கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  மலரும் நினைவுகள்  
 

வரதர்

 

மலரும் நினைவுகள்

வரதர்

விற்பனை உரிமை :

பாரி நிலையம்

184, பிராட்வே, சென்னை - 600 108.

முதற்பதிப்பு : ஜுன் 1996

(ஊ)

விலை ரூ 30 - 00

Title : Malarum Ninaivugal
Subject : Articles of Past Recollections
Authoor : T.S. VARATHARAJAN
No. of. Pages : 168
Types : 10 point
Paper : Creamwove 10.5 kg.
Binding : Duplex Board
Price : Rs. 30 - 00
Pubilshers : KUMARAN PUBLISHERS
79,1 st Street , Kumaran Colony,
Vadapalani, Madras - 600026.
Printers : Chitra Printo Graphy, Madras - 14


இலங்கையில் கிடைக்குமிடம்
ப+பாலசிங்கம் புத்தகசாலை
340, செட்டியர்தெரு, கொழும்பு - 11

முகவுரை

1993

யாழ்ப்பாணத்தில் போர் நடந்து கொண்டிருக்கிறது. காலத்திற்கேற்ற விதமாக மக்களின் வாழ்க்கையும் ஏதோ ஒருவிதமாக நடந்து கொண்டிருக்கிறது.

அந்த நெருக்கடி வாழ்க்கையிலும் “மல்லிகை’’ வெளிவந்து கொண்டிருக்கிறது.

மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா ஒரு நாள் என்னைச் சந்திக்கிறார்.

“கன நாளாய் நீங்கள் ஓண்டும் எழுதவில்லை. ஏதாவது எழுதுங்கோவன்’’ என்கிறார்.

போர்க்காலச் சூழ்நிலையில் வழமையான வாழ்க்கையைத் தவறவிட்டிருந்த நான் “என்னைத்தை எழுத……………….’’ என்று சலித்துக் கொள்கிறேன்.

“ எதை வேணுமெண்டாலும் எழுதுங்கோ …………… உங்கடை இளமைக்கால நினைவுகள் எதையாவது எழுதலாமே!’’ என்று அடி எடுத்துத் தருகிறார் ஜீவா.

“பார்க்கலாம்…………. ’’ என்று நான் பதில் சொல்லிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறேன்.

அன்றிரவு.

“இளமைக்கால நினைவுகள்’’ என்று ஜீவா எடுத்துக் கொடுத்த அடி நெஞ்சில் அவை மோதுகிறது.

எனக்கு “ஆனா’’ சொல்லித் தந்த ஆசிரியரின் நினைவு கனவு போல வருகிறது. “தீவாத்தியார்” என்று தலைப்பிட்டு எழுத தொடங்குகிறேன். ஒரு சிறிய கட்டுரை எழுதிக் கொடுப்பதே திட்டம்.

எழுதிக் கொண்டுபோக

இளமைக்கால நினைவுகள் தொட்டனைத் தூறும் மணற்கேணியாயின.

அவை ஒரு கட்டுரையில் நிற்பதாக இல்லை. தொடர்ந்து எழுதினேன். மல்லிகையின் பதினைந்து இதழ்களில் அவை தொடர்ந்து வெளிவந்தன.

மல்லிகை வாசகர்களிடமிருந்து மனம் நிறைந்த பாராட்டுகள் கிடைத்தன.

50 – 60 ஆண்டுகளுக்கு முந்திய மக்களின் வாழ்வியல், இன்றைய இளைஞர்களுக்குப் புதுமையாக இருந்தது, முதியவர்களக்கு ஒரு சுகமான மீட்டலாக அமைந்தது.

இந்தக் கட்டுரைகளைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட வேண்டுமென்று கணிக்கக் கூடிய பல நண்பர்களிடமிருந்து வேண்டுகோள் கணிக்கக் கூடிய பல நண்பர்களிடமிருந்து வேண்டுகோள் வந்தது. மல்லிகை ஜீவா தாமே வெளியிட வேண்டுமென்று விரும்பினார். யாழ்ப்பாணத்தில் நிலைமை மிக மோசமாகிக் கொண்டிருந்ததால் உடனடியாக எதையும் செய்ய முடியவில்லை.

இந்த நிலையில்தான் நான் வெறுங்கையோடு கொழும்புக்கு வரவேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.

“கை கொடுக்க’’ இங்கே நண்பர்கள் இருந்தார்கள்.

எனது இனிய நண்பர் “ஈழத்துச் சோமு என்ற திரு. நா. சோமகாந்தன் அவர்கள் இந்தக் கட்டுரைகளை நூலாக்கி வெளியிட்டுவிட வேண்டுமென்று முற்பட்டார். எந்த ஒரு அலுவலிலும் அவர் முற்பட்டுவிட்டால், அதன் நிறைவைக் கண்டுதான் ஓய்வார். செயல்வீரர்.

ஈழத்துத் தமிழ் உலகுக்கு இன்றைக்கும் பெருமை தேடித்தந்து கொண்டிருப்பவர் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள். இளமைக் காலம் தொடக்கம் என் தரத்தை அவர் அறிவார். அவர் சிறப்பை நான் அறிவேன். பேராசிரியரின் சிறப்புரை இந்த நூலின் கணிப்பை ஒருபடி உயர்த்தியிருக்கிறது.

இந்த நூல் வெளியிட்டிருக்கும் குமரன் பப்பிளிசேர்ஸ் திரு. செ. கணேசலிங்கன், ஈழத்தின் தவைசிறந்த நாவலாசியர். இப்போது தமிழகத்தில் காலூன்றி நிற்கிறார். இவரும் என் மதிப்புக்குரிய நண்பரே.

நண்பர் வேலணை வீரசிங்கம் அவர்கள் நூல் வெளிவருவதில் எடுத்துக்கொண்ட அக்கறை பிரதானமானது.

திரு. ஆர். பி. ஸ்ரீ தரசிங் தமது தந்தையாரைப்போலவே எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் முன் நிற்பவர்.

இவ்விதம் எனது உற்ற நண்பர்கள் இந்த நூலை வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள். அவர்கள் என் நெஞ்சில் இருக்கிறார்கள்.
- வரதர்

“மலரும் நினைவுகளுக்” கான முன்னுரை

வரதர்

இலக்கிய வரலாற்று நிலைநின்ற
ஓர் அறிமுகக் குறிப்பு

கார்த்திகேசு சிவத்தம்பி

“மலரும் நினைவுகள்’’ என்னும் இந்நூல், வரதர் என்னும் ஈழத்து நவீன தமிழிலக்கிய முன்னணி எழுத்தாளர் தமது இளமைக்கால யாழ்ப்பாணத்தை “மீள் சித்தரிப்பு” ச் செய்யும் ஒரு முயற்சியாகும்.

இலக்கிய வரலாறாசிரியர்களிலும் பார்க்க, சமூக வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பெரிதும் பயன்படப்போகும் இந்நூல், முதலில், டொமினிக் ஜீவாவின் “மல்லிகை’’ இதழ்களில் 1991 – 4 க்காலப் பகுதியிலே கட்டுரைத் தொடராக வெளிவந்ததாகும்.

இந்த வருடம் (1996) தனது எழுத்திரண்டாவது வயதை எட்டும் (1924) தியாகர் சண்முகம் வரதராசர், ஆகிய “வரதர்’’ ஈழத்தின் தமிழிலக்கிய வரலாற்றில் விடுபடமுடியாத முக்கியத்துவமுடையவராவர்.

ஈழத்திலக்கிய வரலாற்றில் வரதருக்குரிய முக்கியத்துவக்கான இடம் மூன்று அமிசங்களிடியாக வருவது, இவர்,

ஐ. ஈழத்துச் சிறுகதையாசிரியர்களுள் முக்கியமான ஒருவர்.

ஐஐ. ஈழத்து நவீன தமிழிலக்கிய வரலாற்றின் ஒரு முக்கிய நிறுவனமாக விளங்கும் “மறுமலர்ச்சி’’ இயக்கத்தின் ஸ்தாபக அங்கத்தவர்களுள் ஒருவர்.

ஐஐஐ ஈழத்துத் தமிழிலக்கியத்தின் முக்கிய பிரசுரகர்த்தருள் ஒருவர்.

வரதரின் முக்கிய சிறுகதைகள் ஈழத்தின் தமிழர் நிலைப்பட்ட அனுபவங்களை மிகுந்த உணர் திறனுடன் பதிவு செய்துள்ள படைப்புகளுக்குள், இடம் பெறுவன. 1940 இதிலிருந்தே சிறுகதை எழுதி வந்துள்ள வரதர், ஐம்பதுகளின் பிற்கூற்றில் ஏற்பட்ட இலக்கிய உத்வேக வளர்ச்சியின் பொழுது தனது படைப்பாளுமையைக் “கற்பு’’ “வீரம்’’ போன்ற தமது சிறுகதைகள் மூலம் பதிவு செய்துள்ளார். இவரது சிறுகதைத் தொகுதியான கயமை மயக்கம் 1960இல் வெளிவந்தது. அத்தொகுதியில் இடம்பெறும் “கற்பு’’ எனும் சிறுகதை. 1956 இனக்கலவரத்தின் பொழுது கற்பழிக்கப்பட்ட தனது மனைவியை ஏற்றுக்கொள்ளும் கோயிற்ப+சகர் (அக்கதையின் பிரதான ஆண்பாத்திரம் ஒரு ப+சகர் என்றே நினைக்கிறேன்) மனத்திண்மை பேசப்படுகிறது. இந்தச் சிறுகதை இலக்கிய விமர்சனங்கள் முதல் சமூகவியலாளர் வரை பலரால் எடுத்துப் பேசப்படுவதாகும்.

மனித அவலவேளையில் ஏற்படும் விழுமியச் சிதைவு, மிகுந்த நுண்ணுணர்வுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சமூகப் பாங்கான எழுத்துக்களால், இவர் சமூகத்தின் பொதுவான “முற்போக்கு” ச் செல் நெறிக்கு ஆதரவு நல்கினார். இதன் காரணமாக இவர் முற்போக்குச் சக்திகளின் ஆதரவாளராகக் கருதப்பட்டார். இலக்கியம் பற்றிய ஒரு சமூக நிலைப்பார்வைக்கு இக்கண்ணோட்டம். பெரிதும் உதவிற்று.

வரதரின் “கதை கூறும் பாங்கு’’ அவதானிக்கப்பட வேண்டியத. களத்தை அமைத்து அந்தப் பின்புலத்தில் மனித இயக்கங்களை எடுத்துக் காட்டும் முறைமை இவருடையது. கதை கூறுபவரின் ஆளுமையோடு “இவர்’’ இணைந்து நிற்பார்.

“மறுமலர்ச்சி’’ எனும். சஞ்சிகை ஆரம்பித்த இலக்கிய ஆர்வலர் குழுவினர் வரதருக்கு முக்கிய இடம் உண்டு வரதரும். அ. செ. முருகானந்தனம் “மறுமலர்ச்சி’’ யின் இணை ஆசிரியர்களாக விளங்கினர். “மறுமலர்ச்சி இயக்கம் 1942 இல் தொடங்குகின்றது. அது “மறுமலர்ச்சி’’ ச் சஞ்சிகையை நடத்திற்று. ஏறத்தாழ மூன்று வருடகாலம் “மறுமலர்ச்சி’’ வெளிவந்தது. பின்னர் 1948 இல் தொடக்கப் பெற்றுச் சிலகாலம் நடத்தப் பெற்றுப் பின்னர் நின்றுபோயிற்று.

ஈழத்தின் நவீன தமிழிலக்கிய வளர்ச்சியில் “மறுமலர்ச்சி’’ச் சஞ்சிகைக்கு ஒர முக்கிய இடம் உண்டு.

ஏறத்தாழ 1920 களிலிருந்து படிப்படியாக முளையிட்டு வளர்ந்து கொண்டிருந்த நவீன ஈழத் தமிழிலக்கியத்தின் வரலாற்றில் ஒரு இலக்கியம் பற்றிய ஒரு குறிப்பிட்ட கருத்து நிலையோடு தொழிற்பட வந்த முதலாவது இயக்கம், மறுமலர்ச்சி இயக்கமாகும். இதில் முக்கிய இடம் வகித்தோர் நாவற் குழிய+ர் நடராசன், ச. பஞ்சாட்சரசர்மா, அ. செ. முருகானந்தன், ச. வேலுப்பிள்ரளை, சு. இராசநாயகன் அ. ந. கந்தசாமி, தி.ச. வரதராசன் முதலியோராவர். இவர்களின் இலக்கியக் கருத்துநிலை பிரதியை மையமாகக் கொண்டது என்பது புலனாகின்றது.

இவர்கள் பாரதி வழிவந்த இலக்கிய உத்வேகத்தையே தமது பிரதான தளமாகக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து 1952 இல் முழுதான சமூகக் கூடப்பாடுடைய, இலக்கியம் பற்றிய திட்டவட்டமான ஒரு கருத்து நிலையைக் கொண்டிருந்த இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மேற்கிளம்பியது.

மறுமலர்ச்சி இயக்கத்தின் தாக்கம் புகைகதையிலும் பார்க்கக் கவிதையிலேயே நன்கு தெரியவந்தது. ஈழத்தின் தமிழ்க்கவிதை வளர்ச்சியில் மறுமலர்ச்சி இயக்கம் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். அ. ந. கந்தசாமி, மஹாகவி க. இ. சரவணமுத்து (சாரதா) முதலியோர் இந்தத்திருப்பு முனை வழியாகவே வந்தனர். இவர்களுள் அ.ந. கந்தசாமி மறுமலர்ச்சி நோக்கின் தர்க்க ரீதியான அடுத்த கட்டமாகிய முற்போக்கு இலக்கிய வாதத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

சமூக மாற்றம் பற்றி இந்நூலில் வரும் குறிப்புகளைப் பார்க்கும்போது, வரதர் பழைமை பேண் வாதியல்லர் என்பது தெட்டத் தெளிவாகின்றது.

சமூக வளர்ச்சிப் போக்கின் வரலாற்றுத் தாக்கத்தை உணர்ந்து கொள்ளும் இந்தத் திறன்தான் வரதரைத் தொடர்ந்து சமூக இளைபுள்ள ஓர் எழுத்தாளராக வைத்திருக்கிறது என்று துணிந்து கூறலாம்.

வரதரின் இலக்கிய முக்கியத்துவம் அவரது இலக்கியப் பிரசுர முயற்சியாலும் அழுத்தம் பெறுபிக்றது. தொழின் முறையாக, வரதர், அச்சக உரிமையாளராவர். ஆனந்தா அச்சம் என்பது இவரது அச்சகத்தின் பெயர். 1960, 70 களில் இவரின் “வரதர் வெளியீடு;’’ பண்டிதமணி சி. கணவதிப்பிள்ளையின் “இலக்கிய வழி’’ முதலில் வரதர் வெளியீடாகவே “வள்ளி’’ என்பதும் வரதர் வெளியீடே. வித்துவான் பொன். முத்துக்குமாரன், செங்கையாழியான், கைலாசபதி, சாந்தன், சொக்கன் ஆகியோரது சில நூல்களும் “வரதர் வெளியீடு’’ களாக வந்தன. (எனது நூலொன்றும் வெளிவருவதற்கான ஓர் ஆயத்தம் இருந்தது. எனது கவனயீனத்தினால் அது நிறைவேறவில்லை)

வரதரின் முக்கிய வெளியீடுகளில் ஒன்று. “வரதரின் பல குறிப்பு’’ என்பதாகும். ஈழத்துத்தமிழர், தமிழலக்கியம் பற்றிய ஒரு தொகுப்பு ஆவணமாக (னுசைநஉவழசல) அது விளங்கிற்று. 1970 களில் இது வெளிவந்தது. நான்கு பதிப்புக்களின் பின்னர் வெளிவரவில்லை.

வரதர் இன்று ஈழத்துத்தமிழ் எழுத்தாளரிடையே மதிப்பு மிக்க ஒரு “மூத்தோனாக’’ விளங்குகிறார்.

அவரிடத்துக் காணப்படும் நேர்மை நோக்கு மிக முக்கியமான அம்சமாகும்.

அந்த நேர்மையினை இவர் தனது இளவயது நினைவுகளை மீட்டும் முறைமையிலே நன்கு தெரிகிறது. தமது இளமைக் கால நினைவுகளை எடுத்து கூறிய போது எழுத்தாளர் சிலரிடத்துக் காணப்படாத “இலக்கிய உண்மை’’ இந்த எழுத்தாளர்களில் நன்கு பளிச்சிடுகின்றது.

“மலரும் நினைவுகள்’’ என்ற இந்த நூல் 1920. 30 களில் யாழ்ப்பாணம் இருந்த நிலைமையினை நன்கு காட்டுகின்றது. இவர் சித்தரிக்கும் பகுதி யாழ்ப்பாணத்தின் வடக்கு, வடமேற்குப் பகுதிகளாகிய வலிகாமப் பகுதியாகும்.
யாழ்ப்பாணக்குடா நாட்டின் கிழக்குப் பகுதியான வடமராட்சியிலும் 1930 களில் ஏறத்தாழ இந்த நிலைமையே காணப்பட்டது. வாழ்க்கைமுறை, பயன்பாட்டுப் பொரும்கள் ஆகியவற்றில் சில முக்கிய வேறுபாடுகள் காணப்பட்டன. எனினும் இந்த நூலில் வரும் விவரணத்தை 1920 – 30 யாழ்ப்பாணத்தின் விவசாய வாழ்க்கை நிலைபற்றிய (Pநயளயவெ டகைந) உண்மையான சித்திரிப்பு எனக் கொள்ளலாம்.

யாழ்;ப்பாணம் பற்றிய வரலாற்றாய்வுகளை நோக்கும் பொழுது, குறிப்பாக நவீன காலத்தை நாம் சில பெரு மனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளாகவே கண்டு வந்துள்ளோம் என்பது தெரிய வருகின்றது. இதனால் 18,19,20 நூற்றாண்டுகளின் சமூக அசைவியக்கம் பற்றிய வரலாற்றுத் தரவுகளை நாங்கள் முதன்மைப்படுத்தவில்லை. இத்தகைய நூல்களில் வரும் தரவுகள் சமூக வரலாற்றுக்கான மதிப்பு மிக்க ஆவணங்களாகும். இவற்றை நன்கு பயன்படுத்தி உரிய சமூக வரலாற்றை எழுதிக் கொள்ளலாம்.

இந்த வகையில் டானியல், ஜீவா, ரகுநாதன், தெணியான், போன்றோரின் படைப்புக்கள் ஒரு “வெட்டுமுக’’ த்தைத் தந்துள்ளன. வரதரின் இந்த விவரணம் யாழ்ப்பாணத்துச் சமூக அமைப்பின் அதிகாரப்படி முறைகளையும் (ர்நைசவயசஉhநைள) அவற்றில் ஏற்பட்ட மாற்றங்களையும் காட்டுகின்றன.

படைப்பிலக்கியகர்த்தர்கள் உலகமெங்கும் வரலாற்று விவரணங்களுக்கு உதவியுள்ளனர்.

வரதருடைய இந்த ஆக்கம். அந்த வரிசையிலே வைத்து நோக்கப்படவேண்டியது.

கொழும்பு கார்த்திகேசு சிவத்தம்பி
9.5.1996 முது தமி;ழ்ப் பேராசிரியர்
யாழ். பல்கலைக்கழகம்

கலை, இலக்கியத் துறையில் வரதரின் பங்களிப்பு மிகக் குறைவாகவே தோன்றலாம். ஆயினும் அவர் தமது சிறுகதைகளில் ஆணித்தரமாக பல சமுதாய விழுமியங்கள் பற்றிய தன் கருத்துக்களைப் பதித்துள்ளார். அவற்றையும் மேலேயுள்ள கலாநிதியின் அறிமுகக் குறிப்பில் காணலாம்.

“வரதர் கதைகள்’’ என்ற சிறுகதைத் தொகுதியில் வரும் “வெறி’’ என்ற கதை தேர்தல் ஊட்டும் வெறியை மட்டும் கூறி நிற்பதல்ல. அதன் முடிவில் கதை மாந்தர்களை ஆசிரியர் கையாளும் சிறப்பையும் காட்டி நிற்கும். கதையை இன்பியலாக முடிக்க வேண்டும் என எதிர் பார்ப்பது மட்டுமல்ல முற்போக்காக அமைக்க வேண்டும். என்பதையும் வரதர் மறைமுகமாகக் கதை மூலம் தெரிவிக்கிறார். கதை மாந்தரை, நிகழ்ச்சிகளை, சம்பவங்களை எழுத்தாளனே ஆக்கப+ர்வமாக உருவாக்கி கதையை நகர்த்திச் செல்கிறான் என்ற அடிப்படை உண்மையையும் அக்கதையின் இறுதிப்பகுதி வெளிப்படுத்தி விடுகிறது.

வரதர் தமது எழுத்து வேலைகள் முடித்து விட்டதாக எண்ணாது மேலும் தமது படைப்பாற்றவை வெளிப்கொணர வேண்டும் என விரும்புகிறேன்.

சென்னை செ. கணேசலிங்கன்
23.6.96

பொருளடக்கம்

1. எங்கள் கிராமம் 17
2. புன்னாலை பொன்னாலையானது 26
3. சாதிகள் 33
4. கடந்துபோன கற்காலம் 42
5. வீடுகள், மாடுகள் 47
6. சைவம் 59
7. அப்பா 66
8. பிரசித்தகாரன் 75
9. விளையாட்டுகள் 80
10. பேய் பிசாசுகள் 86
11. நீர் விளையாட்டு 91
12. புகழ்பெற்ற வைத்தியர்கள் 94
13. அப்பாவின் கடை 100
14. தீ வாத்தியார் 128
15. பெரிய பள்ளிகூடம் 131
16. இந்தியப் பயணம் 141
17. உணவு 152
18. உடையும் நகையும் 159
1. எங்கள் கிராமம்

1928 ஆம் ஆண்டாக இருக்கலாம். அப்போது எனக்கு வயது நான்கு.

நான் பிறந்து வளர்ந்த கிராமம் பொன்னாலை. இது யாழ் குடாநாட்டின் வடமேற்கு மனையில் அமைந்திருக்கிறது.

மிகச் சிறிய கிராமம்… அப்போது மிக ஏழைக் கிராமம் என்று கூடச் சொல்லலாம்.

ஏழைக் கிராமமாக இருந்த போதிலும் அதற்கு ஒரு செல்வாக்கும், நல்ல வரலாறும் உண்டு. அந்தப் பெருமையைத் தந்தது. பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயம். அந்தச் சுற்று வட்டாரமெங்கும் மிகவும் புகழ் வாய்ந்த ஆலயம். ஏதோ ஒரு காலத்தில் அந்தக் கோயிலுக்கு பிரமாண்டமான கட்டிடங்களும், ஏழு வீதிகளும் இருந்ததாகச் சொல்வார்கள். கடைசியாக ஒல்லாந்தர் அந்தக் கோயிலை இடித்து, சங்கிலித் தொடராக ஆட்களை நிறுத்தி அந்தக் கற்களைச் சங்கானைக்கும் வேறு இடங்களுக்;கும் கொண்டு சென்று வேறு கட்டிடங்களைக் கட்டியதாகச் சொல்வார்கள்.

எனக்குத் தெரியத்தக்கதாக இப்போதுள்ள வயிரக்கல் மூலத்தானமும், முன் பண்டபமும், உள் வீதியைச் சுற்றி மதிலும், அந்த மதிலைச் சுற்றி வெளி வீதியும் இருந்தன, கோபுரம் கட்டுவதற்கு அடித்தளம் இடப்பட்டிருந்தது.

சிறு வயதில் எங்களுடைய விளையாட்டுக் களம் இந்தக் கோயிலும் அதன் வீதிகளும் தான்.

கோயில் மண்டபங்களின் மேல் ஏறி ஒழிந்து விளையாடியதும், தேர் முட்டியிலிருந்து பந்தயம் போட்டுக் குதித்ததும், மேற்கு வீதியில் “தாச்சி’’ விளையாடியதும், மாரி காலத்தில் கோயில் கேணியில் ஒல்லி கட்டி நீந்திப் பழகியதும் எனக்கு இப்போது நினைவுக்கு வந்து நெஞ்சை நிறைக்கின்றன. திரும்பக் கிடைக்க முடியாத அற்புதமான, மகிழ்ச்சியான காலம் அது.

பொன்னாலைக் கோயில் அந்தக் காலத்தில் வருடம் பதினொரு மாதங்களும் வெறிச்வோடிக் கிடக்கும்.

ஆவணிமாதத்தில் பதினேழு நாட்கள் திருவிழா நடக்கும் போது மட்டும் கோயில் கலைகட்கும் எல்லா நாட்களுமல்ல. சில திருவிழா நாட்களில் சாமி தூக்கவும் ஆளில்லாமல், தற்காலிகத் தேனீர்க் கடையின் முன்னால் சீட்டு விளையாடிக் கொண்டிருப்பவர்களைக் கூட்டிக் கொண்டு போகவேண்டியிருக்கும்.

ஏழாத்திருவிழா, பன்னிரண்டாந்திருவிழா என்றால் “கூத்து’’ நடக்கும் கூத்து என்றால் ஏழாந் திருவிழாவன்று கொட்டகைக் கூத்து. கொட்டகை போட்டு, அதனிடையே மேடை அமைத்து, “சீன்’’ கட்டி “பெற்றோல்மாக்ஸ்’’ வெளிச்சத்தில் நடக்கும் ஏழாந் திருவிழாவுக்கு ஆண்டுதோறும் “லங்கா தகனம்’’ நடகத்தான். இணுவில் நாகலிங்கம் இராமனாக வருவார்.

“ஐயோ என் ஜானகியை
அரக்கன் கொண்டு
போயினானே………’’

என்று அவர் பாடிக் கொண்டு தலையில் கைவைத்துப் புலம்புவது என் கண்முன் இன்றும் தெரிகிறது. கடைசியில் ராவணனாகவும் அவரே பத்துத் தலைகளைத் கட்டிக் கொண்டு வருவார்.

நெல்லியடி ஆழ்வாப்பிள்ளை சீதை, பப+ன் செல்லை யாவும் முக்கியம். அனுமானாக வந்தவர் யாரென்று நினைவில்லை. ஆனால் அவர் மேடையில் ஒரு சால்வையை விரித்;துவிட்டு, அதையே, கடலாகப் பாவனை செய்து கொண்டு பாய்கிறேன் கடலை………. என்ற பாட்டுடன் தொங்கிப் பாய்ந்தது நினைவிருக்கிறது. (இந்த லங்கா தகனம் நாடகத்திலும் வேறு பல நாடகங்களிலும் 1940 மட்டில் பொன்னாலை வரகவி பி. கே. கிருஷ்ணபிள்ளை பங்குபற்றி “போட்டோ போட்டிகள்’’’ நடத்தியது மிக பிரசித்தம். அவரைப் பற்றிப் பின்னால் எழுதுகின்றோன்.)

பன்னிரண்டாந் திருவிழாவில் நடப்பது கொட்டகைக் கூத்தல்ல. அது மக்கள் கூட்டத்தினிடையே நடக்கும். பொன்னாலைக் கோயில் கூத்து என்றால் சுமார் பத்து ரதல் சுற்றாடலிலுள்ள மக்களெல்லாம் வந்து குவிவார்கள். ஒற்றை மாட்டுத் திருக்கல் வண்டிகளும், வில் வண்டிகளும் இரட்டை மாட்டு வண்டிகளும், வில் வண்டிகளும் இரட்டை மாட்டு வண்டிகளும் கோயிலின் பக்கத்தேயுள்ள வளவுகளில் நிரம்பிவிடும்.
அந்தக்காலத்தின் வானொலி. தொலைக் காட்சி, சினிமா கூட இல்லை மக்களுக்கு முக்கிய பொழுது போக்கு கோயில் திருவிழாக்கள்தான்.

திருவிழாக்களிலும் மேளக் கச்சேரி, சதிர்க் கச்சேரி என்ற சின்னமேளம், கூத்து முதலிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றால் மக்கள் திரண்டு கூடுவார்கள்.

மேளக் கச்சேரியை விட சின்ன மேளத்துக்குக் கூட்டம் அதிகமாக வரும். நேரத்தோடு வந்து அங்காங்கே படுத்துத் தூங்கியவர்களெல்லாம் மத்தளச் சத்தம் கேட்டதும் துள்ளி எழுந்து மண்டபத்துக்கு வந்துவிடுவார்கள். றலிசெற், பண்டிருட்டி செற் என்ன அந்த நாளில் மிக பிரபலம். மக்களுக்கு அவர்களுடைய நடனச் சிறப்புகள் முக்கியமல்ல.

ஏதோ அந்தப் பெண்கள் அலகரித்துக் கொண்டு சபை நடுவே துள்ளிக் குதிப்பதும், அவர்கள் பாடும் பாட்டுகளும் தான் முக்கியம்.

‘பண்டித மோதிலால்
நேரைப் பறிகொடுத்தோமே
பறிகொடுத்தோமே. நெஞ்சம்
பரிதவித்தோமே – (பண்டித)

என்று ஒரு பாட்டு

“வாங்கித் தர வேண்டும்
கதராடை
அடுத்த தீபாவளிக்கு
எங்கம்மாவுக்கும் எனக்கும்’’

- வாங்கி


என்று ஒரு பாட்டு எல்லாம் தென்னிந்திய இறக்குமதிகள், மக்களுக்கும் பாட்டின் பொருள் முக்கியமல்ல. இசையும், பாடுபவரும்தான் முக்கியம்.

பன்னிரண்டாந் திருவிழாக் கூத்து – “கிருஷ்ண லீலா’’ மக்கள் மத்தியில் நடக்கும். மேடையோ, சீனோ எதுவும் கிடையாது.

என்னுடைய இன்றைய நினைப்பில் பெரிய சன சமுத்திரம், நடுவில் பாதை விட்டு இரு பிரிவாக மக்கள் அமர்ந்திருப்பார்கள். ஒரு பக்கம் ஆண்கள், மறுபக்கம் பெண்கள், நடுவே இருக்கும் பாதையில் தான் கூத்து நடக்கும்.

திருவிழா ஆரம்பிக்கும் முன் கோயிலில் முன் மண்டத்தில் கூத்தின் முதற் காட்சி நடைபெறும். ப+தகி என்ற அரக்கி வருவதும் அவளைக் கண்ணன் கொல்வதும் அங்கே நடக்கும். ப+தகியாக மூளாய் பெரியதம்பி என்ற நடிகர் சபையில் வந்ததும் “ப+’’ என்று பெரியதாக வாயால் ஊதுவார். நெருப்புப் பொறிகள் பறக்கும் (அப்போது அது எனக்கு மிகுந்த அச்சம் தந்த காட்சி. அது ஏதோ குங்கிலிய விளையாட்டு என்று பிற்காலத்தில் தெரிந்து கொண்டேன்.

சாமி புறப்பட்டு வந்து தெற்கு வீதி தாண்ட முன்னர்லுள்ள கேணியடியில் கூத்தின் இரண்டாம் காட்சி நடைபெறும். கோபிகைகளின் துணிகளைக் கண்ணன் கவர்கிற காட்சி. (இது அவ்வளவாக என் நினைவில் இல்லை)

வடக்கு வீதியில் கூத்தின் கடைசிக் காட்சி நடைபெறும். கம்சனைக் கண்ணன் கொல்கிற காட்சி. கழிவுபுரம் பண்டாரி என்பவர் கம்சன் வேடத்தில் வந்து மிக அட்டகாசமாகப் பாட்டுகள் பாடி வாசனங்களும் பேசுவார். கண்ணனாக வந்தவர் பெயர் நினைக்கவில்லை. யாரோ அன்னாவி என்று சொல்லுவார்கள். ஒரு சால்வையைக் கயிறு போல உருட்டி அதை இரண்டு பேர் வழியின் குறுக்காக பிடித்திருக்க, கயிற்றின் ஒரு பக்கத்தில் கண்ணனும் மறுபக்கத்தில் கம்சனும் நின்று துள்ளிக் குதித்து சண்டையிடுவதாகப் பாவனை செய்வார்கள்.

கடைசியில் கண்ணன் கயிற்றைத் தள்ளிக் கொண்டு மறுபக்கம் போய் கம்சனை விழுத்திக் கொல்லுவார்.

இவ்வளவுடன் கூத்து முடியும். பொழுதும் விடியும்.

இதெல்லாம் 1930 ஆண்டளவிலான கதை. 1940 மட்டில் பொன்னாலைக்குப் புகழ் சேர்க்க ஒரு அருமையான கவிஞர் தோன்றுகிறார். “கவிஞர்’’ என்பதை விட, “நாடகக் கலைஞர்’’ என்றுதான் அவர் மக்களிடையே பிரசித்தம் பொன்னாலைக் கிருஷ்ணன் என்றால் அந்தக் காலத்தில் தெரியாதவர்கள் இல்லை. “பப+ன் கிருஷ்ணன்’’ என்றும் சொல்லுவார்கள். ஊரில் எல்லாரும் “அண்ணாவி யார்’’ என்று அன்போடு அழைப்பார்கள். அவர் அவ்வப்போது அச்சிடுவித்து வெளியிட்ட சிறு சிறு பாட்டுப் புத்தகங்களில் இஃது மூளாய் திரு. கணபதிப்பிள்ளை அவர்களின் சீடன், பொன்னாலை வரகவி பே, க. கிருஷ்ணபிள்ளை அவர்களால் இயற்றப்பட்டது’ என்று அச்சிடப்பட்டிருக்கும்.

இந்தக் கிருஷ்ணபிள்ளை ஆங்கிலம் கற்று அந்த நாளைய வழக்கப்படி மலேசியா சென்று அங்கே உத்தியோகம் பார்த்தார். அங்கே போயும் நாடகப் பைத்தியம் அவரை விடவில்லை. அங்கே அவர் ஒரு சிறிய புகைவண்டி நிலையத்தின் பொறுப்பாளராக இருந்ததாகவும் ஒரு நாள் ஒரு நாடகத்தில் பங்கு பெறுவதற்காக, புகை வண்டி வரும் போது வளையத்தைக் கொடுக்கும்படி அங்கிருந்த சிற்றூழியரிடம் சொல்லிவிட்டு இவர் நாடகம் நடிக்கப் போனதாகவும், அன்று புகைவண்டி வந்தபோது சிற்றூழியன் தூங்கி விடவே, கடமை தவறிய குற்றத்துக்காக கிருஷ்ணபிள்ளையின் வேலை போய்விட்டதாகவும் சொன்னார்கள்.

வேலை போனபின் கிருஷ்ணபிள்ளை தமது ஊராகிய பொன்னாலைக்குத் திரும்பிவிட்டார். அதன் பிறகு தமது புலமையை யாழ்ப்பாணம் எங்கும் பரப்பினார்.

பொன்னாலைக் கிருஷ்ணனை எனக்கு நன்றாகத் தெரியும். ஒரு கவிஞனுக்குரிய முத்திரைகள் அவரிடம் நிறைய இருந்தன.

எந்தப் பெரிய கொம்பன் எதிர்ப்பக்கத்தில் இருந்தாலும் அவர் நியாயத்தின் பக்கமே தலை நிமிர்த்திப் பேசுவார்.

குடிப்பது தமது பிறப்புரிமை, என்பது போல நன்றாகக் குடிப்பார். ஆனால் குடியின் கொடுமைகளைப் பற்றி மக்களிடையே பிரசாரம் செய்வார்.

“”மதுவெனும்
குடிவகையே – கெடு
மதியொடு தரும்
பகையே – அட
மனிதனே
மகா புனிதனே – உந்தன்
மனைவியுடைய மனதும்
கெடுக்கும்’’ (மதுவெனும்)

இப்படி ஒரு பாட்டு.

பொன்னாலைக் கிருஷ்ணன் ஒரு சிறந்தத சந்தக் கவி. மக்களுக்கு நலன் தரும் கருத்துக்களை மிக ஆழமாக எடுத்துச் சொன்ன புலவர் அவர்.

நியாயம், நேர்மை, நீதிக்காக வாதாடிய கவிஞர் அவர், மனித நேயம் கொண்டவர்.

அவருடைய கவிதையில் சொற் சுவைக்கு ஒர உதாரணம் :

அவரது வீட்டில் ஒருமுறை களவு போய்விட்டது. ஏழைக் குடும்பம், கல் அடித்தும், புல் செதுக்கியும், வெயிலில் அலைத்தும் சேர்ந்த பொருள் போய் விட்டது. கவிஞர் பாடுகிறார்.

“கல்லடித்துப் புற்செருக்கிக்
கானலுண்டு கடுகளவாய்
மெல்ல மெல்லச் சேர்ந்தநகை
மிக்கரா யிரத்தினையும்
கொள்ளை கொண்ட
கள்வர்களும்
கொண்டநகைச்
செல்வர்களும்’’
…………………….
…………………….

கடைசி வரி நினைக்கவில்லை. எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் படித்த பாடல், ஆயினும் சொற்சுவை, பொருட்சுவை இன்னும் என் நெஞ்சில் பதிந்திருக்கிறது!

அற்புதமான கவிஞர் அவர்!

எங்கள் பனைமரத்தின் மீது அவருக்கு அபரா நம்பிக்கை தோளில் ஒரு பனை ஓலைப் பெட்டி தொங்கும் (அதற்குள் அவருடைய பாட்டுப் புத்தகங்கள்.)

“பனைப்பாட்டு அல்லது தாலபுரக்கீதம்’’ என்று ஒரு கவிதை நூலே எழுதியிருக்கிறார்.

பனை வேரிலிருந்து, பனை ஓலைவரை பனையிலிருந்து பெறக்கூடிய பயன்களைப்பற்றி அந்நூலில் விரிவாகவும், விளக்கமாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அந்நியப் பொருட்களின் மோகத்தினால் மக்கள் பனையைக் கைவிட்டு விட்டார்கள்’’ என்று கவிஞர் அழுதிருக்கிறார். (பனை அபிவிருத்திச் சபையோ அல்லது யாழ்ப்பாணத்து அபிமானிகளோ அந்தப் பனைப்பாட்டு நூலைத் தேடி கண்டுபிடித்து அச்சிட்டு வெளியிட்டால் அது காலத்துக்கேற்ற செயலாக அமையும் கவிஞரையும் கௌரவித்ததாக இருக்கும்.)

இந்தக் கவிஞரின் அருமையைச் சரியான காலத்தில் நான் உணரத் தவறியமைக்காக இப்போது வருந்துகிறேன். அவருக்கு எவ்வளவோ செய்திருக்க வேண்டும்.

எனது ஊரின் பெயர் “பொன்னாலை’’ என்று இப்போது வழக்காவிட்டால்.

ஆனால், நான் சிறுவனாக இருந்த காலத்தில் அதைப் பொன்னாலை என்று சொல்வதில்லை. “புன்னாலைச் சாமி’’ என்ற சொற்கள் அதிகமாக வழங்கும் “உந்தப் புன்னாலைச் சாமியாரறிய’ என்று சத்தியங்கள் (பொய்ச் சத்தியங்களும்) செய்வது சாதாரணம். சில முக்கிய எழுத்து வழங்;குகளில் மட்டும் “பொன்னாலை’’ என்று எழுதப்படும்.

எனக்குக் கொஞ்சம் அறிவு வந்த வயதில் இந்தப் புன்னாலை என்ற பெயர் ஏதோ எங்கள் ஊரைத் தரக்குறைவாக மதிப்பிடுவது போலத் தோன்றிற்று. எங்கேயாவது “புன்னாலை’’ என்று எழுத்தில் காணப்பட்டால் மனதுக்;குள் எனக்குப் பொல்லாத கோபம் வரும்.

“புன்னாலை’’ யை “பொன்னாலை’’ ஆக்குவதற்காக அப்போது நான் செய்த ஒரு முயற்சி சற்றே வேடிக்கையானது!

2. புன்னாலை
பொன்னாலையானது!

யாழ்ப்பாணத்துப் பட்டணத்துக்கு பத்து மைல் தூரம் சைக்கிளில் போகிற வயது எனக்கு வந்துவிட்ட காலம்.

சொந்தமாகச் சைக்கிள் கிடையாது. என்னுடைய நண்பர்களிடமும் இல்லை. சைக்கிள் வாங்கும் அளவுக்கு நாங்கள் பணக்காரர்கள் அல்லர்.

பக்கத்து ஊரான மூளையில் சைக்கிள் கடை இருந்தது. “சைக்கிள் கடை’’ என்றால், சைக்கிள் விற்கும் கடையல்ல. சைக்கிள் வாடகைக்கு விடுமிடம். முதல் ஒரு மணித்தியாலத்துக்கு 25 சதமும், அடுத்த ஒவ்வொரு மணித்தியாலத்துக்கும் 15 சதமும் வாடகை என்று நினைவு. ஒரு இரவு முழுவதுக்கும் எடுத்தால் ஒரு ரூபா மட்டுமே வாடகை. அப்படியான ஒரு இரவுக் கட்டணத்தில் சைக்கிளை வாடகைக்கு எடுத்துத்தான் நான் சைக்கிள் ஓடப் பழகினேன். என்னோடு இன்னொரு நண்பரும் சேர்ந்து பழகினால் சைக்கிள் வாடகை ஆளுக்கு ஐம்பது சதம்.

ஒரு ப+ரணை இரவில் பொன்னாலைக் கோயிலுக்குப் பின்னாலுள்ள பரந்த வெளியில் சைக்கிள் ஓடிப் பழகத் தொடங்கியது : எங்களோடு முஸ்பாத்தியாகப் பொழுது போக்க வந்த பெரிய பையன் ஒருவன் என்னைச் சைக்கிளில் இருத்தித் தள்ளிக் கொண்டுபோய், பிறகு கையை விட்டது : நான் சைக்கிளோடு விழுந்தது : பழக்கிய ஆசானிடம் ஏச்சு வாங்கியது : குட்டுப்பட்டதும் : பிறகு கொஞ்ச நேரத்தில் பெடல் பண்ணப் பிடிப்பட்டதும் (ஆஹா என்ன உற்சாகம்) அந்தப் பரபரப்பில் “பிறேக்’’ பிடிக்கக் கை ஏலாமல் சிறிய மேட்டில் சைக்கிளில் இருத்தித் தள்ளிக் கொண்டு போய், பிறகு கையை விட்டது : நான் சைக்கிளோடு விழுந்தது : பழக்கிய ஆசானிடம் ஏச்சு வாங்கியது : சூட்டுப்பட்டது @ பிறகு கொஞ்ச நேரத்தில் பெடல் பண்ணப் பிடிபட்டதும் (ஆஹா என்ன உற்சாகம்) அந்தப் பரபரப்பில் “பிறேக்’’ பிடிக்கக் கை ஏலாமல் சிறிய மேட்டில் சைக்கிளை ஏற்றி விழுந்தது : அதனால் முழங்காளில் கல் அடித்து சிறு காயம் ஏற்பட்டது @ என்னுடைய ஆசான் இந்தக் காயத்துக்கு புழுதியை அள்ளித் தூவித் துடைத்து விட்டது – ஓ : எல்லாம் எவ்வளவு உற்சாகமான நினைவுகள்!

சைக்கிள் ஓடப் பழகியபின் வாரக் கடைசி நாட்களில் ஏழெட்டுப் பேராகச் சேர்ந்து கீரிமலைக்குச் சைக்கிளில் போவோம். கீரிமலையில் குளிப்பதைவிட, போகவரச் சைக்கிள் ஓடுவதே முக்கியமான காரியம்.

இரண்டுபேர் சேர்ந்து வாடகைச் சைக்கிள் எடுப்போம். யார் ஓடுவது என்பதில் போட்டி.

குறிப்பிட்ட சந்திவரை நீ ஓடு @ நான் பின்னுக்கு இருக்கிறேன். சந்தி வந்ததும் என்னிடம் ஓடத் தந்துவிட்டு நீ பின்னுக்கு இருக்க வேண்டும் என்ற ஒரு ஒப்பந்தம் ஓடிக் கொண்;டு போகிறவர் குறிப்பிட்;ட சந்திவந்தாலும் நிற்க மாட்டார். அதிக தூரம் சைக்கிள் நிற்கவில்லையென்று கண்டதும், பின் சீற்றிலிருந்து குதித்து இறங்கி சைக்கிளை இழுத்துப் பிடித்து நிறுத்தித்தான் ஓடுவார்.

அப்படிச் சைக்கில் ஓடுவதற்குப் போட்டி போட்ட வயது அது!

இப்போது!

“சைக்கிள் ஓடவா? நானா?

அப்படிச் சைக்கிளில் தான் போகவேண்டுமென்று நிர்ப்பந்தம் ஏற்பட்டாலும், “நான் பின்னுக்கு இருக்கிறேன், நீங்கள் உழக்கிக் கொண்டுபோய் விடுகிறீர்களா……..’’

காலம் மாறிவிட்டது. வயதும் போய்விட்டது!

அந்தக் காலத்தில் அடிக்கடி சைக்கிளில் யாழ்ப்பாணம் போவோம். முக்கியமாக “படக்காட்சி’’ (சினிமா) பார்ப்பது தான் நோக்கம்.

அதுவும் இப்படி இரண்டுபேர் பங்குபோட்டு வாடகைக்கு எடுத்த சைக்கிள்தான்.

ஓட்டுமடம் சந்திவரையும் “டபி’’ ளில் வருவோம். சந்தி வந்ததும் பின்னால் இருப்பவர் இறங்கி நடக்க வேண்டும். ஏன் என்றால், ஓட்டுமடம் சந்திக்குப் பிறகு “ரவுண்’’ வந்துவிடும். மின்சார விளக்குகள் எரியும்! ரவுனுக்குள் சைக்கிளில் “டபிள்’’ போகக்கூடாது என்று சட்டமாம். பொலிஸ்காரர் கண்டால் பிடித்த வழக்கு எழுதி விடுவார்களாம்.

சட்டத்துக்கு அந்த நாளில் எவ்வளவு மரியாதை! பயம்!

ஓட்டுமடம் சந்தியிலிருந்து படமாளிகை வரை சுமார் ஒரு மைல் தூரம் நடக்க வேண்டும். ஆனால் அது அவ்வளவு பெரிய விஷயமல்ல. “சிம்பிள்!’

படக்காட்சிக்கு நேரம் நெருங்கிவிட்டதென்றால் நடப்பதாவது@ சைக்கிளில் போகிறவருக்கு பின்னால் ஓடியே போய்ச் சேர்ந்து விடுவோம்!

ஓ!............ சொல்ல வந்த “புன்னாலை’’ யைப் “பொன்னாலை’’ ஆக்கிய விஷயம்………

நான் சைக்கிளில் யாழ்நகர் போகிறபோது, ஒவ்வொரு சந்தியிலும் நிற்கும் கைகாட்டி மரங்களில் “புன்னாலை இத்தனை மைல்’’ என்று எழுதியிருப்பதைப் பார்ப்பேன். Pரnயெடயi என்று ஆங்கில எழுத்துக்களில் மட்டுமே எழுதியிருக்கும். அந்தக் காலத்தில் அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்ட விஷயங்களெல்லாம் ஆங்கிலத்தில் தான் இருக்கும். அவற்றை விளங்கிக் கொள்ள வேண்டியது மக்களுடைய கடமை என்று அரசாங்கம் கருதிற்று.

இந்த Pரnயெடயi என்ற எழுத்துக்களைக் கண்டதும் என் மூளைக்குள் ஒரு அற்புதமான யோசனை தோன்றிற்று. அதில் இரண்டாவதாக உள்ள ரு என்ற எழுத்தின் மேற்பகுதியில் ஒரு சிறிய வளைவு போட்டுவிட்டால் அது “ழு’’ ஆகிவிடும் Pரnயெடயi (புன்னாலை) Pரnயெடயi (பொன்னாலை) ஆகிவிடும்!

என்ன அருமையான யோசனை! அதை எப்படியும் செய்து முடித்துவிட வேண்டுமென்று மனம் துருதுருத்துக் கொண்டேயிருந்தது எதையும் சாதிக்க முடியுமென்று நம்பி;க்கை. உடனே செய்து விட வேண்டுமென்ற துடிப்பு.

என்னுடைய யோசனையை சில நண்பர்களிடம் சொன்னேன். அவர்களும் மிக உற்சாகமாக ஆமோதித்தார்கள்.

ஒருநாள் ஏழெட்;டுப் பேராக யாழ்ப்பாணம் பட்டணத்துக்கப் படக்காட்சி பார்க்க போனோம்.

பாட்லிங்மணி, எஸ். எஸ். கொக்கோ நடித்த “மெட்ராஸ் மெயிலா –

ஆர். பி. லட்சுமிதேசி நடித்த “டூபான் குயி’ னா –

எஸ். ஆர். செல்வம் நடித்த வனராஜ கார்சன்’ என்ற டார்சான் படமா –

டி. ஆர். மகாலிங்கம் நடித்த “நந்தகுமா’ ரா.

எம். கே. தியாகராஜபாகவதர் சந்தானலட்சுமி நடித்த “அம்பிகாபதி'யா

- எந்தப் படமொன்று நினைக்கவில்லை.

(ஹே, காலையில் படித்த நூலின் பெயர் கூட மாலையில் நினைக்கவில்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பார்த்த படங்களும் அதில் நடித்த நடிகர்களின் பெயர்களும் நினைவிருக்கிறதா! ஓகோ என்ற என்றானாம்!

மினைக்கெட்டுப் பத்து மைல் தூரத்திலிருந்து யாழ்ப்பாணப் பட்டணத்துக்குப் படக்காட்சி பார்க்கப் போனால், றோயல் டாக்கீஸ் என்ற தகரக் கொட்;டகையில் முதலாம் காட்சியும், றீகல் தியேட்டரில் இரண்டாவது காட்சியுமாக இரண்டு படங்களைப் பார்த்துவிட்டுத்தான் திரும்புவோம்.

டிக்கட் கலரி சதம் 25.

அப்பொழுதெல்லாம் கிய+வரிசைக் கிராமத்தைப்பற்றி யாரும் கேள்விப்பட்டதுமில்லை!

கலரி டிக்கட் கொடுக்கும் இடத்துக்கு முன்னால் ஒரு பெரிய கும்பல் நிற்கும். அதற்குள் நுழைந்து சென்று டிக்கட் வாங்கி வருவது ஒரு பெரிய கலை! ஒருவர் எத்தனை டிக்கட்டுகளும் வாங்கலாம்.

எங்களில் உசாத்துணை ஒருவர் தன்னுடைய சேட்டைக் கழற்றி எங்களிடம் தந்துவிட்டு, வேட்டியைச் சுருக்கிக் கொடுக்கு கட்டுவார். (கொடுக்கா, அது என்ன என்று கேட்பவர்களும் இப்போது இருக்கக்கூடும்) ஆளுக்கு 5 சதவீதம் எங்கள் எல்லாரிடமும் வாங்கி அந்தப் பணத்தை ஒரு கையில் இறுகப் பொத்திக் கொண்டு, கும்பலின் ஊடே அவர் சரிந்து நெகிழ்ந்து உட்புகுவார். வேறு இரண்டு பேர் அவருக்கு உதவியாக (மற்றவர்கள் இடித்துப் பின் தள்ளாதபடி) பக்கத்தில் செல்வோம்.

இடி …….. நெரி………. தள்ளு……..

அவர் ஒருமாதிரி டிக்கட் கையில் பொத்திக்கொண்டு வந்து, ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு டிக்கட்டை கொடுப்பார். என்ன ஆச்சரியம்! ஒரு நாளாவது டிக்கட்டுகள் கூடிக் குறைந்ததில்லை!

இப்படி ஒரு தியேட்டரில் படம் பார்த்துவிட்டு, அது முடிந்ததும் அடுத்த தியேட்டருக்கு ஓடி, அங்கேயும் படம் பார்த்துவிட்டு வீடு திரும்பும்போது இரவு சாமம் தாண்டியிருக்கும்.

அன்று முன்னேற்பாடாக, நான் ஒரு சிறிய டின்னில் கொஞ்சம் கறுப்புப் பெயின்ரும், ஒரு சிறிய பிறஷ{ம் கொண்டு போயிருந்தேன்.

படம் முடித்து திரும்பி வரம்போது – நடுச்சாமத்தில் ஒவ்வொரு சந்தியிரும் நிற்போம். கைகாட்டி மரத்துக்கப் பக்கத்தில் அதைப் பிடித்துக்கொண்டு ஒருவர். நிற்பார். நான் அவர்மீது ஏறி நின்று Pரnயெடயi என்பதன் ரு வின் மேலே ஒரு வளைவை கறுப்பு மையினால் அழகாகப் போடுவேன். அந்த ரு என்ற எழுத்து “ழு’’ ஆக மாறிவிடும். Pரnயெடயi Pரnயெடயi ஆகிவிடும்! - இப்படியே யாழ்ப்பாணம் சுடுகாட்டாலடிச் சந்தியிலிருந்து ஆனைக்கோட்டை, மானிப்பாய், சண்டிலிப்பாய், சங்கானை, சித்தங்கேணி, சுழிபுரம் - எல்லாச் சந்ததிகளிலுமுள்ள கைகாட்டி மரங்களில் புன்னாலை, பொன்னாலை ஆகிவிட்டது.

சட்டத்துக்கு மாறான செயல்தானே?

ஒரு சட்டமறுப்புச் செய்த உற்சாகம் எங்களுக்கு

பெரிய சாதனை செய்து விட்ட திருப்தி!

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், நாங்கள் பெயர்ப்பலகை திருத்திய கொஞ்சக் காலத்துக்குப் பிறகு, அரசாங்கத்தின் வழக்கமான நடைமுறையின்படி அந்தக் கைகாட்டி மரங்களுக்குப் பெயின்ற் அடித்து ஊர்ப்பெயர்களையும் புதுப்பித்தார்கள்.

அப்போது –

பொன்னாலை என்று இருந்ததை புன்னாலை என்று மாற்றி எழுதவில்லை. பொன்னாலை என்றே எழுதினார்கள்.

பிற்காலத்தில் தமிழ்மொழிக்கும் சற்றே இடமளிக்க முன் வந்த அரசாங்கம், கைகாட்டி மரங்களில் ஆங்கிலத்தோடு தமிழிலும் ஊர்ப் பெயர்களை எழுத ஏற்பாடு செய்தது. அப்போதும் குறித்த கைகாட்டி மரங்களில் தமிழிலும் “பொன்னாலை’’ என்றே எழுதி வைத்தார்கள்.

அதன் பிறகு எங்கும் “பொன்னாவை’’ என்றே ஆகி விட்டது.

3. சாதிகள்

என்னைப் பற்றிச் சொல்ல முன் என்னுடைய தகப்பனாரைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். எங்கள் ஊரில் அவர் ஒரு கடை வைத்திருந்தார். அந்தக் கடை ஊரில் முக்கியமான ஒரு ஸ்தலம்.

அப்பாவையும் அவருடைய கடையையும் பற்றிச் சொல்ல முன் என்னுடைய ஊர் மக்களைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும்.

பொன்னாலை என்பது ஒர சிறிய கிராமம், ஏழைக் கிராமமாக இருந்தது என்று முன்பே சொல்லியிருக்கிறேன். இந்தக் கிராமத்தில் சுமார் 250 – 300 குடும்பங்கள் அப்போது இருந்தன.

அந்தக் காலத்தில் மக்களைப் பற்றிச் சொல்வதென்றால் அவர்கள் என்னை சாதி என்பது முக்கியம். ஒவ்வொரு ஊரிலும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சாதியார் வசிப்பார்கள்.

“நீ எந்தப் பக்கம்? (எந்தப் பகுதி)’ என்று கேட்டால், அவர் கிழக்குப் பக்கம் என்றால் இன்ன சாதி என்றும், தெற்குப் பக்கம் என்றால் இன்ன சாதி என்றும் - இப்படியே ஒவ்வொரு பக்கத்துக்கு இன்ன இன்ன சாதி என்று அவருடைய கிராமத்தைப் பற்றி தெரிந்தவர்கள் அறிந்து கொள்வார்கள்.

இந்ரியாவில் எந்த தாழ்த்தப்பட்ட சாதியினரும் தாங்கள் இன்ன சாதி என்று பகிரங்கமாகச் சொல்லிக் கொள்வார்கள். யாழ்ப்பாணத்தில், குறைந்த சாதிக்காரர் எனப்படுவோர் தங்கள் சாதியைப் பகிரங்கப்படுத்த விரும்புவதில்லை. அதனால்தான் இங்கே “நீ என்ன சாதி’’ என்று விசாரியாமல் நீ எந்தப்பக்கம்;’ என்று கேட்டு அறிந்து கொள்வார்கள்.

பொன்னாலையில் முக்கியமாக மூன்று சாதிகள் இருந்தன.

ஒன்று வேளாளர் இவர்களிலும் ஐந்தாறு குடும்பத்தினர் தாங்கள் உயர் சாதியென்றும் மற்றவர்கள் குறைவு என்றும் சொல்லிக் கொள்வார்கள்.

இரண்டாவது கோபியர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் கூட இவர்கள் வேளாளர்களைப் போல பொதுவாக எல்லாச் சமூக உரிமைகளையும் பெற்றிருந்தார்கள்.

மூன்றாவது நளவர்.

இந்த நளவர் என்ற சாதியைப் பற்றி ஒரு பல்கலைக் கழக மாணவன் ஆராய்ச்சி செய்யலாமென்று நினைக்கிறேன்.

இவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள். தீண்டத்தகாதவர்கள, ஒதுக்கப்பட்டவர்கள். முன்னேற முடியாதபடி அடக்கி வைக்கப்பட்டவர்கள்.

பின்தாங்கியே எங்கள் கிராம மக்களிடையே இவர்கள் மேலும் அதல பாதாளத்தில் பின் தங்கியிருந்தார்கள்.

இவர்களுக்கு சொந்தமான நிலம் புலம் இருந்ததில்லை. அயலூர்களிலிருந்து பெரிய வேளாளர்களுக்குச் சொந்தமான வரண்ட நிலங்களிலேதான் இவர்கள் குடியிருந்தார்கள்.
அதற்கு ஈடாக நிலச் சொந்தக்காரர்களுக்கு ஏதாவது அடிமை குடிமை வேலைகள் செய்வார்களென்று நினைக்கின்றேன்.

அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் கிணறுகளே கிடையாது. ஏதோ ஒரு கிணறு இருந்தது. அதுவும் உப்புத் தண்ணீர்.

நல்ல தண்ணீர் பெறுவதற்காக அவர்கள் வயல் பக்கப் போவார்கள். ஆனால், அங்கே உள்ள கிணறுகளில் இவர்கள் தண்ணீர் அள்ளக்கூடாது. யாராவது உயர்ந்த சாதிக்காரர் வந்து தண்ணீர் அள்ளி இவர்களுடைய மண் பானைகளில் ஊற்றி விடும்வரை காத்திருக்க வேண்டும்.

இவர்களுடைய தொழில் பொன்னாலையில், கல்வீடுகள் என்று பெயருக்கு இரண்டு மூன்று வீடுகள் மட்டும் இருந்தன. மற்றவையெல்லாம் மண்வீடுகளும், தென்னோலைத் தட்டி வீடுகளுமே.

நளவ சாதியினரிடையே மண் வீடுகள் கூட இல்லை எல்லாம் சிறு சிறு ஓலைக் குடிசைகளே.

அவர்கள் உயர் சாதியினரின் வீடுகளுக்குள்ளோ கோயில்களுக்குள்ளோ நுழையக்கூடாது. றோட்டுகள், ஒழுங்கைகளில் நடந்து போகலாம். அதுவும் மேல் சாதிக்காரரைத் தூரத்தே கண்டுவி;ட்டால், தலையிலோ, தோளிலோ இருக்கும் சால்லைத் துண்டை எடுத்து கக்கத்தில் வைத்துக் கொண்டு வேலி ஓரமாக வழிவிடுவார்கள்.

இந்த நிலையிலும் அவர்களுடைய பிள்ளைகள் பாடசாலைகளுக்குப் போக அனுமதியிருந்தது.

ஆனால், பாடசாலையில் மற்றப் பிள்ளைகளேல்லாம் வாங்குகளில் இருந்து படிக்கும்போது இவர்களுடைய பிள்ளைகள் கீழே மண் நிலத்தில்தான் இருப்பார்கள். ஆசிரியருடைய மேசையைச் சுற்றி நின்று மாணவர் பாடம் கேட்கும்போது இந்தப் பிள்ளைகள் ஒரு பக்கமாக ஒதுங்கியே நிற்பார்கள்.

பள்ளிக்கூடம் என்றதும் நினைவு வருகிறது. என்னுடைய அறிவுக்குச் சற்று முற்பட்ட காலத்தில், பொதுவாக எல்லாச் சாதியினரிலும் பல பிள்ளைகள் பள்ளிக்கூடம் போவது கிடையாது. அதிலும் ஒதுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

எனக்குத் தெரிந்த காலம் முதல் எல்லாப் பிள்ளைகளும் 14 வயது வரை கட்டாயமாகப் பள்ளிக்கூடம் போக வேண்டும் என்று சட்டம் இருந்தது. அப்படிப் போகாத பிள்ளைகளின் பெற்றோர் மீது வழக்குத் தொடரப்படும். அதற்கென்றே ஒரு உத்தியோகத்தரும் இருந்தார்.

இந்த வழக்குப் பயந்தே பலர் பிள்ளைகளைப் பாடசாலைகள் அனுப்பினார்கள்.

வீட்டிலோ வயலிலோ ஏதும் வேலையிருந்தால் அன்று அந்த மாணவன் பாடசாலைக்குப் போகமாட்டான்.

ஆசிரியர் கேட்டால் “வீட்டில் இன்ன வேலை’’ என்று பதில் சொல்வான். அவன் பொய் சொல்லாமலிருப்பதால், அது நியாயமான பதிலாக ஆசிரியரால் ஏற்றுக் கொள்ளப்படும்.

அதிகமானவர்கள் பத்து வயதிலேயே “அவனுக்கு வயதாகி விட்டது’’ என்றோ அவன் “வேலைக்குப் போகிறான்’ என்றோ படிப்பை நிறுத்தி விடுவார்கள்.

ஒழுங்காகப் படித்தால் 10 வயதில் ஐந்தாhம் வகுப்புக்கு வந்திருப்பான். அதற்கு மேல் படிக்க அநேகமான கிராமப் பாடசாலைகளில் வகுப்புகளும் இருக்கமாட்டா. பொன்னாலை, அ. மி. பாடசாலையிலும் 5ம் வகுப்புவரைதான் இருந்தது.

3ம்,4ம் வகுப்புப் படித்து விட்டாலே, “எழுதப் படிக்கப் பழகிவிட்டான். இனி என்ன உத்தியோகமா பார்க்கப் போகிறான் என்று படிப்பை நிறுத்தி எங்கேயாவது கடைகளில் வேலைக்கோ அல்லது வீட்டில் உதவியாகவோ வைத்து விடுவார்கள்.

பெண் பிள்ளைகள் என்றால் சொல்ல வேண்டியதில்லை. இனிப் பெரிய பிள்ளையாகி விடுவாள்’’ என்றும், “பெட்டைக்குப் படிப்பு எதற்கு? என்றும் படிப்பை நிறுத்தி விடுவார்கள்.

அந்தக் காலத்தில் 4ஆம் 5ஆம் வகுப்புகளுக்கு மேல் பெண் பிள்ளைகள் படிப்பது மிக அப+ர்வம்.

பள்ளிக்கூடம், படிப்புப் பற்றி, பிறகு – நான் படித்த விஷயம் வரும்போது சொல்கிறேன்.

இந்த நளவ சாதியைப் பற்றி யாராவது நிறைய ஆராய்ந்து எழுத வேண்டும். இவர்களிடையே கூட, பொன்னாலையில் இரண்டு பிரிவுகள் இருந்தனவாம். ஒரு பிரிவுக்கு “வாடை’’ என்று பெயர். மற்ற பிரிவுக்கு “சோளம்’’ என்ற பெயர்.

இயற்கையான காற்றுகளின் பெயர்களையே இவர்கள் தங்கள் பிரிவுகளுக்குப் பெயர் வைத்திருப்பது வியக்கத்தக்கதாக இருக்கிறது.

ஏதோ பெயருக்கு இரண்டு பிரிவுகள் இருந்தனவே தவிர, இவர்களிடையே எந்த வித்தியாசமும் - ஏற்றத் தாழ்வும் இருந்ததாகத் தெரியவில்லை.

இவர்களிடையே வழங்கிய பெயர்களும் சுத்தமான தமிழ்ப் பெயர்களாக இருந்தமை கவனத்துக்குரியது.

வேலன், கந்தன், முருகன், வெள்ளையன், நாகன், பெரியான், சின்னான், மற்றும் வள்ளி, தெய்வி, பொன்னி, சம்பரத்தி முதலிய பெயர்களெல்லாம் மற்ற மெல் சாதிக்காரர்களிடையே அருகிப்போய், அந்த நேரத்திலும் நளவ சாதியினரிடையே வழங்கியிருந்தன.

நாகரிகம் என்று கருதிக் கொண்டு மேல் சாதிக்காரர், வேலுப்பிள்ளை, முருகமூர்த்தி, வரதராசா, கந்தையா (ஐயா) என்று வால் சேர்த்து வைத்த பெயர்களை தாழ்வு சாதியினர் வைக்க அனுமதி இருந்திருக்காதென்று நினைக்கிறேன்.

இவர்களில் யாராவது சற்றே தலைதூக்கினால் - கல்வி கற்றால், பணம் சம்பாதித்தால், நாகரிகமாக வாழ்ந்தால், பெரிய சாதிக்காரர்களுக்குப் பொறுக்காது.

ஒரு கீழ் சாதிப் பயல் “தன்னுடைய நிலை’’ தவறி இப்படி உயருவது தங்களை அவமதிப்பதாகுமென்று சாதிமான்கள் நினைத்தார்கள்.

ஒரு சம்பவம் நினைவு வருகிறது.

அப்போது வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மிகப் பிரசித்தம்

பொன்னாலைக்கு சமீபமாக, சுழிபுரத்தில் விக்டோரியாக் கல்லூரி இருந்தது. இக் கல்லூரி உள்ளுர் தமிழ் மக்களாலேயே தாபிக்கப்பட்டது. ஆயினும் தங்களுடைய அரச விசுவாசத்தை வெளிப்படுமுகமாக விக்டோரியா மகாராணியின் பெயரை அக்கல்லூரிக்குச் சூட்டினார்கள் போலும்! அந்தக் காலத்தில் அரச விசுவாசம் மிக அதிகமாகவே இருந்தது. நான் படித்த நாலாம் வகுப்புப் புத்தகத்தில்,

“வாழ்க வாழ்கவே
ஜர்தாம் ஜார்ஜு
மன்னர் வாழ்கவே!

என்று ஒரு பாட்டு (பாடம்) இருந்தது.

பொன்னாலையின் இன்னொரு பக்கமாக சற்றுத் தொலைவில், வட்டுக்கோட்டையில் இருந்தது யாழ்ப்பாணக் கல்லூரி.

இந்த யாழ்ப்பாணக் கல்லூரி மிகப் பெரியது. அமெரிக்கன்;; மிஷைனரியாரால் நூற்றாண்டுகளுக்கு முன்பு தாபிக்கப்பட்டது. இலங்கை முழுவதம் கல்விமான்களிடையே மிகவும் பிரபலமானது. ஒரு பல்கலைக் கழகத்துக்கு உள்ள மதிப்பு இந்தக் கல்லூரிக்கும் இருந்தது.

அப்போதெல்லாம் இலவசக் கல்வி கிடையாது. வசதியுள்ள பணக்காரவீட்டுப் பிள்ளைகள் மட்டுமே அங்கே படித்தார்கள். வசதி குறைந்த பிள்ளைகள் ஊர்தோன்றும் இருந்த தமிழ்ப் பள்ளிகளில் படித்தார்கள். தமிழ்ப் பள்ளிகளை அமெரிக்கன் மிஷன் தாபனத்தாரும், அந்தந்த ஊரிலுள்ள சைவப் பெரியார்களும் நடத்தி வந்தார்கள். பின்னால் சைவ வித்தியாவிருத்திச் சங்க (இந்துப் போட்) தோன்றி ஊர் தோறும் பாடசாலைகளைத் தாபித்து அமெரிக்கன்மிஷனறிக்குச் சரியான போட்டியாக வளர்ந்தது.
யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி மட்டுமல்ல, மாணவரின் உடை. ஒழுங்குமுறை எல்லாவற்றிலுமே மிகுந்த கண்டிப்பு உண்டு.

உயர் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் “கோட்” போட்டுக் கொண்டுதான் வகுப்புக்கு வரவேண்டும் என்று கூடச் சட்டம் இருந்ததாம்!

மாணவர்களை ஆங்கில நாகரிகத்தில் வழிப்படுத்துவதிலும் இப்படியான கல்லூரிகள் அந்த நாளில் கண்ணாக இருந்தன.

இந்த யாழ்ப்பாணக் கல்லூரியில் நளவ இனத்தைச் சேர்ந்த ஒரு “பீயோன்’’ இருந்தார். கிறிஸ்தவர். கிருஸ்தவதானங்களில் உத்தியோகம் வழங்கும் போது தமது மதத்தவர்களுக்கே முன் வரிசை வழங்குவது அன்றைய வழக்கம்.

உத்தியோகத்துக்காக மதம் மாறியவர்கள் அக்காலத்தில் அநேகர்.

கிறிஸ்தவராக இருந்த படியால்தான் அந்த நளவ இனவாலிபருக்கு யாழ்ப்பாணக் கல்லூரியில் “பீயோன் வேலை கிடைத்திருக்குமென்று நம்புகின்றேன்.

இந்துக் கல்லூரியில் நளப் பிள்ளையைக் கிட்டவும் எடுத்திருக்க மாட்டார்கள்.

அந்தப் பீயோனுக்கு என்ன பெயர் என்று தெரியவில்லை. “நாச்சாண்டியன்’’ என்று ஊரில் சொல்வார்கள். “நாச்சாண்டியன்’’ என்பது இயற் பெயரா இடுகுறிப்பெயரா என்பதும் இன்றுவரை எனக்குத்தெரியாது.

இந்த நாச்சாண்டியன் பொன்னாலையிலிருந்த ஒரே ஒரு கிறிஸ்த நளவ குடும்பத்தில் திருமணம் செய்திருந்தார். (பொன்னாலையில் இன்னும் ஒரு கிறிஸ்தவக் குடும்பம் இருந்தது. அது வேளாளக் குடும்பம். இரண்டு குடும்பங்கள் மதத்தால் ஒன்றுபட்ட போதிலும் அவை இரண்டும் இரணண்டு துருவங்களாகவே இருந்தன. கிறிஸ்தவரானாலும் மேல் சாதிக்காரர் மேல் சாதிதான். கீழ்ச் சாதிக்காரர் அவர்களுக்குக் கிட்டவும் போக முடியாது!)

நாச்சாண்டியன் எங்களுர் நளவர்களைவிட வித்தியாசமானவராக இருந்தார். சுத்தமாக உடை அணிந்திருப்பார். வட்டுக் கோட்டையிலிருந்து பொன்னாலைக்கு சைக்கிளில் வந்து போவார்! (ஒரு நளப்பிள்ளை சைக்கிளில் போவதற்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும்!)

இப்படி ஒரு கீழ்சாதிக்காரன் தலை தூக்குவதைப் பெரிய சாதிக்காரர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

ஒரு நளப் பயல் இப்படிப் பெரிய சாதிமான்களைப் போல நடந்து தங்களை அவமதிப்பதாக அவர்கள் உண்மையிலேயே நம்பினார்கள்.

ஒருநாள் நாச்சாண்டியன் வட்டிக்கோட்டையிலிருந்து சைக்கிளில் வருகிறார். இவர்மீது சில நாட்களாகவே கண்வைத்திருந்த பெரிய சாதிக்கார வாலிபர் இருவர் அவரை வழிமறித்தார்கள். ஒரு “வீரன்’’ உதைத்த உதையில் நாச்சாண்டியன் ஒரு பக்கமும் சைக்கிள் ஒருபக்கமுமாக விழுந்தார்.

அதற்குப் பிறகு நாச்சாண்டியனைத் தூக்கி நிமிர்த்தி நிறைய “சாத்துப்படி’’ சாத்தினார்கள். அதன் பிறகு தூக்கிக் கொண்டு போடா என்று சைக்கிளைக் தூக்கிக் கொண்டு போகும்படி செய்தார்கள்.

அந்த வீரர் வாலிபர்களைப் பற்றி அப்போது ஊரிலே பலர் பெருமையாகப் பேசிக் கொண்டது நினைவிருக்கிறது.

அந்தப் பீயோன் சற்றே படித்தவர், கொஞ்சம் உலகம் தெரிந்தவர். “அவர் அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்திருக்கலாமே” என்று நினைக்கிறீர்களா!

அரசாங்கம் என்றால் யார்?

4. கடந்து போன கற்காலம்

கிராம மக்களைப் பொறுத்த மட்டில் விதானையார், அவருக்கு மேல் உடையார், அவருக்கு மேலே மணியகாரன். அவருக்கு மேலே அரசாங்க எஜன்டர் - இவர்கள்தான் அரசாங்கம்.

என்ன பிரச்சினையொன்றாலும் கிராம மக்கள் விதானை யாரிடம் தான் போக வேண்டும். மேற்கொண்டு பொலிசுக்குப் போவது, கோர்ட்டுக்குப் போவது எல்லாம் விதானையார் தீர்மானிக்க வேண்டிய விஷயம். – முக்கியமாக ஏழை மக்களைப் பொறுத்தமட்டில்!

இந்த விதானை, உடையார், மணியக்காரர் - இவர்கள் எல்லாருமே அரசாங்கத்தால் நியமிக்கப்பெற்ற உத்தியோகத்தர்கள். இவர்கள் நியமிக்கும் போது, இவர்களுடைய படிப்பு, ஊரில் இவர்களுக்குள்ள செல்வாக்குமே முக்கிய தகுதிகளாகக் கவனிக்கப்படும்.

கிராமத்தைப் பொறுத்த மட்டில் விதானையார் ஒரு சர்வாதிகாரி மாதிரி. விதானை என்றால் சாதாரண கிராம சேவகரல்லர். அவர் “பொலிஸ் விதானை! “அப்போதெல்லாம் “பொலிஸ் நிலையங்;கள் பட்டணங்களில் மட்டுமே இருக்கும். கிராமங்களில் பொலீசின் கடமையும் அதிகாரமும் விதானையாருக்குத்தான்.

பெரிய சாதிமான்களாகிய இந்த விதானைமார், தங்களையொத்த சாதிமான்களுக்கு எதிராகக் கீழ் சாதிக்காரர்கள் முறைப்பாடு கொண்டு போனால் பெரும்பாலும் அதைக் கவனிக்க மாட்டார்கள். சில சமயங்களில் முறைப்பாடு செய்யப் போனவனுக்கே தண்டனை பெற வேண்டிய சந்தர்ப்பமும் நேரிடலாம்!

விதானையாரையும் குற்றம் சொல்ல முடியாது. அவர் தமது சமூகத்தைப் பகைத்துக்கொண்டு வாழ விரும்புவாரா?

மேலும் ஒரு கீழ் சாதிக்காரன், தனக்கு ஏற்படும் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தனது அயலிலுள்ள நாட்டாண்மைக்கார வேளாளரிடம் தான் போவானே தவிர விதானை யாரிடம் போகமாட்டார்கள். அவன் விதானையாரிடம் முறைப்பாடு செய்;யப் போனால் அதுவே பெரிய குற்றமாகிவிடலாம்.

ஓ! எவ்வளவு மோகமான நிலையில் அந்தக் காலத்தில் சில மக்கள் வாழ்ந்தார்கள்! - இன்னும் பொற்காலம் வரவில்லைதான். ஆனால் நிச்சயமாக அந்தக் கற்காலம் போயே போய் விட்டது!

இதற்கு ஒரு சம்பவத்தை உதாரணமாகச் சொல்கிறேன்.

ஒரு பஸ் வண்டியில் நடந்த சம்பவம்.

பஸ் வண்யென்றால் நீங்கள் இப்போது பார்க்கின்ற இ. போ. ச. பஸ் மாத்திரியல்ல.

ஓரளவுக்கு இப்போதைய மினி பஸ் வண்டியில் அளவு இருக்குமாயினும், அமைப்பு முறையில் மிகவும் பின் தங்கிய மொடல்.

பின்னால் தெல்சன் பஸ் வந்தபிறகு இவற்றைத் “தட்டி பஸ் : பெயரால் பொது மக்கள் வழங்குவார்கள்.

(இப்படியான பெயர்கள் சூட்டுவதில் பொதுமக்களும் ஒரு தனி வல்லமை உண்டு. சமீப காலத்தில் ஒரு வகை விமானத்துக்குச் “சகடை’’ என்ற பெயர் சூட்டினார்களே!

இந்தத் தட்டி பஸ்களில் உள் கூடாரத்தின் சட்டத்தில் “பிரயாணிகள் 21’ என்று எழுதியிருக்கும். முன்பக்கத்தில் ஒட்டுநருக்குப் பக்கத்தில் (லொறிகளில் இருப்பது போல) இரண்டு பேருக்கு இருக்கை உண்டு.

உள்ளே (உள்ளே போவதற்குப் பின்பக்கத்தால் ஏறவேண்டும்) நீளப் பக்கமாக இரண்டு பக்கத்திலும் இரண்டு பலகை ஆசனங்கள் உண்டு. இவை ஒவ்வொன்றிலும் தலா 9 பயணிகள் வீதம் 18 பயணிகள். நடுவில் ஓட்டுநருக்குப் பின்பக்கமாக ஒரு பயணிக்கு இருக்கை எல்லாமாக 21 பயணிகள்.

பொதுவாகப் பத்து பன்னிரண்டு பயணிகளோடுதான் பஸ் ஓடிக் கொண்டிருக்கும் இப்போதையைப் போல அந்த பஸ்ஸில் நெருக்கடி கிடையாது. ஆடி அமாவாசைத் தீர்த்தம், நயினாதீவு தேர் போன்ற சில நாட்களில்மட்டுமே “ஓவலோட்’’ அமளி துமளியாக இருக்கும் :

பொன்னாலையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு பத்து மைல் பயணம் செய்ய 25 சதம் கட்டணமென நினைகிறேன். டிக்கட் என்றும் ஒன்றும் கிடையார். நடத்துனரே பஸ் முதலாளியாகவும் இருப்பார். அல்லது முதலாளிக்கு மிக நம்பிக்கையான ஆளாக இருப்பார். அவர் பணத்தை வாங்கிக் கொள்வார். டிக்கட் வழக்கம் இல்லை.

பஸ் சேவையும் லாபமும் நட்டமும் நடத்துனரின் திறமையிலேயே தங்கியிருந்தது. என்ன சிரமப்பட்டும் பயணிகளைச் சேப்பதில் அவர் கண்ணும் கருத்துமாக இருப்பார். காரை நகர்ப் பாலத்தில் - சுமார் அரை மைல் தூரத்தில் பஸ் வருவதைப் பொன்னாலை றோட்டிலிருந்து கண்டதும், தோளிலிருந்த சால்வையை எடுத்து தலைக்கு மேலே உயர்த்தி விசுக்கிக் காட்டினால், பொன்னாலைச் சந்தியில் வந்து பஸ் நின்று விடும். சைகை காட்டிய அந்தப் பயணி வந்து பஸ்ஸில் ஏறும் வரை காத்து நிற்கும். (சால்வையைத் தெரியாதவர்களும் இந்தக் காலத்தில் இருக்கக் கூடும். அந்தக் காலத்தில் எல்லாருமே சால்வை அணிந்திருப்பார்கள். வெயில் நேரத்தில் அது தலைப் பாகையாகி தலையில் ஏறிவிடும். எங்காவது நிலத்தில் உட்கார நேரும் போது சால்வையை மடிந்து நிலத்தில் போட்டு அதன் மேலே உட்காருவார்கள். கைகால் முகம் கழுவினால் ஈரம் துடைக்க உதவும். வியர்வைக் காலத்தில் அதை ஒத்தித் துடைக்கவும் விசிறியாக விசுக்கவும் உதவும். சிலரைப் பிடித்துக் கட்டுவுதற்கு கயிறாகவும் மாறும். இப்படிச் சால்வையின் உபயோகம் பலவிதம்.)

ஒருவர் அடுத்த நாள் காலையில் யாழ்ப்பாணம் வருவதாக பஸ் நடத்துனரிடம் சொல்லி வைத்தால், அடுத்தநாள் காலையில் அவர் வீட்டுப் படலையருலுகே பஸ் வந்து நின்று “பாம், பாம்’’ என்று “கோண்” அடிக்கும் (அந்தக் கோணைக்கூட இப்போது காணோம்!) பஸ் கோண் சத்தம் கேட்டதும் வீட்டுக்குள்ளிலிருந்து ஒரு சிறுவன் ஓடிவந்து “ஐயா சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார், நிக்கட்டாம்’ என்றால் “கெதியாய் வரச்சொல்லு தம்பி’’ என்று சொல்லிவிட்டு நடத்துனர் பஸ்ஸை நிறுத்தி வைத்திருப்பர்! அப்படிப் பயணம் செய்த காலம் அது,

இந்தத் தட்டி பஸ் வண்டியில் சாதி வித்தியாசம் பாராமல் கீழ் சாதி மக்களையும் ஏற்றுவார்கள். ஆனால் மக்கள் பஸ் வண்டியில் ஆசனங்களில் இருக்கக்கூடாது. ஆசனங்கள் ஆட்களின்றி காலியாக இருந்தாலும், இந்த கீழ் சாதிக்காரர்கள் இரண்டு ஆசனங்களுக்கும் நடுவேயுள்ள “வக்’’ கில் தான் - இருக்க வேண்டும். எங்கேயிருந்தாலும் பயணக் கட்டணம் ஒன்றுதான்!

இந்த நடைமுறைப் பல காலம் பஸ் பயணத்தின் போது கவனித்திருக்கிறேன்.

கொஞ்சக் காலத்துக்குப் பிறகு “நெல்சன்’’ பஸ் பயணச்சேவை தனிப்பட்ட முதலாளிகளிடமிருந்து பஸ் கம்பணிகளுக்கு மாறிவிட்டது. கம்பெனிகளின் மீது அரசு பல விதிமுறைகளை விதித்திருந்தது.

காலமும் மாறி வந்தது.

நெல்சன் பஸ்ஸில் இன்றைய மாதிரியே குறுக்கு வாட்டில் இருக்கைகள். ஒவ்வொரு இருக்கையில் 2 அல்லது 3 பேர் இருக்கலாம். இந்த இருக்கைகளில் முன்பக்கமாக இரண்டு வரிசைகள் பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருக்கும். அவற்றிலும் ஆண்கள் உட்காரலாம். ஆனால் பெண்கள் வந்தால் எழுந்து இடம் கொடுக்க வேண்டும்.

ஒருநாள் நான் இந்த நெல்சன் பஸ்வண்டியில் ஏறி யாழ்ப்பாணம் வந்து கொண்டிருந்தேன். மூளாயில் ஒரு பெரிய வேளாளர் ஏறினர். அவர் ஏறும்போதே பஸ் இருக்கைகளில் இடமில்லை. பெண்களில் இருக்கைகள் மட்டும் வெறுமையாக இருந்தன. அந்த வேளாளர் வெறுமையாக இருந்த பெண்களின் இருக்கை ஒன்றில் இருந்து கொண்டார்.

பஸ் சுமார் அரை மைல் தூரம் ஓடிவந்து சுழிபுரம் சந்தியில் நின்றது. பஸ்ஸை மறித்துச் சிலர் ஏறினார்கள். ஏறியவர்களில் இருவர் பெண்கள். ஏறிய பெண்கள் இருக்க இடமின்றி நிற்கிறார்கள். பெண்களின் இருக்கையில் பெரிய வேளாளர் உட்கார்ந்திருக்கிறாரே!

நடத்துனருக்கு ஆட்களை விளங்கவில்லையோ அல்லது விளங்கியிருந்தாலும் நியாயத்தை – சட்டத்தை அமுல் செய்தாரோ தெரியாது.

“ஆரங்கை, பொம்பிள்ளையனின்ரை சீற்றிலை இருக்கிறது? பொம்பிளையன் வந்துவிட்டினம். இடத்தைக் கொடுங்கோ”

நடத்துநரின் குரல் கம்பீரமாகப் பளிச்சென்று கேட்டது.

பெரிய வேளாளர் இரண்டாம் பேச்சின்றி எழுந்து நின்றார். அந்த கீழ்சாதிப் பெண்களுக்கு இருக்க இடம் கொடுத்து விட்டுத்தான் எழும்பி நின்றார்!

ஆம், அந்தக் “கற்காலம்’’ போயே விட்டது!

5. வீடுகள், “மாடு’’ கள்

நான். ஆனாப் படிக்கத் தொடங்கிய காலத்தில், அதாவது 1928 ஆம் ஆண்டளவில் பொன்னாலைக் கிராமத்தில் மூன்றோ, நாளோ கல்வீடுள் தான் இருந்தன. அவற்றுள் ஒரு வீட்டுக்காரரை கல்வீட்டுக் கிருட்ணர்’ என்றே வழங்குவார்கள். அவரே முதன் முதலில் கல்வீடு கட்டியவராக இருக்கலாம்.

எங்களுக்கு வீடும் ஒரு கல்வீடாக இருந்தது. கல்வீடு என்றால் ஏதோ பெரிய மாடமாளிகையல்ல. பக்கம் பக்கமாக இரண்டு அறைகள். அவற்றின் முன்னும் பின்னும் இரண்டு விறாந்தைகள். சீமெந்து, கொங்கிறீற் என்று ஒன்றும் கிடையாது. சுண்ணாம்புச் சாந்தினால் கட்டப்பட்டவீடு, அப்போதெல்லாம் கோயில்கள் முதலிய பெரிய கட்டிடங்களைக் கட்டுவதற்கு சுண்ணாம்பையே பயன்படுத்தினார்கள். சுண்ணாம்பு இடிப்பதற்கென்றே சிறு தொட்டி மாதிரியான ஒரு அமைப்பு பொன்னாலைக் கோயிலில் இருந்தது எனக்கு நினைவிருக்கிறது. திருவாசகத்திலும் சுண்ணாம்பு இடிக்கும் பெண்களை வைத்து “சுண்ணாப்பாட்டு’’ வருகிறது. (இது திருவாசகமாயினும் மரணச் சடங்குகளில் மட்டுமே பாடப்படுகிறது. அதனால் வேறு சந்தர்ப்பங்களில் இத் திருவாசகப் பாடல்களைப் படாமல் ஒதுக்கி விட்டார்கள்.

பெரிய சூளை வைத்துச் சுண்ணாம்பு தயாரிப்பார்கள். எங்கள் வீட்டுக்குள் முன் வீட்டில் “அருணாசலம்’’ என்று ஒரு பெரிய சமக்காரர். அப்பொழுது அவரிடம் பெரிய இரட்டை மாட்டு வண்டியும், அவற்றுக்கான ஒரு சோடி அண்ணாமலை எருதுகளும் இருந்தன.

அண்ணாமலை மாடுகள் முற்றிலும் நல்ல வெள்ளை நிறத்தனவாய், நீண்டு வளர்ந்த கொம்புகளுடன் உயரமாயும், பார்வைக்குக் கம்பீரத் தோற்றமுடையனவாயும் இருக்கும். அவற்றின் கொம்பு நுணியில் பித்தளையிலான “கும்பி’’ யும் (முடிபோன்ற அமைப்பு), கழுத்திலே கெச்சையும் அணியப்பட்டிருக்கும். சிலர் சலங்களும் அணிவித்திருப்பார்கள். மாடுகள் நடக்கும்போது, இந்தக் கெச்சை, சலங்கைகள் ஜல், ஜல்’ என்று ஓசை எழுப்பி, உற்சாகம் தரும்.

அண்ணாமலை மாடுகள் தென்னிந்தியாவிலுள்ள “திருவண்ணாமலை’’ என்ற இடத்திலிருந்து காலத்துக்குக் காலம் யாழ்ப்பாணத்துக்கு இறக்குமதி செய்யப்படும “உரு’’ என்று சொல்லப்படும் பெரிய வள்ளங்களில் (அவைகளைக் கப்பல்கள் என்றே சொல்வோம்) அந்த மாடுகள் இந்தியாவில் ஏற்றப்பட்டு, இங்கே ஊர்காவற்துறையில் இறக்கப்படும். இப்படி மாடு வரும் காலத்தில், அவற்றை வாங்குவோரும், தரகர்களும், சும்மா விடுப்புப் பார்க்;;;க வருபவர்களுமாக ஊர்காவற்துறை (காரைநகர் துறைமுகப்பகுதி) திருவிழாக் காலம் போலக் களை கட்டிவிடும்.

சுண்ணாம்புச் சூளை ஒன்று வைப்பதென்றால், வண்டி வண்டியாக முருகைக் கற்களையும், மரக்குற்றிகள் விறகுகளையும் ஒரு வளவு நிறையக் கொண்டு வந்து குவிப்பார்கள். பிறகு நடுவில் மூன்று நான்கு மரக் குற்றிகளை நட்டு, அதைச் சுற்றிச் சுமார் பத்து அடி விட்டத்தில் மர விறகுகளை ஒரு படை அடுக்குவார்கள். அந்த விறகுகளின் மேல் முருகைக் கற்களை ஒரு படை பரப்பி அடுக்குவார்கள். இப்படி நாலைந்து படைகள் அடுக்குவார்கள். இந்த வேலைகளை அனுபவம் வாய்ந்த தொழிலாளர்களே செய்வார்கள். அடுக்கி முடித்த பிறகு, ஒரு நல்ல நாளில் மர விறகுகளில் தீயைப் பற்ற வைப்பவர்கள் பெரிய “சொக்கப்பனை’’ போல ஐந்தாறு நாட்களுக்கு நெருப்பு எரியும். புகை மண்டலம் வானளாவி எழும்பும்.

ஐந்தாறு நாட்களுக்குப் பிறகு நெருப்பை ஆற்றிவிட்டுப் பார்த்தால் முருகைக் கற்களெல்லாம் வெந்து சுண்ணாம்பாகியிருக்கும் அதை அள்ளி எடுத்து கட்டிடம் கட்டுபவர்களுக்கு விற்பார்கள்.

எங்களுக்கு வீடு முருகைக் கற்களினால் கட்டி, கூரையும் ஓட்டினால் வேயப்பட்டிருந்தது. ஓடு என்றால் என்றால் நீங்கள் இப்போது சாதாரணமாகக் காணும் ஓடுகள்தான். அப்போது ஓடுகளும் இந்தியாவிலிருந்துதான் வந்திறங்கின ஓடுகள் மட்டுமா, அரிசி, நெல், எள் மற்றும் நவதானியங்கள், மண் சட்டி, பாவனைகள் இப்படித் தேவைப்பட்ட பல பொருட்களும் இந்தியாவிலிருந்துதான் வந்து இறங்கின. அதனால் காரைநகர் துறைமுகப்பகுதி ஒரு குட்டி நகரம் போல விளங்கிற்று. “கிட்டங்கி’’ என்ற பண்டசாலைகளும், கடைகளும் அங்கே நிறைந்திருந்தன.

சற்று முந்திய காலத்தில் “ஓடு என்றது “பீலி’’ ஓடுகளைத் தான். சுமார் ஒரு சாண் நீளத்தில் பீலிபோல அந்த ஓடுகள் அமைந்திருக்கும். அவற்றை ஒரு வரிசை நிமிர்த்தியும் அதன்மேலே ஒரு வரிசை கவிழ்த்தும் அடுக்கி கூரைகளை வேய்வார்கள். இப்போது கூட எங்கேயாவது அந்த மாதிரி ஓடுகள் வேய்ந்த கூரைகளை நீங்கள் பார்க்க முடியுமென்று நம்புகிறேன்.

அப்போதெல்லாம் ஒரு குடும்பம் குடியிருக்கும் வளவு என்பது ஒரு பரப்பு, இரண்டுபரப்பு நிலமல்ல. ஐந்து பரப்பு முதல் பத்துப் பதினைந்து பரப்புவரையில் ஒரு குடியிருப்பு வளவு அமைந்திருக்கும்.

வளவு நிறைய பனைமரங்களும், வடலிகளும் காணப்படும், எங்கள் வளவு இருந்தது பொன்னாலை மேற்குப் பக்கத்தில் நல்ல தண்ணீர் இல்லாத படியால், தென்னை முதலிய வேறு மரங்கள் அங்கே இல்லை. ஆனால், வேம்பு, புளி முதலிய சில மரங்கள் இருக்கும்.

வளவுகளைச் சுற்றி வேலி அடைப்பது யாழ்ப்பாணத்தின் அத்தியாவசிய தேவையாகக் கருதப்பட்டது. வேலி முழுவதும் வரிசையாக பூவரசு மரங்கள் நிற்கும். சில இடங்களில் கிளுவை, முள் முருக்கை மரங்களையும் வேலிக்கு நடுவதுண்டு.

மாரி காலத்தில் ப+வர மரத்தின் குழைகளை வெட்டி வண்டி வண்டியாக செம்பாட்டுப் பக்கம் அனுப்புவார்கள். அங்கே இவை தோட்டங்களில் பசளையாக நிலத்துள் புதைக்கப்படும்.

ஒவ்வொரு குடியிருப்பு வளவுக்கும் அதன் உறுதியில் ஒரு பெயர் உண்டு. நாங்கள் குடியிருந்த வளவுக்கு “தெருவில் புலம்’’ என்று பெயர். அது ஒன்பது பரப்பு நிலம்.

பொதுவாக அந்தக்காலத்தில் ஒரு வீடு (நாற்புறமும் மண் சுவர் வைத்துக் கட்டப்பட்ட அறை) அதன் முன்னால் ஒரு திண்ணை (விறாந்தை) எல்லாக் குடியிருப்பு வளவுகளிலும் இருக்கும். வீட்டுக்கு முன்னால் தலைவாசல் இருக்கும். இன்றைய வீடுகளில் “ஹோல்’’ என்று சொல்கிறோம். அதற்குப் பதிலாக அமைந்திருந்ததே இந்தத் தலைவாசல். சிலர் இந்தத் தலைவாசலைச் சுற்றி தென்னோலைத் தட்டியினாலோ அல்லது பன்னாங்கினாலோ மறைப்புச் செய்திருப்பார்கள்.

வீட்டு அறைக்கு ஒரு பக்கமாக அதோடு தொடர்பில்லாமல் குசினி இருக்கும். அப்போது இதைக் குசினி என்று சொல்வதில்லை. “அடுக்களை’’ என்று தான் சொல்வோம் இந்த அடுக்களை அரைச் சுவர் வைத்து மேலே பனைமட்டையினால் வரிந்து அடைக்கப்பட்டிருக்கும். குசிக்குள் வெளிச்சம் புகவும். உள்ளேயிருந்து புகை வெளியேறவும் இந்த அமைப்பு வசதியாக இருந்தது. இந்த அடுக்களையின் முன்பாகவும் ஒரு சிறு திண்ணை இருக்கும். இந்தத் திண்ணையில் அம்மி குளவி வைத்திருப்பார்கள். (எங்கள் வீட்டு அடுக்களை இந்த அமைப்பில் இருக்கவில்லை. வீட்டு அறையோடு சேர்ந்திருந்த ஒரு சிறிய அறையே அடுக்களையாகப் பாவிக்கப்பட்டது.)

தலைவாசல், அடுக்களை தவிர ஒரு மாட்டு மாலும், மாட்டுவண்டிலும் இருந்தால் வண்டிமாலும் இருக்கும்.

அநேகமாக எல்லார் வீட்டுத் தலைவாசலிலும் ஒரு கட்டில் இருக்கும். கௌரவமான மனிதர்கள் வீட்டுக்கு வந்தால் கட்டிலில் உட்கார வைத்துக் கதைப்பார்கள். மற்றவர்கள் எல்லாரும் தலைவாசல் தரையில் இருந்துதான் கதைப்பார்கள். கனம்பண்ண வேண்டிய பெண்கள் வந்தால் (அவர்கள் கட்டிலில் உட்கார மாட்டார்கள்.) அவர்களுக்குப் “புற்பாய்’’ விரித்து இருக்க விடுவார்கள்.

இன்றைய வீடுகளைப் பார்த்தால் வீடு நிறையப் பொருள்கள்! இப்பொழுது வீடுகளில் காணப்படும் பொருள்கள் எதுவுமே அன்றைய வீடுகளில் இல்லை!

செற்றிகள், கதிரைகள், மேசைகள், கட்டில்கள், அலுமாரிகள் மின் விசிறிகள், குளிர்சாதனப் பெட்டி, ரெலிவிஷன், ரேடியோ - இவைகள் எதுவுமே அன்றைய வீடுகளில் இல்லை! (இன்றைய வீடுகளில் இவ்வளவும் எடுத்துவிட்டுப் பார்த்தால் வீடு “ஓ’’ என்று விடும்!)

தலைவாசலில் இருக்கும் கட்டிலும், வீட்டுக்குள் இருக்கும் பெட்டகமுந்தான் அன்றைய முக்கியமான பொருட்கள், பெட்டகம் என்பது தடித்த மரப் பலகையினாலான ஒரு பெரிய பெட்டி, வீட்டுக்குக் கதவுக்கு இருப்பது போல அதற்கும் ஒரு பெரிய திறப்பு இருக்கும். இந்தப் பெட்டிக்குள்ளே தான்.

முக்கியமான பணம், நகை, உறுதி முதலியவற்றை வைத்திருப்பார்கள். சில வீடுகளில் இந்தப் பெட்டகம் ஆறு அடி நீளம் இருக்கும். வீட்டுக்காரர் இரவில் அதன்மீதே படுத்துறங்குவார். (காவல்! )

“மாட்டுமால்’’ என்பது முக்கியமாக மாடுகள் கட்டுவதற்காக அமைக்கப்பட்டது. பொதுவாக எங்கள் கிராமத்தில் எல்லார் வீடுகளிலும் பசு மாடுகள் இருந்தன. எங்கள் வீட்டில் நான்கு பசுக்களும் இரண்டு கன்றுக்குட்டிகளாம் இருந்தன. பசுக்களுக்கு கழுகி, செங்காரி, சுட்டி சிவப்பி என்று பெயர்களும் உண்டு.

காலையில் ஒருவர் வீடு வீடாகச் சென்று மாடுகளைக் கட்டிலிருந்து அவிழ்த்துக் கொண்டுபோய், பொன்னாலைக் கோவிலின் பின்புறத்தே உள்ள பரந்த புல் வெளியில் மேய விட்டு. மாலையில் வீடுகளுக்குக் கொண்டுவந்து விடுவார். அதுதான் அவருக்குத் தொழில். மாட்டுச் சொந்தக்காரர் அவருக்குச் சம்பளம் என்று எதுவும் கொடுப்பதில்லை. மாடுகள் காடுகளில் மேயும் போதும் போய் வரும்போதும் போடும் சாணியை அவர் ஒரு கடகத்தில் சேர்த்து காட்டிலேயே குவியல் குவியலாகக் குவித்து வைத்திருப்பார். அவ்வவ்போது அவற்றை விற்பதனால் கிடைக்கும் பணமே அவருக்கு ஊதியமாகும்!

சிறுவயதில் நாங்கள் படிப்பைக் கவனியாமல் எந்த நேரமும் விளையாட்டித் திரியும்போது எங்கள் பெற்றோர், “உன்னுடைய தலையில் கடகத்தை வைத்து மாடு மேய்கத் தான் விடுவோம்! என்று ஏசுவது வழக்கம் - அவ்விதம் மிகவும் வருவாய் குறைந்த தொழிலாகவே அது கணிக்கப்பட்டது.

ஒவ்வொரு வீட்டிலும் வைக்கோல், பட்டடையாகக் குவிக்கப்பட்டிருக்கும், காட்டில் மேய்ந்துவிட்டு வந்த மாடுகளுக்கு வைக்கோலும் போடப்படும் காலையில் எங்கள் தெருவால் நூற்றுக்கணக்கான மாடுகள் ஏதோ ஊர்வலம் போலகக் காட்டுக்குச் செல்வதும், மாலையில் அவை திரும்பிக் கூட்டமாக வருவதும் ஒரு கலகலப்பான காட்சி.

மாடுகளுக்குப் புல் செதுக்கி வருதற்காக, மிக அதிகாலைப் பொழுதில் (விடிவதற்கு முன்) பல ஆண்டுகளும், பெண்களும் கடகமும் உளவாரமும் கொண்டு காட்டுக்குப் போவார்கள். போகும்போது அந்த இருட்டு நேரத்தில், வழக்கமாக புல் செதுக்க வருபவர்களின் வீட்டருகே வந்ததும் கூப்பிட்டுக் கொண்டு போவார்கள். மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சியில் பெண்கள் அதிகாலை வேளையில் துயிலெழும்பும் காட்சி நினைவு வருகிறது.

விடிந்து ஏழு மணிபோல, (வெயில் சுடத் தொடங்குமுன்) கடகம் நிறையப் புல் நிரப்பிக்கொண்டு வீடு திரும்புவார்கள். புல் செதுக்கும் உளவாரத்தை இன்று பலர் அறியாமலிருக்கலாம். ஐந்தாறு அங்குல நீளத்தில் முன் பக்கம் தகடாகக் கூர்மையதாகவும், பின்பக்கம் குழாய் போன்ற அமைப்பும் உள்ளதுதான் உளவாரம். அதை ஒரு மரப்பிடியில் இறுக்கிப் புல்லைச் செதுக்குவார்கள். திருநாவுக்கரசு நாயனார் உளவாரத் திருப்பணி செய்தாரென்று படித்திருக்கிறோமல்லவா?

இன்னும் சிறிது காலம் போனால் இந்த உளவாரம்? பாக்குவெட்டி, கரம்புச்சத்தம், கொச்சச்சத்தம், வெற்றிலை பாக்கு உரல், குத்தூசி, வெற்றிலைத் தட்டம், மற்றும் உமல், திருவணை, உறி, பட்டை, தட்டுவம் இப்படிப் பல பொருட்களை நூதன சாலையில் தான் பார்க்க வேண்டி வரும் போலிருக்கிறது!

எல்லா வீடுகளிலும் பசுக்கள் இருந்தன. எல்லா வீடுகளிலும் பால் இருக்கும். நாங்கள் இப்போது இந்த நகரத்தில் பால்காரரிடம் வாங்கும் பொருளுக்கும் “பால்’’ என்று தான் பெயர், ஆனால் அந்தக் காலத்தில் பொன்னாலைக் காடுகளில் பசு புல் மேய்ந்துவிட்டு வந்த பசுக்கள் கொடுத்துதான் உண்மையான பால்! அதற்கென்று ஒரு மணம், அதற்கென்று ஒரு ருசி. – அந்த மாதிரிப் பாலை இனிக் காண்போமென்று தோன்றவில்லை.

அப்போது பாலை யாரும் விற்கமாட்டார்கள். எப்போதாவது பால் தேவைப்பட்டுப் பால் கொடுத்தால் அதற்குப் பணம் வாங்கமாட்டார்கள். பால் மோர் விலைக்கு விற்க கூடாதென்று சொல்வார்கள்.

எல்லா வீடுகளிலும் கோயிலுக்கென்று கொஞ்சம் பால் தினசரி கொடுப்பார்கள். காலை வேளையில் வீட்டுக்கு வீடு பால்காவடி தூக்சிச் சென்று பால் சேகரித்துக் கொண்டு போய் கோயிலுக்குக் கொடுப்பதையே ஒருவர் தொண்டாகக் கொண்டிருந்தார்.

வீடுகளில் பால், மோரை புனிதமாக உபயோகிப்பார்கள், பால் மோர் புழங்கும் பாத்திரங்களை (மண் பாத்திரங்கள் தான்) மற்றைய சமையல் பாத்திரங்களுடன் கல்காமல் தனியாக வைத்திருப்பார்கள். அதனால் எவ்வளவு சுத்த ஆதாரமுள்ளவர்களும் பால், மோரை எந்த வீட்டிலும் வாங்கிப் பருகுவார்கள்.

வீட்டில் உபயோகிக்கும் பாத்திரங்கள் எல்லாமே பொதுவாக பாத்திரங்கள்தான். மிகச் சிலரிடம் மட்டும் பித்தளை வெண்கலப் பாத்திரங்கள் சில இருந்தன. (இப்போது வீடுகளில் நிறைந்திருக்கும் “எவர் சில்வர்’’ பாத்திரங்கள் மிகச் சமீபத்திய வரவு)

சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் எங்கள் வீட்டிலிருந்த மாட்டு பால் இதோ என் முன்னே தெரிகிறது!

பெரிய மால் அது. நாலு “மொக்கு’’ மரத் தூண்களில் வளை வைத்து மேலே பயனை ஓலையால் வேயப்பட்டிருந்தது.
அதன் ஒரு பக்கத்தில் நிலத்தில் கட்டைகள் அறைந்து அவற்றில் பசுக்கள் கட்டப்பட்டிருக்கும். அவைகளைக் கட்டிய பனைநார்க்கயிறு நுனியிலே “கண்ணி’’ வைத்துச் செய்யப்பட்டிருக்கும். மாடுகளின் கால்களிலே இந்தக் கண்ணிகளைப் பிணைப்பதும், தேவையானபோது கழற்றிவிடுவதும் மிக இலகுவாக இருக்கும்.

மாலின் இன்னொரு பக்கத்தில் விறகுகள் குவிக்கப்பட்டிருக்கும். வளையிலிருந்து ஒரு “அளவு’’ கட்டி அதில் கருக்கு மட்டைகள் அடுக்கியிருக்கும். பக்கத்தில் கங்குமட்டை, கொக்கரை, பன்னாடை முதலியவை குவிக்கப்பட்டிருக்கும் - எல்லாம் பனையிலிருந்து பெறப்பட்டவையே!

இந்தப் பனைமரம் அன்றைய மக்களோடு மிகவம் நெருங்கியிருந்தது. பனை வேரிலிருந்து அதன் குருத்து வரை மக்களால் உபயோகப்படுத்தப்பட்டது.

ஒரு வழியில் பார்த்தால் பனையில் வேர்தான் பனங்கிழங்கு, இந்தக் கிழங்கைச் சுட்டும் அவித்தும் உண்பார்கள். பனங்கிழங்கைச் சுட்டு தும்பு வார்த்து, துண்டு துண்டாக முறித்து உரலிலிட்டு அதனுடன் தேங்காய் வெங்காயம் பச்சைமிளகாய் போட்டு இடித்து – ஓ , நினைக்க வாயூறுகிறது!

பனம் பாத்தியிலிருந்து கிழங்கை எடுக்கும்போது அதன் வாலோடு ஒட்டிக் கொண்டிருக்கும் ஊமலை இரண்டாகப் பிளந்து அதற்குள் “பூரான்’’ இருக்கும் அதன் சுவைக்கு வேறு இணையில்லை!

பனம்பழத்தைத் தண்ணீர் ஊற்றிப் பிசைந்து அதில் வரம் பாணிiயை நாள்தோறும் பாயில் பரவிக் காயவிட்டால் சுமார் பத்து நாட்களில் பனாட்டு வந்துவிடும்!

பனையைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம்!

பனை மரத்தின் உபயோகம் எத்தனை!

வீட்டுச் சுவர்களுக்கு மேல் எல்லாம் பனைமரங்களே! வளைகள், குறுக்கு மரங்கள், சலாகைகள் - இவற்றின்மேலல் பனை ஓலைக்கூரை. வீட்டின் சுவர்களைத் தவிர மற்ற யாவும் பனையிலிருந்தே பெறப்பட்டன.

மனைமட்டை, நார், ஓலை, குருத்தோலை - இந்தக் குருத்தோலையிலிருந்துதானே எங்கள் அறிவுக் கருவிகளான ஏடுகள் தயாரிக்கப்பட்டன!

இதைவிட பனங் ‘கள்’? கருப்பநீர் - இந்தக் கருப்ப நீரிலிருந்து பனங்கட்டி, கல்லாக்காரம்……...

இன்று பனையின் உபயோகங்கள் எல்லாம் வீண்போகின்றன. அவற்றின் இடங்களை அந்நிய நாட்டுப் பொருட்கள் பிடித்துக்கொண்டு விட்டன. யாழ்ப்பாணத்தான் பனையை ஒதுக்கிவிட்டு வெகுதூரம் விலகி விட்டான்!

எங்கள் வீட்டு மாலின் நடுவே இரண்டு உரல்களும் உலக்கைகளும் இருக்கும். உரல்களில் ஒன்று பெரிது. மற்றது சிறிது – பொக்கனி உரல், பெரியது குற்ற @ சிறியது திட்ட.

மாலின் இன்னொரு பக்கத்தில் நீளமாக அசைவு கட்டி அதில் உலர்த்தும் பாய்கள் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும். மாலின் இரண்டு பக்கங்கள் தென்னோலைத் தட்டியினால் அடைக்கப்பட்டிருக்கும். மற்ற இரண்டு பக்கங்களும் அடைப்பெதுவும் இல்லாமல் திறந்தபடி இருக்கும்.
எங்கள் வீட்டில் ஒரு சிறிய வண்டி மாலும் இருந்தது. அது தனியாகக் கட்டப்படாமல், வீட்டின் ஒரு பக்கதத்தில் பத்தியாக இறக்கப்பட்டுத் தென்னோலையால் வேயப்பட்டிருந்தது. அதற்குள் எங்கள் ஒற்றைத்திருக்கல் வண்டி நிற்கும். அதற்குப் பக்கத்தில் அதை இழுக்கும் நாம்பன் மாடு கட்டி நிற்கும்.

இந்த வண்டிதான் அப்பாவின் கடைக்குப் பொருள்கள் வாங்குவதற்காக கிழமையில் இரண்டு மூன்று தரம் சங்கானைச் சந்தைக்கும், மாதத்தில் இரண்டு தரம் யாழ்ப்பாணப் பட்டினமத்துக்கும் போய் வரும்.

வண்டி இழுக்கும் மாடுகளின் கால்களில் “லாடம்’’ கட்டுவார்கள். லாடம் கட்டாலிட்டால் மாடுகளின் காற்குளம்புகள் தேய்ந்து அவை நடப்பதற்குக் கஷ்டப்படும்.

எனக்கு எழெட்டு வயதாயிருக்கும் போது, எங்கள் நாம்பனுக்கு லாடம் கட்டுவதற்காக அப்பா வண்டியைக் கொண்டு போன போது நானும் கொல்லர் வீட்டுக்குப் போயிருந்தேன்.

அந்தப் “பயங்கர’’ காட்சி இன்னும் என் நினைவிலிருக்கிறது.

மாட்டுக்கு லாடம் கட்டுவதை நான் அதற்கு முன்பார்த்ததில்லை. எனக்கு அப்போது ஆறேழு வயதுதானிருக்கும்.

கொல்லர் வீட்டில், வண்டியிலிருந்து மாட்டை அவிழ்த்து ஒரு மரத்தடிக்குக் கொண்டு போறார்கள். நான் வண்டிக்குள்ளேயே இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

மாட்டின் கால்களிலே ஒரு கயிற்றைச் சுற்றிப் போட்டனர். வேடிக்கையாகக் கவனித்துக் கொண்டிருந்தேன்.

“தொபுகடீர்’’ என்று அந்த நாம்பன் மாடு பக்கவாட்டில் சரிந்து விழுந்தது!

நான் திடுக்கிட்டுப் பயந்து போனேன்.

அப்படி ஒரு அவலமான பயங்கரக் காட்சியை அதற்கு முன் நான் கண்டதில்லை. எங்கள் குடும்பத்தில் ஒருவர் போல இருந்த “எங்கடை நாம்பன்’’ இப்படி அடியற்ற மரம் போல விழுந்ததை – விழுத்தப்பட்டதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

“ஓ!’’ என்று நான் பலத்துக் குரலெடுத்து அழத்தொடங்கி விட்டேன்.

கொல்லர் ஓடிவந்து என்னைத் தூக்கித் தடவி, “அழாதை ராசா, தம்பியின்ரை மாட்;டை நாங்கள் ஒன்றும் செய்யமாட்டேன். இப்ப விட்டிடுவம் …………’ என்று ஆறுதல் கூறித் தேற்றிய காட்சி இன்றும் என் மனத்திரையில் தெரிகிறது.

“சிறு பிள்ளைகளுக்கு முன்னால் இப்படியான அவலக் காட்சிகளைக் காட்டுவது நல்லதல்ல’’ என்ற உளவியல் கருத்தை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையென்று நினைக்கிறேன். அன்றியும், அன்றைய கிராமத்துச் சூழ்நிலையில் மிகச்சிறு வயதிலிருந்தே இத்தகைய கொடுமையான காட்சிகளுக்;குச் சிறுவர்கள் பழக்கப்பட்டிருப்பார்கள்.

ஆனால் என்னுடைய நிலை வேறு.

6. சைவம்

நான் இத்தகைய காட்சிகளுக்குப் பழக்கப்பட்டிருக்கவில்லை.

ஓடுகிற சிறு எறும்பைக் காலால் நசித்துக் கொன்றால் அதுவும் பாவம் அப்படிச் செய்யக்கூடாது’ என்று என் பெற்றோர் போதித்தார்கள். தும்பியைப் பிடித்து அதன் வாலில் புல்லைச் செருகிப் பறக்க விட்டால், “அப்படிச் செய்யாதே, அடுத்த பிறப்பில் நீ தும்பியாப் பிறக்க, அந்தத் தும்பி பொடியனாய்ப் பிறந்து உன்னை வருத்தும்’’ என்று சொல்வார்கள்.

கிழுவை மரத்திலிருக்கும் பொன் வண்டைப் பிடித்து பழைய நெருப்புப் பெட்டிக்குள்ளே நாலைந்து கிழுவை இலைகளையும் உணவாக வைத்து, அதற்குள் பொன் வண்டைப் பத்திரப்படுத்தி வைத்தால், “பாவம் அந்தப் பொன் வண்டு – அதை அடைத்து வைக்காதே’’ என்பார்கள்.

“எல்லாப் பொடியன்களும் வைத்திருக்கிறார்களே’’ என்று நான் நியாயம் சொன்னால், “அவர்கள் வைத்திக்கட்டும், நீ சைவப்பிள்ளை, நீ வைத்திருக்கக் கூடாது’ என்பார்கள்.

ஓம். நான் சைவப்பிள்ளையாகப் பிறந்து சைவப்பிள்ளையாக வளர்ந்தவன்.

“சைவம்’’ என்பது ஒரு சமயம். எங்களுரில் பொதுவாக எல்லாருமே சைவ சமயத்தவர்கள்தான்.

ஆனால் நான் இந்தச் சைவத்துக்குள்ளும் தனியான ஒரு “சைவம்!’’

இந்தச் “சைவ’’ க்காரர்கள், பொதுவாக வேளாளர்களாக இருந்த போதிலும் தாங்கள் ஒரு தனிச் “சாதி’’ போல வாழ்கிறார்கள்.

சைவ சமயத்தில் சொல்லப்பட்ட ஆசாரங்களைச் சற்றேனும் தவறாமல் கைக்கொண்டு நடப்பது இவர்களின் கொள்கை.

இவர்கள் மச்ச, மாமிசம் - முட்டை கூட உண்ண மாட்டார்கள். மது அருந்துதல், சுருட்டுக் குடித்தல் முதலிய வேண்டாத பழக்கங்களையும் முற்றாக நீக்கி விட்டார்கள்.

மற்றவர்கள் கண்காண உண்ணமாட்டார்கள். தங்களையொத்த ஆசாரமுள்ள சைவர்களின் வீடுகளைத் தவிர மற்றவர்களின் வீடுகளில் உணவு கொள்ளமாட்டார்கள். பச்சைத் தண்ணீரைக் கூட அவர்களிடம் வாங்கிக் குடிக்க மாட்டார்கள்.

இவருடைய உறவினர் ஒருவர் அவரும் நல்ல உயர் வேளாளராக இருந்த போதிலும் - அவர் மந்ந மாமிசம் உண்பவராக, சைவக் கட்டுப்பாட்டுக்குள் அடங்காதவராக இருந்தால் அவருடைய வீட்டிலும் உணவு கொள்ள மாட்டார்கள்.

இந்தச் “சைவ’’க்காரர்கள் யாழ்ப்பாணத்தின் பல கிராமங்களிலும் கொஞ்சம் கொஞ்சப் பேர் இருக்கிறார்கள். இவர்களில் சிலர் வேதம் ஓதி, கோயில்களில் ப+சை செய்வதும் உண்டு.

இந்த இடத்தில் இன்னொரு விஷயமும் சொல்ல வருகிறது.

சைவ சமயத்தவர்களில் சமயச் சடங்குகளை நடத்தும் பிராமணக் குருமார்கள், ஒரு மனிதனின் முக்கியமான மரணச் சடங்குகளைச் செய்ய வரமாட்டார்கள்.

“;மரணச் சடங்குகளை முறையாகச் செய்யாவிட்டால், இறந்தவனுடைய ஆவி நாசமாய்ப் போய்விடும்’’ என்று ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை சைவசமயத்தவர்களிடையேயும் உண்டு.

ஆனால் அப்படி அவனுடைய ஆவியைக் காப்பாற்றி கடைத் தேற்றுவதற்கு, சைவசமயத்தின் குருமாரான பிராமணர்கள் வரமாட்டார்கள்.

பிராமணர் அல்லாத மற்றையோரின் பிரேதத்தைப் பார்த்தாலே பாவம் வந்துவிடுமென்று அவர்கள் நம்புகிறார்களாம்!

இப்படிப் பிராமணக் குருமாரினால் தள்ளி வைக்கப்பட்ட மரணச் சடங்குகளை இந்தச் சைவக் குருமாரே நடத்தி வைத்து இறந்துபோன மனிதனின் ஆன்மாவை ஈடேற்றி வைக்கிறார்கள்.

நான் ஒரு சைவப்பிள்ளையாக இருந்தது பற்றிச் சிறுவயதில் கவலைப்பட்ட பல நிகழ்வுகளுண்டு.

மச்ச, மாமிசம் உண்பதற்கு நான் என்றுமே ஆசைப்பட்டதில்லை.

சிறுவயதில் அந்த உணவு குறித்து அருவருப்பு உள்ளவனாய் இருந்தேன். அறிவு வந்த பிறகு அது தகாத செயல் என்று உணர்ந்து தவிர்க்கிறேன்.

இது போலவே மதுபானம் அருத்தலும், சுருட்டுக் குடித்தல் முதலியனவும்.

எனக்குக் கவலை தந்த நிகழ்வுகள் எப்படியென்றால், சிறுவயதில் எங்காவது காடு மேடுகளில் அலைந்து திரிந்து விட்டு தண்ணீர் விடாய்தால், என்னுடைய நண்பர்கள் பக்கத்து வீடுகளில் தண்ணீரை வாங்கிக் குடிப்பார்கள். அல்லது அகப்பட்ட கிணற்றில் (பக்கத்திலிருக்கும்) வாளியாலோ, பட்டையாலோ தண்ணீரை அள்ளிக் குடிப்பார்கள்.
ஆனால் என்னால் அப்படிச் செய்ய முடியாது. மற்றவர்களின் வாளினால் தண்ணீரை அள்ளிக் குடிப்பதும் கட்டுப்பாட்டை மீறிய செயல், மிக அவசியமானால், வீட்டுக்காரரிடம் ஒரு செம்பு வாங்கி, அதை முதலில் கழுவிச் சுத்தம் செய்த பின், அதற்கு ஒரு கயிறு கட்டி கிணற்றில் தண்ணீரை அள்ளிக் குடிக்கலாம்.

தண்ணீர் குடிப்பதற்கு இந்தப் பாடென்றால் உணவு வகைகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை!

சைக்கிளில் கீரிமலை, யாழ்ப்பாணம் என்று திரிந்த காலங்களில், நண்பர்கள் ஒரு தேநீர்க் கடையில் பலகாரம் சாப்பிட்டுத் தேநீரும் குடிப்பார்கன். ஆனால் எனக்கு “சைவாள்கடை’, “பிராமணாள் கடை’’ அகப்பட்டால் சரி@ இல்லையென்றால் பட்டினிதான்.

பிராமணாள் கடையிலும் மற்ற நண்பர்களெல்லாம் ஒன்றாக இருந்து மகிழ்ச்சியாக உணவு உண்ணும்போது நான் மட்டும் உள்ளே போய் “கண் காணாமல்’’ சாப்பிட்டு விட்டு வரவேண்டும்!

சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பத்துப் பதினைந்து இளைஞர்கள் சேர்ந்து “வேட்டை’’ க்குப் போவதுண்டு. எல்லார் வீட்டிலும் நாய்களுண்டு. அந்த நாய்களையும் கூட்டிக் கொண்டு வேட்டைக்குப் போவார்கள்.

பொன்னாலைக் கிருஷ்ணன் கோவிலுக்குப் பின்னால் பரந்திருந்த சிறு பற்றைக் காடுகள் நான் வேட்டை நடைபெறும் இடம்.

அங்கே இவர்களின் நாய்களின் உதவியோடு, முயல் உடுப்பு முதலிய சிறு பிராணிகளை வேட்டையாடுவார்களாம்.

நான் இந்தக் குழுவில் சேர முடியாது. என்னிடம் நாயும் இல்லை. (எங்கள் வீட்டில் நாய் வளர்ப்பதும் தடை செய்யப்பட்;டது)

ஏனென்றால் நான் சைவப் பிள்ளை!

நான் மிகச் சிறுவனாக இருந்த காலந் தொட்டே இந்தச் சைவக் கட்டுபாடுகளை மிக ஒழுங்காகக் கடைப்பிடித்து வந்தவன். அப்பா, ஆச்சிக்குத் தெரியாதுதானே, என்று கருதி நான் ஒருபோதும் எந்தக் கட்டுபாட்டையும் மீறி நடந்தது கிடையாது.

நான் வளர்ந்து அறிவு ப+ர்வமாக நடக்கத் தொடங்கிய பிறகும் அந்தச் சைவக் கட்டுபாடுகள் பலவற்றைப் பேணியே வருகிறேன். ஏனென்றால் இந்தக் கட்டுபாடுகள் நீதியையும், உடல் நலத்தையும் ஆதாரமாகக் கொண்டு அமைந்திருக்கின்றன.

இப்படி மிகுந்த கட்டுபாடுகள் நிறைந்த ஒரு குடும்பத்திலிருந்த போதிலும் அப்போது எனக்கு முன்னேற்ற காரமான ஒரு சலுகை கிடைத்திருந்தது.

ஓம், அந்தக் காலத்திலேயே நான் குடுமி வைத்திருக்கவில்லை.

அந்தக் காலத்துக்குச் சற்று முன்பாக, பெண்களைப் போல ஆண்களும், குடுமி வைத்திருந்தார்கள். நான் சிறுவனாக இருந்த காலத்திலும் அநேகமான சிறுவர்கள் குடுமி வைத்திருந்தர்கள். என்னையொத்த சைவக் குடும்பத்திலுள்ள ஆண்களுக்கு குடுமி ஒரு கட்;டாயச் சின்னம். அவர்கள் தலையில் முன்பகுதியை மழுங்கச் சிரைத்து பின் பகுதி மயிரை வளர்த்துக் குடுமி வைத்திருப்பார்கள்.

ஏனோ என்னுடைய பெற்றோர்கள் சிறுவயதிலிருந்தே என்னுடைய தலைக்கு “கிலுப்பா’’ தான் வைத்திருந்தார்கள்.

அந்தக் காலத்தில் இதை ஒரு புரட்சி என்றுதான் சொல்ல வேண்டும். என்னுடைய தகப்பனார் தமது இளம் பராயத்தில் நிச்சயமாகக் குடுமி வைத்திருப்பார். ஆனால் நான் அறியத் தக்கதாக அவர் தலையை மொட்டை அடித்திருந்தார். முதலில் சில காலம் உச்சியில் நாலைந்து மயிர் மட்டும் (துருக்கித் தொப்பியில் இருக்கும் குஞ்சம் போலவும், மகாத்மா காந்தியின் சில படங்களில் காண்பது போலவும்) இருந்தது. பிறகு அவையும் இல்லாமல் ஒரே மொட்டையாக இருந்தது.

தலை மயிரை வளர்ப்பதிலும், வெட்பதிலும், அதை அலங்கரிப்பதிலும் எங்களுடைய பண்பாடு – தமிழ்ப் பண்பாடு இருப்பதாகப் பலரும் சொல்கிறார்கள். இதே போல உடை அணிவதிலும் தமிழ்ப் பண்பாடு என்று ஒன்று இருப்பதாகச் சொல்கிறார்கள்.

சமீபத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் பல பெண்கள் - இதற்குமுன் இரண்டு பின்னல்களைப் பின்னிக்கட்டியிருந்த – தமது கூந்தலை வெட்டி “குரோப்’’ செய்திருப்பதைப் பற்றி சிலர் “தமிழ்ப்’’ பெண்களின் பண்பாடு அழிகிறதே,! என்று குறிப்பிட்டதைக் கேட்டிருக்கின்றேன்.

பண்பாடு, நாகரிகம் என்றால் என்ன?

ஒரு இனத்தின் பழக்க வழக்கங்களையே இந்த இனத்தின் பண்பாடு என்று சொல்கின்றோம்.

இந்தப் பழக்க வழக்கங்கள் என்றுமே மாறாமல் “அன்றைக்கு’’ இருந்தபடியே இன்றைக்கும் இருக்க வேண்டும். இனியும் என்றென்றைக்கும் இருக்க வேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள் - அவர்களும் தமது தந்தையரின் காலத்தில் இருந்தது போலவும், பேரனாரின் காலத்தில் இருந்தது போலவும் தான் இன்றைக்கும் இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். அதற்குமிஞ்சி அவர்களால் “விரும்ப’’ முடியாது ஏனென்றால் எல்லாச் சக்திகளையும் மீறிக் கொண்டு மாற்றங்கள் நடந்து கொண்டேயிருக்கின்றன.

தமிழ்ப் பெண்யொருத்தி, நீண்ட கூந்தலோடு, சேலை உடுத்தி, பொட்டிட்டு, பொன், நகை அணிந்து வந்தால் தான் “அது தமிழ்ப்பண்பாடு” என்று நினைக்கிறோம். ஏனென்றால், எமது தந்தையர் காலத்திலும், பேரனார் காலத்திலும் அத்தகைய தோற்றத்தில் தான் பெண்களின் அழகைக் கண்டிருக்கின்றோம். படித்த இலக்கியங்களிலும், பார்த்த ஓவியங்களிலும் அத்தகைய தோற்றத்திலேயே அழகிய பெண்களைக் கண்டிருக்கின்றோம். அதுதான் அழகு என்று எங்கள் மனதில் பாடம் செய்திருக்கின்றோம்.

கடந்த அரை நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழ் ஆண் மக்கள் எல்லாரும் தங்கள் குடுமிகளை வெட்டி எறிந்து “தமிழ்ப் பண்பாட்டை மீறி விட்டார்கள்.

அப்படி மீறி நிற்கிறவர்;;;களே இன்று பெண்கள் தமது கூந்தலை வெட்டுவதைக் கண்டு “ஐயோ தமிழ்ப் பண்பாடு தொலைகிறதே!’ என்று ஓலமிடுகிறார்கள்.

இதே மாதிரித்தான் மனிதர்களுடைய – தமிழர்களுடைய உடுப்புகளும்.

கொஞ்சக் காலத்துக்கு முன்பெல்லாம் தமிழ்த் தலைவர்கள் தலைப்பாகை அணிவதைக் கண்டிருக்கிறோம். அதற்குச் சற்று முன், உத்தியோகம் பார்க்கிற எல்லாரும் தலைப்பாகை அணிவார்கள்.

தமிழர் பண்பாடு நாகரிகம் என்ற பெயரால் எல்லாப் பழைமைகளையும் கட்டி அழத் தேவையில்லையென்று நான் இன்றைக்கு நினைக்கிறேன். எந்தப் பெரிய கொம்பனாலும் அவைகளைக் கட்டி நிறுத்தி வைக்க முடியாது.

நல்லவைகளை எடுத்துக் கொள்வோம் கெட்டவைகளை – பயனற்றவைகளை நீக்கி நடப்போம்.

7. அப்பா

என்னுடைய பெற்றோர்கள் “நாகரிகம், பண்பாடு’’ என்ற வார்த்தைகளைக் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.

ஆசாரம், ஒழுக்கம், கட்டுபாடு, என்றே அவர்கள் அறிந்திருப்பார்கள்.

அவர்கள் மெத்தப் படித்தவர்கள் அல்லர். ஆனாலும் “ஊரோடு ஒத்து வாழ்’’ என்ற ஆத்திசூடிக் கருத்தையும் தமது முன்னோரிடத்திலிருந்து ஆசாரம், ஒழுக்கம், கட்டுபாடு என்பவற்றையும் அறிந்திருந்தார்கள்.

அப்படியிருந்தும், தம்மைப் பொறுத்த விஷயங்களில் மற்றவர்களைப் பாதிக்காத விஷயங்களில், பழைய வழக்கங்கள் சிலவற்றை எனது தகப்பனார் மறுத்து நடந்திருக்கிறாரென்றே தோன்றுகிறது - எனக்குச் “சிலுப்பா’ வைத்தது மட்டுமல்ல@ இப்படி பல விஷயங்கள்!
அப்பா!

என்னுடைய தகப்பனாரை நான் “அப்பா’’ என்று தான் சொல்வது வழக்கம். தாயாரை “ஆச்சி’’ என்று சொல்வேன்.

ஆனால் எங்கள் கிராமத்தில் எல்லாரும் தகப்பனை “அப்பு’’ என்று தான் சொல்லுவார்கள். “அப்பா’’ என்றால் அவர்களுடைய கருத்தில் அது பேரனைக் குறிக்கும்.

எங்கள் வீட்டில், பேரனை பெத்தப்பா’ என்று சொல்லுவோம்.

அப்பா அல்லது அம்மாவின் தகப்பன் பேரன், மகன் அல்லது மகளின் மகன் தன்னுடைய பெத்தப்பாவை இப்போது “தாத்தா’’ என்றுதான் சொல்லுகிறான்.

அந்தக் காலத்தில் சிறிய தந்தையை குஞ்சியப்பு, சீனியப்பு என்பார்கள். அவர் இப்போது சித்தப்பா ஆகிவிட்டார். அதே மாதிரி குஞ்சியாச்சி சின்னம்மாகவும் : அம்மான், மாமாவாகவும் மாறிவிட்டார்கள்! (டாடி, மம்மி, அங்கிள் அண்டி என்று ஆங்கிலத்துக்கு மாறிவிட்டவர்களை நான் கணக்கில் சேர்க்கவில்லை)

எனது பதினைந்தாவது வயதில் அப்பா இறந்து போனார். அவர் வாழ்ந்து கொண்டிருந்த போது, எல்லாருடைய அப்பாக்களையும் போல அவரையும் சாதாரண அப்பாவாகவே நினைத்திருந்தேன்.

இப்போது சிந்தித்துப் பார்க்கும்போது, ஓ! அவர் எத்தகைய மாமனிதர் என்று பிரமித்துப் போகிறேன். அப்படிப்பட்ட ஒரு தந்தைக்கு மகனாகப் பிறந்து குறித்து மிகுந்த மன நிறைவு கொள்கிறேன்.

கறுத்த நிறம், வாட்டசாட்டமான உடம்பு. ஆழ்ந்த சிந்தனை நிறைந்த கூரிய பார்வை. மொட்டைத் தலை முழங்காலோடு நிற்கும் சுத்தமான நாலு முழ வேட்டி, ஒரு பக்கத் தோளில், சுருக்கி மடித்துப் போடப்பட்ட சால்வைத்துண்டு இவைகளோடு ஒரு உறுதிவாய்ந்த மனிதரின் தோற்றம் என் மனதில் தெளிவாக இருக்கின்றது.

அவர் கல கல வென்று சிரிப்பது மிக அருமை அதனால் கர்வம் பிடித்தவர் போன்ற ஒரு முகத்தோற்றம்.

நேர்மையும் வாய்மையும் அவருடைய வழிகள்.

யாருடைய சோலி சுரட்டுக்கும் போகமாட்hர். தமது கடமைகளில் இம்மியும் தவறாதவர்.

காலையில் அவர் எப்போது எழும்புகிறார் என்பதை நான் ஒரு நாளும் கண்டதில்லை. விடிகிறது விடியுமுன் அவர் முற்றத்தை “சறக்சறக்’’ விளக்கு மாற்றால் கூட்டும் சத்தம் கேட்கும். அவருக்கு எல்லாமே சுத்தமாக – மிகச் சுத்தமாக இருக்க வேண்டும். காலை ஏழு மணிக்கு முன்பே. எங்கள் வீட்டின் முன் பக்க விறாந்தையிலிருந்த தமது கடையைத் திறந்து விடுவார்.

எங்கள் வீட்டில் அப்போது மணிக்கூடு இருக்கவில்லை. ஆனாலும் ஏதோ நிழலை அடையாளம் வைத்துச் சரியாகப் பதினொரு மணிக்கு ஒரு பித்தளைத் “தவலை’’ யையும் எங்கள் வீட்டில் ஒரு கிணறு இருந்தது. ஆனால் அது உப்புத் தண்ணீர், பொன்னாலை மேற்குப் பகுதியில் எல்லாக் கிணறுகளுமே உப்புத் தண்ணீர்தான். குடிப்பதற்கும் சமைப்பதற்கும் தேவையான நல்ல தண்ணீரை சுமார் கால் மைல் தூரம் நடந்து போய் வயல் வெளியிலுள்ள கிணறுகளில் அள்ளி வருவார்கள்.

அப்பா மேலும் கொஞ்ச தூரம் நடந்து “ அறுகம் பிட்டி ’’ என்று சொல்லப்பட்ட மிகவும் நல்ல தண்ணீர் கிணற்றுக்குத் தான் குளிக்கப் போவார். அவர் “சோப்’’ போட்டுக் குளித்ததில்லை. வெகு நேரமாக உடமைத் தேய் தேயென்று தேய்த்து அழுக்கு நீக்கிக் குளிப்பார். “சோப்’’ போட்டுக் குளிப்பவரின் உடம்பு கூட அவ்வளவு சுத்தமாக இராது.

குளித்துவிட்டு வரும்போது தவலைத் தண்ணீரைத் தோளிலும், வாளித் தண்ணீரைக் கையிலும் சுமந்து கொண்டு வந்து சேருவார்.

வீட்டு வாசலுக்கு சில யார்கள் முன்பு வரும்போதே அவர் சேருமுவதும், நாங்கள் தயாராக வைத்திருக்கும் ஒரு பேணியை அவரிடம் கொடுத்து விட்டு, தவலைத் தண்ணீரை இறக்கி வாங்கி வைப்பதும் நாள் தவறாமல் நடக்கும் நிகழ்ச்சி நாங்கள் கொடுத்த பேணியால் வாளித்தண்ணீரில் சிறிது அள்ளி கால்களைக் கழுவிவிட்டுத்தான் அப்பா வீட்டுக்குள் நுழைந்தார்.

அப்பா தமது உணவு விஷயத்திலும் மிகுந்த கட்டுப்பாடுடையவர். கோப்பி, தேநீர் ஒருபோதும் அருந்தமாட்டார். காலையில் எந்த உணவும் உண்பதேயில்லை. நண்பகலிலும் இரவிலும் குறிப்பிட்ட நேரத்துக்கு குறிப்பிட்ட அளவு உணவே உண்பார்.

அப்பாவுக்குக் கடவுள்மீது நம்பிக்கை இருந்ததென்பது நிச்சயம். ஆனால் ஆடம்பரமாகக் கடவுளை அவர் துதித்ததை நான் கண்டதில்லை. சாமி கும்பிடுவதற்கதக அவர் கோயிலுக்குப் போவதில்லை. பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆவணி மாதத்தில் வருடாந்த திருவிழாத் தொடங்கும். கொடியேற்றத்துக்குச் சில நாட்களுக்கு முன்பு, கோயில் ப+சகர் ஊரிலே முக்கியமான ஆட்களுக்கெல்லாம் இன்ன திகதியில் திருவிழாத் தொடங்குகிறதென்று போய்ச் சொல்வது வழக்கம், ஐயர் வந்து வீட்டில் சொல்லிவிட்டுப் போனாரே என்பதற்காக கொடியேற்ற தினத்தன்று அப்பா கோயிலுக்குப் போய் கொடியேறும்வரை அங்கே நின்றுவிட்டு வீடு திரும்புவதே வழக்கம். இதுதான் நான் கண்ட அப்பா கோயிலுக்குப் போன காட்சி.

நான் மிகசச் சிறுவனாக இருந்தபோது அப்பா தினசரி தீட்சை “அனுட்டானம்’’ பார்ப்பதும், நெந்நி, மார்பு கைகள் முதலிய இடங்களில் திருநீற்றைக் குழைத்து மூன்று விரல்களால் அழகாகப் ப+சுவதும், சந்தக் கல்லில் சந்தனம் அரைத்துப் போட்டு வைப்பதுண்டு. ஆனால் பிறகு, அவற்றையெல்லாம் விட்டு விட்டு வீப+தியை நெற்றியில் பரவிப் ப+சி “சிவ சிவ’’ என்று சொல்லிக் கொள்வதோடு அவருடைய கடவுள் வணக்கம் நின்றுவிட்டது.

ஆனால், இன்னொரு விஷயத்தை மட்டும் எனக்குத் தெரிந்த நாள் முதல் கடைசிவரையும் ஒழுங்காகச் செய்து வந்தார்.

அது, தியானம், யோகாப் பியாசம் என்று சொல்லலாம்.

தினசரி அதிகாலையில் பொழுது விடியுமுன் “கொடியிலிருக்கும் மான்தோலை எடுத்து ஒரு தட்டுத்தட்டி தூசி கலைத்துவிட்டு அதைக் கட்டிலின்மீது, போடுவார். அதன் மேல் ஒரு சுத்தமான நாலு முழத் துண்டை மடித்துப் போடுவார். பிறகு அதன் மீது கால்களைப் பத்மா சனமாகப் போட்டுக் கொண்டு உட்காருவார். இரண்டு கைகளையும் முழங்கால்களின் மீது வைத்துக் கொள்வார். பிறகு கண்களையும் மூடிக்கொண்டு ஏதோ கணக்குப் பண்ணி மூச்சை உள்ளே இழுப்பதும் வெளியே விடுவதுமாக இருப்பார் - இது சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் நடக்கும், அதன் பிறகு சில நிமிடங்கள் குறிப்பிட்ட சில பாடல்களைப் பாடுவார்.

“சீதர களப்பச் செழுந்தாமரைப் ப+வும்’’, “பொல்லாப் பிழையும் இல்லாப் பிழையும்’’ ஆகிய பாடல்களை அவர் தினசரி பாடுவது நினைவு வருகிறது.

இதே யோகாசனக் காட்சி இரவிலும் சுமார் ஏழுமணியளவில் - சாப்பாட்டுக்கு முன் நடக்கும்.

தினசரி காலையும் மாலையும் அப்பா யோகப்பியாசம் செய்வதை நான் பல ஆண்டுகளாகப் பார்த்திருக்கிறேன்.

இந்த யோகாப்பியாசப் பயிற்சிக்கு அவருக்கு யாரும் “குரு’’ இருந்ததாகத் தெரியவில்லை. அந்த வழியில் அவரை ஊக்கியவர் யாரென்பதும் தெரியவில்லை. எங்களுரில் அப்படி வேறு யாரும் யோகாப்பியாசப் பயிற்சி செய்ததாகவும் தெரியவில்லை.

அப்பாவிடம் இரண்டு புத்தகங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று கடப்பை, சச்சிதானந்த யோகீஸ்வரர் என்பவர். எழுதிய யோகாசனம் பற்றிய நூல். பெரிய மொத்தப் புத்தகம். அதில் சச்சிதானந்த யோகீஸ்வரர் பத்மாசன மிட்டு யோகாசனத்தில் இருக்கும். ஒரு அழகான போட்டோப்படமும் இருந்தது. அப்பா அந்தப் புத்தகத்தைப் படித்தே யோகாசனப் பயிற்சியைத் தொடங்கியிருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். ஆனால் அப்படி ஒரு நூலை வாங்கவோ, யோகாசனப் பயிற்சி வேண்டுமென்ற விருப்பத்தை அவருக்கு உண்டாக்கவோ யாரோ ஒருவர் இருந்துதானிருக்க வேண்டும். அது யாரென்று தெரியவில்லை.

யாழ்ப்பாணத்தில் அப்போது யோகர் சாமியார் இருந்த காலம். அப்பாவும் யோகரும் சம காலத்தவர்கள், யோகர் சாமி பிறந்தது 1865 ம் ஆண்டென்றும், மறைந்தது 1964 ஆம் ஆண்டென்றும், திரு. ச. அம்பிகைபாகன் எழுதிய நூலிலே குறிப்பிட்டிருக்கிறார். அதன்படி அப்பா யோகர் சுவாமிக்கு பதினைந்து வயது இளையவன். இவ்வுலகில் சுமார் நூறு ஆண்டுகள் வாழ்ந்த சாதனை யோகர் சுவாமிக்குண்டு. அப்பா அறுபது ஆண்டுகளே வாழ்ந்தார். அப்பாவும் யோகர் சுவாமியும் சம காலத்தவரேயாயினும், யோகரோடு அப்பாவுக்கப் பழக்கம் இருந்ததில்லை.

யோகர் சுவாமிகளைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைப் பார்ப்பதற்காக ஒருமுறை அப்பா கொழும்புத்துறைக்குப் போனார். அப்பா யோகரை அதற்குமுன் கண்டதில்லை. வழி விசாரித்து யோகரின் வீட்டுக்குப் போயிருக்கிறார். அங்கேயிருந்த ஒருவரிடம் “யோகர் இருக்கிறாரா?’’ என்று கேட்டிருக்கிறார்.

“அவன் இங்கே இல்லை. கொழும்புக்குப் போய்விட்டான்!’’ என்று அப்பாவுக்குப் பதில் கிடைத்தது. “யாரிவன், சுவாமியை “அவன் இவன்’ என்று கதைக்கிறானே’’ என்று நினைத்துக் கொண்டு அப்பா திரும்ரி விட்டாhர்.

பிறகு யாரிடமோ இந்த நிகழ்ச்சியைச் சொல்லிக் கதைத்த போது, அப்பாவுக்குப் பதில் சொல்லித் திருப்பி அனுப்பியவர்தான் யோகர் தெரியவந்தது.

மீண்டும் ஒருமுறை யோகர் சுவாமியைப் பார்ப்பதற்காக அப்பா பயணம் வெளிக்கிட்டார். – பயணந்தான். பொன்னாலையிலிருந்து கொழும்புத்துறை பன்னிரண்டு மைல் தூரம் பஸ்ஸா, காரா? – மாட்டுவண்டிப் பயணந்தானே!

அப்பா தனது ஒற்றைத் திருக்கல் வண்டியில் புறப்பட்டார். இம்முறை என்ன நினைத்தாரோ, மிகச் சிறு பையனாக இருந்த என்னையும் கூட்டிக் கொண்டு போனார். அதிகாலை நாலு மணிக்கு எழுப்பி மாட்டு வண்டியில் புறப்பட்டது நினைவிருக்கிறது. வழிப் பயணமெதுவும் தெரியாது வண்டிக்குள் நித்திரை. அப்பொழுது எனக்கு ஏழெட்டு வயதுதானிருக்கும்.

என் வீட்டின் தலைவாசல் போன்ற ஒரு இடத்தில், சுமார் பதினைந்து இருப்பது பேர்கள் கூடியிருந்தார்கள். கூட்டத்தில் தலைவர் போல ஒருவர் உட்கார்ந்திருக்கிறார். அவர்தான் யோகர் சுவாமியாக இருக்க வேண்டும். குத்துவிளக்கு ஏற்றியிருந்தாலும், கற்ப+ரம் எரிந்ததும், யாரோ தேவாரம் பாடிக்கொண்டிருந்ததும் என் நினைவின் அடி ஆழத்திலிருந்து நிழற் காட்சிகளாக இப்போது எனக்குத் தெரிகிறது.

அந்த அடியார் கூட்டத்தில் நானும் அப்பாவும் ஒரு பக்கமாக உட்கார்ந்து கொண்டேன். தேவாரம் பாடி முடிந்தது. ஒவ்வொருவராக யோகர் சுவாமியின் அருகில் சென்று அவரை வணங்குகிறார்கள். சிலர் கற்கண்டு வாழைப்பழம் முதலிய பொருள்களை அவர் முன் படைக்கிறார்கள்.

அப்பா அவரை வணங்கி எழுந்த பிறகு நானும் நிலத்தில் நீளக் கிடந்து (அட்டங்கமாக) யோகரை வணங்கி எழுகிறேன்.

இந்த இடத்தில் ஒரு புது நினைவு. இப்போதெல்லாம் கோயில்களில் கூட தரையில் குப்புறப்படுத்து அட்டாங்க வணக்கம் செய்யும் பழக்கம் குறைந்து வருவதும் போலத் தெரிகிறது. இதைப் பற்றி ஏன் எழுதுகிறேனென்றால், இந்தக் காலத்தில் - சில ஆண்டுகளுக்கு முன்னால் நான் கொழும்பு சென்றிருந்த போது நண்பர் சில்லைய+ர் செல்வராசனைச் சந்திப்பதற்காக அவருடைய வீட்டுக்குப் போயிருந்தேன். நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது அவருடைய புகழ்வாய்ந்த மனைவி கமலினியும் ஒரு சிறுவனும் அந்த இடத்துக்கு வந்தார்கள். சிறுவனைத் தங்கள் மகன் என்று எனக்கு அறிமுகப்படுத்தி விட்டு, அவனிடம் ஏதோ மெதுவாகச் சொன்னார் செல்வராசன். உடனே அந்தச் சிறுவன் என் காலருகே தரையிலே குப்புறப்படுத்து அட்டாங்கமாக வணக்கம் செய்தான்!

ஒரு கணம் திணறிப் போனேன். “இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு பண்பாடா,’’ என்று

இது இருக்க ………………..

நான் யோகர் சுவாமியை வணங்கி எழுந்ததும் “என்ன பெயர்?’’ என்று அவர் கேட்டார்.

நான் “வரதராசா’’ என்று மிக அடக்கமாக எனது பெயரைச் சொன்னதும், அவரே தம் முன்னாலிருந்த தட்டிலிருந்து கொஞ்சம் கற்கண்டை எடுத்து என்னுடைய கைகளில் தந்தார். பிறகு, “நீ பின்னுக்கு நல்லாயிருப்பாய்’’ என்று ஒரு வாழ்த்தும் சொன்னார். யோகர் சுவாமி இப்போதும் என் நினைவில் இருக்கிறார்.

அந்த ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு அப்பாவுக்கும் யோகர் சுவாமிக்குமிடையே எவ்விதத் தொடர்பும் இருந்ததில்லை!

மீண்டும் யோகரிடம் அப்பா போனதில்லை. “உவரிடம் எனக்கு அலுவலில்லை’’ என்று கருதியிருக்கலாம்.

அப்பாவின் ஒற்றைத்திருக்கல் மாட்டு வண்டிக் கூடாரத்தின் ஒரு பக்கத்தில் ஒரு சிறிய “போட்’’ பலகை இருக்கும். அதில் “தி சண்முகம், தொல்புரம், கமம்’’ என்று மூன்று வரிகள் எழுதியிருக்கும். ஆனால் அப்பாவுக்கு கமம் (விவசாயம்) இருந்ததில்லை. அந்தக் காலத்தில் விவசாயத்தேவைக்கான வண்டிகளுக்கு வரிகட்டத் தேவையில்லை. ஏனைய வண்டிகளுக்கு ஏதோ ஒரு வரி இருந்திருக்க வேண்டும். அதனால் எல்லா வண்டிக்காரர்களுமே தங்கள் வண்டியில் “ கமம்’’ என்று தான் எழுதியிருப்பார்கள்! அப்படி எழுதுவதை ஒரு தவறாக யாரும் கருதுவதில்லை.

அப்பாவின் ஊரும் “பொன்னாலை’’ தான். ஆனால் பொன்னாலைக்குரிய விதானையார் தொல்புலத்திலேயே இருந்தார். தொல்புரத்தில் ஒரு பகுதியாகவே பொன்னாலைக் கிராமமும் சட்டப்படி கருதப்பட்டது.

அப்பாவுக்குக் “கமம்? இருக்கவில்லை. ஆனால் ஒரு ‘கடை’’ இருந்தது. அந்தக் கடைக்குத் தேவையான பொருட்களை சங்கானை, சுன்னாகம் சந்தைகளிலும், பெரியபட்டணத்திலும் (யாழ்ப்பாணம்) போய் வாங்கி வருவதற்காக அவருக்கு அந்த வண்டி தேவையாக இருந்தது. எப்போதாவது எங்கள் குடும்பம் கோயில்களுக்கோ, உறவினர் வீடுகளுக்கோ போய் வருவதற்கும் அந்த வண்டி உபயோகப்பட்டது.

8. பிரசித்தகாரன்

இன்று ஓடிக்கொண்டிருக்கும் உலகத்துக்கு மாட்டு வண்டி தோதாக இல்லைதான். ஆனால் அன்றைய உலகம் இப்படியெல்லாம் ‘அவசரப்படாத’ உலகம். அதற்கு மாட்டு வண்டி மிகத் தோதான வாகனம். எரிபொருள் செலவுஎதுவுமில்லை. மாட்டுக்கான தீவனம் மட்டுந்தான் செலவு. அன்றைய கிராமத்திலே அது அவ்வளவு பெரிய விடயமல்ல. வண்டிக்கான பராமரிப்புச் செலவு. ‘இல்லை’ என்று சொல்லக்கூடிய அளவுக்கு எப்போதாவதான் வரும். ஊர்த்தச்சரும், கொல்லரும் அதைச் சொற்ப செலவில் செப்பம் செய்து விடுவார்கள்.

இன்று ‘போக்கு வரத்து’ என்பது பெரிய பிரச்சினையாகவும், பெருஞ்செலவை உண்டாக்குவதாகவும் வளர்ந்து நிற்கின்றது! ‘கட்டைவண்டி’க் காலத்தின் அமைதியும் நிம்மதியும் இனி ஒரு போதும் வராது!

‘கமம்’ அல்லாத வண்டிகளுக்கு ஆண்டு தோறும் எத்தனை ரூபா வரிப்பணம் கட்டவேண்டியிருந்ததென்பது தெரியவில்லை.

ஆனால், இருபத்தொரு வயதுக்கு மேற்பட்ட உழைப்பாளிகளான ஒவ்வொரு ஆண்மகனும், ஆண்டு தோறும் ஆளுக்கு ஒரு ரூபா வரிப்பணம் கட்ட வேண்டியிருந்தது. அந்த வரி எதற்கு? அவர் உயிரோடு ஊரில் வாழ்வதற்குத் தான். அந்த வரிக்குப் பெயரே ‘தலைவரி’ என்பதுதான்!

இந்தத் தலைவரியைக் குறித்த தவணைக்குள் கட்டிவிட வேண்டுமென்று அரச அறிவித்தல் வரும்.

இப்போது அரச அறிவித்தல்கள் செய்தித் தாள்களில் வரும் வானொலியில் வரும். தொலைக்காட்சியிலும் வரும். அந்தக் காலத்தில் இந்த மக்கள் தொடர்புச் சாதனங்கள் எதுவுமே மக்களிடம் செல்வதில்லை. எனினும், அரச அறிவித்தல்கள் யாவும் கிராமம் கிராமமாக மூலை முடுக்குகளில் வாழ்ந்த மக்களையெல்லாம் ஒழுங்காகச் சென்றடைந்தன.

எப்படி?

அந்தக் கால அரச அறிவித்தல்கள் எல்லாம் ‘பிரசித்தம்’ மூலம் வரும்!

அரசாங்க ஏஜண்டர் மணியகாரனுக்கு அறிவிக்க, மணியகாரன் உடையாருக்கு அறிவிக்க, உடையார் விதானையாருக்கு அறிவிப்பார். அறிவித்தல் கிடைத்த உடனே விதானையார், வழக்கமாக ஒழுங்கு செய்து வைத்திருக்கும் பிரசித்தகாரனை (பறையடிப்பவன்)க் கூப்பிட்டு, ஒரு கடிதத்துண்டில் அறிவித்தலை எழுதிக் கொடுப்பார். அவனுக்கு வாசிக்கத் தெரியாதாதலால் அந்த வாசகத்தை அவனுக்கு வாய் மூலம் சொல்லிப் பாடமாக்குவித்து அனுப்புவார்.

ஒழுங்கையில் ‘டும், டும், டும்’ என்று பறை ஒலி கேட்டதும் எல்லாரும் படலைகளைத் திறந்து கொண்டு பிரசித்தகாரனை எதிர்நோக்கி நிற்பார்கள். கிட்ட வந்ததும் “என்ன பிரசித்தம்?” என்று கேட்பார்கள். அவனும் விதானையார் பாடமாக்குவித்து அனுப்பிய அறிவித்தலை “இத்தால் கலமானவருக்கும் தெரிவிப்பது…” என்று முறையாக எடுத்துச் சொல்வான். மிக அருமையாக யாராவது படித்தவர்கள்” சந்தித்தால் அவர்களிடம் விதானையார் எழுதிக் கொடுத்த அறிவித்தலை ‘நயினார் பாக்கவும்’ என்று சொல்லிக் காட்டுவான்.

இந்தப் பறையடிக்கிறவர்களுக்கு ஊரிலுள்ள எல்லா மனிதர்களினதும் குலம் கோத்திரம் எல்லாம் அப்பொழுது தெரிந்திருந்தது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவர்களுக்குரிய பட்டப்பெயர் ஒன்று தெரிந்து வைத்துக்கொண்டு அந்தப் பெயரைச் சொல்லி அழைப்பார்கள். எங்கள் வீட்டாரை ‘செகராச சேகரம்’ என்பார்கள். இது என்ன படடம் என்று எனக்குத் தெரியவில்லை. முன்பு சில காலம் ‘நாங்கள் செராச சேகர அரக பரம்பரையாக்கும்!’ என்று பொருமையக நினைத்ததுண்டு. அது எப்படி இருந்தாலும் இப்போது நான் ‘பரம்பரை’க்கு மதிப்புக் கொடுப்பதில்லை. பரம்பரைக்கு மதிப்புக் கொடுத்த காலம் ‘மலையேறிவிட்டது!’

இப்போது இன்றைக்கு, யாரிடம் ஒழுக்கமும், அறிவும், பதவியும், செல்வமும் இருக்கிறதோ அவர்தான் உயர்ந்தவர்@ இந்த நான்கு பொருள்களும் ஒருவரிடம் வரிசைக்கிரமப்படி மேலோங்கி நிற்பதை அறிந்து அவருடைய மதிப்பையும் கணக்கிட்டுக் கொள்ளலாம். அப்படி உயர்ந்த மதிப்புப் பெறுகிறவர்தான் இன்று உயர்ந்த ‘சாதி’ பெரும்பாலும் இன்று நியாயம் நடப்பதாகவே தோன்றுகிறது.

இது இருக்க.

பறையறைந்து பிரசித்தம் செய்யும் முறை மிகப்பழைய காலத்திலிருந்தே தமிழ் நாட்டில் வழக்கமாயிருந்திருக்கிறது. தமிழ் நூல்கள் பிரசித்தகாரனை ‘முரசறைவோன்’ என்று கூறும்.

அப்பாவின் மாட்டு வண்டி நினைவுக்கு வந்ததும், அதனுடைய அமைப்பு என் கண் முன்னே தெரிகிறது. வெயிலுக்கும் மழைக்கும் பாதுகாப்பாகப் பயணம் செய்யக் கூடிய ஒரு சாதாரண வண்டிதான் அது. அலங்காரங்கள் எதுவும் கிடையாது. அப்போது சில பணக்காரர்களிடம் அழகான வில் வண்டிகள் இருந்தன. அப்பாவின் வண்டி சாதாரண ‘ஏபோட்டி’ கார் என்றால், அவைகள் நவீன யப்பானிய டயோட்டா, டற்சன் மாதிரியிருக்கும்! அந்த வில்வண்டி அமைப்புகளெல்லாம் எமது அடுத்த சந்ததிக்குத் தெரியாமல் போகக்கூடும்!

வில் வண்டிக் கூடாரங்களெல்லாம் நல்ல பிரம்புகளினால் அமைக்கப்பட்டு அதன்மேல் உயர்ந்த பூத்துணிகளும், அதன்மேல் மெழுகுசீலையும் போட்டு அமைக்கப்பட்டிருக்கும். அழகாக வண்ணம் பூசப்பட்டிருக்கும். உள்ளே உட்காரும் இடத்துக்கு வைக்கோல் பரப்பி அதன் மேல் புற்பாய் விரிக்கப்பட்டிருக்கும்.

எங்கள் வண்டிக்கு ஒருமுறை கூடாரம் அமைத்தது எனக்கு நினைவிருக்கிறது. பொன்னாலைக் கிருஷ்ணன் கோவிலுக்குப் பின்னாலுள்ள தரவையில் அலரிச் செடிகள் நிறைய இருந்தன. நல்ல றோசாப் பூக்களைப் போல, அதே நிறத்தில் கொத்துக் கொத்தாகப் பூத்துச் சொரியும் போது மிக அழகாக இருக்கும். ஆனால் அலரிப் பூக்களுக்கு வாசனை கிடையாது. தற்கொலை செய்ய விரும்புகிறவர்கள் இந்த அலரியின் விதைகளையோ, வேர்களையோ அரைத்துச் சாப்பிட்டு உயிரை விடுவதாகச் சமீபத்தில் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அப்பா ஒரு கத்தியுடன் போய், அலரிச் செடிகளில் மிக நீண்ட தடிகளைப் பார்த்து பத்துப் பதினைந்து தடிகளை வெட்டிக்கொண்டு வந்தார். வீட்டு வளவுக்குள் அவைகளை நிலத்தில் போட்டு மேலும் கீழும் உக்கிய பனை ஓலைகளைப் போட்டு எரித்தார். ஓரளவுக்கு எரிந்ததும். தடிகளை வெளியே எடுத்து அவற்றின் தோல்களை உரித்தார். நல்ல துப்பரவாகத் தோல்கள் கழற்றி, தடிகள் வெள்ளை வெளேரென்று காணப்பட்டன.

அடுத்த நாள் கூடாரம் கட்டுவதில் தேர்ச்சி பெற்ற ஒரு தொழிலாளி வந்தார். அப்பாவும் அவருமாக, அலரித்தடிகளை வண்டியின் இரு பக்கத் தடிகளிலுள்ள துவாரங்களில் பொருத்தி மேற்பக்கத்தை அளவான உயரத்தில் வளைத்துப் பொருத்திக் கட்டினார்கள். முன் பக்கமும் பின் பக்கமும் சற்றே நீண்டு இருக்கக் கூடியமாதிரி தடிகள் வளைத்துக் கட்டப்பட்டன. அதன் பிறகு மெல்லிய கமுகம் சலாகைகளை குறுக்குப் பாட்டில் வைத்துக் காட்டினார்கள். கூடு சரியாக அமைந்து வி;ட்டது. அதன் மேல் நல்ல பனை ஓலைப் பாய்களை இரண்டு பட்டாகப் போட்டு மூடி, அவற்றின் ஓரங்களைக் கூடாரத்தின் அளவாக வெட்டினார்கள். அதன் மேல் ‘தார்ச்சாக்கு’ப் போட்டு மூடி ஓரங்களைத் தடிகளுடன் சுருட்டித் தைத்து விட்டார்கள். இந்தத் தார்ச்சாக்குகள் எந்த மழையையும் மிக அவதானமாக அளவு தவறாமல் தொழில் நுட்பத்தோடு செய்தார்கள். பயிற்சி இல்லாதவர்கள் இப்படியான வேலைகளைச் செய்ய இயலாது.

அந்தக் காலத்தில் இப்படிப் பல தேர்ச்சி பெற்ற கைவினைஞர்கள் இருந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொழிலில் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.

கோயில் சப்பரத்துக்குப் படல் கட்டும் சில பச்சைத்தென்னோலையிலேயே, இடையிடையே மஞ்சள் குருத்தோலைகளை இணைத்து அவற்றில் அழகிய சித்திரவேலைகளைச் செய்வார்கள்.

எங்க@ரில் நாராயணிச் சட்டம்பியார்’ என்று ஒரு வயோதிபர் இருந்தார். நான் சிறுவனாக இருந்தபோதே அவர் காலமாகி விட்டார். அவர் பல நுட்பமான கைவேலைகள் செய்வாரென்று பிறர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இளைஞர்களுக்கு ‘எட்டு மூலைப் பட்டம்’ ‘கொக்குப் பட்டம்’ முதலிய பட்டங்களை மிக அழகாகச் செய்து, அவைகளுக்கு ‘விண்’ணும் கட்டிக் கொடுப்பாராம் நாராணிச் சட்டம்பியார்.


9. விளையாட்டுகள்

ஆடிமகதம் வந்துவிட்டால்@ இளைஞர்கள் மட்டுமல்ல, சில பெரியவர்களும் பெரிய பெரிய பட்டங்களுடன் கடற்கரைக்கு வந்து பட்டம் விடுவது வழக்கம். பட்டங்கள் உயரப் போனதும், அவற்றில் கட்டியிருக்கும் ‘விண்’கள் ஙொஞ்ஞ்…….’ என்று பெரிதாக ஓசை எழுப்பிக் கொண்டிருக்கும்.

பெரியவர்கள், பெரிய பெரிய பட்டங்களைத் தடித்த சணல் நூல்களில், இரண்டுபனை மூன்று பனை உயரங்களில் பறக்க விட்டுக் கொண்டிருக்க, மிகச் சிறுவர்களாகிய நாங்கள், ஒரு பெரிய தென்னீர்க்கை எடுத்து, அதன் குறுக்காக ஒரு பனை ஈர்க்கை தையல் நூலினால் கட்டி. பனை ஈர்க்கை ஒரு மாதிரி இருபக்கமும் வளைத்து நடுவிலுள்ள தென்னீர்க்கின் முனைகளுடன் நூலிலே பொருத்தி, அதற்கு அளவாக ஒரு கடதாசி எடுத்து அதன் ஓரங்களில் சோற்று பசையைப் பூசி ஒட்டி ‘சீனாப்பட்டம்’ செய்வோம். எங்களுக்குச் சரியாக அது அமையாவிட்டால் சற்றே மூத்த அக்காவையோ அண்ணையையோ கெஞ்சி, அவர்கள் சொல்கிற வேலைகளெல்லாம் செய்து கொடுத்து, அவர்களைக்கொண்டு செய்விப்போம். அந்தப் பட்டத்துக்கு ‘முச்சு’ கட்டியபின் பழைய வேட்டியின் கரையைக் கிழித்து அதற்கு ‘வால்’ கட்டுவோம். அந்தப் பட்டத்தின் முச்சில் தையல் நூலைக் கட்டியதும், ஒரு நண்பன் அதைத் தூக்கிப் பிடித்துவிட, நாங்கள் நூலைப் பிடித்துக் கொண்டு தெரு நீளம் ஓடுவோம். நாங்கள் ஓடும் வரையும் பட்டமும் பறக்கும். நாங்கள் நின்றதும் அதுவும் தரையில் படுத்து விடும். எப்போதாவது சில சமயங்களில் காற்று வளமாக அடிக்க, பட்டம் சற்றே உயரப் பறப்பதுமுண்டு. அப்படிப் பறந்து தெரு ஓரத்திலுள்ள மரக்கொப்புகளில் சிக்கிக் கொள்துமுண்டு.

அப்போதெல்லாம் ஆகாயத்தில் மிக உயரத்தில் விண்கூவிக் கொண்டு பறக்கும் பெரிய எட்டுமூலைப் பட்டங்கள் தான் எங்கள் இலட்சியக் கனவுகளாக இருந்தன.

இப்படி எத்தனை விளையாட்டுகள்!

எந்த விளையாட்டும் தொடர்நது நெடுநாளைக்கு நீடிப்பதில்லை. ஏதோ சொல்லி வைத்ததுபோல, கொஞ்ச நாட்களில் விளையாட்டும் மாறிவிடும். வட்டக்கோடு, கெந்தியடித்தல், ‘வார்’ ஓட்டம், வளையம் உருட்டுதல், ஒளித்து விளையாடுதல், இவைகளுக்கெல்லாம் ‘ராஜா’ போன்ற பெரிய விளையாட்டு ‘தாச்சி மறித்தல்’. இதைக் ‘கிளித்தட்டு’ என்றும் சொல்வார்கள். இந்த விளையாட்டைக் கொண்டு நடத்தும் சூத்திரதாரிக்கு விளையாட்டில் ‘கிளி’ என்றுதான் பெயர்.

இவற்றைவிட, வருடப்பிறப்பு வந்துவிட்டால், பெரிய மரங்களில் ஊஞ்சல் கட்டி ஆடுவது, கைவிசேஷக் காசை வைத்துக்கொண்டு ‘காசு கட்டுவது’ தீபாவளியன்று கடற்கரையில் நிற்கும் மீன்பிடிகாரரின் சிறிய தோணிகளையும், கட்டுமரங்களையும் எடுத்துக் கொண்டு கடலில் தோணியேட்டுவது - இப்படிக் காலத்துக்குக் காலம் விளையாட்டுகளும் மாறிக்கொண்டேயிருக்கும்.

மாரி காலம் வந்துவிட்டால், கோயில் வீதியிலும். கிராமத்துச் சாலையிலும் எங்களால் விளையாட முடியாத நிலை ஏற்படும். எங்கள் விளையாட்டிடங்கள் எல்லாம் சேறும் சகதியுமாக இருக்கும்.

மற்றைய கிராமங்களின் ஒழுங்கைகள் போலன்றி, எங்கள் பொன்னாலையில், கிருஷ்ணன் கோயிலிருந்து பிள்ளையார் கோவில் வரை சுமார் கால் மைல் தூரத்துக்கு மிக அகலமான சாலை இருக்கிறது. வேட்டைத் திருவிழாவன்று, வரதராஜப் பெருமன், மகாலட்சுமி பூலட்சுமி ஆகிய மூவரும் தனித்தனியே மூன்று குதிரை வாகனங்களில், மிகப் பெரிய மேல் சாத்துப்படி கீழ்ச் சாத்துப்படிகளுடன் ஒரே வரிசையில் பிள்ளையார் கோயிலுக்கு வந்து போவதற்காக அந்தச் சாலை இப்படி அகலமாக அமைக்கப்பட்டதாகச் சொல்வார்கள். அந்தச் சாலையும் எங்களுடைய முக்கியமான விளையாட்டுத் தளங்களுள் ஒன்றாக இருந்தது.

இன்று போல அப்போது தார்போட்ட சாலைகள் யாழ்ப்பாணத்தில் மிக மிகக் குறைவு. மிகச் சில பிரதான சாலைகள் மட்டுமே தார் போடப்பட்டிருந்தன. வேறு சில சாலைகள் கல் பரப்பி உருளை விட்டுச் சமப்படுத்தப்பட்டிருந்தன. இவைகளை ‘மக்கி றோட்’ என்று சொல்வார்கள். அந்தக் காலத்து ‘உருளை’ களை மாடுகள்தான் இழுத்தன. உருளையை வண்டித் துலா போன்ற அமைப்பிலை இணைத்திருக்கும். அந்தத் துலாவில் நுகத்தைப் பொருத்தி அதில் இரண்டு மாடுகளைப் பூட்டி உருளையை இழுப்பார்கள்.

மழைக்காலம் வந்து, எங்கள் விளையாட்டு இடங்களை பழுதாக்கி விடவே, எங்களுடைய விளையாட்டையும் மாற்றிக் கொள்வோம்.

மாரி காலத்தில் கேணிகள், குளங்களில் நீந்திக் கும்மாளமடிப்பதுதான் எங்களுடைய முக்கியமான விளையாட்டு.

எங்களுரில் சின்னக்குளம், பெரியகுளம் என்று இரண்டு குளங்களும், பல கேணிகளும் உண்டு.

பெரிய குளம் என்பது உண்மையிலேயே மிகப் பெரியது. யாழ்ப்பாணத்தில் அவ்வளவு பெரிய குளம் இருப்பதை நான் அறிவேன்@ அதன் கிழக்கு எல்லையாக மூளாய், தொல்புரம் கிராமங்களும், வடக்கு எல்லையாக நெல்லியான், சுழிபுரம் கிராமங்களும் இருக்கின்றன. தெற்கு, மேற்கு ஆகிய இரு எல்லைகளும் பொன்னாலைக் கிராமத்துக்குரியன. “பொன்னாலைக் குளம்’’ என்பதுதான் அதன் பெயர். இது ஆழமற்ற பரந்தகுளம், கோடை காலம் முழுவதும் நீரின்றி வரண்டு, பெரு வெளியாக இருக்கும். நாங்கள் சுழிபுரம் போக வேண்டியிருந்தால் அதற்கூடாக நடந்துபோய் விடுவோம். மாரிக் காலத்தில் இந்தக்குளம் நீர் நிறைந்து, சிறிய கடல் போலக் காணப்படும். சுற்றிவர நெல்வயல்கள், நெற்பயிர் வளர்ந்து வரும் போது, சில காலங்களில் மழையில்லாமல் பயிர் வாடுவதுண்டு@ அக் காலங்களில் மழையில்லாமல் பயிர் வாடுவதுண்டு@ அக்காலங்களில் பெரிய குளத்திலிருந்து வயல்களுடே வெட்டப்பட்ட வாய்க்கால்களிலிருந்து ஏற்றுப்பட்டை மூலம் வயல்களுக்கு நீர் இறைப்பார்கள். நீர் இறைக்கும் இடத்தை “துலை’’ என்று சொல்லுவார்கள்.

இப்படி நீர் இறைப்பவர்கள் அதிகாலை நாலு ஐந்து மணிக்கே இறைப்பதைத் தொடங்கி விடுவார்கள். வெயில் வரமுன்னர் இறைப்பு முடிந்துவிடும். துலையில் இரு கரைகளிலும் இரண்டுபேர் நிற்பார்கள். ஏற்றுப்பட்டையின் மேலும் கீழும் போடப்பட்ட இரு கயிறுடன் இரு பக்கமும் செல்லும் இரண்டு கயிறுகளையும் இரண்டு கைகளில் பிடித்துக் கொண்டு, பட்டையில் தண்ணீரைக் கோலி அள்ளி வரம்புக்கு உயர்த்தி பட்டையின் கீழ்க் கயிற்றைச் சரித்து மிக நேர்த்தியாக நீரை வயலுக்குள் பாய்ச்சுவார்கள். அநேகமாக பக்கத்துக்கு இருவர் வீதம் நாலு பேர் நின்று இரண்டு பட்டைகளால் நீரிறைப்பதே வழக்கம். அப்படி இறைக்கும்போது களை தெரியாமலிருக்கப் பாட்டுக்கள் பாடுவதுண்டு@ அதி காலை நேரத்தில் பனிக் காலத்தில் அவர்கள் பாடும் பாட்டின் சத்தம் சுமார் அரைமைலுக்கப்பால் வீட்டில் படுத்திருந்த எனக்குக் கேட்டதுண்டு. தொலைவிலிருந்து வந்தால் சத்தம் கேட்கும். சொற்கள் விளங்காது. எங்கள் நவாலிய+ர் சோமசுந்தரப் புலவர் இந்த “துலை” இறைப்பைப் பயன்படுத்தி “ஏறாத மேட்டுக்கு இரண்டு “துலை’’ என்று ஒரு அருமையான பாடல் எழுதியிருக்கிறார்.

இந்தப் பெரிய குளம் நீச்சல் விளையாட்டிற்கு ஏற்றதாக இருக்கவில்லை.

ஆனால், பிள்ளையார் கோயிலுக்கு முன்னாலிருந்த சின்னக்குளம் நீந்தி விளையாடக் கூடியதாக இருந்தது. ஆனால் அது ஊருக்கு நடுவே இருந்ததால் எங்கள் விளையாட்டுக்கு அவ்வளவாகப் பயன்படவில்லை. அங்கே நீந்தி விளையாடிக் கொண்டிருந்தால் பெற்றோரோ அயலவரே ஏசிக் கலைப்பார்கள்.

கேணிகள் தான் எங்கள் நீச்சல் விளையாட்டுகளுக்கு மிக வாய்ப்பாக இருந்தன. கேணிகள் இருந்த இடங்களில் குடிமனைகள் இல்லை. அங்கே எங்கள் இராச்சியத்தை சுதந்திரமாக நடத்தலாம்.

அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்துக் கிராமங்கள் எங்குமே கேணிகள் ஒரு முக்கிய தேவையாக இருந்தன@ எல்லா வீடுகளிலும் மாடுகள் இருந்தன. தரவைகளில் புல் மேய்ந்துவிட்டு வரும் மாடுகள் தண்ணீர் குடிப்பதற்கு இந்தக் கேணிகள் அவசியம் தேவைப்பட்டன. அநேகமான கேணிகளின் பக்கத்தில் மரத்தின் அடிப்பாகம் போன்ற ஒரு கல்தூண் 3 – 4 அடி உயரத்தில் நாட்டப் பெற்றிருக்கும். அந்தக் கல் தூண்களுக்கு “ஆவுரோஞ்சிக் கல்’’ என்று பெயர் கேணியில் தண்ணீர் குடித்துவிட்டு வரும் மாடுகள் தங்கள் உடம்பை அந்தக் கல்லில் தேய்த்து உடல் அரிப்பைப் போக்கிக் கொள்வதற்காக இந்த ஏற்பாடு@ அந்தக் காலத்தில் மாடுகளின் நலனில் மக்கள் எவ்வளவு அக்கறையாக இருந்தார்களென்பதற்கு இது ஒரு உதாரணம்.

பொன்னாலைக் கிருஷ்ணன் கோயிலுக்கு ஒரு கேணியும், தென் மேற்குமூலையில் அந்தியேட்டி மடத்தையடுத்து ஒரு கேணியும் இருந்தன.

அந்தியேட்டி மடம் என்றதும் ஒரு விடயம் நினைவு வருகிறது. இந்த அந்தியேட்டி மடம்தான் எங்களில் பலருக்கு ஒருவித பாலியல் பாடம் படிப்பித்த இடமாக இருந்தது.

இந்த மடத்தின் தெற்கு, வடக்குப் பக்கங்களில் சுவர், மற்ற இரண்டு பக்கங்களுக்கும் அடைப்பில்லாமல் வெளியாக இருந்தது. மடத்தின் நடுவில் அந்தியேட்டி செய்வாற்கான ஓம குண்டம் ஒன்று இருந்தது. அந்தக் குண்டத்தில் எந்நாளும் நெருப்பு எரிந்த கரித்துண்டுகள் இருக்கும். அந்தக் கரித்துண்டுகளை எடுத்து, வடக்கும் தெற்குமாக இருந்த இரண்டு சுவர்களிலும், ஊரிலே நடக்கும் பாலியல் செய்திகளை சில எழுத்தாளர்கள் எழுதியிருப்பார்கள். சில ஓவியங்கள் அந்தச் செய்திக்குரிய நாயக நாயகியரைப் படங்களாகவும் தீட்டியிருப்பார்கள். பாலியல் தொடர்பான உறுப்புகளின் பெயர்களையும் நிகழ்வுகளின் பெயர்களையும் நான் அந்தியேட்டி அந்த மடத்துச் சுவர்களில் தான் முதலில் படித்து அறிந்து கொண்டேன். அந்தப் பெயர்களை கிராமங்களில் வாய்ப்பேச்சுகளில் கேட்பது சர்வ சாதாரணம். ஆனால் அவைகளை எழுத்தில் படிப்பதற்கு அந்தியேட்டி மடந்தான்! ஒருநாள் நண்பர் அந்த மடத்தில் எழுதியவன் எழுத்துப் பிழைவிட்டு எழுதியிருக்கிறான். “பி’’ னாவுக்குப் பதிலாகப் “பு” னாப் போட்டு எழுதியிருக்கிறான்!’’ என்று ஒரு குற்றம் கண்டு பிடித்துச் சொன்னான். எனக்கு இன்றைக்கு அது சந்தேகமாக இருக்கிறது. எந்தப் பண்டிதரிடம் போய்க் கேட்பது? எந்த அகராதியில் பார்ப்பது?

தமிழில் இப்படியான சில சொற்கள் வாய் வழியாகவே சாகாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

10. பேய் பிசாசுகள்

இந்தச் “சுவையான’’ அந்தியேட்டி மடத்துக் கேணியை விட, ஊருக்கு வெளியே சுமார் ஒரு மைல் தூரத்தில் பெரியவர் கோயில் கேணியும் ஒன்றிருந்தது.

இந்தப் பெரியவர் கோயிலுக்குப் பக்கத்திலேதான் எங்களுர்ச் சுடலை இருக்கிறது.

இப்பொழுதெல்லாம் “சுடலை’’ என்பது சர்வ சாதாரணமான ஒரு இடமாகிவிட்டது. அந்தக் காலத்தில் “சுடலை’’ என்றால் எங்களுக்கெல்லாம் இன்னதென்று சொல்ல முடியாத ஒரு பயம். எங்கே பேய், பிசாசு, முனி இவைகளெல்லாம் குடியிருப்பதாக மனதில் ஒரு எண்ணம்.

அந்தப் பேய் பிசாசுகளெல்லாம் இப்பொழுது எங்கே போய் விட்டனவோ தெரியாது. அந்தக் காலத்தில் எத்தனை பேர் தாங்கள் பேயைக் கண்டதாக, முனியைக் கண்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். பயங்கரமான பல பேய்க்கதைகளை நான் சிறு வயதில் கேட்டிருக்கிறேன். சிலருக்குப் பேய் பிடித்து மந்திரவாதி வந்து ப+சை போட்டு அவர்களை ஆட வைத்து, மந்திரப் பிரம்பினால் அவர்களை அவர்கள் மீது குடி கொண்டிருக்கும் பேய்களை அடித்துப் பேயோட்யதையும் பார்த்திருக்கிறேன்.

நீ ஆர்?’’ என்று மந்திரவாதி பேயிடம் - பேய் பிடித்த ஆளிடம் கேட்பான், அது ஏதோ ஒரு பெயர் சொல்லும். “எப்படி இந்த ஆளைவந்து பிடித்தாய்?’’ என்று கேட்பான். அதற்கும் பதில் சொல்லும். பதில் சொல்லாவிட்டால் மந்திரப் பிரம்பினால் அடி விழும். அதற்குப் பயந்து “பேய்’’ ஒழுங்காகப் பதில் சொல்லும். கடைசியாக “உனக்கு என்ன வேணும்!’’ என்று கேட்பான். அது ப+சை பொங்கல் - முக்கியமாகக் கோழிச் சாவலும் கேட்கும் மந்திரவாதி அது கேட்டதெல்லாம் தருவதாகச் சொல்லி” அந்த ஆளை விட்டு ஓடிப் போகிறாயோ? என்று கேட்பான், பதில் வரத் தயங்கினால் மந்திரப் பிரம்பால் அடி!

கடைசியாகப் போகிறேன் போகிறேன்’ எனச் சொன்ன பிறகுதான் விடுவான். ஏதோ உடம்புக்குள் இருக்கும் பேயை மந்திரங்கள் சொல்ல தலை உச்சிக்குக் கொண்டுவந்து, உச்சி மயிரிலே பேயை உச்சிக்குக் கொண்டுவந்து, உச்சி மயிரிலே பேயை இறக்கி, அந்த மயிரில் கொஞ்சம் - பேயுடன் சேர்ந்து வெட்டி எடுப்பானேன்றும், அந்த மயிரைக் கொண்டு போய் சுடலையிலுள்ள ஆலமரத்தில் ஆணிவைத்து அறைந்து விடுவானென்றும் சொல்வார்கள். மயிரோடு சேர்ந்து அந்தப் பேய் சுடலை ஆலமலத்தில் அறையப்பட்டு சிறைப்பட்டுப் போகும் என்று நம்பிக்கை.

எங்களுர்ச் சுடலையிலுள்ள ஆலமரத்தில் இப்படிப் பல ஆணிகள் மயிருடன் சேர்த்து அறையப்பட்டிருப்பதை என்கண்களால் பார்த்து இருக்கிறேன்.

ஆட்களைப் பிடித்து ஆட்டும் செய்வினைப் பேய்களைவிட, ஊருக்கு ஊர் சந்திக்குச் சந்தி பல ஆலயங்களிலும் பேய்கள் முனிகள் குடிகொண்டிருந்து மக்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்தன.

இப்போது அந்தப் பேய்களும், முனிகளும் எங்கே போய் விட்டன – மக்களின் மனசுகளில் தான் பேய்களும், முனிகளும் உருவாகி “நம்பிக்கை’’ என்ற நீர் ஊற்றி வளர்க்கப்பட்டு வந்தன. இன்று அந்த “நம்பிக்கை’’ வரண்டுவிட்டதால், பேய்கள், முனிகள் செத்துவிட்டன. ஆனால், இன்றைக்கும் இப்படி வேறுவிதமான மூட நம்பிக்கைகள் மக்களின் மனத்திலே வளர்ந்து கொண்டிருக்கின்றன.

சுடலைப்பக்கம் நாங்கள் அடிக்கடி போய்வந்த காரணத்தால், பகலிலே, “சுடலைப்பயம்’’ எங்களிடமிருந்து போய் விட்டது. ஆனால் இரவு வந்துவிட்டால் சுடலைப் பயமும் வந்துவிடும்!

எனக்குப் பன்னிரண்டு வயதிருக்கும், அப்பொழுதே நான் பல பகுத்தறிவுக் கட்டுரைகளைப் படித்துவிட்ட காரணத்தால், இந்தப் பேய்முனிக் கதைகளெல்லாம் வெறும் மூட நம்பிக்கை என்ற எண்ணம் என் மனதில் படியத் தொடங்கிவிட்டது.

ஒருநாள் இரவு, பொன்னாலைக் கோயிலில் திருவிழாக்காலம். அன்று இரவுத் திருவிழா நடந்து கொண்டிருந்தது. நல்ல நிலாக்காலம். இரவு பதினொரு மணிக்கு மேல் நடுச்சாமத்தை அண்மித்துக் கொண்டிருற்த நேரம். வழக்கம் போல் கோயிலடியில் கூடியிருந்த ஐந்தாறு நண்பர்களிடையே ஒரு பந்தயம். பேய் பிசாசுகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததால் ஏற்பட்டவினை, பேய்பிசாசு உண்டென்று வாதிட்ட ஒருவர். “இந்தச் சாம நேரத்தில் சுடலைக்குப் போய்வர யாரால் முடியும்?’’ என்று கேட்டார். இல்லையென்று வாதிட்ட நானும், இன்னொரு நண்பருமாக இந்தச் சவாலை ஏற்று, “நாங்கள் போய்வருகிறோம். என்ன பந்தயம்’’ என்று கேட்டோம்.

“இப்போதே சுடலைக்குப் போய் போனதற்கு அடையாளமாகச் சுடலைச் சாம்பலைக்கிள்ளி எடுத்துக்கொண்டு வரவேண்டும். அப்படிக் கொண்டு வந்தால் பத்துச்சதம் நாங்கள் தருவோம். அப்படிச் சாம்பலை எடுத்து வராவிட்டால் நீங்கள் பத்துச்சதம் எங்களுக்குத் தரவேண்டும் என்று பந்தயம் ஒப்பந்தமாகி, பந்தயப் பணத்துக்குப் பொறுப்பாக ஒரு நடுவரையும் நியமித்துப் கொண்டோம்.

“பத்துச் சதம்’’ என்பது அந்தக் காலத்தில் பெரிய காசு!

கோயிலடியில் ஒரு சதம் கொடுத்து கடலைக்காரியிடம் கடலை வாங்கினால் “கச்சான். உருண்டைக் கடலை, சோழன்’ எல்லாம் கலந்து மடி நிறைய வாங்கலாம்@ பத்;துச் சதத்துக்கு எவ்வளவு பொருள்கள் வாங்கலாம்! ஒரு கொத்து அரிசி வாங்கலாம்@ ஒரு போத்தல் மண்ணெண்ணை வாங்கலாம்@ பெரிய தோசையாக ஐந்து தோசை வாங்கலாம் - இப்படி எவ்வளவோ.

அந்தக் காலத்தில் அரைச்சதம் என்ற நாணயம் சாதாரணமாகப் புழக்கத்தில் இருந்தது. பல பொருட்களுக்;கு அரைச் சதக் கணக்கில் விலைகள் இருந்தன. ஒரு தீப்பெட்டியின் விலை இரண்டரை சதம். ஒரு இறாத்தல் சீனியின் விலை இரண்டரை சதம்.

நான் சிறுவனாக இருந்தற்குச் சற்று முந்திய சாதாரணமாகப் புழக்கத்தில் இருந்தது. பல பொருட்களுக்கு அரைச் சதக் கணக்கில் விலைகள் இருந்தன. ஒரு தீப்பெட்டியின் விலை இரண்டரை சதம். ஒரு இறாத்தல் சீனியின் விலை இரண்டரை சதம்.

நான் சிறுவனாக இருந்ததற்குச் சற்று முந்திய காலத்தில்காற் சதத்துக்கும் ஒரு நாணயம் இருந்திருக்கிறது. நான் அறிய அது புழக்கத்தில் இருக்கவில்லை. ஆனால் நான் அந்தக் காற்கசதக் குத்தியைப் பார்த்திருக்கிறேன்.

செப்பிலே செய்யப்பட்ட ஒரு சதநாணயத்தை உங்களிற் பலர் பார்த்தீருப்பீகள். அது சுமார் இரண்டு செ. மீ விட்டமுடையது. அதனுடைய பாதியளவே அரைச்சத நாணயம். அந்த அரைச் சதத்திலும் பாதி அளவானதே காற்சத நாணயம்.

பத்துச் சதத்திற்குப் பந்தயம் ஏற்றுக்கொண்ட நானும் எனது நண்பனுமாக உடனேயே – அந்தச் சாமத்தில் சுடலைப் பயணத்தைத் தொடங்கினேன். நண்பர்கள் கோயில் வீதியின் தென்மேற்கு முனைவரை எங்களுடன் வந்து அங்கே நின்று கொண்டார்கள். அங்கிருந்து பார்த்தால் சுமார் அரை மைல் தூரத்துக்கு நாங்கள் போவதை நிலவு வெளிச்சத்தில் கண் காணிக்கலாம்.

என்னதான் பகுத்தறிவுக் கட்டுரைகளைப் படித்தும் பேய் பிசாகளை மூட நம்பிக்கைகள் என்று தெரிந்து வைத்திருந்த போதிலும், சிறு குழந்தையிலிருந்தே மனத்தில் வளர்த்து வைத்திருந்த நம்பிக்கை என் நெஞ்சுக்குள்ளே படபடத்து, ஆனால் -

முன்வைத்த காலை இனிப் பின்வைக்க முடியாது? நண்பர்களின் முன்னே தோற்றவனாகப் பேய் நிற்பதா என்ற வீம்பு!

பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் ஆளுக்காள் உற்சாகமாகக் கதைத்துக் கொண்டும், இடையே உரத்த தொனியில் ஏதோ பாட்டுக்களையும் பாடிக்கொண்டும் நானும் நண்பனும் சுடலைக்குப் போய்விட்டோம்.

இருவரும், ஒவ்வொரு கை நிறைய சுடலைச் சாம்பலை அள்ளிக் கொண்டோம்.

“படக், படக், என்று நெஞ்சு அடித்துக் கொண்டது தான்.

ஆனாலும் துணிச்சல்தான்!

சுடலைச் சாம்பலைக் கொண்டுவந்து நண்பர்களிடம் காட்டியபோது –

ஓ! அது எவ்வளவு பெரிய, தீரச் சாதனையாக இருந்தது!

அன்று பத்து சதத்துக்குக் கடலை வாங்கி எல்லா நண்பர்களுமாக ஒரு “சமா’’ நடத்தினோம்!

அந்தச் சுடலைக்குப் பக்கத்திலிருந்த பெரியவர் கோயில் கேணியும் எங்கள் நீச்சல் இடங்களில் ஒன்று.

11. நீர் விளையாட்டு

சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நீந்தி விளையாடப் புறப்பட்டால், முதலில் ஒரு பாட்டம் கிருஷ்ணன் கோயில் கேணியில் விளையாடி, பிறகு அடுத்திருந்த அந்தியெட்டி மடக் கேணியில் விளையாடி, பிறகு ஒரு மைல் தூரம் நடந்து போய் பெரியவர் கோயில் கேணியில் நீந்திய பிறகுதான் அன்றைய விளையாட்டு ஓயும், நேரம் மதியம் தாண்டி சாப்பாட்டு நேரம் வந்துவிடும்.

நீத்திப் பழகுபவர்கள், இரண்டு ஒல்லித் தேங்காய்களை நடுவில் சுமார் ஒரு அடி இடைவெளி விட்டு நாரினால் முடிந்த அந்த இடைவெளிக்குள் - நாரிலே தங்கள் உடலைப் பொருத்திக் கொண்டு, தண்ணீரில் மிதந்து நீந்தப்பழகுவார்கள். ஒல்லிர் தேங்காய்கள் நீத்துபவர்களுடைய பாரத்தையும் சுமந்து கொண்டு தண்ணீரில் மிதக்கக் கூடியவை.

எங்களுரில் அப்போது பெரும்பாலான ஆண்கள் அனைவருக்குமே நீந்தத் தெரியும். பல பெண்களும் கூட நீந்துவார்கள்.

ஏழெட்டு வயதிலேயே எங்களிற் பலர் நீந்தப் பழகிவிட்டோம். எங்களுடைய நீச்சல் உடை “கோவணம்’’ தான். ஆண்கள் எல்லோருமே கோவணம் கட்டிக் கொண்டிருப்பது அந்தக் காலத்து வழக்கம் சிறுவர்களாக இருக்கும் போதே கோவணம் கட்டவேண்டுமென்பதை பெரியவர்கள் வற்புறுத்துவார்கள். நான் தமிழ்ப்பள்ளிக் கூடத்தில் எஸ். எஸ். ஸி. தேர்வை முடித்துக் கொண்ட பிறகு, யாரோ ஆலோசனை கூறியதன் பேரில் ஆங்கிலம் கற்பதற்காக சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரிக்கச் சென்றதுண்டு. (மூன்றே மூன்று மாதங்கள் மட்டுமே நான் அங்கே படித்தேன், அது வேறு கதை) அப்போது விக்டோரியாக் கல்லூரியில் சோமசுந்தரம்;’ என்று ஒரு ஆசிரியர் இருந்தார். சரியான “சைவப்பழம்’’ தாடி வைத்திருந்தார். மாணவர்கள் கோவணம் கட்டியிருக்க வேண்டுமென்பதில் அவர் சரியான கண்டிப்பு. ஒவ்வொரு மாணவனாகக் கூப்பிட்டு தமது கைப்பிரம்பினால் பின்பக்கத்தில் உரோஞ்சிப் பார்ப்பார்.
இப்போது சிறு குழந்தைகளைக் கூட உட்காற்சட்டை இல்லாமல் பார்க்க முடியாது. அப்போது சிறுவர்கள் இரண்டு மூன்று வயதுவரை – சிலர் பள்ளிக்கூடம் போகிற வரை உடம்பிலே எவ்விதத் துணியும் அணிவதில்லை. சில சிறு பெண் குழந்தைகள் அரசியலை வடிவில், வெள்ளியிலோ, செப்பிலோ செய்த ஒரு ஆபரணத்தை (அதை “அரை மூடி’’ என்று சொல்வார்கள்) அரைஞாண் கொடியில் கோத்துத் தொங்கவிட்டு, பெண்ணுறுப்பை மறைந்திருப்பார்கள். ஆண் குழந்தைகளுக்கு எதுவும் வேண்டியிருக்கவில்லை. அரை ஞாண்கொடி ஆண், பெண் எல்லோருக்குமே அவசியமானது. அநேகமாக அந்தத் தேவைக்கென்றே ஒரு கறுப்புக் கயிறு கடைகளில் விற்கும். வசதியுள்ளவர்கள் வெள்ளியில் அரை ஞாண்கொடி செய்து அணிந்திருப்பார்கள். மிகச் சில பெரிய பணக்கார வீட்டுப் பிள்ளைகள் தங்கத்தில் செய்த அரைஞாண் கொடி அணிவதுண்டு.

அரைஞாண் கொடி கட்டுவதும் (கோவணம் கட்டுவதற்கு அது அவசியம் தேவை) காது குத்துவதும் பொதுவான வழக்கமாக இருந்தது.

நான் வெள்ளியினால் செய்த அரைஞாண் கொடியை பல காலம் அணிந்திருந்தேன். காது குத்திக்கொண்டதுமுண்டு. ஆனால் தோடா அல்லது கடுக்கனோ அணியவில்லை. சாத்திரப்படிக்குக் குத்திவிட்டு பிறகு அதை அப்படியே சோரவிட்டு விட்டார்கள். என்னுடைய காதுகளில் இன்றைக்கும் அந்த அடையாளங்கள் இருக்கின்றன. ஆனால் துவாரங்களும் தூர்ந்து விட்டன.

நாங்கள் கேணியில் நீந்தி விளையாடும் போது கோவணந்தான் கட்டிக் கொள்வோம். எல்லாரும் எல்லா நேரமும் கோவணம் கட்டியிருப்பதில்லை. கோவணம் கட்டியிராதவர்கள், கேணிக் கரையில் முன்பு யாரோ அவிழ்த்துப் போட்டிருந்த கோவணத் துணிகளை எடுத்துக் கட்டிக் கொள்வார்கள்.

“நீர் விடையாடேல்’’ என்று ஒளவையார் சொல்லியிருந்தாலும், நீரி;ல் நீந்தி விளையாடுவது மிக உற்சாகமான, சுவையான விளையாட்டு.

கேணியில் நீர் நிறைந்திருக்கும்போது, கேணிக் கரையிலிருந்து சுமார் 20 - 35 அடி தூரம் பின்னுக்குப் போய், அங்கிருந்து வேகமாக ஓடிவந்து, கேணிக்கட்டில் ஒரு காலை ஊன்றி, எழும்பிப் பாய்ந்து தண்ணீருக்குள் “டும்மீல்’’ என்று குதிப்பது, குதித்த வேகத்தில் கேணியின் அடிவரை சென்று சேற்றில் கால் முட்டி, பிறகு மேல் நோக்கி எழுந்து, இடை நீந்தலில் தண்ணீருக்கு மேல் தலையை உயர்த்தி “ ஆவ், ஆவ்” என்று பெரிய மூச்செறிவதும், நீருலுக்குள் மூழ்கி கேணியில் ஒரு கரையிலிருந்து மறு கரைக்குச் சுழியோடிப்போய் மிதப்பதும், அப்படிச் சுழியோடிப் போகும்போது, யாராவது எட்டுந் தண்ணீரில் நின்றுகொண்டிருப்பவர்களின் கால்களைத் தூக்கிச் சரிந்துவிடுவதும் - இப்போது நினைக்கும் போதும், அப்படியொரு மாரிக்கேணியில் குதித்து நீந்த வேண்டும்போலிருக்கிறது. இயலுமா?

12. புகழ்பெற்ற வைத்தியர்கள்

பொன்னாலை என்ற எங்கள் கிராமத்துக்கு அந்தக் காலத்தில் புகழ் சேர்த்த பெருமை இரண்டு ஆயுள்வேத வைத்தியர்களுக்குண்டு.

ஒருவருக்குப் பெயர் கந்தையா, மற்றவர் கணபதிப்பிள்ளை. இருவரும் சகோதரர்கள்.

கந்தையா மூத்தவர், “கந்தையா” என்றால் யாருக்கும் தெரியாது “ரியாரி இராசா என்றால், இப்போதும்கூட வயதானவர்கள் பலரும் அறிந்திருப்பார்கள். அதே மாதிரித்தான் அவருடைய தம்பி கணபதிப்பிள்ளையும் “பரியாரி பெத்தார்” என்றால் தான் அவரைத் தெரியும்.

அந்தக் காலத்தில் பலருக்கும் இப்படி இரண்டு பெயர்கள் இருக்கும். ஒன்று இடாப்புப் பெயர். மற்றது வீட்டுப் பெயர். பிறப்புப் பதியும்போது வைத்த பெயர்தான் இடாப்புப் பெயராக இருக்கும். இடாப்புப் பெயர் என்பது பள்ளிக்கூடத்து இடாப்பில் பதிந்த பெயர். அதுதான் சட்டப+ர்வ பெயர். ஆனால் சிறு வயது முதலே வீட்டிலே செல்லமாக வேறு ஒரு பெயர் வைத்துக் கூப்பிடுவார்கள். அநேகமாக அது பேரன், கொப்பாட்டனின் பெயராக இருக்கும். இடாப்புப் பெயர் வேலாயுதம்” என்றிருக்கும். பாடசாலையிலும் படிப்பு முடிந்து அவர் ஏதும் உத்தியோகத்தில் சேர்ந்தால் அலுவலகத்தில் அவரை வேலாயுதம் என்றே அழைப்பார்கள். ஆனால் ஊர் முழுவதும் அவரை சின்னராசா என்ற வீட்டுப் பெயரால்தான் அழைப்பார்கள். “வேலாயுதம்” என்று விசாரித்தால் பலருக்குத் தெரியாமலிருக்கும்.

“பரியாரி பெத்தார்’’ என்ற கணபதிபிள்ளை சற்ஞ நாகரிகமானவர். அந்தக் காலத்திலேயே சிறிது ஆங்கிலம் கற்று மலேசியா சென்று அங்கே உத்தியோகம் பார்த்தவர். ஆங்கிலம் பேசுவார். மிடுக்கும், நாட்டாண்மைத்தனமும் அவருடன் கூடப் பிறந்தவை@ இந்தக் குணத்தினால் போலும் உத்தியோகம் பார்த்த இடத்தில் அவரால் நிலைத்திருக்க முடியவில்லை. உத்தியோகத்தைத் துறந்துவிட்டு ஊருக்கு வந்து தமது பரம்பரைத் தொழிலான வைத்தியத்தைப் படித்து, அதையே தொழிலாகக் கொண்டிருந்தார். எங்கள் ஊரில் செய்தித்தான் படித்து உலகச் செய்திகளைப்பற்றியெல்லாம் சற்று விபரமாகக் கதைக்கிறவர் இவர் ஒருவராகத்தானிருந்தார்.

இரண்டாவது மகாயுத்தம் நடந்த காலத்தில் இவர் மிகவும் உற்சாகமாக ஹிட்லரின் வீரத்தைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். பிற்காலத்தில் தியாகராஜபாகவதருக்கும் எம். ஜி. ஆருக்கும் உயிரையே கொடுக்கக்கூடிய “பக்தர்கள்’’ இருந்ததுபோல, அப்போது ஹிட்லருக்கும் பல விசிறிகள் இருந்தார்கள். அவர்களில் பலர் “ஹிட்லர் மீசை’’ வைத்திருந்தார்கள். பரியாரி பெத்தாரும் ஹிட்லர் மீசை வைத்திருந்தார். ஹிட்லரைப்பற்றி இப்போது வரலாறு படிக்கும் மாணவர்கள்தான் தெரிந்திருப்பார்கள். ஆனால் அப்போது ஹிட்லரைப்பற்றிக் கேள்விப்படாத மனிதர்களே இல்லையென்று சொல்லலாம். இப்பொழுது “பிரபாகரன்’’ என்ற பெயரைத் தெரியாமல் தமிழர்கள்யாரும் இல்லையல்லவா’’ அதுபோல!

ஹிட்லரைப்பற்றி யாரும் குறைவாகப் பேசிவிட்டால் பசியாரி பெத்தரிடம் தப்ப முடியாது!

பரியாரி இராசா மூத்தவர். அவருடைய வீடு எங்கள் வீட்டுக்கு முன்னால் ஒரு ஒழுங்கையில் இருந்தது. அவர் அதிகம் படித்தவரல்லர். ஏதோ வைத்திய வாகட நூல்களைப் படித்து அறிந்துகொள்ளக்கூடிய அறிவு இருந்தது போலும். இவர் தம்பியார் பெத்தாரைப்போல உலக விவகாரங்களெல்லாம் பேசமாட்டார். ஊர்க் கதைகள்தான் அவருக்கு. அதற்கும் அதிகமாக நேரமிருக்காது. அதிகாலையிலிருந்தே நோயாளிகளைப் பார்க்கும் வேலை அவருக்கு வந்துவிடும்.

இப்போதெல்லாம் ஏதாவது நோய் வந்தவுடன் மருத்துவமனைக்கு ஓடிப் போகிறோம். நடக்க முடியாத நோயாளிகளை வாகனங்களில் ஏற்றிச் சென்று மருத்துவர் முன் நிறுத்துகிறோம்.

அந்தக் காலத்தில் பெரும்பாலும் நோயாளி இருக்குமிடம் தேடி மருத்துவர் வருவார். அநேகமாக எல்லா ஊர்களிலும் இரண்டொரு வைத்தியர்கள் இருப்பார்கள். அந்த ஊர் மக்களின் நோய்களை அவர்களே தீர்த்து வைப்பார்கள்.

முற்றிப்போன சில பெரிய நோய்களுக்கு சில குறிப்பிட்ட “ஸ்பெஸலிஸ்டுகள்’’ வௌ;வேறு ஊர்களில் இருந்தார்கள். அப்படியான நோயாளிகளை சற்று வசதியுள்ளவர்கள் மோட்டார் வண்டியிலோ, மாட்டு வண்டியிலோ ஏற்றிக் கொண்டு “சிறப்பு மருத்துவர்’’ இருக்கும் ஊருக்குக் கொண்டு போவார்கள். சில சமய ங்களில் அவரை அழைத்து வந்து நோயாளியைக் காட்டுவார்கள்.

நாயன்மார்கட்டு, ஒட்டகப்புலம், சுதுமலை, சில்லாலை என்று இப்படி இன்னும் பல ஊர்களில் இப்படியான சிறப்பு மருத்துவர்கள் இருந்தார்கள். ஒவ்வொரு ஒவ்வொரு நோய்க்கு “ஸ்பெஷலிஸ்ட்.’’

எங்களுர் பரியாரி இராசாவும் அத்தகைய சிறப்பு மருத்துவர்களில் ஒருவராக இருந்தார். “சன்னி’’ நோய்க்கு பரிகாரி இராசா மிகவும் புகழ் வாய்ந்த வைத்தியர். மிகத்தூர இடங்களிலிருந்தெல்லாம் “சன்னி’’ நோய்க்காரர்கள் பொன்னாலைக்கு வருவதுண்டு.

நான் மிகச் சிறு வயதில் மோட்டார் வண்டியைப் பார்த்தது பரியாரி இராசா வீட்டுக்கு வந்த மோட்டார் வண்டியைத் தான். அவருடைய வீட்டுக்கு அடிக்கடி மாட்டு வண்டிகளும், மோட்டார் வண்டிகளும் வரும். சிலர் நோயாளிகளை அழைத்து வருவார்கள். சிலர் அந்த வண்டிகளில் பரியாரியாரைக் கூட்டுக்கொண்டு போவார்கள்.

அந்தக் காலத்தில் மோட்டார் வண்டிகள் மிக அருமை. மாட்டுவண்டிச் சில்லில் இருப்பதுபோல மரத்தினாலான சட்டங்கள் பொருத்திய சில்லுகளுடன் கூடிய அந்த மோட்டார்கள், “பாம் பாம்’’ என்று தமது றப்பர் பந்து பொருந்திய “கோணை’’ அடித்துச் சத்தம் போட்டுக்கொண்டு, தெருப்புழுதியை அள்ளி விசிறிக்கொண்டுவரும்.

தூரத்தில் மோட்டார் வண்டியில் சத்தம் கேட்டால் கை அலுவலை அப்படியே விட்டுவிட்டு ஓடிவந்து படலையைத் திறந்து, தெரு ஓரமாக நின்று நாங்கள் மோட்டார் வண்டியைப் பார்ப்போம்!

அது அப்போது ஒரு காட்சிப் பொருள்.
பரியாரி வீட்டருகே மோட்டார் வண்டி நின்றதும், ஆட்கள் இல்லாவிட்டால் கிட்டப்போய் புழுதிபடிந்து கிடக்கும் அதன் உடம்பில் எங்கள் ஒரு விரலினால் எங்கள் பெயர்களை எழுதி வைப்போம்.

இப்போதெல்லாம் புகழ்பெற்ற “டொக்ரர்’’ களிடம் போய் “கிய+’’ வில் காத்திருந்து எங்கள் முறை வந்ததும் உள்ளே போய், எங்களுக்கு என்ன வருத்தம். என்ன குணம்குறி, எங்கள் பரம்பரையில் அப்படி நோய் இருந்ததா என்பன போன்ற விபரங்களையெல்லாம் சொல்ல வேண்டும். அதற்குப் பிறகு அவர், “ஸ்டதாஸ்கோப்’ பை நெஞ்சிலும், முகிலும் வைத்துப் பார்த்துவிட்டு பல கேள்விகள் கேட்பார். அவற்றுக்கெல்லாம் நாங்கள் மறுமொழி சொன்னபின், அவற்றுக்கெல்லாம் நாங்கள் மறுமொழி சொன்னபின், ஒரு துண்டில் மருந்தை எழுதிக்கொடுப்பர். அந்தத் துண்டைக் கொண்டுபோய் மருந்து வாங்க வேண்டும்.

அந்தக் காலத்தில் தமிழ் வைத்தியரிடம் போனால் அவர் கையைப் பிடித்து நாடி பார்ப்பார். அந்த நாடியே அவருக்கு எல்லா குறிகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, தமது மருந்துப் பெட்டியைத் திறந்து சில குளிசைகளை எடுத்துத் தருவார்.

ஒரே குளிசையே சில சமயங்களில் வௌ;வேறு நோய்களுக்கும் தரப்படும். ஆனால் நோய்களுக்கேற்றபடி “அனுமானங்கள்’’ மாறும். ஒரு நோய்க்கு முலைப்பால் அனுமானம் என்றால், வேறொன்றுக்கு குடிநீர் அனுமானமாக இருக்கும். பத்தியங்களும் மாறும். “குடிநீர்’’ என்றால் குடிக்கும் தண்ணீரல்ல. திற்பலி, வேர்க்கொம்பு முதலிய பல மருந்துச் சரக்குகளை நீரில் போட்டுக் காய்ச்சி எடுத்த நீருக்கே “குடிநீர்’’ என்று பெயர். இந்தக் குடிநீரிலும் பலவகையுண்டு. குடிநீரே பல நோய்களுக்கு மருந்துமாகும்.

பரியாரி இராசா ஒரு சிறு குழந்தையின் கை நாடியைப் பிடித்தும் பார்த்துவிட்டு, குழந்தையின் வயிற்றில் பனை ஓலைத்துண்டு இருப்பதாகக்கூறி மருந்து கொடுப்பதாகவும், பிறகு குழந்தைக்கு வயிற்றால் போன போது ஓலைத்துண்டும் போனதாக யாரோ சொன்னது நினைவிருக்கிறது.

அந்தக் காலத்தில் சிறு குழந்தைகளை பனை ஓலைத் தடுக்கில் தான் வளர்த்தியிருப்பார்கள். அந்தத் தடுக்கிலிருந்து ஓலைத்துண்டு குழந்தையின் கைக்குள் அகப்பட்டு வாய்க்குள் போயிருக்க வேண்டும்.
இப்போதெல்லாம் ஆயுள் வேதக் கல்லூரிகளில் படித்துப் பட்டம் பெற்ற “டொக்டர்’’ கள் அநேக நோய்களுக்கு ஆங்கில மருந்துகளையே கொடுக்கிறார்கள்.

பரம்பரைப் புகழ் வாய்ந்த தமது நாட்டு வைத்தியம் மெல்ல மெல்ல அற்றுப் போய்க் கொண்டிருப்பது போலத் தெரிகிறது. அரசாங்கம் ஏதோ ஆயுள்வேத வைத்தியத்துக்கென்று ஒரு துறையை அமைத்து, உள்ளுராட்சி அலுவலகங்கள் மூலம் ஆதரவு செய்வதுபோல் தோன்றினாலும், அந்த வைத்தியத்துறை சரியான இடத்தில் வைக்கப்படவில்லையென்றே தோன்றுகிறது.

புகழ்பெற்ற வைத்திய வாகடங்கள் சில குடும்பங்களுடன் மறைந்துபோய் விடுமோ என்று தோன்றுகிறது.

13. அப்பாவின் கடை

எங்கள் கிராமத்தில் அப்பா ஒரு கடை வைத்திருந்தார். எனக்கு நினைவு தெரிந்த காலம் முதல் கடைசி வரையும் அவருடைய தொழில் அந்தக் கடைதான். எங்கள் வீட்டின் பின்பக்க விறாந்தை தெருவின் ஓரளமாக அமைந்திருந்தது. அந்த பக்க விறாந்தையில்தான் கடை. விறாந்தைக்கும் தெருவுக்கும் இடையில் சுமார் நான்கு அடி இடைவெளியிருக்கும். விறாந்தையிலிருந்து தெரு ஓரம் வரை பந்தி இறக்கியிருந்தது விறாந்தையின் நடுப்பகுதியில் கடைக்கான பெரிய வாசல். அதன் இருபுறமும், பந்தியில் இரண்டு வாங்குகள் போடப்பட்டிருந்தன. அந்த வாங்குகளில் எந்த நேரமும் யாராவது இருந்து கதைத்துக் கொண்டிருப்பார்கள். கடைக்குப் பொருள் வாங்க வருபவர்களும் சில சமயங்களில் அங்கே தங்கிக் கதைத்துவிட்டுப் போனார்கள். ஊரில் அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகள் தொடக்கம், உலக விவகாரங்கள் வரை அவர்களுடைய உரையாடலில் அடிபடும்.

அப்பா அதிகம் கதைக்கமாட்டார். எப்போதாவது சுருக்கமாகத் தமது அபிப்பிராயத்தைச் சொல்லுவார்.

அந்தக் “கடைச் சபை’’ யில் ஆண்கள் மட்டுமல்ல. பெண்களும் கலந்து கொள்வார்கள்.

விறாந்தையின் நீளம் சுமார் இருபத்தைந்து அடி அகலம் பத்து அடியிருக்கும். அந்த விறாத்தை நீளத்துக்குப் பலவிதமாக பொருள்களும் பரவிக் கிடக்கும் சுவர் ஓரமாக ஒரு றாக்கை, அதில் தகர டப்பாக்களிலும், போத்தல்களிலும் விற்பனைப் பொருள்கள் அடுக்கியிருக்கும். சுவரின் இன்னொரு பக்கமாக ஒரு ‘கோர்க்காலி@ சில சாக்கு மூடைகளிலும், பனை ஓலை உமல்களிலும் சில பொருள்கள் இருக்கும்.

எனக்கு இப்போதும் அந்தக் கடையில் இருந்த பொருள்கள் வரிசைக் கிரமமாக நினைவில் இருக்கின்றன. அந்தப் பொருள்களைக் கவனித்தால் அன்றைய மக்களின் தேவைகளைப் பற்றி ஓரளவு தெரிந்து கொள்ளலாம்.

விறாந்தையின் மேற்குச் சுவரோடு மண்சட்டி பானைகள் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கியிருக்கும். புரட்டாசிச் சனிக்கிழமைகளில் சனீஸ்ரனுக்கு எரிக்கும் சிறிய சுட்டிகள் முதல். உலைமூடிகள், தட்டைச் சட்டிகள், குண்டான் சட்டிகள், பானைகள், கள் - கருப்பநீர் சேர்க்கும் முட்டிகள் இப்படிப் பலவித பாண்டங்களும் அங்கேயிருக்கும்.

‘சனிஸ்வரனுக்கு எரிக்கும் சட்டி’ என்றது நினைவுவருகிறது. பொன்னாலை கிருஷ்ணன் கோயிலுக்கு அப்போது மிகப் பெருந்தொகையான சனக்கூட்டம் வருவது புரட்டாதிச் சனிக்கிழமைகளில்தான். ‘கடைசிச் சனி’ என்றால், அதிகாலையிலிருந்து பொழுது படும்வரை சனக்கும்பல்தான்.

இப்போது எல்லாக் கோயில்களிலுமே நக்கிரகங்களை அமைத்திருக்கிறார்கள். நவக்கிரகங்களில் சனிஸ்வரனும் இருப்பார். அந்தந்த ஊரில் இருப்பவர்கள் தங்கள் தங்கள் கோயிலிலுள்ள சனிஸ்வரனை வழிபட்டுத் தப்பிக் கொள்கிறார்கள்.

ஆனால் அந்தக் காலத்தில் பொன்னாலைக் கிருஷ்ணன் கோயிலில் மட்டுந்தான் சனிஸ்வரன் இருந்தார். அதிலும், கோயில் உள்வீதியில் சனிஸ்வரனுக்கென்றே தனியாக ஒரு கோயில் இருந்தது.

அந்தச் சனிஸ்வரன் மிகவும் பிரசித்தமானவர். கிருஷ்ணன் கோயிலோடு சேர்ந்திருக்கும் சனிஸ்வரனுக்கு சக்தி அதிகமாம்!

யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலிருந்தும் நடந்தும், மாட்டுவண்டிகளிலும், சிலர் மோட்டார் வண்டியிலும் சனிஸ்வரனைத் தேடிக்கொண்டு அஙகே வருவார்கள்.

கோயிலுக்கும் நல்ல வருமானம். சட்டி, எள்ளுப் பொட்டலம், எண்ணெய் எல்லாவற்றையும் வெளியில் வாங்கிக் கொண்டுபோய், சனிஸ்வரனின் கோயிலின் முன்பாக வைத்து எரிப்பதற்கு கட்டணம் பத்துச் சதம்! (ஒரு கொத்து அரிசின் காசு!)

அது இருக்க, மறுபடியும் அப்பாவின் கடைக்கு வருவோம். சட்டி பானைகள் அடுக்கியிருந்த இடத்தை அடுத்து, வெளிக்கிறாதி ஓரமாக ஒரு மண்பானையில் ‘ஊத்தைச் சோடா’ இருக்கும். ஊத்தைச் சோடாவை பானையிலிருந்து அள்ளி எடுப்பதற்காக ஒரு அகப்பையும் இருக்கும். சோடாவைக் கையினால் எடுத்தால் அது கையைக் கடிக்கும்.

கடையிலிருக்கும் சர்க்கரை, சீனி, கற்கண்டு முதலிய இனிப்புப் பொருள்களை நான் அவ்வப்போது எடுத்து வாயில் போட்டுக்கொள்வது வழக்கம். அந்த வழக்கப்படி, பானையிலிருந்து ஊத்தைச் சோடாவை மாச்சீனி (ஐசிங் சுகர்) என்று நினைத்துக் கிள்ளி வாயில் போட்டுவிட்N;டன்.

பிறகு நான் குழறிக் கூக்குரலிட்டதும் அயலட்டையெல்லாம் கூடி ஆளுக்கொரு கதை சொன்னதும் யாரோ ஆட்டுப்பாலைக் கொண்டுவந்து குடிக்கத் தந்ததும் நினைவிருக்கிறது.

ஊத்தைச் சோடாப் பானைக்குப் பக்கத்தில் ஒரு பெரிய தகர டப்பாவில் மண்ணெய் இருக்கும். சுமார் ஒரு அடிச்சதுரமும் ஒன்றரை அடி உயரமுள்ள தகர டப்பா வெள்ளைவெளேரென்ற நிறம். எழுத்துக்கள் லேபில் எதுவுமில்லை. தலைப்பக்கத்தில் சிறிய கைப்பிடி இருக்கும். தலைப்பக்கத்தின் ஒரு மூலையிலுள்ள அதன் வாயை உடைத்து அதற்குள் ஒரு ‘பம்’ வைத்திருக்கும். அந்தப் ‘பம்’மை அடிக்க மண்ணெய் குழாய் வழியாக வெளி வந்து பக்கத்தில் தயாராக வைக்கப்பட்டிருக்கும் புனல்வைத்த போத்தலில் விழும்.

போத்தல் கணக்காக மண்ணெய் வியாபாரம் அநேகமாக நடப்பதில்லை. ஒரு சிறிய அளவு கரண்டி இருந்தது. அது நிறைய விட்டால் இரண்டு சதம். (ஒரு போத்தல் மண்ணெய் பத்துச் சதத்துக்குள்ளாகவே இருக்க வேண்டும்.)

மண்ணெய் அப்படி மலிவாக இருந்த போதிலும் கிராமத்து மக்கள் மிகவும் கட்டுச் செட்டாகவே அதை உபயோகிப்பார்கள்.

பலருடைய வீடுகளில் அரிக்கன் லாம்பெல்லாம் கிடையாது. தகரத்தில் செய்த குப்பி விளக்குத்தான். பின்னால் அது பித்தளையில் அழகாகச் செய்யப்பட்டு புழக்கத்திலிருந்தது.

மண்ணெய்த் தகரத்துக்குப் பக்கத்தில் கடையின் நடுநாயகமாக ஒரு ‘ஐஞ்சறைப் பெட்டி.’ ஆனால் அந்த அடுக்கில் ஐந்தல்ல. பல அறைகள் இருந்தன. ஒவ்வொரு சரக்கு. மல்லி, மிளகு, வெந்தயம், சீரகம், வெண்காயம் - இவைகள் ஒருபக்கம். ஓரமாக சற்றே பெரிய ‘பக்கீஸ்’ பெட்டியில் சீயக்காய் இருக்கும்.

சீயக்காய் அப்போது முக்கியமான பொருள். ஒவ்வொரு சனிக்கிழமையும் எல்லோரும் எண்ணை தேய்த்து முழுகுவார்கள். சிலர் கிழமைக்கு இரண்டு முறை முழுகுவார்கள். எண்ணெயைப் போக்குவதற்கு சீயக்காய் தேவையாக இருந்தது. அதற்கு முன்னால் ‘அரப்பு’த்தான் உபயோகிக்கும் வழக்கமிருந்தது. அரப்பு என்பது இலுப்பைப் புண்ணாக்கு. அரப்பை இடித்து, நீரில் போட்டு, அதனுடன் ஒரு எலுமிச்சம் பழத்தையும் போட்டு அவிப்பார்கள். முதலில் எலுமிச்சம் பழத்தை நன்றாகத் தலையில் தேய்த்துவிட்டு பிறகு அரப்பைத் தேய்ப்பார்கள். எப்படித்தான் கண்களை மூடிக்கொண்டிருந்தாலும் அரப்புத் தூள் கண்ணுக்குள் புகுந்து நெடு நேரம்வரை கண்ணை உறுத்திக் கொண்டிருக்கும். அரப்பு தலைமயிரை முரடாக்கி விடும் என்பது போன்ற எண்ணத்தினால் பிறகு அநேகமானோர் சீயக்காயையே உபயோகித்தார்கள். பிறகு சீயக்காய் தூளாகவே பக்கெட்டுகளில் வந்துவிட்டது. அதுவும் போய் இப்போது ‘ஷாம்பு’ தேவைப்படுகிறது.

எண்ணை முழுக்கென்றால் சும்மா ஒருகை எண்ணையைத் தலையில் வைத்து முழுகுவதல்ல, கோவணத்தைக் கட்டிக்கொண்டு உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரே எண்ணைக் குளியல்தான். எண்ணை வைத்துவிட்டால் உடனே போய் முழுக விடமாட்டார்கள். உடம்பில் “எண்ணை ஊறுமட்டும்’’ மணித்தியாலக் கணக்கில் காத்திருந்துதான் முழுக வேண்டும்.

முழுக்குத் தினத்தில் சாப்பாடும் சிறப்பாக அமையும். ஊன் உண்பவர்களால் அன்றைய தினம் பல கோழிகளின் ஆயுள் முடியும். அன்றைக்குச் சில “பத்தியங்களும்’’ காக்க வேண்டும். குளிரான பழக்கங்கள் உண்ணக் கூடாது. வியர்வை வரும்படி வேலை செய்யக்கூடாது. ஆண் பெண் உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. இப்படிச் சில பத்தியங்கள் உண்டு.

ஒழுங்காக எண்ணை வைத்து முழுகாவிட்டால் உடம்பில் சூடு சேர்ந்து பலவித நொந்தரவுகளும் ஏற்புடுமென்று சொல்வார்கள்.

பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் “தமிழ் வாணன்’’ எண்ணை முழுக்குப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அது தேவையற்ற ஒரு வேலையென்றும், அதனால் பெரிய பலன் ஏதுமில்லையென்றும் பல ஆதாரங்களுடன் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கட்டுரையைப் படித்த பிறகு நான் எண்ணை முழுக்கை நிறுத்திவிட்டேன். (எனக்குப் பிடிக்காத ஒரு வேலையை நிறுத்துவதற்கு அந்தக் கட்டுரை ஒரு சாட்டாகவும் அமைந்தது!) எண்ணை முழுக்கினால் ஏற்படக் கூடிய நயநட்டங்களைப் பற்றி என்னால் சரிவர எழுத முடியவில்லை. ஆனால் எண்ணை முழுக்கை நிறுத்தியதனால் என்னுடைய உடம்புக்கு எவ்விதம் கெடுதியும் ஏற்படவில்லை என்பது மட்டும் நிச்சயம்.

அப்பாவின் கடையில் சீயக்காய்ப் பெட்டிக்குப் பக்கத்தில் தான் “ஐஞ்சறைப் பெட்டி’’ இருந்தது சுமார் நான்கு அடி நீளமும், இரண்டு அடி அகலமுமான ஒரு நீளப்பெட்டி, குறுக்கும் நெடுக்கும் பலகைகள் போட்டு சிறிதும், பெரிதுமான பல அறைகளாக வகுக்கப்பட்டிருந்தது. அவைகளுக்குள் தான் மல்லி, மிளகு, சீரகம், வெந்தயம், மஞ்சள் முதலிய பலசரக்குகள் இருந்தன. ஒரு பெரிய அறையில் செத்தல்மிளகாயும், இன்னொன்றில் ஈரவெண்காயமும் இருந்தன. “ஈரவெண்காயம்’’ என்று புதிதாக ஒன்றுமில்லை. சாதாரண வெண்காயந்தான். ஆனால் அதை “ஈரவெண்காயம்’’ என்று சொல்லுவோம். அது ஏன் என்பது எனக்கு இன்னமும் தெரியவில்லை. சீரகத்தை “நற்சீரகம்’’ என்போம். இன்னொரு சீரகம் இருந்தது. அதைப் “;பெருஞ்சீரகம்’’ என்போம். “சோம்பு’’ என்றும் சொல்வதுண்டு. இறைச்சிக் கறி ஆக்குகிறவர்கள் தான் பெருஞ்சீரகம் வாங்குவார்கள். அந்தப் பெட்டியில் ஒரு சிறிய அறையில் பாக்கு இருந்தது. அதைக் “கொட்டைப் பாக்கு’’ என்போம். பாக்கைச் சீவி சீவலாகவும் விற்பதால் இதைக் “கொட்டைப் பாக்கு’’ என்று குறிப்பிட்டிருக்கலாம். பாக்குச் சீவலில் இரண்டு விதம் உண்டு. ஒன்று பாக்குவெட்டியால் கையினால் சீவி எடுப்பது. இந்தப் பாக்கு வெட்டியில்தான் எத்தனை விதம் இருந்தது. சில பாக்குவெட்டிகள் கலையுணர்வோடும் செய்யப்பட்டிருக்கும்.

கைச்சீவலை விட்டால் மற்றது “மெஷின்’’ சீவல் சுமார் ஒன்றரை அடி நீளமான மரக்குத்தியில் பாக்குகளின் அடிப்பாகத்தைப் பொருத்தக்கூடியதாக சிறு குழிகள் இடைவெளிவிட்டுச் செய்யப்பட்டிருக்கும். அந்தக் குழிக்குள் சுமார் 10 – 12 பாக்குகளை வரிசையாகப் பொருத்தி வைப்பார்கள். பிறகு மரம் சீவும் சீவுளினால் மெல்லிதாக – கடதாசிச் தடிப்பில் சீவுவார்கள். மெலிதான இருப்பதால் அவை சுருண்டு சுருண்டு விழும். பொன்னாலைக் கோயில் திருவிழாக் காலத்தில் ஒருவர் தினந்தோறும் “இந்த மெஷின்’’ பாக்குச் சீவிக் கொடுப்பதை நான் பார்த்திருக்கிறேன். திருவிழாக் காலத்தில், திருவிழா முடிந்ததும் வந்தவர்கள் எல்லாருக்கும் விப+தி , தீர்த்தம், சந்தனம் என்பவற்றோடு வெற்றிலை பாக்கும் கொடுப்பது வழக்கமாக இருந்தது. அதற்குப் பாக்கைக் கையால் சீவி மாளாது என்று மெஷினில் சீவி எடுப்பார்கள். மெஷின் சீவல் பொலிhகவும் இருக்கும்.

அந்தக் காலத்தில் - சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு சதம் கொடுத்துப் பலர் கறிச் சரக்கு வாங்கிச் செல்வதை நான் பார்த்திருக்கிறேன். ஒரு தட்டத்தில் கொஞ்சம் மல்லி, ஐந்தாறு மிளகு, கொஞ்சம் சீரகம், ஒரு சிறு மஞ்சள் துண்டு இவ்வளவும் போட்டு வாங்க வருபவர் சால்லைத் துண்டை விரித்துப் பிடிக்க, அப்பா அந்தச் சரக்கை அதில் கொட்டி விடுவார். இவ்வளவுக்கும் ஒரு சதந்தான் பெறுமதி (ஒரு ரூபா வல்ல@ ஒரு சதம்!)

பலர் இப்படித்தான் அன்றாடக் கறிச் சரக்கு வாங்குவார்கள். மிக மிகச் சிலர்தான் இவைகளைக் கூடுதலாக வாங்கி உரலிட்டு இடித்து, தூளாக்கி வைத்திருப்பார்கள், இப்போது உரலாவது உலக்கையாவது! – எல்லாவற்றுக்கும் மெஷின்.

கடையின் ஒரு பக்கத்தில் தேங்காய்கள் குவிக்கப்பட்டிருக்கும் ஒரு தேங்காயின் விலை இரண்டு அல்லது மூன்று சதம் இருக்குமென்று நினைக்கிறேன். அதைக்கூட முழுத் தேங்காயாக வா ங்குவார்கள். அதற்கும் வழியில்லாத சிலர் சொட்டாகத் தோண்டி அரைச் சதத்துக்கு வாங்குவதுமுண்டு.

அந்தக் காலத்தை நினைத்துப் பார்த்தால் இப்போது மக்களின் “வாழ்க்கைத்தரம்’’ மிகவும் உயர்ந்திருக்கிறதென்பதில் சந்தேகமில்லை ஆனாலும் இன்றைக்கும் மற்றைய பல நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது நாங்கள் மிகவும் கீழே தான் இருக்கிறோம். (இன்றைய போர்க்காலச் சூழ் நிலையில் நாங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேலே பின்னேறிவிட்டோமென்பது வேறு விஷயம்.)

தேங்காய் குவியலுக்குப் பக்கத்தில் தேங்காயெண்ணை டின்னும், அதற்குப் பக்கத்தில் வெற்றிலைக் கூடையும் இருந்தன. அந்த கூடையில் எப்போதும் நாலைந்து கட்டு வெற்றிலை இருக்கும். ஒரு கட்டில் நூறு வெற்றிலை. அந்தக் காலத்தில் வெற்றிலை, பாக்கு மிக முக்கியமான பொருட்கள். பொதுவாக எல்லாருமே வெற்றிலை தட்டம் இருக்கும் இந்தத் தட்டங்கள் தான் எத்தனை வகை! சில கீழே கால் வைத்து சுமார் அரை அடி உயரத்திலிருக்கும் சித்திரவேலைகள் செதுக்கப்பட்டிருக்கும். ஒருவர் வீட்டுக்கு இன்னொருவர் போனால் முதலில் வெற்றிலைத் தட்டத்தைக் கொண்டு வந்து வைத்துத்தான் உபசரிப்பார்கள்.

திருமணம் முதலிய எந்தக் கொண்டாட்டமாயிருந்தாலும், வெற்றிலை பார்க்கும் கொடுப்பது மிக மிக முக்கியமான ஒன்று.

வெற்றிலை பாக்குப் போடுவது சாப்பிட்ட உணவைச் சீரணிக்கச் செய்யுமென்றும், வாயில் துர்நாற்றத்தைப் போக்குமென்றும் சொல்வார்கள். சில பெண்களுக்கு வெற்றிலை பாக்குப் போடுவதால் உதடுகள் சிவந்து (லிப்ஸ்டிக் ப+சியது போல) அழகாகவும் இருக்கும்.

வெற்றிலைச் சாற்றைத் துப்புவதனால் பல இடங்களில் அது அசிங்கமாக இருக்கும். முதலில் பாக்கை வாயில் போட்டு சப்பிக்கொண்டு, அதன் பின் வெற்றிலையில் காம்பையும் நரம்புகளையும் களைந்து அதன்மேல் சுண்ணாம்பு ப+சி வாயில் போட்ட மெல்லுவார்கள். சிலர் இவற்றுடன் புகையிலையும் ஒரு துண்டைச் சேர்த்துக்கொள்வார்கள். இப்படிப் புகையிலை சேர்ப்பவர்கள்தான் சாறைத் துப்புவது அதிகம்.

பிற்காலத்தில் மூளாய் கூட்டுறவு ஆஸ்பத்திரியில் டாக்டர் சாக்கோ ஆஸ்பத்திரிக்குள் - வார்டுகளில் - வெற்றிலை வைத்திருப்பதற்குத் தடை விதித்ததுண்டு. வெற்றிலையைப் போட்டு, அதன் சிவந்த சாறைக் கண்ட கண்ட இடங்;களிலெல்லாம் பலரும் துப்பி அசிங்கப்படுத்தியதே அவர் அப்படித் தடை விதித்தற்குக் காரணம். ஆனால் பலர் கனவாக வெற்றிலையை ஒளித்து மறைத்து உபயோகித்துக்கொண்டுதானிருந்தார்கள். சிகரெட், பீடி, சுருட்டுக் குடிப்பவர்கள்போல வெற்றிலை போட்டுப் பழகியவர்களும் அது இல்லாமல் இருக்க முடியாது.

அப்பாவின் கடையில் இரண்டு சாக்குகளில் புகையிலைகள் தனித்தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும். ஒன்றில் தின் புகையிலை, மற்றதில் சுற்றும் புகையிலை.
புகையிலைச் சுருட்டுக் குடிப்பவர்களும் அந்தக் காலத்தில் அதிகம். பெண்கள் பலர்கூடச் சுருட்டுக் குடிப்பார்கள். சுருட்டாக விற்பனை வாங்குபவர்கள் குறைவு. தாங்களே புகையிலையை வாங்கி, வேண்டிய அளவுகளில் கிழித்துச் சுருட்டாக்கிக் கொள்வார்கள். அதுவும் ஒரு கலை. அப்போது சுருட்டு வியாபாரம் யாழ்;ப்பாணத்தின் மிக முக்கியமான தொழில்களில் ஒன்று. பல ஊர்களிலும் சுருட்டுக் கொட்டில்கள் இருந்தன. இப்போதாயின் அவற்றுக்கு பெயர் சூட்டி “சுருட்டுத் தொழிற்சாலை’’ என்று சொல்வார்கள். அப்போது மிகச் சிலவற்றைத் தவிர மற்றவைகளுக்குப் பெயர் கிடையாது. “சுருட்டுக் கொட்டில்கள் தான்!

வேறு வேலை கிடையாதவர்ளெல்லாம் சுருட்டுக் கொட்டில்களில் போய், சிறிது காலம் பழகி, சுருட்டுக்காரர்கள்’ ஆகிவிடுவார்கள். நாட் சம்பளம், மாதச் சம்பளம் என்றெல்லாம் கிடையாது. ஆயிரம் சுருட்டுச் சுற்றினால் இவ்வளவு கூலி என்றுதான் கணக்கு. அவரவர் திறமைக்கும் உழைப்புக்கும் ஏற்பச் சம்பாதித்துக் கொள்ளலாம்.

இந்தச் சுருட்டுக் கொட்டில்கள் பற்றி எனக்கு நேரில் பார்த்த பட்டறிவு எதுவுமில்லை. அதனால் அதுபற்றி அதிகம் எழுத முடியவில்லை. ஆனால் இந்தச் சுருட்டுக் கொட்டில்களைப்பற்றி நிறைய விடயங்கள் இருக்கின்றன என்று மட்டம் தெரியும். யாராவது தெரிந்தவர்கள் இது பற்றி ஒரு பெரிய கட்டுரை எழுதலாம். சுருட்டுக்குத் தேவையான புகையிலையைச் சேகரிப்பது, பாதுகாப்பது, பின்னர் சுருட்டுச் சுற்றுவதற்குத் தோதாகக் கிழிந்து தயார் செய்வது, சுருட்டுகளைச் சுற்றும் விதம் சுருட்டுக் கொட்டிலின் அமைப்பு, சுருட்டுகளுக்கு “கோடா’’ போடுவது சிறு சிறு கட்டுகளாகக் கட்டுவது, அவற்றைப் பனை ஓலைப் பாயினால்களுக்கு அனுப்புவது, “யாழ்ப்பாணத் திறம் சுருட்டு’’ என்ற புகழ். சுருட்;டு முதலாளிகள், தொழிலாளர்கள் - இப்படிப் பல விடயங்களைப்பற்றியும் ஒரு பெரிய கட்டுரை எழுதலாம்.

அந்தக் காலத்திலேயே சுருட்டுக்குப் போட்டியாக சிகரெட்டும், பீடியும் வந்துவிட்டன. இவைகள் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதியாயின. சிகரெட், பிரித்தானியாவிலிருந்து வந்ததென்று நினைக்கிறேன். பீடி இந்தியாவிலிருந்து வந்தது. “சொக்களால் ராம் சேட் பீடி’’ என்ற பெயர் இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது.

சிகரெட் சிவப்பு நிறக் கடதாசி சுற்றிய வட்ட டின்னில் இருந்தது. “எலிபன் (யானை) மார்க் சிகரெட் ஒரு டின்னில் 10 சிகரெட்டுகள் இருக்கும். ஒரு சிகரெட் இரண்டு சதம் விற்றதாக நினைவு. இரண்டு சதம் கொடுத்து சிகரெட் வாங்கும் தகுதி மிக மிகச் சிலருக்கே உண்டு. அதனால் சிகரெட் உபயோகம் அவ்வளவாக இல்லை. ஆனால் பீடி ஒரு சதத்துக்கு மூன்றோ நாலாக இருந்தன. இதனால் பீடி உப்யோகம் மிக வேகமாகப் பரவிற்று.

சிகரெட் டின்னுக்குப் பக்கத்தில் நெருப்புப் பெட்டி பக்கட் இருந்தது. நெருப்புப் பெட்டிகளும்’ அந்தக் காலத்தில் வெளிநாட்டிலிருந்து தான் வந்தது. சுவீடன் நாட்டிலிருந்து வந்திருக்க வேண்டும்.

“மூன்று நட்சத்திரம்’’ அடையாளமாகப் போட்ட தீப்பெட்டிகளை எனக்கு நினைவிருக்கிறது. ஒரு பெட்டியின் விலை மூன்று சதமென்று நினைக்கிறேன்.

மூன்று சதம் விற்றாலும் பல வீடுகளில் தீப்பெட்டியே இருக்காது. சுருட்டுப் பற்றவைப்பவர்கள் அடுப்பிலிருந்து ஒரு கொள்ளிக்கட்டையை எடு;த்துப் பற்ற வைப்பார்கள். அடுப்புப் பற்றவைப்பதற்கும் சிலர், அடுப்பு எரியும் பக்கத்து வீட்டில் போய் பன்னாடையில் கொஞ்ச நெருப்புத் தணல் வாங்கி வந்து, அதை ஆட்டியும் ஊதியும் நெருப்பை உண்டாக்கிக்கொள்வதுண்டு.

அந்தக் காலத்துச் சிக்கன வாழ்வு தொடர்ந்து வந்திருக்குமானால் இன்றைய போர்க்காலப் பஞ்சம் யாழ்ப்பாணத்து மக்களை கொஞ்சமும் பாதித்திருக்காது!

ஒரு அறுபது ஆண்டுக் காலத்துக்குள், எவ்வளவோ ஆடம்பர வாழ்க்கையைப் பழக்கிக்கொண்டு இப்போது அவைகள் கிடைக்கவில்லையே என்று கூக்குரலிடுகிறோம்!

இரண்டு சிறிய டின்களில் சீனி இருந்தது. ஒன்றில் மாக்சீனி (ஐசிங் சுகர்) மற்றதில் தற்போது சாதாரண பழக்கத்திலுள்ள சீனி. அதை “கிளியே’’ என்போம்.

மாக்சீனி ஒரு றாத்தல் மூன்று சதம். கிறேப் சீனி ஒரு றாத்தல் இரண்டரைச் சதம்.

தேயிலையும் ஒரு டின்னில் இருந்தது. அப்படித் தேயிலையை இப்போது கடைகளில் இருப்பது போல் தூளாக இல்லாமல் நீள நீள இலைச் சுருள்களாக இருக்கும். டின்னைத் திறந்தால் “
கம்’’ மென்று அருமையான தேயிலை மணம் வீசும்.

கோப்பிக் கொட்டையும் ஒரு டின்னில் இருந்தது.

அப்போதெல்லாம் கோப்பி, தேநீர் குடிப்பவர்கள் மிகக் குறைவு. சுகயீனமானவர்களுக்கு கோப்பி, தேநீர் கொடுப்பதுண்டு. காலையில் பழஞ்சோற்றுத் தண்ணீர் குடிப்பார்கள். அதற்குள் வெங்காயத்தை வெட்டிப் போட்டு, சிறிது மோரும் கலந்து குடிப்பதுண்டு. அநேகமாக எல்லார் வீட்டிலும் மோர் இருக்கும். குடிபானங்களில் மோரும் முக்கியமானது. சிலர் எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து தண்ணீர் கலந்து சர்க்கரை சேர்த்துக் குடிப்பார்கள்;. கருப்ப நீர்க் காலத்தில் கருப்பநீரும் குடிப்பார்கள். (கள் குடிப்பவர்களின் கதை வேறு)

எனக்குத் தெரிய, தேயிலையும் சீனியும் இலவசமாகக் கொடுத்து, ஒரு பொது இடத்தில் தேநீர் தயாரித்து வீட்டுக்கு வீடு இலவசமாகத் தேநீர் கொடுத்துப் பழக்கினார்கள். தேயிலைப் பிரசார சபையின்; வேலையாக இருந்திருக்கும். அதன் பயன், இன்றைக்கு காலையில் எழுந்தவுடன் தேநீர் குடிக்காவிட்டால் ஏதோ வாழ்க்கையே நாசமாகி விட்டது போன்ற மனப்பான்மை வந்து விடுகிறது!

அறுபது ஆண்டுகளுக்கு எப்படி எப்படியெல்லாம் மாறிவிட்டோம்!

ஒரு வகையில் பார்த்தால் எங்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருப்பது உண்மைதான்.

ஆனால் இன்றைய போர்க் காலச் சூழ்நிலையில் ஒரு உண்மை தெளிவாகத் தெரிகிறது. அன்று எங்களுக்குத் தேவையான பொருட்கள் பெரும்பாலும் எங்கள் நாட்டிலேயே உற்பத்தி செய்து கொண்டோம். அல்லது எங்கள் நாட்டில் கிடைக்கக்கூடிய பொருட்களுக்கு ஏற்றதாக எங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டோம்.

ஒரு உதாரணத்துக்குப் பார்த்தால் எரி பொருளுக்காக இன்று தவண்டையடிக்கிறோம்! அந்தக் காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை! அவரவர் வீட்டுச் சமையலுக்குத் தேவையான எரிபொருள் அவரவர் வளவுக்குள்ளேயே இருக்கும். சொந்த வளவுக்குள் இல்லாதவர்கள் கூட, அங்கே இங்கே தேடி விறகுகளை இலவசமாகவே பெற்றுக் கொள்வார்கள்.

விளக்கு எரிப்பதற்கு மண்ணெய் வருமுன் தேங்காயெண்ணை இலுப்பெண்ணை முதலிய எண்ணெகளை சிக்கனமாக உபயோகிப்பார்கள்.

போக்குவரத்துக்கு, பிறவியிலேயே அமைந்த இரண்டு கால்கள் இருந்தன. பத்துப் பதினைந்து மைல் தூரங்களைக் கூட நடந்து போய் வருகிறவர்கள் உண்டு. இதற்குமேல் மாட்டு வண்டிகள் இருந்தன.

எரிபொருள் கஷ்டம் எப்படி வரும்!

அப்பாவின் கடையிலே இன்னும் பல பல பொருள்கள் இருந்தன. எங்களுர் மக்களுக்கு எது எது தேவையாக இருந்ததோ அவையெல்லாம் அநேகமாக அந்தக் கடையில் இருந்தன.

ஒரு பெரிய சாடியிலி; சக்கரை ஒரு தகர டப்பாவில் கற்கண்டு. இப்போது கற்கண்டு என்பது ஏதோ சீனியைக் கட்டியாக்கி வைத்தது போலிருக்கிறது. அன்றைய கற்கண்டை எனக்கு இப்போது நன்றாக நினைவு இருக்கிறது. அவற்றில் சில பக்கங்கள் கண்ணாடி போல அழுத்தமாக இருக்கும். இடையிடையே சில கற்கண்டுகள் நூலினால் கோர்க்கப்பட்டிருக்கும். கற்கண்டு டின்னைத் திறந்து நான் அடிக்கடி ஒரு கட்டியை எடுத்து வாயில் போட்டு கொள்வேன். சில சமயங்களில் அப்பா “வயிற்றில் ப+ச்சி வைக்கும்’’ என்று பேசி எடுக்க வேண்டாமென்று தடுப்பதுண்டு. என்றாலும் தினசரி ஏழெட்டுக் கற்கண்டுக் கட்டிகளையாவது நான் எடுத்து வாயில் போட்டுக் கொள்வேன். இனிப்பு அதிகம் எடுத்து வாயில் போட்டுக் கொள்வேன். இனிப்பு அதிகம் சாப்பிட்டால் வயிற்றில் ப+ச்சி உண்டாகும் என்பது உண்மையாகத்தானிருக்கும். ஏனென்றால் அடிக்கடி சுமார் 3 – 4 மாதங்களுக்கென்றொரு முறை எனக்குப் பேதி மருந்து வாங்கிக் கொடுப்பார்கள். பரியாரி இராசாதான் எங்களுடைய குடும்ப வைத்தியரும் தான் எனக்குப் பேதி மருந்து வாங்கித்தருவார்கள். பணம் கொடுக்காமல் மருந்து வாங்கினால் அது சிந்திக்காது என்று சொல்லி, இருபத்தைந்து சதம் தந்து விடுவார்கள். நான் அதைக்கொண்டு போய் பெத்தார் பரியாரிடம் கொடுத்து, “பச்சைத் தண்ணிப் பேதி;;’’ வாங்கி வருவேன். வழக்கமாகப் பேதி மருந்தை விழுங்கிவிட்டு, தேநீர் குடிக்க வயிற்றால் போகும். பச்சைத் தண்ணீர்ப் பேதி மருந்தை விழுங்கிவிட்டு அவ்வவ்போது பச்சைத் தண்ணீரைக் குடிக்க வயிற்றால் போய், நான் களைத்து விழுந்தும், பிறகு வயிற்றால் போவதை நிறுத்துவதற்கு மருந்து வாங்கித் தந்து நிறுத்தியதும் நினைவிருக்கிறது. இப்போதெல்லாம் கண்டபடி பேதி மருந்து எடுக்கக்கூடாதென்று வைத்தியர்கள் சொல்கிறார்கள். அது அந்தக் காலம்! காலத்துக்குக் காலம் வைத்திய முறைகளும் மாறிக் கொண்டுதானே இருக்கின்றன.

கற்கண்டை விட “பல்லி முட்டை’’ என்ற இனிப்பும் ஒரு போத்தலில் இருந்தது. அதை இனிப்பு என்று சொல்வதில்லை. ஒரு சதத்துக்குப் பல்லிமுட்டை தாருங்கோ என்று தான் கேட்பார்கள். சிறு சிறு உருண்டைகளாக வெள்ளை, சிவப்பு, மஞ்சள், பச்சை என்று பல நிறங்களிலும் அந்த இனிப்பு உருண்டையாய் இருக்கும். வெள்ளை நிறத்திலிருக்கும் இனிப்பு சரியாகப் பல்லியின் முட்டையைப் போலவே இருக்கும். அதனால் அதற்கு “இனிப்பு’’ என்ற பெயர் மறைந்து “பல்லிமுட்டை’’ என்ற பெயரே வழங்கிற்று.

சிறு சிறு துண்டுகளான “சொக்கிளேற்’ றுகளும் அப்போதே வந்திருக்கின்றன. அழகான வட்ட, சதுர டின்களில் அவை வரும். ஒவ்வொரு துண்டும் முதலில் சிறு ஓயில் பேப்பரால் சுற்றப்பட்டு அதன் மீது பல வர்ணங்களில் அழகான டிசைன்கள் போட்ட ஈயவத்திகளினால் சுற்றப்பட்டிருக்கும். “சொக்கிளேற்’’ சைச் சாப்பிட்டுவிட்டு நான் அந்த ஈய வத்திகளை எறிந்துவிட மாட்டேன். அவற்றை தெளிவு நிமிர்த்தி அடு;கிச் சேர்த்து வைத்திருந்தேன். எவ்வளவு அழகான வத்திகள் அவை!

மூன்று தகர டப்பாக்களில் “பிஸ்கட்டு’’ கள் இருந்தன. அந்த டப்பாக்களின் முன்பக்கத் தகரம் வெட்டப்பட்டு கண்ணாடி பொருத்தப்பட்டிருந்தது. “பிஸ்கட்’’ என்றதும், நைஸ், மாறி, கிறிம்கிராக்கர்ஸ் என்ற வரிசைகளை நினைத்துவிட வேண்டாம். ஒரு டின்னில் றஸ்க், இன்னொன்றில் மடத்தல், மற்றதில் பொழிஞ்சி. இந்தப் பொழிஞ்சி பிஸ்கட் இப்போது அருகி விட்டது. சிறுசிறு துண்டுகளாக, சீனிக் கரைசலில் அவைகள் தோய்க்கப்பட்டிருக்கும், தின்பதற்கு “மொரு மொரு’’ என்றிருப்பதோடு இனிப்பாகவும் இருக்கும்.

“பொழிஞ்சி’’ என்றதும் என்னைப் படிப்பித்த ஒரு நல்ல ஆசிரியரின் நினைவு வருகிறது. அவருக்கு “பொழிஞ்சியர்’’ என்று பட்டம். பொதுவாக நாங்கள் அவருடைய பெயரைச் சொல்வது கிடையாது “பொழிஞ்சியர்’’ என்று தான் கதைப்போம். அவர் முதன் முதலாகப் பாடசாலைகள்கு வந்ததும், அவர் தீவுப்பகுதியைச் சேர்ந்தவர் என்று அறிந்தோம். ஒரு மாணவன் “டேய், இவர் துறைமுகத்தடியால்தான் வந்திருப்பார். அங்கே பொழிஞ்சி கிடைக்கும். பொழிஞ்சி வாங்கித் தின்று கொண்டு வந்திருப்பார்’’ என்று தனது கற்பனையை எடுத்துவிட்டான். எப்படியோ அன்றுமுதல் அவர் “பொழிஞ்சியர்’’ ஆகிவிட்டார்!

அந்தக் காலத்திலேயே ஆசிரியர்களுக்குப் பட்டம் சூட்டுவதில் மாணவர்கள் வல்லுநர்களாக இருந்தார்கள். வாக்கர், அவட்டை, பிரசங்கி, மீசையர், சூழர் - என்று இப்படிப் பல பட்டங்கள் கொண்ட ஆசிரியர்களிடம் நான் படித்திருக்கின்றேன். “தீவாத்தியார்’’ என்பவரும் இவர்களில் ஒருவர்.

பிஸ்கட் டின்களுக்குப் பக்கத்தில் அகலமான வாயுள்ள ஒரு போத்தலில் நூல் பந்துகள் இருந்தன. இவை தையல் தைப்பதற்கான நூல் பந்துகள். தையல் ஊசிக்கும் ஒரு சிறு பெட்டி மேசையின் மீது இருந்தது. அப்போது கிராமத்தில் தையல் நூலும் ஊசியும் அவசியமான தேவைகள். தையல் மெஷின்களோ, தையற்காரர்களோ அங்கே இருந்ததில்லை. கிழிந்து போன வேட்டி, சால்வை, சேலைகளைத் தூக்கி மூலையில் போட்டுவிட மாட்டார்கள். கிழிசல்;களைத் தைத்துத் தைத்து உபயோகிப்பார்கள். அநேகமாக பல பெண்களுக்குத் தைக்கத் தெரியும். தைப்பதென்றால் கிழிந்த துணிகளைத் தைப்பது@ பெண்கள் தங்களுக்குத் தேவையான “றவிக்கை’’யையும் தாங்களே தைத்துக் கொள்வார்கள். ஃபாஷன்’ சமாச்சாரமெல்லாம் கிடையாது. கையையும் கழுத்தையும் வெட்டி பொருத்தி ஒரு சட்டை தைத்தால் சரி. ஆண்கள் பொதுவாகச் சட்டை போடும் பழக்கம் இல்லை. அதனால் தையல் பிரச்சினையும் இல்லை.

அந்தக் காலத்தில் பெண் பிள்ளைகளுக்குத் “தையல் பாடம்’’ என்று ஒரு பாடம் முக்கியமாக இருந்தது. முக்கியமாக நூல் கோர்க்கவும், இரண்டு விரல்களை மடித்து அதனூடே தைக்க வேண்டிய துணியை விறைப்பாகப் பிடித்துக் கொள்வும், நூலோடவும், “விசுப்பம்’’ தைக்கவும் அதற்கு மேல் போனால் தெறிஓட்டை தைக்கவும் பெண்கள் பாடசாலையில் பயின்று கொள்வார்கள்.

இப்போது பாடசாலைகளில் பெண் ஆசிரியைகளே பெரும்பான்மையாகி விட்டார்கள் போலிருக்கிறது. அந்தக் காலத்தில் ஒரு பாடசாலைக்கு ஒரே ஒரு பெண் ஆசிரியை தான் இருப்பர்;கள். அவரை “ஆசிரியை’’ என்றோ ரீச்சர் என்றோ சொல்லுவதில்லை. “தையலம்மா’’ என்றுதான் சொல்வார்கள். அவருக்கு முக்கியமான வேலை பெண் பிள்ளைகளுக்கு தையல் பாடம் படிப்பிப்பதுதான். நேரமிருந்தால், அரிவரி, முதலாம் வகுப்புகளுக்கு பாட்டு, வாசிப்பு, கணிதம் முதலிய சில பாடங்களையும் படிப்பிப்பார்கள்.

1940 ஆம் ஆண்டில் மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் நாள் எஸ்;. எஸ். ஸி. வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோதுகூட, அந்தப் பெரிய பாடசாலையில் ஒரே ஒரு பெண் ஆசிரியைதான் இருந்தார். அவர் ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியை. அவரையும் தையலம்மா என்றுதான் சொன்னோம். ஆனால், அவர் தையல்பாடம் படிப்பித்தாரா என்பது தெரியவில்லை. பாலர் வகுப்புத்தான் அவருக்குரிய வகுப்பாக இருந்தது!

கடையில் தையல் ஊசிச்சரை இருந்த சிறிய மேசையில் சிகரட், பீடியுடன் ஒரு பக்கத்தில் ஒரு கர்ப்ப+ரப் பெட்டியும் இருக்கும். அந்தச் சற்று வட்டாரத்தில் புகழ்பெற்ற கிருஷ்ணன் கோயில் சமீபத்தில் இருந்ததால் கர்ப்ப+ர வியாபாரம் ஒழுங்காய் நடந்தது. கர்ப்ப+ரம் இப்போது போல வெறும் கடதாசிப் பக்கட்டுகளில் வரவில்லை. அதுவும் வெளி நாட்டிலிருந்தே வந்தது. கர்ப்ப+ரம் இப்போது போல வெறும் கடதாசிப் பக்கட்களில் வரவில்லை. அதுவும் வெளி நாட்டிலிருந்தே வந்தது. கைக்கு அடக்கமான – சுமார் ஒரு சாண்நீளம், அரை அடி அகலமான தகரப் பெட்டிக்குள் சிறு சிறு பக்கட்டுகளாக அது அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். கர்ப்ப+ரம் முடிந்தால் அந்தத் தகரப் பெட்டி பல தேவைகளுக்கு உதவிற்று. முக்கியமாக பெண் பிள்ளைகளின் தையல் பெட்டியாக அந்தக் கர்ப்ப+ரம் வந்த பெட்டிதான் வழங்கிற்று.

அந்தச் சிறிய மேசைமீது இன்னொரு முக்கியமான பொருள் இருந்தது. அதுவே கடையின் கணக்குக் கொப்பி. அந்தக் கொப்பியில் கொள்முதல் கணக்கோ, விற்று வரவுக் கணக்கோ – அப்படியான ஒன்றும் இருக்காது. கடன் வாங்குபவர்களின் பெயர்களும், இன்ன திகதியில் இன்ன பொருள் இன்ன விலைக்குக் கடனாக வாங்கினார் என்ற விபரமும் இருக்கும். உண்மையில் அது கடைக்கணக்குக் கொப்பியல்ல. கடன் கணக்குக் கொப்பிதான்.

கடனுக்குப் பொருள் கொடுக்கும்போது சிட்டை எழுதுவதோ, கடன் வாங்குபவரிடம் கையெழுத்து வாங்கவோ கிடையாது.

அநேகமாகக் கடன் வாங்குபவர்கள் ஒழுங்காக அவ்வவ்போது பணத்தைக் கொடுத்து விடுவார்கள். யாரும் கணக்குத் தவறு என்றோ, தான் வாங்கவில்லையென்றோ சொன்னதை நான் அறியேன். ஒழுங்காகத் திருப்பிக் கடன் பணத்தைக் கட்டக் கூடியவர்களுக்குத்தான் கடன் கொக்கப்படும்.

எப்போதாவது ஒருவர் கடனைக் கட்டாயம் நெடுநாட்களுக்கு இழுத்தடிதாரானால், அப்பா கணக்குப் புத்தகத்தை, கிராமக் கோட்டுக்கு எடுத்துக் கொண்டுபோய் கடனாளியைச் “சித்தாரிப்பார்’’ (வழக்குப்பதி செய்வார்) இந்த வழிக்குக் சட்டத்தரணிகளோ வேறு எந்தச் செலவுகளோ கிடையா, கிராமக் கோட்டு நீததான், விதானை யார் மூலம் எதிரிக்குக் கட்டளை அனுப்பிக் கூப்பிட்;டு, குறிப்பிட்ட ஒரு தவணைக்குள் பணத்தைக் கட்டிவிடும்படி கட்டளையிடுவார். அநேகமான அந்த அளவில் பிரச்சினை முடிந்து விடும்.

இந்தக் “கிராமக்கோடு’’ என்பது பின்னால் இல்லாமல் போயிற்று. சிறு சிறு வழக்குகளுக்கெல்லாம் பொலிஸ் கோட்டுக்குப் போகவும், அங்கே சட்டத்தரணிகளுக்குப் பணம் கொடுத்துக் கெட்டழியவும் வேண்டிய நிலை ஏற்பட்டது.

கடையின் உட்பக்கச் சுவர் ஓரமாக ஒரு தடித்த நீளப் பலகை, அரை அடி உயரத்தில் கால் வைத்து வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பலகையின்மீது ஒரு பெரிய கடகத்தில் ஊர் அரிசி இருக்கும். அப்பாவே நெல் மூடை பெரிய கடகத்தில் ஊர் அரிசி இருக்கும். அப்பாவே நெல் மூடை வாங்கி வந்து, அவித்துக் காயவைத்து, மாட்டுவண்டியில் சங்கானைக்குக் கொண்டுபோய் அங்கேயிருந்த “மில்’’ லின் குற்றிக்கொண்டு வந்த அரிசி. மில்லிலிருந்து அரிசியை ஒரு சாக்கிலும், தவிட்டை இன்னொரு சாக்கிலும் கட்டிக்கொண்டு வருவார். தவிட்டை தலைவாசல் மூலையிலிருந்த ஒரு வெற்றுச் சீமெந்துப் பீப்பாவில் கொட்டி வைப்பார். மாடுகளுக்கு அவ்வித தவிடு கொடுப்து வழக்கம்.

இப்போதுள்ள பலருக்கு சீமெந்துப் பீப்பாவைத் தெரியாது. இப்போதெல்லாம் தடித்த கடதாசிப் “பாக்’’ கில்தானே சீமெந்து வருகிறது. அந்தக் காலத்தில் சீமெந்தும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள். பெரிய பீப்பாக்களில் தான் வரும். சீமெந்து உபயோகித்த பிறகு அந்தப் பீப்பா வேறு பல தேவைகளுக்குப் பயன்படும்.

சீமெந்துப் பீப்பா என்றதும் ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. எங்கள் வீட்டுக்கு முன்னாலுள்ள ஒரு வீட்டில் சிறு பிள்ளைகள் ஒளித்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஒளித்து விளையாடுவதும் இப்போது அருகிக் கொண்டு வருகிறது. ஏழெட்டுப் பிள்ளைகள் ஒன்று கூடுவார்கள். ஒரு பிள்ளையின் கண்களை இன்னொருவர் பொத்திக் கொண்டிருக்க. மற்றப் பிள்ளைகளெல்லாம் ஓடிப்போய் ஒவ்வொரு மறைவிடங்களில் ஒளித்துக் கொள்வார்கள். பிள்ளைகளின் கண்களைப் பொத்திக் கொண்டிருப்பர் “கண்ணாரே கடையாரே. காக்கணமாம் ப+ச்சியாரே! எனக்கொரு முட்டை உனக்கொரு முட்டை பிடித்துக் கொண்டோடி வா!’’ என்று ஒரு பாட்டுப்பாடி கண்களை மூடிய கைளை எடுத்துப் பிள்ளையைப் போகவிடுவார். அந்தப் பிள்ளை ஓடி ஓடி மற்றவர்கள் மறைந்திருக்கும் இடங்களைத் தேடி அவர்களைக் கண்டு பிடிக்க வேண்டும். முதலில் கண்டு பிடிக்கப்படுபவரே அடுத்த முறை கண்கள் பொத்தப்படுவார்.

என் வீட்டில் இப்படி ஒளித்து விளையாடிக் கொண்டிருந்த போது ஒருமுறை ஒரு சிறு பிள்ளையைக் கண்டு பிடிக்க முடியவில்லை. கடைசியில் கண்டு பிடிக்க வேண்டியவர் மாத்திரமன்றி எல்லாப் பிள்ளைகளுமே சேர்ந்து தேடத் தொடங்கினார்கள். பெயரைச் சொல்லிக் கூப்பிட்டார்கள். பலனேதுமில்லை. கடைசியில் வீட்டுப் பெரியவர்களுக்கு மட்டுமன்றி அயலட்டைக்கும் இது தெரியவரவே, எல்லோருமாகச் சேர்ந்து அந்தப் பிள்ளையைத் தேடினார்கள். கிணற்றையும் எட்டிப் பார்த்தார்கள்.

கடைசியாக அவர்களுடைய வீட்டுத் தலைவாசலில் கிடந்த சீமெந்துப் பீப்பாவுக்குள் அந்தப் பிள்ளை இருக்கக் கண்டு பிடிக்கப்பட்டது.

ஒளிப்பதற்கு நல்ல இடமென்று கருதி; சீமெந்துப் பீப்பாவுக்குள் இறங்கிப் பதுங்கிய அந்தப் பிள்ளை சற்று நேரத்தில் அப்படியே நித்திரையாகி விட்டது!

பெரிய கவலையுடன் பதறிப் போய் தேடிக் கொண்டிருந்த எல்லோரும் “ஓ,ஓ’’ என்று சிரித்தது இன்னும் நினைவிருக்கிறது.

அப்பாவின் ஊர் அரிசிக் கடகத்;துக்குப் பக்கத்தில் ஒரு பெரிய சாக்கில் வெள்ளைப் பச்சை அரிசி இருக்கும். “ரங்கூன் பச்சை அரிசி;’’ என்று பெயர். பர்மாவிலிருந்து இறக்குமதியாவது, அப்பம், தோசை முதலிய பலகாரம் செய்பவர்கள் அந்த அரிசியைத்தான் வாங்குவார்கள்.

பச்சைஅரிசி மூடைக்குள் பக்கத்தில் ஐந்தாறு பெரிய உமல்களில் சில பொருள்கள் இருந்தன. ஓரு உமலில் செத்தல் மிளகாய் இருந்தது. மற்றவர்களில் உழுந்து, பயறு முதலிய பொருள்கள் இருந்தன.

இப்போது எந்தப் பொருள் வாங்குவதானாலும் “பாய்க்’’ தேவைப்படுகிறது. முன்பு இந்த “பாய்க்’’ குகளின் இடத்தை உமல்களும், பெட்டிளுமே பெற்றிருந்தன. இந்த உமல்களில் எத்தனை வகை! சிறிய, ஒரு அடி அகலம். ஒரு அடி நீளமான உமல்களிலிருந்து பெரிய 2 அடி அகலம், 3 அடி உயரமான உமல்களும் இருந்தன. எல்லாம் பனை ஓலையினால் செய்யப்பட்டவை. உள்ளுர் மூலப் பொருட்களைக் கொண்டு உள்ளுரில் தயாரிக்கப்பட்டவை. இந்த “பாக்’’ குகளுக்காக மட்டும் ஒரு ஆண்டில் எங்களுடைய பணம் எவ்வளவு தொகையாக வெளியே போய்க் கொண்டிருக்கிறது என்பதை யாராவது அறிந்து சொன்னால் திகைப்பாக இருக்கக்கூடும்.

இப்போது கச்சான் கடலை வாங்குவதற்குகூட “பாக்’’ தேவையாக இருக்கிறது. முன்பு இப்படியான பல பொருட்களை “மடி’’ யில் தான் வாங்கிக் கட்டிக்கொள்வார்கள். “மடி’’ என்றால் தெரியுந்தானே? “குழந்தையை மடியில் வைத்திருந்தாள்’’ என்று சொல்கிறோம். இது அந்த மடியல்ல. உடுத்தியிருக்கும் வேட்டியில் வயிற்றுப் பக்கமாகச் சற்றே வெளியே இழுத்தெடுத்து ஒரு சிறு “பை’’ போல ஆக்கிக்கொள்வது தான் மடி. “மடியில் கனமிருந்தால் வழியில் பயம்’’ என்ற ஒரு பழமொழியும் உண்டு.

சில சமயங்களில் “மடி’’ க்குப் பதிலாக “சண்டிக்கட்டை’’யும் பயன்படுத்திக் கொள்ளுவது முண்டு. இதென்ன “சண்டிகட்டை’’யும் பயன்படுத்திக்கொள்ளுவதுமுண்டு. இதென்ன “சண்டிக்கட்டு’’ என்கிறீர்களா? உடுத்தியிருக்கும் வேட்டியை மடித்துக் கட்டிக்கொள்வதுதான் சண்;டிக்கட்டு’ இந்தச் சண்டிக்கட்டு மடிப் பின்பகுதியை ஒரு “பை’’ போலப் பாவித்து அதற்குள் பொருள்களைப் போட்டுக்கொண்டு நடக்கும் வழக்கமும் இருந்தது.

கடையின் பின் சுவர் ஓரமாக ஒரு மூலையில் பெரியதொரு பானை இருந்தது. கன்னங்கரேலென்று இருக்கும். அதற்குள் நல்லெண்ணை இருந்தது. நல்லெண்ணை அன்று மிக முக்கியமான ஒரு பொருளென்பதை முன்பே சொல்லியிருக்கிறேன்.

கடைக்குப் பக்கத்தில் ஒரு அ. மி. பாடசாலை இருந்ததால் அதன் தேவை நோக்கி, சிலேற், பென்சில், கொப்பி, பேனை, மைக்கூடு, மைக்கட்டி, (இந்தக் கட்டியை நீரிலே கரைத்து மைக்கூட்டுக்குள் விட்டு வைத்துக்கொள்ளலாம்) முதலியவும், புத்தகங்களான “மிஷன் தமிழ்ப் புத்தக”மும் “இயற்கை விளக்க வாசகம்’’ என்ற புத்தகமும் விற்பனைக்காக இருந்தன.

எங்களுரில் புகழ் வாய்ந்த இரண்டு வைத்தியர்கள் இருந்தார்களென்று குறிப்பிட்டிருந்தேனல்லவா? அநேகமாக அவர்கள் நோயாளிகளுக்கு “குடிநீர்’’ மருந்து எழுதிக் கொடுப்பார்கள். அதனால் அந்த மருந்துப் பொருள்களும் பற்பல விதமான டின்களில் இருந்தன. திற்பலி வேர்க்கொம்பு, பரங்;கிக்கிழங்கு, தேத்தாங்கொட்டை - இப்படிச் சில மருந்துப் பொருள்களின் பெயர்கள் இன்னமும் என் நினைவில் இருக்கின்றன. ஒரு சிறிய வாய் குறுகிய சாடியில் “பாதரசம்’’ என்ற பொருளும் மருந்துத் தேவைக்காக இருந்தது. அதிக விலையுள்ளது. செத்தல்மிளகாய் ஒன்றை எடுத்து அதன் காம்பைக் கிள்ளி விதைகளைக் கொட்டி விட்டு, அந்த மிளகாய்க் கோதுக்குள்தான் இந்தப் பாதரசம் என்ற பொருள் மிகக் கவனமாக விட்டுக் கொடுக்கப்படும். “கவனம்’’ என்று நான் சொல்வதில் மிகுந்த பொருள் உண்டு. பாதரசம் என்பது குழு குழு என்று திரவமுமில்லாமல் திடமுமில்லாமல் இருக்கும். ஈயம் போலக் கனக்கும் ஒரு துளி கீழே விழுந்தால் சிறு சிறு கடுகுகள் போலப் பிரிந்து சிதறும். அந்தத் துகள்களை மெதுவாகக் கூட்டி ஒன்று சேர்த்தால் பழையபடி ஒன்றாகச் சேர்த்தால் பழையபடி ஒன்றாகச் சேர்ந்துவிடும் உள்ளங்கையில் விட்டால் ஓட்டாது. தாமரையிலையில் தண்ணீர்போல ஓடிக்கொண்டிருக்கும். அதில் ஒரு சிறு துளி எடுத்து வெற்றிலை சாரோடு சேர்த்து கசக்கி, அதை ஒரு சதக் காசின்மீது தேய்த்தால், செம்பினாலான அந்த ஒருசதம், வெள்ளிக்காசான 50 சதம்போல நிறம் மாறிவிடும். இதை யாரோ எனக்குச் சொல்லி நான் செய்து பார்த்திருக்கிறேன். (அந்தக் காலத்தில் ஒரு சதமும், 50 சதமும் ஒரே அளவானவை) அந்தப் போலி 50 சதம் பலமணி நேரங்களுக்கு நிறம் மாறாவிருக்கும்.

அப்பாவின் கடையை வைத்துக் கொண்டு இன்னும் நிறைய விடயங்கள் எழுதுவதற்கு இருக்கக்கூடும். இப்போதைக்கு நினைவில் வந்தவை இவ்வளவுதான். கடையை இவ்வளவுடன் நிறுத்திவிட்டு வேறு ஏதாவது சொல்லலாமா பார்க்கிறேன்.

14. தீ வாத்தியார்

பொன்னாலையில் ஒரு அ. மி. த. க. பாடசாலை இருந்தது அதுவே எங்களுரில் முதன் முதலாகத் தோன்றிய பாடசாலை என்பதில் சந்தேகம் இல்லை. அது எந்த ஆண்டில் அங்கே தோன்றிற்று என்பது தெரியவில்லை. யாரையாவது விசாரித்தால் ஓரளவு – கிட்டத்தட்ட எப்போது அது தொடங்கியது என்பதை அறியலாம். ஆனால் இதை எழுதும் போது அப்படி விசாரிக்கக் கூடிய ஒருவரும் பக்கத்தில் இல்லை. நான் பிறந்தது 1924 ஆம் ஆண்டில், அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே கூட அந்தப் பாடசாலை இருந்திருக்கிறது.

பொன்னாலையில் மட்டுமன்றி, யாழ்ப்பாணத்தின் அநேக கிராமங்களில் அ. மி. த. க. பாடசாலைகள் அந்தக் காலத்திலேயே இருந்தன. “அ. மி. த. க. ‘’ என்பதன் விரிவாக்கம் “அமெரிக்கன் மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலை’’ என்பதாகும்.

அமெரிக்கன் மிஷனரியார் தமது கிறிஸ்த்துவ மதத்தைப் பரப்புவதற்கு இந்த பாடசாலைகளை நிறுவியதாகச் சொல்கிறார்கள்.

அ. மி. த. க. பாடசாலைகளைத் தவிர, றோ. க. (றோமன் கத்தோலிக்க) பாடசாலைகளும் வேறு சில மிஷன் பாடசாலைகளும் யாழ்ப்பாணக்குடா நாட்டின் பல பாகங்களிலும் பரவலாகக் கிடந்தன.

தமது பிள்ளைகளைக் கிறீஸ்தவர்கள் மதம் மாற்றப் போகிறார்கள் என்ற பயத்தினால் பல கிராமங்களிலிருந்த வசதி படைத்தவர்கள், தமது ஊர்களில் சைவப் பாடசாலைகளைத் தொடங்கினார்கள்.

தொடக்கத்தில் தமது சொந்தப் பணத்தினாலும், நிதி சேகரிப்பினாலும் பாடசாலைகளை நடத்தி வந்தார்கள். பிறகு அரசாங்கம் ஆசிரியர்களுக்குச் சம்பளமும் பாடசாலை நிர்வாகத்துக்கு நன்கொடையும் கொடுக்கத் தொடங்கவே, அவர்களில் சிலர் “மனேச்சர்’’ என்ற பதவிப் பெயரோடு குட்டி முதலாளிகளாக விளங்கியதுமுண்டு.

மனேச்சரின் முன்னிலையில் சில ஆசிரியர்கள், காலிருந்த செருப்பைக் கழற்றி, தோளால் சால்லையை எடுத்து மரியாதை செய்த காலமும் உண்டு.

யார் என்ன சொன்னாலும், கிறிஸ்தவ மிஷனரிமார்களே யாழ்ப்பாணத்து மக்களிடையே பரந்து பட்ட அளவில் கல்விக் கண்ணைத் திறந்துவிட வழி செய்தார்கள் என்பதை உரத்துச் சொல்ல விரும்புகிறேன். அவர்களுடைய வழியைப்;; பின்பற்றித்தான் நல்லை நகர் ஆறுமுக நாவலர் பாடசாலைகளைத் தொடங்கினார். அவரைப் பின் பற்றியே ஆங்காங்கிருந்த பல சைவப் புரவலர்கள் சைவப் பாடசாலைகளைத் தொடங்கினார்கள்.

அதற்கு முன் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் என்ற பெயரில் பல கிராமங்களிலிருந்த கல்வி மான்கள், சில குறிப்பிட்ட மாணவர்களுக்கு மட்டும் சைவமும் தமிழும் சொல்லிக் கொடுத்தார்கள். ஆர்வமும், வசதியுமுள்ள மிகச் சிலரே அவ்விதம் கல்வி பயின்றார்கள்.

அந்தத் திண்ணைப் பள்ளிக்கூடங்களை எனக்குத் தெரியாது. எங்கள் ஊரில் அப்படி ஒன்று இருந்திருக்கவும் முடியாது வேறு பல ஊர்களில் இருந்ததாகப் பின்னால் கேள்விப்பட்டிருக்கிறேன். முறையான பாடசாலைகள் தோன்றத் தொடங்கியதும், அந்தத் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் மெல்ல மெல்ல மறைந்து போயிருக்க வேண்டும்.

அந்தத் திண்ணைப் பள்ளிக் கூடங்களின் ஆசிரியர்கள், தமது மாணவர்களிடம் மாதாந்தக் கட்டணட் அறவிட்டிருக்க மாட்டார்கள். அந்தக் காலத்தில் பணம் மூலமான கொடுக்கல் வாங்கலும் அதிகமில்லை. வசதிபடைத்த வீட்டுப் பிள்ளைகள், ஆசிரியரின் வீட்டுக்குத் தேவையான அரிசி முதலிய பொருள்களை அவ்வவ்போது கொடுத்திருப்பார்கள். மற்றவர்கள் அவருடைய வீட்டில் உடலுழைப்புச் செய்திருப்பார்கள். “குரு” வுக்குத் துணி தோய்த்துக் கொடுப்பது, கால் பிடித்து விடுவது, விசிறுவது முதலியன கடமைகளைச் சீடர்கள் செய்வது அக்காலத்து வழக்கம்.

பெரிய சங்கீத வித்துவான்களிடம் சங்கீதம் பயில்வோர், குருவின் வீட்டிலே தங்கியிருந்து, இப்படியான பணி விடைகள் செய்து பயில்வது மிகப் பிற்பட்ட காலங்;களிலும் வழக்கிலிருந்தது. இப்போது சங்கீதம் பயில்வதற்கும் கல்லூரிகள் வந்து விட்டனவே!

தங்களைப் பராமரிக்கும் வசதி படைத்த மாணவர்களிடம் ஆசிரியர் சற்றே மரியாதையுடன் கூடிய கவனம் செலுத்துவது தவிர்க்க முடியாமலிருந்திருக்கும். அதுபோல் தமக்கு அதிகமாகச் சேவை செய்யும் மாணவரையும் ஆசிரியர் கவனித்திருப்பார். இவர்களை விடவும் கல்வியில் மிகுந்த ஆர்வம் காட்டி திறமைசாலிகளாக விளங்கும் மாணவர்களை ஆசிரியர்கள் அதிகம் கவனித்திருப்பார். - இது என்றுமுள்ள வழக்கு.

அன்றைய குரு – சீடன் முறை வேறு.
இன்றைய ஆசிரியர் - மாணவன் முறை வேறு

ஒரு நூற்றாண்டுக் காலத்துக்குள் கல்வி கற்கும் முறையில் எவ்வளவு பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது!

“பாடம் சொல்லிக் கொடுத்துப் பணம் வாங்கக் கூடாது’’ என்ற மாதிரியான ஒரு கொள்கையும் அந்தக் காலத்தில் இருந்திருக்க வேண்டும். அதாவது கல்வியைப் பணத்துக்கு விற்கக் கூடாது என்ற கொள்கை. இந்த இடத்தில் எனக்கு ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள் அப்போது ஆனந்த விகடன் ஆசிரியராக இருந்த “கல்கி’’ யின் வேண்டுகோளின்படி ஆனந்தவிகடன் தீபாவளி மலருக்கு ஒரு கட்டுரை எழுதி அனுப்பினார்! “நாவலர் எழுத்தார்’’ என்ற கட்டுரை அந்தக் கட்டுரைக்காக இருபத்தைந்து ரூபாய்க்களை ஆனந்த விகடன் அன்பளிப்பாக அனுப்பியிருந்தது. அந்தக் காலத்தில் அது ஒரு கணிசமான தொகை. பண்டிதமணி அந்தப் பணத்தைத் திருப்பி அனுப்பி “நாங்கள் எழுத்தை விற்பதில்லை’’ என்று எழுதினாராம். பின்னால் பண்டிதமணி அந்தக் கொள்கையை மாற்றிக் கொண்டு விட்டார். கொள்கைகள் காலத்தினால் மாறக் கூடியவைகளே.

எனக்கு நினைவு தெரிந்த காலம் முதல் பொன்னாலை அ. மி. பாடசாலையில் தலைமையாசிரியராக இருந்தார் “தீவாத்தியார்!’’

தீவாத்தியாக உயர்சாதி வேளாளரல்லர் சற்றே குறைந்த சாதி. அவர் கிறிஸ்தவ மதத்தில் நேர்ந்த படியால் தான் அந்தக் காலத்தில் ஒரு ஆசிரியராகத் தலைநிமிர முடிந்ததென்று நினைக்கிறேன். கிறிஸ்தவ பாடசாலைகளில் கிறிஸ்தவர்களையே ஆசிரியர்களாக நியமிப்பார்கள். கிறிஸ்த்துவ ஆசிரியர்கள் கிடைக்காமலிருந்தால்தான் மற்றவர்களுக்கு இடம் கிடைக்கும். முக்கியமாகத் தலைமையாசிரியர் கிறிஸ்தவராகவே இருப்பார். எப்படியும் அந்த ஊருக்குள்ளும் ஒருவரை ஆசிரியராக நியமித்து வைத்திருப்பார்கள். அவர் புற சமயத்தவராயிருந்தாலும், அதிகம் கடிக்காதவராயிருந்தாலும் சேர்த்துக் கொள்வார்கள்.

ஆரம்ப காலங்களில் பயிற்றப்பட்ட ஆசிரியர்களோ, ஆசிரிய தராதரப் பத்திரமுள்ள ஆசிரியர்களோ அதிகமாக இல்லை. ஏதோ ஒரு அளவுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கக்கூடியவர்களை ஆசிரியராகச் சேர்த்துக் கொள்வார்கள்.

பின்னால் ஆசிரிய கலாசாலை என்று தொடங்கியபோது, தகுதி வாய்ந்தவர்கள் போதாமையால் அப்படியான மாணவர்கள் எங்கேயிருந்தாலும் அவர்களைத் தேடிப்போய் அழைத்து வந்து ஆசிரிய கலாசாலையில் சேர்த்துப் பயிற்றினார்கள்.

என்னுடைய நினைவிலிருக்கும் தீவாத்தியாருக்குசுமார் நாற்பத்தைந்து வயதிருக்கும். பெரிய தோற்றமான ஆனல்லர். வேட்டி உடுத்து, சேட்போட்டு, அதன்மேல் “கோட்’’டுப் போட்டிருப்பார். அந்தக் காலத்தில் உத்தியோகம் பார்க்கிறவர்கள் “கோட்’’ போடுவது வழக்கம். இப்போது “கோட் போடுபவர்களையே காணோம்!

தீவாத்தியாரின் சொந்தப் பெயர் செல்லப்பா. அவர் காரைநகரைச் சேர்ந்தவர். காரைநகர் அந்தக் காலத்தில் “காரைதீவு’’ என்றே வழங்கிற்று. எங்கள் பக்கத்தில் பொதுவாகத் “தீவு’’ என்றால் அது காரை தீவையே குறித்தது. தீவிலிருந்து வந்த வாத்தியார், தீவு – வாத்தியார் - தீவாத்தியார் ஆகிவிட்டார்! அந்தக் காலத்தில் ஆசிரியர்களை “வாத்தியார்’’ என்றும் “சட்டம்பியார்’’ என்றும் சொல்வதே வழக்கம். அதன் பிறகு “மாஸ்டர்’’ என்ற சொல் பெருவழக்காக இருந்தது. யாழ்ப்பாணத்தில் எல்லாக் கிராமங்களிலும் இந்த மாஸ்டர்மார் மிகவும் குறிப்பிடத் தக்கவர்களாக இருந்தார்கள். இப்போது “மாஸ்டர்’’ என்ற பெயரும் அருகி வருகிறது. “சேர்’’ என்பது மாணவர்களிடையே மட்டும் வழக்கிலிருக்கிறது.

பொன்னாலை அ. மி. பாடசாலையில் தீவாத்தியார் தலைமையாசிரியராக இருந்தார் அவருடைய மனைவிதான் அங்கே தையலம்மாவாக இருந்தாள். “கட்டையம்மர்;’’ என்பது அவருடைய பட்டப் பெயர். கணவனும் மனைவியும் ஆசிரியர்களாக இருந்தால், கணவன் படிப்பிக்கும் பாடசாலையிலேயே மனைவி தையலம்மாவாக இருப்பார்.

பொன்னாலை அ . மி. பாடசாலையில் “பிரசங்கியார்’’ என்று ஒரு உதவி ஆசிரியரும் இருந்தார். அவருடைய பெயர் தெரியவில்லை. “பிரசங்கியார்’’ என்று தான் சொல்வோம். வேறும் இரண்டொரு உதவி ஆசிரியர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் “முத்து வாத்தியார்’’ என்ற உள்ளுர்க்காரர். பிரசங்கியார் ஒரு கிறிஸ்தவர். செக்கச் செவலென்று ப+சினிப் பழம்போல இருப்பார். மிஷனோடு நெருங்கிய தொடர்புள்ளவராக இருந்திருக்க வேண்டும். தீவாத்தியருக்கு தலைமையாசிரியர்’ என்ற மதிப்பு மரியாதையை அவர் அவ்வளவாகக் கொடுப்பதில்லை. நான் நாலாம் வகுப்பில் படித்தபோது இந்தப் பிரசங்கியாரிடம் படித்த நினைவிருக்கிறது. அதிலும், ஏதோ வினாவுக்குச் சரியான பதில் சொல்லாதற்காக அவர் அடிமட்டத்தை எடுத்து அதன் நுனியுடன் எனது வயிற்றுப் பகுதியைச் சேர்த்துப் பிடித்து அப்படியே தசையை முறுக்கி ஒரு தண்டனை கொடுத்தது இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது. எனக்கு மட்டுமல்ல@ எல்லா மாணவர்களுக்கும் அவருடைய தண்டனை அநேகமாக இப்படித்தான் இருக்கும்.

அந்தக் காலத்து ஆசிரியர்கள் பலர் மாணவர்களுக்குப் படிப்பிப்பது மட்டுமல்ல, அவர்களுக்கு அவ்வப்போது தண்டனைகள் கொடுப்பதிலும் மிக அக்கறையாக இருந்தார்கள்.

பொதுவாக ‘வாத்தியார்’ என்றால் அவருடைய கையில் ஒரு கம்பு இருக்கும். சிலர் நல்ல பிரப்பங்கம்பு சம்பாதித்து, அடிக்கிற அடியில் அது கிழிந்து விடாமலிருப்பதற்காக அதன் நுனிகளை நெருப்பினால் சுட்டு வைத்திருப்பார்கள். சிலர் அவ்வப்போதே மாணவர்களை அனுப்பிவெளியில் நிற்கும் பூவரச மரத்தில் நல்ல கம்பாகப் பிடுங்கிவரச் சொல்வார்கள். தவறுகள் ஒரே மாதிரியாக இருந்தாலும் மாணவர்களுடைய தகுதியை உத்தேசித்து அடியின் எண்ணிக்கையும் வேகமும் கூடிக்குறையும்.

சிலர் கம்பை உபயோகிக்காமல், தமது கையையே உபயோகித்து மாணவர்களின் தலையில் பலமாகக் குட்டுவார்கள். அல்லது, வயிற்றிலோ, சொக்கையிலோ, காதிலோ இரண்டு விரல்களை குரடுபோல பாவித்துக் கிள்ளி முறுக்கி உயிரெடுப்பார்கள்! இதைவிட முழங்காலில் நிற்க விடுவது, ஒற்றைக்காலில் நிற்க விடுவது, வெயிலிலே தலையை அண்ணாந்தபடி நிற்க வைத்து நெற்றியிலே சிறு கல்லை வைத்து விடுவதுண்டு. (நெற்றியில் வைத்த கல் கீழே விழாதபடி அண்ணாந்த நிலையில் நிற்க வேண்டும்.)

இப்படியான தண்டனைகள் அனுபவித்தும், உடன் மாணவர்கள் அநுபவித்ததைக் கண்டும் நிலைகுலைந்த மாணவர்கள் ‘ஆசிரியர்’ என்றாலே ஏதோ யமதூதன் மாதிரி மனத்திலே படம் போட்டு வைத்திருப்பார்கள். பாடசாலைகளுக்கு வெளியே, ஒழுங்கையில் ஆசிரியரின் தலை தெரிந்தாலும் பூனையைக் கண்ட எலி மாதிரி ஓடித் தப்பி விடுவார்கள்!

ஒரு நாள் பாடசாலை நடந்து கொண்டிருக்கும் போது தீவாத்தியார் தமது மனைவியான தையலம்மாவுடன் ஏதோ வாக்குவாதப்பட்டு, தமது கையிலிருந்த கம்பினால் மனைவிக்கு இரண்டு மூன்று அடிகள் போட்டு விட்டார்.

அடுத்த வகுப்பிலிருந்த பிரசங்கியார் உடனே ஓடிவந்து தீவாத்தியார் அடிப்பதைத் தடுத்து, “பாடசாலையில் வைத்து இப்படியெல்லாம் செய்யக் கூடாது” என்று கண்டித்திருக்கிறார். “நான் எனது மனைவிக்கு அடிப்பதை நீர் என்ன கேட்கிறது?” என்ற மாதிரி தீவாத்தியார் பதில் சொல்ல, “கணவன் மனைவி என்பதெல்லாம் வீட்டோடு. இங்கே நீர் தலைமையாசிரியர், அவர் உதவியாசிரியர். தலைமையாசிரியர் தமது உதவியாசிரியருக்கு கை நீட்டி அடிக்கக்கூடாது!” என்ற மாதிரிப் பிரசங்கியார் சொல்லியிருக்கிறார்.

வாய்ப் பேச்சு முற்றி கை கலந்து கொண்டார்கள். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. தீவாத்தியாரும் பிரசங்கியாரும் கைகளைப் பின்னிக்கெண்டு தள்ளுப்பட ஊரவரான முத்து வாத்தியார் அவர்களுக்கு நடுவில் அவர்களின் கைகளில் தொங்கிக்கொண்டு இருவரையும் விலக்கிவிட முயற்சித்தார்.

அந்தளவில் அன்றைய தினம் பாடசாலை மூடப்பட்டு மாணவர்கள் எல்லோரும் வீட்டுக்குவந்து விட்டோம்.

அடுத்த நாளும் பாடசாலை நடக்கவில்லை. ஆனால் மிஷனிலிருந்து மேலதிகாரிகள் வந்து விசாரணை நடந்தது. நாங்கள் பாடசாலையின் பக்கத்து வளவில் போய் வேலிக்கருகே குனிந்திருந்து வேலி மட்டை இடைவெளிக்குள்ளால் பார்த்தோம்.

நெடு நேரமாக விசாரணை நடந்தது. கடைசியில் தீவாத்தியார் நெடுஞ்சாண் கிடையாக நிலத்தில் விழுந்து அதிகாரிகளை வணங்கியதையும் பார்த்தோம்.

தீவாத்தியார் குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டிருக்க வேண்டும். என்ன தண்டனை என்று தெரியவில்லை. இடமாற்றமாக இருக்கலாம். ஒருவேளை வேலை நீக்கமாகவும் இருந்திருக்கலாம்.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தீவாத்தியார் பாடசாலைகள்கு வரவில்லை!


15. பெரிய பள்ளிக்கூடம்

பொன்னாலைக்குப் பக்கத்தில் இருப்பது ‘மூளாய்’ என்ற கிராமம். மூளாயில் ‘சைவப்பிரகாச வித்தியாசாலை’ என்ற ஒரு பாடசாலை இருந்தது - இன்றும் இருக்கின்றது. ஆனால் அந்தக் காலத்தில் - 1930 – 40 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் அந்தப் பாடசாலை ஒரு தனிச் சிறப்போடு துலங்கிற்று.

அந்தச் சுற்று வட்டாரத்திலிருந்த தமிழ்ப் பாடசாலைகள் எல்லாவற்றிலும் மூளாய்ச் சைவப்பிரகாச வித்தியாசாலை ஒரு தனிச் சிறப்போடு கொடிகட்டிப் பறந்தது.

அது ஒரு தனியார் பாடசாலை. அதைத் தாபித்தவர் யாரென்று தெரியவில்லை. 1940ஆம் ஆண்டளிவ்ல அதன் முகாமையாளராக, தொல்புரத்துச் சட்டத்தரணி நவரத்தினம் என்பவர் இருந்தது தெரியும். ‘சட்டத்தரணி’ என்பது மிக் சமீபத்தில் வந்த சொல். அப்போது ‘பிரக்கிராசி நவரத்தினம்’ என்போம்.

மூளாய்ச் சைவப்பிரகா வித்தியாசாலை, சாதாரணமான பாடசாலை போன்றதல்ல. அது ஒரு கல்லூரிக்கு; சமமாக இருந்தது. வைரக் கல்லினால் கட்டப்பெற்ற, அழகிய, உறுதியான பெரிய மண்டபம். அதன் ஒரு புறம் ‘சரஸ்வதி அறை’ (பூசை அறை) அதன் எதிரே மண்டபத்தின் மறு கோடியில் தலைமை ஆசிரியர் அமர்ந்திருப்பதற்கான மேடை, இந்த மேடை, நாடகங்கள் நடத்தக் கூடிய அளவுக்கு விசாலமானது.

இந்தப் பெரிய மண்டபத்தைத் தவிர வேறும் இரு மண்டபங்கள், பெரிய மண்டபத்தில் ஆறாம் வகுப்புத் தொடக்கம் ஒன்பதாம் (ளு.ளு.ஊ) வகுப்பு வரை இருந்தது. இரண்டாவது மண்டபத்தில், இரண்டாம் வகுப்புத் தொடக்;கம் ஐந்தாம் வகுப்புவரை இருந்தன. சற்றுத் தள்ளியிருந்த மூன்றாவது மண்டபத்தில், அரிவரியும் (பாலர் கீழ்ப்பிரிவு) முதலாம் வகுப்பும் இருந்தன.

பாடசாலையின் முன்பக்கம் வைரக்கல்லினால் நன்கு கட்டப்பெற்ற கிணறு, துலா அமைப்புடன் இருந்தது. வாசலில் இரு பக்கமும் பூந்தோட்டம். உயர் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தனி மேசையும் கதிரையும் - இன்றைக்கு நினைத்துப் பார்த்தாலும் ஒரு தமிழ்ப் பாடசாலை எத்தனை சிறப்புகளோடு இருந்ததை நினைக்க நெஞ்சு நிறைகிறது.

எனக்குத் தெரிய “பாக்கிய நாதர்’’ என்பவர் அங்கே தலைமையாசிரியராக இருந்தார். அவரும் ஒரு சாதாரண தமிழ்ப் பாடசாலையின் தலைமையாசிரியரைப் போலன்றி ஒரு கல்லூரியின் “பிறின்சிபல்’’ போலவே விளங்கினார். அவரும் “போட்’’ அணிந்திருந்தது நினைவிருக்கிறது. அவருடைய காலத்தில் அங்கே பெற்றோர் தினவிழா’ க்களெல்லாம் மிகக் கோலாகலமாக நடக்கும். ஒருமுறை இலங்கைக் கல்விப் பகுதியின் வித்தியாதிபதியாக இருந்த ஒரு வெள்ளைக்காரர் அந்தப் பாடசாலைக்கு விஜயம் செய்ததும், விழா முடிந்து அவர் திரும்பிச் செல்வதற்காக மோட்டார் வண்டியில் ஏறியதும், இருபக்கமும் வரிசையாக நின்ற மாணவர்கள் “ஹிப் ஹிப் கூறே!’’ என்று கோஷம் போட்டதும் எனக்கு நினைவிருக்கிறது.

பொன்னாலை அ. மி. பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு வரையுமே இருந்தது. அந்தக் காலத்துக் கிராமப் பாடசாலைகளுக்கு அவ்வளவும் போதியதாய் இருந்தது. ஐந்தாம் வகுப்புக்கு வரு முன்ரே பல மாணவர்கள் ஏதோ ஒரு காரணத்தைக் கொண்டு படிப்பை நிறுத்திவிடுவார்கள். பெண் பிள்ளைகளைப் பற்றியோ சொல்லத் தேவையில்லை. இரண்டாம் மூன்றாம் வகுப்புகள் வரை ஆண்களோடு சமானமாக எண்ணுத் தொகையில் இருந்த பெண்கள் ஐந்தாம் வகுப்பில் மிக அருகிவிடுவார்கள். ஆறாம் வகுப்புக்குப் போவது அத்தி ப+த்தது போல இருக்கும். அதற்குமேல் அனேகமான பெண்களின் படிப்பு இல்லையென்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் அதன் பிறகு அவர்கள் “பெரிய பிள்ளை’’ ஆகி விடுவார்கள்! “பெரிய பிள்ளை ஆன பெண், திருமணம் ஆகும் வரை வீட்டுப் படலையைத் தாண்டக் கூடாது!

இன்று பாடசாலைகளில் மட்டுமன்றி வீதிகளிலும் விழாக்களிலும் நிறைந்து வழியும் “பெரிய பிள்ளை’’ களைப் பார்க்கும்போது – ஓ, காலம் எவ்வளவு வேகமாக மாறுகிறது!

எங்கள் கிராமத்தில் ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்க விரும்புகிறவர்கள் மூளாய் சை. பி. வித்தியாசாலைக்குத் தான் போய்ச் சேருவார்கள்.

மூளாய்ப் பள்ளிக் கூடத்துக்குப் போகப் போகிறோம் என்ற நிலை வந்தால் எங்களுக்கு ஒரே பரபரப்பு! – ஏதோ பல்கலைக்கழகத்துக்குப் புதிதாகப் போகிற மாணவர்களின் மனநிலை.

பொன்னாலையில் நான் படித்த காலத்தில் வழமை போல ஆண்டுக்கொரு முறை வகுப்பேற்றத் தேர்வு நடக்கும். இப்போதையைப் போல கிட்டத்தட்ட எல்லா மாணவர்களையுமே வகுப்பேற்றிவிட மாட்டார்கள், தேர்வுகளும் எல்லாப் பாடசாலைகளிலும் ஒரே நாளில் நடக்காது.

இன்ன திகதியில் இந்தப் பாடசாலையில் தேர்வு நடக்குமென்று கல்வியதிகாரிகளிடமிருந்து அறிவித்தல் வரும். அது வந்த உடனே சறு சுறுப்பாகிவிடும். சில சமயங்களில் பின்னேர வகுப்புக்களும் நடக்கும்.

தேர்வு நாளுக்கு ஒரு கிழமைக்கு முன்பே பாடசாலைகளில் படிப்பைவிட வேறு பல அலுவல்கள் மும்முரமாக நடக்கும்.

“தேர்வு’’ என்ற சொல் மிகச் சமீப காலங்களில் வழக்குத்துக்கு வந்த சுத்தமான தமிழ்ச்சொல், அதற்கு முன் அதை “பரீட்சை’’ என்று கௌரவமாகச் சொன்னார்கள்@ எழுதினார்கள்.

நாங்கள் பொன்னாலையில் படித்த காலத்தில் இதே தேர்வை “சோதனை’’ என்றுதான் சொல்வோம்.

பாடசாலைகளைப் படிப்பித்த ஆசிரியர்களே இஅப்போது பரீட்சையையும் நடத்துவதில்லை. பரீட்சை நடத்துவதற்கென்று “பரீட்சாதிகாரி’’’ என்ற ஒரு உத்தியோகத்தர் காற்சட்டை, மேற்சட்டை, கோட், தொப்பி எல்லாம் போட்டுக் கொண்டு வருவார். இந்தப் பரீட்சாதிகாரியையே பின்னால் “வித்தியாதரிசி’’ என்று “தமிழ்’’ப்படுத்தினார்கள். மிக அண்மைக் காலத்தில் தான் அவர் “கல்வியதிகாரி’’ என்று தமிழானார். ஆனால் நாங்கள் அவரை “சோதனைகாரன்’’ என்றே சொன்னோம்.

சோதனைக்கு ஒரு கிழமைக்கு முன்பே, மாணவர்கள் எல்லாருக்குமாகச் சேர்ந்து பாடசாலை வளவை மிக அழகாகத் துப்புரவு செய்வோம். பாடசாலைகள் கட்டிடத்தையும் கூட்டிக் கழுவித் துப்புரவு செய்வோம். வாங்குகளை தண்ணீர் ஊற்றி உரஞ்சோ உரஞ்சென்று உரஞ்சி அவற்றில் ஓராண்டு காலமாகப் படித்திருந்த அழுக்கை அகற்றுவோம். “சிலோற்’ றுகளைக் கழுவி சுற்றியுள்ள மரச் சட்டத்தை பீங்கான் ஓட்டினால் சுரண்டிப் புதிசாக்குவோம்.
சில மாணவர்கள் புத்தகங்களைப் படித்துக் கிழித்திருப்பார்கள். அந்தப் புத்தகங்களில் பல ஒற்றைகள் இருக்காது சிலருடைய சிலேற்றுகள் உடைந்திருக்கும். உடனடியாகப் புதிய சிலேற் வாங்கிக் கொடுக்கும் வசதி அவர்களுடைய பெற்றோருக்கும் இருக்காது.

இதற்காக, பக்கத்திலிருந்த மூளாய் அ. மி. பாடசாலையிலிருந்து கொஞ்ச சிலேற்றுகளும் புத்தகங்களும் சோதனைக்கென்று இரவலாக வாங்கிவரப்படும். (இதே மாதிரி அ. மி. க்குச் சோதனை வரும்போது இங்கிருந்து அங்கே போகும்)

புத்தகங்கள் சிலேற்றுகள் இல்லாதவர்களுக்கு சோதனையிலன்று இவை கொடுக்கப்பட்டு சோதனை முடிந்ததும் திருப்பிப் பெறப்படும்.

கரும்பலகைக்குப் புதிதாகக் கறுப்பு மை ப+சப்படும். வெள்ளையடிக்கக் கூடிய சிறிய சுவர்த்துண்டுகளுக்கு வெள்ளையும் அடிக்கப்படும்.

சோதனைகாரன் இருப்பதற்கு நல்லதாய் ஒரு கதிரையும் மேசையும் போடப்படும். மேசையின்மீது அழகான துணி விரிக்கப்பட்டு, அதன் மீது ப+ச்செண்டும் வைக்கப்படும்.

ஒருமுறை அந்த மேசையில் இரண்டு மூன்று எலுமிச்சம் பழங்களும் வைக்கப்பட்டிருந்தன.

யாரோ ஒருவர் “அது ஏன்?’’ என்று விசாரித்தும். மற்றவர் “இன்றைக்கு வரும் சோதனைகாரன் “மூளைக் கலக்கப் பொன்னையா@ மூளைக் கலக்கத்தால் அவர் ஏதும் பிழையாக நடக்காமலிருக்கத்தான் எலுமிச்சம்பழம் வைத்திருக்கிறார்கள். எலுமிச்சம்பழ மணத்துக்கு மூனைக்கலக்கம் தெளிந்துவிடும்’ என்று பதில் சொன்னதும் எனக்கு நினைவிருக்கிறது. இப்போது நினைத்துப் பார்க்கையில் சிரிப்பாக இருக்கிறது. ஆனால் அப்போது அதைச் சத்திய வாக்காக நான் நம்பினேன்!

ஒருமுறை ஒரு சோதனைக்காரன் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தார். அந்த மோட்டார் சைக்கிளுக்குச் “சைட்கா’’ ரும் பூட்டப்பட்டிருந்தது. அதைப் புதுமையாக நாங்கள் வேடிக்கை பார்த்தோம். அந்தச் செட் காருக்குள் ஒரு பெரிய கல் வைக்கப்பட்டிருந்தது. அதற்குள் ஆள் இருக்காவிட்டால் குலுக்கியடிக்குமாம் அதற்காக கல்லைப் பாரமாக வைத்திருக்கிறார்கள் என்று “விஷயம் தெரிந்த” ஒருவர் எங்களுக்கு விளக்கமளித்தார்.

சோதனை நாள் வந்துவிட்டால் அது எங்களுக்கு மிக முக்கியமான நாள், எல்லாரும் வெள்ளையாக – சுத்தமாக உடையணிந்து, ஒழுங்காகத் தலைசீவி, விப+தி ப+சிக் கொண்டு போவோம்.

“வேத பாடசாலை’’ யாக இருந்த போதிலும் நாங்கள் விப+தி ப+சிக்கொண்டு போனதற்கு ஒருபோதும் தடையிருக்கவில்லை.

விப+தி ப+சுவது அந்தக் காலத்தில் மிக மிக முக்கியமான ஒரு விடயம். காலையில் எழுந்து காலைக் கடன் கழித்து, பல் துலக்கி, முகம் கழுவி நெற்றியில் விப+தி பூசுவது ஒரு நாளும் தவறாத காரியம். “நீறில்லா நெற்றி பாழ் என்ற பழமொழியும் உண்டு. இப்போது விப+தி பூசுபவர் தொகை மிகக் அருகி விட்டது பலர் கோயிலுக்குப் போகையில் அங்கே ஐயர் கொடுக்கும் விப+தி வாங்கி “அப்பனே முருகா’’ என்று சொல்லி நெற்றியில் ப+சிக் கொள்வதோடு கடமையை முடித்துக்கொள்கிறார்கள்.

வீட்டில் விப+தி வைத்துப் ப+சுபவர்களிலும் பலர் அதை கடையில்தான் வாங்கிக் கொள்கிறார்கள். அந்தக் காலத்தில் எல்லாரும் தேவையான விப+தியை தாங்களே தயாரித்துக் கொள்வார். பசுமாட்டின்;; சாணியை எடுத்து நன்றாகப் பிசைந்து வட்;ட வட்டமாக வராட்டியாகத் தட்டி வடை மாதிரி நடுவில் ஒரு துவாரம் போட்டு, சில நாட்கள் வெயிலில் காயவைப்பார்கள். நன்றாகக் காய்ந்தபின், வளவுக்;குள் ஒரு இடத்தில் உமியைப் பரப்பி அதன் மேல் வராட்டிகளை அடுக்கி, உமியால் மூடியபின் நெருப்பு வைப்பார்கள். அநேகமாக மறுநாளே உமியெல்லாம் எரிந்து ஒரு சாம்பல் குவியலாக இருக்கும். அதை மெதுவாகக் கிளறி உள்ளேயிருக்கும் வராட்டிகளை எடுத்தால் அவை நன்றாக வெந்து வெள்ளை வெளெரென்று இருக்கும். அது தான் விப+தி அதை ஒரு பானையில் போட்டு வைத்து அவ்வப்போதைக்குக் கொஞ்சம் எடுத்து ஒரு பனை ஓலைக் குட்டானிலோ, அல்லது தேங்காய் குடுவையிலோ போட்டு வைத்து உபயோகிப்பார்கள்.

விப+தி சுட்ட உமிச் சாம்பல்தான் காலையில் பல்விளக்க உதவும், அது கிணற்றடியில் ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கப்பட்டிருக்கும்.

விப+திக் குட்டான் தலைவாசல் வளையிலே அல்லது தென்னோலைத் தட்டியின் விளிம்பிலோ கட்;டித் தொங்க விடப்பட்டிருக்கும். குட்டானில் விரல்களை விட்டு சிறிது விப+தியைக் கிள்ளி “சிவ சிவா’’ என்று சொல்லிக்கொண்டு நெற்றியில் ப+சிக் கொண்டால் “கடவுள் வணக்கம்’’ முடிந்துவிடும்! விப+தியை அப்பிப் ப+சிக் கொண்டு சிலர் செய்கிற அக்கிரமங்களைக் கண்டதால் எனக்கு அந்த விப+தியின் மீதும் சினம் ஏற்படுகிறது.

பொன்னாலை அ. மி பாடசாலையில் நான் ஐந்தாம் வகுப்பை முடித்துக் கொண்டு, ஆறாம் வகுப்பு படிப்பதற்காக மூளாய் சைவ பாடசாலைக்குப் போய் சேர்ந்தேன். அது 1930 ஆம் ஆண்டாக இருக்கும்.

எப்படி இதை இரண்டு வரிசையில் மிகச் சுலபமாக எழுதி விட்டேனோ, அதுமாதிரி மிகச் சுலபமாக நான் ஆறாம் வகுப்பில் போய் சேர்ந்துவிட்டேன். இங்கே எனது “சேர்ட்டுபிகேட்’ டைக் கேட்டதும் மறுபேச்சின்றி உடனே தந்துவிட்டார்கள். அங்கே கொண்டுபோய் அதைக் கொடுத்ததும் “வருக வருக’’ என்று சேர்த்துக் கொண்டார்கள்.

இப்போது ஒரு பாடசாலையில் ஆறாம் வகுப்பில் ஒரு மாணவரைச் சேர்ப்பதென்றால்………….. அடேயப்பா! அதற்கு ஒரு தேர்வு எழுத வேண்டும். சேரும் புதிய பாடசாலைகள் ஆயிரக்கணக்கில் “நன்கொடை’’ கொடுக்க வேண்டும்.

காலம் எப்படி மாறிவிட்டது!

அந்தக் காலத்தில் புதிதாக மாணவர்களை சேர்ப்பதென்றால், பாடசாலைக்காரர்களுக்கு ஏதோ விருந்து கிடைத்தது மாதிரியிருக்கும், மாணவர்களை அதிகமாகச் சேர்த்து கொண்டால், ஆசிரியர்கள் தொகையும் அதிகரிக்கலாம். அரசாங்கத்தின் நன்கொடையும் அதிகமாகும். பெரிய பாடசாலையாகி நல்ல பெயர் கிடைக்கும் - மாணவர்களைச் சேர்ப்பதிலும், பாடங்களைப் படிப்பதிலும் அன்றைய ஆசிரியர்களுக்கு ஒரு அக்கறையிருந்தது. இப்போது அது போய் விட்டது. ஏன்?

மாணவர்களைச் சேர்ப்பதில் மட்டுமல்ல! அவர்கள் ஒழுங்காகப் பாடசாலைகளுக்கு வருகிறார்களா என்பதிலும் ஆசிரியர்கள் கருத்தாக இருப்பார்கள். பாடசாலைக்கு வராமல் “கள்ளமடித்து’’ நிற்கிற மாணவர்களை அவர்களுடைய வீட்டுக்கேபோய் இழுத்துவந்த ஆசிரியர்களை நான் அறிவேன். பாடசாலைக்கு வராமல் ஒளித்துத் திரிந்த ஒரு மாணவனை, ஆசிரியர் ஒருவர் அவன் ஒளிந்திருந்த இடத்தைக் கண்டுபிடித்துப் போக, அவன் பனங்கூடல்கள். வடலிகளுக்குள்ளால் தாவிஓட, ஆசிரியரும் விடாமல் ஓடிக் கலைத்துப் பிடித்து பாடசாலைக்குக் கொண்டுவந்து நல்ல சாத்துபடி கொடுத்ததையும் நான் கண்டிக்கிறேன்.

முளாய்ப் பாடசாலைக்குப் போவதென்றால் எங்களுக்கு ஏதோ பல்கலைக்கழகம் போவதுபோல இருக்குமென்று முன்பு குறிப்பிட்டிருந்தேன். அதற்கு முன் ஊர்ப் பாடசாலைக்கு அழுக்குப்பிடித்த ஒரு நாலுமுழ வேட்டியை மட்டுதே “யூனிபோம்’’ ஆகக் கொண்டிருந்த நாங்கள், எட்டு முழ வேட்டிகட்டி, மேலே சால்வையும் போர்த்திக் கொண்டு மூளாய்ப் பாடசாலைக்குப் போனோம். சால்வையை தோளிலேபோர்த்தி அதன் ஒரு தலைப்பை மீண்டும் கழுத்தைச் சுற்றி கொண்டு வந்து முன்பக்கத்தால் சொருகிக் கொள்வதற்கு ஒரு “ஸ்ரையில்!’’

அதுவரை ஒரு சிலேற்றும் பென்சிலும், இரண்டு புத்தகங்களும் மட்டுமே பாடசாலைக்குக் கொண்டு சென்ற நாங்கள், இப்போது – ஆறாம் வகுப்புக்கு, ஏழெட்டுக் கொப்பிகள், ஐந்தாறு புத்தகங்கள், “கொம்பாஸ்’’ பெட்டி, கலர்ப்பெட்டி, றோய்ங் கொப்பி, “மாப்பிங்’’ கொப்பி! இவற்றையெல்லால் அடுக்கி ஒரு “பெல்ற்’’ றினால் கட்டி, அந்தப் பொதியை ஒரு பக்கத்துக்குத் தோளிலே வைத்துக் கொண்டு போவோம். பேனைத்தடி, லெற்பென்சில், அடிமட்டம் முதலிய கருவிகளையும் “பெல்ற்’ றின் பக்கத்தில் சொருகி வைத்திக் கொள்வோம்.

பேனைத் தடிகளில்தான் எத்தனை வகை@ வாழக்காய்ப் பேனை செருகிய கருங்காலிப் பேனைத் தடிதான் நம்பர் வண். “ஜி’’ நிப் சர்வ சாதாரணம் பித்தளைப் பேனா, வேலாயுதப் பேனை போன்ற “நிப்’’ புகளும் அருமையாக உண்டு.

பாடசாலைக்குப் போகும்போது, தோளில் இருக்கும் புத்தகக் கட்டை ஒரு கை தாங்கிக் கொள்ளும். மற்றக் கையில் ஒரு தூக்குச் சட்டி!

தூக்குச் சட்டியைத் தெரியாதவர்கள் பலர் இருக்கலாம்.

சிறிய வாளியைப் போல பித்தளையால் செய்யப்பட்டது தூக்குச் சட்டி, வாளிக்கு அடிப்பாகம் குறுகியது. வாய்ப்பாகம் அகன்று இருக்கும். தூக்குச்சட்டிக்கு இரு பக்கமும் சமமாகவே இருக்கும். இறுக்கமான மூடியும், உள்ளே ஒரு தட்டும் இருக்கும்.

தூக்குச் சட்டியில் மதிய உணவு கொண்டு போவோம், ஏனென்றால் பாடசாலை காலை – மாலை இரு நேரமும் நடக்கும். மதிய உணவுக்காக ஒரு மணி நேரம் லீவு விடுவார்கள். நாங்கள் அதற்குள் வீட்டுக்குப் போய்வர இயலாது. சுமார் ஒன்றரை மைல் தூரம். பயணமே கால் நடைதான்.

இப்போது எல்லா மாணவர்களிடமும் சைக்கிள் இருக்கிறது. அப்போது சைக்கிள் கூட மிக அருமை. புத்தகம் புதிய சைக்கிள் டைனமோ லைற் எல்லாம் ப+ட்டியது ரூபா நூற்றைம்பதுக்குள் தான் இருக்கும். ஆனால் அப்போது அதுவே பெரிய தொகை! அன்றியும் “நடக்கிறது’’ என்பது அப்படியென்றும் கஷ்டமான காரியமல்ல. சிறு வயதிலிருந்தே நடையோ நடையென்று நடந்து பழக்கப்பட்ட கால்கள், மனமும் அதைப் பெரிதாக நினைத்துக் களைத்துப் போவதில்லை!

16. இந்தியப் பயணம்

எனது பாடசாலை நினைவுகளோடு தொடர்ந்து நீண்ட தூரம் வந்துவிட்டேன். இந்தக் கட்டுரையின் நோக்கம் 50 – 60 ஆண்டுகளுக்கு முந்திய யாழ்;ப்பாணத்து நிலையை ஓரளவு எடுத்துக்காட்டுவதாகும். பாடசாலை வாழ்க்கையைத் தொடர்ந்து சென்றதால் இனி அதிகம் “பழம் கதைகள்’’ இருக்காதென்று நினைக்கிறேன்.

எனவே திருப்பச் செல்கிறேன்.

1935 ஆம் ஆண்டாக இருக்கலாம். அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்து மக்களுக்கு சிதம்பரம் ஒரு (முஸ்லிம்களுக்கு) “மெக்கா’’ போல.

உள்நாட்டில் பெரிய யாத்திரைத் தலமாக விளங்கியது கதிர்காமம். ஆண்டுதோறும் யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் போய் வருகிறார்கள் பல்லாயிரம்பேர். கந்தன் கனவில் வந்து “உத்தரவு’’ கொடுத்தால்தான் கதிர்காம யாத்திரை போகலாமென்றும் அப்படியில்லாமல் போனால், “திசைமாறா’’ வில் திசைமாறி காட்டுக்குள் அலையவேண்டி வரும் அல்லது வேறு ஏதும் ஆபத்துக்கள் வருமென்றும் சொல்வார்கள். ஆனால் போக விரும்பியவர்களுக்கெல்லாம் இந்த “உத்தரவு’’ தாராளமாகக் கிடைத்துக்கொண்டு தானிருந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கு மாகாணம் வழியாகக் கால்நடையாகவே கதிர்காம யாத்திரை செல்பவர்களும் பலர் இருக்கிறார்கள்.

கதிர்காமத்துக்கு அடுத்த பெரிய யாத்திரைத் தலம் சிதம்பரம்.

சிதம்பரம், யாழ்ப்பாணத்தவர்களுக்கு ஏதோ சொந்த இடம்போல இருந்தது.

சிதம்பரம் கோயிலுக்கு அண்மையில் “ஞானப்பிரகாசம்’’ என்ற குளத்தைச் சுற்றி யாழ்ப்பாணத்தவர்களுக்குச் சொந்தமான மடங்கள் இருந்தன. “மடங்கள்’’ என்றால் நீங்கள் யாழ்ப்பாணத்தில் பார்க்கின்ற மடங்கள் மாத்திரமல்ல. அநேக அறைகள், அதைவிட நெல் முதலியவற்றைச் சேமித்து வைக்கும் களஞ்சிய அறைகள், பெரிய சமையல்கூடம், தடுவே அமைந்த பெரிய முற்றங்கள், திண்ணைகள் பின்னால் வண்டிகள் நிறுத்தும் இடங்கள், மாட்டுத் தொழுவங்கள் - இப்படி ஒவ்வொரு மடமும் மிக விசாலமாக அமைந்திருக்கும்.

யாத்திரீகள் அங்கே போனால் வசதியாகத் தங்கி, இலவசமாகவே சாப்பாடும் கொள்ளலாம்.

மடத்தில் பொருளாதார நிலைக்கேற்ப இந்த வசதிகளும் அதிகமாக இருக்கும். ஒவ்வொரு மடத்துக்கும் இந்தியாவிலும், யாழ்ப்பாணத்திலும் நிறையச் சொத்துக்கள் இருந்தன. ஒவ்வொரு மடத்துக்கும் மடாதிபதி இருப்பார். அவர்கள் நல்ல செல்வாக்குடன் குட்டி ஜமீந்தார்கள் மாதிரி இருந்தார்கள்.

இந்த மடங்களுக்கும் சிதம்பரம் கோயிலுக்கும் தமது நிலபுலம்களை தானமாக எழுதிக் கொடுத்துவிட்டு “சிவகதி’’ அடைந்தவர்கள் யாழ்ப்பாணத்தில் பல பேர் பிள்ளைகள் இல்லாத பலர் தமது சொத்துக்களை இப்படி எழுதி வைத்துப் புண்ணியம் தேடுவது வழக்கமாக இருந்தது. மனைவி, பிள்ளைகள் மீது ஏதும் வெறுப்புக்கொண்டவர்களும், “எனது சொத்துக்களை உங்களுக்கு விடமாட்டான். எல்லாத்தையும் சிதம்பரத்துக்கு எழுதிவிடுவேன்’ என “ஏது’’ வதும் உண்டு.
இந்த மடங்களில் சில இப்போதும் சிதம்பரத்தில் பண்டைச் சிறப்பிழந்த நிலையில் இருக்கின்றன. இந்த மடங்களுக்காக யாரோ புண்ணியவான்கள் எழுதி வைத்த பல நிலங்களை ஆங்காங்கே உள்ள சிலர், மெல்ல மெல்லத் தமக்கே சொந்தமாக்கியும் கொண்டுவிட்டார்கள்.

அந்தக் காலத்தில் ஆறுமுக நாவலர்கூட சிதம்பரத்திலே தான் தமது பல தொண்டுகளைச் செய்திருக்கிறார்.

சிதம்பர தரிசனம் செய்ய வேண்டுமென்ற பெரிய ஆசை, யாழ்ப்பாணத்திலுள்ள பல குடும்பங்களில் இருந்தது போலவே எங்கள் குடும்பத்தில் இருந்தது.

எனது தகப்பனார் முன்பே சில முறைகள் சிதம்பரம் போய் வந்திருக்கிறார். தாயார் போனதில்லை, தம்பதி சமேதராகப் புண்ணிய தீர்த்தங்களில் தீர்த்தமாடிச் சுவாமி தரிசனம் செய்தாலே முழுப் பயனும் கிடைக்குமென்று புராணங்கள் சொல்லியிருக்கின்றன. பின்னால் பிதிர்க் கடன் செய்யப்போகிற புத்திரனையும் அழைத்துச் சென்றால் மேலும் அதிகமாகப் பயன் கிடைக்குமென்று எண்ணியிருப்பார்கள்.

1935 ஆம் ஆண்டளவில் சிதம்பர யாத்திரைக்கான ஏற்பாடுகள் யாவும் செய்யப்பட்டன.

எனது தகப்பனார், தயார், நான் எனது ஒன்றவிட்ட அண்ணா (வித்துவான் பொன். முத்துக்குமாரன்). நடராசா என்ற அயல்வீட்டு இளைஞர் ஒருவர் - இந்த ஐந்து பேருத்தான் பயணக்குழு.

“பாஸ்போர்ட்’’ , “விசா’’ என்ற பேச்சா கிடையாது. “எக்சேஞ்’’ என்ற பணமாற்றுப் பிரச்சினையும் இல்லை.

அப்போது இலங்கைகென்ற ஒரு ரூபா நாணயம் கிடையாது. இந்திய ஒரு ரூபா நாணயமே இங்கேயும் வழக்கிலிருந்தது. அந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் மேன்மை தங்கிய ஐந்தாம் ஜோர்ஜ் மன்னரின் படமும் மறுபக்கத்தில் “இந்தியாவின் சக்கரவர்த்தி’’ என்ற எழுத்துக்களும் இருந்தன.

ஒரு ரூபாக் குற்றியை விட்டால், அதற்குக் கீழே இலங்கையில் 50 சத, 25 சத, 5 சத, 1 சத, அரைச் சத நாணயக் குற்றிகள் இருந்தன. அதற்கு முன் காற்சத நாண மும்புழக்கத்தில் இருந்தன.

இந்தியாவில் 8 அணா (50காசு), 4அணா, 2 அணா, 1அணா, அரை அணா, கால் அணா, தம்படி என்பது கிட்டத்தட்ட அரைசதம். ( 16 அணா 1 ஒரு ரூபா.)

ஒரு ரூபாய்க்குக் குறைந்த இந்திய நாணயங்கள் இலங்கையில் செல்வா. இலங்கை நாணயங்கள் இந்தியாவில் செல்வா.

ஆனால் ஒரு ரூபா நாணயக் குற்றி மட்டும் இரு நாடுகளிலும் செல்லுபடியாகும்!

இந்தியாவுக்குக் கொண்டு போக வேண்டிய பணத்தை அப்பா ஒரு ரூபா நாணயக் குற்றிகளாக மாற்றிக் கொண்டார். சுமார் 2 அங்குல கனமும் 2 முழ நீளமும் கொண்ட ஒரு “பை” காக்கித் துணியில் தைத்து, அதற்குள் அந்த ஒரு ரூபா நாணயங்;களைப் போட்டு, “பெல்ற்’’ கட்டுவது போல வேட்டிக்குள் இடுப்பில் கட்டிக் கொண்டார். அது நல்ல பாதுகாப்பான வழியாக இருந்தது. இந்தியாவில் வழிப்பறிகாரர்களும், எத்தர்களும் அதிகமென்று கேள்விப்பட்டிருந்தோம் - ஏழைகள் நிறைந்த நாட்டில் கள்ளர்களும் அதிகமாகவே இருப்பர்.

இந்தியாவைப் பற்றி அப்பா சொன்ன ஒரு “பொன் மொழி’’ நினைவுக்கு வருகிறது.

“கோடி சீமானும் இந்தியாவில்தான். கோவணக் குண்டியனும் இந்தியாவில்தான்’ மெய்யான வார்த்தை, இன்றைக்குக்கூட அது ஓரளவு சரியாகத்தானிருக்கிறது.

எங்களுடைய இந்தியப் பயணம் அப்போது விமான வழியில்லை. விமானத்தை அப்போது ஆகாயத்தில் எப்போதாவது பார்த்தோமோ என்பதும் சந்தேகம்.

1940 க்குப் பின்னால் நான் பலமுறை விமான மார்க்கமாக இந்தியாவுக்கும் போயிருக்கிறேன். பலாலியிலிருந்து திருச்சிக்குப் போய்த் திரும்ப ரூபா 95 மட்டுமே விமானக் கட்டணமாக இருந்தது.

அப்போது தலைமன்னார் வரை ரயிலில் சென்று அங்கிருந்து இந்தியக் கரையான “மண்டபம் காம்ப்’’ வரை சிறிய கப்பலில் பயணித்து, அதன்பின் இந்திய றயிலில் செல்வதே வழக்கமான முறை. இவ்வழியில் போவதானால், யாழ்ப்பாணறயில் நிலைத்திலேயே இந்தியாவில் நாங்கள் போகவேண்டிய ஊருக்கு டிக்கட் வாங்கிவிடலாம். இந்தியாவிலும் அது செல்லுபடியாகும்.

ஆனால் நாங்கள் சென்றது இன்னுமொரு புதிய பாதை.

அப்போது, ஊர்க்காவற்றுறைக்கும் இந்தியாவிலுள்ள கோடிக்கரை முதலிய துறைகளுக்குமிடையே பழைய காலத்துப் பாய்க்கப்பல்கள் வந்து போய்க் கொண்டிருந்தன. இந்தியாவிலிருந்த அரிசி முதல் அண்ணாமலை மாடுகள் வரை அந்தக் கப்பல்களில் வந்து ஊர்காவற்றுறையில் இறங்கின. ஊர்க்காவற்றுறை என்று பெயர் இருந்தாலும் இக்கரையிலிருந்த காரைதீவுப் பக்கமாகவும் அதிக இறக்குமதிகள் நடத்திருக்க வேண்டும். காரைதீவின் அந்தப் பகுதியை “கிட்டங்கியபடி’’ என்று தான் இன்றைக்கும் சொல்வார்கள்.

கப்பலிலிருந்து பொருள்களை இறக்கிக் களஞ்சியப்படுத்தும் அறைகளுக்கு “கிட்டங்கி’’ என்று பெயர். அத்தகைய கிட்டங்கிகள் காரைதீவு முனையில் இருந்தன. அதனால் அந்தப் பகுதியைக் “கிட்டங்கியடி’’ என்றே சொல்வார்கள். அந்தப் பகுதியில் பல கடைகளும், பயணிகள் தங்கிச் செல்லக்கூடிய ஒரு பெரிய மடமும் கூட இருந்தன.

காரைதீவு இப்போது காரை நகராகிவிட்டது. துறைமுகமும் அந்தக் கலகலப்பும் மறைந்து போயின. கிட்டங்கிக் கட்டிடங்களும் அந்த மடமும் இப்போது களையற்று இருக்குமென்று நினைக்கிறேன்.

ஊர்காவற்றுறைக்கு இந்தியாவிலிருந்து பொருள்களை ஏற்றிவந்து, திரும்பிச் செல்லும் பாய்க்கப்பல் ஒன்றில்தான் எங்களுடைய பயணம் ஒழுங்கு செய்யப்பட்டது. அதுவே மிகவும் மலிவான பயண வழியாக இருந்திருக்க வேண்டும்.

ஒருநாள் காலையில் இந்தியாவிலிருந்து பொருள்களை ஏற்றிவந்து, திரும்பிச் செல்லும் பாய்க்கப்பல் ஒன்றில்தான் எங்களுடைய பயணம் ஒழுங்கு செய்யப்பட்டது. அதுவே மிகவும் மலிவான பயண வழியாக இருந்திருக்க வேண்டும்.

ஒருநாள் காலையில் பொன்னாலையிலிருந்து மாட்டு வண்டியில் புறப்பட்டு காரைநகர் கிட்டங்கியடிக்கு – துறைமுகத்துப் போய்ச் சேர்ந்தோம். அங்கேயிருந்த மடத்தில் தங்கி மதிய உணவை முடித்துக் கொண்டு பிற்பகல் இரண்டு மணியளவில் கப்பலுக்கு போய் ஏறிக் கொண்டோம்.

கரையிலிருந்து சிறு தோணி மூலம் கப்பல் நிற்குமிடத்துக்குச் சென்று, கப்பலில் கட்டியிருந்த ஒரு கயிற்று ஏணி மூலம் கப்பல்களுக்கு ஏறிய நினைவிருக்கிறது.

அந்தக் கப்பல் பயணத்துக்கு - இலங்கையிலிருந்து இந்தியா செல்வதற்கு – ஒரு ஐந்து ரூபா மட்;டும் கட்டணம் சிறு பையனாக இருந்த எனக்கு அரைக் கட்டணமாக இருந்திருக்கலாம். அப்படியிருந்திருந்தால், நான் முதல் முதலில் இலங்கையிலிருந்;து இந்தியாவுக்குப் பயணப் பணமாக செலுத்திய கட்டணம் இரண்டரை ரூபாதான்!

கப்பலில் மேல் தட்டில் “வானமே கூரையாக’’ நாங்கள் இருந்ததும் ஒரு பக்கத்திலிருந்த படிக்கட்டு வழிமூலம் ஒரு முறை நான் கீமே இறங்கிப் பார்த்ததும், மேல் தட்டில் பாய் மரங்கள் நிறுத்தியிருந்தும், ஒரு பக்கத்தில் ஒரு சிறிய அறை போன்ற இடத்தைக் காட்டி அது “தண்டே;’’ லின் இடம் என்று யாரோ சொன்னதும் கதைபோலத் தெரிகின்றன. “தண்டேல்’’ என்பது கப்பலின் தலைவனைக் குறிக்கும் சொல்.

அன்றிரவு வெகு நேரத்தில் பின் - கிட்டத்தட்ட சாமப் பொழுதாக இருக்கலாம் - கப்பல் பாய் விரித்துப் புறப்பட்டது.

நான் நித்திரையாகி விட்டேன். கப்பலின் ஆட்டத்தினால் நான் வாந்தி எடுத்து மட்டும் நினைவிருக்கிறது.

அடுத்த நாள் காலை நல்ல வெயில் வந்த பிறகு – காலை 8 மணியளவில் இந்தியாக் கரையை அடைந்தோம். கரையிலிருந்து வெகு தூரத்துக்கப்பால் கப்பல் நின்றுவிட, மீண்டும் சிறு தோணி மூலம் இந்தியக் கரையை அடைந்தோம். அந்த இடம் வேதாரண்யம்.

“வேதாரண்யம்’’ என்பது ஏற்கனவே நான் கேள்விப்பட்ட பெயர்.
வேதாரண்யத்தில் இருந்து காலத்துக்குக் காலம் முறை வைத்து யாழ்ப்பாணம் வந்து, வழக்கம்பரை அம்மன் கோயிலடியில் தங்கியிருந்த குருக்கள்மார்தான் எங்களுக்கு மத சம்பந்தமான கிரியைகள் செய்யும் குருமாராக இருந்தார்கள். இரண்டு மூன்று பேர் வந்து சுமார் ஆறுமாத காலம் வரை தங்கியிருப்பார்கள். பிறகு இவர்கள் மூன்று பேர் வருவார்கள்.

எல்லோரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அப்பாவைப் போல நல்ல வாட்டசாட்டமாக இருப்பார்கள். ஆனால் அப்பா கறுவல். அவர்கள் நல்ல நிறமாக இருந்தார்கள். துப்;புரவான வெள்ளை வேட்டி உடத்து உடம்பெல்லாம் திருநீற்றுக் குறிகளும் நெற்றியில் சந்தனப் பொட்டுமாக அவர்கள் குமிழிமிதியடியில் நடந்து வரும் போது ஒரு மதிப்பான தோற்றமாக இருக்கும்.

அந்தக் காலத்தில் ஆசாரமுள்ள சைவப் பிள்ளைகள் எல்லோரும் சுமார் பத்து வயதில் சமய தீட்சை பெற்றுக் கொள்வது வழக்கம். எனக்கு இந்த வேதாரண்யக் குருக்களில் ஒருவர்தான் சமய தீட்சை செய்து வைத்தார். கொஞ்சக் காலம் அதே பாராக்காகக் காலையும் மாலையும் அனுட்டானம் பார்த்தேன். விப+திக் குறிகள் வைத்தேன் கொஞ்சக் காலந்தான். இப்போது முதல் மந்திரம் “ஈசானாய நம’’ என்பது கடைசியில் “சிவாயநம’’ என்பதும் தேடிப் பார்க்க நினைவு வருகின்றன. மற்றவையெல்லாம் மயமாகி விட்டன. இப்போதெல்லாம் எப்போதாவது வாங்கி நெற்றியில் தொட்டுக் கொள்வதோடு சரி – உண்மை என்னவென்றால் “ஞானம்’’ முற்றிவிட்டது!

வேதாரண்யத்தில் இறங்கி அந்தக் குருக்கள் வீட்டுக்குப் போனோம். அப்பாவை அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்களைக் கண்டவுடன் அப்பா அட்டாங்கமாக நிலத்தில் விழுந்து வணக்கம் தெரிவித்தது இன்று ஒரு படம்போலத் தெரிகிறது.

அன்றைய தினம் அங்கேயே வேதாரண்யேஸ்வரர் குளத்தில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து குருக்கள் வீட்டிலேயே உணவருந்தினோம். அன்று மாலையில் அங்கிருந்து புறப்பட்டு ‘திருத்துறைப்பூண்டி’ என்ற ரயில் நிலையத்துக்குச் சென்றோம்.

திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்தை நான் ‘பட்டிக காட்டான் பட்டணம் பார்த்தது போல’ப் பார்த்தேன். அதற்கு முன் நான் ரயிலைப் பார்த்ததில்லை! அதைவிட அங்கிருந்த கடைகளும், வெளிச்சமும், மக்கள் கூட்டமும், கல கலப்பும் எனக்குப் புதுமையாக இருந்தன. மாலை மலையாகத் தொங்கிய பூக்கடைகளையும், அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழக் கடைகளையும் வியப்போடு பார்த்தேன்.

திருத்துறைப்பூண்டியில் ரயிலேறிச் சிதம்பரம் சென்றோம். நான் ரயிலைப் பார்த்ததும் அன்றுதான். அதில் ஏறிப் பயணம் செய்ததும் அன்றுதான்.

சிதம்பரத்தில் சிவபுரி மடத்துக்குப் போய் அங்கே தங்கினோம். அந்த மடாதிபதி எங்களுக்கு ஒரு வகையில் உறவினர். முகமலர்ச்சியோடு வரவேற்று எல்லா வசதிகளும் செய்து கொடுத்தார்.

எங்க@ர்க் கோயில்களைப் பார்த்த கண்களுக்குச் சிதம்பரம் கோயிலின் பிரமாண்டமான அமைப்பும், அண்ணாந்து பார்க்க வைத்த வானளாவிய கோபுரங்களும் பெரும் திகைப்பையளித்தன.

‘தில்லைவாழ் அந்தணர்கள்’ என்ற தீட்சிதர்கள்தான் சிதம்பரம் கோயிலின் உரித்தாளிகளும் பூசகர்களுமாக இருந்தனர். சாதாரணமான பிராணமர்களைவிட இவர்கள் உயர்ந்தவர்களாம். அவர்களைத் தவிர வேறு யாரும் பஞ்சாட்சரப் படிகளைத் தாண்டி சுவாமி இருக்கும் இடத்துக்குள் போகக் கூடாது. மற்றப் பிராமணர்களிருந்து தங்களை வித்தியாமாகக் காட்டிக்கொள்வதற்காகக் குடுமியை உச்சியிலே முடிந்திருப்பார்கள்.

சிதம்பரம் சிற்சபையில் ‘சிதம்பர ரகஸ்யம்’ என்று ஒன்று இருக்கிறது. குறிப்பிட்ட பணம் கொடுத்து விசேட அர்ச்சனை செய்விப்பவர்களுக்கு ஒரு திரையை நீக்கி அந்த ‘ரகஸ்ய’த்தைக் காட்டுவார்கள். நானும் பார்த்தேன். ஒரே இருட்டாக இருந்தது. அந்த இருட்டுக்குள் தோரணங்கள் போல ஏதோ வில்வமாலைகளாகத் தெரிந்தன. அது என்ன ரகஸ்யமோ – எனக்கு இன்றுவரை புரியாத ரகஸ்யம் அது!

சிதம்பரத்தில் நான் பார்த்த சுவாமி தரிசனத்தை விட, இன்னொரு ‘தரிசனம்’ தான் எனக்கு அப்பொழுது மிக முக்கியமாகப் பட்டது.

நாங்கள் தங்கியிருந்த மடத்துக்குப் பக்கத்தில் ஒரு ‘டூரிங் டாக்கீஸ்’. அதல் ‘பேசும் படங்கள்’ – சினிமாப் படங்கள் காட்டினார்கள். தரை டிக்கட் இரண்டு அணா. கீழே நல்ல மணல் பரவியிருந்தார்கள். அந்த மணலில் இருந்து இரண்டு நாட்கள் இரண்டு படங்கள் பார்த்தேன். ஒன்று ‘பவளக்கொடி.’ மற்றது ‘நவீன சாரங்கதரா’ இரண்டும் எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்த படங்கள்.

முதன் முதலாகச் சினிமாப் படம் பார்க்கிறேன். படங்கள், உண்மையான மனிதர்களைப் போல நடிப்பதும், பேசுவதும் பாடுவதும் எனக்குப் பெரிய புதுமையாக முதலில் தோன்றின. பிறகு அவற்றின் கதையில் ஆழ்ந்து நன்கு சுவைத்தேன். சாரங்கதரா படத்தில் கடைசிக் காட்சியில், கதா நாயகனின் வெட்டித் தூண்டாடப்பட்ட கைகள், வெட்டிய கொலையாளியின் மூக்கைப் பிடித்துத் தரதர வென்று நெடுந்தூரம் இழுத்துச்சென்ற காட்சி, பல நாட்களுக்கு என்னை வியக்க வைத்துக் கொண்டிருந்தது.

சிதம்பரத்தில் ஆருத்தரா தரிசனம் செய்துகொண்டு, அங்கிருந்து சீர்காளி, மாயவரம், திருவாரூர், திருப்புன்கூர் முதலிய பல தலங்களுக்குச் சென்றோம். எல்லாக் கோயில்களுமே பிரமாண்டமான கட்டிடங்களுடனும் வானளாவிய கோபுரங்களுடனும் விளங்கின.

இப்படிப்பல ஊர்களுக்கும் போயிருந்த போது எந்தெந்தக் ஹோட்டல்களில் தங்கினோம். எவ்வித உணவுகளை உண்டோம் என்று நினைக்கறீர்கள்?

ஹோட்டலா? – அந்தப் பேச்சே இல்லை. பல ஊர்களில் ஹோட்டல்கள் இருந்ததாகவும் தெரியவில்லை.

ஒவ்வொரு ஊரிலும் கோபுர வாசலுக்கு முன்னால் உள்ள பெரிய வீதிகளில் வீதியையே எல்லையாகத் தொடர்ந்து வீடுகள் இருக்கும். வீடுகள் என்றால் வளவுகளும், சுற்று மதில்கள் - வேலிகளும் அதில் படலைகளும் எங்கள் யாழ்ப்பாணத்து மனக்கண் முன் தோன்றும். அந்த வீடுகள் எல்லாம் வீதியின் ஓரத்தையே வாயிலாகக் கொண்டிருந்தன. ஒவ்வொரு வீட்டின் முன்புறமும் தெருத் திண்ணைகள் இருந்தன. திண்ணைகளின் சுவர் மாடத்தில் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும்.

அப்படிப்பட்ட தெருத் திண்ணை ஒன்றில் இரவு தங்கப் போகிறோம் என்றால் வீட்டுக்காரர்கள் தடை சொல்ல மாட்டார்கள். பல இடங்களில் அத்தகைய தெருத் திண்ணைகளில்தான் தங்கினோம்.

கோயில்களில் பூசை முடிந்ததும். புக்கைக் கட்டிகள் குறைந்த விலையில் விற்பனை செய்வார்கள். புக்கை என்றால் தயிர்ச் சாதம். புளிச்சாதம், சர்க்கரைச் சாதம், நெய்ச் சாதம் என்று பல்வகைச் சுவைகளிலும் கிடைக்கும். ஒரு புக்கைக் கட்டி கால் அணா, ஒரு ஆளுக்குப் போதும். அநேகமாக எங்களுடைய உணவு இந்தப் பிரசாதமாகவே இருந்தது!


17. உணவு

சுமார் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முந்திய யாழ்ப்பாணத்துக் கிராம மக்களின் வாழ்க்கை முறையை இதுவரை இந்தத் தொடரில் எழுதி வந்தேன். என்னை மையமாக வைத்து. என் நினைவுக்கு வந்தவைகளை இதுவரை எழுதிவிட்டேன். இந்தத் தொடரை நிறைவு செய்யுமுன். அந்தக் காலத்துக்கும் இந்தக் காலத்துக்குமுள்ள வேறு பாடுகளைப் பல துறைகளிலும் ஒரு தொகுப்பு முறையாக எழுத விரும்புகின்றேன்.

மனித வாழ்க்கைக்கு முக்கியமான உணவையும் உடையையும் பற்றி முதலில் பார்க்கலாம்.

உணவு விஷயத்தில் மக்களின் பழக்கம் இப்போது பெரிய அளவில் மாற்றம் கண்டிருக்கிறது.

இப்போது காலையில் எழுந்தால் எனது முதல் வேலை கடைக்குப்போய் செய்திப் பத்திரிகையும் பாணும் வாங்கி வருவதுதான்.

பாண் இல்லாவிட்டால் காலை உணவுப் பிரச்சினையைச் சமாளிக்க முடியாது என்ற அளவுக்குப் பாணின் ஆதிக்கம் வலுத்துவிட்டது.

இந்தப் பாண் எப்பொழுது எங்கள் மக்களுக்கு அறிமுகமயிற்று? – அநேகமாக இரண்டாவது மகாயுத்தக் காலத்திலாகத்தான் இருக்கும்.

1947ஆம் ஆண்டளவில் நான் எழுதிய “வாத்தியார் அழுதார்” என்ற சிறுகதையில் இந்தப் பாண் வருகிறது. அப்போது பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவாகப் பாண் கொடுக்கப்பட்டதாக அந்தக் கதையில் வருகிறது. எனவே 1947ஆம் ஆண்டுக்கு முன்னரே இங்கே பாண் வந்து விட்டது. (வரலாற்று ஆய்வுகளுக்கு சிறுகதைகளும் உதவுமென்பதற்கு இது உதாரணம்!)

யுத்த காலத்தில் அரிசித் தட்டுப்பாடு காரணமாக ‘கோதுமை’யை அறிமுகம் செய்தார்கள். அதற்கும் இப்போது நாங்கள் வாங்கும் ‘கோதுமை மா’வுக்கும் சம்பந்த மில்லை. அது அரிசியிலும் சற்றே பெரிய தானியமாக, மணிமணியாகப் பழுப்பு நிறத்தில் இருக்கும்.

அந்தக் கோதுமைத் தானியத்தை எப்படி எப்படிப் பயன்படுத்தலாம் என்பதற்குப் பிரச்சாரமும் செய்தார்கள். அதனுடைய சிறந்த போஷாக்குச் சத்துப்பற்றி எடுத்துக் கூறினார்கள். அதிலிருந்து உணவு வகைகளைச் செய்து கண்காட்சிகளில் வைத்துக் காட்டினார்கள்.

அதை வறுத்து மாவாக இடித்து எங்கள் வீட்டில் பிட்டு அவித்தது எனக்கு நினைவிருக்கிறது. அது நல்ல வாசனையாகவும் சுவையாகவும் இருந்தது. ஆனால் அரிசிமாப் பலகாரங்களையே உண்டு பழகிய எங்கள் மக்களின் வாய்க்குக் கோதுமைச் சங்கதி அவ்வளாக ஒத்துவரவில்லை!

பிறகும் கொஞ்சக் காலம் ‘கட்டி அடித்தால்’ அதுவும் பழக்கப்பட்டிருக்கலாம். ஆனால் யுத்தம் முடிய. பழையபடி அரிசி வந்து குவிந்ததும் கோதுமை கண்ணில் காணாமல் போய்விட்டது.

ஆனால் இந்தப் புதிய பலகாரமான ‘பாண்’ மட்டும் மெல்ல மெல்ல மக்களைப் பிடித்துக் கொண்டது.

யுத்தகாலத்துக்கு முன்பு ஒரு ‘சிங்கள மாமா’ உயரமான ஒரு கூடையைத் தலையில் சுமந்து பிஸ்கட், கேக் முதலிய புதிய பலகாரங்களை றோட்டு றோட்டாகக் கூறி விற்றுக்கொண்டு போவார். கொஞ்சம் வசதி படைத்தவர்கள் அந்த ‘மாமா’விடம் புதிய பலகாரங்களை வாங்கிச் சுவைப்பர்கள். ஆனால் அவர் ‘பாண்’ விற்றதாகத் தெரியவில்லை. அப்படி விற்றிருந்தாலும் யாரும் அதை ஒருநேர உணவுப் பொருளாக வாங்கி உண்ணவில்லை.

அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்திலே ‘பேக்கரி’ வைத்து நடத்தியவர்கள் சிங்களவர்தான். தமிழர்களுக்கு அது தெரியாத ஒரு வித்தையாக இருந்த காலம் அது!

எங்கள் கிராமத்தை வைத்துக்கொண்டு பார்த்தால் அந்தக் காலம் சாப்பாட்டுக்கே மக்கள் மிகுந்த கஷ்டப்பட்டகாலம்.

சிலருக்குக் காலையில் சாப்பிடும் பழக்கமே இல்லை! அதிகமானவர்களுடைய காலை உணவு ‘பழஞ்சோறு’ தான்! பழைய கறி. குழம்பு முதலியவற்றுடன் சம்பல், உப்புமிளகாய் முதலியவற்றுடனும் பழைய சோற்றை உண்ணுவார்கள். (பழஞ்சோறு என்பது முதல்நாள் சமைத்த சோறு. இதைப் படுக்கப்போகும்போது சோற்றுப் பானையில் தண்ணீரை ஊற்றி வைப்பார்கள். அதுதான் பழஞ்சோறு.)

சில வீடுகளில் பழஞ்சோறும் போதியளவு இருக்காது. அதற்குள் நிறையத் தண்ணீரை ஊற்றிப் பெருக்கி அந்தப் பழஞ்சோற்றுத் தண்ணீரையே காலை உணவாகக் குடித்துவிட்டு இருப்பார்கள்.

பழஞ்சோற்றுத் தண்ணீருக்கு உப்பைப் போட்டுக் கரைத்து, அதை வெங்காயம், பச்சை மிளகாய் எதையாவது கடித்துக்கொண்டு குடிப்பதுண்டு.

பழஞ்சோற்றுத் தண்ணீருக்குள் தயிரைவிட்டு வெங்காயத்தை வெட்டிப்போட்டு கொஞ்சமாகப் பச்சை மிளகாயையும் வெட்டிப்போட்டு, ஊறுகாயையும் அதில் கரைத்துக் குடித்தால்… அப்படிக் குடித்த நினைவு வருகிறது. நாக்கில் ஜலம் ஊறுகிறது.

பழஞ்சோற்றுத்தண்ணீரை ‘நிலாத் தண்ணீர்’ என்றும் சொல்வார்கள். அதன் பொருள் இன்னமும் எனக்கு விளங்கவில்லை.

மத்தியான உணவு அரிசிச் சோறுதான். சிலருக்கு அதுவும் கஞ்சியாகத்தான் கிடைக்கும். சில சமயம் கூழாகவும் மாறும். இந்தக் கூழைப் பற்றி நிறைய எழுதலாமென்று நினைக்கிறேன். எழுதக்கூடிய பட்டறிவு எனக்கில்லை. அரிசிக் கூழ், ஒடியற் கூழ், ஊதுமாக் கூழ் என்று சில கூழ்களின் பெயர்கள்தான் நினைவு வருகின்றன. ‘கூழ் ஆனாலும் குளித்துக்குடி’ என்ற சொல் கூழின் எளிமையை எடுத்துக் காட்டி கொண்டிருக்கிறது. ஆனால் கூழிய மிக ‘றிச்’சான கூழும் உண்டு. (விஷயம் தெரிந்தவர்கள் யாராவது கூழைப்பற்றி விரிவாக ஒரு கட்டுரை எழுதினால் உபயோகமாக இருக்கும்.)

பலருக்கு இந்த மாதிரி மூன்று நேரமும் உணவு கிடைப்பதே கஷ்டம்.

புழுக்கொடியல், பனாட்டு முதலியவற்றையும் பசிபோக்கும் உணவாகப் பலர் உபயோகித்தார்கள்.

“உணவுக்குப் பஞ்சமே தவிர பல வீடுகளில் குழந்தை குட்டிகளுக்குப் பஞ்சம் இருக்காது. ‘குடும்பக் கட்டுப்பாடு’ பற்றியே கேள்விப்பட்டிராத காலம்.

ஒரு குடும்பத்தில் நிறைய உறுப்பினர் இருந்ததும் சிலருடைய உணவுக்கு கஷ்டத்துக்குக் காரணமாக இருந்தது.

அந்தக் காலத்தில் சொல்லப்பட்ட ஒரு கதை நினைவு வருகிறது.

எங்க@ரில் ‘முட்டு இராமலிங்கம்’ என்று ஒரு கிழவர் இருந்தார். நடக்கும்போது இரண்டு முழங்கால்களையும் முட்டி முட்டி நடந்ததால் அவருக்கு அந்தப் பெயர் வந்தது.

முன்பின் யோசியாமல் காரியம் செய்கிறவர்களை ‘முட்டு இராமலிங்கம் ஒரு கொத்தரிசிச் சோற்றைத் தின்றமாதிரி’ என்று சொல்வதுண்டு.

ஒரு சனிக்கிழமை. சனிக் கிழமையென்றால் முழுக்குநாள். ஓளவைப் பாட்டியே ‘சனி நீராடு’ என்று சொல்லிவைத்தாள்.

முட்டு இராமலிங்கம் வீட்டில் ஏழெட்டுப் பிள்ளைகள். இராமலிங்கத்தின் மனைவி முழுக்கு நாளுக்கென்று ஒரு கொத்து அரிசி போட்டு சோறாக்கி வைத்திருந்தாள்.

முதலில் வீட்டுத் தலைவர்தான் சாப்பிடுவது வழக்கம். இராமலிங்கம் சாப்பிட உட்கார்ந்தார். மனைவி தட்டில் சோற்றையும் கறிகளையும் படைத்தாள்.

தட்டில் போட்ட உணவை இராமலிங்கம் சாப்பிட்டு முடிக்க மனைவி மீண்டும் தட்டை நிரப்பினாள். இராமலிங்கம் சாப்பிட்டார். அது முடிவதைக் கண்டு மனைவி மீண்டும் போட்டாள்.

மீண்டும், மீண்டும்……

இப்படியே பானையிலிருந்த சோறு முழுவதும் முடிந்து விட்டது. அதற்குப் பிறகுதான் இராமலிங்கம் விழித்துக்கொண்டு ‘ஐயையோ, உனக்கும் பிள்ளைகளுக்கும் இல்லாமல் எல்லாவற்றையும் தின்றுவிட்டேனே’ என்று அவதிப்பட்டாராம்!

நல்ல வேளையாக வீட்டில் அரிசி இருந்தபடியால், இராமலிங்கத்தின் மனைவி அவசரம் அவசரமாக மீண்டும் சமையல் செய்து பிள்ளைகளுக்குக் கொடுத்தாராம் - இப்படி ஒரு கதை.

சாப்பாடு கிடைக்காவிட்டால் பச்சைத் தண்ணீரைக் குடித்துப் பசியை அடக்குவதும், சாப்பாடு கிடைத்த நேரம் அளவு கணக்கின்றி வயிற்றை நிரப்புவதும் சிலருக்குப் பழக்கப்பட்டிருந்தது.

சாப்பாடு பற்றிய இன்னுமொரு அந்தக் காலத்துக் கதையையும் சொல்லி வைக்கிறேன்.

இது காரைதீவில் கேட்ட கதை. கரைதீவு என்பது புராதனப் பெயர். இப்போது அது ‘காரைநகர்’ என்ற பெயரை நிலை நிறுத்திவிட்டது! பெயரில் மட்டுமே ‘நகர்’ வந்ததே தவிர அங்கே இன்னும் ‘நகரசபை’ வரவில்லை. உருவத்தில் இன்று கிராமமாகவே இருக்கின்றது. அஃதிருக்க,

நான் கரைநகரில் கேட்ட கதையைச் சொல்கிறேன்.

மாரிகாலம் வந்துவிட்டால், அங்கே மாடுகள் மேயும் தரவைகளிலெல்லாம் தண்ணீர் நிறைந்து விடும். மாடுகளுக்கு மேச்சல் நிலம் கிடையாது. மாடுகளை வீட்டில் கட்டி வைத்துப் பராமரிப்பது கஷ்டம்.

இதே நேரம் செம்பாட்டுப் பகுதியில் உள்ளவர்களுக்கு மாடுகள் தேவைப்படும். செம்பாடு என்பது வலி – வடக்குப் பகுதி என்று நினைக்கிறேன். அங்கே உள்ளவர்கள் அநேகமாக நெல் விளைவிப்பதில்லை. எல்லாம் தோட்டக் காணிகள் வெங்காயம், மிளகாய், புகையிலை முதலிய தோட்டப் பயிர்கள் செய்வதுதான் அவர்களுடைய முக்கியமான விவசாயம். குரக்கனும் விளைவிப்பார்கள் போலிருக்கிறது. நெல் விதைப்பதற்கு காலம் சரிவருவதில்லை.

தங்களுடைய தோட்டங்களின் எருத் தேவையை பூர்த்திசெய்வதற்காக, செம்பாட்டுக் கமக்காரர் காரைநகருக்கு வந்து மாரிகாலத்தில் மாடுகளைக் கொண்டுபோய் வைத்திருப்பார்கள். மாடுகள் போடும் சாணி அவர்களின் தோட்டங்களுக்கு மிகவும் தேவையான எரு.

அப்படி மாடுகளைக் கொண்டு போனவர்கள் இடைக்கிடை காரை நகருக்கு வந்து மாடுகளின் நிலைமை பற்றிச் சொல்வது வழக்கம்.

அப்படித்தான் கொண்டு போன மாடுகளைப் பற்றிச் சொல்வதற்காகச் செம்பாட்டுக்காரர் காரைநகரிலுள்ள மாட்டுச் சொந்தக்காரனின் வீட்டுக்கு ஒருநாள் வந்தார். அவர் வந்ததற்கு வேறொரு உள் நோக்கமும் இருந்தது.

காரைநகர் வீட்டுக்காரர், நித்தியம் அரிசிச் சோறு தின்று அலுத்துப்போய், மாற்றத்துக்காக அருமை பெருமையாய் அன்றைய தினம் குரக்கன் பிட்டு அவித்திருந்தார்கள்.

செம்பாட்டார் மாடுகளைப் பற்றிக் கதைத்த பின், வழக்கம்போல அவரைச் சாப்பிடும்படி சொன்னார்கள்.

அவரும் ஆவலோடு சாப்பிட உட்கார்ந்தார். சாப்பாட்டுத் தட்டில் அன்று நாங்கள் அருமையாகத் தயாரித்த குரக்கன் பிட்டைக் கொண்டுவந்து போட்டார்கள்.

செம்பாட்டார் திகைத்துப் போனார். பெரிய ஏமாற்றம் அவருக்கு.

“அட. எனக்கு முன்னம் நீ இங்கே வந்துவிட்டாயா!” என்றாராம் அவர்.

செம்பாட்டுக்காரரின் வீட்டில் அந்தக் காலத்தில் பெரும் பாரும் குரக்கன் பிட்டுத்தான் சாப்பாடாம். அவருடைய கடுமையான உழைப்புக்கு அரிசி நின்று பிடிக்காது. குரக்கன் தான் நின்று பிடிக்கும். அவர் மாடுகளைப்பற்றிக் கதைக்கும் சாட்டில் அரிசிச் சோறு சாப்பிடும் எண்ணத்திலேதான் அன்று காரை நகருக்கு வந்திருந்தார். அவரை முந்திக்கொண்டு குரக்கன்பிட்டு அன்று காரை நகருக்கு வந்துவிட்டதைக் கண்டு அவருக்குப் பெரிய ஏமாற்றமும் கவலையும் ஏற்பட்டுவிட்டது!

இது வெறும் கதையாகவே இருக்கலாம். ஆனால் அந்த காலத்து உணவுப் பழக்கத்தைச் சற்றே ‘பிட்டு’க் காட்டுகிறதல்லா?


18. உடையும் நகையும்
ஒரு மனிதனின் வெளித் தோற்றத்துக்கு முக்கியமான காரணமாயிருப்பவை அவனுடைய ஆடையணிகளும் தலைமுடி (கூந்தல்) அமைப்புமே ‘ஆள் பாதி, ஆடை பாதி’ என்று பழமொழியும் உண்டு.

ஆயிரத்துத் தொழாயிரத்து இருபதுகளில் சுமார் அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணப் பகுதியில் பொதுவாக ஆண்களும் பெண்களும் முடியுடை வேந்தர்களாகவே இருந்தார்கள். அதாவது குடுமி வைத்திருந்தார்கள். ‘சிலுப்பா’ வெட்டிய ஆண்களை மிக அரிதாகவே காண முடியும்.

ஆண்களும் குடுமி வைத்திருப்பது அக்காலத்தில் ஒரு சமூக வழக்கமாக இருந்தது. அந்தச் சமூக வழக்கத்தை மீறுவதற்குப் பெரும்பாலானவர்கள் துணியவில்லை.

இப்போதெல்லாம் புதுமை செய்வதற்காகவும் பகுத்தறிந்து சரியானதைச் செய்வதற்காகவும் சமூக வழக்கங்களை உடைத்துக்கொண்டு வருவதற்குப் பலர் தயாராக இருக்கிறார்கள். அந்தக் காலத்தில் இந்தக் குணம் மக்களிடையே சற்றுக் குறைவாகவே இருந்தது. அப்பா எப்படிச் செய்தார். அப்பாவின் அப்பா எப்படிச் செய்தார். நாமும் அப்படித்தான் செய்யவேண்டுமென்ற ஒரு மனப் பதிவு அன்றைய மக்களிடம் இருந்தது.

இப்போது புலிப் பெண்களில் சில ஆண்களைப்போலச் ‘சிலுப்பா’ வெட்டியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அந்தக் காலத்தில் யாராவது இதை நினைத்துக் கூடப் பார்ப்பார்களா?

சில ஆசாரக் குடும்பங்களில் பெண்களின் கணவன் இறந்து விட்டால் அந்தப் பெண்களின் தலையை மொட்டையடிப்பார்கள். இந்தியப் பிராமணர்களிடையே இந்தப் பழக்கம் முன்பு பெருவழக்கு. யாழ்ப்பாணத்திலும் மிக மிகக் குறைந்த அளவில் சில குடும்பங்களில் இந்த வழக்கம் இருந்தது.

புலிப் பெண்களின் சிலுப்பாத் தலைகளைப் பார்க்கும் போது என் மனதுக்குள் ஒரு மகிழ தோன்றுகிறது. எங்கள் பெண்களின் முன்னேற்றப் பாதைக்கு இரு ஒரு அடையாளம் என்றே நான் கருதுகிறேன். “ஆண்களோடு பெண்களும் சரி நிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே.”

(ஆனால் “ஐயோ, நமது தமிழ்ப் பண்பாடு சீரழிந்து போகிறதே!” என்று கூக்குரலிடும் பழைமைவாதிகள் இப்போதும் நிறைய இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. அவர்களின் வாய்கள் இப்போதைக்கு மூடப்பட்டிருப்பது நல்லதே!)

அந்தக் காலத்தில் ஆண்கள் சிலர் தலையின் முன் பக்கத்தை மழுங்கச் சிரைத்து பின் அரைவாசிக்கே மயிரை வளர்த்துக் குடுமி வைத்திருப்பார்கள்.

‘காற்சட்டை, கேட் போட்டுக்கொண்டு ‘கச்சேரி’ உத்தியோகத்துக்குப் போன பலர்கூட அந்தக் காலத்தில் குடுமியை வெட்டத் துணியவில்லை. அவர்கள் தமது தலைப்பாகைக்குள் குடுமியை மறைத்து வைத்திருப்பார்கள்.

ஆண்களின் இந்தக் குடுமி மோகம் மிக விரைவில் மாறத்தொடங்கிற்று. 1930களில் பல இளைஞர்கள் குடுமிகளை வெட்டிச் சிலுப்பா வைக்கத் தொடங்கிவிட்டார்கள்.

குடுமி வைத்திருந்த இளைஞர்களை மற்றச் சிறுவர்கள் ‘டேய், குடும்பாஸ்!’ என்று கேலி செய்யவும் தொடங்கினார்கள். அதற்குப் பயந்து தமது குடுமிகளை வெட்டிக் கொண்ட சில நண்பர்களை நான் அறிவேன்.

பெண்களின் தலைமுடி அன்று தொடக்கம் - இன்று கூடப் பெரும்பாலும் மறையாமல் இருக்கிறதென்று சொல்லலாம்.

ஆங்கிலப் பள்ளிகளுக்கு சென்ற சில பெண்கள் தமது கூந்தலை சற்றே தோள்வரை வெட்டிவிட்டதுண்டு. ஆனால் அவர்களும் தமது திருமணத்துக்கு முன்பு கூந்தலை வளர்த்துக்கொண்டை போட்டுக்கொள்வார்கள். அல்லது பின்னித் தொங்கவிடுவார்கள்.

கூந்தலை வளர்த்து அழகாகக் கொண்டைகள் போடுவதும். அல்லது விதம் விதமாகப் பின்னி விடுவதுமே தமக்கு அழகாக இருக்கும் என்ற ஒரு மனப்பான்மை பெண்களிடம் பொதுவாகப் பதவியிருக்கிறது.

ஆபிரிக்காவுக்குப் போகவேண்டாம். பக்கத்திலுள்ள தமிழ்நாட்டுக்குக்கூடப் போகவேண்டாம். இங்கே யாழ்ப்பாணத்தில்கூட, முன்பெல்லாம் காதுகளில் துளை போட்டு, அற்றில் பெரிய பெரிய பாரமான ஆபரணங்களைத்தொங்க விடுவதும், அதனால் காதுத் துவாரம் இரண்டு விரல்களை நுழைக்கக்கூடிய அளவுக்குப் பெரிதாகப் போவதும் அழகென்று, நாகரிகமென்று நினைத்தார்கள். சேலை கட்டுவதில்கூட ஒரு காலத்தில் பதினாறு முழச் சேலையைச் சுற்றிச் சுற்றி வரிந்து கட்டினார்கள். பிறகு பன்னிரண்டு முழச் சேலையைக் கட்டும்போதுகூட அதன் முந்தானையைத் தோள்மீது போட்டு, பின்பக்கமாக எடுத்து, இடுப்பை ஒரு சுற்றுச் சுற்றி மறுபடியும் பின்பக்கத்தில் ‘பின்’ பண்ணித் தொங்கவிட்டார்கள். அதுவே அழகென்றும் நாகரிமென்றும் நினைத்தார்கள். இன்றைக்கு யாராவது அப்படிச் செய்தால் அதை அழகாயிருக்கிறதென்று சொல்வார்களா, நாகரிகமென்று சொல்வார்களா?

பெண்களைத் தங்கள் ஆளுகையின் கீழ் அடக்கி வைத்திருக்கவேண்டுமென்றும், அவர்களை அழகுபடுத்தித் தங்கள் போகப்பொருளாக வைத்திருக்க வேண்டுமென்றும் இன்றைக்கும் பல ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், அப்படி அடக்கி அடக்கமாக இருப்பதே – அல்லது அப்படி இருப்பதாக உலகுக்குக் காட்டுவதே நாகரிகம் என்றும், பண்பாடு என்றும் பெண்களும் நினைக்கிறார்கள்! – சிறு வயதிலிருந்தே பெண்களுக்கு அப்படிப்பாடம் படிப்பித்து வைக்கப்பட்டிருக்கிறது.

“கணவன் எப்படித்தான் கொடுமைப்பத்தினாலும் அவற்றையெல்லாம் பொறுத்து வாழ்வதே பெண்ணின் பெருமை” என்ற இந்தப் படிப்பு இன்னும் பல நாட்களுக்கு நின்று பிடிக்காதென்றே நினைக்கிறேன். உலகெங்கும் பெண்ணியல் வாதமும் பகுத்தறிவு வாதமும் தலைதூக்கியிருக்கிறது. நமது தமிழீழப் பெண்கள், தமிழ் கூறும் நல்லுலகுக்கு மட்டுமின்றி, உலகம் முழுவதுக்குமே வழிகாட்டிகளாக நெஞ்சில் உரமும் நேர் கொண்ட பார்வையும் கொண்டவராய்க் கைகளில் துப்பாக்கி ஏந்தியிருக்கிறார்கள்!

ஈழத் தமிழகம் பெருமைப்படலாம்!

அந்தக்கலத்தில் இரண்டு மூன்று வயதுச் சிறு பிள்ளைகள் பலர் உடம்பில் உடை என்று எதுவுமில்லாமல் பிறந்த மேனியாகத் திரிவதை நான் பார்த்திருக்கிறேன். இப்போது குழந்தை பிறந்த உடனேயே ‘நப்கின்’ என்றும், பிறகு ‘யங்கி’என்றும் அணியாத பிள்ளைகளைப் பார்ப்பதே அரிது!

முன்பு, மூன்று நாலு வயதாகும் போது ஆண் பிள்ளைகளும் சரி, பெண் பிள்ளைகளும் சரி இடுப்பில் ஒரு சிறு துண்டு கட்டியிருப்பார்கள்.

இன்னும் சற்றே வளர்ந்ததும், பெண்பிள்ளைகள் மேலுக்கு ஒரு சட்டையும், அரையில் சிற்றாடையும் அணிவார்கள். சிறிய பெண்பிள்ளைகள் அணிவதற்கேற்ற சிற்றாடைகள். சிறிய பெண்பிள்ளைகள் அணிவதற்கேற்ற சிற்றாடைகள் (சிறிய சேலைகள் - நீளமும் குறைவு@ அகலமும் குறைவு) அப்போது விற்பனைக்கு வந்தன. அத்தகைய சிற்றாடை தயாரிக்கும் தொழிலே இப்போது நின்று விட்டிருக்குமென்று நினைக்கின்றேன்.

‘பெரிய பிள்ளை ஆகிவிட்ட, வசதிபடைத்த பெண் பிள்ளைகள். வெளியே விசேடங்களுக்குப் போகும்போது. கீழே பாவாடைகட்டி, மேலே சட்டை போட்டு, அதன்மீது தாவணி அணிந்து செல்வார்கள்.

இப்போது கூடப் பல இந்துப் பாடசாலைகளில் சரஸ்வதி பூசை போன்ற விசேட தினங்களில் பெண்பிள்ளைகள் இப்படித்தாவணி அணிந்து செல்வதைப் பார்த்திருப்பீர்கள். அப்படி உடை அணியும்படி அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் அல்லது ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

பெண் பிள்ளைகள் இப்படிப் பாவாடை தாவணி அணிந்து, தமிழ்ப் பண்பாட்டைக் காப்பாற்றுவதாகச் சிலர் நினைவு கொள்கிறார்கள்!

ஆனால், அவர்களும் ஆண் பிள்ளைகள் வேட்டி சால்வை – அவசியமானால் தலைப்பாகையும் அணிந்து தமிழர் பண்பாட்டைக் காப்பாற்ற வேண்டுமென்று வற்புறுத்துவதில்லை!

இங்கே பெண்கள் அடக்கி ஆளப்பட வேண்டியவர்கள் என்ற நினைவே தலைதூக்கி நிற்கிறது!

முன்பெல்லாம் பெண்கள் திருமணம் ஆகிவிட்டால் சேலைதான் அணிவார்கள். வீட்டுக்குள் இருக்கும்போதும் சேலைதான்@ வெளியே போகும்போதும் சேலைதான்!

இப்போது பெண்கள் வீட்டுக்கு வெளியே போகும்போது தான் சேலை அணிவது என்று ஆகிவிட்டது. சில பெண்கள் திருமணமான சில பெண்கள் வெளியே போகும்போது கூடப் பாவாடை சட்டை, ‘கவுண்’ போன்றவற்றை அணிகிறார்கள். அவர்களை யாரும் தள்ளிவைத்து விடவில்லை.

ஆண்கள் காற்சட்டை அணிவது இப்போது சர்வசதாரணம்.

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, காற்சட்டை போட்டவர் ஏதோ வெள்ளைக்காரருக்கு அடுத்த துரை என்ற எண்ணம் மக்களிடையே இருந்தது. மிக உயர்ந்த பதவியில் உள்ளவர்கள் மட்டுமே காற்சட்டை அணிவார்கள். அவர்களில் சிலவகை உத்தியோகத்தர்கள் - முக்கியமாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் அரைக் காற்சட்டையே அணிவது வழக்கம். (அரைக் காற்சட்டை என்பது ‘சோட்ஸ்’ அது முழங்காலுக்குக் கீழே இறங்காது.)

அந்த அரைக் காற்சட்டை இப்போது காணக்கிடைக்காத ஒரு பொருளாகிவிட்டது. முன்பு பாடசாலைகளில் படிக்கும் மாணவர்கள் எல்லாரும் அரைக்காற்சட்டைதான் அணிவார்கள். (பாடசாலைகள் என்றதும் ஆங்கிலப் பாடசாலைகள், தமிழ்ப் பாடசாலைகளில் படிக்கும் மாணவர்கள் எல்லாருமே வேட்டியும் சால்வையும்தான் அணிவார்கள்) பல்கலைக்கழகம் போகிறவரையும் அரைக்காற் சட்டைதான் மாணவர்களின் யூனிபோம் ஆக இருந்தது.

இப்போது மூன்று வயதுப் பையனுக்கும் முழுக்காற் சட்டைதான்!

பதவி, அந்தஸ்து வித்தியாசங்களின்றி காற்சட்டை பொது உடைமையாகிவிட்டது. ‘தமிழ்ப்பண்பாடு அழகிறதே!’ என்று முக்கியமாகப் பெண்கள் சேலை உடுக்கிவேண்டும். சிறுபெண்கள் பாவாடை, சட்டை தாவணி போட வேண்டும் என்று அழுகிறவர்கள் யாருமே இந்தக காற்சடடை நாகிகத்துக்கு எதிராகக் குரல் எழுப்புவதில்லை. ஏனென்றால் அப்படிக்குரல் கொடுக்கக் கூடிய வரும் காற்சட்டைதான் அணிந்திருப்பார். அல்லது அவருடைய உறவினர்கள் நண்பர்கள் எல்லோருமே காற்சட்டை அணிந்தவர்களாக இருப்பார்கள். – ஏன் வம்பு? சிறிய வாய்க்காலில் வரும் நீருக்கு அணைபோட்டுப் பார்க்கலாம். சீறிப் பொங்கி வரும் கட்டாற்றுக்கு அணைபோட்ட நினைப்பர்களா.

இப்போது வேட்டி உடுக்கும் ஆண்களில் அநேகர் சால்வை போடுவதில்லை. ‘சேட்’ தான் போடுகிறார்கள்.

முன்பு சிறுவர்கள் வேட்டி உடுத்தி மேலே ‘சேட்’ போடுவார்கள். சேட் போட்டால் அனேகர் சால்வை அணிவதில்லை. ஆனால் பெரியவர்கள் வேட்டி உடுத்துவதானால் ‘நாஷனல்’ என்னும் சட்டை அணிந்து, அதற்கு மேல் கழுத்தைச் சுற்றி சால்வை அணிவார்கள். ‘நாஷனல்’ சட்டை என்பது தமிழாசிரியர்களின் ‘யூனிபோம்’ மாதிரியே அந்தக் காலத்தில் விளங்கிற்று. ‘சேட்’ வெள்ளைக்காரருடைய உடுப்பு. ‘நாஷனல்’ என்பது எங்கள் நாட்டுக்குரிய சட்டையாகக் கருதப்பட்டது. ஆனால் அதன் பெயர்மட்டும் ‘நாஷனல்’ என்று இந்திய மொழியிலேயே வழங்கப்பட்டது.

முன்பெல்லாம் ஆண்களில் பலரும் நெற்றிப் பொட்டு வைத்துக் கொள்வது வழக்கமாக இருந்தது. இப்பொழுது அந்தப் பழக்கம் மிக அருகிவிட்டது. நெற்றியில் விபூதிக் குறிவைத்துப் பெரிய அளவில் அதன்மீது சந்தனப் பொட்டு வைப்பவர்கள் ஒருவகை. விபூதியையோ பவுடரையோ அழுத்திப் பூசி, புருவங்களின் நடுவே சின்னஞ் சிறு வட்டமான சந்தனப்பொட்டு இட்டுக் கொள்வார்கள். அந்தச் சந்தனப்பொட்டின் நடுவே சிறு குச்சி முனையால் குங்குமம் வைத்து அலங்கரிப்பவர்களும் உண்டு.

ஆண்களில் சிலர் கழுத்திலே தங்கச் சங்கிலியில் ‘அச்சரக்கூடு’ கோத்து அணிந்ததும் உண்டு. அது அவர்களின் செல்வச் செழிப்பின் அறிகுறியாகவும் இருந்தது.

பெரும்பாலான ஆண்களும் பெண்களைப் போலக் காதுகளின் துளை போட்டிருந்தார்கள். அதிலே கடுககன் போட்டுக்கொள்வதே அழகாகக் கருதப்பட்டது. இப்போதும் திருமணச் சடங்கின் போது மணமகனுக்குக் கடுக்கன் அணிவது ஓர் முக்கிய சடங்காக நடக்கின்றது. இப்போது ஆண்கள் காதில் துளை போடுவதில்லையாதலால் அவர்களுக்காக ‘வில்லுக் கடுக்கன்’ வந்திருக்கிறது!

பெண்களின் நகைப்பித்து அன்றைக்கும் உள்ளதுதான் இன்றைக்கும் உள்ளதுதான். நகைப்பித்தும் புடைவைப் பித்தும் பெரும்பாலான பெண்களோடு உடன் பிறந்த வியாதி.

புடைவைகளின் தரத்திலும் மாதிரிகளிலும் அணியும் விதத்திரும் இப்போது மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது போலவே நகைகளின் வடிவங்களிலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

பெண்களின் முக்கிய ஆபரணங்களில் ஒன்றான ‘அட்டியல்’ என்ணனும் நகையை இப்போது காணோம். அட்டியல் கழுத்தைச்;சுற்றி இறுக்கமாக பட்டை போல அணியப்படும். அதன் நடுவில் ஒரு சிறிய பதக்கம் தொங்கும்.

பல பெண்கள் காதுகளில் கீழ்ப்பக்கம் நடுப்பக்கம் மேல் பக்கம் ஆகிய மூன்று இடங்களிலும் துளை போட்டு அவற்றில் நகைகள் அணிந்ததுணடு. காதில் மேற்பக்கத்திலிருந்து தொங்கிய நகைக்கு ‘வாளி’ என்று பெயர். கீழ்க் காதில் அணிந்த தோடு பெரிய கொட்டைப் பாக்கின் அளவில் பல சிவப்புக் கற்கள் பதித்ததாகவும், வேறு பல வடிவங்களிலும் இருந்தது.

பெண்கள் கழுத்தில் இப்போது முக்கியமாக அணியும் ‘நெக்கிலஸ்’ அப்போது இல்லை. அட்டியலைவிட, இரட்டைப்பட்டுச் சங்கிலி, பெரிய பதக்கம் கோத்த சங்கிலி முதலியவற்றை அப்போது அணிந்தார்கள். பெரிய பணக்கார வீட்டுப்பெண்கள் கழுத்தில் காசு மாலையும், இடுப்பில் தங்க ஒட்டியாணமும் அணிந்ததுண்டு.

கைகளில் அப்போது அணியும் காப்புகள் இப்போது போல மெல்லிய வளையல்களாக இருக்கவில்லை. ஒவ்வொன்றும் இரண்டு பவுனுக்கு குறையாத தட்டையான தடித்த காப்புகளையே அன்று அணிந்தார்கள்.

கை விரல்களில் தங்க மோதிரமும், கால் விரல்களில் வெள்ளி மோதிரமும் அணியும் வழக்கம் இருந்தது.

பெண்களின் இந்த நகை விஷயத்தி;லும் அந்தக் காலத்து வேறுபல நடைமுறைகளிலும் சரி எனக்குத் தெரியாதவையும் நான் மறந்துவிட்டவையும் இன்னும் நிறைய இருக்கலாம்.


மலரும் நினைவுகள்

ஈழத்து புதுமை இலக்கிய வளர்ச்சிக்கு ‘மறுமலர்ச்சி’ மூலம் வழிகோலியவர் வரதர். எழுத்துலகில் முத்திரை பதித்த இவரின் எழுத்துப்பணியின் மணி ஆண்டு இவ்வாண்டு ஜூலை முதல் தேதியன்று நிறைகின்றது. இலக்கிய உலகம் நன்றியேடு போற்றும் நன்னாள் இது.

வரதரின் ‘கயமைமயக்கம்’ தொகுதியிலுள்ள சிறுகதைகள் அத்தனையுமே முத்துக்கள் - இலங்கைத்தமிழ்ச் சிறுகதைகளின் முதல் வரிசை ஸ்தானத்தில் இன்றும் இருப்பவை. புதுக்கவிதை பற்றிப் பேசப்படுவதற்கு பலகாலத்துக்கு முன்னரே, அவ்வாறான புதுக்கவிதைகளை பரீட்சார்த்தமாக எழுதி இலக்கிய உலகின் நாடி பிடித்துப் பார்த்தவர்!

இலக்கிய வளர்ச்சிக்காக ‘மறுமலர்ச்சி’, ‘ஆனந்தன்’, கவிதைக்கென ‘தேன்மொழி’, செய்திக்கென ‘புதினம்’ ‘வெள்ளி’ மாணவர்க்கென ‘அறிவுக்களஞ்சியம்’ அவர் நடத்திய பத்திரிகைகள்.

இலக்கிய அறிஞர்களையும், எழுத்தாளர்களையும் ஊக்குவிப்பதற்காக தமது ‘வரதர் வெளியீடு’ நிறுவனம் ஊடாக 300க்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டவர்.

இத்தனை அனுபவசாலியான மூத்த எழுத்தாளரின் ‘மலரும் நினைவுகள்’ புதிய எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாகத் திகழப்போவது திண்ணம்.
- சோமசுந்தரம்