கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  சூரியனோடு பேசுதல்  
 

வ. ஐ. ச. ஜெயபாலன்

 

சூரியனோடு பேசுதல்

வ. ஐ. ச. ஜெயபாலன்

--------------------------------------------------

சூரியனோடு பேசுதல்

வ. ஐ. ச. ஜெயபாலன்


யாழ் பதிப்பகம்
641015

-------------------------------------------------

SUURIYANODU PESUDHAL
Poems in Tamil by V. I. S. JAYAPALAN
(c) Author

Published by
YAAZH PATHIPPAGAM
386 Kamarajar Road
Uppilipalayam P O
Coimbatore 641 015 Tamil Nadu
South India

Printed at : Printo Pack / 641 030
Cover letter: Mekalai Arts / 641 033
Photo by : Kannan Colour Studio

First Edition : February 1986

Price : Rupees Eight

-------------------------------------------------

... இந்த வெளியீடு குறித்து


இவ்வுலகம் மனிதகுலம் முழுமைக்குமானது! நேசமும் அமைதியும் இணக்கமும் வாய்ந்த உயிர்ப்புள்ள வாழ்வைத்தான் மக்களினம் எதிர்நோக்குகிறது!

ஆனால், என்ன கொடுமை! வெறுப்பும் பகைமையுமே எங்கும் விதைக்கப்படுகின்றன.

இவற்றால் மக்கட்குலம் இழக்க நேர்ந்த விழுமியங்கள் ஏராளம்! ஏராளம்! இவற்றில் ஒன்றுதான் தெற்காசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான "யாழ்ப்பாண நூலகம்" நெருப்பிட்டுக் கொளுத்தப்பட்டதும்!

இத்தகைய கொடுமைகளைச் செய்பவர்கள் உலக மக்களினம் முழுமைக்குமே பகைவர்கள்தாம்! இவர்களின் அழிம்புகள் தொடரும்வரை இவர்களுக்கு எதிரான போர்களும் நிகழ்ந்தே தீரும்!

இவ்வகையில், உலகெங்கும் துன்பத்திற்குள்ளான மக்களின் போராட்டத்தில் ஒரு கூறாகத்தான் ஈழ விடுதலைப் போரையும் நாம் உற்றுநோக்குகிறோம்.

போர்க்களமாய் மாறிப்போன மண்ணிலிருந்து முகிழ்க்கும் இலக்கியங்கள் மக்களின் வாழ்க்கையைப் பலப்பல பர்மாணங்களுடன் புலனாக்குவதால், இவற்றை மக்களுக்கு வழங்குவதும்கூடப் போராட்டத்திற்குப் புரியும் உதவியே.

யாழ்ப்பாண நூலகத்தின் நினைவுகளுடன், மக்கள் போராட்டங்களின் நேர்மைகளை மக்களுக்குச் சொல்ல அவாக்கொண்ட நாம், "சூரியனோடு பேசுதலை"த் தமிழ் மக்களுக்கு வழங்குவதில் பெருமையடைகிறோம்.

அன்புடன்
துரை - மடங்கன்
யாழ் பதிப்பகம்
கோவை
15-2-86

-------------------------------------------------

எனது இச்சிறு காணிக்கை


நமது கௌரவமான இருப்பைத்
தமது உயிர்த்தியாகம் மூலம் உறுதிப்படுத்திய
விடுதலைப் போராட்டத்தின் தியாகிகளுக்கும்,
போர்க்களத்தில் வெஞ்சமர் புரிந்து
விடுதலைப் போராட்டத்தை முன் எடுத்துச் செல்லும்
தோழர்களுக்கும், அவர்களுக்குத் துணை நின்று
தமிழ்பேசும் மக்களது - தமிழ், முஸ்லீம், மலையக
மக்களது - ஐக்கியத்துக்காகவும், அவர்களது
கூட்டு அரசியல் இராணுவத் தலைமையை
உருவாக்கவும் அயராது உழைக்கும் அறிஞர்களுக்கும்,
கலைஞர்களுக்கும், ஊர் தோறும் உள்ள
நீதுயுள்ள மனிதர்களுக்கும்.

-------------------------------------------------

நானும் அவர்களில் ஒருவன்


1970 களில் இருந்தே எனது கவிதைகளை நூலுருவில் கொண்டுவர வேண்டும் என எனது நண்பர்களில் பலர் அக்கறை எடுத்தனர். அவர்களுள் பலர் முக்கியமான ஈழத்துக் கவிஞர்களாவர். அவர்கள் வெவ்வேறுபட்ட இலக்கியக் கொள்கைகளை அடியொற்றிச் செல்பவர்கள். ஆனாலும் உலகினதும் வாழ்வினதும் செழுமையிலும் மானிடத்தின் வலிமையிலும் நம்பிக்கை கொண்டவர்கள்.

அவர்கள் வரலாற்றின் இயங்கு திசையில் ஈழத்து மண்ணில் கால்கள் ஆழப்புதைய நிமிர்ந்து நடந்து செல்பவர்கள். இவர்களுள் யேசுராசா, அன்பு ஜவகர்ஷா, தமயந்தி, சேரன், ஐயர், டானியல் அன்ரனி, டோமினிக் ஜீவா, டானியல், வண. பிதா ஜெயசீலன், நிர்மலா, நித்தியானந்தன், அமரர் விமலதாசன், மட்டக்களப்பு ஆனந்தன் போன்றவர்களை நான் இங்கு நினைவு கூருவேன். நெருக்கடி நிலை, எனது கையில் பிரதி தயாராக இருந்திராமை, இரண்டு சிக்கலும் தீரும் வேளைகளில் ஏற்பட்ட பணமுடை - இப்படி பல்வேறு காரணங்களால் இதுவரை எனது கவிதைத் தொகுதி பிரசுரமாகமலே போயிற்று.

பதினைந்து வருடப் பிரசவ வேதனையின் பின் எதிர்பாராத ஒரு சூழலில், இங்கு எழுதிக் கலவரப்படுத்த விரும்பாத பல்வேறு ஈழத்துச் சிக்கல்களின் மத்தியில், எழுத்து மூலம் எனது இருப்பை உணர்ந்திருந்த சில கொங்கு நாட்டுக்காரர்களைச் சந்தித்தேன்.

இப்படி எதிர்பாராது சந்தித்த கொங்கு நாட்டுக்காரர்கள் எனது கவிதைத் தொகுதிக்குப் பிரசவம் பார்ப்பதில் சிறப்பான ஒரு வெற்றியைப் பெற்றுள்ளனர். இவர்களுள்ளும் சிலர் தமிழ் நாடறிந்த கவிஞர்கள். இவர்களும் பல் வேறுபட்ட இலக்கியக் கொள்கைகளை அடியொற்றிச் செல்பவர்கள். எனது ஈழத்து நண்பர்களைப் போலவே இவர்களும் உலகினதும் வாழ்வினதும் செழுமையிலும் மானிடத்தின் வலிமையிலும் நம்பிக்கை கொண்டவர்கள்.

இந்தக் கொங்கு நாட்டுக்காரர்கள் எனது கவிதைத் தொகுப்புக்கு முன்னுரை தரும்படிக் கேட்டனர். கவிதைகளை நானே எழுதியிருக்கிறபோது முன்னுரை அவசியப்படாதே எனக் கருத்துத் தெரிவித்தேன். எனினும் பின்னர் அவசியப்படாத விசயங்களையே முன்னுரையாக எழுதி விடலாம் எனத் தீர்மானித்தேன்.

நான் நெடுந்தீவைச் சேர்ந்தவன். பாக்கு நீரிணையின் ஆழத்தில் இருந்து எட்டிப்பார்க்கின்ற அந்தச் சிறு தீவு போர்த்துக்கீசர், டச்சுக்காரர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது. 11 கி. மீ. நீளமும் 8 கி. மீ. அகலமும் கொண்ட சிறு தீவாக இருந்தபோதிலும் கற் கோட்டை ஒன்றைக் கட்டாமல் காலூன்றுவது அந்நியருக்குக் கை கூடவில்லை. இத்தீவுக்கு முதன்முதலாக நான் வந்த போது ஐந்து வயதிருக்கும். அழகிய கடற்கரைகளையும், குதிரைகள் தெறித்துத் திரியும் புல் வெளிகளையும், கல்வேலி சூழ்ந்த நிலங்களின் மனிதரின் அயராத உழைப்பினால் பசுமையாகிக் குலுங்கும் தோட்டங்களையும், மாலை வேளைகளில் சாரி சாரியாகப் பொற்குடந்தாங்கி நல்ல தண்ணீர்க் கிணறுகளுக்குச் செல்லும் அழகிய பெண்களையும், பல தொழில்களும் தெரிந்த அரோக்கியமான கிராமவாசிகளையும் கொண்டது அந்த மனோரம்மியமான தீவு.

புழுதி தோயத் தோய தெருக்களில் தண்ணீர்க் குடம் சுமந்து சென்ற ஒரு தேவதைக்குஞ்சு எனது மனசிலும் எனது கவிதைகளிலும் முதற்காதலின் தடங்கள் பதியக் கடந்து சென்றதும் இந்தச் சிறுதீவில் தான்.

சின்னஞ்சிறு வயதிலேயே அந்தப் போர்க்குணம் கொண்ட மண்ணையும் மக்களையும் வரித்துக் கொண்டது எனது கவிதை.

நான் பிறந்தது உடுவில் கிராமத்தில். யாழ்ப்பாணக் குடாநாட்டின் செம்மண் புலத்தில் உள்ள அழகிய கிராமம் அது. பனந்தோப்புகளின் பின்னே மேலே வானமும் கீழே மண்ணும் சிவந்து விரிந்து அகன்று செல்லும் அந்த அழகிய கிராமத்தில்தான் எனது அம்மாவும் பிறந்தாள். அவளது மரபின் அடி ஒன்று உடுவில் கிராமத்தைச் சேர்ந்தது.

இங்குதான் அவள் கற்றதும் பின்னர் ஆசிரியையாகிக் கற்பித்ததும். எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய இந்தச் செம்மண் பூமியில் கனவென நிகழ்ந்த எனது பால்யப் பருவம், இனிமையும் அர்த்தமும் நிறைந்தது.

காலைப் பொழுதில் புற்களில் பனிமுட்டை இட்டு வைத்திருக்கும் இரவு செம்மண் பூமியின் மீது வெள்ளை, ஊதா வண்ண வெடிவேலன் பூக்களைச் சூடி வைத்திருக்கும் வேளைகளில் முள்ளு முள்ளுக் கரப்பஞ்செடிகள் தமது பலவர்ணச் சின்னஞ்சிறு பூக்களைச் சேர்த்துக் கட்டி எமக்காகக் கைகளில் வைத்துக் கொண்டிருக்கும்.

நானும் எனது தங்கை ராதாவும் பனிமுட்டைகளை உடைத்து, வெடி வேலன் பூக்களைக் கொய்து வேலியில் காத்திருக்கும் கரப்பஞ் செடிகளிடம் பூச் செண்டுகளை வாங்கிக் கொண்டு காலைக்கடன்களை முடித்துக் கொள்வோம்.

வீட்டில் இருந்த சிறிய சுருட்டுக் கைத்தொழிலகத்தில் வேலையில் ஈடுபட்டிருப்பவர்களுக்குப் பராக்காக ஒருவர் பெரிய புராணமோ அரிச்சந்திரன் கதையோ பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகங்களோ மறைந்து போய்விட்ட பெரிய எழுத்து இலக்கியங்களோ உரக்கப் படித்துக் கொண்டிருப்பர்.

சில சமயம் தொழிலாளர்கள் நாட்டார் பாடல்களைப் படிப்பார்கள். காமக்களி சார்ந்ததால் அச்சேறாமல் போய்விட்ட "கத்தரிக்காய்க்கறிக் கூடைக் காரி கைநிறையக் காசு தாறன் வாடி" போன்ற அரிய பாடல்களை இரசித்து பாவனை பண்ணிப் பண்ணி அவர்கள் பாடுவார்கள்.

"கல்லு முள்ளுப் பத்தையடா போடாபோடா
கம்பளம் விரிக்கிறன்டி வாடி வாடி" எனத் தொடரும் அப்பாடல் பின் எழுத்துக்கள் அஞ்சுகிற மாதிரி தொடர்ந்து செல்லும்.

இப்படி எத்தனை எத்தனை இன்று வழக்கிலில்லாத இலக்கியங்களை அவர்கள் அனுபவித்தனர். நமக்கு இவை எல்லாம் பள்ளிக் கூடங்களாயிற்று.

சிறு வயதிலேயே வீட்டில் பாரதி பாடல்கள் பிரபலமாகியிருந்தன.

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஆயிரம் முட்டு மோதல்களும் முரண்பாடுகளும். அவர்கள் ஒற்றுமைப்படும் இடம் கவிதைகள் சம்பந்தப்பட்டதாகும்.

சகுந்தலை காவியத்துள் குறிப்பிட்ட ஒரு பக்கத்தில் வாசனைப் பொடியை கொட்டி வைத்து உனது காதலை வெளிப்படுத்தினாய் என்பார் அப்பா. நானெங்கே உங்களைக் காதலித்தேன், பாரதியாரின் கண்ணன்பாட்டுக்குள் வாசனைப் பொடியை கொட்டி வைத்துத்தந்தது நீங்களாக்கும் என்பாள் அம்மா.

இருவருமே அந்த நாட்களில் இலங்கைப் பத்திரிகைகளிலும் இந்தியப் பத்திரிகைகளிலும் வரும் கவிதைகளை கத்தரித்துச் சேகரித்து வைத்துக் கொள்வதும் தடித்த அட்டைக் கொப்பிகளில் அவற்றைப் பிரதி எடுத்துப் பாதுகாப்பதுமாக இருப்பார்கள். அவற்றில் ஒன்றைக் கூட நான் பேணிப் பாதுகாத்து உடமையாக்கிக் கொள்ளவில்லையே என்பதே எனது கவலை.

அப்பா சிங்களப் பகுதிகளில் நெடுங்காலம் வர்த்தகராக இருந்தவர். அம்மா ஆங்கிலம் கற்று, பின் ஆசிரியராக இருந்தவர். நமது வீட்டில் சிங்களக் கவிதைகள், ஆங்கிலக் கவிதைகள் எல்லாம் அவ்வப்போது விருந்தாட வரும்.

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வாய்த்த மோதல் நிறைந்த வாழ்க்கையில் எனக்குச் சந்தோசமில்லை. எனினும் அவர்கள் இருவரும் கவிதைகளில் காட்டிய ஈடுபாடு எனக்கு ஒரு அதிசயமானதாக அற்புதமானதாகவே இன்றும் படுகிறது. கவிதைக்கு வாழ்வில் என்றுமே ஒரு இடம் இருந்து வந்திருக்கிறது என்பதற்கு அவர்களே சாட்சி.

இத்தகையவர்களால் தான் சங்ககாலத்து இலக்கியச் செல்வங்கள் எமது கைகளிற்குக் கிட்டியது. இவர்களே கிராமத்துப் புல்வெளிப் பூக்களாகப் பூத்து உதிர்ந்து போய்க்கொண்டிருத நாட்டார் இலக்கியங்களை நமக்குத் தந்தவர்கள். நான் கவிஞன் என்கிற வகையில் இத்தகைய மனிதருக்கு என்றென்றுமே கடமைப்பட்டவன்.

1956 லும் 1958 லும் நடந்த கலவரங்கள் 'மத்துகம' என்கிற சிங்களச் சிறு நகரில் பிரபல வர்த்தகராக இருந்த எனது தந்தையை ஈழத்துக்குத் திரும்ப வைத்தது. கலவரத்துக்குப் பின்னரும் அவர் தமது வர்த்தகத்தை மத்துகமவில் தொடர்ந்திருக்கலாம். அன்று "எல்லைப் பிரதேசங்களைச் சிங்களக் குடியேற்றங்களில் இருந்து பாதுகாப்பீர்" என்கிற அன்றைய தேசியக் கோரிக்கைக்கு அவர் தலைபணிந்தார்.

இலகுவான வாழ்க்கையை உதறிவிட்டுத் தமது ஆஸ்துமா நோயுடன் காடுகள் சூழ்ந்த வன்னிப்பகுதியில் எனது தந்தை சிறிய விவசாயப் பண்ணை ஒன்றை ஆரம்பித்தார். பின்னர் எனது வாழ்க்கை, காடுகளுடனாயிற்று. இப்போது எனக்குக் காடுகளில் சுற்றுவதற்கு இரண்டு துணைவர்கள் இருந்தனர்.

ஒரு துணை எனது தம்பி சிவா; மற்ற துணை எனது தந்தையாரின் துப்பாக்கி. வன்னியில்தான் நான் முதன்முதலாகத் துப்பாக்கியையும் 303 ரைபிளையும் சந்தித்தது.

காடுகளில் துப்பாக்கியும் கையுமாகச் சுற்றிய அந்த இளம் நாட்களில், நாட்டுப்பாடல்களும், சங்க இலக்கியங்களும் என்மீது தொற்றிக் கொண்டன. பின்னர் அவை இறங்கவும் இல்லை. நான் அவற்றை இறக்கிவிடச் சொல்லிக் கேட்கவும் இல்லை.

எனது கல்வியும் அங்கிங்கெனாதபடி இலங்கை எங்கும் தொடரப்பட நேர்ந்தது. இதுவும் பல்வேறுபட்ட புவியியல் பண்புகளுடனும் சமூகத் தன்மைகளுடனும் பழக்கப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை எனக்குத் தந்தது.

1975 க்கும் 80 க்கும் இடையில், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் சகல அம்சங்களுள்ளும் எனது வாழ்வு விரிந்தது. இரண்டு வருடங்கள் மாணவர் தலைவனாக வேறு இருந்தேன். எனது பல்கலைக்கழக வாழ்வில், விரிவுரை மண்டபங்களுள் நான் கற்றுக் கொண்டது பெரும்பாலும் ஒன்றுமில்லை என்றே தோன்றுகின்றது. ஆனால், பரந்துபட்ட கலந்துரையாடல்கள், நூலகம், ஆய்வு, கிளர்ச்சிகள், இளையதலைமுறைக் கலைஞர்களது தொடர்பு என, விரிவுரை மண்டபத்துக்கு வெளியில், இந்த வாழ்வு எனக்கு நிரம்பவே கற்றுத் தந்தது. ஈழம் என்கிறபோது, அதுவும் குறிப்பாகக் கலை, இலக்கியம் பற்றிப் பேசுகிற போது, நம் விமர்சகர்கள் பற்றிய ஞாபகம் வருவது இயல்பானது.

கைலாசபதி, சிவத்தம்பி போன்றோர் ஆகட்டும், தளைய சிங்கத்தின் நண்பர்களாகட்டும், எவ்வளவு அகன்ற, தம்முள் முரண்பட்டு, முரண்பாடுகள் ஊடாகப் பங்களிப்புச் செய்த விமர்சகர்களுடன் நான் நட்புப் பாராடியிருக்கிறேன். இவர்களிடம் கனி மட்டுமே கவர்ந்து கொண்டவன் நான். இந்தப் பரந்துபட்ட விமர்சகர்களின் சந்திப்பும் நட்பும், எனக்குக் கிடைத்த இனியதும் பயனுள்ளதுமான அனுபவமாகும்.

எனது இளமைக் காலத்தில் எனது மண்ணில் இரண்டு அரசியல் அருவிகள் பிரவகித்தன. ஒன்று தமிழ் மக்களது பிரதேச, மொழி அரசியல் உரிமைகளை மையப்படுத்தியிருந்த தேசிய வாதிகளின் போராட்டம். அடுத்தது யாழ்க்குடாநாட்டில் ஓங்கியிருந்த சாதி ஒடுக்குதலுக்கு எதிரான கோரிக்கைகளில் மையப்பட்டிருந்த இடதுசாரிகளின் போராட்டம்.

தீயவாய்ப்பாக இந்த இரண்டு அருவிகளும் முன் நோக்கிய திசையில் நகர்ந்த போதும், ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளவோ கை கோர்த்துக் கொள்ளவோ பிடிவாதமாக மறுத்தன.

இந்த இரண்டு போக்குகளும் தமது முற்போக்கான அம்சங்களில் முடிச்சுப் போட்டுக் கொண்டிருக்குமானால் நாம் என்றோ மீட்சி பெற்றிருப்போம்.

என் தந்தை போன்ற தமிழ்த் தேசியவாதிகள், சாதிப் பிரச்சினையில், காந்திய சீர்திருத்தவாதப் போக்கை ஆதரித்தனர். வன்முறை தொட்ட புரட்சிகரப் போராட்டப் போக்கை நிராகரித்தனர். நான் போரட்டத்தை, அல்லது வீட்டைக் கைவிட நேர்ந்தது. வீட்டை நான் கைவிட்டேன்.

அன்று, தமிழரது தேசிய சமவத்துவத்துக்கான போராட்டமும், சாதிச் சமத்துவத்துக்கான போராட்டமும் பிளவுபடுத்தப்பட்டு, பகைப்படுத்தப்பட்டுக் கையாளப்பட்டமை இந் நிலைமையைத் தீவிரப்படுத்தியது.

சமகாலத்தில் இரண்டு போராட்டங்களும், தமிழ் பேசும் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்துள் ஒன்றிணைந்து வருகிறதில், தந்தை போன்ற தேசியவாதிகளது ஆதரவை அது ஈட்டி வருகின்றதை சமீபத்தில் ஈழம் செறபோது கவனித்தேன். மூன்றாம் உலக நாடுகளின் மார்க்சிய அறிஞர்களால், இத்தகைய இயங்கியல் போக்குகளிலிருந்து கற்றுக் கொள்ளப்பட வேண்டியவை நிரம்பவும் உண்டு என்பதை உணர்ந்தேன்.

வீட்டில் நிலவிய சூழலில், தமிழ்மக்களின் தேசியக் கோரிக்கையின்பால் ஈடுபாடு காட்டிய என்னை 1960 களின் நடுப்பகுதியில், ஆயுதக் கிளர்ச்சியாக முதிர்ந்த இடது சாரி அணியினரின் சாதி ஒடுக்குதலுக்கு எரிதான போராட்டங்கள் ஆகர்சித்தன. உலகத்திலும் புத்தகங்களிலுக் பாதி சிவப்பாய் இருக்கிற விடயமும் மெல்லப்புரிய ஆரம்பித்தது.

இத்தகைய ஒரு பாதையில் நீண்டகாலம் நடந்து சென்றே தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் முன்னணியில் நிற்கும் மக்களுடன் மக்களாக நிற்கும் ஒரு இடதுசாரியாக நான் வளர்ச்சியடைந்தேன்.

அன்று தேசியவாதிகளின் போராட்டங்களும் இடதுசாரிகளின் போராட்டங்களும் பிளவுபட்டிருந்தன. எனினும் இவை பிளவுபட்டிருந்தபோதும் மக்களது பங்களிப்பையும் தலைமையையும் கொண்டிருந்தன.

இன்று இடது சாரிப் போக்கும் தமக்குள் இணங்கி ஒன்றை ஒன்று செழுமைப் படுத்தி வளருகிற சூழல் உருவாகி வருகிற போதும், இவை இளைஞர் அணிகளாகவே இருப்பது துன்பம் தருகிறது.

காலம் மேலும் மேலும் வெற்றிகளை ஈட்டும். இளைஞர் அணிகள் மக்கள் அணிகளாக மேம்படும் என்கிற நம்பிக்கையை ஈழத்துக் கவிஞர்கள் பாடுகின்றனர். இந்த நம்பிக்கையை ஈழத்துக் கலைஞர்கள் செழுமையுடன் வெளிப்படுத்துகின்றனர். பொது எதிரிக்கு எதிரான போராட்டமும் இடது அணியும் தேசிய அணியும் போராட்டத்தில் ஒருமைப்பட்டதால் ஏற்பட்ட பரந்துபடுகிற தன்மையும், எங்களுக்கு இயைபாக இருக்கிற வாய்ப்புகள் ஆகும். இயக்கக் குழுக்களின் மோதல், நீர் மேல் மட்டத்தில் பிளவுகளை ஏற்படுத்திய போதும், ஆழத்தில் மண் மட்டத்தில் எவையும் நம்மைப் பிளப்பதில்லை. மண் மட்டம் என்கிறபோது ஈழத்து மண்ணில் இருக்கிற நிலைமையையே குறிப்பிடுகிறேன்.

போராட்டத்தின் அவலப்பக்கம் மட்டுமே பலருக்குத் தெரிகிறது. அல்லது அப்பக்கத்தையே தெரிந்து கொள்ளப் பலரும் விரும்புகின்றனர். மனித ஆளுமையைச் செழுமைப்படுத்தும் ஆயிரம் சூழல்களும் பல்லாயிரம் சம்பவங்களும் போர்க்களத்தில் தோற்றம் பெறுகின்றன. அங்கு மனிதாபிமானம் ஓர் உன்னதமான பூஞ்சோலைபோல் பூத்துப் பொலிவதையும் சிறந்த கனித்தோட்டம் போல் காய் கனிகளோடு குலுங்குவதையும் பலர் கண்டுகொள்வதில்லை. முரிந்த கிளைகளையும் சருகுகளையும் அவற்றின் மீது சிந்தியுள்ள உப்புக்கரிக்கும் கண்ணீர் முத்துக்களையும் மட்டுமே இவர்கள் தேடுகின்றனர். இரத்த வாடையை மட்டுமே சுவடு பிடித்து இருதரப்புப் பிணங்களை மட்டுமே கணக்கெடுப்பதில் இவர்கள் கருத்தாக இருக்கின்றனர்.

நமது தேசிய இன ஒடுக்குதலின் அரசியல் நமது இருப்பை கணத்துக்குக் கணம் அச்சுறுத்துகின்றது. நாம் ஒரு மலரை முகர்கின்றபோது துப்பாக்கி வெடிக்கும் ஓசையைக் கேட்கிறோம்.

இப்போதெல்லாம் காடுகளில் நாம் நடக்கும்போது யந்திரத் துப்பாக்கிகள் சடசடக்க மேலே பிணந்தின்னிக் கெலிக்காப்டர்கள் சிறகடித்துப் பறக்கின்றன.

1983 ந் ஆரம்ப காலங்களில் ஒருநாள் அதிகாலையில் என்று ஞாபகம். எனது இழந்து போன காதலி "ஆரி மக்சிமோட்டோ"வை முதன் முதலில் அணைத்து முத்தமிட்டபோது, யாழ்ப்பாணம் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இருந்த மோட்டார் வாகனங்களைப் போராளிகள் குண்டுவீசித் தாக்கி அழித்தனர். யாழ்நகரையே அந்த வெடிகுண்டுகளின் ஒலி அதிரவைத்தது. பின்னர் பொழுது விடிந்து வெகு நேரம்வரை அந்த அழகிய யப்பானிய சினேகிதியுடன், பெருமிதத்துடன் எமது விடுதலைப் போரைப் பற்றியும், நமது போராளிகளைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தேன்.

விடுதலைப் போராட்டத்தில் இணைந்து நேரடியாகப் பங்கு கொள்ளும் தீர்மானத்தை 'மல்வானை' என்ற முஸ்லீம் கிராமத்தில் தங்கியிருந்தபோது எடுத்தேன். நாடு இனக்கலவரத்தில் எரிந்து கொண்டிருந்தது. நான் அந்த அழகியுடன் யப்பான் நாட்டுக்குத் தப்பி ஓடத் தயாராக இல்லை. ஆய்வுமட்டத்தில் ஈழ விடுதலைக்குத் தொடர்ந்து உதவலாம் என்கிற ஆரி மக்சிமட்டோவினதும், முஸ்லிம் நண்பர்கள் சிலரதும், தோழர் லோகநாதனதும் ஆலோசனைகளைப் புறந்தள்ளிவிட்டு நேரடியாக விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொள்ளும் ஆர்வத்துடன் மல்வானையிலிருந்து புறப்பட்டேன். இதுவே நமது காதலுக்கு இறுதி அத்தியாயமாக அமைந்தது.

1983 ஆம் ஆண்டு ஜூலைக் கலவரங்களில் எனது உயிர்காத்த முஸ்லிம் மக்களை நான் மறந்து போய் விடாது, அவர்கள் தொடர்பான ஆய்வுகளை விடுதலைக் கண்ணோட்டத்துடன் மேற்கொண்டேன்.

தேசிய இன ஒடுக்குதலின் அரசியல், நமது இருப்பைக் கணத்துக்குக் கணம் அச்சுறுத்துகிறது.

நமது கவிதைகளில், கலை இலக்கியங்களில் நாடகங்களில், வாழ்க்கையானது, கலை நயத்துடனும் போர்க் குணத்துடனும் வெளிப்படுத்துகின்றமைக்கான பின்னணி இதுதான்.

இப்படிக் கலையும் அரசியலும் பின்னிப் பிணைந்தது நம். வாழ்வு. அழகும், எழுச்சிமிக்க உள்ளடக்கமும் சேர்ந்தவை நமது கலைகள். நமது போராட்டத்தின் வெற்றிகளின் பின்னர் நாம் வேறொரு புதிய தளத்திற்குச் செல்வோம்.

இந்தியக் கவிதைகளையும் எமது கவிதைகளையும் ஒப்பிடுகிறவர்களில் பலர் இந்த இருவேறுபட்ட பின்புலங்களைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை.

மலைகளில் குறிஞ்சி பலவருடத்துக்கு ஒருமுறை பூக்கும். மருதநிலத்தில் தாமரைகள் சிரிக்கும். சிறப்பாகச் செழித்த பூக்களும் குறைவளர்ச்சியுற்ற பூக்களும் குறிஞ்சியிலும் இருக்கும். இந்த வகையில் தான் நான் இவற்றைப் புரிந்து கொள்கிறேன்.

அண்மையில் நான் எனது தாயகம் சென்று வந்தேன். போரிலும் மக்கள் நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொண்டு வாழ்கிறதைக் கண்டு நெகிழ்ந்து போனேன். குண்டுகள் தலைக்குமேல்! காற்றையும் நீரையும் கிழித்துச் சென்று கடலில் அவர்கள் மீன்பிடிக்கின்றார்கள்! ஜே. ஆரின் கனவுப்பறவையான கெலிக் கெப்ரர் கழுகுகளின் நிழல்விழுந்து ஊர்ந்து செல்லும் வயல்களை அவர்கள் உழுது விதைக்கிறார்கள். சிறுசிறு தொழிற்கூடங்களில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, நடந்துவரும் போராட்டத்துக்குத் தமது பங்களிப்பை நமது தொழிலாளர்கள் நல்குகின்றனர்.

பல்வேறு இயக்கங்களையும் சேர்ந்த இளைய போராளிகளின் கால்கள் நமது கடற்கரைகளில், காடுகளில், வயல்களில், தெருவீதிகளில் படிகின்றன.

மக்கள் இவர்களையிட்டுப் பெருமைப்படக் கூடிய தருணங்களை ஒருபோதும் தவற விடுவதில்லை. தவிர்க்க இயலாத இடத்தில் விமர்சனங்களையும் கண்டனங்களையும் கூறத் தவறுவதுமில்லை. இப் போர்ப்படைகள், எப்போது மக்கள் படைகளாக விரிவடையும் என்பது தெரியவில்லைதான். இதற்காக நமது இளைய அறிஞர்கள் பணி புரிகின்றனர் என்பதும், இதனைச் சாத்தியமாக்குவதற்காக நமது கவிஞர்களும் எழுத்தாளர்களும் கலைஞர்களும் உழைக்கிறார்கள் என்பதும், நிறைவு தருவனவாகும். இவை எல்லாம் ஈழத்து நிலைமைகள்.

பழுத்த இலைகளை உதிர்த்து, சிறு செடிப்பிராயத்து வேலிகளைத் தகர்த்து, விருட்சமாக எழுகிற பெருமரம் போல, இளைஞர் இயக்கமட்டத் தொடக்கப் புள்ளிகளுள் தேங்கிப் போகாமல், மக்கள் இயக்கம் என்கின்ற பெருவிருட்சமாக நமது விடுதலைப் போராட்டம் முனைப்புக் கொள்கின்றது.

இளம் போராளிக்ள் மக்கள் மயமாவதற்கும், மக்கள் போர் மயமாவதற்குமாக, எமது கவிஞர்கள் கிராமத்துத் தெருக்களில் மக்கள் சூழப் பாடுகின்றார்கள். எமது நாடகக்காரர்கள் மண் சுமந்த மேனியருக்காக ஊர்வீதிகளில் நாடகங்கள் போடுகின்றார்கள்.

சிறு பத்திரிகைகளில் இன்றும் கவிதைகள் வருகின்றன. முன்னைவிட முக்கியத்துவத்தோடு அவை மக்களால் படிக்கப்படுகின்றன. எனது தோழர்கள் இன்றும் ஆய்வு நூல்களை வெளியிடுகின்றார்கள். குழுவாத உணர்வுகளை ஒதுக்கி விட்டு இளைஞர்களும் போராளிகளும் அவற்றை வாசிக்கிறார்கள். போர்ப்பயிற்சி செய்யும் இளைஞர்கள் காதலும் செய்கிறார்கள். போராளிகள் காதலிக்கக் கூடாது என்ற இளைஞர் இயக்க மட்ட வேலிகளைத் தகர்த்துக் கொண்டு போராட்டம் மக்கள் மயப்பபடப்பட, போராட்டம் முழு வாழ்வாக விரிவடைகின்றது. போராட்டத்திற்கும் வாழ்வுக்கும் இடையிலான அந்நியப்படும் பண்பை, நமது வாழ்வு விரைவில் இழந்துபோகும் என்றே நம்புகின்றோம்.

இறந்துபோன நண்பர்களை அவர்கள் வாழ்ந்தபோது அறிந்திருந்ததைவிட அதிகமாக மக்கள் அறிந்து வைத்திருக்கின்றனர்.

இந்தப் பின்னணியில் வாழ்வின் குரலை, வாழ்வுக்காக, வாழ்வால் நமது, கலைஞர்கள் எழுப்புகின்றனர். நானும் அவர்களில் ஒருவன். நான் அவர்களுள் ஒருவன் மட்டுமே.

கடலத் தாண்டித் தமிழகம் வந்தபோது மனம் நிறைந்திருதது. எனது அருமைத் தங்கை சிறீரஞ்சினி சென்னை வந்திருந்தாள். எனது ஆயிரம் ஆயிரம் தங்கைகள் போர்க்களத்தில் இருந்தனர்.

காலம் மாறும். வசந்த நாட்களில் திடீரென ஒருநாள் குயில்கள் பாடுவது போல இது நிகழும். நமது மக்கள் வீதிகளில் கூடி நின்று ஆரவாரிப்பார்கள். நமது தோழர்கள் வானத்தை நோக்கித் துப்பாக்கிகளை முழங்குவார்கள். ந்மது கவிஞர்களும் ஆனந்தக் கண்ணீர் வடிய மக்கள்முன் தோன்றுவார்கள்.

இத்தகைய மகத்தான ஒரு விடுதலைப் போராட்டப் பாதையில்தான் எத்தனை நெளிவு சுளிவுகள்? எத்தனை சிக்கல்கள்?

தோல்வி, ஏமாற்றம், சாக்காடு, கயமை, சுயநலம், சதி, தப்பி ஓடுதல் எல்லாம் நம் வாழ்வை அலைக்கழிக்கின்றன.

விடுதலைக் கரங்கள் வழி தவறிக் கலைக்கரங்களாக மாறி விடுவதும் உண்டு. இத்தகைய தருண்ங்களில் தமிழக மக்களது ஆதரவு நமக்கு மேலதிகப் பாதுகப்பைத் தருவதாகும்.

உங்களுக்கும், இந்தக் கொங்கு நாட்டுக்காரர்களுக்கும் நன்றி. எனக்கு ஈழவிடுதலை வரலாற்றில் சிறு இடமாவது இருக்குமாயின், இந்தக் கொங்கு நாட்டுக்காரர்கள் எனது உயிரையும், எனது கவிதைகளையும் நெருக்கடி மிக்க ஒரு கால கட்டத்தில் மாதுகாத்தனர் என்று எழுதப்படட்டும்.

எமது விடுதலைப் போராட்டம், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், மலையகத்திலும், முஸ்லீம் பிரதேசங்களிலும் விடுதலை இயக்கங்களின் அகத்தும் புறத்துமிருத பலரது வாழ்வைப் பலி கொண்டிருக்கிறது. இது துயரம் மிக்கதே. எத்தகைய ஒரு புகழ்மிக்க மரணத்தையும் விட வாழ்வு உன்னதமானது என்பதை நாம் நன்கு அறிவோம்.

எதிர் காலத்தை நமக்கு வென்று தருவதற்காக, தம்மைப் பலி கொடுத்த பல்வேறு விடுதலை இயக்கங்களைச் சார்ந்த போராளிகளுக்கும், புறமிருந்து போராடிய மக்களுக்கும், கவிஞர்களுக்கும் முன் நான் மிகவும் சிறிய மனிதன் என்பதை உணருகின்றேன்.

எனது கவிதைத் தொகுதியை வெளிக் கொணரும் யாழ் பதிப்பக நண்பர்களுக்கும், தேர்ந்த கலைத்துவத்துடன் அச்சுப் பதிப்பைக் கையாண்டுள்ள 'பிரின்டோ பேக்' அச்சக நண்பர்களுக்கும், குறிப்பாக, அச்சுப் பருவத்தில் பிள்ளைத்தமிழ் போல யாவற்றையும் அழகுபடுத்திய கவிஞர் புவியரசுக்கும் எனது நன்றிகள்.

தோழமையுடன்
வ. ஐ. ச. ஜெயபாலன்
கோவை, தமிழகம் 8-1-1986


-------------------------------------------------

வசந்தகாலம் 1971


காடுகள் பூத்தன.
குயில்கள் பாடின.
எந்த வசந்தமும் போலவே இனிதாய்
எழுபத் தொன்றிலும் வசந்தம் வந்தது.
இராமன் ஆளினும் இராவணன் ஆளினும்
ஊர் ஊராக என்றும் போலவே
எந்த ஓர் பெரிய சவால்களுமின்றி
அதே அதே பெரிய குடும்ப ஆதிக்கம்
அந்த வசந்த நாளிலும் தொடர்ந்தது.
சேற்றில் உழல்வதை இயல்பாய்க் கொள்ளும்
எருமைகள் போலச் சொரணைகள் செத்த்
'விதியே' என்னும் கிராமியப் பண்பை
அந்த வசந்த நாட்களில் புதிதாய்
எந்த ஓர் விசயமும் உலுப்பிடவில்லை.
எந்த வசந்த நாட்களும் போலவே
அந்த வசந்த நாட்களும் நடந்தன.
எனினும் எனினும் இலங்கைத் தீவில்
சிங்களக் கிராமப் புறங்களில் மட்டும்
இளைஞர்கள் சிலபேர் ஒருவரை ஒருவர்
இரகசியமாகத் தட்டி எழுப்பினர்.
நீண்ட நீண்ட இரவுகள் விழித்து
இருளில் தூங்கும் மக்களுக்காக
மலைகளை அகற்றும்
பரம ரகசியம் பேசிக் கொண்டனர்.
திடீரென அந்த வசந்த நாட்களில்
தெருக்கள் தோறும் துப்பாக்கிச் சன்னதம்
குடியானவரைத் திடுக்கிட வைத்தது.

வீதி மருங்கெலாம் இரத்தப் பூக்கள்,
இருண்ட அந்தக் கிராமங்கள் தோறும்
எத்தனை எத்தனை இள ஞாயிறுகள்
கரிசல் மண்ணுள் புதைக்கப்பட்டன.
குயில்கள் பாட
திருமண ஊர்வலம் போல வந்த
எழுபத் தொன்றின் வசத காலம்
ஆந்தைகள் அலற
மரண ஊர்வலமாகக் கழிந்தது.

எங்கள் கிராமங்கள் மண்வளம் மிகுந்தவை
எதைப் புதைத்தாலும் தோப்பாய் நிறையும்.

1980.

-------------------------------------------------

ஈழத்து அகதி


கரிய முகத்திரை நீக்கி
துயின்று கிடந்த பூமியின் இதழில்
ஆதவன் முதல் முத்தம் பதித்தான்.

அலைகள் எறிந்து
வெண் திரை ஏந்தும்
நீலக் கடலின் பாதையை மறித்து
கொட்டிக் கிடக்கும்
வெண் மணல் பின்னே
நம்பிக்கை துலங்கும்
இராமேஸ்வரத்துக் கோபுரமாக.

சுறாக்கள் கழுகுகள் என
தமிழரின் பிணங்கள் ருசிப்பட்டலையும்
சிறீலங்காவின் படகும் விமானமும்
பாதாளத்தில் எங்கோ வீழ்ந்தன.
எருமையோடு மரண தேவன்
எல்லைக் கோட்டின் அப்பால் நின்றான்.
கல் இடுக்குகளில்
மண்ணைப் புரட்டி
புல் இதழ் விரிக்கும் அறுகினைப் போல்
தொடுவான் இடற
சுதந்திரச் சிறகுகள் விரித்ததென்
ஆத்மா.

என்னுடன் படகில் இருந்த
மனிதரின் கண்கள்
நீண்ட நாட்களின் பின்னர் சுடர்ந்தன.

எம்மரும் கடலை
எம் தாய் மண்ணின் எழில் மிகு கரைகளை
பூச் செண்டுகளாய்
ஊர் மனை தொடுத்த நம் வீதிகளை
இழந்து போனோம்.

எங்கும் கண்களைக் கட்டி
காக்கிகள் போர்த்து
துப்பாக்கிகளில் அறையப்பட்ட
சிங்களம் பேசும் நடைப்பிணங்கள்.

வாழ்விடம் என்கிற சிறப்பினை இழந்து
பதுங்கும் குழிகளாய் எங்கள் வீடுகள்.

துயர்களின் நடுவிலும்
ஒடுங்குதலறியா அறுகினைப் போல்
சுதந்திரச் சிறகுகள் தொடுவான் இடற
எழுந்த என் ஆத்மா
"தப்பி ஓட முனைந்திடேல்" என்று
உறுதியாக என்னைப் பணித்தது.

"பின் வாங்குதலே இது
மரணத்தை வெல்வோம்."

1985.

-------------------------------------------------

சூரியனோடு பேசுதல்

கண் மலர
நாள் விடியும்

ஓடுகின்ற பஸ்சின் வெளியே
என்றும் இளமை மாறாத எம் உலகம்.
மஞ்சள் முகம் மலர
சீனத்துத் தேவதையாய்
சுவர்க்கம் இருந்து
சூரியன் எழுந்து வரும்.

கரும்புத் தோட்டத்தின் மீது
கழிகின்ற கிராமத்து வீதிகளில்
தொழிற்சாலை ஒன்றின் இரும்புக் கழிவுகளில்
தலை நிமிர வுள்ள மானிடத்தின்
பாதை திசையெல்லாம்
இருள்துடைத்து
நம்பிக்கைக் கோலம் எழுதுகின்ற சூரியனே!

நேற்று அதிகாலை
என்னுடைய தாய் நாட்டின் காடுகளில்
துணை வந்த தோழர்களோடு
உன்னை நன் எதிர் கொண்டேன்.

நேற்று இள மாலையில்
இருள் கவியும் கால்மீது
போராடி முன்னோக்கும் படகில்
பிரியும் உன் முகம் நோக்கி
உள்ளம் கிளர்ந்திருந்தேன்.

இன்று அதிகாலை
தமிழகத்தில்
ஓடுகின்ற பஸ்சின் ஜன்னலால்
முத்தமிட்டாய்.
கண் விழித்த எந்தன் கைகளுக்குள்
ஒரு புதிய நாளைப் பரிசு தந்தாய்.

தீ நடுவே ஒரு பூவாய்
போர்க் களத்தில் உயிர்த்திருக்கும்
எங்களது வாழ்வுக்கு
இந்நாளை நான் தருவேன்.

மீண்டுமென் தாய் நாட்டின்
கரைகளிலே
எம்முடைய கால்களிலே எழுந்து நின்று
உனைக்காணும் நாட்களை மீட்டெடுக்க
இந்நாளை நான் தருவேன்.

1985

--------------------------------------

உயிர்த்தெழுந்த நாட்கள்

அமைதிபோல் தோற்றம் காட்டின எல்லாம்
துயின்று கொண்டிருக்கும் எரிமலை போல.
மீண்டும் காற்றில் மண் வாங்கி
மாரி மழைநீர் உண்டு
பறவைகள் சேர்ந்த செடிகொடி வித்துகள்
பூவேலைப்பாட்டுடன் நெய்த
பச்சைக் கம்பளப் பசுமைகள் போர்த்து
துயின்று கொண்டிருக்கும் எரிமலை போல
அமைதியாய்த் தோற்றியது கொழும்பு மாநகரம்.
சித்தன் போக்காய் தென்பாரதத்தில்
திரிதலை விடுத்து மீண்ட என்னை
"ஆய்போவன்" என வணங்கி
ஆங்கிலத்தில் தம் உள்ளக்கிளர்ச்சியை
மொழி பெயர்த்தனர் சிங்கள நண்பர்கள்.
கொதிக்கும் தேநீர் ஆறும் வரைக்கும்
உணவகங்களிலும்
பஸ்தரிப்புகளில் காத்திரு பொழுதிலும்
வழி தெருக்களிலே
கையை அசைக்கும் சிறு சுணக்கடியிலும்
திருமலைதனிலே படுகொலை யுண்ணும்
தமிழருக்காகப் பரிந்துபேசுதலும்
பிரிவினைக் கெதிராய்த் தீர்மானம் மொழிதலும்
இன ஒற்றுமைக்கு
பிரேரணைகளும் ஆமோதிப்பும்
இவையே நயத்தகு நாகரிகமாய்
ஒழுகினர் எனது சிங்கள நண்பர்கள்.

வழக்கம்போல வழக்கம்போல
அமைதியாய் திகழ்ந்தது கொழும்புமாநகரம்.
கொழும்பை நீங்கி
இருபது கி.மீ. அப்பால் அகன்று
கற்கண்டை மொய்த்த எறும்புகள் போன்று
ஆற்றோரத்து மசூதிகள் தம்மை
வீடுகள் மொய்த்த
மல்வானை என்ற சிறுகிராமத்தில்
களனி கங்கைக் கரையில் அமர்ந்து
பிரவாகத்தில் என் வாழ்வின்பொழுதை
கற்கள் கற்கள் கற்களாய் வீசி
ஆற்றோரத்து மூங்கிற் புதரில்
மனக் குரங்குகளை இளைப்பாறவிட்டு
அந்த நாட்களின் அமைதியில் திளைத்தேன்.
தனித் தனியாகத் துயில் நீங்கியவர்
கிராமமாய் எழுந்து
'இந்நாளைத் தொடர்வோம் வருக' என
பகலவனதன்னை எதிர் கொண்டிடுதல்
ஏனோ இன்னும் சுணக்கம் கண்டது.
கருங்கல் மலைகளின் 'டைனமற்' வெடிகள்
பாதாள லோகமும் வேரறுந்தாட
இன்னமும் ஏற்றப் பட்டிடவில்லை
இன்னமும் அந்தக் கடமுடா கடமுடா
'கல்நொருக்கி' யந்திரஓட்டம் தொடங்கிடவில்லை;
பஸ்தரிப்புகளில்
'றம்புட்டான்' பழம் அழகுறக்குவித்த
தென்னோலைக் கூடைகள் குந்திடவில்லை,
நதியினில் மட்டும்
இரவு பகலை இழந்தவர் போலவும்,
இல்லாமையின் கைப் பாவைகள் போலவும்
பழுப்புமணல் குழித்துப் படகில் சேர்க்கும்
யந்திர கதியுடைச் சிலபேர் இருந்தனர்.
எனினும் சூழலில் மனுப்பாதிப்பு
இவர்களால் இல்லை.
தூர மிதக்கும் ஏதோ ஒருதிண்மம்
நினைவைச் சொறியும்.
இரு கரைகளிலும் மக்களைக் கூட்டி
எழுபத்தொன்று ஏப்பிரல் மாதம்
நதியில் ஊர்வலம் சென்றன பிணங்கள்;
இளமைமாறாத சிங்களப் பிணங்கள்.
எழுபத்தேழின் கறுத்த ஆகஸ்டில்
குடும்பம் குடும்பமாய் மிதந்து
புலம் பெயர்ந்தவைகள் செந்தமிழ்ப் பிணங்கள்;
(அதன் பின்னர்கூட இது நிகழ்ந்துள்ளதாம்)
இப்படி இப்படி எத்தனை புதினம்
நேற்று என் முஸ்லீம் நண்பர்கள் கூறினர்.
வாய்மொழி இழந்த பிணங்களில் கூட
தமிழன் சிங்களன் தடயங்கள் உண்டோ!
கும்பி மணலுடன் கரையை நோக்கிப்
படகு ஒன்று தள்ளப்பட்டது.
எதிர்ப்புறமாக மரமேடையிலும் ஆற்றங்கரையிலும்
குளிப்பும் துவைப்புமாய்
முஸ்லீம் பெண்களின் தீந்தமிழ் ஒலித்தது.
பின்புற வீதியில்
வெண்தொப்பி படுதா மாணவமணிகளின்
இனிய மழலைத் தமிழ்கள் கடந்தன.
காலைத் தொழுகை முடிந்தும் முடியாததும்
மசூதியிலிருந்து இறங்கிய மனிதர்கள்
என்னை அழைத்தனர்.
"கலவரம்" என்று கலவரப்பட்டனர்.
இலங்கையில் கலவரம் என்பதன் அர்த்தம்
நிராயுதபாணித் தமிழ்க் குடும்பங்களை
சிங்களக் காடையும் படையும் தாக்குதல்.
சிலசில வேளை முஸ்லீம்களுக்கும்
இது நிகழ்ந்திடலாம்.
தமிழரின் உடைமை எரியும் தீயில்
தமிழரைப் பிளந்து விறகாய் வீசும்
அணுயுகக் காட்டு மிராண்டிகள் செய்யும்
கொடுமைகள் தன்னை எடுத்துச் சொல்லினர்.
பருந்தின் கொடுநிழல் தோய்ந்திடும் கணத்தில்
தாயின் அண்மையைத்
தேடிடும் கோழிக் குஞ்சாய்த் தவித்தேன்.
தமிழ் வழங்குமென் தாய்த் திருப்பூமியின்
'தூர இருப்பே' சுட்டதென் நெஞ்சில்
தப்பிச் செல்லும் தந்திரம் அறியா
மனம் பதைபதைத்தது.
தென் இலங்கை என் மன அரங்கில்
போர் தொடுத்த ஓர் அந்நிய நாடாய்
ஒரு கணப்பொழுதில் சிதைந்து போனது.

ஒருமைப்பாடு என்பது என்ன
அடிமைப்படுதலா?

இந்தநாடு எங்கள் சார்பாய்
இரண்டுபட்டது என்பதை உணர்ந்தேன்.
நாம் வாழவே பிறந்தோம்.
மரண தேவதை இயற்கையாய் வந்து
வருக என்னும் வரைக்குமிவ் வுலகில்
இஷ்டப்படிக்கு
பெண்டு பிள்ளைகள் தோழர்கள் என்று
தனித்தும் கூடியும் உலகவாழ்வில்
எங்களின் குரலைத் தொனித்து
மூக்கும் முழியுமாய் வாழவே பிறந்தோம்.

எமது இருப்பை
உயர்ந்தபட்சம் உறுதி செய்யும்
சமூக புவியியல் தொகுதியே தேசம்.
எங்கள் இருப்பை உறுதிசெய்திடும்
அடிப்படை அவாவே தேசப்பற்று.
நாடுகள் என்று இணைதலும் பிரிதலும்
சுதந்திரமாக
மானிட இருப்பை உறுதிசெய் திடவே.

இதோ எம் இருப்பு வழமைபோலவே
இன அடிப் படையில்
இந்த வருடமும் நிச்சயமிழந்தது.
நான் நீ என்பது ஒன்றுமே இல்லை.
யார்தான் யாரின் முகங்களைப் பார்த்தார்?
நாவில் தமிழ் வழங்கியதாயின்
தீயில் வீசுவார்.
பிரிவினை கோரிப் போராடும் தமிழர்
ஒருமைப்பாட்டிற்கு உழைக்கும் தமிழர்
இராமன் ஆளினும் இராவணன் ஆளினும்
நமக்கென்ன என்று ஒதுங்கிய தமிழர்
தமிழ்ப் பேரறிஞர், தமிழ்ப்பேதையர்
ஆண் பெண் தமிழர்கள்
முகத்தை யார் பார்த்தார்?
களை பிடுங்குதல் போல
தெரிவு இங்கும் இலகுவாய்ப் போனது.
'சிங்கள பௌத்தர்' அல்லாதவர்கள்
என்பதே இங்கு தெரிவு.
கத்தோலிக்க சிங்களர் தம்மை
கழுத்தறுக்கும் கடைசி நிலைவரை
இணைத்துக் கொள்க;
தற்போதைக்கு முஸ்லீம் மக்களைத்
தவிர்க்க என்பதே அடிப்படைத் தந்திரம்.
மசூதியை விட்டுத் தொழுகையின் நடுவே
இறங்கி வந்த மனிதர்கள் என்னை
எடுத்துச் சென்றனர்;
ஒளித்து வைத்தனர்.
என்ன குற்றம் இழைத்தனன் ஐயா?
தமிழைப் பேசினேன் என்பதைத் தவிர்த்து
என்ன குற்றம் இழைத்தனன் ஐயா?
தமிழைப் பேசினேன் என்பதைத் தவிர்த்து
அவர்க்கும் எனக்கும் வேறுபாடேது?

நேற்றுப் பௌர்ணமி.
முட்டை உடைப்பதே பௌர்ணமி நாளில்
அதர்மமென் றுரைக்கும்
பௌத்த சிங்கள மனிதா சொல்க!
முட்டையை விடவும் தமிழ் மானிடர்கள்
அற்பமாய்ப் போனதன் நியாய மென்ன?

இரத்தம் தெறித்தும் சாம்பர் படிந்தும்
கோலம் கெட்ட காவி அங்கியுள்
ஒழுங்காய் மழித்த தலையுடன் நடக்கும்
இதுவோ தர்மம்?
ஏட்டை அவிழ்க்காதே
இதயத்தைத் திறந்து சொல்,
முட்டையை விடவும் தமிழ் மானிடர்கள்
அற்பமாய்ப் போனதன் நியாய மென்ன?

வன வாசத்தில்
இல்லாதது போன்ற இருப்பில்
கொதிப்புடன் சில நாட் கழிந்தது.
எங்கே எங்கே எமது தேசம்?
எமது இருப்பைத் தனித்தனியாகவும்
எமது இருப்பை அமைப்புகளாகவும்
உறுதிப்படுத்தும் புவிப் பரப்பேது?
இலங்கை அரச வானொலி சொன்னது
"அகதிகள் முகாம்களில் பாதுகாப்பாக
பாதிக்கப்பட்ட தமிழர்கள் உள்ளனர்."
அகதிகள் முகாமே எங்கள் தேசமாய்
அமைதல் கூடுமோ?
இலங்கை அரசின் வானொலி சொன்னது
"அகதிகளான தமிழர்கள் தம்மை
பாதுகாப்புக்காய்
வடக்குக் கிழக்குப் பகுதிகள் நோக்கி
அனுப்பும் முயற்சிகள் ஆரம்ப மென்று."
கப்பல்கள் ரயில்கள் பஸ் வண்டிகளில்
வடக்குக் கிழக்காய்ப் புலம் பெயர்கின்றோம்.
எங்கே எங்கே எம்தாய் நாடு?
எங்கே எங்கே,
நானும்நிமிர்ந்து நிற்கவோர் பிடிமண்?
நாடுகளாக இணைதலும் பிரிதலும்
சுதந்திரமாக நம் சமூக இருப்பை
உயர்ந்தபட்சம் உறுதி செய் திடவே,
இங்கு இப்பொழுதில்,
நான் நீ என்பது ஒன்றுமேயில்லை
பிரிவினை வாதிகள்
ஒருமைப்பாட்டையே உரத்துப் பேசுவோர்
காட்டிக் கொடுப்பவர்
அரசின் ஆட்கள்
கம்யூனிஸ்டுகள் பூர்சுவாக்கள்
யார்தான் முகத்தைப் பார்த்தாரிங்கு,
எமது நிலவுகை இப்படியானதே,
எங்கெம் நாடுகள் எங்கெம் அரசு?
எங்கு எம்மைக் காத்திடப் படைகள்?
உண்டா இவைகள் உண்டெனில் எங்கே?
இல்லையாயின் ஏன் இவை இல்லை?

மசூதிகளாலே இறங்கி வந்து
என்னை எடுத்துச் சென்ற மனிதர்கள்
பொறுத்திரு என்றனர்.
விகாரைப் புறமாய் நடந்துவந்த
காட்டுமிராண்டிகள்
இன்னும் களைத்துப் போகவில்லையால்
அஞ்சி அஞ்சித்
தலைமறைந் திருத்தலே தற்போது சாத்தியம்.
இதுவே தமிழன் வாழ்வாய்ப் போகுமோ?

அப்படியாயின்
இதைவிட அதிகம் வாழ்வுண்டே சாவில்!
நிலவரம் இதுவெனில்
நாங்கள் எங்கள் தாய்நாட்டில் இல்லை;
அல்லதெம் தாய்நாடு எம்மிட மில்லை.
சாத்தியமான வாழ்வை விடவும்
அதிகம் வாழ்வு சாவினில் என்றால்
எங்கள் இளைஞர் எதனைத் தெரிவார்?

முஸ்லீம்போல தொப்பி யணிந்து
விடுதலை வீரனைக் கடத்தி வருதல்போல்
கொழும்புக் கென்னைக் கொண்டு வந்தனர்.
விடுதலை வீரனைப் போல்வதை விடவும்
விடுதலை வீரனாய் வாழ்வதே மேலாம்.

கொழும்பில் தொடர்ந்தஎன் வன வாசம்
கொடிது கொங்கிறீற் வனம் என்பதனால்,
அமெரிக்க நண்பன் ஒருவனின் வீட்டில்
என்னைப் பதுக்கி வைத்தனராயின்
சொல்க யார்தான் இந்த நாட்டில்?
அந்நியன்கூட இல்லை போலும்!
அந்நியனாகவும்,
ஏதுமோர் நாட்டின மாதல் வேண்டுமே!
அமெரிக்க நண்பரும் ஜப்பான் தோழியும்
இஷ்டம் போல அளந்தனர் கொழும்பை
காட்டு மிராண்டிக் கைவரிசைகளின்
பாதகக் கணங்களைப்
புகைப்படச் சுருளில் பதித்துக் கொண்டனர்.
அங்கு என் வாழ்வின் பெரியபகுதி
பூனைகளோடும், பறவைகளோடும்!

*

வானொலி எனக்கு ஆறுதலானது
பாரதத்தின் கண்களாக
தமிழகம் விழித்து
உலகை உசுப்பும் ஓசையைக் கேட்டேன்.
சுரங்கமொன்றுள் மூடுப்பட்டவர்
தலைக்குமேலே நிலம் திறபடும்
துளைப்பு ஓசை செவிமடுத்தது போல்
புத்துயிர் பெற்றேன்.
உலகம் உள்ளது, உலகம் உள்ளது.
உலகின் வலிய மனச் சாட்சியினை
வியட்னாம் போரின் பின்னர் உணர்ந்தேன்.
காட்டு மிராண்டிகள் திடுக்குற
எழுந்தது எங்கும் உலக நாரீகம்
இந்த நாட்டில் எனக்கிடமில்லை;
இந்த உலகில் எனதிடமுள்ளது.
ஆயின்,
எங்கென் நாடு? எங்கென் நாடு?

வானொலிப் பெட்டியை வழமைபோல் திறந்தேன்
வழமை போலவே
ஒப்பாரிவைத்தது தமிழ் அலைவரிசை.
இனவெறிப் பாடலும் குதூகலஇசையும்
சிங்கள அலையில் தறிகெட எழுந்தது.
இதுவே இந்த நாட்டின் யதார்த்தம்
சிறைச் சாலையிலே கைதிகளான
எங்கள் நம்பிக்கை ஞாயிற்றின் விதைகள்
படுகொலைப்பட்ட செய்தி வந்தது
கிளாரினட் இசையின் முத்தாய்ப்போடு.
யாரோ எவரோ அவரோ இவரோ
அவஸ்தையில் இலட்சம் தலைகள் சுழன்ற
அந்தநாட்கள் எதிரிக்கும் வேண்டாம்;
பாண்டியன் வாயிலில் கண்ணகியானது
சன்னதம் கொண்ட எனது ஆத்மா.
மறுநாட் காலை அரசு நடத்தும்
'தினச்செய்தி' என்னும்
காட்டு மிராண்டிகளின் குரலாம் தினசரி
'பயங்கர வாதிகள் கொலை' என எழுதி
எமது புண்ணில் ஈட்டி பாய்ச்சியது.
குற்றம் என்ன செய்தோம் சொல்க!
தமிழைப் பேசினோம்.
இரண்டாம் தடவையும் காட்டும்ராண்டிகள்
சிறையுட் புகுந்தனர் கொலைகள்விளுந்தன;
கிளாரினட் இசையுடன் செய்தியும் வந்தது.

உத்தமனார்,
காட்டுமிராண்டித் தனங்களைத் தொகுத்து
உத்தியோக தோரணையோடு
"சிங்கள மக்களின் எழுச்சி" என்றார்;
தென்னை மரத்தில் புல்லுப் புடுங்கவே
அரசும் படையும் ஏறிய தென்றார்.
உலகம் உண்மையை உணர்ந்து கொண்டது.

துப்பாக்கிச் சன்னமாய் எனது ஆத்மாவை
ஊடுருவியது,
விமலதாசனின் படுகொலைச் செய்தி.
ஒடுக்குதற் கெதிராய் போர்க்களம் தன்னில்
பஞ்சமர்க்காகவும்,
தமிழைப் பேசும் மக்களுக்காகவும்,
உழைப்பவர்களுக்காகவும்
"ஒருநல்ல கிறிஸ்தவனாய் இறப்பேன்" என்பாய்
இப்படி நிறைததுன் தீர்க்க தரிசனம்.
விடுதலைப் போரின் மூலைக்கல்லாய்
உன்னை நடுகையில்,
ஒருபிடி மண்ணை அள்ளிப் போடுமென்
கடமை தவறினேன் நண்ப,
ஆயிரமாய் நீ உயிர்த்தே எழுக!

"அடக்கினேன்
எழுபத்தொன்றில் கிளர்ச்சியை நானும்
பிரிவினைப் போரை வேரறுத்திடுதல்
ஏன் இவ்வரசுக்கு இயலவில்லை?"
சிறிமா அம்மையார் திருவாய் மலர்ந்தார்.
'நரபலியாகத் தமிழ் இளைஞரை
வீடுவீடேறிக் கொன்று குவிப்பீர்'
மறைபொருள் இதுவே-
மீண்டும் இளைஞரின் இரத்தம் குடிக்க
மனம் கொண்டாரோ,
காறி உமிழ்ந்தேன்.

வீட்டினுள் ஜன்னலால் புகுந்த றைபிள்
கலா பரமேஸ்வரனைக் காவு கொண்டதாம்;
'அப்பாவி' என்று
முகத்தில் எழுதி ஒட்டிவைத்திருக்குமே! -
முகத்தை யார் பார்த்தார்.....
இப்படியாக ஐம்பது தமிழர்கள் யாழ்ப்பாணத்தில்-
முத்தமிட்டனர், செம்மண் பூமியை

பஸ்தரிப்புகளில் தேநீர்ச் சாலையில்
வழி தெருக்களில்
ஒருமைப்பாட்டை உரத்துப் பேசிய,
சிங்கள நண்பரை எதிர்பார்த்திருந்தேன்.
முற்போக்கான கோஷங் களோடு
கொழும்பு நகர வீதியை நிறைத்த
சிவப்புச் சட்டைச் சிங்களத் தோழரின்
முகங்களைத் தேடிய படிக்கு,
வீதிப்பக்கமாய் மொட்டை மாடியில்
கால்கடுக்க நெடுநாள் நின்றேன்.
எங்கே மறைந்தன ஆயிரம் செங்கொடி?
எங்கே மறைந்தன ஆயிரம் குரல்கள்?
கொடிகள் மட்டுமே சிவப்பாய் இருததா?
குரலில்மட்டுமே தோழமை இருந்ததா?
நான் உயிர்பிழைத்தது தற்செயலானது! -
முகத்தை யார் பார்த்தார்?

பரிதாபமாக என்முன் நிற்கும்
சிங்களத்தோழர் சிறுகுழுவே கலங்கிடல் வேண்டாம்.
உங்கள் நட்பின் செம்மைச் செழிப்பில்
சந்தேகம் நான் கொண்டிடவில்லை.
தற்போ துமது வல்லமை தன்னில்
நம்பிக்கை கொள்ள ஞாயமும் இல்லை.

சென்று வருக,
எனது உயிர்தப்பும் மார்க்கத்தில்
நின்று கதைக்க ஏதுபொழுது? என்றாலும்,
பின்னொருகால் சந்திப்போம்
தத்துவங்கள் பேச...

தமிழர் உடைமையில்
கொள்ளை போனதும் எரிந்ததும் தவிர்த்து
எஞ்சிய நிலத்தில் எரிந்த சுவரில்
அரசுடமை எனும் அறிக்கை கிடந்தது.

இப்படியாக, உயிர் பிழைத்தவர்கள்
பின்புற மண்ணையும் தட்டியபடிக்கு
எழுந்தோம்.
வெறுங்கைகளோடு -
உடைந்த கப்பலை விட்டு அகன்ற
ரொபின்சன் குரூசோவைப் போல,
குலைந்த கூட்டை விட்டு அகன்ற
காட்டுப் பறவையைப் போல.

நாம் வாழவே எழுந்தோம்.
சாவை உதைத்து.
மண்ணிலெம் காலை ஆழப் பதித்து
மரண தேவதை இயற்கையாய் வந்து
வருக என்னும் இறுதிக் கணம்வரை,
மூக்கும் முழியுமாய்
வாழவெ எழுந்தோம்!

1983

--------------------------------------

மீன்பாடும் தேன்நாடு


வங்கக்கடலுக்கோ வெண்பட்டு மணல்விரிப்பு
மலையகத்து அருவிகட்கோ பச்சை வயல்விரிப்பு
பாடும்மீன் தாலாட்டும் பௌர்ணமி நிலாவுக்கு
ஒயிலாக முகம்பார்க்க ஒய்யாரமாய்த் தூங்க
மட்டு நகரில் வாவியிலே நீர்விரிப்பு.
எங்கிருந்தோ வந்தவர்கள் எல்லாம் அனுபவிக்க
சொந்தங்கள் இங்கே துயரம் சுமக்கிறது.

காலமெல்லாம் இங்கே
கணபதியும் எங்கள் காக்கா முகம்மதுவும்
தெம்மாங்குபாட திசைகாணும் தாய் எருமை.
திசைதோறும் புற்கள் முலைதொட்ட பூமியிலே
கன்றை நினைந்து கழிந்தபால் கோலமிடும்.

காடெல்லாம் முல்லை கமழும் வசந்தத்தில்
வயல்புறங்கள் தோறும் வட்டக்களரி எழும்.
வட்டக்களரியிலே வடமோடிக் கூத்தாடும்
இளவட்டக்கண்கள்
தென்றல் வந்து மச்சியின் தாவணியை இழுப்பதிலே
தடுமாறும் கால்கள் தாளம் பிசகாது.

குதிரையிலேதாவி கொதிப்போடு இளவரசன்
போருக்குப் போவான்
கொடும்பகையில் வென்றிடுவான்.

எட்டாக வட்டமிட்டு இறுமாப்பாய்த் தலைநிமிர்ந்து
செட்டாகப்பாடிச் செழிப்பார்கள் போர்வீரர்
அண்ணாவிதட்டும் மத்தளத்தின்
தாளத்தின் சொற்படிக்கு
எல்லாமே வட்டக் களரியிலே மட்டும்தான்,
படிக்கட்டில்
பொல்லாவறுமை பசியோடு இவனுடைய
கைகோர்த்துச் செல்லக் காத்திருக்கும் வேதனைகள்.

போடியாரின் மாளிகையில் போரடித்த நெல்குவித்து
நாடோடிப் பாடல் மகிழ்ந்து பசிமறக்கும்.
ஊரின்புறத்தே ஒருநாள் நடக்கின்றேன்,

எல்லைப்புற வயலும் எழுவான் கடற்கரையும்
செல்வங்கள் எல்லாம் சொத்தாய்ப் பிறர்கொள்ள
பொட்டல்வெளியில்
கணபதியும் எங்கள் காக்கா முகம்மதுவும்
சிண்டைப்பிடித்துக் கிடக்கின்றார், என் சொல்வேன்!

1982.

ஈழத்தின் கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் தூண்டிவிடப்பட்ட மோதல்கள் தந்த துயருடன் எழுதியது.

--------------------------------------

லெனின்கிராட் நகரமும்
யாழ்ப்பாணத்துச்
செம்மண் தெருவும்


காலைத் தொழுகை அழைப்பைப் பாடும்
பள்ளிவாசல் கோபுரம் போல
உலக உழைப்பவர் எழுச்சியைப் பாடும்
வரலாறான லெனின் கிராட் நகரே!
கோடி தழும்பும் கோடா கோடி
வீரப் பதக்கமும் போர்த்த உன் மகிமையில்
மாகவி ஒருவன் காதலாகினான்.

ஹிட்லரின் கோலியாத் படைகளின் குவிப்பை
சிறு தாவீதாய் நீயெதிர் கொள்கையில்
சிரித்தன உலகின் சில தலைநகர்கள்.

சிரித்தவை எல்லாம் எதிரும் புதிருமாய்
விமானம் இத்தனை டாங்கி இத்தனை
துப்பாக்கி ஏந்தும் உருப்படி எத்தனை
என்றே போரின் வெற்றி தோல்வியை
கணிதச் சமன்பாடாக்கினர் போலும்.

விடுதலைக்காக விண்ணையும் பிளக்கும்
மானிடன் வலிமை மறந்தனர் போலும்.

பெட்ரோல் நிரப்பிய போத்தலை வீசியே
டாங்கிகள் வேட்டை ஆடிய உனது
விடுதலை வீரன் சமன் ஒரு ஹிட்லரின்
ஒடுக்கும் ராணுவ உருப்படி என்றே
கூட்டிக் கழித்துப் பார்த்தனர் போலும்!

லெனின் நகரே
இரண்டரை வருட முற்றுகைத் தீயில்
புடமிடப் பட்ட புரட்சியின் தொட்டிலே
இருள் கவிந்த யாழ்ப்பாணத்துச்
செம்மண் தெருக்களில்
விரக்தி விளிம்பில் தடுமாறுகையில்,
உதன் நினைப்பு
'மானிடர்கள்' நாமென்ற
மாட்சிதனைப் புலப்படுத்தும்.

1980.

--------------------------------------

சிறு பிராயத்துச் சிங்கள நண்பனுக்கு


ஒரு பகலாயின கால் நூற்றாண்டுகள்.
நேற்றுப் போல இருக்கிற தெல்லாம்.
'மத்துகாமத்து' மலைச்சாரல்களில்
வசந்த காலப் பட்டாம் பூச்சிநாம்;
அருவி நீரில் பொன்மீன் குஞ்சுகள்,
ரப்பர் காட்டில் தாவும் மந்திகள்,
நேற்றுப் போல இருக்கிறதெல்லாம்.

எனது பால்ய சிங்களத் தோழா!
மீண்டும் உன்னை எதிர் கொள்கஒயிலே
படபடவென்று
கிளர்ச்சி அடைந்த மாடப்புறாக்களாய்
ஆயிரம் நினைவுகள் இறகை விரித்தன;
'பியர்' மதுக் கிண்ணமாய் நுரைத்தது நெஞ்சம்.

தோழமை என்ற பேரின்பத்தில்
திளைத்திருக்கையில்
இதயத்தில் முள்ளாய் ஏதோ நெருடும்.

அந்த நாட்களில்
ஒவ்வோர் இனிய மாலைப் பொழுதிலும்
பட்டங்கள் பெற்று தலையும் நரைத்த எனது மாமா
பூப்பந்தாடும் நண்பரை விலகிக்
குதூ கலத்தைச் சாகக் கொடுத்து,
அவமானத்தால் கூனிக் குறுகி,
யார் யாரையோ இரந்து பிடித்து
சிங்களம் படித்தது நினைவிருக்கிறதா?

கூழுக்காகச் சிறுமைப் படுதலை
மிண்டி விழுங்கிய மாமாவிடத்து
எத்தனை பேர்கள் கிண்டல்கள் செய்வார்?
இதுவே எங்கள் வரலாறானது.

கைகளைப் பற்றி, கண்கள் பனிக்க
பிரியா விடையின் வஞ்சனை யின்றி
இன ஒடுக்குதலைக் கண்டனம் செய்தனை
நன்றி நண்பா!
எனினும் இதுவுமோர், கால் நூற்றாண்டுகள்
கேட்டுப் புளித்த வார்த்தைகள் எமக்கு.
அனுதாபிகளின் பட்டியல் நீண்டது.

அதிகரித்தது சுமைகளும் நண்பா
எங்களின் தளைகளை எரித்திட இறுதியாய்,
வேள்வித் தீயுள் புகுந்திடத் துணிந்தோம்!

1980.

--------------------------------------

மரீனாவின் சோகம்


நீதி கேட்டலறும்
மீனவ மனிதனின் ரத்தத்தின் மீது
வங்கக் கடல் வாடை முத்தமிடும்.
ரத்தமும் மரணமுமாய்
மண்ணின் மைந்தனைச் சபித்தவன் எவனோ?
நான் செல்லும் இடமெல்லாம் ஏன் இத்துயரம்?
என்னைச் சூழ ஏன் மானிட அவலம்?

எரிந்த பஸ்களின் அஸ்தியைத் தாண்டி
நடமாடும் காக்கி முள்வேலிகள் தாண்டி
பிரபஞ்சத்தின் சாலையாய் விரியும்
மரீனா மணலில் கால்களைப் பதித்தேன்.

இன்று கார்களின் இரைச்சல் இல்லை
கலாசாரத்தைச் சீரழிக்கின்ற
கொழுத்த மனிதர்களின் கும்பல்கள் இல்லை.
அழகுபட்டிருந்தது மரீனா எனினும்
சோகம்
இரத்தம் தோய்ந்த சோகம்.
இதுவே மனிதன் விதியா என்று
மனமுடைந்து கண்கள் கசிந்தேன்.

"அந்தப்பக்கம் போகாதே" என
காக்கி முள்வேலி ஒன்று நகர்ந்தது.
"மீனவர்கள் பயங்கரம்" என்று
இரத்த வாடை வீசும் வாயால்
என்னைப் பார்த்து எச்சரித்தது.

எங்கோ கேட்ட பழைய தொனி இது.
ஈழவன் எனக்குப் பழகிய தொனி இது.
அமெரிக்காவின் புதல்வர்களான
செவ்விந்தியரைக் கொன்று குவித்த
வெள்ளை ஓநாய்கள் எழுப்பிய தொனி இது.
தஸ்மேனியாவின் ஆதி வாசிகளை
மிருகங்களாக வேட்டை ஆடிய
வெள்ளை வேட்டுவர் பேசிய தொனி இது.
தோல் மட்டும் இங்கு கறுப்பாய் இருந்தது.
மனமுடைந்து திரும்பி நடந்தேன்.

கடற்கரை தன்னை அழகுபடுத்தல்
என்பது என்ன?
மீனவருக்கு வீடும் நீரும் அறிவும் தருதலா?
மீனவர் தம்மைக் கொன்று புதைத்தலா?
மனமுடைந்து திரும்பி நடந்தேன்.

மீனவன் ரத்தம்
வீதிப் புழுதியில் கலந்திடும் பொழுதில்
வெண்மணி அமைதியாய் இருந்தது போலும்!
கொடிகளும் கோசமும் கரங்களும்
உயர்ந்து பிளக்கும்
கோவை வானில்
வெண்புறாக்கள் பறந்தன போலும்!

1985.

--------------------------------------


முதற் காதல்


வாடைக் காற்று
பசும்புல் நுனிகளில்
பனிமுட்டை இடும் அதிகாலைகளில்
என் இதயம் நிறைந்து கனக்கும்.

அன்னையின் முலைக்காம்பையும்
பால்ய சகியின் மென் விரல்களையும்
பற்றிக் கொண்ட கணங்களிலேயே
மனித நேயம்
என்மீதிறங்கியது.

நான் இரண்டு தேவதைகளால்
ஆசீர்வதிக்கப் பட்டவன்.

"பால்ய சகியைப் பற்றி
உனது கவிதையில் ஒன்றுமே யில்லையே"
என்று கேட்பான் எனது நண்பன்.

குரங்கு பற்றிய பூமாலைகளாய்
நட்பை
காதலை
புணர்ச்சியை
குதறிக் குழப்பும்
தமிழ் ஆண் பயலிடம்
எப்படிப் பாடுவேன் என்முதற் காதலை.

கேட்கிறபாவி தன் மனையாளிடத்தும்
சந்தேகம் கொள்ளுதல்
சாலும் தெரியுமா?

அடுத்த வீட்டு வானொலியை
அணைக்கச் சொல்லுங்கள்
பஸ் வரும் வீதியில்
தடைகளைப் போடுங்கள்
இந்த நாளை
எனக்குத் தாருங்கள்.

என் பாதித் தலையணையில்
படுத்துறங்கும் பூங்காற்றாய்
என் முதற் காதலி
உடனிருக்கின்ற காலைப் பொழுதில்
தயவு செய்து
என்னைக் கைவிட்டு விடுங்கள்.

தேனீரோடு கதவைத் தட்டாதே
நண்பனே.

எனது கேசத்தின் கருமையைத் திருடும்
காலனை எனது
இதயத்துக்குள் நுழையவிடாது துரத்துமென்
இனிய சகியைப் பாடவிடுங்கள்
அவளை வாழ்த்தியோர் பாடல் நான்
இசைப்பேன்.

காடுகள் வேலி போட்ட
நெல் வயல்களிலே
புள்ளி மான்களைத் துரத்தும் சிறுவர்கள்
மயில் இறகுகளைச் சேகரிக்கும்
ஈழத்து வன்னிக் கிராம மொன்றில்
மனித நேயத்தின் ஊற்றிடமான
பொன் முலைக் காம்பை
கணவனும் குழந்தையும்
கவ்விட வாழும்
என் பால்ய சகியை வாழ்த்துக!

என் முதற் காதலின் தேவதைக் குஞ்சே!
இனிமை
உன் வாழ்வில் நிறைக.
அச்சமும் மரணமும்
உனை அணுகற்க.

ரைபிள்களோடு காவல் தெய்வமாய்
உனது
ஊரகக் காடுக்குள் நடக்குமென் தோழர்கள்
மீண்டும் மீண்டும்
வெற்றிகள் பெறுக.

ஒருநாள் அவருடன் நானும் சேர்ந்து
உனது கிராமத்து
வீதியில் வரலாம்
தண்ணீர் அருந்த உன் வீட்டின் கடப்பை
அவர்கள் திறந்தால்
எத்தனை அதிர்ஷ்டம் எனக்குக் கிட்டும்.

நடை வரப்பில்
நாளையோர் பொழுதில்
என்னை நீ காணலாம் .....
யார் மீதும் குற்றமில்லை.
என்ன நீ பேசுதல் கூடும்?
நலமா திருமண மாயிற்றா?
என்ன நான் சொல்வேன்?

புலப்படாத ஒரு துளி கண்ணீர்
கண்ணீர் மறைக்க
ஒரு சிறு புன்னகை
ஆலாய்த் தழைத்து
அறுகாக வேர் பரப்பி
மூங்கிலாய்த் தோப்பாகி
வாழ வேண்டும் எந்தன் கண்ணே.

1985

--------------------------------------

ஊட்டியின் மறுபக்கம்


பள்ளத்தாக்கில் நீட்டி நிமிர்ந்து
ஊட்டி ஏரி
அமைதியாய்க் கிடக்கும்.

நீர் தொட்டுயரும் மலைச் சாரல்களில்
புல் விரிப்பில்
நிழல் கோடு கிழித்து
ஏரியின் நீருள்
சிரசாசனம் செய்யும் கற்பூர மரங்கள்
உயரும்.
சில நாட்களின் பின் மீண்டும் தோன்றிய
பகலவனை வருக என்போம்.

படகுகள் தோறும்
புல் வெளி எங்கணும்
வீதிகள் இடத்தும்
மானிடத் தோப்பின் மலர்களும் அரும்புமாய்
வண்ண வண்ணப் பெண்கள்
குழந்தை மொட்டுகள்.

என் வயதையும் நிலையையும்
பொருட்படுத்தாது
சுட்டிப்பயலாய் சுதந்திரமாகும்
தேனீக் கண்கள்.

சுள்ளென உறைக்கும்
வெயிலும்
சில்லிடும் வாடையும்
கண்ணா மூச்சி ஆடும் சுவாத்தியம்.

குதிரைச் சவாரி முடித்து
உலகின் பசிய இயற்கையின்
பிரதி நிதிகள் கூடிய அரங்குபோல்
எழிலார்
தாவர இயல் பூங்கா பார்த்து
திரும்பி வருகையில்,
கண்டேன் ஊட்டியின் மறுபுறம்.

இலைகளை அள்ளிமுடித்து
கொண்டை போட்ட
முட்டைக் கோசுத் தோட்டத்தில் இறங்கி
ஊட்டியின் மறுபுறம் கண்டவர் எத்தனைபேர்?

உருளைக்கிழங்குத் தோட்ட நிலத்தில்
முள்ளால் மண்ணை
குத்திப் புரட்டும் உழைப்பவர் நடுவில்
இலங்கையின் மலைகளில் இருந்து
உதைத்தெறியப் பட்ட சிலருடன் பேசினேன்.

நண்பரே நமது காலம் விடிகையில்
இலங்கை மலைகளின்
ஓரடிப் பாதைகள்
மீண்டும் உமக்குத் திறந்து கிடக்கும்.
என்கிற பேச்சு
அர்த்தமற்றதா?

மானிட வாழ்வின் இயங்கும் திசைகளின்
தொலை தூரத்து இலக்குகள்
தொலைவில் இருப்பினும் எட்டாப் பொருளோ?

இயங்கும் மக்களின்
வரலாற்றின் ஓட்டத்தை
இன்றைய இடத்தில் தேக்கிட முனைபவர்
அர்த்தமற்ற பேச்சென உரைப்பர்.

மஞ்சள் பூசி
பன்றிமுள் செடிகளும்
வாடா மல்லியும்
பூஞ்சிரிப் புதிர்க்கும்
ஊட்டியின் வீதிகளூடு.

உயர்ந்த செங்கொடிகளை மீறி உயர்ந்த
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின்
மேதினச் சங்கற்பங்கள் யாவும்
அர்த்தமற்றவையா?

மக்களின் மேம்பாடும் அபிலாசைகளை
அர்த்தப்படுத்தப் போராடுகின்ற
உலக அணியில்
நானொரு கவிஞன்.

அளவுற வெட்டித் தைத்த
பசிய தேயிலைச் சட்டை போட்ட
மலைகளை விழுங்கும் பனிமூட்டத்துள்
பசுந்தளிர் பறிக்கும்
செந்தளிர் விரல்களின்
பெண்ணை நான் கேட்கிறேன்
அர்த்தமற்றதா என்னுடைய பேச்சு?

கொழுந்துக் கூடையும்
துயரும் சுமக்கும்
பெண்களின் குறும்பு விழிகளில்
சுடரும்
தொலைதூரத்து விடிவெள்ளிகளைத்
தெளிவாய்ப் பார்க்கிறேன்.
அர்த்தமற்றதோ என்னுடைய பார்வை?

மனோரம்மியமாய் இயற்கைத் தேவதை
சூரியக் குறிப்பில் திறந்து கிடக்கும்
குறிஞ்சி மண்ணில்
பள்ளத்தாக்கில் நீட்டி நிமிர்ந்து
அமைதியாய்க் கிடக்கும்
ஊட்டியின் ஏரி.

1985

--------------------------------------

அம்மாவுக்கு


அம்மா
தங்கக் கனவுகளை இழந்த
என் அம்மா.
எனக்கென
வரலாற்று நதியின் படுக்கையில்
நீ கட்டிய அரண்மனை யாவும்
நீருடன் போனது.

இன்று
கோவில்கள் தோறும் கைகளைக் கூப்பி
"பிச்சை வேண்டாம் நாயைப் பிடி" என
இறைவனை வேண்டும்
என்னுடைய அம்மா.

யாழ்ப்பாணத்து செம்மண் தெருக்களில்
வன்னிக் காட்டின்
வயல்வெளிப் புறங்களில்
கீழ் மாகாணத்து ஏரிக்கரைகளில்
முகம் அழிந்த
பாதி எரிந்த பிணங்களைப் புரட்டி
தங்கள் தங்கள் பிள்ளையைத் தேடும்
அன்னையர் நடுவில்

தமிழகத்தில்
இன்றுநான் உயிருடன் இருப்பதை அறிந்து
பாக்கியம் செய்தவள் என
மனசு நிறையும்
என்னுடைய அம்மா!

இப்படியுமொரு காலம் வந்ததே
நம்முடைய மண்ணில்

இன்று உனக்கு நான்
கதைகள் சொல்வேன்
மரணம் பற்றிய கதைகள்
கவிஞர் இருவரின் மரணம் பற்றிய
கதைகள் என்பதால்
உனக்கிதைச் சொல்வேன்.

கொடுமையானது
மொலாய்சின் மரணம்
கொடுமையின் பின்னே
வக்கிரம் அடைந்த மனிதர்கள் இருப்பர்
கொடிதினும் கொடிது
டால்டனின் மரணம்
இந்தக் கொடுமையின் பின்னே இருந்தது
வக்கிரம் மட்டுமே.

தென்னாப்பிரிக்க அன்னை ஒருத்தி
நிறவெறியரது கொடுங்கோலரசின்
வெஞ்சிறைக்குள் தன்
மைந்தனை இழந்தாள்.

தென் ஆப்பிரிக்க நாட்டின் சிறைகளும்
நமது நாட்டின்
சிறைக்ளைப் போல்வன அம்மா.

வைத்தியக் கல்லூரி ஆய்வு மேசையில்
கிடத்தப்பட்ட பிணங்களைப் போல்வர்
கொடுங்கோலாரது சிறைகளில் மானிடர்.
கவிஞன் பெஞ்சமின் மொலாய்ஸ் என்பவன்
எங்களைப் போன்றவன்
ஆப்பிரிக்கப் புதர்க் காடுகளுள்
தம்முன்னோர் முழங்கிய போர் முரசுகளை
மீட்டு எடுத்தவன்.

வெள்ளைக்கார அன்னியர்க் கெதிராய்
தன் முன்னோர் எய்த விச அம்புகளை
கூரிய ஈட்டியை
சினம் மிகுந்த நாட்டுப் பாடலை
தனது கவிதையாம் பொன் தட்டுக்களில்
ஆப்பிரிக்காவிற்குப் பரிசாய்த் தந்தவன்.

ஒவ்வொரு சமயம்
பேனா ஏந்தும் கரங்களினாலே
துப்பாக்கியினைத் தூக்கும் அவனை
தென்னாப்பிரிக்க நிறவெறிப் பேய்கள்
தூக்குமரத்தில் அறைந்தன அம்மா.

விடுதலைக் கீதம் இசைத்தபடிக்கு
கவியரங்கம் ஏறுதல் போல
தூக்கு மேடையில் ஏறிய மகனை
இறுதியாய் ஒரு தரம்
ஒரே ஒரு ஒரு தரம்
கண்டிடத் துடித்த அன்னையின் கதறல்
ஆப்பிரிக்காவை உலுக்கி எடுத்தது.

நிராகரிக்கப்பட்ட
அன்னையர் இதயக் குமுறலும் கதறலும்
உலகமெங்கும்
விடுதலைப் போரின் கவிதைகள் ஆவன.
அம்மா உனக்கு
இன்னுமோர் கவிஞனின்
கதையை நான் சொல்வேன்.

என்னரும் ஈழத் தாயக மண்போல்
விடுதலைப் போரின் விழுமியம் நிறைந்த
எல்சல்விடோர் என்கிற நாடு
அங்கும்
துப்பாக்கியோடு பேனா ஏந்தும்
பெஞ்சமின் மொலாய்ஸ் போலொரு கவிஞன்.
ரூஜ் டால்டன் என்பது அவன் பெயர்.

கொடிய எதிரியை
நன்கறிவான் அவன்
கொடிய எதிரியின் துப்பாக்கிகளின்
குண்டின் வேகமும் திசையும் அறிவான்.

எதிரிகள் அறியாத
தன்தாய் நாட்டின் மலைகளும் அறிவான்
மடுக்களும் அறிவான்.

வஞ்சகப் புரட்சி பேசிப் பேசி,
வெஞ்சமர்க் களத்தில் பதவிகள் தேடி
முதுகில் கத்தி பதிப்பதற் கென்றே
உடன் நடப்போரை
அறிந்திலன் அம்மா.

தோழர்கள் நடுவே துரோகிகள் யாரென
எப்படிப் பகுத்துக் காண்பது அம்மா?
போர்க் களத்தில்
தோழமைகள் தோல் போர்த்திய
சூழ்ச்சிக்காரரால்
கொல்லப்பட்ட அக் கவிஞனுக்காகக்
கண்ணீராலே அஞ்சலி செய்வோம்.

எல்சல்விடோரின் போர்க்களமொன்றில்
எதிரியோடு மோதி வீழ்ந்திருப்பின்
மரணத்துள்ளும்
பணிகளை முடித்தவோர் மனநிறைவிருக்குமே.
தன் துப்பாக்கியையும் பேனாவினையும்
தோழர்கள் ஏந்தித் தொடர்வார் என்கிற
ஆத்ம சாந்தி
அங்கிருந்திருக்குமே.

கொடுமையானது மொலாய்சின் மரணம்
கொடுமையின் பின்னே
வக்கிரம் நிறைந்த மனிதர்கள் இருப்பர்
கொடிதினும் கொடிது
டால்டனின் மரணம்
இந்தக் கொடுமைகள் பின்னே இருந்தது
வக்கிரம் மட்டுமே.

அம்மா!
கொலைப்பட்டிறப்பதே எனது விதியெனில்
பெஞ்சமின் மொலாய்சின்
மரணமே எனது தெரிவென அறிக.
கொலைக் களம் தன்னில் மகனை இழப்பதே
உனது விதியெனில்
பெஞ்சமின் மொலாய்சின் தாயைப் போல
விடுதலைக் கீதம் இசைத்திடு அம்மா.

1985.

------------------------

பூதம் விழுந்து கிடக்கும் மலை


உயிர்ப் பிச்சை கேட்கும் கொடியவன் போல
தளர்ந்து போனதால்,
குளிர் இவ்வேளை
நாடியைத் தடவி உச்சி முகரும்.
வெண் பூந்துகிலால் முகத் திரையிட்ட
மணமகளாக -
பனியில் அடங்காப் பசும் பேரழகை
மலைமகள் சிந்தும் வைகறைப் பொழுது.

எங்கோ பாடும் எதோ ஒரு பறவையும்
எங்கோ பூத்த ஏதோ ஒரு புஸ்பமும்
தங்கள் இருப்பின் சுதந்திரம் மகிழும்.
புகைபடிந்த ஓவியம் போன்ற
காட்சிப் புலத்தில்
சூரியக் குழந்தை சிறுகை அளாவும்.

யாழ்ப்பாணத்துக் கூரைப் பதிவினுள்
கூனிப் போன எனது ஆத்மா
முகில் பாய் விரிக்கும் ஹற்றன் மலைகளில்
நெஞ்சை நிமிர்த்தும்.
குடாவைத் தாண்டியும் உலகம் விரிவதை
அலட்சியப்படுத்தி
பைத்தியம் போலப் பழம் பெருமைக் கந்தலைத்
தேகம் முழுவதும் சூடி
முள் முடிகளையும் விலங்குகளையும்
அணியெனத் தாங்கும் யாழ்ப்பாணத்தை
வலிமை பெயரும் இளைய கரத்தால்
குடாவின் வெளியே இழுத்து வாருங்கள்
ஹற்றன் மலைகளில் நிமிர விடுங்கள்.

அரைத் தூக்கத்தில் தேயிலை நிரல்களுள்
கத்திகள் வீசியும் கூடைகள் நகர்த்தியும்
விழுந்து கிடக்கும் பெரும் பூதத்தை
விழிக்கா தென்ற குருட்டுத் துணிவுடன்
எட்டி உதைக்கும் சின்ன மனிதராள்
விலங்குகள் சுமக்கும் நாங்களும் இருக்கிறோம்.

சிவனொளி பாத மலையும் நடுங்கி
இந்து சமுத்திரக் குழிகளில் பதுங்க
ஒரு நாள் இங்கு மானிடம் விழிக்கும்.
எல்லோர் கைகளின் விலங்கும் தகரும்.
பறவைகள் போலவும் பூக்களைப் போலவும்
எல்லோர் இருப்பும் சுதந்திரம் எய்தும்.

1982

-------------------------------------------

விடை பெறுதல்


பெட்டி படுக்கையைத் தூக்கிய படிக்கு
வீதிக்கு வந்தால்
வானத்தில் முழு நிலவு.

நட்சத்திர முல்லைச் சரங்கள் அசையும்
மஞ்சத்தில்
மயங்கும் நிலவே
முகிற்திரை இழுத்து முகம் மூடாமல்
விடை தருக.

கூவத்தின் கரைகளில்
சேரிகளின் இளவரசன்
புல்லாங்குழல் இசைக்கிறான்
இன்றும்.

தென்னங் கீற்று சிறுசிறு கூட்டுள்ளும்
காங்கிரீட் பொந்துக் குகைகள் தோறும்
முடங்கிப் போனதோ ஏனைய மானிடம்?

நகரின் வறண்ட சுவர்கள் மீது
மந்திரக் கோலால் தொட்ட நிலவே
சென்னையின் மலக்குடலாக நெளியும்
கூவத்திற்கும்
வெள்ளிச்சரிகை போர்த்த நிலவே.

சுவர்க்காட்டின் நடுவில்
பல்லிமனிதனாய் உயிர்காத்திருத்தல்
சாலாது நமக்கு.

ஆயிரம் பறவையும்
ஆயிரம் மலர்களும்
காற்றும்
தத்தம் கவிதையில் வாழ்த்த
ஈழத்து மண்ணில் தோழர்களோடு
இரத்த வாடை வீசும் வீதியில்
எதிரிக்குப் புரியும் ஒரே ஒரு மொழியில்
பேச்சு வார்த்தை நடத்துதற்காக
துப்பாக்கிகளைத் தூக்கி நடப்பேன்.
ரைபிளைத் துடைத்த படிக்கு
காதலிக்கு முத்தம் கொடுப்பேன்.

முற்றங்கள் தோறும்
சிறுவரின் பொம்மைத் துப்பாக்கிக்குச்
சரணடைந்து
கைகளைத் தூக்குவேன்.

எமது சிறாரின் குதூகலச் சிரிப்பை
உயிரைக் கொடுத்தும் பாதுகாத்திட
உறுதி பூண்ட
நெஞ்சுடன் நடப்பேன்.

சென்னை நகரமே
விடை தருக.
வேய்ங்குழல் பாடும் இளவலே
வருகிறேன்.

புகலிடத்துக்கு விலையென எமது
சுதந்திரத்தை எப்படித் தருவது?

பூரண நிலவே
கேள் ஒரு வார்த்தை.
உனைப்போல் எனது நெஞ்சம் நிறைந்தது
ஒளியோடு.

விழுகிறபோது எம் புதல்வர்களுக்கு
அடிமை விலங்கைத் தருவது எப்படி?

பொம்மைத் துப்பாக்கி ஏந்திடும்
அவரிடம்
நாளை எமது ரைபிளைத் தருவோம்.
போய் வருகின்றேன்.

1985

-------------------------------------------

இரத்தம் எழுதிய கவிதை


மே பதினைந்தில்
இந்துமா கடலில்
வானம் அதிர ஓலமிட்டது
புயல் தீண்டிய கருங்கடலல்ல.
என்னரும் தீவின் மக்கள் அறிவீர்!
அன்று என் கரைகளில் சிவப்பாய்ச் சுடர்ந்தது
மேதினத் தன்றென் தோழர்கள் கட்டிய
தோரணங்களும் கொடிகளுமல்ல.
உருண்ட நம் தலைகள் சிந்திய குருதி!

கண்கள் அகன்று பிதுங்கிய முகங்களில்
கட்த்துக் கிடந்த நாவுகள் தோறும்
இரத்தம் எழுதிய கவிதையைச் சொல்வேன்.
போர்த்துக்கீசரை எதிர்த்து வீழ்ந்த என்
மூதாதையரின் கிராமியப் பாடலில்
முன்னரும் இதுபோற் கவிதைகள் கேட்டுளேன்.

கொதித்து எழுந்த நம் இளைஞரைப்போல
வெண்மணல் போர்த்த முருகைக் கற்களில்
தலைவிரித்தடின கறுத்த பனைகள்.
நெடுந்தீவின் பசும்புல் வெளியெலாம்
காட்டுக் குதிரைகள் கனைத்தன.
உப்புக் கழிகளில்
புலம் பெயர்ந்துறையும்
சர்வதேசப் பறவைகள் அரற்றின.

பருத்தித் தோட்ட வெளிகளை எரித்து
குதிரைகளுக்காய்ப் புல்வெளி விரித்த
டச்சுக் கொடுங்கோல் அஞ்ச எழுந்த என்
முன்னோர் இசைத்த போர்ப்பாடல்களை
அன்று மீண்டுமென் கரைகளிற் கேட்டேன்.

மௌனித்து நிற்பதேன் உலகம்?

முகமிழந்த என்னரும் மக்கள்
யம் மூதாதையரின் முகங்களைப் பெறுக!
பாண்டவர் தம்முள் பொருதிக் கிடக்கிறார்.
குருசேத்திரத்து மக்களே எழுக!


(நெடுந்தீவின் பயணிகள் படகினைத் தாக்கி இலங்கைக் கடற் படையினர் நாற்பதுக்கும் அதிகமானவரைக் கொன்றதால் எழுந்த கண்ணீர்க் கவிதை. நிகழ்ச்சி: மே 15, 1985)

-------------------------------------------

தாய் நிலமும் தனையர்களும்


இந்துக் கடலில்,
முஷ்டி உயர்த்திய கையினைப் போன்ற
என் அழகிய தேசமே
என்னுடன் பேசு.

நாவில் நீர் ஊற
குட்டிகள் பின்னே அலையும் நாய்களைக்
காட்டுக்குதிரைகள் உதைத்து நொறுக்கும்
'நெடுந்தீவின்' புல்வெளிகளை நாங்கள்
இழந்து படுவோமா .....

'அறுகம் குடாவில்'
தோணிகள் மீது அலைகள் எறியும்
கடலை அதட்டி,
வலைகளை விரித்து
நூறு நூறாண்டாய் முஸ்லிம் மீனவர்
பாடும் பாடலை நாங்கள் இழப்பமோ?

வரலாறொன்றின் திருப்பு முனையில்
மார்புற எம்மை அணைத்த படிக்கு
போர்க்குணத்தோடு நிற்குமெம் தாயே
சொல்க எனக்கு!

எலிகள் நிமிரவும் வளைகள் உண்டே.
உண்டே உண்டே
விலங்குகள் பறவைகள்
மரங்கள் நிமிர்ந்திட
சரணாலயங்களும் தேசிய வனங்களும்.

மனுகுமாரருக்குத்
தலைசாய்த்திடவும் பிடிமண் இல்லை.
ஏன் எம் வாழ்வில் இத்தனை சுமைகள்
ஏன் எம் பாதையில் இத்தனை இருட்டு.

முகங்கள் சிதைந்து
யோனிகள் கிழிந்து
சவக்குழிகளிலும்,
திருகப்பட்ட முலைகளோடும்
நசுக்கப்பட்ட விதைகளோடும்
முழங்காலிட்டு
சொந்த மண்ணிலும்,

குட்டப்பட்டு
தலைகுனித அகதிகளாக
உலகத் தெருவிலும்
ஏன் எங்களுக்கு இவ்விதம் எழுத்து
ஏன் எம் நெஞ்சில் இவ்விதம் நெருப்பு.

பூவார் வசந்த
மரங்களின் மறைப்பில்
காதற் பெண்களின் தாவணி விலக்கி
அபினிமலர்களின் மொட்டைச் சுவைக்கும்
இளம் பருவத்தில்
'இடுகாட்டு மண்ணைச் சுவை' என எமது
இளையவருக்கு விதித்தவன் யாரோ?

நினைவிருக்கிறதா அன்னைநாடே
கோவிலில் சர்ச்சில்
பள்ளிவாசலில்
சிறைப்பட்டவரை விடுக என்று
உண்ணாவிரதம் இருந்த சிறுவர்கள்.

அதே அதே சிறுவர்
அதே அதே சிறுமியர்.

தாமே செய்த குறும் பீரங்கிகள்
தோள்களில் சுமந்து அணி நடக்கின்றார்.

போர்த்துக்கீசியரைப் போரில் எதிர்த்த *
சிங்கள நாட்டு இளவரசனுக்குத்
தன்னுயிர் நோக்காது புகலிடம் தந்த
சங்கிலி மன்னனைப் பாடுவோம் அம்மா.

பகை நெருப்பிடையே மலர் எனச் சிரிக்கும்
சிங்களப் புரட்சியாளர்களுக்கு
இன்றும் புகலிடம் தருகிறோம் அம்மா.

உன்மரபுப் பெருமைகள் சிறக்கவே நாங்கள்
இன்றும் வாழ்கிறோம் என்னருந் தாயே!

அன்னியர்க் கெதிராய்
போர்களில் வீழ்ந்த நம்
மூதாதையர்கள்
சிறுவராய் மீண்டும் உதித்து வந்தனரோ
பணிகள் முடிக்கும் சபதங்களோடு.
எத்தனைபேரைக் களபலியாக
மீண்டும் உன்னிடம் தந்தோம் அம்மா!

பல்கலைக்கழக முன்றிலில் நின்று
தொடுவானங்களை எட்டிப் பிடித்த
எத்தனைபேரைக் களபலி தந்தோம்.
விமலதாசனை, ரவிசேகரனை
திருமலை தந்த கேதீஸ்வரனை
முல்லைத்தீவின் சிறீ எனும் தோழனை
பொன்பூச் சொரியும் நிழல் வாடிகளின்
நிழலில் நின்று
விடுதலைப் போருக்கு எம்மை அழைத்த
எத்தனை பேரை நாங்கள் இழந்தோம்.

வெடிகுண்டின்மேல் வீழ்ந்து படுத்து
தோழரைக்காத்த
'வெத்திலைக்கேணி' அன்புவைப் போல
இன்னொரு தோழனை காண்பது எப்போ?

'காரைதீவுக் கடற்கரைப் போரில்
இரண்டாம் வன்னி நாச்சியாய் எழுந்து
வீரம் விளைத்த சோபா என்ற
தேவதை போல
மீண்டுமோர் தோழியைக் காண்பது எப்போ?

சாவகச் சேரியில் எதிரியை வேருடன்
கல்லி எறிந்த நீக்கிலஸ் போலவும்
நித்திரைப் பாயில் முற்றுகையிட்ட
நூற்றுவர் நடுங்கக் கூற்றென எழுந்த
வன்னிச் சிறுத்தை காத்தான் போலவும்
கொழும்பு வீதியில் போர் முரசறைந்த
மாணவன் பரிபூரணனைப் போலவும்
இன்னொரு தோழமை எய்துமோ வாழ்வு?

விடுதலைக்கு மூலைக் கல்லாய்
இவர்களைத் தானே நாங்கள் நாட்டினோம்
விடுதலைக்குத் திசை விண்மீனாய்
இவர்களைத்தானே நாங்க எரித்தோம்.

இஸ்பெயின் மண்ணில்
கியூபா மண்ணில்
நிக்காரக்குவ மண்ணில்
இளைஞர்கள் எழுந்தது போல நாம் எழுந்தோம்.

இஸ்பெயின் அன்னை குற்றுயிராக
நெருப்பில் வீழ்ந்ததும்,
பறக்கும் வெண்புறா மாலைகள் சூடி
கியூப, நிக்காரக்குவ அன்னையர் வெற்றித் தேரில் பவனி வந்ததும்
நாம் அறிந்ததுவே.

அப்ப மாவினுள் புளிப்பினைப் போல
எங்கே இளைய விடுதலை வீரர்
மக்களினூடு தமை இழந்தனரோ
அங்கெலம் செங்கொடி வானில் எழுந்தது.
அங்கெலாம் வெண்புறா வானில் பறந்தது.

அன்னை நாடே
வரலா றொன்றின் திருப்புமுனையில்
மார்புற எம்மை அணைத்தபடிக்கு
போர்க்குணத்தோடு நிற்குமெம் தாயே
பரந்து பட்டநம் மக்களால் மட்டுமே
நீண்டநம் பாதை கடந்திடக் கூடும்.
பரந்து பட்டநம் மக்களால் மட்டுமே
வலிய நம் சவால்களை முடிப்பது கூடும்.

1986

* வெள்ளையருக்கு எதிராக மருது சகோதரர்கள் ஊமைத் துரைக்குப் புகலிடம் தந்தது போல, போர்த்துக்கீசரின் நிபந்தனைகளையும் மீறி சிங்கள கிளர்ச்சிக்காரனான நிக்கபிட்டிய பண்டாரவுக்கு (Nikapitiya Bandara) புகலிடம் தந்தான் யாழ்ப்பாணத்து இறுதி மன்னன் சங்கிலியன். 1619 இல் யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சிக்குக் காரணமான போர்த்துக்கீசரின் படையெடுப்புக்கு இதுவும் ஒரு காரணமாயிற்று.

-------------------------------------------

20 பெப்ரவரி 86 இன்
நாட்குறிப்பு


செய்தி சொல்லும் வானொலி அடங்க
தங்கையின் கூச்சல்
"யாழ்ப்பாணத்தில் விமானத் தாக்குதல்"
என் கபாலத்துள் அணு பிளந்தது.

எதாய் மண்ணில் எரிமலை வெடிக்க
எனதினம் குருத்துகள் சிதைய
ஒரு விதி
திம்பு மேசையில் எழுதப்பட்டதோ?

எங்கே பிரளயம்?
எங்கு எதாய் மண் குதறப்பட்டது?
எழுபதிலேயே சவாலாய் நிமிர்ந்த
வல்வைத் துறையிலா?
கிழங்குகள் போல
தலைமறைந்த போராளிகளின்
விளை நிலமான உரும்பிராயிலா?
யாழ்ப்பாண அரசைக் கட்டிக் காத்த
செங்குந்தப் படைகளின்
வாழையடியில் வாழைகள் நிமிரும்
கள்ளியங் காட்டிலா?
வீட்டுக்கு வீடு கலைஞர்கள் பிறக்கும்
அளவெட்டியிலா?
அறுபதுகளிலேயே பேசப்பட்ட
நிச்சாமத்திலா?

யாழ்குடா நாட்டின் எந்த ஊரில்
இனக் கொலைகாரனின் வன்மம் தீர்ந்தது?

தீயின் நடுவே...
'வியட்னாம் போல ஈழமே எழு' என
எமது கலைஞர்கள் இசைப்பது கேட்டேன்.

'ரை' கட்டி
நாமேன் இன்னமும்
பேச்சு வார்த்தை மேசையில் இருந்தோம்?
கொலைபடும் மக்களைப் புதைப்பது பற்றிய
ஆகம விதிகளை அளவளாவுதற்கா?

ஆளும் வர்க்கச் சிங்கள மொழியில்
போர் என்றாலும் போர்
சமாதானம் என்றாலும் போர்.
எதை நாம் பேச?
ஆளப்படுகிற சிங்கள மக்களோ
வாய்மொழி இழந்து
முகங்கள் இழந்து
அபினி தின்று மூச்சிழந்து
ஆளும் பேய்களின் நடைப் பாவையாக,
இந்த மனிதன் விழிக்கும் வரைக்கும்
எவருடன் பேச?
முழங்குக நமது போர் முரசங்கள்.

சமாதானப் புறாவே!
"தமிழரை கொன்றிட" என எழுதாத
ஆயுதம் பற்றிய ஹாஸ்யம் உரைத்த
சமாதானப் புறாவே....!
சமரச முயற்சி என்பது என்ன?
காட்டு விலங்கைச் சிங்கத்தோடு
நாள் ஒரு மிருகம் பேரம் பேச
நிர்ப்பந்திப்பதா?

போர் நிறுத்தம் என்பது என்ன
போர் தயாரிப்பா?

நேற்றைய குண்டு வீச்சைத் தொடர்ந்த உன்
தேய்ந்து போன கவலையைக் கேட்டவர்
இன்று இல்லை.
இதுவே விதியா?

சமாதானப் புறாவே
இந்துக்கடலில்
எங்கள் பிணங்களை அடுத்து அடுத்து
தமிழகத்து மீனவர் பிணங்கள்....
கண் தெரிகிறதா?

மக்களே! மக்களே! வீதியில் இறங்குவீர்!
கோடு வரைந்து
போருக் கெழுவீர்...
வானில் எதிரி பறந்து வருவது
அமரிக்க விமானம்
இஸ்ரவேல் விமானம்
அதிர்ச்சியடையாதீர்!
சீரழிந்த சீன விமானம்...
இனக் கொலைக்கு துணையென வந்த
மானிட இனத்தின் பகைவரைக் காண்பீர்!
இவர்களே நமது முதல் எதிரிகள்.
ஏனையோரோடுதான் நமக்குப் பேச்சு.

இன்று நமக்கு வேண்டிய தெல்லாம்
ஒரு கோடு.
முதல் எதிரிக்கும் ஏனையோருக்கும்
நடுவிலோர் கோடு.
குருசேத்திரத்து விஜயன் போல
குழம்பிடாமல் ஒரே ஒரு கோடு.

ஹிட்லருக்கும் ஏனையோருக்கும்
நடுவில் கிழிக்கப்பட்டது போலவும்
யப்பானுக்கும் ஏனையோருக்கும்
நடுவில் கிழிக்கப்பட்டது போலவும்
ஒரே ஒரு கோடு நமக்குத் தேவை.
இனக் கொலைக்கு ஆட்பட்டழியும்
நமக்குத் தேவை ஒரே ஒரு கோடு.

இக் கோடில்லாத போர் முழக்கங்கள்
தற்கொலை யாகும்.
ஓர் இனத்தின் தற்கொலை.

பனை முனையிலிருந்து அறுகம் குடாவரை
விரிந்தஎன் ஈழ தேசத்து மக்களே!
கோடறியாதவர் அறிஞர் ஆயினும்
கோடறியாதவர் கலைஞர் ஆயினும்
தற்கொலைப் பாதையில் நம்மைத் தள்ளுவர்.
ஓர் இனத்தின் தற்கொலை.

மலையக மக்களே!
முஸ்லிம் மக்களே!
தமிழ் மக்களே!
என்னரும் ஈழ தேசக் குடிகளே!
ஊர்கள் தோறும் தெருவில் இறங்குவீர்
கோடுகள் கிழிக்க!
ஊர்கள் தோறும் ஆயுதம் தாங்குவீர்
போர்களை வெல்ல!

மகத்துவங்கள் ஆயிரம் நிறைந்த
மரணத்தின் மேலும் வாழ்வே வலியது.

--------------------------------------------

நம் செயல்பாடுகள்...

மானுட விடுதலை, மானுட நேசம், பொய்மை கலைந்த நிலை, நேர்மை இவை மட்டுமே மனிதனின் இறுதி இருப்பாய் இருக்க இயலும். மானுட உச்ச அறிவின் சாரமும் குழந்தைமையும் சார்ந்த மனிதனே நாம் கனவுகாணும் நிரந்தர மனிதன். இம்மனிதன் இறுதித் தேர்வில் நடைமுறை மனிதனன்றி வேறல்லன். இவன் நெருக்கடி நேரத்தில் வெளியிடும் மொழியைப் பதிவு செய்தலே நம் இலக்கு.

மானுட விடுதலை சார்ந்த ஆக்க இலக்கியங்களையும், ஆய்வு முயற்சிகளையும் மொழி, இன, நாட்டு எல்லைகள் தாண்டிக் கொணர நாம் முயல்கிறோம்.

இன்றுள்ள கல்வி, கலை, அறிவியல், பொருளியல், பண்பாட்டு நெருக்கடிகளும் நம்மை ஒருமைப்புள்ளி நோக்கி நகர்த்துகின்றன. இயல்வதை இம்மாதிரிச் செயல்பாடுகளில் முன் வைக்கிறோம்.

யாழ் பதிப்பகம்

---------------------------------------------

இக்கவிதைகளை வெளியிட்ட

* அலை (ஈழம்)
* மல்லிகை (ஈழம்)
* மனிதன் (ஈழம்)
* பொங்கும் தமிழமுது (ஈழம்)
* தாரகை (ஈழம்)
* மக்கள் பாதை மலர்கிறது
* தாய் (தமிழ்நாடு, இந்தியா)
* படிகள் (தமிழ்நாடு, இந்தியா)

இதழ்களுக்கு எம் நன்றி

----------------------------------------------

பிழை - திருத்தம் - பக்கம் - வரி

நிலங்களின் - நிலங்களில் - 6 - 25
இடது சாரிப் போக்கும் - இடது சாரிப் போக்கும் தேசிய வாதப் போக்கும் - 12 - 24
போரிலும் - போரின் நடுவிலும் - 15 - 17
நடக்கும் - நடக்கும் பிக்குவே - 30 - 31
உலகம் உள்ளது உலகம் உள்ளது - உலகம் உள்ளது உள்ளது உலகம் - 33 - 7
குறிப்பில் - குளிப்பில் - 51 - 27

---