கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  நான் கண்ட கலைப்புலவர்  
 

கா. மாணிக்கவாசகர்

 

நான் கண்ட கலைப்புலவர்




கா. மாணிக்கவாசகர்
நூல் நிலைய நிர்வாகி
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி.





யாழ்ப்பாணம்
1958

++++++++++++++++++++

கலைப்புலவர் க. நவரத்தினம் அவர்கள் ஆசிரியத் தொழிலிலிருந்து இளைப்பாறிய போது அவர் கல்வி, கலை, சமயம், நாடு ஆகியவற்றிற்கு ஆற்றியுள்ள பணியைப் பாராட்டுமுகத்தால் வெளியிடப் பெற்றது.

திருமகள் அழுத்தகம், சுன்னாகம்.

++++++++++++++++++++


நான் கண்ட கலைப்புலவர்

சில வருடங்களுக்குமுன் “கல்யாணி” என்பார் எழுதிய சமையற் கலையும் ஆரோக்;கிய உணவும் என்னும் நூல் ஒன்று எனக்குப் படிக்கக் கிடைத்தது. சுவையான உணவைச் சமைப்பது ஒரு கலையே என்ற தீர்மானித்தேன். நாள்கள் சில சென்றன. “சோம்பற்கலை” என்னுங் கட்டுரையைக் ‘கலைக்கதிரி’ற் படித்தேன். அதைத் தொடர்ந்து ‘தையற் கலை’ என்ற நூலையுங் கண்டேன். ஒன்றிற்கொன்று முரணானகலை நூல்களைக் காண என் மனம் நிலைகுலைந்தது. சமையல் செய்வது தொடங்கிச் சட்டை போடுவது வரை கலையானால் உண்மையான கலைதான் எது என அறிய ஆவலுற்றேன்.

எனது எண்ணத்தை அறிந்த ஒரு தமிழ்ப் பெருமகனார் சமயமும் கலையும் என்ற அழகிய சிறிய வெளியீடொன்றைத் தந்தார். அந் நூலினுள் நுழைந்தபோது முதல் வரியே முழு விடை பகர்ந்து விட்டது. “மக்களின் பண்பாட்டிற்கு உறுதுணையாக அமைந்துள்ள சாதனங்களுள் கலை சமயத்திற்கு மட்டுமே அடுத்தபடியாகவுள்ளது” மன மகிழ்வுடன் தொடர்ந்து படிக்கலானேன். “சிற்பம், ஓவியம், சங்கீதம், நடனம் ஆகியவற்றினூடாக நிலையுள்ள ஒளியின் வெண்கதிர்கள் தோன்றுவது கலை. துணைப்பொருளின்றி அவ்வொளியை உணருவது சமயம்” எனக் கண்டேன்.

நுண்கலைகளுக்கு இரத்தினச் சுருக்கமான இவ்விமர்சனம் கொடுத்தவர். எமது கல்லூரிக்கே பெருமை ஈந்து பல்கலைக் கொள்கலமாக விளங்கும் கலைப்புலவர் திரு. க. நவரத்தினம் அவர்களேயாவர். ஈழவளநாட்டின் அறிஞர்களுள் ஒருவர் கலைப்புலவர் க. நவரத்தினமவர்கள். அன்னார் சிறுகதை, பெருங்கதை, கவிதை இவைகளை விடுத்துக் கலைவிமர்சனம் ஒன்றையே குறிப்பாகக் கொண்டவர். கலை, சமயம் இவைகளில் அவரது புலமை வியத்தற்குரியது. அவர் கருத்துக்கள் பின்னோக்குடையவை. அவரை நன்கறிய வேண்டுமானால் அவருடன் ஒட்டுறவாகப் பழகல்வேண்டும். எதற்கு எடுத்தாலும் நகைச் சுவையான பதிலைத் தரும் அவர், வீட்டில் ஒரே பக்தி மயமாகக் காட்சியளிப்பார். அவர் வீடு திருமகள் வாசம்; கலை மாளிகை; அழகு வனம்; சுமார் நூற்றைம்பது வயதான வீடும் சாலையும்; அதனுள்ளே தென்னாட்டுச் செல்வங்கள். தூய்மையானதோர் இடத்தில் அவர்கள் ஆசிரியராகிய ஆனந்தக்குமாரசுவாமியின் திருவுருவம் காட்சியளிக்கின்றது. இதனைக் கண்ணுற்ற பொழுது ‘நவரதர்தினமவர்கள் ஆனந்தக்குமாரசுவாhமியுடன் ஒருங்கே துள்ளும் உள்ளம் படைத்தவர்’ என்று பன்மொழிப்புலவர் மீனாட்சிசுந்தரனார் கூறியது நினைவிற்கு வந்தது. சாலையைத்தாண்டி வீட்டினுட் சென்றவுடன் எங்கள் கண்களையே நம்ப முடியாது போய்விடுகிறது. அவ்வில்லத்திற்கு ‘சாந்திநிகேதன்’ என்ற பெயர் சாலவும் பொருந்தும். எங்கு பார்த்தாலும் கலைப் பொக்கிஷங்கள். தரையெல்லாம் தமிழ்நாட்டுக் கோலம், ஓவியங்கள், சிற்பம் செறிந்த வெண்கல வெள்ளிப்பாத்திரங்களும் திருவுருவங்களும். என்னே! சிற்பாசாரிகளின் சிற்பத்திறமை. அவர்கள் இல்லையேல் அழகுக் கலையெங்கே, ஆலயமெங்கே? ஆனால் இக்கலைக் கர்த்தாக்கள் சமய ஆச்சாரியர்களிலும் பார்க்கக் குறைந்தவர்கள் என்ற எண்ணம் சிலரிடம் காணப்படுகிறது. அவர்கள் அறியாமையைத் தெளிவுபடுத்துகிறார் கலைப்புலவர். “கலைஞர்கள் பழங்கால இந்தியாவில் சமய ஆசானுக்குச் சமமாக, ஆச்சாரியர்களாக மதிக்கப்பட்டு வந்தார்கள். உயர்ஞானிகள் ஞானத்திற் கண்ட பேரொளியைக் கலைஞர்கள் உருவிலும் திருவிலும் தோற்றுவிக்கின்றனர்.”

அனைத்தையும் விட அழகான அலுமாரிகளில் நான் கண்ட நூல்கள் என்னை வியக்கச் செய்தன. அவை பல்லாண்டுகளுக்கு முந்தியவை. கிடைத்தற்கரிய நூல்களையெல்லாம் தேடித் திரட்டி வைத்திருக்கிறார். ஒன்பது அலுமாரிகளில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான நூல்கள் இருக்கின்றன. அவைகளில் பெரும்பாலான நூல்கள் சமயம், கலை, தத்துவஞானம், சரித்திரம் சம்பந்தமானவை. இவைகளில் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். என்ற பெருநோக்கத்துடன் 1930ஆம் ஆண்டு ‘கலாநிலையம்’ என்றதோர் தாபனத்தை நிறுவினார். அந்நாளில் யாழ்ப்பாணத்தில் அறிவுக் களஞ்சியமாக விளங்கிய நிலையம் இது ஒன்றே எனின், அது மிகையாகாது. கலாநிலையத்தில் ஆயிரத்து நூறு நூல்களும், அச்சில் இல்லாத பல ஆங்கில, தமிழ் நூல்களும் ஏட்டுப் பிரதிகளும் உள்ளன. அவ்வப் போது அறிஞர்களின் விரிவுரைகள் நிகழும். அதன் கண் அமர்ந்து ஞாயிறு என்னும் கலையாக்கம் கருதிய வெளியீடொன்றைச் செப்பமுறச் சிலகாலம் வெளியிட்டார். ‘மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்ற நோக்கத்துடன் வெளியான அவ்விதழில், அந்நாளில் நம் கல்லூரி ஆசிரியராகக் கடமையாற்றிய திரு. தா. ஆபிரகாம் அவர்களால் எழுதப்பட்டு நவரத்தின மலர்களால் மொழி பெயர்க்கப்பட்ட ‘சாள்ஸ் டாhவின்’ என்ற கட்டுரையையும், நெடுங் காலமாக தமிழ், சமஸ்கிருதத்துறைத் தலைவராகக் கடமையாற்றிய வயாகரண மகோபாத்யாய வை. இராமசாமி சர்மா அவர்கள் தொடர்ந்து எழுதிய ‘பெருங்காப்பிய ஆராய்ச்சி’ என்னும் கட்டுரையையும் இங்கு குறிப்பிடுவது மிகவும் பொருத்தமுடையதாகும்.

பலவருடங்கள் விரிவாகக்கற்று இலங்கையிலும் இந்தியாவிலுமுள்ள கலைக்கோயில்களைத் தரிசித்து, அவற்றின் பயனாக தென் இந்திய சிற்ப வடிவங்கள் என்னும் நூலைத் தமிழில் இதுவரை யாரும் எழுதாத முறையில், பல மேல்நாட்டுக் கலை விற்பன்னர்களின் நூல்களிலிருந்து மேற்கோள்கள் காட்டி, அனேக படங்களுடன் அழகுறப் பதிப்பித்து வெளியிட்டார்கள். இதுவே தமிழில் வெளியான முதற் சிற்பக்கலை விமர்சன நூலாகும். இந்நூலைப்பற்றி ‘கல்கி’ ஆசிரியராகிய ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி பின்வருமாறு எழுதுகிறார்:

“தமிழ்மொழிக்கு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள் செய்த தொண்டை ஸ்ரீ நவரத்தினம் தமிழ்ச் சிற்பத்துக்குச் செய்திருக்கின்றார் என்று சொல்லலாம். தமிழ் நாட்டில் எந்தப் புத்தகசாலையில் இந்த, அரிய புத்தகம் வைக்கப்படவில்லையோ, அந்தப் புத்தகசாலையை மூடி விடுவதே உத்தமமாகும்”

தான் அறிந்த உண்மையை வற்புறுத்திக் கூறும் தன்மை அவரது பாண்டியத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். அன்னார் அண்மையில் நிகழ்த்திய ஓர் ஆங்கில விரிவுரையிற் சில உண்மைகளை வற்புறுத்தியுள்ளமை கண்டு கவனிக்கத்தக்கது. “கோயில்களிலும் இல்லங்களிலும் திருவுருவங்களை வைத்து வழிபடும் வழக்கு, வேதகால ஆரியர்களின் சமய ஆசாரங்களில் இல்லாதிருந்தது .......பொலனறுவாக் காலத்திலும் அதன் பின்னரும் இலங்கைக்கலையில் தென் இந்தியக் கலையின் சாயல் படிந்துள்ளதை மறுப்பது சரித்திரத்தைத் தவறான கண்கொண்டு பார்ப்பதாகும்”

சமயத்துறையிற் பண்பாடுடைய வேதாந்தியாவிருந்தபோதிலும் சைவ சித்தாந்தத்தை நன்கு பயின்று ஆராய்ந்தவர். 1943ஆம் ஆண்டிலே கண்டியில் நடைபெற்ற சர்வமத கோட்பாடுகளின் மகாநாட்டில் அவர் சைவ சித்தாந்தம் பற்றி நிகழ்த்திய விரிவுரையும், சைவ சித்தாந்தம் வேதாகம சைவசித்தாந்தம் என்ற பொருள்பற்றிச் சிலகாலமாகப் பத்திரிகை மூலம் வெளியிட்ட தொடர் கட்டுரைகளும், பகவத்கீதை சைவசித்தாந்தக் கருத்துக்களையே இயம்புகிறது என ஆராய்ந்த தமிழறிஞரின் முடிவை எதிர்த்து, பகவத் கீதையில் சைவசித்தாந்தக் கருத்துக்கள் இருந்தபோதிலும் அவைகளின் முடிபுகள் ஒன்றாக இருப்பதில்லை என விளக்கி எழுதிய கட்டுரைகளும் கலைப்புலவரது சித்தாந்த அறிவைத் தெரிந்துகொள்வதற்குத் துணையாக அமைந்துள்ளன.

கைப்பணியைப்பற்றிக் கூறினாலன்றிக் கலைப்புலவரைப்பற்றிச் சொன்னது பூர்த்தியாகாது. “கைப்பணியை கலை அம்சத்துடன் வளர்க்க வேண்டும் என்ற ஆர்வமுடையவர் கலைப்புலவர் ஒருவர்தான்” என்று தமிழாசிரியர்கள் சொல்லும்பொழுதெல்லாம் ‘எங்கள் ஆசிரியர்’ என்று, எனதுள்ளம் இறுமாப்படைவதுண்டு.

யாழ்ப்பாணக் கலையும் கைப்பணியும் என்ற நூலில் யாழ்ப்பாணக் கலைஞர்களின் திறமையை நன்றாக எடுத்துக் காட்டுகிறார். “ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பெருமாள் கோயிலடியிலிருந்த நெசவாளர்கள் அழகிய பட்டுக் கம்பாயங்களைத் தென்இலங்கைக்கு அனுப்பி, அவை அங்குள்ள சிங்களக் கலைஞர் பரம்பரையினராற் பெரிதும் கவரப்பட்டன ........அவர்கள் வௌ;வேறு துணிகளிற் பல்வேறு நிறங்களில் மாங்காய்க் கரையுடைய சிறந்த சேலைகளைத் தயாரித்தார்கள்......... பாக்கு வெட்டி, கத்தி, பூட்டும் திறப்பும் செய்வதில் யாழ்ப்பாணக் கொல்லர்கள் பெயர் பெற்றவர்கள்........பழங்காலத்திலிருந்தே தச்சர்கள் வம்சாவளியாக கலைவனப்புடைய கோயில் வாகனங்களையும் தேர்களையும் ஏனைய நுட்பமான வேலைப்பாடுகளையும் செய்து வந்தனர்.......வீரமாகாளி அம்மன்கோயிற் தேரும், கதிரேசன் கோயில் வெள்ளித் தகடடித்த மயூரவாகனமும் அவர்களின் அழகிய கலைத்திறமைக்குத் தக்க எடுத்துக்காட்டுகளாகும்.” பொற்கொல்லர்களின் திறமையைக் கூறும்பொழுது சேர் எமர்சன் றெனன்ட் எழுதிய இலங்கை என்ற நூலிலிருந்தும், ‘பிரித்தானிய மன்னர் பரம்பரையினரின் இலங்கை வருகை’ என்னும் கட்டுரையிலிருந்தும் மேற்கோள்கள் காட்டியுள்ளார்.

இவ்வாறு மேன்மையுற்றிருந்த நம் கலைஞர்களின் இன்றைய நிலையையும் அவர் சொல்லாற் கேட்பது அவசியம். “யாழ்ப்பாணத்திலுள்ள நெசவுத் தொழில் அனேகமாக இறந்துவிட்டது........சாயம் தோய்க்கும் தொழிலும் துணியிற் கையால் அச்சிடும் தொழிலும் மறைந்துகொண்டே வருகின்றன. சரிகைச் சித்திரவேலை தளர்ச்சியுறுவதும் அதைவெகு சிலரே விரும்புவதும் மிகவும் வருந்தத்தக்க செயலாகும்........நுண்கலை என்ற வகையில் தச்சுத்தொழில் படிப்படியாக இறக்கிறது. ஆனால், தொழிலாக அது வளர்கிறது.

இவ்வாறு பழமைபேசி இன்றைய நிலையிற் குறைகாணும் கலைப்புலவர் அதனை நிறைவாக்கும் வழியையும் கூறாதிருக்கவில்லை. பொருளாதார நிலையை அபிவிருத்தி செய்யவேண்டியது ஆட்சியாளரின் கடமையென்று வற்புறுத்துகிறார். பொருள் கிடைத்துவிட்டால் கலை வளர்ந்ததாகுமா? இதற்கு அவர் தரும் விளக்கமே இந்நூலின் கருவூலம். “எங்கள் இரசனையும் மதிப்பீடும் தன்மையும் மாறினாலன்றி. எமது தொழில்களுக்குக் கலை வனப்பை உண்டுபண்ண இயலாது........எமது வீடுகளில் விலை மலிவான கலவனப்பற்ற, நிலையில்லாத கலன்களை உபயோகிப்பதற்குப் பதிலாக, தேவைப்படும் பொழுதும் தேவையாகுமிடத்திலும் எமது மரபிலுள்ள கருவிகளை உபயோகிக்கத் தொடங்க வேண்டும். நமது பெண்கள் மேல்நாட்டு வியாபாரிகளின் பட்டியலிற் காணும் வடிவங்களை உபயோகிப்பதற்குப் பதிலாக நமது மரபிலுள்ள அழகிய படிவங்களில் அவர்கள் அணிகலன்கள் செய்து அணிய விரும்புதல் வேண்டும்.

கைப்பணியில் அவரது அறிவைக் கண்டோம். இனி, அவரது கலைஞானத்தை அறியப் புகுவோம். உலகின் பல பாகங்களிலுள் காணப்படும் புத்தர் திருவுருவங்களுள் சிறந்தனவாகக் கருதப்படும் மூன்றில், அநுராதபுரத்தின் அடர்ந்த வனத்துள் காணப்படும் உருவம் மூன்றாவதாகும். அதனைக் காண்போர் புத்தரின் ஒரு சிலையாகவே காண்கின்றனர். அவர்கள் பார்வைக்கும், கலைப்புலவரின் கண்ணோட்டத்திற்கும் உள்ள வேறுபாடு ஊன்றிக் கவனிக்கத்தக்கது. “இச்சிலையை உற்று நோக்குவேருக்கு இதன் பெருமை விளங்காதிருத்தல் அரிது. மாலைப் பொழுதில் இயற்கை அமைதியுற்றபின், எங்கணும் சாந்தம் நிலவும் வேளையில் குளிர்ந்த பசுமை நிறைந்த சோலையின் மத்தியில் நாம் சென்று, ஏகாந்தமாகச் சுகாசனமிட்டு அகத்துள் ஆனந்தம் அரும்ப, கருணை பொலிந்த வதனத்துடன் சுகித்தருக்கும் இத்திருவுருவத்தின்முன் நிற்போமாயின் அப்பாக்கியம் நம் தவப்பயனேயாகும். அந்நேரத்தில் மனத்தில் எழும் இன்ப உணர்ச்சி எழுதுந்தரத்தன்று. மனோநிக்கிரகத்தினால் எழும் வீரம், வைராக்கியம், கருணை, பரவசம் முதலாங் குணங்களுக்கு இத்திருவுருவம் ஓர் எடுத்துக்காட்டாகும். இதன் தேக அங்கங்கள் பருமனாகத் தோன்றினும், ஜடத்தன்மையற்றதாய். பரவசப்பட்ட இதய தாமரையை தன்னகத்தே கொண்டதாய், சாத்வீகம் நிறைந்து விளங்கும் வடிவினதாய் இருக்கின்றது.”

கலைப்புலவர் புலமை நிறைந்தவர் மட்டுமல்லர். திறமை வாய்ந்த ஆற்றலுடையவர். தமிழ் வளர்ச்சிக் கழகத்தாரின் நான்காவது தமிழ்விழாவை யாழப்பாணத்தில் நடாத்துவதெனத் தீர்மானித்த பொழுது கலைப்புலவர் அதன் செயலாளராக நியமனம் பெற்றார். அவரின் ஆற்றலைக் கண்ட காலஞ் சென்ற ‘கல்கி’ ஆசிரியர் ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதியதாவது: “திரு. க. நவரத்தினம் காரியதரிசி என்று ஏற்பட்டவுடன் எழுந்து நின்று ‘இங்குள்ள அன்பர்க்ள எல்லோரும் தலைக்கு பத்து ரூபா அங்கத்தினர் சந்தா கொடுத்தவிட்டுப் போகவேண்டும்; அப்பொழுதுதான் வேலைகளைத் தொடங்கலாம்’ என்று சொல்லி, அவ்விதமே வசூலிக்கவும் தொடங்கிவிட்டார். ‘சரிதான், யாழப்பாணத்திற் தமிழ்விழா சிறப்பாக நடக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை’ என்று நானும் முடிவுகட்டிக் கொண்டேன்” அவ்வாறே தமிழ்விழா யாழ்ப்பாணத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.

இந்தியக் கலைகளின் மேல் மோகம் கொண்டு அவைகளைப் படித்தும், சேகரித்தும் வரும்சிலரில் ஒ. ஜீ. கங்கூலி அவர்கள் முதலிடம் வகிப்பவர்கள். அன்னாருடன் கலைப்புலவர் வைத்திருந்த நட்பின் பயனாக 1939ஆம் ஆண்டு மிகச் சிறந்ததொரு ஓவியக் கண்காட்சியை நடத்தினார்கள். அதில் பௌத்;த, பால, இந்து, இராஜபுத்திர, இராக இராகினி ஓவியங்களும்; ஓரிசா, நேபாள தேசத்து ஓவியங்களுமாக எழுபத்தொரு அழகிய கண்கவர் ஓவியங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றன. இத்தகைய இந்திய ஓவியக் கண்காட்சி இதற்கு முன்னும் பின்னும் நடந்ததில்லை.

கலைப்புலவரின் வாழ்க்கைத்துணைவி திருமதி மகேஸ்வரி தேவியார் கலைகளுக்கு இருப்பிடமாக விளங்குபவர். அவர்கள் வீணை, ஜலதரங்கம், சித்தார், கோட்டவாத்தியம் ஆகிய அதி நுட்ப இசைக்கருவிகளைத் திறமையாக மீட்கும் வல்லமையுடையவர்கள். தமது இசைக் கலைஞானம் பலருக்கும் பயன்படவேண்டும் எனக் கருதி ‘A First Book of Indian Music,’ ‘Veena Tutor’ ஆகிய நூல்களை வெளியிட்டார்கள். அந்நாளில் அவர்களது இசைஞானமும் ஆர்வமும் ஒரு துணிகரச் செயல் எனப் பாராட்டப்பட்டது. வங்கக் கவி டாக்டர் ரவீந்திரநாத்தாகூரின் கலைக்கோயிலான விஸ்வபாரதியில் இரண்டு ஆண்டுகளாக இருந்து கலைச் செல்வங்களைப் பயின்றதன் பயனாகத் தமது குருவாகிய கவிதாகூரை 1934ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்தார்கள். தாகூரின் வருகையைத் திட்டமிட ஏற்பட்ட செயற்குழுவுக்குப் புலவரவர்கள் செயலாளராகவிருந்து திறம்பட நடத்தினார்கள்.

இந்நாளில் தீண்டாமையை ஒழிக்கச் சகலவித நடவடிக்கைகளும் எடுப்பது பாராட்டத்தக்கது. ஆனால், முப்பத்தெட்டு வருடங்களுக்கு முன் இதனைச் செய்ய மிகச் சிலரே துணிந்தனர். 1920 ஆம் ஆண்டு ஆனைப்பந்தியடியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென ஒரு பாடசாலையை ஆரம்பித்து, சம ஆசனம் அளித்து, ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்;’ எனக் கருத்தில் வைத்து விபுலாநந்த அடிகளுடன் நவரத்தினம் அவர்களும் ஆக்க வேலைகள் செய்துவைத்தனர்.

இவை தவிர 1929, 30, 31ஆம் ஆண்டுகளில் வாலிபமகாநாட்டின் ஆதரவில் நடந்த கலை, கைத்தொழிற் கண்காட்சியின் திட்டக் குழுவிற்கு செயலாளராக விருந்தார். வடமாகாண மதுவிலக்குச் சபை, ஈழகேசரி பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம், யாழ்ப்பாணக் கலைகைப்பணிச் கழகம் ஆகியவற்றின் செயலாளராகவும்; யாழ்ப்பாணநூதனாசாலை ஆலோசனைக் குழுவிலும், இலங்கைத் தேசிய நூதனசாலை ஆலோசனைக்குழுவிலும் அங்கத்தவராகவம் இருக்கிறார். இலங்கை அரசினர் கலைக்கழக சிற்ப ஓவியப் பிரிவிலும் அங்கத்தவராக மூன்று வருடம் கடமை யாற்றினார். உருத்திரபுரம் சிவாலயம் அவரது திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு. ஒரு சிவாலயத்தை அதன் இலக்கணங்களுக்கமைய அமைப்பது மிகச் சிரமமானதொரு செயலாகும்.

கலைப்புலவரின் நூல்களை முக்கியமாக சமயம், கலை, வாணிபத்துறை என முத்திறத்திற் காணலாம். அவற்றுள் -

சமய நூல்கள்: Bhagavad Gita – A Study, Advaita Vedanta, Saiva Siddhanta, Hindu Temple, Reform என்பன.

கலைநூல்கள்: தென் இந்திய சிற்ப வடிவங்கள், இலங்கையிற் கலைவளர்ச்சி, இந்திய ஓவியங்கள், Arts and Crafts of Jaffna, Development of Art in Ceylon, Religion and Art முதலியன.

வாணிப நூல்கள்: கணக்குப் பதிவு நூல், உயர்தரக் கணக்குப் பதிவு நூல், இக்கால வாணிப முறை ஆகியவை. தமிழிலே முதன் முதலாக வாணிப நூல்கள் எழுதிய பெருமை நவரத்தினம் அவர்களையே சாரும்.

ஆலயங்களில் மிருகபலியை நிறுத்தல்வேண்டுமென்றும். தீண்டாமையை ஒழித்தும், மதுவிலக்கை ஆதரித்தும் ‘ஈழகேசரி’, ‘வீரகேசரி’, ‘இந்துசாதனம்’ ‘Hindu Organ’ ஆகிய பத்திரிகைகளிற் கட்டுரைகளும், அறிக்கைகளும் வெளியிட்டார்கள். பதினெண் புராணங்களைப்பற்றி ஆங்கிலத்திலே தொடர்ச்சியாகக் கட்டுரைகள் எழுதினார்கள். நடராஜ வடிவம். தமிழ்நாட்டிற் கலை வளர்ச்சி, இலங்கையிற் கலை வளர்ச்சி, இந்திய ஓவியங்கள், டக்டர் ஆநந்தக் குமாரசுவாமி, நாவலர் கோட்டம் முத்துத்தம்பிப் பிள்ளை. பிரம்மஸ்ரீ சி. கணேசையர் ஆகியவை அவரது வானொலிச் சொற்பொழிவுகள். மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன்விழாவில் ‘தமிழ் நாட்டில் ஓவிய வளர்ச்சி’ என்னும் பொருள்பற்றி விரிவுரையாற்றினார்கள். சங்கப் பொன்விழா மலரிலும், தமிழ்விழா மலர், ஈழகேசரி வெள்ளிவிழா மலர், யாழ்வினோத காணிவல் மலர், மணிவாசகர் விழா மலர், கல்லூரி ஆண்டு மலர்களிலும், கலாநிதி இதழ்களிலும் கலைப்புலவரது கட்டுரைகள் வெளியாயின. யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் நூற்றாண்டு மலரின் தொகுப்பாசிரியராகவும் இவர் இருந்தார்.

அருள்மயமான இந்தியக் கலைகளின் தத்துவத்தை விளக்குவாரற்று ஒளியிழந்து இருந்தகாலை அதனை ஆராய்ந்து அகிலம் அறியச் செய்த பெருந்தனை, கலாயோகி டாக்டர் ஆனந்தக்குமாரசுவாமி அவர்களாகும். அன்னாரது ஆராய்ச்சித் திறத்தினாற் தான் உலகம் இன்று இந்தியக் கலையை, சமயத்தை, பண்பாட்டைப் போற்றுகிறது. எனினும், இச் சீரிய பணியைச் செய்த அறிஞருக்கு உரிய மதிப்பைக் கொடுக்க இந்தியக் கலை விற்பன்னர்கள் தவறிவிட்டனர். தமிழுக்கு ஓர் ஆறுமுகநாவலரையும். தமிழிசைக்கு ஒரு விபுலானந்தரையும், கலைகளுக்கு ஓர் ஆனந்தகுமாரசுவாமியையும் அளித்தது ஈழத் தமிழினம். இவர்கள் ஆற்றிய அரும்பணிகளைத் தொடர்ந்து செய்ய ஆர்வமும் ஆற்றலுமுடைய பல தமிழறிஞர்களையும் தந்துள்ளது.

டக்டர் ஆனந்தக்குமாரசுவாமிகளது வரலாற்றின் மிகச் சிறிய அம்சங்களையும் அறிந்து வெளியிட்டுவருகிறார் திரு. எஸ். துரைராசசிங்கம் அவர்கள். அவர் வெளியிட்ட Homage to Dr Ananda K. Coomaraswamy என்ற ஆனந்தக்குமாரசுவாமி நினைவு மலரில் சுவாமி சத்தியானந்தா, கலைப்புலவர் ஆகியோரது கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. துரைராசசிங்கம் அவர்கள் கலாயோகியின் புகழை மங்காது காத்து வருமிடத்து, கலைப்புலவர், டாக்டரவர்களின் நூல்களிலுள்ள கருத்துக்களை விளக்கி நூல்கள் எழுதியும். பலரும் கலைகளின் தத்துவத்தை அறியக்கூடியதாக எடுத்துச் சொல்லியும் வருவதைக் கலையுலகம் போற்றக் கடமைப்பாடுடையது.

1949ஆம் ஆண்டு சாந்திநிகேதனில் நடைபெற்ற உலக சமாதான மகாநாட்டில் யாழ்ப்பாணத்திற் பிறந்து, மலேயத்தில் வாழும், ஈழத்தாயின் புதல்வர் தமிழ்த்துறவி சுவாமி டக்டர் சத்தியானந்தா ‘இன்றைய உலகில் சமயமும், சமயப் பணியும் எவ்வாறிருக்க வேண்டும்’ என்னும் பொருள்பற்றி விளக்கிப் பேசினார். ‘சமயம் வெறும் புத்தகப் படிப்புமல்ல. சாஸ்திரம் ஓதுவது மல்ல. சமயத்தை வாழ்க்கையிற் பயிலல் வேண்டும். சுத்தமான அறவாழ்க்கை வாழ்தலும், துன்புறும் ஜன சமூகத்தின் துன்பததைப் போக்குதலும், வறியவருக்குத் தொண்டாற்றுதலுமே சமயமாகும். பல சமயக் கோட்பாடுகள் மக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதற்குப் பதிலாக வேற்றுமையையே வளர்க்கின்றன” என்பது அவர் ஆசிய மக்களுக்கு விடுத்த செய்தி.

சுவாமிகளின் அறைகூவலை வழிமொழிதலைப் போன்று 1956ஆம் ஆண்டில் புதுடில்லியில் நடைபெற்ற ஆசிய எழுத்தாளர்களின் மகாநாட்டிற் கலைப்புலவரவர்கள், “சமயம் நிலைத்து நிற்கவேண்டுமானால் நவீன பண்பாட்டுக்குத் தக்கபடி அதில் மாற்றங்கள் ஏற்படல் வேண்டும். எல்லையற்ற பரம்பொருளுக்கும், எல்லைக்குட்பட்ட மனிதனுக்குமிடையிற் பாலம் அமைப்பதன் முன், மனித குல சகோதரத்துவத்தை ஏற்படுத்தவும், மனிதர்கள் மனிதர்கள் மத்தியில் நல்லெண்ணத்தையும், இணக்கத்தையும் உண்டாக்கவும் சமயம் உதவுதல் வேண்டும். ஸ்தாபன முறையில் அமைத்து நிர்வகிக்கப்படும் சமயம், இன்று மனிதர் ஒருவரை ஒருவர் நன்கு விளங்;கிக் கொண்டு உறவாடத் தடையாக இருக்கின்றது. இக்கால வாழ்க்கையிற் சமயம் இடம்பெற வேண்டுமாயின், தனிப்பட்ட ஸ்தாபன ரீதியான முறைகளை வற்புறுத்துவதை விடுத்து, சர்வ மக்களுக்கும் பொதுவான ஆத்மீகத் துறைகளை அது வற்புறுத்துவதாக அமைதல் வேண்டும். மனிதனைத் தெய்வீக குணங்கள் இடம் பெறுவதற்கு ஏற்ற தகுதியுடையவனாக்குவதே சமயத்தின் நோக்கமாக இருத்தல் வேண்டும். செல்லரித்துப்போன பழைய சாத்திரங்களையும், கோட்பாடுகளையும் பாதுகாப்பதை விடுத்து, ஞான ஒளியையும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து கொள்ளும் தன்மையையும் பரப்புவதையே சமயம் சாதிக்கக் கருதல் வேண்டும். பகுத்தறிவுக்குப் பொருத்தமானதும், ஆத்மீக வளர்ச்சிக்கு ஏற்றதுமான சமயக் கொள்கைகள், ஆசிய மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைதல் வேண்டும். வாழ்க்கையின் சகல பிரச்சினைகளையும், இதனை இலக்காகக் கொண்டே நோக்குதல் வேண்டும்” எனக் கூறி ஆசிய எழுத்தாளர்களின் கவனத்தை ஈர்ந்தார்.

திரு. க. நவரத்தினம் அவர்கள் கலை, கைப்பணித் துறைகளில் ஆற்றிவரும் பணிகளைக் கௌரவித்து, திரு. சு. நடேசபிள்ளை அவர்கள் தலைமையில் நடைபெற்ற இலங்கையிற் கலைவளர்ச்சி என்னும் நூல் அரங்கேற்றத்தின்போது ‘கலைப்புலவர்’ என்னும் மதிப்புக்குரிய பட்டத்தை அவர் யாழ்ப்பாண மக்கள் சார்பில் இவர்களுக்கு வழங்கினார்கள். அந்நூலைப் பற்றியும், ஆசிரியரைப் பற்றியும், பலர் புகழுரைகள் கூறினார்கள். பின்வரும் பாக்கள் அவற்றுட் சில:

தென்னாட்டில் வடநாட்டிறட் திகழ்அழகுக்
கலைகள்பல தென்னி லங்கைப்
பொன்னாட்டில் வளர்ந்துவர ராறுரைக்கும்
புதுநூல்செய் ததனை யிங்கே
தன்னாட்டை யுயர்த்தீழ கேசரிப்பொன்
iனாயாவின் தகைமைக் கீந்தான்
இந்நாட்டு வரலாற்றி லிவன் பெயர்பொன்
னெழுத்தினா லெழுதற் பாற்றே
- புலவர்மணி, ஏ. பெரியதம்பிப்பிள்ளை

முன்னாட் கலாயோகி முயன்ற பெருந்தொண்டை
யிந்;நாள் நவரத்தின மியற்றினான் - எந்நாட்டுச்
சான்றோரு மேத்தச் சங்கமே யிந்நூலுக்
கான்ற பெருமை யளி:
- நவாலியூர். சோ. நடராசன்.

பல்கலைக் கொள்கலமாக விளங்கும் கலைப்புலவர் நவரத்தினமவர்களை ஆசிரியராகப் பெற்ற நாம் பூரிப்படைகிறோம். மாணவர்களுக்கு அவர் விடுத்த அறிவுரையைக் கூறினாலன்றி இக் கட்டுரை முற்றுப்பெற்றதாக நாம் கருதவில்லை. “பழமை எவ்வாறிருந்ததென்பதை நாம் அறிய முடியாத நிலையில் இருக்கிறோம். ஆனால் புதுமை எவ்வாறு இருக்கிறதென்பதை ஆராய்ந்து அறியக்கூடிய நிலையிலும் இருக்கிறோம். புதுமையின் சிறப்புக்களையும் அதனால் அறிவுலகிற்கேற்பட்டுள்ள பல நன்மைகளையும் நன்கு அறிய வேண்டுமாயின் புதுமையை ஆக்கிவரும் மேல்நாட்டினர்களது ஆராய்ச்சி முடிபுகளை நாம் மிகச் சிரத்தையடன் கற்றல் வேண்டும். அறிவுலகிற்குஅரண் செய்து நிற்கும் பல உண்மைகளை மேலைத்தேச அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். எங்கள் பழமையின் சிறந்த இயல்புகளை நாம் அறிவதற்கு அவர்கள் ஆராய்ச்சி முடிபுகள் துணைபுரிகி;ன்றன. அதனைத் துணையாகக் கொண்டு முன்னேறுவீர்”

கலைப்புலவர்கள் நெடுங்கால முயற்சியின் பயனாக தமிழ்நாட்டுக் கலைகள். இந்திய ஓவியங்கள் ஆகிய இரு கலைப் பொக்கிஷங்களை எழுதி முடித்துள்ளார்க ளென்பதையும், ஆங்கிலத்தில் இலங்கையில் இந்துசமய வளர்ச்சி - Hinduism in Ceylon from the Earlist Times என்னும் பொருள் பற்றிய நூலொன்றை எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்களென்பதையும் அறிய மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறோம்.

அறுபதாவது வயதைத் தாண்டிவிட்ட கலைப்புலவர் க. நவரத்தினமவர்கள் மேலும் பல்லாண்டுகள் வாழ்ந்து தமிழ்க்கலைக்கும், இந்துசமயத்திற்கும், தமிழுக்கும் தொண்டாற்ற இறைவனை இறைஞ்சுகின்றோம்.

வாழ்க கலைப்புலவர்!
வளர்க கலைகள்!!

++++