கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும்  
 

கலாநிதி ஜேம்ஸ் தே. இரத்தினம்

தமிழாக்கம்:
திரு ஏ. ஜே. கனகரட்னா

 

எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும்

கலாநிதி ஜேம்ஸ் தே. இரத்தினம்

தமிழாக்கம்:
திரு ஏ. ஜே. கனகரட்னா

மறுமலர்ச்சிக் கழகம்
1981

------------------------------------------------------------------------------------
எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும்

கலாநிதி ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம்

A translation of James T. Rutnams
The Tomb of Elara at Anuradhapura
(Jaffna-1981)

யாழ்ப்பாண தொல்பொருளியல் கழகம்
ஈவ்லின் இரத்தினம் நிறுவனக் கட்டிடம்
பல்கலைக் கழக ஒழுங்கை
திருநெல்வேலி
யாழ்ப்பாணம்

தமிழாக்கம்:
திரு ஏ. ஜே. கனகரட்னா

வெளியீடு: 1981 ஆண்டு ஆகஸ்ட்
மறுமலர்ச்சிக் கழகம்
பல்கலைக்கழகம்
யாழ்ப்பாணம்

அச்சிட்டது
நொதேர்ண் பிறின்ரேர்ஸ்
411, ஸ்ரான்லி வீதி
யாழ்ப்பாணம்.

----------------------------------------------------------------------

".....( துட்ட கெமுனுவின்) இக் கட்டளைக்குப் பணிந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை மக்கள் ஒரு வீரனாகவும், நீதியும் மனிதப் பண்பும் கொண்ட மன்னனாகவும் விளங்கிய ஒருவனுக்கு (எல்லாளனுக்கு) தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வந்துள்ளமை இம்மக்களுக்குரிய சிறப்பைக் காட்டும்"
G. P. மலலசேகர என்ற காலஞ் சென்ற பிரபல சிங்கள பௌத்தத் தலைவரும், அறிஞரும் தனது "The Pali Literature of Ceylon" (Colombo 1928, p.34) எனும் நூலில் எல்லாளனுக்குச் சிங்கள மக்கள் செலுத்திவந்த அஞ்சலி பற்றிப் பாராட்டிக் கூறிய கூற்று.

---------------------------------------------------------------------------

இது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1981 மார்ச் 24ல் யாழ்ப்பாணத் தொல்பொருளியல் கழகம், தென்னாசியவியற் கருத்தரங்கு ஆகியவற்றின் ஆதரவில் நடைபெற்ற கூட்டத்தில் ஆற்றப்பட்ட உரையாகும்.

--------------------------------------------------------------------------------

புகைப்படம்: அநுராதபுரத்தில் உள்ள 'எல்லாளன் சமாதி' எனப்படும் கட்டிடம்.

------------------------------------------------------------------------------

முன்னுரை

இலங்கையில் தமிழ் இனத்துடன் தொடர்பான வரலாற்றுச் சின்னங்கள் மிக முற்பட்ட காலத்திலிருந்தே காணப்படுகின்றன. இவற்றைத் தமிழ் மக்கள் சரியான முறையில் அறியாதிருக்கும் நிலையில், தமிழ் இனத்தைப் பல வகையாலும் தாக்கிவரும் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் தமிழருடைய வரலாற்றுச் சின்னங்களை மறைத்தும், மறுத்தும், அழித்தும் வருகின்றது. இச் செயல்களுக்கு ஓர் உதாரணம்தான் 2200 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்த தமிழ் மன்னன் ஒருவனின் சமாதியை, எல்லாளப் பெருமன்னனின் சமாதியை, இன்று துட்டகைமுனுவின் சமாதி என்று கூறுவது.

கிறிஸ்த்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே எல்லளன் சமாதியென மரபு ரீதியாகவும், வரலாற்றுச் சான்று ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்த உண்மையைத் திரித்து துட்டகைமுனுவின் சமாதியெனச் சிங்கள பௌத்தப் பெருந்தேசியவாதத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறினர். அவ்வாறே எல்லாளன் ச்மாதி துட்டகைமுனுவின் சமாதியெனப் பெயர் மாற்றிப் பெருவிழாவும் எடுக்கப்பட்டது.
இவ்வநியாயத்தில் பெரும் கல்விமான்களும் அரசியல்வாதிகளும் பங்கெடுத்துக் கொண்டார்கள். இவ்வநியாயத்தை எதிர்த்து, கலாநிதி ஜேம்ஸ் தே. இரத்தினம் அவர்களின் இவ்வாராய்ச்சி நூல் வெளிவருவது ஓர் வரப்பிரசாதமாகும். கலாநிதி ஜேம்ஸ் தே. இரத்தினம் அவர்களுக்கு யாழ். பல்கலைக்கழகம் அண்மையில் கௌரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கியது. இவ்வாராய்ச்சி நூலை எழுதியதன் மூலம் தனக்கு வழங்கிய கலாநிதிப் பட்டத்திற்கு மேலும் ஓர் மெருகூட்டியுள்ளார் எனக் குறிப்பிடலாம்.

அறிவாளிகள் என்ற கோணத்தில் இருந்து தம்மாலான கடமையைச் செய்யத் தவறாமைக்காக வரலாறு கலாநிதி ஜேம்ஸ் தே. இரத்தினம் அவர்களின் பெயரை உரியவாறு நினைவு கூரத் தவறாது.
இந்நூலை ஆங்கிலத்தில் இருந்து உரியவாறு தமிழில் மொழிபெயர்த்துத் தந்த திரு. ஏ. ஜே. கனகரட்னா அவர்களுக்கு எமது கழகம் பெரிதும் கடமைப்பட்டதும் நன்றியுடையதுமாகும். அட்டைப்படம் வரைந்துதவிய ஓவியர் ரமணிக்கும் எமது நன்றிகள். இந் நூலை சிறந்த முறையில் அச்சிட்டுத் தந்த நொதேர்ண் பிறிதேர்ஸுக்கும், ஊழியர்களுக்கும் கழகம் நன்றியுடையதாகும்.

இந் நூலை வெளியிட எமக்குச் சந்தர்ப்பம் கிடைத்தமையை எண்ணிக் கழகம் மகிழ்ச்சியடைகிறது.

மறுமலர்ச்சிக் கழகம்.

பல்கலைக் கழகம்
யாழ்ப்பாணம்.
ஆகஸ்ட் 1981

----------------------------------------------------------

மூப்படைந்து இருந்த போதிலும் வீரனாகத் திகழ்ந்த இலங்கைத் தமிழ் மன்னன் எல்லாளன் தன்னை விட வயதில் மிக இளையவனான- "மகாவம்சத்தின் காவியத் தலைவனாக" விளங்குபவனான- துட்டகைமுனுவினால் தனிச்சமரில் கொல்லப்பட்ட நாள் தொடக்கம் எல்லாளனுடைய உடல் தகனம் செய்யப்பட்ட போர்க்களம், வீர தர்மம் மிக்க அவனுடைய பகைவனின் திட்டவட்டமான ஆணைக்கேற்ப புனித ஸ்தானமாக கருதப்பட்டு வந்திருக்கிறது.

இந்த நிகழ்ச்சி 2000-ம் ஆண்டுகளுக்கு முன் அதாவது கி. மு. 161ல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. நாற்பத்தி நான்கு ஆண்டுகளாக இச் சோழ மன்னன் இந்நாட்டை ஆண்டான். மகாவம்சத்தின் கூற்றுப்படி இம் மன்னன் நீதி வழுவாது நண்பனையும் பகைவனையும் சமமாகக் கருதி நீதி வழங்கினான்; மகாவம்சத்திலே வேறு எந்த இடத்திலாவது ஒரு மன்னன் இவ்வாறு தாராளமாகப் பாராட்டப் பட்டதில்லை.

மகாவம்சம் தரும் சான்று

மகாவம்சம் மேலும் கூறுவதாவது "இச்சை, வெறுப்பு, பயம், மாயை ஆகியவற்றை தவிர்த்து ஒப்பாரும் மிக்கரும் இன்றி அவன் நேர்மையாக செங்கோல் ஓச்சி வந்தான். இரவிலே முகில்கள் மழையைப் பொழிந்தன. பகலில் மழை பெய்யவே இல்லை." இச் செங்கோலனை இயற்கை கூட ஆதரித்தது போலும்.

அக்கால கட்டத்திலே வழக்கிலுருந்த ஐதீகங்களுடன் மன்னனை இணைத்து மகாவம்சம் தனது பாராட்டை விளக்கிச் செல்கிறது; "இந்த மன்னன் துன்மார்க்கத்தில் காலடி எடுத்து வைக்காததினால்தான் அவனுடைய நம்பிக்கைகள் பொய்யனவையாய் இருந்த போதிலும் அதிசயிக்கத்தக்க சக்திகளை அவர் வரமாகப் பெற்றிருந்தார்"

எனவே துட்டகைமுனு தான் ஈட்டிய உன்னத வெற்றி வேளையிலும்- அவன் தன் மனச் சாட்சியுடன் போராடியதைப் பின்னர் பார்ப்போம்- இதனால்தான் தனது உயர்ந்த பகைவனின் ஈமைக் கிரியைகளில் உடனடியாகப் பங்கு பற்றினான். இது வியப்பன்று.

மகாவம்சம் பின்வருமாறு கூறுகிறது; "நகரத்தின் தெற்கு வாசலில் அண்மையில் இரு மன்னர்களும் பொருதினர். எல்லாளன் குறிநோக்கி தனது ஈட்டியை எறிந்தான். துட்டகைமுனு அக் குறியில் இருந்து தப்பித்துக் கொண்டு எல்லாளனின் யானையை தந்தங்களினால் துளைப்பதற்கு தனது யானையை ஏவினான். எல்லளனை நோக்கி தனது ஈட்டியை எறிந்தான். யானையுடன் எல்லளனும் சரிந்தான். இவ்வாறு துட்டகைமுனு வெற்றிவாகை சூடி இலங்கையை ஒரே ஆட்சிக்குள் இணைத்தபின்னர் தலை நகருக்குள் தேர்ப்படையுடனும், காலாட்படையுடனும், யானைப்படையுடனும் அணிவகுத்துச் சென்றான். நகரிலே முரசு அறையும்படி ஆணையிட்டான். முரசொலி காதுக்கு எட்டிய தூரத்தில் இருந்து மக்கள் எல்லோரும் கூடிய பின்னர் எல்லாள மன்னனின் ஈமைக் கிரியைகளை துட்டகைமுனு நடத்தினான். போர்க்களத்திலேயே எல்லாளனின் உடல் பாடையில் வைக்கப்பட்டு, துட்டகைமுனு அச்சிதைக்கு கொள்ளி வைத்தான். அங்கு ஒரு நினைவுத் தூபியைக் கட்டி எழுப்பி அதனை வைபடுமாறு ஆணையிட்டான். அன்று தொடக்கம் இலங்கை மன்னர்கள் இந்நினைவுத் தூபியை அண்மித்ததும் இசை வாத்தியங்கள் வாசிப்பதை நிறுத்தி மௌன அஞ்சலி செய்வது வழக்கம்"

இந்த நினைவுத் தூபிக்கு அண்மையில் ஒரு தூணில் கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அக் கல்வெட்டின் வாசகம்; "அரசனாயிருந்தால் என்ன, குடியானவனாகவிருந்தால் என்ன ஒருவருமே இவ்வழியால் பல்லக்கிலோ. சிவிகையிலோ முரசு கொட்டி எதிர்காலத்தில் செல்லலாகாது" எனெக் கூறுகிறது.

ஒரு தமிழ் மன்னனுக்கு "இன்று வரையும் கூட" தனித்துவமான அஞ்சலி செலுத்தப்பட்டமைக்கு மகாவம்சத்தை இயற்றியவர், 700 ஆண்டுகளுக்கு மேல் கழிந்தும், (மகாவம்சம் கி. பி. 6-ம் நூற்றாண்டில்தான் இயற்றப்பட்டது) சான்று பகர்கின்றார். மகாவம்சத்தில் காணப்படும் சான்றுகளிலிருந்து நாம் பெறும் தகவல்களாவன;

இரு மன்னர்களும் நகரத்தின் "தெற்கு வாசலுக்கு (புரதக்கிண துவாரம் ஹி) அண்மையில் பொருதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அங்குதான் எல்லாளனின் உடல் பாடையோடு எரிக்கப்பட்டது. அவ்விடத்தில்தான் துட்டகைமுனு "நினைவுத் தூபியைக்" கட்டினான். நினைவுத் தூபிக்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் பாளிச் சொல் "Cetiya". அத்துடன் அந்நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்த வேண்டுமெனவும் ஆணையிட்டான்".

பிற ஆதாரங்கள்

மகாவம்சத்திற்கு உரையாக அமைகிறது "வம்சத்த பக்காசினி" எனும் நூலாகும். இதன் பதிப்பாசிரியர் G. P. மலலசேகர, இந்நூல் கி. பி. "8-ம் அல்லது 9-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது" என்கிறார். வில் கெல்ம் கைகர் என்பவர் இந்நூல் 11-ம் நூற்றாண்டிற்கும் 13-ம் நூற்றாண்டிற்கும் இடையில் இயற்றப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதினார். இவ்விளக்க உரையின்படி மன்னர்கள் தனிச்சமர் பொருதிய இடம் (புரதக்கிண துவாரம்ஹி) "எலார பட்டிமாகரவுக்கு கிழக்கேயும் அனுராதபுரத்தின் தெற்குப் பகுதியிலும் உள்ள குயவரின் கிராமத்திற்கு மேற்கேயும்" அமைந்ததாக குறிப்பிடப்படுகிறது.

உரை ஆசிரியர் எலகரபட்டிமாகர எனும் இடத்தைப் பற்றி குறிப்பிடுகையில் அது அதத் தலைமுறைக்கு நன்கு பரிச்சயப்பட்ட ஒரு இடமாகவும் எல்லொருக்கும் தெரிந்த இடமாகவும் குறிப்பிடுவது நோக்கற்பாலது. எலகரபட்டிமாகர என்றால் என்ன? "எல்லாள விக்கிரக அகம்" என்பதே அதன் பொருள். வேறு எந்த அர்த்தமும் அதற்குக் கொடுக்க முடியாது. இப்புனித இடம் முன்பே கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. வம்சத்தபக்காசினி இயற்றப்பட்ட காலத்திலும் அது இருந்திருக்கிறது.

கி. மு. 2-ம் நூற்றாண்டில் துட்டகைமுனுவால் பிரகடனம் செய்யப்பட்டு 6-ம் நூற்றாண்டில் அனுஷ்டிக்கப்பட்டு வந்ததாக மகாவம்சத்தின் ஆசிரியரால் சான்று பகரப்படும் வழக்கம் பற்றி உரை ஆசிரியர் சான்று பகருகிறார். இவ்வாறு செய்யும் பொழுது அவர் தனது நேரடி அனுபவத்தினையே குறிப்பிடுகின்றார் என்பது வெளிப்படை. இவ்வுரை ஆசிரியர் வாழ்ந்த காலத்திலும் இலங்கை அரசர்கள் தூபியை அண்மித்ததும் இசை வாத்தியங்கள் வாசிப்பதை நிறுத்தி மாகைகளையும் வாசனைப் பொருட்களையும் தாங்கிய வண்ணம் புனித இடத்தை வலம் வந்து இவ் ஸ்தூபியை (Cetiya) வழிபட்டனர். பரணவித்தானாவும் உரையாசிரியர் வாழ்ந்த காலம் வரையிலும் அதாவது எல்லாளன் இறந்து 1000 ஆண்டிற்கு பின்னரும் எல்லாளனின் "பிரதிமை"க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது என்பதை ஒப்புக் கொண்டார்.

எல்லாளன் இறந்த பின்னர் அவன் எவ்வாறு புனிதமான ஒருவனாய்க் கருதப்பட்டான் என்பதை அவனுக்கு உருவாக்கப்பட்ட சிலையும் அச்சிலைக்கு அமைக்கப்பட்ட ஒரு அகமும் வெளிக்காட்டுகின்றன. "சேத்திய" (Cetiya) என்ற சொல்லை கைகர் "நினைவுச் சின்னம்" (Monument) என மொழி பெயர்த்தமை தவறு என்பது புலனாகிறது. உண்மையில் இதற்குப் பொருத்தமான சொல் தூபி அல்லது தாதுகோபம் ஆகும்.

சமய குரவர்களாகிய மகிந்த, சங்கமித்த ஆகியோர் தகனம் செய்யப்பட்ட இடங்களிலே எழுப்பப்பட்ட கட்டிடங்களை வர்ணிக்கும்போது பயன்படுத்தப்பட்ட பாள்ச் சொற்களாகிய சேத்திய, தூப ஆகிய சொற்களை கைகர் மொழி பெயர்க்காது விட்டமை விசித்திரமானது. மகிந்தரைக் குறிப்பிடுகையில் (அவரது ஞாபகார்த்தமாக) "இங்கு ஒரு சேத்தியாவைக் கட்டி எழுப்பப்பட்டுள்ளது" எனவும், சங்கமித்தையைப் பற்றிக் குறிப்பிடுகையில் "மதிநுட்பம் மிக்க உதிய அங்கு ஒரு தூபியைக் கட்டுவித்தான்" எனவும் குறிப்பிட்டுள்ளார். பிறிதொரு இடத்தில் கைகர் வெளிப்படையாகவே கூறியுள்ளார். அஃதாவது "எனது மகாவம்ச மொழிபெயர்ப்பு பற்றி நான் திருப்திப் படவேயில்லை" என்பதாகும். மாண்ட தனது பகைவனான செங்கோலனான எல்லாளனுக்குத் துட்டகைமுனு அளித்த மதிப்பும் பயபக்தியும் இத்தீவின் வரலாற்றிலேயே ஈடு இணையற்றது என்பதில் ஐயமில்லை. இறக்கும் தறுவாயில் இருந்த துட்டகைமுனுவை ஏன் மனச்சாட்சி உறுத்தியது என்பது இப்போது எமக்குப் புரிகிறது. எல்லாளன் கொல்லப்பட்ட காலத்தில் துட்டகைமுனு அவருக்கு தனிச்சிறப்பு வாய்ந்த வணக்கத்தையும் அளித்தது எம்மால் புரந்து கொள்ள முடிகிறது. இலட்சக் கணக்கானோரை படுகொலை செய்தமை ஒன்றரை மனித்ரை படுகொலை செய்தமைக்கு ஒப்பாகும் எனப் புத்த குரமார் அவனைத் தேற்றினர். ஏனையோர் நாத்திகரும் துட்டரும் என அவர்கள் விளக்கி, அவர்களை விலங்குகளுக்கு மேலாகக் கணிக்க வேண்டியதில்லை எனவும் கூறினர்.

விதிவிலக்கானவர்களில் ஒருவர் "மூன்று நெறிகளைக் கடைப்பிடித்தவர்" என்றும் மற்றவர் " ஐந்து ஒழுக்க சீலங்களைக் கடைப்பிடிப்பதாக வாக்குப் பண்ணியவர்" என்றும் அவர்கள் விளக்கினர். இவ்வாறு விதிவிலக்கானவர்களில் ஒருவன் எல்லாளன் போலும்! E. W. அதிகாரத்தின் கருத்துப்படி எல்லாளன் பயபக்தி மிக்க இந்து சமயத்தவன். எனவே 2000 ஆண்டுகளுக்கு மேலாக எல்லாளன் வழிபடப்பட்டு வந்தமைக்குக் காரணம் அரசாணைக்குக் கீழ்ப்படிந்தமை அல்ல. ஓர் மேன்மகன் - தேசத்தவர் வழிபடும் தெய்வங்களுள் ஒருவராகக் கருதப்பட்டு - வணக்கம் செலுத்தப்பட வேண்டும் என்று கருதப்பட்டமையே.

14-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சத்தர்மாலங்காரய என்னும் நூல் "எல்லாளன் தகனம் செய்யப்பட்ட இடத்தில் அவரது பெயருடன் விளங்கிய தாதுகோபுரத்தை துட்டகைமுனு கட்டுவித்தான்" எனத் திட்டவட்டமாகக் கூறுகிறது.

எனவே 6-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட மகாவம்சமும் பின் வந்த உரையும் கூறும் வழக்கம் தொடர்ந்து அனுஷ்டிக்கப்பட்டு வந்ததை இந்நூலாசிரியர் உறுதிப் படுத்துகிறார். "இற்றை வரையும் (அதாவது 14-ம் நூற்றாண்டில்) இவ்விடத்துக்கு மன்னர்கள் வரும்போது முரசு கொட்டப்படுவதில்லை" என சத்தர்மாலங்காரய கூறுகின்றது. சோழர்கள் அனுராதபுரத்தை கைப்பற்றிய பின்னரும் கூட இது கடைப்பிடிக்கபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. எனவே எல்லாளன் தூதுகோபுரம் போரின் அழிபடுகளையும் எஞ்சிப் பிழைத்தது எனலாம்.

போத்துக்கேயரதும் ஒல்லாந்தரதும் ஆட்சிக் காலத்தில் இந்நாட்டின் சில பகுதிகள் காடாக மாறிற்று. எடுத்துக் காட்டாகப் பலன்னறுவையும் அதன் சுற்றுப்புறமும் காடாக மாறி ஏறக்குறைய 500 ஆண்டுகளாக எவராலும் அறியப்படாது கிடந்ததைக் கூறலாம். ஆனால் அனுராதபுரமோ எனில் மக்களின் நினைவில் தொடர்ந்தும் இடம்பெற்று இருந்தது. அங்கு உள்ள சில நினைவுச் சின்னங்களை புனருத்தாரணம் செய்வதற்கு கீர்த்தி சிறீ இராசசிங்கன் முயன்றான் என்பதை நாம் அறிவோம்.

அனுராதபுரத்தில் காணப்படும் சில அழிபாடுகள் பொருத்தமான முறையில் இனம் காணப்படவில்லை என்பது உண்மையே. ஆனால் அரசர்களாயினும் சாதாரண மக்களாயினும் மரியாதையாக அஞ்சலி செலுத்திச் செல்ல வேண்டிய இடம் வாழையடி வாழையாக நன்கு தெரிந்து இருந்தது. தலைமுறை தலைமுறையாக இந்த ஆணை வாய்மொழியாக தொடர்ந்து நடைமுறையில் இருந்து வந்ததினால் தவறு ஏதும் ஏற்பட்டு இருப்பதற்கு சாத்தியமில்லை எனலாம்.

வரலாற்று ஆசிரியர்கள் பார்வையில்

19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தனது பகைவனிடமிருந்து தப்பி ஓடிகொண்டு இருந்த பிலிமத்தலாவ அனுராதபுரத்தில் இருக்கையில் காலாதி காலமாக அனுஷ்டிக்கப்பட்டு வந்த இந்த வழக்கத்தை தான் கடைப்பிடிக்க வேண்டுமென விடாப்பிடியாக வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.1840இல் வெளிவந்த "இலங்கையில் பதினொரு ஆண்டுக்ள்" என்ற நூலில் அதன் ஆசிரியரான போப்ஸ் என்பவர் பின்வருமாறு கூறுகின்றார். "ஒரு நாத்திகனின் பாழடைந்த கல்லறையை பல பௌத்த யாத்திரீகர்கள் ஒரு புனிதக் கட்டிடத்தின் அழிபாடு எனக் கருதுகின்றனர். எல்லாளன் இறந்து 20 நூற்றாண்டுகளாகியும் எல்லாளனைத் தோற்கடித்தவனது ஆணையை எந்த ஒரு சுதேசியும் எக்கட்டத்திலும் தட்டிக் கழித்து இருப்பான் என நான் நம்பவில்லை. 1818ல் பிலிமத்தலாவ -மிகப் பழைய கண்டிய குடும்பத்தின் தலைவன்- தான் ஈடுபட்டு இருந்த கிளர்ச்சி நசுக்கப்பட்டு தப்பி ஓடிக் கொண்டு இருந்த வேளையில் மிகக் களைப்புற்று கால் கைகள் அசைக்க முடியாது இருந்த போதிலும் தனது சிவிகையில் இருந்து கீழிறங்கினான். இடத்தினைச் சரியாகத் தெரியாததினால் இந்த பண்டைய நினைவுச் சின்னத்தை எப்போதோ கடந்தாகி விட்டது என உறுதி அளிக்கப்படும் வரை அவன் தொரர்ந்து நடந்தான்."

19ம் நூற்றாண்டு முழுவதிலும் அதற்கு எவ்வளவோ காலத்திற்கு முன்ன்ரும் இந்தப் பாழடைந்த கட்டிடம் 'எலாள சொகென' என அழைக்கப்பட்டது. பண்டைய பழக்க வழக்கத்திற்கு ஏற்ப அனுராதபுரத்திற்கு சென்ற யாத்திரீகர்கள் இதற்கு பயபக்தியாக வணக்கம் செலுத்தி வந்தனர். எமேசன் ரெனன்ற் எழுதிய "இலங்கை" என்ற நூல் 1859-1860ம் ஆண்டு காலப்பகுதியில் 5 பதிப்பகளில் வெளிவந்தன. இந்நூலின் முதற் தொகுதியில் 3ம் பாகத்திலுள்ள 5ம் அத்தியாயம் சிங்கள வீரதர்மம் -எல்லாளனும் துட்டகெமுனுவும்- என்ற தலைப்பில் பின்வருமாறு கூறுகிறது. "இரு தலைவர்களுக்குமிடையே ஏற்பட்ட போரே இலங்கை வீரதர்மத்தைப் பற்றிய ஒரே ஒரு எடுத்துக்காட்டு. எல்லாளனுடைய வீரத்தை உண்மையில் மெச்சிய அவ்னது பகைவன் எல்லாளன் மாண்ட அதே இடத்தில் ஒரு நினைவுச் சின்னத்தைக் கட்டி எழுப்பினான். அதன் அழிபாடுகள் இன்றும் கூடக் காணப்படுகின்றன. இன்றும் கூட சிங்கள மக்கள் பயபக்தியோடு அதனை வழிபடுகின்றனர்"

தொல்லியலாளர் நோக்கில்

எஸ். எம். பறோஸ் என்பவர் இலங்கையிலே ஆகஸ்ட் 1884ம் ஆண்டு தொடக்கம் 1886ம் ஆண்டு பெப்ரவரி மாதம் முடியும் வரை தொல்பொருளியல் திணைக்கள நில அளவையாளராக கடமையாற்றினார். 1885ல் அவர் "இலங்கையின் புதையுண்ட நகரங்கள்" என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டார். அது நான்கு தடவை பதிப்பிக்கப்பட்டது. இந்நூலிலே பறோஸ் பின்வருமாரு எழுதுகிறார். "தெவிட்டும் அளவிற்கு போரிலே வெற்றி வாகை சூடிய துட்டகைமுனு தான் சிந்திய இரத்தத்தை நினைத்து மனம் வருந்தி எஞ்சிய வாழ்நாளில் பிராயச்சித்தம் தேடுவதென தீர்மானித்தான். தனது பகைவனான எல்லாளனுக்கு ஏற்ற ஓர் நினைவுச் சின்னத்தினை கட்டுவித்து இக் கல்லறையை கடக்கும் போது இசை வாத்தியங்கள் ஒலிக்கப்படாது என்றும் மன்னர்கள் தமது பல்லக்கிலிருந்து இறங்கி நடக்க வேண்டும் என்றும் ஆணையிடுவதே அவனது முதல் அக்கறையாய் இருந்தது." இது அவ்விடத்தில் மண் கூம்பு வடிவத்தில் அமைக்கப்பட்ட்து. இவ்வாறு தாராள சிந்தையுடன் அமைக்கப்பட்ட இந்நினைவுச் சின்னம் தொடர்ந்தும் இருந்தது என்பதற்கு 1816ல் பிலிமத்தலாவை இவ் இடத்தைக் கடந்து வெகுதூரம் வரை நடந்து சென்றமை சான்று பகரும். பறோஸின் நூலில் தரப்பட்டுள்ள அனுராதபுரத்தின் வரைபடத்தில் இவ் இடம் "எல்லாளனின் கல்லறை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1896ல் பறோஸுக்குப் பின்வந்த H. C. P. பெல் என்பவர் மிக நிதானமான ஆராய்ச்சியாளர் என்பது நன்கு தெரிந்ததே. "மரங்கள் வளர்ந்திருந்த மண்மேட்டை- பண்டைக் காலத்தில் அனுராதபுரத்தில் இருந்த பழைய தாது கோபுரத்தை ஆனால் இப்பொழுது மக்களிடையே எல்லாளைன் கல்லறை என வழங்கப்படுகின்ற இடத்தை" அகழத் தொடங்கினார். அகழ்வாராய்ச்சிக் கிடங்குகளை வெட்ட ஆரம்பிக்கும் போதே இது கணித்ததிஸ்ஸவினால் (கி. பி. 165-193) கட்டப்பட்ட தாதுகோபுரமாக இருக்கலாம் என ஓர் அடிக்குறிப்பில் பெல் சரியாக ஊகித்தார்.

தொடர்ந்து அடுத்துவரும் இரு பந்திகளிலும் பெல் பின்வரும் முடிவுக்கு வருகிறார். "எல்லாளனின் உடல் தகனம் செய்யப்பட்டு அவனது அஸ்தி அவன் மாண்ட இடமாகிய நகரத்தின் தெற்கு வாசலுக்கு அண்மையில் ஓர் கல்லறையில் இடப்பட்டது; ஆகவே இவ் இடம் தக்கிண விகாரைக்கு அண்மையில் இருத்தல் வேண்டும். இவ்விகாரை அரை நூற்றாண்டுக்குப் பின்னர் வட்டகாமினி அபயாவின் ஆட்சியில் உந்திய என்ற போர்வீரனால் கட்டப்பட்டது."

பெல் முன்வைத்த காரணங்கள் மகாவம்சத்திலும் தீபவம்சத்திலும் இருந்து எடுத்த மேற்கோள்களில் தங்கியிருதன. நகரத்தின் தெற்கு வாசலுக்கு அண்மையில் கட்டப்பட்ட எல்லாளனின் கல்லறை தக்கிண விகாரைக்கு அண்மையில் இருக்கின்றது என அவர் திருப்திப்பட்டார். அப்பொழுது அங்குதான் அகழ்வாராய்ச்சி நடத்துவதாகவும் குறிப்பிட்டார்.

1895ம் ஆண்டு தொடக்கம் 1900ம் ஆண்டு வரை எல்லாளனின் கல்லறையில் அகழ்வாராய்ச்சி தொடர்ந்து நடைபெற்றது. ஆனால் ஒதுக்கப்பட்ட நிதி போதாமையக இருந்தமையால் 1900ம் ஆண்டில் இவ் வேலைகள் நிறுத்தப்பட்டன. பெல் எழுதிய 5 ஆண்டு அறிக்கைகளிலும் இவ்விடத்தை எல்லாளனின் கல்லறை என்றே குறிப்பிட்டார். 1900ம் ஆண்டு வரை இதுவே நிலைமை.

எட்டு ஆண்டுகளின் பின்னர் இது தொடர்பாக H. W. கேவ் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்; "துட்டகைமுனுவின் தனிச்சிறப்பு வாய்ந்த தருமச் செயல் 2000 ஆண்டுகளாக மெச்சப்பட்டு வந்திருக்கிறது. எல்லாளன் மாண்ட இடத்திலேயே தகனம் செய்யும்படி ஆணையிட்டு அவ்விடத்திலேயே கல்லறை ஒன்றைக் கட்டுவித்தான். இக் கல்லறைக்கு அஞ்சலி செலுத்தப்பட வேண்டும் என்றும் அதைக் கடக்கும் போது ஒருவருமே அதை வழிபடாது செல்லக்கூடாது என்றும் ஆணையிட்டான். இற்றைவரை கூட இவ் ஆணைகள் ஓரளவுக்காயினும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. கல்லறை பெரும் மண்மேடையாக இப்பொழுதும் அமைந்துள்ளது."

இங்கு நன்கு கவனிக்கப்பட வேண்டியது யாதெனில் அஞ்சலி செலுத்தப்பட வேண்டும் என துட்டகைமுனு கி. மு. 2ம் நூற்றாண்டில் ஆணையிட்டதே. கி. பி. 6ம் நூற்றாண்டில் இவ் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தமைக்கு மகாவம்சத்தை இயற்றிய புகழ் வாய்ந்த நூலாசிரியர் மகாநாம சான்று பகருகின்றார். வம்சத்தப்பக்காசினியின் நூலாசிரியர் அந்நூல் தோன்றிய காலத்திலும் இப் பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்ததை உறுதிப்படுத்துகிறார். மலலசேகரவின் கருத்துப்படி இந்நூல் 8ம் அல்லது 9ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்க வேண்டும். கைகர் கருத்துப்படி இந் நூல் 11ம் நூற்றாண்டிற்கும் 13ம் நூற்றாண்டிற்கும் இடையில் தோன்றியிருக்கலாம். சத்தர்மாலங்காரய என்ற நூலை இயற்றிய ஆசிரியர் இவ் வழக்கம் 14ம் நூற்றாண்டில் அனுஷ்டிக்கப்பட்டு வந்தமைக்கு சான்று பகர்கின்றார். 19ம் நூற்றாண்டிலும் 20ம் நூற்றாண்டிலும் இவ் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தமைக்கு முறையே போப்சும் , கேவும் சான்று பகருகின்றனர். ஆனால் இன்றோ இந்த உயர்ந்த மரபு மறைந்து விட்டது. 1948ம் ஆண்டு வரை தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஒரு வழக்கம் - வீர தருமத்தில் ஒரு நாட்டையும் ஒரு மக்களையும் அதி உன்னத நிலைக்கு உயர்த்திய ஒரு வழக்கம் - ஐய்யகோ! மழுங்கடிக்கப்பட்டு விட்டதே. உண்மையில் எல்லாளனின் கல்லறை அல்ல என்று நாம் வாதத்திற்காக ஒப்புக் கொண்டாலும் இக் கல்லறையை கண்டுபிடிப்பதற்கு நேரிய முயற்சிகள் ஏதாவது மேற்கொள்ளப் பட்டுள்ளனவா? 1948ம் ஆண்டிலே தொல்பொருளியல் ஆணையாளராக கடமையாற்றிய சேனரத் பரண வித்தான தனது ஆண்டறிக்கையில் வெளியிட்ட கோரமான ஒரு குறிப்பே ஒரே ஒரு தடயமாக அமைகின்றது. அக் குறிப்பு வருமாறு; "எல்லாளனின் அஸ்திக்கு மேலே அனுராதபுரத்தின் வைத்திய அதிகாரி படுத்து உறங்குகின்றார் என்பது சாத்தியமற்ற ஒன்றல்ல." இவ்வாறு தானா நாம் துட்டகைமுனுவின் வீரதர்மத்தை மதித்து கௌரவிப்பது?

பரணவித்தானாவின் விதண்டாவாதம்

மக்களிடையே நிலவிய நம்பிக்கையை 1948ம் ஆண்டு வரை ஒருவரும் எதிர்க்க முன்வரவில்லை. அவ் ஆண்டிலே தான் பரணவித்தான இந்த மண்மேடு துட்டகைமுனுவின் கல்லறையாக இருக்கலாம் என கூற முன்வந்தார். மிக விரைவில் பரணவித்தானவின் உத்தரவுக்கு அமைய அவ்விடத்தில் ஒரு விளம்பரப் பலகை இம் "மண் மேடு துட்டகைமுனுவின் கல்லறை" என அறிவித்தது. இப்பொழுதோ ஒருவரும் தாம் செல்லும் வாகனத்தில் இருந்து பயபக்தியோடு நடந்து செல்வதில்லை.

பரணவித்தான ஒரு மாபெரும் தொல்பொருளியலாளர் என இலங்கையில் கௌரவிக்கப்படுகிறார். ஆனால் ஆனைக்கும் அடி சறுக்கும் அல்லவா? எம் எல்லோரையும் போன்று அவரும் அவரும் தவறு விடக்கூடியவர்தான். எத்தனையோ விடயங்களில் அவர் அவர் தவறு விட்டிருக்கிறார் என்பதை இப்பொழுது நிரூபிக்கக் கூடியதாக இருக்கின்றது. உதாரணங்கள் பல பெருகிக்க் கொண்டே வருகின்றன. சில வேளைகளில் அவர் படுமோசமாகத் தவறு விட்டிருக்கிறார். கல்வெட்டுக்களிலே வரிகளுக்கிடையே எழுதப்பட்டவை எனக் கூறப்படுபவற்றிற்கு அவர் கொடுத்துள்ள விளக்கங்கள் புனைவுகள் அல்லாவிட்டாலும் வெறும் மருட்சிகளே. இத்தகைய கல்வெட்டுக்கள் பற்றி அவர் ந்ழுதிய நூல்கள் வெறும் கட்டுக் கதைகளே.

1946ம் ஆண்டில் பரணவித்தானா எல்லாளனின் கல்லறையை அகழ்ந்து ஆராயத் தொடங்கினார். 1949ம் ஆண்டு வரை இவ்வேலையை அவர் தொடர்ந்தார்.அவரது அவதானிப்புகளும் குறிப்புகளும் தொல்பொருளியல் திணைக்களம் 46, 47, 48, 49ம் ஆண்டுகளில் வெளியிட்ட ஆண்டறிக்கையில் உள்ளன. பரணவித்தானவின் இந்நான்கு அறிக்கைகளும் ஒரு கட்டுரையாக இணைக்கப்பட்டன. அதன் தலைப்பு அனுராதபுரத்தில் உள்ள தக்கிணதூபி; துட்டகைமுனுவின் கல்லறை. இலங்கையின் கடந்த காலத் தோற்றங்கள் என்ற தலைப்பில் 1972ல் வெளிவந்த பரணவித்தானவின் நூலில் இக் கட்டுரை இடம் பெறுகின்றது.

பெல் விட்ட இடத்திலிருந்து 1946-ம் ஆண்டு ஆண்டறிக்கையில் பரணவித்தானா கதையைத் தொடங்குகிறார். பரணவித்தானா பின்வருமாறு எழுதுகின்றார். "இம் மண்மேடு பொதுவாக அடையாளம் காணப்படுவதை சந்தேகிப்பதற்கும் அதை தக்கிண விகாரையின் தூபியாக கொள்வதற்கும் திருவாளர் பெல் நம்பத்தகுந்த காரணங்களை முன்வைத்தார்". பெல்லின் 5 அறிக்கைகளும் எமக்கு கிடைத்துள்ளன. இந்த அறிக்கைகளில் இரண்டே இரண்டு தடவைகளில்தான் பெல் தக்கிண விகாரையைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். பெல்லின் முதல் அறிக்கையில் இடம்பெற்ற ஒரே ஒரு அடிக் குறிப்பில் நாம் ஏற்கனவே கண்டுள்ளது போன்று அங்கு எல்லாளனின் கல்லறை தீபவம்சத்தில் குறிப்பிடப்பட்ட தூபியாக இருக்கலாம் என அவர் ஊகம் தெரிவித்தார். அதே அடிக்குறிப்பில் எல்லாளனின் அஸ்தி இடப்பட்ட கல்லறை அமைந்த இடம் தக்கின விகாரைக்கு அண்மையில் இருக்க வேண்டும் என்றும் பெல் குறிப்பிட்டார். இங்குதான் மகாவம்சத்திலும் தீபவம்சத்திலும் இருந்தும் நம்பத் தகுந்த காரணங்களை மேற்கோள் காட்டுகின்றார். இரண்டாவது தடவையாக தக்கின விகாரையைப் பற்றிய குறிப்பு பெல்லின் 1898-ம் ஆண்டறிக்கையில் இடம் பெறுகின்றது. அங்கு வேறு பெரிய விகாரைகளுடன் தனது "ஊக" தக்கின விகாரையை குறிப்பிடுகின்றார். இதற்கு மேல் வேறு ஒன்றும் குறிப்பிடவில்லை. எந்த இடத்திலாவது மண்மேடை பற்றிய பொது நம்பிக்கையை பெல் சந்தேகிக்கவில்லை. பெல்லின் அறிக்கைகளை வாசிக்க விழையும் எவருக்கும் இது தெட்டத் தெளிவு.

விடயம் இதோடு முடியவில்லை. பரணவித்தானா மேலும் கூறுகின்றார்- "ஞாபகம் இருக்கலாம். பெல் அரை நூற்றாண்டுக்கு முன்னர் இந்த மண்மேடு தக்கின விகாரையின் அழிபாடுகளை மறைக்கின்றதேயொழிய பொதுவாக நம்பப்படுவது போன்று எல்லாளனின் கல்லறையை அல்ல என்ற கருத்தை வெளியிட்டார். தனது கருத்தை அரண் செய்ய பெல் தனது (1898-ம் ஆண்டு) அறிக்கையில் முன்வைத்த காரணங்கள் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை". முன்வைக்கப்படாத காரணங்களை எவ்வாறு ஏற்றுக் கொள்வது? இது பரணவித்தானாவின் கல்வெட்டு இடைவரி வாசிப்புப் போன்று மர்மமாக அல்லவா இருக்கிறது.

பொதுவாக நம்பப்படுவது போன்று இம் மண்மேடு எல்லாளனின் கல்லறையல்ல என பெல் ஒருபோதும் கூறவில்லை. அவரது அறிக்கைகளை துருவித் துருவி ஆராய்ந்தாலும் இக்கருத்தை நீங்கள் கண்டுபிடிக்கவே மாட்டீர்கள். பெல் எழுதிய 5 அறிக்கைகளிலும் இவ் இடத்தைப் பற்றி அவர் இரண்டே இரண்டு கருத்தைத்தான் வெளியிட்டார் என்பதை நான் திரும்பத் திரும்ப அழுத்த வேண்டியுள்ளது. முதலாவது கருத்து; "இம் மண்மேடு தக்கிண தூபியாய் இருக்கலாம்". இரண்டாவதாக எல்லாளனின் கல்லறை அதற்கு அண்மையில் அமைந்திருக்கும் என்பதாகும். தனக்கு முன் பதவியிலிருந்த பெல்லை வானளாவப் புகழ்வதில் பரணவித்தானா பரவசமடைகிறார். இந்தப் பாராட்டு நியாயம் என்பதில் ஐயமில்லை. ஆனால் வேடிக்கை என்னவெனில் பெல் கூறாதவற்றிற்கு தான் பாராட்டைப் பெறுகின்றார்.

மறுபுறம் இன்னொரு முன்னாள் தொல்பொருளியல் ஆணையாளராகிய A. M. கொக்காட் என்பவரின் குறிப்புகளை பரணவித்தானா அவ்வளவு சாதகமாக நோக்கவுமில்லை, பாராடவுமில்லை. எல்லாளனின் கல்லறை ஓர் தூபியாக கொள்ளப்பட்டலும் அக் கருத்துக்கும் எல்லளனை நினைவுகூர கட்டப்பட்ட நினைவுச் சின்னமே இது என்ற பொது நம்பிக்கைக்கும் முரண்பாடு இருப்பதாக கருத வேண்டியதில்லை என கொக்காட் சுட்டிக்காட்டினார். இடக்கிடப்பியல் சார்ந்த தகவல்களை கொக்காட் படித்தறியவில்லை எனக் கூறி பரணவித்தானா அதை மறுத்துரைக்க விழைந்தார்.

தொல்பொருளியலில் பரணவித்தானாவின் ஆசானாக இருந்த கொக்காட்டை விடயம் அறியாதவர் என பழி கூறுவது மிக அவலமே. பரணவித்தானா சிறந்த அறிஞன் என்பதில் ஐயமில்லை. ஆராய்ச்சித் துறையில் முயற்சி மிக்கவராய் அவர் விளங்கினார். ஆனால் தன்னைப் பற்றியும் தனது நூதனமான ஊகங்கள் பற்றியும் அவர் அதீத தன்மதிப்பு உடையவராய் இருந்ததினால் கண்டனத்தையோ திருத்தத்தையோ அவர் ஏற்கத் தயாராக இல்லை. பெல்லையும் கொக்காட்டையும் தவிர்ந்த எமது முன்னாள் தொல்பொருளியல் ஆணையாளரில் இருவர் பரணவித்தானாவின் கருத்துக்கு மாறுபட்டனர். ஆனால் அவர்களுக்கு பதிலளிக்க பரணவித்தானா முயலவேயில்லை. ஏளனத்தோடு அவர்களை முற்றாகவே புறக்கணித்தார். இதனால் உண்மையான ஆய்வுத் துறைக்கு பங்கம் ஏற்படுகிறது.

சில்வாவின் அசைக்க முடியாத வாதங்கள்

தக்கின தூபியை பற்றி பரணவித்தானாவின் கருத்துக்களை அப்பொழுது உதவித் தொல்பொருளிய்ல் ஆணையாளராக இருந்த கலாநிதி R. S. D. சில்வா விமர்சிக்கத் துணிந்தவருள் ஒருவர். சில்வாவின் நீண்ட நுணுக்கமான ஆராய்ச்சி தன்மைமிக்க கட்டுரை 1957, பங்குனி 24-ம் திகதி "சிலோன் ஒப்சேவர்" (Ceylon Observer) ஞாயிறு பதிப்பில் வெளிவந்தது. ஒரு முழுப் பக்கத்தில் அமைந்த கட்டுரை "தக்கின தூபி - துட்டகைமுனுவின் கல்லறை அல்ல" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்தது. பரணவித்தானாவின் அறிக்கைகளில் சம்பந்தப்பட்ட பகுதிகளை வரிக்கு வரி டீ. சில்வா ஆராய்ந்து பரணவித்தானாவின் முடிவகளை ஆணித்தரமாக மறுத்துரைத்தார். டி. சில்வா அவர்கள் தகைமை வாய்ந்த தொல்பொருளியலாளர். தொல்பொருளியலின் இரசாயன அம்சங்களில் அவர் சிறப்புப் பயிற்சி பெற்றிருந்தவர். எனவே அவ்விடத்தில் கண்டெடுக்கப்பட்ட களிமண் கட்டிகளையே அவர் பரிசோதனைக்கு உட்படுத்தினார். சத்தர்மாலங்காரவிலும் வேறு நூல்களிலும் காணப்பட்ட மேற்கோள்களையும் ஆராய்ந்து பரணவித்தானா முன்வைத்த சான்றுகள் தக்கின தூபி துட்டகைமுனுவின் கல்லறை என்ற பரணவித்தானாவின் முடிவுக்கு அரண் செய்வதாக இல்லை என திட்டவட்டமாக கூறினார்.

டி. சில்வா ஒரு முக்கிய அம்சத்தினை வலியுறுத்தினார். எந்த ஒரு நூலிலாவது துட்டகைமுனுவின் சடலம் தகனம் செய்யப்பட்ட இடத்தில் தூபி ஒன்று கட்டப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்றும், துட்டகைமுனு இதற்கு முன்னர் வழக்கத்திற்கு மாறான ஒரு விருப்பத்தை தெரிவித்திருந்த போதிலும் தனக்குத் தூபி ஒன்றை கட்டி எழுப்புமாறு விரும்பவில்லை என்றும் டீ. சில்வா அழுத்தினார். துட்டகைமுனுவின் இறுதி ஆசை "மகாதூபி தெரியக் கூடிய ஒரு இடத்தில் எனது சடலத்தை தகனம் செய்வீராக" என்பதாகும்.

பௌத்த சங்கத்தினர் அரசனின் ஆணைகளை கண்டிப்பாக நிறைவேற்றியிருப்பார்கள். இறந்த மன்னனின் சடலம் மகாவிகாரையில் மாலக்கையில் தகனம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியினை நினைவுகூரும் பொருட்டு அவ் இடத்திற்கு "ராஜ மாளக" என்னும் மறுபெயர் சூட்டப்பட்டது.

மாலக்கை என்பது புனித சமயச் சடங்குகள் நிகழ்த்தப்படும் ஒரு தனி வேறு இடம் என கைகர் வரயறை செய்கின்றார். மகாவிகாரையில் 32 மாலகாக்கள் இருந்தன. துன்மாலக்க என்ற பாளிப் பதம் (தனிச் சொல்லாக) ஒரே ஒரு தடவைதான் மகாவம்சத்தில் காணப்படுகிறது. அதுவும் துட்டகைமுனுவின் இறுதி விருப்பம் தொடர்பாக.

துட்டகைமுனுவின் பிரேதம் தகனம் செய்யப்பட்ட கம்மாலக்க மகா விகாரையின் வளவுக்குள் தான் அமைந்திருத்தல் வேண்டும். ஏனெனில் பௌத்த சங்கத்துடன் தான் இனங்காணப்படல் வேண்டும் என துட்டகைமுனு மிகவும் விரும்பியதால். ஆனால் அரசனின் சடலம் விகாரைக்கு வெளியே உள்ள மாலக்காவில் தகனம் செய்யப்பட்டதாக மகாவம்சம் கூறுகின்றது. "நிசிம மாலக்கா" என்ற பாளிப் பதத்தை கைகர் இவ்வாறு தான் மொழிபெயர்த்தார்.

அபய ஆரியசிங்க என்பவர் அண்மையில் பத்திரிகை ஒன்றில் வெளியிட்ட கட்டுரையில் கைகருடைய கருத்திலிருந்து வேறுபடுகின்றார். இப் பதத்திற்கு பொருத்தமான மாற்று மொழி பெயர்ப்பை தந்துள்ளார். அவருடைய மொழிபெயர்ப்பின்படி "நிசிம மாலக்கா" என்பது வழக்கமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சடங்குகளுக்கு பொருத்தமில்லாத ஒரு இடமென்பதேயாகும். அரசனாக இருந்த போதிலும் இவ்விடத்திலே ஒரு சடலம் தகனம் செய்யப்பட்டு இருந்தமையால் பிக்குகள் இவ்விடத்தைக் கைவிட்டு தமது "சங்க கம்மாவை" வேறு இடத்தில் நடாத்த விரும்பி இருத்தல் வேண்டும். தகனம் நடைபெற்ற ஓர் இடம் "கம்மாலக்க" என்று அழைக்கப்படுவதற்கு தகுதியற்று விடுவது இயல்பே.

தகனம் முடிவுற்ற பின்னர் இவ்விடத்திலே "மகுத்தமுத்தசால", "ரவிவித்தசால" என இரண்டு சாலைகள் கட்டப்பட்டதாக மகாவம்சம் குறிப்பிடுகின்றது. த்மது துயரத்தை வெளிப்படுத்துவதற்கு அங்கு குழுமியிருந்த நாட்டிய மகளிரதும், விசுவாசமுள்ள வேறு பிரஜைகளினதும் நினைவாகவே இவை கட்டப்பட்டன. தகனம் நடைபெற்ற இடத்தில் ஒரு கட்டிடம் அமைக்கப்பட்டதாகவும் ஆரியசிங்க கூறுகின்றார். இதற்கு ஆதாரமாக மகாபோதி வம்ச கிரந்திப் பதவிவர்ணய எனும் நூலிலிருந்து அவர் மேற்கோள் காட்டுகிறார். துட்டகெமுனுவின் தகனம் பற்றி இதுவே வரலாற்று அல்லது சமய மூலகங்களிலிருந்து எமக்கு கிடைக்கப் பெறும் மிகப் பிந்திய மேற்கோள் போல தெரிகிறது.

துட்டகெமுனுவின் சடலம் தகனம் செய்யப்பட்ட இடத்தில் வேறு ஏதாவது கட்டிடமோ, நினைவுச் சின்னமோ கட்டி எழுப்பப்பட்டதாக குறிப்புகள் ஏதும் காணக்கூடியதாக இல்லை. அவ்விடத்தில் "தூபி" அல்லது "சேற்றிய" கட்டப்பட்டதாக எங்குமே நாம் வாசிக்க முடியவில்லை. தகனம் நடைபெற்ற இடத்திற்கு காலாகாலமாக மக்கள் அஞ்சலி செலுத்தினர் என்பது எந்த ஒரு நூலிலும் குறிக்கப்படவில்லை. துட்டகெமுனுவின் அஸ்திக்கு மேலாக தக்கின தூபி கட்டி எழுப்பப் பட்டதாக ஓரிடத்திலேயும் குறிப்பிடப்படவில்லை. மகா புளில மழுவவில் (இது பற்றிப் பின்னர் பார்ப்போம்) தக்கின தூபி கட்டப்பட்டதென சத்தர்மாலங்கார ஆசிரியர் கூறும்போது அங்குதான் துட்டகெமுனுவின் சடலம் தகனம் செய்யப்பட்டு, அவரது அஸ்திகள் இடப்பட்டன எனக் குறிப்பிட்டிருக்கலாமே! இலங்கையின் தேசிய வரலாற்றிலும் சமய வரலாற்றிலும் துட்டகெமுனு வகிக்கும் தலைசிறந்த இடம் கருதி இது உண்மையாக இருந்திருப்பின் விடயமறிந்த எந்த ஒரு நூலாசிரியரும் இதைக் குறிப்பிட்டிருப்பார்களே!

மறுபுறம் எல்லாளன் மாண்டதும் அவனைத் தோற்கடித்தவன் மனச்சாட்சி உறுத்த எல்லாளனை ஏறக்குறைய தெய்வ நிலைக்கு உயர்த்தினான் என மகாவம்சம் சான்று பகர்கின்றது. வழிபாடு செலுத்தப்பட வேண்டும் என ஆணையிட்டதோடு ஒரு "சேத்தியாவையும்" அங்கு கட்டுவித்தான். சேத்திய என்பது வெறும் நினைவுச் சின்னமல்ல. அது ஒரு தூபி. மகாவம்சதீக எனும் நூல் எலாரபட்டிமாகாரவைப் பற்றி குறிப்பிடுகிறது. அதாவது எல்லாளனின் விக்கிரகம் அமைந்த கோவில் வளவு. வேறு எந்தவொரு இலங்கை மன்னனின் விக்கிரகம் வழிபடப்பட்டதைப் பற்றி வேறு எங்கும் நாம் காணவில்லை. 2000ம் ஆண்டுகளுக்கு மேலாக ஒரு கல்லறைக்கு இத்தகைய அசாதாரண அஞ்சலி செலுத்தப்படுவது பற்றி நாம் வேறு எங்கும் கேள்விப்படவில்லை. ஒரு அரசனின் ஆணை எமது காலத்தைச் சேர்ந்த ஒரு தொல்பொருளியல் ஆணையாளரால் மீறப்படும் வரை இவ் அஞ்சலி செலுத்தப்பட்டு வந்தமை கவனத்தில் கொள்ளத்தக்கது.

சிங்கள மக்களின் சீற்றம்

எனவே 1947ம் ஆண்டில் எல்லாளனின் கல்லறையை பரணவித்தானா அகழ்வாராயத் தொடங்கியதும் பொதுமக்கள் ஆவேசம் கொண்டமை வியப்பன்று. இது சம்பந்தமாக அவரே கூறுகுன்றார். "மேற்குப் பக்கத்திலே பொக்கிஷங்களைத் தேடி கிண்டியவர்களால் உருவாக்கப்பட்டிருந்த பாதையை நாம் துப்புரவு செய்யத் தொடங்குகிறோம். இவ்வேலையில் நாம் அதிகம் முன்னேற முன்னர் அனுராதபுர மக்களின் ஒரு பகுதியினர் திணைக்களம் புனித இடங்களை மாசுபடுத்துகின்றது என கிளர்ச்சி செய்யத் தொடங்கி ஆட்சேபனைக் கூட்டங்களை நடாத்தி, அமைச்சர் தலையிட்டு இதனை நிறுத்த வேண்டுமென அவசர தந்திகளை அனுப்பி சாத்தியமான எல்லா வழிகளாலும் எமக்கு எதிராக பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்க தம்மால் ஆனவரை முயன்றனர்." கொழும்பில் இருந்து தனது துணைக்கு வருமாறு அமைச்சரை அழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு பரணவித்தானா உள்ளானார். ஒரு துண்டுப் பிரசுரத்தை தயாரித்து அதில் 5000 பிரதிகள் அச்சிட்டு பொசன் காலத்தில் யாத்திரீகர்களிடையே வினியோகித்த பின்னர்தான் ஆவேசமுற்ற மக்கள் இறுதியில் சாந்தமடைந்தனர். 1946ம் ஆண்டு வரை அவர் தனது அராய்ச்சி வேலையைத் தொடர்ந்து நடாத்தினார். இவ்வகழ்வாராய்ச்சி பற்றிய அறிக்கைகளை நாம் முன்னர் குறிப்பிட்டது போன்று தொல்பொருளியல் திணைக்கள நிர்வாக அறிக்கையில் காணலாம். இதன் பின்னர் பேணிப் பாதுகாக்கும் வேலைகள் மேற்கொள்ளப்பட்டன.

உடைந்த கற்துண்டுகளாக காணப்பட்ட மிக நீண்ட பிராமி கல்வெட்டு ஒன்றினை - இது இலங்கையின் மிக நீண்ட கல்வெட்டு - கண்டு பிடித்துள்ளதாக பரணவித்தானா தனது அறிக்கைகளில் குறிப்பிட்டார். இக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு 33 ஆண்டுகள் சென்றுவிட்டன. ஆனால் இக் கல்வெட்டுக்கு பரணவித்தானா வழங்கிய மொழிபெயர்ப்பு இன்னும் வெளிவரவில்லை. 1967ம் ஆண்டிலேயே இம் மொழிபெயர்ப்பு தொல்பொருளியல் திணைக்களத்துக்குக் கையளிக்கப்பட்டது.

இதற்கிடையில் தற்போது தொல்பொருளியல் ஆணையாளராக கடமையாற்றும் சத்தமங்கல கருணாரத்ன இதே கல்வெட்டை மொழிபெயர்த்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கலாநிதிப்பட்டத்திற்காக சமர்ப்பித்த தனது ஆராய்ச்சியில் சேர்த்துள்ளார். "இலங்கையின் பிராமிக் கல்வெட்டுக்கள்" என்ற இந்த ஆராய்ச்சிக் கட்டுரையை எம்மில் சிலருக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நூலகத்தில் படிக்கும் பாக்கியம் கிடைத்தது. இவ் ஆராய்ச்சிக் கட்டுரை பல்கலைக்க்ழகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருபத்தொரு ஆண்டுகள் சென்று விட்டதாயினும் அது இன்னும் பிரசுரிக்கத்தக்கது.

இக்கல்வெட்டுக்கு கருணாரத்தினா வழங்கிய மொழிபெயர்ப்பு பண்டைய இலங்கை என்ற சஞ்சிகையில் (இதழ் ஒன்று தை 1971) பிரசுரிக்கப்பட்டது. இதிலிருந்து இக்கல்வெட்டு தக்கின விகாரையின் திசமகாசேத்தியவின் பராமரிப்புக்காக வழங்கப்பட்ட பல்வேறு நன்கொடைகள் தொடர்பானது என அறிகிறோம். இதனைப் பெருமன்னனாகிய பித என்பவன் அமைத்தான். தக்கின விகாரையின் பெயர் பன்னிரண்டுக்கு மேற்பட்ட இடங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது என பரணவித்தானா குறிப்பிட்டிருந்தார். இத்தால் எல்லாளனின் கல்லறை வட்ட காமினி அபயாவின் (கி. மு. 80-77ம் ஆண்டுக் கால கல்வெட்டில் குறிப்பிடும் பித்தராஜா இவரே) ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட தக்கின விகாரையின் தூபியான திசமகாசேத்தியாவின் ஒரு பகுதி என்பது ஊர்ஜிதம் செய்யப்படுகின்றது.

வட்ட காமினி அபயாவின் ஏழு வீரர்களுள் ஒருவன் தக்கின விகாரை என அழைக்கப்படும் விகாரையை நகரத்தின் தென்புறத்தில் கட்டினான் என மகாவம்சம் குறிப்பிடுகின்றது. இது தக்கின விகாரை என அழைக்கப்படும் என மகாவம்ச ஆசிரியரே குறிப்பிடுவது நோக்கற்பாலது. இதைப் போன்றே எல்லாளனின் கல்லறையும் அண்மைக்காலத்தில் "எல்லாள சொகன" என அழைக்கப்படுவது நோக்கற்பாலது.

விகாரைகளையும், தூபிகளையும் நிறுவுதல், கட்டுதல், மீளமைத்தல், பழுது பார்த்தல் ஆகியவை குறித்து எப்பொழுதும் மயக்கங்கள் நிலவி வந்துள்ளன. சில வேளைகளில் கோவிலைத் திருத்துபவர் அதனைக் கட்டியவர் அல்லது நிறுவியவர் எனக் கூறப்படுகிறார். தக்கின விகாரையை உத்தி என்பவனே கட்டினான் என்பது பொதுப்படையாக ஏற்கப்படும் ஒன்று. மீளமைத்தல், விரிவாக்கம் செய்தல், பழுது பார்த்தல் ஆகியவை கட்டியவரிலிருந்து புறம்பானவையே.

தக்கினராமையில் ஒரு விகாரையையும், ஒரு தூபியையும் கனிட்ட திஸ்ஸ (கி. பி. 167-186) என்பவன் கட்டினான் என்று தீபவம்சம் கூறுகின்றது. மகாவம்சம் இதற்குத் தரும் விளக்கம் யாதெனில் இம்மன்னன் தக்கின விகாரையின் தூபிக்கு ஒரு மேற்பகுதியை அமைத்தான் என்றும், ஒரு உணவறையை அமைத்து மகாமேகவனவின் எல்லையை அகற்றியதோடு மகாவிகாரையின் மதிற் சுவரையும் நீக்கித் தக்கின விகாரைக்குச் செல்வதற்கான ஒரு வீதியையும் அமைத்தான் என்பதே. கல்வெட்டில் வர்ணிக்கப்பட்டுள்ள திஸ்ஸ மகா சேத்திய கனிட்ட திஸ்ஸவினால் பெருப்பிக்கப்பட்ட தூபியே. நகரத்தின் தெற்கிலே அமைந்திருந்த தக்கிண தூபி அல்லது எல்லாளன் கல்லறைக்கு திஸ்ஸ மகா சேத்திய எனும் இன்னொரு பெயரும் அப்போது வழக்கில் இருந்தது. தக்கிண தூபியின் தெற்கில் உள்ள ஓர் இடத்தில் பெல்லினால் கண்டுபிடிக்கப்பட்ட போதிகார தக்கிண விகாரையின் ஒரு பகுதியாக இருந்தும் இருக்கலாம். எல்லாள பட்டி மாகரவும் நகரின் தெற்கில் அமைந்து இருந்தது. எல்லாளன் மாண்ட இடமும் அவனது சடலம் தகனம் செய்யப்பட்ட இடமும் அங்கு துட்டகைமுனுவால் கட்டப்பட்ட தாது கோபுரம் அல்லது "சேத்தியா"வும் (Cetiya) ஒருபுறம் குயவர் கிராமத்துக்கும் மறுபுறம் எல்லாளனின் விக்கிரக அகத்திற்கும் இடையில் அமைந்திருந்ததாக மகாவம்ச டீக வர்ணிக்கின்றது. எனவே அனுராதபுர நகரின் தெற்கில் பிக்குகளுக்கான ஒரு கட்டிடம் இருந்தது. இது மகாவிகாரைக்கு வெளியே அமைந்திருந்தது. தக்கின விகாரையின் வளவுக்குள் எல்லாளனின் அஸ்திக்கு மேல் கட்டி எழுப்பப்பட்ட தாதுகோபுரம் அல்லது "சைத்தியாவும்" (Cetiya) போதிகாரவும் எல்லாளன் விக்கிரக அறையும் அங்கு அமைந்திருந்தன.

துட்டகைமுனுவால் கட்டப்பட்டது எல்லாள தாதுகோபுரமே இவ்விடத்தில் அமைந்த முதல் கட்டிடமாகும். துட்டகைமுனுவின் பெறாமகனான வட்ட காமினியின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட விகாரை இரண்டாவது கட்டிடமாகும். காலப் போக்கில் இவை பெருப்பிக்கப்பட்டு புதுக் கட்டிடங்கள் சேர்க்கப்பட்டன. இலங்கையின் பிக்குகளைச் சார்ந்த வேறு கட்டிடத் தொகுதிகளிலும் இவ்வாறு நடைபெற்றது. தூபியைத் தவிர வேறு எல்லாம் அழிந்துவிட்டன என சேனகபண்டார நாயக்கா கருதுகின்றார். எனினும் எல்லாளனின் கல்லறையின் சிதைவுகள் உண்மையை இங்கு பகருகின்றன.

பரணவித்தானாவின் கையறு நிலை

தக்கின தூபி என அழைக்கப்படும் (6-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட மகாவம்சத்தில் குறிப்பிடப்படும் அடைமொழியையே இங்கு பாவிக்கின்றோம்) தூபியினை அகழ்ந்து ஆராய்கையில் கரியையும் சாம்பலையும் தாம் கண்டதாக பரணவித்தானா குறிப்பிடுகின்றார். மண்மேட்டின் உச்சியிலிருந்து 38 அடி அவர் அகழ்ந்ததும் ஒரு கல்நடைப் பாதையை அவர் கண்டாராம். கற்களை அகற்றி அந்த மட்டத்திலிருந்து மேலும் ஒரு 13 அடி அவர் அகழ்ந்தார். (மண்மேட்டின் உச்சியிலிருந்து 51 அடி). இந்த மட்டத்தில் கரி மட்டம் ஒன்று அமுக்கப்பட்டு இருந்தமைக்கான தாராளமான தடயங்களைக் கண்டார். அவருடைய அகழ்வு ஆராய்ச்சியின் போது தூபியை கொள்ளைக் காரர்கள் கொள்ளை அடித்துவிட்டதற்கான அறிகுறிகளை அவர் கண்டு பிடித்தார்.

1948-ம் ஆண்டிலே அவர் எழுதிய விரிவான அறிக்கையின் 67-ம் பந்தியில் ஒரு பிற்குறிப்பு எழுதினார். அதில் "குழியின் அடிக்கு எவ்வளவோ மேலே உள்ள மட்டங்களில் இடைக்கிடை கரித் துண்டங்களும் அஸ்தியும் காணப்பட்டன என்பது இங்கு குறிப்பிட வேண்டும். தாம் கண்ட கரியையும் சாம்பலையும் தூபிக் கொள்ளையர்கள் மேலே கிளப்பி எறிந்து விட்டார்கள் என்பதும் பின்னர் குழி மூடப்பட்ட போது இவை அங்குமிங்கும் சிதறின என்பதும் தெட்டத் தெளிவு" எனக் குறிப்பிட்டுள்ளார். "சாம்பல்" என்ற பதம் இங்கு இரு தடவை குறிப்பிடப்படுகிறது என்றும் அவரது அறிக்கைகளில் வேறு எவ்விடத்திலும் அது காட்டப்படவில்லை என்பதும் இங்கு நோக்கற்பாலது.

1957-ல் பரணவித்தானாவின் கருத்துக்களைப் பற்றிக் குறிப்பிட்ட டீ. சில்வா அவ்வேளையில் கரித் துண்டங்களையும் களி மண்ணையும் ஆராய்ந்து இருந்தார். ஆனால் அஸ்தியை அவர் காணவில்லை. இந்த அஸ்திக்கு என்ன நடந்து விட்ட்து?

டீ. சில்வாவுக்கும் பரணவித்தானாவுக்கும் நடைபெற்ற விவாதத்தில் வேறு பல பிரச்சனைகளோடு பின்வருவனவும் சார்ந்திருந்தன. அங்கு மூட்டப்பட்ட தீயின் தன்மை, தக்கின தூபியின் அடித்தளத்திற்கு சமமான ஒரு ஆழத்தில் துட்டகைமுனுவின் சிதை அமைந்திருக்க முடியாது என்பது; கோள்ளையர்கள் இவ்விடத்தை நன்கு ஆராய்ந்திருந்தமையால் அவர்கள் தீவட்டிகளை பயன்படுத்தி இருந்திருப்பார்கள் போன்ற பிரச்சனைகள். இது எவ்வாறாயினும் தக்கின தூபி எல்லாளனின் கல்லறையா துட்டகைமுனுவின் கல்லறையா என்பதை தீர்மானிப்பதற்கு இதனை அத்துணை பொருட்படுத்த வேண்டியதில்லை என்பதால் இது பற்றி மேலும் ஆராயாது விடுவோம். எனினும் இலக்கிய, இட அமைவியல் சார்ந்த சான்றுகளை டீ. சில்வா முன்வைக்கும் பொழுது அவ் வாதங்கள் ஆதாரபூர்வமானவையாய் அமைகின்றன. ஒரு இளம் தொல்பொருளியல் உதவி ஆணையாளர், அதுவும் தனது பதவி உயர்வை எதிர்பார்க்க கூடியவர், அக்கட்டத்திலே தொல்பொருளியல் ஆணையாளர் பதவியைத் தொடர்ந்து இலங்கை பல்கலைக் கழகத்தின் முதலாவது தொல்பொருளியல் பேராசியராக நியமனம் பெற்றிருந்த காலத்தில், தொல்பொருளியல் திணைக்களத்திலே தட்டிக் கழிக்க முடியாத ஒரு சக்தியாய் விளங்கிய ஒருவருக்கு எதிராக, தனது கருத்துக்களை துணிச்சலாக முன்வைத்தார் என்பது பாராட்டுக்குரியதே. ஆனால் டீ. சில்வா இவ்வளவு நேர்மையாக தனது கருத்து வேறுபாடுகளை தெரிவித்த போதிலும் பரணவித்தானா ஏளனத்தோடு வாளாவிருந்தார். அதுவே டீ. சில்வாவுக்கு கிடைத்த பதில்.

14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சத்தர்மாலங்காரய என்ற நூலில் தக்கின தூபியைப் பற்றிய ஒரு குறிப்பை வைத்துக் கொண்டு பரணவித்தானா அவருக்கே உரித்தான திறமையோடு இந்தத் தூபியின் கீழ் துட்டகைமுனுவின் அஸ்தியே இடப்பட்டிருந்தது எனெக் கூறி, இது எல்லாளனின் கல்லறை என்ற காலா காலமாக நம்பிக்கையை தரைமட்டமாக்குவதற்கு முயன்றார்.

நிதான நோக்கில்

தனது 1948-ம் ஆண்டு அறிக்கையில் 49ம் பந்தியில் தனது கருத்தின் அடித்தளத்தை பரணவித்தானா பின்வருமாறு பிரகடனம் செய்தார்; "தக்கின தூபியின் தூபி மகாபுளில மளுவ என்ற இடத்தில் கட்டி எழுப்பப்பட்டதாக நிலவிய ஒரு மரபினை சத்தர்மாலங்காரய குறிக்கிறது". ஏனோ தெரியவில்லை உண்மையான குறிப்பினை அவர் தரவில்லை. மேற்கோள் காட்டும் போது தனக்கே தெரிந்த காரணங்களுக்காக பரணவித்தானா மேற்கோள்களை பொறுக்கி எடுப்பது காணக்கூடியதாக இருக்கின்றது. சில வேளைகளில் விபரங்களை தாராளமாக அள்ளித் தருவார். ஆனால் வேறு கட்டங்களில் வாசகனே அவற்றை வேட்டையாட வேண்டியுள்ளது. எனவே பரணவித்தானாவின் கூற்றுக்களின் மூலங்களை கண்டுபிடிப்பதில் மாணவர்க்கு பெரும் சிரமம் ஏற்படுகின்றது. ஒரு தொல்பொருளியல் திணைக்கள ஆணையாளரின் நிர்வாக அறிக்கைகள் இவ்வாறு போதிய விபரம் இன்றிக் காணப்படக் கூடாது என்பது சொல்லாமலே விளங்கும்.

எனினும் அம்மேற்கோளை நாம் தேடிக் கண்டுபிடித்து விட்டோம். சத்தர்மாலங்காரயாவில் வரும் சொற்களின் மொழிபெயர்ப்பை கீழே தருகின்றோம்; "புத்தர் நிலை எய்தி எட்டாவது ஆண்டில் எமது புத்தர் மகாசமன என்ற தெய்வீக அரசனின் அழைப்பின் பெயரில் அனுராதபுரத்தை வந்தடைந்து, பின்னர் தக்குணு மகாசய அமைந்திருந்த மகாபுளில மளுவில் தங்கியிருந்தார்".

மேலே தரப்பட்ட மேற்கோளைக் குறிப்பிட்டு இதை பரணவித்தானா அனுராதபுரத்தில் மகிந்த தேரோ சம்பந்தமாக மகாவம்சத்தில் குறிப்பிடப்படும் ஓர் "பிச்சுல" மரத்தோடு தொடர்பு படுத்த அதி வேகத்தோடு விரைகின்றார். கைகரின் மகாவம்ச மொழிபெயர்ப்பில் இம் மேற்கோள் வருமாறு; " ம்கிந்த தேரோ அரச மாளிகைக்குச் சென்று அதற்குத் தெற்கில் நின்ற பிச்சுல மரத்தின் மீது எட்டுக் கைபிடி அளவு மலர்களைத் தூவினார்".

நாம் மேலே செல்ல முன்னர் கைகரின் மேற்படி மொழிபெயர்ப்பை நாம் திருத்தக் கடமைப்பட்டுள்ளோம். அறிஞனான A. P. புத்ததத்த மகாதேரோ இத்திருத்தத்தை அறிஞர்களின் கவனத்திற்கு ஏற்கனவே கொண்டு வந்தார். மேற்கூறிய பந்தி பின்வருமாறு இருத்தல் வேண்டுமென அவர் சுட்டிக் காட்டிய போது கைகரும் பின்னர் ஏற்றுக் கொண்டார். "மகிந்த தேரோ அரச மாளிகைக்குச் சென்று அதன் தெற்கில் நின்றவாறு பிச்சுல மரத்தின் மீது எட்டுக் கைபிடி அளவு மலர்களைத் தூவினார்." இந்தத் திருத்தத்தில் இருந்து அந்த பிச்சுல மரம் அரச மாளிகையின் தெற்கொல் அமைந்ததாக குறிப்பிடப்படவில்லை என்பதை அறிகின்றோம்.

நகரின் தெற்கிலே மகாபுளில மளுவ ஒன்று அமைந்திருந்ததாகவும் அதற்கு மேலே (பின்னர்) தக்கின தூபி அமைந்ததாகவும் மகிந்த தேரோ அனுராதபுரத்திற்கு விஜயம் செய்ததாகவும் ஒரு பிச்சுல மரம் நின்றதாகவும் அது பின்னர் கம்மாலக்காவின் இடமாக அமைந்திருக்க வேண்டும் எனக் காட்டி விட்டு மகாபுளில மளுவவும் கம்மாலக்காவும் ஒன்றே ஒன்று என்று கூறுவதற்கு பரணவித்தானா முற்படுகின்றார். இந்த மாலக்காவில் தான் துட்டகைமுனு தகனம் செய்யப்பட்டு இதற்கு மேல் கட்டப்பட்ட தூபியில்தான் அவரது அஸ்தி இடப்பட்டிருக்கின்றது என்ற கற்பனாவாத முடிவிற்கு அவர் வருவதற்கே இவ்வாறு முற்படுகின்றார்.

பரணவித்தானாவின் அண்மைக்கால ஆராய்ச்சி முறையியலுக்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. ஆய்வறிஞர்களுக்கு இது இப்பொழுது நன்கு பரிச்சயம். அவரது வாதமுறை பின்வருமாறு;
A=B
b=C
ஆகவே A=C
யுரேக்கா, கண்டுபிடித்து விட்டேன்! இது மேலோட்டமாக நம்பக்கூடியது போன்று ஒலிக்கின்றது. ஆனால் வாதப்பிழை என்பது வெளிப்படை. ஏனெனில் பெரிய எழுத்து B க்கும் சிறிய எழுத்து bக்கும் (ஒலி அமைப்பில் அது ஒன்றாகத் தோன்றினும்) மிக முக்கிய வேறுபாடு உண்டு. மகாபுளில மளுவவும் கம்மாலக்காவும் ஒன்றே ஒன்று என இந்த பரந்த உலகத்தில் யார் தான் சொன்னார்கள்? துட்டகைமுனுவின் அஸ்திக்கு மேலே தூபி ஒன்று கட்டப்பட்டதென இலக்கியத்தில் எங்காவது குறிப்புண்டா? எல்லாளனின் அஸ்தி அடக்கம் செய்யப்பட்ட 2109 ஆண்டுகளிலே பழைய ஒரு நூலாவதோ, ஒரு உரைநூலோ, ஒரு கல்வெட்டாவதோ, ஓர் ஏடாவதோ, ஒரு தொல்பொருளியலாளனோ, ஒரு வரலாற்று ஆசிரியனோ துட்டகைமுனுவின் அஸ்திக்கு மேலே ஒரு தூபி கட்டப்பட்டதாகச் சொல்லவில்லை. ஆனால் அவ்வாறுதான் நடந்தது என பரணவித்தானா கூறுகின்றார். அவர் திருவாய் மலர்ந்ததை கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா? ஆனால் பரணவித்தானாவுக்கு சார்பாக நாம் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். அவர் பொதுவாக தனது கருத்துகளை உடும்புப் பிடியாக பிடித்திருந்த போதிலும் இக்கருத்தை அறிஞர்கள் மீதும் பொதுமக்கள் மீதும் அவர் நீண்ட காலம் வற்புறுத்தவில்லை. ஏனெனில் 1948-ம் ஆண்டுக்கு பின்னரும், தக்கிண தூபி துட்டகைமுனுவின் கல்லறை என்ற ஒரு அறிவித்தல் பலகையைத் தொங்கவிட்ட பின்னரும், துட்டகைமுனுவின் அஸ்தி என்று கூறப்பட்டவற்றை அனுராதபுரத்தில் உள்ள தொல்பொருளியல் காட்சிச் சாலையில் காட்சிக்கு வைப்பதோடு அவர் அமைதியுற்றார். இதற்கிடையில் ஞாயிறு பத்திரிகை ஒன்றில் தக்கிண தூபி துட்டகைமுனுவின் கல்லறை அல்ல என்று கொட்டை எழுத்து தலைப்பில் ஆர். எச். டி. சில்வா கட்டுரை வெளியீட்டது மட்டுமல்ல தக்கிண தூபியில் வைக்கப்பட்டிருந்த தவறான அறிவிப்புப் பலகையையும் அகற்றுவதற்கு ஈற்றில் நடவடிக்கையும் எடுத்தார். அப்போது ஒரு சக்தியாய் விளங்கிய பரணவித்தானாவிடம் இருந்து எந்தவித ஆட்ட்சேபனையோ எதிர்ப்போ கிளம்பவில்லை.

இலங்கை பற்றிய "இலங்கைப் பல்கலைக்கழக வரலாறு" என்றநூலில் முதல் தொகுதியின் இரண்டாம் பாகத்து மூன்றாம் அத்தியாயத்தில் (பரணவித்தானா இதற்கு தொகுப்பாசிரியராய் இருந்து 1959ல் வெளியிட்டார்) எல்லாளனையும் துட்டகைமுனுவையும் பற்றி குறிப்பிடப் பரணவித்தானாவுக்கு ஒரு சந்தர்ப்பம் வந்தது. எல்லாளன் கல்லறை பற்றிய அடிக் குறிப்பில் ஏற்கனவே தெரிந்த நிலைப்பாட்டை வைத்து அது உண்மையில் தக்கிண தூபம்தான் என அவர் மேலும் குறிப்பிட்டார். எல்லாளனின் நினைவுச் சின்னம் அனுராதபுரத்தில் உள்ள இன்றைய வைத்திய அதிகாரியின் வீட்டிற்கு வடக்கே சற்று முன் அமைந்திருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டார். அங்குதான் அனுராதபுரத்தின் தெற்கு வாசல் அமைந்திருக்க வேண்டும் என்பது அவர் கருத்து. மகாவம்சத்தின் உரை நூல் ஆசிரியர் வாழ்ந்த காலம் வரை எல்லாளனின் விக்கிரகம் வழிபடப்பட்டதென அவர் ஒப்புக் கொள்கிறார். இங்கே துட்டகைமுனு பற்றி ஒரு வார்த்தை 5ஆனும் இல்லை. துட்டகைமுனுவின் தகனம் பற்றி அவர் வர்ணிக்க விழையும் போதுதான் தனது ஊகங்கழை அச்சில் வெளிவர விடுகின்றார். "(பௌத்த சங்கத்தினர் பொது நிகழ்ச்சிகளுக்கு கூடும் மகாவிகாரையின் எல்லைக்கு வெளியே அநேகமாக பின்னர் தக்கிண தூபி கட்டப்பட்ட இடத்தில் சடலம் தகனம் செய்யப்பட்டிருக்கின்றது)". "அநேகமாக " என்ற சொல்லை மட்டும்தான் அவர் ஆகக் கூடுதலாக பாவிக்க முடிந்தது. "அஸ்தி" தொல்பொருளியல் காட்சிச் சாலையில் தொந்தரவு செய்யப்படாது உறங்கியது.

அரசியல் தலையீடு

1980 யூலாய் 2-ம் திகதி "சன்" பத்திரிகைக்கு எழுதிய மாக்கஸ் ஜோசெப் என்பவர் பின்வருமாரு குறிப்பிட்டார். விஜயனது அஸ்தியையும் எலும்புகளையும், குவேனியினது ஆடையையும் கண்டுபிடிக்குமாறு தொல்பொருளியல் திணைக்களத்தை உசார்ப்படுத்திய கலாச்சார அமைச்சரான இ. எல். பி. குருலே நூதன சாலையில் கவனிப்பாரற்ற நிலையில் "அஸ்தி" உறங்கிக் கொண்டிருப்பதை அறிந்து பிரமித்தார். உடனடியாகவே தனது திணைக்க்ள உத்தியோகஸ்தர்களை அனுப்பி அதைக் கொழும்பு நூதனசாலைக்கு எடுத்து வந்து பத்திரமாக மூடி வைத்தார். பின்னஎ இச்செய்தியை ஜனாதிபதி, மந்திரிசபை ஆகியோர் கவனத்துக்குக் கொண்டு வ்ந்து, அவர்களின் ஆலோசனைப்படி இந்த அஸ்தியின் வரலாறு சம்பந்தமான இலக்கிய ஆதாரங்களை ஆராய்வதற்கு நாட்டின் தலைசிறந்த தொல்லியலாளர்களையும் வரலாற்று ஆசிரியர்களையும் கொண்ட ஒரு குழுவை நியமித்தார்.

இக்குழு 1978-ம் ஆண்டு நவம்பரில் நியமிக்கப்பட்டது. சம்பந்நப்பட்ட ஆவணங்களை ஆராய்வதற்கு அதற்கு ஏறக்குறைய ஆறு மாதங்கள் தேவையாயிற்று. அதற்குப் பின்னர் தனது முடிவுகளை அமைச்சருக்கு சமர்ப்பித்ததாக அறியப்படுகிறது. அவர் அம் முடிவுகளை ஜனாதிபதியினதும் அமைச்சரவையினதும் கவனத்திற்கு முறையே கொண்டு வந்தார்.

1980-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28-ம் திகதியில் வெளிவந்த "சிலோன் டெயிலி நியூஸ்" (Ceylon daily News) என்ற பத்திரிகை 'நேற்றைய அமைச்சரவை முடிவுகள்' என்ற தலைப்பில் பின்வருமாறு அறிவித்தது. தக்கிண தூபியில் கண்டெடுக்கப்பட்ட துட்டகைமுனுவின் அஸ்தி அங்கேயே திரும்பவும் இடப்படவிருக்கின்றது. இலங்கை அரசாங்கத்தினால் பாரிசில் ந்டாத்தப்பட்ட பரிசோதனைகள் அஸ்தி ஏறக்குறைய 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என நிரூபித்துள்ளன. வேறு வரலாற்று உண்மைகளில் இருந்து இவ் அஸ்தி துட்டகைமுனுவினது என்பது நிரூபணமாகிறது. 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ம் திகதி வெளிவந்த "சிலோன் டெயிலி நியூஸ்" பின்வருமாறு கூறுகிறது. "அனுராதபுரத்தில் துட்டகைமுனுவின் அஸ்தியை வைத்து ஒரு நினைவுச் சின்னம் கட்டி எழுப்புவதற்கு அரசாங்கம் ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது. கொழும்பில் உள்ள தேசிய காட்சிச் சாலையில் இருந்து அஸ்தி பவனியாக அரசனின் பிறப்பிடமான திஸ்ஸமகாராம, மாகம ஊடாக அனுராதபுரம் கொண்டுசெல்லப்பட்ட்து. திறந்துள்ள பேழையில் உள்ள அஸ்தியை மூடியுள்ள, குண்டு துளைபுகாத கண்ணாடி ஊடாக தரிசிக்க முடியும். இந் நினைவுச் சின்னத்தினை கட்டி எழுப்புவத்ற்கு எட்டு இலட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

குழுவின் அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. குழுவில் 12 பேர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் சிலர் தமது விசேட துறைகளில் இப்பொழுது உயர் பதவியை வகிக்கின்றனர். மேலும் சிலர் இன்னும் உயர்ச்சி பெறவிருக்கின்றனர். தற்பொழுது கடமையாற்றும் தொல்பொருளியல் ஆணையாளரும் பிரதி ஆணையாளரும் இக்குழு உறுப்பினர்களில் இருவர். ஆனால் இவ்விடயமாக பரணவித்தாவின் கருத்தில் இருந்து வேறுபட்ட முன்னை நாள் ஆணையாளர் ஆர். எச். டி. சில்வா இக்குழுவில் இடம்பெறவில்லை. களனிய பல்கலைக்கழக தொல்பொருளியல் துறைத் தலைவரான அபய ஆரியசிங்க குழு உறுப்பினராக இருந்த போதிலும் அதன் கருத்துகளில் இருந்து தம்மை வேறுபடுத்திக் கொண்டார். (1979-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ந் திகதி வெளிவந்த சிலோன் டெயிலி நியூசில் அவரது கடிதத்தை காண்க) அரசாங்க அறிவிப்பின் மூலம் பாரிசில் நடைபெற்ற விஞ்ஞான பரிசோதனை பற்றிய அறிக்கையையும், வரலாற்று உண்மைகள் பற்றிய அறிக்கையையும் அது பெற்றிருந்ததாகவும் நாம் அறிகின்றோம். இந்த அறிக்கைகள் எங்கே? எல்லா உறுப்பினர்களும் இந்த அறிக்கைக்கு கைச்சாத்து இட்டனரா? பாரிசில் நடாத்தப்பட்ட பரிசோதனைகள் நடாத்திய விஞ்ஞானிகள் யார்? நிறுவனம் எது?

விஞ்ஞானப் பரிசோதனையின் மர்மம்

1980-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ம் திகதி, பெப்ரவரி மாதம் 26-ம் திகதி ஆகிய தினங்களில் வெளிவந்த சிலோன் டெயிலி நியூஸ் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டுரைகளில் இருந்து கொழும்புப் பல்கலைக்கழக றேடியோ ஐசோரோப் நிலையத் தலைவர் கலாநிதி கிராண்வில் தர்மவர்த்தனா இப்பரிசோதனையில் ஈடுபட்டார் என அறிகின்றோம். பிரான்ஸில் உள்ள அணுசக்தி ஆணைகுழுவில் அவர் கடமையாற்றியதாக கூறப்படுகின்றது. மிக நல்லது. ஆனால் அறிக்கை எங்கே? பிரான்ஸின் அணுசக்தி ஆணைக் குழுவினரால் அவ் அறிக்கை கைச்சாத்திடப்பட்டதா?

நாம் இந்த வினாக்களை எழுப்புவதற்கு கடமைப்பட்டுள்ளோம். ஏனெனில் பண்டைய பொருட்களை ஆராய்வதற்கான விசேட உத்தி முறையில் தாம் பாண்டித்தியம் பெற்றதாக கலாநிதி கிராண்வில் தர்மவர்த்தனா இக்கட்டுரையில் குறிப்பிடுகின்றார். 1969-ல் புகழ் வாய்ந்த பிரித்தானிய விஞ்ஞான சஞ்சிகையான் "நேச்சர்" இல் (Nature) வெளிவந்த கட்டுரையில் கசின், தர்மவர்த்தனா ஆகியோரது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பின்னர் குறிப்பிடப்பட்ட தர்மவர்த்தனா என்பவர் இலங்கையைச் சேர்ந்த கலாநிதி கிராண்வில் தர்மவர்த்தனா என்பது தெட்டத்தெளிவு. இவர் தாமே பிரகடனஞ் செய்துள்ள தனது சாதனைகளைப் பற்றி நாம் உண்மையில் பெருமைப்படத்தான் செய்ய வேண்டும். ஆனால் இவ் ஆய்வில் பிரான்சின் அணுசக்தி நிலையத்தின் பெயர் இழுக்கப்பட்டிருப்பதால் அதன் அச்சுப்பதிவு எமக்கு முன் சமர்ப்பிக்கப்படும் எந்த ஒரு ஆதாரங்களிலும் காணப்படும் என எதிர்பார்ப்பது நியாயமே.

எம்முடைய தற்போதைய நோக்கைப் பொறுத்தவரை நாம் விடையளிக்க வேண்டிய கேள்வி இதுவே- அஸ்தி மனித இனத்தைச் சார்ந்ததா? (இது பற்றிய ஐயங்கள் எழுப்பப்பட்டுள்ளன) 2000 ஆண்டு பழமை வாய்ந்ததா? இவை துட்டகைமுனுவினதோ, எல்லாளனினதோ அஸ்தி என்பதை எவருமே கூற முடியாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இதுதான் சர்ச்சையில் இழுபறிப்படும் எலும்புத்துண்டு (அஸ்தி). மீண்டும் கேட்கிறோம். சான்றிதழ் எங்கே? பிரான்சில் அணுசக்தி ஆணைக் குழுவின் கைச்சாத்தினை அது பெற்றிருக்கிறதா?

விஞ்ஞானப் பரிசோதனை பற்றி பல பெயர்கள் அடிபட்ட போதிலும் இன்றைய சர்ச்சைக்கு அவை அதிக பொருத்தம் உடையன அல்ல. நகரின் தெற்கிலே எல்லாளனின் சடலம் தகனம் செய்யப்பட்டு அதற்கு மேலாக ஒரு "சேத்தியா" (Cetiya) கட்டி எழுப்பப்பட்டதென்று 2000 ஆண்டுகளாக தொடர்ச்சியறாத ஒரு மரபு வழங்கி வந்துள்ளது. எம் முன்னேயுள்ள ஒரேயொரு கேள்வி: இப்பொழுது சிதைந்த வடிவத்திலுள்ள அத்தேற்குத் தாதுகோபுரம் அந்தச் சேத்தியாவா? இந்தக் கருத்து நிலைப்பாட்டுக் கெதிராக பரணவித்தானா சில ஊகங்களில் இறங்கியுள்ளார். அவர் முன்பு ஒரு புளில மரம் நின்ற இடத்தில் தூபி கட்டப்பட்டதாகவும் "பிச்சுல" மரம் நின்ற இடத்தில் தான் துட்டகைமுனு தகனம் செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார். இந்த இடங்கள் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்க முடியாதா? ஆனால் இந்த ஊகத்தை ஆதரிப்பதற்கு மரபு ஏதும் இல்லை. இந்த ஊகத்தை அறிந்து கொள்வதற்கு வரவழைக்கப்பட்ட மிகமிகச் சிறிய இலக்கிய ஆதாரங்களும் கற்பனைத் தன்மை வாய்ந்தவையாக காணப்படுகின்றன.

இப் பிரச்சினையை குழு எவ்வாறு கையாண்டது என் இனிப் பார்ப்போம். மீண்டும் கேட்கிறோம். அறிக்கை எங்கே? ஆரம்பத்தில் இருந்த அதன் பன்னிரண்டு உறுப்பினர்களில் எத்தனை பேர் அவ்வறிக்கையில் கைச்சாத்திட்டனர்? உண்மையில் எத்தனை பேர் கண்ணுற்றனர்? கைக்கு இலகுவில் அகப்படாத இவ் அறிக்கையின் உள்ளடக்கம் பற்றி மாக்க்ஸ் ஜோசெப் சன் என்ற பத்திரிகையில் வெளியிட்ட கட்டுரை நல்ல வேளையாக சில தடயங்களை நமக்குத் தருகின்றது.

1980ம் ஆண்டு யூலை மாதம் 2ந்திகதி சன்னில் (SUN) வெளிவந்த அறிக்கை (சுருக்கம் என வர்ணிக்கப்பட்டது) மாக்க்ஸ் ஜோசெப்பின் கையிருப்பில் இருந்த ஒரு பிரதியை ஆதாரமாகக் கொண்டது என்பது தெட்ட்த் தெளிவு. இது எமக்குக் கிடைக்கப் பெற்றது. அதன் தலைப்பு "துட்டகைமுனு மன்னனின் அஸ்தியை ஆராய்வதற்கு என நியமிக்கப்பட்ட உபகுழுவைப் பற்றிய அறிக்கை"(அவ்வாறே). அதற்கு ஒரு நூல்பட்டியல் உண்டு. அதில் 23 குறிப்புகளே காட்டப்பட்டுள்ளன. பரணவித்தானாவின் நிலைப்பட்டினை அது செம்மையாக வர்ணிக்கின்றது- "அஸ்தி துட்டகைமுனு மன்னனின் அஸ்தியாக இருக்கலாம் என பரணவித்தானா ஓரளவு நிர்ணயமின்மையுடன் குறிப்பிட்டுள்ளார் என அறிக்கை கூறுகின்றது.

அஸ்தி துட்டகைமுனு மன்னனது தான் என நிரூபிக்க முற்பட்டு பரணவித்தானா கோட்டை விட்டார். ஆனால் பரணவித்தானாவை மிஞ்ச குழு முற்பட்டது நிச்சயமின்மையை நிச்சயமாக அது விழைந்தது. அரசனின் அஸ்தி எனக் கூறப்படுவனவற்றை அல்ல, உண்மையில் துட்டகைமுனுவின் அஸ்திகளை அராய்வதாகக் கூறி இக் குழுவினர் தமது பக்கச் சார்பு நிலையை ஏற்கனவே வெளிக்காட்டி விட்டனர். இது நேர்மையான தவறாக இருந்திருக்கலாம். சரி விடுவோமாக.

இப் பன்னிருவரில் யார் இந்த அறிக்கையை உண்மையாகப் பார்த்தார்கள் என்பது எமக்கு நிச்சயமில்லை. ஆனால் சத்தமங்கல கருணாரத்னா, ரோலண்ட் சில்வா போன்ற தலைசிறந்த தொல்பொருளியலாளரின் அறிவிற்கு ஈடுசெய்யக் கூடியதாக அது அமையவில்லை. இவர்கள் பயனின்றி முன்வைத்த பெரும்பாலான வாதங்கள் பரணவித்தானாவின் கழுகுப் பார்வையிரிருந்து தப்பித்து இருக்க முடியாது. எனவே செத்த பாம்பை அடிப்பது போன்றுதான் எமக்கு அறிக்கை காட்சி அளிக்கின்றது.

"பிச்சுல" மரம் நின்ற இடத்திற்கு மேல் எழுந்த "மாலக்க"வும் பின்னர் தக்கிணதூபி அமைக்கப்பட்ட மிகப் பெரிய மகாபுளில மளுவவும் வேறானது என்பது இப்பொழுது தெட்டத் தெளிவு. இது ஒன்றுதான் என்று துணிய முனைவதற்கு அதாரமாய் அமைந்தது கைகரின் தவறான மொழிபெயர்ப்பு ஒன்றே ஆகும்.

வம்சத்தப் பக்காசினி பிச்சுல மரம் அரச மரத்தின் தென்கிழக்கில் இருந்ததாக கூறுகின்றது. மகாபோதி வம்ச உரைநூலில் இது அரச மாளிகையின் தென்கிழக்கில் அமைந்ததாக கூறப்பட்டது. (தனது அறிக்கையின் இரண்டாம் பக்கத்தில், பகுதி 5ல் பிச்சுல மேடையைப் புளில மேடையாக ஆணைக்குழு அறிக்கையை யாத்தவர் குறிப்பிட்டது தவறு போல் தோன்றுகின்றது.)

எல்லாளனின் சமாதியே

எம்மை வழி நடத்துவதற்கு நாம் இங்கு ஒன்றைக் குறித்துக் கொள்ள வேண்டும். சிங்களத்தில் பிச்சுல என்பது கிம்புல் மரத்திற்கும் புளில என்பது இதனின்று வேறுபட்டு காவுடு அரச மரத்தையும் குறிக்கும் என்றும் சுட்டிக்கட்டப் பட்டுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தப் பெயர்கள் ஒன்று தானும் கைகர் சுட்டியுள்ள "தமர்சி இண்டிகா" என்பதுடன் பொருத்தமானது அல்ல.

மகாவிகாரையின் எல்லைக்குள் தான் "கம்மாலக்க" நிச்சயமாக அமைந்துள்ளது. அரசன் தகனம் செய்யப்பட்ட பின்னர் இந்த "மாலக்க" அசுத்தம் செய்யப்பட்டதாக கருதப்பட்டு (சீமசுமுகத்தவிற்கு பின்னர்) நிசிமாலக்கவாக்கவாக பிரகடனம் செய்யப்பட்டிருக்கலாம். அபய ஆரியசிங்காவின் கருத்தோடு நாம் உடன்படுகின்றோம். பௌத்த மதத்தினருக்கு "பண" போதிக்க வேண்டும் என்ற அளவிற்கு பௌத்த சங்கத்துடன் இனங்காணப்பட வேண்டும் என விரும்பிய துட்டகைமுனு தான் இறந்த பின்னர் மகாவிகாரைக்கு வெளியில் தகனம் செய்யப்பட வேண்டும் என கேட்டிருத்தல் கற்பனையில் கூட செய்ய முடியாததே. அவர் "கம்மாலக்க"வையே தேர்ந்தெடுத்தார். அது பௌத்த குருமார் கட்டிடத்துள் நிச்சயமாக அமைந்திருந்தது. ஆனால் எந்தக் கட்டத்திலேயும் மகாவிகாரையின் எல்லைக்குள் தக்கிண தூபி அமையவில்லை. எனவே மேற்குறிப்பிட்ட வாதம் ஆதாரமற்றதாகின்றது. இப்பண்டைய இடங்கள் மாறுகின்றன என்று மன்னிப்பு கோரும் வகையில் காட்டும் வாதங்கள் திருப்திகரமானவை அன்று. ஆகவே இந்த வாதங்களை பரணவித்தானா எப்பொழுதாவது கையாளவில்லை.

பரணவித்தானா கண்டெடுத்த கல்வெட்டின்படி இத் தூபி திஸ்ஸ மகா சேத்திய என அழைக்கப்பட்டது. இலக்கிய நூல்களில் எங்கேயாவது இப்பெயரைப் பற்றி குறிப்பைக் காணோம். இதிலிருந்து தக்கிண தூபிக்கு பல பெயர்கள் இருந்திருக்கலாம் என்பதே நிரூபணமாகிறது. ஆரம்பத்தில் எலார தூபி என அழைக்கப்பட்ட இது, மகாவம்சத்தில் தக்கிண தூபி என அழைக்கப்பட்ட தூபி என்றும் வடக்கே அமைந்த அபயகிரி விகாரைக்கு மாற்றுப் பெயராக உத்தர விகாரைக்கு எதிராக உள்ள தக்கிண தூபி என்றும் அழைக்கப்பட்டது. இவ்விரு இடங்களும் ஒரே நெடுங்கோட்டில் அமைந்துள்ளன.

ஒன்றைப்பற்றி நாம் நிச்சயம் சொல்லலாம். எல்லாளனின் சடலம் நகரத்தின் தெற்கு வாசலில் தகனம் செய்யப்பட்டு அதன் மேல் தூபி கட்டி எழுப்பப்பட்டது. ரேணர் என்ற ஆசிரியரைப் பின்பற்றி கைகர் அவ்விடத்தை தெற்கு வாசலுக்கு அண்மையில் அமைந்தது என குறிப்பிடுகின்றார். ஆனால் இம்மொழிபெயர்ப்பு தவறானது. ஏனெனில் பாளி மூலம் "புரதக்கிண துவாரம் ஹி" (அதற்கு அர்த்தம் நகரின் தெற்கு வாசலில்) சுமங்கலாவும் பட்டுவண்துடாவையும் சிங்களத்தில் எழுதிய மகாவம்சத்தில் இது செவ்வையாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அஃதாவது நகரத்தின் தெற்கு வாசலில்(நுவர தக்குணு வாசல் தொரதி)

அரசர்கள் தகனம் செய்யப்பட்ட இடங்களுக்கு மேல் எழுப்பப்பட்ட நினைவுச் சின்னங்கள் பற்றி இக்குழுவின் அறிக்கையை எழுதியவர் (இவ் அறிக்கை இன்னும் பரம் ரகசியமாக இருக்கிறயு) பலவாறு கூறுகின்றார். ஆனால் அவர் குறிப்பிடும் மேற்கோள்கள் இந்த வழக்கம் பரவலாக இருந்தது என்பதை ஆதரிக்கவில்லை. மேற்கோள் காட்டப்படும் ஓர் உதாரணம் எல்லளனின் தகன இடத்திற்கு மேலாக கட்டி எழுப்பப்பட்ட தனித்துவம் வாய்ந்த சேத்தியாவுக்கே (Cetiya) பொருந்தும்.

200 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை மக்களின் பெருமையின் சின்னமாக இருந்த ஒரு நினைவுச் சின்னம் இன்று அழிக்கப்படவுள்ளது என்பது தர்மிஷ்ட ஊழியின் கொடூரமான வேடிக்கையே. இந்த மண்மேட்டில் துட்டகைமுனுவின் அஸ்தி புதைக்கப்பட்டதாக துளிகூடச் சான்று இல்லை. இதில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் சாம்பல் (இதனை மண்ணும் கரியும் அசுத்தப்படுத்தியிருக்கலாம்) மனித அஸ்தியாக இல்லாதிருக்கலாம். அதைவிட 2000 ஆண்டுகளுக்கு கீழ்ப்பட்டதாய் இருக்கலாம். அது 2000 ஆண்டு பழமையுடைய மனித அஸ்தி எனின் அது எல்லாளனுக்குரியதாய் தான் இருக்கக் கூடும். உலகம் எம்மைப் பார்த்து நகைக்காதவாறு நாம் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

--------------------------------------------------------------------------------

APPENDIX - A

'Members of the committee of inquiry into the Ashes of DUTUGEMUNU'
(As published in the copy of the Report referred to in page 25)

1. Dr. Nandadeve Wijesekara (Chairman)
Chief Editor and Chairman of the Board for Compilation of the Mahavamsa.

2. Mr. V. V. Abhayagunawardena (Secretary)
Secretary of the Board for Compilation of the Mahavamsa.

3. Rev. Dr. Horana Vajiragnana Thera, Royal Pandit
Honorary Editor of the Sinhala Dictionary.

4. Dr. Abhaya Aryasingha
Head of th Department of Archaeology, University of Kelaniya.

5. Dr. Saddhamangala Karunaratna
Commissioner of Archaeology

6. Prof. P. L. Prematilleke
Professor of Archaeology, University of Matara.

7. Pandit Gunapala Senadheera
Chief Editor, Department of Educational Publications

9. Mr. Roland Silva
Deputy Commissioner of Archaeology

10. Mr. M. H. Sirisoma
Asst. Commissioner of Archaeology

11. Mr. Sarath Wattala
Archaeological Assistant, Department of Archaeology

12. Mr. Douglas Ranasinghe, J. P.
Jt. Secretary of the Archaeological Society of Sri Lanka

---------------------------------------------------------------------

1885இல் வெளியான "Buried Cities of Ceylon" (Burrow எழுதியது) என்னும் நூலில் உள்ள படத்தில் 'எல்லாளன் சமாதி' குறிப்பிடப்பட்டுள்ளது.

----------------------------------------------------------------------

கைகருடைய "Mahavamsa" நூலில் பக்கம் 136இல் (1960 பதிப்பு) 'எல்லாளன் சமாதி' குறிப்பிடப்பட்டுள்ள படம்.

----------------------------------------------------------------------------

கைகருடைய Culture of Ceylon in Medieval Times (பதிப்பு 1960) என்ற நூலில் பக்கம் 218இல் 'எல்லாளன் சமாதி' குறிப்பிடப்பட்டுள்ள படம்.

---------------------------------------------------------------------------

குறிப்பு:

இக் கட்டுரைக்குரிய மேற்கோள்களுக்கான ஆதாரங்களும், கூற்றுக்களுக்கான மூலங்களைக் குறிபிடும் அடிக்குறிப்புக்களும் ஆங்கில மூல நூலிலே விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

பார்க்கவும்-
The Tomb of Elara at Anuradhapura,
Jaffna Archaeological Society,
Jaffna.
1981.

----------------------------------------------------------------------------------------

"மரணத்தின் பின்பும் வாழ்வு நீடிக்கின்றது. அதுவும், இந்தப் பூமியில் தான் நீடிக்கின்றது. அது அவனவன் ஆற்றிய கடமைகளில் உயிர் வாழ்கின்றது. அநியாயங்களை எந்த வகையிலாயினும் எதிர்ப்பவர்களது ஆன்மாக்கள் மரணத்தின் பின்பும் பூமியில் பிரகாசிக்கின்றன. இராமரணை கட்டுதற்கு அணில் தன் இயல்புக்கேற்ப தன்னாலான சிறு கற்களைப் பொறுக்கிக் கொடுத்தது போல பௌத்த சிங்களப் பெருந்தேசியவாத அடக்கு முறையிலிருந்து தமிழ் தேசியத்தைக் கட்டிக்காக்க ஒவ்வொருவரும் தத்தம் இயல்புக்கேற்ப தம்மாலான கடமைகளைச் செய்ய வேண்டும்."

----------