கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  கால தரிசனம்  
 

தி. ஞானசேகரன்

 

ஒளியைத் தேடி



நான் மட்டும் தனியாக இருக்கும் அந்த நேரத்தில் கதவு தட்டப்படும் ஓசை கேட்கிறது. யன்னலின் திரையை நீக்கி வெளியே பார்க்கிறேன். நான் நினைத்தது போலவே புகையிலைத் தரகர் பொன்னம்பலந்தான் நின்றுகொண்டிருந்தார்.



கதவைத் திறக்காமலே அண்ணன் வீட்டிலில்லை என்பதை அவரிடம் கூறிவிடலாமா என ஒருகணம் யோசிக்கிறேன். ஆனால் அப்படிச் செய்யவில்லை.



பொன்னம்பலம் உள்ளே வந்து கதிரையில் உட்காருகிறார். நான் அவருக்குத் தேநீர் தயாரிப்பதற்காகச் சமையல் அறைப்பக்கம் போகிறேன்.



பொன்னம்பலத்திடம் எல்லோரும் மரியாதையுடன்தான் பழகுவார்கள். அதற்குக் காரணம் அவர் தனது தொழிலிற் காட்டும் நேர்மையாகத்தான் இருக்க வேண்டும்.



பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு, நான் கல்லூரி மாணவியாக இருந்தபோது கண்ட பொன்னம்பலத்தின் இளமைத்தோற்றம் இன்றும் அப்படியே இருக்கிறது. அவர் அப்போதெல்லாம் வியாபார விஷயமாக எங்கள் வீட்டுக்கு வருவார். அப்பொழுது எங்கள் தந்தை உயிரோடு இருந்தார்; குடும்பமும் நல்ல நிலையில் இருந்தது.

அண்ணனுக்கு அரசாங்கத்தில் ஆசிரியத் தொழில் கிடைத்த பின்னர் தோட்டத்தைக் கவனிப்பதற்கு நேரம் இல்லாமற் போய்விட்டது. எங்களிடம் இப்போது விற்பனைக்குப் புகையிலைக் கன்றுகளும் இல்லை.



எங்கள் தந்தை இறந்தபின்பு எங்களுக்கு ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்களோ பல. அப்போது பொன்னம்பலந்தான் எங்களுக்கு உதவியாக இருந்தார். அவர் ஒருவர்தான் இப்பொழுதும் எங்கள் குடும்பத்துக்கு ஆதரவாக இருக்கிறார்.



அண்ணன் சிறிது நேரத்திற்கு முன்புதான் வெளியே சென்றார். பொன்னம்பலம் அதனைக் கவனித்த பின்புதான் இங்கு வந்திருக்க வேண்டும்.



கடந்த சில நாட்களாக பொன்னம்பலம் என்னிடம் பழகும் விதத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. எனினும் நான் அதனை உணர்ந்து கொண்டவள்போல அவரிடம் காட்டிக்கொள்வதில்லை.



தேநீரைக் கிளாஸில் ஊற்றிப் பொன்னம்பலத்திடம் கொடுக்கிறேன். அதனை வாங்கும்போது அவருடைய கை எனது விரல்களிற்படுகிறது.



பொன்னம்பலம் சிரிக்கிறார். அவருடைய உள்ளத்தில் ஏற்பட்ட மாற்றத்தினாலோ என்னவோ முகத்தில் அசடு வழிகிறது.



“பூமணி ! நீ எவ்வளவு வடிவாய் இருக்கிறாய்! ” பொன்னம்பலம் இப்படிக் கூறியதைக் கேட்க எனக்கு உள்ளூர ஆசையாக இருந்தாலும் ஏதோ ஒரு வித பயமும் இருக்கத்தான் செய்கிறது.



பொன்னம்பலம் எழுந்து நிற்கிறார்.



“பூமணி! நான் .... .... உன்னை ஒண்டு கேட்கிறேன். நீ அண்ணனிட்டைச் சொல்லுவியோ?”



நாக்கு மேலே ஒட்டிக்கொண்டதுபோல அவரது குரல் தடுமாறுகிறது. உடல் சிறிது நடுங்குகிறது. அவர் சொல்லி முடித்ததும் எச்சிலை விழுங்குவது நன்றாகத் தெரிகிறது. அவரது முகம் மாறி விட்டது.

அண்ணனிடம் சொல்லமாட்டேன் என்பதற்கு அடையாளமாக, நான் தலையைமட்டும் அசைக்கிறேன். அவர் கேட்கப்போவது என்ன என்பதை அறிய எனக்கு ஆவலாக இருக்கிறது.



அண்ணன் வருவது தூரத்தே தெரிகிறது. பொன்னம்பலம் சமாளித்துக்கொண்டு கதிரையில் உட்காருகிறார். நான் சமையல் அறைப்பக்கம் போகிறேன்.



அண்ணனும் பொன்னம்பலமும் முன் கூடத்திற் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பொன்னம்பலம் சிறிது காலமாக அண்ணனிடம் பேசுவதெல்லாம் எனக்குத் திருமணம் செய்து வைக்கவேண்டிய அவசியத்தைப் பற்றியதாகத்தான் இருக்கும்.



அவர்கள் பேசுவதை மறைந்திருந்து கேட்பதற்கு எனக்கு கொள்ளை ஆசை.



“பூமணிக்கு வயசு முப்பதாகுது. இனிமேலும் அவளுக்கு கலியாணஞ் செய்து வைக்காமல் இருக்கிறது சரியில்லைத் தம்பி.”



பொன்னம்பலம் அண்ணனிடம் கூறிய வார்த்தைகள் என் காதிலும் விழுகின்றன.



அண்ணன் மௌனமாக இருக்கிறார். அவரால் என்னதான் செய்யமுடியும்?.



ஏழெட்டு வருடங்களாக எனக்குத் திருமணஞ் செய்து வைப்பதற்கு ஏறாத வாசற் படிகளெல்லாம் ஏறியிறங்கிவிட்டார். பலன்தான் கிட்டவில்லையே.



எனக்குப் பெரிய இடத்தில் கைநிறையச் சம்பளம் எடுக்கும் ஒரு நல்ல மாப்பிள்ளையைக் கட்டிவைக்க வேண்டுமென்பது அண்ண னுடைய விருப்பம்



நான் மணப் பருவம் எய்திய நாளிலிருந்தே அண்ணன் அதனை என்னிடம் அடிக்கடி கூறுவார். அதனாலேதான் என் மனதிலும் அந்த ஆசை வேரூன்றி விட்டதோ என்னவோ!



நான் பெரியவளாகிச் சில மாதங்களுக்குள் என்னைத் தனது மகனுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டுமென மாமா விரும்பினார். ஆனால் நான் அதனைத் துளிகூட விரும்பியதில்லை. என் தோழி சுகுணா ஓர் என்ஜினியரைத் திருமணம் செய்து வாழ்க்கை நடத்துகிறாள். நான் மட்டும் ஒரு கமக்காரனுக்கு வாழ்க்கைப்படுவதா?



பெரிய இடங்களில் எனக்குத் திருமணம் பேசியபோதெல்லாம் அத்திருமணம் நடந்துவிடாதா என என் மனம் ஏங்குவதுண்டு. எனக்கு அழகில்லை என்றார்கள் சிலர். எங்களுடைய அந்தஸ்து போதாதென்றார்கள் வேறு சிலர். எங்களால் கொடுக்க முடியாத அளவு சீதனம் கேட்டுத் தட்டிக்கழித்தனர் பலர். இப்போது எனக்கு வயது அதிகமாகிவிட்டது என்ற காரணமும் அவர்களுக்குக் கிடைத்துவிட்டது.



பேசுகிறவர்கள் எதையும் பேசிவிட்டுப் போகட்டும் எனக்கு நல்ல இடத்தில் திருமணம் நடக்கத்தான் போகிறது.



அன்று சுகுணா தனது கணவர் சந்திரனுடன் வந்திருந்தாள். அவளுடைய கணவனைப் போன்று அவளுடைய குழந்தையும் அழகாகத்தான் இருக்கிறான். முன் கூடத்தில் அண்ணனுடன் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது நான் மட்டும் சமையலறையில் அந்தக் குழந்தையுடன் கொஞ்சிக்கொண்டிருந்தேன்.



நானும் ஒரு நாள் சுகுணாவைப்போல ஒரு பெரிய உத்தி யோகத்தரைக் கலியாணஞ் செய்வேன். எனக்கும் அழகான ஓரு குழந்தை பிறக்கும். அந்தக் குழந்தையை எப்பொழுதும் என்னிடம் வைத்துக் கொஞ்சுவேன். அப்போது என் கணவர் தன்னிடம் எனக்கிருந்த அன்பு குறைந்து விட்டதென்று செல்லமாகக் குறைப்படுவார்.



நான் சுகுணாவின் குழந்தையை நெஞ்சோடு அணைத்து அதன் கன்னங்களை மாறி மாறி முத்தமிடுகிறேன். குழந்தை கன்னங் குழியச் சிரிக்கிறான். அவனுடைய மிருதுவான கேசங்கள் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கின்றன.



குழந்தை தன் பிஞ்சுக் கரங்களால் என் மார்புச் சட்டையைப் பிடித்து இழுக்கிறான். கற்பனையில் எனக்கு ஏதேதோ ஆசைகள் எழுகின்றன. எனக்கு நாணமாக இருக்கிறது.



நான் வழுகியிருந்த மேலாடையைச் சரிப்படுத்துகிறேன்.

பால் கொடுக்கலாமென்றால், பாற்காரன் காலந்தாழ்ந்தும் இன்னும் வரவில்லையே!



சுகுணா வந்து குழந்தைக்குப் பாலூட்டுகிறாள். குழந்தை செய்யும் குறும்புத்தனங்களை எனக்குச் சொல்லும்போது அவளுக்கு பெருமை யாக இருக்கிறது. சுகுணாவைப்போல் நானும் என்றுதான் பெருமைப் படப் போகிறேனோ?



சுகுணாவின் பேச்சு திசை திரும்புகிறது. “பூமணி! அண்ணர் உமக்கு எப்ப கலியாணஞ் செய்துவைக்கப் போகிறார்?”



“இப்ப என்ன அவசரம் ? ஆறுதலாய்ச் செய்யிறது. கலியாணஞ் செய்தால் சுதந்திரமாய் இருக்கேலாது. குழந்தை குட்டியென்று பெரிய கரைச்சல்....”



சுகுணா சிரிக்கிறாள். அவளும் இப்படித்தான் திருமணம் நிறைவேறுமுன்பு சொல்லிக்கொண்டிருந்தாளா? அல்லது எனது ஆதங்கத்தைப் புரிந்துகொண்டிருப்பாளா?



சுகுணாவும் அவளது கணவரும் எங்களிடம் விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார்கள்.



அண்ணன் என்றும்மில்லாத மகிழ்வுடன் இருக்கிறார்.



“பூமணி! கடவுள் கண்ணைத் திறந்துவிட்டார். நான் பட்ட கஷ்டத்துக்கெல்லாம் பலன் கிடைத்து விட்டது. சுகுணாவின் கணவன் சந்திரனுக்கு ஒரு தம்பி இருக்கிறானாம், கொழும்பில் ஒரு கம்பனியில் வேலை; கைநிறையச் சம்பளம் கிடைக்கிறது. நானும் சந்திரனும் இதைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம். அவர்களுக்கு இந்தச் சம்பந்தத்தில் நல்ல சந்தோஷம். வருகிற மாதமே திருமணத்தை நடத்திவிடவேண்டுமென்று சொல்கிறார்கள். ”



அண்ணா இதனை என்னிடம் கூறும்போது உணர்ச்சி வசப்படுகிறார். ஆனந்த மிகுதியால் அவரது கண்கள் கலங்குகின்றன.



என்னுள்ளமும் மகிழ்ச்சியால் துள்ளுகிறது. என்னுடைய நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகின்றன. இன்னும் ஒரு மாதத்தில் நான் ஒரு பெரிய உத்தியோகத்தரின் மனைவியாகி விடுவேன்.

அண்ணனிடம் எந்தப் பதிலையும் சொல்ல என்னால் முடிய வில்லை. சமையல் அறைக்குள் ஒடிவிடவேண்டும் போல் இருக்கிறது. எனது மகிழ்ச்சியைக் கண்டுகொண்டால் அண்ணன் கேலி செய்வார். எனக்கு வெட்கமாக இருக்கும்.



எனக்குத் திருமணஞ் செய்துவைக்க அண்ணன் இவ்வளவு காலமும் எவ்வளவு கஷ்டப்பட்டார். இப்போது திருமணம் தானாகவே வந்து கைகூடப்போகிறது. ஏதாவது காரணங்களால் இம்முறையும் என் திருமணம் குழம்பிவிடாமல் இருக்கவேண்டுமே.



“பூமணி, எங்கள் இருவருக்கும் ஒரே பந்தலில் திருமணம் நடக்கப்போகிறது. சந்திரனின் தங்கையைத்தான் நான் திருமணஞ் செய்யப்போகிறேன்.”



‘ஐயோ அண்ணா!’ என்று அலற வேண்டும்போல இருக்கிறது. எனக்கு எல்லாம் ஒரே நொடியில் விளங்குகின்றன.



சந்திரனின் தங்கை ஒரு குருடி. எனக்கு வாழ்வளிப்பதற்காக ஒரு பிறவிக் குருடியை அண்ணன் திருமணஞ் செய்யப்போகிறார். அண்ணா வுக்கு முன்னால் என்னால் நிற்கமுடியவில்லை. நான் சமையல் அறைக்குள் ஒடுகிறேன்.



அண்ணன் சிரிக்கிறார். திருமணத்தைப்பற்றிச் சொன்னதும் எனக்கு வெட்கம் ஏற்பட்டுவிட்டதென நினைத்துச் சிரிக்கிறாரா? எனக்கு எல்லாமே மங்கலாகத் தெரிகின்றன.



இரவில் படுக்கும்போது தூக்கமே வருவதில்லை, என் தலையே வெடித்துவிடும்போல் இருக்கிறது.



அண்ணா! எனக்குத் திருமணஞ் செய்துவைப்பதற்குப் பணம் வேண்டுமென்ற காரணத்தால், நான் பெரியவளாகியதும் நீ மேலே தொடர்ந்து படிக்காமல், உன் உயர்வைக் குறுக்கிக்கொண்டு ஊரிலேயே உத்தியோகத்தில் அமர்ந்துகொண்டாய்.



உழைக்கத் தொடங்கியதும் உனது பணத்தில் உனக்காக ஒன்றும் செலவு செய்யாது என் திருமணத்திற்காகப் பணத்தைச் சேர்த்து வைத்தாய்.



அழகான பெண்ணுடன் வசதியான வாழ்க்கையை உனக்கு அமைத்துத்தரப் பலர் முன்வந்தபோதும் எனது திருமணத்தின் பின்புதான் உனக்கு திருமணம் என்று திடசித்தம் செய்துகொண்டாய்.

இப்போது எனக்காகக் குருட்டு வாழ்க்கை நடத்தவும் திட்டமிட்டு விட்டாயா?



நான் இதற்கு ஒரு போதும் சம்மதிக்கமாட்டேன். இந்தத் திருமணம் நடக்க ஒரு போதும் விடமாட்டேன். எனக்குத் தெரியும், நீ என் பேச்சைக் கேட்கமாட்டாய்.



எத்தனையோ இரக்கமற்ற இரவுகள் என்னைச் சித்திரவதை செய்கின்றன.



புகையிலைத் தரகர் பொன்னம்பலம் வழக்கம்போல எங்களது வீட்டுக்கு வந்து போய்க்கொண்டுதான் இருக்கிறார்.



அன்றொருநாள் தனிமையில் என்னிடம் கேட்கத்தயங்கியதை இன்று துணிவுடன் கேட்கிறார். நான் அதற்குச் சம்மதிக்கிறேன். என் மனதில் என்றுமில்லாத சாந்தி நிலவுகிறது.



விடிவதற்கு இன்னும் சிறிது நேரந்தான் இருக்கிறது. பொன்னம்பலம் எங்கள் வீட்டு வாசலில் காருடன் எனக்காகக் காத்திருக்கிறார். அவர் மிகவும் நல்லவர்; எனக்கு ஒரு குறையுமில்லாமற் காப்பாற்றுவார்



அண்ணன் அமைதியாகத் தூங்கிக்கொண்டிருக்கிறார்.



“அண்ணா ! உனக்கு மட்டும் தான் தியாகம் செய்யத் தெரியுமென்று எண்ணாதே. நான் உன் தங்கை எனக்கும் செய்யத் தெரியும் .”



கலங்கும் கண்களால் மானசீகமாக அண்ணனிடம் விடை பெறுகிறேன்.



அண்ணன் நித்திரையில் புன்னகை பூக்கிறார்.



கீழ்வானம் சிவந்து ஒளிமயமாகத் தெரிகிறது. எங்கோ பறவைகள் இனிமையாகப் பாடுகின்றன.



விடிந்துவிட்டது.

(1970இல் இலங்கை சாகித்தியமண்டலம் நடாத்திய அகில இலங்கைச் சிறு கதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை.)

+++++++++++++++++++++++=

சங்கு சுட்டாலும்...



பொன்னுத்துரை மாஸ்டர் தமிழ்ப் பாடசாலைக்கு மாற்றலாகி வந்த பின்னர் எங்களது கிராமத்தில் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.



நான் சிறுவனாக இருந்தபோது விளையாடித்திரிந்த செம்மண் புழுதி நிறைந்த பிள்ளையார் கோவில் வீதி, இப்போது அழகான தேரோடும் வீதியாக மாறி விட்டது. கோவிலின் வலதுபுறத்தில் இருந்த பனை வடலிகளை அழித்து, தூர்ந்துபோயிருந்த கேணியையும் நிரப்பிய பின்பு, அப்பகுதி இப்போது வெட்டை வெளியாக அழகாகத் தெரிகிறது.



கோவிலின் முன் புறத்தில் தெருவோரமாக அடர்த்தியாக வளர்ந்திருந்த சவுக்க மரங்களையும் மகிழ மரங்களையும் தழுவிவரும் இதமான காற்று, பெயர் பெற்ற யாழ்ப்பாண வெயிலின் தகிப்பைத் தாங்க முடியாது தவித்துக்கொண்டிருக்கும் கிராமத்து மக்களுக்கு, எவ்வளவோ இன்பத்தைக் கொடுக்கும், மின்சாரக் கம்பங்கள் நாட்டுவதற்காக, அந்த அருமையான மரங்களில் சிலவற்றை இப்போது வெட்டிச் சாய்த்து விட்டார்கள். ஆனாலும் அந்தச் சூழலில் தவழும் குளிர்மை இன்னும் குறையாமல் இருக்கிறது.



வழிப்போக்கர்கள் தங்கிச் செல்வதற்காகக் கட்டப்பட்டிருந்த அந்த மடம், எப்போதோ வாசிகசாலையாக மாற்றப்பட்டிருந்த போதிலும், இப்போது இன்னும் விஸ்தரிக்கப்பட்டிருப்பதைக் கவனிக்க முடிகிறது.

நான்கைந்து வருடங்களுக்குள்ளாக இவ்வளவு மாற்றங்களும் நிகழ்ந்துவிட்டன. கொழும்பில் வேலை பார்க்கும் நான், ஒவ்வொரு தடவையும் கிராமத்துக்கு வரும்போது இந்த மாற்றங்களைப் படிப்படியாக அனுபவித்து மகிழ்ந்திருக்கிறேன்.



பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் பொன்னுத்துரை மாஸ்டர் எங்கள் கிராமத்துத் தமிழ்ப் பாடசாலையில் எனக்குத் தமிழ்ப் பாடஞ் சொல்லித்தந்திருக்கிறார். அதன் பின்னர் அரசினரால் வெளி யிடங்கள் மாற்றஞ் செய்யப்பட்டு, அங்கெல்லாம் சேவை புரிந்து விட்டு, மீண்டும் எங்கள் கிராமத்துப் பாடசாலைக்கே மாற்றலாகி வந்து விட்டார். பொன்னுத்துரை மாஸ்டர் வெளியிடங்களுக்கு மாற்றலாகிப் போகாதிருந்திருந்தால் எங்களது கிராமம் இன்னும் எவ்வளவோ சிறப்பான மாற்றங்களை அடைந்திருக்கும்.



எங்களது கிராமத்தின் இளஞ் சந்ததியினர் எல்லோருக்குமே பொன்னுத்துரை மாஸ்டரிடம் தனி மரியாதையுண்டு. அதற்குக் காரணம், அநேக மாணவர்கள் அவரிடம் கல்வி கற்றோம். அவரது உயர்ந்த கருத்துக்களினால் கவரப்பட்டிருக்கிறோம். சமூக நலனுக்காக அவரது வாழ்வின் பெரும்பகுதி அர்ப்பணமாகி வருவதை உணர்ந்திருக்கிறோம்.



பொன்னுத்துரை மாஸ்டரின் எளிமையான தோற்றமே எல்லோரையும் இலகுவில் கவர்ந்துவிடும். பாடசாலைக்குப் போகும் நேரங்களைத் தவிர மற்ற நேரத்தில் அரையில் ஒரு நாலுமுழ வேட்டியுடனும் தோளில் ஒரு சால்வையுடனுந்தான் அவரைப் பார்க்கலாம். அவரது கரிய தோற்றத்தில் பளிச்சென்று தெரியும் திருநீற்றுப் பூச்சும், நெற்றியில் எப்போதும் துலங்கிக் கொண்டிருக்கும் சந்தனப் பொட்டும், எவரையும் வசீகரிக்கும் புன்னகையும், அவரை அறிந்து கொள்ளாதவர்களைக்கூட அவரிடம் பணிந்து நடக்க வைத்துவிடும்.



பொன்னுத்துரை மாஸ்டருக்கு வயது ஐம்பதுக்கு மேலிருக்கும். திருமணமாகவில்லை. தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார். சமூக சேவையிலும், ஆன்மீகத்துறையிலும் தனது வாழ்வின் பெரும் பகுதியைச் செலவழித்ததனாலேதான் அவருக்குத் திருமணஞ் செய்வதில் நாட்டம் ஏற்படவில்லையோவென நான் அடிக்கடி எண்ணுவதுண்டு.

கிராமத்துக்கு வரும்போதெல்லாம் பொன்னுத்துரை மாஸ்டரைச் சந்திக்காமல் நான் கொழும்புக்குத் திரும்புவதில்லை. அவரைப் பார்த்துச் சிறிது நேரம் உரையாடாமல் இருந்துவிட்டால் என் மனதில் நிறைவு எற்படுவதில்லை.



பொன்னுத்துரை மாஸ்டரை மாலை வேளைகளில் அநேகமாக வாசிகசாலையில் அல்லது கோவிலின் சுற்றாடலில் பார்க்கலாம். இந்தத் தடவை நான் கிராமத்துக்கு வந்தபோது பொன்னுத்துரை மாஸ்டரைப் பல இடங்களில் தேடியும் சந்திக்க முடியவில்லை.



பிள்ளையார் கோவில் குருக்களிடம் பொன்னுத்துரை மாஸ்டரைப் பற்றி விசாரித்தபோது, அவர் வெறுப்போடு கூறிய பதில் என்னைத் திடுக்கிட வைத்து விட்டது.



பொன்னுத்துரை மாஸ்டர் சம்சாரியாகிவிட்டாராம். அவருக்குப் பொது விஷயங்களில் ஈடுபடுவதற்கு இப்போது நேரம் இருப்ப தில்லையாம். குருக்கள் ஏனோ பொன்னுத்துரை மாஸ்டரைப் பற்றிய விபரங்களை தொடர்ந்து கூறுவதற்கு விரும்பவில்லை.



என் மனதில் அந்தரம் புகுந்துகொண்டுவிட்டது. என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. பொன்னுத்துரை மாஸ்டருக்கு என்ன நடந்துவிட்டது?



வாசிகசாலையிலிருந்து சீட்டு விளையாடிக்கொண்டு, வாசிப்பவர் களுக்குத் தங்களால் கஷ்டம் ஏற்படுமே என்பதையும் நினைத்துப் பாராமல் பெரிதாகச் சத்தம் செய்துகொண்டு வாசிகசாலையின் ஒழுங்குகளையும் மீறிப் பீடி புகைத்துக்கொண்டு, சதா ஊர்வம்பு பேசி மற்றவர்களைக் கேலியும் கிண்டலுஞ் செய்துகொண்டு காலங் கடத்திவரும் கூட்டமொன்று எங்கள் ஊரில் இருக்கிறது.



நான் வாசிகசாலையை அடைந்தபோது, நானும் பொன்னுத்துரை மாஸ்டரிடம் நன்மதிப்பு வைத்திருப்பவன் என்ற காரணத்தினாலோ ஏனோ அவர்கள் பொன்னுத்துரை மாஸ்டரைப் பற்றிக் கதைக்கத் தொடங்கினார்கள்.



“கிழட்டு வயசிலும் பொன்னுத்துரை வாத்தியாருக்கு கலியாணம்!”

“ இந்த காலத்திலை யாரைத்தான் நம்புகிறது!”



“பென்ஷன் எடுக்கிற வயசிலும் ஒரு கலியாணமோ?”



“இதுவும் அவருடைய சோஷல்சேர்வீஸ் தான்.....”



பொன்னுத்துரை மாஸ்டரைப்பற்றி அவர்கள் தொடர்ந்தும் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.



தீப்பந்தம் ஒன்றை எடுத்து எனது உடலில் மாறிமாறிச் சுடுவதைப்போன்று அவர்கள் சொற்களால் என்னை வதைத்தார்கள். என்னால் தொடர்ந்து அவர்களது பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டு இருக்க முடியவில்லை. எனது உடலெல்லாம் எரிச்சல் எடுப்பதைப் போலிருந்தது. உடனே எழுந்து வந்துவிட்டேன்.




பொன்னுத்துரை மாஸ்டரைச் சந்தித்து இப்படியெல்லாம் மற்றவர்கள் கேவலம் பண்ணும்படி ஏன் நடந்துகொண்டீர்கள்?’ என அவரிடம் கேட்க வேண்டுமென்ற வேகம் என்னுள் துளிர்த்தெழுந்தது.



பொன்னுத்துரை மாஸ்டரின் வீட்டை நான் அடைந்தபோது, வெளி விறாந்தையிலே கிடந்த, ‘ஈசிச்செயரில்’ அவர் சாய்ந்திருந்தார். என்னைக் கண்டதும் வழமையான புன்னகையோடு “வா தம்பி , இப்படி உட்கார் ” என வரவேற்றார்.



அவரை நான் கூர்ந்து கவனித்தேன். அவர் என்னைப் புன்னகையோடு வரவேற்றபோதும், அந்தப் புன்னகையில் நிறைவைக் காணமுடியவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு பார்த்ததைவிட, அவர் இந்தத் தடவை மிகவும் சோர்வுடன் காணப்பட்டார். அவரிடம் வழக்கமாக இருக்கும் கம்பீரமும் கலகலப்பும் எங்கோ மறைந்து விட்டன. நல்ல எண்ணங்களையும் நல்ல செயல்களையும் மனிதன் மறந்து விடும்போது எல்லாவற்றையுமே இழந்து விடுகிறானா?,



எப்படி பொன்னுத்துரை மாஸ்டரிடம் பேச்சைத் தொடங்குவது என யோசித்துக் கொண்டிருந்த வேளையில், அவராகவே கதைக்கத் தொடங்கினார்.

“ நான் திருமணம் செய்துவிட்டேன் என்பதைக் கேள்விப்பட்ட பின்புதான், நீ இங்கு வந்திருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும். இது எனது சொந்த விஷயம். இதில் தலையிடுவதற்கு யாருக்குமே உரிமை கிடையாது. மற்றவர்கள் எனது விஷயங்களில் தலையிடுவதை நான் ஒருபோதும் விரும்பமாட்டேன். ”



தொடக்கத்திலேயே எனக்கு வாய்ப்பூட்டுப் போடுகின்றாரா?



“ சொந்த விஷயமாக இருந்தாலும், சமூகம் ஏற்றுக் கொள்ளாத ஒரு செயலை புரியும்போது, பலமுறை சிந்திக்கவேண்டுமென நீங்கள் தானே அடிக்கடி கூறுவீர்கள்.”



அவர் செய்தது எனக்குப் பிடிக்கவில்லை என்பதனை நாசூக்காக அவர் அறியும்படி செய்தேன்.



அப்போது வீட்டின் உள்ளே இருந்து ஒரு பெண் எனக்கும், மாஸ்டருக்கும் தேநீர் கொண்டுவந்தாள்.



யாரது, தேவகியக்காளா? நான் அதிர்ந்துபோய் உட்கார்ந்து விட்டேன். தேவகியக்காளையா பொன்னுத்துரை மாஸ்டர் திருமணஞ் செய்திருக்கிறார்.?



தேவகியக்காள் புன்னகையுடன் தேநீரைக் கொடுத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.



நான் சிறுவனாக இருக்கும்போது எனது மனதிலே பெருந் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சியொன்று தேவகியக்காளைப் பார்த்ததும் எனது மனதில் உறுத்தத் தொடங்கியது.



எனக்கு அப்போது பத்து வயதுதான் இருக்கலாம். தேவகியக்காளின் வீடு எங்களது வீட்டிலிருந்து கொஞ்சத் தூரத்திலேதான் இருக்கிறது. நான் அடிக்கடி தேவகியக்காளிடம் செல்வதுண்டு. தேவகியக்காளும் அவளது தாயும் ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்து வந்தார்கள். தேவகியக்காளின் தந்தை வெகு காலத்துக்கு முன்பே இறந்துவிட்டாராம். அவர்களுக்கு வேறு யாருமே துணையில்லை.

அப்போது தேவகியக்காளுக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. தேவகியக்காளின் சொந்த மச்சான் தேவகியக்காளைத் திருமணஞ் செய்வதாக இருந்தார். திருமணத்திற்கு ஒருமாதம் இருக்கையிலே அவர்கள் அதற்கு வேண்டிய ஒழுங்குகளைச் செய்துகொண்டிருந்தார்கள். தேவகியக்காளும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தாள்.



ஆனால் சிறிது நாட்களில் நிலைமை மாறிவிட்டது. நான் தேவகியக்காளிடம் சென்றபோது அவள் அழுது கொண்டிருந்தாள். தேவகியக்காள் அழுவதைப் பார்த்தபோது நானும் கலங்கி விட்டேன்.



தேவகியக்காளைத் திருமணம் செய்வதாக இருந்த அவளது மச்சான், கடைசி நேரத்தில் மறுத்துவிட்டாராம். அவருக்கு வேறு இடத்தில் நல்ல சீதனம் கொடுக்க யாரோ முன்வந்ததினால், அத்திருமணம் தடைப்பட்டுவிட்டது. தேவகியக்காளுக்குச் சீதனம் கொடுப்பதற்கு அவர்களிடம் எதுவுமே இல்லை.



அதன் பின்னர் பல வருடங்களாக எத்தனையோ இடங்களில் தேவகியக்காளுக்குத் திருமணம் பேசினார்கள். அப்போதெல்லாம் சீதனம் ஒருபெரும் பிரச்சனையாக இருந்ததால், தேவகியக்காளுக்குத் திருமணம் நடக்காமல் போய்விட்டது.



தேவகியக்காளுக்கு வயது ஏறிக்கொண்டிருந்தது அவளது தாயும் நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் சாய்ந்துவிட்டாள்.



எனக்கு உத்தியோகம் கிடைத்த பின்னர், நான் வெளியிடங்களிலேயே காலத்தைக் கழித்ததினால் தேவகியக்காளைப் பற்றி அறிந்துகொள்ள முடியவில்லை. அவளைப்பற்றிய நினைவுகளும் படிப்படியாக எனது நினைவிலிருந்து அகன்றுவிட்டன.



இன்றுதான் திடீரெனப் பொன்னுத்துரை மாஸ்டரின் வீட்டில், வெகுகாலத்துக்குப் பின் தேவகியக்காளை மீண்டும் பார்க்கிறேன்.



பொன்னுத்துரை மாஸ்டரின் செருமல் சத்தம் என் நினைவுகளைத் தடை செய்கிறது.



“தேவகிக்குத் துணையாக இருந்த அவளது தாயும் இறந்துவிட்டாள். அனாதையாகிவிட்ட ஒர் ஏழைக்கு இனிமேல் வாழ்வே கிடைக்கப்போவதில்லை என்றிருந்த ஒரு பெண்ணுக்கு நான் வாழ்வளித்திருக்கிறேன். இதை நீயும் தவறென்று சொல்லுகிறாயா?”



நான் ஒரு கணம் சிந்தித்தேன். எனது மனம் அவர் செய்ததைச் சரியென ஒப்புக்கொள்ள மறுத்தது.



“வயது சென்ற உங்களைத் திருமணம் செய்து கொள்வதால் ஒர் இளம் பெண் என்ன வாழ்க்கையை அனுபவித்து விடப்போகிறாள்?- ” என்னையும் மீறி நான் வார்த்தைகளைக் கொட்டிவிட்டேன்.



“என்னால் அவளுக்கு எவ்விதமான இன்ப வாழ்க்கையையும் கொடுக்கமுடியாது என்பது உண்மைதான். அவளை நான் பதிவுத் திருமணம் மட்டுந்தான் செய்திருக்கிறேன். சட்டத்தின்படி அவள் என் மனைவி சட்டத்தைத் தவிர்ந்த எவ்வகையிலும் அவள் எனக்கு மனைவியாகவில்லை எனக்கொரு துணையாகத்தான் இருக்கிறாள்.”



மென்மையான மலர்ச் செடியை நடுவில் வைத்து அதனைச் சுற்றிச் சட்டமென்ற தீப்பிழம்பினால் வட்டமாக வரம்பு கட்டியிருக்கிறாரா பொன்னத்துரை மாஸ்டர்? என்னால் எதுவும் பேசமுடியவில்லை.. தொடர்ந்தும் பொன்னுத்துரை மாஸ்டர்தான் பேசினார்.



“எனது வயிற்றில் வெகு காலமாக இருந்து வந்த நோயைச் சிறிது காலத்துக்கு முன்புதான் புற்றுநோய் எனக் கண்டிருக்கிறார்கள் வைத்தியர்கள். நோய் நன்றாக முற்றி உடலெங்கும் பரவி விட்டதாம். புற்று நோயைக் குணப்படுத்த முடியாது என்பது எனக்குத் தெரியும் ஆனாலும்......”



ஐயோ, எவ்வளவு கொடூரத்தனமாக ஒரு பெண்ணின் வாழ்வோடு இவர் விளையாடியிருக்கிறார்? வாழ்வின் இறுதிக் காலத்தில் திருமணஞ் செய்து ஒரு பெண்ணின் வாழ்வையே கருகச் செய்ய வேண்டுமா?



நான் இருந்த இடத்தில் ஆயிரம் ஈட்டிகள் ஒரே சமயத்தில் திடீரென முளைத்துக் கழுவாய்களாக என்னைத் துளைப்பதுபோல் இருந்தன. என்னால் அங்கு இருக்க முடியவில்லை. எழுந்துவிட்டேன்.

எனது தவிப்பைக் கண்டதும் பொன்னுத்துரை மாஸ்டர் என்னை அமைதியாக இருக்கும்படி கைகளினால் சைகை காட்டிவிட்டு மேசையில் இருந்த தேநீரை எடுத்து மிகவும் சாவதானமாகப் பருகினார்.



எனக்கு வைக்கப்பட்டிருந்த தேநீர் ஆறிக்கிடந்தது.



“நன்றாகச் சிந்தித்த பின்தான் நான் தேவகியைத் திருமணஞ் செய்திருக்கிறேன். இன்று நான் செய்ததைத் தவறெனக் கருதுபவர்கள் யாருமே ஏழ்மை நிலையில் அனாதரவாகிவிட்ட அவளது வாழ்வை மலரச் செய்ய எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. யாரும் எதையும் இலகுவாகக் கதைத்துவிடலாம். ஆனால் எதையும் சாதனையிற் காட்டுவதுதான் கடினமானது.



சட்டத்தின்படி தேவகி எனது மனைவி. நான் இறந்த பின்னர், அரசாங்கத்தினால் வழங்கப்படும் பென்ஷன் பணம் அவளுக்குக் கிடைத்துக்கொண்டேயிருக்கும். எனது வாழ்க்கை முடிந்த பின்னரும் அவள் சீவிப்பதற்கு வழியமைத்துக் கொடுப்பதற்காகத்தான் தேவகியைச் சட்டத்தினால் எனது மனைவியாக்கிக் கொண்டேன். வாழ வழியற்ற ஒர் இளம் பெண்ணுக்கு இந்த ஏழை வாத்தியாரால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லையே ” பொன்னுத்துரை மாஸ்டரின் கண்களில் நீர் பளபளத்தது.



நான் பதில் ஏதும் கூறமுடியாமற் கண்களை மூடிக்கொண்டேன். திடீரெனப் பொன்னுத்துரை மாஸ்டரின் உருவம் பெரிது பெரிதாகிக் கொண்டே வந்து, அந்த அறை முழுவதும் நிறைந்து, அதற்கப்பாலும் பெருகி எங்கும் வியாபித்தது போன்று என் மனக்கண்களுக்குத் தோன்றியது.



-கலசம் 1972.

+++++++++++++++++++++++

ஒரு சின்னப் பையன் அப்பாவாகிறான்



இரவு எட்டு மணியாகிவிட்டால் எனக்கு நித்திரை வந்துவிடும். சாப்பிட்டுவிட்டுப் படுத்துவிடுவேன். இன்றைக்கு நான் இன்னும் படுக்கைக்குப் போகவில்லை. கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் மணி ஒன்பது அடித்தது. எனக்கு நித்திரை வரவில்லை. கொழும்பிலிருந்து யாழ்தேவி ‘றெயிலில்’ அக்கா வருவா. அவவுடன் அத்தானும் வருவார். அக்காவைப் பார்க்கிறதுக்கு எனக்கு ஆசையாக இருக்கிறது. போன வருஷந்தான் அத்தான் அக்காவைக் கலியாணஞ் செய்து கொழும்புக்குக் கூட்டிக்கொண்டு போனவர். அத்தானுக்குக் கொழும்பிலை தான் வேலை. அக்காவுக்கு என்னிடம் நல்ல விருப்பம். கலியாணஞ் செய்யிறதுக்கு முன்னம், அக்கா எனக்கு ஒவ்வொரு நாளும் குளிக்கவாத்துவிடுவா. தலை சீவிவிடுவா. இரவில் பாடமுஞ் சொல்லித் தருவா.



அண்ணன்மார் இரண்டு பேரும் ‘போர்டிங்’கிலை இருந்து படிக்கினம். அவையளை எனக்குப் பிடிக்காது. அவையளுக்கு என்னுடைய தலையிலை நோகக் கூடியதாகக் குட்டத்தான் தெரியும் . வேறையொண்டுந் தெரியாது. அப்பாவுக்கும் கொழும்பிலைதான் வேலை. நான் வீட்டிலை கடைக்குட்டி. அதனால் எனக்குக் கொஞ்சம் செல்லம்.



அக்கா கொழும்புக்குப் போனபிறகு அவவின் எண்ணம் எனக்கு அடிக்கடி வரும். அக்காவை உடனே பார்க்கவேணும் போல இருக்கும். அக்கா கொழும்பிலிருந்து அடிக்கடி வீட்டுக்குக் கடுதாசி எழுதுவா. அதை நான் எழுத்துக் கூட்டி வாசிப்பேன். அதை வாசிக்கிற பொழுது எனக்குச் சந்தோஷமாக இருக்கும். அக்கா மிச்சம் நல்லவ நான் குழப்படி செய்தாலும் ஒருநாளும் அடிக்கிறது இல்லை. நான் கொஞ்சம் குழப்படிதான். ஆனால் அக்கா சொன்னால் கேட்டு நடப்பன். எந்தக் குழப்படியும் செய்யமாட்டேன்.



வீட்டுப் படலையடியில் கார் வந்து நிற்கிறது. “ அம்மா ... அம்மா... அக்கா வந்திட்டா ” என்று கூவிக்கொண்டு சந்தோஷத்துடன் துள்ளிக் குதித்துப் படலையடிக்கு ஓடுகிறேன். மற்ற நாட்களில் இருட்டிவிட்டால் நான் வீட்டுக்கு வெளியே வரவும் மாட்டேன். இருட்டைக் கண்டால் எனக்கு சரியான பயம்.



அம்மா அரிக்கன் லாந்தரை எடுத்துக்கொண்டு எனக்கு பின்னால் வருகிறா. அக்காவும் அத்தானும் காரில் இருந்து இறங்குகிறார்கள். எனக்கு அக்காவின் கையைப் பிடித்துக்கொண்டு துள்ள வேண்டும்போல் இருக்கிறது. அக்கா கையில் ஏதோ பார்சல் வைத்திருக்கிறா. அதனால் அக்காவின் கையை நான் பிடிக்கவில்லை. பார்சலில் என்ன இருக்குமென்டு எனக்குத் தெரியும். சொக்கிலேட், பிஸ்கட், இனிப்பு எல்லாந்தான் இருக்கும். அக்கா எனக்கு ஏதும் விளையாட்டுச் சாமான்களும் கொண்டு வந்திருப்பா.



“இண்டைக்கு றெயிலிலை சரியான சனம். இருக்கிறதுக்கும் இடம் கிடைக்கேல்லை” அம்மாவிடந்தான் அக்கா சொல்லுகிறா. அத்தான் கார்க்காரனுக்குக் காசைக் கொடுத்துவிட்டுச் சூட்கேசையும் தூக்கிக் கொண்டு நடக்கிறார். நானும் அவர்களுக்குப் பின்னால் நடக்கிறேன்.



அக்கா என்னோடை ஏன் கதைக்கவில்லை? இருட்டில் நான் நிற்கிறதைக் கவனிக்கவில்லையோ? அக்காவுக்குத் தெரியும்படியாக முன்னுக்குப் போகிறேன். அக்கா இப்பவும் என்னோடை கதைக்கவில்லை. அக்கா பாவம் றெயிலில் வந்தபடியால் சரியான களைப்புப்போல இருக்கு. அக்காவைச் சுமக்கவிடக்கூடாது. கையில் இருக்கும் பார்சலை வாங்கிக்கொள்வதற்காக நான் கையை நீட்டுகிறேன். அக்கா ஒன்றும் பேசாமல் பார்சலைக் கொடுக்கிறா.



வீட்டுக்கு வந்ததும் அத்தான் தன் சூட்கேசை மேசையில் வைக்கிறார். நானும் பார்சலை அதற்குப் பக்கத்தில் வைக்கிறேன். அக்கா அதையெல்லாம் எடுத்துக்கொண்டு அறைக்குள் போகிறா. அத்தானும் அக்காவுக்குப் பின்னால் போகிறார். இரண்டு பேரும் உடுப்பை மாற்றிக்கொண்டு முகம் கழுவுவதற்குக் கிணற்றடிக்குப் போகிறார்கள்.



அக்காவும் அத்தானும் முகம் கழுவிக்கொண்டு வந்த பிறகு சாப்பிட உட்காருகிறார்கள். நானும் அவர்களோடு உட்காருகிறேன். அம்மா எல்லோருக்கும் சாப்பாடு போடுகிறா.



அக்கா ஏதோ கொழும்புப் புதினங்களையெல்லாம் அம்மாவிடம் சொல்லிக்கொண்டு சாப்பிடுகிறா. அத்தானும் எதோவெல்லாம் சொல்லுகிறார். அம்மா ஊர்ப் புதினங்களைச் சொல்லுகிறா.



முருங்கைக்காய்க் கறியென்றால் அத்தானுக்கு நல்ல விருப்பமாம். அத்தானுக்குக் கொஞ்சம் முருங்கைக்காய் கறி போடும்படி அக்கா சொல்லுகிறா. அம்மா அத்தானுக்கு நிறைய முருங்கைக்காய்க் கறி போடுகிறா.



அவர்கள் கதைப்பதையெல்லாம் கேட்டுக்கொண்டு நான் சாப்பிடுகிறேன். அக்காவின் முகத்தை அடிக்கடி ஆசையோடு நிமிர்ந்து பார்க்கிறேன் . அக்கா என்னைப் பார்க்கவில்லை. என்னுடன் ஒரு கதையும் பேசவில்லை அக்கா அத்தானைத்தான் கவனித்துக் கொள்ளுகிறா.



அத்தானும் அக்காவும் சாப்பிட்டு முடிந்ததும் கைகழுவப் போய்விட்டார்கள். நான் இன்னும் கோப்பையில் இருந்த அரைவாசிச் சோற்றைக்கூடச் சாப்பிடவில்லை. என்னால் சாப்பிட முடியவில்லை. அக்கா என்னுடன் ஏன் கதைக்கவில்லை? சாப்பாடு தொண்டைக்குக் கீழே இறங்குவதற்குக் கஷ்டமாக இருக்கிறது. கலியாணம் முடிச்சபிறகு அக்கா எவ்வளவோ மாறி விட்டா. அவவுக்கு அத்தான் தான் பெரிசாப் போச்சு. எனக்கு கண்கள் கலங்குகின்றன. அழுகை வந்துடும் போல் இருக்கிறது.



“ஏனடா மணி, மிளகாயைக் கடிச்சுப்போட்டியே? தண்ணியைக் குடி,” என்று சொல்லி அம்மா மூக்குப்பேணியுடன் தண்ணீரை எனக்கு முன்னால் வைக்கிறா. நான் ‘மடக் மடக்’ கென்று தண்ணியைக் குடிச்சிட்டுச் சோற்றைக் கையால் அளைந்தபடி இருக்கிறேன்.



அக்காவும் அத்தானும் பாயை எடுத்துக்கொண்டு அறைக்குள் போகிறார்கள்; அக்கா அறைக் கதவைச் சாத்திறா.



எனக்கு புரையேறுகிறது. முந்தியென்றால் அக்கா என்னுடன் தான் படுப்பா. இப்ப அத்தானைக் கலியாணஞ் செய்தபிறகு அறைக்குள் படுப்பதற்குப் போகிறா. இண்டைக்கென்றாலும் நான் அக்காவுடன் படுக்கலாமெண்டு ஆசையோடு இருந்தேன். அக்காவுக்கு இப்ப நான் ஒருத்தன் இருக்கிறன் என்ற நினைப்பே இல்லைப் போல இருக்கு.



எல்லாம் இந்த அத்தான் வந்த பிறகுதான் அக்கா இப்படி மாறிவிட்டா. அத்தானின் மேல் எனக்குக் கோபங் கோபமாக வருகிறது அவருக்குப் பெரிய நடப்பு. ஏன் இண்டைக்கெண்டாலும் அக்காவை என்னோடு படுக்கவிட்டால் என்ன?



எனக்கு கண்ணிலே நீர் முட்டிவிட்டது. கன்னத்திலே வழிந்து விடும்போல இருக்கிறது. அம்மாவுக்குத் தெரியாமல் கோப்பையுடன் சோற்றை வெளியே எடுத்துக்கொண்டு போகிறேன் . வெளியே இருட்டாகத்தான் இருக்கிறது எனக்கு பயம் வரவில்லை. ஏன் நான் பயப்படவேணும் ? அம்மாவுக்குத் தெரியாமல் சோற்றை எறிந்துவிட வேணும். அம்மா கண்டால் ஏச்சுத்தான் கிடைக்கும்.



எங்கோ வெளியில் படுத்திருந்த எங்களுடைய நாய் பப்பி இப்போது என்னுடன் விளையாட வருகிறது. தனது முன்னங் கால்களைத் தூக்கி என்மேல் வைத்துக் கொண்டு செல்லங் கொட்டுகிறது.



“சீ சனியன் ! இந்த நேரத்திலைதான் இவருக்கு என்னோடை விளையாட்டு”- நான் சினத்துடன் பப்பியைக் காலால் உதைக்கிறேன். அது ‘வாள் வாள் ’ என்று கத்திக்கொண்டு ஒப்பாரி வைக்கிறது.



“இந்த மூதேவி ஏன் இப்படிக் கத்துகிறது? நான் மெல்லவாய்த் தானே தட்டினனான். ஏதோ கால் முறிஞ்சுபோன மாதிரியெல்லே சத்தம் போடுது.” நான் அம்மாவுக்கு கேட்கக் கூடியதாக கூறுகிறேன்.



சோற்றை வெளியே வீசிவிட்டுக் கையைக் கழுவுகிறேன்.



எனக்கு நித்திரை வரவில்லை. பாயில் படுத்திருந்து ஒருவருக்குந் தெரியாமல் அழுகிறேன். நாளைக்கு அக்கா என்னோடை கதைச்சாலும் நான் அவவோடை கதைக்க மாட்டன். அவவுக்கு இப்ப பெரிய எண்ணம். கலியாணம் முடிச்சபிறகு கண்கடை தெரியேல்லை. அவ என்னோடை கதைக்காட்டில் எனக்கென்ன? எனக்கொண்டும் குறையமாட்டுது.

எனக்கு எப்ப நித்திரை வந்ததோ தெரியாது. காலையில் எழுந்திருக்கிறதுக்கு நேரமாகிவிட்டது.



“மணி! மேசையிலை உனக்கு பிஸ்கட் வைச்சிருக்கிறன் எடுத்துத் தின்” அக்காதான் சொல்லுகிறா.



நான் கேட்காதவன் போல அந்த இடத்தைவிட்டு நழுவுகிறேன். அவ கொண்டுவந்த பிஸ்கட் எனக்குத் தேவையில்லை.



அடுத்த வீட்டு ராணி விளையாடுவதற்கு வந்திருக்கிறாள். ராணியுடன் அவளுடைய சின்ன தம்பியும் வந்திருக்கிறான். நானும் ராணியுந்தான் விளையாடுவோம். ராணியுடைய தம்பிக்கு விளையாடத் தெரியாது. நாங்கள் வீடுகட்டி விளையாடினால் அதை உடைக்கத்தான் தெரியும். நாங்கள் மண்ணில் சோறு கறி சமைச்சுக்கொடுத்தால் அதைச் சாப்பிடவுந் தெரியாது. சும்மா அழுதுகொண்டு எங்களை விளையாட விடாமல் குழப்பத்தான் தெரியும். விளையாட வருகிறபோது தம்பியைக் கூட்டிக்கொண்டு வர வேண்டாமென்று ராணியிடம் சொன்னால் அவள் கேட்கமாட்டாள். ஒவ்வொரு நாளும் கூட்டிக்கொண்டுதான் வருவாள்.



நானும் ராணியும் அப்பா அம்மா விளையாட்டு விளையாடிக் கொண்டு இருக்கிறோம். நான் அப்பா; ராணி தான் அம்மா. அவள் மூன்று கற்களை எடுத்து அடுப்பு மாதிரி வைக்கிறாள். அந்தக் கற்களின்மேல் ஒரு சிரட்டையை வைத்து அதற்குள் தண்ணீர் ஊற்றுகிறாள். அடுப்பில் பானையை வைத்துத் தண்ணீர் ஊற்றியாகி விட்டது. உலையிலே போடுவதற்கு நான் தான் அரிசி கொணர்ந்து கொடுக்க வேண்டும்.



நான் தெருப்பக்கம் போய்க் குறுணிக் கற்களைப்பொறுக்கி கொண்டு வருகிறேன்; அதுதான் அரிசி!



நான் அரிசியைக் கொண்டுவரும்போது அத்தானும் அக்காவும் முன் விறாந்தையில் கதைச்சுக்கொண்டு இருக்கினம். ராணியின் தம்பி ஒரு பிஸ்கட்டை வைத்துக் கடித்துக்கொண்டிருக்கிறான். அக்காதான் கொடுத்திருக்க வேண்டும். நான் ராணியைப் பார்க்கிறேன். அவளும் பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள் அக்காவும் அத்தானும் எங்களு டைய விளையாட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கினம். நான் அவர்களைப் பார்க்காதவன் போல வேறு பக்கம் திரும்பிக் கொண்டு வருகிறேன்.

“டேய் மணி, இங்கை வா”- அக்கா பிஸ்கட்டைக் கையில் வைத்துக்கொண்டு என்னை கூப்பிடுகிறா.



நான் பேசாமல் இருக்கிறேன் .



“என்னடா உனக்குக் காது கேக்கலையோ? பிஸ்கட் தரக் கூப்பிட்டால் கேட்காதவன் மாதிரிப்போறாய். ”



“ எனக்கு உம்முடைய பிஸ்கட் தேவையில்லை.”



“ ஏனடா உனக்கெண்டுதானே வாங்கியந்தனாங்கள்”



“ நான் உம்மோடை கோவம். நீர் என்னோடை கதைக்கத் தேவையில்லை” நான் முகத்தைக் கோபமாக வைத்துக்கொண்டு சொல்லுகிறேன். அக்காவை நல்லாய்க் கெஞ்ச வைக்க வேணும். அதற்குப் பிறகு தான் பிஸ்கட்டை வாங்க வேணும்.



அப்போது எங்களுடைய நாய் பப்பி அங்கே வருகிறது. நான் பப்பியை உற்றுப்பார்க்கிறேன். அக்கா தான் இதற்கு பப்பி என்று பெயர் வைச்சவ. அவவுக்கு பெயர் வைக்க கூடத் தெரியாது. “பப்பன்” என்றல்லோ பெயர் வைச்சிருக்க வேணும்



பப்பி திடீரெனப் பாய்ந்து ராணியின் தம்பி வைச்சிருந்த பிஸ்கட்டை கௌவிக்கொண்டு ஓட்டம் எடுக்கிறது.



எனக்கு சிரிப்புத்தான் வந்தது. கையை தட்டிக் கொண்டு துள்ளிச் சிரிக்கிறேன்.



தம்பி ‘வீரெ’ன்று அழத் தொடங்கிவிட்டான். அவருக்கு நல்லாய் வேணும். எங்கடை அக்கா கொண்டு வந்த பிஸ்கட்டை நான் தின்னாமல் இருக்க, அவர் மட்டும் தின்னலாமோ?



தம்பி அழுவதைப் பார்க்க ராணிக்கும் அழுகை வந்துவிட்டது. அவள் வைச்சிருந்த பிஸ்கட்டைத் தம்பிக்குக் கொடுக்கிறாள். அப்போது தான் அவனுடைய அழுகை அடங்கியது. ராணி தன்னுடைய சட்டையால் தம்பியின் கண்ணீரைத் துடைத்துவிட்டாள். ராணி அப்படிச் செய்வதை பார்க்க எனக்குக் கோபம் வருகிறது.



“ராணி உன்னோடை நான் விளையாடமாட்டன். உனக்கு விளையாடத் தெரியாது. நான் அப்பா, நீ அம்மா . அப்படி யெண்டால் நான் புருஷன்; நீ பெண்சாதி. கலியாணம் முடிச்ச பிறகு பெண்சாதி புருஷனிட்டைத்தான் அன்பாயிருப்பா; தம்பியிடம் அன்பாயிருக்க மாட்டா. தம்பி இருக்கிறதையே அவ மறந்துபோயிடுவா” நான் அப்படிச் சொல்லுகிறபோது எனக்கு அழுகை வந்துவிடும் போலிருக்கிறது.



‘வெடுக்’கென்று தம்பியின் கையிலிருந்த பிஸ்கட்டைப் பறித்துப் பப்பியிடம் வீசி எறிகிறேன்.



“டேய் மணி இங்கை வாடா ”-அக்கா என்னை அதட்டிக் கூப்பிடுகிறா. நான் அக்காவைப் பார்க்கிறேன். ஏன் அக்காவின் கண்கள் கலங்கியிருக்கின்றன?



அக்கா வந்து என்னுடைய கையை பிடிச்சு இழுத்துக் கொண்டு போய் மீண்டும் அத்தானின் பக்கத்தில் உட்காருகிறா. நான் வேறெங்கோ பார்த்தபடி அக்காவின் அருகில் நிற்கிறேன்.



“ஏனடா உனக்கு என்னோடை கோவம்?”



என்னால் பேசமுடியவில்லை. அழுகை அழுகையாக வருகிறது. கண்களில் நீர் முட்டிக் கன்னத்தில் வழிகிறது.



அக்கா என்னைத் தன்னுடைய மார்போடு அணைக்கிறா. நான் அக்காவுடைய நெஞ்சிலே முகத்தைப் புதைச்சுக்கொண்டு விம்மி விம்மி அழுகிறேன்.



“சீ வெட்கமில்லையேடா உனக்கு? ஏன் இப்படி அழுகிறாய்?” அக்கா எனது தலைமயிர்களை ஆதரவோடு கோதிவிட்டுக்கொண்டு என்னிடம் கேட்கிறா. அதன் பின்பு அக்கா எனக்கு நிறைய பிஸ்கட்டும் இனிப்பும் தருகிறா; நான் சாப்பிடுகிறேன்”



அத்தான் நாலைஞ்சு நாள் கழிச்சுக் கொழும்புக்குப் போகிறார். அக்கா போகவில்லை. அக்காவுக்குக் கொஞ்ச நாளில் குழந்தை பிறக்கப்போகிறதாம்; குழந்தை பிறந்த பிறகுதான் அக்கா கொழும்புக்குப் போவாவாம். அதை கேட்க எனக்கு நல்ல சந்தோஷமாக இருக்கு. அக்கா கொஞ்ச நாளைக்கு வீட்டிலை இருப்பா என்பதை நினைக்க எனக்கு மிகவும் சந்தோஷம்.



ராணி ஒவ்வொரு நாளும் எங்களுடைய வீட்டுக்கு வருவாள். எங்களுக்கு அக்கா புதிசு புதிசாக விளையாட்டுக்கள் சொல்லித் தருவா. அக்காவுக்கு குழந்தை பிறந்தால் அந்த குழந்தையோடும் நாங்கள் விளையாடலாம்.



கொஞ்ச நாளில் அக்காவுக்கு ஒரு தம்பிப் பாப்பா பிறந்தது. அக்கா கட்டிலில் படுத்திருந்தா. தம்பிப் பாப்பாவைத் தொட்டிலிலே கிடத்தியிருந்தார்கள் அந்த பாப்பாவைத் தொட்டுப் பார்க்க எனக்கு ஆசையாக இருந்தது. தூக்கி விளையாட வேணும் போல இருந்தது. நான் சின்னப் பொடியன், குழந்தையைத் தூக்கக் கூடாதாம். பெரிசா வளர்ந்த பிறகுதான் தூக்கலாமாம்; அக்கா தான் சொன்னா. நான் பாப்பாவைத் தொட்டுப் பார்க்கிறேன். குட்டிக் குட்டி விரல்கள் எனக்கு ஆசையாக இருக்கு.



பாப்பா பிறந்தவுடன் அத்தானுக்கு தந்தி கொடுத்தார்கள். ஆனால் அவர் உடனே வரவில்லை. அவருக்கு வேலை செய்யிற இடத்திலை லீவு எடுக்க முடியவில்லையாம். அத்தான் உடனே வராதது எனக்குச் சந்தோஷமாக இருந்தது. அத்தான் வந்தால், அக்கா அத்தானைத்தான் கவனிப்பா; அவரோடைதான் அன்பாயிருப்பா. அத்தானோடைதான் அடிக்கடி பேசுவா. என்னோட பேசுவதற்கு அக்காவுக்கு நேரம் இருக்காது.



திடீரென்று ஒருநாள் விடியும்போது அத்தான் காரில் வந்து இறங்கினார். நான்தான் முதலில் அத்தான் வருவதை கண்டேன். அக்காவிடம் ஓடிப்போய் “அத்தான் வந்திட்டார்” என்று சொன்னேன். உடனே அக்கா எழுந்து முன்வாசலுக்கு ஒடிவருவா என்றுதான் நினைத்தேன். அக்கா எழுந்திருக்கக் கூட இல்லை. தம்பிப் பாப்பாவோடு கொஞ்சி விளையாடிக்கொண்டிருந்தா. அத்தான் வரும்போது அக்கா எழுந்து அத்தானை வரவேற்க வாசலுக்குக்கூட வராதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.



அத்தான், அக்கா இருந்த அறைக்கு வந்தார். அக்கா தம்பி பாப்பாவை அத்தானுக்குக் காட்டிறா. அத்தானையே உரிச்சு வைச்சதுபோலத் தம்பிப் பாப்பா இருக்கிறானாம்; அக்காதான் அத்தானிடம் சொன்னா. அத்தானுக்குப் பெரிய புழுகம். அத்தான் தம்பிப்பாப்பாவை தூக்கி முத்தங் கொடுக்கிறார்.



“ஐயையோ, குழந்தைக்கு நோகப்போகிறது” என்று சொல்லி அக்கா உடனே தம்பிப் பாப்பாவை வாங்கிக் கொள்ளுகிறா.



அத்தான் இரவு றெயிலில் வந்தவர். அதனால் அவருக்கு களைப்புப் போலத் தெரியுது. அக்காவிடம் கோப்பி போட்டுத் தரும்படி சொல்லுகிறார்.



“குழந்தைக்குப் பசிக்கும், பால் கொடுத்துவிட்டு உங்களுக்குக் கோப்பி தருகிறேன்” என்று சொல்லிக்கொண்டு அக்கா தம்பிப் பாப் பாவுக்குப் பால் கொடுக்கிறா.



முந்தியென்றால் அத்தான் படுக்கையில் இருக்கும்போதே அக்கா கோப்பி போட்டுக் கொண்டுவந்து அத்தானை எழுப்புவா, அத்தான் கோப்பி குடிச்சபிறகுதான் கட்டிலை விட்டு இறங்குவார். அத்தான் கேட்காமலே அக்கா அவருக்கு வேண்டியதையெல்லாம் செய்வா. இண்டைக்கு அத்தான் கோப்பி போட்டுத் தரும்படி கேட்டும் அவருக்குக் கோப்பி கிடைக்கவில்லை.



அக்கா பால் கொடுத்துக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, அம்மா கோப்பி போட்டுக்கொண்டு வந்து அத்தானுக்கு கொடுக்கிறா. அவருக்கு சாப்பாடும் அம்மாதான் கொடுக்கிறா.



அக்கா தம்பி பாப்பாவைத்தான் நன்றாகக் கவனிக்கிறா. தம்பிப் பாப்பாவைக் குளிக்க வார்க்கிறா, பவுடர் போடுகிறா, பால் கொடுக்கிறா, தம்பிப் பாப்பாவோடுதான் அக்கா இரவில் படுக்கிறா.



இதையெல்லாம் பார்க்க எனக்கு சிரிப்புத்தான் வருகிறது. அத்தானை நினைக்கும்போது பாவமாகவும் இருக்கிறது. அத்தான் நிறைய பிஸ்கட், சொக்கிலெட் எல்லாம் வாங்கி வந்தார். எனக்கு விளையாடுகிறதுக்கு ஒரு பொம்மையும் வாங்கி வந்தார். அது நல்ல வடிவான ரப்பர்ப் பொம்மை.



ராணி வந்ததும் நானும் அவளும் அந்தப் பொம்மையை வைச்சு விளையாடுகிறோம். இண்டைக்கும் எங்களுக்கு ‘அப்பா அம்மா’ விளையாட்டுத்தான். நான் அப்பா, ராணி அம்மா, பொம்மைதான் எங்களுடைய தம்பிப் பாப்பா.



ராணி அந்தப் பொம்மையை மடியில் வைச்சுக் கொண்டு ‘ஆராரோ’ என்று தாலாட்டுகிறாள். குழந்தையைத் தூங்க வைக்கிறாளாம்.



“குழந்தைக்குப் பசிக்கும் பால் கொடு” நான் ராணியிடம் சொல்லுகிறேன்.



அக்கா குழந்தைக்குப் பால் கொடுக்கிறதைப் போலவே ராணியும் அந்தப் பொம்மையை இரண்டுகைகளாலும் தூக்கித் தன்னுடைய நெஞ்சோடு அணைச்சுப் பால் கொடுக்கிறாள்.



முன் விறாந்தையில் இருந்த அக்காவும் அத்தானும் அதைப் பார்த்துச் சிரிக்கிறார்கள்



ராணிக்கு வெட்கம் வந்துவிட்டது.



“சீ ராணி உதென்ன விளையாட்டு? என்று அக்கா அதட்டுகிறா.”



இவ்வளவு நேரமும் தூரத்திலிருந்து எங்களுடைய விளையாட்டைக் கவனித்துக்கொண்டிருந்த பப்பி, மெதுவாக வந்து தீடீரென்று எனக்குப் பக்கத்திலே கிடந்த பிஸ்கட் பெட்டியைக் கௌவிக் கொண்டு ஓட்டம் எடுக்கிறது.



நான் அதைப் பறித்து எடுப்பதற்காகப் பப்பியைத் துரத்திக் கொண்டு பாய்ந்து ஓடுகிறேன். சனியன் பிடிச்ச கல்லொன்று என்னுடைய காலை இடறிவிட்டது. நான் நெஞ்சு அடிபட விழுந்துவிட்டேன். என்னால் எழும்ப முடியவில்லை. முழங்கால் நன்றாக நிலத்திலே உரஞ்சுப்பட்டு விட்டது. கொஞ்சம் ரத்தம் வருகிறது. துப்பலைத் தொட்டு காயத்தில் அப்புகிறேன்; அப்பவும் எரிச்சல் குறையவில்லை. எனக்கு அழுகை வந்துவிட்டது.



ராணி பொம்மையை வீசி எறிந்துவிட்டு என்னிடம் ஓடி வருகிறாள். என்னுடைய கையைப் பிடித்து மெதுவாகத் தூக்குகிறாள்.

நான் ராணியின் கையைக் கோபத்தோடு தட்டி விடுகிறேன். எனக்கு ராணியின் மேல் கோபங்கோபமாக வருகிறது. ராணிக்கு அப்பா அம்மா விளையாட்டு விளையாடவே தெரியாது. தம்பிப் பாப்பாவை வீசி எறிஞ்சுவிட்டு அவள் வருவதைப் பார்க்க எனக்கு எரிச்சலாக இருக்கிறது.



நான் விழுந்துவிட்டதைப் பார்த்ததும் அக்காவும் அத்தானும் அருகே ஓடிவருகிறார்கள்.

“தம்பிப் பாப்பா கிடைச்ச பிறகு நீ அதிலைதான் அன்பாயிருக்க வேணும். தம்பிப் பாப்பாவைத்தான் நீ முதலில் கவனிக்கவேணும். அதைக் கவனிச்ச பிறகுதான் என்னைக் கவனிக்கவேணும். பெம்பிளையளென்றால் அப்பிடித்தான்; பாப்பா கிடைச்ச பிறகு புருஷனை விடப் பாப்பாவிடந்தான் கூட அன்பாயிருப்பினம். ” நான் ராணியிடம் சொல்லுகிறேன்.



நான் சொல்லிறது ஒண்டும் அவளுக்கு விளங்கவில்லை; முழிக்கிறாள்.



“கள்ளப்பயலே என்னடா சொன்னனி? உனக்கு இதிலையிருக்கிற மூளை படிப்பிலை இல்லை” என்று சொல்லிக் கொண்டு அக்கா என்னை மெதுவாகத் தூக்குகிறா. அக்காவும் அத்தானும் சிரிக்கிறார்கள்.



நான் ராணியை இழுத்துக்கொண்டு திரும்பவும் அப்பா அம்மா விளையாட்டு விளையாடப் போகிறேன்.



பப்பி தூரத்திலிருந்து எங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. நாங்கள் விளையாடுகிறோம்.



பொம்மை தம்பிப் பாப்பாவாகிறது



ராணி அம்மாவாகிறாள்



நான் அப்பாவாகிறேன்.



-கதம்பம் 1971.



(1972ஆம் ஆண்டு இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத் தமிழ் இலக்கிய மன்றம் நடாத்திய அகில இலங்கைச் சிறுகதைப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற கதை.)

++++++++++++++++++++++++++++

பலி



தூரத்தில் வள்ளி வருவது தெரிந்தபோது கொத்துவதை நிறுத்திவிட்டு மண்வெட்டியைத் தோளிற் சாய்த்தபடி மாட்டுக் கொட்டிலின் பக்கம் போகிறான் வேலன்.



கொத்தி முடிந்த நிலப்பரப்பைப் பார்க்கும்போது அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வழக்கத்தைவிட அவன் இன்று அதிகமாக வேலை செய்திருக்கிறான்.



காலையிலிருந்து மழை பிசுபிசுத்துக்கொண்டிருக்கிறது. பலமாகப் பெய்து நிலம் நன்றாக நனைந்தால் கொத்துவதற்குச் சுலபமாக இருக்கும். வரட்சிக்குப் பின் மழைத் துளிகள் விழுவதால் மண்வாசனை வீசத் தொடங்கியது.



மண்வெட்டியிற் படிந்திருந்த மண்ணை, இடுப்பிற் செருகியிருந்த சுரண்டியால் ஒருதடவை வழித்துவிட்டு மீண்டும் சுரண்டியை இடுப்பிற் செருகுகிறான்.



தலையிற் கட்டியிருந்த துண்டை அவிழ்த்துத் தேகத்தில் வழிந்திருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டே மண்வரம்பின்மேல் வள்ளி நடந்துவரும் அழகை அவன் பார்த்துக்கொண்டிருந்தான்.



சேலைத் தலைப்பை இடுப்பில் வரிந்து கட்டிவிட்டு தலையில் இருந்த சோற்றுப் பெட்டியை ஒருகையாற் தாங்கிக்கொண்டு ஒரு கையில் தேநீர்ப் போத்தலையும் தூக்கியபடி ஏதோ பாரத்தைச் சுமந்து வருபவள் போல வேலனைப் பார்த்துக் குறும்புத்தனமான அபிநயஞ் செய்து தோட்டத்து மண் வரம்பில் நடந்து வந்து கொண்டிருந்தாள் வள்ளி.



அவர்களுடைய பெட்டை நாய் கறுப்பியும் அவளைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.



வரம்பின் வலப் புறத்தில் கந்தையாக் கமக்காரனின் மதாளித்த புகையிலைக் கன்றுகள் நிமிர்ந்து நிற்கின்றன. மறுபுறம் பரந்து கிடக்கும் வெற்றுத் தரையை இப்போதுதான் வேலன் கொத்திக்கொண்டிருக்கிறான்.



தோட்டம் முழுவதுமே கந்தையாக் கமக்காரனுக்குத்தான் சொந்தம். ஆனாலும் ஒரு பகுதியைப் பயிர்செய்வதற்கு மாத்திரம் வேலனுக்கு கொடுத்து நடுவிலே வரம்பு வகுத்து எல்லை பொறித்திருக்கிறார் கமக்காரன். இந்த வரம்புதான் தோட்டத்துக்கு வழியாகவும் அமைந்திருக்கிறது.



வரம்பின் ஒரு கோடியில் கந்தையாக் கமக்காரன் பெரிய வீட்டில் வாழ்கிறார். மறு கோடியில் வேலனும் வள்ளியும் ஒரு குடிசையில் வசிக்கிறார்கள்.



கமக்காரனின் பாவனைக்காக வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு கிணறு இருக்கிறது. அதில் வேலன் கயிறு பிடித்துத் தண்ணீர் இறைக்கக்கூடாது. தோட்டத்தின் நடுவில் இருக்கும் கிணற்றில் இருந்துதான் வேலன் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவான். கமக்காரன் தனது வசதிக்காக அதனை அனுமதித்திருக்கிறார்.



கந்தையாக் கமக்காரனுடைய பகுதியில் முக்கியமான தோட்ட வேலைகள் இருக்கும்போது, வேலன் அதைச் செய்து முடித்த பின்புதான் தனது தோட்டத்தைக் கவனிக்க முடியும். வசிப்பதற்கும் பயிர் செய்வதற்கும் நிலம் கொடுத்தபடியால் அவன் அதைச் செய்கிறான்.



தோட்டத்து மூலையில் இருக்கும் பனைகளில் இறக்கும் கள்ளில் ஒரு போத்தலைத் தினமும் கமக்காரனுக்குக் கொடுக்கவேண்டும். பனைகளில் கள்ளு வடிப்பதற்குக் கமக்காரன் அனுமதித்தபடியால் அவன் அதைச் செய்கிறான்.



இவற்றையெல்லாம் விடச் சுளையாக நூறு ரூபாய்களைக் கமக்காரன் குத்தகைக் காசு என்று கூறி அவனிடம் ஒவ்வொரு வருடமும் பெற்றுக்கொள்ளுகிறார்.

வேலனைப் போன்றுதான் அவனுடைய சொந்தக்காரர்களிற் பலர் பரம்பரை பரம்பரையாகக் கமக்காரர்களின் தயவில் வாழ்கிறார்கள். அவர்களுக்குச் சொந்தமாக ஒரு துண்டு நிலங்கூடக் கிடையாது. கமக்காரர்கள் அவர்களுக்கு மட்டும் காணியை விலைக்குக் கொடுக்கமாட்டார்கள்.



வள்ளி சோற்றுப் பெட்டியை இறக்கிவைத்தாள். “என்ன மச்சான், களைச்சப் போனியே? கறி வைக்கக் கொஞ்சம் சுணங்கிப் போச்சு”என்று தான் தாமதித்து வந்ததற்குக் காரணம் கூறிக்கொண்டே வள்ளி அவன் அருகில் அமர்ந்தாள்.



பழைய சோற்றில் கறியைச் சேர்த்துப் பிசைந்து திரட்டி ஒரு உருண்டையை வாழையிலையில் வைத்து வேலனிடம் கொடுத்தாள்.



“வள்ளி நீயும் கொஞ்சம் சாப்பிடன்” என்று கூறி, வேலன் இலைத்துண்டில் பாதியைக் கிழித்து அவளிடம் கொடுத்தான். அவர்க ளுடைய நாய் கறுப்பியும் வாலையாட்டிக்கொண்டு அவர்களிடம் பங்கு கேட்டது.



வள்ளி மகிழ்ச்சியோடு ஒரு கவளத்தைக் கறுப்பிக்கும் கொடுத்தாள். சதா வேலனையே சுற்றிக்கொண்டிருந்த கறுப்பி ஒரு கிழமைக்குள் வள்ளியுடன் எவ்வளவு ஐக்கியமாகிவிட்டது.



தனிக்கட்டையாக இருந்த வேலனை அவனுடைய தாய் மாமன் அழைத்து ஒரு நல்ல நாளில் வள்ளியின் கையால் சோறு குடுப்பித்தான்.



வள்ளி வீட்டுக்கு வந்த பின்புதான் வேலனுக்கு வயிறாரச் சாப்பாடு கிடைக்கிறது. வள்ளியின் கை வண்ணம் எவ்வளவு ருசிக்கிறது.



தூரத்தே கந்தையாக் கமக்காரன் வருகிறார்.



அவசர அவசரமாகச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு பானையி லிருந்த தண்ணீரில் கையைக் கழுவி விட்டு எழுந்திருந்தான் வேலன்; வள்ளியும் சோற்றுப் பெட்டியை மூடிவிட்டு, வேலனிடம் விடைபெற்றுக் கொண்டு குடிசையை நோக்கிப் புறப்பட்டாள்.



வள்ளி எழுந்து செல்வதைக் கவனித்தபடியே வேலனிடம் வந்தார் கந்தையாக் கமக்காரன்.

இவ்வளவு நேரமும் சிறு தூறல்களாக விழுந்து கொண்டிருந்த மழை, இப்போது பலக்க ஆரம்பித்து விட்டது.



“அதிலை போறதார் வள்ளியே? சின்னப்பொடிச்சியாய் திரிஞ்சவள் ‘கொழு கொழு’ வெண்டு நல்லாய்க் கொழுத்திட்டாள்”.



கந்தையாக் கமக்காரன் வரம்பிலிருந்து சறுக்கித் தடுமாறுகிறார்.



“வரம்பு நனைஞ்சு நுதம்பலாய் கிடக்குக் கமக்காறன்; கவனமாய் வாருங்கோ”



ஒரு கிழமையாக வள்ளியைக் கந்தையாக் கமக்காரன் தினமும் பார்க்கிறார். இன்றுமட்டும் திடீரென்று வள்ளியைப்பற்றி அவர் கேட்டபோது வேலனின் மனசுக்குச் சங்கடமாக இருந்தது.



“நீ ஒருக்கா வீட்டுக்கு வா, சுன்னாகத்துக்கு ஒரு நடை போட்டு வரவேணும்”.



நேற்றுத்தான் கந்தையாக் கமக்காரன் தனது மனைவியை, அயற் கிராமத்தில் உள்ள அவளது தந்தையின் வீட்டுக்கு அனுப்பிவைத்தார். அது விஷயமாகத்தான் தன்னையும் அங்கு அனுப்பப் போகிறார் என நினைத்தபடி வேலன் அவரைப் பின்தொடர்ந்தான்.



கந்தையாக் கமக்காரன் வீட்டு முற்றத்தில் வேலன் வெகு நேரமாகக் காத்துக்கொண்டிருந்தான். உள்ளே சென்ற கமக்காரன் இன்னும் வெளியே வரவில்லை



சிறிது நேரம் ஒய்ந்திருந்த மழை மீண்டும் பலக்கத் தொடங்கியது.



நனைந்துவிடாமல் இருப்பதற்காக, முற்றத்தில் நின்ற வேலன் இப்போது வீட்டின் வாசற்படியில் ஏறிக் கதவோரமாக நின்றான்.



கந்தையாக் கமக்காரன் கையில் ஒரு கடிதத்துடன் வெளியே வந்தபோது, வீட்டு வாசற்படியில் கதவு ஓரம்வரை வேலன் வந்துவிட்டதைக் கவனிக்கிறார். அவரது முகம் மாற்றம் அடைகிறது.



“இறங்கடா பணிய, கீழ்சாதி! வீட்டுக்குள்ளையும் வந்துவிடுவாய் போலை கிடக்கு.”



வேலன் வெலவெலத்துப்போய்க் கீழே இறங்கினான். வாசற்படியில் நின்றதற்கு இப்படி அவர் தன்னை ஏசுவார் என்பதை அவன் எதிர்பார்க்கவே இல்லை. கமக்காரனுக்கு மனசு சரியில்லைப் போலிருக்கிறது.



அதன் பின்பு கந்தையாக் கமக்காரன் ஒன்றும் பேசவில்லை. கடிதத்தை மட்டும் அவனிடம் நீட்டினார். வேலன் பணிவோடு அதனை வாங்கிக்கொண்டு குழம்பிய மனத்துடன் சுன்னாகத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான்.



நாய் குரைக்குஞ் சத்தம் கேட்டு குடிசைக்குள் சமைத்துக் கொண்டிருந்த வள்ளி வெளியே வந்து பார்த்தாள். கந்தையாக் கமக்காரன் நின்று கொண்டிருந்தார்.



“வேலன் சுன்னாகத்துக்கு போட்டான். நீ ஒரு போத்தல் கள்ளு எடுத்துக்கொண்டு வா”



வள்ளியின் பதிலை எதிர்பார்க்காமலே தனது வீட்டுப்பக்கம் திரும்பி நடந்தார் கமக்காரன்.



வழக்கமாகக் கமக்காரன் ஒரு போத்தல் கள்ளுத்தான் வாங்குவார். காலையிலேயே அதனை வேலன் அவருக்குக் கொடுத்துவிட்டுத்தான் தோட்டத்திற்குச் சென்றான் .இப்பொழுது மீண்டும் இன்னும் ஒரு போத்தல் கள்ளு அவருக்குத் தேவைப்பட்ட போது வள்ளிக்கு ஆச்சரியமாக இருந்தது.



தன்னிடம் ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் வேலன் சுன்னாகத்துக்குப் போய்விட்டதை எண்ணியபோது அவளுக்குக் கோபமும் வந்தது.



முட்டியில் இருந்த கள்ளைப் போத்தலில் வார்த்து எடுத்துக் கொண்டு கந்தையாக் கமக்காரனின் வீட்டை நோக்கி நடந்தாள் வள்ளி.



அவளுடைய நாய் கறுப்பியும் வாலை ஆட்டிக்கொண்டு அவளைப் பின் தொடர்ந்து சென்றது.



எங்கோ திரியும் தெருநாய் ஒன்று கறுப்பியின் பின் புறத்தை நுகர்ந்தபடி நெருக்கமாகத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. அது ஆண் நாயாகத்தான் இருக்கவேண்டும். கறுப்பி கோபத்துடன் அந்தத் தெருநாயைப் பார்த்து உறுமியது. ஆனாலும் அந்த நாய் கறுப்பியைத் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது.



“சீ! சனியன் ”என்று கடிந்துகொண்டே ஒரு கல்லை எடுத்து அந்த ஆண் நாயின்மேல் விட்டெறிந்தாள் வள்ளி.



இப்போது அந்த நாய் தூரத்தில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.



கள்ளுப் போத்தலுடன் வள்ளி கந்தையாக் கமக்காரனின் வீட்டு வாசலுக்கு வந்துவிட்டாள். கமக்காரன் உள்ளேயிருக்கிறார் போலத் தெரிகிறது. தயங்கியபடியே வாசற்படிகளில் ஏறிக் கதவோரத்தில் சிறிது நேரம் நின்றாள்.



“ஏன் வள்ளி, வாசற்படியிலை நிற்கிறாய் உள்ளுக்கு வாவன்” கமக்காரன்தான் அப்படிச் சொன்னார்.



வள்ளிக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் எந்தக் கமக்காரன் வீட்டுக்குள்ளும் ஒருநாளும் சென்றதில்லை.



“இல்லைக் கமக்காறன் நான் போகவேணும்” என்று சொல்லிக் கொண்டே அவள் கள்ளுப்போத்தலை வாசற்படியில் வைத்தாள்.



“வள்ளி! வாசற்படியிற் போத்தலை வைக்காதை உள்ளுக்கு கொண்டுவந்து மேசையிலை வை.”



கந்தையாக் கமக்காரனின் குரல் கொஞ்சங் கடுமையாக இருந்தது.



வள்ளி தயங்கினாள். கமக்காரன் கோபித்துக்கொள்வாரோ என அவளுக்குப் பயமாகவும் இருந்தது. கமக்காரனின் சொல்லுக்குப் பணியாவிட்டால், அவர் சிலவேளை தோட்டத்தை விட்டு துரத்திவிடவும் கூடும். பின்பு இருப்பதற்கும் இடமில்லாமல் பிழைப்பதற்கும் வழியின்றித் தவிக்கவேண்டிய நிலைதான் ஏற்படும்.



வள்ளி மெதுவாக நடந்து உள்ளே சென்றாள். அவளுடைய கால்கள் கூசின.



இவ்வளவு நேரமும் அவளுடன் துணையாக வந்து கொண்டிருந்த கறுப்பி இப்போது வெளியே நின்றுவிட்டது. தூரத்தில் வந்து கொண்டிருந்த அந்த ஆண் நாய் இப்போது கறுப்பியை நெருங்கிக் கொண்டிருந்தது.



“வள்ளி ! இப்ப இங்கை ஒருதரும் வரமாட்டினம், நீ ஆறுதலாய்ப் போகலாம்.”



வள்ளியின் மனதில் ஏதோ உறுத்தியது. அந்த இடத்தை விட்டு உடனே ஓடிவிடவேண்டும்போல் தோன்றியது. அதற்குள் கந்தையாக் கமக்காரன் எழுந்து சென்று முன் கதவைப் பூட்டினார்.



வள்ளி நடுங்கினாள்; “ ஐயோ கமக்காரன் நான் போகவேணும்” எனத் துடித்தாள் .



கந்தையாக் கமக்காரன் மெதுவாகச் சிரித்தார்; “பயப்பிடாதை வள்ளி வேலனுக்கு ஒண்டுந் தெரியவராது. நீ கொஞ்ச நேரம் என்னோட இருந்திட்டுப் போகலாம்”.



வள்ளி கதவின் பக்கம் பாய்ந்தாள். ஆனால் சாவி கமக்காரனின் கையிலேதான் இருக்கிறது. அவர் எழுந்து சென்று வள்ளியின் வலது கையைப் பற்றினார் .



“ஐயோ! கமக்காறன் என்னை ஒண்டுஞ் செய்யாதையுங்கோ ”



வள்ளி கெஞ்சினாள், மன்றாடினாள், அழுதாள். “பயப்பிடாதை வள்ளி” என்று மட்டுந்தான் கந்தையாக் கமக்காரன் சொன்னார். ஆனால் வள்ளியின் கையை மட்டும் அவர் விட்டுவிடவில்லை.



வள்ளியின் கெஞ்சலும் மன்றாட்டமும் ஆதரவற்றுத் தேய்ந்தன; அவள் ஆவேசத்துடன் திமிறினாள். ஆனாலும் கமக்காரனின் அசுரப் பிடியிலிருந்து அவளால் விடுபட முடியவில்லை. அவள் பத்திரகாளி யானாள். மறுகணம் பளீரென்று அந்தச் சாதிமானின் கன்னத்தில் பலமாக அறைந்தாள்.

தீண்டத்தகாத சாதிக்காரி ஒருத்தி தனது கன்னத்திலே தீண்டி விட்டதனால் கந்தையாக் கமக்காரனுக்குக் கோபாவேசம் பொங்கியது. அவரது கண்கள் சிவந்தன.



அறைந்துவிட்ட அவளது கையைப் பிடித்து பலமாக திருகினார். வள்ளிக்கு வலியெடுத்தது; தலைசுற்றியது; கண்கள் இருண்டன. அவள் போராட்டத்திலே தோற்றுப்போய் நிலத்தில் சாய்ந்தாள்.



வெளியே கறுப்பி பலமாக உறுமிக்கொண்டிருந்தது. பின்பு சிறிது சிறிதாக அதன் குரல் தேய்ந்து மெலிந்தது. இப்போது அந்த பிரதேசத் தையே துன்பத்தில் ஆழ்த்துவதுபோல அது சோகமாக ஊழையிடத் தொடங்கியது.



வள்ளி மயக்கந் தெளிந்து எழுந்திருந்தபோது அவளது உடலும் உள்ளமும் தழலாகத் தகித்தன.



“நீயும் ஒரு மனுசனே! பெரிய சாதிக்காறனே? சீ ! தூ.... ” அவள் காறியுமிழ்ந்தாள்.



கந்தையாக் கமக்காரன் எழுந்து சென்று கதவைத் திறந்துவிட்டார்.



வள்ளி தள்ளாடியபடியே வெளியே வந்தாள்.



அவளது நாய், வாலைக் குழைத்துக்கொண்டு அவளைச் சுற்றி வந்தது.



கறுப்பி இடங்கொடுக்காததினால் ரோசமடைந்த அந்த ஆண் நாய், இப்போது தூரத்தில் போய்க்கொண்டிருந்தது.



-சிந்தாமணி 1970.

++++++++++++++++++++++++

சுமங்கலி



உள்ளத்தை வேதனைப்படுத்தும் அந்தச் செய்தியைத் தாங்கிக் கொள்ளப் பொன்னம்மாவின் மென்மையான இதயத்திற்கு கஷ்டமாக இருந்தது.



வேகவைக்கும் ஈயக்குழம்பு காதிற்கூடாகத் தசைகளை அறுத்துச் சென்று இதயத்தில் தேங்கிக் குமிழி பரப்பிக்கொண்டிருப்பதைப் போன்ற வேதனை.



வாழ்நாளில் அனுபவித்திராத துன்பம் அவளை வாட்டச் சிறிது நேரம் எதையும் சிந்திக்கும் சக்தியை இழந்துவிட்டாள். விழிகளை மேவிப் பெருகிய கண்ணீர் குழிவிழுந்திருந்த அவளது கன்னத்தின் சுருக்கங்களை நிரப்பி வழிந்துகொண்டிருந்தது.



நெற்றியிலே பட்டையாகத் தீட்டியிருந்த திருநீற்றைக் கரைத்துக் கசிந்திருந்த வியர்வைத் துளிகளைத் தன் சேலைத் தலைப்பினால் ஒற்றியபொழுது குங்குமம் அழிந்துவிடக்கூடாதேயென்ற கவனமும் அவள் நினைவில் வந்தது.



“பொன்னம்மா! சாத்திரியாருக்கு ஒருத்தினை தேத்தண்ணி ஊத்திக்கொண்டு வா.”



அடுப்பிற்கு முன்னால் வெகுநேரம்வரை தன்னை மறந்திருந்த பொன்னம்மா, புருஷனின் குரல் கேட்டுத் திடுக்குற்று அவசர அவசரமாகப் பன்னாடையை அடுப்பிற்குள் செருகினாள்.

சாத்திரியார் கூறிய செய்தி அவளின் மனச்சுவர்களை அரித்துப் புண்படுத்திக்கொண்டிருந்தது.



‘அவளது கணவன் சாதாசிவம் இன்னும் ஒரு மாதத்திற்குள் இறந்துவிடுவாராம்’.



எவ்வளவு இரக்கமற்றதனமாக அந்தச் செய்தியைச் சாத்திரியார் கூறினார். அவர் கூறிய வார்த்தைகள் பொய்த்துவிட்டால் பொன்னம்மா சந்தோஷத்தால் பூரித்துப்போவாள்.



ஆனால், சாத்திரியார் கூறும் வார்த்தைகள் ஒரு போதும் பொய்த்துவிடுவதில்லை என்பதைப் பொன்னம்மா நன்றாக அறிந்திருந்தாள்.



அவளுக்கும் சதாசிவத்திற்கும் கலியாணம் நடந்த புதிதில், அவர்களுக்குப் புத்திரபாக்கியம் இல்லையென்று சாத்திரியார் கூறியதை முதலில் பொன்னம்மா நம்பவில்லைத்தான். ஆனால் இன்றுவரை அது எவ்வளவு உண்மையாகிவிட்டது.



சாத்திரியாரிடத்தில் ஏதோ தெய்வம் நின்று பேசுகிறது என்று பலர் கூறுவதைப் பொன்னம்மா கேட்டிருக்கிறாள். உண்மையில் தெய்வந்தான் நிற்கிறதோ அல்லது சாத்திரத்தின் மகிமைதானோ அவர் கூறுவது மட்டும் உண்மையாகிவிடுவதைப் பொன்னம்மா பல முறை கண்டிருக்கிறாள்



செம்பிலிருந்த தேநீரை மூக்குப் பேணியில் ஊற்றிச் சாத்திரியாரிடம் கொடுத்துவிட்டு மிகுதியைக் கணவனின் பக்கத்தில் வைத்தாள் பொன்னம்மா.



ஏனோ சிறிது நேரம் அவ்விடத்தில் அமைதி நிலவியது. சதாசிவம் மனைவி கொணர்ந்துவைத்த தேநீரையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார். முகத்திலே தேங்கும் துன்பத்தைப் பொன்னம்மா பார்த்துவிடக்கூடாதேயென்ற பயம் அவருக்கு.



சாத்திரியாருடைய மனமும் வேதனையடைந்தது. அவர் கூறிய செய்தி அந்த இணைபிரியாத தம்பதிகளை எவ்வளவு தூரம் வாட்டி வருத்துகிறது. நீண்ட நாட்களாக அவர்களுடைய குடும்ப நண்பராக இருந்து அவர்களின் அன்புப் பிணைப்பை நன்கு அறிந்தபின்பும், தான் செய்த தவறுக்காக, மறைக்கவேண்டிய உண்மையைக் கூறியதற்காக, அவர் தன்னைத்தானே நொந்துகொண்டார்.

சாதகக் குறிப்புகள் அடங்கிய ஏட்டின் எழுத்துக்கள் சாத்திரியாரின் கண்களுக்கு மங்கலாகத் தெரிந்தன. வழக்கம்போல முருங்கையிலையின் தளிர்களைக் கசக்கி எழுத்துக்களின்மேல் அவர் தேய்த்தபொழுது, இலைச்சாறு எழுத்தின் வெட்டுக்களை நிரப்பி அவற்றைப் பச்சை வர்ணங்களிலே துலங்கச் செய்தன. ஆனாலும் அவரது கலங்கிய கண்களுக்கு இப்பொழுதும் எழுத்துக்கள் துலங்கவில்லை.



ஒரு கணம் இலைச்சாற்றின் நெடி அவ்விடத்திற் பரவியது.



அங்கு நிலவிய அமைதி சாத்திரியாருக்கு ஏதோ பயங்கரச் சூழ்நிலையாகி மனதிலே கொந்தளிப்பை ஏற்படுத்த, அந்த அமை தியைக் குலைக்கும் வகையில் அவரேதான் முதலில் பேசினார்.



“என்ன பொன்னம்மா சுகமில்லையோ? ஒரு மாதிரியிருக்கிறாய் கண்ணெல்லாம் சிவந்து போய்க்கிடக்கு.”



“இல்லைச் சாத்திரியார், தேத்தண்ணிக்கு அடுப்பு மூட்டேக்க, சாம்பல் கண்ணுக்குள்ளை பறந்திட்டுது.”



இதைச் சொல்லி முடிப்பதற்குள் அழுது புலம்பிவிடாமல் இருப்பதற்காகப் பொன்னம்மா எவ்வளவோ முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டாள்.



2

சாத்திரியார் எழுந்து சென்று வெகுநேரமாகியும் சதாசிவம் அந்த இடத்தை விட்டு நகரவேயில்லை. தான் இறந்தபின் பொன்னம்மா இறக்கையொடிந்த பறவையாகத் துடித்துப்போவாளே என்பதை நினைத்த பொழுது, அவரது இதயத்தை யாரோ கசக்கிப் பிழிவது போல் இருந்தது.



இளமைப் பருவத்தில் பொன்னம்மாவுடன் கழித்த இன்ப நாட்கள் அவரது மனக்கண்முன் நிழலாடின.



வெகு காலத்துக்குப்பின் அன்றொருநாள் தனது மாமன் வீட்டுக்குப் போயிருந்த சதாசிவம் ஒருகணம் பிரமித்துப்போனார்.



நெற்றியிலே தோன்றும் வியர்வைத் துளிகளைத் தனது அழுக்குப் படிந்த சட்டையால் துடைத்துவிட்டு, மூக்கால் வழியும் சளியை நாக்கினால் உறிஞ்சிக்கொண்டு, அவருடன் சிறுவயதிற் கெந்திவிளை யாடிய பொன்னம்மா இன்று எப்படி வளர்ந்துவிட்டாள்!



சித்தாடை கட்டிய சிங்காரப் பெண்ணாக அவரைத்தன் கருவண்டுக் கண்களால் மருளவிழித்ததும், தன்னையும் மறந்து ‘அத்தான் வந்திருக்கிறாரம்மா’என்று அகமகிழக் கூவியதும், வதன மெல்லாம் செம்மை படரப் புன்னகைத்ததும், நிலத்திலே கால்விரலால் ஏதேதோ கோலமிட்டதும்...... அப்பப்பா! சதாசிவம் என்ற கட்டிளங் காளை கிறங்கிப்போனான்.



அன்று பொன்னம்மா ஒடியற்கூழ் காய்ச்சியிருந்தாள். அவளின் கைவண்ணத்திற்குத்தான் எவ்வளவு சுவை! சதாசிவத்திற்கு ஒடியற்கூழ் என்றால் கொள்ளை ஆசையென்று எப்படித்தான் அவளுக்குத் தெரிந்ததோ?



பெண்களே இப்படித்தான்; தாங்கள் யாரிடம் அன்பு செலுத்துகிறார்களோ அவர்களின் மனவிருப்பத்தை நன்கு புரிந்துகொண்டு அதற்கேற்ற வகையிற் செயற்படுவதில் பெருஞ் சாமர்த்தியசாலிகள்.



மடித்துக்கோலிய பலாவிலைக்குள் பொன்னம்மா கூழை வார்க்க, அதை உறிஞ்சிச் சுவைப்பதுபோல் சதாசிவம் வாஞ்சையுடன் ஓரக்கண்ணால் அவளை நோக்க, ஆசை வழியும் கண்களால் கள்ளத்தனமாக சதாசிவத்தையே பார்த்துக்கொண்டிருந்த பொன்னம்மா வுக்கு வெட்கமாகிவிட்டது.



சதாசிவம் வீட்டிற்குப் புறப்பட்டபொழுது பொன்னம்மா அவரிடம் “அத்தான் ... நான்.....’’ என்று ஏதோ கூற முயன்று, வெட்கித் தடுமாறி அதைக் கூறாமல் விட்டபோதிலும் தனது மனத்துடிப்பிலேதான் அவளும் இருக்கிறாள் என்பதைப் புரிந்துகொள்ளச் சதாசிவத்திற்கு அதிகநேரம் பிடிக்கவில்லை.



“பொன்னம்மாவுக்கு ஏழிற் செவ்வாய் மணமுடித்தால் கணவனுக்குத்தான் கூடாதாம்”- ஊரிலுள்ள பெரிய மனிதர்கள் சதாசிவத்திற்கு புத்திமதி கூறினார்கள். ஆனால் அவற்றைக் காதில் வாங்கிக்கொள்ளக்கூடிய நிலையில் அப்போது சதாசிவம் இருக்க வில்லை. பொன்னம்மா இல்லாத வாழ்வு வரண்ட பாலைவனமாகிவிடும் போல் அவருக்குத் தோன்றியது.

அதன் பின் -



இந்நாள்வரை அவர்களுடைய இல்லற வாழ்க்கை இனிமை நிறைந்ததாய், இன்பத்துள் இன்பமாய்க் கழிந்துவிட்டது.



ஆனால் இன்று சாத்திரியார் கூறிய வார்த்தைகள் - எதிர் காலத்தைத்தான் துன்பம் எதிர்நோக்கி நிற்கிறதா?



பொன்னம்மாவின் முன்னால் போடப்பட்டிருந்த வாழை இலையில் பிசைந்துவிடப்பட்டிருந்த சோறு அப்படியே கிடந்தது. அவள் தன்னை மறந்த நிலையில் எங்கோ பார்த்தபடியிருந்தாள். எவ்வளவு நேரந்தான் அப்படியிருந்தாளோ அவளுக்கே தெரியாது. உணவைக் கண்டால் அவளுக்கு வெறுப்பாக இருந்தது. தொண்டைக்குள் ஏதோ இருந்துகொண்டு உணவை உட்செல்லவிடாமல் தடை செய்வதைப் போன்ற ஒரு பிரமை. அவளுக்குப் பசியே எடுக்கவில்லை.



ஊரில் யாரோ இறந்திருக்க வேண்டும். எங்கோ பறைமேளம் கேட்டுக்கொண்டிருந்தது. பொன்னம்மா இடியேறு கேட்ட நாகம்போலத் தவிக்கிறாள். நெஞ்சு வேகமாகப் படபடக்கிறது. இன்னும் சில நாட்களில் அவளுடைய வீட்டிலும் இதயத்தைப் பிளக்கும் அந்த ஓசை கேட்கப் போகிறதா?



பொன்னம்மாவின் முகம் பயங்கரமாக மாற, மனதிற்குள் ஒரு செத்தவீடு நடந்து ஒய்கிறது.



எந்த நிமிடத்தில் அந்தப் பயங்கரம் நிகழ்ந்து விடுமோ வென்ற தவிப்பு மலைபோல வளர்ந்து, அவளது நெஞ்சை அடைத்துக்கொண்டு பெருஞ் சுமையாகக் கனத்தது.



பொன்னம்மா படுக்கையிற் புரண்டுகொண்டிருந்தாள். இரவில் படுத்துக்கொள்ள வேண்டுமென்பதற்காகப் படுத்தாளே தவிர, அவள் படுத்தாலும் படுக்கா விட்டாலும் ஒன்றுதான். பல நாட்களாக நித்திரை யில்லாததால் அவளது கண்கள் சிவப்பேறி மடல்கள் வீங்கியிருந்தன.



கலைந்திருந்த கூந்தலும், செம்மை படர்ந்த கண்களும், அழுக்குப் படிந்த உடையும், அவளின் பைத்தியக்காரத் தோற்றத்தை மிகைப் படுத்தின.



அவள் ஏக்கத்துடன் படலையை நோக்கியபடியே இருந்தாள்.

அருகில் இருந்த கைவிளக்கு காற்றில் அசைந்தாடுகிறது. நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு எங்கோ சாமக்கோழி ஒலி எழுப்புகிறது.



அயலூருக்குச் சென்ற சதாசிவம் ஏன் இன்னும் திரும்ப வில்லை? மனைவி வீட்டில் தனியாக இருக்கப் பயப்படுவாளே என்று, பொழுது மங்கிவிட்டால் வீட்டைவிட்டு கிளம்பாத சதாசிவத்தை இன்று வெகு நேரமாகியும் காணவில்லை.



பக்கத்திலிருந்த பனை வடலிக்குள் பாம்பொன்று பயங்கரமாகக் கொறித்துக்கொண்டிருந்தது.



திடீரென்று பேரிரைச்சலுடன் வீசியகாற்று அருகிலிருந்த தீபத்தின் ஒளியைத் துடிக்கவைத்து அணைத்து இருளைக் கவித்தது.



பொன்னம்மாவின் நெஞ்சு ஒருகணம் விறைத்துப் போயிற்று.



“ஒரு வேளை அவருக்கு ஏதேனும்..........” இதயத்தைப் பிசைந்து எழுந்த எண்ணங்களைப் பொன்னம்மாவால் தாங்க முடியவில்லை.



“ஆயாக்கடவைப் பிள்ளையாரே, நீதான் அவரைக் காப்பாற்றவேணும்.” கண்களை மூடிக்கொண்டு பொன்னம்மா வேண்டுதல் செய்கிறாள்.



படலை கிறீச்சிடும் சத்தம். கண்களைக் கூர்மையாக்கிக்கொண்டு அவள் பார்க்கிறாள். இருளில் மங்கலாகத் தெரியும் உருவம்....... சதாசிவம்தான்.



பொன்னம்மாவின் நெஞ்சிலிருந்து நிம்மதியான பெருமூச்சுக் கிளம்புகிறது.



பயம் என்பது ஒரு பிசாசு, அது மனதிற்குட் புகுந்து விட்டால் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் தனக்குச் சாதகமாக்கி, விழுங்கி ஏப்பம்விட்டு விசுவரூபம் எடுத்துக் கொண்டேயிருக்கும்.



பொன்னம்மாவைக் கலங்கவைக்கும் வகையில் அடுத்த நாளும் ஒரு நிகழ்ச்சி நடந்தது.



சற்று முன்பு அவள் கேட்ட பயங்கர ஓசை..... ‘லொறி’யின் சக்கரங்கள் அவளது நெஞ்சைச் சிராய்ப்பதுபோலச் சடுதியாய்த் தெருவை உராசி நிறுத்தப்பட்டு.... ஐயோ! இப்பதானே அவரும் தெருவுக்குப் போனவர், ஒருவேளை சக்கரங்களுக்குள் சிதைந்து இரத்தக் களரியாகி... பொன்னம்மா தெருவை எட்டிப் பார்ப்பதற்கே அஞ்சினாள்.



ஒரு மாதத்திற்கு முன்பு பக்கத்து வீட்டுச் செல்லக் குஞ்சாச்சி ‘காரில்’ அடிபட்டு அந்த இடத்திலேயே செத்துப்போனது அவளின் நினைவில் வந்தபொழுது நெஞ்சுக்குள் ஏதோ செய்தது.



மறுகணம் பொன்னம்மா தெருவை நோக்கி ஓடுகிறாள்.



நிதானம் இழந்துவிட்ட அவளது கால்களைப் பாதையிலே கிடந்த கல்லொன்று பதம்பார்த்து விடுகிறது. அவள் நெஞ்சு அடிபட நிலத்திலே சாய்ந்தாள்.



“ஒரு மயிரிழை தப்பிவிட்டுது, இல்லாட்டில் சதாசிவத்தை உயிரோடை பாக்கேலாது.” யாரோ வழிப்போக்கன் கூறியது பொன்னம்மாவின் காதுகளிலும் விழுந்தது.



பொன்னம்மாவின் உணர்ச்சிகள் வெடித்துப் பெருமூச்சாகப் பிரதிபலிக்கின்றன. அவளது தலை சுற்றுகிறது. கண்கள் இருட்ட டைகின்றன. நெஞ்சுக்குள் பலமான வலியொன்று ஏற்படுகிறது. அவளால் எழுந்திருக்க முடியவில்லை.



நிலத்திலே விழுந்து கிடந்த பொன்னம்மாவைச் சதாசிவம்தான் தூக்கிச்சென்று கட்டிலிலே கிடத்துகிறார்.



நான்கைந்து நாட்கள் கழிகின்றன.



பொன்னம்மா புரண்டு படுக்கிறாள். அவளால் அந்தச் சோக நிகழ்ச்சியைத் தாங்க முடியவில்லை. சதாசிவத்தின் உடலை யாரோ துணியால் மூடிவிட்டார்கள். அயலவர்களின் ஒப்பாரி அந்தச் சுற்றுவட்டாரத்தையே துக்கத்தில் ஆழ்த்திக்கொண்டிருந்தது. சதாசிவத்தின் விசுவாசமான உழைப்பாளி ஒருவன் கலங்கிய கண்களுடன் பாடை கட்டுவதில் முனைந்திருந்தான்.



பொன்னம்மாவின் கண்களில் மட்டும் ஏன் கண்ணீர் துளிர்க்கவில்லை? அழுதழுது கண்ணீர் வற்றி விட்டதா? அவள் கணவனின் உடலையே வெறித்துப் பார்த்த வண்ணம் இருந்தாள்.

நெற்றியிலே கசிந்த வியர்வையில் அவளணிந்திருந்த குங்குமம் கரைந்து வழிந்தது. அரக்கத்தனமாக அவளின் கூந்தலை யாரோ அவிழ்த்து விட்டார்கள். பொன்னம்மா இனிமேல் சபை சந்திக்கு உதவாதவள்; அறுதலி.



யாருமே இல்லாத வரண்டபாலைவனத்தில் தான் தன்னந்தனியனாக விடப்பட்டுக் கணவனையே நினைத்துக் கதறிக் கொண்டிருப்பதுபோல அவளுக்குத் தோன்றியது.

யாரோ அந்திமக் கிரியைகள் செய்கிறார்கள் . பாடை நகர்கிறது; பறைமேளம் நாராசமாய்க் காதில் விழுகிறது.



பொன்னம்மா கதற முயற்சிக்கிறாள்.



“ஐ.... .... ! ஐயோ.... ....”



கண்ணீர் கருமணிகளை அறுத்துக்கொண்டு பிரவகித்துப் பாய்கிறது. நெஞ்சுக்குள் ஏதோ கிழிந்து சிதறுவதைப்போல் இருந்தது. உலகமெல்லாம் இருண்டு வந்து சூனியப் பெருவெளியாகியது........



“பொன்னம்மா ! எணை பொன்னம்மா ! என்ன குளறுகிறாய்? கனாக்கண்டனியோ?”



சதாசிவம் அவளின் தோள்களை உலுப்புகிறார்.



பொன்னம்மா இனிமேல் விழித்துப் பார்க்க மாட்டாள். அவளது தவிப்பு அடங்கிவிட்டது.



அவள் மேல்நோக்கிப் பறந்துகொண்டிருந்தாள், என்றுமில்லாத புத்தொளி அவளது வதனத்தில் நிறைந்திருந்தது. எங்கிருந்தோ மங்கல கீதங்கள் அவளது காதுகளில் விழுந்தன. வானத்திலிருந்து சொரிந்த நறு மலர்கள் அவளுக்கு வரவேற்புக் கூறின.



“பொன்னம்மா.... ..... !” உலகத்துச் சோகமெல்லாம் இழையோடிய சதாசிவத்தின் அலறல் அனாதரவாய் ஒலித்துக்கொண்டிருந்தது.



- ஈழநாடு 1964.

+++++++++++++++++++

பிழைப்பு



நான் மருதானைச் சந்தி வழியாக வந்து பஞ்சிகாவத்தை ரோட்டில் திரும்பிக்கொண்டிருந்தேன். பகல் முழுவதும் ஓயாது ஓடும் ‘ட்ராலி’ பஸ்கள் இப்போது ஓய்ந்துவிட்டன. தெருவில் ‘கார்’களோ ‘பஸ்’ களோ ஒன்றையும் காணோம்.‘லாபாய் லாபாய்’ என்று கத்திக் கொண்டிருக்கும் வியாபார தந்திரிகள் தங்கள் கடைகளை மூடிவிட்டார்கள். இரவு பகல் இருபத்துநான்கு மணிநேரமும் சேவை செய்யும் ஒரு தேநீர்க்கடை மட்டுந்திறந்திருந்தது. முன்பகுதியிலுள்ள மேசையருகே முதலாளி தூங்கி வழிந்து கொண்டிருந்தார். அவரைத் தவிர வேறு ஒருவரையுமே கடையில் காணவில்லை. அருகிலுள்ள புகையிரத நிலையத்தின் ‘குட்செட்’டில் இயந்திரங்களின் ஒலிகள் இடையிடையே கேட்டுக் கொண்டிருந்தன. வெகு தூரத்தில் மங்கலாக இரு உருவங்கள்.... மனிதர்களாகத்தான் இருக்கவேண்டும். அவர்களைத் தவிர அத்தெருவில் மனிதசஞ்சாரமே அற்றுப்போயிருந்தது.



புகையிரத நிலையத்தின் மணிக்கூண்டுக் கோபுரத்தை நிமிர்ந்து பார்த்தேன். இரவு ஒன்று ஐம்பத்தைந்தாகிவிட்டது. எனது நடையில் வேகம் கூடியதை உணர்ந்தேன். சட்டைப் ‘பாக்கெட்’டில் இருந்த ரூபா நோட்டுக்கள் பெருஞ் சுமையாய்க் கனத்துக்கொண்டிருந்தன.



ஒன்றரை மாத காலமாகத் தியேட்டர் ஒன்றில் கடமை யாற்றியதில் இன்றுதான் சம்பளம் கிடைத்தது. தினமும் இரவு இரண்டாங் காட்சி முடிந்து வீடு திரும்புவதற்கு எப்படியும் நேரமாகிவிடும். முன்பெல்லாம் நான் இவ்வழியாக வரும்பொழுது அதிகம் பயப்படுவதில்லை. இன்று ஏனோ எனது மனதைப் பயம் கௌவிக் கொண்டுவிட்டது.



மருதானை வீதிகளில் இரவில் நடமாடுவது கவனமாக இருக்கவேண்டும். இங்கு வழிப்பறிகள் நடப்பதுண்டு. அத்தோடு வேறுவிதமான கொள்ளைகளும் நடக்கும். மருதானை நகருக்கு இரவெல்லாம் பகல் தான். வெறியர்களின் கூத்துகளும், கும்மாளங்களும், வேறு பல கேளிக்கைகளும் இங்கு நடைபெறும். வாழ் நாள் முழுவதும் உழைக்கும் பணத்தை நொடிப் பொழுதில் தீர்த்துக் கட்டக்கூடிய பணம்விழுங்கிகளின் சுவர்க்க பூமியிது. அவர்களின் வலைக்குள் அகப்பட்ட எத்தனையோ அப்பாவிகளின் கதைகளை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.



சிறிது காலத்துக்கு முன் எனது ஏழை நண்பன் ஒருவன் என்னிடம் வந்தான். தனது சகோதரிக்கு ஏதோ பண இடைஞ்சலாம். சம்பளப் பணம் முழுவதையும் அவளிடம் கொடுத்துவிட்டானாம். கைச்செலவுக்குப் பணம் வேண்டுமென்று என்னிடம் கடன் கேட்டான். ஏதோ கையிலிருந்த பணத்தைக் கொடுத்து அனுப்பினேன். நான்கைந்து நாட்களின் பின்தான் உண்மை வெளிப்பட்டது. அவன் சினிமாவுக்குச் சென்று திரும்புகையில் தனது சம்பளத்தைப் பறிகொடுத்து விட்டான் என்பதை வேறுசிலர் கூறத்தான் கேள்விப்பட்டேன். அவனிடம் உண்மையை விளக்கமாகக் கூறும்படி கேட்டால் வெட்கமும், வேதனையும் அடைவானேயென்று பேசாமல் இருந்துவிட்டேன். பாவம், அவன்மேல் எனக்கு அனுதாபந்தான் ஏற்பட்டது.



அருகிலிருக்கும் தியேட்டரில் இரவு இரண்டாங்காட்சியாக ஏதோ பயங்கரமான படம் காட்டுகிறார்கள் போலிருக்கிறது. இடையிடையே அலறும் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன.



மிகவும் சமீபத்திலிருந்து ஏதோ துர்நாற்றம் மூக்கைத் துளைத்தது. விரல்களால் மூக்கை அழுத்திப்பிடித்துக்கொண்டே நடந்தேன். சில நாட்களுக்கு முன் தெருவோரத்தில் ஒரு காகம் செத்துப்போய்க் கிடந்தது. அதன் அழுகிய நாற்றமாகத்தான் இருக்குமோ....? அப்படியும் நினைத்துவிட முடியாது. ஏனெனில், வெகு காலமாகவே இத் துர்நாற்றம் இவ்விடத்தில் இருக்கின்றது. சிறிது தூரத்தில் சாக்கடை நீர் தேங்கி நிற்கின்றது. அதன் நாற்றமாகத்தான் இருக்க வேண்டும்.

தெருவின் வளைவை அடைந்துவிட்டேன். வரிசையாகத் தொழிலாளர்களின் குடிசைகள் தென்படுகின்றன. அவற்றைத் தாண்டிவிட்டால் நான் குடியிருக்கும் வீட்டை அடைந்துவிடலாம்.



நான் கண்களைக் கூர்மையாக்கிக்கொண்டு பார்த்தேன். அதோ ஒரு பெண்ணின் உருவம் தெரிகிறது. குடிசையொன்றின் முன்வாசலில் அவள் நிற்கின்றாள்.



வழக்கமாக, எதிர்ப் பக்கத்திலுள்ள கட்டிடத்தின் மேல்மாடியில் அமைந்திருக்கும் விளம்பரப் பலகையில் மின்சார ‘பல்ப்பு’கள் எரிவதும் அணைவதுமாகவிருக்கும். அதனால் அவ்விடத்தில் யார் நின்றாலும் துலக்கமாகத் தெரியும். ஆனால், இன்று அந்த இடம் இருள் கவிந்து இருக்கின்றது. மின்சார ‘பல்ப்பு’கள் பழுதடைந்திருக்க வேண்டும். தூரத்திலுள்ள மின்சாரக் கம்பத்தின் வெளிச்சம் அவ்விடத்தில் சிறிது மங்கலாகத் தெரிகிறது.



நான் அவ்விடத்தைச் சமீபித்துக்கொண்டிருந்தேன். இப்போது அவளின் உருவம் தெளிவாகத் தெரிகிறது. இளம் பெண்ணாக இருக்கின்றாளே .....! அவள் தெருவின் இரு பக்கங்களையும் பார்த்து விட்டுக் குடிசையின் வாசலை அடைகிறாள். அவளுடைய பார்வையில் ஏன் ஏக்கம் தெரிகிறது? அவள் யாருடைய வரவை எதிர்பார்த்து நிற்கின்றாள்?



அவள் தன்னை அலங்கரித்திருப்பது நன்றாகத் தெரிகிறது. இந்த அகால வேளையில் அப்படி என்ன அலங்காரம் வேண்டிக்கிடக்கிறது? தலைவாரிப் பூச்சூடி அழகாக உடையணிந்திருக்கிறாள். ஒருவேளை இவளும்....? அப்படித்தான் இருக்கவேண்டும். தனது காதலனை... இல்லைக் காதலர்களை எதிர்பார்த்து நிற்பவளாக இருக்க வேண்டும்.



நான் அவளைச் சமீபித்து விட்டேன். ‘க்கும்’- ஒரு செருமல் ஒலி அவளது அடித் தொண்டையிலிருந்து கிளம்புகின்றது.



எனது தலை நிமிரவேயில்லை. நான் நடந்துகொண்டிருந்தேன். ஆனாலும் நடையின் வேகம் குறைந்துவிட்டது. அவளின் செருமலுக்கு அவ்வளவு சக்தியா? கடைக்கண்ணால் அவளைப் பார்த்தேன்.



அவள் சிறிது சத்தமாகச் சிரிக்கின்றாள். ஜலதரங்கத்தின் நாதமல்லவா கேட்கிறது. என்னையும் மீறிக்கொண்டு எனது தலை நிமிர்கின்றது. அவள் புன்னகை புரிந்தவண்ணம் தன்னிடம் வரும்படி கையால் அழைத்தாள்.



ஏன் எனது நடை தடைப்பட்டுவிட்டது? கால்கள் இயங்க மறுக்கின்றன. நான் நகராமல் நின்றுவிட்டேன். என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. எனது இதயம் வேகமாக அடித்துக்கொள்ளு கின்றது. இந்தத் தருணத்தில் பயத்தைக் களைந்தெறிந்து விட்டுப் புத்திசாலித்தனமாகவல்லவா நடந்துகொள்ள வேண்டும். ஏன் என் புத்தி மழுங்கிவிட்டதா?



இதோ அவள் என்னைநோக்கி வந்துகொண்டிருக்கிறாள். ‘நெருங்காதே’ என்று கத்தவேண்டும்போலத் தோன்றுகிறது. எனது தொண்டை ஏன் அடைத்துக்கொண்டுவிட்டது? உமிழ்நீரைக்கூட விழுங்க முடியவில்லையே! இந்த இடத்தைவிட்டே ஓடிவிடுவோமா? ஆம், அதுதான் சரியான யோசனை. ஆனால் எனது கால்களை நகர்த்தக்கூட முடியவில்லையே! கால்களுக்கு இவ்வளவு கனம் திடீரென்று எப்படி வந்தது.



அவள் என்னருகில் நிற்கின்றாள். இதழ்களிலே புன்னகை அரும்பி நிற்கின்றது. அப்பப்பா அவளது வதனத்திலே எவ்வளவு கவர்ச்சி! நாகபாம்பின் உடலிலே ஒருவகை வழவழப்பான அழகு தோன்றுமே அதேபோலத்தான்.



ஐயோ, அவள் என் கைகளைப் பற்றுகின்றாளே! ஏன் என் தேகமெல்லாம் வியர்த்துக் கொட்டுகின்றது? எனது உரோமக் கால்கள் குத்திட்டு நிற்கின்றன. நான் மரக்கட்டை போலாகிவிட்டேன். எனது கைகளை விடுவித்துக் கொள்ளக்கூடிய சக்தி எங்கே ஓடி மறைந்து விட்டது. இந்நிலையில் யாராவது பார்த்துவிட்டால்...? நான்கு பக்கங்களையும் கவனிக்கிறேன். நல்லவேளை ஒருவருமே இல்லை.



“உள்ளே வாருங்கள்” என்று கூறிக்கொண்டே எனது பதிலையும் எதிர்பாராது அவள் குடிசைக்குள் என்னை அழைத்துச் சென்றாள்.



நாம் செய்யக்கூடாதென்று திடசங்கற்பம் செய்திருக்கும் செயல்களைச் சிலவேளைகளில் சந்தர்ப்ப வசத்தால் நம்மையும் மறந்து செய்து விடுகின்றோமே.... .... இதே நிலையில்தான் நானும் இருந்தேன்.

அவளது குடிசை சிறியதுதான். பலகைத்துண்டுகளினாலும், தகரத்தினாலும் அமைக்கப்பட்டிருந்தது. குடிசைக்குள் நுழைவதற்கு நன்றாகக் குனிய வேண்டியிருந்தது. முன் பகுதியில் அதிக வெளிச்சம் இல்லை. எதிலோ என் கால்கள் இடறி நிலை தளருகின்றது. அவள் என்னைத் தாங்கிக்கொண்டாள். குடிசையின் மூலையில் ஒரு சிறு கயிற்றுக்கட்டில் போடப்பட்டிருந்தது. அதிலே என்னை அமரும்படி கூறிவிட்டுக் குடிசையின் முன் கதவைச் சாத்தினாள்.



அப்பப்பா, சிறிது நேரத்திற்குள் எனது உடைகளெல்லாம் வியர்வையால் நனைந்துவிட்டதே!. சே! ஏன் எனது உடம்பெல்லாம் இப்படி நடுங்குகின்றது? நான் மிகவும் தென்புடன் அல்லவா இருக்க வேண்டும். எனது பயந்தாங்கொள்ளித்தனத்தை இவள் அறிந்து கொண்டால் மிகவும் சாதுரியமான முறையில் எனது பணத்தைப் பெற்றுக் கொண்டு விடுவாளே!



எனது சிறுதொகைப் பணத்தைச் செலவு செய்வதற்கு நான் போட்டுவைத்திருந்த திட்டங்கள் மனக்கண்முன் வந்தன. எனக்கு வேலை கிடைத்தவுடன் முதற் சம்பளத்தில், ஊர்ப்பிள்ளையாருக்கு ஒரு தீபம் வாங்கிக் கொடுப்பதாக எனது அன்னை நேர்த்திக்கடன் செய்திருந்தாள்; முக்கியமாக அதனை நிறைவேற்றவேண்டும். எனது ஏழைத் தங்கைக்கு ஒரு சேலை வாங்கியனுப்ப வேண்டும். பாடசாலைக்கு வசதிச்சம்பளம் கட்டுவதற்குப் பணம் வேண்டுமென்று தம்பி கடிதத்துக்குமேல் கடிதமாக எழுதியிருந்தான். இவற்றை யெல்லாம்விட வேறும் பல சில்லறைச் செலவுகள்.



நான் மிகவும் சாதாரணமாக இருப்பவனைப்போல நடித்துக் கொண்டு நான்கு பக்கமும் நோட்டம் விட்டேன். எதிர் மூலையில் பாத்திரங்கள் உருண்டு கிடந்தன. அறையின் நடுவே ஒரு பிரம்புத்தட்டி தொங்கிக்கொண்டிருந்தது. மறுபக்கத்திலேதான் சமையலறை போலிருக்கிறது. உள் வளைமரங்களில் புகை ஒட்டறைகள் படிந்திருந்தன. எதிரேயிருந்த கதிரையொன்றில் இரும்புப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது. எதிர்ப்பக்கத்தில் சேலைகளும் வேறு உடைகளும் இருந்தன. இவைகளைப் பார்த்தால் அக்குடிசையில் அவளைத்தவிர வேறு ஒருவரும் வசிப்பதில்லைப் போல் தெரிகின்றது. இவள் தனியாகவா இங்கு இருக்கின்றாள்.



மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் மேற் கூரையில் ஏதோ மின்னியவாறு தெரிந்தது. உற்றுக்கவனித்தேன்.

ஒரு சிலந்தி, வலை பின்னியிருந்தது; அது வட்டம் வட்டமாக எவ்வளவு அழகாக இருக்கின்றது. அதன் நடுவே சிலந்தி! அந்த வலையில் பூச்சியொன்று விழுந்து துடித்துக்கொண்டிருந்தது.



அவள் திரும்பி வந்தாள். விளக்கு வெளிச்சத்தில் அவளின் தோற்றத்தை நன்கு கவனித்தேன். எவ்வளவு அழகாக இருக்கின்றாள்! அவளது தோற்றத்தில் நாரீமணிகளின் அதிமித அலங்காரம் இருக்கவில்லை. குடும்பப் பெண்ணுக்குரிய அலங்காரத் தோற்றந்தான் இருந்தது. அவளைப் பார்க்கும்போது அவளின்மேல் எனக்கு அனுதாபந்தான் ஏற்பட்டது.



இவள் தனது வாழ்வைச் சரியான பாதையிலே செலுத்தி யிருந்தால் நிச்சயம் ஒரு சிறந்த குடும்பப் பெண்ணாகியிருப்பாள் என்று எண்ணத் தோன்றியது.



ஏன் இவ்வளவு கீழ்த்தரமான வழியில் இறங்கியிருக்கிறாள்? ஒருவேளை வறுமையாக இருக்குமோ? நிச்சயம் அப்படியிருக்க முடியாது. வறுமையைப் போக்கிக்கொள்ள எவ்வளவோ கண்ணியமான தொழில்கள் இருக்கின்றனவே. படுகுழியில் விழவேண்டியதில்லையே! பின் இந்நிலைக்கு இவள் வருவதற்குக் காரணந்தான் என்ன?



அவர்கள் வாழும் கீழ்த்தரமான டாம்பீக வாழ்க்கை முறையாகத்தான் இருக்க வேண்டும். குடிக்கும், கும்மாளத்திற்கும் கண்ணியமாகப் புரியும் தொழில்களின் வருமானங்கள் போதுவதில்லை. அதனாலேதான் குறுக்கு வழியை நாடுகின்றார்கள் போலும். ஆனாலும் இந்த முடிவை என் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. அவளுடன் கதைத்து ஏதாவது கிரகித்துக்கொள்ளலாம் போலத் தோன்றியது.



இதோ அவள் எதையோ நீட்டுகிறாள். கிண்ணத்துடன் பாலை வாங்கிச் சுவைத்தேன். அவள் என்முன் அடக்கமாக நின்று கொண்டிருந்தாள். நான் இங்கு வந்தபோது அவளிடம் காணப்பட்ட கலகலப்பு எங்கே ஓடிமறைந்து விட்டது?. கிண்ணத்தைக் கட்டிலின் ஓரத்திலே வைத்தேன்.



விம்மும் ஒலி கேட்கின்றதே!



அவளை உற்றுக் கவனித்தேன். கண்ணீர்! ... இது என்ன தொந்தரவாக இருக்கின்றது. எதற்காக இவள் அழுகின்றாள்? அழவேண்டுமானால் தனிமையிலிருந்து அழுது தொலைக்கலாமே. என்னை இங்கு அழைத்துக் கொண்டுவந்து வைத்து ஏன் அழவேண்டும்? வரவர அழுகை அதிகரிக்கின்றதே. எனக்கு அவளைப் பார்ப்பதற்கு அனுதாபமாகவும், சங்கடமாகவும் இருந்தது.



“ஏன் அழுகின்றாய்?”



அவள் அதிகமாக விம்மினாள். எனக்குப் பொறுமை குறைந்துகொண்டு வந்தது. கேட்பதற்குப் பதில் கூறாமல் இப்படி அழுதுகொண்டிருந்தால்........? ஆத்திரந்தான் பொங்கியது. ஆனாலும் அடக்கிக்கொண்டு அவளின் அழுகைக்குக் காரணத்தைக் கண்டிப்புடன் கேட்டேன்.



இப்போது அவள் ஒருவாறு தனது அழுகையைக் குறைத்துக்கொண்டாள்.



“நான் ஒரு அனாதை. சிறு வயதிலே தாய்தந்தையரை இழந்த எனக்கு அண்ணா ஒருவர் துணையாக இருந்தார். ஆனால் அவரும் சிறிது நாட்களுக்கு முன் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். நான் தனியனாகி விட்டேன். எனது துன்பத்தை நினைக்கும்போது அழுகை வந்துவிட்டது.” என்று கூறிக்கொண்டே அவள் நிலத்தில் அமர்ந்தாள்.



என் மனம் சிறிது வேதனைப்பட்டது. பாவம், இந்த இளம் வயதில் அவளுக்கு இவ்வளவு கொடுமையா? விதி யாரைத்தான் விட்டு வைத்தது!



ஆனாலும் அவள் புரியும் இழிவான தொழிலை நினைக்கும் போது மனதிலே கசப்புத்தான் ஏற்பட்டது. ஒருவேளை தனியாக விடப்பட்ட அவள் வயிற்றை நிரப்புவதற்குத்தான் இத்தொழிலைப் புரிகின்றாளா?



“ஏன் ஏதாவது கண்ணியமான தொழிலைச் செய்து சம்பாதிக்கலாமே” என்று மெதுவாகக் கேட்டு வைத்தேன்.



“நேற்றுவரை என்னிடமிருந்த நகைகளை விற்றுக் கண்ணியமான முறையில் சீவனத்தை நடத்திவிட்டேன். என்னிடமிருந்த பணமெல்லாம் கரைந்துவிட்டது. தனிமையில் விடப்பட்ட ஒர் இளம்பெண் எந்தக் கண்ணியமான தொழிலைச் செய்யலாம்? அவளைச் சுற்றியிருக்கும் சிலர் எப்படியும் அவளை இழிநிலைக்குக் கொணர்ந்து விடுவார்கள். அப்படியொரு நிலை பிறரால் ஏற்படுமுன் நானே இந்நிலைக்கு வந்துவிடுவதெனத் தீர்மானித்தேன். நீங்கள் தான் முதன் முதல் என்னிடம் வந்திருக்கிறீர்கள். ”



நான் அவளை நிமிர்ந்து பார்த்தேன். புதுமலரின் வருணிக்க முடியாத ஒருவித வனப்பு அவளிடம் மறைந்திருப்பதை என் உள்மனம் உணர்ந்துகொண்டது. நுகரப்படாத மலரா அவள்? நமது சமுதாயத்தில் தேவையற்ற முறையில் எவ்வளவு மலர்கள் அநியாயமாகக் கசங்கி விடுகின்றன.



அவள் தொடர்ந்தாள் “.... ஆனால் உங்களைக் கண்டவுடன் நான் அந்த எண்ணத்தைக் கைவிட்டு விட்டேன். என் சகோதரனை உங்கள் உருவத்தில் பார்க்கின்றேன். என் அண்ணாவின் அதே கனிந்த பார்வை, தோற்றம் யாவும் உங்களிடம் அமைந்திருக்கின்றன..... அண்....ணா !” விம்மியபடியே அவள் என்னை அழைத்தாள். உணர்ச்சி இழையோடிய அவளது அன்புக்குரலின் சக்தி என் உள்ளத்தை இளகச் செய்தது.



எனது கண்கள் குளமாகின. அவளின் நிலைகண்ட எந்த மனித இதயமும் கலங்காமல் இருக்கமாட்டாது.



அவள் தனது உள்ளத்தைத் திறந்து எல்லாவற்றையுமே கூறிவிட்டாள். இந்த உத்தமப் பெண்ணுடன் உடன் பிறக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லையே என்று எனது மனம் அழுதது. ஆனாலும் நான் அவளுக்கு என்ன உதவியைச் செய்யப் போகின்றேன்? எனது குடும்பத்தில் எனக்கு இருக்கும் பொறுப்பே சுமக்க முடியாமல் கனக்கின்றதே.



எனது சட்டைப் ‘பாக்கெட்’ டில் கிடந்த பணத்தில் நூறு ரூபாவை எடுத்து அவளிடம் நீட்டினேன். அவள் தயங்கினாள்.



“ஓர் இளம்பெண் தனியாக வாழமுடியாதென்று நினைத்துக் கொள்ளாதே. மனத்திடமும், துணிவுங்கொண்ட எந்தப் பெண்ணும் துன்பமில்லாது வாழலாம். கண்ணியமான ஏதாவது தொழிலைச் செய்து வாழக் கற்றுக்கொள். அதற்கு இந்தப்பணம் மூலதனமாகவாவது உதவட்டும்” என்று கூறி அவளது கையில் பணத்தைத் திணித்தேன்.

நான் அவளுக்குக் கூறிய வார்த்தைகளும், செய்த சிறு உதவியும் எனது மனதிற்குத் திருப்தி அளிக்கவில்லை. ஆனாலும் என் நிலைமையில் அதைத்தான் என்னால் செய்ய முடிந்தது.



நன்றிப் பெருக்கால் அவளது கண்கள் கலங்கின. நான் புறப்படும் பொழுது. “போய்வாருங்கள் அண்ணா” என்று கூறி அன்புடன் விடை தந்தாள்.



வாழ்விலே நல்ல காரியம் ஒன்றைச் சாதித்த மனநிறைவுடன் எனது அறையை அடைந்தேன்.



வழக்கம்போல் அடுத்தநாள் இரவு அவ்வழியாக வந்து கொண்டிருந்தபொழுது என்னையறியாமலே எனது பார்வை அவளது குடிசையின் பக்கம் திரும்பியது. அங்கே நான் கண்ட காட்சி! - ஓர் இளம் வாலிபனை அணைத்தபடியே அவள் குடிசைக்குள் நுழைந்து கொண்டிருந்தாள்.



- கலைச்செல்வி 1964.

+++++++++++++++++++++++++

இதுதான் தீபாவளி



தீபாவளி நாளிலும் இப்படி வெகுநேரம் தூங்கி விட்டேனே என்ற ஆதங்கத்துடன் எழுந்திருந்தேன்.



நேற்று மாலை ‘யாழ்தேவி’யில் ஊருக்கு வந்த நான், பிரயாணக் களைப்பினால் சற்று அதிகமாகவே நித்திரையில் ஆழ்ந்துவிட்டேன். சனக்கூட்டங் காரணமாகப் புகையிரதத்தில் இருப்பதற்கு இடம் கிடைக்கவில்லை. பண்டிகை நாட்களில் அரசாங்கத்தாரால் ஒழுங்கு செய்யப்படும் விசேஷ றெயிலில் பயணஞ் செய்தால் நெருக்கடியாக இருக்குமே என்று தான் ‘யாழ்தேவி’யில் பயணஞ் செய்தேன். விசேஷ றெயிலைவிட ‘யாழ்தேவி’யிலேதான் கூட்டம் அதிகமோ என எண்ணும்படியாகி விட்டது.



எனக்கு இருப்பதற்கு இடம் கிடைக்காததினால் நான் கவலை கொள்ளவில்லை. தீபாவளிக் கொண்டாட்டங்களைக் கண்டுகளிப் பதற்காக என்னுடன் முதன்முறையாக யாழ்ப்பாணத்திற்கு வரும் சிங்கள நண்பன் பியசேனாவுக்கு இருக்க இடம் கிடைத்திருந்தால் எனது மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்திருக்கும்.



என்னைப் போன்றுதான் நண்பனும் வெகுநேரம் தூங்கியி ருப்பானோ என நினைத்துக்கொண்டே பியசேனாவின் கட்டில் இருந்த பக்கம் திரும்பினேன். அவன் எனக்கு முன்னதாகவே விழித்துக் கொண்டுவிட்டான். கட்டிலில் இருந்தவண்ணம் யன்னலின் திரையை நீக்கி ஆர்வத்தோடு வெளியே பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனது பார்வையை எனது பக்கம் திருப்பும் வகையில் “குட்மோனிங்” என வந்தனம் தெரிவித்தபடியே எழுந்து அவனது அருகில் சென்றேன்.



எனது குரல் கேட்டுத் திடுக்குற்றவன்போல அவன் எனது பக்கம் திரும்பிப் புன்னகையோடு பதிலுக்கு வந்தனம் கூறினான்.



யன்னலின் அருகிற் சென்று திரையை நன்றாக நீக்கிவிட்டு வெளியே நோக்கினேன்.



அங்கே எனது தங்கை ராணி முற்றத்தை அலங்கரித்துக் கோலம் போட்டுக்கொண்டிருந்தாள். தன்னை மறந்து கோலமிடுவதிலே கந்பனைகளை விரியவிட்ட அவளது வதனத்தில் எத்தனை எத்தனையோ பாவங்கள் தெரிந்தன.



“யுவர் ஸிஸ்டர் லுக்ஸ் வெரி சார்மிங்” நண்பன் பியசேனா ராணியின் அழகை வர்ணித்தபோது மனதில் ஒருவித குறுகுறுப்பு எனக்கு ஏற்பட்ட போதிலும் அசடு வழியச் சிரித்து வைத்தேன்.



‘இது கொழும்பில்லையடா யாழ்ப்பாணம், அதுவும் தமிழ்ப் பண்பாடு நிறைந்த ஒரு கிராமம். இங்குள்ள வாழ்க்கை முறைகளும், பண்பாடுகளும் வேறுபாடானவை. இங்கு ஒரு வயது வந்த பெண்ணை இப்படிப் பார்ப்பதும், வர்ணிப்பதும் குற்றமாகும்’- என்று நண்பனிடம் சொல்ல எனக்குத் துணிவில்லை.



ஏனென்றால், பியசேனாவின் உயர்ந்த மனப்பக்குவத்தைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். அவனும் நானும் கொழும்பு மாநகரில் ஒரே அறையில் ஆறு வருடங்களுக்கு மேலாகக் காலத்தைக் கடத்தி வருகிறோம்.



பியசேனா சிங்களப் பத்திரிகைகளில் கதைகளும் கட்டுரை களும் எழுதிவரும் பிரபல இளம் எழுத்தாளன். சமுதாயத்தின் ஏற்றத் தாழ்வுகளையும், கலாசாரங்களையும், பண்பாடுகளையும் அலசி ஆராய்வது அவனது இனிய பொழுதுபோக்கு. அந்த ஆராய்ச்சியின் பயனாகத் தோன்றும் பல பிரச்சினைகள் எங்கள் இருவருக்குமிடையில் சர்ச்சைகளையும், வாதங்களையும் ஏற்படுத்தி எங்களது நட்பை இறுக்கிக் கொள்ளும்.

தீபாவளியைக் கொண்டாடுவதற்காகக் கொழும்பிலிருந்து நான் புறப்பட்டபோது, பியசேனாவும் என்னுடன் வருவதற்கு ஆசைப்படு வதாகக் கூறினான். தீபாவளிக்காகக் கிடைத்த விடுமுறையை வீணாக்காமல் என்னுடன் வந்து யாழ்ப்பாணத்து மக்களின் வாழ்க்கை முறைகளை அவன் அறிந்துகொள்ள விரும்பினான். நானும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தேன்.



நாங்கள் இருவரும் புறப்பட்டு யாழ்ப்பாணத்தில் எனது கிராமமாகிய புன்னாலைக்கட்டுவனுக்கு வந்து சேர்ந்ததும், எனது தாய் தந்தையரை நண்பன் பார்த்தபோது இரு கைகளையும் கூப்பி ‘வணக்கம்’ எனக் கூறி எங்கள் எல்லோரையும் கவர்ந்தான்.



பியசேனாவுக்குத் தமிழ் பேசத் தெரியாவிட்டாலும் சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல இரண்டொரு வார்த்தைகளை ‘விளாசு’வதில் கெட்டிக்காரன்.



இவ்வளவு நேரமும் கோலத்தின் அழகினை இரசித்துக் கொண்டிருந்த பியசேனா என் பக்கம் திரும்பி “வை டூ யூ செலிபறேற் டீபாவலி?” எனத் தீபாவளி கொண்டாடுவதற்குரிய காரணத்தைக் கேட்டான்.



வழக்கம்போல எங்களது சம்பாஷணை ஆங்கிலத்தில் தொடர்ந்தது.



“முன்பொரு காலத்தில் நரகாசுரனின் கொடுமைகளிலிருந்து தங்களைக் காப்பாற்றும்படி தேவர்கள் விஷ்ணு பெருமானிடம் வேண்டுதல் செய்ய, அவர் அந்த அசுரனை அழித்துத் தேவர்களைக் காத்தருளினார். நரகாசுரன் இறக்கும் தருணத்தில், தான் இறந்தொழிந்த நாளை உலகத்தோர் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டுமென விரும்பினான். அதனால் நாங்கள் அவன் இறந்துபட்ட இத்தீபாவளி நாளில் எமது இல்லங்களைச் சுத்தஞ்செய்து, அலங்கரித்து, நீராடிப் புத்தாடை புனைந்து, தெய்வ வழிபாடு செய்து மகிழ்வடைகிறோம்” என நண்பனுக்கு விளக்கினேன்.



“அப்படியானால் தீபாவளி எங்கள் எல்லோருக்குமே மகிழ்ச் சிகரமான நாள்தான். நானும் உங்களுடன் சேர்ந்து தீபாவளியைக் கொண்டாடி எல்லோரது மகிழ்ச்சியிலும் கலந்துகொள்ளப் போகிறேன். எனக்காக எதையும் மிகைப்படுத்தவோ குறைத்துக்கொள்ளவோ வேண்டாம். வழமை போலக் கொண்டாடுங்கள் அப்போதுதான் நான் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடியும்.” என்றான்



அதன்படி நானும் பியசேனாவும் குளித்து முடித்த பின் முதலில் கோவிலுக்குச் செல்வதற்காகப் புறப்பட்டோம்.



நான் தீபாவளிக்காக வேண்டிய புதிய வேட்டியை அணிந்து கொண்டபோது, தனக்கும் ஒரு வேட்டி தரும்படி வேண்டினான் பியசேனா. அவனுடைய ஆசையைக் கெடுப்பானேன் என நினைத்து அவனது விருப்பத்தைப் பூர்த்தி செய்தேன்.



அவன் வேட்டியை அரையில் சுற்றியபோது அது நழுவிக் கீழே விழ, மீண்டும் அதனை எடுத்து அவன் அணிந்துகொண்டபோது அதன் தலைப்பு நிலத்தில் இழுபட, திருப்திப்படாதவனாய் அதனைத் திரும்பத்திரும்ப அணிய முயற்சித்தபோது எனக்கு வேடிக்கையாக இருந்தது.



அந்த நேரத்தில் அயல் வீடுகளிலுள்ள சிறுவர் கூட்டமொன்று அங்கே வந்தது. அவர்களுக்கு ஒரே கொண்டாட்டம். போகுமிட மெல்லாம் அவர்களுக்கு இன்று பணியாரங்களும் பட்சணங்களும் கிடைக்கும். தாங்கள் அணிந்திருக்கும் புது வண்ண உடைகளை மற்றவர்கள் பார்த்து இரசிக்கும்போது அந்தப் பிஞ்சு உள்ளங்களில் உவகை பொங்கி வழியும்.



பியசேனா வேட்டியணிந்து கொள்ளத் தெரியாமல் திண்டாடுவதைப் பார்த்த துடுக்குத்தனமான சிறுமி ஒருத்தி கைகொட்டிச் சிரித்தாள். அவளுடன் சேர்ந்து மற்றவர்களும் சத்தமிட்டுக் கேலிசெய்து கைகொட்டிச் சிரித்தனர்.



பியசேனா கொஞ்சங்கூட வெட்கப்படாதவனாய் அந்தச் சிறுவர்களோடு சேர்ந்து தானும் சிரித்து மகிழ்ந்தான்.



நண்பனின் அரையில் வேட்டியை நன்றாக வரிந்து கட்டி அவிழ்ந்து விடாமல் இருப்பதற்காக ஒரு ‘பெல்ற்’ரையும் அணிவித்தேன்.



சிறுவர்களின் சிரிப்பொலி கேட்டு அதன் காரணத்தை அறிந்துகொள்வதற்காக மறைவிலிருந்து கவனித்த எனது தங்கை ராணி, தன்னுள் பொங்கிவந்த சிரிப்பை அடக்க முயன்று திணறிப்போய்க் ‘களுக்’ கென்று சிரிப்புதிர்த்தாள்.



பியசேனாவுக்கு இப்போது ஏனோ நாணம் பற்றிக் கொண்டது. அவனது புன்னகை அசடாக வழிந்தது.



நாங்கள் இருவரும் கோவிலைச் சென்றடைவதற்குச் சிறிது தாமதமாகி விட்டது. கோவிலில் நிறைந்திருந்த பக்திச் சூழல் பியசேனாவைப் பெரிதும் கவர்ந்தது.



பக்தர்களில் சிலர் தேவார திருவாசகங்களைப் பாடியும், சிலர் கண்ணீர் வடித்து இறைவனிடம் ஏதேதோ இறைஞ்சி நின்றபோதும், அந்த ஒலிகள் அவனுள் ஏற்படுத்திய புளகாங்கிதத்தில் தன்னை மறந்து அவன் கைகூப்பி வழிபட்டு நின்றபோது, எனது உரோமக்கால்கள் குத்திட்டு நின்றன.



அர்ச்சகர் கொடுத்த பிரசாதத்தை அவன் இரு கைகளாலும் வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டபோதும், கண்களை மூடிக்கொண்டே திருநீற்றைத் தனது நெற்றியில் அணிந்துகொண்டபோதும், அந்த வெண்ணீற்றின் மையமாய்ச் சந்தனப் பொட்டிட்ட போதும் அவன் எவ்வளவு தெய்வீக பக்தனாய்க் காட்சியளித்தான்!



நீறுபூத்த நெருப்பாய் மிளிரும் அவனது கலையுள்ளத்தில் எம்மதமும் சம்மதந்தானா?



வழிபாட்டை முடித்துக்கொண்டு கோவிலின் பிரகாரத்தைச் சுற்றிப் பார்த்தபோது அவன் அறிய விரும்பியவற்றிற்கு நான் விளக்கம் கொடுத்தவண்ணம் இருந்தேன்.



ஸ்தூபியில் நிறைந்திருத்த சிற்பவேலைகளும் ஆங்காங்கே சுவர்களில் வரைந்திருந்த ஓவியங்களும் அவனை மகிழ்ச்சி கொள்ளச் செய்தன.



“புத்த கோவில்களில் நாங்கள் வணங்கும் முறைகளும் இந்துக் கோவில்களில் நீங்கள் வழிபடும் முறைகளும் சில வழிகளில் ஒத்திருக்கின்றன. புத்தர் பெருமானை வழிபடும் நாங்களும் உங்களைப்போல விநாயகக் கடவுளையும் முருகனையும் வழிபடு கிறோம். அப்படியாயின் இந்த இரு மதங்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன அல்லவா?”

பியசேனா கூறிய வார்த்தைகளில் பொதிந்திருந்த உண்மைக் கருத்துகளில் சிந்தனையைத் தேக்கியபடி நடந்துகொண்டிருந்தேன்.



“ஆனாலும் உங்களது ஆலயங்களில் நான் காணும் சிற்பங்களையும் ஓவியங்களையும் அவற்றில் தேங்கி நிற்கும் கொள்ளை அழகுகளையும், அவைகள் உணர்த்தும் உங்கள் பண்பாடுகளையும் கலாசாரங்களையும் பார்த்து நான் தலைவணங்கும்போது நீங்களும் உயர்ந்து நிற்கிறீர்கள் என்பதை மறுக்க முடியாது.”



அவன் அப்படிக் கூறும்போது எனக்குப் பெருமையாக இருந்தது.



கோவிலில் இருந்து நாங்கள் புறப்பட்டு வீட்டுக்கு வரும் வழியில் எனது பெருமையெல்லாம் சிதறிப் போகும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது.



தெருவின் திருப்பத்தில் இரட்டைக் காளைகள் பூட்டிய அந்த வண்டியில் நான்குபேர் சவாரி செய்து கொண்டிருந்தார்கள். நெடுந்துhரம் பிரயாணஞ் செய்தவைபோன்று அந்தக் காளைகள் களைப்படைந்து வாயினால் நுரை கக்கியவண்ணம் இருந்தன. வண்டியை ஓட்டுபவன் அரக்கத் தனமாகக் காளைகளின் முதுகில் கழிகொண்டு அடிக்கும் போது, அவை வேதனை தாங்காது விரைந்தோட, கழுத்தின் சலங்கைகள் கலகலத்தன. அந்த வேகத்தில் திருப்திப்படாதவன்போல வண்டி ஓட்டுபவன் காளைகளின் வால்களை வாயினால் கடித்துத் துன்புறுத்தினான்.



அந்த வண்டியின் பின் பக்கத்தில் கழுத்து வெட்டப்பட்டு முண்டமான ஓர் ஆட்டை அதன் கால்களில் கட்டித் தொங்கவிட்டி ருந்தார்கள். ஆட்டின் தலையைத் தனியே எடுத்து வண்டியிலிருந்த ஒருவன் வைத்திருந்தான். வண்டி ஓடும் வேகத்தில் அந்த ஆட்டின் உடல் இடையிடையே தெருவில் உராய்ந்து இரத்தத்தால் வழியைக் கறைப்படுத்திக்கொண்டிருந்தது.



இதனைப் பார்த்த பியசேனா ஒருகணம் திடுக்குற்று நின்றான். அவனது முகத்தில் ஒருவித அருவருப்பும் வேதனையும் கலந்தன. அவனால் உடனே எதுவும் பேச முடியவில்லை. விபரமறிய விரும்பி என்பக்கம் திரும்பினான்.

“இங்குள்ள சிலர் தீபாவளியை மகிழ்ச்சிகரமாகக் கொண்டா டுவதாக நினைத்து மாமிசமும் புசிக்கிறார்கள்”என்றேன். இதைக் கூறுவதற்குள் நான் ஏன் குறுகிப்போனேன்.



பியசேனா எவ்வித பதிலும் பேசவில்லை. கோவிலில் இருந்த போது ஏற்பட்ட உற்சாகம் திடீரென்று அவனிடமிருந்து மறைந்து போயிற்று. அவன் சிந்தனை செய்தபடியே வழியில் பதிந்திருந்த அந்தச் செங்குருதியைப் பார்த்த வண்ணம் மௌனமாக நடந்து கொண்டிருந்தான்.



அவனது மௌனம் என்னைச் சித்திரவதை செய்தது. ஆனால் அந்த மௌனத்தைக் கலைக்கக்கூடிய சக்தி எனக்கில்லை. நான் கதைக்கத் தொடங்கினால் அவன் வேறும் ஏதாவது கேட்டு விடுவானோ எனப் பயந்தேன்.



பியசேனா எதைப்பற்றி இப்போது சிந்தனை செய்கிறான்?



யாழ்ப்பாணத்தின் வாழ்க்கை முறைகளையும் பண்பாடு களையும் அறிந்துகொள்ளும் பொருட்டு அவன் என்னுடன் அளவளாவும் போதெல்லாம் எங்களைப்பற்றி எவ்வளவு உயர்த்திக் கூறியிருந்தேன். நான் கூறுவதை அவன் ஆர்வத்தோடு கேட்பதைப் பார்த்து எவ்வளவு பெருமையடைந்தேன். எங்களது பெருமை களெல்லாம் வாய்ச்சொல்லில் மட்டுந்தான் என யோசிக்கிறானா?,



நாங்கள் வீடுவந்து சேர்ந்ததும் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டோம். அப்பொழுது எங்கோ வெளியே சென்றுவிட்டுத் திரும்பிய எனது தந்தை, மது வெறியில் பலத்த சத்தமிட்டு ஒப்பாரி வைத்துக் கொண்டே வந்துகொண்டிருந்தார். அவர் வாடிக்கையாக மது வருந்தும் குண்டுமணியனின் கள்ளுக் கொட்டிலில் தீப்பற்றிக் கொண்டது என்பதை அவர் எழுப்பிய ஒப்பாரியிலிருந்து புரிந்துகொண்டேன். அவருக்கு அந்நிகழ்ச்சி பெருங் கவலையை உண்டாக்கவே, வசைபாடத் தொடங்கினார்.



இதைப் பார்த்துக்கொண்டிருந்த நண்பன் பியசேனா “வை யுவர் பாதர் இஸ் ஸிங்கிங்?” - ஏன் உனது தந்தை பாடுகிறார் என என்னிடங் கேட்டான்.

எனது தந்தை பாடவில்லை, கள்ளுக் கொட்டில் எரிந்து விட்ட தென ஒப்பாரி வைக்கிறார் என்று எப்படி நான் சொல்வேன்? நான் மௌனமானேன்.



கோவிலில் பக்தர் ஒருவர் தேவாரம் பாடிய போதும் பியசேனா இதே கேள்வியைத்தான் என்னிடம் கேட்டான்.



அப்போது தேவார திருவாசகங்களின் மகிமைகளைப் பற்றியும் அவற்றைப் பாடிய நாயன்மார்களைப் பற்றியும் அவர்கள் செய்த சைவப் பணிகளையும் விளக்கி ஆர்வத்தோடு ஒரு குட்டிப் பிரசங்கமே செய்தேன்.



எனது மௌனத்தைக் கலைக்கும் வகையில் பியசேனா என்னிடம் கேட்டான், “இஸ் யுவர் பாதர் ஸிங்கிங் டேவாரம்?”.- உனது தந்தை தேவாரம் பாடுகிறாரா?



நாக்கைப் பிடுங்கிக்கொண்டு என் உயிரை மாய்த்து விடலாம் போலிருந்தது. முன்பொருபோதும் அடைந்திராத பெரும் அவமான மடைந்தேன். ஐயகோ! தந்தை மகற்காற்றும் உதவி இதுதானா?



எனது தந்தை மது அருந்தியிருக்கிறார் என்று கூறுவதற்கு என் நாக் கூசியபோது, எனது முகத்திலே தெரிந்த அவமானத்தைக் கண்டுகொண்ட இங்கிதம் தெரிந்த நண்பன் நல்லவேளையாக வேறு எதுவும் என்னைக் கேட்கவில்லை.



நிலைமையைச் சமாளிப்பதற்காக எனது அன்னையும் தங்கை ராணியும் அருமைத் தந்தையைக் கிணற்றடிக்கு அழைத்துச் சென்றார்கள்.



கிணற்றடியில் தந்தைக்குத் தீபாவளி ஸ்நானம் நடந்தது.



எனது அன்னை அவருக்கு தலையில் அரப்பு வைத்துத் தேய்த்துவிட, தங்கை கிணற்றிலிருந்து நீரிறைத்துக் குளிப்பாட்டினாள்.



மதுமயக்கத்தில் இருந்தவர் அவர்களது பிடியிலிருந்து திமிறி எழுந்தோட, எனது அன்னையும் தங்கையும் துரத்திப் பிடித்து மல்லுக்கட்டிக் கிணற்றடிக்கு இழுத்துவந்து மீண்டும் குளிப்பாட்ட முயற்சித்தனர்.

தீபாவளி நாட்களில் இவையெல்லாம் சாதாரண நிகழ்ச்சிகள். ஆனால் பியசேனாவுக்கு வாழ்க்கையிலே கண்டிராத கண்கொள்ளாக் காட்சிகளாக இருந்தன. அவன் விஷமச் சிரிப்போடு இந்த நிகழ்ச்சிகளை இரசித்தவண்ணம் இருந்தான்.



பியசேனா ஒரு நல்ல இரசிகன். அத்தோடு எழுத்தாளனும் அல்லவா. கதையோ கட்டுரையோ எழுதுவதற்கு ஏற்ற சம்பவங்கள் அவனுக்கு நிறையக் கிடைத்திருக்குமே.



எனக்கு உடம்பெல்லாம் பற்றி எரிவதைப்போல் இருந்தது. பியசேனாவை நிமிர்ந்து பார்ப்பதற்குக்கூட அருகதையற்றவனாய், ஒரு சமுதாயமே தலைகுனிந்து நிற்பதைப் போன்று நான் வெட்கித்து நின்றேன்.



ஒருவாறாக எனது தந்தை குளித்து முடித்தபின் எல்லோருமாகச் சேர்ந்து உணவருந்திவிட்டுச் சிறிது நேரம் ஓய்வெடுத்தோம்.



அன்று மாலை பியசேனா கொழும்புக்குத் திரும்ப வேண்டியிருந்தது. நான் தீபாவளியோடு சேர்ந்து ஒரு கிழமை லீவு எடுத்திருந்தமையால் அவனை மட்டும் வழியனுப்பிவிட்டுக் கனத்த மனத்தோடு வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்தேன்.



கறை படிந்த வழியில் நடக்கும்போது உடலெல்லாம் கூசுகிறது.



காலையில் ஆட்டிலிருந்து வழியெங்கும் வடிந்த அந்தச் செங்குருதி இப்போது காய்ந்து கருமையாகித் தெரிகிறது.



- வீரகேசரி 1969

+++++++++++++++++++++

கட்டறுத்த பசுவும்

ஒரு கன்றுக் குட்டியும்



கதிரி தனது பிள்ளைக்குப் பால் கொடுத்துக் கொண்டி ருக்கிறாள். வியர்வைத் துளிகள் அவளது நெற்றியில் அரும்பி யிருக்கின்றன. பின் வளவைக் கூட்டித் துப்புரவாக்கிக்கொண்டிருந்த அவளிடம், அழுது அடம்பிடித்து வெற்றியடைந்துவிட்ட களிப்பில் அந்தச் சிறுவன் பால் குடித்துக்கொண்டிருக்கிறான். பால் கொடுப்பதிலே ஏதோ சுகத்தைக் காண்பவள்போல கதிரி கண்களை மூடிய வண்ணம் சுவரோடு சாய்ந்திருக்கிறாள். அவளது மடியில் முழங்கால்களை அழுத்தி, தலையை நிமிர்த்தி, தன் பிஞ்சுக் கரங்களால் தாயின் மார்பில் விளையாடிக் கொண்டே அவன் பால் குடித்துக்கொண்டிருக்கிறான். சில வேளைகளில் தனது சிறிய கால்களை நிலத்திலே உதைத்துத் தாயின் மார்பிலே தலையால் முட்டுகிறான். அப்படிச் செய்வது அவனுக்கு ஒரு விளையாட்டோ என்னவோ.



கண்ணாடியின் முன்னால் நின்று கண் புருவத்துக்கு மைதீட்டிக் கொண்டிருந்த வசந்தியின் பார்வை, கோடிப்புறத்து யன்னலின் ஊடாகக் கதிரியின் மேல் விழுகிறது. மைதீட்டுவதை நிறுத்திவிட்டு அவள் மெதுவாக யன்னலின் அருகில் வந்து கம்பிகளைப் பிடித்தவண்ணம் கதிரி பால் கொடுப்பதையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறாள். அவளது பார்வை சிறிதுநேரம் கதிரியின் மார்பிலே மேய்கிறது. கதிரியின் உடலமைப்பைக் கவனித்தபோது வசந்திக்கு ஆச்சரியமாக இருக்கின்றது.



வளவு கூட்டுவதற்காக மாதத்தில் இரண்டு தடவையாவது கதிரி இங்கு வருவாள். நெல் குத்துதல், மாவு இடித்தல் போன்ற வேறு வேலை களிலிருந்து சொல்லியனுப்பினாலும் அவள் வந்து செய்து கொடுப்பாள்.



வசந்தி கொழும்பிலிருந்து ஊருக்கு வந்திருந்த வேளைகளில், கதிரி அங்கு வேலைக்கு வரவேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படாமல் போய் விட்டன. அதனால் கதிரியை ஐந்தாறு வருடங்களாக வசந்தியால் பார்க்க முடியவில்லை.



வசந்தி கல்யாணஞ் செய்து கணவனுடன் கொழும்புக்கு போவதற்கு முன் கதிரியை அடிக்கடி பார்த்திருக்கிறாள். அப்போது இருந்த அவளது இறுக்கமான உடலமைப்பும், அழகும் இன்றும் மாறாமல் அப்படியே இருக்கின்றன.



‘நறுக்’கென்று அந்தச் சிறுவன் கதிரியின் மார்புக்காம்பில் கடித்து விடுகிறான்.



‘ஆ’ என்று ஒருவித வேதனையோடு அந்தச் சிறுவனைத் தூக்கி நிமிர்த்திய கதிரி, “ஏன்ரா கள்ளா கடிச்சனி?” என அவனிடம் செல்லமாகக் கடிந்து கொள்ளுகிறாள்.



அவன் தாயைப் பார்த்துச் சிரிக்கிறான். அவனது கடை வாய்களிலிருந்து பால் வழிகிறது. கதிரி தன் சேலைத் தலைப்பினால் அந்தச் சிறுவனின் வாயைத் துடைத்துவிட்டு, நெஞ்சை மறைத்துக் ‘குறுக்குக் கட்டு’க் கட்டிக்கொள்ளுகிறாள்.



இப்போது அந்தச் சிறுவன் எழுந்து நிற்கிறான். அவனது உடல் முழுவதும் புழுதி படிந்திருக்கிறது. அவனது மெலிந்த உடலின் நெஞ்சு எலும்புகள் பளிச்சென்று தெரிகின்றன. அவனது தோற்றத்துக்குக் கொஞ்சங்கூடப் பொருத்தமில்லாமல் வயிறு மட்டும் முட்டிக்கொண்டு பெரிதாக இருக்கிறது.



கொழும்பிலிருக்கும் மாதர்சங்கம் ஒன்றிற்கு வசந்தி அடிக்கடி செல்வாள். அந்தச் சங்கத்தில் அங்கத்தவர்களாக இருக்கும் அவளது சிநேகிதிகளில் பலர், குழந்தை பிறந்த ஒரு சில மாதங்களிலேயே பால் கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள்.



பால் கொடுப்பதனால் உடலுறுப்புகளின் இறுக்கமும் கவர்ச்சியும் குறைந்து விடுவதைப்பற்றி அவளுடைய சிநேகிதிகள் அடிக்கடி கதைத்துக்கொள்வார்கள். சிறிது காலத்துக்கு முன்பு மாதர் சங்கத் தலைவி பால் கொடுப்பதை நிறுத்துவதற்கு இலகுவான முறைகள் எவை என்பதைப்பற்றி ஒரு குட்டிப் பிரசங்கமே செய்தாள். இவையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக வசந்தியின் நினைவில் வந்துகொண்டிருந்தன.



வசந்தியின் மனது துருதுருக்கிறது. வளர்ந்துவிட்ட குழந்தை யொன்றுக்குப் பால் கொடுக்கும் கதிரியின் உடல் எவ்வளவு அழகாக இருக்கிறது! வசந்தி கதிரியிருக்கும் இடத்திற்கு வருகிறாள்.



“பிள்ளை, எப்ப கொழும்பாலை வந்தது?” வசந்தியைக் கண்டதும் ஆச்சரியத்தோடு கேட்கிறாள் கதிரி.



“காலைமைதான் வந்தனான்; நான் வந்ததைப் பற்றி அம்மா உன்னட்டைச் சொல்லேல்லையோ?”



“இல்லைப் பிள்ளை, நான் வரேக்கை அவ அடுப்படியிலை வேலையாயிருந்தா, அவவையேன் குழப்புவான் எண்டு நான் பின்வளவுக்குக் குப்பை கூட்டப் போட்டன்.”



அந்தச் சிறுவன் இப்போது வசந்தியை ஆச்சரியமாகப் பார்க்கிறான். பின்பு பயத்துடன் தாயின் மடியில் முகத்தைப் புதைத்துக் கொள்கிறான்.



“இவன்தான் பிள்ளை என்ரை கடைசிப் பெடியன், ஆள் வலு சுட்டியன். பிள்ளையை ஒரு நாளும் பார்க்கேல்லையெல்லே; அது தான் பயப்பிடுகிறான். அந்தச் சிறுவனின் தலைமயிர்களைத் தன் விரல்களினால் கோதியபடியே கூறுகிறாள் கதிரி.



“உவனுக்கு எத்தனை வயசு?”



“ஓ, இவன் பிறந்தது பிள்ளைக்குத் தெரியாது தானே. இந்த முறை எங்கடை அன்னமார் கோயில் வேள்வி வந்தால் இரண்டு முடிஞ்சு போம்.”



“இப்பவும் நீ உவனுக்குப் பால் கொடுக்கிறாய். ஏன் நிற்பாட்டேல்லை? நெடுகப் பால் கொடுத்தால் உன்னுடைய உடம்பு பழுதாய்ப் போமெல்லே.”

“என்ன பிள்ளை உப்பிடிச் சொல்லுறாய்? உவன் வயித்திலை வாறவரைக்கும் முந்தினவன் மூண்டரை வரியமாய்க் குடிச்சவன். பால் நிற்பாட்ட ஏலாமல் வேப்பெண்ணை பூசித்தான் நிற்பாட்டினனான். என்ரை நடுவிலாளும் அப்பிடித்தான்; இரண்டு வரியமாய்க் குடிச்சவள். பெத்த பிள்ளையளுக்குப் பாலைக் குடுக்காமல் அப்பிடியென்ன எங்கடை உடம்பைக் கட்டிக்காக்க வேணுமே?”



கதிரி சொல்லுவது வசந்திக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவள் ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டு மூன்று வருடங்களுக்குக் குறையாமல் பால் கொடுத்திருக்கிறாள்!.



வீட்டினுள்ளேயிருந்து குழந்தையின் அழுகைக் குரல் கேட்கிறது.



“பிள்ளைக்கும் போன பொங்கலுக்கையெல்லோ குழந்தை பிறந்தது. கொழும்பிலை ஆசுப்பத்திரியிலை தான் பிறந்ததெண்டு கொம்மா சொன்னவ. இப்ப குழந்தைக்கு ஏழு மாசமிருக்குமே?”



“இல்லை ஆறு மாசந்தான்”



“எடி வசந்தி, குழந்தை அழுகிறசத்தம் உனக்குக் கேக்கல் லையோ? அதுக்குப் பசிக்குதுபோலை. உங்கை கதிரியோடையிருந்து என்ன கதைச்சுக்கொண்டிருக்கிறாய்?”



வசந்தியின் தாய் அன்னம்மா, குழந்தையைத் தூக்கிக்கொண்டு அவர்கள் கதைத்துக்கொண்டிருக்கும் இடத்திற்கு வருகிறாள்.



“ஏதோ கனாக்கண்டு அழுகுதாக்கும். காலைமை எட்டு மணிக்குத்தானே பால் கொடுத்தனான். இனி பன்னிரண்டு மணிக்குத்தான் கொடுக்கவேணும்.” வசந்தி தான் கூறுகிறாள்.



“இந்தா குழந்தையைப் பிடி, நீ என்னத்தையாவது செய். நான் போய்க் கதிரிக்குத் தேத்தண்ணி ஊத்திக்கொண்டு வாறன்.” வசந்தியிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு அன்னம்மா திரும்புகிறாள்.



குழந்தையை இறுக அணைத்து, அதன் தொடைகளைத் தட்டி அழுகையைக் குறைக்க முயலுகிறாள் வசந்தி. குழந்தை வசந்தியின் மார்பிலே முகத்தைப் புதைத்துக்கொண்டு வீரிட்டு அழுகிறது.

“அம்மா தொட்டிலுக்கை சூப்பி இருக்கு, அதையும் எடுத்துக் கொண்டு வாங்கோ.”



அன்னம்மா கதிரிக்குத் தேநீர் கொண்டு வரும்போது சூப்பியையும் மறக்காமல் எடுத்து வருகிறாள். வசந்தி அதனை வாங்கி குழந்தையின் வாயில் வைத்தபின்புதான் ஒருவாறு அதன் அழுகை ஓய்கிறது. குழந்தை தாயின் முகத்தைப் பார்த்தபடி அந்த றப்பரை ஆவலுடன் உமியத் தொடங்குகிறது.



கதிரி எழுந்து கோடிப்புறத்து வேலியிலே செருகியிருந்த தனது சிரட்டையை எடுத்துத் துடைத்து, அதிலே படிந்திருந்த தூசியை நிலத்திலே தட்டி நீக்கி விட்டு அன்னம்மாவிடம் நீட்டுகிறாள். அந்தச் சிரட்டையிலே செம்பு முட்டிவிடக்கூடாதே என்ற கவனத்துடன் அன்னம்மா அதற்குள் தேநீரை வார்க்கிறாள்.



“பிள்ளை, குழந்தைக்குப் பசிக்குதுபோலை; பாலைக் குடுமன்” வசந்தியைப் பார்த்துக் கதிரி கூறுகிறாள்.



“அழுகிற நேரமெல்லாம் பால் கொடுக்கப்படாது. பிறகு பால் நிற்பாட்டிறது கரைச்சல். நான் இப்ப பால் கொடுக்கிறதைக் குறைச்சுப் போட்டன்; வாற மாசத்தோடை நிற்பாட்டப்போறன். நேரத்தின்படிதான் பால் கொடுக்கவேணும்.”



அதைக் கேட்டபோது கதிரியின் மனசுக்குக் கஷ்டமாக இருக்கிறது. பச்சிளம் குழந்தைக்குப் பசிக்கிறது, அதற்குப் பால் கொடுக்காமல் ஏமாற்றுகிறாள் தாய். கதிரியின் தொண்டைக்குள் ஏதோ அடைப்பதைப் போல இருக்கிறது. தேநீர் உள்ளே இறங்க மறுக்கிறது.



“ஏன் கதிரி தேத்தண்ணியைக் குடிக்காமல் வைச்சுக் கொண்டிருக்கிறாய்? சுறுக்காய்க் குடிச்சிட்டுப் போய்க் குப்பையைக் கூட்டன். கையோடை ஒரு கத்தை வைக்கலையும் எடுத்துக்கொண்டு போய் மாட்டுக்குப் போட்டு விடு. காலைமை தொடக்கம் அது கத்திக் கொண்டு நிற்குது.”



கதிரியிடம் கூறிவிட்டு அன்னம்மா வீட்டுக்குள் செல்கிறாள். அவளைத் தொடர்ந்து வசந்தியும் குழந்தையுடன் செல்கிறாள்.



கதிரியால் தேநீரைக் குடிக்க முடியவில்லை; அவள் அதனை வெளியே ஊற்றிவிட்டு சிரட்டையை வேலியில் செருகுகிறாள். பின்பு கோடியில் அடுக்கியிருந்த வைக்கோற் போரில் ஒரு கற்றை வைக்கோலை எடுத்துக் கொண்டு மாட்டுக் கொட்டிலுக்குச் செல்லுகிறாள். அவளைப் பின் தொடர்ந்து அந்தச் சிறுவனும் செல்லுகிறான்.



கதிரியைப் பார்த்ததும் அந்தப் பசுமாடு உறுமுகிறது. கொட்டிலின் மறுபுறத்தில் கட்டப்பட்டிருந்த அதன்கன்று, பால்குடிப்பதற்காகக் கயிற்றை இழுத்துக் கொண்டு தாய்ப்பசுவின் அருகே வர முயற்சி செய்து கொண்டிருக்கிறது. தாய்ப்பசு கன்றின் முகத்தைத் தன் நாவினால் நக்குகிறது. இப்போது பசுவின் முலைக் காம்பிலிருந்து பால் சுரந்து சொட்டுச் சொட்டாக நிலத்திலே சிந்துகிறது. கதிரி அதனை உற்றுப் பார்க்கிறாள். அந்தப் பசு நல்ல உயர்சாதிப் பசுவாகத்தான் இருக்க வேண்டும்.



கதிரி வைக்கோலைத் தொட்டிலுக்குள் போட்டு உதறி விடுகிறாள். பின்பு அதன் கன்றை ஆதரவாகத் தடவிவிட்டு அதற்கும் சிறிது வைக்கோலைப் போடுகிறாள்.



வெயில் உக்கிரமாக எறிக்கிறது. கதிரிக்குக் களைப்பாகவும் ஆயாசமாகவுமிருக்கிறது. தொடர்ந்தும் வேலைசெய்ய அவளால் முடியவில்லை. அருகிலிருக்கும் வேப்ப மரநிழலின் கீழ் தனது சேலைத் தலைப்பை விரித்து அதிலே சாய்ந்து கொள்ளுகிறாள். அவளது சிறுவன் தூரத்திலே விளையாடிக் கொண்டிருக்கிறான்.



வசந்தி தன் தோழி ஒருத்தியின் கல்யாணத்திற்குச் செல்வ தற்காகத் தன்னை அலங்காரம் செய்து கொண்டிருக்கிறாள். வெகுநேரமாகக் கண்ணாடியின் முன்னால் நின்று ஒரு புதிய ‘பாஷன்’ கொண்டையைப் போடுவதில் அவள் முனைந்திருக்கிறாள்.



அந்தக் கொண்டை அவளது தோற்றத்துக்கு மிகவும் எடுப்பாகவிருக்கும் என்பது அவளுக்குத் தெரியும். ஒரு நாள் அந்தக் கொண்டையோடு அவள் மாதர் சங்கத்துக்கு போயிருந்தபோது, அங்கிருந்த எல்லோரும் ஒருமுகமாக அவளது அழகைப் புகழ்ந்தார்கள். அன்று அந்தக் கொண்டையை அடுத்த வீட்டிலிருக்கும் அவளது தோழிதான் போட்டுவிட்டாள்.



கொண்டை போட்டு முடிந்துவிட்டது. ஆனாலும் வசந்திக்கு அது திருப்தியை அளிக்கவில்லை. ஒருவாறாகத் தனது அலங்காரத்தை முடித்துக்கொண்டு அவள் புறப்பட்டுவிட்டாள்.

வெகு நேரமாகத் தூங்கிக்கொண்டிருந்த வசந்தியின் குழந்தை அழத் தொடங்குகிறது. அன்னம்மா ஓடிச்சென்று குழந்தையைத் தூக்குகிறாள். அவளைப் பார்த்ததும் குழந்தை வீரிட்டு அழுகிறது. அதன் அழுகையை நிறுத்த எண்ணிய அன்னம்மா, சூப்பியை எடுத்து அதன் வாயிலே வைக்கிறாள். குழந்தையின் அழுகை சிறிது நேரம் அடங்குகிறது. அதனைத் தன் தோளிற் சாய்த்து, முதுகிலே தட்டி நித்திரையாக்க முயலுகிறாள் அன்னம்மா. குழந்தை மீண்டும் வீரிட்டு அழுகிறது. அன்னம்மா எவ்வளவோ முயற்சி செய்தபோதும் அதன் அழுகையை நிற்பாட்ட முடியவில்லை. குழந்தை மீண்டும் மீண்டும் அழுது கொண்டிருக்கிறது. அதன் வாயிலிருந்த சூப்பி நிலத்திலே விழுகிறது.



கண்ணயர்ந்திருந்த கதிரி எழுந்து உட்காருகிறாள். ஏன் அந்தக் குழந்தை வெகுநேரமாக அழுதுகொண்டிருக்கிறது? குழந்தையின் அழுகை கதிரியின் நெஞ்சுக்குள் ஏதோ செய்தது. அவளால் பொறுமையாக இருக்க முடியவில்லை.



“ஏன் கமக்காறிச்சி குழந்தை அழுகுது? பிள்ளையைக் கூப்பிட்டு பாலைக் குடுக்கச் சொல்லுமன்”அன்னம்மாவிடம் கூறுகிறாள் கதிரி.



“இனி ஆறு மணிக்குத்தான் பால் குடுக்கவேணுமெண்டு சொல்லிப்போட்டு அவள் எங்கையோ கலியாணத்துக்குப் போட்டாள். இங்கை குழந்தை கிடந்து பசியிலை துடிக்குது. அப்பவும் நான் சொன்னனான், குழந்தையையும் கொண்டுபோகச்சொல்லி; அவள் கேட்டால் தானே. பால் குடுக்கிற நேரத்துக்கு வருவனெண்டு சொல்லிப் போட்டுப் போட்டாள். இப்ப என்ன செய்யிறது? அழுதழுது இதுகின்ரை தொண்டையும் அடைச்சுப்போச்சு”.



அன்னம்மாவின் குரலையும் மீறிக்கொண்டு துடித்துத் துடித்து அழுகிறது குழந்தை.



அன்னம்மா விளையாட்டுப் பொருட்களைக் காட்டிக் குழந் தையின் அழுகையை அடக்க முயற்சிக்கிறாள். ஆனாலும் அதன் அழுகை அடங்கவில்லை. அன்னம்மாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.



வெகு நேரமாக அழுது களைத்துப்போன அந்தக் குழந்தைக்கு இப்போது அழுவதற்கே சக்தியிருக்கவில்லை. அது இப்போது முனகிக் கொண்டிருக்கிறது.

அன்னம்மாவின் கண்களில் நீர் துளிர்த்துவிட்டது. அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.



கொட்டிலில் கட்டியிருந்த பசுமாடு ‘அம்மா அம்மா’ என்று குரல் கொடுக்கிறது. பால் கறக்கும் நேரம் வந்துவிட்டால் அது கத்தத் தொடங்கி விடும். மாட்டுடன் சேர்ந்து இடையிடையே கன்றும் குரல் கொடுக்கிறது.



இப்போது முனகுவதற்குக் கூடச் சத்தியில்லாமல் குழந்தை அன்னம்மாவைப் பரிதாபமாகப் பார்க்கிறது.



“கமக்காறிச்சி, குழந்தை இனித் தாங்கமாட்டுது; பசுப் பாலையாவது குடுமன்.” கதிரி அன்னம்மாவிடம் கூறுகிறாள்.



“குழந்தையைக் கொஞ்சம் பார்த்துக்கொள் கதிரி, நான் ஓடிப்போய்ப் பாலைக் கறந்து கொண்டுவாறன். ”



முற்றத்து விறாந்தையிலுள்ள திண்ணையில் பாயொன்றை விரித்துக் குழந்தையை அதிலே கிடத்திவிட்டு, செம்பை எடுத்துக் கொண்டு மாட்டுக்கொட்டில் பக்கம் போகிறாள் அன்னம்மா.



குழந்தை மீண்டும் அழத் தொடங்குகிறது. அது தன் பிஞ்சுக் கால்களால் நிலத்தில் உதைத்து, உடலை நெளித்துத் துடிக்கிறது.



கதிரி ஒரு கணம் கண்களை மூடிக்கொள்ளுகிறாள். அவளால் குழந்தைபடும் வேதனையைப் பார்க்க முடியவில்லை.



துடித்துப் புரண்டுகொண்டிருந்த குழந்தை திண்ணையின் ஓரத்திற்கு வந்து விடுகிறது.



ஐயோ! குழந்தை விழப்போகிறதே !



கதிரி ஓடிச்சென்று, திண்ணையின் நடுவிலே குழந்தையைக் கிடத்துவதற்காகத் தன் இரு கைகளாலும் அதைத் தூக்குகிறாள்.



“அம்..... மா” குழந்தை அவளது முகத்தைப் பார்த்து வெம்புகிறது.



குழந்தையைத் தன் நெஞ்சோடு அணைத்தபடி நிலத்திலே உட்கார்ந்து விடுகிறாள் கதிரி.

குழந்தை அவளது நெஞ்சிலே முகத்தைப் புதைத்துக் கொண்டு முனகுகிறது. தன் பிஞ்சுக் கரங்களால் அவளது நெஞ்சை விறாண்டுகிறது. நெஞ்சை மறைத்துக் குறுக்குக்கட்டுக் கட்டியிருந்த அவளது சேலை அவிழ்ந்து விடுகிறது.



“அ..... ம்மா, அம்... மா ”



கதிரி தன்னை மறக்கிறாள்.



கதிரியின் மார்புக் காம்புகள் நனைந்துவிடுகின்றன. மறுகணம் அந்தக் குழந்தை அவளது மார்பில் கைகளால் அளைந்தபடி வாயை வைத்து உமியத் தொடங்குகிறது.



“ஐயோ கதிரி, மாடெல்லோ கயித்தை அறுத்துக் கொண்டு கண்டுக்குப் பாலைக் குடுத்துப் போட்டுது”.



மாட்டுக் கொட்டிலில் இருந்தபடியே அன்னம்மா பலமாகக் கூறுகிறாள்.



அவள் கூறுவதைக் கேட்கக்கூடிய நிலையில், அப்போது கதிரி இருக்கவில்லை.



கல்யாண வீட்டிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த வசந்தி, இப்போது தனது ‘ஹான்பாக்’கைத் திறந்து அதற்குள்ளிருந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்து, கலைந்திருந்த தனது அலங்காரத்தைச் சரிசெய்து கொள்ளுகிறாள்.



- வீரகேசரி 1973

++++++++++++++++++++++++++

இப்படியும் ஓர் உறவு



எனது வைத்தியக் கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு மலைநாட்டிலுள்ள நாகஸ்தனைத் தேயிலைத் தோட்டத்தில் வைத்தியனாகப் பதவியேற்று ஒரு வருடத்திற்கு மேலாகிறது. இந்தக் கால ஓட்டத்தில் எனக்கு எவ்வளவோ விசித்திரமான அனுபவங்கள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன.



கல்லூரியிலே கற்ற தொழில் முறைகளெல்லாம் இங்கு வேலை பார்க்கும்போது சில வேளைகளில் என்னைக் கைவிட்டு விடுகின்றன. தேயிலைத் தோட்டத்துத் தொழிலாளர்களுக்கு வைத்தியம் பார்ப்பதற்குப் புதுவிதமான திறமை வேண்டுமென்பது இப்போதுதான் எனக்குப் புரிகிறது.



எனக்குக் கொடுக்கப்பட்ட பங்களா, வைத்திய சாலைக்குப் பக்கத்திலேதான் இருக்கிறது. சிகிச்சைக்காகப் பலர் வைத்தியசாலையில் கூடிவிட்டார்கள் என்பதனை அவர்கள் எழுப்பிய பலமான பேச்சுக் குரலில் இருந்து புரிந்துகொண்டேன்.



எனது பங்களாவிலிருந்து புறப்பட்டு வைத்தியசாலையை நான் அடைந்தபோது, பலர் எழுந்து வணக்கம் தெரிவிக்கிறார்கள்.



“சலாங்க”



“சலாம்” நான் அவர்களுக்குப் பதில் வணக்கம் தெரிவித்து விட்டு வைத்தியசாலைக்குள் நுழைகிறேன்.

‘மருந்துக்காரன்’ அதாவது வைத்தியசாலையில் வேலை செய்யும் தொழிலாளி அறையைச் சுத்தமாகக் கூட்டித் துடைத்துக் கிருமிநாசினி தெளித்திருந்தான். அதன் வாசனை அறையெங்கும் நிறைந்திருந்தது. தினந் தினம் நுகர்ந்து பழகிப்போன அந்த வாசனை என் மனதுக்கு இதமாக இருந்தது; வெளியே சிலர் மூக்கைச் சுழித்தார்கள். நோயாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே வந்து தங்களது நோய்களைக் கூறிச் சிகிச்சை பெற்றுக் கொண்டு திரும்பிய வண்ணம் இருக்கிறார்கள்.



அடுத்துக் கறுப்பையாக் கங்காணி வருகிறார். மலையில் பெண்கள் கொழுந்தெடுக்கும்போது இவர்தான் மேற்பார்வை செய்பவர். அவர் அணிந்திருக்கும் ‘கோட்’டும் காவிபடிந்த பற்களால் உதிர்க்கும் சிரிப்பும், குழைந்து பேசும் நயமும் கங்காணிமார்களுக்கே உரித்தான தனிச் சிறப்புக்கள்.



“சலாமுங்க”



“சலாம்” கங்காணி, என்ன வேணும்?



“கொழந்தை பொறந்திருக்குங்க; பேர் பதியணும்”



நான் கங்காணியை உற்றுப் பார்க்கிறேன். அவரது தலையில் நரைத்திருந்த கேசங்கள் எனக்குப் பல கதைகள் சொல்லுகின்றன.



எனது சிந்தனைப் பொறிகளில் ஒருகணம் தாக்கம் ஏற்படுகின்றது; நான் மௌனமாகின்றேன்.



கங்காணியின் மனைவி கறுப்பாயி நேற்றுத்தான் காலில் ஏற்பட்டிருந்த காயத்திற்கு மருந்து கட்டுவதற்காக வைத்தியசாலைக்கு வந்திருந்தாள். அவளது தோற்றத்தை எனது மனக்கண்ணின் முன்னால் நிறுத்திப் பார்க்கிறேன். கறுப்பாயி கர்ப்பிணியாக இருக்கவில்லையே!



“யாருக்குக் கங்காணி குழந்தை பிறந்திருக்கு? கறுப்பாயிக்கா?”



“இல்லீங்க சாமி, செகப்பாயிக்கு”



“யார் அந்த சிகப்பாயி?” நான் கங்காணியிடம் கேட்கிறேன்.



“என்னோட கொழுந்தியா தானுங்க. சம்சாரத்தோட தங்கச்சிங்க, நான் ரெண்டாந் தாரமா எடுத்துக்கிட்டேனுங்க”

எனது பொறிகள் கலங்குகின்றன. சிகப்பாயியை எனக்கு நன்றாகத் தெரியும். அவள் தினமும் காலையில் வைத்தியசாலையின் வழியாகத்தான் மலைக்குக் கொழுந்தெடுக்கச் செல்வாள். அப்பொழு தெல்லாம் சிகப்பாயியின் அழகை நான் பலமுறை இரசித்திருக்கிறேன்.



பெயருக்கேற்ற நிறம், அழகான வதனம், கருவண்டுக் கண்கள், கொஞ்சிப் பேசும் குரல், கொழுந்துக் கூடையைப் பின் புறத்தில் மாட்டிக்கொண்டு நாகஸ்தனைத் தோட்டத்திற்கே ராணிபோல அவள் நடந்து செல்லும் அழகே அலாதியானது. தோட்டத்து வாலிபர்களின் உள்ளங்களையெல்லாம் கிறங்க வைத்த அந்தச் சிகப்பாயியா இந்தக் கிழவனை மணந்து கொண்டிருக்கிறாள்!



என் மனதுக்குக் கஷ்டமாக இருந்தது.



“சிகப்பாயியை எப்போது கலியாணஞ் செய்தாய்?” நான் ஆவலோடு கறுப்பையாக் கங்காணியை வினவுகின்றேன்.



“கலியாணஞ் செய்யல்லீங்க, எடுத்துக்கிட்டேனுங்க” இதைக் கூறும்போது வெட்கத்தோடு தலையைச் சொறிந்துகொண்டே குழைந்தார் கங்காணி.



முறைப்படி விவாகம் செய்யாதவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் பிறப்பைப் பதிவு செய்யும் போது, தாய் தந்தையரின் கையொப்பத்தையும் பதிவுப்புத்தகத்தில் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதனைக் கங்காணியிடம் விளக்கமாகக் கூறி, இருவருடைய கை யொப்பத்தையும் பெற்றுக்கொள்வதற்கு நேரில் அவர்கள் வசிக்கும் லயத்திற்கு வருவதாகவும் சொல்லிக் கங்காணியை அனுப்பி வைத்தேன்.



அதற்குப்பின் எனது வேலை என் கருத்தில் அமையவில்லை. வைத்தியத்திற்கு வந்தவர்களை ஒவ்வொருவராக அனுப்பிவிட்டு, மருந்துக்காரனையும் கூட்டிக் கொண்டு சிகப்பாயி வசிக்கும் லயத்திற்குப் போகிறேன்.



லயத்தில் சிகப்பாயி இருக்கும் ‘காம்பரா’வுக்குள் நுழையும் போது கங்காணி என்னை வாசலிலே நின்று வரவேற்கிறார். சிகப்பாயியின் தாயும் தந்தையும் எனக்குச் சலாம் வைக்கிறார்கள்.



எனக்கு அவர்களைப் பார்க்கும்போது எரிச்சலாக இருந்தது. அழகான கிளிபோன்ற பெண்ணை வளர்த்து, இந்தக்கிழட்டுப் பூனையிடம் கொடுத்துவிட்டார்களேயென என் மனம் ஏங்குகிறது.

நான் சிகப்பாயியைப் பார்க்கிறேன். சிகப்பாயிக்கு என்ன நேர்ந்துவிட்டது? அவளது உடலெல்லாம் மெலிந்து பெலவீன மடைந்திருக்கிறாள். அவளது முகத்திலே ஏன் இவ்வளவு சோகம்? ஏன் அவளது கண்கள் கலங்குகின்றன? தோட்டத்து வாலிபர்களை ஏங்க வைத்த சிகப்பாயியா இவள்!



சிகப்பாயியையும் அவளது குழந்தையையும் பரிசோதனை செய்தபின்னர், குழந்தையின் பிறப்பைப் பதிவுசெய்யவேண்டிய எல்லா விபரங்களையும் ஒவ்வொன்றாகக் கேட்கிறேன்.



ஏன் சிகப்பாயி மௌனமாக இருக்கிறாள்? கங்காணியும் சிகப்பாயியின் தாய் தந்தையரும் எனக்கு வேண்டிய விபரங்களைக் கூறுகிறார்கள். அவற்றைக் குறித்துக்கொண்ட பின்னர், கங்காணி பிறப்புப் பதிவுப் புத்தகத்தில் கையொப்பமிடுகிறார்.



சிகப்பாயியின் பெருவிரலை மையில் தோய்த்துப் புத்தகத்தில் ஒப்பமாக அழுத்துகிறேன். அவளது விரல்கள் நடுங்குகின்றன. அவளையும் மீறிக்கொண்டு ஒரு விம்மல் சோகமாக என் காதுகளைத் துளைக்கிறது. மறுகணம் அவள் மயக்கமடைந்துவிட்டாள்.



அவளது நாடித்துடிப்பை நான் அவசர அவசரமாகச் சோதனை செய்கிறேன். பயப்படும்படியாக ஒன்றுமில்லை. அவளுக்கு ஏதோ அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அவளுக்கு இப்போது பூரண ஓய்வு தேவை. அவள் மனதை அலட்டிக்கொள்ளாமல் நிம்மதியாக நித்திரை செய்யும் வண்ணம் வேண்டிய மருந்தை ஊசிமூலம் அவளது உடலிலே பாய்ச்சிவிட்டு வைத்தியசாலைக்குத் திரும்புகிறேன்.



எனது மனம் குமைச்சல் எடுக்கிறது. சிகப்பாயி ஏன் திடீரென்று மயக்கமடைந்தாள்? அவளுக்கு அதிர்ச்சி ஏற்படக் காரணமென்ன? அவள் ஏன் மௌனம் சாதிக்கிறாள்?



ஏழெட்டு நாட்களாகச் சிகப்பாயியின் சோக உருவம் இடையிடையே என் மனதிலே தோன்றி என்னை அலைக்கழித்த வண்ணம் இருந்தது.



ஒருநாள் இரவு நடுநிசி நேரத்தில் எனது பங்களாவின் கதவு அவசர அவசரமாகத் தட்டப்படும் ஓசை கேட்கிறது. யாருக்கோ கடுமையான சுகவீனமாக இருக்கவேண்டும். நான் கதவைத் திறக்கிறேன்.

முனியாண்டி வாசலில் நின்றுகொண்டிருந்தான். அவன் தோட்டத்திலுள்ள படித்த வாலிபர்களில் ஒருவன். அவனிடம் எப்பொழுதும் எனக்கு ஓர் அபிமானம் உண்டு. அவன் எதைப் பேசும் போதும் நிதானத்துடனும் முன்யோசனையுடனுந்தான் பேசுவான். அவனது பேச்சில் ஒருவித தனிக்கவர்ச்சி இருக்கும். முனியாண்டி மிகவும் களைத்துப் போயிருந்தான். எங்கிருந்தோ அவசரமாக ஓடிவந்ததால் அவனுக்கு மூச்சு வாங்குகிறது.



“ஐயா, செகப்பாயிக்கு ரெம்ப வருத்தமுங்க. வெரசா வந்து பாருங்க”. அவனது குரலில் பதற்றம் தொனிக்கிறது.



நான் உடையை மாற்றிக்கொண்டு மருந்துப்பெட்டியுடன் அவனைப் பின்தொடர்கிறேன்.



சிகப்பாயி இருக்கும் காம்பராவுக்குள் நுழைந்த போது, அங்கு பலர் கூடியிருந்தார்கள். எனது வரவை அவர்கள் எதிர்பார்க்கவில்லைப் போலத் தெரிகிறது. என்னைக் கண்டதும் எல்லோரும் எழுந்து நிற்கிறார்கள். சிலர் சமாளித்துக்கொண்டு ‘சலாம்’ வைக்கிறார்கள்.



என்னுடன் வந்த முனியாண்டியை உள்ளே நுழையவிடாமல் அங்கு நின்ற சிலர் தடுத்துவிட்டார்கள். அவர்கள் கோபத்தோடு முனியாண்டியைப் பார்த்த பார்வை பயங்கரமாக இருந்தது. நான் நிதானத்துடன் அங்கிருந்த சூழ்நிலையை அவதானித்தேன்.



அந்த அறையின் ஒரு பகுதியிலே தோட்டத்துப் பூசாரி ஒருவன் கையில் உடுக்கு ஒன்றை வைத்து அடித்தபடியே தாளத்துக்கேற்ப ஏதோ மந்திர உச்சாடனம் செய்துகொண்டிருந்தான். அவனது கண்கள் சிகப்பாயியை வெறித்துப் பார்த்தவண்ணம் இருந்தன. சிகப்பாயியைச் சுவரோடு சாய்த்து இருத்தி, சாய்ந்து விடாமல் இருப்பதற்காக இருவர் அவளைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். அவளது கேசங்கள் கலைந்திருந்தன. பூசாரியின் மந்திர உச்சாடனம் உச்சஸ்தாயியை அடையும் போதெல்லாம் அவன் பக்கத்திலே கிடந்த செம்பிலிருந்து தண்ணீரை எடுத்துச் சிகப்பாயியின் முகத்தில் அடித்தான்.



எனது வரவை யாரோ பூசாரிக்குச் சொல்லியிருக்க வேண்டும். அவன் சமாளித்துக்கொண்டு எழுந்திருந்தான். அசடு வழியக் குழைந்துகொண்டே “செகப்பாயிக்குப் பேய்க் கோளாறுங்க, அதுதான் சாமி பார்க்கிறமுங்க” என்றான்.

எனக்குப் பொங்கிவந்த கோபத்தில் எதையுமே என்னால் பேச முடியவில்லை. நான் அங்கு இருந்தவர்களின்மேல் வீசிய பார்வையின் பயங்கரத்தில் எல்லோரும் ஒடுங்கிப்போய் நின்றார்கள்.



சிகப்பாயியைத் தூக்கிப் பக்கத்திலே கிடந்த சாக்கில் படுக்க வைக்கும்படி கங்காணியிடம் கூறினேன்.

கங்காணியும் வேறு சிலரும் அவளைத் தூக்க முயன்றபோது ஈனசுரத்தில் அவள் கூறினாள்:



“அடே, கறுப்பையா கங்காணி, என்னைத் தொடாதேடா.”



கங்காணி இதை எதிர்பார்க்கவேயில்லை. செய்வதறியாது திகைத்து நின்றார். அங்கு நின்ற பெண்கள் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். கங்காணியின் பெயரைச் சிகப்பாயி சொல்லியது அவர்களுக்கு வெறுப்பைக் கொடுத்தது. தோட்டத்துப் பெண்கள் வாழ்நாளில் தவறுதலாகக்கூடத் தங்கள் கணவன்மார்களின் பெயரைச் சொல்லமாட்டார்கள்.



நான் சிகப்பாயியைப் பரிசோதனை செய்தேன். எனது இதயம் ஒரு துடிப்பை இழந்து மீண்டுந் துடித்தது.



சிகப்பாயியின் நாடித் துடிப்புக் குறைந்து விட்டது. அவளது இதயம் பலவீனமாகத் துடித்துக் கொண்டிருந்தது. இனிச் சிகப்பாயி பிழைக்கமாட்டாள்.



அவளது இதயத் துடிப்பையும் சுவாசத்தையும் துரிதப்படுத்த எண்ணி ‘கொறாமின்’ ஊசிமருந்தை அவளது உடலிலே பாய்ச்சுகிறேன். காலங்கடந்த இந்த முயற்சி ஏற்ற பலனைத் தராது என்று எனக்குத் தெரிந்துங்கூட என்னால் சும்மா இருக்க முடியவில்லை.



எல்லாமே எனக்கு ஒரு நொடிப்பொழுதில் விளங்குகின்றன. சிகப்பாயிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி அவளுக்குச் சித்தப்பிரமையை ஏற்படுத்தியிருக்கிறது. பேய் பிடித்து ஆட்டுகிறதென்ற மூட நம்பிக்கையில் அவளுக்கு ஏற்ற வைத்தியம் செய்விக்காமல், அவளுக்குத் தேவையான ஓய்வு உறக்கத்தைக் கொடுக்காமல் இரவு பகலாக அவள் பூசாரியின் சித்திரவதைக்கு ஆளாகியிருக்கிறாள். இந்த மூடநம்பிக்கைதான் அவளின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி யிருக்கிறது.



சிகப்பாயி மெதுவாகக் கண்விழித்துப் பார்த்தாள்; நான் ஆவலோடு அவளை நோக்கியவண்ணம் இருந்தேன். ஏக்கம் நிறைந்த அவளது பார்வை யாரையோ தேடியது. அங்கிருந்த ஒவ்வொருவரின் மேலும் வரிசையாக அவளது பார்வை திரும்பியது. திடீரென்று கண்களில் மலர்ச்சி தோன்றுவதை என்னால் அவதானிக்க முடிந்தது.



சிகப்பாயி மிகவும் கஷ்டத்தோடு முனகினாள்.



“என் ராசா வந்திட்டாரு.”



“யார் சிகப்பாயி, யார் வந்தது? யார்.......?” நான் ஆவலோடு அவளிடம் கேட்கிறேன்.



அவள் பதில் பேசவில்லை. வாழ்வு அணைந்துபோகும் அந்த நேரத்திலும் அவளது வதனத்தில் இலேசாக நாணம் பரவுவதைக் கண்டேன். அவள் தனது ராசாவின் பெயரைச் சொல்லமாட்டாள்,



சிகப்பாயியின் கண்கள் முனியாண்டியை நோக்கிய வண்ணம் இருந்தன.



முனியாண்டி மற்றவர்களின் பிடியிலிருந்து திமிறிக்கொண்டு உள்ளே ஓடிவந்தான். அவனைத் தடுத்து நிறுத்த முயன்றவர்களை எனது அதிகாரத் தொனியில் அடக்கி வைத்தேன். அப்போது அங்கிருந்த சூழ்நிலையில் எல்லோரும் எனது பேச்சுக்குக் கீழ்ப்படிய வேண்டித்தான் இருந்தது.



அங்கு கூடியிருந்தவர்கள் கதைத்த கதைகளிலிருந்து எனக்குச் சில விஷயங்கள் தெரியவந்தன.



முனியாண்டியும் சிகப்பாயியும் காதலர்கள். முனியாண்டி குறைந்த சாதிக்காரனாக இருந்தபடியால், தங்களது காதலுக்கு மற்றவர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என எண்ணிய அவன், தோட்டத்து மாரியம்மன் கோவிலின் தனிமையான சுற்றுப் புறங்களில் சிகப்பாயியை அடிக்கடி சந்தித்திருக்கிறான்.



அப்பொழுதெல்லாம் தங்களது குலதெய்வமான மாரியம்மன் தான் இந்த உறவுக்குத் துணைநிற்கவேண்டுமென அவன் அடிக்கடி வேண்டிக்கொள்வான்.

சிகப்பாயி கர்ப்பவதியாகிச் சில மாதங்களின் பின்பு தான் அவளது தாய்தந்தையருக்கு விஷயம் தெரியவந்திருக்கிறது. அவர்கள் அவளை வெளியே செல்லவிடாமல் வீட்டினுள்ளேயே வைத்துக் கண் காணித்திருக்கிறார்கள். முனியாண்டியால் எந்தவழியிலும் சிகப் பாயியைச் சந்திக்க முடியவில்லை.



சிகப்பாயிக்குக் குழந்தை பிறந்ததும் அவளைப் பயமுறுத்தி, முனியாண்டியிடமிருந்து நிரந்தரமாகப் பிரித்துவிட அவளது தாய்தந்தையர்கள் சூழ்ச்சி செய்திருக்கிறார்கள். கறுப்பையாக் கங்காணியும் அவர்களுக்கு உடந்தையாக இருந்திருக்கிறார்.



உள்ளே வந்த முனியாண்டி சிகப்பாயியின் அருகில் அமர்ந்து அவளது தலையைத் தூக்கித் தனது மடியில் வைத்தான்.



அவள் அவனிடம் ஏதோ கூறுவதற்கு முயன்றாள்.



அவன் அவளது வதனத்தை நோக்கிக் குனிந்தான். அவனது கண்கள் கலங்கியிருந்தன.



“ராசா........ ராசா.......” அவள் முனகினாள் . அதற்கு மேல் பேசுவதற்கு அவளிடம் சக்தியிருக்கவில்லை. மறுகணம் அவளது தலை சாய்ந்துவிட்டது.



நான் கண்களை மூடிக்கொண்டேன்.



அங்கு நின்றவர்கள் யாருமே எதையும் பேசவில்லை. எங்கும் ஒரே நிசப்தம்.



எல்லாமே முடிந்துவிட்டன.



சிகப்பாயி பெற்றெடுத்த அந்தப் பச்சிளங் குழந்தை திடீரென்று வீரிட்டு அழத்தொடங்கியது. அந்த ஒலி அப்பிரதேசத்தையே துன்பத்தில் ஆழ்த்துவதுபோல் சோகமாக ஒலித்துக்கொண்டிருந்தது.



- வீரகேசரி 1970

++++++++++++++++++++++++

பிறந்த மண்



“ அப்பா, நான் இந்தியாவுக்கு வரமாட்டேன்” வேலைக்குப் புறப்பட்டுச் செல்லும்போது இருளப்பன் கூறிவிட்டுச் சென்ற வார்த்தைகள் மாணிக்கத்தேவரை நிலைகுலையச் செய்தன.



இலங்கைக்கு வந்து நாற்பது வருட காலமாக மரகதமலைத் தேயிலைத் தோட்டத்தில் தனது வாழ்நாளின் முக்கிய பகுதியைக் கழித்துவிட்டு இப்போது தாய்நாட்டுக்குத் திரும்ப முடிவு செய்துவிட்ட மாணிக்கத்தேவர், கடைசி நேரத்தில் தன் மகன் இப்படியான அதிர்ச்சி தரும் முடிவுக்கு வருவானென எதிர்பார்க்கவேயில்லை.



மாணிக்கத்தேவர் இந்நாட்டிலே வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமற்றுப் போய்விடவில்லையென எண்ணும்படியாக அவரிடம் இருந்த ஒரேயொரு செல்வம் அவரது மகன் இருளப்பன்தான்.



தனது விலைமதிப்பற்ற செல்வத்தை இழந்து வெறுங்கையோடு தன் தாய்நாட்டுக்குத் திரும்பவேண்டிய நிலைமை வந்துவிட்டதை நினைத்தபோது மாணிக்கத்தேவரின் குழிவிழுந்த கண்களுக்குள் நீர் திரையிடுகிறது.



‘வழுக்கற்பாறை லயத்தின்’ வலது பக்கத்திலுள்ள கடைசிக் காம்பராவிலேதான் மாணிக்கத்தேவர் வசிக்கிறார். காம்பராவின் முன்பகுதியிலுள்ள ‘இஸ்தோப்பில்’ அடுப்புக்கு முன்னால் இதுவரை நேரமும் குளிர்காய்ந்து கொண்டிருந்த மாணிக்கத்தேவரின் மனம் நிலைகொள்ளாமல் தவிக்கிறது. பக்கத்திற் கிடந்த கம்பளியை எடுத்துப் போர்த்திக்கொண்டு மெதுவாக எழுந்து வாசலுக்கு வருகிறார்.

பனி மூட்டம் இன்னும் அகலவில்லை. குளிர் காற்று மாணிக்கத் தேவரின் முகத்தில் சுரீரெனப் பாய்கிறது. அவரது உடல் சிறிதாக நடுங்குகிறது.



தூரத்தில் நெருக்கமாக வளர்ந்திருந்த தேயிலைச் செடிகள் பச்சைநிறப் பட்டுப் படுதா விரித்திருப்பது போல் அழகாகக் காட்சி தருகின்றன. அதன்மேல் காலைக் கதிரவன் தன் பொற்கதிர்க் கரங்களால் தங்கக் கலவையை அள்ளித் தெளித்து அழகு தேவதையின் சித்திரம் வரைந்துகொண்டிருக்கிறான்.




தூரத்தில் மேட்டு லயமும் அதன் கீழேயுள்ள பணிய லயங்களும் பனிமூட்டத்தில் அமுங்கிக் கிடக்கின்றன. வேலைக்குப் புறப்பட்ட பெண்கள் கொழுந்துக் கூடைகளை முதுகுப்புறத்தில் தொங்க விட்டுக்கொண்டு கரத்தை றோட்டுவழியாக மலைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.



அவர்களைப் பார்த்தபோது மாணிக்கத்தேவருக்கு அவரது மனைவி மீனாச்சியின் நினைவு வருகிறது.



‘அவள் மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந்தால், இருளப் பனைப் பிரிந்து இந்தியாவுக்குச் செல்ல முடியாமல் அவளது தாயுள்ளம் எவ்வளவு வேதனையடைந்திருக்கும். இப்படியான ஒரு பிரிவை அவளால் தாங்கிக்கொள்ளமுடியாது என்ற காரணத்தினாலேதான் இறைவன் அவளை இந்த உலகத்தை விட்டே பிரித்து விட்டானா’ என அவர் எண்ணினார்.



மாணிக்கத்தேவருக்கு இந்நாட்டில் பிரஜாவுரிமையில்லை. அவர் இந்தியப் பிரஜையோவென்றால் அதுவும் இல்லை. இந்தியாவில் பிறந்தவர், இந்த நாட்டில் வாழ்பவர்; எந்த நாட்டிலும் அவருக்கு உரிமையில்லை. மாணிக்கத்தேவர் இலங்கைக்கு வந்தகாலத்தில் இருந்த சட்டங்களும், சலுகைகளும் அற்றுப்போய்விட்டன. இப்போதுள்ள நிலைமையில் ஏதாவதொரு நாட்டின் பிரஜாவுரிமை உள்ளவர்கள்தான் ஒரு நாட்டிலிருந்து வேறொரு நாட்டுக்கு போய்வர முடியும்.



மாணிக்கத்தேவர் தனது பிறந்த நாட்டை ஒரு தடவையாவது பார்க்கவேண்டுமென விரும்பியபோதெல்லாம் தனது ஆசையைக் கட்டுப்படுத்திக் கொள்வார்.

யாராவது இந்தியாவுக்குச் சென்று திரும்பியவர்களை மாணிக்கத்தேவர் சந்தித்தால் இலேசில் விட்டுவிட மாட்டார். இந்திய நாட்டின் அரிசி விலையிலிருந்து அரசியல் நிலைவரை எல்லாவற்றையுமே துருவித் துருவிக் கேட்டுத் தனது பிறந்த நாட்டை மானசீகமாகத் தரிசிப்பதில் அவருக்கு அளவுகடந்த ஆனந்தம்.



இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்த நாளிலேதான் அவரது மகன் இருளப்பன் பிறந்தான். அப்போது மாணிக்கத்தேவர் தனது மனைவி யிடம் கூறி மகிழ்ந்த வார்த்தைகள் அவரது நினைவில் வருகின்றன.



“மீனாச்சி, நான் இங்கே வர்ரப்போ நம்ப நாட்டிலே சுதந்திரப் போராட்டம் நடத்திக்கிட்டிருந்தாங்க. அந்தப் போராட்டத்திலே ரெம்பப் பேரு சிறைக்குப் போய்க்கிட்டிருந்தாங்க. அவங்க பட்ட கஷ்டத்தாலே நம்ப நாட்டுக்குச் சுதந்திரம் கிடைச்சிருச்சு. இப்போ நான் அந்த மண்ணிலே இருந்தா ‘வந்தே மாதரம்’ என்னு சொல்லிக்கிட்டு அந்தச் சுதந்திர பூமியிலே விழுந்து புரண்டிருப்பேன்; ஆசையோடு அந்த மண்ணுக்கு முத்தம் கொடுத்திருப்பேன். தெருவெல்லாம் ஓடி சந்திச்சவங்க கிட்டேயெல்லாம் நம்ம நாட்டுக்குச் சுதந்திரம் கிடைச்சிருக்குன்னு சொல்லிச் சந்தோஷப்பட்டிருப்பேன்.



“எனக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கல்லே. ஏன்னா பிறந்த நாட்டுக்காகப் போராட வேண்டிய நேரத்தில பொழைப்பைத் தேடி இங்கே வந்திட்டேன். அதனாலதான் சாபக்கேடு மாதிரி சுதந்திரமில்லாம இங்கயிருந்து கஷ்டப்படுறேன்.



சாகிறத்துக்கு முன்னாலே அந்தப் புண்ணிய பூமிக்கு நான் போகணும். நான் போறப்போ கூட்டிக்கிட்டுப் போறதுக்கு நீயிருக்கே. அதோட என் சொந்தமுன்னு சொல்லிக்க இன்னிக்கு ஒரு மகனையும் பெத்துத்தந்திருக்கே. நாடு அடிமையா இருக்கிறப்போ நான் தனியாத்தான் புறப்பட்டு வந்தேன். ஆனா திரும்பிப் போறப்போ குடும்பத்தோட அந்தச் சுதந்திர பூமிக்கு போவேன் எங்கிறத நெனைக்க எனக்கு ரெம்பப் பெருமையாயிருக்கு.”



வெகு நாட்களாகத் தன் பிறந்த நாட்டைக் காணத் துடித்துக் கொண்டிருந்த மாணிக்கத்தேவருக்கு, அவரது ஆசை நிறைவேறக் கூடிய காலம் இப்பொழுதுதான் ஏற்பட்டிருக்கிறது.



இலங்கை இந்திய அரசுகள் செய்த ஒப்பந்தத்தின் பேரில், காடாகக் கிடந்த இந்த நாட்டைத் தங்களின் கடுமையான உழைப்பால் செல்வங் கொழிக்கும் பூமியாக மாற்றிய இந்தியத் தமிழர்களில் லட்சக் கணக்கானோர் அவர்களது தாய்நாட்டுக்குத் திருப்பியனுப்பப்படுகிறார்கள்.



தான் பிறந்த மண்ணில் வாழத்தான் கொடுத்து வைக்கவில்லை யென்றாலும், தன் வாழ்நாளின் இறுதிக் காலத்திலாவது அந்த மண்ணிலேயிருந்து கண்ணை மூட வேண்டுமென விரும்பிய மாணிக் கத்தேவரும் அவர்களுள் ஒருவராகிவிட்டார்.



தனது மனைவியையும் மகனையும் தன்னோடு இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென நினைத்திருந்த மாணிக்கத்தேவரது ஆசையை நிராசையாக்கிவிட்டு இருளப்பன் பிறந்த மறுவருடமே நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டாள் மீனாச்சி. அவள் இறக்கும்போது இருளப்பனை வளர்க்கும் பொறுப்பை மாணிக்கத்தேவரிடம் ஒப்படைத்து விட்டுத்தான் சென்றாள்.



இருளப்பனை வளர்த்து ஆளாக்கி விடுவதற்குள் மாணிக்கத் தேவர் அடைந்த கஷ்ட நஷ்டங்கள் கணக்கிலடங்கா.



லயத்தில் ஆடு மாடுகளைக் கட்டிவைத்திருக்கும் தொழுவங்கள் போன்ற காம்பராக்களில் பலகுடும்பங்கள் சுகாதார வசதியற்ற வாழ்க்கை நடத்தவேண்டிய நிர்ப்பந்தமும், காலையிலிருந்து மாலைவரை மழையிலும் வெயிலிலும் வேலை செய்தால் கிடைக்கும் குறைந்த ஊதியமும், தோட்ட நிர்வாகத்தினர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்குப் போதிய கல்வி கற்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்காமல் அவர்களின் சிந்திக்கும் ஆற்றலை மழுங்க வைத்துத் தங்கள் நிர்வாகத்துக்குச் சாதகமான தொழிலாளர் பரம்பரையை உருவாக்கும் முறையும், சிறிய உத்தியோகத்தர்களுக்குக் கூடப் பயந்து ‘சலாம்’ போடவேண்டிய நிலைமையும் மாணிக்கத்தேவருக்குத் தோட்டத்து வாழ்க்கையை வெறுப்படையச் செய்தன.



இருளப்பனும் தன்னைப்போன்று ஒரு தோட்டத் தொழிலாளி யாவதை மாணிக்கத்தேவர் விரும்பவில்லை. அவன் மேற்படிப்புப் படித்து உயர்ந்த உத்தியோகம் பார்க்கவேண்டுமென அவர் விரும்பியதால் அவனை ‘டவுனில்’ உள்ள உயர்நிலைப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார்.

தந்தையின் விருப்பத்தையும் அவர் படும் கஷ்டங்களையும் உணர்ந்த இருளப்பன் மிகவும் கவனமாகப் படித்தான். அவனது முயற்சி வீண்போகவில்லை. சிரேஷ்ட தராதரப் பத்திரப் பரிட்சையில் விசேஷ சித்திகளுடன் அந்த வட்டாரத்திலேயே முதன்மையாகத் தேறினான்.



மாணிக்கத்தேவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. “என் மகன் சோதனையிலே பாஸ் பண்ணிட்டான், இனிமே அவனுக்கு உத்தியோகம் கிடைச்சிடும். அப்புறம் நான் ‘செவனே’ன்னு பென்சன் வாங்கிக்க வேண்டியதுதான்”. தோட்டம் முழுவதும் தனது மகன் சோதனையில் சித்தியடைந்த செய்தியைக் கூறிச் சந்தோஷப்பட்டார் மாணிக்கத்தேவர்.



இருளப்பன் அரசாங்க உத்தியோகங்களுக்கு மனு அனுப்பிய போதும், நேர்முகப்பரீட்சைகளுக்குச் சென்று வந்தபோதுந்தான் அந்த அதிர்ச்சி தரும் விஷயம் மாணிக்கத்தேவருக்குத் தெரிய வந்தது.



இருளப்பனுக்குப் பிரஜாவுரிமை இல்லை. அதனால் அரசாங்க உத்தியோகங்களுக்கு அவன் அனுப்பிய மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.



தேயிலைத் தோட்டங்களில் வெற்றிடமாகும் உத்தியோ கங்களுக்கு இருளப்பனது மனுக்கள் கவனிக்கப் படவேயில்லை. ஏனெனில் அந்த உத்தியோகங்களுக்குப் பெரிய மனிதர்களின் சிபார்சு வேண்டியிருந்தது.



பெரிய மனிதர்களின் படிக்காத பிள்ளைகளுக்குக் கூட எவ்வளவு இலகுவில் தேயிலைத் தோட்டங்களில் உத்தியோகங்கள் கிடைத்துவிடுகின்றன!



இருளப்பன் உத்தியோகத்திற்காக முயற்சித்துக் களைப்படைந்து விட்டான், அவனுக்கு மறு வருடமே தோட்டத்தில் பெயர் பதியப்பட்டது. இப்போது இருளப்பனும் ஒரு தேயிலைத் தோட்டத் தொழிலாளி.

“நாமெல்லாம் பொறந்த பொன்னாட்டை மறந்தவங்க, அந்த மண்ணிலே பாடுபட்டு ஒழைச்சிருந்தா சொந்த மண்ணிலே பாடு பட்டோம் என்ற பெருமையாவது இருந்திருக்கும். இங்கே வந்து இதுவும் நம்ப நாடுதான் என்கிற நெனைப்போடதான் பாடுபட்டோம். நாம இந்த மண்ணுக்கு வஞ்சகம் செய்யலே. நாமதான் வஞ்சிக்கப்பட்டோம். நாம பாடுபட்ட மண்ணிலே நாமதான் நல்லா வாழல்லேன்னாலும் நம்ப புள்ளையிங்களாவது நல்லா வாழ வழியில்ல.”



மாணிக்கத்தேவர் தன்னைச் சந்தித்தவர்களிடம் மேற்கண்ட வாறு கூறிப் புலம்பினார். அவரால் வேறு என்னதான் செய்யமுடியும்?



மாணிக்கத்தேவரின் நினைவுகள் கலைகின்றன. காலையில் இருளப்பன் அவசர அவசரமாகப் புறப்பட்டுச் சென்ற நேரத்தில் கதைப்பதற்குப் போதிய அவகாசம் கிடைக்காததினால், அவன் இந்தியாவுக்குத் தன்னுடன் வர மறுக்கும் காரணத்தை மாணிக்கத் தேவரால் கேட்டு அறிந்துகொள்ள முடியவில்லை.



இருளப்பன் வேலை முடிந்து திரும்பியபோது மாணிக்கத்தேவர் சாவகாசமாக அவனிடம் கேட்டார். “நான் தான் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டுட்டேன். நீயும் இங்கேயிருந்து கஷ்டப்படப்போறியா?”



“கஷ்டப்படுறவங்க யாருமே எந்த நாளும் கஷ்டப் படுறதில்லப்பா. இந்தியாவுக்குப் போனவங்க போக மீதிப்பேரு இந்த நாட்டிலதான் வாழப்போறாங்க. அவங்களிலே ஒருத்தனா நானும் இருந்திட்டுப் போறேன்.



நீங்க இந்தியாவுக்குப் போனா ரெம்பக் கஷ்டப்படுவீங்க. வயசான காலத்தில அங்க போய் உங்களாலே என்ன செய்யமுடியும்? ஒழைச்சுத் திங்கத்தான் முடியுமா? அல்லது சொந்தமுன்னு சொல்லிக்க யாருமே இல்லாத இடத்தில ஒரு நேரச் சாப்பாட்டுக்கே வழியில்லாம கஷ்டப்படப் போறீங்களா? நீங்க அங்க போயிட்டா, எங்க இருக்கிறீங்களோ எப்படியெல்லாம் கஷ்டப்படுறீங்களோன்னு என் மனசு வேதனைப் பட்டுக்கிட்டே இருக்குமப்பா. நான் உங்களுக்கு ஒரே பிள்ளை. வயசான காலத்தில உங்களுக்கு உதவியா இருக்க ஆசைப்படுறேன். நீங்க உங்க முடிவை மாத்திக்கிட்டு இங்கதான் இருக்கணும். உங்களைப் பிரிஞ்சு என்னாலே வாழமுடியாதப்பா.”



இருளப்பன் இப்படிக் கூறியபோது துக்கத்தினால் அவனது தொண்டை அடைத்தது; கண்கள் கலங்கின.



“தம்பி...ராசா, உனக்கு இந்த நாட்டிலே பிரஜாவுரிமையே இல்லையே, அப்புறம் எந்த உரிமையோட நீ இங்கே வாழப்போறே? நீதான் உன் முடிவை மாத்திக்கணும். என்னோட இந்தியாவுக்கு நீ வரத்தான் வேணும்.”



“பிரஜாவுரிமை கிடைக்கிறதுன்னா எத்தனையோ சட்ட திட்டங்கள் இருக்கப்பா. அந்த உரிமை எனக்குக் கிடையாமலே போகலாம். ஆனா நான் இந்த நாட்டில பொறந்தவன் என்கிற நெனைப்பை, அந்த நெனைப்பில கிடைக்கிற சொகத்தை என் மனசில இருந்து அழிக்க முடியாதுப்பா. நீங்க ஒங்க பொறந்த மண்ணை நெனைச்சு ஏங்குறீங்க. அதேமாதிரித்தானப்பா என் பொறந்த மண்ணை என்னாலே மறக்க முடியாதப்பா. நான் உங்ககூட இந்தியாவுக்கு வந்தாலும் இந்த மண்ணோட நெனைப்பு என்னை வதைச்சுக் கிட்டேயிருக்கும். பொறந்த மண் தெய்வம் மாதிரி. அதை மறந்தவங்க யாரும் நல்லா வாழ முடியாதப்பா.”



இருளப்பன் கூறிய வார்த்தைகள் மாணிக்கத்தேவரது நெஞ்சின் அடித்தளத்தையே தொட்டன; அவரது கண்கள் கலங்கின.



இப்போது அவரது கண்கள் கலங்குவது தனது மகனை இன்னும் சிறிது காலத்தில் பிரிந்து செல்ல வேண்டுமே என்பதற்காகவல்ல !



- தினகரன் 1972

+++++++++++++++++++++++++

உயிர்த் துணை



பொன்னி !



இப்போது நினைத்தாலும் என் உடலெல்லாம் சிலிர்க்குதடி! உனக்கு எவ்வளவு தியாக சிந்தை! மனிதப் பிறவியெடுத்த எவருமே செய்யத் துணியாத தியாகமல்லவா நீ செய்தது.



அதனை நினைக்கும்போது என் கண்கள் குளமாகுதடி. கண்களென்றா சொன்னேன்? எனக்கேது கண்கள்?



கண்கள் இருக்கவேண்டிய இடத்தில் இரு குழிகள் அல்லவா இருக்கின்றன.



நீ தானே எனக்குக் கண்களாக இருந்தாய்! ஏன் எனது உற்றார் உறவினர், சொந்த பந்தம் எல்லாமாக இருந்தவளும் நீதானே.



நான் ஒரு பிச்சைக்காரன். இந்தக் குருட்டுப் பிச்சைக்காரனோடு நீயும் சேர்ந்துகொண்டாய். இதனால் உனக்கு கிடைத்த பலன்?



நான் பட்டினி கிடக்கும்போது நீயும் பட்டினி கிடந்தாய். நான் அரைவயிற்றுக்கு உண்ணும்போது நீயும் அரைவயிற்றுக்கு உண்டாய். நான் கவலைப்படும்போது நீயும் கவலைப்பட்டாய். இந்தக் கபோதியோடு சேர்ந்துகொண்டதால் ஒரு நாளாவது நீ மகிழ்ச்சியடைந்திருப்பாய் என நான் நினைக்கவில்லை.



பொன்னி!

உன்னை நான் முதன் முதலில் சந்தித்த நிகழ்ச்சி இப்போது கூட என் நினைவில் இருக்கிறது. அந்தப் பசுமையான நினைவை எப்படி என்னால் மறந்துவிட முடியும்?



ஊரின் ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு மடந்தான் எனது இருப்பிடம். அந்த மடத்தில் வழக்கம்போல் அன்றும் நான் தனியாக கத்தான் படுத்திருந்தேன். வெகுநேரமாகத் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. என்னால் எங்கும் வெளியே செல்ல முடியவில்லை. எத்தனையோ நாட்கள் பட்டினியாகக் கிடந்து என் வயிற்றைப் பழக்கியிருக்கிறேன். அன்றும் நான் பட்டினியாகத்தான் இருந்தேன். பசி மயக்கத்தில் கிறங்கிப்போய்க் கிடந்தேன்.



பறவைகளின் கீதங்கள், மனிதர்களின் குரல்கள், இயந்தி ரங்களின் இரைச்சல்கள் நிறைந்திருக்கும் நேரந்தான் பகற் பொழுதாக இருந்தால், அன்று நான் உன்னைச் சந்தித்தது இரவு நேரமாகத்தான் இருக்க வேண்டும்.



அப்போது எனக்கு உடமையாக இருந்தபொருட்கள் ஒரு போர்வையும் கைத்தடியுந்தான். போர்வையை நிலத்திலே விரித்து, கைத்தடியையும் பக்கத்திலே வைத்துக்கொண்டு படுத்திருந்தேன்.



திடீரென ஏதோ அரவம் கேட்டது. எனக்குப் பக்கத்தில் யாரோ படுத்திருப்பதைப் போன்ற ஒரு பிரமை.



மெதுவாகக் கையினால் தடவிப் பார்த்தேன்.



எனது உடலிலே ஒரு சிலிர்ப்பு! அச்சத்தோடு கையை இழுத்துக்கொண்டேன்.



வெளியே மழை கொட்டிக்கொண்டிருந்தது. நீயும் என்னைப் போன்ற ஓர் அனாதையாகத்தான் இருக்க வேண்டும். புகலிடந் தேடித்தான் நீ அங்கு வந்திருக்கிறாய் என்பதைப் புரிந்துகொண்டேன்.



எங்கோ இடியிடிக்கும் ஓசை. அதற்கு முன்னர் மின்னலும் இருந்திருக்க வேண்டும்.



எனது உள்ளத்திலே நடுக்கம். இடிமின்னல் என்றால் எனக்கு ஒரே பயம். நான் பதினாறு வயதுக் கட்டிளங் காளையாகக் கல்லூரிக்குச் சென்றுவந்துகொண்டிருந்த காலத்தில் ஒரு பயங்கரமான மின்னலின் தாக்குதலினாலேதான் என் பார்வையை இழந்தேன்.

மீண்டும் இடியிடிக்கும் ஓசை.



பயத்தினால் நான் உன்னைக் கட்டிப் பிடித்தேன். நீ மௌனமாகப் படுத்திருந்தாய். உனக்கும் அப்போது பசி மயக்கமாக இருந்திருக்குமோ என்னவோ.



எனது பயம் சிறிது குறைந்தபோது நான் உன் உடலை ஆதரவோடு தலையிலிருந்து கால்வரை தடவிக்கொடுத்தேன். எங்கே நீ என்மேல் கோபித்துக்கொள்வாயோ என அப்போது எனக்கு அச்சமா கவும் இருந்தது.



நீ எனது ஸ்பர்சத்தை உணர்ந்து கொள்ளாதவள் போலப் படுத்திருந்தாய்.



உனக்குத் தருவதற்கு என்னிடம் உணவு ஏதும் இல்லையே என நான் கவலையடைந்தேன். எனது பசிகூட அப்போது எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. சிறிது நேரத்தில் என்னை அறியாமலே நான் நித்திரையாகி விட்டேன்.



எங்கோ பறவைகள் பாடின.



நான் நித்திரை கலைந்து எழுந்திருந்தபோது. நீயும் பக்கத்திலே படுத்திருக்கிறாயா என ஆவலுடன் தடவிப் பார்த்தேன்.



நீ எனக்கு முன்னரே எங்கோ எழுந்து சென்று விட்டாய்



மறுநாள் இரவும் நீ வந்தாய். உரிமையுள்ளவள் போல் என் பக்கத்திலே வந்து படுத்தாய்.



எனக்கு அழவில்லாத மகிழ்ச்சி. யாருமற்ற அனாதையாக இருந்த எனக்கு உனது உறவு கிடைத்ததில் ஒரு வித மனநிறைவு.



அன்றும் உனது உடலை ஆசையோடு நான் தடவினேன். உனது அழகைப்பார்த்து மகிழ்வதற்கு எனக்குக் கண்கள் இல்லை என்பதை தெரிந்துதானோ என்னவோ, உனது உடலை நான் தடவிப் பார்ப்பதற்கு நீ எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தாய்.



அன்று எனக்காக வைத்திருந்த உணவில் உனக்கும் பகிர்ந்து கொடுத்தேன். நீ அருந்தினாய்.

அன்று இரவு முழுவதும் எனக்கும் நித்திரை வரவில்லை. ஏதேதோ கற்பனைகளில் திளைத்திருந்தேன்.



அதன்பின்னர் அல்லும் பகலும் நீ என்னைவிட்டுப் பிரியாமல் இருக்கத் தொடங்கிவிட்டாய்.



பொன்னி!



ஆதரவற்றுத் தனிமனிதனாகத் திரிந்த எனக்கு நீ வந்த பின்புதான் வாழ்க்கையில் ஒருபிடிப்பு ஏற்படத் தொடங்கியது. எத்தனையோ நாட்கள் சோம்பற்தனமாகப் பட்டினியாகவே நான் காலத்தைக் கடத்தியிருக்கிறேன். ஆனால் நீ வந்த பின்னர் உனக்கு உணவு தரவேண்டுமே என்ற உணர்வில், என்னுள் புதிய தென்பு பிறந்தது. நான் ஒரு மனிதனாகினேன்.



பிச்சையெடுக்கும் பணத்தில் சிறிது சிறிதாகச் சேர்த்து ஒரு சங்கிலி வாங்கி உன் கழுத்தில் அணிந்து உனது அழகை என் அகக்கண்களால் பார்த்து மகிழ்ந்தேன்.



பொன்னி!



நான் ஐந்து வயதுச் சிறுவனாக இருந்தபோது ஒரு குருடனைப் பார்த்திருக்கிறேன். அவனுக்குத் துணையாக ஒரு சிறுவன் இருந்தான். அந்தக் குருடனது கைத்தடியைப் பற்றிக்கொண்டு சிறுவன் முன்னே நடந்து செல்வான். குருடன் அவனைப் பின்தொடர்வான். அந்தக் குருடன் போகவேண்டிய இடங்களுக்கெல்லாம் சிறுவன் அவனை அழைத்துச் செல்வான். அல்லும் பகலும் அந்தச் சிறுவன் குருடனுக்குத் துணையாக இருந்தான்.



அந்தக் குருடனுக்குச் சிறுவன் -



மகன்.



ஆனால் எனக்கு நீ -



.............?



பொன்னி!



நான் பெரிய சுயநலக்காரன். நீ எங்கே என்னை விட்டுப் பிரிந்து விடுவாயோ என்ற பயத்தில், நான் உன் சுதந்திரத்திலே கூடக் குறுக்கிட்டிருக்கிறேன். அதனை நினைக்கும்போது எனக்கு இப்பொழுதும் வெட்கமும் வேதனையாகவும் இருக்குதடி.



உன் அரையிலே ஒரு கயிற்றைச் சுற்றி, அந்தக் கயிற்றின் தலைப்பை நான் பிடித்துக்கொள்வேன். நீ முன்னே நடந்துசெல்வாய். என் வழிகாட்டியாக, ஒளி விளக்காக....., என் கண்களாக...., என்னைக் காப்பாற்றும் உறுதுணையாக நீ முன்னே செல்வாய். நான் உன்னைப் பின்தொடர்வேன்.



எத்தனையோ மனிதர்கள் இந்தக் காட்சியைப் பார்த்துச் சிரித்திருப்பார்கள்; கேலி செய்திருப்பார்கள்.



பிறரைப் பார்த்துச் சிரிப்பதும் கேலி செய்வதும் மனித இனத்துக்கே சொந்தமான பலவீனங்கள்தானே.



அப்போது உனக்கு வெட்கமாக இருந்திருக்குமோ என்னவோ. உனது விருப்பத்துக்கு மாறாக நான் எத்தனையோ தடவை நடந்திருக்கிறேன்.



ஆனால் ஒருபொழுதாகிலும் என் செய்கைகளுக்கு நீ எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. நீ சாதிப்பதெல்லாம் மௌனந்தான்.



ஏன் பொன்னி! இந்தக் குருடனின் மனதைப் புண்படுத்தக் கூடாதென்றா அப்படி மௌனம் சாதித்தாய்?



காலையில் என்னை மனிதர்கள் நிறைந்த பகுதிக்கு அழைத்துச் செல்வாய். நீ அநேகமாக என்னை அழைத்துச் செல்லுமிடம் ஒரு நாற்சந்தி என்பதையும், அங்கு ஒரு மூலையில் மின்சாரக் கம்பமும், அதையடுத்து பஸ் தரிப்பு நிலையமும் இருக்கின்றன என்பதையும், என் உணர்வுகளால் அறிந்திருக்கிறேன்.



பகல் முழுவதும் அந்தத் தெருவால் போகிறவர்களிடத்திலும், பஸ்தரிப்பு நிலையத்தில் நிற்பவர்களிடத்திலும் நான் யாசித்துக் கொண்டிருப்பேன். என் முன்னே ஒரு துண்டு விரிக்கப்பட்டிருக்கும்.



இரக்க மனம் படைத்த புண்ணியவான்கள் சிலர் என் துண்டிலே சில்லறையை வீசுவார்கள்.



ஒரு நாள்.......



அன்றுதானடி உன் கோபத்தைக் கண்டேன். சன நடமாட்டம் குறைந்த நேரம். பஸ்தரிப்பில் நின்று கொண்டிருந்த யாரோ ஒருவன் என் துண்டிலே சில்லறையைப் போடுவதுபோல் நடித்து, துண்டிலே இருந்த சில்லறையில் சிலவற்றைத் திருடிவிட்டான்.



அந்தக் கயவனின் செய்கையைக் கண்டபோது அப்பப்பா நீ அடைந்த சீற்றம்.



அப்போது எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தில், துண்டிலிருந்த பணம் சரியாக இருக்கிறதா எனத் தடவிப் பார்த்தபோதுதான் நான் இதனை உணர்ந்துகொண்டேன்.



சிறுமை கண்டு பொங்குவாய் நீ, என்பதை அன்றுதான் நான் அறிந்தேன். பொன்னி! உனக்கு அவ்வளவு கோபம் கூடாதடி!



மனிதர்களிற் சிலர் மனிதாபிமானமற்ற வாழ்க்கை நடத்துவது உனக்குத் தெரிந்திருக்க முடியாதுதான்.



பிழைவிடுவது மனித இயற்கையென்றால் மன்னிப்பது தெய்வ குணமடி. நான் அப்போது உன்னைத் தடுத்து நிறுத்தியிருக்காவிட்டால், நீ அவனை என்ன செய்திருப்பாயோ எனக்கே தெரியாது. உனது சீற்றத்தைக் கண்ட அந்தக் கயவன் தான் எடுத்த பணத்தைப் போட்டுவிட்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான்.



பொன்னி!



நான் உன்னைச் சந்திப்பதற்கு முன்னால் அடைந்த கஷ்டங்களுக்கு அளவேயில்லை. அப்போது எனது கைத்தடிதான் என் வழிகாட்டி. நான் செல்லும் பாதையைக் கைத்தடியினால் தட்டித் தட்டி ஆராய்ந்தபடி நடப்பேன். எத்தனையோ நாட்கள் எனது கால்களைக் கற்களும் முட்களும் பதம் பார்த்திருக்கின்றன. எத்தனையோ நாட்கள் பள்ளங்களிலும் மேடுகளிலும் நான் விழுந்து எழுந்திருக்கிறேன். எத்தனையோ நாட்கள் கார்களிலும், பஸ்களிலும் மோதி என் உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடிய நிலைமைகள் ஏற்பட்டன. ஒரு நாளாவது எனது உடலில் காயமே இல்லாத நாள் இருந்ததில்லையடி.



நீ வந்த பின்புதான் என் கஷ்டங்கள் எல்லாம் நீங்கின. என் வாழ்வின் ஒளிமயமான காலம் பிறந்தது. நான் உன் கண்களால் உலகத்தைப் பார்க்கத் தொடங்கினேன்.

பொன்னி!



இப்பொழுது நினைத்தாலும் என் உள்ளம் பதறுதடி. என் உடலெல்லாம் நடுங்குதடி. அந்தச் சோக நிகழ்ச்சி என் இரத்தத்தையே உறையச் செய்யுதடி.



அன்று கடும் மழை, இடி, பேய்க்காற்று, எங்கோ மரங்கள் முறிந்து விழும் ஓசை.



இயற்கையின் சீற்றம் - இது என் வாழ்க்கையில் எவ்விதமெல்லாம் விளையாடி விட்டதடி.



மழை சிறிது ஓய்ந்தபோது நான் உன்னையும் அழைத்துக் கொண்டு வெளியே புறப்பட்டேன்



உனது நடையிலே ஏனோ தளர்ச்சி! என்னை வெளியே அழைத்துப் போவதற்கு நீ அப்போது விரும்பவில்லை என்பதைப் புரிந்துகொண்டேன்.



ஆனாலும் என்ன செய்வது? நான் பிச்சையெடுக்காவிட்டால், நான் மட்டுமா பட்டினி கிடப்பேன்? என்னுடன் சேர்ந்து நீயுமல்லவா பட்டினி கிடக்க நேரிடும்.



வழக்கமாக நீ என்னை அழைத்துச் செல்லும் நாற்சந்திக்குத்தான் அன்றும் அழைத்துச் சென்றாய். பஸ் தரிப்பு நிலையத்தைத் தாண்டி கம்பத்தின் அருகிற் சென்றதும் வழக்கம்போலத் துண்டை விரித்து நான் உட்கார்ந்தேன்.



திடீரென என் காலின் ஊடாக ஆயிரம் மின்னல்கள் ஒன்று சேர்ந்து வெட்டிப்பாய்வதைப் போலிருந்தது.



“ ஐயோ ! அந்தக் குருடனின் கால் மின்சாரக் கம்பிக்குள் சிக்கிவிட்டது” பஸ்தரிப்பில் நின்ற யாரோ கத்தினார்கள்.



கடும் மழையாலும் புயலாலும் சேதமடைந்த மின்சாரக் கம்பத்திலிருந்து தொங்கி, நிலத்திலே படர்ந்திருந்த கம்பியில் எனது கால் சிக்கியிருக்க வேண்டும்.



நான் துடித்துப் புரண்டேன். எனது கைகளும் கால்களும் மாறி மாறி நிலத்தில் அடித்தன. எனது உடல் வலித்து வலித்து இழுத்தது.

உயிர்த் துடிப்பு!



கணப்பொழுதில் அங்கு சனக்கூட்டம் நிறைந்து விட்டது. பலரது இரக்கம் நிறைந்த ஓலங்கள், கூச்சல்கள், கூக்குரல்கள் - எங்கும் ஒரே பரிதாபக் குரல்கள்.



ஆனால் இந்தக் குருடனைக் காப்பாற்ற ஒருவராவது முன் வரவில்லை. ஒரு குருடனுக்காகத் தங்களது உயிருக்கே ஆபத்துத்தேட யாருமே விரும்பவில்லை.



பொன்னி! பொன்னி!



நான் பலங்கொண்ட மட்டும் கத்தினேன். எனது குரல் தொண்டை யிலிருந்து வெளிவர மறுத்து எனக்குள்ளேயே எதிரொலிப்பதைப் போலிருந்தது.



பொன்னி!



உனக்கு எப்படித்தான் அந்த வேகம் வந்ததடி! திடீரெனப் பாய்ந்து வெறிகொண்டவள்போல, நீ எனது காலிலே சிக்கியிருந்த கம்பியை உனது வாயினாற் கடித்து இழுத்துக் குதறுவதை நான் உணர்ந்தேன்.



ஐயோ........ !



அந்தக் கணத்திலே உனது மரணத் துடிப்பை அங்கு நின்றவர்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்திருப்பார்கள். உனது மரண ஓலம் எனது இதயத்தைப் பிளந்து ஒலித்தது.



ஆறறிவு படைத்த மனித ஜென்மங்கள் என் உயிரைக் காப்பாற்றத் தயங்கியபோது, வாய்பேசாத நாற்கால் பிராணியாகிய நீ, உனது உயிரைப் பணயம் வைத்து என்னைக் காப்பாற்றினாய்.



உயிர்த்துணையான உன்னைப் பிரிந்த பின்பும் நான் உயிரோடு இந்த உலகத்தில் இருக்கிறேன்; நானும் ஒரு மனித ஜென்மந்தானே!



ஆனால் நீ..............



நன்றியுள்ள ஒரு நாய்.



- கலைமகள் 1973

++++++++++++++++++++++++++++++++

கால தரிசனம்



மூர்த்தி ஐயர்:-



என்னுடைய பெயர் மூர்த்தி ஐயர். எல்லோரும் என்னை மூர்த்தி என்றுதான் கூப்பிடுவார்கள். பள்ளிக் கூடத்திலை மாத்திரம் முழுப்பெயர் சொல்லிக் கூப்பிடுவினம். எங்களுடைய வகுப்பில் பரமகுருதான் அடிக்கடி சோதனையில் முதலாம் பிள்ளையாய் வருவான்; ஏனென்று எனக்குத் தெரியும். பரமகுருவினுடைய அப்பாதான் எங்களுடைய வகுப்பு வாத்தியார். அவர் தன்னுடைய மகனுக்கு நிறைய ‘மாக்ஸ்’ போடுகிறவர்.



பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்திலை இருக்கிற பிள்ளையார் கோயிலில் என்னுடைய அப்பா குருக்களாக இருக்கிறார். வாத்தியார் அடிக்கடி கோயில் கும்பிட வாறவர். பூசை முடிஞ்ச பிறகு அப்பாவும் வாத்தியாரும் கதைச்சுக் கொண்டிருப்பினம். சில நேரத்திலை வாத்தியார் என்னைப்பற்றி அப்பாவிடம் கோள் மூட்டிக் கொடுப்பார். ‘படிப்பிலை கவனமில்லை, விளையாட்டுப் புத்தி’ எண்டு சொல்லுவார். பள்ளிக் கூடத்திலை ஏதும் குழப்படி செய்தால் அதையும் அப்பாவிடம் சொல்லிப்போடுவார். அப்பா வாத்தியாரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு என்னை ஏசுவார். அப்பாவும், வாத்தியாரும் கதைக்கிறதைக் கண்டாலே எனக்கு எரிச்சலாக இருக்கும்.



எங்களுடைய வகுப்பிலை கடைசி வாங்கிலைதான் வழக்கமாக முத்து இருப்பான். அவனைக் கடைசி வாங்கிலை இருக்கச் சொல்லி வாத்தியார்தான் சொன்னார். முத்துவும் படிப்பில் வலு கெட்டிக்காரன், ஒவ்வொரு தவணையும் சோதனையில் என்னை முந்திவிடுவான்.



கோயிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கூட்டுப் பிரார்த்தனை நடக்கும். பள்ளிக்கூடப் பிள்ளைகள் எல்லோரும் கட்டாயம் கூட்டுப்பிரார்த்தனைக்கு வரவேண்டுமென வாத்தியார் சொல்லுவார். அதனால் நாங்கள் எல்லோரும் வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் கோயிலுக்குப் போவோம்.



முத்து கோயிலுக்குள்ளே வருவதில்லை. வெளியே நிண்டுதான் கூட்டுப்பிரார்த்தனை செய்வான். தான் சொல்லுவது எங்களுக்கும் வாத்தியாருக்கும் கேட்க வேண்டு மென்பதற்காக அவன் பலமாகக் கத்தி, கூட்டுப்பிரார்த்தனை செய்யிறதைப் பார்க்கப் பாவமாக இருக்கும்.



என்னுடைய அண்ணன் கொழும்பில் வேலை செய்கிறார். அண்ணனும் முந்தி நான் படிக்கிற தமிழ்ப்பள்ளிக்கூடத்திலைதான் படிச்சவர். பிறகு யாழ்ப்பாணத்திலை பெரிய பள்ளிக்கூடத்திலை சேர்ந்து படிச்சார். அண்ணன் பள்ளிக்கூடம் போகிற காலத்திலை குடுமி வைச் சிருந்தவர். அண்ணனுக்கு குடுமி முடியத்தெரியாது, அம்மாதான் அவருக்குத் தலைவாரி, குடுமி முடிஞ்சு விடுகிறவ. அண்ணன் அப்போது காதில் கடுக்கனும் போட்டிருந்தார். பள்ளிக்கூடம் போகும் போது சந்தனப் பொட்டுப் போட்டுக்கொண்டுதான் போவார்.



தன்னைப்போன்று அண்ணனையும் பெரிய குருக்களாக்கி விட வேண்டுமென்றுதான் அப்பா விரும்பினார். அதனாலேதான் அண்ணன் பள்ளிக்கூடத்திலை படிக்கிற காலத்திலேயே வீட்டில் சமஸ்கிருதமும் படிச்சார். கோயில் வேலைகளும் பழகினார். ஆனால் அப்பாவுடைய விருப்பம் நிறைவேறவில்லை. அண்ணனுக்கு அரசாங்கத்தில் வேலை கிடைத்தது. அண்ணன் குடுமியை வெட்டிவிட்டுச் சிலுப்பாத் தலையோடு வேலைக்குப் போய்விட்டார்.



அண்ணன் வேலைக்குப் போனது அப்பாவுக்குக் கொஞ்சங்கூட விருப்பமில்லை. ஆனால் அம்மாவுக்கு அண்ணன் வேலை பார்க் கிறதைப்பற்றி நல்ல சந்தோஷம்.



அண்ணன் குடுமியோடை இருந்தபோது இருந்த வடிவும் முகவெட்டும் இப்ப இல்லையெண்டு அம்மா சில வேளை சொல்லுவா. அதைக்கேட்க எனக்கு வேடிக்கையாக இருக்கும்.

அண்ணன் படிக்கிற காலத்திலை குடுமி வைச்சிருந்ததைப் போல் நான் குடுமி வைச்சிருக்கவில்லை. கடுக்கனும் போடுறதில்லை. பள்ளிக்கூடம் போறபோது சந்தனப் பொட்டு மாத்திரம் போடுவன். ஏனென்றால் பொட்டுப் போடாவிட்டால் அப்பா ஏசுவார்.



போன வெள்ளிக்கிழமை எங்களுடைய கோயிலில் பிரசங்கியார் வந்து கண்ணப்பநாயனாரைப்பற்றி பிரசங்கம் செய்தார். எல்லோரும் பிரசங்கத்தைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.



“......... அறிவு, அருள், அடக்கம், தவம், சிவபக்தி எல்லாம் நிறைந்தொரு வடிவம் எடுத்தாற்போன்ற சிவகோசரியார் என்ற பிராமணர், சைவாகம விதிப்படி அருச்சித்த சிவலிங்கப் பெருமானுக்கு வேடுவத் தலைவனாகிய திண்ணன், தான் சுவைத்து உருசிபார்த்த இறைச்சிகளை நெய்வேத்தியமாகப் படைத்தான்.......”



இதைக் கேட்டுக்கொண்டிருந்த எனக்கு மனசிலே அருவருப்பு ஏற்பட்டது. நான் ஒரு வேடனுடைய தோற்றத்தை நினைத்துப் பார்த்தேன். கறுத்த உருவமும் பரட்டைத் தலையும் தாடி மீசையும் பெரிய பற்களுமாகக் கோவணத்துடன்.... சீ எவ்வளவு அருவருப்பாக இருக்கிறது.



அன்றிரவு படுக்கையில் படுத்திருந்தபொழுது அப்பாவுடைய தோற்றமும் ஒரு வேடனுடைய தோற்றமும் என் நினைவிலே மாறி மாறி வந்துகொண்டேயிருந்தன. படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தேன். பூசை செய்வதற்குப் பக்திதான் மிகவும் முக்கியம்; வேறு எதுவும் முக்கியமில்லை என்பது இப்ப எனக்கு நன்றாக விளங்குகிறது.



‘கோயிலுக்குப் பூசை செய்வதில் இருக்கிற மதிப்பு எந்தத் தொழிலிலுமில்லை’ என்று அப்பா அடிக்கடி சொல்லுவார்.



அப்பா காலையில் எழுந்தவுடன் குளித்து, சந்தியாவந்தனம் செய்து, சிவபூசை பண்ணியபிறகுதான் சாப்பிடுவார். அவருடைய எண்ணம் முழுவதும் கோயிலைப்பற்றியும், கடவுளைப்பற்றியுந்தான் இருக்கும். அப்படி இருக்கிறவருக்கு அவருடைய தொழில் பெரிதாகத்தான் இருக்கும்.



“முந்தின காலத்திலை எங்களுடைய ஆக்கள் எல்லோரும் அப்பாவைப் போலத்தான் இருந்தார்கள். இந்தக்காலத்துச் சூழ்நிலையில் ஆசாரத்தோடும் கட்டுப்பாட்டோடும் இருக்கிறது மிகவும் கஷ்டம். காலம் மாறிப்போச்சுது.”என்று அம்மா அடிக்கடி சொல்லுவா. அம்மா சொல்லுறது சரிபோலத்தான் எனக்குத் தெரிகிறது.



முத்து:-



அப்பு காலமையும் பின்னேரத்திலையும் கள்ளு இறக்கப் போறவர். வாத்தியார் வீட்டுப் பனையளிலைதான் அப்பு கள்ளு இறக்கிறவர். எங்களுக்கும் குடியிருக்கிறதுக்கு வாத்தியார்தான் காணி தந்திருக்கிறார். வாத்தியார் வீட்டுக்குப் பின்னாலை இருக்கிற பெரிய காணியிலைதான் நாங்கள் குடியிருக்கிறம். வாத்தியாருக்கு நிறையக் காணியள் இருக்கு



வாத்தியாரை அப்பு ‘கமக்காறன்’ என்று மரியாதையோடு கூப்பிடுவார். நான் எப்பவும் வாத்தியார் என்று தான் கூப்பிடுறனான்



வாத்தியாரைக் கண்டால் அப்புவுக்குச் சரியான பயம். தலையில் கட்டியிருக்கும் துண்டை அவிழ்த்து கக்கத்துக்குள் வைத்து குழைந்துகொண்டுதான் வாத்தியாருடன் அவர் கதைப்பார். வாத்தியார் எதைச் சொன்னாலும் அப்பு அதைத் தட்டாமல் உடனே செய்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்.



வாத்தியாருடைய வீட்டைச் சுற்றியுள்ள தோட்டத்தில் வாத்தியார் கமஞ்செய்கிறார். நிலத்தைக் கொத்திறது, வரம்பு கட்டுறது, கன்று நடுகிறது, இறைக்கிறது எல்லாம் அப்புதான் செய்யிறவர். வாத்தியார் மேற் பார்வை மட்டும் பார்ப்பார்.



வாத்தியாருடைய தோட்டத்திலை வேலை செய்து முடிஞ் சதுந்தான் அப்பு எங்கடை தோட்டத்திலை வேலை செய்வார்.



அப்பு வியர்வை வழிய வழிய வாத்தியாற்றை தோட்டத்திலை நின்று வேலை செய்யிறதைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருக்கும்.



ஒவ்வொரு நாளும் பின்னேரத்திலை வாத்தியாருக்கென்று அப்பு இரண்டு போத்தல் கள்ளு எடுத்துக் கொண்டுபோய் அவருடைய வீட்டிலை கொடுத்துவிட்டு வருவார். வெள்ளிக்கிழமையிலை மாத்திரம் வாத்தியார் கள்ளுக் குடிக்கமாட்டார். கோயிலுக்குப் போவார். வாத்தியாருக்கு அப்பு கலப்பில்லாத கள்ளுத்தான் கொடுப்பார்.

சில நாட்களில், அப்புவுக்கு நேரமில்லாவிட்டால் நான் தான் வாத்தியார் வீட்டுக்குக் கள்ளு எடுத்துக் கொண்டு போறனான்.



மதுபானம் அருந்தக்கூடாதென்று பாடப்புத்தகத்திலை எழுதியிருக்கு. ஒருநாள் வாத்தியார் அந்தப் பாடத்தை எங்களுக்குச் சொல்லித் தந்தார்.



அதுக்குப்பிறகு ஒருநாளும் நான் வாத்தியார் வீட்டுக்குக் கள்ளு எடுத்துக்கொண்டு போறதில்லை. மதுபானம் அருந்தக்கூடாதென்று படிப்பித்த வாத்தியாருக்கு நானே எப்படி மதுபானம் கொண்டுபோய்க் கொடுக்கிறது? எனக்குப் பயமாக இருக்கும்.



போன கிழமை கோயிலில் நடந்த பிரசங்கத்தை நானும் கவனமாகக் கேட்டன். கண்ணப்பநாயனாரின் கதையைக் கேட்டுக் கொண்டிருந்தபோது, என்னுடைய உடம்பில் ஏதோ ஒரு புது வேகம் உண்டாகிறதைப் போல இருந்தது.



“........ சிவலிங்கப் பெருமானின் வலக்கண்ணிலே இரத்தம் வடிந்தபோது பதைபதைத்து ஆவிசோர்ந்து தனது கண்ணைத் தோண்டி சுவாமியின் கண்ணிலே அப்பினான் வேடுவர் தலைவனாகிய திண்ணன். அப்போது சுவாமியின் இடக்கண்ணிலிருந்து இரத்தம் வடியத் தொடங்கியது.



சிவலிங்கப் பெருமானை மோந்து, முத்தமிட்டு, வாயிலே கொண்டுவந்த திருமஞ்சன நீரைத் தனது மனசிலுள்ள அன்பை உமிழ்வதுபோலத் திருமுடியின் மேல் உமிழ்ந்து, தனது தலையிலிருந்த பூக்களைச் சாத்தி வழிபட்ட திண்ணனார், இப்போது சுவாமியினுடைய கண்ணிலே அடையாளமாகச் செருப்பை வைத்துக்கொண்டு தனது மறுகண்ணையும் தோண்டுவதற்காக அம்பை வைத்தார்.



தயாநிதியாகிய எம்பிரான் ‘நில்லு கண்ணப்பா, நில்லு கண் ணப்பா,’எனத் திருவாய்மலர்ந்து கண்ணைத் தோண்டும் கையைத் தனது திருக்கரத்தினாலே தடுத்தார்.”



எனக்கு உடம்பு புல்லரித்தது. கண்ணப்பநாயனாரைப் போல நானும் கடவுளைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டுத் தழுவிக் கும்பிட வேண்டும் போல ஒரு வெறி எனக்கு ஏற்பட்டது. நான் என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். எனக்கு ஏனோ அழுகை வந்தது. விம்மி விம்மி அழுதுகொண்டு கடவுளைக் கும்பிட்டேன்.

எங்களுடைய வகுப்பிலை படிக்கிற மூர்த்தி ஐயர் நான் அழுகிறதைப் பார்த்துவிட்டு, என்னை அழவேண்டாமென்று சொன்னார். அவருக்கு என்னிடத்திலை நல்ல விருப்பம். ஒருத்த ருக்கும் தெரியாமல் மடப்பள்ளியிலிருந்து நிறையக் கடலையும் வாழைப்பழமும் எடுத்துக் கொண்டுவந்து எனக்குத் தந்தார்.



போன தவணைச் சோதனையில் நான் பரமகுருவை முந்தி விட்டன். நான்தான் வகுப்பிலை முதலாம் பிள்ளை.



பரமகுருவுக்குப் தமிழ்ப்பாடத்திலை ‘மாக்ஸ்’ குறைஞ்சு போச்சுது. ‘சாதி யிரண்டொழிய வேறில்லை’ என்ற பாட்டு எழுதச்சொல்லிக் கேள்வி வந்தது. அந்தப் பாட்டு பரமகுருவுக்குப் பாடமில்லை. எனக்கு நல்ல கரைஞ்ச பாடம்.



நான் வகுப்பிலை முதலாம்பிள்ளையாய் வந்தபோது அப்பு நல்ல சந்தோஷப்பட்டார். அப்பு படிக்கிறகாலத்திலை எங்கடை ஆட்கள் ஒருத்தரும் பெரிய உத்தியோகங்களுக்குப் படிக்கிற தில்லையாம். இப்ப காலம் மாறிப் போச்சுது.



எங்களுடைய ஆட்கள் பலபேர் படிச்சு உத்தியோகம் பார்க்கினம். அப்பு என்னை எப்படியும் கஷ்டப்பட்டுப் படிக்க வைக்கிறனெண்டு சொல்லியிருக்கிறார். நானும் கவனமாகப் படிச்சு உத்தியோகம் பார்க்கத்தான் போறன். பிறகு எங்களுக்கு ஒரு கஷ்டமும் இருக்காது நாங்களும் மற்றவையளைப்போல நல்லா இருக்கலாம்.



பரமகுரு:-



நானும் முத்துவும் எங்களுடைய வளவிலிருக்கும் தோட்டத்தில் சேர்ந்து விளையாடுவோம். நான் முத்துவோடு விளையாடுவதை அப்பா கண்டால் எனக்கு நல்ல அடிதான் கிடைக்கும். அதனால் அப்பா எங்காவது வெளியிலை போன நேரத்திலைதான் நாங்கள் இரண்டுபேரும் சேர்ந்து விளையாடுவோம்.



முத்து இந்தத் தவணைச் சோதனையில் என்னை முந்தி விட்டான். அதைப்பற்றி எனக்குப் பொறாமையில்லை. அவன் படிச்சு பெரியவனாகியதும் கொழும்புக்குப்போய் மூர்த்தி ஐயரின் தமையனைப்போலத் தானும் உத்தியோகம் பார்ப்பானாம்.



முத்துவினுடைய தகப்பன் எங்களுடைய தோட்டத்திலை கஷ்டப்பட்டு வேலை செய்யிறதைப் பார்க்க எனக்குப் பாவமாக இருக்கும். அவையளுக்குக் காணியில்லாத படியாலைதான் எங்களுடைய நிலத்திலை கஷ்டப்படுகினம். இப்ப அவையளுக்குக் காணியில்லாவிட்டால் என்ன? நான் வளர்ந்து பெரியவனாகியதும் எங்களுக்கு இருக்கிற காணிகளில் ஒன்றை முத்துவுக்குச் சொந்தமாகக் கொடுத்துவிடுவன்.



எனக்கு ஒரேயொரு அண்ணன் மட்டுந்தான் இருக்கிறார். அவர் யாழ்ப்பாணத்திலைதான் வேலைசெய்கிறார். அவர்மேலை எனக்கு நல்ல விருப்பம். அண்ணன் எங்களுடைய வீட்டுக்கு வருவதில்லை. அப்பாதான் அவரை வரவேண்டாமென்று சொன்னவர். அண்ணனுக்கு நிறையச் சீதனம் வாங்கி கலியாணம் செய்துவைக்க வேண்டுமென்று அப்பா விரும்பினார். அண்ணர் தனக்கு விருப்பமான ஒரு பெம்பிளையைக் கலியாணம் செய்யவேண்டுமென்று பிடிவாதமாக இருந்தார். அந்தப் பெம்பிளைபகுதி வேதக்காறராம். அவவும் அண்ண ரோடைதான் வேலை செய்கிறவவாம். கடைசியில் அண்ணர் தன்னுடைய விருப்பப்படிதான் கலியாணஞ் செய்தார்.



கலியாணம் முடிஞ்சவுடனை அண்ணர் பெம்பிளையையும் கூட்டிக்கொண்டு வந்தார். அப்பா, ‘இனிமேல் வீட்டுவாசல் மிதிக்கக் கூடாதெ’ன்று அண்ணரை ஏசிக் கலைச்சுப்போட்டார். இது நடந்து ஒரு வருஷத்துக்குப் பிறகு அண்ணருக்கு ஒரு ஆம்பிளைப் பிள்ளை பிறந்தது. அதைக் கேள்விப்பட்டவுடனை, அம்மா தான் போய்ப் பார்க்கவேணுமென்று அப்பாவிடம் பயந்து பயந்து கேட்டா. அப்பா தடுக்கவில்லை. அம்மாமட்டும் போய் அண்ணரையும், மச்சாளையும், பிள்ளையையும் பார்த்து விட்டு வந்து புதினங்களைச் சொன்னா. அப்பா ஆசையோடு அதைக் கேட்டுக்கொண்டிருந்தார். அப்பாவுக்கும் அந்தப் பிள்ளையைப் போய்ப் பார்க்க ஆசைதான். ஆனால் அவர் அதை வெளிக்காட்டுகிறாரில்லை. அவருடைய பெருமை அவரை விடுகுதில்லை.



போன வெள்ளிக்கிழமை நான் அப்பாவோடை கோயிலுக்குப் போயிருந்தன். மூர்த்தி ஐயருடைய தகப்பன்தான் வழக்கமாகக் கோயிலில் பூசை செய்யிறவர். அன்றைக்கு அவர் கோயிலுக்கு வரவில்லை. அவருக்கு ஏதோ சுகமில்லையாம். கொழும்பிலை உத்தியோகம் பார்க்கிற குருக்களுடைய மூத்த மகன்தான் அன்றைக்குப் பூசை செய்தவர். தகப்பனுக்குச் சுகமில்லாதபடியால் அவர் லீவு எடுத்து வந்தவராம். பெரிய குருக்களைப்போல இவர் குடுமி வைச்சிருக்க வில்லை. பெரிய குருக்களைப்போல இவர் கோயிலுக்கு நடந்து வரவில்லை; சைக்கிளிலைதான் வந்தவர். பூசை முடிஞ்சதும் எல்லோருடனும் சேர்ந்து நானும் அன்று நடந்த பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தன்.



“.......புலால் உண்பவர்கள் புலையர்கள். சிவலிங்கப் பெருமானுடைய சந்நிதியில் வெந்த இறைச்சியும், எலும்பும் கிடக்கக்கண்ட சிவகோசரியார் வேட்டுவப் புலையர்கள்தான் இந்த அநுசிதத்தைச் செய்தார்கள் போலும், இதற்குத் தேவரீர் திருவுளம் இசைந்தீரோ? என மனம் வெதும்பினார்.



........ வேட்டுவப் புலையரெனத் தான் திட்டிய திண்ணனாரைச் சிவலிங்கப் பெருமான் ‘கண்ணப்பா’ என்று அழைத்ததோடு, தன் வலப்பக்கத்தில் நிற்கும்படி திருவாய் மலர்ந்தபோது சிவகோசரியார் மெய்தானரும்பி விதிர்விதிர்த்துச் சிவலிங்கப் பெருமானை வணங்கி நின்றார்.”



மறுநாள் எங்கடையூர் வயிரவர் கோயிலில் வேள்வி நடந்தது. எங்களுடைய வீட்டிலும் இறைச்சி வாங்கினார்கள். அப்பாவுக்கு ஆட்டிறைச்சி என்றால் நல்ல விருப்பம். எனக்கும் விருப்பந்தான். சாப்பிடும்போது அம்மா எங்கள் இருவருக்கும் நிறைய இறைச்சி போட்டா.



முதன் நாள் கோயிலில் கேட்ட பிரசங்கம் என் நினைவுக்கு வந்தது.



“நாங்கள் இறைச்சி தின்னிறம், அப்படியானால் நாங்களும் புலையர்களோ?” என்று அப்பாவிடம் கேட்டன்.



அதைக் கேட்டதும் அம்மா சிரித்தா. அப்பா கொஞ்சநேரம் பேசவில்லை; ஏதோ யோசித்தார். அவருக்கு நான் கேட்ட கேள்விக்கு உடனே பதில் சொல்ல முடியவில்லை.

“முந்தின காலத்தில் புலையர்கள்தான் இறைச்சி சாப்பிடு வார்கள்; வேளாளர் சாப்பிடுவதில்லை. அதனாலைதான் வேளாளரைச் சைவ வேளாளர் என்று சொல்லுவார்கள். இப்ப காலம் மாறிப்போச்சு. இந்தக் காலத்திலை பலபேர் மாமிசம் சாப்பிடுகிறார்கள். அதனால் மாமிசம் புசிப்பது பிழையென்று யாரும் நினைப்பதில்லை” என்று அப்பா சொன்னார்.



நான் யோசித்துப் பார்த்தன்.



அப்படியானால் இப்ப நாங்கள் பிழையென்று நினைக்கிற விஷயங்கள் காலம் மாறினால் பிழையற்றதாகி விடுமோ?



காலம் மாறிக்கொண்டுதானே இருக்கிறது!.



- வீரகேசரி 1973

+++++++++