கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்  
 

வ. ஐ. ச. ஜெயபாலன்

 

தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்

வ. ஐ. ச. ஜெயபாலன்

++++++++++++++++++++

தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்

வ. ஐ. ச. ஜெயபாலன்

அலை வெளியீடு
48, சுய உதவி வீடமைப்புத் திட்டம்,
குருநகர், யாழ்ப்பாணம்

+++++++++++++++++++

அலை வெளியீடு
மார்கழி 1985
விலை ரூபா 5-00


The National Question and the Muslims
(A Socio-Political analysis in Tamil)

By V. I. S. Jayapalam

Published by Alai Veliyeedu
48, Self-Help Housing Scheme,
Gurunagar, Jaffna.

Printed at
Pats Printers
601, K. K. S. Road, Jaffna.

Cover Design by G. Kailasanathan

First Edition: December, 1983

Price: 5-00

+++++++++++++++++++

பதிப்புரை

பாரம்பரியப் பிரதேசங்கள் என்ற கருத்தாக்கத்தை முன்னிறுத்துகின்ற தமிழ் மக்களிலும், தேசிய ஐக்கிய மாயையிலும் மூழ்கியுள்ள முஸ்லிம் மக்களிலும் பெரும்பான்மையோர், தத்தமது பிரதேசங்களின் பல்வேறு நிலைமைகள் பற்றியும் சரியான பிரக்ஞையினைக் கொண்டுள்ளனர் என்று சொல்வதற்கில்லை. 'யாழ்ப்பாண நோக்கு நிலையினைக்' கொண்டுள்ளவர்கள் கிழக்கு மாகாணத்தைக் குறிப்பாக முஸ்லிம் மக்களை நடைமுறையில் மறந்தே போய் விடுகின்றனர். எமது பிரதேசங்கள் சார்ந்த சமூக, அரசியல், பொருளாதார ஆய்வுகள் சரிவர மேற்கொள்ளப்படாமை இதற்கான காரணிகளுள் ஒன்றாக அமையும்.

தமிழ்-முஸ்லிம் மக்களின் 'இருப்பு நிலை' அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய நிலையிலாவது போதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமலிருப்பது துர்ப்பாக்கியமானதே. இந்தப் பின்னணியிலேயே பிரச்சினையின் முக்கியத்துவம் கருதி, இளம் ஆய்வாளரான வ. ஐ. ச. ஜெயபாலனின் முஸ்லிம் மக்களைப் பற்றிய இச் சிறு வெளியீட்டினைக் கொண்டு வருகிறோம். ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாறுதல்களின் மூலம் பிரச்சினையின் உண்மைத்தன்மை மேலும் துலங்குவதற்கு இது தூண்டுதலாக அமையுமெனவும் எதிர்பார்க்கிறோம்.

பின் அட்டையிலுள்ள கவிதை வரிகள் 'அஷ்ஷுரா' சஞ்சிகையிலிருந்து எடுக்கப்பட்டவை. பாக்கிஸ்தானியக் கவிஞரின் இக் கவிதையினைத் தமிழாக்கியவர், முஸ்லிம் கவிஞரான 'பண்ணாமத்துக் கவிராயர்'

நூலாசிரியருக்கும், முகப்பினை வடிவமத்த கோ. கைலாசநாதனுக்கும், விரைவில் அச்சேற்றிய அச்சக ஊழியருக்கும் எமது நன்றிகள்.

அலை வெளியீட்டினர்

குருநகர்
31-12-83

+++++++++++++++++++

என்னுரை

ஒடுக்குதல்களுக்கு எதிராகப் போராடும் வர்க்கங்களோ அல்லது தேசிய இனங்களோ, தமது சமூக அரசியல் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பாக சமகாலத்தில் நிலவும், தேசிய சர்வதேசிய நிலைமைகளையும் முரண்பாடுகளையும் விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து தெளிவதன் மூலம் மட்டுமே, தமது போராட்டம் தொடர்பாகவும் தாம் எதிர்நோக்கும் நிர்மாணப் பணி தொடர்பாகவும், சரியானதும் தொலைநோக்குள்ளதுமான மூல உபாயத்தையும் தந்திரோபாயங்களையும் வகுத்தல், சாத்தியப்படும்.

பல்லாயிரம் மக்களின் தலைவிதி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் இவ்வகையில் மட்டுமே, பொறுப்புள்ளதும் இறுதி வெற்றிக்கான மார்க்கத்தில் பொருந்துவதுமான தீர்மானங்களையும் நடவடிக்கைகளையும், இயக்க ரீதியாக மேற்கொள்ளுதல் இயலும்.

ரஷ்யா, சீனா, வியட்னாம், அல்பேனியா, கியூபா, நிக்கரகுவா போன்ற நாடுகளில் மக்கள் தலைமைகள் விஞ்ஞான பூர்வமான ஆய்வுகளின் அடிப்படையிலேயே தமது தேசியப் போராட்டம், தேச நிர்மாணம் தொடர்பான மூல உபாயங்களை வகுத்துக் கொண்டன. இவற்றை மேற்படி காலகட்டங்களில் மேற்படி நாடுகள் சார்ந்து நிலவிய தேசிய, சர்வதேசிய முரண்பாடுகள் தொடர்பாகப் புரிந்து கொள்ளுதல் மூலம், பயனுள்ள சர்வதேச அனுபவங்களை நாமும் பெறுதல் அவசியமாகும்.நாடுகளிடையே சமூக, கலாசார, பொருளாதார நிலைமைகள் மாறுபடுவதையும்; இயங்கியல் போக்கில் பல்வேறு வகைகளிலும் காலகட்டங்கள் மாறிச் செல்வதையும், நாம் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.

தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக சர்வதேச அணுபவங்கள் பலவும் பலதேசிய இனங்கள் வாழும் நாடுகளில் (Multi-Nations Countries) புரட்சிகளின் போது இடம்பெற்ற விவாதங்கள், ஆய்வுக்கட்டுரைகள் என்பவற்றின் ஊடாகவே நமக்குக் கிட்டுகின்றன. ஒடுக்கப்படும் ஒரு தேசிய இனம் வேறு மார்க்கங்கள் அற்றுப்போன நிலையில் தனது இருப்புக்கும், தேசிய விடுதலைக்குமாகப் போராடும் நிலைமைகளில் போதிய அளவு பங்களிப்பு, சர்வதேச ரீதியில் இடம்பெறவில்லை. பெரும்பாலான தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் 1840களின் பின் முதன்மை பெற்று ஒரு நூற்றாண்டினுள்ளேயே பெரும்பாலும் நடந்து முடித்து விட்டன. அது வளர்ச்சியடைந்த நாடுகளின் முதலாளித்துவ வளர்ச்சிக் காலகட்டம் என்பதும் கருத்தில் கொள்ளப்படுதல் வேண்டும்.

போராடும் நமது தேசிய இனம் சார்பாகவும், இந்து சமுத்திரத்தில் மையப்பட்ட சர்வதேச நிலைமைகள் சார்பாகவும் சமகால நிலைமைகளை ஒட்டிய தகவல்களை விஞ்ஞான ரீதியாகத் திரட்டிப் பகுப்பாய்ந்து நமது விடுதலையின் மார்க்கத்தைக் கண்டு கொள்ளுதல் மூலம் மட்டுமே நமக்கும், சர்வதேசியத்துக்கும் உருப்படியான வரலாற்றுப் பங்களிப்பை நாம் செய்தல் கூடும்.

நான் எழுதி வரும் எமது மண்ணும் எமது வாழ்வும் என்ற நூலின் ஒரு பகுதியான 'தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்' என்ற அத்தியாயத்தை, அவசியம் கருதிச் சிரமம்பாராது வெளியிட முன்வந்தமைக்காக அலை வெளியீட்டாளர்களுக்கு எனது நன்றிகள்.

எனது சிரமம் நிறைந்த பொருளாதார நிலையில், இந்த ஆய்வுகளைத் தொடர பல்வேறு வகைகளிலும் உதவியாக இருந்த அம்மாவுக்கும், சகோதரிகளுக்கும் எனது நன்றிகள். திக்குவல்லையில் இருந்து யாழ்ப்பாணம் வரைக்கும், பேருவலையில் இருந்து கல்முனை வரைக்கும் சகல விதத்திலும் எனக்கு கற்பித்த முஸ்லிம் மக்களுக்கும், முஸ்லிம் நண்பர்களுக்கும் எனது விசேட நன்றிகள்.

எதிர்காலத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு பணியாற்றப் போகிற தமிழ், முஸ்லிம், மலையக இளைஞர்களுக்கு இந்நூல் காணிக்கை.

வ. ஐ. ச. ஜெயபாலன்

61, 4ம் குறுக்குத் தெரு,
யாழ்ப்பாணம்.
25-12-1983

+++++++++++++++++++++