கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  மகாகவி பாரதி  
 

எஸ். திருச்செல்வம்

 

மகாகவி பாரதி

எஸ். திருச்செல்வம்

----------------------------------------------------------

இந்நூலுக்கு முதலுரையெழுதும் போது சுகவீனமுற்று, ஆஸ்பத்திரியில் படுக்கையிலிருந்தவாறே கடைசிப் பந்திகளையும் சொற்கூட்டிச் சொல்லி, என்னைக் கொண்டே எழுதுவித்து, தன் கடைசி எழுத்தையும் பார்க்காது கண்ணயர்ந்துவிட்ட

அன்புப் பேராசிரியர்
க. கைலாசபதி அவர்களுக்கே
இது சமர்ப்பணம்

----------------------------------------------------------

மகாகவி பாரதி

வரலாற்றுச் சுருக்கம்


எஸ். திருச்செல்வம்


"கலை இலக்கிய பத்திரிகை நண்பர்கள்" வெளியீடு

----------------------------------------------------------

மகாகவி பாரதி (வரலாற்றுச் சுருக்கம்)

பாரதி நூற்றாண்டு நினைவு வெளியீடு

முதற்பதிப்பு : 11 டிசம்பர் 1982

ஆக்கம் : திருச்செல்வம்

முகவரி :R/3/9, அன்டர்சன் மாடி,
பார்க் வீதி, கொழும்பு-5

மேலட்டை ஓவியம் :சுதா

உரிமை :ஆசிரியருக்கு

வெளியீடு : "கலை இலக்கியம் பத்திரிகை நண்பர்கள்"

அச்சுப்பதிவு : குமரன் அச்சகம், கொழும்பு.

----------------------------------------------------------


சிவமயம்
பிரார்த்தனை உரை
இலக்கிய கலாநிதி, பண்டிதமணி
சி. கணபதிப்பிள்ளை அவர்கள் வழங்கியது

பாடாமல் இருக்க மாட்டாமை, பாரதியாருக்குப் பிறவிச்சொத்து. பாரதியாரின் இருதயம் பரிசுத்தமானது. அதில் ஒரு எண்ணம் உதிக்குமானால், அக்கணமே அவ்வெண்ணம் பாடல்களாய்க் குதிக்கும்.

பாடல்கள், பாலர் தொடக்கம் பண்டிதர்வரை யாரையும் இனிக்க வைப்பவை. பாடல்களைப் போலவே, வசனங்களும் புத்தம் புதியவை.

இந்த ஆண்டு பாரதி நூற்றாண்டு. வானொலியிலும் பத்திரி கைகளிலும் அடிக்கடி பாரதியாரைத் தரிசிக்கின்றோம் இச் சந்தர்ப்பத்தில், அவருக்கு ஒரு வரலாறு எழுதி வெளியிடுவது பொருத்தம்; வெகுபொருத்தம்.

"மகாகவி பாரதி" என்ற தலைப்பைக்கொண்ட இந்நூல், பாரதியார் வரலாற்றைத் தெளிவுபெற விளக்கஞ் செய்கின்றது. அவ்வளவிலமையாது, வேண்டிய இடங்களில் பாரதியாரின் இலக்கிய இரசனை சுரப்பதையும் ஒரு அளவுக்குத் தொட்டுக் காட்டுகின்றது. இவ்வாற்றான் இந்நூல் ஏற்றுப் போற்றற்பாலது.

பாரதி பாடலில் அபிமானங்கொண்டவர்கள் கைகளில் இந்நூல் இருக்கவேண்டியது. பள்ளிமாணவர் ஊன்றிப் படிக்க வேண்டிய நூல் என்பதிற் சந்தேகமில்லை.
"மகாகவி பாரதி" என்ற இந்நூல் என்றும் நின்று நிலவுக என்று திருவருளைப் பிரார்த்திப்போமாக!

சி. கணபதிப்பிள்ளை

கலாசாலைவீதி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.
01.12.1982

----------------------------------------------------------

யாழ் - பல்கலைக்கழக தமிழ் பீடாதிபதி
பேராசிரியர் க. கைலாசபதி அவர்களின்

முதல் உரை

கடந்த ஒருவருட காலமாகத் தமிழ் கூறு நல்லுலகத்திலே மகாகவி பாரதியின் நூற்றாண்டு நிறைவு வௌ;வேறு வகைகளிற் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. இந்தியாவிலே மாநில அரசுகள் சிலவும் மத்திய அரசும் பாரதியை நினைவு கூரும் நிகழ்ச்சிகள் பலவற்றை ஏற்பாடு செய்தன: சாகித்ய அகாதெமி புதுடில்லியிலே பாரதிபற்றிய அனைத்துலகக் கருத்தரங்கு ஒன்றினை வெகு சிறப்பாகக் கொண்டாட ஒழுங்குகள் செய்திருக்கிறது. உலக மொழிகள் பலவற்றிலே பாரதியின் ஆக்கங்கள் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதுடன், பாரதி சம்பந்தமான ஆய்வு, அறிமுக நூல்களும் வருகின்றன. இவை யாவும் பாரதியின் புகழ் உலகளாவிய தாய் வளர்ந்து வரவதைக் காட்டுகின்றன் அவனது ஆக்கங்களின் முக்கியத்துவத்தை உலகம் உணரத் தலைப்பட்டிருப்பதை உணர்த்துகின்றன.

ஏறத்தாழ அறுபது வருடங்களுக்கு முன் (1921), சென்னையிலே திருவல்லிக்கேணியில் இறந்தபொழுது, அங்கிருந்து கிருஷ்ணாம்பேட்டைச் சுடுகாட்டுக்குப் பிரேத ஊர்வலத்திலே மிகச் சிலர்தான் சென்றனர் என்னும் செய்தியையும், அன்றைய தமிழகத்துப் பத்திரிகைகள் எத்தகைய முக்கியத்துவமும் கொடுத்து பாரதியின் மரணச் செய்தியைப் பிரசுரிக்கவில்லை என்னும் செய்தியையும் எண்ணிப் பார்க்கும்பொழுது, கடந்த ஆறு தஸாப்தங்களில் பாரதியின் பெருமை வியக்கத்தக்க விதத்தில் விகசித்துள்ளது என்பதை அவதானிக்காமல் இருக்க இயலாது.

ஒவ்வொரு வருடமும் கலை இலக்கிய கர்த்தாக்களின் நூற்றாண்டு நிறைவு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. வாழையடி வாழையென இயங்கிக் கொண்டிருக்கும் கலை இலக்கியங்களின் தொடர்ச்சியான ஜீவிதத்திற்கு இவர்கள் ஆற்றிய பங்களிப்பினை இவ்விழாக்களின் மூலம் நாம் நினைவு கூருகிறோம். ஆயினும் மலைத் தொடரிலே ஆங்காங்கே கொடுமுடிகள் உயர்ந்தெழுந்து நின்று கோலங்காட்டுவது போல, சில இலக்கிய கர்த்தாக்கள் தமது ஈடு இணையற்ற மேதாவிலாசத்தினாலும் தனித்துவமான சாதனைகளினாலும் ஏனையோரிலும் பார்க்க ஏற்றம் பெற்ற விளங்குவதைக் காண்கிறோம். அவர்களிற் சிலர் யுகபுருஷர்களாகவும் போற்றப்படுகின்றனர். பாரதி அத்தகைய பெரும்புலவர்களில் ஒருவன். காலம் தாழ்ந்தேனும் உலகம் அவனது திறமைகளையும் சிறப்பியல்புகளையும் கண்டுகொண்டது.

அவன் வாழ்ந்த காலத்திலே தமிழ் நாட்டிலிருந்த சிலர் அவனது ஆற்றலையும் அருமை பெருமைகளையும் இனங்காணத் தவறவில்லை. வ. வே. சு. ஐயர், வ. ரா., நெல்லையப்பர், சிங்காரவேலர், திருமலாச்சாரியார், புதுச்சேரி சீனி வாச்சாரியார் முதலியோரும் வேறு சிலரும் பாரதி உயிருடன் இருந்த காலத்திலேயே அவனுக்கு எதிர்காலத்தில் பெரும் புகழ்கிட்டும் என்பதைத் தமது நுண்ணுணர்விற் கண்டு கொண்டனர். உதாரணமாக, பாரதியார் வாஞ்சையுடன் "தம்பி" என்று அழைத்து வந்த பரலி சு. நெல்லையப்பர் 1971 இல் முதன் முதலாகப் பாரதி பாடல்களை அச்சிட்டு வெளியிட்டபொழுது பின்வருமாறு எழுதியிருந்தார்.

"அவர் காத்திற்குப் பின்-எத்தனையோ
நூற்றாண்டுகளுக்குப் பின்- தமிழ்நாட்டு
ஆண்களும் பெண்களும் பாடி
மகிழும் காட்சியை நான் இப்பொழுதே
காண்கிறேன்"

நெல்லையப்பர் காலமாகு முன்னரே-பத்தாண்டுகளுக்கு முன்-பாரதியின் பெருமையைத் தமிழ்நாடு இந்தியாவும் ஏற்றுக் கொண்டமையை மனக் கண்ணாலன்றி ஊனக் கண்ணாற் கண்டு பெருமகிச்சயடைந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. இவ்வாறு அவர் பிறத்த நாடும் உலகமும் பாரதியை யுகக்கவி என்று பெருமையுடன் ஏற்றுக் கொள்வதற்கான முக்கிய காரணம் யாது? தனது காலத்தின் தேவைகளை நன்குணர்ந்து அவற்றை நிறைவேற்றியமையே பாரதியின் வெற்றிக்கு அடிப்படையாகும்.
சமுதாயங்களில் நடந்தேறும் மகத்தான மாற்றங்கள் வரராற்றின் தேவைகள், பிளெகானவ் என்ற சமூகவியல் அறிஞர் ஒரு சந்தர்ப்பத்திலே இரத்தினச் சுருக்கமாகக் கூறியிருப்பதுபோல, "பொருளாதார நிலைமைகளில் ஏறக்குறைய மெதுவாக நிகழும் மாறுதல் தனது ஸ்தாபனங்களை ஏறத்தாழத் துரிதமாக மாற்றிவிடும்படியான அவசியத்தை அவ்வப்பொழுது சமுதாயத்தின் முன் வைக்கிறது". அடிப்படையில் மக்களே இம்மாற்றத்தை- பெருநிகழ்வை-நடத்தி முடிக்கிறார்கள். வரலாறு தன்னியக்கமுடையது அன்று. வரலாற்று மாற்றத்திற்கு "எப்பொழுதுமே மனிதர்களின் குறுக்கீடு அவசியப்படுகிறது. இதனாலேயே புரட்சிகளைப் பற்றிப் பேசும ;பொழுது, வர்க்கங்களைப் பற்றியும் ஆற்றல் மிக்க மனிதர்களைப் பற்றியும் நாம் கொள்ள நேரிடுகிறது. பெருமாற்றங்களிலே பங்கு கொள்வோருக்குக் கால உணர்வு ஓரளவிற்கேனும் இருத்தல் அவசியம். ஒவ்வொரு காலகட்டத்திலே மாற்றம் வரலாற்றின் தேவையாய் இருப்பதைத் தெரிந்து கொள்ளவும், சமுதாயத்தை எதிர்நோக்கும் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளவும் ஒருவருக்குக் கால உணர்வு அத்தியாவசியமாகும். பிளெகானவ் கூறியவாறு,

"....மனிதர்களை மாபெரும் சமுதாயப் பிரச்சினைகள் பிரச்சினைகள் எதிர் கொள்கின்றன. மற்றவர்களை விட யார் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவியாக அதிகமாகப் பணிபுரிகிறார்களோ அவர்களைத்தான் மகாபுருஷர்கள் என்று அழைக்கிறோம்." சுப்பிரமணிபாரதி தனது காலத்து-யுகத்து- கலை, இலக்கிய, தத்துவப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பெருமளவில் உதவியவன் என்பதனாலேயே அவனை மகாகவி என்றும் யுகக்கவி என்றும் போற்றுவதோடு அவனது நூற்றாண்டு நிறைவையும் நன்றியுணர்வுடன் நினைவு கூருகிறோம்.

இலங்கையிலும் அவனது செல்வாக்கு காலப் போக்கில் வளர்ந்து வந்திருக்கிறது. ஆரம்பத்தில்-மிகவும் முற்பட சுவாமிகள் விபுலானந்தா, முகாந்திரம் சதாசிவஐயர், ஈழகேசரி பொன்னையா முதலானோர் பாரதிக்கும் உரிய முக்கியத்துவத்தை அளித்தனர். எனினும் முப்பதுகளுக்குப் பின், குறிப்பாக வ. ரா. சில காலம் வீரகேசரி ஆசிரிராக இருந்ததைத் தொடர்ந்து எழுந்தாளர்கள் மெல்ல மெல்லப் பாரதியின் ஆக்கங்களை உணர்ந்து வந்துள்ளனர்.

கலை இலக்கியத்தில் மட்டுமன்றி, சமூகப் பிரச்சினைகளுக்கும் பாரதியின் படைப்புக்களின் முக்கியத்துவம் எழுத்தாளர்களினாலும் சமூக சீர்திருத்த வாதிகளினாலும் உணரப்பட்டு வந்துள்ளது.

ஈழத்து இலக்கியமும் பாரதி என்ற பெருநதியின் பல வளங்களைப் பெற்றுள்ளது. எதிர்காலத்தில் இளம் தலைமுறையினர், குறிப்பாகக் குழந்தைகள் பாரதியின் பொக்கிஷங்களைப் பொருத்தமான முறையில் போற்றிப் பேணப் பழகிக் கொள்ள வேண்டும்.

அதற்கு ஈழத்தில் பாரதிபற்றி "மகாகவி பாரதி" என்ற இந்நூல் உதவும் என்று நம்பலாம். அளவு சிறிதானாலும், இதனை முழுமையாகப் பயன்படுத்தலாம்.
27-11-1982 கொழும்பு


----------------------------------------------------------

மகாகவி பாரதி

"நாவலர்" என்றால் அது நல்லை நகர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்களை மட்டுமே குறிக்கும்.

அது போல்-

"பாரதியார்" என்றால் அது மகாகவி சுப்பிரமணிய பாரதியாரை மட்டுமே குறிக்கும்.

எமக்கு-

நாவலர் ஒருவர் மட்டுமே.

பாரதியாரும் ஒருவர் மட்டுமே.

தமிழ் மொழிக்குப் புத்துயிர் அளித்து, புதுச் சக்தி ஊட்டியவர் பாரதியார்.

பாமர மக்களும் படித்துப் பொருள் புரியும் வகையில் அறிவுக் கவிதைகளை அழகு தமிழில் அளித்த கவிஞர் பாரதியார்.

இனிய எளிய கவிதைகளால் தமிழ்க் கவிதை வானில் புரட்சியையும், எழுச்சியையும், மலர்ச்சியையும் ஏற்படுத்தியவர் மகாகவி பாரதியார்.

இன உணர்ச்சி, மொழி உணர்ச்சி, சுதந்திர உணர்ச்சி, தாய் நாட்டு உணர்ச்சி என்று கணக்கிலடங்கா உணர்ச்சிக் கவிதைகளைப் புனைந்து, தமிழன்னைக்குச் சூட்டி மகிழ்ந்தவர் சுப்பிரமணிய பாரதியார்.

தேசப் பற்றும், தமிழ்ப் பற்றும், கடவுள் பற்றும் நிரம்பி வழிந்த பெரும் புலவர் இவர்

"பாட்டுக்கொரு புலவன் பாரதியடா" என்று தமிழ்ப் புலவர்களைப் பாட வைத்த பெரும் புலவன் எங்கள் பாரதி.

இது பாரதி பிறந்த தின நூற்றாண்டு!

பாரதி நூற்றாண்டில் வாழ்பவர்கள் என்பதில் எமக்கெல்லாம் மட்டற்ற மகிழ்ச்சி.

2

1882-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதினொராம் திகதி எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார். இது தமிழுக்கு சித்திர பானு வருடம் கார்த்திகை மாதம் இருபத்தேழாம் திகதியாகும்.

தந்தையார் பெயர் சின்னச்சாமி அய்யர், தாயார் லட்சுமி அம்மாள். மூல நட்சத்திரத்தில் பிறந்த தங்கள் மைந்தனுக்கு சுப்பிரமணியன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றார்.

இவரது செல்லப் பெயர் சுப்பையா. "பாரதி" என்பது இவரது அறிவாற்றலுக்கும், கவிதை புனையும் ஆற்றலுக்கும் கிடைத்த பட்டப் பெயர்.

சுப்பிரமணியனுக்கு ஐந்து வயதாக இருக்கும் போதே தாயார் மரணமாகி விட்டார். இது நடந்தது 1887-ம் ஆண்டில்.

இரண்டாண்டுகள் கழித்து 1889-ல் தந்தையார் மறுமணம் செய்து கொண்டார். இதே வருடத்திலேயே குலமரபுப்படி ஏழு வயதுச் சிறுவனாகவிருந்த சுப்பிரமணியனுக்குப் பூணூல் சடங்கும் நடைபெற்றது.

இளமையிலேயே அருட்கவி பொழியும் ஆற்றலை சுப்பிரமணியன் பெற்றிருந்தான். தமிழன்னையே இளைஞனின் நாவில் நர்த்தனம் புரிவதாக எல்லோரும் பேசிக் கொண்டனர்.

1893-ம் ஆண்டில், பதினொரு வயதை மட்டுமே எட்டிப்பிடித்திருந்த இவரது கவித்திறன் எட்டயபுரம் மன்னரின் காது வரை எட்டயது. எட்டயபுரம் சமஸ் தானப் புலவர்கள் சபையில் சுப்பிரமணியனின் கவித்திறன் பாராட்டப ;பட்டு, "பாரதி" என்ற பட்டமும் சூட்டப்பட்டது.

பதினொரு வயதுப் பையனுக்குப் "பாரதி" என்ற பட்டமா என்று தமிழறிந்தோர் ஆச்சரியப்பட்டனர்!

3

பாரதிக்கு பள்ளிப்படிப்பு வேப்பங்காய் போலக் கசந்தது. ஆனால் கவிதைகள் புனைவதிலேயே அவரது மனம் இன்பம் கண்டது.

திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்த பாரதியார், அப்போதே தமிழ்ப் பண்டிதர்களுடனும் வித்துவான்களுடனும் சொற்போர் புரிய ஆரம்பித்தார்.

இதனால் பாரதியாரின் தமிழ்ப் புலமை பற்றியே எங்கும் பேசப்படலாயிற்று.

1897-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ம் திகதி பாரதியாரின் வாழ்வில் மறக்க நாளாகும். பதினான்கு வயது மட்டுமே நிறைவு பெற்றிருந்த இவருக்கு அன்று தான் திருமணம் நடைபெற்றது. மனைவியாக வாய்த்தவள் ஏழு வயதுச் சிறுமியான செல்லம்மாள்.

இந்திய முறைப்படி இவர்களுக்குப் இவர்களுக்குப் பால்ய திருமணம் நடந்தேறியது,

திருமணமாகிச் சரியாக ஓராண்டு கழித்து, அதாவது 1898-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் பாரதியாரின் தந்தையாரான சின்னச்சாமி ஐயர் மரணமானார்.

இதனைத் தொடர்ந்து அவரது வாழ்;க்கையில் பல கஷ்டங்களும், பெரும் துயரங்களுனும் ஏற்பட்டன.

4

அந்த வருடத்திலேயே பாரதியார் காசிக்குச் சென்றார். அங்கு வசித்துவந்த தமது அத்தையாரான குப்பம்மாளின் ஆதரவுடன் காசியில் குடியேறினார்.

காசி இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்று, மெட்ரிக்குலேஷன் பாPட்சையிலும் சித்தி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து அலகபாத் சர்வகலாசாலையில் புது முகத் தேர்வுப் பாPட்சையில் முதன் நிலையில் சித்தி பெற்றார். வட மொழியுடன், இந்தியையும் கற்கும் சந்தர்ப்பமும் இவ்வேளையில் பாரதியாருக்குக் கிடைத்தது.

1902-ம் ஆண்டு வரை இங்கு வசித்து வந்த பாரதியார், இருபது வயதுக்குரிய வாலிப மிடுக்குடன் திகழ்ந்தார். மீசை வளர்த்து, கச்சம், வால் விட்ட தலைப்பாகையும் அணியும் பழக்கம் இந்நாட்களிலேயே அவருக்கு ஏற்பட்டது.

1903-ம் ஆண்டில் எட்டயபுரம் மன்னரின் வேண்டுதலுக்கு இசைந்து, அரசவைக் கவிஞர் பதவியை ஏற்றுக் கொண்டார். ஆனாலும் நீண்ட காலம் இவர் இப்பதவியில் இருக்கவில்லை. ஆனாலும் ஒரு வருட காலம் மட்டுமே இப்பதவியை அவர் வகித்தார்.

இருபத்தொரு வயதிலேயே அரசவைக் கவிஞர் பதவியை வகித்த பெருமை பாரதியாருக்குக் கிடைத்தது. மன்னருக்குத் தோழராகவும் விளங்கிய இவர், இச் சந்தர்ப்பத்திலே "விவேகபானு" என்ற பத்திரிகையில் "தனிமை இரக்கம்" என்ற பாடலை எழுதினார்.

எங்கள் மகாகவியால் எழுதப்பட்டு, அச்சேறிய முதற் கவிதை இதுவே.

5

இருபத்திரண்டு வயதான பாரதியார், 1904-ம் ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரையான மூன்று மாதங்களும் மதுரை சேதுபதி கலாசாலையில் தமிழ்ப் பண்டிதராகப் பணி புரிந்தார்.

நவம்பர் மாதம் முதல், சென்னை "சுதேச மித்திரன்" நாளிதழில் துணை ஆசிரியர் பதவி வகித்து, பத்திரிகையைச் சிறப்பாக வெளியிட்டு வந்தார். இதே வேளையில் "சக்கரவர்த்தினி" என்ற மாத சஞ்சிகையின் பொறுப்பாசிரியர் பதவியையும் வகித்து வந்தார்.

பத்திரிகை, எழுத்து, கவிதைப் பணிகள் ஒரு புறமிருக்க பாரதியார் இக் காலகட்டத்தில் அரசியலிலும் முழுமூச்சாக ஈடுபடத் தொடங்கினார்.

கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரபிள்ளையுடனும் தொடர்பு கொண்டதுடன் வங்கிக் கிளர்ச்சியிலும் நேரடியாகவே ஈடுபட்டார்.

1905-ம் ஆண்டில் கல்கத்தாவில், தாதாபாய் நௌரோஜி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மகா சபைக் கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

இச் சமயத்திலே சுவாமி விவேகானந்தரின் சிஷ்ய நிவேதிகாதேவியைச் சந்திக்கும் பேறு அவருக்குக் கிடைத்தது, அவரிடம் ஆசி பெற்று, அவரையே தமது ஞானகுருவாகவும் ஏற்றுக் கொண்டார்.

1907 ஏப்ரலில் தமிழகத்தினட தலைநகரான சென்னையிலிந்து "இந்திரா" என்ற புரட்சிகர வார இதழ் வெளிவர ஆரம்பமானது. அதன் முதல் ஆசிரியர் பதிவியையும் பாரதியாரே வகித்தார்.

"பால பாரதம்" என்ற ஆங்கில இதழையும் இதே வேளையி; பாரதியார் பொறுப்பேற்று நடத்தினார்.

6
இதே ஆண்டு டிசம்பரில் சூரத் காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்று, திலகரின் தீவரவாத இயக்கத்தில் மோகம் கொண்டார்.

அரவிந்தர், லாலா லஜபதிராய் ஆகியோரின் தொடர்பும் இப்வேளை பாரதியாருக்கு ஏற்பட்டது. வி. கிருஷ்ணசாமி ஐயரின் தேசியப் பாடல்கள் பாரதியாரின் மனதைக் கொள்ளை கொண்டது.

இதனால் ஏற்பட்ட மனமகிழ்ச்சியின் காரணமாக, "சுதேச கீதங்கள்" என்ற தமது பாடல்களை நான்கு பக்கச் சிறு பிரசுரங்களாக வெளியிட்டு இலவசமாகவே விநியோகம் செய்தார்.

1908-ம் ஆண்டு பாரதியாரின் முதலாவது கவிதை நூல் வெளியானது. "ஸ்வதேச கீதங்கள்" என்பது இந் நூலின் பெயர்.

இந்திய விடுதலைக் கிளிர்ச்சியில் மிகுந்த ஊக்கத்துடன் பாரதியார் ஈடுபடலானார். தீவிரவாதிகளின் கோட்டையாக சென்னை விளங்கியது. "சுயராஜ்ய" தினக் கொண்டாட்டத்தை அடுத்து, வ. உ. சிதம்பரப்பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோருக்கு எதிராக நடந்த வழக்குகளில் பாரதியாரும் சாட்சி சொன்னார். ஆனாலும் வ. உ. சி., சிவா ஆகியோருக்குச் சிறைத் தண்டையே கிடைத்தது.
இதனால் பாரதியார் சோர்ந்து விடவில்லை. தாம் ஆசிரியராகவிருந்த "இந்தியா" என்ற பத்திரிகையை விடுதலைப் போராட்டத்துக்கு முடுக்கி விட்டார்.

பாரதியாரின் வீரம் மிகுந்த பாடல்கள், கேலிச் சித்திரங்கள், உணர்ச்சிக் கட்டுரைகள், தலையங்கங்கள் அரசியல் பிரச்சாரத்துக்கு கை கொடுத்து வழி நடத்தின.

இதனால் "இந்தியா" பத்திரிகை மீது அரசின் பார்வை விழுந்தது. பாரதியார் மீது அரசு வாரண்ட் பிறப்பித்ததாக தகவல் வந்தது.

பாரதியார் சென்னையிலிருந்து தலைமறைவாகி புதுவைக்குச் சென்றார்.

புதிய இடம், புதிய சூழல், முன்பின் பழக்கமில்லாத மக்ககள். அங்கும். பொலிஸாரின் "கெடுபிடி" அதிகரித்தது, இச் சந்தர்ப்பத்திலேயே குவளைக் கண்ணனின் நட்பு பாரதியாருக்குக் கிடைத்தது.

7

1908-ம் ஆண்டு முதல் "இந்தியா" பத்திரிகை புதுவையிலிருந்து வெளி வந்தது.

பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கு எதிராகத் தமது பேனாவை வன்மையாகப் பாரதியார் பயன்படுத்தினார். இவரது பிரச்சாரத்துக்கு நாட்டில் பெரும் வரவேற்புக் கிடைத்தது. பத்திரிகையின் செல்வாக்கும் அதிகரித்தது.

இதனை அவதானித்த அரசு, இப் பத்திரிகையைப் பொது மக்கள் படிப்பதற்குத் தடை கொண்டு வந்தது. சென்னையில் பிறந்து புதுவையில் வளர்ந்த "இந்தியா" பத்திரியையும் நின்றது.

இந்த நிலைமையைப் பயன்படுத்தி, தமது இரண்டாவது கவிதை நூலான "ஜன்ம பூமி" யைப் பாரதியார் வெளியிட்டார். 1909-ம் ஆண்டில் இது வெளியானது.

1910-ம் ஆண்டில் விஜயா (தினசரி), சூரியோதயம் (வாரந்தம்), பாலபாரதம் (வாராந்தம்), கர்மயோகி (மாதாந்தம்) ஆகிய பத்திரிகைகளும் வெளிவருவதும் தடைப்பட்டது. "சித்ராவளி" என்ற ஆங்கில தமிழ் கார்ட்டூன் பத்திரிகையை வெளியிடும் முயற்சியும் கைவிடப்பட்டது.

இதே வருடம் ஏப்ரல் மாதம், பாரதியாரும் ஸ்ரீநிவாஸாச்சாரியாரும் மேற்கொண்ட முயற்சியின் பயனாக அரவிந்தர் புதுவை வந்தார். இவ்வேளையிலேயே வேதப் பொருள் ஆராய்ச்சியும் நடைபெற்றது.

1910-ம் ஆண்டு நவம்பர் மாத்தில், பாரதியாரின் "கனவு", "சுயசரிதை" முதலிய கவிதைகள் அடங்கிய "மாதாமணிவாசகம்" என்ற நூல் வெளியிடப்பட்டது.

இவ்வேளையில் வ. வே. சு. ஐயர் புதுவைக்கு வந்தார். ஐயரின் சந்திப்பால் பாரதியார் புத்துணர்வு பெற்று, அரசியல், கலை, இலக்கியம் ஆகிய பல துறைகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட ஆரம்பித்தார்.

8
அடுத்த வருடம், மணியாச்சி என்ற இடத்தில் மாவட்ட கலக்டர் ஆஷ் என்பவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதன் பயனாக புதுவையிலிருந்த தேசபக்தர்கள் மீது பொலிஸார் தங்கள் பார்வையை வீச ஆரம்பித்தனர். பலர் புதுவையிலிருந்து வெளியேறினர்.

இதன் பயனாக, பாரதியாருக்கு சிஷ்யர்களும், அன்பர்களும் நாடெங்கும் அதிகரிக்கத் தொடங்;கியது.

1912-ம் ஆண்டே பாரதியாரின் வாழ்வில் உழைப்புமிக்க வருடமாகும். பகவத் கீதையை இவ்வாண்டிலேயே தமிழில் மொழி பெயர்த்தார்.
கண்ணன் பாட்டு, குயில் பாட்டு ஆகிய கவிதை நூல்களும் வெளியாகின. "பஞ்சாலி சபதத்தின்" முதலாம் பகுதியும் அச்சேறியது.

பாரதியாரின் புத்தங்களைப் பொது மக்கள் ஆர்வத்துடன் விரும்பிப் படிக்கத் தொடங்கினர்.

சுப்பிரமணிய சிவாவின் "ஞான பானு" என்ற பத்திரிகைக்கு 1913-ம் ஆண்டு காலப் பகுதியில் பாரதியார் பல விஷயதானங்களை எழுதினார்.

இவரது தேசபக்திப் பாடல்களைக் கொண்ட "மாதாமணி வாசகம்" என்ற நூல் இவ்வாண்டில் தென்னாபிரிக்கா நேடாவில் பிரசுரம் செய்யப்பட்டது.

9

1914-ம் ஆண்டு-

முதலாவது உலக யுத்தம் ஆரம்பமாகி விட்டது.

புதுவையில் வாழ்ந்த தேச பக்தர்களுக்குப் பெரும் துயர்களும் தொல்லைகளும் ஏற்பட்டன.

அடுத்த மூன்றாண்டுகளும் பாரதியாரின் வாழ்வு சொல் லொணாக் கஷ்டங்களுக்கு மத்தியில் உருண்டோடியது. "அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு என்ன செய்வது?" என்ற நிலையில் அவர் வாழ நேர்ந்தது.

1917-ம் ஆண்டில் இவரது "கண்ணன் பாட்டு" என்ற நூலை பரலி சு. நெல்லையப்பர் வெளியிட்டார்.

அடுத்த ஆண்டில் "நாட்டுப் பாட்டு" என்ற பெயரில் இவரது சுதேச கீதங்கள் புத்தகமாக வெளிவந்தது. இதனையும் பரலி சு. நெல்லையப்பரே வெளியிட்டார்.

புதுவை (புதுச்சேரி) வாழ்க்கையிலும் பாரதியாருக்கு வெறும்பேற்பட்டது.

10

1918 நவம்பர் 20-ம் திகதி-

புதுவையிலிருந்து புறப்பட்டு, பிரிட்டிஷ் எல்லையில் காலடி எடுத்து வைத்தபோது பாரதியார் கைது செய்யப்பட்டார்.

முப்பத்திநான்கு நாட்கள் "ரிமாண்டில்" இருந்த பின்னர் "வழக்கு இல்லை" என்று கூறி விடுதலை செய்யப்பட்டார். அதன் பின்னர் தமது மனைவியின் ஊரான கடயத்துக்குச் சென்றார்.

அடுத்த இரண்டாண்டுகளையும் கடயத்திலேயே செலவிட்டார். எட்டயபுரம், திருவனந்தபுரம், காரைக்குடி, கானாடு காத்தான் ஆகிய பல இடங்களுக்கும் விஜயம் செய்தார்.

வறுமை மீண்டும் பாரதியாரை வாட்டத் தொடங்கியது.

தமது நிலையை விளக்கி எட்டயபுரம் மன்னருக்குச் சீட்டுக் கவிதைகளை எழுதி அனுப்பினார். மன்னரிடமிருந்து எதிர் பார்த்த உதவி கிடைக்கவில்லை.

இதனால் அவரது உடல் நிலை பாதிப்படைந்தது.
1919 மார்ச் மாதம் 19-ம் திகதி மீண்டும் சென்னைக்கே திரும்பினார்.

இந்திய அரசியல் மேதை ராஐhஜி வீட்டுக்கு ஒரு தடவை சென்றபோது மகாத்மா காந்தியை பாரதியார் சந்தித்தார். இந்தியாவின் மும்மூர்த்திகளான ராஐhஜி, காந்தி, பாரதி ஆகிய மூவரும் ஒன்றாகச் சந்தித்தது இதுவே முதலும் கடைசியுமாகும்.

1920 டிசம்பர் மாதத்திலிருந்து மித்திரன் பத்திரிகையிலும் மீண்டுமு; உதவி ஆசிரியர் பணியை ஏற்றார். பல வெளியூர்களில் சொற்பொழிவாற்றும் சந்தர்ப்பமும் இக் காலப்பகுதியில் பாரதியாருக்குக் கிடைத்தது.

11

1921 ஜூலை ஆகஸ்ட் மாதத்தில்-

திருவள்ளிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானையின் கோபத்துக்கு இலக்காகி, பாரதியார் தாக்கப்பட்டார். தலையிலும் காலிலும் சிறு காயங்கள் ஏற்பட்டன.

காயங்கள் குறைவாகவே இருந்த போதிலும், தாக்குதல் அதிர்ச்சி பாரதியாரை நோயாளியாக்கியது.

செப்டம்பர் மாதம் 11-ம் திகதி-

தாக்குதல் அதிர்ச்சியிலிருந்து விடுபட்ட போதிலும், வயிற்றுளைவு நோயினால் பாரதியார் பாதிக்கப் பட்டார். மருந்து சாப்பிடவும் மறுத்துவிட்டார்.

செப்டம்பர் 11-ம் திகதி நள்ளிரவு தாண்டி, 12-ம் திகதி அதிகாலை 1.30 மணிக்கு, மகாகவி சுப்பிரமணிய பாரதியார் இவ்வுலக வாழ்வு நீங்கினார்.

இறக்கும் போது பாரதியாருக்கு 39 வயது மட்டுமே!

12

பாரதியாரை மாபெரும் கவிஞர் என்று மட்டுமே மக்கள் அறிவர்.

அவர் ஒரு சிறந்த கதாசிரியர், கட்டுரையாசியர், மேடைப் பேச்சாளர் என்பது பலருக்குத் தெரியாது.

அவர் ஒரு சிறந்த கதாசியர், கட்டுரையாசியர், மேடைப் பேச்சாளர் என்பது பலருக்குத் தெரியாது.

அவர் ஒரு சிறந்த தேவியக் கவிஞராக மிளிர்ந்த போதும், தமிழுக்குச் செய்த தொண்டு மகத்தானது.

பாரதியாரின் கவிதை நடைப் புதுமையை, அவரது வசன நடையிலும் காணலாம். படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கு உணர்ச்சியும், புத்துணர்வையும் அது ஏற்படுத்தும்

தமிழ் மொழியில் அவருக்கிருந்த கற்பனைத் திறனும், சிந்தனைத் திறனும் சிரஞ்சீவித் தன்மை வாய்ந்தவை.

மகாகவியின் கவிதைகளை தேசிய கீதங்கள், பக்திப்பாடல்கள், ஞானப் பாடல்கள், தனிப் பாடல்கள், கண்ணன் பாட்டுக்கள், குயில் பாட்டுக்கள், பாஞ்சாலி சபதம், புதிய பாடல்கள், வசன கவிதை எனப் பலவாறாகப் பிரிக்கலாம்.

அவரது கதைகளையும் ஞானரதம், நவ தந்திரக் கதைகள், தராசு, சில வேடிக்கைக் கதைகள் என வகைப்படுத்தலாம்.

காக்காக்கள் பார்லிமென்ட், சும்மா, கிளி, குதிரைக் கொம்பு, மழை, காற்று, கடல், மாலை நேரம், கடற்கரை யாண்டி என்பன இவரது வேடிக்கைக் கதைகளில் சிலவாகும். சந்திரிகையின் கதை, சின்னச்சங்கரன் கதை ஆகியன எழுதி முடியுமுன்னரே, பாரதியார் பூவுலகு நீங்கினார்.

13
பாரதியாருக்கு இரண்டு புதல்விகள் பிள்ளைச் செல்வங்களாகக் கிடைத்தனர்.

ஒருவர் சகுந்தலா பாரதி. மற்றவர் தங்கம்மாள் பாரதி, பாரதியாரின் கூடப் பிறந்த சகோதரரான சி. விசுவநாத அய்யர் இப்போது மானமதுரையில் வசிக்கின்றார். தலைமை ஆசிரியராகப் பதவி வகித்து, ஓய்வு பெற்ற இவருக்கு இப்போது வயது 86 ஆகும்.

இன்று உலகம் போற்றும் கவிஞராகத் திகழும் பாரதியாரின் இறுதிச் சடங்கு வைபவங்களில் கலந்து கொண்டவர்கள் இருபது பேர் மட்டுமே என்று கூறப்படுகின்றது. இவர்களில் ஒருவரான ஸ்ரீ லட்சுமி நாராயண சாஸ்திரிகள் இப்போதும் சென்னையில் வசிக்கிறார்.

பாரதியாரின் பேரர்கள், பூட்டர்கள் பலர் கனடா, கலிபோர்னியா, மலேஷியா, டோரண்டோ ஆகிய இடங்களில் இன்று தொழில் புரிகின்றார்கள்.

புதிய ரஷ்யாவையும், ஜேர்மனியையும் புகழ்ந்து பாடிய முதற் கவிஞர் பாரதியாரே. வீழ்ந்துபட்ட பெல்ஜியத்துக்காகவும் முதற் குரல் கொடுத்தார் இவரே!

புரட்சி, பொதுவுடமை என்ற சொற்களைத் தமிழில் தந்த புரட்சிக் கவிஞரும் இவரே.

குழந்தைகளுக்காச் சின்னஞ்சிறு கவிதைகளைப் பாடிய குழந்தைக் கவிஞரும் இவரே.

பாரதி பாடாத பொருளே இவ்வுலகில் இல்லை எனலாம். இதனால் தான் பாரதியாரை, உலகக் கவிஞன், உண்மைக் கவிஞன், தேசியக் கவிஞன், குழந்தைக் கவிஞன். குதூகலக் கவிஞன், புதுமைக் கவிஞன், புதுயுகக் கவிஞன், வீரக் கவிஞன், விடுதலைக் கவிஞன், கண்டனக் கவிஞன், காதற் கவிஞன், சுதந்திரக் கவிஞன் என்ற பல்வேறு பெயர்களால் உலக மக்கள் மகிழ்வுடன் அழைக்கின்றனர்.

14
பாரதியாரின் பாடல்கள் ஒவ்வொன்றும் எந்தச் சந்தர்ப்பத்தில் பாடப்பட்டன என்ற ஒரு ஆராய்ச்சி இப்போது நடைபெற்று வருகின்றது.

இரு பாடல்கள் உருவான சந்தர்ப்பம் பின்வருமாறு:-
பாரதியாரின் இளைய மகள் சகுந்தலா, ஒரு தடவை தமது தாய் சொல்லைக் கேட்கவில்லை. தாய் சொல்லை எதிர்த்துப் பேசினார். அப்போது அதனைக் கவனித்த பாரதி "தாய் சொல்லைத் தட்டாதே" என்றார்.

உடனே மகள் சகுந்தலா தந்தையைப் பார்த்து "நான் என்னென்ன செய்யக்கூடாது. என்னென்ன செய்ய வேண்டும்" என்று கேட்டாள்.

அதனால் பிறந்ததே "ஓடி விளையாடு பாப்பா-நீ ஓயந்திருக்கலாகாது பாப்பா" என்ற பாடல்.

பாரதியார் கடயத்தில் இருந்த போது, மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் பஜனைக் கோஷ்டியினர் வீதியழியாக பாடிச் செல்வர். ஒரே பாடலையே தினமும் அவர்கள் படிப்பதை பாரதியார் கவனித்தார்.

இதனால் சலிப்படைந்த பாரதியார் "நான் புதுப் பாட்டுச் சொல்லித் தருகின்றேன், நீங்கள் படியுங்கள்" என்று சொல்லி "காக்கைச் சிறகினிலே நந்தலாலா - நின்றன் காரியமுகம் தோன்றுதையா நந்தலாலா" என்ற பாடலைச் சொல்லிக் கொடுத்தார்.
15
பாரதி வாழ்ந்த எட்டயபுரத்தில் 1948 செப்டம்பரில் மணிமண்டபம் கட்டப்பட்டது.

இந்திய அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் பலர் பங்கு கொண்டு இவ்வைபவத்தைச் சிறப்பித்தனர்.

1960 செப்டம்பர் 11-ம் திகதி பாரதியாரின் 78ஆவது பிறந்த தினத்தன்று அவரது முத்திரையை இந்திய அரசு வெளியிட்டுக் கௌரவித்தது.

மகாகவியின் 81-வது பிறந்த தினத்தை தமிழக அரசு 1962 டிசம்பர் 11-ம் திகதி கோலாகலமாகக் கொண்டாடியது.

அவரது கவிதைகள் பல ரஷ்ய, ஆங்கில, ஸ்பானிய, ஆர் மீனிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

பாரதி சிலையும் தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ளது. ஈழத்திலும் பல இடங்களில் பாரதிக்கு சிலை நிறுவப்பட்டு வருகிறது. விhவான முறையில் பாரதி நூற்றாண்டு விழா தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

சுமார் இரு நூற்றுக்கதிகமான பாரதி தொடர்பான நூல்கள் தமிழகத்தில் கடந்த பன்னிரண்டு மாதங்களிலும் வெளி வந்துள்ளன. ஒவ்வொரு பிரதியிலும் ஆயிரம் பிரதிகளைக் கொள்முதல் செய்யும் திட்டத்தைத் தமிழக அரசு செயற்படுத்தி வருகிறது.

"சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்" என்று பாடிய பாரதியை ஈழம் மறந்து விடவில்லை.

பல அரங்குகள், விழாக்களுடன், பாரதியாரின் சில கவிதைகள் சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, புத்தகமாக வெளிவரவுள்ளது.

பாரதி பிறந்த நூற்றாண்டு விழாவின் இறுதி நாளான இன்று-

இச் சிறு நூல் எமது காணிக்கை!

16

பேராசியர் கல்கியின் "பாரதி பிறந்தார்" என்ற கட்டுரையின் முதற் பகுதி:-

"பாரதி தினக் கொண்டாட்டங்கள் வருடம் தோறும் செப்டம்பர் 11-ம் திகதி தமிழ் நாட்டில் நடக்கின்றன. ஒரு வருடம் நடந்த கொண்டாட்டத்தில் ஒரு பிரசங்கி, பாரதியாரின் பெருமையையும், அவருடைய கவியின் மகிமையையும் பற்றிப் பேசிவிட்டுப் பின்வருமாறு பேச்சை முடித்தார்:-

"அப்பேர்ப்பட்ட பாரதியார், இன்றைய தினம் மண்ணுலகை விட்டுப் பொன்னுலகை அடைந்தார். அவரை நாம் எல்லோரும் பின்பற்றுவோமாக!"

ஆனால் அந்தக் கூட்டத்திலிருந்த ஒருவராவத அன்றைய தினம் பாரதியாரைப் பின்பற்றவில்லை. பிறருக்குப் போதனை செய்த பிரசங்கி கூட அவரைப் பின்பற்றிப் பொன்னுலகம் சேரவில்லை. எல்லோரும் கல்லுப் பிள்ளையார் போல இருந்து விட்டுத் தத்தம் வீட்டுக்குச் சென்றார்கள்.

இப்படிப்பட்ட பேச்சு விபாPதங்களுக்குக் காரணமாயிருப்பது என்னவென்றால், பாரதியாரின் ஞாபகத்தைக் கொண்டாடுவதற்கு நாம் அவருடைய மரண தினத்தை ஏற்படுத்திக் கொண்டதேயாகும்.

அவர் இறந்து போனதை ஏன் இவ்வளவு உற்சாகமாகக் கொண்டாட வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக பிறந்த தினத்தைக் கொண்டாடுவது பொருத்தமில்லையா என்றும் ஒரு பிரச்சினை வருடாவருடம் கிளம்புகிறது.
17
மகாகவி பாரதியாரின் இறுதி யாத்திரையில் கலந்து கொண்ட இருபது பேரில் ஒருவரான ஸ்ரீலட்சுமி நாராயண சாஸ்திரிகள் இப்போதும் தமிழகத்தில் வாழுகின்றார். இவருக்கு தற்பொழுது வயது எண்பதாகிறது,

பாரதியாரின் இறுதிச் சடங்கு பற்றி தமிழக சஞ்சிகை யொன்றில் பின்வருமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

"1921 செப்டம்பர் பதினோராம் நாள் ஞாயிற்றுக்கிழமை எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. கவிபாரதி கடுமையான வயிற்றுப்போக்கினால் மிகவும் சிரமப்பட்டார். படுத்த படுக்கையாகக் கிடந்தவரின் உடல்நிலை மிக மோசமாகவிருந்தது.

இரவு சுமார் இரண்டு மணியளவில் எங்கள் வீட்டுக்கு மண்டபம் ஐயங்கார் அனுப்பியதாக ஓர் ஆள் வந்து கவி பாரதியார் காலமான விஷயத்தைச் சொன்னார் துளசிங்கப்பெருமாள் தெருவிலுள்ள பாரதியாரின் வீட்டு வாசலில் மண்டபம் ஐயங்கார், சுதந்திரநாத் ஆர்யா, நரசிம்மப் பட்டாசாரி, மற்றும் பாரதியாரின் உறவினர் சிலரும் இருந்தனர்.

வீட்டின் உட்கூடத்தில் துணியோடு ஒட்டிக் கிடந்தது கவிஞரின் உடல், பாரதியார் இறப்பதற்கு சுமார் ஒரு மணி நேரத்துக்க முன்னதாக அவராகவே எழுந்து முகம் கைகால்களெல்லாம் குளிர்ச்த நீரில் அலம்பிக்கொண்டு வந்து படுத்தார். அப்படியே காலமாகி விட்டதாக அவருரடய உறவினர்கள் தெரிவித்தனர்.

பொழுது விடிவதற்குள் பாரதியார் காலமான செய்தி ஊரெல்லாம் பரவியது. புதுவை ஸ்ரீ நிவாஸாசாரி, திருமலாசாரி, கடையம் ஹரிஹரசர்மா, கிருஷ்ணசாமி சர்மா, நெல்லையப்பர், சக்கரை செட்டியார், சுதேச மித்திரன் ஆபீஸிலிருந்து நாலைந்துபேர் யாவரும் வந்திருந்தார்கள். வந்திருந்த மொத்த நபர்களையும் கைவிரல்களை விட்டு எண்ணி விடலாம். கூட்டம் அதிகம் இல்லை.

தகனத்துக்கு ஏற்பாடுகள் தொடங்கினர். பாரதியாருக்குப் பிள்ளை (மகன்) இல்லாததினால் அவரது உறவுக்காராகிய ஹரிஹரசர்மாவே ஈமச்சடங்குகளைச்செய்ய தர்ப்பையை வாங்கிக் கைவிரலில் மாட்டிக் கொண்டு சடலத்தைத் தொட்டுக்கொண்டார்.

பிரேதத்தை ஹரிஹரசர்மா, கிருஷ்ணசாமிசர்மா, என்தமையனார் (எருக்கூர் எஸ். நீலக்கண்ட பிரம்மச்சாரி) மற்றும் பாரதியாரின் உறவினர் நால்வரும் சுமந்து கொண்டு கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டுக்குச் சென்றனர். கூடவே சுடுகாட்டுக்குச் சென்றேன்.

சுடுகாட்டில் பாரதியின் பெருமையைப் பேசினர். அந்திமச்சடங்குக்காகப் புரோகிதர் மந்திரம் சொல்ல ஹரிஹர சர்மா சிதைக்குத் தீ மூட்டினார். வந்திரந்தவர்கள் கவிபாரதியின் பாடல்களைப் பாடினார். நானும் கூடவே பாடினேன். அன்று நிகழ்ந்த இந்தக் காட்சியை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.

18
பாரதியாரின் பேத்திகளில் டாக்டர் திருமதி விஜய பாரதியும் ஒருவராவார். "சி. சுப்பிரமணிய பாரதி" என்ற பெயரில் இவரால் எழுதப்பட்டு, 1972 செப்டம்பரில் ஆங்கிலமொழியில் வெளியான நூலிலுள்ள சில முக்கிய தகவல்கள் இங்கே தரப்படுகின்றன:-

பாரதியின் தந்தையான சின்னச்சாமி ஐயர் தமிழில் பாண்டித்தியம் பெற்றவர். நவீனபொறியியல்துறை, கணிதம் ஆகியவைகளிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர். அதனால் தனது மகனும் இவ்விரு துறைகளிலும் போதிய பயிற்சி பெறவேண்டும் என விரும்பினார். அத்துடன் ஆங்கிலக் கல்வியிலும் மகன் புலமை பெறவேண்டும் என்பது அவரின் அவா.

ஆனால் மகனோ இந்தத் துறைகளை நாடிச்செல்லாது, பாட்டெழுதி பட்டம் பெற்றுப் பாரதியானார்.
தனது பருவமறியாத வயதிலே தாயை இழந்தவர் பாரதியார். பதினாறு வயதையடையும்போது தந்தையையும் காலனுக்குப் பறிகொடுத்தார். சிறு வயதுடையவனாக இருக்கும்போதே அடுத்தடுத்து இரு மரணங்களையும் சந்தித்ததாலோ என்னவோ மரணத்துக்குப் பயந்தவராகவே இவர் வாழ்ந்து வந்தார்.
அன்புத் தாயை ஐந்து வயதில் இழந்த பாரதியார், தாய் அன்புக்காக ஏங்கித் தவித்தார். அதனைத்தான் மீண்டும் பெறமுடியாதே. இதனாலேயே தமது அதிகமான பாடல்களையும் அன்னை, அம்மா என விழித்துப் பாடியுள்ளதை அவதானிக்கலாம். சரஸ்வதி, பராசக்தி பாடல்களும் இவரது ஆக்கங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன.

பாரதியாரிடம காணப்படும் அதிகமான குணாதிசயங்களும் அவரது தந்தையாரிடம் காணப்பட்டவையாகும். எதையும் ஒழித்து மறைக்காது நேரடிhகவே சொல்வது, உண்மையில் ஆழ்ந்த நம்பிக்கை, திறமை ஆகியன தமது தந்தையாரிடமிருந்து பாரதியார் பெற்றவை. அதேபோல "கோபம்" கொள்வதையும்கூட தந்தையிடமிருந்தே அவர் பெற்றார். தந்தையார் பருத்தித்தொழிலில் முழுப்பணத்தையும் முதலீடுசெய்வது நஷ்டமடைந்து மரணமாகும்வரை பாரதியாருக்குப் பணத்தின் முக்கியத்தும்தெரியாமலிருந்தது.

1904ம் ஆண்டு ஆகஸ்ட்மாதம் முதலாம் திகதி முதல் நவம்பர் மாதம் பத்தாம் திகதிவரை மதுரை சேதுபதி உயர் பாடசாலையில் பாரதியார் தமிழ் பண்டிதராகக் கடமையாற்றினார் அல்லவா? அப்போது அவருக்குக் கிடைத்த மாதச் சம்பளம் பதினேழு ரூபா ஐம்பது சதமாகும்.

பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிகையில் உதவியாசிரியாராகச் சேர்ந்தது எவ்வாறு என்பதுபற்றி பல கதைகள் அடிபடுகின்றன.

சுதேசமித்திரன் ஆசிரியராகவிருந்த ஜி. சுப்பிரமணிய ஐயர் மதுரைக்கு வந்தபோது பாரதியாரின் திறமைகளை அறிந்து அவரை அழைத்துச் சென்றதாகச் சிலர் கூறுகின்றனர்.

பாரதியாரின் தூரத்து உறவினரான லட்சுமண ஐயர் என்பவர், பாரதியாரின் வேண்டுதலுக்கிணங்க சுதேசமித்திரனில் சேர்த்து விட்டதாக வேறு சிலர் சொல்கின்றனர்.

பாரதியார் தமது சகபாடியான அய்யசாமி அய்யரைக் கேட்டதற்கிணங்க, அவரது மாமாவான இராஜாராமஅய்யர் (இந்து பத்திரிகை நிருபராகக்கடமையாற்றியவர்) உதவியால் வேலைகிடைத்ததாக மற்றும் சிலர் கூறுகிறார்கள்.

பாரதியார் ஆணழகன். வெண்ணிறமான தோற்றமுள்ளவர். ஐந்து அடி ஆறு அங்குலத்துக்கு சற்றுக் கூடுதலான உயரம். மூக்கு தனிக் கவர்ச்சியானது. தாமரை மலர் போன்ற கண்கள். கண்மணிகள் இரு பந்துகள் போல இருக்கும்.

மிகப்பரந்த உயர்ந்த நெற்றி, தடவி முறுக்கிவிடப்பட்ட ஆண்மை பொருந்திய மீசை, நெற்றியில் பொட்டு, சுட்டெரிக்கும் பார்வை.

இவைகள் அவருக்கே சொந்தமானவை.

பாரதியாரிடம் இயற்கையாகவே அமைந்த குணங்களில் ஒன்று பிடிவாதம். தாம் நினைத்ததைச் செய்தில் அவருக்கு இன்பம்.

தினமும் பார்த்தசாரதி கோவில் போய், அங்குள்ள யானைக்கு வாழைப்பழம் கொடுப்பது இவரது வழக்கம். அன்றைய தினம் யானை கட்டுப்பாடில்லாமல் நின்றது. அதனால் யானைக்கு வாழைப்பழம் கொடுக்க வேண்டாமென கோயில் அதிகாரிகள் சொல்லியும் பாரதியார் கேட்கவில்லை. வழக்கம் போல அருகில் போய் பழம்கொடுத்தபோது, யானை அவரை உதைத்துத் தள்ளியது.

அதுவே அவரது மரணத்துக்குக் காரணமாக அமைந்து விட்டது.
1904ம் ஆண்டு "விவேகபானு" பத்திரிகையில்
வெளியான பாரதியாரின் முதற் கவிதை

தனிமை இரக்கம்

குயிலனாய் நின்னொடு குலவியின் கலவி
பயில்வதிற் கழித்த பன்னாள் நினைந்து பின்
இன்றெனக் கிடையே எண்ணில்யோ சனைப்படும்
குன்றமும் வனமும் கொழிதிரைப் புனலும்
மேவிடப் புரிந்த விதியையும் நினைத்தால்

பாவியென் நெஞ்சம் பகீரெனில் அரிதோ?
கலங்கரை விளக்கொரு காவதம் கோடியா
மலங்குமோர் சிறிய மரக்கலம் போன்றேன்
முடம்படு தினங்காள்! முன்னர் யான் அவளுடன்
உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில்

வளியெனப் பறந்த நீர் மற்றியான் எனாது
கிளியினைப் பிரிந்துழிக் கிரியெனக் கிடக்கும்
செயலையென் இயம்புவல் சிவனே!
மயிலையிற் றென்றெவர் வகுப்பரங் கவட்கே!
எனது பக்கம்

காரணமில்லாமல் எந்தச் சம்பவமுளம் நிகழ்வதில்லை!

இச்சிறு நூல் வெளிவருவதும் கூட ஒரு காரணத்தினால் தான்.

இது பாரதி பிறந்த தின நூற்றாண்டு. இதனால் பாடசாலை மாணவர்களிடையே பாரதி பற்றிய பேச்சுக் கட்டுரைப் போட்டிகள் ஆங்காங்கு நடத்தப்பட்டன.

இவ்வாறான பல போட்டிகளில் எனது மகனும் கலந்து கொள்ள முன் வந்த வேளைகளில், பேச்சுக்கான பிரதிகளைத் தயாரிக்கும் சந்தர்ப்பங்களிலேயே, பாரதியாரின் வாழ்க்கை வரலாறு சம்பந்தமான நூல்கள் போதியளவு இல்லாத குறை தெரிந்தது.

எனவே பாடசாலை மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாக வாயினும் வெளியிடவேண்டும் என்ற எண்ணம் என்னுள் கருக்கூட்டியது.

இச்சிறு நூல் வெளிவர இதுவே காரணம்!
மாணவர்கள் மட்டுமன்றி, மற்றோரும் கூட பாரதியார் வரலாற்றை ஒரே பார்வையில் படிப்பதற்கு இச் சிறுநூல் உதவும் என்பது எனது நம்பிக்கை.

பாரதியாரின் நூறாவது பிறந்த நாளில் இந்நூல் வெளியாவது மிகப்பொருத்தமானதாக அமைந்துள்ளது.

இந்நூலுக்கு முன்னுரை வழங்கியது இலக்கிய கலாநிதி, பண்டிதமணி திரு. சி. கணபதிப்பிள்ளை ஐயா, யாழ், பல்கலைக் கழக தமிழ் பீடாதிபதி பேராசிரியர் க. கைலாசபதி ஆகியோருடன் மேலட்டை ஓவியத்தை வரைந்தளித்த அருமை நண்பன் "சுதா", குறுகிய காலத்தில் நூலை அச்சேற்றித் தந்த குமரன் அச்சகத்தினர் ஆகியோர்-
என்றும் என் நன்றிக்கு உரியவர்கள்!

5-12-1982. எஸ். திருச்செல்வம்

----------------------------------------------------------

பாரதி நூற்றண்டு விழா
கொண்டாடப்பட்ட
11-12-1981 முதல்
11-12-1982 வரையான
காலப்பகுதியில்
பாரதிபற்றி
ஈழத்தில் வெளியான
ஒரேயொரு
தமிழ்நூல் இதுவே.

----------------------------------------------------------
குமரன் அச்சகம், கொழும்பு - 12

----------