கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  ஈழத்து இலக்கிய வளர்ச்சி  
 

கனக - செந்திநாதன்

 



இரசிகமணி
கனக - செந்திநாதன்;



ஈழத்து
இலக்கிய
வளர்ச்சி


ஈழத்து
இலக்கிய வளர்ச்சி

கனக - செந்திநாதன்

மித்ர வெளியீடு
Mithra Arts and Creations
சிட்னி சென்னை மட்டக்களப்பு

Apart from fair dealing for the purpose of Private Study, Research, Criticism or Review as Permitted under the Copyright Act, No part may by reproduced, stored in a retrieval system, or transmitted, in any form or any means, electronic, mechanical or photocopying, recording or otherwise without prior written permission from the publishers.

Mithra Publication books are published by
Dr Pon Anura
production Editor
ESPO
EELATHTHU ELAKKIYA VALARCHCH
(A Short History of Modern Ceylon Tamil Literature)

by
KANAGA - SENTHINATHAN
Originally Published by ilampirai M. A. Rahman of
Arasu Publications at Colombo, Sri Lanka in 1964

Mithra Books First Edition
24th December 2000

Cover Design
K. PUGAZHENTHI and ILANGAINATHAN
Made in India by Mithra Book Makers
Mithra arts and Creations
1/23 MUNRO STREET 30 VANNIAG STREET 375/8-10 ARCOT ROAD
EASTWOOD 2122 AUSTRALIA BATTICALOA (EP) CHENNAI 600 024 INDIA
Ph (02) 9868 2567 SRI LANKA Ph (044) 372 3182
e-mail www. anura@matra. com. au e-mail www. mithra@md4. com. in
Fax
: 0091-44-4721336
மித்ர : 45 24 டிசம்பர் 2000
விலை : ரூ. 75. 00 பக்கங்கள் : 240.

முதற்பதிப்புக்கு
ஒரு முன்னுரை
இராஜ. அரியரத்தினம்

நான் ஆசிரியப் பதிவி வகித்துக் கடமையாற்றிய பத்திரிகைகள் இரண்டு. ஒன்று ஈழகேசரி@ மற்றது ஈழநாடு.

ஈழகேசரிக் காலத்தை என்னால் என்றுமே மறக்க முடியாது. எனது தலைவரும் தமிழ்த் தொண்டருமான திருவாளர் நா. பொன்னையா அவர்களது பெருந்தன்மையாலும், காரியாலய நிர்வாகிகளது இன்முகத்தாலும், அரசியல் தலைவர்களும், தமிழ்ப் புலவர்களும், எழுத்தாள நண்பர்களும் அங்கு அடிக்கடி வருவது வழக்கம். ஈழகேசரி அலுவலகம் எல்லோருக்கும் ‘அடையா நெருங்கதவாக’ இருந்து வந்ததை யார் மறுப்பர்?

ஒருநாள் எனது இலக்கிய நண்பர் கனக செந்திநாதன் அவர்கள் அலுவலகத்துக்கு வந்த போது, தாம் பலகாலமாகச் சேகரித்துப் பத்திரப்படுத்தி வைத்துள்ள பழைய பத்திரிகைகளை விற்று விடப் போவதாகவும், ஏதாவது உபயோகமான காரியத்தைச் செய்து விற்றுவிடின் நல்லதெனவும் கூறினர். அப்போது எழுந்த யோசனைதான் “ஈழத்துப் பேனா மன்னர்கள்” என்ற வரிசை.

இலக்கிய உலகை அதிசயத்தில் ஆழ்த்திய ‘அறிமுகம்’ முடியும்வரை அதனை எழுதுபவர் யார் எனத் தெரியக்கூடாதென்பதற்காகக் கரவைக் கவி கந்தப்பனார் என்ற புனை பெயரை நானே அவருக்குச் சூட்டினேன். அப்பெயர் ஈழத்து இலக்கிய உலகில் நிலைத்துவிட்டதுமன்றி விமர்சனத்துறையில் ஒரு மைல் கல்லாகவும் அமைந்து விட்டது.

அதன் பின்னர், இலக்கிய விமர்சகர் செந்திநாதன் அவர்கள் வீரகேசரி, தினகரன் ஆகிய பத்திரிகைகளில் ஈழத்து இலக்கிய முயற்சிகள் பற்றி அவ்வப்போது கட்டுரைகள் பல எழுதினார். மேற்படி கட்டுரைகளை ஆதாரமாகக் கொண்டு “ஈழத்து இலக்கிய வளர்ச்சி” மலர்ந்ததெனலாம்.

இத்தகைய இலக்கிய வளர்ச்சி நூல்களையும் ஆராய்ச்சி களையும் பலகலைக்கழகம் போன்ற செழுங்கலை நியமங்களே நுண்ணியதாக ஆராய்ந்து வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஈழத்துப் பல்கலைக்கழகத்தின் கவனம் வேறு திசைகளில் போய்க் கொண்டிருக்கின்றது. பிற்கால இலக்கிய உலகப் பூசலுக்கே அது வித்தூன்றி வருகிறது. இந்நிலையில் தனி மனிதனின் முதல் முயற்சியாக இந்நூல் வெளிவருவது போற்றற் குரியது,

விமர்சனகாரர் என இப்போது பெயர் பெற்று ஈழத்தில் இருப்பவர்களிற் சிலர் பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர் களாய், தங்கள் காலத்தேதான் எல்லாம் தோன்றின எனும் எண்ணமுடையவராய் எழுதி வருகிறார்கள். திரு. கனக – செந்திநாதன், ஆறுமுக நாவலர் தொடக்கம் இன்றைய இளங் கவிஞர்கள் வரை ஆராய்ந்து பழமையையும் புதுமையையும் நமக்கு இந்நூலிற் காட்டியுள்ளார். தமிழ்ச்சுடர் மணிகளையும், ஈழத்து ஒளி விளக்குகளையும், பேனா மன்னர்களையும் இளம் எழுத்தாளர்களையும் காலத்தை வைத்துப் பிரித்து ஆராய்ந்திருப்பது மிக நன்று. ஒவ்வொரு பத்தாண்டு காலத்தைப் பற்றி முகவுரையாக விஷயங்களையும் சரித்திர நிகழ்ச்சிகளின் எழுச்சிகள் ஆகியவற்றையும் கூறிவிட்டு, அப்பத்தாண்டு காலத்தில் எழுதிய எழுத்தளார்களையும் அவர் தம் படைப்புக்களையும் அறிமுகம் செய்துள்ளார். பின், முகவுரையாக அப்பத்தாண்டுக் காலத்தில் இலக்கிய உலகம் என்ன சாதித்தது என்பதைத் தொகுத்துக் கூறியுள்ளார்.

தென் தமிழ்நாட்டுக்குப் பல தடவை இலக்கிய யாத்திரை செய்ததன் பயனாக எனக்கு ஒர் அநுபவம் உண்டு. ஈழத்தைப் பற்றியும், இங்குள்ள எழுத்தாளர்களைப் பற்றியும், அவர்களின் படைப்புக்களைப் பற்றியும் தென்னகத்தாரின் அறிவு போதியதன்று. விரல்விட்டு எண்ணக் கூடியவர்களையே அவர்கள் அறிவார்கள். இத்தகைக்கும் அது அவர்கள் தவறாகாது. இத்தகைய நூல்கள் வெளிவந்திருந்தால் ஏற்கனவே அவர்கள் பல விபரங்களை அறிந்திருக்கலாம். அப்படியான ஒரு பெருங் குறை இப்போது நீங்கியிருப்பது உள்ளத்துக்குப் பேருவகை தருகின்றது.

ஈழகேசரியின் சாதனைகள் பலவற்றுள் அதன் புத்தக மதிப்புரைகள் மேன்மையாக விளங்கின. பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை தொடக்கம் ஈழகேசரி மதிப்புரைகளைப் படித்துக் கடிதமூலம் வாழ்த்தினார்கள். அந்த மதிப்புரைகள், விசர்சனங்கள் என மதிப்புப் பெற்றன. ஒவ்வொரு துறையிலும் அவ்வத் துறையில் துறை போனவர்கள் தாம் அதனை எழுதி உதவினார்கள். அவர்களிலே சோ. சிவபாதசுந்தரம், பண்டிதர் பொ. கிருஷ்ணபிள்ளை, ச. அம்பிகைபாகன், கனக - செந்திநாதன் ஆகியோரை மறக்கவே முடியாது.

இன்றைய காலகட்டத்தில் இந்நூல் மிகமிகத் தேவையானது. ‘நடமாடும் வாசிகசாலை’ எனப் போற்றப்படும் எனது மதிப்புக்குரிய நண்பர் கனக-செந்திநாதன் இத்தேவையைப் பூர்த்தி செய்து இலக்கிய உலகிற்குத் தமது பங்கினைப் பொறுப்புணர்ச்சியுடனும், முழுமையுடனுஞ் செய்துள்ளார்கள்.

இத்தகைய நூல்களை நல்லறிஞர்களும், எழுத்தாளர்களும் வாழ்த்தி வரவேற்பார்கள் என்பதிற் சந்தேகமேயில்லை. இத்தகைய நூல்களால் ஈழ மணித் திருநாடு பெருமையடைகின்றது.

‘கலாநிதி’
சாவகச்சேரி.
20-1-64.

உள்ளுறை

கோபுரவாயில் ... ... ... 17
நுழைவாயில் ... ... ... 29
1922 – 1930 .. ... ... 38
1931 – 1940 ... ... ... 46
1941 – 1950 ... ... ... 53
முன்னோடிகள் ... 55
‘மறுமலர்ச்சி’ எழுத்தாளர் ... 65
நாட்டுப் பாடல்கள் ... 78
‘பண்டித வர்க்க’ எழுத்தாளர் ... 81
மலர்கள் ... 89
மட்டக்களப்பிலே துளிர்த்த ஆர்வம் ... 91
1951 – 1960 ... ... ... 95
சிறுகதைகள் ... 102
கவிதைகள் ... 117
நாவல்கள் ... 127
நாடகங்கள் ... 132
கட்டுரைகளும் விமர்சனங்களும் ... 138
பெண் எழுத்தாளர்கள்; ... 155
1960 இன் பின்னர் ... ... ... 160
முஸ்லிம் எழுத்தாளர்கள் ... 162
பத்திரிகைகள் ... 186
பல்கலைக் கழகம் ... 200
சங்கங்கள் ... 203
பிற முயற்சிகள் ... 214
சாகித்திய மண்டலம் ... 223
திருக்கடைக் காப்பு ... ... ... 228
அநுபந்தம் ... ... ... 233

பல்லாண்டு
கழிந்த பின்னர்
ஒரு முன்னீடு
எஸ். பொ.

நூல்கள் மட்டுமன்றி, பயணங்களும் ஞானத்தைச் சேர்க்கவும் செப்பனிடவும் உதவும். அண்மையில் நான் மேற்கொண்ட இலக்கியச் செலவின் அடிப்படை இதுவே. புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்தம் இலக்கியப் படைப்புத் திசையையும் திறனையும் கேள்விச் செவியனாய் அறிவதிலும் பார்க்க, கள உசாவல் அநுகூலமானது. ஞானம் பொற்பங்களின் மகிழ்ச்சி மட்டுமல்ல. சிதிலங்களின் சோகங்களும் சேர்ந்ததுதான்.

செலவின்போது, இளைய இலக்கிய ஆர்வலர் மத்தியிலே, நேற்றைய நூற்றாண்டில் நிகழ்ந்த ஈழத்துத் தமிழ் இலக்கிய முயற்சிகள் பற்றிய ஞானசூன்யம் தூக்கலாகத் தெரிந்தது. குழு ஆக்ரோஷங்களும் ஆரவாரங்களும் துன்பந் தந்தன. நிதானித்த பொழுது, ஈழத்து இலக்கிய வளர்ச்சி பற்றிய சரியான தகவல்களும் ஆவணங்களும் இவர்களுக்கு கிடைப்பதாக இல்லை. இலங்கையில், கல்வித் தமைமைகளை வைத்து, உயர் பதவிகளைச் சாதித்து, புத்திஜீவிதப் பெயர் படைத்தோர். தமது தலைமைத்துவத்தைத் தக்க வைப்பதற்காகக் கட்டவிழ்த்து விட்ட பொய்மையின் சோடிப்புகளை வரலாறு என மயங்கும் நிலை தொடர்கின்றது. பொய்மையை அடைகாத்தோருடைய பாசறைகளிலிருந்து பட்டதாரிகளாக வெளிவந்தோரது ‘தமிழ்ச் சேவை’களினால், பொய்மைகள் பேரக் குழந்தைகள் பெற்றுச் சேமமாக வாழ்தல் கண்டு திகைத்தேன்.

கனடாவில் ஸ்கோபரோ நகரிலே திமிழ்க் கலை – தொழில் நுட்பக் கல்லூரி செயற்படுகின்றது. அதன் அக்கறையினால் தமிழ்க் கனடிய இளைஞர் பலர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியிலே பட்டதாரிகளாவதற்குப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடனான சந்திப்பும் கலந்துரையாடலும் மறக்க ஒண்ணாத நிகழ்வு. வல்லபங்களைத் தேடுவதிலும், அவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லுதல் வேண்டும் என்கிற சளைக்காத ஆர்வத்திலும் ஈடுபாடுடைய அவர்களுடைய தமிழ்ப் பற்றும் துடிப்பும் சிலிர்ப்பினை ஏற்படுத்தின. ஈழத்தின் வரலாறு பற்றியும், அதன் இலக்கிய வரலாறு பற்றியும் அறிவதற்கான மூல நூல்கள் அவர்களுக்குக் கிடைப்பதாக இல்லை என்கிற குறை அச்சந்திப்பின் போது உணரப்பட்டது. தமிழ்த் தேசியத்தை நிராகரித்து, இடதுசாரி ஐக்கியம் என்கிற பெயராலே, சிங்களப் பேரினவாதத்திற்குச் சிற்றூழியஞ் செய்து, பதவிகள் சுகித்து மார்க்சியத்தின் அரிதாரம் பூசிய பூஜாரிகளுடைய சுலோகங்களை சத்தியத்திற்கான மாற்றீடாக உச்சாடனஞ் செய்யப்படும் அவலம். அறிவின் சுயாதீனத்தினை மதிக்கும் ஆசிரியர்களும் மாணாக்கர்களும்! உண்மையின் தேடலிலே சுய ஆய்வுகளையும் முடிவுகளையும் ஊக்குவிக்கத் தக்க தமிழ் நூல்கள் அவர்களுக்குக் கிடைப்பதாக இல்லை. தேடலிலே ஒரு வரட்சி@ வறுமை

இரசிகமணி கனக – செந்திநாதன் எழுதிய ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்னும் நூலைப் பெரும்பாலானோர் அறியாதவர்களாக இருந்தார்கள். முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த அந்த நூல் அவர்களுக்குக் கிட்டாதது வியப்பன்று. ஆனாலும், அதனைப் பற்றிய கேள்வி ஞானமாவது அவர்களுக்கு இருத்தல் வேண்டும் என்பது நியாயமான எதிர்பார்ப்பாகும். ஏனெனில் இரசிகமணியின் நூலுக்கு ஒரு மகத்துவம் உண்டு. தற்கால ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றின் மூல நூல் அதுவாகும். நடுவு நிலைமை பேணி, தர்மம் மதித்து, உண்மைத் தகவல்களை அதிலே இரசிகமணி திரட்டித் தந்துள்ளார். இந்நூல் 1963ஆம் ஆண்டு வரையிலுமான வரலாறே சொல்கின்றது. அதன் பின்னரான வரலாற்றினை ஆவணப்படுத்த இன்னொரு இரசிகமணி எப்பொழுது தோன்றுவாரோ?

உண்மையின் ஆவணத்திற்காக மேற்கொண்டும் தகவல்கள் சில தகும்;. இந்நூலின் முதற் பதிப்பு 1964 ஆம் ஆண்டின் முதற் கந்தாயத்தில் வெளிவந்தது. 1956 ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் தமிழரின் இறைமையைப் பறிக்கவும், ஈழத் தமிழினத்தின் சீர்த்தியைக் குலைக்கவும் நுழைவாயில் அமைத்து நிறைவேற்றப்பட்ட ‘சிங்களம் மட்டுமே’ சட்டமாக்கப்பட்டத்திற்குப் பின்னர்தான் ஈழத்தமிழ் இலக்கிய முயற்சிகளிலே ஒரு புதிய உத்வேகம் ஏற்பட்டது என்கிற மாயைக்குக் கோபுரவாயில் அமைத்தவர்கள். இரசிகமணி ஈழத் தமிழ்த் தாயின் திருவடிகளிலே சமர்ப்பித்த ஆவணத்தின் சத்தியத்தினைக் கண்டு வெகுண்டெழுந்தார்கள். சிங்கள மொழியின் மேலாண்மைக்கு மென்தரை இறக்க வசதி செய்வதற்காகவும் புதிய வரலாறு கற்பிக்க முனைந்தோரின் புரளிகள், இரசிகமணி ஆவணப்படுத்திய உண்மையின் ஒளியிலே பல்லிழித்து விடும் என்கிற அவதி, நவ புத்திஜீவித முகமூடிதாரிகளுக்கு ஏற்படலாயிற்று. ‘கனக செந்திநாதன் பட்டதாரியா? பல்கலைக்கழகம் கண்டவரா? அவருடைய ஆங்கில அறிவின் அகல நீளம் என்ன? மார்க்ஸிஸத் தத்துவத்தில் அவருக்கு இருக்கும் வல்லபம் என்ன? யுகவநச யடட hந ளை ய தமிழ்ச் சட்டம்பி’ என்று இடுப்புக்குக் கழகங்களின் தமிழ்த் துறையிலமர்ந்து ‘இலக்கிய தாதா’க்களாக வளர்ந்து கொண்டிருந்தவர்கள் தங்களுடைய ‘பினாமி’களை (அல்லது சிண்களை), இலக்கிய சர்ச்சை என்னும் பெயரிலே தெருச் சண்டையில் ஈடுபட ஊக்குவித்தார்கள். ‘உள்ளொளி’ தரிசிக்க விரும்பிய மு. தளையசிங்கம் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியின் அவசர குறிப்புகளை வைத்துக் கொண்டு, இந்தக் குஸ்தியில் கலந்து கொண்டமை சோகமே. தவறுகளை ஏற்றுக் கொள்ளும் நேர்மை மு. த. வுக்கு இருந்தது. தவறான அநுமானங்களைத் திருத்திக் கொள்ளாது அவர் அற்பாயுசிலே மறைந்தமை மகா அவப்பேறாகும்.

எது எவ்வாறிருந்த போதிலும், ஈழத்தின் தமிழ் இலக்கிய உலகம். கனக செந்திநாதனின் அப்பழுக்கற்ற, தமிழ்ப் பற்றினையும், தமிழ் இரசனை மூலமும் விமர்சனம் மூலமும் ஈழத்து இலக்கியத்திற்குச் செய்த நிறைவான பங்களிப்பினையும் இனங் கண்டு பாராட்ட ஈழத் தமிழுலகம் முந்தியது. தற்பொழுது கிழக்குப் பல்கலைக்கழகமாக மாறியுள்ள வந்தாறு மூலை மத்திய மகா வித்தியாலயத்தில் 1964 ஆம் ஆண்டு நடைபெற்ற காப்பியப் பெருவிழாவிலே, ஈழத்தின் நானா பகுதிகளிலுமிருந்து கூடிய தமிழறிஞர் முன்னிலையில், ‘இரசிகமணி’ எனப் பட்டஞ் சூட்டிக் கௌரவிக்கப்பட்டார். இதனால், ஈழத்தின் தமிழ் இலக்கிய வரலாற்றின் அரிதான தகவல்களையும் உண்மைகளையும் ஆவணப்படுத்தியும், தமிழ்மொழியின் தனித்துவ சால்பு என்கிற கூறினைப் பேணி, ஈழமண்ணிலே உருவான தமிழ் இரசனையிலே வேர்கொண்ட தமிழ் விமர்சனத்தின் மனச் சாட்சியாய் அவர் வாழ்ந்ததினாலும் ‘இரசிகமணி’ என்கிற விருதுதான் மகிமை பெற்றது என்கிற சத்தியமே இன்று நின்று நிலவுகின்றது.

தமிழிலே, தமிழ்ப்படைப்பிலே, அவர் புதிதுகள் நாடினார். பண்டித மரபினை நிராகரிக்காது. அதன் செழுமைகளை உள்வாங்கி, அதே சமயம் புதிய இலக்கியப் படைப்புதம் திசைகளையும் திறனையும் நேர்மையாகத் தரிசித்து, தமிழிலே மறுமலர்ச்சி காணத் துடித்த இளைஞர்களுக்கு மூத்த அண்ணாவாகப் படைப்புத் துறையிலே கால் பதி;த்தவர் கனக செந்திநாதன். சிறுகதை – நாவல் - நாடகம் - கவிதை ஆகிய துறைகளிலெல்லாம் அவருடைய அக்கறைகள் வியாபித்திருந்தன. படைப்பிலக்கியத்தில் கணிசமான வெற்றி சாதித்தவர் ஈழத்து இலக்கிய உலகிலே படைப்பிலக்கியத்திலே தோற்றவர்கள் பலர் ‘இலக்கிய விமர்சனம்’ என்று ‘விண்ணாண’த் ‘தொழில்’ செய்கிறார்கள். தர்மமும் தமிழும் துறந்த வேறு இலக்குகளிலே அவர்களுக்குச் சிரத்தை. இரசிகமணி சமகால இலக்கியப் படைப்புகளிலே சிறந்தனவற்றைத் தமிழ்ச் சுவைப்புக்குரியதாக்குதல் வேண்டும் என்பதிலே சிரத்தை ஊன்றி வாழ்ந்தவர் சமகாலப் படைப்பாளிகளுடைய படைப்பு நயங்களை அவரைப் போன்ற மனம் மலர, வாய் மணக்கப் பாராட்டியவர்கள். இலர் என்று சொல்லலாம். இந்தப் பண்பு அவரை மனித நேயத்தின் உச்ச உபாசகராயும் வாழச் செய்தது. அவர் அதிசயர். தமிழ் இலக்கியப் பணியே அவருக்கு சுவாசமாயும், சுகமாயும், வாழ்க்கையாயும் அமைந்தது.

என் இலக்கிய வாழ்க்கையை அர்த்தமும் பயனும் உள்ளதாக ஆற்றுப்படுத்திய ஐவருள் நிச்சயமாக இரசிகமணியும் ஒருவர். யாழ்ப்பாண கலாசாரத்தின் ஆன்மாவைத் தரிசிக்க உதவிய உபகாரி. ‘சொக்கா, நேற்றைய பங்களிப்பினை அஃது அற்பமாக அமைந்தாலும் - மதித்தல் என்பது இன்றைய நமது பங்களிப்பினை நாளைய புதியவர்கள் மதித்தல் வேண்டும் என்கிற சுயநலத்தினை பேணவும் உதவும்’ என வலு எதார்த்தமாக உபதேசித்தவர். அவருடைய நட்பும் உறவும் என் இலக்கியத்தின் பூரிப்பு. ‘மத்தாப்பு’ நாவலில் மட்டுமன்றி, வடமொழி போற்றும் ஒன்பான் சுவைகளுக்கு அர்த்தம் தேடுவதாயும் அமைந்த ‘மணிமகுடம்’ நாவல் எழுதுவதிலே மூவருள் ஒருவராய் இணைந்தவர்.

ஒரு சமயம் இலக்கிய விமர்சனம் பற்றிக் குறுமுனி ஏ. ஜேயுடன் பேசிக் கொண்டிருந்தேன். ‘கனக செந்திநாதன் அற்புதமான மனிதர். ஆங்கில நூல்களின் முழுத்தான அறிவு பெறும் வாய்ப்பு இன்றியும், ஆங்கில இலக்கிய விமர்சனங்கள் கற்பிக்கும் முறைகளையும் விதிகளையும் அவர் மிக நேர்த்தியாகத் தமது விமர்சனங்களிலே பயிலுவது ஆச்சரியமாக இருக்கின்றது’ எனப் பாராட்டியது இப்பொழுதும் பசுமையாக இருக்கிறது.

இன்னும் ஒன்று. என் விமர்சன வழியும் இரசிகமணியின் பாதையும் வேறுபட்டமை. இந்த வேற்றுமையை மதிக்கவும் பாராட்டவும் எங்களால் முடிந்தது. உண்மையைச் சொல்வதாயின் இந்தப் பண்பினை எனக்கு ஊட்டியவரும் இரசிகமணியே எனக்கும் பண்டிதமணிக்கும் இடையில் உறவினை ஏற்படுத்தியவரும் அவரே. நாவலவர் பரம்பரையின் புதிய வடிவமாய் என் பணி அமைந்துள்ளதாக, சி. க. பாராட்டுவதாக இரசிகமணி சொல்லுவார். எத்தகைய இனிப்பான பாராட்டு!

இன்றைய தலைமுறையினருக்குக் கிடைப்பதாக இல்லையே! இரசிகமணி கனக. செந்திநாதனின் முன்னோடி இலக்கிய ஊழியம் கனவாய், பழங்கதையாய் மறைந்துபட வேண்டுமா? தமிழ்க் கலை தொழில் நுட்பக் கல்லூரியின் ஆசிரியர்களும் மாணவர்களும் அளித்த இராப்போசன விருந்தின் பின்னர், தம்பியின் வீட்டிலே படுத்திருந்த பொழுது, இரசிகமணியின் நூலின் இரண்டாம் பதிப்பினை பற்றிய அக்கறையிலேயே உழன்றேன்.

இந்த இலக்கியச் செலவின் போது என் பழைய இலக்கிய தோஸ்துகளைக் கண்டு மகிழ்ந்தேன். அவர்களுள் ஒருவர் கவிமணி கந்தவனம். அவர் என்றும் குரும்பசிட்டி மண்ணின் இலக்கியப் பாராம்பரியத்தினைப் பேணுபவராக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடன் உரையாடும் பொழுதெல்லாம் அந்தச் செம்மண்ணிலே அநுபவித்த இலக்கியச் சுகங்களை மீள அநுபவித்தேன். இந்தப் பழசுகள் பற்றிய நினைவுகள் மகத்தானவை. அப்பொழுது, என் மனசார்ந்த உணர்வுகளை உணர்ந்து கொண்டவர் போல, ‘இரசிகமணியின்; ‘ஈழத்து இலக்கிய வளர்ச்சி’யின் இரண்டாவது பதிப்பினை வெளியிடுவதற்கு குரும்பசிட்டி மண் உதவும்’ என்றார். அவர் வெறும் சொல் வீரர் அல்லர். அவர் காட்டிய ஆவேச அக்கறையினால், இந்தப் பதி;ப்பு இவ்வளவு விரைவாக வெளிவருகின்றது. அந்த மண்ணின் மாண்பு நின்று நிலவும். இந்த இரண்டாம் பதிப்பிலே, முதற் பதிப்பின் பாடம் உள்ளவாறு பேணப்பட்டுள்ளது. இது முக்கியம். ஆனால் முதற் பதிப்புக்கு பொலிவு சேர்த்த முன்னோடிகளுடைய புகைப்படங்கள் இந்தப் பதிப்பிலே சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இஃது ஆவணத்துக்குப் புறம்பான சோடிப்பு என்பது மட்டுமல்ல காரணம். முதற்பதிப்பின் பதிப்புரையும் சேர்த்துக் கொள்ளப்பட வில்லை. ஆவணங்களின் செப்பம் கருதியே இவற்றைக் குறிப்பிட வேண்டியிருக்கின்றது. இந்தப் புதிய பதிப்புக்கு, தேவை கருதி இந்த முன்னீடு சேர்க்கப்படுகின்றது. அதே போன்று கனக செந்திநாதனின் படமும், அவருடைய இலக்கிய வாழ்க்கையின், சொரூபத்தையும் ஊழியத்தையும் உரிய முறையிலே தரிசிக்க உதவும் இரண்டு அநுபந்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இறுதியாக பண்டிதமணியின், ஆசியும் வாழ்த்தும் இந்நூலுக்குப் பொருந்துவதாக:

“குறித்த (ஈழத்து இலக்கிய வளர்ச்சி) புத்தகம் உயர்தர வகுப்பு மாணவருக்கும் ஆசிரியர்களுக்கும், கல்விமான்களுக்கும் அரியதொரு விருந்தாய் அமைந்து பெருமதிப்பைப் பெறும் என்பது எனது நம்பிக்கை”

பண்டிதமணி சி.க.வின் ஆசியும், இரசிகமணியின் இலக்கிய ஊழியமும் நின்று நிலவுக.

சமர்ப்பணம்

இல்வாழ் வென்னும் சகடத்தை
இருபத்து நான்கு ஆண்டுகளாய்
நல்ல முறையில் இழுத்துவந்த
நவைதீர் சோடி ஆனவளும்

பொன்னைப் பொருளைக் கேட்காமல்
புத்தக மாகிய செல்வமதை
கண்ணிற் கருமணி போல, பல
காலங் காத்து வருபவளும்

பிள்ளை, குடும்பம், சுற்றமெனும்
பெரிய மலையைத் தான்சுமந்து
என்னைத் தனியாய் இலக்கியத்தில்
இனிதே உலவ விட்டவளும்

நல்ல குணங்கள் பலகொண்ட
நாயகி ஆகிய நாகம்மைக்
கென்ன உண்டு கொடுப்பதற்கு?
இதையே சமர்ப்பித் திடலானேன்.

தொலைந்து போன
அடையாளத்தை
மீட்பது போலவே
இழந்துவிட்ட
கனக. செந்திநாதனின்;
கோட்டுருவத்தை
நாளைய
இலக்கியச் சுவைஞருக்கும்
தமது தூரிகையால்
மீட்டுத் தந்த
ஆதிமூலம்
அவர்களுக்கு
மித்ரவின்
நன்றி

கோபுரவாயில்

‘ஈழத்து இலக்கிய வளர்ச்சி’ யாகிய மணி மண்டபத்துள் நுழைந்து, எழுத்துலக மன்னர்களையும், ஆற்றலிலக்கியச் சிற்பிகளையும், அவர் தம் படைப்புக்களையும் நான் எப்படி வரிசைப்படுத்தியுள்ளேன் என்பதை அறிய அவாவி நிற்கும் வாசக நேயரே! இங்கே – கோபுரவாயிலில் வைத்தே – சில எச்சரிக்கைகளைச் சொல்ல எண்ணியுள்ளேன். ஏனெனில், இந்நூலுக்கு – மணிமண்டபத்துக்கு – அவை நிச்சயத் தேவையாகும்.

மட்டக்களப்பிலே, சென்ற ஆண்டு 1963 ஆவணித் திங்கள் 23, 24, 25 ஆம் நாட்களில் இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்க அநுசரணையுடன் கிழக்கிலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடாத்திய தமிழ் விழா கோலாகலமான முறையில் நடந்தேறியது. ஈழத்தின் நானாபகுதிகளிலிருந்தும் அறிஞர்கள், பண்டிதர்கள், பெரும் எழுத்தாளர்கள், இளங்கவிஞர்கள், கலைஞர்கள் இலக்கிய இரசிகர்கள் என இலக்கிய உலகின் பல பிரிவினரும் ஒன்றாக ஒரே மேடையிலே தோன்றியமை இவ்விழாவின் சிறப்பம்சமாகும். மூன்று நாட்கள் நடைபெற்ற இவ்விழாவிலே மொத்தம் பனிரெண்டு அரங்குகள் இடம் பெற்றன. இவற்றுள் உரை அரங்கிற்கும்;, கருத்தரங்கிற்கும் தலைமைதாங்கும்படி தமிழ் விழாவின் பிரதம அமைப்பு நிருவாகியான திரு. எஸ். பொன்னுத்துரை என்னைக் கேட்டிருந்தார். கலாநிதிகளும், பேராசிரியர்களும், பட்டதாரி அறிஞர்களும், பழம் பெரும் பண்டிதர்களும் நிரம்பியுள்ள அவ்வவைக்கு என்னைத் தலைமை தாங்கும்படி கேட்டமை, என்னைச் சற்றே வியப்பில் ஆழ்த்தியது. அதனை, பிரதம அமைப்பு நிருவாகியிடம் வெளிப்படையாகவே தெரிவித்தேன். அதற்கு அவர் கீழ்க்காணும் பதிலைத் தந்தார்:

“ஈழத்து இலக்கிய உலகத்துடன் நீங்கள் இருபத்தைந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக தொடர்பு கொண்டுள்ளவர்கள். “ஈழகேசரி”க் குழுவிலே தொடங்கி, மறுமலர்ச்சி வட்டாரத்துடன் நெருங்கியுழைத்து, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலுந் தொடர்புகொண்டு சேவை செய்தவர்கள். இத்தனை வருடங்களாக ஈழத்திலும், தமிழ்நாட்டிலும் வெளிவரும் புத்தகங்களையும் பத்திரிகைகளையும் ஒழுங்காக வாசித்து, அவற்றிலே தரமானவற்றை அவ்வப்போது அறிமுகப்படுத்தியும் வருகின்றீர்கள். தற்கால இலக்கிய முயற்சிகளைப் பற்றி நீங்கள் சேகரித்து வைத்திருக்கும் தகவல்கள் வேறு யாரிடமுமில்லை என்பது எனது நம்பிக்கை. தமிழ் விழாவில் இடம்பெறும் ஒவ்வொரு அரங்கிற்கும் அவ்வத் துறையிலே துறைபோனவர்களைத் தலைமை தாங்கும்படி கேட்டுக் கொள்வதே தமிழ் விழாக் குழுவினரின் முடிவு”

புகழ்ச்சி மொழி என்கிற மதுவில் ஒரு கணம் திண்டாடினேன். ஒரு விழாவிற்குத் தலைமை தாங்க அழைப்பவர்களை ‘நாலு முகமன்’ வார்த்தைகள் கூறி அழைப்பது தமிழரது வழக்கம். ஆனால் பொன்னுத்துரை அவ்வழக்கங்களுக்கு அப்பாற்பட்டவர். அவரை ஈழம் அறியும். ‘கண்டனக்காரர்’ என்று பெயர் பெற்றவர். தனக்குச் சரியெனப்பட்டதை நண்பர்கள் - அணியைச் சேர்ந்தவர்கள் என்று பாராது சொல்பவர். எழுதுபவர், மத்தாப்பு, மணிமகுடம் ஆகிய கூட்டு இலக்கிய முயற்சிகளில் என்னுடன் தொடர்பு கொண்டிருந்தாலும், வீரகேசரியின் இலக்கிய சர்ச்சைப் பகுதியில், ஈழத்தின் சிறுகதை – கவிதை – நாவல் ஆகியவற்றின் தர மதிப்பீட்டில் என்னாடு மாறுபாடு கொண்டு ‘நெருப்பாகக் கக்கும்’ கண்டனக் கணைகளைத் தொடுத்து முடித்திருந்தார் அவரைப் பொறுத்த மட்டில் நட்பும், அரசியல் உடன்பாடும் வேறு@ இலக்கிய மதிப்பீட்டு விடயம் வேறு. எனவே, அவர் கூற்றுக்கள் அவர் தம் உள்ளத்து அடித்தளத்தின் பிரதிபலிப்பே என்பதை உணர்ந்தேன். அதனால், எனக்கு ஒருவகைத் திருப்தி ஏற்பட்டது.

நான் தலைமை தாங்கிய இரு அரங்குகளுக்கும் எஸ். பொன்னுத்துரையே வரவேற்புரை நிகழ்தினார். அப்போது அவர் பின்வருமாறு குறி;ப்பிட்டார்:

“கனக – செந்திநாதன் அவர்கள் ஒரு தமிழ்ச் சட்டம்பியார். ஆனாலும், தமிழாசிரியர்களிலும் பார்க்க அவர் வேறு ஒர் இனம் - வர்க்கம். ஒரு பெண்ணிற்குச் சீதனமாகக் கொடுக்கக்கூடிய செல்வத்தைத் தமிழ்ப் புத்தகங்களும் பத்திரிகைகளும் வாங்குவதிற் செலவு செய்தவர். ஆங்கிலங் கற்றோர்தாம் தமிழில்; இலக்கிய விமர்சனஞ் செய்யலாம் என்று சில புதுமை விமர்சகர்கள் சொல்லிவரும் இந்நாளில், மரபிலே திளைத்து, தமிழிலே தோய்ந்து, ஈழத்துத் தமிழ் இலக்கிய விமர்சனத் துறையைச் செப்பனிடுபவர். சந்தனக் கட்டை தன்னைத் தானே தேய்த்து மணக்குழம்பு தருவது போல தானே சிறுகதை – நாவல் - நாடகம் ஆகிய சிருட்டி இலக்கியங்கள் செய்திருந்தாலுந் தன்னை அதிகம் பிரபலப்படுத்தாமல், பழம் பத்திரிகைப் பரவையுள் மறைந்து கிடக்கும் எழுத்தாளர்களை வாசகர் கவனத்துக்கு கொண்டு வந்தவர். அவர் எழுதியுள்ள கட்டுரைத் தொடர்களும் வெளியிட்டுள்ள நூல்களும் இதற்குச் சான்று பகரும். அல்வாயூர்க் கவிஞர் மு. செல்லையா கவிதைவானில் ஒரு வளர்பிறை என்ற விமர்சன நூலையும், தமது மதிப்பு மிக்க ஆசானாகிய பண்டிதமணி திரு. சி. கணபதிப்பிள்ளை அவர்களின் வரலாறும் வண்டமிழ் வளர்ச்சியுங் கொண்ட மூன்றாவது கண்ணையும். அகால மரண மெய்திய தமது மகள் பராசக்தியின் நினைவாக ஈழத்துக் கவிஞர் முப்பத்தைந்து பேரது கவிதைகள் அடங்கிய ஈழத்துக் கவிதை மலர்களையும் அவர் வெளியிடு;ள்ளார். அவர் தமது பணத்தில் மற்றைய எழுத்தாளர்களைப் போலத் தாம் எழுதிய சிறுகதைகளை (‘ஒருபிடி சோறு’ முதலியன), விதியின்கை, வெறுப்பானை முதலிய நாவல்களை, தாகம், மன்னிப்பு, ஒளிபிறந்தது என்ற நாடகங்களை வெளியிட்டிருக்கலாம். ஆனால் ஈழம் அதன் எழுத்தாளர்கள் அவர்கள் படைப்புக்கள் என்றே சதா எண்ணமிடும் அவரால் விரிந்த மனப்பான்மையில் அப்படித் தான் வெளியிட முடிந்தது.

“இன்று நான் அவரிடம் விடுக்கும் வேண்டுகோள் ஒன்றுண்டு. உங்கள் பாதையை நாங்கள் வாழ்த்தி வரவேற்கிறோம். மற்றையோர் சிறுகதைகளையும் நாவல்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கட்டும். நீங்கள் ஈழத்துப் பேனா மன்னர்களை, ஈழத்து ஒளி விளக்குகளை, கவிதைக் கடலில் கதை முத்துக்களை, ஈழத்து இலக்கிய வளர்ச்சியை எழுதியுள்ளீர்கள். அவற்றினின்றும் தொகுத்து. நிலைபெறக்கூடிய ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்னும் விமர்சன நூல் ஒன்றைத் தாருங்கள். விமர்சனம் என்னும் பெயரால் வட்டார நலன்கள் மட்டுமே பேணப்பட்டு, உண்மை வரலாறு மறைக்கப்பட்டு வருகின்றது. கலாசாலைகளிலும் சருவகலாசாலையிலும் கற்கும் மாணாக்கர் அவற்றையே உண்மையென நம்பி ஏமாந்து போகின்றார்கள். ஆகையால் தான் உங்கள் நூல் உடனடித் தேவையாக இருக்கின்றது. இங்கே இப்போதே அதற்கான சபதம் எடுத்துக் கொள்ளுங்கள். இஃது எனது வேண்டுகோள் மாத்திரமன்று, ஈழத்தமிழ்த்தாயின் வேண்டுகோளுமாகும்”

தமிழ்த்தாயின் பெயரால் ஒரு தமிழ் விழாவிலே தமிழ் எழுத்தாளருட் சிறந்தவர் ஒருவரால் விடுக்கப்பட்ட வேண்டுகோள் என் நெஞ்சத்தடத்திலே நின்றுலாவியது. அநுமான் கூடச் சாம்பவானின் புகழ் மொழி கேட்டபின்தான் கடலைத் தாண்டினான் என்பது கதை. அன்பர் பொன்னுத்துரையின் உற்சாக மொழிகளினால் நான் மீண்டும் ஈழத்து இலக்கியக் கடலின் அகல – நீள – ஆழத்தைக் காண அதிற் குதித்தேன்.

அதன் பயனாக வெளிவருவதே இந்நூலாகும். நூலினை எழுதும்போது எத்தனையோ சங்கடங்கள் குறுக்கிட்டன. அவை முழுவதையும் இங்கு குறிப்பிடத் தேவையில்லை. இருப்பினும், இந்நூல் எழுதப்படுஞ் சூழ்நிலையைக் கவனத்திற் கொள்ளல் வேண்டும்.

‘குமாரசுவாமிப் புலவருக்குப் பின்னர் ஈழத்திலே எவ்விதமான இலக்கிய வளர்ச்சியும் ஏற்படவில்லை. தமிழ் கடிவாளமற்ற குதிரை போலத் ‘தறிகெட்டு’ ஒடுகிறது என்று நினைக்கும் ‘படித்தவர்’களும் நம் மத்தியில் இருக்கிறார்கள். தாங்களாகவே ஏற்படுத்திக் கொண்ட சுற்றுமதில்களுக்கு அப்பால் நடைபெறும் இலக்கிய முயற்சிகளைப் பற்றியும் ஆக்கங்களைப் பற்றியும் அறியும் அக்கறை எதுவுமின்றி. ‘சிறுகதைகள் - நாவல்கள் ஆகியன இலக்கியங்களா?’ என்று கேட்போரும் இருக்கின்றார்கள். கதை முயற்சிகளுக்கு இலக்கியத்திற்கான ‘நோபல்’ பரிசுகள் வழங்கப்பட்டுவரும் கால ஓட்டத்தினைத் தென்னகத்துத் திமிழறிஞர்கள் உணர்ந்து அவ்வகைப் பணிகளிலே தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்கள். ஈழத்திலே இன்னமுஞ்சிலர் இதனை உணராது. கால ஓட்டத்தைத் தடுத்து நிறுத்தலாம் என்று எண்ணுவதுதான் விந்தையிலும் விந்தையாகும்.

இஃது இவ்வாறு ஒரு புறமிருக்க, சிருட்டி இலக்கிய காரர் மத்தியிலும் பல குறைகள் உள. பழைமையில் வேரூன்றாத நிலையும், தொல்காப்பியம் முதலாம் பழைய இலக்கண நூல்களைப் படியாவிட்டாலும், தமது எழுத்துத் துறைக்கு வேண்டியவற்றையேனும் அறிய முயலாமலும், ஈழத்தின் பழைய வரலாற்றினையும், நூல்களையும் படிக்க வேண்டுமென்னும் அவா இல்லாமலும், ‘ஏதோ எழுதினால் எழுத்தாளராகி விடலாம்’ என்னும் அலட்சியப் போக்குள்ளவர்களாகப் பலர் இருக்கிறார்கள். படித்தவர்களையும் அறிஞர்களையும் அலட்சியமாக நோக்குவோரும் உளர். ஒரு பத்து வருட முயற்சிகளை அடுத்த பத்து வருடத்துள் மறைத்தும், மறுத்தும் எழுதும் விமர்சனகாரர்களும் இருக்கிறார்கள். பழைய எழுத்தாளரது இலக்கிய சிருட்டிகள் நூலுருவம் பெறாது பழைய பத்திரிகைக் குவியலுள் மறைந்திருத்தல் இலக்கிய வரலாற்றுப் புட்டர்களுக்கு வசதியாகவும் இருக்கின்றது.

இந்நிலையிற் குமாரசுவாமிப் புலவர் அவர்களது காலத்திற்கு முற்பட்ட வரலாற்றைச் சுருக்கமாக கூறிவிட்டு, பி;ன்னர் நிழந்துள்ளவற்றை ஒரளவு விரிவாகக் கூறியிருக்கிறேன். ஈழத்து இலக்கிய வளர்ச்சியைப்பற்றி ஆராய்ந்து பாகம் பாகமாக நூல்கள் வெளிவருதல் வேண்டும். ஏன். தனித்தனி எழுத்தாளர்களின் முழுப்படைப்புக்களைப் பற்றிய விமர்சன நூல்கள் எழுதினாலும் நல்லதுதான். அப்படியான நூல்கள் வெளிவருவதற்கு இந்நூல் நிச்சயம் ஓரளவாவது உதவி புரியும் என்பதுண்மையாகும்.

பெரியதோர் இலக்கிய வளர்ச்சிப் பரப்பினை ஒரளவு அடக்கமான முறையில், முக்கிய அம்சங்களை விட்டு விடாமல் எழுதியுள்ளேன். ஈழத்துப் பேனா மன்னர்கள் வரிசையில் நாற்பது எழுத்தாளர்களைப் பற்றியும், ஈழத்து ஒளி விளக்குகளில் மறைந்த பதினான்கு அறிஞர்களைப் பற்றியும் சற்று விரிவாகவும் எழுதியுள்ளேன். அத்தகைய விரிவைப் பல காரணங்களுக்காக இந்நூலிலே தவிர்த்துள்ளேன்.

இதன்கண் ஈழத்து இலக்கிய முயற்சிகளினதும் அவற்றின் வளர்ச்சிகளினதுமான வரலாற்றை எழுதியுள்ளேன். முயற்சிகள் நடைபெறுவதற்கான பின்னணியைச் சரித்திர நோக்குடனேயே அணுகியுள்ளேன்.

ஆனால், இலக்கிய வளர்ச்சியின் சரிதத்தைச் சொல்லும் அளவிற்கு மட்டுமே, எழுத்தாளர்களுடைய சிருட்டிகளைப் பற்றிய விமர்சனம் இந்நூலில் இடம் பெறுகின்றது. விரிவான விமர்சன முறையைப் பிரக்ஞை பூர்வமாகவே தவிர்த்துள்ளேன். இத்தகைய உபாயத்தை நூலின் சுருக்கங் கருதிக் கையாண்டுள்ளேனேயன்றிப் பிறிதொன்றுக்குமில்லை.

1931ஆம் ஆண்டிற்குப் பின்னர் குறிப்பிடப்படும் எழுத்தாளர்கள் சமகாலத்தவராவார்கள். அவர்களுட் சிலரேனும் வளர்ச்சி;த் தடத்திலே முன்னேறிக் கொண்டிருப்பவர்களாவர். பலர் என்னுடைய நண்பர்களுமாவர். அவர்களது முயற்சிகளை எடைபோட்டுக் காட்டுதல், பகையை வலிந்து விலைக்கு வாங்குஞ் செயல் என்பதையும் நான் உணருவேன். இருப்பினும், வரலாற்றினைச் சொல்வதற்கு அத்தியாவசியமான அளவிற்கு அவர்களுடைய எழுத்துக்களை நான் விமர்சனஞ் செய்துள்ளேன்.

ஈழத்து இலக்கிய வளர்ச்சியைப் பற்றிய நேர்மையான வரலாறு எழுதப்படல் வேண்டும் என்கிற வேணவாவே என் நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்தது. மனிதரிடம் இயல்பாகவுள்ள பந்தபாச உணர்வுகளை ஒரளவிற்கேனும் என்னிடமிருந்து பிரித்து வைத்து, வரலாற்றாசிரியனின் பொறுப்புணர்ச்சியுடனும். அந்தரக் கயிற்றில் நடக்கும் கழைக் கூத்தாடியின் நிதானத்துடனும், இதனை எழுதியுள்ளேன் என்று துணிந்து கூறலாம்.

எழுத்தாளர்கள் அதீதக் கற்பனை வளங் கொண்டவர்கள். தாங்கள் எழுத்துலகிற் சாதித்தவற்றைப் பார்க்கிலும், ஏதோவெல்லாஞ் சாதித்துள்ளதான மன மயக்கத்தில் மகிழ்பவர்கள். எனவே., எனது மதிப்பீடு சில சமயம் அவர்களுக்கு மனச் சுளிவினை ஏற்படுத்தலாம். “முதுகு சொறிவது” அல்லது இதமாக நாலு வார்த்தைகள் கூறுவதுதான் விமர்சனமன்று. எழுத்தாளர்கள் தாம் சாதித்தவற்றின் எல்லைக் கட்டுகளை உணர்ந்து, மேலும் முன்னேற வேண்டுமென்கிற நல்லெண்ணத்திற் சில கசப்பான உண்மைகளையுஞ் சொல்லியுள்ளேன். இதனைச் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் மனதில் வைத்திருப்பார்களே யானால் நன்று. அறிவு சம்பந்தமான விசாரணையில் உணர்ச்சி வசப்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.

இந்நூலில், முஸ்லிம் எழுத்தாளர்கள் என்னும் பகுதியைத் தனியே சேர்த்துள்ளேன். சென்ற சில மாதங்களாகப் பல முஸ்லிம் அறிஞர்களுடன் தொடர்புகொண்டு பல தகவல்களைச் சேகரித்து, பல நூல்களை அறபுத் தமிழறிஞர் உதவியுடன் வாசித்து, பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து, இன்றுவரையுள்ள முஸ்லிம் புலவர்களையும் எழுத்தாளர்களையும் தொகுத்துள்ளேன். இப்பகுதியின் தொகுப்பு வேலையிற் பலர் உதவி செய்திருப்பினும், விசேடமாகத் தெல்தொட்டை ஆ. பி. நூ. அல்லாபிச்சை அவர்களுக்கு நன்றி கூறுதல் எனது கடன்மையாகும்.

‘ஈழத்து இலக்கிய வளர்ச்சி’யின் கையெழுத்துப் பிரதியை அரசுப் பதிப்பக நிருவாகியிடங் கொடுத்து ஊர் திரும்பிய நான், நோய்வாய்ப்பட்டேன். இடதுகை மணிக்கட்டுக்கு அப்பால் விரல் முழுவதும் உள்ளும் புறமும் வீக்கம். இருபத்தியொரு நாட்கள் மானிப்பாய் மருத்துவ மனையிலே தங்கிச் சிகிச்சை பெற்றேன். இக்கோபுரவாயிற் குறிப்புக்களை எழுதும்பொழுதும் எனக்குப் பூரண சுகமில்லை. பின்னர் கிடைத்த மலைநாட்டு எழுத்தாளர் மன்றம். இலங்கை முஸ்லிம் எழுத்தாளர் சங்கம் ஆகியவற்றைப் பற்றிய ஓரிரு குறிப்புக்கள் விடுபட்டுப் போனமைக்கு இச் சுகயீனமே காரணமாகும்.

காரியம் மிகவும் பெரியது@ என் ஆற்றலுள்ள வரை நீந்தியிருக்கின்றேன். என் நினைவுக்குப் படாமல் யாராவது எழுத்தாளரோ, நல்ல படைப்போ தப்பியிருப்பின், காகாகலேல்கர் தமது ‘சப்த நதிகள்’ என்னும் நூலின் முகவுரையில் இந்த நூலில் ஏழு நதிகளின் கரையில் வளர்ந்துள்ள நாகரிகத்தையுஞ் சரித்திரச் சம்பவங்களையுமே குறிப்பிட்டுள்ளேன். அதனால், மற்றைய நதிதீரத்து மக்கள் தாம் குறைந்தவர்களென்றோ, சரித்திரப் பின்னணி இல்லாதவர்களென்றோ நினைத்து விடவேண்டாம். காலம் வரும்பொழுது அவர்களையும் அறிமுகஞ் செய்துவைப்பேன். அப்படி விடுபட்டுப் போன நதிதீரத்து மக்களுக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கின்றேன்’ எனக் குறிப்பிடும் பகுதியை நினைவுபடுத்தி, சம்பந்தப்பட்டவர்களுக்கு காகாஜீயின் சமர்ப்பணத்தையே, நான் சமர்ப்பிக்க விழைகின்றேன். அவர்கள் அவற்றினை எனக்கு எடுத்துக் காட்டுவார்களேயானால், அடுத்த பதிப்பிற் சேர்த்துக் கொள்ளுதல் சாத்தியமாகும்.

இந்நூலின் இறுதியில் எழுத்தாளர்கள் - நூல்கள் - பத்திரிகைகள் - சங்கங்கள் ஆகியவற்றின் அட்டவணை ஒன்றையுஞ் சேர்க்க நினைத்திருந்தேன். எதிர்பாராத காரணங்களினால் அவ்வாசை இப்பதிப்பில் நிறைவேறாது போயிற்று. இருப்பினும், புத்தக அமைப்பு முறையினால், அட்டவணையின் துணையின்றித் தேவையான தகவல்களைச் சட்டென்று தேடிக் கொள்ளலாம் என்பது என் மனக்குறையைப் போக்கி திருப்தியைத்தருகின்றது.

ஈழத்தின் இலக்கிய வளர்ச்சியை அறியவேண்டுமென்று விரும்பும் எழுத்தாளர் – விமர்சகர் என்போர்க்கும் கல்லூரிகளிலும் சருவகலாசாலைகளிலும் பயிலும் மாணாக்கர்களுக்கும் இந்நூல் பயன்படும். மேலும், பத்திகைகளையும் புத்தகங்களையும் ஏராளமாக அனுப்பி, ஈழத்தை விற்பனைச் சந்தையாக மட்டும் உபயோகித்துக் கொண்டு, ஈழத்தமிழர்களைப் பற்றியும், இங்குள்ள எழுத்தாளர்களைப் பற்றியும் ஒன்றுமறியாமலிருக்கும் தென்னகப் பத்திரிகை ஆசிரியர்களுக்கும் இது நிச்சயம் பயன்படும்.
குரும்பசிட்டி கனக. செந்திநாதன்
தெல்லிப்பழை
4-2-1964

நுழைவாயில்

“நல்லைநகர் ஆறுமுகநாவலர் பிறந்திலரேல் சொல்லுதமிழ் எங்கே?” என்று ஒரு மேதை பாடினார். இது சரியான மதிப்பீடு. புலவர்களிடத்திலும் வித்துவான்களிடத்திலும் செய்யுள் நடை பயின்று கொண்டிருந்த தமிழ்ப் பாவையை அழைத்து, உனக்கு ஏற்ற வன்னநடை வசன நடைதான், இனி மேல் வாழக்கூடிய நடையும் வழங்கக்கூடிய நடையும் அது தான் என்று பழக்கி வைத்த ஆசான் ஆறுமுகநாவலர் அவர்களே என்று பெருமிதம் விஞ்சக் கூறுகின்றார் இன்னொரு புலவர்.

அன்னநடை பிடியினடை அழகுநடை
யல்லவென அகற்றி அந்நாட்
பன்னுமுது புலவரிடஞ் செய்யுணடை
பயின்ற தமிழ்ப் பாவையாட்கு
வன்னநடை வழங்குநடை வசனநடை
யெனப்பயிற்றி வைத்த ஆசான்
மன்னுமருள் நாவலன்றன் அழியாநல்
லொழுக்கநடை வாழி வாழி.

இந்த அருமந்த பாடல். சொல்லென்ற மலரிலே பொருளென்ற புதுமதுச் சொட்டிச் சுரக்கும், பாடல் - சோமசுந்தரப் புலவர் அவர்களுடையதாகும். இது நாவலரின் உண்மையான தமிழ் மூச்சினை நேர்மையாக விமர்சிக்கிறது. ஈழத்தின் தமிழ் வளர்ச்சிச் சரித்திரம் பூதந்தேவனார் என்ற புலவரோடு ஆரம்பிக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலுள்ள ஈழத் தமிழ் முயற்சிகளை எழுதப் புகின், பெரியதோர் ஆராய்ச்சி நூலுக்கேற்ற எராளமான விடயங்கள் உள. பாவலர் சரித்திர தீபகம், தமிழ்ப் புலவர் சரித்திரம், ஈழமண்டலப் புலவர் சரித்திரம் என்னும் நூல்களிலே எத்தனையோ புலவர் பெருமக்களை நாம் சந்திக்கின்றோம். முக்கியமாக இரகுவமிசம் பாடிய அரசகேசரி, மன்னர்களாக இருந்தும் மருத்துவமும் சோதிடமும் ஆக்கித்தந்து தமிழ் வளர்;த்த செகராசசேகரன், பரராசசேகரன் ஆகியோர், ஈழத்து இலக்கிய வாயிலுக்குப் பொன்பூச் சொரிந்து பொலிந்த செழுந்தாதிறைக்கும். பறாளை விநாயகர் பள்ளைப் பாடிய சின்னத்தம்பிப் புலவர், யாழ்ப்பாண வைபவ மாலை இயற்றிய மயில்வாகனப் புலவர் பரசமய கண்டனமாகிய குறவஞ்சி பாடிய இருபாலைச் சேனாதிராய முதலியார் ஆகியோர் நம் மனத்தகத்தை விட்டு நீங்காமல் கொலுவீற்றிருக்கிறார்கள்.

ஆனால், சுருக்கமான இக்காலத் தமிழ் இலக்கிய முயற்சிகள் பற்றிய கட்டுரைக்கு முதற்கண் நிற்பவர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்களே, இருப்பினும், அவருடைய சேவைகள்கூடத் தமிழ் நாட்டின் இக்கால ‘நவீன’ விமர்சகர்களால், ‘பொய்யாப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே’ என்றபடி மறக்கப்பட்டு – மறுக்கப்பட்டு – அழிவழக்காடப்படுகின்றன. இதோ, தமிழ்நாட்டின் ‘சலங்கைநடை’ விமர்சகரான ஸ்ரீ மான் ஒருவரின் விமர்சனத்தின் ஒரு பகுதியைப் பாருங்கள்.

“சரவணப் பெருமாளையரும், விசாகப் பெருமாளையரும், இவர்களுக்குப் பின் தோன்றிய ஆறுமுகநாவலர் முதலானவர்களும் வளருந் தமிழிலக்கியத்தின் இன்றியமையாத பகுதியாய் மதிக்கத்தக்க கட்டுரைகளை எழுதிவிடவில்லை. இராமலிங்கர் பாவலராகவும் நாவலராகவும் திகழ்ந்தவர். இவரது மனுமுறைகண்ட வாசகத்திலே எடுத்துக்கொண்ட பொருளை விரித்துரைக்கும் ஆற்றல்; மிகுந்த வித்தகர் இவர் என்பதைக் காண்கின்றோம்.”

ஒரு கண்ணில் வெண்ணெயும், மறு கண்ணிலே சுண்ணாம்பும் வைத்துக்கொண்டு பேனாபிடிக்கும் இவ்வகை ஆராய்ச்சியாளருக்குப் பதில் சொல்வதற்கு இது தகுந்த இடமன்று. எஃது எவ்வாறாயினும், ஈழத்தமிழ் வளர்ச்சிச் சரித்திரத்திலே, பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுக்காலம் நாவலர் காலம். அக்காலம், வசன நடையாகிய குழந்தை தளர் நடைக்கு ஆயத்தம் செய்த காலம். அக்குழந்தைக்கு நடைவண்டி கொடுத்து, உறுதியாக நடக்க உதவிய பெருமை ஆறுமுகநாவலரவர்களுடையது.

ஆறுமுக நாவலர் பரிசோதித்தும், புத்துரையாத்தும், புதிதாய் எழுதியும் வெளியிட்ட நூல்கள் ஐம்பத்தொன்று. அச்சிற் பதிப்பிக்கும் பொருட்டு எழுதிமுடித்தவைகள் பத்து, எழுதத் தொடங்கியவைகள் ஒன்பது.

எல்லா நூல்களையும் அக்காலத் தமிழிலக்கியச் சூழலிலே வைத்து,
ஐ. பால பாடங்கள் - சைவ வினாவிடைகள்.
ஐஐ. பெரிய புராண – திருவிளையாடற் புராண வசனங்கள்@
ஐஐஐ. நாவலர் பிரபந்தத் திரட்டு (கண்டனங்கள்)
ஐஏ. பெரியபுராண சூசனம்@
ஏ. அவர் பதிப்பித்த நூல்கள்.

என ஐந்து பிரிவுகளாக வகுத்துக் கொண்டு ஆராய முற்படின், நாவலரவர்கள் திமிழ்ப் பாவைக்கு ஆசானாகிய தன்மை ஒரு சிறிது புலப்படும். பாடசாலை மாணவர் தொடக்கம், பண்டிதர் வரைக்கும் படிப்படியாகப் படித்து அநுபவிக்கக்கூடிய ஆக்க வேலைகளை அவர் நமக்கு அளித்துவிட்டுச் சென்ற பெருமையுந் தெரியும்.

அடுத்து வருகிறார் ஒரு பரோபகாரி. ‘செல் துளைத்த துளையன்றி மெய்ப்புள்ளி விரவாத சென்னாளேடுகளை’ தன் கண்ணீராலே கழுவித் தொல்காப்பியம், கலித்தொகை முதலிய தொன்னூல்களைப் பதிப்பித்து, ஒல்காப் புகழ்மேவிய தாமோதரம்பிள்ளைதான் அவர். சென்னைச் சருவகலாசாலையிலே முதன் முதல் பீ. ஏ பரீட்சையில் சித்தியடைந்து, உயர்தர உத்தியோகங்களை வகித்தும், தமிழ்த் தொண்டை விடாமற் செய்த அவரது சேவைக்கு ஈழத் தமிழ் மக்கள் என்ன செய்து விட்டார்கள்? பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத் தமிழ்ச் சரித்திரமே தாமோதரம்பிள்ளையின் சரித்திரமாகும். கற்றுணர்ந்தோரேத்தும் கலித்தொகைக்கு அவர் கண்ணீரிலே தோய்த்து எழுதிய முகவுரையைத் தமிழர் ஒவ்வொருவரும் படித்துப் பார்க்க வேண்டும்.

அவர் பதி;ப்பித்த நூல்கள் பதினொன்று@ எழுதிய நூல்கள் ஆறு.

இப்படித் தொண்டு செய்த பிள்ளையவர்களையும் தமிழ் நாடு மறந்து கேலி செய்ததையும், உண்மையை மறைத்ததையும் எழுதப்புகின் அவை பாரதமாகிவிடும். இருபதாம் நூற்றாண்டிலே கால்வைக்கும் முன்பே அவர் அமரரானார். அவர் அமரராகிய தினம் 1-1-1900.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து ஏறக் குறைய இருபத்தைந்து வருடகாலம் தமிழ் மூச்சுவிட்ட புலவர் குமாரசுவாமிப் புலவர் ஆவார். படாடோபத்தைக் கண்டு மயங்காமல், தன்னை உள்ளபடி மதிக்கின்றவர்களிடத்தில் மதிப்பு வைத்து, பிழைகளைக் கண்ட விடத்துக் கண்டித்துத் தலைநிமிர்ந்து வாழ்ந்தார். வடமொழியிலிருந்து மேக தூதம், சாணக்கிய நீதி, இதோபதேசம், இராமோதந்தம் என்பவற்றை மொழிபெயர்த்தும் தமிழ்ப் புலவர் சரிதம், இலக்கியச் சொல்லகராதி, சிசுபால சரிதம், கண்ணகி கதை, இரகுவமிச சரிதாமிர்தம் என்பனவற்றை எழுதியும்@ யாப்பு, தண்டி, அகப்பொருள் ஆகியவற்றிற்குப் புத்துரை எழுதியும், கம்பரமாயணம் (பாலகாண்டம்) நிகண்டு, மறைசையந்தாதி, சதாசாரக் கவித்திரட்டு ஞானக்கும்மி ஆகிய நூல்களைப் பதிப்பித்தும்@ முப்பதுக்கு மேற்பட்ட நூல்களைத் தந்ததுடன், மாணவர்களுக்கு முறையாகப் பாடஞ் சொல்லியும் அவர் நடமாடும் புத்தக சாலைபோன்று வாழ்ந்தார்.

இவர்களைத் தவிர இலக்கிய நயத்தை நுண்ணிதாக எடுத்துக் காட்டி உரை சொல்லிய வித்துவ சிரோன்மணி பொன்னம்பலபிள்ளை@ தமிழ் வரலாறு எழுதிய மட்டக்களப்பு பூபாலப்பிள்ளை@ ஈழமண்டல சதகம் செய்த உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை@ தென்மொழி வரலாறு@ அபிதான கோசம் என்பவற்றை இயற்றிய ஆ. முத்துத்தம்பிப் பிள்ளை@ அகராதி வேலையை முறையாகச் செய்த கதிரை வேற்பிள்ளை. சனிவெண்பா இயற்றிய மட்டக்களப்பு வித்துவான் சரவணமுத்து ஆகியோரும், கவி சிரேஷ்டராக விளங்கிய சிவசம்புப் புலவர் திருவாவடுதுறை ஆதீன மகாவித்துவானும் திராவிடப் பிரகாசிகை என்னும் நூலினை இயற்றியவருமாகிய கோப்பாய் சபாபதி நாவலர், தமிழ் நாவலர்சரிதை பதிப்பித்த தி. த. கனகசுந்தரம்பிள்ளை ஆகியோரும் பிறரும் ஈழத்தின் தமிழ் வளத்துக்குச் செய்த உபகாரம் கொஞ்சமன்று.

மதிப்பிற்குரிய பார்சிவல் பாதிரியார் இருந்து தமிழ் வளர்த்த யாழ். மத்திய கல்லூரியும் வட்டுக்கோட்டைச் செமினரி என்று அக்காலத்தில் வழங்கப்பட்டு இப்பொழுது யாழ்ப்பாணக் கல்லூரி எனப் பெயர் பெற்ற நிலையமும், கத்தோலிக்க நாடகப் புலவர் பலரும், கிறிஸ்துவ மதத்தோடு தமிழையும் வளர்த்ததை நாம் புறக்கணிக்க முடியாது. முறையான அகராதி தொகுப்பு வேலையையும், பிறநாட்டு விஞ்ஞான நூல்களைத் தூய தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்ட தொண்டையும், அக்கால அமெரிக்க மிஷன் பாதிரிமார்கள் ஏற்றுக் கொண்டு பெரும்புகழ் எய்தினார்கள்.

நாவலர் அவர்கள் 1822 இல் பிறந்தார். குமாரசுவாமிப்புலவர் 1922 இல் மறைந்தார். இவற்றிற்கு இடைப்பட்ட நூறு வருடகாலத் தமிழ் சரித்திரத்திலே ஈழ நாட்டின் பங்கு பொன்னெழுத்துக்களாலே பொறிக்கப்பட வேண்டிய தென்பதில் ஐயமில்லை. ஈழநாடு தமிழ் நாட்டுக்கே வழிகாட்டித் தலை நிமிர்ந்து நின்றது. பணவருவாயை நாடாமல், உண்மையான தமிழ் அபிமானத்தால் உந்தப்பட்டுச் சேவை செய்தோர் பலர். உபயோகமான – வாழ்க்கைக்கு வழகாட்டியான – சமய நூல்களையும் இலக்கிய நூல்களையும் வெளியிட்டும், வசனத்தில் எழுதியும், ஆராய்ந்தும், உரையெழுதியும் அவர்கள் செய்த சேவைக்கும், இப்போதைய எழுத்தாளர் செய்யும் இலக்கிய சேவைக்கும்உள்ள வித்தியாசம், மலைக்கும் மடுவுக்கும் உள்ள பேதம் போன்றது.

1922க்குப்பின் - குமாரசுவாமிப் புலவர் அவர்கள் மறைந்தபின் - இன்றுவரை (ஏறக்குறைய நாற்பது வருட காலம்) ஈழ நாட்டில் நடந்த இலக்கிய முயற்சிகளைப் பற்றிப் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் தொகுத்து ஒரு நூலையேனும் விரிவாக எழுதவில்லை. குமாரசுவாமிப் புலவருக்குப் பின்னர் தமிழ் இலக்கியம் மங்கி, மறைந்து, சுவடே தெரியாமல் ஈழத்தை விட்டு ஓடிவிட்டதா? ஆம். அப்படிக் கருதியவர்களும் இருந்தார்கள்.

கால ஒட்டத்தைக் கருத்திலே கொள்ளாமல், வெறும் புராணங்களைப் பதிப்பித்தும், உரை எழுதியும், சமயச் சண்டைகள் பிடித்தும், கண்டனக் கணைகள் தொடுத்தும், படித்தவர்களும் பண்டிதர்களும் காலத்தைத் கலா விநோதமாகக் கழித்தார்கள். களிப்புற்றார்கள். பொதுமக்களின் பிரச்சினைகள், அவர்களது ஆசாபாசங்கள்;, மனோ எழுச்சிகள். சிந்தனைகள் எதற்கும் அவர்கள் மதிப்புக் கொடுக்கவில்லை. அவர்களது மொழி நடையைக் கூடக்கையாளாமல், ஏதோ ஒரு படாடோபமான நடையைக் கையாண்டார்கள். தப்பித்தவறி யாராவது கையாண்டால் இழிசனர் வழக்கு என்று கேலியுஞ் செய்தார்கள். இதனால் படித்தவர்களென்றால், அவர்கள் உலகம் தெரியாதவர்கள் என்றும், ஏதோ புதுவகைச் சாதி மனிதர்களென்றும், தங்களுக்கிடையில் குழுஉக் குறியாக ஒரு மொழியைக் கையாள்பவர்களென்றும், அவர்களுக்கும் பொதுமக்களுக்கு மிடையில் ஒருவகைத் தொடர்புக்கும் இடமில்லையென்றும் கருதியவர்களும் இருந்தார்கள்.

குமாரசுவாமிப் புலவருக்குப்பின் இன்றுவரை உள்ள காலத்தை வரையறை செய்து எப்படிச் சுருக்கமாக ஆராயலாம்? இது சிக்கல் மலிந்த ஒரு பிரச்சினை. வளருந் தமிழ் என்ற புத்தகமெழுதிய ‘சோமலெ’ அவர்களைப் போல எழுத்துக்களை இருபத்தெட்டு வகையாக வகுத்துக் கொண்டு எழுதினால் நல்லதுதான். அதற்கு மிகுந்த பிரயாசையும் கூட்டு முயற்சியும் தேவை. பிரபல சிறுகதை ஆசிரியராகிய கு. ப. ரா அவர்கள் தமது வானொலிப் பேச்சொன்றிலே தற்காலச் சிறுகதை இலக்கியம் பற்றிக் குறிப்பிடும்பொழுது எழுத்தாளர்களை மூன்று வட்டாரமாக்கிப் பேசினார். அவை கலைமகள், மணிக்கொடி, ஆனந்த விகடன் என்பன. அப்படி ஈழத்திலே சொல்ல முயன்றால் ஈழகேசரி, மறுமலர்ச்சி, சுதந்திரன் என மூன்று பிரிவுகளாக வகுக்கலாம். இந்தப்பிரிவு வெகு செயற்கையானது. எழுத்தாளர்களை அவர்கள் இப்பொழுதில்லாத ஏதோ ஒரு வட்டத்துட் கொண்டுபோய் விட்டுவிடும். இது துவேஷத்தை உண்டாக்கும் வினை விளைக்கலாம். எனவே அப்படிப் பிரிப்பது முறையன்று என்றே நினைக்கின்றேன். இதைவிடப் பண்டித வர்க்கம், மறுமலர்ச்சி வட்டம், முற்போக்குக் குழூஉ எனப் பிரிக்கலாமா என்கிற எண்ணமும் எழுகின்றது இந்த மூன்று வகைக்கும் வரை விலக்கணம் கூறுதல் இலகுவான காரியமன்று. மேலும் கால ஓட்டத்திலே ஒரு வட்டத்தை விட்டுப் பிறிதோர் வட்டத்திற்கு இடம் பெயர்ந்து சென்ற அநேகம் எழுத்தாளர் உளர். ஒவ்வொரு வட்டத்தைப் பற்றியும் முற்றிலும் முரணான வரை விலக்கணங்களைப் பலர், பல காலத்திற் கற்பித்துச் சிக்கலை மேலும் சிக்கலாக்கி வைத்திருக்கிறார்கள். இவற்றை விடுத்துக் காலத்தை ஒட்டிப் பிரிப்பது சௌகரியமான வழி. அவ்வக் கால எல்லையுள் முற்கூறிய பகுப்புமுறையை உள்ளடக்கி எழுதுவதுதான் சுலபமானது. அவற்றுள் அகப்படாதவற்றை விசேடமாகக் குறிப்பிடலாம் என்பதும் என் எண்ணமாகும்.

எனவே,
1922 தொடக்கம் 1930 வரை
1931 தொடக்கம் 1940 வரை
1941 தொடக்கம் 1950 வரை
1951 தொடக்கம் 1960 வரை
1960 இன் பின்னர்.......... .......

என ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரித்து வைத்துக் கொண்டு மேலே செல்லலாம். இதிலே கூட எச்சரிக்கை தேவை. இக் காலவரையறை, சொல்லும் விடயத்தைச் சுலபமாகவும் சுருக்கமாகவும் சொல்ல நாமாகவே ஏற்படுத்திக் கொண்ட உபாயமே ஒழிய, வரம்பன்று. சில நிகழ்ச்சிகள் சிறிது காலம் முன் பின்னாகவும் நிகழ்ந்திருக்கலாம் என்பதை நினைவில் வைத்திருத்தல் வேண்டும்.

1922 – 1930

இக்கால எல்லையுள் நால்வரே முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். இந்நால்வரும் தம் மரண பரியந்தம் தமி;ழ்த்தொண்டு செய்தவர்களாயினும் பிற்காலத்தேதான் புகழ் பெற்றிலங்கினராயினும் - இக்கால எல்லையைச் சேர்ந்தவர்களே. ‘தொல்காப்பியம்’ – கணேசையர், ‘யாழ்நூல்’ விபுலாநந்தர், ‘உலகியல் விளக்கம்’ – நவநீதகிருஷ்ண பாரதியார், ‘சொற்பிறப்பு ஒப்பியல் அகராதி’ – சுவாமி ஞானப்பிரகாசர் என்போரே இவர்கள். இந்நால்வரும் ஈழத்தின் ஒளிவிளக்குகள் என்பதற்குச் சந்தேகமில்லை.

தமிழ்ச்சுடர் மணிகளாகிய நாவலர், தாமோதரனார், குமாரசுவாமிப் புலவர் என்போரது பழைய பண்பாட்டை மறவாத, சிஷ்ய பரம்பரையாக மகாவித்துவான் சி. கணேசையர் அவர்கள் விளங்கினார். மதுரைத் தமிழ்ச் சங்க வெளியீடாகிய ‘செந்தமி’ழில் இலக்கண நுணுக்க விடயங்களை எழுதியும், பெரும் வித்துவான்களோடு தர்க்கித்தும் அவர் இக்காலத்திலேயே புகழெய்தி விட்டார். அவர் தமிழுக்குச் செய்த தொண்டு அளவில்லதது@ ஈழத்துப் பெருமை தரக் கூடியது. தொல்காப்பியம் முழுவதற்கும் உரை விளக்கக் குறிப்பெழுதியதைத்தான் இங்கு குறிப்பிடுகின்றேன்.

ஈழத்துப் பெரும்புலவராகிய அரசகேசரியின் ‘இரகுவமிச’த்திற்கு உரை எழுதிய காலத்தைப் பார்க்கிலும், தொல்காப்பியம் எழுத்ததிகாரம் வெளிவந்த காலத்திலே தான் அவர் புகழ் ஓங்கத் தொடங்கிற்று. அவருடைய சஷ்டியப்த பூர்த்தி விழாவை 08-10-38 இல் கொண்டாடிய பொழுது, தமிழ்நாடும் ஈழமும் ஒருமுகமாக வாழ்த்தின. அதை அடுத்து, தொல் - சொல்லதிகாரத்தையும் பொருளதிகாரத்தையும் உரை விளக்கக் குறிப்புகளுடன் வெளியிட்டு கணேசையரவர்கள் ஈழத்தின் புகழை மேலும் ஒருபடி உயர்த்தினார்.

1859 ஆம் ஆண்டில் சைமன் காசிச் செட்டி என்பவரால் ஆங்கிலத்தில் ‘தமி;ழ்ப் புலவர் சரித்திரம்’ எழுதப்பட்டது. 1886 இல் ஆனல்ட் சதாசிவம்பிள்ளை அவர்களால் ‘பாவலர் சரித்திர தீபகம்’ என்ற பெயரால் தமிழ்ப் புலவர் சரித்திரம் தமிழில் எழுதப்பட்டது. இதனை விரித்து 1916 இல் குமார சுவாமிப் புலவர் அவர்கள், தமிழ்ப் புலவர் சரித்திரத்தை எழுதினார். 1922இல் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை அவர்களால் மிகச் சுருங்கிய அளவில் ‘ஈழமண்டலப் புலவர் சரித்திரம்’ தொகுக்கப்பட்டது. 1939இல் இவை எல்லாவற்றிலும் இருந்து மலரெடுத்து அழகிய மாலையாகத் தொடுத்து ‘ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரித’த்தைக் கணேசையர் அவர்கள் தந்தார்கள். இது கணேசையர் ஈழத் தமிழர்களுக்களித்த முதுசொத்து. இதை விட மாணவர்களுக்காக குசேலர் சரித்திரத்தையும் அவர் எழுதி யுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலக்கண சுத்தத்தை முக்கிய நோக்கமாகக் கொண்ட அவரது தமிழ்நடை இறுக்கமும் கடினமும் கொண்டது என்பதுண்மை. சாதாரண மூன்றாந்தரப் புலவரும் முதற்றரக் கவிதா சிரேஷ்டர்களும் ஒரே வகையாக எழுதப்பட்டிருக்கிறார்கள் என்பது ஈழ மண்டலப் புலவர் சரித்திரத்தைப் பற்றிய ஒரு குறையாகும்.

ஈழ நாட்டிலே பி. எஸ். ஸி என்னும் ஆங்கிலப்பட்டத்தோடு முதன்முதலாக மதுரைத் தமிழ்ப் பண்டிதராகிய பெருமைக் குரியவர். கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பைச் சார்ந்த காரைதீவிலே பிறந்து, தமிழ் பேசும் இடமெல்லாவற்றிற்கும் உரிமையாளராக விளங்கிய விபுலாநந்தர் அவர்கள். அவரது ‘யாழ்நூல்’ ஈழத் தமிழர்க்குப் பெருமையளிக்கக் கூடியதென்பதிற் சந்தேகமில்லை. ஆனால் பெருமையளிக்கக்கூடியதென்பதிற் சந்தேகமில்லை. ஆனால் 1927இல் வெளியிட்ட மதங்க சூளாமணியும் பண்டிதமணி கதிரேசச் செட்டியாரது மணிமலரில் எழுதிய ஆங்கில வாணி யுந்தான் சாராசரித் தமிழ் படித்த இரசிகர்களைக் கவரக்கூடியன என்பது தான் என் முடிவு. “விபுலாநந்தத்தேன்” என்ற பாடற் றொகுதியும், அவருடைய கட்டுரைத் தொகுதிகளும் சமீப வெளியீடுகளாக வெளிவந்திருக்கின்றன. அவருடைய சொற்பொழிவும் கட்டுரைகளும் ஏற்ற இறக்கமின்றிச் சலசல என்றோடும் ஒரு தெளிந்த நீரோடைபோன்று காட்சி அளிக்கின்றன. எத்தனையோ புதுமையான விடயங்களை அவர் சொல்லியிருப்பதோடு மறுமலர்ச்சி இலக்கியத்துக்கு வித்தூன்றி, பாரதி பாடல் தொடக்கம் நாட்டுப் பாடல் வரை நாட்டில் முழங்க முயற்சியும் செய்திருக்கின்றார்.

தமிழ் நாட்டிலுள்ள திருக்கண்ணபுரத்தில் பிறந்து, யாழ்ப்பாணத்தை அடைந்து, ஈழத்தையே தாய்நாடாகக் கொண்டு வாழ்ந்த நவநீதிகிருஷ்ண பாரதியார் 1922ல் வெளியிட்ட உலகியல் விளக்கமும்;, பிற்காலத்தில் எழுதிய திருவாசக உரையும் படித்த பண்டித வர்க்கத்தினராற் பெரிதும் போற்றப்பட்டன. அச்சேறாத காந்தி வெண்பாவும், பிறபாடல்களும், மாணவர்க்காக எழுதிய இலக்கண நூல்களும். பொதுசன இரஞ்சகமான அவரது சொற்பொழிவுகளும் பாரதியாரைப் பற்றிய முடிவைச் சிக்கலாக்குகின்றன என்பதுண்மை.

தமிழ்ச் சொற்பிறப்பாராய்ச்சியையே உயிர் மூச்சாகக் கொண்ட சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள், தமிழ்நாடே, இன்னும் உள்நுழையாத தமிழ்ச் சொற்களின் தாது ஆராய்ச்சியில் இறங்கி அருமையான அகராதியை உருவாக்கியிருக்கின்றார். சாதாரண வாசகர்களுக்கு இது தெரியாத சங்கதிதான். எனினும் இதனாலே தமிழின் தொன்மை – பரப்பு – தனித்தன்மை – மற்றமொழிகளுக்குத் தாயான விதம் எல்லாம் புலனாகும். மேலும், தமிழிலே, தருக்கம், யாழ்ப்பாண வைபவ விமரிசனம் முதலிய உபயோகமான நூல்களும், பல கண்டன நூல்களும் எழுதி யிருக்கின்றார். முந்திய மூவரிலும் பார்க்க நடையில் எளிமையும், சாதாரண வாசகனுக்கு விளங்க வேண்டும் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்பும் இவரிடம் காணப்படுகின்றன.

இந்நால்வருடன், இன்னும் ஒருவரைப்பற்றியும் குறிப்பிட வேண்டும். சாதாரண மக்கள் கவியாக – விகடகவியாக – சாதாரண மக்களின் அபிலாஷைகளைப் பாடும் கவியாக - இருந்த ஆசுகவி வேலுபிள்ளை தான் அவர். “சுதேச நாட்டியம்” என்ற பத்திரிகையை நடாத்திப் பொதுசனப் புகழைப் பெற்றார். பத்திரிகையின் குறிக்கோளாக அவர் போட்டுக் கொண்டது என்ன தெரியுமா? ‘யதார்த்தவாதி வெகுசன விரோதி’ என்பதுதான்! அவருடைய பெரும் முயற்சியாக ‘யாழ்ப்பாண வைபவ கௌமுதி’ என்ற பெருநூல் விளங்குகிறது. இது யாழ்ப்பாணத்தின் பழைய சரித்திர சம்பவங்களையும், குடியேற்றங்களையும், சாதி ஆராய்ச்சிகளையும் அறிய விரும்புகிறவர்கள் படித்துப் பார்க்க வேண்டிய நூலாகும். இவரது பாடல்களும், வசனமும் குத்தலோடும் கிண்டலோடும் கூடியவை. ‘கண்டனங்கள் கீறக் கல்லடியான்’ என்ற பெருமை பெற்றார் இவர்.

ஆறுமுக நாவலர் தொடக்கம் வேலுப்பிள்ளை வரையுமுள்ள புலவர் பெருமக்களையும், வித்துவ இரத்தினங்களையும் எழுத்தாளர் வரிசையிலே சேர்க்கலாமா? இது கேட்கப்பட வேண்டிய ஒரு கேள்வி. ‘எழுத்தாளன்’ என்று இக்காலத்தில் வழங்கப்படும் பொருளில் - சொல்லில் - அவர்கள் விளங்கவில்லை யென்றாலும் அவர்கள் செய்த முயற்சிகளாலேதான் இன்றும் நாம் தலைநிமிர்ந்து நிற்கின்றோம் என்பது உண்மை. இப்படியான ஒளி விளக்குகளின் ஆராய்ச்சி நூல்கள், கண்டனங்கள் முதலி யவற்றோடு சாதாரண பொதுமக்கள் படித்து இரசிக்கக்கூடிய கதைகள் - நாவல்கள் இல்லையா? என்ற குரல் கேட்கின்றது.

தமிழ்நாட்டில் வேதநாயகம்பிள்ளை, மாதவையா, இராஜமையர், பொன்னுசாமிப்பிள்ளை, நடேச சாஸ்திரிகள் முதலியோர்களும், ரெங்கராஜு, துரைசாமி ஐயங்கார் போன்றவர்களும் இலக்கியத்தரமுள்ள நாவல்களையும், துப்பறியும் கதைகளையும் எழுதி வந்தபோது அதன் வாடை ஈழத்தைத் தாக்கவில்லையா? ஈழம் வேலி கட்டிக்கொண்டு வாழ்ந்ததா?

இல்லவேயில்லை.

ஈழத்தின் புனைகதை இலக்கிய முயற்சிகள் திருகோணமலையிலே தொடங்கிற்று என்பது குறிப்பிடத் தக்கது. ஆங்கிலக் கதையைத் தழுவி, இன்னாசித்தம்பி அவர்கள் எழுதிய ‘ஊசோன்பாலந்தை கதை’ 1891 இல் வெளிவந்தது. இதுவே ஈழத்திலே வெளியான முதல் நாவலாகக் கருதப்படுகின்றது. தி. த. கனகசுந்தரம் பிள்ளையின் தமையனார் திருகோணமலை சரவணமுத்துப்பிள்ளை அவர்கள், மோகனாங்கி என்னும் கற்பனை நாவலை எழுதி 1896 இல் பதிப்பித்தார். இரண்டாம் பதிப்பில் இந்நாவலின் மகுடம் சொக்கநாதன் என்று மாற்றப்பட்டது.

“நாகரிகமாக புதுமுறைகொண்டு நம் நாட்டிற் கற்பனா சரித்திரங்கள் எழுதி வெளியிட்டவர்கள் மிகச் சிலரே. இவர்களில் முதலாவதாக வைத்தெண்ணப்படுபவர்கள் சி. வை. சின்னப்பிள்ளை அவர்களே” என்று வண்ணை நகர் மா. சிவராமலிங்கம்பிள்ளை அவர்கள் ஒரு முகவுரையிற் கூறுகின்றார். சி. வை. சின்னப்பபிள்ளை அவர்கள் தமிழ்ப் பரோபகாரி@ சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களது கனிஷ்ட சகோதரராவர். இவர் இந்தியாவிற் கௌரவமான உத்தியோகத்திலமர்ந்து, பின் உபகாரச் சம்பளம் பெற்று இங்கு வந்து எஞ்சிய காலத்தைக் கல்வி விருத்திக்கே அர்ப்பணித்தவர். இவர் வீரசிங்கன் கதை, இரத்தினபவானி, உதிரபாசம், விஜயசீலம் முதலிய நாவல்களை எழுதியிருக்கின்றார். ஈழநாட்டின் சரித்திரத்தோடு சம்பந்தப்பட்ட விஜயனின் கதை ‘விஜயசீலம்’ அது 1916 ஆம் ஆண்டிலேயே ஒரு நாவலாக எழுதப்பட்ட தென்றால் ஆச்சரியப்படக் கூடிய விடயமல்லவா?

இவரை அடுத்துப் பலர் இத்துறையில் முயன்றனர். ஆனால், வீரசிங்கன் கதை, விஜய சீலம் என்ற நூல்கள் பெற்ற வெற்றியை அவை அடையவில்லை என்று பலர் கருதுகின்றனர். இடைக்காடர் அவர்களால் எழுதப்பட்டு, 1925 ஆம் ஆண்டில் வெளிவந்த சித்தகுமாரன் என்ற இரு பாக நாவலை ‘நாவல்’ என்று சொல்வதற்கு இயலாமல் இருக்கின்றது. வெறும் உபதேசங்களைக் கதாபாத்திரங்கள் மூலமாய்ப் போதிக்கும் ஒரு போதனை நூல் போல் அது காட்சியளிக்கின்றது.

ஆனால், இதனைத் தொடர்ந்து வெளிவந்த அ. நாகலிங்கம் எழுதிய ‘சாம்பசிவ ஞானாமிர்தம்’ அல்லது ‘நன்னெறிக் களஞ்சியம்’ (1927) என்னும் நாவல் பல நல்லறிஞர்களின் பாராட்டைப் பெற்றது.

துப்பறியும் நாவல்களாக பூங்காவனம் (மா. சிவராமலிங்கம் பிள்ளை), பவளகாந்தன், அருணோதயம் (வரணியூர் இராசையா), செல்வரத்தினம் (வே. க. நவரத்தினம்), மேகவர்ணன் (வே. வ. சிவப்பிரகாசம்), குலநாயகி திலகவதி (ம. க. சின்னையா), காந்தமலர் (சி. வே. தாமோதரம்) என்பன இக்கால எல்லையுள் எழுந்தன. இந்தியாவிலிருந்து இங்கு வந்து வீரகேசரியிற் கடமையாற்றிய ப. நெல்லையாவும் மூன்று நாவல்களை எழுதினார்.

பெண் எழுத்தாளரும் இந்தக் காலத்தில் நாவல்கள் எழுதியுள்ளமையை விசேடமாகக் குறிப்பிட்டே ஆக வேண்டும். செ. செல்லம்மாள் என்பவர் ‘இராசதுரை’ என்ற நாவலை எழுதினார்.

இக்கால எல்லையில் பழந்தமிழ் மரபினை அடியொற்றிப் பிறந்த இலக்கிய முயற்சிகளையும், அவற்றினைக் காலாகக் கொண்டு மலர்ந்த புதுவகை இலக்கிய முயற்சிகளையும் காணுதல் கூடும். பழைமையும் அதன் வழிவந்த புதுமையும் ஒரு சேர சங்கமித்தமையால், இதைச் ‘சங்கமகால’ மெனவும் கூறலாம். அன்றியும், எதிர்காலப் புதுமை முயற்சிகளுக்கு இக்கால எல்லையின் முயற்சிகளே அடித்தளமாயும் அமைந்து விட்டன.

1931 – 1940

இக்காலத்திலே, ஆசியாவின் இலக்கிய முயற்சிகளிலே பரவலான மறுமலர்ச்சி தோன்றத் தொடங்கிவிட்டது எனப் பல விமர்சகர்கள் கருதுகின்றார்கள். உண்மை, பாரத தேசத்திலும் - தமிழ்நாடு உட்பட இக்காலத்தில் அரசியற் பின்னணி உந்துதலினாலே இலக்கிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. மகாத்மாகாந்தியின் உப்புச் சத்தியாக்கிரக இயக்கம் தேசமெங்கும் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் தீண்டாமை ஒழிப்பு. மதுவிலக்கு, அகிம்சை ஆகிய கொள்கைகளைப் பிரசாரஞ் செய்ய ஒவ்வொரு மாகாணத்திலும் புதிய சத்திகள் கிளைத்தெழுந்தன. ஆட்சி மொழியான ஆங்கிலத்தில் வெளிவந்த பத்திரிகைகளின் பெருஞ் சோதியின் முன் சோபையை இழந்தவையாகக் கருதப்பட்ட சுயமொழிப் பத்திரிகைகள், புதிய கோலத்திலே சரிநிகர் சமானமாகத் தலை தூக்கின. தமிழ்நாடும் இத்தொண்டிலே பின் தங்கிவிடவில்லை. ஆனந்த விகடன், தமிழ்நாடு, சுதந்திரச் சங்கு, ஊழியன் ஆகிய பத்திரிகைகள் அதிலே விசேடமாக முனைந்து முன்னேறின.

ஆங்கில விமர்சன அறிவுடன், சமகால நிகழ்ச்சிகளை மட்டும் அசைபோட்டுக் கொண்டு, வித்தாரஞ் செப்ப முன் வந்துள்ள புது விமர்சகர், ஈழநாட்டின் தமிழ் இலக்கிய முயற்சிகளிலேயுள்ள அரசியல் தாக்கத்தினை நாட்டின் சுதந்திரத் திற்குப் பிற்பட்ட காலத்திற்குக் கொண்டு வந்து நிறுத்துகின்றனர். 1956 இல் நடைபெற்ற ‘மௌனப்புரட்சி’ யிலிருந்து ஈழத்தின் ஆற்றலிலக்கிய முயற்சிகளின் கணக்கெடுப்பினை நடாத்த முன்வருவோருக்கும் பஞ்சமில்லை. காலவரையறைகளை இப்படிச் சுருக்கிக் கொள்வது சிலபல வட்டார நலன்களைப் பேணுவதற்குச் சௌகரியமாக இருக்கலாம். ஆனால், இஃது இலக்கிய வரலாறு மாணாக்கனை ஏமாற்றுகின்றது. இலக்கியம் அரசியல் தாக்கங்களுக்கு மசிந்து கொடுக்காத சுயம்புவன்று. அரசியல் தாக்கத்தினாலர் இலக்கிய வழிப்புணர்ச்சி பல சந்தர்ப்பங்களிலே ஏற்பட்டிருக்கின்றது. இருப்பினும், ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில், பெருமளவில் அரசியல் தாக்கத்தினை உணர்ந்த கால எல்லை இதுதான் (1931 – 1940) என்பது எனது அபிப்பிராயமாகும். சில ‘புத்திசாலி’ விமர்சகர்கள், ஒரு காலத்தின் இலக்கிய எழுச்சியை அவதானித்துவிட்டு. சரித்திரத்தில் உதிரியாகவுள்ள ஒரு சம்பவத்தினைப் பெயர்த்தெடுத்து, நேர்மையற்ற காரண வாதங்களுடன். பொருந்தாத் திருமணஞ் செய்து வைக்கின்றார்கள். இச்செயல் வரலாற்றுப் புரட்டாகும்.

பாரதநாட்டின் காந்தீய இயக்கத்திற்கும், ஈழநாட்டின் தமி;ழ் இலக்கிய முயற்சிகளிலே ஏற்பட்ட மாற்றங்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இக்காலத்தில் எழுதப்பட்ட பல கதைகள் காந்தீயப் பிரசார மூச்சினை அடிநாதமாகக் கொண்டு விளங்கி, எனது கூற்றினை நிரூபிக்கின்றன.

இக்கால எல்லையிலேதான், யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசின் ‘பகிஷ்கார இயக்க’த்திற்குப் பக்க பலமாகவும், காந்தீய நோக்கை மக்களிடையே பரப்புந் தொண்டிற்காகவும், புதிய இளைஞருலகைக் கையேற்று அவர் தம் படைப்புகளை வெளியிடும் நோக்கத்திற்காகவும் திரு. நா. பொன்னையா அவர்களால் ஈழகேசரி தொடங்கப்பட்டது. அது தொடக்க காலத்தில் கடினமான இலக்கிய சமயக் கட்டுரைகளைக் கொண்டு வெளிவந்தது. பின்னர், பழைமைக்கும் புதுமைக்கும் நடந்த போராட்டமாக அது ஐந்து வருட காலத்தைக் கழித்தது. ஒரு புறத்திலே திருமுருகாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, ஆயிரத்தெண்ணூறு வருடங்களுக்கு முன் தமிழர் நிலை, வேளாளர் வருண ஆராய்ச்சி முதலிய விடயங்களும், மறு புறத்திலே சுயா, அநுசுயா முதலியோரது ‘யாழ்ப்பாண நடை’க் கட்டுரைகளும்;, அருணோதயம், பவளகாந்தன், தேவி திலகவதி முதலிய நாவல்களுமாக அது வெளியிடப்பட்டது.

இதே காலத்திற்றான் க. வே. சாரங்கபாணி (ஆசு கவி வேலுப்பிள்ளையின் மகன்) என்ற எழுத்தாளர் அரசியல், விமர்சனம், நாடகம் ஆகிய துறைகளிலே தன் கைவண்ணத்தைக் காட்ட ஆரம்பித்தார். கைவண்ணம் என்கிற சொல்லைக் கருத்துச் செறிவுடன் உபயோகிக்கின்றேன். மிக இளமையிலேயே மரணமடைந்த இந்த எழுத்தாளர் ஈழத்தின் ஒளி விளக்காகத் திகழ்வார் என்றே கருதப்பட்டார். இவரது ‘நமது தாயகம்’ என்கிற நூல் மிடுக்கான வசனங் கொண்டது. அந்நூலும், சத்தியேஸ்வரி என்கிற நாடக நூலும் அவரை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இந்தக் கால எல்லையுள் முக்கியமாகப் குறிப்பிடப்பட வேண்டியவர்கள் நாவலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்களே. புலவர் அவர்களது ‘ஆடிப்பிறப்பு’, ‘கத்தரி வெருளி’ முதலிய பாடல்களை வைத்துக் கொண்டும், பிற தனிப்பாடல்களை வைத்துக்கொண்டும், அவரைப்பற்றி கற்பனை வளமற்ற ‘வெறும் யதார்த்தக் கவிஞர்’ எனப் பிழைபட்ட ஒரு முடிவுக்குச் சில தற்கால விமர்சகர்கள் வந்திருக்கிறார்கள். சிறுவர்களுக்குப் படிப்பிக்க உகந்த பாடல்களை – வைத்துக்கொண்டு, அவர் ஒரு புதுமைக் கவிஞர் என்று முடிவு கட்டுவது தவறு. பழைமைக்கும் புதுமைக்கும் நடந்த பேராட்டத்தின் பிரதிநிதியாகத்தான் அவர் காட்சியளிக்கின்றார். ‘கவிஞர் திலகமாய் விளங்கியவரும் 1953இல் காலமாகியவருமாகிய நவாலியூர் சோமசுந்;தரப் புலவர் ஒரு பெருங் கவிஞராவர். அவருடைய புகழ் ஈழத்துக்கு வெளியே பரவாமலிருப்பது வருந்தத்தக்கது. அவர் பதினாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். ‘ஆடிப்பிறப்பும்’, ‘கத்தரித்தோட்டத்து வெருளியும்’ என்ற பாடல்கள் மிகச் சிறந்தன. “இலங்கை வளமும் தால விலாசமும், சிறுவர் செந்தமிழும்” அவருடைய சிறப்பான நூல்கள் என்று ‘வளருந் தமிழ்’ என்ற நூலில் ‘சோமலெ’ அவர்கள் எழுதியிருப்பதை வாசித்தால், அவரும் சோமசுந்தரப் புலவர் அவர்களைச் சரியாக மதிப்பிடவில்லை என்றே தோன்றுகின்றது. தந்தையார் பதிற்றுப் பத்து, நாமகள் புகழ்மாலை, உயிரிளங்குமரன் நாடகம், கதிரைச் சிலேடை வெண்பா என்பனவும், மரதனஞ்சலோட்டமும் புலவர் அவர்கள் பாடியவை என்பதை நாம் நினைவிற் கொள்ளல் வேண்டும்.

1938 ஆம் ஆண்டிற்கு;ச் சற்று முன்னர் பின்னராகப் பல எழுத்தாளர்கள் எழுத்துத் துறைக்கு வந்துவிட்டார்கள். எனினும், இவர்களையெல்லாம் 1940 ஆம் ஆண்டிற்குப் பின்வந்த எழுத்தாளர் என்று குறிப்பிடுவதுதான் பொருத்தமானதாக இருக்குமென நினைக்கின்றேன்.

ஈழநாட்டுப் புலவர் பெருமக்களையும் அறிஞர்களையுங் கொண்ட ‘கலாநிலையம்’ என்னும் தாபனம் க. நவரத்தினம் அவர்களின் பெரு முயற்சியால் நிறுவப்பட்டு, அங்கு சொற்பொழிவுகளும் ஆராய்ச்சிகளும் நடத்தப்பட்டன. கலை ஆக்கங் கருதி ஞாயிறு என்னும் சஞ்சிகையும் சில காலம் நடாத்தப்பட்டது. ஒருசில இதழ்களே வெளிவந்தாலும் வாசகர் நெஞ்சிலே அது நிலையான ஓர் இடத்தைப் பெற்று விட்டது.

இந்தச் சந்தர்ப்பத்திலே, அமைதியான முறையில் இலக்கிய இரசனையையும், முறையான கல்வியையும் பரப்பித் தொண்டு செய்த ஒருவரைக் குறிப்பிட்டேயாக வேண்டும். அவர்தான் பண்டிதமணி சி;. கணபதிப்பிள்ளை அவர்கள். திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையை மையமாகக் கொண்டு அவர் ஒரு காவிய பாடசாலையை உண்டாக்கினார். தமிழிற் பால பண்டித – பண்டித வகுப்புக்களும், சமஸ்கிருத – சிங்கள வகுப்புக்களும் ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிற்றுக் கிழமைகளில் நடாத்தப்பட்டன. பண்டிதர் அவர்களின் இரசிகத் தன்மையும், அவருடைய படிப்பிக்கும் ஆற்றலும், சொற்பொழிவுத்திறனும் அங்கே படித்த மாணவர்களையும், அவர்களாற் பரம்பிய மாணவ வர்க்கத்தையும் இறுகப் பற்றிக் கொண்டது.

இதே காலத்திலே, கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாலையில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவரும், கற்பனைக் களஞ்சியம் என்று போற்றப்படுபவருமான குருகவி மகாலிங்கசிவம் அவர்கள் தமது ஆழ்ந்த புலமையுள்ள சொற்பொழிவினால் இலக்கிய இரசனையை வளர்த்தமை ஈண்டு குறிப்பிடப்பட வேண்டியதாகும்.

1922ஆம் ஆண்டிற்குப்பின் சுமார் பத்து வருட காலம் தூங்கிக் கிடந்த யாழ்ப்பாணம் - எதற்கெடுத்தாலும் தமிழ் நாட்டையே எதிர்பார்த்திருந்த யாழ்ப்பாணம் - தன் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டது.

இதைப்போன்ற ஒர் எழுத்தாளர் வட்டாரம் கொழும்பில் ‘வட்டத் தொட்டி’ யாகக்கூடி ஈழத் தமிழரும், வளர்ந்து வரும் தமிழிலக்கிய பரப்பை அறிவதற்;கு ஏதாவது செய்ய வேண்டும் என முனைந்தது.

இத்தகைய ஒரு பின்னணியிலே பழைமையை ஆராய வேண்டும். புதியனவற்றை ஆக்க வேண்டும். அதிலும் ஈழத்துக்கே தனித்துவமாக அமைந்துள்ள கலாசாரத்தினையும் பண்பாட்டினையும் பிரதிபலிக்க வேண்டும் என்கிற ஓர் எழுச்சி உதயமாயிற்று. பிற்காலத்திலே ‘தேசிய இலக்கியம்’ என்பதை ஒரு ‘கோஷ’மாக முன் வைத்தவர்கள் இந்தக் கால எல்லையின் எழுச்சியை உணரக் கடன்மைப்பட்டவர்கள். இவ்வெழுச்சிக்கு ஏற்றதொரு சங்கப் பலகையாக ‘ஈழகேசரி’யே எழுத்தாளர் முன் காட்சியளித்தது.

இக்காலத்தில் வட பெரும்பாக வித்தியாதரிசியாயிருந்த கே. எஸ். அருணந்தி அவர்கள், ஆசிரியர் சங்கங்களின் உதவியோடு பாடசாலை மாணவர்கள் படிப்பதற்கேற்ற இலக்கிய பாடல்களைப் புனையுமாறும், அவற்றிற்குப் பரிசில்கள் வழங்குமாறும் ஏற்பாடுகள் செய்தார். இந்த முயற்சியின் பெறுபேறாகத் தமிழாசிரியர்களிடையே புதிய பல கவிஞர்கள் தோன்றினார்கள். ‘பிள்ளைப்பாட்டு’ (1938) என்ற அந்த நூலால் எத்தனையோ பேர் தன்னம்பிக்கை கொண்டு எழுத்துலகிற்கு வந்தனர்.

எனவே, 1940 ஆம் ஆண்டிற்குப் பின் தமிழிலக்கியத்திலுள்ள பல துறைகளிலும் எழுத்தாளர் முன்னேறித் தமது படைப்புகளைப் பொது மக்களுக்கு முன் வைப்பதற்கு வேண்டிய சாதகமான சூழ்நிலைகள், இக்கால எல்லையின்பின் ஐந்து வருடங்களுக்குமிடையிற் பரவலாக ஈழநாட்டிலே தோன்ற ஆரம்பித்து விட்டதென்பதை அவதானிக்கவேண்டும். இச்சாதகமான சூழ்நிலைகள் உருவாகியிருந்த காலத்திலேதான், அப்பொழுது ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையின் ஆசிரியராயிருந்த ‘கல்கி’ அவர்களும், சித்திரக்காரர் ‘மாலி’ அவர்களும் ஈழத்திற்கு வந்தனர். ஈழத்தின் இரசனைத் திறனைக் கண்டு ‘கல்கி’ ஆசிரியர் இலங்கை யாத்திரை என்னும் கட்டுரைத் தொடரில், இதனைப் பலபடப் புகழ்ந்துள்ளார்.

1941 – 50

இந்தப் பத்து வருட காலத்தை ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சிக் காலம் எனக் குறிப்பிடுதல் மிகவும் பொருத்தமுடைத்து. சரியாகவரையறுத்துச் சொல்வதனால், 1938 ஆம் ஆண்டிற்கும் 1945 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தைக் குறி;ப்பிட வேண்டும். இரண்டாவது உலக மகாயுத்தம் நடந்து கொண்டிருந்த இவ்வேளையில், ஈழத்து இலக்கிய மறுமலர்ச்சி ஏற்பட்டது கவனிக்கத்தக்கது. யுத்தத்தின் தீமைகளைப்பற்றிப் பக்கம் பக்கமாக எழுதலாம். ஆனாலும் யுத்தம் நாட்டுப் பற்றினையும், எழுச்சியினையும் உண்டாக்குகின்றது என்பதை மறுக்க முடியாது.

கணேசையவரர்களது தொல்காப்பிய எழுத்ததிகார உரைவிளக்கக் குறிப்பு, சுவாமி ஞானப்பிரகாசரது சொற்பிறப்பு – ஒப்பியல் தமிழ் அகராதியின் முதற் பாகங்கள், வித்துவான் சுப்பையா பிள்ளையினுடைய தஞ்சைவாணன் கோவை விளக்கவுரை, கலைப் புலவர் க. நவரத்தினம் எழுதிய தென்னிந்திய சிற்ப வடிவங்கள் ஆகிய சிறப்பு வாய்ந்த நூல்களெல்லாம் இக்காலத்தே தான் வெளிவந்தன.

இக்கால எல்லையில் தமிழ் மட்டும் படித்தவர்களுடன் பண்டித, வித்துவான்களுடன் - ஆங்கிலம் படித்தவர்களும் எழுத்துத் துறைக்கு ஆர்வத்துடன் வந்தார்கள். கதாசிரியர்களும், நகைச்சுவைக் கட்டுரையாளர்களும். நடைச் சித்திரம் எழுதுவோர்களும், கவிஞர்களும் தத்தமது துறைகளிலே தமது கைவண்ணத்தைக் காட்ட முற்பட்ட காலம் இஃதாகும்.

இக்கால எல்லையுள் நடைபெற்ற இலக்கிய முயற்சிகள் மிக விரிந்தனவாகும். எனவே, சில உப பிரிவுகளை வகுத்துக் கொண்டு எழுதுவதுதான் சௌகரியமான உபாயமாகும். முன்னோடிகள், மறுமலர்ச்சி எழுத்தாளர், நாட்டுப் பாடல்கள், பண்டித வர்க்க எழுத்தாளர், மலர்கள், மட்டக்களப்பிலே துளிர்த்த ஆர்வம் என்ற ஆறு உப தலைப்புகளுக்குள் இக்காலத்தின் இலக்கிய வளர்ச்சியை அடக்க விழைகிறேன். இந்தப் பகுப்பு முறை வரலாற்றினை இலகுபடுத்திச் சொல்வதற்கேயன்றி, தரம் பிரிப்பதற்கன்று. இப்படி வகுத்து எழுதினாலும், ஒரே காலத்தின் இலக்கிய முயற்சி என்கிற இழை இவற்றினை ஒன்று சேர்த்துப் பிணைப்பதை அவதானிக்கலாம்.

முன்னோடிகள்.

முன்னோடிகன் என்கின்ற விருதுடன் அறுவரைக் குறிப்பிடலாம். விசேட மென்னவென்றால், ஐவர் ஆங்கிலப் பயிற்சியுடன் தமிழ் எழுத்துத் துறைக்கு வந்து இன்றளவும் ஒளி வீசிக் கொண்டிருப்பவர்கள்.

இக்கால எல்லையுள் வாழ்ந்த இளைஞர்கள் துடிப்பும், தேசாபிமானமுங் கொண்டவர்கள். தமிழ் நாட்டிற்கு நாம் எவ்வகையிலும் பின் தங்கிவிடலாகாது என்கிற உணர்ச்சி மிக்கவர்கள். தற்காலத்தில் வாழும் சில எழுத்தாளர்களைப் போல், ‘அவருக்கென்ன தெரியும்?’ எனத் தலைக்கனம் கொள்ளாமல், தமிழை முறையாகப் படித்தவர்களை மதித்தும், புதிது புதிதாக அறியவும், ஆக்கவும் ஆவல் கொண்டிருந்தார்கள். இப்பண்புகளினாலேதான் அவர்களது புகழ் இயன்றவும் ஈழத்துத் தமிழ் கூறும் நல்லுலகில் நின்று நிலவுகின்றது.

ஆங்கிலம் படித்து ஆற்றலிலக்கியத் துறையிற் குதித்த ஐவரும், தமிழில் வௌ;வேறான துறைகளிலே தங்களுடைய சத்திகளை வெளியிட்டிருக்கிறார்கள் என்பது எனது அபிப்பிராயமாகும்.

சோமசுந்தரப் புலவரது மகனாகப் பிறந்து, கவிதையையே மூச்சாகக் கொண்டு உழைக்க, சோ. நடராசன் அவர்கள் முன்வந்தார்கள். தாகூர், இராதாகிருஷ்ணன் போன்ற அறிவுலக மேதைகளின் நாடகங்களையும், கட்டுரைகளையும் 1936ஆம் ஆண்டிலேயே மொழி பெயர்த்துத் தமிழ் வாசகரின் முன் வைத்தார்கள். புராதன கால இலங்கை, இந்தியா சம்பந்தமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினார். ‘கற்சிலை’ போன்ற சிறுகதைகளையும் எழுதினார் இவ்வாறு பல்வேறு துறைகளிலும் தனது எழுத்தாற்றலைச் செலவு செய்திருப்பினும், கவிதைத் துறையிலேதான் மகத்தான வெற்றியை ஈட்டினார். ‘மருதக் கலம்பகம்;’ அவருடைய படைப்புகளில் உயர்ந்தது. காளிதாசரது ‘மேகதூத’ த்தையும், தாகூரின் ‘கீதாஞ்சலி’ யையும் தமிழிலே தந்துள்ளார். ஆரம்பகாலத்தில், அவரது கவிதைகளிலே கவிதா காம்பீரியம் நிமிர்ந்து நின்றது. பிற்காலத்தில், அவர் பாடிய பாடல்களிற் சில அங்கதச் சுவை மிகுந்தும், உட்பொருள் தெளிவற்றும் இருப்பதாகச் சில விமர்சகர்கள் அபிப்பிராயப்படுகின்றார்கள். தமிழ் மொழி அலுவலகத்தில் உயர் பதவி வகிக்கும் அவர். மொழி பெயர்ப்பினைத் தொழிலாகவும், இலக்கியப் பணியாகவும் வரித்துவிட்டார் போலும்! பல நூல்களைத் தமிழாக்கியுள்ளார். அவற்றுள் ‘இதோபதேசம்’ ஆயிரம் ரூபா பரிசு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர் சிங்களத்திலிருந்து தமிழாக்கிய ‘பூவை விடுதூது’ ஒரு நல்ல முயற்சி. சமீப காலத்திற் பல புனைபெயர்களில் விமர்சனத்துறையிற் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அவருடைய துணிச்சலைப் பாராட்டும் அளவிற்கு, விமர்சனத் துறைக்;கு அவர் கையாளும் தெளிவற்ற வசன நடையைக் குறை கூறுவோரும் உளர். நாடகத் துறையில் அவர் சாதித்தவை குடத்துள் விளக்காக இருக்கின்றன.

ஈழத்துச் சிறுகதைத் துறையிலே, சுயா, பாணன், ஆனந்தன் எனப் பலர் முன்னரே எழுதத் தொடங்கியிருந்தாலும், நவீன சிறுகதை உத்திகளைக் கொண்ட, கவர்ச்சிகரமான படைப்புகளைப் படைத்து, ஈழத்தின் சிறுகதைத் துறைக்கு வழிகாட்டிய முதல்வர் என்கிற பெருமையைச் சம்பாதித்தவர். சி. வைத்திலிங்கம் அவர்களே.

இந்தச் சந்தர்ப்பத்தில், ஈழத்துச்சிறுகதை முயற்சிகளின் வரலாற்றினைத் தொட்டுக்காட்டுவது நன்று. மேலை நாட்டுச் சிறுகதை உருவங்களிலே நமக்குப் பயிற்சி ஏற்படுவதற்கு முன்னர், பண்டிதர் சந்தியாகோ சந்திரவர்ணம் பிள்ளை அவர்கள், ‘மரியாதை இராமன் கதை’, ‘கோமுட்டி கதை’, ‘மூடர் கதை’ முதலிய ஏழு கதைகளடங்கிய ‘கதாசிந்தாமணி’ என்னும் சிறுகதைத் தொகுதியை 1875 ஆம் ஆண்டில் வெளியிட்டார். இது சிவில் சேவையாளருக்குப் பயன்படுத்தப்பட்டது. இதனையடுத்து, ஊர்க் கதைகள் நூற்றியொன்றைத் தனது நடையில் எழுதித் தம்பி முத்துப்பிள்ளை புலவரும், ‘ஹைதர் ஷா சரித்திரம்’ என்னும் சிறுகதைத் தொகுதியை ஐதுரூஸ் லெப்பை மரைக்காரும் வெளியிட்டார்கள். இவ்வாறு வெளிவந்த சிறுகதைத் தொகுதிகளிலே 1938 ஆம் ஆண்டில் வெளிவந்த செ. சந்திரபால கணேசன் எழுதிய ‘நற்பவளத் திரட்டு’ என்னுஞ் சிறுகதைத் தொகுதி விசேடமாகக் குறிப்பிடத்தக்கது. இந்த குறிப்பீடு அதன் நடைக்காகவோ, கதை சொல்லப்படும் உத்தி முறைக்காகவோ அன்று. அக்காலத்திலே சாதிப் பிரச்சினைகளைப்பற்றியும், சர்வதேச அரசியலில் ஏற்படும் நெருக்கடிகளைப் பற்றியும் கதைகள் புனைவதுதான் முற்போக்கான இலக்கிப்பணி என்று ஒரு குரல் கேட்கின்றது. தீண்டாமை ஒழிப்பு, சீதனக் கொடுமை, மது ஒழிப்பு ஆகியனபற்றியும். இத்தாலியில் முசோலினி செய்த அட்டூழியங்களைப் பற்றியும் இத்தொகுதியிலே கதைகள் உள்ளன என்பதை நிச்சயம் குறித்துக் காட்ட வேண்டும்

ஆனால். மேனாட்டு உத்திமுறைப் பயிற்சியுடன், சிறுகதைகளுக்குத் தற்கால வண்ணக் கோலங் கொடுத்ததில் சி. வைத்திலிங்கம் முன் வரிசையில் முதல்வராக நிற்கின்றார். கலைமகளையும், கு. ப. ரா. வின் பாணியையும் மனதில் வைத்துக் கொண்டு அவர் தனது கதைகளைப் படைத்தார் என்று தேசிய இலக்கியம் பற்றிப் பேசுபவர்கள் குறைபடுகின்றார்கள். இருப்பினும், கிராமப் புறங்களின் வர்ணனைகளும், களனி ஆற்றங்கரை வர்ணனைகளும் ஈழநாட்டிற்கே உரியவை. கதையின் கருவுக்கேற்ற பகைப்புலத்தினை வீச்சுடனும் வளத்துடனும் அமைத்து, கலைத்துவம் ததும்புஞ் சில அழகான சிறுகதைகளை எழுதியிருக்கின்றார். கதையின் கடைசிப் பகுதியிலே - இறுதி வசனத்திலே – திருப்பும் வியப்பு முடிவுக் கோட்பாட்டினை ஈழத்துச் சிறுகதைத் துறைக்கு ஓரளவு வெற்றியுடன் அறிமுகப்படுத்தி வைத்திருக்கின்றார். எண்ணிக்கையைப் பொறுத்த மட்டில் இருபத்தைந்து சிறுகதைகளைத் தானும் எழுதாத இந்தச் சிறுகதைச் சிற்பியை இன்றுங்கூட எழுத்துலகம் போற்றுகின்ற தென்றால், இவரது கதைகளின் வலிமைக்கு வேறு சான்றுகள் தேவையில்லை. வடமொழிப் பிரேமையினால் வட சொற்கள் இவரது கதைகளிலே மிகுதியென்று குறைப்படுவோருமுளர். மூன்றாம் பிறை, கங்கா கீதம் என்பன முறையே தமிழ்நாட்டு, ஈழநாட்டுச் சிறுகதைத் தொகுதிகளிலே இடம் பெற்றிருக்கின்றன. இவற்றுடன் பாற்கஞ்சி, நெடுவழி ஆகிய கதைகளும் வாழக்கூடிய வளம் மிக்கவை.

“இலங்கையர்கோன்” பிற நாட்டு நல்ல சிறுகதைகளையும், நாடகங்களையும் மொழி பெயர்த்துத் தமிழ் வாசகர்களுக்கு உதவினார். இலங்கைச் சரித்திரக் கதைகளையும், பழங்காலப் புராணக் கதைகளையும் மெருகிட்டுப் புதிய சிறுகதைகளாக்கினார். சரித்திர நாடகங்களையும் இலக்கிய நாடகங்களையும் எழுதினார். நாடகங்களின் தன்மைக்கு ஏற்ப செய்யுள் நடையையும், சாதாரண வழக்கு நடையையுங் கையாண்ட புதுமையை இவரது எழுத்துக்களிலே காணலாம். பின்னர், பத்து வருட காலத்தை வானொலி நாடகங்களை எழுதுவதிலேயே செலவு செய்தார். காரியாதிகாரியாகக் கடமை பார்த்த அனுபவத்தை வைத்துக் கொண்டு எழுதிய ‘விதானையார் வீட்டில்’ என்கிற தொடர் நாடகம் வானொலிப் பிரியர்களிடம் நற்பெயர் பெற்றது. மேடை நாடகங்களே வாழத்தக்கன. அவற்றிற்கு உயிரூட்டுதல் வேண்டுமென்று சங்கற்பஞ் செய்து கொண்டு எழுத நினைத்த காலையில் அகால மரணமெய்தினார்.

மொழி பெயர்ப்பினும், நாடகத்திலும், ‘இலங்கையர் கோன்’ பெற்ற வெற்றியைச் சிறுகதைத் துறையில் ஈட்டவில்லையென்று கருதுவோரும் உளர். இருப்பினும் காலத்திற்குக் காலம் வளர்ச்சித் தடத்திலே மிடுக்குடன் நடந்து, இறக்கும்வரை எழுதிக் கொண்டேயிருந்த பெருமை ‘இலங்கையர்கோனை’ச் சாரும். ‘வஞ்சம்’ அவரது நல்ல கதைகளுள் ஒன்றாகும். ‘தேசிய இலக்கியம்’ ‘மண்வளம்’ என்று பிற்காலத்தில் எழுப்பப்பட்ட ‘கோஷ’ங்களுக்குப் பொருத்தமான சிறுகதையாகத் திகழும் ‘வெள்ளிப் பாதசர’ த்தை 1942 ஆம் ஆண்டிலேயே எழுதிவிட்டார். மொழிபெயர்ப்பு நாவலாகிய முதற்காதலும், நாடக நூல்களாகிய மிஸ்டர் குகதாசன், மாதவி மடந்தை ஆகியனவும் அவரது காலத்திலேயே வெளிவந்தன. தந்தை மனம், கடற்கரைக் கிளிஞ்சல் என்னுஞ் சிறுகதைகள் தமிழ்நாட்டு, ஈழ நாட்டுச் சிறுகதைத் தொகுதிகளிலே இடம் பெற்றிருக்கின்றன. அன்னாரின் சிறுகதைகள் சில அடங்கிய ‘வெள்ளிப்பாதசரம்’ என்னுந் தொகுதியை அவரது மனைவியார் வெளியிட்டுள்ளார். ‘விஜய குமாரன்’, ‘விடியாத இரவு’ முதலிய நாடகங்கள் நூலுருப் பெற்று வெளிவந்தால் அவருடைய புகழ் நி;ன்று துலங்கும்.

சோ. சிவபாதசுந்தரம் தெளிந்த கட்டுரையாளராவர். தோட்டத்து மீனாட்சி, அழைப்பு முதலிய கதைகளை ஆனந்த விகடனில் எழுதியிருந்தாலும், அவருடைய பிரயாணக் கட்டுரைகளும், விமர்சனங்களுமே வாசகரை ஆட்கொண்டன. பெரியவர், படித்தவர், புகழ்பெற்றவர். நட்பாளர் என்று பாராமல், தாம் பிழையெனக் காணுவதை நேர்மையாய்த் தலைநிமிர்ந்து எழுதிய பெருமை அவருக்கு உண்டு. போற்ற வேண்டியவற்றைப் போற்றப்பின் நிற்பவருமல்லர். சந்தர்ப்பங்கிடைத்த பொழுதெல்லாம். ஈழத்து இலக்கிய முயற்சிகளின் மரபினையுந் தரத்தினையும் வாழ்த்தியவர். கோவில்களில் நடைபெறும் மேளக் கச்சேரிகள் தமது மதிப்பினை இழந்திருந்தபொழுது, அக்கலையின் நுட்பத்தைப்பற்றி அவர் எழுதிய ரசனைக் கட்டுரைகள், அக்கலைஞர்களுக்குப் புதிய உற்சாகத்தையும், ஊக்கத்தையுங் கொடுத்தன.

தமிழ் மொழியில் மட்டுமே பயிற்சி பெற்றிருந்த ஆசிரியர்களையும், மாணவர்களையும் உற்சாகப்படுத்தி, ஆலோசனைகள் நல்கி, எழுத்துலகிற்குக் கொண்டு வந்த பெருமையும் அவரைச் சாரும். மாணிக்கவாசகர் அடிச்சுவட்டில், ஒலி பரப்புக் கலை (சென்னைப் பரிசு பெற்றது), புத்தர் அடிச்சுவட்டில் (ஸ்ரீலங்கா சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது) ஆகிய மூன்று பெரிய நூல்களும் அவரது எழுத்து வன்மைக்குச் சான்றாக இருக்கின்றன. ‘காஞ்சனை’ என்னும் அவரது சிறுகதை தமிழ் நாட்டுச் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றிருக்கின்றது.

கவிதை – சிறுகதை – மொழிபெயர்ப்பும் நாடகமும் - கட்டுரை ஆகிய நான்கு துறைகளிலும் வழி காட்டிய இந்த நால்வருடனும், ‘சம்பந்தன்’, குல. சபாநாதன் ஆகிய இருவரையுஞ் சேர்த்துத்தான் முன்னோடிகள் அறுவரானார்கள்.

‘சம்பந்தன்’ தமிழாசிரியராகப் பணி புரிந்து கொண்டு சிறுகதைத் துறையில் பெருவெற்றியீட்டியவராவர். ‘விதி, புத்தரின் கண்கள்’ ஆகிய கதைகள் ‘கலைமக’ளிலே வெளிவந்த காலத்திலேதான் எழுத்துலகம் அவரது திறமையை அறியலாயிற்று. தேர்ந்தெடுத்த சொற்களை வைத்துக் கொண்டு, ஓரிரண்டு பாத்திரங்களையே நடமாடச் செய்த. அற்புதமான சிறுகதைகளைப் படைக்குங் கலை அவரிடம் இலாவகமாக அமைந்துள்ளது. ‘பாசம்’ என்கிற அவரது நாவலிலும், சிறுகதைகளிலும் வரும் பாத்திரங்களின் பெயர்களும். நிலைக்களங்களும் ஈழத்தைப் பிரதிபலிப்பனவாக அமையவில்லையென்று குறை கூறுவோரும் உளர். அவரது படைப்புக்களிலே வடசொற்களும், சாதாரணமான வாசகருக்கு விளங்காத சொற்களும் மிகுதியாகக் காணப்படுகின்றன என்பது உண்மையேயாகும். இருப்பினும் எண்ணிக்கையில் நம்பிக்கை வைக்காது. தரம் ஒன்றினையே குறிக்கோளாகக் கொண்டு, தான் எழுதுஞ் சிறுகதைகளை அழகாக எழுதுகின்றார் என்கிற புகழுக்கு உரியவர். ‘விதி’, ‘மனிதன்’ ஆகிய அவரது கதைகள் தமிழ் நாட்டு, ஈழ நாட்டுச் சிறுகதைத் தொகுதிகளில் இடம் பெற்றிருக்கின்றன. அவருடைய சிறுகதைத் தொகுதியொன்றும் காவியமொன்றும் சமீபத்தில் வெளிவர இருக்கின்றன. அவை ஈழத்தின் புகழை நிச்சயம் நிலை நிறுத்தும் என்பது எனது நம்பிக்கையாகும்.

இக்கால எல்லைக்குள் சற்று முன்னராகப் புகழ் மிக்க ஆராய்ச்சியாளராக விளங்கிய முதலியார் இராசநாயகம் (யாழ்ப்பாணச் சரித்திரம் என்கிற நூலின் ஆசிரியர்) அவர்களின் அடிச்சுவட்டில், குல. சபாநாதன் பணிபுரிகின்றார். பழைய புலவர்களைப் பற்றிய சீவிய சரித்திரங்களையும், ஈழத்தின் ஆலயங்களைப் பற்றிய வரலாறுகளையும், பழைய நூல்களையும், நல்ல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார். கதிர்காமம், நயினை நாகேஸ்வரி ஆகிய அழகிய நூல்களும், யாழ்ப்பாண வைபவமாலைப் பதிப்பும் அவரது பெயரை நிலை நாட்டப் போதுமானவையாக இருக்கின்றன. ‘ஸ்ரீ லங்கா’ என்கிற அரசினர் சமாசாரப் பத்திரிகையை இலக்கியத் தரத்திற்கு உயர்த்திய பெருமையும் அவரைச் சார்ந்தது.

தற்கால எழுத்தாளர்களின் முன்னோடிகளென்று மேலே குறிப்பிட்ட அறுவரையுஞ் சொல்லுதல் மிகவும் பொருத்தமானது. இந்த அறுவருடன், இன்னொருவரையும் முன்னோடியாகக் குறிப்பிட வேண்டும். ‘சுயா’ என்னும் புனை பெயருக்குள் ஒளித்திருக்கும் சு. நல்லையா அவர்கள் ஒரு தமிழாசிரியாக இருந்தும், அக்கால இரசனைக்கேற்ற நகைச்சுவைக் கட்டுரைகளை யாழ்ப்பாணப் பழகு தமிழில் எழுதி, தனக்கென ஓர் இடத்தினைப் பெற்றுள்ளார். இவர் பல சிறுகதைகள் எழுதியிருப்பினும், அவை இவரது நகைச்சுவைக் கட்டுரைகள் பெற்ற வெற்றியைப் பெறவில்லை. பிற்காலத்திலே ஒரு நீண்ட தொடர் நாவலைத் ‘தினகர’னில் எழுதியுள்ளார். கடந்த பத்து வருட காலமாக எழுத்துலகிலிருந்து ஒதுங்கி வாழ்வதற்குக் காரணம் விளங்கவில்லை.

இவர்கள் யுத்த காலத்தின் கெடுபிடிக்குள் உலகம் அவதிப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் எழுதிய எழுத்துக்களை, பதினேழு வருடங்களின் பின், நிதானித்து அசைபோட்டு வாசிக்கும் பொழுது, சில உண்மைகளை உணர முடிகின்றது. தமிழ் நாட்டு எழுத்தாளார்களான கு. ப. ரா. ‘கல்கி’ ஆகியோரது எழுத்தின் ஆதிக்க நிழல் இவர்களுடைய எழுத்துக்களில் கவிந்திருக்கின்றது. ‘கலைமகளையும் ஆனந்தவிகடனையும் இலட்சியப் பத்திரிகைகளாக வைத்துக் கொண்டு எழுதிய தன்மையைக் கவனிக்க முடிகின்றது. யதார்த்த இலக்கியகாரரின் கருப்பொருள் களாகிவிட்ட வறுமை, பசி, முதலாளி – தொழிலாளிப் போராட்டங்கள் சூசகமாகவே கையாளப்பட்டன. பிரசாரத்தின் வேகம் கலைக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது. அவர்கள் கையாண்ட நடையில் ஒரு செழுமையும் பூரணத்துவமும், வாசித்து முடித்த பின்னர் ஓர் இன்பமான அமைதியை அளிக்கும் தன்மயக்க நிலையும் இருந்தன என்பதை நாம் மறுக்க முடியாது.

முன்னோடிகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய உரிய இடத்தினை மறுக்கும் புதுமை விமர்சகர்கள், அவர்களுடைய எழுத்துக்கள் கனவுலக எழுத்துக்களாகவும், மேற்றட்டு இலக்கியங்களாகவும் இருந்தன எனக் குறைகூறுகின்றார்கள். இந்த விமர்சகர்களின் குரலாக, 1955 ஆம் ஆண்டு, மார்கழி மாதத்தில் வெளிவந்த “ஈழத்துத் தமிழ் இலக்கியம்” என்னுங் கட்டுரை அமைந்திருப்பதைக் காணலாம். மேனாட்டு இலக்கிய விமர்சன முறையினைத் தமிழிலே திணிக்க முன்வந்துள்ள மேற்படி கட்டுரைகள் ஆசிரியர் பின்வருமாறு எழுதுகின்றார்.

“குல. சபாநாதன், சோ. சிவபாதசுந்தரம், சி. வைத்திலிங்கம், இலங்கையர்கோன், சம்பந்தன் ஆகியோர் ஈழகேசரிக் குழுவினர் என்று கூறக்கூடிய வகையில் இலக்கிய முயற்சியில் ஈடுபட்டனர் எனினும் இன்று. அக்கால இலக்கிய முயற்சிகளைப் பின்னோக்கிப் பார்க்கும்பொழுது, மேற்கூறிய இலக்கிய கர்த்தாக்கள் மறுமலர்ச்சி இலக்கியத்தையோ, இலக்கியத்தின் உட்பிரிவுகளையோ, புதிய புதிய பரீசீலனைகளையோ அதிகம் வளர்த்தனர் என்;று கூறுவதற்கில்லை. ஆங்கில விமர்சனங்கள் கூறும் ‘ரோமான்டிசம்’ என்னும் கனவுலகக் காட்சிகளில் ஈடுபடச் செய்யுள் இலட்சியபூர்வமான சிந்தனைகளிலும் உணர்ச்சிகளிலும் மயங்கி எழுதினர் என்றுதான் சொல்லலாம்”

தமிழ் இலக்கிய விமர்சன முறையைப் பற்றி முடிவு பெறாத கருத்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன. கலை விவகாரத்தில் ஒரு வழிதான் பொருந்தும் என வாதாடுவது முறையா? ”நூறு மலர்கள் மலரட்டும்!” என்கிற கோஷம் இப்புதுமை விமர்சகர்களின் அரசியல் ஆசானாற் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்படி விட்டெறிந்து அபிப்பிராயங் கூறுதல் அறிவு சார்ந்த செயலாகாது. ஒவ்வொரு தனித்தனி எழுத்தாளர்களது படைப்பையும் ஆராய்ந்து மதிப்புக் கூற வேண்டுமேயல்லாது, ஒட்டு மொத்தமாகக் கூறும் விமர்சனம் சரியானதாகமாட்டாது. சிறுகதை நாவல் நாடகம் ஆகிய படைப்புத் துறைகளிலே மேனாட்டு உத்தி முறைகளிற்கூடக் காலத்திற்குக் காலம் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இன்று சிலரால் பழக்கத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ள விமர்சன அளவுகோல்களால் ஈழத்து முன்னோடிகளின் படைப்புக்களை மதிப்பிடுவது பொருத்தமானதன்று.

அவர்களது படைப்புக்கள் என்கிற படிக்கற்களிலே ஏறித்தான், இலக்கிய வளர்ச்சிக் கோபுரத்தை நாம் அடையலாம். மேலும், இக்கால எல்லையுள் எழுந்த குவேனி, அனுலா, விஜயன், பூதத்தம்பிக் கோட்டை, சிகிரியா, யாழ்ப்பாடி ஆகிய சரித்திரக் கதைகளிலேயுள்ள அழகும் கலைத்துவமும் தற்கால எழுத்தாளரது சரித்திரக் கதைகளிலே காண முடியாததாக விருக்கின்றது. ‘சுயா’, ‘அநுசுயா’, ‘சானா’ ஆகியோர் எழுதிய ‘யாழ்ப்பாண நடை’க் கட்டுரைகளின் தரத்திற்கு, மண்வளம் பற்றி வானளாவப் பேசப்படும் இக் காலத்திற் கூட ஒருவரும் எழுதவில்லை. இந்த வெற்றிகளையும் நாம் மனதிலிருத்திக் கொள்ளுதல் நன்று.

‘மறுமலர்ச்சி’ எழுத்தாளர்.

எழுத்துலகத்திற் புகுந்து தமது படைப்புத் திறமைகளை வெளிக்காட்ட வேண்டுமென்று துடித்துக் கொண்டிருந்தவர்களும், “ஈழகேசரி” இளைஞர் பகுதியிற் சேர்ந்து, சிவபாதசுந்தரம் அவர்களால் உற்சாகப்படுத்தப்பட்டவர்களுமான இருபது, இருபத்தைந்து இளைஞர்கள் 1942ஆம் ஆண்டளவில்ஒரு சங்கத்தைத் துவக்கினார்கள். அதற்கு எழுத்தாளர் சங்கம் என்று பெயர் சூட்டப்படாவிட்டாலும், அதுதான் ஈழத்திலே தோன்றிய முதலாவது தமிழ் எழுத்தாளர் சங்கமாகும். ‘மறுமலர்ச்சிச் சங்கம்’ என்னும் பெயருடன் அது சிலகாலந்தான் இயங்கினாலும், குறிப்பிடக் கூடிய சேவையைச் செய்தது. மறைந்த சிறுகதை மன்னனாகிய கு. ப. ராவின் குடும்ப நிதிக்கு அது பணஞ் சேகரித்து அனுப்பியது. இஃது எழுத்தாளர் குடும்பத்தின் துயர் துடைக்கும் துடிப்பான செயலாகும். சுவாமி விபுலாந்தர் அவர்களுக்கு வரவேற்பளித்தது. நவசக்தி ஆசிரியர் சக்திதாஸன் சுப்பிரமணியம் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்தபொழுது, அச்சங்கம் அவரைக் கௌரவித்தது. பாரதிவிழா – கம்பர்விழா ஆகியவற்றைக் கொண்டாடியதுடன், மாதாமாதம் கருத்தரங்குகளையும் நடாத்திற்று. எல்லாவற்றிற்கும் மேலாக, அதன் சார்பில் ஒரு கையெழுத்துப் பத்திரிகை நடத்தப்பட்டது. யுத்த காலத்திற்குப் பிற்பட்ட கால எல்லையுள் அச்சுவாகனம் ஏறி மிகப் பயன்தரும் இலக்கிய பரிசோதனைக் களம் அமைத்துக் கொடுத்த ‘மறுமலர்ச்சி’ப் பத்திரிகைதான் அச்சங்கம் கையெழுத்துப் பத்திரிகையாக நடாத்திய சஞ்சிகையாகும்.

மறுமலர்ச்சிச் சங்கத்துடன், மறுமலர்ச்சிப் பத்திரிகையுடனும் தொடர்பு கொண்டு முன்னேறிய எழுத்தாளர்களைத் தான் ‘மறுமலர்ச்சி’ எழுத்தாளர்களென்று குறிப்பிடுகின்றேன்.

பொருத்தமான பெயருடன் ‘மறுமலர்ச்சி’ என்ற பத்திரிகை வெளிவரலாயிற்று. தனது இரண்டு வருட ஆயுட்காலத்திற்குள், அது புதிய பல எழுத்தாளர்களை உருவாக்கியது. இவ்வெழுத்தாளர்களுட் பலர் இப்பொழுதும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுள், சிறுகதைத் துறையிலே அ. செ. முருகானந்தன், சு. வேலுப் பிள்ளை, அ. ந. கந்தசாமி, தி. ச. வரதராசன், சு. இராஜ நாயகன், தாழையடி சபாரத்தினம், ‘சொக்கன்’ என்பவர்களைக் குறிப்பிடலாம். அவர்களது படைப்புக்களைப்பற்றி ஈழத்துப் பேனா மன்னர்கள் வரிசையில் விமர்சனஞ் செய்துள்ளேன். இருப்பினும், இங்கே அவர்களுடைய படைப்புகளைப் பற்றிச் சிறிது குறி;ப்பிட வேண்டி இருக்கின்றது.

முருகானந்தன், சரியான யாழ்ப்பாணக் களமும், பண்பாடும், கருவுங்கொண்ட கதைகளைப் படைத்துப் புகழீட்டினார். சவாரிக்காட்சியும், நீதிமன்ற வழக்குகளுங் கொண்ட “புகையிலை தெரிந்த முகம்’ என்னும் அவரது குறுநாவல் மிகுந்த பாராட்டுதல்களைப் பெற்றது. பல பத்திரிகைகளிலே உழைத்துக் களைத்து, பதினைந்து ஆண்டுகளின் பின், ‘யாத்திரை’ என்னும் நாவலையும். ஈழத்து இசையாளர்களைப் பற்றிய தொடர் கட்டுரைகளையும் எழுதி, தன்னை மறந்திருந்த வாசகருக்குத் தன்னை நினைவூட்டினார். சரியான தூண்டுதலும், நல்ல சூழ்நிலையுமிருந்தால் சிறந்த சிறுகதைகளைப் படைக்கக் கூடிய திறமைசாலி என்பதை அவரது சிறுகதைகள் பறைசாற்றி நி;ற்கின்றன. மனிதமாடு என்னும் அவரது கதை தமிழ்நாட்டுச் சிறுகதைத் தொகுதியில்இடம் பெற்றிருக்கிறது. ‘வண்டிச் சவாரி’ என்கிற அவரது சிறுகதை குறிப்பிடத்தக்க நல்ல கதையாகும்.

தற்காலத்திலே, தங்களை முற்போக்கு எழுத்தாளர் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு முன்னோடியாக அ. ந. கந்தசாமி விளங்கினார். கதைத் துறையிலே வெற்றியீட்டத் தவறினாலும், இரத்த உறவு என்னும் கதை, அவரது அரசியற் போக்கினைக் காட்டும் வகையில் அமைந்திருக்கின்றது. கவிதை எழுதும் ஆற்றல் அவரிடமுண்டு. ‘கவீந்திரன்’ என்ற புனைபெயரில் ‘துறவியும் குஷ்டரோகியும்’ போன்ற சில நல்ல கவிதைகளை எழுதியுள்ளார். பல பத்திரிகைகளிலே கடமையாற்றித் தமது அணியிலுள்ள இளைஞர்களை உற்சாகப்படுத்தியவர். பல்சுவைக் கட்டுரைகளை எழுதியிருக்கின்றார். ஏதாவது பிரச்சினையைக்கிளப்ப வேண்டுமென்கிற தொனி சில கட்டுரைகளிலே மேலோங்கி நிற்கின்றது. அரசினர் சமாசாரப் பகுதியிலிருந்து வயது எல்லைக்கு முன்னர் ஓய்வு பெற்ற பின்னர், கேலிக் கவிதைகள் பாடுவதிலும், பிரச்சினைக்காகவே பிரச்சினைக் கட்டுரைகள் எழுதுவதிலும் திறமையை வீணாக்கிக் கொண்டிருக்கின்றார். அவர்தமது முழுச் சக்தியையும் ஒருங்கு கூட்டி நிலை பெறத் தக்க நாவல் - காவியம் - இயற்ற வேண்டும். அப்போது தான் அவர் பெயர் நின்று நிலைக்கும்.

வாலிப உந்துதல்களுடன், காதலின் பல்வகைக் கோலத்தையும், காமத்தையும் வைத்துச் சிறுகதைகளைப் படைத்துத் தமது எழுத்தினால், தி. ச. வரதராசன் (வரதர்) வாசகர்களை மயங்கச் செய்தார். இளம் எழுத்தாளர்களுக்கு உற்சாகமூட்டக் கூடியதாக மறுமலர்ச்சி, ஆனந்தன், தேன்மொழி (கவிதைப் பத்திரிகை), புதினம் பத்திரிகைகளைக் காலத்திற்குக் காலம் நடாத்திப் பார்த்தவர். “வாழ்க நீ சங்கிலி மன்ன!” என்னும் வரலாற்று நூலை எழுதியுள்ளார். வள்ளி, இலக்கிய வழி, மூன்றாவது கண், சிலம்பொலி ஆகிய நூல்களைத் தமது வரதர் வெளியீடு மூலம் வெளியிட்டு எழுத்தாளர்களை ஊக்குவித்திருக்கின்றார். அதிக கால இடைவெளிக்குப்பின் காதல், கற்பு, வீரம் ஆகிய விடயங்களுக்குப் புரட்சிகரமான போக்கில் ‘கரு’ சமைத்துப் பழைய படியுந் தமது இடத்தைத் தாபித்து ‘கயமை மயக்கம்’ என்னுஞ் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். ‘மூர்த்தி மாஸ்டர்’ பெரும்பாலான கதைகளிலும் நடமாடும் சுயபிம்பங் காட்டும் ஒரு பாத்திரமாகும்.

உருவக் கதை என்கிற கடினமான கதை சொல்லுந் துறைக்குட் புகுந்து, முதலாவது வெற்றியை ஈட்டிய பெருமை சு. வேலுப்பிள்ளை (சு. வே) யைச் சாரும். பாரதரத்தினம், சக்கரவர்த்தி இராஜ கோபாலச்சாரி (ராஜாஜி) அவர்களாற் புகழப்பட்ட ‘மணற்கோவி’லையும், வாசகர் பலராற் பாராட்டப்பட்ட ‘வெறுங்கோவி’லையும் எழுதித்தான் ஒரு பண்பாடான, சிந்தனை மிக்க ஒர் எழுத்தாளர் என்பதை நிலை நாட்டிவிட்டார். இவருடைய வர்ணனை அழகுகள், கற்பனை நயங்கள் தனிச் சிறப்பு வாய்ந்தன. நடையிலே சுத்தமும் ஓட்டமும் உண்டு. பாற்காவடி, மண்வாசனை போன்ற பல நல்ல சிறுகதைகளை எழுதி, தாம் ஒரு சிறுகதையாசிரியர் என்பதையும் நிரூபித்துள்ளார். ஈழத்தின் ஐந்து எழுத்தாளர் சேர்ந்து எழுதிய ‘மத்தாப்பு’ என்னுங் குறுநாவலின் நடுநாயகமான அத்தியாயத்தை வாசித்தவர்கள். அவருக்கு நல்ல துறையும் நேர்த்தியாக வருமென்று அபிப்பிராயப்படுகின்றார்கள். இராமாயணப் பாத்திரமான குகனை வைத்து இவர் எழுதியுள்ள ‘குக’னும் ‘சந்திரமதி’யும் உப பாடப் புத்தகங்களாகையினால், இலக்கியக் கணக்கெடுப்பிலிருந்து வழுவி விட்டன. அண்மையில் அவரது ’40 கட்டுரைகள்’; என்னும் நூல் வெளிவந்துள்ளது. அவரது கட்டுரை எழுதும் ஆற்றலுக்கு அக்கட்டுரைத் தொகுதி தகுதியான சான்றாகும்.

‘சொக்கன்’ தமது கதைகளுக்கும், நாடகங்களுக்குமான விடயங்களைப் பெரும்பாலும் இலங்கைச் சரித்திர நூல்களிலே இருந்து எடுக்கின்றார். இச்சரித்திர நிகழ்ச்சிகளைச் சரித்திராசிரியனின் நேர்மையுடன் அனுகாமல், இலக்கியாசிரியனின் கற்பனை நோக்குடன் அணுகுகின்றார். அதனால் அவ்வெழுத்துக்களிலே மனோ ரதியச் சாலையைச் சேர்ந்த கவர்ச்சி இருக்கின்றது. மலர்ப் பலி, செல்லும் வழி இருட்டு ஆகிய நாவல்களை எழுதியிருக்கின்றார். சிலம்பு பிறந்தது, சிங்கைகிரிக் காவலன் ஆகிய இரண்டு நாடகங்களுக்குக் கலைக்கழகத்தினரின் முதலாவதுபரிசிலை இரண்டு தடவைகளிற் பெற்றுள்ளார். சிறுகதைகளையும், குறுநாவல்களையும் நல்ல தமிழ் நடையில் எழுதுகின்றார். இருப்பினும், ‘எனக்கு நாடகங்களே எழுத வருகின்றன’ என்று சமீப காலத்திற் சொல்லத் தொடங்கியுள்ளார். ‘வீரத்தாய்’ என்னும் கவிதை நூலையும் படைத்திருக்கின்றார். மனோன்மணியத்தை வசன நடையில் மாணவர்க்காக எழுதியுள்ளார்.

பிரபல எழுத்தாளரான சம்பந்தனின் அடிச்சுவட்;டிலே நடந்து, தரமான சில கதைகளை ‘நனவோடை’ ‘உத்தி’யில் எழுதியவர். சு. இராஜநாயகனாவர், உருவகங்களைத் தம் கதைகளிலே அழகாகக் கையாளுகின்றார். ‘அவன்’; என்கிற அவரது சிறுகதை ஈழத்துச் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது.

‘கல்கி’ப் பத்திரிகை நடாத்திய ஒரு சிறுகதைப் போட்டியில் மூன்றாவது பரிசைப் பெற்றதின் மூலம் பிரபலம் அடைந்து, ‘அசுரகதி’யிற் பல சிறுகதைகளைப் படைத்து, தாழையடி சபாரத்தினம் வாசகரைக் கவர்ந்தார். ஈழத்துச் சிறுகதைத் தொகுதியில் வெளியான ‘குருவின் சதி’; பழைய ஏகலைவன் கதையாக இருந்தாலும், அதன் நடையும், புதுப் பார்வையும், அதனைத் தரமான கதையாக ஆக்கிவிட்டிருக்கின்றன.

மறுமலர்ச்சி வட்டச் சிறுகதை ஆசிரியர்களை மொத்தமாக நோக்குமிடத்து, வாசகர்கள் அதிகம் பரவியிராத ஒரு காலத்தில், சிறுகதை இலக்கியத்தைப் பற்றி அலசி ஆராய்ந்து அதன் இலட்சணங்கள் தமிழில் வரையறுக்கப்படாத ஒரு நிலையில் மிக இளம் வயதில், தமக்குத் தெரிந்தவற்றை வைத்துக் கொண்டு, ஏதாவது எழுத்துலகிற் செய்ய வேண்டுமென்ற துடிப்புடன் எழுத வந்தவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. ஆனால் பதினெட்டு வருடம் கடந்து அவர்களது வளர்ச்சியையும் வளத்தையும், பார்க்கும் பொழுது, மகிழ்;ச்சி தரத்தக்கனவாகவே இருக்கின்றன. கிராமச் சூழ்நிலைக் கதை (அ. சொ. மு) ‘முற்போக்கு’க் கதை (அ. ந. கந்தசாமி), காதற்கதை (வரதர்), உருவகக் கதை (சு. வே), சரித்திரக் கதை (சொக்கன்), ‘நனவோடை’க்கதை (இராஜநாயகன்) என அவர்கள் புதிய கிளைப்பாதைகளில் நடந்து முன்னேறினார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

“காதல் இல்லாமல் கதை எழுதமாட்டார்கள்” என நையாண்டி செய்யும் படித்தவர்களுக்கு மறுமலர்ச்சி வட்டாரத்துச் சிறுகதை ஆசிரியர்கள் செய்துள்ள தொண்டு விளங்காதிருக்கலாம். இக்காலத்து இலக்கிய வளர்ச்சியைப் பற்றி ஆராய்ந்த ஒரு விமர்சகர், “இவர்கள் ‘கலைக்காகவே கலை’ என்ற கொள்கையிற் தம்மை அறியாமலே புகுந்து விட்டார்கள்” என எழுதியுள்ளார். இது சரியான மதிப்பீடன்று இக்கால எல்லையுள் எழுதிய எழுத்தாளர்கள் கொள்கைக் குழப்பங்கள் என்கிற சக்திக்குள் அகப்படவில்லை. ஆனால். எழுத்துத் துறையைப் பூரண பிரக்ஞை அவர்களுக்கு இருந்திருக்கின்றது.

ஈழத்து எழுத்தாளரை அறிமுகஞ் செய்து வைத்து, அவர்களது படைப்புக்களை வெளியிட்டு முன்னணிக்குக் கொண்டுவரும் பணியில், இக்காலத்தில் வெளிவந்து கொண்டிருந்த ‘ஈழகேசரி’, ‘மறுமலர்ச்சி’ முதலிய ஈழத்துப் பத்திரிகைகளே முன்னோடிகளாக விளங்கின. தமிழகத்துப் பத்திரிகைகள் ஈழத்து எழுத்தாளரை மாற்றாந் தாய் மனோபாவத்துடன் நடத்துகின்றன என்று தற்காலத்தில் ஒரு பரவலான அபிப்பிராயம் நிலவுகின்றது. ‘கங்கை’யின் ஆசிரியர் பகீரதன் முன்னிலையில் இந்த மனக் குறையை திரு. எஸ். பொன்னுத்துரை எடுத்துச் சொன்னதைத் தொடர்ந்து ‘தினகரன்’, ‘எழுத்து’. ‘சரஸ்வதி’,’கங்கை’ ஆகிய பத்திரிகைகளிலே நடந்த வாதப் பிரதிவாதங்களை நாம் மறுப்பதற்கில்லை. மேற்படி குற்றச்சாட்டில் ஓரளவு உண்மை இருக்கின்றது. இருப்பினும், ‘கலாநிலைய’மும் அவ்வப்போது ‘ஆனந்த விகட’னும் ‘கலைமக’ளும் 1942 ஆம் ஆண்டளவிற் ‘கிராம ஊழியன்’ 1960 ஆம் ஆண்டளவில் ‘சரஸ்வதி’ ஆகிய பத்திரிகைகளும், ஈழத்து எழுத்தாளரின் படைப்புக்களை வெளியிட்டுச் செய்த சேவையை நாம் புறக்கணத்துவிட முடியாது.

‘கிராம ஊழிய’னைப் பற்றி விசேடமாகக் குறிப்பிட வேண்டும். பிரபல எழுத்தாளராகிய கு. ப. ரா. அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த அப்பத்திரிகை. பிற்காலத்தில் திருலோக சிதாராம், வல்லிக்கண்ணன் ஆகியோரின் பொறுப்பில் வெளிவந்தது. அக்காலத்தே தான் ஈழத்து எழுத்தாளர் அப்பத்திரிகையைத் தமது சொந்தப் பத்திரிகையாக உரிமை கொண்டாடினார்கள். ஏனைய பத்திரிகைகள் விசேட மலர்களின் முதற் கட்டுரைக்காக முதல் அமைச்சரையோ, வேறு துறைகளிற் பிரபலமானவரையோதான் தேடிச் சென்றன@ செல்கின்றன. ‘கிராம ஊழியன்’ விசேட மலர் ஒன்றில் ‘இலக்கியப்பாதையில் என்கிற கட்டுரையே முதலாவது கட்டுரையாகப் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அக்கட்டுரையின் ஆசிரியர் ஈழத்துப் பிரபல கவிஞரும், விமர்சகருமான பண்டிதர் சோ. தியாகராஜன் அவர்களாவர். அதனைக் கண்டு ஈழமும் தமிழகமுந் திடுக்குற்றன. பத்திரிகை ஆசிரியரின் துணிச்சல் பாராட்டத்தக்கது. அதே ஆண்டு மலரில் , ச. அம்பிகைபாகன், சி. வைத்தியலிங்கம், இலங்கையர்கோன், இராஜஅரியரத்தினம் ஆகியோரும் இடம் பெற்றிருந்தார்கள். ‘இலக்கிய வளர்ச்சியையே நோக்கமாகக் கொண்டிருந்த அந்தப் பத்திரிகை, தரமான விடயங்கள் எங்கிருந்து வந்தாலும் முக்கியத்துவங் கொடுத்து பிரசுரித்திருக்க, வியாபார நோக்கத்தோடு ஈழத்துப் பத்திரிகைச் சந்தையிலே புகுந்துள்ள இரண்டாந் தரப் பத்திரிகைகள் கூட, ஈழத்து எழுத்தாளரை ஏன் புறக்கணிக்க வேண்டும்?’ என்கிற நியாயமான கேள்வி ஈழத்து எழுத்தாளர் வட்டாரத்திற் சலசலப்பினை உண்டாக்கியதில் வியப்பில்லை.

‘கிராம ஊழியன்’ மூலமும், ‘மறுமலர்ச்சி’ மூலமும் எழுத்துலகிற் புகுந்த இளங்கவிஞர்களுட் பலர், இப்பொழுது ஈழத்தின் தரமான கவிஞர்களாக விளங்குவதைக் காணலாம். நாவற்குழியூர் நடராசன், ‘மஹாகவி’, ‘சாரதா’ (க. இ. சரவணமுத்து) சோ. தியாக ராஜன். செ. கதிரேசபிள்ளை ஆகியோரைப் பெயர் சொல்லிக் குறி;ப்பிடலாம்.

நாவற்குழியூர் நடராசன் புதுப்புது பிரச்சினைகளைக் கவிதைகள் மூலம் எழுப்பிப் புதுப்பாதை வகுத்துக் கொண்டு முன்னேறியவராவர். திருலோக சீதாரம் தொகுத்த தற்காலக் கவிமலர்களின் தொகுப்பில் இவரது சிலம்பொலி இடம் பெற்றுள்ளது. தற்பொழுது இலங்கை வானொலியின் தமிழ் நிகழ்ச்சி அதிகாரியாகப் பதவி வகிக்கும் இவர், பல கவியரங்குகளை வானொலியிலே நடாத்திப் பரிசளித்தது, ஈழத்தின் கவிதையூற்று வற்றிவிடாமற் பாதுகாத்து வருகின்றார். இவரது கவிதைகள் ‘சிலம்பொலி’ என்ற நூலாக வெளிவந்திருக்கிறது. அது தரமான கவிதை நூலாகும்.

ஈழத்துக் கவிதை உலகிலே ‘மஹாகவி’ (து. ருத்திரமூர்த்தி)க் கெனத் தனியான இடமுண்டு. கிராமத்து அழகுகளையும் அம்மக்களின் இன்ப துன்பங்களையும் அவரது பாடல்களிற் காணலாம். பற்பல சந்தங்களிற் பலவகைத் திரிபு கொண்டு அவர் பாடுகிறார். ‘வள்ளி’ என்ற கவிதைத் தொகுதி அவரது பெருமையில் ஒரு பகுதியைத் தான் புலப்படுத்துகின்றது. இன்னுஞ் சில தொகுதிகள் வெளிவர வேண்டும். அவை ஈழத்தின் புகழை நிலைநாட்டும், ஆனால், அவருடைய இடைக்காலப் பாடல்களிற் சில வரிப்பாடல்களைப் போலத் தோற்றமளிப்பவனவாகவும், மடங்கியும் முறிந்தும் விளக்கக் குறைவாகக் காணப்படுவதாகவும், சில விமர்சகர்கள் அபிப்பிராயப்படுகின்றார்கள். ‘கல்வழகி’, ‘சடங்கு’ முதலிய சிறு காவியங்களும் அதன் பின் பாடியவையும் தரமாக அமைந்திருக்கின்றன.

பிரபல எழுத்தாளரான சோ. சிவபாதசுந்தரத்தின் தம்பியாகிய தியாகராஜன் ஒரு கண்டனக்காரராக எழுத் துலகிற் புகுந்தார். இலக்கிய நயங்களை எழுதுபவர்களை எடைபோடு வதில் சமர்த்துப் பெற்றவர். ஆனால், அவரது புகழ் இவற்றிலே நிலைபெறவில்லை. அவர் பாடிய குழந்தைப் பாடல்களும், பெரியோரைப் பற்றி எழுதிய பாடல்களும் அவரைக் கவிஞர் வரிசையிலே உயர்த்தி வைத்தன. பண்டித பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியராக வெளிவந்த அவர், தனது முழு ஆற்றலையும் வெளிக்காட்ட ஆயத்தமாகும் பொழுது, இலக்கியங்களோடு தொடர்பில்லாத உள்ளுர்த் தலைமைக் காரர் உத்தியோகங் கிடைத்துவிட்டது. அவ்வுத்தியோகம் இலக்கிய ஆர்வத்தினை பின்னுக்குத் தள்ளினாலும், நீறு பூத்த நெருப்பாக இலக்கிய ஆர்வம் கனன்று கொண்டிருந்தது. அவர் தற்பொழுது ஆசிரிய உலகிற்குத் திரும்பி வந்துள்ளமை கவிதை உலகிற்கு நல்ல தென்பது எனது எண்ணமாகும்.

நல்ல கருத்தாழமும், ஓசை நயங்கெடாததுமாகிய கவிதைகளை ஆரம்ப காலத்திற் பாடிய கதிரேசபிள்ளை, பிற்காலத்திற் கல்லூரி நாடகங்களிற் கவனத்தைத் திருப்பி விட்டமை, ஈழத்துக்கவிதை வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள நட்டங்களுள் ஒன்றாகும். எனினும் சென்ற சில வருடங்களாகப் பல கவியரங்குகளில் அவர் பாடி வருகின்றார். ஓசை நயம் பொருந்திய கவிதைகளைத் தகுந்த இசையுடன் பாடுவதில் இவர் இப்போது பெற்றுவரும் வெற்றியில் தகுந்த காவியம் ஒன்று வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

1941 ஆம் ஆண்டிற்கும் 1950 ஆம் ஆண்டிற்குமிடையில் தோன்றிய தமிழ்நாட்டுக் கவிதை ஆர்வம், ஈழத்திலும் கலைவாணனின் கவிதைகள் இக் கவிஞர்களைக் கவர்ந்துள்ளன. அவரது பணி இக்கவிஞர்களைக் கவர்ந்துள்ளன. அவரது பாணி இக்கவிஞர்களாற் பின்பற்றப்பட்டது. இக்காலத்தில், தனித்தனிக் கவிதைகளும். கவிதைக் கடிதங்களும் எராளமாகத் தோன்றின. இவற்றினை, இப்பொழுது பின் நோக்கிப் பார்க்கும் பொழுது, இலக்கியத் தராசில் நிற்கக்கூடியவையாக வெகுசிலவே தேறும். தேறக் கூடியவற்றுள் யோகசித்தி, சுவர்க்கபூமி ஆகிய இரண்டு கவிதைகள் கதைப்பாடல்களும் நிச்சயம் இடம்பெறுமென்பது எனது அபி;ப்பிராயமாகும். இவற்றினைச் சரவணமுத்து ‘சாரதா’ என்கிற புனைப் பெயருக்குள் ஒளிந்திருந்து எழுதினார். கதைகள் தழுவல்களாக இருந்தபோதிலும், கவிதைத் தரம் உயர்ந்தே நிற்கின்றது. அவற்றிற்கு ஈடான சிறு காவியங்கள் ஈழத்தில் இன்னும் பாடப்படவில்லையென்பது இரசிகர்களுடைய அபிப்பிராயமாகும்.

இந்தப் பகுதியில் மறுமலர்ச்சி வட்டத்தைச் சேராது, அதே சமயம் தமிழ் மறுமலர்ச்சியினை மூச்சாகக்கொண்ட சில எழுத்தளார்களையுஞ் சேர்த்துக் கொள்ள வேண்டும். ‘யாழ்ப்பாணன்’ (சிவக்கொழுந்து), ‘சானா’ (சண்முகநாதன்), ச. நமசிவாயம், பஞ்சாட்சர சர்மா ஆகியோரும் இக்கால எல்லையிலே தான் எழுத்துத் துறைக்கு வந்தார்கள்.

பாடப் புத்தகங்கள் எழுதியும், பிரசுரித்தும் வருவதுடன், பல கவிதைகளையும் ‘யாழ்ப்பாணன்’ இயற்றியுள்ளார். கவிதைக் கன்னி, மாலைக்கு மாலை, கண்ணன்பாட்டு, பாலர் கீதம் என்னும் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. காயம்பட்ட பச, கிழவன், பாலர் கோவில் கட்டி விளையாடுதல் என்பன நல்ல கவிதைகள். அவருடைய பல பாடல்கள் பால பாடங்களில் இடம் பெற்றிருப்பதால், பாடசாலைகள் தோறும் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன.

இலங்கை வானொலி நிலையத்தில், தமிழ் நாடகப் பகுதிக்கு அதிகாரியாக இருக்கும் ‘சானா’ வை நடிகர் – ஒவியர் என்று அறிந்து வைத்திருக்கும் அளவிற்குத்தானும். அவர் ஒரு நல்ல எழுத்தாளர் என்பது பலருக்குத் தெரியாது. பழம்பெரும் நூலிலிருந்து ஒரு பாடலை எடுத்து நயம் எழுதுபவர்களையே எழுத்தாளர் என்று ஒரு சாராரும், ஓரிரு சிறுகதைகளை எழுதினாற்றான் எழுத்தாளர்களென்று பிறிதொரு சாராரும் கருதுகின்றார்கள். ஆனால். ‘சானா’ தமக்கென ஒரு பாதையை எழுத்துத் துறையில் வரித்துக் கொண்டார். வ. ரா. அவர்கள் எழுதிய பிரசித்திபெற்ற நடைச் சித்திரங்களை ஒட்டி, யாழ்ப்பாணப் பாத்திரங்களை வைத்து, மிக நல்ல நடைச்சித்திரங்களைப் படைத்திருக்கின்றார். நடைச்சித்திரங்களை மட்டுமன்றி, பலவகைக் கட்டுரைகளையும் எழுதிக் கட்டுரை எழுத்தாளர் வரிசையிலே தனக்கென ஓரிடஞ் சம்பாதித்துக் கொண்டார்.

ச. நமசிவாயம் கட்டுரை, கவிதை, கதை எனப்பல துறைகளிலுங் கைவைத்து, இளமைத் துடிப்புடன் எழுதினர் ஆனால், வானொலிப் பகுதியிற் சேவைக்குப் புகுந்த பி;ன்னர், இலக்கியப் பணியைக் கைவிட்டுவிட்டார்.

பஞ்சாட்சர சர்மா சமஸ்கிருதப் பண்டிதர்@ தமிழிற் பால பண்டிதர்@ ஆங்கிலமும் மலையாளமுந் தெரியும், எனினும் அவரை யாரும் பண்டித வர்க்கத்துடன் சேர்ப்பதில்லை. மறுமலர்ச்சி வட்டத்துடன் தொடர்புகொண்ட அவரது இலக்கியப்பணி, மறுமலர்ச்சி இலக்கியப் போக்;கின் சாயல் படிந்தது. தாகூரின், ‘படித்துறை சொல்லும் கதை’ யையும், மலையாள மொழியிலிருந்து சில கதைகளையும் தமிழாக்கியுள்ளார். கிராமியக் கவிதைகள் சம்பந்தமாகவும், ஈழத்துக் கவிதைகள் சம்பந்தமாகவும் அவர் ஆராய்ச்சிகள் செய்துள்ளார். சிறுகதை – கவிதை – நாவல் சம்பந்தமாக எந்த எழுத்தாளரது முயற்சிகளையும் எடைபோட்டு வைப்பதிலே பிரியர். சர்மா அவர்களது அபிப்பிராயந் தெளிவானது@ கலங்கமில்லாதது.

நாட்டுப் பாடல்கள்:

எழுத்தாளர்களுடைய படைப்புக்கள் ஒரு புறமாக வளர்ந்தோங்க, நாட்டுப்பாடலைத் தொகுக்கும் முயற்சியும் நடைபெற்றது. தேவேந்திர சத்தியார்த்தி என்னும் வடஇந்தியர் பாரததேசம் முழுவதுஞ்; சுற்றித் திரிந்து, கிராமியப் பாடல்களைச் சேகரித்து, அவை ஒரு நாட்டின் பழங்காலச் செல்வங்களென்றும், அவற்றின் மூலந்தான் கிராம மக்களுடைய உணர்ச்சிகளை உய்த்துணர முடியுமென்றும் விளக்கி, புத்துயிர் ஊட்டினார். அவர் தமிழ் நாட்டிற்குஞ் சென்று. அங்கு வாழும் அறிஞர் பலரை இத்துறையிலே ஈடுபடும்படி ஊக்குவித்தார்.

கி. வா. ஜகந்நாதன், மு. அருணாசலம் ஆகியோர் தமிழ் நாட்டில் இத்துறையில் ஈடுபடத் தொடங்கிய அதே காலத்தில், ஈழத்திலும் பலர் இத்துறையிலே ஈடுபடத் தொடங்கினர். கிராமியப் பாடல்களுக்குப் பெயர் பெற்ற மட்டக்களப்புப் பகுதியில் இவ்வேலை சுறுசுறுப்புப் பெற்றது. பேருழைப்பாளியான சதாசிவஐயரவர்கள் அப்பகுதியிலுள்ள ஆசிரிய சங்கங் களின் துணையோடு மட்டக்களப்பு வசந்தன் கவித்திரட்டு என்னும் நூலைத் தொகுத்து வெளியிட்டார்.

ஈழத்தின் பிற்காலப் புலவர் பெருமக்களின் கூத்துக் களையும் நாடகங்களையும். வரலாறுகளையும் ஆராய்ந்து வெளியிடும் வெள்ளவத்தை மு. இராமலிங்கம் அவர்கள் கிராமியக் கவிதை சம்பந்தமாகச் செய்த பணி அளவிடற்கரியது. அவருடைய பேருழைப்பின் பயனாக கிராமக் கவிக் குயில்களின் ஒப்பாரிகள், வட இலங்கையர் போற்றும் நாட்டார் பாடல்கள், களவுக் காதலர் கையாண்ட விடுகதைகள் ஆகிய நூலையும் வெளிவந்திருக்கின்றன. ‘கனகி புராணம்’ என்னும் நூலையும் பதிப்பித்திருக்கின்றார். அசோக மாலா, நவமணி ஆகிய நாடகங்களை எழுதி, நூல்களாக வெளியிட்டிருக்கின்றார். ‘இரட்டையர்கள்’ என்கிற புனைபெயரில் கவிஞர் சரவணமுத்து அவர்களும், பண்டிதர் பஞ்சாட்சர சர்மா அவர்களும் தேயிலைத் தோட்டங்களிலே வழங்கிவரும் நாட்டுப் பாடல்களை வெளியிட்டு, அருமையான விளக்கங்களும் எழுதினார்கள். சமீபகாலத்தில் வித்துவான் எப். எக்ஸ். ஸி. நடராசா அவர்கள் ஈழத்து நாடோடிப் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டார். கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்கள் பதிப்பாசிரியராக அமர்ந்து ஒரு நாட்டுப் பாடல் தொகுதியை வெளியிட்டுள்ளார். பண்டித மனப்பான்மையுடன் செயற்கையான முறையிலே பாடல்களை வகுத்துக் கவர்ச்சியைக் குறைத்து விட்டார்கள் என்று சிலர்குறை கூறுகின்றார்கள். வேறு சிலர், இத்தகைய பகுப்பு முறை வரவேற்கத் தக்கது என்று கருதுகின்றார்கள். வாய்மொழி இலக்கியம் என்ற நாடோடிப்பாடல் தொகுப்பொன்றை, வடபகுதி சனசமூக நிலையங்கள் சமீபத்தில் வெளியிட்டுள்ளன. மட்டக்களப்புப் பகுதியிலே வசிக்கும் எழுத்தாளர்கள் சிறப்பாக முஸ்லிம் எழுத்தாளர்கள் - அவ்வப்போது சில அருமையான நாடோடிப் பாடல்களை வெளியிட்டிருக்கிறார்கள். பாடல்களை விளக்க அவர்கள் புனையும் கதைகள், நாட்டுப் பாடல்களின் மூச்சினை நசுக்கவே உதவி செய்கின்றன. வேறு சில பொறுப்பற்ற எழுத்தாளர்கள், தாங்களே நாடோடிப் பாடல்களை இயற்றிக் கலப்படஞ் செய்யும் மோசடியில் இறங்கியுள்ளார்கள். இத்தகைய நேர்மையற்ற வழிகளிலே இறங்கி, நாட்டுப் பாடல்களின் சிறப்பினைக் குறைப்பது வேதனை தருஞ் செயலாகும்.

அரசாங்கத்தின் கலாசாரப் பகுதியினர் கண்விழித்து, இத்துறையில் ஈடுபாடுகாட்டத் தொடங்கியுள்ளனர். உண்மையான கோலாட்டப் பாடல்கள், கிணறுவெட்டுப் பாடல்கள், தோணிப்பாடல்கள். விறகு கொண்டு போகும் பெண்களுடையவையாக அமைந்த பாடல்கள், தளக்காவடிப் பாடல்கள் முதலியனவற்றை வெளியிட கலாசாரப் பகுதியினர் முயன்றால். அது தனி சிறந்த தமிழ்ப் பணியாக அமையும்.

‘பண்டித வர்க்க’ எழுத்தாளர்.

பண்டிதர்களுடைய இலக்கிய சேவையைச் சொல்லப்புகும் இச்சந்தர்ப்பத்தில். தமிழ்நாட்டு இலக்கியப் பத்திரிகை ஒன்றில், ‘புதுமை இலக்கியம்’ படைக்கும் ‘பேரெழுத்தாளர்’ ஒருவர் எழுதியவை ஞாபகத்திற்கு வருகின்றன. அவருடைய கண்டு பிடிப்பு பின்வருமாறு அமைந்திக்கின்றது.

“வளரும் இலக்கியத்துக்கு எதிரிகள் என்று இரண்டு ரகத்தினரைச் சிறப்பாகச் சொல்ல வேண்டும். 1 பண்டிதர்கள். 2. பத்திரிகைக்காரர்கள். பண்டிதர்களுக்குப் பழசைத் தவிர வேறு எதிலும் ஈடுபாடு கிடையாது. பழசில் கூடத் தங்கள் இலாபங்கருதியே ஈடுபாடு. வளரும் தமிழைக் கண்டு கொள்ளும் சக்தி அவர்களிடம் இல்லை என்பது வெளிப்படை. பழசி; கூட இன்றைக்குத் தேவையானதைக் கண்டுகொள்ள அவர்களுக்குப் போதுமான சக்தி கிடையாது. இலக்கியம் பிறரை எட்டி விடக்கூடாது. தங்களுடைய ஏகபோகமான சொத்தாக இருக்கவேண்டும் என்று இக்குழாத் தினர் பாடுபடுவது புரிகிறது”

ஈழநாட்டிலே எழுத்துத் துறையிலே புகுந்துள்ள பண்டிதர்களை இவ்வாறு ஏக சுருதியிற் புறக்கணித்து விட முடியாது. இடையிடையே, மறைவாக, மேற்படி மனப்பான்மையைச் சில பண்டிதர்கள் காட்டினாலும். அவர்களுட் பலர், காலப் போக்கினை அனுசரித்து, வளருந் தமிழிலக்கியத்திற்குத் தங்களது பங்கினைச் செய்திருக்கிறார்கள்.

ஈழத்துப் பண்டிதர்களைப் பேராசிரியர் ‘கல்கி’ பின்வருமாறு எடையிட்டார்:

“இங்கு தடுக்கி விழுந்த இடமெல்லாம் பண்டிதர்களே......... ஆனால், ஈழத்திலேயுள்ள பண்டிதர்களிற் சிலர் – பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, பொ. கிருஷ்ணன் போன்றோர் – கட்டுப்பெட்டிகளல்லர். எந்த நல்ல விஷயத் தையும் மனமுவந்து வரவேற்பவர்கள் அவர்கள்தாம்”

ஈழத்தில் பண்டிதர்களும் பாலபண்டிதர்களும் பல்கிப் பெருகி இருப்பதற்கு முக்கிய காரணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச்சங்கமும் பண்டித பயிற்சிக் கலாசாலையும் எனின் மிகையாகாது. ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தைப் பற்றி நினைக்கும்போது, தேனீபோலச் சுறுசுறுப்பாக இருந்து. தகுந்தவர்களை ஒன்று கூட்டி அச்சங்கத்தைத் தொடங்கிய பிரம்மஸ்ரீ சதாசிவ ஐயரவர்களைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அச்சங்கத்;தின் முயற்சியினால் கரவை வேலன் கோவை, கதிரைமலைப் பள்ளு, ஐங்குறு நூறு முதலிய நூல்கள் வெளிவரலாயின. ஐயரவர்கள் சங்கத்தைத் தொடங்கி நூல்களை அச்சேற்றியது மாத்திரமல்லாமல், சமாளாதண்டக் கலிவெண்பா, நவரத்தின மாலை, தேவி தோத்திர மஞ்சரி, சித்திவிநாயகர் இரட்டை மணிமாலை, இருதுசங்கார காவியம் ஆகிய நூல் களைத் தாமே மொழிபெயர்த்தும், இயற்றியும் தமிழ்த் தாய்க்குச் சூட்டினார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, கிழக்கிலங்கையில் வழங்கி வந்த வசந்தன் கவிகளைச் சேர்த்து, 1940 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு வசந்தன் கவித்திரட்டு என்னும் நூலை வெளியிட்டார்கள். இலக்கிய முயற்சிகளில் இஃதொரு புதிய துறைக்கு வழிகாட்டிற்று. பிற்காலத்தில் கலாநிதி என்ற சஞ்சிகையையும் நடாத்தினார். ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்றெல்லாம் மேடை மீது முழங்கும் தம்பிமார்களைப் பார்த்துச் சதாசிவ ஐயர் போன்ற உழைப்பாளிகளுக்குத் தமி;ழ் மக்களாகிய நாம் ஏதாவது ஞாபகார்த்தக் கைங்கரியஞ் செய்துவிட்டு. அப்புறம் மேடை முழக்கத்தை வைத்துக் கொள்ளலாமென்று சொல்லத் தோன்றுகின்றது.

“நமது பண்டிதர்களுட் சிலர் கட்டுப்பெட்டிகளல்லர்” என்று கல்கி எடைபோட்டது சரிதான் என்பதை நிறுவுவதற்கு ஓர் உதாரணத்தை எடுத்துத் தரலாம். ‘ஆனந்த விகடன்,’ 1935 ஆம் ஆண்டில் நடாத்திய நாவலுக்காகிய விமர்சனப் போட்டியில், ‘ஆனந்த மடம்’ என் நாவலைப் பற்றி விமர்சனம் எழுதிப் பரிசு பெற்ற பண்டிதர் பொ. கிருஷ்ணன் அவர்கள் 1956 ஆம் ஆண்டிற்குரிய பரிசையும் பெற்றார். தூய உள்ளமும், இளம் எழுத்தாளரைத் தட்டிக் கொடுக்கும் மனப்பான்மையும், காலத்திற்கேற்ற வசன நடையும், ‘வண்ணாத்திப்பூச்சி’ தொடக்கம் வள்ளுவர் வரை படித்து அருமையான விமர்சனக் கட்டுரை எழுதும் வன்மையுங் கொண்டு கிருஷ்ணன் அவர்கள் விளங்குகின்றார்கள். அவர் ஏராளமான விமர்சனக் கட்டுரைகளை எழுதியிருக்கின்றார். அக்கட்டுரைகள் பலவகைப் பட்டன. அவரைப் போன்ற எழுத்தாளர்களாலே தாம் ஈழம், காய்தல் உவத்தலின்றிச் சரியான இலக்கிய மதிப்பீடு செய்கின்றது என்கிற நற்பெயரைச் சம்பாதித்துக் கொண்டது.

ஈழத்தில், இலக்கிய இரசனையைப் பெருக்கியவர்களுள் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவர் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களேயாம். ஈழத்தின்பழைமை அஞ்சலி செய்து, அதனைப் புதுக்கோலத்தில் அறிமுகப் படுத்தியதுடன், எங்கேயோ மூலையில். பத்தோடு பதினொன்றாக இருந்த ஈழத்துப் புலவர் இரத்தினங்களையெல்லாம், அவர் நமக்கு நல்ல முறையிலே அறியச் செய்தார். சின்னத்தம்பிப் புலவர், சேனாதிராய முதலியார், முத்துக்குமார கவிராயர், வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை, மகாலி;ங்க சிவம், சோமசுந்தரப் புலவர் என்போரை அவர் நமக்கு அறிமுகஞ் செய்து வைத்து, அவர்களுடைய வாழ்க்கை முறைகளையும், பாடல்களையும் நுண்ணியதாக விளக்கினார். ஈழத்தின் பழைய கலாசாரம் கந்தபுராண கலாசாரந்தான் என்பதைத் தெளிவாக நிறுவியுள்ளார். இராமாயணம், பாரதம், திருக்குறள். அன்பினைந்திணை ஆகியவற்றை அவர் அணுகிய முறை மற்றையோர் செல்லாத தனிவழி: புதுவழி. அவர் தமது கட்டுரைகளிற் பொருள் முக்கியத் துவத்தையே கவனிப்பவர். ஆரியம் - தமிழ் என்று பேதம் பாராட்டாது, இரண்டையும் இரு கண்களாக மதித்துச் சொல்லின் மூச்சினை அறிந்து உபயோகித்தல் வேண்டும் என்கிற கொள்கையுள்ளவர். பண்டிதமணி அவர்களுடைய நூல்களாக கதிர்காம வேலன் பவனி வருகிறான். இலக்கிய வழி, சைவநற்சிந்தனைகள், பார நவமணிகள். கந்த புராண கலாசாரம், கந்தபுராண போதனை, சமயக் கட்டுரைகள் முதலியன வெளிவந்திருக்கின்றன. ‘இலக்கணத்தை அதிகங் கவனியாது. தமிழ் நடையை மலினமாக்கி உபயோகிக்கின்றார்’ என்று சில பண்டிதர்கள் பண்டிதமணியவர்களுடைய நடையைக் குறை கூறுகின்றார்கள். ஆனால், பண்டித மணி அவர்களுடைய நடை அவர்களுக்கே அமைந்த கொடை: அந்த நடைதான் அவரது தனித்துவத்தை வெளிப்படுத்துகிறது.

அடுத்து. பண்டிதமணியுடன் ஒருசாலை மாணாக்கராக, நாவலர் காவிய பாடசாலையிற் பயின்று. கவிஞராய் ஒளிரும், மட்டக்களப்பைச் சேர்ந்த புலவர்மணி. ஏ. பெரிய தம்பிப்பிள்ளை அவர்களைக் குறிப்பிடவேண்டும். ‘ஈழமணித் திருநாடு’ என்ற கவிதை மூலம் பிரசித்தியடைந்த புலவர்மணி பகவத்கீதையை வெண்பா உருவிற் பாடியுள்ளார். அதன் முதலாவது பாகம் பகவத்கீதை வெண்பா என்கிற பெயரில் அச்சில் வந்து, ஸ்ரீலங்கா சாகித்திய மண்டலப்பரிசில் பெற்றுள்ளது. விபுலாநந்தர் மீதும், மகாலி;;ங்கசிவத்தின் மீதும் அவர் பாடிய பாடல்களும், ‘வாழி கல்லோயா நங்கை!’ போன்ற தனிப் பாடல்களும் கிழக்கிலங்கையின் தமிழ் வளத்தினை நினைவூட்டுகின்றன. பல கவியரங்குகளிற் பங்குபற்றிய புலவர்மணி அவர்கள் அழகும், மென்மையும், ஓசை நயமுங் கொண்ட பல பாடல்களை நமக்குத் தந்துள்ளார். இறுக்கமான வசனநடையிற் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். இருப்பினும், அவர் கவிஞர் திலகமாகவே ஒளிருகின்றார்.

கொழும்புப் பகுதியிலே தமிழை வளர்த்த மு. நல்லதம்பி அவர்கள், ஈழம் சுதந்திரம் பெற்ற பொழுது நடைபெற்ற மரதனஞ்சலோட்டப் போட்டிக் கவிதைகளில் பரிசு பெற்றதின் மூலம் முன்னணிக்கு வந்தார். அது ‘மாதனஞ்சலோட்டம்’ என்னும் பெயரில் அரசாங்க வெளியீடாக வெளி வந்திருக்கிறது. அந்தப் பாடலைப்பற்றி எவ்வளவோ அபிப்பிராய பேதங்கள் நிலவி வந்த போதிலும். அவர் பாடியுள்ள குழந்தைப்பாடல்கள் ஈழத்தின் புகழை ஓங்கச் செய்யுமென்பதுண்மை. ஒரு நல்ல தொகு திக்கான நூறு தரமான பாடல்கள் கூடத் தேடுவராரற்று மறைந்து போய்க்கிடக்கின்றன. மொழிப்பயிற்சி, ஈழவாசகம் ஆகிய பாடநூல்களோடு தான் அவர் வாழவேண்டும் போலும்!

இதே சந்தர்ப்பத்தில், மட்டக்களப்பினைப் பிறப்பிடமாகக் கொண்டு சைவத்தமிழ்ப் பணி புரியும் கா. அருணாசலத்தேசிகர் அவர்களையும் குறிப்பிடவேண்டும். சமயத் தொண்டே அவரது சிந்தையெல்லாம் நிறைந்திருந்தபடியால், இலக்கியம் அவரது சேவையைப் பெருமளவிற்கு இழுந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். இருப்பினும், சைவ சமய சிந்தாமணி என்கிற அவரது நூலில் அவரது தமிழ் வண்ணத்தைக் காணலாம்.

பத்துப்பாட்டு முதல், பாரதியார் பாடல்கள் வரை ஆராய்ந்து, தெளிந்த கட்டுரைகள் எழுதி, தமிழ்த் தாய்க்குப் பல அணிகளைச் சூட்டியுள்ள வித்துவான் க. வேந்தனார் அவர்கள் மேடைகளிலே பலவிதக் கௌ;கைகளைப் பேசிவந்தார். இதனால் அவரது இலக்கியக் கொள்கைகள் குறித்து விமர்சகர்களிடையே பலவித வேறுபட்ட அபிப்பிராயங்கள் நிலவிவந்த போதிலும், அவர் நல்ல கவிஞர் என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். ‘காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றி........’ என்கிற வரியுடன் கூடிய ‘அம்மா’ என்னும் பாடல், பாடசாலைகள் தோறும் முழங்கிக் கொண்டிருக்கின்றது. கவிதைக் கடித முறையில் அமைந்துள்ள அவரது ‘தமிழன் குரல்’ நல்ல கவிதை நூலாக இருந்தாலும், மேலும் அவரது கவிதைகள் நூல்களாக வெளிவந்தாற்றான் அவரது பெருமை நன்கு புலனாகும்.

தமது இளங் காலத்திலேயே, அதாவது 1932 ஆம் 33 ஆம் ஆண்டுகளிலேயே, பண்டிதர் இராசையனார் அவர்களது அடிச்சுவட்டைப் பின்பற்றிப் பெரும்பாணாற்றுப் படை, சிறுபாணாற்றுப்படை முதலிய சங்கப் பாடல்களை ஆராய்ந்து, தனித் தமிழ் நடையிலே கட்டுரைகள் எழுதி வந்த பண்டிதர் சோ. இளமுருகனார் அவர்கள், நெடுங்கால இடைவெளிக்குப் பின், தமயந்தி (நாடகம்), செந்தமிழ்ச் செல்வம். அறப்போர்க்கு அறைகூவல், வழிநடைச் சிந்து, வேனில் விழா (அங்கதச் சுவையுடைய கவிதைநூல்). பூரணன் கதை, செந்தமி;ழ் வழக்கு ஆகிய படைப்புக்களை நமக்கு அளித்துள்ளார். அவர்தம் கவிதைகளிலே தமிழின் செழுமையையும், கனிந்த சுவையையும், நாம் காணக் கூடியதாக இருக்கின்றது. சுவாமி வேதாசலம் அவர்களது தனித் தமிழ் இயக்கத்திற்கு ஈழத்தின் பிரதிநிதியாக அவர் விளங்குகின்றார். தனித்தமிழ்க் கொள்கையைப் பற்றி ஈழத்தமிழறிஞரிடையே பலவித அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. தமிழ்நடை பழைமையைப் பின்பற்றுவதாய். மரபு பிறழாததாய் இருக்க வேண்டும் என்பதிலே அக்கறை கொண்டுள்ள அவர், அந்த நடைக்குப் புறம்பாக அமைந்துள்ள நூல்களை, தமிழ்மீது கொண்டுள்ள ஆர்வமிகுதியினாலே தாக்கும் பொழுது, கண்டனவாதி என்று பெயர் பெற்று விடுதல் நூதனமன்று.

“சாவில் தமிழ் மடித்துச் சாகவேண்டும் - எந்தன்
சாம்பல் தமிழ் மணக்க வேண்டும்”

என்று வீறுடன் படியவரும், ‘ஆனந்தத்தேன்’ என்கிற கவிதைத் தொகுதியின் ஆசிரியருமாகிய சச்சிதானந்தன் பட்டதாரியாக இருப்பினும், ஒரு பண்டிதருமாவார். மனைவி கட்டிக்கொடுத்த சாதம் என்னும் பொருளை வைத்துக் கொண்டு அவர் பாடிய ‘அமிழ்தம்’ ஈழநாட்டிற்கே பெருமையளிக்கக் கூடிய கவிதைகளுள் ஒன்றாகும். பண்டிதர்களுள் நல்ல நாவல் ஒன்றினைப் படைத்த பெருமையும் இவரையே சாரும். ‘அன்ன பூரணி’ என்பது இந்நூலின் மகுடமாகும்.

மட்டக்களப்புச் சரித்திரத்தை முதன்முதலில் ஆங்கிலத்தில் இயற்றிய எஸ். ஓ. கனகரத்தினாவின் மருகரான வித்துவான் எப். எக்ஸ். ஸி. நடராசா அவர்கள், பிற்காலத்திற்றான் நிறைய எழுதியிருப்பினும், இவ்வெழுத்தாளர்களுடன் சேர்க்கத் தக்கவரே. சரித்திர – ஆராய்ச்சித் துறைகளிலே மிக்க ஈடுபாடுடையவர். அரிய பல நூல்களையும், வாய் மொழி இலக்கியச் செல்வங்களையுஞ் சேர்த்து வைத்துள்ளார். ஈழநாட்டில் வெளிவந்த நூல்களைப் பற்றிய அபிரிமிதமான செய்திகளை இவர் சேகரித்து வைத்துள்ளதுடன், எழுத்தாளர் மரபினைப் போற்றும் ஞானத்தைப் பெறும் வகையில் கட்டுரைகள் மூலமும், கைந்நூல்கள் மூலமும் வெளியிட்டு வருகின்றார். ஈழமும் தமிழும் என்னும் இவரது கைந்நூல் மிகவும் பயனுள்ளது. இலங்கைச் சரித்திரத்தின் அந்நியர் ஆதிக்கக் காலத்தை மூன்று பாகங்களாக எழுதியுள்ளார். எண்ணெய்ச் சிந்து, மொழிபெயர்ப்பு மரபு, ஈழத்து நாடோடிப் பாடல்கள், மட்டக்களப்பு மான்மியம் முதலிய நூல்கள் இதுவரையில் வெளிவந்துள்ளன. ‘மட்டக்களப்பு மான்மியம்’ ஸ்ரீலங்கா சாகித்திய மண்டலப் பரிசில் பெற்றுள்ளது.

பல பாடநூற் புத்தகங்களோடு, சக்திதாஸன் என்கிற புனைபெயரில், பொருள் செறிந்த பல கட்டுரைகளையும், தகர்க்க முடியாத பல கண்டனங்களையும் எழுதிய பண்டிதர் வ. நடராஜன் அவர்களும் மட்டக்களப்புத் தமிழகத்தின் பெருமையைத் தொகுத்துக்கூற விழைந்த பண்டிதர் வீ. சீ. வீகந்தையா அவர்களும், சிவதொண்டன் பத்திரிகை மூலமாகச் சமய இலக்கியத் தொண்டும் கவிதைப் பணியும் ஆற்றும் க. சி. நடராஜன் அவர்களும், தற்காலத் தில் விரைவாக முன்னேறிப் பிரபல பேச்சாளராக விளங்குபவரும், இன் வெறியா?, மொழிப்போராட்டமா? என்னும் நூலின் ஆசிரியருமாகிய வித்துவான் வேலன் அவர்களும் கதிரமலைப்பள்ளு நாடகம் எழுதிய பண்டிதர் வீரகத்தி அவர்களும் பண்டித வர்க்க எழுத்தளார்களுட் குறிப்பிடத்தக்கவர்களாம்.

மலர்கள்.

ஈழத்தமிழ் இலக்கிய வளத்துக்குப் பத்திரிகை ஆண்டு மலர்களும், பெரியோரது நினைவு மலர்களும், வெள்ளிவிழா மலர்களும் இயன்றளவு துணை புரிந்திருக்கின்றன. இத்துறையில் ‘ஈழகேசரி’ ஆண்டு மலர்கள் முக்கியமான இடத்தை வகித்துள்ளன.

பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்கள் பலவகைக் கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், இலங்கையில் இன்பத் தமிழ், தாவரமில்லை. நூற்றாண்டுகளில் தமிழ் ஆகிய நூல்களை இயற்றித் தந்து, திருக்குறள் அறிவினை இளைஞர் மத்தியிலே வளர்க்கத் திருக்குறள் விழாக்களையும் போட்டிகளையும் நடாத்தி வருபவர். அவர் தமிழ் வசன நடைக்கு வழிகாட்டியான நாவலரது பெயரில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் நினைவு மலர் ஒன்றையும், பேரம்பலப்புலவர் நினைவு மலர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த இரண்டு மலர்களும் குறிப்பிடத்தக்க மலர்களாம்.

‘தொல்காப்பிய உரைகள்’, ‘இருபதாம் நூற்றாண்டு வசனம்;’ ஆகியவற்றின் ஆசிரியரும், மறையக்கூடிய நிலையிலிருந்த பல சிறு நூல்களைத் தமிழ் வாசகருக்குத் தந்த வருவமாகிய அ. வி. மயில்வாகனம் (கோவைவாணன்’) அவர்கள், இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவரும், தமிழ்ப் பரோபகாரி சி. வை. தாமோதரம்பிள்ளையின் புதல்வரும், இராம கதை, பாண்டவர் கதை, மனோன்மணீயம், சந்திரகாசம் ஆகியவற்றை எழுதியவருமான கிங்ஸ்பெரி தேசிகரது நினைவாக வெளியிட்ட மலரும் குறிப்பிடத்தக்கதாகும்.

குருகுல முறையிலே, தமது வீட்டிலேயே பாலர் வகுப்புத் தொடக்கம் பண்டிதர் வகுப்பு வரை நடாத்தியும், புராண – காவிய இரசனையை ஊட்டியும், அதேசமயம் வட இலங்கையின் பகுத்தறிவுத் தந்தையாகவும், வரகவியாகவுந் திகழும் கந்தமுருகேசனார் பெயரில் தரமான ஒரு நினைவு மலர் வெளிவந்திருக்கின்றது.

அடக்கமாகச் சமயப்பணியும், தமிழ்ப் பணியும் புரியும் நா. முத்தையா அவர்கள், ஆத்மஜோதி என்னும் பத்திரிகையை நாவலப்பிட்டியிலிருந்து நடாத்தி வருகின்றார்கள். கூட்டு வழிபாடு, கந்தரநுபூதி முதலிய சிறு நூல்களை வெளியிட்டுள்ளதுடன், அவ்வப்பொழுது அருமையான முறையில் ஆத்ம ஜோதி மலர்களையும் வெளியிட்டு வருகின்றார்கள். அவர் வெளியிட்டுள்ள ஆத்மஜோதி மலர்களுடன், தெய்வீக வாழ்க்கைச் சங்க வெள்ளி விழா மலரையுஞ் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த மலர்களுடன் இலங்கைத் தமி;ழ் விழா மலர், ஆரிய திராவிட சங்க வெள்ளி விழா மலர், கணேசையர் மலர், சமூகத் தொண்டன் மலர் ஆகியவற்றையும் இலக்கிய மணங் கமழும் மலர்களாகச் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

மட்டக்களப்பிலே துளிர்த்த ஆர்வம்

ஈழத்தின் வட பகுதியிலே துடிப்புள்ள இளைஞர்கள் சேர்ந்;து நடாத்திய மறுமலர்ச்சி இயக்கத்தினைப் பற்றிக் குறிப்பிடுகையில், கிழக்கிலங்கை எழுத்தாளர்களுடைய பெயர்களைக் காணோம். கிழக்குப் பகுதி கவிதை வளம் மிக்கதொரு பிரசேதமாகும். படிப்பறிவில்லாத பாமரர்களே வியத்தகு பாடல்களைப் புனைவார்களாம். எனவேதான். கவிதைத் துறையிற் காட்டிய ஆர்வத்தினை, அவர்கள் புனைகதைத் துறையிலே காட்டவில்லை. மாறும் இலக்கிய உலகப் போக்கு, மட்டக்களப்பினைத் தாக்காது விடவில்லை. ஆனால், இந்தத் தாக்கம், இந்தக் கால எல்லையின் இறுதிப் பகுதியிலேதான் உருவம் பெறத் தொடங்கிற்று.

1947 ஆம் ஆண்டில் விபுலாநந்த அடிகளாரின் யாழ் நூல் அரங்கேற்றப்பட்டது. அதனை ஆங்கிலத்திலும் இயற்ற வேண்டுமென்று ஆர்வம் மிகக் கொண்டிருந்தார். ஆனால், அவரது எண்ணம் நிறைவேறாதே, 1949 ஆம் ஆண்டில் பரமபதமடைந்தார். அரும்பெரும் ஆராய்ச்சிகள் செய்து, தமது இலட்சிய நூலாகப் படைத்த யாழ்நூலினைப் பலருக்குக் கற்பிப்பதற்கு முன்னரே, வாழவேண்டிய வயதில் காலமாகியது தமிழ்கூறும் உலகத்திற்குப் பெரும் நட்டமாகும். இந்நிகழ்ச்சி மட்டக்களப்பு மாவட்டத்தை அதிர்ச்சிக் குள்ளாக்கிற்று. ‘மட்டக்களப்பின் இலக்கிய சகாப்தம் விபுலாநந்தருடன் முடிந்துவிட்டதா?’ என்கிற துடிப்பு இளைஞர் மத்தியில் ஏற்பட்டது. இதே காலத்தில் திராவிடக் கழகத்தின் பகுத்தறிவுப் பிரசாரமும், அண்ணாத்துரையின் அடுக்குச் சொற்றொடர்களும் இளைஞரின் உள்ளங்களைக் கவர்ந்திருந்தன. ‘தீபாவளி கொண்டாடக் கூடாது’ என்று துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டமை கூடப் புதுமையாக்கப்பட்டது. பகுத்தறிவு ஆர்வம், அத்தகைய பிரசாரத்திற்கு வலுக்கூட்டக்கூடிய புனைகதைகள் எழுத வேண்டுமென்கிற ஆர்வத்தினையும் ஏற்படுத்தியது.

பல காலத்திற்கு முன்னர். புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளையை ஆசிரியராகக் கொண்டு ‘கிழக்குத்தபால்’ என்னும் பத்திரிகை வெளிவந்தாலும், நவீன இக்கியப் போக்கில் நாட்டமற்றதாகவே அது வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து, 1947 ஆம் ஆண்டில் ‘உதயம்’ பத்திரிகையை நடாத்தியவர் எஸ். டி. சிவநாயகம் ஆவார். இளமைத் துடிப்பின் ஆவேசத்துடன் தொடங்கப்பட்ட அப்பதிரிகைதான் இளைஞர் பலருடைய புனைகதைகளுக்கு முதற்களம் அமைத்துக் கொடுத்தது. சிவநாயகம் அவர்கள் கொழும்புப் பத்திரிகைகளிற் கடமையாற்றச் சென்றபடியால், ‘உதயம்’ அற்பாயுளாகவே மரித்தது,

ஆனால், இளைஞரின் துடிப்புக் கனன்று கொண்டிருந்தது. தற்பொழுது பாராளுமன்றத்தில் மட்டக்களப்பின் முதலாவது உறுப்பினராக இருக்கும் செ. இராசதுரையும், ஜனாப். கே. எம். ஷா (‘பித்தன்’)வுஞ் சேர்ந்து ‘லங்காமுரசு’ என்ற பத்திரிகையை நடாத்தினார்கள். அதுவும், பொருள் வருவாயற்ற இளைஞரின் முயற்சியாகச் சில இதழ்களே வெளிவந்து இயற்கை எய்திற்று. ஈழத்தில். அதிகமான கையெழுத்துப் பத்திரிகைகள் நடத்தப்படுவது மட்டக்களப்பிலேதான். இத்தகைய கையெழுத்துப் பத்திரிகைகளை, மட்டக்களப்பின் பொது வாசிக சாலையிலே காணலாம். எழுத்தார்வமுள்ள மட்டக்களப்பு இளைஞர்களுக்கு அத்தகைய கையெழுத்துப் பத்திரிகைகளே பிரசுர களமமைத்துக் கொடுத்தன. இவ்வாறு வளர்ச்சியடைந்த இளைஞருடைய முயற்சிகளை அடுத்த கால எல்லையுட் பார்க்கலாம்.

1941 ஆம் ஆண்டிற்கும் 1950 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்திலே வெளிவந்த ஓர் ஆண்டு மலரை எடுத்து வைத்துக் கொண்டு பார்த்தால், இந்தக் கால எல்லையுள் நடந்த இலக்கிய முயற்சிகளின் சொரூபத்தினை ஒரளவுக்குக் காணலாம். கட்டுரைப் பகுதி மிகுதியாகவும், கதை கவிதைப் பகுதிகள் குறைந்தும் காணப்படுதலை அவதானிக்கலாம். கட்டுரைகளிலே பண்டித வர்க்கத்தினரின் ஆதிக்கமும், கதைகளிலே மறுமலர்ச்சி எழுத்தாளரின் புதுமைப்போக்கும், கவிதைகளிலே ஆரம்பகாலத் தளர்நடையும் விரவியிருப்பதைக் காணலாம். கட்டுரைகளின் நடையையும் இறுக்கத்தையும் கண்டு ‘ஈழம் இன்னும் பழைய காலத்தைக் கைவிடவில்லை. என்று மதிப்பீடு செய்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால், ஈழத்தின் தரமான பல சிறுகதைகள் இக்கால இடைவெளிக்குள் வெளிவந்திருக்கின்றன என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

‘அறிவிலும், ஆற்றலிலும் தமிழ் நாட்டுடன் போட்டியிடக் கூடிய பண்டிதர் பலர் இருந்தும். வெறும் பாடப் புத்தகங்களுக்கு உரை எழுதுவதிலும், ஒருவரை ஒருவரை குறைகூறுவதிலும் காலத்தை வீணே கழித்து விடுகிறார்கள்! உருப்படியான, இலக்கியத் தரமுள்ள, பாரிய நூலொன்றையுஞ் செய்துவிட வில்லையே’ என்று குறைப்பாடும் இரசிகர்களும் இருக்கிறார்கள். தனி மனிதர் சிலரால் எடுக்கப்பட்ட முயற்சிதான் மேலோங்கி நிற்கின்றனவே யொழியக் கூட்டு முயற்சிகள் செய்யப்படவில்லையென்பதும் மற்றொரு குறையாகும். எனினும், பல வகைப்பட்ட நூல்கள், வைத்தியக் கைம் முறை, சுத்தபோசனபாக சாஸ்திரம். சிவசம்புப் புலவர் பிரபந்தத் திரட்டு, அடியார்க்கு நல்லார் ஆராய்ச்சி, உலகவரலாறு, வான சாஸ்திரம், கதிர்காமம், மாணிக்க வாசகர் அடிச்சுவட்டில் என்பன இக்காலத்தே தான் வெளிவந்தன என்பதை நாம் மனதில் நிறுத்திக் கொள்ளல் வேண்டும். சுதந்திர ஈழத்தின் இலக்கிய முயற்சிகளுக்கு புதிய பரம்பரையினர் தங்களைத் தயார் செய்துகொண்ட கால எல்லையும் இப்பகுதியேயாகும்.

1951 – 1960

இந்தக் கால எல்லையுள் நடந்த இலக்கிய முயற்சிகளைப் பற்றி எழுதப் புகுங்காலை மிகவும் எச்சரிக்கையோடும். நிதானத்தோடும் உள்நுழைய வேண்டியிருக்கிறது. இலக்கியப் படைப்பாளிகளான எழுத்தாளர்களுடன், வாசக எழுத்தாளர், ‘நேயர் கடித’ எழுத்தாளர், கேள்வி-பதில் எழுத்தாளர், ‘எழுத்தாளர் சங்க அங்கத்துவ’ எழுத்தாளர்களும், பயிருடன் வளர்ந்த களைகளாகப் பல்கிப் பெருகி உள்ளார்கள்.

இத்தகைய ‘எழுத்தாளர்’களைப் பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டுமா? குறிப்பிடாவிட்டால் அவர்கள் வரிந்து கட்டிக் கொண்டு என்னுடன் சண்டைக்கு நிற்பார்கள் என்பதும் எனக்குத் தெரியும். இருப்பினும். அவர்களுடைய பெயர்களையுஞ் சேர்த்து வரலாற்று மோசடி செய்ய முடியாது.

சிருட்டி இலக்கியம் படைக்கும் எழுத்தாளரை எடுத்துக் கொண்டாலும், ‘தடி எடுத்தவனெல்லாந் தண்டற்காரன்’ என்பதுபோல, ஏதோ இரண்டொரு சிறுகதைகளை மட்டும் ‘எப்படியோ’ பிரசுரித்துவிட்டு, ‘நானும் ஓர் எழுத்தாளன் தான்’, என்று சொல்லித் திரியும் மிகப் பெரிய எழுத்தாளர் படையொன்று என் கண்முன் காட்சியளிக்கின்றது. மிகப் பழையவர்கள் இவர்களை எழுத்தாளர்களென்று ஒப்புக் கொள்வதில்லை. இத்தகைய வட்டார வியாதி தொடர்ந்து வளர்கின்றது. 1950 ஆம் ஆண்டில் எழுதத் தொடங்கியவர்கள்கூட, 1956 ஆம் ஆண்டில் எழுத்துத் துறைக்கு வந்தவர்களை எழுத்தாளரென்று ஒப்புக் கொள்வதில்லையே! பண்டித மனப்பான்மையைச் சாடும் இந்தப் புதுமை எழுத்தாளர்கள், தாங்களும் ஒரு வகையான பண்டித மனப்பான்மையைத்தான் பிரதிபலிக்கின்றார்கள் என்பதை உணருவதில்லை. ‘பழைய இலக்கியங்கள் எங்களுக்குத்தான் சொந்தம்@ மற்றவர்கள் அணுகக்கூடாது’ என்று பண்டிதர்கள் கருதுகிறார்கள் என்று சொல்லும் கதாசிரியர்கள், ‘சிறுகதையோ நவீன கவிதையோ நாவலோ எங்களுக்குத் தான் சொந்தம்@ நேற்றுப் பேனா பிடிக்கத் தொடங்கிவிட்ட இவர்கள் கதை எழுதத் தொடங்கிவிட்டார்களாம்’ என்று ஏளனமாகப் பேசுபவர்களையும் நாம் பார்த்திருக்கின்றோம்.

இவற்றைத் தவிர வேறு ஒரு பெரிய சங்கடமும் இருக்கிறது. 1950 ஆம் ஆண்டிற்குமுன்பில்லாத வட்டார மனப்பான்மையும், ஆரம்பத்தில் நீறு பூத்த நெருப்பாக இருந்து, பின்னர் பூகம்பமாக வெடித்துள்ளது. இந்த வட்டார மனப்பான்மைக்கு ஆதாரமாக, இலக்கியக் கோட்பாடுகள் முன்வைக்கப்படினும், அரசியற் பின்னணிதான் கோலோச்சுகின்றது என்கிற உண்மையும் வெளிப்படையாகத் தெரிகின்றது. இந்த வட்டார மனப்பான்மை, பிறிதொரு வட்டத்தைச் சேர்ந்தவரது உண்மையான இலக்கிய ஆற்றலைச் சிலாகித்தாலுஞ் சீறுமளிவிற்குக் கசப்பு நிலை அடைத்துள்ளது. ஈழத்து இலக்கிய வளர்ச்சியிலே கவிந்துள்ள கிரகணம் என்றே இந்நிலையைக் குறிப்பிட வேண்டும். இந்தப் பிரிவு நிலையை மேலும் பிளவு படுத்தச் சில தற்கால விமர்சகர்கள் ஊக்கமுடன் உழைத்து வருதல் வேதனைக்குரிய செயலாகும்.

மேலே தரப்பட்ட அவல நிலைகளைப் பூரணமாக அறிந்து கொண்டு, கழைக் கூத்தாடியன் நிதானத்துடன், இந்தக் கால எல்லையின் வளர்ச்சியை எழுத விழைகின்றேன்.

இரண்டாவது உலக மகாயுத்தம், குடியேற்ற நாடு களைக் கட்டியாண்ட ஏகாதிபத்தியத்தின் பலத்தினை வெகுவாகக் குறைத்ததுடன், குடியேற்ற நாடுகளின் சுதந்திர வேட்கையைப் பெரும் அளவில் வளர்க்கவும் உதவி செய்தது. இந்நிலையிலே, இந்தியா, இலங்கை, பர்மா போன்ற கிழைத்தேய நாடுகள் சுயாட்சி பெற்றன.

பாரத நாட்டினைப் போன்று, இலங்கை தேசியப் போராட்டங்கள் நடாத்திச் சுதந்திரத்தினைச் சம்பாதிக்க வில்லை. இதன் காரணமாக தேசீய விழிப்பை ஏற்படுத்தக் கூடிய எழுத்தாளரும் கவிஞர்களும் ஈழத்திலே தோன்ற வில்லையென்பதையும் அவதானிக்கலாம். தற்காலத்திலே தேசீய உணர்வு மங்கி, இன உணர்ச்சி கோலோச்சுவதற்கு தேசீய விழிப்பு ஏற்படாது கன்றிப் பழுத்த சுதந்திரம் கிடைத்தமையும் ஒரு பிரதான ஏதுவாகும். இலக்கிய வரலாற்றைச் சொல்லப்புகுந்துள்ள எனக்கு, இத்தகைய அரசியல் சம்பந்தமான விசாரணை நடாத்தும். உரிமை கிடையாது ஆனாலும், இலக்கியத்தின் போக்கினை எவ்வளவு தூரம் அரசியல் தாக்கங்கள் பாதித் திருக்கின்றன என்று சொல்லுங் கடன்மைப்பாடு உண்டு.

சுதந்திரம் பெற்ற இலங்கையில், ஆங்கிலம் அன்று அலங்கரித்த திருப்பீடத்தைத் தேசீய மொழிகள் அலங்கரிக்க வேண்டும் என்கிற எண்ணம் மிக இயற்கையாக எழுந்தது. இதற்கு முன் இலவசக் கல்விச் சகாயத்தினால், படித்தோர் தொகை மிகுந்து வேலையில்லாச் திண்டாட்டம் பூதாகரமாக உருவெடுக்கத் தொடங்கிற்று. தேசீய ஐக்கியத்தைப் பேணவும், அதேசமயம் பொருளாதார, வளத்தினைப் பெருக்கவுங் கூடிய அபிவிருத்தித் திட்டங்கள் சமர்ப்பிக்க இயலாத அரசியல் வாதிகள், மொழிப் பிரச்சினையை அதிகாரத்திற்கு வருங் குறுக்குப்பாதையாக மேற்கொண்டனர். இரு மொழிகளுக்குஞ் சம உரிமை என்கிற உறுதி மொழி பனியாய் மறைந்தது. தமிழர் இரண்டாந்தரப் பிரசைகளாக்கப்பட்டார்கள். சுதந்திரத்திற்கு அடிகோலிய தமிழ்ச் சமூகம், தமது மொழி இந்நிலையடைந்த பொழுது கொண்டகொந்தழிப்பு, ஈழத்து இலக்கியப் படைப்புகளிலே தலைதூக்கின. இத்தாக்கங்களைச் சில எழுத்தாளரது படைப்புகளிலே துலாம்பரமாகக் காணலாம். இவற்றை, ‘வெறும் இனவெறி எழுத்துக்கள்’ என்று ஏகவசனத்திலே ஒதுக்கிவிட முடியாது. கம்யூனிச சித்தாந்தம் சர்வதேசீயத் தொனியில் மலர்ந்தது. இங்கிலாந்து சென்று படித்துத் திரும்பியவர்களின் கைங்காயத்தினால், கம்யூனிசம் ஈழத்திலும் பரவியது. இரண்டாவது உலக மகாயுத்தத்திற்குப் பின்னர் சோவியத் ரூசிய நாடு வல்லரசாக நிமிர்ந்து நின்றது. அந்நாட்டினது விஞ்ஞான சாதனைகளும், இலக்கிய முயற்சிகளும் இளைஞர் மனதினைச் கவரத் தொடங்கின. எனவே, அந்நாட்டு முயற்சிகளின் ஆதிக்கமும். கம்யூனிச சித்தாந்த அழுத்தமும் சில எழுத்தாளரது எழுத்துக்களிலே இடம் பெற்றன. அவர்களது எழுத்துக்களை வெறும் கம்யூனிச பிரசாரம் என்று ஏக வசனத்தில் கழித்துவிடவும் முடியாது.

திராவிட நாட்டுக் கோரிக்கை, இதேகால எல்லையில், தமிழ்நாட்டிலே அரசியற் பிரச்சினையாகவே எழுந்தது. எதுகை, மோனை கலந்த ஒரு வகை நடையை அறிமுகப் படுத்தி, திராவிட நாட்டுப் பிரசாரம் நடத்தப் பெற்றது. இவ்வகையான நடையிலே தங்களையும் ஈடுபடுத்தியமையையும் சில எழுத்தாளரது எழுத்துக்களிலே அவதானிக்கலாம்.

யுத்தகாலப் பணப் பெருக்கமும், யுத்தச் செய்திகள் அறியும் ஆவலும், வாசிப்புப் பழக்கத்தினைச் சாதாரண மக்களிடையில் ஏற்படுத்தின இந்தச் சந்தர்ப்த்தைப் பயன்படுத்திக் கொண்டு மஞ்சள் பத்திரிகைகளும், துப்பறியும் கதைகளும் ஏராளமாக வரத்தொடங்கின. படிப்புக் குறைந்த மக்களிடமிருந்தும், சிற்றின்பப் பிரியர்களிடமிருந்தும் இவற்றிற்கு வரவேற்புக் கிட்டியது. தமிழ்ச் சினிமாவிலே பேசப்படும் வசனங்களின் பாணியிலும் எழுத்துக்கள் அமைந்தன. இத்தகைய தாக்கங்களைச் சில எழுத்தாளரது ஆரம்ப முயற்சிகளிலே காணலாம். இவற்றிலிருந்து அவர்கள் சீக்கிரமே விடுபட்டமை போற்றுதலுக்குரிய செயலாகும்.

அதிக மொழிப் பயிற்சி பெறாது. தொழிலாளரது வாழ்க்கை முறையை அனுபவ வாயிலாக வெளிப்படுத்த முடியும் என்கிற தைரியத்திலே எழுதவந்த எழுத்தாளரும் இந்தக் கால எல்லையைச் சேர்ந்தவர்களே. தங்களுக்குத் தெரிந்த சொற்களிலேயே இலக்கியம் படைக்க முடியுமென்று நினைத்து எழுதிய துணிவினை இவர்களது எழுத்துக்களிலே பார்க்கலாம்.

இப்படிப் பல கோணங்களிலும், வட்டங்களிலும் தங்களைப் பிணைத்துக் கொண்ட பல எழுத்தாளரது படைப்புக்களிலே ஓர் ஒருமைப்பாட்டினையும் காணலாம். பழைமையில் வேரூன்றாத புதுமையும், பழைமையையும் மரபையும் அறிந்து கொள்வதிலே சோம்பேறித்தனம் - அவாவின்மையும், ஆழமற்ற ஒருவகைப் பக்கச் சார்பான போக்கும் பலருடைய எழுத்துக்களிலே காணப்படும் ஒருமைப்பாடாகும். இந்தக் குறைபாடுகளையும் மனதில் வைத்துக் கொண்டுதான் இந்தக் கால எல்லையின் முயற்சிகளை ஆராய வேண்டும்.

மேலும் 1922ஆம் ஆண்டு தொடக்கம் 1950 ஆம் ஆண்டுவரை, சுமார் அறுபது எழுத்தாளர்களைச் சந்தித்து விட்டு, இந்தக் கால எல்லையில் கால் வைத்தவுடனே தங்களை எழுத்தாளரென்று கூறிக் கொள்ளும் நூற்றுக்கு மேற்பட்டவர்களைச் சந்திக்கின்றோம். வருடத்தில் ஈழத்துப் படைப்புக்களாக நூறு கதைகளும், ஐந்தாறு நாவல்களும் நமக்கு கிடைத்த காலம் போய், இக்கால எல்லையுள் ஆண்டொன்றுக்குப் பல நூற்றுக்கணக்கான கதைகளும், பத்துப் பன்னிரண்டு நாவல்களும் கிடைக்கின்றன. நாள் ஒன்றுக்குச் சராசரி இரண்டு கவிதைகள் வீதம் பிரசுரமாகின்றன. இவற்றுள் சில எமது கண்களுக்குத் தப்பி விடவுங்கூடும். சிறிய பத்திரி கைகளில் வரும்நல்ல சரக்குகள் நம்மை வந்தடையாமல் இருத்தலுங்கூடும். இந்த எல்லைக்கட்டுகளனைத்தையுந் தாண்டித்தான் இக்கால எல்லையின் ஈழத்து இலக்கிய வளர்ச்சியை நிர்ணயிக்க வேண்டி இருக்கின்றது.

இக்காலத்தில் நடைபெற்ற இலக்கிய முயற்சிகளின் தரம் எவ்வாறாக இருப்பினும், பரப்புமிகவும் விரிவானது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எனவே, மீண்டுஞ் சௌகரியங் கருதியே, இப்பகுதியை ஆறு உப பிரிவு களாக வகுத்துள்ளேன். அவையாவன: 1. சிறுகதைகள் 2. கவிதைகள். 3. நாவல்கள். 4. நாடகங்கள். 5. கட்டுரைகளும் விமர்சனங்களும் 6. பெண் எழுத்தாளர்கள். இத்தகைய பகுப்பு முறை சரியான உபாயமுமன்று. இந்நூலின் சுருக்கங்கருதியே இவ்வுபாயத்தைக் கையாளுகின்றேன். சில எழுத்தாளர்கள் இவ்வுப பிரிவுகளின் பலவற்றிலே குறிப்பிடத் தக்கவர்களாவார்கள். இருப்பினும், அவர்கள் முன்னணியிலே திகழும் ஒரு பிரிவிலே மட்டுங் குறிப்பிட்டுவிட்டு, ஏனைய துறைகளிலே அவர்கள் செய்துள்ள முயற்சிகளையுஞ் சேர்த்துள்ளேன். இதனால் அவர்கள் ஏனைய பிரிவுகளிலே செய்துள்ள முயற்சிகளைத் தரங்குறைத்துக் கூறுவதாக அர்த்தமாகி விடமாட்டாது.

‘1960 ஆம் ஆண்டிற்குப் பின்’ என்கிற கடைசிப் பகுதியை வேறு பல துறைகளிலே நடைபெற்ற இலக்கிய முயற்சிகளைப் பற்றி எழுதுவதற்காக ஒதுக்கி வைத்துள்ளேன். எனவேதான் 19509 ஆம் ஆண்டிற்குச் சற்று முன்னராக – சுதந்திரன் பத்திரிகையின் உதய காலத்திலிருந்து – எழுத்துத் துறைக்கு வந்தவர்களையும், 1960 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் எழுத்துத் துறைக்கு வந்து, தற்சமயம் பிரகாசித்துக் கொண்டிருப்பவர்களையும் இப்பகுதியிலே சேர்த்துப் பூரணப் படுத்த முயலுகின்றேன். இதனையும் மனதில் நிறுத்திக் கொண்டு, இக்கால எல்லையுள் நடைபெற்ற இலக்கிய வளர்ச்சியினைப் பார்ப்போம்.

சிறுகதைகள்.

இந்தக் கால எல்லையுள் சிறுகதைத் துறையிலேயே பெரும் அளவிலே முயற்சிகள் நடைபெற்றன. உலக இலக்கிய அரங்கத்திலே சிறுகதைத் துறை பெற்றுவரும் செல்வாக்கினை அநுசரித்தே இம்முயற்சிகள் நடை பெற்றதை நாம் அவதானிக்கலாம் கதை சொல்லும் உத்தி முறைகளிலே பலவிதப்பட்ட பரிசோதனைகளும் நடாத்தப்பட்டன. இந்தக் காலத்திலே தோன்றிய எல்லா எழுத்தாளர்களுமே ஒரு சிறுகதையாவது எழுதியிருக்கின்றார்கள். இருப்பினும், வ. அ. இராசரத்தினம், எஸ். பொன்னுத்துரை, பித்தன், அருள் செல்வநாயகம், செ. கணேசலிங்கன், என். கெ. ரகுநாதன். கே. டானியல், டொமினிக் ஜீவா, காவலூர் இராசதுரை, அ. முத்துலிங்கம், உதயணன், நவம், நீர்வைப் பொன்னையன் ஆகிய எழுத்தாளர்களே சிறுகதைத் துறையிலே பிரபலம் எய்தினர்.

இந்தப் பெயர்களை ஒரே பட்டியலிலே தருவதினால், இவர்களுடைய படைப்புக்கள் எல்லாம் கிட்டத்தட்ட ஒரே தரமானவையென்று கொள்ளத் தேவையில்லை. சிலரது கதைகள் தரத்திலே உயர்ந்தும், சிலரது கதைகள் தரத்திலே தாழ்ந்தும் காணப்படுகின்றன என்பதுதான் உண்மையாகும். சிலரிடையே ஒரே காலத்தில் தோன்றிய எழுத்தாளர் என்பதைத் தவிர வேறு ஒற்றுமையைக் காண முடியாது. ஒரே காலம் என்று சொல்வதிலும் ஒரு வில்லங்கம் உண்டு. 1950 ஆம் ஆண்டிற்கும் சற்று முன்னராகச் சிறுகதைத் துறைக்கு வந்தவர்களும், 1960 ஆம் ஆண்டிற்றான் வந்தவர்களும் இப்பட்டியலிலே இருக்கின்றார்கள்.

பழம்பெரும் சிறுகதையாசிரியர்கள் எழுத்துத் துறையிலிருந்து சற்றே ஒதுங்கிவிட, அவ்விடத்திற்கு வந்த சிறுகதைச் சிற்பிகளுட் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர் வ. அ. இராசரத்தினமாவார். கொட்டியாரப் பகுதியைச் சேர்ந்த மூதூரைச் சேர்ந்த இவ்வாசிரியரது எழுத்துக்களிலே மகாவலி கங்கைக் கரையையும், அதன் அழகையும், வளத்தையும் பார்ப்பதுடன், கிழக்குக் கடற்கரை எழிலையுங் காணலாம். அழகான வர்ணனைகளை இணைத்து, தெளிவான நடையிலே, கட்டுக் கோப்பான பல நல்ல கதைகளை எழுதியுள்ளார். ஈழத்துச் சிறுகதைத் தொகுதியில்வெளி வந்த இவரது ‘தோணி’ என்னுஞ் சிறுகதை ஈழத்திற்கே பெருமை தரும் படைப்பாகும். தமிழகத்தின் ‘ரீடேர்ஸ் டையஸ்ட்’டான் மஞ்சரி அதை மறுபிரசுரஞ் செய்து கௌரவித்தது. ‘தோணி’ க் கதையையுஞ் சேர்த்து, அவரது சிறுகதைத் தொகுதி வந்துள்ளது. அதற்கு அவர் ஸ்ரீலங்கா சாகித்திய மண்டலத்தின் பரிசிலைப் பெற்றுள்ளார். அத்தொகுதியிலே இடம்பெற்றுள்ள பாலன்பிறந்தான், பிரிவுபசாரம் ஆகிய கதைகள் நல்லவை. அவை கதைக்கு ஏற்ற ‘கரு’வை அன்றாட வாழ்க்கையிலே தேர்ந்தெடுக்குந் திறமையைப் புலப்படு;த்துகின்றன. ஈழகேசரி வளர்ப்புப் பண்ணையில் வளர்ந்த அவர் அப்பத்திரிகையில் எழுதும் பொழுதுதான் கவர்ச்சியுடன் எழுதினார். ஈழகேசரியிலே தொடர் கதையாக வெளிவந்த கொழுகொம்பு என்கிற நாவல் நூலுருவம் பெற்றிருக்கின்றது. சிறுகதையின் வெற்றியை, அவர் நாவல் இலக்கியத் துறையில் ஈட்டவில்லை. பிரஞ்சு மொழியில் வந்த ‘தபாற்காரன்’ என்கிற நாவலின் உத்தியை அநுசரித்து, ஈழநாட்டில் எழுதிய துறைக்காரன் அவருடைய இரண்டாவது நாவலாகும். இவற்றுடன். சில சரித்திரக் கதைகளையும், வானொலி நாடகங்களையும் எழுதியுள்ளார். எனினும், பழைய கவர்ச்சி சமீப காலச் சிறுகதைகளிற் குறைந்தும், பிரசாரத் தொனி அதிகரித்து மிருப்பதாகச் சில இரசிகர்கள் அபிப் பிராயப்படுகின்றார்கள்.

எஸ். பொன்னுத்துரை எழுத்துலகின் பல துறைகளிலே தமது கைவண்ணத்தைக் காட்டியவராவர். ஈழத்திலே அதிகம் புனைபெயர்களுக்குள் மறைந்து நின்று, பல இலக்கியப் பரிசோதனைகளை நடாத்திப் பார்த்தவர். இக்கால எல்லையில், சிறுகதைத் துறையில்உருவ அமைப்புகளிலும், உத்தி முறைகளிலும் பலபரிசோதனைக் கதைகளை எழுதி, புதிய வழிகளையும் அறிமுகஞ் செய்து வைத்துள்ளார். ஐந்து பாணிகளிலே அமைந்த பசி என்னும் ஐங்குறு கதைகளும்’, யாழ்ப்பாணத்தில் மலர்ந்த நிழல், மட்டக்களப்பு நிலைக்களத்தில் மலர்ந்த ஒளி ஆகியவற்றை அடக்கிய துருவக்கதைகளும் விமர்சகர்களின் பாராட்டுதல்களைப் பெற்றன. ஆபாசமாகவும், பெண் பாத்திரங்களின் வருணனைகளைப் ‘பச்சை’யாகவுங் ‘கொச்சை’யாகவும் எழுதுகின்றார் எனக் குறைப்படும் வாசகருமுளர். அவரைப் பற்றிச் சில விமர்சகர்கள் ‘பிரச்சினைக்குரிய எழுத்தாளர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்கள். துணிவான ஒரு புதிய போக்கு அவரை அவர்கள் முன் அவ்வாறு நிறுத்தியுள்ளது. ‘முற்போக்கு’ ‘பிற்போக்கு’ என்கிற கோஷங்களுக்கு மத்தியில், நற்போக்கு இலக்கியக் கோட்பாடினை முன் வைத்திருக்கின்றார். சூடிக் கழிக்காத மலர் முதலிய அவரது அருமையான உருவகக் கதைகளைக் கலைமகள் விரும்பிப் பிரசுரித்திருக்கின்றது. முதல் முழக்கம், வலை ஆகிய நல்ல நாடகங்களை எழுதித் தாமே மேடையேற்றி, நாடகத் துறையிலும் வெற்றியீட்டியுள்ளார். ‘ஆபாசம்’ என்று சொல்லி மற்றைய எழுத்தாளர் அணுகவுங் கூசும் விடயங்களை வருணனைகளின் மேன்மையாலும், கவர்ச்சியான நடையாலும் வாசகருக்குச் சொல்லக் கூடியவர் என்பதற்குச் சான்றாகத் ‘தீ’ என்னும் அவரது நவீனம் அமைந்துள்ளது. அதே சமயம் அவா, வீடு ஆகிய அவரது குறுநாவல்கள் சிக்கலான இந்து-பௌத்த சமயத் தத்துவங்களைக் கொண்டவை என்பதையும் மறந்துவிடக் கூடாது. இவை தமிழிற் புதியவை@ வெற்றி முயற்சிகள். கிறித்துவப் பின்னணியைக் கொண்டுள்ள நியமம், பேதுருவின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் நல்ல கதையாகும். கிறித்துவ நம்பிக்கைகளுக்குப் பிறழாது, அதே சமயம் புத்தம் புதிய ஒரு பார்வையில் இக்கதை அமைந்துள்ளது. இஸ்லாமியப் பின்னணியை வைத்து எழுதப்பட்ட இத்தா என்னுங் கதையை இஸ்லாமிய உணர்ச்சியுடன் கிழக்கிலங்கை முஸ்லிம்களின் வழக்குத் தமிழில் எழுதி, வெற்றியீட்டியுள்ளார். அவரது தமிழ் நடையை விசேடமாகக் குறி;ப்பிட வேண்டும். அர்த்த பூர்வமாகச் சொற்களைத் தேர்ந்து, உருவகங்களைப் பயனிலையிலேற்றி, போதை தரும் தனித்துவ முத்திரை கொண்டதாக அது திகழ்கின்றது. அந்நடையினால் சாதாரண வாசகனைக் கவர முடியுமா? இருப்பினும், தற்காலத்தில் அவரது பாணியைச் சில எழுத்தாளர்களும், பல இளம் எழுத்தாளர்களும் பின்பற்றுகின்றார்கள். அவரது இலக்;கிய ஆக்கத்தின் மூச்சிற்கேற்ப வசன அமைப்பினை நுட்பமாக வேறுபடுத்திக் கொள்வதைக் கவனிக்கத் தவறுகின்றார்கள். குத்தலும், கிண்டலும், அங்கதச் சுவையுங் கொண்ட நடையிற் பல கட்டுரைத் தொடர்களை எழுதியுள்ளார். விமர்சனத்துறையிலும் மிக்க ஈடுபாடுடையவர். நெருப்புப் பார்வை அவரது விமர்சன வழியாகும்.

கிழக்கு மகாணத்து முஸ்லிம்கள் மத்தியிலே புதிதாகப் பல எழுத்தாளர்கள் தோன்றி வருகின்றார்கள். அவர்களுடைய எழுத்துக்களில், வருங்காலத்தில் நின்றுநிலைக்கத்தக்க இலக்கியம் படைக்க வல்ல ஆற்றல் தொக்கி நிற்பதை அவதானிக்க முடிகின்றது. இந்த எழுத்தாளர்களுக்கு முன்னோடியாகத் திகழ்பவர் கே. எம். ஷா என்பவராவர். பித்தன் என்கிற புனை பெயருக்குள் மறைந்து எழுதினால், பலருக்கு அவர் முஸ்லிம் எழுத்தாளர் என்பது தெரியாதிருக்கலாம். ‘சுதந்திரன்’ பண்ணையிலே வளர்ந்து, வெகு வேகமாக முன்னுக்கு வந்தவர். பாதிக்குழந்தை, தாம்பத்தியம் போன்ற அருமையான சிறுகதைகளை நமக்குத் தந்துள்ள ‘பித்தன்’ பல காலமாக எழுத்துத் துறையிலிருந்து ஒதுங்கியிருப்பது, ஈழத்துத் தமிழிலக்கிய முயற்சிகளுக்குப் பொதுவாகவும், முஸ்லிம் இலக்கிய முயற்சிகளுக்குக் குறிப்பாகவும் பெரு நட்டமாகும்.

கிழக்கிலங்கை அளித்துள்ள இன்னொரு சிறுகதை எழுத்தாளர் அருள். செல்வநாயகமாவர். ‘கலைமகள்’, ‘அழுத சுரபி’ ஆகிய தென்னகப் பத்திரிகைகளில் இவரது சிறு கதைகள் வெளிவந்துள்ளன. பெரும்பாலானவை இலங்கைச் சரித்திரச் சம்பவங்களை ஒட்டியவையாக இருக்கின்றன. சரித்திரச் சம்பவங்களை ஒட்டியவையாக இருக்கின்றன. சரித்திரச் சம்பவங்களிலேயுள்ள பற்றுதலினாலன்றி, இந்தியப் பத்திரிகைகளிலே இடம் பிடிக்கும் ஓர் உந்துதலினால் இக்கதைகள் பிறந்தனவாகத் தோன்றுகின்றன. மேற்படி கதைகளிலே, இதிகாசக் கற்பனைகள் சரித்திரச் சம்பவங்களை மறைத்து நிற்கின்றன. ‘ஈழநாட்டு வரலாற்றுக் கதைகள்’ ‘தாம்பூலராணி’ ஆகிய சிறுகதைத் தொகுதிகள் என்கூற்றினை மெய்ப்பிக்கின்றன. ‘வாழமுடியாதவன்’ மாலதியின் மனோரதம் முதலிய நாவல்களை எழுதியுள்ளார். இத்துறைகளிலே பெறாத வெற்றியை இவர் பிறிதொரு துறையிலே ஈட்டியுள்ளார். மு. திருநாவுக்கரசு அவர்கள் வெளியிட்ட ‘விபுலானந்த அடிகள்’ என்னும் நூலைத் தொடர்ந்து, இவர் ‘விபுலாநந்த அடிகள்’ என்னும் நூலை வெளியிட்;டார். இதனால் விபுலாநந்தருடைய எழுத்துக்களிலே ஈடுபாடு கொண்டு ஒரு நல்ல தொகுப் பாசிரியராகத் தமிழ்த் தொண்டு புரிகின்றார். விபுலாநந்தரின் இலக்கியங்களைத் தொகுதிகளாக வெளியிட்டு வருகின்றார். விபுலாநந்தத்தேன், விபுலாநந்த ஆராய்வுகள், விபுலாநந்த வெள்ளம் ஆகியன நல்ல தொகுதிகளாகும்.

ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர்களுள் மூன்று சிறுகதைத் தொகுதிகளை (நல்லவன், ஒரே இனம், சங்கமம்) வெளியிட்ட பெருமை செ. கணேசலிங்கனைச் சாரும். பல இலக்கிய நண்பர்களினதும், தமிழகத்தின் பிரசுரகர்த்தாக்களினதும் தொடர்புடையவர். இதன் காரணமாகத் தன் நண்பர்கள் சிலரது நூல்களையும் பிரசுரித்திருக்கின்றார். மு. வரதராசனாரின் தொடர்பினாலோ என்னவோ சிறுகதை எழுதுவதற்கு நன்கு அமையாத கட்டுரை நடையைக் கதைகளைச் சித்தரிப்பதற்குக் கையாளுகின்றார். பாத்திரங்களை அறிமுகப்படுத்துவதிலே கணிசமாக வெற்றியீட்டியுள்ளார். பதவி துறந்தார்! என்கிற இவரது சிறுகதை ஈழத்துச் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றிருக்கின்றது. அக்கதையிலும் பார்க்க மானம், விளம்பரம் காவிகள் ஆகியன இவரது சிறந்த கதைகளாகும். 1955 ஆம் ஆண்டளவில், சுதந்திரன் பத்திரிகையில் எழுத்தாளர்களையும், கலைஞர்களையும் புதிய முறையிலே அறிமுகஞ் செய்து வைத்துள்ளார்.

கற்பனைக் கதைகளும் மனோரதிய இலக்கியக் கோட்பாடும், படித்த வர்க்கத்தினரின் இலக்கியப் பொழுது போக்குகளாகக் கருதப்பட்டன. தொழிற் புரட்சி, பிரஞ்சியப் புரட்டி, அமெரிக்க சுதந்திரப் போர், ரூசியப் புரட்சி, உலக மகாயுத்தங்கள் ஆகிய அனைத்துலக அரசியல் நிகழ்ச்சிகள் மேலைநாட்டின் இலக்கியப் போக்குகளிலே அவ்வப்போது பல ‘கோஷ’ங்களை அறிமுகப்படுத்தி வைத்தன. ‘இயற்கை இலக்கியம்’ ‘யதார்த்த இலக்கியம்’ ‘தேசீய இலக்கியம்’ ‘சமதர்ம யதார்த்த இலக்கியம்’ ஆகிய பல இலக்கியக் கோட்பாடுகள் உலக இலக்கிய அரங்கிற் பரப்பின. இத்தகைய கோட்பாடுகளின் சாயல்களைத் தென்னாட்டின் மணிக்கொடி எழுத்தாளரது எழுத்துக்கள் அந்தக் காலத்திலேயே தாங்கி நி;ன்றன. இதே ‘மணிக்கொடி’ எழுத்து முயற்சிகளுக்குப் பிற்பட்ட இலக்கிய ஆக்கங்களில் மட்டுமே பரிச்சயங் கொண்ட ஒருசாராரும் எழுத்துத் துறைக்கு வர விரும்பினர். 1947ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்திலே கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை நிறுவப்பட்டது. சமத்துவத்தைப் போதிக்கும் அக்கட்சியின் பிரச்சாரங்களிலே துணிச்சல் பெற்று அவர்கள் தொழிலாளி வர்க்க எழுத்தாளராகவும், ஒடுக்கப்பட்ட இனத்தினரின் எழுத்தாளராகவும் எழுத்துத் துறைக்கு வந்தார்கள். இவர்கள், முற்போக்கு எழுத்தாளர் என்று தங்களை அழைத்துக் கொண்டார்கள். முற்போக்கு என்பது கட்சி அடிப்படையில் எழுந்தது என்று சிலர் சுட்டினர். முற்போக்கு எழுத்தாளர் இக்குற்றச்சாட்டினை மறுத்தே வந்தனர். முற்போக்கு இலக்கியம் என்பது, மனிதப் பண்பினை உயர்வையும், உழைப்பின் பெருமையையும், நாட்டுப் பற்றையும், மொழிப்பற்றையும், தேசீய ஒருமைப்பாட்டையும், சமாதான இலட்சியங்களையுங் கொண்டதுவாகத் திகழுமானால், அது சிந்தனா சக்தியுள்ள எல்லா எழுத்தாளருக்கும் பொதுவானவையாக அமையும். ஆனால், ‘முற்போக்கு இலக்கியம்’ என்பது கட்சி சம்பந்தமான ஒரு கோஷம் என்பதைப் பி;ன்னர் நடந்த நிகழ்ச்சிகள் வெட்ட வெளிச்சமாக்கி விட்டன. முற்போக்கு இலக்கிய கர்த்தாக்களாகச் சிறுகதைத் துறையில் விளங்குபவர்கள் என். கே. ரகுநாதன், கே. டானியல், டொமினிக் ஜீவா ஆகிய மூவருமேயாவர்.

முற்போக்கு முதல்வராகச் சிறுகதைகள் எழுதிய ரகுநாதன் திராவிட கழகப் பாணியில் ‘பொன்னி’யிலும், சுதந்திரனிலும் சில கதைகளை எழுதினார். உணர்ச்சி களைத் தெளிவான நடையிலே சித்திரிக்கும் ‘இலட்சிய நெருப்பு’ போன்ற நல்ல கதைகளை எழுதியுள்ளார். (இக்கதை வைத்திலிங்கத்தின் ‘உள்ளப் பெருக்கு’ என்கிற கதைக்கு எதிர்க்கதையாக எழுந்தது என்பதையும் ஞாபகத்திலே வைத்துக் கொள்ளுதல் வேண்டும்) இவரது ‘நிலவிலே பேசுவோம்!’ என்கிற சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது. இத்தொகுதியிலே இடம்பெற்றிருக்கும் கதைகள் சாதிப் பிரச்சினைகளையும், இனப் பிரச்சினைகளையும் ஒருவித ஆவேச பிரசாரத் தொனியில் அணுகுகின்றன. ‘கனவு’ நல்ல கதையாகும். சமீப காலத்திலே சிறுகதை எழுதுவதை நிறுத்தி, தாம் சார்ந்த கட்சிப் பத்திரிகையான ‘தேசாபிமானி’ யில் கட்டுரைகள் எழுதிவருகின்றார்.

சிறுகதைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தளவிலே கே. டானியல் முதலிடம் பெறுகின்றார். சுதந்திரன் நடாத்திய சிறுகதைப் போட்டியில் அமரகாவியம் என்னும் கதைக்குப் பரிசில் பெற்றதன் மூலம் வாசகர்களுக்கு அறிமுகமானார். ‘சுதந்திரன்’ காலத்திலேதான் ‘கரு’வைச் சிதைக்காமல் அளவான வருணனைகளுடன் நல்ல கதைகளை எழுதினார். அவ்வாறு வெளிவந்த உப்பிட்டவரை! என்னுங் கதை ஈழத்துச் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது. இவரது கதைகளிலே ரூசிய எழுத்தாளரான கார்க்கியின் ஆதிக்கம் இடம் பெற்றுள்ளதை அவதானிக்கலாம். ‘டானியல் கதைகள்’ என்னும் சிறு கதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். ‘சுதந்திரன்’ பத்திரிகையிலே பிரசுரமான நல்ல கதைகளை தவிர்த்து அண்மைக் காலத்துக் கதைகளே இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. இந்தக் கதைகளிலே தாழ்த்தப்பட்ட இனத்தின் இராமர்களையும், உயர்ந்த சாதியார் மத்தியில் வாழும் இராவணர்களையுமே பெரும்பாலுஞ் சந்திக்கிறோம். பிற்காலத்தில் ‘கரு’ப் பஞ்சத்தினாலோ என்னவோ, அசை போன்ற உண்மைக்கதைகளை எழுதி இடர்ப்படுகின்றார். ‘நெடுந்தூரம்’ என்னும் நாவல், இவருக்கு வெற்றியளிக்கவில்லை யென்பது வாசகரது அபிப்பிராயமாகும்.

‘தண்ணீரும் கண்ணீரும்’ என்னுஞ் சிறுகதைத் தொகுதிக்குப் பரிசில் பெற்றதன் மூலம் பிரபலமடைந்தவர் டொமினிக் ஜீவா ஆவார். சொன்னதையே திருப்பி; சொல்லி, வாசகரை நிறுத்தி வைத்துப் பிரசங்கஞ் செய்யும் பாணியில் எழுதுவது பெரும்பாலான கதைகளிலே உள்ள குறைபாடாகும். கதைத் தொடர்ச்சியைப் பேணுவதற்காக, மணிக் கூண்டில் நேரத்தைக் காட்டிக் கொண்டேயிருப்பார். இருப்பினும். ஞானம், முற்றவெளி ஆகிய இரண்டு சிறுகதைகளும் மற்றைய கதைகளிலும் பார்க்க வேறாகவும், சிறந்தனவாகவும் விளங்குகின்றன. ‘பாதுகை’ என்னும் இரண்டாவது சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது. ‘பாதுகை’ என்னும் கதை ராஜாஜியினுடைய கதையின் தழுவலென்று பலத் சர்ச்சை எழுந்துள்ளது. சமீபத்தில் பிரசுரமான ‘படுமுடிச்சு’ப் போன்ற கதைகள் ஆரம்ப எழுத்தாள னொருவனின் திருந்தாப் படைப்புக்களைப் போன்று காட்சியளிக்கின்றன.

மேற்குறிப்பிட்ட இருவரும் சாதிப் பிரச்சினைகள், சிங்கள தமிழர் ஒற்றுமை ஆகியவற்றைக் கட்சிக் கண்ணோட்டத்திலேயே அணுகுகின்றனர். ஒரே விடயங்களைத் திரும்பத் திரும்ப ஒரே மாதிரி அமைப்பில் சொல்வதினால் வாசகரை என்றும் திருப்திப்படு;த்த முடியுமா என்பது சிந்தனைக்குரியது. ‘தமிழரின் புண்பட்ட உள்ளங்களை அவர்களின் மனப் போராட்டங்களை அறியாது அவர்களை அவமதிக்கும் முறையிற் கதைகளைப் படைக்கின்றனர்’ எனக் குறை கூறுவோருமுளர். முற்போக்கு இலக்கியம். சந்திரபால கணேசனின் சீர்திருத்தக் கதைகளின் படியைத் தாண்டி மேலே செல்லாவிடின், வாசகரிடையே சலிப்பினை ஏற்படுத்திவிடும் என்பதை இவர்கள் மனதிற் கொள்ளல் வேண்டும். இருப்பினும், தொழிலாளரிடையே தோன்றி, உடலுழைப்பையே நம்பி வாழும் இவ்விருவரும் அதிக மொழிப் பயிற்சியின்றித் துணிவுடன் எழுதுவது ஈழத்து இலக்கிய உலகிற்குப் புதிய இரத்தத்தையுஞ் சேர்த்துள்ளது.

காவலூர், ராசதுரை, அ. முத்துலிங்கம் ஆகியோர் ‘தினகரன்’ பண்ணையில் வளர்ந்தவர்களாவர். காவலூர் ராசதுரை எழுதுவினைஞராக வாழ்க்கை நடாத்திய அநுபவத்தினால், கீழ்மட்ட மத்தியதர மக்களின் வாழ்க்கையையே தன்னுடைய கதைகளிலே பிரிதிபலிக்கின்றார். இருப்பினும், இவருடைய கதைகள் பெரும்பாலும் நடைச் சித்திரங்களாகவே காட்சி தருகின்றன. ‘குழந்தை ஒரு தெய்வம்’ என்கிற இவரது சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது. அத்தொகுதியில் இடம் பெற்றுள்ள தொட்டாற் சுருங்கி என்னுங் கதை தரமானது.

அ. முத்துலிங்கம் மிகச் சுருங்கிய அளவு கால எல்லையுள் ஒரு சிலசிறுகதை மட்டுமே எழுதியிருப்பினும், சிறுகதை ஆசிரியராகக் குறிப்பிடத் தக்கவராவர். ‘பக்குவம்’, ‘அனுலா’ ஆகிய கதைகள் போட்டிகளில் பரிசு பெற்றவை. தான் பிறந்த கிராமத்தின் சூழ்நிலைகளைத் தனது கதைகளிலே வருணித்துள்ளார். இவ்வருணனைகள் நீண்டு, புவியியற் கட்டுரைகளாகக் காட்சியளிப்பதாகச் சில இரசிகர்கள் கருதுகின்றார்கள். நனவோடை உத்தியினை இவர் ஓரளவுக்கு வெற்றியுடன் கையாண்டுள்ளார். ‘பக்குவம்’ என்னுங்; கதை சந்தேகத்திற்கிடமின்றிப் பரிசு பெறத்தக்க நல்ல கதையாகும்.

‘உதயண’னின் கதைகளிலே சம்பவங்கள் நிறைய இடம் பெறுகின்றன. சில கதைகளிலே இலேசான நகைச்சுவையுடன் யாழ்ப்பாண மக்களின் விசித்திரமான குணங்களைக் கிண்டல் செய்துள்ளார். ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், எழுது வினைஞர்கள் ஆகிய மத்தியதர வகுப்பைச் சேர்ந்த பாத்திரங்களை இவர் கதைகளிலே அறிமுகப்படுத்துகின்றபடியால், இவர் வாழ்க்கையை ஆழ்ந்து நோக்கவில்லை என்று கருதும் விமர்சகர்களுமிருக்கின்றார்கள். ‘தேடி வந்த கண்கள்;’ கல்கிச் சிறுகதைப் போட்டியிலே பரிசில் பெற்ற கதையாகும். ‘இதயவானிலே’ ‘மனப் பாறை’ ஆகிய இரண்டு தொடர் கதைகளையும் எழுதியுள்ளார்.

‘கல்கி’, ஈழத்து எழுத்தாளர்களுக்காக நடாத்திய சிறுகதைப் போட்டியிலே, ‘நந்தாவதி’ என்னுஞ் சிறு கதைக்கு முதற் பரிசு பெற்றதன் மூலம், ‘நவம்’ வாசகரைக் கவர்ந்தார். மட்டக்களப்புப் பகுதியைச் சேர்ந்த அவரது கதைகளை வாசிக்கும் பொழுது, திராவிட முன்னேற்றக்கழக எழுத்தாளர்களின் கதைகளை வாசிக்கும்உணர்வே ஏற்படுகின்றது. ஓ ஹென்றி பாணியில் வியப்புத் திருப்பத்திலே முடிவுறும் கதையே சிறந்தது என்கிற எண்ணத்தில், செயற்கையான – கதைக்குப் பொருந்தாத – முடிவுகளையே பெரும்பாலுங் கையாளுகின்றார். அவரது ஏனைய கதைகளிலே காண முடியாத தெளிந்த நடையில் ‘நந்தாவதி’ அமைந்துள்ளது. நீலவேணி என்னும் துப்பறியுந் தொடர் கதையைச் ‘சுதந்திர’னில் எழுதியுள்ளார்.

ஈராண்டு எழுத்துப்பயிற்சியுடன் ஒரு சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுச் சிறுகதை எழுத்தாளர் வரிசையிலே நீர்வைப் பொன்னையன் சேர்ந்து கொண்டார். மேடும் பள்ளமும் என்னும் அச்சிறுகதைத் தொகுதி ஓர் அவசரப்படைப்பாகும். இ;ஃது இவரிடம் கட்சி அரசியல் வேகம் இருக்குமளவிற்கு இலக்கியப் பயிற்சி இல்லாத குறையைப் புலப்படுத்துகின்றது. இவரது எல்லாக் கதைகளிலுமே முதலாளி என்கிற மேட்டையும், தொழிலாளி என்கிற பள்ளத்தையுஞ் சந்திக்கலாம். நிறைவு என்னுங் கதை நல்ல சிறுகதையாக அமையா விட்டாலும் நல்ல உருவகங்களைத் தன்னுட் கொண்டுள்ளது.

இவர்களுடன் பொ. தம்பிராசா, த. ரஃவேல், கே. வி. நடராஜன், செந்தூரன், க. சா. அரியநாயகம், ஆ. பொன்னுத்துரை, ஆ. தங்கத்துரை ஆகியோரும் குறிப்பிடத்தக்க நல்ல சிறுகதைகளை எழுதியிருக்கின்றார்கள். அவர்களையுஞ் சிறுகதை எழுத்தாளர் வரிசையிலே சேர்த்துக் கொள்ளலாம்.

தற்காலத்தில் பெரிய எழுத்தாளர் படையொன்று சிறுகதைத் துறையில் ஈடுபட்டு வருகின்றது. ஒருசிலர் நல்லசிறுகதைகளைப் படைத்து வெகு வேகமாக முன்னேறி வருகின்றார்கள். மற்றுஞ் சிலர் ஓரிரு சிறுகதைகளையே மட்டும் எழுதியுள்ளார்கள். இளமைத் துடிப்புடன் சில கதைகளை எழுதிவிட்டு, எழுத்துலகத்திலிருந்து நிரந்தர ஒய்வு எடுத்துக் கொள்ளக் கூடிய எழுத்தாளர்களுமிருக்கிறார்கள். பூவில் உதிர்ந்து விடக் கூடிய எழுத்தாளர்களுமிருக்கிறார்கள். கனிந்து பழுத்து இலக்கியத்தின் சுவையை ஏற்றவல்ல சிலரேனும் இவர்களுட் தேறலாம். எனவே, இந்த எழுத்தாளரது வெற்றி தோல்விகளை இன்னொரு பத்து ஆண்டுகள் கழித்துத்தான் மதிப்பிட முடியும்.

ஆனாலும் சிறுகதைகள் எழுதிவரும் எழுத்தாளர் பட்டியலொன்றைத் கீழே சமர்ப்பிக்கின்றேன். அவர்களுடைய எழுத்தாற்றலை மதிப்பீடு செய்து, அவர்களுடைய பெயர்களை நான் வரிசைப்படுத்தவில்லை என்பதையுங் கவனத்திற் கொள்ளுதல் நன்று. இப்பட்டியலிற் சில பெயர்கள் தவறிப்போயுமிருக்கலாம். பின் வருவோர் சிறுகதைகள் எழுதி வருகின்றார்கள். என். எஸ். எம். ராமையா, ஜோவலன் வாஸ். செ. கதிர்காம நாதன், ‘செம்பியன் செல்வன்’, ‘செங்கை ஆழியான்;’, ‘அ;ஙகையன்’, ‘முருகு’, ‘துருவன்’, நா. சண்முகநாதன், பொ. சண்முக நாதன், எஸ். அகத்தியர், பெனடிகற் பாலன், துரை, சுப்பிரமணியம், செ. யோகநாதன். ஜோர்ஜ் சந்திரசேகரன், ‘சத்தியன்’இ முத்து சிவஞானம். தங்கபிரகாஷ், தெளியவத்தை ஜோசப், ஏ. வி. பி. கோமஸ், ‘மணிவாணன்’. ‘வி. சிங்காரவேலன்’, ‘சாரல்நாடன்’ பாமா ராஜ கோபால், கலா பரமேஸ்வரன், சு. மகாலிங்கன், ‘ஸ்ரீரங்கன்’, ‘மகான்’, ‘சசிபாரதி’, ‘ரமணன்’, ம. மனோகரன், என். என். பாலசிங்கம், மா. பாலசிங்கம், மாதகல் செல்வா, வ. கு. க. சர்மா, சி. இராஜநாயகம், இரா. சிவசந்திரன், ‘நிமலன்’, கரிகாலன், இ. சர்வானந்தன், ‘வடகோவைவளவையர் கோன்’, அன்ரனி பெர்னாண்டோ டேவிட் இராசையா, அன்ரனி இராசையா, ஈழத்து இரத்தினம், கல்லாற்று நடராஜன், எஸ். சிவலிங்கம். மி;. ந. முத்துராசன், சி. தில்லைநாதன், ‘சித்தன்’, ‘கோபதி’, ந. அ. தியாகராஜன், ‘மல்லிகைக்காதலன்’, மல்லிகை சி. குமார், மு. சிவ. லிங்கன், ஆர். எஸ். மணி, எழிலன்பன், எம். பொன்னுத்துரை.

இந்தக் கால எல்லையுள் தென்னகத்திலும் பல நூறு சிறுகதையாசிரியர்கள் தோன்றியுள்ளார்கள். இருப்பினும், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், பிலஹரி, சூடாமணி ஆகிய சிலரே முன்னணிக்கு வந்துள்ளார்கள். அவர்களுடைய சிறுகதைகளிலும் பார்க்கத் தரமான பல கதைகளை நமது சிறுகதைச் சிற்பிகள் எழுதியுள்ளார்களென்று துணிந்து கூறலாம். பத்திரிகையின் பக்கங்களை நிரப்ப வேண்டிய அவதியுடன் எழுதுவது தென்னக எழுத்தாளரது சிறுகதைகளிலே தெரிகின்றது. அவர்களது பிரசுரகளமும் விரிவானது. ஆனால், ஈழத்திலுள்ள சிறுகதை ஆசிரியருட் சிலரேனும், சிறுகதை இலக்கியத்தை உந்நத பீடத்திற்கு உயர்த்த வேண்டு மென்கிற பிரக்ஞையுடனும், இலட்சியத்துடனும் எழுதி, சிறுகதை இலக்கியத்தை வளப்படுத்தி வருதல் ஈழத்திற்குப் பெருமை தருகின்றது. இருப்பினும், பிரசுரகளம் சுருங்கியிருப்பதும், ஆற்றலினாலன்றிப் பின் கதவு வழியாற்றான் சில பத்திரிகைகளிலே பிரசுர இடம் பெறவேண்டியிருப்பதும் நல்ல சிறுகதை எழுத்தாளர்களின் பயனுள்ள முயற்சிகளைப் பாதித்து வருகின்றது என்பதும் வேதனை தரும் உண்மைகளாம்.

கவிதைகள்

இவ்வாண்டுகளுக்கிடைப்பட்ட கதாசிரியர்களை அடுத்துக் கவிஞர்களை நோக்கினால். தரத்திலும், உற்சாகத்திலும், புதுமையான சந்தங்களையும் வழிகளையும் கையாள்வதிலும் பலர் முன்னணியில் நிற்பது புலனாகும். ஈழம் எப்பொழுதும் கவிதைத் துறையிற் பின் தங்கி நின்றதில்லை. அந்தப் பரம்பரையைக் காப்பாற்றுபவர்களைப் போலத்தான் இக்காலக் கவிஞர்களுங் காட்சியளிக்கின்றார்கள். பிரபல மடைந்த கவிஞர்களாக பரமஹம்ஹதாசன், முருகையன், அல்வாயூர் மு. செல்லையா, இ. நாகராஜன், கே. கணேஷ், இராஜபாரதி, திமிலைத் துமிலன், மண்லீர் மு. சோமசுந்தரம்பிள்ளை, ‘நீலாவணன்’, ‘தில்லைச் சிவன்’, தான்தோன்றிக் கவிராயர், நயினை கவி இராமுப்பிள்ளை, ‘அம்பி’, இதம், சக்தி அ. பாலையா, ச. வே. பஞ்சாட்சரம், மு. க. சூரியன், ‘கோசுதா’, பா. சத்தியசீலன்;, வன்னியூர்க் கவிராயர் ஆகியோர் விளங்குகிறார்கள்.

‘பரமஹம்ஹதாசன்;’ என்னும் புனை பெயருக்கேற்ப, மு. சுப்பராமன் இயற்றும் கவிதைகள் சாந்தமும் அமைதியுமுடையனவாய், தெய்வீக வாழ்க்கையைப் பிரதிபலிப்பனவாக விளங்குகின்றன. ‘ஆத்ம ஜோதி’ப் பத்திரிகைக்கு ஏற்ப அவரது பாடல்கள் அமைந்து இருக்கின்றன. தமிழரசுக் கட்சியினர் நடாத்திய கவிதைப் போட்டியில் அவர் முதற்பரிசு பெற்றார். அப்பாடலை வைத்துக் கொண்டு பரமஹம்ஸ தாசனின் ஆற்றலை மதிப்பிடாமல், சம தரையிலோடும் தௌ;ளிய நீரோடையின் சாயல் அவரது கவிதைகளுக்கு உண்டு என்கிற முடிவுக்கு வருவோம். மகாகவி தாகூரின் ‘குசரவை புயவாநசiபெ’ என்னும் நூலைத் தித்திக்கும் பாடல்களிற் ‘தீங்கனிச் சோலை’யாகத் தந்திருக்கின்றார். அவருடைய பக்திப் பாடல்களைக் கொண்ட தொகுதியாக ஸ்ரீ கதிரைமணி மாலை விளங்குகின்றது.

இலங்கைப் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரியாக வெளியேறிய முருகையனிடம் இயற்கையான புலமையுண்டு. வயதிற் குறைந்த இந்தக் கவிஞருடைய நடையிலே பசுங்கன்றின் துள்ளல் இருக்கின்றது. புதுமைப் பாதையில் முன்னேறும் அவாவுடன் கவிதைகளை இயற்றி வருகின்றார். திருப்புகழின் சந்தம் இவரது கவிதைகளுக்குச் சுவையூட்டுகின்றது. கவியரங்குகளுக் கேற்ற முறையில் கவிதைகளை இயற்றி வாசிப்பதிற் சமர்த்தர். ‘குற்றம் குற்றமே’ முதலிய கவிதை நாடகங்களையும், பல சிறு காவியங்களையும் படைத்திக்கின்றார். கவிதை பற்றியும், மரபு பற்றியும் புதிய பார்வையிலே சில கட்டுரைகளை எழுத்து பத்திரிகையில் எழுதியிருக்கின்றார்.

அல்வாயூர் மு. செல்லையா பழம் எழுத்தாளராவர். அக்காலத்தில் ‘அநுசுயா’ என்னும் புனை பெயரிற் பல நகைச்சுவைக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இலங்கை வானொலியினரால் நடாத்தப்பெற்ற கவிதைப் போட்டியிலே, அவரது ‘புதிய வண்டுவிடுதூது’ என்கிற கவிதை முதற் பரிசினைப் பெற்று, அவரை ஒரு நல்ல கவிஞராக நிலைநாட்டிற்று. ‘வளர்பிறை’, ‘குமாரவேள் பதிகம்’ என்பன அவரது கவிதை நூல்களாக வெளி வந்திருக்கின்றன. அவரது கவிதைகளிலே பழைமையை அநுசரிக்கும் போக்கும், இலேசான நகைச் சுவையும் கலவி நிற்கின்றன.

இ. நாகராஜன் கதாசிரியரா, கவிஞரா என்னுஞ் சந்தேகம் பலருக்கிருக்கலாம். அவர் ‘திரை’, ‘அடைக்கலம்’ ஆகிய நல்ல சிறுகதைகளை நமக்குத் தந்திருக்கின்றார். இருப்பினும், பெரும்பான்மையான கதைகளின் நடையும் போக்குங் கவித்துவச் சாயலைக் கொண்டு விளங்குகின்றன. அவர் பாடியுள்ள பாலர் பாடல்களும், பிற பாடல்களும் கவிஞர்கள் வரிசையிலே அவருக்குச் சிறப்பான இடத்தைச் சம்பாதித்துக் கொடுத்திருக்கின்றன. ‘ஈழகேசரி’யில், பல புனை பெயர்களில் மறைந்திருந்து, இனிய சந்தங்களைக் கொண்ட பாலருக்கேற்ற கவிதைகளைத் தந்திருக்கின்றார். தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் பெரும்பாலான பாலர் பாடல்களிலும் பார்க்க, இவை எவ்வளவோ மேன்மையானவை. இத்தகைய பாடல்களைச் சேர்த்து அவர் ஒரு தொகுதியாக வெளியிடின், பாடசாலை மாணவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். ‘மேடையேறும் தம்பிமார்க்கு’, ‘சூத்திரஞ் செய்த சூது’ ஆகிய இரண்டும் அவரது நகைச்சுவைக்கும், கவிதா நயத்திற்கும் சான்றாக விளங்குகின்றன. புத்தொளி, கூத்தாடி முதலிய சிறு காவியங்களை இயற்றியுள்ளதுடன், இரண்டு குறுநாவல்களையும் எழுதியுள்ளார்.

கண்டி – தலத்துஓயாவைச்சேர்ந்த கே. கணேஷ் மலை நாட்டின் தமிழ் இலக்கிய முயற்சிகளின் முன்னோடியாக விளங்கினார். இடதுசாரி அரசியலில் ஈடுபாடுடைய அவர், பாரதி என்னும் மாதப் பத்திரிகையை நடாத்திப் பார்த்தவர். இந்திய நாட்டின் ஆங்கில எழுத்தாளர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர். முல்க்ராஜ் ஆனந்தின் தீண்டாதான் என்னும் நாவலை மொழி பெயர்த்துள்ளார். கே. ஏ. அப்பாஸின் பத்துச் சிறுகதைகளை மொழி பெயர்த்து குங்குமப்பூ என்னுந் தொகுதியாக வெளியிட்டுள்ளார். அவருடைய ஆகஸ்டு தியாகி ஆறுமுகம் நல்ல சிறுகதையாகும். இருப்பினும் அவர் கவிஞராகவே வாழ்கின்றார். அவருடைய கவிதைகளுட் சில இடதுசாரி இயக்கத்தின் தேவைக்காக எழுதப்பட்டவை ஆகும். 1958ஆம் ஆண்டிலே யப்பானில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் ஓரிடம் பெற்று, யாப்பானிய மன்னரின் கௌரவப் பட்டத்திற்குரியவரானார்.

‘இராஜபாரதி’ சில அருமையான கவிதைகளை ‘ஈழகேசரியிலும் ‘சுதந்திர’னிலும் எழுதியுள்ளார். அந்தக் கவிதைகள் வீறும், ஓசை நயமுங் கொண்டவையாகத் திகழ்கின்றன. தீயுண்ட வீரமுனை என்னும் அவரது சிறு காவியம் நூலுருவம் பெற்றுள்ளது. ‘யாழ்ப்பாண’னுடன் ‘ஜீவா’ என்னும் பெயரில் எழுதிய கடிதக் கவிதையும் நூலாக வந்துள்ளது. ‘ஜீவா’ என்பது அவரா, அவரது மனைவியா என்கிற புதிர் இன்னமும் விடுபடவில்லை. பிற்காலத்தில் தமது மனைவி பெயரிலும், மகள் பெயரிலும் பத்திரிகைகள் இளங்கவிஞர்களுக்கு நடாத்தும் போட்டிகளிற் கலந்து, பல வெற்றிகளை ஈட்டியுள்ளார். ‘ஈழகேசரி’யில் வாழ்ந்த இராஜபாரதியே வாழத் தக்கவர். காதலைக் கருப்பொருளாக வைத்து நல்ல பாடல்கள் இயற்றவல்ல அவரிடம் பழைய இராஜபாரதி தோன்ற வேண்டும்.

சென்னைக் குழந்தை எழுத்தாளர் மன்றமளித்த கவிதைப் பரிசின் மூலம் திமிலைத் துமிலன் பாராட்டுக்குரிய கவிஞராகிவிட்டார். ஓவியருமான அவர், தமது கவிதைகள் சிலவற்றிற்குத் தாமே படங்கள் வரைந்து அழகூட்டியுள்ளார். அவர் இரண்டு சிறு காவியங்களையுந் தந்துள்ளார். ஆனாலும், தனிப் பாடல்களிலேயுள்ள சிறப்பினை அவரது சிறுகாவியங்களிற் காண முடியவில்லை. நீரரமகளிர் என்னுங் கவிதை நூலை வெளியிட்டுள்ளார். அவரது பாடல்களிலே தேசிகவிநாயகம் பிள்ளை, பாரதியார் ஆகியோரது அடிகள் அப்படியே இடம் பெறுவதினால், அவரது சுய கற்பனை வளத்தைக் காண முடியாது போய் விடுகின்றது. அவரது ஆற்றலுக்கேற்ற கவிதைகளைத் தந்து, கிழக்கு மாகாணத்தின் புகழை நிலைநாட்ட முன் வருதல் வேண்டும். அவர் பல சிறு கதைகளையும், சில நாடகங்களையும் இயற்றியுள்ளார் என்பதுங் குறிப்பிடத்தக்கது.

மண்டூரைச் சேர்ந்த மு. சோமசுந்தரம் பிள்ளை அதிகம் பிரபலமடையாத நல்ல கவிஞராவர். புலவர் மணியின் மாணாக்கரான அவர் பழைமையிலே திளைத்துக் கவிதைகள் புனைகின்றார் கவியரங்குகளிலே தமது பாடல்களை அற்புதமாக, இராகமுடன் பாடி அரங்கேற்றி, மக்களுடைய மனதைக் கவர்கின்றார். மண்டூர் முருகன் மீது மிகுந்த பக்தியுள்ள அவர், திருமண்டூர் முருகமாலை என்னும் நூலை இயற்றியுள்ளார். ஒசை நயம் அவரது கவிதைகளின் மூச்சாகும்.

நீலாவணன் தமிழரசு இயக்கத்திற்கு இசைவான கவிதைகளைச் ‘சுதந்திர’னில் எழுதி முன்னுக்கு வந்தார். சிறுகதைகளில் கையாளப்படும் வகையில், ஆரம்ப காலத்தில் உவமைகளைக் கையாண்டார். சமீப காலத்தில் அவரது போக்குமாறி, தத்துவங்களைக் கொண்ட கவிதைகளை எழுதி வேகமாக முன்னுக்கு வந்தார். வானொலி தீபாவளிக் கவியரங்கு ஒன்றிலே, ஆலம்பழத்தை மேனாட்டுக் கவிஞர்களுடைய பாணியில் உருவகப்படுத்திப் பாடிய கவிதை இரசிகர்களின் பாராட்டுதலைப் பெற்றது. ‘மரபு’ பரிசோதனைக் களத்தில் அவரது வழி என்னுங் கவிதை இடம்பெற்றது. இந்தக் கவிதை ஒன்றால் அவர் வாழ்ந்து கொண்டிருக்கலாம். பட்டமரம் என்னுஞ் சிறு காவியத்திலும், மழைக்கை என்னுங் கவிதை நாடகத்திலும் ‘வழி’யின் புலமையைக் காண முடியவில்லை உணர்ச்சி வசப்படும் அவர் அண்மைக் காலத்தில் வசைக்கவிதைகள் பாடுவதில் காலத்தை விரயஞ் செய்து கொண்டிருப்பது வேதனை தருஞ் செயலாகும். ‘வழி’யின் சிந்தனைகளுடன் கவிதைகள் எழுதிவந்தால், அவரது புகழ் நிலைத்து நிற்கும்.

தில்லைச்சிவன் பட்டணத்து மச்சினி என்கிற கவிதையால் மக்களுடைய கவனத்தை ஈர்ந்தார். கொத்த மங்கலம் சுப்புவினுடைய பாணியை ஓரளவிற் பின்பற்றி எழுதப்பட்ட அக்கவிதையில், நல்ல கருத்தும், ஆழமான நகைச்சுவையும் உண்டு. அவரது சில கவிதைகள் கிராமியச் சூழலையும், அமைதியையும் பின்னணியாகக் கொண்டவை. வேறு சில கவிதைகள் இலக்கிய நடையில் அமைந்துள்ளன. கனவுக் கன்னி என்னும் அவரது கவிதைத் தொகுதி ஒன்றைப் பாரதி மன்றத்தினர் வெளியிட்டுள்ளனர்.

போட்டிக் கதையொன்றைப் பூர்த்தி செய்ததன் மூலம் எழுத்துத் துறைக்குட் புகுந்த தான்தோன்றிக் கவிராயர் ஒரு நையாண்டிக் கவிஞராகவே நிலைத்துவிட்டார். தலைவர்கள் வாழ்க மாதோ!, பாரதி தரிசனம், பரிசு கேட்ட அம்மானை ஆகியன எதிரிகளைச் சாடுஞ் சரங்களைக் கொண்டுள்ளன. இத்தகைய பாடல்களினால் ஒருவிதச் ‘சலசல’ப்பினை ஏற்படுத்திப் பிரபலமடையலாமே தவிர, நின்று நிலவ முடியாது. ‘பன்றி பல ஈன்றுமென்ன? குஞ்சரம் ஒன்றீன்றதனால் பயனுண்டாமே’ என்பதை மனதிலிருந்தி, வரிக்கவிதை மோகத்திலிருந்து விடுதலையாகி, பல்வேறு சந்தங்களிலும், பாடலுருவங்களிலும் அவர் கவனத்தைச் செலுத்தினால், நல்ல கவிதைகளைப் படைக்கலாம்;. பல வானொலி நாடகங்களை எழுதியும் நடித்துமுள்ளார். வானொலி நாடகங்களிலே நடித்த பயிற்சியுடன், ஒலிபெருக்கிக்கு முன்னால் கருத்தாழமற்ற வெறும் வரிப் பாடல்களையுஞ் சாமர்த்தியமாக அரங்கேற்றி மக்கள் மனதைக் கவர வல்லவர். பனையரசன் நாடகத்தை ‘நேற்று - இன்று – நாளை’ என்கிற பெயரில் அரங்கேற்றி யுள்ளார்.

வரகவி நாகமணிப் புலவர் வாழ்ந்த நயினா தீவிற் பிறந்த நயினை இராமுப்பிள்ளை, இயற்கையான கவி;ப் புலமையோடு கூடிய, ஓசை நயங் குன்றாத பாடல்களை இயற்ற வல்லவர். காலிமுகக்களரி என்னும் இவரது பாடல் மிகவும் பிரசித்தமானது. கதிர்காமஞ் சென்ற வண்டே என்கிற பிறிதொரு பாடலும் இரசிகர்களது அமோக ஆதரவைப் பெற்றுள்ளது. நயினை நாகபூஷணி திருவோலக் காட்சியும் அவள் மாட்சியும், நயினை கந்தவேள் அருள்வேட்டல் ஆகியன அவர் பாடி வெளிவந்த கவிதை நூல்களாம்.

விஞ்ஞானக் கட்டுரைகள் எழுதுபவராகவும். சிறுகதை எழுத்தாளராகவும் எழுத்துத் துறைக்கு வந்த ‘அம்பி’ (இ. அம்பிகைபாகன்) தமது பெயரைக் கவிஞராகவே நிலை நாட்டி உள்ளார். இவரது கவிதைகளிலே விஞ்ஞானக் கருத்துக்களையும், புதிய போக்கினையும் அவதானிக்கலாம். பாரதியே இவரது ஆதர்ச கவியாவர். பல கவியரங்குகளிலே தமது திறமையை வெளி;க்காட்டி வருகின்றார். இவரது அந்தப்பாவை என்னும் முதலாவது சிறுகாவியமே இவருக்கு வெற்றியைக் கொடுத்துள்ளது.

இதம் (வ. இளையதம்பி) ஒரு தமிழாசிரியராவர். பல தரமான குழந்தைப் பாடல்களை ‘ஈழகேசரி’யில் எழுதியுள்ளார். ‘மின்விளக்கு’, ‘சேவல்’ என்பன பாடசாலை மாணவர்களுக்கு ஏற்றவை. சிறுவருக்குப் பெரிதும் பயன்படும் வகையில் கூட்டல், பெருக்கல் வாய்பாடுகளைப் புதிய பாணியில், உவமானப் பொருள்களுடன் இயற்றித் தந்தமைக்கு மாணவருலகம் என்றும் அவருக்குக் கடமைப்பட்டிருக்கின்றது.

சக்தி ஏ. பாலையா மலைநாடு தந்த தலை நிமிர்ந்த கவிஞராவர். நல்ல ஓவியரான அவர், ஓவியஞ் சம்பந்தமாக நல்ல கட்டுரைகளை எழுதியுள்ளார். ‘மலையகக் கவிஞரது படைப்புக்களை ஏனையோர் மதிக்கின்றார்களில்லை’, யென்று சீறியெழுந்தவர், இத்தனைக்கும் மேல். அவர் ஒரு நல்ல கவிஞராவர். மலைநாட்டுக் கலைஞரது உணர்ச்சியைத் தட்டியெழுப்பப் பத்திரிகையும் நடாத்தியவர். சொந்த நாட்டிலே என்னும் நூல் வெளிவந்திருக்கின்றது. சுதந்திர வீறே இவரது கவிதைகளில் மேலோங்கி நிற்கின்றது.

ச. வே. பஞ்சாட்சரம். இந்து சாதனம் பத்திரிகையிற் பணிபுரியத் தொடங்கி, பத்திரிகையிற் பணிபுரியத் தொடங்கி, பத்திரிகையாளராக வாழ்ந்து, வேகமாக முன்னணிக் கவிஞர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளார். எழிலி என்னுங் காவியத்தை நூலுருவிலே தந்துள்ளார். இளைஞரான இவர், தரமான கவிதைகளால் ஈழத்தமிழன்னையை அலங்கரிப்பாரென எதிர்பார்க்கலாம்.

மு. க. சூரியன் குடத்துள் விளக்காக இருந்து கவிதைப் பணிபுரிந்து வருகின்றார். இதனால் அவரது கவிதைச் சத்தியைப் பலர் அறியாதிருக்கின்றனர். இவரது கதிரேசன் பாமாலை என்னும் நூல் இவரது ஆற்றலுக்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.

கோசுதா எண்ணிக்கையளவிற் பல தனிப்பாடல்களை இயற்றியுள்ளார். அவர் வானொலிநாடகப் புகழுடன் கவிதைத் துறைக்கு வந்தார். கவிதைக் குவியல் என்னுங் கவிதைநூல் அவரது கன்னிப் படைப்பாகும் அது சீரோ, சந்தமோ, ஓசை நயமோ அற்ற சொற்குவியல்களாகவே காட்சி தருகின்றது. அதனைத் தொடர்ந்து வெளியான பாலர்பாடல்கள் அவர் கவிதைத் துறையில் முன்னணிக்கு வரலாமென்பதைக் கோடி காட்டி நிற்கின்றது.

பா. சத்தியசீலன் இளம் எழுத்தாளர் சங்கம் நடாத்திய கவிதைப் போட்டியில் முதலாம் பரிசைப் பெற்றதன்மூலம் பலருக்கும் அறிமுகமானவர். இருப்பினும், வெகுவிரைவாக முன்னேறி, கவிஞர்கள் வரிசையில் தமக்கென ஓர் இடத்தினைப் பிடித்துக் கொண்டார். ‘மஹாகவி’யினுடைய ஆதிக்கம் இவரது பாடல்களிலே காணப்படினும், தனித்துவத்திற்குக் குறைவில்லை. மரபிலே காலூன்றி, புதுமையை நோக்க வேண்டுமென்கிற நோக்கமுள்ள இவர், பலவகையான பாடல் உருவங்களிலும் கவிதைகள் புனைந்து வருதல் வரவேற்கத்தக்க தொன்றாகும்.

வன்னியூர்க் கவிராயர், வன்னி நாட்டிற்குப் புகழ் தேடித் தந்துள்ள கவிஞராவர். அடங்காப்பற்றில் வாழ்ந்தாலும், பல கவியரங்குகளிலே அடக்கமான பாடல்களை அரங்கேற்றியுள்ளார். வன்னிநாட்டிலே இலக்கிய மறுமலர்ச்சியைத் தோற்றுவிக்க வேண்டுமென்று உழைத்துவரும் அவர் ஒரு சுதேச வைத்தியராவர். எஸ். எல். சௌந்தரநாயகம் என்னும் தமது சொந்தப் பெயரில் சிறுகதைகளும் எழுதி வருகிறார்.

‘ஜெயம்’, ‘மயிலன்’,’அமுது’ ஆகியோரும் முன்னணிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுடன் பின்வரும் இளங்கவிஞர்களும் ஈழத்துத் கவிதை இலக்கிய உலகில், அவ்வப்போது தங்களுடைய படைப்புக்களை வெளியிட்டு வருகிறார்கள். மு. பொன்னம்பலம், செ. து. தெட்சணாமூர்த்தி, சி. மௌனகுரு, செ. மகேந்திரன், அரிஅரன், க. சொக்கநாதன், வி. கந்தவனம், ஈழவாணன், ஜீவா – ஜீவரத்தினம், மு. சடாட்சரன், பாண்டியூரன், கே. டபிள்யூ, அரியநாயகம், அரையூர் அமரன், யாழ்ப்பாணக் கவிராயர், தமிழோவியன், ‘மலைத்தம்பி’ சிதம்பரநாத பாவலர், கவி. கோவிந்தசாமித்தேவர், அமரன் நாகலிங்கம், வெளிமடைக் குமரன் பெரியாம்பிள்ளை, சி. எஸ். காந்தி, ஈழக்குமார், ஐயாத்துரை, நடராஜா, ‘சுபத்திரா’, ‘முத்தழகு’, குலரத்தினம், திமிலைக் கண்ணன், திமிலை மகாலி;ங்கம். இவர்களுள் அநேகர் எதுகையையும் மோனையையும் எங்கேயாவது இணைத்துவிட்டாற் கவிதையாகிவிடும் என்கிற தப்பெண்ணத்திலே, ‘கவிதைகள்’ என்கிற சொற்குவியல்களைப் படைத்து வருகிறார்கள். இவர்கள் பாடலிலக்கணத்தை அறிந்து எழுத முன்வர வேண்டும். சினிமாப் பாட்டுகளுக்கு வார்த்தை மாற்றி எழுதும் ‘கவிதை’களை நிச்சயம் ஈழமாதா ஏற்றுக் கொள்ள மாட்டாள் என்பதையும் சில இளங் கவிஞர்கள் உணருதல் வேண்டும்.

இக்கால எல்லையுள் கவிதைகள் புனைந்துள்ள அநேகர், வறுமையும் அதன் கோரமும், தமிழும் தமிழியக்கமும் முதலிய பொருள்களையே திரும்பத் திரும்பக் கையாளுகின்றார்கள். அங்கதச் சுவையுடைய ‘கேலி’க் கவிதைகளும், வரிப் பாடல்களும் மிகுந்து காணப்படுகின்றன. கவிதை எழுதும் ஆற்றலோடு, செய்யுளுக்கு வேண்டிய உருவம், யாப்பு முறை முதலியவற்றை அறிய முயலுதல் வேண்டும். புதுமை வேண்டும்@ அதனை ஈழத்து இரசிகர்கள் வரவேற்கின்றார்கள். ஆனால், அப்புதுமை பழைமை என்னுந் தரையிலே வேரூன்றித் தான் மலரவேண்டும். இல்லாது போனால், கவிதையென்னும் பெயரால் காகிதப் பூக்களே ஈழத்துக் கவிமலர்ச் சோலையை நிரப்பும் என்பதை நமது கவிஞர்கள் உணர்ந்து கொள்ளுதல் நன்று.

நாவல்கள்

ஈழத்திலே நாவல் இலக்கிய முயற்சிகள் மிகவுங் குறைவானது என்பதை நாம் நேர்மையுடன் ஒப்புக் கொள்ளுதல் வேண்டும். 1940 ஆம் ஆண்டிற்கு முன்னர் தோன்றிய நாவல்களின் எண்ணிக்கை என்கிற பின்னணியிலே வைத்துப் பார்த்தால், நாவலிலக்கியத்துறையிலே ஏற்பட்டுள்ள தேக்கம் நன்கு விளங்கும். இத்தேக்கத்திற்கு, ஆற்றலி;லக்கியத்தரக்குறைவன்று@ பிரசுரவசதிக் குறைவே எனச் சாட்டப்படுங் காரணத்திலே ஒரளவு உண்மை இருக்கின்றது. ஈழத்தின் பிரசுரகர்த்தாக்கள் பாடநூல்களைப் பிரசுரிப்பதிலேயே நாட்டமுடையவர்கள் அவர்களது நோக்கம் உடனடி ஆதாயமாகும். அவசர யுகத்தில் அதிகம் விற்பனையாக முடியாத நானூறு, ஐந்நூறு பக்கங்களைக் கொண்ட நாவல்களைப் பிரிசுரிப்பதிலே அவர்கள் தங்களுடைய முதலை முடக்கி வைக்கத் தயாராகவில்லை. எழுத்தாளர்களுந் தங்களுடைய செலவிலேயே, அத்தனை பக்கங்களைக் கொண்ட நாவல்களைப்பிரசுரிக்கும் பண வசதி படைத்தவர்களல்லர் எனவே. ஈழத்து நாவலிலக்கிய முயற்சிகள் பத்திரிகைத் தொடர் கதைகள் எழுது வதாகவும், குறுநாவல்கள் எழுதுவதாகவும் முடங்கிக் கிடக்கின்றன.

பத்திரிகைத் தொடர்கதைகளை நாவல்களென்று ஏற்றுக் கொள்ளாத விமாசகர்களு மிருக்கின்றார்கள். ஒரு பிரிதியல் பிரசுரமாகும் தொடர்கதையின்ஒரு பகுதி, வியப்பினையோ ஆவலையோ தூண்டும் ஓர் இடத்தில் நிறுத்தப்படுகின்றது. வாசகனிடம் ஒன்றினை எதிர் நோக்கியிருக்கும் மனோபாவத்தைத் தூண்டவே இந்த உபாயங் கையாளப்படுகின்றது. இது, நாவலின் தொடர்ச்சியனைக் கூறுபடுத்தி, செயற்கையான வியப்புச் சுவையை பொருத்துகின்றது. இக்குறைபாட்டினைச் சாண்டில்யனுடைய அநேகமான நாவல்களிலே தெளிவாகக் காணலாம். இத்தகைய உபாயத்தினால் ஞாபகசக்தி குறைந்த வாசகரை வெகுவாகக் கவர முடியும். ஆனால், அவற்றினைப் புத்;தக உருவிலே படிக்கும் விமர்சகன் ஏமாற்றமடைகின்றான். ‘வாரந்தோறும் ஒருஇலட்சம் வாசகர் படித்தின்புற்றது@ ஆகையினால் இது சிறந்த நாவல்தான்’ என்று அதற்கு உயர்ந்த இடத்தினை ஒதுக்க முடியாது. இலக்கியத்தின் தரத்தினை எப்பொழுதும் வாசகரின் எண்ணிக்கையை வைத்துத் தீர்மானிக்க இயலாது. பிறிதொரு சாரார் ‘கல்கி’யினுடைய தொடர் கதைகளடைந்த வெற்றிகளை வைத்துக் கொண்டு தொடர்கதைகள் சிறந்த நாவல்களாகவும் அமையலாம் எனக் கருதுகின்றார்கள். ஆனால், வாசிப்புப் பழக்கத்தைச் சாதாரண மக்கள் மத்தியிலே கொண்டுவந்ததில் ‘கல்கி’ அடைந்த வெற்றியை நாவலிலக்கியத் துறையில் அவர்ஈட்ட வில்லையென்பது எனது அபிப்பிராயமாகும்.

இவற்றினை மனதிலிருத்திக் கொண்டுதான், நாவலிலக்கியப் பகுதிக்குள் நுழையவேண்டும். பெரும்பாலுந் தொடர்கதைகளையும் நாவல்களாக ஏற்றுக்கொண்டு தான், இப்பகுதியைப் பூரணப் படுத்துதல் சாத்தியமாகின்றது. ஏனொவெனில், நூல்களாகவே பிரசுரமான நாவல்கள் வெகு குறைவாகும்.

எண்ணிக்கைகளைப் பொறுத்த மட்டில், இளங்கீரன் நாவலிலக்கியத் துறையில் முன்னணியில் நிற்கின்றார். முஸ்லிமான இவர், சாமர்த்தியமான புனைபெயருக்குள் மறைந்து கொண்டு எழுதுகின்றார். தமது உழைப்பின் நிமித்தம் இளமைப் பருவத்தில் மலாயா, இந்தியா ஆகிய நாடுகளில் வாழ்ந்தவர். ஓர் எழுத்தாளராக வளருவதற்கு இப்பிரயாணங்கள் பெரிதும் உதவிசெய்தன. தமக்காக ஒரு நடையையோ, கதைசொல்லும் பாணியையோ வரித்துக் கொள்ளாது, வாசகருடைய விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் வியாபாரத் தந்திரம் நன்கு அறிந்தவரா அவர் எழுதுவதை இவரது நாவல்கள் முழுவதையும் ஒன்றாக வாசிப்பவர்கள் அறிந்து கொள்ளலாம். ஈழத்து எழுத்தாளர்களுள், திராவிட முன்னேற்றக் கழகத்தினரின் எழுத்து நடையை மிக ஆதர்சமாகக் கொண்டு எழுதியவர் இளங்கீரன் தாம். வண்ணக்குமரி, நீதிபதி ஆகிய ஆரம்பகால நாவல்கள் தி. மு. க. ஆதரவாளர்களைத் திருப்தி செய்வதாகவே அமைந்துள்ளன. 1953 ஆம் ஆண்டில் வெளியாக ‘வண்ணக்குமரி’ என்னும் நாவலில் ‘நம்நாடு’ என்று இவர் தென்னிந்தியாவையே குறிப்பிடுகின்றார். அந்த நாவல்கள் இராசா - இராணி சினிமாக் கதைகளாகவும், மிரசுதார் – பண்ணைக் கூலிகள் போராட்டமுள்ள ‘சீர்திருத்த’க் கதைகளாகவுமே அமைந்துள்ளன. ‘தினகர’னில் சொர்க்கம் எங்கே? போன்ற நாவல்களை எழுதி, ஈழத்து வாசகர்களைக் கவர வேண்டிய நிலை ஏற்பட்ட பொழுது கம்யூனிஸ எழுத்தாளரான இளங்கீரனைச் காண்கின்றோம். ஈழத்துப் பின்னணியில் எழுதப்பட்ட கதைகளிலே தென்றலும் புயலும், நீதியே நீ கேள் ஆகியன நூலுருவம் பெற்றுள்ள கதைகளாகும். ‘நீதியே நீ கேள்’ ஒரு செம்புப் பாலில் ஒரு குடந் தண்ணீர் கலக்கப்பட்ட விதத்தில் அமைந்திக்கின்றது’ எனப் பிறிதோர் விமர்சகர் தெரிவித்த அபிப்பிராயத்தில் ஓரளவு உண்மை இருக்கின்றது. தற்போதைக்குத் ‘தென்றலும் புயலும்’ தேறும்.

அடுத்ததாகக் கசின் (க சிவகுருநாதன்) எண்ணிக்கையில் அதிகமான தொடர்கதைகளை எழுதியிருக்கின்றார். அவருடைய கதைகள் முறைதவறிய காதலையோ, காமத்தையோ சித்திரிப்பனவாகவும், எங்கேயோ நடந்த உண்மைக் கதைகளை வாசிப்பதான எண்ணத்தை ஊட்டுவனவாகவும் அமைந்திருக்கின்றன. ஆசிரிய சமூகத்தில் நடமாடும் பாத்திரங்களே அதிகமாக அவரது கதைகளிலே இடம் பெறுகின்றன. அவரதுகதை சொல்லும் பாணி சிக்கலின்றி ஒழுங்காக அமைந்துள்ளதால், சாதாரண வாசகரை அவராற் கவர முடிகின்றது. இராசா மணியம் சகோதரிகளும், இதய ஊற்று ஆகிய கதைகளடைந்த வெற்றியைப் பிற்காலக் கதையான கற்பகம் பெறவில்லை. ‘கசின்’ சிறுகதைகளும் எழுதியிருக்கின்றார். ஆனால், அச்சிறுகதைகளும் நெடுங்கதைப் பாணியிலே வளர்க்கப் பட்டுள்ளன.

காதல் பைத்தியம் (சி. எஸ். பரமேஸ்வரன்) ஒன்றரை ரூபாய், எழையின் காதல் (க. நாகப்பு) முதலிய நாவல்களும் இக்காலத்தே தான் நூல்வடிவம் பெற்றன. ‘சமூகத் தொண்டன்’ நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு பெற்ற கச்சாயில் இரத்தினம். வன்னியின் செல்வி என்னும் நாவலைத் தந்திருக்கின்றார். அவரது பாட்டாளி வாழ்க்கையிலே என்னுஞ் சிறுகதைத் தொகுதியும் வெளி வந்திருக்கின்றது. ஐயோ நானா, காமசுந்தரி, பெண்ணோ பேயோ ஆகிய துப்பறியும் கதைகளைத் தந்துள்ள ஜோ. ஏ. எம். தாஸ் துப்பறியும் நாவல்கள் எழுதுந் துறையில் முன்னணி;க்கு வந்து கொண்டிருக்கின்றார்.

சிறுகதை எழுத்தாளரது நாவல் முயற்சிகளை ஏற்கனவே கண்டோம். நாவலிலக்கியத் துறையில் ஈடுபட்டுப் பின்னர் நாடகத் துறைக்குச் சென்று விட்டவர்களுடைய முயற்சிகளையும், பத்திரிகை ஆசிரியர்களாக இருந்து தொடர்கதைகளை எழுதியவர்களுடைய முயற்சிகளையும் வேறு பகுதிகளிலே தந்துள்ளேன்.

ஈழத்து நாவல்கள் பொதுப்படையாக, சாய்வு நாற்காலியில், இருந்து கொண்டு, பொழுது போக்குக்காக வாசிப்போருக்கு ஏற்றவையாகவே இருக்கின்றன. மனித சமூகத்தின் அடிப்படை உணர்ச்சிகளையும், எழுச்சிகளையும், இன்ப துன்பங்களையும் பிரதிபலிப்பனவாக அவை அமையவில்லை. சிலர் துப்பறியுங் கதைகளை எழுதியிருப்பினும். அவை ஈழ மண்ணிலே வேரூன்றவில்லை. ஈழத்தின் எழில் மிகுகளங்களையும் நமது நாவலிலக்கிய முயற்சிகள் பயன்படுத்தத் தவறிவிட்டன. ஈழத்தின் கிராமப் புற வாழ்க்கையில் எத்தனையோ ‘செம்மீன்’கள் தோன்றலாம். இத்துறையிற் பின் தங்கிவிடாது. ஈழத்து எழுத்தாளர் முனைந்து முன்னேற வேண்டியது அவர்களது கடமையாகும்.

நாடகங்கள்

ஈழத்து இலக்கிய வளாச்சியின் நாவலிலக்கியத் துறையிலே தேக்கத்தினைக் கண்டு மனஞ் சோர்வடைந்த நமக்கு. நாடகத்துறையின் வளர்ச்சி உற்சாகத் தரத்தக்கதாக அமைந்துள்ளது. முத்தமிழுள் ஒன்றாகக் கருதப்பட்ட நாடகத் தமிழின் இடைக்காலத் தேய்வுக்கான காரணங்களை ஆராயத் தேவையில்லை. அதனைப் பற்றிப் பலரும் ஆய்ந்து முடிவு கட்டிவிட்டனர். இருப்பினும், தமிழ் சினிமாவின் வருகைக்குப்பின்னர், தமிழ் நாடகத் துறையில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டது என்பதை மனத்திலிருத்திக் கொள்ளுதல் நன்று. இந்நிலை ஈழத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் பொதுவானது. 1956 ஆம் ஆண்டில் நடைபெற்ற ‘மௌனப் புரட்சி’யின் பயனாக சுயமொழிகளின் வளர்ச்சி வலியுறுத்தப் பெற்றது. சுயமொழிகளிலேயுள்ள இலக்கிய – கலை வளர்ச்சிகள் கருதி, அரசாங்கம் ஸ்ரீலங்கா சாகித்திய மண்டலம். இலங்கைக் கலைக்கழகம் ஆகிய நிறுவனங்களைத் தாபித்தது. இலங்கைக் கலைக்கழகத்தின் ஒரு கிளையான தமிழ் நாடகக்குழு, நாடக வளர்ச்சியினை ஊக்குவிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. சி;ங்கள நாடகக் கலையடைந்துள்ள அதி துரித வளர்ச்சியைக் கண்டும் தமிழ் நாடகக் குழு திறம்படச் செயலாற்றவில்லை என்கிற ஒரு பரவலான அபிப்பிராயம் நிலவி வருகின்றது. 1961 ஆம் ஆண்டில் இந்நாடகக் குழு பலத்த கண்டனத்திற்குள்ளாயிற்று. இருப்பினும், கலைக்கழகத்தின் தமி;ழ் நாடகக்குழுவினர் நடாத்திய நாடகப் பிரதிப் போட்டியினால், பல எழுத்தாளர் நாடகங்கள் எழுதுவதில் ஆர்வங் காட்டினார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. நான்கு வருடங்களாக நடாத்தப்பட்ட போட்டி இவ்வாண்டு நிறுத்தப்பட்டுள்ளது. நாடகங்கள் எழுதுவது இலக்கிய முயற்சியானதினால் கலைக்கழகத்தின் நாடகக் குழு இதனைப் புறக்கணித்து விட்டமை வருந்தத் தக்கதாகும்.

இருப்பினும், சி;ங்கள நாடகத்துறையிலேற்பட்டுள்ள வியத்தகு முன்னேற்றம், தமி;ழ் நாடகத் துறையில் ஊக்கத்தினை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்தக் கால எல்லையுள் பல நல்ல நாடகங்கள் எழுதப்பட்டுள்ளன@ மேடையேற்றப்பட்டுள்ளன.

ஈழத்து நாடகத்துறையைக் கணக்கெடுக்கும் எவரும் கலையரசு சொர்ணலிங்கம் அவர்களை மறந்துவிட முடியாது. பழங்காலக் கூத்து முறை நாடகங்களிலிருந்து நவீன நாடகங்கள் தோன்றிய ஆரம்ப காலத்திலிருந்து இன்றுவரை நாடகத் துறையிற் கவனஞ் செலுத்தி நடித்து, பயிற்றுவித்து, நாடகங்கள் தயாரித்து வரும் பழம்பெரும் நடிகராவர். அவரையே ஈழத்து நாடகத்துறைத் தந்தை என்பர். அவரையும் இந்த இடத்தில் ஞாபகம் வைத்துக்கொண்டு. நாடக இலக்கிய வளர்ச்சியினைப் பார்ப்போம்.

யாழ்ப்பாணம்-தேவன் பல துறைகளிலே உழைத்துத் தமது புகழை நிலைநாட்டியிருப்பினும், நாகத் துறையிலே தான் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளார். வானவெளியிலே என்னுங் கட்டுரை நூலையும், பிற கட்டுரைகளையும் வைத்துக் கொண்டு அவரை ஒரு நல்ல கட்டுரையாளர் என நினைப்பவர்களுமிருக்கின்றார்கள். மணிபல்லவம், வாடிய மலர்கள் ஆகிய மொழிபெயர்ப்பு நாவல்களை நமக்குத் தந்துள்ளார். அவர் தாமே புனைந்த கண்டதும் கேட்டதும் என்னும் நாவலை நூலுருவிலே தந்துள்ளார். பல சிறுகதைகளையும் எழுதியுள்ளார் இத்துறைகளிலே ஈட்டியுள்ள வெற்றிகளிலும் பார்க்க நாடகத்துறையில் ஈட்டியுள்ள வெற்றியே குறிப்பிடத்தக்கது. அவர் இப்சனின் நாடகத்தை ‘பத்தினியோ? பாவையா?’ என்னும் பெயரில் மொழி பெயர்த்து மேடை நாடகமாகத் தயாரித்துள்ளார். நளதமயந்தி, கற்புக்கனல் ஆகியவற்றை நவீன மேடைக்கேற்ற விதத்திலே தயாரித்தளித்தார். சகோதர பாசம் என்னும் நாடகம், அவரிடமுள்ள இயல்பான நகைச் சுவையைப் புலப்படுத்தியது. அந்த நாடகத்தின் நகைச்சுவைப் பாத்திரங்களைக் கிராமிய நடையிலும், மற்றைய பாத்திரங்களின் உரையாடலைத் திருத்திய தமிழிலும் எழுதி வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்க தாகும். தென்னவன் பிரமராயன் என்னும் நாடகநூலைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அவர் இரண்டு தடவைகளில் கலைக்கழகப் பரிசில் பெற்றுள்ளார்.

த. சண்முகசுந்தரம் அவர்களும் நாவலாசிரியராகவே வாசகருக்கு அறிமுகமானார். அவருடைய ஆசை ஏணி ‘சுதந்திர’னிலே தொடர்கதையாக வெளிவந்தது கலைக் கழகத்தின் தமிழ் நாடகக்குழுவிலே கொண்டிருந்த தொடர்பினாற் போலும், நாடகத் துறையிலே தமது முழுக் கவனத்தையுஞ் செலுத்தலானார். மருதப்புரவீக வல்லியின் வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு வாழ்வு பெற்ற வல்லி என்னும் நாடக நூலை நமக்களித்துள்ளார். அந்நூலுக்கு ஸ்ரீலங்கா சாகித்ய மண்டலத்தின் பரிசினைப் பெற்றுள்ளார். அண்மையில் பூதத்தம்பி நாடகநூலையும் வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணத்துள் சரித்திர சம்பவங்களைத் தேடி எடுத்து, அவற்றினை நாடகங்களாகப் புனையும் அவரது தொண்டு போற்றத் தக்கதாகும்.

சிறந்தொரு நாடக நடிகராக, நாடகக்கலையே மூச்சாக, வாழ்ந்து வருபவர் ஏ. ரி. பொன்னுத்துரை அவர்களாவர். வருஷம் பிறந்து முன்னம் முன்னம், ஆயிரத்தில் ஒருவர் ஆகிய ஓரங்க நாடகங்களை மேடையேற்றினார். ஓரங்க நாடகங்களின் சிறப்பினை ஈழத்து இரசிகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டுமென்கிற ஆர்வமுள்ளவர். ஓரங்க நாடகங்களுடன், பகையும் பாசமும், பாசக்குரல் ஆகிய முளுநீள நாடகங்களையும் எழுதி, நடித்துத் தயாரித்துள்ளார். நிறைகுடம் ஈழத்தின் நானா பகுதிகளிலும் முப்பதுக்கு மேற்பட்ட மேடைகளிலே நடிக்கப்பட்டு, அவருக்குப் பெரும் புகழ் சம்பாதித்துக் கொடுத்தது.

மட்டக்களப்பைச் சேர்ந்தவரும், சங்கீத ஆசிரியருமான காலஞ் சென்ற எம். எஸ். பாலு நாடகக் கலையை வளர்க்க உழைத்து வந்தார். வானொலி நாடகங்களாகவும், ஓரங்க நாடகங்களாகவும் நூற்றுக்கு மேற்பட்ட நாடகங்களை எழுதினார். அவரது நாடகங்களிலே நகைச்சுவையே மேலோங்கி நிற்கின்றது. அவர் முழுநீள நாடகங்களிலே கவனஞ் செலுத்தாதது துர்ப்பாக்கியமாகும். அவர் சில சிறு கதைகளையும், குழந்தைப் பாடல்களையும் இயற்றியுள்ளார். மட்டக்களப்பு இளைஞர் பலரின் எழுத்தார்வத்தினை வளர்த்து அவர்களுடைய முன்னேற்றப் பாதையைச் செப்பனிட்டு;க்கொடுத்த அவரது சேவையை மட்டக்களப்பு எழுத்தாளர்கள் மறக்கவில்லை. அவரது ஞாபகார்த்தமாக ஒரு நாடகப் போட்டியை நடாத்திவருகின்றார்கள். கலைக் கழகம் நடத்தும் போட்டி நிறுத்தப்பட்டுள்ள இச்சந்தர்ப்பத்திலே, இந்த நினைவுப் போட்டி வருடா வருடம் நடாத்தப்படுதல் விரும்பத் தக்கது.

சி. சண்முகம் பல வானொலி நாடகங்களை எழுதியுள்ளார். அத்துடன் சில நகைச்சுவை மேடை நாடகங்களையும் எழுதியுள்ளார். ஸ்ரீமான் கைலாசம் பறந்தது பைங்கிளி ஆகியன இரசிகர்களின் பாராட்டுதல்களைப் பெற்றன. பாத்திர அமைப்பிலும், சம்பவக் கோவையிலுங் கவனஞ் செலுத்தாது, உச்சரிப்பு முறைகளுக்கே முக்கியத்துவங் கொடுத்து எழுதுதல் இவரது நாடகங்களிலுள்ள குறைபாடாகும்.

கே. மாணிக்கவாசகர் நாடக இலக்கியத் துறையில் உழைத்து வருகின்றார். நீ இல்லையேல்?, மஞ்சள்குங்குமம் ஆகிய நாடகங்கள் வெற்றிகரமான மேடை நாடகங்களாக அரங்கேற்றப்பட்டுள்ளன.

நடமாடி, சிறுகதை, குறுநாவல் ஆகிய இலக்கியத் துறைகளிலே வெற்றியீட்டத் தவறியிருப்பினும், நல்ல மேடை நடிகர் என்பதை நிலைநாட்டியுள்ளார். இராசா இராணிக் கதைகளை, படாடோபமான வசனங்களிலே நாடகங்களாக்குவதிலேதான் இவருக்கு அதிகம் ஈடுபாடு இருக்கின்றது. இவர் எழுதியுள்ள சரிந்தது கொற்றம் என்னும் ஓரங்க நாடகமும், சங்கிலியன் முழு நீள நாடகமும் இரசிகர்களின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளன.

ஆர். பாலகிருஷ்ணன் வெகு வேகமாக எழுத்துலகில் முன்னேறி வருகின்றார். இலங்கையர் கோன் நினைவுச் சிறுகதைப் போட்டியில் வழி என்னுஞ் சிறுகதைக்கு முதற்பரிசு பெற்றதன் மூலம் வாசகரது கவனத்தை ஈர்ந்தார். அவர் எழுதியுள்ள கடதாசிக் கூட்டம் என்கிற ஓரங்க நாடகம், ஓரங்க நாடகத்தின் இலக்கணமாக அமைந்துள்ளது என விமர்சகர்களாற் பாராட்டப்பட்டது. பலகாலமாக ஒரங்க நாடகங்கள் தயாரித்து வந்த அவர், கூண்டுக்கு வெளியே என்னும் முழு நீள நாடகத்தை எழுதி வெற்றிகரமாகத் தயாரித்துள்ளார். யாழ்ப்பாண மக்களுடைய வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்து, அவர்களது பலவீனங்களை அங்கதச் சுவையுடன் சித்திரிப்பதில் வல்லவராகத் திகழ்கின்றார்.

அன்புமணி, பலகாலமாகச்சிறுகதைத் துறையிலே உழைத்து, பின்னர் நாடகத் துறையிலே தமது கவனத்தைத் திருப்பியுள்ளார். பல வானொலி நாடகங்களை எழுதியுள்ளதுடன், கடல் தந்த தீபம் என்னும் நாடகத்தையும் மேடையேற்றியுள்ளார். இந்நாடகத்திற்குக் கலைக்கழகத்தின் பரிசிலைப் பெற்றார். இவர் ‘சில்வர் டஸ்ட்’ உடுப்புகளுடன் நடிக்கத்தக்க. இராசா - இராணிக் கதைகளையே நாடகங்களாக்குகின்றார்.

இராசரத்தினம் (ராஜ் நகைச் சுவை நாடக மன்றம் போன்றோர், அநுபவ வாயிலாக நகைச்சுவை நாடகங்கள் தயாரித்து வந்தாலும் அவை இலக்கியக் கணக் கெடுப்பிலே சேரமாட்டாது.

நகைச்சுவை, சரித்திர சம்பவங்கள் ஆகியவற்றையே திரும்பத் திரும்ப நாடகங்களிலே புகுத்தாமல், அனைத்துலகத்திற்கும் பொதுவான உணர்ச்சி முரண்பாடுகளை வைத்து நாடகங்களை எழுதுவதன் மூலந்தான், தமது திறமைகளைக் கடலுக்கு அப்பாலும் தெரியச் செய்யலாம் என்பதை நமது நாடகாசிரியர்கள் மனதிற் கொண்டு, அவ்வாறான நாடகங்களை எழுத முன்வருதல் வேண்டும்.

கட்டுரைகளும் விமர்சனங்களும்

இக்கால எல்லையுள் எழுத்துத் துறையில் மலர்ந்த கதாசிரியர்களையும் நாடகாசிரியர்களையும் அறிந்து கொண்டு, கட்டுரைத் துறைக்கு வருகின்றோம். கட்டுரைகள் எழுதுவதும் இலக்கியத் துறையின் ஒரு பிரிவு என்கிற எண்ணம் பல எழுத்தாளர்களிடமில்லை. கட்டுரை எழுத்தாளர், அரசியற் பிரச்சினைகளில் ஈடுபட்டு, தமிழரின் அவல நிலை கண்டு ஆவேசமுற்று, எழுதும் ஒரு போக்கினை வெளிப்படையாகவே அறிந்து கொள்ளலாம். அரசியற் கட்சி அபிமானங்கள் கதாசிரியர்களையும் கவிஞர்களையும் ஈர்த்ததைப் பார்க்கிலும், கட்டுரையாசிரியர்களையே பெரிதும் ஆட்கொண்டன என்பதும் புலனாகும். பல கட்டுரையாசிரியர்கள் அரசியற் பிரசாரக் கட்டுரைகளைத் தவிர, சிந்தனைக் கட்டுரைகள் - நகைச்சுவைக் கட்டுரைகள், பிரயாணக் கட்டுரைகள் ஆகிய துறைகளிலே எவ்வித முயற்சியுஞ் செய்யவில்லை. ஆழமான படிப்பும், நல்ல மொழிப் பயிற்சியும், சிந்தனைத் தெளிவுங் கட்டுரையாசிரியர்களுக்குத் தேவை. வெறுஞ் சொல்லடுக்காய் - அட்டைக் கோபுரமாய் - அமைந்து விடுங் கட்டுரைகளால் யாருக்கும் எவ்வித பயனுமில்லை.

கொழும்பு றோயல் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவரும், தற்பொழுது தம்மொழி அலுவலகத்திற் கடமை பார்ப்பவருமான கி. லஷ்மண ஐயரவர்கள் எழுதிய பாரதத்தூதுவர், கம்பனது கதாபாத்திரங்கள் ஆகிய நூல்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. இந்தியத் தத்துவ ஞானம் என்னும் தமது நூலுக்கு ஸ்ரீலங்கா சாகித்திய மண்டலப் பரிசு பெற்றுள்ளார்.

ச. ஹண்டி பேரின்பநாயகம் அவர்கள் நல்ல கட்டுரையாளராவர். தமிழ் சிங்களப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது. இரு மொழிகளும் ஆட்சி மொழியாக வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, அல்லாவிடின் தமிழர் இரண்டாந்தரப் பிரசைகளாக்கப் படுவார்கள் என்று அவர்எழுதிய தொடர் கட்டுரை, கட்டுரையாளருக்கு வழி காட்டுவதாக அமைந்துள்ளது. போட்டுக்கிடந்து எடுத்தது, யப்பான் யாத்திரை, அந்நிய மதம் என்பன அவரது நல்ல கட்டுரைகளாம். சமீபத்தில் அவர் எழுதி வெளியிட்டுள்ள ஆட்சி இயல் என்னும் நூல், உயர்தர வகுப்பு மாணவர்களுக்குப் பாடப்புத்தகமாக இருப்பினும். அவரது கட்டுரை எழுதுங் கைவண்ணத்தைக் காட்டுகின்றது..

தெல்லியூர் நடராசா ‘சுதந்திரன்’ பத்திரிகையிற் சொற்ப காலம் கடமையாற்றியவர். சொந்தத்திலும் பத்திரிகை வெளியிட்டுப் பார்த்தவர். தமிழன் மாட்சி, தங்கத் தாத்தா, பிளவுங்கள் இலங்கையை ஆகிய நூல்களை தந்துள்ளார். சாரண இயக்கத்திற்கு உதவும் விதத்தில் இளைஞர் சாரணியம் போன்ற நூல்களைத் மொழி பெயர்த்துத் தந்துள்ளார். சோதிட சாத்திரத்திலே நம்பிக்கையுள்ள இவர், அது சம்பந்தமான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார். சோமசுந்தரப் புலவரது பல பாடல்கள் இவர் நடாத்திய பத்திரிகையிலே தான் பிற்காலத்திற் பிரசுர மானவையென்பதுங்; குறிப்பிடத் தக்கது.

முருகேசபிள்ளை என்னும் நல்லறிஞரின் புத்திரராகிய மு. கணபதிப்பிள்ளை விபுலாநந்த அடிகளாரிடம் அன்புடையவர். அவரது நினைவாக ஈழமணி என்கிற சஞ்சிகையைச் சிலகாலம் நடாத்தியவர். அவரது குறிப்புக்களைக் கொண்டு எழுதப்பட்ட விபுலாநந்த வரலாறு 1951 ஆம் ஆண்டில் வெளியாயிற்று. தமிழன் எங்கே? என்னும் அவரது நூல் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை போன்றோரின் பாராட்டுதலைப் பெற்றது. ஆனால், அவரது திராவிடக் கொள்கைகளை வரவேற்காத ஈழத்து நல்லறிஞர்களுமிருக்கின்றார்கள். பரபரப்பூட்டும் வகையிலே சில சமயங்களில் புத்தக மதிப்புரைகள் எழுதிவருகின்றார்.

புதுமைலோலன், ‘ஆனந்தன்’ பத்திரிகையிலும் கடமையாற்றிய தமிழாசிரியராவர். அரசியல் சம்பந்தமான சிறுநூல்களைக் கட்சிக் கண்ணோட்டத்தில் எழுதியுள்ளார். ஆரம்ப காலத்தில் அவர்பல சிறுகதைகளையும் காணிவல் காதல், தாலி ஆகிய குறுநாவல்களையும் எழுதியுள்ளார். ஆனால், அவரது புகழ், கட்டுரையாசிரியர் என்கிற வகையிலே தான் நிலைநாட்டப்பட்டிருக்கின்றது. தாயின் மணிக்கொடி சிறிய நூலாயினும் நன்கு அமைந்துள்ளது. ஆரம்ப கால நடை தி. மு. க. வைப் பின்பற்றுவதாக இருந்தாலும். பிற்காலத்தில் உணர்ச்சியூட்ட வல்ல ஒரு நடையைத் தமதாக்கிக் கொண்டார். அவரது எழுத்திலும் பேச்சிலும் அடிக்கடி பாரதி தாசனுடைய பாடல்கள் இடம்பெறும்.

எழுத்தாளர் வட்டாரத்தில் ‘நிருபர்’ என்னுஞ் சொல் நாவற்காடு சி. செல்லத்துரையையே குறிக்கும். நிருபர்கள் செய்தி சேகரிப்பவர்களேயொழிய, இலக்கியகாரர்களல்லர். ஆனால் இவர் வேறுபட்டவராகவே வாழ்கின்றார். யார் என்ன நடையிற் பேசினாலும், அதேநடையிற் சுவை குன்றாத செய்திகளைத் தருவதினால் அவர்கட்டுரையாளராகி விட வில்லை. பல புனைபெயர்களில் ஒளிந்து நின்று, விழாக்களைப் பற்றிய விமர்சனங்களையும், அரசியற் சூழ்நிலைகளைப் பற்றிய விமர்சனங்களையும், அரசியற் சூழநிலைகளைப் பற்றிய கட்டுரைகளையும் எழுதியுள்ளார். விடயங்களை நேரடியாகச் சொல்லாமல், குறிப்பாலுணர்த்தும். தன்மையை அவரது கட்டுரைகளிற் காணலாம். ‘இளவரசு’ என்னும் புனைபெயரில் தமிழ் வளர்க்கும் செல்வர்கள் இருபத்தைந்து பேர்களைச் சுவைப்பட அறிமுகஞ் செய்து வைத்துள்ளார். அக்கட்டுரைகளில் அவரது விமர்சனச் சீர்மையினையும், அதேசமயம் கண்டிக்க வேண்டியவற்றை நகைச்சுவையுடன் மறைபொருளிற் சொல்லும் அழகினையுங் காணலாம்.

நந்தி (டாக்டர் சிவஞானசுந்தரம்) ‘குமுதம்’ பத்திரிகையிலெழுதிப் பிரபலமடைந்த சிறுகதையாசிரியராவர் ஆரம்பத்திற் பொழுது போக்குக் கதைகளை எழுதியிருப்பினும், பிற்காலத்தில் மனோதத்துவக் கதைகளை எழுதுவதிலே அக்கறை காட்டி வருகின்றார். மலையக மக்களுடைய வாழ்க்கைப் பிரச்சினைகளை வைத்து ‘மலைக்கொழுந்து’ என்னுந் தொடர்கதை எழுதினார். இந்தக் கன்னிப்படைப்பே அவருக்குக்கணிசமான வெற்றியைக் கொடுத்துள்ளது. ஆனால், அருமைத் தங்கைக்கு என்னும் நூல் அவரைக் கட்டுரையாசிரியராக உறுதிப்படுத்துகின்றது. இந்நூலில், கடித உருவத்தில் கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. கர்ப்பவதிகளுக்கு நல்லமுறையில் சுகாதார ஆலோசனைகள் தரப்பட்டுள்ளன.

ஈழத்துச்சோமு புகைப்படக்கதைகள் எழுதும் சிறுகதை எழுத்தாளராக வாசகர் மத்தியில் பிரபல மெய்தினார். ‘சமூகத் தொண்ட’னில் சில விமர்சனக் கட்டுரைகள் எழுதியுள்ளார். ஈழத்து இலக்கியத்தைப் பற்றி ஒவ்வோர் ஆண்டிலும் கணக்கெடுப்பு நடத்தி இளம் எழுத்தாளருக்கு வேண்டிய தகவல்களைத் தந்து கொண்டிருந்தார். தற்காலத்தில் சுவையான அறிக்கைகள் தயாரித்துப் பத்திரிகைகளில் வெளியிட்டு வருகின்றார்.

க. சி. குலரத்தினம். பாடப் புத்தக ஆசிரியர்களைப் போன்று அல்லாது, எழுத்தாளரது உள்ளப்பாங்குடன் மிகவும் பயன்படத் தக்கமுறையில் அரசியற் சித்தாந்தங் களைப் பற்றி விவேகியில் தொடர்ச்சியாக எழுதி வருகி;ன்றார். தெளிவான விளக்கங்களும், எளிமையான நடையும் அவரது கட்டுரைகளைச் சிறப்பிக்கின்றன. ஆழ்ந்த சமய அறிவும், தமிழ்ப் புலமையுங் கொண்டுள்ள அவர் தமது கவனத்தை இத்துறைகளிலுந் திருப்பு வாராயின் ஈழம் பெரிதும் பயனடையும்.

பிரேம்ஜி தமிழரசுப் பத்திரிகையான ‘சுதந்திர’னிலும், பின்னர் கம்யூனிஸ்ட் கட்சிப் பத்திரிகையான தேசாபிமானியிலும் கடமையாற்றியவர். தற்பொழுது தூதுவராலய மொன்றில் மொழி பெயர்ப்பாளராக வேலை செய்யும் அவர், கட்சிக் கொள்கைகளைப் பிரசாரஞ் செய்வதற்காகவும், எதிர்க்கருத்துக் கொண்டோரைச் சாடுவதற்காகவும், கட்டுரைகள் எழுதிவருகின்றார் அவரது கட்டுரைகளில் கட்சி முத்திரைச் சொற்களும் வட உச்சரிப்புச் சொற்களும் அடிக்கடி வந்து , சொல்லும் விடயங்களை நீட்டிவிடுகின்றன ‘தினகரன்’ பத்திரிகையிற் கடமை பார்க்கும் சபாரத்தினம், மகேசன் ஆகிய இருவரும், பத்திரிகையின் பக்கங்களை நிரப்புவதற் கல்லாமல், சுவையான கட்டுரைகளை அவ்வப்போது எழுதி வருகிறார்கள்.

எஸ். வேலுப்பிள்ளை (மாயாவி) ஒரு தரமான கட்டுரையாளராவர். ‘கண்டதும் கேட்டதும்’ என்னும் பகுதியைத் ‘தினகர’னில் தொடர்ந்து எழுதி, ‘மாயாவி’ என்னும் பெயரில் பிரபலமடைந்தார். அவர், ‘தினகர’னில் தொடர்கதையும் எழுதியுள்ளார்.

ரீ. பாக்கியநாயகம் நாடோடிப் பாடல்கள் பற்றி அவ்வப்போது கட்டுரைகள் எழுதியிருக்கின்றார். ஆனால், நகைச் சுவைக் கட்டுரைகளே அவருக்குப் புகழைக் கொடுத்தன. அவரது நகைச்சுவை, மேலோட்டமான சம்பவ முரண்பாடுகளிலே பிறக்கின்றது. இதனால், சாதாரண வாசகரைக் கவர்ந்து விடுகிறார்.

ஆசிநாதன் (ச. பெனடிக்ற்). ஆ. தம்பித்துரை ஆகிய இருவரும் நல்ல ஓவியர்கள். இருவரும் ஒவியக் கலை சம்பந்தமாக ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார்கள். கற்காலக் கலையும் சுவையும், ஆசிநாதனது அருமையான நூலாகும். கட்டுரைகளுக்கு அவரே சித்திரங்களும் வரைந்துள்ளார். ஆ. தம்பித்துரை ஓவியக்கலை, சிறுவர் சித்திரம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். ‘சிறுவர் சித்திரம்’ ஒரு புதிய முயற்சி. தாமே மரத்திற் செதுக்கிய படங்களை இந்நூலிற் சேர்த்துள்ளார்.

நான் கண்ட கலைப்புலவர் என்னும் நூலை எழுதியுள்ள க. மாணிக்கவாசகர் நூல் நிலையங்களைப் பற்றிப் பல உபயோகமான கட்டுரைகளை எழுதியுள்ளார். ஈழத்துச் சிவானந்தன், யான் கண்ட சொற்செல்வர்கள் என்னும் நூலில் ஈழத்து மேடைப் பேச்சாளரை அறிமுகஞ் செய்து வைத்துள்ளார். இவற்றுடன், நாவலர் சமயப்பணி (சீ. சிவரத்தினம்), வாழையடி வாழை (சு. செபரெத்தினம்), ஆறுமுகமான பெருமான் (க. தனபாலசிங்கம்). ஈழத்துச் சிதம்பரம் (கணபதீஸ்வரக்குருக்கள்), யார்நாடற்றவன்? (தமிழ்ப்பித்தன்) ஆகிய நூல்களும் வெளிவந்திருக்கின்றன.

இக்கால எல்லையுள் கட்டுரைத்துறைக்கு வந்துள்ள பெரும்பாலான எழுத்தாளர்கள், ‘சுயா’, எழுதியதைப் போன்ற நகைச்சுவைக் கட்டுரைகளையோ, அநுசுயா எழுதியதைப் போன்று பலவகைக் கட்டுரைகளையோ, சோ. சிவபாத சுந்தரம் எழுதியதைப் போன்று சிந்தனைக்கட்டுரைகளையோ, ‘சானா’ எழுதியதைப் போன்று நடைச் சித்திரங்களையோ எழுதாமல், ஒரே பாதையிலும் பாணியிலும் எழுதி வருகின்றார்கள்.

கட்;டுரைகளுக்கேற்ற விடயங்களுக்குப் பஞ்சமா? தி. ஜ. ர.வின் ‘பொழுது போக்கு’ம், வ. ரா. வின் ‘மழையும் புயலும்’, ‘நடைச் சித்திரம்’ ‘என்ன ருசியோ’ முதலியவையும் வே. சாமிநாத சர்மாவின் கட்டுரை நூல்கள் பலவும் நன்றாக அமைந்திருக்கின்றன. இவற்றை நமது கட்டுரையாசிரியர்கள் ஒரு முறை படித்தால், இந்தப் பரந்த உலகத்திற் கட்டுரைகள் எழுதுவதற்கு எத்தனையோ சுவையான விடயங்களிருப்பதை உணர்வார்கள். இந்தச் சந்தர்ப்பத்திலே, முக்கியமாக ஒன்றைக் குறிப்பிட வேண்டும்.

ஆங்கிலத்தில் எழுதும் பிரபல மலைநாட்டு எழுத்தாளரான சி. வி. வேலுப்பிள்ளையின் மலை நாட்டுத் தலைவர்களது அறிமுகக் கட்டுரைகளும், நாடோடிப் பாடல்கள் சம்பந்தமான கட்டுரைகளும் ‘தினகர’னில் வெளிவந்தபோது வாசகர் விரும்பிப் படித்தனர். விடயங்களைச் சொல்லும் முறையில் அவை நன்றாக அமைந்திருக்கின்றன. இத்தகைய கட்டுரைகள் எழுதுவதற்குக் கூர்மையான அவதானமும், நடைத் தெளிவுந் தேவை யென்பதை நமது கட்டு;ரையாசிரியர்கள் உணர வேண்டும்.

இனி. நமது கவனத்தை இலக்கிய விமர்சனத்துறைக்குத் திருப்புவோம். முன்னரெப்பொழுதும் இல்லாத அளவிற்கு. ஈழத்தில் ‘நேயர் கடித’ விமர்சனங்கூட பெரும் அளவில் வளர்ந்துள்ளது. ஈழநாட்டில் விமர்சகர்களுக்குப் பஞ்சமில்லை என்கிற கருத்தினைச் சரஸ்வதி ஆசிரியர் வ. விஜயபாஸ்கரன் இங்கு வெளியிட்டிருந்தார். ஓர் எழுத்தாளர் சங்கம் நடாத்திய எழுத்தாளர் புகைப்படக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். பல ‘புதுமுக’ங்களை எழுத்தாளர் வரிசையிற் கண்டேன். அவர்களுடைய படங்களுக்குக் கீழே துறை: ‘இலக்கிய விமர்சனம்’ என்று போடப்பட்டிருந்தது என்னை வியப்பிலாழ்த்திற்று. இத்தனை இலக்கிய விமர்சகர்கள் இலக்கிய உலகில் உயிர் வாழ்வதற்கு எத்தனையாயிரம் எழுத்தாளர் நம் மத்தியில் வாழவேண்டும் என்று என் மனதிற்குள் வேடிக்கையாக நினைத்துப் பார்த்தேன்.

பத்திரிகைகளிலே, ஏதாவதொரு கதை நன்றாக இருந்தது. ஆபாசமாக இருந்தது என்று அஞ்சலட்டை அபிப்பிராயங்களை அனுப்பி வைக்கும் இவ்வெழுத்தாளர் படையை நாம் விமர்சகர்களாகக் கொள்ளத் தேவையில்லை. இருப்பினும் புதிய கோணத்திலே இலக்கிய விமர்சனத் துறையினை அணுகும் புதிய சந்ததியொன்று தோன்றிக் கொண்டிருக்கின்றது.

புதியவர்களும் வளரட்டும்@ பழையவர்களும் வாழட்டும். பழையவர்கள் இரசனைக் கட்ரைகளையே எழுதி வந்தார்கள். அவர்களுக்கு இலக்கிய இலக்கணந் தெரியாது. ஆங்கிலங்கற்றுதம்தான் தமிழில் இலக்கிய விமர்சனஞ்; செய்ய வேண்டும் என்று இந்தப் புதிய விமர்சகர்கள் ஓயாமற் பிரசாரஞ் செய்வதினால் ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்குப் பாதகஞ் செய்து வருகின்றார்களென்பதை அவர்கள் தவறுகின்றார்கள்.

இலக்கிய விமர்சனந் தமிழில் இருந்தது கிடையாது. வ. வே. சு. ஐயருக்குப் பின்னர் தான் தமிழில் இறக்குமதி செய்யப்பட்டது என்னும் தப்பான நிலைக்களனிலிருந்து, இலக்கிய இலக்கினை அணுகுகின்றார்கள். இதன் காரணமாக, அவர்களுக்கு அதற்கு முற்பட்ட தமிழிலக்கியத்திலும் விமர்சன முறைகளிலும் பரிச்சயங்கிடையாது என அவர்கள் மறைமுகமாக ஒப்புக் கொள்ளும் விகடாலங்காரத்தினையும் அவதானிக்கலாம். அவர்கள் விமர்சனத் துறையிலே புகுந்து பதங்களும் சில அளவுகோல்களும் அந்நியமாக இருப்பதினால், சிலருக்குப் புதுமையாகத் தோன்றலாம். இப்புதுமை மோகத்தினால் சங்கந்தொட்டு வந்துள்ள இலக்கிய விமர்சன முறைகளும், அளவு கோல்களுந் தவறானவையென அர்த்தமாகிவிடாது. பரத நாட்டியம் தமிழ் நாட்டு நடனமுறையாகும். அது நடனமேயில்லை, ரொக்-அன்-ரோல் தனர் நடனமென்று நிலைநாட்ட முற்படுவது எவ்வளவு வேதனைக்குரியதோ, நாதஸ்வர இசையிலும் பார்க்க ‘ஜாஸ்’ இசைதான் சிறந்தது என நிலை நாட்ட முற்படுவது எவ்வளவு வேதனைக்குரியதோ, அவ்வளவு வேதனைக்குரியது அவர்கள் விமர்சனத்துறை பற்றித் தெரிவிக்கும் கருத்துக்களாகும். நமது இலக்கிய இரசனையும், அதன் மதிப்பீடும், நமது மண்ணிலேயும், தமிழர் நெஞ்சங்களிலேயும் வேரூன்றிய மரபினாலே நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ‘தனிப்பட்டவர்களுடைய தீர்ப்பிலும் பார்க்க. சமூகத்தின் தீர்ப்பு மேன்மையான தீர்ப்பு’ என்பதை நானும் ஒப்புக் கொள்ளுகின்றேன்.

புதிய விமர்சகர்கள் புதிய பார்வையை நமக்கு அறிமுகஞ் செய்து வைப்பதற்கு நாங்கள் மறுப்புச் சொல்லவில்லை. ஈழத்து இலக்கியகாரர் கிணற்றுத் தவளைகளுமல்லர். ஆனால், புதிய விமர்சகர்கள் 1940 ஆம் ஆண்டளவில் ரா. ஸ்ரீதேசிகன் ‘கதைமரபு’, ‘கவிதை மரபு’ பற்றி எழுதியுள்ள கட்டுரைத் தொடர்களை வாசித்துப் பார்க்க வேண்டும். மேனாட்டார் இலக்கியத்தை அணுகும் முறைக்குமுள்ள வேறுபாடுகளை அக்கட்டுரைகளிலே அறிந்து கொள்ளலாம். இக்கியத்தை அணுகும் முறையிலே வேறுபாடு இருந்தால், இலக்கியம் பற்றிய சுவையும் வேறுபடுதல் இயல்பானதாகும். சுவை வேறுபடும்பொழுது. இலக்கிய மதிப்பீட்டின் அளவு கோல்களும் வேறுபடுகின்றன. ரா. ஸ்ரீதேசிகனைப் போல அவர்கள் இருவிதமான அளவு கோல்களிலும் பரிச்சயம் வைத்துக் கொண்டு, இலக்கிய விமர்சனஞ் செய்யப் புகுவார்களேயானால், ஈழத் தமிழுக்கு அவர்களால் ஆக்க பூர்வமான தொண்டினைச் செய்ய முடியும். புதிதாக அவர்கள் காட்டும் அளவு கோல் களைக்கூட அவர்கள் தெளிவாக விளங்கிக் கொண்டவர் களாகக் காணோம். அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள கட்டுரை நடை, விடயங்களை விளக்குவதை விடுத்து, மேலுங் குழப்புவதாகவே அமைந்துள்ளது. இலக்கிய விமர்சனம் என்பது வேறு. இரசனை என்பது வேறு என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், ‘இலக்கிய இரசனை ஆகாது’, என்கிற பிரசாரத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. இரசிகமணி டி. கே. சி. யின் இரசனை தேசிகவிநாயகம் பிள்ளையையும், பண்டிதமணி சி. க. வின் இரசனை சோம சுந்தரப்புலவரையுஞ் சாதாரண வாசகருக்கு அறிமுகஞ் செய்து வைத்தன என்பதை அவர்கள் நினைவில் வைத்துக் கொள்ளுதல் வேண்டும். அவர்களது பிரசாரம் வலுப்;பெறுமானால், இரசனைக் கட்டுரைகள் அருகி வரலாம். அவ்வாறு நிகழுமானால், ஈழத்து எழுத்தாளரது நல்ல முயற்சிகள் சாதாரண வாசகரின் கவனத்தைப் பெறாமற் போய்விடவுங் கூடும். பண்டிதர் குழூஉக் குறிகளை வைத்து ஏதோ செய்தது போலவே, அவர்களும் ஏதோ குழூஉக் குறிகளை வைத்து எழுதுவதன் மூலம் புது விதமான ‘பண்டித வர்க்கத்தை உருவாக்க முற்படுகின்றார்களென்பதை உணரத் தவறி விடுகின்றார்கள்.

பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, பொ. கிருஷ்ணன், சோ. சிவபாதசுந்தரம் ஆகியோர் இரசனையை வளர்ப்பதிலும், இலக்கிய விமர்சனஞ் செய்வதிலும் முன்னணியில் நிற்பதை ஏலவே கண்டோம். இவர்களையடுத்து, ஆங்கிலம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவரும், விபுலாநந்தரவர்களுடன் உடனுறைந்து அவருடைய ஆக்கவேலைகளிற் பங்கு கொண்டவருமாகிய மா. பீதாம்பரம் அவர்கள் விமர்சனத் துறையில் மிக்க ஈடுபாடு கொண்டு உழைத்துள்ளார். ஆறுமுகநாவலரின் மறைவுக்கும், குமார சுவாமிப்புலவர்களுடைய ஆக்க வேலைகள் தொடங்குவதற்குமிடைப்பட்ட ஓர் இருபது ஆண்டுகளில், கிறீத்தவர்கள் தமிழ் நடையை எவ்வாறு ஈழத்திற் கையாண்டார்கள் என்பதைப்பற்றி அவர் விமர்சனக் கட்டுரைகள் எழுதியுள்ளார். தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், யாப்பியற் சுருக்கம் ஆகிய அவரது கட்டுரைகள் அவரது தெளிந்த அறிவுக்குச் சான்றுகளாம். மெய்க்கூத்து, அபிநயக்கூத்து, நாடகம் என்பன பற்றி விளக்கங்கள்;; தந்து, நாடகச் சுவடிகள் பற்றி விமர்சனக் கட்டுரைகள் எழுதியுள்ளார். முஸ்லிம்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகளை முதலில் எடுத்தியம்பிய தமிழரும் அவரேயாவர். விபுலாநந்தருடைய ஆங்கிலவாணியை நூல்வடிவிலே தந்துள்ளார். பிள்ளைப்பாட்டுப் போட்டியிலே கலந்து முதலாம் தொகுதியிற் பதினாறு பாடல்களுக்கும், இரண்டாம் தொகுதிற் பதினைந்து பாடல்களுக்கும் பரிசு பெற்றுள்ளார். ஈழத்திலும் தென்னகத்திலுமிருந்து வெளிவந்த பல நூல்களுக்கு விமர்சனஞ் செய்துள்ளார். பத்திரிகைகளிலே வெளிவரும் மதிப்புரைகள் விமர்சனங்களாக அமையா விட்டாலும், பீதாம்பரம் அவர்களின் மதிப்புரைகள் உபயோகமான விமர்சனக் குறிப்புக்களைக் கொண்ட தரமான விமர்சனக் கட்டுரைகளாக விளங்குவதை எவராலும் மறுக்க முடியாது.

திருவாசகம் (பண்டிதமணி கதிரேசன் செட்டியார் உரை) என்னும் நூலுக்கு வ. கந்தையா அவர்கள் எழுதிய விமர்சனம் அறிஞருலகிற் பெரும் பரபரப்பினை ஏற்படு;த்தியது. வானொலியிலும், பத்திரிகைகளிலும் பல நூல்களை விமர்சனஞ் செய்துள்ளார். மாணிக்க வாசக சுவாமிகளின் திருக்கோவையாரைச் சாதாரண மக்களும் வாசிப்பதற்கேற்ற வசன நடையில் அமைத்துத் தந்துள்ளார்.

இலங்கைப் பல்கலைக்கழகத்திற் படித்துக் கொண்டிருந்த பொழுது, வீரகேசரியில் ஈழத்து நாவல்களைப் பற்றி எழுதி, க. கைலாசபதி இலக்கிய விமர்சனத் துறைக்குள் நுழைந்தார். சிறுவயதிலே சிங்கப்பூரில் வாழ்ந்ததால், ஈழத்து நாவல் இலக்கிய முயற்சிகளைப் பற்றி முழுவதும் அறியாதிருந்த போதிலும், அவரது கன்னி முயற்சி பாராட்டத்தக்கது தான். சில வருட காலமாக தினகரன் ஆசிரியராகக் கடமை பார்த்தார். அப்பொழுது அவர் ஞாயிறு தினகரனை இலக்கியத் தரத்திற்கு உயர்த்தி, ஆற்றிலிலக்கிய முயற்சிகளுக்குக் கணிசமான இடம் ஒதுக்கிக் கொடுத்துச் செய்துள்ள சேவையை ஈழம் மறக்காது. பல இளம் எழுத்தாளர்களுக்கு உற்சாகங்கொடுத்து, தமது பரம்பரை என்று சொல்லக்கூடிய பல எழுத்தாளர்களை உருவாக்கினார். பாரிய விமர்சனக் கட்டுரையாக அவர் எழுதியுள்ள மகாகவி கண்ட மகாகவி ஏமாற்றத்தையே தருகின்றது. இரண்டு மகாகவிகளையும் நம்மாலே தரிசிக்க முடியாதிருக்கின்றது. நாடும் நாயன்மாரும் என்றும் பல்லவர்கால இலக்கியம் பற்றி ஆராய்ந்து ஒரு சிறுநூலையும் வெளியிட்டுள்ளார். அவர் தமிழ் நாட்டினருக்குத் தெரிந்த ஒர் இலக்கிய விமர்சகராவர். தமிழ் விரிவுரையாளராகக் கடமை பார்க்கும் கைலாசபதி தமது விமர்சனக் கட்டுரைகளிலே, ஆங்கில வசன அமைப்பினைக் கையாளுகின்றார்.

கா. சிவத்தம்பி, அங்க அசைவுகளினாற் சிரிப்பூட்டக் கூடிய நகைச்சுவை நடிகராகவே அறிமுகமானார். பல மேடை நாடகங்களிலும், வானொலி நாடகங்களிலும் நடித்துள்ளார். இருப்பினும், முற்போக்கெழுத்தாளரின் ‘விமர்சனப் பண்டித’ ராகவே எழுத்துத் துறையிற் புகழெய்தினார். தேனருவியில் அவர் எழுதியுள்ள இயக்கமும் இலக்கியமும், அவர் நிறைய வாசிப்பவர் என்பதைக் காட்டுகின்றது. கைலாசபதியினுடையதிலும் பார்க்கத் தெளிவான நடையில் எழுதி, வாசகரைக் கவருகின்றார். இருவரது எழுத்துக்களிலும், தருக்கஞ் சார்ந்த விவாதங்கள் குறைந்தும், மார்க்ஸிச நோக்கு எல்லா இடங்களிலும் விரவியுங் கிடப்பதைக் காணலாம்.

நாவேந்தன், கவிதை – சிறுகதை – கட்டுரையாகிய பல துறைகளிலே உழைத்து வருகின்றார். பிச்சைக்காரன், தலைவர் வன்னியசிங்கம், ஸ்ரீ அளித்த சிறை ஆகிய சிறுநூல்களைத் தந்துள்ளார். வாழ்வு என்னுஞ் சிறு கதைத் தொகுதியையும் நமக்குத் தந்துள்ளார். அதில் இடம் பெற்றுள்ள பதினைந்து கதைகளுள் ‘வாழ்வு’ நல்ல கதையாகும். இருப்பினும், இவரை விமர்சகர் வரிசையிலேதான் சேர்க்க வேண்டியிருக்கின்றது. பிறரது அபிப்பிராயங்களைப் பற்றி இலட்சியஞ் செய்யாது, தமது மனதுக்குட்பட்டதையே எழுதுகின்றார்@ பேசுகின்றார். மேற்கூறிய இருவிமர்சகர்களும் ஒரு துருவமென்றால், நாவேந்தன் அதன் எதிர்துருவத்தைச் சேர்ந்தவர். அவரையே ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த சங்கப் பலகையில் அவர் எழுதியுள்ள சில விமர்சனக் கட்டுரைகள், பக்கச் சாய்வான கண்டனங்களென்று ஒரு சாரார் கருதுகின்றார்கள். அவர் இலக்கிய விமர்சனத்துறையில் தமிழரசுக் கட்சியின் கண்ணோட்டத்தைப் பிரதி பலிக்கின்றார்.

அண்மையில், விமர்சன விக்கிரகங்கள், ‘முற்போக்கு இலக்கியம்’ ஆகிய கட்டுரைகளை எழுதி, விமர்சனத் துறையிலே ‘கலகல’ப்பினை ஏற்படுத்தியதன் மூலம், மு. தளையசி;ங்கம் எழுத்தாளர் கவனத்தை ஈர்த்தார். மேற்கோள்களை ஆங்கிலத்தில் தருவதின் மூலமும் ஆங்கிலமும், தமிழுங் கலந்த புதியதோர் மணிப்பிரவாள நடையைக் கையாள்வதின் மூலமும், சராசரி வாசகர்களைக் கவரத் தவறிவிடுகி;ன்றார். சமகால முயற்சிகளிலிருந்து தமது இலக்கிய விசாரணையைத் தொடங்குதல், இவரிடமுள்ள பிறிதொரு குறைபாடாகும். தீ என்னும் நாவலை விவாகரத்திற்குரிய தாக்கி, பாலெழுச்சிகளை மையமாகக் கொண்டு புனையப்படுங் கதைகளை மேனாட்டார் நோக்கிலே அணுகி, ‘எழுத்து’வில் புதியதோர் எஸ். பொன்னுத்துரையைத் தரிசிக்கின்றார். அக்கட்டுரை விமர்சன விசாரணையிற் சுயபோக்கினை காட்டுகின்றது. தமிழ் விழா – ஒரு வெட்டுமுகம் என்னும் கட்டுரை, சிறிய சன்னலினூடாக உலகினைப் பார்க்கும் அவரது இயல்பினைப் புலப்படுத்துகின்றது. பாலெழுச்சிகளைக் ‘கரு’ப் பொருள்களாக வைத்துக் கொண்டு பல சிறுகதைகளை எழுதியுள்ளார்.

‘எழுத்து’ என்னும் விமர்சன ஏட்டினால் தர்மூ, சிவராமூ முன்னணிக்கு வந்துள்ள விமர்சகராவர். மௌனி, நா. பிச்சைமூர்த்தி, சி. சு. செல்லப்பா ஆகியோரது படைப்புக்களிலே மிகுந்த ஈடுபாடுள்ள அவர், அந்த ஆசிரியர்களுடைய எழுத்துக்களிலே இரசனையை ஏற்படுத்துவதற்காகவே எழுதுவதாகத் தோன்றுகின்றது. விளக்கமற்ற தத்துவக் கோட்பாடுகளையும், விஞ்ஞான உண்மைகளையுங் குழப்பியடித்து, ஏதோ பெரிய விடயங்களைச் சொல்ல வருகின்றார் என்கிற மனமயக்கத்தினை இளம் எழுத்தாளர் மத்தியில் ஏற்படுத்துகின்றார். தெளிவற்ற சொற்குவியல் நடையில் எழுதுகின்றார். கட்டுரையின் நோக்கம் கருத்தினைத் தெரிவிப்பதாக இருக்க வேண்டும். அவ்வாறில்லாது போனால். ஏன் கட்ரைகள் எழுதி வாசகரின் பொறுமையைச் சோதிக்க வேண்டும் என்று அவரைக் கேட்கத் தோன்றுகின்றது. மேலும், ஈழத்து இலக்கிய முயற்சிகளின் மூச்சினை உணராது அக்கரைப் பச்சையிலே மயங்கிக் கிடக்கின்றார், நம் நாட்டு விடுகதைகளைப் போல அமையும் ‘புதுக்கவிதை’ களையும் எழுதியுள்ளார்.

கே. எஸ். சிவகுமாரன், தமிழ் சினிமா தொடக்கம் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் வரை சகலவற்றையும் அறிமுகப்படுத்தும் ஆவல்மிக்கவராகக் காணப்படுகின்றார். இளம் எழுத்தாளருக்கு உபயோகமாகும் வகையில் மேனாட்டுக் கதாசிரியர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். ஆழமான விமர்சன நோக்கில்லாது போனாலும், விமர்சனம் என்னும் எண்ணத்திலே, இரசனைப் போக்கில், பல நூல்களை வாசகருக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். தற்பொழுது, ஆங்கிலப் பத்திரிகையிலே தமிழ் நூல்களை அறிமுகப்படுத்துதல் நற்பணியாகும். விமர்சகனுக்கு, எழுத்தாளரை வாசகருக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் ஒருவித கடன் மைப்பாடும் இருப்பதினாலேதான், இவரை நான் விமர்சகர் வரிசையிலே சேர்த்துள்ளேன்.

இந்தச் சந்தர்ப்பத்திலே, நமது இலக்கிய விமர்சகர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோளை விடுத்தல் பொருத்தமானது. ஒரு விமர்சகன் இலக்கிய மதிப்பீட்டினைச் செய்யும் பொழுது சொந்த விரோத – குரோத, பந்த – பாச உணர்ச்சிகள் குறுக்கிடாது பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். அப்பொழுது தான் நாம் எழுத்தாளருக்கும் வாசகருக்குஞ் சரியான பாதை காட்டலாம். விமர்சகருக்கு வௌ;வேறு பார்வைகள் இருப்பினும், மதிப்பீட்டு அளவுகோல் ஆளுக்கு ஆள் வேறுபடக் கூடாது.

பெண் எழுத்தாளர்கள்;

உலக வரலாற்றிலேயே முதலாவது பெண் பிரதமரை அளித்த பெருமை ஈழநாட்டிற்கு உண்டு. இதன் காரணமாக ஈழத்துப் பெண்கள் எழுத்துத்துறை உட்பட எல்லாத் துறைகளிலும் முன்னணியில் நிற்கின்றார்களென்று வெளி நாட்டினர் நினைப்பதற்கு இடமுண்டு. ஆனால், வேறு துறைகளில் எப்படியோ, எழுத்துத்துறையிலே பெண்களுடைய முயற்சிகள் திருப்திதரத் தக்கனவாக இல்லை. எழுத்துத் துறையிலே, தென்னகப் பெண்மணிகள் முன்னணியில் நிற்கின்றார்களென்பதுண்மையாகும். தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் எந்தப் பத்திரிகையையோ, விசேட வெளியீடுகளையோ புரட்டிப்பார்த்தால் நாம் எத்தனையோ தரமான பெண் எழுத்தாளர்களைச் சந்திக்க முடிகின்றது. ஆனால், ஈழத்தில் பல்கிப் பெருகியுள்ள பட்டதாரிகள் - தமிழாசிரியைகள் என்னும் பகுதியிலிருந்துகூட, விரல்விட்டு எண்ணக்கூடிய எழுத்தாளர்கள் தாமுந் தோன்றவில்லை.

1950 ஆம் ஆண்டில் மிகத் துணிச்சலுடன் மா. மங்கம்மாள் வர்கள் ‘தமிழ் மகள்’ என்னும் பத்திரிகையை நடாத்தினார்கள். ஆன்றமைந்த படிப்பும், அடக்கமுமுடைய பண்டிதை வேதநாயகி அவர்கள் பல நீண்ட கட்டுரைகளெழுதித் தம்மை எழுத்தாளராக நிலை நாட்டினார்கள். ஒரு புலவரின் மகளும், இளமுருகனாரின் துணைவியுமான பண்டிதை பரமேஸ்வரி அவர்க்ள் ‘நாமகள் புகழ் மாலை’க்கு அரியதோர் உரை எழுதியதுடன், ‘கதிரைச் சிலேடை வெண்பா’ விருத்தியுரையும், ‘சிறுவர் செந்தமி’ழுக்குப் பதவுரையும் எழுதியுள்ளார்கள். இவற்றுடன். மங்கையர்க்கரசியார் என்னும் நாடகத்தையும், கதிரை முருகன் கலிப்பாவையும் இயற்றியுள்ளார்கள். கவிநயம், உரை என்பனவற்றை ஆன்றோர் மரபு வழுவாது எழுதுவதில் வல்லவராவர். பண்டிதை சத்தியதேவி துரைசிங்கம் அவர்கள் அழகான மேடைப்பிரசங்கியாக இருந்தும், எழுத்துத் துறையில் இறக்கவில்லை. ஆனால் இன்னொரு பிரபல பேச்சாளரான தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் சமயக் கட்டுரைகள் எழுதுவதுடன் எழுத்துத் துறைக்குக் காலெடுத்துவைத்துள்ளார்கள்.

சிறுகதைத் துறையில் சசிதேவி தியாகராசா, பவானி, சாந்தினி, குறமகள், புதுமைப்பிரியை, குந்தவை, பா. பாலேஸ்வரி, பாலாம்பிகை, நடராசா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

சசிதேவி தியாகராசா அவர்கள் ‘ஈழகேசரி’இ ‘உதயம்’ ஆகிய பத்திரிகைகள் நடாத்திய சிறுகதைப் போட்டிகளிலே பரிசு பெற்றுக் கதாசிரியராகப் பிரபலம் எய்தினார். தெளிந்த நடையையும், காண்டேகரின் சாயல் கொண்ட உவமானங்களையும் இவரது கதைகளிலே காணலாம். ‘வாழ்வு உயர்ந்தது’ என்னும் இவரது சிறுகதை ஈழநாட்டுச் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது. முன்னாள் உணவு அமைச்சின் நிரந்தரக் காரியதரிசி ஒருவரின் புத்திரியான பவானி, பெண் எழுத்தாளர்களுள் மிகவுந் துணிச்சலானவர். மேனாட்டு இலக்கியப் பயிற்சியுடன், ஆண்-பெண் உறவுகளிலேயுள்ள திடுக்கிடும் சம்பவங்களைத் தமது கதைகளிலே கையாளுகின்றார். தமிழ்ப் பண்பாட்டிற்கு ஒவ்வாத, செயற்கையான அதிர்ச்சிகள் இடம்பெறும் அளவிற்கு, கதை சொல்லும் பாணி அமையவில்லை கடவுளரும் மனிதரும் என்னுஞ் சிறுகதைத் தொகுதியைத் தந்துள்ளார்.

சாந்தினி (மகேஸ் வைரமுத்து) ஒரு சில சிறுகதைகளே எழுதியிருப்பினும். தமக்கென ஓர் இடத்தைச் சிறுகதைத் துறையிலே சம்பாதித்துள்ளார். இவரது எழுத்துக்களில் பெண் பாத்திரங்களுடைய உணர்ச்சிகள் மேலிட்டு நிற்கும். ஈழத்தின் சிறந்த பத்துச் சிறுகதைகளைப் பொறுக்கி எடுத்தால், இவர் எழுதியுள்ள நிறைவு என்னுங் கதை நிச்சயமாக ஒர் இடத்தினைப் பெறும்.

குறமகள் (வள்ளி நாயகி) நல்ல பேச்சாளர்@ எழுத்தாளர். தெளிவான நடையில் எழுதுகின்றார். ஐவர் எழுதிய ‘மத்தாப்பு’க் குறுநாவலில் மஞ்சள் வர்ணத்தை வைத்து ஒர் அத்தியாயத்தை நன்றாக எழுதியுள்ளார்.

புதுமைப் பிரியை (பத்மா காந்தன்) ‘சுதந்திரன்’ சிறுகதைப் போட்டியில் ரத்தபாசம் என்னும் தமது கதைக்கு முதற்பரிசு பெற்றதன் மூலம் வாசகருக்கு அறிமுகமானார்.

குந்தவை (மு. சடாட்சரதேவி) நெடுங்காலமாக எழுதி வந்திருப்பினும், ஆனந்த விகடனில் எழுதிய ஒரு முத்திரைக் கதையின் மூலம் பிரபலமடைந்துள்ளார். மேற்படி முத்திரைக் கதை நல்ல கதையாகும்.

பா. பாலேஸ்வரியும், பாலம்பிகை நடராசாவும் பெண் வாசகரை நன்றாகக் கவரக் கூடிய பல சிறுகதைகள் எழுதியுள்ளனர்.

தற்காலத்தில் சிதம்பர பத்தினி, புஷ்பா, ராதிகா, கே. வி. பரம், யோகாம்பிகை வல்லிபுரம், கணேசாள், உமா, கு. பரமேஸ்வரி, ராணி, யாழினி, க. யோகேஸ்வரி ஆகிய பெண் எழுத்தாளர்களுஞ் சிறுகதைத் துறையிலே உழைத்து வருகின்றார்கள். யாழ்நங்கை பல சிறுகதைகளை எழுதியிருக்கின்றார். தற்போது ‘வீரகேசரி’யில் உதவியாசிரியராகக் கடமை பார்க்கின்றார்.

இருப்பினும், சிறுகதைத் துறையிலே பெண் எழுத்தாளர்கள் காட்டும் ஆர்வத்தினை ஏனோ கவிதைத் துறையிற் காட்டத் தவறுகின்றார்கள். ‘சந்தன நங்கை’ கவிதைத் துறையில் ஆற்றி வரும் அமைதியான தொண்டு குறிப்பிடத்தக்கதாகும்.

நூலாசிரியர்கள் வரிசையில், வடபகுதி மாவட்ட வித்தியாதரிசியாகக் கடமையாற்றும் இரத்தினம் நவரத்தினம் அவர்கள் குறிப்பிடத்தக்கவராவர். அவர் அளித்துள்ள இரு நூல்கள் குறளில் உணர்ச்சி வளம் குறிப்பிடத்தக்க நூலாகும். திருமதி மயில்வாகனம் அவர்கள் ஷேக்ஸ்பியருடைய நாடகக் கதைகளை மொழிபெயர்த்துத் தந்துள்ளார்கள். தெய்வீக வாழ்வை ஈ. த. இராசேஸ்வரி மொழி பெயர்த்துள்ளார். கமலா நாகமுத்து வானொலி நாடகத் துறையில் உழைத்து வருகின்றார். இந்திராணி மார்க்கண்டு, தங்கத் தாமரை என்னுஞ் சிறுவர் இலக்கிய நூலொன்றை அளித்துள்ளார்.

தென்னாட்டில் எத்தனையோ பெண் எழுத்தாளர்கள் சிறுகதை நாவலிலக்கியத் துறைகளிலே பிரகாசித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்கிற உண்மையை மட்டும் நமது பெண் எழுத்தாளர்களுக்கு ஞாபக மூட்ட விரும்புகின்றேன்.

இந்தக்கால எல்லையுள் எழுத்துத் துறையின் சகல பிரிவிலும். எண்ணிக்கையைப் பொறுத்தமட்டிலாவது எராளமானவர்கள் வந்துள்ளமையை அவதானிக்கலாம். அத்துடன் சிறுகதை, நாடகத்துறைகளிலே அடைந்துள்ள வெற்றிகளைப் பற்றி ஈழம் பெருமைப்படலாம். இந்தக் கால எல்லையுள் எழுதப்பட்ட சிறுகதைகளுட் தரமானவற்றைப் பொறுப்புணர்ச்சியுடன் தேர்ந்தெடுத்து ஒரு தொகுதி வெளியிடுவோமேயானால், தென்னாட்டார் நாம் அடைந்துள்ள முன்னேற்றத்தை அறிய ஒரு நல்ல வாய்ப்புண்டாகும். வேறெப் பொழுதும் இல்லாத அளவிற்கு எழுத்தாளரது முயற்சியினால், இக்கால எல்லையுள் சிறுகதைத் தொகுதிகளும். கவிதைத் தொகுதிகளும் வெளி வந்திருக்கின்றன. இருப்பினும், வெளிவந்துள்ள தொகுதிகள். பொதுவான இலக்கிய வளர்ச்சியைப் பிரதிபலித்துக் காட்டத் தவறிவிட்டன என்றே கூறவேண்டும்.

1960 இன் பின்னர்

ஈழத்தின் இலக்கிய வளர்ச்சியைப் பற்றி எழுதப் புகுந்த நான், இதுவரையிற் சில பகுதிகளிலே நடைபெற்ற முயற்சிகளைப் பற்றியும், அதனாலேற்பட்ட வளர்ச்சிகளைப் பற்றியும் ஒன்றுமே எழுதவில்லை என்பதை வாசகர்கள் உணர்ந்து இருப்பார்கள்.

பத்திரிகைகளும் பத்திரிகை ஆசிரியர்களும் இலக்கிய வளர்ச்சிக்காக உழைக்க வில்லையா? எழுத்தாளர் சங்கங்கள் எழுத்து ஆர்வத்தினை வளர்க்கவில்லையா? இலங்கைப் பல்கலைக்கழகம் இலக்கிய வளர்ச்சிக்குப் பணியாற்றவில்லையா? ஏன் முஸ்லிம் எழுத்தாளர்களுடைய இலக்கிய முயற்சிகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டிருக்கின்றன? ஒரு கண்ணிலே சுண்ணாம்பும், ஒரு கண்ணிலே வெண்ணெயும் வைக்கும் இச்செயல்தான் நேரிய விமர்சனமா? இவ்வாறான பல கேள்விகள் எழுதல் இயல்பாகும். ஆனால் நான் காரண பூர்வமாகவே சில முயற்சிகளைப் பற்றி இதுவரையில் எழுதவில்லை. இத்தகைய முயற்சிகளை ஒவ்வொரு கால எல்லைக்குள் அடக்கி மதிப்பீடு செய்வது இயலாத காரியமாகும் சிறுகதை – கவிதையாகிய பல துறைகளிலே 1960 இன் பின்னரும் நடைபெற்ற இலக்கிய முயற்சிகளையுஞ் சேர்த்தே சென்ற அத்தியாயத்திற் பூர்த்தியாக்கியுள்ளேன். எனவேதான், வேறு வழிகளில் நடைபெற்ற இலக்கிய முயற்சிகளைப் பற்றி எழுதி இந்நூலினைப் பூர்த்தியாக்கவே, “1960இன் பின்னர்” என்னும் இந்த அத்தியாயத்தை, ஏலவே ஒதுக்கி வைத்தேன்.

‘1960 இன் பின்னர்’ என்கிற தலைப்பு மலைவினை ஏற்படுத்துதல் இயல்பாகும். கால வரையறைகளை வைத்துக் கொண்டு இவ்வரலாற்றினை எழுதும் உபாயத்தினை வரித்துக் கொண்டமையினாலேதான், இத்தலைப்பினை உபயோகிக்கின்றேன். இந்தப் பகுதியில் நான் விசாரணைக்கு எடுத்துள்ள துறைகளில், ஆரம்ப காலந்தொட்டு இற்றைவரை நடந்துள்ள முயற்சிகளையும், அவற்றின் அறுவடைகளையும் விபரித்து உள்ளேன்.

இந்தப் பகுதியை ஆறு உபபிரிவுகளாக வகுத்துள்ளேன். அவையாவன 1. முஸ்லிம் எழுத்தாளர்கள். 2. பத்திரிகைகள். 3. பல்கலைக்கழகம். 4. சங்கங்கள். 5. பிற முயற்சிகள் 6. சாகித்திய மண்டலம்.

முஸ்லிம் எழுத்தாளர்

பலவேறு காரணங்களுக்காக இந்தப் பகுதியைத் தனியாக எழுத வேண்டியிருக்கின்றது. ஈழத் இலக்கிய முயற்சிகளைப்பற்றி அவ்வப்போது எழுதுகையில், விகிதாசாரப்படி முஸ்லிம் எழுத்தாளர்களுடைய பெயர்களைக் குறிப்பிடவில்லையென்று குறைப்பட்டோர் பலர் உளர். குடத்துளிட் தீபமாக மறைந்து கிடக்கும் இலக்கிய முயற்சிகளை தமிழ் வாசகர் மத்தியிலே வைக்க வேண்டிய கடன்மை முஸ்லிம் எழுத்தாளர்களுக்கு உண்டு. இந்தக் கடன்மையினை மறந்து, பல கோஷங்களுக்குப் பின்னாற் சென்று. சமுதாயத்திற்கு ஆற்றவேண்டிய கடன்மைகளை மறந்து செயலாற்றுஞ் சில முஸ்லிம் எழுத்தாளர்களுடைய செயல் நாணந்தமைமையுடையது இந்தப் பொறுப்பற்ற செயலை வருங்கால சந்ததியினர் மன்னிக்க மாட்டார்கள். வரலாறு எழுதப் புகுந்துள்ள ஒரு சிலரும். நேரிய வரலாறு எழுதுவதாகவும் எனக்குப்படவில்லை. சித்தி லெப்பையுடன் முஸ்லிம் மக்களுடைய இலக்கிய முயற்சிகள் ஈழத்திலே தோன்றியதாக வலுப்பெற்ற பிரசாரமொன்று நடைபெற்றது. இதனை மறுத்து, மருதமுனை இ. மீராலெவ்வை அலிமின் ‘ஞானரை வென்றான்’ என்னும் நூலுடன் ஈழத்து இலக்கிய முயற்சிகளின் ஆய்வு நடாத்தப்பட வேண்டும் என்றும் எழுதினார்கள். ‘ஞானரை வென்றான்’ அறுபத்திரண்டு முடிவு பெற்ற பாடல்களைக் கொண்ட சிறு நூலாகும். அது எழுதப்பெற்ற காலத்தை நிர்ணயிக்கப் போதிய சான்றுகளுமில்லை இவ்வாறாக வட்டார நலன்களை முன்வைத்தே சரித்திரம் எழுதும்பொழுது, உண்மையை அறிய முடியாது வரலாற்று மாணாக்கன் மலைவு கொள்ளுகின்றான்.

முஸ்லிம் பெருமக்களுடைய இலக்கிய முயற்சிகள் பற்றி எழுதுவதற்குச் சிலகாலமாகவே செய்திகளும் பழைய புத்தகங்களுஞ் சேகரித்து வந்தேன். பல நண்பர்கள் மெய்வருத்தம் பாராது எனக்குப் பூரண ஒத்துழைப்புத் தந்தார்கள். அவர்களுள் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர் தெல்தொட்டை, அன்பர் ஆ. பி. நூ. அல்லாபிச்சை அவர்களேயாவர். அவர் எண்ணிறைந்த குறிப்புக்களைத் தந்துதவியதுடன், பழைய புத்தகங்களையும் பார்வைக்குத் தந்துள்ளார்.

இப்பகுதியில், பல சந்தர்ப்பங்களிலே விமர்சன நோக்கினைக் காரண பூர்வமாகவே தவிர்த்துள்ளேன். இலக்கிய மதிப்பீடு முஸ்லிம் நண்பர்களுடைய மத உணர்ச்சிகளைப் புண்படுத்தக்கூடும். இன்னொரு சங்கடமும் எனக்கிருக்கின்றது. நான் குறிப்பிடுஞ்சில நூல்கள் அறபு எழுத்துக்களிலே எழுதப் பெற்றவையாகும். இதன் காரணமாக அவற்றை என்னால் முழுமையாக வாசிக்க இயலவில்லை. சில முஸ்லிம் நண்பர்களுடைய உதவியுடன் சிலவற்றைத் தமிழாக்கி வாசித்துள்ளேன். இங்கு இடம் பெற்றுள்ள அறபுத்தமி;ழ் மாதிரிப் படம் எனது இடர்ப் பாட்டினைச் சுயமே விளங்கும். இப்பதிப்பில் இப்படம் இடம் பெறவில்லை.

முஸ்லிம் எழுத்தாளர் அறபு எழுத்துக்களிலே உள்ள தமிழ் நூல்களைத் தமி;ழ் எழுத்துக்களிலே எழுதித் தந்தால், நாமும் அவற்றின் நயங்களைக் காணுதல் முடியும். இந்தப் பணியினை முஸ்லிம் அறிஞர்களுடைய கவனத்திற்கு விட்டு விடுகின்றேன்.

இச்சந்தர்ப்பத்தில், ‘கொழும்பு ஆலிம்’ அவர்கள் இயற்றிய அறபுத் தமிழ் நூல்களில் ஒன்றினைத் தமிழில் ‘மிஃராஜ் என்னும் நபி பெருமானவர்களின் தெய்வீக வானுலக யாத்திரை’ என்னும் பெயரில் அல்லாமா மௌலவி மீறான் சாகிபு குமாரர் பாணந்துறை, எம். எஸ். எம். அப்துற் றஊபு (தக்யா தம்பி) அவர்கள் வெளியிட்டுள்ளமையை முன்மாதிரியாகக் கொண்டு இப்பணியினை மேற்கொள்ளலாம்.

பல முஸ்லிம் எழுத்தாளர்களுடைய வேண்டுகோளுக்கு அமையவே இப்பகுதியைத் தனியாக எழுதுகின்றேன். இப்படிக் கூறுபடுத்தி எழுதுவதில் என்னுடைய மனம் மிகவும் வேதனைப்படுகின்றது. மேலும், நான் முஸ்லிம் எழுத்தாளர்களை இரண்டாந்தரமான எழுத்தாளர்கள் என்று தனியாக எழுத முற்பட்டேன் என்று சில முஸ்லிம் எழுத்தாளர்கள் விதண்டாவாதமுஞ் செய்தல் கூடும். என்னுடைய அவதிகளை உணர்ந்து. நேரிய வரலாற்றினை எழுதமுற்படும் என்னுடைய நோக்கினை, முஸ்லிம் பெருமக்கள் அநுதாபத்துடன் வரவேற்பார்களென்கிற நம்பிக்கை எனக்குண்டு.

தமிழிலக்கிய வளர்ச்சிக்கு, சீறா தந்த உயர் தனிப் பாவலர் உமறுப் புலவர் உட்படப் பல முஸ்லிம் அறிஞர்களும், கவிஞர்களும், எழுத்தாளர்களுஞ் செய்துள்ள தொண்டினைத் தமிழிலக்கியப்பரப்பு மறந்தது கிடையாது@ மறுத்தது கிடையாது@ மதவேறுபாடுகளைக் கடந்த ஒற்றுமையை நிலை நாட்டுந் தனிச் சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு. தமிழிலக்கிய வரலாற்றினை அறிந்தோர் இதனை அறிவர். பௌத்தமும் சைனமும் வடபுலத்திலிருந்து தென்னகத்திற்கு வந்தன. இருப்பினும், பௌத்தப் புலவரும், சைனப் புலவரும் இயற்றியநூல்கள்தமிழ் நூல்களென்பதை மறுப்பதற்கில்லை. மேனாடுகளிலிருந்து கிறீத்துவத்தைப் பரப்பத் தமிழகத்திற்கு வந்த வீரமா முனிவர், காட்டுவெல்டு ஐயர், போப்பையர் முதலிய பேரஞறிஞர்கள் தமிழுக்குச் செழுமையூட்டியிருக்கிறார்கள். தேம்பாவணி தமிழ்த் தாயை அணிசெய்யும் முத்தாரமாகும். தமிழ் இலக்கிய மரபிலே திளைத்த உமறுப்புலவர், பாலை வனங்களைக்கூடத் தமிழ்ச் சுவையுடன் சோலை வனங்களாகச் சீறாவிலே சித்திரித்துள்ளதைக் காணுதல் கூடும். உண்மை இவ்வாறிருக்க, ‘எங்களைத் தனியாகப் பிரித்துத்தான் இலக்கிய மதிப்பீடு செய்தல் வேண்டும்’ என்று ஒரு சில முஸ்லிம் எழுத்தளார்கள் வற்புறுத்தி வருதல் சரியானதா என்பதை அவர்களே புனராலோசனை செய்து பார்த்தல் விரும்பத்தக்கது. இப்படி அவர்கள் மதவாரியாகத் தமிழிலக்கிய முயற்சிகளைப் பிரித்துக் கொண்டால் தமிழுக்கும் நட்டம்@ அவர்களுக்கும் நட்டம்@ என்பது எனது அபிப்பிராயமாகும். எனது அபிப்பிராயத்திற்கு ஆதாரமாக ஒரு சம்பவத்தை ஈண்டு குறிப்பிட விரும்புகின்றேன். இத்தகைய பிரிந்து செல்லும் ஒரு மனோபாவத்தினாலே, தமிழக முஸ்லிம் எழுத்தாளரது இலக்கிய முயற்சிகள் பெருமளவிற் பாதிக்கப்பட்டன. பாகிஸ்தான் தனியாகப் பிரிய வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்ற பொழுது, தமிழிலக்கிய முயற்சிகளும் இனணந்ததாகவே கொள்ளப்பட்டது. இதனால், முஸ்லிம் எழுத்தாளரது படைப்புக்களைச் சாய்புத்தமிழ் என ஒதுக்கும் நிலையேற்பட்டது. ஈழத்து முஸ்லிம் மக்கள் ஆங்கிலங் கற்பதினால் மத அநுட்டானங்கள் தளர்ந்து விடுமென்று தவறாக எண்ணியதன் பயனாக, கல்வித் துறையில் முஸ்லிம் மக்கள் ஒரு நூற்றாண்டு காலம் பின் தங்கி நின்றார்களென்பதை முஸ்லிம் பெரியார்கள், பிற்காலத்திலே ஒப்புக் கொண்டார்கள். இவ்வெதார்த்த நிலையை. ‘முஸ்லிம்களின் எழுத்துக்களைத் தனியாக மதிப்பீடு செய்ய வேண்டும். அவற்றிற்குத் தனிப் பரிசில்கள் வழங்கப்பட வேண்டும்’ என்று பிரிவினைக் கோஷம் எழுப்பும் நண்பர்கள் சிந்தித்துப் பார்க்கக் கடவர்.

ஈழத்து முஸ்லிங்களின் இலக்கிய முயற்சிகளைப் பற்றி வரலாற்றுக்கட்ரைகள் எழுதப் புகுந்துள்ள நண்பர்கள் அரசியற் காரணங்களினாலே போலும் சித்தி லெவ்வைக்கு ‘இலக்கிய’ முக்கியத்துவம்கொடுத்து எழுதுகின்றார்கள். அவருக்கு முன்னர் சீறா சரிதத்தை 763 இசைப் பாடல்களாக்கி 1878 ஆம் ஆண்டில் காரண மாலை என்னும் நூலாக, காலி செய்குத் தம்பிப் புலவர் வெளியிட்டார். அதே ஆண்டில், கண்டி செய்கு முகமது லெவ்வை ஆலிம் புலவரது தீன் மாலை என்னும் அரபுத் தமிழ் நூலும் வெளியாயிற்று. ‘ஞானரை வென்றான்’ என்னும் நூலும் இதற்கு முன்னர் இயற்றப்பட்டதாக அறியக் கிடக்கின்றது.

கண்டி முகமது காசிம் சித்திலெப்பை ஒருநியாய துரந்தரராவர். தமது சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்த சீர்திருத்தச் செம்மலாவர். பிற்காலத்தில் ரி. பி. ஜயா அவர்கள், முஸ்லிம் மக்களது கல்வி முன்னேற்றங்கருதி உழைத்தது போன்று, அக்காலத்தில் சித்திலெப்வை பட்ட அரும்பெரும் பாடுகள் நம்மை வியப்பிலாழ்த்துகின்றன. முஸ்லிங்களுடைய பிரச்சினைகளை எடுத்தியம்ப முஸ்லிம் நேசன் (1883) என்னும் பத்திரிகையை நடாத்தினார். இதுவே ஈழத்தில் வெளியான முதலாவது முஸ்லிம் தமிழ்ப் பத்திரிகையென அறியக்கிடக்கின்றது. முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காகத் தம்மை அர்ப்பணித்த சித்திலெப்பை, என்றுந் தம்மை ஓர் இலக்கியக்காரன் என்று நினைத்தது கிடையாது. அவரது சகோதரர் கவிஞராக இருந்தும், கவிதை கற்பனை வளத்தில் ஊறுவதென்றும், கற்பனையிலே ஈடுபட்டால் சமூக சீர்திருத்த வேலைகளை எதார்த்தமாகச் செய்து முடிக்க இயலாது என்றும் அவர் நம்பினார். அவர், சுறூத்துஸ்ஸலாத்து, அஸன் பேயுடைய கதை, அபுநுவாஸின் கதை, ஞான தீபம், அஸ்ராறுல் ஆலம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். அவருடைய தமிழ்நடையிலே அறபுச் சொற்களும். பேச்சு வழக்கும் விரவிக் கிடப்பதை அவதானிக்கலாம். அறபுத் தமிழிலும் நூல்கள் இயற்றியுள்ளார். அவரது நூல்கள் அவரது தமிழ்ப் புலமையையோ, இலக்கிய ஆற்றலையோ வெளிப்படுத்தத் தவறியுள்ளன. 1892 ஆம் ஆண்டில் வெளியான ‘அஸ்ராறுல் ஆலம்’ என்னும் நூலுக்கு முஸ்லிம் மக்களிடையே எதிர்ப்புத் தோன்றியது. எதிர்ப்பினை அடக்கச் சித்திலெவ் வைக்குச் சார்பாக நூல்கள் எழுதியவர்களுள் கண்டி தர்ஹா வித்துவான் - மெய்ஞ்ஞான அருள் வாக்கியர் அப்துல் காதிர் புலவர் குறிப்பிடத் தக்கவராவர்.

ஈழத்து முஸ்லிம் மக்களுடைய இலக்கிய முயற்சிகளின் கொடுமுடியாக அப்துல் காதிர் புலவரே துலங்கிக் கொண்டிருக்கின்றார். தமிழிலக்கிய மரபிலே திளைத்த அணியும் யாப்பும் சீர்மையுடன் அலங்கரிக்கும் செய்யுள் நடையையே. அவர் தமது இலக்கிய நடையாக வரித்துக் கொண்டார். தமது ஐம்பத்திரண்டு வயதிற்குள் முப்பதுக்கு மேற்பட்ட நூல்கள் இயற்றியுள்ளார். அவர் யாழ்ப்பாணத்துப் பொன்னம்பலக் கவிராயருடன், மதுரைத் தமிழ்ச் சங்கத்துடனும் தொடர்புடைய தமிழறிஞராவர். அவர் இயற்றியுள்ள நூல்கள் சிலவற்றின் பெயர்களைக் குறி;ப்பிட்டாலே, அவர் தமிழிலக்கியக் கவிதைத் துறையிலே கொண்டிருந்த ஆழ்ந்த புலமையை ஊகித்தறிந்து கொள்ளலாம். திரு மதீனத்து மாலை, கண்டிநகர்ப் பதிகம், திருமயம் காட்டுபாபாசாகிபு காரணக்கும்மி, ஞானமணித் திரட்டு, திரு பகுதாது அந்தாதி, கண்டிக் கலம்பகம், மெய்ஞ் ஞானக் குறவஞ்சி, மெய்ஞ்ஞானக் கோவை, கோட்டாற்றுப் புராணம். வழிநடைச் சிந்து ஆகியன குறிப்பிடத்தக்க நூல்களாம். 1909 ஆம் ஆண்டில் அவரால் இயற்றப்பட்ட சந்தத் திருப்புகழ் என்னும் நூல் அறிஞருலகின் ஏகோபித்த பாராட்டுதலைப் பெற்றது. இந்நூலுக்கு மதுரையைச் சேர்ந்த முத்துவாலை வெண்பாப்புலிக் கவிராயர் பின்வருஞ் சாற்றுக்கவியினை அளித்துள்ளார்.

சீருலவு முமற் புலவர் சீறா நூலும்
சிறந்த விரா மாயணங்கம் பன்சொன் னூலும்
பேருலவு மருணகிரி புகழுங் காசிம்
பெரும்புலவோ ரவர்கடிருப் புகழும் போல
மேருலவு புயத்தனல்லா பி;ச்சை செய்த
வேள்வியப்துல் காதிறியற் கவிஞன் சொன்ன
வேருலவு திவிய சந்தத் திருப்பு கழ்ப்பா
வினியநவ ரசமதுரத் தின்ப மாதோ!

இராமாயணம், சீறாப்புராணம் ஆகிய நூல்களுக்கு அவர் ஆற்றிய இரசனைப் பிரசங்கங்களைக் கேட்டு மகிழ்ந்த யாழ்ப்பாண மக்கள் அவருக்கு ‘வித்துவ தீபம்’ என்னும் விருதினைச் சூட்டிபர் பரிசில்களும் வழங்கினர். அவரது கவிதா சக்திக்குச் சான்றாக அவரால் இயற்றப்பட்ட ஒரு விருத்தத்தினைக் கீழே தருகின்றேன்:

அத்துவி தத்தின் சோதி
யடங்கலு மாகி வெண்மை
முத்துரு வாகி மஞ்ஞை
முதமறைக் கனியாய்க் கிந்தீல்
சித்துரு வாகி ஆதம்
சிரத்தொளி வாகி யார்க்கும்
முத்தியின் வித்தாய் நின்ற
முஹம்மது நபியுல் லாவே.

முஸ்லிம் புலவர்களது இலக்கிய ஊற்று வற்றிவிடாது. தொடர்ச்சியா இலக்கிய முயற்சிகள் நடைபெற்றன. குத்புநாயக நிர்யாண மான்மியம் இயற்றிய யாழ்ப்பாணம், மு. சுலைமான் லெவ்வைப் புலவர், நாலாயிரம் கவிதைகளைக் கொண்ட முகைதீன் புராணம் இயற்றிய யாழ்ப்பாணம் பதுருதீன் புலவர், சன்மார்க்க இலகு போத வினாவிடை எழுதிய யாழ்ப்பாணம் மீரான் முனைதீன் புலவர், ஆரண முகமதின் காரணக்கும்மி இயற்றிய யாழ்ப்பணம் சுல்தான் தம்பிப்பாவலர். ஞானத் திருப்புகழ் இயற்றிய அக்குறணை இஸ்மாயில் லெவ்வை, மீரான் மாலை, மெய்ஞ்ஞானத் தூது முதலியன இயற்றிய வேருவலை செய்கு முஸ்தபா ஆலிம் ஒலியுல்லாப் புலவர், மீமன் கப்பல் கும்மி முதலியன இயற்றிய திருகோணமலையைச் சேர்ந்தவரும், மதுரைத் தமி;ழ்ச் சங்க உறுப்பினருமான செய்கு மதார் புலவர், துற்றதுல் மபாஹிர் இயற்றிய கொழும்பு முகம்மது அசன், மங்கள வாழ்த்து இயற்றிய தெல்தொட்டை கே. எஸ். முகம்மது முகைதீன், ஞானாந்தரத்தினம் இயற்றிய கொழும்பு கா. அ. அப்துல் கனிசாய்பு, நாச்சியார் பதிகம் இயற்றிய நாவலப்பிட்டி அப்துற்றஹ்மான் ஆராய்ச்சியார், சன்மார்க்க வினாவிடை இயற்றிய கலகெதரை நூர்முகம்மது, மெய்ஞ்ஞான பரிபூரணக் களஞ்சியம் முதலியன இயற்றிய கண்டி சாது கா. பீர்பாவா (சூபி), கலிமாத் திறவுகோல் முதலியன இயற்றிய காத்தான் குடி எம். ஏ. ஹாமிது லெவ்வை ஆலிம், மெய்ஞ்ஞான ரத்தினவலங்காரக் கீர்த்தனம் இயற்றிய கொழும்பு ஹம்ஸா லெவ்வைப்புலவர், மின்ஹதுல் அத்பால் முதலிய அறபுத் தமிழ் நூல்கள் இயற்றிய கொழும்பு ஆலிம் என்றழைக்கப்படும் செய்யிதுமுகம்மது ஹஸரத்து, நவரத்தின புராணம் இயற்றிய மூதூர் முகைதீன் பிச்சைப் புலவர், மணமங்கள மாலை இயற்றிய அட்டாளைச் செனை அப்துற் றஹ்மான் லெவ்வை ஆலிம் புலவர், ஒருபாவொருபஃது முதலிய இயற்றிய அக்கரைப்பற்று முகமது றாவிப்புலவர் கைப்புட்பச் சிசுமாலை இயற்றிய அக்கரைப்பற்று உமர் லெவ்வைபர் புலவர், ரசூல் நாமா முதலிய அறபுத் தமிழ் நூல்களியற்றிய தெல்தொட்டை, கதீப் எ. அ. ஆதம் லெவ்வை, மனோரஞ்சிதத் தெம்மாங்க இயற்றிய ராகலை, துவான் கிச்சில் ஜப்பார், சுகிர்ந்த மெஞ்ஞானக் கீர்த்தம் இயற்றிய மன்சூர் அப்துல் புலவர், வேதவிளக்க ஆராட்டு முதலிய அறபுத்தமி;ழ் நூல்கள் இயற்றிய கொழும்பு, செய்கு அப்துற்; றஹ்மான் ஆலிம், துன்பம் தவிர்க்கும் இன்பப் பிரார்த்தனை இயற்றிய கொழும்பு, அப்ஸலுல் உலமா பி. கே. எம் அப்துல்காதிர் பாகவி, ஆசாரக் கோவை இயற்றிய கற்பிட்டி அப்துல் மஜீது புலவர் வேதாந்த விளக்கம் முதலிய இயற்றிய மாத்தளை செய்கு சுலைமானுல் காதிரி, தன் பீஹ{ஸ் ஸாலிகீன் இயற்றிய ஹபீபு முகம்மது ஆலிம், உறுதி உபதேசமாலை முதலியன இயற்றிய மௌலானா செய்னுல் ஆபிதீன் வலியுல்லாஹ், அருமறைச் சிறப்பும் ஆநந்தக் களிப்பும் இயற்றிய காத்தான்குடி செய்யிது ஸக்காபு பாறுல் அலவி மௌலானா, காரண ரஞ்சத மஞ்சரி முதலிய தமிழ் நூல்களியற்றிய கொழும்பு ஹக்கீம் ம. அ. கா. அப்துற் றஹ்மான், மழைக் கவிகளும் தனிப்பாடல்களும் இயற்றிய சம்மாந்துரை இஸ்மா லெவ்வைப் புலவர், நவவண்ணக் கீhத்தனம் இயற்றிய புத்தளம் காரைதீவு செய்கு அலாவுதீன் புலவர், செய்கு அஸ்ரப் ஒலிக்கும்மி இயற்றிய வேருவலை அகமது லெவ்வை மரைக்கார், ஆஷிக்கு அவதார மாலை இயற்றிய ஒலுவில் தா. ம. செய்கு இப்றாஹிம் மௌலானா. உம்ததுல் இஸ்லாம் எழுதிய காத்தான்குடி முகம் மது காசிம் ஆலிம், நல்வழிக் கவிதைகள் முதலியன இயற்றிய அப்துல்லா புலவர், மழைக் காவியங்கள் பாடிய பொத்துவில் மீரா லெவ்வை, தோத்திர புஞ்சம் இயற்றிய மக்கோனா அப்துல் ஹமீது புலவர் ஆகியோர் தொண்டாற்றினார்கள்.

இவர்களுடன் இருவரை விசேடமாகக் குறிப்பிட வேண்டும். ஒருர் புகழ்ப்பாவணி இயற்றிய சு. மு. அசனா லெப்பை ஆலிம் புலவராவர். தமிழ் அறபு ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளுங் கற்று முதலாவது முஸ்லிம் எழுதுவினைஞராக உத்தியோகம் பார்த்த அவர்கள், ஆறுமுக நாவலர் தமி;ழ்; மூலம் சைவத்தை வளர்த்ததைப் போன்றே, அவர்களுந் தமிழ் மூலம் இஸ்லாத்தை வளர்க்க உழைத்தார்கள். மற்றவர், சர்வ சமய சமரசத்திற்கு உழைத்த மாத்தறை முகம்மது காசிம் புலவராவர். அவருக்கு அறபு – தமி;ழ் - சிங்களம் ஆகிய மும்மொழிகளிலுந் தேர்ந்த புலமை இருந்தது. அறபு இலக்கியம் ஒன்றினைக் கவிப்பரிவட்டம் என்னும் பெயரிலே தமிழாக்கியுள்ளார். சர்வசமய சமரசக் கீர்த்தனைகள், கதிர்காமக் கடவுளின் காரணக் கும்மி உட்பட ஏழு தமி;ழ் நூல்களை இயற்றியுள்ளார். அத்துடன் ஒட்ருன்ன சக சிங்காசனய (முடியும் சிம்மாசனமும்) என்னுஞ் சிங்கள நூலையும் இயற்றியுள்ளார்.

மேலே குறி;ப்பிடப்பட்டுள்ள புலவர் பெருமக்கள் எல்லோரும் ஒரே தரத்தினரல்லர். சிலரது நூல்கள் மிகவுஞ் சிறியன@ சிலரது நூல்கள் நமக்குக் கிடைப்பனவாக இல்லை. இருள் சூழ்ந்த இந்நிலையைப் போக்க, இத்துறையில் ஆராய்ச்சி செய்து, கட்டுரைகள் எழுதித் தெளிவினை ஏற்படுத்த வேண்டியது முஸ்லிம் எழுத் தாளரது தலையாய கடன்மையாகும்.

‘முஸ்லிம் நேசன்’ முதலாவது நடாத்தப்பட்ட முஸ்லிம் பத்திரிகையாகும். அதனைத் தொடர்ந்து 1893 ஆம் ஆண்டில் எல். எம். உதுமான் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இஸ்லாம் மித்திரன் சில ஆண்டுகள் தினசரியாக நடாத்தப்பட்டது. பின்னர்சில ஆண்டுகள் வார இதழாக அதிக பக்கங்களுடன் வெளியாகியது. இப்பத்திரிகை இஸ்லாமியரின் சமய – அரசியல் - சமூக – பொருளாதார விடங்களில் அதிக சிரத்தை கொண்டு உழைத்தது. இப்பத்திரிகையின் தாபக ஆசிரியரான எல். எம். உதுமான் அவர்கள் 1932-ஆம் ஆண்டு ஆவணி மாதம் 25 ஆந் தேதி காலமானார்கள் அதன் பின்னரும் அவரது குமாரர்களான சுக்ரி, ரஸீன் ஆகிய இருவரும் ‘இஸ்லாம் மித்திரன்’ பத்திரிகையை 1945 ஆம் ஆண்டு வரையிலும் தொடந்து நடாத்தினார்கள். இவர்கள் ‘முஸ்லிம்’ என்ற பெயரில் ஒரு சதவிலையில் ஆங்கில ஏடொன்றையும் நடாத்தினார்கள். முஸ்லிம் பாதுகாவலன் என்னுந் தமிழ் ஆங்கிலப் பத்திரிகையை ஐ. எல். எம் அப்துல் அஸீஸ் அவர்கள் வெளியிட்டார்கள். இப்பத்திரிகை சேர். பொன். இராமநாதனின் அரசியற் கொள்கைகளை எதிர்த்தது. மார்க்க அறிஞர்களும் மௌலவிகளுமாகச் சேர்ந்து அல் - இல்ம் என்னும் மார்க்கப் பத்திரிகையை நடாத்தினார்கள். அதன் ஆசிரியர் என். டி. அப்துற் றஸ்ஸாக் (ஜமாலி) ஆவர். அல்இஸ்லாம் என்னுஞ் சீர்திருத்தப் பத்திரிகை காலஞ் சென்ற ஓ. கே. மொஹிதீன் சாகிபு அவர்களால் நடாத்தப் பெற்றது.

ஆனால், 1946 ஆம் ஆண்டிலே தோன்றிய இஸ்லாமிய தாரகைதான் ஈழத்து முஸ்லிம் எழுத்தாளர் மத்தியிலே மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது என்று சொல்லலாம். கே. எம். முகம்மது சாலிஹ் அவர்களும் ஓ. கே. மொஹிதீன் சாகிபும் ஆசிரியர்களாகக் கடன்மையாற்றினர். வாரப் பத்திரிகையான இஸ்லாமிய தாரகை பாகிஸ்தான் கோரிக்கையையும், பின்னர் பாகிஸ்தானுயும் ஆதரித்தமையால் அதற்கு இந்தியாவிலே தடைவிதிக்கப்பட்டது. ஒரு சமயம் வாரவாரம் இருபதினாயிரம் பிரதிகள் விற்பனையான அப்பத்திரிகை, படிப்படியாகத் தரங்குறைந்து, 1950 ஆம் ஆண்டளவில் இயற்கை எய்தியது.

‘இஸ்லாமிய தாரகை’யில் கடன்மையாற்றிய கே. எம். எம். சாலிஹ், தாரகை என்னும் பத்திரிகையை 1953 ஆம் ஆண்டில் ஆரம்பித்தார். ‘தாரகை’ யுடன் தொடர்பு கொண்டிருந்த பல எழுத்தாளர்கள் தற்காலத்தில் வேறு பத்திரிகைகளிலே பிரகாசித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஏ. எல். எம். கியாஸ் இருபது நீண்ட ஆண்டுகளாகத் ‘தினகர’னிலே கடமையாற்றுபவர். ‘முஸ்லிம் மஞ்சரி’ அவரது மேற்பார்வையில் வெளிவருகின்றது. ஆரம்ப காலத்தில், ‘தினகர’னை முஸ்லிம் வாசகர் மத்தியிலே அறிமுகப்படுத்த கியாஸ் சலியாது உழைத்தார். அவரது உழைப்பின் பயனாகத்தான் ‘தினகரன்’, முஸ்லிம் மக்கள் மத்தியிலே செல்வாக்குப் பெற்றது என்றால் மிகையாகாது.

எச். எம். பி. முஹிதீன் பல வருடங்களாகக் கம்யூனிட் கட்சியின் பத்திரிகையான தேசாபிமானியின் ஆசிரியராகக் கடமையாற்றியவர். இப்பொழுது தொழிலாளியின் ஆசிரியராவர். பல சிறுகதைகளையும் எழுதியுள்ளார். ‘கார்க்கியைக் கண்டேன்’ என்னுஞ் சிறு நூலின் ஆசிரியராவர்.

டி. எம். பீர். முகம்மது மலைநாட்டிலே நடாத்தப்பட்ட பல பத்திரிகைகளிலே ஆசிரியராகக் கடன்மையாற்றியவர். பல சிறுகதைகளை எழுதியிருக்கின்றார். அவற்றுள் ஆறு சிறுகதைகள் ‘சிறுகதைகள் 6’ என்ற பெயரில் நூலுருவம் பெற்றுள்ளது. சதியில் சிக்கிய சலீமா, கங்காணி மகள் ஆகிய இரண்டும் அவரது நாவல்களாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்புடைய மேடைப் பேச்சுக்களினால், ‘ஈழத்து அண்ணா’ என்று அவரது அபிமானிகளால் அழைக்கப்பட்டார்.

எம். எச். எம். இப்றாஹிம் ‘சுதந்திர’னிலும் ‘வீரகேசரி’யிலும் உதவியாசிரியராகப் பல ஆண்டுகள் உழைத்தவராவர். பல கட்டுரைகளை எழுதியிருக்கின்றார். எஸ். எம். எம். மொஹிதீன், லங்கா ஜோதி என்னும் பத்திரிகையிலும் வேறு பத்திரிகைகளிலும் ஆசிரியராகக் கடன்மை யாற்றியுள்ளார்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும், ‘தாரகை’ப் பத்திரிகையுடன் தொடர்பு கொண்டவர்களாகவோ அப்பத்திரிகை உருவாக்கியவர்களாகவோ விளங்குகின்றார்களென்பது கவனிக்கத்தக்கது. நவயுகம். ‘பால்யன்’ ஹனீபா அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. வார இதழான அஃ;து ஆரம்பகாலத்தில் விறுவிறுப்பாக வெளிவந்து, இறுதியில் அரசியல் சிக்கலில் மாட்டி மறைந்து விட்டது. இவர்களுடன் பத்திரிகையாளரான வேறு சிலரையுங் குறிப்பிடுதல் பொருத்தமுடைத்து. ஆரம்ப காலத்தில் ஈ. வே. ராவுடன் அரசியல் தொடர்பு கொண்டிருந்த வி. நூர்முகம்மது, தோழன் என்னும் மாதப் பத்திரிகையின் ஆசிரியராவர். இதுவரை முஸ்லிம் எழுத்தாளர்களால் நடாத்தப்பட்ட மிகச் சிறந்த மாதப் பத்திரிகை ‘தோழன்’ என்பது பல அன்பர்களுடைய அபிப்பிராயமாகும். ‘அருள்ஜோதி’ என்னும் மாதப் பத்திரிகையை எம். ஏ.சி. ஜெயிலானி நடாத்தினார். மாதப் பத்திரிகைகளான தீனுல் இஸ்லாம் (மௌலவி எம். கே. எம். மன்சூர் நூரி) நேர்வழி (மௌலவி எம். ஐ. அப்துல் ஹமீது – நூரி) சமுதாயம் (எஸ். எம். ஹனீபா), மாணவன் குரல் (எம். ப. எம். மாஹிர்) ஆகியன குறிப்பிடத்தக்கன. ஏ. எம். ஹனியா வினால் நடாத்தப்பெற்ற மாணவ முரசு என்னுஞ் சிறுவர் பத்திரிகை இளம் எழுத்தாளரை ஊக்குவித்தது.

ஞானக்கடல் என்னும் பத்திரிகையை நடாத்திய அன்பர் பூபதிதாஸர் தற்பொழுது ‘வீரகேசரி’யின் இஸ்லாமிய உலக மலர்ப் பகுதியின் ஆசிரியராக நற்பணி புரிந்து, இஸ்லாமிய இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து வருகின்றார்.

‘தினகரன்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராகக் கடன்மையாற்றும் செய்னுல் ஹீஸைன் சிறந்த பிரயாணக் கட்டுரையாசிரியராவர். அவரது “கோடையில் உல்லாசம்”, ‘நாமறிந்த நாடுகள்’ ஆகிய பிரயாணக் கட்டுரைகள் பல்லாயிரக்கணக்கான வாசகர்களைக் கவர்ந்தன. ‘ஆயிஷாவுக்குக் கல்யாணம்’, ‘பிள்ளைகுட்டிக்காரர்’ ஆகிய முஸ்லிம் தொடர் சித்திரங்களை எழுதிப் புதிய துறைகளை முஸ்லிம் எழுத்தாளருக்கு வகுத்துக் காட்டியுள்ளார்.

அகில இலங்கை முஸ்லிம் வாலிப சங்க இயக்கம் வாலிப முஸ்லிம் என்னும் மாதப் பத்திரிகையை நடாத்தி இளம் எழுத்தாளர்களை உற்சாகப்படு;த்தியது.

முஸ்லிம் பத்திரிகையாளர்களை அடுத்து, நூலாசிரியர்களையும். கட்டுரையாளர் களையுஞ் சந்திப்போம்.

மௌலவி உமர் ஹஸரத்து அவர்கள் ‘முஸ்லிம் மக்களின் சி.க.வ என்று பெருமையுடன் அழைக்கப்படுகின்றார்கள். அவர் பன் மொழிப்புலமை பெற்ற அறிஞராவர். நபிபெருமானாரின் நாற்பது மணி மொழி (ஹதீது) களைத் தமிழில் குறள்வெண்பா வடிவில், நாற் பய நந்நூல் என்கிற பெயரில் வெளியிட்டுள்ளார். அவரது தமி;ழ்ப் புலமைக்கு அந்நூல் சான்று பகருகின்றது. அவர் மகரகம அறபிக் கல்லூரிக்கு அதிபராயிருந்தவர். ஸக்கரிய்யா ஹஸரத்து ‘அஹ்காமுல் ஹாஜ்’ என்னும் ஹஜ்யாத்திரை சம்பந்தமான ஒருநூலை வெளியிட்டிருக்கிறார்கள். வெலிகாமம், வெலிப்பிட்டியைச் சேர்ந்த செய்யிது யாஸீன் மௌலானா அவர்களுஞ் சில நூல்களை இயற்றியுள்ளார்கள்.

தற்பொழுது, அரசாங்க சேவை ஆணைச்சபை உறுப்பினராகப் பணிபுரியும் அல்ஹாஜ் எ. எம். எ. அஸீஸ், ஈழத்தின் முதலாவது முஸ்லிம் சிவில் சேவையாளருமாவர். முஸ்லிம் மாணவர்களுக்கு வெளிநாட்டுப் படிப்பு வசதிகயைப் பெருக்க இஸ்லாமிய கல்விச் சகாய நிதியை ஏற்படுத்தியவர். கல்விமானான அவர் சமய சம்பந்தமான பல கட்டுரைகளை எழுதியுள்ளார். வானொலியில் உரையாற்றியுள்ளார். இவற்றைத் தொகுத்து இலங்கையில் இஸ்லாம் என்னும் நூலை வெளியிட்டுள்ளார். முஸ்லிங்களது மொழித் தேவைக்காக அறபிச் சொற்களுக்குச்சில புதிய குறியீடுகளையுஞ் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற குறிக்கோளுடையவர்.

கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் அதிபராகக் கடன்மையாற்றும் ஐ. எல். எம். மஷ்ஹ{ர் பிறிதொரு முஸ்லிம் கல்விமானாவர். அவரது உளமும் கல்வியும் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல ஆசிரிய – மாணவ உலகத்திற்குப் பெரிதும் பயன்படத்தக்க அருமையான நூலாகும். முஸ்லிம்களின் கலாபிவிருத்தியில் மிகுந்த அக்கறையுடன் உழைத்து வருகின்றார்.

எஸ். எம். கமாலுத்தீன், கொழும்பு பொது நூல் நிலையப் பொறுப்பாளராகக் கடன்மையாற்றுகின்றார். இளம் முஸ்லிம் இயக்கங்களிலே மிகுந்த ஈடுபாடுடைய அவர், பல அருமையான கட்டுரைகள் எழுதியுள்ளார். அக்கட்டுரைகளைத் தொகுத்து அவர் ஒரு நூலாக வெளியிட்டால் பெரிதும் பயனுண்டாகும்.

இலங்கை வர்த்தக சபையிற் கடன்மை பார்க்கும் எம். எம். உவைஸ். இலங்கைப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர், அவர் ஓர் ஆங்கில நூலையும், இஸ்லாமியத் தென்றல், நம்பிக்கை ஆகிய தமிழ் நூல்களையுந் தந்துள்ளார். பாடப் புத்தகங்கள் சிலவற்றை உரையாசிரியராக அமர்ந்து பதிப்பித்துள்ளார். தேவராஜனின் வியாபார எண் கணிதம் போன்ற நூல்களைத் தமிழிலிருந்து சிங்களத்திற்கு மொழி பெயர்த்துச் சிங்கள மொழியை வளப்படுத்தவும் உழைத்து வருகின்றார்.

மாத்தளை எம். ஸி. மதார். சாகிபு, பாஸ்கரத் தொண்டைமானின் பாணியைப் பின்பற்றி, ஓவியஞ் சிற்பம் முதலியன பற்றி விளக்கக் கட்டுரைகளை ஏராளமாக எழுதியுள்ளார்.

தென்னகத்தின் முதுபெருந் தமிழறிஞரான் ம. கா. மு. காதிர் முஹ்யித்தீன் மரைக்காயரின் புதல்வரான எம். கே. எம். அபூபக்கர் ‘தினகரன்’ ஆசிரியர் குழுவிற் கடன்மை பார்ப்பதுடன், அவ்வப்போது இஸ்லாமியருக்குப் பெரிதும் பயன்படும் கட்டுரைகளையும் எழுதி வருகின்றார்.

அல்ஹாஜ் வி. எம். ஷம்சுத்தீன் பழம் பெரும் எழுத்தாளராவர். இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிராக யாராவது எழுதிவிட்டால். உடனே கொதித்தெழுந்து, தகுதியான விளக்கங்கள் கொடுக்கும் இயல்புடையவர். பாரதியார் இஸ்லாமியரைத் ‘திக்கை வணங்கும் துலுக்கர்’ என்று எழுதியதை மறுத்தெழுதிய பெருமையும் இவருக்கு உண்டு. தென்னகத்திலிருந்து வெளியாகும் முஸ்லிம் முரசு என்னும் பத்திரிகையின் கௌரவ ஆசிரியராக மேன்மைப் படுத்தப்பட்டவர்.

ஹாபிஸ் எம். கே. செய்யித் அஹ்மது இஸ்லாமிய வரலாற்றுத் துறையில் மிகுந்த ஈடுபாடுடையவர். தமிழ் கூறும் முஸ்லிம் நல்லுலகம் என்று தொடர் கட்டுரையின்மூலம் இஸ்லாமிய புலவர்களையும் ஞானிகளையும் அறிமுகப் படுத்தி வருகின்றார்.

இஸ்லாம் என்பது என்ன? என்னுந் தலைப்பில், இஸ்லாமிய சமய விளக்கத்தைத் தமி;ழ் - ஆங்கிலம் - சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் எழுதி ஒரே நூலாக மாத்தறை, எஸ். ஒய். இஸ்ஸதீன் வெளியிட்டுள்ளார். பர்ஸன்ஜி மௌலிது என்னும்அறபு இலக்கியத்தை மௌலவி ஒ. எல். எம். இபுராஹீம் தமிழாக்கியுள்ளார். கொழும்பு. எப். எம். இபுறாஹீம் அவர்கள் ஸ{ப்ஹான மௌலித் என்னும் அறபிக் காவியத்தைத் தமிழிற் பிரசுரித்துள்ளார். அல்ஹாஜ் மௌலவி ஏ. சி. எம். நுஃமான் ‘தீன் மாலை’ யைப் பதிப்பித்துள்ளார்.

இலங்கையில் தப்லீக் - கல்ஹின்னை மௌலவி சலாஹீத்தீன், உங்கள் பிரச்சினை – மௌலவி ஏ. ஆர். எம். றூஹ{ல்ஹக், மனோதத்துவமும் இஸ்லாமும் கல்முனை ஏ. எம். ஏ. கரீம், மாநபியின் வாழ்வும் வாக்கும் ஏ. எம். கனி என்னுந் நூல்கள் வெளிவந்துள்ளன. ஹப்புத்தளையைச் சேர்ந்த சொல்லின் செல்வர் எஸ். எம். ரஹீம் சாஹியு அற்புதமான சொற்பொழிவாளராவர். அவரது பேச்சுக்கள் நூலுருவம் பெறின் இஸ்லாமிய உலகம் பெரிதும் பயனடையும். ‘ஈழமேகம்’ பக்கீர்த் தம்பி கவர்ச்சியான மேடைப் பேச்சாளராவர். கவிதைகளையும் இயற்றியுள்ளார். அவரது கட்டுரைகளைத் தொகுத்து உரை மலர் என்னுந் நூல் வெளிவந்திருக்கின்றது.

1960 ஆம் ஆண்டுக்குப்பின்னர், இலங்கைப் பல்கலைக்கழகத்திலிருந்து தமிழ் எழுத்துத் துறைக்கு வந்தவர்களுள் மூவர் குறிப்பிடத்தக்கவர்களாவர். ஜே. எம். எம். றாஜி யின் ‘இஸ்லாமியர் கண்ட ஈழம்’ என்னுங் கட்டுரைத் தொடர், அவரிடமுள்ள வரலாற்று ஞானத்தையும், எழுத்தாற்றலையும் புலப்படுத்துகின்றது. இஸ்லாமிய கலாசாரத்தைப் பேணியே றாஜி கட்டுரைகள் எழுதுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாக வித்தியாதரிசியாகக் கடன்மை பார்க்கும் எம். எம். சமீம் ‘முஸ்லிம்களின் திருமணச் சம்பிரதாயங்கள்’ போன்ற கட்டுரைத் தொடர்களை எழுதியுள்ளார். இஸ்லாமிய வரலாற்றுத் துறையில் ஈடுபாடுடையவர். ‘இஸ்லாமிய கலாச்சாரம்’ என்னுந் நூலை எழுதி வெளியிட்டுள்ளார். அந்நூல் உண்மையான இஸ்லாமிய கலாசாரத்தைப் பிரதிபலிக்க வில்லையென்று, மணிவிளக்கு என்னும் பத்திரிகை கருதுகின்றது. எம். ஏ. எம் சுக்ரியும் வரலாற்றுக் கட்டுரைகள் எழுதி வேகமாக முன்னுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இவர் நல்ல மேடைப் பேச்சாளருமாவர்.

ஜே. எம். எம். அப்துல் காதர், எ. எம். எம். முஹ்ஸீன் எம். வை. எம் முஸ்லிம், எம். அகமது லெவ்வை, எம். எஸ். ஹமீது, அபூ உபைதா எஸ். டி. அபூபக்கர், எஸ். எம். ஏ. ஹஸன், மௌலவி யூ. எம். தாஸீம். மௌலவி ஏ. எல். எம். இப்ராஹிம், ஹலீம்தீன், யூ. எல். தாவூத், ஏ. இக்பால் ஆகியோர் கட்டுரை மொழி பெயர்ப்புத் துறைகளில் ஈடுபட்டு உழைத்து வருகின்றார்கள். கிராமியக் கவிதைகளைத் தொகுத்து வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ள ஏ. ஆர் எம். ஸலீம் தமது ஈழத்து முஸ்லிம் புலவர்கள் என்னுந் நூலுக்கு ஸ்ரீ லங்கா சாகித்தியப் பரிசு பெற்று புகழெய்தியுள்ளார்.

இனி ஆற்றலிலக்கியத் துறையில் முஸ்லிம் எழுத்தாளர் செய்துள்ள முயற்சிகளைப் பார்ப்போம். கவிதைத் துறையில் முஸ்லிம் எழுத்தாளர் பிரகாசிக்கின்றார்கள். உண்மையில், சென்ற அத்தியாயத்திலேயே சேர்க்கத் தக்கவர்களாவர். ஆனால், முஸ்லிம் முயற்சிகளைப் பிரித்து எழுத வேண்டும் என்கிற வற்புறுத்தல் மேலோங் கியிருப்பதினாலேதான் அவர்களுடைய கவிதை முயற்சிகளை இந்தப் பகுதியிலே எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதை முதற்கண் சொல்ல விரும்புகின்றேன்.

கவிஞர் அப்துல் காதர் லெப்பை பழைய முஸ்லிம் புலவர்களுடைய மரபிற் காலூன்றி, புதிய பரம்பரையினருக்கு வழிகாட்டியாக விளங்கும் கவிஞராவர். அவரது இக்பால் இதயம் என்கிற கவிதை நூலில் அத்தகைய ஒரு கவிஞரைத் தான் நாம் சந்திக்கின்றோம்.

எம். ஸி. எம் சுபைர் (குறிஞ்சிக் குயில்) மலர்ந்த வாழ்வு என்னுஞ் சிறுகாவியத்தை நூலுருவில் தந்துள்ளார். பாட்டுத் தலைவியான ஸலீமாவைத் தமிழ்ப்பண்பு கமழ அவர் சித்திரித்துள்ளார். மணிக்குரல் என்னும் மாதப் பத்திரிகையை நடாத்தி வருகின்றார்.

எம். எம். சாலிஹ் (புரட்சிக்கமால்), எம். எஸ். எம். சாலிஹ் (அண்ணல்), எம். ஏ. கபூர் (யுவன்) ஆகிய மூவரும் கிழக்கிலங்கை தந்துள்ள முன்னணிக் கவிஞர்களாவர். புரட்சிக்கமால் கவிதைகள் என்னுங் கவிதைத் தொகுதி புரட்சிக்கமாலின் ஆற்றலுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. தமிழார்வத்தினையும் மத நம்பிக்கைகளுக்குப் பிறழாத சீர்திருத்த வாதத்தினையும் இவரது கவிதை களிற் காணலாம்.

பெரிய கிண்ணியாவைச் சேர்ந்த ‘அண்ணல்;’ 1953 ஆம் ஆண்டு தொடக்கம் கவிதைத் துறையில் ஈடுபட்டு, சிறிது காலம் ஓய்ந்துவிட்டு, மறுபடியும் முழுமூச்சாகக் கவிதைத் துறையில் முனைந்து முன்னேறி வருகின்றார். அவரது சமீப காலத்துப் பாடல்கள் கவிஞர்கள் வரிசையில், அவரை வெகு முன்னுக்குக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது. ஓசை நயங்கொண்ட பாடல்களை, அழகாகக் கவியரங்குகளிலே அரங்கேற்றி வருகின்றார்.

‘யுவன்’ உணர்ச்சியுள்ள கவிஞராவர். ‘பாட்டுத் திறத்தாலே........’ என்னுந் தலைப்பில் வானொலியினர் நடாத்திய கவியரங்கிலே, முஸ்லிம் கவிஞர்களின் புகழை நிலை நாட்டினர். மிக வேகமாக முன்னேறி வந்துள்ள இந்தக் கவிஞரின் கவிதைகளைச் சமீப காலத்திலே காணவில்லை.

விடத்தில்தீவு முகம்மது காசீம் நீண்ட நாட்களாகக் கவிதை எழுதி வருபவரெனினும் சமீப காலத்தில் அவரும் எழுதுவதை காணவில்லை. கள்ளத்தோணிக்குத் தீர்ப்பு என்னுந் நூலை எழுதியிருக்கின்றார். கம்பளை கி. மு. நல்ல தம்பிப் பாவலர், இசைத் தேன் என்கிற கவிதை நூலை வெளியிட்டாளர் இராகங்களோடு பாடுவதற்கேற்ற முறையில் பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன.

இவர்களுடன். பின்வரும் இளங் கவிஞர்களும் முஸ்லிம் சமூகத்திலே தோன்றியுள்ளனர். வழுத்தூர் ஒளியேந்தி, எம். ஏம். நுஃமான், யூ. எல். ஏ. மஜுத், சாரணா கையூம், அவைவேந்து, பஸீல் காரியப்பர், நாகூர், ஏ. பாவா, மருதமைந்தன், மருதூர்க்கனி, மருதூர்கைய்யாம், அன்பு முகைதீன், மு. ஆதம் லெவ்வை.

சிறுகதைத் துறையில் முஸ்லிம் எழுத்தாளர்க் குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டத் தவறிவிட்டார்கள். ‘பித்த’னுக்குப் பின்னர். குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிறுகதை எழுத்தாளர்கள் தோன்றவில்லை என்கிற கசப்பான உண்மையை நாம் கவனத்திற் கொள்ளுதல் நன்று.

மரபினாலும் சிறுகதையின் எண்ணிக்கையினாலும் அ. ஸ. அப்துல் ஸமது முதலிடம் பெறுகின்றார். அவரது கதைகளிலே ஆழ்ந்த உணர்ச்சிகளையோ, புதிய போக்குகளையோ காண முடியவில்லை. மொத்தத்தில், பத்திரிகைக்கதைகள் எழுதுகின்றார் என்றே சொல்லலாம். வி. எம். இஸ்மாயில் (மருதூர்க் கொத்தன்) சமீப காலத்தில். எஸ் பொன்னுத்துரையின் கதை சொல்லும் பாணியைப் பின்பற்றி நல்ல கதைகள் எழுதி வருகின்றார். வேலி அவருக்கு வெற்றியை அளித்துள்ள சிறுகதையாகும். மருதமுனை மஜீதும் நல்ல கதைகள் எழுதுகின்றார். அவரது கதைகள், வேறு பத்திரிகைகளில் பிரசுரமான கதைகளின் சாயல்களிலே விளங்குகின்றன. எம். ஐ. எம். தாஹீ ரும் வளர்ந்து வருஞ் சிறுகதை எழுத்தாளராவர்.

இஸ்லாமிய மதம் நாடகக் கலையை ஏற்றுக் கொள்ளவில்லை என அறிகிறேன். இருப்பினும், சிறுகதைத் துறையிலும் பார்க்க, நாடகத் துறையில் முஸ்லீம் எழுத்தாளர்கள் கணிசமான வெற்றியீட்டியுள்ளார்கள். மன்னார் மாதோட்டப் புலவர்களான பக்கீர் புலவர், சாந்த ரூபி நாடகத்தையும் விதானைப் புலவர் எனப்படும் சி. முகைதீன் கப்புடையார். கபுகரகு நாடகம், காஞ்சி நாடகம் ஆகியவற்றையும் அக்காலத்திலேயே இயற்றியுள்ளார்கள். தற்காலத்தில் எம்.ஏ. அப்பாஸ் ‘கள்ளத்தோணி;’ என்னுந் தலைப்பில் மிகத் துணிவான நாடகம் நன்றினை இயற்றி மேடையேற்றினார். அவர் நாடக நூல்களாக கள்ளத்தோணி. துரோகி ஆகியவைகளை வெளியிட்டுள்ளார். வானொலி நாடகங்கள் பல எழுதிப் புகழ் பெற்றவர். ‘ஒரே இரத்தம்’ என்கிற தொடர் நாவலைத் ‘தினகர’னில் எழுதியுள்ளார். அதுவும் நூலாக வெளி வந்துள்ளது.

எம்.எம். மக்கீன்;, நாடகத்துறையில் குறிப்பிடத் தக்க முஸ்லிம் எழுத்தாளருள் ஒருவராவர். ‘டயல் எம் பார் மாடர்’ என்கிற ஆங்கில நாடகத்தைத் தமிழாக்கி மேடையேற்றி, வெற்றி கண்டவர், பல வானொலி நாடகங்களை எழுதியிருக்கின்றார். சிறுகதைகளும் எழுதி வருகின்றார்.

எம். நஸ்ருதீன் சிறந்த நாடக எழுத்தாளராவர். வானொலியில் ஏராளமான சமூக நாடகங்களை எழுதியவர். இவரின் ‘அழாதே கண்ணே’ என்கிற மேடை நாடகம் இரசிகர்களின் நல்ல பாராட்டுதலைப் பெற்றது.

ஆர். என். ஸைபுத்தீன் சாஹிபு மேடை நாடகத்துறையி;ல் இறங்காவிடினும். வானொலியில் - முஸ்லிம் நாடகப் பகுதியில் தொடர்ந்து பல நாடகங்களை எழுதி வருகின்றார்.

ஏம். ஏ. முகம்மது வானொலி நாடகங்கள் நிறைய எழுதியிருக்கின்றார். சிங்களத்திலும் நாடகங்கள் எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் எழுத்தாளர்களுள் இருப்பதுபோலவே முஸ்லிம் எழுத்தாளர்களுள்ளும் விரல் விட்டு எண்ணக் கூடிய பெண் எழுத்தாளர்களே உளர். இருப்பினும், முஸ்லிம் பெண் கல்வி என்கிற பின்னணியிற் பெருமைப் படத்தக்க முன்னேற்றமாகும்.

முஸ்லிம் பெண் எழுத்தாளர்களுள் விசேடமாகக் குறிப்பிட வேண்டியவர் பேராதனை ஷர்புன்னிஷா பேகம் ஆவார். இவர் பல ஆண்டுகளாகக் கட்டுரை, கதை எழுதி வருகின்றார்.

பேசும் சுபைர்தானி அப்துல் காதர் என்பவர் எழுதி வருவதோடு சொந்தமாக ஒரு பத்திரிகையும் நடாத்தி வருகின்றார். ‘கலைமலர்’ என்ற அப்பத்திரிகை இரு ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவருகின்றது. இது பெண்ணுலகமே பாராட்டும் பெரு முயற்சியாகும்.

ஷாஜஹானி புகாரி என்பவர் வானொலி நாடகம், பேச்சு, கட்டுரைத் துறைகளிற் ஈடுபட்டு வருகின்றார்.

சிறுகதை – கட்டுரைத் துறைகளில் வேகமாக முன்னேறி வரும் லைலா முஹிதீன், பாத்திமா ஹலால்தீன். பூர்ணிமா, நயீமா ஏ. பசீர் மும்தாஜ் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

இறுதியாக முஸ்லிம் எழுத்தாளர்களுக்கு இன்னொரு சோதனையுங் காத்திருக்கின்றது என்பதையுஞ்சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். முஸ்லிம் அரசியல்வாதிகளுட் பெரும்பாலானோர் தனிச் சிங்களச் சட்டத்தை ஆமோதித்துச் சிங்கள மொழியையே தமது ஆட்சி மொழியாக ஏற்றுள்ளார்கள். இதனால் முஸ்லிம் எழுத்தாளர்களது எழுத்துக்களைப் பற்றி அக்கறை வருங் காலச் சந்ததியினருக்கு ஏற்படாமலும் போகக்கூடும். இந்நிலையில், தமிழர்களுடன் தமிழராக வாழும் கிழக் கிலங்கை வாழ் முஸ்லிம் எழுத்தாளர்களை மதிப்பீடு செய்யவேண்டிய நிலையேற்படலாம். இஃது, அரசியற் சூழ்நிலைகளை அடிப்படையாக வைத்துச் சொல்லப்படும் ஆருடமேயாகும். இதனை முஸ்லிம் சமூகமும், முஸ்லிம் எழுத்தாளர்களும் பொய்ப்பிப்பார்களேயானால், ஈழத்தமிழ் மேன்மேலும் வளர்ச்சியடையு மென்பது திண்ணமாகும்.

பத்திரிகைகள்

இலங்கையில் சமய வளர்ச்சி கருதியே ஆரம்பத்திற் பத்திரிகைகள் நடாத்தப்பட்டன. அவற்றுள் உதய தாரகை என்னும் பத்திரிகை 1841 ஆம் ஆண்டு தொடக்கம் நடாத்தப்பட்டு வருகின்றது. அப்பத்திரிகையின் ஆசிரியர்களுள் சுப்பிரதீபம் இயற்றிய கறோல் விசுவநாதபிள்ளையும், ஆனல்டு சதாசிவம்பிள்ளையும் குறிப்பிடத்தக்கவர்களாவர். 1841 ஆம் ஆண்டில் சைமன் காசிச் செட்டி. உதயாதித்தன் என்னும் பத்திரிகையை நடாத்தினார்.

கத்தோலிக்க மதத்தின் வளர்ச்சி கருதி வெளிவந்து கொண்டிருக்கும் சத்தியவேத பாதுகாவலன் 1876 ஆம் ஆண்டு தொடக்கம் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இவ்வாறு கிறித்துவ மதத்தின் வளர்ச்சி கருதிப் பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருந்த பொழுது, இந்து சமயத்தின் வளர்ச்சி கருதி இந்து சாதனம் என்னும் பத்திரிகை வெளிவரலாயிற்று. ‘உதயதாரகை’, ‘சத்தியவேத பாதுகாலவன்’ இந்துசாதனம் ஆகிய மூன்றும் சமய வளர்ச்சியை மனதிற்கொண்டு வெளிவந்து கொண்டிருந்தமையால், அவற்றின் இலக்கிய சேவையை மதிப்பீடு செய்தல் முறையன்று.

வேறொரு காரணத்திற்காக, ‘இந்துசாதனம்’ ஆசிரியராகவிருந்த ம. வே. திருஞான சம்பந்தபிள்ளையின் சேவையை ஈண்டு குறிப்பிட்டுத்தானாக வேண்டும். பொதுசனங்கள் இரசிக்கக் கூடியதாக, யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில், பழமொழிகள் மிகுதியாகக் கொண்டதாய், உலகம் பலவிதம் என்கிற தலைப்பில் துரைரத்தினம் - நேசமணி, கோபால் நேசரத்தினம் முதலிய கதை நூல்களை நமக்குத் தந்துள்ள ம. வே. திருஞானசம்பந்தப் பிள்ளை தாம் தற்காலத்தில் ‘எழுத்தாளர்’ என்னுஞ் சொல் யார் யாரைக் குறிக்கின்றதோ, அவர்களுக்கெல்லாம் முன்னோடியாகக் காட்சியளிக்கின்றார். அவர் எழுதியுள்ள கதைகள், இளமை குன்றாத கவர்ச்சியுடன், இன்றும் இரசிக்கக் கூடியனவாக விளங்குகின்றன. தற்பொழுது ‘இந்துசாதனம்’ ஆசிரியராகக் கடன்மை யாற்றும் ந. சிவப்பிரகாசம் அவர்கள் தந்துள்ள இலங்கை மாதா திருப்பள்ளி எழுச்சி பாரதியாரின் ‘பாரத மாமா திருப்பள்ளி எழுச்சி’யை நினைவூட்டி நன்கமைந்திருக்கின்றது. தூய செந்தமிழில் பேசியும் சமயக் கட்டுரைகள் எழுதியும் வருகின்றார்.

இலக்கிய வளர்ச்சியுடன் தன்னை இரண்டறப் பிணைத்துக் கொண்ட பத்திரிகை நா. பொன்னையா அவர்களாலே தாபிக்கப்பட்ட ‘ஈழகேசரி’யாகும். அப்பத்திரிகையின் ஆசிரியராக குமாரசுவாமிப் புலவரின் புத்திரரான கு. அம்பலவாணர் கடன்மை பார்த்தார்கள். அவர் ஆசிரிய தலையங்கங்களையும், பிற நாட்டுச் செய்திகளையுஞ் சுவைப்பட எழுதிய போதிலும், பத்திரிகைத் தமிழைக் கீழே போக விடாது பார்த்துக் கொண்டார். குமாரசுவாமிப் புலவர் பெற்ற கடிதங்களை நமக்களித்து, புலவரவர்களுடன் தொடர்பு கொண்டிருந்த தமிழ்நாட்டிலும் ஈழ நாட்டிலும் வாழ்ந்த சம கால அறிஞர்களை அறிமுகப்படுத்தினார்.

பிற்காலத்தில், ‘ஈழகேசரி’யின் ஆசிரியராக இராஜ. அரியரத்தினம் கடன்மை பார்த்தார்கள். அவர்தமிழ் நாட்டிற்கும், ஈழநாட்டிற்கும் பாலமாக அமைந்து, பல இலக்கிய யாத்திரைகள் செய்துள்ளார். ‘தங்கப்பூச்சி’ என்னும் நாவலைத் தந்துள்ளதுடன், வெள்ளம் போன்ற அழகிய சிறுகதைகளையும் எழுதியுள்ளார். ’வெள்ளம்’ ஈழநாட்டுச் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றிருக்கின்றது. ‘சோணாசலக் கவிராயர்’ என்னும் பெயரிலே பல கவிதைகளை எழுதியுள்ளார். ‘ஈழகேசரி’யில் ‘பாதையோரத்தில் - பட்டசாரி’ என்னும் பகுதியையும், ஈழநாட்டில் ஆசிரியராக அமர்ந்த காலத்தில் ‘இரத்தினக் கம்பளம்’ என்னும் பகுதியையும் வாராவாரஞ் சுவைப்பட எழுதி வந்தார். கல்கி பிறந்தார் என்னும் நூலையும் வெளியிட்டிருக்கின்றார். பல இளம் எழுத்தாளரை ஊக்குவித்து எழுத்துத்துறைக்குக் கொண்டு வந்த பெருமையும் அவரைச்சாரும்.

கட்சி சார்பான வாரப் பத்திரிகைகளும், மத சார்பான வாரப் பத்திரிகைகளுமே ஈழநாட்டில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தென்னகத்தில் பல்லாயிரக் கணக்கான பிரதிகள் வாராவாரம் வெளிவந்து விற்பனையாகும் எத்தனையோ சஞ்சிகைகள் இருக்கின்றன. அத்தகைய வார – மாதப் பத்திரிகைகளே ஆற்றலிலக்கியத் துறையினை வளப்படுத்தி வருகின்றன. தரமான சிறு கதைகளுக்கும். சுவையான தொடர்கதைகளுக்கும் இத்தகைய சஞ்சிகை களையே வாசகர்கள் எதிர்பார்க்கின்றார்கள். தினசரிகள் செய்திகளைத் தரும் பத்திரிகைகளாகவே வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையிலே. ஈழத்துத் தினசரி களின் வாரப்பதிப்புக்கள். ஆற்றலிலக்கிய முயற்சி களுக்குக் கணிசமான இடம் ஒதுக்கிக் கொடுத்துச் செய்துருஞ் சேவையை நம்மால் மறுக்க இயலாது. இதன் காரணமாகத் தான் ஈழத்து இலக்கிய வளர்ச்சியைப் பற்றியும் இங்கு எழுத வேண்டியிருக்கின்றது. க. அ. மீரா முகைதீன் அவர்களால் நடாத்தப்பட்ட தினத் தபால் காலை மாலைத் தினசரிதான் ஈழத்தில் வெளியான முதலாவது புதினப் பத்திரிகையாகும்.

அதையடுத்து வெளியான தினசரி வீரகேசரியாகும். அதன் முதலாவது ஆசிரியராக அமர்ந்தவர் பெரி. சுப்பிரமணியன் செட்டியாராவர். அவரைத் தொடர்ந்து ஆசிரியர் பிடத்திலமர்ந்த எச். நெல்லையா அவர்கள், தொடர் கதைகளின்மூலம் வாசகரைத் கவர்ந்தார். காந்தாமணி அல்லது தீண்டாமைக்குச் சாவுமணி குறிப்பிடத்தக்க நூலாகும்.

பாரதியாரின் நண்பரும், மணிக்கொடி பரம்பரையின் முன்னோடியுமான வ. ரா. அவர்களும் ‘வீரகேசரியின்’ ஆசிரியராகக் கடன்மையாற்றியுள்ளார். இனிமையான சுபாவமும். ஆழ்ந்த சமயப்பற்றுங் கொண்டுள்ள கே. பி. ஹரன் ஒரு சிறந்த ’பத்தி’ எழுத்தாளராகவே தமது திறமையை வெளிப்படுத்தினார். தற்பொழுது ‘ஈழநாடு’ என்னுந் தினசரியின் ஆசிரியராகக் கடன்மை பார்க்கின்றார்.

கே. வி. எஸ். வாஸ் பல ஆண்டுகளாக ‘வீரகேசரி’யில் செய்தி ஆசிரியராக இருந்து, பின்னர் அதன் ஆசிரியராக உயர்ந்தார். பதினான்காவது வயதில் ‘கத்திச்சங்கம்’ என்னுஞ் சிறுகதையைச் ‘சுதேசமித்திர’னில் எழுதியதன் மூலம் அவர் எழுத்துத் துறைக்கு வந்தார். இந்தியாவிலேயே எழுத்துத்துறையின் பல்வேறு துறைகளிலும் அவர் பிரகாசித்தார். ‘கைம்பெண்ணின் கண்ணீர்’ என்னும் அவரது நாவல் செட்டிநாட்டு நாவல் போட்டியிலே முதற் பரிசில் பெற்றது. ‘மணிக்கொடிப்’ பத்திரிகையுடனுந்தொடர்பு கொண்டு, அடிப்படைப் பொருளாதாரம் பற்றிக் கட்டுரைகள் எழுதியுள்ளார். பல நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும் பல தொடர்கதைகளையும் எழுதியுள்ளார். ‘வீரகேசரி’யில் அவர் எழுதிய குந்தளப் பிரேமா வாசகரின் பாராட்டுதலைப் பெற்று, பி;ன்னர் நூலுருவிலும் வந்துள்ளது. கடந்த கால் நூற்றாண்டு காலம் வீரகேசரியில் கடன்மையாற்றி நந்தினி, தாரணி, மலைக்கன்னி, ஏங்குதே என் நெஞ்சம்? போன்ற தொடர்கதைகளை எழுதியுள்ளார். அவர் ‘இந்து’ ஆங்கிலப் பத்திரிகையினதும் கல்கி, மலாயாப் பத்திரிகைகளினதும் விசேட பிரதிநிதியாகக் கடன்மையாற்றுகின்றார். அவர் எழுதிய, ‘ஆனந்த விகட’னில் வெளிவந்த ஈழத்தின் கதை அவரது புகழை நன்றாக நிலை நாட்டியுள்ளது. அவரது சரித்திரப் புலமைக்கும், எழுத்தாற்றலுக்கும் அந்நூல் சான்று பகர்கின்றது. இயந்திர வேகத்தில். எதைப்பற்றியுஞ் சுவைபட எழுதக் கூடிய ஒரு பத்திரிகையாளராவர். தற்பொழுது கே. வி. எஸ். வாஸையும், எஸ். டி. சிவநாயகத்தையும் கூட்டாசிரியர்களாகக் கொண்டு ‘வீரகேசரி’ வெளிவந்து கொண்டு இருக்கின்றது.

ஞாயிறு வீரகேசரியின் பொறுப்பாசிரியராகப் பலகாலஞ் சேவை செய்துள்ள வி. லோகநாதன் அவர்கள் இலக்கியகாரராகவே வாழ்ந்தார்கள். காலத்தின் மாற்றங்களை அநுசரித்து இலக்கிய உலகின் நித்திய இளைஞராகவே வாழ்பவர். அவர் பல சிறு கதைகளை எழுதியுள்ளார். அவற்றின் தொகுதியாக ஊதிய விளக்கு என்னும் நூல் வெளியாயிற்று. பல தொடர் கதைகளை எழுதியுள்ளார். அவரது பிரேமாஞ்சலி என்னும் நாவல் நூலுருவம் பெற்றுள்ளது. நடனாஞ்சலி என அவர் எழுதியுள்ள நாட்டிய நாடகம் அற்புதமாக அமைந்துள்ளது. அது ஊர்வசி என்னும் பெயரில் அரங்கேற்றப்பட்டுப் பலரது பாராட்டுதல்களைப் பெற்றது. வெளிநாட்டுப் பிரயாண அநுபவங்களை வைத்துக் கொண்டு பாரிஸ்டர் சிற்றம்பலம் என்னும்நாவலை எழுதினார். ஈழத்தில் வெளிவந்த மிகத்தரமான தொடர்கதையான இதனைப் பூர்த்தியாக் காமலே, வீரகேசரியிலிருந்து விலகியமை ஈழத் தமிழிலக்கியத்திற்கு ஏற்பட்டுள்ள பெரு நட்டமாகும். முதன்முதலில் ‘தான்தோன்றிக் கவிராயர்’ என்ற புனைபெயரைத் தமக்குச் சூட்டி சீட்டுக் கவிதைகள் இயற்றியுள்ளார்.

‘வீரகேசரி’ பல காலமாகத் தென்னக எழுத்தாளருக்கே முக்கியத்துவம்; கொடுத்து வந்தது என்பது உண்மையாகும். ஆனால். 1956 ஆம் ஆண்டிற்குப் பின்னர், ஈழத்து எழுத்தாளரது படைப்புக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பெருமையுடன் பிரசுரித்து வருகின்றது. அடிக்கடி எழுத்தாளர் கோஷ்டிகளுடன் தன்னைப் பிணைத்துக் கொள்ளாது, ஆற்றலுக்கு முக்கியத்துவங் கொடுத்து சிருட்டி இலக்கியத்தினைப் பிரசுரித்து வருதலை எவ்வளவு பாராட்டினாலும் தகும். எழுத்துத் துறையிற் சற்றே பின்தங்கி விட்டவர்கள் என்று கொள்ளப்பட்ட மலைநாட்டு எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்காகத் தோட்ட மஞ்சரி என்னும் பகுதியை ஆரம்பித்த ‘வீரகேசரி’ பெருமைப்படத் தக்க மலைநாட்டு இளம் எழுத்தாளர்களை உருவாக்கி யுள்ளது.

நாடகத்துறையில் மிக்க ஈடுபாடு கொண்டு உழைத்த வை. இராமநாதபிள்ளை அவர்களே ‘தினகர’னின் முதலாவது ஆசிரியராவர். அவரைத் தொடர்ந்து இராமநாத ஐயர் சில காலம் அதன் ஆசிரியராகக் கடன்மையாற்றினார்.

ரி. எஸ். தங்கையா அவர்கள் ஆசிரியராக வந்த காலத்திலேதான் ‘தினகரன்’ ஒரு செய்திப் பத்திரிகை என்கிற நிலையில் உயர்ந்தது. ‘தங்கையாவைப் போன்ற ஒரு சிறந்த பத்திரிகையாளரை நாங்கள் கண்டதே யில்லை’ என்று பல சக பத்திரிகையாளர்கள் வாயாரப் போற்றுகின்றார்கள். ஆங்கிலத்தில் நிருவாகம் நடைபெறும் பெரியதொரு தாபனத்தில் தங்கையாவின் பெருமை, இரவுப் பதிப்பு ஆசிரியராக முடங்கிக் கிடப்பது வேதனைக்குரிய நிகழ்ச்சியாகும்.

வி. கே. பி. நாதன் அவர்கள் ‘தினகர’னில் ஆசிரியராக அமர்ந்திருந்த காலத்தில், வாரப்பதிப்பில் பண்டித வர்க்க எழுத்தாளரின் கையோங்கியிருந்ததை அவதானிக்கலாம். அதேசயம், கணேசலி;ங்கன் போன்ற ஈழநாட்டு எழுத்தாளரின் சிறு கதைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. அவரைத் தொடர்ந்து க. கைலாசபதி தினகரன் ஆசிரியராகி, ஞாயிறு தினகரனை இலக்கியத் தரத்தில் உயர்த்தி வைத்தார்.

தற்பொழுது ‘தினகரன்’ ஆசிரியராக இருக்கும் ஆர். சிவகுருநாதன் பல்கலைக் கழகத்தில் ‘இளங்கதிர்’ ஆசிரியராக இருந்தவர். பல்கலைக்கழகத்தில் ‘இந்து தர்மம்’ என்னும் பத்திரிகையைத் தோற்றுவிக்க முன்நின்று உழைத்தார். அவர் ‘தினகர’னின் சில பரிசோதனைக் களங்களுக்கு இடமளித்துள்ளார். தினகரன் ஒருதேசியப் பத்திரிகையாகும். அஃது அவ்வப்போது, சில வட்டாரங்களுக்கே உழைத்து வருகின்றதோ என்கிற மயக்கத்தினைத் தருகின்றது. அச்சு வசதிகளையும், பிறவசதிகளையும் மனதிற்கொண்டு பார்த்தால், ‘தினகர’னால் ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு எத்தனையோ ஆக்க பூர்வமான வழிகளிலே தொண்டாற்ற முடியும் என்பதை மட்டும் அவர்களது கவனத்திற்கு இச்சந்தர்ப்பத்திலே சமர்ப்பிக்கின்றேன்.

1947 ஆம் ஆண்;டில். தமிழ்க் காங்கிரஸ் அரசியலை வளர்ப்பதற்காகச் சுதந்திரன் என்னுந் தினசரி தொடங்கப் பெற்றது. சுமார் ஐந்து ஆண்டுகளே தினசரியாக வந்து, தற்பொழுது வாரப்பத்திரிகையாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. அதன் முதலாவது ஆசிரியரான கோ. நடேசையர் பல நூல்களை வெளியிட்டுள்ளார். அவரது தமிழ்நடை தெளிவானது. எளிமையானது. வெற்றியுனதே, நீ மயங்குவதேன் முதலிய நூல்களைத் தந்துள்ளார். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே கணக்குப் பதிவு நூல், ஆயில் என்ஜின்கள், பம்புகளும் அவற்றை உபயோகிப்பதும் ஆகிய பலவகையிலும் பயன்படும் நூல்களை எழுதியுள்ளார் என்பது பெருமைப்படத்தக்க தொன்றாகும்.

நடேசையருக்குப் பிறகு, நாகலிங்கம், நாதன், குமார சாமி, தெல்லியூர் நடராசா, சுப்பிரமணியம் ஆகிய பலர் ‘சுதந்திர’னில் தற்காலிக ஆசிரியர்களாகக் கடன்மையாற் றினார்கள். பின்னர் எஸ். டி. சிவநாயகம் அவர்கள் ‘சுதந்திரன்’ பத்திரிகையின் ஆசிரியரானார்.

கிழக்கிலங்கையின் எழுத்தார்வத்தினை வளர்த்து உதயம் பத்திரிகையை நடாத்திய சிவநாயகம், ‘தினகரன்’ பத்திரிகையில் சொற்பகாலம் கடன்மையாற்றியபின் ‘சுதந்திரன்’ பத்திரிகையில் பிரதம ஆசிரியரானார். பல புனை பெயர்களில் சிறுகதை – நாவல் - கவிதை – நாடகம் ஆகிய பல துறைகளிலும் எழுதினார். மாயாவி என்னும் நாவலும், பச்சைக்கல் மோதிரம், துறவி ஆகிய சிறுகதை களும் குறிப்பிடத்தக்கவை. நாடோடிப் பாடல்களைக் கதைகள் புனைவதின் மூலம் விளக்கும் பாணியை அறிமுகஞ் செய்து வைத்த பெருமை இவரைச் சாரும். ஒரே இரத்தம் உதயகுமாரி போன்ற ஏழு நாடகங்களை எழுதியுள்ளார். குயுக்தியார் கேள்வி – பதில் பகுதி மூலம் அரசியல் எதிரிகளைச் சாடினார். ‘சுதந்திர’னை விட்டு விலகிய பிறகு, தமிழின்பம் பத்திரிகையிற் சேவைசெய்து, தற்பொழுது ‘வீரகேசரி’யின் கூட்டு ஆசிரியராகக் கடன்மை பார்க்கின்றார். இவர் இலக்கியத்தின் பல உட்பிரிவுகளிலுஞ் செய்துள்ள சேவைகளனைத்திலும் பார்க்கப் பிறிதோர் வழியிற் செய்துள்ள சேவையே மேலோங்கி நிற்கின்றது. கிழக்கிலங்கையின் ஆற்றலிலக்கிய முயற்சிகளை ஊக்குவித்து, அத்துறையில் மட்டக்களப்புப் பின் தங்கிவிடாது பார்த்துக்கொண்ட பெருமை இவரையே சாரும். இன்று கவிஞர்களாகவும், கதாசிரியர்களாகவும், பத்திரிகையாளர்களாகவும் தலை நிமிர்ந்து, நிற்பவர்களைச் ‘சுதந்திரன்’ பண்ணையிலே வளர்த்தார். இன்று முற்போக்கு இலக்கியம் பேசும் அ. ந. கந்தசாமி, பிரேம்ஜி. சில்லையூர் செல்வராஜன் ஆகியோர் இவருக்குக்கீழ் இலக்கியப் பயிற்சி பெற்றவர்களென்பதும் குறிப்பிடத்தக்கது.

கே. இராமசுவாமி ‘சுதந்திர’னின் தற்போதைய ஆசிரியராவர். முப்பது ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையிற் பணியாற்றும் இவர், தினகரன், வீரகேசரி பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகக் கடன்மையாற்றியிருக்கின்றார். இடதுசாரிக் கொள்கையில் நம்பிக்கையுள்ள இவர் இன்றையச் சீனம், லெனின் மரண் சாசனம் முதலிய நூல்களின் ஆசிரியருமாவார். தமிழரான இவர் சிங்களத்தில் ரஸ கலா நடாத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பத்துக்கு மேற்பட்;ட சிங்கள நாவல் களையும் எழுதியிருக்கின்றார்.

‘சுதந்திரன்’ பத்திரிகை 1956 ஆம் ஆண்டு வரையில் ஈழத்து ஆற்றலிலக்கியத்துறையில் ஒரு புதிய பரம்பரையை உருவாக்க உழைத்து வந்தது. ஈழகேசரியைப் போன்ற அது மகத்தான சேவை செய்துள்ளது. ஆனால் 1956 ஆம் ஆண்டிற்குப் பி;ன்னர், தமிழரசுக் கட்சி அங்கத்தவர்கள் பெருந்தொகையினராகப் பராளு மன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ‘சுதந்திரன்’ இலக்கியத்தை முற்றிலும் மறந்துவிட்ட ஒரு அரசியற் பத்திரிகையாகப் படிப்படியாக மாறிவிட்டது. இலக்கிய ஆற்றலைப் பொறுத்த வரையில் கட்சிச் சார்புகளை கணக்கிலெடுக்காத ‘சுதந்திரன்’ தற்காலத்தில் அவ்வாறான ஒரு பக்கச் சார்பினைத் தேர்ந்தெடுக்கக் காரணம் யாதோ நாமறியோம். ஆனால், ஈழத்து இலக்கியத்திற்கு இதனாற் பாரிய நட்டமேற்படலாம்.

‘ஈழகேசரி’ வெள்வி விழாக் கொண்டாடிய சொற்பகாலத்திலே இயற்கை எய்திற்று. அதன் இடத்தினை நிரப்புவது போல ‘ஈழநாடு’ வெளிவந்து கொண்டிருக்கின்றது. இராஜ. அரியரத்தினம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வாரப்பத்திரிகையாக வெளிவந்த அது. இப்பொழுது தினசரியாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. கே. பி. ஹரன் அதன் தற்போதைய ஆசிரியராவர். பல இளம் எழுத்தாளர்கள் தமது படைப்புக்களை அரங்கேற்றுவதற்கு ‘ஈழநாடு’ களம் அமைத்துக் கொடுத்துப் பணிபுரிகின்றது.

அரசியற் கட்சிகள் சார்பாக பல வாரப் பத்திரிகைகள் வெளிவந்தன. பதினெட்டு வருடங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் தேசாபிமானி யின் ஆசிரியராகக் கடன்மையாற்றிய கே. இராமநாதன் குறிப்பிடத்தக்க பத்திரிகையாசிரியராவர். அவரது கட்டுரைகள் தாம் சார்ந்த கொள்கைகளைத் தெளிவாக விளக்கின இளைஞர் மத்தியிலே போராட்ட ஆர்வத்தினையுந் தியாக சிந்தையும் வளர்த்தன. இலக்கிய வளர்ச்சி கருதி 1946 ஆம் ஆண்டில் பாரதி என்னும் பத்திரிகையை நடாத்தினார். தற்பொழுது அவரது திறமையை தென்னகத்திலிருந்து வெளிவரும் ஜனசக்தி பயன்படுத்துகின்றது.

வேறும் பல வாரச் செய்தித்தாள்கள் தோன்றி, மஞ்சள் இலக்கியம் வளர்த்து, குறுகிய காத்தில் மரிக்க, அவற்றின் இடத்திலே புதிய பத்திரிகைகள் தோன்றுகின்றன. இலக்கிய வளர்ச்சியின் விசாரணையில் அத்தகைய பத்திரிகைகளைச் சேர்க்கத் தேவையில்லை.

சனசமூக நிலையங்களின் சமாசம் நடாத்திய பத்திரிகையின் ஆசிரியராக க. பே. முத்தையா அவர்கள் உழைத்தார்கள். தமது பத்திரிகையில் பல புதிய எழுத்தாளர்களை ஆதரித்ததுடன், பல இளங் கவிஞர்களையுங் கிறித்தவர்கள் மத்தியிலே உருவாக்கினார். அவர், திருக்குறட் கருத்துக் களையும் பெரியோர் பொன்மொழிகளையும் அழகாகக் கோத்துக் கட்டுரைகள் எழுதுகின்றார். வெண்பா பாடுவதில் ஈடுபாடுடையவர். பாடசாலை மாணாக்கருக்குப் பயன்படத்தக்க கட்டுரைத் தொகுதி ஒன்று வெளியிட்டுள்ளார். செந்தமிழும் சிலுவையும் என்னும் அவரது நூல் மிகவும் பயனுள்ளது. அந்நூலில் கிறித்துவப் பெரியார்களாற்றிய தமிழ்த் தொண்டினை விபரித்துள்ளார்.

மட்டக்களப்புத் தொகுதியின் முதலாவது பாராளுமன்றப் பிரதிநிதியான செ. இராசதுரை அந்தக் காலத்தில் சிறுகதை எழுதுவதில் மிகுந்த ஆர்வங்காட்டினார். ‘மிஸ் கனகம்’ என்னுஞ் சிறுகதைத் தொகுதி வெளி வந்துள்ளது. ‘லங்காமுர’சைத் தொடர்ந்து, சொந்த அச்சு வசதிகளுடன் ‘தமிழகம்’ என்னும் பத்திரிகையை வெளியிட்டார். முழுநேர அரசியல் ஊழியராகிவிட்ட அவரால் அப்பத்திரிகையைத் தொடர்ந்து நடாத்த முடியவில்லை. நல்ல மேடைப் பேச்சாளராவர். பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் என்னுஞ் சிறு நூல் அவரது பேச்சு வன்மைக்குச் சான்று பகர்கின்றது. நல்ல நடிகருமான அவர் சங்கிலியன் நாடகத்தைத் தாமேஎழுதி, தயாரித்து, மேடையேற்றியுள்ளார். இலக்கியத்தின் நட்டம், அரசியல் ஆதாயமாக அமைந்துவிட்டது.

ஈழத்தில் அவ்வப்போது தரமான பத்திரிகைகள் நடத்தப்பட்டன. ஆனால், அவை தொடர்ந்து வெளிவராது சிறுவயதிலேயே மரணமடைந்தமை நமது துர்ப்பாக்கியமாகும். சதாசிவஐயர் நடாத்திய கலாநிதி என்னுஞ் சஞ்சிகையுடன் வேறு சில சஞ்சிகைகளும் ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்குக் களங்களமைத்துக் கொடுத்ததை நாம் மறந்து விடக்கூடாது. 1921 ஆம் ஆண்டில் சி. பத்மநாமஐயர், ஆனந்தசாகரம் என்னும் பத்திரிகையை வெளியிட்டார். அகவலோசையிற் பாடல்கள் இயற்றவும் பாடவும் வல்ல ச. கந்தையாபிள்ளை 1933 ஆம் ஆண்டில் வித்தகம் என்னும் பத்திரிகையை நடாத்தினார். கிழக்கிலங்கையிலிருந்து மெதடிஸ் திருச்சபையினால் நடாத்தப்பட்ட தீபம் என்னும் பத்திரிகையுங் குறிப்பிடத்தக்கது. பல கிறிஸ்தவ நூல்களை இயற்றிச் சமயத் தொண்டும், கண்டியரசன் நாடகம், ஏகேலபலை குடும்ப சங்காரம் ஆகிய நூல்களை இயற்றித் தமிழ்த் தொண்டும் ஆற்றிய ஜே. எஸ். ஆழ்வாப்பிள்ளை ‘தேசத் தொண்டன்’ என்னும் பத்திரிகையை நடாத்தினார்.

மாதப் பத்திரிகைகளுள் சி. சரவணபவன் (சிற்பி) அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் கலைச்செல்வி குறிப்பிடத்தக்க சேவையைச் செய்துள்ளது. ஈழத்தில், பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவரும் மாதப் பத்திரிகை என்கிற பெருமை அதற்கு உண்டு. புதிய பல எழுத்தாளர்களை ஊக்குவித்து, முன்னுக்குக் கொண்டு வந்தது. நகைச்சுவைக் கட்டுரைப் போட்டி, நாவல் போட்டி ஆகிய புதிய துறைகளிலே அது போட்டிகள் நடாத்தி எழுத்தாளரை ஊக்குவிக்கின்றது. அதன் ஆசிரியரான ‘சிற்பி’ பிறந்த மண், நிறைவு போன்ற பல சிறுகதைகளையும், உனக்காக கண்ணே! சிந்தனைக் கண்ணீர் ஆகிய குறு நாவல்களையும் எழுதியுள்ளார். பெரு முயற்சியுடன் ஈழத்துச் சிறுகதைகள் தொகுதியை வெளியிட்டுள்ள அவர், மேலுஞ் சில தொகுதிகளை வெளியிடுவராயின், அஃது ஈழத்து இலக்கியத்திற்கு மகத்தான சேவையாக அமையும்.

தேனருவி ஆர்வமுள்ள இளைஞர்களால் நடாத்தப்பட்டு வருகின்றது. சந்திரோதயம் போன்று, பிரச்சினைக் கதைகளுக்கு அது களம் அமைத்துக் கொடுத்துள்ளது. எதிர்த் துருவக் கருத்துப் பரிவர்த்தனைகளை அது வரவேற்கின்றது. விவேகி, பல ஆண்டுகளாக ஆசீர்வாதம் அவர்களால் வெளியிடப்படுகின்றது. மாணவ வாசகரைக் கவரும் விடயங்களை பெரும்பாலும் இடம் பெறுகின்றன.

‘இங்கிலாந்திற் செய்யப்பட்டதுவ என்று வரும் அந்நியப் பொருள்தான் சிறந்தவை என்கிற மனப்பான்மை நம்மத்தியிலே நிலவிவந்தது. அவற்றே ‘இந்தியப் பத்திரிகை’ தான் சிறந்தது என்னும் ஒரு பிழையான அபிப்பிராயத்தை நமது வாசகர்கள் வளர்த்து விட்டார்கள். இந்த மனோநிலையிற் கணிசமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஈழத்து வாசகர்கள், ‘ஈழத்துப் பத்திரிகைகளை விலை கொடுத்து வாங்குவோம்’ எனச் சங்கற்பஞ் செய்து கொள்ளுதல் வேண்டும். தொழிலதிபர்களும் விளம்பரங்கள் மூலம் நமது பத்திரிகைகளை ஆதரிக்க வேண்டும். அப்பொழுது தான் நமது எழுத்தாளர்களுக்குப் பிரசுர களங்கள் அமைத்துக் கொடுக்கக் கூடிய தரமான பத்திரிகைகள் தோன்றும். பிரசுர வசதிகளில்லா விட்டால் எழுத்தாளர்கள் சோர்வடைந்து போவார்கள்.

பல்கலைக்கழகம்

இலங்கைப் பல்கலைக்கழகம், தமிழ் உணர்ச்சியைப் பரப்புவதிலே முன்னணியில் நிற்கின்றது. ஆனால், தமிழ் வளத்திற்காக ஆராய்ச்சியையோ, ஈழத்தமிழர் சரிதத்தையோ, கல்வெட்டு ஆராய்ச்சியையோ போற்றத் தக்கதாக அது செய்யவில்லை. இந்தியப் பல்கலைக் கழகங்களிலுள்ளதைப் போன்று ஆராய்ச்சிகளையோ போற்றத் தக்கதாக அது செய்யவில்லை. இந்தியப் பல்கலைக் கழகங்களிலுள்ளதைப் போன்ற ஆராய்ச்சிப் பீடங்கள் இங்கு அமைக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இருப்பினும். கூட்டு முயற்சியுடன் அவ்வாறான ஆராய்ச்சிகள் நடாத்தப்பட்டிருக்கலாம். பேராசிரியரிடமும், மற்றும் விரிவுரையாளரிடமும் ஈழத்தமிழன்னை அதிகம் எதிர்பார்க்கிறாள் என்பதை அவர்கள் மறந்து விடுகின்றார்கள். ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பது போல, பல்கலைக்கழகத்திற் பணியாற்றும் தமிழறிஞர்கள் கூட்டு முயற்சிகளிலே ஒத்துழைக்க முன்வருதல் அவசியம். பல்கலைக்கழகத்தின் முதற் பேராசிரியராகவிருந்த சுவாமி விபுலாந்த அடிகளாருடைய பணி இவர்களுக்கு வழி காட்டியாக அமையவேண்டும். அடிகளாரால் ஆரம்பிக்கப்பட்ட வித்துவான் (டிப்ளோமா) வகுப்புகள் கூட நிறுத்தப்பட்டு, எல்லை சுருங்கி வருகின்றது.

தனிப்பட்ட முறையில், பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை அவர்கள் கவிதை நூல்களையும், பல நாடகங்களையும், பல கட்டுரைகளையுந் தந்துள்ளார். அவரது காதலியாற்றுப் படை என்னுங் கவிதை நூல் பழைய நடையையும், புதிய எண்ணங்களையும் பிணைத்துள்ளது. மாணிக்கமாலை, சங்கிலிநாடகம், நானாடகம் ஆகியன அவருக்கு நாடகத் துறையிலுள்ள ஈடுபாட்டினைக் காட்டுகின்றன. நானாடகத்திலிடம் பெற்றுள்ள உடையார் மிடுக்கு புதுப்போக்கினையுடையது. கிராமியக் கொச்சையை நாடகங்களிலே துணிந்து புகுத்தினார். இப்பொழுது, அவரது வழியைப் பின்பற்றி பலரும் நாடகங்கள் எழுதி வருகின்றனர். ஆனால், மாணிக்கமாலை இலக்கிய நடையில் மிளிர்கின்றது. அஃது அவருக்கு வெற்றியைக் கொடுத்துள்ளது. ஈழத்து வாழ்வும் வளமும் அவரது கட்டுரைத் தொகுதியாகும். அவரது அறிவாற்றலுக்கு அவர் எவ்வளவோ செய்திருக்கலாம்.

கலாநிதி சு. வித்தியானந்தன், தமிழர் சால்பு, இலக்கியத் தென்றல், கலையும் பண்பும் ஆகிய நூல்களைத் தந்துள்ளார். பின்னவை இரண்டும் முஸ்லிம் மக்களுடைய ஆதரவைப் பெற்றுள்ளன. அவரது புத்தகங்களனைத்தும் பாட நூல்களைப் போன்றே காட்சி தருகின்றன. மட்டக்களப்புப் பகுதியில் பண்டுதொட்டே, மரபு வழி பேணி, தென்மோடி வட மோடிப் பாணிகளிலமைந்துள்ள நாட்டுக் கூத்துக்கள் ஆடப் பட்டு வருகின்றன. வட்டக்களரியிலாடப்படுவது இத்தகைய கூத்து முறையின் சிறப்பு அமிசங்களுள் ஒன்றாகும். இந்த மரபினைத் தகர்த்து, மேற்படி கூத்துக்களை (நொண்டி நாடகம் - கர்ணன் போர்) நவீன மேடைகளிலே சு. வித்தியானந்தன் அரங்கேற்றி வருகின்றார். இத்தகைய புதிய சினிமாக் கவர்ச்சி, மேற்படி நாட்டுக்கூத்துக்களின் தனித்துவத்தைச் சிதைக்கமாட்டாதா என்பது சிந்தனைக் குரிய விடயமாகும்.

வி. செல்வநாயகம் அவர்கள் தமிழ் இலக்கிய வரலாறு. உரை நடை வரலாறு ஆகிய நூல்களைத் தந்துள்ளார். இவ்விரண்டு நூல்களும் அவரது படிப்பாற்றலுக்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளன.

கலாநிதி ஆ. சதாசிவம். கருத்துரைக் கோவை என்னும் நூலைத் தந்துள்ளார். அஃது அவரது திறமைகளை நிலை நாட்டத் தவறியுள்ளது. அவர் மரபு பற்றித் தெளிவான கருத்துக்கள் கொண்டவராவர். கொச்சைத் தமிழையே உலக வழக்கென்று சில ஆற்றலிலக்கியக் காரர் மலைவு கொண்டுள்ள நேரத்தில், மிகத் துணிச் சலுடன் மரபு பற்றித் தமது கருத்துக்களை ஆணித்தரமாக வெளியிட்டு, ஓரளவு பயனையும் அறுவடை செய்துள்ளார்.

இலங்கைப் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறிய மாணவர்கள், எங்களுக்குத் தமிழ் தெரியாது என்று சொல்லிக் கொள்வதை ஒரு காலத்தில் பெருமையாகக் கருதினார்கள். இந்நிலையில் வியத்தகு மாற்றம் ஏற்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதாகும். தமிழ் போதனா மொழியாக மாறியுள்ளது. மட்டுமே இம்மாற்றத்திற்குக் காரணமென்று சொல்லிவிட இயலாது. தமிழ் உணர்ச்சி வளர்ந்துள்ளது. பல்கலைக் கழக மாணவர், இளங்கதிரைத் தரமான பத்திரிகையாக வெளியிட்டு வருகின்றார்கள். தங்களது படைப்புக்களான சிறுகதைகளை அவ்வப்போது தொகுதிகளாக வெளியிட்டு வருகின்றார்கள். கதைப்பூங்கா, விண்ணும் மண்ணும் ஆகிய தொகுதிகள் நமக்குக் கிடைத்துள்ளன. பெருமைப்படத்தக்க எழுத்தாளர் பரம்பரை யொன்று பேராதனை யிலே தோன்றி வருதல், மனங்குளிர்விக்குஞ் செய்தியாகும்.

சங்கங்கள்

தமிழிலக்கிய வரலாற்றில் சங்ககாலம் என்று கூறப்படுகின்றது. நம்முன்னோர்கள்; முச்சங்கங்கள் வைத்துத் தமிழை வளர்த்தார்களென்பது பொதுவான நம்பிக்கையாகும். நான் ஈண்டு குறிப்பிடுஞ் சங்கங்களும் அத்தன்மையுடையனவெனக் கருதத் தேவையில்லை. பொதுவாக, இலக்கிய ஆர்வத்தினை வளர்க்கவும், கருத்துப் பரிவர்த்தனைகளுக்குக் களங்களமைத்துக் கொடுக்கவும் பல சங்கங்கள் உழைத்திருக்கின்றன. சங்கங்கள் ஆற்றிய பணிகளை இப்பகுதியிலே தொகுத்துக் கூறலாமெனத் துணிகின்றேன்.

பிரமஸ்ரீ. தி. சதாசிவஐயரவர்களின் அரிய உழைப்பினால் நிறுவப்பட்ட ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம், கலைப் புலவர் நவரத்தினம் அவர்களின் முயற்சியினாலே தோன்றிய கலாநிலையம், துடிப்புள்ள இளைஞர்களின் ஆர்வத்திலே தோன்றிய மறுமலர்ச்சிச் சங்கம் ஆகியன ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய பணியினை ஏலவே பார்த்தோம்.

ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தினைப் பற்றிக் குறிப்பிடுகையில், அதனுடன் இணைந்து செயலாற்றி, இன்னும் அதன் இயக்க சக்தியாக உழைத்துவருந் தமிழறிஞர் சு. நடசேபிள்ளை அவர்களையும் நினைவிலிருத்திக் கொள்ளுதல் வேண்டும். ஈழநாட்டின் தலை சிறந்த அரசியல் ஞானியும், கல்விமானுமான சேர். பொன். இராமநாதன் அவர்களின் மருகரான அவர். பரமேஸ்வரக் கல்லூரியின் தமிழ் வித்துவானாகச் சேர்ந்து ஈழத் தமிழ் வளர்ச்சிக்குத் தொண்டாற்றத் தொடங்கியதிலிருந்து. இன்றுவரை அதன் மேன்மைக்காக உழைத்து வருகின்றார். சுதந்திர ஈழத்தில். தென்னகத்தின் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் அநுசரணையுடன், தமிழ் கூறும் நல்லுலகின் தமிழ்விழா வெற்றிகரமாக நடைபெறுவதற்கு அவர் முன்னணியில் நின்று உழைத்தார். கதிர்காம நாதன் திருப்பள்ளி எழுச்சி என்கிற அவரது பாடல்கள் வெளி வந்த பொழுதே, அவரை ஒரு சிறந்த புலவராக ஈழம் அறிந்து கொண்டது. சமீபத்தில் வெளி வந்துள்ள சகுந்தலை வெண்பா அதனைச் சந்தேகத்திற் கிடமின்றி நிலைநாட்டி விட்டது. ஆழ்ந்த தமிழ்ப் புலமையுடைய அவர். இலங்கைப் பாராளுமன்றத்தின் பிரதிநிதிசபையின் அங்கத்தவராகவும், தபால் - வானொலிப் பகுதி அமைச்சராகவும் கடன்மை பார்த்துள்ளார். தற்பொழுது அவர் மேற்சபை (ளுநயெவந) அங்கத்தவராவர்.

யாழ்ப்பாணத்தில் நடந்தேறிய தமிழ் விழாவின் வெற்றிக்கு உழைத்தவர்களுள் இன்னொருவர் காலஞ் சென்ற கே. கனகரத்தினம் அவர்கள் ஆவர். அவர் அப்பொழுது கல்வி அமைச்சின் பாராளுமன்றக் காரியதரிசியாகக் கடன்மை பார்த்துக் கொண்டிருந்தார்.

1948 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஈழத்திலே பல எழுத்தாளர் சங்கங்கள் தோன்றின. இலங்கையின் இடதுசாரி இயக்கங்களுடன் ஒத்துழைக்க கே. இராமநாதன், கே. கணேஷ், எம். பி. பாரதி போன்றோரால் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தாபிக்கப்பட்டது. அவர்களால் நடாத்தப்பட்ட பாரதி என்னுஞ் சஞ்சிகை இலக்கியத் துறையில் மார்க்ஸிசக் கண்ணோட்டத்தை அறிமுகப்படுத்தியது. அச்சங்கம் பல ஆண்டுகள் செயலற்றுக்கிடந்தது. பின்னர், கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தவர்களான எழுத்தாளரால் அதற்குப் புத்துயிரூட்டப் பெற்றது. பிரேம்ஜி அதன் பொதுச் செய லாராக்கப்பட்டார். அதன் கிளை யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டது. அந்தக் காலத்தில் வேறு எழுத்தாளர் சங்கங்கள் செயலாற்றாத காரணத்தால். எழுத்தாளர் மத்தியில் கருத்துப் பரிவர்த்தனைகள் நடைபெறுவதற்கு ஏற்றதாகப் பல கருத்தரங்குகளை அது ஏற்பாடு செய்து கொடுத்தது. இக்கருத்தரங்குகள் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் நடாத்தப்பட்டன. அத்துடன், பெரியார் ஞாபகார்த்தமாக விழாக்களையும் அது நடாத்தியது. சோமசுந்தரப் புலவரின் ஞாபகார்த்தமாக ஒரு கவிதைப் போட்டியினை நடத்திப் பரிசில்கள் வழங்கிற்கு. 1961 ஆம் ஆண்டிற்கு முன்னர். கட்சி அரசியலை மறந்து, பல்வேறு தரப்பட்ட அரசியற் கோட்பாடுடையவர்களும் முற்போக்கு எழுத்தாளர் சங்க நடவடிக்கைகளிலே பங்கு பற்றினார்கள். கொழும்பில் ஆடம்பரமாக ஸாஹிராக் கல்லூரி மண்டபத்தில் நடாத்தப்படட முதலாவது மகா நாட்டில், எதிர்க்கருத்துப் பரிவர்த்தனைக்கு இடமளிக்க மறுத்ததன் காரணமாகவும், அஃது இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் எழுத்தாளரது தொழிற் சங்கமே என்று நிரூபிக்கப்பட்டதனாலும், பல அங்கத்தவர்கள் அதிலிருந்து விலகினார்கள். அச்சங்கம் புதுமை இலக்கியம் என்னும் விமர்சனச் சஞ்சிகையை மிகுந்த ஆர்வத்துடன் பிரசுரித்து வந்தது. அதன் அச்சுக் கூலியிலும் பார்க்கக் கூடுதலான விளம்பரத் தொகையைக் கூட்டுறவு மொத்த விற்பனவுப் பகுதி செலுத்தி வந்த போதிலும், அதனைத் தொடர்ந்து நடத்தாதது விசனிக்கத்தக்கதே’ ஆரம்பத்தில் ஆக்கபூர்வமான வேலைகளைச் செய்துவந்த மேற்படி சங்கம், பிற்காலத்தில் சாகித்திய விழாக்களைக் குழப்புதலையே தனது பிரதான இலக்கியப் பணியாக வரித்துக் கொண்டது. 1962ஆம் ஆண்டில் தமது சங்க அங்கத்தவர்களை சாகித்திய விழாவிற் பேச அனுமதிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டஞ் செய்தது. 1963ஆம் ஆண்டில் சாகித்திய விழாவிற் கலந்து கொண்ட பேச்சாளர்களுக்கு முட்டையெறிந்து அறிஞருலகின் வெறுப்பினைச் சம்பாதித்துக் கொண்டது. எழுத்தாளர் மத்தியிலே ஐக்கியத்தை உருவாக்க உழைத்தபோது நன்றாக இயங்கிய சங்கம், அவர்கள் மத்தியிலே பிரிவினையை வளர்க்க முயன்றபோது தாழ்ந்தது.

மலாயாவில் தமிழன் என்னும் பத்திரிகை நடாத்திய வித்துவான் வ. மு. கனகசுந்தரம் அவர்களின் முயற்சியினாற் கொழும்புத் தமிழ்ச் சங்கம் வளர்ந்து வந்தது. அது வருடா வருடம் தென்னக அறிஞர்களை அழைத்து விழாக்கள் நடாத்தியது.

ஆ. க. சுப்பிரமணியம் அவர்களின் முயற்சியினால் இலங்கை எழுத்தாளர் சங்கம் 1952 ஆம் ஆண்டிலே தாபிக்கப்பட்டது. இருப்பினும். அது செயற்படவில்லை. பின்னர் எஸ். டி. சிவநாயகம் அவர்களுடைய முயற்சியினால் அகில இலங்கை எழுத்தாளர் சங்கம் நிறுவப்பட்டது. கொழும்பில் இயங்கிய இச்சங்கங்களுடன் சோ. சிவபாதசுந்தரம். அ. குருசாமி, வி. லோகநாதன் ஆகியோரது முயற்சியின் பயனாக இலக்கிய அன்பர் வட்டம் சில ஆண்டுகளாக கிரமமாகக் கூடிவந்தது.

யாழ்ப்பாணத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆரம்பத்தில் வேகமாகச் செயற்படாவிட்டாலும், பிற்பகுதியில் நன்கு இயங்கியது. நாவேந்தன். முருகையன், சொக்கன், யாழ்ப்பாணம் - தேவன் ஆகியோர் அனத் செயலாளர் களாகக் கடன்மையாற்றினார்கள். தமிழ் எங்கள் ஆயுதம் என்னுங் கவிதை நூலை அது வெளியிட்டது. வானொலிக்கவிதைப் போட்டியில் பரிசு பெற்;ற ம.செல்லையாவைத் தகுந்தபடி கௌரவித்ததுடன். முதன் முதலாகச் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றவர்களையுங் கௌரவித்தது. தென்னகத்து நல்லறிஞர்களும். எழுத்தாளர்களும் ஈழத்துக்கு வருகை தந்தபோது, அஃது அறிமுகக் கூட்டங்களையும் ஒழுங்கு செய்தது.

இந்த யாழ்ப்பாணத் தமிழ் எழுத்தாளர் சங்கமே, சென்ற வருடம் விரிவுபெற்று இலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கமாக மாறியது. அதன் தோற்றம் ஈழத்தின் பல பகுதி எழுத்தாளர் களினாலும் வரவேற்றப்பட்டது. அது கிழக் கிலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்துடன் சேர்ந்து தமிழ் விழா ஒன்றைத் கோலாகலமாகக் கொண்டாடியது. ஐநூறு ரூபா பரிசு வழங்கப்பட்ட சிறுகதைப் போட்டியை வெற்றிகரமாக நடாத்தியது. பரிசுபெற்ற கதைகளையும், பராட்டப்பெற்ற கதைகளையுஞ் சேர்த்து போட்டிக் கதைகள் என்னும்நூலை வெளியிட்டுள்ளது. சு. வேலுப்பிள்ளையை ஆசிரியராகக் கொண்டு இலங்கை எழுத்தாளன் என்னும் தரமான இலக்கிய விமர்சன ஏடொன்றை மாதாமாதம் வெளியிட்டு வருகின்றது. தமிழ் விழாவின் போது அஃது அகில இலங்கை அடிப்படையில் இயங்க வேண்டும் என்கிற அபிப்பிராயம் பல பகுதி எழுத்தாளர்களாலுந் தெரிவிக்கப்பட்டு, இலங்கை எழுத்தாளர் சங்கத்தின் சாதனைகளிலே பெரும்பங்கு அதன் செயலாளராகக் கடன்மையாற்றும் யாழ்ப்பாணம் - தேவனைச் சாரும் எனக் கூறின் மிகையாகாது.

யாழ் இளம் எழுத்தாளர் சங்கம் எழுத்தார்வமிக்க இளைஞர்களாலே தொடங்கப்பட்டு, முறையாகக் கூட்டங்கள் நடாத்தி, அறிஞர்களை அழைத்துப் பேசச் செய்து, தனது அங்கத்தவர்களுடைய வளர்ச்சிக்காக உழைத்தது. அதன் அங்கத்தவர்கள் தற்பொழுது சர்வகலாசாலையிலும் பிற இடங்களிலும் இருந்து ஓரளவு தங்களுடைய திறமையைக் காட்டி வருகின்றார்கள். அது வெளியிட்டுள்ள ஆண்டு மலரொன்று நல்ல முறையில் அமைந்துள்ளது. அது வெளியிட்ட கவிதைத் தொகுதியின் மூலம் அறிமுகமான இளங் கவிஞர்கள் வளர்ந்து வருதல் மகிழ்ச்சியைத் தருகின்றது. யாழ் இளம் எழுத்தாளர் சங்கத்திலேற்பட்ட அரசியற் கருத்து வேற்றுமைகள் காரணாக இலங்கை இளம் எழுத்தாளர் சங்கம் ஒன்றுந் தோன்றியுள்ளது.

தீவுப் பகுதி எழுத்தாளர் சங்க மொன்றும் இயங்கி வருகின்றது. கவிஞர் தில்லைச்சிவன் அதன் செயலாளராகக் கடன்மையாற்றுகின்றார்.

நாவேந்தனை நாயகமாகக் கொண்ட இலக்கிய இரசிகர் சங்கமும் இயங்கி வருகின்றது. கொழும்பில் அவ்வாறான ஓர் இலக்கிய இரசிகர் குழு பயனுள்ள வேலைகளைச் செய்து வந்தது. அதன் செயலாளர்களாக ஆர். கனகரத்தினம், எம். ஏ. ரஹ்மான் ஆகிய இருவருங் கடன்மையாற்றினர்.

எழுத்தாளர் சங்கம் என்று அழைக்கப்படாவிட்டாலும், குரும்பசிட்டி சன்மார்க்க சபையையும் ஈண்டு குறிப்பிடுதல் பொருத்தமுடைத்து. தமிழ்த் தொண்டர் நா. பொன்னையா அவர்களால் தொடங்கப்பட்ட மேற்படி சபை கடந்த இருபத்தொன்பது ஆண்டுகளாக பல இலக்கியக் கூட்டங்களை நடாத்தி வருவதுடன், பண்டிதமணி சி. க. வின் சைவ நற்சிந்தனைகள், ஈழத்து எழுத்தாளர் ஐவர் எழுதிய மத்தாப்பு, ஆ. தம்பித்துரை எழுதிய ஓவியக் கலை, சிறுவர் சித்திரம் என்பனவற்றையும் அது வெளியிட்டுள்ளது.

ஈழத்துப் பண்டிதர் கழகம், பண்டிதர்களுடைய நலன்களைப் பேணுவதுடன், புதிதாகப் பண்டிதர்கள் தோன்றுவதற்கும் பணியாற்றி வருகின்றது. பண்டிதர் செ. துரைசிங்கம்; அவர்கள் அதன் செயலாளராவர். அதன் தலைவராகக் கலாநிதி ஆ. சதாசிவம் அவர்கள் வந்ததுடன், மரபினைப் பேணும் இயக்கத்தை அது தீவிரப்படுத்தி வரும் அதே நேரத்தில், மற்றும் ஆற்றலிலக்கியக்காரர்களுடனும் நேச உறவினை வளர்த்துள்ளது.

மட்டக்களப்பில், 1941 ஆம் ஆண்டளவில் கலை மன்றம் என்கிற தாபனம் தோன்றிற்று. பண்டிதர் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை அது பரிசில் வழங்கி ஊக்குவித்தது. வெளியூர் அறிஞர்களையும் அழைத்துத் தமிழ் விழாக்கள் கொண்டாடிற்று. அத்துடன் ஞாயிறுதோறும் பயனுள்ள ஆராய்;ச்சி வகுப்புக்களை நடாத்திற்று. எப். எக்ஸ். சி. நடராசா அவர்கள் செயலாளராக இருந்த பொழுதுதான் அம்மன்றம் சுறுசுறுப்பாக இயங்கிற்று. துடிப்பு மிக்க இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட வாலிபர் சங்கம் பெரிய அளவிலே ஒரு தமிழ் விழா நடத்தியது.

இருப்பினும். எழுத்தாளர் சங்கம் 1960 ஆம் ஆண்டு வரையில் மட்டக்களப்புப் பகுதியிலே தோன்றவில்லை. மட்டக்களப்பு சிவானந்த வாசிகசாலை மண்டபத்தில் நடை பெற்ற எழுத்தாளர் சந்திப்பு ஒன்றில் அரசியல் வேற்றுமைகளைக் கடந்து, எழுத்தாளர் ஐக்கியத்தை வளர்த்த ஓர் எழுத்தாளர் சங்கந் தோன்ற வேண்டிய அவசியத்தை எஸ். பொன்னுத்துரை வற்புறுத்திப் பேசினார். இதனைத் தொடர்ந்து மட்டக்களப்புப் பகுதியிலே பல எழுத்தாளர் சங்கங்கள் தோன்றலாயின. மட்டக்களப்புத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உதய காலத்தின் எப். ஜி. ஜெயசிங்கம் மிகவும் உற்சாகத்துடன் உழைத்து அதனை நல்ல நிலையில் வைத்தார். தற்பொழுது அன்புமணியை செயலாளராகக் கொண்டுள்ளது. விபுலாநந்த நினைவு தினத்தை ஒழுங்காக கொண்டாடி வருவதுடன், தமது அங்கத்தவர்கள் ஏதாவது போட்டிகளிலே கலந்து கொண்டு வெற்றியீட்டினால் அவர்களை பாராட்டியுங் கவுரவித்தும் வருகின்றது. மாணவர்களிடையே கட்டுரைப் போட்டிகளையும் பேச்சுப் போட்டிகளையும் நடாத்துகின்றது. காலஞ் சென்ற எம். எஸ். பாலு அவர்களின் ஞாபகார்த்தமாக அஃது ஒருநாடக போட்டியினை நடாத்துதல் குறிப்பிடத்தக்கதாகும்.

கரவாகுப்பற்றுப் பகுதியில் கல்முனைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தாபிக்கப்பட்டது. அதன் செயலாளர் வி. எம். இஸ்மாயிலாவார். அது தனது முதற் பணியாக நாடகத்துறையில் எஸ். பொன்னுத்துரை ஆற்றிய தொண்டுகளுக்காக அவரை பொற்பதக்கஞ் சூட்டி கௌரவித்தது. பல புத்தக அறிமுக கூட்டங்களை நடாத்தியதுடன், இலங்கையர்கோன் ஞாபகார்த்த தினத்தை மிகக் கோலாகலமாக கொண்டாடிற்று. அவ்விழாவின் சிறப்பு அம்சமாக ஒருசிறுகதைப் போட்டியை நடாத்தி, முந்நூற்றைம்பது ரூபா பரிசில் வழங்கிற்று.

முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அக்கரைப் பற்றுக் கிளையின் தலைவர் அ. ஸ. அப்துஸ்ஸமது ஆவார். அக்கிளை சித்திலெப்பை நினைவு தினத்தை கொண்டாடியது.

மஹாகவி, பாலேஸ்வரி ஆகியோர் திருகோணமலையிற் கடமையாற்றிய பொழுது, திருகோணமலை எழுத்தாளர் சங்கம் நற்பணி புரிந்து வந்தது. அப்பொழுது ஒரு தரமான மலர் வெளிவந்தது. மலரின் கவிதைப் பகுதி அழகுற அமைந்து இருந்தது. இருவரும் கொழும்புக்கு மாற்றலாகி வந்த உடன் மேற்படி சங்கம் இயற்கை எய்திற்று.

கவிஞர் அண்ணலுடைய ஊக்கத்தினாலே கிண்ணியா தமிழ் எழுத்தாளர் சங்கம், கொட்டியாரப் பகுதியிலே தமிழ் விழிப்பினை உண்டாக்கும் முகமாக தாபிக்கப்பட்டிருக்கின்றது.

துறை நீலாவணைக் கிராம நலனைப் பேணும் வகையில் ஜீவா ஜீவரத்தினம் என்பவரால் இலக்கியப் பெரு மன்ற மொன்று நிறுவப்பட்டுள்ளது. அஃது ஒரு கவிதைப் போட்டியையும் நடாத்தியுள்ளது.

கிழக்கிலங்கையிலே சிதறிக் கிடக்கும் எழுத்தாளர்களை ஒன்று திரட்டும் அவாவுடன் கிழக்கிலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நிறுவப்பட்டுள்ளது. அதன் தலைவர் எப். எக்ஸ். ஸி. நடராசா. பண்டிதவர்க்கத்தின் நலன்களைப் பேணவும், அதன் பொதுச் செயலாளர் எஸ். பொன்னுத்துரை ஆற்றலிலக்கிய முயற்சிகளின் ஆக்கங் கருதி உழைக்கும் வகையிலும் அஃது அமைந்துள்ளது. இச் சங்கத்தினர் மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற தமிழ்விழா ஒன்றினை நடாத்தினார்கள். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முதலாவது மகாநாடு எழுத்தாளர்களைப் பிரித்தது என்றால், தமிழ்விழா எல்லோரையும் ஒன்று சேர்த்து வைத்தது என்று சொல்லலாம். அது கிழக்கிலங்கைப் புத்தக சபையை நிறுவி, பழந்தமிழ் ஏட்டுப் பிரதிகளை அச்சுவாகனம் ஏற்றும் அரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

பக்கீர்த் தம்பியின் உழைப்பின் பயனாகச் சம்மான்துறையில் கலாபிவிருத்திக் கழகம் நிறுவப்பட்டுள்ளது. அது உரைமலர் என்னும்நூலை வெளியிட்டுள்ளதுடன், ஆண்டு தோறும் பேச்சுப் போட்டிகள் நடாத்தி, விமரிசையாக ஆண்டு விழாக்கள் கொண்டாடி வருகின்றது.

மட்டக்களப்பில் இளைஞர் மத்தியிலே கலை இலக்கிய ஆர்வத்தினை வளர்க்க மட்டக்களப்புத் தமி;ழ்க் கலாமன்றம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அது கிழக்கிலங்கையிலே கலை இலக்கியத் துறையிலே முன்னணியில் நின்றுழைக்கும் நான்கு பெரியார்களைப் பொற்பதக்கஞ் சூட்டிக் கௌரவித்தது. கவிதைத் துறையிற் புலவர்மணி ஏ. பெரியதம்பிப் பிள்ளையும், வரலாற்றுத்துறையில் எப். எக்ஸ். ஸி நடராசாவும், புனைகதைத் துறையில் எஸ். பொன்னுத்துரையும், பேச்சுத்துறையில் செ. இராசனுத்துரையும் கௌரவிக்கப்பட்டார்கள். அது மட்டக்களப்புக் கலைஞர்களைப் கொழும்பு இரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திற்று. மீன்பாடும் தேனாடு தந்த தவப் புதல்வர் விபுலாநந்தரின், நினைவாக ஒரு சிலையினை நிறுவும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. இம் மன்றத்தின் உயிராகவும், இயக்கசக்தியாகவும் உழைத்து வருபவர் எஸ். எஸ். எம். யூசுப் சாகிபு (மட்டுநகர் சாகிபு) அவர்களாகும். அவர் ஒரு சிறந்த நாடக நடிகராக இருப்பதுடன், கலை இலக்கிய முயற்சிகளுக்கு அள்ளிக் கொடுக்கும் வள்ளலாகவும், தன்னை விளம்பரப்படுத்தாது சக்தியாக இயங்கும் உழைப்பாளராகவும் திகழ்கின்றார். ஸ்ரீகாந்தா வைச் செயலாள ராகக் கொண்டு இயங்கிய அகில இலங்கைத் தமிழ் எழுத்தாளர் முன்னேற்றச் சங்கம் பல கருத்தரங்குகளை நடாத்திற்று.

கதம்பம் ஆசிரியர் கே. வி. எஸ். மோகனைச் செயலாளராகக் கொண்டு குழந்தை எழுத்தாளர் சங்கம் ஒன்று தாபிக்கப்பட்டது. அது தென்னகத்தின் குழந்தைக் கவிஞரான அழ. வள்ளியப்பாவைத் தருவித்துக் கூட்டங்கள் நடாத்திற்று. பிறிதொரு குழந்தை இலக்கிய எழுத்தாளர் சங்கம் பெயரளவில் தாபிக்கப்பட்டுள்ளது. பெயரளவில் இருக்கும் இன்னொரு சங்கம் கவிஞர்கள் சங்கமாகும்.

தமி;ழ் எழுத்தாளர் மன்றம் கொழும்பில் தாபிக்கப்பட்டது. இதன் தலைவராகப்பண்டிதர் கா. பொ. இரத்தினமும் செயலாளராக சங்கரப்பிள்ளையும் கடன்மையாற்றுகின்றார்கள். இச்சங்கம் கருத்தரங்கங்கள் கடன்மையாற்றுகின்றார்கள். இச்சங்கம் கருத்தரங்கங்கள் நடாத்தியதோடு பல போட்டிகளில் பரிசு பெற்ற ஈழத்து எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து ஈழத்துப் பரிசுச் சிறு கதைகள் என்கிற பெயரில் வெளியிட்டுள்ளது.

வீரகேசரியில் வெளிவருந் ‘தோட்ட மஞ்சரி’யினால் மலைநாட்டைச் சேர்ந்த பல இளம் எழுத்தாளர்கள் தமது எழுத்தாற்றலை வெளிப்படுத்தி வருகின்றார்கள். மலையகத்தில் ஒரு கேந்திரமான எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவித்து இரா. சிவலிங்கம். பெரி. கந்தசாமி, செந்தூரன், செ. மு. கார்மேகம் ஆகியோர் மலையக இலக்கிய வளர்ச்சிக்கு உழைத்து வருதல் மகிழ்ச்சி தருஞ் செயலாகும். பதுளை, நாவலப்பிட்டி, கண்டி, மாத்தளை ஆகிய பகுதிகளிலே இளம் எழுத்தாளர் சங்கங்கள் தோன்றி வருதல் மலையகத்தின் இலக்கிய விழிப்புணர்ச்சியைக் காட்டுகின்றது.

கிராமத்திற்கு ஓர் எழுத்தாளர் சங்கம், ஆளுக்கோர் எழுத்தாளர் சங்கம் என்கிற வகையிலே எழுத்தாளர் சங்கங்கள் தோன்றிப் பகையுணர்ச்சியையும் வளர்த்து வரும் ஒரு சூழலை அவதானிக்க முடிகின்றது. எழுத்தாளன் ஒவ்வொருவனும் தனதுதனித்துவத்தை இலக்கியத்திலே நிலைநாட்ட விழைகின்றான். எனவே, ஓர் எழுத்தாளன் பிறிதோர் எழுத்தாளனுடன் கருத்து மாறுபாடு கொண்டிருத்தல் இயல்பாகும். ஆனாலும், இந்த வேற்றுமைகளிலே ஒற்றுமையை நிலை நாட்டுதலே சிந்தனையாளரான எழுத்தாளரின் கடன்மையாகும். ஈழம், தமிழ் என்கிற விரிந்த அடிப்படையிலே நமது எழுத்தாளர் சங்கங்கள் செயலாற்ற முற்பட்டால் மிகுந்த பயனை நாம் அறுவடை செய்து கொள்ளலாம்.

பிற முயற்சிகள்

இதுவரையில் நான் எழுதிய பகுதிகளுள் அடங்காது நடைபெற்ற இலக்கிய முயற்சிகளைப்பற்றி, இந்தப் பகுதியிலே எழுதுகின்றேன்.

பிற முயற்சிகளைப் பற்றி நினைக்கும் பொழுது முதலாவது ஏ. ஜே. கனகரத்தினாவைப் பற்றிய நினைவுதான் வருகின்றது. சொற்பகாலம், ஈழத்தின் ஆங்கிலத் தினசரிகளுள் ஒன்றான ‘டெயிலி நியூ’ஸின் ஆசிரியர் குழுவிலே கடன்மையாற்றிய அவர், ஈழத்துத் தமிழ் கதாசிரியரின் படைப்புக்களை ஆங்கில வாசகர்களுக்கு அறிமுகஞ் செய்து வைத்துள்ளார். பொ. தம்பிராசா, சாந்தினி, டொமினிக் ஜீவா ஆகியோரின் கதைகளை மொழி பெயர்த்து. அவ்வப்போது ஆங்கிலப் பத்திரிகைகளிலே வெளிவரச் செய்தார். பொ. தம்பிராசாவின் தலைக் கொள்ளி என்னுங் கதை ‘இலஸ்ரேட்டட் வீக்லி ஓவ் இண்டியா’வில் வெளியாயிற்று. தற்கால ஈழத்துச் சிறுகதை கள் என்னுந் தொடர் ‘ஒப்சேவர்’ பத்திரிகையின் வாரப் பதிப்பில் வெளிவந்தபொழுது, சிங்களக் கதாசிரியர்களிலும்பார்க்க, தமிழ்க் கதாசிரியர்கள் ஒரு படி மேலே நிற்கிறார்கள் என்று நிரூபித்த பெருமை அவரைச்சாரும்;. அந்த வரிசையில் இடம் பெற்ற தோணி (வ. அ. இராசரத்தினம்) தாலி (சொக்கன்), நிழல் (எஸ். பொன்னுத்துரை), செம்மன் (கனக செந்திநாதன்) ஆகிய கதைகளை மிக அருமையாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். அவர் நல்ல விமர்சகருமாவர். தென்னத்தார் தரிசித்த மௌனியிலும் பார்க்க பிறிதொரு மௌனியைத் தமது மௌனி வழிபாடு என்னுங் கட்டுரையிலே நமக்குக் காட்டியுள்ளார். முறையான ஆங்கில அறிவும், மிகுந்த தமிழ்ப் பற்றுங் கொண்டுள்ள இளைஞரான அவரிடம் ஈழத்தமிழ் மாதா அதிகம் எதிர்பார்க்கிறாள்.

சர்வதேசப் புகழ் பெற்ற நம்நாட்டு ஆங்கில எழுத்தாளர் அழகு. சுப்பிரமணியமாவர். அவரது சிறுகதை உலகச் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றதில். ஈழத் தமிழர் பெருமைப்படலாம். அவரது பல கதைகளைத் தமிழாக்கும் முயற்சி நடைபெற்றுச் சில கதைகள் ‘தினகர’னிலும், ‘வீரகேசரி’யிலும் பிரசுரமாகியிருக்கின்றன. அவரது கதைகளைத் தமிழாக்கும் பணியில் முன்னணியில் உழைப்பவர். ஈ. ஆர். திருச்செல்வமாவார்.

சி.வி.வேலுப்பிள்ளை நாடறிந்த ஆங்கில எழுத்தாளருங் கவிஞருமாவர். அவரது ஆங்கிலப் படைப்புக்களைத் தமிழாக்கும் பணியினை. ‘டெயிலி மிரர்’ ஆங்கிலத் தினசரியிற் கடன்மையாற்றும் பொ. கிருஷ்ணசாமி மேற்கொண்டுள்ளார். வாழ்வற்ற வாழ்வு. எல்லைப்புறம் ஆகியன மொழிப் பெயர்க்கப்பட்டுத் ‘தினகர’னில் வெளியாயின. சமீபகாலத்தில் தாமே தமிழிலும் எழுத முயலுகின்றார். ‘வீரகேசரி’யில் வெளியான வீடற்றவன் குறுநாவல் அதற்குச் சான்றாக அமைந்துள்ளது. ‘இலங்கைத் தேயிலைத் தோட்டத்திலே (ஐn உநலடழளெ வநய பயசனநn) என்னும் அவரது ஆங்கிலக் கவிதைத் தொகுதி பலரது பாராட்டுதல்களைப் பெற்றது.

‘என்கவுண்டர்’ பத்திரிகை நடாத்திய உலகச் சிறுகதைப் போட்டியில் பரிசுபெற்று, ஈழத்தின் புகழை நிலை நாட்டியவர். நம் நாட்டு ஆங்கில எழுத்தாளரான த. ராமநாதனாவர். அவரது குநுநாவலொன்று ‘கரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்’ என்னும் மகுடத்தில் மொழிபெயர்க்கப் பட்டுத் ‘தினகரனி’லே பிரசுரமாயிற்று. அவரது கதைகளை மொழி பெயர்ப்பதில் காவலூர் ராசதுரை ஆர்வங் காட்டி வருகின்றார்.

ராஜா புரக்டர், இ. சி. ரி. கந்தப்பா ஆகிய ஈழத் தமிழர்களும் ஆங்கிலத்திலே சில அருமையான கதைகளை எழுதி நூலாக்கியுள்ளார்கள். அவர்களது கதைகளையும் மொழி பெயர்க்கும் பணியில் நமது தமிழ் எழுத்தாளர்கள் ஈடுபடுதல் நன்று.

தமிழ்க் கதைகளைச் சிங்கள வாசகருக்கும், சிங்களக் கதைகளைத் தமிழ் வாசகருக்கும் அறிமுகப்படுத்தும் வகையிற் சில கதைகளை மொழி பெயர்ப்பதில், பாராளுமன்ற மொழி பெயர்ப்பாளராகக் கடன்மையாற்றும் நா. சுப்பிரமணியம் ஈடுபட்டுள்ளார்.

சென்ற காலப் பெரியோர்களது பிரபந்தங்கள் மறுபிரசுரஞ் செய்து வெளிவந்துள்ளமை மற்றொரு முக்கிய நிகழ்ச்சியாகும். சிவசம்புப் புலவர் பிரபஞ்சத் திரட்டையடுத்து, முத்துக் குமாரகவிராசசேகரரது பாடல்கள், சங்கர பண்டிதரது நூல்கள், முருகேச பண்டிதரது பாடல்கள், ஆறுமுக நாவலர் குமாரசுவாமிப் புலவர் என்போரது நூல்கள் எளிதிற் பெறத்தக்கனவாக இருக்கின்றன. ஈழகேசரிப் பொன்னையா ஞாபகார்த்த வெளியீட்டு மன்றம், கலைப்புலவர் நவரத்தினம் அவர்களின் ஈழத்தில் கலை வளர்ச்சி, சி. கதிர வேலுப்பிள்ளை அவர்களின் கிரேக்க நாட்டுத் தத்துவ தரிசனம் அகிய சிறந்த நூல்களை வெளியிட்டு ஈழத்திற்குப் பெருமை தேடித் தந்துள்ளது.

தம்மொழி அலுவலகம் பல அரிய ஆங்கில நூல்களைத் தமிழாக்கித் தரும் பணியில் ஈடுபட்டுள்ளது. தமிழிலே விஞ்ஞான பாடங்களைக் கற்பிப்பதற்கான கலைச் சொற்களை ஆக்கியும், உயர் வகுப்பு மாணாக்கருக்கு உபயோகமான நூல்களை மொழி பெயர்த்தும் வருதல் நற்பணியாகும். பேராசிரியர்களாகிய ஆ. வி. மயில்வாகனமும், அ. சின்னதம்பியும் தமிழில் விஞ்ஞானம் கற்பிக்க வேண்டும் என்கிற இயக்கத்திற்குத் தலைமை தாங்குகின்றார்கள். இருப்பினும், தம்மொழி அலுவலகத்தினர் கலாநிதி எஸ். பொன்னையா அவர்கள் காட்டிய மொழிபெயர்ப்புக் கொள்கையைப் பின்பற்றுவது பற்றி அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. எடுத்துக்காட்டாக ஒரு பதத்தின் தமிழாக்கத்தை இங்கு குறிப்பிடவிரும்புகின்றேன். Pபை-சைழn என்பதைத் தம்மொழி அலுவலகத்தினர் பன்றி இரும்பு என்று மொழி பெயர்த்துள்ளனர். தென்னகத்தார் வார்ப்பு இரும்பு என்னுஞ் சொல்லை உபயோகிக்கின்றார்கள். பண்டைக்காலந் தொட்டே Pபை-சைழn என்பதற்குப் பாளம் என்றுஞ் சொல் வழக்கல் இருந்துள்ளது. இவ்வாறு அர்த்தச் செறிவுடைய சொற்கள் வழக்கில் இருக்கும் பொழுது. ஏன் இவ்விதமான அவதி என்பதுதான் நமக்குப் புரியவில்லை.

கூட்டு முயற்சிகளான இலக்கியங்கள் தோன்ற வேண்டுமென்ற ஆர்வத்துடன் எஸ். பொன்னுத்துரை உழைத்து வருகின்றார். எஸ். பொவுக்கு எதையும் புதிது புதிதாகச் செய்து பார்த்து, அதன் வெற்றி தோல்விகளின் மீது மீண்டும் முன்னேற வேண்டும் என்கிற ஆர்வம் மிகுதி யாகவுண்டு. அவரது எண்ணத்தில் பல பரிசோதனைக் களங்கள் மலர்ந்தன. முதன்முதலில் ஐந்து எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதிய பத்தாப்பு என்னுங் குறு நாவல் வீரகேசரியில் பிரசுரமாயிற்று. மத்தாப்பின் ஐந்து வருணங்களைத் தேர்ந்தெடுத்து. இ. நாகராஜன், கனக. செந்திநாதன், சு. வேலுப்பிள்ளை, (சு. வே), குறமகள், எஸ் பொ. ஆகிய ஐவரும் ஒவ்வொரு அத்தியாயத்தை எழுதி, மேற்படி குறுநாவலைப் பூர்த்தி செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, ‘தினகர’னில் ஏழு எழுத்தாளர் சேர்ந்து ஒவ்வொரு அத்தியாயத்தைப் பூர்த்தி செய்த வண்ணமலர் என்னுங் குறுநாவல் பிரசுரமாயிற்று.

நவரசங்களையுஞ் சித்திரிக்கும் ஒரு நாவல் கூட்டு முயற்சியாகத் தோன்ற வேண்டுமென்று எஸ். பொ. விரும்பினார். ஒவ்;வோர் அத்தியாயத்திலும் ஒவ்வொரு ரசம் மேலோங்கி நிற்பதாக ஒன்பது அத்தியாயங்களில் மேற்படி நாவல் பூர்த்தியாகலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. நாவலுக்குக் கண்டிச் சரித்திரம் பகைப்புலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இவ்வாறே மணிமகுடம் என்னும் நாவல் தோன்றியது. அது வீரகேசரியிற் பிரசுரமாயிற்று. இ. நாகராஜன், கனக. செந்திநாதன், எஸ். பொ. ஆகிய மூவரும் முறையே மூன்று மூன்று அத்தியாயங்களை ‘மணிமகுட’த்தில் எழுதினார்கள்.

இப்பரிசோதனை முயற்சிகளிலே யாழ்ப்பாணத்திலே எழுத்தாளர்களே பங்குபற்றினார்கள். முழுக்க முழுக்க மட்டக்களப்பு எழுத்தாளர்களைக் கொண்டு “கோட்டை முனைப் பாலத்திலே” என்னுத் தொடரை ‘தினகர’னுக்காக எம். ஏ. ரஹ்மான் தயாரித்தார். மட்டக்களப்பு நகரின் புளியந்தீவு, கோட்டைமுனை ஆகிய இரண்டு பகுதிகளை இணைப்பது கோட்டை முனைப்பாலமாகும். அப்பாலத்தில் நிகழுஞ் சம்பவங்களை வைத்து, இத்தொடரில் கட்டுரைகளும், சிறுகதைகளும், நடைச் சித்திரங்களும் இடம் பெற்றன. இத்தொடரில் பழம் எழுத்தாளரின் எண்ணிக்கைக்குச் சமமான ‘புதுமுகங்’களும் அறிமுகஞ் செய்து வைக்கப்பட்டன. ரஹ்மான் கிழக்கிலங்கையின் இலக்கிய விழிப்புணர்ச்சிக்குச் செய்துள்ள சேவை மகத்தானதாகும். அரசு வெளியீடு, ரெயின்போ பிரிண்டர்ஸ் ஆகியவற்றின் நிருவாகியான அவர், கிழக்கிலங்கை எழுத்தாளரது எழுத்துக்களை நூல் வடிவில் கொண்டுவருவதற்கு அரும்பாடுபட்டார். அரும்பாடு படுகின்றார். கவிதை சிறுகதை ஆகிய ஆற்றலிலக்கியத் துறையிலே கிழக்கிலங்கை எழுத்தாளர் முதன் முதலில் ஸ்ரீலங்கா சாகித்திய மண்டலப் பரிசு பெறும் வகையில் புலவர்மணி ஏ. பெரியதம்பிப் பிள்ளையின் ‘பகவத்கீதை வெண்பா’ வையும் வ. அ. இராசரத்தினத்தின் ‘தோணி’யையும் அவர் வெளியிட்டார். புத்தக வெளியீட்டுத் துறையில் அவர் அக்கறை காட்டுவதற்கு, அவர் எழுத்தாளராக இருப்பதுவே பிரதான காரணமாகும். 1950 ஆம் ஆண்டில், திருச்சி ஷாஜஹான் பத்திரிகையிற் சமயக் கட்டுரைகள் எழுதி முஸ்லிம் எழுத்தாளர் வரிசையிற் சேர்ந்து கொண்ட அவர், தற்காலத்தில் உருவகக் கதைத் துறையிலேயே தமது ஆற்றல்களை வெளி;ப்படுத்துகின்றார். தினகரன் நடாத்திய உருவகக் கதைப் போட்டியில் முதற் பரிசு பெற்றார். பல நல்ல உருவகக் கதைகளை அவ்வப்பொழுது எழுதியுள்ளார். ஈழம் பெருமைப்படும் வகையில் மரபு என்னும் உருவகக் கதைத் தொகுதியைத் தந்துள்ளார். சிறுவர் இலக்கியத் துறையிலும் ஈடுபாடுடைய அவர், ‘இளமைப் பருவத்திலே! என்னும் நூலைச் சிறுவருக்கேற்ற முறையில் மிக அழகாக அமைத்து வெளியிட்டார். அகில இலங்கைச் சிறுகதைப் போட்டியில் அவர் எழுதிய ‘பூ’ முதற்பரிசு பெற்றது.

‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’ என்னுஞ் சூத்திரத்தை ஆதாரமாகக் கொண்டு ஒரு சுவையான பரிசோதனைக் களத்தை எஸ். பொ. ஏற்படுத்தினார். மேற்படி சூத்திரத்தின் மூச்சினை ஐந்து இலக்கிய உருவங்களிலும், ஐந்து பார்வைகளிலும் அணுகுதலே இதன் நோக்கமாகும். மரபு என்னும் உருவகக் கதையை எம். எ. ரஹ்மானும், வேலி என்னுஞ்சிறுகதையை வி. எம். இஸ்மாயிலும் கடுதாசிக் கூட்டம் என்னும் ஒரங்க நாடகத்தை ஆர். பாலகிருஷ்ணனும், வழி என்னுங் கவிதையை நீலாவணனும், வீடு என்னுங் குறுநாவலை எஸ். பொவம் எழுதினார்கள். இந்தப் பரிசோதனையின் வெற்றி தோல்விகளை மதிப்பிட இருவர் நோக்கு என்னும் ‘விமர்சன அரங்கும்’ இடம் பெற்றது. இத்தொடரில் ஒவ்வோர் இலக்கிய உருவத்தின் போக்கினையும் இவ்விரண்டு எழுத்தாளர்கள் விமர்சித்தார்கள். இதில் சு. வேலுப்பிள்ளை, ஆ. சண்முகநாதன், வ. அ. இராசரத்தினம். ‘அண்ணல்’, ஏ. ரி. பொன்னுத்துரை, சி. மயில்வாகனம், முருகையன், எப். எக்ஸ். ஸி. நடராசா. கனக. செந்திநாதன், யாழ்ப்பாணம் - தேவன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விரிந்த பரிசோதனைக்கு ‘தினகரன்’ ஆசிரியர் ஆர். சிவகுருநாதன் அவர்கள் களமமைத்துக் கொடுத்ததைப் பாராட்டலாம்.

பஞ்ச கன்னியரைப் புதுப்பார்வையிலே ஐந்து எழுத்தாளர்கள் அணுகும் புதிய பரிசோதனை ஒன்றினையும் எஸ். பொ. செய்துள்ளார். அதில் இடம் பெறுங் கதைகள் இன்னமும் பிரசுரமாகவில்லை.

கவிஞர்களான மஹாகவியும் முருகையனுங் கூட்டாக ஒரு காவியத்தைப் பாடினார். தகனம் என்னும் மேற்படி காவியந் தேனருவியிற் பிரசுரமானது.

இலங்கை வானொலி என்றதும் வர்த்தக ஒலிபரப்புப் பகுதியில் ஒலிபரப்பப்படும் ‘டப்பா’ச் சங்கீதந்தான் ஞாபகத்திற்கு வருகின்றது. இலக்கியத் தரத்திற்கு உயரக் கூடியதாகச் சில பேச்சுக்களும், கவியரங்கங்களும், சில வானொலி நாடகங்களிளுமே இடம் பெற்றுள்ளன. சென்னை, திருச்சி ஆகிய நிலையங்களிருந்து ஒலிபரப்பப்படும் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு ஈடுசெய்யக் கூடியதாக எதனையும் ஈழத்து நிலையம் சாதிக்க வில்லை. ஆற்றல் இலக்கியத்திற்காகக் களமமைத்துக் கொடு;ப்பதிற்குப் புதிய போக்கினையோ ஆர்வத்தினையோ காட்டாதது விசனிக்கத் தக்கது. இருப்பினும் கவிஞரான தமிழ் நிகழ்ச்சி அதிகாரியைப் பெற்றுள்ளமையால். கவிதைத் துறையில் பல புதுப்புது அரங்குகளை அஃது ஒலிபரப்பியது. ஆற்றலிலக்கியத்தின் ஏனைய துறைகளிலும் இத்தகைய களங்களமைத்துக் கொடுத்தல் விரும்பத் தக்கது.

வானொலி நாடகத் துறையிலே பல எழுத்தாளர்கள் பங்குகொண்டு வருகின்றார்கள். அவர்களிலே தினகரன் பத்திரிகையின் நிர்வாகியாகக் கடன்மையாற்றும் எம். எஸ். இரத்தினம் விசேடமாகக் குறிப்பிடத்தக்கவராவர். நகைச் சுவைப் பாத்திரங்களை அமைப்பதுடன், அவற்றை நன்றாக நடிக்கவும் வல்லவர். மற்றும் வி. என். பாலசுப்பிரமணியம், பி. இராமலிங்கம், திருமதி சௌந்தரி இராமசாமி ஆகியோரும் நல்ல வானொலி நாடகங்களை எழுதி வருகின்றார்கள்.

இ. இரத்தினம் அவர்கள் பாஓதல் என்கிற அரங்கினை ஒழுங்கு செய்தார். அதற்கான விளக்கக் கட்டுரையும் எழுதியுள்ளார். ‘ஓதல்’ என்னுஞ் சொல் தமிழ்ச் செவிகளுக்குப் பொருந்துவதாக இல்லை. நாம் பண்டுதொட்டு வேதங்களைத் தாம் ‘ஓதி’ வருகின்றோம். மரபு வழியாக வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என நால்வகைப் பாக்கள் உள. அவற்றை நாம் பாடலாம். ஆங்கிலத்தில் Pழநவசல என்பதை சுநஉவைந பண்ணுவார்கள் (செய்யுள்களை ‘ஒப்பு’விப்பார்கள்). ளுழபெ (பாட்டு) என்பதைப் பாடுவார்கள். இவற்றினை ஒன்று சேர்த்து, பாட்டை ‘ஓதல்’ என்று குழப்புவதிலே அர்த்தமிருப்பதாக எனக்குப் படவில்லை.

சாகித்திய மண்டலம்

பாரத நாட்டிற்குச் சுதந்திரங்கிடைத்த அதே ஆண்டில் சோல்பரி அரசியல் திட்டத்தின்படி தேர்தல்கள் நடைபெற்றன. 1948ஆம் ஆண்டில். ஈழத்துக்குச் சுதந்திரம் வழங்கப் பெற்றது. இருப்பினும், பொருளாதார – நிருவாக அமைப்புக்களிலே எவ்வித மாற்றமும் நிகழவில்லை. ஈழத்தின் சுயமொழிகள் பாடசாலைகளிலே கட்டாய பாடமாக்கப்பட்டிருந்தாலும், ஆங்கில மொழியே முதன் மொழியாகக் கொள்ளப்பட்டது.

மொழிக்கொள்ளையைப் பொறுத்த வரையில் 1956 ஆம் ஆண்டில், பெரும் மாறுதலேற்பட்டது. தமிழுக்குஞ் சிங்களத்திற்குஞ் சம உரிமைகள் என்னுங் கொள்ளை அரசியல்வாதிகளாற் கைவிடப்பட்டது. ‘சிங்களத்தை ஆட்சி மொழியாக்கி, தமிழை வட – கிழக்குப் பகுதிகளின் பிராந்திய மொழியாக்குவேன்’ என்று பிரசாரஞ் செய்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் தலைமையிற் போட்டியிட்ட அபேட்சகர்கள் பெருந்தொகையினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதனால், அவர் பிரதமரானார். தேர்தற்கால வாக்குறுதிகளைப் பேணும் முகமாக அவர் பல காரியங்களை மேற்கொண்டார். அவற்றுள் இலங்கைக் கலைக்கழகம், ஸ்ரீலங்கா சாகித்திய மண்டலம் ஆகியவற்றை நிறுவியமை குறிப்பிடத்தக்க செயல்களாம்.

அவை நிறுவப்படுவதற்கு ஒரு மாயாங்கத்திற்குச் சற்று முன்னராக, இலவசக் கல்விமுறை அமுலுக்கு வந்து விட்டது. இதனாற் படித்த இளைஞர் பட்டாளமொன்று – குறிப்பாகச் சுயமொழிகளிலே தேர்ச்சி பெற்ற இளைஞர் பட்டாளமொன்று தோன்றியது. அவர்கள் வாசிப்புப் பழக்கங் கொண்டவர்கள். அவர்களுடைய தேவையை ஈடு செய்யும் வகையிற் சுயமொழி நூல்கள் பெருமளவில் விற்பனையாயின. சிங்களமொழி நூல்களை வேற்று நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தல் இயலாது. விகிதாசாரத்திற்கு ஏற்றதாகவேணும் ஈழத்திலே தமிழ் நூல்கள் பிரசுரமாக்குதற்குத் தென்னிந்தியத் தமிழ் நூல்களின் இறக்குமதியும் ஒரு காரணம் என்பது மறுப்பதற்கில்லை.

பிரசுரமாகும் ஈழத்து ஆசிரியர்களது நூல்களை ஏழுதுறைகளிலே வகுத்து ஒவ்வோர் ஆண்டும் அவ்வத் துறைகளிலே வெளிவருந் தரமான நூல்களுக்கு ஆயிரம் ரூபா பரிசு வழங்கத் திட்டமொன்று வகுக்கப்பட்டது. சிங்கள மொழி நூல்களைப் போலவே, தமிழ் நூல்களுக்கும் ஏழு பரிசுகள் வழங்கத் தீர்மானித்தமையை இருள் வானிலே தோன்றிய ஒளிரேகையென்றே சொல்லல் வேண்டும். தமிழ்மொழியின் நலன்களைக் கவனிக்கும் வகையில், அக்காலத்தில் இலங்கைப் பல்கலைக்கழகத்திலே கடன்மையாற்றிய சங்.பிதா சேவியர் தனிநாயகம் அவர்கள் முதன் முதலாக ஸ்ரீலங்கா சாகித்திய மண்டல உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தனிநாயகம் அவர்கள் ஈழத்துப் புத்திரராயினும். தென்னகமும் மலாயாவுமே அவரது ஆற்றல்களைப்புரிந்து உரிய மதிப்பளித்துப் பெரிதும் பயன்படுத்திக் கொண்டுள்ளன. அவர்தற்பொழுது மலாயா நாட்டிலே கீழைத்தேய மொழிகளி;ன் பேராசிரியராகப் பணி புரிகின்றார். 1959ஆம் ஆண்டிலே வெளிவந்த தமிழ் நூல்களுக்கு ஒரு பரிசு தானும் வழங்கப்படவில்லை. பிரசுரமான எந்தத் தமிழ் நூலும் பரிசுக்குத் தகுதியானவையல்ல என்று மேற்படி நூல்களைப் பரிசீலனை செய்தோர் அபிப்பிராயந் தெரிவித்தமையே இதற்குக் காரணமாகும்.

அடுத்த ஆண்டில் நிலைமைகள் மாறின. நான்குதமிழ் நூல்களுக்கு சாகித்திய மண்டலப் பரிசுகள் வழங்கப்பட்டன. பண்டிதர் சு. அருளம்பலனாரின் பதிற்றுப் பத்து ஆராய்ச்சிப் பதவுரை, சோ. சிவபாதசுந்தரத்தின் புத்தர் அடிச்சுவட்டில், கி. லஷ்மண ஐயரின் இந்திய தத்துவஞானம், டொமினிக் ஜீவாவின் தண்ணீரும் கண்ணீரும் ஆகியனவே பரிசு பெற்ற நூல்களாகும். இந்நிகழ்ச்சி, எழுத்தாளர் மத்தியில் சாகித்திய மண்டலப் பரிசுபெறும் நோக்கத்துடன், தமது புத்தகங்களைப் பிரசுரிக்க வேண்டும் என்கிற சுறுசுறுப்பினை ஏற்படுத்தியது.

1961 ஆம் ஆண்டில் வெளியான நூல்களுள், சோ. நடராசனின் இதோபதேசமும், கலாநிதி சு. வித்தியானந்தனின் கலையும் பண்பும் ஆகிய இரு நூல்களுமே பரிசுகளுக்குரியனவாகத் தெரிவு செய்யப்பட்டன.

1962 ஆம் ஆண்டிற் பிரசுரமான நூல்களுள் ஆறு நூல்கள் பரிசுகள் பெற்றன. கலாநிதி கைலாசநாதக்குருக்களின் வடமொழி இலக்கிய வரலாறு, புலவர் மணி ஏ. பெரியதம்பிப் பிள்ளையின் பகவத்கீதை வெண்பா, எப். எக்ஸ். ஸி. நடராசாவின் மட்டக்களப்பு மான்மியம், வ. அ. இராசரத்தினத்தின் தோணி, த. சண்முகசுந்தரத்தின் வாழ்வு பெற்ற வல்லி, ஏயாரெம் ஸலீமின் ஈழத்து முஸ்லிம் புலவர்கள் ஆகியனவே அந்நூல்களாம்.

கலாநிதி ஆ. சதாசிவம் சாகித்திய மண்டலத்தின் உறுப்பினராகிய பின்னர்தான் சாகித்திய மண்டலத்தின் நடவடிக்கைகளைப் பற்றி வாசகரும் அக்கறை காட்டத் தொடங்கினர். அதன் நடவடிக்கை ஏதோ சில அங்கத்தவர்களுடைய இரகசியக் கூட்டங்கள் என்கிற நிலைமாறி பெரும் மனிதரின் ஏக பாத்தியதையான நிறுவனம் என்கிற நிலை மாறி – பொதுசன அபிப்பிராயப் பரிவர்த்தனைகளும் நடக்கத் தொடங்கின. தமிழ்ப் பிரதேசங்களிலே தமிழ் சாகித்திய விழாக்கள் நடத்தும் பொறுப்பினைக் கலாநிதி சதாசிவம் மேற்கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்தில் இரு தடவைகள் இத்தகைய விழாக்கள் நடந்தேறி விட்டன.

தரமான நூல்கள் தோன்றுவதற்குத் தகுதியான ஊக்கமுந் தேவை. அத்தகைய விருப்பத்தக்க ஊக்கத்தையாவது சாகித்திய மண்டலப் பரிசுத்திட்டம் அளித்து வருகின்றது என்னும் உண்மையை மறுப்பதற்கில்லை. இப் பரிசுத் திட்டம் அளித்துள்ள ஊக்கத்தினால், அடுத்த பத்தாண்டுகளுக்கிடையில் குறைந்தது ஆயிரம் நூல்களாவது பிரசுரிக்கப்படலாம். அவற்றுள் உலக இலக்கியத் தட்டில் நிற்கக் கூடிய பத்து நூல்களாவது தேறுதல் சாத்தியமாகும்.

சாகித்திய மண்டலம் கலைப் பூங்கா என்னும் அரையாட்டைச் சஞ்சிகையை வெளியிட்டது. கலாநிதி ஆ. சதாசிவம் அதனை நடத்தும் பொறுப்பினை மண்டலத்தின் சார்பாக ஏற்றுக் கொண்டதிலிருந்து, ‘கலைப்பூங்கா’ கிரமமாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

சாகித்திய மண்டலத்தின் தமிழ் உறுப்பினர்கள் தமிழ் வளர்ச்சி ஒன்றினையே கருத்திற் கொண்டு, சொந்த விரோத குரோதங்களுக்கு இடமளிக்காது உழைப்பார்களேயானால் எவ்வளவோ காரியங்களைச் சாதித்தல் முடியும். இலங்கைக் கலைக்கழகத்தின் பிரசுர சபை எவ்வளவோ சாதித்திருக்கலாம். இருப்பினும், இங்கு குறிப்பிடும் அளவிற்கு எதையுமே அது சாதிக்கவில்லை. நாடகக் குழுவின் சிபார்சிற் சென்ற ஆண்டுகளில் பரிசுபெற்ற நூல்களைக்கூட அஃது இன்னமும் பிரசுரிக்கவில்லை.

எனவே, சாகித்திய மண்டல உறுப்பினர்கள் பொறுப்புணர்ச்சியுடன் பல வழிகளிலும் உழைக்க முன்வருதல் வேண்டும். திருக்குறள். மிஸி ஹாமியினாற் சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டமை மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சியாகும். நமது ஆற்றலிலக்கியப் பெருமைகளைச் சிங்கள மக்கள் அறியக்கூடியதாகவும், அவர்களுடைய வளர்ச்சியை நாம் அறியக் கூடியதாகவும் மொழி பெயர்ப்பு வேலைகளை மண்டலம் ஊக்குவிக்கலாம். ஈழத்தின் இலக்கிய முயற்சிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நூல்களாக்கி, அவற்றைச் சர்வதேச அரங்கிற்கு அறிமுகஞ் செய்து வைக்கலாம். தக்கவர்களை அமர்த்திப் பூதந்தேவனார் காலந் தொட்டு, இற்றை வரையிலுமுள்ள ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றை மிக விரிவான முறையில் எழுதலாம். ஆண்டுதோறும் வெளியாகும் மிகச் சிறந்த கதைகளைத் தொகுத்தும், கவிதைகளைத் தொகுத்தும் எழுத்தாளரது ஆர்வத்தைத் தூண்டலாம். செற்கிடங்கிலே அழியும் நிலையிலுள்ள ஈழத்துப் பழம் புலவர்களின் இலக்கிய ஆக்கங்களை நூலுருவிற் கொணர்ந்து, நமது பாரம்பரியத்தின் தொன்மையையுஞ் செழுமையையும் பாதுகாக்கலாம். மண்டலத்தின் கவனத்திற்கு மேற்படி யோசனைகளைச் சமர்ப்பிக்கின்றேன்.

திருக்கடைக்காப்பு

ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்னும் இம்மணி மண்டபத்துட் பிரவேசஞ் செய்து, அங்கு தமிழ்ச் சுடர் மணிகளாய் விளங்குவோரையும், ஒளிவிளக்காய் பிரகாசிக்கும் பேனா மன்னர்களையுந் திரிசித்து, 1922 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றை வரை அவர்கள் ஈழத்து இலக்கிய உலகிற் சாதித்த சாதனைகளைக் கண்டு. ஓரளவாவது மனநிறைவு பெற்றிருப்பீர்களென எண்ணுகின்றேன்.

இம் முயற்சிகளைப் பற்றியும், இம் முயற்சிகளுக்குக் கருவாயமைந்த எழுத்தாளர் பெருமக்களது கடந்தகாலப் படைப்புக்கள் பற்றியும் பலர் பலவாறு கூறலாம். ‘பூ’ கடந்த நாற்பதாண்டுகளிலே ஈழஞ் சாதித்த சாதனை இவைதாமா? இவைகளில் மணமலர்கள் ஒன்றுகூட இல்லையே: எல்லாமே முருக்க மலர்கள் தாம்’ என்று போன போக்கில் ஏளனஞ் செய்யலாம். அதற்கு மாறாக, ‘ஆகா! என்ன அதியற்புதமான முயற்சிகள் அந்த காலமல்லவா பொற்காலம்’ என மனம்போன போக்கிற் பாராட்டலாம். இவை அந்தந்த வகை விமர்சனங்களின் மனப்பாங்கினைப் பொறுத்தவை. மேலெழுந்த வாரியாக. எதனையும் படியாது, ஆளைப் பார்த்தே விமர்சிப்போர் – மேனாட்டு விமர்சனப் படிக்கல் கொண்டு. நம்நாட்டு நூல்களை எடை காணும் விமர்சகர்கள் பற்றி எமக்கு எவ்வித அக்றையுமில்லை. அவர்களுக்கு இந்நூல் நிச்சயமாகப் பயன்படமாட்டாது. எதனையும் நின்று நிதானித்து, கடந்தகால இலக்கியப் போக்கை காய்தலுவத்தலன்றிக் காணவிரும்புவோர்க்கு இந்நூல் பல வகையிலும் வழி காட்டலாம். அன்றியும், எதிர்காலச் சந்ததியினர் தம் நாட்டு இலக்கியங்களின் தராதரத்தை நிருணயித்துக் கொள்ளவும் இஃது உதவியளிக்கலாம்.

இந்த இடத்தில் ஒன்றை மாத்திரங் கூறமுடியும். இந்நூலிலே காட்டப்பட்டுள்ள ஈழத்து இலக்கிய கருத்தாக்களின் படைப்புக்களில் எவையெவை காலவெள்ளத்தோடு எற்றுண்டு செல்லாது, ஞானசம்பந்தர் ஏடுகள் வைகையாற்றில் எதிரேறியமையைப் போன்று, எதிரேறிச் சென்று வாழுமோ அவையவை இலக்கியங்களாக வாழும்@ அவைகளே வாழும் இலக்கியங்கள்@ எதிர்காலச் சந்ததியினரின் முழுசொ முமாகும்.

ஆனால், எவையெவை யெல்லாம் நின்று நிலைத்து வாழும் என்று சொல்ல முடியாமையால் அவற்றை அலட்சியப்படுத்திவிட முடியாது. பொருளே இல்லையாகி விட்ட பிறகு, எதிர்காலம் பொருளின் தரத்தையோ, நிலைபேற்றையோ உணரமுடியாது. அஃது இன்மையுள் உண்மையைத் தேடியவாறாம். அதனால், இக்காலப் படைப்புக்கள் எல்லாம் அச்சுவாகனமேறி நூல்வடிவு பெற்று, நிகழ்கால வாசகன் கைகளில் ஒப்படைக்கப்படல் வேண்டும். அதன்பின்னர் தான் வாழும் இலக்கியம் எது என்பது நிர்ணயிக்கப்படும். பத்திரிகை எழுத்துக்களைக் கொண்டே வாசகன் எல்லாவற்றின் எல்லாவற்றையும் இனங்கண்டு கொள்ளுதல் சாத்தியமன்று. நூல்வடிவு பெறாதவரையில். கடல் கடந்து வாழுந் தமிழ்க் குலம் ஈழத்து இலக்கிய வளம் பற்றி உணரவும் வாய்ப்பு ஏற்படாது. எனவே, இன்று நம்முன்னுள்ள அவசியமும் அவசரமுமுள்ள தமிழ்த் தொண்டு, ஈழத்து இலக்கிய கருத்தாக்களின் படைப்புக்களை நூல்வடிவிற் கொணர்வதே.

ஈழத்திலுள்ள சாதாரண எழுத்தாளன் இன்றுவரையிலே தன் படைப்புக்களைக் கொண்டு வாழ்க்கை நடத்தக் கூடிய சூழ்நிலை உருவாகவில்லை. ஏதோ ஒருவகை அருட்டு ணர்வால் எழுதினான். எழுதுகின்றான் கூலியில்லை. பொருள் வரவாயில்லை. இந்நிலையில் அவனே தனது படைப்புக்களை நூல் வடிவிற் கொண்டு வரவேண்டுமென எதிர்பார்த்தல் அநியாயம். இலக்கியத்துக்குச் செய்யுந் துரோகம். அதனுடன், அவன் தனது படைப்புக்களை நூல் வடிவிற் கொணர்ந்தாலும் விற்பனவு வசதியில்லை. ஈழத்து வாசகனுடைய மனோநிலை ஈழத்துப் படைப்புக்களை அநுதாபத்தோடு நோக்குமளவிற்கு மாறியுள்ளதேயன்றி, வெளியிடங்களிலிருந்து வரும் நூல்களைப் போற்றுமளவிற்கு மதிப்புக் கொடுக்கும் அளவிற்கு – வளரவில்லை. வாசகனின் அநுசரணையில்லாத எந்த நூலும் வியாபார ரீதியில் நட்டமடையும். எனவே, ஈழத்து இலக்கியம் வளர்வது, நூல்கள் பல வெளிவருவது என்பனவெல்லாம் வாசகனிடத்தே தங்கியுள. வாசகனின் அநுதாபத்தோடு நம் நாட்டுப் புத்தக வியாபாரிகளின் கூட்டுறவும் வேண்டப்படுகின்றது. சமீப காலத்தில் நம்நாட்டுப் புத்தக வியாபாரிகள் ஈழத்து நூல்களுக்கு உரிய மதிப்பை வழங்குவதைக் காணும் போது மனங் குளிருகின்றது.

வருடாவருடம் பாட நூல்களை மாத்திரம் வெளியிட்டு ஆதாயமடையும் புத்தக வெளியீட்டகங்கள் தமிழ்த் தொண்டு கருதியாவது வருடத்தில் ஓன்றிரண்டு எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டு உதவுதல் வேண்டும். அதனால், அவர்கள் எவ்வகையிலும் இழப்படைய மாட்டார்கள். வட இலங்கைத் தமிழ் நூற் பதிப்பதும். அரசு வெளியீடு, கலாநிலையம். கலைவாணி, ஆசீர் வெளியீடு. ஆத்ம ஜோதி வெளியீடு என்பன இத்துறையில் ஈடுபட்டுள்ளமை பாராட்டத்தக்க செயலாகும். இவற்றின் இவ்வகை முயற்சி வளர்ச்சியடைவதோடு, இவற்றை ஏனைய பதிப்பகங்களும் பின்பற்றி நடத்தல் வரவேற்கத் தக்கது. பொது நூல் நிலையங்களும், கல்லூரி நூல் நிலையங்களும் ஈழத்து எழுத்தாளரது படைப்புக்களை வாங்கிப் பொது மக்களிடத்தும் மாணாக்கரிடத்தும் அவை பரவும் வகை செய்தல் வேண்டும். பாடசாலைப் பரிசளிப்பு வைபவங்களுக்கு ஈழத்து எழுத்தாளரது நூல்களை ஆதரித்தல் வேண்டும்.

‘ஈழத்து நூல்களாக என்ன இருக்கின்றன? இங்கு யார் எழுதுகின்றார்கள்?’ என்று பிறநாட்டு இலக்கிய மோகங் கொண்ட சிலர் வெகு அலட்சியமாகக் கேட்பதை நாம் அறிவோம். அதனால், ஈழத்து இலக்கிய வேகம் தடைப்பட்டுத் தேங்கி விடப் போவதில்லை. அந்த அடிமை மனப்பாங்கின் குரல் கேட்டு நாம் தளர்ச்சியடையத் தேவையில்லை. சென்ற நாற்பது ஆண்டுகளில் குறிப்பாகக் கடந்த ஐந்து ஆண்டுகளில் - இருபது சிறுகதைத் தொகுதிகள், சில கவிதைத் தொகுதிகள், கட்டுரைத் தொகுதிகள், நாவல்கள், நாடகங்கள், பொது நூல்கள் என்பனவற்றை நாம் பெற்றிருக்கின்றோம். இக் கணக்கெடுப்பில் வெற்றாரவாரஞ் செய்வோரின் பங்கு மிகக் குறைவு என்பதிலும், இல்லையென்பதே பொருத்தமானது. எனவே, ஈழத்து இலக்கியத்தோடு எவ்வகைத் தொந்தமுமற்ற அவர்களது பேச்சு நமக்கு வேண்டாம்.

இறுதியாக, ஒன்று கூற விழைகின்றேன். ஈழத்தில் இலக்கியம் வளர்ச்சியுற வேண்டுமானால், சாகித்திய மண்டலம், எழுத்தாளர் சங்கங்கள், நூல் நிலையங்கள், புத்தக விற்பனையாளர்கள் எல்லோரும் ஒருமித்து இலக்கியப் பணியிற் கருத்துக் கொண்டு, நூல்களை வெளியிட முன் வருதல் வேண்டும். வாசகன் மத்தியில் அவற்றைத் தக்க முறையில் அறிமுகஞ் செய்து, அவனது சுவையை வளர்த்தல் வேண்டும். அப்பொழுதுதான் ஈழத்து இலக்கிய முயற்சிகள் மேன்மேலும் ஓங்கி வளரும்.

அனுபந்தம் - 1

உயர்திரு
கனக. செந்திநாதன்
கவிமணி வி. கந்தவனம்.

ஈழத்து இலக்கிய வானில் இணையற்ற பிரகாசத்துடன் விளங்கிக் கொண்டிருந்த ஒரு நட்சத்திர எழுத்தாளர் கனக செந்திநாதன். ஈழநாடு, ஈழத்து எழுத்தாளர்கள், ஈழத்துப் படைப்புகள் என்று சிந்தித்துச் செயற்பட்டவர் அவர்.

ஈழகேசரிப் பொன்னையா அவர்கள் பிறந்த குரும்பசிட்டியிலே 5-11-1916ல் பிறந்தவர் செந்திநாதன். தந்தையார் கனகசபை. தாயார் பொன்னம்மா. உடன் பிறந்தவர் ஒருவர். பெயர் மீனாட்சி@ செந்திநாதனுக்கு மூன்று வயது மூத்தவர்.

செந்திநாதனுக்கு தந்தையார் வைத்த பெயர் திருச்செவ்வேல் என்பது. திருச்செவ்வேல் பிறந்து ஆறு மாதத்திலேயே தகப்பனை இழந்தார். அதனால் ‘இன்னா இளமை வறுமை’ என்பதை முழுக்க அனுபவிக்க நேர்ந்துவிட்டது. ஆனால் தாயின் தளராத முயற்சி மகனின் கல்வியை வளர்த்தது. குறைந்தது தனது மகனை ஒரு தமிழ் ஆசிரியனாகவாவது ஆக்க வேண்டும் என்பது தாயாரின் பெருவிருப்பாக இருந்தது. ஊரில் உள்ள மகாதேவ வித்தியாசாலையிலும் திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாசாலையிலும் செந்திநாதன் கல்வி கற்றார். 1934-ம் ஆண்டு எஸ். எஸ். (எல்) சி. யில் சித்தியெய்தினார். 1936-ல் ஆசிரிய தராதரப் பத்திரப் பரீட்சையில் சித்திபெற்று 1937, 38-ம் ஆண்டுகளில் திருநெல்வேலி சைவ ஆசிரிய கலாசாலையில் பயின்று பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளியேறினார். 1939-ம் ஆண்டு தை மாதம் ஆசிரிய உத்தியோகத்திற் சேர்ந்த செந்திநாதன் 32 ஆண்டுகளாக பத்துப் பாடசாலைகளில் ஆசிரியப் பணிபுரிந்துள்ளார்.

1940-ம் ஆண்டு ஆனியில் செந்திநாதனுக்குத் திருமணம் நடந்தது. அவருக்கு மனைவியாகப் பேறு பெற்றவர் அவ்வூரைச் சேர்ந்த நாகம்மா என்பவர். இருவருக்கும் நான்கு பெண்களும் ஒரு மகனும் பிறந்தார்கள். இது செந்திநாதனின் குடும்ப வாழ்க்கை.

அவரது இலக்கிய வாழ்க்கையை நன்கு விளங்கிக் கொள்ள இந்தப் பின்னணிக் குறிப்பு அவசியமானது. கிராமச் சூழலிற் பிறந்து, இளமையில் தந்தையை இழந்து, வறுமையில் வாடி, கடின உழைப்பால் ஆசிரியராக வந்த ஒருவர் தானுண்டு தன் குடும்பம் உண்டு என்று இருப்பாரா அல்லது எவ்வித ஊதியமும் இல்லாத எழுத்துத் துறைக்கு வருவாரா? இந்த இடத்திலேதான் இரசிகமணியை வாசகர்கள் இனம் கண்டு கொள்ள வேண்டும்.

ஆசிரிய கலாசாலையில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களின் இரசிக மாணவனாக இருந்து, சிந்தனைச் செல்வர். பொ. கைலாசபதி அவர்களிடம் பத்திரிகைத் துறைக்குத் தேவையானவற்றை ஒரளவு படித்து வெளியேறிய இரசிகமணி திரு. சோ. சிவபாதசுந்தரத்தின் வழிகாட்டலோடு எழுத்துத் துறையில் புகுந்தார். எழுத்துலகில் சில காரியங்களைத் தமிழை மட்டும் படித்த தன்னாலும் சாதிக்க முடியும் என்று துணிந்தார். அதற்காக அவர் தனது சிறிய ஊதியத்தின் பெரும் பங்கை புத்தகங்கள், பத்திரிகைகள், விசேட மலர்கள் என்பவற்றை வாங்குவதில் செலவு செய்தார். பல துறைகளிலும் ஏறத்தாழ இரண்டாயிரம் நூல்களை வாங்கிச் சேர்த்தார்.

இரசிகமணி எழுதினார். எழுதுவதில் மட்டும் அவர் இன்பம் காணவில்லை. எழுத்தாளர்களைச் சந்தித்துப் பேசுவதிலும் அவர்களை ஊக்குவிப்பதிலும் மேலும் இன்பம் கண்டார். எழுத்தாளர் சங்கங்கள், புத்தக வெளியீடுகள், இலக்கிய விரிவுரைகள் எல்லாவற்றுக்கும் சென்றார் பல எழுத்தாள நண்பர்களது இன்ப துன்பங்களிற் கலந்து கொண்டார்.

எழுத்தாளர் இரசிகமணியின் உறவினர்கள். ஆம் அவர்கள் உதட்டளவில் இலக்கியம் பேசி உலாசபுரியில் வாழவில்லை. இலக்கியத்தை அவர் உள்ளத்தால் நேசித்தார். எழுத்தாளர்களுடன் உள்ளன்புடன் பழகினார்.

இரசிகமணியின் இலக்கியப் படைப்புக்கள் அனைத்தையும் அவரது அறுபதாண்டு நிறைவு விழாவையொட்டி ‘பூச்சரம்’ என்ற மகுடத்தில்தொகுத்துள்ளேன். யாழ். இலக்கிய வட்டம் வெளியிட்டிருக்கும் இத்தொகுப்பிலிருந்து இரசிகமணியின் பன்முகப்பட்ட எழுத்தாற்றலை அறிந்து கொள்ளலாம்.

பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை ஈழகேசரி நா. பென்னையா, கலாகேசரி. ஆ. தம்பித்துரை, சிற்பக் கலைஞர் ஆறுமுகம் என்போரின் வாழ்க்கை வரலாற்றை அவர் எழுதியிருக்கின்றார். சோமசுந்தரப் புலவர், அல்வாயூர்க் கவிஞர், அம்பி ஆகியோரின் கவிதைகள் பற்றி விமர்சன நூல்கள் எழுதி வெளியிட்டிருக்கின்றார். பள்ளு, பரணி. கலம்பகம் என்பவை பற்றிய அவரது வானொலிப் பேச்சுக்கள் நூல் வடிவம் பெற்றுள்ளன. மாணவர்களுக்கான நல்ல இலக்கிய இரசனைக் கட்டுரைகளைக் ‘கடுக்கனும் மோதிரமும்’ என்ன தொகுப்புக் கொண்டுள்ளது.

இவை யாவற்றுக்கும் மேலாக ‘ஈழத்து இலக்கிய வளர்ச்சி’ என்ற நூலை 1964-ல் வெளியிட்டு எமது நாட்டின் இலக்கிய வளத்தைத் தமிழ் கூறும் நல்லுலகு முழுவதும் அறியும்படி செய்தார். ஈழத்துக் கவி மலர்கள். ஈழத்துப் பேனா மன்னர்கள், தற்காலக் கவிஞர் பற்றிய ‘முற்றத்து முல்லை’க் கட்டுரைகள். ஈழத்துக் குழந்தைப் பாடல்கள் பற்றிய இரசனைக் கட்டுரைகள் போன்றவை மூலம் எங்கள் நாட்டின் எழுத்துக்கு மதிப்பும் மாண்பும் வரத் தொண்டாற்றினார். இவற்றைவிட அவரது ஆக்கப் படைப்புகளாக ‘வெண்சங்கு’ என்ற சிறுகதைத் தொகுதியும். ‘ஒரு பிடி சோறு’ என்ற நாடகமும் வெளிவந்துள்ளன. ‘விதியின் கை’, ‘மத்தாப்பு’ என்ற இருநாவல்களும், ‘நீதிக்கரங்கள்’ என்ற கவிதைத் தொகுதியும் நூல்களாக்கப்பட்டுள்ளன. ‘செம்மண்’ என்ற இவரது சிறுகதை ‘ஒப்சேவர்;’ பத்திரிகையில் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ‘ஒரு பிடி சோறு’ என்ற மற்றொரு சிறுகதை ருஷ்சிய மொழியில் வெளிவந்த இலங்கைச் சிறுகதைத் தொகுதியிலும் இடம்பெற்று உள்ளது. இவர் இருபத்தைந்து சிறுகதைகளையும், நான்கு நாவல்களையும், பன்னிரண்டு நாடகங்களையும் எமக்கு வழங்கியுள்ளார்.

இவரது இலக்கிய சேவையாலும், பொதுச் சேவையாலும் வடிவம் பெற்ற பல சங்கங்களைக் குறிப்பிடல் வேண்டும். மறுமலர்ச்சிச் சங்கம், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் - யாழ். கிளை, அகில இலங்கை எழுத்தாளர் சங்கம், யாழ். இலக்கிய வட்டம் என்பவற்றின் வளர்ச்சிக்கு அயராது உழைத்தவர் இரசிகமணி. சொந்த ஊராகிய குரும்பசிட்டியில் ஈழகேசரி நா. பொன்னையா அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட சன்மார்க்க சபையின் வளர்ச்சியி;லும் அவர் ஒன்றிக் கலந்திருக்கின்றார்.

இரசிகமணியின் இலக்கிய சேவையைப் பாராட்ட முன் வந்த சங்கங்கள் பல:

1964-ம் ஆண்டு கிழக்கு இலங்கை எழுத்தாளர்சங்கம் ‘இரசிகமணி’ என்ற பட்டத்தைச் சூட்டிப் பாராட்டியது.

1967-ம் ஆண்டு யாழ். இலக்கிய வட்டம் அவரது 50-ம் ஆண்டு நிறைவை ஓர் இலக்கியப் பெரு விழாவாகக் கொண்டாடியது.

1969-ம் ஆண்டு அம்பனைக் கலைப் பெருமன்றம் ‘இலக்கியச் செல்வர்’ என்ற பட்டத்தையளித்துக் கௌரவித்தது.

1976-ம் ஆண்டு யாழ். இலக்கிய வட்டம் அவருக்கு ‘மணிவிழா’ எடுத்தது.

ஈழத்து இலக்கியத் துறையிலும். தமிழ்நாட்டு நவீன இலக்கியப் பரப்பிலும் ஆழ்ந்த புலமை மிகுந்த ஒரு பேராசிரியர் இரசிகமணி அவர்கள். எழுத்தாளர், படிப்பாளர், படைப்பாளர், திறனாய்வாளர், பேச்சாளர், இரசனையாளர், அன்பாளர், பண்பாளர், தொழிலாளர் என்போரின் சங்கமந்தான் இரசிகமணி எனப்படும் கனக செந்திநாதன்.

அவர்கள் நோய்வாய்ப்பட்டிருக்கையிலும் ‘எப்படிச் சுகம்?’ என்று யாராவது பார்க்கப் போனால் ‘எப்படி இந்த நாவல்?’ என்றுதான் பேச்சைக் கொடுப்பார். அவருக்கு நோயைப் பற்றிக் கவலையில்லை. ஓர் எழுத்தாளனைக் கண்டுவிட்டால் அல்லது ஒருபுதிய நூலைக் கண்டுவிட்டால் அவரது நோய் அகன்றுவிடும். ஆம் இலக்கியமே அவரது உயிரும் உடலும் பேச்சும் மூச்சும் கனவும் நினைவும். இவ்விதம் ஈழத்து இலக்கிய வானில் இணையில்லா வகையிலே பிரகாசித்த இரசிகமணி அவர்கள் 1977-11-16 மறைந்தும் மறையாத இலக்கியச்சுடர் ஆகிவிட்டார்.

அனுபந்தம் - ஐஐ

என் பெற்றோர்
இரசிகமணி

மாதா

எல்லோருக்கும் அன்னை தெய்வம்தான். உமக்கு மாத்திரந்தானா? என்று கேட்கிறீர்களா? இல்லை. ஆனாலும் என் அன்னையை நினைக்கும்போது.... என்னை வளர்த்து ஆளாக்க அவள் பட்ட கஷ்டங்களை உணரும்போது.......... அவள் எனக்குப் பூசிக்கக்கூடிய பேசும் தெய்வம்தான்! சந்தேகமே யில்லை.

அந்த மனித தெய்வத்தின் பெயர் பொன்னம்மா.

ஐந்து ஆண் சகோதரர்களுக்கிடையில் பிறந்த ஒரே ஒரு பெண்....... இப்படிப் பிறந்ததினால் என் தாய்க்கு இயற்கையாகவே ஒரு துணிவு ஏற்பட்டிருந்தது. அவருடைய எந்த முடிவையும் யாரும் ஆட்சேபித்துச் சொல்ல இயலாது. என்னையார் அசைக்க முடியும் என்ற அவரது மனோநிலையைக் கடவுள் நெடுநாள் நீடிக்கவிடவில்லை. என் அன்னையர் என் தந்தையாரை இழந்து கிட்டத்தட்ட முப்பத்தைந்தாவது வயதில் கைபெண் ஆனார் ஆம் நான் பிறந்து ஆறு மாதத்துக்கிடையில் என் தந்தை அமரராகி விட்டார்.

பிதா

என் தந்தையார் பெயர் கனகசபை. கனக. செந்திநாதனில் உள்ள ‘கனக’ என்பது தந்தையாரின் பெயரான கனகசபை என்பதில் உள்ளதுதான். சிலர் இதைச் சரியாக விளங்காமல் பல எழுத்தாளர்களுந்தான் - கனக செந்திநாதன் ஒரே பெயர் என எண்ணி என் தகப்பனார் பெயரைக் குறிக்கும் ‘இன்னிசல்’ முதல் எழுத்து என்ன என்று கேட்டிருக்கிறார்கள். இன்னொரு புதினம் எனக்கு என் தந்தையார் இட்ட பெயர் திருச்செவ்வேல். பதிவுப் பெயர்கூட அதுதான். முக்கியமான அரசாங்க அலுவல்களுக்கு எல்லாம் அப்பெயராலேயே கையெழுத்திடுகிறேன். இந்த அருமையான பெயர் எனக்கு இருப்பதாகப் பல வருடங்கள் எனக்கே தெரியாது. ஆசிரிய கலா சாலைக்குச் சேர வேண்டிய சந்தர்ப்பத்தில் பிறப்புச் சாட்சிப் பத்திரம் எடுக்கும் போதுதான் அறிந்தேன். ஒரளவு வாய்க்குள்; நுழையாத இந்தப் பெயரை மாற்றிச் செந்திநாதன் எனவைக்கவே விரும்பினேன். ஆனால் என் மதிப்புக்குரிய வரும் சிந்தனைச் செல்வருமான உப அதிபர் பொ. கைலாசபதி அவர்கள் அப்படியே இருக்கட்டும் என்று கூறிவிட்டார்கள். அம்மகான் கூறிவிட்டால் அதில் ஏதோ பொருள் இருக்கத் தானே வேண்டும்? அப்படியே விட்டுவிட்டேன்.

குருவின் பதிவு

நான் நவீன இலக்கிய உலகத்தையோ, ஜனநாயக உலகத்தையோ தீண்டாத மிகமிகப் பழமையான பெரியவர்கள் தொடர்பும் மதிப்பும் உள்ளவன். செந்திநாதன் அதற்கு எதிரானவர். இக்கால இலக்கிய உலகில் முழுகித்திளைத்தவர். அப்படியிருந்தும் எங்கள் தொடர்பு வளர்ந்து கொண்டேயிருக்கின்றது. அவர் என்னிடம் என்ன பெற்றாரோ நான் அறியேன். அவரிடம் நான் பெற்றவை அதிகம். செந்திநாதனைச் சந்திக்குந்தோறும் நவீன உலகு பற்றி விசாரிப்பேன். அவர் கணக்குப் போட்டு இந்த ஆண்டு வெளிவந்த கதைகள் இத்தனை@ நாவல்கள் இத்தனை@ நாடகம் இத்தனை@ கவிதைகள் இத்தனை@ அவற்றுள் உயர்தரமானவை இவை என்று சொல்லுவார். நான் கேட்டுக்கொள்வேன். நான் அவற்றை வாசித்துப்பார்க்க விரும்புகிறேன் என்று பெரும்பாலும் அவருக்குச் சொல்லுவதில்லை. சொன்னால் அவற்றையெல்லாம் சுட்டிச் சுமந்து கொண்டு வந்துவிடுவார் என்ற பயத்தினாலேதான் நான் சொல்வதில்லை.

செந்திநாதன் நவீன இலக்கிய உலகைத் தரிசிப்பதற்கு ஒரு தூரதிஷ்டிக் கண்ணாடியாய் எனக்கு அமைந்திருந்தார். இப்போது அவர் வெளியிட்ட ‘ஈழத்து இலக்கிய வளர்ச்சி;’ பழைமைக்கும் புதுமைக்கும் பாலமாய் அமைந்திருப்பது கண்டு மிக்க மகிழ்;ச்சி அடைந்தேன். அதன் தலையங்கங்களைக் கண்ட மாத்திரத்திலேயே, புத்தகத்தையும் திரு. செந்திநாதனையும் என் மனம் வாழ்த்தத் தொடங்கிவிட்டது.
சித்தாந்தசாகரம், பண்டிதமணி,
சி. கணபதிப்பிள்ளை

நடமாடும் வாசகசாலையாகவும்,
பல்கலைக்கழகமாகவும் திகழ்ந்தவர்
இரசிகமணி கனக செந்திநாதன்.
இரசிகமணி என்கிற விருதுக்குக்
கௌரவஞ் சேர்த்த பண்பாளர்.

அவர் கதைஞர். கவிஞர்.
கட்டுரையாளர். பரமார்த்த இலக்கியச்
சுவைஞர். ஏனைய படைப்பாளிகளுடைய
ஆக்கங்களை மதிக்கும் இயல்பினர்
அவர் இலக்கிய ஞானி. தற்பற்று
அறுத்த இலக்கிய யோகி.

இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து
இலக்கிய வரலாறு குறித்து
முழுத்தகவல்களையும் அரிதின்
முயன்று இந்நூலிலே இரசிகமணி
திரட்டியுள்ளார். இது முதனூல்@ மூலநூல்.