கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  வந்து சேர்ந்தன
தரிசனம்
 
 

முருகையன்

 

வந்து சேர்ந்தன
தரிசனம்

முருகையன்

----------------------------------------------------

வந்து சேர்ந்தன
தரிசனம்
கவிதை நாடகங்கள்

முருகையன்

செய்யுட்கள வெளியீடு,
149/ 3, காலி வீதி, கொழும்பு- 4.

----------------------------------------------------------

முன்னுரை

"பாட்டும் செய்யுளும் கோத்திடுவீரே" என்று பணித்தான் மகாகவி பாரதி. அவனுக்குப் பின் ஒரு புதிய கவிஞர் பரம்பரையே தோன்றியது. தங்களைச் சுற்றியிருந்த மக்களின் பிரச்சினைகளைப் பற்றிய உணர்வோடு எழுந்தனர் பல புலவர்.

அந்தப் பரம்பரையில் வந்த கவிஞர் முருகையனின் கவிதைகள் ஈழத்து இதழ்களிலும் இந்திய இதழ்களிலும் வெளிவந்திருக்கின்றன. அவர் ஆங்கிலக் கவிதைகள் சிலவற்றைத் தமிழில் த்ந்ததோடு தமிழ்க் கவிதைகள் சிலவற்றை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்திருக்கிறார்.

சிறந்த நடையும் கருத்தாழமும் முருகையனின் கவிதைகளிற் பொருந்தியிருப்பதைக் கவனிக்கலாம்.

கவிஞர் முருகையனின் இரு கவிதை நாடகங்கள் இந்நூலிலுள்ளன. பலருக்குத் தெரிந்த வாதவூரர் குதிரை வேண்டிய கதையைப் புதிய கோணத்தில் நோக்கி அழகோடும் அர்த்தத்துடனும் 'வந்து சேர்ந்தன' என்ற கவிதை நாடகத்தை அமைத்திருக்கிறார்.

"தூய்மை யான நினைப்பினாற் செய்கைகள்
தூண்டப் பட்டு நடப்பன வேல், உயர்
நீர்மையே இங்கு நின்றிடல் கூடுமாம்
நீதி யீனம் சரிந்து விழுந்திட"
என்ற கருத்தை அடிநாதமாகக் கொண்டு, அதனை விளக்கும் வகையில் அமைக்கப் பட்டது இக்கவிதை நாடகம். கவிஞரின் கவிச் சிறப்புக்குச் சான்றாக, வந்து சேர்ந்த குதிரைகளைப் பற்றி மைவண்ணன் கூறுவதாயமைந்திருக்கும்,

"பொய்யை வாய்மை படுத்த எழுந்தன;
ஐய, வல்ல அடலுடல் வாய்ந்தன.
கொய்தெம் இன்னற் குலையை மிதிப்பன
வைகை வெள்ள வனப்பை நிகர்ப்பன"
என்ற அடிகளைக் காட்டலாம்.

"விடுவோமா எங்களது லட்சியத்தை
விழுந்து விட்டோம் வாயிலிலே என்பதற்காய்?"
என்று ஒருவனும் ஒருத்தியும் காத்துக்கிடப்பதைச் சித்தரிப்பது 'தரிசனம்' என்ற மற்றக் கவிதை நாடகம்.

எங்கள் மத்தியிலும் சிறந்த கவிஞர்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கும் கவிஞர் முருகையன் மென்மேலும் பல கவிதைகளைப் படைத்தும், நூல்களை வெளியிட்டும் தமிழன்னையை அணி செய்ய வேண்டும்.

சு. வித்தியானந்தன்
பல்கலைக்கழகம், பேராதனை.
9-6-1965.

----------------------------------------------------------------

முதற் பதிப்பு 1965

ஊடு ப்பொய் எதையும் உள்பக நூறி
ஓடி ஓடி அல் சும் நுதி கொண்ட
மோடியான வடி வேலது வாங்கி
மூசி வீசுபவர் பாவலர் ஆவார்.

உரிமைகள் ஆசிரியருக்கு

விலை ரூபா 1/=

------------------------------------------------------------------

வந்து சேர்ந்தன

நாடக மாந்தர்

அறவாணன்: பாண்டியனின் துணை அமைச்சன்
அங்கயற்கண்ணி: அறவாணனின் மனைவி
மைவணன்: அங்கயற்கண்ணியின் தம்பி
வாதவூரடிகள்
பாண்டியன்: மதுரை மன்னன்

அங்: (அலுப்புடன், ஆனால் விடையைப் பெற விரும்பும் தீர்மானத்துடன்)
என்ன தான் உங்கள் எண்ணமாம்? சிந்தனைப்
பின்னலே வேலையாய்ப் பேசா மௌனியாய்
இப்படி இருந்தால் என்ன தான் முடிவு?
பாண்டிய நாட்டின் உதவி அமைச்சர் நீர்
தூண்டிலில் மீன் போல் துயரப் படுகிறீர்,
ஏன் என அறிதல் எனக்குமா தகாது?

அற: அரசியற் காரியம்: அதனை ஏன் உனக்கு?
முரசறைந் தெங்கும் முழக்கிப் பரப்பவா?

அங்: (பரிகாசமாக)
உதவி அமைச்சரே, உங்கள் துணைவி நான்.
பதவியில் உயர்ந்த இப் பண்புடை யவரின்
வாழ்க்கைத் துணைவியை மற்றைய பிறர் போல்
மதிக்க நினைப்பதா?

அற: சரிசரி, சும்மா சளசள என்று
பேசி இருந்தாற் பிரச்சனை தீருமா?

அங்: திகைப்பையும், மறைப்பையும்,
உறைப்பையும், முறைப்பையும்
தந்துகொண் டிருக்கிற, தலை பறி போகிற
சிக்கல் தான் என்ன? சிறிது விளக்குவீர்.

அற: (தணிந்த குரலில்) கிட்டவா,
(இரகசியமாக) இன்னும் அருகிலே
தணிந்த பேச்சு, படிப் படியாக உயர்ந்து
சாதாரண நிலைக்கு வருகிறது.
வாதவூர்
ஐயரைப் பற்றிய அந்தரங் கம், இது.
மன்னனை அந்த வாதவூ ரையர்
என்ன மாதிரி ஏமாற்றி விட்டார்!
யாருமே அறியா இரகசி யம் இது.

அங்: என்ன சொல்கிறீர்? எங்கள் வாதவூர்
ஐயரைப் பற்றியா அவதூ றாகப்
பேசத் துணிந்தீர்? பெரிய பிழை இது.

அற: உண்மைதான் கண்ணீ, உக்கிர மான
பச்சை உண்மை, பயங்கர உண்மை.
பாண்டிய மன்னனும் பல பிற மனிதரும்
பூண்ட மெய்யறப் புனிதர் என் றெண்ணிய
வாதவூ ரந்தணர் மாயா சாலச்
சூதினர் போலச் சூழ்ச்சி புரிகிறார்
அறநெறி வழுவா அந்தணர் எனவும்
சால்பு மிக்க தன்மையர் எனவும்
சீலம் யாவையும் தெரிந்தவர் எனவும்
கல்விவல் லமையாற் கனிந்து பழுத்த
செவ்வி படைத்த சிறந்த மனமுடைப்
பெரியவர் எனவும் பேசப் படுபவர்
மொய்ம்மை வினைந்ததாய்ப் பொறாமை குவிந்ததாய்
மெய்ம்மை அழிந்ததாய் மேன்மை அவிந்ததாய்ச்
சூழ்ச்சிகள் புழுத்த சுடலையே போன்ற
மனத்தினர் செய்யும் மாண்பிலாச் செய்கையைச்
செய்தே விட்டார்.

அங்: சீ, சீ, சும்மா.
எவரோ கூறிய இழிந்த பொய்களை
உண்மை என்றா நாம் ஒப்புக் கொள்வது?
வாதவூ ரையரா வாய்மை பிழைப்பவர்?

அற: அங்கயற் கண்ணி, அவைகளை யெல்லாம்
நம்பா திருக்கவே நானும் விரும்புவேன்.
என்ன செய்வது? நம் எண்ணப் படியா,
உலக நிகழ்ச்சிகள் உண்மையில் இருக்கும்?
விரும்பிய வாறே விளைவுகள் இருக்குமேல்
கரும்பே அன்றோ காசினி முழுவதும்?
'வாதவூ ரந்தணர்' மறுவில் லாதவர்,
ஓதல் அரிய உயர்வு பெற்றவர்,
சூது வாதுகள் சூழ்ந்தறி யாதவர்,
நீதி வாழ்க்கையின் நெறி திறம் பாதவர்
என்றுதான் இதுவரை எண்ணி இருந்தேன்.
நன்றாய் அவரின் நண்பனாய்ப் பழகினேன்.

அங்: வைகைப் புதுப் புனல் வளம் பல பரப்பிய
செய்கையாற் செழித்த தீம்பழச் சோலையின்
தெற்குப் புறத்திற் சிறந்த வெண் மணல்
பரப்பி நீர் இருவரும் பக்கலில் அமர்ந்து
தத்துவ உலகையே தராசிலிட் டுருட்டிச்
சுற்றிச் சுருட்டிடும் சொற்கள் பேசியும்,
அரசியல் முறைமையின் ஆணி வேர் விளக்கமாய்ப்
பெருகும் நல்ல பேச்சுப் பேசியும்,
காலம் செல்லல் காணாக் கண்களும்,
மாலை மாய்வதை மறந்த மனங்களும்,
உடையோ ராகி உட்கார்ந் திருந்த நாள்
ஒன்றா? இரண்டா? ஒன்பதா? பத்தா?
முதன்மை அமைச்சரும் உதவி அமைச்சரும்
நெஞ்சம் கலந்தும் நேயம் பயின்றும்
உரை யாடல்செய் துட்கார்ந் திருந்தநாள்
எண்ணவா முடியும்? எத்தனை நாட்கள்?

அற: எத்தனை நாள் பழகியும் என்ன?
பித்தன் நான்; முட்டாள்; பேயன் நான்; மடையன்
அந்த அந்தணரின் சிந்தனைப் போக்கை
அறப் போர் வையின்கீழ் அழுக்கிருந் தமையை
தத்துவப் பூச்சின்கீழ் தகுதிகெட் டழிந்த
எத்தும் சூழ்ச்சியும் இழிகுணப் பார்வையும்
உள் மறைந் திருந்த உளுத்த நிலைமையை
இதுவரை காணா திருந்த என் மதித்திறன்
நல்லது, நல்லது நகைப்பைத் தருவது!
எத்தனை நாட்கள் பழகியும் என்ன?
உத்தமர் வேடத் துள்ளே இருந்த
சத்தியக் கொலைஞனின் தன்மையைக் காணவும்
சத்தியே இல்லதோர் சடப்பொருள் நான் தான்

அங்: எந்த வகையிலே வாதவூ ரந்தணர்
எங்கள் மன்னரை ஏமாற் றினாராம்?

அற: நம்பிக்கைத் துரோகம்; நன்றி இல் லாத
நம்பிக்கைத் துரோகம்; நானிலம் புரப்பவர்
குதிரை வாங்கிக் கொண்டு வரும்படி
கொடுத்தார் அல்லவா குவியலாய்க் காசு?
அவற்றைத் திருடினார், அமைச்சர் முதல்வர்!

அங்: (துணுக்குற்று) என்ன சொல்கிறீர்?

அற: இதுதான் நடந்தது.
பொன் எலாம் இந்தப் பொய் முதல் அமைச்சர்
என்ன செய்தாராம் தெரியுமா? கேள் நீ
பெருந்துறை அடைந்தனர் பெரியதாய் வழர்ந்ததோர்
குருந்தினைக் கண்டனர் குளிர்ந்ததாம் நெஞ்சகம்.
அங்கே இருந்த ஆரோ ஒருவனைச்
"சங்கரா" எனவும் தாணுவே, எனவும்
போற்றிப் போற்றிப் புகழுரை பாடிக்
கையில் இருந்த காசையும் கொடுத்தார்.
மன்னர் கட்டளை என்னவென் பதையே
மறந்தவர் போல மயங்கினார்

அங்: பின்பு?

அற: ஏவலா ளர்கள் இங்கே திரும்பினார்.
உண்மையை வேந்தருக் குரைத்தனர். வரும்படி
திருமுகம் ஒன்றிற் செய்தி அனுப்பினார்,
பாண்டிய மன்னர் பதைத்துத் துடித்து
மீண்ட வாதவூர்ப் பார்ப்பனர் அரசருக்
கென்ன சொன்னார் தெரியுமா?

அங்: என்ன?

அற: 'பெருந்துறை நகரிற் குதிரை வாங்கிக்
கட்டி இருக்கிறேன் - நல்ல நாட் பார்த்துக்
கூடல் நகர்க்குக் கூட்டி வரவே
எண்ணி இருந்தேன்; ஏவலா ளர்கள்
அவசரக் குடுக்கைகள்; ஆத்திரப் பட்டு
வந்து பொய்க் கதை வனைந்துரைத் தார்கள்
கேட்டு நம்பினீர் போலும் வேந்தரே!'
என்று சொன் னாராம் இந்த மகாத்துமா!!

அங்: உண்மையாய் இருக்கும்; உந்தக் கதையிலே
எங்கே சூழ்ச்சி? எங்கே பொய்ம்மை?
குதிரை வாங்கிக் கட்டி இருக்கிறார்.
மதுரைக் கும் அவை வரவே "வந்திடும்"
எப்படி அறிந்தீர் ஏமாற் றிதுவென?

அற: பொறு கயற்கண்ணி, புதிய செய்தியை
உனது தம்பிதான் உரைத்தான் எனக்கும்

அங்: (அலட்சியமாக)
எனது தம்பியா? என்ன சொல்கிறான்?
பைத்தியக் காரப் பையன்
(யாரோ வருவதைக் கேட்டு, விசாரிக்கும் தொனியில்)
வருவதார்?

மை: நான் தான் அக்கா

அங்: நல்ல காலமாய்
நீயே வந்தாய் நினைப்பதற் கிடையில்
உண்மையே தானா உவர் சொல் கிறதும்?

மை: என்ன சொல் கின்றார்?

அங்: இவரது நண்பர்
வாதவூ ரையர் வஞ்சகர் என்கிறார்
நாக்கூ சாமல் நவில்கிறார் தம்பீ,

மை: உண்மைதான் அக்கா - உலகையும் வேந்தையும்
வஞ்சகப் பொய்மையின் மறைப்பினாற் குருடாய்
மாற்றி ஏ மாற்றும் மாயச் சூழ்ச்சியில்
வல்லவர் அந்த வாதவூ ரையர்
காசு மூட்டையைக் கையிலே ஏந்திக்
குதிரை வாங்கப் போனார் அல்லவா?

அங்: நீயும் தானே பெருந்துறை சென்றாய்?

மை: ஆமாம், அக்கா - அதனா லே தான்
நேரே கண்டதை நிசமாய்ச் சொல்கிறேன்.

அங்: குதிரை வாங்கவே இல்லையா அந்தணர்?

மை: குதிரையும் இல்லை; கழுதையும் இல்லை!
குற்றம் செய்தார் என்பதை மறைக்கக்
கற்பனை செய்து கதையளந் திருக்கிறார்
நம்பிய மன்னரும் நன்றென மகிழ்ந்து
நண்பராய் மதித்து நடத்தி வருகிறார்.

அற: (வெற்றிக் குரலில்)
இப்பொழு தென்ன சொல்கிறாய் கண்ணீ?

அங்: நம்பத் தகாத பயங்கர உண்மைகள்

அற: ஏமாந் திருக்கும் எங்கள் மன்னர்முன்
தீர்மான மாக இன்று பிற்பகல்
உண்மையின் மூடியை உடைக்கப் போகிறேன்.
வண்மையின் மன்னவர் வாய்மை ஏ தென்பதை
அறிந்து கொள் ளட்டும்; அது தான் நல்லது
அமைச்சர் முதல்வரின் அநீதியைக் கொல்லுவேன்.
ஏட்டுக் கட்டுடன் இருந்து பழகியும்,
நீற்றுப் பூச்சுடன் நெற்றியைக் காட்டியும்,
பார்த்தாற் பசுப்போற் பாசாங்கு செய்தும்,
கூத்தினர் போலக் கோலமும் கொள்கையும்.
பிராமணோத் தமரின் பெரிய தனத்தை
இராசனுக் குணர்த்தல் எனது கடமையே.

அங்: என்ன நன்மையாம் இதனால் நமக்கு?

அற: நன்மையே உண்மை; உண்மையே நன்மை.
நன்மையே உண்மை நாலுபே ரறியத்
திறந்து காட்டுதல்; தீமையின் மூடியை
அறுந்து போம்படி அகற்றுதல் நன்மையே.
வாய்மையி னுடைய வலப்புறம் நின்றதன்
தூய்மையைக் காப்பதே தொழில் நமக் காகுக
உண்மை வெல்லவும், உறையினுள் உறங்கும்
பொய்ம்மை கொல்லவும் புறப்படுகிறேன்.

அங்: இப்போ தேயா?

அற: இப்போ தே தான்.
பிற்பக லுக்கேன் பின்போட வேண்டும்?
பிற் பகுதியில் குரல் தேய்ந்து மறைகிறது

அங்: போய் விட்டார்; போயே விட்டார்,
(விரக்தியுடன் - ஏளனமாக)
நீயேன் தம்பீ நிற்கிறாய்? நீ போ
இரண்டு பேருமாய் இராசா விடம்போய்
அருந்தவஞ் சான்ற அமைச்சர் முதல்வரைச்
சிறையிடச் செய்து திரும்பி வா ருங்கள்
ஏனடா நிற்கிறாய் இளிச்ச வாயனே?
போய்ப் பறை அறை உன் புதிய உண்மையை.

மை: ஏனோ அக்கா இத்தனை கோபம்?
உண்மையைத் தானே உரைத்தேன்?

அங்: ஓகோ!
உண்மையைக் கண்ட உத்தமப் பெரியவர்
"கண்டறியாத" உண்மையைக் கண்டவர்
போங்கள், இருவரும் போங்கள், ஐயரை
நீங்களே சிறைக்குள் நிறுத்தி வை யுங்கள்

மை: வாய்மையைச் சொல்வதால் வரும் பிழை உண்டோ?

அங்: வாய்மை பேசுதல் மகிமை வாய்ந்த நல்
அறந்தான் ஆயினும் அதிலும் கூட
எத்தனை சிக்க இருக்கிற தென்பதை
அறியா விட்டால் அதுவும் சங்கடம்
தீமை இலாத சொற்களைச் சொல்வதே
வாய்மை என்பது வள்ளுவன் கூற்று.

மை: தீமை இலாததே வாய்மையா? - நல்லது.
(தமக்குள் பேசுவது போல)
தீமை இலாததே வாய்மை; அவ் வாறெனின்
வாதவூ ரையரைச் சிறையிலே தள்ளிட
வகை செயும் படிநான் வழங்கிய செய்திகள்
தீமை பயப்பன அல்லவா? ஆகையால்
வாய்மை அல் லாதவை.

அங்: மன்னிக் கும்படி
வாதவூரையரை வணங்கிக் கேள் - போ.
அத்துடன் அந்த அரசரின் முன் போய்ச்
சத்தியம் செய் நீ - தயங்கா தே, அடா!

மை: உதவி அமைச்சர் முன் பொய் சொல் லேன் என
உண்மையை மறுத்துப் பொய்யைச் சொல்வதா?

அங்: ஆமாம், அது தான் அற நெறி - அந்தணர்
கோமான் சிறையிடைக் கொடுமைப் படாமல்
அமைக்க வல்ல அன்பு சால்வழி

மை: சொல்லுவேன், சென்று, சிறியேன் பிழையைச்
சொல்லுவேன், அழுவேன், தொழுவேன், வாதவூர்
ஐயர் முன்சென் றபசா ரத்தை
மன்னிக் கும்படி வணங்குவேன் பணிவேன்.
மன்னர் முன் செல்வேன், வாய்மையை உரைப்பேன்
தீமை இலாத வாய்மையைச் சொல்லுவேன்
கண்ட காட்சியின் மறுதலை யாயினும்
கண்டறியாத உண்மையை உரைப்பேன்
தீமை இலாத வாய்மையைச் சொல்லுவேன்
இன்றைக் கிப்பொழு திங்கென் முன்னால்
உண்மையே பொய்ம்மை; பொய்மையே உண்மை
போகிறேன் அக்கா.

அங்: போய்வா தம்பி.

காட்சி மாற்றம் - ஓடி வந்த களைப்பும்
அவசரமும் பதற்றமும் பரிதவிப்பும் மைவணனின்
குரலில் தெரிகின்றன.

மை: ஐயரே, ஐயரே - ஆயிரம் வணக்கம்.

வாத: மைவண னா, வா! வந்திரு வந்திரு;
செய்திகள் எப்படி? சித்தம் வாடிய
காரணம் என்ன? கவலையை விட்டு நீ
ஆறுதலாக அனைத்தையும் சொல்லுக

மை: ஐயரே இந்த ...
(குரல் தழுதழுத்துத் தடங்கற்பட)
பேசவாய் வரவிலை.

வாத: வேண்டாம் தம்பி, விம்மலை நிறுத்து.
எனது காலை ஏன் பிடிக்கிறாய்? ஈசனின்
புனைகழல் அடிகளே பூசனைக் குரியன.
எழுந்து, நிதானமாய் இருந்து பின் அமைதியாய்ச்
சொல்ல வேண்டியதைச் சொல்லத் தொடங்குக.

மை: "மன்னித்தோம்" எனும் வாசகம் அருளுக
ஆறுத லாக நான் அனைத்தையும் சொல்லுவேன்
அமைச்சர் முதல்வரே, அருள் புரிந்திடுக.

வாத: மன்னித்தேன் நான். மலைபோ லே பல
குற்றங் களையும் கொடுஞ் செயல் களையும்
செய்திருந் தாலும், சிற்றம் பலவன்
எய்திவந் தவருக் கிரங்க இருக்கிறான்.
பயப்பட வேண்டாம், பதற்றமும் வேண்டாம்
நடந்ததை தம்பீ, நவில்வாய்.

மை: ஐயா,
காட்டிக் கொடுத்தேன் கசடன் நான், உங்களை.

வாத: எப்படித் தம்பீ?

மை: வாதவூ ரையரே,
அறவா ணரிடம் - அவர்தான்... மைத்துனர்!
நடந்ததைச் சொன்னேன்; நாவினாற் கெட்டேன்.

வாத: நடந்ததைச் சொன்னால் நல்லது தானே?

மை: நல்லதா? எப்படி? நாமெலாம் பெருந்துறை
சென்ற பொழுது சிவனடி யாரிடம்
பணத்தினைத் தந்ததும் பரி ஒன் றேனும்
வாங்கா தொழிந்தோம் என்பதும் திறந்து
வெளிவெளி யாகச் சொல்லியே விட்டேன்
அளிமிக வுடையோய், அருள்தக வுடையோய்
ஏழையேன் செய்த இழிந்த செயல்க்ளை
மன்னித் தருளுக வாதவூ ரையா!
சிறியேன் செய்த இச் சிறுசெய லாலே
சிறையிடை யன்றோ சேர்ப்பர் தங்களை!!
சாந்த மூர்த்தியைத் தகவுடைப் பெரியரை
வேந்தர் சீறி வெதுப்புவார் அல்லவோ?
மன்னித் தருளுக வாதவூ ரையா.

வாத: வருந்தாதே நீ, மைவணா!

மை: (புறப்பட விரும்பும் அவசரத்துடன்)
இங்கே
இருந்தது போதும், இப்போ தேநான்
அரசவை நோக்கி அதிவிரை வாகச்
செல்லுதல் வேண்டும், சென்று மன்னர் முன்
சத்தியம் செய்து தடுத்து நிறுத்துவேன்.
மன்னர் சீற்றம் மறித்து நிறுத்துவேன்.
வருகிறேன் வாதவூ ரையா!

வாத: மைவணா!
நில் சிறிது, என்ன அவசரம்? எதற்காய்
வில்லுமிழ் சரமென விரைந்து செல்கிறாய்?

மை: வேந்தர் உங்கள் மேல் வெறுப்பு வைக்குமுன்
நான் போய் உங்கள் குற்றச் சாட்டினை
மறுக்கப் போகிறேன், சத்தியம் செய்து!

வாத: இல்லை மைவணா, எதற்கு நீ நடந்ததை
மறுக்கப் போகிறாய்? வருவது வரட்டும்.
(எதையோ நினைத்துக் கொண்டவர் போலத்
தீர்மானமான குரலில்)
உன்னை நான் மன்னியேன், மன்னியேன் உன்னைநான்.

மை: (வருந்தி)
காட்டிக் கொடுத்த காதகச் செய்லை
மன்னித் தருள மறுக்கி றீர்களா?

வாத: ஆமாம், மைவணா, அப்படி யே தான்.
நான் சொல் வதுபோல் நீ செய் யாவிடில்
உனது பிழையை உண்மையில் மன்னியேன்

மை: தங்கள் கட்டளை என்னவோ? இடுக
தலையாற் செய்கிறேன், காலால் இட்டதை
சொல்லுக ஐயரே,

வாத: சொல்கிறேன். இனிமேல்,
இன்று தொடங்கி, இக்கணம் தொட்டு, நீ
நடந்ததை மறுக்க நாவசைக் காதே.
சொந்தக் காதாற் கேட்ட கேள்வியை,
சொந்த மூக்குச் சொல்லிய மணத்தை,
சொந்த நாவினாற் சுவைத்த சுவைகளை,
சொந்த மேனியாற் தொட்டறிந் தவையை,
உலகம் எதிர்ப்பினும் - ஒளித்து வைக் காதே
ஞாலமே திரண்டுனை நடுங்க விழிப்பினும்
நடந்ததை மறுக்க நாவசக் காதே!
இவ்வா றொழுகுவ தாக உறுதிதா.
அவ்வா றில்லையேல், அறிந்துகொள் என்னை நீ
காட்டிக் கொடுத்த காதகச் செயலை
மறந்தும் சிறிதும் மன்னியேன், மன்னியேன்.

மை: (பெருமூச்சு விட்டுச் சோர்வுடனும், பணிவுடனும்)
அப்படியே, என் ஐயா,

வாத: போய், வா,
(சிறிது மௌனத்தின் பின், தமக்குள்)
நல்ல நாடகம் நடத்த இருக்கிறான்.
தில்லை ஆடும் தென்னா டுடையவன்
குதிரைகள் விலைக்கு நான் வாங்கவே யில்லை
மதுரைக் கவைகள் வருமெனச் சொன்ன
கூத்தன் கூத்தை முன் கூட்டி, யா ரறிவார்?
பார்த்தால் யாவுமே பரமனின் நாடகம்!
அறவா ணன் சென் றரசருக் குரைத்ததும்
உறுவார் என்றுமே உறாத சீற்றம்;
என்னை அழைப்பார், ஏவலர் மூலமாய்.
முன்னால் நிறுத்துவார்; முறைத்துப் பார்ப்பார்.
'எங்கே பணம்? என என்னைக் கேட்பார்
சிங்கே றெனவே சிரிப்பார், சினப்பார்.
சிறையிலே தள்ளெனச் செப்புவார். பணமெலாம்
பெறவழி புரி' எனப் பேசி உறுக்குவார்
கொண்டு சென் றென்னைச் சிறையில் அடைப்பதால்
உண்டுபண் ணிடலாம் உறுதுயர் எனக்கென
எண்ணி எதையோ எல்லாம் செய்வார்.
வருவது வரட்டும், வந்த பிறகு
வருபவன் வரட்டும் என் மனச் சிறைக் கோயிலுள்...
கொண்டு வரட்டும் குதிரைகள், அல்லது
தொண்டனைத் தன்னிடம் அழைத்தே விடட்டும்.
எலியையோ முயலையோ ஏற்றையோ காற்றையோ
நரியையோ வெளியையோ நடத்தி வரட்டும்;
குதிரையாய் மாற்றி; கொண்டு வராவிடின்,
மூல முதல்வனும் முழுமுழுப் பொய்யனே!
சீல நெறிகள் ஓர் சிதைந்த மண் பாண்டமே
அந்த நாளிலே அருங்குதி ரைத்திரள்
வந்துசே ராவிடின், மங்கைபங் கினனும்
பச்சைப் பொய்யனே! பரம்பரஞ் சோதியின்
எண்ணமே தென்பதை இருந்து பார்க்கலாம்.

காட்சி மாற்றம்

அங்: இன்று தான் அல்லவோ ஆவணி மூலம்?
வாதவூ ரந்தணர் வைத்த அவதி?
நிச்சயம் இன்று குதிரைகள் வரும், வரும்.

அற: எப்படி முடியும்?

அங்: ஏன் முடியாது?

அற: பைத்தியம், பைத்தியம், வாதவூரையரை
அத்தனை தூரம் நம்புகிறாயா?
எப்படி வருமாம் குதிரைகள்? சும்மா
வாயிலே வந்த படிக்கொரு நாளை
உளறிக் கொட்டினார், உண்மையா அதுவும்?
அங்கே வாங்கி இருந்தால் அல்லவோ
குதிரைகள் வருதல் கூடும், இன் றைக்கு?

மை: உண்மை தான் அக்கா, எனது கண்களும்
காதும் நேரே காட்டி வைத்தவை
எப்படிப் பொய்களாய் இருத்தல் கூடும்?
மாயக் கனவின் மயக்கப் பிடியினால்
காட்சிப் பிழை நடந் திருக்குமேல் அல்லது
எப்படி வருதல் கூடும் குதிரைகள்?
கண்கள் பொய்யாய்ச், செவிகளும் பொய்யாய்
மூக்கும் நாக்கும் மூச்சும் பொய்யாய்
மாற்றும் வல்லமை பெருந்துறைக் குண்டெனில்
காற்றினும் கூடிய காலுடைக் குதிரைகள்
இன்று வருதல் கூடும், அல்லது
எப்படி வருதல் கூடும் குதிரைகள்?

அங்: கட்டா யம்வரும் குதிரைகள் - காத்திரு.

அற: முட்டாள் போலநீ முணுமுணுக் கின்றாய்
அன்று நான்போய் அரசருக் குரைத்ததும்
தூதுவர் பலரையும் பெருந்துறைக் கனுப்பினார்.
சென்ற தூதுவர், திருப்பெருந் துறையின்
மூலௌ முடுக்குகள் எல்லாம் தேடியும்
நாலுநாள் முயன்று நலிந்து களைத்தபின்
குதிரை என்பதன் குதிஅடி கூடக்
கண்டோ மில்லை என்றுவந் துரைத்தார்;
உண்டோ இனியும் உனக்குநம் பிக்கை?

அங்: கட்டா யம்வரும் குதிரைகள்.

அற: (ஏளனமாக)
காத்திரு.
கட்டாயம் வரும் கழுதைவால் தும்புகள்.

அங்: ஏளனம் மட்டும் செய்யத் தெரியும் -
பாவம்! அந்தப் பழுத்த அடியவர்!
வெய்ய சிறையிலே விட்டு வருத்தநீர்
காலாய் இருந்தீர் அல்லவா?

அற: ஆமாம்!
அதனால் என்ன?

அங்: ஆத்திரம் வருகுது,
பெரிய கெட்டித் தனந்தான் போங்கள்.

அற: உண்மையைக் காத்தோம்; உயர்வுதா னேஅது?

அங்: தீமை உள்ளதும் வாய்மை யாகுமோ?

அற: தீமையோ, நன்மையோ! செய்து முடிந்தது.
பின்பு நினைத்துப் பெறும்பயன் என்ன?

அங்: வீதியில் அப்பால் மேலே எழுந்த
பூதூ ளிப்புகை தெரிகிறதல் லவா?

மை: குதிரைக் கூட்டமாய் இருக்குமோ?

அற: நல்லது.
தம்பியும் தமக்கையும் சரிசம மான
பித்துக் கொள்ளிகள்!

அங்: தொலையிலே எழுந்த
புழுதி, அரச குமரனின் பொற்றேர்
எழுப்பிவிட் டதுதான். எப்போது வருமோ,
குதிரைக் கூட்டம்? கூட்டமாய்ச் சனங்கள்
வீதி எங்கும் மிகுந்திருக் கின்றனர்.
ஏது, யாவரும் இன்று குதிரைகள்
வரும் என நம்பியா வந்து நிற் கின்றனர்?
வருமோ இன்று குதிரைகள்? அல்லது...

காட்சி மாற்றம்

வாத: வராமல் விட்டால், வாய்மை தொலைந்தது.
நராதிபன் முன்னால் நான் ஒரு பொய்யன்.
எனக்கு முன்னாலே இறைவன் ஓர் பொய்யன்.
கனைக்கும் ஒண்பரி காட்டுவேன் வந்தெனச்
சொல்லிய சொல்லும் இல்லையாய் முடியும்.
நல்லன வெல்லாம் நசிந்துபின் கசியும்.
சிறையி லிட் டுள்ளனர் சிவனடி யாரை:
சிறை எது செய்யுமாம்? சிரிப்பு வருவதேன்?

பூட்டுத் திறக்கப்படுதல், சாவிக்கொத்தின் கலீரொலி.

பூட்டைத் திறக்கும் சத்தமா? ஏது?
ஓட்டமாய் எவனோ ஓடி வருகிறான்.
மைவணன் வருகிறான் - வரட்டும் கேட்போம்,
என்ன நடந்ததாம் என்பதை விபரமாய்.

மை: (ஓடோடி வந்தமையால் இளைத்துக் கொண்டே)
வந்து சேர்ந்தன வாதவூ ரையா!
வந்து சேர்ந்தன.

வாத: (சாந்தமும் மகிழ்ச்சியும் ததும்பிய குரலில்)
வந்தன வா அவை?
இந்து வார்சடை எம்பிரான் நாடகம்.

மை: வந்து சேர்ந்தன வாவு பரித்திரள்.
சிந்தை தேம்பல் ஒழிந்தது கூடலூர்.

அற: (வந்து கொண்டே)
முந்தி முந்தி முறை முறை நேர்களாய்
உந்தி வந்த உயர்நடை உள்ளன.

மை: பொய்யை வாய்மை படுத்த எழுந்தன;
ஐய, வல்ல அடலுடல் வாய்ந்தன.
கொய்தெம் இன்னற் குலையை மிதிப்பன
வைகை வெள்ள வனப்பை நிகர்ப்பன.

அற: எண்ணி லாமல் எழுந்து விரைவன
கண்ணி லான் பெற்ற கண்ணெனத் தக்கன.
மண் எ லாம் எழும் வானம் மறைத்திட.

வாத: அண்ணலாரின் அதிசய நாடகம்.
(பாண்டியன் வருவதைப் பார்த்து)
வேந்த ரா? வரு வீர்.

வேந்: மிக்க இன்பமே
ஏந்தி நின்றன யாவரின் நெஞ்சமும்
வாய்ந்து வந்த வனப்புடை வாசியை
நாந் தளிர்த்த மனத்தொடு காண்கிறோம்.
தங்கள் மேன்மை அறிந்தில நாகியே
பொங்கும் இன்னற் புனலுள் அமிழ்த்தினேன்.
வெங் கொ டுஞ்செயல் வேதிய ரே, பொறுத்
திங்கு நம்முடன் வாரும் - வணங்கினேன்.
வகைப் படுத்தி, வரிசைப் படுத்தியே
வந்து சேர்ந்த குதிரைக் குழாத்தினை,
பகைப் பு லம் செகுக் கும்படைச் செல்வத்தைப்
பார்வை யிட்டு வணிகர் தலைவரும்
உகப்ப நல்ல, உயர்ந்த பரிசுகள்
உதவ வேண்டும், வருக அமைச்சரே!
சகிப்பின் வேந்தர் நீர்.

வாத: தாரணி வேந்தர் நீர்.
சகல மும் மறந் தின்பம் பருகுவோம்.

மை: வாய்மை, தன்னை வழிநடத் தும், அதன்
வழியில் நாங்கள் குறுக்கிட லாற் சில
தீமை கூட விளைவது கூடுமோ?
சிக்க லே, இது?

அங்: அல்ல, என் தம்பி, கேள்!
தூய்மை யான நினைப்பினாற் செய்கைகள்
தூண்டப்பட்டு நடப்பன வேல், உயர்
நீர்மையே இங்கு நின்றிடல் கூடுமாம்,
நீதியீனம் சரிந்து விழுந்திட.

-----------------------------------------------------------------

தரிசனம்

நாடக மாந்தர்: ஒருவனும், ஒருத்தியும்

'உக முடி விதுவோ? ஒழிவுறு கணமோ?
உயர்வுகள் மகிமை பல சாய
உடைகிற பகலோ இதுவென மிகவும்
உலைகிற நினைவோ டுயிர் குன்றிச்
சகமுழு வதுமே தகர்கிற தினமோ?
சகலரும் ஒழியும் நிலை தானோ?
தரையினி இலதாய் அழிவது நிசமோ?
தகுதிகள் கெடவோ?' எனுமாறே.

ஊழிக்கடையின் பெருவெள்ளம்
ஓடிப் பெருகிப் பிரளயமாய்
ஆழித் தரங்க மாய் எதையும்
அள்ளி எடுத்துப் போயிற்று.

முக்கு ளித்தனர்; மூச்சுத் திணறவும்
மொகு மொ கென்ற புனல் அவர் மூக்கின
துட்பு குந்தது; திக்கித் தவித்தனர்.
உயிர் கலங்கி மறுபடி மீண்டது.
அக்கணத்தில் அவர்களை வெள்ளமோ
அகன்ற டூமறாவில் அள்ளி எறிந்தது.
பக்கென் றந்த அதிர்ச்சி ஒழிந்ததும்
பரப ரப்புடனே எழ லாயினர்.

அங்கு மேற்கிலே ஆதவன் மமைவதைக் கான
இங்கு நின்றவன் ஒருவன் முன் ஒருத்தி வந் திருந்தாள்.

அம்......மா! என்ன? முழங்கால் கூடவா......?
அடிகள் உண்மையில் பலம் தான். சுழற்றி
மூசிய புயலின் முரட்டுக் குழப்படி
எத்தனை கொடியது? யாரது?
- நான் தான்.
- நீயா? யார் நீ? என்ன செய்கிறாய்?
பிரளயம் முடிந்ததே அல்லவா? பின்னும் நீ
மிஞ்சி இருப்பது வியப்பே யாகும்.
உலகம் முழுவதும் ஒழிந்ததென் றிருந்தேன்.
கலகம் அனைத்தும் கழிந்ததென் றிருந்தேன்.
குழப்பம் விளைக்கும் கொடுமைகள் யாவும்,
அமைதியைக் குலைக்கும் அல்லல்கள் எல்லாம்
தொலைந்து போய் இருக்கும் என்று நான் நம்பினேன்.
அனைத்தையும் கல்லி அறுத்துப் பெயர்த்து
நனைத்துக் கழுவிக் கரைத்து விழுங்கிப்
புரண்டு விரைந்த பிரளயம் எனது
புலன்களை மழுக்கிப் போதம் மறைத்து
மயங்க வைத்ததும் உண்மைதான். ஆயினும்
வேண்டா தவைகள் எல்லாம் ஒழித்துத்
துடைத்தே யிருக்கும் என்று தான் நினைத்தேன்.
ஆனால் நீ யார்? எப்படித் தப்பினாய்?
விந்தை தான்.
- ஓகோ!
- விளையாட் டென்ன
இந்த வேளையில்? ... எதற்கு நீ நிற்கிறாய்?
- அதிர்ச்சியில் மழுங்கிய கட்புலக் காட்சி
இன்னும் திறக்க வில்லையா, தெளிவாய்?
அன்றியும் இதுவோ மாலை வேளை.
மைம்மலில் எதுவுமே மங்கலாய்த் தெரியும்!
- என்ன நீ சொல்கிறாய்? இங்கே சற்றே
இரு நீ அந்தப் பாறையில். நாங்கள்
ஆறுத லாக அனைத்தையும் பேசலாம்.
- என்ன பேச்சிது? கண்களைக் கொஞ்சம்
இந்தப் புறமாத் திருப்புக; உண்மையில்
அரை நா ளிகையாய் அருகில் இப் பாதையில்
இருக்கிறேன் தானே!
- நிற்கிறாய் என்று தான்
நினைத்தேன் .....
- கொஞ்சம் திரும்பிப் பார்த்தால்
உள்ளது தெரியுமே உள்ளவா றாக.

'மங்கை ஆர்?' என மதித்தவன் முகத்திலோர் மாற்றம்
தங்க, உற்றுள தையலை ஒரு தரம் பார்த்தான்.

- என்ன ஊமையா நீங்கள்?
- இல்லை.......

வாய் திறந்திலர் ஒருவரும்; மனங் கலந் திடவும்
போய் இரண்டு கண் பொருந்தின; பிறந்தது புதுமை.
'நீ இருந்துகொள்; நானும் இங் கிருக்கிறேன்' எனவோ
ஆயும் நல்லிழை அகல்விழி யால் உரைக் கின்றாள்?

பிரளயம் உன்மேற் பிரியம் வைத்து
மிச்சமாய் விட்டது மிகவும் நல்லது.
மெச்சினேன் இயற்கையின் விசத்திரப் போக்கினை.
அச்சா! அது தான் அழகு!
- நானோ
ஏனோ பிழைத்தேன் என்றுதான் வருந்திக்
கவலைப் படுகிறேன்.
- என்னடி சோர்வு?
காலை மலர்ந்ததும் கதிரவன் வருவான்.
புற்களும் முளைக்கும்; பூங்கொடி தளைக்கும்.
நெற்பயிர் நிமிரும்; நிறை பயன் கொழிக்கும்.
நாங்கள் இருவரும் அருந்தி அருந்தி
நுகர்ந்து நுகர்ந்து திளைக்கலாம்.
- ஆனால் சுற்றிலும் எவ்வள விருட்டு?
- பனியோ கொடிது; பற்கள் கிடுகிடுத்
துயிரையே துளக்கி உலைத்திடும் போலும்.
சட்யையோ ஈரம்; சற்றே அதனை
உலர்த்த எண்ணினால்... ஒரு வழி காணோம்.
மேனியில் வெப்பம் விளைவிக் காது நாம்
இப்படி யாக இருப்போ மானால்
குளிரே நமது குருதி முழுவதும்
உறையும் படியாய் ஒடுக்கவும் கூடும்.
- சரி, சரி, வாரும். சும்மா இங்கே
பேசி இருந்து பெறும் பயன் என்ன?
- இன்னும் கொஞ்சம் இறுக்கிப் பிடியடி
கையை... நன்றாய்...
- காணுமா?
- இன்னும்.......
பற்றிய நெருக்கம் பனிக்குளிர்ப் பகையை
முற்றுகை யிட்டு முடிக்க வல்லது.
எல்லாம் சரி தான். எங்கே போகிறோம்?
செல்லும் வழியும் திசையும் இருண்டு
மயங்கிய வேளையில் வழியறி யாது.......
- தயங்கி நின்று தவித்தல் தான் நல்லதா?
அப்படி யானால் அவ்விதம் செய்வீர்.
எப்படி யோ நான் என் வழிப் போகிறேன்.
- வேண்டாம், அன்பே! விரல்களைத் தளர்த்த
வேண்டாம். இன்னும் விருப்புடன் நெருக்குவாய்.
எங்கே வரும்படி என்னை அழைப்பினும்
அங்கே நானும் உன் அடிகள் தொடருவேன்.
- அப்படி வாரும் வழிக்கு.
- என்
ஆசைக் குமரி நிகழ்த்தும்
சொற்படி தானே நடக்கும்.
தூண்டப்பட் டாடும் என் ஆவி?
தப்பு விடை சொல்லி விட்டால்
தயவு புரிந்து பரிந்தே
ஒப்பி என் குற்றம் பொறுத்தல்
உன் கட னாம்.........
- சரி, வாரும்.
- எங்கு செல்கிறோம் என்பதைச் சொல்வதில்
நங்கை என்ன தயக்கம்?
- அதோ! புதுத்
தங்க மோ எனு மாறு தகதகத்
திங்கும் அந்த ஒளி வரு கின்றதே!
ஒன்று மே என் விழியிலே பட்டிலது.
என்ன செய்யலாம்?
ஏன்? அதோ! அங்கு தான்
பாரும் அந்தப் பராபரன் கோயிலின்
சீர் மிகுந்த சிறப்புசால் கோபுரம்.
வாரும் அங்கு வணங்கலாம் சென்று, நாம்.
- ஒன்றுமே தெரிய வில்லை.
உன்சொல்லைக் கேட்டு நம்பி
அன்றோ நான் தொடருகின்றேன்.
அதோ மின்னல். அமிர்த ஜோதி
என்று தான் சொல்ல வேண்டும்
எழுங் கோயிற் கோபு ரத்தில்
நின்ற பொற் கலசம் என்ற
நிறையொளிப் புதுமை தன்னை.
- கண்டாயே போலும்! நானோ
கதிரொளிப் பளிச்சுப் பாய்ச்சும்
திண்டிரட் சுடர்கள் தாக்க
விழிகளை மூடிக் கொண்டேன்.
- கண்டாலும் காணீ ரேனும்
கருத்திரண் டெதற்கு வேண்டும்?
உண்டென்று சொல்கின்றேன் நான்.
- ஒப்பவே வேண்டும் போலும்!

தனிமை யான அமைதி சால் சூழலில்
இனிமை யான 'எழிலொடும்' ஏகினான்.
கனிவி நோடவன் காதல் கலந்தனள்.
வனிதை யாள் பின் அவ் வாலிபன் போகிறான்.

போனவர்கள் கோபுர வா சலினால் உள்ளே
புகுந்தனர்கள்; மண்டபத்தில் நுழைந்த போதில்....

- ஏன் நுழைந்தோம்? பெரிய தவறிழைத்தோம், அன்பே!
இருட்டில் ஒன்றும் தெரியவில்லை; படிக்கல் தட்டி
நான் விழுந்து போய்விட்டேன்.
- என்ன? ஆ.........! ஆ..........!!
நனைகிறதேன் எனது விரல்? இரத்தமா! ஆ.......

வாலிபனின் கால் தொட்டு முழங்கால் தொட்ட
மங்கை நல்லாள் பதறிவிட்டாள்; மயங்கிச் சாய்ந்தாள்.

என்ன செய்வான் வாலிபனும்? பாவம்! அங்கே
இருந்தபடி இருக்கின்றான், செயலி ழந்து.
மின்னனையாள் விழுந்தவள் தான்; விழிக்கவில்லை.
வெகுநேரம் இவ்வாறு கழிந்து போன
பின்னர் அவள் முனகலுடன் சில சொல் மெல்லப்
பேசுதற்குத் தொடங்குகிறாள்; அவனுக் கோ தன்
சென்ற உயிர் மீண்டதுபோல் மகிழ்ச்சி முட்டச்
சிறாம்பலுற்ற முழங்கால் நோ மறந்து போனான்.

- எங்குள்ளேன் நான்? என்ன செய்கின் றேன்? ஏன்?
யார் மடியில் எனது தலை வைத்துள் ளேன்? ஓ!
- மங்கை நல்லாய், உன் மயக்கம் தெளிந்து போச்சா?
- மகிழ்ச்சி என்ன அதற்காக?
- பேச வேண்டாம்.
அசையாதே அன்பே, நீ எங்கு செல்ல
அவ்வளவு துடிக்கின்றாய்? அதற்குள் ளே நீ
விசையாக எழுந்திருத்தல் நல்ல தன்று.
வேண்டாம். நீ பழையபடி படுத்துக் கொள்வாய்.
மடி மீது தலையினை வை.
- மாட்டேன், போங்கள்.
மயக்கம் ஒன்று வந்ததுண்டே! அதனால் என்ன?
விடுவோமா எங்களது லட்சியத்தை
விழுந்து விட்டோம் வாயிலிலே என்ப தற்காய்?
- உள்ளேயோ கசை இருட்டு, மேலும் போனால்
உடைந்து விடு வோம் நாங்கள், தூணில் மோதி.
எள்ளளவும் உயிர் மீதில் ஆசை உண்டேல்
இவ்வாறு பிடிவாத மாக உள்ளே
செல்வதற்கு முயல்வாயோ? தயவு செய்து
திரும்புதற்குச் சம்மதிப்பாய்.
- வெளியில் மட்டும் முழுமை நிலா வான மீதில்
உலவி வரு கின்றதுவோ?
- அங்கு கூட
இருள் எனினும் திறந்த வெளி ஆகையாலே
எதனோடும் மோதிவிடும் அபாயமில்லை.
- சரி, சரி. ஏன் பல கதைகள்? உயிரின் மேலே
தணியாத ஆசை உள்ள தாலே தானே,
இருளிடையே முன்னேறி நகர்ந்தென் றாலும்
எம்பெருமான் அமர்ந்திருக்கும் மூலத் தானக்
கருவறையை நாம் அடைதல் வேண்டும்? ஆமாம்,
கட்டாயம் நீங்கள் இதற் குதவ வேண்டும்.
ஆலயத்தின் கருவறையை அடைந்த பின்னர்
ஆவி அகன் றிட்டாலிம் பரவாயில்லை.
- அது தான் உன் விருப்பமெனில் மறுத்துப் பேசி
ஆவதென்ன? தவழ்ந்து செல்வோம் வருகின் றாயா?
- வருவதற்குத் தடையில்லை. ஆனால் அந்த
வாசலிலே படிக்கல்லுத் தட்ட வீழ்ந்து
குருதி பெருக் கிய உங்கள் முழங்கா லோடு
குனிந்திருந்து தவழ்வதற்கும் இயலா தன்றோ?
- நான் மறந்து போய்விட்டேன். அவ்வா றானால்
நகர்ந்து நகர்ந் தே வருவேன், உனக்குப் பின்னால்.


சிவந்த இதழ்ச் சிரிப்பாளி தவழ்ந்து சென்றாள்.
சிறிது சிறி தாய் நகர்ந்து சிறந்தோன் போனான்.

கருவறையின் படிக்கட்டை இரு பேரும்
அடைந்தனர்கள்; களிப்பு விஞ்சிப்
பெருகுகிற சிந்தையளாய் அவள் மூலத்
தானத்தைப் பார்க்க லானாள்.

- இருளிலே ஒன்றும் தெரியவில்லை என்ன செய்வோம்
இனி, அன்பே!
- மூல மூர்த்தி
அருள் இருந்தால் அது போதும். அத்திசையை
நோக்குங்கள் வணங்க.
- ஆனால்.......
உள்ளதுவோ, இல்லதுவோ, ஒன்றிரண்டோ,
பலவோ என் றறியா ஒன்றினை
உள்ளுருகி ஊனுருகி எப்படி நான்
வணங்கிடுவேன்?
- ஓகோ! சற்றுத்
தள்ளி இரண் டறைக்கப்பால் தீப அறை
உள்ளதங்கு சென்று தேடி
வெள்ளி விளக் கெடுத்து வந்தால் அனைத்தையுமே
வெளிவெளியாய்ப் பார்க்க லாகும்.
- அப்படியா?
- வாருங்கள், அதோ, பாதை.
தீப அறை நோக்கிப் போவோம்.
எப்படியும் தரிசித்தே விடவேண்டும் என்கின்ற
எண்ணத்தாலே.

இவை கூறி அவனுடைய கைப்பற்றித்
தீப அறை நோக்கிப் போனான்.
அவள் பாதை தன் பாதை ஆக்கி அவன்
நகரலுற்றான்; இரண்டு பேரும்

ஒருவாறு வந்தடைந்தார் விளக்கிருக்கும்
அறைக்கருகில்........

உந்தித் தள்ளித்
திருவாயில் தனைத் திறப்பீர், கவனமாய்......
- இதோ!
சேச்சே........ எல்லாம் போச்சு.........

கதவு படீ ரெனத் திறக்கக் காற்று குபீர்
என நுழைந்த கார ணத்தால்
இதுவரையும் எரிந்திருந்த விளக்கணைந்து
போயிற்றே! என்ன செய்வார்?
உதவி இனி வேறென்ன? உலகெங்கும்
கவிந்த இருள் உள்ளும் சூழக்
கதியறியா தங்கேயே சாய்ந்து விட்டார்
இரு பேரும் கதவி னண்டை.

- இனி என்ன செய்திடலாம்? நீயே சொல்.
- ஐயையோ! என்னைக் கேட்டால்?
பனி வெளியே, இருள் கொடிது, விளக்குமில்லை
விடியுமட்டும் இங்கே யே தான்
தனிமையில் இவ் விரவு தனைக் கழித்திடுதல்
வேண்டும்.
- அதைத் தவிர மார்க்கம்?
கனி மொழியே! உன்னுடைய விருப்பம் போல்
ஆகட்டும்.
- தலையை இங்கென்
மடி மீதில் வையுங்கள்.
- கண்ணயர
விருப்பமில்லை; காத்திருப்போம்.

என்று விடியும்? விடியுமெனில்
இருளும் தொலைந்து பகல் மலரும்.
நன்று புதிதாய்ப் பிறந்து வரும்.
நாளை ஒன்று சிறந்து வரும்.
வென்றி மிகுந்து பூரித்தே
வெயிலோன் வருவான் எனவெல்லாம்
அன்றில் இணையை அனையவர்கள்
ஆவ லோடு காத்திருந்தார்.

ஆவ லோடு காத்திருந்தார்;
அவர்கள், அங்கே ஒளி கூட்டத்
தீவம் இல்லை யானாலும்
தென்பு மிகுந்து நெஞ்சகத்தே
மேவி விளக்காய் மின்னிய; தவ்
விளக்கின் ஒளியை மங்காமல்
காவல் காத்தார் இரு பேரும்.
காலம் மெல்ல நகர்கிறது.

--------------------------------------------------------