கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  கலாயோகி ஆனந்த கெ. குமாரசுவாமி  
 

கலாகேசரி ஆ. தம்பித்துரை

 

கலாயோகி ஆனந்த கெ. குமாரசுவாமி

கலாகேசரி ஆ. தம்பித்துரை

சுன்னாகம்:
வட-இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம்
29-10-1971

---------------------------------------------------------------------------

கலாயோகி ஆனந்த கெ. குமாரசுவாமி

கலாகேசரி ஆ. தம்பித்துரை

சுன்னாகம்:
வட-இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம்

---------------------------------------------------------------------------

ஈழநாட்டுப் பெரியோர்கள் - 1
முத்லாம் பதிப்பு: 29-10-1971.
(கலாயோகி முத்திரை வெளியீட்டு நாள்)
பதிப்புரிமை
விலை ரூபா 1-00

KALAYOGI
ANANDA K. COOMARASWAMY
Author: KALAKESARI A. THAMBITHURAI
Publishers: NORTH-CEYLON TAMIL WORKS PUBLISHING HOUSE, CHUNNAAKAM
First Edition: 29th OCTOBER 1971
Price: Re. 1-00
Printers: THIRUMAKAL PRESS, CHUNNAKAM

---------------------------------------------------------------------------

(புகைப்படம்)
கலாயோகி ஆனந்தக் குமாரசுவாமி (22-8-1877 - 9-9-1947)

---------------------------------------------------------------------------


முகவுரை

சுதந்திரம் பெற்ற ஈழநன்னாடு தம் தேசியத் தலைவர்களைக் கௌரவிக்கும் முகமாக அவர்கள் திருவுருவம் பொறித்த தபால் முத்திரைகளை வெளியிடத் தீர்மானித்துத் தமிழர்தம் பெருந் தலைவர்களாகிய கலாயோகி ஆனந்தக் குமாரசுவாமி, சிறீலசிறீ ஆறுமுகநாவலர் ஆகியோரது முத்திரைகளை ஒக்டோபர் 29ஆந் திகதி வெளியிடுகின்றது. தமிழர்தம் நெஞ்சமெல்லாம் பேருவகை பூக்கும் நிகழ்ச்சி இது.

இந்தச் சந்தர்ப்பத்திலே நமது இளந் தலைமுறையினர் அவ்விரு பெரியோர்களும் செய்த அரும்பணிகளை ஓரளவுக்காயினும் அறிது கொள்ள வேண்டிய கடப்பாடுடையர். சிறீலசிறீ ஆறுமுகநாவலர் ஆற்றிய பெரும்பணிகள் பற்றி நம் இளைஞர்கள் நூல்கள் வாயிலாக ஒரு சிறிதாயினும் அறிந்துள்ளனர்.

கலாயோகி ஆனந்தக் குமாரசுவாமி அவர்களின் கலைத் தொண்டு பற்றி அறிந்தவர்கள் மிகச் சிலரேயாவர். எனவே, அன்னாரின் தொண்டு பற்றிய சிறிய நூல் ஒன்றினை வெளியிட நாம் தீர்மானித்தோம்.

நாம் இந் நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். இந் நூலை எழுதியுதவிய கலாகேசரி ஆ. தம்ம்பித்துரை அவர்கள் நுண்கலைகள் பற்றிச் சொல்லக்கூடிய தகுதி யுடையவர்; பல சித்திரத் தேர்களையும் நுணுக்கம் மிகுந்த சிற்பங்களையும் ஆக்கி உதவியவர்; வடமாநில சித்திர வித்தியாதிகாரியாகக் கடமை புரிபவர். ஏற்கனவே ஓவியக்கலை, சிறுவர் சித்திரம், சுவர்ச் சித்திரங்கள் என்ற நூல்களை ஆக்கிப் புகழ் பெற்றவர்.

கலாயோகி ஆனந்தக் குமாரசுவாமி அவர்களைப் பற்றி ஒரு சிறிய நூல் எழுதித்தருமாறு அவரைக் கேட்டபோது, அவர் 'வீரகேசரி', 'தினபதி' என்ற பத்திரிகைகளில் ஐந்து வருடங்களுக்கு முன்பு எழுதிய கட்டுரைகளைச் சற்று விரிவாக்கி எழுதி உதவினார்கள்.

இந் நூல் கலாயோகி ஆனந்தக் குமாரசுவாமி அவர்களைப் பற்றி அறிய விரும்புவோர்க்கு நிச்சயம் பயன்படும் என்பதுறுதி. சிறிய நூலாயினும் கலாயோகி அவர்களின் உயிர்த் துடிப்பைச் சரியாகக் கொண்டுவரக் கலாகேசரி தம்பித்துரை அவர்கள் முயன்றிருக்கிறார் என்பதை வாசிப்போர் உணர்வர்.

ஈழநாட்டுப் பெரியோர்களின் சரித்திரங்களை மாணவர்க்கு உதவும் வகையில் தொடர்ந்து வெளியிட நாம் எண்ணியுள்ளோம். அதற்கு முன்னோடியாக - முதல் நூலாக - இந்நூலை வெளியிடுகின்றோம். இந்நூலை யாத்துதவிய கலாகேசரி ஆ. தம்பித்துரை அவர்களுக்கும் இதை வெளியிட உதவி புரிந்த கனக. செந்திநாதன் அவர்களுக்கும் எம் நன்றியுரியதாகுக. வழமைபோல எமது வெளியீடுகளி ஆதரித்துதவிய பொதுமக்கள் இதனையும் உவந்தேற்பர் என நம்புகிறோம்.

வட-இலங்கைத்
தமிழ்நூற் பதிப்பகத்தார்.
சுன்னாகம்,
29-10-1971.

-----------------------------------------------------------------------

கலாயோகி
ஆனந்த கெ. குமாரசுவாமி

"திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்" என்னும் மகாகவி பாரதியின் வாக்கிற்கிணங்க, இந்திய கலாதத்துவத்தை மேல் நாட்டவரும் மதிக்கும் வண்ணம் வெளிப்படுத்திய பெருமைக்குரியவர் கலாயோகி ஆனந்தக் குமாரசுவாமியாவார். இந்திய கலாதத்துவம் என்னும் பொழுது இலங்கை, சீயம், சாவகம், கம்போடியா முதலிய தென்கிழக்கு நாடுகளின் கலாதத்துவங்களும் அதனுள் அடங்கும்.

பிறப்பு

இவர் 1877ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 22ஆந் திகதி கொழும்பு மாநகரிற் பிறந்தார். தாய்நாட்டின் தன்னிகரற்ற பெருமைகளைப் பிறநாட்டவருக்கு விளங்க வைக்கும் தன்மையானது இவரது பாரம்பரியமான முதுசொத்தாகும். இவரின் தந்தையாராகிய சேர் முத்துக்குமாரசுவாமி அவர்கள்தாம் 'அரிச்சந்திர நாடக'த்தை ஆங்கிலத்தில் எழுதி விக்டோரியா மகாராணிக்குச் சமர்ப்பித்தவர் என்பதிலிருந்து இவ்வுண்மை துல்லியமாகப் புலப்படுகின்றது.

பிரித்தானிய ஆட்சியின் மாட்சிமைக் காலத்தில் கீழைத்தேச வாசிகளில் முதல் முதல் 'சேர்' பட்டம் பெற்றவரும், கிறீஸ்தவர், யூதர் அல்லாதவர்களுள் முதல் 'பாரிஸ்டர்' பட்டம் பெற்றவ்ரும் சேர் முத்துக்குமாரசுவாமி அவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனந்தக் குமாரசுவாமி அவர்களின் தாயார் எலிசபெத் கிளே பீபி என்னும் ஆங்கிலப் பெண்மணியாவார். தந்தையார் 1879இல் கொழும்பிலே அமரத்துவமெய்தினார். அதன் பின்பு, தாயாரும் தனயனும் இங்கிலாந்திலேயே வசித்து வந்தனர். விக்கிளிவ் கல்லூரியிலும் பின்பு லண்டன் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்ற இவர் 1900ஆம் ஆண்டில் தாவரவியலையும் புவியியலையும் பாடங்களாகக் கொண்டு பீ. எஸ்ஸி. பரீட்சையில் முதலாம் பிரிவிற்றேறினார். 1903இல் முதன் முதலாக இலங்கைக்கு வந்து 1906ஆம் ஆண்டு வரையும் தாதுப் பொருள் ஆராய்ச்சிப் பகுதியின் தலைவராகக் கடமையாற்றினார். இக் காலத்திலேயே 'தோரியனைட்' என்னும் கனியத்தைக் கண்டுபிடித்தார். இதற்காகவே இவருக்கு லண்டன் பல்கலைக்கழகம் கலாநிதிப் (டக்டர்) பட்டம் வழங்குக் கௌரவித்தது.

சிற்ப ஆராய்ச்சி

இந்த உத்தியோக தோரணையாக நாட்டின் பலபாகங்களுக்குஞ் செல்லும் பொழுது பாழடைந்து கிடந்த கோயில்களையும், தாதுகோபங்களையும், விகாரைகளையும், அவற்றின் சிற்பத் திறனையும் இவர் ஆராயத் தொடங்கினார். அத்துடன் கிராமப்புறங்களிலிருந்து தொழில் புரிந்து வந்த சிற்போவியப் பரம்பரையினர் சிலரையுஞ் சந்தித்து அவர்களது குருகுலக் கல்வி முறையைப் பற்றியும் ஆராய்ந்துள்ளார். இச் சுதேசக் கலைகளுக்குப் புத்துயிர் அளிப்பதுடன் மேல்நாட்டு நாகரிகத்தில் நாட்டங் கொண்டுள்ள இலங்கை மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தும் எண்ணத்துடனும் 'இலங்கைச் சீர்திருத்தச் சபை'' என்னும் கழகத்தை 1905இல் ஆரம்பித்தார். அச் சபையின் வெளியீடான 'இலங்கைத் தேசிய சஞ்சிகை'யில் வெளிவந்த 'இலங்கையில் வரைதல் கற்பித்தல்' என்னும் கட்டுரையின் கண்ணே இந் நாட்டிலே நிலவி வந்துள்ள குருகுலக் கல்விமுறையைப் பற்றி மிகவும் தெளிவாக விளக்கியுள்ளார். சிங்களக் குரு (ஆசிரியர்) முதலாவது பாடமாகக் கொடுக்கும் வேக வேத மென்னும் சித்திர அம்சம் தமிழர்தம் அகத்திருக்கருக்கு என்னும் அம்சத்திலிருந்து மெறப்பெற்றது என்பதைத் தக்க ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார். சுதெசிப் பொருள்களை ஆதரிக்க வேண்டிய அவசியத்தைப் பற்றியும், இந்தியக் கலைகளைப் பற்றியும் பல கட்டுரைகளை எழுதினார். இவைகளே கலையும் சுதேசியும், தேசிய இலட்சியக் கட்டுரைகள் என்னும் ஆங்கில நூல்களாக வெளிவந்து இந்திய மக்களிடம் ஒரு உள்ளக் கிளர்ச்சியை உண்டு பண்ணின எனில் அது மிகையாகாது.

பலதுறை ஆற்றல்

இந்தியக் கலையுல மறுமலர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த கலாநிதி ஆனந்தக் குமாரசுவாமி அவர்களை விஞ்ஞான மேதையாகவும், கலாயோகியாகவும், தத்துவ ஞானியாகவும், சங்கீத அறிஞராகவும், ஆராய்ச்சியாளராகவும் விளங்க வைத்தது இவரது மதிநுட்பம். இது உண்மையில் அதிசயிக்க வேண்டிய ஒன்று. இத்தகைய பலதிறப்பட்ட ஆற்றல் உடைய இவரை, இத்தாலிய மறுமலர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவரும், மேல்நாட்டுக் கலையுலகில் முதன்மைபெற்று விளங்கியவரும், பல திறப்பட்ட ஆற்றல், அதி நுட்பமான மதி நுட்பம் பொருந்தியவருமான 'லியோநாடோ-டா-வின்சி' யுடன்தான் ஒப்பிடலாம்.

ஆனந்தக் குமாரசுவாமி யவர்களைப் போலவே டாவின்சியும் நியாயவாதியைத் தந்தையாகவும் பொறியியல், புவியியல், கணிதம் போன்றவற்றில் ஆற்றல் உடயவராகவும் கலையுணர்ச்சியில் அதிமேதையாகவும் விளங்கியுள்ளார். 'நன்று - ஆனால் இன்று ந்ன்றாகச் செய்ய முயற்சி செய்' என்னும் கொள்கையுடையவர் டாவின்சி. அவர், எப்படி உடலுறுப்புக்களை மண்டையோட்டின் அமைப்பில் இருந்து ஆராயத் தொடங்கி இதயத்தின் உட்கிடக்கையை 'மோனலிசா' போன்ற ஓவியங்களில் வெளிப்படுத்தி இருக்கின்றாரோ அது போலவே கலாயோகி அவர்களும் இந்தியக் கலைகளின் வெளிநுட்பங்களைக் கூறத் தொடங்கி அவற்றின் ஆழமான உட்தத்துவங்களை விளக்கி உள்ளார்.

உதாரணமாகச் 'சிவநடனம்' என்னும் அவரது கட்டுரையில் இது துல்லியமாகத் தெரிகின்றது. இவர் இலங்கையிற் செய்த கலை ஆராய்ச்சிகளே 'மத்திய காலச் சிங்களக் கலை' என்னும் சிறந்த நூலாக 1908ஆம் ஆண்டு மார்கழி மாதம் முதலாவது பதிப்பாக வெளிவந்தது. அப்பதிப்பில் ஆக நானூற்று இருபத்தைந்து பிரதிகளே இவரது மேற்பார்வையிற் பதிப்பிக்கப்பட்டன. சிங்களக்கலை, இந்தியக் கலையில் நின்று வேறுபட்டது; தனித்துவமானது; என்று சிலர் இன்று கருதுகின்றனர்.

பன்மொழிப் புலமை

இவர் கீழைத்தேசக் கலைகளையும் பண்பாட்டையும் மாத்திரமன்றி மேலைத்தேசப் பண்பாட்டையும் கலைகளையும் நன்றாகத் தெரிந்திருக்கின்றார். இதற்கு இவரது பன்மொழிப் புலமையே காரணமாகும். இவர் ஆங்கிலம், பிரஞ்சு, வடமொழி, தமிழ், லத்தீன், சிங்களம், இத்தாலி, பாளி, பாரசீகம், கிறீக் முதலிய பதினான்கு மொழிகளை அறிந்திருந்தார். இப்பன்மொழித் திறனே பல நாடுகளின் கலை காலாச்சாரப் பண்புகளைக் கற்றுக் கீழை நாடுகளின் கலை, கலாச்சாரப் பண்பாட்டுடன் ஒப்புநோக்கி அவற்றின் பெருமைகளை உலகறியத் துணையாகத் தூண்டியதெனலாம். நமது கலைகளிலே தாமரை வகிக்கின்ற முக்கிய இடத்தைக் கூறவந்த கலாயோகி அவர்கள் "மத்திய கால ஓரோப்பியக் கலைகளில் றோசாமலர் பெற்றுள்ள ஸ்தானத்தைப் போலத் தாமரை மலர் இந்தியக் கலைகளின் முக்கிய அங்கமாக மிள்ர்கின்றது" எனக் கூறுகின்றார். இதிலிருந்து நாம் மேற்கூறிய உண்மை தெளிவாகின்றது.

சிவதாண்டவம்

இவரது மற்றோர் நூலாகிய 'சிவநடனம்' என்னும் நூலில் 'இந்தியா மனித நல்வாழ்வுக்கு அளித்திருப்பவை என்ன', 'இந்துக் கலை நோக்கு', 'சிவநடனம்', 'அழகு ஓர் அரசு', 'இந்திய சங்கீதம்' போன்ற பதினான்கு கட்டுரைகளுள. அவற்றுள் 'சிவ நடனமே' தலையாய கட்டுரையாகும். இக்கட்டுரையின்மூலம் சிவதாண்டவத்தின் பெருமைகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்துக் கூறியுள்ளார்.

முதலாவதாக
"வேதங்க ளாட மிகுஆ கமமாடக்
கீதங்க ளாடக் கிளர்அண்ட மேழாடப்
பூதங்க ளாடப் புவன முழுதாட
நாதங்கொண் டாடினான் ஞானானந் தக்கூதே."
என்னும் பாவில் அடங்கியுள்ள தத்துவத்தை மேல்நாட்டவ்ருக்குச் சுருங்கக் கூறி விளங்க வைத்துள்ளார்.

இரண்டாவதாக,
"மாமலங்க ளற வீடரு முல்லை மல்லம்பதியின் எல்லை வண்ங்கி', என்னும் சேக்கிழார் சுவாமிகளது பாடலை உள்ளடக்கி ஆனந்தக் கூத்தனது தாண்டவத்தின் நோக்கம் கணக்கற்ற ஆன்மாக்களின் ஈடேற்றத்தையே குறிக்கோளாக உடையது என்பதையும் விளக்கியுள்ளார்.

மூன்றாவதாக,
'தில்லை வெளியிற் கலந்து விட்டால்...' என்னும் பாவிற் கூறியுள்ள சிதம்பர இரகசியத் தத்துவத்தின் கருத்திற்கமையச் சிதம்பரத்தின் மகிமையையும், அது உலகின் நெற்றிக்கண்ணாக விளங்குவதையும் தெய்வாம்சம் பொருந்த எடுத்துக் காட்டியுள்ளார். ஆனந்த நடராசனின் சிலைக்குப் பின்னுள்ள திருவாசி, ஓங்காரத்தின் அமைவைக் குறிப்பதை, தத்துவ ரீதியாக விளக்கியுள்ளார்.

'இந்துக் கலை நோக்கு' என்னும் கட்டுரையின் ஓரிடத்திற் கலையின் விபாவம், அநுபாவம் (பலாபலன்), பாவம், சத்வபாவம் ஆகிய நான்கு அம்சங்களின் செயற்பாட்டின் மூலமே இரசிகனிடத்தில் இரசஞான எழுச்சி உந்தப்படுகின்றது என்று கூறுகின்றார். இப்படியான பல தெய்வீகத் தத்துவங்களைக் கொண்டுள்ள சிவ நடனம் ஆகிய இந்நூலை இரண்டாவது முறையாக நியூயோர்க் நூன்டே அச்சகத்தார் வெளியிட்டுள்ளார். இவ் வெளியீட்டாளர், "ஆனந்தக்குமாரசுவாமி அவர்கள் இக் கலாதத்துவக் கட்டுரைகள் மூலம் வெளியிட்டுள்ள கருத்துக்கள் இறக்கும் நிலையை அடைந்துள்ள இந்துசமய பண்பாட்டை மீட்பதற்கு உதவியாக இருக்கின்றன" என்று கூறிப் பெருமைப்படுகின்றனர்.

மேலைநாட்டினரேயன்றித் தமிழ்நாட்டினரும் நடராஜமூர்த்தியின் நடன தத்துவத்தை அறிய இந்நூல் வழிவகுத்ததெனில் அது மிகையாகாது. இவ்வுண்மை சேர் ஆர். கே. சண்முகம் அவர்களின் கூற்றிலிருந்து புலனாகின்றது:

"தமிழ் நாட்டில் தமிழ் சோர்ந்திருந்தபோது யாழ்ப்பாணம் தமிழைப் போற்றி வளர்த்தது. நம் நாட்டிலுள்ள சிவாலயங்களில் நாம் நடராஜ மூர்த்தியைத் தொழுது வந்த போதிலும் அந்த நடராஜர் எவ்வாறு, எவ்வித முறையில் நடனமாடுகிறார் என்பதை மக்கள் புரிந்து கொள்ளாதிருந்தனர். யாழ்ப்பாணத்து அருங்கலை வல்லுநரான திரு. ஆனந்தக்குமாரசுவாமியின் பலனாகவே நாம் நடராஜ நடனத்தைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்ள முடிந்தது."

இலங்கையின் வெண்கல உருவங்கள் என்ற நூலும் குறிப்பிடத்தக்க பெருமையுடையது. இதன்கண் இலங்கையில் வளர்ந்து வந்த திராவிட சிற்பங்களின் சிறப்பியல்புகளைக் காணலாம்.

முக்கியமான ஆராய்ச்சிகள்

'இந்திய இந்தோனேஷியக் கலை' என்னும் இவரது மற்றோர் நூலும் மிகவும் போற்றப்படுகின்றது. இவரே அமராவதிச் சிலைகளை ஆராய்ந்து யாழின் வடிவம் இன்னதென்று வரையறுத்துக் கூறியவராவார். இதுவே சுவாமி விபுலானந்தர் அவர்களை யாழின் அமைவுகளை ஆராய்ந்து பண்டைக் காலத்துத் தமிழிசையின் நுட்பங்களை விளக்கும் யாழ்நூலை வெளியிடத் தூண்டியது எனலாம்.

இதுபோலவே அவர் தமது, இந்திய சிற்பி, இந்தியத் தாதுப் படிமங்கள், கலையும் சுதேசியும், பௌத்த விக்கிரக அமைப்பு இலக்கணம், கலையில் இயற்கையின் திரிபு முதலிய சிறந்த புத்தகங்களை, கலையின் கருப் பொருளின் தத்துவங்கள் சிதைவுறா வண்ணம், கலையுலகிற்கு நல்கியுள்ளார். இந்நூல்களைக் கற்றுணர்ந்த கலையார்வமுள்ளவர்களின் உள்ளங்களிலே அவர் எப்படிக் கலாதத்துவத்தின் திறம் தெரிந்து கலையுலகம் உய்ய இவற்றைத் தந்துள்ளார் என்னும் பேரெண்ணம் தோன்றும். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கின் திறம் தெரிந்து - திருக்குறளைத் தந்த வள்ளுவப் பெருந்தகையைப் போற்றவந்த நக்கீரர்,

"தானே முழுதுணர்ந்து தண்டமிழின் வெண்குறளால்
ஆனா அறம்முதலா யந்நான்கும் - ஏனோர்க்கு
ஊழின் உரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும்
வாழியுல கென்னாற்றும் மற்று."

எனப் பாடிப் புகழ்கின்றார். நக்கீரரது பாடலின் கருத்து நம் கலாயோகிக்கும் பொருந்தும்.

இந்தியாவில் மொகலாயர் காலத்திலே காணப்பட்ட இந்து ஓவியங்கள் யாவும் இங்கு ஏற்பட்ட மொகலாய ஓவியக்கலை மரபின் (1550-1800) ஆக்கத்தின் பயனாகவே தோன்றியன, என்னும் கொள்கை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் உலகிற் பரவி இருந்தது. இக் கொள்கையை மறுத்துப் 'பண்டைய இந்திய ஓவிய மரபு வழி வந்தனவே இந்து ஓவியங்களான இராசபுத்தான மரபு (1550 - 1900) ஓவியங்கள் என்றும், மொகலாய ஓவியக்கலை இலக்கணங்களில்லாத தனி இந்திய ஓவிய மரபில் ஏற்பட்டன' என்றும் விளக்கினார். இவ்விளக்கங்களை இரு தொகுதிகளாக இராசபுத்தான ஓவியங்கள் (Rajput Paintings) என்னும் நூல்வடிவில் வெளியிட்டார்.

இதே போன்று காந்தார புத்தர் திருவடிவங்கள் கிரேக்கரது சிற்ப வடிவங்களைப் பின்பற்றி அமைக்கப்பட்டதென்ற கருத்தையும் கண்டித்துப் புத்தர் வடிவத்தின் ஆதித் தோற்றம் என்னும் நூலிலுள்ள கட்டுரைகள் மூலம் விளக்கம் தந்துள்ளார்கள்.

இவர் வடமொழியிலிருந்து நந்திகேஸ்வரர் அபிநய தர்ப்பணம், சுக்கிர நீதி சாரம், விஷ்ணு தர்மோத்திரம், சிலபரத்தினம், அபிலாசார்த்த சிந்தாமணி முதலிய கலை நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வரவேற்பு

கலைத்துறையில் மாத்திரமன்றி தந்தையர் நாட்டின் விடுதலைப் பற்றிலும் தமிழ்ப் பற்றிலும் ஆர்வமுள்ளவர். இவ்வுண்மையை யாழ்ப்பாணத்தில் தமக்களிக்கப்பட்ட வரவேற்புப் பதிலுரையின் மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

'இலங்கைச் சமூக சீர்திருத்தச் சபை'யின் கிளை ஸ்தாபனமொன்றை யாழ்ப்பாணத்தில் நிறுவும் பொருட்டு 1906ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் திகதி தம் மனைவியாரான எதெல் அம்மையாருடன் முதன் முறையாக யாழ்ப்பாணம் வந்தார்கள். ஜூன் மாதம் 4ஆம் திகதி மாலை 7-30 மணிக்கு கலாநிதி ஆனந்தக் குமாரசுவாமி தம்பதிகளுக்கு யாழ். இந்துக் கல்லூரி மண்டபத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பின்போது அவர் உதிர்த்துள்ள மணிமொழிகளின் சுருக்கம் பின்வருமாறு:

'எங்கள் பாஷையாகிய தமிழில் நான் பேசமுடியாமலிருப்பதை மன்னிக்கும்படி முதலாவதாக உங்களைக் கேட்டுக்கொள்கின்றேன். பல சந்தர்ப்பங்கள் என் வாழ்நாட்களிற் பெரும்பாகத்தை இங்கிலாந்திற் கழிக்கச் செய்து விட்டன. இதனால் எனது சொந்தப் பாஷையைப் பேசமுடியாதவனாய் இருந்த போதிலும் தமிழர் அந்தப் பாஷையைப் படிக்கவேண்டிய அவசியத்தையும் அதன் சிறப்பையும் நன்கு உணர்ந்து இருக்கின்றேன். எங்கள் சொந்த இலக்கியங்களையும் பெரும்பான்மை மொழிபெயர்ப்பிலும், சிறுபான்மை மூலத்திலும் படித்துள்ளேன். என்னுடைய பெருவிருப்பம் நீங்கள் என்னை உங்களில் ஒருவனாக ஏற்கவேண்டுமென்பதே. ஆகவே, நீங்கள் என்னை ஒரு தமிழனாகவும் நண்பனாகவும் ஏற்றிருப்பதற்காக உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவிக்கின்றேன். நான்கு வருடங்களுக்கு முன் நான் இலங்கைக்கு மூன்றாவது முறையாக வந்தபொழுது ஆங்கிலேயனாகவே வந்தேன். இப்பொழுது நான் இந்தியத் தாயின் புத்திரனாக மறு பிறப்பெடுத்து ஒரு குழந்தை தன் பெற்றோரிடஞ் சேருகிறமாதிரி உங்களிடம் வந்துள்ளேன். என் வாழ்நாளிற் பெரும்பாகத்தை இங்கிலாந்திற் செலவழித்த போதிலும் இங்கு வந்ததின் பின்னர் எங்கள் பண்பாட்டின் சிறப்பை உணர்ந்துள்ளேன். ஆகையால் எங்களில் அநேகர் மேனாட்டு நாகரிகத்தைப் பின்பற்றுவதால் ஏற்படும் தீமைகளை உணர்ந்து அதைப் போக்க என்னாலான முயற்சிகள் செய்து வருகின்றேன்.

'இந்தியாவின் கடந்த மூவாயிரம் ஆண்டுச் சரித்திரத்தை ஆராயும்பொழுது இதனிற் காணப்படும் சிறந்த இலட்சியங்களை வேறெங்கும் காண முடியாது. இதை நம்மவரிற் பலர் உணராதிருக்கின்றனர். தீர்க்காலோசனை செய்யாது, மாற்றம் ஏற்படுத்த வேண்டுமென்ற விருப்பினாற்போலும், எங்கள் பண்டைய முறைகளை மாற்றப் பார்க்கின்றார்கள்.'

'சனங்களின் அபிப்பிராயத்துக்கு மாறாக அரசாங்கத்தை நெடுநாட்களுக்கு நடத்த முடியாது. மக்கள் திரண்டு விஷயங்களை எடுத்துச் சொன்னால் அதை அரசாங்கம் கேட்டே தீரவேண்டும். கல்வி சம்பந்தமாக ஒருவர் பேசுகையில் ஆங்கிலம் இலங்கையில் எல்லா வீடுகளிலும் பேசப்படும் காலம் சீக்கிரம் வருமென்றார். அப்படி ஒரு காலம் வருமாயின் தமிழ்ச் சாதியே இல்லாமற் போய்விடும்.'

இக்கூற்று ஒன்றே அவரது மொழிப்பற்றுக்கு எடுத்துக்காட்டாகும்.

யாழ்ப்பாணத்தின் பல அறிஞர்ப் பெருமக்களால் நிறுவப்பெற்ற 'தமிழ்ச் சங்க'த்தின் சார்பாக இவருக்கு வித்தியா விநோதன் என்னும் பட்டம் யாழ். வண்ணை நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையில் இதே ஆண்டு ஜூன் மாதம் 10ஆந் திகதி வழங்கப்பட்டது. மனைவி திருமதி குமாரசுவாமி அவர்களுக்கு 'சிவஞான போதம்' எனும் நூற் பிரதி வழங்கப்பெற்றது. இவ்வம்மையாரும் சிறந்த ஒரு சைத்திரிகராவார். எனவே அவரின் துணையும் இவரைக் கலை ஏணியின் உச்சத்துக்கு இட்டுச் சென்றதெனலாம்.

கலைஞனுக்கே உரிய தன்மான உணர்ச்சி கலாயோகியிடம் பிரவாகித்துப் பெருகியது. தமக்குக் கிடைக்க வேண்டிய உயர் பதவியை, தமிழர் என்ற காரணத்திற்காகத் தன்னைப் புறக்கணித்து, ஆங்கிலேயர் ஒருவருக்குக் கொடுத்தமையினால் 1903ஆம் ஆண்டு தொடக்கம் வகித்து வந்த பதவியை 1906ஆம் ஆண்டு உதறித் தள்ளினார். இது அவரின் தன்மான உணர்ச்சிக்கு ஒரு உரைகல்லாகும்.

அதன்பின்பு தனது இலட்சிய பூமியாகிய இந்தியா சென்றார். அங்கு அரசியல் வாதிகளாகவும், கலைஞர்களாகவும், அறிஞர்களாகவும், அறிஞர்களாகவும் விளங்கிய திலகர், தாதாபாய் நௌரோஜி, தாகூர், அரவிந்தர், ஓ. சி. கங்குலி போன்றவர்களின் நட்பையும், பெருமதிப்பையும் பெற்றார். இரவீந்தாநாத் தாகூர் அவர்களின் பாடல்களை முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டவரும் ஆனந்தக் குமாரசுவாமி அவர்களே. இவை அவரின் சுதந்திர தாகத்தையும், பன்மொழித் திறனையும் எடுத்துக் காட்டுகின்றன.

கலையுலகில் கிழக்கும் மேற்கும்

பதினேழு ஆண்டுகள் படித்துப் பட்டம் பெற்ற விஞ்ஞானத் துறையிலும் மேலாகக் கலைத்துறையை மதித்து

'எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு'

என்னும் வள்ளுவன் வாக்கிற் கிணங்க விஞ்ஞான ரீதியிற் கற்று ஆராய்ந்து அவற்றிற்குப் புதிய மெருகும் ஒளியும் ஊட்டி உயர்ந்த புகழை அளிக்க அயராது உழைத்தார். அவர் உழைத்த காலம் இந்தியக் கலையுலகிற்கு ஒரு பொற்காலமாயிற்று.

மேலைநாட்டுக் கலைக்கு அந்நாட்டுச் சிற்பிகள் சிறந்த மனிதத் தன்மையை அளித்துள்ளார்கள். ஆனால் இந்தியக் கலைஞர்கள் அவர்களின் கலைப்படைப்புக்களுக்குக் கருத்தைக் கவரும் தெய்வத் தனமையைக் கொடுத்துள்ளனர் என்பதை நன்கு உணர்ந்தவர் ஆனந்தக் குமாரசுவாமி அவர்கள்.

இதனாற்றான் இராஜாஜி அவர்கள்,
'அழகை இறைவனாகக் கண்டவருள் ஆனந்தக் குமாரசுவாமி அவர்கள் முதன்மை பெற்றவர். அவர் ஒரு பெரியார். மற்றையோர் காணாத பலவற்றைக் கண்டவர்'
எனகு கூறிப் புகழ்ந்துள்ளார்கள்.

'மேனாட்டுச் சிற்பங்களைப் போல இந்திய சிற்பங்கள் உடலுறுப்புச் சாஸ்திர (Human Anatomy) அமைவுகளுக்கேற்ப அங்க அமைவுகளையும், உறுதியான நரம்புகளையும், மனித அழகையும், முகபாவத்தையும் கொண்டிருக்கவில்லை. சாதாரண பொம்மைகளாக அவை இருக்கின்றன என்று கருதி வந்தவர்கள் மேலைநாட்டினர். மேலைத்தேசக் கலைப் படைப்புக்கள் மனிதனது சாதாரண உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய, முப்பரிமாணமுள்ள, தன்மை நவிற்சிப் (Realistic) படைப்புக்களே. அவைகளில் உயிர்த்துடிப்பையோ, உயர்ந்த தத்துவங்களையோ, உள்ளத்தின் உணர்ச்சிகளைக் காட்டும் முகபாவங்களையோ காண முடிவதில்லை. கீழைத்தேசக் கலைகள் - முக்கியமாக இந்தியக் கலைகள் - குறியீட்டு எண்ணமும், அரூபத் தன்மையும், அலங்காரச் சிறப்பும், ஆத்ம உணர்ச்சி வெளிப்பாடும் கொண்ட கற்பிதக் (Idealistic) கலைப் படைப்புக்களே. இவைகளிற் காணப்படும் அங்க அமைப்பும், சாயலும், கால்களின் நிலையும், கைகளிற் காணும் முத்திரைகளும், ஆடை அணிகலன்களும், ஆயுதங்களும், பிறவும் மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்ட அரும்பெரும் தத்துவங்களை விளக்குவனவே.' இவ்வுண்மைகளை அம் மேலை நாட்டினருக்குப் பல கட்டுரைகள் மூலமும் சொற்பொழிவுகள் மூலமும் விளங்க வைத்து அவர்கள் கொண்டிருந்த தவறான கருத்தை மாற்றியவர் இவர். இதனாலேயே உலகக் கணித மேதை ஈன்ஸ்டின், பிரஞ்சுப் பேரறிஞர் ரோமைன் ரோலண்ட், ஜேர்மன் பேராசிரியை ஸ்டெல்லா கிராமரிஷ் போன்றோர் இந்தியக் கலைகளைப் போற்றி ஆராய்ச்சி செய்ய வாய்ப்பேற்பட்டது.

இன்று மேலை நாடுகளிலே கைக்கொள்ளப்பட்டுவரும் தற்கால ஓவியங்கள், தற்காலச் சிற்பங்கள் ஆகியவற்றிற் காணப்பெறும் குறியீட்டு எண்ணமும், அரூபத் தன்மையும் கீழ் நாட்டினரிடமிருந்தே பெறப்பெற்றவை எனலாம். இதற்கும் கலாயோகி அவர்களின் கலை விளக்கங்களே காரணமாக இருதிருக்கக் கூடும்.

இந்தியாவில் தொண்டு

1909ஆம் ஆண்டில் மீண்டும் இந்தியா வந்த இவர் 1910ஆம் ஆண்டில் அகலபாத்தில் நடந்த அகில இந்தியக் காட்சியின் கலைப்பகுதியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் பயனாக இந்தியாவில் சிலகாலம் வசித்துக் கலை ஆராய்ச்சி செய்தார். தமது எழுத்தாலும் பேச்சாலும் இந்திய சுதேசி இயக்கத்திற்கு ஆக்கமும், ஊக்கமும் ஊட்டினார். அகலபாத்தில் நடைபெற்ற ஐந்தாவது கைத்தொழில் மகாநாட்டில் 'சுதேசியம் மெய்யும் பொய்யும்' என்ற ஒரு சிறந்த கட்டுரையை வாசித்தார். லண்டன் மாநகரில் 'இந்தியக் கழகத்தை' உருவாக்க உறுதுணையாக இருந்தார். இப்பொழுது அது 'ரோயல் இந்தியா, பாக்கிஸ்தான், இலங்கைக் கழகம்' என்ற பெயரில் நடைபெறுகிறது. அதன் முதலாவது தலைவராக இருந்த பேரறிஞர் ரைஸ் டேவிட்ஸ் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க அதன் நிர்வாகக் குழு அங்கத்தவராகவும் இருந்து பல பணியாற்றினார்.

திரும்பவும் 1912ஆம் ஆண்டில் 'சாந்தி நிகேத'னுக்கு வந்து சிலகாலம் தாகூர் அவர்களுடன் தங்கியிருந்தார். அப்பொழுது வங்கக் கலைகளைப் பற்றி நன்கு ஆராய்ந்து பல உயரிய கலைக் கட்டுரைகளை அவர்கள் தம் கலை வெளியீடுகளில் வெளியிட்டார். இதே காலத்தில் தென் இந்தியாவுக்கு வருகை தந்து திராவிடக் கலைகளின் தாயகமாக அது மிளிர்வதை உணர்ந்தார். பாரதக் கலைகளின் கருவூலம் திராவிடக் கலைகளிற் காணப்படுவதைக் கண்டு களித்தார். இந்தியாவில் தங்கியிருந்த காலங்களில் யோகாப்பியாசத்தையும் நன்கு பயின்றார்.

இந்தியக் கலைஞன் முதலில் தத்துவ ஞானியாகவும், யோகியாகவும் பின்பு கலைஞனாகவும் தோற்றுகின்றான். இது அவர் கண்டறிந்த உண்மை. எனவேதான் அக்கலைகளின் அறிவையும், அழகையும், தத்துவங்களையும் அறிந்த இவரைக் கலாயோகி என்று உலகம் போற்றிப் புகழ்கின்றது.

'டாக்டர் குமாரசுவாமி அவர்கள் எங்கள் உரிமைகளின் உயர்ந்த இலட்சியத்தை எடுத்து அறிவுறுத்தியவரும், இந்தியக் கலையின் சிறந்த அழகினைஉலகிற்கு விளக்கியவருமான ஒரு ரிஷியாவார்' என்று இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த டாக்டர் இராசேந்திரப் பிரசாத் அவர்கள் இவரைப் பாராடியது இதற்கு எடுத்துக்காட்டாகும்.

அவர் இங்கு தங்கிச் சுற்றுப்பிரயாணம் செய்த காலங்களில் சேகரித்த கலைப்பொருள்களைக் கொண்டு இந்தியாவிலேயே ஒரு கலாபவனத்தை நிறுவ முயன்றார். அம் முயற்சிக்குப் போதிய ஆதரவு கிடைக்கப் பெறாமையினால் அவர் தம் எண்ணம் நிறைவேறவில்லை. மன்ச் சோர்வுடன் மேல்நாடு சென்றார்.

போஸ்டன் கலைக்கண்காட்சி

அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் 1917ஆம் ஆண்டு போஸ்டன் நகரிலுள்ள கண்காட்சிச் சாலையின் இந்தியக் கலைப்பிரிவின் கலைக்காப்பாளராகப் பதவியேற்றார். 1933ஆம் ஆண்டு அங்குள்ள ஸ்லாமிய, இந்துக் கலையாராய்ச்சித் துறைகளின் தலைவராகப் பதவியுயர்த்தப்பட்டார். அவரால் போஸ்டன் கண்காட்சிச்சாலை உலகிலே முதன்மை வாய்ந்ததாய் மிளிர்ந்தது. இந்தக் கலைப்பணி காரணமாகப் பல்வேறு நாடுகளுக்கும் சென்று கலைப்பொருள்களைச் சேகரித்தார். தமது கலைஞானத்தையும் ஆராய்ச்சியையும் ஊற்றுத்தாரை போலப் பிரவாகிக்கச் செய்தார்.

இதே நோக்குடன் ஆனந்தக் குமாரசுவாமி அவர்கள் 1920ஆம் ஆண்டு யப்பான் நாட்டிற்குக் கலையாத்திரை சென்றார். பின்பு 1921ஆம் ஆண்டு மீண்டும் தந்தையர் நாடான நம் ஈழ நாட்டிற்கு வந்தார்கள். இங்கு தமது மைத்துனர்களான சேர் பொன். இராமநாதன், சேர் பொன். அருணாசலம் முதலிய உறவினர்களைக் கண்டு மகிழ்ந்தார்கள். இவர்கள் இருவரும் கலாயோகி அவர்களது தந்தையினுடைய சகோதரியின் புதல்வர்களாவர்.

அந்த வருகையின் போது 'றோயல் ஏசியாற்றிக் சொசையிற்றி'யின் கொழும்புக் கிளையின் ஆதரவில் சேர் பொன். அருணாசலம் அவர்களின் தலைமையில் 'இந்திய வர்ண ஓவியங்கள்' என்னும் சொற்பொழிவையும், ஆனந்தாக் கல்லூரியில் 'புராதன சிங்களக் கலை' என்னும் விரிவுரையையும் நிகழ்த்தினார்கள். இலங்கையில் ஒரு பல்கலைக் கழகம் நிறுவப்படவேண்டுமென்ற ஒரு திட்டத்திற்கு வித்திட்டவரும் இவரேயாகும்.

கல்விச் சீர்திருத்தம்

நவீன விஞ்ஞானக் கல்வியின் வளர்ச்சியின் பயனாக மக்களிடம் கலையார்வம் குன்றி வருவதையும் அதனால் மக்களின் வாழ்வில் நிரதர இன்பத்தையும் ஆத்ம திருப்தியையும் அடைய முடியாதிருப்பதையும் அறிந்திருந்தார். எனவேதான் கல்வி பாரம்பரிய கலாச்சார அடிப்படைகளை ஆதாரமாகக் கொண்டு இருக்க வேண்டும் என்று பாடுபட்டார். பெண் கல்வியின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

'பெண்கல்வி மிக அவசியமாகும். பெண்களை அடக்கியொடுக்கி வைக்கும் வழக்கம் மகமதியர் ஆட்சியின் பின்னர் ஏற்பட்டதாகும். பெண்களே ஒரு நாட்டின் கலாச்சாரத்தைக் காப்பாற்றக் கூடியவர்கள். இந்தியாவிலே பெண்களுக்கும், பாட்டாளி மக்களுக்கும் ஆரம்பக் கல்வி கூட இல்லை.அதனால் ஏற்படக் கூடிய தீமையிலும் பார்க்க மோசமானது இப்போது அளிக்கப்பட்டுவரும் உயர்தரக்கல்வி. அது பயனற்றதாகிவிட்டது. எம்மவர் விஞ்ஞானக்கல்வியையும் கைத்தொழிற் கல்வியையும் பெற விரும்புகின்றனர். இவை அவசியமானவையே. ஆனால், இவையெல்லாம் நாட்டின் பண்பாடு என்னும் அத்திவாரத்திலிருந்து எழுப்பப்பட வேண்டும்.' இவை அவர் கூற்றுக்கள். இதன்மூலம் அவர் எப்படியான பல்கலைக்கழகக் கல்வியை எதிராஅர்த்திருந்தார் என்பதை நாம் இன்றுதானும் அறியவில்லை. இவர் ஆங்கிலத்துடன் தமிழ், சிங்களம் போன்ற சுயமொழிகளும் நமது பாடசாலைகளில் கற்பிக்கப்படவேண்டியதை அன்று வலியுறுத்தினார்.

1923ஆம் ஆண்டு அமெரிக்கா திரும்பிய இவர் 1924ஆம் ஆண்டில் நியூயோர்க் நகரில் 'இந்தியக் கலைக் கேந்திரம்' என்ற ஒரு நிறுவனத்தை நிறுவினார். அதன் முதலாவது தலைவராகவும் கடமை புரிந்தார். இதன்மூலம் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே கலைத் தொடர்பை ஏற்படுத்தியதுடன் இந்தியக் கலைகளின் நிலையையும் உயர்த்தினார். கொலம்பியாப் பல்கலைக்கழகத்தில் 'இந்தியக் கலைகள்' என்னும் பொருள் பற்றிப் பல சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். 1932ஆம் ஆண்டு மார்ச் மாதம் போஸ்டன் கண்காட்சிச்சாலையில் நுண்கலைப் பிரிவில் கி. மு. 3000 ஆண்டுகளில் சிந்துவெளி வாழ்க்கை' என்னும் தலைப்பில், திராவிட நாகரிகத்தின் சிறப்பைப் பற்றி உலகப் புகழ்பெற்ற சொற்பெருக்கை ஆற்றினார்.

இந்தியாவில் உள்ள பூனா நகரில் திகழும் பந்தர்க்கார் கீழ்நாட்டு ஆராய்ச்சி நிலையம் கலாயோகி அவர்கள் இந்தியக் கலைகளுக்கும், தத்துவ ஞானத்துக்கும் செய்துவந்த சேவையைப் பாராட்டி அவரைத் தமது நிறுவனத்தின் கௌரவ உறுப்பினராகத் தேர்ந்தெடுத்துக் கொண்டது. இது இந்திய மக்கள் அவருக்குச் செய்த ஒரு கௌரவமாகும்.

அரசியல் விடுதலைக்கு

ஒரு நாடு சுதந்திர நாடாக இருந்தாற்றான் அந்நாட்டின் கலை, கலாச்சாரப் பண்புகள் வளர்ச்சியுறும். இதை நன்கு உணர்ந்திருந்தவர் ஆனந்தர். இந்திய இலங்கைக் கலை வளர்ச்சியில் பேரார்வம் கொண்டுள்ள இவர் அவற்றின் விடுதலைப் போரில் பங்குபற்றியதிலும் வியப்பில்லை. ஈழநாட்டின் சுதந்திரம் இந்தியாவின் விடுதலையில் தங்கியுள்ளது என்பதை அரசியல் முன்னோக்கோடு அறிந்திருந்தார். அமெரிக்காவின் தலைநகரான உவாசிங்டனில் இருந்த 'இந்திய சுதந்திர இயக்க'த்தின் முதலாவது தேசியக் கமிட்டியின் தலைவராக இவர் 1938ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பெற்றார். இதன்மூலம் கலாநிதி செய்யத் ஹூசைன், கலாநிதி கிருஷ்ணலால் சிரிதரணி, கலாநிதி அனும்சிங் போன்றோருடன் இந்திய தேசிய விடுதலைக்கு அமெரிக்க மக்களின் ஆதரவைத் தேடினார். அத்துடன் 'மகாத்மா' என்ற ஒரு கட்டுரையையும் வெளியிட்டு இந்திய தேசிய விடுதலையில் தமக்கிருந்த ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

நூல்களின் திறன்

இவர் இந்தியக்கலை மறுமலர்ச்சிக்கல்ல உலகிலேயே ஒரு மறுமலர்ச்சியைக் காண விரும்பினார். இதன் நிமித்தம் அவர் புத்தகங்களாகவும் கட்டுரைகளாகவும் ஐந்நூறு பிரசுரங்கள் வரை எழுதியுள்ளார். அவற்றில் அவர் தாம் கண்டனவற்றையும், ஆராய்ந்தவற்றையும் வேறு அபிப்பிராயங்களுக்கு இடமின்றித் திரிகோண கணித தேற்ற வாய்ப்பாடுகள் போலத் தர்க்கமாக விளக்கமாக எழுதியுள்ளார். அவை தீர்க்கதரிசிகளின் ஒரு அருள்வாக்குப் போலக் காலப்போக்கில் நிரூபணமாவதையும் நாம் இன்று காண்கின்றோம். எனவே, இந்நூல்களை நம்மவர்கள் அவசியம் கற்கவேண்டியதே. இதைக் கலாநிதி ச. இராதாகிருஷ்ணன் அவர்கள் பிவருமாறு எடுத்துரைக்கின்றார்:

"நான் டக்டர் ஆனந்தக் குமாரசுவாமி அவர்களின் நூல்களைப் பல வருடங்களாகக் கற்று வந்தேன். அவரைப் போஸ்டன் நகரில் 1946ஆம் ஆண்டிற் சந்திக்கும் பெரு மகிழ்ச்சியைப் பெற்றேன். இந்திய மறுமலர்ச்சிக்கு மாத்திரமன்றி, உலகத்தில் ஒரு புதிய மறுமலர்ச்சிக்கு வழிகோலியவர்களுள் அவருமொருவராவார். இக்காலத்து நிலையற்ற வேஷங்களில் ஏமாற்றமடையும் எங்கள் மாணவர்கள், உண்மை உணர்ச்சியைப் பெறுவதற்கு, அவரின் நூல்களைக் கற்க வேண்டுமென நான் விரும்புகின்றேன்."

எழுபது வயதின் நிறைவு

ஆனந்தக் குமாரசுவாமி அவர்கள் தமது இறுதிக்காலம் வரையும் (முப்பது ஆண்டுகள்) போஸ்டன் கண்காட்சிச் சாலையில் உலகிலே உயர்ந்த கலைஞராகவும், கலைஞர்களுக்கெல்லாம் ஒளி விளக்காகவும் திகழ்ந்து வந்தார். கலைத்தொண்டிற்காகத் தமது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த இவரின் 70ஆவது ஆண்டு நிறைவுவிழா 1947ஆம் ஆண்டில் உலகெங்கணுமுள்ள அறிஞர்களாற் கொண்டாடப் பெற்றது. அமெரிக்கக் கலைஞர்கள் போஸ்டன் நகரிற் சிறப்பாகக் கொண்டாடினர். அப்பொழுது அங்கு நடைபெற்ற இந்திய சுதந்திரதின விழாக் கொண்டாட்டத்திலும் கலாயோகி அவர்கள் கலது கொண்டார்கள்.

"அடுத்த ஆண்டில் அமெரிக்காவில் ஆற்றிவரும் கலைச்சேவையில் இருந்து ஓய்வுபெறப் போகிறேன். அதன் பின்பு நானும் எனது மனைவியும், மகனும் இந்தியாவிற்குப் போவதாக இருக்கின்றோம். என் வாழ்நாளில் மிகுதி நாட்களை இந்தியாவிற் கழிக்கத் தீர்மானித்துள்ளேன். எனது மகன் இராமனை எனது மனைவி கல்விகற்ற அங்குள்ள காங்கிரி குருகுலத்திற் கல்வி கற்கவிட எண்ணியுள்ளேன்" என்று அன்றைய சொற்பொழிவிற் கூறிப்போந்தார்கள். ஆனால் அவரது ஆவலை முற்றுப்பெறக் காலன் விடவில்லை. அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பே போஸ்டன் நகரில் உள்ள தோம் என்னும் இடத்தில் 1947ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி தமது எழுபத்தொன்றாம் வயதில் அமரத்துவம் எய்தினார்.

அவர் இந்திய, இலங்கைக் கலைகளின் மீதும், பண்பாட்டுப் பாரம்பரியத்தின் மீதும் வைத்துள்ள பற்றுதல் அவரது இறுதிக்காலப் பேச்சிலிருந்து புலனாகின்றது.

இவர் கீழைத்தேசக் கலைகளின் மறுமலர்ச்சிக்கு ஆற்றிய பெரும்பணி இந்திய சுதந்திரத்துக்குக் காந்தியடிகள் ஆற்றிய தூய பணியையும், இந்துசமய மறுமலர்ச்சிக்கு சுவாமி விவேகானந்தர் அவர்கள் ஆற்றிய சிறந்த பணியையும் நிகர்த்தவையாகும்.

'இந்திய மறுமலர்ச்சிக்கு மாத்திரமன்றி உலகில் ஒரு புதிய மறுமலர்ச்சிக்கு வழிகோலியவர்களில் ஒருவர்' என்னும் புகழ்மாலையில் இருந்து இவ்வுண்மை தெளிவு பெறுகின்றது.

விஞானக் கலாநிதியாகவும் தேசியத் தந்தையாகவும் திகழ்ந்து கலைஞானியாகவும் தத்துவஞானியாகவும் மிளிர ஆனந்த (கெண்டிஷ்) குமாரசுவாமி ஒருவரினால்தான் இயலும். இவர் ஈழத்திற்கு மாத்திரமேயன்றி உலகிற்கே ஒரு திலகமாகும்.

இத்தகைய புகழ் வாய்ந்த ஈழம் தந்த கலாயோகி அவர்களைப் பின்பற்ற வேண்டிய நாம அவர் காலாச்சார வளர்ச்சிக்கு வேண்டிய அம்சத்தைப் பற்றிக் கூறிய கூற்றை நினைவில் நிறுத்திக் கொள்வோமாக:

"கலாச்சார நோக்கங்களுக்கு மக்கள் கல்வியறிவு உள்ளவர்களாக மட்டும் இருத்தல் வேண்டுமென்பது முக்கியமல்ல. அவர்கள் மத்தியில் பாரம்பரிய முறையைத் தழுவி வந்த தத்துவஞானிகள்தான் இருத்தல் வேண்டும்."

-------------
சுன்னாகம், வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகத்தினருக்காக, குரும்பசிட்டி, திரு. மு. சபாரத்தினம் அவர்களால் சுன்னாகம், திருமகள் அழுத்தகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பெற்றது.

-----------------------------------------------------------------------