கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சு வழக்கு  
 

சி. வன்னியகுலம், எம்.ஏ.

 

ஈழத்துப்
புனைகதைகளிற்
பேச்சு வழக்கு

சி. வன்னியகுலம், எம்.ஏ.

வெளியீடு:
முத்தமிழ் வெளியீட்டுக் கழகம்
யாழ்;ப்பாணம்
1986

முதற் பதிப்பு: 1986-06-25

உரிமை. திருமதி பர்வதாமணி வன்னியகுலம், டீ.யு. (ர்ழளெ)
‘மணிமாளிகை’
அல்வாய் தெற்கு
அல்வாய்

COLLOQUIAL USAGE IN SRI LANKA TAMIL FICTION
by
S. VANNIYAKULAM. M.A.


சாதாரண பதிப்பு:
விலை ரூபா 25.00

நூலகப் பதிப்பு
விலை ரூபா 30.00

Publishers:
Muththamizh Veliyeeddu Kazhgam, Jaffna.

Printers:
Aseervatham Press, 50, Kandy Road, Jaffna.


காணிக்கை
ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காகத்
தமது எழுத்தையும் வாழ்வையும்
ஆயுதமாக்கிய அமரர்
கே. டானியல் அவர்களுக்கு


பேராசிரியர் சு. வித்தியானந்தன்
துணைவேந்தர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

ஆசியுரை
இலக்கியம் மொழியாலானது. இலக்கியத்தைத் திறனாய்வு செய்பவர்கள், அதற்கு அடிப்படையாக அமையும் மொழியினையும் விமரிசனம் செய்வது பயனுள்ள நெறியாகும். அத்தகைய பயனுள்ள ஆய்வு நெறியினை மேற்கொண்டவர் திரு. சி. வன்னியகுலம். முதுகலைமாணிப் பட்டத்துக்காக அவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குச் சமர்ப்பித்த ஆய்வேடு யாழ்ப்பாணம் முத்தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் ஆதரவில் நூலாக வெளிவருவதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குச் சமர்ப்பித்த ஆய்வேடுகளுள், திருமதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்களுடைய சி.வை. தாமோதரம்பிள்ளை ஓர் ஆய்வு நோக்கு என்பதே முதன்முறையாக நூல்வடிவம் பெற்றது. அதைத் தொடர்ந்து, திரு. வன்னியகுலத்தின் ஆய்வேடு தற்போது நூல்வடிவம் பெற்றுள்ளது. இரண்டுமே முத்தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் வெளியீடுகளாயமைந்தமை இங்குக் குறிப்பிடற்பாலதாகும்.

திரு. வன்னியகுலத்தின் ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சு வழக்கு என்னும் இந்நூல் நான்கு இயல்களைக் கொண்டமைகின்றது. முதலாவது இயலிலே இலக்கியத்துக்கும் மொழிக்குமுள்ள தொடர்பு பற்றியும், பேச்சு மொழியின் முக்கியத்துவம், ஈழத்துப் பேச்சுவழக்கின் பொதுப் பண்புகள், அவை இந்தியப் பேச்சுவழக்குடன் வேறுபடும் தன்மைகள் ஆகியன பற்றியும் விரிவாகவும் விளக்கமாகவும் கூறப்பட்டுள்ளன. இரண்டாவது இயலிலே ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்குக் கையாளப்பட்ட வரலாறு கூறப்பட்டுள்ளது. மூன்றாவது இயலிலே பிரதேசக் கிளைமொழிகள் எவ்வாறு அவ்வப் பிரதேசங்களில் எழுந்த புனைகதைகளிலே கையாளப்பட்டுள்ளன என விவரணஞ் செய்யப்பட்டுள்ளது. நான்காவது இயலில், எத்தகைய புனைகதைகளுக்கு எத்தகைய கிளைமொழி உபயோகிக்கப்படவேண்டுமென ஓரளவு வரையறை செய்யும் ஆசிரியர் தான் தரவுகளாகக் கொண்ட புனைகதைகளிலே அவற்றின் உபயோகம் எவ்வாறமைந்துள்ளது என்பதை விமரிசிக்கின்றார். அத்துடன் பேச்சு வழக்கினை இலக்கியத்திலே கையாளுமிடத்து எழுத்தாளர்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகளும் தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளன.

ஈழத்துப் புனைகதைகளின் மொழி என்னும் புதிய விடயத்தை, வேண்டிய தரவுகள் - சான்றாதாரங்கள் ஆகியவற்றுடனும், ஆய்வு மனப்பாங்குடனும், நுணுகிய நோக்குடனும் இந்நூலிலே தந்துள்ள ஆசிரியரைப் பாராட்டி அவருடைய இந் நூலுக்குத் தமிழ் கூறும் நல்லுலகம் ஆதரவு நல்கும் என எதிர்பார்க்கின்றோம். நூலாசிரியருக்கு என்னுடைய ஆசிகளை வழங்குவதுடன், இந்நூலை வெளியிட்டுவைக்கும் முத்தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் பணிமேலும் வளர்ச்சியடைய வாழ்த்துகிறேன்.

அறிமுகவுரை
ஈழத்துப் புனைகதைகளின் வளர்ச்சி முற்போக்கு இலக்கிய வளர்ச்சியுடன் தொடர்புடையதாகவே காணப்படுகின்றது. இந்தியாவுக்குக் கிடைத்த சுதந்திரச் சலுகைகள் இலங்கைக்கும் 1948ல் கிடைக்கப்பெற்று நேரடியான காலனித்துவ ஆட்சிமுறை மறைந்தபோதும் மறைமுகமான காலனித்துவ ஆட்சிமுறை தொடர்ந்து இருந்துவந்தது. இதனால் மக்களிடையே தேசிய விழிப்புணர்ச்சி பாரதி போன்ற பல்வேறு அறிஞர்களால் ஏற்படுத்தப்பட்டது. இதன்விளைவாகவே 1950 ற்குப் பின் எழுந்த புனைகதைகள் புதுமை தழுவி அமைய ஏதுவாயிற்று. பாரதியைப் பின் பற்றி யாவரும் விரும்பும் எளியநடையில் இலக்கியங்கள் அமைந்தமையாலும் மக்களின் தேவையை முன்வைத்து எழுதப்பட்டமையாலும் அவை ஜனரஞ்சகப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டன.

புனைகதைகள் கதைமாந்தரை இயல்பான பாத்திரங்களாக நடமாட வைப்பதன் மூலமே சமூகச் செல்வாக்கைப் பெறுகின்றன. இப்பாத்திரங்களின் உரையாடல்கள் கதாபாத்திரங்களுக்கும் அவர்கள் வாழும் சமூகங்களுக்கும் இடையே உள்ள பின்னிப்பிணைந்த உறவைக் காட்டுவனவாக இருப்பது மிக அவசியம். இலக்கியங்களில் தேசிய உணர்வும் பிரதேசப் பற்றும், இனத்தனித்துவங்களும் பேணப்படுதல் இக்காலப் புனைகதைகளின் போக்காக உளது. கதைமாந்தரைச் சாதாரணமாக உலாவவிட்டு அன்றாடப் பேச்சுவழக்கில் அவர்களுடைய உரையாடலை அமைப்பதனாலேயே மேற்கூறிய கோட்பாடுகளடங்கிய யதார்த்த இலக்கியங்கள் வெளிவரச் செய்யலாம்.

‘பேச்சுவழக்கு’ என்பது ‘கொச்சையானது’. ‘இழித்தது’, ‘மொழியின்பாற் படாதது’. ‘கொடியது’ என்ற கருத்து. பண்டைக்காலமுதல் கற்றோரிடத்தும் கற்றோரின் தத்துவ ஊடுருவல்களால் சாதாரண மக்களிடத்தும் காணப்படுகின்றது. இதனைத் தொல்காப்பியரிடத்தும் அவரது உரையாசிரியர்களிடத்தும் ‘செந்தமிழ் - கொடுந்தமிழ்’ என்ற பாகுபாட்டிலிருந்து அறியமுடிகின்றது.

மொழியியல் துரித வளர்ச்சியை அடைந்த இந்த யுகத்திலே, தாய்மொழியிலாயினும் வேற்றுமொழியிலாயினும் பேச்சுமொழியின் முக்கியத்துவம் பல நாட்டு மக்களால் உணரப்படும் இக்காலகட்டத்திலே, நமது நாட்டில் பாடசாலை நூல்களிற்பேச்சுமொழிப் பிரயோகம் காணப்படதமை வினோதமானதன்றோ! ஆறாம் வகுப்பிற்குரி தமிழ்ப் பாட நூலிலே பேச்சுமொழி அறிமுகப்படுத்தப் பட்டிருப்பினும் அந்நூலிற்கூட ‘உரையாடல் மொழி’ எழுத்து வழக்கையே கொண்டிருப்பது கவலை தருவது. தமிழிற் பாடநூல்களை எழுதுவோரிடம் காணாத இவ்வுணர்வு மொழியியலையே கற்கைநெறியாகக் கொள்ளாத திரு. சி. வன்னியகுலத்திடம் காணப்படுவது அவரைச் சிறந்த ஸ்தானத்திற்கு உயர்த்துகின்றது இவரது ‘பேச்சுமொழி’ பற்றிய சிந்தனையிற் தெளிவான பாதையைக் காட்டிவைத்த பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களின் திறமையும் பாராட்டப்பட Nவுண்டியதாகும். தமிழ் இலக்கியத்திலும் மொழியியலிலும் பேராசிரியர் சண்முகதாஸ் கொண்ட புலமை இலக்கியங்களில் பேச்சுவழக்கின் முக்கியத்துவம் பற்றிய தெளிவான கருத்துப்போக்கினை வன்னியகுலம் விளங்கிக்கொள்வதற்கு ஏதுவாயிற்று. ‘புனைகதைகளிற் பேச்சுவழக்கு’ப் பற்றி ஆராய முற்பட்ட வன்னியகுலம் பொருத்தமான வழிகாட்டியைத் தேர்ந்தெடுத்தமையும் அவருடைய கூரிய சிந்தனைத் திறனைக் காட்டுவதாயுள்ளது.

பாடசாலைக் கல்வியை ஒன்றாகப் பயின்ற காரணத்தால் வன்னியகுலத்திடம் இளமைதொட்டே காணப்பட்ட ‘வாசிக்கும் ஆற்றலை’ நினைவு கூர்கின்றேன். முற்போக்கு இலக்கியக் கூட்டங்களிலெல்லாம் வன்னியகுலத்தையும் காணலாம். இளமையிலிருந்தே இலக்கியங்களைச் சுவைப்பதிலும், விமர்சிப்பதிலும் ஆர்வமிக்க இவர் அவ்வார்வ மிகுதியால் மேற்படிப்பையும் விமர்சனத்துறையிலேயே மேற்கொண்டுள்ளார். மொழியியலில் நாட்டம் காட்டும் வன்னியகுலம் மொழியியலிற் குறிப்பாகச் சமூக மொழியியலில் தெளிவான விளக்கத்தைப் பெற்றுக்கொண்டால் ‘பேச்சுவழக்குத்’ தொடர்பாக தர்க்கரீதியிலமைந்த ஆணித்தரமான கருத்துக்களை மொழி விமர்சனத்தில் கூறிவிட முடியும்.

எப்பிரதேசத்தை மனதில் வைத்து இலக்கியம் எழுதப் படுகின்றதோ அப்பிரதேசத்தின் பேச்சுவழக்கு அவ்விலக்கிய உரையாடலிலே பிரயோகிக்கப்படுதல் வேண்டும். இவற்றைப் படிப்பதன் மூலம் பிரதேச மொழிவழக்குகளை ஏனைய பிரதேச மக்களும் அறிந்துகொள்ளும் ஆற்றலையும், புரிந்துகொள்ளும் மனோபாவத்தையும் பெற்று விடுகின்றனர். இந்நூலின் மூன்றாவது இயல், கதைகளிற் பிரதேச தனித்துவத்தைப் பிரதிபலிக்கும் மொழிவழக்குகளைப் பற்றியும் அவற்றைக் கையாளும் ஆசிரியர்களின் சிறப்பையும் துலக்கமாகக் காட்டுகின்றது. மக்களின் வாழ்க்கை முறையிற் காணப்படும் பிரதேச வேறுபாடுகளை மொழிவழக்குகள் பிரதிபலிக்குமாற்றை இங்கே அறிந்து கொள்ளலாம்.

1950ன் பின் எழுந்த புனைகதைகளிற் காலத்தால் முற்பட்டனவே உரையாடலின்போது உயர்வழக்கு (ர்iபா ஏயசநைவல) தாழ்வழக்கு (டுழற ஏயசநைவல) ஆகிய இரு வகைகளையும் கொண்டுள. உயர் வழக்கு என்பது படித்தவர்கள் சம்பிரதாய பூர்வமான சில சந்தர்ப்பங்களிற் பயன்படுத்தும் வழக்கு ஆகும். தாழ்வழக்கு என்பது படித்தவர்களாலும் படியாதவர்களாலும் பயன்படுத்தும் வகையாகும் படியாதோர் இவ்வழக்கையே எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்துகின்றனர்: படித்தோர் இவ்வழக்கைத் தமது குடும்பத்தவர், நண்பர், வேலைக்காரர் போன்றோருடன் மாத்திரம் பயன்படுத்துவர். சமயபோதனை, கற்பித்தல், சொற்பொழிவு போன்றன உயர்வழக்கில் அமையும். ஆனால் 1950ற்குப் பிற்பட்ட நாவல்களில் காலத்தால் முற்பட்டவை குறிப்பாக அறுபதுகளில் வெளிவந்த முற்போக்கு நாவல்களில் முக்கியபாத்திரங்கள் பாமரமக்களுடன் தத்துவார்த்தத் தொடர்பு கொள்ளும்போது உயர்வழக்கில் தொடர்பு கொள்வதைப் போர்க்கோலம், நீதியே நீ கேள் போன்றவற்றில் காணமுடிகின்றது. இப்போக்கு மாற்றப்படவேண்டியது என்பதை இந்நூலாசிரியர் விளக்கமாக உணர்த்தியுள்ளார்@ உயர்வழக்கையும் தாழ்வழக்கையும் கலந்து பேசும் பாத்திரங்களையும் கண்டித்துள்ளார். இவை ஆசிரியரின் புனைகதைப் பாத்திரங்களின் பேச்சுவழக்குப் பற்றிய தெளிந்த சிந்தனையைக் காட்டுவதாக உள்ளது.

இந்நூல் புனைகதை புனைவோர்க்கும், வாசகர்க்கும் பேச்சுமொழி பற்றிய உணர்வையும் அதன் பிரயோகத் திறத்தையும் பிரயோகச் சீர்கேட்டால் வாசகர்க்கு ஏற்படும் இடையூறுகளையுங் கோடிட்டுக் காட்டுகின்றது.
கலாநிதி பார்வதி கந்தசாமி
மொழி – பண்பாட்டுத் துறை,
யாழ். பல்கலைக்கழகம்,
திருநெல்வேலி,
1986-06-11

வெளியீட்டுரை
1977 ஆம் ஆண்டிலே, ஈழத்து அறிஞர்களுடைய ஆய்வு நூல்களை வெளியிடும் பணியினை முன்வைத்து யாழ்ப்பாணம் முத்தமிழ் வெளியீட்டுக் கழகம் தொடங்கப் பெற்றது. தனது ஒன்பதாவது வயதினை அண்மித்துக் கொண்டிருக்கும் கழகம் இந்நூலுடன் சேர்த்து எட்டு நூல்களை வெளியீட்டுத் தமிழியன் ஆய்வுக்கு உதவி வருகின்றது. தமிழ் நாட்டிலே வெளியிடப்படும் ஈழத்தவரின் நூல்கள் இங்கு எம் கைகளுக்குக் கிட்டுவது அருமையாகவுள்ளது. இந்நிலையை ஓரளவு போக்குவதும், எவரும் அச்சிடுவதற்கு முன்வராத ஆய்வேடுகளை நூல்களாக வெளிக்கொணர முயற்சிப்பதுமே முத்தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் நோக்குகளாகும்.

இன்று வெளியாகும் ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சு வழக்கு என்னும் ஆய்வு நூல் எமது நாட்டிலே 1950ஆம் ஆண்டுக்கும் 1979ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்திலே எழுந்த தமிழ்ப் புனைகதைகளின் மொழியினைத் திறனாய்வு செய்கின்றது. ஈழத்துப் பேச்சுமொழி பற்றி மொழியியல் விஞ்ஞான அடிப்படையிலே ஏற்கெனவே பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாய்வுகளை மேற்கொண்டவர்கள் தத்தம் பேச்சிலே அடிப்படையாகக் கொண்டு அல்லது வெளிக்கள ஆய்விலே தாம் பெற்ற தரவுகளை அடிப்படையாகக் கொண்டே ஈழத்துதுப் பேச்சு வழக்கினை ஆராய்ந்தனர். ஆனால், ஈழத்து நவீன இலக்கியங்களிலே பிரதிபலித்துள்ள பேச்சு மொழியினை இலக்காக வைத்து எவருமே விரிவான ஆய்வினை மேற்கொள்ளவில்லை. இந்த வகையில், இந்நூல், இத்துறையிலே முதன் முதலாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியாக அமையுஞ் சிறப்பினைப் பெற்றுள்ளது.

அன்றியும் இந்நூல் ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சியின் ஒரு முக்கிய காலகட்டத்தின் போக்கினைச் சுட்டுவதுடன். அக்காலகட்டத்து முக்கிய நிகழ்வொன்றின் விவரங்களை ஆவணப்படுத்துவதாகவும் அமைகின்றது. அது இந்நூலின் இரண்டாவது இயலிலே விவரமாகக் கூறப்பட்டுள்ள மரபுப் போராட்டம் பற்றியதாகும். ஈழத்து இலக்கிய வரலாற்றிலும் மொழி வரலாற்றிலும் இம்மரபுப் போராட்டம் ஒரு குறிப்பிடப்பட வேண்டிய நிகழ்வாகும். இம்மரபுப் போராட்டக் காலத்திலே பலரும் தத்தம் கருத்துக்களைப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளியிட்டனர். இவற்றையெல்லாம் தொகுத்து அளித்தது மாத்திரமன்றி, மதிப்பீடு செய்தும் ஆசிரியர் எழுதியுள்ளார். இரு தசாப்தங்களுக்கு முன் நடந்த இலக்கிய மொழி மரபுக் கருத்துப் பரிமாறல்களை ஓரிடத்திலே ஆவணப்படுத்தித் தந்துள்ளமை இந்நூலின் இன்னொரு சிறப்பாகும்.

இந்நூல் ஆய்வுக் கட்டுரை வடிவில் “1950ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட ஈழத்துத் தமிழ்ப் புனைகதைகளிற் பேச்சு வழக்கு” என்னும் தலைப்பிலே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்து முதுகலைமாணித் தேர்வுக்கு 1979இல் சமர்ப்பிக்கப்பட்டதாகும். தற்போது நூல் வடிவுக் கேற்றபடி சில திருத்தங்களும் மாற்றங்களும் பெற்று வெளிவருகின்றது. ஆக, இலக்கிய ஆய்வு தொடர்பான புதியதொரு பரிணாமத்தைத் தோற்றுவிக்கும் ஆராய்ச்சி நூலொன்றினைத் தனது எட்டாவது வெளியீடாக வெளிக்கொணருவதில் முந்தமிழ் வெளியீட்டுக் கழகம் உவகையடைகின்றது.

இந்நூலின் ஆசிரியரான திரு. சி. வன்னியகுலம் கமத்தொழில் திணைக்களத்திலே பணியாற்றி வருகிறார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைமாணிப் பட்டத்தினைப் பெற்ற அவர், அப்பல்கலைக்கழக முதுகலைமாணித் தகுதித் தேர்விலும் சித்தியடைந்தார். பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் நடாத்திய முதுகலைமாணித் தேர்வில் 1979இல் சித்தியடைந்து பட்டம் பெற்றார். தமிழ் இலக்கியங்களைப் படிப்பதிலும் விமரிசிப்பதிலும் ஆர்வங்கொண்ட திரு. வன்னியகுலம் முற்போக்கு எழுத்தாளர்களுடைய இலக்கியங்களை விமரிப்பதிலே அதிக ஆர்வங்காட்டி வந்துள்ளார்.

இந்நூல் வெளிவருவதற்குக் கழகத்தின் பொதுச்செயலர் திரு. க. சொக்கலிங்கம் (சொக்கன்) ஆற்றியுள்ள பணி அளப்பரியது. 1977இல் முத்தமிழ் வெளியீட்டுக் கழகம் உருவாவதற்குக் காரணமாயிருந்தவர் திரு. சொக்கலிங்கம் அவர்களேயாவர். அன்று தொடக்கம் எட்டு ஆண்டுகளாக எட்டு நூல்கள் வெளிவருவதற்கு அவருடைய அயராத உழைப்பும் ஆர்வமும் காரணங்களாயமைந்தமையை இவ்விடத்திலே சுட்டுதல் என்னுடைய கடனாகும். அவர் இந்நூல் பிழையற வெளிவருதற்குப் படிகள் திருத்தியும் ஆலோசனைகள் நல்கியும் உதவியுள்ளார்.

முத்தமிழ் வெளியீட்டுக் கழகம் தோன்றுவதற்குக் காலாயிருந்தோருள் ஒருவரான திரு. மு.வி.ஆசீர்வாதம் அவர்கள் இன்று நம்மிடை இல்லை. எனினும், அவருடைய மகள் திருமதி சமத்தர் அவர்களும். அச்சக முகவர் திரு. றோக் யோசல், அச்சக ஊழியர்களான திருவாவளர்கள் ஆ. கோவிந்தராஜா, ஜெ. சேகர் ஆகியோரும் ஏனையோரும் இந்நூல் செவ்வானே வெளிவருவதற்கு உறுதுணை புரிந்துள்ளனர். அவர்களுக்குக் கழகத்தின் சார்பில் நன்றி கூறுகிறேன்.

தமிழ்த்துறை. பேராசிரியர். அ. சண்முகதாஸ்
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் தலைவர்
திருநெல்வேலி முத்தமிழ் வெளியீட்டுக் கழகம்
யாழ்ப்பாணம்.
1986-06-11


என்னுரை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட முதுகலைமாணித் (எம்.ஏ.) தேர்வின் ஒரு பகுதித் தேவையைப் பூர்த்தி செய்யுமுகமாக எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரை இன்று நூல் வடிவம் பெற்றுள்ளது. இவ்வாய்வுக் கட்டுரை 1979ஆம் ஆண்டு எழுதி முடிக்கப்பட்டு ஏழு ஆண்டுகளின் பின்னர் நூலாக வெளிவருகின்றது.

ஈழத்துப் புனைகதைக்கும் எனக்கும் உள்ள தொடர்பு இவ்வாய்வுக் கட்டுரையை எழுதுவதற்காக மட்டும் வலிந்து மேற்கொள்ளப்பட்ட ஓர் இணைப்பு முயற்சியன்று. இயல்பாகவே புனைகதைத் துறையில் எனக்கிருந்த ஈடுபாடே, முதுகலைமாணித் தேர்வின் பொருட்டு இவ்வாய்வுக் கட்டுரையைச் சமர்ப்பிப்பதற்குத் தூண்டுகோலாயமைந்தது. 1965ஆம் ஆண்டிலிருந்து கணிசமான அளவு சிறுகதைகளை நான் ஈழத்துப் பத்திரிகைகளில் எழுதி வந்திருக்கின்றேன். இவற்றிற் சில அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட போட்டிகளிலே பரிசிலையும் பாராட்டையும் பெற்றிருக்கின்றன.

பட்டப்படிப்பை மேற்கொள்ளத் தொடங்கியபோது இத் தடத்தினின்றும் நான் விலகிச் செல்லலானேன். எதையும் தர்க்க ரீதியாக, இயங்கியல் ரீதியாகவும் ஆராயும் மனப்பக்குவத்தை அக்கல்விமுறை என்னில் உருவாக்கியது. இந்தப் புதிய துறையிலான நாட்டத்தை இனங்கண்டு. அதனை ஆற்றுப்படுத்திச் செழுமைப்படுத்தியவர் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள். 19..4ஆம் ஆண்டுக்காலப் பகுதியில் அவர் இலங்கை வானொலியிலே கலைக்கோலம் நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தார். அந்நிகழ்ச்சிகளிலே ஈழத்து நாவல், சிறுகதை நூல்கள் பலவற்றை விமரிசனம் செய்வதற்கான சந்தர்ப்பங்களை அவர் எனக்கு வழங்கினார். எனது விமரிசன ஆர்வம் அரும்பு கட்டத் தொடங்கியது இக்காலப் பகுதியிலேயே என்பது குறிப்பிடற்குரியது. இவ்வார்வத்தின் காரணமாகவே முதுகலைமாணித் தேர்வுக்கான ஆராய்ச்சிக் கட்டுரையாக ஈழத்துத் தமிழ்ப் புனைகதைகளிற் பேச்சுவகை;கு என்ற விடயத்தை நான் தேர்ந்தெடுத்தேன்.

இந் நூலினைப் படிக்கத் தொடங்குவதன் முன்னர், இவ்வாய்வுக் கட்டுரை எழுதப்பட்ட நோக்கத்தையும் காலத்தையும் மனதிலிருத்திக் கொள்வது இன்றியமையாதது.

கட்டுரையின் பிரதான நோக்கம், ஈழத்துப் புனைகதைகளிற் கையாளப்பட்டுள்ள பேச்சுவழக்கின் தன்மைபற்றி ஆராய்வதே. இவ்வாய்வினுக்கு அடிப்படையாக மனித வாழ்வியலிலும் இலக்கிய உருவாக்கத்தினும் பேச்சுமொழியின் தொடர்புநிலை சுட்டிக்காட்டப்பட்டு, அதன் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டுள்ளது. மக்கள் பேச்சுவழக்கினை ஈழத்துப் புனைகதைகளிலே பிரயோகிக்க முற்பட்டபோது எழுந்த வாதப் பிரதிவாதங்கள் விரிவாகவே தொகுக்கப்பட்டு ஆராய்பட்டுள்ளன. ஈழத்துத் தமிழ்ப் புனைகதைகளின் வரலாறு வளர்ச்சிபற்றி இங்கு விரிவாக ஆராயப்படாது, அவற்றின் வளர்ச்சிக்கட்டங்கள் மட்டுமே சுருக்கமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. புனைகதை எழுத்தாளர் பலரின் பெயர்கள் இக்கட்டுரையில் இடம்பெறாதிருத்தல் கூடும். பொதுவாகத் தமது படைப்புக்களிலே பேச்சுவழக்கினுக்கு முக்கியத்துவம் கொடுத்த எழுத்தாளர்களின் ஆக்கங்களே, இக் கட்டுரையில் முதன்மைத்துவம் கொடுக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. 1979ஆம் ஆண்டுக்குப் பின்னர் எழுத்துலகப் பிரவேசஞ் செய்த படைப்பாளிகளின் பெயர்கள் இக் கட்டுரையில் இடம்பெற்றிருக்க நியாயமில்லை.

மொழியியல் ஆய்வின் இன்றியமையாமை உணரப்பட்டதன் காரணமாகப் பல்கலைக்கழகங்களிலே இத்துறை இன்று வளர்ச்சி பெற்றுக் காணப்படுகின்றது. இலக்கிய மொழி, பேச்சுமொழி பற்றிய ஆய்வுகளை இத்துறை சார்ந்த அறிஞர்களே மேற்கொண்டு வருகின்றனர். மொழியியற் தத்துவங்களைக் கற்று, அவற்றை இலக்கியத்திலும் சமுதாய மொழிவழக்கிலும் பிரயோகம் செய்யவும் அவற்றின் படிமுறை வளர்ச்சியை இனங்காணவும் வல்லவர்கள் அவர்களே. நான் மொழியியலைச் சிறப்புப் பாடமாகக் கற்றவன் அல்லன்@ அதனால், மொழியியலின் தத்துவங்களை முட்டறத் தெரிந்து கொண்டவனுமல்லன். ஆயினும், இக் காலகட்டம் வரை ஈழத்துப் புனைகதை இலக்கியத்தின் மொழிபற்றி மொழியியல் அறிஞர்கள் மேற்கொள்ளத் தவறிய ஆய்வறிவு முயற்சியை நான் மேற்கொள்ளத் துணிந்தேன். மொழியின் தத்துவங்களை அளவுகோலாகக் கொண்டு நான் புனைகதைகளை மதிப்பீடு செய்ய முற்படவில்லை. புனைகதைகளிற் கையாளப்பட்ட பேச்சுவழக்கினை வகைப்படுத்தி ஆய்வதன் மூலம் ஒரு மொழியியற் கோட்பாட்டை உருவாக்க முடியுமா என்பதே இக் கட்டுரையின் தேடுதலாக அமைந்தது.

ஈழத்துப் புனைகதை இலக்கியத்திலே பேச்சுவழக்கினைக் கையாள்வதற்கான மரபு எதிர்ப்புப் போராட்டத்தை நிகழ்த்தியவர்களும், அம் முயற்சியிலே வெற்றி கண்டவர்களும் முற்போக்கு எழுத்தாளர்களே. எனவே அவர்களர் படைப்புக்களே பெருமளவுக்கு எனது ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வு என்பது முகம் பார்த்தோ, கட்சி சார்ந்தோ, உணர்ச்சி நிலைகளுக்கு ஆட்பட்டோ செய்து விடக் கூடிய ஒன்றன்று. அவ்வாறு செய்ய முற்படின் அது ஆய்வுத் தடத்தினின்றும் வழிதவறிச் சென்றுவிடுதல் கூடும். இந்தப் பற்றுநிலைக்கு அப்பாற்பட்டதே எனது ஆய்வுமாகும். எனவே, இக் கட்டுரையிலே எனது மதிப்பிற்குரிய எழுத்தாள நண்பர்கள் பலரின் படைப்புக்களை நான் நேர் நின்று ஆராய்ந்திருக்கிறேன்@ விமரிசித்திருக்கிறேன். இந்த விமரிசனம், அவர்களது படைப்புக்களிலே கையாளப்பட்ட பேச்சுமொழியின் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டுவதனை நோக்கமாகக் கொண்டதன்று. பிரக்ஞை பூர்வமாக. எதிர்காலத்திலே பேச்சுமொழி கையாளப்படவேண்டும் என்பதனை வலியுறுத்துவதே எனது நோக்கமாகும்.

ஒரு படைப்பாளியின் அரசியல், சமூகவியல் சார்ந்த விளக்கம். அவனது ஆக்கங்களிலே மிகத் தெளிவான கருத்துக்களை முன்வைக்கத் தூண்டுகின்றது. இவையே அற்புதமான படைப்பின் ஊற்றுக்கண்ணாய் அமைந்து விடுகின்றன. இவ்வாறான ஒரு படைப்பாளியினாலேயே மக்களுடுன் இரண்டறக் கலக்கவும், அவர்தம் பேச்சுமொழியினை இயல்பாகத் தன் படைப்புக்களில் வடித்துவிடவும் முடிகிறது. இவ்வாறான ஒரு படைப்பாளியாக இக்கட்டுரையிலே கே. டானியல் இனங்காணப்படுகிறார். யாழ்ப்பாணத்தின் பண்பாட்டுக் கோலங்களையும், சமூகப் படிநிலை அமைப்புகளையும், அவற்றினுக்கிடையேயான தொடர்பு நிலைகளையும் தமது ஆக்கங்களிலே யதார்த்த பூர்வமாகப் பதிவு செய்ய வேண்டுமென்ற ஆர்வமே, அம்மக்களின் மொழிவழக்கும் அவரது சிருஷ்டிகளிலே இயல்புற அமைவதற்குக் காரணமாயிற்று. பல்வேறு எடுத்துக்காட்டுகள் மூலமாகவும் இவ்வுண்மை இவ்வாய்விலே நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனாலேயே அமரர் கே. டானியலுக்கு இந்நூலினைச் சமர்ப்பணம் செய்துள்ளேன்.

இந்நூலினை அச்சிடுவதற்கு என்னைத் தூண்டியவர் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் என்று சொல்வதை விட, திருமதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்களெனக் குறிப்பிடுவதே சாலவும் பொருத்தமானது. யப்பான் நாட்டிலிருந்தபோதும், அவ்வப்போது அவர் எனக்களித்த ஆக்கமும் ஊக்கமுமே இந்நூலை அச்சேற்றுவதற்குத் தோன்றாத் துணையாக நின்றன. முதுகலைமாணித் தேர்வுக்காக இக்கட்டுரையை எழுதுவதற்கு வழிகாட்டியாகவும், மேற்பார்வையாளராகவும் விளங்கியவர் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களாவர். இந்நூலினை உருவாக்குவதற்கு அவர் மேற்கொண்ட சிரமங்கள் அளப்பில. எழுத்தறிவித்த இவர்களுக்கு நான் கூறும் நன்றி தினைத்துணையேயாகும்.

இக்கட்டுரையை எழுதும்போது என் மனத்தெழுந்த சந்தேகங்களையும், பிரச்சினைகளையும் பொறுமையுடன் கேட்டறிந்து அவற்றைத் தெளிவுபடுத்தியவர்கள் பேராசிரியர் க. கைலாசபதி அவர்களும் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களுமாவர். சிரமங்களைப் பொருட்படுத்தாது இவ்வாய்வுத்துறை தொடர்பாக அவர்கள் வழங்கிய உதவிகட்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

பல்வேறு வேலைபழுவின் மத்தியிலும் இந் நூலுக்கான ஆசியுரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் வழங்கியுள்ளார்கள். அவர்களுக்கும் எனது நன்றி உரியது. இந் நூலுக்கான அறிமுக உரையைக் கலாநிதி பார்வதி கந்தசாமி வழங்கியுள்ளார். கலாநிதி பார்வதி கந்தசாமியும் நானும் பள்ளிப் பருவமுதல் பல்கலைக்கழகம் வரை ஒன்றாகப் பயின்றவர்கள். அவரது அறிமுக உரை இந்நூலை அணிசெய்வது குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அவருக்கும் என் நன்றி உரியது.

இந்நூலினை அச்சேற்றும் முயற்சியிலே எனது மனைவி பர்வதாமணியும் மைத்துனர் த. கலாமணி அவர்களும் வழங்கிய ஒத்தாசைகள் அளப்பில. அவர்களுக்கும் எனது நன்றி.

இந்நூலினைப் பதிப்பித்து உதவியவர்கள் முத்தமிழ் வெளியீட்டுக் கழகத்தினர். பல்வேறு நெருக்கடிகளின் மத்தியிலும் இந்நூலைப் பதிப்பித்து வெளியிடும் இக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களுக்கும், செயலாளர் க. சொக்கலிங்கம் அவர்களுக்கும் நான் என்றும் நன்றியுடையேன். படிதிருத்துதல் முதற்கொண்டு நூலை வெளியிட்டு வைத்தலீறாக அவர்களது முயற்சி பரந்துபட்டதாக அமைந்துவிட்டது.

இந்நூலை மிகக் குறுகிய காலத்தில் அழகாக அச்சிட்டு உதவிய ஆசீர்வாதம் அச்சக ஊழியர்களுக்கும், குறிப்பாக அச்சமைப்பு முகவர் திரு. றோக் யோசவ் அவர்களுக்கும் நான் மிகுந்த நன்றியுடையேன்.

‘மணிமாளிகை’ சி. வன்னியகுலம்
அல்வாய் தெற்கு
அல்வாய்
11-06-1986

பொருளடக்கம்
ஆசியுரை ஏ

அறிமுகவுரை ஏii

வெளியீட்டுரை ஓi

என்னுரை ஓiஎ

1. இலக்கியமும் மொழியும் - முன்னுரை 1 – 28

இலக்கியமும் மொழியும் 1

பேச்சுவழக்கின் முக்கியத்துவம் 5

ஈழத்துப் பேச்சுவழக்கின் சில பொதுவான இயல்புகள் 17

இந்திய ஈழத்துப் பேச்சு வழக்கிலே ஒலியமைப்பு 22

2. ஈழத்துப் புனைகதையும் பேச்சுவழக்குப்
பிரயோகமும் - வரலாறு 29 – 75

ஈழத்துத் தமிழ்ப் புனைகதை இலக்கிய
வரலாற்றுச் சுருக்கம் 29

ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் 30

ஈழத்து சிறுகதை இலக்கியம் 36

ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்குப்

பிரயோக வரலாறு 43

மரபுப் போராட்டம் 50

3. புனைகதைகளிற் கையாளப்பட்ட
பிரதேசப் பேச்சுவழக்கு – விவரணம் 76 – 121

பேச்சுவழக்கின் சில பண்புகள் 76

பிரதேசக் கிளைமொழிகள் 78

யாழ்ப்பாணப் பிரதேசக் கிளைமொழி 81

மட்டக்களப்புப் பிரதேச கிளைமொழி 93

மலைநாட்டுப் பிரதேசக் கிளைமொழி 104

தென்மாகாணப் பிரதேசக் கிளைமொழி 109

மன்னார், முல்லைத்தீவுப் பிரதேசக் கிளைமொழி 117

கொழும்புப் பிரதேசக் கிளைமொழி 118

4.ஈழத்துப் புனைகதையும் பேச்சுவழக்கும் - விமரிசனம் 122 – 154

கதை நிகழ் களமும் பேச்சுவழக்கும் 122

கதைப் பொருளும் பேச்சுவழக்கும் 125

புனைகதை வகையும் பேச்சுவழக்கும் 127

பேச்சுவழக்குப் பயன்பாடும் பிரச்சினைகளும் 141

முடிவுரை 155 – 161

உசாத்துணை நூல்விவர பட்டியல் 162 – 171


1. இலக்கியமும் மொழியும் - முன்னுரை

இலக்கியமும் மொழியும்
மனிதன், தனது எண்ணங்களையும் உணர்வுகளையும் ஏனையோருடன் பரிமாறிக்கொள்வதற்கான கருத்துப் பரிமாற்ற ஊடகமாக மொழி விளங்குகின்றது அக்கருத்துப் பரிமாற்றம் ஒலிவடிவிலே இயலும்போது “பேச்சுமொழி” யெனவும் ஒழுங்கான வரிவடிவிலமையும்போது “எழுத்துமொழி” யெனவும் அழைக்கப்படும். இவை தவிர, சைகையாலும் அங்க அசைவுகளாலும் கருத்துக்கள் உணர்த்தப் படுவதும் உண்டு. எனினும், மொழியியலாளர் இவற்றை மொழியென இன்னும் அங்கீகரிக்கவில்லை: குறியீடு அல்லது சைகை என்ற அளவிலேயே அவை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. 1

இலக்கியத்தின் மூலாதாரமாக விளங்குவது மொழியே. ஓவியம், சிற்பம், நடனம் போன்ற கலைகள் மொழியாற்றலின்றி இயங்கவல்லன. ஆயின், இலக்கியமோவெனின் மொழியை அடிப்படையாகக் கொண்டே இயங்கவல்லதாகிறது. எனவேதான், “இலக்கியப் பற்றிய விளக்கமென்பதெல்லாம் அடிப்படையில் மொழியியல்பேயாகும்.” 2 என்பர் ஸ்ரைநர். மொழியின் வாழ்வு, வளம், வளர்ச்சி. வரலாறுபற்றிய ஆய்வுகட்கு ஆதாரமாக விளங்குவன இலக்கியங்களேயாகும். கல்வெட்டுக்கள், செப்பேடுகள் ஆகியன மிகச் சிறிய அளவிலேயே மொழிபற்றிய தகவல்களை எமக்குத் தரவல்லன. ஆயின், இலக்கியங்களோவெனின் அவை எழுந்த காலத்தின் மொழிவழக்கையும் அதன் வளர்ச்சியையும் செம்மையான முறையிலே தரவல்லனவாயுள்ளன.

காலத்துக்குக் காலம் அரசியல், சமூகநிலைமைகளின் மாற்றங்களுக்கேற்ப இலக்கியப் பொருளும் இலக்கிய வடிவங்களும் வேறுபட்டு வந்துள்ளன. இவைபோன்றே இலக்கிய மொழியும் சொற்பிரயோகங்களும் காலத்துக்குக் காலம் வேறுபட்டு வந்துள்ளன சங்ககாலப் பகுதியிலும் பல்லவர் காலப்பகுதியிலும் எழுந்த இலக்கியங்களை ஒப்பிடுவதன் மூலம் இவற்றினை நாம் விளங்கிக்கொள்ளலாம்.

சங்ககாலத் தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டியரெனப்படும் மூவேந்தரும் பாரி, காரி முதலான குறுநில மன்னர்களும் ஆட்சிசெய்தனர். சிறுநிலப் பரப்புக்களை ஆண்ட மன்னர்களுக்கு உலகம் முழுவதிலும் தமது ஆணையைச் செலுத்த வேண்டும் என்ற ஆசைமட்டும் மிதமிஞ்சி இருந்திருக்கிறது. அதனாலேயே, அக்காலத் தமிழகமெங்கும் போர்கள் தொடர்ந்து நடைபெற்றிருக்கின்றனவென்று மேம்படும் ஆசையால் உந்தப்பட்ட மன்னர் மோத, அவராட்சியிலடங்கிய மக்களும் மோதினர்.

புறநானூற்றுக் காலத்திற் புகழும் பெருமையும் வீரத்தின் வழிவந்தன. “வெற்றி அல்லது வீரமரணம் என்ற நிலைக்கு ஒரு தனிக் கவர்ச்சியிருந்ததாகத் தெரிகிறது. மன்னர் தலைமையில் ஒன்றுகூடி ஒற்றுமையாக நின்று போராடுவதிலும் மன்னனுக்குத் தம் சேவை தேவையென்றுணர்வதிலும் புறநானூற்றுக்கால மக்கள் மகிழ்ந்தனர்…… எனவே மன்னருக்கிடையில் ஏற்பட்ட போரில் மக்களும் முழுமனதோடு ஈடுபட்டனர்.” 3 இதனால், இக்கால மக்களின் வாழ்க்கையிலே போரும் வீரமும் தவிர்க்கமுடியாதனவாயின. சங்ககாலப் புறத்திணைப் பாடல்களின் பொருளாகப் போரும் வீரமுமே அமைந்துள்ளமையால் இவற்றோடு தொடர்புடைய சொற்களே பாடல்களிலும் இடம்பெற்றுவிடுகின்றன. போர், வீரம், வெற்றி, தோல்வி, இழப்பு, அழிவு, புகழ், கொள்ளை, அறிவுறுத்தல், ஆற்றுப் படுத்தல் ஆகியவற்றைச் சுட்டும் சொற்களே மீண்டும் மீண்டும் இப்பாடல்களில் இடம்பெறுவதனை நாம் காணலாம்.

அகத்திணைப் பாடல்கள், சங்ககால மக்களின் அக வாழ்வினைச் சித்திரிப்பன. சங்ககால மக்கட் பாகுபாடும் வாழ்க்கையும் ஒழுக்கமும் இயற்கையோடு ஒன்றியனவாகவே அமைந்தன.4 எனவேதான், இக்கால அகத்திணைப் பாடல்கள் மக்களின் ஒழுக்கங்களான புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் ஆகியவற்றினைப் பொருளாகக் கொண்டன. இப்பாடல்களிற் காமம், உறவு, பிரிவு, ஊடல், இரங்கல், கழிவீரக்கம், ஆற்றுமை போன்ற நிலைகளைப் புலப்படுத்துஞ் சொற்களையே பெருமளவினவாக நாம் காணமுடிகிறது.

பல்லவர்காலம் அரசியல், சமூக நிலைமைகளிலே சங்ககால நிலைமைகளினின்றும் வேறுபட்டதாகும். கி.பி. 6ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடக்கம்p கி.பி. 9ஆம் நூற்றாண்டி;ன பிற்பகுதிவரை உள்ள காலம் பல்லவர் காலமாகும்? 5 பல்லவரென்பார் தமிழ்நாட்டிற்கு வடக்கே சாதவாகன வமிசத்தினர் சிறப்புடன் விளங்கிய காலத்திலே அவர்தம் ஆட்சிக்குட்பட்டிருந்த சில மாகாணங்களுக்குத் தலைவராயிருந்து வந்த ஒரு வகுப்பினர். சாதவாகனப் பேரரசு நிலைகுலையத் தொடங்கியபோது, இப் பல்லவ வகுப்பினர் தாம் தலைமை வகித்த மாகாணங்களுக்குத் தம்மையே மன்னராக்கிக் கொண்டனர். அப்போது, தமிழ்நாட்டை ஆண்டுவந்த களப்பிரரின் ஆட்சியும் வலிகுன்றியதை அறிந்து, அவருடன் போரிட்டு முதலில் தொண்டைமண்டலத்தையும் பின்னர் சோழமண்டலத்தையும் கைப்பற்றி இவர்கள் ஆட்சிசெய்யலாயினர். 6

சங்கமருவிய காலத்திற் சமரசம் பூண்டிருந்த அகச் சமயங்களான சைவமும் வைணவமும் இக்காலத்திற் புறச் சமயங்களான சமண, பௌத்த மதங்களுடன் உக்கிரமாகப் போராட வேண்டிய நிலைக்குள்ளாயின. ஒவ்வொரு சமயமும்@ தனது கொள்கைகளைப் பரப்பவும், ஏனைய சமயங்களை நசுக்கவும் முனைந்தது. பல்லவ அரசன் மகேந்திரவர்மன், பாண்டியமன்னன் நின்றசீர் நெடுமாறன் போன்ற மன்னர்களையே மதம்மாறச் செய்யுமளவுக்குச் சமயப்போராட்டம் தீவிரமடைந்திருந்தது. எனவே, பல்லவராட்சிக் காலத்திற் சமயப்போராட்டமே சமூக நிகழ்வுகளிலே முதன்மை பெறலாயிற்று. இதனாற் பத்தி அநுபவப் புலப்பாடே பல்லவர் கால இலக்கியங்களின் உயிர்நாடியாயமைந்தது. 7

சங்ககாலத்திலே, மன்னரையும் மக்களையும் நாயகராகக் கொண்டமைந்த இலக்கியங்கள் பல்லவர் காலத்திற் கடவுளரையே இலக்கிய நாயகராகக் கொள்கின்றன.8 இதனால், பல்லவர்கால இலக்கியங்களிற் பத்தி அநுபவங்களைப் புலப்படுத்துஞ் சொற்களே மிகுந்தவரக் காணலாம். இறைவன், அவனது தோற்றப்பொலிவு, அவனது அருட்செயல்கள், அவன் எழுந்தருளியிருக்கும் தலங்கள். தலமகிமைகள், பக்தி அநுபவ வெளிப்பாடு, பிறமதக் கண்டனம் பற்றிய சொற்களே இக்கால இலக்கியங்களில் மீண்டும் மீண்டும் இடம்பெறுதலை நாம் காணலாம். அத்துடன் யாப்பமைதியிலும் பல்லவர்கால இலக்கியம் சங்ககால இலக்கியத்தினின்றும் வேறுபடுவதனை நாம் அவதானிக்கலாம். சங்க காலப் பாடல்கள் அகவல், வஞ்சி யாப்பிலமைந்தமை. அகவல்யாப்பு ஒரு பொருளினையோ, காட்சியினையோ நேர் நின்று விபரிப்பதற்குகந்தது@ எடுத்துக்கொண்ட விடயத்தினைச் செட்டாகக் கூறிச்செல்ல வாய்ப்பானது. ஆயின் பல்லவர் காலத்திலே பெருவழக்காயிருந்த பாவினங்களோ, கற்பனைக் காட்சிகளைப் புனைந்துரைக்க வல்லனவாயும் பத்தி அநுபவங்களைப் புலப்படுத்தவல்லனவாயும் இசைத்தன்மை கொண்டனவாயும் அமைந்தன. எனவேதான், பல்லவர் காலப் பத்தி அநுபவத்தைப் புலப்படுத்தும் பாடல்கள் பாவினவடிவிலே அமைந்து விட்டன.

இவ்வாறு இலக்கியத்தின் பொருள், உருவம், மொழி என்பன சமுதாய நிலைமைகளுக்கேற்ப மாறுபடும் என்னும், மொழி என்பன சமுதாய நிலைமைகளுக்கேற்ப மாறுபடும் என்னும் போது, இவை யாவுமே வர்க்கச் சார்பானவையா என்ற வினாவும் எழுகின்றது. ஆராய்ச்சியாளர், இலக்கியம் வர்க்கச் சார்பானது என்னுங் கருத்தினைக் கொண்டுள்ள போதும், மொழி அந்நிலைக்கு அப்பாற்பட்டது என்றே முடிபுகொண்டனர். இதுபற்றி ஜே. வி. ஸ்ராலின் பின்வருமாறு கூறினார்:

“மொழி ஒரு குறிப்பிட்ட பொருளாதார அடித்தளத்தின் - அது புதிய அடித்தளமாகவோ பழைய அடித்தளமாகவோ இருக்கலாம் - பெறுபேறு அன்று@ அது அச் சமுதாயத்தின் வரலாற்றுக் காலம் முழுவதிதும், பல நூற்றாண்டுகள் காலமாக (அச் சமுதாயத்தினரிடையே காணப்பட்ட) பல்வேறு பொருளாதார அடித்தளங்களின் வரலாறு முழுவதினதும் பெறுபேறு ஆகும். இது குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தினாலே தோற்றுவிக்கப்பட்டதன்று. அது முழுச் சமுதாயத்தினாலும் அச் சமுதாயத்திலுள்ள சகல வர்க்கங்களினாலும் நூற்றுக்கணக்கான பரம்பரைகளின் முயற்சிகளினாலும் தோற்றுவிக்கப்பட்டதாகும்.” 9

கா. சிவத்தம்பி இலக்கியத்திற்கும் மொழிக்கும் இடையே உள்ள தொடர்புபற்றி விளக்குகையில்,

“இலக்கியம் மேற்கட்டுமானத்தைச் சார்ந்தது என்பது பலவிடங்களிலும் பலராலும் எடுத்துக் கூறப்படும் உண்மையாகும் மொழியின் நிலை வேறுபட்டது…… மொழி குறிப்பிட்ட ஒரு அடித்தளத்துக்கோ அன்றேல் இன்னொன்றுக்கோ உரியதாகாது……” 10

என்பது.

பேச்சுவழக்கின் முக்கியத்துவம்.
“மொழி ஒரு முக்கியமான முதன்மையான செய்திப் பரிமாற்றச் சாதனந்தான் எனினும், மொழியினைத் தனித்துப்பார்ப்பதென்பது இயற்கையானதாக இயல்பானதாகத் தோன்றவில்லை. ஏனெனில் மொழி மனிதனின் உள்மனதோடு எப்பொழுதுமே ஒன்றிச் செல்கிறது. செயல்படுகிறது என்பதாலேயே மொழி மனிதனின் உள்ளடக்கிடக்கையைப் பேச்சு வடிவில் வெளிக்கொணர்ந்து அவனது ஆசைகளை, எண்ணங்களை உணர்ச்சிகளை, கொள்கைகளை, கோட்பாடுகளை வெளிப்படுத்துகின்றது.” 11

இவ்வாறு மனிதமனங்களின் வெளிப்பாடான மொழியிற் பேச்சுவழக்கே முதன்மையானதாகக் கொள்ளப்படுகின்றது.

“பேச்சுமொழி, எவ்வளவு தேவையான ஒலிகள் போதுமோ அவ்வளவு ஒலிகளைக் கொண்டு இயங்குகிறது. பேசும்பொழுது வாயின் அசைவும் குரலின் ஏற்றத்தாழ்வும், சைகைச் செய்கையும், சூழ்நிலையும், சொல்லும் சந்தர்ப்பமும் பேசும் ஒலிகட்குத் துணை செய்கின்றன. அதனால், குறைந்த ஒலிகள் போதும். மேலும், பேசும்போது கருத்து வேகம்மிகுதி. அதனால் சொற்சிதைவுகளைப்பற்றிப் பொருட்படுத்துவதில்லை. தேவைக்கு மீறிய ஒலிகள் சிலவசமயத்தில் வெறுப்பை உண்டாக்கிவிடும். அதனால் பேச்சில் தேவைக்கு வேண்டிய அளவே ஒலிக்கப்படுகின்றன.” 12

ஆயின் வரிவடிவிலான எழுத்துமொழி தன்னியல்பிலே மாற்ற முறா நிலைபேறுடையது. அதற்கெனத் தேர்ந்தெடுத்தச் சொற்கள் வேண்டும்@ முயற்சி வேண்டும். பேச்சு மொழி யோவெனின் இக் கட்டுக்கோப்புகளுளடங்காது, மனத்தின் உடனடியான, முயற்சியற்ற வெளிப்பாடாக அமைந்துவிடுகிறது 13 என்பது மு. வரதராசன் எனவேதான். எழுத்து மொழியிலும் பேச்சு மொழியே மனித மனங்களைப் படம் பிடித்துக் காட்டும் தெளிவான, விளக்கமான கருவியாகக் கொள்ளப்படுகிறது. இதனையே பாரதியாரும், “உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின வாக்கினிலே ஒளியுண்டாகும்.” 14 என்றார்.

மனிதனது பரிணாம வளர்ச்சியிலே, அவனது முதலாவது கருத்துப் பரிமாற்ற ஊடகமான “சைகையை” அடுத்து, மொழியென்ற வகையில் முதன்மை பெறுவது பேச்சு மொழியே. 15 சைகையாலே தனது கருத்துக்களைத் தெளிவாகவும் விரிவாகவும் தொடர்ச்சியாகவும் உணர்த்த முடியாத இடர்ப்பாடு தோன்றவே, ஒலிகளை எழுப்புவதன் மூலம் மனிதன் தனது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டான். தான் கருதிய எண்ணங்கள் யாவற்றையும், யாவர் முன்னிலையிலும் ஒலியெழுப்பிக் கூற முடியாததும் நேர்நின்று உணர்த்த முடியாததுமான நிலையிலே, மனிதன் வரிவடிவத்தைக் கைக்கொள்ளத் தொடங்கினான். எனவே மனித எண்ணங்களைப் பிரதிபலிப்பதிற் பேச்சுவழக்கிற்கு அடுத்தபடியாகவே எழுத்துவழக்கு அமைந்து காணப்படுகிறது. “மொழி என்பது ஒலிவடிவத்தையே உணர்த்தும். வரி வடிவம் ஒலிவடிவத்தின் நிழற்படம் போன்றது. கருத்துக்கு ஒலிவடிவம் அறிகுறி ஒலிவடிவத்தின் அறிகுறி வரிவடிவம்” 16 என ஒலிவடிவிற்கும் வரிவடிவத்திற்கும் இடையேயுள்ள தொடர்பினை விளக்கிச் செல்வர் ரா. சீனிவாசன். இதனையே, மு. வரதராசன் இன்னொருவகையிலே, “மொழியின் உயிர் வாய்க்கும் செவிக்கும் இடையே உள்ளது. எழுது கோலுக்கும் கண்ணுக்கும் இடையே இல்லை” 17 என விளக்கமாகக் கூறுவர்.

இலக்கண நூலார் பலரும், சங்ககாலந் தொட்டு எழுத்து மொழிக்கே இலக்கணம் வகுத்து வந்துள்ளனர். பேச்சு மொழி எவ்வாறமைதல் வேண்டுமென யாருமே இலக்கணம் செய்ததில்லை ஒரு மொழியின் இயல்புகளுக்கு இலக்கண விதிகள் கூறுமிடத்து குறிப்பாகப் பேச்சுவழக்கு, எழுத்து வழக்கு ஆகிய இருவழக்குகளுள்ள தமிழ் மொழியிலே எழுத்து மொழிக்கு மாத்திரம் இலக்கணம் வகுப்பின் அது பூரணமான இலக்கணமாகி விடமாட்டாது.18

ஏனெனில், படிக்காத பாமரனது பேச்சுமொழியிலும் பச்சைக் குழந்தையின் பேச்சுமொழியிலுங்கூட அடிப்படைமொழி இலக்கணம் அமைந்து கிடக்கிறது. பாமரனும் பச்சைக் குழந்தையும் படித்தவன் பேசுவது போலவே மொழியிலக்கண அமைதியைக் கையாளுகின்றனர் படித்தவன், “அம்மா சோறு தந்தாள்” எனச் சொல்வது போன்றே சிறு குழந்தையும் தன்னுடைய மொழியறிவிற் கேற்ப அவ் வாக்கியத்தினைக் கூறிவிடுகின்றது. ஆனால், “அம்மா சோறு தந்தான்” என்று பாமரனோ பச்சைக் குழந்தையோ இலக்கண வழுவாகப் பேசுவதில்லை. அவ்வாறு இலக்கண வழுவாகப் பேசுமிடத்து மொழியானது எவருக்குமே புரியாததொன்றாகிவிடுகிறது. குழந்தை தான் கற்கும் அடிப்படை வாக்கியங்கள் சிலவற்றைத் தனது மனதிலே பதிய வைத்துக்கொண்டு அவற்றைப் போன்ற பல்வேறு வாக்கியஙகளை இங்கு உதாரணமாகக் காட்டலாம்.

“மழையுது”@ “வெடிச்சதார்” என்ற சொற்களை நாம் பேச்சு வழக்கிலே பயன்படுத்தாவிடத்தும் குழந்தையானது மொழியின் அடிப்படை இலக்கண அமைதியை மனதிற்கொண்டே இச் சொற்களைக் கையாளுகின்றது.” 19

சாதாரண வாக்கியம் பெரியவர்களின் குழந்தைகளின்
பேச்சுவழக்கு பேச்சுவழக்கு
அ. நெருப்பு எரிகிறது. எரியுது. எரியுது.
ஆ. மழை பெய்கிறது. மழை பெய்யுது. மழையுது.
இ. வெடி சுட்டது யார். வெடிசுட்டதார் வெடிச்சதார்.

ஆகவே, எழுத்துமொழிக்கு மட்டுமன்றிப் பேச்சு மொழிக்கும் இலக்கணம் உண்டு என்பதையும், அவ்விலக்கணமும் தொன்றுதொட்டு வரும் பேச்சுவழக்கை அடிப்படையாகக் கொண்டே அமைந்தது என்பதையும் நாம் விளங்கிக் கொள்ளலாம் இதனையே வெண்டிறியே என்பார். “பேச்சுமொழி ஓடும் ஆறுபோன்றது@ எழுத்துமொழி அந்த ஆற்றில் மிதக்கும் பனிக்கட்டிபோன்றது” 20 என்றார். அதாவது, எழுத்துமொழிக்கு அடிப்படையாக அமைவது பேச்சுமொழியென்பதே அவர்தம் கருத்தாகும்.

மனிதனது கருத்துக்களை விரைவாகப் புலப்படுத்தும் ஆற்றலும் பேச்சுமொழிக்கே உண்டு. மனிதன் எண்ணும் கருத்துக்கு நேரடியாக, விரைவாக ஒலியுருவங் கொடுப்பதாற் கருத்துக்கள் விரைவாகப் புலப்படுத்தப்படுவது மல்லாமல், பேசுஞ் சொற்களும் மிகவும் சுருங்கியவையாக அமைந்து விடுகின்றன. சொற்கள் சுருங்கியவையாக இருப்பது போலவே வாக்கியங்களும் பேச்சுவழக்கிலே சுருங்கியவையாக அமைகின்றன. 21

“நான் நினைக்கின்றபோது அம்மா வருகிறாள்” என்பது எழுத்து வழக்கு. இதே கருத்தினைப் பேச்சுமொழியிலே மிக எளிதாகவும் சுருக்கமாகவும் கூறி விடலாம். “நினைக்க அம்மா வாறா” என்பது பேச்சு மொழி. எழுத்து மொழியைவிடப் பேச்சு மொழியிலே விரைவுப் புலப்பாடு மிக்கிருப்பது கண்கூடு இவ்வாக்கியத்திலே “நான்” என்ற தன்மைச் சுட்டும் “கிற”, “கின்றா” என்னும் இடைச்சொற்களம் “ள்” என்ற பால்விகுதியும் “போது” என்ற வினையெச்சமும் இல்லாமலேயே பேச்சுமொழி கருத்தைப் புலப்படுத்திவிடுகின்றது. இது போன்றே, “நீ இங்கே வருவாய்” என்ற எழுத்துமொழி வாக்கியமானது பேச்சு வழக்கிலே “வா” என்ற முன்னிலை ஏவலொருமையோடு வாக்கியமாகிக் கருத்தைப் புலப்படுத்திவிடுகின்றது. இதனாலேதான், “பேச்சுமொழியின் வாக்கி;யம் சுருங்கியது, எளியது, நேரானது, இயற்கையானது, தெளிவானது, எழுத்து மொழியின் வாக்கியம் பெரும்பாலும் அதைவிட நீண்டது. செயற்கையானது. சிக்கல் உடையது. தமிழில் பேச்சுவழக்குச் சராசரி இரண்டு சொற்கள் உடையது. எழுத்து வாக்கியம் நான்கு அல்லது ஐந்து சொற்கள் உடையது.” 22 என்று கூறுவர் முத்துச் சண்முகன்.

பேச்சுவழக்கிலே, ஒலியமைப்பின் தன்மைக்கேற்ப குறித்த ஒரு சொல் பல்வேறு கருத்துக்களைப் புலப்படுத்தி விடுகின்றது. ஒலியின் ஏற்றத்தாழ்வுகட்கேற்பச் சொல்பவனின் தன்மையும், நிலையும், கருத்தின் வலுவும் புலப்படுத்தப்பட்டுவிடுகின்றன. “உனக்கு வேண்டாம்” என்ற வாக்கியம் எழுத்துவழக்கிலும் சாதாரண பேச்சுவழக்கிலும் ஒத்த பொருளையே குறிக்கின்றது. “உனக்குத் தேவையில்லை” என்பது இதன் பொருள்;. இதே சொல், பேச்சுழக்கிலே ஒலி மாற்றம்பெறும்போது பொருளிலும் வேறுபட்டுவிடுகின்றது. இவ் வாக்கியத்திலே வரும் “டாம்” என்ற எழுத்தின் ஒலியை எடுத்தலோசையிலே வினாவாகக் கையாளும்போது, முன்னைய பொருளைவிட வேறொரு பொருளையே அது புலப்படுத்திவிடுகின்றது இங்கு “வேண்டாம்” என்பது “வேணுமா” என்ற கருத்தையே புலப்படுத்துவதாயுள்ளது.

“ வா பாப்பம்” என்ற பேச்சுமொழி சாதாரணமாக “வா பார்த்துக்கொள்வோம்” என்னுங் கருத்தையே புலப்படுத்துகின்றது. ஆயின், “வாபாப்பம்” என “பாபம்” என்னுஞ் சொல்லை அழுத்தி ஒலிக்கும்போது. அது வேறொரு பொருளைக் குறிப்பதாகிறது. “வந்தால் ஆபத்து” என்பதே இதன் பொருள். இவ் வாக்கியத்தை அழுத்தமாக ஒலிக்கையிலே, எமது சுட்டுவிரலை முன்னிறுத்தி எச்சரிக்கை காட்டும்போது இவ் வாக்கியம். முதலில் உணர்த்திய பொருளைவிட வேறொரு பொருளைக் குறித்து விடுகின்றது.

நடைமுறையிலே, இலக்கிய வழக்குகள் காலஞ் செல்லச் செல்ல வழக்கிறந்து போவதனையும், அவ்விடத்தைப் பேச்சு மொழிச் சொற்கள் நிறைவு செய்வதனையும் நாம் காணக்கூடியதாக உள்ளது. சங்ககால இலக்கியச் சொற்கள் பல இன்று வழக்கிறந்துவிட்டன. யாருமே அச்சொற்களிற் பெரும்பாலானவற்றை எழுத்து வழக்கிலோ அன்றிப் பேச்சு வழக்கிலோ பயன்படுத்துவதில்லை. ஆயின், சங்ககால இலக்கியங்களிலே இடம்பெறாத எத்தனையோ சொற்களையும் சொல் இலக்கணங்களையும் இன்றைய தமிழ்மொழியிலே நாம் பயன்படுத்துகின்றோம்.

ஒருமைப் பெயர்ச்சொற்களுக்குக் “கள்” விகுதி சேர்ப்பதன் மூலம் அவற்றைப் பன்மைப் பெயர்ச்சொற்களாக்கலாம் என்பது இலக்கண விதி. 23

உதாரணம்:
மரம் + கள் ஸ்ரீ மரங்கள்
கிளை + கள் ஸ்ரீ கிளைகள்

ஆயின், இன்று இவ்விலக்கண விதியைவிடப் புதிய பிரயோகம் ஒன்றினைப் பேச்சுவழக்கிலே நாம் பயன்படுத்துகின்றோம். ஒருமைப் பெயர்ச்சொல்லின்முன் எண்ணிக்கைகளைச் சேர்ப்பதன்மூலம் “கள்” விகுதி தவிர்க்கப்படுவதுடன் பன்மைநிலையும் உணர்த்தப்படுகின்றது.
உதாரணம்:

இலக்கண வழக்கு பேச்சு வழக்கு
மரம் + கள் ஸ்ரீ மரங்கள் மூன்று + மரம் ஸ்ரீ மூன்று மரம்
கிளை + கள் ஸ்ரீ கிளைகள் மூன்று + கிளை ஸ்ரீ மூன்று கிளை

பேச்சுவழக்கில் மட்டுமன்றி, எழுத்துவழக்கிலும் இன்று மேற்குறித்தவாறே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவையாவும், பேச்சுமொழி செல்வாக்கு மிகுந்தது என்பதையும், அதன் செல்வாக்கு மொழியின் இலக்கண வீதிகளிலும் செறிந்துவிடும் என்பதையும் வலியுறுத்துகின்றன.

தமிழ்மொழியிலே, காலத்துக்குக் காலம் பெருந்தொகையான பிறமொழிச் சொற்கள் வந்து கலந்துள்ளன. சிறப்பாகத், தமிழ்நாடு ஐரோப்பியராட்சியின் கீழ் இருந்த காரணத்தினாலே, ஐரோப்பியமொழிச் சொற்கள் பெருமளவினவாகக் கலந்து வழங்கப்படுகின்றன. எழுத்து வழக்கிலும் பார்க்கப் பேச்சுவழக்கிலேயே இவ்வாறான வேற்றுமொழிச் சொற்கள் இலகுவாகக் கலந்துவிடுகின்றன.

நன்னூல், பிறமொழிச் சொற்கள் தமிழ்மொழியிலே இடம்பெறும் வகையிலே வரையறுத்துள்ளது. 24 ஆயினும், சாதாரண பாமரமகன் ஒருவன் இவ்விலக்கண விதிகளை அறியாமலே பிறமொழிச் சொற்களை மிக இலகுவாகப் பேச்சுமொழியிற் கையாண்டுவிடுகிறான். எழுத்துவழக்கிலே மொழிபெயர்ப்பு வேண்டப்படும் பிறமொழிச் சொற்களையும் வாய்மொழி வழக்கிலே சிறிய ஒலிமாற்றத்துடன் அவன் கையாண்டு விடுகிறான்.

“மொழிபெயர்க்க முடியாத வேற்றுமொழிச் சொற்களைத் தம்மொழிச் சாயலாக ஆக்குவதில், பாண்டித்தியம் நிறைந்த மக்களிலும் சாதாரண மக்கள் சிறந்தவர்கள் என்பது பிழையாகாது…” 25

என்று கூறுவதுடன் பின்வரும் உதாரணங்களையும் எணடுத்துக் காட்டுவர் மட்டுநகர் செ. நடராசா.

போர்த்துக்கீசர் சொற்கள் தமிழ் வடிவம்
1. ளுயியவழ - சப்பாத்து
2. ஆநளய - மேசை
3. டீநnஉழ - வாங்கு
4. ஊhயஎய - சாவி
5. ஊயசயவந - கரத்தை
6. யுசசயவயட - இறாத்தல்
7. ஊழிய - கோப்பை
8. வுழஅடிழ - தோம்பு
9. யுடயஎயnஉய - அலவாங்கு
10. ஊநஅநவெழ - சீமெந்து

பேச்சுமொழியில் வழங்கும் ஆங்கிலச் சொற்கள் சில:

ஆங்கிலச் சொற்கள் தமிழ் வடிவம்
1. டீழயவ - வத்தை
2. ஞரயசவ - கொத்து
3.யுனஎழஉயவந - அப்புக்காத்து
4. குரnநெட - புனல்
5. றுயசசயவெ - விறாந்து
6. ஊழககநந - கோப்பி

வல்லெழுத்தை இறுதியாசவுடைய சொற்கள் தமிழ் மொழியிலே இல்லை. இவ்வாறான பிறமொழிச் சொற்கள் பேச்சுவழக்கிலே இடம்பெறும்போது ஈறு, குற்றுகரம் பெற்றுத் தமிழ் இலக்கணவிதிப்படி ஆகிவிடுகின்றது.

உதாரணம்:
பிறமொழிச் சொல் தமிழ் வடிவம்
1. ஊழரசவ - கோடு
2. வுசழரி - துருப்பு
3. ளுயடயன - சலாது
4. யுடபழள - அலுகோசு
5. ளுடயவந - சிலேற்று

ஒரு மொழியிலே தோன்றும் ஆரம்பகால இலக்கியங்கள் யாவற்றிலும் பேச்சுமொழியின் செல்வாக்கு மிகுந்து காணப்படுவதனை ஆராய்ச்சியாளர் பலரும் நிறுவியுள்ளனர். மக்களின் பேச்சுமொழியானது பண்டு. இலக்கியமொழியாகப் பயன்படுத்தப்படுகையிலே ஓசை, அசை, சீர், யாப்புக் கட்டுக்கோப்பினுக்கேற்ப அவை செம்மை செய்யப்பட்டன. இவ்வாறு, “செறுப்புற்று” (ர்iபாவநநென டுயபெரயபந) ஒருவகைப் பேச்சுமொழியே பண்டைய இலக்கியங்களிற் பயன்படுத்தப்பட்டுள்ளதென்பர் கான்ட்வெல். 26

கிரேக்க அறிஞரான மில்மன் பரி என்பார், வீரயுகத்திற்குரியதாகக் கருதப்படும் ஆதிக் கிரேக்க காவியங்கள் யாவும், எழுத்தறிவில்லாத வாய்மொழிக் கவிஞராற் குலமரபுத் தொழிலாகப் பாடப்பட்டன என்பர். 27 ஜே. ஆர். மார் என்பாரும் பண்டைய கிரேக்கப் பாடல்களைப் போலவே பழந்தமிழ்ச் செய்யுள்கள் வாய்மொழி இலக்கியமாக இருந்திருக்கலாமென்பர் 28 க. கைலாசபதி, ஆதித் தமிழ் இலக்கியங்களிலே வழங்கிய தோல், குழை, யாப்பு போன்று காரணப் பெயர்கள் - அக்காரணங்கள் இன்று வலுவிழந்த போதும் - நிலைத்து நிற்பதனை எடுத்துக்காட்டி, வாய்மொழிச் சொற்களின் ஆதிக்கம் இலக்கியத்திலே நிலையானது என்பதனை நிறுவியுள்ளார். 29

இன்று, புனைகதை, நாடகம் சினிமா போன்ற கலை இலக்கிய வடிவங்களிற் பேச்சுவழக்கானது பெருந் தாக்கத்தினை ஏற்படுத்தி வருவதனை நாம் அவதானிக்கலாம். புனை கதை இலக்கியத்தைப் பொறுத்தவரையில் “இருவழக்குப் பண்பு” நடைமுறையிலே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆசிரியர் கூற்றுக்களும், விவரணங்களும் இலக்கியத் தமிழிலே அமையப், பாத்திர உரையாடல்கள் மட்டும் பெரும்பாலும் பேச்சுவழக்கில் அமைகின்றன. 30

ஈழத்து மேடை, வானொலி நாடகங்களைப் பொறுத்த வரையிலே ஆரம்பகால நாடகங்கள் யாவும் - அவை சரித்திர நாடகமாயினுஞ்சரி, சமூக நாடகமாயினுஞ்சரி - இலக்கியத் தமிழிலேயே நடிக்கப்பட்டு வந்தன. இலக்கியவழக்கு மொழியில் எழுதப்பட்ட நாடகங்களே போற்றவும்பட்டன. ஆனால், இந் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து, நகை சுவைக்காக மட்டுமே யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழ் மேடைகளிற் பயன்படுத்தப்பட்டது. தரகர்மாரோ, நகைச்சுவை நடிகர்களோ ஹாஷ்ய உணர்வின் மிகுவிப்பதற்காக மேடைகளிலே யாழ்ப்பாணப் பேச்சு வழக்கினைப் பயன்படுத்தினர்.31 “லண்டன் கந்தையா”, ‘அடங்காப்பிடாரி’ போன்ற வானொலி, மேடை நாடகங்களை இதற்கு உதாரணமாகக் காட்டலாம்.

ஆனால் இன்று, பேச்சுத்தமிழானது நாடகங்களிலே அதன் பயன்பாடு புலப்படும் வகையிலே பயன்படுத்தப்படுகிறது. பிரதேச மண்வாசனையை ஊட்டவல்ல ஆற்றல் பேச்சுவழக்கிற்கே உண்டென்பது அநுபவ பூர்வமாக உணரப்பட்டுவிட்டது. குறித்தவொரு பிரதேச மக்களின் வாழ்க்கை முறைகள். சடங்குகள், சம்பிரதாயங்கள் யாவற்றையும் அவர்தம் வாழ்;க்கைச் சூழ்நிலையையும் பேச்சுவழக்கே சிறப்பாகச் சித்திரிக்கவல்லது. என்பதை இன்றைய நாடகங்கள் எமக்கு விளக்குவனவாக உள்ளன. ஈழத்து நாடகங்களிலே பிரதேசப் பேச்சுத் தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்ற முயற்சியின் முன்னோடியாக விளங்கியவர் பேராசிரியர் கணபதிப்பிள்ளையாவார். தாம் எழுதிய நானாடகம் இருநாடகம் ஆகிய நாடக நூல்களிலே யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழை ஆற்றல் மிக்க ஒரு கருவியாக அவர் பயன்படுத்தினார். 32 நாடகத்திலே பேச்சுத்தமிழைப் பயன்படுத்துவதுபற்றி,

“அன்றியும் நாடகம் என்பது உலக இயல்பை உள்ளது உள்ளபடி காட்டுவது. ஆகவே, வீட்டிலும் வீதியிலும் பேசுவதுபோலவே அரங்கிலும் ஆடுவார் பேசல்வேண்டும்…………… 33

என்று அவர் தமது உறுதியானகொள்கையைப் பிரகடனப் படுத்தினார். அவரது காலத்தின் பின்னரே ஈழத்து வானொலி. மேடை நாடகங்களிற் பேச்சுத்தமிழானது ஆற்றல்மிக்க ஒரு கருவியாக கொள்ளப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சில ஆண்டுகளுக்கு முன் நடிக்கப்பட்ட ‘தணியாத தாகம்’ என்ற இலங்கை வானொலி நாடகம் பெரும் வெற்றியை ஈட்டியமைக்கு அதன் பேச்சு மொழி வழக்கினையே பிரதான காரணமாகக் கொள்ளவேண்டும்.

தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களின் உரையாடல்களும் ஆரம்ப காலத்திலே இலக்கியப் பேச்சுநடையிலேயே அமைந்தன. கதாநாயகன், கதாநாயகி, ஏனைய பாத்திரங்கள் யாவும் இலக்கியத் தமிழிலேயே உரையாடின. இடைக்காலத்திலே, நகைச்சுவைப் பாத்திரங்கள் மட்டும் சாதாரண பேச்சு வழக்கில் உரையாடின.

“பராசக்தி, வேலைக்காரி, ராணி முதலிய படங்களைப் பார்த்தால் இழ்வுண்மை புலப்படும். ராணி என்ற படத்தில் கதாநாயகி தான் ராணி என்று உணராது கள்வர் கூட்டத்தில் இருக்கும்போது மக்கள் தமிழில் பேசுகிறாள். ஆனால், காதலிக்கும்பொழுது இலக்கியத் தமிழிலேயே பேசுகிறான். கதாநாயகன் எப்பொழுதும் இலக்கியத்தமிழிலேயே பேசுகிறான். ஆனால், இன்று தமிழ்ப் படங்களின் நடை எவ்வளவோ மாறிவிட்டது. சமூகப் படங்கள் எல்லாம் மக்கள் தமிழிலேயே அமைகின்றன. தலைவனும், தலைவியும் மக்கள் தமிழிலேயே பேசுகின்றனர். 1964 தொடக்கத்தில் வெளிவந்த படம் காதலிக்க நேரமில்லை என்பது, பெரும் வெற்றியுடன் அநேக இடங்களில் பல நாட்கள் ஓடின படம் இது. இதில் மருந்துக்குக்கூட இலக்கியத் தமிழ் கிடையாது. அனைவரும் மக்கள் தமிழிலேயே பேசுகின்றனர்.”34

என்றார் முத்துச் சண்முகன்.

திரைப்படங்களின் வெற்றிக்கும் அப்படங்களின் மொழி வழக்கிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டென்பதே இவரது கருத்து. இவர் கூறுவதுபோலத் தென்னிந்திய சமூகத் தமிழ்த் திரைப்படங்கள் யாவற்றிலும் பேச்சுவழக்கு இன்று பயன்படுத்தப்பட்டு வருவது உண்மையே. ஆனால், அது இயல்பான மக்கள் தமிழ் அல்ல என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். தென்னிந்தியத் தமிழ் மக்களின் பேச்சு வழக்கினை மருவிய ஒருவகையான வழக்கே தமிழ்த் திரைப்படங்களிலே இன்று பயன்படுத்தப்படுகிறது. இதனை மக்கள் தமிழெனவோ, இலக்கியத் தமிழெனவோ கொள்ளாது தராதரப் பேச்சுத்தமிழ் அல்லது, தமிழ்ம் திறைப்படங்களுக்கே பிரத்தியேகமான பேச்சுவழக்கு எனக் கொள்வதே பொருந்தும். தென்னிந்திய மக்கள் சொற்களுக்கிடையிலே ஒலியினை அழுத்தியும் நீட்டியும் ஒலிப்பது பொன்று திரைப்படங்களிலே ஒலிப்பது இல்லை. படங்களிற் பேசப்படுஞ் சொற்களும், அவை பேசப்படும் முறையும் இயல்பான பேச்சு வழக்கினைவிடச் சற்று நெகிழ்ச்சியுடையவாகத், தமிழ்பேசும் மக்கள் யாவரும் விளங்கிக் கொள்ளக்கூடியதாக உள்ளன. தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களின் உரையாடலை இலகுவாக விளங்கிக்கொள்ளும் யாழ்ப்பாணத் தமிழரொருவர், தென்னிந்தியத் தமிழ் மகன் ஒருவரது உரையாடலை (நேரில் உரையாடும்போது) இலகுவிலே விளங்கிக்கொள்ள முடியாதிருப்பது கவனிக்க வேண்டியதாகும். எவ்வாறாயினும், தமிழ்த் திரைப்படத் துறையைப் பொறுத்தவரையிலே, இவ்வகை உரைநடையே ஆதிக்கஞ் செலுத்துவதாயுள்ளது.

ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களைப் பொறுத்தவரையிலும் இப்பாதிப்பினை நாம் தெளிவாகக் காணமுடிகிறது. யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழை உரையாடல்களுக்ணகப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட ‘பொன்மணி’ என்னும் திரைப்படம் வசூலினைப் பொறுத்தவரையில் தோல்விகண்டமைக்கும், தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படப் பேச்சுவழக்கினைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட காத்திருப்பேன் உனக்காக, நான் உங்கள் தோழன் ஆகிய படங்கள் வசூலினைப் பொறுத்தவரையிலே ஓரளவு வெற்றி கண்டமைக்குமான மொழியியற் காரணங்களை நாம் நோக்கலாம். தென்னிந்தியத் தமிழ்ப்பட உரையாடல் ஈழத்துத் தமிழ் மக்களுக்கு நன்கு பரிச்சயமானதொன்றாகும். திரைப்பட உலகிலே கேட்டுக் கேட்டுப் பழக்கப்பட்டுப்போய்விட்ட தென்னிந்தியப் பேச்சுவழக்கிற்கு மாறாகத் திரைப்பட உலகிற்கு முற்றிலும் புதியதான யாழ்ப்பாணப் பேச்சு மொழியைப் பொன்மணியிற் பயன்படுத்தியமையே அதன் தோல்விக்கான மொழியியற் காரணமாக அமைந்தது. ஆனால், காத்திருப்பேன் உனக்காக, நான் உங்கள் தோழன் ஆகிய திரைப்படங்கள் நன்கு பரிச்சயமான தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படப் பேச்சுவழக்கிலே தயாரிக்கப்பட்டமை இரசிகர்களின் மனத்தினைத் திருப்திப்படுத்துவதாக இருந்தது. எனவே, பேச்சுவழக்கானது ஆற்றல் வாய்ந்ததாக இருப்பினும் அதனைப் பொருளுக்கும் இடத்திற்குமேற்பப் பயன்படுத்தும்போதே ஏற்றம் பெறுகிறது என்பதனை நாம் விளங்கிக்கொள்ளலாம்.

ஈழத்துப் பேச்சுவழக்கின் சில பொதுவான இயல்புகள்
ஈழத்துத் தமிழ்ப் பேச்சுவழக்கினை வரையறுத்துக் காட்டுவதிலே பல்வேறு இடர்ப்பாடுகள் உள்ளன. அவற்றிலே முதன்மையானது, ஈழம்வாழ் தமிழ் மக்கள் ஒரு குழுவினராகவன்றி நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் பரந்து வாழ்வதாகும். இதனால், இம் மக்களின் பேச்சு வழக்கானது இடத்திற்கும், சூழலுக்கு மேற்ப வேறுபட்டுக் காணப்படுகின்றது. ஆனால், தென்னிந்தியத் தமிழ் மக்களின் பேச்சு வழக்கினோடு ஒப்பிடுகையிற் பல்வேறு நிலைகளிலே ஈழத்துத் தமிழ்ப் பேச்சுவழக்கு வேறுபட்டு விளங்குவதனை நாம் அவதானிக்கலாம்.

சிறப்பாகச் சொற்களைப் பிரயோகிப்பதில் மட்டுமன்றி உச்சரிப்பு, ஒலி, அசை மாற்றங்கள் ஆகியவற்றிலும் ஈழத்துப் பேச்சுத் தமிழ் இந்தியத் தமிழ்ப் பேச்சு வழக்குடன் வேறுபட்டு நிற்கின்றது. அரசியல், சமூக, வரலாற்று பௌதீக காரணிகள் சில இந் நிலைமைக்குக் காரணங்களாயமைந்தன.

ஒருமொழி தான் தோன்றிய இடத்திலே அதிக அளவு மாற்றங்களைப் பெறுவதனையும் புகுந்த இடத்திற் பெருமளவு மாற்றங்களின்றி விளங்குவதனையுமே நாம் இதற்குக் காரணமாகக் கொள்ளலாம். இன்று இங்கிலாந்திலே பேசப்படும் ஆங்கிலம் ஒருவர்க்கொருவர் புரிந்துகொள்ள முடியாத அளவு இடந்தோறும் மாறுபட்டிருப்பதனையும், அமெரிக்கர் பேசும் ஆங்கிலத்திலே அதிக அளவான வேறுபாடுகள் இல்லாதிருப்பதனையும் இதற்குச் சான்றாகக் காட்டுவர் முத்துச் சண்முகம். 35

ஈழத்துப் பேச்சுத் தமிழ் இந்தியப் பேச்சுத் தமிழைப் போன்று பல்வேறு மொழிகளின் தாக்கத்திற்கு உட்பட்டதொன்றல்ல. ஆங்கில, சிங்கள மொழிகளின் தாக்கமே ஈழத்துப் பேச்சுவழக்கிலே நேரடி ஆதிக்கஞ் செலுத்துகின்றது. இவற்றின் தாக்கமுங் கூடப் பெருமளவிற்கு கற்றோரின் பேச்சு வழக்கிலேயே காணப்படுகின்றது. சாதாரண கிராமிய மக்களின் பேச்சுவழக்கிலே இம் மொழிகளின் ஆதிக்கம் அருகிலே காணப்படுகின்றது. ஆனால், இந்தியத் தமிழோவெனின் ஆங்கில மொழியோடு வடமொழி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு, மராத்தி போன்ற பல்வேறு மொழிகளுடனும் நெருங்கிய உறவு கொண்டது. இதனால், இம்மொழிகளினின்றும் எத்தனையோ சொற்களும் ஒலிகளும் இந்தியத் தமிழிலே கலந்தன. இந்தியத் தமிழிற் காணப்படுகின்ற ஒலிப்புடை அடைப்பொலிகள் (ஏழiஉநன ளுவழிள) இப் பிறமொழிகளின் ஆதிக்கத்தினாலே ஏற்பட்டவையே. யாழ்ப்பாணத் தமிழிலே மொழி முதலிலே இன்றும் ஒலிப்புடை ஒலிகள் வருவதில்லை. 36

சாதி அமைப்பும் பேச்சுத் தமிழிற் பெரும் ஆதிக்கஞ் செலுத்துகின்றது. இந்தியாவிலே எத்தனைவகைச் சாதிகள் உண்டோ அத்தனைவகையான பேச்சுத்தமிழும் அங்கு காணப்படுகிறது. இந்தியக் கிராமங்களில் வாழும் ஒவ்வொரு சாதியினரும் ஒவ்வொருவகைப் பேச்சுத்தமிழைப் பயன்படுத்துகின்றனர். இதனால், இந்தியப் பேச்சுத்தமிழிற் தமிழிற் சாதிப் பேச்சுத்தமிழ் () பெரும் பங்கினை வகிக்கின்றது. 37 சிறப்பாகப் பிராமணர்கள், தம்மோடு ஒத்த சாதியினருடன் பேசும்போது ஒருவகைத் தமிழையும், ஏனைய சாதியினருடன் பேசும்போது இன்னொரு வகைத் தமிழையும் கையாளுகின்றனர். இந்திய, முஸ்லிம் தமிழ்ப் பேச்சுவழக்குகளைத் தவிர அடிப்படையிலே சாதிப்பேச்சுத்தமிழ் வேறுபாடுகள் ஈழத்தில் உணரப்படுவது மிக அரிதாகும்.

பிரதேசங்கட்கிடையிலான தொடர்பு முறைமைகளும் ஈழத்துப் பேச்சுவழக்கின் சில தனியியல்புகளுக்குக் காரணமாயமைகின்றன. ஈழத்திலே பிரதேசப் பொதுப் பேச்சுத் தமிழ் () வேறுபாடுகள் உணரப்படவே செய்கின்றன. யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, கொழும்பு போன்ற பிரதேசங்களிற் பேசப்படும் மொழிகளுக்கிடையே வேறுபாடுகள் உணரப்படுகின்றபோதும், இவையாவற்றினதும் இயல்பும் அடிப்படையிலே ஒரே தன்மைத்தானவையே. ஆனால், இந்தியப் பேச்சுத் தமிழ் பிரதேசத்திற்குப் பிரதேசம் விகற்பம் மிகுந்து காணப்படுகின்றது குமரித்தமிழ், தஞ்சைத்தமிழ், வடஆர்க்காட்டுத்தமிழ், சென்னைத்தமிழ் ஆகியன மிகத் துல்லியமாகப் புலப்படும் வேறுபாடுகள் கொண்டவை. 38

இவ்வாறு, பிரதேசப் பேச்சுமொழியானது, இந்தியாவிலும் ஈழத்திலும் வேறுபட்ட அளவிலே அமைந்திருப்பதற்கு இரு நாடுகளின் பிரதேச அமைவினையை காரணமாகக் கூறலாம். இந்தியா மிகப் பரந்த நாடு. தமிழ் நாட்டிலே தமிழ்மக்கள் வாழும் பகுதிகள் மிகப் பரந்தவை@ இடைத்தூரமும் மிக அதிகம். அத்துடன் போக்குவரவு வசதிகளும் குறைவாகும். இதனால், ஒரு பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நாளாந்தம் ஏனைய பிரதேசப் பொதுமக்களுடன் தொடர்புகொள்ள முடிவதில்லை. எனவே, ஒரு பிரதேசப் பேச்சுமொழியானது இன்னொரு பிரதேசப் பேச்சுமொழியின்மீது ஆதிக்கஞ் செலுத்துவதும் அருகியே காணப்படுகின்றது.

ஈழத்தைப் பொறுத்தவரையிலே நிலைமை மாறானது ஈழம் மிகச்சிறிய நாடு தமிழ்ப்பேசும் மக்கள் நாளாந்தம் ஏனைய பிரதேச மக்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. எனவே, ஒரு பிரதேசத்தின் பேச்சுவழக்கு இன்னொரு பிரதேசத்தின் பேச்சுவழக்கினைப் பாதிப்பதாகக் காணப்படுகிறது. இதனாலேயே, ஈழத்துப் பிரதேசப் பேச்சுத்தமிழானது அடிப்படை இயல்புகளிலே ஒற்றுமையுடையதாகக் காணப்படுகின்றது.

ஈழத்துத் தமிழ்ப் பேச்சுவழக்கிலே, தென்னிந்தியப் பேச்சுத் தமிழில் இல்லாத அளவுக்குச் சிங்களச் சொற்களின் செல்வாக்கினைக் காணக்கூடியதாக உள்ளது சிறப்பாக மட்டக்களப்பு. மலைநாட்டுப் பேச்சு வழக்கிலும், முஸ்லிம் மக்களது பேச்சு வழக்கிலும், சிங்களச் சொற்கள் பயின்று வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டம் நீண்ட காலம் சிங்கள் மன்னர்களின் நேரடி ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. மலைநாடும் தொன்று தொட்டுச் சிங்கள மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்து வந்ததுடன், சிங்கள மக்களையே பெரும்பான்மையிராகவுங் கொண்டது. முஸ்லிம் மக்கள் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடகிழக்கு மாகாணங்களில் மட்டுமன்றி, சிங்கள மக்கள் வாழும் பகுதிகளிலும் செறிந்து வாழுகின்றனர். இவர்கள், வியாபாரத்தினையே பிரதான தொழிலாகக் கொண்டவர்கள். சிங்கள மக்கள் மத்தியிலே நாளாந்தம் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதனால், சிங்கள மொழியினையே வர்த்தகமொழியாக இவர்கள் பயன்படுத்துகின்றனர்.

1960ஆம் ஆண்டின் பின்னர், சிங்களம் அரசகரும மொழியாக்கப் பட்டமையாலும், அளவிறந்த சிங்களச் சொற்கள் தமிழ் மொழியிற் கலந்து விட்டன. லக்சல, சலுசல, ஜனவசம, போயா, பிரீதி, மித்துறி, மஹாஜனசம்பத, ஜாதிக சம்பத போன்ற பொதுமக்கள் தொடர்புடைய சொற்கள் சிங்கள மொழியினின்றும் தமிழ் மொழியிலே இன்று பரவலாகப் பயன்படத்தப்படுஞ் சொற்களாகும். இதன் காரணமாக ஈழத்துத் தமிழ்ப் பேச்சு வழக்கிலே சிங்களச் சொற்களின் ஆதிக்கத்தினை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

மலையாளம் இந்தியத் தமிழிலிருந்து வேறான மொழியென்றால், ஈழத்துப் பேச்சுத் தமிழையும் வேறு மொழியெனக் கொள்ளலாமோவென்ற ஐயம் இந்திய மொழியியலாளரிடையே தோன்றியுள்ளது. 39 ஏனெனில், மலையாளம் போலவே பேச்சு வழக்கிலே, ஈழத்துத் தமிழும் இந்தியத் தமிழினின்றும் வேறுபடுகின்றது. இந்தியத் தமிழையும் ஈழத்துத் தமிழையும் ஒரே மொழியாக இணைப்பது ஒரே வடிவிலான எழுத்து மொழியேயாகும்.

ஆக, பொதுப் பேச்சுத்தமிழ் () என்ற வகையிலேயே, இந்தியப் பேச்சுத்தமிழுடன் ஈழத்துப் பேச்சுத்தமிழ் ஒத்திருப்பதனை நாம் காணலாம். இது, சாதிப் பேச்சுத்தமிழ் ஒத்திருப்பதனை நாம் காணலாம். இது, சாதிப் பேச்சுத்தமிழ், பிரதேசப் பொதுப் பேச்சுத் தமிழ் ஆகியவற்றின் பண்பிலிருந்தும் வேறுபட்டது. கற்றவர் – கல்லாதவர், சாதி, பிரதேசம், என்னும் வேறு பாடுகளின் இயல்புகளைக் கைக்கொள்ளாது மக்கள் யாவரும் விளங்கக்கூடிய வகையிற் பேசுவதே பொதுப் பேச்சுத் தமிழ். சதாரணமாகப் படித்த மக்கள் தங்கள் நாட்டில் மட்டுமன்றி ஏனைய நாட்டு மக்களுடம் உரையாடுகையிற் பொதுப் பேச்சுத்தமிழையே கையாளுகின்றனர் இது, ஓரளவுக்கு மேடைப் பேச்சுத் தமிழையும் எழுத்துவழக்குத் தமிழையும் ஒத்ததாகவே காணப்படுகிறது.

ஈழத்துப் பேச்சுவழக்கின் இயல்பினைத் தெரிந்துகொள்வதற்கு அதனை இந்தியப் பேச்சுத்தமிழுடன் ஒப்பிட்டு நோக்கல் பொருத்தமானது. பின்வரும் உதாரணங்கள் மூலம் இரு நாடுகட்கிடையிலான பேச்சுமொழி வேறுபாட்டை விளங்கிக்கொள்ளலாம்.

இந்திய, ஈழத்துப் பேச்சுவழக்கிலே ஒலியமைப்பு

உயிர் எழுத்துக்களில் ஒலியமைப்பு.

மெல்லின ஈற்றுச் சொற்களின் இறுதி மெல்லினங்கள் இந்தியப் பேச்சுவழக்கிலே உச்சரிக்கப்படுவதில்லை. இவற்றுக்குப் பதிலாக மூக்குயிர்களே உச்சரிக்கப்படுகின்றன ஆனால், ஈழத்துப் பேச்சுத்தமிழிலே இறுதி மெல்லினங்கள் உள்ளவாறே உச்சரிக்கப்படுகின்றன.

உதாரணம்:

இலக்கிய வழக்கு ஈழத்துப் பேச்சு வழக்கு இந்தியப் பேச்சு வழக்கு
அவன் - அவன் - அவெ
இவன் - இவன் - இவெ
குடம் - குடம் - கொட
வந்தோம் - வந்தம் - வந்தோ

இந்தியப் பேச்சுத்தமிழிலே முதலசையில் வரும் இகர உகரங்களை அடுத்து அகரம் வரும்போது முறையே எகரமாகவும் ஒகரமாகவும் மாறும். ஈழத்துப் பேச்சு வழக்கிலே இம்மாற்றம் இடம்பெறுவதில்லை.

உதாரணம்:
இலக்கிய வழக்கு ஈழத்துப் பேச்சு வழக்கு இந்தியப் பேச்சு வழக்கு
இடம் - இடம் - எடம்
திறப்பு - திறப்பு - தெறப்பு
உலகம் - உலகம் - ஒலகம்
குடை - குடை - கொடை

இந்தியப் பேச்சுத் தமிழிலே இரண்டாவது அசையில் நிற்கும் உயிர் மறைந்து விடும். ஈழத்துப் பேச்சு வழக்கிலே இவ்வாறு மறைவதில்லை.

உதாரணம்:
இலக்கிய வழக்கு ஈழத்துப் பேச்சு வழக்கு இந்தியப் பேச்சு வழக்கு
பாக்கியம் - பாக்கியம் - பாக்யம்
ஓடினான் - ஓடினான் - ஓட்னா
எவ்வளவு - எவ்வளவு - எவ்ளவு


மெய்மெயழுத்துக்களில் ஒலியமைப்பு
இந்தியப் பேச்சுவழக்கிற் குறிலை அடுத்துவரம் யகர மெய் இகரம் பெறும். ஈழத்துப் பேச்சுவழக்கிலே இயல்பாயிருக்கும்.

உதாரணம்:
இலக்கிய வழக்கு ஈழத்துப் பேச்சு வழக்கு இந்தியப் பேச்சு வழக்கு
நெய் - நெய் - நெய்யி
செய் - செய் - செய்யி
பெய் - பெய் - பெய்யி
மெய் - மெய் - மெய்யி

இந்தியப் பேச்சுவழக்கிற் குற்றொற்றிறுதிச் சொற்கள் உகரம் பெறும்@ ஈழத்துப் பேச்சுவழக்கிலே இயல்பாயிருக்கும்.

உதாரணம்:
இலக்கியம வழக்கு ஈழத்துப் பேச்சு வழக்கு இந்தியப் பேச்சு வழக்கு
பெண் - பெண் - பொண்ணு
கண் - கண் - கண்ணு
பால் - பால் - பாலு
தயிர் - தயிர் - தயிரு

ன்ற் என்ற மெய்ம்மயக்கம் இந்தியப் பேச்சுவழக்கிலே ண்ண் எனவும், ஈழத்துப் பேச்சு வழக்கிலே ண்ட் எனவும் வரும்.

உதாரணம்.
இலக்கிய வழக்கு ஈழத்துப் பேச்சுவழக்கு இந்தியப் பேச்சுவழக்கு
கன்று - கண்டு - கண்ணு
ஒன்று - ஒண்டு - ஒண்ணு
நின்றான் - நிண்டான் - நிண்ணா
தின்றான் - திண்டான் - திண்ணா

வேற்றுமைச் சொற்கள்.
ஆறாம் வேற்றுமையைப் பொறுத்தமட்டிலேயே இந்தியப் பேச்சுவழக்கிற்கும் ஈழத்துப் பேச்சுவழக்கிற்குமிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆறாம் வேற்றுமை உருபுகள் அது, ஆது, அ என்பன. இந்தியப் பேச்சுவழக்கிற் பெயர்ச்சொல் ஆறாம் வேற்றுமை உருபினை ஏற்றுக்கொள்வதில்லை. மாறாகப் பெயர்ச்சொல்லின் ஈறு கெட்டு விடுகிறது. ஈழத்துப் பேச்சுவழக்கிலே அது, ஆது, அ என்னும் உருபுகளுக்குப் பதிலாக ரை, எடெ ஆகிய உருபுகளே வழக்கிலுள்ளன.

உதாரணம்:
இலக்கிய வழக்கு ஈழத்துப் பேச்சுவழக்கு இந்தியப் பேச்சுவழக்கு
அவனது - அவன்ரை - அவெ
- அவனெட - அவெ

ழகரம் இந்தியப் பேச்சுவழக்கிலே இயல்பாக உச்சரிக்கப்பட ஈழத்துப் பேச்சுவழக்கிலே ளகரமாக ஒலிக்கப்படுகின்றது.

உதாரணம்:
இலக்கிய வழக்கு ஈழத்துப் பேச்சுவழக்கு இந்தியப் பேச்சுவழக்கு
கொழும்பு - கொளும்பு - கொயும்பு
பழம் - பளம் - பயம்

மேற்காட்டப்பட்ட உதாரணங்களை ஆராயும்போது, இந்தியப் பேச்சு வழக்கிற்கும் ஈழத்துப் பேச்சு வழக்கிற்குமிடையேயான பின்வரும் பிரதான வேறுபாடுகள் சிலவற்றை நாம் அவதானிக்கலாம்:

(1) இந்தியப் பேச்சு தமிழ் ஈழத்துப் பேச்சுத் தமிழைவிடப் பெருமளவுக்குச் சொற் குறுக்கத்தைப் பெறுகின்றது. பெரும்பாலான பெயர், வினைச் சொற்களின் ஈற்றுமெய் கெட்டுச் சொல் குறுக்கம் பெற்று விடுகிறது:

உதாரணம்:
அவன் - அவெ

வந்தான் - வந்தா

(2) இந்தியப் பேச்சுத்தமிழிற் பெருமளவுக்கு இசைத்தன்மை பேணப்படுகின்றது. பேச்சுவழக்கிலே வலயம் முறிந்துபோகாது சொற்களுக்கு அசைநிறைகள் சேர்க்கப்படுகின்றன.

உதாரணம்:
பெண் வந்தாயிற்று - பெண்ணு வந்தாச்சு
நெய் மணக்கிறது - நெய்யி மணக்குது

(3) இந்தியப் பேச்சுத்தமிழ் இலக்கியத் தமிழைவிடப் பல்வேறு நிலைகளிலும் திரிபுபட்டுள்ளது. ஆனால், ஈழத்துப் பேச்சுத்தமிழ் முற்றுமுழுவதாக இல்லாவிடினும் ஓரளவுக்கேனும் இலக்கியத் தமிழின் இயல்புகள் கொண்டதாக அமைந்துள்ளது.

இவ்வியலில் இலக்கியத்திற்கும் மொழிக்கும் இடையே உள்ள தொடர்பு, சமூகரீதியாகவும் இலக்கிரீதியாகவும் பேச்சுமொழியின் முதன்மைத்துவம், இந்தியப் பேச்சுவழக்கினோடு ஈழத்துப் பேச்சுவழக்கினை ஒப்பிட்டு. ஈழத்துப் பேச்சுவழக்கின் தனிச் சிறப்பியல்புகள் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன. புனைகதை இலக்கியத் துறையிலே, பேச்சு வழக்கின் பங்குபற்றி ஆராயப் புகும்போது, மேற்குறித்த விடயங்கள் பற்றி அறிதல் இன்றியமையாததாகும்.

சான்றாதாரம்
1. வரதராசன், மு., மொழி வரலாறு. பக். 6

2.ளுவநiநெச புநழசபநஇ ‘டுiபெரளைவiஉள யனெ டுவைநசயவரசந’ டுiபெரளைவiஉள யவ டுயசபந. p. 115

3.வேலுப்பிள்ளை, ஆ., தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும். பக். 14

4.வித்தியானந்தன், சு. தமிழர் சால்பு. பக். 180

5.செல்வநாயகம் வி., தமிழ் இலக்கிய வரலாறு. பக். 96

6.மேற்படி. பக். 96

7.மேற்படி பக். 98.

8.வேலுப்பிள்ளை, ஆ., மு.கு.நூ. பக். 67.

9.ளுவயடinஇ து.ஏ.இ ஆயசஒளைஅ யனெ வாந Pசழடிடநஅள ழக டுiபெரளைவiஉள. P. 9.

10.சிவத்தம்பி, கா., வானமாமலை மணிவிழா மலர், பக்.7.

11.கருணாகரன், கி., சமுதாய மொழியியல். பக். 2.

12.சீனிவாசன், ரா., மொழியியல், பக். 292

13.வரதராசன், மு., மு.கு.நூ., பக். 7

14. பாரதியார் கவிதைகள், தேசிய கீதங்கள், தமிழ்.

15.வரதராசன், மு., மு.கு.நூ., பக். 234

16.சீனிவாசன், ரா., மு.கு.நூ., பக். 7

17.வரதராசன், மு., மு.கு.நூ., பக். 15

18. சண்முகதாஸ். அ., நமது மொழியின் இயல்புகள், பக்.3

19.சணமுகதாஸ், அ. “குழந்தை மொழி”, பசறைத் தமிழ் வித்தியாலய மலர், 1973

20.ஏயனெசநலளஇ டுயபெரயபந

21.வரதராசன். மு., மு.கு.நூ., பக். 14

22.முத்துச் சண்முகன், இக்காலத் தமிழ், பக். 9

23.நன்னூல், சூ. 278

24.மேற்படி, சூ. 273, 274.

25.நடராசா செ. மட்டுநகர், “செந்தமிழ்ச் சாயல் தழீஇய அந்நியமொழிச் சொற்கள்”, இளங்கதிர்.1949-50

26.ஊhசளைவழிhநச புயனெறநடடஇ யு ளுவரனல ழக வாந ளுழரசஉநள ழக Pழநவசலஇ p. 4

27.கைலாசபதி, சு. ஒப்பியல் இலக்கியம், பக். 69.

28.மேற்படி. பக். 68.

29.மேற்படி, பக். 76.

30.சண்முகதாஸ். அ.,“ஆக்க இலக்கியமும் மொழியியலும்”, ஆக்க இலக்கியமும் அறிவியலும்,பக்.57

31.சண்முகதாஸ். அ., “ஈழத்து நாடக வரலாற்றில் ஒரு தமிழ்ப் பேராசிரியர்”, இளங்கதிர். பக். 67-3.

32.சொக்கலிங்கம், க., ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி (விரிவான தகவல்களுக்கு).

33.கணபதிப்பிள்ளை, க., நானாடகர், முன்னுரை, பக். 5-6

34.முத்துச் சண்முகன், மு.கு.நூ., பக். 9

35.மேற்படி, பக்.22

36.மேற்படி, பக்.32

37.முத்துச் சண்முகன், இக்கால மொழியியல். பக்.243

38.மேற்படி, பக். 235.

39.முத்துச் சண்முகன், இக்காலத் தமிழ். பக்.17

40.இவ்விடயந் தொடர்பாகப் பார்க்க:

முத்துச் சண்முகன், “யாழ்ப்பாணத் தமிழ்” இக்காலத் தமிழ், பக். 15

ளுரளநநனெசையசயதயாஇ ளு.இ யு னுநளஉசipவiஎந ளவரல ழக ஊநலடழn வுயஅடை (றுiவா ளிநஉயைட சநகநசநnஉந வழ துயககயெ வுயஅடை). ருnpரடிடiளாநன வாநளளைஇ யுnயெஅயடயi ருniஎநசளவைலஇ 1967.

ளூயnஅரபயஅpடைடயiஇ ஆ.ஈ “யு வுயஅடை னுயைடநஉவ in ஊநலடழn”இ ஐடு. 23 (1962) pp. 90-98.

ளுயnஅரபயனயளஇ யு.இ வுhந Phழழெடழபா ழக ஏநசடியட குசழஅள in ஊழடடழஙயயைட ஊநலடழn வுயஅடைஇ ருnpரடிடiளாநன Ph. னு. வாநளளைஇ ருniஎநசளவைல ழக நுனinடிரசபாஇ 1972.

2. ஈழத்துப் புனைகதையும்
பேச்சுவழக்குப் பிரயோகமும்
வரலாறு

ஈழத்துத் தமிழ்ப் புனைகதை இலக்கிய வரலாற்றுச் சுருக்கம்

19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஈழத்தின் அரசியல், சமூக அமைப்புகளிலேற்பட்ட மாற்றங்கள், அக்காலத்தெழுந்த ஈழத்து இலக்கியங்களிலும் பிரதிபலித்தன. சுதேச மன்னர்களின் ஆட்சிபீடங்கள் ஐரோப்பியர் கைகளுக்கு மாறியமை, ஈழத்தின் சமூக அடித்தளத்தினையே ஆட்டங்காணச் செய்தது. ஐரோப்பியர் வருகையோடு இடம் பெற்று அரசியல் மாற்றங்கள், சமூக நிலைமைகளிற் பாரிய விளைவுகளை ஏற்படுத்தின.

கோட்டை, கண்டி, யாழ்ப்பாண அரசுகளின் வீழ்ச்சியானது, நிலமானிய சமூக அமைப்பின் அடித்தளங்களை வலுவிழக்கச் செய்தது. இவ்வமைப்பிற் சிக்குண்டு கிடந்த சுதேசிகளை, ஐரோப்பியர் வகுத்த புதிய ஜனநாயகப் பாதையானது புதியதொரு சமூக அமைப்பினுக்கு இட்டுச் சென்றது. அரசியல், கல்வி, கலாசாரம், மொழி, தொழில் வாய்ப்புக்களிலே புதிய பாதைகள் வகுக்கப்பட்டன.

விவசாய நிலத்தோடு கட்டுண்டு கிடந்த மக்கள், புதிய தொழில் துறைகளிலே நாட்டங் கொண்டனர். விவசாய அடிப்படை மாற்றம் பெற்றது. உணவுப் பயிர்ச் செய்கை பணப்பயிர்ச் செய்கையாக மாறியது. சமூகத்தின் உயரந்தஸ்தை நிலை நிறுத்துவதான கல்விமுறை, சாதாரண மகனுக்கும் அறிவு புகட்டும் ஒரு பொதுத் துறையாக மாற்றம் பெற்றது. சாதி அமைப்புக்களும் சமய வகுப்புக்களும் ஆட்டங்காணலாயின. புதிய வீடுகள் திறக்கப் பட்டமை, கிராமத்தோடு கட்டுண்டு கிடந்த மனிதனைப் பரந்து விரிந்த ஓர் உலகிலே முன்னிறுத்துவதாயிற்று. இம்மாற்றங்கள், ஈழத்துச் சமூக அமைப்புகளிற் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தலாயின. ஈழத்து இலக்கியங்களும் இ;வாறான மாற்றங்களினாலே தாக்கப்பட்டதன் விளைவே ஈழத்துத் தமிழ்ப் புனைகதைகளின் தோற்றமாயமைந்தது.

இம்மாற்றங்களினால், நிலமானிய அமைப்பினைப் புலப்படுத்திவந்த இலக்கியங்கள் சிறிதே புதிய ஜனநாயகவழி திசை திரும்பலாயின. இதுவரைகாலமும், கடவுளும் மன்னனும் நிலக்கிழானுமே இலக்கிய நாயகர்களாயினர். அத்துடன், அவர்களைப் பாடுவதற்குச் செய்யுள் வழக்கே பயன்படுத்தப்பட்டுவந்தது. இந்நிலை 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே செல்வாக்கினை இழக்க, அதன் விளைவாகச் சாதாரண மனிதன் அவ்விடத்தை ஆக்கிரமித்துக் கொண்டான். அவனைப் பாடும் இலக்கிய உருவமும் மாற்றம் பெற்றது. செய்யுள் வடிவத்துக்குப் பதிலாக உரைநடை செல்வாக்குப் பெற்றது. இவ்வுரைநடையுடன் பின்னிப் பிணைந்து நிற்கும் ஓர் இலக்கிய வகையே புனைகதை இலக்கியமாகும். புனைகதை இலக்கியம், நாவல், சிறுகதை ஆகிய இருவகை இலக்கிய வடிவங்களையும் உள்ளடக்கியது. ஐரோப்பியர் வருகையினாலே ஈழத்தின் சமூக மாற்றங்களோடு உருவான புனைகதை இலக்கியம், பின்னர் அம் மாற்றங்களின் விளைவுகளைப் பிரதிபலிப்பதாயும், அம் மாற்றங்களின் விளைவுகளை நெறிப்படுத்துவதாயும் அமையலாயிற்று.

ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியத்தின் தோற்றம் வளர்ச்சிபற்றி நா. சுப்பிரமணியம் (1978) விரிவாக எழுதியுள்ளார். இது தொடர்பான ஏனைய ஆய்வுகள் அந்நூலிலே குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே இக் கட்டுரையிலே, இவைபற்றி விரிவாக ஆராயாது ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியத்தின் பொதுவான வளர்ச்சிப்போக்கே சுருக்கமாகத் தரப்படுகின்றது. ஆய்வு வசதி கருதி, ஆரம்பகால நாவல்கள் (கி.பி. 1900 வரை), இடைக்கால நாவல்கள் (கி.பி. 1951ன் பின்னர்) என மூன்று பிரிவுகளாக வகுத்து ஆராயப்படுகின்றது.

ஆரம்பகால நாவல்கள் (1885 – 1900 வரை)
ஈழத்தின் ஆரம்பகாலத் தமிழ் நாவலாக. 1885 இல் வெளியிடப்பட்ட முகம்மது காசிம் சித்திலெவ்வை எழுதிய அசன்பே கதை கொள்ளப்படுகின்றது. இந்நாவல் வெளியிடப்பட்டுப் பத்து ஆண்டுகளின் பின்னர் திருக்கோணமலை த. சரவணமுத்துப்பிள்ளை மோகனாங்கி என்ற நாவலை எழுதினார். இவ்விரு நாவல்களுமே ஈழத்தின் ஆரம்பகாலத் தமிழ் நாவல்களாக இங்கு கொள்ளப்படுகின்றன. அசன்பே கதை, எகிப்து தேச அரச வம்சத்தைச் சேர்ந்த அசன் என்னும் இளைஞனின் வாழ்க்கையைச் சித்திரிக்கின்றது. மர்மங்கள் நிறைந்த அற்புதக் கதை இது. உண்மையே வெல்லும் என்ற சத்திய நெறியை இக்கதை போதிக் கின்றது. மோகனாங்கி, தஞ்சை நாயக்க வம்ச வரலாற்றினைப் பொருளாகக் கொண்டது. இது காதல், வீரர், சூழ்ச்சி என்பன பொருந்திய அரசகுடும்பக் கதையாகும்.

எனவே, ஆரம்ப காலத்துத் தமிழ் நாவல்களின் பண்பினைப் பின்வருவனவாக நாம் கொள்ளலாம்.

(அ) முதலாவது தமிழ் நாவலான மாயூரம் வேத நாயகம்பிள்ளையின் பிரதாபமுதலியார் சரித்திரம் போலவே, ஈழத்திலே தோன்றிய அசன்பே கதையும், மோகனாங்கியும் ஒழுக்க நெறியை வற்புறுத்துவன.

(ஆ)ஆரம்பகால ஈழத்துத் தமிழ் நாவல்கள், பழமைப் பிடியினின்றும் இலகுவிலே மீளமாட்டாதனவாய்ச், சமூகத்தின் உயரந்தஸ்திலிருந்த அரசவம்சத்தினரின் சரித்திரங்களையே பொருளாகக் கொண்டன.

(இ)இந்நாவல்கள் ஈழத்தவரால் எழுதப்பட்டிருப்பினும் அவை ஈழத்தினைக் களமாகக் கொண்டனவல்ல.

(ஈ)இந் நாவல்களின் மொழிநடை காவியப்பண்பு வாய்ந்தது.

இடைக்கால நாவல்கள் (1901 – 1950 வரை)
இக்காலப்பகுதியில் இயற்றப்பட்ட நாவல்களிலே ஈழத்தினைக் களமாகக்கொண்டு இலக்கியம் படைக்கப்பட வேண்டும் என்ற முனைப்பின் வெளிப்பாட்டினை அவதானிக்க முடிகிறது. 1936ல் சி. வே. தாமோதரம்பிள்ளை எழுதிய காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி என்ற நாவலுக்குப் பதிப்புரை எழுதிய சி.இ. இரகுநாதையர் பின்வருமாறு குறிப்பிட்டார்:

“மேலைத்தேசங்களில் கற்பனை நூல்கள் மிக அதிசயிக்கத்தக்கவிதமாக முன்னேற்றமடைந்துள்ளன. உயர் கற்பனா சரித்திரங்களை எழுதும் ஆசிரியர்களும் மிகவும் கீர்த்திபெற்றவர்களாய்ப் பலர் இருக்கின்றனர். நமது தாய்நாடாகிய இந்தியாவிலும் அனேக கற்பனா சரிதங்கள் வெளிவந்திருக்கின்றன. கீர்த்திபெற்ற ஆசிரியர்களாகவும் பலர் விளங்குகின்றனர்.”

இக்கூற்றானது, இடைக்காலத்து ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியக் கோட்பாடுகள் பற்றிய பல்வேறு தகவல்களை எமக்கத் தருகின்றது அவை:

(அ)இடைக்காலத்தெழுந்த ஈழத்துத் தமிழ் நாவல்களுக்கும் ஆதரிசமாயமைந்தவை மேலைதேய நாவல்களே.

(ஆ)நாவல்களின் பொதுப்பண்பு. அவை கற்பனா சரிதங்களாய் இருக்கவேண்டுமென்பதாகும் காவியங்கள் மனிதனைக் கற்பனை உலகிலே சஞ்சரிக்க வைப்பது போன்ற நாவலும் கற்பனாரசம் மிக்கதாய் இருக்கவேண்டும்.

(இ)நாவல்கள், காவியப்பாங்குடன் விளங்குவதுடன் சரித்திரங் கூறுவனவாயும் இருக்கவேண்டும். நாடு, நகர வருணனை, கதாநாயகன், நாயகியரின் பிறப்பு, வளர்ப்பு, இறப்பு ஆகியன நாவலிலே இடம்பெறவேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

(ஈ)கற்பனாசரித்திரம் எழுதுவதாற் பெருங்கீர்த்தியைப் பெற்றுவிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இக்காலத் தெழுந்த நாவல்கள் பலவும், ஆங்கில நாவல்களைப் படித்த மத்தியதர வர்க்கத்தினராலே இந்நோக்கத்துடனேயே எழுதப்பட்டன.

இவ்விடைக்காலத்து நாவல்கள், சமயமாற்றம், சமய போதனை, சமூக சீர்திருத்தம், ஒழுக்கம், காதல், கணவன் மனைவி உறவுநிலை போன்றவற்றைச் சமுதாய நடப்பியல் போடொட்டிச் சித்திரிக்கத் தலைப்பட்டன. இவை, ஈழத்தினைக் களமாகக் கொண்டமைந்ததோடு ஈழம் வாழ் மக்களின் சமூக நிலைப்பாடு, வாழ்க்கைப் பின்னணி ஆகியவற்றையும் வருணிப்பனவாயிருந்தன. 1905ல் சி.வை. சின்னப்பா பிள்ளை எழுதிய வீரசிங்கன் கதை மேற்குறித்த பண்புகள் பலவற்றைக்கொண்டதாகும்.

இக்கால கட்டத்திலெழுந்த நாவல்கள், ஐரோப்பியர் வருகையினாலே ஏற்பட்ட சமூக முரண்பாடுகளைச் சித்திரிப்பனவாக மட்டுமன்றி, அம்மாற்றங்களின் விளைவுகளை மேலெழுந்தவாரியாக ஆராயவுந் தலைப்பட்டன. 1925ல் இடைக்காடர் எழுதிய சித்த குமாரன், நீலகண்டன் ஒரு சாதிவேளாளன் ஆகிய நாவல்கள் முறையே சைவசித்தாந்த தத்துவங்களையும், சொத்துடமைக்கான போட்டி, சாதிப்பிரச்சினை ஆகியவற்றையுஞ் சித்திரிக்கின்றன. எஸ். தம்பிமுத்துப்பிள்ளை எழுதிய சுந்தரன் செய்த தந்திரம் (1918) அகைவல்லி (1926) ஆகிய நாவல்கள் முறையே, நேர்மை, சாதிப்பிரச்சினை ஆகியவற்றைச் சித்திரிக்கின்றன. 1938ல் ஸ்ரிக்னி சார்ள்ஸ் இயற்றிய சோமாவதி அல்லது இலங்கை இந்தியர் நட்பு என்ற நாவல், இலங்கை இந்திய நட்புறவை வளர்ப்பதனை நோக்கமாகக் கொண்டிருப்பதுடன் சிங்கள தமிழ் இனங்களின் ஐக்கியத்தினையும் வலியுறுத்துகின்றது. இவை தவிர, மங்களநாயகம் தம்பையா எழுதிய அநுபவக் களஞ்சியம். நொறுங்குண்ட இதயம் (1914), அரியமலர் (1926) ஆகிய நாவல்களும், ம.வே.திருஞான சம்பந்தம்பிள்ளை எழுதிய காசிநாதன் நேசமலர் (1924) கோபால நேசரத்தினம் (1926 – 27), துரைரத்தினம் நேசமணி (1927 – 28) ஆகிய நாவல்களும் இக்காலகட்டத்தெழுந்த சமூக நாவல்களாகும்.

ஈழத்து நாவல் இயக்கியப் பரப்பிலே இன்னொரு வகையான நாவல்களின் தோற்றத்தினையும் அவதானிக்க முடிகிறது. 1900 – 1950ம் ஆண்டுகட்கிடைப்பட்ட காலப் பகுதியிலே இந்தியாவில் அரசியல், வரலாறு, சமூக நாவல்களைக் கல்கி எழுதிக்கொண்டிருக்க, ஆரணி குப்புசாமி, வடுவூர் துரைசாமி ஐயங்கார் போன்றோர் துப்பறியும் மர்மநாவல்களை எழுதியமை போல, ஈழத்திலும் இக்காலப் பகுதியிற் பெருமளவு மர்மநாவல்கள் தோற்றம் பெற்றன.

எஸ்.கே. சுப்பிரமணியம் எழுதிய நீலாக்ஷி (1918) திருமதி செம்பொற்சோதீஸ்வரர் செல்லம்மாளின் இராசதுரை (1924) இடைக்காடரின் நீலகண்டன் ஒரு சாதிவேளாளன் (1925), அ. நாகலிங்கம்பிள்ளையின் சாம்பசிவ ஞானாமிர்தம் அல்லது நன்னெறிக்களஞ்சியம் (1927), வண்ணை மா.சிவராமலிங்கம் பிள்ளையின் பூங்காவனம் (1930), வ.மு.சின்ன தம்பியின் வீராம்பாள் அல்லது விபரீத மங்கை (1930) சார்ள்ஸ் ஸ்ரிக்னியின் தேம்பாமலர் (1929), ஞானபூரணி (1933) சி. வே. தாமோதரம்பிள்ளையின் காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி (1936), மூத்ததம்பி செல்லப்பாவின் சுந்தர வதனா அல்லது இன்பக காதலர் (1938), வரணியூர் ஏ.சி. இராசையாவின் பவளகாந்தன் அல்லது கேசரி விஜயம் (1932), அருணோதயம் அல்லது சிம்மக்கொடி (1923) ஆகியனவும் வீரகேசரிப் பத்திரிகையிலே அதனாசிரியர் எச். நெல்லையா எழுதிய ஏறத்தாழப் பத்துத் தெர்ர் நாவல்களும் இக்காலப்பகுதியிலெழுந்த மர்மப்பண்பு நாவல்களென்பர் நா. சுப்பிரமணியம். (1978:39)


இக்கால நாவல்கள் (1950 இன் பின்னர்)
1948 ஆம் ஆண்டு ஈழம் சுதந்திரமடைந்த சிறிது காலத்திலேயே அரசியற் சித்தாந்தம் பற்றிய கொள்கைகளும் விளக்கம்பெறத் தொடங்கி விட்டன. இதனால், 1950ஆம் ஆண்டுக்குப் பிந்திய காலத்து இலக்கியங்களின் போக்கிலும் குறிப்பிடக்கூடிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளமையை நாம் அவதானிக்கலாம். சிறப்பாக, இடதுசாரி இயக்கங்களின் வளர்ச்சியானது ஈழத்து இலக்கியங்களின் உள்ளடக்கத்தினை வெகுவாகப் பாதிக்கலாயிற்று. இத்தாக்கங்களுடன், 1956இல் ஏற்பட்ட அரசாங்க மாற்றமும் மொழிப்பிரச்சினையும் ஈழத்துத் தமிழ் நாவல்களையும் பாதித்தன. இக் காலகட்டத்திலேயே, சமூகத்தின் பல்வேறு அம்சங்களையும் பிரதிபலிக்கும் நாவல்கள் உருவாக ஆரம்பித்தன. புரட்சிகர நாவல்கள், அரசியல் பொருளாதார நாவல்கள், சமூக நாவல்கள், குடும்ப நாவல்கள், வரலாற்று நாவல்கள், துப்பறியும் நாவல்கள் எனப் பல்வேறு கிளைகளாக ஈழத்து நாவல் இலக்கியப் பரப்பு விரிவடைகின்றது.

1950ஆம் ஆண்டுக் காலம்வரை, மேலெழுந்தவாரியாக வருணிக்கப்பட்ட சில சமூகப் பிரச்சினைகள், ஆழமாகவும், விரிவாகவும் அணுகப்பட்டன. இவ்வாறான நோக்கிலே முதன் முதலில் நாவல் எழுதத் தொடங்கியவர் இளங்கீரனே.1 1956இல் இவர் எழுதிய தென்றலும் புயலும் என்ற நாவலே, வர்க்கம். வாதிப்பிரச்சினை போன்றவற்றை யதார்த்தமாகச் சித்திரிக்கலாயிற்று. இதுபோன்றே, 1962இல் இவர் எழுதிய நீதியே நீ கேள் நாவலும் பொருள் முதல்வாத நோக்கிலே வர்க்கம், சாதி, இனப்பிரச்சினைகளைச் சித்திரிப்பதாயிற்று.

கணேசலிங்கம், டானியல், பெனடிக்ற் பாலன், அகஸ்தியர், தெணியான் ஆகியோரது நாவல்களும் பொருள் முதல்வாத நோக்கிலே சமூகப் பிரச்சினைகளை அணுகியவையாகும். கணேசலிங்கனின் நீண்டபயணம், சடங்கு, செவ்வாமை, தரையும் தாரகையும் போர்க்கோலம், மண்ணும் மக்களும் ஆகியன, வர்க்கப்போராட்டத்தை ஆழமான நோக்கிலே சித்திரிப்பனவாகும். பெனடிக்ற் பாலனின் சொந்தக்காரன், கோகிலன் சுப்பையாவின் தூரத்துப் பச்சை ஆகியன தோட்டத் தொழிலாளரின் வர்க்கப் போராட்ட முனைப்பினைப் படம்பிடித்துக் காட்டுபவை. டானியலின் பஞ்சமர் நாவலும், தெணியானின் விடிவைநோக்கி நாவலும் சாதிக்கொடுமையின் கொடூரத்தையும் அதற்கெதிரான போராட்டங்களையும் சித்திரிப்பனவாகும்.

தெளிவத்தை ஜோசப், பாலமனோகரன், கே.வி.எஸ். வாஸ், எஸ். பொன்னுத்துரை, அருள் சுப்பிரமணியம். செங்கை ஆழியான், நா. பாலேஸ்வரி, கனகசெந்திநாதன். சொக்கன் ஆகியோர் காதல், ஆண்பெண் உறவுநிலைகள், அவற்றினாலேற்படும் பிறழ்வு நிலைகள் போன்றவற்றைச் சித்திரிக்கும் குடும்ப நாவல்களை எழுதுகின்றனர் வ. அ. இராசரத்தினம் கிரௌஞ்சப் பறவைகள் என்ற வரலாற்றுக் கற்பனை நாவலை எழுதியுள்ளார்.

ஈழத்துச் சிறுகதை இலக்கியம்
புனைகதை இலக்கியத்தின் ஓரம்சமான சிறுகதை இலக்கியம், நாவல் இலக்கியத்தின் பின்னரேயே Nதூற்றம் பெற்றதெனினும் புனைகதை இலக்கியத் துறையிலே அதன் தாக்கம் மிகுதியாகவும் உணரப்படுகின்றது. தனியே சமூக சீர்திருத்தக் கருத்துக்களைப் பொருளாகக் கொண்ட ஈழத்து நாவல்களுக்குப் பெருமளவு வழிகாட்டியாய் அமைந்த சிறுகதை இலக்கியமே. அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் முதன்முதலிலே முனைப்புடன் எழுத்தாளப்பட்டது சிறுகதை இலக்கியத்திலேயாகும். இப்பிரச்சினைகளை பூரணத்துவமாக ஆராய்ந்து தீர்வுகாணும் “சஞ்சீவியாக” சிறுகதைகள் இல்லாவிடினும், இவற்றை இலக்கியப் பொருளாக எடுத்தாளலாம் என்பதனை நாவலாசிரியர்களுக்கு உணர்த்தியது சிறுகதை இலக்கியமே. இதனால்தான், ஈழத்தின் ஆரம்பகாலச் சிறுகதை ஆசிரியர்கள் பலரும் பிற்காலத்திலே சிறந்த நாலாசிரியர்களாகத் திகழ்வதை நாம் அவதானிக்கலாம். பாரிய அரசியல் சமூக பொருளாதாரப் பிரச்சினைகளைச் சிறுகதை வடிவத்தினுள் சிறப்பாகச் சித்திரிக்கமுடியாது போகவே நாவல், இலக்கிய முயற்சியில் அவர்கள் ஈடுபடுவதனை நாம் காணலாம். அரசியல், பொருளாதாரக் கோட்பாடுகளிற் பல்வேறு நிலைகளிலே இவ்வெழுத்தாளர்கள் வேறுபட்டிருப்பினும், இவர்களிற் பலர் ஆரம்பகாலத்திலே சிறுகதை எழுத்தாளர்களாய் இருந்தோரே என்பதை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். கணேசலிங்கம், டானியல், தெணியான், பெனடிக்ற் பாலன், அகஸ்தியர் எஸ். பொன்னுத்துரை, சொக்கன், கனக செந்திநாதன், தெளிவத்தை ஜோசப் போன்ற பலரும் இவ்வாறு உருவான நாவலாசிரியர்களே.

ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் தோற்றம், வளர்ச்சி பற்றி க. அருணாசலம் (1980) விரிவாக ஆராய்ந்துள்ளார். ஈழத்தின் சிறுகதை வரலாற்றினை, ஆரம்பகாலச் சிறுகதைகள் 1950ஆம் ஆண்டின் பின்னருள்ள இடைக்காலச் சிறுகதைகள் 1960ஆம் ஆண்டின் பின்னருள்ள இக்காலச் சிறுகதைகள் என மூன்று பிரிவுகளாக வகுத்து நோக்கலாம்.

ஆரம்பகாலச் சிறுகதைகள்
ஈழத்தின் சிறுகதை இலக்கிய முன்னோடிகளாகச் சி. வைத்தியலிங்கம், இலங்கையர்கோன், சம்பந்தன் ஆகியோர் கொள்ளப்படுகின்றனர். இருப்பினும் இவர்களின் காலத்திற்கு முன்னரேயே சந்தியாகோ சந்தியவர்ணம் பிள்ளையின் கதாசிந்தாமணி செ. சந்திரபால கணேசனின் நற்பவளத்திரட்டு ஆகிய சிறுகதைத் தொகுதிகள் ஈழத்திலே வெளிவந்துவிட்டன. இத்தொகுதிகளிலுள்ள கதைகள் இக்காலச் சிறுகதைகள் போன்ற உருவம், உள்ளடக்கம், உத்தி முறைகளைக் கொண்டு விளங்காமையால், அவை சிறுகதைகளாகக் கொள்ளப்படுவதில்லை என அருணாசலம் (1980) குறிப்பிடுகின்றார். எனவே, ஈழத்தின் சிறுகதை வரலாற்றைத் தொடக்கி வைத்தோர் சி. வைத்திலிங்கம் இலங்கையர்கோன், சம்பந்தன் ஆகிய மூவரே என்பது கவனத்திற்கொள்ளத்தக்கது. இவர்களுடன் சோ. சிவபாத சுந்தரம், குலசபாநாதன், சோ. நடராசன் ஆகியோரையும் ஆரம்பகாலச் சிறுகதை எழுத்தாளராகக் கொள்ளலாம். இவர்களின் படைப்புக்களுக்குக் களமமைத்துக் கொடுத்தது. ஈழகேசரிப் பத்திரிகையாகையால். இவர்கள் “ஈழகேசரிக் குழுவினர்” என்றும் அழைக்கப்பட்டனர்.2

சிறுகதை முயற்சியில் இவர்கள் ஈடுபடத் தொடங்கியபோது, இந்தியாவிலே மணிக்கொடிப் பத்திரிகையிற் கு.ப.ரா. மௌனி, புதுமைப்பித்தன், சிதம்பர சுப்பிரமணியன் ஆகியோர் பல்வேறு உத்திகளைக் கையாண்டு சிறுகதைகளை எழுதி வந்தனர். இக்காலகட்ட ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர்களுக்கு முன்னோடிகளாக விளங்கியோரும் இவர்களேயாவர். பொதுவாக, மணிக்கொடி எழுத்தாளர்களது நேரடித் தாக்கம் ஈழகேசரிக் குழுவினரைப் பாதித்துள்ளதாகக் கருதப்படுவதுண்டு. சி.வைத்தியலிங்கம், இலங்கையர்கோன் ஆகியோரது ஆக்கங்களிற் கு.ப.ரா. எழுத்தின் நேரடித் தாக்கத்தினையும், சம்பந்தனின் கதைகளிலே மௌனியின் தாக்கத்தையும் காணக்கூடியதாக உள்ளது. ஆரம்பகால ஈழத்து எழுத்தாளர்கள் பலரும், தென்னிந்தியத் தமிழ்ச் சஞ்சிகைகளிலே தமது ஆக்கங்கள் பிரசுரமாவதனையே அவாவி நின்றனர். கலை மகளிலும், ஆனந்த விகடனிலும் பிரசுரமாகும் சிறுகதைகளே தரமானவை என்ற எண்ணமும், அவற்றில் எழுதுபவனே சிறந்த எழுத்தாளன் என்ற மயக்கமும் இக்கால ஈழத்து எழுத்தாளர்களை வெகுவாகப் பாதிக்கலாயின. இம்மோகமானது. ஈழத்து எழுத்தாளர்களின் ஆக்கத்திறனையும் மலினப்படுத்துவதாயிற்று. “கலைமகளையும், ஆனந்தவிகடனையும் இலட்சியப் பத்திரிகைகளாக வைத்துக்கொண்டு எழுதிய தன்மையைக் கவனிக்க முடிகிறது. யதார்த்த இலக்கியகாரரின் பொருளாகிவிட்ட பசி, முதலாளி தொழிலாளிப் போராட்டங்கள் சூசகமாகவே கையாளப்பட்டன. பிரசாரத்தின் வேகம் கலைக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது.”3 என இம்மோகத்தின் விளைவுபற்றிக் கக செந்திநாதன் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. இதனாலேதான், அரசியற் கருத்துக்களையோ, வர்க்கப் போராட்டங்களையோ, புரட்சிகரக் கருத்துக்களையோ இவர்களாலே வெளிப்படையாகவோ தெளிவாகவோ கூறமுடியாது போய்விட்டது. சமூக நோக்கிலும் ஆழமான அகலமான நோக்கின்மை இவர்தம் கதைகளின் ஊறுபாடாயமைந்தது. உருவம் மட்டுமே இக்காலக் கதைகளிற் சிறப்புற அமைந்து காணப்பட்டது.

அத்துடன், வரலாற்றுச் சம்பவங்களும், இதிகாச புராணக் கதைகளும் காதல், கழிவிரக்கம், ஆண் பெண் உறவு நிலைகளிலேற்படும் பிறழ்வுச் சிக்கல்கள் ஆகியனவே இவர்தம் கதைகள் பலவற்றின் கருப்பொருளாயமைந்தன. இந்தியாவினதும் ஈழத்தினதும் சமூக அடிப்படைப்பிரச்சினைகள் வேறு றோனவையே. இருப்பினும் இக்கால கட்ட ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர் பலரின் கதைகளிலும், இரு நாடுகட்கும் பொதுவான பிரச்சினைகளே சித்திரிக்கப் பட்டுள்ளன. தென்னிந்தியச் சஞ்சிகைகளிலே தமது படைப்புக்கள் பிரசுரமாக வேண்டும் என்ற ஆர்வம், இவர்தம் கதைகளிலே ஈழத்தின் தனித்துவமான பிரச்சினைகள் சித்திரிக்கப்படுவதற்கு இடையூறாயமைந்தது.

இவ்வாறு தென்னிந்தியத் தமிழ்ச் சஞ்சிகைகளின் தயவை எதிர்பார்த்து நின்ற ஈழத்து எழுத்தாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாயமைந்தது. 1942ஆம் ஆண்டு ஈழத்திலமைக்கப்பட்ட மறுமலர்ச்சிச் சங்கமாகும். பழமையை அத்திவாரமாகக் கொண்டு புதுமையைக் கட்டி எழுப்புவதும். பழமையை மட்டும் புதுப்பித்துக் கொண்டிருக்காமற் புத்துயிரும், புத்தழகும் கொண்ட புதுப்புது முறைகளிலே தமிழ் இலக்கியப் பரப்பின விரிவடையச் செய்ய வேண்டும் என்பதே இச் சங்கத்தினரது நோக்கமாயமைந்தது. இந்நோக்கங்களை அடிநாதமாகக் கொண்டு இவர்களாலே நடாத்தப்பட்ட மறுமலர்ச்சி என்ற கையெழுத்துப் பிரதி ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர்தம் பார்வையைக் கூர்மைப் படுத்துவதாக அமைந்தது. சமுதாயப் பிரச்சினைகள் பலவும் துணிந்து ஆராயப்படுதற்கு, இக் கையெழுத்துப் பிரதி பெரிதும் உதவுவதாயிற்று. ஈழத்து மக்களின் எண்ணங்கள், சிந்தனைகள் பிரச்சிகள் முதன் முதலிலே இக் கையெழுத்துப் பிரதியிலேயே சிறுகதைகளாகப் பரிணமித்தன. இக்காலகட்டத்திலேயே, ஈழத்தி; ஈழகேசரியும் தென்னிந்திய சஞ்சிகைகளான கலைமகள், ஆனந்த விகடன், கிராம ஊழியன், சரஸ்வதி ஆகிய பத்திரிகைகளும் பிரக்ஞைபூர்வமாக ஈழத்து ஆக்கங்களுக்கு முதன்மைத்துவம் தரலாயின. இதனாலேயே, 1940ஆம் ஆண்டு காலப் பகுதியிலே வீறுகொண்ட ஓர் எழுத்தாளர் பரம்பரை ஈழத்தில் உருவாக முடிந்ததை நாமவதானிக்கலாம்.

அ.செ. முருகானந்தம், தி.ச. வரதராசன், வ.அ. இராசரத்தினம், சு. வேலுப்பிள்ளை, கனக செந்திநாதன், தாளையடி, சபாரத்தினம், அ.ந. கந்தசாமி, சொக்கன், இராஜநாயகன் ஆகிய முதிர்ந்த எணழுத்தூளர்கள் இக்காலகட்டத்திலே உருவானவர்களாவர். அ.செ. முருகானந்தம் தமது சிறுகதைகளிலே கிராமியர் சூழலை அழகாகப் படம்பிடித்துள்ளார். தி.ச. வரதராசன் காதற்கதைகளை ஆக்கினார். சு. வேலுப்பிள்ளை உருவகக் கதைகளையும், சொக்கன் சரித்திரக் கதைகளையும் எழுதியுள்ளனர். இராஜநாயகன் நனவோடை உத்தியிலான கதைகளை எழுதி வெற்றிபெறலானார். 4

இடைக்காலச் சிறுகதைகள் (1950 – 60 வரை)
1950ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலத்தினை, ஈழத்துச் சிறுகதை இலக்கியத்தின் அதிதீவிர வளர்ச்சிக் காலம் எனலாம். வரலாறு கற்பனை ஆகிய குறுகிய வட்டத்தினுள் முடங்கிக்கிடந்த சிறுகதை இலக்கியப் பரப்பானது. தேசியம் மண்வாசனை, யதார்த்தம், அரசியற் சித்தாந்தம், தத்துவம், சமூக சீர்திருத்தம் ஆகிய பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி பெறுவதும் இக்காலப் பகுதியிலேயாகும். சிறப்பாக, இக் காலப் பகுதியிலெழுந்த சிறுகதைகளிலே அரசியல் நிலைமைகளின் தாக்கத்தினைத் தெளிவாக இனங்காண முடிகிறது.

இந்தியாவிலே மகாத்மாகாந்தி தொடங்கிய அகிம்சைப் போராட்டமும், அண்ணாத்துரையின் திரரிட நாட்டுக் கோரிக்கையும் ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. மேலைநாட்டுக் கல்வியும் ரூசியப் புரட்சியும் அந் நாட்டின் தீவிர வளர்ச்சியும் எம் நாட்டிலே கொம்யூனிச சித்தாந்தத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டன. 1956இல் ஈழத்திலேற்பட்ட இனக்கலவரமானது மொழி, இனம் பற்றிய நோக்குகளை மேலும் கூர்மைப்படுத்தியது. இக்காலப்பகுதியெழுந்த சிறுகதைகள் பலவற்றிலும் இவற்றின் தாக்கத்தினை உணரமுடிகிறது.

இக்காலப்பகுதியில் உருவாகிய எழுத்தாளர்களான செ. கணேசலிங்கம், என். கே. ரகுநாதன், கே. டானியல், டொமினிக் ஜீவா, நீர்வை பொன்னையன், அகஸ்தியர், பெனடிக்ற் பாலன் போன்றோர் தத்துவார்த்த நோக்கிலே பிரச்சினைகளை அணுகவும், அவற்றைச் சிறுகதைகளிலே வடிக்கவும் முயன்றனர். எஸ். பொன்னுத்துரை, அ. முத்துலிங்கம், பித்தன், உதயணன், அருள், செல்வநாயகம், தெளிவத்தை ஜோசப், சில்லையூர் செல்வராசன், சிற்பி போன்றோர் பாலியல், சமூக சீர்திருத்தம் தொடர்பான சிறுகதைகளை எழுதினர்.

இக்காலப் பகுதியிலேயே, ஈழத்தின் பிரசுர களமும் சற்று விரிவடைவதனை நாம் அவதானிக்கலாம். தினகரன், வீரகேசரி, சுதந்திர் போன்ற பத்திரிகைகள் வாரந்தோறும் சிறுகதைகள் பலவற்றைப் பிரசுரித்தன. சிறுகதைத் தொகுப்புக்கள் பல வெளிவரலாயின. செ. கணேசலிங்கனின் நல்லவன், ஒரே இனம், சங்கமம் கே. டானியலின் டானியல் கதைகள், டொமினிக் ஜீவாவின் தண்ணீரும் கண்ணீரும், பாதுகை ஆகிய தொகுதிகளில் வெளியான சிறுகதைகள் இக்காலத்தனவே.

இக்காலச் சிறுகதைகள் (1960 இன் பின்னர்)
1960ஆம் ஆண்டுக் காலப் பகுதியிலே நந்தி, மு. தளையசிங்கம், செ. கதிர்காமநாதன், செ. யோகநாதன், செம்பியன் செல்வன், செங்கை ஆழியான், குந்தவை, பவானி, தெணியான், புதுமைப்பிரியை சாந்தன், நெல்லை க. பேரன், அ. யேசுராசா, குப்பிளான் ஐ. சண்முகன், மூ. நித்தியானந்தன், மருதூர்க் கொத்தன், திக்வல்லை கமால், மண்டூர் அசோகா, காவலூர் ஜெகநாதன், மல்லிகை சி. குமார், எம்.ஏ. நுஃமான், பரிபூரணன், திமிலைத்துமிலன், ச. முருகானந்தன், டானியல் அன்ரனி, எம்.எச்.எம். சமீம், அன்பு ஜவஹாஷா அன்புடீன் ஆகியோர் சிறுகதை ஆக்க முயற்சியிலே ஈடுபடுகின்றனர்.

1960ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலச் சிறுகதைகள், முன்னையகாலச் சிறுகதைகளின் பண்புகளினின்றும் முற்றிலும் வேறுபட்டவையாகும் தமது சிறுகதைப் படைப்புக்களைப் பற்றிக் காலஞ்சென்ற செ. கதிர்காமநாதன் பின் வருமாறு கூறினார்.

“கலையும் இலக்கியமும் மக்களுக்காகவே என்ற கோட்பாட்டை உடையவன் நான். ஒடுக்கப்பட்ட மக்களது வாழ்க்கையின் பிரதிபலிப்புக்களும், விளைவுகளுமே என் கதைகளின் உள்ளடக்கம். வாழ்க்கை தாங்கொணாத – அழுத்திக் கொல்கிற சுமையாக ஏன் இருக்கிறது என்பதைத் துருவித் துருவி ஆராயும் உளப்பாங்கே எனது கதைகளின் ஊற்றுக்கண். ஆதலின் கலை கலைக்காகவும் அழகுக்காகவும் எப்படியும் எழுதலாம் என்ற இலக்கியக் கோட்பாடுகளின் அடியொற்றி வாழ்க்கைக்கு முரணான கற்பனைக் கதைகளைத் தழுவி நிற்கும் சமத்காரம் என் கதைகளுக்குக் கிடையா.”

இவை, இவர்தம் கதைகளுக்கே பிரத்தியேகமாக அமைந்த பண்பன்று. இக்காலகட்ட எழுத்தாளர் பலரின் கதைகளிலும் இப் பண்பே மேலோங்கி நிற்கக் காணலாம்.

சமூகசீர்திருத்தக் கருத்துக்கள், இக்காலகட்டச் சிறுகதைகளிலே மிக ஆழமான ஆய்வுகட்குப்பட்டன. மனிதனது இன்னல்களுக்குக் காரணங்கள் யாவை. அவர்கள்படும் வேதனைகள் எவை, இவ்வின்னல்களை வென்று செல்லும் மார்க்கங்கள் யாவை எனத் துருவித்துருவி ஆராய்ந்து செல்வதும், அவற்றை மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுவதுமே இக்காலச் சிறுகதைகளின் இயல்பாயமைந்தன. சமூக நிலைமைகளினதும், சம்பவங்களினதும் ஒவ்வொரு கோணமும் சிறுகதைகளிலே மிக நுணுக்கமாக ஆராயப்படுகின்றது.

இதனாலேதான், இக்காலக்கட்டச் சிறுகதைகள், புரட்சிகரமானவையாய், சமூகக் கொடுமைகளின்மீது சீற்றங் கொண்டனவாய், ஏழை எளிய மக்களின்மீது தோழமைப் பண்பு பூண்டனவாய் அமைந்திருப்பதை நாம் காணலாம். சிறப்பாக, அரசியல் சமூக நோக்கிலே இடதுசாரி எழுத்தாளர்களின் எழுத்துக்கள் மிகவும் வேகமும் விறுவிறுப்பும் கொண்டனவாய் அமைகின்றன. இதனைப்போன்றே, சாதாரண மேல்மட்ட உணர்வுகளையும், அவற்றின் விளைவுகளையும் விபரிக்கத் துணிந்த எழுத்தாளர்களும் அவற்றினை மிக நுணுக்கமாகவும், விளக்கமாகவும் சித்திரிக்க முனைகின்றனர்.

ஈழத்துப் புனைகதைகளிற்
பேச்சுவழக்குப் பிரயோக வரலாறு
“ஒரு குறிப்பிட்ட சமூகத்தினைப் பிரதிபலித்து ஆக்க இலக்கியங்கள் படைக்க முனைபவர்கள், அச் சமூகத்தின் நோக்குகளையும் போக்குகளையும் புலப்படுத்தும் வாழ்வு நிலைகளையும் கருத்துத் தொடர்புக்கு இன்றியமையாத மொழியின் நிலையையும் நன்றாக அறிந்திருத்தல் அவசியமாகும். அச் சமூகத்தின் எண்ணக் கருத்துக்களை அச் சமூகத்தினர் பேசும் மொழி தான் எமக்குப் புலப்படுத்துகின்றது. ஆகவே, அவர்களுடைய பேச்சுமொழியை நன்குணர்தல் அவசியமானதாகும்.” 6

எனவே, ஈழத்திலே எப்போது எமது சமூகத்தினைப் பிரதிபலிக்கும் இலக்கியங்கள் தோன்றினவோ, அப்போதே அவ்விலக்கியங்களிற் பேச்சுமொழியும் இடம்பெறத் தொடங்கிவிட்டது. தமிழ் இலக்கியத்தினைப் பொறுத்தவரையிலே, ஆக்க இலக்கியங்களிற் பேச்சு வழக்குப் பிரயோகத்தினைத் தொடக்கி வைத்தோர் ஆங்கிலப் பாதிரிமாரே.

கீழைத் தேசங்களிலே தமது அரசியல், பொருளாதார நடவடிக்கைகளை நிலைப்படுத்துதற்குச் சுதேசிகளின் மதமாற்றம் இன்றியமையாதது என்பதை ஐரோப்பியர் நன்குணர்ந்து கொண்டனர். எனவே, சுதேசிகளை மதமாற்றம் செய்வதன்பொருட்டு, அவர்தம் மொழிகளை ஐரோப்பியப் பாதிரிமார் பயில்வராயினர். மிகச் சாதாரண மக்களை அவர்களின் மொழியிலேயே பயிற்றுதல் சுலபமானதெனக் கண்டுகொண்ட இவர்கள், பேச்சுமொழி கலந்த மொழி நடையிலே தமது மதப் பிரசாரத்தினையும், பிரசங்கங்களையும், நூல்களையும் துண்டுப் பிரசுரங்களையும் செய்யத் தலைப்பட்டனர். இவர்களிற் சிலர், மதப்பிரசார வேலைகளில் மட்டுமன்றி, ஆக்க இலக்கிய முயற்சியிலும் ஈடுபடலாயினர். அங்கும், பேச்சுமொழி கலந்த ஒரு மொழி நடையினையே அவர்கள் கையாளலாயினர். தமிழ்ச் சிறுகதையின் தந்தையெனக் கருதப்படும் வீரமாமுனிவர் இயற்றிய பரமார்த்த குரு கதை இத்தகைய மொழி நடையிலே இயற்றப்பட்டதொன்றே. பின்வரும் பகுதி பரமார்த்தகுரு கதையினின்றும் தரப்படுகின்றது:

“அப்புறம் போகையில் வழுக்கு நிலத்திவீரமாகக் கொள்ளத் தளர்ந்த நடையாய்ப் போகிற நொண்டிக்காற் குதிரை தவறி விழுந்ததாம். அந்தண்டையிலிருந்த குழியிற் குருவுந் தலை கீழுங் கால் மேலுமாக விழுந்து கோவென்றலறி யென்னையெடுக்கவோடி வாருங்கோளென்று கூப்பிட்டார். சீடருமோடிவந்து முன்னெழுதித் தந்த வோலையை யெடுத்தொருவன் வாசிக்க விழுந்த தலைப்பாகெடுக்கவும், விழுந்த சோமன் வேஷ்டியெடுக்கவும், விழுந்த சட்டை யுள்ளுடை யெடுக்கவுமென்றவன் வாசித்தபடி ஒன்றொன்றா யெல்லாத்தையுமெடுத்து வைக்கக் குருக்கள் நிருவாணமா யங்கே கிடந்தார்.”

இவ்வுரைநடைப் பகுதியிற் பாத்திர உரையாடல் மட்டுமன்றி, ஆசிரியரின் வருணனைப் பகுதியும் பேச்சு வழக்குக் கலந்த மொழிநடையிலே எழுதப்பட்டுள்ளமை காணலாம்.

ஈழத்துப் புனைகதை இலக்கியங்களிற் பேச்சுவழக்குப் பிரயோக வரலாறு பின்வரும் நான்கு காலப்பகுதிகளாக வகுக்கப்பட்டு ஆராயப்படுகின்றது.

1. 1875 – 1917ஆம் ஆண்டுவரையான காலப்பகுதி

2. 1918 – 1940ஆம் ஆண்டுவரையான காலப்பகுதி

3. 1941 – 1960ஆம் ஆண்டுவரையான காலப்பகுதி

4. 1960ஆம் ஆண்டின் பின்னருள்ள காலப்பகுதி


1875 – 1975ஆம் ஆண்டுவரையான காலப்பகுதி
ஈழத்தைப் பொறுத்தவரையிலே, புனைகதை வரலாறு 1875இல் சந்தியாகோ சந்தியவர்ணம்பிள்ளை எழுதிய சிறுகதைத் தொகுப்பான கதாசிந்தாமணியுடன் ஆரம்பமாகிறது. இதன் பின்னர் 1885இல் சித்திலெவ்வை எழுதிய அசன்பே கதையுடன் நாவல் இலக்கியம் தோற்றம் பெறுகிறது. 7

ஆரம்பகால ஈழத்துச் சிறுகதைகளும், நாவல்களும் ஈழத்துச் சமூக அமைப்பினைச் சித்திரித்தனவல்ல. அவை, மக்களின் நாளாந்தப் பிரச்சினைகளையோ, போராட்டங்களையோ பொருளாகக் கொண்டவையல்ல. மாறாக வரலாற்று நிகழ்ச்சிகளையும், நல்லுபதேசங்களையுமே அவை காவியப்பாங்குடன் சித்திரித்தன. ஆரம்பகால நாவல்களான அசன்பே கதையோ, மோகனாங்கியோ ஈழத்தினைக் களமாகக் கொண்டதல்ல.

இப்புனைகதைகளிலே இடம்பெறும் கதாபாத்திரங்களும் இயல்பிகந்த மானிடப் பண்பு கொண்ட, அற்புத சிருஷ்டிகளாகவே காணப்பட்டன. அவையாவும், சாதாரண மனிதன் பார்த்துப் பின்பற்றுமளவுக்கு அமானுஷ்யத் தன்மைகள் கொண்டனவாக உருவாக்கப்பட்டன. எனவே, கதைப் பொருளிலும் பாத்திரவார்ப்பிலும் இக்காலக்கட்;டப் புனைகதைகள் சமகால சமூக நிலைமைகளை எவ்வகையிலும் சித்திரிப்பனவாக அமையவில்லை. இதனால், இக்காலப் புனைகதைகளின் மொழிநடையும் இயல்பானதாகவன்றிக் காவியப்பண்பு வாய்ந்ததாகவே காணப்பட்டது. புனைகதைகளிலே, ஆசிரியர் கூற்றுக்கள் மட்டுமன்றிப் பாத்திர உரையாடல்களும் செத்தமிழ் நடையிலேயே அமையலாயின.

1918 – 1940ஆம் ஆண்டுவரையான காலப்பகுதி
1918ஆம் ஆண்டளவிலே எஸ். தம்பிமுத்துப்பிள்ளையினால் எழுதப்பட்ட சுந்தரன் செய்த தந்திரம் என்ற நாவலிலே பேச்சுமொழி ஓரளவுக்கேனும் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது. இவரின் பின்னர், ம.வே. திருஞான சம்பந்தபிள்ளை தமது நாவல்களிற் பேச்சுவழக்கினை பரவலான அடிப்படையிற் பிரயோகிக்க முனைந்தார். 1929இல் இவரியற்றிய காசிநாதன் நேசமலர். 1931இல் இயற்றிய துரைரத்தினம் நேசமணி ஆகிய நாவல்களிலே பேச்சு வழக்குக் குறிப்பிடக்கூடிய அளவுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பாக இப்புனைகதைகளிலான பேச்சுவழக்கு இன்ன பிரதேசத்திற்குரியது என வரையறை செய்து கொள்ள முடியாத வகையிலே அமைந்திருப்பினும். பொதுவாக யாழ்ப்பாணப் பேச்சுவழக்கினை நிகர்த்தகாகக் காணப்படுகின்றது. சாதாரண பேச்சுவழக்குச் சொற்களும், பழமொழிகள் மரபுச்சொற்றோடர்கள் என்பனவும் இவர்கள் கதைகளிற் பயன்படுத்தப்பட்டுள்ளன. வரணியூர் ஏ.சி. இராசையாவும், தாம் இயற்றிய பவளகாந்தன் அல்லது கேசரி விஜயன் என்ற நாவலிலே யாழ்ப்பாணப் பிரதேசப் பேச்சுவழக்கினை ஓரளவு கையாண்டுள்ளார். இந்நாவல்கள் தவிர்ந்த ஏனைய நாவல்கள் யாவும், செந்தமிழ் நடையிலோ தராதர ஈழத்துத் தமிழிலோ எழுதப்பட்டவையாகும். இந் நாவல்களிற் பிரதேசப் பேச்சுவழக்கானது. வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டுள்ளமை கவனிக்கற்பாலதாகும்.

1940 – 1960ஆம் ஆண்டுவரையான காலப்பகுதி
இக்காலப் பகுதியிலான ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்குப் பிரயோகம் பரவலாக இடம்பெறுகின்றது. இக்காலப் பகுதியிலே, இந்தியாவில் வெளிவந்துகொண்டிருந்த மணிக்கொடிப் பத்திரிகை ஈழத்து எழுத்தாளர்களுக்கு ஓர் ஆதரிசமாயமைந்தது. சிறப்பாகப் புதுமைப்பித்தன், கு.ப.ரா. ஆகியோர். பேச்சுமொழி கலந்த சிறுகதைகள் பலவற்றை எழுதி வெற்றி கண்டனர். இவர்கள், பிரதேசப் பேச்சுமொழியிலே எழுதிய மண் வாசைன இலக்கியங்கள் பலவும் இலக்கிய உலகிற் பெரும் வரவேற்பைப் பெறலாயின. எனவேதான், இவர்களது நேரடித் தாக்கத்திற்குள்ளான ஈழத்து எழுத்தாளர்களும் தமது புனைகதைகளிலே பேச்சுவழக்கினைக் கையாள்வாராயினர்.

“ஈழத்து இலக்கிய உலகின் முன்னோடிகள்” எனக் கனக செந்திநாதனால் வருணிக்கப்படும், சி. வைத்திலிங்கம் இலங்கையர்கோன், சோ. சிவபாதசுந்தரம், சம்பந்தன் ஆகியோரும் “மறுமலர்ச்சி எழுத்தாளர்களென” வருணிக்கப்படும் அ. செ. முருகானந்தம், சு. வேலுப்பிள்ளை, அ.ந. கந்தசாமி, தி.ச. வரதராசன், சு. இராஜநாயகன், தாழையடி சபாரத்தினம்@ சொக்கன் ஆகியோரும் தமது புனைகதைகளிற் பேச்சு வழக்கினைக் கையாளலாயினர். பிரக்ஞைபூர்வமாகப் பேச்சு வழக்கினைக் கையாளவேண்டும் என்ற கொள்கை இவர்களிடையே இல்லையாயினும், அதனைப் புனைகதை இலக்கியத்திற் பயன்படுத்தவேண்டும் என்ற முனைப்புப் பெருமளவிலே காணப்பட்டது.

இவ்வெழுத்தாளர்களது ஆக்கங்களிலே, பொருளுக்கேப்ப் பல்வேறு அளவிலும், வகையிலும் பேச்சுவழக்கானது பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக, இவர்களது கதைகள் வரலாறு, கற்பனை, காதல், மன அவசங்கள் ஆகியவற்றினைப் பொருளாகக் கொண்டமையாற் பிரதேசப் பேச்சுவழக்கினைப் பிரக்ஞைபூர்வமாகக் கையாளவேண்டிய தேவை ஏற்படவில்லை. பிரதேசப் பண்புகளையும், பிரச்சினைகளையும் சித்திரிக்கின்ற கதைகளில் மட்டுமே ஆங்காங்கு பிரதேசப் பேச்சுவழக்குகள் கையாளப்பட்டு வந்தன. இங்கும், ஆசிரியர் கூற்றும் விவரணப் பகுதிகளும் செந்தமிழிலே அமையப், பத்திர உரையாடல்கள் மட்டுமே பிரதேசப் பேச்சுவழக்கில் அமையலாயின. இவ்வாறான கதைகள் பலவற்றை எழுதி வெற்றிகண்டவர் இலங்கையர்கோன். இவர், புனைகதை இலக்கியத்துறையில் மட்டுமன்றி நாடகத்துறையிலும் ஆர்வங்காட்டியமை இவர்தம் புனைகதைப் படைப்பாற்றலின் வெற்றிக்குக் காரணமாகின்றது. இவரது “வெள்ளிப் பாதசரம்” என்ற கதையிலிருந்து எடுக்கப்பட்ட ஓர் உரையாடற் பகுதியை நாம் நோக்கலாம்:

“ஐயோ! கால் சங்கிலியைக் காணயில்லை……”

“என்ன, வடிவாகப் பார்!”

“ஒரு காலான் எங்கையோ மணலுக்குள்ளே கழண்டு விழுந்துபோச்சு.”

“கொஞ்சம் கவனமாக வாறதுக்கென்ன? உனக்கு ஆட்டம் மெத்திப்போச்சு, ஊதாரி நாய்!”

“போதும் உங்களோடை கோவிலுக்கு வந்த வண்டவாளம். இனி நடையைக் கட்டுவம்.”

“நல்ல ஆத்திரத்திலை சொல்லிப்போட்டன். இஞ்சை பார்……” 8

இவ்வுரையாடற் பகுதியிலே, யாழ்ப்பாணத்து மக்களின் பேச்சுவழக்கினை இயல்பான வகையிலே ஆசிரியர் உபயோகித்துள்ளமையை நாம் அவதானிக்க முடிகிறது.

1960இன் பின்னர் உள்ள காலப்பகுதி
1960ஆம் ஆண்டுகாலப்பகுதியில், ஈழத்திலே இடம்பெற்ற மரபுப் போராட்டமானது, புனைகதைகளில் எந்த வகையிலே, எந்த அளவுக்குப் பேச்சுவழக்குப் பயன்படுத்தப்படவேண்டும் என்பதை உறுதிப்படுத்தியது. இக்காலப்பகுதியிலே, எழுத்தாளர் பலரும் தம்மாலியன்ற அளவுக்குப் புனைகதைகளிலே பிரக்ஞைபூர்வமாகப் பேச்சுவழக்கைக் கையாளலாயினர். பிரதேசப் பேச்சுத் தமிழைப் பிரக்ஞை டொமினிக் ஜீவா, இளங்கீரன், அகஸ்தியர். கணேசலிங்கன், எஸ். பொன்னுத்துரை, அ.செ. முருகானந்தம், கனகசெந்திநாதன் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

இவர்கள் யாவரும், புனைகதை இலக்கியத்திலே பேச்சு வழக்கினை எந்த அளவுக்குப் பயன்படுத்தவேண்டும் என்பதில் ஒத்தகருத்தினரல்லர். பேச்சுவழக்கினைக் கையாள்வதுபற்றி இளங்கீரன் பின்வருமாறு கூறினார்:

“கதைகளிலே வரும் பாத்திரங்கள் எவ்வாறு பேசுகின்றனவோ அதேவகையில்தான் கொச்சைத் தமிழ் உபயோகப்படுத்தப்படுகின்றது. சிறுகதைகளில் பாத்திரங்களை அமைக்கின்றபொழுது ஒரே நடையைக் கையாளமுடியாது. அப்படிக் கையாண்டல் அது சோபைதராது. சாதாரண மக்களுக்கு விளங்கக்கூடிய வகையில் அவர்களுக்கு ஏற்றமாதிரியான முறையில் வசனநடையை அமைக்கவேண்டும்.”9

கனக செந்திநாதன், எஸ். பொன்னுத்துரை ஆகியோர், பேச்சுமொழிப் பிரயோகம்பற்றி இன்னொரு வகையான கருத்தினையே கொண்டிருந்தனர். வெண்சங்கு என்ற தமது சிறுகதை நூலின் முகவுரையிலே கனக. செந்திநாதன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

“வெறும் நாட்டுப்புறச் சொற்களால், பாமர வார்த்தைகளால் மாத்திரம் மண்வாசனையைக் காட்ட முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அந்தப் பிராந்தியத்தின் சிறப்புற்ற கருவை அந்த அந்தப் பிராந்தியத்தின் நடையில் எழுதுதல் வேண்டும் என்பதிலும், கிராமியக் கொச்சை மொழி கதையை வாசித்து விளங்க இடைஞ்சலாக இருத்தல்கூடாது என்பதிலும் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது.”

அந்நூலின் முன்னீட்டிலே எஸ். பொன்னுத்துரை.

“ஈழத்து இலக்கிய உலகில் “மண்வாசனை” என்ற கோஷம் சில ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்தாளரால் முன்வைக்கப்பட்டது. பிராந்தியங்களிற் பயிலப்படும் கொச்சைச் சொற்களை சிலவற்றைக் கோவை செய்தால், அஃது இயல்பாகவே மண்வாசனை இலக்கியமாகிவிடும் என்ற தப்பித எண்ணத்தைக் காமித்து, அத்தகைய கதைகயை எழுதிச் சலித்தவர்களும் தம்மத்தியில் வாழ்கின்றார்னள். ஒரு பகுதியான மண்ணிற்கே உரித்தான கலாசாரத்திலே பிறக்கும் கதைக்கருவை அந்த மண் தனித்துவமாக ஒலிக்கும் தொனிப்பொருளைப் பிரசவிக்கும் வண்ணம் கல்வி நெறியிற் பொருத்துவதே “மண்வாசனை” இலக்கியத்திற்கான சிறப்பம்சமாகும்.”

என்று கூறுவது பிரதேசப் பேச்சுத்தமிழைப் புனைகதை இலக்கியத்திலே கையாள்வது பற்றிய அவர்தம் கொள்கையைத் தெளிவுபடுத்துவதாக உள்ளது.

அண்மைக் காலத்திலே, ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சு வழக்குப் பிரயோகமானது ஒரு புதிய பரிணாமத்தினை அடைந்துள்ளது. சிறப்பாக, வீரகேசரி வெளியீடுகளிற் பேச்சுவழக்கானது ஒரு@ புதிய பாணியிலமைந்து காணப்படுகிறது. காதல், துப்பறிதல் வரலாறு போன்றவற்றைச் சித்திரிக்கும் புனைகதைகளிற் பாத்திர உரையாடல் செந்தமிழிலேயே அமைந்து விடுகிறது. பிரதேசப் பண்பு வாய்ந்த புனைகதைகளிலும் அப்பிரதேசத்திற்குச் சிறப்பாகவுள்ள பேச்சுவழக்குக் கையாளப்படுவதில்லை. வியாபார நோக்கங்கருதி வீரகேசரிப் பிரசுரக் கதைகளிலே தராதர ஈழத்துப் பேச்சு வழக்கே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்பேச்சு வழக்கானது கனக. செந்திநாதன் குறிப்பிட்ட பேச்சு வழக்கினை நிகர்த்ததாகக் காணப்படுகின்றது. ஆனால், வியாபார நோக்கமற்ற தனியார் வெளியீடுகளிலே பிரதேசப் பண்பு விதந்து கூறப்படுமளவிற்குப் பேச்சு வழக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதனைக் காணமுடிகிறது.

மரபுப் போராட்டம்
1956ஆம் ஆண்டுக்காலப் பகுதிவரை, தென்னிந்தியத் தமிழ் இலக்கியங்களே மேன்மையான இலக்கியங்களென்றும், தென்னிந்தியத் தமிழ்ப் பத்திரிகைகளிலே பிரசுரமாகும் படைப்புக்களெ தரமான படைப்புக்களென்றும் ஈழத்தவராற் கருதப்பட்டு வந்தது. இலக்கியத்தினைப் பொறுத்தவரையிலே தென்னிந்தியப் பாரம்பரியமே ஈழத்துப் பாரம்பரியமாகவும் கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையினை மாற்றி, ஈழத் தமிழ் மக்களுக்கெனத் தனியானதோர் இலக்கியப் பாரம்பரியம் உண்டென்பதனை வலியுறுத்தியதும், புனைகதைகளிலே பாத்திர உரையாடல்கள் செந்தமிழிலன்றிப் பாமரம்களின் பேச்சுவழக்கிலேயே இடம்பெற வேண்டும் என்பதனைத் தீர்க்கமாக ஈழத்து எழுத்தாளர்களுக்கு உணர்த்தியதும் மரபுப் போராட்டமே. எனவே, ஈழத்துத் தமிழ்ப் புனைகதை இலக்கியத்திற் பேச்சு வழக்குப்பற்றி ஆராய முற்படும்போது, மரபுப் போராட்டம் பற்றி எடுத்துக் கூறுவதும் இன்றியமையாததாகும். இம் மரபுப் போராட்டம் பற்றிய தகவல்கள், அவ்வப்போது நாளிதழ்களிலும் சஞ்சிகைகளிலும் இடம்பெற்றனவேயன்றி அவற்றைத் தொகுத்துக் கூறும் முயற்சிகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. எனவே, மரபுப்போராட்டம் பற்றிய தகவல்கள் இங்கு விரிவான வகையிலே தரப்படுகின்றன.

மரபுப் போராட்ட வரலாறு
1960ஆம் ஆண்டுக்காலப் பகுதியிலே ஈழத்து இலக்கிய கர்த்தாக்களிடையே இலக்கியமரபு பற்றி நடைபெற்ற போராட்டமே மரபுப் போராட்டமாகும். இலக்கியப் பொருள், இலக்கிய வடிவம், உரைநடை இலக்கணவமைதி ஆகியவற்றிலே தொன்று தொட்டுக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபுகளை மீறலாமா. மீறலாகாதா என்பதே இவர் தம் வாதப்பிரதிவாதங்களுக்கு இலக்காயமைந்தவையாகும். இலக்கியத்தின் நோக்கம், அதன் பயன் அது யாராற் படைக்கப்படவேண்டும். இலக்கியத்திலே இழிசினர் வழக்கைப் பயன்படுத்தலாமா, செந்தமிழைப் பயன்படுத்தலாமா என்பன இவர்தம் போராட்டக் கருவாயமைதந்தன. இத்தகைய போராட்டத்திற்குக் களம் அமைத்துக் கொடுத்தவை தினகரன், வீரகேசரி போன்ற நாளிதழ்களும் அக்காலத்தில் வெளிவான சஞ்சிகைகளுமாகும்.

1958ஆம் ஆண்டுக்காலப் பகுதியிலே, ஈழத்தின் அரசியல், சமூக நிறுவனங்களிடையே உருவான விழிப்புணர்ச்சி போல, இலக்கியத் துறையிலும் புரட்சிகரமான மாற்றங்கள் உருவாகலாயின. இலக்கியம் கற்றோர்க்கு மட்டுமே உரியது என இறுமாந்திருந்த பண்டிதப் பரம்பரையினர்க்கு எதிராக, இக்காலத்திலே ஒரு குழுவினர் இயங்கலாயினர். இவர்கள், இலக்கியம் கற்றோர்க்கு மட்டுமன்றி மற்றோர்க்கும் உரியது என்றும், அது பண்டிதர்களால் மட்டுமன்றிப் பாமரர்களாலும் படைக்கப்படலாம் என்றும் இலக்கிய உலகிலே “ஊடுருவல்” 10 செய்தனர். “இலக்கிய ஊடுருவல்காரர்” எனப் பண்டித வர்க்கத்தினராலே வருணிக்கப்பட்டோர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினைச் (இனி வருமிடங்களிலெ இ.மு.எ.ச) சேர்ந்தோராவார். இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்களாக விளங்கிய கே. இராமநாதன், கே. கணேசு ஆகியோரால் 1946ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது இ.மு.எ. சங்கம், இச் சங்கம், ஈழத்து இலக்கிய உலகு இதுவரை அறிந்திராத புரட்சிகரக் கொள்கைகள் பலவற்றை முன்வைத்தமை, அவ்விலக்கிய உலகிற் புதியதொரு உத்வேகத்தினை ஏற்படுத்துவதாயமைந்தது.

ஈழத்துத் தமிழ் இலக்கியத்திற் பேச்சுவழக்குப் பிரயோகம் பாவலடைய, இ.மு.எ. சங்கம் பெரிதும் காரணமாயிருந்ததினாலே அதன் நோக்கங்களை ஓரளவேனும் விவரமாகப் பார்ப்பது அவசியமானதாகும். இச் சங்கத்தின் ஏடாகிய புதுiமை இலக்கியத்திலே (1975) இ.மு.எ. சங்கத்தின் ஆரம்பகால நோக்கங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. “எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே இல்லாருமில்லை உடையாருமில்லை” என்றும் “எல்லாரும் இன்புற்றிருத்தலன்றி வேறென்றறியேன்” என்றும் சங்கம் அறைகூவல் விடுத்தது.

“மனித வர்க்கம் யுகயுகாந்தரமாகக் கண்ட இலட்சியக் கனவைச் சாதனையிலாக்க, வர்க்க பேதமற்ற ஒப்பிலா சமுதாயத்தைச் சிருஷ்டிக்க மனிதப் பெருங்குடி மக்கள் நடத்தும் போராட்டத்தையும் அதில் தோன்றும் புதிய சமுதாய அமைப்பையும் பிரதிபலிக்கும் சோசலிஸ்ட் யதார்த்தவாதம் என்ற இலக்கிய தத்துவத்தை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தனது இறுதி இலட்சியமாக ஏற்றுக்கொண்டது”

“மக்களின் சகல பகுதிகளையும் பிரதிபலித்து, நிரந்தர உலக சமாதானம், தேசிய விமோசனம், உண்மை ஜனநாயகம், உயர்ந்த வாழ்க்கைத்தரம், சிறந்த கலாசாரம், நாட்டின் அரசியல் பொருளாதார சமுதாய முன்னேற்றம், இவற்றிற்காக மக்கள் நடத்தும் போராட்டங்களைக் கருவூலமாகக் கொண்ட மக்கள் இலக்கியமே” சங்கத்தின் உடனடி இலட்சியமாக அமைந்தது.

“முற்போக்கு எண்ணங்கொண்ட சகல எழுத்தாளர்களையும் ஓர் அணியில் திரட்டி மக்கள் கலாசாரம் உயர்ந்த மனிதவர்க்கத்திற்குமான இலக்கினைப் படைப்பதும், சம அடிப்படையில் சகல தேசிய இனங்களின் மொழி கலாசார முன்னேற்றத்திற்காக உழைப்பதும், எழுத்தாளரின் நலன்களுக்காகவும் உரிமைக்காகவும் பாடுபடுவதும்,” 11 சங்கத்தின் குறிக்கோளாயமைந்தது.

இச் சங்கத்தின் இலக்கியக் கோட்பாடுபற்றி கா. சிவத்தம்பி (1975: 29) பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

“இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் செயல் வேகத்துடன் கருமமாற்றத் தொடங்கியபோது, முக்கிய இலக்கிய கோஷமாக அமைந்தது ஈழத்துத் தமிழ் இலக்கியம் என்னும் கோட்பாடேயாகும். ஈழத்தின் நவீன தமிழ் இலக்கியம் தென்னிந்தியத் தமிழ் இலக்கியத்தின் பிரதியாக அமையாது. ஈழத்தின், மண்வாசனையைப் பிரதிபலிப்பதாக இருத்தல் வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.”

“மண்வாசனை என்னும் கோஷம் தேசிய இலக்கியம் என்னும் கோஷத்துடனும் இந்தியத் தமிழ் இலக்கியம் பற்றிய நோக்குடனும் சம்பந்தப்பட்டு நின்றதாகும். ஆனால், அடிப்படையிற் பார்க்கும் போது மண்வாசனை என்னும் கோஷமே முக்கியமானதாகும்.”

“ஈழத்திலே தோன்றும் தமிழ் இலக்கியம், ஈழத்து மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து எழுதப்படவேண்டுமென்ற கருத்து முன் வைக்கப்பட்டது. ஈழத்து வாழ்க்கைப் பிரச்சினை இலக்கியப் பொருளாகச் சிறுகதை நாவல்களில் இடம் பெற்றபொழுது ஈழத்துப் பல்வேறு பிரதேசங்களின் வர்ணனை, வாழ்க்கை முறை விவரணம், பேச்சு வழக்கு ஆகியன இடம்பெற வேண்டுவது அத்தியாவசியமாயிற்று.”

இ.மு.எ. சங்கத்தின் மேற்குறிப்பிட்ட இலட்சியங்களும் நடவடிக்கைகளும், மரபுவழி இலக்கிய கர்த்தாக்களுக்குப் பாரிய பிரச்சினைகளாயின. இ.மு.எ. சங்கம் சோஷலிச யதார்த்தவாத இலக்கியத்தை முன்வைக்கவே, நாட்டின் அடிப்பட்ட சமூகத்திலுள்ள பல்வேறு தரத்தினரும் அதன் உறுப்பினராயினர். இவ்வியக்கத்திலே உள்ள கற்றோர் மட்டுமன்றி மற்றோரும் இலக்கிய சிருஷ்டி முயற்சியிலே ஈடுபடலாயினர்.

சாதாரண தொழிலாள வர்க்கத்தினர் ஆக்க இலக்கிய முயற்சியிலே “ஊடுருவல்” செய்தது மட்டுமன்றிச் சாதாரண பாமரமக்களின் பேச்சுவழக்கினையும் தமது புனை கதைகளிற் பயன்படுத்தலாயினர். “இழிசினர் வழக்கு” என ஒதுக்கப்பட்ட பேச்சுவழக்கு இலக்கிய அந்தஸ்துப் பெறலாயிற்று. செந்தமிழ் இருந்த இடத்திற் கொடுந் தமிழ் குடிபுகலாயிற்று. இச்சாதாரண தொழிலாள வர்க்க எழுத்தாளர்கள் “இழிசினர் வழக்கைத்” தமது புனை கதைகளிற் கையாண்டதோடமையாது, சாதி, மதம், வர்க்கம் போன்றவை தொடர்பாகப் புரட்சிகரமான கருத்துக்களையும் இலக்கியத்திற் புகுத்தலாயினர். எனவே ஈழுத்து இலக்கியமானது முற்றிலும் புதிய ஒரு தடத்திலே கால்பதிக்கலாயிற்று.

இச்சந்தர்ப்பத்திலே, ஈழத்துப் பத்திரிகைகள் பலவும் சோஷலிச யதார்த்தவாத இலக்கியங்களுக்கு முதன்மைத்துவம் தந்ததோடு பிரசுர களமமைத்தும் கொடுத்தன. க. கைலாசபதி தினகரனில் ஆசிரியராக இருந்தபோது அப்பத்திரிகை மண்வாசனை இலக்கியங்களின் பிரசுர களமாயமைந்தது. இ.மு.எ. சங்கத்தின் “ஊதுகுழல்” என வருணிக்கப்படுமளவுக்கு அஃது ஈழத்து முற்போக்கு இலக்கியங்களுக்கு முதன்மை கொடுக்கலாயிற்று. இளங்கீரன் நடாத்திய மரகதம் இ.மு.எ. சங்கத்தின் கோட்பாட்டு விளக்கமாயமைத்தது. சிற்பி (சரவணபவன்) பதிப்பித்த கலைச்செல்வி, ஈழத்துச் சிருஷ்டி இலக்கியங்களைப் பிரசுரித்த தொடமையாது. இழிசினர் வழக்கைக் கையாண்டு இலக்கியம் படைத்த இலங்கையர்கோன் மறைந்தபோது, அவருக்கு மார்கழி 1961 இல் நினைவு இதழும் வெளியிட்டது. சிருஷ்டி இலக்கியம் பற்றிய விமர்சனங்கள் பலவும் இச் சஞ்சிகைகளிலே அவ்வப்போது இடம்பெறலாயின. விமர்சனக் கூட்டங்கள் பலவும் ஆங்காங்கு நடத்தப்படலாயின. இக்காலகட்டத்திலே இ.மு.எ. சங்கம் தனது உறுப்பினர் பலரின் ஆக்க இலக்கிய நூல்கள் பலவற்றை வெளியிட்டு வைத்ததுடன் விமர்சனக் கூட்டங்களும் நடத்தலாயிற்று, இரண்டு வருட காலத்துள் அது, காவலூர் இராசதுரையின் குழந்தை ஒரு தெய்வம் (1961), நீர்வை பொன்னையனின் மேடும் பள்ளமும் (1962) இளங்கீரனின் நீதியே நீகேள் (1963), என்.கே. ரகுநாதனின் நிலவிலே பேசுவோம் (1963) போன்ற நூல்களுக்குக் கொழும்பிலும், பெனடிக்ற் பாலனின் குட்டி (1963) நாவலுக்குக் கொழும்பு யாழ்ப்பாணம் ஆகிய இரு இடங்களிலும் வெளியீட்டு விழாவும் அறிமுகவிழாவும் எடுத்தது.

அத்துடன், இ.மு.எ. சங்கத்தினாலே தொடக்கப்பட்ட எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகமானது அதன் உறுப்பினர் பலரின் நூல்களைப் பதிப்பித்து வெளியிடலாயிற்று. கே. டானியலில் டானியல் கதைகளையும், டொமினிக் ஜீவாவின் சாலையின் திருப்பத்தையும், பெனடிக்ற் பாலனின் குட்டியையும் அது பதிப்பித்து வெளியிட்டது.

இச் சந்தர்ப்பத்திலேயே டொமினிக் ஜீவாவின் தண்ணீரும் கண்ணீரும் என்ற சிறுகதை நூலுக்கு 1961ஆம் ஆண்டுச் சாகித்தியமண்டலப் பரிசு வழங்கப்பட்டது. இத்துடன், இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களின் ஆதாரவாளரான கி. லஷ்மணனின் இந்திய தத்துவ ஞானம் என்ற நூலுக்கும் அவ்வாண்டு சாகித்தியமண்டலப் பரிசு வழங்கப்பட்டது.

இவையாவும், ஈழத்து மரபுவழி இலக்கியகர்த்தாக்களை விழித்தெழச் செய்தன. ஈழத்தின் தமிழ் இலக்கிய பாரம்பரியம் தங்கள் கைகளிலிருந்து பிடுங்கப்படுவதையும், எதிர் காலத்திலும் தமது முதன்மைத்துவம் பறிக்கப்பட்டுவிடும் என்பதையும் அவர்கள் உணர்ந்துகொண்டனர். எனவே தான், தமது மரபுவழி இலக்கியப் பாரம்பரியத்தைப் பேணுவதற்காகப் பண்டிதவர்க்கத்தினர், சோ. இளமுருகனார் தலைமையிலே ஒன்றுசேர்ந்து மரபுப் போராட்ட அணியொன்றை உருவாக்கினர்.

தூய்மையும், பெருமையும் பல்லாயிரம்மாண்டு காலரலாறும் கொண்ட தமிழ் இலக்கியப் பரப்பிலே, முற்போக்கு எழுத்தாளர்களின் அத்துமீறிய பிரவேசம் இலக்கியத்தூய்மையை மாசுபடுத்திவிடுமோ என மரபுவழி இலக்கிய கர்த்தாக்கள் அஞ்சினர். இதுவரை காலமும் ‘எம்சொத்து’ என இறுமாந்திருந்த பண்டித வர்க்கத்தினருக்கு மிகச் சாதாரணமானவர்களான இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களின் இலக்கியப் பிரவேசம் ஒருபெரும் சவாலாக அமைந்தது. அகநானூறு, புறநானூறுப் பொருண்மைகளை இரசித்துக் கற்றுமகிழ்ந்த இப்பண்டித வர்க்கத்தினர், சாதாரண மனிதன் இலக்கியப் பொருளாக அமைவதை ஏற்றாரல்லர். யாப்பிலும் அணியிலும் கண்ணுங் கருத்துமாயிருந்த இவர்கள், பேச்சுவழக்கினை நிகர்த்த உரைநடையைத் துச்சமென மதித்தனர் மன்னனதும், மாண்புமிகு இலக்கியக் கதாபாத்திரங்களதும் உரையாடல்களுக்குப் பதில் இழிசினர் உரையாடல் இலக்கியத்திலேயே இடம் பெறுவதை இவர்கள் ஏற்றாரல்லர். நக்கீரரும் கம்பனும், திருஞானசம்பந்தரும் இயற்றிய இலக்கியங்களை நயந்து கற்ற இவர்கள், கே. டானியலையும், டொமினிக் ஜீவாவையும் இலக்கியகர்த்தாக்களாக ஏற்றுக்கொண்டாரல்லர்.

எனவே, ஈழத்து இலக்கிய அணியானது, இருபெரும் பிரிவுகளாகப் பிரிந்து நின்று மரபுப் போராட்டம் நிகழ்த்த வேண்டியதாயிற்று. பண்டித வர்க்கத்தினர் மரபு மீறப் படலாகாது என்றனர். படைப்பிலக்கிய கர்த்தாக்கள், காலத்திற்கேற்ப மரபுகள் மீறப்படவேண்டுமென்றனர். இவ்விரு பகுதியினருக்குமிடையிலே சிலர் மரபு அறிந்தே மீறப்படவேண்டும் என்றனர்.

மரபு மீறப்படலாகாது என்போர் அணியிலே சோ. இளமுருகனார், தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை, ச. சுப்பிரமணியன், பண்டிதர் வ. நடராசன், புதுமைப் பண்டிதன் ஆகியோர் இடம்பெற்றனர். இவர்கள் யாவரும் தமிழ்ப் பாதுகாப்புக் கழகம் என்ற நிறுவனத்தின் கீழ் இயங்கினர்.

மரபு மீறப்படவேண்டும் என்போர் அணியிலே சிருஷ்டி இலக்கியகர்த்தாக்களான இளங்கீரன், கே. டானியல், டொமினிக் ஜீவா, அ.ந. கந்தசாமி, சொக்கன், செ. கணேசலிங்கம் ஆகியோர் தீவிர பங்காற்றினர். இவர்களின் பக்கபலமாகக் கல்விமான்களான பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, கலாநிதி சு. வித்தியானந்தன், திரு. க. கைலாசபதி, திரு. கா. சிவத்தம்பி ஆகியோர் விளங்கினர். இவர்கள் யாவரையும் இ.மு.எ. சங்கமானது ஒன்றுசேர்த்துப் பலம்வாய்ந்த ஓர் இயக்கமாக விளங்கியது.

இவ்விரு கொள்கையினரையும் ஏற்றுக்கொள்ளாது, தமக்கென ஒரு புதிய அணியை எஸ். பொன்னுந்துரை வகுத்துக் கொண்டார். இவரது அணி, “நற்போக்கு இலக்கிய அணி” என அழைக்கப்பட்டது. இவர்கள் மரபு அறிந்தே மீறப்படவேண்டும் என்ற கொள்கையை முன்வைத்தனர்.

ஈழத்தின் மரபுப் போராட்டம் போன்ற ஒரு போராட்டம், சுமார் 60 ஆண்டு காலங்களின் முன்னர் வங்காள மொழியிலும் தோன்றி, அம்மொழியின் தீவிர வளர்ச்சிக்கு விட்டது. எமது புனைகதைகளிலே, செந்தமிழ் வழக்குப் பேச்சுவழக்கென இரு பிரிவுகள் இருப்பதுபோல, வங்காள மொழியிலும் காதுபாஷை, சலித் பாஷை என இரு பிரிவுகள் இருந்தன. சாது பாஷை எழுதுவதற்கும், சலித் பாஷை பேசுவதற்கும் பயன்படுத்தப்பட்டன. முன்னைய வங்காள மொழி இலக்கியங்களிற் கதாபாத்திரங்கள் யாவும் சாதுபாஷையிலேயே உரையாடின. ஆனால், மாபெரும் எழுத்தாளரான தாகூர், பாத்திர உரையாடல்கள் சலித் பாஷையிலேயே அமையவேண்டுமென்றார். வங்காளத்தின் பெரும்பான்மையான கல்விமான்கள் இவர்தம் போராட்டத்தை ஆதரித்தனரல்லர் ஆயினும், தாகூர் தமது தலைசிறந்த இலக்கியங்களிலெல்லாம் சாது பாஷையையுமு; சலித் பாஷையையும் கலந்தே எழுதிவந்தார். இவ்விரு பாஷையும் கலந்த மொழிநடையிலே ஏராளமான நூல்களை அவர் இயற்றினார். இன்று, வங்கத்தின் தலைசிறந்த எழுத்தாளரென வருணிக்கப்படும் புத்ததேவ போஷ், முற்றிலும் சலித் பாஷையிலேயே இலக்கியம் அமையவேண்டும் என்கிறார். வங்கதேசத்திலே இன்று, சாது பாஷையை ஆதரிப்பார் யாரும் இல்லை. கதையோ, கட்டுரையோ, ஏனைய படைப்புக்களோ, யாவும் சலித் பாஷையிலேயே எழுதப்படுகின்றன. 12

ஈழத்திலும்,டு இம் மரபுப் போராட்டத்திலே வெற்றி பெற்றது மரபு மீறப்படவேண்டும் என்ற வாதமே. புனைகதை இலக்கியத்திலே பாத்திர உரையாடல்கள் பேச்சு வழக்கிலும், ஆசிரியர் கூற்றுக்கள். வர்ணனைகள் செந்தமிழிலும் அமைவதற்கான பாதையை வகுத்துக்கொடுத்ததும் இம் மரபுப் போராட்டமேயாகும்.

இலக்கியமரபு பற்றிய கோட்பாடுகள்
1960ஆம் ஆண்டுகாலப் பகுதிகளிலே, ஈழத்து இலக்கிய மரபு பற்றி மூன்று வகையான கருத்துக்கள் நிலவின. ஒன்று, தொன்றுதொட்டு வழங்கிவரும் இலக்கியமரபானது மீறப்படலாகாது. இரண்டு, காலத்துக்குக் காலம் இடத்துக்கேற்ப இலக்கியமரபானது மாற்றமடையவேண்டும் மூன்று நற்போக்கு இலக்கியம் என்ற கோட்பாடு.

இலக்கியமரபு மீறப்படலாகாது
“எப்பொருள் எச்சொல்லின் எவ்வா றுயர்ந்தோர்
செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே” 13

என்பதும்,

“மரபானது தொன்றுதொட்டு வரும் முறைமை”

என்பதும் இக் கொள்கையினரின் கருத்தாகும். எனவே, இலக்கிய ஆக்கமரபோ, பொருள்மரபோ, வடிவமரபோ மீறப்படலாகாது என்பது இவர்தம் வாதமாக அமைந்தது. இவர்கள், மரபு பற்றிப் பின்வரும் கருத்துக்களுடையோராய் விளங்கினர்.

(அ)தமிழ் இலக்கியத்தினதும், தமிழ் மொழியினதும் பாதுகாவலர் பண்டித வர்க்கத்தினரே.

(ஆ)கல்லாதார்க்கு இலக்கியத்திலே இடமில்லை.ஸ

(இ)கற்றார் வழக்கே செந்தமிழ் வழக்கு

(ஈ)கொடுந்தமிழ் வழக்கினாலே மொழி அழிந்துவிடும்.

(உ)கொடுந்தமிழ் வழக்கு சிருஷ்டி இலக்கியத்திலே சிறுபங்கே இடம்பெற வேண்டும்.

(ஊ)சிருஷ்டி இலக்கிய கர்த்தாக்கள் கல்வியறிவற்றவர்கள், அவர்கள் யாவரும் மார்க்சிசவாதிகள்.

(எ)புனைகதை வடிவம் இலக்கிய வடிவமாகாது.

(அ) தமிழ் இலக்கியத்தினதும்,
தமிழ் மொழியினதும் பாதுகாவலர்
பண்டித வர்க்கத்தினரே
தமிழ் இலக்கிய ஆக்கஉரிமை, மரபுவழியானதே என்பதனைத் தீவரமாக விசுவாசித்தவர்கள் இவர்கள். “அவ்வாறாயின் மொழித்திறமுணர்ந்து, இலக்கணமும் இலக்கியமுஞ் செய்து, பல்கலை வளர்த்தார் யாவரெனின், ஆசிரியர் தொல்காப்பியனாரும், நக்கீரர், பரணர், திருவள்ளுவர் முதலாம் கடைச்சங்கப் புலவரும்……” எனத் தொடங்கி நயினாமுகமதுப் புலவர்வரை கூறிச்செல்வர் சோ. இளமுருகனார். 14

மேற்கூறப்பட்ட தன்மைத்தாராலேயே இக்கால இலட்சியங்களும் படைக்கப்படவேண்டும்@ அவரல்லாதார் இலக்கியங்களும் படைக்கப்படவேண்டும்@ அவரல்லாதார் இலக்கியம் செய்யத் தகுதியற்றார் என்பது இவர்தம் வாதமாயமைந்தது. இலக்கியத்தினை ஆக்கவும், அநுபவிக்கவும் அதனை வளர்க்கவும், வளப்படுத்தவும் வல்லார் பண்டித வர்க்கத்தினரே. பாடசாலைப் பிள்ளைகளாயினும், பல்கலைக்கழகப் பேராசிரியர்களாயினும் முறைப்படி இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தோரே தமிழ் இலக்கியம் படைக்கவல்லார் என்பதே இவர்தம் கருத்தாகும்.

1-12-1962 ஆம் திகதிய தினகரனிலே கா. சிவத்தம்பி, “குட்டை நீரல்ல மரபு” என்ற கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். இக்கட்டுரை பழைமைவாதிகளின் போலிவாதங்களைச் சாடியதோடமையாது. மரபுமாற்றத்தை வற்புறுத்துவதாயும் அமைந்தது. இவரது கருத்துக்கள் பண்டித வர்க்கத்தினரின் காரசாரமான கண்டனங்களுக்கு இலக்காகின.

“இலக்கண நெறிப்பட்ட செந்தமிழ் நடையைப் பேணி இலக்கியஞ் செய்து தமிழை வளர்த்தும், இலக்கியஞ் செய்வோர்க்குத் துணைபுரிந்தும், தமிழ்க் கல்வியை நாடெங்கணும் பரப்பிப் பண்டுபோலச் செந்தமிழ் மரபினைப் பாதுகாத்தும் வருகின்ற பண்டிதர்மாரைப் பழித்துரைப்பவை.” என்றும்,

“இக்காலத்தில் கல்வியறிவில்லாத புரட்சி எழுத்தாளர் தாந்தாம் விரும்பியபடி சான்றோர் வழக்கைத் தகர்த்தெறிந்துவிட்டுப் புதிய வழிகளில் எழுதத் துணிந்துகொண்டனர். அத்துணிவே பேதைமையால் எழுந்த துணிவாம்.” என்றும்.

சோ. இளமுருகனார். மரபுவழி இலக்கிய கர்த்தாக்களின் கருத்தினை வலியுறுத்துகின்றார். 15

(ஆ) கல்லாதார்க்கு இலக்கியத்திலே இடமில்லை
1960ஆம் ஆண்டுக்காலப் பகுதியிலே, இலக்கிய ஆக்க மரபை மீறிச் சாதாரண, கல்வியறிவற்ற தொழிலாளவர்க்கத்தினரும் சிருஷ்டி இலக்கிய முயற்சிலே முன்னின்றுழைத்தனர். இவர்தம் சிருஷ்டி இலக்கிய முயற்சியிலே முன்னின்றுழைத்தனர். இவர்தம் சிருஷ்டிகளை இலக்கியங்களாகவோ, இவர்களை இலக்கிய கர்த்தாக்களாகவோ ஏற்றுக்கொள்ளப் பண்டித வர்க்கத்தினர் ஒருப்படவில்லை. எனவே, பல்வேறு கோணங்களினின்றும் இத் தொழிலாள வர்க்கத்தினரின் இலக்கிய ஊடுருவலை அவர்கள் விமர்சிக்கலாயினர்.

“நேற்றுப்பெய்த மழைக்கு முளைத்த காளாண்கள் போலும் புதுமை எழுத்தாளர் தமிழ்ச் சொற்களையும் வேற்றுமொழிச் சொற்களையும் உருவந் திரித்தும், அவற்றின் இலக்கண அமைதியை அழித்தும் தாந்தாம் விரும்பியபடி எழுதிக்கொண்டு அதனை மரபென்று கூறுதல் வெற்றாரவார வெறும் போலியுரையாம்.”

என்று ச. சுப்பிரமணியனும், (தினகரன் 15-12-1962)

“இனி எழுத்தாளராக வர விரும்புவோர் நாவலர் செய்த இலக்கணச் சுருக்கத்தையும், நளவெண்பா, திருக்குறள் முதலிய இலக்கிய நூல்களையும், நாவலர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர், மறைமலையடிகள், முதலியோர் உரைநடைகளையும் கட்டாயம் படிக்கக் கடவர். அப்பொழுதுதான் தமிழ்மொழியின் அமைப்பையும் சொல்வழக்கையும், தமிழ் நாட்டுக்குரிய இலக்கியப் பொருண்மைகளையும், சிறந்த உரைநடை அமைப்பையும் முட்டறத் தெரிந்துகொள்வர். அத்துணைச் சிறிய எல்லையாயினும் நின்று பயின்றுகொள்ளாதார். தம்மை எழுத்தாளர் என்றும், சிருஷ்டி கர்த்தாக்கள் என்றும், புதிய பிரததேவர் என்றும் கூக்குரல் இடுவதில் பொருள் இல்லை.”

என்று சோ. இளமுருகனாரும் 16 கூறுவது கவனத்திற்குரியது.

(இ)கற்றார் வழக்கே செந்தமிழ் வழக்கு
தமிழ் இலக்கியம் பண்டிதவர்க்கத்தினரின் தனிச்சொத்து என்றும் கல்லாதார்க்கு இலக்கியத்திலே இடமில்லை என்றும் வாதாடியோர், தமது வாதத்திற்கு வலுவூட்டுவதற்காகக் “கற்றார் வழக்கே செந்தமிழ் வழக்கு” என்றும் வாதத்தையும் முன்வைக்கலாயினர்.

“வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே
நிகழ்ச்சி அவர்கட் டாகலான்” 17

என்னுஞ் சூத்திரம், அவர்தம் வாதத்தினை வலுவூட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்டது. அவ்வாதம், கல்லாது சிருஷ்டி இலக்கிய முயற்சியிலே ஈடுபட்ட தொழிலாள வர்க்கத்தினரையும், அவர்தம் சமூகப் பின்னணி (சாதி) யையும் விமர்சிப்பதாயிற்று. கற்றார் வழக்கே செந்தமிழ் வழக்கு என வாதாடிய பண்டித வர்க்கத்தினர் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, கலாநிதி சு. வித்தியானந்தன், திரு. க. கைலாசபதி, திரு. கா.சிவத்தம்பி போன்றோரின் வழக்கையும் செந்தமிழ் வழக்கெனக் கொள்ளாது இழிசினர் வழக்கெனவே கொண்டனர். அத்துடன், இழிசினர் வழக்கைக் கையாண்ட இலங்கையர்கோன், சம்பந்தன், வரதர் ஆகியோரின் சிருஷ்டி இலக்கியங்களே இவர்கள் பாரதூரமாக விமர்சித்தாருமில்லை. எனவேதான், இவ்வாதம் தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்தசிருஷ்டி இலக்கிய கர்த்தாக்களை இலக்கிய உலகினின்றும் விரட்டுவதற்காக முன்வைக்கப்பட்டதொன்று எனக் கண்ட கா. சிவத்தம்பி (1975:42)

“இழிசினர் வழக்கு என்னும் வாதமும், தமிழ் இலக்கண இலக்கிய அறிவின்மை என்னும் வாதமும் நவீன இலக்கிய ஆக்க எழுத்தாளர்களுள் பலரின் சமூகப் பின்னணியைத் தாக்குவதாகவும் அமைந்த படியால், இவ்வாதத்திற்கு இலக்கிய வரலாற்றடிப்படையிலும் இ.மு.எ. சங்கம் பலத்த எதிர்ப்பினைத் தெரிவித்தது.”

(ஈ)கொந்தமிழ் வழக்கினாலே
மொழி அழிந்துவிடும்.

ஒரு மொழியிலே பேச்சு வழக்குச் சொற்கள் மிகுதியாக வந்து கலப்பின், அம்மொழி காலப்போக்கிலே வேறொரு மொழியாகிவிடும். இதற்குச் சான்றாக தமிழ் மொழியினின்றும் கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகள் தோன்றி என வாதிட்டனர் மரபுவழிப் பண்டிதர்கள். தமிழ் மொழியிலே, கொடுந்தமிழ் வழக்கு மிகுந்தே இம்மொழிகள் தோன்றின என்பதும், எதிர்காலத்திலும் கொடுந்தமிழ் வழக்கு மிகுமாயின் தமிழ் மொழியே அழிந்து விடும் என்பதும் இவர்தம் வாதமாகும். இதனாலேதான்,

“இவ்வகைத் தமிழ்க் கொலைக்குக் காரணம், ஒன்றையும் படித்தறியமாட்டாமையாற் கல்லாதார் பேசுவதுபோல எழுதிப் பிழைக்கலாம் என்றும் பாழுங்கொள்கை, புதுமை எழுத்தாளர் உள்ளத்திற் புகுந்து கொண்டமையேயாகும். இம் மயக்கவுணர்ச்சி நீங்கிய வழியே. யாழ்ப்பாணத்துக்குச் சிறப்பாய் அமைந்த செந்தமிழ் நடையும், வழக்கும் மரபும் வளமுறும். அது நீங்காழி தமிழ் மொழிக்குரிய இனிமையும், எளிமையும், இலக்கண வரம்பும், வழக்கும், மரபும் நாளடைவில் அழியும். அழியவே ஆ! செந்தமிழ் கொடுந்தமிழாவிடும்!”

என்று சோ. இளமுருகனார் 18 கூறுகிறார். இக் கருத்தினைத்’ தமது செந்தமிழ் வழக்கு என்று சிறிய நூலிற் பதினான்குக்கும் மேற்பட்ட இடங்களிலே அவர் வலியுறுத்திச் செல்கின்றார். அத்துடன்,

“”இப் புதுவழக்கு வளம்பட்ட மொழிகளில் யாண்டும் இல்லை. உருகிய நாட்டிலுள்ள மொழிகளிற் சிலர் எழுதத் தொடங்கி ஆய்வுநிலையில் வீட்டிருக்கின்றனர்@ அது, பயன்படுமென்று யாரும் துணிவில்லை என்பர் ஆராய்ச்சியாளர்.” 19 என்றும் இவர் பிறமொழி வழக்குகளிலிருந்து உதாரணம் காட்டுவது தமிழின் மொழித்துய்மையை வற்புறுத்துவதற்காகவேயாகும்.

(உ)இழிசினர் வழக்கு சிருஷ்டி இலக்கியத்தில் சிறு பங்கே இடம்பெற வேண்டும்
தமிழ் மொழியிலே, கொடுந்தமிழ் வழக்கு மிகுமாயின் அம்மொழியே நாளடைவில் பிறிதொரு மொழியாகத் திரிந்துவிடும் என வாதாடிய மரபுவழி இலக்கியகர்த்தாக்கள். தமது வாதம் அடிப்படையிலேயே பலமிழந்து போவதனை உணர்ந்து பின்வருமாறு சமாதானமும் கூறலாயினர்:

“இனிக் கொடுந்தமிழ்ப் பேச்சைப்பற்றிச் சிறிது கருதுவாம். நாடகத்திற் பல்வேறு நாடக மாந்தர் வருவர். அவருட் சிலர் கல்லாதாராயுமிருப்பர். அவர் பேச்சுக் கல்லாதான் பேச்சாகவே அமைதல் வேண்டும். அங்ஙனம் அமையாவழி, அந்நாடக மாந்தரின் தனிப்பண்பு வெளிப்படமாட்டாது. ஆதலின், அவர் பேச்சு இலக்கணமற்றதாய் அமைவது முறையாம்! அவ்வாறாயின், கொடுந்தமிழ் பேசுவதும் நாடகத் தமிழிலே பேசுவரன்றி, தூய செந்தமிழிற் பேசுதல் நகைப்புக் கிடமாகும். அதுபோலச் சிறுகதைகளில் வரும் உரையாடல்களும் அங்ஙனம் அமையலாமோவெனின் அமையலாம் என்க. ஆயின் அக்கதையில் வரும் எல்லாப்பாத்திரங்களையும் கல்லாதாராகியும் அமையக் கதை முழுமையையும் கொடுந்தமிழில் எழுதுவது எத்துணைப் பேதமையாகும்!! ஆகவே, கொடுந்தமிழ்ப் பேச்சு நாடகங்களிலே சிறுபான்மை அமையும் என்பதுஉம், அதுபோலக் கதை நூல்களிலும் அச் சிறுபான்மையளவே யமையவேண்டுமென்பதுஉம் பெறப்படும்.”

என்று சோ. இளமுருகனார் கூறுவது கவனத்திலே கொள்ளத்தக்கது. முதலில், இலக்கியத்திலே இழிசினர் வழக்கைக் கண்டித்த இவர்கள் பின்னர், கல்லா மாந்தரின் உரையாடல் இலக்கணமற்றதாய் இடம்பெறலாம் என வாதிடுவது இவர்தம் கொள்கை முரண்பாட்டினை வெளிப்படுத்துவதாகவே காணப்படுகின்றது.

(ஊ)சிருஷ்டி இலக்கியகர்த்தாக்கள் யாவரும்
பொதுவுடைமைவாதிகள்
மரபுவழி இலக்கிய கர்த்தாக்கள் சிலர், சிருஷ்டி இலக்கிய கர்த்தாக்கள் யாவரும் பொதுவுடமைவாதிகள் என மயங்கியதாலும் அவர்தம் இலக்கியப் பிரவேசத்தினை அங்கீகரித்தனரல்லர். கொம்யூனிச சித்தாந்தம், எமது நாட்டிலே பேசப்படுவர் அர்த்தமற்றது, அச்சித்தாந்தமானது எமது மரபுவழிக் கொள்கைகளைத் தகர்த்தெறிந்து விடும் என்றும் இவர்கள் நம்பினர்.

“தற்கால இலக்கிய கர்த்தாக்கள் தமிழ் மொழியின் தனித்தன்மையை, தமிழ் இலக்கியத்தின் குணாதிசயத்தை மீறுவதைத்தான் நாம் கண்டிக்கிறோம்@ எதிர்க்கிறோம். ஒழுங்கான தமிழ் வசனங்களை எழுதத் தெரியாதவர்கள், ஆங்கில இலக்கியத்தின் புதிய உத்திகளையும் உருவ அமைப்புக்களையும் தமிழ்மொழியில் கொண்டுவரவேண்டும் என்ற நல்லெண்ணத்தினால், புதுமை இலக்கிய கர்த்தாக்கள் என்ற பொய்ம்மைப் போர்வைக்குள் புகுந்துகொண்டு பட்டப்பகலில் தமிழ்க்கொலை புரிவதையும் வேறுமொழி இலக்கியங்களிலிருந்து தாராளமாகக் கொள்ளையடிப்பதையுமே நாம் எதிர்க்கின்றோம். தமிழ் இலக்கிய இலக்கணப் பயிற்சியற்ற இத்தகைய எழுத் (துத்) தோழர்கட்குத் தங்களின் சிகப்புச் சாயத்தை அவர்களும் பூசிவிட்டார்களே என்பதற்காக, தமிழ் மரபிலும் ஆங்கில இலக்கியக் கடலிலும் மூழ்கித் திளைத்த சில தரம்வாய்ந்த விமர்சகர்கள், மிண்டுகொடுக்க முயல்வதையும் நாம் கண்டிக்கிறோம், வெறுக்கிறோம்……”

எனப் புதுமைப் பண்டிதனும் (தினகரன் 8-12-1962)

“ரூசிய மொழியின் எழுதப்பட்ட புரட்சி நூல்களிற் சிலவற்றைப் படித்த இளைஞர் சிலர் தமிழ் மரபு மாற்றத்தைப்பற்றிப் பேசிவருவது விந்தையாக இருக்கிறது.”

என ஆ. சதாசிவமும் (தினகரன். 5-3-1963) கூறுவது காண்க.

(எ)புனைகதை, இலக்கிய வடிவமாகாது.
புறநானூற்றையும், சிலப்பதிகாரத்தையும் தேவார திவ்வியப் பிரபந்தங்களையுமே இலக்கியங்களாக ஏற்றுக்கொண்ட மரபுவழி இலக்கிய கர்த்தாக்கள், புனைகதைகளை இலக்கியமாக ஏற்றுக்கொண்டாரல்லர். இலக்கியம் செய்யுள் வடிவிலேயே அமையவேண்டும் என்றும், அது உயர் பொருளை உள்ளீடாகக் கொள்ள வேண்டுமெனவும் எதிர்பார்த்த இவர்கள், சாதாரண மனிதனின் வாழ்க்கைப் பிரச்சினைகளைச் சித்திரிப்பதுமல்லாமல், அவனது பேச்சு மொழியையும் சித்திரிப்பதால் புனைகதை இலக்கிய வடிவத்தினையே வன்மையாகக் கண்டிக்கலாயினர்.

“சிறுகதைகளும் வசன கவிதையும் இலக்கியமாகா, இன்றைய சிறுகதைப் படைப்பில் இழிசினர் வழக்கே அதிகரித்துவிட்டது. பேச்சுத் தமிழுக்கு இடமளிக்கும் பொதுவுடைமைவாதிகள் தமிழைக் கொலை செய்கிறார்கள்…..”

என்று ஆ. சதாசிவம் (தினகரன், 05-3-1963) குறிப்பிடுவது கவனத்திற் கொள்ளத்தக்கது.

ஐஐ. இலக்கிய மரபு மீறப்படவேண்டும்.
இலக்கியமானது காலத்துக்கும் சமூக மாற்றங்களுக்கு மேற்ப மாற்றமடையும் பெற்றிவாய்ந்தது@ அது அசையாத குட்டை நீரல்ல என்பதே இரண்டாவது கொள்கை. பொதுவாக, இக்கொள்கையை வரவேற்றோரும் கடைப்பிடித்தோரும் முற்போக்கு எழுத்தாளரே. இ.மு.எ. சங்கம் என்ற நிறுவனத்தின்கீழ் ஓர் அணியிலே இவர்கள் இயங்கினர். இச்சங்கம் மாக்சிய தத்துவங்களையும் கொம்யூனிச சித்தாந்தங்களையும் முன்வைத்து இயங்கினும், அதன் உறுப்பினர் யாவரும் இத் தத்துவங்களையும் சித்தாந்தங்களையும் முற்றுமுழுதாக ஏற்றுக்கொண்டோரல்லர். மாக்சிய தத்துவங்களையும் கொம்யூனிச சித்தாந்தங்களையும் ஏற்றுக்கொள்ளாத முற்போக்கு எழுத்தாளர் சிலரும் இச் சங்கத்திலே அங்கம் வகித்தனர். அரசியல், சித்தாந்த நோக்கிலே வௌ;வேறு அபிப்பிராயமுடையோராய்க் காணப்படினும், இலக்கிய நெறியிலே இவர்கள் யாவரும் முற்போக்குக் கோட்பாடுகளை ஆதரித்தோரே இவர்கள், இலக்கியப் பொருள், வடிவம், ஆக்க உரிமை யாவற்றிலுமே மரபு மீறப்பட வேண்டும் என்னும் கொள்கை உடையோராவர்.

“தமிழ் இலக்கிய வடிவத்திலே, இலக்கியப் பொருளிலே, கவிதை யாப்பிலே, உரைநடையிலே, இலக்கணத்திலே காலத்துக்கு ஏற்ற வளர்ச்சியை இறந்த காலத்திலே கொண்டிருக்கிறோம். நிகழ் காலத்திலே காணுகின்றோம்@ எதிர்காலத்தில் காண இருக்கின்றோம். பாகத, சங்கத, அராபிய, இந்துஸ்தானி போர்த்துக்கேய, ஒல்லாந்த, பிரெஞ்சு, ஆங்கிலச் சொற்கள் ஏராளமாகத் தமிழிலே வந்து புகுந்து விட்டன. தமிழ் பலகாலமாகத் தனித்தியங்கும் ஆற்றலுள்ள மொழியாக இருந்தும், இன்று பிறமொழிகளின் அன்பளிப்பையும் ஏற்று இயங்குகின்றது. தமிழ்மொழி மக்களது அறிவு வளர்ச்சிக்கும் சமுதாயத்தின் நிலைமைக்கும் சூழ்நிலைக்கும் தக்கவாறு காலத்துக்குக் காலம் வேறுபட்டுக்கொண்டு வந்திருக்கிறது. ஈழத்திலே தமிழ்மொழி ஒரு நூதன உயிராற்றல் அமைந்து உரம்பெற்று வளரத் தொடங்கிவிட்டது. இதற்குக் காரணம் உயர்தரக்கல்வி தமிழ்மொழி மூலம் புகட்டப்படுவதே. தமிழ்மொழி பல புதிய துறைகளிற் புதிய முறையில் வளர்ச்சியடைய வேறெந்த நாட்டிலில்லாத வாய்ப்பு ஈழத்திலுண்டு.” எனச் சு. வித்தியானந்தன் (ஊற்று, தொகுதி 1, இல.1) மரபுமாற்றம்பற்றிக் கருத்துத் தெரிவித்திருப்பது மரபு மாற்றத்தின் இன்றியமையாமையை வற்புறுத்துவதாய் உள்ளது.

இக் கொள்கையினைப் பின்பற்றியோர் பின்வரும் வாதங்களை எடுத்துக்காட்டி முற்போக்கு அணிக்கு ஆதரவு தேடிக்கொண்டனர்.

(அ)மக்களுக்காகவே இலக்கியம்.

(ஆ)புனைகதை இலக்கியமே ஆற்றல்வாய்ந்த சாதனம்

(இ)புனைகதை இலக்கியத்திலே இழிசினர் வழக்குத் தவிர்க்க முடியாதது.

(ஈ)முற்போக்கு எழுத்தாளர் யாவரும் பொதுவுடைமைவாதிகள்.

(உ)தேசிய, மண்வாசனைக்கு இலக்கிய முதன்மை அளித்தல்.


(அ) மக்களுக்காகவே இலக்கியம்
ஐரோப்பியர் வருகையுடன் நிலமானிய சமுதாயம் ஆட்டங்காணத் தொடங்க நமது நாட்டிலே, நிலமாணிய அமைப்பினை மிண்டுகொடுத்துக் காத்துவந்த இலக்கியங்களும் தம் முக்கியத்துவத்தினை இழக்கலாயின. சமூக வாழ்க்கையிலே மன்னன் வகித்த இடத்தை மக்கள் வகிக்கலாயினர். மனித சமுதாயத்தின் அத்திவாரம் மக்களே என்பது, கொள்கைரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது எனவே, இலக்கியத்திலே மக்கள் இடம்பெறுவதும், அவர்களுக்காகவே இலக்கியம் படைக்கப்படுவதும், அவர்களின் மொழியிலேயே இலக்கியம் அமைவதும் தவிர்க்கவியலாததாகியது.

“யாம் அநபாய சோழன் காலத்திலோ, பாலை பாடிய பெருங்கடுங்கோ காலத்திலோ, குலோத்துங்கன் காலத்திலோ வாழவில்லை. புரவலர், புலவர், இழிசினர் என்று மக்களிலே பாகுபாடு செய்திட எமக்கு எவ்வித உரிமையும் கிடையாது. எம் இன்றைய புரவலர் மக்கள் தாம்! அவர்களுக்கு விளங்காவகையில், மரபினைக் காக்க எண்ணிக் கடுந் தமிழிலே, வழக்கொழிந்த மொழி நடையிலே இலக்கியம் சமைத்தல் பேதைமையாகும் மக்களிலிருந்து ஒதுங்கியும், மக்களை ஒதுக்கியும் வாழ்வோரின் இலக்கிய வாழ்வு என்றும் நீடித்து நில்லாது……”

எனச் சொக்கன் (தினகரன், 05-01-1963)

(ஆ)புனைகதை இலக்கியமே ஆற்றல்வாய்ந்த சாதனம்.
புனைகதை இலக்கியம், மனிதனது எண்ணங்களையும், சிந்தனைகளையும், அபிலாஷைகளையும் சித்திரிக்கின்றது. அது மனிதனைச் செயலூக்கத்திற்குத் தூண்டுகிறது@ புரட்சிகர சமுதாயத்தின் ஆக்கத்திற்கு வழி சமைக்கின்றது. எனவே, வாழ்க்கைப் போராட்டத்தை வென்றெடுப்பதற்குப் புனைகதை இலக்கியமும் ஓர் ஆயுதமாகும் என்பது இவர்கள் கருத்து.

“இன்று உலகிற்கே பொதுவான இலக்கியக் கோட்பாடு ஒன்று உருவாகியிருக்கிறது. அக்கோட்பாட்டின்படி நாடகமும், கதையும், கவிதையுமே மிக முக்கியமான உருவங்களாகக் கருதப்படுகின்றன. இந்நிலையில் எவர்தான் கதைகள் இலக்கியமாகா என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியும்?”

என வினவும் அ.ந. கந்தசாமி, (தினகரன், 2-2-1963) நோபல் பரிசுபெற்ற இலக்கிய எழுத்தாளர் பலரும் சிறுகதை, நாவல் ஆசிரியர்களே எனத் தமது வாதத்தினை ஆதாரபூர்வமாக நிறுவ முயன்றார்.


(இ)இலக்கியத்திலே இழிசினர் வழக்குத் தவிர்க்க
முடியாதது
மனிதனது உணர்ச்சிகளை நேரடியாகப் பிரதிபலிப்பது, அவனது பேச்சுமொழி. எனவே, மனிதனைப் பொருளாகக் கொண்ட இலக்கியங்களிலே, அவனது பேச்சுமொழி கையாளப்படும்போதே இலக்கியமும் உயிர்த்துடிப்புடையதாகிறது. இப்பேச்சுமொழியை இழிசினர் வழக்கென ஒதுக்கி வைப்பதிலே அர்த்தமில்லை என்று இவர்கள் வாதாடினர்.

“காளிதாசன்கூட இதற்கு விதிவிலக்கல்ல, சாகுந்தலத்தில் செம்படவர் பாத்திரங்கள் செம்படவர்க்குரிய பேச்சுவழக்கான பிராகிருத மொழியிலேயே உரையாடுவதாக வடமொழியாளர் வாயிலாக அறிகிறோம். நமது நாட்டிலும் கலாநிதி க. கணபதிப் பிள்ளையவர்கள் நானாடகம் என்னும் அரிய நூலைப் பேச்சுத் தமிழிலே யாத்திருக்கின்றார். நாடகத்திலும் கதைகளிலும் பலதிறப்பட்ட பாத்திரங்களும் வருதல் வழக்கம் இந்நிலையில் பேச்சுத் தமிழை விடுத்த இவற்றை வளங்கொண்ட இலக்கியச் சுவை கொண்டவையாக அமைத்தல் முடியாது. உலகப் பேரறிஞரும். சிறந்த இலக்கிய கருத்தருமான பேர்னாட்ஷா தமது பிக்மாலியன் நாடகத்தை முழுக்க முழுக்க இழிசினர் வழக்கிலேயே அமைத்திருக்கிறார்.”

என அ.ந. கந்தசாமி (தினகரன். 2-2-1963) கூறுவது இலக்கியத்திலே இழிசினர் வழக்கு இடம்பெறுவது புதுமையானதாகாது என்பதே விளக்குதற்காகவாகும்.

(ஈ)முற்போக்கு எழுத்தாளர் யாவரும்
பொதுவுடைமைவாதிகள்
முற்போக்கு எழுத்தாளர் யாவரும் பொதுவுடைiமாதிகளே என்ற மயக்கம், மரபுவழி இலக்கிய கர்த்தாக்களிடம் மட்டுமல்ல, முற்போக்கு அணியைச் சேர்ந்த எழுத்தாளர் பலரிடமுங் கூடக் காணப்பட்டது. பொதுவுடைமை வாதிகளல்லாத எழுத்தாளர்களும் இ.மு.எ. சங்க உறுப்பினர்களாக இருந்தனர். இருப்பினும், முதுற்போக்கு அணியிலுள்ளோர் யாவரும் பொதுவுடைமை வாதிகள், அவர்கள் யாவரும் தலைசிறந்த எழுத்தாளர்கள் என்ற மயக்கம் ஈழத்து இலக்கிய உலகிலே வேரூன்றி விட்டது.

“மக்கள் இலக்கியத்தை நாம் மதித்து அதற்கு மதிப்பளிக்கிறோம். மக்களின் அன்றைய பிரச்சினைகளை எழுதக்கூடியவர்கள்தான் முற்போக்கு எழுத்தாளர்கள். உலகில் சிறந்த எழுத்தாளர்கள் என்று கருதப்படுபவர்கள் எல்லாரும் அதிகமாகப் பொதுவுடமைவாதிகளே.”

என டொமினிக் ஜீவா (தினகரன், 14-01-1963) குறிப்பிடுவது கவனத்தில் கொள்ளத்தக்கது.

(உ)தேசிய மண்வாசனைக்கு இலக்கிய முதன்மை
ஆரம்பகால ஈழத்துப் புனைகதை எழுத்தாளர்களுக்குப் போதிய பிரசுரகளம் இங்கு இன்மையால், அவர்கள் யாவரும் தெ;னிந்தியத் தமிழ்ச் சஞ்சிகைகளையே பிரசுரத்தின்பொருட்டு எதிர்நோக்க நேர்ந்தது. இதனால் அவர்தம் கதைகளிலே தென்னிந்தியத் தமிழ் இலக்கியப் பண்பு மேலோங்கி நிற்பதாயிற்று ஈழத்து மண்வாசனையை அவற்றிலே நுகர முடியவில்லை. மேலும், ஈழத்தை நல்லதொரு சந்தையாக ஆக்கிக்கொண்ட இச் சஞ்சிகைகள், ஈழத்து எழுத்தாளர்களுக்குப் போதிய சந்தர்ப்பமுங் கொடுக்க முன்வரவில்லை. ஈழத்திலே மண்வாசனை இலக்கியம், பிரதேச இலக்கியம் ஆகிய கோட்பாடுகள் உருவாவதற்கு மேற்கூறிய காரணங்கள் போதுமானவையாக அமைந்தன.

தென்னிந்தியச் சஞ்சிகைகளின் தயவை எதிர்நோக்காது தரமாகவே ஈழத்திற் பிரசுரவசதிகளை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்@ ஈழத்து மக்களின் வாழ்க்கை முறையை எமது இலக்கியங்களிலே இதயபூர்வமாகத் தரிசிக்கவேண்டும் என்ற கோஷம் 1960ஆம் ஆண்டுக்காலப் பகுதிகளிலே மேலோங்குவதாயிற்று. ஈழத்து மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகள் இலக்கியப் பொருளாகும்போது, ஈழத்தின் பிரதேச வருணனைகளும், வாழ்க்கைமுறை விவரணங்களும். பிரதேசப் பேச்சுவழக்கு ஆகியனவும் ஈழத்து ஆக்கங்களிலே இடம்பெறுவது தவிர்க்கவியலாததாயிற்று. இதனாலேயே, ஈழத்து ஆக்க இலக்கியங்களிலே முதலில் தேசிய இலக்கியக் கோட்பாடும், பின்னரே மண்வாசனைக் கோட்பாடும் இடம்பெற்றன.

நற்போக்கு இலக்கியம்
இப் புதிய இலக்கியக் கொள்கையின் “பிதாமகர்” எஸ் பொன்னுத்துரையாவார். 1963ஆம் ஆண்டுவரை, இ.மு.எ. சங்கத்துடன் இணைந்து, அதன் கொள்கைகளை ஏற்று இயங்கி வந்தவர் இவர். 1963 மே மாதம் 7ஆம், 8ஆம் திகதிகளிலே, முறையே பருத்தித்துறையிலும் யாழ்ப்பாணத்திலும் நடைபெற்று இ.மு.எ. சங்க இரண்டாவது மகாநாட்டிலே ஏற்பட்ட கருத்து வேறுபாடு. எஸ். பொன்னுத்துரையை இ.மு.எ. சங்க அணியினின்றும் பிரிப்பதாயிற்று. இவ்வாறு பிரிந்து. தமக்கென ஓரணியை வகுத்துக்கொண்ட எஸ். பொன்னுத்துரை. 09-08-1964ஆம், 16-09-1964ஆம் திகதிய தினகரன் பத்திரிகையிலே தனது கொள்கை விளக்கத்தை முன்வைத்தார்.

இலக்கியத்திலே, தனிமனிதவாதம் முதன்மையானது என்பது இவர்தம் கோட்பாடு. எனவே, இயக்க நெறியிலே கட்டுப்பாட்டுடன் இயங்கிவந்த இ.மு.எ. சங்கத்துடன் இவரால் இணைந்து செயற்பட முடியவில்லை. இதுவே இ.மு.எ. சங்கத்தினின்றும் இவர் வெளியேறுவதற்கும் காரணமாகும் என்பர். கா. சிவத்தம்பி (1975)

ஈழத்துப் புனைகதைகளிலே மரபுப் போராட்டத்தின்
தாக்கம்
மரபுப் போராட்டமானது, ஈழத்து இலக்கியம் எதிர்காலத்திலே எவ்வாறமைதல் வேண்டும் என்பதனைத் தீர்மானிப்பதாயிற்று. இப்போராட்டம் வகுத்த வழியிலே, ஈழத்து இலக்கியம் தனக்கென ஒரு தனித்துவமான பாதையை வகுக்கலாயிற்று மரபுப் போராட்டத்தினாலே ஈழத்து இலக்கியத்திலேற்பட்ட விளைவுகளாகப் பின் வருவனவற்றை நாம் கொள்ளலாம்.

(அ)புனைகதை இலக்கியம் ஆற்றல் இலக்கியமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. செய்யுள் இலக்கியத்திலும் பார்க்க, உரைநடையாலான புனைகதை இலக்கியமே மக்களை நேரடியாகச் சென்றடையக் கூடியது என்பதும், இப் புனைகதை இலக்கியத்திலே சமூக மாற்றங்களைப் பிரதிபலிக்க முடிவதுடன், அம் மாற்றங்களை ஊக்குவிக்க முடியும் என்பதும் ஏற்றுக்கொள்ளப் பட்டன.

(ஆ)தேசிய இலக்கியம். மண்வாசனை இலக்கியம் ஆகியன ஈழத்திலே வளம்பெறலாயின. ஈழத்து இலக்கியம் ஈழத்து மக்களின் சமூக நிலைமைகளைப் பிரதிபலிக்க வேண்டும்@ அவ்வப் பிரதேச மக்களது சிறப்புற்ற கருப்பொருளை அச் சமூகப் பின்னணியிலே சித்திரிக்க வேண்டும்@ மொழியும் அவ்வப் பிரதேச மக்களின் வழக்கினை ஒட்டியதாக இருக்கவேண்டும் என்ற கருத்துக்கள் இலக்கிய உலகிலே உறுதிப்படுத்தப்பட்டன. இதனாலே, பிரதேசப் பேச்சுத் தமிழின் செல்வாக்கு ஈழத்துப் புனைகதைகளிலே தவிர்க்க முடியாதவாறு இடம்பெறுவதாயிற்று.

(இ)சாதாரண தொழிலாள வர்க்கத்தினர் பலர் பிரக்ஞை பூர்வமாகச் சிருஷ்டி இலக்கியத் துறையிலே பங்களிப்பதற்கும் மரபுப் போராட்டமானது வழிவகுக்கலாயிற்று. இதுவரை, பண்டித வர்க்கத்தினரே இலக்கிய கர்த்தாக்கள் என இறுமார்ந்த நிலைமாறி, மாறிலாயிற்று. இதுவரை, பண்டித வர்க்கத்தினரே இலக்கிய கர்த்தாக்கள் என இறுமாந்த நிலை மாறி, சாதாரண கல்வியறிவற்ற தொழிலாள வகுப்பினரும் சிருஷ்டி இலக்கியத் துறையிலே ஈடுபடலாயினர்.

(ஈ)தென்னிந்தியத் தமிழ்ச் சஞ்சிகைகளின் தொகைக் கட்டுப்பாடு கோட்பாட்டுரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், செயல்ரீதியாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டது. கணக்கற்று வந்துகுவிந்த தென்னிந்தியத் தமிழ்ச் சஞ்சிகைகட்கு இறக்குமதிக் கட்டுப்பாடு விதிக்கப்படவே அவ் வெற்றிடத்தை நிரப்புவதற்காக உள்நாட்டிலே சஞ்சிகைகள் பல தோன்றின. இவை ஈழத்திலே புதிய எழுத்தாளர்கள் பலர் உருவாவதற்குக் காரணமாயமைந்தன.

எனவே, ஈழத்துப் புனைகதை இலக்கியத்தின் தனித்துவத்திற்கும், அதன் செழுமைக்கும் தூண்டுகோலாயமைந்தது மரபுப் போராட்டமே என்பது கண்கூடாகும்.

அடிக்குறிப்புக்கள்.
1. சுப்பிரமணியம், நா., ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம், பக். 67

2. கனக. செந்திநாதன், ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு.

3. மேற்படி, பக். 36

4. மேற்படி, பக். 44

5. கதிர்காமநாதன், செ., “என்னுரை”, கொட்டும்பனி.

6. சண்முகதாஸ், அ., “ஆக்க இலக்கியமும் மொழியும்”. ஆக்க இலக்கியமும் அறிவியலும், பக். 59.

7. சுப்பிரமணியம், நா., ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம், பக். 10

8. இலங்கையர்கோன், வெள்ளிப் பாதசரம்.

9. சுபையர் இளங்கீரன், தினகரன், 14-1-1963

10. இளமுருகனார், சே., செந்தமிழ் வழக்கு, பக். 5

11. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க இலட்சியங்களும்… அமைப்பு விதிகளும், 1954

12. முத்துச் சண்முகம், இக்காலத் தமிழ், பக்.12

13. நன்னூல், பொதுவியல், சூத். 388

14. இளமுருகனார், சோ., செந்தமிழ் வழக்கு, பக். 12

15. மேற்படி, பக். 1-2@ 57

16. மேற்படி, பக். 5-6

17. தொல்காப்பியம், மரபியல், சூத். 638

18. இளமுருகனார், சோ., செந்தமிழ் வழக்கு, பக். 5

19. மேற்படி. பக்;. 3

20. மேற்படி, பக். 8

3. ஈழத்துப் புனைகதைகளிற்
கையாளப்பட்ட
பிரசேப் பேச்சுவழக்கு
விவரணம்

பேச்சுவழக்கின் சில பண்புகள்
கடந்த இரு தசாப்தங்களாக, ஈழத்து ஆக்க இலக்கியங்களிற் பிரதேசப் பண்பும், மண்வாசனைப் பண்பும் முதன்மை பெற்று விளங்குகின்றன. புனைகதை இலக்கியத்திற் பிரதேசப் பேச்சுவழக்கின் இன்றியமையாமையை, எழுத்தாளர்கள் போலவே வாசகர்களும் உணருகின்றனர். ஒரு பிரதேசத்தின், அல்லது மக்கள் குழுவின் இயல்புகளைத் தெளிவுறச் சித்திரிப்பது அவர்களுடைய பேச்சு மொழியே என்பதை இன்று யாவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் பிரதேசப் பேச்சுமொழிகள் அல்லது கிளைமொழிகள் யாவும், இடத்திக்கிடமும் மக்களின் இயல்பிற்கேற்பவும் வேறுபட்டுக் காணப்படுகின்றன. தேசியரீதியாகவும் மாவட்ட ரீதியாகவும், கிராமிய மட்டத்திலும் சாதியடிப்படையிலும் பேச்சுமொழியானது தன்னியல்பிலே வேறுபடுகின்றது. இந்தியத் தமிழர் பேச்சுவழக்கிற்கும் இலங்கைத் தமிழர் பேச்சுவழக்கிற்கும் வேறுபாடுகள் நிறைய உண்டு. யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிற்கும் மட்டக்களப்புப் பேச்சு வழக்கிற்றுமிடையே பல்வேறு நுட்பபேதங்கள் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்திலும், புத்தூர்க் கிராமவாசிகளின் பேச்சு வழக்கும் வதிரிக் கிராமவாசிகளின் பேச்சு வழக்கிற்குமிடையே பல நுண்ணிதான வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஒரே கிராமத்திலேயே, சாதியடிப்படையிலும் தொழிலடிப்படையிலும் பேச்சு வழக்கானது வேறுபட்டுச் செல்கின்றது. எனவே, இக் காலகட்டத்திலே, பிரதேசக் கிளைமொழிகள் பற்றிய ஆய்வு இன்றியமையாத தொன்றாகிவிட்டது. இன்று, பிரதேசக் கிளை மொழிகள் பற்றிய தெளிவான அறிவுள்ள ஒரு வாசகனாலேயே ஈழத்து மண்வாசனை இலக்கியங்களை நயந்து கற்க முடிகிறது. விமர்சிக்க முடிகிறது.

பிரதேசக் கிளைமொழிகள், பின்வரும் மூன்று சந்தர்ப்பங்களிலே இடத்திற்கிடம் வேறுபடுகின்றன. முதலாவது, ஒலியமைப்பிலே இடத்துக்கிடம் ஏற்படும் வேறுபாடு ஆகும். பன்றி என்னுஞ் சொல்லில் உள்ள ன்ற் என்னும் ஒலிகள் ன்ன் என ஒலிக்க பண்டி என யாழ்ப்பாணத் தமிழிலும் அமைகின்றன. எனவே, ஒலிமாற்றம் அல்லது ஒலித்திரிபு, பிரதேசக் கிளைமொழிகளின் வேறுபாட்டுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது.

இரண்டாவது, ஒரு குறிப்பிட்ட பொருளினை அழைப்பதற்கு, ஒருபகுதி மக்கள் வழங்குஞ் சொல்லை எல்லாப் பகுதி மக்களும் வழங்குவதில்லை. அவர்கள், அச்சொல்லுக்குப் பதிலாக வேறொரு சொல்லைப் பயன்படுத்துகின்றனர். நெல்லு, அரிசி முதலிய தானியங்கள் புடைக்கும் கருவியை யாழ்ப்பாண மக்கள், தமது இல்லங்களிலே சுளகு என்பர். இதே பொருளினை, விவசாயக் களத்திலே குல்லம் என அழைப்பர். யாழ்ப்பாணத்திலே குரக்கன் என அழைக்கப்படும் தானியத்தைத் தென்னாட்டிலே கேள்வரகு என்றும், சேலத்திலே ஆரியம் என்றும், பாண்டி நாட்டிலே கேப்பை என்றும், திருச்சிராப்பள்ளியிலே ராகி என்றும் சித்தூரிலே கேவுரு என்றும் வழங்குகின்றனர்.

மூன்றாவது, ஓரிடத்திலே வாழ்கின்ற மக்கள் ஒரு சொல்லுக்கு வழங்கும் பொருளைப், பிறிதோர் இடத்திலே வாழும் மக்கள் பெரும்பாலும் வழங்குவதில்லை. இரு திறத்தினரும், அச் சொல்லினை வௌ;வேறு பொருளிலும் அர்த்தத்திலுமே வழங்குகின்றனர். தென்னிந்தியாவிலே தவறிவிட்டார் என்ற சொல், இறந்துவிட்டார் என்ற பொருளை உணர்த்துகின்றது. இதே சொல், யாழ்ப்பாணத்திலே பிழை செய்துவிட்டார் என்ற பொருளிலே வழங்கப்படுகின்றது.

பிரதேசக் கிளைமொழிகள்
ஈழத்தினைப் பொறுத்தவரையிலே, தமிழ்பேசும் மக்கள் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் மட்டும் வாழ்பவரல்லர். ஈழத்தின் சகல பிரதேசங்களிலும், அவர்கள் பரந்து வாழ்கின்றனர். இதனால், அவர்கள் வாழும் ஒவ்வொரு பிரதேசத்தின் பேச்சுவழக்கினையும் வகுத்துக் காட்டுவது இயலாததாகும். ஈழத்துப் பிரதேசக் கிளைமொழிகள் பற்றி, அறிஞர்கள் பலர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளபோதும். அவை பரந்த அடிப்படையிலும் ஆழமாகவும் அமையாமைக்கு இதுவே காரணமாகும். அதிலும், புனைகதைகளிலே இடம்பெறும் பேச்சுவழக்கினை ஆராயும் இப்பணி இன்னும் சிக்கலானதாகவே அமைந்துள்ளது.

சுவாமி விபுலாந்தர், எவ். எக்ஸ். சீ. நடராசா, க. கணபதிப்பிள்ளை, எம். சண்முகம்பிள்ளை, எஸ். தனஞ்செயராசசிங்கம், எஸ். சுசீந்திரராசா, அ. சண்முகதாஸ், கமில் ஸ்வெலபில், எவ்.பீ.ஜே. குய்ப்பர் ஆகியோர் ஈழத்துப் பிரதேசக் கிளைமொழிகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர் 1 கமில் ஸ்வெலபில் (1959: 28-36) மிகவும் பரந்து ஓர் அடிப்படையிலே ஈழத்துப் பிரதேசக் கிளைமொழிகளைப் பின்வருமாறு வகுத்துள்ளார்.

(அ)வடபகுதிப் பிரதேசக் கிளைமொழி.

(ஆ)வடகிழக்குப் பிரதேசக் கிளைமொழி.

(இ)தென்கிழக்குப் பிரதேசக் கிளைமொழி.

(ஈ)கொழும்புப் பிரதேசக் கிளைமொழி.

அ. சண்முகதாஸ். (1976)
“மாவட்ட அடிப்படையிலே, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னி, மேற்குக் கரை, மலை நாடு எனும் பாகுபாட்டினை அமைக்க முடியும். இன அடிப்படையில், இந்தியத் தமிழர், இஸ்லாமியர், இலங்கைத் தமிழர் என்றொரு பாகுபாடு செய்ய வேண்டியுள்ளது.”

எனக் கூறுவதுடன், தொழில் முறைகளுக்கு ஏற்றவகையிலும் மொழியானது வேறுபட்டுச் செல்கின்றது என்பர்.

இவ்வாய்வின் பொருட்டுப் பிரதேசக் கிளைமொழிகள் பின்வருமாறு வகுக்கப்பட்டுள்ளன:
(அ)பிரதேச அடிப்படையில்,

(ஆ)தொழில் அடிப்படையில்

(இ)இன அடிப்படையில்,

(ஈ)கருத்துத்தொடர்பு முறைமை அடிப்படையில்.

பிரதேச அடிப்படையிலே பின்வருமாறு நோக்கலாம்.
(அ)யாழ்ப்பாணப் பிரதேசக் கிளைமொழி.

(ஆ)மட்டக்களப்புப் பிரதேசக் கிளைமொழி.

(இ)மலைநாட்டுப் பிரதேசக் கிளைமொழி.

(ஈ)ஏனைய பிரதேசக் கிளைமொழி.

ஏனைய பிரதேசக் கிளைமொழிகளைப் பின்வருமாறு வகுக்கலாம்:
(அ)தென்மாகாணப் பிரதேசக் கிளைமொழி.

(ஆ)மன்னார்ப் பிரதேசக் கிளைமொழி.

(இ)முல்லைத்தீவுப் பிரதேசக் கிளைமொழி.

(ஈ)கொழும்புப் பிரதேசக் கிளைமொழி.


தொழில் அடிப்படையிலே, ஒவ்வொரு தொழிலுக்கும் அத்தொழிலுக்கே பிரத்தியேகமான சொற்கள் வழங்கப் படுவதை நாம் அவதானிக்கலாம். கடற்றொழில் செய்வோர் ஒரு குறிப்பிடவகைச் சொற்களைத் தமது தொழில் நடவடிக்கையின்போது பயன்படுத்துகின்றனர். இதே சொற்களை, விவசாயம் செய்வோரோ வியாபாரிகளோ பயன்படுத்துவதில்லை. எனவே, தொழில் அடிப்படையிலே பல்வேறு வகையான பேச்சுமொழி வகைகளை நாம் இனங் காணமுடிகிறது. அவற்றுள் சில:

(அ)அரச கூட்டுத்தாபன ஊழியர் கிளைமொழி.

(ஆ)உழவுத் தொழில் செய்வோர் கிளைமொழி.

(இ)கடற்றொழிலாளர் கிளைமொழி.

(ஈ)வியாபாரிகள் கிளைமொழி.

(உ)தோட்டத் தொழிலாளர் கிளைமொழி.

(ஊ)ஏனைய தொழில்கள் செய்வோர் கிளைமொழி.

கருத்துத் தொடர்பு முறைமை அடிப்படையிலே, ஒரே பிரதேசத்திலேயே பேச்சுவழக்குகள் வேறுபடும்.

விற்பனையாளன் - வாங்குபவன்

பெற்றோர் - குழந்தைகள்

மருத்துவர் - நோயாளி

ஆசிரியர் - மாணவர்

சட்டத்தரணி - வழக்காளி, எதிரி

எனத் தொடர்பு முறைமைக்கேற்பப் பேச்சுமொழியும் வேறுபட்டுச் செல்லும். அத்துடன், சந்தர்ப்பத்திற்கேற்பவும் பேச்சுமொழியானது வேறுபட்டுச் செல்வதனை நாம் கவனத்திற் கொள்ளவேண்டும். குறிப்பிட்ட ஒருவரே கல்விகற்றோர் மத்தியிலே ஒருவிதமாகவும், கல்லாதார் மத்தியிலே இன்னொருவிதமாகவும் பேசுவதனை நாம் காணலாம்.

யாழ்ப்பாணப் பிரதேசக் கிளைமொழி.
யாழ்ப்பாணப் பிரதேசக் கிளைமொழி பற்றிப் பல்வேறு அபிப்பிராயங்கள் தெரிவிக்கப்படுகின்றன. யாழ்ப்பாணப் பிரதேச மக்களின் பேச்சுவழக்குச் செந்தமிழ் வழக்கினை அண்மித்தது என ஒரு சாராரும். அது செந்தமிழ் வழக்கினை அண்மியதல்ல. அதுவும் ஒருவகைக் கிளைமொழியே என இன்னொரு சாராரும் கருத்துத் தெரிவிக்கின்றனர். இந்தியத் தமிழ்மக்கள், புனைகதைகளிலே இடம்பெறும் யாழ்ப்பாணப் பேச்சுவழக்கினை விளங்கிக்கொள்ள முடியாதிருப்பதாகவும், அவற்றுக்கு அடிக்குறிப்புத் தேவைப்படுவதாகவும் கூறுகின்றனர். இன்னொருசாரார் யாழ்ப்பாணப் பிரதேசக் கிளை மொழியானது மலையாள மொழிபோல அமைந்துள்ளது என்பர். ச. தனஞ்செயராசசிங்கம் (1965-66):

‘பழந்தமிழ் இலக்கியங்களில் வழங்கும் செந்தமிழ்ச் சொற்களில் பல யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் வழங்கப்பட்டு வருகின்றனர். அவ் வழக்குகள், யாழ்ப்பாணத்தவர் பண்டைத் தமிழின் சிறப்பியல்புகளைப் பேணி வளர்த்தமைக்குச் சான்று பகருகின்றன.” என்று கூறுவர்.

“தமிழ் மொழியின் தூய்மை, உச்சரிப்பு இவை பற்றி யாழ்ப்பாணத்தவர்கள் அக்கறை கொண்டுள்ளனர். தமது மொழிக்கு மிகுதியாகப் பணி செய்யாவிட்டாலும் அவர்கள் பழைமையைப் பாதுகாத்து வருகின்றனர்.”
என்று இலக்குமணன் செட்டியா (1956) குறிப்பிடுவர்.

“இதுவரை காட்டிய இயல்புகள் நம் தமிழைவிட யாழ்ப்பாணத் தமிழே புத்தகத் தமிழோடு மிகவும் ஒத்துவருகிறது என்பதைக் காட்டுகின்றன……… நம் தமிழில் காணப்படாத பழந்தமிழ் இயல்புகள் பலவற்றை யாழ்ப்பாணத் தமிழில் காண்கிறோம்.”
என்பர் முத்துச் சண்முகன். (1967 : 32)

“இலங்கைத் தமிழர் எழுதுவது போலத்தான் பேசுகிறார்கள் என்றும், குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழ் செந்தமிழ் என்று மேலைநாட்டவர் கூறிய பிழையான கூற்றுக்களை எம்மிற் பலர் உண்மையென நம்பிக்கொண்டனர். மேலைநாட்டிலிருந்து வந்து தென்னிந்தியப் பண்டிதர்கள் சிலரிடம் இலக்கியத் தமிழைக் கற்ற சிலர், வீதிகளிலும், சந்தைகளிலும் உள்ள சாதாரண மக்களுடன், தாம் படித்த தமிழிலே உரையாட முடியாததை அனுபவ மூலமாகக் கண்டனர். ஆனால், பழந்தமிழ்ச் சொற்கள் சிலவற்றையும், இந்தியப் பேச்சு நடையை விட வேறுபட்ட அமைப்பையும் கொண்ட யாழ்ப்பாணத் தமிழை அவர்கள் கேட்டபோது அது இலக்கியத் தமிழே என்று பிழையாக முடிவு கொண்டனர்.”8

என, முன்னர் குறிப்பிடப்பட்டவர்கள் கூறிய கூற்றுக்களை மேலும் விளக்கியுரைப்பர் அ. சண்முகதாஸ் (1977 : 55). எவ்வாறாயினும், மேற்காட்டிய கூற்றுக்கள் வாயிலாக, இன்றும் யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே பெருமளவு பழந்தமிழ்ச் சொற்கள் வழக்கிலுள்ளன என்பதை நாம் அவதானிக்கலாம்.

பிரதேசக் கிளைமொழிகள் ஓவியமைப்பிலும் பொருளமைப்பிலும் இடத்துக்கிடம் வேறுபடுவனவாகும். யாழ்ப்பாணக் கிளைமொழியைப் பொறுத்தவரையிலே, அதன் ஒலியமைப்பு இயல்பானதாகவே காணப்படுகிறது. ஒருசில மட்டும் மாறி வழங்கும். 2

ஈழத்துப் புனைகதைகளிற் பெரும்பாலான யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை முறையினைச் சித்திரிப்பனவாகும். இப் புனைகதைகள் யாவற்றிலும், யாழ்ப்பாணப் பேச்சு வழக்கானது செம்மையானதாக அமைந்துள்ளது எனக் கூறுதற்கில்லை. எனவே, யாழ்ப்பாணப் பிரதேசத்தினைக் களமாகக் கொண்ட புனைகதைகள் யாவற்றையும் இவ்வாய்வின் பொருட்டு எடுத்துக்கொள்ளாது, அப் பிரதேசத்தின் மண்வாசனையைச் சிறப்பாகப் புலப்படுத்தும் பஞ்சம், போர்க்கோலம், பிரளயம், வாடைக்காற்று, முற்றத்து ஒற்றைப்பனை, போன்ற நாவல்களும், மூவர் கதைகள், வீ, அக்கா, யாழ்ப்பாணக் கதைகள், கொட்டும்பனி போன்ற சிறுகதை நூல்களுமே பயன்படுத்தப்படுகின்றன.

யாழ்ப்பாணப் பிரதேசக் கிளைமொழிக்கும் செந்தமிழ்
வழக்குக்குமிடையேயுள்ள ஒலி வேறுபாடுகள்
1. மொழியிறுதியிலே வரும் ஏகாரம் ஐகாரமாகத் திரியும்.
அங்கே - அங்கை
இதிலே - இதிலை
வேறே - வேறை

2. ழகரம் ளகரமாகவே ஒலிக்கப்படுகின்றது. பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையின் நாடகங்களிலே “கொழும்பு” என்ற சொல் “கொளும்பு” என்றே பேச்சுத் தமிழிற் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கழுத்து - களுத்து
தமிழ் - தமிள்
பழக்கம் - பளக்கம்

3. ன்ற் என்ற மெய் மயக்கம் ண்ட் ஆக மாறிவரும்
கன்று - கண்டு
ஒன்று - ஒண்டு
தின்றான் - திண்டான்

4. செந்தமிழ்ச் சொற்களிலே, இரட்டித்து வரும் றகரம் - த்த் - ஆக மாற்றமடைகின்றது.
நேற்று - நேத்து
வெற்றிலை - வெத்திலை
விற்றான் - வித்தான்

5. மொழியின் இடைநிலையிலே, -ற்ப்- ஒலிக்கூட்டம் -ப்ப்- ஆக மாற்றமடைகின்றது.
நாற்பது - நாப்பது

6. வடமொழி எழுத்துக்களான, ஷ ஜ போன்றவை யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலே ஒலிக்கப்படுவதில்லை. இச் சொற்கள், தமிழ் ஒலிமரபிற்கேற்ப மாறி ஒலிக்கப்படுகின்றன.
கஷ்டம் - கயிட்டம்
விஷயம் - வியளம்
போஜனம் - போசனம்

7. செந்தமிழ்ச் சொற்களிலே சில உருமாறி ஒலிக்கப்படும்.
மகன் - மோன்
தகப்பன் - தேப்ப், தோப்பன்

8. ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் ஒன்றுசேர்ந்து ஒரே சொல்லாக ஒலிக்கப்படும்.
இங்கே பார் - இஞ்சார்
கொண்டு வந்தான் - கொண்டாந்தான்

9. ஏழாம் வேற்றுமை உருபான இடம் என்னும் விகுதி இட்ட எனவும், ட்டை எனவும் ஒலிக்கப்படும்
உன்னிடம் - உன்னிட்ட, உன்னிட்டை
அவனிடம் - அவனிட்ட, அவனிட்டை

10. ந்த், த்த் ஆகிய இடை நிலைகள், பேச்சுவழக்கிலே முறையே -ஞ்ச்-, -ச்ச்- ஆக ஒலிக்கும்
முடிந்தது - முடிஞ்சது
படித்தது - படிச்சது

11. யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழிலே பெயர்ச்சொல்லினை அடுத்து உடைய என்னும் உருபுக்குப் பதிலாக – ரை என்னும் உருபே பயன்படுத்தப்படுகிறது.
அவனுடைய - அவன்ரை
என்னுடைய - என்ரை

12. சில வினைச்சொற்கள் யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே, முயற்சிச் சுருக்கங் கருதிக் குறுகி ஒலிக்கப்படும்.
செய்கிறது - செய்யுது
கதைக்கிறீர்கள் - கதைக்கிறீயள்
போய்விட்டார் - போட்டார்

13. யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே, கேள்வி கேட்கும் போது ஓ அல்லது ஏ என்னும் இடைச்சொல்லை இறுதியிலே ஒலிப்பர் தென்னிந்தியாவிலே, அ அல்லது ஆ என்னும் இடைச்சொற்களே வழங்கப்படுகின்றன.
தென்னிந்தியப் யாழ்ப்பாணப்
பேச்சுவழக்கு பேச்சுவழக்கு
வாறியா? வாறியோ?
சாப்பிட்டியா? சாப்பிட்டியே?
இருங்க இருங்கோ

சில பிரதேசங்களிலே, ஓ என்ற இடைச் சொல்லின் பின்னர் ஏ காரத்தையும் சேர்த்தும் போறியோவே, வாறியோவே எனவும் ஒலிப்பர்.

14. யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே உறவுமுறைப் பெயர்கள் சில பின்வருமாறு ஒலிக்கப்படுகின்றன:

உன் அப்பன் - கொப்பன்

உன் அண்ணன் - கொண்ணன்

உன் ஆத்தை - கோத்தை

உன் அம்மா - கொம்மா

உன் ஆச்சி - கோச்சி

உன் அத்தான் - கொத்தான்

யாழ்ப்பாணப் பிரதேசக் கிளைமொழியிற் பொருள் மாற்றம்.
சொற்களின் பொருள் காலத்துக்குக் காலம் வேறுபட்டுவருகின்றது. குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியிலே வழங்கிய சொல்லின் பொருள், இன்னொரு காலப்பகுதியிற் பொருள்நிலையிலே வேறுபட்டுவிடுகின்றது. சொல்லின் பொருளானது, மக்களின் வாழ்க்கைமுறைக்கும், தேவைக்குமேற்ப, குன்றியும், திரிந்தும், விரிந்தும், மாறுபட்டும் விடுகிறது. சில சொற்கள் பழைய பொருளிலன்றிப் புதிய ஒரு பொருளை உணர்த்தவல்லனவாகக் காணப்படுகின்றன. சில சொற்கள், முற்றாக வழக்கிறந்துவிடுகின்றன. இவ்வாறான பொருள் மாற்றங்கள் பேச்சுவழக்கிலன்றி, எழுத்து வழக்கிலும் காணப்படுகின்றன. ஆனால், பேச்சுவழக்கிலேயே அதன் பொருள் மாற்றம் மிகுந்து காணப்படுகின்றது யாழ்ப்பாணப் பேச்சுவழக்கும் மேற்கூறப்பட்ட பண்புகளினின்றும் வேறுபட்டதல்ல. அதுவும் பொருள்நிலையிலே காலத்துக்குக் காலம் வேறுபட்டே வந்துள்ளது. யாழ்ப்பாணப் பிரதேசத்தினைக் களமாகக் கொண்ட புனைகதைகளினின்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்வரும் சொற்கள் அவை முன்னர்க் குறித்த இயல்பான பொருளையன்றிப் பிறிதொரு பொருளையோ, அதனோடு தொடர்புடைய பொருளையோ உணர்த்தி நிற்பதை நாம் காணலாம்.

1. ஞான்றுகொண்டிருத்தல் அல்லது நான்றுகொண்டிருந்தல்
இச் சொல் கழுத்திற் சுருக்கிட்டுக் கொள்ளலைக் குறிக்கும். ‘ஞான்றுகொள்வேனேயன்றி யாது செய்வேன்’ என இராமலிங்கம் வள்ளலாரின் அருட்பாவிலே இச் சொல் இப்பொருளிலே வழங்குகின்றது. யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலே இச்சொல் சிறிய ஒலி மாற்றத்துடன் ‘நாண்டு கொண்டிருத்தல்’ என வழங்கப்படுகிறது. இங்கு விடாப்பிடியாக ஒரு செயலைச் செய்யத் தூண்டுவதனை இச்சொல் குறித்து நிற்கின்றது. “அந்தப் பொடியன் அவளைத்தான் கட்டுவனெண்டு நாண்டுகொண்டிருக்கிறான்” என்ற வாக்கியத்திலே, விடாப்பிடியாக நிற்கிறான் என்று கருத்தினை இச்சொல் குறிக்கின்றது.

2. விலை:
இச்சொல் ஒரு பொருளின் பெறுமதியைக் குறிக்கும். யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே இச்சொல், வழமையான பெறுமதியைவிடக் கூடிய பெறுமதியைச் சுட்டுவதற்கே பயன்படுத்தப்படுகின்றது. “சாமான் எல்லாம் இப்ப விலை” என்னும்போது இச்சொல் குறித்த பொருளின் வழமையான பெறுமதியிலும் பார்க்கக் கூடுதலான பெறுமதி என்பதனைக் குறிப்பதாகின்றது.

3. ஒறுப்பு:
இச்சொல், தண்டனை, கடிந்து பேசுதல், வெறுப்பு, அடக்குதல், குறைவு என்பவற்றைக் குறிக்கும். ஆனால், யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே, இச்சொல் தட்டுப்பாட்டினால் ஏற்பட்ட அதிகவிலை அல்லது நட்டம் என்ற பொருளிலே வழங்கப்படுகின்றது. “இப்ப எல்லாச் சாமானும் சரியான ஒறுப்பு” என்னும்போது ஒறுப்பு இப்பொருளையே குறிக்கின்றது.

4. விடுதல்:
இச்சொல், நீங்குதல், பிரிதல், அனுமதித்தல், கட்டவிழ்த்து முதலியவற்றைக் குறிக்கும். யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலே இச்சொல், செலுத்துதல் என்னும் பொருளிலேயும் வழங்கப்படுகின்றது. “கார்விடுதல்”, ‘வண்டில் விடுதல்’ போன்ற வழக்குகள் கிராமப் பகுதிகளிலே காணப்படுகின்றன.

5. உதவாக்கரை:
இச்சொல், வெற்றிலை, புகையிலை ஆகியவற்றின் பயனற்ற பகுதிகளைக் குறிக்கும். யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே இச்சொல் தேவையற்ற ஒரு மனிதனைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. மனித சமுதாயத்திற்குப் பயன்படாத ஒரு மனிதனை யாழ்ப்பாண மக்கள் உதவாக்கரை’ என்று கூறுகின்றனர்.

6. பெட்டை
இச்சொல், சங்க இலக்pயங்களிலே பேடு என்ற பொருளைத் தந்தது. பேடு, பெடை ஆகியன ஒருபொருட் பல சொற்கள். யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே இச் சொல், பேட்டினை (பெட்டைக் குருவியை) இன்று குறிப்பதில்லை. பெண் பிள்ளை என்ற பொருளையே இச்சொல் இன்று குறிக்கின்றது. இச் சொல்லுக்குப் பதிலாகப் ‘பொடிச்சி’, ‘பெடிச்சி’ ஆகிய சொற்களும் பயன்படுத்தப்படுகின்றன.

இவ்வாறு பெருந்தொகையான சொற்கள், யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே பண்டு தாம் குறித்த பொருளிலன்றி வேறு பொருளிலேயே இன்று வழங்கப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாணப் பிரதேசக் கிளைமொழியிற்
செந்தமிழ்ச் சொற்கள்.
யாழ்ப்பாணப் பிரதேசக் கிளைமொழியிலே, அரிய பல பழந்தமிழ்ச் சொற்கள் இன்றும் கையாளப்படுகின்றன. இச்சொற்கள் செந்தமிழ்ச் சொற்கள் என்ற பிரக்ஞையின்றிச் சாதாரண பேச்சுவழக்குச் சொற்களாகக் கருதப்பட்டுப் பேச்சுவழக்கிலே பயன்படுத்தப்படுகின்றன. புனை கதைகளிலும், பாத்திர உரையாடல்களின்போது இச்சொற்கள் மிகச் சாதாரண பேச்சுவழக்குச் சொற்களாகவே பயன்படுத்தப்பட்டுவருகின்றன. பின்வரும் எடுத்துக்காட்டுக்களை இதற்குச் சான்றாக நாம் காட்டலாம்:

1. கொள்ளை என்னும் பெயர்ச்சொல் சங்க இலக்கியங்களிலே, மிகுதி, கூட்டம், நோய், விலை, பயன் போன்ற பல்வேறு பொருள்களை உணர்த்தியது. யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே இச்சொல் மிகுந்த என்ற பொருளிலும் மற்றையோரை வைதற்கும் பயன்படுத்தப்படுகின்றது “கொள்ளை மலிவு” என்னும் போ மிகுதல் என்பதனைக் குறிக்கவும், “கொள்ளையிலை போவான்” என்னும்போது ஒருவனை வைவதற்கும் பயன்படுகின்றது. இரண்டாவதிலே “கொள்ளை” என்பது ஒரு நோயைக் குறிப்பது காண்க.

2. பையப்பைய என்ற சொல், மெல்ல என்ற பொருளிலே யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே இன்றும் வழங்கப்படுகின்றது. கொல்லிப் பாவையன் தலைவியொருத்தி, காளையோடு மெல்ல நடந்து சென்றது, “காளையோடு பையவியலி பாவையன்ன” என் ஐங்குறுநூற்றில் (389) வருணிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே விரைவாக நடக்கமுடியாத ஒருவரை விளித்து, “நான் கெதியாப் போறன் நீ பையப்பைய வா” என்னும்போது, மெதுவாக வா என்ற பொருளிலே இச்சொல் இங்கு எதிரொலிச் சொல்லாக உபயோகப்படுத்தப்படுகின்றது.

3. வாங்கல் என்னும் சொல், பண்டு வளைத்தல், இழுத்தல், ஏற்றல், விலைப்பொருட்டாற் கொள்ளுதல், ஒதுக்குதல் எனப் பல பொருள்களை உணர்த்தியது. யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே “கழுத்து வாங்கிப்போட்டுது” என்று கூறும்போது. கழுத்து ஒருபக்கம் இழுபட்டுவிட்டது என்பதைக் குறிக்கின்றது. தேர்வடத்தினைப் பற்றி இழுப்பது, யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே “வடம் வாங்கல்” என அழைக்கப்படுகிறது.

4. முடை என்னுஞ் சொல், புலால், கெட்ட மணம்,ணு புளித்த மோர் முதலியவற்றின் வீச்சல், தவிடு முதலிய பொருள்களில் பண்டு வழங்கப்பட்டது யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே கெட்ட மணத்தினைக் குறிப்பதற்கு ‘முடை நாத்தம்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

5. பாறு என்ற தொழிற் பெயர், சிறுத்தல், நிலை கெட்டோடுதல், கிழிபடுதல், அடிபறிதல், ஒழுங்கற்றுப் பரந்து கிடத்தல் ஆகிய பொருள்களில் பண்டு வழங்கியது. இன்று, யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலே மரம் ஒன்று சுயநிலையினின்றும் அடிபறிந்து றிபதனைக் குறிக்க, இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. “மரம் பாறிப்போய் நிக்குது” என்ற வழக்கினை யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலே இன்றும் காணமுடிகிறது.

6. சுடச்சுட என்னும் சொல், எரித்தல், பணிகாரம் முதலியன செய்தல், சூட்டித்தல் முதலிய செயல்களை உணர்த்தப்பண்டு பயன்படுத்தப்பட்டது. யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலே இச்சொல், சூடு ஆறாது அருந்துதல், உண்மை என்ற பொருளிலே வழங்கப்படுகிறது. காரசாரம் என்ற பொருளையும் இச்சொல் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலே குறிக்கின்றது. காரசாரமாக ஒருவரை வைவதனைச் “சுடச் சுடக் குடுத்தன்” என்பர்.

8. வெறுங்கை என்பது வெறுமையான கை என்பதனைக் குறிக்கும் யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே, இடருற்ற ஒருவரையோ, நண்பர் ஒருவரையோ சந்திக்கப் போகும் போது “வெறுங்கையோடை போகக்கூடாது” என்பர். வெறுங்கை என்பது, இங்கு வெறுமனே எனப் பொருள் படும்.

யாழ்;ப்பாண மக்களின் பேச்சுவழக்கிலே, இப்படியான செந்தமிழ்ச் சொற்கள் மிகச் சதாரணமானவையாக நாளாந்தம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாணப் பிரதேசக் கிளைமொழியிற்
பிறமொழிச் சொற்கள். 3
மனித இனங்களிடையே தொடர்புகள் மிகும்போது அவர்கள் வழங்கும் மொழிகளிடையேயுமு; பல்வேறு வகையிலும் அளவிலும் தொடர்புகள் நிகழ்கின்றன. கருத்துப் பரிமாற்றம் நிகழும்போது சொற்பரிமாற்றமும் நிகழ்ந்துவிடுகிறது. ஒரு மொழி தனக்கல்லாத வேற்றுமொழிச் சொற்களையும் அச் சந்தர்ப்பத்திலே ஏற்றுக்கொண்டுவிடுகிறது. அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்ட அப்பிறமொழிச் சொற்களிற் சில நாளடைவிலே தமக்குரிய பொருள்களை உணர்த்தாது, வேறு பொருள்களை உணர்த்த வல்லனவாகிவிடுகின்றன. யாழ்ப்பாணத் தமிழிலே வடமொழி, பிராகிருதமொழி, போர்த்துக்கேயமொழி, அரபு மொழி ஆங்கிலமொழி, சிங்கள மொழிச் சொற்கள் பல இன்று தமிழ் மொழியினின்றும் வேறுபடுத்திக் காணவியலாத அளவுக்கு இரண்டறக் கலந்துள்ளன. யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலே காணப்படும் பிறமொழிச் சொற்கள் சிலவும், அவை இன்று குறிக்கும் பொருளும் கிழே தரப்படுகின்றன.

(அ) மச்சம் என்ற சொல், வடமொழியிலே மீனைக் குறிக்கும். யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே இச்சொல் மீன், இறைச்சி, இறால், நண்டு போன்ற அசைவ உணவு வகையைக் குறிக்கின்றது. பொதுவாக இச்சொல், யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே விரதம் என்ற சொல்லுக்கு எதிர்ச் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. “நாங்கள் போன கிழமை முழுக்க விரதம். இண்டைக்குத்தான் மச்சம்” என்ற வாக்கியம், மச்சம் என்ற சொல்லின் பொருளைத் தெளிவுறுத்துவதாக உள்ளது.

(ஆ) மோசம் என்ற சொல், வடமொழியிலே வஞ்சனை அபாயம், களவு, பிசகு எனப் பொருள்படும். ஆனால், யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே “அவன் மோசம்போட்டான்” என்பது, அவன் இறந்துவிட்டான் எனப் பொருள் படுகின்றது.

(இ) கலாதி என்ற சொல், வடமொழி இலக்கியங்களிலே, கலகம் என்ற பொருளைக் குறிக்கும். யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலும் இச்சொல், கலகம் என்ற பொருளிலே வழங்கப்படுகின்றது. அத்துடன் சிறப்பு, கவர்ச்சி போன்ற பொருள்களையும் இது குறிக்கின்றது. “திருவிழா இண்டைக்குக் கலாதி” என்னும்போது சிறப்பையும் அல்லது விசேடத்தையும், “அவன் கலாதியா உடுத்திருக்கிறாள்” என்னும்போது கவர்ச்சியையும் இச்சொல் குறிக்கின்றது.

(ஈ) கட்டை என்ற சொல், பிராகிருத மொழியிலிருந்து தமிழுக்கு வந்தது இச்சொல், விறகு, குற்றி, உடல், பிரேதம், குறைவு முதலிய பொருள்களைக் குறிக்கும். இன்று, யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே, மைல் (அடைந) என்ற பொருளிலே இச்சொல் வழங்கப்படுகிறது. மைல் என்ற சொல் குறிப்பிட்ட அளவு தூரம் ஒன்றினைக் குறிக்கின்றது.

(உ) பரிகாரம் என்ற வடசொல், நீக்குகை, பிராயச்சித்தம், வைத்தியம் போன்ற பொருள்களைக் குறிக்கும் பண்டு, மயிர்வினைஞன் தன் கத்தியாற் சிறுபுண்களுக்குப் பரிகாரம் (வைத்தியம்) செய்ததனாலே அவனைப் பரிகாரி என அழைத்தனர். பரிகாரி என்ற சொல், யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே பரியாரி என மருவி வழங்குகின்றது. இன்று, மயிர்வினைஞனையும் நாட்டு வைத்தியனையும் இச்சொல் குறிக்கின்றது.

(ஊ) பரதேசி என்ற வடசொல், பிறநாட்டிலிருந்து வந்து யாத்திரை செய்வோரைக் குறித்தது. இவர்கள் பிச்சை ஏற்றுக் காலங்கழித்தனர். இன்று, யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே இச்சொல், பிறநாட்டு யாத்திரீகர்களைக் குறிக்காமல், அவன் பிச்சையேற்ற தன்மையை விளக்கும் தாய் பிச்சைக்காரன், நாதியற்றவன் ஆகிய பொருள்களைத் தருகின்றது. யாழ்ப்பாண மக்கள் கோபங்கொண்டு ஒரு வரை வையும்போது “பரதேசி நாய்” என்று குறிப்பிடுகின்றனர்.

(எ) பராக்கு என்ற வடசொல், யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலே. பிராக்கு, பிலாக்கு எனவும் வழங்கப்படுகிறது. இச்சொல், கவனமின்மை, மறதி, சாக்கிரதை எனப் பொருள்படும். யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலே. வேறு விடயத்தில் மனத்தைத் திருப்புதல் என்ற பொருளிலே இச்சொல் வழங்கப்படுகிறது. “றோட்டிலை நடக்கேக்கை பிராக்குப் பார்த்துக்கொண்டு நடக்காதை” என்னும்போது இச்சொல் வேறுவிடயத்திலே கவனத்தைச் செலுத்தக்கூடாது என்றே பொருள்படுகின்றது.

இவை தவிர ஆங்கில, போர்த்துக்கேய, ஒல்லாந்த மொழிகளினின்றும் பெருமளவு சொற்கள் யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலேன்று நாளாந்தம் வழங்கப்பட்டு வருகின்றன. 4

மட்டக்களப்புப் பிரதேசக் கிளைமொழி.
ஈழத்தின் கிழக்கு மாகாணமானது, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்கள் பண்டுதொட்டுத் தமிழ்மக்கள் வாழும் பிரதேசங்களாகக் கொள்ளப்படுகின்றன. அம்பாறை மாவட்டத்திலே. நெடுங்காலமாகத் தமிழ் மக்களே பெரும் பான்மையினராக இருந்து வந்திருப்பினும் இன்று, சிங்கள மக்களே அங்கு பெரும்பான்மையினராவர். கிழக்கு மாகாணத் தமிழ் மக்களின் பண்பாடு, பாரம்பரியங்கள் யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை நிலையினின்றும் வேறுபட்டவையாகும். மொழியியல் ரீதியாகவும், இரு பகுதியினரிடையேயும் பரந்த ஓரிடைவெளி காணப்படுகிறது. 5

சொற்களின் ஒலியமைப்பினும், பொருள் வழக்கிலும் இரு பகுதியினரிடையேயும் மிகுந்த வேறுபாடுகள் காணப்படுகின்றன. மொழி வழக்கிலான இவ்வேறுபாடுகளுக்குப் பின்வரும் காரணங்கள் எடுத்துக்காட்டப்படுகின்றன.

(அ)மட்டக்களப்புப் பிரதேசத்திலே வாழும் பழந்தமிழ்க் குடிகளுடன் பழமையான சோனகச் சாதியினரும் வாழ்ந்து வருகின்றனர். 6 இவர்கள், நீண்ட காலமாக ஒருங்கிணைந்தேவ வாழ்ந்து வருகின்றனர்@ விவசாயம், மீன்பிடி போன்ற தொழில் துறைகளிலும், கலாசாரத்தொழில் துறைகளிலும், கலாசாரத் தொடர்புகளிலும் ஒருவருடன் ஒருவர் தோழமையுடன் ஒத்துழைத்து வருகின்றனர். அத்துடன், மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் இவ்விரு இனத்தினரும் அருகருகே நெருக்கமாகக் குடியமர்ந்துள்ளனர். இதனால், இங்குள்ள மக்கள் தமிழ்மொழியையே தமது தாய்மொழியாகவும் கொண்டுள்ளனர். அவர்கள், தமது இஸ்லாம் மதத்துடன் தொடர்பான அரபுச்சொற்கள் பலவற்றை நாளாந்தம் பேச்சுவழக்கிலே பயன்படுத்தி வருகின்றனர். இதனால், யாழ்ப்பாணத் தமிழிலே இல்லாத அளவிற்கு மட்டக்களப்புப் பிரதேசக் கிளைமொழியிலே அரபுச் சொற்கள் பெருமளினவாகக் காணப்படுகின்றன.

(ஆ)மட்டக்களப்பு குறிப்பிட்ட சிலகாலங்களிலே பண்டைய சிங்கள மன்னரின் நேரடி ஆட்சியின் கீழ் இருந்த ஒரு பிரதேசமாகும். இதனால், மட்டக்களப்புப் பேச்சு வழக்கிலே பெருமளவு சிங்களச் சொற்கள் கலந்து வழங்குகின்றன. இச் சிங்களச் சொற்கள், ஒலிமாற்றம் இன்றியும் ஒலித்திரிபுடனும் பொருள் வேறுபாட்டுடனும் மட்டக்களப்பு மக்களால் வழங்கப்படுகின்றன. 7

(இ)ஈழத்தினை ஆண்ட சோழமன்னர்கள், கடைசியாக ஈழத்தைவிட்டு வெளியேறிய இடம் மட்டக்களப்பாகும். எனவே, மட்டக்களப்புத் தமிழிலே இந்தியத் தமிழின் செல்வாக்கு மிக நீண்டகாலம் இடம்பெற்றிருக்கவேண்டும். இதனாலேயே இப்பகுதி மக்களின் பேச்சுவழக்கானது பெருமளவுக்கு இந்தியத் தமிழ்ப் பேச்சுவழக்குடன் ஒத்திருப்பதாகக் கருதப்படுகிறது. யாழ்ப்பாணத் தமிழைவிட மட்டக்களப்புத் தமிழின் பல ஒலியியற் பண்புகள் இந்தியத் தமிழுடன் ஒத்திருப்பதைச் சண்முகதாஸ் (1983) எடுத்துக் காட்டியுள்ளார்.

மட்டக்களப்புப் பிரதேசக் கிளைமொழியின் இயல்புபற்றி கமில் சுவெலபில் (1966 @ 125-31) என்ற மேனாட்டறிஞர் கூறியிருக்கும் கருத்து இங்கு நோக்கத்தக்கது.

‘தமிழ்ப் பேச்சுவழக்குகள் யாவற்றுள்ளும் மட்டக்களப்புப் பேச்சுவழக்கு வடிவமே இலக்கிய வழக்கினை ஒத்ததாகக் காணப்படுகிறது. அது, அம்மொழியின் அதி உயர்ந்த எல்லைப் பேச்சுவழக்காக அமைவதால் பண்டைய பண்புகளைப் பேணுவதாக உள்ளது. அத்துடன், அது இலக்கிய வடிவுக்கு அண்மையானதாக அமைந்தது ஒருபுறமிருக்க, மறு புறத்தில் குறிப்பிடத்தக்க சில புதுத் தன்மைகளையும் தன்னகத்தே வளர்த்து வந்துள்ளது.”

என்று கூறுவார் அவர். எனவே, மட்டக்களப்புப் பிரதேசக் கிளைமொழியானது, பழந்தமிழ் இலக்கிய வழக்கினை ஒத்திருப்பது மட்டுமன்றி. அது பல்வேறு பத்தியியல்புகள் கொண்டு வளம்பெற்று விளங்குவதையும் நாம் அவதானிக்க முடிகிறது.

மட்டக்களப்புப் பிரதேசக் கிளைமொழியின் பூரணமான சிறப்பியல்புகளைப் பிரதிபலிக்கக்கூடிய புனைகதை இலக்கியங்கள் இன்றும் எம்மத்தியிலே அருகியே காணப்படுகின்றன. அம்மொழியின் சிறப்பியல்புகளை ஓரளவு விரிவாக ஆராய்வதற்கு அப்பிரதேசப் புனைகதைகளுடன் நாட்டார் பாடல்கள், நாட்டுக்கூத்து, நாடகங்கள் ஆகியவற்றிலுள்ள பேச்சுவழக்கினையும் நாம் ஆராய்தல் வேண்டும் இவ் வாய்வின்பொருட்டு, எஸ். பொன்னுத்துரையின் வீ. மண்டூர் அசோகாவின் கொன்றைப் பூக்கள் ஆகிய புனைகதை நூல்களும், சு. வித்தியானந்தன் பதிப்பித்த அலங்காரரூபன் நாடகம், வீ.சீ. கந்தையா பதிப்பித்த இராம நாடகம் ஆகிய நாடகங்களுக்கும், சு. வித்தியானந்தன் தொகுத்த மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள் நூலும், வி.சீ. கந்தையா எழுதிய மட்டக்களப்புத் தமிழகம் விபுலானந்தர் எழுதிய ஈழமண்டலத் தமிழும் சோழமண்டலத் தமிழும் ஆகிய கட்டுரைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மட்டக்களப்புப் பிரதேசக் கிளைமொழியிலே
ஒலிமாற்றங்கள். 9
மட்டக்களப்புப் பேச்சுவழக்கின் ஒலியமைப்பானது யாழ்ப்பாணப் பேச்சுவழக்கின் ஒலியமைப்பினைவிட வேறுபட்டதாகக் காணப்படுகிறது. மட்டக்களப்புப் பிரதேசத்தினைச் சேர்ந்த ஒருவர் உரையாடும்பொழுது, அப்பேச்சு வழக்கின் தனித்துவங்களைக் கொண்டு அதனை நாம் இனங்கண்டுகொள்ள முடிகிறது. யாழ்ப்பாணப் பிரதேசக் கிளை மொழியிலே இல்லாத பல சொற்கள், மட்டக்களப்புப் பிரதேசக் கிளைமொழியிலே காணப்படுகின்றன. அத்துடன் சொற்களின் ஒலியமைப்பிலும் பல்வேறு ஓசைநுட்பங்களை அவதானிக்க முடிகிறது. இவ்வாறான சிறப்பியல்புகளுக்கு மட்டக்களப்பு மக்கள் தொன்றுதொட்டு விவசாயத்தினை மேற்கொண்டு வருவதும் அவர்கள் அரபுச் சொற்களையும் சிங்களச் சொற்களையும் பேச்சுவழக்கிலே பயன்படுத்துவதுமே காரணமெனலாம். மட்டக்களப்புப் பேச்சுவழக்கிலே பின்வரும் ஒலிமாற்றங்கள் சிலவற்றை நாம் அவதானிக்கமுடிகிறது.

1. மட்டக்களப்புப் பேச்சு வழக்கிலே சொல்லின் இறுதியில் அல்லது இடைநிலையில் இடம்பெறும் உகரம் இகரம்மாக வழங்குகின்றது. யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே உகரம் இயல்பாக இருக்கும்.

மட்டக்களப்புப் பேச்சுவழக்கு யாழ்ப்பாணப் பேச்சுவழக்கு
இரி - இரு
பஞ்சி - பஞ்சு
புதிசி - புதிசு
உருக்கி - உருக்கு
வழிசல் - வழுசல்
பசிப்பால் - பசுப்பால்

2.மொழியீற்றிலே வரும் உகரம் இகரமாகத் தீரிபு பெற்ற வினைச்சொற்கள், திரிபடந்த வினைப் பகுதியுடன் -க்- என்றும் நிகழ்கால இடை நிலையும் பால் காட்டும் விகுதியும் சேர்ந்து வழங்குகின்றன. ‘இருக்கிறான்’ என்பது இரு + க் + ஆன் ஸ்ரீ இரிக்கான் எனவரும். இதுபோன்றே குளிக்கான், தேய்க்கான் வைக்கான் போன்ற வழக்குகளும் மட்டக்களப்புப் பேச்சு வழக்கிலேயே காணப்படுகின்றன.

3. முதனீண்டு ஒலிக்கும் சொற்கள் சில மட்டக்களப்புப் பேச்சு வழக்கிலே, முதனிலே குறுகியே ஒலிக்கப்படுகின்றன.

போய்விட்டான் என்பது பெய்த்தான் என வழங்குகின்றது. டகரம் தகரமாகத் திரிபடைந்தது.

4. மட்டக்களப்புப் பேச்சு வழக்கிலே லை, டை, ரை என்னும் இடையின எழுத்துக்கள், முறையே லெ, டெ, ரெ எனவே வழங்குகின்றன.

தலையிலை - தலெயிலெ
உடையுது - உடெயிதி
அரை - அரெ

4. லை, னை என்னும் எழுத்துக்கள் ல.ன எனச் சில இடங்களிலே ஒலிக்கப்படுகின்றன.
மனைவி - மனவி
அவனைப்போல - அவனப்போல
தலைப்பா - தலப்பா

5. மட்டக்களப்பு வாவிக்கு மேற்குப்பகுதிப் பிரதேசக் கிளை மொழியிலே மொழிக்கு முதலில்வரும் அகரம் இகரம் ஆகியன எகரமாக ஒலிக்கப்படுகின்றன.
அரிசி - எரிசி
இடத்திலை - எடத்தில
கிடக்கு - கெடக்கு
சிலை - செலெ

7. உகரம் ஒகரமாக ஒலிக்கப்படுகின்றது.
குரவை - கொரவெ
குறைவு - கொறவு
உடனே - ஒடனே
குரக்கன் - கொரக்கன்

8. இகரகம் உகரமாக மாறும். இதழ்கள் மூடி ஒலிக்கப்படும் சொற்கள் மட்டக்களப்புப் பேச்சுவழக்கிலே இதழ்கள் குவிந்தே ஒலிக்கப்படுகின்றன.
பிள்ளை - புள்ளே
பிடிச்சான் - புடிச்சான்

9. எகரம் ஒகரமாக மாறும்
பெட்டி - பொட்டி
பெண்சாதி - பொஞ்சாதி

10. வி, வீ ஆகிய எழுத்துக்களை முதலாக உடைய சொற்கள் முறையே உ, ஊ, ஆக மாறும்
வீடு - உடு
வீடு - ஊடு

11. மொழியிடையிலே ரகரம் லகரமாகும்
குரவை - குலவெ
சரவை - சரவெ

12. மொழியிடையிலே யகரம் சகரமாகும்
அயறு - அசறு
பயறு - பசறு
வியாதி - விசாதி

13.யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே, மொழியிடையில் றகரம் பகரமாகவும், வகரம் ககரமாகவும், மொழியிற்றிலே ற்று, த்து ஆகவும் த்து, ச்சு ஆகவும் ஒலிக்கப்படுவதுபோலவே மட்டக்களப்புப் பேச்சுவழக்கிலும் ஒலிக்கப்படுகின்றது. ‘ஏன்’ விகுதி ‘அன்’ விகுதியாக ஒலிக்கப்படுகின்றது.
நாற்பது - நாப்பது
சிவப்பு - செகப்பு
பெற்று - பெத்து
எரித்து - எரிச்சு
வந்தேன் - வந்தன்

மட்டக்களப்புப் பிரதேசக் கிளைமொழியிலுள்ள
சிறப்புச் சொற்கள்.
மட்டக்களப்புப் பேச்சுவழக்கானது, சிறப்பாகச் சில ஒளியியல்புகளைக் கொண்டுள்ளமைபோலவே, அப் பிரதேசத்தில் மட்டுமே வழங்கப்படும் தனித்துவமான பல சொற்களையும் கொண்டுள்ளது. அவற்றிற் சில:

1. கிறுகி என்ற சொல், திரும்பி என்ற இறந்தகால விளையெச்சப் பொருளிலே வழங்கப்படுகிறது. திரும்புதல் என்ற தொழிற் பெயர், கிறுகுதல் என வழங்கப்படுகிறது. புனைகதைகளிலே பாத்திர உரையாடல்களில் மட்டுமன்றி நாட்டுப் பாடல்களிலும் இச்சொல்லே பயன்படுகின்றது.

“ஆலையிலே சோலையிலே
ஆலம்பாடிச் சந்தையிலே
கிட்டிப்புள்ளும் பம்பரமும்
கிறுகி அடிக்கப் பாலாறு பாலாறு……”

என வரும் நாட்டுப்பாடல் கவனிக்கத்தக்கது.

2. எலுவா என்ற சொல் அல்லவா என்ற உடன்பாட்டு வினாவின் திரிபு நிலையாகும். மட்டக்களப்பு பேச்சு வழக்கிலே, “நீங்க கோயிலுக்குப் போன எலுவா” என்ற வினாவாக்கியம். ‘நீங்கள் கோயிலுக்குப் போனீர்கள் அல்லவா’ என்ற வாக்கியத்தின் சிதைந்த நிலையிலானதாகும்.

3. மறுகா என்ற சொல் மறுகால் என்ற சொல்லின் லகர மெய்கெட்டு வழங்கப்படுகிறது. மறுபடி, பின்னர் என்பர் இச் சொல்லின் பொருள். இவ்வாறு மொழியீற்று லகர மெய் கெட்டு வருஞ் சொற்கள் பல மட்டக்களப்புப் பேச்சுவழக்கிலே காணப்படுகின்றன.

போனால் - போனா
வந்தால் - வந்தா
கேட்டால் - கேட்டா
இருந்தால் - இருந்தா

4. ஒள்ளுப்பம் என்ற சொல் எள்ளுப் போல என்ற பொருளிலே வழங்கப்படுகிறது. “ஒள்ளுப்பந்தா”, “ஒள்ளத்தா” ஆகிய வழக்குகள் மட்டக்களப்புப் பேச்சுவழக்கிலே காணப்படுகின்றன. யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலே, எப்பன், ஒருத்தினை, கொஞ்சம் போன்ற சொற்கள் வழக்கிலுள்ளன.

5. கா அசைச் சொல்லாக வழங்கப்படுகிறது. பொதுவாகப் பெண்கள் உரையாடும்போது, அவர்கள் தம்முள் ஒத்தாரையும் முதிர்ந்தாரையும் அன்பாய் அழைக்கும்போது இந்த அசைச் சொல்லைப் பயன்படுத்துகின்றனர். “என்னகா எங்கே போறாகா” “வாகா” போன்ற வழக்குகள் பெருமளவு காணப்படுகின்றன. இந்த அசைச் சொல்லானது மட்டக்களப்புப் பேச்சு வழக்கிலே நீக்கமற நிறைந்திருப்பதனை ‘ஆடவர் தோவிலுங்கா அரிவையர் நாவிலுங்கா” எனக் கல்லடி வேலுப்பிள்ளை அழகாக வருணிப்பர்.

6. அங்கே, இங்கே ஆகிய சொற்கள் ஈறுதிரிந்து பலவாறு பயன்படுத்தப்படுகின்றன. அங்கே என்ற சொல் அங்க, அங்கிட்டு அங்கால, அவடத்த, அயின எனவும், இங்கே என்ற சொல் இங்க, இங்கிட்டு, இங்கால, இஞ்சிற்று, இஞ்ச, இஞ்சால, இவடத்த, இயன, ஈன, இந்தா எனவும் வழங்கப்படுகின்றன.

சுட்டுப் பெயர்களுடன் கள் விருதி இணையும் போது, அவற்றினிடையே உகர இடைநிலை இடம்பெறுவதால் அவன், அவள் ஆகிய சொற்கள், முறையே அவனுகள், அவளுகள் என வழங்கப்படுகின்றன. முஸ்லிம் பெண்கள் தமது கணவனை அவக அவகள் என்றே அழைக்கின்றனர்.

மட்டக்களப்புப் பிரதேசக் கிளைமொழியிலே
பிறமொழிச் சொற்கள்
மட்டக்களப்புப் பிரதேசக் கிளைமொழியிலே வழங்கும் பிறமொழிச் சொற்களில், இக் கட்டுரையிலே சிறப்பாக ஆராயப்படுபவை அரபுச் சொற்களும் சிங்களச் சொற்களுமாகும். ஆங்கில, போர்த்துக்கேய, ஒல்லாந்த மொழிச் சொற்கள் ஏனைய பிரதேசங்களில் வழங்குவதுபோலவே இங்கும் பயன்படுத்தப்படுகின்றன.

அரபுச் சொற்கள்
1. அசறு என்ற சொல், பிற்பகல் 3-5 மணிவரையுள்ள காலத்தைக் குறிக்கும். “அசறாப்போச்சி” எனப்பாடசாலையிலிருந்து திரும்பும் பிள்ளைகள் பேசிக் கொள்வதை சாதாரணமாகக் கேட்கமுடியும்.

2. மகரி என்ற சொல் பிற்பகல் 5-6 மணிவரையுள்ள காலத்தைக் குறிக்கும். பொழுதுபடுவதனை இங்கு “மகரி பட்டுப்போச்சு” என்பர்.

3. வறக்கத்து என்ற சொலட், செல்வத்தைக் குறிக்கும். “அவன் பெரிய வறக்கத்துடையவன்” என்ற வழக்கு, செல்வன் என்பதனைக் குறிப்பதாகும்.

4. செய்த்தான் என்பது, சாத்தான் என்பதனைக் குறிக்கும். மிக வேகமாக ஓடிச்செல்லும் ஒருவனை “செய்த்தான் மாதிரிப் போனான்” என்பர்.

5. ராகத்து என்பது அகவுணர்வு என்ற பொருளிலே வழங்கப்படுகிறது. இதற்கு ஆறுதல் என்ற கருத்தும் உண்டு. “நல்ல ராகத்தாக இருக்குதுகா” என்பது ஆறுதலாக இருக்கிறது என்பதனைக் குறிக்கும்.

6. ஹறாம் என்பது இல்லை என்பதனைக் குறிக்கும். “என்னிடம் காசு ஹறாம்” என்பது என்னிடம் காசு இல்லை எனப் பொருள்படும்.


சிங்களச் சொற்கள்
1. அயின இயின ஆகிய சொற்கள் சிங்களமொழிச் சொற்களாகும். ‘அயின தியென்ன’ (றாளகம ;ளளாமயம) அங்கு வை என்பதையும், ‘இயின தியென்ன’ (கர்ம ;ளாமயம) என்பது இங்கு வை என்பதையும், குறிக்கும் சிங்களச் சொற்களாகும். இச்சொற்கள், மட்டக்களப்புப் பேச்சு வழக்கிலும் இதே பொருளிலே பயன்படுத்தப்படுகின்றன. “அயின வை” என்பது அங்கே வை என்பதையும், “இயின வை” என்பது இங்கே வை என்பதையும் குறிக்கின்றன.

2. களைபுளை என்ற சொல் ‘கலபல’ டஈஅஇ என்ற சிங்களச் சொல்லின் திரிபாகும். இச் சொல் சிங்கள மொழியிலே குழப்பத்தினைக் குறிக்கின்றது. மட்டக்களப்புப் பேச்சுவழக்கிலும் குழப்பத்தினைக் களைபுளை என்றே வழங்குகின்றனர். மக்கள் அமளிதுமளிப்படுவதை “ஒரே களபுளையாக் கிடக்கு” என்பர்.

3. கணகாட்டு என்ற சொல், ‘கணக்காட்டுவ’ (டமுலனபஙத) என்ற சிங்களச் சொல் தரும் பொருளிலேயே மட்டக்களப்புப் பேச்சுவழக்கிலும் பயன்படுத்தப்படுகிறது. சிங்களத்தில் இச் சொல் துக்கம், தொல்லை என்பவற்றைக் குறிக்கிறது. மட்டக்களப்புப் பேச்சுவழக்கிலும் பெரிய தொல்லையாகிவிட்டது என்பதனைப் “பெரிய கணகாட்டப் போச்சி” என வழங்குகின்றனர்.

4. அமாறு என்ற சொல் “அமாறுவ” (றரனசநத) என்ற சிங்களச் சொல் தரும் பொருளிலேயே மட்டக்களப்புப் பேச்சுவழக்கிலே பயன்படுத்தப்படுகிறது. இச்சொல் சிங்கள மொழியிலே கஷ்டம் என்ற பொருளைத் தருகின்றது. மட்டக்களப்புப் பேச்சுவழக்கிலே, “பெரிய கஷ்டமாகப் போய்விட்டது” என்பதனை, “பெரிய அமாறாப் போச்சி” என்றே வழங்குகின்றனர்.

5. கொளப்பத்த என்ற சொல் ‘கொளப்பத்த’ (கடனஈஅ;) என்ற சிங்களச் சொற் தரும் பொருளிலேயே வழங்கப்படுகிறது. கமுகமடலைச் சிங்களத்திலே கொளப்பத்த என்பர். மட்டக்களப்பிலும் அதிகாலையிலே வயல் நிலங்களுக்குத் தமது மதியபோசனத்தைக் கட்டிச் செல்லப் பயன்படும் கமுகமடலையே இப்படிக் குறிப்பிடுகின்றனர்.

6. நிக்கங்கார என்பது (மளடஒடனச) வயலிலே வேலைசெய்வோரைக் குறிக்கின்றது. ‘நிக்கங்’ (மளடஒ) என்ற சிங்களச் சொல் சும்மா என்ற பொருளைத் தரும். இந்த ‘நிக்கங்’ என்ற சிங்களச் சொல்லுடன் ‘கார’ என்ற விகுதியையும் இணைத்து வயலிலே சும்மா (கூலியின்றி) வேலைசெய்வோரை ‘நிக்கங்கார’ என அழைக்கின்றனர்.

7. கரைச்சல் என்ற சொல், ‘கரைச்சலய’ (டசிளிளஇh) என்ற சிங்களச் சொல் தரும் பொருளிலேயே மட்டக்களப்புப் பேச்சுத் தமிழிலும் வழங்கப்படுகிறது. சிங்களத்தில் இச்சொல் தொல்லையைக் குறிக்கின்றது. மட்டக்களப்பிலும், யாழ்ப்பாணத்திலும் ஓயாத தொல்லையைச் ‘சரியான கரைச்சல்’ என்றே பேச்சுத்தமிழில் வழங்குகின்றனர்.

8. கபடா என்ற சொல் ‘கபடாவ’ (.nஎனத) என்ற சிங்களச் சொல்லின் திரிபாகும். இச்சொல் சிங்களத்திலே களஞ்சியத்தைக் குறிக்கும். மட்டக்களப்புப் பேச்சுத் தமிழிலே களஞ்சியங்களுள் ஒன்றான மடைப்பள்ளியைக் குறிப்பதற்கு இச்சொல் வழங்கப்படுகிறது.

மலைநாட்டுப் பிரதேசக் கிளைமொழி
இலங்கையின் மத்திய மாகாணமும் ஊவா மாகாணமும், இவற்றினைச் சூழ உள்ள பிரதேசங்களும் மலை நாடாகக் கொள்ளப்படுகின்றன. இப் பிரதேசங்களிலே, 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிற் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையின் பொருட்டுப் பெருமளவு தென்னிந்தியத் தமிழ் மக்கள் கூலிகளாகக் கொண்டுவந்து குடியமர்த்தப்பட்டனர். இவ்வாறு, தென்னிந்தியாவினின்றும் தருவிக்கப்பட்டு, மலைநாட்டுப் பெருந்தோட்டங்களிலே குடியமர்த்தப்பட்ட தமிழ் மக்கள், தமது மொழி, பண்பாடு, கலை ஆகியவற்றின் தனித்துவங்களைக் கைநெகிழவிட்டாரல்லர். சிங்களமக்கள் மத்தியிலே, இவர்கள் வாழ்க்கை நடாத்திவரினும், தம் இனத்துக்கே உரித்தான தனித்துவங்களை இன்னும் பேணிக்காத்து வருகின்றனர். ஆயினும், சிங்கள மொழி, பண்பாடு ஆகியவற்றின் தாக்கங்களும் இவர்களின் வாழ்வியல்புகளைப் பாதிக்கவே செய்தன.

மொழியைப் பொறுத்தமட்டிலே, இவர்கள் தமது தாய் மொழியாகிய தென்னிந்தியத் தமிழ் மொழியையே பயன்படுத்துகின்றனர். இம் மொழி, மட்டக்களப்பு, யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழ் போலன்றித் தனித்துவமான பல பண்புகள் கொண்டு விளங்குகிறது. மலை நாட்டிலே வசிக்கும் சிங்கள மக்களின் சொற்பிரயோகங்கள், வாக்கிய அமைப்புக்கள் ஆகியன மலை நாட்டுப் பேச்சுத் தமிழிலே ஆங்காங்கு ஆதிக்கஞ் செலுத்தியிருப்பதனை நாம் அவதானிக்க முடிகிறது. மலைநாட்டுப் பிரதேசங்களிலே, தென்னிந்தியத் தமிழ் மக்கள், முஸ்லிம் மக்களுடன் இணைந்து வாழ்கின்றனர். இதனால், முஸ்லிம் மக்கள் பயன்படுத்தும் அரபுச் சொற்களும் இவர்களது மொழியின் தனித்துவத்தைப் பாதிப்பதாயமைந்துள்ளன. ஒரு குறிப்பிட்ட சமுதாயச் சூழலிலே, தமக்கென வகுத்துக்கொண்ட பண்பாடு, மொழி என்பவற்றைக்கொண்ட மக்கள் இன்னொரு சமூகத்தினருடன் நெருங்கிப் பழகும்போது அவர்களது பண்பாடு, மொழி என்பன நிச்சயம் ஒன்றை யொன்று பாதிக்கவே செய்யும் என்பதற்கு, மலைநாட்டுத் தமிழ் மக்களின் வாழ்க்கை சிறந்த தொரு எடுத்துக்காட்டாகும்.

19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து புதியவொரு பண்பாட்டுச் சூழலிலே உருவாகிக்கொண்ட இத்தோட்டத் தொழிலாளரது வாழ்க்கை முறை பற்றியோ, அவர்தம் மொழியியல்புகள் பற்றியோ இதுகாலவரை விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. சிறப்பாக, இவர்களது மொழிபற்றிய ஆய்வுகள் அறிஞர்களாலே மேற்கொள்ளப்படாமையால், புனைகதைகளிலே உபயோகிக்கப்படும் அம்மொழியின் இயல்புகளை யாவரும் விளங்கிக்கொள்ள முடியாதுள்ளது. இருப்பினும் அவ்வப்போது மலைநாட்டுப் பிரதேசங்களிலே உருவான புனைகதைகளில், இவர்களது பேச்சுமொழியின் சிற்சில இயல்புகளையாவது விளங்கிக்கொள்ள முடிகிறது. இவ்வாய்விற்கு, வீரகேசரி, தினகரன் போன்ற நாளிதழ்களிலும், மல்லிகை, குமரன் நதி போன்ற சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ள புனைகதைகளின் பேச்சுவழக்கும், கோகிலம் சுப்பையாவின் தூரத்துப் பச்சை, தெளிவத்தை ஜோசப்பின் காலங்கள் சாவதில்லை, யோ. பெனடிக்ற்பாலனின் சொந்தக்காரன் போன்ற நாவல்களின் பேச்சுவழக்குகளும் மூலாதாரமாகும்.

பேச்சுமொழியின் கருத்துப் புலப்பாடு எழுத்து மொழியைவிட விரைவானது ஆகும். அதுபோன்றே, எழுத்து மொழியைவிடப் பேச்சுமொழி முயற்சிச் சுருக்கமானது. பேச்சு மொழியிலே முயற்சிச் சிக்கனத்துக்காகச் சில ஒலிகள் நீக்கப்பட்டுச் சொல் குறுக்கம்பெறுகிறது. இப் பண்பினை, மலைநாட்டுப் பிரதேசக் கிளைமொழியிலே நாம் பரக்கக் காணலாம். பேசப்படும் ஒவ்வொரு சொல்லும், ஏதொவொரு வகையிலே எழுத்து வழக்கைவிட முயற்சிச் சுருக்க முடையதாகவே காணப்படுகின்றது. நாவுக்குக் கடினமற்ற முறையிலே, சொற்களின் ஒலிகள் இலகுபடுத்தப்படுகின்றன. இதனாற் பெருமளவு ஒலித்திரிபுகளை மலைநாட்டுப் பிரதேசக் கிளைமொழியிலே அவதானிக்க முடிகிறது. பின்வரும் எடுத்துக்காட்டுக்கள் இதற்குச் சான்றாகும்.

பண்ணிவிட்டேன் - பண்ணிட்டேன் (வகரம் கெட்டது) போய்விட்டது – போய்ட்டு (வகரம் கெட்டது)

நாங்கள் - நாம்ப (கள் கெட்டது)
பார்க்கிறாயா - பாக்கியா (ரகரமும் றகரமும் கெட்டன)

இவ்வாறு, மலைநாட்டு மக்களின் பேச்சுவழக்கிலே ஒவ்வொரு சொல்லும் முயற்சிச் சுருக்கமுடையதாகவே காணப்படுகின்றது. இதனால், இவர்களது பேச்சிலே, ஒலித்திரிபு தவிர்க்கமுடியாததொன்றாகிவிடுகிறது.

மலைநாட்டுப் பிரதேசக் கிளைமொழியிலே ஒலிமாற்றம்
மலைநாட்டுப் பிரதேசப் பேச்சுவழக்கிலே, ஒலிமாற்றமானது மொழியின் முதல், இடை, கடை ஆகிய மூன்று நிலைகளிலும் இடம்பெறுகிறது. அத்துடன், ஏனைய பிரதேசங்களிலே வழக்கிலில்லாத பல சொற்களும் சொல்லுருபுகளும் மலைநாட்டுப் பிரதேசப் பேச்சு வழக்கிலே இடம்பெறுகின்றன.

மொழி முதலில் ஒலிமாற்றம் பெறும் சொற்கள்
1. வ கரம் ப கரமாகும்
வடுவா - படுவா
விடுவோம் - (ஒதைச்சி) பிடுவோம்

2. இ கரம் எ கரமாகும்
இறங்கி - எறங்கி
விபரம் - வௌரம்
சிவப்பு - செகப்பு

3. உ கரம் ஒ கரமாகும்
உனக்கு - ஒனக்கு
துரை - தொரை
உழைத்த - ஒழைச்ச

4. இ கரம் ஒ கரமாகும்
திறப்பு - தொறப்பு
திற - தொற

5. ஒ கரம் உ கரம்
கொடு - குடு

6. இ கரம் உ கரம்
பிடி - புடி
பிள்ளை - புள்ளை

7. அ கரம் எ கரமாகும்
சலாம் - செலாம்


மொழியியிடையே ஒலிமாற்றம்
1. ற கரம் த கரமாகும்
குற்றம் - குத்தம்
சுற்றம் - சுத்தம்

2. க கரம் வ கரமாகும்
மகள் - மவள்
போகட்டும் - போவட்டும்

3. ய கரம் ச கரமாகும்
உயிர் - உசிர்
பயிர் - பசிர்

4. ண கரம்; ம கரமாகும்
எண்பது - எம்பது
செண்பகம் - செம்பகம்

5. யத், ஞ்;ச் ஆகும்
பெய்த - பெஞ்ச
செய்த - செஞ்ச

மொழியீற்றிலே ஒலிமாற்றம்
1. ன்ற், ன்ன் ஆகவும் ண்ண் ஆகவும் மாறும்.
கொன்றான் - கொன்னா, கொண்ணுட்டா
இன்றைக்கு - இன்னைக்கு, இண்ணைக்கு

2. உ கரம் இ கரமாகும்.
நாளைக்கு - நாளைக்கு
செய்து - செஞ்சி

3. ஆய் விகுதி ஏ விகுதி.
வருகிறாய் - வர்றே
போகிறாய் - போறே

4. ஈற்று மெய்யெழுத்து அ கரச் சாரியை பெறும்.
வாங்குகையில் - வாங்கயில
போகையில் - போகயில

5. ஈற்று மெய் உ கரம் பெறும்
நான் - நானும்
கேள் - கேளு
உயிர் - உசிரு
பால் - பாலு
கண் - கண்ணு


சொல்லுருபுகள்
1. ‘விட்டது’ என்ற சொல்லுருபுக்குப் பதிலாக ‘இருச்சி’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
வந்துவிட்டது - வந்திரிச்சி
போய்விட்டது - போயிரிச்சி

2. ‘கொண்டு’ என்ற சொல்லுருபுக்குப் பதிலாக ‘கிட்டு’ என்ற சொல்லுருபு வழங்கப்படுகிறது.
அவிழ்த்துக்கொண்டு - அவுத்துக்கிட்டு
பிடித்துக்கொண்டு - பிடிச்சிக்கிட்டு

3. ‘இடம்’ என்ற சொல்லுருபுக்குப் பதிலாக ‘கிட்ட’ என்ற சொல் வழங்கப்படுகிறது.
உங்களிடம் - ஒங்கிட்ட
என்னிடம் - ஏங்கிட்ட

4. ‘என்றால்’ என்ற சொல்லுருபுக்குப் பதிலாக ‘னா’ என்ற எழுத்து வழங்கப்படுகிறது.
நடந்தாயென்றால் - நடந்தினா
கலியாணமென்றால் - கலியாணம்னா


தென்மாகாணப் பிரதேசக் கிளைமொழி
காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது தென்மாகாணம். சிங்களமக்கள் மிகப் பெரும்பான்மையாக வாழும் இப் பகுதியிலே, தமிழ் மக்கள் சிறு தொகையினராயும், தமிழ் பேசும் முஸ்லிம் இனத்தவர்கள் கணிசமான அளவினராயும் வாழுகின்றனர். சிறப்பாக இப் பிரதேசங்களிலே வாழும் முஸ்லிம் மக்கள், ஈழத்தின் ஏனைய பகுதி முஸ்லிம்களைவிடத் தனித்துவங்கள் பல நிறைந்தவர்களாகக் காணப்படுகின்றனர். தென்மாகாணத்திலும், திக்குவல்லைப் பிரதேசமே முஸ்லிம் மக்களின் பண்பாட்டுக் களமாக விளங்குகிறது.

“கிழக்கே வரண்ட மலைக் குன்றமும், மேற்கே ஸியபலா வாவியும் (மின்ஹாத் மஹாவித்தியாலயத்தின் அண்மையிலுள்ள நிலம்) தெற்கே இந்து சமுத்திரமும் எல்லையாகக் கொண்ட திக்குவல்லையில் அன்றைய தெவிநுவரைக் குடிமக்களின் சந்ததியினர் வாழும் யோனகபுரம் இன்று வளர்ச்சி பெற்ற கிராமமாக இலங்குகின்றது.

சிங்களக் கிராமங்களின் மத்தியில் அமைந்துள்ள யோனகபுரம் சுமார் 160 ஏக்கர் நிலைப்பரப்பினைக் கொண்டது. 3,500க்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் வாழ்கிறார்கள்… நெய்தல் நிலச்சார்புள்ள யோனகபுரத்தில் குடியேறிய முஸ்லிம்கள் மீன்பிடித்தொழிலை அறிந்திருக்கவில்லை. விவசாயம் செய்வதற்குப் பரந்த இடவசதி கிடைக்காத, கடலோடு நசுக்கப்பட்ட ஒரு பிரதேசத்துள் வாழத் தலைப்பட்டதால் தமது சீவனோபாயத்தின் பொருட்டு மூதாதையர் காட்டிய வாணிபத்தையே கைக்கொண்டனர். இவ் வர்த்தகப் பெருமக்களுள் பெரும் பகுதியினர் தமது மனைவிமார்களைக் கிராமத்தில் வாழவிட்டு நெடுந்தூரத்திலுள்ள சிங்களச் சீழை (ஊவா மாகாணத்தின் தென்கிழக்குப் பிரதேசம்) கிரவபத்துக் கிராமங்கள் தோறும் சென்று வியாபாரஞ்செய்து பொருள் திரட்டினர். 11

என யோனகபுர ஹம்ஸா குறிப்பிடுவது, இப் பிரதேசத்தின் அமைவு. அதன் தன்மை, மக்களின் வாழ்க்கைமுறை, தொழில் முயற்சிகள், பண்பாடு ஆகியவற்றை விளக்குவதோடு, அப்பிரதேசத்தின் மொழிவழக்கினையும் உய்த்தறியச் செய்வதாக உள்ளது.

இப்பகுதி மக்கள், சிங்களக் கிராமங்களின் மத்தியிலே வாழ்க்கை நடாத்துவதாற் பெருமளவு சிங்களச் சொற்கள் இவர்தம் பேச்சுவழக்கிலே இடம்பிடித்துக்கொள்கின்றன. இவர்கள், வியாபாரத்தினை மூலாதாரமாகக் கொண்டிருப்பதனால் பேச்சு மொழியிலே வியாபாரத்தினாடு சம்பந்தப்பட்ட சொற்கள் பெருமளவு ஆதிக்கஞ் செலுத்துகின்றன.

தென்மாகாணத்தின் பிரதேச் கிளைமொழிபற்றிய ஆய்வுக்குப் போதிய மூலாதாரங்கள் கிடைக்காமையினாலே, அவ்வப்போது தினசரிகளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமான இப்பிரதேசம் சார்ந்த புனைகதைகளும், லெ. முருகபூபதியின் சுமையின் பங்காளிகள் என்ற நூலுமே ஆதாரமாகக் கொள்ளப்படுகின்றன.

தென்மாகாணப் பிரதேசக் கிளைமொழியிலே
ஒலி மாற்றம்
எழுத்துவழக்கிலுள்ள உச்சரிப்புக் கடினமும், அவசரமாகச் சொற்களைப் பேசிமுடிக்கவேண்டும் என்ற ஒருவகை உந்தலுமே திக்குவல்லைப் பிரதேச மக்களின் பேச்சிலே ஒலித் திரிபுகள் ஏற்படக் காரணமேன்பர் எஸ். ஐ. எம். ஹம்ஸா. 12

மொழிமுதலிலே ஒலிமாற்றம்
1. மட்டக்களப்புப் பேச்சுவழக்கில் உள்ளதுபோலவே இப்பிரதேசப் பேச்சுவழக்கிலும், ஒ கரம் உ கரமாகும்.
கொடுப்பார்களா - குடுப்பாங்களா
கொடுக்கிறார் - குடுக்கியார்

2. மலைநாட்டுப் பேச்சுவழக்கிலே, உ கரம் ஒ கரமாவது போலத் தென்மாகாணப் பேச்சுவழக்கிலும் ஆகும்.
சுகமில்லை - சொகமில்லை
முதலில் - மொதல்ல
உனக்கு - ஒனக்கு

3. மலைநாட்டு, மட்டக்களப்புப் பேச்சுவழக்குகளிலே காணப்படுவதுபோல தென்மாகாணப் பேச்சுவழக்கிலும் இ கரம் உ கரமாகவும், ஒ கரமாகவும் ஒலிக்கப்படும்.
பிடி - புடி
பிட்டு - புட்டு
பிறகால - பொறகால
பிரட்டல் - பொறட்டல்

4. இ கரம் ஈ கரமாகும்
இருந்து - ஈந்து
ஆசையிருந்தால் - ஆசையீந்தால்

5. வ கரம் நீண்டொலிப்பதுடன் மொழியீறு திரித்தும் குறைந்தும் விடுகிறது.
வருகிற - வார
வருகிறாய் - வாற

6. ‘சொன்னாய்’ என்பது ‘செல்லிய’ என வழங்கப்படுகிறது.


மொழியிடையே ஒலிமாற்றம்
1. ப கரமும் ய கரமும் வ கரமாகும்.
வியாபாரம் - யாவாரம்
மரியாதை - மருவாதை

2. ஏ காரம் ஓ காரமாகும்.
முடியவேணும் - முடியவோணும்
போகவேணும் - போகோணும்

3. க கரம் வ கரமாகும்
மகள் - மவள்
மகன் - மவன்

4. அ கரம் உ கரமாகும்
பாரடா - பாருடா

5. ர கர ற கரங்கள் ய கரமாகும்.
இருக்கிறதா - ஈக்கியா
வைக்கிறதில்லையா - வெக்கில்லையா
உரிக்கிற - உரிக்கிய
பேசுகிற - பேசிய


மொழியீற்றிலே ஒலிமாற்றம்
1. ன கரமெய் உ கரச் சாரியை பெறும்.
பெற்றுவிட்டான் + கள் - பெத்துட்டானுகள்
சொன்னான் + கள் - சொன்னானுகள்

2. ன கர மெய் கெடும்.
வாவேன் - வாவே
போவேன் - போவே

3. மட்டக்களப்புப் பேச்சுவழக்கிலே காணப்படுவதுபோல உ கரம் இ கரமாகும்.
இருக்கு - இரிக்கி
அண்டைக்கு - அண்டைக்கி

4. க்க ச்ச வாகும்
கவனிக்க - கவனிச்ச
இருக்கும் - இரிச்சும்

5. போல என்பது பில வாகும்
காட்டினாற்போல - காட்டினாப்பில
செய்தாற்போல - செஞ்சாப்பில

6. விட்டது என்ற விகுதிக்குப் பதிலாக இரிச்சி என்ற விகுதி பயன்படுத்தப்படுகிறது.’
பட்டுவிட்டது - பட்டிரிச்சி
நடந்துவிட்டது - நடந்திரிச்சி

7. உடைய என்ற சொல்லுருபுக்குப் பதிலாக ட, டே போன்ற விகுதிகள் வழங்கப்படுகின்றன.
அவர்களுடைய - அவங்கட - அவங்கடே
ஆண்டவருடைய - ஆண்டவர்ட - ஆண்டவர்டே

8. மட்டக்களப்புப் பேச்சுவழக்கிலே காணப்படுவதுபோல, அல்லவா என்ற வினாவுக்குப் பதிலாக எலா என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
சொன்னது அல்லவா - சென்னஎலா
மாயவேண்டாமல்லவா - மாயவேணாஎலா

9. அளவு என்ற சொல்லுக்குப் பதிலாக, இட்டு என்ற சொல் வழங்கப்படுகிறது.
அவ்வளவு - அம்புட்டு
இவ்வளவு - இம்புட்டு

10. அங்கு, இங்கு, எங்கு என்ற சுட்டுப் பெயர்களிடன் கிட்டு என்ற விகுதியும் சேர்த்து வழங்கப்படுகிறது.
அங்கு - அங்கிட்டு
இங்கு - இங்கிட்டு
எங்கு - எங்கிட்டு

11. கொள் என்ற சொல்லுருபுக்குப் பதிலாக, கிட் என்ற இடையெழுத்துப் பயன்படுத்தப்படுகிறது.
காட்டிக்கொண்டான் - காட்டிக்கிட்டான்
சொல்லிக்கொண்டான் - சொல்லிக்கிட்டான்

மேற்குறித்த ஒலிமாற்றம். ஒலித்திரிபுகட்கு அமையாமல், சில சொற்கள், விசேட ஒலிமாற்றம் பெற்று விளங்குகின்றன. சிறப்பாக, இரு சொற்களை ஒன்றுடன் ஒன்று கூட்டிச் சொல்லும்போதே இவ்வாறான ஒலிமாற்றங்கள் நிகழ்கின்றன.

என்று சொன்னான் - என்டியான்
இல்லாமல் போய்விட்டது - இல்லாப் பெய்த்து
வாங்கவேணும் - வாங்கோணும்


தென்மாகாணப் பிரதேசக் கிளைமொழியிலே
சிறப்புச் சொற்கள்
தென்மாகாணப் பிரதேசக் கிளைமொழியிலே வழங்கப்படும். அப்பிரதேசத்திற்கே தனித்துவமான சில சொற்கள் பின்வருமாறு:

1.அருப்பணத்தில : விரைவாக என்னும் பொருளிலே இச்சொல் வழங்கப்படுகிறது. ‘சுருக்கா’ என்பதன் திரிபே ‘அருப்பணத்தில’ என்றாயது.

2. புள்ளகாலி : பிள்ளைகள் என்ற பொருளிலே வழங்கப்படுகிறது. யாழ்ப்பாணப் பிரதேசக் கிளைமொழியிலே இச்சொல் ‘பிள்ளைகுட்டி’ எனப் பயன்படுத்தப்படுகிறது.

3. பயினமன்: தடைவ என்னும் பொருளிலே இச்சொல் வழங்கப்படுகிறது. “எத்தனை தடவை” என்பது, “எத்தின பயினமன்” என்று வழங்கப்படுகிறது.

4. பாரஞ்சாட்டுதல் : பாரங்கொடுத்தல் என்னும் பொருளிலே வழங்கப்படுகிறது.

5. காலமாகுதல் : இச்சொல், மரணமாதல் என்னும் பொதுப் பொருளையும், பெண்கள் பருவமடைதல் என்ற சிறப்புப் பொருளையும் இங்கே தருகிறது.

6. ஊட்டுக்காகுதல் : இச்சொல், வீட்டையடைதல் என்ற பொதுப் பொருளையும், பெண்கள் பருவமடைதல் என்ற சிறப்புப் பொருளையும் இங்கே தருகிறது.

7. சரயும் : முறையும் என்ற பொருளிலே வழங்கப்படுகின்றது. இந்த முறையும் என்பதனை “இந்தச் சரயும்” என்றே வழங்குகின்றனர்.

8. மறுவாதை : மரியாதை என்ற பொருளிலே வழங்கப்படுகின்றது.

9. பொலக்கடக்கி போற, பேண்டிட்டுது ஆகிய சொற்கள் மலங்களித்தலைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

10. சிறுக்கன், சிறுக்கி, புழுக்கச்சி, செவலயன், மசமாது, கொலுவன், மோலன், பரப்பாதத போன்ற சொற்கள், மற்றையோரை வைதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.


தென்மாகாணப் பிரதேசக் கிளைமொழியிலே
பிறமொழிச் சொற்கள்
இப்பிரதேச மக்களின் பேச்சுவழக்கிலே, ஏனைய பிரதேச மக்கள் வழங்கும் போர்த்துக்கீச, ஒல்லாந்த, ஆங்கிலச் சொற்களும், பெருமளவு சிங்கள, அரபுச் சொற்களும் காணப்படுகின்றன.

சிங்களச் சொற்கள்.
கசால் - கரைச்சல்
சவுத்து - பிரயோசனமற்றது
ஜுவால் - கோபம்
கொலுவன் - மடையன்
மோலன் - ஊமையன்
செவலயன் -
பரப்பாதத -
மசவாது -
அரக்கு - சாராயம்
கோணி - சாக்கு
புட்டுவம் - கதிரை
சன்சபாவ - கிராமசபை
வீதுறு - கண்ணாடி
கோப்ப - கோப்பை

இவை தவிர, தமிழ்ச் சொற்களுடன் சேர்ந்த சிங்களச் சொற்களும் பல, வகைச் சொற்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. பரநாய், பங்குஸாத்து நாய் போன்றவையும், “கவுறுத் யன்னே தேவாலே அபித் யன்னே ஏவாலே” போன்ற சிங்களப் பழமொழிகளும் இப்பகுதி மக்களாலே பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன.

அரபுச் சொற்கள்.
திரிபுபட்ட தனிச்சொற்களாகவும் தமிழுடன் கலந்த திரிபுச் சொற்களாகவும் பெருமளவு அரபுச் சொற்கள் இப் பிரதேசப் பேச்சுவழக்கிலே காணப்படுகின்றன.

கிப்லா, மையத்து, எத்தீன், ஆலிம்சா, ஹாஜி, மௌத்த, பரக்கத்து, வைவாத்து, ஸலாம் என்பன திரிபுபட்ட தனி அரபுச் சொற்களாகும்.

துனியாதொங்கல, தக்பீர் மொழக்கம் முதலியன விகுதியிலே தமிழ்மொழி சேர்ந்து திரிபுபட்ட அரபுச் சொற்கள்.

பலாய், முஸீபத்து, நஜீஸ{ ஆகியன தனி அரபுச் சொற்களாலான வசைமொழிகளாகவும் அல்லஹ்ரஸ{ல், கத்தம், பாத்திஹா, ஏஸ{வா ஆகியன பக்தி உணர்வை வெளிப்படுத்தும் சொற்களாகவும் தென்மாகாணப் பிரதேசக் கிளைமொழியிலே வழங்கப்படுகின்றன.

மன்னார் முல்லைத்தீவுப் பிரதேசக் கிளைமொழி
மன்னார், முல்லைத்தீவுப் பிரதேசக் கிளைமொழிகள் விதந்து கூறப்படுமளவுக்குத் தனித்துவங்கள் நிறைந்தனவல்ல. அவை அடிப்படையிலே யாழ்ப்பாணக் கிளைமொழியின் பண்புகளை ஒத்தனவாகக் காணப்படுகின்றன. ஒலியமைப்பிலும், பொருள் வழக்கிலும், வேற்றுமொழிச் சொற் பிரயோத்திலும் இவை யாழ்ப்பாணப் பிரதேசக் கிளைமொழியின் இயல்புகள் பலவற்றைப் பெற்றுள்ளன. சில நுண்ணிய வேறுபாடுகள் இப் பிரதேசக் கிளை மொழிகளிலே இல்லாமலில்லை. மன்னார்ப் பிரதேசத்தில் பெருமளவு முஸ்லிம் மக்கள் வாழ்வதாலே, அவர்களது பேச்சு வழக்கு, யாழ்ப்பாணப் பேச்சுவழக்கினின்றும் அப்பிரதேசப் பேச்சுவழக்கினை வேறுபடுத்துவதாக உள்ளது. மன்னார், முல்லைத்தீவுப் பிரதேசங்கள் மீன்பிடியையும், நெல் வேளாண்மையையும் அடிப்படைத் தொழில்களாகக் கொண்டிருப்பதனாலே, இத் தொழில்களுடன் தொடர்புடைய சொற்பிரயோகங்களே இப் பிரதேசக் கிளைமொழியிற் பெருமளவு ஆதிக்கஞ் செலுத்துகின்றன.

மன்னார் முல்லைத்தீவுப் பிரதேசங்களிலிருந்து குறிப்பிடற்குரிய அளவு மண்வாசனை இலக்கியங்கள் எழுந்ததாகக் கூறுதற்கில்லை. ஆ. பாலமனோகரனின் நிலைக்கிளி செங்கையாழியானின் காட்டாறு போன்ற நாவல்கள், முல்லைத்தீவு, வன்னிப்பிரதேசத்தினைக் களமாகக் கொண்டிருப்பினும் அவற்றிலுள்ள பேச்சுமொழி வழக்கினை யாழ்ப்பாணப் பேச்சுவழக்கினின்றும் வேறுபடுத்திக் கூற முடியாதுள்ளது. பேச்சுவழக்கிலே, இப்பிரதேசத்துக்கே தனித்துவமான சில சொற்கள் கையாளப்பட்டுவரினும், புனைகதைகளிலிடம் பெறும் பேச்சுவழக்குகளிலே அவ்வாறான சொற்கள் பயன்படுத்தப்படுவதனை அவதானிக்க முடியவில்லை.

கொழும்புப் பிரதேசக் கிளைமொழி
மேல்மாகாணத்திலே வாழும் தமிழ்பேசும் மக்களின் பேச்சுவழக்கே இங்கு கொழும்புப் பிரதேசக் கிளைமொழி எனக் குறிப்பிடப்படுகின்றது கொழும்புப் பிரதேசக் கிளைமொழி என்னும்போது, இப் பிரதேசத்திலே வாழும் மக்கள் யாவரும் ஒரேவகையான பேச்சுமொழியையே கையாளுகின்றனர் என்பது அர்த்தமாகாது. இங்கும், இடத்திற்கிடம் பேச்சுவழக்கிலே பல்வேறு நுண்ணியல்பு மாற்றங்களை நாம் அவதானிக்க முடிகிறது. கோட்டை, மருதானைப் பகுதியிலுள்ள பேச்சுவழக்கு ஒரு வகையாகவும், கொட்டாஞ்சேனை, முத்துவாள், நீர்கொழும்புப் பகுதி மக்களின் பேச்சுவழக்கு இன்னொரு வகையாகவும், பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெகிவளைப் பகுதி மக்களின் பேச்சுவழக்கு இவற்றினின்றும் வேறுபட்டதாகவும் காணப்படுகிறது. இவ்வாறு, பிரதேசப் பேச்சுமொழி இங்குப் பகுதிக்குப் பகுதி வேறுபடுவதற்கு இங்குள்ள தொழில் வசதி, பொருளாதார அமைப்பு ஆகியவையே காரணமாகும்.

கொழும்புப் பிரதேசம் யாழ்ப்பாணம், மட்டக்களப்புப் போன்று தனித்துவமான பொருளாதாரப் பண்பாட்டு இயல்புகளைக் கொண்டதன்று. ஆங்கிலேயராட்சியின் போது கொழும்பு இலங்கையின் தலைநகராக்கப்பட்டமை. இப்பகுதியிலே பல்லினப் பண்புகொண்ட ஒரு பொருளாதார அமைப்பினுக்கு வழிகோலிற்று. கொழும்புத் துறைமுகம், மக்களுக:குப் பெருமளவு வேலை வாய்ப்பினை நல்கியது. இத்துறைமுகத்திலே கூலிவேலை செய்யும் தொழிலாளர் பலரும் கொட்டாஞ்சேனையை அண்டிய பகுதிகளிலே குடியேறினர். பண்பாடு பழக்க வழக்கங்களிலே பெரிதும் பின்தங்கிய இக் கூலித் தொழிலாளரின் பேச்சுவழக்கிலே, பெருமளவு கொச்சை வழக்குகளை அவதானிக்கலாம். கோட்டை, மருதானைப் பகுதிகள் வர்த்தக நிலையங்களைப் பெருமளவினவாகக் கொண்டன. இப்பகுதிகளின் உயிர் நாடியான தொழில் வர்த்தகமாகும். இப்பகுதிகளிலே, பெருமளவு கடைச் சிப்பந்திகளும், அங்காடி வியாபரிகளும் வதிவதால், இவர்தம் பேச்சுவழக்கிலே அத்தொழிலுடன் சம்பந்தப்பட்ட சொற்களே பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன. பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெகிவளைப் பகுதிகளிலே அரசாங்க கூட்டுத்தாபன ஊழியர்கள் பெருமளவினராகக் காணப்படுகின்றனர். இதனால், அப்பகுதி மக்களின் பேச்சுவழக்கிலே மத்தியதர வர்க்கத்தினரின் சொற்பிரயோகங்களைக் காணக்கூடியதாக உள்ளது. கறுவாக்காடு செல்வர்களும், நாகரிக மாந்தரும் ஆடம்பர வாழ்க்கை நடாத்தும் ஒரு பகுதியாகும். இதனால், இப்பகுதி மக்கள் அவர்தம் நாகரிக இயல்புகளைப் புலப்படுத்துவதான ஒருவகைப் பேச்சுவழக்கினைக் கையாளுகின்றனர். முத்துவாள், நீர்கொழும்புப் பகுதி மக்கள், முஸ்லிம் மக்களுடனும், சிங்கள மக்களுடனும், இரண்டறக் கலந்து வாழ்கின்றனர். இதனால், இப்பகுதி மக்களின் பேச்சு வழக்கிலே அரபு, சிங்களச் சொற்கள் மிகுந்து காணப்படுகின்றன.

இவ்வாறு, கொழும்பின் ஒவ்வொருபகுதி மக்களினது பேச்சுவழக்கும் இயல்பிலே வேறுபட்டிருப்பினும், அப்பிரதேசத்திற்கே தனித்துவமான சில பண்புகளும் இல்லாமலில்லை. யாழ்ப்பாணம், மட்டக்களப்புப் பிரதேசங்களின் பேச்சுமொழியினின்றும், கொழும்புப் பிரதேசப் பேச்சு மொழி தனித்துவமான சில இயல்புகள் கொண்டதாகவே அமைந்துள்ளது.

இப்பிரதேசப் பேச்சுவழக்கில் பிரதான இயல்பாகக் கொள்ளக்கூடியது. ஏனைய பிரதேசக் கிளைமொழிகளிலும் பார்க்கச் செறிவான அந்நியமொழிச் சொற்பிரயோகமாகும். நவீனமயப்பட்ட தலைநகரிலே வாழ்கின்றமையால், இப்பகுதி மக்கள், அந் நவீனமயச் சூழலுக்கேற்றவாறு தங்கள் பண்பாடு, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை அமைத்துக்கொள்ள வேண்டியவரானார்கள். நவீன சாதனங்கள், கருத்துக்கள் ஆகியவற்றின் வருகையும் அவற்றின் பெருக்கமும் மக்கள் வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்தன. இவற்றினைப்பற்றிய கருத்துப் பரிமாற்றத்தின்போது அவை தொடர்பான நவீன சொற்களும் பயன்படுத்தப்படலாயின. அத்துடன், இப் பிரதேசத்திலே வாழும் தமிழ் மக்கள் முஸ்லிம், சிங்கள மக்களுடன் இணைந்து வாழவேண்டியிருப்பதும், சிங்கள மொழியே வர்த்தக மொழியாகவும், அரசகரும மொழியாகவும் இருப்பதும் இப் பிரதேச மக்கிளன் பேச்சு வழக்கிலே சிங்கள மொழியின் ஆதிக்கத்திற்கு வழிகோலுவனவாயின. எனவேதான், கொழும்புப் பிரதேசத் தமிழ்ப் பேச்சுமொழியின் தனி இயல்பாகப் போர்த்துக்கீச, ஒல்லாந்து, ஆங்கில, அரபு சிங்களமொழிக் கலப்பினை நாம் கொள்ளலாம். இவ்வாறு பல்வேறு மொழிச் சொற்கள் பேச்சுவழக்கிலும் எழுத்துவழக்கிலும் வந்து கலப்பினும் அவையாவும் பெயர்ச் சொற்களாகவே அமைந்திருப்பதையும் நாம் அவதானிக்கமுடிகிறது.

இவ்வாறு, சிறப்பியல்புகள் சிலவற்றைக் கொண்டிருப்பினும், கொழும்புப் பிரதேசக் கிளைமொழியின் தனியியல்புகளைத் தெளிவாகத் தரவல்ல புனைகதைகள் இன்றும் அருகியே காணப்படுகின்றன. தனியே கொழும்புப் பிரதேசத்தின் பண்பாட்டினையும், அப்பிரதேசப் பேச்சுத் தமிழையும் சித்திரிக்கும் புனைகதைகள் போதிய அளவு கிடைக்காமையினால், அப்பிரதேசப் பேச்சுமொழிச் சொற்கள் பற்றிய ஆய்வு இங்கு மேற்கொள்ளப்படவில்லை.

அடிக்குறிப்பு
1. ஈழத்துப் பிரதேசக் கிளைமொழி பற்றிய ஆய்வுகளின் விவரங்களுக்குப் பார்க்கவும் @ ளுயnஅரபயனயள (1983)

2. கணபதிப்பிள்ளை (1949-50)

3. தனஞ்செயராசசிங்கம் (1967-68)

4. நடராசா, மட்டுநகர் செ. (1949-50)

5. ளுயnஅரபயனயள (1983)

6. பாலசுந்தரம் (1967-68)

7. (அ) ளுயnஅரபயனயள (1983)
(ஆ) பாலசுந்தரம் (1967-68)
(இ) நவசோதி (1976)

8. மேலும் பல சொற்களுக்குரிய விவரங்களுக்குப் பார்க்கவும், சண்முகதாஸ், அ. (1980)

9. ஹம்ஸா, யோனகபுர. (1976)

10. ஹம்ஸா, எஸ். ஐ. எம். (1976)


4. ஈழத்துப் புனைகதையும்
பேச்சு வழக்கும் -
விமர்சனம்

கதைநிகழ்களமும் பேச்சுவழக்கும்
கதை நிகழ்களம் என்பது இங்குக் குறித்த ஒரு சமூகக் குழு வதியும் பகுதியைக் கருதுகின்றது. ஒவ்வொரு சமூகக் குழுவுக்கும் வௌ;வேறுபட்ட வதிவிடமும், ஒழுக்கமும், தொழில் முறையும் பண்பாடும் உண்டு. இக்காலப் புனைகதைகள் சித்திரிக்கும் சமூகக்குழு அல்லது கதைநிகழ்களத்தின் தன்;மைக்கேற்ப அவள்ளின் இயல்பு அமைந்து விடுவது போல, அவற்றிலிடம்பெறும் பேச்சு வழக்கும் வேறுபடுகின்றது. இதனாலேயே, எல்லாவகையான புனைகதைகளிலும் எல்லாப் பேச்சு வழக்குகளையும் வரம்பின்றிக் கையாள முடிவதில்லை. பிரதேசத்துப் பிரதேசம் பேச்சு மொழி வேறுபடுவதுபோல கதைநிகழ் களத்திற்கும் கதைப் பொருளுக்குமேற்பவும் பேச்சுவழக்குப் பிரயோகம் வேறுபட்டு இடம்பெறும்.

ஒரு களத்திலே உபயோகப்படுத்தப்படும் பேச்சுவழக்கினை இன்னொரு களத்திற் பயன்படுத்த முடிவதில்லை. மலைநாட்டுக் கிராமம் ஒன்றினைக் களமாகக் கொண்ட புனைகதையின் பேச்சு வழக்கும், விவசாயக் களம் ஒன்றினைச் சித்திரிக்கும் புனைகதையின் பேச்சுவழக்கும் ஒரே தன்மைத் தாய் இருக்க முடிவதில்லை, இருவகைப் பேச்சுவழக்கிலும் பயன்படுத்தப்படும் சொற்களும், சொற்பொருளும், சொற்களின் ஒலியமைப்பும், அவற்றின் ஒழுங்கும் வௌ;வேறானவையாகவே இருக்கும். மலைநாட்டுக் களத்தினைச் சித்திரிக்கின்ற புனைகதையின் பேச்சுவழக்கிலே அத்தொழிலுடன் சம்பந்தப்பட்ட சொற்பிரயோகங்களே மிகுந்திருக்கும். இச் சொற்பிரயோகங்கள், விவசாயக் களத்தினைச் சித்திரிக்கும் புனைகதைகளின் பேச்சு வழக்கிலே இடம்பெற முடிவதில்லை. மலைநாட்டுக் களத்தினையும், விவசாயக் களத்தினையும் சித்திரிக்கும் இருவேறு புனைகதைகளினின்றும் கீழே தரப்படும் உரையாடற் பகுதிகளினின்றும் இதனைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

“ஏன் வேலா கேட்டியா சேதியே? நம்ப கோப்பித் தோட்டத்திலே போனவருசம் பூச்சி விழுந்து நட்டம்னு இந்த வருசம் தேயிலைச்செடி நடப்போறாங்களாம். புதுக்காடு வெட்டறதிலேயும் தேயிலைதான் போடப் போறாங்களாம்.”

“அவனுங்க எக்கேடாவது கெட்டு நாசமாப் போகட்டும். நமக்கு ஒழுங்காகக் கூலி கொடுத்தாப் பத்தாதா?”

“அப்புறம் புதுசா ஒரு துரை வரப்போறான்னு சீமைக்கு எழுதியிருக்கிதாக சின்னக்கணக்கன் ஆபீஸிலே சொன்னானாம்.”

“அய்யா! கீ மலை வழியா நாட்டுக்கு ஒரு பாதை வச்சிருக்கான். அந்த வழியாதான் கூட்டியாரான்னு சொல்லுறாங்க.”

மேற்குறிப்பிட்ட உரையாடற் பகுதி. கோகிலம் சுப்பையா எழுதிய தூரத்துப் பச்சை (பக். 68-69) என்ற நாவலினின்றும் கொடுக்கப்பட்டதாகும். இவ்வுரையாடற் பகுதியிலே இடம்பெறும் கோப்பித்தோட்டம், தேயிலைச் செடி, துரை, சின்னக்கணக்கன், கீ மலை போன்ற சொற்கள் கதைநிகழ் பிரதேசத்தினை இனங்காட்டுவனவாகும். சேதி, நம்ப, நட்டம்னு, அவனுங்க, பத்தாது சொல்றாங்க, சீமை, வந்நிருக்கான், வழியாதான், கூட்டியாரான்னு போன்ற சொற்கள் கதைநிகழ்களத்து மாந்தரை இனங்காட்டுவனவாகும். இவ்வாறு, மலைநாட்டுக் களத்தினையும், மாந்தரையும், அவர் செய்கின்ற தொழிலையும் சித்திரிக்கும் புனைகதை ஒன்றின் பேச்சுவழக்கினை அக் களத்தினைத் தவிர்ந்த வேறெக் களத்திற்கும் நாம் பொருத்திப் பார்ப்பது இயலாததாகும்.

பின்வரும் உரையாடற் பகுதி செங்கை ஆழியான் எழுதிய காட்டாறு (பக். 182) என்ற நாவலினின்றும் தரப்படுகின்றது. இந்நாவல் விவசாயக் களம் ஒன்றினைச் சித்திரிப்பதாகும்.

“இப்ப பெய்யிற மழை காணுமே வாணன் குளம் நிரம்ப?”

“விசரி…… விசரி…… வாணன் குளத்தின்ற நிலம் நனையக் காணாது அதனாலதான் இந்தத் தடவை புழுதியில விதைக்கிறதெண்டு பயிர்ச்செய்கைக் கூட்டத்தில் முடிவெடுத்திருக்கிறம் … எண்டாலும் சில பங்காளர் சேத்து விதைப்புச் செய்யிறதெண்டு இருக்கினம் …… அதனால றோட்டிற்குக் கிழக்கில் இருக்கிற காரைப்பிட்டி வயல்காரர் புழுதிவிதைக்கிறதெண்டும் றோட்டிற்கு மேற்கால இருக்கிற கமக்காரர் மயில்பீட்டிக் கமக்காரர் சேத்துவிதைப்புச் செய்யிறதெண்டும் கூட்டத்தில முடிவெடுத்திருக்கினம். எங்களுக்குக் காரைப்பிட்டி வயல்வெளியில் ஒரு ஏக்கர் இருக்குது … புழுதியிலும் விதைத்து சேத்திலும் விதைக்கவேணும்.”

இவ்வுரையாடற் பகுதியிலே வரும் மழை. குளம், வயல்வெளி, புழுதி விதைப்பு சேத்து விதைப்பு, பயிர்ச் செய்கைக் குழு என்பன விவசாயக் களத்தினுக்குப் பிரத்தியேகமான சொற்களாகும். இச்சொற்களை மட்டும் வைத்துக்கொண்டு இக் கதைநிகழ்களம் ஒரு விவசாயக் களமாக இருக்க வேண்டும் என்பதனை நாம் ஊகித்துக் கொள்ளலாம் காணுமே. குளத்தின்ர, இருக்கினம், மேற்கால, செய்யிறதெண்டு போன்ற சொற்கள் இக் கதைக்கள மாந்தர் யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழோடொட்டிய வன்னிப் பேச்சுத் தமிழைப் பேசுபவர் என இனங்காட்டுகின்றன.


கதைப்பொருளும் பேச்சுவழக்கும்
களத்திற்குக் களம் பேச்சுவழக்கு வேறுபடுவது போலப் பொருளுக்கேற்பவும் அது வேறுபடுகின்றது. ஒரு களத்திலேயே இருவேறு பொருள்களை அடிப்படையாகக் கொண்டெழும் கதைகளும் உண்டு. அவ்வாறு, இரு வேறு பொருள்களை அடிப்படையாகக் கொண்டெழும் புனைகதைகளின் பேச்சுவழக்கும், சொற்பிரயோகங்களும் பெரும்பாலும் வேறுவேறான தன்மை கொண்டனவாய் அமைந்திருக்கும்.

“நான் துரதிர்ஷ்டம் பிடித்தவன் நாகம். சண்முகத்தான் சொன்னதிலே என்ன பிழை? அவர் ஏன் இனி இங்கு வரப்போகிறார். அவர் வரமாட்டார் ……. நாகம் என் அண்ணன் சூசை இருக்குமட்டும் செமியோன் வரவேமாட்டார். தேடிவந்த அதிர்ஷ்டத்தைக் கைதவறவிட்டேன். மீண்டும் வரவாடி போகுது நாகம்? அவர் ஒரு மானஸ்தர் ………… நான் கோழை…… தாய் தேப்பனுக்கும், அண்ணனிற்கும் பயந்த ஒரு கோழை… கோழைகளுக்கு ஆசைகள் இருக்கக்கூடாதடி.”

மேற்குறிப்பிட்ட உரையாடல், செங்கை ஆழியான் எழுதிய வாடைக்காற்று (பக். 7) என்ற நாவலினின்றும் தரப்பட்டதாகும். இந் நாவல் மீனவக் களம் ஒன்றினைச் சித்திரிக்கின்றது. தனது காதலனின் பிரிவாற்றாது துன்புறும் ஒரு கன்னிப்பெண் கழிவிரக்கத்துடன் தன் தோழிக்கு மேற்கண்டவாறு கூறுகின்றாள். இவ்வுரையாடற் பகுதியானது, மீனவக் களத்தினை எவ்வகையிலும் சித்திரிப்பதாக அமையவில்லை. இவ்வகை உரையாடல் மீனவக் களத்தில் மட்டுமன்றி வேறெக் களத்திலுங்கூட இடம்பெற முடியும். பொதுவாகக், காதல் உணர்வினைச் சித்திரிக்கும் புனைகதைகளின் பேச்சுவழக்கானது, எக்களத்தினை அடிப்படையாகக் கொண்டிருப்பினும் அக்களத்தின் சிறப்பு வழக்கினைப் புலப்படுத்துவதில்லை. பொதுவான ஒரு பேச்சுவழக்கினையே காதலைப் பொருளாகக் கொண்டெழும் புனை கதைகளிலே நாம் காணக்கூடியதாக உள்ளது.

இங்கு தரப்படும் இன்னொரு உரையாடற்பகுதி, கே. டானியல் எழுதிய போராளிகள் காத்திருக்கின்றனர் (பக். 84) என்ற நாவலிலே இடம்பெறுவதாகும். இந்நாவல் மீனவக் களம் ஒன்றினைச் சித்திரிக்கின்றது.

“எட பொடி கருங்கண்ணியடா பட்டிருக்கு@ கூட்டமா வந்திருக்கு. கடிப்பு வலையை எடு.”

“மச்சம் மீளப்போகுது இறங்கடா இறங்கு” என்று கூறிவிட்டு கிழவன் பட்டிவலைக்குள் குதித்துவிட்டான். பட்டிக்குள் கடிப்பு வலையைப் போட்டு வளைத்து நிமிர்த்தியபோது அப்பாடி எத்தனை கருங்கண்ணிப் பாரைகள்!”

இவ்வுரையாடற் பகுதியானது, கதைநிகழ்களம் மீனவக் களம் என்பதனைத் தெளிவாக உணர்த்திவிடுகின்றது. மீன்பிடித் தொழிலைப் பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட இப் புனைகதையின் மேற் குறிப்பிடப்பட்ட பகுதி, தொழில் நுணுக்கங்களை எடுத்துக் காட்டுகின்றது. தொழில் நுணுக்கங்களைச் சித்திரிக்கும்போது, அத் தொழிலோடு சம்பந்தப்பட்ட சொற்களையும் கையாள்வது தவிர்க்க வியலாததாகிவிடுகின்றது. எனவேதான், இவ்வுரையாடற் பகுதியிலே கருங்கண்ணி படுதல், கடிப்புவரை, பட்டிவலை, மச்சம்மீளல் போன்ற அக்களத்தினுக்கே பிரத்தியேகமான சொற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மேலே குறிப்பிடப்பட்ட இரு உரையாடற் பகுதிகளும், மீனவக் களத்தினை அடிப்படையாகக் கொண்டெழுந்த புனைகதைகளினின்றும் தரப்பட்டவை. ஆனால், இரண்டினது பேச்சு வழக்கும் சொற்பிரயோகமும் வேறுபட்டிருப்பதனை நாமவதானிக்கலாம். முன்னையது காதலைப் பொருளாகக் கொண்ட உரையாடல் அது எக்களத்தினுக்கும் பொதுவான ஓர் உரையாடல், பின்னையது தொழிலைப் பொருளாகக் கொண்டது. அது, குறிப்பிட்ட அத் தொழிலுக்கும் களத்திற்கும் உரிய சிறப்பு வழக்கினையும் சொற்களையுமே கொண்டது. இவ்வுரையாடற் பகுதி இரண்டும், பொருளுக்கேற்பச் சொல்லும், பேச்சுவழக்கும் வேறுபடும் என்பதனை நன்கு விளக்குவனவாகும்.

புனைகதை வகையும் பேச்சுவழக்கும்
ஈழத்தின் இக்காலப் புனைகதை இலக்கியங்களை, அவற்றின் பொருளை அடிப்படையாகக் கொண்டு பின்வருமாறு வகுக்கலாம்.

(அ) துப்பறியும் புனைகதைகள்.

(ஆ) வரலாற்றுப் புனைகதைகள்.

(இ) மேல்மட்ட உணர்வுப் புனைகதைகள்.

(ஈ) மிகை உணர்வுப் புனைகதைகள்.

(உ) மண்வாசனைப் புனைகதைகள்.

இப் புனைகதை வகைகள் ஒவ்வொன்றும், பொருளிலே வேறுபட்டிருப்பதுபோல நடை, பேச்சுவழக்கு ஆகியவற்றிலும் வௌ;வேறியல்புடையனவாகக் காணப்படுகின்றன. இவற்றிலே, முன்னிரண்டுவகைப் புனைகதைகளிலும் சாதாரண மக்களின் பேச்சுவழக்கு இடம்பெறுவதில்லை. இவ்விருவகைப் புனைகதைகளிலும் இடம்பெறும் உரைநடையினை உரையாடல், நடை, விவரண நடையென பிரித்து நோக்கவேண்டிய அவசியமேற்படுவதில்லை. ஏனெனில், இவ்வகைப் புனைகதைகளிலே விவரணமன்றி உரையாடலும் செந்தமிழ்ப் புனைகதைகளிலே விவரணமன்றி உரையாடலும் செந்தமிழ்ப் பாங்காகவே அமைந்துவிடுகின்றது. அத்துடன், சாதாரண மக்கள் உபயோகிக்கும் சொற்களோ, சொற்றொடர்களோ. மரபு வழக்குகளோ, பழமொழிகளோ பயன்படுத்தப்படுவதில்லை விவரணப் பாங்காகவே பேச்சுவழக்கும் அமைந்துவிடுகிறது. ஆனால், பிற்கூறப்பட்ட மூன்றுவகைப் புனைகதைகளும் பொருளிலே வேறுபடுவனபோல நடை, பேச்சுவழக்கு ஆகியவற்றிலும் முன்னிருவகைப் புனைகதைகளினின்றும் வேறுபட்டவையாகும். இம் மூவகைக் கதைகளிலும், அடிப்படையிலே ஒரே வகைத்தான பேச்சு வழக்கே கையாளப்படுகின்றது. ஆசிரியர் கூற்றும் விவரணங்களும் செந்தமிழிலே அமையப் பாத்திர உரையாடல்கள் மட்டும் பேச்சுவழக்கிலே அமைகின்றன. சாதாரணமாக, மக்கள் பயன்படுத்துஞ் சொற்களம், சொல்லமைதிகளும் உரையாடல்களிலே பயன்படுத்தப்படுகின்றன. இம் மூவகைப் புனைகதைகளிலும் அடிப்படையிற் பேச்சு வழக்கே கையாளப்படுவதாயினும், ஒவ்வொரு வகையிலும் அவற்றின் இயல்பும், பண்பும் வேறுபட்டிருப்பதனை நாம் காணமுடிகிறது. எனினும் மேற்குறிப்பிட்ட ஐவகைப் புனைகதைகளிலே இடம்பெறும் உரையாடற் பாங்கின் பண்புகள் பொதுவாகவும், அவ்வைந்து வகைகளுட் பின் மூன்றிலும் இடம்பெறும் பேச்சுவழக்கின் பண்புகள் சிறப்பாகவும் இவ்வியலிலே ஆராயப்படுகின்றன.

(அ) துப்பறியும் புனைகதைகளின் உரையாடற் பாங்கு
துப்பறியும் புனைகதைகளின் உரையாடல் செந்தமிழ்ப் பாங்கானது என்பதை மேலே கண்டோம். ஆனால், அது வரலாற்றுப் புனைகதைகளின் பேச்சுவழக்கினை விடப் பல்வேறு அம்சங்களிலும் வேறுபட்டதாகக் காணப்படுகின்றது.

“இன்ஸ்பெக்டர், சுகி, சி.என்.எஸ். ஹோஸ்டலில் எந்த அறையில் தங்கி இருந்தாள் கூறுவீர்களா?

“22ஆம் அறை.”

“உங்களுக்கு என்னைப்பற்றித் தகவல் கொடுத்தவரின் பெயர் என்ன?

“மாலா – மிஸ் மாலா ஆறுமுகம்.”

“எந்த அறை?”

“இருபத்தி ஓராம் அறை”

“சுகி இறந்ததுபற்றி அவளுக்குத் தெரியுமா?”

“தெரியும்”

“அப்போ உடலை அடையாளம் காண அவளை ஏன் அழைக்கவில்லை?”

“உங்கள் தங்கையின் உடல் கிடந்த நிலையை அவர் கண்டால் மயக்கம்போட்டு விழுந்துவிடக்கூடும்.”

“ஒகே இன்ஸ்பெக்டர்…… மிக்க நன்றி”?

மேலே தரப்பட்டது, ஷர்மிளா எழுதிய அன்பே என் ஆருயிரே (பக்.9) என்ற துப்பறியும் நாவலிலிருந்து எடுக்கப்பட்ட உரையாடற் பகுதியாகும். இவ்வகைப் புனைகதைகளிலே உரையாடல், நேரடியான கருத்துப் பரிமாற்றத்தைச் செய்வதாயும், விரைவுத்தன்மை கொண்டதாயும், சுருங்கிய வாக்கியங்களை உடையதாயும் அமைந்து விடுகிறது. இரண்டொரு சொற்களின் சேர்க்கையிலேயே வசனம் ஒன்று அமைந்து விடுவதுடன் கருத்தும் புலப்படுத்தப்படுவதனைக் காணலாம். இவ்வாறான உரையாடல் துப்பறியும் நாவல்களுக்கே பிரத்தியேகமானதாகும். உரையாடல் செந்தமிழ் நடையிலேயே அமைந்தபோதும் ஆங்காங்கே சில பேச்சு வழக்குச் சொற்களும் இடம் பெற்றுவிடுகின்றன. உதாரணமாக, தப்பிப்பது, மயக்கம் போட்டு ஆகிய பேச்சுவழக்கிற்குரிய தொடர்கள் மேற்படி உரையாடலிலே இடம்பெற்றுள்ளதை நாமவதானிக்கலாம்.

(ஆ) வரலாற்றுப் புனைகதைகளின்
உரையாடற் பாங்கு
ஈழத்தைப் பொறுத்த அளவிலே, வரலாற்றுப் புனைகதைகள், ஏனைய கதைவகைகள் விருத்தி;யடைந்த அளவுக்கு இன்னும் விருத்தியடையவில்லை என்றே கூறவேண்டும். ஆரம்பகால ஈதை;துச் சிறுகதைகள் பலவும், வரலாற்றுச் சம்பவங்களைக் கதைப் பொருளாகக் கொண்டவையே. ஆனால், தேசிய இலக்கியம், மண்வாசனை இலக்கியம் போன்ற கோஷங்கள் ஈழத்திலே தலைதூக்கியதும் அவை இரண்டாந்தரப் புனைகதைகளாகக் கொள்ளப்படலாயின. இதனாலே, 1960க்குப் பின்னர், இவ்வகைப் புனைகதைகளின் தோற்றம் அருகியே காணப்பட்டது. மிக நீண்டகால இடைவெளியின் பின்னர் வ.அ. இராசரத்தினம் எழுதிய கிரௌஞ்சப் பறவைகள் என்ற சரித்திர நவீனமே அண்மைக்காலத்தில் வெளிவந்துள்ளது. இச் சரித்திர நவீனத்தினின்றும் காட்டப்படும் பின்வரும் உரையாடற் பகுதி (பக். 81) வரலாற்றுப் புனைகதையின் உரையாடற் பண்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

“உங்களுக்கு ராமாயணக் கதை தெரியுமா?”

“தெரியாமலென்ன? காட்டிலே இன்பமாகக் குலவிக்கொண்டிருந்த கிரௌஞ்சப் பட்சிகளில் ஒன்றை வேடன் ஒருவன் அம்பெய்து கொன்றான். ஆணை இழந்த சோகத்தில் பெண் பறவை கூவியழுதது. அப்பெண் பறவையின் சோகக் குரல் கொடுத்த உணர்வின் உந்துதலால் முற்றும் முறந்த மகா முனிவனான வால்மீகி, மனிதமனத்தின் சந்துபொந்துகளிலெல்லாம் பிரவாகித்துப் பாய்ந்து உணர்வூட்ட வல்லதாய் எழுதிய அந்த அமர காவியத்தை நான் ரசித்துப் படித்திருக்கிறேன்.”

“அக் காவியத்தை நான் தொட்டுப் பார்த்தது கூட இல்லை. ஆனால், அக் காவிய நாயகியான சீதை தன் நாயகனோடு காட்டுக்குச் சென்றாள் என்பது மட்டும் எனக்குத் தெரியும். வாருங்கள் இப்போதே போகலாம்.

“எங்கே பிரபா?”

“நீங்கள் போகவேண்டிய இடத்துக்குத்தான்.”

“இன்னமும் அதற்குக் காலம் வரவில்லை,”

“அப்படியானால் இங்கேயே இருந்துவிடலாம்.”

வரலாற்றுப் புனைகதைகள் அரசவமிசத்தையும், அவர் தம் வரலாற்று நிகழ்ச்சிகளையும் சித்திரிப்பதாலே, அவற்றின் உரையாடல் சாதாரண பேச்சுவழக்காகவன்றி நாடகப் பாணியிலே அமைந்து விடுவதனை மேற்காட்டப்பட்ட உரையாடற்பகுதி தெளிவாக விளக்குகின்றது. இவ்வுரையாடற் பகுதியிலே இலக்கணசுத்தமாகவே கதாபாத்திரங்கள் பேசுகின்றன. புனைகதையின் நடை, காவியப்பாங்கானதாக இருப்பது போலவே உரையாடலும் கவர்ச்சிகரமானதாகக் காவிய நடையிலே அமைந்துவிடுகிறது.

இவ்வகை உரையாடல்களிலே இன்னொரு முக்கிய அம்சத்தையும் நாம் அவதானிக்கலாம். ஆசிரியர், பாத்திர உரையாடல்களைச் செந்தமிழிலே அமைக்கவேண்டுமெனப் பிரக்ஞைபூர்வமாக முயன்றிருப்பினும், நவீனம் எழுதப்பட்ட காலத்திலே வழங்கப்படும் பேச்சுமொழிச் சொற்களும், மரபுத் தொடர்களும் உரையாடல்களிலே இடம்பெற்று விடுகின்றன. மேற்காட்டப்பட்ட உரையாடற் பகுதியிலே சந்துபொந்து, ரசித்து ஆகிய இக்காலப் பேச்சுவழக்குச் சொற்கள் இடம்பெற்றுள்ளமையைக் காண்க.

(இ) மேல்மட்ட உணர்வுப் புனைகதைகளிற்
பேச்சுவழக்கு.
உயர்வர்க்க சிந்தனையுடைய கதாபாத்திரங்கன் நடவடிக்கைகளையும், அவர்தம் சிந்தனை வெளிப்பாடுகளையும் சித்திரிக்கும் கதைகளே இங்கு மேல்மட்ட உணர்வுப் புனைகதைகள் எனப்படுகின்றன. உயர்வர்க்க சிந்தனை என்பது, மனித அடிப்படைத் தேவைகளுக்கு அப்பாற்பட்ட விடயங்கள் பற்றிய சிந்தனைகளைக் குறிக்கின்றது. பிறழ்வு நிலையிலான காதல், பாலியல் உணர்வுச் சிக்கல்கள், கலை, இலக்கியம், களியாட்டுக்கள், ஆடம்பரங்கள், நவீன சாதனங்கள், பொழுதுபோக்குகள் பற்றிய சிந்தனைகளே மனித அடிப்படைத் தேவைகட்கு அப்பாற்பட்ட சிந்தனைகள் தாக்கத்தினாலே, இடருண்டு தவிக்கும் மாந்தர் பலதரத்தினராயும் உளர். சாதாரண ஏழை முதல் கோடீஸ்வரன் வரை மனதின் வெறியாட்டினாலே அல்லற்பட்டு அழுந்துகின்றனர். எனவே, இம் மேல்மட்ட உணர்வுப் புனைகதைகளிலே இடம்பெறும் கதாபாத்திரங்களும், பல்வேறு நிலைகளில் உள்ளனவாகக் காணப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் தத்தமது இயல்புக்கேற்ப இயங்கவும் உரையாடவுஞ் செய்கின்றன. இதனாலே, இவ்வகைப் புனைகதைகளின் பேச்சுவழக்கு. இவ்வாறுதான் அமைந்திருக்கும் எனத் திட்டவட்டமாகக் கூறுவதற்கில்லை. உயர் தகுதிகொண்டவோர் பாத்திரம் செந்தமிழிலேயே உரையாடுதல்கூடும்@ சாதாரண மகன் ஒருவன் சாதாரண பேச்சுவழக்கையே கையாளவுங்கூடும்.

ஆனாலும், இவ்வகைப் புனைகதைகளிற் பேச்சுவழக்கானது. நாம் இனங்கண்டு கொள்ளுமளவுக்குச் சாதாரண பேச்சு வழக்கினை ஒத்ததாயே காணப்படுகின்றது. சாதாரண பேச்சுவழக்கு இவ்வகைக் கதைகளிலே திரிந்தும், சிதைந்தும் வேறுபட்டும் கையாளப்படுகின்றது.

“சீ… போடா மூதேவி! செய்யிறதையும் செய்து போட்டு. சமாதானப்படுத்த வந்திட்டார் நீதாண்டா இதுக்கெல்லாம் தூண்டுகோல். நீ வளந்திட்டாபாரு. இனி நான் என்னத்துக்கு இந்தக் கிழட்டுக்கட்ட எப்ப சாகுதெண்டு பார்த்திற்று இருக்கயன் நான். சாகத்தாண்டாபோறன்… இனி நான் எப்பிடி நாலு பேர்ர கண்ணில முழிச்சிச் சீவிப்பன்?”

“அப்பா! பணக்காரன் உத்தியோகமுள்ளவன் சாதிக்காரன் என்றெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தா பெண்களெல்லாம் அப்படியப்படியே இருக்க வேண்டியது தான். எல்லோரும் பணத்தையும் பெரிய உத்தியோகத்தையும் விரும்பினா, ஏழைகளை… சிறிய உத்தியோகத்தினை மணக்கிறது ஆரப்பா? வரட்டுக் கௌரவம் ஒன்றையே பார்த்துக்கொண்டிருந்தா இருக்கிற பெண்களெல்லாம் கன்னிகளாகவே சாகவேண்டியது தான்.”

மேற்குறிப்பிடப்பட்ட உரையாடற் பகுதி மண்டூர் அசோகா எழுதிய கொன்றைப்பூக்கள் (பக். 140) என்ற சிறுகதைத் தொகுப்பினின்றும் தரப்பட்டதாகும். இவ்வுரையாடல் இடம்பெறும் ‘இலட்சியம்’ என்ற சிறுகதை, ஒரு கௌரவப் பிரச்சினையைச் சித்திரிக்கின்றது. கௌரவம் உயர் வர்க்கத்தினரின் அசைக்கமுடியாத சொத்தாகும். இவ்வாறு உயர்வர்க்க சிந்தனையின் வெளிப்பாட்டின்போது, பேச்சு மொழியானது இயல்பான நிலையினின்றும் திரிந்து விடுகின்றது. இவ்வுரையாடற் பகுதியிலே தந்தையின் பேச்சுவழக்கு ஓரளவிற்குச் சாதாரண பேச்சு வழக்கினை ஒத்ததாகக் காணப்படுகின்றது. சொற்களும் அவற்றின் ஒலியமைப்பும் சாதாரண பேச்சுவழக்குத் தன்மை கொண்டனவாயுள்ளன. ஆனால், மகன் பேசும்போது இயல்பிகந்த பேச்சுவழக்கினையே கையாளுகின்றான். அவனது பேச்சு வழக்கிலே இடம்பெறும் என்றெல்லாம். ஒன்றையே, அப்படியப்பிடியே, ஆகிய சொற்கள் முறையே எண்டெல்லாம், ஒண்டையே, அப்படிஅப்பிடியே எனவே இடம் பெற்றிருக்கவேண்டும். அத்துடன் உரையாடும் பாணியும் சாதாரண பேச்சு வழக்கைவிட வேறுபட்டுக் காணப்படுகின்றது.

மேல்மட்ட உணர்வுப் புனைகதைகளின் இன்னொரு சிறப்பம்சம், அவற்றின் கதாபாத்திரங்கள் புத்திபூர்வமாய் (ஐவெநடடநஉவரயட) இயங்குவனவாக அமைவதாகும். சமூகத்தின் உயர்வர்க்க உணர்வுகளைத் தமது அறிவாற்றலினாலும், மதிநுட்பத்தினாலும் அளந்தறிந்து அவற்றுக்கேற்ப இயங்குவனவாகவே இவ்வகைக் கதைகளிலே இடம்பெறும் கதாபாத்திரங்கள் அமைகின்றன. எனவே இவர்களது மதிநுட்பத்தினைப் புலப்படுத்தும் பாங்கிலேயே பேச்சுவழக்கும் கையாளப்பட வேண்டி உள்ளது. இதனாலே, இவ்வகைப் புனைகதைகளிற் பேச்சுவழக்கானது இயல்பாகவன்றிச் செந்தமிழோடு இயைபான வகையிலே அமைந்து விடுகிறது. பின்வரும் உரையாடற் பகுதி, ஐ. சண்முகன் எழுதிய “தடங்கள்” (கோடுகளும் கோலங்களும், பக். 47) என்ற சிறுகதையிலே இடம் பெறுவதாகும்.

“கலைகளின் பிறப்பின் அடிப்படை அழகு இயல்புகள்தான். அழகுகளின் வசீகரங்களே மனித மனங்களை கிறுகிறுக்கச்செய்து, உணர்ச்சிவசப்படவைத்து, அவனை, கலைக்கோலங்களை ஆக்கத் தூண்டுகின்றது. இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

“அழகுதான் கலையின் அடிப்படை என்ற வாதத்தை ஏற்கமுடியாது. மனிதமனத்தின் உணர்ச்சிக் குமுறல்களும், கொந்தளிப்புகளும், சோகங்களும்கூட உயர்ந்த படைப்புக்களின் கருப்பொருளாகின்றதுதானே!”

எனக் கலையின் மூலாதாரம் எது என்பதுபற்றி இரு கதாபாத்திரங்கள் செந்தமிழில் உரையாடுவது, இவ்வகைக் கதைகளின் பேச்சுவழக்கிற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

(ஈ) மிகை உணர்வுப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
மண்வாசனை இலக்கியச் சிருஷ்டிகர்த்தாக்கள் யாவரும், இலக்கியத்தின் மூலாதாரம் மக்கள் வாழ்க்கை என்பதை ஏற்றுக்கொண்டோராவர். ஆனாலும், இவர்கள் யாவரும் தத்தமது இயல்புக்கும், ஆளுமைக்கும் ஏற்பவே மக்கள் வாழ்க்கைமுறையை நோக்கினர். சிலர், மக்கள் வாழ்க்கையையும் அவர்தம் பிரச்சினைகளையும் தூர நின்று மூன்றாமவராகவே அவதானித்தார். இன்னும் சிலர், மக்கள் வாழ்க்கையையும் அவர்தம் பிரச்சினைகளையும் கற்பனையிலேயே காணலாயினர். தொலைநின்று மக்கள் வாழ்க்கையை நோக்கியோருக்கு, வாழ்க்கையின் உள்ளாந்த பிரச்சினைகள் தெளிவாக முடியவில்லை@ அப் பிரச்சினைகளின் அழகியல்புகளையும், விகாரங்களையும் அவர்களாலே உய்த்துணர முடியவில்லை. இதனால், அவர்தம் புனைகதைகளிலே வாழ்க்கையின் இயல்புகளைத் தெளிவாகத் தரிசிக்க முடியவில்லை. இவ்வாறு, வாழ்க்கையின் உள்ளர்த்தங்களை விளங்கிக்கொள்ள முடியாத இவர்தம் புனைகதைகளிலே, மக்களின் பேச்சுவழக்கும் இயல்பாக அமையமுடியாது போயிற்று.

மக்களோடு இரண்டறக் கலந்து, அவர்தம் இயல்புகளை அநுபவித்து உணரமுடியாது, கற்பனை உலகிலே மக்கள் வாழ்க்கையை அவதானித்த சில முற்போக்கு எழுத்தாளர்கள், கற்பனையிலேயே மக்களின் பிரச்சினைகளைச் சித்திரிக்கலாயினர்@ தீர்வும் காணலாயினர். இதனாலே, இவ்வகைப் புனைகதைகள் இயல்பிகந்தனவாயும் மக்களின் பிரச்சினைகளை மிகைப்படுத்திக் காட்டுவனவாயும், யதார்த்த மற்ற முடிபுகளை முன்வைப்பனவாயும் அமைந்துவிடுகின்றன. பேச்சு வழக்கும் இவ்வகைக் கதைகளிலே மிகை உணர்ச்சிப் பாங்கான நடையிலே அமைந்து விடுகிறது.

டொமினிக் ஜீவாவின் “தண்ணீரும் கண்ணீரும்” (தண்ணீரும் கண்ணீரும் பக். 57-58) என்ற சிறுகதையிலிடம்பெறும் உரையாடலை இவ்வகைப் பேச்சுவழக்கினுக்குத் தக்க சான்றாகக் காட்டலாம். இக் கதைநிகi; களம், யாழ்ப்பாணக் கரையோரக் கிராமமான குருநகர். சாமி நாதன், உயர்சாதியைச் சேர்ந்தவன். பஸ்கொண்டக்ரர் பண்டாரி, கீழ்சாதி@ ரிக்ஷாத் தொழிலாளி, பண்டாரி, ஒருநாள் தண்ணீர் விடாய் தாங்கமாட்டாது அம்மன் கோவில் நல்லதண்ணீர்க் கிணற்றிலே தண்ணீர் அள்ளினான். சாமிநாதன் ஊரைக்கூட்டி அவனை அடித்து நொருக்கினான். சில நாட்களின் பின்னர், சாமிநாதன் பஸ் விபத்திலே சிக்குண்டு உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்தபோது, பண்டாரியே அவனை வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்று தனது இரத்தத்தையும் கொடுத்து அவனது உயிரைக் காப்பாற்றுகிறான். கண்விழித்து, நடந்ததை அறிந்ததும் சாமிநாதன் திருந்திவிடுகிறான். அவன் பண்டாரியைக் கண்டதும்,

“சொல்லு பண்டாரி, ஏன் எனக்கு உயிர்ப் பிச்சை தந்தாய்? நான் கொடியவன் தீயவன், உன்னை மிருகமாக அடித்தேன்@ நீ இருந்த வீட்டை எரித்தேன். நான் நாயினும் கடையன்.”

எனச் செந்தமிழிலே வினவுகிறான். அதற்குப் பண்டாரி

“நானும் மனிதன், நீயும் மனிதன். நீயும் நானும் தொழிலாளிகள்”

என இலக்கண சுத்தமான தமிழிலே பதிலளிக்கிறான். குருநகரைச் சேர்ந்த இரண்டு பாத்திரங்கள் இலக்கண சுத்தியாகவும், கருத்தாளமாகவும் இங்கு உரையாடுகின்றன. ஆனால், முதலிலே,

“நேசம்மா, ரத்தமில்லாட்டி என்ர ரத்தத்தைத் தாறன் குடுக்கிறியளா அம்மா”

எனச் சாதாரண பேச்சுத் தமிழிலே கேட்கும் பண்டாரியைப் பின்னர் செந்தமிழிலே தத்துவம் பேச வைக்கிறார் ஆசிரியர். வாழ்வின் நடப்பியல்புகளை மாற்றியமைக்க Nவுண்டும் என்று மனோவேகத்தினாலே ஏற்படும் மிகை உணர்ச்சியானது, புனைகதையிலே இடம்பெறும் ஒவ்வோரிடத்தும், அதன் பேச்சுவகை;கும் இயல்பிகந்து செல்கின்றது@ செயற்கையானதாக அமைந்து விடுகிறது. இவ்வாறான பேச்சுவழக்கினை, மிகை உணர்வுப் பாங்கா புனைகதைகளிலே நாம் பரக்கக் காணலாம்.

கீழ்மட்ட மக்கள் வாழ்க்கையையே இலக்கியப் பொருளாக வரித்துக்கொண்டவரும், அவர்களின் கொச்சைப் பேச்சு வழக்கே புனைகதைகளில் இடம்பெற வேண்டும் என வாதாடியதுடன், அவ்வாறான மண்வாசனைப் பாங்கான புனைகதைகள் பலவற்றைச் சிருஷ்டித்தவருமான செ. கதிர்காமநாதன்1 எழுதிய சிறுகதைகளுள் ஒன்று ஒரே குடிசைகளைச் சேர்ந்தவர்கள் என்பது.

தாழ்வுற்று வறுமை மிஞ்சி நைந்துபோன ஒரு வண்ணாரக் கிராமம்@ எப்போதோ வாழ்வின் ‘இடுக்கிப் பிடியைத் தாங்கிக்கொள்ள முடியாது அக் கிராமத்தை விட்டு ஓடிப்போனான் சிதம்பரி என்ற சிறுவன். அவன், மலைநாட்டிலே லோண்டறி ஒன்றிலே வேலைசெய்தான். அரசியல், பொருளாதார, சமூக அறிவியலிலே அவன் அங்கு ‘புடம்போடப்பட்டான்’2. ஒருநாள் திடீரென்று அவன் தனது கிராமத்துக்கு வந்தான். தனது சகதொழிலாளர், உறவினர்க்கு ‘ஞானோபதோசஞ்’ செய்தான். அக் கிராமத்திலே, திடீரெனப் புரட்சிகரமான மாற்றங்கள் உருவாயின. சாதாரணமாக அடிமைப்பட்டுக் கிடந்த கூனனும் நிமிர்ந்து நின்றான்@ வேளாள் ‘நயினார்’ மாருடன் நியாயம் கதைத்தான்.

“கிழவன்! நீ சொல்லுகிறது சரி! நாங்கள் குடிமையாக இருக்கமுடியாது எண்டு கூறி உயர்ந்த வர்க்கத்துக்கு எதிராக இந்தச் சின்னஞ்சிறு கிராமத்துள் போராடியதுடன் எங்கடை கடமை முடியவில்லை. நாட்டிலே பொருளாதார நெருக்கடி வரவர தீவிர மடைஞ்சுகொண்டு வருகுது. எங்களாலே வாழ்க்கை நிலையை தாங்கமுடியாத அளவுக்கு செலவு கூடியிட்டிது. கடையளிலை போனால் செத்தல் மிளகாய் இல்லை…… உள்ளி இல்லை…… புளி இல்லை…… தலைக்குமேலை எல்லாச் சாமானும் விலையாயிருக்கு…… தொழிலாளிகளான எங்கள் மத்தியில் தலையெடுத்துவிட்ட புரட்சி கர உணர்வை இனி எந்த அரசாங்கமும் ஒண்டுஞ் செய்துவிட முடியாது. மக்களை அடக்குகிற, மக்கள் எதிரிகளை நாங்கள் இனம் கண்டுவிட்டோம். அவங்களை ஒழிச்சுக்கட்ட நாங்கள் உறுதிபூண்டுவிட்டோம்……”2

எனப் பேசுகின்றது ஒரு பாத்திரம். தாழ்த்தப்பட்ட சமூகத்திலே அடிமைப்பட்டுக் கிடந்த மக்களைத் தனியொருவனான சிதம்பரி இவ்வளவு வேகமாக மாற்றியமைத்துப் புரட்சியாளராகத் தூண்டி விடுகிறான். கதையிலே காணப்படும் இம் மிகை உணர்வானது, பாத்திர உரையாடல்களிலும் மிகைப் பண்பினை உருவாக்கிவிடுகின்றது. இப்பாத்திரம் தான் கூறவந்த விடயத்தைச் சாதாரண பேச்சு வழக்கிலே எடுத்துக் கூறமுடியாது. செந்தமிழ்ச் சொற்களையும் பயன்படுத்துகின்றது. இவ்வுதாரணம், மிகைஉணர்வுப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு ஒருபோதும் இயல்பானதாக அமையமாட்டாது என்பதை வலியுறுத்துகின்றது.

(உ) மண்வாசனைப்பாங்கான புனைகதைகளிற்
பேச்சுவழக்கு.
1960ஆம் ஆண்டுக்காலப் பகுதியிலே ஈழத்து இலக்கிய உலகில் முன்வைக்கப்பட்ட மண்வாசனை என்ற கோட்பாடு, பல்வேறு விளக்கங்கட்கு உட்படுவதாயிற்று. எழுத்தாளர் சிலர், அவ்வப் பிரதேச மக்களின் பேச்சு வழக்கினை அட்சரம் பிசகாது புனைகதைகளிலே வடித்துவிட்டால் அது மண்வாசனை இலக்கியமாகிவிடும் எனக் கொண்டனர். இவர்கள் அவ்வப்பிரதேச மக்களின் வாழ்க்கை முறைகளை உயிர்த்துடிப்புடன் சித்திரிப்பதிலும் பார்க்க அப் பிரசேப் பேச்சு வழக்கினுக்கே முதன்மைத்துவம் வழங்கினர். சிறப்பாக, 1960ஆம் ஆண்டினை அடுத்துவரும் காலப்பகுதிகளிலே, இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்ட நாடகங்களில் இப் பண்பினை அவதானிக்க முடிந்தது. யாழ்ப்பாணப் பேச்சுவழக்கு, பொருத்தமற்ற இடங்களிலெல்லாம் நகைச் சுவை உணர்வினை ஊட்டுவதற்காகக் கையாளப்பட்டு வந்தது. பேச்சுவழக்கென்பது யாழ்ப்பாணப் பேச்சுவழக்கே என்று கருதப்பட்டது. தரகர், கலியாணத்தரகர், சோதிடர் போன்ற பாத்திரங்களின் நகைச்சுவைப் பண்பினை வெளிப்படுத்துவதற்காகவே இந்நாடகங்களிலே பேச்சுவழக்குப் பயன்படுத்தப்பட்டது.

இலக்கிய அணியின் இன்னொருசாரார், பேச்சுவழக்கு மட்டும் மண்வாசனை இலக்கியமாகிவிட முடியாது@ அவ்வப் பிரதேச மக்களின் தொழில் முறைகள், பழக்கவழக்கங்கள், சடங்கு சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றை இயல்பான நிலையிற் சித்திரிப்பனவே மண்வாசனை இலக்கியமெனக் கொண்டனர்.

“ஈழத்து இலக்கிய உலகில் மண்வாசனை என்ற கோஷம் சில ஆண்டுகட்கு முன்னர் எழுத்தாளர் சிலரால் முன்வைக்கப்பட்டது. பிராந்தியங்களில் பயிலப்படும் கொச்சைச் சொற்கள் சிலவற்றைக் கோவை செய்தால், அஃது இயல்பாகவே மண்வாசனை இலக்கியமாகிவிடும் என்ற தப்பித எண்ணத்தைக் காமித்து அத்தகைய கதைகளi எழுதிச் சலித்தவர்களும் நம்மத்தியில் வாழ்கின்றனர். ஒரு பகுதியான மண்ணிற்கே உரித்தான கலாச்சாரத்திலே பிறக்கும் கதைக்கருவை, அந்தமண் தனித்துவமாக ஒலிக்கும் தொனிப்பொருளைப் பிரசவிக்கும்வண்ணம் கல்விநெறியிற் பொருத்துவதே மண்வாசனை இலக்கியத்திற்கான சிறப்பம்சமாகும்.”3

என எஸ். பொன்னுத்துரை குறிப்பிடுவது இங்குக் கவனத்திற்குரியது.

ஆரம்பகாலத்திலிருந்து மண்வாசனை இலக்கியம் என்பதனைக் கொள்கை ரீதியாகவும் ஏற்றுக்கொண்டவர்கள் முற்போக்கு அணியினர். இவர்கள் யாவரும் புனைகதைகளிலே மண்வாசனையின் இன்றியமையாமையை உணர்ந்து, தமது ஆக்கங்களிலே தம்மாலியன்ற அளவுக்கு அப் பண்பினைப் புலப்படுத்த முயன்றனர். இருப்பினும், அவர்கள் யாவரது புனைகதைகளிலும் மண்வாசனைப் பண்பானது செவ்வையாக அமைந்தது எனக் கூறுவதற்கில்லை. குறித்த ஒரு பிரதேச மக்களின் வாழ்க்கை முறைகளையும் தொழில் முறைகளையும் அவர்களது பண்பாடு பழக்கவழக்கங்களையும், அவர்தம் நம்பிக்கைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள் ஆகியவற்றையும் அப்பிரதேசத்திற்கேயுரிய பேச்சு வழக்குடன் இணைத்து யார் கையாண்டார்களோ அவர்களின் புனைகதைகளிலேயே மண்வாசனைப் பண்பினைச் செவ்விதிற் காணமுடிகிறது. எழுத்தாளன், குறித்த பிரதேச மக்களுடன் இரண்டறக் கலந்து பழகி அவர்களின் இன்பதுன்பங்களிலே பங்குகொண்டு அவற்றினாலே தான்பெற்ற உணர்வினை உயிர்த்துடிப்புடன், புனைகதைகளிற் சித்திரிக்கும்போதே மண்வாசனைப் பண்பானது சிறப்புற அமைகின்றது.

“இரண்டு முழுக்கச் சரியான வேலை பிள்ளை. முந்த நாள் வளைஞ்ச வெள்ளாவி@ நேத்துப் பெருங்காட்டுக்கை ஒரு துடக்குக் கழிவுக்குப் போட்டுவந்ததினாலை துறைக்குக் கொண்டுபோக முடியவில்லை. உடம்பும் அவ்வளவு சரியில்லை. இப்ப பத்துமணிபோலைதான் துறைக்குப் போனன்.. அதுக்கிடையில் சின்னாச்சிப்பெட்டை வந்து பிள்ளை வரட்டாமென்று புடியாளா நிண்டாள். அதுதான் மருமோனைப் பிடிச்சு விட்டுட்டு ஓடியாறன். சரியான வெயிலும் கொழுத்துதணை.”

“அரிவி வெட்டெல்லாம் முடிஞ்சுதே பிள்ளை? சிங்கன் கண்டி எப்பிடிப் பொலிஞ்சமே?”

“ஓமோம்: நீ எங்கைளட துணிளை ஒழுங்காக வெழுத்த வெழுவையிலை நெல்லு வேண்ட வந்திட்டியாக்கும்”

“எணை அப்பு சும்மா கிடவனை. உடுப்பு வெளுக்காட்டி என்ன குடிமேனுக்குக் குடுக்கிறதைக் குடுக்கத் தானையெணை வேணும். நீ பேசாமல் கிடவனை.”

கே. டானியலின் பஞ்சமர் (பக். 1-2) என்ற நாவலினின்றும் காட்டப்பட்ட மேற்படி உரையாடலானது, மண்வாசனை இலக்கியத்தின் பேச்சுவழக்கிற்கு நல்லதோர் எடுத்துக்காட்டாகும். மக்களுடன் ஆசிரியர் இரண்டறக் கலந்து பழகிய தன்மையையும், மக்களின் தொழில்முறை நுணுக்கங்களை அவதானித்து அவற்றைத் தமது படைப்பிலே சிறப்புறக் கையாளவேண்டும் என முனைந்தமையையும் மேற்படி உரையாடலிலே அவதானிக்கமுடிகிறது. யாழ்ப்பாணப் பிரதேசக் கிளைமொழியிலே இடம்பெறும் இண்டுமுழுக்க, சரியான, வளைஞ்ச வெள்ளாவி, துடக்குக்கழிவு, துறை, பெட்டை, பிள்ளை, மருமோன், ஓடியாறன், குடிமேன் போன்ற சொற்களை ஆசிரியர் பிரக்ஞைபூர்வமாகப் பயன்படுத்தியுள்ளமையையும் நாம் அவதானிக்கலாம்.

லெ. முருகபூபதியின். சுமையின் பங்காளிகள் (பக். 1) என்ற சிறுகதைத் தொகுப்பினின்றும் கீழே கொடுக்கப்படும் உரையாடற் பகுதியிலே மண்வாசனைப் பண்பானது செவ்விதில் அமைந்திருப்பதனை அவதானிக்க முடிகிறது.

“செவஸ்தியான் புறகால புடிடா……ம்… ஏலோ… ம் ஏலோ……ம்…… மத்த அலை வரட்டும் ஆ… வந்திட்டுது…… பிடி …… ஏலோ.”

“அடியேய்…… கருப்பணத்தில வாவே… பயஸ்கோப்பில வாற சிறுக்கிமாதிரி … ஆட்டி ஆட்டி வா.”

“இண்டைக்கும் மட்டச்சாலையா பட்டிரிச்சீ…… சூசை அப்புட வலையிலயும் மட்டச்சாலைதான்.”

“இந்தா செவஸ்தியான் நீயும் குடி…… இந்தச் சிறுக்கன்களுக்கும் குடு…… ம்…… இந்தா……”

“ஏண்டா…… அந்தோனி…… நீயும் ஒரு ஜோன்சன் எஞ்சின் வாங்கிh என்ன? எஞ்சினை வாங்கிட்டு இப்படி துடுப்பு போட்டு வலிச்சு மாயவேணா எலா……?”

“என்னடா செல்லிய …… நீ…? எஞ்சின் வாங்கிய தெண்ணாப்பில லேசாயிரிச்சா……? நம்மட்ட அம்மட்டுக் காசா …… இரிச்சுது……?”

மேற்படி உரையாடல் பகுதியினின்றும் குறித்த பிரதேச மக்களின் தொழில் முறைகளை நாம் அறியமுடிகிறது. அவர்களின் மதுவருந்தும் பழக்கத்தினையும், சினிமாவிலே அவர்களுக்கிருக்கும் மோகத்தினையும், அவர்கள் பின்பற்றும் மதக்கோட்பாட்டையும். கல்வி நிலையிலே அவர்களின் தாழ்வான நிலையையும், ஜோண்சன் எஞ்சின் வாங்கித் தமது எதிர்கால வாழ்க்கையைச் சிறப்பாக அமைத்துக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தினையும் இச்சிறு உரையாடற் பகுதிமூலம் அறியமுடிகிறது. இவ்வாறான ஒரு வாழ்க்கைப் பின்னணியுடன் அப்பகுதி மக்களி;ன் பிரத்தியேக வழக்குகளாக புறகால, புடிடா, தத்த, கருப்பணத்தில, வாவே, பயஸ்கோப், சிறுக்கன், சிறுக்கி, பட்டிரிச்சி, மாயவேணா, எலா, செல்லிய, சுண்டாப்பில ஆகிய சொற்பிரயோகங்களை ஆசிரியர் இரண்டறக் கலந்து தரும்போது, ஒரு பூரணமான மண்வாசனை இலக்கியத்தின் நறுமணத்தினை நாம் நுகரமுடிகிறது.

புனைகதை இலக்கியத்திற் பேச்சுவழக்கைப்
பயன்படுத்துவதால் உருவாகும் பிரச்சினைகள்
புனைகதை இலக்கியத்திற் பேச்சுவழக்குப் பயன்பாட்டினை இன்று எதிர்ப்போர் யாருமிலர். புனைகதை இலக்கியப் படைப்பாளிகள் யாவரும் தமது ஆக்கங்களிலே தமது இயல்பினுக்கேற்றவாறு பேச்சுவழக்கினைக் கையாளுகின்றனர். கதைப் பொருளின் தன்மைக்கேற்பவும், கதை நிகழ் களத்தின் வேறுபாட்டிற்கேற்பவும். படைப்பிலக்கிய கர்த்தாவின் மொழியாற்றலுக்கேற்பவும் பல்வேறு அளவிலும் வகையிலும் பேச்சு வழக்கானது கையாளப்பட்டு வருகின்றது. ஆனாலும், பேச்சுவழக்கினைப் புனைகதை இலக்கியத்திலே எவ்வாறு, எந்த அளவுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய ஒரு கோட்பாடு இன்னும் ஈழத்து எழுத்தாளர்களிடையே உருவாகவில்லையென்றே கூறலாம். ஏனெனில் பேச்சுவழக்கினைப் புனைகதை இலக்கியத்திற் கையாளவேண்டும் என வாதிட்டு, அதனை நடைமுறையிலும் கைக்கொண்ட எழுத்தாளர்கள் கூடப் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பேச்சுவழக்கினைக் கையாளும்போது ஒரு சீராக அதனைப் பயன்படுத்தினாரல்லர். இவ்வாறு பேச்சு வழக்கினை வழுவின்றி இலக்கியகர்த்தாக்கள் பயன்படுத்தத் தவறியமைக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. அவையாவன:-
(அ)மொழியின் இருவழக்குப் பண்பு.

(ஆ)பிரக்ஞைபூர்வமாகப் பேச்சுவழக்கினைப் பிரயோகிப்பதிலே ஆர்வமில்லை.

(இ)சொற்களின் ஒலியமைப்பு வேறுபாடுகள்.

(ஈ)உபதேசங்கள், தத்துவங்களை விவரிக்கையிலே ஏற்படும் முரண்பாடுகள்.


(அ) மொழியின் இருவழக்குப் பண்பு
புனைகதை இலக்கியத்திலே பேச்சுவழக்குப் பயன்பாடு ஆரம்பமான காலமுமல், அவ்விலக்கிய மொழியிலே இருவழக்குப் பண்பும் இடம்பெறத் தொடங்கியது. இருவழக்குப் பண்பெனப்படுவது, புனைகதை இலக்கியத்திலே இருவகையான மொழிநடை கையாளப்படுவதனைக் குறிக்கிறது. இக்காலப் புனைகதைகளிலே, ஆசிரியர் கூற்றும் விவரணப் பகுதிகளும் செந்தமிழில் அமையப், பாத்திர உரையாடல்கள் பேச்சுவழக்கிலே அமைந்துவிடுகின்றன. செந்தமிழ், பேச்சுவழக்கு ஆகிய இருவகை நடையும் புனைகதைகளிடம் பெறுவதே இருவழக்குப் பண்பு எனப்படுகிறது.4 இவ்வாறு செந்தமிழும் பேச்சுத்தமிழும் ஓர் இலவக்கியவடிவத்திலே கையாளப்படும்போது செந்தமிழானது பேச்சுவழக்கிலும், பேச்சுவழக்குச் செந்தமிழிலும் ஆதிக்கஞ் செலுத்துவது தவிர்க்க முடியாததாகி விடுகின்றது. ஆரம்பகாலப் புனைகதைகளிலே, விவரணப் பகுதிகளும் உரையாடல்களம் செந்தமிழிலேயே அமைந்திருந்தமையால் இருவழக்குப் பண்பு அவற்றிலே இடம்பெறும் சந்தர்ப்பம் இல்லாதிருந்தது.

உரையாடல் பகுதியிற் செந்தமிழ்ச் சாயல்
புனைகதைகளிலே, ஆசிரியர் கூற்றும் விவரணப் பகுதிகளும் செந்தமிழிலே அமையும்போது பாத்திர உரையாடல்கள் மட்டுமே பேச்சுவழக்கிற் கையாளப்படுகின்றன. இவ்வாறு உரையாடல்களிற் பேச்சுவழக்கு இடம்பெறும் போது, அவற்றிலே செந்தமிழின் சாயலும் இடம்பெற்று விடுகின்றது. இதனாற், பேச்சு வழக்கின் தனித்துவம் பாதிக்கப்படுகின்றது. ஈழத்தின் பல்வேறு புனைகதைகளிலும் இவ்வாறான பண்பு இடம்பெற்றிருப்பதனை நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

“ஜானகி… சாதிகுலம் என்று சம்பிரதாயங்கள் சும்மா வரேல்லை. அவை தெய்வம் அருளியவை எண்டு அப்பா சொன்னது பொய்யில்லை. சம்பிரதாய விதிகளையும் வைதீக நெறிகளையும் நாங்க மறுத்தாலும் நீங்கள் மறக்கப்படாது. அதுவும் நீ ஒருநாளும் அதுகளை மீறி நடக்கப்படாது.

செ. யோகநாதன் எழுதிய, ஒளி நமக்கு வேண்டும் (பக். 47) என்ற சிறுகதை நூலிலே இடம்பெறும் மேற்குறிப்பிடப்பட்ட உரையாடற் பகுதியிலே, பேச்சுமொழியிலே செந்தமிழின்சாயல் படிந்திருப்பதனை நன்கு அவதானிக்கமுடிகிறது. மேற்படி உரையாடற் பகுதியிலே இடம்பெற்றுள்ள என்ற, அதுவும், விதிகள், நெறிகள் ஆகிய செந்தமிழ்ச் சொற்கள், முறையே எண்ட. அதுகும், விதியள், நெறியள், எனவே பேச்சுவழக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கவேண்டும். அத்துடன், சாதாரண மக்களினாலே பேச்சுவழக்கிற் பயன்படுத்தப்படாத அருளியவை, சம்பிரதாய விதிகள், வைதீக நெறிகள் போன்ற சொற்களும், சொற்றொடர்களும் இவ்வுரையாடற் பகுதியிலே பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு, பேச்சுவழக்கிலே அமையவேண்டிய சொற்களைச் செந்தமிழ்ப்பாங்கிற் பயன்படுத்துவதும் சாதாரண மனிதன் பேச்சுவழக்கிற் பயன்படுத்தாத சொற்களைப் பயன்படுத்துவதும் மொழியின் இருவழக்குப் பண்பின் தாக்கமெனக் கொள்ளலாம்.

விவரணப் பகுதியிற் பேச்சுவழக்குச் சாயல்
ஈழத்து மண்வாசனைப் புனைகதைகளின் நடையிலே பேச்சுவழக்கானது, பேரளவு ஆதிக்கஞ் செலுத்துகின்றது. பேச்சு வழக்கிற் கையாளப்படும் சொற்கள் பல, அமைப்பிலோ, ஒலியிலோ திரிபின்றி விவரணப் பகுதியிலும் கையாளப்பட்டு வருகின்றன. ஈழத்துப் புனைகதைகளின் நடையைப்பற்றி எம்.ஏ. நுஃமான் பின்வருமாறு கூறினார்.

“ஈழத்துப் பேச்சுவழக்குச் சொற்களும், சொற்றொடர்களும், மரபுத் தொடர்களும், போர்த்துக்கீஸ், டச்சு, சிங்களம் முதலிய மொழிகளில் இருந்து கடன் வாங்கிய சொற்களும் ஈழத்தவர்களின் சடங்கு சம்பிரதாயங்களில் வழங்கும் பண்பாட்டுச் சொற்றொகுதியும், தொழில்துறை, அரசதுறைச் சொற்களும் நாவல் விவரணத்தில் கலந்து ஈழத்து நாவலாசிரியர்களின் நடையைத் தனித்துவப்படுத்துகின்றன.”5

கே. டானியல், கணேசலிங்கம், எஸ். பொன்னுத்துரை, யோ. பெனடிக்ற்பாலன் ஆகியோரின் நாவல்கள், சிறுகதைகளிலே மேற்குறிப்பிட்ட இயல்புகளை நாம் தெளிவாகக் காணலாம். கே. டானியலின் பஞ்சமர் என்னும் நாவலிலே சங்கடப்படலை, தேங்காய்ப்பரவல், கமக்காரி, சட்டம்பியார், சாங்கோபாங்கம், குறிச்சி (நித்திரை), வில்லங்கம், மாராப்புப் போடுதல், மைமல் நனைக்கிறது (குடிக்கிறது), மட்டுமட்டு, சமசியம், இடைஞ்சல், வெள்ளென, குலைக்கிறது. அருட்டுமல் போன்ற பேச்சுவழக்குச் சொற்கள், ஆசிரியரின் விவரணப் பகுதிகளிலே பேச்சு வழக்கில் உள்ளவாறே கையாளப்பட்டுள்ளன. பின்வரும் ஒரு சிறு விவரணப் பகுதியிலே இப்பண்பினை நாம் அவதானிக்கலாம்.

“சின்னாச்சி தோய்த்து வைத்திருந்த புடவையை அவனுக்குப் போர்த்துவதற்காகக் கொடுத்திருந்தாள். அந்தப் போர்வையை மிஞ்சிக்கொண்டு அவனுக்குக் குலைப்பன் வந்துவிட்டது. அவன் அனுக்கத்துடன் நடுங்கினான்.”6

மேற்காட்டப்பட்ட விவரணப் பகுதியிலே, மிஞ்சிக் கொண்டு, குலைப்பன், அனுக்கம் ஆகிய பேச்சுவழக்குச் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதுடன், பேச்சுவழக்குப் போன்றே ஆசிரியர் வாக்கிய அமைப்பினைப் பேணியிருப்பதையும் நாம் காணமுடிகிறது.

(ஆ) பேச்சுவழக்கினைச் சீராகக் கையாளவேண்டும்
என்ற ஆர்வமின்மை
மண்வாசனை இலக்கியம் படைக்க முனைவோர், தமது எண்ணங்கள் புலப்படுத்தப்படும் மொழியின் இயல்பினைச் செவ்வனே அறிந்திருத்தல் வேண்டும். மொழியின் இயல்புகளை விளங்கிக்கொள்ளாது. மண்வாசனை இலக்கியம் படைக்க முயல்வது அவ்விலக்கியத்தின் அடிப்படைப் பண்பினையே பிரதிபலிக்கமுடியாது செய்துவிடுகின்றது. ஈழத்து மண்வாசனை இலக்கியங்கள் யாவற்றிலும், இப்பண்பினைப் பரவலாகக் காணமுடிகிறது. எழுத்தாளர் பலரும், மக்களின் பேச்சுவழக்கினைக் கூர்ந்து நோக்காது தத்தமது இயல்பினுக்கேற்ற வகையிலே அதனைப் பயன்படுத்துகின்றனர். இதனாற், பேச்சுவழக்கிலே செந்தமிழ்ச் சொற்கள் கலந்துவிடுகின்றன. பேச்சு மொழியைக் கூர்ந்து நோக்கும் ஆசிரியன், அம் மொழியின் சொற்களைப் பிறழ்வின்றி ஒரு சீராகக் கையாளுவான்.

செங்கை ஆழியானின் முற்றத்து ஒற்றைப்பனை (பக். 3) என்ற புனைகதையினின்றும் ஓர் உரையாடற் பகுதி கீழே

“”விஷர் கதை கதையாதை. இந்தப் பனையைத் தறிச்சால் நான் எங்க விட்டம் போடுறது?”

“விசயம் விளங்காமல் கதைக்கிறாய்!...... ஒருக்கா ஏற்றிய கொடியை ஐந்தாறு நாளுக்கு நான் கீழே இறக்கிறதில்லை. வயல் வெளியிலை போய் ஏத்திப் போட்டு வீட்டிலே கொண்டுவந்து கட்டலாமே? எத்தனை வரியமா இந்தப் பனையை நான் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து வருகிறன்!........”

மேற்படி பந்தியிலே பேச்சுவழக்குச் சொற்கள் தவறான வகையிலே கையாளப்பட்டுள்ளமையை நாம் அவதானிக்கலாம். பேச்சுவழக்கிலமைந்த மேற்படி பந்தியிலே, ஏற்றிய, ஐந்தாறு, நாளுக்கு, இறக்கிறதில்லை, கொண்டுவந்து, எத்தனை, வருகிறன் ஆகிய செந்தமிழ் வழக்குச் சொற்களும், திருந்திய பேச்சுமொழிச் சொற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இச் சொற்கள் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் முறையே, ஏத்தின, ஐஞ்சாறு, நாளைக்கு, இறக்கிறேல்லை, கொண்டந்து, எத்தினை, வாறன் எனவே பயன்படுத்தப்படுவதனை ஆசிரியர் அறிவர். அறிந்தே ஆசிரியர் பேச்சுவழக்குச் சொற்களை இவ்வாறு திருத்தமாகக் கையாண்டார் என்று கொண்டாலும், ஒரு சொல்லினையே வௌ;வேறுவிதமாக அவர் கையாண்டமைக்கான காரணத்தை நாம் ஆராயவேண்டும். பேச்சுமொழி பற்றிய கூர்ந்த நோக்கின்மையும், பிரக்ஞைபூர்வமாக அதனைப் புனைகதையிலே கையாளவேண்டும் என்ற ஆர்வமின்மையுமே இதற்கான காரணங்களாம். மேற்படி பந்தியிலே, விசர் என்ற சொல்லுக்குப் பதிலாக விஷர் என்ற சொல்லை ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார். ஆயின், விசயம் என்ற சொல்லை விஷயம் எனப் பயன்படுத்தினாரல்லர். ஏற்றிய கொடி என முதலில் குறிப்பிடும் ஆசிரியர் பின்னர், ஏத்திப்போட்டு எனக் கையாளுகின்றார். இவ்வாறு, முன்பின் முரணான வகையிலே பேச்சுவழக்குச் சொற்களைப் பயன்படுத்தும் பண்பினை ஈழத்துப் புனைகதைகள் பலவற்றிலும் காணக்கூடியதாக உள்ளது. இதற்கு, மொழிபற்றிய நோக்கினுக்கு ஆசிரியர்கள் முதன்மைத்துவம் வழங்காமையே காரணமாகும்.

(இ) ஒலிமையப்பு வேறுபாடுகள்
ஒலிகள் பல்லாயிரக் கணக்கானவை. இவ்வொலிகள் யாவற்றையும் எழுத்திலே வடித்துவிட முடிவதில்லை. ஏனெனில், எழுத்துக்கள் வரம்புடையனவே. வரையறுக்கப்பட்ட அளவு எழுத்துக்களாலே, எண்ணற்ற ஒலிகளுக்கு உருவங்கொடுக்க முடிவதில்லை. மிருகங்கள், பறவைகள் எழுப்பும் ஒலிகள் யாவற்றையுமோ வாத்திய இசைக்கருவிகளின் இனிய இசையினையோ எழுத்திலே வடிக்க முடிவதில்லை. இவ்வொலிகள் யாவற்றையும் வரிவடிவிலே அமையக்கூடிய அளவுக்கு எழுத்தாக்கம் இன்னும் வளர்ச்சியடையவில்லை.

இவைபோன்றே, மனிதன் எழுப்பும் ஒலிகள் யாவற்றுக்கும் இன்னும் வரிவடிவம் கண்டுபிடிக்கப்படவில்லை. மனித எண்ணங்கள், உணர்ச்சிகள் யாவற்றையும் எழுத்திலே சிறைப்பிடித்துவிட முடிவதில்லை. அந்த அளவுக்கு எழுத்து மொழியானது இன்னும் வளர்ச்சியடையாத ஒன்றாகவே காணப்படுகின்றது. பேச்சொலிகள் யாவற்றுக்கும் எழுத்துக்கள் இல்லாமையால் புனைகதைகளிலே பேச்சுவழக்குச் சொற்களை ஒவ்வோராசிரியரும் வௌ;வேறு விதமாகவே பயன்படுத்தி வருகின்றனர்.

அ. யேசுராசாவின் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் என்ற சிறுகதைத் தொகுதியினின்றும் சில எடுத்துக்காட்டுக்களை நாம் ஆராயலாம்.

“உங்கட மாமா செல்வநாயகம் உம்மட்டக் கதைக்கச் சொன்னேர்”

“உம்மட விருப்பத்தக் கேக்கச் சொன்னேர்”

“புறத்தியிப் பெடியனெண்டா என்ர பங்கப் பிரி, அப்பிடியெண்டெல்லாம் சொத்துக்கு கரச்சல் குடுப்பானெண்ட கவலை போல……”

இவ்வுதாரணங்களிலே தரப்பட்டுள்ள பேச்சுவழக்குச் சொற்கள் பலவற்றை ஈழத்து எழுத்தாளர்கள் பலரும் சற்று வேறுபட்ட வகையிலே கையாண்டுள்ளனர். அவற்றிற் சில பின்வருமாறு அமைந்துள்ளன.

உங்கட - உங்கடை
உம்மட்ட - உம்மட்டை
சொன்னேர் - சொன்னார்
விருப்பத்த - விருப்பத்தை
என்ர - என்ரை
பங்க - பங்கை
கரச்சல் - கரைச்சல்
போல - போலை

டை, தை, சை, கை, வை, பை, றை போன்ற எழுத்துக்களின் ஒலியானது, எழுத்திலே உள்ளவாறு உச்சரிக்கப்படுவதில்லை. அவற்றின் ஈற்றொலி சிற்சில இடங்களில் குறுகியும், அழுத்தம் பெற்றும் பெறாமலும் ஒலிக்கப்படுகின்றன.

உம்மட்டை, உம்மட்ட ஆகிய இரு சொற்களையும் எடுத்துக்கொண்டால், இவ்விரு சொற்களிலுமுள்ள டை, ட ஆகிய எழுத்துக்களை ஐகார அகர ஒலிகட்கிடைப்பட்ட ஒருவகை அகர ஒலிகொண்டே உச்சரிக்கிறோம். இதனாலேயே, எழுத்தாளர் பலரும் இவ்வெழுத்தை டை எனவும் ட எவும் பயன்படுத்துகின்றனர்.

அ.யேசுராசாவின் மேற்காட்டிய உதாரணப் பகுதியிலிருந்தே இதனை ஆதாரப்படுத்தலாம். முதலாவது கூற்றிலே, கதைக்க என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது கூற்றிலே, விருப்பத்த என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்கு, கதைக்க என்ற சொல்லுலிம் விருப்பத்த என்ற சொல்லிலும் எழுத்து வழக்கில் தை என்னும் எழுத்தே இடம்பெறுகின்றது (கதைக்க, விருப்பத்தை). ஆனால், அவ்வெழுத்து பேச்சுவழக்கில் இடம்பெறும்போது, அதிலுள்ள ஐ கார உயிரொலி எய் எனக் கதைக்க என்ற சொல்லிலும், அ என விருப்பத்தை என்ற சொல்லிலும் உச்சரிக்கப்படுகின்றது. ஆனால், பேச்சொலிகள் யாவற்றுக்கும் எழுத்துருவம் இன்மையால், அவ்வேறுபாட்டை உணர்த்த முடியாதுள்ளது.

(ஈ) உபதேசங்கள் தத்துவங்களை விவரிக்கையிலே
உண்டாகும் முரண்பாடுகள்
உபதேசங்கள், புத்திமதிகள், தத்துவக் கருத்துக்கள் ஆகியன பெரும்பாலும் சமூகத்தின் உயர்நிலையிலுள்ள, அறிவும் அநுபவமும் ஆற்றலும் உள்ளவர்களினாலேயே வழங்கப்படுகின்றன. மேடைப்பேச்சுக்களும் இவ்வாறானவர்களினாலேயே ஆற்றப்படுகின்றன. இவ்வாறு, சமூகத்தின் உயர்நிலையிலுள்ளோர் தாம் உபதேசஞ் செய்யும்போ, ஏனையோர் தம்மை உயர்நிலையிலே வைத்து எண்ணவேண்டுமென்பதாலும், செந்நெறிப்பாங்கான விடயத்தினைத் தராதரமுடைய ஒரு மொழியிலே விளக்கவேண்டுமென்ற அவாவினாலும், பெரும்பாலும் செந்தமிழையே கையாண்டு வருகின்றனர். பாடசாலையிலே ஆசிரியன் மாணவனுக்குப் போதிக்கும் மொழி தொடக்கம் வரலாறு அரசியல் கலை, சமயச் சார்பான சொற்பொழிவுகள் வரை யாவும் செந்தமிழிலேயே ஆற்றப்படுகின்றன. இதனைப் பின்வரும் அட்டவணை தெளிவாக விளங்குகின்றது. 7

சந்தர்ப்பங்கள் பேச்சு வழக்கு எழுத்துவழக்கு
1. உறவினர், நண்பர்
ஆகியோருடனான உரை
யாடலின்போது ஓ

2. விரிவுரை, சமய, இலக்கியச்
சொற்பொழிவுகளின் போது ஓ

3. கடிதம்: படித்தவர்கள் எழுதும்
போது ஓ
படியாதவர்கள் எழுதும்
போது ஓ

4. பத்திரிகை, சஞ்சிகை ஆகி
யனவற்றில் கட்டுரை, ஆசிரி
யர் தலையங்கம், செய்திகள்
ஆகியன…. ஓ

5. வானொலியிலே: செய்திகள்,
தொகுப்பாளர் அறிவிப்பு……
கிராமிய நிகழ்ச்சிகள் சிலவும்
சமூகநாடகங்களும் ………. ஓ

6. தற்காலச் சிறுகதை, கவிதை,
நாவல், நாடகம் ஆகியன…. ஓ ஓ

7. அரசாங்க வர்த்தமானி விளம்
பரங்கள். ஓ

ஈழத்துப் புனைகதைகளிலே உபதேசங்கள், புத்திமதிகள், மேடைப்பேச்சுக்கள் ஆகியன இடம்பெறும்போது, இயல்பாகச் சாதாரண மக்களின் பேச்சுவழக்கினைக் கைக்கொள்ளும் பாத்திரங்கள் செந்தமிழிலேயே அவற்றினை ஆற்றுகின்றன. விறுவிறுப்பும் ஆழமும், செறிவானவுமான விடயங்களை விளக்குவதற்குச் செந்தமிழ் மொழியே பயன்படுத்தப்படுகிறது. இவ்வியல்பினை ஈழத்துப் புனைகதைகள் யாவற்றிலும் காணக்கூடியதாக உள்ளது. பின்வரும் எடுத்துக்காட்டுக்களை நாம் இங்கு நோக்கலாம்.

(அ)உரையாடல்கள் யாவும் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலே அமையுமாறு எழுதப்பட்டது செ. கணேசலிங்கனின் போர்க்கோலம் என்ற நாவல் இந் நாவலிலே இடம்பெறும் வடிவேலு என்ற பாத்திரம் சாதாரணமாக யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே உரையாடுகின்றது. ஆனால், அப்பாத்திரம் புரட்சிபற்றிய ஒரு கொள்கை விளக்கத்தினைப் பின்வருமாறு செந்தமிழிலேயே ஆற்றுகின்றது.

“ஆகக்கூடியது அவர்களால் நாட்டில் கிடைக்கக் கூடியதை வரியாகக் கறந்து ஓரளவு பகிர்ந்து கொடுக்கலாம். அவ்வளவுதான். சோஷலிசம் என்றால் நாட்டிலுள்ள வறுமையைப் பகிர்வதல்ல, உங்பத்திச் சாதனங்களையெல்லாம் அரசு உடமையாக்கி உற்பத்தியைப் பெருக்க வேண்டும். தற்போதய அரசியலமைப்பையும் அதன்கீழ் ஆட்சிசெலுத்தும் வர்க்கத்தையும் வைத்துக்கொண்டு எல்லாவற்றையும் சாதிக்க முடியாது. ஆயுதப்புரட்சி இல்லாமல் தற்போது ஆளும் வர்க்கத்தை ஒழித்து விடலாம் என்று நினைப்பது பகற்கனவு.”8

இவ்வுரையாடற் பகுதியிலே பேச்சுவழக்குச் சொல் ஒன்றேனும் இடம்பெறாமை கவனிக்கத்தக்கது.

(ஆ)இன்னோர் எடுத்துக்காட்டை இங்கு நோக்கலாம். இளங்கீரனின் நீதியே நீ கேள் என்ற நாவல் 1958ஆம் ஆண்டளவிலே எழுதப்பட்டது. தனது படைப்புகளிலே பேச்சு வழக்கினைக் கையாள வேண்டும் என்ற இலட்சியம் உடையவர் இளங்கீரன். இந் நாவலிலும் பாத்திர உரையாடல்களைப் பேச்சுவழக்கிலே அவர் அமைத்துள்ளார். கணேஷ் என்ற ஒரு பாத்திரம் இந் நாவலிலே இடம்டிபறுகிறது. கணேஷ் ஒரு பட்டதாரி. உயர்ந்த எண்ணங்கள், இலட்சியங்கள் கொண்டவன். சாதாரண வேளைகளிலே, அவன் பேச்சு வழக்கினையே தன் உரையாடல்களின்போது பயன்படுத்துகிறான். ஆனால், மற்றவர்களுக்கு உபதேசம் செய்கையிலே தான் ஒரு படித்தவன், பட்டதாரி என்ற உயர்வுச் சிக்கலினாற் போலும் செந்தமிழிலேயே உரையாடுகிறான். அவன் உபதேசஞ் செய்யும் ஒரு பகுதியே கீழே தரப்படுகின்றது.

“நேர்மை, நீதி, நாணயம், மனச்சாட்சி, என்றெல்லாம் சொல்கிறீர்களே, அவையெல்லாம் உங்களிடமிருந்தால் இருவது வருஷங்களாக உங்களுக்கு உழைத்த மனுஷனை இப்படி நிர்க்கதியா விடுவீர்களா? உங்களால்தானே அவருடைய குடும்பம் ஒருவேளைச் சோற்றுக்கும் கதியற்றுக் கண்ணீரும் கம்பலையுமாகத் திண்டாடுகிறது? உங்களுக்காக வருஷக்கணக்காக உழைத்த மனுஷனுக்கு என்ன பரிசு கொடுத்தீர்கள்? பசி, பட்டினி, காசநோய், கவலை, கண்ணீர் இவைகளைத்தானே கொடுத்தீர்கள்?”9

இவ்வுரையாடற் பகுதியும் செந்தமிழ்ச் சாயலிலே அமைகின்றது.

(இ)புனைகதை ஆசிரியர்கள் சிலர், பாத்திர உரையாடல்களின்போது செந்தமிழ், பேச்சுவழக்குத் தமிழ் ஆகிய இரண்டும் சேர்ந்த ஒருவகைக் கலப்பு நடையையே கையாளுகின்றனர். கதாபாத்திரங்கள் உபதேசங்களை, புத்திமதிகளை, வழங்கும்போதும் மேடைப்பேச்சுக்களை ஆற்றும் போதும் பேச்சுவழக்குச் சொற்கள் சில கலந்துவருவதுண்டு. செங்கை ஆழியானின் பிரளயம் என்ற நாவலினின்றும் பின்வரும் பகுதி உதாரணங் காட்டப்படுகின்றது.

“இதோபார் பொன்னு, படிப்பின் பெருமையை இன்றைக்கு உணர்ந்திருக்கிறேன்…… விதானையார் தம்பிப்பிள்ளையைப் பார்…… நான் துணி எடுக்கப் போறவேளையெல்லாம் என்ன சொல்லுகிறார். ஏன் வேலுப்பிள்ளை பிள்ளையளையெல்லாம் படிப்பிக்கிறாய். சும்மா மறிச்சுப்போட்டு தொழிலைக் கற்றுக்கொடுக்கிறது தானே…… படிச்சாப்போலை ஏதோ கிடைக்கப்போகிறதே என்று சொல்கிறார்.” 10

மேற்குறிப்பிட்ட உரையாடற் பகுதியிலே போற, மறிச்சுப் போட்டு, படிச்சாப்போலை, சும்மா ஆகிய சொற்கள் மாத்திரமே பேச்சுவழக்கு வடிவிலே அமைந்தவை. ஏனைய சொற்கள் யாவும் செந்தமிழ்ச் சொற்களாகும்.

இவ்வாறு ஒரே பாத்திரம் ஒரிடத்திலே பேச்சுத்தமிழையும், இன்னோரிடத்திலே செந்தமிழையும், சில விடங்களிலே இரண்டும் சேர்ந்த கலப்பு நடையையும் பயன்படுத்துவது, புனைகதையின் சீரான உணர்வோட்டத்தினுக்கு ஊறுபயப்பதாயுள்ளது. அத்துடன், பூரணமான பாத்திர வார்ப்பினுக்கும் இடையூறாக உள்ளது. இதுபற்றி, துரை ராஜா மனோகரன்,

“ஈழத்துத் தமிழ் நாவல்களின் கதைத் தலைவர்கள் சிலவேளைகளிலே முழுமையான பாத்திரங்களாக அமையமுடியாமற் போவதற்குக் காரணம், அவர்கள் ஒரே சீரான முறையிலே பேச்சுமொழியைப் பயன்படுத்தாமையே.” 11

எனக் குறிப்பிடுகின்றார். எனவே, பாத்திரங்களின் பூரணத்துவமான வார்ப்பிலும் பேச்சுவழக்குப் பிரயோகம் பெரும் பங்கு வகிக்கின்றது என்பதனை இங்கு நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

இதுவரை கூறியவற்றைத் தொகுத்து நோக்கும்போது, ஈழத்துப் புனைகதை இலக்கியங்களிலே பேச்சுவழக்கானது இக்காலவரையிற் செம்மையான முறையிலே கையாளப் படவில்லை என்பது தெளிவாகும். எனவே, புனைகதை இலக்கியத்திலே பேச்சுவழக்கினைப் பயன்படுத்துவது பற்றிய புதிய கோட்பாடு ஒன்று உருவாக்கப்படுதல் இன்றியமையாததாகும். அக் கோட்பாட்டினடிப்படையிலே பேச்சு வடிக்கானது பயன்படுத்தப்படும்போது, ஈழத்துப் புனைகதை இலக்கியம் மேலும் செழுமையான ஒரு வளர்ச்சிக் கட்டத்தினை அடையும் என்பது திண்ணம்.

அடிக்குறிப்பு
1. கதிர்காமநாதன், செ. கொட்டும்பனி, முன்னுரை

2. கதிர்காமநாதன் செ., மூவர் கதைகள், பக்: 9

3. எஸ். பொன்னுத்துரை, வெண்சங்கு, (முன்னீடு)

4. உலகமொழிகள் சிலவற்றிலே காணப்படும் ஓரமிசமாகிய இருவழக்குப் பண்பு பற்றிய
விவரங்களுக்குப் பார்க்கவும்: “ஆக்கவிலக்கியமும் மொழியியலும்”, ஆக்கவிலக்கியமும்
அறிவியலும், பக். 57

5. நுஃமான், எம்.ஏ., “ஈழத்துத் தமிழ் நாவல்களின் மொழி”, தமிழ் நாவல் நூற்றாண்டு விழா
ஆய்வரங்கு 1977.

6. டானியல், கே., பஞ்சமர், பக். 1 – 2

7. சண்முகதாஸ், அ., நமது மொழியின் இயல்புகள், பக். 9.

8. கணேசலிங்கம், செ., போர்க்கோலம், பக். 175.

9. இளங்கீரன், நீதியே நீ கேள், பக். 101.

10. செங்கை ஆழியான்., பிரளயம், பக். 22.

11. மனோகரன், து., “ஈழத்துத் தமிழ் நாவல்களிற் கதைத் தலைவன் பாத்திரம் பண்பு”, பக். 218.


முடிவுரை
இவ்வாய்வுக் கட்டுரையின் நான்கு இயல்புகளிலும் பொதுவாக இலக்கியத்துக்கும் மொழிக்கும் இடையேயுள்ள தொடர்புபற்றியும், சிறப்பாக ஈழத்துப் புனைகதைகளிலே பேச்சு வழக்குப் பயன்பாடு பற்றியும் ஆராயப்பட்டுள்ளது. முதலாவது இயல், இலக்கியமும் மொழியும், பேச்சு வழக்கின் முக்கியத்துவம், ஈழத்துப் பேச்சுவழக்கிலே ஒலியமைப்ணபு ஆகியன பற்றி ஆராய்கின்றது. இரண்டாவது இயலிலே, ஈழத்துப் புனைகதைகளின் வரலாற்றுச் சுருக்கம், ஈழத்துப் புனைகதைகளில் பேச்சு வழக்குப் பிரயோக வரலாறு, மரபுப் போராட்டம் ஆகியன பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளது. மூன்றாவது இயலில் பேச்சு வழக்கின் சில பண்புகள், பிரதேசக் கிளைமொழிகள் ஆகியன பற்றியும், நான்காவது இயல், கதை நிகழ் களமும் பேச்சுவழக்கும். கதைப்பொருளும் பேச்சுவழக்கும், புனைகதை வகையும் பேச்சு வழக்கும், புனைகதை இலக்கியத்திற் பேச்சு வழக்கைப் பயன்படுத்துவதால் உருவாகும் பிரச்சினைகள் ஆகியன பற்றியும் விளக்குகின்றன. முதலாவது இயலிலே பின்வருங் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.

(அ)இலக்கியத்தின் மூலாதாரமாக விளங்குவது மொழியே. ஒரு மொழியின் வாழ்வு, வளம் வளர்ச்சி பற்றிய தகவல்களைச் செம்மையானதாகத் தரவல்லது இலக்கியமேயாகும்.

(ஆ)காலத்துக்குக் காலம் அரசியல், சமூக மாற்றங்களுக்கேற்ப இலக்கியப் பொருளும், இலக்கிய வடிவமும் இலக்கிய மொழியும் வேறுபட்டு வருகின்றன.

(இ)இலக்கியம் சமூக நிலைமைகளைப் பிரதிபலிப்பதனால், அது வர்க்க சார்பானதாகும். ஆனால், மொழிவர்க்கச் சார்பானதாகவன்றி மனித இனத்தின் கூட்டு முயற்சியினாலே தோற்றுவிக்கப்பட்டதாகும்.

(ஈ)எழுத்து மொழியைவிடப் பேச்சுமொழியே இலகுவானது@ ஆற்றல்மிக்கது@ வளர்ச்சி உடையது@ பிறமொழிச் சொற்களையும் மிக இயல்பாகத் தமிழ் வடிவத்துக்கேற்ப ஏற்றுக்கொள்கிறது.

(உ)புனைகதை, நாடகம், திரைப்படம் போன்ற துறைகளிலே பேச்சுவழக்கானது பெருந் தாக்கத்தினை ஏற்படுத்திவருகிறது. ஈழத்து மேடை நாடகங்கள், வானொலி நாடகங்கள், தமிழ்த் திரைப்படங்கள் ஆகியன உதாரணமாகக் காட்டப்படுகின்றன.

(ஊ)ஈழத்துப் பேச்சுவழக்கு இந்தியப் பேச்சுவழக்கினின்றும் பல்வேறு நிலைகளிலும் வேறுபட்டுள்ளது.


1. இந்தியப் பேச்சுத் தமிழ் போலன்றி, ஈழத்துப் பேச்சுத் தமிழிலே குறித்த சில பிறமொழிகளின்
செல்வாக்கு அருகியே காணப்படுகிறது. சிங்கள மொழியின் செல்வாக்கினை மட்டக்களப்பு,
மலைநாடு, முஸ்லிம் மக்களது பேச்சு வழக்கிலே அவதானிக்க முடிகிறது.

2. இந்தியாவிலே சாதியமைப்பு (அதாவது பிராமணர் – பிராமணரல்லாதோர் பேச்சுவழக்கு)
பேச்சுவழக்கிலே வகிக்கும் செல்வாக்கினை ஈழத்துப் பேச்சு வழக்கிலே காண முடியவில்லை.
இந்திய, முஸ்லிம் பேச்சு வழக்கைத் தவிரச் சாதிப் பேச்சு வழக்கு வேறுபாடுகள் ஈழத்திலே
அவ்வளவாக உணரப்படுவதில்லை.

3. இந்தியா பரந்த தேசமாகையினாலே பிரதேசங்களுக்கிடையிலதன தொடர்புகள் குறைவு. இதனாற்
பிரதேச மொழிகளுக்கிடையே விகற்பங்களுமதிகம். ஆனால், இலங்கை சிறிய நாடாகையால்,
பிரதேசத் தொடர்பு நெருக்கங் காரணமாகப் பிரதேச மொழி விகற்பங்கள் குறைவாகவே
காணப்படுகின்றன.

4. ஆக, பொதுப்பேச்சுத்தமிழ் என்ற வகையிலேயே இந்தியத் தமிழ் பேச்சுவழக்கும் ஈழத்துத் தமிழ்ப்
பேச்சுவழக்கும் ஒற்றுமையுடையனவாகக் காணப்படுகின்றன.


(எ)இந்திய ஈழத்துத் தமிழ்ப் பேச்சுவழக்குகளின் ஒலியமைப்பினை ஒப்பிட்டாராய்கையிலே, பின்வரும் முடிபுகள் பெறப்பட்டன.

1. இந்தியப் பேச்சுத் தமிழிற் பெருமளவு இசைத்தன்மை பேணப்படுகின்றது.

2. இந்தியப் பேச்சுத்தமிழ் இலக்கியத் தமிழைவிடப் பல்வேறு நிலைகளிலும் திரிபுபட்டுள்ளது. ஆனால்,
ஈழத்துத் தமிழ்ப் பேச்சுவழக்கு ஓரளவுக்கேனும் இலக்கியத் தமிழின் இயல்புகள் கொண்டுள்ளது.

இரண்டாவது இயலிலே பின்வரும் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.

(அ)கீழைத்தேசங்களிலே ஐரோப்பியர் வருகையுடன் நிலமானிய அமைப்பு ஆட்டங்காணத் தொடங்க அவ்வமைப்பினைப் போற்றிய இலக்கிய வடிவங்களும் இலக்கியப் பொருளும் மாற்றமுறுகின்றன. செய்யுள் வழக்குச் சமூகத்திலே வகித்த முக்கியத்துவத்தினை உரைநடை பெறுவதாயிற்று. இவ்வுரைநடையுடன் பின்னிப்பிணைந்த ஓர் இலக்கியவடிவமே புனைகதை இலக்கியமாகும்.

(ஆ)ஈழத்தின் ஆரம்பகால தமிழ்ப் புனைகதைகள், அரச வம்சத்தினரின் சரித்திரங் கூறுவனவாகவும் ஒழுக்க நெறியை வற்புறுத்துவனவாகவும், காவியப்பாங்கான மொழிநடை கொள்வனவாகவும், ஈழத்தினைக் களமாகக் கொள்ளாதனவாகவும் காணப்படுகின்றன.

இடைக்கால ஈழத்துப் புனைகதைகளுக்கு ஆதர்சமாயமைந்தவை மேலைத்தேயப் புனைகதைகளே, ஆனாலும், அவை ஈழம் வாழ் மக்களின் சமூகநிலைப்பாடு, வாழ்க்கைப் பின்னணி ஆகியவற்றையும் சித்திரிக்கத் தலைப்பட்டன.

இக்கால ஈழத்துப் புனைகதைகள், இந் நாட்டின் சமூக, அரசியற் பிரச்சினைகளைத் தத்துவார்த்த நோக்கிலே ஆழமாக அணுக முற்படுகின்றன.

(இ)ஈழத்தின் ஆரம்பகாலச் சிறுகதை எழுத்தாளர்கள் பலரும் பாரிய அரசியல், சமூக, பொருளாதாரக் கருத்துக்களைச் சிறுகதை வடிவத்திலே கூறமுடியாது போகவே நாவலிலக்கிய முயற்சியிலே ஈடுபடுகின்றனர்.

(ஈ)ஈழத்தின் ஆரம்பகால எழுத்தாளர்களுக்கு முன்னோடியாக மணிக்கொடிக் குழுவினர் விளங்கியபோதும், 1950ஆம் ஆண்டின் பின்னர் ஈழத்துப் புனைகதை இலக்கியம் தனித்துவமான, புரட்சிகரமான ஒரு பாதையை வகுத்துக்கொண்டது.

(உ)ஈழத்துப் புனைகதைகளிலே சமுதாயச் சித்திரிப்பின் அடிப்படையிலேயே பேச்சுவழக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

(ஊ)1960ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் ஈழத்திலிடம் பெற்ற மரபுப் போராட்டம், ஈழத்துக்குத் தனியானதோர் இலக்கியப் பாரம்பரியம் உண்டென்பதையும் பிரதேச மண்வாசனை இலக்கியங்களின் இன்றியமையாத பண்பு என்பதையும் உணர்த்திற்று. அது தொழிலாள வர்க்கத்தினரின் ஆக்க இலக்கியப் பிரவேசத்துக்கு வழிவகுத்தது. ஈழத்துப் புனைகதைகளிலே பேச்சுவழக்குப் பிரயோகத்தின் இன்றியமையாமையை விளக்கியதோடு. தற்கால ஈழத்துப் புனைகதைகளின் தத்துவார்த்த நோக்கிலான வளர்ச்சிக்கும் அது வித்திட்டது.

மூன்றாவது இயலிலே பின்வரும் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.

(அ)பேச்சுவழக்கானது தேசியரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும், கிராமிய மட்டத்திலும், இனம், சாதி, தொடர்பு முறைமை, தொழிலடிப்படையிலும் இடத்திற்கிடம் வேறுபடுகின்றது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மலைநாடு, தென்மாகாணம், மன்னார், முல்லைத்தீவு, கொழும்பு ஆகியவற்றின் பிரதேசக் கிளைமொழிகள்பற்றி ஆராயப்பட்டுள்ளன.

(ஆ)மேலே குறிப்பிட்ட பிரதேசக் கிளைமொழிகளின் ஒலியமைப்பு வேறுபாடுகள், பொருள்மாற்றம், செந்தமிழ்ச் சொற்கள், பிறமொழிச் சொற்கள் பற்றி ஓரளவு ஆராயப்பட்டுள்ளன.

(இ)மன்னார், முல்லைத்தீவு, கொழும்புப் பிரதேசக் கிளைமொழிகளின் சிறப்பியல்புகளை விரிவாகத் தரவல்ல ஆதாரங்கள் போதிய அளவு கிடைக்காமையினாலே, அவைபற்றிய ஆய்வும் சுருக்கமாகவே அமைந்துள்ளது.

நான்காவது இயலிலே பின்வரும் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.

(அ)கதைநிகழ் களத்திற்கேற்பப் புனைகதையின் பேச்சு வழக்கும் வேறுபடும்.

(ஆ)கதைப் பொருளின் தன்மைக்கேற்ப அக்கதையிலே இடம்பெறும் பேச்சுமொழி வேறுபடும்.

(இ)ஈழத்துப் புனைகதைகள், இக்கட்டுரையிலே துப்பறியும் புனைகதைகள், வரலாற்றுப் புனைகதைகள், மேல்மட்ட உணர்வுப் புனைகதைகள், மினைஉணர்வுப் புனைகதைகள், மண்வாசனைப் பாங்கான புனைகதைகள் என வகுக்கப்பட்டு ஒவ்வொரு வகைப் புனைகதையின் பேச்சுவழக்கும் தனித்தனியே ஆராயப்பட்டுள்ளது.

(ஈ)துப்பறியும் புனைகதைகளினதும் வரலாற்றுப் புனைகதைகளினதும் பேச்சுவழக்குகள் செந்தமிழ்ப் பாங்கானவையென்பதும், மேல்மட்ட உணர்வுப் புனைகதைகளினதும், மிகைஉணர்வுப் புனைகதைகளினதும் பேச்சுவழக்குகள் செந்தமிழ்ச் சொற்களும் பேச்சுவழக்குச் சொற்களும் விரவி வருவன என்பதும். மண்வாசனைப் பாங்கான புனைகதைகளினதும் பேச்சு வழக்கு இயல்பாக அமைந்துள்ளது என்பதும் எடுத்துக்காட்டுக்களுடன் நிறுவப்பட்டுள்ளன.

(உ)ஈழத்து இலக்கிய கர்த்தாக்கள் பலரும், செம்மையான வகையிலே புனைகதைகளிலே பேச்சுவழக்கினைப் பயன்படுத்தத் தவறியுள்ளனர். இதற்கான காரணங்களாகப் பின்வருவன எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

1. மொழியின் இருவழக்குப் பண்பு: புனைகதைகளிலே பாத்திர உரையாடல்கள் பேச்சுவழக்கிலும்,
விவரணப் பகுதிகள் செந்தமிழிலும் அமைகின்றன. இவ்விருவகை நடையையும் ஆசிரியர்கள்
பயன்படுத்தும் போது, அவை ஒன்றையொன்று பாதிக்கின்றன.

2. பேச்சுவழக்கினைச் சீராகக் கையாளவேண்டுமென்ற ஆர்வம் எழுத்தாளர்களிடையே இல்லை
மண்வாசனை இலக்கியம் படைக்க முனைந்த எழுத்தாளர் சிலர். பேச்சமொழியைப் பயன்படுத்தும்
வகையிலே சிரத்தையற்றவர்களாகவே காணப்படுகின்றனர். பேச்சு வழக்கிலான குறித்த ஒரு
சொல்லையே வௌ;வேறு விதமாகப் பயன்படுத்துவது இவர்களின் சிரத்தையின்மையை
புலப்படுத்துகின்றது.

3. ஒலியமைப்பு வேறுபாடுகள்: தமிழ்மொழியைப் பொறுத்தவரையிலே, பேச்சொலிகள் யாவற்றுக்கும்
இன்னும் எழுத்துருவம் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனாற் குறித்த சில சொற்களை எழுத்தாளர்கள்
பலரும் வௌ;வேறுவிதமாகப் பயன்படுத்துகின்றனர்.

4. உபதேசங்கள், தத்துவங்கள் மேடைப்பேச்சுத் தொடர்பாக ஏற்படும் முரண்பாடுகள்: சாதாரண
பேச்சுவழக்கினைப் பயன்படுத்தும் பாத்திரங்களும், உபதேசங்கள் செய்யும்போதும் தத்துவங்கள்
கூறும் போதும் மேடைப்பேச்சுகளை ஆற்றும்போதும் செந்தமிழையே பயன்படுத்துகின்றன. பிரக்ஞை
பூர்வமாகப் பேச்சுவழக்கினைப் பயன்படுத்த வேண்டும் எனக் கருதும் எழுத்தாளர்களும் மேற்
கூறப்பட்ட சந்தர்ப்பங்களிலே செந்தமிழையே கையாண்டு வருகின்றனர்.

நான்காம் இயலின் முடிவிலே, இதுவரை ஈழத்துப் புனைகதைகளிலே செம்மையான வகையிலே பேச்சுவழக்கானது பயன்படுத்தப்படவில்லை என்பதும், இதுபற்றிய புதிய கோட்பாடு ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

உசாத்துணை நூல்விபரப் பட்டியல்
அருணாசலம், க., “ஈழத்திலே தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்”
(பதிப்பிக்கப்படாத ஆய்வுக் கட்டுரை) பேராதனைப் பல்கலைக்கழகம்.

அசோகா, மண்டூர்., கொன்றைப் பூக்கள், தாய்நாடு பதிப்பகம், கொழும்பு, 1976.

இல்கையர்கோன், வெள்ளிப் பா சரம், ஸ்ரீ சண்முகநாத அச்சகம், யாழ்ப்பாணம், 1962.

இலக்குமணன் செட்டியா வளரும் தமிழ் பாரி நிலையம் சென்னை, 1966.

இளங்கீரன், நீதியே நீ கேள், பாரி நிலையம், சென்னை, 1952

…………….. தினகரன், 14 – 01 – 1963

இளமுருகனார், சோ., செந்தமிழ் வழக்கு, தமிழ்ப் பாதுகாப்புக் கழக வெளியீடு 18,

இராசரத்தினம், வ. அ., கிரௌஞ்சப் பறவைகள், வீரகேசரிப் பிரசுரம், கொழும்பு, 1975

கருணாகரன், கி., சமுதாய மொழியியல், பாரி நிலையம், சென்னை, 1975

கணபதிப்பிள்ளை, க., “ஊருக்கொரு பேச்சு”, இளங்கதிர், 1946 – 50

கதிர்காமநாதன், செ., கொட்டும்பனி, கொழும்பு, 1968

கந்தசாமி, அ. ந., தினகரன், 02 – 02 – 1963

கந்தையா, வி. சீ., இராமநாடகம், கத்தோலிக்க அச்சகம், மட்டக்களப்பு, 1969

கணேசலிங்கம், செ., போர்க்கோலம், பாரி நிலையம், சென்னை, 1969

கோகிலம் சுப்பையா, தூரத்துப் பச்சை, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1964
மறுபிரசுரம்: வீரகேசரி வெளியீடு, கொழும்பு, 1973

கைலாசபதி, க., ஒப்பியல் இலக்கியம், பட்டாளிகள் வெளியீடு, சென்னை, 1969

சதாசிவம், ஆ., “ஒரு மொழிக்கு ஒரே இலக்கணம்”, தினகரன், 05 – 02 – 1963

சற்குணம், ம., “மட்டக்களப்புத் தமிழகத்திற் சிங்கள வழக்கு”, இளங்கதிர், 1955-56

சண்முகம், ஐ., கோடுகளும் கோலங்களும், அலைவெளியீடு. யாழ்ப்பாணம் 1976

சண்முகதாஸ், அ., நமது மொழியின் இயல்புகள், பாவலர் தெ. அ. துரையப்பாபிள்ளை
நினைவுப் பேருரை – 2, மகாஜனக் கல்லூரி, தெல்லிப்பழை 1976

………………….. “குழந்தை மொழி” பசறைத் தமிழ் வித்தியாலய மலர், பசறை,
1976.

………………….. “ஈழத்து நாடக வரலாற்றில் ஒரு தமிழ்ப் பேராசிரியர்” இளங்கதிர்
இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கம், பேராதனை,
1965-69 “ஆக்க இலக்கியமும் மொழியியலும்”, மல்லிகை,
ஆகஸ்ட், 1976

………………….. “ஆக்க இலக்கியமும் மொழியியலும்”, ஆக்க இலக்கியமும்
அறிவியலும் (பதிப்பாசிரியர்: அ. சண்முகதாஸ்) யாழ்ப்பாண
வளாகத் தமிழ்த்துறை வெளியீடு, யாழ்ப்பாணம், 1977)

சிவத்தம்பி, கா., நாவலும் வாழ்க்கையும் தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1978

………………….. “சொல்லிலக்கணம் சுட்டும் சமூக உற்பத்தி உறவுகள்”,
வானமாமலை மணிவிழா மலர், சென்னை, 1978

………………….. “இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் ஈழத்தின்
தமிழிலக்கிய வளர்ச்சியும்”, புதுமை இலக்கியம், தேசிய
ஒருமைப்பாட்டு எழுத்தாளர் மகாநாட்டு மலர், 1975

சிவநேசச் செல்வன், ஆ., “ஈழத்துத் தமிழ் நாவல்களின் தோற்றம்”, ஈழத்து தமிழ் நாவல்
நூற்றாண்டு ஆய்வரங்குக் கட்டுரை, இலங்கைப் பல்கலைக்கழகம்,
யாழ்ப்பாணம், 1977

சீனிவாசன், ரா., மொழியியல், பாரி நிலையம், சென்னை, 1960

சுப்பிரமணியம், நா., ஈழத்துத் தமிழ் நாவல் நூல் விவரப் பட்டியல், நூலகம்,
இலங்கைப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாண வளாகம், 1976

………………………. ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம், முத்தமிழ் வெளியீட்டுக்
கழகம், யாழ்ப்பாணம், 1978

சுப்பிரமணியம், ச., “இதுதானா தமிழ் மரபு”, தினகரன், 05 – 01 – 1963

செல்வநாயகம், வி., தமிழ் இலக்கிய வரலாறு ஸ்ரீ லங்கா அச்சகம், யாழ்ப்பாணம்
1965

செங்கை ஆழியான், வாடைக்காற்று, வீரகேசரி வெளியீடு, கொழும்பு, 1973

………………… பிரளயம், வீரகேசரி வெளியீடு, கொழும்பு, 1975

………………… காட்டாறு. வீரகேசரி வெளியீடு, கொழும்பு, 1977

………………… முற்றத்து ஒற்றைப்பனை, சிரித்திரன் பிரசுரம், யாழ்ப்பாணம், 1972

செந்திநாதன், கனக., ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி, அரசு வெளியீடு, கொழும்பு,
1964

…………………… வெண்சங்கு, யாழ். இலக்கியவட்ட வெளியீடு, யாழ்ப்பாணம், 1967

சொக்கலிங்கம், க., ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி, முத்தமிழ் வெளியீட்டுக்
கழகம், யாழ்ப்பாணம், 1977

………………….. “காலம் மாறிவிட்டது”, தினகரன், 05 – 01 – 1963

டானியல், கே., போராளிகள் காத்திருக்கின்றனர் வீரகேசரி வெளியீடு, கொழும்பு
1975.

…………………. பஞ்சமர், தாரகை வெளியீடு, யாழ்ப்பாணம், 1972

டொமினிக் ஜீவா, தண்ணீரும் கண்ணீரும் தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1960

…………………. தினகரன், 14 – 01 – 1963

தனஞ்செயராசசிங்கம், ச., யாழ்ப்பாணப் பேச்சுவழக்கில் சொல்லும் பொருளும்” இளங்கதிர்,
1967 – 68

…………………. “பேச்சுத் தமிழில் இலக்கிய வழக்கு”, இளங்கதிர் 1965 – 65

தெளிவத்தை ஜோசப்., காலங்கள் சாவதில்லை, வீரகேசரி வெளியீடு, கொழும்பு, 1974

தொல்காப்பியம் (புலியூர்க்கேசிகள் தெளிவுடையுடன்) பாரி நிலையர், சென்னை,
1964

நவசோதி, க., “மட்டக்களப்பு வழக்குத் தமிழர்”, மட்டக்களப்புத்ட தமிழாராய்ச்சி
மகாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை, 1976

நடராசா, மட்டுநகர்., “செந்தமிழ்ச் சாயல் தழுவிய அந்திய மொழிச் சொற்கள்”.
இளங்கதிர் 1. 49 – 50

நடராசன், கே. வி., யாழ்ப்பாணக் கதைகள், யாழ் இலக்கிய வட்ட வெளியீடு,
யாழ்ப்பாணம், 1965

நுஃமான், எம்.ஏ., “ஈழத்துத் தமிழ் நாவல்களின் மொழி”, தமிழ் நாவல் நூற்றாண்டு
ஆய்வரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை, யாழ்ப்பாணம், 1977

நன்னூல் (ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரால் புதுக்கியது) ஆறுமுகநாவலர் வி.
அச்சகம், சென்னை, 1966

பாலசுந்தரம், இ., “மட்டக்களப்புப் பேச்சுத் தமிழிலே சிதைந்த வழக்குகள்”
இளங்கதிர் 1967 – 68

பாலமனோகரன், நிலக்கிளி, வீரகேசரி வெளியீடு, கொழும்பு, 1973

புதுமைப் பண்டிதன், “ஓடும் சாக்கடை நீருமல்ல மரபு”, தினகரன், 08-12-1962

பெனடிக்ற் பாலன், யோ, சொந்தக்காரன், பாரி நிலையம், சென்னை, 1968

பொன்னுத்துரை, எஸ்., வீ அரசு வெளியீடு, கொழும்பு, 1966

மனோகரன், து., “ஈழத்துத் தமிழ் நாவல்களிற் கதைத் தலைவன் பாத் பண்பு”
இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகத் தமிழ்
முதுமாணிப் பட்டத்திற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை, 1978

முத்துச் சண்முகன், இக்காலத் தமிழ், சீயோன் பதிப்பகம், மதுரை, 1967

………………… இக்கால மொழியியல், திருவருள் அச்சகம், மதுரை, 1971

முத்துலிங்கம். அ., அக்கா, பாரி நிலையம், சென்னை, 1964

முருகபூபதி, லெ., சுமையன் பங்காளிகள், 1975

யேசுராசா. அ., தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும், ஆசிரியரின்
வெளியீடு, யாழ்ப்பாணம், 1974

யோகநாதன், செ., ஒளி நமக்கு வேண்டும், மலர் வெளியீடு, மட்டக்களப்பு, 1973

வரதராசன் மு., மொழி வரலாறு, திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்
பதிப்பகம், சென்னை, 1944

வித்தியானந்தன், சு., தமிழர் சால்பு (சங்க காலம்) தமிழ் மன்றம், கண்டி. 1954

………………….. மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள், கண்டி, 1962

………………….. அலங்காரரூபன் நாடகம் கத்தோலிக்க அச்சகம், மட்டக்களப்பு,
1962

வீரமாமுனிவர், பரமார்த்தகுரு கதை

வேலுப்பிள்ளை, ஆ., தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும் சென்னை, 1969

ஹம்சா, யோனகபுர, “திக்குவல்லையின் வரலாற்றுப் பின்னிணைப்போடு
பொருளாதாரப் பங்களிப்பு” மல்லிகை, பெப்ரவரி, 1976

ஹம்சா, எஸ்.அய்.எம்., “திக்குவலையின் பேச்சுத்தமிழும் படைப்பிலக்கியப்
பிரவேசமும்”. மல்லிகை, பெப்ரவரி, 1976

ஊர்மிளா, அன்பே என் ஆருயிரே, வீரகேசரி வெளியீடு, கொழும்பு.

ளுயnஅரபயனயளஇ யு.இ “ளுழஅந யுளிநஉவள ழக வாந வுயஅடை ளுpழமநn in ளுசi டுயமெய”
Pசழஉநநனiபௌ ழக வாந வுயஅடை ஐஏ வா ஐவெநசயெவழையெட வுயஅடை
ஊழகெநசநnஉநஃ ளுநஅiயெசஇ ஏழட ஐஐ ழேஎ. 6வா 1974

……………….. “வுhந Phழழெடழபல ழக ஏநசடியட குழசஅள in உழடடழஙரயைட ஊநலடழn வுயஅடை”இ
ருnpரடிடiளாநன Ph. னு. வாநளளை ருniஎநசளவைல ழக நுனiனெரசபாஇ 1972

……………….. “ளுநியசயவழைn ழக ளுசi டுயமெய வுயஅடை கசழஅ வாந ஊழவெiநெவெயட வுயஅடை”இ
வுயஅடை ஊiஎடைணையவழைn எழட. 1. ழே.2இ வுயஅடை ருniஎநசளவைலஇ வுயதெயஎரச.
1983

ளூயnஅரபயஅpடைடயiஇஆ.இ “யு வுயஅடை னுயைடநஉவ in ஊநலடழn”இ ஐனெயைn டுiபெரளைவiஉளஇ எழட. 23இ 1962

ளுரளநநனெசையதயாஇ ளு.இ “யு னுநளஉசிவiஎந ளுவரனல ழக ஊநலடழn வுயஅடை (றiவா ளிநஉயைட சநகநசநnஉந
வழ துயககயெ வுயஅடை)இ ருnpரடிடiளாநன Ph. னு. வாநளளை. யுnயெஅயடயi
ருniஎநசளவைலஇ 1967

ளுவநiநெச புநழசபந. “டுiபெரளைவiஉள யனெ டுவைநசயவரசந”இ டுiபெரளைவiஉள யவ டுயசபநஇ ஏiஉவழச
புநடடயநெண டுவன.இ டுழனெழnஇ 1971

ளுவயடinஇ து.ஏ.இ ஆயசஒளைஅ யனெ வாந Pசழடிடநஅள ழக டுiபெரளைவiஉளஇ ஆழளஉழற. 1954

ஏயனெசநலளஇ து.இ டுயபெரயபநஇ(நுபெடiளா வுசயளெடயவழைn) டுழனெழn. 1951

ஊhசளைவழிhநச ஊயனெறநடடஇ “ஐடடரளழைn யனெ சுநயடவைல”இ யு ளுவரனல ழக வாந ளுழரசஉநள ழக Pநநவசலஇ
டுழனெழn.

ணுஎநடநடிடை இ மு.இ “ளுழஅந குநயவரசநள ழக ஊநலடழn வுயஅடை”இ ஐனெழ – ஐசயnயைn துழரசயெடஇ
ஏழட. 9.2.இ 1966

முத்தமிழ் வெளியீட்டுக் கழக வெளியீடுகள்
1. ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி
திரு. க. சொக்கலிங்கம், எம்.ஏ
(பிரதிகள் இல்லை)

2. ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
திரு. நா. சுப்பிரமணியம், எம்.ஏ.
(பிரதிகள் இல்லை)

3. தமிழியற் சிந்தனை
பேராசிரியர் சு. வித்தியானந்தன், Ph.னுஇ
விலை: ரூபா 12-00

4. கம்பராமாயணக் காட்சிகள்
இலக்கிய கலாநிதி
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
நூலகப் பதிப்பு: ரூபா 20-00

5. தமிழ்மொழி இலக்கண இயல்புகள்
கலாநிதி அ. சண்முகதாஸ்
(பிரதிகள் இல்லை)

6. சி.வை. தாமோதரம்பிள்ளை – ஓர் ஆய்வு நோக்கு
மனோன்மணி சண்முகதாஸ், எம்.ஏ.
சாதாரண பதிப்பு : ரூபா 25-00
நூலகப் பதிப்பு : ரூபா 30-00

7. தமிழர் திருமண நடைமுறைகள்
பதிப்பாசிரியர்:
பேராசிரியர் அ. சண்முகதாஸ். Ph.னு.
மனோன்மணி சண்முகதாஸ், எம்.ஏ.
விலை: ரூபா 35-00

8. ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
திரு. சி. வன்னியகுலம், எம்.ஏ
சாதாரண பதிப்பு: ரூபா 25-00
நூலகப் பதிப்பு: ரூபா 30-00