குவதன் மூலமுமே - அதாவது தன்னை ஒரு விடயப் பொருளாக ஆக்கி நோக்குவதன் மூலமே - அவன் தன்னைத்தான் அறிந்து கொள்ளலாமாதலால், கலை, மனிதனை, மனித நிலைப்படுத்தும் நடைமுறையில் மிக முக்கியமான ஓர் இடத்தினைப் பெறுகின்றது" (Art and Society, London, 1997)

இம் மேற்கோள்பற்றி பேராசிரியர் கா. சிவத்தம்பி கூறும் விளக்கத்தினை இங்கு தருவது பயனுடையது. அது பின்வருமாறு :

"கலையாக்கத்தின் தன்மை பற்றிய இம் மேற்கோள், ஒரு கலைப் படைப்பிலிருந்து அதனை நுகர்வோன் பெறும் கலைப் பயனை மிக நுணுக்கமாக, அதே வேளையில் மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.

பெரிதும் எளிமைப்படுத்தாமற் கூறுவதானால் படைப்பு என்பது மனிதன் தன்னைத் தான் நன்கு புரிந்து கொள்வதற்கு வேண்டிய, புறநிலைப் பொருளாக அமைந்துள்ள 'படைப்பு' ஆகும். அது மனிதனைப் பற்றியது. அதே வேளையில் மனிதன் தனக்குப் புறம்பே வைத்து நோக்கத்தக்க ஒரு பிண்டப் பொருளாக அமைவது. மனிதனிடத்திலிருந்து 'படைக்க' ப்படுவது. (ஆக்கம் மாத்திரம் படைப்பு ஆகாது. 'படைப்பு' எனும் பொழுது ஆக்கமும் அளிப்பும் இணைகின்றன). எனவே, கலைப்படைப்பு என்பது மனிதனூடாக வந்து மனித நிலையைக் காட்டுவது.

ஓவியம், சிற்பம், இசை முதலாம் துறைகளில் வரும் படைப்புகளுக்கு இவ் உரைகல் வாசகம் எத்துணை பொருந்துமோ இலக்கியத்துக்கும் அத்துணை பொருந்தும்.

ஒவியம், சிற்பம், இசை முதலாம் துறைகளில் ஒரு படைப்பு ஆக்கி அளிக்கப்படுகின்றபொழுது அவற்றின் செம்மையை உத்தரவாதம் செய்வதற்கான 'தொழி நுட்பம்' எத்துணை அவசியமோ இலக்கியத்திலும் ஆக்க நுட்பப் புலமை அத்துணை அவசியமானதாகும் ......"

(உயிர்ப்புகள் பின்னுரையில்)

இவ்விடத்தில், ஈழத்துச் சிறுகதைத் தேட்டம் பற்றி எவ்வாறு எடை போடலாம் என்ற வினா எழுகின்றது. அதற்கு பேராசிரியர் கா. சிவத்தம்பியின் வார்த்தைகளில் இவ்வாறு விடை கூறலாம்:

"நாம் எழுதுவன மாத்திரம் முக்கியமாவதில்லை. 'எழுதப்பட்டது' எவ்வாறு அமைந்துள்ளது என்பதும் முக்கியமாகும் .எழுதப்பட்டது என்பது எழுதப்படும் பொருளின் முக்கியத்துவத்திலே, அந்தப் பொருளை அறிமுறையிலே தொடங்கி அந்த 'அறிமுறை' எவ்வாறு 'சித்திரிப்பு' ஆகின்றது என்பது பற்றி விளங்க முற்பட்டு, அந்த 'அறிமுறை' யினைக் கொண்ட ஆளுக்கும் அந்தச் சித்தரிப்புக்குமுள்ள இயைபு பற்றித் தெளிவுபடுத்தி, அதனையடுத்து எழுதப்பட்டதன் பின்னர் பிண்டப் பொருளாய் நிற்கும் அந்தப் படைப்புதான் சித்திரித்ததை எவ்வாறு 'விளக்குகின்றது' என்பதைக் கண்டு, அந்த விளக்கத்தை ஏற்படுத்தும் அம்சங்கள் யாவை என்பதை இனங்கண்டுகொண்டு அமிசங்களின் இயைபையும் படைப்பின் முழுமையையும் இயைபுபடத் தெரிந்து கொள்வதிலேயே விமர்சனம் முழுமை பெறுகின்றது".
(உயிர்ப்புகள் பின்னுரையில்)

மேலே குறிப்பிட்டுள்ளது போன்று (ஈழத்துச்) சிறுகதை எவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்று கவனிக்க முற்படும்போது சிறுகதை என்ற வகையின் முக்கிய அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வது தவிர்க்க இயலாததாகி விடுகின்றது.

முதலில் சிறுகதை என்ற வகையின் உயிர்நாடியான அம்சம் யாது என்றறிய வேண்டும். அது இதுதான் :

"சிறுகதை ஒரு குறிப்பிட்ட மனோ நிலையை அல்லது உணர்வு நிலையைக் காட்டுவதாக அமைதல் அவசியம். இந்த மனோ நிலையை வார்த்தைகளால் சுட்டிக் காட்டாது, கதையினை வாசிக்கும் வாசகனின் மனதில் அவனை அறியாது அவ்வுணர்வுநிலை தோன்றும்படி செய்ய முடியுமானால் அவ்வாறான சிறுகதை ஒரு தலை சிறந்த சிறு கதையாக அமையும்." (கா. சிவத்தம்பி, தமிழ் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்.)

இனி சிறுகதை என்ற வகையின் தனித்துவமான அம்சம் பின்வருவது :

"சிறுகதை என்பது தனித்துவமான அல்லது ஒரு தனிப்பட்ட தாக்கத்தினை ஏற்படுத்துவதற்கான செறிவினையும் கூர்நோக்கினையும் உடையதாயிருக்கும் ; தாக்க முழுமையே இவ் விலக்கிய வகையின் பிரதான நோக்கமாகும்"

மேலே ஜே. ஏ. கடொன் என்பார் கூறியுள்ளவற்றை (A Dictionary of literary terms, Penquin 1982)

"இன்றைய சூழலுக் கேற்ற உவமையாகக் கையாள்வதானால், சிறுகதையை, அதிக பலம் உள்ளடக்கி வைக்கப் பெற்ற சிறு 'கிறனெட்'டுக்கு ஒப்பிடலாம். அது 'வெடிக்கும்' பொழுது ஆயிரம் சூரியனைக் கண்டது போன்ற ஒரு சத்திய தரிசனம், ஆன்மத திகைப்பு / குழைவு / மீள்கண்டு பிடிப்பு ஏற்பட வேண்டும் "
(உயிர்ப்புகள் பின்னுரையில் கா. சிவத்தம்பி)

மேற்கூறியவாறு சிறுகதை ஏற்படுத்தும் தாக்கமானது, அதன் உருவச் சிறுமையினாலேயே சாத்தியமாகின்றது. அதாவது படைப்பாளி தான் ஏற்படுத்த விரும்பும் தாக்கத்திற்கான அளவிற்கு அதன் நீளத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். (தொய்வான நீளம் சிறுகதை என்ற வடிவத்தின் அமைப்பினைச் சிதைத்துவிடும்). எனவே, சிறுகதை என்ற வடிவம் மிகச் சிக்கலான தொன்றாகின்றது. இதில் தேர்ச்சி பெறுவதென்பது எழுத்தாளனது படைப்பாளுமையிலேயே தங்கியுள்ளது.

முற்குறிப்பிட்ட சிறுகதையின் செறிவு என்பது (சிறுகதையின்) மொழிநடை நோக்கிலும் முக்கியம் பெறுகின்றது. சிறுகதையிலே எழுதப்படுவன, எழுத்தின் வழித் தோன்றி, எழுத்திற்கு அப்பால் நிற்கும் உணர்வுகளைத் தோற்றுவிப்பனவாக இருத்தல் வேண்டும். எனவே, ஒரு சிறுகதை பேசுவனவற்றிலும் பார்க்க அதன் மௌனங்கள் முக்கியமானவையாகின்றன. இதனை மேலும் விளங்கிக் கொள்வதற்கு, கு. ப. ராவின் சிறுகதைகள் பற்றி தி. ஜானகிராமன் கூறியுள்ளவற்றை நினைவுகூர்வது அவசியமாகின்றது. அது பின்வருமாறு :

"அவருடைய எழுத்துக்களைப் படிக்கும் பொழுது ஒரு பிரமிப்புத்தான் ஏற்படுகின்றது. பட்டுப் போன்ற சொற்களிலும் பத்துப் பக்கங்களுக்கு மேற்படாத சொற்களிலும் எப்படி இவ்வளவு பெரிய கலைவடிவங்களையும் உணர்ச்சி முனைப்பையும் வடிக்கிறார் அவர்! இந்தத் தொகுப்பிலுள்ள 'மூன்று உள்ளங்கள்', 'படுத்த படுக்கையில்', 'சிறிது வெளிச்சம்', 'தாயாரின் திருப்தி' - இவைகளை மீண்டும் மீண்டும் படிக்கப் பிரமிப்பே மிஞ்சுகிறது. இத்தனை சிக்கனத்தை எப்படி இவர் சாதிக்கிறார் என்ற பிரமிப்பு. ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் வரிக்குள்ளும் எத்தனை ஒளிகள், பார்வைகள்! எழுதியதை விட எழுதாமல் கழித்ததே முக்கால் வாசி என்று தோன்றுகின்றது. ஆடம்பரம் இல்லாத எளிய சொற்களுக்குக்கூட, உணர்ச்சி முனைப்பாலும், ஒரு கூட்டுச் சக்தியாலும் ஒரு புதிய பொருளும் வேகமும் கிடைக்கின்றன. சாதாரண சொற்களுக்குக் கூட ஒரு புதிய வீரியத்தை ஏற்றிய பாரதியின் வெற்றிதான் ராஜகோபாலனின் கதைச் சொற்கள் கண்டிருக்கின்றன. அதனாலேயே சத்தமில்லாத வேகமும் சிக்கனமும் கைகூடி அவர் கதைகள் அடர்த்தியும் இறுக்கமும் நிறைந்த சிற்ப வெற்றிகளாகத் திகழ்கின்றன. இத்தனை வெற்றிகள் திணித்த கதைகளை தமிழில் யாரும் இதுவரை இன்னும் எழுதவில்லை. உண்மையாகவே மௌனங்கள் நிறைந்த கதைகளை அவர் ஒருவர்தான் எழுதியிருக்கிறார்" (சிறுவெளிச்சம் வாசகர் வட்டம், 1969)

சிறுகதையின் உரைநடை அம்சமும் கவனத்திற்குரியதொன்றாகும். 'அதன் உரைநடை கவிதைக்குரிய தன்மைகளை (காம்பீரியம், நுண்ணுணர்வு முதலியன)பெற்றிருத்தல் அவசியம். அதன் ஒவ்வொருஅம்சமும் - தலைப்பு முதல் இறுதிக்குறியீடு வரை - எழுத்தாளனின் படைப்புத் திறனின் ஆழ்வுக் குவிவிலிருந்து வெளிக்கிளம்ப வேண்டும். அப்பொழுது தான் அது உண்மையான கலைப்படைப்பாக மிளிரும்" (இதுபற்றி, தமிழ்ச்சிறுகதை முன்னோடிகளுள் ஒருவரான வே. சு. அய்யர் அன்றே சிந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.)

சுருங்கக்கூறின் மேற்கூறிய விடயங்களை நுணுகிநோக்கும் போது உள்ளடக்கம் மட்டுமன்றி அதனோடு சேர்ந்து கலையாக்க நெறியும் சமமான முக்கியத்துவம் பெறுவதன் தவிர்க்க இயலாமை புலனாகின்றது. ஆகவே, இவ்வடிப்படையில் நோக்க முற்படும் போது, தன் தவிர்க்கவியலாமை இன்னும் தெளிவாகக் கூறின், வெளிப்பாட்டுப்புதுமை, மொழிச்செறிவு, உருவ நேர்த்தி, உரைநடைச் சிறப்பு, உத்திமுறை, பிற பரிசோதனை முயற்சிகள் முதலானவற்றுள் சிலவோ பலவோ முற்குறிப்பிட்ட எழுத்தாளரது பெரும்பாலான சிறுகதைகளில் இடம்பெறுகின்றதா என்று நோக்க முற்படும்போது, முற்குறிப்பிட்டோருள் பின்வரும் எழுத்தாளர்களையே முக்கியமான எழுத்தாளர்களாக கணிக்க முடிகின்றது.

பித்தன், எஸ். பொ, மு. தளையசிங்கம், கே. வி. நடராஜன், மு. பொன்னம்பலம், செ. கதிர்காமநாதன், சட்டநாதன், அ. யேசுராசா, உமா வரதராஜன், எஸ். எல். எம். ஹனீபா, தெளிவத்தை ஜோசப், நந்தினி சேவியர், என். எஸ். எம். ராமையா, மொயின் சமீம், ரஹீம், குப்பிளான் சண்முகம், கவிதா, ரஞ்சகுமார், திருக்கோயில் கவியுவன், சண்முகம் சிவலிங்கம், பொ. கருணாகரமூர்த்தி, சக்கரவர்த்தி, நா. பார்த்திபன், குமாரமூர்த்தி, ஓட்டமாவடி அரபாத், ரஊப்.

பிற்காலச் சிறுகதைகளுடாக : செங்கை ஆழியான் (இரவு நேரப் பயணிகள்), அ. முத்துலிங்கம் (வம்சவிருத்தி). எழுத்துலகிலே அண்மைக்காலம் பிரவேசித்தவர்களுள் : ஷோபாசக்தி, கௌரிபாலன், திசேரா, அம்ரிதாஏயெம், விஜயலெட்சுமி, மலர்ச்செல்வன் முதலானோர்.

முற்குறிப்பிட்ட பட்டியலிலுள்ள (மேற் குறிப்பிட்ட எழுத்தாளர்கள் தவிர்ந்த ஏனைய) எழுத்தாளர்கள் பெரும்பாலானோரது படைப்புகள் முன்னர் குறிப்பிட்ட சிறுகதைக்குரிய தன்மைகளைப் பெற்றுக் கொள்ளாமை மட்டுமன்றி, வேறுசில குறைபாடுகளைக் கொண்டனவாகவுமுள்ளன. இவ்விடத்தில் அவைப்பற்றிக் கவனிப்பதும் அவசியமாகின்றது.

- கதையம்சத்திற்கே முதன்மையளித்தல்.

- சம்பவத்தொகுப்பிற்கு முதன்மையளித்தல்.

- ஒரே பாணியில் எழுதுதல். வெறும் விவரண அல்லது நிகழ்ச்சிப் பதிவுகளாகத் தருதல் (குறிப்பாக, எண்பதுகளிலிருந்து இப்பண்பு மிகுந்து வருகின்றது.)

- சிறுகதை சிருஷ்டிப்பதனை எளிதான செயலாகக் கருதுதல், (அது ஒரு பிரசவம், தவம் என்பதைனை உணர்வதில்லை.)

இதனால் முதல் வரைவாக (First Draft) அல்லது செதுக்காத சிற்பங்களாக அல்லது அவசரக் கோலங்களாக பெரும்பாலான படைப்புகள் அச்சுருப் பெறுதல்.

- சிறுகதை என்ற வடிவம் பற்றிய தெளிவான அறிவில்லாமை.

மேற்கூறிய குறைபாடுகளைத் தவிர இன்றும் சில குறைபாடுகள் ஈழத்துச் சிறுகதைகளில் இடம்பெற்றுள்ளன. இவை நாவலுக்கும் பொருந்துவனவாதலின் அவை பற்றிப் பின்னர் கவனிப்போம்.


3

இனி ஈழத்து நாவல் இலக்கியத் தேட்டம் பற்றி அவதானிப்பது பயனுடையது.

ஈழத்து தமிழ் நாவல் வரலாறு சிறுகதை வரலாற்றைவிட சற்று நீண்டகாலங் கொண்டது. அது ஏறத்தாழ 115 ஆண்டுகளை உள்ளடக்கியது. ஆயினும், ஈழமக்களது வாழ்வை ஓரளவு பிரதிபலிக்கின்ற நாவல்கள் சென்ற நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்திலிருந்தே (1916) வெளிவரத் தொடங்கின. எனினும் பிரக்ஞைபூர்வமாக ஈழமக்களது வாழ்வியல் பிரச்சினைகள் அறுபதுகள் தொடக்கமே ஈழத்து நாவல்களில் வெளிப்படுகின்றன. இவ்விதத்தில் முற்போக்கு எழுத்தாளர்களது பங்களிப்பு கவனத்திற்குரியதென்பது நாமறிந்ததே (எ-டு: இளங்கீரன், செ. கணேசலிங்கன், டானியல்).

எழுபதுகள் ஈழத்து நாவல் வளர்ச்சிப் போக்கிலே குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியது. மலைநாடு, வன்னி, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் என ஈழத்தின் பல பிரதேசங்களிலுமிருந்து இளம் எழுத்தாளர்கள் பலர் நாவல் உலகினுள் பிரசேவித்தனர். கூடவே தத்தம் பிரதேசங்களை நாவலின் களமாக்கினர். தமிழ் நாட்டுப் படைப்புகளின் இறக்குமதித்தடையும், வீரகேசரி பத்திரிகை நன்கு திட்டமிட்டு மாதாந்த நாவல் வெளியீட்டு முயற்சியில் ஈடுபட்டமையும் அத்தகைய முயற்சிகள் சித்திபெற வழிவகுத்தன என்பது நாமறிந்ததே. எண்பதுகளில் இடம் பெற்ற ஈழத்து அரசியல், சமூக மாற்றங்கள் சிறுகதை போன்று நாவலில் முனைப்புப்பெறவில்லை. ஆயினும் அவ்வாறான தேசிய இனப்பிரச்சினை, புகலிட அனுபவம் பற்றிய நாவல்கள் சில வெளிவராமலில்லை.

சிறுகதை வளர்ச்சியில் கவனித்தமைபோன்று நாவலிலும் சமூக நோக்குடைய உள்ளடக்கத்தை முதன்மைப்படுத்தி அணுகும்போது பின்வரும் நாவலாசிரியர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்:

(அ) டானியல், இளங்கீரன், செ. கணேசலிங்கன், யோ. பெனடிக்பாலன், செ. யோகநாதன், தெணியான், சுதந்திரராஜா.

(ஆ) எஸ்.பொ. (சடங்கு), செங்கைஆழியான், தெளிவத்தை ஜோசப், அருள் சுப்பிரமணியம், அ. பாலமனோகரன், தி. ஞானசேகரன், விஜயன், கோகிலம் சுப்பையா, வை. அகமத், ஷம்ஸ், திக்வெலை கமால், இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், மு.பொன்னம்பலம், கோகிலா மகேந்திரன், அங்கையன் கயிலாசநாதன், தியாகலிங்கம், கி.ஆ.துரை, பொ. கருணாகரமூர்த்தி, தாமரைச் செல்வி, மலரவன், கோவிந்தன், மு.தளையசிங்கம், நித்திய கீர்த்தி, பொன். கணேச மூர்த்தி.

மேற்குறிப்பிட்ட நாவலாசிரியர்களுள் சிறந்த நாவலாசிரியர்களாகத் கூறக்கூடியவர்கள் யாரென்பது பற்றி சற்றுப் பின்னர் கூறுவதே பொருத்தமானது. இதற்கு முன் நாவல் என்ற வடிவத்தின் தனித்துவமான இயல்புகள் பற்றி சற்று சுருக்கமாக நினைவுகூர்வது அவசியம்.

முன்பு சிறுகதை பற்றிக் கவனித்தபோது, அடிப்படையில் படைப்பின், உள்ளடக்கத்திற்குச் சமமாக கலையாக்க முறையும் முக்கியம் வாய்ந்ததென்பதும் அது பற்றிக் கவனத்திலெடுப்பது அவசியமென்பதும் தொடர்பாகக் கூறியுள்ள விடயங்கள் இங்கு நாவல் பற்றி அவதானிக்கும்போதும் ஏற்புடையன என்பது முதலில் விதந்துரைக்கப்பட வேண்டியதாகின்றது.

அடுத்து, நாவல் என்ற வடிவத்திற்குரிய தனித்துவப் பண்புகள் பற்றி சுருக்கமாக நினைவு கூருவோம்.

இவ்விதத்தில் முதலில் குறிப்பிடத்தக்கது நாவல் வாழ்வின் முழுமையைச் சித்திரிப்பதாக அமைய வேண்டும் என்பது. இவ்விதத்தில் ஆய்வாளரொருவர் பின்வருமாறு கூறுவது கவனத்திற்குரியது:

"ருஷ்யப் பேரிலக்கியங்கள் மூலம் உலகளாவிய தளத்தில் நாவலுக்கு ஏற்பட்ட பொதுவான இலக்கணங்கள் முக்கியமானவை. முதன்மையாகக் கூறவேண்டியது, நாவல் வாழ்வின் முழுமையை சித்திரிக்க முயலவேண்டிய ஓர் இலக்கிய வடிவம் என்ற கருத்தாகும். இன்றும் உலக அளவில் பெரும்பாலான நாவலாசிரியர்கள் இக்கருத்தையே கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. ............ படைப்பில் முழுமை இரு வகைகளில் சாத்தியமாகின்றது. ஒன்று அநுபவத்தைக் கூறுகளாகக் கண்டு அக்கூறுகளில் ஒன்றின் சாராம்சத்தை முழுமையை குறிப்பாலுணர்த்துவது. இதையே கவிதைகள் - காவியங்கள் நீங்கலாக - செய்கின்றன. சிறுகதையின் தளமும் இதுவே. இன்னொன்று அனுபவங்கள் அனைத்தையும் தொகுத்து வகைப்படுத்தி முழுமையை உண்டு பண்ண முயல்வது. இரண்டாம் வகைச் செயல்பாடுதான் நாவலுக்கு உரியது என்று ருஷ்ய பேரிலக்கியங்களில் நிறுவுகின்றன.-....."

முக்கியமான மற்றொரு பண்பு நாவல் வாழ்வின் சிக்கலை - விரிவை காட்ட முயல வேண்டுமென்பது. இத்தொடர்பில் பின்வரும் பகுதி அவதானிக்கப்படவேண்டியது:

"நாவல் ஒருமையும் குவிதலும் உள்ளதாக இருத்தலாகாது; நாவலின் நகர்வு ஒரே திசை நோக்கியதாக இருக்கக்கூடாது. வலைபோல நாலாபுறமும் பின்னிப்பின்னி விரிவடைதல் வேண்டும். நாவலின் ஆகிருதி ஒரே பார்வையில் முழுமையாகப் பார்த்துவிடக்கூடியதாக இருக்கக் கூடாது போன்ற விதிகள் 'போரும் அமைதியும்', 'கரமசோவ் சகோதரர்கள் போன்ற பெரும் படைப்புகளின் மிகச்சிறந்த இயல்பாக அவற்றின் 'வடிவமற்ற வடிவம்'தான் விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறது. அவற்றை வாசகர்கள் மீண்டும் மீண்டும் படிப்பதற்கு காரணம் இந்த விரிவுதான். பெரும் காடுபோல தழைத்து சுரமுள்ள நிலமெங்கும் பரவிநிறைந்திருப்பது ஒரு சிறந்த நாவலின் இலக்கணம் எனப்படுகிறது. மலைகள் போல வடிவின்மையும் வடிவும் ஆக இருப்பதே நாவல் என்று வலியுறுத்தப்படுகிறது. மேற் குறிப்பிட்ட விதிகள் அனைத்தும் அடிப்படையில் ஒன்றையே கூறுகின்றன. அதுதான் எளிமைப்படுத்துவதாகவோ குறுக்குவதாகவோ அமையக்கூடாது. அது வாழ்வின் சிக்கலைக் காட்டக்கூடியதாகவும் விரிவைத் தொடமுயல்வதாகவும்தான் இருக்கவேண்டும்.
(ஜெயமோகன், நாவல், 1994)

ஆக, மேற்கூறியவற்றை மனங்கொண்டு அவதானிக்கும்போது, ஓரளவு தேறக்கூடியவர்களாக கோவிந்தன் (புதிய உலகம்), மலரவன் (போருலா), தேவகாந்தன் ('கனவுச் சிறை' தொடர்), டானியல் (கானல்) ஆகியோரிருப்பினும் முக்கியமான ஈழத்து நாவலாசிரியர்கள் என்று முழுத்திருப்த்தியுடன் எடுத்துக்கூறுவதற்குரிய நாவலாசிரியர்கள் ஈழத்தில் இனி வருங்காலங்களிலேயே உருவாகும் வாய்ப்பு உள்ளது என்பது ஜீரணிக்க வேண்டிய உண்மையாகும்.

நாவல் பற்றி மேலே கூறப்பட்ட எனது கருத்திற்கு அரண்செய்வனவாக ஆய்வாளர் இருவரது கூற்றுக்கள் உள்ளன. அவற்றுளொன்று பின்வருமாறு: (அதற்கு முன் இனிவரும் மேற்கோள்பகுதியில் கூறப்படும் விடயம் பற்றி சில விளக்கங்கள் கூற வேண்டும்; ஈழத்து நாவல் வரலாற்றில் முற்போக்கு எழுத்தாளர்களது நாவல்கள் முக்கிய இடம் பெறுபவை. இவற்றுள் கணிசமானவை, சாதிப்பிரச்சினையுடன் தொடர்புபட்டவை. இத்தகைய நாவல்கள் பற்றிய விமர்சனமே இனிவரும் பகுதி):

"உண்மையில் பஞ்சமர் முதல் இந்த நாவல் வரை வரும் இத்தகைய நாவல்கள் யாவும் 'இலக்கியங்களென அன்றேல் இலக்கியங்களாக வரும் வரலாறுகளே'.

இவற்றிற் காணப்படும் முக்கியமான பிரச்சினைப் பொருள் யாதெனில், இவை எந்த அளவுக்கு இலக்கியங்களாக உள்ளன என்பதேயாகும். அந்த உரைகல் ஒன்றை மாத்திரம் வைத்துக்கொண்டு இவர்களை விழுத்த விரும்பும் அழகியல் விற்பன்னர்கள் பலர் இருக்கிறார்கள்.

இந்த வரலாற்றுக் கதைகளின் முக்கிய பண்பு, இவை, 'நாவல்'களாக இருப்பதிலும் பார்க்க, 'கதை'களாக இருப்பதுதான். கதை என்பது தொடர்நிலைக்கோவை வெளிப்பாடு. உண்மையான நாவல் என்பது மனித உறவுச் சிக்கல் ஒன்றின் அல்லது பலவற்றின் சித்திரிப்பு (னநாiஉவழைn: டிழசவசயலயட). நாவலுக்கு ஒரு கதைச்சட்டகம் வேண்டும் கதையே நாவலாகிவிடாது" (கா. சிவத்தம்பி)

ஆய்வாளர் மேலே குறிப்பிட்ட வகை சார்ந்த நாவலை மனங்கொண்டு கூறிய விடயம் (நாவல்,கதை) ஈழத்தின் ஏனைய எல்லாவகை நாவல்களுக்கும் பொருத்தமானதென்பது நுணுகி நோக்கும்போது தெளிவாகின்றது. ஆக, அதனை இன்னொரு விதமாகக் கூறின் ஈழத்தில் நாவலாசிரியர்களில்லை, கதாசிரியர்களே உள்ளனரெனலாம்.

மற்றொரு ஆய்வாளரது கூற்று பின்வருமாறு :

"நாவலின் பொருளைப் பொறுத்தும் அணுகுமுறையைப் பொறுத்தும் மாறுதலும் வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளதெனினும் உருவத்திலோ கதைகூறும் முறையிலோ அடிப்படையில் பாரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லையெனலாம். சுருக்கமாகச் சொன்னால் நாவல் இலக்கியத்தில் இங்கு பரிசோதனை முயற்சிகள் இடம்பெறவில்லை. மார்க்சீய நாவலாசிரியர்களின் நாவல்களில் கலைச்செழுமை குறைவு என்ற குற்றச்சாட்டு உண்டு; அதில் உண்மையில்லாமலும் இல்லை. ஆனால் அதற்குப் புறம்பான நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஆழமான தேடலும் கலைச் செழுமையும் உடைய சிறந்த நாவல்கள் ஒன்று கூட இல்லை. தமிழக நாவல் வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்க அம்சமாகும்." (20ஆம் நூற்றாண்டு ஈழத்து தமிழிலக்கியம்)

இனி ஈழத்து நாவல்களில் பெருமளவு காணப்படும் குறைபாடுகள் சிலவற்றைச் சுட்டுவது பயனுடையது. அவையாவன:

- (முன்னர் குறிப்பிட்டது போன்று) கதையம்சம் முதன்மை பெறல்.
- விவரணப்பாங்கு முதன்மை பெறல்.
- பாத்திரங்களைச் சுதந்திரமாக இயங்கவிடாமை.
- கொள்கை விளக்கத்திற்கு முதன்மையளித்தல்.
- துண்டுதுண்டான சம்பவங்களின் தொகுப்பாக அமைதல்.
- பிரச்சினைகள் பன்முகத்தன்மையுடனோ ஆழமாகவோ அணுகப்படாமை.
- ஒரேவித பாணியிலோ சட்டகம் அமைத்தோ எழுதுதல்.
- பத்திரிகைத் தேவையையோ(பக்க அளவு; உடனடியாகத் தேவைப்படல்) வெளியீட்டாளர்களின் தேவையையோ (பக்க அளவு) மனங்கொண்டு எழுதுதல்.

இதுவரை கூறியவற்றை நினைவுகூரும்போது ஈழத்தில் சிறந்த சிறுகதையாசிரியர்கள் மிகச் சிலராக உள்ளமையும் சிறந்த நாவலாசிரியர்கள் இல்லாமையும் புலப்படுகின்றது.

ஆகவே, ஈழத்து புனைகதைத் துறையின் இத்தகைய ஆரோக்கியமற்ற நிலைக்கான காரணங்கள் பற்றி விரிவாகவும் ஆழமாகவும் சிந்திப்பது காலத்தின் அவசியத் தேவையாகின்றதென்றே கருதுகின்றேன். எனவே, எழுத்தாளர் நிலையிலும், விமர்சகர் நிலையிலும், பிரசுரிப்பாளர் நிலையிலும் நின்று இவ்விடயம் பற்றி அணுகுவது பொருத்தமானது.

எழுத்தாளர் நிலையில் ...........

புனைகதையானது அனுபவத்தின் அறுவடை என்பது தெளிவானது. அவ்வாறெனில் ஈழத்து எழுத்தாளர் பலரும் பரந்துபட்ட அனுபவங்கள், பிரச்சினைகளுக்கு போதியளவு முகங்கொடுத்து வந்துள்ளதாகக் கூறுவதற்கில்லை. (எண்பதுகளுக்குப் பின்பே அத்தகைய நிலையில் ஓரளவு மாற்றமேற்பட்டுள்ளது.)

சமூகப் பிரச்சினைகளுடன் முட்டிமோதியுள்ள எழுத்தாளர் சிலரிருப்பினும் அத்தகையோரிடம் படைப்பாற்றல் வறுமை நிலவுகின்றது.

படைப்பாற்றலுள்ளோர் சிலர் தாம் சார்ந்த கோட்பாடுகளுக்கே முதன்மை கொடுப்பவர்களாக உள்ளனர். இதனால், ஒரே அமைப்பிலான படைப்புகளை - எலும்புக்கூடுகளான பாத்திரங்களை - செயற்கையான உரையாடல்களை உருவாக்குகின்றனர்.

படைப்பாற்றல் விருத்திக்குத் தரமான வாசிப்பு அவசியமானது. அதுவும் உலகப் பொதுவான இலக்கிய வடிவங்களான சிறுகதை, நாவல் என்பன காலத்திற்குக் காலம் மாற்றமுற்று வருபவை. இத்தகு மாற்றங்களை ஓரளவாவது அறிவது அத்தியாவசியம். இந்நிலையில் பிறமொழி புனைகதை வளர்ச்சி பற்றி நேரடியாகவோ மொழிபெயர்ப்பினூடாகவோ அறிந்து கொள்வதும் முக்கியம் பெறுகின்றது. (மலையாள இலக்கிய வளர்ச்சிக்கு, உலகப் படைப்புகள் உடனுக்குடன் மொழிபெயர்க்கப்படுவதும் முக்கிய காரணம்). ஈழத்தில் நவீன கவிதை வளர்ச்சி மொழிபெயர்ப்புக் கவிதைகளூடாக வளம் பெற்றுள்ளமை நாமறிந்ததே. மாறாக ஈழத்து எழுத்தாளர் புனைகதை மொழி பெயர்ப்புகளில் அக்கறை காட்டுவது அரிதாகவுள்ளது. இத்தகைய வறியநிலைதான் தரமான தமிழ்நாட்டு புனைகதைகளை வாசிப்பதிலும் காணப்படுகின்றது.

விரிந்த அனுபவ வட்டம், பரந்த வாசிப்பு என்பனவே வாழ்க்கை பற்றிய தரிசனம், உலக நோக்கு என்பனவற்றை உருவாக்குபவை. ஓர் எழுத்தாளன் சிறந்த எழுத்தாளனாக முகிழ்ப்பது அவற்றிலேயே தங்கியுள்ளது. இவ்வாறான நிலை ஈழத்து எழுத்தாளரிடம் அருகிக்காணப்படுவதனாலேயே ஈழத்து எழுத்தாளர் பலரும் கலைஞர்களாகவும் ஆவணப்பதிவாளர்களாகவும், படப்பிடிப்பாளர்களாகவும், ஆலை முதலாளிகளாகவும் விளங்குகின்றார்கள்.

பழந்தமிழ் இலக்கிய பரிச்சயம் படைப்பாளிகளிடம் இருப்பது படைப்பாற்றல் செழுமைக்கும், மொழிநடை வளத்திற்கும் உதவுவது. (எ-டு: புதுமைப்பித்தன், கு.ப.ரா., கு. அழகிரிசாமி). ஈழத்து புனைகதையாசிரியர்களிடம் தற்புதுமையும், தனித்துவமான மொழிநடையினையும் காணமுடிவதில்லை. இதிகாசக் கதைகளை (புதுமைப்பித்தன், கு.ப.ரா., எம்.வி. வெங்கட்ராமன், சிதம்பர ரகுநாதன், ஜெயமோகன் போன்று) நவீன நோக்கில் மறுவாசிப்புச் செய்துள்ள ஈழத்து எழுத்தாளர்களைக் காண்பதற்கில்லை. இவற்றிற்கான காரணங்களும் மேற்கூறிய விடயமே எனலாம்.

பிறகலைகளின்பால் நாட்டம் கொள்வது எழுத்தாளனை வளம்படுத்துவதாகும் (எ-டு: ஜானகிராமன், மௌனி, விட்டல்ராவ்); ஈழத்தில் இத்தகைய ஆற்றலுள்ள எழுத்தாளரும் மிகச் சிலராவர்.

ஈழத்து எழுத்தாளர்கள் பகுதிநேர எழுத்தாளர்களாகவுள்ளனர். (அதாவது எழுத்தாளராக மட்டுமுள்ளவரிலர்). இதனால் எழுதுவதற்குப் போதிய நேரமில்லாதவர்களாகவுள்ளனர். இத்தகைய சூழல் படைப்புகள் செம்மையுறுவதற்கு பல விதங்களில் பெருந்தடையாகவுள்ளது.

ஈழத்து எழுத்தாளர் பலரும் மத்தியதர வர்க்கத்தினராகவோ தொழிலாளர் வர்க்கத்தினராகவோ இருப்பதனால் பொருளாதார நிலையில் பின்தங்கியவர்கள். இத்தகைய நிலை அவர்களது எழுத்து முயற்சிகளை (முழு நேர உழைப்பாளிகளாதல்; நேர அவகாசமில்லாமை; நூல் வெளியிட முடியா நிலை) கடுமையாகப் பாதித்து வருகின்றது. எழுத்தாளர் பலரது தொகுப்புகள் நீண்ட காலத்தின் பின் வெளிவருவதற்கும் (எ-டு: பித்தன், ஜோர்ஜ் சந்திரசேகரன்), வெளிவராமலே போவதற்கும், மறுபிரசுரம் பெறாமைக்கும் இந்நிலை முக்கிய காரணமாகும்.

ஈழத்து எழுத்தாளரில் கணிசமானோரிடம் ஒரு தொகுதி வெளியிட்ட பின் அல்லது பிரபல்யம் பெற்றபின் தற்செருக்கு ஏற்படுவதையும் (இதனால் விமர்சனக் கருத்துகளை அலட்சியம் செய்தல்; தொடர்ந்து எழுதாமை; வாசியாது விடுதல்) மறுபடி எழுதுவதற்கு பயமேற்படுவதையும் அவதானிக்கலாம்.

தவிர, ஈழத்திலே எண்ணிக்கை ரீதியில் பெண் எழுத்தாளர் குறைவாக உள்ளமைக்கும், அவர்களுங்கூட எழுத்தாளர் வரிசையில் முதன்மை இடம் பெறாதமைக்கும் காரணங்கள், அவர்களது வாழ்வின் இரட்டைச் சுமையும், அண்மைக் காலம் வரை அவர்களது அனுபவ வட்டம் குறுகியதாக இருந்தமையுமாகும்.

இனி அண்மைக்காலமாக ஏற்பட்டுவரும் சில மாற்றங்களும் ஈழத்து எழுத்தாளர்களிடம் பெரும் பாதிப்பினை ஏற்படுத்திவருகின்றன. அவற்றுட் சில:

(அ) எண்பதுகளுக்குப் பிற்பட்ட அரசியல் நெருக்கடி.
(ஆ) குறுகிய பிரதேசவாத முனைப்பு.
(இ) பரிசுகள் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகரிப்பு.
(ஈ) வெகுசன ஊடகங்களும் ஆர்ப்பாட்டங்களுடனான வெளியீட்டு விழாக்களும் தகுதியற்றோர்களை பிரபல்யமடையச் செய்தல்.
(உ) தலைமுறை இடைவெளி அதிகரித்தல்.
(ஊ) சிறுசஞ்சிகை வளர்ச்சியில் தேக்கம்.

விமர்சகர் நிலையில் ..........

ஈழத்திலே புனைகதை வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திலே (அறுபதுகளில்) ஆரோக்கியமான நிலையை எட்டியதும் பின்னர் அது பாரிசவாதத்திற்குற்பட்டதும் சந்தேகமின்றி ஈழத்து விமர்சன வளர்ச்சியோடு பின்னிப்பினைந்துள்ள ஒன்றாகத் தோன்றுகின்றது.

'ஆரோக்கியமான நிலை' என்று இங்கு கூறப்படுவது ஈழத்து புனைகதைப் போக்கில் முற்போக்கு விமர்சகர்களினால் தேசிய இலக்கியம் பற்றி -ஈழத்து இலக்கியம் பற்றிய - சிந்தனை பரவலாக்கப்பட்டமையும் (அத்தகைய சிந்தனை அறுபதுகளுக்கு முன்பிருந்தே ஓரளவு இருந்து வந்துள்ளது) ஈழத்து எழுத்தாளர் வட்டம் பிரதேச ரீதியிலும் சமூக நிலையிலும் விரிவாக்கப்பட்டமையும் இலக்கியப் படைப்பின் சமூக நோக்கு வற்புறுத்தப்பட்டு ஈழத்து எழுத்தாளர் மத்தியில் அந்நோக்கினை முளைவிடச் செய்தமையும் ஆன விடயங்களாகும்.

ஆயினும் படைப்பின் சமூக நோக்கினை வற்புறுத்திய அவ் வேளையில் படைப்பின் ஆக்கக்கூறுகளை - கலைத்துவ அம்சங்களை - வற்புறுத்த முற்போக்கு விமர்சகர்கள் தவறி விட்டனர். அத்தகைய விடயங்களின் முக்கியத்துவத்தினை அம்முற்போக்கு விமர்சகர்களுள் சிலர் அண்மைக்காலமாக வற்புறுத்தத் தொடங்கினாலும் அது காலங் கடந்த ஞானோதயமாகவே படுகின்றது. ஏனெனில், அதற்கிடையில் ஈழத்து எழுத்தாளருள் ஒரு சாரார் (நோய்) தீராத நோயாளிகளாகிவிட்டனர் என்பதில் தவறில்லை.

மறுபுறம் நாம் கருதியுள்ள அளவிற்கு ஈழத்து விமர்சனம் வளர்ந்துள்ளதா என்ற கேள்வியும் எழுகின்றது. கோட்பாடு ரீதியான விமர்சனம் வளராத நிலையுள்ளமையினாலேயே புனைகதையாசிரியர் பலர் புனைகதையின் ஆக்கக் கூறுகள் முதலியன பற்றி தாம் பிரபல்யம் பெற்ற பின்னரும் சூனிய நிலையில் காணப்படுகின்றனர். செயற்பாட்டு விமர்சனமும் ஆரோக்கியமான விதத்திலோ ஆழமான முறையிலோ இடம்பெற்றுவந்துள்ளதென்பதற்கில்லை.

தனி எழுத்தாளரது படைப்புகள் (டானியல் போன்ற ) எவையும் ஆய்விற்குட்படுத்தப் படவில்லை.

விமர்சன உலகில் முன்னர் உயர்கல்வி வழிவந்த விமர்சகர்கள் பெற்றுள்ள இடத்தினை அண்மைக்காலமாகப் படைப்பாளிகள் ஆக்கிரமித்து வருவது கண்கூடு. இதனால் சில அனுகூலங்கள் ஏற்படுகின்ற அதேவேளையில் பிரதிகூலங்களும் ஏற்பட வாய்ப்புள்ளமை கண்கூடு.

இவ்வாறே, இப்போது அமைப்பியல், பின் அமைப்பியல், பின் நவீனத்துவம் போன்ற சிந்தனைகளின்பால் புலiமாPதியில் ஈடுபாடு காட்டாத நிலையும் அவற்றின் சாதகதான அம்சங்கள் பற்றி பொருட்படுத்தாத நிலையும் ஈழத்து ஆய்வாளர், விமர்சகரிடத்தில் காணப்படுவது அவ்வளவு தூரம் வரவேற்பிற்குரியதன்று.

பிரசுர நிலையில் ..........

ஈழத்தில் எழுத்தாளர் எண்ணிக்கை பெருகியுள்ள அளவிற்கு அவர்களது படைப்புகளைப் பிரசுரிக்கும் வாய்ப்பு அதிகரித்திருப்பதாகக் கூறமுடியாது. எப்போதுமே ஓரிரு சிறு சஞ்சிகைகளும், சில பத்திரிகைகளுமே வெளிவருகின்றன. இவையும் படைப்பின் தரத்தில் கவனஞ் செலுத்த முற்படுவதில்லை.

ஈழத்து எழுத்தாளர் பலரது படைப்புகள் இன்று வரை நூலுருப் பெறாமலுள்ளன (எ-டு: அ.ந. கந்தசாமி). பல படைப்புகள் நீண்டகாலத்தின் பின்பே நூலுருப்பெறுகின்றன. (எ-டு: சி.வைத்தியலிங்கம், சம்பந்தன், பித்தன்). சிறந்த தொகுப்புகள் பல, மறுபதிப்பிற் குள்ளாகாமலுள்ளன. (எ-டு: செ. கதிர்காமநாதனின் 'கொட்டும் பனி') இதற்கு முதற்கூறியது போன்று எழுத்தாளர்களிடம் பொருளாதாரப் பலமின்மை ஒரு புறமிருக்க, நூல் பிரசுர முயற்சிகளில் ஈடுபடும் பதிப்பகங்களோ, அவை வெளிவருவதில் ஆர்வங்காட்டும் சமூக நோக்குடைய பதிப்பகங்களோ (எ-டு: தமிழ் நாட்டிலுள்ள வாசகர் வட்டம்) ஈழத்தில் அரிதாகவே காணப்படுகின்றமையும் பிறிதொரு காரணமாகவுள்ளது.

மேற்கூறியவற்றைவிட, நூல்களை விற்பனை செய்வதென்பது பகீரதப் பிரயத்தனத்திற் குட்பட்ட செயலாக உள்ளமை நாம் நன்கறிந்ததே.

ஆக, பிரசுரநிலை தொடர்பான மேற்கூறிய சிரமங்கள் ஈழத்து எழுத்தாளர் தாண்டமுடியாத தடைகளாக நீண்டகாலமாக இருந்து வருவதும் அவை சிறந்த எழுத்தாளர் உருவாக்கத்தில் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்தி வருவதும் கவனத்திற்குரியன.

மேற்கூறிய விடயங்களை அவதானிக்கும்போது, ஈழத்தில் நாவல் இலக்கிய வளர்ச்சி ஆரம்பகால நிலையிலுள்ளதன் - ஈழத்தில் சிறந்த நாவலாசிரியர்கள் உருவாகாததன் - தாற்பரியம் எமக்கு தெளிவாகி விடுகின்றது. அந்தநிலை வியப்பிற்குரியதல்லவென்பதும் தவிர்க்க இயலாத தென்பதும் புலனாகிவிடுகின்றது.

இதுவரை கூறியவற்றை நன்கு நினைவுகூரும் போது ஈழத்து நவீன கவிதை வளர்ச்சி உன்னதநிலையை எட்டியுள்ளமையும் சிறுகதை வளர்ச்சி ஓரளவே திருப்தி தருகின்றமையும் நாவல் வளர்ச்சி சந்தேகமின்றி அதிருப்தியளிக்கின்றமையும் நன்கு புலப்படுகின்றது. இவ்வாறான இறங்கு நிலை வரிசையை மனம் கொண்டே எனது உரையும் நவீன கவிதை, சிறு கதை, நாவல் என்ற ஒழுங்கு முறையில் இடம்பெற்றுள்ளது. தவிர ஈழத்துப் புனைகதையின் வளராநிலை அது பற்றிய காரணங்களைத் தேடும் பயணத்திற்கு ஆற்றுப்படுத்தியதில் தவறில்லை என்றே கருதுகின்றேன்.

4

இறுதியாக ஈழத்து நவீன இலக்கியத்தின் - நவீன கவிதை, சிறுகதை, நாவல் என்பனவற்றின் - ஆரோக்கிய வளர்ச்சி பற்றிய, அவற்றின் தேட்டம் பற்றிய எனது ஆய்வுரையை பின்வரும் மேற்கோளுடன் முடிப்பது பொருத்தமென்று கருதுகின்றேன்.

ஈழத்து நவீன கவிதை பற்றி:

"இன்றைய தமிழக சமூகச் சார்புள்ள புதுக் கவிதைகள் தரமுள்ளவையாக உருப்பெறவில்லை. இனிவரும் தமிழகக் கவிதை ஈழத்துக் கவிதைகளின் மேற்கண்ட இயல்புகளைக் கவனித்துக் கொண்டால் - மிக நல்லது" . (வானம்பாடிகளும் சமூகக்கவிதைகளும், க. பூரணச் சந்திரன்)

ஈழத்து நாவல் பற்றி :

(இவ்விடயம் ஈழத்துச் சிறுகதைக்கும் பொருத்தமானதே)

"விஜயலட்சுமி போன்ற மிக நுட்பமான பாத்திரங்களை உருவாக்கும் திறனுடைய தெணியான் போன்ற எழுத்தாளர்கள் தங்கள் ஆக்கங்களை ஆக்க நிலையிலேயே உலக இலக்கிய பிரக்ஞையுடன் படைத்தல் வேண்டும். முற்போக்கு எழுத்தாளர்கள் தமது சமூகக் கட்டுப்பாடுகளுக்கிடையே முற்றிலும் விசாலமான இலக்கியப் பரிச்சயத்துடன் பிரதேச மண்ணிலேயே காலூன்றி நிற்கின்றனர். இந்த மண்வாசனையைச் சர்வதேசியப்படுத்தும் விசாலமான இலக்கியப் பரிச்சயத்துடன் இவ்வெழுத்தாளர்கள் தொழிற்படும் போதுதான் எமது எழுத்தாளர்களின் சித்திரிப்புகள் பொதுப்படையான புனைகதை ஆய்வில் இடம்பெறும்.

தெணியான் போன்ற எழுத்தாளர்கள் இலக்கிய சருவதேசியத்தை அறிவதனாலும் தமிழ்ப் புனைகதைகளின் உலகப் பொதுவான வளர்ச்சிக்கு நிச்சயமாக உதவலாம்" ('மரக்கொக்கு' முன்னுரையில் பேராசிரியர் கா. சிவத்தம்பி.)

(இங்கு தெணியான் ஈழத்துப் புனைகதை எழுத்தாளர்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றாரென்பதில் தவறில்லை.)

(இவ்வுரையில் ஆங்காங்கு தரப்பட்ட மேற்கோட்பகுதிகளில் இடம்பெற்றுள்ள தடிப்பெழுத்துக்கள் ஆய்வாளரினால் இடப்பட்டவையாகும்.)

-----------------------------------------------------------------------