கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  நாளை இன்னொரு நாடு  
 

எம். கே. எம். ஷகீப்

 

நாளை இன்னொரு நாடு

மொழிபெயர்ப்புக் கவிதைகள்

எம். கே. எம். ஷகீப்




-----------------------------------

நாளை இன்னொரு நாடு
மொழிபெயர்ப்புக் கவிதைகள்


எம். கே. எம். ஷகீப்

பதிப்புரிமை:
ஆசிரியருக்கு

முதற்பதிப்பு:
செப்டம்பர் 1997

வெளியீடு:
நிகரி
4, ஜயரட்ன அவனியூ, கொழும்பு-5

கணணிப் பொறியமைப்பு:
எஸ். ரேவதி

அட்டை வடிவமைப்பு:
ஏ.எம். நஷ்மி

அச்சுப்பதிப்பு:
கார்த்திகேயன் பிரைவேட் லிமிட்டட்
501/2, காலி வீதி, கொழும்பு -06

விலை: 50/-

-----------------------------------



பெற்றோருக்குச் சமர்ப்பணம்

மீண்டும் ஒரு கவிதைத் தொகுதியுடன்
உங்களைச் சந்திப்பதில் 'நிகரி' மகிழ்ச்சியடைகிறது. "பிற நாட்டு
நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்"
என்றான் பாரதி. இங்கே சரிநிகர் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த நண்பர்
ஷகீப் மொழிபெயர்த்த கவிதைகள் தொகுப்பாகின்றன. இவற்றில்
பெரும்பாலான கவிதைகள் சரிநிகரில் அவ்வப்போது வெளியானவை.
ஈழத்தில் மொழிபெயர்ப்புத் துறையில் நீண்ட காலமாகவே
ஈடுபட்டிருக்கும் கே.கணேஷ் ஏற்கனவே சோவியத் கவிதைகள் உட்பட
பல்கேரிய, ஹங்கேரிய, உக்ரேனிய கவிஞர்களின் ஆறு மொழிபெயர்ப்புக்
கவிதைத் தொகுப்புக்களைத் தந்திருக்கிறார். சி.சிவசேகரம் மாசேதுங்
கவிதைகளை 1976 இல் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார்
.
இதற்கு முன்னரே 1960களில் முருகையன் ஷேக்ஸ்பியரின் சில சொனற்றுக்கள்
உட்பட ஜோண் டண் போன்றோரின் ஆங்கிலக் கவிதைகளை தமிழுக்குக்
கொண்டு வந்திருந்தார். அது 'ஒரு வரம்' என்ற தலைப்பில் வெளியாயிற்று.
1981இல் நுஹ்மானும் முருகையனும் மொழிபெயர்த்து வெளியிட்ட
பலஸ்தீனக் கவிதைகள் ஈழத்துக்கவிதையுலகில் ஏற்படுத்திய தாக்கம்
குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது. இவர்கள் தவிர அ. யோகராசா,
சோ.பத்மநாதன்,எம்.எச்.எம்.ஷம்ஸ்,பண்ணாமத்துக் கவிராயர்,
என். சண்முகலிங்கன் ஆகியோரும் பிற மொழிக் கவிதைகளைத் தமிழில்
கொண்டு வந்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களிள் அ. யேசுராசா,
சோ.பத்மநாபன், எம்.எச்.எம்.ஷம்ஸ் ஆகியோர் தவிர்ந்த மற்றையோர்
மொழிபெயர்த்த கவிதைகள் தொகுப்புக்களாக ஏற்கனவே வெளியாகியுள்ளன.
ஜெய்சங்கர், மதுபாஷினி போன்ற பலர் அண்மைக்காலமாக பிற மொழிக்
கவிதைகளைத் தமிழுக்குக் கொண்டு வருவதில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இம்மொழிபெயர்ப்புக்களில் பெருப்பாலானவை ஆங்கிலத்தினூடாகவே
தமிழுக்குக் கொண்டு வரப்பட்டவை. ஆயினும் எண்பதுகளிலிருந்து நமது
இளைஞர்கள் ஐரோப்பிய நாடுகளிற்கு புலம் பெயர ஆரம்பித்த பிறகு
ஆங்கிலம் வழியாக என்பதற்குச் சமாந்தரமாக நேரடியாகவே ஐரோப்பிய
மொழிகளிலிருந்தும் தமிழுக்கு படைப்புக்கள் வர ஆரம்பித்தன. இந்த
வகையில் பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழுக்குப் படைப்புக்களைக்
கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வரும் க.கலாமோகன் குறிப்பிடத்தக்கவர்.
கலாமோகன் பிரெஞ்சு மொழியிலும் கவிதைகள் எழுதி வருகிறார் என்பதும்,
அவருடைய பிரெஞ்சு மொழிக் கவிதைகளின் தொகுப்பொன்று 'நாளை' என்ற
தலைப்பில் ஏற்கனவே வெளியாகியிருப்பதும் இங்கு பதிவு செய்யப்பட
வேண்டியவொன்று. அண்மையில் காலமான கு.இராமச்சந்திரன்
மலையாளத்திலிருந்து தமிழுக்கு நேரடியாக கவிதைகளைக் கொண்டு வரும்
முயற்சியிலீடுபட்டிருந்தார். இத்தொகுப்பில் கூட ஷ்கீப் அவர்கள் அரபு
மொழியில் இருந்து நேரடியாகவே தமிழுக்குக் கொண்டு வந்த
கவிதைகளும் உள்ளடங்குகின்றன. இவை நமது சிந்தனை மரபையும்,
மொழியின் வீச்சையும் விரிபுபடுத்தும் என்பதில் ஐயம் இல்லை.
இத்தொகுப்பிலுள்ள கவிதைகளில் பெரும்பாலானவை யுத்த அகதிகள்,
ஒடுக்கப்படும் பெண்கள், ஒடுக்கப்படும் தேச மக்கள் ஆகியோரின் துயர்
பற்றியும், அவர்களின் விடுதலைக்கான வேட்கை பற்றியும் பேசுகின்றன.
'அரசியலும் கவிதையும் கொண்டிருக்கின்ற தவிர்க்க முடியாத பிணைப்பின்
வெளிப்பாடே இது' என்கிறார் ஷகீப். தொண்ணூறுகளில் கிழக்கிலிருந்து
அறிமுகமான முஸ்லிம் கவிஞர்களுள் ஒருவராக அடையாளம் காணப்பட்டவர்
ஷகீப். இவருடைய கவிதைகளுள் பெரும்பாலானவை சரிநிகரில் வெளியானவை.
தவிரவும், மூன்றாவது மனிதன், களம் போன்ற சஞ்சிகைகளிலிம் இவரது கவிதைகள்
பிரசுரமாகியுள்ளன. கவிதைகளோடு சிறுகதைகளையும் தமிழாக்குவதில்
இவர் ஈடுபட்டு வருகிறார். சரிநிகரிலும் வேறு பல இதழ்களிலும் அவை
பிரசுரமாகியுள்ளன. ஷகீப்பினுடைய இக்கவிதைகளை நிகரி தனது
இரண்டாவது வெளியீடாக வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறது. ஐரோப்பிய
மொழிகளில் இருந்தும், அரபு மொழியிலிருந்தும் தமிழுக்கு நேரடியாகவே
கவிதைகள் வர ஆரம்பித்து விட்டன. அயல் மொழியான
சிங்களத்திலிருந்து கவிதைகள் தொகுப்பாகத் தமிழுக்கு வரப்போவது எப்போது?

நன்றி
நிகரி
97.09.15



சொல்லியே ஆக வேண்டிய குறிப்புக்கள்

எனது முதலாவது நூல் மொழிபெயர்ப்புக் கவிதைகளின் தொகுதியாக
வருகின்றது. எனது முயற்சியினதும், வளர்ச்சியினதும் முழுமை
பெறாத ஒரு பிரதியாக இன்நூல் எனக்குப் படுகிறது. தமிழ் அல்லாத
பிற மொழிகளில் யாராவது கதைக்கிற போது மூக்கு வியர்க்கிற
நான் இவற்றை மொழி பெயர்க்கத் தகுதி பெற்றவனா என்றும்
என்னைக் கேட்டுக் கொள்ள வேண்டியுள்ளது. எனினும், நான் கற்ற
மொழிகளை வெறும் உரையாடல்களுக்கு அப்பால் ஓரளவுக்கேனும்
பிரயோசனப்படுத்தியிருக்கிறதாய் நண்பர்கள் என் மொழிபெயர்ப்புக்கள்
பற்றிக் கதைக்கிற போது அறிய முடிகிறது. இவ்விடத்தில் நான் என்
மொழிக் கல்வி உட்பட்ட கல்வி வாழ்க்கைக்கு பாதையமைத்த நலீமிய்யா
கலாபீடத்திற்கும், அதன் ஸ்தாபகருக்கும், பணிப்பாளருக்கும்,
ஆசிரியர்களுக்கும் கட்டாயம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இங்கேதான் அரபும் ஆங்கிலமும் கற்கும் வாய்ப்புக் கிடைத்தது.
இத்தொகுப்பிலுள்ள கவிதைகளை இம் மொழிகளிலிருந்தே நான் மொழி
பெயர்த்துள்ளேன். கற்கும் காலத்தில் உரிய அக்கறை காட்டாமையின்
துயரம் இம்மொழிகளில் நல்ல படைப்புக்களைப் பார்க்கும் போது
இப்போது வரிகிறது. எனினும் பின் வந்த காலங்களில் ஆங்கிலம்
கற்பதற்கான சூழல் ஏற்பட்டது. கலை இலக்கியப் பரிச்சயமும்
நண்பர்களும் அதற்கேற்ற பத்திரிகைத் தொழிலும் கிடைத்தது.
என் வயதுக்கும், வாசிப்பிற்கும் கிடைப்பிற்கும் ஏற்ப சுமார்
முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன்.
இவை பல்வேறு இதழ்களில் பிரசுரமாகியிருக்கின்றன. அரபு மொழி,
இஸ்லாமிய சூழல் தொடர்புகளின் காரணமாக பொதுவாகக் கிடைக்கப்
பெறாதவைகளையும் கவனத்தில் எடுத்திருக்கிறேன்.
மிக இளம் வயதினரது வெளிப்பாடுகளையும், புறமொதுக்காது
தமிழாக்கி உள்ளேன். இத்தொகுப்பில் எனக்கு நல்லதாகப் படுகிற - இன்னும்
நன்றாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் சில கவிதைகளை
மீள வாசிக்கும் போது தெரிகிறது - கவிதைகளை தெரிவு செய்து
தொகுத்திருக்கிறேன். ஈழத்து இலக்கியம் அரசியல் மயப்பட்டிருக்கிற அல்லது
அரசியலே இலக்கியமாய் ஆக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டிருக்கிற
இந்த வேளையில், ஏதோ ஒரு வகையில் இதில் உள்ள கவிதைகளும்
அரசியல் பேசுபவையாக/அரசியல் சார் கவிதைகளாக உள்ளன.
இது திட்டமிட்டுச் செய்யப்பட்டதல்ல. அரசியலும் கவிதையும்
கொண்டிருக்கிற தவிர்க்க முடியாத பிணைப்பின் பாற்பட்டதே இது.
இதன் நியாயப்பாடுகள் பேசப்படவேண்டியவை. அல்லது விமர்சிக்கப்பட
வேண்டியவை. ஈழம், பலஸ்தீன், பொஸ்னியா போன்று பல்வேறு
போராட்டங்களின் வெளிப்பாட்டுக் கவிதைகளும், சர்வதேசப் பிரச்சினையான
பெண்ணியம் சார் கவிதைகளும் என பல இத் தொகுப்பில் இடம்
பெற்றுள்ளன. களச்செயல் வீரர்களது உணர்வின் வெளிப்பாடுகளை
நான் கொண்டுவந்திருக்கிறேனா அல்லது கொச்சைப்படுத்தியிருக்கிறேனா
என எப்போதும் ஒரு உள்ளுணர்வு குறுகுறுத்துக் கொண்டே இருக்கிறது.
இருந்தும் தெரியப்படுத்தியிருக்கிறேன் என்ற திருப்தி எனக்கு
நம்பிக்கையூட்டுகிறது. "உனது கவிதைகளை விட உன் மொழிபெயர்ப்புக்
கவிதைகள் நன்றாயிருக்கிறது" என்று முகஸ்துதி இல்லாமல்
சொல்லுகின்ற நண்பர்களின் வார்த்தைகளைப் போல் இனியும்
எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. இது
தொடர்பான சகல பார்வைகளையும் உங்களுக்கே விட்டுவிடுகிறேன்.

இருதியாக, கட்டாயம் தெரிவிக்க வேண்டிய நன்றிகள் இவர்களுக்கு:
சிவக்குமார், றஷ்மி, ரேவதி உள்ளிட்ட சரிநிகர் நண்பர்கள், தம்பி ஷகீல்,,
நண்பர்கள் ஷபீக், நளீம், இம்தியாஸ், பாரதி, அப்பாஸ், நிஃ மதுல்லாஹ்,
கேசவன் இப்புத்தகத்தை அச்சிட்டுதவிய கார்த்திகேயன் நிறுவன
உரிமையாளர் குருபரன் மற்றும் எல்லா வகையிலும் என்னை
ஊக்குவிப்பவர்கள், விமர்சிப்பவர்கள் ஆலோசனை சொல்பவர்கள்,
கவிதைகளைப் பிரசுரித்தவர்கள், அச்சிட்டவர்கள்...
எல்லோரையும் விட...என்னைப் போல் ஒருவனுடன் பொறுமையுடன்
வாழ்ந்துகொண்டிருக்கும் நில்பாவுக்கும்.

எம்.கே.எம். ஷகீப்
1997-09-12

4, ஜெயரட்ன மாவத்தை,
திம்பிரிகஸ்யாய,
கொழும்பு -05

51, தக்கியா வீதி,
திருகோணமலை


"மொழி எனும் தடைக்கல் பொருட்பாடுகளைச் சிக்கலாக்குகிறது.
மொழி உண்மையிலேயே ஒரு முட்டுக்கட்டை தான். எந்த ஒரு மொழி
பெயர்ப்பும் விவாதத்துக்குரியவை என்பதை உணர்கிறேன்.
மொழிபெயர்ப்பு எப்போதும் ஓரளவு குறைபாடுடையதாக அல்லது
உண்மையில் இருந்து பிறழ்ந்ததாக இருக்கிறது. ஆனாலும்,
மொழிபெயர்ப்பு நடைபெறுவதை எவராலும் தடுக்க முடிந்ததில்லை.
கவிதையைப் பொறுத்த வரையில், அது மூலத்திற்கு அப்பாற்பட்டுச்
செல்கிறது. மொழித்தடைக்கற்களைத் தாண்டி விடுகிறது:
அது எந்த மொழியில் தோன்றியதோ அந்த மொழிக்கு அப்பாலும்
செய்திகளைக் கொண்டு செல்கிறது. இந்த ஆற்றப் இல்லையெனில்
கவிதையினால் உயிர் வாழ முடியாது.

மக்கள் எப்போதும் கவிதையை வரவேற்க வேண்டியுள்ளது:
அதனை ஒரு அன்பளிப்பாகப் பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
அதனை ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது என்பது உண்மையாகும்.
கவிதையை உருப்படியாக உருவாக்குவதில் குறைபாடுகள்
இருந்தாலும், கவிதையில் இன்றியமையாத, மாற்றமுடியாத
தன்மை ஒன்று உண்டு. அது தான் சொற்கள். கவிதையில் கூறப்பட்டுள்ள
சொற்கள் எக்காலத்திற்கும் கூறப்பட்டவை: அவற்றை ஒருபோதும் துடைத்தழிக்க
முடியாது. இவை சில சமயம் கலப்பட வடிவத்தில் நேயர்களைச்
சென்றடைந்தாலும் கூட இந்த உண்மை பொருந்தும்.

மொழிபெயர்ப்புப் பற்றி ஏதேதோ சொல்லப்பட்டாலும் அது பரந்த நோக்கில்
மனிதரின் செய்தித் தொடர்பு பற்றிக் கூறுவதாகும். மனிதனின் இயல்பிலேயே
கவிதை இருக்கிறது. அடையாளம் காணப்படுகிறது. கவிதையை மனிதன்
நாடுகிறான். மனிதனைக் கவிதை நாடுகிறது. அதாவது, மனித மனத்தின்
உள்ளார்ந்த பகுதியாக மொழிபெயர்ப்பு விளங்குகிறது."

-மாரியோ லூசி
இத்தாலியக் கவிஞர், மொழிபெயர்ப்பாளர்

-----------------------------------

page 1:
----------
என்னருந் தாய்நாடே
மூடுபனியுள்ளுறைந்து கிடக்கிறதிந்நிலம்

இப்பனி எங்கிருந்து வருகிறது?

அந்த அடர்ந்த மரங்களில்....
விரிசலாய்க் கிடக்கிற புல்வெளிகளில்...
கருமெனத் தெரிகிற பாறைகளில் இருந்தா
இக்குளிர்ப்பனி வருகிறது?
இது - உடனே நான்
அடையாளம் கண்டிருக்கக்கூடிய
என் தேசத்துப் பனியல்ல!

இப்பனி எங்கிருந்து வருகிறது?

எல்லாமிங்கு மாறிப்போகிறது...
பழமரங்களில் வரிசைகள் ஒழுங்கற்றும்
நீண்ட புல்வெளிகள் மிதந்து சென்றும்
எல்லாம் வேறு வடிவம் கொள்கின்றன!

வெற்றுப்பெருநிலமே விரிசலாய் எங்கும்
கண்ணில் படுகிறது.

இது - (அவர்களின்) பசியினைப் போக்காத
பெரும்வெளி

இந்தக் கல் நிறைந்த பாதைகள்
மீண்டும் மீண்டும் அழைக்கின்றனவென்னை,
இருந்தும்,
நட்புமிகு ஆத்தமாக்களும் சிலவேளைகளில்
என் துயரங்களைத் தழுவிச்
சுகப்படுத்துகின்றன.

விருந்தினர் எவரும்
தன் வீடேகவேண்டுமொருநாள்

எந்தப் பூமியை நான்
என் தாய் நாடென்பது அடுத்ததாய்....!?

பிலால் மம்பெட்(கிரீமியதாத்தாரியக் கவிஞன்)
ஆங்கிலத்தில்: Ravi Bugharaev


Page 2:
----------
சப்பாத்துக்களையும் காலுறைகளையும்
விற்றுக்கொண்டிருக்கிற பெண்ணல்ல நான்...
சுவரினுள்ளே உயிரோடு புதைத்தாயே
அந்த அவள்தான் நான்*
நான் குற்றமற்ற இளங்காற்றாய் மாறினேன்.
கற்களும்,சீமெந்தும் ஓசைகளைப் புதைக்காது
என்பதை நீ ஆரிந்திருக்கவில்லை....

மேலும் நான் யாரென்றால்....,
பழமைகளுக்குள்ளும், கனதியான
சடங்குகளுக்குள்ளும்
புதைத்தாயே.....அவளே தான்
வெளிச்சம் இருட்டுக்கு எப்போதும்
பயந்ததில்லை என்பதையும் நீ
அறிந்திருக்கவில்லை.

உதடுகளிலிருந்து மலர்களை எடுத்துவிட்டு
முட்களையும், விறகுச் சுள்ளிகளையும்
எவருக்குத் திருப்பிக் கொடுத்தாயோ
அவள்தான் நான்
பாவம்....நீ,
நறுமணங்களை கைது செய்ய முடியாது
என்பது உனக்குத் தெரிந்திருக்கவில்லை.

Page 3:
----------

கற்பெனும் பெயரால்
நீ வாங்கி விற்றவளும் நாந்தான்,
களிமண் சாடியில் மிதந்து செல்கிற
"சொஹ்னி ஒருபோதுமே இறக்கமாட்டாள்
என்பது
உனக்குத் தெரியாது.

உன் தலைக்குப் பாரமாயிருக்கிறதென்று
நீ யாரைக் கை(தட்டி) விட்டாயோ
அந்த.... அவள்தான் நான்.
"சிந்தனையை அடகுவைத்திருக்கும் ஒரு தேசம்
ஒருபோதுமே விழித்துக்கொள்வதில்லை."
என்பது கூட உனக்குத் தெரிந்திருக்கவில்லை.

என்னுடைய கற்பின் பெயராலும்
என்னுடைய ஒழுக்கத்தின் பெயராலும்....
இன்னும்....எனது விசுவாசம்.
தாய்மைத்துவ அன்பு
என்கிற பெயர்களாலும்
என்னை நீ வியாபாரப்படுத்தினாய்....
ஆனால்...இனியும் நான் அவளல்ல-
இது-
உதட்டிலும், மனத்திலும் பூக்கள் மலர்கிற நேரம்
சப்பாத்தும், காலுறையும் விற்கிறவளோ....
அரையாடையுடுத்து விளம்பரத்தில்
நிற்கிறவளுமோ அல்ல நான் இனியும்.

கிஷ்வர் நஹீட்(ஆங்கிலம்)

* பேரரசர் ஜஹாங்கீர் இளவரசராயிருந்த போது, அவருடன் காதல் தொடர்பு கொண்டமைக்காக ஒர் அழகான விபச்சாரி உயிருடன் புதைக்கப்பட்டாள். அதனையே இங்கு கவிஞர் குறிப்பிடுகின்றார்.

* சொஹ்னி ஒரு சோகக் காதல் கதையொன்றின் கதாநாயகி. தனது காதலனை காண்பதற்காக பெரிய மண்சாடியொன்றில் ஆற்றைக் கடக்க முயன்று மூழ்கிப்போனதாகவும், அவளின் நல்ல மண்சாடியை எடுத்து விட்டு பதிலாக கூடாத மண்சாடியை வைத்து விட்டதாலேயே அவள் மூழ்க நேர்ந்ததென்றும் அக்கதையில் குறிப்பிடப்படுகின்றது.
-1996

Page 4:
----------

எங்களிடம்
ஒரு தாய் நாடு
இருந்தது

என் தாய் நாட்டில்
ஒரு சிறுபிள்ளையாய்
நான் இருந்தபோது,
மலைச்சிகரத்தில்
மலர்ந்திருக்கும்
ஓர் அழகான
பூவப்போலிருந்தேன்.

page 5:
----------
அப்போது எனக்கு
ஒரு வீடு இருந்தது:
தாயும், தந்தையும் இருந்தனர்.
உற்றார், உறவினர்கள்
இருந்தனர்:
நண்பர்கள் இன்னும்
இன்னுமானவர்கள்
எல்லாம் இருந்தனர்.

தாயகத்தில்
நான் சிறுபிள்ளையாய் இருக்கையில்
இவர்களெள்ளாம் இருந்தனர்.

'என்ன பாவம் செய்தேன்' என
தெரியாத நிலையில்
நான் துரத்தப்பட்டேன்,
எனக்குத் தெரிந்ததெல்லாம்...
அந்தப் பயங்கரமான நாளில்
மேகத்தைப் போலிருந்த
ஒரு கூடாடத்திற்குள்...
அகதிகளுடன்
ஒன்றுமறியாத புதியனவாய்
இருந்ததுதான்!

அந்நிய ஆக்கிரமிப்பாளர்களின்
அழிவுக் குண்டுகள்
என் தந்தையையும்
தொடர்ந்து
என் தாயையும்
அநியாகமாகக் கொன்றன.

அவர்கள், என் மாமனை,
எஞ்சிய என் சோதரர்களை
எல்லாம் கொன்றார்கள்,

page 6:
----------

நான் அதிர்ந்து போனேன்,
என் கண்ணீர் கூட இறந்து போனது,
என்னைத் தாங்கும் கால்கள்
வழிதெரியாது நிலைத்து
நின்றன.

அவர்கள் என் அனைவரையும்
கொன்றார்கள்!
ஒரு தேசம் சோபையிழந்தது
அவர்களுக்குப்
புனிதமாய்ப்பட
பாதம் பதித்து
முன்னேறிச்
சென்றார்கள்.
நாங்கள்
ஆட்டுமந்தைகளைப் போல்
அலைந்து திரிந்தோம்!

அனைத்தும் நடந்தேறிய பின்
லட்சக்கணக்கான எங்களின்
விழிகள் தூக்கத்தைத் துறந்தன.

"நான் ஏன் அந்நியமானோம்?'
என
"அவளை"ப் போல்
இன்னும் பலருக்கு
இன்னும் தெரியாது.
"ஏன் நாம்
அந்நியர்களானோம்....?"!
...ஆயிரக்கணக்கான
"ஏன்" கள்
என்னிதயத்தை எரித்துக்
கொண்டிருக்கின்றன!

எப்படி நாம் அலைந்து
திரிந்தோம்!
ஏன் நாம் அகதிகளானோம்
என்பதெல்லாம்
எனக்கே தெரியுமா!? -அது
எனக்கே ஞாபகமா!?

page 7:
----------
நாங்கள் தான்
அனைவரும் பார்த்திருக்க
ஆடுகளைப் போல்
விரட்டப்பட்டவர்கள்!

அதிகார சதிகாரர்களுக்கு
அவர்கள் என் வீட்டைக்
கொடுத்தனர்.
பின்பு, அவர்கள்....
என்னைப் போன்ற
சிறுவர்களை
அழுக்கு நிறைந்த கூட்டுக்குள்
தூக்கிப்போட்டனர்.

அந்த சோகமிகு நாள்
எனக்கு ஞாபகமா....!?
எங்கள் பாதைகளை
இரத்தச் சமுத்திரங்கள்
நிறைத்துவிட்ட....,
நாங்கள்,
ஆடு மாடுகளைப் போல்
அலைந்து திரிந்த....
நாங்கள் அகதிகளாய் மாறிய....
அந்த சோகமிகு நாள்
எனக்கே ஞாபகமா......!?

காயப்பட்ட ஒவ்வோர்
ஆத்மாவும்
வினைவிக் கொள்கிறது,
"நாம் ஏன் அந்நியரானோம்....!?
"நமக்கேன் இந்த வாழ்வு....!?"

முஹம்மத் ஸாலிஹ் யூனிஸ்(ஆங்கிலம்)


page 8:
----------

எல்லா இருப்பிடமும்
சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டு
நெருப்பிடப்பட்டுப் போனபின்
பொஸ்னியாவில் இப்போது மீதமிருப்பது
சிறு சிறு தடிகளாலான இருப்பிடங்களே....
உயிரினங்கள் கூட
செயலற்று மரத்துப் போயின..

எல்லாம் அழிந்து போயின....

இரவுணவுக்காய் இப்போது எஞ்சியிருப்பது
பழைய சப்பாத்துக்களும், நாடாக்களுமே...
இலைகளும், புற்களும் கூட இரவுணவாகிப்
போகலாம்.
எங்களிடமிருந்த உணவுகளெல்லாம்
'சேர்பியர்' களுக்கும் 'குரோஷியர்'களுக்கும்
விநியோகிக்கப்பட்டுவிட்டன.
இயேசுவைப் பின்பற்றுவதாய்ச் சொன்ன
கிரேக்க பழமைவாதிகளும்,
கத்தோலிக்கர்களுமே
அவ்வாறு செய்தனர்.
அவர்களின் இயேசு சொல்லியிருக்கிறார்:
"நீங்கள் என்னிடம் வரவிரும்பினால்
சிறியவர்களுக்கு இரக்கம் காட்டுங்கள்.."

பொஸ்னியாவில் எல்லோரும்
காகித மனிதர்களாய் மாறிப்போனார்கள்.
பழைய "காட்போட்"டாய் கிழவர்களும்
"டொய்லெட் பேப்பராய்" பெண்களும்
விளக்கொளியில் தூக்கிப்பிடித்து
துடிக்கும் இதயத்தை

page 9:
-----------

பார்க்கமுடியுமான
மெல்லிய 'டிஷு'வாய் சிறுவர்களும்...
இப்படி எல்லாரும் இப்போது
காகித மலர்களாய் எஞ்சிப் போனார்கள்.

உண்மையான் பொஸ்னியமக்கள்
பழுதான உருளைக்கிழங்கைப்போல்
வெட்ட வெளியில் கிடக்கிறார்கள்.
அவர்களின் ஓசைகள்
பள்ளியின் தொழுகைகளில்
நீடிக்காது போலிருக்கிறது....
அவரவர் சோலிகளில், சந்தையில்,
வியாபாரஸ்தலங்களில்
அவர்களை இனிமேல்
காணக்கிடைக்காது போலிருக்கிறது.
எதிரிகளுக்கும் கருணைகாட்டிய
இறைதூதர் முஹம்மதை
ஞாபகப்படுத்திக் கொண்டிருப்பவர்களாய்
அவர்களைப் பார்க்க முடியாமல்
போய் விடும் போல் தெரிகிறது.

தொலைக்காட்சித் திரைகளில்
தெரிகிற
ஒளியும், நிழலுமாய்ப் போன்ற
மக்கள்தான் இங்கிருக்கிறார்கள்.
அவர்களின் இதயங்கள்
பழைய விளக்காய்
சிமிட்டிக் கொண்டிருக்கின்றன.

இருப்பிடங்கள், உயிரினங்கள்
எல்லாமே
மெளனித்து...சடமாய்....

உலகமே அவர்களை
அவதானித்துக் கொண்டிருக்கும் போதே
அவர்களின் வாழ்வு
முடிந்து கொண்டிருக்கிறது.
சுவரில் தெரியும் நிழலாய்
நகர்ந்து கொண்டிருக்கிறது.

டானியல் மூர்(ஆங்கிலம்)

page 10:
-----------

மலைகள்
இப்போது
நகர்கின்றன

மலை ஒரு நாள் நகரப்போகிறது என்று
நான் சொன்னேன்
மற்றவர்களுக்குச் சந்தேகம்....
ஓரிரு நிமிடங்கள் தான் மலை உறங்குகிறது
என்றும் சொன்னேன்.
முன்னர்
எல்லா மலைகளும்
நெருப்பில்(நெருப்போடு) நகர்ந்தன(வாம்)
அதைக்கூட நீங்கள் நம்பமாட்டீர்கள்,
மனிதர்களே....இதை மாத்திரம் நம்புங்கள்
உறங்கிக் கொண்டிருக்கும்
பெண்கள் அனைவரும்
இனி
விழித்தெZஉந்து, புறப்படுவார்கள்

AKEKO YOSANO(சீனம்)


page 11:
-----------

சந்தோஷச்
சந்திப்புக்கள்

பலமுறை நான் உன்னை
கனவுகளில் கண்டேன்
ஆனந்தக் கண்ணீரில்
என் கண்கள்
பலமுறை நனைந்தும் இருக்கின்றன

இப்போது
பெரிய பெரிய காட்டுவிலங்குகளெல்லாம்
விலகியோடி விட்டன,
இருண்ட மேகங்களும் விலகி
வெளுத்தாயிற்று...

எங்களுடைய செஞ்சங்கக் கொடி
உயரப்பறந்து கொண்டிருக்கின்றது

நாம் எம் தவறுகளை
மீளாய்வு செய்ய வேண்டும்.
எமது தாயகத்திற்கு
ஓர் ஒழுங்கைக் கொண்டுவர வேண்டும்.

(அவளது) உணர்வுகளையெல்லாம்
உன்னிடம் கொட்டிவிட்ட
அந்த, செந்நிறமுடியுடைய
உனது அவளைப் பார்த்துச் சிரிக்காதே!

உனது மரணம் வீணாகிப் போகவில்லை
நீ தான் எனது
நிலையான மூச்சு...
எப்போது
எம் தேசத்தின் திட்டங்கள் யாவும்
முழுநிறைவு பெறுகிறதோ,
அப்போது நாம்
கனவுகளில் சந்தித்து
எம் வெற்றீயைக் கொண்டாடுவோம்!

Liu Hsin-Wu(சீனம்)
ஆங்கிலத்தில் Chen Yen-ning

Page 12:
------------

"ஸ்பொன்ச்"

பெண்ணே...
நீயோர் உறிஞ்சுபொருள்...
உனது கணவனின் பாவங்களை,
உனது மகனின் எடுத்தெறிந்ததான
வாழ்க்கையை....
உனது மாமனாரின்
கொழுந்து விட்டெரிகிறதான
கணைகளையெல்லாம்
நீ உறிஞ்சிக் கொண்டிருக்கிறாய்,
குறைவாக உன்னால் எடுக்க முடிந்ததான
நிலைகளில் கூட,
நீ...மொத்தமாய், எல்லாவற்றையும்
உறிஞ்சி எடுத்துவிடுகிறாய்.

தனிமைப்பட்ட இரவின்
தாமதித்த வேளைகளிலும்....
அதிவிடிகாலையின்
ஆரவாரமற்ற பொழுதுகளிலும்...
உறிஞ்சு பொருளின்
சொட்டு சொட்டாய் வடிகிற
சத்தத்தை நான் கேட்கிறேன்....
நீ பாத்திரங்கள் கழுவிக்கொண்டிருக்கிறாய்....
அவற்றை அலம்பிக் கழுவி முடிக்கிற போது
நீ யாராகவுமே எழும்புவதில்லை....
மொத்தத்தில் யாராகவுமே நீ இல்லை......

பெண்ணே....
நீயோர் உறிஞ்சுபொருள்....
எனினும்...நீ அவ்வாறிருக்க வேண்டிய
எந்தத் தேவையுமே உனக்கில்லை

மேனகா கல்யாணரத்தின டி சில்வா( ஆங்கிலம்)

page 13:
-----------


மழலையாய்
மழலைகளுக்கு...

என்னை விட்டுவிடுங்கள்,
என் பாடல்களை
உங்களுக்குப் பாடிக்காட்டுகிறேன்.
நான் விரும்பும் வார்த்தைகளை
எழுத விடுங்கள்.
என் விலா எலும்புகளுக்கிடையே...
தென்றலைப் போல் மிருதுவான
என் இதயமும்
கைதியான என் நேசமும்......

என்னை விட்டு விடுங்கள்
தோட்டத்துப் புற்களுடன்
நடனமாட வேண்டும்!
இரவு எனும் ஏட்டில்
சூரியனை வரைய வேண்டும்:
அது-
உறங்கிப் போன மெழுகுவர்த்திகளை
எழுப்பிவிடலாம்!

page 14:
-----------

என்னை விட்டு விடுங்கள்,
நான் விரும்பியவாறு இருக்க வேண்டும்,
ஒளியேற்ற வேண்டும்!
மரங்களுக்கிடையே.....,
காற்றின் கைகளுக்கிடையே....,
சிறகடித்துப் பறக்கவிரும்பும் என்னை
விட்டு விடுங்கள்!

நாளை,
விருடமாகப் போகும் விதைகளே...,
பிஞ்சு நெஞ்சங்களே.....
மெளனத்தைக் கலைக்கும்,
உங்கள் சலங்கைச் சங்கீதச் சிரிப்பை
நான் விரும்புகிறேன்....
கண்ணின் கருமையில் வளரும்.....,
வெறுமையைப் பாடல்களால் நிரப்பும்
உங்களின் அந்தச் சிரிப்புகளை
நான் மிகவும் விரும்புகிறேன்.

ஒரு வாளாக.....,ஒரு கோடரியாக....
எங்களைப் பாதுகாக்கும்,
ஒரு நெருப்புச் சாட்டையாக
எப்போதும் நீங்கள் இருக்க வேண்டும்.

விலங்குகள் இறுக்கினாலும்
தடைகள் குறுக்கிடினும்
சத்தியத்தைப் பேசுகின்ற
உயர் நூலாக
நீங்கள் இருக்க வேண்டும்.
மல்லிகைத் தோட்டமாக....,
தீங்குகளை, இழிவுகளை விட்டும்
நீங்கியவர்களாக....,
சுதந்திரமான சிறுவர்களாக, சிறுமிகளாக
நீங்கள் இருக்க வேண்டும் என
நான் விரும்புகிறேன்

ஜமாலுல் கஸாஸ்(அரபு)


Page 15:
-----------
'மரணமென்பது
வாழ்க்கையைப் போன்று
பெறுமதியானது அல்ல'
என்பதை
இந்த உலகத்தாருக்குச் சொல்லிக் கொடுக்க
என்னால் எழுந்திருக்க முடியவில்லை
அட்மிரா......

Page 16:
------------

அன்பு என்பதும்
வாழ்க்கையைப் போன்று
பெறுமதியானதே என்பதையும்
இந்த உலகத்தாருக்குச்
சொல்லிக் கொடுக்க வேண்டியுள்ளது
எனினும்,
அதைச் சொல்லக்கூட
என்னால் எழுந்திருக்க முடியாதுள்ளது
பொஸ்கோ....

மரணிப்பது
எமது மூச்சல்ல:
மனிதத்தின் அன்பெனும்
உயிர்த்துடிப்பே

நாம் இழந்தது எம்மையல்ல
ஒரே நிறத்து இரத்தமுடைய
முழு மனித இனத்தினது
இழப்புத்தான் நாங்கள்....
நாம் இன்னுமொரு மூச்சுவிட்டு
இந்த உலகத்தாருக்கு
அன்பையும் சொல்லி....,
இதையும் சொல்லுவோம்....
"இது-சரஜிவோ நகர் அல்ல,
'விர்பானா'வில் இருக்கும்
எமது கல்லறைகள்..."

சரத் ஸாந்த ஜயகொட(சிங்களம்)
சரஜிவோ நகரிலிருந்து யுத்தத்தின் கொடுமை தாளாது தப்பியோடிய அட்மிரா-பொஸ்கோ என்ற இளம் காதலர்களை எதிரிகளது துப்பாக்கிகள் கொன்றன. "விர்பனா" என்ற இடத்தில் அவர்கள் ஒருவரை ஒருவர் அணைத்தவாறே காவியமாகிப் போனார்கள். அவர்களது நினைவாக எழுதப்பட்டதே இக்கவிதை.

Page 17:
------------

நம்பிக்கை

தளம்பிக் கொண்டிருக்கிற
சிந்தனைகளோடு
உட்கார்ந்திருக்கிறேன்.
என் பார்வைக்குள் சிறைப்பட்டதை
அவதானிக்கிறேன்.
மேகங்கள் மங்கி மறைகின்றன
இரவு
தன் நிழற்திரையை அனுப்பிக்
கொண்டிருக்கின்றது.

சமாதானம் அல்லது அமைதி பற்றிய
சிறியதொரு நம்பிக்கை
என் மனதை அமைதிப்படுத்துகிறது
என் துன்ப துயரங்களையெல்லாம்
அப்புறப்படுத்திவிட்டு
ஒரு சந்தோஷ உணர்வு
என்னுள் மின்னிப் பளிச்சிடுகிறது.

Page 18:
------------
தனிமைப்பட்டதும், அமைதியானதுமான
சிறுநம்பிக்கை
எல்லாவற்றையும் கொண்டு வருகிறது
அன்பு, மகிழ்ச்சி உள்ளார்ந்த நிறைவு
இப்படி..... எல்லாவற்றையும்
எனது சிறு நம்பிக்கை ஒன்றாகக் கொண்டு
தருகிறது.

என் வெற்றுக் கண்களால்
பார்க்கிறேன்....
கண் சிமிட்டும் மந்திர நட்சத்திரங்கள்
வானத்தை நிரப்பியிருக்கின்றன....
அவைகளின் இருப்பின் இரகசியத்தை
தெரிந்திருக்கிற
ஏகமான அவனின் இருப்பின்
சாட்சியம்
மின்னிப் பளிச்சிடுகின்றது....
அவன்(எங்களை) அவதானிக்கிறான்.

சமாதானம் அமைதி பற்றியதும்,
யுத்த ஆயுதங்களின் நிறுத்தம்
பற்றியதும்....
அன்பினதும், நட்பினதும்
அதிகரிப்புப் பற்றியதுமான
ஒரு சிறிய, தனிமைப்பட்ட நம்பிக்கை
என்னுள்....
ஆனாலும்....
தூக்கத்துக்கு இதமான கடுங்குளிர்
என்னை அசைத்தெழுப்பி
வெறுமைப் படுத்துகிறது
மனது குழம்பிச் சுழல்கிறது
நான் அழுகிறேன்
அது என்னை மூழ்கடிக்கிறது.....

மீண்டும்
அமைதி, சமாதானம் பற்றியதான
தனிமைப்பட்ட சிறு நம்பிக்கை....
இறைவனது படைப்புக்கள்
நறுமணமுள்ள சுத்தமான காற்றை
நுகரட்டுமாக....

page 19:
-----------

வெறுக்கத்தக்க சிந்தனையொன்று
என் ஆத்மாவை, மனச்சோர்விலும்,
இருட்டிலும் பொத்தித்து வைத்திருக்கிறது.
விதியெனும் கடலுக்குள்
இவ்வுலகம் எப்படி மூழ்கிக்
கொண்டிருக்கிறது?
என்று சிந்திக்கிறேன்
சுழலும் பட்டுப்பூச்சிக் கூட்டில்
பட்டன தொற்றிக் கொள்வதாய்
....சிந்தனை....!

அமைதி, சமாதானம் பற்றிய
தனித்த நம்பிக்கை....இன்னும்,
என் அனைத்துச் சகோதர
சகோதரிகளும்
கவலைகளிலிருந்து விடுபடுவார்கள் என்ற
நம்பிக்கை

இன்னுமே பிறக்காத
குழந்தைகளுக்காகவும்,
அழுது கொண்டிருக்கிற மழலைகளுக்காகவும்,
வறுமையிலும், விரக்தியிலும்
சிக்குண்டிருக்கிற
இளைஞர்களுக்காகவும்....
அமைதியிலும், சமாதானத்திலும்
ஆசை வைக்கிறேன்.
வயோதிபர்கள் வேதனைகளிலுருந்து
விடுபடுவார்கள் என்றூம் நான்
நம்புகின்றேன்....
அனைத்து மனிதர்களினதும்
படைப்புக்களினதும்
ஒற்றூமை உள அமைதி,
சந்தோஷத்திற்காக நான்
அமைதியிலும், சமாதானத்திலும்
மேலும்........மேலும்
நம்பிக்கை வைக்கிறேன்.

சமாதானம், அமைதி பற்றியதான
சிறிதொரு நம்பிக்கை
இன்னும்...என்னுள்.......

நஹ்ழா திராணி(ஆங்கிலம்-அவுஸ்திரேலியா)

Page 20:
------------

அச்சம்
என்பதில்லையே.....

இருட்போர்வை
என்னை மூடுகிறது....
என்றாலும்
நான் அதற்குப் பயந்தவனல்ல....

இருட்டு
அது....சுரங்கக் குழியைப்
போல
பயங்கரமாய் இருந்தாலும்
நான் அச்சமற்றவன்

Page 21:
-----------

இறைவனுக்கு,
என் நன்றிகள்....!
எந்த இறைவன்
தோற்கடிக்கவும்
பயமுறுத்தவும் முடியாத
ஆத்மாவைத் தந்தானோ
அந்த இறைவனுக்கு
என் நன்றிகள்

சில நிகழ்வுகளின்
பயங்கரப் பிடிகளுக்குள்
சிக்கியிருக்கின்றேன்.
அந்நேரங்களில்.....
பயத்தால் சத்தமிட்டதோ
அதிர்ச்சியால்
தயங்கியதோ கிடையாது.

குண்டாந்தடிகள் பொழிவித்த
ரத்தமழையில்
என் தலை நனைந்திருக்கிறது
ஆனாலும்....அது
எவருக்கும் தலைகுனிந்து
வணங்கியதில்லை

கடும் கோபங்களும்
கண்ணீர்க் கோலங்களும்
என்னைப் பயமுறுத்துகின்றன
அவ்வாறு
நிழலாய்த் தொடரும்
பயங்கரங்களும்
வருடமாய்த் தொடரும்
அச்சுறுத்தல்களும்
என்னை அச்சமற்றவனாகக்
காண்கின்றன.
தொடர்ந்தும் காணப்போகின்றன.

வில்லியம் ஏனெஸ்ட் ஹென்லி(ஆங்கிலம்)
-1992



Page 22:
-----------
ஆத்மானந்தம்...

உயர்ந்த மலைச் சாரல்களில்
பூத்திருக்கும்
வாசனை மலர்களுடன்
கைகுலுக்கு

வானத்தில் பாடித்திரியும்
பறவைகளுடன் தோழமை கொள்.
அதிகாலைச் சூரியனைப் போல்

Page 23:
-----------

ஒளிவிடு
மலர்த் தோட்டத்து அழகைப் போலும்
மலரிதழில் தூங்கும் பனியைப் போலும்
புன்னகை செய்.

உனை மூடும் இருளைப் பாராதே
உனக்கு மேலே ஒளிர்கின்ற
நட்சத்திரங்களைப் பார்.

உன்னைச் சூழ
நீ புரிந்து கொள்ளாத
எத்தனையோ ஒளி:
அர்த்தங்களை அறியாத
எத்தனையோ அழகுகள்:
உலகத்தை அணைத்துக்கொள்
ஒவ்வொரு இயற்கையின்
ரகசியங்களும் உன்னில்
சந்தித்துக் கொள்ளக் காண்பாய்


ஆத்மா ஒரு சூரியன்
ஒளிக் கீற்றுக்களைக் கொண்ட
அழகான பகற் சூரியன்!

ஆத்மா - ஒரு சோலை
வாசனை மலர்களையும்
பழங்களையும் கொண்ட
அழகான சோலை!

ஆத்மாவின் கானம்
எதிரொலிக்கும் கானம்
அதற்கு
இசையின் இனிமை தேவையில்லை

ஆத்மாவின் ஒளி
மங்கிவிடுவதற்கு முன்னால்
அதிலிருந்து கிடைப்பவைகளை
எல்லாம்
பெற்றுக்கொள்

அப்துல் முன்ஸீம் கந்தீல்(அரபு)
(எகிப்திய புதுக்கவிதையாளர்)

page 24:
-----------

"கொலரா"

கிழக்கு வெளுத்துவிட்டது
அதிகாலை வந்து விட்டது

அதிகாலை அமைதியில்
நடந்து செல்கின்ற வழிப் போக்கர்களின்
காலடி ஓசைகளைக் கேள்

page 25:
-----------

புலம்பிக் கொண்டு திரிபவர்களை,
அவர்களது ஊர்வலத்தை
உற்றுக் கவனி!

ஒரு மரணம்...
இரண்டு மரணம்....
...பத்து....இருபது
....அதனைக் கணக்கிட
வேண்டாம்!

விசும்புகின்றவர்களின்
விசும்பலைக் கேள்!
குழந்தைகளின்
அழுகையைக் கேள்!
இறப்பு.....இறப்பு.....
எண்ணிக்கை தோற்றூவிட்டது!

ஒவ்வொரு வீட்டிலும்
ஒவ்வொரு உயிரற்ற உடல்
படுத்துக் கிடக்கிறது!
கவலைப் படுகிறவர்கள்
புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அழிவு.....அமைதியை
செயலிழக்கச் செய்து விட்டது!

இவைகள் தான்
மரணத்தின் கைகள் செய்தவை,
செய்கின்றவை!

மரணம்...மரணம்...மரணம்
மனித இனம்
மரணத்தின் செயல்கள் பற்றி
முறையிட்டுக் கொண்டிருக்கிறது.

நாஸிக் அல் மலெய்கா(அரபு)
செப் 16-30 / 93

Page 26:
------------

ஒரு
தாயின்
புலம்பல்

அதோ அந்தப் பிணத்தைப் பார்!
கால்கள் இரண்டும் பிணைக்கப்படு
சிதைக்கப்பட்டிருக்கும்
இந்த உயிரற்ற உடலைப்பார்
ரத்தம் முகாமிட்டிருக்கும்
முகத்தையும்,
நீலமாக(நிறம்) மாறியிருக்கும்
உடலையும் பார்!
தடிகளுக்கு தாகமேற்பட்டதால்
தலையெல்லவா கூழாய்ப்
போயிருக்கிறது!

அதோ அந்தப் பிணத்தைப் பார்!

சுழன்று வீசும் காற்றின் தீண்டுதலையே
தாங்க முடியாத என் இளவயது மகன்
சாட்டைகளின்

சுழற்சி முறைத் தாக்குதலை
எவ்வாறு தாங்கிYஇருப்பான்?

Page 27:
------------

காற்று முத்தமிட்டாலேயே
கன்னத்தைத் தடவிக் கொள்பவன்
சவுக்குகளின் அரவணைப்பை
எவ்வறு ஏற்றிருப்பான்?
விரோதம், குரோதம்
கொலை வெறி, மிருகத்தனம்- இவை
மானிட தேசத்தில் முளைவிட்டிருக்கும்
புதுமைக் காளான்கள்!

அதோ அந்தப் பிணத்தைப் பார்!

பருவ மொட்டு இன்னும் அரும்பாத
என் பாலகனின் முகத்தில்
அமைதியான அழகும்
புரிந்து கொள்ள முடியாத
புன்னகையும் மறைந்திருப்பதை
நான் காண்கின்றேன்.

இதோ...நான்....என் மகனின்
இனிய குரலைக் கேட்கின்றேன்.
"என் பலஸ்தீன தேசத்தாய்
சுதந்திரச் சேலை உடுத்தும்
நன்னாளைக் காண்பதற்காக வாழ்ந்தேன்.
என் கனவுகள் நனவாக முன்னரே
இலட்சியப் பாதையில்
என்னுயிரை இழந்தேன்.
கண்களில் வளர்ந்த கனவு மொட்டுக்கள்
பூப்படைய முன்னரே
உதிர்ந்து விட்டன.
நான் தியாகியாய் மரணித்தேன்
என்பதற்கு
என்னுடலை அலங்கரிக்கும்
இந்தக் காயச் சித்திரங்கள்
சாட்சிகளாக இருக்கட்டும்
(எனவே)
எனக்காக எவரும் அழவேண்டாம்"

அதோ அந்தப் பிணத்தைப் பார்

இறந்து போன என் தோழர்கள்
சந்தோஷமாயிருக்கிறார்கள்


page 28:
-----------

இருந்து கொண்டிருப்பவர்கள்
துன்பப்படுகிறார்கள்
உதிர்ந்த இலைகளை விட
செடியில் இருக்கும் இலைகள் தானே
காற்றின் கஷ்டத்தை
அதிகம் சுமந்து கொள்கின்றன.

அதோ அந்தப் பிணத்தைப் பார்
இங்கே பிரசவமாகும்
கோணற் சிந்தனைகளாலும்
நிலையற்ற எண்ணங்களாலும்
நொடிப் பொழுதுகள் கூட
நோயப் பொழுதுகளாகின்றன

மணம் பரப்பும் மலர்கள்
மனதை வஞ்சித்தால்
விழிகள் நீரைச் சுமந்து கொண்டு
மெளனமாக இருக்குமா?

இங்கே கர்ப்பவதிகள்(கூட)
வல்லுறவுக்குட்படுத்தப்படுவதால்
விலையுயர்ந்த எதிர்கால
வாரிசுகள் வீணடிக்கப்படுகிறார்கள்

எதிர்காலம் நலமாகும்
நனவாகும் என்பார்கள்
இங்கே நிகழ்காலமே
கனவாகிறதே!

அதோ அந்தப் பிணத்தைப் பார்!

மானிட இனத்தின்
மதிப்பும் மரியாதையும்
எங்கே தப்பிச் சென்றுவிட்டன?
இரக்கம்,ஒழுக்கம்,கண்ணியம்,நீதி
இவைகளெல்லாம்
எங்கே சென்று தொலந்து விட்டனவோ?

உலகம் பாலையாய் காட்சி தருகிறது!
வசீகரம் நிறைந்த பொருட்களை விட்டும்
உலகம் பாலையாய் காட்சி தருகிறது!

page 29:
-----------

கழுகுகளும் அட்டைகளும்
பசிக்காகத்தான் உயிர்களை
உண்ணுகின்றன
பகையுணர்வு இல்லாத
அவைகள் தான் அமைதியானதாகவும்
சாந்தமானதாகவும் தெரிகின்றன.

இந்த மனிதக் கழுகுகளின்
அடாவடித்தனங்கள்
எவ்வளவு மோசமானது!!
எவ்வளவு வேட்கம் நிறைந்தது!!!

அதோ, அந்தப் பிணத்தைப் பார்!

அவர்கள் கற்பதற்குப் பாடமொன்றுள்ளது.
"துப்பாக்கியைச் சுமந்தால்
அனைத்துப் பலமும்
எங்கள் தோளில் தான்"
என்று கூறும் அவர்கள்
கற்பதற்குப் பாடமொன்றுள்ளது.

அந்தப் பாடம்
வீரத்தினதும் தைரியத்தினதும்
சரியான அர்த்தத்தை
அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும்

அதோ! அந்தப் பிணத்தைப் பார்!

அடக்குமுறை, அட்டூழியம்,
பகிரங்க வல்லுறவு,
தெய்வநிந்தனை,கொடூரபலம்
கூடப்பிறந்த இவைகள்
அவர்களை
மனச்சாட்சியில்லா
மனிதர்களாக்கி விட்டன.

இழிவுபடுத்துவதாலும்
களங்கமேற்படுத்துவதாலும்
நோய் ஏற்படுத்துவதாலும்
போலிப் புன்னகை புரிவதனாலும்
அவர்கள் உலகத்தை ஏமாற்றி விடுகிறார்கள்!

page 30:
-----------

அதோ, அந்தப் பிணத்தைப் பார்!

'முஸாவே......'எங்கள் தூதரே!
இவர்கள் உன் பாசறையில்
எதனைக் கற்றுக் கொண்டார்கள்?
கொல்வதையும் விழுங்குவதையும்
கொள்ளையடிப்பதையுமா
இவர்களுக்கு நீ கறுக் கொடுத்தாய்?

ஆண்கள்,பெண்கள்,
இளஞர்கள்,யுவதிகள்,
கிழவர்கள்,பாலகர்கள்,
பலவீனர்கள் நோயாளிகள்
இவர்களையெல்லாம்
துன்பப்படுத்தி, முடமாக்கினான்
நன்மையேற்படுமென்று
நீயா கற்றுக் கொடுத்தாய்?

ஓ......முஸாவே! எங்கள் தூதரே!
இவர்கள் உன் பாசறையில்
எதனைக் கற்றுக் கொண்டார்கள்?

அதோ.....அந்தப் பிணத்தைப் பார்!

இந்த மரண பூமியில்
வசிப்பதை நினைத்து
என் முகம்
வெட்கிச் சிவக்கிறது,

"மனித உரிமைகளின்
மதிப்பைப் கெடுத்து
புண்ணிய பூமியின்
புத்திசாலிப் பாதுகாவலர்கள்" என
இந்த இஸ்ரேலியர்களுடன் வசிப்பதை
நினைத்து
என் முகம் வெட்கித்துச் சிவக்கிறது.

ஹம்டாட்(ஆங்கிலம்)


page 31:
-----------

பிரிவு
காதலுக்கில்லை


இருள் சூழ்ந்த இரவு வேளையில்
என்னை நீ சந்திக்க வா!
"இரவுகள் தான் ரகசியங்களின்
பாதுகாவலன்"
என்பதை நான் நம்ப
இருள் சூழ்ந்த இரவு வேளையில்
என்னை நீ சந்திக்க வா!

உன் மீது நான் கொண்ட
காதல்
சூரிய வெளிச்சத்தைத் தடுத்து விடும்
நிலவின் உருவாக்கத்தை
நிறுத்தி விடும்!
நட்சத்திரங்களின் பயணப்
பாதையை மாற்றிவிடும்.

page 32:
------------

இந்த உறவின் பின்
ஒருவரையொர்வர் சந்திக்க முடியாத
பரஸ்பரக் காதலை
சொல்லிக் கொள்ள முடியாத
பிரிவொன்று ஏற்பட்டு விடுமோ
என நான் அஞ்சுகிறேன்!

முன்பு......
வானம் வாழ்த்துப் பாடும்
மழைக் காலங்களில்
என்னை நீ
சந்திக்க வரும் வேளைகளில்.....
என் மேலாடைகளை
வெறுத்தொதுக்குவேன்!

அது தான் நான் கொண்ட
பெரு விருப்பின் ஆதாரம்!
இனிமேல்....
நீயில்லாத நேரம்
கிடைக்குமா அவ்வின்பம்?

என் பயணத்தின் துரிதம்
விதியயும் துருரிதப்படுத்தி
உன்னைப் பிரித்துவிட்டது!
காலம் பல கரைந்தாலும்
உன் பிரிவை முடிவாக
ஏற்றுக்கொள்ள மாட்டேன்
என் எதிர்பார்ப்பிலிருந்து பொறுமையை
பிரித்து விடவும் மாட்டேன்.

நீ வசிக்கும் பூமிக்கு
ஒவ்வொரு மேகங்களிலிருந்தும்
மழை கிடைக்கட்டும்
அதன் மூலம்
ஓடைகள் நதிகளெல்லாம்
சந்தோஷமாய்
இளைப்பாறிக் கொள்ளட்டும்!

வலதா முஸ்தக்பி(அரபு-1990)

page 33:
------------


அந்தச் செய்தி கேட்பவர் அனைவரும்
அதிர்வர்.........

இன்று
ஒரு பெண் வாழ விரும்புகிறாள்....
"இறைச்சிக்கடைக்காரனின்"
பலிகொள்ளலுக்கு
தலைசாய்க்க மறுத்து
அவள் வாழ விரும்புகிறாள்....
கோபமும்;ஏளனமும்.....
கைகளில் கற்களுமாய்
மக்கள் அவளைக் கொன்றுவிட
வந்திருக்கின்றனர்.

page 34:
------------

தனக்கான கடவுளாக
தன் கணவனை அவள்
ஏற்க மறுத்தாள்
........ "இறை" நிந்தனை செய்தாள்!

அவள் வாழ விரும்புகிறாள்.

தன் உயிர்ப்புக்காகவும்;
தன் இருப்புக்காகவும்
அவள் வெளியே வர் விரும்பினாள்
பரம்பரைப் பொக்கிஷத்தைப் போல்
அளிக்கப்பட்ட வாழ்க்கையை அவள்
ஏற்க மறுத்தாள்.

மற்றவர்களது கையிலிருக்கும்
அவளது கடிவாளங்களின் பிடியை
தளர்த்தி விட அவள் முன்றாள்.

ஒரு மனிதப் பிறவியாய்
தனக்கான தெரிவுரிமையை
அவள் வேண்டினாண்
........எனவே
அவள் வாழ விரும்புகிறாள்.

நூற்றாண்டுகளாய் அணிந்திருந்த
அடிமை ஆடைகளை
அவள் கழற்றி விட விரும்புகிறாள்.

ஒளியின் ஓர் ஒற்றைக் கதிருக்காய்
அவள்,சடங்குகளையெல்லாம் தாண்டி
ஓடி விட முயல்கிறாள்.

அவள் வாழ விரும்புகிறாள்.

இதையெல்லாம் செவியுறுவோர்
அதிர்வர்:
வார்த்தைகளுக்கப்பால்!

அதிய்யா தாவுத்(ஆங்கிலம்)
-பாகிஸ்தான்

page 35:
-----------

பெண் - அழகிய மலர்.
நிறையக் கனவுகளும் அழகுகளும்...
அன்பும் மகிழ்வுமாய்....அவள்
.......எனினும்
ஓர் உழைப்பாளியாய்
ஆடை தைப்பவனாய்
விற்பனைப் பெண்ணாய்
தாதியாய் உதவியாளாய்,
பணி செய்து தியாகித்து....
..............
துன்பத்திலேயே அவள் வளர்ந்தாள்!

page 36:
-----------

நான்
தவறாக வழிநடத்தப்பட்ட ஒரு பெண்
காரணமின்றி அடிபட்டவள்
வாயடைக்கப்பட்டவள்
வல்லுறவுக்குள்ளானவள்
யுத்தம் என்னை பாதிக்கப்பட்டவளாக்கிற்று.

மொட்டிலேயே கிள்ளியெறியப்பட்ட
ஒரு மலராய்.......நான்
வாடியும் வதங்கியும்...........
எதுவுமற்று..

ஆயினும் நான்
ஒரு பெண்ணாய்ப் பெருமையுற்று
துணிவுறுகிறேன்.

ஆக்கிரப்புக்களில் அச்சுறுத்தப்படாது
எப்போதுமே பலம் பெற்ற பெண்ணாய்
நான் இனி

இறந்த காலம் பின் கிடக்க
இனி
யதார்த்தங்களை எதிர்கொண்டு துணிந்து....
விடா முயற்சியுடன் என் உழைப்பு

எனை நோக்கிய கல்லடிகள்
இனியில்லாது நின்றெதிர்ப்பேன்

சந்தோஷங்களை எதிர்கொள்ளவும்
நீதி எங்கும்
வியாபித்து நிலை பெறும்வரை
வானம் நோக்கிச் சண்டையிடவுமே
நான் இனி!

* இக்கவிதையை எழுதிய கவிஞரின் பெயர்
தெரியவில்லை. Options என்ற சஞ்சிகையில்
வெளியாகிய்ருந்தது. சரிநிகரில் 'பிரகடனம்' என்ற
தலைப்பில் வெளியாகியது.

page 37:
-----------

இன்னுமொரு
கொடை



ஒரு வெங்காயத் துர்நாற்றத்தைப் போல் தான்
என் இறந்த காலமும்,
சிதைந்தழுகிக்கெட்டு நாற்றமெடுத்தது.

வேர்களின் மூலத்தில் குவிவாய்
முளைத்திருக்கிறது
வெங்காயம்.

நானும் கூடத்தான்: தாயின் கருப்பைக்குள்
தூவப்பட்ட விதையாகி,
வேர்கொண்டு முளைத்திருந்தேன்.
அதற்கிருப்பது போன்றே
என் உள்மையங்களும் சற்றுக் கடினமானதே.

வெங்காயத்தை உணவிலும்,
என்னைத் தவறான பழிசுமத்தல்களிலும்
நன்றே பயன்படுத்தினர்.

இருந்தும் நாம் கடினமான மையங்கள்
கொண்டவர்கள்.
இன்னுமொன்றும் கூடவே கொடையாக,
மக்களில் அநேகர் என்றுமே கண்டுகொள்ளாத
அழகினையும் நாம் கொண்டவர்கள்

Darlest Chenevert (ஆங்கிலம்)
சிறைக் கைதிகளுக்கென ஏற்பாடு செய்யப்பட்ட
எழுத்துப்பட்டறையில் கலந்து கொண்ட போது
எழுதப்பட்ட கவிதை- 1996


page 38:
-----------

என் இதயம் பெரியது:
என் மேசையும் கூட அகன்றது.
சிலவேளை, என் தாய்க்குத்தான்
அனேக விடயங்கள் தெரியாதிருந்திருக்கும்
இருந்தும்,இன்றவள் தோள்களில்
முகம் புதைத்து அழும் தருணம் கிடைக்கின்
உயிர்ப்புறும் என் எல்லாமும், நானும்.
எந்த ஆதாரங்களும்,விளக்கங்களுமின்றி
அனைத்தையும் புரிந்து கொள்ள
முடியுமானவள்
நீதான் தாயே
இலடியங்களுக்கான போர்களின் பாதையில்
பொய்கள் தரும் வேதனைகளும்,காயங்களும்
எவ்வளவு தான்!?

page 39:
-----------
மரணித்துப் போகிற இரவுகளில்
வார்த்தைகள் இன்றிய உன்னுடனான
உரையாடல்
நேரின்
என் வேதனைகள் அகன்றோடிவிடும்
கனவுகள் தான் இது எனினும்
அழகியதும், மனதை வருடிச் செல்கிறதுமான
இவைகளை, என் கவலைகள்
விரட்டியடித்துச் சென்றுவிடாது/

***

புதிதாகச் சுடப்பட்ட ரொட்டிபோல்
வெதுவெதுப்பான எம் கையுறகள்
மழைகளுக்கப்பால் பறந்து சென்று
எமக்கு மினுப்புக் காட்டுகிறது.
மலையுச்சிகளில் மலர்ந்திருக்கும்
பொப்பி மலரினைப்போல்
எம் பதாகையும் அங்கே பறந்து
கொண்டிருக்கிறது

***

விலக்கமுடியா விதிகளில்
உன் ஆரம்பங்களில் என்ன சொல்லி
நானுனை வாழ்த்த?

நானுனக்கும், நீ அதையே உன் குழந்தைக்கும்
சொல்லப் போகிற
ஒரே வார்த்தைகளைத் தானே!?

சிக்கல் மிகு பாதைகளில்
நீ தொடங்கும் பயணங்களில்
எதை நானுனக்கு அன்பளிக்க?
உன் குழந்தைக்கு நீயும் திரும்பக்
கொடுக்க வேண்டியதைத்தான்
தருவேன் நான் உனக்கு

தாயாக இருக்கிற நான்
தந்தையும் தான்: வழிகாட்ட,
வாழ்த்த, வரவேற்க......
என்ன இது ஆச்சரியம்
முன்னமேயே நீ மனிதனாய் மாறிவிட்டாயே!

Rayisa Akhmatova(செச்னியாவின் பெண் கவிஞர்)
ஆங்கிலத்தில் Ravi Bukharaev



page 40:
-----------

அடிச்சுவடுகள்

ஒரு பெருந்துவக்கோசை...
சற்றேக,முடிவற்றுத் தொடர்ந்தன
பின்னும் பின்னும் பல பெருவெடிப்பாய்
அது ஓய, பெருங்கூச்சல்....
பின்னர்
நெருப்புப் பிரளயத்தினூடு
கலைந்து போன நீண்ட
மிக நீண்ட மெளனம்!

மெளனங் கிளறி,
தன்னுடைய மனிதருக்காய்ப்
போரிட்டுக்கொண்டு
உயிரை மட்டுமே மிச்சமாய் வைத்திருக்கிற
ஒருவனது மெலிதான காலடி ஓசைகள்
கேட்கின்றன.

page 41:
------------

நண்பர்களாய், எதிரிகளாய்
மனிதர்களாய் நிரம்பியிருக்கிற
வாழ் நரகிலிருந்து தப்பித்தோடுவதாய்
அவ்வோசைகள் எங்கும் மெளனத்தில்
நிறைகிறது.

செத்துப்போன அவனது அவர்களின்
நெஞ்சழுத்தும், அழிக்கவொண்ணா
நினைவுகளோடு
அவன் ஓடுகிறான்

தூரத்தே; காற்று வெளி மெளனங்கிழித்து
இன்னுமொரு உயிரைப் பறித்தெடுக்கிற
மற்றோரு துவக்கோசை கேட்கிறது.

உடல் நோவு தரவில்லை.
கோபம்,விரக்தி,குற்றவுணர்வு
அழுத்திச் சாக்கொல்கிறது அவனை நிதமும்.
தலை கவிழ்த்துக் குந்தியிருக்கிறான்.

அவனது மனிதர்களும்
அவனைப் போன்ற மனிதர்களும்
செத்தழிந்து போன உலகில்
இன்னுமே துடித்துக் கொண்டிருக்கிற
இதயத்தோடும்,
சிந்திக்கிற மூளையோடும்
கவலையுணரா ஆத்மாவுடனும்
வாழ்தல் தகுமா?
அவனே வினவும் வினாக்கள்.

எது எது போயிருப்பினும் அல்லது
எல்லாமே போயிருப்பினும்
அவனது உய்ரிப்பான வாழ்விருந்த
அந்த யதார்த்த உலகுக்கு
போதல் முடியுமா?

துஸாந்தி செல்வராஜா(ஆங்கிலம்)


page 42:
------------

மன்னிக்கவும்
என்னை...!

மன்னிக்கவும் என்னை.
உன் கேள்விகளுக்கான பதில்கள்
என்னிடத்திலில்லை;
இருப்பது - அநீதி, வெறுப்பு, யுத்தம்
மற்றும்
கோஷமாக மட்டுமல்ல சமத்துவம்.

எனக்கென்ற காட்சியில்லை.
காணமுடிவது-
அடர்ந்துபடர்ந்த 'ஹிரோஷிமா'
மேகங்களையும்
'ஆஸ்ட்விச்சி'ன் சிம்னிகளிலிருந்து
பரவிச் செல்கிற கரும்புகையுமே....!

கடந்தகாலங்களென்றெதுவுமில்லை
மாயையாகத் தெரிவது -
கீறல் விழுந்த கண்ணாடிகள் காட்டுகிற
சாந்தமான முகங்கள்.
பெரும் கண்ணீர் மூட்டத்துள் காணாமல்
போயின
அவற்றின் உயிர்ப்பான தோற்றங்கள்!

எதிர்காலம்....?
என் கைகள் அசைந்தொழும்பி வழியனுப்ப

Page 43:
-------------

ஒன்றன்பின் ஒன்றாய்
ஒவ்வொன்றாய்ச் செல்கிறது புகைவண்டி
நான் ரயில் நிலையத்திலேயே நிற்கிறேன்;
எனக்கு அது தெரிகிறது.

பாதுகாப்போ, அபயமோ எதுவுமில்லை -
தங்கமும், வைரமும், நிலையற்று விலையற்று
ஏறியிறங்குகின்றன; அவ்வாறே வீடுகளும்
புத்தகங்கள் எரிக்கப்படவும்,
உறவுகள் முறிக்கப்படவும் தாராளமாய்
முடிகிறது இங்கு

மற்றும்
வதையையும் சிதையையும்
கத்தியையும் கம்பியையும்
கடவுளின் பெயரால் புனிதப்படுத்தியாயிற்று
'இஸங்களும்' உலகை அவற்றிடையே
பிரித்துவிடும்.


மிகக் கூரான அவைகளது
சின்னங்களிலிருந்து சொட்டுச் சொட்டாய்
வழிகிறது
இரத்தம் -
தெரிவுக்கும், கருத்துத் தெளிவுக்கும்
இடமற்ற கல்லறைகளில்
உறுதியான முடிவுகள் உறங்குகின்றன.

எப்போதும் போலன்றி,
மிகச்சத்தமாயும், அதிகமாயும்
அண்டங்காக்காய் கத்திக்கொண்டிருக்கிறது
முன்பு, இவ்வாறு நீ கேட்டிருக்கமாட்டாய்
கிறீச்சிட்டுக் கொண்டிருக்கிற கதவும்
தொப்பென்று சத்தமெழுப்பி
மூடிக்கொள்கிறது.

மன்னிக்கவும் என்னை;
உன் கேள்விக்கான பதில்கK
என்னிடத்திலில்லை

ஆன் ரணசிங்ஹ(ஆங்கிலம் - 1997)

page 44:
------------

Nezar Kabbani, பிரபலமான சிரிய
கவிஞர். பலமுறை அரசியல் சர்ச்சைகளுக்கு உட்பட்டவர். அராபிய அடிமை மனோபாவத்தை கேள்விக்குள்ளாக்கி விமர்சிக்கும் இவர், பல அரபு நாடுகளில் எதிர்ப்பைச் சந்தித்தவர். அரபு நாடுகளின் இஸ்ரேலுடனான குருட்டுத்தனமான சமாதான உடன்பாடுகளை எள்ளி நகையாடும் கவிதைகளின் தொகுப்பான 'ஓடித்திரிபவர்கள்' அண்மையில் வெளியிடப்பட்டது. இக்கவிதை நூல் பல அராபிய பிராந்தியங்களில் தடை செய்யப்பட்டிருக்கிறது. "மாற்று இலக்கியத்தைப் படைக்கிறாரில்லை" என்று நோபல் பரிசு பெற்ற எகிப்திய இலக்கியவாதி நஜீப் மஹ்பூழ் இவரை விமர்சித்துள்ளார். Nezar என்னுடைய நல்ல நண்பர் என்று கூறும் யசீர் அரபாத் "இவர் எங்களுடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்தால், நாம் எவ்வளவு கஷ்டங்களை எதிர்கொண்டோம், எவ்வளவு முயற்சிகளைப் பிரயோகித்தோம் என்பதை அறிந்திருப்பார் என்கிறார். இது Nezar Kebbani யின் "Joggers" என்ற நூலிலுள்ள நீள் கவிதையின் தமிழ் வடிவம். மூல மொழியில் இருந்து ஆங்கிலப் படுத்தியவர் Khalid M. Amayirah. Palastine Times இல் இக்கவிதை பிரசுரமாயிருந்தது.

ஒரு
கோபக்காரக்
கவிஞனின்
செய்யுள்
--------------------

நிஸார்
கப்பானி

Page 45:
------------

1

எமது இறுதிக் கண்ணியச் சுவரும்
வீழ்ந்து போனது,
நாம் சந்தோஷித்தோம்
ஆடிக்களித்தோம்
ஒப்பமுமிட்டோம்.
'கோழைகளின் சமாதானம்' என
எம்மை ஆசீர்வதித்தார்கள்:
இதைவிட
....எதுவும் எம்மை இனி தலைகுனிந்து,
வெக்கப்பட வைக்காது....
எம் பெருமிதத்தின் இரத்தக்குழாய்களெல்லாம்
வரண்டு வற்றியாயிற்று.

2
ஐம்பதாவது தடவையாகவும்,
எம் மானம், நேர்மை,ஒழுக்கம்,கண்ணியம்
எல்லாம் போயாகி விட்டது.
எதுவித பதற்றமோ
எந்தச் சத்தங்களோ....எம்மிடம் இல்லை...
எல்லாம் இழந்து....,
இரத்தத்தைப் பார்க்கையில் ஏற்படுகிற
அற்ப அதிர்வுமற்று
மொத்தமாய் எல்லாம் போயிற்று
ஐம்பதாவது தடவையாகவும்
நாம் ஓடித்திரிகிற காலத்தில்
நுழைந்தோம்
அறுவைக்கடைக்கு முன்னால்
ஆட்டு மந்தைகளைப் போல்
வரிசையாய் நான் நின்றோம்
கொலைகாரர்களின் சப்பாத்துக்களை
முத்தமிடுவதற்காய்
மூச்சுத்திணறத்திணற நாம்
போட்டி போட்டு ஓடினோம்

page 46:
------------

3.
ஐம்பது ஆண்டுகளாய் அவர்கள்
எம் பிள்ளைகளை
பட்டினி போட்டார்கள்
நீண்ட நோன்பிருப்பின் இறுதியில்
ஒரு வெங்காயத்தை அவர்கள்
எமக்கு எறிந்தனர்

4.
ஐம்பதாவது தடவையாக
அராபியர் கரங்களில் இருந்து
கிரடனாவும் வீழ்ந்தது.
வரலாறும் வீழ்ந்தது
எம் ஆத்மாக்களின் தூண்களும்
எம் சுயத்தினது தூண்களும்
மொத்தமாய் ஐம்பதாவது முறையாகவும்
வீழ்ந்தன.
வீரப்பாடல்கள் இனி இல்லை

இஷபெய்ல்யா அண்டாக்யா
ஹட்டின்...அம்மோரியா
எல்லாம் எதுவுமற்று வீழ்ந்தன.
"மேரி" யும் அவர்களின் சிறைக்கைதியானாள்;
வானத்து அத்தாட்சிகளைக் காக்க
எந்த வீரனுமே இல்லை!

5.
எம் இறுதிக் கன்னிகையும்
ரோமர்களிடம் வீழ்ந்து போனாள்.
இனிச் சண்டையிட என்னதான் இருக்கிறது?
எம் மாளிகையில் தேநீர் ஊற்றுகிற
பெண்கூட இல்லை..
இனி யாரைத்தான் காக்க?

6.
ஓர் அந்தலூசியா கூட
எம் கரங்களில் இல்லை
அவ்ர்கள் கதவுளைத் திருடினார்கள்
சுவர்களைத் திருடினார்கள்
மனிவிகளைத் திருடினார்கள்
ஒலிவ் மரங்கள், எண்ணெய் வளங்கள்

Page 47:
-----------

வீதியில் உள்ள கற்கள்
எலுமிச்சைச் செடியின் ஞாபகங்கள்
எல்லாவற்றையும் திருடினார்கள்
இலந்தைப் பழங்களை,
நாணயங்களை,
பள்ளிவாசல் விளக்குகளின்
எண்ணைகளைக் கூட
அவர்கள் திருடினார்கள்.

7.

'காஸா' எனப்படுகிற
ஒரு மீன்சாடியை அவர்கள்
எம் கையில் விட்டுவிட்டுப் போனார்கள்
'ஜெரிக்கோ' என்றழைக்கிற
ஒரு காய்ந்த எலும்பும் கிடைத்தது
கூரைகள் அற்ற
ஒழுங்காகக் கட்டப்படாத
பலஸ்தீன் என்ற ஹோட்டலையும்
எம்மிடம் விட்டுச் சென்றார்கள்.
இன்னும்:
எலும்புகளற்ற ஒரு செத்த உடம்பையும்
விரல்கள் அற்ற ஒரு கையையும்
அவர்கள் எமக்குத் தந்துவிட்டுச் சென்றார்கள்

8.

நினைத்து அழுவதற்கு
ஒரு துண்டுச் சின்னமும்
எமக்காக இல்லை
அவர்கள் கண்களையே
எடுத்துச் சென்றுவிட்டபோது
ஒரு சமூகத்தால் அழமுடிவதெப்படி?

9.

ஒஸ்லோவில்
இந்த இரகசிய மன்றத்தின் பின்
மொத்தமாய் நாம் கருகிப் போனோம்
ஒரு கோதுமை மணியைவிடச்
சின்னதாய்
ஓர் இருப்பிடத்தை
எமக்கவர்கள் தந்தனர்
ஓர் அஸ்பிரின் குளிசையைப் போல்
தண்ணீரின்றி

page 48:
------------

விழுன்கிவுடுமளவு
அவர்கள் எமக்கோர் இருப்பிடம் தந்தனர்.

10.
ஐம்பது வருடங்களின் பின்னரும்
இடமற்ற ஆயிரம் ஆயிரம்
நாய்களைப் போல்
வறண்ட நிலமே
எம் வசிப்பிடத் தீர்ப்பாயிற்று

11.
ஐம்பது வருடங்களின் பின்னரும்
ஓர் உறைவிடத்தை நாம் காணவில்லை
ஒரு கானலைக் கண்டோம்
ஆனால் அது சமாதானம் அல்ல
எம் இதயங்களை ஊடறுத்துச் செல்கிற
ஓர் ஈட்டி அது
இன்னும்
அது ஒரு பலாத்காரமும் கூட!

12.
கடுகளவேனும் பெறுமதியற்றது
ஒஸ்லோவில் பொறித்தவைகள்.
மக்களின் ஆத்மாக்கள்
உயிரோடிருக்கையில்
ஓடித்திரிவதில் தான் பயனென்ன?

13.
பசுமை மிகு சமாதானத்தையும்
ஒரு வெள்ளைப் பிறையையும்
ஒரு நீலக் கடலையும்
கப்பல்கள் கட்டும்
ஓர் துறையையும்
நாம் நீண்ட நாளாய்
கனவில் கண்டோம்
ஆனால்
திடீரெனப் பார்த்தபோது
நாம் சாணக்குப்பல் ஒன்றில்
குந்திக் கொண்டிருந்தோம்

Page 49:
------------

14.
பயந்தாங் கொள்ளிகளின்
சமாதானம் பற்றி
யார் அவர்களிடம் கேள்வி
கேட்கப்போகிறார்கள்
தாயக சில்லறை வியாபாரம் பற்றியோ
உடன்படிக்கைகள் பற்றியோ
வியாபாரிகள் பற்றியோ
பங்குதாரர்கள் பற்றியோ
யார்தான் அவர்களிடம்
கேள்வி கேட்கப்போகிறார்கள்

அவர்கள் வீதிகளை மெளனப்படுத்தினார்கள்
கேள்விகளையும்
கேள்வி கேட்டவர்களையும்
கொன்றொழித்தார்கள்

15.
எம் ஈரல்களைச் சப்புகிற
பிறக்கப் போகும் குழந்தைகளைக்
கொன்றொழிக்கப்போகின்ற
ஒரு பெண்ணுக்கு
எம் விருப்பம் இன்றியே
திருமணம் செய்துவைக்கப்பட்டோம்


நாம் அவளைத் தேனிலவுக்கு
அழைத்துச் சென்றோம்
அங்கே
குடித்துக் களித்தோம்
ஆடினோம்
மனப்பாடமிட்டிருந்த
காதல் கவிதைகளையெல்லாம்
பாடினோம்
பெற்றோருமாகினோம்
குழந்தைகள் அழகை உருக்குலைத்து
பாய்ந்து திரிகிற தவளைகள் ஆக்கினோம்
நா(மு)ம்
ஒரு நாடின்றி ஒரு குழந்தையுமின்றி
துயரங்களின் அருகாமைகளைச்
சுற்றிச் சுற்றி அலைபவர்களானோம்

page 50:
-----------

16.
கல்யாண விருந்துக்கு வராதவர்களுக்காய்
ஓரிடத்தும் இல்லாதவாறு
அராபிய நடனம்
அராபிய உணவு
அராபிய சங்கீதம்
ஏன் அராபிய ஒழுக்கம்
எல்லாம் இருந்தன

17.
அரைவாசிச் சீதனம்
டொலரில் இருந்தது
வைரமோதிரமும் டொலரில் வாங்கப்பட்டது
திருமணப் பதிவுகாரரின் கூலியும்
டொலரில் கொடுக்கப்பட்டது

திருமண கேக் - அமெரிக்க அன்பளித்தது
மணமகளின் ஆடை, பூக்கள்
மெழுகுவர்த்திகள்
எல்லாம்
அமெரிக்கத் தயாரிப்பு

18.
பலஸ்தீன் இல்லாமலேயே
திருமணம் முடிந்தது....
அவளின் உருவத்தை எல்லா
ஒலிபரப்புக்களிலும்,
கண்டாய்
அவளின் அழுகை......சமுத்திரமூடே
சிக்காக்கோ, நியூயோர்க்.....
பயணித்ததைக் கண்டாய்.

அறுவைக்கு வந்த பறவையாய்
புலம்புகிறேன்:
இந்தத் திருமணம் எனது திருமணமல்ல.
அந்த ஆடை என்னுடைய ஆடையல்ல,
இந்த வெக்கம் என்னுடைய வெட்கமல்ல.....
இந்த 'வெட்கத்த்தை' நான்
ஒருபோதும் ஏற்கமாட்டேன்
அமெரிக்காவெ....!

page 51:
-----------

ஹெராக்லிடஸ் ஆற்றில்


ஹெராக்லிடஸ் ஆற்றில்-
ஒரு மீன் இன்னொரு மீனை
வேட்டையாடுகிறது.
ஒரு மீன் இன்னொரு கூர்முனை கொண்ட
மீனால்
வேறொரு மீனை வெட்டித் துண்டாடுகிறது.


page 52:
------------

ஒரு மீன் இன்னொரு மீனை உருவாக்குகிறது.
ஒரு மீனில் இன்னொரு மீன் வாழ்கிறது.
ஒரு மீன் தன்னை முற்றுகைப்படுத்திவிட்ட
இன்னொரு மீனிலிருந்து தப்பிச் செல்கிறது.

ஹெராக்லிடஸ் ஆற்றில் -
ஒரு மீன் இன்னொரு மீனை விரும்புகிறது.
அது சொல்கிறது:
உன்னுடைய கண்கள் வானத்து மீன்களைப்
போல்
பளிச்சிட்டு மின்னுகின்றன
ஓ மீன்களின் உலகத்தின்
அதிசிறந்த அழகே...
பொதுமைக் கடல் நோக்கி
உன்னுடன் நான் ஒன்றாக நீந்தி வரவேண்டும்.

ஹெராக்லிடஸ் ஆற்றில் -
மின்களின் மேலான இன்னொரு மீனை
ஒரு மீன் கண்டுபிடிக்கிறது.
ஒரு மீன் இன்னொரு மீனுக்கு முன்னால்
மண்டியிட்டு நிற்கிறது.
ஒரு மீன் இன்னொரு மீனுக்காய் பாடல்
இசைக்கிறது.
ஒரு மீன் இன்னொரு மீனை
இலகுவாய் நீந்தக் கற்றுத்தரக் கேட்கிறது.

ஹெராக்லிடஸ் ஆற்றில் -
மீன் மரத்துக்கும் மீன் கல்லுக்கும் கீழான
தனியே கவனிப்பாரற்றுக் கிடக்கும் மீனாகிய
நான்
சில போதுகளில் சின்ன மீனுக்கு
வெள்ளிச் செதில்களால் இவ்வாறெழுதி
வினவ
அவாக் கொள்கிறேன்.
"சங்கடத்தில், கண்ணிமைக்கிற போதானதா
இருட்டு!?"

விஸ்லாவா ஸிம்போஸ்கா
ஆங்கிலத்தில் ஜொன்ரெறிக்

page 53:
------------

நாடு கடத்தலின் ஆரம்பம்

செய்தியெங்கும் பரவியாயிற்று.
நான், என் வீட்டு ஜன்னல்களை எல்லாம் மூடி
விளக்குகளையும் அணைத்து விடுகிறேன்.
'ப்ரிஜ்' ஜிலுள்ள உணவுகளையெல்லாம்
அயலவர்க்காய் எடுத்து வைக்கிறேன்.
எஞ்சியுள்ள பாலை
அடுத்த வீட்டுப் பூனைக்கு கொடுக்கலாம்.
இதம் தருகிற ஒரு கிளாஸ் குளிர் நீர்
எனக்குப் போதுமானது;
நான் அருந்துகிறேன்.

கதவுகளையெல்லாம் மூடிவிட்டு
வீதியில் இறங்கி கால்திக்கில் நடக்கிறேன்.

மாலையில் அல்லது இருட்டில்
ஏதோ ஒரு பொழுதில்
உத்தியோகபூர்வ வாகனமொன்றுடன்
ஆட்கள் வந்து
உத்தியோகபூர்வ பிணவறைக்கு
கூட்டிப் போவர்.
பின்,
நாடுகடத்தப்பட்ட ஏனையோரைப் போல்
என்னையும் கொல்வர்.

பின்னர்,
பத்திரிகையில் இவ்வாறு ஒரு செய்தி வரும்:
"குற்றவாளியான இன்னாரின் மகள்
இன்னாரின் வீட்டில்,
பழைய துணிப்பெட்டிகளின்
லாச்சிகளுக்குள்ளே
அரச எதிர்ப்புக் கவிதைகள் சில
கண்டெடுக்கப்பட்டென."

அஸ்ரா அப்பாஸ்(ஆங்கிலம்)
கராச்சி