கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  தமிழர் வரலாறும் பண்பாடும்
தெரிந்ததும் தெரியாததும்
 
 

பேராசிரியர் சி. மௌனகுரு

 

தமிழர் வரலாறும்
பண்பாடும்
தெரிந்ததும் தெரியாததும்

பேராசிரியர் சி. மௌனகுரு
நுண்கலைத்துறை
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை

தலைப்பு : தமிழர் வரலாறும் பண்பாடும்
-தெரிந்ததும் தெரியாததும்

ஆசிரியர் : பேராசிரியர் சி. மௌனகுரு

பதிப்பு : ஆவணி 2005

அச்சு : குமரன் அச்சகம்
361 ½, டாம் வீதி
கொழும்பு – 12
தொலைபேசி : 2421388

முன்னுரை
மறைந்த இரா. சிவலிங்கம் நினைவாக இவ்வாண்டு நினைவுப் பேருரை ஒன்றினை ஆற்ற வேண்டும் என்று திரு. வாமதேவன் தொலைபேசி மூலம் என்னக் கேட்டுக் கொண்டபோது ஒரு வேண்டுகோளையும் விட்டார். அது பின்வருமாறு ‘பேச்சை ஏற்கனவே தந்துவிடுங்கள் பேச்சோ எழுத்தோ கனதியாக இருக்கவேண்டும் எளிமையாக இருக்கவேண்டும் ஜனரஞ்சகமாக இருக்கவேண்டும்.”

கனதி, எளிமை, ஜனரஞ்சகம் என்ற கடிவாளங்கள் எனக்கு இடப்பட்டன. வாமதேவனின் வேண்டுகோளில் ஒரு நடைமுறை உண்மையிருந்தது. கனதியாகக் கூறுவோரின் கருத்துக்களில் ஜனரஞ்சகம் இன்மையால் மக்கள் அதனைக் கவனிப்பதில்லை. ஜனரஞ்சகமாகப் பேசுவோரின் பேச்சில் கனதியின்மையினால் அறிவோர் அதனைச் சட்டை செய்வதில்லை. கனதிக்கும் ஜனரஞ்சகத்திற்கும் திருமணம் செய்து வைப்பது நல்லதல்லவா?

மறைந்த எனது மதிப்பிற்குரிய இரா. சிவலிங்கம் கனதியும – ஜனரஞ்சமும் இணைந்து ஒரு மனிதர். கனதியான சிந்தனைகளைக் கொண்டவர். மலைநாட்டு இளைஞர்கள் ஒரு சக்தியாக மாற தன் வாழ்நாளை 1960, 70களில் அர்ப்பணித்தவர். கல்வியறிவிலும், பொருளாதாரத்திலும் பின்தங்கி நின்ற மலைநாட்டுச் சமூகத்திற்குத் தன் கனதியான பேச்சுக்களால் உரமூட்டியவா. ஆனால் எளிமையாகவும், ஜனரஞ்சகமாகவும் தன் கனதியான கருத்துக்களை மக்கள் முன்னும் மாணவர் முன்னும் கொண்டு சென்றவர்.

கனதி ஜனரஞ்சம் இணைந்து ஒரு குறியீடு அவர். அவர் எனக்கு 1970களில் அறிமுகமானார். முற்போக்குச் சிந்தனைகள் எம்மை இணைத்தன. அவரோடு அரையாடுவதற்கும், சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் சில காரியங்களிற் சேர்ந்து செயற்படுவதற்குமான வாய்ப்புக்களும் எனக்கு 1972, 73, 74ஆம் ஆண்டுகளில் கிடைத்தன. அப்போது எனக்கு வயர் இருபத்தி எட்டு, இருபத்தி ஒன்பது இருக்கும். அத்தகைய ஒரு பெரியாரின் நினைவுச் சொற்பொழிவு கனதியாகவும், எளிமையாகவும், ஜனரஞ்சகமானதாகவும் இருக்க வேண்டும் என்று திரு. வாமதேவன் கேட்டது சாலப் பொருத்தமானதே. அவர் வேண்டுகோளுக்கிணங்க கனதியானதொரு விடயத்தை எளிமையாகவும், ஜனரஞ்சகமாகவும் என்னால் இயன்றவரை எடுத்துரைக்க முயல்கிறேன்.

1. தமிழர் வரலாறும், பண்பாடும்
தெரிந்ததும் - தெரியாததும்
இவ்வுரையில் தமிழர் வரலாறு பண்பாடும் பற்றி செல்வாக்குச் செலுத்தும் நமக்குத் தெரிந்த கருத்துக்களும்.

நம்மிற் சிலருக்குத் தெரிந்தும் பலருக்குத் தெரியாததுமான செல்வாக்கு செலுத்தாத கருத்துக்களும்

செல்வாக்குச் செலுத்தாத கருத்துக்களை எவ்வாறு மேலும் வளர்த்தெடுத்து அனைத்துத் தமிழர்க்குமான ஒரு வரலாறையும் பண்பாட்டையும் கட்டமைக்கலாம் என்ற கருத்துக்களும் கூறப்படுகின்றன.

1) இவ்வுரைக்கான அறிமுகம்

2) பொதுவாக வரலாறு, பண்பாடு என்றால் என்ன?

3) தமிழர் வரலாற்றிலும் பண்பாட்டிலும் நமக்குத் தெரிந்தவை யாவை?

4) தமிழர் வரலாற்றிலும் பண்பாட்டிம் நமக்கும் தெரியாதவை யாவை?

5) வரலாறு, பண்பாடு பற்றிய நவீன சிந்தனைகளும் தெரியாததை அவை விளக்கும் முறைமையும்

6) நாம் செய்ய வேண்டியவை யாவை?

1. அறிமுகம்
படிப்பறிவுள்ள பாட்டாளிகளின் கேள்வி என்ற தலைப்பிலே ஜெர்மனிய நாட்டு நாடகாசிரியரான பெட்டோல் பிரச்ட் ஒரு கவிதை எழுதினார். அந்தக் கவிதையின் சில வரிகள் இவை.

ஏழு நுழைவாயில்கள் கொண்ட
தேபன் நகரைக் கட்டியது யார்?
வரலாற்றுப் புத்தகங்களில் உள்ளன
அரசனின் பெயர்கள்.
அரசர்களா சுமந்து வந்தனர்
கட்டிட வேலைகளுக்கான
கற்களை?

சீனச் சுவர் கட்டி முடித்ததும்
மாலையில் எங்கே சென்றனர்
கொத்தர்கள்?
காளை அலெக்ஸாண்டர்
இந்தியாவை வென்றான்.
தனியாகவா?
ஒரு சமையல் காரன் கூடவா இல்லை
அவனோடு

இதிகாசப் புகழ்
அட்லாண்டிலைக்
கடல் விழுங்கிய இரவில்
மரணத்தின் பிடியிலிருந்தோர்
அடிமைகளின் உதவியை நாடிக்
கூக்குரலிடவில்லையா?

இக்கவிதை வரிகளைத் தமிழர்களின் வரலாற்றுக்கும், பண்பாட்டுக்கும் பொருத்திப் பார்ப்போம்.

தஞ்சை இராஜராஜேஸ்வரப்
பெரும் கோயிலைக் கட்டியது யார்?
வரலாற்றுப் புத்தகங்களில் உள்ளன.
ராஜ ராஜ சோழன் பெயர்
அவனா சுமந்து வந்தான்
கட்டிட வேலைகளுக்கான
கற்களை?

மதுரை மீனாட்சியம்மன் கோயில்
கட்டி முடிந்ததும் மாலையில்
எங்கே சென்றனர் கட்டிட
வேலையாட்கள்?
இராஜேந்திர சோழன்
இலங்கையை வென்றான்
தனியாகவா?
ஒரு சமையல் காரன் கூடவா இல்லை
அவனோடு?
இதிகாசப் புகழ்
கபாட புரத்தைக்
கடல் விழுங்கிய இரவில்
மரணத்தின் பிடியிலிருந்தோர்
அடிமைகளின் உதவியை நாடிக்
கூக்குரலிடவில்லையா?

படிப்பறிவுள்ள பாட்டாளியின் கேளவிகள் மேற்குலகுக்கு மாத்திரமல்ல. கிழக்கிற்கும் பொருந்தும், தமிழ்நாட்டுக்கும் பொருந்தும்.

இதிலிருந்து தெரிவது என்ன? அலெக்ஸாண்டரையும், ராஜராஜசோழனையும் பெயர் குறித்த வரலாறு அவர்கள் சமையற்காரனையும் படை வீரர்களையும குறித்து வைக்கவில்லை. நாட்டுக்கு உணவளித்த, பொருளளித்த விவசாயிகளையும் உழைப்பாளரையும் குறித்து வைக்கவில்லை.

தமிழர் பண்பாட்டுச் சின்னமாக தஞ்சை இராஜ இராஜேஸ்வரத்தையும், மதுரை மீனாட்சியம்மானையும் காட்டும் வரலாறு அக்கோயில்களைக் கட்டிய மக்கள் வாழ்ந்த குடிசைகளைப் பண்பாட்டுச் சின்னமாகக் காட்டவில்லை.

இது என்ன வரலாறு? இது என்ன பண்பாடு? இது அரசரதும் மேட்டிமைகளதும் வரலாறும் பண்பாடும் ஆகும். எமக்குத் தெரிந்தவை இவைதாம். தெரியாமல் இருப்பவை லட்சோப லட்சம் உழைக்கும் மக்களதும், அடிநிலை மக்களது வரலாறும் பண்பாடும்தான்.

ஏன் வரலாறும் பண்பாடும் மனித சமூகத்தின் ஒரு பகுதியை மாத்திரம் தெரிவிக்கின்றன? மறு பகுதியை மறைக்கின்றன? இதற்கான விடையை நாம் வரலாற்றெழுதியல், பண்பாட்டு வரலாறு எழுதியலில் என்பவற்றில் தேட முடியும். வரலாற்றெழுதியல் என்பது வரலாறு எழுதப்படும் முறை. பண்பாட்டு வரலாற்றெழுதியல் என்பது பண்பாட்டு வரலாறு எழுதும் முறை.

2. பொதுவாக வரலாறு என்பது என்ன?
பண்பாடு என்பது என்ன?
2.1 வரலாறு
மனிதக் கூட்டம் சென்ற காலம், இடைக்காலம், இன்றைய காலத்தில் தாம் வாழ்ந்த வாழ்கின்ற முறைமையினைச் சரியானபடி தருகின்ற ஒரு பயில்நெறி (னளைஉipடiநெ) வரலாறு என்று ஒருவாறு வரலாற்றை வரையறுக்கலாம்.

மேலைநாட்டிலும் கீழை நாடுகளிலும் ஆட்சி புரியும் அரசர்கள் தம்மைப் பற்றியும் தம் செயற்பாடுகள் பற்றியும் ஆவணங்கள் எழுதி வைக்கும் முறைமை இருந்துள்து. கீழை நாட்டிலேயே சிறப்பாக இந்தியாவில் புராணம், இலக்கியம், கல்வெட்டு, மெய்க் கீர்த்திகள் என்பன மூலம் அரசர் பாரம்பரியம் பேணப்பட்டது. புராணம், இலக்கியங்களிலே பாரம்பரிய அரச மரபுகள் கூறப்பட்டதுடன் புதிதாகத் தம் படை பலத்துடன் தோற்றம் பெற்ற அரச மரபுகள் பழைய மரபுகளுடன் இணைத்தும் கூறப்பட்டன. இவ்வரசர்கள் சந்திர, சூரியர்களுடன் இணைத்துக் கூறப்பட்டனர்.

19ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரேயே வரலாறு ஒரு பயிலும் நெறியாக அறிமுகமானது. ஆங்கிலேயர் ஆட்சியின் பின்னரேயே சரித்திரம் இலங்கைப் பாடசாலைகளில் பாடமாக அறிமுகம் செய்யப்பட்டது. இலங்கையையும், தமிழ்நாட்டையும் ஆட்சிபுரிந்த ஆங்கிலேயர் சரித்திரக் கல்வி மூலம் தம் வரலாற்றையும், பெருமைகளையும் எம் இளம் சிறார் மனதிற் புகுத்தி, கருத்தியலால் எமை அடிமைப்படுத்தப்பெரும் முயற்சிகள் மேற்கொண்டனர். ஆரம்ப காலத்தில் எம் நாட்டுச் சரித்திரத்திற்குப் பதிலாக ஆங்கிலேயர் சரித்திரத்தையே கற்றோம்.

பின்னாளில் பேரினவாதக் கருத்தியல் கொண்ட இலங்கை வரலாற்றாசிரியர்கள் பிரிட்டிஸாரின் முறைமையைப் பின்பற்றிப் பேரினவாதக் கண்ணோட்டத்தில் இலங்கை வரலாற்றை எழுதினார். இதனைப் பலர் உணரவில்லை. இந்த விழிப்புணர்வு (எபைடையnஉந) இன்மைதான் தமிழ் மக்களை இன்றைய அடிமை நிலைமைக்குக் கொணர்ந்தது.

ஆங்கிலேயர் சரித்திரம் கற்பித்த முறைமை, நம்மை அடிமை மனோபாங்குள்ளவராக ஆக்கிய அதேவேளை ஐரோப்பிய வரலாற்றைக் கற்க வைத்ததன் மூலம் உலகு பற்றிய ஒருவகை ஞானத்தையும் நமக்குத் தந்தது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. அதன் மூலமாகவே நாம் சரித்திரம் பற்றிச் சிந்திக்க முற்பட்டோம். இந்த வரலாற்றை கல்வெட்டு, புதை பொருள் எழுத்தாவணம், சாசனங்கள் என்பனவற்றையே ஆதாரமாகக் கொண்டு எழுதினர் வரலாற்றாசிரியர்கள்.

2.2 பண்பாடு
‘பண்பாடு என்பது அறிவு, நம்பிக்கை, கலை, ஒழுக்க நெறிகள், சட்டம், வழக்கம் முதலானவையும். மனிதன் சமூகத்தில் ஓர் உறுப்பினராக இருந்து கற்கும் பிற திறமைகளும் பழக்கங்களும் அடங்கிய முழுத் தொகுதியாகும்’ என்பார் எட்வாட் பர்னாட் டைலர்.

‘சமூகத்திடமிருந்து ஒரு தனிநபர் பண்பாட்டைக் கற்கும்போது தன் சுயபடைப்புத் திறன் மூலம் அறியாமல் கடந்த காலத்தின் மரபுத் தொடர்ச்சியாக முறைசார் முறைசாராக் கல்விகள் மூலமாக அறிகிறார்’ என்பார் ராபர்ட் ஹெலூவி.

பண்பாட்டு அடையாளமாக உடை, அணிகலன் போன்ற புழங்கு பொருட்கள், கல்வி, தத்துவம், மருத்துவம் போன்ற அறிவுத் துறைகள் பயன்படுத்தும் சொற்கள், தொனி முக பாவனை சைகைகள் என்பனவும் கருதப்படுகின்றன. இவற்றுள் ஒரு சமூகத்தின் பண்பாட்டின் அடையாளமாக மேற்கிளம்புவன சில. ஒன்று மொழி, அடுத்தது கலை, மற்றது இலக்கியம் ஏனையவை சமயம், வாழ்க்கை என்பனவாம்.

2.3 சமூக அமைப்பு
வரலாற்றையும் பண்பாட்டையும் மேலும் புரிந்துகொள்ள மக்கள் சமூகத்தைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும். மனித சமூகம் மேற்குலகில் வர்க்கங்களாகவும் தமிழ்நாட்டின் சாதிகளாகவும் பிரிந்து கிடந்தன@ கிடக்கின்றன. மேற்கு நாட்டார் வருகை தமிழர் சாதி அமைப்பில் சிற்சில மாற்றங்களை ஏற்படுத்தியதாயினும் சாதி அமைப்பை அடிநாதமாகக் கொண்ட சமூக அமைப்பு இன்னும் மாறிவிடவில்லை.

தமிழர் மத்தியிலே காணப்பட்ட சாதி அமைப்பை
1. உயர் நிலைச் சாதிகள்
பிராமணர்
வேளாளர்
வணிகர்

2. இடைநிலைச் சாதிகள்
கைவினைஞர் (பொற்கொல்லர், பரதவர், கம்மாளர், சிற்பிகள் முதலியோர்)

3. கடைநிலைச் சாதியினர்
பஞ்சமர் (தீண்டாச் சாதியினர்),
(அடிநிலை மக்கள்)

என மூன்றாகப் பிரிக்கலாம். இவ்வமைப்பை மையம் ஃ இடைநிலை ஃ விளிம்பு எனப் பிரித்துப் பார்ப்பதன் மூலம் மேலும் விளங்கிக் கொள்ளலாம். மையத்தில் உயர்நிலைச் சாதியினரும், இடையில் இடைநிலைச் சாதியினரும் விளிம்பில் கடைநிலைச் சாதியினரும் இருந்தனர். பின்வரும் படம் அதனை விளக்கும்.

விளிம்பு
இடைநிலை
மையம்

மையத்தில் இருந்தோரிடமே ஆட்சியதிகாரமும் பண்பாட்டு அதிகாரமும் இருந்தன. ஆட்சியதிகாரம் அரசரான வேளாளரிடமும் பண்பாட்டதிகாரம் அவர்கட்கு ஆலோசனை வழங்கிய பிராமணரிடமும் இருந்தன.

இடைநிலைச் சாதியினர் மைத்தோடு இணைந்தும் முரண்பட்டும் வாழ்ந்தனர். மையத்தின் தயவில் வாழ்ந்தனர்.

விளிம்பிலுள்ளோர் மையம், இடை நிலையில் வாழ்ந்தோரின் ஏவலர்களாக அடிமைகளாக வாழ்ந்தனர். ஊரில் தூரத்தில் இவர்கள் வைக்கப்பட்டனர்.

தமிழ் நாட்டின் குடியிருப்புப் பகுதிகளை எடுத்துப் பார்த்தால் வளமுள்ள பகுதிகளிலும் வளர்ச்சியடைந்த இடங்களிலும் சமூகத்தின் மையப் பகுதியினர் வாழ்ந்தனர். ஓரளவு வளமற்ற இடங்களில் இடைநிலையினரின் இருக்கைகள் அமைந்தன. வசதியற்ற கட்டாந்தரைகளிலும், ஒதுக்கப்பட்ட சேரிப்புறங்களிலும் கடை நிலையினர் வாழ்ந்தனர்.

மையத்தில் வாழ்ந்தோருக்கு வசதிகளும் வாய்ப்புகளும் அமைந்தன. இடைநிலையில் இருந்தோர் அதற்காகப் போராடினர். அதனால் ஒரு சிறிது வாய்ப்பும் வசதியும் அவர்கள் பெற்றனர். விளிம்பிலிருந்தோர் எதுவும் பெறாது ஒதுக்கப்பட்டே இருந்தனர்.

மையம் ஃ இடைநிலை ஃ விளிம்பு என எளிதாகப் பிரித்தாலும் இவை ஒவ்வொன்றினிடையேயும் வசதி பெற்றோர் வசதியற்றோர் என மையம் விளிம்பு என்ற பாகுபாடுகள் இருந்தன என்பதையும் மறந்துவிடலாகாது.

இதில் மையமே ஆட்சி அதிகாரத்தையும் பண்பாட்டு அதிகாரத்தையும் கொண்டிருந்தது. முழுத் தமிழரின் வரலாறும் பண்பாடும் மையத்தின் வரலாறும் பண்பாடாகவுமே கட்டமைக்கப்பட்டது. விளிம்பில் வாழ்ந்த தமிழர் வரலாறும் பண்பாடும் கவனிக்கப்படவேயில்லை.

சமூகத்தின் மையத்தில் இருந்த இராஜ ராஜசோழனின் ஆணைப்படி, அவனுக்கு உதவிய கருவூர்த் தேவரின் ஆலோசனைப்படி சமூகத்தின் இடைநிலையில் வாழ்ந்த ஒரு கட்டிடக் கைவினைஞன் வரைந்த வரைபடப்படி கடைநிலை அடிமைகளால் இராஜேஸ்வரப் பெரும் கோயில் கட்டி எழுப்பப்பட்டது. மைய மக்களான வேளாளகுல ராஜ ராஜ சோழனின் பெயரும், பிராமணரான கருவூர்த் தேவரின் பெயரும் வரலாற்றில் இடம்பெற்று விட்டன. அச் செயலில் பிரதான இடம்பெற்ற இடைநிலை கடைநிலை மக்களின் பெயர் வரலாற்றில் இடம்பெறவில்லை.

வரலாறும் பண்பாடும் இவ்வாறுதான் மையத்தை பிரதானப் படுத்தி இடைநிலையையும் விளிம்பையும் ஓரம் கட்டிக் கட்டமைக்கப்பட்டது.

2.4 கட்டமைத்தல், கட்டவிழ்ப்பு, மீள்கட்டமைப்பு
கட்டமைத்தல் (உழளெவசரஉவழைn) கட்ட விழ்ப்பு (னுநஉழளெவசரஉவழைn) மீள்கட்டமைப்பு (சநஉழளெவசரஉவழைn) என்ற பதங்களின் அர்த்தங்கள புரிந்துகொள்வது அவசியம். ஏதோ ஒரு தேவை கருதி திட்டமிட்டு உருவாக்கப்படுவதை கட்டமைத்தல் எனலாம். சட்டங்கள், சம்பிரதாயங்கள், சடங்குகள், கருத்து நிலைகள் யாவும் கட்டமைக்கப்படுகின்றன. கட்டமைப்பு வாதம் எனப்படும் ஸ்ரக்ஸரலிஸம் இக் கட்டமைப்பை விளக்கியது.

கட்டமைக்கப்பட்ட விதத்தினைப் புட்டுக்காட்டி அவிழ்த்துக்காட்டி அல்லது உடைத்துக்காட்டி யாரால் இது கட்டமைக்கப்பட்டது அதன் உள்நோக்கம் என்ன? என்பதனை வெளிப்படுத்தல் கட்டவிழ்ப்பு அல்லது கட்டுடைப்பு வாதம் எனப்படும் னநஉழளெவசரஉவழைn ஆகும்.

இன்னொரு தேவை கருதி அதனை இன்னொரு வகையில் கட்டி அமைத்தல் மீள் கட்டமைப்பு எனப்படும் சநஉழளெவசரஉவழைn ஆகும்.

நமது கருத்து, பண்பாடு யாவும் இவ்வாறே கட்டமைப்பு கட்டுடைத்து மீள் கட்டமைத்து பின்னர் மீள் கட்டமைப்பை கட்டுடைத்து இன்னொரு மீள் கட்டமைப்பை ஏற்படுத்தின ஒரு சங்கிலித் தொடராக வளர்ந்து வந்துள்ளது. கீழ்வரும் அட்டவணை அதை விளக்குகிறது.

கட்டவிழ்ப்பு
கட்டமைப்பு , கட்டுடைத்தல்

மீள்கட்டமைப்பு , கட்டுடைத்தல்
1

மீள்கட்டமைப்பு , கட்டுடைத்தல்
2

மீள்கட்டமைப்பு , கட்டுடைத்தல்
3

மீள்கட்டமைப்பு
4

(இங்கு காலம் தோறும் மீள் கட்டமைப்பு நடைபெறினும் 1, 2, 3, 4 என அது மாறிச் செல்வதைக் காணுகிறோம்.)

அமைப்பியல் வாதம் எல்லாவற்றையும் ஓர் அமைப்பாகக் கண்டது. அமைப்பியல் வாதத்தின் முதல்வர் லெவிஸ்ராஸ் ஆவர். கட்டவிழ்ப்பு பற்றி விளக்கியவர்களுள் முக்கியமானவர்கள் தெரிதாகவும், பூக்கோவும் ஆவர். தெரிதா அனைத்துச் செயற்பாடுகளுக்கும் ஆதாரம் அதிகாரமே என்றார். பூக்கோ கட்டுடைத்து அதிகாரத்தை இனம் கண்டார்.

இதற்கு முன்னரேயே சமூக அமைப்பின் இயங்கியலை ஹெகல் இருக்கும் நிலை (வாநளளை) எதிர்நிலை (யுவெi வுhநளளை) பின் இரண்டிலிருந்தும் உருவாகும். இணைநிலை (ளலn வாநளளை) பின் அதற்கு எதிர்நிலை என இயங்கியல் ரீதியில் விளக்கினார்.

பின்வரும் அட்டவணை அதை விளக்கும்

இயக்கம்
இருக்கும் நிலை , எதிர்நிலை


இணைநிலை , எதிர்நிலை
1

இணைநிலை , எதிர்நிலை
2

இணைநிலை , எதிர்நிலை
3

இணைநிலை

(இங்கு இணை நிலை காலம் தோறும் நடைபெறினும் அது 1, 2, 3 என பரிணாம முறையிற் செல்வதைக் காணுகிறோம்.)

மார்க்ஸ் இயங்கியல் தத்துவத்தினடியாக சமூகத்தின் வரலாறு ஆளும் வர்க்கத்திற்கும் ஆளப்படும் வர்க்கத்திற்குமிடையிலான வர்க்கப் போர் என்று விளக்கினார். இக்கருத்தை இன்னொரு நிலைக்கு எடுத்துச் சென்றவர்கள்தான் தெரிதாவும், ப+க்கோவும்.

எல்லாக் கருத்துக்களும் கட்டமைக்கப்பட்டுள்ளன. அறம் - மறம் நன்மை – தீமை நல்லது கெட்டது என்று எதிரெதிர் நிலையில் நாம் கருத்துக்களைக் கட்டமைக்கிறோம். அறத்திற்குள் மறமும் உண்டு. மறத்திற்குள் அறமுமுண்டு. நல்லவனுக்குள் கெட்டவனும் கெட்டவனுக்குள் நல்லவனும் இருக்கிறான். எனவே அறம் - மறம் என்ற கருத்து ஒரு சார்பு நிலைக்கருத்;து. அறம் - மறம் எனக கட்டப்பட்டதை உடைத்துப் பார்த்தால் ஏன் அப்படிக் கட்டமைக்கப்பட்டது என்பது தெரிய வரும் என்பது இவர்களது வாதம்.

எல்லாச் செயற்பாடுகளிலும் அதிகாரம் உண்டு. எதனையும் கட்டுடைத்து அதிகாரத்தை இனம் காண வேண்டும் என்றார் தெரிதா.

தமிழர் வரலாறும் பண்பாடும் என நமக்குத் தெரிந்தவை யாவும் இவ்வாறு கட்டமைக்கப்பட்டவைதான். நமக்கு எவை தெரிந்துள்ளன என்பதனை இனி நோக்குவோம்.

3. தமிழர் வரலாற்றிலும் பண்பாட்டிலும்
நமக்குத் தெரிந்தவை

3.1 வரலாற்றில் தெரிந்தவை
தமிழர் வரலாற்றை அரசர்களின் வரலாறாகக் காட்டும் போக்குதான் மிகச் செல்வாக்குச் செலுத்தும் போக்காகும். தமிழர் வரலாற்றை எடுத்து நோக்கினால் நமக்குத் தெரிவது என்ன?

முடியுடை மூவேந்தரான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆரம்பத்தில் தமிழ்நாட்டை ஆண்டனர். பின்னர் பல்லவர்களின் ஆட்சி நிலவியது. அவர்களிலும் மனேந்திர வர்ம பல்லவன், நரசிம்மவர்ம பல்லவன் முக்கியமான அரசர்கள், அதன் பின்னால் புகழ் பூத்த சோழ மன்னர்கள் தமிழ்நாட்ட ஆண்டனர். இராஜ இராஜசோழன், இராஜேந்திரசோழன், குலோத்துங்க சோழன் முக்கியமான மன்னர்கள். இவர்கள் கடல் கடந்து தமிழர் ஆட்சியை நிறுவினர். பின்னர் பாண்டிய மன்னர்கள், அவர்களுள் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், மாறவர்மன் சுந்தர பாண்டியன் ஆகியோர் முக்கியமானவர்கள். அதன் பின்னர் நாயக்க மன்னர்கள். பின்னர் தமிழ்நாடு பாளையங்களாகப் பிரிக்கப்பட்டபோது பாளையத்தை ஆட்சி செய்த கட்டபொம்மன், ஊமைத்துரை, சிறிய மருது, பெரிய மருது போன்றோர். பின் தமிழ் நாட்டை ஆண்ட மன்னர்களை வரிசைப்படுத்தல், அவர்களில் முக்கியமானவர்களை விதந்துரைத்தல், அவர்கள் பெருமைகள், அவர்கள் நடத்திய போர்கள் வெற்றிகள், தோல்விகள், கட்டிய கட்டிடங்கள், ஆட்சிமுறை என்ற அடிப்படையிலே தமிழ் நாட்டுத் தமிழர்களின் வரலாறு எழுதப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர் வரலாறும் இவ்வாறே இராவணன் எனும் ஐதீக அரசனின் ஆட்சி தொடக்கம் சேர சோழ பாண்டிய அரசர்கள். ஆரியச் சக்கரவர்த்திகள் (யாழ்ப்பாண மன்னர்கள்) குளக்கோட்டன், மாகோன் பண்டார வன்னியன், சங்கிலியன் என அரசர் வரலாறாகவே கட்டமைக்கப்பட்டள்ளது. நமக்குத் தெரிந்த வரலாறும் இதுதான்.

அரசர்கள், தம் பெருமைகளையும், சாதனைகளையும் கல்விலும், சொல்லிலும் பொறிக்க புலவர்களையும், சிற்பிகளையும் வைத்திருந்தனர். அரசரிடம் அதிகார பலமும், படை பலமும் இருந்தன. தம் புகழ் கூறும் பாடல்களைப் பாடப் பாணர்களை வைத்திருந்தார்கள். இதனால் அரசர் செய்த சொல்கள் யாவும் கல்வெட்டுக்களில் இடம்பெற்றன.

வரலாற்றாசிரியர்களும் அவற்றையே ஆதாரமாகக் கொண்டனர். இதனால் அரசர் வரலாறே வரலாறு என்றாயிற்று. சில அரசர்கள் தம் அரசவையில் வரலாற்று ஆசிரியர்களையும் உடன் வைத்திருந்தனர் என்று அறிகிறோம்.

தமிழர் வரலாறு அல்லது இலங்கை வரலாறு இவ்வளவுதானா? சிற்சில அரசர்கள் போர் வீரர்கள், அமைச்சர்கள், பிரபுக்கள் சமயத் தலைவர்கள் என்பவர்களின் வரலாறும் செயல்களும்தான் தமிழ்நாட்டினரின் அல்லது இலங்கைத் தமிழரின் முழுமையான சரித்திரமா? தமிழ்நாட்டின் வாழ்க்கையையும், பண்பாட்டையும், குளங்களையும், கோயில்களையும் மாளிகைகளையும் கட்டிடங்களையும், சாலைகளையும் உருவாக்கியது யார்?

தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் வாழ்வதற்கான உணவுப் பொருட்களை உருவாக்கியது யார்? மக்கள் பாவித்த பாவனைக் கைப்பொருட்களை உருவாக்கியது யார்? போரில் பாவிக்கப்படும் ஆயுதங்களை வடித்தெடுத்தவர் யாவர்? மன்னருக்குப் பின்னால் நின்று அவருக்கு தன்னுயிர் ஈந்து மாபெரும் வெற்றி ஈட்டிக் கொடுத்தவர்கள் யாவர்?

இக்கேள்விகளைப் பல வரலாற்றாசிரியர்கள் எழுப்பாமையினாலேதான் வரலாறு அரசர்களின் வரலாறாக ஆக்கப்பட்டுள்ளது.

வரலாறு என்பது உருவாக்கப்படுவது, கட்டமைக்கப்படுவது, சில ஆதாரணங்களை அடிப்படையாக வைத்து வரலாற்று ஆசிரியர்களின் தத்துவ சிந்தனைப் போக்கிற்று ஏற்ப வரலாறு உருவாக்கப்படுகிறது என்பதனை நாம் மனம்கொள்ள வேண்டும். இங்கு வரலாற்று ஆசிரியரின் கருத்து நிலை மக்கள் மீது திணிக்கப்படுகிறது.

மன்னர்களின் செயல்களில் எல்லாம் மக்கள் பங்கு கொண்டுள்ளனர். அரசன் கோயிலைக் கட்டினான் என்பதனைவிட அரசனால் கோயில் கட்டப்பட்டது அல்லது அரசன் கோயிலைக் கட்டுவித்தான் என்பதுதன் சரி. தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்டியது யார்? ராஜ இராஜ சோழனா அல்லது இலட்சோப லட்சம் உழைக்கும் தமிழ் மக்களா? அக்கோயில் எழ எத்தனை மக்களின் இரத்தமும் வியர்வையும் சிந்தியிருக்கும், எத்தனை ஏழை மக்களின் உயிர்கள் பலியாகியிருக்கும்? எத்தனை குடும்பங்கள் கஷ்டங்களைத் தாங்கிக் கொண்டிருக்கும்?

இங்கு எழுப்பப்பட வேண்டிய கேள்வி மன்னர் வரலாறா? மக்கள் வரலாறா? என்பதுதான்.

எல்லா வரலாற்று ஆசிரியர்கட்கும் ஒரே தகவல்கள்தான் கிடைக்கின்றன. ஆனால் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஏற்பவே தகவல்கள் விடை தரும். வரலாற்று ஆசிரியர்களுக்கு முதலில் தகவல்களை நோக்கிச் சரியான, வித்தியாசமான கேள்விகள் கேட்கத் தெரியவேண்டும். கேள்விகள் அவரவர்களின் அறிவுக்குத் தக ஆழம் கொள்ளும் அகலம் கொள்ளும். விடைகளும் வௌ;வேறாயிருக்கும். தகவல்களில் மன்னரைத் தேடினால் ‘மன்னர்தான் கிடைப்பர் மக்களைத் தேடினால் மக்கள் கிடைப்பர்.

நாம் தெரிந்த வரலாறெல்லாம் மன்னர்களின் வரலாறுதான். தமிழ் இலக்கிய வரலாற்றைக் கூட இலக்கிய வரலாறாகப் பார்க்காமல் ஆண்ட மன்னர் பரம்பரையினடியாக பல்லவர் காலம், சோழர்காலம், நாயக்கர் காலம் என்று தான் தெரிந்து வைத்திருக்கிறோம்.

வரலாற்றில் நாம் தெரிந்து கொண்டது என்ன? பல நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை மகாபுருஷர்கள் தோன்றுகிறார்கள். அவர்களே நாட்டின் வரலாற்றை உருவாக்குகிறார்கள். இது ஒரு கொள்கை. அப்படியாயின் மக்களின் நிலை என்ன? மக்கள் மகா புருஷர்களின் வருகையை எதிர்பார்த்து நிற்கும் வாயில்லாப் பூச்சிகள் தாமா? மகாபுருஷர்களை அக்காலச் சூழ்நிலைகள் உருவாக்குகின்றன. மக்கள் இல்லாமல் மகாபுருஷர்கள் இல்லை. வரலாறு எனும் பெரும் யந்திரத்தின் பல்லும் சில்லும் மக்களே. ஆனால் நாம் தெரிந்த வரலாறு மகா புருஷர்களான மன்னர்களில் வரலாறே.

நாம் முன்னரே குறிப்பிட்டமைக்கிணங்க சமூக அமைப்பின் மையத்தில் வாழ்ந்தோரின் வரலாறே இங்கு வரலாறாக தெரியப்படுத்தப்படுகிறது. மையமக்களின் வரலாற்றையே முழுத் தமிழ் மக்களதும் வரலாறாக நாம் தெரிந்து வைத்துள்ளோம்.

3.2 பண்பாட்டில் தெரிந்தவை
3.2.1 மொழி
தமிழ்ப் பண்பாட்டின் வரலாறும், பண்பாட்டுப் பிரதிநிதித்துவங்களும் இவ்வாறுதான் உருவாகியுள்ளன. உருவாக்கப்பட்டுள்ளன. நான் முன்னரேயே பண்பாட்டில் முக்கியமாக மேலெழுவன மொழி, இலக்கியம், கலை, சமயம், வாழ்க்கை என்று கூறினேன். பண்பாட்டின் அடிநாதமான தமிழ் மொழியை எவ்வாறு தெரிந்து வைத்துள்ளோம். அது சினால் அகத்தியனுக்கு உபதேசிக்கப்பட்ட மொழி, அகத்தியன் வழியில் அவர் சீடன் தொல்காப்பியன் இலக்கணம் கண்ட மொழி, பின் நன்னூலார் இலக்கணம் கண்ட மொழி. சங்கப் புலவர்கள் வளர்த்த மொழி பின்னால் வள்ளுவர், இளங்கோ, கம்பன் வளர்த்த மொழி செந்தமிழ் மொழி என்றுதான் தெரிந்து வைத்துள்ளோம் எழுத்து மொழியையும், செந்தமிழ் பேச்சு மொழியையுமே சிறந்த தமிழ் என தெரிந்து வைத்துள்ளோம். பாண்டியன் தமிழே தமிழ் என்ற பாரம்பரியம் ஒன்று உண்டு. இன்று ஒரு குறிப்பிட்ட பிரதேசத் தமிழே சிறந்த தமிழ் என்று கூறுவதுபோல. தமிழ் மொழியை இவ்வாறுதான் தெரிந்து வைத்துள்ளோம்.

3.2.2 இலக்கியம்
தமிழ் இலக்கியங்களையும் இவ்வண்ணமே தெரிந்து வைத்துள்ளோம். சங்க இலக்கியங்கள், அற நூல்கள், பக்தி இலக்கியங்கள், காவியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள் இவை தாம் பழந்தமிழ் இலக்கியங்களாக நாம் அறிந்தவ. சமயப் பூசல்கள் காரணமாக சில இலக்கியங்கள் பின் தள்ளப்பட்டமையுமுண்டு. சைவப் பெருமக்களல் கம்பராமாயணமும், சீவக சிந்தாமணியும் நாலாயிரத்திவ்விய பிரபந்தமும் புறக்கணிக்கப்பட்டதுண்டு. வைணவப் பெருமக்களால் பெரிய புராணமும் தேவாரத் திருப்பதிகங்களும் புறக்கணிக்கப்பட்டதுண்டு. பொது நூலான திருக்குறளைச் சமணம், பௌத்தம், சைவம், வைணவம் ஆகிய நான்கு சமயங்களுமே தத்தமது எனப் போராடியதுமுண்டு. எப்படியாயினும் எழுத்து மொழிசார் இவ்வுயர் இலக்கியங்களையே தமிழின் உன்னத இலக்கியங்கள் என நாம் தெரிந்து வைத்துள்ளோம்.

3.2.3 கலைகள்
கலைகளிலும் இவ்வாறே. பல்லவமன்னர்கள் கட்டி எழுப்பிய கற்கோயில்கள், சோழ மன்னர் காலத்தில் எழுந்த பெரிய கோயில், மற்றய கோயில்கள், படிமக்கலை வளர்ச்சி அதில் உருவான செப்பு விக்கிரகங்கள், நடராஜர் சிலை, சிலப்பதிகார காலத்தில் உருவாகி பல்லவ சோழர் காலத்தில் உருப்பெற்ற நடனக் கலை, சங்கீதக் கலை, நாயக்க மன்னர்களால் வளர்க்கப்பெற்ற கர்நாடக சங்கீதம் என்பனவற்றையே தமிழரின் கலைகள் என்று தெரிந்து வைத்துள்ளோம்.

3.2.4 வாழ்க்கை
தமிழரின் வாழ்வு முறைகளாக அகப்புற வாழ்க்கை, போரிலே புறமுதுகு காட்டாத தீரம் முதுகிலே புண்பட்ட மகனுக்கும் பாலூட்டிய முலையை அறுத்தெறிவேன் என்று வாளுடன் புறப்பட்ட வீரத்தாய், கற்போடு வாழ்ந்த குலமகளிர் பெண்களுக்குரிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, குடிகளின் குணமறிந்து கோலோச்சும் அரசமைப்பு, வேதம் ஓதி அம்மி மிதித்து அருந்ததி காட்டி அந்தணர் நடத்தும் தமிழர் திருமண விழா அதில் இடம்பெறும் தாலி. மணமகள் இடும் குங்குமம், கோயி; வழிபாடு, விரதம் பண்டிகைகள், விழா, கோலம் போடுதல், குத்துவிளக்கு ஏற்றல், இப்படித்தான் தமிழ்ப் பண்பாட்டை நாம் தெரிந்து வைத்துள்ளோம். நமக்குத் தெரிந்த தமிழர் பண்பாட்டுச் சின்னங்களான மொழி, கலை பண்பாடு இவைகள் தாம்.

3.2.5 சமயம்
தமிழரின் மதமாக இந்து மதத்தைத் தான் நாம் தெரிந்து வைத்துள்ளோம். அதுவும் சைவ மதத்தைத்தான் தமிழோடு இணைத்துத் தெரிந்துள்ளோம். சைவமும் தமிழும் என்ற சொற்றொடர் பிரபல்யமானது. திருவள்ளுவரையும் மூன்று கோடிழுத்து சைவராக்கிய திருவுருப்படங்களை நான் கண்டுள்ளேன்.

திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும், குன்றமெறிந்த குமரவேளும் இருந்து தமிழ் வளர்த்த தமிழ்ச் சங்கம் என்பது ஐதீகம்.

இந்து மதத்தினுள்ளும் தமிழர் நாகரீகமாக நமக்குத் தெரிவது ஆகமம் சார் பிராமணர்கள் முக்கியத்துவம் பெறும் இந்து மதம்தான். சமஸ்கிருத சுலோகங்கள் தேவார திருவாசகங்கள் மெய்கண்ட தேவரின் சிவஞானபோதம், சைவசித்தாந்தம், சற்று அகட்டினால் திவ்வியப் பிரபந்தங்கள் துவைதம் அத்வைதம் முதலான வைஷ்ணவ சித்தாந்தங்கள். தமிழர் மதமாக நாம் இவற்றைத்தான் தெரிந்து வைத்துள்ளோம். பண்பாட்டின் சின்னங்களாக நாம் தெரிந்து வைத்துள்ள செந்தமிழ் மொழியும், செந்தமிழில் எழுதப்பட்ட இலக்கியங்களும், கட்டிடம் சிற்பம், நாட்டியம், இசை முதலாக கரைகளும், உயரிய வாழ்க்கை முறைகளும், இந்து மதமும் சிறப்பாக சைவ மதமும், நான் முன்னரே குறிப்பிட்டபடி சமூக அமைப்பின் மையத்தில் வாழ்ந்தவர்களுடையதாகும்.

மையத்தில் வாழ்ந்த கல்வி கற்ற பிராமணரும் சத்தியரும் உயர் நிலையில் வாழ்ந்த வணிகரும் (இவர்களுக்கே அன்று கல்வி கற்கும் வாய்ப்பு இருந்தது. அதுவே மனுதர்மமாகவும், சட்டமாகவும் இருந்தது) செந்தமிழ் பேசினர். அரசவையிலும் பிரபுக்களும் வணிகரும் வாழ்ந்த சபையிலும் செந்தமிழ் இலக்கியங்கள் அரங்கேறின. அரசரை சற்று எதிர்த்த கம்பராமாயணம் போன்ற இலக்கியங்களும்கூட சமூக அமைப்பின் மையத்தில் வாழ்ந்த திருவெண்ணெய் நல்லூர்ச் சடைநன் என்ற பிரபு ஒருவரின் ஆதரவில் மையத்தின் நிறுவனமாக திருவரங்கக் கோயிலிலேயே அரங்கேறியது.

கலைகள் யாவும் மையத்தில் வாழ்ந்தோரையே சுற்றிச் சுழன்றன. அரசர்களும், தேவிமாரும், பணம் படைத்த பிரபுக்களும் கோயில்கள் கட்டினர். சிலைகள் வடிக்க பணம் கொடுத்தனர் சிலைகளைக் கோயில்களுக்குள் வைத்தனர். கோயிலில் குருக்கள்மாரை நியமித்தனர். கோயில் கலைகளினது மையமாயிற்று. நடனம், இசை, ஒவியம் யாவும் கோயில் சார்ந்து அமைந்தன. கோயில் இந்து மக்கள் பண்பாட்டின் மையமாயிற்று.

நாம் அறியும் ஆகமம்சார் மதங்கள்கூட மையத்தில் வாழ்ந்த மக்களாலேயே பின்பற்றப்பட்டன. மதத்தின் தலைவர்களாக பிராமணர்கள் கருதப்பட்டனர். அவர் இரு பிறபபாளர் எனக் கருதப்பட்டனர் கடவுளோடு பேசும் தகுதி அச்சாதிக்கு மட்டுமே உரியது என்ற கருத்து உருவானது. தேவார திருவாசகம் பாடிய குரவர்கள் யாவரும் மையத்தில் வாழ்ந்த பிராமண, வேளாள வணிக குலத்தவர்களே.

தமிழரது வாழ்க்கை முறைகள் என நாம் அறியும் புராதன இன்றைய வாழ்க்கை முறைகள் மையத்தில் பண பலமும், அறிவு பலமும், அதிகார பலமும் பெற்று வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறைமைகள் தாம்.

இவ்வண்ணம் மையத்தில் வாழ்ந்த மக்களின் வரலாறும் பண்பாடுமே முழுத் தமிழர்களது வரலாறாகவும் பண்பாடாகவும் கட்டமைக்கப்பட்டது. யாரால் கட்டமைக்கப்பட்டது? ஆளும் வர்க்கத்தால் தம் நலனுக்காகக் கட்டமைக்கப்பட்டது.

மையத்தில் தமிழர் பண்பாடாகக் கருதப்பட்ட செந்தமிழ், உயர் இலக்கியம் கற்கும் வாய்ப்பு விளிம்பு மக்களுக்கு கிடைக்கவில்லை. மையமக்கள் உருவாக்கிய கோயில்களுக்குள் நுழைய, அக்கலைகளை ரசிக்க அவர்கட்கு வாய்ப்புத் தரப்படவில்லை. மைய மக்களின் மதங்களை அனுஷ்டிக்கக்கூட அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் மையத்துக்கு அப்பால் வாழ்ந்த இடைநிலை மக்களும், விளிம்பு மக்களும் தத்தமக்கென வரலாற்றையும், பண்பாட்டையும் உருவாக்கிக் கொண்டனர். தமிழர் வரலாற்றில் தெரியாத பக்கம் அதுதான். முதலில் மையத்தில் தெரியாதவற்றை அறிந்து கொள்வோம். பின் இடைநிலை விளிம்பு நோக்கிச் செல்வோம்.

4. தமிழர் பண்பாட்டிலும் வரலாற்றிலும்
தெரியாதவை
4.1 பின்னணி
நமக்குத் தெரியாதவை பற்றி அறிந்துகொள்ள முதலில் அதற்கான பின்னணியைத் தெரிந்துகொள்ளல் அவசியமாகும்.

இந்திய சரித்திரத்தை ஐரோப்பிய கருத்தியலுக்குத்தக ஒரு நெறிமுறையுடன் எழுதும் வழமை 18ஆம் நூற்றாண்டில் ஆரம்பிக்கிறது. வின்சன்ற் சிமித்தின் இந்திய வரலாற்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடுவர். இந்திய வரலாற்றினை ஆங்கிலேயேர் தம் காலனித்துவ சிந்தனைகட்கு ஏற்ப வடிவமைத்தனர்.

19ஆம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேயருக்கு எதிரான சுதேசிகள் போராட்டம் வலுவடைந்தது. ஆங்கிலம் கற்ற இந்திய சுதேசிகள் - அதிலும் முக்கியமாக வட இந்தியர் தேசியப் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் அரும்பிய சுதேசிய புத்திஜீவிகள் இந்தியாவின் தேசியப் பெருமைகளைக் கூறும் வகையில் இந்திய வரலாற்றை வடிவமைத்தனர். சந்திர குப்தமௌரியனும், அசோகனும், அக்பரும் வீரசிவாஜியும் இந்திய பெரும் அரசர்களாக அவ்வரலாறுகளில் இடம்பெற்றனர். எல்லோரா அஜந்தா குகைச் சிற்பறங்களும் ஓவியங்களும், தாஜ்மஹாலும், வட இந்திய கோயில்களும் இந்திய உன்னத சின்னங்களாகக் காட்டக்கப்பட்டன. இவை யாவும் நான் முன்னர் ஏற்கனவே கூறியதுபோல் இந்திய சமூக அமைப்பின் மையத்தைச் சேர்ந்த வரலாறும் பண்பாடும்தான்.

இவ்வரலாறுகளில் தமிழ்நாடு பெரும் இடத்தைப் பிடித்திருக்கவில்லை. தமிழ்ப் பண்பாடு கூறப்பட்டிருக்கவில்லை.

18ஆம், 19ஆம் நூற்றாண்டுகளிலே பின்வரும் விடயங்கள் தமிழ்நாட்டில் நடந்தேறின.

1. ஏட்டுச் சுவடியிலிருந்து பண்டைய தமிழ் இலக்கியங்கள் - முக்கியமாக சங்க இலக்கியங்கள் - பதிப்பிக்கப்பட்ட. அச்சில் வெளிவந்தன.

2. சிலப்பதிகாரம் கண்டுபிடிக்கப்பட்டது அது அச்சில் வெளிவந்தது.

3. கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம், ஆரிய மொழிக் குடும்பத்திற்கு மாறாக திராவிட மொழிக் குடும்பம் ஒன்று உண்டு என நிறுவியது.

4. சிந்துவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டது. அது ஆரியருக்கு முற்பட்டது என நிறுவப்பட்டதுடன் அது பண்டு இந்தியாவில் வாழ்ந்த திராவிட கலாசாரம் எனவும் கூறப்பட்டது.

5. திராவிடர் தமிழர் எனவும், சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் எனவும் நிறுவும் முயற்சிகள் மேலெழும்பின.

இவற்றால் தமிழர் மத்தியில் கல்வி கற்று மேலெழுந்த மேட்டுக் குடியினர் இந்திய வரலாற்றில் தமக்குரிய தேசியப் பெருமைகள் தரப்படவில்லை என்ற எண்ணத்துடன் தமிழ் வரலாற்றை உருவாக்கினார்.

சதாசிவ பண்டாரத்தார். நீலகண்ட சாஸ்திரி போன்றோர் சோழர்கால கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்களை ஆராய்ந்து சோழர்கால ஆட்சி பற்றியும் அதன் உன்னதங்கள் பற்றியும் அதிகம் வெளிக்கொணர்ந்தனர்.

19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட தமிழ்த் தேசிய உணர்வு காரணமாக அசோகனைப் போல, அக்பரைப் போல, அஜந்தா போல, தாஜ்மஹால் போல தமிழரிடமும் ராஜ இராஜசோழனும், குலோத்துங்க சோழனும் இருந்தார்கள் என்றும், தமிழரிடம் அஜந்தா எல்லோரா குகை போல மாமல்லபுரக் கோயிலும் இருந்தன என்றும் தமிழர் தேசிய பெருமை கூறும் வரலாறுகள் தமிழ்ப் புத்திஜீவிகளினால் எழுதப்படலாயின.

நாவலாசிரியர்களான கல்கியும், (சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு) அகிலனும் (வேங்கையின் மைந்தன்) சாண்டியல்யனும் (கடற்புறா) விக்கிரமனும் (பாண்டியன் மனைவி) தமது சரித்திர நாவல்கள் மூலம் மகோன்னதமான தமிழ் அரசர்களை உருவாக்கினர். அவர்களது ஆட்சிச் சிறப்பினையும், அவர் தம் மதியூகங்களையும், மக்கள் மத்தியில் இச் சரித்திர நாவலாசிரியர் பரப்பினர். தமிழ்ப் பெரும் அரசர்கள் அனைவரும் இந்நாவல்களில் மகாபுருஷர்களாக, அறிவும் - வீரமும் - அன்பும் நிறைந்த லட்சிய புருஷர்களாகச் சித்திரிக்கப்பட்டனர். ஒரு வகையில் காவியங்கள் கூறிய குறைகள் அற்ற காவிய நாயகர்களாகக் காட்டப்பட்டனர். இவர்கள் யாவரும் சமூக அமைப்பின் மையத்தில் வாழ்ந்தோர்கள் ஆவர்.

1) சேர சோழ பாண்டிய மன்னர் ஆண்டகாலம்

2) களப்பிரர் எனும் அந்நியர் ஆண்டகாலம் (இருண்ட காலம்)

3) பல்லவ மன்னர் ஆண்டகாலம்

4) சோழ மன்னர் ஆண்ட காலம்

5) நாயக்க மன்னர் ஆண்டகாலம்

6) ஐரோப்பியர் ஆண்டகாலம்

எனத் தமிழர் வரலாறு கட்டமைக்கப்பட்டது. ஐரோப்பியரையும், களப்பிரரையும் தவிர ஏனையவர்கள் யாவரும் தமிழ் மன்னர்களாகவும் தமிழ் மக்களுக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கும் பெரும் சேவை புரிந்தவர்களாகவும் காட்டப்பட்டனர். இம்மன்னர்கள் வியக்கத்தக்க தமிழர் பெருமை கூறக்கூடிய பெரும் கோயில்களையும், கட்டிடங்களையும் கட்டியவர்களாகவும் கலைகளையும் இலக்கியங்களையும் வளர்த்தவர்களாகவும் தமிழர் சரித்திரம் எழுதப்பட்டது. பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இவையே கற்பிக்கப்பட்டன.

தமிழ் மன்னர்களுள் உன்னதமானவர்களாக கரிகாற் பெருவளத்தானும் (காவேரி அணைக் கரை கட்டியவன்) ராஜராஜசோழனும் (தஞ்சைப் பெரும் கோயில் கட்டியவன்) ராஜேந்திர சோழனும் (இலங்கையும், கங்கையையும் வெற்றி கொண்டவன்) குலோத்துங்க சோழனும் (கலிங்கம் வென்றவன்) மாறவர்மன் சுந்தரபாண்டியனும் (இலங்கை வென்றன்) கட்டபொம்மனும், ஊமைத்துரையும், சின்னமருதுவும் பெரிய மருதுவும் (ஆங்கிலேயரை எதிர்த்த வீரர்கள்) வரலாற்று நூல்களிலே காட்டப்பட்டனர். தமிழர் வரலாறாக நாம் இதனைத் தாம் தெரிந்து வைத்துள்ளோம்.

தமிழ்ப் பண்பாடாக சங்க காலத்தில் ஐந்து விதமான நிலங்களிலும் தமிழர் வாழ்ந்த ஐந்து விதமான வாழ்க்கை, முக்கியமாக அவர்களது அகப் ஃ புற வாழ்க்கை.

அவர்களிடம் ஏற்பட்ட அற ஒழுக்க சிந்தனைகள், தமிழர் பண்பாட்டில் திருக்குறள் தமிழ் வேதமாக எழுந்தமை.

சமண பௌத்த மதங்களுக்கு எதிராக வைதீக மதம் மக்களை அரவணைத்து எழுந்தமை, அதனடியாக எழுந்த பக்தி இலக்கியங்கள், காவியங்கள்.

தமிழ் மன்னர் எழுப்பிய இந்துக் கோயில்கள், இந்துக் கலைகள், பரதநாட்டியம், கர்நாடக இசை என தமிழரின் பண்பாடு காட்டப்பட்டது.

நாம் தெரிந்து வைத்துள்ளவற்றில் மிகச் சிலவற்றையே நான் மேலே குறிப்பிட்டுள்ளேன்.

இவை யாவும் மையத்தில் வாழ்ந்தோரின் வரலாறுகளும், பண்பாடுகளும் என்பதனை நாம் இலகுவாக இப்போது புரிந்துகொள்கிறோம்.

மையத்தில் வாழாமல் இடையிலும், விளிம்பிலும் வாழ்ந்த மிகப் பெரும்பான்மையான மக்களிடையே சமூக வாழ்வு இல்லையா? அவர்களிடம் பண்பாட்டு வாழ்க்கை முறை இல்லையா? அவர்கள் மத்தியில் தலைவர்கள் உருவாகவில்லையா? அவர்கள் மையத்தில் வாழ்ந்த மக்கள் போல பிறநாட்டை வெற்றி கொண்டு வந்த பெரும் செல்வத்தைப் பகிர்ந்து உண்டு உடுத்து மகிழ்ந்து வாழ்ந்தார்களா? அகப் ஃ புறம் என்ற தமிழர் பண்பாட்டு வாழ்க்கையில் திளைத்து வாழ்ந்தார்களா? மையத்தில் வாழ்ந்தோர் போல கல்வி அறிவு பெற்று, ஆடை அணி புனைந்து பெரும் கோயிற் பண்பாட்டை உள்வாங்கி பிராமணர் துணையுடன் வாழ்ந்தார்களா? மையத்தில் வாழ்ந்தோர் போல பெரும் மாடமாளிகைகளில் வாழ்ந்தார்களா? குதிரை, யானை வைத்திருந்தார்களா? என்ற பல கேள்விகள் நமக்கு எழுகின்றன. இடையிலும், விளிம்பிலும் வாழ்ந்த பெரும்பான்மைத் தமிழ் மக்களின் வரலாறும் பண்பாடும் நமக்குத் தெரியாதவை.

ஆனால் கொலைக் குற்றவாளி தன்தையறியாமல் தடங்களை விட்டுச் செல்லுவதுபோல வரலாற்றில் மன்னர்களும் ஏனையவர்களும் எழுதி வைத்த கல்வெட்டுகள். சான்றுகள் என்பன இவ்விடைநிலை. விளிம்பு நிலை மக்கள் பற்றிய செய்திகளைத் தருகின்றன. அச் செய்திகளின்படி மையத்தில் வாழாத மக்கள் மையத்தில் வாழ்ந்தோர் போல மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் வாழவில்லை. சமூகத்தின் முழுச் சுமையையும் ஏற்றுக்கொண்டு வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டே வாழ்ந்தவர்களாகத் தெரிகிறார்கள். முக்கியமாக விளிம்பு நிலை மக்கள் அடக்கப்பட்டவர்களாக, ஒடுக்கப்பட்டவர்களாக, அடிமைகளாக வாழ்ந்திருக்கிறார்கள். கோயில்களுக்குள் புக இவர்கட்கு அனுமதியில்லாதிருந்தது. சில பொருட்களைத் தொடமேட்டிமைகளின் வீட்டுக்குள் புகட் கூட இவர்கட்கு உரிமை தரப்படவில்லை. சேரியிலும், ஊருக்குப் புறம்பான இடங்களிலும் இவ்வடி நிலைமக்கள் வாழ்ந்தனர்.

எனினும் இவர்க்ள வாழ்க்கை நடத்தினர். தமக்குள் ஒரு அமைப்பை ஏற்படுத்தி தம்மளவில் திருப்தியுடன் வாழ முயன்றனர். தமக்கென கலைகளையும் பண்பாட்டையும் உண்டாக்கிக் கொண்டனர்.

இவர்களும் தமிழரே, இவர்கள் வாழ்வும் தமிழ் வாழ்வே. இவர்கள் பண்பாடும் தமிழ்ப் பாண்பாடே. இவர்களின் வரலாறும் பண்பாடும் எமக்குத் தெரியவில்லை. தெரிவதில்லை. தமிழர் பண்பாட்டிலும் வரலாற்றிலும் நமக்குத் தெரியாதவை யாவை? என அடுத்து நோக்குவோம்.

தமிழர் வரலாற்றையும், பண்பாட்டையும் மையத்தில் வாழ்ந்தோரின் வரலாறாகவும், பண்பாடாகவும், கட்டமைத்தவர்களுக்குப் (நான் முன்னனே குறிப்பிட்ட ஆரம்ப கால வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வாளருக்கும்) பின்னால் 1960களில் புதிய ஆய்வாளர் குழு தமிழ் ஆராய்ச்சி உலகுக்குள் உருவாகிறது. இவர்கள் மாக்ஸிய நெறியில் வர்க்கப் போரே வரலாறு என்ற சித்தாந்தத்தால் கவரப்பட்டவர்கள். இந்திய வரலாற்றையும், பண்பாட்டையும் மாக்ஸிய நெறியில் அணுகிய டாங்கே, கோஸாம்பி, கே.ஆர். சர்மா, சர்தேசாய், ரொமிலர் தாப்பர் வழியில் தமிழகத்திலும் இலங்கையிலும் வாழ்ந்தவர்கள். நா. வானமாலை, கைலாசபதி, சிவத்தம்பி, ஆ. சிவசுப்பிரமணியம் சிதம்பரரகுநாதன், வே. கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள்.

இவர்கட்குப் பின்னர் வரலாற்றையும் பண்பாட்டையும் மக்கள் வரலாறாகவும் பண்பாடாகாவும் புரிந்துகொண்ட சிறந்த வரலாற்றுப் பண்பாட்டய்வாளர்கள் ஆராய்ச்சி உலகில் தோன்றுகிறார்கள். இவர்களுள் வெளிநாட்டவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். பேர்ட்டன்ஸ்ரைன், நொபுறுகறோசிமா, ஹெய்ல்ட் ஓம்வெல்ட், செண்பகலஷ்மி, சுப்பராயலு, கதலின்கௌ, கமில் சுவலபல் போன்றோஐம் அ. மாக்ஸ், வேலுச்சாமி, ராஜ்கௌதமன், குணா போன்றோரும் இவர்களுள் குறிப்படத்தக்கவர்கள். இவர்களுட் பலர் அமைப்பியல், பின் அமைப்பியல், பின் நவீனத்துவம், நியூ மாக்ஸியம், பின்காலனித்துவம், முதலான சித்தாந்தங்களால் கவரப்பட்டவர்கள். புதிய சிந்தனைகளுக்கு பரிச்சயமானவர்கள். இவர்கள் எழுத்துக்களும் ஆராய்வும் தமிழர், வரலாறு, பண்பாடு பற்றி தெரியாத பல விடயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தன. இவர்களுட் சிலர் கிடைத்த ஆதாரங்களுக்குப் புதிய விளக்கங்களுமளித்தனர். இதனால் மையத்தில் வாழ்ந்த தமிழர் வரலாறு, பண்பாடு மட்டுமன்றி இடையிலும் விளிம்பிலும் வாழ்ந்த மக்கள் பற்றிய செய்திகளும் வெளிவரலாயின.

இவர்களுள் நான் குறிப்பிட்ட இரண்டாவது தலைமுறையினர் அதாவது மாக்ஸிய நெறிமுறை நின்று அணுகியோர் வரலாற்றையும், பண்பாட்டையும் பரிணாச் சுழலேணி முறையிலும், தமிழ் நாட்டில் பண்பாட்டு வரலாற்றை வர்க்கப்போரின் பின்னணியிலும் விளக்கினர். அதன் பின்வந்தோர் மையம் ஃ விளிம்பு என பிரித்து விளக்கினர்.

4.2 தெரியாதவை

4.2.1 பரிணாம வளர்ச்சியில் தமிழர் வரலாறும் பண்பாடும்
வளர்ந்துள்ளமை
புதிய ஆராய்ச்சிப் பரம்பரையினர், தமிழர் பண்டைய காலத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய நிலங்களில் தனித்தனிப் பண்பாட்டுடனும், பெருமிதத்துடனும், அகப் ஃ புற கோட்பாடுகளுடன் வாழ்ந்தனர் என்ற மரபுக்கருத்துக்கு மாறாக இவர்கள் இந்த 5 நிலக் கோட்பாட்டை சமூக பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டில் விளக்கினர்.

குறிஞ்சியில் வேட்டையாடிய தமிழ் இனம், முல்லையில் வேட்டையில் பிடித்த மிருகங்களை கொல்லாது வளர்த்து கால்நடை மேய்க்கும் இனமாகப் பரிணாமமுற்று, அதன் வளர்ச்சியாக, நதிக்கரைகளில் நிரந்தரமாக இருந்து வேளாண்மை செய்து, பொருள் பெருக்கி அப்பொருட்களை காக்க கோட்டை, கொத்தளம், படை என அமைத்து அரசு உருவாக்கி மருத நாகரிகம் வளர்த்து பின்னர் பெருகிய செல்வத்தை பிற நாட்டுடன் பகிர்ந்தும், பெற்றும் வாழ கடல் கடந்து வாணிபம் செய்து நெய்தல் நில நாகரிகம் கண்டு, பேரரசுகள் அமைத்து வாழத் தொடங்கினர் என பண்டைய தமிழர் வரலாற்றுக்கும் பண்பாட்டுக்கும் இவர்கள் புதிய விளக்கமளித்தனர். சுருங்கச் சொன்னால்.

(புணர்ச்சி) ஃ வேட்டையாடுதல் ஃ (குறிஞ்சி)


(இருத்தல்) ஃ மந்தைய மேய்த்தல் ஃ (முல்லை)

(ஊடல்) ஃ விவசாயம் செய்தல் ஃ (மருதம்)


(பிரிதல்) கடல் கடந்த வாணிபம் செய்தல் ஃ (நெய்தல்) என்று

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற திணைக்கோட்பாட்டுக்கு, வேட்டையாடுதலில் இருந்து கடல் கடந்து வெளிநாட்டு வியாபாரம் செய்தது வரையான பரிணாம வளர்ச்சி என்று புதிய விளக்கத்தை இவர்கள் அளித்தனர்.

இந்த வளர்ச்சி வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டு கி.பி 2ஆம் நூற்றாண்டு வரை நடைபெற்றதென்றும் இந்த வளர்ச்சியினூடே சிறு சிறு குழுக்களாக வாழ்ந்த இனங்கள் தமக்குள் மோதிக் கொண்டன என்றும் இம்மோதலில் வெற்றி பெற்ற பெரும் இனக் குழுக்களான சேர, சோழ, பாண்டிய இனக்குழுக்கள் முறையே தமிழ் நாட்டின் வடக்கிலும் (தஞ்சாவூர்) தெற்கிலும் (மதுரை) மேற்கிலும் (கேரளா) மூவரசுகளை தோற்றுவித்தன என்றும் இந்த ஓயாத போரையும் போரில் அடித்த கொள்ளையையும் போருக்கு மன்னனை ஊக்கிய புலவர்களின் மனப்பாங்கையும், போரைக் கடிந்த புலவர்களின் மனப்பாங்கையுமே சங்க இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன என்றும் இவர்கள் சங்க இலக்கியங்களுக்குப் புதுவிளக்கமளித்தனர்.

சங்க இலக்கியங்கள் யாவும் பெரும்பாலும் மன்னர்களின் வேண்டுகோளின்படி புலவர்களால் மன்னர்களையும், மன்னர் சார்ந்து வாழ்ந்த உயர் குடியினரையும் மையப்படுத்தி தொகுக்கப்பட்ட நூல்களாகும். திட்டமிட்டு தொகுக்கப்பட்ட அத்தொகுப்புகள் விட்டுச் சென்ற தடயங்களை வைத்தே இவ்வாசிரியர்கள் அன்றைய சமூகத்தினை மீள்கட்டடைத்தனர்.

மன்னர் புகழ் பாடிய அவர்களைப் போருக்கு ஊக்கிய அக்கால கட்டத்திலேதான் மன்னனை எதிர்த்துப் பாடிய பாடல்களும், போர்களையும் குழுச்சண்டைகளையும் எதிர்த்துப்பாடிய பாடல்களும் தோன்றியுள்ளன: தொகுக்கப்பட்டுள்ளன. அப்பாடல்களின் மூலம் போரின் மறுபக்கமும், காதல் வாழ்க்கையின் மறுபக்கமும் தெரியவரலாயிற்று.

சங்க இலக்கியத்தில் வரும் தலைவனும், தலைவியும் மையத்தில் இருந்த மக்களே. அக்காதல் வாழ்வே உயர்ந்த அகத்திணை (தூய அகம்) என்று கூறப்பட்டது. விளிம்பில் வாழ்ந்தோரின் காதல் கைக்கிளை, பெருந்திணை என அகத்திணைக்குப் புறம்பாக (அகப்புறம்) வைக்கப்பட்டது.

தொல்காப்பியர் அடியோர், வினைவலர் (அடிமைகள், தொழிலாளிகள்) காதலை அகத்திணைக்கு புறம்பாக வைத்ததை இவர்கள் புட்டுக்காட்டினர்.

இவ்வண்ணம் பண்டைய தமிழ் வரலாறும், பண்பாடும் நாம் தெரிந்தது போல் அல்லாது முரண்பாடுகளும் வேற்றுமைகளும் கொண்டதாக அமைந்தது என்று இவர்கள் கூறியவற்றை அண்மையி;ல செய்யப்பட்ட அகழ்வாராய்வுகளும், கிடைத்த புதைபொருட் சின்னங்களும் உறுதி செய்வனவாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

4.2.2 தமிழர் வரலாறும் பண்பாட்டு வரலாறும் தமிழர்களுக்கு
இடையே தோன்றிய வர்க்கங்களின் போராகும்.
வேட்டையாடி வாழ்ந்த குறிஞ்சி நிலமக்களிடையே பேதங்கள் இருக்கவில்லை. கிடைத்ததை சமமாக பகிர்நது பேதா பேதமின்றி சமத்துவமாக தமிழர் வாழ்ந்தனர். மந்தை மேய்த்து, விவசாயம் செய்து, வாணிபம் செய்து, அரசமைத்து வளர்ந்த போது சொத்துப் பெருகியது. அதகாரம் பெருகியது. விவசாயம் செய்தோர் வேளாளராயினர். அரசமைத்த அரசர்கள் இவ்வேளாள நிலக் குடியிலிருந்து எழுந்த நிலவுடமையாளர்களாவர். வெளியில் இருந்து தமிழ் நாடு புகுந்து அரசர்களுக்கு ஆலோசகர்களாக மாறிய பிராமணர்களுக்கும் நிலங்களை மன்னர் கொடுக்க அவர்களும் நிலவுடமையாளர்களாயினர். இவ்வண்ணம் நிலவுடமை வர்க்கம் மையத்தில் தம் ஆட்சியையும் அதிகாரத்தையும் வைத்துக்கொண்டது.

கடல் கடந்து வியாபாரம் செய்த வணிகர் பெரும் செல்வமீட்டினர். அரசர்களுக்கு நிகர வாழ்ந்தனர். அரசர்களுக்கு கடனும் கொடுத்தனர். இதனால் வணிக வர்க்கம் என்ற பெருவர்க்கம் ஒன்றும் எழுந்தது. மையத்தில் வாழ்ந்த மக்களுக்கு நிகர வணிகர் வாழ்ந்தனர். மைய நிலவுடமை வர்க்கமும், வணிகவர்க்கமும் மைய அதிகாரத்திற்குப் போரிட்ட வர்க்கப் போரே மையத்திலிருந்து கட்டப்பட்ட வரலாற்றுக்கும் பண்பாட்டுக்கும் அடித்தளம் என இவ்வாய்வாளர் நிறுவினர்.

பேராசிரியர் கைலாசபதி, சிவத்தம்பி, வானமாமலை ஆகியோரின் ஆய்வுகள் இவற்றில் முக்கியம் பெறுகின்றன. பல்லவர் காலத்தில் நடைபெற்ற சமயப்போரையும் பக்தி இலக்கியத்தையும் வரலாற்றுச் சான்று கொண்டும், இலக்கியச் சான்று கொண்டும் அது நிலவுடமையாளரான சைவருக்கும் வணிகரான சமணருக்கும் நடந்த போர் என இவர்கள் நிறுவினர். இப்பெரும்போரில் மையத்தில் வாழ்ந்த நிலவுடமையாளர் நமக்குச் சார்பாக அடிநிலை மக்களான திருநாளைப் போவார் (பறையர்) கண்ணப்பர் (வேடர்) திருக்குறிப்புத் தொண்ட நாயனார் (வண்ணார்) திருநீலகண்ட யாழ்ப்பாணர் (பாணர்) முதலிய அடிநிலைச் சாதியினரையும் சேர்த்துக் கொண்டனர் ஆனால் சமணருக்கு எதிரான போராட்டம் வெற்றிபெற்று சைவம் தன்னை நிலைநிறுத்தி பிராமணர் ஆதரவுடன் பெரும் கோயில்கள் கட்டி சைவசித்தாந்தம் கண்டு பெரும் நிறுவனமாக உருவாகிய பின் சேர்ந்து போராடிய இவ்வடிநிலை மக்களுக்குக் கோயிலுக்குள் புக உரிமைமறுக்கப்பட்டது என்ற கொடுமைகளை இவர்கள் சுட்டிக்காட்டினர்.

சமணர்களுக்கு எதிரான போரில் அனைவரையும் இணைத்த பக்தி இயக்கம் தன் அலுவல் முடிந்ததும் அடிநிலை மக்களை கைவிட்ட கதையை இவர்கள் வெளிக்கொணர்ந்தனர். திருநாளைப்போவாரான பறையரான நந்தனார், தில்லைவெளியில் சிவனுடன் ஒளியில் கலக்கவில்லை. அந்தணர்கள் திட்டமிட்டு அப்பாவியான அவரை எரித்து ஒளிமயமாக்கி, ஒளிமயமான இறைவனுடன் கலந்து விட்டார் என்று இவர்களும் ஒரு புது வரலாறு கட்டினர். (இந்திரா பார்த்த சாரதியின் நந்தன் கதை நாடகம்)

சோழகாலத்தில் உருவான பேரரசும், பெரும் சித்தாந்தமான சைவசித்தாந்தமும் நில உடமையாளரதும், பிராமணரதும் வர்க்க நலன்களுக்கு அமையும் விதத்திற் செயற்பட்ட முறைமையை பேரா. கைலாசபதியின் பேரரசும் பெரும் தத்துவமும் என்ற கட்டுரையும் பேரா. சிவத்தம்பியின் சைவ சித்தாந்தம் - ஒரு சமூக வரலாற்று நோக்கு என்ற கட்டுரையும் விளக்கின.

4.2.3 தமிழர்களின் பொற்காலம் என்பது முழுத் தமிழர்களினதும்
பொற்காலமன்று, மையத்தில் வாழ்ந்த நிலவுடமையாளரான
தமிழரதும் வைதீகர்களினதும் பொற்காலமேயாகும்.
ஏற்கனவே இருந்த தகவல்களின் படி சங்க காலமும் சோழர்காலமுமே தமிழ் மக்களின் பொற்காலம் என்று கட்டமைக்கப்பட்டது. இதனோடு பல்லவ காலத்தையும் இணைக்கும் வழக்கமுண்டு. இவை ஏன் பொற்காலமென்று கட்டமைக்கப்பட்டதெனின் இக்கால கட்டத்திலே தான் மையத்தில் வாழ்ந்த நிலவுடமையாளரும் அவருக்குத் துணையாக நின்ற வைதீக மதங்களும் மேலோங்கி நின்ற காலங்களாகும். ஏனைய காலங்களில் களப்பிரர் காலத்தை இருண்ட காலம் எனவும் சோழருக்குப் பின்னர் தமிழ் நாட்டை இஸ்லாமியரும் தெலுங்கரும் மராத்தியரும் கிறித்தவர்களான மேற்கு நாட்டவர்களும் ஆண்ட காலத்தை பொற்காலம் அல்லாத காலம் எனவும் முன்னோர் கட்டமைத்தனர்.

சமணர் பௌத்தரின் தமிழ் நாட்டு வருகை நிலவுடமையாளருடன் போராடிக்கொண்டிருந்த வணிக சமுகத்தினருக்குச் சார்பாயிற்று. சமணரின் வைதீகமத எதிர்ப்பு மையத்தின் பண்பாட்டு விழுமியங்களைக் கேள்விக்குட்படுத்தின.

அனைவருக்கும் கல்வி (கல்வித் தானம்)

அனைவருக்கும் மருத்துவம் (ஒளடத தானம்)

அனைவருக்கும் அடைக்கலம் (அபயதானம்)

அனைவருக்கும் உணவு (அன்னதானம்)

என்பன சமணரின் கோட்பாடு சமண மதமும் பௌத்தமதமும் மையத்தைத் தாண்டி இடைநிலையை ஊடறுத்து விளிம்புநிலை மக்களிடையே வேரூன்றின. அடிநிலை மக்கள் சமூகக் கொடுமைகளிலிருந்தும் அடக்கு முறைகளிலிருந்தும் விடுதலை வேண்டினர். தம்மை மனிதர்களாக மதிக்கும் சமண பௌத்தத்தில் அதிகளவு சேர்ந்தனர். கி.பி. 2ஆம் நூற்றாண்டு தொடக்கம் 6ஆம் நூற்றாண்டு வரை களப்பிரர் ஆட்சிக்காலத்தில் சமணமும் பௌத்தமுமே தமிழகத்தில் பிரதான மதங்களாக இருந்தன.

சமூகத்தில் ஒதுக்கப்பட்ட தாசிகுல மகளான மாவியும் மணிமேகலையும் அங்கீகரிக்கப்பட்டனர். மணிமேகலை பௌத்த துறவியானாள். அவள் துறவியானதும் அவளைக் குறைத்துப் பார்த்த மக்களே அவளது காலில் விழுகின்றனர். தம்மை வருத்திய சமூகக் கொடுமைகளினின்று விடுதலை பெறவிரும்பிய அடி நிலை மக்கள் விடுதலைக்கு வழிகாட்டிய மதங்களின் பின் செல்லுதல் வியப்பில்லை அல்லவா?

இவ்வண்ணமே இஸ்லாமியர் வருகையும் அடிநிலை மக்களுக்குச் சார்பாக அமைந்தது. சாதிபேதம் காட்டாத இஸ்லாமில் பெருந்தொகை அடிநிலை மக்கள் இணைந்தனர். இஸ்லாமிய அரசர்களின் படைகளில் இவர்கள் இணைக்கப்பட்டனர்.

ஐரோப்பியர் ஆட்சியிலும் இதுவே நிலவியது. கிறிஸ்தவ பாதிரிமாரினால் கட்டப்பட்ட பாடசாலைகளும் அறநிலையங்களும் அடிநிலை மக்களின் கல்வி நிலையையும் வாழ்க்கை முறைகளையும் உயர்த்தின. பல அடிநிலை மக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினர். சமண, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்கள் பெரு வளர்ச்சியுற்ற காலம் ஒரு வகையில் அடிநிலை மக்களின் பொற்காலமாக இருந்தது. அடிநிலை மக்களின் பொற்காலம் மையத்தில் வாழ்ந்த உயர்நிலை மக்களுடைய பொற்காலம் ஆகாதுதானே.

இவ்வண்ணம் தமிழரின் பொற்காலம் என்று கட்டமைக்கப்பட்ட கட்டமைப்புகள் ஆராய்வாளர்களினால் கேள்விக்குட்படுத்தப்பட்டன.

4.2.4. சமணம், பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் என்ற சமயங்களும்
தமிழையும் பண்பாட்டையும் பெரிதும் வளர்த்தன.
வரலாற்றுப் போக்கில் தமிழர்கள் வாழ்வில் பல்வேறு மதங்கள் கலந்திருக்கின்றன. அவை அம்மக்களின் வாழ்க்கை முறைகளும் சிந்தனைகளும் வளர உதவிபுரிந்துள்ளன. அற ஒழுக்கக் கருத்துக்களும் நீதிநூல்களும் தொல்காப்பியம், நன்னூல் முதலாம் இலக்கணங்களும் குளாமணி, சீவக சிந்தாமணி முதலாம் இலக்கியங்களும் சமணர் தமிழுக்கு அளித்த கொடைகளாகும்.

ஏக வணக்கக் கருத்துக்களும் சமத்துவ சிந்தனைகளும் சீறாப்புராணம், இராஜநாயகம் முதலாம் காவியங்களும் இஸ்லாம் தமிழர்க்களித்த செல்வங்களாகும்.

தாராண்மை வாதக்கருத்துக்களும், முற்போக்கு சிந்தனைகளும் தேம்பாவணி, சதுரகராதி, ஒப்பிலக்கணம் முதலாம் இலக்கண இலக்கியங்களும் கிறிஸ்தவர் தமிழர்க்களித்த செல்வங்களாகும்.

சமத்துவ சிந்தனைகளையும் அறநெறிச் சிந்தனைகளையும் மணிமேகலை, வீரசோழியம், குண்டலகேசி முதலாம் இலக்கிய இலக்கணங்களும் பௌத்தர் தமிழர்க்களித்த செல்வங்களாகும்.

இந்நான்கு மதங்களினதும் வருகை தமிழர் சிந்தனைகளையும் தமிழ் இலக்கியத்தையும் வளர்த்துள்ளன என்ற கருத்துக்களை மயிலை வேங்கடசாமி, சக்கரவர்த்தி நயினார், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் போன்ற தமிழ் அறிஞர்கள் வெளிக்கொணர்ந்தனர். சமணமும் தமிழும், பௌத்தமும் தமிழும், இஸ்லாமும் தமிழும், கிறிஸ்தவமும் தமிழும் என்ற கருத்துருவங்கள் தோன்றின.

வைதிகச சிமிழுக்குள்ளும் சைவ வேலிக்குள்ளும் இருந்தும் தமிழை மீட்டு அது அனைத்து மதங்களுக்கும் உரியது என்ற புதிய கருத்துக்கள் கட்டமைக்கப்பட்டன.

4.2.5 சோழர்கால கோயில் அமைப்பு சுரண்டல் தன்மை கொண்டது.
சோழர்கால மன்னர்கள் கோயில்களைப் பெருமளவு கட்டினார்கள். இராஜராஜசோழன் கட்டிய தஞ்சை இராஜராஜேஸ்வரன், அவன் மகன் இராஜேந்திரன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம் என்பன தமிழர் கலைகளின் கொடுமுடிச் சின்னங்களாகக் கொள்ளப்பட்டுள்ளன. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழியும் உருவானது.

ஆரம்ப காலத்தில் கோயில்கள் பெரும்பொருளாதார நலன்கள் அற்றவையாகவும் மக்கள் அனைவரும் கூடி வழிபடும் இடங்களாகவும் அமைந்திருந்தன. கல்லால் கோயில் கட்டப்பட்ட பல்லவர் காலத்தில் அவை சில கட்டுப்பாடுகளுடனும் சித்தாந்தங்களுடனும் வழிபடும் இடங்களாயின. சோழர் காலத்திலோ கோயில் ஒரு பெரும் நிறுவனமாகிவிட்டது.

கோயிலுக்கு மூன்று வகைகளில் நிலங்கள் கிடைத்தன.
1. ஏற்கனவே கோயிலுக்கு இருந்த நிலங்கள்.

2. அரசர்களாலும் குடும்பத்தினராலும் அன்பளிப்பு செய்யப்பட்ட நிலங்கள்.

3. சிறிய நிலப்பரப்பு வைத்திருந்த விவசாயிகளுக்கு கடன் கொடுத்து அக்கடனை விளைச்சலின்மையாற் கட்டத்தவறிய விவசாயிகளிடமிருந்து பறித்தெடுத்த நிலங்கள்.

(இத்தகைய விவசாயிகளை கோயில் அடிமைகளாக்கி குலக் குறிசுட்டு கோயில் அடிமைகளாக வைத்துக்கொண்டதுடன் கோயில் தனது நிலங்களில் வேலை செய்யவும் வைத்தது.)

இவ்வண்ணம் கோயிலில் உள்ள இறைவனின் பெயரால் நிலங்களையும் அடிமைகளையும் மேலும் மேலும் சேர்த்துக் கோயில் பெரும் நிலவுடமை நிறுவனமாகியது.

கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலங்கள் சோழர் காலக் கல் வெட்டுக்களில் தேவ தானம் என்று அழைக்கப்பட்டன. அவற்றை நிர்வகிக்கும் உரிமை கோயிற் சபையாரிடம் இருந்தது. இவர்கள் பெரும்பாலும் தமக்கென நிலமுடைய நிலவுடமையாளர்களே. அதாவது மையத்தில் வாழ்ந்தவர்களே.

இவ்வகையில் கோயில் சோழர் ஆட்சியில் ஒரு பெரு நிறுவனமாகி விட்டது. பெரும் நிலப்பரப்புகள் கொண்ட நிலவுடமை நிறுவனமாக, மக்களுக்கு கடன் கொடுக்கும் வங்கியாக, சோழர் கால நிலவுடமைப் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் நிலவுடமை அமைப்பாக தன்னகத்தே பெரும் பொற்குகைகளைக் கொண்ட தங்க பொன் சுரங்கமாக நடனம், சங்கீதம், சிற்பம், ஓவியம் சார்ந்த நளின கலைகளை வளர்க்கும் கலைக்கூடமாக சுருங்கச் சொன்னால் சர்வ வல்லமை உள்ள அதிகாரம் கொண்ட நிறுவனமாக விளங்கியது. (இக்கலைகள் யாவும் மையத்தில் வாழ்ந்த அரசர்களையும் நிலப்பிரபுக்களையுமே மகிழ்ச்சியுற செய்தன. கோயிலுக்கு வெளியே நின்ற அடிமட்ட மக்களுக்கு இம்மகிழ்ச்சி கிடைக்கவில்லை.)

இத்தகைய கோயில்கள் அதிகாரம் மிகுந்த அரசனைக்கூட கட்டுப்படுத்தும் சக்திமிக்க நிலையங்களாக இருந்துள்ளன. இவ்வாறு இவை அரசியல் மையங்களாக உருப்பெற்றன.

4.2.6. கோயிலின் சுரண்டலுக்கு எதிராக எழுந்த சுரண்டப்பட்ட மக்களின்
போராட்டங்கள்.
இச்சுரண்டல் முறைகளை மக்கள் எப்போதும் சகித்துக் கொண்டிருந்தார்கள் என்று கூற முடியாது. வாழ்க்கைத் துயரங்கள் அவர்களை ஒன்றுபடுத்தின. கொடுமை அளவு மீறும் போது அவர்கள் போராடினர். சில அபூர்வ கல்வெட்டுக்கள் இப்போராட்டம் பற்றி கூறுகின்றன.

தஞ்சாவூரில் பஞ்சைக் கிராம கல்வெட்டு ஒன்றில் தங்களுக்கு ஜீவிதமான நிலத்தை கோயிற் சபையார் கைப்பற்றிய அநீதியை அக்கோயிலின் பணியாட்கள் முறையிட்டும் நீதிகிடைக்காத போது அவர்கள் அக்கோயிலின் முன் தீ வளர்த்து தீயிலிறங்கி உயிர்தியாம் செய்தமை கூறப்பட்டுள்ளது.

இதேபோல் தங்கள் உரிமையை நிலைநாட்ட உழைக்கும் மக்கள் வீரமாக உயிர் நீத்த செய்திகள் கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகின்றன. மக்கள் ஆதரவைத் திரட்டவும் மன்னன் கவனத்தை ஈர்க்கவும் கோயிற் சபையாரின் அநீதியை அம்பலப்படுத்தவும் ஊர்க்கோபுரத்தின் மேல் ஏறி கீழே விழுந்து உயிர் நீத்த செய்திகள் சில கோயில் சாசனங்களில் இருந்து தெரியவருகின்றன.

கோயில்களிலே ஆடல் பாடல் நிகழ்த்த தேவரடியாள்கள் நியமிக்கப்பட்டனர். இரண்டு வகை தேவரடியார்கள் கோயிலுக்கு இருந்தன.

ஒருவகையினர், அரசகுடும்பத்தை சேர்ந்தவர்களும் வணிக குடும்பத்தை சேர்ந்தவர்களும் தம்மிடமுள்ள பெரும் செல்வத்தை கோயிலுக்கு கொடுத்து தேவரடியாள்கள் ஆகிய செல்வாக்கு மிக்க பணக்கார தேவரடியாள்கள்.

மற்றவகையினர் பஞ்சம், வெள்ளம் காலத்தில் நிலம் இல்லாதவர்கள் தங்களுடைய பெண்களைக் கோயிலுக்கு விற்று விடுவார்கள். அவ்வண்ணம் வரும் ஏழைத்தேவரடியாள்கள்;. அப்பெண்களுக்குக் கோயில் நிர்வாகம் சிறிது நிலம் கொடுக்கும். அந்நிலத்தை வைத்து அப்பெண்ணின் குடும்பம் வாழும். ஆனால் குடும்பம் அதிகரிக்க அந்நிலத்திற்கு வட்டி கட்ட முடியாத நிலை வர அந்நிலத்தை கோயில் பறித்துக் கொள்ளும். இவ்வண்ணம் அக்குடும்பம் பெண்ணையும் நிலத்தையும் இழக்கும். இது ஒரு மறைமுக சுரண்டல் ஆகும்.

இரண்டாம் நிலை தேவரடியார்கள் ஒன்று திரண்டு தமது நிலப் பறிப்புக்கு எதிராக போராட்டம் நடாத்தி உள்ளனர். சதுரிமாணிக்கம் என்ற தேவரடியாள் இவ்வண்ணம் அடிமையாக வந்த இரண்டாம் நிலைத் தேவரடியாள். இவள் தமது உரிமையை நிலைநாட்ட கோபுரத்தின் மேல் ஏறி விழுந்து உயிர்விட்டாள் என்ற கல்வெட்டு உண்டு. (இதனால் அக்கட்டளையை மாற்ற அரசன் விடுத்த கல்வெட்டில் இதிலுள்ளது.)

சில சமயங்களில் ஆட்சியின் அநீதியையும் நிலவுடமையின் கொடுமையையும் தாங்க முடியாத மக்கள் ஆயுதம் தாங்கி போராடியும் இருக்கிறார்கள். நிலங்களை இப்படித்தான் பங்கிட வேண்டும். கோயிலுக்கு இன்ன இன்ன உரிமைகள் இருக்கின்றன என்று கோயிற் சுவர்களில் எழுதப்பட்ட கல்வெட்டுக்களை இடித்து அழித்திருக்கிறார்கள்.

கலகங்களால் இத்தகைய கல்வெட்டுக்கள் அழிந்து விட்டதை குறிப்பிட்டுப் புதிய பத்திரங்களையும் கல்வெட்டுக்களையும் உண்டாக்கும் படி அரசன் பொறித்த சாசனங்கள் மூலம் இதனை உணர்கிறோம்.

இவ்வண்ணம் தம்மை அடக்கிய, தம்மை சுரண்டிய மைய நிறுவனமாக கோயிற் கொடுமைகளுக்கு எதிராக மையத்திலும் இடையிலும் வாழ்ந்த சிறு நிலம் வைத்திருந்த ஏழைகளும் அடக்கப்பட்டோரும் போராடி உள்ளனர்.

4.2.7 அரசின் தன்மைகள்
தமிழ் நாட்டு அரசர்கள் சர்வ வல்லமை கொண்டவர்களாகவும், தெய்வீக உரிமை பெற்றவர்களுமாகவே நமக்கு தெரிந்திருந்தனர். குலோத்துங்க சோழனை திருமாலின் அவதாரமாகவே ஜெயங் கொண்டார் கலிங்கத்துப் பரணியில் கூறுகிறார். கடவுளின் பிரதிநிதியாகவே அரசன் ஆள்கிறாள் என்பதனைக் காட்டும் வகையில் இராஜ இராஜசோழனுக்கு சிவபெருமான் முடி சூட்டும் சிற்பம் ஒன்று வடிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடவுள் பிரதிநிதியான அரசனின் மறுபக்கம் நமக்குத் தெரியாத ஒன்று.

இராஜராஜசோழனும், ராஜேந்திர சோழர்களும் கடல் கடந்து படை எடுத்தனர். பிறநாட்டுச் செல்வங்களைத் தம் நாடு கொண்டு வந்தனர். தோற்றவர்களையும் அவர்கள் நாட்டுப் பெண்களையும் தம் நாட்டுக்கு அடிமைகளாகக் கொணர்ந்தனர். போரிலே பிறநாட்டவரைக் கொலை செய்தனர். எதிரிகள் நாட்டை கொள்ளையிட்டனர். ஆவும், பார்ப்பனரும், அறவோரும் பெண்களும் சென்று விடுங்கள் என்று அறமுரைத்துப் போர் தொடங்கினாலும் போரிலே அறமுரைத்துப் போர் தொடங்கினாலும் போரிலே அற விதிகள் மீறப்பட்டன.

பிறநாட்டுப் படை எடுப்புக்களால் கவர்ந்த பணம், உள்நாட்டு வரிகளால் பெற்ற பணம், பாரம்பரியச் செல்வம் பிற மன்னர்களின் திறை, உள்ளுர்ப் பணக்காரர்களின் அன்பளிப்பு என மன்னனுக்குப் பல வழிகளாலும் பெரும் செல்வம் கிடைத்தது. மிகப் பெரும் நிலவுடமையாளனாகவும், செல்வனாகவும் மன்னன் இருந்தான். நாட்டைக் காப்பதற்காகவே வரி என்ற பெயரில் மக்கள் மன்னனால் சுரண்டப்பட்டனர்.

நாலு வர்ணப் பாகுபாடு சமூக அமைப்பின் நீதியாக இருந்தது. மனுதர்மம் அதுவே எனக் கூறப்பட்டது. பிராமணர் மிக உயர்ந்தோர் அரசர் (ஷத்திரியர்) இரண்டாமவர், வணிகர் (வைசியர்) மூன்றாமவர், சூத்திரர் (உழைப்பாளிகள்) நான்காம் நிலையினர் என தர்மம் வகுக்கப்பட்டது.

சட்டத்திலும் தண்டனை முறைகள் சாதிக்குச் சாதி வேறுபட்டன. பிராமணருக்கு மரண தண்டனையில்லை என்ற சட்டமே இருந்தது. சாதி முறைமைகள் மீறுவோர் மிகவும் தண்டிக்கப்பட்டனர்.

பிராமணரும் சத்திரியரும், வைசியரும் சூத்திரரும் மையத்திலும் இடையிலும் வாழ்ந்தனர். மையத்தில் வாழ்ந்த சூத்திரர் எனப்படுவோர் உழைப்பாளி உயர் வகுப்பினராவர்.

இவர்களுள் அடங்காத பஞ்சமர் (அடி நிலை மக்கள்) ஊருக்கு வெளியே வைக்கப்பட்டனர். நால் வகை வருணத்துக்குள்ளும் இவர்கள் அடங்கவில்லை. (பத்து அவதாரங்கள் எடுத்த, பன்றி அவதாரம் கூட எடுத்த பரமன் ஒரு பஞ்சம அவதாரம் எடுக்கவில்லை என்பது கவனத்திற் கொள்ள வேண்டியது.) இதுவே சமூக நீதியாக அன்று உரைக்கப்பட்டது. அச் சமூக நீதியை நிலை நிறுத்துவனவாக சமூக அமைப்பை மாறாதபடி பாதுகாக்கும் காவலனாகவே அரசன் இருந்தான். இவ்வரசர்கள் யுக புருஷர்கள், அவதாரங்கள் என்று வேறு அழைக்கப்பட்டனர்.

ராஜராஜசோழன் தமிழ் வளர்த்ததைவிட சமஸ்கிருதத்தையே அதிகம் வளர்த்திருக்கிறான் போலத் தெரிகிறது. பிரமதேயம் என்ற பெயரில் பிராமணர்கட்கு நிலங்கள் கொடுக்கப்பட்டன. அவை சதுர வேதிமங்கலம் என்றழைக்கப்பட்டன. வேதப் பாடசாலைகள் நிறுவப்பட்டன. சமஸ்கிருதம் அரச மொழியாக அமைந்தது. இவ்வகையில் தமிழை விட சமஸ்கிருதத்தையே அம் மன்னன் அதிகம் வளர்த்தான்.

மிக அதிகமாக மன்னர்கள் கோயில் கட்டினார்கள். பெரும் கோயில்களை மன்னர்கள் கட்டியமைக்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன.

ஒன்று சமூக அமைப்பைக் கட்டிக் காக்கும் நிறுவனமாக, ஒரு படையின் வேலையை கலாசாரம் என்ற போர்வையில் கோயில் செய்தது. அது ஒரு வகைப் பண்பாட்டு அடக்குமுறை. படையின் வேலையின் ஒரு பகுதியைக் கோயில் செய்தமையினால் படைக்கு ஒதுக்கும் பெரும் பணத்தின் ஒரு பகுதியைக் கோயில் கட்ட ஒதுக்குதல் அரசனுக்கு அவசியமாக இருந்தது.

மற்றது படை எடுப்பில் செய்த படுகொலைகளுக்குப் பிராயச்சியத்தம் கோயில் கட்டி இறைவனைக் குடியிருத்தி அவர் தொண்டுகள் செய்தலேயாகும். இவ்வண்மை செய்தால் மக்களைக் கொலை செய்த பிரமஹத்தி மன்னனுன்னு வராது என பிராமணர் செய்த போதனைகளுக்கியைய பெரும் கோயில்களை மன்னன் கட்டினான்.

4.2.8 சோழர் காலப் பொருளாதார அமைப்பின் சுரண்டல்முறை
சோழர் காலத்தில் நிலமே பிரதான உற்பத்தி கருவியாக இருந்தது. சோழர் காலத்தின் நிலவுடமை முறையில் நான்கு வகையான நிலவுடமை முறைகள் இருந்தன.

1. வெள்ளான் வகை - இது சொந்த நிலம், உழுவித்து உண்ணும் நிலக்கிழாருக்குரியது.

2. தேவதானம் - இவை கோயில்களுக்கு உடைமையாக இருந்தன. சபையார் இதற்குப் பொறுப்பு.

3. பிரமதேயம் - பிராமணருக்கு உடைமையான நிலங்கள்

4. ஜீவிதம் - கோயில் பணி செய்வாரக்கு உரித்தான நிலங்கள்

இந்த நிலங்கள் ஏதும் இல்லாமல் வசதியற்ற மையத்திற்குத் தூரமான இடங்களில் வாழ்ந்த தீண்டத் தகாத மக்கள் வாழ்ந்த இடங்களும் இருந்தன. அவை எந்தவித பயனுமற்ற விளைச்சல் அற்ற நிலங்களாகும்.

சோழர் காலத்தில் நிலவுடமை முறைகளிற் பல மாற்றங்கள் செய்தனர். வெள்ளான் வகையில் சிறு நிலச் சொந்தக்காரர்களின் உடைமைகளைப் பறித்து கோயில் தேவதானமாக மாற்றினர்.

சிலவற்றை பிராமணருக்குரிய பிரமதேயமாக்கினார்கள். இவ்வண்ணம் கோயில் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்திய மேல் வர்க்கத்திற்கே நில உரிமை மாற்றப்பட்டது. இதனால் உழுவித்து உண்போர் சுகமாக வாழ உழுதுண்போர் நிலை மேலும் மேலும் தாழ்ந்தது.

4.2.9 அடிமை முறைகள் தமிழர் மத்தியில் இருந்தனர்.
தமிழர் மத்தியில் சங்க காலத்திலிருந்து ஆங்கிலேயர் காலம் வரை அடிமை முறைகள் இருந்துள்ளன. இவ்வடிமைகளைப் பின்வருமாறு பிரிக்கலாம்.

1. போரினால் கொண்டுவரப்பட்ட போர் அடிமைகள்

2. வீட்டடிமைகள்

3. கோயில் அடிமைகள்

4. மட அடிமைகள்

அந்தணர்களும் அரசர்களும் வேளார்களும், அரச அதிகாரிகளும் கோயில்களுக்கும், மடங்களுக்கும் அடிமைகளைத் தாமாகவோ விலைக்கோ கொடுத்த செய்திகளைக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. ஒரு குறிப்பிட்ட தேவைக்கு மேல் அடிமைகள் தேவையில்லை என்ற நிலையில் இதனைச் செய்திருக்கலாம்.


இவ்வடிமைகளுக்கு கைகளில் பாதங்களில் இலச்சினை பொறிக்கப்பட்டன. (ஆடு மாடுகளுக்கு குறியிடுவதுபோல) வழியடிமை, என்ற சொற்றொடர் பரம்பரையாக அடிமைகளை வைக்கும் வழக்கத்தைக் காட்டுகிறது.

இவ்வடிமைகள் அனைவரும் தமிழர்களே. இங்கு தமிழரே தமிழரை அடிமைகளாக வைத்திருந்த ஒரு பண்பாட்டினை நாம் அறிந்துகொள்கிறோம்.

4.2.10 மையத்திற்குள்ளும் முரண்பாடு
மையத்திற்குள் அதிகாரத்திலும் சமூக மேலடுக்கிலும் இருந்த வர்க்கங்களுக்கிடையே போராட்டங்களும், மோதல்களும் நடைபெற்றுள்ளன. என்னும் அடி நிலைக்களைச் சுரண்டுவதில் மைய வர்க்கங்கள் தமக்குள் சமரசமும் செய்து கொண்டன. மையத்தில் வாழ்ந்த அரசருக்கும் வணிகருக்கும் நடைபெற்ற முரண்பாட்டையே சிலப்பதிகாரம் காட்டுகிறது. அரச வணிக முரணில் அங்கு வணிகர் வெல்கின்றனர். பல்லவர் காலத்தில் நடைபெற்ற நிலவுடமையாளரான சைவர், சமணரான வணிகர் முரண்பாட்டில் வணிகர் அழித்தொழிக்கப்படுகின்றனர். (18000 சமணர் கழுவேற்றப்பட்டதாக வரலாறு) சைவ மதத்திற்கும் வைஷ்ணவத்திற்கும் நடைபெற்ற முரண்பாடுகூட மையத்தில் வாழ்ந்த இரண்டு வித நிலவுடமை வர்க்கங்கட்கிடையே நடந்த போரே என்று பலர் விளக்கியுள்ளனர். (சமூக அமைப்பை இறுக்கமாகப் பேணியது சைவம், சமூக அமைப்பைச் சற்று நெகிழ்த்துப் பார்த்தது வைணவம்)

இவ்வாறு நமக்குத் தெரியாத விடயங்கள் பல வரலாற்றிலும் பண்பாட்டிலும் உள்ளன. இவை யாவும் மையம் சார்ந்தவைதாம்.

எனினும் மையத்தை விட்டு இடையிலும் வெகுதூரம் விளிம்பிலும் தமிழர் வாழ்ந்தனர். இடையில் வாழ்ந்தவர்கள் மையத்தோடு தொடர்புடைய ஆனால் மையத்தை விட்டுத் தள்ளி வைக்கப்பட்ட கைவினைஞர்கள், சிறு நிலவுடமையாளர் இடைப்பட்ட சாதிகள் ஆவர். விளிம்பில் வாழ்ந்தோர் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆவர். பாணன், பறையன், துடியன், கடம்பன் என நான்கு பெரும் குடிகளாகப் பெருமையுடன் சங்ககாலத்தில் வாழ்ந்த இந்நான்கு குடிகளும் காலப்போக்கில் விளிம்பு நிலை மக்களாக்கப்பட்டு விட்டனர். அவர்களைப் பற்றி நமக்கு அடியோடு தெரிவதில்லை.

4.3 மையத்துக்கு வெளியே காணப்பட்ட தமிழ்ப் பண்பாடு
மையத்துக்கு வெளியே இடையிலும் விளிம்பிலும் தமிழ் மக்கள் மிகப் பெரும்பான்மையினர் வாழ்ந்தனர் அவர்கள் தமக்கென தனிப்பண்பாடுகளுடன் வாழ்ந்தனர். அவர்களின் மத அனுஷ்டானங்கள், வழிபாட்டு முறைகள், இலக்கியங்கள், மொழி, வாழ்க்கை முறைகள் என்பன மையத்தைவிட வேறாக இருந்தன.

மையத்திலிருந்தோர் சிவன், திருமால், முருகன், பிள்ளையார், சக்தி என்று ஆகமமயப்பட்ட பிராமணர் பூசை புரியும் பெரும் தெய்வங்களை வணங்க இவ்விடை நிலை மக்களோ பெரும் தெய்வங்களுடன் காளி, மாரி திரௌபதி முதலாம் பல்வேறு வகையான பெண் தெய்வங்களையும், வைரவர், மதுரைவீரன் முதலாம் ஆக முறைசாராத பூசாரிமார் பூசை புரியும் சிறு தெய்வங்கள் என மேட்டிமையாரால் அழைக்கப்பட்ட தெய்வங்களை வணங்கினர். வருடம் தோறும் இத் தெய்வ விழாக்கள் மையத்தில் வாழ்ந்த கோயில் திருவிழாக்கள் போல அல்லாமல் தீப்பாய்தல், பள்ளயம் கொடுத்தல் பலி கொடுத்தல், கும்பம் சொரிதல், மடை என்ற வித்தியாசமான வழிபாட்டு முறைகளைக் கொண்டதாயிருந்தன.

இத் தெய்வங்கைள வழிபட அவர்கள் தேவாரம் அல்லாத அம்மன் அகவல், சிறு காவியம், தாலாட்டு, சிந்து என்ற பாடல்களைப் பாடினர். பாடல்களுக்கும் ஆடல்களுக்கும் இசைவாக உடுக்கு பறை என்பன அடித்தனர்.

உடுக்கு அடித்து, சிலம்பொலித்து பறைதட்டி மாரி, காளி முதலாம் தெய்வங்களை மனதரில் வரவழைத்து அத் தெய்வங்களுடன் தரகர்களின்றித் தாமே பேசி தம் தெய்வ வழிபாடுகளை இவாகள் நிகழ்த்தினர். சாமியாடுதல், தெய்வமாடுதல், கலையாடுதல், பேயாடுதல என்று இவை அழைக்கப்பட்டன.

தெருக்கூத்து, ஒயிலாட்டம்
தமிழ்நாட்டில் வட ஆர்க்காடு தென் ஆர்க்காட்டில் பல கிராமங்களில் வருடம்தோறும் 18 நாட்கள் நடைபெறும் பிராமணர் இடம்பெறாத திரௌபதை அம்மன் கோயிற் சடங்குகளையும் அங்கு நடைபெறும் பாரதப் படிப்பு, சடங்குசார் நாடகங்கள் சடங்குகளில் நாடகங்கள் சடங்குகளில் மக்க் பங்கு கொள்ளும் தன்மைகள் யாவற்றையும் அல்பஹில்பைற்றல் தனது ஊரடவ ழக வுhசையரியவாi (திரௌபதி வழிபாடு பாகம் 1,11) எனும் நூல்களில் விபரமாகக் கூறியுள்ளார். இதுபோன்ற வழிபாடுகள் இடைநிலை மக்களிடையே தமிழ்நாட்டின் பல பாகங்களிலுமுண்டு. ஊருக்கு ஊர் தெய்வம் வேறுபடும்.

இடைநிலையில் வாழ்ந்த இப்பெரும்பான்மைத் தமிழ் மக்களின் உடை, வீடு, வாழ்க்கைமுறை, விளையாட்டுக்கள், பொழுதுபோக்குகள், நம்பிக்கைகள், எழுதப்பட்ட இலக்கியங்கள் (இதனை நாம் வாய்மொழிக்கும் செந்நெறி இலக்கியங்களுக்கும் இடைப்பட்ட இலக்கியங்கள் எனலாம். புகழேந்திப் புலவர் பாடிய அல்லியரசாணிமாலை, நல்லதங்காள் கதை என்பனவும் மாரி அம்மன் தாலாட்டு, மாரி அம்மன் காவியம் என்பன இதற்குள் அடங்கும். இதனை ஆங்கிலத்தில் ழசயவரசந என்பர். ழசயவரசந என்பது ழசயட என்ற வாய்மொழிப் பண்பும் டவைநசயவரசந என்ற எழுத்துப் பண்பும் கொண்ட இலக்கியங்களாகும். இதனையே நாம் வாய்மொழி இலக்கியம் என்கிறோம், என்பவற்றுடன் அவர்களிடம் கூத்தும் பாட்டும் இருந்தன. தெருக்கூத்து, தேவராட்டம், ஒயிலாட்டம், கும்மி, கோலாட்டம் என அவை விரியும்.

இவர்கள் பேசியது பேச்சுமொழி. அது கொடுந்தமிழ் என அழைக்கப்பட்டது. மைய மக்களைவ விட வேறானது. இவர்களின் பண்பாடு மைய மக்களைவிட வேறானதாக இருந்தன. இதனை நாம் தமிழர் பண்பாட்டின் மறுபகுதி என்று குறிப்பிடலாம்.

4.3.1 மையத்துக்கு வெளியே காணப்பட்ட அடிநிலைத் தமிழ்ப்பண்பாடு
இடைநிலைக்கு அப்பால் விளிம்பு நிலையில் வாழ்ந்த அடித்தள மக்களிடமும் இடைநிலை மக்களிடம் காணப்பட்ட மாரி, காளி வழிபாடு இருப்பினும் இவர்கள் தம் குலத்தலைவர்களையும், முன்னோர் வழிபட்ட தெய்வங்களையும், ஆவிகளையும் வணங்கினர். (இது பண்டைய தமிழர் வணக்க முறையின் எச்ச சொச்சம்)

இவர்களிடம் இடைநிலை மக்களிடம் காணப்பட்ட எழுதப்பட்ட ழசயவரசந இருக்கவில்லை. எழுத்து அவர்களிடம் இன்மையால் வாய்மொழியாக மாத்திரமே அவற்றை வைத்திருந்தனர். வாய்மொழியாகவே அவர்கள் தம் தலைமுறைக்கு அதனைக் கடத்தினர்.

அவர்களது வாழ்க்கைமுறை, பொழுதுபோக்கு, விளையாட்டுக்கள், நம்பிக்கைகள் வீடு கட்டும் முறை என்பன இன்னும் வேறாக இருந்தன. அவர்களும் தம்மளவில் தனித்துவமான பண்பாடுகளைக் கொண்டிருந்தனர். இவர்களது பண்பாட்டின் ஊற்றுக் கண்களை ஆரியப் பண்பாடும், பிராமணியப் பண்பாடும் சற்றும் கலக்காத மிகப் புராதன தமிழர் பண்பாட்டுடன் இன்றைய மானிடவியலாளர் இனம் காணுகின்றனர். இம்மக்கள் தம்மை இன்று தலித்துகள் என்று மாத்திரமல்ல ஆதித்திராவிடர் என்றும் அழைத்துக் கொள்கின்றனர்.

மிகப் பெரும்பான்மைத் தமிழர்களாக இடைநிலை, விளிம்பு நிலைத் தமிழரின் பண்பாடுகளை தமிழ்ப் பண்பாட்டின் பிரதான வட்டத்துக்குள் கொண்டு வரப்படுவதில்லை.

இப்பண்பாடுகள் நமக்குப் பெரிதாகத் தெரியப்படுத்தப்படுவதில்லை. இவற்றுள் சில பண்பாட்டு அம்சங்கள் நமக்கு அடியோடு தெரியாதவை.

அடியோடு தெரியாத பெரும்பன்மைத் தமிழ் மக்களின் வரலாற்றையும், பண்பாட்டையும் அறிந்துகொள்ள இன்று புதிய ஆய்வு முறைகளும் அறிவு முறைகளும் தோன்றியுள்ளன. இப்புதிய சிந்தனைகள் நமக்குத் தெரியாதவற்றை மேலும் மேலும் தெரிந்துகொள்ள புதிய சிந்தனா ஆயுதங்களை எமக்குத் தந்துள்ளன. அவை யாவை? அச் சிந்தனை முறைகள் புதிய வரலாற்றையும் பண்பாட்டையும் எவ்வண்ணம் விளக்குகின்றன என்பவற்றை இனிப் பார்ப்போம்.


5. வரலாறு பண்பாடு பற்றிய
நவீன சிந்தனைகளும் தெரியாதவை பற்றி
அவை விளக்கும் முறையும்
நாம் முன்னரேயே குறிப்பிட்ட படி நவீன சிந்தனைப் போக்குகள் மாற்று வரலாறு எழுதும் முறையியலை வரலாற்று ஆசிரியர்களுக்கும் பண்பாட்டு வரலாற்று ஆசிரியர்கட்கும் தந்துள்ளன.

1. மாற்று வரலாறு (யுடவநசயெவiஎந ர்ளைவழசல)

2. அடித்தளத்திலிருந்து வரலாறு (ர்ளைவழசல கசழஅ வாந டிநடழற)

3. அடித்தள மக்கள் வரலாறு (ளுரடியடவநசn ர்ளைவழசல)

4. பெண்ணிய வரலாறு (குநஅinளைவ ர்ளைவழசல)

5. புதிய வரலாறு (நேற ர்ளைவழசல)

என்ற வரலாற்றுப் பள்ளிகள் பல இன்று பேசப்படுகின்றன.

5.1 மாற்று வரலாறு
இதுவரை எழுதப்பட்ட வரலாறுகள் யாவும் ஆளும் வர்க்கங்களினதும் மையத்தில் வாழ்ந்த உயர் மக்களினதும், அவர்கள் பார்வையிலும் எழுதப்பட்ட வரலாறுகளாகும். அப்படி எழுதப்பட்டமையினால் மையத்திற்கு அப்பால் வாழ்ந்த மக்களின் வரலாறு, வாழ்வு முறைகள் எழுதப்படவில்லை. மையத்தின் வரலாறு அதிகார மயப்பட்டு நின்ற சமூகத்தின் பண்பாட்டு அரசியல் மேலாதிக்கம் செலுத்தியோரின் வரலாறு எனவே மாற்று வரலாறு எழுதப்பட வேண்டும் என்ற கோட்பாடே மாற்று வரலாற்றாகும்.

5.2 அடித்தளத்திலிருந்து வரலாறு
அடித்தளத்திலிருந்து வரலாறு (ர்ளைவழசல கசழஅ வாந டிநடழற) என்பது அடித்தள மக்களின் பார்வையில் எழுதப்படும் வiலாறாகும். மையத்திலிருந்தோர் சமூகத்தைப் பார்த்த முறைமை வேறு. அடித்தளத்திலிருந்தோர் சமூகத்தைப் பார்த்த முறைமை வேறு. அடித்தளத்திலிருந்தோர் சமூகத்தைப் பார்த்த முறைமை வேறு. மைத்திலிருந்தோரான மேட்டிமையாரின் பார்வையில் மேட்டிமையாரின் நலன்களுக்காக வரலாறு கட்டப்பட்டது போல அடித்தளத்திலிருந்தோர் சமூகத்தைப் பார்க்கும் பார்வையில் அடித்தளத்தோரின் நலன்களுக்காக வரலாறு கட்டப்பட வேண்டும் என்பது அடித்தளத்திலிருந்து வரலாறு எழுதும் முறைமை.

உதாரணமாக மகாபாரதப் போரை, மேட்டிமையாளரான துரியோதனனும் வீமனும் தன் சபதங்களை நிறைவேற்றும் போராகவும் தத்தம் இராச்சியங்களைப் பெறும் போராகவும் பார்த்திருக்கலாம். ஆனால் அங்கு சண்டையிடச் சென்ற ஒரு அடி நிலை வீரன் எப்படிப் பார்த்திருப்பான்? அவனுக்கு அங்கு சபதமும் நிறைவேற்றப்படுவதில்லை. நாடும் கிடைப்பதில்லை. அப்படியாயின் வீமனும் துரியோதனனும் பங்கு பற்றிய வேகத்தில் போரில் அவன் பங்கு பற்றி இருப்பானா? அடித்தள மகனின் பார்வையில் அச்சண்டை அவனுக்கு தனது எஜமானார் இருவர் தத்தமது நலன்களுக்காகப் புரியும் போராகவே புலப்பட்டிருக்கும்.

வியாசபாரதம் செய்த வியாசர் தர்ம ஞாயங்களைக் கட்டியெழுப்பி அறத்தின் பக்கம் வீமனை நிறுத்தி மறத்தின் பக்கம் துரியோதனனை நிறுத்தி மகாபாரதப் போரை தர்மத்திற்கும் - அதர்மத்திற்கும் நடந்த யுத்தமாகக் கட்டியமைத்தார்.

அடித்தள மகனின் பார்வையில் கட்டியமைக்கும் நவீன வியாசர் அதனை மேட்டிமைகளின் ஆதிக்கச் சண்டையாகவும், அதில் தவிர்க்க முடியாது அகப்படும் அப்பாவிகளின் வெறுப்பையும் காட்டிக் கட்டமைப்பார். இது மகாபாரத்தை அடித்தள மக்களின் பார்வையிலிருந்து பார்க்கும் முறை. இவ்வாறு அடிநிலை மக்கள் பார்வை வரலாறு, அதிகார வர்க்கத்தின் அதிகாரத்தை அடி நிலை மக்களின் பார்வையில் தோலுரித்துக் காட்டும் வரலாறு. ஒன்றல்ல அது பல என்பதுவும், வரலாற்றுக்கு ஒரு பார்வையல்ல அதற்குப் பல பார்வையுண்டு என்ற கருத்துக்களை வைப்பதுவுமே அடித்தள மக்களின் பார்வையில் வரலாறு எதுவும் முறையாகும்.

5.3 அடித்தள மக்கள் வரலாறு
அடித்தள மக்கள் வரலாறு (ளரடியடவநசn ர்ளைவழசல) என்பது விளிம்பு நிலையில் வாழும் மக்களின் வரலாறாகும். அதாவது இது வரையில் வரலாறு இல்லாத வரலாற்றில் இடம்பெறாத அடித்தள சமூகக் குழுக்களின் வரலாறாகும். அடித்தள மக்கள் யார்? என்பதற்கு அடித்தளமாக இதுவரை வரலாற்றில் இடம்பெறாத அடித்தள சமூகக் குழுக்கள் மற்றும் வர்க்கங்களின் பட்டியல் ஒன்று தயார் செய்யப்பட்டது. இதில்

1. முன்னாள் அடிமைகள்

2. பாட்டாளிகள்

3. சிறைக் கைதிகள்

4. பெண்கள்

போன்றோர் இடம்பெற்றனர். பின்னர் இதில் இன்னும் சில பிரிவினர் சேர்க்கப்பட்டனர். அவர்கள் பின்வருமாறு.

1. இனக் குழுக்கள்

2. தொல் குடிகள்

3. குழந்தைகள்

4. தாழ்த்தப்பட்ட மக்கள்

5. முதியோர்

6. லெஸ்பியன்

7. அலிகள்

இம்மக்கள் யாவரும் சமூகத்தின் மையத்திலும் இடையிலும் வாழாமல் சமூகத்தின் விளிம்பினில் வாழ்ந்தவர்கள். வாழ்பவர்கள். சமூகத்தால் கவனிக்கப்படாதவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள், மையத்தைவிட்டு ஓடுபவர்கள். இவர்கள் வரலாறு எழுதப்பட வேண்டும் என்ற அடித்தள மக்களின் வரலாற்றாய்வு என்ற கருத்தாக்கம் உருவானது. அடித்தள மக்களை முதன்மைப்படுத்தி 1990களின் தொடக்கத்தில் அடித்தளத்திலிருந்து வரலாறு என்ற கோட்பாட்டை முதன்மைப்படுத்தி இந்திய வரலாறு குறித்த கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு வரிசையை ரணஜித் குகா உருவாக்கினார்.

5.4 பெண்ணின் வரலாறு
பெண்ணின் வரலாறும் (கநஅinளைவ ர்ளைவழசல) இவ்வாறே. இதுவரை ஆணாதிக்கப் பார்வையிலேயே வரலாறு எழுதப்பட்டது. பெண் முதன்மைப் படுத்தப்படவில்லை. பெண்ணியியல் நோக்கியல் வரலாறு எழுதப்பட வேண்டும் என்று ஆய்வாளர் உருவாக்கிய கோட்பாடுதான் பெண்ணிய வரலாற்றுக் கோட்பாடு.

ஆரம்பத்தில் பெண் மேனிலையில் இருந்தாள். தாயே குழுவின் தலைமகளாக ஆட்சி செய்தாள். ஆணாதிக்கம் மேலோங்க பெண் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டு இதுவரை பண்பாட்டு அடக்குமுறைக்குள் வாழ்கிறாள். வரலாறு முழுதும் பெண் அடக்க முறையுண்டு. இவ்வடக்கு முறையைக் காட்டும் வகையில் வரலாறு எழுதுதலே பெண்ணிய வரலாற்று அணுகுமுறையாகும்.

5.5 புதிய வரலாறு
படைய வரலாற்றிற்கு மாறான வேறான வரலாறாகும். மேற்குறிப்பிட்ட வகையில் மையப் பார்வையிலிருந்து மாறி மையமற்ற பன்முகப்பார்வையில் அனைவரையும் உள்ளடக்கி, நடந்தேறிய நிகழ்வுகளை நேர்கோட்டிலும் ஒற்றைப் பார்வையிலும் பார்க்காமல் சிக்கலாகவும், பன்முகப்பார்வையிலும் பார்த்து அமைக்கப்படும் வரலாறே புதிய வரலாறாகும்.

இத்தகைய அடித்தள, விளிம்பு நிலை பெண்ணிய, மாற்று, புதிய வரலாறு எழுத மரபு மரபான வரலாற்று முறை இடம் தராது. அடிநிலை மக்கள் தம்மைப் பற்றிக் கல்வெட்டு எழுதவில்லை. இலக்கியம் படைக்கவில்லை. தம் முன்னோரின் நினைவுகளைப் பேணிக்காக்க கோயில் கட்டவில்லை. கல்லறை கட்டவில்லை.

அன்றாடம் சாப்பாட்டுக்கே ஆலாய்ப்பறந்த இவர்களிடம் இவற்றை நாம் எதிர்பார்க்க முடியுமா? அவ்வண்ணமாயின் இவர்கள் வரலாற்றை எழுதுவது எப்படி? என்ற வினாக்கள் எழுந்தன.

நாம் முன்னர் பார்த்தபடி மேட்டிமையார் இவர்களைப் பற்றி எழுதி வைத்த ஆவணங்களை ஆதாரணமாகக் கொள்ளலாம். ஆனால் அவை மேட்டியமையார் பார்வையல்லவா? சரியான தகவல்களை அவை தருமா? அவற்றுக்குள்ளால் ஓரளவு முன்னர் கண்டுபிடித்ததுபோல சில விடயங்களைக் காணலாமேயொழிய உண்மையானவற்றைக் காண முடியுமா? அடித்தளத்தோரின் உண்மையான வரலாறு காண வேறு சான்றுகளைத் தேட வேண்டும் அச்சான்றுகளை அடித்தள மக்களிடமிருந்தே பெறவேண்டும். அவர்கள் சேகரித்து வைத்தவற்றிலிருந்தே பெற வேண்டும். அவர்கள் சேகரித்த வைத்த சான்றுகளை புதிய வரலாற்றாசிரியர்கள் பின்வருமாறு வகைப்படுத்தினர்.

1. வாய்மொழி மரபுகள் (ழுசயடயட வசயனவைழைn)

2. பழ மரபுக் கதைகள் (டுநபநனௌ)

3. நொடிக் கதைகள் (யுநெஉனழவநள)

4. நினைவுகள் (ஆநஅழசநைள)

5. வதந்திகள் (சுநஅழரசள)

வாய்மொழி மரபுகள் என்பன அடித்தள மக்கள் தம் வாழ்க்கை முறைகளை, அனுபவங்களை, மேட்டிமையாருக்கு எதிராகத் தாம் நடத்திய போராட்டங்களை தலைமுறை தலைமுறையாக வாய்மொழியாக சில வடிவங்களிற் பேணி வருதலாகும். நாட்டார் பாடல்கள், நாட்டார் கதைப் பாடல்கள், பழ மொழிகள், விடுகதைகள், வாய்மொழிக் கதைகள் என்பன இவற்றுள் அடங்கும்.

பழமரபுக் கதைகள் என்பது வாய்மொழிக் கதைகளுள் ஒன்றாகும். அண்மைப் பழங்காலத்தில் நிகழ்ந்த உண்மையான நிகழ்ச்சிகளையோ, கற்பனையான நிகழ்ச்சிகளையோ கருப்பொருளாகக் கொண்டு மக்கள் கூறும் கதைகளாகும்.

நொடிக் கதைகள் என்பது சுருக்கமானதும் பெரும்பாலும் தனிப்பட்ட மனிதர்களை மையமாகக் கொண்டதுமான பழமரபுக் கதை வடிவம். சில நேரங்களில் இவை கதை வடிவின்றித் துணுக்குச் செய்தியாகவும் அமையும்.

நினைவுகள் என்பன வெளியில் கூறினால் அவற்றால் ஆபத்து வருமென அறிந்து நினைவிலேயே தேக்கி வைத்திருப்பனவாகும். இவை தலைமுறை தலைமுறையாக இரகசியமாகவே அடித்தள மக்களிடம் பேணப்படும். சிலவேளை நினைவுகளை பூடமாகவும் மறைத்தும் நாட்டார் கதை, பாடல்களில் வெளிப்படுத்துவர்.

வதந்திகள் என்பன ஒரு குறிப்பிட்ட சமுதாய்தில் அமைதியின்மை, பதட்டநிலை நிலவுகையில் வழக்கமான தகவல் சாதனம் தடைப்படுகையில் அல்லது தகவல் சாதனத்தில் நம்பிக்கையின்மை தோன்றுகையில் மக்களின் உண்மயான கருத்துக்களைக் கூற மக்களே ஏற்படுத்தும் ஒரு தகவல் முறை (உண்மையும் வதந்திகளாகப் பரவும் அதேவேளை திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுவதும் உண்டு. (ஆராய்வாளர் அதனை வேறு சான்று கொண்டு பிரித்துப் பார்த்து அறிய வேண்டும்.)

தமிழர் வரலாற்றையும் பண்பாட்டையும் மேலும் புரிந்துகொள்ள வரலாறு பண்பாடு பற்றிய இப்புதிய சிந்தனைகளை நாம் பிரயோகிக்கலாம்.

இவ்வண்ணம் பிரயோகித்துப் பல முயற்சிகள் தமிழர் வரலாற்றிலும் பண்பாட்டிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வரலாறு (ர்ளைவழசல), மானிடவியல் (யுவொசழிழடபைல), சமூகவியல் (ளுழஉஉழைடழபல), நாட்டுப்புறவியல் (குழடமடழசந), மொழியியல் (டiபெரளைவiஉள) போன்ற கற்கை நெறிகள் இவ்வகையில் தமிழர் வரலாற்றையும் பண்பாட்டையும் அறிய உதவியுள்ளன.

இவை யாவற்றையும் காலனித்துவத்தின் குழந்தைகள் என அழைக்கும் வழக்கமுண்டு. தாம் வென்ற கீழைத்தேய நாடுகளை வென்ற ஐரோப்பியர் அம்மக்களை அடக்கி ஆள, அவர்களை அறிய முயன்றதன் விளைவே இத்துறைகளின் தோற்றம் என்பர். அது உண்மையாயினும் கீழைத்தேய மக்கள் தம்மைத் தாம் புரிந்துகொள்ளவும் இத்துறைகள் உதவின என்பதை மறுப்பதற்கில்லை.

இப்போது மேற்கத்தைய அளவு கோல்களை விடுத்து புதிய அளவு கோல்களைக் கண்டு அவற்றைப் பிரயோகிப்பதன் மூலம் தமது பண்பாட்டுத் தனித்துவங்களைத் தமிழ் மானிடவியலாளர்கள், நாட்டுப்புறவியலாளர்கள் காண முயல்கின்றார்கள்.

தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் முன்னர் நாட்டுப்புற மக்கள் ஆய்வு தீண்டத்தகாத ஒன்றாகக் கருதப்பட்டிருந்தது.

உயரிய மக்கள் பற்றிய ஆய்வும் உயர் இலக்கியங்களுமே ஆய்வுக்குரியனவாகக் கொள்ளப்பட்டன. இன்று அந்நிலை மாறிவிட்டது. நாட்டுப்புற இயலுக்கென தனி நிறுவனம் அமைத்து ஆயும் ஆய்வு மையங்கள் பல்கலைக்கழகங்களுக்குள் தோன்றிவிட்டன. இதனால் மையத்தினின்று விலகி வாழ்ந்த நாட்டுப்புறத் தமிழ் மக்களின் வரலாறும், பண்பாடும் மென்மேலும் அறியப்பட்டு வருகின்றன. அவ்வரலாறுகள் பொதுவாக அறியப்பட்ட தமிழர் சரித்திரத்தையும் பண்பாட்டையும் மாற்றத்தக்க வகையில் புதிய தகவல்களைத் தருகின்றன.

கிராமப்புறத்திலும் மையமுண்டு விளிம்புமுண்டு. கிராமப்புறத்திலும் ஓரம் கட்டப்பட்டு வாழும் உரிமை மறுக்கப்பட்ட தமிழர்களுமுண்டு. இவர்களே விளிம்பு நிலை மக்கள் என இன்று அழைக்கப்படுகிறார்கள்.

இவ்வகையில் தென்னிந்திய மக்களிடையே காணப்பட்ட அடித்தள மக்களைப் பற்றி முதன் முதலில் எழுதியவர் எட்கர் தர்ஸ்டன் ஆவார். நாட்டார் பாடல்களையும், வாய்மொழி மரபுக் கதைகளையும், ஆராய்ந்து அதற்குள்ளால் மேலெழுந்த மதுரை வீரன், கட்டபொம்மன், முத்துப்பட்டன் முதலான மக்கள் தலைவர்களையும், மக்களின் ஆதிக்கத்திற்கான எதிர்ப்புக் குரல்களையும் முதன் முதலிற் காட்டியவா நா. வானமாமலை. அவர் வழியில் அடித்தள மக்களின் வரலாறு பற்றி எழுதுபவர் ஆ. சிவசுபபிரமணியம். அத்தோடு அடித்தள மக்களின் பவரலாற்றை மேலும் வளர்த்துச் செல்லும் அ. மார்க்ஸ், ராஜ்கௌதமன், பொ. வேலுச்சாமி, வளர்மதி முனைவர் முத்தையா, சுந்தர்காளி, அருணன், ராஜன்குறை, ஆ. செல்லப்பெருமாள், மாற்கு, ஆ. திருநாகலிங்கம் ஆகியோருடன் இன்னொரு மட்டத்தில் தொ.மு. பரமசிவன், இரா. வெங்கடாசலபதி, பக்தவத்சலபாரதி, மே.து.சு. இராசுகுமார், அ. ராமசாமி, வீ. அரசு ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள்.

அண்மைக்காலமாக ஓரங்கட்டப்பட்ட விளிம்ப நிலை மக்கள் பற்றி குறிப்பிடத்தக்க ஆய்வுகள் வெளி வந்துள்ளன.

நாம் முன்னரேயே குறிப்பிட்ட புதிய சிந்தனைகள் தந்து மாற்று வரலாறு எழுதும் முறையியலைப் பின்பற்றி இவர்கள் அடித்தள மக்களிடம் நிலவிய வாய்மொழி மரபுகளை ஆதாரமாக்கி அம்மக்களின் வாழ்வு, வரலாறுகளை நமக்குத் தருகின்றனர்.

அடிநிலை மக்களான பறையர், பள்ளர், அருந்ததியர், நாடோடி மக்களான பூம்பூம், காரைக்காலம்மையார், ஆண்டாள் போன்றோர் பெண்ணியல் நோக்கில் விளக்கப்பட்டதுடன் தமிழர் வரலாற்றிலும், பண்பாட்டிலும் தமிழ்ப் பெண்களின் இரண்டாம் தர நிலையை விளக்கியும், அடிநிலை மக்கள் மத்தியில் பெண்கள் நிலை பற்றியும் விளக்கிப் பல கட்டுரைகள் வந்துள்ளன.

மேற்குறிப்பிட்டவற்றை நாம் இலங்கைத் தமிழர்க்கும் பொருத்திப் பார்க்கலாம். இங்கும் மையங்களை வைத்தே வரலாறும் பண்பாடும் கட்டமைக்கப்பட்டுள்ளன. வடக்கிலே ஆரியச் சக்கரவர்த்திகள், சங்கிலியன் பண்டாரவன்னியன் என்றும், கிழக்கிலே ஆடகசவுந்தரி, மாகோன், குளக்கோட்டன் என்றும் அரசர் வரலாறாகவே தமிழர் வரலாறு கட்டமைக்கப்படுகிறது. மையத்தில் வாழ்ந்த நிலவுடமை, வைதீகப் பண்பாடே முழு இலங்கைத் தமிழரதும் பண்பாடாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழர்களின் அரச பாரம்பரியம் பற்றி மேற்கூறியவாறு கட்டமைக்கப்பட ஈழத் தமிழரின் பண்பாட்டுப் பாரதிபரியமாக ஆரிய மரபுவழிப் பண்பாடே பண்பாடாகக் காட்டப்படுகிறது. பரதநாட்டியமும், கர்நாடக சங்கீதமும், கோயிற் கலைகளும், உயர்ந்தோர் வாழ்க்கை முறையுமே ஈழத்தமிழர் பண்பாடாக அறிஞர்களாலும், வெகுஜன ஊடகங்களாலும் கட்டமைக்கப்பட்டுள்ளன.

ஈழத் தமிழர் மத்தியில் மைய வாசிகளல்லாத கிராமப்புறத் தமிழர் பண்பாடும் கிராமப்புறத்துக்குள்ளும் ஓரம்கட்டப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் அடிநிலைத் தமிழ் மக்கள் வரலாறும் இன்னும் ஈழத் தமிழரின் மையப் பண்பாட்டிற்குள் பெரிதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

நீண்டதொரு போராட்டத்தின் பின்னர்தான் கிராமியக் கலைகளான கூத்தும், வசந்தனும், கிராமியப் பாடல்களும், கிராமிய மக்களின் வாழ்க்கை முறைகளும், வழிபாட்டு முறைகளும் சிறிதளவாக ஈழத் தமிழர் பண்பாடாக ஏற்கப்பட்டுள்ளன. அதுவும் உயர் பண்பாடாக அல்ல உப பண்பாடாகத்தான்.

கிராமப்புறக் கலைகளின் நிலையே இவ்வாறானால் கிராமப்புறத்தில் வாழும் அடித்தள மக்களின் வரலாறு பற்றியும் பண்பாட்டின் நிலை பற்றியும் சொல்ல வேண்டியதில்லை.

ஈழத்தில் வாழும் கிராமிய ஈழத் தமிழரைவிட ஈழத்தமிழ் மக்களோடு கூடி வாழும் இஸ்லாமியரதும், பறங்கியரதும், மைத்தினின்று தூரத்தில் வாழும் மலையகத் தமிழரதும் வரலாறும், பண்பாடும், ஈழத் தமிழர் வரலாற்றிலும் பண்பாட்டிலும் பெரிதாகப் பேசப்படுவதில்லை.

இவ்விடத்தில் மலையகத் தமிழர், தமிழ் பேசும் இஸ்லாமியர், பறங்கியர் மத்தியிலும் மையம் விளிம்பு உண்டென்பதையும் அவர்கள் மத்தியிலும் அடக்குவோரும் அடக்கப்படுவோரும் உண்டென்பதையும் மறந்துவிடலாகாது.

ஈழத் தமிழர் மத்தியில் அடிநிலை மக்கள், விளிம்பு நிலை மக்கள், பெண்கள், ஓரம்கட்டப்பட்ட மக்கள் பற்றிய ஆய்வுகள் ஆரம்ப நிலையிலேயே உள்ளன.

பேராசிரியர் சிவத்தம்பியின் ளுசi டுயமெயn வுயஅடை ளுழஉநைவல யனெ Pழடவைiஉள பேராசிரியர் சி. பத்மநாதனின் இலங்கைத் தமிழர் தேச வழமைகளும் சமூக வழமைகளும், பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு பதிப்பித்த வாய்மொழி மரபுகள் வரலாற்று மூலங்களாக எனும் நூல், பேராசிரியர் அருணாசலத்தினதும், முக்கியம் நடேசனதும் சாரல் நாடனதும் மலையக மக்கள் பற்றிய நூல்கள் என்பன ஈழத்து இஸ்லாமியர்களையும் அவர்களின் பண்பாடுகளையும், தமிழரோடு அவர் தொடர்புகளையும் கூறும் சமீம், அனஸ், முத்துமீரான் ஆகியோர் எழுதிய நூல்கள் என்பன இத்துறையில் குறிப்பிடத்தக்க சில நூல்களாகும்.

விளிம்பு நிலை மக்களின் வரலாற்றையும் பண்பாட்டையும் வெளிக்கொணரும் முயற்சிகள் ஆங்காங்கே மேற்கொள்ளப்படுகின்றன.

கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை விசேட கற்கைநெறி மாணவர் கிழக்கு மாகாண பறை அடிப்போர், சலவைத் தொழில் செய்வோர், வேடர் இன மக்களின் கலை பண்பாடு பற்றி இறுதி வருடத்தில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளனர்.

இச்சிந்தனைப் போக்குகளும் செயற்பாடுகளும், தமிழர் வரலாற்றையும், பண்பாட்டையும் மீள் கட்டமைப்புச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தமிழ்ப் புலமையாளர்களை இட்டுச் சென்றுள்ளன.

6. நாம் செய்ய வேண்டியவை யாவை?

6.1 பிரதான ஓட்டத்திற் கலக்கச் செய்தல்
இதுவரை நாம் கூறியவற்றிலிருந்து தமிழர் வரலாறும் பண்பாடும் பற்றிய கருத்து நிலைகள் ஆரம்பத்தில் மையத்தை அடித்தளமாகக் கொண்டிருந்திருப்பினும் காலப்போக்கில் மேட்டிமை மக்களின் வரலாறாக மாத்திரமன்றி ஏனைய மக்களின் வரலாறாகவும் பார்க்கும் வகையில் ஆய்வுகள் வந்துள்ளன என்பதை அறிந்துகொண்டோம். பேர்ட்டன்ஸ்ரைன், நொபுறு கறோசிமா, சண்பகலக்சுமி, கதலின் கௌ. ஐராவதம்மகாதேவன், அல்ப்ஹில்பைற்றல் போன்றோரின் ஆய்வுகளும் ஏனையோரின் ஆய்வுகளும் தமிழ் மக்களின் சமூக அமைப்பையும் அதனடியாக எழுந்த பண்பாடுகளையும் தெளிவாக விளக்கியுள்ளன. இவை பெரும்பாலும் ஆய்வுகளாக இருக்கின்றவேயன்றி பிரதான கல்வி நீரோட்டத்துடன் இன்னும் கலக்கவில்லை. இன்றும் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் ஈழத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழர் வரலாறும் பண்பாடும் பெரும்பாலும் பழைய தடத்திலேயே கற்பிக்கப்படுகின்றன. பாடசாலைகளும் பழைய முறையிலேயே தமிழர் பண்பாட்டையும், வரலாற்றையும் மையம் சார்ந்த மேட்டிமைகளின் வரலாறாகவும் பண்பாடாகவும் கற்பிக்கின்றன.

கல்விக் கூடங்கள் என்ற நிறுவனங்கள் பழைய தடத்திலேயே செல்வதால் பண்பாடு வரலாறு பற்றிய பழைய கருத்துநிலையே மாணவர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் கட்டமைக்கப்படுகிறது. எனவே புதிய சிந்தனைகளின் அடியாக எழுந்த ஆய்வு முடிவுகளைப் பிரதான ஓட்டத்துடன் இணைக்கச் செய்யும் அழுத்தங்களைக் கொள்கை வகுப்போருக்கு ஆய்வு அறிஞர்கள் கொடுக்க வேண்டும். ரொமிலாதாப்பர் போன்றோரின் அழுத்தங்கள் உயர்கல்வி நிறுவனங்களில் இந்திய வரலாற்றைக் கற்பிப்பதில் சிறிது மாற்றங்கள் ஏற்படுத்தியமையையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

6.2 அடித்தளத்திலிருந்து வரலாறு எழுதும் முறையியலை தொடரல்
அடித்தளத்திலிருந்து வரலாறு எழுதும், மாற்று வரலாறு எழுதும் முறையில் மென்மேலும் தகவல்களை நாம் தேடிச் செல்ல வேண்டும். ஒரு புதைபொருள் ஆராய்வாளன் புதைபொருட் சின்னங்களையும் அழிந்த கட்டிடங்களையும் எழுத்தாவணங்களையும் தேடிச் செல்வது போல புதிய வரலாற்று எழுதியலின் நுட்பங்களையும் அதில் தீவிரமாக ஈடுபடும் ஆராய்வாளர்களின் அனுபவங்களையும் கற்றுத் தேர்ச்சி பெற்று இத்துறையியீடுபடுவோர் அடித்தள மக்களின் வாய்மொழி மரபுகளையும் ஐதீகக் கதைகளையும், சடங்குகளையும் தேடிச் செல்ல வேண்டும். தொகுக்க வேண்டும். நுணுக்கமாக ஒப்பிட்டு ஆராய வேண்டும்.

ஒரு ஆசிரியர் கூறியது போல வியக்க வைக்கின்ற அல்லது பிரமிக்க வைக்கின்ற வரலாற்றுச் சான்றுகளை விட்டுவிட்டு அதிர்ச்சியூட்டுகின்ற வாய்மொழிச் சான்றுகளைத் தேடிச் செல்லவேண்டும்.

6.3 அடித்தள மக்கள் வரலாற்றின் அரசியலைப்
புரிந்துகொள்ளல்
அடித்தள மக்கள் வரலாற்றுக் கண்ணோட்டம் என்பது பின் அமைப்பியல் வாதக் கருத்தோட்டத்திலிருந்து பிறந்தது என்பர். முக்கியமாக அதிகாரமே எல்லாவற்றிற்கும் அத்திவாரம் என்ற பூக்கோவின் கருத்து நிலையினின்றும் வந்தது என்பர். அதன் பின்னர் எழுந்த பன்மைத்துவம் என்ற பின் நவீனத்துவக் கருத்து இவ்வாய்வு நெறியினை மேலும் வளர்த்தது. ஒன்றல்ல பல என்ற கருத்துருவைப் பின் நவீனத்துவம் தந்தது. சமூகம் சாதிகளாகப் பிரிந்துள்ளன என்பதனைப் புட்டுக்காட்டி ஒவ்வொரு சமூகத்திற்குள்ளும் புகுந்து நுண்ணாய்வு செய்து அதனதன் தனித்துவங்களைக் கூறுகிறது. பின் நவீனத்துவம்.

இனமாக, வர்க்கமாக ஒரு சமூகம் இணைவதைத் தடுக்க முனையும் அதிகாரம் கொண்ட மேற்குலக நாடுகளுக்கு இவ்வாய்வுகள் இதனால் சாதகமாக அமைகின்றன என்ற குற்றச்சாட்டும் இவ்வாய்வுகளை நோக்கி வைக்கப்படுகின்றன.

அக்குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லாமல் இல்லை. சமூகத்தை மென்மேலும் சாதிகளாகக் கூறுபடுத்தி மக்கள் பிரிவினையில் சுகம் காண முனைவோரும் இதனை ஊக்குவிப்பர். எனினும் பிரிவுகள் உண்டென்ற யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் ஒற்றுமை ஏற்படாது. தனித்துவங்கள் கூறப்பட்டு நிறுவப்பட்டு அத்தனித்தங்கள் ஏற்கப்படுகையில்தான் புரிந்துணர்வுகள் ஏற்படும் புரிந்துணர்வின் அடிப்படையில் ஏற்படும் சமத்துவம் உறுதிமிக்கதாக இருக்கும். தகர்க்க முடியாததாக இருக்கும்.

அடித்தளத் தமிழ் மக்கள், வரலாற்றில் இதுவரை உரிமை மறுக்கப்பட்டவர்கள். எனவே அவர்களது வரலாறும் இணைந்ததுதான் முழுத் தமிழரின் வரலாறும் பண்பாடும் ஆகும். அடித்தள மக்கள் கற்கைநெறி அவர்களைப் பற்றி மென்மேலும் நுணுக்கமாக அறிய எமக்கு உதவுகிறது. இதனால் மையத்தில் வாழ்வோரும், இடையில் வாழ்வோரும் தம்மோடு இன்னொரு பண்பாடு கொண்ட தமது மொழி பேசுவோர். தம் மதம் கார்ந்தோர் இருப்பர் என்பதனை அறிவது. மானிடவியல் பண்பாடுகளுக்குள் உயர்வு தாழ்வு இல்லை என்பதனை நிரூபித்துள்ளது.

சமூகப் பிரிவு யதார்த்தம். அதனை நாம் இல்லை என்று மறுக்க முடியாது. அது பற்றிய ஆராய்வு மென்மேலும் அவசியம். அனைத்து மக்களும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு சமத்துவமாக வாழ வேண்டும் என்பது மனித குல லட்சியம். யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். லட்சியத்தை நோக்கி முன்னேற வேண்டும்.

அடித்தள மக்கள் ஆய்வுகள் அருகிச் செல்லும் சமூகப் பிரிவினைகளை மேலும் கிளறிவிடும் என்று பலர் கூறுகின்றனர். நாள்பட்டு மோசமாகிப்போன புண்ணை அறுத்துக் கழுவித்தான் வைத்தியர் சுகமாக்குவார். வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வாளனுக்கு ஒரு சமூகக் கடமையுண்டு. சமூகத்திற் காணப்படும் நாட்பட்டுப்போன சமூகப் பிரிவு என்ற புண்ணை அவன் அறுத்துக் கழுவித்தான் சுகப்படுத்த முடியும். ஆனால் இப்பணியை வரலாற்று பண்பாட்டு ஆய்வாளன் தனித்து நின்று செய்ய முடியாது. அது ஒருபெரும் சமூக மாற்றத்துடனும் தங்கியுள்ளது. சுருங்கச் சொன்னால் எனக்குள்ள உரிமை மற்றவர்க்குமுண்டு எனக்குள்ள வரலாற்றுப் பெருமையும் பண்பாட்டுப் பெருமையும் மற்றவர்க்கும் உண்டு என்ற வகையில் தமிழர் வரலாறும் பண்பாடும் எழுதப்படவேண்டும்.

சான்றாதாரங்கள்
1. எட்காட் தாஸ்டன் (2001) தமிழில் ரத்னம் க.
தென்னிந்திய மானிட
இனவியல், சென்னை

2. பக்தவத்சலபாரதி (1991) பண்பாட்டு மானிடவியல்,
சென்னை.

3. பக்தவத்சலபாரதி (2002) தமிழர் மானிடவியல்,
சென்னை

4. சிவசுப்பிரமணியன் ஆ. (2002), அடித்தள மக்கள், வரலாறு
சென்னை

5. சிவசுப்பிரமணியன் ஆ. (2005) தமிழகத்தில் அடிமை முறை,
சென்னை

6. ராசுகுமார் மே.து. (2004), சோழர்கால நிலவுடமைப்
பின்புலத்தில் கோயில்
பொருளியல், சென்னை

7. பிலவேந்திரன் ச. (பதி) (2004), சனங்களும் வரலாறும் சொல்
மரபின் மடக்குகளில் உறையும்
வரலாறுகள், சென்னை

8. மார்க்ஸ் அ. வேல்சாமி. பொ (பதி) விளிம்பு நிலை ஆய்வுகளும்
தமிழ்க் கதையாடல்களும்,
சென்னை

9. வானமாமலை நா. (1992), தமிழர் வரலாறும் பண்பாடும்,
சென்னை

10. கைலாசபதி க. (1999), பண்டைத் தமிழர் வாழ்வும்
வாழிபாடும், சென்னை

11. கைலாசபதி க. (1968), வுயஅடை ர்நசழைஉ Pழநவசல
ஊழடழஅடிழ

12. சிவத்தம்பி கா. (2004), பண்டைய தமிழ்ச் சமூகத்தில்
நாடகம், சென்னை

13. கார். ஈ.எச். (மொழிபெயர்ப்பு) (2004), வரலாறு என்றால் என்ன?
சென்னை

14. சிவத்தம்பி கா. (1983), தமிழ் இலக்கியத்தில் மதமும்
மானிடமும், சென்னை

15. சித்திரலேகா மௌனகுரு (பதி) (2004), வாய்மொழி மரபுகள்
வரலாற்று மூலங்களாக,
கல்முனை

16. சிவத்தம்பி கா. (2003), பண்டைத் தமிழ்ச் சமூகம்
வரலாற்றைப் புரிதல் நோக்கி,
சென்னை

17. பரமசிவன் தொ. (1989), அழகர் கோயில், மதுரை

18 ஜமாலன் (2003), மொழியும் நிலமும், ஈரோடு

19. ஜெகதீசன் தெ. வே. (2004), பத்திரகாளியின் புத்திரர்கள்,
சென்னை

20. லூர்து. தே (1997) நாட்டார் வழக்காற்றியல் சில
அடிப்படைகள், சென்னை

21. வேங்கடாசலபதி ஆ. இரா. (2004), முச்சந்தி இலக்கியம்,
சென்னை

22. ராஜ்கௌதமன் (1997), அறம் அதிகாரம், சென்னை

23. மார்க்ஸ் அ. (2001), கலாசாரத்தின் வன்முறை,
சென்னை

24. பரமசிவன் தொ (1995), தெய்வங்களும் மரபுகளும்.
சென்னை

25. வெங்கடேசன் சு. (2001), கலாசாரத்தின் அரசியல்,
சென்னை

26. குணசேகரர் கே. ஏ. (1999), தலித்துக்களின் கலாச்சாரம்
சென்னை

27. கேசவன் கோ. (1995), சாதியம், சென்னை

28. மார்க்ஸ் அ. வேல்சாமி பொ. ரவிக்குமார் மாற்றுக்களைத் தேடி (கல்வி,
கலாசாரம், நிதி மருத்துவம்)
நிறப்பிரிகை கட்டுரைகள்

29. மார்க்ஸ் அ. (1991), மார்க்சியமும் இலக்கியத்தில்
நவீனத்துவமும், சென்னை

30. இராமசாமி துளசி முனைவர் (2001), பண்பாட்டு வரலாற்று ஆய்வுக்கு
நாட்டுப்புறவியல் ஆய்வாளனின்
பங்களிப்பு, சென்னை

31. ராஜ்கௌதமன் (1993), தலித் பண்பாடு, புதுவை

32. ராஜ்கௌதமன் (1994), தலித் பார்வையில் தமிழ்ப்
பண்பாடு, பாண்டிச்சேரி

33. பக்தவத்சலபாரதி (2003) (பதி), தமிழகத்தில் நாடோடிகள்
சங்ககாலம் முதல் சமகாலம்
வரை, சென்னை

34. பத்மநாதன் சி. (2002), இலங்கைத் தமிழர் தேச
வழமைகளும், சமூக
வழமைகளும், கொழும்பு

35. கேசவன் சோ (1980) மண்ணும் மனித உறவுகளும்,
சென்னை

36. Sivathamby K. (1995), Sri Lankan Tamil Society and
Politic, Madras

37. Kailasapathy (1965), Tamil Heroic Poetry, Oxford

38. Singaravela (1966), Social Life of the Tamils,
Kuala Lumpur

39. Stein Burton (Ed) (1985), Essays on South India, USA

40. Stein Burton (1980), Peasant State and Society in
Medival South India,
New York

41. Zvelebal Kamil (1973), The Smile of Murugan on the
Tamil Literature of South India,
Leiden

42. Karashima Noboru (2001), History and Society in South
India, The Cholas to Vijayanagar,
Oxfordசி. மௌனகுரு (1943):
இலங்கையின் மிகச் சிறந்த நாடகவியலானராக இவர் தனது இளமாணிப்பட்டத்தினை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும், முதுமாணிப் பட்டத்தினையும், கலாநிதிப் பட்டத்தினையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் பெற்றவர். யாழ். பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பின்னர் தற்போது கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறையின் தலைவராயும், விபுலாநந்தர் இசை நடனக் கல்லூரியின் தலைவராயும் பணியாற்றி வருகின்றார். ஏராளமான நாடகப் பிரதிகளை எழுதி மேடையேற்றியுள்ளதுடன் பல கட்டுரைகளையும், பழையதும் புதியதும் (1992), ஈழத்து தமிழ் நாடக அரங்கு (1993), அரங்கு ஓர் அறிமுகம் (2000) என்பன உட்பட இருபத்திற்கு மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.