கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  காற்றுவழிக்கிராமம்  
 

சு. வில்வரெத்தினம்

 

காற்றுவழிக்கிராமம்

சு. வில்வரெத்தினம்

---------------------------------------------

நன்றி.

கவிதைகள் எழுதுதல் என்பதை விடவும் முக்கியமானது காலத்தில் அவற்றை வெளிக்கொணர்வது. காலத்தில் வெளிக் கொணரப்படாமல் ஊறுகாய் போடப் பட்டிருக்கும் எனது முந்தைய தொகுப்புகள் போலல்லாமல் அவற்றையும் முந்திக் கொண்டு 'காற்றுவழிக் கிராமம்' வெளி வருகிறது. இதுவும் காலத்தாற் பிந்தியதாகிவிடக் கூடாது எனும் பெருமுனைப்பினால் காலத்தாலாகிய இவ்வுதவிக்குக் காரணர் நண்பர் எம்.ஐ.ஏ.ஜபார்.

'ஆகவே' இதழின் வேலைகளையும் தள்ளி வைத்துவிட்டு இத்தொகுப்பை அதன் வெளியீடாகக் கொணர்ந்துள்ளார். அவர்க்கும், இதில் உள்ள முதல் கவிதையை வேண்டிப் பெற்று 1994-ஜனவரி சிறப்பிதழில் பிரசுரித்த 'சரிநிகர்க்கும்', துரித காலத்தில் அச்சுப்பதிவு வேலைகளை முடித்துத் தந்த 'டெக்னோ பிறின்ட்' டாருக்கும், அட்டைக்கான புகைப்படம் தந்துதவிய பனம்பொருள் அபிவிருத்திச் சபையினருக்கும், பல வழியாலும் பரவலாக இதன் விநியோகத்திற்குதவும் எனது மருமகர்கள், செ.பாஸ்கரமூர்த்தி, தா.பாலகணேசன், மற்றும் பெயர் குறிப்பிடாத அன்பர்க்கும் எனது நன்றிகள்.

அன்புடன்,
சு.வில்வரெத்தினம்
புங்குடுதீவு.


--------------------------------------------------------------------------------

காற்றுறங்கும் அகாலத்தில்
மூட்டைமுடிச்சுகளோடு மக்கள்
கிராமத்தை ஊமையாய் விட்டுப்போன கதை

'அகங்களும் முகங்களும்' (அலை வெளியீடு) கவிதைகளுடாக பரிச்சயமானவை கவிஞர் சு.வில்வரெத்தினம். அதன் பிறகு "நெற்றிப் பரப்பின் நிகழ்வுகள்' "காலத்துயர்" போன்ற இரு தொகுப்புகள் வெளிவந்திருக்க வேண்டும். ஆனால் அவை இயல்பான காரணங்களால் சாத்தியமாகாது போயிற்று. இவை இரண்டையும் கடந்து நான்காவது தொகுப்பான "காற்றுவழிக் கிராமத்தை" தேர்ந்தெடுத்து "ஆகவே" வெளியிடுவதன் பின்னணியிலுள்ள காலத்தேவை புரிய முடிந்ததொன்றே.

உணரப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும் வழியறியாத் தடுமாறலிலும் இருக்கைகளை நிரந்தரமாக்கிக் கொள்ளும் தீவிர விருப்பிலும் நீளுகிறது ஒரு யுத்தம். இதன் வெறியின் இரட்டைத்தனம் எல்லாவற்றிலும் வெளிப்படுவதை நான் அவதானிக்காமலில்லை. தமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கான அரசியற்பகட்டாக எம்மால் கவனம் கொள்ளப்படுகிற "கிராம உதயங்களும்", "2000 ஆம் ஆண்டளவில்" (தெற்கிலுள்ள) யாவருக்கும் புகலிடம் வழங்குவதற்கான முனைப்புகளும் தெற்கில் மட்டுமே நிகழ, வடக்கிலும் கிழக்கிலும் நகரங்கள் சிதைக்கப்பட்டு, கிராமங்கள் சிறைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

18.10.1991 அன்று வடக்கின் தீவுகள் ஆக்கிரமிக்கப்பட்டன. வாழ்விடத்தை விட்டும் மக்கள் பெயர்த்தெடுக்கப்பட்டனர். இதன் பின்னரான தீவுகளின் அவல இருப்பை நிழற் படங்களாக்கி நம்மை ஈர்த்து துயர் கிளர்த்துபவை இக்கவிதைகள். இவ்வவல இருப்பின் அனுதாபத்துக்குரிய பங்காளியாய், சலிக்காதவனாய், எதிர்கொண்டவனாய் நம்மால் தரிசிக்கப்படுகிறவன் இக்கவிஞன். இதனால் தான் ஓர் யுத்தகாலத்தில் சிதைக்கப்பட்ட கிராமங்களின் பதிவை உள்வாங்கிய ஆவணமாய் இத்தொகுதியை நம்மால் பார்க்க முடிகின்றது. நிகழ்கிற வரலாற்றைத் தவிர்த்து எழும் அதிமனோரதிய சோடனைகளே வாழ்வனுபவம் என நம்பவைக்கும் முரட்டுப் பிரயத்தனங்களின் முன் சு.வில்வரெத்தினம் போன்றவர்களின் கவிதைகள் தனித்து நிற்கின்றன. வாழ்க்கையைப் பேசுகிற கவிதைகள் என்ற வகையில் இத்தொகுப்பு மிகுந்த கவனத்திற்குரியதாகிறது.

இத்தொகுதி 'ஆகவே' நூற்றொடரின் முதல் வெளியீடாக வருவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

'ஆகவே' சார்பாக,

ஜபார்.


--------------------------------------------------------------------------------

எனக்குள்
இன்னொரு விழியெனத் திகழும்
என் இறைவன்
குருநாதனுக்கு



--------------------------------------------------------------------------------

காற்றுக்கு வந்த சோகம்


முழுவியளத்துக்கு
ஒரு மனுவறியாச் சூனியத்தைக் கண்டு
சூரியனே திகைத்துப் போன காலையிலிருந்து
இப்படித்தான்
உயிர்ப்பிழந்து விறைத்த கட்டையெனக்
கிடக்கிறது இக்கிராமம்.

கிராமத்தின் கொல்லைப் புறமாய்
உறங்கிய காற்று
சோம்பல் முறித்தபடியே
எழும்பி மெல்ல வருகிறது.

வெறிச்சோடிய புழுதித்தெரு,
குழம்பிக் கிடக்கும் சுவடுகள் மேலாய்
சப்பாத்துக் கால்களின் அழுத்தம்,
காற்றுக்கு குழப்பமாயிருந்தது.

முற்றங்கள் பெருக்கும் ஓசைலயம்
பாத்திரங்களோடு தேய்படும் வளையல் ஒலி,
ஆச்சி, அப்பு, அம்மோயென
அன்பொழுகும் குரல்கள்-
ஒன்றையுமே காணோம்.

என்ன நடந்தது?
ஏனிந்தக் கிராமம் குரலிழந்து போயிற்று?
திகைத்து நின்றது காற்று
தேரடியில் துயின்ற சிறுவன்
திருவிழாச் சந்தடி கலைத்திருந்தமை கண்டு
மலங்க விழித்தது போல.

திறந்த வாசலினூடே வீட்டுச் சொந்தக்காரனென
சுதந்திரமாய் நுழைகிற காற்று
இப்போ தயங்கியது.
தயங்கித் தயங்கி மெல்ல
ஓர் வீட்டுவாசலை எட்டிப் பார்த்தது.
ஆளரவமே இல்லை.

இன்னுமொரு வாசல்; இல்லை.
இன்னும் ஒன்று; இல்லை.
இன்னும் ஒன்றை எட்டிப் பார்க்கையில்
இழுத்துப் பறிக்கும் மூச்சின் ஓசை.
சற்றே கிட்டப் போனது.
வாசற் படியிலே

வழுக்கிக் கிடந்தது ஓர் முதுமை.
ஊன்றுகோல் கையெட்டாத் தொலைவிலே.
இழுத்துப் பறிக்கும் மூச்சினிடையே
எதையோ சொல்ல வாயெடுக்கவும்
பறிபோயின சொற்கள்.
பறியுண்ட மூச்சு
மடியைப் பிடித்து உலுக்குவதாய்
காற்று ஒருகால் நடுங்கிற்று.

பதற்றத்தோடே
படலையைத் தாண்டிப் பார்த்தது
தூக்க எடுக்க துணை கிடைக்குமாவென்று.
ஆருமே இல்லை.

காற்றென்ன செய்யும்?
ஒப்பாரி எழுந்தால் ஏந்தியெடுத்து
ஊரின் காதிலே போடும்.
ஒரு குரலின் உரைசலும் இல்லையே.
உண்மையிலேயே
காற்றிற்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

பக்கத்திருந்து உறவுகள்
பால் பருக்க,
கால் பிடிக்க,
கை பிடிக்க,
தேவாரம் ஓத,
கோலாகலமாய் பிரிகின்ற உயிர்
அநாதரவாய்,
அருகெரியும் சுடர் விளக்கின்றி
பறை முழக்கமின்றி, பாடையின்றி.....
அட, சாவிலும் கூட ஒரு வாழ்விருந்த கிராமம் இது.

காற்று பரிதவித்தது.
"எங்கே போயின இதன் உறவுகள்?"
ஒன்றும் விளங்காமல் அந்தரித்தது.
அதற்கெங்கே தெரியும்?
காற்றுறங்கும் அகாலத்தில்தான்
மூட்டை முடிச்சுக்களோடு மக்கள்
கிராமத்தை ஊமையாய் விட்டுப்போன கதை.

ஒரு பெருமூச்சை உதிர்ந்தபடி
மீண்டும் உள்ளே நுழைந்தது.
முதுமையினருகில் குந்தியிருக்கும்
இன்னொரு கூனற்கிழமாய் தன்னைப் பாவித்திருந்து
பிறகெழுந்து
சேலைத்- தலைப்புள் வாயைப்புதைத்தபடி
வந்தது வெளியே.

வீதியில் தலைநீட்டிய முட்செடியன்றை
வேலியோரமாய் விலக்கியபடியே
மெல்ல நடந்தது காற்று
சொல்லிக் கொள்ளாமல் போன புதல்வரைத் தேடும்
சோகந் தாளாத தாயைப் போல.

28.07.1993



புள்வாய்த் தூது

இம்முறை
பெருங்குடமுழுக்குக் காட்டுவது போல கொட்டிற்று வானம்
புலம் பெயர்ந்து வந்த பறவைகள்
நிரம்பி வழிந்த நீர்த்துறையெங்கும்
முங்கிக் குளித்தன; முத்தெடுத்துதறின
கூரலகால் பிறகெடுத்துக் கோப்பன போல்வன.


எடுத்தூதிய வெண்சங்கென எழுகின்ற கொக்குகள்
அசை நடை நாரைகள்,
கன்னங்கரேலென நீர்க்காகங்கள் என
வண்ணம் பலப்பல-
இயற்கையெடுத்த விழாக் கோலம் போல.

இனிய பறவைகாள்
உங்களைப் போலவே வண்ணம் பலவுடைய மக்களின்
விழாக் கோல வாழ்விருந்த கிராமம்தான் இதுவும்.
எதற்கோ வியூகம் வகுத்தவர்க்கஞ்சியவர்
வேரற விட்டுப் போய் நாளாயிற்று.

நவராத்திரியின் கும்பச்சரிவோடு போனவர்கள்தான்
மீளக் கொலுவேறவில்லை
கொலுவிருந்த வாழ்வு குலைந்து போய்க் கிடக்கிறது.
கூடி வாழ்தல் என்பது அழகிய கொலுநேர்த்தியல்லவா?
எத்தனை நவராத்திரிகள் வந்தேகின.
கும்பப் பொலிவும், கூட்டுக்களியும், விழாக் கோலமும்தான்
இல்லையாயிற்று.

மார்கழி எம்பாவை வந்தாள்
மழைக்கண் திறந்து பொழிந்தவாறே.
வந்தவளை பட்டுக் குடையெடுத்து வரவேற்று
"ஏலோரெம்பாவாய்"என ஊர்கோலமாய்ப் போகவும்
ஆளணியற்ற தவக்குறைவு எமக்காச்சு.
பாவம் எம் பாவை போயினாள்
பண்ணிழந்த தெருவழியே.

மாரி வந்ததென்ன?
ஏரழகின்றிக் கிடந்தன வயல்கள்
தை மகள் வந்தாள்.
கைநிரம்ப வெறுமையுடன் கந்தலுடை பூண்டிருந்தது கிராமம்.
பொங்கல், படையலென பூரிப்பின் ஓரவிழும்
உண்டிலள் போனாள் ஒளியிழந்த முகத்தினளாய்.

"ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை"
வெண்தாடிப் புலவனது பாட்டோசை
"கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே"
என் செயலாம்
கூழை நினைத்தானே வாயூறத்தான் செய்கிறது.
ஊதிக் குடிக்க உதடும் குவிகிறது.
ஒடியலுக்கும் ஏது குறை?
போனவரியத்தானும் கிடந்துளுத்துக் கொட்டுது.
கூடிக்கலந்துண்ணச் சாதிசனம்?
இந்த ஆடிப் பிறப்பிற்கும் விடுதலை ஆனந்தம் இல்லையாச்சு.

விழாக்காலத் தேதி விவரங்களே
மறந்து போய்க் கிடக்கும் கிராமமிதில்
ஓசை, ஒலியெலாமாகி நிறைந்த பறவைகாள்
உங்கள் உயிர்த்துடிப்புகள் இனியவை.

வயல்வெளி நடப்புகள், சிறகடிப்புகள்,
வெளிநிரம்பிடும் சங்கீதம், யாவுமே
இனியவை என்பேன் எனினும்
சிறு துயரம்
நீராம்பலெனத் தலைநீட்டும்.

மாரிகழிய மறுபடியும் வருகின்ற
கோடை வறள்வில் இக் குதூகலங்கள்
சிறகை மடக்கி விடைபெறுதல் கூடும் அல்லவோ,
நினைகையில் சிறுதுயர் எழும்
எனினும் உமை நோகேன்
அற்ற குளத்து அறுநீர்ப்பறவையென
கேலியாடும் எண்ணம் சிறிதுமிலை.
நானறிவேன்
தாயக மீள்வில் இருக்கும் தனிச்சுகம்.

பெரு வெளியில் தலைநீட்டும்
உயர்மரக் கொம்பரில்தானே உங்கள் கூடுகள் உள்ளன.
அறிவேன்
குஞ்சு பொரித்தலும், குதலைகட்கு உவந்து
ஊட்டலும், காத்தலும், இங்காகலாம்
சிறகு முளைத்தவற்றை
கூட்டிச்செல்வதாய குதூகல நிகழ்வெலாம்
தாயக வெளிநோக்கியல்லவோ
நானறிவேன்

நீரறிவீரோ
என் நெஞ்சிலும்
கூடு கட்டி வாழும் குருவிகட்கு வாசலுண்டு
கூடிழந்து போனவரின்
நேசம் விட்டுப் போகாத நெஞ்சகத்தில் சோகமுண்டு
நீரறிய மாட்டீர்.

நீரறிதல் கூடுமெனில்
கோடைவழிப் போக்கில்
குளிர்த்தி வற்றிப்போன எங்கள் வாழ்நிலையின் சோகத்தை
எம்மவரைக் கண்டு இயம்புதல் கூடுமோ?
சற்றெமக்கு இரங்குங்கள்
நாளை நாளையெனக் காத்திருந்த நம்பிக்கை
முளைகருகிப் போகுமுன்னே வரவுண்டோ கேளுங்கள்.

"கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழுவிக்"
கதியிற் கலங்கிய புலவரென கைவிடப்பட்ட முதியவர்
கிழித்துப் போட்ட ஒடியல் கிழங்கென
வாடிச் சுருங்கி மனம் மெலிந்து
கடைசி ஒரு சொல்லாடலில் விடைபெறக்
காத்திருப்பதை சொல்லுங்கள்.

மாண்டோரும் மற்றும் தென்புலத்தோரும்
தாழ்வாரத் தவமியற்றிக் காத்திருந்தும்
திவசச் சோறுமின்றி, பரிந்துவக்கும் படையலுமின்றி
வெற்றுப் பாத்திரராய் மீளுவதைச் சொல்லுங்கள்

காலப்புற்றெழுந்து படர்ந்தாலும்
உட்கனலவியாத் தவ முனிவரென
ஒளியேற்றக் காத்திருக்கின்றன வீடுகள் ஒவ்வொன்றுமென
உரக்கவே அழுத்துங்கள்.

வேறென்ன விளம்ப இருக்கிறது
நீங்கள் மீளுகையில்
விட்டு விட்டுச் செல்லுகின்ற ஆனந்த வித்துகள்
முளை கொள்ளும் நாள்வரையும்
நாங்கள் இருப்போமா
நன்னிலத்தின் காவலராம்
எங்களுடைச் சந்ததிக்கேனும் இதன்
வேரடியில் வாழ்வு சிலிர்க்கட்டும்.

19.09.1993



காற்றே.....

வழமையைப் போலவே
பிசிறேறிய வார்த்தைதானுமில்லை பிச்சையிட
பிறகேன் அலைகிறாய்
வெறுமை குலுங்கும் பாத்திரத்தோடு.

இடிந்துபோய்க்கிடக்கிற கோயிலின் சிலையாய்
திசைமுகம்நோக்கி இந்தக் கிராமமே
இருகையேந்தி நிற்கிறது.
இந்தலட்சணத்தில
வாசல்தோறும் வந்திரந்து திரிகிறாய்.
வரவேற்பு உபசாரம் அல்ல
வல்லடிவசைகூட உனக்கில்லை.

வாயைமூடிக்கட்டியவாறே
மாரிக்கிணற்றில் ஓசைப்படாதிறங்கி
தற்கொன்ற முதியவர்க்கும்
உன்மீதிருந்த வன்மத்தைப் பார்த்தாயா?
என்னதான் இரந்தும்
ஒரு ஒப்பாரிதன்னும் பெறமுடியாமற் போனமுன்றலில்
அந்திரெட்டி சடங்கெனும் ஆரவாரங்களும்
அற்றுப்போன பின்னாலும் ஏன் வளையவருகிறாய்

ஓர் அந்நியன்போல விலகிச்செல்ல முடியாமல்?

பருக்கைகளுக்கு ஆலாய்ப் பறக்கிற காக்கைகளும்
நக்குத்தீனுக்குச் சண்டையிடும் நாய்களும்
சீந்தாத முற்றத்தில்
பூனைவால் மிருது காட்டிப் புகுந்து தடவுகிறாய்.

"சூய்"யென்று விரட்டுகிற சொல்லும் தெறிக்காத
சூனியத்திலிருந்து தொட்டெடுத்துப் பாத்திரப்படுத்தக் கூடியதாய்
ஒரு பருக்கையும் இல்லாது போனமை சோகம்தான்
என் செயலாம்?

இந்த சந்தி விருட்சத்தைப் பார்த்தாயா
முந்தியெல்லாம் நிழலுக்கு ஒதுங்கவரும் மனிசரிடம்
நேசபாவத்தோடு விசிறிக் கொடுத்தவாறே
குசலம் விசாரிக்கும்,
வித்துயிர்த்த காலத்திலிருந்து வேரூன்றிப் பந்தலாய்
வியாபித்த நாள் வரைய வரலாற்றை விபரிக்கும்.
இன்றோ நிழலுக்கு ஒதுங்கவும்
நேச பாவத்துறவு கொள்ளவும் மனுவின்றிப் போக
நினைவுகளைச் சருகுதிர்க்கும்
வெற்று வெளியில் விரல் கிளைத்திட தற்புலம்பும்
மொட்டைக் கனவுகளை முணுமுணுக்கும்.

காற்றே நீயும் போ
நெடுநாள் நினைவுகளைக் கோதிக் கோதி
முடியைப் பிய்த்துக் கொள்ளும் மனிசரைப் போல
சருகுதிர்த்த நினைவுகளைக் கிளறிப்பார்
உருவெழுந்தால் கொடுக்கை வரிந்துகட்டியந்த
ஒற்றைப் பனையின் சிரசைப் பிடித்துலுப்பு
உன்மதத்தம் குறைந்ததென்றால் கீழிறங்கி வா
போக்கிழந்து கிடக்கின்ற தெருவின்
புழுதியை ஊதி ஊதி
உறவுகளின் சுவடிருந்தால் தேடுவோம்
நீயும் நானுமாய்.

9.10.1993



இலையுதிர்காலத் தேய்பொழுதில்


முற்றத்து வேம்பின்
முறுகப் பிணைந்த வேர்கள்
மேலெழத் திரண்ட மிடுக்கில் அமர்ந்தபடி
எடுத்துவிடுகிறான் எந்தை ஒருபாட்டு.

முழுநிலாக் காய்ந்தபடி
நீள விரித்த களப்பாயில்
சூடடித்த நெல்லின்னும் தூற்றாமல்.

காற்றெழட்டுமெனக் காத்திருந்த இடைவெளியே
பாட்டெழவும் அதைப் பண்ணோடு வாங்கியவர்
தம்பங்குக்கு வாய்திறந்து
கூட்டுக்களி இசைக்கையிலே காற்றுவரும்.

"குல்லத்தை எடுங்கள்" குரல் கேட்டதும்

கோலியெடுத்த நெல்லை
காற்று வளமாய் நின்று தூற்றத் தொடங்கினார்
கொட்டும் பொன்னருவியென
குதூகலநெல்மணிகள் ஓசையிட
நிறைமணிச் சொல்லெடுத்து
தூக்கிய தமிழின் பாட்டும் தொடர்ந்திசைய
கூட்டிசைந்த வாழ்வின் கொள்கலமாய்
நேற்றெலாம் நிரம்பி வழிந்ததிம்முற்றம்.

பொலியோ பொலியெனப் பொலிந்த
பூமித்தாயின் பூரிப்பை பொங்கலிட்டு
பகிர்ந்துண்ட வாழ்வின் முதிசக்காரரான எம் முந்தையோர்
ஆனந்தத்தை குடியமர்த்தி வைத்துப்போன
அதே முற்றத்திலேதான்
இன்றும் நான் நின்று கொண்டிருக்கிறேன்.
ஆயினும்,
ஒற்றையாய்
உறவிலியாய்,
சுற்றஞ் சூழவிருந்த வாழ்வை
தொலைத்துவிட்ட வறியனாய்.

என்னைப் போலவே தான்
கைவிடப்பட்ட இக்கிராமமும்
முதுமையின்பாலையில் பெருமூச்செறிந்தபடி.

நெற்றிப்புருவத்தின் நெருக்கம்போல்
இன்னும் அந்நாளின் நிகழ்வுகள்
நினைவுகள் இன்னும் காய்கின்ற
நெல்மணிகளெனச் சூடாறாமல்

எனினும் கண்காள் காண்மின்களோ
முந்தைப் பொலிவெலாம் இழந்த முற்றம்
கூட்டிசைந்த வாழ்வின்
கொள்கலமாய் இன்றில்லை.

கொள்ள, கொடுக்க குலுங்க, கலகலக்க
வாழ்வின் சுவையை மொள்ள முடியாத
ஒட்டுவிட்ட பாத்திரனாய்
நானிங்கு
எதனுடை முதிசக்காரன்?

வாழ்வுதிர்ந்த வற்றல்மரம்
முற்றுஞ் சருகுதிர்க்க
இன்றெங்கள் முற்றத்திலே இலையுதிர்காலம்.

இதோ காற்று வருகிறது
இலையுதிர்காலக்காற்று
சருகுகளின் உலர்ந்தமொழிபேசி.

முன்னைப்போல் பதந்தூக்கிய பாட்டோசை,
ஏற்ற இறக்கங்களோடு இசைக்கூப்பாடாய்
குழைகின்ற குரல்கள்,
குத்தல், இடித்தல், கொழித்தல், புடைத்தலென
கிராமத்து வாழ்வின் படைப்போசை எவையுமின்றி
பசையற்ற பாலையின் புடைபெயர்வாய் அலைகிறது.

பூமியைப் பிணமெரியும் காடாய் தகிக்கவிட்ட
கொள்ளிக்கண் சூரியனார்
நீரினுள்மூழ்கி நினைப்பொழிய
சுடலைப் பொடியெடுத்துத் தூவினாற் போலெங்கும்
நரையிருள் மேவ
அடிவானின்
புதைக்குழிக் கீழ்
கரிய படையெடுப்பிற்கு காத்திருக்கும் இருள்.

தூரத்தே
புலம்பெயர்ந்து வரும் அகதியின்
நெற்றிச்சுருக்காய் நெரியும் நிலாச்சோகை
பனையிடுக்கிடை எதையோ எட்டிப் பார்க்கும்

உடைந்து கிடக்கிறது கொள்ளிக் குடம்
உமியின் கரிச்சட்டி ஒருபுறம்
ஒரு நெல்லுப்பொரியும் விடாமல் பேய்கள்
கொறித்து முடிக்க கிடந்ததொரு வெற்றுப்பெட்டி.

வாழ்வின் கொள்கலங்களும் இவ்வாறு
சுடலைக்கே பாத்திரமாய்ப் போக
நானிங்கு எதனுடை முதிசம் காக்க?

யாரும் பிச்சையிடமாட்டாததொரு மலட்டுத் தெருவில்
எல்லாவழிகளும் மயானத்திற்கே
இட்டுச் செல்வதாய ஒரு சந்தியில்
உயிர்வழிந்தோடும் பாத்திரமொன்றைக் கையளித்துவிட்டு
காலம் நகர்கிறது ஊன்றுகோலையும் பறித்துக்கொண்டு.

அரைக்கசைத்திருக்கும் கந்தல் நழுவவும்
பதறாது நொய்ந்துபோன கையனாய்
கைதவறிய சாவிக்கொத்து கதறியபோதும்
கேளாச் செவியனாய் நானிங்கு.

ஆயினும்,
வரண்டு போன உதடுகளை ஈரப்படுத்த
நாவெழாநிலையிலும
வாழ்வூற்றின் அடி ஆழத்தில் எங்கோ,
நீருறிஞ்சத் துடிக்குமென்
உயிரின் வேர்முனைகள்.

நீருறிஞ்ச நீருறிஞ்ச
செவியுதறும் இலைதழைகளென
எனதுணர் விழிகள் பரபரக்கும்.

யாரங்கே-
ஊடுபத்திப் போகுதொரு உயிர்
ஒரு கணம் சுடர் தழைய
தேவாரம் மொழி பாடுக-

வாழ்வூற்றின் கேணிப்படிக் கட்டிருந்து
கேவிக் கேவி
கேட்கும் ஒரு பாடுகுரல்.

"தோடுடைய செவியன் விடையேறியோர்
தூ வெண் மதி சூடி...."

இதோ காண்மின்
கடுக்கன்சிரிப்போடு எந்தை கால்மாட்டில்
பாம்படச்செவியாட என்னம்மை தலைமாட்டில்
மாண்டுபோன சுற்றம் புடைசூழ.....

"ஏடுடைய மலரான்உனை நாட்பணிந்து
ஏத்த அருள் செய்த...."

ஏட்டைப் புரட்டி என்கணக்கைப் பார்த்த
காலக் கணிதன்
முனைமடித்த பக்கத்தை மூடிவைக்க

"பீடுடைய பிரமாபுரம் மேவிய..."

தோணிபுரத் தீர்த்தங்கரையில்
சிறுவிரல் சுட்டிய திசையைப்பார்த்தவாறே
பனித்த கண்ணிமைகள் மூட
சிறுவிக்கல் - அவ்வளவே

"காடுடைய சுடலைப் பொடி பூசியென்..."

08.05.1994




காயப்படுத்தப்பட்ட தேவதைக்கு



கண்முன்னாலேயே
கொள்ளைபோகிறது கிராமம்.
விழிகளை இறுக மூடிக்கொண்டிருப்பதாய்
பாவனை செய்தாக வேண்டும்.

இன்று மாலையும்
படையினன் ஒருவன் வீசிச்செல்கிறான்
உடைத்தபெட்டகம் ஒன்றின்
ஒடிந்தகாலை.

கிராமதேவதையின் அணிகலன்கள் யாவுமே
களவாடப்பட்டு விட்டன.
ஒற்றைச்சிலம்பும் இவள் உடைமையாயில்லை.
பறிபோயின
பேச்சொலியும், கைவளையோசை வீச்சு நடையும்
பிறைநுதற் திலகமும்
அந்நியன் கைப்பட்டழிந்ததெனவாயிற்று.

சந்திவிருட்சங்களின் கீழே
இவளின் இதயஒளிர்வாய விளக்குகள் எரிவதில்லை
குந்தியிருந்தழுகிறாள் குமையும் இருள் நடுவே.

வல்லிருளின் ஆட்சி,
வழிப்போக்கிலும் இருள்தான்
வாழ்விடங்கள் எங்கும் இருள்.

பில்லிசூனியத்தில் பீடழிந்தனவாய் மனைகள்
எங்காவது ஓர் இடுக்கிடை
எட்டிப் பார்க்கின்ற ஆவிகள் போல
வாழ்வுறிஞ்சப்பட்ட வற்றல்மனிதர்.

எப்போதாவது
வீதிக்கு வருவார்கள்
கட்புலனாகா விலங்குகளுடன் இழுபடுபவர்களாய்.
ஒவ்வோர் சனிக்கிழமையும்
நிவாரணத்திற்காகக் கூடும் இவர்களைக் காணின்
விரத காலத்துக் காக்கைகளின் நினைவெழும்
ஆயினும்
கரைதல் இலாது
பொதிசுமந்து செல்வார்கள்
இன்னும் பிரதோஷம் நீங்கப்பெறாத விரதகாரராகவே.


வாசலிலே
பரபரத்தவாறே வரவேற்கக் குரல்இராது
பொதி இறக்கி வைக்கையிலே
பிதுங்கி வழிகின்ற துயரப்பெருமூச்சை ஆர்கேட்பார்?

பொங்கி வைத்தாறிய சோற்றின் பருக்கைகளுள்
தொலைந்துபோன வாழ்வினைத் தேடிடும் விரல்களிலோ
பிசைபடும் பழைய நினைவுகள்.

எடுத்திட்ட கவளமும் முட்களாய் இறங்க
நெஞ்சு நிரம்பவும் கீறல்கள், கிழியல்கள்
காயப்படுத்தப்பட்ட நினைவுகளில்
கண்பிளக்கும் புண்கள்
புண் உமிழ் கசிவுகள்.
கட்டிபட்ட ரணமாய்
உள்ளே அனல் கொதிக்கும்.

கொதித்தென்ன? குமுறியென்ன?
பட்டகாயங்களின் குருதிவாடையும் தெறிக்காத
வார்த்தைகளோடு குரல்வளையை
காத்தாக வேண்டும்.

தாயே கிராமதேவதா,
கொலுவிழந்தாய்
கொலுசின் குரலிழந்தாய்.
முள்ளில் அழுந்தும் நின்பாதநோவுகள்
எனது மெல்லிதயத்துள் விம்மும்.

எனினும் என் விசனமெல்லாம்
முட்கள் குறித்தோ
முட்களை விதைத்தவர் குறித்தோ அன்று.

பாவனைகளின்றி
நோவுண்டபாதங்களில்
எதைக் காணிக்கையாக்குதல் என்பது பற்றியது.

மௌனமாய்
வார்த்தைகள் அலம்பாத எம் வாசலருகே
வந்து போயேன்
கண் நீரலித்த மண்
நின் காலடிகளுக்கு ஒத்தடமாய் இருக்குமெனின்.

10.08.1994



இறக்கையால் எழுதியது


சொல்லித்தானாக வேண்டும்
தத்தெடுப்பாரின்றி தனித்துப் போய்விட்ட எம் தீவுகளைப்பற்றி.

சஞ்சீவி மலையை அனுமன் காவிச்செல்கையில்
கடலிடைச்சிந்திய துண்டங்களாம்
இத்தீவுகளைக் கவனியாமலேக
கரைசேராத் திட்டுகளாய் தனித்திருந்தழுதனவாம்.

கைவிடப்பட்ட துண்டங்களை கரைசேர்க்க யாருமில்லை.
சஞ்சீவிமலையினின்றும் தூரித்த தீவுகளானோம் நாம்.

சஞ்சீவி மலையின் துண்டங்கள் நம் தீவுகள் என்றால்
விண்ணெழுந்து ராவணனைப் பொருதிய ஜடாயுவின்
துண்டாடப்பட்ட இறக்கைகளாய் நாம்

வெட்டுண்டோம்; வீழ்ந்தோம்
கடல்வெளித் தனித்தலைகிற மிதவைகளாய்
எக்கரையுமற்று எற்றுப்படுகின்றோம்.
ஆயினும்
வீழுமுன் விண்ணெழுந்து பொருதிய ஞாபகம்
வெட்டுண்ட இறக்கைகளுக்கு இல்லையெனலாமோ?

சஞ்சீவி மூலிக்காற்றே வா
வெட்டுண்ட இறக்கைகளுக்கு உணர்வின் தைலமிடு
எழுந்து பறந்ததாக வேண்டும்
எம் முந்தைப் புலம் நோக்கி
வெட்டுண்டு வீழுமுன் வீடிருந்த உச்சிப்புலம் அது.

இறந்தாரை எழுப்பும் சஞ்சீவி கொணர
அனுமனும் இங்கில்லை.
இராமர்அணையும் கடலுள் அமிழ்ந்தாச்சு
எம்முயிர்த்துவமே சஞ்சீவியாக
எழுந்து பறந்தாகத்தான் வேண்டும்.

19.09.1994



கிழிந்ததன் நகலாய்

கடிதம்கண்டேன்.
கிழிந்துபோன வாழ்க்கையின் நகலாய்.

எண்ணெய்பிசுக்கேறிய காகிதத் துண்டில்
பழைய பற்றுவரவேட்டில் கிழித்தெடுத்ததாயிருக்க வேண்டும்.
பாதி பேனையாலும், பாதி பென்சிலாலும் எழுதப்பட்டிருந்த
நலம் விசாரிக்கும் வரிகள்
என் கைகளில் நடுங்கின.

பிசுக்கில் பதிந்திருந்த பெருவிரல் ரேகையை
உருப்பெருக்கிப் பார்ப்பதென
எழுதப்படாத துயரங்களை வரைபடம் போடுகிறது மனம்.

பிரச்சினைகளின் பூதாகாரத்துள்
கீச்சிடலுமின்றி சிறுபூச்சிகளாய் நசித்துக் கிடக்கும்
துயரங்கள் உங்களுக்குள்ளும்தான்; எங்களுக்குள்ளும்தான்

நாலுதிக்குக்கொரு உடைவாகிப்போயின நம் உறவுகள்
ஆயினும் அதிசயம்தான்
நாமும் உயிர்கொண்டு ஊர்கின்றோம்
காலொடிந்த நண்டினைப் போல்.
கரைதான் தென்படவில்லை.
தென்படுவதாய் தெளியும் பொழுதெல்லாம்
திசைமுகத்தில் பீச்சியடிக்கும்
கணவாய்மைபோலும் கறை.

கறைபடிந்த துயரத்தின் நடுவே
நாளும் நாளும் காணாமல் போகிறோம்;
இல்லையா?

இருகரையும் துயரெறிகை
உங்களைப் போலவேதான் எங்களதும்
எங்களைப் போவேதான் உங்களதும்
திரையெறியும் துயரம் இருகரையிலும்தான்.

அன்றோர் காலை
நாவெண்டாமுனையில் மீன்வாங்க நின்றிருந்தோம்
அக்கரையின் வான்பரப்பில் இரைச்சலோடு எழுந்து பறந்தன
இயந்திரப் பறவைகள்; குண்டு பீச்சிகள்.

கொட்டடிப் பக்கமாய்
கொழுந்துவிடடெரியுதென்றார்
பக்கத்தில் நின்றிருந்த முதியவர்
திசைமுகம் புகைமண்டலமாய்த் தெரிந்தது எமக்கு.
குருதிபடிந்த காலையாயிருந்திருக்கும் உங்களுக்கு.

பதறியவாறே வீட்டிற்கு வந்து
"குரலை" முறுக்கினேன்
சற்றுமுந்திய செய்திகளின்படி கொட்டடியிலும், கச்சேரியடியிலும்
குண்டு வீச்சென்றார்
சேத விபரம் தெரிந்தபின்னால் தான்
சிறிது மூச்சுவிட்டேன்.

இப்பாலிருந்து
மண்டைதீவின் பீரங்கிகள் முழங்கும் போதெல்லாம்
எங்கள் நெஞ்சு பதறும்
குண்டுவீச்சின் போதெல்லாம்
எங்கள் வீட்டின் நிலைக்கதவுகள், சன்னல்கள் மட்டுமல்ல
கூடவே எமது உணர்வுகளும் அதிர்வுறும்.

உற்றதுயர் சொல்லியழ
உரத்துப் பேச
ஒரு மனுவில்லாத் தனிக்காட்டில்
சிறகொடுக்கி குரலொடுக்கி
சீவியத்தைச்சிறைப்படுத்தி
பாடாய்ப்படுத்துகிற பாழும் மனத்தோடு போராடி
கிழிந்துபோன வாழ்வின்
இக்கரை நகலாய் நாங்கள்

எங்களதைப்போலவேதான் உங்களதும்
உங்களதைப்போலவேதான் எங்களதும்

யுத்தமுனைகளால் கிழிக்கப்பட்டு
குருதிப் பிசுக்கேறிப்போன வாழ்வின்பக்கங்களில்
எழுதப்படுமா ஒரு நற்செய்தி?

தெளிவற்றதாயிருக்கும் உங்கள் கடிதத்தின் வாசகங்கள்
மீண்டும் ஒருமுறை குரல்வழியாய் நடுங்குகின்றன.

எல்லாமே தெளிவற்றிருக்கிறது
ஆயினும்
ஒரு தீக்குச்சி உரசலின்
சிறு நம்பிக்கைத் துளியில் தெரியவரும் நற்செய்திக்காய்
காத்திருத்தல் மட்டும் தொடரும்.

காத்திருப்போம்
எல்லாத் துயரங்களின் நடுவிலேயும்.
தீக்குச்சியிலும் ஈரம்படிந்துவிடாதவாறு காப்போம்.

12.10.1994




வேற்றாகி நின்ற வெளி

வெளியாரின் வருகையோடு
வேர்கொண்ட வாழ்வையும் பிடுங்கிக் கொண்டு
மக்களெல்லாம் வெளியேறிய ஓரிரவிற்குப்பின்
விடியப் பார்த்தால்
வாழ்வெனும் வெள்ளம் வற்றிக்கிடந்த திடலாய்
கிராமம்.

முற்றத்துச்சூரியன்
முற்றத்து நிலா,
முற்றத்துக்காற்றென
வீட்டுமுற்றங்களுக்கே உரித்தான
வாழ்வனுபவங்கள் விடைபெற்றுக் கொண்டன.

வேலிகளை வெளியார் வெட்டிப் போட்டார்கள்.
வாசல் கதவுகளை உடைத்துப் போட்டார்கள்.
உள்ளத்தையெல்லாம் கொள்ளையடித்தார்கள்.
வீடுகள் திறந்தபடியே கிடந்தன.

திறந்த வாசல்களூடே நுழைந்த காற்று
கதவுகளை சாத்தியும், திறந்தும், தள்ளியும்
உள்ளோடியோடி எதையெதையோ முயன்று
உறவின்மை கண்டபின் தோற்றோடி
வேற்றாகி நின்ற வெளியிடைத் தோய்கிறது.

வெளிகொண்ட காற்று
வெளிகொண்ட நிலா
வெளியை வெறிக்கின்ற சூரியன்.

வெளியிடை வெறித்த பார்வையோடு நிற்கிறேன்
ஏதோ மோப்பம் பிடிக்குமாப்போல்
மெல்லனவந்த காற்று
விலகிச் செல்கிறது ஒரு வேற்றானைப் போல.

விழிகளைப் பெயர்க்கிறேன்
வேற்றாம்பார்வை என்னிலும் தொற்றியதோ?
விலகல
மெல்ல விலகல்; மேலும் விலகல்.
விட்டு நீங்கும் கப்பற்துறை வரையும்
விலகி வந்தாயிற்று கடைசியாய்.

காற்று மோப்பம் பிடித்தது சரிதான்.

இதோ கப்பல் நகர்கிறது
கனத்துக கிடக்கும் இதயச்சுமையையும் தாங்கியவாறே.

விலகிச் செல்லும் துறைமுகம்
வழியனுப்பவும் வாராதிருந்த முதியவரின் சோகத்தை
அப்பிக் கிடந்ததென.

தூரத்தே
புகார் மூட்டமெனத் தெரியும் பனைகளுக்கு அப்பால்
வேற்றாகி விண்ணாகி நின்ற வெளியுள்
குமைகிறது காற்று

3.2.1995


நிகழ்கிற வரலாற்றைத் தவிர்த்து எழும்
அதி மனோரதிய சோடனைகளே வாழ்வனுபவம் என
நம்பவைக்கும் முரட்டுப் பிரயத்தனங்களின் முன்
சு. வில்வரெத்தினம் போன்றவர்களின் கவிதைகள்
தனித்து நிற்கின்றன. வாழ்க்கையைப் பேசுகிற
கவிதைகள் என்ற வகையில் இத்தொகுப்பு மிகுந்த
கவனத்துக்குரியதாகிறது.


** காற்றுவழிக் கிராமம் - முற்றும்**


----------------------------------------------------------