கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  திறனாய்வாளர் திருக்கோணமலை த. கனகசுந்தரம்பிள்ளை  
 

மகாஜனக் கல்லூரி தமிழ் மன்றம்

 

திறனாய்வாளர்

திருக்கோணமலை

த. கனகசுந்தரம்பிள்ளை

சரித்திரச் சுருக்கம்











தமிழ் மன்றம்
மகாஜனக் கல்லூரி
தெல்லிப்பழை
1976

+++++++++++++++++++++++++

நன்றியுரை

பண்டைத் தமிழ் இலக்கிய இலக்கணங்கள் பனையோலைச் சுவடிகளில் இருந்து செல்லரித்து அழிந்தொழியாமல் அவை இன்றைய காகிதப் புத்தகங்களாக மிளிருவதற்குத் தமிழ்கூறும் நல்லூலகில் ஈழநாட்டு நல்லறிஞர்களே முன்னோடிகளாய்ப் பெரும்பங்கு கொண்டனர் என்பதனை 1945ஆம் ஆண்டு நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் பயின்று கொண்டிருக்கையில் பெரிதும் உணர்ந்தேன். உணர்ந்த அவ்வுணர்வுப் பெருக்கால் அவ்வமயம் அண்ணாமலையில் கல்வி கற்ற ஈழத்து மாணவர்களை ஒருமுகப்படுத்தி, சங்கம் அமைத்து, திரு. சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள். விபுலானந்தவடிகள், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் ஆகிய மூவரின் திருவுருவப் படத்தைத் துணைவேந்தர் துணைபுரியத் திறந்துவைத்தோம். இதனைத் தமிழ்ப் பேராசிரியராக இருந்த தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் அப்போது எழுதிய ஒரு கட்டுரையில் “தாமோதரம்பிள்ளையவர்களின் திருநாளைத் தமிழுலகம் கொண்டாடுகிறது. இத் திருநாளைப்பற்றிய எண்ணம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தே பயின்றுவரும் இலங்கை மாணவர் உள்ளத்தேயே அரும்பிவிட்டது எனவறிந்து எனக்கு ஓர் இறுமாப்புண்டு. இல்லை@ செம்மாப்பே உண்டு” என்று குறிப்பிட்டுளது ஈண்டு நினைக்கப் பாலதாகும்.

ஈழத் திருநாட்டிலும் அன்னார்களின் திருவுருவப் படத்தைத் திறந்துவைத்து எதிர்கால ஈழத்தமிழுலகை இனிதுற வைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்றம் பெற்றது. திரு. வி. கனகசபைப்பிள்ளை, திரு. த. கனசுந்தரம்பிள்ளை என்போர் நான் தொழில்புரியும் மகாஜனக்கல்லூரி மிளிரும் வலிகாமம் வடக்கைச் சோந்தவர்களாய் இருந்தமையால் கல்லூரியின் தமிழ்மன்றத்தின் சார்பில் இவர்களின் இனத்தவர்களைக் கண்டு உரையாடி அவ் எண்ணத்தை வெற்றியாக்கிக் கொண்டேன்.

முதற்கண் திருக்கோணமலை த. கனகசுந்திரம்பிள்ளை அவர்களின் படத்தைத் திறந்து வைப்பதற்குரிய வாய்ப்பைப் பிள்ளை அவர்களின் புத்திரர்களில் திரு. க. இராசசேகரன், டீ. யு அவர்களும், திரு. க. இராசமார்த்தாண்டன், டீ. யு. அவர்களும் மன்றத்தார்க்களித்தார்கள். இவர்கள் இதனால் மகன் தந்தைக்கு ஆற்றும் உதவியை மாண்பாய்ச் செய்துவிட்டார்கள். இதனோடு இவர்கள் அமையாது பிள்ளை அவர்கள் எழுதிய கடிதங்கள், கட்டுரைகள் முதலானவற்றைத் தொகுத்து ஒரு புத்தகவடிவில் வெளியிடுவதால் எதிர்காலத் தமிழுலகம் ஈழத்தமிழரின் தமிழ்ப்பலமையையும் தமிழ்த் தொண்டையும் நன்கு தெளிந்து கொள்வதாகும் என்பதையும் கூறிவிடுகின்றோம். இவர்களின் தொண்டுக்கு மகாஜனாவின் தமிழ் மன்றத்தார் நன்றி கூறுகின்றனர்.

இன்னும் பிள்ளை அவர்களின் திருவுருவப் படத்தைத் திறந்து வைக்க முன்வந்த இலங்கைப் பல்கலைக்கழகத்து யாழ். வளாகத் தலைவர் கலாநிதி திரு. க. கைலாசபதி அவர்களுக்கும், பிள்ளையின் வரலாற்றுச் சுருக்கத்தை வெளியிட்டு வைத்த மன்றக்காப்பாளரும், கல்லூரித் தலைவருமாகிய திரு. பொ. கனகசபாபதி அவர்களுக்கும், சிறப்புச் சொற்பொழிவாற்றிய யாழ்வளாக நூல்நிலைய இயக்குனர் திரு. ஆ. சிவநேசச்செல்வன் அவர்களுக்கும் தமிழ் மன்றத்தார் நன்றி கூறுகின்றனர்.

இங்ஙனம்
மகாஜனா தமிழ் மன்றச் சார்பில்
நா. சிவபாதசுந்தரனார்
(பொறுப்பாசிரியர்)

+++++++++++++++++++++++++

திருகோணமலை
த. கனகசுந்தரம்பிள்ளையவர்கள் சரித்திரச் சுருக்கம்

கனகசுந்தரம்பிள்ளையவர்கள் திருமூலநாயனாரால் சிவபூமியென்று கூறப்பெற்ற பண்டைச் செந்தமிழ்த் தேயமாகிய ஈழமண்டலத்திலே தேவாரம் பெற்ற சிவத்தலமாகிய திருகோணமலையிலே வேளாளர் குலத்திலே ருதிரோற்காரி ஆவணிமீ 24உ (கிறிஸ்தாப்தம் 1863) கல்வி யறிவொழுக்கங்களிற் சிறந்த தம்பிமுத்துப்பிள்ளை என்பாருக்கு அருந்தவப் புதல்வராய்ப் பிறந்தார்கள். சில காலம் சிற்றூர் உயர்தர பாடசாலையிற் பிரதமாசிரியராகவும் சைதாப்பேட்டை ஆசிரிய கல்லூரியில் ஆங்கில போதகாசிரியராகவும் இருந்து தமிழ்ப் புலமையிலும் சிறந்து, தத்தை விடு தூது, மோகனாங்கி முதலிய அரிய நூல்களியற்றி உலகிற் குபகரித்தவராகிய சிவபதமடைந்த ஸ்ரீமாந் த. சரவணமுத்துப்பிள்ளை, பீ, ஏ, என்பார் இவர்களுக்குச் சகோதரராவர். கனகசுந்தரம்பிள்ளையவர்கள் பிள்ளைமையில் திருகோணமலையிலிருந்த அறிஞர்களாகிய ஸ்ரீ கதிரைவேற்பிள்ளை, ஸ்ரீ கணேச பண்டிதர் என்பாரிடம் தமிழிலக்கிய இலக்கணங்களும் ஆங்கிலமும் கற்றுணர்ந்து கல்வியிற் பேரவாவும், நுண்மதியுமுடையராய்ப் பதினான்கு வயதளவில் திருவாதவூரர் புராணம். மறைசையந்தாதி முதலிய நூல்களுக்குப் பொருள் கூறும் ஆற்றலுடையவர்களா யிருந்தார்கள். 1880ஆம் ஆண்டில் சென்னை மாநகர் சென்று முதலில் செங்கல்வராய நாய்க்கர் பாடசாலையில் கற்று, மத்திய பாடசாலைப் பரீட்சையிற் சித்தியெய்தினார்கள். பின் பச்சையப்பன் கல்லூரியில் எப். ஏ. வகுப்பிலும் பிரசிடென்சிக் கல்லூரியில் பீ. ஏ. வகுப்பிலுஞ் சித்தியெய்தியமையோடு, பீ. ஏ. வகுப்பில் தத்துவ சாஸ்திரத்திலும் தமிழிலும் விசேஷ சித்தியடைந்தமை காரணமாக மிகச் சிறந்த பரிசுகளும் பெற்றார்கள். கல்லூரிப் பிரதமாசிரியர்களும். மற்றைய ஆசிரியர்களும். அறிவொழுக்கங் காரணமாக இவர்களிடத்து மிக்க பிரீதி யுடையவர்களாக இருந்தார்கள். அதன்பின் பிள்ளையவர்கள் அரசாட்சியாரது வித்தியாபிவிருத்தி நிலையத்தில் உத்தியோகம் பெற்று அதனை மிக்க திறமையோடு முறை வழுவாது நடாத்தி வந்தார்கள். சிலகாலஞ் சென்றபின் இராசாங்க லேகநிலையத்தில் உத்தியோகம் மாற்றம்பெற்று அந் நிலையத்திற்றானே வித்தியாபிவிருத்தி நிலைய சம்பந்தமான காரியங்களுக்கு அத்தியட்சகர்களுமாயினார்கள். யாழ்ப்பாணத்துத் தெல்லியம்பதி வாசரும், கிராமக் கோட்;டு நீதிபதியுமாகிய ஸ்ரீமாந் சிதம்பரநாத முதலியார் புதல்வியாகிய சுந்தரம் என்னும் பெண்மணியை விவாகஞ் செய்து அறநெறி வழாது இல்லறமோம்பித் திருவாளர்களாகிய இராசராசன், பீ. ஏ. இராசசேகரன், பீ. ஏ. (ஹானர்ஸ்) இராசேசுவரன், பீ. ஏ. இராசமார்த்தாண்டன், பீ. ஏ என்னும் புதல்வர்களையும், செல்வநாயகி என்னும் புதல்வியையும் பெற்று மகிழ்வுற்றார்கள். இப் புதல்வர்கள் தங்கள் அரும் பெறற் றந்தையார்க்குளவாகிய சீலமெல்லாம் இனிதமையப்பெற்று மன்னுயிர்க்கினியராய், “தக்கார் தகவில ரென்ப தவரவ ரெச்சத்தாற் காணப்படும்” என்னும் பொய்யா மொழிக்கு இலக்கியம் புதுக்குவது காணும் அறிஞரெல்லாம் “நீவீர் பல சிறப்புக்களும் பெற்று இனிது வாழ்க” என்று இவர்களுக்கு ஆசிகூறி இறைவனருளை வேண்டி நிற்பது கண்டு மகிழ்கின்றோம். இவர்கள் புதல்வியார் சென்னைப் பிரஸிடென்ஸித் தபாலாபீசுத் தலைவராயிருந்து தேகவியோக மடைந்த ஸ்ரீமாந் ராவ் பகதூர் க. வைத்திய லிங்கம்பிள்ளையவர்கள் சியேட்ட புத்திரராகிய ஸ்ரீ இரங்கநாதன் என்பாரை விவாகஞ்செய்து ஆங்கில முஞ் செந்தமிழும் கற்றுணர்ந்து அறிவொழுக்கங்களிற் சிறந்தவராய்ப் பல சிறப்புக்களோடும் வாழ்கின்றனர். பிள்ளையவர்களது மனைவியார் பல வருடங்களின் முன், தமது இருபத்தெட்டாவது வயதில் தேகவியோகமாயினர். அஃது பிள்ளையவர்களுக்கும், குழந்தைகளுக்கும் பெருந்துயர் தருவதாயிற்று. பிள்ளையவர்கள் தங்கள் பிள்ளைகளை அன்புடன் வளர்த்துக் கல்வி யறிவொழுக்கங்களாற் சிறப்புறுவித்து அவையத்து முந்தியிருப்பச் செய்த திறன் வியக்கற்பாலது. கனகசுந்தரம்பிள்ளையவர்கள் தங்கள் உத்தியோகக் கடமைகள் ஒழிந்த மற்றைய காலங்களிலெல்லாம், பழந்தமிழ் நூல்களையும், வடமொழி நூல்களையும் ஆராய்தலேயே பெருங் கடனாகக் கொண்டு ஒழிவின்றி உழைத்து வந்தார்கள். சென்னையிலிருந்த வித்துவான் இராசகோபாலப்பிள்ளையார் அவர்கள் உதவிகொண்டு கம்பராமாயணத்திற் சில பாகங்களையும் வேறு சில நூல்களையும் மிக நுண்ணியதாக ஆராய்ந்து கொண்டார்கள். ஏனைய நூல்களையெல்லாம் தாங்களாகவே இடைவிடாது கற்றுணர்ந்தார்கள். தொல்காப்பியத்;தையும் சங்ககாலத்து இலக்கியங்களையும் ஏட்டுப் பிரதிகள் பலவற்றோடு ஒப்புநோக்கி நுண்ணியதாக ஆராய்ந்து கொண்டார்கள். இந் நூல்களிலுள்ள உண்மைப் பாடங்களும் நுண்பொருளும் கண்டறிதலில் தமிழ்நாட்டில் ஒப்புயர்வின்றி விளங்கினார்கள். இவர்களாற் பிள்ளைமையிலும் பிற்காலத்தும் பாடப்பட்ட சில செய்யுட்கள் அவ்வவ் காலங்களில் வெளியிடப்பட்டுள்ளன. அவை பண்டைச் சான்றோர் செய்யுட்கள் போல ஒழுகிய ஓசையும் விழுமிய பொருளும் கொண்டுள்ளன. பிள்ளையவர்கள் தாங்கள் அரிதிற் கற்றுணர்ந்த தமிழ்க் கல்வியைப் பிறர்க்கும் பயன்படச் செய்வான் கருதிச் சிறிதும் சிரமம் பாராதும் கைம்மாறு கருதாதும் பிறரியற்றிய நூலுரைகளுக்கு இன்றியமையாத் துணைபுரிந்தும், அவற்றைப் பரிசோதித்துத் திருத்திக் கொடுத்தும், பண்டிதர் பலர்க்கு நூலுரைகளில் நேர்ந்த ஐயங்களை நேராகவும் கடிதவாயிலாகவும் தெளிவித்தும் பேருதவி புரிந்து வந்தமையோடு ஆங்கிலத்திலும் பீ. ஏ. பரீட்சைக்காகக் கற்ற பலர்க்குப் பலநூல்களிலும் நேர்ந்த ஐயங்களைத் தெளிவித்தும் உதவி புரிந்து வந்தார்கள். ஆறுமுகநாவலரவர்கள் செந்தமிழ் வளர்ச்சி கருதிவப் பரோபகாரமாகத் தாபித்த வித்தியாநுபாலன யந்திரசாலையிற் பிரகடனமாகும் புத்தகங்களிலுள்ள தூலமுத்திரித வழுக்களையும் பிறவற்றையும் நெடுங்காலமாகத் திருத்தஞ் செய்து உபகரித்து வந்தார்கள். அம்மட்டோ! தமிழ் நாட்டில் இவர்கள் காலத்திருந்த புலவர்களுள் கல்வி விஷயத்தில் இவர்களது இன்றியமையாப் பேருதவியைப் பெறாதவர்கள் இல்லையெனக் கூறினும் அஃது ஒரு சிறிதும் புனைந்துரையாகாது. “கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டென்னாற்றுங் கொல்லோவுலகு” என்பது பொய்யாமொழியன்றோ! சிவபதமடைந்த வித்துவச் சிகாமணிகளாகிய சி. வை. தாமோதரம்பிள்ளை, திருவனந்தச் சுந்தரம்பிள்ளை, பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் முதலிய பலர் தாம் தாம் பதிப்பித்தனவும் இயற்றி வெளியிட்டனவுமாகியப் பல நூலுரைகட்கெல்லாம், பிள்ளையவர்களது பேருதவி இன்றியமையாததாயிற்று. நாராயணசாமி ஐயரவர்களது நற்றிணையுரையை அவர்களிறந்த பின்னும் பிள்ளையவர்களே பரிசோதித்து அச்சிடுவிக்க வேண்டியவர்களானார்கள். பண்டிதர் நா. கதிரைவேற்பிள்ளை முதலிய சிலர் இவர்களிடம் தொல்காப்பியத்தைக் கற்றுணர்ந்து கொண்டனர் என்பர். சென்னையிலும் பிறவிடங்களிலுமுள்ள இப்பொழுதைப் புலவருள்ளும் பல்லோர் இவர்களிடம் கல்வி விஷயமாக இன்றியமையா உதவிகளைப் பெற்றோரும், நூலுரைகளைக் கற்றறிந்தோருமாவர். மஹாமஹோபாத்தியாயர் ஸ்ரீமத் சாமிநாதையரவர்கள் தாங்கள் வெளியிட்ட நூலுரைகளுக்கு இடையிடையே பிள்ளையவர்களையும் உசாத்துணைவர்களாகக் கொண்டுள்ளார்கள். ஸ்ரீமத் அநவரத விநாயகம்பிள்ளையவர்கள், ஸ்ரீமத் நமச்சிவாய முதலியாரவர்கள், ஸ்ரீமத் வ. உ. சிதம்பரப் பிள்ளையவர்கள் என்பவர்களும் தாங்கள் தாங்கள் வெளியிட்ட நூலுரைகளுக்குப் பிள்ளையவர்களது இன்றியமையாப் பேருதவியைப் பெரிதும் பெற்றுள்ளார்கள். பிள்ளையவர்களது வடநூலுணர்ச்சி மாண்பையும் மொழிபெயர்க்கும் ஆற்றலையும், ஸ்ரீ பண்டித நடேச சாஸ்திரியார் அவர்களுக்குப் பின் இவர்களால் மொழிபெயர்த்துப் பிரகடனஞ் செய்யப்பட்ட வால்மீகி ராமாயணத்துக் கிஷ்கிந்த காண்டப் பாகமும் சுந்தரகாண்டமும் காட்டும். இலக்கிய இலக்கண நூலுணர்ச்சி வன்னையையும் ஆராய்ச்சித் திறனையும் பிள்ளையவர்களாலும் அவர்களது இன்றியமையாப் பேருதவி கொண்டு பிறராலும் வெளியிடப்பட்ட அரிய நூல்களும் “யாப்பிலக்கணம்”, “திருவள்ளுவர்”, “இராமாயணம்” முதலாக மாசிக சங்கிகைகளிலும் பிறபத்திரிகைகளிலும் பிள்ளையவர்களால் எழுதப்பட்ட அரிய விஷயங்களும் காட்டும். சமய நூலுணர்ச்சியை இவர்களாற் பரிசோதித்துத் தூல முத்திரித வழுக்களும் பிறவுமாக நுண்ணிதினாய்ந்து திருத்தப்பட்ட சிவஞானபாடியம், திருமந்திரம் முதலிய நூல்கள் காட்டும்.

பிள்ளையவர்கள் நெடுங்காலமாகச் சென்னை சர்வகலாசாலைப் பரீட்சகருள் ஒருவராயிருந்தமையோடு நான்கு வருடகாலமாகப் பரீட்சக சங்கத்துக்குத் தலைவர்களாகவும் இருந்தார்கள். அன்றியும் மதுரைத் தமிழ்ச்சங்கத்துப் பரீட்சகருள் ஒருவராகவும் சென்னைக் கிறிஸ்தியன் கல்லூரியிலும் பச்சையப்பன் கல்லூரியிலும் தமிழி;த் தலைமைப் புலவர்களாகவும் இருந்தார்கள். சாண்டலர்துரை என்பாரால் அரசினராஞ்ஞைப்படி தொகுக்கபட்ட மிகப் பெரிய தமிழகராதிக்கும் சில காலம் உதவிப் பதிப்பாசிரியர்களாக இருந்தார்கள். இவ்வகராதி சென்னை அரசினராற் பெருந்தொகைப் பொருள் கொடுத்து நடாத்துவிக்கப்பட்டது. இதனை ஏற்றவாறு சிறப்புறச் செய்து முடித்தற்கு ஆங்கில நூலுணர்;ச்சியும், மிகப் பெரிய தமிழறிவும், சமஸ்கிருத நூலுணர்ச்சியும் ஒருங்கு கைவரப்பெற்ற பிள்ளையவர்களைப் போன்ற ஒருவர் தமிழ்நாடு முழுவதிலும் கிடைப்பதரிது என்பது ஆபால கோபாலப் பிரசித்தம், அங்ஙனமாகவும். தமிழணங்கும், அரசினரும் புரிந்த தவக்குறையே போலும்! பிள்ளையவர்கள் ஒருவருட காலத்துள் இவ் வேலையினின்று விலகிக் கொண்டார்கள். எவ்வேலையைக் கையேற்பினும் “செய்வன திருந்தச் செய்” என்றவாறு அதனைச் சிறப்புறச் செய்துமுடித்தலும், பொருள் வருவாயையும் பொய்ப் புகழையுமே கருதி முகமன் வார்த்தைகள் கூறி நடுவநிலைமை குன்றாமையும் நம் பிள்ளையவர்களுக்கு இயல்பாகும். “கேடும் பெருக்கமு மல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி” என்பது தமிழ்மறை. பல வருடகாலமாகப் பிள்ளையவர்கள் “கற்றாரைக் கற்றாரே காமுறுவர்” என்றவாறு வடமொழி தென்மொழிகளில் வல்ல கவிஞர் சிகாமணியாகிய சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் அவர்களுக்கு ஆப்த நண்பினர்களும், நல்விஷயத்தில் உசாத்துணைவர்களுமாகி அவர்களோடு சேர்ந்து நம்பியகப்பொருளுக்கு ஓர் அரிய உரையை எழுதி வெளியிட்டும் கம்பராமாயணத்தைப் பிழையறப் பரிசோதித்துக் கூடிய மட்டில் ஏட்டுப் பிரதிகள் பலவற்றோடு ஒப்புநோக்கிச் சுத்த பாடங்கண்டு முழுவதையும் அரும்பதவுரையோடு அச்சிட முயன்று முதலில் பால காண்டத்தை அவ்வாறு வெளியிட்டுமுள்ளார்கள். இவ்வரும்பதவுரை கம்ப சூத்திரத்து நுண்பொருள்களை நன்கு தெரித்துக் கற்றோர்க்கும் மற்றோர்க்கும் பெரும்பயன் தருவதாயமைந்துள்ளது. அயோத்தியா காண்டமும் அவ்வாறே பரிசோதித்துச் சுத்த பாடமாக்கப்பட்டும் அரும்பதவுரை பூர்த்தியாக முன்னே இவர்களிருவரும் ஒருவர் பின் ஒருவராகச் சென்றமையால், அது கடைபோக முடிந்து அச்சுவாகனமேற முடியாததாயிற்று. இந்நூல் முழுவதும் இவ்வாறே இப் புலவர் திலகர்களாற் பரிசோதித்து வெளியிடப்பெறாமை கம்ப நாடர் தவக்குறைவோ நம்மனோர் தவக்குறைவோ அறியகில்லேம். தமிழ் நாவலர் சரிதை என்னும் நூலும் ஈழமண்டலத் தேவாரமும் திருப்புகழும் என்னும் நூலும் வேறு சில நூல்களும் பிள்ளையவர்களால் குறிப்புரையோடு அச்சிடப்பட்டனவாகும். பிள்ளையவர்கள் தொல்காப்பியம் முழுவதையும் ஆராய்ந்து குறிப்புரை முதலியவற்றோடு அச்சிட நினைத்து ஏட்டுப் பிரதிகள் பலவற்றை வைத்து ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். தங்களறிவும் ஆராய்ச்சியும் மிகச் சிறியவென்பதையும், அவை கொண்டு நூலுரைகளைப் பிழைபட வியற்றி வெளியிடுதல் அநீதி என்பதையும் நோக்காது பொருள் வருவாயையும், பொய்ப் புகழையுமே கருதி அவற்றை வெளியிடுவது நம்மவருட் பெரும்பாலர் இயல்பு. தக்க ஆராய்ச்சியின்றி அவ்வாறு செய்தல் நம் பிள்ளையவர்கள் போன்ற அறிஞர்க்கு ஒரு போதும் கருத்தன்று. இதனால் பிள்ளையவர்கள் பெயர் பெரிய எழுத்திற் புத்தக முகத்துக் காணப்படாதொழியினும் அத்தகைய புகழ் விரும்பப்படா தொழியினும் இவர்கள் காலத்தில் இவர்கள் உதவி கொண்டு பிரகடனமாகிய அருந்தமிழ் நூல்கள் பல என்பதிற் சிறிதும் ஐயமில்லை. “இனித் தமிழுக்கு வரம்புமில்லை@ உரை கல்லுமில்லை” எனக் கூறப்பட்டதும் ஒரு சிறிதும் தவறாகாது. பிள்ளையவர்கள் அரசினர்பால் உபசாரச் சம்பளம் பெற்றிருந்த பிற்காலத்தில் தமிழிலக்கண விலக்கிய வரலாற்றை நன்கு ஆராய்;ந்து சர்வகலாசாலையிற் பலர்க்கும் பயன்படுமாறு பிரசங்கிக்க வேண்டுமென்று அக்கலாசாலை அதிகாரிகளோடு ஒழுங்கு செய்திருந்தார்கள். அதனால் எவ்வளவோ உண்மைகளும் தவறுகளும் வெளியாகுமென்று பலர் நம்பியிருந்தார்கள். இவர்கள் மரணம் காத்திராப்பிரகாரம் சடுதியில் நேர்ந்துவிட்டமையால் அவ்வெண்ணம் நிறைவேற முடியாததாயிற்று. நெருந லுளனெருவனின்றில்லை யென்னும் பெருமையுடைய இவ்வுலகியல் நோக்கித் திருவருளை நினைத்து ஒருவாற்றான் அமைவதேயன்றி இருகாற் பசுக்களாகிய நம்மவராற்றலால் ஆவது மொன்றுளதோ? தொல்காப்பிய முதலிய இலக்கணங்களை யெல்லாம் பல்காற் பயிலுமுகத்தால். இக்காலத்து, அவற்றை ஒருவாறு உணர்ந்திருப்பார் ஒருசில ருளராயினும், அவற்றை நுண்ணிதினாய்ந்துணர்ந்து பரோபகாரமே கருதிச் சிரமம் பாராட்டாது மாணவர்க்குரைத்து வந்தவர்கள். நம் பிள்ளையவர்களே யென்பது அவர்கள்பால் அந்நூல்களிற் பெரும்பாகத்தைக் கற்றுணர்ந்து கொண்ட அம்மாணவர்கள் நன்கு தெளிந்த உண்மையாகும். தமிழணங்கும் ஆதாரமற்றவளாயினாள். உலகத்தில் தமிழை வளர்க்கின்றோம் என்று கொடிகட்டிப் பிரசித்தம் செய்து புத்தகங்களைப் பிரகடனஞ் செய்வோரை உற்று நோக்கின் அவருட் பெரும்பாலார் தந்;நயமொன்றையே கருதிப் பெரும் பொருளீட்டித் தமக்கும் தம் பெண்டிர் பிள்ளைகட்கும் இம்மைச் சுகமொன்றையே தேடி வைத்துச் செம்மாப்புற்றொழிவாராகின்றனர். நம் பிள்ளையவர்களோ தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராய் விளங்கித் தம் பெயரையும் பிறவற்றையும் கருதாது, தமிழுக்காக உழைத்த பெருமாண்பும், அருமை பெருமையும் அவர்களோடு நன்கு பழகியோரே அறிய வல்லுநர். “தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்” எனவும் “முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே யழகுக் கழகு செய்வார்” எனவும் வரும் ஆன்றோர் வாக்குகளும் ஈண்டு நோக்கற்பாலன. பிள்ளையவர்களைப் போன்ற நற்குண நற்செய்கைகளிற் சிறந்த நல்லிசைப் புலவர்களை இத் தமிழுலகம் அடையும் காலம் எக்காலமோ அறிகில்லேம்.

நேரிசை வெண்பா

செந்தமிழ்நூன் முற்று முணர்சீரார் புகழ்க்கனக
சுந்தரவேள் வாழ்க்கை துறந்ததனாற் - செந்தமிழாம்
மாதார நொந்து வருந்தினளே பாவலரும்
ஆதார மற்றனரே யாம்.

தொல்காப் பியமுதலாந் தொன்னூல் விழுப்பொருளும்
பல்காப் பியமும் பலர்க்கருள - வல்லவனாஞ்
சொல்லார் திறற்கனக சுந்தரன்போ லிவ்வுலகில்
நல்லா ருளரோ நமக்கு.

புத்திரர்கள் செவ்விகண்டுன் புந்திநிலை நன்குணர்ந்தேன்
துத்தியஞ் சேர் நற்கனக சுந்தரனே - எத்திறத்துந்
தக்கார் தகவில ரென்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்.


நல்லோன் கனகசுந்தரன்

என்றும் எழிலுடன் எங்கள் தமிழன்னை
நின்று நிலவ நிறைதமிழில் - ஒன்றுதிருக்
கோணா மலைக்கனக சுந்தரன் மாண்பணியை
ஏணாகக் கொள்வோம் எடுத்து

கற்றுமிக வாய்ந்து கனகசுந்த ரன்திறனில்
உற்ற தமிழ்ச்செய்திப் பெற்றிதனை - நற்றமிழர்
பற்பலர் கொண்டனர்காண் பைந்தமிழ்ச் சீரினுக்கே
பொற்பாய் மிளிர்ந்த தமிழ்

ஏடுகளில் ஏறி எழிலாக வீற்றிருந்த
பீடுதமிழ்த் தெய்வத்தைப் புத்தகமாய் - நாடுகளில்
பல்லோர் பகர்ந்தேத்தப் பாங்காய்ப் பரிந்துழைத்தான்
நல்லோன் கனகசுந்த ரன்.

எழுதியதிலும் சொல்லியலும் ஏடுகளில் தேர்ந்து
வழுக்களைந்து வான்தமிழை வாரி - வழங்கியதால்
கற்றார்உள் ளத்தில் கனகசுந்தர ரன்நின்றான்
கொற்றத் தமிழனவன் காண்.

அன்னை தமிழுக்கே ஆய்ந்தழகு தான் செய்தான்
உன்னுந் திருக்கனக சுந்தரன் - முன்னாள்
இவர்போல் தமிழ்ப்பணி ஈழநன் னாட்டார்
தவமாய் தழுவல் தகும்.
புலவர் நா. சிவபாதசுந்தரனார்.


தி. தி. க அவர்கள் திறனாய்வில் சில துளிகள்

...... விருத்தங்களை கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரியப்பாக்களுக்கு இனமென்று கூறுவது முழுதும் தவறு. அன்றியும் இதுவிஷயத்தில் அகத்தியரைத் தொல்காப்பியரோடு சேர்த்து அவர்க்கு இது உடன்பாடென்றாவது@ உடன்பாடன்றென்றாவது சொல்வதும் தவறு. அகத்தியர் செய்த இலக்கணத்தினை நாமும் கண்டிலம். தொல்காப்பிய உரையாசிரியர்களும் கண்டிலர். அகத்தியர் செய்யுளிலக்கணம் கூறினாரோ என்பதும், கூறினாராயின் தொல்காப்பியர் கூறிய செய்யுளிலக்கணங்களெல்லாம் கூறினாரோ என்பது தெரியா. ஆகலான் இவ்விஷயத்தில் அகத்தியர் கருத்து இதுவென்று துணிதல் முற்றவியலாது.
- தமிழ் வரலாற்றின் ஆராய்ச்சி

பண்டைக்காலத்து நிகழ்ந்த ராஜகாரியத்தைக் கூறுவதே சரித்திரம் என்பர். சிலர் இது சரியன்று@ உண்மையாக நோக்குமிடத்துச் சரித்திரம் முற்காலத்தில் உலகத்து நிகழ்ந்த சமயாபிவிருத்தி, சனாபிவிருத்தி, தன விருத்தி, கல்வி விருத்தி, அரசியல் விருத்தி முதலிய சம்பவங்க ளெல்லாவற்றையும் கூறுவதாகும்.
- சரித்திரநூல் கற்பதனால் வருபயன்

பாயிரங் கூறினவர் நூலாசிரியர் பெயரை மொழிபெயர்த்துத் தமிழில் அருளப்பருங் கடற் பெயரருந் தவத்தோன்” என்று கூறினாராயின், நூலாசிரியர் பெயரை அமிதசாகர ரென்று எழுத வேண்டும். அமிதம் அளவில்லாதது@ சாகரம் கடல். ஏட்டில் அமிதசாகரரென்றிருந்ததைப் பின்னுள்ளோர் அமிர்தசாகரரென்றும் அமுதசாகரரென்றும் கொண்டிருக்கலாம்.
- யாப்பிலக்கணம்
---