கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  தவத்திரு ஆறுமுகநாவலர்  
 

சைவப்பெரியார் சு. சிவபாதசுந்தரனார் பீ.ஏ.

 

தவத்திரு ஆறுமுகநாவலர்

சைவப்பெரியார் சு. சிவபாதசுந்தரனார் பீ.ஏ.

தமிழ் ஆக்கம்: வை. ஏரம்பமூர்த்தி

------------------------------------


சிவமயம்

தவத்திரு ஆறுமுகநாவலர்

ஆங்கிலத்தில் எழுதியவர்:
சைவப்பெரியார் சு. சிவபாதசுந்தரனார் B.A.

தமிழில் மொழிபெயர்த்தவர்:
ஆசிரியர் வை. ஏரம்பமூர்த்தி B.A.

சைவசித்தாந்த மன்றம், கனடா

--------------------------------------

மூலநூல்: ஆறுமுகநாவலர் (ஆங்கிலத்தில்)
ஆக்கம்: சைவப்பெரியார் சு. சிவபாதசுந்தரனார் பீ.ஏ.
தமிழ் மொழிபெயர்ப்பு: வை. ஏரம்பமூர்த்தி பீ.ஏ. (முன்னாள் ஆசிரியர், யாழ் இந்துக் கல்லூரி)
முதற்பதிப்பு: (ஆங்கிலத்தில்) 1950
முதற்பதிப்பு: (தமிழில்) 1992
மறுபதிப்பு: (தமிழில்) டிசம்பர் 1998
அச்சமைப்பும் பதிப்பும்: பாரதி பதிப்பகம்
வெளியீடு: சைவசித்தாந்த மன்றம், கனடா

Title: ARUMUKHA NAVALAR
Author: S. Sivapadasundaram B.A.
Translated into Tamil by: V. Erampamoorthy B.A., Emeritus Teacher, Jaffna Hindu College
First Edition in Tamil: 1992
Reprinted and Published in Tamil: December 1998
Published by: Saiva Siddhantha Manram, Canada
1008 - 50 Elm Drive East
Mississauga, Ontario L5A 3X2
Type Setting and Printing: Bharathy Pathippagam

----------------------------------------


சிவ சிவ
பதிப்புரை

தவத்திரு ஆறுமுகநாவலர் வாழ்க்கை வரலாற்றைச் சைவப் பெரியார் சு. சிவபாதசுந்தரனார் அவர்கள் 1950 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். அக்கைந்நூலை 33 ஆண்டுகளுக்குப் பின் 1983 இல் யாழ் இந்துக் கல்லூரி ஆசிரியர் அமரர் வை. ஏரம்பமூர்த்தி அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து உதவினார். இலங்கை அஞ்சல் திணைக்களப் பெரும்பாக மேலதிகாரியாக இருந்த அமரர் கந்தப்பர் சண்முகம் அவர்களின் பிற் சந்ததியினர் அவர் அமரத்துவம் எய்திய 36 ஆவது ஆண்டினதும் அன்னாரின் பிறந்த நூற்றாண்டினதும் நிறைவும், தவத்திரு ஆறுமுகநாவலரின் குருபூசையுடன் வந்ததால், 1992 இல் இந்நூலை வெளியீடு செய்து நிறைவு கண்டனர்.

இக்கைநூலினை பெரியார் அமரர் க. சண்முகம் அவர்களின் மகளும் முன்னாள் யாழ் இந்துக்கல்லூரி அதிபர் ந. சபாரத்தினம் அவர்களின் பாரியாருமான திருமதி லீலாவதி சபாரத்தினம் அவர்கள் அன்புநெறியில் தொடராக வெளியிட அனுப்பி உதவினார். அதனை 1997 இல் நாவலர் குருபூசையுடன் ஆரம்பித்து அன்புநெறியில் தொடர் கட்டுரையாக வெளியிட்டு வந்தோம். அன்புநெறி இதழ் வெளிவரத் தொடங்கிய காலந்தொட்டு ஆக்கமும், ஊக்கமும், ஆதரவும் அளித்து வருபவர் திருமதி லீலா சபாரத்தினம் அவர்கள். அவரும் தம் புகழ்பூத்த கணவர், தந்தை போலத் தமிழ்ப்பற்றும், சைவசமயப் பற்றும் மிக்கவர். இந்நூலைக் கனடா சைவ சித்தாந்த மன்றம் புதிய பதிப்பாக வெளியிட அனுமதி அளித்தமைக்கு அவருக்குப் பணிவான நன்றியை அன்புடன் கூறுகிறேன்.

“தமிழ் சைவம் ஆகிய இரண்டும் என் இரு கண்கள்; அவ்விரண்டும் ஒளி குண்ராமல் இறுதிவரை காத்துப் பயன் கொள்வதே என் கடன்; அவை ஆழப் பணிபுரிவதே என் வாழ்வின் குறிக்கோள்” என வாழ்ந்தவர் தவத்திரு ஆறுமுகநாவலர் அவர்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் செந்தமிழும் சிவநெறியும் வளர்ந்து ஓங்குவதற்காக அவதாரம் செய்தவர் ஆறுமுக நாவலர். அவர் தமிழ் இலக்கிய இலக்கணச் சித்தர். சாத்திரங்கள் சிவாகமங்கள் கற்றவர். தமிழிலும், ஆங்கிலத்திலும் வடமொழியிலும் வல்லவர். சிவனடியை மறவாத சிந்தனையாளர். உரைநடை கைவந்த வல்லாளர்; நல்லாசிரியர்; நூலாசிரியர்; உரையாசிரியர்; பதிப்பாசிரியர்; சொல்லின் செல்வர்; தனக்கென இல்லறம் ஏற்காது நற்பணி புரிந்தவர்.

இந்நூலை எழுதிய சைவப்பெரியார் சு. சிவபாதசுந்தரம் அவர்கள் சைவப் பற்று மிக்க சைவாசார சீலராய் சைவத்தின் கொழுகொம்பாய் வாழ்ந்தவர். சைவசமயத்தைப் பற்றித் தர்க்கரீதியாகப் பேசியவர்; எழுதியவர்; சைவப்பெரியார் பிறந்திலரேல் சின்னஞ்சிறுவர்களுக்கான சைவபோதக் கதைகளும், சிவஞானக் கருத்து விளக்கங்களும், திருவருட்பயனுக்குத் தெளிவான சிற்றுரையும் வெளிவந்திருக்கமாட்டா. பள்ளித் தலமனைத்தும் கோயில்கள் அமைத்துக் காலை வழிபாட்டுடன் பாடம் ஆரம்பிக்கும் மரபு வழியும் மங்கியிருக்கும்.

இப்பதிப்பினைச் சிறந்தமுறையில் பதிப்பித்து உதவிய பாரதி பதிப்பகத்தினருக்கும் அன்பர் திரு. ந. ஜெகநாதன் அவர்களுக்கும் சைவசித்தாந்த மன்றம் சார்பில் உள்ளம் நிறைந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.

சைவப் பெருமக்கள் இந்நூலை அன்போடு பெற்று ஆதரவு நல்குவதோடு, தம் குழந்தைகளுக்கும் மற்றையோருக்கும் தவத்திரு ஆறுமுகநாவலரைப் பற்றி அறியச் செய்ய வேண்டுமென பணிவன்புடன் வேண்டி அமைகின்றேன்.

தவத்திரு ஆறுமுகநாவலர்திருத்தாள் போற்றி
ஓம் நமசிவாய

திருவள்ளுவரகம்
9-12-1998
தி. விசுவலிங்கம்
தலைவர்
சைவசித்தாந்த மன்றம், கனடா

--------------------------------------

வாழ்த்துரை

பத்தொன்பதாம் நூற்றாண்டில் செந்தமிழும் சிவநெறியும் வளர்ந்து ஓங்குவதற்காக அவதாரம் செய்தவர் நாவலர் பெருமான். இறைவனால் காலத்தினாற் செய்த நன்றியென்று இவருடைய அவதாரத்தைக் குறிப்பிடலாம். உலகிலேயே மிகச் சிறந்த மொழி தமிழ் என்பதும் தமிழர் கண்ட கடவுட் கொள்கை சைவம் என்பதும் வரலாறு காட்டும் உண்மை. ஆனால் காலப்போக்கில் இதன் வளர்ச்சியில் சில மாசுக்கள் புகுந்து விட்டன. இதனை அகற்றிச் செம்மை சேர்ப்பதற்காக அரும்பாடு பட்டவர் நாவலர் ஐயா. திருநீறு பூசியவன் இழித்துரைக்கப்பட்டதும் ஆங்கிலம் தெரியாதவன் அடிமை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டதும் அக்கால வழக்கமாக இருந்தன. இந்த நேரத்தில்தான் நவலர் ஐயா குதித்து எழுந்தார்; பிரசங்க மாரி பொழிந்தார்; சைவநூல்களை வெளியிட்டார்; தமிழ் வசனநடையை ஆரம்பித்தார்; சைவத் தமிழ்ப் பாடசாலைகளை நிறுவினார். இவற்றை எல்லாம் சிவபாதசுந்தரனார் ஆங்கிலத்தில் ஒரு சிறிய நூல் வடிவில் எமக்குத் தந்துள்ளார். நாவலர் பெருமானைப் பற்றி இளஞ் சந்ததியினரும் அறிந்து கொள்வதற்கு இந்நூல் பேருதவியாக அமைந்துள்ளது. ஆங்கிலத்தில் வெளிவந்த இந்த நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளமை மிகவும் பாராட்டுக்குரியது. பயனுள்ள ஒரு நற்பணி இதுவாகும். நற்றமிழ், சைவம் வல்ல நாவலர் பணியை நாம் தொடர்வோம்.

சிவத்தமிழ்ச்செல்வி துர்க்காதுரந்தரி
செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி

---------------------------------------

முகவுரை

ஆறுமுகநாவலர் என்ற பெயர் இன்று சைவ உலகெங்கும் போற்றிப் பேசப்படுகிறது. சைவசமய அனுட்டான முறைகளிலே மாறுபட்ட கருத்துள்ளவர்கள் தாமும் தத்தமது கொள்கைகளை நிலைநாட்டுவதாக எண்ணிக் கொண்டு பொருத்தமற்ற இடங்களிலும் நாவலரை மேற்கோள் காட்டுவதில் பெருமை அடைகின்றனர். ஆனால் அப்பெருமானுடைய மகோன்னதமான வாழ்க்கை பற்றி இவர்கள் எட்டுணையும் அறிந்திலர். ஆங்கில மொழியறிவு உள்ளவர்களுக்காக அவருடைய உயர்ந்த இலட்சிய வாழ்க்கை வரலாற்றைச் சின்னஞ்சிறிய இக்கைந்நூலில் வடித்துத் தந்திருக்கிறேன். மிக்க அடக்கத்துடனேயே நான் மேற்கொண்டுள்ள முயற்சி இது. நாவலருடைய வாழ்க்கைச் சரித்திரம் பற்றி வெளி வந்திருக்கும் நூல்களெல்லாம் சாதாரணமான வாசகர்களுக்கு மிகப்பெரிய நூல்களாயிருப்பதால் எனது மருகர் பண்டிதர் சம்பந்தன் இச்சிறு நூலுக்குத் தமிழ் வடிவம் ஒன்றை எழுதி வெளியிட எண்ணியிருக்கிறார்.

நாவலர் அவர்கள் தாமே எழுதிய விஷயங்களையும் நல்லூரைச் சேர்ந்தவரும் அவர்களுடைய பெறாமகனுமாகிய அமரர் த. கைலாசபிள்ளை எழுதிய நாவலர் சரித்திரத்தையும் அடிப்படையாகக் கொண்டது இக்கைந்நூல். இப்பணியில் ஈடுபடும் தகுதி எனக்கில்லை என்பதை நானறிவேன். எனினும் அற்ப சொற்பமாகவோ அங்கொன்றும் இங்கொன்றுமாகவோ நாவலர் பற்றி எழுதப்படும் இச்சிறுநூலுக்கும் ஒரு பயன் கிடைக்கும் என்றே நம்புகிறேன். அப்பெருமானாரது பெருமைக்கு ஏற்ற முறையிலமைந்த வாழ்க்கைச் சரிதம் ஒன்றை எழுதும் முயற்சியில் ஈடுபடும் ஆற்றல் உள்ள வரலாற்று ஆசிரியன் ஒருவனுக்கு இக்கைந்நூல் ஒரு தூண்டு கோலாக அமையக்கூடும் என்பது எனது நம்பிக்கை.

சு.சிவபாதசுந்தரம்
‘கந்தவனம்’
ஜூலை 19, 1950

---------------------------------------

மொழிபெயர்ப்பின்
முன்னுரை

இக்கைந்நூலின் ஆசிரியரான சைவப் பெரியார் சு. சிவபாதசுந்தரனார் தமது முன்னுரையில் குறிப்பிட்டிருந்தது போல இந்நூலுக்கு ஒரு தமிழ் வடிவம் யாண்டும் வெளிவந்ததாக நான் அறியவில்லை.

“நாவலர்” என்ற அடைமொழியில்லாமல் கூறினால் அது யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர் அவர்களையே குறிக்கும் என்பது கூட நம்மவரில் பலருக்குத் தெரியாது. அங்ஙனம் இருக்கும்போது இனிவரும் சந்ததியினரை பற்றியும் பேசவேண்டியதில்லை.

யாழ்ப்பாணத்துச் சைவன் ஒவ்வொருவனும் சிவத்துக்கு அடுத்தபடியாகவும் நாயன்மாருக்கு அடுத்தபடியாகவும் வைத்துப் போற்றவேண்டிய பெயர் நமது ஆறுமுகநாவலர் அவர்களுடைய பெயரேயன்றோ? சைவ உலகம் கொஞ்சம் கொஞ்சமாக இத்திருப்பெயரை மறந்து வருவதைக் கண்ட மன அலைச்சலில் பிறந்ததுதான் இந்த மொழி பெயர்ப்பு.

சைவசமயிகள் என்று சொல்லிக் கொள்ளும் பெற்றோர் ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகளுக்கு இச்சிறுநூலைப் பெற்றுக் கொடுத்துப் படிக்கச் செய்ய வேண்டும் அன்பது என் பணிவான வேண்டுகோளாகும்.

வை. ஏகாம்பரமூர்த்தி
‘குமாரவயல்’
‘ருதிரோற்காரி’ ஆனிமகம்
13-7-1983

-------------------------------------------------------

வெளியீட்டாசிரியர் உரை
திரு. க. சொக்கலிங்கம் M. A.

சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்பதும் அவர் அருளிச் செய்தனவே வேத சிவாகமங்கள் என்பதும் அவர்தம் வழிப்பட்ட மெய்யடியார்கள் அருளியவையே திருமுறைகளும் மெய்கண்ட சாத்திரங்களும் என்பதும் ஐயந்திரிபுகளுக்கு இடமற்ற உண்மைகளாய்ச் சைவசமயிகளால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. அத்தோடு முத்தியின்பம் பெறும் பொருட்டு சிவபெருமானை மனமொழி மெய்களால் வழிபடுவதும் மேற்குறித்த சைவசமய முதனூல்களைப் போற்றி அவற்றின் வழி ஒழுகுவதும் அவர்களின் இன்றியமையாக் கடனுமாகும் என்று சைவநெறிக் காவலரான ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் தமது தருமநெறிபட்ட வாழ்வினாலும் வாக்கினாலும் தொண்டினாலும் வழிகாட்டினார். சென்ற நூற்றாண்டிலே சைவசமயக் கலாச்சாரம் என்ற ஆலமரத்தை மேற்றிசைக் கலாச்சாரம் என்ற சூறாவளியானது சுழன்றடித்து வேரோடு சாய்க்க முற்பட்டபோது அந்நிலை ஏற்படாது தாமே தனிநின்று காத்தார்; சைவர் என்ற பெயரோடு சைவத்திற்கு மாறான சூழலில் வாழ்வதும் சைவசமய அடிப்படை உண்மைகளை உணராத அறியாமையில் மூழ்கியிருப்பதும் அதன் அழிவுக்கு வித்தாய் அமைந்து விடும் எனக்கருதி, சைவப்பிள்ளைகள் சைவ கலாச்சாரச் சூழலிலே சமயத்தையும் தமிழையும் நன்கு கற்கவும் உலகியல் நன்மைகளுக்காய் ஆங்கிலம் கற்கவும் பின்னைய ஒன்றிற்காகவே பிறசமயப் பாடசாலைகளுக்கு அவர்கள் செல்வதைத் தடுக்கவும் முற்பட்டுத் தாமே பாடசாலைகளை நிறுவினார்; பிறரைத் தூண்டி நிறுவுவித்தார்; சைவசமய நூல்களையும் தமிழ் நூல்களையும் எழுதி வெளியிட்டார்; பல திறத்தனவான செயல்களிலும் தொண்டுகளிலும் தமது வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவழித்தாலும் நேரத்தின் ஒரு பகுதியைக் கற்பித்தலுக்கும் ஒதுக்கி ஆளுமை நிறைந்த நல்லாசிரியத் தகைமையாற் சிறந்ததொரு மாணாக்க பரம்பரையை உருவாக்கினார். இவ்வகையில் அவர் தமது தேசிய சமய கலாச்சாரக் கல்விப் பாரம்பரியத்தின் முன்னோடியுமானார் என்று கொள்வதும் பொருந்துவதே.

ஈடு காணமுடியாததும் மகத்தானதுமான நாவலரின் வாழ்க்கை வரலாற்றினை அவரின் தமையனார் புதல்வரான ஸ்ரீமத் த. கைலாசபிள்ளை, வே. கனகரத்தின உபாத்தியாயர், சேற்றூர் அருணாசலக் கவிராயர் (செய்யுள் வடிவில்), மாயாண்டி பாரதி, யோகி சுத்தானந்த பாரதி (நாடக வடிவில்), தி. ச. வரதராசன் (வரதர்), சொக்கன், பண்டிதை பொன். பாக்கியம் முதலியோர் தமிழிலும் சைவப் பெரியார் சு. சிவபாதசுந்தரனார், வ. முத்துக்குமார சுவாமி ஆகியோர் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளனர். பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, சி. சீவரத்தினம், கலாநிதி ச. தனஞ்சயராசசிங்கம் முதலியோர் ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளனர்.

சு. சிவபாதசுந்தரனார் அவர்களுடைய “Arumukha Navalar” என்ற நூல் மூர்த்தியாற் சிறியதென்றாலும் கீர்த்தியால் மாணப் பெரியதாகும். சைவப்பெரியார் கல்வியிலும் சைவசமய ஆசாரங்களிலும் தலைசிறந்து விளங்கிய குடும்பம் ஒன்றின் கான்முளையாய்த் தோன்றியவர்; தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மும்மொழிகளிலும் துறைபோன அறிவாளர்; கணிதம், ஆங்கிலம், அளவையியல், உளவியல், கல்வியியல் என்ற மேற்றிசைக் கல்விப் புலங்களை ஐயந்திரிபறக் கற்றுணர்ந்து இந்நூற்றாண்டுத் தொடக்கத்திலேயே அளவையியல், உளவியல் நூல்களைத் தமிழிலே ஆக்கி அளித்தவர்; வேதசிவாகமங்கள், திருமுறைகள், மெய்கண்ட சாத்திரங்கள் யாவற்றையும் கற்றுணர்ந்து உணர்ந்தாங்குச் சாதனையிலும் போதனையிலும் கடைப்பிடித்த சான்றோர்; சைவசித்தாந்த தத்துவங்களை மாணாக்கர் தொடக்கம் பெரியோர் வரை அறிந்து தெளிவடையப் படிமுறைக் கிரமமாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் நூல்களை எழுதிய நுண்மாண் நுழைபுலத்தினர். இவை யாவிலும் மேலாக நாவலரின் தேசிய, சமய, கலாசார பாரம்பரியத்தினை இம்மண்ணிலே நிலை பெறுத்திய மேலோர் வரிசையிலே முதலிடம் வகிப்பவர். பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை நாவலரின் மாணவபரம்பரை இடையறாது படாது கட்டிக் காத்து வந்தது போலச் சைவப்பெரியார் ஆசிரியர், அதிபர் பரம்பரை ஒன்றினை வளர்த்தெடுத்தார். நாவலர் தமிழிலே வசனநடை கைவந்த வல்லாளர். சைவப்பெரியார் தமிழோடு ஆங்கிலத்திலும் வல்லாண்மை பெற்றிருந்தமைக்கு “Arumukha Navalar” நூலும் ஒரு சான்றாகும்.

இன்று அப்பெரியாரின் ஆங்கில நூல் நாவலர் குருபூசை தினத்தன்று தமிழ் மொழிபெயர்ப்பு வடிவில் வெளியாவது சைவத்தமிழ் மக்களுக்கு வாய்த்த பெரும்பேறு என்பதற்கு ஐயமில்லை. மூல நூலாசிரியனது கருத்தோட்டத்தோடு இணைந்து விடுவதால் மட்டும் ஒரு மொழிபெயர்ப்பு நூல் மேன்மை பெற்று விடுவதில்லை. மூல நூலாசிரியனது உள்ளமும் உணர்வுகளும் அவன் கருத்துக்களோடு இரண்டறக் கலந்து அத்துவிதமாகும் நிலையிலேதான், இது மூலமா மொழிபெயர்ப்பா என்று வியப்பார்ந்த ஐயத்தை எழுப்பும் நிலையிலேதான் மொழிபெயர்ப்பு நூல் மகோன்னதத்தை அடைகின்றது. இதற்கு மூலநூலாசிரியனை உள்ளும் புறமும் உணர்ந்திடத்தக்க உள்ளுணர்வும் அவன் சொல்லும் பொருளிலே பத்தி கலந்த நம்பிக்கையும் தெளிவும் முழுமையான விளக்கமும் மூலமொழி, மொழிபெயர்ப்பு மொழி ஆகிய இரண்டிலும் இணையான அறிவாற்றலும் மொழிபெயர்ப்பாளனுக்கு இன்றியமையாத தகுதிகளாய் வேண்டப்படுகின்றன.

இத்தகுதிகள் யாவும் “Arumukha Navalar” நூலைத் தமிழில் மொழிபெயர்த்த அமரர் வை. ஏரம்பமூர்த்தி (ஈழத்துறைவன்) அவர்களுக்குக் குறைவற அமைந்து கிடந்தன என்பதற்கு இன்று வெளியாகும் இத்தமிழ் ஆறுமுகநாவலர் நூல் சான்று பகரும் என உறுதியாக நம்புகின்றேன். அமரர் வை. ஏரம்பமூர்த்தி கலைமாணிப் பட்டதாரி; யாழ் இந்துக் கல்லூரியின் மூத்த ஆசிரியப் பரம்பரையினர்; சைவ ஆசாரசீலர்; கல்லூரியின் இந்து இளைஞர் மன்றப் புரவலராய் விளங்கிச் சைவ கலாசாரப் பாரம்பரியத்தை மாணவரிடையே கட்டியெழுப்பியவர்; இந்துக் கல்லூரியின் ஞானவைரவர் ஆலயத்தின் இன்றைய வடிவிற்கும் வனப்பிற்கும் தெய்வீகத்திற்கும் வித்திட்ட முதல்வர்களுள்ளே குறிப்பிடத்தக்கவர். கணிதம், தமிழ், ஆங்கிலம், சமயம் ஆகிய பாடங்களைத் தங்காலத்தில் திறம்படக் கற்பித்த நல்லாசிரியரான இவர், ஆங்கிலத்திலும் ஆற்றல் பெற்றிருந்ததோடு ஓவியம், நாடகம், நிழற்படக்கலை என்பவற்றிலும் திறமை படைத்திருந்தார். எனவே மூல நூலாசிரியரின் கருத்துக்கள் உணர்வோட்டங்களை நன்கு உள்வாங்கி அவருடைய நூலுக்கு எவ்வித குறைவுமேற்படாதவாறு மிகச்சிறப்பாக இம்மொழிபெயர்ப்பினை அவராலே செய்ய முடிந்ததில் வியப்பில்லை. எனினும் அவரின் ஆன்மார்த்தப் பணியானது அவர் காலத்திலேயே நூல்வடிவில் வெளிவராது போனது மிகக் கவலையளிக்கும் ஒன்றே. நாவலர் குருபூசையான இப்புனித நாளிலே (15-12-1992, கார்த்திகை மகம்) அவரது அபிலாட்சையை நிறைவேற்றும் வகையிலே நூலை வெளியிட்டு வைப்பதன் மூலம் வெளியீட்டாளர்கள் அவரின் புனித ஆன்மாவிற்குத் தமது நன்றிக் கடனைச் செலுத்தக் கிடைத்த திருவருள் குறித்து அமைதியும் ஆனந்தமும் அடைகிறர்கள்.

வெளியீட்டாளர்களுக்கு வேறொரு வகையிலும் இந்நாள் மிகப் புனிதமானதாகவும் நினைவில் வணக்கத்தோடு நிறுத்துவதற்குரியதாகவும் அமைந்தமை ஒரு தற்செயல் நிகழ்ச்சியேயாயினும் அது அவர்களைப் பொறுத்தவரை மகத்தானதே. அவர்களின் பிதாமகரும் அஞ்சலகங்களின் மேற்பார்வை அதிகாரியாய்ச் சேவை புரிந்தாலும் தமது ‘வினையாடல்’ காரணமாய் அனைத்திலங்கை அஞ்சலகங்களின் மேலதிகாரியாய் மிகுந்த மதிப்போடு கருதப்பட்டு மேலிடத்தாரின் கௌரவ ஆலோசகராய் விளங்கியவரும் வல்லண்மை, சான்றாண்மை, ஒப்புரவு முதலாம் அரிய பண்புகளுக்கு உறையுள்ளவருமான அமரர் கந்தப்பர் சண்முகம் அவர்களின் நூற்றாண்டு நிறைவும் இத்தினத்தோடு வந்தமைவதால் அன்னவரின் குடும்பத்தினர் தங்கள் நினைவு கூர்தலிலே நிறைவு காண்பதில் அர்த்தமும் நியாயமும் உள்ளன,

இந்நூல் வெளியாவதில் பேரார்வம் கொண்டிருந்த அமரர் ந. சபாரத்தினம் அவர்களை நினைவு கூர்வதோடு, நூலமைப்பினைச் செய்து தந்த நண்பர் பி. நடராசனுக்கும் திருவள்ளுவர் அச்சகத்தாருக்கும் வெளியீட்டாளர் சார்பில் நன்றி கூறுகிறேன்.

“மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்”

------------------------------------------------------


பொருளடக்கம்

இயல் பக்கம்

நூன்முகம் 13

1. இளமைப்பருவம் 16

2. சமயப்பணிகள் 20

3. இலக்கியப்பணி 29

4. இந்தியாவில் நாவலர் 32

5. இறுதி நாட்கள் 34

6. நாவலர் என்னும் பெருந்தகை 35

பின்னிணைப்பு 39

----------

நூன்முகம்

ஒழுக்க சீலனான தலைவனொருவன் இல்லாமல் சைவப்பயிர் வாடிக் கிடந்தது. தகுந்த ஒரு ஆசானின்றித் தமிழன்னை தவித்துக் கொண்டிருந்தாள். தியாகச் செம்மல் ஒருவனுக்காக யாழ்ப்பாண நாடே ஏங்கி நின்றது. இத்தகைய ஒரு சூழ்நிலையிலே தான் தவத்திரு ஆறுமுக நாவலர் அவர்கள் தோன்றினார்கள். இரண்டு நூற்றாண்டுகளாக நமது சைவ சமயம் அந்நிய ஆதிக்கத்தினால் ஓலைச் சுவடிகளுக்குள்ளே சிறை வைக்கப்பட்டு இருந்தன. தலைவனொருவனின்றி யாழ்ப்பாணம் இருளில் மூழ்கிக் கிடந்தது. நாவலர் தோன்றினார். இவற்றுக்கெல்லாம் விடிவு தேடித்தந்தார்.

ஐரோப்பாவில் மதவெறியே நடைமுறை வழக்கமாயிருந்த ஒரு காலத்திலேயே போர்த்துகேயர் யாழ்ப்பானத்தைக் கைப்பற்றினார்கள். இங்கிலாந்திலே இம்மதவெறியைத் தூண்டிவிட்ட மேரி என்ற மகாராணியை உதிர(க்காளி) மேரி என்றே வழங்கினார்கள். அங்கே ஒரு நூற்றாண்டு காலமாக இரத்தக்களரி கோர தாண்டவமாடியது. புரட்டஸ்தாந்த மதத்தைச் சேர்ந்தவர்களில் ஆயிரக்கணக்கானோர் பிரான்சு தேசத்தில் ஒரே நாளில் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் நடைபெற்ற தினத்தைப் புனித பார்த்தலோமியா தினம் என வழங்குகிறார்கள். நம் யாழ்ப்பாண நாட்டிலிருந்தோர் அனைவரும் சைவசமயிகளாய் இருத்தலைக் கண்ட போர்த்துக்கேயர் மனம் பொறாதவராய்த் தம் நாட்டிலே நடைமுறை வழக்கிலிருந்த மத வெறிக் கொள்கையை இங்கேயும் கடைப்பிடிக்கத் தொடங்கினர்.

அந்நியருடைய மதவெறிக்காற்றாத யாழ்ப்பாண மக்களிற் பலர் இந்தியாவுக்கு ஓடித்தப்பி அங்கே வேதாரண்யம், சிதம்பரம் முதலான இடங்களிற் குடியேறினார்கள். இங்ஙனம் ஓடித் தப்பியவர்களிலே ஞானப்பிரகாச முனிவரும் ஒருவராவார். அன்னாரது சிறந்த குடும்பத்திலே தோன்றியவரே நமது நாவலர் பெருமான். மற்றும் இங்கே தப்பியிருந்தவர்களிற் பலர் வெளிப்படைக்குக் கத்தோலிக்கர் போல வாழ்ந்து கொண்டு அகத்தே சைவராய் இருந்தார்கள். ஏனையவர்கள் உண்மைக் கத்தோலிக்கராகவே மாறினார்கள்.

இரண்டுமற்ற வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் தமது சமய ஒழுக்கங்களை முறையாகக் கடைப்பிடிக்க முடியாமல் இடர்ப்பட்டனர். கோவில் வழிபாடு, விரத உத்தியானங்கள், தீட்சை முதலான இன்றியமையாத சமய அனுட்டானங்களில் ஈடுபடமுடியாத காரணத்தினால் அவர்கள் வெளிப்பார்வைக்கு எங்ஙனம் கிறீஸ்தவர்களாயிருந்தனரோ அவ்வாறே அகத்தேயும் பெயரளவிலேயே சைவர்களாயிருந்தனர்.

போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்துக்குப் பிரியாவிடை சொல்லிவிட்டுப் போகவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டதும் மேற்கூறியவாறு கிறிஸ்தவத் தோற்றம் காட்டி வாழ்ந்தவர்கள் எல்லாம் தமது ரோமன் கத்தோலிக்கப் போர்வையை உதறிவிட்டுச் சைவசமயத்தை வெளிப்படையாகவே அனுட்டிக்கத் தொடங்கினார்கள். ஆயினும் நாம் மேலே கூறியாங்கு சைவநெறி முறைகளில் அப்பொழுது எஞ்சி இருந்தது மிகமிகச் சொற்பமேயாகும். போர்த்துக்கேயருக்குப் பின் வந்த ஒல்லாந்தரும் அவர்களைப்போலவே தமது மதக் கோட்பாடுகளை நம் மக்கள் மீது திணிப்பதில் ஆர்வமுள்ளவர்களாகவே இருந்தனர். எனினும் போர்த்துக்கேயரைப் போல் இவர்கள் வெளிப்படையாகக் கொடுமை செய்யவில்லை. மறைமுகமான கபட மார்க்கங்களை இவர்கள் கையாண்டு வந்தனர். யாழ்ப்பாணத்திலே புரட்டஸ்தாந்த மதம் தோன்றக் காரணமாய் இருந்தவர்களும் இவர்களேயாம்.

ஒல்லாந்தர் காலத்துக்குப் பின் பிரித்தானிய ஆட்சி ஆரம்பித்த போது யாழ்ப்பாணத்துச் சைவசமயிகளுக்கு நிம்மதி கிடைத்ததெனலாம். தங்கள் சமய ஒழுக்கங்களைக் கடைப்பிடித்து ஒழுகத் தமக்குச் சுதந்திரம் கிடைத்ததென்று உணரக்கூடியதாய் இருந்தது. வேதாரண்யத்தில் இருந்து சைவக்குருமார் இங்கு வந்து சிற்சில இடங்களிலே சைவசமயப் புனருத்தாரணம் செய்தனர். தங்களுடைய மதத்தைச் சார்ந்தவர்களுடைய நலன் கருதிப் பாதிரிமார் இங்கே வந்தார்கள் என்று கூறமுடியாது. இங்குள்ள சைவர்களையும் தங்கள்பால் திருப்ப வேண்டும் என்ற திட்டமிட்ட ஒரு நோக்கத்தோடு நமது சைவசமயத்துக்கு உலை வைக்கவே இவர்கள் இங்கு வந்தனர். தனித்தனிக் குருமாராக அன்றி இவர்கள் மிஷனரிக் கூட்டங்களாக வந்தார்கள். இலங்கையின் வேறு எந்தப் பகுதியும் யாழ்ப்பாணத்தைப் போல மிஷனரித் தாக்கத்துக்கு உள்ளாகவில்லை. இரண்டு நூற்றாண்டுக் காலமாக அந்நிய ஆதிக்கத்துக்கு உட்பட்டு நசிந்து போயுருந்த யாழ்ப்பாணத்துச் சைவ மக்கள் பாவம் தம் முதுகெலும்பையே இழந்து விட்டனர். உணவு, உடை, பணம், உத்தியோக, ஆங்கிலக் கல்வி என்பவற்றைக் கொடுத்து நமது மக்களையே இந்த மிஷ்னரிமார் அப்போஸ்தலர்கள் ஆக்கி வைத்தனர். இத்தகைய சுகங்களைக் கண்டு மயங்கிய நம்மவர் பலர் நமது சமயத்தைக் கைவிட்டுக் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினர். இவருள்ளும் பலரை அவர்கள் பாதிரிமாராக்கி உற்றார் உறவினரைக் கிறிஸ்தவராக்கப் பயன்படுத்தினார்கள். போர்த்துக்கேய ஒல்லாந்த காலங்களில் ஆதிக்கவெறிக்கு அஞ்சிக் கிறிஸ்தவரானோரிலும் பார்க்க இந்தக் கிறிஸ்தவர்கள் மிகவும் விசுவாசிகளாய் இருந்தனர். “அறிவு குறைந்த மூட நம்பிக்கை மிகுந்த, காட்டு மிராண்டித்தனமான ஒரு மக்கட் கூட்டத்தின் சமயம்தான் சைவசமயம், கிறிஸ்தமதமோ உலகிலே அறிவான்மிக்க சமுதாயம் கைக்கொள்ளும் மதமாகும்” என்று மிஷனரிமார் கூறிவந்தனர். எனினும் பிறவியிலேயே சைவராய்ப் பிறந்த சிலர் தமது சமயக் கோட்பாடுகளள முற்றாகக் கைவிடாமலே வாழ்ந்து வந்தனர். தமது சமயத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த ஏனைய சைவ மக்கள் இந்த மிசனரித் தாக்கத்தை எதிர்க்க எத்தகைய முயற்சியும் மேற்கொள்ள முடியாத அளவுக்கு அசர்த்தர்களாயிருந்தனர். இவ்வாறு நம் சைவசமயம் தாழ்வுற்று வலிமை குன்றித் தத்தளித்துக் கொண்டிருந்தது.

இருள் சூழ்ந்த இக்காலத்திலேதான் நமது அவதார புருடர் தோன்றினார். சைவசமத்துக்குப் புத்துணர்வு ஊட்டினார். அடங்கிக் கிடந்த ஆற்றல்களை வெளிக்கொணர்ந்தார். தற்காப்புகேயன்றிப் புறச்சமய வாதிகளை எதிர்க்கவும் வேண்டிய சக்தியைத் திரட்டினார்.

இனித் தமிழ்மொழி அந்நிய ஆட்சிலேதான் பாதிக்கப்பட்ட தென்று கூறிவிட முடியாது. சிறந்த கல்விமான்கள் பலர் அக்காலத்தில் இருந்தனர். ஆயினும் தமிழ்மொழியின் அபிவிருத்திக்கு இரண்டு வகையான வசதிக்குறைவுகள் இருந்தன. தமிழைப் பாதுகாப்பவர்கள் என்றிருந்த ஒரு சாராரிடையே விரும்பத்தகாத பொறாமைக் குணம் ஒன்றிருந்தது. இதனை அவ்வளவுதூரம் பாரதூரமான வசதிக் குறைவென்று கூறமுடியாது. தாம் கண்டறிந்த உண்மைகளை மற்றவர்களுக்கும் சொல்வதற்கு இவ்வறிஞர்கள் முன்வரவில்லல. பண்டித வர்க்கத்தினருக்கு ஏற்ற விடயங்களையே அவர்கள் கற்பித்தார்கள். எனவே தம் முயற்சியின் பயனாகக் கண்டறிந்தவை எல்லாம் அவைகளுடனேயே மறைந்தும் போயின. மற்றும் தமிழ்நூல்கள் எவையுமே அச்சில் இல்லாதது, தமிழ் மாணவனுக்குப் பெரிதும் வசதிக் குறைவாகவே இருந்தது. தான் படிக்க விரும்பிய ஒவ்வொரு நூலையும் அவன் பனை ஓலைச் சுவடிகளிலே எழுதியே படிக்க வேண்டி இருந்தது. இந்நிலையைக் கண்ட நாவலர் தனக்கெனச் சொந்தமான அச்சகமொன்றை நிறுவித் தமிழ் நூல்களில் மிகமுக்கியமானவற்றை அச்சிட்டு உதவினார். தாமே ஓர் ஆசிரியராகி எழுத்தாலும் பேச்சாலும் நாடெங்கும் அறிவுச்சுடர் கொளுத்திக் கல்வித் துறையில் இருந்துவந்த ஏகபோக உரிமையை உடைத்தெறிந்தார். சைவ உலகிலே முதலாவது பிரசாரகராகக் கருதப்பட்டவர். பிரசங்கம் என்ற வார்த்தையைத் தமிழுலகுக்கு அறிமுகம் செய்து வைத்தவரும் இவரே.


1. இளமைப் பருவம்

நல்லுரிலே கார்காத்த வேளாளர் குலத்திலே தமிழ்ப் புலமை மிக்கதொரு குடும்பத்தில் 1822 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி நாவலர் பிறந்தார். இக்குடும்பத்தில் அறிவான்மிக்க பெரியவராய் விளங்கியவர் ஞானப்பிரகாச முனிவர் என்பவர். இவர் ஆகம சாத்திர விற்பன்னர். வடமொழியில் எட்டு நூல்களை எழுதியுள்ளார். சிவஞானசித்தியாருக்குத் தமிழிலே பேருரை ஒன்று எழுதியுள்ளார். மற்றும் நாவலருடைய பூட்டனாராகிய இலங்கைக் காவல முதலியார், பாட்டனாராகிய பரமானந்தர், தகப்பனாராகிய கந்தர் ஆகிய இவர்கள் எல்லாம் அரசாங்க உத்தியோகங்களை வகித்தவர்கள். அத்துடன் தமிழிலும் புலமை மிக்கவர்களாக விளங்கினர். நாவலருடைய தந்தையாராகிய கந்தர் நாடக ஆசிரியராகவும், வைத்தியராகவும் தமிழ் வைத்திய நூல்கள் பலவற்றின் ஆசிரியராகவும் விளங்கினார். நாவலருக்குத் தமையன்மார் நால்வர் இருந்தனர். இவர்கள் எல்லோருமே அரசாங்க உத்தியோகம் வகித்தவர்கள் ஆவர். நாவலருடன் கூடப் பிறந்த சகோதரிமார் மூவர் இருந்தனர். வித்துவ சிரோமணி பொன்னம்மல பிள்ளையின் தாயார் இவர்களுள் ஒருவர்.

நாவலர் தமது ஆரம்பக் கல்வியைச் சுப்பிரமணியபிள்ளை என்பவர் நடத்திய சிறிய பாடசாலையிலே தான் கற்றார். அவரிடம் அபரிதமான விவேகம் இருந்ததென்பது அவருடைய ஒன்பதாம் வயது வரை அவர்தம் ஆசிரியருக்கே தெரியாதிருந்தது. ஒன்பதாம் வயதிலே நாவலருடைய தந்தையார் காலமானபோது அவரால் எழுதப்பட்ட தமிழ் நாடகமொன்று முற்றுப் பெறாத நிலையில் இருந்தது. இதனை நாவலர் அவ்விளமைப் பருவத்திலேயே பூர்த்தி பண்ணினார். இந்த அற்புத ஆற்றலைக் கண்ட நாவலருடைய அண்ணன்மார் அதிசயித்து அவரைச் சரவணமுத்துப் புலவரிடத்திலே உயர்கல்வி பயிலச் செய்தனர். அதன் பிறகு அவருடைய குருவாகிய சேனாதிராய முதலியாரிடம் நாவலர் கல்வி பயின்றார்.

ஏனைய மாணவர்களுக்குப் பாடம் சொல்வது போலவே நாவலருக்கும் பாடங்கள் போதிக்கப்பட்டு வந்தன. ஆனால் அவருடைய கல்விப்பசிக்கு இப்போதனைகள் சிறிதளவிலேனும் போதியதாயிருக்கவில்லை என்பதை ஆசிரியர்கள் வெகுவிரைவில் உணர்ந்து கொண்டார்கள். அதனால் ஏனையோருக்கு ஒரு மாதத்துக்கு உரிய பாடங்களை நாவலருக்கு ஒரு நாள் பாடம் என்ற அளவில் தினமும் அளித்து வந்தார்கள். வைகறையில் நான்கு மணிக்கே நாவலர் துயில் எழுந்து விடுவார். காலைக் கடன்களையும் சமய அனுட்டானங்களையும் முடித்துக் கொண்டு அவர் படிக்கத் தொடங்கி விடுவார். உணவு நேரம் தவிர்ந்த ஏனைய பொழுது எல்லாம் நாவலருக்குப் படிப்பிலேயே கழியும். நாவலருடைய உடம்பு மிகவும் நொய்த உடம்பு. விளையாட்டுக்களில் அவர் ஈடுபட்டதே இல்லை. அவருடைய தலை மட்டும் அளவுக்கு அதிகமாகப் பெருத்து இருந்தது. தமது பன்னிரண்டாவது வயதிலேயே தமிழ்க் கல்வியை முடித்துக் மொண்டார். அதன் பின்பு ஆங்கிலக் கல்விக்காக யாழ்ப்பாணத்தில் இருந்த மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலைக்கு அவரை அனுப்பினார்கள். ஆங்கில மொழி அறிவையும் அவர் மிக விரைவிலேயே பெற்றுக் கொண்டார். அதனால் அப்பாடசாலையிலேயே முதல்வராய் இருந்த சங்கைக்குரிய பீட்டர் பர்சிவல் என்பவர் அவரைக் கீழ் வகுப்புகளில் ஆங்கிலமும் மேல் வகுப்புகளில் தமிழும் கற்பிக்குமாறு கேட்டுக் கொண்டார். எஞ்சிய நேரங்களில் நாவலர் வடமொழியையும் சமயநூல்களையும் தாமே கற்று வரலாயினார்.

இங்ஙனமாக அவருடைய பத்தொன்பதாம் வயதிலே விவிலிய நூலை மொழிபெயர்க்கும் பணியையும் நாவலரிடம் ஒப்படைத்தார்கள். தமது சமய அநுட்டானங்களைச் செய்வதிலும் சைவசமய பிரசார வேலைகளிலும் ஏனைய மதங்களைக் கண்டித்துப் பேசுவதிலும் தனக்குச் சுதந்திரம் அளிக்கப்படவேண்டும் என்ற நிபந்தனையுடன் அந்த மொழிபெயர்ப்பு வேலையை நாவலர் ஒப்புக் கொண்டார். நாவலரையன்றி வேறெவரும் இப்பணியைத் திறம்படச் செய்யமாட்டார்கள் என்பதை அறிந்த சங்கைக்குரிய அப்பெரியவரும் நாவலருடைய நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டார். அத்துடன் தமிழ் இலக்கிய இலக்கணங்களைத் தாமும் கற்பதற்கு நாவலரையே ஆசானாக்கிக் கொண்டார். நாவலரிடம் கல்வி பயின்று பல நன்மைகளைப் பெற்றுக் கொண்ட பாதிரியார் நாவலரைத் தமது குரு என்றே குறிப்பிட்டு வந்தார்.

பைபிள் மொழி பெயர்ப்பிலே முதனூலின் உண்மைச் சொரூபத்தையும் அதன் தத்துவக் கோட்பாடுகளையும் மொழிபெயர்ப்பிலும் பிரதிபலிக்கச் செய்யவேண்டுமென்று நாவலர் அந்நூலுக்குரிய வியாக்கியானங்களையும் அதனோடு தொடர்புடைய ஏனைய நூல்களையும் படிக்க வேண்டியிருந்தது. இம்மொழிபெயர்ப்பு வேலை முடிந்ததும் பர்சிவல் பாதிரியார் நாவலரை அழைத்துக் கொண்டு சென்னைக்குச் சென்றார். அங்கேயும் பண்டிதர்கள் குழுவொன்று பைபிளை மொழிபெயர்த்து வைத்திருந்தது. எனவே இம்மொழிபெயர்ப்புகள் இரண்டும் ஒப்பு நோக்கப்பட்டன. அப்பொழுது பல இடங்களிலே கருத்து வேறுபாடுகள் காணப்பட்டன. எனவே இவ்விரண்டு மொழிபெயர்ப்புகளுள்ளும் சிறந்தது எது என்பதைத் தேர்ந்தெடுக்குமாறு சென்னையிலிருந்த அறிஞர் ஒருவரிடம் அவை ஒப்படைக்கப்பட்டன. யாழ்ப்பாணத்து மொழிபெயர்ப்பே சிறந்தது என அவ்வறிஞர் தேர்ந்தெடுத்ததோடு அமையாது மொழிபெயர்த்தவருடைய புலமையையும் சிலாகித்துப் பாராட்டினார். மிஷனும் நாவலருடைய மொழிபெயர்ப்பையே ஏற்றுப் பிரசுரம் செய்தது.

இந்த மொழிபெயர்ப்பு வேலையில் ஈடுபட்டதனால் நாவலர் கிறிஸ்தவமதக் கோட்பாடுகளையும் நன்கு தெரிந்து கொண்டார். பின்னால் நமது சமயப் பிரசாரகராக அவர் ஆற்றிய பணிக்கு இது பெரிதும் பயனளித்தது.

மொழி பெயர்ப்பு வேலையில் ஈடுபட்டிருந்த போது பாதிரிமார் தமது சமயத்தைப் பரப்புவதற்குக் கையாளும் முறைகளை எல்லாம் நன்கு தெரிந்து வைத்துக் கொண்டார். சைவசமயிகள் தமது சமய அநுட்டானங்களில் கொண்டிருந்த அசிரத்தை காரணமாகவும் நமது சமயம் நலிவடைந்து வந்துள்ளதென்பதை நாவலர் அறிந்து கொண்டார். எனவே தமிழிலிருந்த சைவசித்தாந்த நூல்களையும் தேவார திருவாசகங்களையும் அவர் விரைவிலே கற்றுப் பாண்டித்தியம் அடைந்தார். அத்துடன் வடமொழி இலக்கிய இலக்கணங்களையும் கற்றுக் கொண்டார். பின்னர் சைவசமயத்திலே வேதசிரசுகள் எனப் போற்றப்பட்ட சைவ ஆகமங்களையும் கற்றுணர்ந்தார். அக்காலத்திலே கிடைக்கக்கூடியனவாயிருந்த ஒருசில ஆகமங்களை மாத்திரமே கற்றுக் கொண்டு திருப்தியடைய வேண்டியிருந்தது. உபநிடதங்கள், புராணங்கள் என்பவற்றையும் கற்றுத் தேர்ந்தார். இன்னும் உபாகமங்கள் பத்ததிகளைக்கூட அவர் படிக்கத் தவறவில்லை. அருணாசலக் கவிராயர் எழுதிய “நாவலர் வாழ்க்கை” என்ற நூலின் முன்னுரையிலே நாவலரால் எழுதப்பட்ட நூல்களிலே மேற்கோளாகக் காட்டப் பட்டிருக்கும் நூல்கள் எண்பதுக்கும் மேலிருக்கும் என்பது பண்டிதர் சி. கணபதிப்பிள்ளை அட்டவணை ஒன்றைத் தந்துள்ளார்.

இவ்வாறாக நாவலர் தமிழ் இலக்கிய இலக்கணங்களிலும் சைவசமயத்தின் கிரியா காண்டம், ஞான காண்டம் என்பவற்றிலும் சமக்கிருதத்திலும் பெரும் பாண்டித்தியம் பெற்றதோடு ஆங்கிலத்திலும் போதிய ஆற்றல் பெற்றிருந்தார். நுண்மாணுழைபுலமிக்க சிந்தனையாளர். அவர் கவித்துவம் மிக்கவர்; சிறந்த எழுத்தாளர். கடல்மடை திறந்தாலொப்பச் சொற்பஞ்சமின்றி வாக்குமழை பொழியும் அற்புத ஆற்றல் பெற்றவர். காரணகாரியங்களை எடுத்து நிறுவி வாதிடுவதில் வல்லவர். இவற்றையெல்லாம் நோக்கும்போது தளர்வறியா ஒரு ஊக்கமுள்ள ஓர் இயற்கை விவேகி என்றே நாவலரைக் கூறலாம். யாழ்ப்பாணத்திலும் தென் இந்தியாவிலும் இவரைப்போல பலர் விவேகிகளாக இருந்திருக்கலாம். ஆனால் இவர்கள் ஆறுமுகநாவலர்கள் ஆகவில்லை. அறிவாற்றல்களோடு கூட நாவலருடைய உள்ளத்திலே இறையன்பும் சாஹித்தியநெறியிலே பற்றுதலும் கூடவே வளர்ந்து வந்தன. அறிவு வளர்ச்சி, சாதனை இரண்டிலும் ஒரு நெருங்கிய தொடர்பை நாவலருடைய வாழ்க்கையிலே காணக்கூடியதாய் இருந்தது. நன்மை எதுவோ அதனை நாவலர் சாதனையிலும் செய்து வந்தார். கடவுள்மீது கொண்ட ஆராக்காதலால் அவருடைய ஆத்மசக்தி ஓங்கி வளர்ந்தது. சத்தியத்தின் மீது அவர் கொண்டிருந்த பற்று அதைப் பரப்ப வேண்டும் என்ற தணியாத ஆவலையும் அவர் உள்ளத்திலே தூண்டி விட்டது. நாவலரை நாவலர் பெருமானாக்கிய பண்புகள் இவையேயாகும்.

2. சமயப்பணிகள்

நமது நாட்டின் அவலநிலை பற்றிய சிந்தனைகளே நாவலருடைய உள்ளத்தில் நிரம்பியிருந்தன. அவருக்குத் திருமணம் செய்து வைத்துவிட வேண்டுமென்று அவருடைய தமையன்மார் மேற்கொண்ட முயற்சிகள் யாவும் வியர்த்தமாயின. அவருடைய உள்ளத்தில் அப்படி ஒரு நினைவே இருந்ததில்லை. வாழ்நாள் முழுவதும் பிரம்மசாரியாகவே இருப்பதென்று அவர் தீர்மானித்திருந்தார்.

நாவலர் தமது இருபத்துமூன்றாம் வயதிலேயே பொதுப்பணிகளில் ஈடுபட ஆரம்பித்தார். தமிழிலே போதிய அறிவு பெற்ற இளைஞர்களை ஒன்று சேர்த்து அவர்களுக்குக் காலையிலும் மாலையிலும் தமிழ் இலக்கியங்களையும் சைவசமய சாத்திரங்களையும் போதித்து வந்தார். இவ்விளைஞர்களுள் சதாசிவம்பிள்ளை, நடராசா ஐயர், ஆறுமுகம்பிள்ளை என்பவர்களே மிகவும் விவேகிகளாக விளங்கினர். சதாசிவம்பிள்ளையோ தமது குருவின் அடிச்சுவட்டைப் பின்பற்றித் தாமும் பிரமசரிய விரதத்தை மேற்கொண்டு நாவலருக்கொரு சேனாதிபதியாக விளங்கினார். சென்னையிலிருந்த நாவலரது பதிப்பகத்தின் பொறுப்பு முழுவதையும் ஈற்றில் இவரே ஏற்றுக் கொண்டார். தமது குருவினுடைய மறைவுக்குப் பின் பதிப்பகப் பொறுப்புடன் சிதம்பரம் நாவலர் பாடசாலைப் பொறுப்பையும் ஏற்றார். சமயநூற் கல்வியிலே சிறப்பாக ஈடுபாடு கொண்டிருந்த நடராஜ ஐயர் சைவசித்தாந்த போதனையில் ஈடுபட்டார். மற்றும் ஆறுமுகம்பிள்ளையும் பிரமசரிய வாழ்க்கையையே மேற்கொண்டு திருவண்ணாமலை ஆதீனத்தில் சேர்ந்து தம்பிரானாகிப் பெரிய புராணத்துக்கு விரிவுரை ஒன்றெழுதினார்.

இனி நாவலருடைய மாணவர் கூட்டத்தில் இரண்டாவது தொகுதியைச் சேர்ந்து விளங்கியவர்கள் அவருடைய மருகராகிய பொன்னம்பலபிள்ளை மற்றும் வைத்திலிங்கபிள்ளை, செந்திநாத ஐயர் என்பவர்களாவர். பொன்னம்பலபிள்ளையோ நாவலரைப் போலவே சிறந்த தமிழ் அறிஞராய் விளங்கினார். அவரிடம் கற்றவர்கள் பலர் தமிழ் அறிஞர்களாகத் திகழந்தனர். சபாபதிநாவலர் என்பவரும் உரையாசிரியர் வேலுப்பிள்ளையும், பொன்னம்பலபிள்ளையின் மாணாக்கருட் சிறந்து விளங்கினார்கள். வைத்திலிங்கபிள்ளை என்பவர் தமது குருவான நாவலர் வண்ணார்பண்ணையில் நிறுவிய பாடசாலையிலே தலைமை ஆசிரியராகப் பல ஆண்டுகள் சேவை செய்தார். செந்திநாத ஐயர் சமயநூற் கல்வியிலே சிறந்து விளங்கிப் பலநூல்களை எழுதினார். அவருடைய நீலகண்டபாஷ்யம் என்னும் நூல் பலராலும் வியந்து பாராட்டப்பட்டது.

இவ்வாறாக நாவலருடைய ஆசிரியப்பணி நிறைந்த பலனைத் தந்ததோடு அவர்தம் குறிக்கோளையும் நிறைவேற்றி வைத்தது. நாவலர்கள் பலரும் உருவாயினர்.

இரண்டு ஆண்டுகள் கழித்து (1847) அவர் மீண்டும் சமயப் பிரசாரகராக வேலைக்குத் திரும்பினார். வண்ணார்பண்ணைச் சிவன் கோயில் வசந்த மண்டபத்தையே தமது சமயப் பிரசங்கங்களுக்கு ஏற்ற இடமாகக் கொண்டு வெள்ளி தோறும் மாலையிலே பிரசங்கங்களைச் செய்து வந்தார். நாவலருடைய உடன் மாணாக்கராயிருந்த கார்த்திகேய ஐயரையும் இந்தச் சமய உணர்ச்சி பற்றிக் கொண்டிருந்தது. ஐயரும் நாவலருடன் சேர்ந்து இப்பிரசார வேலையில் ஈடுபட்டு வந்தார். கடவுள் உண்மை, கடவுள் வழிபாடு, கடவுட் பக்தி, சமயப் பற்று, சிவபூசை, சிவதீட்சை, கோயில் திருவிழாக்கள், மானிட வாழ்வின் குறிக்கோள், வாழ்வின் அந்தம், மது மாமிச பட்சணத்தைத் தவிர்த்தல் என்பனவே அவருடைய பிரசங்களில் முக்கியமானவையாகும். கார்த்திகேய ஐயருக்கு என்று ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு தினத்திலே அவர் பிரசங்கம் செய்ய முடியாமற் போய் விட்டது. வந்திருந்த சபையோர் நாவலரையே பேசும்படி கேட்டுக் கொண்டார்கள். தாம் விஷயத்தை ஆயத்தம் செய்யவில்லையே என்று கூறினார். ஆயினும் சபையோர் அவரே அன்றைய பேச்சை நிகழ்த்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். அன்புக் கட்டளையை மீறமுடியாத நாவலரும் ஆயத்தமில்லை (இறப்புக்கு) என்ற விஷயத்தையே தலையங்கமாகக் கொண்டு அருமையான பிரசங்கம் ஒன்றை நிகழ்த்தினார். ஆயத்தம் செய்துகொண்டு வந்து நிகழ்த்தும் பிரசங்கங்களை விட இது மிக அற்புதமாக இருந்ததென்று சபையோர் வியந்து போயினர்.

அவருடைய பிரசங்கங்கள் உணர்ச்சிகரமானவை மாத்திரமல்ல. அவை நம்பிக்கையின் உறுதிப்பாடும் கேட்போரைக் கேட்டபடி ஒழுகத் தூண்டும் கட்டுப்பாடும் அவற்றில் நிரம்பியிருந்தன. இப்பிரசங்கங்களின் பயனாகப் பலர் சிவதீட்சை பெற்றனர்; மாமிச போசனத்தைத் தவிர்த்தனர்; கோவிலுக்கு ஒழுங்காகச் சென்று வழிபட்டு வரத்தொடங்கினர். சைவாசிரம தர்மங்களைக் கடைப்பிடித் தொழுகவும் தலைப்பட்டனர். இங்ஙனம் நாவலர் தமது சமயப் பிரசாரப் பணியைக் கிராமங்களிலும் மேற்கொள்ளத் தொடங்கினார். கிராமங்கள் சிலவற்றிலே பாடசாலைகளை நிறுவி அவை ஒழுங்காக நடைபெறுவதற்குத் தேவையான பொருளாதார வசதிகளையும் தேடி வைத்தார். கோப்பாயில் அமைந்த அவருடைய பாடசாலை இன்னும் நல்ல நிலையில் இயங்கி வருகிறது. ஆனால் புலோலியில் அமைந்ததோ அதனை நிர்வகித்தவ்ர்களுடைய அசிரத்தை காரணமாகச் சீர்குலைந்து இறுதியில் மூடவேண்டிய நிலைக்கு வந்தது. கந்தர்மடம், கொழும்புத்துறை, இணுவில், மாதகல் முதலாமிடங்களிலும் மற்றவர்களைக் கொண்டு அவர் பாடசாலைகளை நிறுவச் செய்தார்.

சைவசமயப் புனருத்தாரணப் பணியைச் செய்தது மாத்திரமின்றி கிறிஸ்தவக் குறுக்கீடுகளிலிருந்து அதனைக் காத்துக் கொள்வதற்கேற்ற சக்தியையும் நாவலர் தேடித் தந்தார். தம்முடன் கூடவே ஒரு பாடசாலை மாணாக்கராய் இருந்த இருவரை மிஷனரிமார் விரித்த வலையிலே வீழ்ந்து விடாமல் காப்பாற்றி வைத்தார். எம். தில்லைநாதபிள்ளை, எஸ். சின்னப்பாபிள்ளை ஆகிய இவ்விருவரும் குறிப்பிட்ட ஒரு தினத்திலே ஞானஸ்நானம் பெறுவதாக உறுதி கூறியிருந்தனர். சைவத்தின் மேம்பாடு பற்றியும் கிறிஸ்துவத்திலுள்ள குறைபாடுகள் பற்றியும் மிகத் தெளிவாகவும் உள்ளத்தில் உறுதியாகப் பதியும் வகையிலும் நாவலர் அவர்களுக்கு எடுத்து விளங்கப்படுத்தினார். அவர் கூறிய விளக்கங்களைக் கேட்டுத் தெளிவு பெற்ற அவர்கள் இருவரும் ஞானஸ்நானம் பெறும் எண்ணத்தைக் கைவிட்டார்கள். தில்லைநாதபிள்ளையோ நாவலருடைய அத்தியந்த சிஷ்யராகி அவருடைய பாடசாலையிலே ஆசிரியராய்ச் சேவை செய்வாராயினர். மற்றும் சின்னப்பபிள்ளை உயர் நீதிமன்ற நியாயவாதியாகிச் சைவசமயத்துக்கு அளப்பரிய சேவை ஆற்றினார்.

நமது சமயத்தின்மீது கிறிஸ்தவர்கள் நடத்தி வந்த தாக்குதல்களை எல்லாம் புறங் காணும் நோக்கத்தோடு நாவலர், சுப்பிரபோதம், சைவ தூஷண பரிகாரம் என்னும் நூல்கள் இரண்டை எழுதி வெளியிட்டார்.

“தாம் கொண்ட கொள்கையை நிறுவத் தமது சமய உண்மைகளைப் பாதுகாப்பதற்காக எடுத்தாண்ட நூல்களைப் பார்க்கும்போது ஆச்சரியமாயிருக்கிறது. எந்தெந்த வகையிலெல்லாம் எதிர்ப்பும் மறுப்பும் தோன்றக் கூடுமோ அவற்றையெல்லாம் எதிர்பார்த்து அவற்றுக் கெல்லாம் தர்க்க ரீதியான பதில் விளக்கியிருக்கும் சாதுரியத்தை உண்மையிலேயே முதல் தரமான நுண்ணறிவு படைத்த ஒருவரிடத்திலே தான் காண முடியும். இந்நூல் நமக்குப் பெருந் தீங்கையன்றோ விளைவிக்கிறது?” இவ்வாறாக 1855 இல் இங்கிலாந்திலே அச்சிடப்பட்ட வெஸ்லியன் மெதடிஸ்த அறிக்கையிலே “சைவதூஷண பரிகாரம்” என்ற நாவலருடைய நூலைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

சைவசமயத்தின் அடிப்படையான அறிவைப் பெறாதவர்களே புராணங்களை விமர்சிக்கப் புறப்பட்டு, சிவனும், சுப்பிரமணியரும் தத்தமது சக்திகளை உண்மையாகவே திருமணம் புரிந்ததாகக் கூறி வருகிறார்கள். “சுவரூபி, எங்கும் நிறைந்தவர் என்பதையும் ‘கடவுள் திருமணம் புரிந்தார்’ என்பது அபத்தம். என்பதையும் ஓரளவு சமய அறிவு படைத்தவர் எவரும் அறிவர்” என்று நாவலர் தமது சுப்பிரபோதத்திலே கூறியுள்ளார். கோவில்களிலே தாசியர் நடனங்களை நடத்தும் துராகிருதமான செயல்களைத் தவிர்த்து அதற்குப் பதிலாக, தேவாரப் பண்களை இசைத்தல், சமயப் பிரசங்கங்களைச் செய்வித்தல் போன்ற நல்ல காரியங்களைச் செய்விக்குமாறு கோவில் அதிகாரிகளுக்கும் அந்நாளிலே நாவலர் அறிவுரை வழங்கினார்.

மிஷனரிமாரும் அவர்களால் மதமாற்றம் செய்யப்பட்டவர்களும் கையாண்டு வந்த கபட நாடகங்களையெல்லாம், யாழ்ப்பாணச் சமய நிலை என்னும் மற்றுமொரு நூலிலே நாவலர் போதனைகள் மூலம் மதம் மதம் மாறச் செய்ய முயன்றார்கள். அதிலே அவர்கள் எதிர்பார்த்த வெற்றியைக் காண முடியவில்லை. எனவே பாட்சாலைகளை ஆரம்பித்து அவற்றிலே கல்வி பயில வரும் மாணவர்களையும் அவற்றில் உபாத்திமைத் தொழிலை ஏற்க விரும்பி வந்தவர்களையும் கவரும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அக்காலத்திலே அரசாங்க பாடசாலைகளும் இயங்கி வந்தமையால் பலரும் அவ்வரசாங்கப் பாடசாலைகளையே நாடிச் சென்றனர். இதனைக் கண்ட மிஷ்னரிமார் அரசாங்கத்திலே தமக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி அவ்வரசாங்கப் பாடசாலைகளை மூடிவிடச் செய்தனர். இதனால் கல்வித் துறையிலே அவர்களே எதிர்ப்பாரற்ற அதிகாரிகளாயினர். ஆசிரிய உத்தியோகம் பெறுவதற்காகா நம்மவர் பலர் கிறிஸ்தராயினர். இவர்களுட் சிலரைப் பாதிரிமார் குருவானவர்களாக்கிப் பூச்சியர் (றெவரண்ட்) என்ற பட்டத்தையும் வழங்கினார்கள். அரிசிக்கும் நெல்லுக்கும் பஞ்சம் ஏற்பட்டாலும் இந்தப் பூச்சியர் பட்டங்கள் மட்டும் மலிந்து வந்தன என்று நாவலர் கூறுகின்றார். இந்தப் பூச்சியர்களும் உள்ளத்தின் உள்ளத்திலே நல்ல சைவர்களாக இருந்தார்கள். இவர்கள் சைவாலயங்களுக்குப் போய் பூசைகள் செய்விக்கவும் திருவிழாக்கள் நடத்தவும் பணம் கொடுத்து வந்தனர். பள்ளிக்கூட நேரங்களில் மாத்திரம் கிறிஸ்தவத் தோற்றம் காட்டி வந்தார்கள். தன்னால் மதமாற்றம் செய்யப்பட்ட இவர்களுக்குக் கிறிஸ்தவத்திலே நம்பிக்கை இல்லை என்பதை பாதிரி நன்கு உணர்ந்திருந்தார் எனினும் இரண்டு காரணங்களுக்காக அவர்களைத் தம்முடன் வைத்திருந்தார். இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் உள்ள மிஷன் சபைகளுக்கு ஆண்டுதோறும் அனுப்பும் அறிக்கைகளிலே தாம் பலரை மதமாற்றம் செய்து வைத்திருப்பதாக அறிவிக்க வேண்டியிருந்தது. அப்படிச் செய்யாவிடில் இவர்களது சேவை பறிபோய்விடும் என்பது ஒரு காரணம். மற்றது வெளிப்படைக்குக் கிறிஸ்தவராகத் தோற்றத்தளவில் விளங்கும் இவர்களுடைய சந்ததியினராவது உண்மைக் கிறிஸ்தவராகக் கூடிய வாய்ப்பு ஒன்று இருந்து வந்தது. மிஷனரியை ஏமாற்றிய முறைகள் பற்றி நாவலர் நான்கு சம்பவங்களைக் கூறியுள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் அவர் காலத்திலே உயிரோடு இருந்தனர் ஆகையால் அப்பொழுது அச்சம்பவங்கள் சுவை உள்ளனவாக இருந்தன. ஆனால் இப்பொழுது அவர்கள் காலமாகி விட்டனர் ஆகையால் மாதிரிக்குத் தானும் ஒரு சம்பவத்தை நான் இங்கே கூறமுடியாதனவாய் இருக்கிறேன்.

நாவலர் சைவசமய வளர்ச்சிக்காக இங்ஙனம் பல வழிகளில் பணியாற்றி வந்தபொழுது அவருடைய நண்பர்களான நீர்வேலிச் சங்கரபண்டிதரும் தாமோதரம்பிள்ளை (பீ.ஏ., பீ.எல்) யும் சிறிஸ்தவ மதத்தை நேர் நின்று தாக்கி வந்தனர். சென்னைச் சர்வகலாசாலயிலே முதன் முதலிற் பட்டம் பெற்ற இருவருள் ஒருவரான விசுவநாதபிள்ளை (மற்றவரே தாமோதரம்பிள்ளையாவார்) கிறிஸ்தவராய் இருந்துகொண்டு சைவசமயத்தைத் தாக்கி வந்தார். பின்னால் அவர் தம் செய்கைக்காக வருந்திச் சைவசமயத்திற்கு எதிர்த்து எழுதி வந்ததற்கெல்லாம் பிராயச் சித்தமாகச் சிதம்பரத்திலே சென்று தமது நாவிலே பொன்னூசியால் சூடு போட்டுக் கொண்டு உண்மையான சைவராகி நாவலரைப் பின்பற்றி ஒழுகும் சீலம் மிகுந்தவரானார்.

சைவசமய அனுட்டானங்களில் எங்காவது வெளிப்படையான பெரிய தவறு கண்டால் நாவலர் கொஞ்சமேனும் தயக்கமின்றித் தமது எழுத்துக்களாலும் பிரசங்கங்களாலும் கண்டித்து வந்தார். வியாபார நோக்கோடு சமய அநுட்டானங்களில் தவறி நடக்கும் சைவக் குருமாரைக்கூட அவர் விட்டு வைப்பதில்லை. மரமேறும் வகுப்பினைச் சேர்ந்தவர்களுட் சிலர் கள்ளுண்பதை விட்டு விட்டனர். புலையரிலே சிலர் மாட்டிறைச்சி உண்பதை நிறுத்தி விட்டார்கள். இங்ஙனமாக அவர்கள் திருந்தி வாழ்கிறார்கள். ஆனால் வெற்று நெற்றி வேளாளர் சிலர் கிறிஸ்தவர்களுடன் கூடிச் சாராயம் குடித்து மாட்டிறைச்சியும் உண்கிறார்கள். இவர்களுடைய திருமணச் சடங்குகளையும் ஈமக்கிரியைகளையும் செய்து வைக்கும் பிராமணர்களும் சைவக்குருமாரும் இருக்கிறார்கள். இவர்களுள் யார் மதிக்கத் தகுந்தவர்கள்? முன்னையவர்களா? பின்னையவர்களா? இங்ஙனம் தாம் எழுதி வெளியிட்ட துண்டுப் பிரசுரம் ஒன்றிலே நாவலர் கேட்கிறார்.

சைவசமயச் சடங்குகளிலே காணப்படும் ஒழுக்கவீனங்களைக் களைவதற்கு வேண்டிய பணிகளை மேற்கொண்ட நாவலர், சமய சம்பந்தமாக ஆக்கபூர்வமான பணிகளுக்கு உதவும் பொருட்டு நல்ல நூல்களையும் எழுதத் தொடங்கினார். சைவசமயத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தம் சமயத்தைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டிய விஷயங்களை அவர் தமது முதலாம் இரண்டாம் சைவ வினாவிடைகளில் இரத்தினச் சுருக்கமாகக் கூறியிருக்கிறார். இச்சிறு நூல்களை நாவலர் தாமே பிரசுரித்து அடக்க விலையிலே விற்பனைக்கு விட்டார். படிக்கத் தெரிந்த ஒவ்வொரு சைவரும் அவருடைய முதலாம் பாலபாடத்தை வாங்கிப் படித்து அதன்படி ஒழுகவும் தலைப்பட்டனர். மற்றெல்லாவற்றையும் விட இச்சிறிய நூலானது மக்கள் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தி அவர்களை நல்ல சைவசமயிகளாக்க உதவிற்று. தமிழாசிரியர் ஒவ்வொருவரும் இந்நூலைக் கற்பிப்பதையே குறியாகக் கொண்டனர். இங்ஙனம் இச்சிறிய நூல்கள் சைவ இல்லங்கள்தோறும் மிளிர்ந்தன. இந்நூலிலே சேர்க்கப்பட்டிருந்த தோத்திரப் பாடல்களை எல்லாம் சிறுவர்கள் மனனம் செய்து வந்தனர். “மண்ணூலகத்தினிற் பிறவி மாசற” என்று தொடங்கும் விநாயகர் தோத்திரத்தையும் “மூவிருமுகங்கள்” என்று தொடங்கும் சுப்பிரமணியர் தோத்திரத்தையும் தெரியாதவர் அந்நாட்களில் இல்லை. சரியாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஒருநாள் காலரா நோய்த் தடுப்புப் பணியிலீடுபட்டிருந்த நடுத்தரவயதினரான ஒருவர் காலரா ஆஸ்பத்திரிக்கு இரவிலே செல்ல நேரும்பொழுதெல்லாம் காலரா நோய் பரப்பும் பிசாசுகளி விரட்டும் என்ற நம்பிக்கையோடு “மூவிரு முகங்கள் போற்றி..” என்ற தோத்திரத்தைப் பாடிக்கொண்டு போவதை நான் கேட்டிருக்கிறேன். மற்றும் நாவலருடைய நான்காம் பாலபாடமோ ஒரு சமயக் கருவூலமாகும். சைவாகமங்களின் சாரத்தைப் பிழிந்து அந்நூலிலே நாவலர் தந்திருக்கிறார். உசாத்துணை நூலாக அது பெரிதும் பயன்படுவதொன்றாகும். சமய அனுட்டான முறைகளில் நமக்கு ஏதாவது சந்தேகங்கள் தோன்றினால் நாம் அந்நூலைப் பார்த்து தெளிவடைந்து கொள்ளலாம்.

பண்டைக்கால ஆலயங்கள் இரண்டைப் புனருத்தாரணம் செய்யும் பணியிலும் நாவலர் ஈடுபட்டார். கீரிமலைச் சிவன் கோவில் அப்போது மறைந்து போயிருந்தது. அத்தலம் பற்றிய துண்டுப் பிரசுரம் ஒன்றை அவர் எழுதி வெளியிட்டார். அவ்வலாயத்தைப் புனருத்தாரணம் செய்யுமாறு அத்துண்டுப் பிரசுரத்தின் மூலம் அவர் சைவப் பொதுமக்களைத் தூண்டிவிட்டார். மக்களும் அப்பணியிலே பெரிதும் ஆர்வங் கொண்டனர். அவர் கீரிமலை சென்று இடங்களை ஆராய்ந்து பண்டு ஆலயம் இருந்த இடத்தைக் கண்டுபிடித்துக் கோவில் அமைய வேண்டிய முறையை விளக்கும் படமொன்றையும் வரைந்து உதவினார். பிராமணக் குருமார் சிலரையும் இப்பணியில் ஈடுபட்டு உழைக்கச் செய்தார். அவர்களும் அப்பணியில் ஈடுபட உடன்பட்டனர்.

அடுத்தது திருக்கேதீச்சரமாகும். அவர் இப்பகுதி இருந்த இடத்தைச் சம்பந்தர், அப்பர் தேவாரங்களால் அறிந்தார். ஆலயம் மறைந்து விட்டது. அது அமைந்திருந்த இடமும் அரசுடமையாய் இருந்தது. அப்பகுதிகளை விலைக்குத் தருமாறு அரசாங்கத்துக்கு விண்ணப்பித்தார். ஆனால் அப்பொழுது வடமாகாண அரச அதிபராயிருந்த துவைனம் என்பவர் அவ்விடத்தை விற்பதற்கு அங்கீகாரம் வழங்க மறுத்து விட்டார். எனவே நாவலர் சைவப் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

திருக்கோவில்களிலே நடைபெறும் ஒழுக்கக் கேடுகள் மீது நாவலருடைய கவனம் திரும்புகிறது. அங்கெல்லாம் நடைபெறும் தாசியர் நடனத்தை அவர் முழுமூச்சுடன் கண்டித்து வந்தார். ஆலய பரிபாலகர்கள், அவ்வாலயங்களைத் தவறான முறையிலே நடத்தி வருவதையும் அவர் கண்டித்தார். இவ்விரு விஷயங்களிலும் சம்பந்தப்பட்டவர்கள் நாவலருக்குப் பகைவராயினர். நாவலரைத் தாக்குவதற்கென ஒரு சமயம் கூலிப்படையினர் சிலர் அவருடைய வீடு தேடிச் சென்றனர். ஆயினும் நாவலருடைய ஆப்த நண்பர் ஒருவருடைய செல்வாக்கினால் இக்கூலிகள் கலைந்து செல்ல வேண்டியதாயிற்று.

தேர்த்திருவிழா நாளிலே பலியிடும் வழக்கத்தை நாவலர் கண்டித்தார். “தேர்ச்சில்லிலே ஆட்டுக்கடா பலியிடுவதைத் தவிர்ப்பதால் ஏற்படுவது புண்ணியமன்று; அதன் விளைவாக நாமக்குக் கேடுதான் வருமென்றல்லவா கூறுகிறார்கள். அந்தோ பரிதாபம்! சமுத்திரங்களிலே நீண்ட தூரம் பிரயாணம் செய்யப் புறப்படுமுன் கப்பல்களிலே ஆட்டுக்கடா பலியிடப்படுவதில்லையே. இம்மாபெரும் கப்பல்கள் தமது நீண்ட நெடும் பிரயாணங்களைக் குறைவின்றி முடித்துக் கொண்டு மீண்டு வந்து சேருகின்றன அன்பதை யாவரும் அறிவரே! திருவாரூர், திருவிடைமருதூர் தேர்களெல்லாம் இத்தகைய பலியில்லாமலே வீதிவலம் வருகின்றனவே. இந்த யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்தக் குட்டித் தேர் மட்டும் பலிகொடாவிட்டால் திரும்பாதென்பதை நாம் நம்பத்தான் வேண்டுமா?” இவ்வாறு நாவலர் தேருக்குப் பலியிடும் வழக்கத்தைச் கண்டித்து எழுதுகிறார்.

இனி, கண்ணகி கோயில்களிலே சைவக் குருமார் பூசை செய்வதைப் பற்றி நாவலர் கூறுவதைப் பார்ப்போம். இக்கண்ணகி கோவில்களிலும் ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களிலும் நம் சைவ மக்கள் சென்று வழிபடுவது நமது சமயத்துக்கு அடுக்காது என்று அவர் எடுத்துக் காட்டுகிறார். “ஜைன மதச் செட்டிச்சியான கண்ணகியின் இரு மருங்கிலும் விநாயக, சுப்பிரமனிய விக்கிரகங்களை அச்சமின்றி வைத்துப் பூசிக்கும் அதி பாதகர்களாகிய இவர்களும் அன்றோ சைவக் குருமார் என்று கணிக்கப்படுகிறார்கள்” என்று நாவலர் குறிப்பிடுகிறார். பதினேழு நூற்றாண்டுகளுக்கு முன் கஜபாகு மன்னன் இவ்வழிபாட்டு முறையை இலங்கை மக்கள் மீது திணித்தான். அவனுடைய மறைவுடன் இந்த வழிபாட்டு முறையும் மறைந்து போயிருக்கும். ஆனால் நமது சைவக் குருமாரன்றோ இக்கோயில்களில் இன்றும் இவ்வழிபாட்டு முறையைக் கைவிடாது பூசாகாரியங்களைச் செய்து வந்தார்கள். செய்தும் வருகிறார்கள்.

நாவலர் தமது காலத்திலிருந்த சைவக் குருமாரையும் கண்டிக்கத் தவறவில்லை. சைவ மக்களை விளித்து அவர் பின்வருமாறு பேசுகிறார். “அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு ஒருமுறை வரிப்பணமாகத் தொண்ணூறு சதத்தைக் கொடுக்க மனமின்றிக் கொடுக்கிறீர்கள். ஆனால் இந்த அற்ப தொகைப் பணத்திற்கு அரசாங்கம் உங்களுக்கு அருமையான தெருக்களை அமைத்துத் தருகிறது. நீங்கள் எங்கெல்லாம் போக விரும்புகிறீர்களோ அங்கெல்லாம் சௌகரியமாகவும் வசதியாகவும் இத்தெருக்களில் நீங்கள் பயனம் செய்யக்கூடியதாயிருக்கிறது. உங்கள் குருமாருக்கும் நீங்கள் அரிசி, பருப்பு, நெய் என்பவற்றோடு ரூபாக்களாகவும் பணம் கொடுக்கிறீர்கள். அவர்களிடமிருந்து நீங்கள் எதனைப் பெற்றுக் கொள்கிறீர்கள்? உங்கள் குழந்தைகளுக்கு அவர்கள் சமயத்தையோ அல்லது நெறி முறைகளையேனுமோ கற்றுத் தருகிறார்களா? உங்கள் கோவில்களிலே ஏதாவது போதனை செய்கிறார்களா? பாடசாலைகளை நிறுவி உங்கள் குழந்தைகளுக்குக் கல்வி புகட்டுகிறார்களா? சைவசமயத்திலுள்ள எவரேனும் ஒருவர் கிறிஸ்துவ மதத்தைத் தழுவ விரும்புகிறார் என்று அறிந்தால் அன்னவரை அணுகி, சைவத்தின் மேன்மையை எடுத்துணர்த்தி மிஷனரிக்கு இரையாகாமல் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்கிறாரா? உங்கள் வீடுகளுக்கு வரும் சமயங்களில் கொலை செய்தல், புலால் உண்ணல், மதுவருந்தல் என்பன விலக்கப்பட வேண்டிய பாதகங்கள் என்று இவ்வாறான நெறிமுறைகளை உங்களுக்கு எடுத்துச் சொல்வதுண்டா? மிஷனரிகள் எங்கள் சமயத்தைத் தாக்கிப் பேசும்போது எதிர்வாதம் புரிந்து நமது சமய உண்மைகளை எடுத்து நிலை நாட்டுவதுண்டா? அந்தியேஷ்டி என்ற பதத்தைச் சரியாக உச்சரிக்கக் கூடிய குருமார் எத்தனை பேர் இருக்கிறார்கள்? தச்சர், கொல்லர், சலவைத் தொழிலாளர் என்பவர்களில் தத்தம் தொழில் தெரியாதவரக்ளை நீங்கள் அழைத்து வேலை செய்விப்பீர்களா? அங்ஙனமிருக்கத் தனது பணி செவ்வனே செய்யத் தெரியாத குருக்களை ஏன் நீங்கள் அழைக்க வேண்டும்?”

ஆகமங்களில் உள்ள வாக்கியங்களை அன்றி அவற்றின் தத்துவங்களையே நாவலர் போற்றி வந்தார். சிராத்தாதி காரியங்களைத் தவறாமல் செய்ய வேண்டுமென்று சொல்லும் அதே சமயத்தில் அக்காரியங்களைச் செய்து வைத்துத் தானங்களைப் பெற்றுக் கொள்ள வரும் குருக்கள் கல்வி கேள்விகளில் சிறந்தவராயும் தம்முடைய சமய அநுட்டானங்களைத் தவராமல் செய்பவராயும் சிராத்தாதி காரியங்களைப் பக்தியோடும் சிரத்தையோடும் செய்பவராயுமிருக்க வேண்டும் என்று வற்புறுத்தி வந்தார். இத்தகைய சிறப்புக்கள் இல்லாத குருமாருக்குத் தானம் கொடுத்தால் கொடுத்தவன் நரகத்துக்குத் தான் போக நேரிடும். இன்னும் சாதிப்பாகுபாடு பற்றிப் பேசும்போதும் அவர் “பிராமணரில் பிராமணன், சாத்திரியன், வைசியன், சூத்திரன் என்றும் சத்தியரில் பிராமணன், சத்திரியன், வைசியன் சூத்திரன் என்றும் வைசியரில் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்றும் கூறுவர். சாதியென்பது பிறப்பினால் மட்டுமல்ல ஆசிரம தர்மங்களைக் கடைப்பிடிக்கும் முறையினாலுமே நிர்ணயிக்கப்படுவதாகும்” என்பதே நாவலருடைய கொள்கையாகும்.

நாயன்மார் பாடியருளிய தேவார திருவாசகங்கள் எல்லாம் இறைவனுடைய அநுபூதி பெற்ற பாடல்கள் என்பதும் வேதங்கள், ஆகமங்களை அணுகுவதற்குத் தமிழில் கிடைத்த திருநெறியென்பதும் நாவலருடைய கருத்தாகும். இவற்றையே அவர் “அருட்பா” என்று வழங்கினார். அதனாலேயே தம் காலத்தில் வாழ்ந்தவரும் நாயன்மாரைப்போல மதிக்கப்படாதவருமான ஒருவர் பாடிய கவிகளை “அருட்பா” என்று வழங்கியதைக் கண்ட நாவலர் மனம் பதைத்து தேவார திருவாசகங்களைப் பாடியருளிய நமது நாயன்மாரையும் இந்தக் கவிகளைப் பாடியவருடைய தரத்துக்கு இறக்குவதா என்று சினந்து சாடினார்.

3. இலக்கியப்பணி

தமிழ் இலக்கியங்களைக் கற்பவர்கள் அக்காலத்திலே தாம் கற்க விரும்பும் இலக்கியங்களை முதலில் ஓலைச்சுவடிகளிலே எழுதிக் கொள்ள வேண்டியிருந்தது. இங்ஙனம் படிப்பதற்கு முன் ஏட்டுப் பிரதிகளை எழுதும் வேலை மிகவும் சிரம சாத்தியமானதாய் இருந்தமையால் அதற்குரிய பொறுமை அற்றவர்களால் இலக்கியங்களைக் கற்க முடியாமல் இருந்தது. எனவே நாவலர் இவ்விலக்கிய நூல்களை அச்சில் பதிக்க முற்பட்டார். மேற்கூறிய கையெழுத்துப் படிவங்களிலே பலவிதமான பிழைகள் மலிந்திருந்தன. அதனால் இக்கையெழுத்துப் பிரதிகள் பலவற்றை நாவலர் சேகரித்து அவற்றை ஒப்பு நோக்கிச் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்தார். பின்னர் சிறந்த பிரதியெனக் கண்டதைத் தாமே கடதாசியில் எழுதி அச்சகத்துக்கு அனுப்பிப் பதிப்பிக்கச் செய்தார். இவ்வாறு கந்தபுராணம், பெரியபுராணம், பாரதம் என்னு நூல்களை அவர் அச்சிற் பதிப்பித்தார். பெரியபுராண சூசனத்திலே பேசப்பட்ட ‘நாயன்மார் வாழ்ந்த சீரிய வாழ்வின்கண் பொதிந்துள்ள தத்துவார்த்தங்கள், உளப்பாங்குகள் என்பவற்றைப் பெரியபுராண சூசனத்திலே நாவலர் நயம்பட எடுத்துக் காட்டியுள்ளார். ஆகம சாத்திர உண்மைகள் பலவற்றை ஆதாரமாக எடுத்துக் காட்டி விளக்கியிருக்கும் அந்நூலிலே அளவிறந்த போதனைகளைக் காணலாம். நிகண்டு என்னும் நூலை அதற்கொரு வசன விளக்கமும் கொடுத்துப் பதிப்பித்துள்ளார். மற்றும் நன்னூலுக்கு விளக்க உரையொன்று எழுதிப் பதிப்பித்துள்ளார். தமிழ் இலக்கியக் கல்விக்கு இவ்விரு நூல்களும் இன்றியமையாத ஆதார நூல்களாகும். பின்னர் நன்னூலுக்கு மிக விரிவான விளக்க உரையொன்றும் எழுதிப் பதிப்பித்ததோடு திருக்குறள் பரிமேலழகர் உரை, திருக்கோவையார், பேரசிரியருரை என்னும் நூல்களையும் நாவலர் அச்சிற் பதிப்பித்தார்.

பாடசாலை மாணவர்க்குப் பயன்படும் வகையிலே இலக்கண வினாவிடை, இலக்கணச் சுருக்கம் என்னும் நூல்களையும் எழுதி வெளியிட்டார். வசன நூல்கள் பலவற்றையும் அவர் எழுதியிருக்கிறார். தமிழுக்கு வசனநடை வகுத்த ஆரம்பகால ஆசான்களுள் நாவலர் முன்னோடியாகத் திகழ்கின்றார். அவருடைய காலத்துக்கு முன்பு இருந்த சைவ நூல்கள் பெரும்பாலும் இலக்கியங்களுக்கு விரிவுரைகள் என்ற வகையிலே இருந்தன. ஆனால் நாவலருடைய வசன நடையோ பலராலும் பாராட்டி வரவேற்கப்பட்டது. பெரியபுராண வசனம், திருவிளையாடற்புராண வசனம், கந்தபுராண வசனம் என்பன நாவலருடைய வசன நூல்களிற் சிறந்தனவாகும். கந்த புராண வசனம் என்பது புராண செய்யுட்களை அப்படியே வசனமாக்கியது போல் அமைந்துள்ளது.

கந்தபுராணம் என்பது மிகச் சிறந்த ஒரு நூலாகும். செய்யுள் நடை எளிமையானது. அத்துடன் சிறந்த இசை அமைப்பும் கொண்டது. கந்தபுராணத்தில் எடுத்தாளப்பட்ட உவமைகள், உருவகங்கள் யாவும் ஒப்புயர்வற்றன. அது பல்வேறு விடயங்கள் உள்ளடக்கிய ஒரு பெருங் கருவூலமாகும். சைவம், வைஷ்ணவம், வேதாந்தம், ஏகான்மவாதம் என்பவை மட்டுமன்றி லோகாயதமும் கந்தபுராணத்திலே பேசப்படுகிறது. விநாயகர், வைரவர், வீரபத்திரர், சுப்பிரமணியர் ஆகிய சிவமூர்த்தங்கள் நான்கின் தோற்றங்கள் அதிலே கூறப்பட்டிருக்கின்றன. நடைமுறை வழக்கினோடு தொடர்பு படுத்தி நீதி நெறிகள் போதிக்கப்பட்டு, அணுகுண்டு உற்பத்தி செய்யும் இக்காலத்தவர்களுக்கே தெரியாத போர்க்கருவிகள் பற்றிக் கந்தபுராணம் பேசுகிறது. சமய சம்பந்தமான கருத்துக்கள் நிரம்பியிருப்பதே கந்தபுராணத்தின் தனிச் சிறப்பெனலாம். தமிழ்ப் பெருங் காப்பியங்கள் ஒவ்வொன்றிலும் திருமணச் சடங்குகள் பற்றியும் பாடப்படுவது ஒரு வழக்கமாகையால் இதிலும் சிவனுடைய திருமணம், சுப்பிரமணியர் திருமணம் என்பன அமைந்துள்ளன. கடவுளுக்கு உருவமில்லை; ஆசா பாசமில்லை; தேவைகளும் இல்லை. அங்ஙனமிருக்கக் கடவுளுக்கு உண்மையான திருமணச் சடங்கு என்று பேசுவது அர்த்தமற்றது.

அண்ட சராசரங்கள் சிருஷ்டிக்கப்படும்போது இறைவனுடைய சக்தி வியாபகமாகிறது. சித்தாக இருக்கும் இறைவன் சக்தியோடு கூடுகிறான். இந்தச் சக்தி வியாபகத்தை அன்னையென்றும் உமாதேவி யென்றும் கூறுகின்றோம். சிவசக்தி சம்மேளனத்தையே திருமணம் என்று புராணங்கள் கூறுகின்றன. சக்தி விகற்பங்கள் மூன்று வகையாகும். இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானா சக்தி ஆகிய மூன்றும் முறையே பிரபஞ்சத்தைக் கட்டுபடுத்தவும் தொழிற்படுத்தவும் அறிவோளி பெறவும் செய்கின்றன. இம்மூன்றினுள்ளும் கிரியா-ஞானா சக்திகளைக் கந்தபுராணம் தெய்வயானை அம்மை, வள்ளியம்மை என்று கூறும். இந்தச் சக்திகளின் வெளிப்பாடே சுப்பிரமணியருடைய திருமணங்களாகப் பேசப்படுகின்றன. இவ்வாறே பெரிய புராணத்திலும் பரவையார், சங்கிலியார் என்ற பெண்களைச் சுந்தரர் திருமணஞ் செய்து கொண்டார் என்று கூறப்பட்டுள்ளது. “தம்பிரான் தோழர்” என்ற் சிறப்பித்துக் கூறப்படும் சுந்தரர் பெண்களுடைய உடலழகினால் கவரப்பட்டவரல்லர். சீவன் முத்தர் ஒருவருக்கும் ஏனைய ஆன்மாக்களுக்கும் இடையிலே நிலவக்கூடிய குரு சிஷ்யத் தொடர்பு ஒன்றேதான். முத்திசாதனம் கைகூடக்கூடிய பக்குவநிலை எய்தியிருந்த அவ்வாத்மாக்கள் இரண்டுக்கும் சுந்தரர்க்குமிடையில் நிலவிய தொடர்பு குரு சிஷ்ய பாவமேயாகும். பேரிலக்கியம் ஒன்றுக்கு இருக்க வேண்டிய அமைதி கருதியே பெரியபுராண ஆசிரியர் அவற்றைப் பரவையார், சங்கிலியார் திருமணங்களாகப் பாடி வைத்துள்ளார். இங்ஙனமாக நாவலர், சுப்பிரபோதம் என்னும் தனது நூலிலே இத்திருமணங்களின் தத்துவங்களை நன்கு விளக்கியுள்ளார்.

சைவசமயநெறி, திருமுருகாற்றுப்படை, கோயிற்புராணம் மற்றும் சர்வோக்தம் என வழங்கும் சிவாகமத்தின் ஒரு பகுதியான சிவ தருமோத்திரம் என்பவற்றிற்கு விளக்க உரைகள் செய்திருக்கிறார்.

இன்னும் கையெழுத்துப் பிரதிகளாயிருந்த இலக்கண இலக்கிய நூல்கள் பலவற்றைத் திருத்திப் பதிப்பிக்கவும் நாவலர் உதவியிருக்கிறார். அவற்றுள் சேனாவரையர் உரையுடன் கூடிய தொல்காப்பியப் பதிப்பே மிகவும் பிரபலமானதாகும்.

4. இந்தியாவில் நாவலர்

(தொடரும்)