கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  கயமை மயக்கம்  
 

வரதர்

 

கயமை மயக்கம்

வரதர்

வரதர் வெளியீடு

++++++++++++++++

முதற் பதிப்பு. 1960

விற்பனையாளர்
ஆனந்தா அச்சகம், புத்தகசாலை
226, காங்கேசதுறை வீதி,
யாழ்ப்பாணம்.

விலை: ரூ. 2-25

பதிப்புரிமை:
'வரதர் வெளியீடு'
யாழ்ப்பாணம்.

இத்தொகுதியில் உள்ள கதைகளும்
அவை வெளிவந்த இதழ்களும்.

1. மாதுளம் பழம் (சுதந்திரன்)
2. உள்ளுறவு (ஆனந்தன்)
3. வேள்விப்பலி (மறுமலர்ச்சி)
4. கயமை மயக்கம் (ஆனந்தன்)
5. உள்ளும் புறமும் (புதுவருட மலர்)
6. பிள்ளையார் கொடுத்தார் (ஆனந்தன்)
7. வீரம் (தினகரன்)
8. வெறி (யாழ். எ. சங்கம்)
9. கற்பு (மத்திய தீபம்)
10. ஒரு கணம் (தினகரன்)
11. புதுயுகப் பெண் (கலைச் செல்வி)
12. வாத்தியார் அழுதார் (ஆனந்தன்)

***
அச்சுப்ப்பதிப்பு: ஆனந்தா அச்சகம், யாழ்ப்பாணம்.

++++++++++++++++

சிறப்புரை

டாக்டர் மு. வரதராசன் அவர்கள்


காலம் மாறுகிறது; சூழ்நிலை மாறுகிறது; ஆனால் மனம் அவற்றிற்கு ஏற்ப மாறியமைவதற்குள் வாழ்க்கையில் போராட்டங்கள் பல ஏற்படுகின்றன. அந்த மன மாற்றத்தை ஏற்படுத்தச் சீர்திருத்தக்காரர் பேச்சுத் தொண்டு ஆற்றுகின்றனர். எழுத்தாளர் எழுத்துத் தொண்டு ஆற்றுகின்றனர். அத்தகைய எழுத்தாளருள் முற்போக்குக் கருத்துக்களைக் கற்பனையான வாழ்க்கைகளில் அமைத்துக் கதைகளைப் படைப்பவர் ஒரு சிலரே. அவர்கள் செய்யும் தொண்டு ஆற்றல் மிக்கது; நிலைத்த பயன் தரவல்லது.

கதைகள், இலக்கியமென்னும் கலையைச் சார்ந்தவை. கதைகளைப் பொழுது போக்குக்காகவே படைத்துப் படிப்பவர்கட்கு மகிழ்ச்சியூட்டுவோர் ஒருசாரார். கதைகளில் கலையின்பத்தை அமைப்பதோடு, விழுமிய உணர்ச்சிகளையும் அமைத்துப் படிப்பவரின் மனநிலையை உயர்த்துவோர் மற்றொரு சாரார். இவர்களுள் இரண்டாம் வகையைச் சார்ந்தவர்கள் எழுத்தாளர் என்ற சிறப்புமட்டும் அல்லாமல், சமுதாயத் தொண்டர் என்ற சிறப்பும் பெறுகின்றனர். (அவர்களுள் வன்றொண்டர்களும் ஒரு சிலர் உள்ளனர். அவர்களின் எழுதுகோல் வன்மையான சம்மட்டியாகவே பயன்படுகிறது.)

இலங்கையில் தோன்றும் எழுத்தாளர்களுள், சமுதாயத் தொண்டர்களின் தொகை பெருகி வருகின்றது. வாழ்க்கையை உள்ளத்தல் உணர்ந்து, சிக்கல்களுக்கு மருந்தும் தேர்ந்து தெளிந்து அவற்றைத் தம் கதைகளில் படைத்துக் காட்டுவதில் அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். 'கயமை மயக்கம்' என்னும் இந்தச் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் திரு. தி. ச. வரதராசன் (வரதர்) இவ்வகையான எழுத்துத் தொண்டு புரிந்து வருகிறார். இந்தத் தொகுப்பில் அமைந்துள்ள மாதுளம்பழம், வீரம், வெற்றி, கற்பு, புதுயுகப்பெண் ஆகிய சிறுகதைகளைக் கற்பவர்க்கு இது எளிதில் விளங்கும்.

இந்தக் கதைகளுள் சிலவற்றில் கணவனும் மனைவியுமாகிய எழுத்தாளர் இருவர் வருகின்றனர். இளங்கோ, கயல்விழி என்னும் பெயர்பூண்ட அவர்கள் காதலர்களாக விளங்குவதை 'வீரம்' என்னும் கதையில் காண்கிறோம். கயல்விழி உண்மையான வீரம் இன்னது என்று உணரத்தக்க நிகழ்ச்சி இளங்கோவின் வாழ்வில் நிகழ்கிறது. அது படிப்பவரின் உள்ளத்தைத் தொட்டு உருக்கவல்லதாகும். அந்நிகழ்ச்சிக்குப்பின் அவர்களின் காதல் உறுதிப்படுகிறது. போலியான 'வீரன்' ஒருவனின் தலையீடு தொலைகிறது.

திருமணமாகி இல்லறம் நடத்தும் அவர்கள், அதோடு நிற்காமல், கதைத்தொண்டும் நடத்துகிறார்கள். வெறி என்ற கதையைக் கணவர் எழுதிக் கொண்டிருக்கிறார்; அந்தக் கதையைக் கொடிய வகையில் முடிக்கும் நேரத்தில், மனைவி 'ஐயையோ' என்று பதறித் தலையிடுகிறாள். எப்படி முடிப்பது என்ற தயக்கமும் திகைப்பும் ஏற்படுகிறது. நஞ்சு குடித்துச் சாகவேண்டிய ததையைச் சாகாமல் செய்து கதையை முடிக்கவேண்டும் என்பது மனைவியின் எண்ணம். கணவர் விட்டுக் கொடுத்தார். மனைவி கதையை முடித்தாள்; அருமையான நல்ல முடிவை அமைத்தாள். கதையைப் பாராட்டுவதா? கதையை முடித்த அந்த மனைவியைப் பாராட்டுவதா? அந்த எழுத்தாளர் குடும்பத்தைப் படைத்த திரு. வரதராசனைப் பாராட்டுவதா?

'ஒரு கணம்' என்ற சிறுகதையிலும் அந்த எழுத்தாளர் குடும்பம் வருகிறது. அங்கும் கதையின் முடிவைப் பற்றிப் பேச்சு உள்ளது. மனைவுக்கு வேலை இல்லாமலே, கணவரே கதையைத் திறமாக முடிக்கிறாராம். அந்தக் கதையில் காணும் சிற்றம்பலமும் பூவழகியும் குற்றம் உணர்ந்து நெஞ்சம் திருந்தி மறுநாள் பழகும்முறை மிக நாகரிகமாக உள்ளது.

இவ்வாறு கதைகளை மட்டும் அல்லாமல், கதை எழுதும் குடும்பத்தையும் படைத்துக் காட்டியுள்ள திறம், இந்தத் தொகுப்புக்குச் சுவையூட்டுகிறது. இவருடைய தொண்டு மேன்மேலும் வளர்வதாக

++++++++++++++++

என் எண்ணம்

1. மாதுளம் பழம்

2. உள்ளுறவு

3. வேள்விப்பலி

4. கயமை மயக்கம்

5. உள்ளும் புறமும்

6. பிள்ளையார் கொடுத்தார்

7. வீரம்

++++++++++++++++

8. வெறி

"கொஞ்சம் இங்கே பாருங்கள்! ... தலையைச் சாடையாக இந்தப் பக்கம் சாயுங்கள்; அந்தப் பக்கமல்ல, இந்தப் பக்கம்... போதும் சரி, சரி .... எங்கே சாடையாகச் சிரியுங்கள்..."

பூவழகியினால் இதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை. நெஞ்சுக்குள்ளே நிறைந்து தொண்டைக் குழியுள் பொங்கிக் கொண்டு நின்ற சிரிப்பை இதுவரையும் அடக்கி அடக்கி வைத்திருந்தாள். சாடையாகச் சிரிக்கச் சொன்னதுதான் தாமதம், படீரென்று சிரித்துக் கொட்டி விட்டாள். சிரிப்பு எப்போதும் தனித்து நிற்பதில்லையே! பக்கத்தில் நின்ற பூவழகியின் தோழி தங்கமலரும் சிரித்தாள்.

பெரிய கமெராவுக்குப் பின்னால் நின்றுகொண்டு போட்டோ எடுக்கத் தயாராக நின்ற சம்பந்தன் - 'சரியா நல்ல 'போ'சைக் கெடுத்து விட்டீர்களே!' என்று கோபப்பட வேண்டியவன், அவனும் சிரித்தான். பிறகு, "நீங்கள் இப்படிச் சிரித்துக் கொண்டிருந்தால் இன்றைக்குப் போட்டோ எடுத்த மாதிரித்தான்; நான் 'டபிள் சார்ஜ்' போட்டு விடுவேன்!" என்றான்.

"அப்படியானால் உடனே ஒரு 'போட் பலகை' எழுதி முன் பக்கம் தொங்க விடுங்கள்: '஽்றிக்கிறவர்களுக்கு டபிள் சார்ஜ்; அழுகிறவர்களுக்கு அரைச் சார்ஜ்' என்று! - உங்கள் ஸ்ரூடியோ அழுது வடிந்துகொண்டிருக்கும்" என்றாள் பூவழகி.

"அதனாலென்ன, உங்களைப் போன்றவர்கள் அழுதால்கூட அதிலும் ஒரு நல்ல 'போஸ்' இருக்குமே!" என்றான் சம்பந்தன்.

இந்த வார்த்தைகளை வெறும் வாயினால் அவன் சொன்னதாக தங்கமலர் நினைத்தாள். ஆனால் பூவழகிக்கோ அவை வெறும் வார்த்தைகளாகத் தோன்றவில்லை. அவன் கரும்பு வில்லை வளைத்துத் தொடுத்துவிட்ட மலர்ப் பாணங்களாகத் தோன்றின. அவள் கன்னங்களில் சிவப்பேறிற்று. எங்கிருந்தோ ஒரு நாணம் ஓடிவந்து அவள் முகத்தில் படர்ந்து அழகு செய்தது.

பொதுவாகப் பெண்களின் உருவத்திலே கலை அழ்கைக் கண்டு ரசிக்கின்ற சம்பந்தனுக்கு, பூவழகியின் வடிவிலே அந்தக் கலைக்கும் மேலான ஏதோ ஒன்று இருப்பதாகத் தோன்றியது.

ஒரு வழியாகப் போட்டோ எடுத்து முடித்துக் கொண்டு தோழிகள் இருவரும் வீட்டுக்குப் புறப்பட்டார்கள். அவர்களுடைய ஊரான நல்லபுரத்துக்குப் போகிற பஸ் சிக்கிரமே கிடைத்ததுமல்லாமல் இருவருக்கும் வசதியான ஒரு ஆசனமும் கிடைத்துவிட்டது!

"என்ன பூ, உன்னோடு உயிரை விடுகிறாரே அந்த ஸ்ரூடியோ மனேஜர்! என்ன சங்கதி?" என்று கேட்டாள் தங்கமலர்.

"என்ன செய்துவிட்டார் அப்படி? அவர் 'பிஸ்னெஸ்'காரர்; எல்லோரோடும் அப்படித்தான் நடந்து கொள்வார்" என்றாள் பூவழகி.

"அதுதான் பார்த்தேனே, நாங்கள் வாசலில் தலைகாட்டியவுடன் ஓடி வந்து உபசரித்தார். போட்டோ எடுப்பதற்கும் தானே வந்தார். அத்தனை 'கிளாக்'மார் இருக்கவும் தானே பில் போட்டுத் தந்தார். இவைதான் போகட்டும்; எங்களுக்கு முன்னால் போட்டோ எடுத்தவர்களுக்கு பத்து நாள் தவணை போட்டாரே, எங்களுக்கு மட்டும் எப்படி மூன்றே நாட்களில் - சனிக்கிழமையே தருவதாகச் சொன்னார்?" என்று தங்கமலர் கேட்டாள்.

தங்கமலர் சொல்லச் சொல்லப் பூவழகியின் உள்ளத்தில் இனந்தெரியாத ஒரு மகிழ்ச்சி துள்ளிக் குதித்தது. வெட்கமாகவும் இருந்தது. "நான் முன்பும் சில தடவைகள் அவருடைய ஸ்ரூடியோவில் வந்து போட்டோ எடுத்திருக்கிறேன். அதனால் கொஞ்சம் பழக்கமுண்டு. அதோடு எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் அவருடைய மாமா வீடு இருக்கிறது. எப்போதாவது அங்கே வரும்போது..."

"ஓ! அங்கே வரும்போது கதைத்துப் பேசிக் கா..."

"சீ, சும்மா இரு தங்கம், அப்படியொன்றுமில்லை. ஸ்ரூஉடியோவுக்கு வந்தபோதுதவிர ஒருநாட்கூட அவரோடு நான் கதைத்ததில்லை..."

இவ்வளவில் பூவழகிக்குக் கொஞ்சம் உசார் வந்துவிட்டது. தோழியிடம் சாடையாக மனதைத் திறக்க வேண்டும் போல் ஒரு புழுகம் ஏற்பட்டுவிட்டது. அவள் தொடர்ந்து, "தங்கம், அவரைப் பார்த்தால் மிக நல்ல பிள்ளையாகத் தோன்றுகின்றது!" என்றாள்.

"ஓ! அதோடு மிக அழகாகவும் இருக்கிறாரே!" என்று கூறித் தங்கமலர் விஷமமாகச் சிரித்தாள்.

"போ, போ; உனக்கு எப்பவும் கேலிதான்" என்று அவளை முழங்கையால் இடித்தாள் பூவழகி.

இதற்கிடையில் நல்லபுரம் வந்துவிட்டது.

தங்கமலரின் வீடு முன்னுக்கு வரவும் அவள் முதலில் இறங்கிவிட்டாள். அவள் பஸ்ஸைவிட்டு இறங்கினாளே தவிர, பூவழகியின் உள்ளத்தைவிட்டு இறங்காமல், 'அதோடு மிக அழகாகவும் இருக்கிறாரே;... அதோடு மிக அழகாகவும் இருக்கிறாரே' என்று ஓயாமல் குசுகுசுத்துக் கொண்டேயிருந்தாள்.

* * * *

இதற்குப் பிறகு இலங்கையில் பத்துக் கோர மரணங்கள் நடந்துவிட்டன; எழுபத்தைந்து பேர்கள் வரை காயமடைந்து விட்டனர்.

அதாவது மூன்று நாட்கள் கழிந்துவிட்டன!

அன்று சனிக்கிழமை, தோழிகள் இருவரும் யாழ்ப்பாணம் போய், போட்டோப் பிரதிகளை எடுத்துக் கொண்டு திரும்பி வந்தார்கள். வௌம்போது தங்கமலர் ஏதோ ஒரு விஷயத்தை அமுக்கி வைத்துக் கொண்டு அதன் சாயலை விஷமச் சிரிப்பாகச் சிரித்துக் கொண்டேயிருந்தாள். 'என்ன சங்கதி? என்ன சங்கதி?' என்று பூவழகி இரண்டு மூன்று தரம் கேட்டாள். 'ஒன்றுமில்லை' என்று தங்கமலர் மழுப்பினாள். பிறகு 'வீட்டுக்கு வா; சொல்கிறேன்' என்றாள்.

தங்கமலர் தன்னுடய வீட்டருகில் இறங்காமல் பூவழகியுடன் இறங்கி அவளுடைய வீட்டுக்குப் போனாள். அறைக்குள்ளே போனதும் மேசைமேல் ஸ்ரான்டில் சொருகியிருந்த பூவழகியின் போட்டோவை எடுத்தாள். பிறகு, தான் மறைத்து வைத்திருந்த ஒரு படத்தை எடுத்து அதில் சொருகி மேசைமீது வைத்து விட்டு, "பூ, படம் எப்படியிருக்கிறது!" என்றாள்.

பூவழகி பார்த்தாள். திறந்த கண்களை மூடாமல் - மூட முடியாமல் பார்த்தாள்.

அது சம்பந்தனின் போட்டோ!

"இது என்ன தங்கம்!" என்று கேட்ட பூவழகியின் குரலில் வெறும் பயம் மட்டுமல்ல, உள்ளே ஒரு மகிழ்ச்சியும் ஒளித்திருந்தது.

"இதுவா? தெரியவில்லையா உனக்கு? திருவளர் செல்வன் சம்பந்தன்; 'கலை ஒளி ஸ்ரூடியோ'வின் உரிமையாளர், ... என் தோழி ஒருத்தியின் உள்ளத்திலே..."

"போதும், போதும், உன்னுடைய ஆலாபனையை நிறுத்திக்கொள்.... அதுசரி தங்கம். இது உனக்கு எப்படிக் கிடைத்தது?" என்று பூவழகி கேட்டாள்.

"திருடினேன்!" என்று பளிச்சென்று ஒரே வார்த்தையில் பதில் சொன்னாள் தங்கமலர். பிறகு "எனக்காகவல்ல; .... உனக்காகக் கண்ணே, உனக்காக!" என்று இராகம் இழுத்துச் சிரித்தாள்.

"யாராவது பார்த்திருந்தால் எப்படியிருக்கும்? ... நீ பெரிய மோசம்!" என்று தோழியைக் கண்டித்தாள் பூவழகி.

"நீ பெரிய பயந்தாங்கொள்ளி... சும்மா மனசுக்குள்ளேயே நினைத்து ஆசைப்பட்டால் போதுமா? எல்லாம் காரியத்தோடுதான் செய்திருக்கின்றேன். இனி திங்கட்கிழமை வருவேன். ஏதாவது புதினமிருந்தால் சொல்லு" என்று சொல்லிவிட்டுத் தங்கமலர் போய்விட்டாள்.

அவள் போனதும் பூவழகி கதவைச் சாத்திவிட்டு ஓடிப்போய் சம்பந்தனுடைய படத்தைக் கையில் எடுத்தாள். அப்படித் திருப்பிப் பார்த்தாள்; இப்படித் திருப்பிப் பார்த்தாள். 'அவருடைய கண்ணும், பார்வையும், தலை இழுப்பும், கள்ளச் சிரிப்பும், ஆளைப்பார் ஆளை!' என்று; மனதுக்குள் செல்லம் கொஞ்சினாள். பிறகு-

* * *

திங்கட்கிழமை பூவழகிக்கு ஒரு கடிதம் வந்தது. சம்பந்தன் எழுதியிருந்தான்.

"என் அன்பே,

உமக்குக் கடிதம் எழுதலாமா எழுதலாமா என்று ஆசைக்கும் பயத்துக்குமிடையே திண்டாடிக் கொண்டிருந்த எனக்கு, சனிக்கிழமை நீர் செய்த துணிகரமான வேலையால், உறுதி வந்து விட்டது. அந்த ஸ்ரான்டிலிருந்த என்னுடைய படத்தை எடுத்துக்கொண்டு உம்முடைய படத்தை அதில் வைத்துச் சென்றீரல்லவா? உமது மன விருப்பத்தை எவ்வளவு நுட்பமாகத் தெரிவித்திருக்கிறீர்!

சில நாட்களாக எனக்கு எந்த நேரமும் உமது எண்ணந்தான். எத்தனையோ பெண்கள் வருகிறார்கள், போகிறார்கள். அவர்களுள் உம்மைப்பற்றி மட்டுமே என் சிந்தனை செல்வதை நினைத்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். இருவருடைய கருத்தும் ஒருமித்தபோதுதான் இப்படி ஒரு மன நிலை ஏற்படும் போலிருக்கிறது!

இப்போது என்ன எழுதுவதென்று தெரியாமல் ஒரே மகிழ்ச்சிக் குழப்பமாக இருக்கிறது. நான் மாமா வீட்டுக்கு வரும்போது உமது வீட்டுக்கும் வரலாமா? எவ்வளவோ கதைக்க வேண்டும் போலிருக்கிறது.

அன்பான பதிலை மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

உமது
சம்பந்தன்.

கடிதத்தைப் படிக்கப் படிக்கப் பூவழகி மேலே பறந்து கொண்டிருந்தாள். ஒரே புளுகம்! திரும்பத் திரும்பப் படிக்கிறாள், படிக்கிறாள்; படிக்கிறாள். அவன் என்ன தேனூறும் கவிதையா எழுதியிருக்கிறான்?

தங்கமலர் வந்தாள். முதலில் வெகு நேரம் கடிதம் வந்த விஷயத்தைப் பூவழகி மறைத்துவிட்டுக் கடைசியில் ஒரு மாதிரி ஒப்புக் கொண்டாள். ஆனாலும் அந்தக் கடிதத்தைத் தங்கமலருகுக் காட்டவேயில்லை! பரவாயில்லை. நீ எனக்கு அதைக் காட்ட வேண்டாம். ஆனால் ஒழுங்காக உடனே ஒரு பதில் எழுதிப் போட்டுவிடு. பாவம், அவர் தபாற்காரன் வரும் வழிமேல் விழிவைத்துக் கொண்டிருப்பார்" என்றாள் தங்கமலர்.

"பதிலா? எல்லாம் யோசித்துப் பார்த்துச் செய்யலாம்" என்று பூவழகி இழுத்தாளே தவிர, அன்றைய தினமே பதில் கடிதம் தயாரித்து அனுப்பி விட்டாள்.

இப்படியாகத்தானே இவர்களது காதல் நாளொரு கடிதமும் வாரமொரு சந்திப்புமாக வளர்ந்து கொண்டு வருங்காலத்திலே,

பூவழகியின் தகப்பனார் -

உங்களுக்குத் தெரியுமே, முன்பு அரசாங்கத்திலே பெரிய பதவியிலிருந்து இளைப்பாறியிருக்கிறவர், இப்போது நல்லபுரம் கிராமச் சங்கத் தலைவராயிருக்கிறவர். திருவாளர் நல்லசிவம் பிள்ளை - அவர்தான் பூவழகியின் தகப்பனார். புகழ்ச்சிக்காகச் சொல்ல வேண்டியதில்லை, மிகப்பெரிய பணக்காரர் என்று சொல்லாவிட்டாலும் அந்தச் சுற்று வட்டாரத்தில் கொஞ்சம் பெரிய மனிதர் என்று பெயர் வழங்கியவர். பூவழகி அவருக்கு ஒரே பிள்ளை. அதனால் செல்லப் பிள்ளையும்.

இத வருடம் பூவழகிக்கு எங்கேயாவது ஒரு நல்ல இடத்தில் திருமணத்தை முடித்து விட வேண்டுமென்று நல்லசிவம் தீர்மானித்துக் கொண்டார். இரண்டொரு இடத்தில் பேச்சுவார்த்தைகளும் நடக்கத் தொடங்கின.

பூவழகிக்கு இது தெரிய வந்ததும் பகீரென்றது. எவ்வளவுதான் செல்ல மகளானாலும் 'அப்பா, நான் மிஸ்டர் சம்பந்தனைக் காதலிக்கிறேன். அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன்' என்று சொல்லுகிற அளவுக்கு வளர்ச்சி பெறாத பேதை. என்ன செய்வாள்? நெஞ்சுக்குள் குமைந்து குமைந்து வேதனைப்பட்டாள்.

இவள் வேதனைப்படுவது தங்கமலருக்கு எப்படியோ மணத்து விட்டது.

அவள் ஓடோடியும் வந்தாள்.

"நீ ஏன் யோசிக்கிறாய் பூ? எல்லாம் ஒழுங்காக நடக்கும். சம்பந்தனைப்பற்றி எல்லா விபரங்களும் நான் விசாரித்து வைத்திருக்கிறேன். அவருடைய தமக்கை ஒருத்தி எங்களுடைய சொந்தத்துக்குள் கல்யாணம் முடித்து மலாயாவில் இருக்கிறா. சாதி, சமயம், பொருள், பண்டம், அறிவு, அழகு எல்லாவிதத்தாலும் உனக்குச் சம்பந்தன் மிகப் பொருத்தமானவர்தான். எப்படியாவது உன் அப்பாவுக்குத் தெரியப்படுத்திவிட்டால் அவரே பேசிச் செய்து வைப்பார்...." என்றாள் தங்கமலர்.

"அப்பாவுக்குத் தெரியப்படுத்துகிறது! என்னால் முடியவே முடியாது!" என்றாள் பூவழகி.

"அதெல்லாம் நான் பார்த்துக் கொள்ளுகிறேன். நீ ஒன்றுக்கும் கவலைப்படாதே!" என்று சொல்லிவிட்டுத் தங்கமலர் போனாள்.

'தங்கம், உன்னுடைய மனசு தங்கம்!' என்று ஆனதக் கண்ணீர் விட்டாள் பூவழகி.

தங்கமலர் சொன்னமாதிரியே செய்து விட்டாள். பூவழகியின் பக்கத்து வீட்டிலிருந்த எழுத்தாளர் சிற்றம்பலத்தின் மனைவி மங்கையற்கரசியைத் தங்கமலருக்குத் தெரியும். மங்கயற்கரசி மூலம் சிற்றம்பலத்துக்குப் பாய்ச்சி, சிற்றம்பலத்திலிருந்து நல்லசிவத்துக்குப் போக விட்டாள் செய்தியை. -ஏறாத மேட்டுக்கு இரண்டுதுலை என்பார்களே, அப்படி!

ஒருவார காலமாக நல்லசிவம் இதே வேலையாகத் திரிந்தார். சம்பந்தனின் குடும்பத்தைப் பற்றிய விபரங்கள் திருப்தியாக இருந்தன. போட்டோ எடுக்கிற சாட்டில் ஒருநாள் கலை ஒளி ஸ்ரூடியோவுக்குப் போய் சம்பந்தனைப் பார்த்தார். அவனைப் பிடிக்காமலிருக்குமா? ஸ்ரூடியோவை நோட்டம் பார்த்தார். இருபத்தையாயிரமாவது பெறும் என்று ஒரு மதிப்புப் போட்டார். வீட்டுக்கு வந்ததும் பூவழகியைக் கூப்பிட்டு, "பார்த்தால் பூனை மாதிரியிருக்கிறாய்; நீ சரியான ஆளடி. பிடித்தாலும் பிடித்தாய் புளியங் கொப்பாகப் பிடித்திருக்கிறாயே!" என்று கேலி செய்தார். "போங்களப்பா!" என்று வெட்கமும் மகிழ்ச்சியும் துள்ளக் கூறிவிட்டுப் பூவழகி உள்ளே ஓடினாள்.

பிறகு மிக விரைவாகக் காரியங்கள் ந்டந்தன. பூவழகிக்கு நாற்பதினாயிரம் ரூபா பெறுமதியான வீடு வளவும், பதினையாயிரம் ரூபா ரொக்கப்பணமும், ஐயாயிரத்துக்கு நகையும் கொடுப்பதென்று பேசித் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் முகூர்த்தம் வைப்பதற்கு மட்டும் இன்னும் ஐந்து மாதங்கள் காத்திருக்க வேண்டுமென்று சம்பந்தனின் தகப்பனார் கேட்டுக் கொண்டார். 'மலாயாவில் இருக்கிற என்னுடைய மகள், தான் இல்லாமல் தம்பியின் கல்யாணம் நடக்கக்கூடாதென்று எழுதியிருக்கிறாள். அவள் ஆயத்தம் செய்து வந்து சேர நாலு மாதமாவது செல்லும். இப்போது கார்த்திகையா? மார்கழி, தை போனால், மாசி மாதம் கூடாது; பங்குனிக்கு நாள் வைக்கலாம்' என்றார். நல்லசிவம் ஒத்துக்கொண்டார்.

கல்யாணம் நிச்சயமானதும் சம்பந்தனுக்கும் பூவழகிக்கும் கட்டு அவிழ்த்து விட்டது மாதிரியிருந்தது.

'பண்டாரநாயக்கா மாண்டாலென்ன, தகநாயக்கா ஆண்டாலென்ன, என்று காதலரிருவரும் தாமும் தம்முடைய உலகுமாக இருந்தனர். பாவம் தங்கமலரைக் கவனிப்பாரேயில்லை!

இவர்கள் இப்படி இன்பமாக இருப்பது பிரமச்சாரி தகநாயக்காவுக்குப் பிடிக்கவில்லைப்போலும்! திடீரென்று ஒரு நாள் அவர் பாராளுமன்றத்தைப் போட்டு உடைத்தார்.

ஆம், தேர்தல் வந்தது!

நல்லசிவம்பிள்ளை போகிறவர்களிடமெல்லாம் தேர்தலைப் பற்றியே கதைக்கத் தொடங்கினார். "தேர்தலில் போட்டியிடுவதைப்போல மடத்தனம் வேறில்லை. உண்மையாகத் தன்னுடைய ஊருக்காகப் பாடுபடுகிறவன் பாராளுமன்றத்தில் போய் என்ன செய்யப் போகிறான்? - கிராமச் சங்க விஷயம் வேறு - பாராளுமன்றத்திலே பேரும், புகழும், லஞ்சமும், கட்சி வெறியுந்தானே கண்ட மிச்சம்!" என்பர்.

சில சமயம் "ஒரு படிப்போ, அறிவோ, அந்தஸ்தோ இல்லாத வெறும் தடியன்களெல்லாம் கேட்கிறார்களே, இவர்களெல்லாம் நாட்டை ஆண்டால் நன்றாய்த்தானிருக்கும்!" என்பார்.

நல்லசிவத்தின் உள்மனதுக்கும் உள்ளே ஒரு பாராளுமன்ற ஆசை கிடந்து நெளிவதை, சில கழுகுக் கண்காரர்கள் கண்டுகொண்டார்கள், விடுவார்களா!

"ஐயா, உங்களைப்போன்ற ஆட்கள் கட்டாயம் கேட்க வேண்டும்!" என்றார்கள்.

"சேச்சே!" என்று சொல்லி அவர் சிரித்தார். அடி மனத்திலே கிடந்து நெளிந்த அந்த ஆசையின் உருவம் அந்தச் சிரிப்பிலே தெளிவாகத் தெரிந்தது.

"இதெல்லாம் பெரிய கோடி சீமான்கள் பார்க்க வேண்டிய வேலை. தேர்தல் என்றால் சும்மாவா? இல்லையென்றால் முப்பதினாயிரம் நாற்பதினாயிரமாவது வேண்டும். எங்கள் தரவளி ஆட்கள் இதிலே தலையிட்டால் நடுவழியில் கிடந்து மாயவேண்டும்."

கிராமச் சங்கத்தில் ஏதாவது அலுவல் பெற வந்திருப்பவர் எப்படியாவது நல்லசிவத்தைப் 'பிளிஸ்' பண்ணுவதிலேயே கருத்தாக இருப்பார்:

"ஐயா, நீங்கள் கேட்கிறதானால் அந்த மாதிரியெல்லாம் தேவையில்லை. ஆகக் கூடுதலாகப் பார்த்தாலும் ஒரு பத்தாயிரம் ரூபா போதுமென்னப் போதும். நீங்கள் ஒரு சதம் செலவழிக்கவில்லையென்றாலும் எங்களுடைய பகம் முழுவதும் உங்களுக்குத்தான். நீங்கள் மட்டும் 'ஓம்' என்று ஒரு வார்த்தை சொல்லுங்கள். கட்டுக் காசுக்குக் கூட நானே நாலு ஐந்து பேரைச் சேர்த்துக் கட்டுகிறேன்" என்று தூபம் போட்டார்.

"சேச்சே, அப்படி ஒருவேளை நான் கேட்கிறதென்றாலும் வேறு ஆட்களை ஒரு சதம்கூடச் செலவழிக்க விட மாட்டேன். எனக்காகப் பாடுபடுவதுமல்லாமல் காசையும் செலவழிக்கலாமோ?" என்றார் நல்லசிவம். பூவழகிக்குச் சீதனம் பேசி வைத்த பதினையாயிரத்தைவிட, வங்கியில் க்டந்த இன்னொரு பத்தாயிரம் ரூபா அப்படியே உருண்டோடி வந்து அவருடைய நெஞ்சிலே கலகல வென்று சத்தமிட்டது.

ஒரு கணக்குப் போட்டுப் பார்த்தார். 'வென்றாலும் சரி, தோற்றாலும் சரி; ஆறாயிரம் ரூபாவுக்கு மேல் ஒரு சதம் செலவளிக்கிறதில்லை' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டார். அடி மனத்திலே கிடந்து துடித்த ஆசை, வெளிமனத்திலே வந்து தாளம் போட்டது. பிறகு பகிரங்கமாக வெளியிலே வந்து கூத்தாடத் தொடங்கியது.

'பூவழகியின் திருமணம் பங்குனியில் வருகிறதே' என்று ஒரு நிமிஷம் யோசித்தார். ஒரு நிமிஷந்தான். பிறகு 'தேர்தல் மார்ச் 19ம் திகதிதானே; பங்குனிக் கடைசி என்றால் ஏப்றில் மாதமாகி விடும். - அது நடத்தி விடலாம்' என்று சமாதானம் சொல்லிக் கொண்டார்.

தை மாசத்தில் தேர்தலுக்குக் கட்டுப் பணம் கட்டியவுடனேயே, நல்லசிவத்தின் தேர்தல் ஆசை பேராசையாக மாறிவிட்டது!

'ஆறாயிரமென்ன, பத்தாயிரமுமே போகட்டும்! பூவழகியின் திருமணம் முடிந்துவிடால் பிறகு எனக்கு ஏன் இந்தப் பணத்தை? சாக முன்னர் ஒரு 'எம். பி.' என்ற பெயரை எடுத்து விட வேண்டும்' என்று நினைக்கலானார்.

தேர்தலுக்குப் பதினைந்து நாட்களிருக்கையில் இந்தப் பேராசை, ஆவேசமாக மாறிற்று. பத்தாயிரத்துக்கு மேல் இன்னும் மூன்று நாலு ஆயிரம் கடன்வாங்க வேண்டுமென்று ஓடித் திரிந்தார். வசதியாகக் கிடைக்கவில்லை. பூவழகியின் சீதனப் பணம் பல்லைக் காட்டிச் சிரித்தது. 'தேர்தல் முடியட்டும்; எங்காவது மாறிக் கொடுக்கலாம்' என்று நினைத்துக்கொண்டு அதில் ஐயாயிரத்தை எடுத்தார்.

தேர்தலுக்கு ஒரு வாரமே இருக்கையில் நிலைமை சரியான போட்டியாக இருந்தது. இன்னுமொரு ஐந்தே ஆயிரங்கள் இல்லாவிட்டால் தோல்வி கண்டு விடுவார் போலத் தோன்றிற்று.

மனிதனுக்கு வெறி மூட்டுகின்ற வேலை மதுவுக்குமட்டும் ஏகபோகச் சொத்தல்ல; ஆசைக்கும், கோபத்துக்குங் கூட அந்த உரிமையுண்டு.

நல்லசிவத்துக்கு வெறி வந்துவிட்டது!

தேர்தலில் வெற்றி காணவேண்டுமென்ற ஒரே வெறி மயக்கம் தம்முடைய பொருளாதார நிலையையும், மகளின் திருமணத்தையுங்கூட மறைத்துவிட்டது.

1960-ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ம் திகதி.

476 வாக்குகளால் நல்லசிவம் தோல்வியடைந்தார்.

வெறி அடங்கி விட்டது! ஆனால்-

வேதனை நிறைந்து விட்டதே!

பூவழகியின் சீதனப் பணத்தை இவர் கோட்டை விட்ட விஷயம் எப்படியோ சம்பதனின் தகப்பனாருடைய செவிக்கு எட்டிவிட்டது. இனி இந்தச் சம்பந்தம் சரிவராது என்ற மாதிரி இடை ஆட்கள் மூலம் அவர் சொல்லி அனுப்பினார்.

சம்பந்தன் பதறினான்.

பூவழகி துடித்தாள்.

அவளுடைய முகத்தை நிமிர்ந்து பார்க்கக்கூட நல்லசிவத்துக்குத் துணியவில்லை. அவருடைய உள்ளம் காய்ந்து கறுத்து உக்கிக் கொண்டிருந்தது. அகத்தின் அவலம் முகத்தைச் சுட்டது. 'பொலிடோ'லைப் பற்றிய எண்ணம் மூளையின் ஆழத்தில் தோன்றிப் பயமுறுத்த ஆரம்பித்தது.

* * *

"ஐயையோ!" என்றாள் கயல்விழி. - அவள் இந்தக் கதையைப் படித்துக் கொண்டிருந்தவள்.

"என்னது?" என்றான் இளங்கோ. -இதை எழுதிக் கொண்டிருந்தவன்.

"பாவம், பூவழகி! - அவளுடைய தகப்பனாரைக் கொன்றுவிடாதீர்கள்!"

இளங்கோ தன் மனைவியை நிமிர்ந்து பார்த்தான். "நான் என்ன செய்ய முடியும்? கதைபோகிற போக்கில் அவர் பொலிடோலைக் குடித்து விடுவாரே!" என்றான்.

"உடனே ஆஸ்பத்திரிக்கு அவரை அனுப்ப் வையுங்கள். எப்படியாவது அங்கே அவரைக் காப்பாற்றி விடுவார்கள்!"

உடனே எப்படி அனுப்புவது? யாரையாவது பக்கத்தில் வைத்துக்கொண்டு அவர் குடிக்கமுடியுமா? அல்லாமலும் பொலிடோல் மிகக் கொடிய விஷம். - ஆள் தவறவே முடியாது!"

கயல்விழி யோசித்தாள். பூவழகியின் காதலை நினைக்க நினைக்க அவளுக்குப் பரிதாபமாக இருந்தது. பிறகு ஏதோ துணிந்தவள் போல் "உங்களால் முடியாவிட்டால் என்னிடம் விடுங்கள். நான் காப்பாற்றி, பூவழகிக்கும் சம்பந்தனுக்கும் கலியாணமும் செய்து வைக்கிறேன்!" என்றாள்.

"உன்னால் முடியுமானால் செய்!" என்றுகூறி இளங்கோ விலகிக் கொண்டாள். கயல்விழி எழுதத் தொடங்கினாள்.

* * *

1960-ம் ஆண்டு பங்குனி மாதக் கடைசியில் திருவளர் செல்வன் சம்பந்தனுக்கும் திருவளர் செல்வி பூவழகிக்கும் சுருக்கமான முறையில் ஆனால் சிறப்பாகத் திருமணம் நடைபெற்றது.

* * *

"இது என்ன இது! கதையை நாசமாக்கி விட்டாயே!" என்று இளங்கோ குதித்தான்.

"ஏன், என்ன?" என்றாள் கயல்விழி.

"சீதனப் பணம் இல்லாமல் சம்பந்தனுக்கும் பூவழகிக்கும் எப்படிக் கல்யாணம் நடக்கமுடியும்? சம்பந்தனின் தகப்பனார் ஒருபோதும் இதற்குச் சம்மதிக்க மாட்டார். சம்பந்தனோ தகப்பனாருடைய முகத்தை முறித்துக் கொண்டு போகமாட்டான்!"

"அப்படியா?" என்று கேட்டாள் கயல்விழி. பிறகு, "கொஞ்சம் பொறுங்கள். கதை இன்னும் முடியவில்லை!" என்று சொல்லிவிட்டு எழுதத் தொடங்கினாள்.

* * *

கல்யாணச் சந்தடி முடிந்து மூன்றாம் நாள். சம்பந்தன் தனியாக இருக்கும்போது நல்லசிவம்பிள்ளை சந்தித்தார்.

"தம்பி, நான் உமக்கு எவ்விதம் கைம்மாறு செய்யப் போகிறேனோ தெரியவில்லை!" என்றார்.

"அப்படியெல்லாம் ஒன்றும் பெரிதாக நினைக்காதீர்கள் மாமா!" என்றான் சம்பந்தன்.

"அதுசரு தம்பி; உம்மிடம் பத்தாயிரம் ரூபா இருந்த விஷயம் உமது தகப்பனாருக்குத் தெரியாதா? .... நீர் அவரிடம் ஒளித்திருக்க மாட்டீரே!" என்று கேட்டார் நல்லசிவம்.

"உண்மைதான். அவருக்குத் தெரியாமல் நான் பணம் வைத்திருப்பதில்லை.... என்னுடைய ஸ்ரூடியோவோடு 'புளொக் மேக்கிங்' பகுதி ஒன்று சேர்ப்பதற்காக வங்கியில் கடன் கேட்டிருந்தேன். அந்த விஷயம் அப்பாவுக்குத் தெரியாது. பணம் கிடைத்தபிறகு சொல்லலாமென்று இருந்தேன். நல்லாமயத்தில் பணம் கிடைத்தது. இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவரிடம் மறைத்து நடப்பதில் தவறில்லை என்று தோன்றியதால் உங்களிடம் அந்தப் பணத்தைத் தந்துவிட்டேன்" என்றான் சம்பந்தன்.

* * *

"அச்சா!" என்றான் இளங்கோ. "கள்ளி, நீயும் பூனைமாதிரி இருந்துகொண்டு புலியாகப் பாய்ந்துவிட்டாயே! இப்போது ஒரு சந்தேகம். இந்தக் கதையில் தேர்தல் வெறியா, பத்தாயிரம் ரூபாவைத் தாரை வார்த்த சம்பந்தனுடைய காதல் வெறியா முக்கிய இடம் வகிக்கிறது?"

"இரண்டு வெறிகளாகவுமே இருக்கட்டும்" என்றாள் கயல்விழி.


++++++++++++++++

9. கற்பு

மாலை நாலரை மணி. பிள்ளையார் கோயில் கணபதி ஐயர் வீட்டின் முன் விறாந்தையிலே மூர்த்தி மாஸ்டரும் ஐயரும் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கெல்லாமோ சுற்றி வந்து கடைசியில் இலக்கிய உலகத்திலே புகுந்தார்கள்.

"மாஸ்டர், நீங்கள் 'கலைச்செல்வி'யைத் தொடர்ந்து படித்து வருகிறீர்களா?" என்று கேட்டார் ஐயர்.

"ஓமோம், ஆரம்பத்திலிருந்தே 'பார்த்து' வருகிறேன். ஆனால் எல்லா விஷயங்களையும் படிக்கிறேனென்று சொல்ல முடியாது. ஏன், என்ன விஷேசம்?"

"கலைச்செல்வி' பழைய பிரதி ஒன்றை இன்றுதான் தற்செயலாகப் படித்துப் பார்த்தேன். அதிலே ஒரு சிறுகதை..."

"யார் எழுதியது?"

"எழுதியவர் பெயரைக் கவனிக்கவில்லை. அந்தச் சம்பவந்தான் மனத்தை உறுத்திக்கெண்டேயிருக்கிறது."

"சொல்லுங்கள், நினைவு வருகிறதா பார்க்கலாம்?"

"மூன்றாம் வருஷம் இலங்கையில் பெருவெள்ளம் ஏற்பட்டதல்லவா; அந்தச் சூழ்நிலையை வைத்துக் கதை எழுதப்பட்டிருக்கிறது. குளக்கட்டை உடைத்துக்கொண்டு ஒரு கிராமத்துக்குள் வெள்ளம் பெருகி வருகின்றது; சனங்கள் உயரமான இடத்தைத் தேடி ஓடுகிறார்கள். அந்த ஊரில் ஒரு பணக்காரனின் வீட்டுக்கு 'மேல்வீடு'ம் இருக்கின்றது; அங்கே அவன் தனியாக இருக்கின்றான்; வெள்ளத்துக்கு அஞ்சி ஒரு ஏழைப்பெண் - இளம் பெண் அந்த மேல் வீட்டுக்குச் செல்கிறாள்; பணக்காரன் அவளைப் பதம் பார்க்க முயல்கிறான்; அவள் இசையவில்லை; அவன் பலாத்காரம் செய்தேனும் அவளை அடையத் துணிந்து விட்டான். அவள் உயிரைவிடக் கற்பையே பெரிதாக மதிப்பவள். மேல் வீட்டிலிருந்து கீழே குதித்து உயிரைத் துறந்தாள். கற்பைக் காப்பாற்றிக் கொண்டாள்.... இந்தக் கதையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் மாஸ்டர்?"

"என்ன நினைக்கிறது? புராண காலத்தில் இருந்து திருப்பித் திருப்பிப் படித்த 'கருத்து'த்தான். கதையை அமைத்த முறையிலும் வசன நடையின் துடிப்பிலுந்தான் இந்தக் கதைக்கு வாழ்வு கிடைக்கும். நான் படிக்கவில்லை. படித்தால்தான் அதைப்பற்றிச் சொல்லலாம்."

"நான் கதைக்கு விமர்சனம் கேட்கவில்லை மாஸ்டர். புராண காலத்திலிருந்து படித்ததாகச் சொன்னீர்களே, அந்தக் 'கருத்தை'ப்பற்றித்தான் உங்கள் அபிப்பிராயம் என்ன என்று கேட்கிறேன்."

"எதைக் கேட்கிறீர்கள் ஐயா? தனது கற்பைக் காப்பாற்ற உயிரைத் துறந்தாளே, அதைப்பற்றியா?"

"ஓமோம், அதையேதான்."

"ஒரு பெண்ணின் முக்கியமாகத் தமிழ்ப் பெண்ணின் சிறப்பே அத்ல்தானே இருக்கின்றது! மானம் அழிந்தபின் வாழாமை இனிதென்பதல்லவா தமிழன் கொள்கை?"

ஐயர் பெருமூச்சு விட்டார். பிறகு, "நீங்களும் இப்படிச் சொல்கிறீர்களா?" என்று கேட்டார்.

மூர்த்தி மாஸ்டர் திகைத்தார். தான் என்ன தவறுதலாகச் சொல்லிவிட்டாரா? இந்த ஐயர் என்ன இப்படிக் கேட்கிறார்?

ஒரு நிமிஷ நேரம் மௌனம் நிலவிற்று. ஏதோ எண்ணித் துணிந்துவிட்டவர்போல கணபதி ஐயரே மீண்டும் மௌனத்தைக் கலைத்தார்.

"மாஸ்டர், எனக்கும் என் மனைவிக்கும் மட்டும் தெரிந்த ஒரு இரகசியத்தை உங்களுக்குச் சொல்லப்போகிறேன் - உங்களுக்குச் சொல்லலாம்; சொல்வதால் ஒரு தீமையும் ஏற்படாது. இதைக் கேட்டபிறகு 'கற்பு' பிரச்சினையைப்பற்றிப் பேசுவோம்.

* * *

போனவருஷம் பெரியந்தனை முருகமூர்த்தி கோயிலில் நான் பூசை செய்து கொண்டிருந்தது உங்களுக்குத் தெரியும். அங்கே தமிழர்கள் தொகை ஐம்பது பேர்கூட இருக்காது. விசேட தினங்களுக்கு மட்டும் பிற இடங்களிலிருந்தெல்லாம் வந்து கூடுவார்கள். சிங்களவர்கூடப் பலர் கோயிலுக்கு வந்து அருச்சனை செய்விப்பது வழக்கம்.

சிங்களவர் - தமிழர் கலகம் துவங்கினவுடனே அங்கே இருந்த தமிழர்களில் முக்கால்வாசிப் பேரும் யாழ்ப்பாணத்துக்கு ஓடிவந்துவிட்டார்கள். நான் பூசையை விட்டுவிட்டு எப்படிப் போகமுடியும்? என் மனைவியைப் போகும்படி சொன்னேன். எனக்கு வருவது தனக்கும் வரட்டுமென்று அவள் மறுத்துவிட்டாள். சிங்களவரும் அக்கோயிலிலே கும்பிட வரும் வழக்கம் இருந்ததால் கோயில் விஷயத்தில் தலையிட மாட்டார்கள். எங்களுக்கும் ஆபத்து நேராது என்ற துணிவில், அவளை மேலும் வற்புறுத்தாமல் விட்டுவிட்டேன்.

ஒரு புதன்கிழமை, அன்று பேபிநோனா என்ற சிங்களக் கிழவி - அவள் எங்களோடு நன்கு பழகியவள். கோயிலுக்கும் நாள் தவறாமல் வருகிறவள் - அவள் சொன்னாள். "நீங்கள் இனி இங்கேயிருப்பது புத்தியில்லை ஐயா. காலியிலிருந்து சில முரடர்கள் மூன்று லொறிகளில் வருகிறார்களாம். வருகிற வழியெல்லாம் தமிழர்களை இல்லாத கொடுமை செய்கிறார்களாம். ந்றிரவோ நாளையோ இந்தப்பக்கம் வரக்கூடுமென்று கதைக்கிறார்கள். நீங்கள் இப்போதே புறப்பட்டு பொலீஸ் ஸ்டேசனுக்குப் போய் விடுங்கள். பிறகு பொலீஸ் துணையோடு கொழும்புக்குச் செல்லலாம்" என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்ட பிறகு 'அப்பனே முருகா! என்னை மன்னித்துக்கொள்' என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டு கையோடு கொண்டு போகக்கூடிய பொருள்களை இரண்டு பெட்டிகளுள் சேகரித்தோம். என் மனைவியின் நகைகளையும் - நூலில் கட்டிய தாலியொன்றைத் தவிர - எல்லாவற்றையும் கழற்றிப் பெட்டியில் பூட்டினோம். இந்த ஆயத்தங்கள் செய்வதற்குள் மாலை ஐந்து மணியாகி விட்டது. நாங்களும் புறப்பட ஆயத்தமானபோது பேபி நோனா அவசரம் அவசரமாக ஓடிவந்தாள். "ஐயா, ஐயா, சில்வாவும் வேறு இரண்டு பேருமாக வாறான்கள். அம்மாவை அவன்கள் கண்ணில் படாமல் எங்கேயாவது ஒளித்திருக்கச் சொல்லுங்கோ! கேட்டால் 'நேற்றே ஊருக்குப் போய்விட்டா' என்று சொல்லுங்கோ. நான் இங்கே நின்றால் எனக்கும் ஆபத்து; உங்களுக்கும் ஆபத்து, கவனம் ஐயா" என்று சொல்லி விட்டு பேபி நோனா ஓடி மறைந்து விட்டாள்.

சில்வாவை எனக்குத் தெரியும்; ஆள் ஒரு மாதிரி. 'ஐயா, ஐயா' என்று நாய்மாதிரிக் குழைந்து ஐம்பது சதம், ஒரு ரூபா என்று இடைக்கிடை என்னிடம் வாங்கியிருக்கிறான். ஆள் காடைத் தரவளியாதலால் நானும் பட்டும் படாமலும் நடந்து வந்திருக்கிறேன். இரண்டொரு நாள் என் மனைவியை றோட்டில் தனியாகக் கண்டபோது அவனுடைய பார்வையும் சிரிப்பும் நன்றாக இருக்கவில்லையென்று அவள் சொல்லியதுண்டு.

இப்போது அவன் வருகிறானென்றால்...

எனக்கு ஒருகணம் ஒன்றும் தோன்றவில்லை. யோசிக்கவும் நேரமில்லை. வீட்டுக்குள் உயரத்திலே பரண் மாதிரி மூன்று மரங்களைப் போட்டு அதன்மேல் சில பழைய பெட்டிகளைப் போட்டிருந்தது. என் மனைவியை நான் தூக்கி அந்த மரங்களின்மேல் விட்டு மெதுவாக அந்தப் பெட்டிகளின் பின்னால் மறைந்திருக்கும்படி விட்டேன். பிறகு எங்கள் பயணப் பெட்டிகளை எடுத்துச் சற்று மறைவாக ஒரு மூலையில் வைத்துவிட்டேன். பிறகு, முன் விறாந்தைப் பக்கம் வந்தேன். நானும் வர அந்தக் காடையர்களும் வாயிலில் நுழைந்தார்கள். எனக்கு உள் மனது நடுங்க ஆரம்பித்துவிட்டது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, "என்ன சில்வா, இந்தப் பக்கம்?" என்று சிரிக்க முயன்றேன்.

"சும்மாதான், நீங்கள் இருக்கிறீர்களா, இல்லாவிட்டால் யாழ்ப்பாணத்துக்குக் கம்பி நீட்டி விட்டீர்களா என்று பார்க்கத்தான் வந்தேன்" என்றான்.

"முருகனை விட்டு நான் எங்கேதான் போகமுடியும்?" என்று சொன்ன என் குரலே தெளிவாக இல்லை.

"எங்களுக்குக் கொஞ்சம் தண்ணீர் குடிக்க வேண்டும்" என்றான் சில்வா. நான் சரியென்று குசினிப் பக்கம் போனேன். எனக்குப் பின்னால் அவர்கள் தொடர்ந்து வருவதை உணர்ந்தேன். ஆனாலும் திரும்பிப் பார்க்கவில்லை. ஒரு செம்பில் தண்ணீரை வார்த்துக் கொண்டு நிமிர்ந்தேன். எனக்கு முன்னால் அந்த மூன்று காடையர்களும் நின்றார்கள். செம்பைப் பிடித்த எனது கையில் நிதானமில்லை.

"அதுசரி அயா, எங்கே அம்மாவைக் காணவில்லை?"

நான் திரும்பித் திரும்பி மனத்துக்குள் ஒத்திகை பார்த்து வைத்திருந்த வசனங்களை ஒப்புவித்தேன்: "அவ நேற்றே ஊருக்குப் போய்விட்டாவே."

'பளீர்' என்று என் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது! செம்பும் தண்ணீரும் உருண்டு சிதறியது. என் கண்களுக்குப் பார்வை வருமுன்பே என் மடியில் கையைப் போட்டு ஒருவன் இழுத்தான்; மற்றக் கையினால் வயிற்றில் ஒரு குத்து விட்டான்.

"தமிழ்ப் பண்டி, பொய்யா சொல்லுகிறாய்? இன்று காலையிற்கூட உன் பொண்டாட்டியைப் பார்த்தேனே!"

மற்றவன் கேட்டான்: "சொல்லடா! அவளை யார் வீட்டில் கொண்டு போய் ஒளித்து வைத்திருக்கிறாய்?" எனக்கு நெஞ்சிலே கொஞ்சம் தண்ணீர் வந்தது. இந்த முரடர்கள் நான் அவளை வேறு யார் வீட்டிலோ ஒளித்து வைத்திருப்பதாக நினைத்துவிட்டார்கள். ஆகையால் இந்த வீட்டில் அதிகம் பார்க்க மாட்டார்கள். என் உயிர் போனாலும் சரி; அவள் மானம் நிலைக்கட்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

"என்னடா பேசாமல் நிற்கிறாய்?"

குத்து! அடி! உதை!
குத்து! அடி! உதை!
குத்து! அடி! உதை! ........

நான் இயக்கமின்றிக் கீழே விழுந்து விட்டேன். அம்மட்டிலும் அவர்கள் விடவில்லை. இரண்டுபேர் என்னைப் பிடித்துத் தூக்கினார்கள்.

"அவள் இருக்கிற இடத்தை நீ சொல்ல மாட்டாய்? ... கடைத் தெருப்பக்கம் காலியிலிருந்து லொறியில் வந்திருக்கிறான்கள். அவன்களிடம் உன்னைக் கொண்டுபோய்க் கொடுத்தால், உன்னைத் தலை கீழாகக் கட்டித் தூக்கித் தோலை உரித்த பிறகு கீழே நெருப்பைக் கொழுத்தி சுடுவான்கள், உனக்கு அதுதான் சரி!..... வாடா!" என்று சொல்லி இழுத்தார்கள். என்னால் நடக்கவும் முடியவில்லை. அவ்வளவு அடி அகோரம். அவர்கள் என்னை இழுத்துக் கொண்டு நடுவீட்டுக்கு வந்துவிட்டார்கள். மேலே என் மனைவி... அந்த அறையையும் கடந்து வெளியே காலை வைத்து விட்டார்கள்.

"நில்லுங்கள்! நில்லுங்கள்!" என்ற கூச்சலோடு என் மனைவி பரணிலிருந்து குதித்தாள்.

"அவரை விட்டு விடுங்கள்!" என்று அலறிக் கொண்டே என்னிடம் ஓடி வந்தாள்.

அவர்கள் என்னை விட்டு விட்டார்கள். ஆறு முரட்டுக் கரங்கள் அவளை மறித்துப் பிடித்தன.

பிறகு......

என்னை ஒரு மேசையின் காலோடு பின்கட்டாகக் கட்டினார்கள். அவளை - என் மனைவியை - குசினிப்பக்கம் இழுத்துக் கொண்டு போனார்கள். இரண்டொரு நிமிஷங்களில் அவளுடைய அலறல் கேட்டது. பிறகு அவள் அலறவில்லையோ, அல்லது நாதான் இரத்தம் கொதித்து, மூளை கலங்கி, வெறிபிடித்து, மயங்கி விட்டேனோ!

மறுபடி எனக்கு நினைவு வரும்பொழுது அதே மேசையடியில் யாரோ ஒருவருடைய மடியில் படுத்திருபதை உணர்ந்தேன். என்னை அவ்விதம் ஆதரவாகத் தூக்கி மடியில் வைத்திருப்பது யாரென்று அறிய ஒரு ஆவல். கண்களைத் திறந்து பார்த்தேன்.

என் மனைவி!

மானம் அழிந்த என் மனைவி......

எத்தனையோ நூற்றாண்டுகளாக ஊறிப்போன 'கருத்து' என்னைச் சித்திரவதை செய்தது. மானத்தை இழந்த என் மனைவியின் மடிமீது தலை வைத்துப் படுத்திருக்கிறேனே; ...... என் உடம்பு கூனிக் குறுகியது. எழுந்து வெளியே நிலத்தில் விழுந்துவிட வேண்டுமென்று மனம் உன்னிற்று.

என் முகத்திலே ஒரு சொட்டுக் கண்ணீர்; இன்னொன்று, இன்னொன்று. என் முகமும் அவள் கண்ணீரால் நனைய, மனம் சிந்திக்கத் தொடங்கியது.

மூன்று விஷப் பாம்புகள் அவளைக் கடித்து இன்பத்தை உறிஞ்சின. அவள் உடலும் உள்ளமும் வேதனையால் துடித்தன. எரிந்து போகிற உடலை யோரோ என்னவோ செய்தார்கள். மனம் சிறிதும் சம்பந்தப்படாதபோது அவளுடைய மானம் போய்விடுமா? செய்யாத குற்றத்துக்கு அவள் தண்டனை அடைய வேண்டுமா? மனம் சம்பந்தப்படாதபோது வெறும் உடலுக்கு நேர்ந்த தீங்கினால் மானம் அழிந்து விடுமென்றால் பிரசவத்துக்காக டாக்டரிடம் போகும் பெண்களெல்லாம் -

என் மனத்தில் எழுந்த ருவருப்பை வெளியே இழுத்தெடுத்துத் தூர வீசினேன். பரிதாபப்படவேண்டிய, பாராட்டப்படவேண்டிய என் மனைவியின் பெருமை என் நெஞ்செல்லாம் நிறைந்தது. மெதுவாக அவள் கைகளைப் பற்றி என் மார்போடு அணைத்துக் கொண்டேன்.

பிறகு பொலீஸ் வந்தது. பேபி நோனாதான் அந்த உதவியைச் செய்தாளென்று பின்னால் தெரிந்து கொண்டேன். என்னவோ கஷ்டமெல்லாம் மட்டு, அகதி முகாமில் கிடந்துழன்று எப்படியோ இங்கே வந்து சேர்ந்தோம்.......

* * *

"இப்பொழுது சொல்லுங்கள் மாஸ்டர். பலாத்காரத்தினால் ஒரு பெண்ணின் உடல் ஊறு செய்யப்பட்டால் அவள் மானம் அழிந்துவிடுமா? அதற்காக அவள் உயிரையும் அழித்துவிடவேண்டுமா? ..... அப்படி உயிரை விட்டவளைப் பத்தினித் தெய்வமென்று கும்பிட வேண்டுமா? கணவன் இறந்தவுடன் உடன்கட்டை ஏறியவள் - அப்படிச் செய்வதே கற்புடைய மகளிர் கடமை என்ற சமூகக் கருத்தினால் உந்தப்பட்டு ஏற்றப்பட்டவள் பத்தினித்தெய்வமா, அல்லது பகுத்தறிவற்ற சமுதாயத்துக்குப் பலியான பேதையா? ..... சொல்ல்ங்கள் மாஸ்டர்!..."

க்ணபதி ஐயர் உணர்ச்சி மேலீட்டால் பொருமினார்.

"என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் ஐயா! இப்படித்தான் பரம்பரை பரம்பரையாக இரத்தத்தில் ஊறிப்போன பல விஷயங்களைப்பற்றிச் சிந்திக்காமலே அபிப்பிராயம் கொண்டுவிடுகிறோம். நான் கூட எவ்வளவு முட்டாள்தனமாக அபிப்பிராயம் சொல்லி விட்டேன்..... ஐயா, பகுத்தறிவு, பகுத்தறிவு என்று சொல்லிக்கொண்டு தேவையில்லாத விஷயங்களிலெல்லாம் வாய்வீச்சு வீசுகிற பலரை எனக்குத் தெரியும். ஆனால் உண்மையான ஒரு பகுத்தறிவுவாதையை இன்றைக்குக் கண்டு பிடித்துவிட்டேன்" என்று சொன்னார் மூர்த்தி மாஸ்டர். ஐயர் வீட்டுச் சுவரிலே இருந்த மகாத்மா காந்தியின் படம் - அதிலே ஐயரின் சாடை தெரிவதுபோலத் தோன்றியது மூர்த்தி மாஸ்டருக்கு.

++++++++++++++++++

10. ஒரு கணம்

மேசையிலே வெள்ளைக் கடதாசி கிடக்க, ஒரு கையிலே பேனாவைத் தயாராக வைத்துக் கொண்டு - ஆனால் ஒன்றும் எழுதாமல், மற்றக் கையால் நாடியைத் தடவிக் கொண்டு கண் பார்த்ததை மனம் பார்க்காமல் - ஆமாம், கற்பனையுலகிலே மிதந்து கொண்டிருக்கிறாரே -

இவர் பெரிய எழுத்தாளர். இலங்கையில் மட்டுமன்றி, தமிழ் நாட்டிலும் தமது சிறுகதைகளை உலவவிட்டுப் புகழ்பெற்றவர். 'சிற்றம்பலம்' என்ற இவருடைய பெயரைச் சொன்னால் உங்களுக்குத் தெரியாது. இவருடைய வாழ்க்கையில் வந்து போன இந்த 'ஒரு கண' நிகழ்ச்சி இவருக்குப் பெருமை தரத்தக்கதல்ல; ஆதலால் இவருடைய பிரசித்திபெற்ற புனைபெயரை இங்கே உபயோகப்படுத்த நான் விரும்பவில்லை.

சிற்றம்பலம் என்ற இந்தப் பெயரும் இவருடைய சொந்தப் பெயரல்ல; இது 'ஒரு' பெயர்; புனை பெயரென்றே சொல்லலாம். இவர் எழுதிய ஒரு கதையில் - நூற்றுக்கணக்கான இவருடைய கதைகளில் நீங்கள் அதை எங்கே தேடிக் கண்டு பிடிக்கப் போகிறீர்கள்? - ஒரு கதையில் 'சிற்றம்பலம்' என்று ஒரு கதாபாத்திரம் வருகிறார். மிக நல்ல உயர்ந்த பாத்திரம். அதைப் படித்து விட்டு அந்தச் சிற்றம்பலம் இவர்தான் என்று பூவழகி-

ஓ! பூவழகியைப் பற்றி இப்போது சொல்ல வேண்டியிருக்கிறது. பூவழகி, சிற்றம்பலம் வீட்டிற்குப் பக்கத்தில் இருப்பவள். அழகி; மென்மையானவள்; இனிமையானவள். அதோடு குறுகுறுப்பும், குறும்புத்தனமும். எல்லாவற்றுக்கும் மேலாக ரசிகத்தனமும் - அவளைச் சிற்றம்பலத்துக்கு மிகவும் பிடிக்கும்! - இங்கே காதல் கூதல் ஒன்றுமில்லை. சிற்றம்பலம் கல்யாணமானவர், நல்ல மனிதர்; பண்புள்ளவர். அவள் கன்னிப்பெண்; களங்கமில்லா நெஞ்சினள்.

இந்தப் பூவழகிதான் இவருக்குச் 'சிற்றம்பலம்' என்ற பெயரை வைத்தாள். அந்தக் கதாபாத்திரமாகத் தம்மை அவள் மதிப்பிடுவதுபற்றி இவருக்குக் கொஞ்சம் பெருமையுமுண்டு.

சிற்றம்பலம் 'வெறும்' எழுத்தாளரல்லர். அதாவது எழுதுவதை மட்டுமே தொழிலாகக் கொண்டவரல்லர். இவர் ஒரு அரசாங்க உத்தியோகத்தர். எழுதுவது சொந்த மனத்திருப்திக்காக. ஆனாலும் அதன்மூலம் மாதம் ஐம்பது, ந்ய்ய்று என்று 'அன்பளிப்பு'களாகப் பெற்றுக் கொண்டிருந்தார். - அது ஒரு கௌரவமும்.

இப்பொழுது இந்த மாலைப் பொழுதிலே இவர் நாடியைத் தடவிக்கொண்டு கற்பனைக் குதிரையில் பறந்து கொண்டிருப்பது 'கதை'க்காகவல்ல. இங்கிருந்து இருபத்தைந்து மைல்களுக்கப்பால் உள்ள ஒரு கிராமத்தில் இவர் பறந்து போய் நிற்கிறார். அங்கே ஒரு வீட்டில் இவருடைய 'செல்லக்கிளி' -

இவருக்கு அவள் 'செல்லக்கிளி.' 'மங்கையர்க்கரசி' என்ற அழகான பெயரை விட்டு விட்டு, 'செல்லக்கிளி' என்று கூப்பிடும்போது இவருடைய இதயத்தின் ஒலி அதிலே கேட்கும். 'மனைவியைத் தலையிலே தூக்கி வைத்திருக்கிறார்' என்று சிலர் கேலியாகச் சொன்னார்கள். 'ஓமோம், அவள் இதற்குத் தகுதியானவள்தான்' என்று இவர் மனதுக்குள்ளே பெருமைப்பட்டார்.

இவருடைய செல்லக்கிளிக்கு இது முதற் பிரசவம். - முதற் பிரசவமென்ன, முப்பதாவது பிரசவமாயிருந்தாலும் அவள் தாய் வீட்டுக்குப் போயிருக்க வேண்டியவள்தான். சிற்றம்பலம் அவள் மீது உயிரையே வைத்திருந்தார் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை. ஆனால் வீட்டுக் காரியமென்று ஒரு துரும்பை எடுத்துப் போட்டறியாதவர். அவளை இங்கே வைத்துக் கொண்டு பத்திய பாகமாக எல்லாம் கவனிக்க இவருக்குத் தெரியாது. தெரிந்ததையும் உசாராகச் செய்கிற ஆளுமல்ல.

ஒரு மாதத்துக்கு முன்னால் மங்கையர்க்கரசி சுகமாக ஓர் ஆண் குழந்தையைப் பெற்றுவிட்டாள். இதற்கிடையில் மூன்று நாலு தரம் சிற்றம்பலம் போய்ப் பார்த்துக் கொண்டு வந்துவிட்டார். சென்ற ஞாயிற்றுக்கிழமை போயிருந்தபோது, விரைவில் தன்னையும் கூட்டிக் கொண்டு போகும்படி அவள் விண்ணப்பம் செய்திருந்தாள். - பேதை அந்தச் சொகுசான இடத்தை விட்டு விட்டு, இங்கே இந்த - ஒரு துரும்பை எடுத்துப் போட்டறியாத கணவருடன் வந்துவிடவேண்டுமென்று எதற்குத்தான் துருதுருக்கிறாளோ!

சிற்றம்பலத்துக்கும் இங்கே ஒரேயடியாய் 'வெறிச்'சென்று கிடந்தது. சில நேரங்களில் பைத்தியம் பிடித்த மாதிரியிருக்கும். இருந்தாலும் அவளுடைய நன்மையைக் கருதி இன்னும் சில வாரங்களுக்காவது அங்கே இருக்கட்டுமென்று நினைத்தார். இங்கே இவருக்குச் சாப்பாட்டுக் கரைச்சல் இல்லை. பக்கத்தில் பூவழகி வீட்டில் அதற்கு ஏற்பாடு செய்துவிட்டுத்தான் மங்கையர்க்கரசி போனாள். மத்தியானம் அலுவலகத்துக்குப் பக்கத்தில் எங்கேயோ சாப்பிட்டுக் கொள்வார். காலையும் மாலையும் பூவழகி கொண்டுவந்து கொடுத்து, இவர் சாப்பிடுகிறவரையும் கூட இருந்து இலக்கிய சர்ச்சை செய்துவிட்டுப் போவாள். சில நேரங்களில் சாப்பாடு முடிந்தாலும் சர்ச்சை முடியாது.

இப்பொழுது, இந்த மாலைப்பொழுதிலே, இவர் நாடியைத் தடவிக்கொண்டு யோசித்து - ரசித்து எழுதிக் கொண்டிருப்பது ஒரு கடிதம், - இவருடைய செல்லக்கிளிக்கு!

'..... இங்கே வருவதற்கு என்ன அவசரம் இப்போது? என்னைப் பொறுத்தவரை ஒரு குறைவுமில்லை இங்கே. குழதையையும் வைத்துக்கொண்டு இங்கே தனியாகப் பெரிய கஷ்டமாக இருக்கும் உமக்கு! இன்னும் சில நாட்களாவது உவ்விடத்திலிருந்துவிட்டுப் பிறகு வரலாம். நாதான் வாரந்தவறாமல், வந்து பார்க்கிறேனே!...'

- இப்படி எழுதலாமா என்று மனதுக்குள்ளே சொல்லி ஒத்திகை பார்த்தார்.

'கிளிக்!'

திடீரென்று மின்சார விளக்கின் ஒளி பளிச்சிட்டது.

சிற்றம்பலம் திடுக்கிட்டு 'அந்த' உலகத்திலிருந்து இந்த உலகத்திற்கு வந்து திரும்பிப் பார்த்தார்.

எதிரே -

பூவழகி!

கையில் சாப்பாட்டுத் தட்டுடன் ஒரு வானத்து மோகினிபோலச் சிரித்துக்கொண்டு நின்றாள்.

ஏனோ, அவளைப் பார்த்ததும் அவரால் உடனே ஒன்றும் பேச முடியவில்லை.

"என்ன, இருட்டியதுகூடத் தெரியாமல் 'எழுத்து' நடக்கிறதா?" - பூவழகி கேலியாகக் கேட்டாள்.

"இல்லை, எதையோ யோசித்துக் கொண்டிருந்தேன்..."

"நேற்றுச் சொன்னீர்களே, அந்தக்கதை - தொடங்கி விட்டீர்களா?"

"இல்லை. இது வேறே!"

"வேறு கதையா?"

"இல்லை. வேறு விஷயம்; கடிதம் - மங்கையர்க்கரசிக்கு."

"ஓ!"

"என்ன, ஓ?"

"ஒவ்வொரு நாளும் எழுதுகிறீர்களே பக்கம் பக்கமாக... 'அவ' கொடுத்து வைத்தவ; நீங்கள் சுவையாக எழுதுவீர்கள். எழுத்தாளரல்லவா?"

"உமக்கென்ன தெரியும்! அவ எழுதுகிற கடிதங்கள் எவ்வளவு நன்றாக இருக்கும் தெரியுமா?"

"இருக்கும், உங்களுக்கு மட்டும்!"

சிற்றம்பலம் சிரித்தார்; பதில் சொல்லவில்லை.

இதற்கிடையில் சாப்பிடவும் தொடங்கி விட்டார்.

பூவழகி சொன்னாள்: "நீங்கள் 'அகில'னின் 'பாவை விளக்'கைக் கட்டாயம் படிக்க வேண்டும்!"

"படிக்காவிட்டால் விடமாட்டீர் போலிருக்கிறதே?"

"என் சினேகிதி ஒருத்தி 'கல்கி'யில் வந்ததை எடுத்துக்கட்டி வைத்திருக்கிறாள். அதை இரவல் கேட்டிருக்கிறேன், உங்களுக்காக!"

"நன்றி... என் நண்பர்கள் சிலரும் அந்தக் கதையைப்பற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவர் அந்தக் கதையையே எனக்குச் சுருக்கிச் சொல்லிவிட்டார்!"

"அதை ஏன் கேட்டு வைத்தீர்கள்?... பிறகு படிக்கும் போது சுவை குறைந்து போகும்!"

"திருப்பித் திருப்பிப் படித்தாலும் சுவைக்கும் என்கிறார்களே!"

"ஓமோம். என்ன அருமையாக எழுதியிருக்கிறார்..."

"அதிலே கதாநாயகனுக்கு - அவன் பெயரென்ன?..."

"தணிகாசலம்"

"அந்தத் தணிகாசலத்திற்கு மூன்று நான்கு காதலிகளாமே?"

"கதையைப் படித்தீர்களானால் இப்படித் தணிகாசலத்தைக் கேலி செய்யத் தோன்றாது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எந்த ஒரு ஆண்பிள்ளையும்..."

"ஆண்பிள்ளைகளைப்பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கிறீரா..." - சிற்றம்பலம் சிரித்தார். அந்தச் சிரிப்பில் தெரிந்தது கேலியா, அசடா? அவர் தொடர்ந்து சொன்னார்: "அந்தப் பெண்களில் ஒருத்தி முக்கியமானவள் - ஒரு ரசிகையாமே?"

"ஓமோம், பாவம்..."

"அவளைப்பற்றி அந்த நண்பர் சொன்னபோது எனக்கு உம்முடைய நினைவுதான் வந்தது..." - இதைச் சொன்னபோது அந்தக் கதாநாயகன் - எழுத்தாளன் தணிகாசலமாகத் தம்மையே நினைத்துப் பார்த்தார் சிற்றம்பல. மறு நிமிஷம் 'சை!" என்று உள்ளத்தை உதறி அந்த நினைவைக் கலைத்தார்.

"சும்மா போங்கள். உங்களுக்குக் கேலிதான்" என்று பூவழகி முகத்தை நெளித்தாள். சிற்றம்பலம் சாப்பிட்டு முடிந்து தட்டில் கையைக் கழுவியவர், நிமிர்ந்து அவளைப் பார்த்தார். அவருக்கு எதிரே மேசையில் சாடையாகச் சாய்ந்துகொண்டு அவள் நின்ற அழகு..... கதை பேசும் அவளுடைய கண்கள்; பட்டுப்போன்ற அழகிய கன்னங்கள்; இனிய உதடுகள்.... இவை இவை அவரை என்ன செய்கின்றன...?

சிற்றம்பலம் சடாரென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு, வேறு ஏதாவது கதைக்கலாமென்று முயற்சித்தார். என்னவோ உடம்பெல்லாம் பதறுவதுபோன்ற ஒரு உணர்ச்சி. உடம்பல்ல, உள் மனந்தான் பதறிக் கொண்டிருந்தது...

சிற்றம்பலத்தின் இதயத்திலே இப்படி ஒரு புகைப்படலம் பொங்கி எழுந்து குமுறுவதைப்பற்றி ஒன்றும் அறியாத பூவழகி, தன்னுடைய தோற்றத்திலே இப்படித் திடீரென்று ஒரு 'கவர்ச்சி' சிற்றம்பலத்தின் கண்களுக்குத் தெரிவதைப்பற்றி ஒன்றும் அறியாத பூவழகி சொன்னாள்; "போன கிழமை நானும் தங்கமும் சேர்ந்து போட்டோ எடுத்தோமென்று சொன்னேனல்லவா? அந்தப் போட்டோ இன்றைக்கு வந்திருக்கிறது..."

"எங்கே பார்ப்போம்" என்று வாய் திறந்து கேட்கச் சிற்றம்பலத்தினால் முடியவில்லை. குரல் நடுங்குமோ என்ற பயம். பேசாமல் கையை நீட்டினார்.

பூவழகியும் படத்தை நீட்டினாள்.

சிற்றம்பலம் அதை வாங்கியபோது -

நிச்சயமாக அவர் வேண்டுமென்று செய்யவில்லை. கை பதறிக் கொண்டிருந்ததாலோ - தற்செயலாகவோ அவளுடைய விரல்களோடு அவருடைய விரல்கள் உராய்ந்தன.

அவர் கையை எடுக்கவில்லை.

அவளால் எடுக்க முடியவில்லை.

அவளுடைய முகத்தை அவர் பார்க்கவில்லை. குனிந்து அந்த மெல்லிய அழகிய விரல்களைப் பார்த்தார். அவற்றை மெதுவாகப் பற்றினார். குனிந்து முத்தமிட்டார்...

முத்தமிட்டுவிட்டு நிமிர்ந்தவர், பூவழகியின் முகத்தைச் சந்தித்தபோது -

ஐயோ!

உதயத் தாமரை இப்படி உருக்குலைந்துவிட்டதே! அந்த முகத்தில் அவர் கண்ட உணர்ச்சிகள்....

உணர்ச்சியா!

உணர்ச்சி எங்கேயிருந்தது? அதன் உயிரே போய் போய்விட்டதே!

அதைப் பார்க்கமுடியாமல் படாரென்று முகத்தை மேசைமேல் கைகளுக்கிடையில் புதைத்து விட்டார்.

பூவழகி -

அவளுடைய நிலை அசாதாரணமானது. இரத்த ஓட்டமே நின்றுவிட்டதுபோலத் தோன்றியது.

தானே தடவி வளர்த்த பசு என்றாவது ஒருநாள் புலியாகி மாறிக் கடித்துவிட முடியுமா?

என்ன இது!

அவருடைய பிடியிலிருந்து விடுபட்ட கையினால், அவருடைய கன்னத்தில் 'ஒன்று' வைக்க அவளால் முடியவில்லை. வைக்கக்கூடியவள்தான்; ஆனால் அவரிடமா!

'பேயே, பிசாசே!' என்று அவளால் ஏச முடியவில்லை. ஏசக்கூடியவள்தான்; ஆனால் அவரிடமா!

உணவு கொண்டு வந்த பாத்திரங்களை அவளுடைய கைகள் ஒன்று சேர்த்தன.

"நான் போய் வருகிறேன்" என்று அவளுடைய வாய் சொல்லிற்று.

அவருக்கு அது கேட்டதா?

அவள் போய்விட்டாள்.

* * *

"கதை எப்படி முடியப்போகிறதென்று எனக்குத் தெரியும்!" என்றாள் கயல்விழி. இதுவரை அவள் இந்தக் கதையை வாசித்துக் கொண்டிருந்தாள்.

"எப்படி?" என்று கேட்டான் இளங்கோ. அவதான் இதை எழுதிக்கொண்டிருந்தவன்.

"கு. ப. ரா. எழுதியிருக்கிறாரே 'மோகினி மயக்க'மோ என்னவோ என்று ஒரு சிறுகதை. அதிலே ஒரு பெண். அடுத்த வீட்டுப் பையன் ஒருவன்; அவளை மாமி மாமி என்று அழைக்கிறவன். ஒருநாள் அவள் ஊஞ்சலிலே ஒய்யாரமாக உட்கார்ந்திருக்க, அந்த இளைஞன் வந்து எதிரே இருந்த ரவி வர்மா படத்து மோஹினி போல அவள் இருக்கிறாளென்று சொல்ல, அவளுடைய உள்ளத்திலும் ஒரு சலனம் ஏற்பட்டு, 'நெற்றியில் பொட்டு வைத்திருக்கிறேனா பார்' என்று கேட்கிறாள். அவன் அவளை நெருங்கியபோது.... எப்படியோ திடீரென்று மாயை விடுபட்டு அவன் திரும்பி ஓடி விடுகிறான் - அந்த இருவரும் இனிமேல் ஒருவரை ஒருவர் சந்திக்கமாட்டார்கள்; சந்திக்க விரும்பமாட்டார்கள், என்ற தத்துவத்துடன் கதை முடிகிறது. உங்கள் கதைக்கும் வேறு கதி ஏது?"

"கொஞ்சம் பொறு. 'கு. ப. ரா' ஒரு கோணத்திலிருந்து பார்த்தார். வேறு கோணங்களும் இருக்கின்றன" என்று சொல்லிவிட்டு இளங்கோ எழுதத் தொடங்கினான்.

* * *

மேசைமீது விழுந்த சிற்றம்பலத்தின் தலை வெகுநேரம் அப்படியே கிடந்தது. அது கனத்து இருண்டு பெரும் பாரமாகத் தோன்றிற்று.

அவர்மீது அவரே கொண்ட வெறுப்பு 'ச்சீ'... என்று இரண்டு மூன்று தரம் வாய்வழியே வெடித்தது. ஒவ்வொரு தரமும் தலையைத்தூக்கி மறுபடியும் மேசைமீது கிடந்த கைகள்மீது மோதிக் கொண்டார்.

வெகு நேரத்துக்குப் பிறகு எழுந்து அறைக்குள்ளாகவே அங்குமிங்குமாக நடந்தார்; மீண்டும் அறைக்கு வந்தார். எங்கெங்கே நடந்து திரிந்தாரென்பது வருக்கு நினைவில்லை.

வேதனைக் குவியல்களிலிருந்து விடுபடுவதற்காக அவர் எங்கேயோ ஓடிக்கொண்டிருந்தார்; கால்கள் அங்குமிங்குமாகச் சுற்றிக் கொண்டிருந்தன.

'ஐயையோ, நானா இதைச் செய்தேன்! நானா? நான் தானா?..."

கைகள் தலைமயிரைப் பற்றி இழுத்துச் சிதறவிட்டிருந்தன. அழுது அழுது கண்கள் வீங்கிவிட்டன.

'செல்லக்கிளி இதை அறிந்தால் -

'அவள் என்னைத் தேவாதி தேவனாக நினைத்திருக்கிறாளே, நான் நாயினும் கேடாகி நிற்கிறேனே'

அவர் உடம்பு நடுங்கி நெளிந்தது.

பூவழகி -

'அவள் என்னை இலட்சிய மனிதனாக எண்ணியிருந்தாளே, ஆண் குலத்தையே அவள் நம்பாதபடி செய்து விட்டேனே!...

'ஏன் செய்தேன்?

'அவளுடைய பெண்மையைச் சூறையாட வேண்டுமென்ற வெறி எனக்கு ஏற்பட்டதா?

'இல்லை; ஒருபோதும் இல்லை!

'பின்?

'ஒரு அன்பான குழந்தையை - அழகான குழந்தையை அணைத்துக் கொள்கிறோமே, அப்படியா?

'அல்ல; அப்படியுமல்ல!

'பின்?

'என்னவோ ஒன்றும் புரியவில்லை. உள்ளுணர்ச்சி எப்படியிருந்தபோதிலும் வெளிப் பார்வைக்கு.....

'கடவுளே, நான் ஏன் அப்படி நடந்தேன்? நானா? நான்தானா...?'

நல்லவேளை; எப்படியோ கடைசியில் நித்திரை என்ற நிம்மதி உலகத்திலே சிற்றம்பலம் புகுந்துவிட்டார். இல்லா விட்டால் மூளை கலங்கியிருக்கும்!

* * *

அடுத்தநாட் காலை பூவழகி சாப்பாடு கொண்டுவந்தபோது -

சிற்றம்பலம் திகைத்துப் போனார். அவர் அவளைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

அவளுடைய முகத்தில் வழக்கமான - களங்கமற்ற அதே புன்சிரிப்பு.

சிற்றம்பலத்தினால் அவளுடைய முகத்தை எதிர்கொள்ள முடியவில்லை. கொஞ்சநேர மௌனத்திற்குப் பிறகு, எங்கேயோ பார்த்தபடி "என்னை மன்னித்து விட்டீரா?" என்று கேட்டார்.

"முதலில் என்னால் தாங்க முடியவில்லை. இரவு வெகுநேரம் வரை அதைப்பற்றியே மனத்தை அலட்டிக் கொண்டிருந்தேன். விடிந்து கண் விழித்தபோது மனமும் தெளிந்தது..."

நன்றிப் பெருக்காலோ என்னவோ சிற்றம்பலத்தின் கண்கள், கலங்கி நீரால் நிறைந்தன. தளதளத்த குரலில் அவர் சொன்னார்: "ஓமோம், அது நானல்ல... அந்தக் கயவனை அடுத்த கணமே கொன்று தீர்த்து விட்டேன். இனிமேல் எழுந்திருக்க முடியாதபடி!"

"நானும்... அந்த 'ஒரு கண'த்தை என்னுடைய வாழ்க்கை நிகழ்ச்சியிலிருந்து எடுத்துத் தார வீசிவிட்டேன்... விட்டுத் தள்ளுங்கள்; இனி அந்தப் பேச்சு வெண்டாம்; நினைக்கவும் வேண்டாம்."

சிற்றம்பலம் நிமிர்ந்து அவளுடைய முகத்தைப் பார்த்துச் சிரித்தார். ஒளியைக் கண்டதும் ஓடிவிடும் இருளைப்போல அவருடைய உள்ளத்தில் கவிந்திருந்த இருளெல்லாம் மறைந்து ஒரு நிறைவு ஏற்பட்டது.

அன்று அவர் தமது மனைவிக்கு எழுதிய கடிதத்தில் 'செல்லக்கிளி, இனி என்னால் உம்மைப் பிரிந்திருக்க முடியாது. அடுத்த ஞாயிற்றுக்கிழமை வருவேன்; புறப்பட்டுவர ஆயத்தமாக இரும்' என்று குறிப்பிட்டிருந்தார்.


+++++++++++++++

11. புதுயுகப் பெண்

அதப் பெரிய வீட்டின் மரண அமைதியைக் குலைத்துக்கொண்டு சுவர்க்கடிகாரம் ஓலமிட்டது. இரவு மணி பதினொன்று. சமையற்கார 'ஆயா'வும் வேலைக்காரப் பையனுங்கூடத் தூங்கி விட்டார்கள்.

கடிகாரத்தின் 'டிக் டிக்' ஓசை பெரிதாக கொதித்துப் பொங்கிய அந்த வீட்டு 'எஜமானி'யின் இதயத் துடிப்புப் போலக் கேட்டுக் கொண்டிருந்தது. தானேதான் அந்த வீட்டு 'எஜமானி' என்று நினைத்தபோது அந்த நிலையிலும் கண்மணிக்குச் சிரிப்பு வந்தது.

சிரிப்பா அது? இதயக் குமுறலில் வெடித்த குமிழி.

அந்த நகரத்திலேயே செல்வாக்கான, 'கௌரவமான' குடும்பங்களில் அவளுடைய குடும்பமும் ஒன்று. அவளுடைய கணவர் முகாந்திரம் நல்லநாதர் என்றால் - ஆகா, எவ்வளவு பெரியமனிதர்!

நல்லநாதர் செல்வத்திலும் செல்வாக்கிலும் பெரிய மனிதரல்லர்; வயதாலும் பெரிய மனிதர்தான். அவருக்கு வயது நாற்பத்தைந்து. ஆனால் ஏழைத் தமிழாசிரியரின் பெண்ணாகப் பிறந்த கண்மணியால் அவரோடு சேர்ந்து 'பெரிய மனுஷி'யாக வாழமுடியவில்லை. அந்தப் பேதைக்கு வயது இருபத்தொன்றுதான். இரண்டாந் தாரந்தான். அதனாலென்ன, எவ்வளவு பெரிய மனிதர்! எவ்வளவு கௌரவம், செல்வம்! .. அவளே முழு மனதோடு விரும்பித்தானே - அதாவது காதலித்து? - முகாந்திரத்தாரைக் கல்யாணஞ் செய்து கொண்டாள்!

இப்போது இரவு. இரவு பதினொரு மணிக்குப் பிறகு -

அந்த அருமைக் காதலனின் நல்வரவுக்காகக் காத்துக் கிடக்கிறாள் இந்தக் 'காதலி.'

ஆனா, இவளுடைய இதயம் ஏன் கொதிக்கிறது? இந்தப் பெரிய வீடு முழுவதும் இவளுடைய பெருமூச்சின் காற்று நிரம்பிப் புழுங்குவதேன்? மூன்றே வருட இல்வாழ்வுக்குள் முப்பது ஆண்டுகள் வாழ்ந்துவிட்டவள் போல இவள் சலித்துக் கொள்ளுவதேன்? ஏன், ஏன்?....

'நாற்பத்தைந்து வயதுக் கணவனுக்கு இருபத்தொரு வயது மனைவி என்றதும், அவளுடைய பெருமூச்சுக்கு இளம் கதாசிரியர்கள் வேறு காரணம் கற்பிக்கக் கூடும். கெம்பீர நடைபோடு அந்த அரபிக் குதிரையின் லகானை அவள் கணவனால் சரியாகப் பிடிக்க முடியவில்லை என்று சொல்வார்கள்; அவளுடைய உடபசியைத் தீர்க்க அவரால் முடியவில்லை என்று எழுதுவார்கள். உண்மை அப்படி அல்ல. உலகில் எத்தனை எத்தனையோ விதமான மனிதர்களைப் பார்த்தபிறகு இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. உண்மையில் அவள் உடல் பசித்து ஏங்கவில்லை. அந்தப் பசி எப்போதோ செத்துவிட்டது! அவள் முன்பு எதிர்பார்த்தது கணவனின் அன்பு; ஆதரவு. இப்போது அதைக்கூடக் கேட்கவில்லை. ஒரு சாதாரண மனிதத்தன்மையை மட்டுமே அவரிடம் வேண்டி நிற்கிறாள். அதுகூடக் கிடைக்காதபடியால்தான் அவளுடைய உள்ளம் குமைகிறது; கொதிக்கிறது; பெருமூச்சுப் பிறக்கிறது.

மூன்று வருடங்களுக்கு முன்னால் -

அப்போது கண்மணியும் இன்பக்கனவுகள் கண்டு கொண்டிருந்தவள்தான். அவள் நல்ல அழகி. அவளைச் சிறு குழந்தையாகவே விட்டுவிட்டு மறைந்துபோன தாயாரின் மறு உருவமென்று தகப்பனார் சொல்லக் கேட்டிருக்கிறாள். அவளுடைய அறிவும் பண்பும் இருக்கின்றனவே, அவற்றை அவள் தகப்பனார் - ஏரம்பு வாத்தியாயர்- நாளுக்கு நாள் மெல்ல மெல்ல அவளிடம் புகுத்தி வைத்திருந்தார்.

ஏரம்பு வாத்தியாரை 'ஏழைத் தமிழாசிரியர்' என்று நான் குறிப்பிட்டதற்காகத் தமிழாசிரியர்கள் மன்னிக்க வேண்டும். இவர் இக்காலத்து ஆசிரியரல்லர்; அவருடைய காலத்தில் ;சம்பள உயர்வுப் போராட்டம்' என்பது கதைகளில் கூட வந்ததில்லை. ஓய்வு நேரத்தில் 'பிசினஸ்' செய்கிற வித்தையையும் அவர் கற்றவரல்லர்; ஐந்து பரப்பு நிலத்தைக் கொத்திப் பார்த்திருக்கிறார். ஏதோ கொஞ்ச நெல் விளைந்ததெ தவிரப் பொன் விளையவில்லை. இந்த நிலையில் தராதரப் பத்திரமற்ற ஏரம்பு வாத்தியாரை 'ஏழைத் தமிழாசிரியர்' என்று சொல்லாமல் வேறென்ன செய்வது?

ஏரம்பு வெறும் பணத்தினால் ஏழையே தவிர, அறிவுச் செல்வத்திலே திளைத்தவர். அவருடைய அருமை மகள் கண்மணியும் அந்தச் செல்வக்கடலிலே நீச்சலடித்தாள். பாடசாலை மாணவர் சங்கத்திலே 'பேச்சு' என்ற நிகழ்ச்சியிலே பங்கு கொள்ளத் தொடங்கிய அவள், தன்னுடைய பதினேழாவது வயதிலே சமூகத் தொண்டுச் சங்கங்களின் ஆண்டு விழாக்களிலே சொற்பொழிவாற்றுமளவுக்கு முன்வந்துவிட்டாள். கூட்டங்களிலே அவள் வெறுமனே பாடம் ஒப்புவிப்பதில்லை. அவள் உள்ளத்திலே உண்மை ஒளி இருந்ததனாலே அவள் வாக்கினிலும் ஒளி பிறந்தது. பொது மக்கள், அறிஞர்கள், பெரியோர்களின் மனம் நிறைந்த பாராட்டுக்கள் அவளை மேலும் மேலும் உயர்த்தின.

அந்தக் காலத்திலே ஒருநாள் -

பாரதி விழாவிலே கண்மணி சொற்பொழிவாற்றினாள். முகாந்திரம் நல்லநாதர் அந்த விழாவுக்குத் தலைமை தாங்கினார். அன்று அவள்மீது அவர் வைத்த கண் -

அவளுடைய கழுத்தில் தாலியைக் கட்டுகிற வரையும் அவர் ஓயவேயில்லை!

நல்லநாதரின் விருப்பத்தைக் கேள்விப்பட்டதும் முதலில் கண்மணி திடுக்கிட்டாள். எரிச்சலும் வெறுப்பும்கூட வந்தன. பிறகு மெல்ல ஆறுதலாக யோசித்துப் பார்த்த போது, அவளுடைய குடும்பத்தின் வறுமை; தம்பி தங்கைகளின் எதிர்காலம்; ஏன், அவளுடைய எதிர்காலத்தையுமே சிந்தித்துப் பார்த்தபோது, தேடிவந்த சந்தர்ப்பத்தினை நழுவ விடுவது புத்திசாலித்தனமாகத் தோன்றவில்லை. அதோடு, நல்லநாதர் எவ்வளவு நல்லவராக, கண்ணியமானவராகத் தோன்றுகிறார். சமூக விழாக்களிலே பங்கு பற்றுகிறவர் - தலைமை தாங்குகிறவர் நிச்சயம் நல்லவராக, பரந்த மனப்பான்மையுள்ளவராக இருப்பாரென்றே அவள் நம்பினாள்.

பேதை! பிரமுகத்தனம் செய்யும் பெரிய மனிதருக்குள் வெறும் சுயநலம், சுயநலம், சுயநலமாகவே புழுத்துக் கிடப்பதை அவள் அறியவில்லை. அவள் புத்தகங்களைப் படித்திருந்தாள்; பரந்த உலகத்தைப் படிக்கவில்லை. படித்தவர்களையெல்லாம் பண்பாளர்களென்று நம்பினாள்! அவர்களுள்ளே வெறும் பதர்களும் கிடப்பதை அவள் அறிந்ததில்லை.

கண்மணியின் சம்மதம் கிடைத்ததும் வெகு விரைவிலேயே திருமணம் நடந்துவிட்டது. எதிர்ப்பதற்கு ஏரம்பு வாத்தியாரிடம் மனம் இருததே தவிர, சக்தி இல்லையே!

திருமணம் நடந்த பிறகு -

வெகு விரைவிலேயே கண்மணி உலகத்தையும் படித்துவிட்டாள்!

'சீவகாருண்ய'த்தைப் பற்றிக் கூட்டங்களிலே சொற்பொழிவாற்றுகிற முகாந்திரத்தார் சனிக்கிழமை முழுகுவதற்கு ஆயத்தம் செய்கிறபோது, 'அம்மே அம்மே!' என்று மரண ஓலமிடும் ஆட்டுக்கடாவின் கதறலைக் கேட்டாள்.

மதுவிலக்கின் அவசியத்தைப்பற்றிப் பத்திரிகைகளுக்கு அறிக்கைகள் விடுகிற 'பிரமுகர்', 'விறாண்டி' இல்லாமல் உயிர் வாழ முடியாத நிலையிலிருப்பதைக் கண்டாள்.

இவற்றுக்கு மேலாக -

'பெண்ணுரிமை' பற்றிப் பொதுக்கூட்டத்திலே குரலெழுப்புகிற பெரிய மனிதர், 'கற்பு நிலையென்று சொல்ல வந்தார் - இரு கட்சிக்கும் அஃதைப் பொதுவில் வைப்போம்' என்று கர்ச்சிக்கின்ற கனவான், சொந்த வாழ்க்கையிலே நடந்துகொள்ளும் கேவலத்தைப் பார்த்தபோது -

கண்மணி குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

அவள் அழகி; அதோடு இளமை அவளுக்கு மெருகிட்டிருந்தது.

நல்லநாதருக்கு அவளுடைய அழகும் இளமையும் ஏன் தெரியவில்லை? அவைகள் ஏன் அவரைக் கவரவில்லை? அவளைவிட முதியவர்களான, அவளைவிட அழகில் குறைந்தவர்களான பிற பெண்களை அவர் தேடி ஓடுவதேன்?

ஆம், அவள் அவர் 'மனைவி'!

வீட்டிலே இரும்புப் பெட்டிக்குள் கிடக்கும் அசல் வைரமாலையைவிட தெருவிலே போகிறவள் அணிந்திருக்கும் போலி முத்துமாலையைப் பார்த்து ஆசைப்படுகிற சில பெண்கள் உண்டல்லவா? அதே மாதிரித்தான் சில ஆண்களும். வீட்டிலே அழகான மயில் இருக்க, அதை விட்டு வீட்டுத் தெருவிலே போகிற வான்கோழியைப் பார்து வாயைப் பிளப்பார்கள்! திருவாளர் நல்லநாதரும் இதத் திருக் கூட்டத்தைச் சேர்ந்தவர்ரான்!

"டிங்!"

மணி பதினொன்றரை.

'இவருக்காக நான் ஏன் காத்திருக்க வேண்டும்? நான் ஒருத்தி இருக்கிறேன் - நானும் இரத்தமும் சதையும் உனத்ச்சியும் சேர்ந்த ஓர் உயிர்ப் பிண்டம் என்ற எண்ணம் சிறிதுகூட இல்லாமல் சுற்றித்திரிகிற இவருக்காக நான் ஏன் காத்திருக்க வேண்டும்?'

எழுந்து போய்ப் படுக்கையில் விழுந்தாள் கண்மணி.

வெறும் உடம்பைத்தான் படுக்க வைக்க முடிந்ததே தவிர, உள்ளத்தைப் படுக்கவைக்க முடியவில்லையே!

உணர்ச்சி குமுறிக் கொப்பளித்தது.

ஒரு விபரீதமான சிந்தனை.

'இவருக்காக நான் ஏன் காத்திருக்க வேண்டும்? இன்று மட்டுமல்ல, எப்போதுமே - எப்போதுமே ஏன் வாழ வேண்டும்?"

கண்மணி எழுந்தாள். நல்லநாதரின் மேசையண்டை போய் ஒரு கணம் தாமதித்தாள். பிறகு வெறிபிடித்தவள் போலச் சடாரென்று அதன் லாச்சிகளில் ஒன்றைத் திறந்து கையை விட்டு எதையோ எடுத்தாள்.

அது ஒரு கைத்துப்பாக்கி - 'றிவோல்வர்!"

தன் நெற்றிப் பொட்டிலே அதன் முனையை வைத்து அழுத்தினாள்.

மறு கணம்....

'கிர்-ர்-ர்...' என்ற மோட்டார்ச் சத்தம். - நல்லநாதர் வந்துவிட்டார்!

கண்மணி இந்த உலகத்துக்கு வந்துவிட்டாள். என்ன செய்கிறேனென்ற உணர்ச்சியில்லாமலே துப்பாக்கியை இருந்த இடத்தில் வைத்து லாச்சியை மூடினாள். பிறகு வாசலை நோக்கி நடந்தாள்.

வாசலில் -

நல்லநாதர் தனியாக வரவில்லை. எவளோ ஒரு 'சித்திராங்கி' அவரை நெருங்கி அணைத்துக் கொண்டு வந்தாள்!

கண்மணிக்கு உடம்பிலுள்ள இரத்தமெல்லாம் உறைந்துவிட்டது போன்ற உணர்ச்சி.

நிலைமை இவ்வளவுக்கு வந்துவிட்டதா?
அவளுடைய வீட்டுக்கு, அவளுடைய கணவன், அவளுடைய கண்ணெதிரில், மானைஇனமற்ற வேசையை அணைத்துக் கொண்டு வருவதா?

இதையும் பார்த்துக்கொண்டு 'கணவனே கண்கண்ட தெய்வம்' என்று இருந்துவிட வேண்டியதுதானா? 'பொறுமையே பெண்ணின் அணிகலன்' என்ற பொன்மொழி இந்த இடத்திலும் பொன் மொழிதானா?

சீ!

நல்லநாதரின் வெறியைத் துச்சமென்று சொல்லக் கூடியதாக கண்மணிக்கு வெறி வந்துவிட்டது!

இந்த யுகத்தில் 'நளாயினி'க்கு இடமில்லை.

கண்மணி மறைந்து, 'கண்ணகி' உதித்துவிட்டாள்!

"நில்லுங்கள்!"

அவள் போட்ட சத்தம் அந்த மயக்க நிலையிலும் நல்லநாதரின் நெஞ்சிலே அடித்தது. அந்தத் தேவடியாள் திடுக்கிட்டு அவருக்குப் பின்னால் இடந்தேடினாள்.

நல்லநாதர் கண்ணை நிமிர்த்திப் பார்த்தார்.

"நீயா? உனக்கு என்ன வந்தது? பேசாமல் போய்ப்படு!"

கண்மணியின் உதடுகளைப் பிய்த்துக்கொண்டு வார்த்தைகள் வெளிவருவது கஷ்டமாக இருந்தது. வெடித்து வெடித்துச் சொன்னாள்:

"நீ... நீங்கள்...... அவளைக்கொண்டு இங்கே நுளைய முடியாது!"

"த்தூ! .... சனியனே! ...... ஏன் குரைக்கிறாய்?.... என்ன செய்து விடுவாய்?" - 'அவ'ளையும் இழுத்துக் கொண்டு நல்லநாதர் முன்னுக்கு வந்தார். கண்மணி இரு கைகளையும் அகல விரித்து மறித்தாள்.

'பளார்!' என்று அவள் கன்னத்தில் ஒரு அடி!

ஒரு நிமிஷம் - அதற்குள் எவ்வளவோ உணர்ச்சிக் கொதிப்புகள்.

கண்மணி விடு விடென்று உள்ளே ஓடினாள்.

தோற்று விட்டாளா? பாரதியுகப் பெண், பழங்காலத்துக்குப் போய் விட்டாளா?.....

இல்லை. இதோ திரும்பி வருகிறாள். அவள் கையில் அந்தத்துப்பாக்கி! நல்லநாதரின் மார்புக்கு நேரே அதன் முனை!

நல்லநாதர் கெக்கெட்டம் போட்டுச் சிரித்தார்.

அந்த வெறி மயக்கத்தில்ம் கூட, 'தமிழ்நாட்டுப் பத்தினிப் பெண் கொண்ட கணவனையே சுட்டுக் கொல்வாளா?' என்ற - இரத்தத்தில் ஊறிப்போன - நம்பிக்கை அவருக்கு.

"சுடடி! சுடடி! .... உம்.... என்ன தாமதம்? .... சுடடி!..." அவர் மீண்டும் நகைத்துக்கொண்டே, கூட வந்தவளை நெருக்கமாக இழுத்து அணைத்து அவள் கன்னத்தில்...

டுமீல்!

ஆம், கண்மணி சுட்டுவிட்டாள்!

[கண்மணி! உன்னை என்னுடைய 'கதாநாயகி' என்று சொல்வதில் எவ்வளவு பெருமைப்படுகிறேன் தெரியுமா?

நீ சுட்டது நல்லநாதரை மட்டுமல்ல; 'கணவன் என்னதான் கொடுமை செய்தாலும்' அவன் மதத்தைத் தூக்கித் தலையில் வைத்துப் பூசை செய்ய வேண்டுமென்ற புராணக் கொடுமையையுமல்ல சுட்டுவிட்டாய்!]


++++++++++++++++

12. வாத்தியார் அழுதார்

பள்ளிக்கூடம் விடுகிற நேரம். நாலாம் வகுப்புக்குக் கடைசிப்பாடம் வரைதல். முருகேசு உபாத்தியாயர் கரும்பலகையில் ஒரு பெரிய பூசினிக்காயின் படம் வரைந்திருந்தார். அதைப்பார்த்து மாணவர்கள் கொப்பிகளில் வரைந்து கொண்டிருந்தார்கள்.

சுந்தரம் அந்த வகுப்பிலேயே முதலாம் பிள்ளை. அவனுடைய 'ஆட்டுப்புழுக்கைப்' பென்சிலாலே ஒருமாதிரி பூசினிக்காய்க்கு உருவம் போட்டு விட்டான். அதன் ஒரு பக்கம், மறுபக்கத்திலும் பார்க்கக் கொஞ்சம் 'வண்டி' வைத்துவிட்டாற் போலிருதது. அழித்துக் கீறலாமென்றால் அவனிடம் றப்பர் இல்லை. பக்கத்திலிருந்த 'தாமோரி'யிடம் இரவல் கேட்டான். தாமோரி, தன்னுடைய பெரிய 'ஆர்ட்டிஸ்ற் றோய்ங்' கொப்பியிலே புத்தம்புதிய வீனஸ் பென்சிலால், பூசினிக்காயென்று நினைத்துக் கொண்டு பனங்காய் மாதிரி ஏதோ ஒரு உருவம் போட்டுக் கொண்டிருந்தான். சுந்தரம் வடிவாகக் கீறியிருப்பதைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு எரிச்சலாக இருந்தது. ஒரு பக்கம் கொஞ்சம் வண்டியாக இருப்பதையும் சுந்தரம் அழித்துத் திருத்துவதை அவன் பொறுப்பானா? "போடா! என்னுடைய றப்பர் தேய்ஞ்சுபோம்; நான் தரமாட்டேன்" என்றான்.

சுந்தரம் விரலிலே சாடையாக எச்சியைத் தொட்டு பிழையான கோட்டை அழிக்க முயன்றான். இதுகூடப் பொறுக்கவில்லை தாமோரிக்கு. டக்கென்று எழுந்து, "வாத்தியார்!" என்று ஒரு பெரிய சத்தம் போட்டான்.

மத்தியான இலவச போசனத்தை அரசாங்கத்தார் நிறுத்தப் போவதைப் பற்றிப் பத்திரிகையிலே வாசித்துக் கொண்டிருந்த உபாத்தியாயர் தாமோரி போட்ட சத்தத்தில் நிமிர்ந்து "என்னது?" என்றார்.

"வாத்தியார், இங்கே சுந்தரம்....... எசிலைத் தொட்டுப் படத்தை அழிக்கிறான்!"

முருகேசு உபாத்தியாயர் அந்த ஊர் மனுசர்தான். அவருக்குப் பணக்கார வீட்டுப் பிள்ளையான தாமோரியையும் தெரியும்;தந்தையை இழந்தவுடன் ஏழைப் பிள்ளையாகிவிட்ட சுந்தரத்தையும் தெரியும். அதோடு இருவரின் குணத்தையும் நன்றாக அறிவார்.

"இங்கே வா சுந்தரம்!" என்றார்.

படபடக்கும் நெஞ்சோடும், அதைப் பிரதிபலிக்கும் முகத்தோடும், இயற்கையாகவே மெலிந்த உடம்போடும் சுந்தரம் வந்தான்.

"நீ எச்சில் தொட்டு அழித்தாயா?"

சுந்தரம் பதில் சொல்லுமுன்பே தாமோரி எழும்பி, "நான் பார்த்தேன் வாத்தியார்!" என்றான்.

"நீ இரடா அங்கே! உன்னை யாரடா கூப்பிட்டது?" என்று விழித்துப்பார்த்த உபாத்தியாயரின் கண்ணில் பொறி பறந்தது! அதைப் பார்த்ததும் சுந்தரத்தின் உடம்பு பதறத் தொடங்கிவிட்டது.

ஆனால் திரும்பிச் சுந்தரத்தைப் பார்த்த உபாத்தியாயரின் முகத்தில் கருணை தவழ்தது. "இங்கே வா, சுந்தரம்" என்று அவாஇப் பக்கத்தில் கூப்பிட்டு முதுகில் லேசாகத் தட்டினார். "நீ எச்சில் போட்டாயா?" என்றார்.

"என்னிடம் றப்பர் இல்லை வாத்தியார்; அம்மாவிடம் காசும் இல்லை!" என்ற சுந்தரத்தின் கண்களில் நீர் ந்றைந்து விட்டது.

"றப்பர் இல்லாவிட்டால் எச்சில் போடக்கூடாது..." என்றார் உபாத்தியாயர். ஆனால் வேறு என்ன செய்யச் சொல்லலாம் என்று யோசித்தவருக்கு ஒரு யோசனையும் ஓடவில்லை. குனிந்து பார்த்தவர் சுந்தரத்தினுடைய கால்சட்டைப் பையுக்குள்ளே என்னவோ மொத்தமாகத் தள்ளிக்கொண்டு கிடப்பதைக் கவனித்தார்; "கால்சட்டைப் பையுக்குள்ளே என்ன வைத்திருக்கிறாய்?"

சுந்தரம் பரிதாபமாக உபாத்தியாயரைப் பார்த்தான். அந்தப் பார்வை அவரை என்னவோ செய்தது. "ஏன் பயப்படுகிறாய்? நீ நல்ல பையன்; பிழையான காரியம் செய்ய மாட்டாய். பயப்படாமல் சொல்லு!" என்றார்.

சுந்தரம் அப்போதும் பதில் சொல்லவில்லை. தலையைக் குனிந்தான். பொல பொலவென்று நாலு சொட்டுக் கண்ணீர் அவன் காலடியில் விழுந்தது. உபாத்தியாயர் அவனை இன்னும் கிட்ட இழுத்து அவன் முதுகைத் தடவிக்கொடுத்து "அழாதே சுந்தரம், அதற்குள்ளே என்ன, புத்தகமா?" என்றார்.

சுந்தரம் இல்லையென்று தலையசைத்தான். பிறகு துடித்துக் கொண்டிருந்த உதடுகளைக் கஷ்டத்துடன் திறந்து மெதுவாக, "வாத்தியார்.... அது... அது... கொஞ்சப் பாண்!" என்றான்.

"ஏன், நீ சாப்பிடவில்லையா?.... பசிக்கவில்லையா?"

"கூப்பன் அரிசி விலை கூடிப்போச்சென்று அம்மா அரிசி வாங்கவில்லை. வீட்டிலே இருக்கிற தங்கச்சிக்கு சாப்பிடக் கொடுக்கத்தான் அதை வைத்திருக்கிறேன்...."

'நீ போ சுந்தரம்' என்று உபாத்தியாயர் வாயால் சொல்லவில்லை; அவரால் சொல்ல முடியவில்லை. 'அண்ணை பள்ளிக்கூடத்தால் வரும்போது பாண் கொண்டுவருவார் என்று, பசியோடு வழி பார்த்திருக்கும் அந்த மூன்று வயதுக் குழந்தையின் வயிறுமல்லவா இனிமேல் துடிக்கப்போகிறது!' சுந்தரத்தைப் போகும்படி தலையசைத்து விட்டு, உபாத்தியாயர் சால்வைத் தலைப்பினால் தமது கண்களை ஒற்றிக்கொண்டார்.

சுந்தரம்! ..... உன்னைப்போல எத்தனை சுந்தரங்கள்!

***