கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  வன்னி மான்மியம்  
 

நிலாந்தன்

 

வன்னி மான்மியம்

நிலாந்தன்

-------------------------------------------------

அடங்காப்பற்று என்றழைக்கப்பட்ட வன்னிப் பெருநிலம் எப்பொழுதும் பகைவரிற்கு அடங்கிக் கிடந்ததில்லை.
யாழ்ப்பாணத்தரசுகள் வீழந்துபடும் போதெல்லாம் ஆட்சிமையம் இயல்பாகவே பெருநிலத்துக்கு நகர்ந்துவிடும்; அல்லது பகை சூழ்ந்தபோதெல்லாம் தமிழரசின் உயிர்ச் சூட்டை பெருநிலமே ஒளித்து வைத்திருக்கும்.
அங்கிருந்துகொண்டு பகைவரின் மீது விடாது போர் தொடுக்கப்படும்.
போத்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர், இந்தியர் என்று படையெடுத்து வந்த எல்லாப் பகைவருக்கும் பெருநிலம் ஒரு பொல்லாத கனவாய்த்தான் முடிந்திருக்கிறது.

-------------------------------------------------

வன்னி மான்மியம்

நிலாந்தன்

நியதி

------------------------------------------------

வன்னி மான்மியம்
(நான்கு பரிசோதனைகளின் தொகுப்பு)

ஆசிரியர்: நிலாந்தன்
உரிமை: ஆசிரியருக்கு
முதற்பதிப்பு: ஜனவரி 2002
பக்கங்கள்: 66+vii
வெளியீடு: நியதி, 361, நாலாம் யுனிற், திருநகர், மல்லாவி
அச்சிட்டோர்: கன்னிநிலம் பதிப்பகம், ஸ்கந்தபுரம்
அட்டை ஓவியம்: நிலாந்தன் (சிந்துச் சமவெளியின் பெண் தெய்வ உரு)
அட்டை அச்சமைப்பு: மாறன் பதிப்பகம்
விலை: ரூ. 100.00

----------------------------------------------------------


1. மண்பட்டினங்கள் 1-19
2. பாலியம்மன் பள்ளு
அல்லது ஓயாத அலைகள் மூன்று 20-27
3. வன்னிநாச்சியாரின் சாபம் 28-35
4. மடுவுக்குப் போதல் 36-43

-----------------------------------------------------------------------

மண்பட்டினங்கள்

1

நேற்று
கிளிநொச்சி வீழ்ச்சியுற்ற மறுநாள்
முல்லைத்தீவுக்குப் போனோம்

‘யாப்ப பட்டுண’வுக்குப் பதிலாக
முல்லைத்தீவு
முல்லைத்தீவுக்குப் பதிலாக
கிளிநொச்சி

ஒரு பட்டினத்துக்குப் பதிலாக
இன்னொரு பட்டினம்
பட்டினங்களின் மீது பட்டினங்கள்
தலைப்பட்டினங்கள் சிறுபட்டினங்கள்
எல்லாமே பாழடைந்த பட்டினங்கள்

வெல்லப்பட வியலாத மக்களோ
ஒன்றில் கொல்லப்படுகிறார்கள் அல்லது
காடுகளிற்கு ஓடிப் போகிறார்கள்
சமயங்களில்
அவர்கள் வெற்றிவீரர்களாகத் திரும்புகிறார்கள்
அப்பொழுது
இடிக்கப்பட்ட பழைய பட்டினத்தின் இடத்தில்
மண்ணால்
ஒரு பட்டினத்தைக் கட்டுகிறார்கள்

முல்லைத்தீவில் எல்லாமே பாழடைந்து விட்டது
மனிதர்கள் கட்டியதை
மனிதர்களே இடித்து விட்டார்கள்
மனிதர்களை மனிதர்களே
கொன்றும் எரித்தும் விட்டார்கள் ஆனால்
மனிதர்களைவிட மூத்ததும்
பெரியதுமான கடல்
எதனாலும் காயப்படாமல்
எல்லா நிச்சயமின்மைகளின் பின்னாலும்
ஏக நிச்சயமாக
அது ஒரு தேவதையைப் போல
அழகிய கடல்
ஒரு முனிவரைப் போல
அமைதியானது
வானத்தின் நீலமெல்லாம் கரைந்து
கடலானது போல நிறம்

மனிதர்கள் வருகிறார்கள் போகிறார்கள்
நகரங்கள் கட்டப்படும் இடிக்கப்படும்
ஆனால் கடல்
வருவதில்லை போவதுமில்லை
யுத்தமோ சமாதானமோ
எதுவும் அதைத் தீண்டுவதில்லை

இதோ
மனிதர்கள் மறுபடியும் வருகிறார்கள்
இனி
மண்ணால் ஒரு பட்டினத்தைக் கட்டுவார்கள்

ஓ....... கடலே
மூத்த கடலே
அன்பான பெருங்கடலே
நீ மண்பட்டினங்களின் உறவாயிரு

ஒரு பெருங்கடலை அவர்கள்
வென்றார்கள்
ஆனால் இன்னொரு தலைப்பட்டினத்தை
இழந்து விட்டார்கள்.

முந்தநாள் கிளிநொச்சியும் வீழ்ச்சியுற்றது
சனங்கள் நெரியும் அதன்
சிறிய வீதிகளைப்
பீரங்கிகள் பிளக்க
அவர்கள் நகருக்குள் நுழைந்த போது
ஒரு நாய் மட்டும் மிஞ்சியிருந்தது.

வெல்லப்படவியலாத மக்களோ
பறவைகளையும் ஏனைய
நன்றியுள்ள மிருகங்களையும்
அழைத்துக் கொண்டு
காடுகளில் ஓடி ஒளித்தார்கள்
அங்கே அவர்கள்
மண்ணால் ஒரு பட்டினத்தைக் கட்டுவார்கள்.

அந்த மண்பட்டினம்
அவர்களுடைய
பதுங்குகுழிகளைப் போலவே
இருண்டதாயும்
காலங்கடந்ததாயுமிருக்கும்
எதிர் காலத்தைப் பற்றிய அவர்களுடைய
நம்பிக்கைகளைப் போலவே அது
எளிதில் இடிந்து போய்விடும்
பீரங்கிகளின் தீராப்பசிக்கு அது
எதிர்ப்பின்றி இரையாகி விடும்.

ஓ...... காடே
மூத்த காடே
அன்பான பெருங்காடே
நீ மண் நகரங்களின்
ஆறுதலாயிரு

ஆட்காட்டிகள் கத்தும் வெளியெல்லாம்
அவர்கள்
ஆதரிக்கப்படாதே அலைகின்றார்கள்
மண் நகரங்கள்
மழையில் நனைகின்றன
மழை
ஒரு பேயைப் போல
துரத்துகிறது
சபிக்கப்பட்ட ஓரிரவில்
அவர்கள் தமது
தலைநகரை விட்டோடிய போதும்
இப்படித்தான்
மழை
ஒரு விரோதிபோற் துரத்தியது.

காடே
நல்ல காடே
அவர்களைக் கைவிடாதே

கடலே
நல்ல கடலே
அவர்களைக் கைவிடாதே

மழை
நீச மழை
எனது மக்களை நெருக்குகிறதே
குற்ற மற்ற எனது மக்கள்
துக்கத்தால்
சித்தப்பிரமை பிடித்தவர் போலாயினரே
வனப்பெலா மிழந்து
விதவைகள் போலே
மண் நகரின் தாழ்வாரத்தில்
மழையில் நனைந்து நனைந்து......

ஓ.... தலச்சிறப்புடைய
தலைப்பட்டினங்களே
வீரமும் மகிழ்ச்சியும் நிறையும்
சந்தை சதுக்கங்களே
புண்ணியம் செய்த
புகழுடைய தெருக்களே
அன்பான பனை மரங்களே
கேளீர்.......

அவர்கள் - தஸ்யுக்கள்*
வேதத்தைவிட மூத்த மக்கள்
யாரோ ஒரு முனிவரின்
யாகத்தீயினின்றும் பிறந்தார்கள்
அவர்களைத் தவிர
வேறு யாராலுமிதுவரை வாசிக்கப்படாத
அபூர்வ மொழியினால் எழுதினார்கள்
தமது முதலாவது தலைப்பட்டினத்தை
சிந்துச் சம வெளியில் கட்டினார்கள்
பூதங் காத்த
அந்த மண்பட்டினம்
மனிதர்கள் கட்டிய
எல்லாச் சிறு பட்டினங்களிலும்
வயதால் இளையது ஆனால்
அற்பாயுளில் முடிந்து போனது
குதிரைகளில் வந்த இந்திரப்படை
அந்தத் தாய்ப் பட்டினத்தை
எரித்தும் இடித்தும் விட்டுப் போனது
மீண்டெழாத அந்தத் தாய் நகரின்
மிச்சங்களை
நதி கொண்டு போனது.

தப்பிய தஸ்யுக்கள் பின்னாளில்
கந்த ரோடையில்**
வழுக்கியாற்றின் உறுதியற்ற தீரங்களில்
மற்றொரு முதல் பட்டினத்தைக் கட்டினார்கள்
மண்ணாலான
அந்தக் கதிரமலை அரசு
ஒரு பெரும் படை யெடுப்போடு
இடிந்து மண்ணாகிப் போனது
குருட்டு வெளவால்
வழிதவறியேனும் போகாத பாழிடமாய்
கதிரமலையரசு
இளவயதில் முடிந்து போனது
வழுக்கியாறோ
சோகந்தாளாமல்
விரைவிலேயே இறந்து போனது.
ஆனால் நகரிழந்த தஸ்யுக்கள்
அழிந்து விடவில்லை
ஒரு படையெடுப்பிலேயே
வற்றிப் போன
வழுக்கியாற்றைப் போலன்றி
வீரமான மக்களவர்கள்
பபிலோன் ஆற்றின் கரையில்
அழுது பாட மறுத்த
யூதர்களைப் போல
கந்தரோடை தொடக்கம்
கல்லுண்டாய் வெளி வரையிலும் அவர்கள்
கதிரமலையின் ஒளி பொருந்திய ஞாபகங்களை
மண்ணாலெங்கும் கட்டினார்கள்.
குதிரைகளில் வரும் இந்திரப் படை
அவற்றை
ஒரு மூச்சிலேயே இடித்து விடும்.
பூதங்காத்த எல்லா
மூத்த நகரங்களையும் போல இவையும்
எரிந்து பாழடைந்து விடும் ஆனால்
கதிரமலை தொடக்கம்
சிந்து வெளி வரையிலும்
அதற்கப்பாலும்
ஆழச் செல்லும்
மாய வேர்களையுடைய
மக்களவர்கள்
தஸ்யுக்கள்
வேர்களையறுக்க
இந்திரவாளில் கூர் இல்லை
வேறெந்த வாளிற்கும் அது இல்லை
அசிரியர், ரோமர் ஆரிய ஜேர்மனியர்
யாரெல்லாமோ முயன்றார் ஆனால்
முடிந்ததா யூதர்களின் வேர்களை யறுக்க?

இந்திரனே கேள்
இனியுனக்கு அவிர்பாகம் இல்லை
அறுவடையில் முதற் பங்கும் இல்லை
இடிக்கப்பட்ட எல்லா நகரங்களிலிருந்தும்
தஸ்யுக்கள் தப்பிச் சென்று விடுவர்
சிந்துச் சமவெளியின்
முதல் அகதித் தஸ்யு
தனது வெட்டுக் காயத்துடன்
தப்பிச் சென்றது போல.

ஆறாத அந்த ஆதிக் காயங்களிலிருந்து
ஆயிரமாய் புதிய தஸ்யுக்கள்
எழுவர்.

எரிக்கப்பட்ட தாய் நகரிலே
இந்திரனே
உனது வாளால் வெட்டுண்டு வீழந்த
எல்லா மூத்த தஸ்யுக்களும் எழுவர்
உடனெழுவர்.

கல்லுண்டாய் வெளியிலே***
கடற் காற்றிலே
புல் முளையாத பழைய மேடுகளில்
உறங்கும்
எல்லா மூத்த தஸ்யுக்களும் எழுவர்
உடனெழுவர்

இடிக்கப்பட்டு
இருந்த இடந்தெரியாமல் அழிக்கப்பட்ட
துயிலுமில்லங்களில்
துயில் கலைந்தலையும்
எல்லா இளந் தஸ்யுக்களும் எழுவர்
உடனெழுவர்.

அன்பான பெருங்கடலும்
ஆதரித்த பெருங்காடும்
இறுமாந்திருக்கும் ஒரு நாளிலே
சில தீர்க்கதரிசிகள் மட்டும்
தெரிந்து வைத்திருக்கும்
ஒரு நாளிலே

யாழ்ப்பாணமே..... ஓ...... யாழ்ப்பாணமே
நீ உனது
தலை நகரிற்குத் திரும்பிச் செல்வாய்
கிளிநொச்சியே...... ஓ....... மணலாறே
நீ உனது
தலைநகரிற்குத் திரும்பிச் செல்வாய்.

இதோ
இந்திரன் படை கொண்டு வருகிறான்
இடியோடு மழையோடு பீரங்கிகளோடு
இதோ
தஸ்யுக்கள் எழுகிறார்
குடையோடு மலைக்குடையோடு மாயக்குடையோடு
முன் பொருநாள் யாதவர்கள்
இந்திரக் கோபத்தை எதிர்த்துப் பிடித்த
அதே கோவர்த்தனக் குடையோடு

இந்திரனே ஓடு
இனியும் உனக்கு
அவிர்பாகம் இல்லை
அறுவடையில் பங்கும் இல்லை
தஸ்யுக்களின் கோபம்
உனது தலை நகரை எரிக்கும்
உனது அந்தப்புரம் சிதறும்.

பட்டினத்தின் மீது பட்டினம் எழும்
பட்டினத்தை எதிர்த்துப்
பட்டினம் எழும்
பட்டினத்தை பட்டினம் வெல்லும்
பட்டினங்கள்
போர்ப்பட்டினங்கள்
வீரப்பட்டினங்கள்
வெற்றிப் பட்டினங்கள்
0
18-10-1996
கொந்தக்காரன்குளம்
ஓமந்தை

*விபரங்களிற்குப் பகுதி (2) ஐப் பார்க்கவும்

2.
தஸ்யு மான்மியம்


மண்பட்டினங்களை மேடையில் நிகழ்த்திக்காட்டத் தேவையான உதவிக் குறிப்புகள்

1. சிந்துச்சமவெளி - கி. மு. 2250 - 1500 வரை

இமயத்தின் பேரப் பிள்ளைகளே தஸ்யுக்கள். இமயத்திற்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவள் சிந்து. இளையவன் பிரம்மபுத்ரா. சிந்துவின் பிள்ளைகளே தஸ்யுக்கள். அவர்கள் வேதத்தைவிட மூத்த மக்கள்; ஆனால், ரிக்வேதம் அவர்களை தஸ்யுக்கள் (அல்லது தாஸர்கள்) என்று அழைப்பதிலிருந்தே இங்கு அவர்களையவ்வாறு கூறப்படுகிறது. அதோடு இந்தியாவின் மிக மூத்த இலக்கியமான கி.மு.800 ஐச் சேர்ந்த ரிக் வேதத்தை விடவும் மூத்த மக்களவர்கள் என்பதை நினைவூட்டவும் இது உதவும்.

ரிக்வேதம் தஸ்யுக்களை ஆரியர்கள் தாக்கி வென்றதுபற்றிக் கூறுகிறது. ஆரியர் இந்திரன் எனப்படும் அவர்களின் கடவுள் அல்லது தலைவனின் தலைமையில் வந்ததாகவும் ரிக்வேதம் கூறுகின்றது.

இந்த விபரங்கள் யாவும் கி.மு.2250 அளவில் சிந்துச் சமவெளியில் காணப்பட்ட இந்தியாவின் முதல் மூத்த நாகரிகத்தை சுமாராக கி.மு.1500 இல் குதிரைகளில் வந்த இந்தோ-ஆரியர்கள் தாக்கிய நிகழ்ச்சியைப் பற்றியவையேயென்று வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.

இந்திரனும் அவனது படையாட்களும் நன்கு பயிற்றப்பட்ட குதிரைகளிலே வந்தார்கள்.

குதிரைகளின் முரட்டுக் குளம்போசையிலிருந்த வளர்த்தெடுக்கப்பட்ட இசையே மேடையில் ஆதார இசையாயிருக்க வேண்டும்.

முதலிலிருந்து முடிவுவரை அகதிகளைத் துரத்திக் கொண்டு வரும் இக் குளம்போசை அகதிகளின் பதட்டமான இதயத் துடிப்போசையின் பிரிக்கப்படவியலாத பகுதியாகவிருந்து குறிப்பாக முடிவில் ஒரு பேரெழுச்சிக்குரிய வெற்றிப் பறையோசையாக மாறியொலிக்க வேண்டும்.

காட்சி 1

முதலில் உடுக்கும் பறையும் இதமாய் ஒலித்துக் கொண்டிருக்கும். அது மிக ஆதியான காலமொன்றின் இடமொன்றின் மங்கலான நினைவுகளை அசைபோடுமாப் போலிருக்க வேண்டும். பிறகு உடுக்கும் பறையும் மெல்ல அடங்கும். ஒரு ஆட்காட்டி பதட்டமான குரலில் கத்தி அவசர அவசரமாக மேடையைக் கடந்து போகிறது.

தொலைவில்
மிகத் தொலைவில்
குதிரைகளின் குளம்போசை மெல்லக் கேட்கிறது.
உடுக்கும் பறையும் தணிந்து செல்ல குளம் போசை வர வர அதிகரித்துக் கொண்டு வந்து கலவர மானதொரு யுத்தக் கூச்சலாக மாறுகிறது.

பின்னணியில் ரிக்வேத சுலோகங்கள் உச்சரிக்கப்படுகின்றன.
அதில் தஸ்யுக்களை இந்திரன் வென்றது பற்றியும்
தஸ்யுக்களின் நகரத்தை எரித்தது பற்றியும்
தஸ்யுக்களின் பாசன மதகுகளை உடைத்து நதிகளை
விடுவித்தது பற்றியுமான விவரங்கள் வருகின்றன.

ரிக்வேதம் தஸ்யுக்களை கறுப்பர்கள், சப்பை மூக்கர்கள்,
ஆண்குறி வழிபாட்டுக்காரர் என்றெல்லாம் கூறுகிறது.
அது இந்திரனின் புஜபலத்தைப் புகழ்ந்துரைக்கின்றது.

வேத சுலோகங்களும் குதிரைகளின் குளம்போசையும் மாறி மாறியொலித்து பிறகு கலந்தொலித்து முடிவில் ஒரு பெரும் யுத்த கூச்சலாகிக் கேட்கின்றன.

இந்திரப்படைகளிடம் குதிரையிருக்கிறது.
கூரான உலோக வாள்களிருக்கின்றன.
இவற்றுடன் செழிப்பான வாய்மொழி இலக்கியங்களுமிருக்கின்றன.

தஸ்யுக்களிடம் அழகிய நகரங்களிருக்கின்றன.
அமைதியான சுகாதாரமானதொரு வாழ்விருக்கிறது.
அவர்களைத்தவிர வேறுயாருமிதுவரை வாசித்தறியாத மாய மொழியிருக்கிறது. ஆனால்,
யுத்தமொன்றை எதிர் கொள்வதற்கு கூரற்ற கனமான
எனவே இயலாத கற்கோடரிகளேயிருக்கின்றன.
எனவே
ர்pக்வேத சுலோகங்கள் ஓங்கியொலிக்க
இந்திரன் வாளை வேகவேகமாகச் சுழற்றுகிறான்.

சிந்துவின் மக்கள் வெட்டிச் சாய்க்கப்படுகிறார்கள்.
சிந்துவின் மாடங்கள் எரிகின்றன.
அங்கங்கள் அறுந்து தொங்க
வெட்டுக் காயங்களுடன்
மிஞ்சியவர்கள் தப்பிச் செல்கிறார்கள்.

விந்திய சற்புத்திர மலைகளைத் தாண்டி தென்னிந்தியாவுக்கும் நீரிணையைத் தாண்டி இலங்கைத் தீவுக்கும் அவர்களின் வழித்தோன்றல்கள் சிதறிப் பரவிச் சென்று குடியேறியிருக்கலாம் என்று கலாநிதி.பொ.ரகுபதி, மு.திருநாவுக்கரசு போன்ற ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

முகங்களில் வெட்டுக்காயத்தோடு
விழிகளில் வன்மத்தோடு
கைகளில்
மண்ணாலான லிங்கங்களையும் ஏந்திக்கொண்டு
தஸ்யுக்கள் தப்பிச் செல்கிறார்கள்.

சோகப்பறையொலிக்கிறது.
குதிரைகளின் முரட்டுக்குளம்போசை
துரத்திக்கொண்டு வருகிறது.

2. கதிரமலையரசு

சற்றேறக்குறைய கிறிஸ்து சகாப்தமளவிற் தொடங்கி சுமாராக கி.பி.9 ஆம் நூற்றாண்டுவரை கந்தரோடையில் காணப்பட்டதாகக் கருதப்படும் முதலாவது யாழ்ப்பாணத்தரசு இது. இன்று வற்றிப்போய்விட்ட வழுக்கியாற்றின் தீரங்களில் தொடங்கி ஒருபுறம் வல்லிபுரக்கடல் வரைக்கும் இன்னொரு புறம் கல்லுண்டாய் வெளிவரைக்கும் பரவி நிலவியதாகக் கருதப்படும் இம்முதலரசின் மீதான கவனத்தை அதிகம் ஈர்த்தவர் ரகுபதிதான்.

காட்சி 11

ஆதித் திராவிட வாத்தியம் என்று ரகுபதி கருதும் பறை பின்னணியில் மிடுக்காயொலிக்க தென்னாடுடைய சிவனாரின் கையிலிருக்கும் உடுக்கும் சேர்ந்தொலிக்கிறது

மறுபடியும் குதிரைகளின் குளம்போசை.
இம்முறை வருவது சோழர்கள்.
தென்னிந்தியாவில் தொடங்கிய சோழப் பேரரசின் ஆட்சிப் பரப்பு அகட்டப்பட்டபோது ஒரு நாள் சிறிய கதிரமலையரசும் அதற்குள் கரைந்து போய்விட்டது என்று ரகுபதி கூறுகிறார்.

முன்னாளில் சிந்துச்சமவெளியில் கேட்ட இந்திரக் குதிரைகளின் குளம்போசைக்கும் பின்னாளில் கந்தரோடையில் கேட்ட சோழக் குதிரைகளின் குளம்போசைக்கும் அதிகம் வித்தியாசமிருக்கவில்லை.

கதிரமலையரசு மண்ணாகிவிட கந்தரோடைத் தமிழர்கள் நிராசையோடு கலைந்து போகிறார்கள். முரட்டுக் குளம்போசை துரத்திக் கொண்டு வருகிறது.

3. கல்லுண்டாய் வெளி - 1982

முன்னாளில் வழுக்கியாறு கடலேரியில் வந்து கலந்த கழிமுகப் பிரதேசம். இந்த முன்னாள் கழிமுகத்தின் அயலில் பரந்து கிடக்கும் வயல்வெளிகளில் துருத்திக்கொண்டு தெரியும் பழைய மண்மேடுகளை யாரும் காணலாம். அந்த நிலக் காட்சி அமைப்புக்குள் பொருந்திவராத மேற்படி பழைய மண்மேடுகளை ரகுபதி தொல்லியல் அகழ்வாராய்ச்சிக்குரிய இடங்களென அடையாளம் கண்டு கூறியுள்ளார்.

இப்படியொரு மண்மேட்டின் அயலில்தான் “ஆனைக்கோட்டை மனிதன்” எனப்படும் மூத்ததமிழன் ஒருவனின் எலும்புரு 1982 இல் அகழ்ந்தெடுக்கப்பட்டது. இப்படி இன்னுமெத்தனையோ கல்லுண்டாய் மனிதர்கள் -மூத்த தமிழர்கள்- அந்த மேடுகளினடியில் உறங்கக் கூடும். அவர்களையெல்லாம் முறையாகத் தட்டியெழுப்பிப் பேசவைத்தால் சிலசமயம் சிந்துவின் “றொசெற்றாக் கல்வெட்டு” கல்லுண்டாய் வெளியிலெங்காவது கிடைத்தல் கூடும், இன்னும் வாசிக்கப்படாத சிந்துவின் எழுத்துக்களை நாம் வாசித்தல் கூடும். இன்னும் வெளிவராத கதிரமலை ரகசியங்களையும் நாம் அறிதல்கூடும். இன்றுவரை சிந்துவையும் கந்தரோடையையும் சூழ்ந்துள்ள புதிர்களையும் மர்மங்களையும் விடுவிக்கவல்ல மந்திரத்திறப்பு அந்தக் கல்லுண்டாய் மனிதர்களிடம் இருக்கவும்கூடும்.

4. யாழ்ப்பாணம் 1995 ஒக்ரோபர் 30
காட்சி 111

குதிரைகளின் குளம்போசை
முதலில் அணிநடைபோலத் தொடங்கிப் பிறகு
திகிலூட்டும் யுத்தப் பேரிரைச்சலாக மாறுகிறது.

இந்திரக் குதிரைகள்
சோழக் குதிரைகள்
போத்துக்கீச ஒல்லாந்த ஆங்கிலக் குதிரைகள்
இந்தியக் குதிரைகள்
கடைசியில் சிங்களக் குதிரைகள்,
றிவிரசக் குதிரைகள்.
பாலகெமுனு துயிலாத சினந்த விழிகளுடன் வருகிறான்.
சப்புமால் குமாரையா
பேராசையால் விழிகள் பளபளக்க வருகிறான்.

தலைப்பிள்ளை போலிருந்த நகரமொன்று
மழையிரவில்
தெருவில் நின்று புலம்புகிறது.
அன்று பகைவனின் நாள்.
நகரத்தின் இதயம் நொறுங்கி
கைதடிவெளி கொள்ளாத்துயர்
நாவற்குழிவெளி கொள்ளாத்துயர்
வெட்டுக்காயத்துடன் தஸ்யுக்கள் தப்பிச் செல்கிறார்கள்.
ஒரு சவ ஊர்வலம் போல சோகப் பறையொலிக்கிறது,
சோர்ந்த உடுக்கொலிக்கிறது.

ஆளில்லா நகரத்தை வென்று
தங்கத் தட்டில் வைத்து
அரசிக்குப் பரிசாக தருகிறான்
மந்திரி.
அரசியோ வெண்தாமரை அரசி
நகரங்களை யெரித்த
சாம்பலையுமணிந்து கொண்டு
விகாரமாய்ச் சிரிக்கிறாள்
சவக்களையோடு சோகப்பறை யொலிக்கிறது
முரட்டுக் குளம்போசை
நெருங்கி நெருங்கி வருகிறது.

5. வன்னி நாடு

அ)
அடங்காப்பற்று என்றழைக்கப்பட்ட வன்னிப் பெருநிலம் எப்பொழுதும் பகைவரிற்கு அடங்கிக் கிடந்ததில்லை.
யாழ்ப்பாணத்தரசுகள் வீழ்ந்துபடும் போதெல்லாம் ஆட்சிமையம் இயல்பாகவே பெருநிலத்துக்கு நகர்ந்துவிடும்; அல்லது பகை சூழ்ந்தபோதெல்லாம் தமிழரசின் உயிர்ச் சூட்டை பெருநிலமே ஒளித்து வைத்திருக்கும்.
அங்கிருந்துகொண்டு பகைவரின் மீது விடாது போர் தொடுக்கப்படும்.
போத்துக்கீசர்இ ஒல்லாந்தர், ஆங்கிலேயர், இந்தியர் என்று படையெடுத்து வந்த எல்லாப் பகைவருக்கும் பெருநிலம் ஒரு பொல்லாத கனவாய்த்தான் முடிந்திருக்கிறது

ஆ)
அகஸ்தியரும் புலஸ்தியரும் செய்த
யாகத் தீயினின்றும்*
வன்னியன் பிறந்தான்
பிறந்ததிலிருந்து யாகத் தீ
அவனுடைய விழிமணிகளில்
விடாமலெரிந்து கொண்டிருந்தது.

ஆட்காட்டிகள் அவனிடம்
சொந்தம் பாராட்டின
வண்ணத்துப் பூச்சிகள் **
கதிர்காமம் போகும் வழியில்
அவனையும் துணைக்கழைத்துப் போயின.

உடுக்கும் பறையும் அவனை
உருவேற்றின
அவற்றில்
அவனுடைய நினைவுக்கெட்டாத காலத்து
முன்னோர்களின்
காலடியோசைகள் கேட்டன.

ஊமத்தங்கூவை கத்தும் இரவுகளில்
வன்னியன் கனவில்
முரட்டுக் குளம்போசைகளைக் கேட்டு
திடுக்குற்று விழிப்பான்
கனவுகளில்
வெட்டுக் காயத்துடன் தடுமாறி ஓடும்
கறுத்த சப்பை மூக்கர்களின்பால்
அவனிதயம் உருகியது
அவர்கள் அவனிடம் வந்து
கனமான கற்கோடரிகளைத் தந்துவிட்டுப் போனார்கள்
மேலும்
அவன் அவர்களின் அம்சமாயுமிருந்தான்

காட்சி 1111

ஒருநாள்
கதிர்காமம் போன வண்ணத்துப் பூச்சிகள்
கலவரத்தோடு திரும்பி வந்தன
ஆட்காட்டிகள் வழமைக்கு மாறாக
பதட்டமாகக் கத்திப் பறந்தன
குதிரைகள் வருகின்றன.

முரட்டுக் குளம்போசைகள் நெருங்கி நெருங்கி வருகின்றன
இந்திரக் குதிரைகள்
சோழக் குதிரைகள்
போத்துக்கீச ஒல்லாந்த ஆங்கிலக் குதிரைகள்
“அமைதிகாக்கும்’ குதிரைகள்
சத்ஜெய குதிரைகள் ஜெயசிக்குறுய் குதிரைகள்

முரட்டுக் குளம்போசை காட்டை நிறைக்கிறது
காடு நிம்மதி கெட்டுத் தவிக்கிறது.

கற்சிலை மடுவில்
வன்னியன் காயங்களோடு தப்பிச் செல்கிறான்
சிந்துச் சமவெளியில் தப்பியது போல.

காடு அவனை ஒளித்து வைத்தது
கடல் அவனது காயங்களை ஆற்றியது

சிந்துச்சமவெளியின் முதல் அகதித் தஸ்யுவும்
வன்னிப் பெரு நிலத்தின் கடைசி அகதித் தஸ்யுவும்
அவர்களின் வெல்லப்படவியலாத
இயல்பைப் பொறுத்தவரை ஒரேயாட்களே.

உடுக்கும் பறையும் சேர்ந்து முழங்கி உருவேற்றுகின்றன
நித்திகைக் குளத்தில், வங்கக் கடலில், நந்திக் கடலில்
குதிரைகள் கோரமாய் மடிகின்றன
குளம்போசை தேய்ந்தழிகின்றது

ஆட்காட்டி உல்லாசமாகக் கத்திப் பறக்கிறது.

வன்னியன் கனவில்
பண்டார வன்னியன் வந்தான்
நட்டாங்கண்டல் காட்டில் சிதைந்த தனது
அரண்மனைக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும்
தனது போர்வாளின் மறைவிடத்தைச் சொன்னான்.

வன்னியன் கனவில்
பனங்காமத்து கைலை வன்னியன் வந்தான்
காட்டின் ரகசியங்களைச் சொல்லிக் கொடுத்தான்
வன்னியன் போருக்கெழுந்தான்.
தென்திசையிலிருந்து குளம்போசைகள்
புதிதாகப் பெருகி வருகின்றன.
ஜெயசிக்குறுய் குதிரைகள்,
கனகராயன் ஆற்றின் இருபுறங்களிலும்
சேனைகள்
அணிவகுத்து நிற்கின்றன.

ஆறு அச்சத்தால் மெலிந்து நிலைகுலைந்து ஓடியது
ஆற்றின் தீரமெல்லாம் குருதி
யுத்தம் தலைப்பேறானவற்றைக் கேட்கிறது
கனகராயன் ஆற்றைக் குளம்போசைகள் நெரிக்கின்றன.

ஒரு கரையில் இந்திரன்
உருவிய வாள்
விழிகளில் பழி வாங்கும் உறுதி

வெட்டுக் காயத்துடன் தப்பிச் சென்ற மூத்த தஸ்யுவின்
அம்சமாயல்ல
முன்பொருகாலம் இந்திரனை எதிர்த்து வென்ற
யாதவரின் அம்சமாயான புதிய தஸ்யுக்கள்
இளந் தஸ்யுக்கள்.

கையாலாகாத கற்கோடரிகளையல்ல.
வாள்களையும் குதிரைகளையும் வைத்திருக்கிறார்கள்.

விளைச்சலையும் பசுக்களையும் வணக்கத்தையும் கேட்ட
இந்திரனைப் புறக்கணித்து
தஸ்யுக்களின் அதே மழை முகில் நிறததவனாகிய
கிருஷ்ணனின்
அபயக் குடையின் கீழ்
அணி திரண்ட
யாதவரின் அம்சமாயான தஸ்யுக்கள்,
புதிய தஸ்யுக்கள்,
இளந் தஸ்யுக்கள்.

இனி, சோகப் பறையும் சோர்ந்த உடுக்கும் இல்லை,
வீரப் பறையும் உருவேற்றும் உடுக்கும் தான்
விடாது முழங்கும்.

பறைமுழக்கம் குளம்போசைகளை மீறியெழுகிறது
உடுக்கு வேகமாயடித்து உருவேற்றுகிறது
யுத்தக் கூச்சலடங்கி பறையும் உடுக்கும் மட்டும்
உருவேற்றுமாப் போல ஒலிக்கின்றன.

வேதத்தை விட மூத்த நாடொன்றின்
அழிவுகளிலிருந்தும்
அவர்கள் எழுந்து வருகிறார்கள்
வற்றிய வழுக்கியாற்றின் தூர்ந்த தீரங்களிலிருந்தும்
அவர்கள் எழுந்து வருகிறார்கள்
அகஸ்தியரும் புலஸ்தியரும் செய்த
யாகத் தீயினின்றும்
அவர்கள் எழுந்து வருகிறார்கள்.

முகங்களில் வெட்டுக் காயங்கள்
விழிகளில் வேள்வித் தீ

உடுக்கும் பறையும் அவர்களை உருவேற்றுகின்றன
வங்கக் கடல் அவர்களை ஆசிர்வதிக்கின்றது.

வண்ணத்துப் பூச்சிகள்
கதிர்காமம் போகும் வழிகளையெல்லாம்
அவர்கள் விடுவிப்பார்கள்
பாலியாற்றின் மெலிந்த தீரங்களில்
பழி கிடக்கும் மக்களை
அவர்கள் விடுவிப்பார்கள்

பறையும் உடுக்கும் சேர்ந்தொலிக்கின்றன
குளம்போசைகள் தொலைவில் பின்வாங்கிச செல்கின்றன.

பறை மேலும் மேலும் மூச்சா யொலிக்கிறது
அது போர்ப்பறை
வீரப்பறை
வெற்றிப்பறை
0

27-11-1997
மல்லாவி

*வன்னியரின் தோற்றம் பற்றிப் பரவலாக உள்ள ஒரு ஐதீகத்தின்படி அகஸ்திய, புலஸ்திய முனிவர்கள் செய்த யாகத்தின் தீயிலிருந்தே வன்னியர் தோன்றினர் என்று கூறப்படுகிறது

**கோடையில் வன்னிப் பெருநிலத்தில் வண்ணத்துப் பூச்சிகள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி அலையலையாக ஊர்வலம் போகக் காணலாம். இதைப் பெருநிலவாசிகள் வண்ணத்துப் பூச்சிகள் கதிர்காமம் போகின்றன என்று கூறுவர்.



பாலியம்மன் பள்ளு
அல்லது
ஓயாத அலைகள் மூன்று



1.
மின்மினிப் பூச்சிகளைச் சூடிய
முதுபாலை மரத்தின்
கீழிருக்கிறேன்
முன்னால்
வவுனிக்குளம்
எல்லாளன் கட்டியதென்று
சொல்லுகிறார்கள்.

கனகராயன் குளத்தில்
மழை பெய்தால்
வவுனிக்குளம் நிரம்புமாம்
வவுனிக்குளம் நிரம்பினால்
பாலியாறு பெருகுமாம்
பாலியாறு பெருகினால்
பாலியம்மன் உருக்கொள்வாள்
பாலியம்மன் உருக்கொண்டால்
படை திரளும்
படை பெருகும்
போர் மூளும்.


2.
வவுனிக்குளத்துக்கு
எத்தனை வயதிருக்கும்?
தெரியாது
சிலசமயம்
குளத்து மேட்டை மேவியெழும்
முதுமரங்களுக்குத் தெரிந்திருக்கும்.
அவற்றின்
வேர்களை யரித்தோடும்
பாலியாற்றுக்குத் தெரிந்திருக்கும்
நிச்சயமாக
பாலியம்மனுக்குத் தெரிந்திருக்கும்.

அவள் தானே
எல்லாளன் படைதிரட்ட
தேர்க்கொடியிலேறி அமர்ந்தாள்.

இப்பொழுதும் கேட்கிறது
கொலுசுச் சத்தம்
இப்பொழுதும் கேட்கிறது
உடுக்கினிசை
பாலியம்மன் ஆடுகிறாள்
உருவேற உருவேற
பாலியாறு பெருகியோடுகிறது
தொட்டாச்சிணுங்கி வெளி முழுதும்
நெல் மணிகள்
பாலியாற்றின் தீரமெல்லாம்
படை வீரர்

எல்லாளன் படை கொண்டு வருகிறான்
கெமுனுவின் நகரை நோக்கி

கெமுனுவுக்கு நித்திரையில்லை
உடுக்கும் கொலுசும்
இதயத்தைப் பிளப்பது போலிருக்கிறது
எங்கே துயில்வது?

கால்களை மேலும் மேலும் மடக்கி
கெமுனு
துயிலாதே புரள்கிறான்
எல்லாளன் படை
வருகிறது.


3.
கொட்டைப் பாக்குக் குருவி
காடு விடு தூது
காட்டின் புதிரும் சோகமும்
முதுமரங்களின் அமைதியும் கம்பீரமும்
அதன் குரலாயினவோ
“வாடா பாப்பம் கொட்டைப் பாக்கா”

ஒரு வரிப்பாடல்
திடீரெனக் கேட்டால்
எவனோ
நாடிழந்தலையும் அரசனின்
சோகப்பாடல் போலிருக்கும்
உற்றுக்கேட்டால்
வன்னியரின் தாய்ப்பாடல்
இதுவோவென்று தோன்றும்
“வாடா பாப்பம் கொட்டைப்பாக்கா”
“வாடா பாப்பம் கெமுனு குமாரா”

குளத்து மேட்டில்
பட்டுத் திரும்பி
காட்டினிருளில் கரைகிறது
ஒரு நன்னிமித்தமாக.
“வாடா பாப்பம் கெமுனு குமாரா”

முதிய எல்லாளன்
கெமுனு நகரின் மீது
படைகொண்டு போனான்
ஒரு தனியுத்தத்தில்
கெமுனு
அவனை சூழ்ச்சியால் கொன்றான்
யானை சறுக்கியது.
தொட்டாச்சிணுங்கி
வயல் வெளியெல்லாம் பரவ
பாலியம்மன் தவஞ் செய்யலானாள்...
கொட்டைப் பாக்குக் குருவியின்
குரலில்
தவிப்புக் கூடியது.


4.
எல்லாளன் திரும்பி வரவில்லை
வவுனிக்குளம்
அவனது ஞாபகங்களால்
நிறைந்து தளும்பியது

பிறகும் பிறகும்
அது வான் பாய்ந்தது.
பாலியாறு
கரைகளை முட்டிக் கொண்டு
ஓடியது

பாலியம்மனோ
கடுந்தவஞ் செய்தாள்

தொட்டாச் சிணுங்கி முட்கள்
பற்றி எரிய
பற்றி எரிய
கற்பூரப் புல் வெளிகள்
பற்றி எரிய
பற்றி எரிய
பாலியம்மன் தவஞ் செய்யலானாள்
நூறு நூற்றாண்டுகளாய்

அவள் தவமெலாம்
திரளத் திரள
கிழக்கு வாவிகளிலும்
வடக்கு நந்திக் கடலிலும்
புதிது புதிதாய்த் தோன்றினர்
எல்லாளர்
ஆயிரமாய்

சாகா வரங்களோடு
பல நூறு கரங்களோடு
கொற்றவை பெற்ற
புத்திரரெல்லாம்
வந்து பிறந்தன ரென்று
கொட்டைப் பாக்குக் குருவி
காடெல்லாம்
கூறித் திரிந்தது

“வாடா பாப்பம் கொட்டைப் பாக்கா”
“வாடா பாப்பம் கெமுனு குமாரா”

பாலியம்மன் பரவசமானாள்
நடனமிடலானாள்
வவுனிக்குளம்
வான் பாயலானது
பாலியாறு
பொலிந்து ஓடியது

கெமுனு குமாரன்
நித்திரை யிழந்தான்
கால்களை மடக்கி மடக்கிப்
படுக்கிறான்
நிம்மதியில்லை

பிரளய காலமிதுவோ?

“யாரங்கே
தளபதிகளை மாற்று
அஸ்திரங்களை மாற்று
வியூகங்களை மாற்று
செய் அல்லது செத்து மடி”

ஓரிரவுக்குள்
ஓராயிரம் யானைப்பலம்
எல்லாளர்களுக்கு
எப்படிக் கிடைத்தது?

பிரளயம்
மகா பிரளயம்
பிரளய காலப் பேரலைகள்

கெமுனு குமாரர்
படைகளைத் துறந்து
நிர்வாணிகளாய் ஓடுகிறார்
விழிகளில் பீதி
பசி, பயம்

ஒதிய மலையில்
கொடி
மருத மடுவிலும்
கொடி

கெமுனு
துயிலாதே
புரண்டு புரண்டு படுக்கிறான்

“வாடா பாப்பம் கெமுனு குமாரா...”

5.
ஆனையிறவு
அலிமங்கடவ

அதன் எல்லாச் சிறகுகளையும்
அரிந்து விட்டார்கள்.

உப்பு வயல்கள்
பற்றி எரிகின்றன

கடலேரி முழுதும் பிணங்கள்

பொறிக்குள் சிக்கிய
கெமுனு குமாரர்
நீரில்லை
விநியோகம் இல்லை
தைரியமும் இல்லை.
கெமுனு குமாரர் தனியே.

பாலியம்மன் தவம் நீத்து
உருக் கொண்டுவிட்டாள்
உப்பளக்காற்றில்
உடுக்கிசை
கோபமும் உருவும் ஏறும்
படுவான் கரையிலும்
குருந்தூர் மலையிலும்
படை பெருகும்

அலிமங்கடவ
அலிமங்கடவ

வாடி வீட்டில்
நெருப்பு
தேய்பிறைக்கால
பின்னிருட்டில்
புறமுதுகிட்டான் கெமுனு

அலிமங்கடவ வீழ்ந்தது
வீழ்ந்தது
அலிமங்கடவ

பாலியம்மன் ஆடலானாள்
பரவசமுற்றே.

இதயம் நிறைந்து
நூற்றாண்டு காலப்
பழி முடித்த திருப்தியோடு
அவள் ஆட ஆட
படை பெருகும்
படை நகரும்
நிலம் அதிரும்
கொட்டைப் பாக்குக் குருவி
ஆனந்தமாகப் பாடிச் செல்லும்

“வாடா பாப்பம் கெமுனு குமாரா”
0

பிற்குறிப்புகள்
1) வன்னிநாட்டின் ஆதியான வழிபாட்டம்சங்கள் தாய்த்தெய்வ வழிபாடும் நாகவழிபாடும்.

பாலியம்மன் இந்தத் தாய்த் தெய்வ வழிபாட்டின் குறியீடாகவே வருகிறாள்.

பாண்டியன்குளம் உதவி அரசாங்க அதிபர் பிரிவிலுள்ள ஆதி வன்னிக் கிராமங்களில் ஒன்று ஒட்டன்குளம்.

இக் கிராமத்தின் வாசலில் பாலியாற்றினோரம் ஒரு காவல்தெய்வம் போல பாலியம்மன் வீற்றிருக்கிறாள்.

வவுனிக்குளம் வான் பாய்ந்தால் நீரெல்லாம் பாலியாற்றில் போய் விழும். வவுனிக்குளத்துக்கும் பாலியாற்றுக்கும் இடையில் உள்ள இந்தப் பூர்வீகபந்தம் காரணமாயும் பாலியம்மன் சிறப்புப் பெறுகிறாள்.

2) கொட்டைப்பாக்குக் குருவியை காட்டின் பாடகன் எனலாம்;. பெருங்காட்டின் மீது அது சதா கத்திப் பறக்கும், ‘குக் குக் குக்கூ குக் குக் குக்கூ” என்ற அந்த ஒரு வரியிசையை வன்னியர்கள் “வாடா பாப்பம் கொட்டைப் பாக்கா” என்று மொழிபெயர்த்து வைத்திருக்கிறார்கள்.

3) அலிமங்கடவ - ஆனையிறவின் சிங்களப் பெயர்

05-07-2000
மல்லாவி





வன்னி நாச்சியாரின் சாபம்


1.
கற்சிலைமடுவில் பண்டாரவன்னியன்
காத்திருந்து தாக்கப்பட்டான்
தனியொரு வாள் வீச்சில் அவன்
அறுபது தலைகளைக் கொய்தானாம்
ஆயினும்
தளபதி *ட்றிபேக்கிடம்
தோற்றுப் போனான்,
தப்பியோடி
காட்டின் மறைவிடமொன்றில்
காயங்களினாலே யிறந்தான்.

நாச்சியாரப்பொழுது
கற்குளத்திலிருந்தாள்
அவள் வழிபட்ட சிவனாலயத்தில்
துர்க்குறிகள் தோன்றின

தோல்வியை யவளால்
தாங்கமுடியவில்லை.

நிராசையாலும் கோபத்தாலும்
அவளிதயம் நொருங்கிப் போனது.

பேருந்தீயை மூட்டினாள்
ஆபத்தில்
தன் சோதரனுக்குதவாத
அறுபத்துநான்கு கிராமங்களின் பெயர்களை
ஓலையில் எழுதியந்தத்
தீயிலே போட்டாள்

சபித்தாள்

பிறகந்தத் தீயில் பாய்ந்து
தன்னை
மாய்த்துக் கொண்டாள்

அன்றிலிருந்து
அவள் வழிபட்ட சிவனாலயம்
அதன் தலச்சிறப்பை
இழந்து விட்டது.

சூழ்ந்த காட்டை
நரசிம்மம் காவல் செய்யலானது.

அவள் சாபம்
ஊர்களின் மீது
குலைப்பன் காய்ச்சலாக வந்ததென்று
ஒரு கர்ணபரம்பரைக் கதை
கூறுகிறது.

2.
வன்னிக்காட்டின் ஆழத்தே வேட்டைக்குப் போனால் அங்கெல்லாம் தூர்ந்த கைவிடப்பட்ட பெரிய குளங்களைக் காணலாம். அவற்றினருகில் பாட்டி சொன்ன கதைகளில் வரும் முதிய புளிய மரங்களையும் முதிய பூவரச மரங்களையும் காணலாம்.

இங்கெலாமிருந்த வன்னியர் தமதூர்களைக் கர்ணபரம்பரைக் கதைகளிடம் கையளித்து விட்டு எங்கேயோ தூரமாய்ப் போய் விட்டார்கள்.

நாச்சியாரால் சபிக்கப்பட்ட ஊர்களே இவையென்று பின் வந்த வன்னியர் கூறுகிறார்கள்.

அநேகமான எல்லாக் கர்ணபரம்பரைக் கதைகளைப் போலவே எமது நாச்சியாரின் கதைக்குள்ளும் ஏதோ ஒரு மெய்விவரம் இருக்கலாம் என்று தோன்றுகிறது.

வன்னிப்பெருநிலத்தை இப்பொழுதும் போட்டுலுப்பும் மலேரியா - தமிழில் குலைப்பன் காய்ச்சல் எனப் படுகிறது: ஒரு காலம் வன்னிமைகளின் சிதைவுக்கோ அல்லது இடப் பெயர்வுக்கோ காரணமாயிருந்திருக்கலாம். ஏனெனில் வன்னி நாட்டின் நிலத்தொடர்ச்சியாகக் காணப்படும் அநுராதபுரத்தில் முன்பு நிலவிய ராஜ்ஜியமொன்றின் வீழ்ச்சிக்கு மலேரியாவும் ஒரு காரணம் என்று நம்பப்படுகிறது.

என்பதால், குலைப்பன் காய்ச்சலுக்கஞ்சி ஜனங்கள் ஊர்களை விட்டுப்போன ஒரு காலம் வன்னிக்கு வந்திருக்கிறது என்று தெரிகிறது. நாச்சியாரின் கதை இந்த மெய் விவரத்தைச் சுற்றிக் கட்ட்பபட்டதொன்றா யிருத்தல் கூடும்.

3.
வன்னி நாச்சியார் தீக்குளித்து சுமாராக ஒன்றரை நூற்றாண்டின் பின் கற்குளத்தைத் தேடிப் போனோம். ஜெயசிக்குறுவின் அகதிகளாய் மாதர் பணிக்கர் மகிழங்குளத்தில் கூடாரமிட்டிருந்த நாட்களவை.

புதூர்க் காட்டிற்கும் குஞ்சுக்குளம் காட்டிற்கும் இடையில் எங்கேயோதான் -நாகதாளிக்காட்டில்- கற்குளமிருப்பதாக முதிய கிராமவாசிகள் சொன்னார்கள்.

அந்தக் காட்டை காவல் புரியும் நரசிம்மம் எமது வருகையால் கோபமுறலாம் என்றும் எச்சரித்தார்கள்.

நில அளவைத் திணைக்களத்தின் பாழடைந்த ஒரு கிணறு தான் அடையாளம்.

அதனயலில் எங்கேயோ ஒரு ஒற்றையடிப் பாதை போவதாயும் சொன்னார்கள்; அதில் போனால் கற்குளம் வருமாம். கற்குளத்திலிப்போது கோயில் இல்லையாம். கற்குவியல்களும் தூர்ந்தழிந்துவிட்ட குளமும்தானிருப்பதாக வேட்டைக்காரர் சொன்னார்கள். கோயிலையண்டிய பகுதிகளில் தறிக்கப்பட்ட பனை மரங்களினடிகளை இப்பொழுதும் காணலாம் என்று கூறினார்கள்.

யானைக்காடு அது.

பெரு விருட்சங்களினடியில் பாய்விரித்தாற்போல
பசும் பூண்டுகளேயெங்கும் மண்டிக் கிடந்தன.

காடு ரகசியமெதையோ மறைத்து வைத்துக் கொண்டு
எவனோ ஒரு உரித்தாளனுக்காகக் காத்திருப்பது போல
மௌனமாயிருந்தது.

ஒரு ராஜதானிக்கு இட்டுச் செல்வன போல
விசாலமான காட்டுப் பாதைகள்

இடையில் இரண்டு ஆறுகள்

இரண்டு முறை முயன்றும் எங்களால் கற்குளத்தை அடைய முடியவில்லை.

நரசிம்மம் எமது வழிகளைக் குழப்பியதோ?

4.
நாச்சியாரின்னும்
சினந்தணிந்தாளில்லை
அவளது சாபம்
கிராமங்களின் மீது
குலைப்பன் காய்ச்சலாய்ப் பரவும்

யாராலுமவளைத் தேற்ற முடியவில்லை

தேற்றப்பட வியலாத் துக்கம்
தேற்றப்பட வியலாக் கோபம்

நாச்சியார் நெடுமூச்செறிந்தாள்.
ட்றிபேக்
காட்டின் மார்பைப்
பிளந்து கொண்டு
வியூகமமைத்தான்
“வெற்றி நிச்சயம்”
“வெற்றி நிச்சயம்”

கல்லிருப்பில்
புற்குளத்தில்
பனங்காமத்தில்
காயமுற்றுப் பின்வாங்கும்
பண்டாரவன்னியன்

நாச்சியார்
வன்மத்தோடு
திரும்பவும் தீயில் வீழ்ந்தாள்.

புதூர்க் கோயிலில்
பூசை நின்று போயிற்று
நாகதம்பிரானைப்
பிறகெவரும் கண்டதில்லை
கோயிற் சுவரில்
குளவி
பெரிய கூடுகட்டியது.

மடுமாதா
முற்றுகையிடப்பட்ட காட்டின்
நாயகிபோல
வியாகுலமுற்றிருந்தாள்

கற்குளத்திலும்
சேனைகளின் ஆரவாரம்.

நாச்சியார்
கோபத்தாலிறுகிக்
கல்லாயானாள்

கோழைக் கிராங்கள் அவளது
சாபத்துக் கிலக்காயின
ஊரெல்லாம் குலைப்பன் காய்ச்சல்
யாராலுமவளைத் தேற்ற முடியவில்லை.

5.
வன்னி நாடு முன்னெப்பொழுதும் இத்துணை வருந்தியதில்லை.
எதிரி மகா மூர்க்கனும் படு முட்டாளாயுமிருந்தான்.
அது வன்னிமைகளின் உயிர் நிலைகளின் மீது நேரடியாகத் தொடுக்கப்பட்ட ஒரு போராயுமிருந்தது.
ஆதியான தலச்சிறப்புடைய தாய்த்தெய்வ வழிபாட்டிடங்களைக் கைவிட்டு அழகிய சிறிய குளக் குடியிருப்புக்களைக் கைவிட்டு ஜனங்கள் சிதறியோடினார்கள்.
வன்னி நாச்சியாரின் சாபத்துக்கிலக்காகி இடம் பெயர்ந்த பிறகு நேர்ந்த மகா அனர்த்தம் இதுவாய்தானிருக்க முடியும்.
ஜெயசிக்குறு,
அல்லது வெற்றி நிச்சயம் படை நடவடிக்கை பிரதானமாக இரண்டு இலக்குகளைக் கொண்டிருந்தது.
முதலாவது யாழ்ப்பாணத்திற்கு ஒரு தரைவழி விநியோக வழியாக கண்டி நெடுஞ் சாலையைத் திறப்பது.
மற்றது கண்டிவீதி வழியே வன்னி நாட்டை இரண்டாகப் பிளந்து விடுவது.
சாலையைப் பிடிப்பதில் தொடங்கிய படை நடவடிக்கை பின்னாளில் பிடித்த சாலையை இழந்து விடாமலிருக்க சாலையினிரு மருங்கிலுமிருந்த பெருங்காட்டையும் பிடிப்பதில் முடிந்தது.
ஆனால் இங்கேதான் கெட்டகாலம் தொடங்கியது.
காடு அடங்க மறுத்தது.
அது யாரொரு பகைவருக்கும் அடங்கியதில்லை.
அதைப் பிடிக்க முயலமுயல அது விஸ்வரூபமெடுத்தது
ஒரு காட்டைப் பிடித்து வைத்திருக்க இன்னும் பல காடுகளை வெல்ல வேண்டியிருந்தது.
காடு திமிறியது.
பகைவனின் கைக்குள் பிடிபட மறுத்து
அது விரிந்து கொண்டே போனது.
அதன் பிரமாண்டம் யாராலும் வெல்லப்படவியலாத தாயிருந்தது.
அதன் அந்தரங்க வழிகளினூடே உரித்தாளரை உள் வர விட்டு அதன் மாய இருளில் அவர்களை உரு மறைத்தும் வைத்தது.
ஜெயசிக்குறு
தறிகெட்டலையும் காயப்பட்ட ஒரு அலியன் யானை போலாகியது
கடைசியில்
காடுதான் வென்றது.

5.
பண்டாரவன்னியன்
மறுபிறப்பெடுத்தான்
வன்னிநாச்சியாரின்
சினமவன் சிரசிலேற

கற்சிலைமடுவில்
அவன் காயப்பட்டுத் தோற்றோடிய
அதே இடத்திலிருந்து
படை புறப்பட்டது.

காடு
அதன் ரகசிய வழிகளை
அவனுக்காய்த்
திறந்து வைத்திருக்க

கைவிடப்பட்ட திருத்தலங்களெங்கும்
குலதெய்வங்கள்
குதூகலித்துக் காத்திருந்தன.
வன்னி நாச்சியாரின்
சினமாறிய இரவது

நடுஇரவில்
முதல் அடியிலேயே
ட்றிபேக்கின்
முதுகெலும்பு முறிந்து விட்டது

அவன்
நொண்டி நொண்டி யோடினான்
காட்டைக் குடைந்து
செய்து வைத்திருந்த
வீடுகளைக் கைவிட்டு

வெடிமருந்துக் கிடங்குகள்
வெடித்துக் கிளம்பிய
கரிய புகையினூடே

ட்றிபேக்
நொண்டி நொண்டி யோடினான்

ஓமந்தை வரைக்கும்
பிறகும் பிறகுமவன்
கொடி சரிய கொடி சரிய
ஓடினான்.

வன்னி நாச்சியார்
சினம் நீங்கிச்
சாந்தமானாள்

நூறு நூற்றாண்டுகளின் பின்
முதற் தடவையாக
முறுவலித்தாள்

நந்திக் கடலில்
தனது சகோதரனின்
பிதுர்க்கடனை
முடித்தாள்

பிறகமைதியாகத்
துயிலப் போனாள்.
0

14-07-2000
மல்லாவி

* ட்றிபேக் - பிரிட்டிஸ் தளபதி - பண்டாரவன்னியனை கற்சிலைமடுவில் தோற்கடித்தவன்.

மடுவுக்குப் போதல்
-பயணக்குறிப்புகள்

1.
காலை 8-00 மணி

நட்டாங்கண்டல் காடு
காட்டுவாசம் நாசியுள் நிறைகையில்
மனம்
காட்டுக் கோழியாய்ப் பறக்கும்
பாதையினிரு மருங்கிலும்
ராங்கிகள் உழுத வயலாய்
இறந்த காடு

யாரும் நடாத மரங்கள்
யாரும் நீர்விடாத புல்வெளிகள்
யாருக்கும் திறைகொடாத காடு

ஒரு காலம்
கைலாய வன்னியனின்
கம்பீரம் கண்டு
கர்வமுற்றிரந்த காடு
பிறகொருநாள்
பண்டார வன்னியனின்
யானைகள் பிளிறும் போது
புளகாங்கிதமுற்ற காடு
இன்று
யாரோ ஒரு சூனியக்காரியின்
கண்பட்டுக் கருகியது போல
சோகமாய் நின்றது.



2.
காலை 9-00 மணி

வற்றிய பறங்கியாற்றின்
பாறைத் தொடரின் மீதிருக்கிறேன்
ஆற்றின் புராதன வளைவுகளிற்கப்பால்
எங்கேயோதான்
அந்த அரண்மனையிருக்கிறது
பண்டாரவன்னியன் கட்டியது

ஆறு துயிலும் இரவில்
அரசர்கள் காலாற நடக்கும் போது
சருகுகள் நொறுங்குமரவம் கேட்பதாக
வேவு வீரர்கள் கூறுகிறார்கள்
பாதி புதைந்த அரண்மனையின்
சிதிலங்களினடியில்
மறைத்து வைக்கப்பட்டிருக்கும்
பண்டாரவன்னியனின் வாளை எடுக்க
யாரோ ஒர வீரன் வருவானென்று
ஆறும் காடும் காத்திருப்பதாக
ஒரு வேட்டைப்பாடல் கூறுகிறது.

3.

ஒரு கோடையிரவில்
சுடலைக் குருவி
மரணத்தை முன்னறிவித்து
பெருமூச்செறிந்த பிறகு
ராங்கிகள் உறுமியபடி
காட்டினுள் புகுந்தன

காடு பயந்து
வேட்டைத் தடங்களை மூடியது
வேட்டைக்காரர் அகதிகளாயினர்
குளங்கள் உடைப்பெடுத்து
வீணே ஆற்றில் போய் வீழ்ந்தன

ஆறு சினந்து
சிப்பியாற்றுக் கழிமுகத்தில்
போய்க் குதித்தது

பிறகெலாம்
பண்டாரவன்னியன்
காலாற நடவாதே விட்டான்

பறவைகள்
காடு மாறிப் போயின
கைவிடப்பட்ட சேனைப் புலங்களில்
கால் நடைகள் காடேகின
இடிந்த அரண்மனை மேட்டில்
வன்னியரின் வீரவாள்
துருவேறிக் கிடந்தது
வேவு வீரர்கள் மட்டும்
துயிலுமாற்றின்
மருதமர மறைவில்
துயிலா துலவினர்.
4.
பகல் 11-00 மணி

யுத்த முன்னரங்காகிய காடு
எரிந்த காவலரண்கள்
வாய்பிளந்த
ஏவு தளங்கள்
நாயாற்றில்
அவர்களே கட்டி
அவர்களே தகர்த்த
பெரிய இரும்புப் பாலம்
ஏதோ ஒரு இடுகாட்டை நோக்கியெம்மை
மயக்கி அழைத்துச் செல்வன போன்ற
விநியோக வழிகள்
அச்சத்திலிருந்து முற்றாக விடுபடாத
காடு
நெட்டுயிர்த்தது

ராங்கிகள் போய் விட்;டன
மழைக் குளிரில் சிலிர்த்து நின்ற
மரங்களில் மோதியபடி
ராங்கிகள் ஓடித் தப்பின

திறைகொடா அரசனின் வாள்
நிலவொளியில்
திசைகளை வென்று ஜொலித்தது
ஆறு
கனவு காணத் தொடங்கியது
காடு மகிழ்ந்து
வேட்டைத் தடங்களைப் புதுப்பிக்கலானது.

5.
பகல் 12-00 மணி

ராங்கிகள் புதைந்த காட்டின்
வேர்கள் இடறும்
வழி நெடுக
காடுகளின் சூரியன்
உருகி வழிகிறான்

மடுமாதா
மருதமர நிழலில்
காட்டின் ஒளியாய்
மிளிர்கிறாள்
திறைகொடாக் காட்டின்
மூர்த்தமவள்
ஆறு கண்ட கனவு அவள்
நிழலற்ற வழிகளில் வரும்
பயணிகளின் ஆறதலுமவள்

ராங்கிகள் அவளை உறுமிக் கடந்தன
பீரங்கிகள்
அவளது பிரகாரத்தில் வெடித்தன
குருதி சிந்தி
விழிகளில் தெறித்தது
நரிகள் ஊளையிட்டு
இரவுகளைப் பகைவரிடம் கையளித்தன

அவள் அசையவில்லை
ஒரு முதுமரம் போலே
அமைதியாயிருந்தாள்

வெற்றிக்கும் தோல்விக்கும்
இலையுதிர் காலத்துக்கும்
சாட்சியவள்
முற்றுகைகள் தோறும்
பிரகாசித்தாள்
மூன்று நூற்றாண்டுகளாய்
ஆறுகளின் தாகமாய்
அகதிகளின் அழுகையாய் பெருமூச்சாய்
காடுகளில்
காணாமல் போன எல்லா
வேட்டைக்காரரிற்கும் தாயாய்
காடுகளை மீட்டு வரும்
வீர வாளின் கூராய்
காடுகளின் கேந்திரத்தே
வீற்றிருக்கின்றான்
நிச்சலனமாக.

6.

மடுமாதாவின் பூர்வீகம் மாந்தை. கோட்டைகள் கட்டிய ஒல்லாந்தர் மன்னாரில் கத்தோலிக்கர்களை வேட்டையாடிய நாளில் மாதா மாந்தையிலிருந்து மடுக்காட்டுக்கு தலைமறைவாக வந்தாள்.

தொடக்கமே தலைமறைவும் இடம்பெயர்வும் என்றானது. அன்றிலிருந்து அகதிகளுக்கும் புகலிடந்தேடிகளுக்கும் மாதா அபயமளிக்கலானாள். அவளமர்ந்த காட்டில் பிறகெவரையும் விசந் தீண்டவில்லை. வேறெங்காவது விசந் தீண்டினாலும் அவளது காலடிமண் மருந்தாயானது.

மூன்றாவது ஈழப்போர் அவளை அநேகமாக அகதிகளின் மூர்த்தம் என்றாக்கியது. குறிப்பாக மடுவையும் அதன் காட்டுப்புறங்களையும் சுற்றிவளைத்த ரணகோஷ (யுத்தகோஷ) படை நடவடிக்கை அவளைத் தேர்தல்கால யுத்த வீயூகமொன்றில் சிக்க வைத்தது.

சூதான சமாதானம் ராங்கிகள் பீரங்கிகள் சகிதம் அவளைச் சூழ்ந்து கொண்டது. ரணகோஷ அவளை அவளது சொந்தக் காட்டிலேயே கைதிபோலாக்கியது.

பிறகு காடுகளை மீட்கக் கிராமங்கள் எழுந்தன. மடுவுக்குப் போகும் வழிகளை மறித்து நின்ற முட்கம்பியரண்களை மோதியுடைத்துக்கொண்டு கிராமங்கள் முன்னேறிய வேகங்கண்டு ராங்கிகள் வெருண்டு ஓடின.

ராங்கிகள் பின்வாங்கிய இரவு மாதாவுக்கு வியாகுல இரவாய் முடிந்தது.

பீரங்கிகள் அவளது காலடியில் வெடித்தன. வெடிமருந்து நெடி கிளம்பி அவளது மேனியெலாம் படிந்தது. வியூகத்துட் சிக்கினாள் மாதா. புலம்பும் அகதிகளின் நடுவே தனித்திருந்தாள் ராமுழுதும்.

ஒல்லாந்தர் காலத்துக்குப் பின் அவள் அதிகம் உத்தரித்த காலமாக ரணகோஷ காலமும் அதன் பின் வந்த காலமும் அமைந்தன, ஆனால் அவள் முகம் வாடியதில்லை. விழிகளில் புதிரான பேரமைதியோடும் பிறகும் பிறகுமவள் மரித்தோரின் மத்தியிலிருந்து எழுந்தாள். எல்லாக் காயங்களும் எல்லாப் பாடுகளும் எல்லா வியூகங்களும் அவளது பெருமைகளை நிரூபிப்பதிற்தான் முடிந்தன.

விசந்தீண்டாத காட்டின் மூலிகையாய் அவளது வீற்றிருப்பை விசப்பாம்புகளோ ராங்கிகளோ பீரங்கிகளோ எதுவும் அசைப்பதில்லை.

காடுகளின் இதயத்தில் சுமார் மூன்று நூற்றாண்டுகளாய் அவளது பிரசன்னம் யாருக்கும் உறுத்தலாயிருந்ததில்லை. அவளை அகதியாக்கித் துரத்திய ஒல்லாந்தருக்கும் அவளை சந்தேகித்த ஆங்கிலேயருக்கும் அவளை வியூகத்துள் வீழ்த்திய சிங்களவருக்கும் யாருக்கும் அவள் உறுத்தலாயிருந்ததில்லை.

பிற்குறிப்பு: வேட்டைப்பாடல்


வேட்டைக்காரர் வருகிறார்
புதிய வேட்டைப் பாடல்களோடு

காட்டுவாசத்தில், கிறங்கி
காட்டுப்புறாக்களின் கழுத்தசைவில்
மன மழிய
வேட்டைக்காரர் வருகிறார்
புதிய வேட்டைப்பாடல்களோடு

இனிக் குளங்கள் முறித்துப் பாயாது
ராங்கிகள் நெரித்து
நாயாறு
தாகமாயிராது
வேட்டைக்காரர் வருகிறார்
புதிய வேட்டைப்பாடல்களோடு

காடு மாறிய பறவைகளே
வீடு திரும்புங்கள்
அரசர்கள்
ஆற்றங்கரையில்
காலாற நடப்பாரினி
அரண்மனை மேட்டில்
யானைகள் பிளிறுமினி

வேட்டைக்காரர் வருகிறார்
புதிய வேட்டைப் பாடல்களோடு.



18-09-2000
மல்லாவி

பின்னுரை 01

நிலாந்தனின் படைப்புக்களில் தீட்சண்யம்மிக்க அறிவின் வீச்சும் பாரமும் இருக்கும். அதேவேளை காலத்தைக் காவிச் செல்லும் வேகமும் இருக்கும். இது அறிவு கோலோச்சும் காலமெனக் கூறும் நிலாந்தன் அந்த அறிவும் அது சார்ந்த உள்ளுணர்வுமே தனது கலை-இலக்கிய மூச்செனக் கருதுகிறார்.
மனிதன் இன்று முற்றிலும் பூகோளப் பிராணியாகிவிட்டான். இது தகவல் யுகம்; அறிவின் யுகம், கலை -இலக்கியம் தொட்டு வாழ்வின் அனைத்து அம்சங்களும் அறிவின் ஆணையைக் கோரி நிற்கின்றன. உணர்ச்சிகள்கூட அறிவாற் தம்மைக் குழைத்தெடுக்குமாறு கோருகின்றன.
அழகின் புனிதமும் புனிதத்தின் அழகும் இரண்டறக் கலக்கும் இடத்தில் உன்னத கலை பிறக்கின்றதென்ற மனப்போக்குடன் அப்பலோவிடம் ஒளியையும் பிளேட்டோவிடம் ஞானத்தையும் யாசித்து நின்று தனது கலைப் படைப்புக்களைச் செய்தார் மைக்கல் அஞ்சலோ. “உள்ளத்தில் ஒளி உண்டானால் வாக்கினில் தெளிவுண்டாகும்” எனக் கூறி இலக்கியம் படைத்தார் பாரதி.
ஒரு கலைப்படைப்பானது வெறும் மனோரம்மிய கற்பனையாகவன்றி அது சத்தியமாய் அமைய வேண்டுமென நிலாந்தன் கூறுகிறார். அதன்படி சத்தியத்தை அதற்குரிய மெருகுடன் படைத்து விட்டால் அது கலையாகிவிடும் என்று அவர் கருதுகிறார். சத்தியத்தை வெறும் தோற்றத்திலன்றி அதன் உள்ளடக்கத்திலும் இலக்கிலுமே பெரிதும் அடையாளம் காணவேண்டும். ஆதலால் ஒன்றின் உள்ளடக்கத்தையும் இலக்கையும் அதற்கேயுரிய மெருகுடன் படைக்குமிடத்து அது கலையாகி விடுகின்றது என்றெண்ணுகிறார். இங்கு ஒன்றின் இலக்கு என்பது வெறும் கற்பனையான மனவிருப்பமல்ல, அது உள்ளடக்கத்தின் மேன்மையான தலைவிதிதான். அதில் உள்ளடக்கத்திற்குப் பொருந்தா வெறும் விருப்பம் மனக்கோட்டையே.

இங்கு இலக்கு என்பதில் இரு அம்சங்கள் உண்டு: ஒன்று, உள்ளடக்கம் தான் புறப்பட்டுள்ள பாதையிலும் வேகத்திலும் தானே சென்றடையும் இடம். மற்றையது அதன் உள்ளடக்கத்திற்கேற்ப எதிர் காலத்தில் அதை எப்படி மேல்நிலைக்கு இட்டுச் செல்லலாம் என்பது. முதலாவது பணி அதன் போக்கில் முன்னுணர்தல், இரண்டாவது அதை நன்னிலைக்கு இட்டுச் செல்லத்தக்க தரிசனத்தைக் காணல். இத்தகைய தரிசனம் கமறாவுக்கும் கண்ணாடிக்கும் அப்பாலானது. இவரது படைப்புகள் சத்திய தரிசனமாய் உள்ளன, இவரது படைப்புகள் காலங்களை ஊடுருவி நிற்கின்றன. எதிர்கால வீரியத்தை அடையாளம் கண்டு முனைப்புடன் பறையறைகின்றன.

“அறிவு பெருத்தவன் நோவு பெருத்தவன்” என்ற பைபிள் வாக்கியத்தை நிலாந்தன் அடிக்கடி நினைவு கூர்வார். காலத்தை முந்திநிற்போர் காலமுரணாற் துயருறுவர். ஆனால் அவர்களே காலத்தை உந்தி முன்னிழுப்பர். அவர்கள் வரலாற்று நகர்வுடன் இரண்டறக் கலந்து என்றென்றும் வரலாற்றின் இயக்க சக்தியாய்த் திகழ்வர். வரலாற்றில் நற்பங்கும் பாத்திரமும் வகிக்கவல்ல தீர்க்க தரிசனம் மிக்கோருக்கு வரலாறு சொல்லும் முதற் செய்தியும் நிபந்தனையும் இதுதான். யுகப்பார்வையுடன் விசுவாசமாய் உரிமைக்குரல் எழுப்பும் படைப்பாளிகளும், சிந்தனையாளர்களும், தலைவர்களும் வரலாற்றில் அழியாவரம் பெறுகின்றனர்.

கலை-இலக்கியம் பற்றிய தெளிவான பார்வையுடன் யாந்திரீகமற்ற உயிரோட்டம் மிக்க படைப்பாளியாகவும் விமர்சகராகவும் நிலாந்தன் உள்ளார். படைப்பாளிகளையும் படைப்பு இலக்கியங்களையும்விட விமர்சகர்களும், விமர்சனங்களும் அதிக முக்கியத்துவம் பெறும் நிலை ஈழத்தில் இருந்தது ஆனால் இப்பொழுது சிறந்த படைப்பாளியாகவும் கூர்ந்த விமர்சகராயும் நிலாந்தன் எனும் ஒருவர் வந்து விட்டார்.

ஓவியனாய், நாடகாசிரியனாய், நாடக நெறிப்படுத்துனனாய், படைப்பிலக்கியக்காரனாய், கலை-இலக்கிய விமர்சகனாய், கலை-இலக்கிய அறிவியலாளனாய், காட்டூனிஸ்டாய், பத்தி எழுத்தாளனாய் இப்படிப் பல்துறை தழுவியவராய் தமிழுக்குப் புதிய பார்வையுடனும், தனிவீச்சுடனும் நிலாந்தன் வந்துள்ளார்.

ஒரு மேதைக் கலைஞனது சிருஷ்டியில் மொழி புது வடிவம் பெறும், பண்பாடு புதுப்பிக்கப்படும். கலை-இலக்கியம் புதுப் பாதை திறக்கும், ஒரு சமூக வளர்ச்சியின் அனைத்தம்சங்களுக்குமான ஒரு குறியீடாய் மேதைக் கலைஞனின் படைப்புக்கள் மிளிரும். தமிழுக்கு நிலாந்தன் அப்படி ஒரு பாத்திரமாவார் என நம்பிக் கூறலாம்.

கீழைத்தேச கலை-இலக்கிய அறிவும், மேலைத்தேச கலை-இலக்கிய அறிவும் ஒருங்குசேரக் கைவரப் பெற்ற நிலாந்தனிடமிருந்து மிகப் புதிய கலை-இலக்கியத்திற்கான திறவுகோல் எமக்குக் கிடைக்கும். பூகோள யதார்த்தமும், இலங்கைத் தீவின் தனிவிசேட அனுபவமும், தமிழீழ மண்ணின் போராட்டப் பின்னணியும், சமகால வாழ்வில் அனைத்து வீக்க தூக்கங்களும் கூட்டிணைந்து நிலாந்தனைத் தமக்கான ஒரு முன்னோடிக் கலைஞனாய்க் கடைந்தெடுக்கத் தொடங்கிவிட்டன. அவை நிலாந்தனின் படைப்புக்களைத் தம்கால அடையாளச் சின்னமெனக் காலமெல்லாம் உரிமைகோரி நிற்கும்.

இவரது படைப்பு வாழ்வாய், தத்துவமாய், வழிகாட்டியாய், வீரியமாய், உள்ளத்தைத் தழுவுவதாய், கண்ணைத் திறப்பதாய், உருவம் வேறன்றி உள்ளடக்கம் வேறன்றி இரண்டும் ஒன்றாய் உள்ளது. வேறானதென்று ஒன்றுமின்றி அனைத்தும் ஒன்றாய் ஒன்றியுள்ளது இவரது படைப்பு. கல்லு நாயாகிவிட்டால் நாயில் கல்லுத் தெரியாத கலைப் படைப்பு இவரது. தனக்குள் ஒடுங்கிக் கிடக்கும் தோகையை மயில் விரித்தாடினாற்போல் வாழ்வின் உட்பொருளை விரித்தாட்டுவதால் ஏற்படும் அழகே நிலாந்தனின் கலை. அதில் பு ளுகில்லை, வறட்சியில்லை, ஏட்டுச் சுரைக்காயில்லை, வாழ்வின் பொருளே தோகையென விரிந்தாடும்.

இவரது படைப்புகள் இன்பத்தைப் பாடினாலென்ன, துன்பத்தைப் பாடினாலென்ன, கொடும் நெருப்பைப் பாடினாலென்ன, கடும் குளிரைப் பாடினாலென்ன, அவை எதனைத்தான் பாடினாலென்ன இறுதியிலும் இறுதியாய் அவை வீரியத்தைத் தரும். நீதியைத் தரும், வாழ்வின் சாரத்தைத் தரும், ஒரு புது நிறைவைத் தரும். முடிவில் வாசகனைப் படைப்புடன் கரைத்தும் விடும். இப்படி ஒரு புதுச் சிருஷ்டியே நிகழ்ந்தேறிவிடும்.

இவர் தன்னை வாழ்வின் வேரிலிருந்து வெட்டிப் பிரிக்காதவரும் அதேவேளை வேருக்குள் சிறைப்படாதவரும்கூட. வேரிலிருந்து பிரபஞ்சம்வரை விரிபவர். கடந்த காலத்தைத் தீக்குச்சியாக்கி நிகழ்காலத்தின்மீது உரஞ்சுவதன் மூலம் நின்றெரியவல்ல ஒளியைப் படைக்க முயல்கிறார். புராண - இதிகாசங்களும் கர்ணபரம்பரைக் கதைகளும், வரலாற்று நிகழ்வுகளும் இவ்வகையில் இவரது படைப்புகளில் தீக்குச்சிகளாகின்றன.

ஆங்கிலம் கற்ற இந்து மத்திய வர்க்கத்திற் பிறந்த இவர் பெரிதும் கத்தோலிக்க அயலைக்கொண்ட சூழலில் வாழ்ந்ததுடன் சென் ஜோன்ஸ் ஆங்கிலிக்கன் கல்லூரியில் கல்வி கற்றதன் மூலம் பல்மதப் பின்னணிக்கு உரியவரானார். இப்பின்னணியாற் தூண்டப்பட்டு யூதேயம், கிறீஸ்தவம், இஸ்லாம், பௌத்தம் ஆகிய ஏனைய மதங்களின் வரலாற்றை அவற்றின் வேரிலிருந்து வாசித்தறிந்தார். இவற்றுடன் சேர்த்தே மேலைத்தேச நாகரிக வரலாற்றையும் ஏனைய நாகரிகங்களின் வரலாற்றையும் சிறப்பாக வாசித்தறிந்ததுடன் இவற்றைப் பற்றி நல்விளக்கம் உள்ளவராயும் உள்ளார்.

மேலும் மேற்கைரோப்பா, சீனா, ஜப்பான், இந்தியா ஆகிய தேசங்களின் நீண்ட ஓவிய வரலாற்றை மிகச் சிறப்பாக அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பதுடன் நல்லோவியனாயும் உள்ளார். அண்மையில் வெளிவர இருக்கும் இருபதாம் நூற்றாண்டின் இஸங்கள் எனும் ஓவியம் பற்றிய இவரது நூலுலம் வெளிச்சம் பவள இதழில் வெளிவந்துள்ளன. “சீனா மரபோவியங்கள் அல்லது ராபோயிஸ்ருக்களின் தியானக் காட்சிகள்’ எனும் கட்டுரையும் ஓவியம் பற்றிய இவரது அறிவிற்கும் மதிநுட்பத்திற்கும் சிறந்த உதாரணங்களாகும்.

வெளிச்சம் 2001 ஆடி-ஆவணி இதழில் நடிகர் சிவாஜியை “சிவாஜி” என்ற தலைப்பில் விமர்சனம் செய்யும் இவரது கட்டுரையில் சிவாஜியின் நடிப்பு, ரியலிஸத்தை மீறியதற்கான காரணங்களை பின்வருமாறு விளக்குகிறார்.

‘“இந்திய ஆன்மிகம் ‘ரியல்’ உலகை -யதார்த்த உலகை- பொய் என்றும் மாயை என்றும் கூறுகின்றது” என்றும் “ஐரோப்பாவின் அறிவுவாதம் ரியலிஸத்தை நெருங்கி வரவர இந்தியாவின் ஆன்மிகம் ரியலிஸத்திலிருந்து விலகி விலகிச் சென்றது” என்றும் கூறி “இத்தகைய ஒரு கலைப் பின்னணிக்குள் ரியலிஸம் அதிகம் வளர முடியவில்லை. இதை அனேகமாக எல்லா இந்திய கலை வெளிப்பாடுகளிலும் காணமுடியும்” என்று கூறி சிவாஜியின் நடிப்புச் சரிந்து போனமைக்கான பின்னணியைச் சிறப்பாக அவரது சோரம்போதலுடன் சோர்த்தும் விளக்குகிறார்.

ஆரம்ப நிலைக்குரிய குறைபாடுகளுடன் கூடிய வகையில் ஈழத்தில் முதலாவது தெருக்கூத்தான ‘விடுதலைக்காளி’யை எழுதி அரங்கேற்றினார். இதனைத் தொடர்ந்து ‘அகதிகளின் கதை’, யுத்தத்தின் நாட்கள், ‘பஸ்மாசுரன்’, ‘ரைற்ரானிக் ட்றீம் ஷொப்’ போன்ற நவீன மேடை நாடகங்களையும் ஆக்கினார். இதில் முதலாவதும் இரண்டாவதுமாகிய நாடகங்கள் எமது யுத்தவாழ்வைச் சித்தரிக்க, மூன்றாவதில் ஒரு புராணக் கதையுடன் அணுகுண்டும் அரசியலும் மிக நேர்த்தியாக இணைக்கப்பட்ட ஒரு சர்வதேசக் கரு சித்தரிக்கப்படுகிறது. நான்காவது ஆங்கிலத்தில் மட்டும் மேடையேற்றப்பட்டது. இது உலகமயமாக்கற் போக்கில் மூளை அரிப்பிற்கான மேற்குலகின் சிந்தனைப் படையெடுப்பையும், அதன் விசித்திரங்களையும், அதற்கேயுரிய கலாச்சாரப் போலித்தனங்களையும் சிறப்பாகக் சித்தரிக்கின்றது.

இவரது வன்னி மான்மியம் வன்னியின் வரலாற்றையும் வாழ்வையும் ஐதீகங்களுடன் இணைத்து வன்னியின் மணத்துடனும் குணத்துடனும் தருகின்றது: வெளிவரவுள்ள யாழ்ப்பாணமே ஓ எனது யாழ்ப்பாணமே எனும் இலக்கியப் படைப்பு யாழ்ப்பாணத்தை அதன் உயிர்மூச்சுடன் வெளிக்கொணர்ந்திருக்கின்றது. இவரது படைப்புகள் எப்போதும் வீரியத்தையும் தீர்ககதரிசனத்தையும் நிஜவாழ்வுடன் குழைத்துக் கூறி நிற்கும்.

இவர் மத்தியவர்க்க வாழ்வொழுங்கையும் அதனுடன் சேர்ந்தே எப்பொழுதும் சீராக இயங்கும் ஓர் ஒழுங்கையும் கொண்டுள்ளார், ஒருபோதும் துவண்டு போகாத மனமும் நம்பிக்கை தளராச் செயலூக்கமும் எவ்வேளையிலும் நோர்த்தியாக இருத்தலும் இவரது அடிப்படை இயல்புகளாகும். இவரது இத்தகைய இயல்புகளும் நேர்த்திகளும் இவரது படைப்புக்களை அப்படியே அலங்கரித்து நிற்கின்றன.

இவர் பழகிய கலை இலக்கியக்காரர்களின் வரிசை பின்வருமாறுள்ளது. திருவாளர்கள் யுகபாலசிங்கம், ஏ.ஜே.கனகரத்தின, பத்மநாபஐயர், அ.ஜேசுராசா, மு.பொன்னம்பலம், சு.வில்வரத்தினம், கிருஸ்ணகுமார், கருணாகரன், புதுவை இரத்தினதுரை, அ.மார்க்கு, கைலாசநாதன், சனாதனன், ஜெய்சங்கர், சிவறஞ்சித், அகிலன், மு.புஸ்பராஜன், தமயந்தி, வாசுகி போன்றோர் முக்கியமானவர்கள். நிலாந்தனைப்பற்றி விளங்கிக்கொள்ள இந்த வட்டமும் ஓரளவு பின்னணியாகலாம்.

இன்றைய படைப்பாளிகளின் யுகம் பெரிதும் புதியது. மனிதன் முற்றிலும் பூகோளப் பிராணியாகிவிட்ட யுகமிது. விரும்பியோ விரும்பாமலோ வடதுருவத்தோனும் தென் துருவத்தோனும் அடிமையாகவோ அன்றி எஜமானாகவோ ஒருவனோடு ஒருவனாய் பூகோள வலையிற் பின்னப்பட்டுவிட்ட யுகமிது. அமெரிக்காவிற்குத் தடிமன் வந்தால் உலகிற்குத் தும்மல் வரும் யுகம். அமெரிக்காவின் சிவப்பாபத்து (Red Danger ) எதிர்ப்பு யுத்தம் முடிவடைந்து ‘பச்சை ஆபத்து’ (Green Danger) எதிர்ப்பு யுத்தம் தொடங்கிவிட்ட யுகமிது. இது முடிய அமெரிக்காவின் ‘மஞ்சள் ஆபத்து’ (Yellow Danger) எதிர்ப்பு யுத்தம் எதிர்கால அஜன்ராவில் எதிர்பார்க்கப்படும் யுகம் என முப்பெரும் நிறயுத்தங்களுள் உலகம் போய்க்கொண்டிருக்கும் காலகட்டமே நிலாந்தனது இத்தகைய உலகப் பின்னணி, இலங்கைத் தீவின் பின்னணி, தமிழீழப் போராட்டப் பின்னணி தமிழீழச் சமூகப் பின்னணி என்பவற்றுள் வைத்துத்தான் நிலாந்தனின் படைப்புக்களை மதிப்பிட வேண்டும்.


மு. திருநாவுக்கரசு
திருநகர்
மல்லாவி
2001-12-15


பின்னுரை 02

தமிழுக்குப் புதுமையான படைப்புகளை வன்னிமான்மியத்தில் தருகிறார் நிலாந்தன், மண்பட்டினங்கள், பாலியம்மன் பள்ளு அல்லது ஓயாத அலைகள் மூன்று, வன்னி நாச்சியாரின் சாபம், மடுவுக்குப் போதல் ஆகிய நான்கு புதுமைப் படைப்புகள் வன்னிமான்மியத்தில் இடம் பெறுகின்றன. இந்த நான்கும் வௌ;வேறு இயல்புடையவை; தனித்தனிவகை கொண்டவை ; ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடும் புதிதானவை. இவை தமிழ்ப் படைப்புலகம் இதுவரையில் பெற்றிராத புதியமுறைப் படைப்புகள்.

தமிழ்ப் படைப்புகளில் ஏற்கனவே பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன ; புதுமைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. அவைபோல இவையும் புதிய வகையினவே. “இவை கவிதையில் நிகழ்ந்திருக்கும் ஒரு மாற்றம் ; புதிய நெடுங்கவிதை” என்கின்றனர் சிலர். நவீனத் தமிழ்க் கவிதையில் நெடுங்கவிதைகள் பல எழுதப்பட்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக நகுலன், பிரமிள் போன்றோர் பல பரிசோதனை முயற்சிகளைச் செய்திருக்கின்றனர். நமது சூழலிலும் மஹாகவி, முருகையன், எம்.ஏ. நுஃமான், நீலாவணன், சண்முகம் சிவலிங்கம், மு.பொ, வ.ஐ.ச.ஜெயபாலன், அஸ்வகோஷ் என்போர் நெடுங் கவிதைகளை திறம்பட எழுதியிருக்கின்றனர். இதில் அஸ்வகோசின் நெடுங்கவிதைகள் சமகால அரசியல் முக்கியத்துவமுடையவை, அதே வேளையில் இவையெல்லாமே சமூக விளைவுகளினதான ஒரு வளர்ச்சி நிலையில் வெளிப்பாடடைந்தவை. நிலாந்தனின் இப்படைப்புக்களும் இத்தகைய ஒரு நிலைப்பட்டனவே.

80களில் முகிழ்ந்த ஈழக் கவிதைகள் பேச்சோசைப் பண்புகளையும் கதைப் பாங்கையும் (காட்சி மற்றும் சம்பவ விவரிப்பு) நாடகத் தன்மைகளையும் பிரதானமாகக் கொண்டவை. இது நமது காலத்தின் வெளிப்பாட்டு அவசியமாயிருக்கிறது என்று அப்போது சேரன் குறிப்பிட்டார். அப்பொழுது அவர் கூறியவாறான கவிதைகள் பெருமளவுக்கும் எழுதப்பட்டன (உ-ம்:- “மரணத்துள் வாழ்வோம்’ கவிதைகள்) இங்கே இப் படைப்புகள் அந்த வளர்ச்சியினதும் பரிமாணங்களினதும் விளைவெனவே நான் கருதுகின்றேன். காலநிலைமைகள் அன்று எப்படி ஈழக் கவிதைகளில் (தமிழ்க் கவிதையில் என்றும் கூறலாம்) ஒரு மாறுபடுதலை ஏற்படுத்தினவோ அவ்வாறே இன்று இவை இவ்வாறு எழுதப்படுவதற்கும் காரணமாயின. ஆனால், இவை கவிதை என்ற வரன்முறையினின்றும் மீறி இன்னொரு வடிவத்தைக் கொண்டிருக்கின்றன. இதுவொரு நல்ல அம்சமே. தமிழுக்கு ஒருபுது வாய்ப்பே. எனவே இவை சட்டகங்களுக்குள் நின்று தம் படைப்புகளை எழுதும் படைப்பாளிகளுக்குப் பெரும் சவால்களை எழுப்புவன ; நெருக்கடியைத் தருவன.

நிலாந்தன் இவற்றில் பல மீறல்களை நிகழ்த்துகிறார். ஆனால் ஒன்றிலிருந்து மீறி இன்னொன்றுள் இறுகிவிடாமல் அதிலிருந்து இன்னொன்று பின் அதிலிருந்து பிறிதொன்றாக இந்த மீறல்களை மிகக் கவனமாகத் தொடருகின்றார். புதியன எனும்போது அவற்றினுள் எப்போதும் புதுமையே அடிப்படையாக இருக்கும் எனும் உண்மையில் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார்.

சிங்கள அரசின் வன்னி மீதான படையெடுப்பும் போரும் உக்கிரம் பெற்றிருந்த சூழலிலும் அப் படையெடுப்பை விடுதலைப் புலிகள் “ஓயாத அலைகள்’ எனும் படை நடவடிக்கை மூலம் முறியடித்த வேளையிலும் எழுதப்பட்ட புதினங்கள்ழூ இவை. இந்தப் படையெடுப்புகளாலும் போராலும் இடம்பெயர்ந்து பெயர்ந்தே நிலாந்தன் இவற்றை எழுதினார். இவை எழுதப்பட்ட வேளையில், இவற்றின் கையெழுத்துப் பிரதியிலேயே இவற்றைப் படித்திருக்கிறேன், படிக்கும்போதெல்லாம் இவை என்னுள் ஏற்படுத்திய உணர்வோட்டங்களும் சிந்தனைத் தூண்டல்களும் அசாதாரணமானவை.

இந்த நான்கு படைப்புகளிலும் மண்பட்டினங்கள் முக்கியமானதாகவே இருக்கிறது என நம்புகிறேன். விரிவும் பன்முகத்தன்மையும் ஆழமும் உணர்வெழுச்சியும் வேகமும் அதிகம் நிரம்பியிருக்கிறது மண்பட்டினங்களில். எந்த்ச சிறந்த படைப்பும் ஏற்படுத்தும் வியப்பும் ஆர்ஸிப்பும் மாறாத கனவின் ஓட்டங்களும் மண்பட்டினங்களில் இருக்கிறது. எனவேதான் மண்பட்டினங்களைப்பற்றிக் குறிப்பிடும்போது எஸ்.வி.ராஜதுரை “கருத்தியல் அரசியல் தளத்தில் அவருடன் (நிலாந்தனுடன்) கூர்மையாக வேறுபடுபவர்களைக்கூடக் கவர்ந்திழுக்கும் ஒரு *புதினம்” என்கிறார். மு.பொன்னம்பலம் “நிலாந்தனின் மண்பட்டினங்கள் அண்மைக்காலத்தில் தமிழில் வெளிவந்த படைப்புகளில் மிகவும் தனித்துவமானது... வரலாறு, நாடகம், என்னும் ஊடகங்களிடையே கவிதையை ஓடவிட்டும் கவிதை, வரலாறு, நாடகம் என்னும் உருவங்களின் கலப்பாகவும் உடைப்பாகவும் நிலாந்தன் மண்பட்டினங்களைத் தந்திருப்பது அவரது பரந்த கலைத்துவ உணர்வுக்குச் சான்று” என்கிறார். “ஒரு தேசிய இன வரலாற்றின் கலாபூர்வ வடிவம் இது” என்கிறார் மண்பட்டினங்களுக்கான விரிவான தனது பின்னுரையில் மு.திருநாவுக்கரசு. இவர்கள் கூறுவதைப்போல பல அம்சங்கள் இணைந்த சிறந்த படைப்பாக இருக்கிறது மண்பட்டினம்.

மண்பட்டினம் நமது நிகழ்காலத்தின் அரசியல் விமர்சனம். நமது வரலாற்றின் வேர்களைத் தேடும் ஒரு முயலுகை. நாடகத்தையும் கவிதையையும் தத்துவத்தையும் ஐதீகத்தையும், வரலாற்றையும் இணைத்து நிகழ்காலத்துக்குரியதாக்கும் புதிய வெளிப்படுத்துகை. இது எழுதப்பட்டபோது உரிய காலத்தில் வெளிவரமுடியாமற் போனது இன்னும் வேதனையாகவே இருக்கிறது. எழுதப்பட்ட காலத்தில் வன்னியை ஊடறுக்கும் நோக்குடன் தொடர்ந்து பெரும் படையெடுப்புகள் நிகழ்ந்துகொண்டிருந்தன. அப்போது நிலாந்தன் எழுதினார்:

அன்பான பெருங்கடலும்
ஆதரித்த பெருங்காடும்
இறுமாந்திருக்கும் ஒரு நாளிலே
சில தீர்க்கதரிசிகள் மட்டும்
தெரிந்து வைத்திருக்கும்
ஒரு நாளிலே

யாழ்ப்பாணமே..... ஓ...... யாழ்ப்பாணமே
நீ உனது
தலை நகரிற்குத் திரும்பிச் செல்வாய்
-----“

(18-10-1996 ஓமந்தை)

“-------
இனி, சோகப் பறையும்
சோர்ந்த உடுக்கும் இல்லை
வீரப் பறையும் உருவேற்றும் உடுக்கும் தான்
விடாது முழங்கும்.
--- ----
--- ---
உடுக்கும் பறையும் அவர்களை (தஸ்யுக்களை)
உருவேற்றுகின்றன
வங்கக் கடல் அவர்களை ஆசிர்வதிக்கின்றது.

வண்ணத்துப் பூச்சிகள்
கதிர்காமம் போகும் வழிகளையெல்லாம்
அவர்கள் விடுவிப்பார்கள்
பாலியாற்றின் மெலிந்த தீரங்களில்
பழி கிடக்கும் மக்களை
அவர்கள் விடுவிப்பார்கள்
-------”

(27-11-1997 மல்லாவி)

இந்தத் தீர்க்கதரிசனமே இவருடைய பிற மூன்று படைப்புக்களுக்கும் ஒருவகையில் காரணமாயும் அமைந்திருக்கிறது. எனவேதான் இந்த நான்கினையும் இங்கே ஒன்று சேர்த்திருக்கிறார் போலும்.

‘மண்பட்டினங்கள்’ அப்போது வெளிவராதபோதிலும் அது கையெழுத்துப்பிரதியாகவும், தட்டெழுத்துச் செய்யப்பட்ட நிலையிலும், ஈழத்திலும் வெளியிலும் பரவலாக வாசிக்கப்பட்டது. எண்பதுகளில் இராணுவ அடக்குமுறை தீவிரமடைந்தபோது இத்தகையதொரு வாசிப்புநிலை இருந்தது. எனினும் ஈழத்தில் இவ்வாறு சிறப்பாகவும் முக்கியமானதாகவும் அதிகமாகவும் வாசிக்கப்பட்ட படைப்ப இதுவாகத்தானிருக்கும் என நம்புகிறேன்.

பின்பு, மண்பட்டினங்களின் முதற் பகுதி மட்டும் மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் “புதிய களம்” இதழில் வெளிவந்தது. இதுவந்து இரண்டு வருடங்களின் பிறகு, இரண்டு பகுதிகளும் சேர்ந்ததாக இந்தியாவில் சு.வில்வரத்தினத்தின் முயற்சியோடும், எஸ்.வி.ஆரின் ஒத்துழைப்போடும் “விடியல்” பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டது. எனினும் அப்போதும் சில பகுதிகள் தவறுதலாக விடுபட்டுவிட்டன. ஆனால் இப்போது இங்கே மண்பட்டினங்கள் முழுமையான நிலையில் உள்ளது.

“மண்பட்டினங்கள்” சிந்துவின் காலத்திலிருந்து ஆறாத நமது காயத்தைப் பேசுகிறது. இடையறாத நமது அலைச்சலை விவரிக்கிறது. எம்மீது முடிவற்றுத் தொடரும் படையெடுப்புகளையெல்லாம் வேதனையோடும் வன்மத்தோடும் எடுத்துரைக்கிறது. எல்லாப் படையெடுப்புகளின்போதும் நிகழும் தப்பிச்செல்லல்களையும் எல்லாப் படையெடுப்புகளையும் எதிர்த்துப் போரிடுவதையும் சொல்கிறது. தன் மூலவேர்களைத் தேடியோடும் ஒரு வாழ்க்கைப் பயணமாக நம்முன் விரிகிறது. காலம் விரிய விரியக் காட்சிகள் பல தெரிகின்றன.
நமது வேர்களினூடு பாய்ந்து வருகிறது குருதி.
இன்னமும் வேகமும் தாகமும் அடங்காத இளைய குருதி.
எப்போதும் வாழ்வதற்கான தவிப்போடும் வேட்கையோடும் பீறிடும் புதிய குருதி.
அக் குருதியுடன் எப்பொழுதும் சேர்ந்திருக்கிறது கண்ணீர்.
அது பழைய கண்ணீர்.
மிகமிகப் பழைய கண்ணீர்.
அதேவேளையில் அது புதிய கண்ணீரும்கூட.

மனித வரலாற்றில் மாறாத அடிப்படையாக எப்போதும் நிகழந்துவரும் போராட்டத்தையும் போரையும், வெற்றியையும் தோல்வியையும், மகிழ்ச்சியையும் துயரையும் சித்தரிக்கிறது “மண்பட்டினம்”, இதில் மனித இயல்பும் அதன் விதியும் மிக நன்றாகப் புலப்படுத்தப்படுகிறது.
“மண்பட்டினம்” தவிர்ந்த ஏனைய மூன்று படைப்புகளும்கூட இந்த சாராம்சத்தைக் கொண்டவைதான். ஏனெனில், நமது நிகழ்காலமும் வரலாறும் அத்தகையதேயல்லவா, இவை மண்பட்டினம் போலன்றி எழுதப்பட்டுக் காத்துக் கிடக்காமல் உடனேயே “வெளிச்சம்” இதழ்களில் பிரசுரமாயின. இவை வெளிவந்த வேளைகளில் பல்வேறு தரப்பிலும் பெரும் கவனத்தையும் ஈர்ப்பையும் பெற்றுமிருந்தன.

பொருளிலும் வடிவத்திலும் வெளிப்பாட்டிலும் நிலாந்தன் நிகழ்த்தியிருக்கும் புதுமையே இதற்குக் காரணம் என நம்புகிறேன். நிலாந்தன் பன்முக ஆற்றல் கொண்ட படைப்பாளி. கவிதை, நாடகம், வரலாறு, ஓவியம், பத்திரிகைத்துறை, காட்டூன் எனப்பல தளங்களில் மிகவும் நிதானமாகவும் சீரியஸாகவும் இயங்குபவர். இவருடைய கடலம்மா, நெய்தல், மனம்பெரிகள் போன்ற கவிதைகளும் தலைமறைவுக் காலத்தைய ஓவியங்களும் பின்பு சிறப்பாக “பிள்ளையார்” ஓவியங்களும் யுத்தத்தின் நாட்கள், அகதியின் கதை, நவீன பஸ்மாசுரன் போன்ற நாடகங்களும் இவருடைய கலைத்துறை ஈடுபாட்டையும் ஆளுமையையும் புலப்படுத்தும். இவைதவிர, ஓவியம் பற்றிய கட்டுரைகளும் என்றும் மாறாத ஈர்ப்புடனான வாசக அனுபவத்தைத் தரும் அரசியல் பத்தி எழுத்துக்களும் இவருடையவை.

எளிமையும் இறுக்கமும் இணைந்த நிலை நிலாந்தன் படைப்புகளின் பிரதான அம்சங்களிலொன்று. ஆழமும் நேர்த்தியும் மிக்க எளிமையை அசாதாரணமாக, மிக இயல்பாக, வெகுசிறப்பாக சாதாரண மொழியினூடு நிகழ்த்திவிடும் ஆற்றல் பெற்றவர் நிலாந்தன். இவர் உரையாடுகையில்கூட இவ்வாறுதானிருக்கும். மிகவும் நேர்த்தியாக, செட்டுடன் கம்பீரம் தொனிக்கும் மிடுக்கான குரலில் தெளிவாயொலிக்கும் பேச்சு நிலாந்தனுடையது.

வன்னியின் ஆழக்காடுகள் வரையில் பயணித்து திறபடாத வரலாற்று மர்மங்களை அல்லது ரகசியங்களை அறிய விழையும் துடிப்புடனிருக்கும் நிலாந்தன் வேட்டைக்காரர்கள், வழிப்போக்கர்கள், மூத்த மனிதர்கள், கிராமவாசிகள் என எல்லோருடைய துணைகொண்டு தன் தேடலை - பயணத்தைத் தொடர்கிறார்.

நிலாந்தன் வன்னியர்கள் காணாத வன்னியைக் கண்டார். இதனால் வன்னியர்கள் வெளிப்படுத்தாத வன்னியின் தொல்கதைகளையும் ஆழ்ரகசியங்களையும் புதினங்களையும் இயற்கையையும் இவர் வெளிப்படுத்துகிறார். அதேவேளையில் யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறியபின் எல்லோரும் யாழ்ப்பாணம் பற்றிய - ஊர் பற்றிய கனவுகளிலேயே இருக்கும்போது நிலாந்தன் அதைக் கடந்து ஒரு தேசியவாதியாக, விரிந்த பார்வை கொண்டவராக தான் வாழ்ந்து கொண்டிருக்கும் வன்னியிலும் தன் வேர்களைத் தேடுகிறார். தன் வேரின் தொடர்ச்சியும் விரிவும் மிகப் பரந்த அளவில் விரிந்திருக்கிறது எனும் அறிவு அவரை தடுமாற்றமடையவிடாமல் இந்தத் தேசியப் பார்வைக்கு உதவியிருக்கிறது.

புதிய சிந்தனையும் பரந்த அனுபவமும் விரிந்த தேடலுமே இவர் படைப்புகளின் அடிப்படை. இந்த நான்கு படைப்புகளிலும்கூட எவரும் இவற்றையுணர முடியும். எப்போதும் ஒரு சிறந்த படைப்பில் வலுவான ஆழ்மன இயக்கம் தொழிற்படும். தர்க்கம் இழையோடும். உள் விசாரணைகள் நிகழ்ந்து கொண்டிருக்கும். இதனால் அது முன்முடிவுகளையோ பின்னிழுப்புகளையோ சுமந்து கொண்டிருப்பதில்லை. வெறும் ஆரவாரங்களோ பிரகடனங்களோ வெற்றுக் கூச்சலோ அதில் இருப்பதில்லை. அது மன இயக்கம் சார்ந்திருக்கும். இந்த மன இயக்கம் நம்மை விழிக்கத் தூண்டுகிறது, இது புலன்களின் விழிப்பு, உணர்தலின் விழிப்பு, அனுபவத்தின் விழிப்பு, சிந்தனையின் விழிப்பு எனத் தொடர்கிறது. இந்த விழிப்பு அடைபட்டு மொண்ணையாகிப்போன உணர்தளத்தை, பிரக்ஞை முனையை ஒவ்வொரு கதவுகளாகத் திறந்து கொண்டு செல்கிறது, இந்தத் திறத்தல் சுவாரஸ்யமாகவும் புதிராகவும் வியப்பாகவும் அமைகின்றது.

எந்தச் சூழ்நிலையிலும் கரைந்துபோகாமல் தன்னை தன் மனத்தை, தன் சூழலை சுயவிசாரணை செய்து பாதுகாத்து நிலை நிறுத்திக்கொள்ளும்படி அது ஆக்குகிறது.

எந்தப் படைப்பும் எற்கனவே நிர்ணயிக்கப்பட்ட எந்தத் தடத்தைச் சுற்றியும் ஓடுவதல்ல. அது புது ஊற்றாகப் பீறிடுகிறது. புதுவழியைத் தானே சிருஷ்டித்துக் கொள்கிறது. ஆகவே படைப்பு எனும்போது அதன் வடிவம், பொருள், சுவை, அனுபவம், அதன் நுட்பம் என்ற சகலதுமே புதியதாக - புதுப் படைப்பாகவே இருக்கிறது. இதை நிராகரிக்கும் மனம் சூத்திரங்களுள் சிக்குண்ட பேதை மனமாகும். நிலாந்தன் இவற்றையெல்லாம் நன்குணர்ந்தே தன் படைப்புகளைச் சிருஷ்டித்திருக்கிறார்.

ஒரு படைப்பாளிக்கு இருக்கும் அடிப்படைத் தகுதிகளான கலை, வரலாறு, தத்துவம், அரசியல் பண்பாடு, சூழல், இயற்கை, ஐதீகம் காலம், உண்மை, நியாயம் என எல்லாவற்றையும் அறிவதில் ஆர்வமும் அறியும் நுட்பமும் திடமும் உள்ளவரிவர் என்பது இப் படைப்புகளில் புலப்படுகிறது. இவை எல்லாவற்றையும் ஒன்றுதிரட்டி உயிர்ப்புடன் குருதி பீறிடத் தந்திருக்கிறார். நிகழ்காலத்தின் இப் படைப்புகளில், வரலாறு, ஐதீகம், சூழல் ஆகியவற்றினூடாகச் சமகாலப் பிரச்சினைகள், நிகழ்காலம் - எதிர்காலம் குறித்த மனவோட்டங்கள் எல்லாம் இணைநிலையில் இவற்றில் கலந்திருக்கின்றன.

“பாலியம்மன் பள்ளு அல்லது ஓயாத அலைகள் மூன்று” பள்ளுக்குரிய ஓட்டமும் மிடுக்கும் கொண்டொலிக்கும் பண்புடையது. வன்னியின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் வனப்பட்சியான கொட்டைப்பாக்குக்குருவியையும் முதுபெருங்குளமான வவுனிக்குளத்தையும் அச் சூழலையும் அதன் வரலாற்றோடு இணைந்திருக்கும் எல்லாளன் கதையையும் பாலியாற்றையும் ஆற்றின் தீரத்திலிருக்கும் பாலியம்மனையும் இணைத்து இரண்டாயிரம் வருட வேரினூடாகப் பயணித்து ஓயாத அலைகள் மூன்றினைச் சொல்கிறார்.

‘வன்னி நாச்சியாரின் சாபம்’ மூலம் நமது வரலாறாகவும் ஐதீகமாகவும் கலந்திருக்கும் ஒரு நினைவோட்டத்தினூடே சமகாலம் பேசப்படுகிறது. நாச்சியாரின் தூங்காத கண்களும் ஆறாத மனமும் நம் கண்களாகவும் மனமாகவும் இருக்கிறது. அது முல்லைத்தீவில் தமிழர் மீண்டும் வென்ற பின்பே தூங்குகின்றது@ ஆறுகின்றது. இந்த நிலத்தை அந்நியர்கள் கைப்பற்றும்போது அதற்கெதிராகப் போராட முன்வராத தன் மக்களைச் சபித்தாள் நாச்சியார் அன்று. இன்றோ நூற்றாண்டுகள் கடந்து தமிழர் மீண்டும் வெற்றிபெறும்போது அவள் மகிழ்கிறாள். வரலாற்றுணர்வினூடாக நிகழ்கால உணர்வேற்றத்துக்குக் குருதி பாய்ச்சும் படைப்பாகிறது இது.

“மடுவுக்குப் போதலு”ம் இவ்வாறான, ஆனால் இன்னொரு தளத்தில் வெளிப்பாடடையும் புதினமே. மடுமாதாவின் வரலாற்று நிகழ்வுகளுடனும் சூழலுடனும் இணைத்து நிகழ்காலத்தைப் பேசுவது. அத்துடன் இது இன்னுமொரு புதிய முறையிலான வடிவமும்கூட.

““ஓயாத அலைகள் மூன்றுக்கு” முன்பு இப் பாதையில் பறங்கியாறு வரையிலுமான பகுதி புலிகளிடமும் அதற்கப்பால் வரும் பகுதி “ரணகோஷ’ படைகளிடமும் இருந்தன.
ஓயாத அலைகள் மூன்றின் மூலம் காடு மீட்கப்பட்ட பிறகு இப் பயணக் குறிப்புகள் எழுதப்பட்டன.

நட்டாங்கண்டல் காட்டைப் பிளந்துபோகும் காட்டுவழியினூடாக மருதமடுவிலிருக்கும் மாதா கோயிலுக்குப் போனபோது எழுதப்பட்ட பயணக் குறிப்புகள் இவை. வழிநெடுகக்கண்ட காட்சிகள் இங்கே நேர ஒழுங்கின்படி தொகுக்கப்பட்டுள்ளன”” என்று நிலாந்தன் கூறுகிறார்.
இவையெல்லாவற்றிலும் மாற்றார் தொடுத்த போரும் அதற்கெதிரான நமது போராட்டமுமே பேசப்படுகின்றது.

எல்லாவற்றிலும் இன்று நாம் எதிர்கொள்ளும் போரும் போரில் பெறும் வெற்றிகளும் சொல்லப்படுகிறது.

போரிட்டுப் போரிட்டே வாழ்ந்த வரலாற்றை, உண்மையை, நியதியை, இன்றும் போரிட்டே வாழுகின்ற வாழவேண்டிய யதார்த்தத்தை உணர்த்துவனவே இந்தப் படைப்புகள்.

இவற்றில் நிலாந்தன் வெறும் கோட்பாடுகளுள் சிக்குண்டுபோகாத யதார்த்தவாதியாக - உண்மையாளனாக இருக்கின்றார். உண்மையை எடுத்துரைக்கும் பண்பாளனாகவும் விளங்குகிறார்.
எந்த அரசியலிலும் தீராதிருக்கும் அல்லது தணியாதிருக்கும் வாழ்வின் நெருக்கடியே இப் படைப்புகளின் அடிப்படை.
சமகால அரசியல் முக்கியத்துவமுடைய இந்த நான்கு படைப்புகளும் ஈழத் தமிழர்களின் வாழ்வையும் வரலாற்றையும் கனவையும் தம்முள் குருதியாகக் கொண்டவை. ஈழத்திலக்கியத்தின் புதியதொரு போக்காவும் திசையாகவும் இத்தகையதொரு படைப்பு முறைமை நிலாந்தனின் மூலமாக உருக்கொண்டிருப்பதாகவும் கருதலாம். ஆனால், இதனைப் பிறர் புரிந்து கொள்ளமுதல் நிலாந்தன் இன்னுமொரு புதிய தளத்துக்குப் பாய்ந்துவிடக் கூடியவர். ஏனெனில், தன் பயணங்களை வௌ;வேறு அனுபவங்களூடு யதார்த்தமாக நிகழ்த்துவதிலேயே இவரது ஈடுபாடு எப்போதுமிருக்கிறது. அதுவோரு தணியாத வேட்கை. அந்த வேட்கையே நிலாந்தன். அதுவே இவரது படைப்புகளும்.

கருணாகரன்
~மகிழ்|
2001-07-15

* மண்பட்டினங்களை எஸ்.வி.ஆர் இவ்வாறு (புதினம் என) குறிப்பிடுகிறார்

நன்றி

முதலில் எனக்கு வன்னியைத் தெரியாது.
பூநகரியில் எங்களுக்கொரு வயல் இருந்தது.
அங்கு விதைக்கவும் அறுக்கவும் என்று யாராவது வீட்டிலிருந்து போய் வருவார்கள்.
அவர்கள் கொண்டு வரும் கதைகளிலிருந்தும்,
வன்னியிலிருந்து வந்த எனது நண்பர்களான பல்கலைக்கழக மாணவர்கள் கூறும் கதைகளிலிருந்தும் பெற்றவைதான் வன்னி பற்றிய எனது முதற் சித்திரம்.
ஆனால் ‘றிவிரச’வின் அகதியாகி கொந்தக்காரன்குளத்துக்கு வந்தபோதுதான் தெரிந்தது எது மெய்யான வன்னி என்று. இப்படிப் பார்த்தால் நானும் என்னைப் போன்ற யாழ்ப்பாணத்தவரும் வன்னியைக் கண்டுபிடிக்க உதவிய ‘ஒப்பறேஷன் றிவிரச’ விற்கு எனது முதல் நன்றிகள்.
ஒரு தீமையையே நன்மையாக மாற்றிய திருப்தி எனக்கு.
ஓரகதிக் கவிஞனாய் வந்தேனிங்கு.
காடும் திருவரும் சந்திராக்காவும் என்னைத் தத்தெடுத்தனர்.
கடல் எனது கவிதைகளை ஈன்றது.
கன்னி கழியாத வன்னிக்கிராமங்கள்
என்னைப் பாடகனாக்கின.
கத்திப் பறக்குமந்தக் கொட்டைப் பாக்குக் குருவி
எனது இசையமைப்பாளன்.
நான் பாடலானேன், ஆடலானேன், பரிசோதனைகள் புரியலானேன்.

கருணாகரன்தான் எல்லாவற்றையும் தொகுத்தார்.
அவர் இல்லை என்றால் இந்தத் தொகுப்பே இல்லை.
அவரே தொடக்கி அவரே முடித்துவைத்தது இந்தத் தொகுப்பு.
அவரும் நானும் ஒரே துறைக்குரியவர்கள்.
அதுவும் போட்டி, பொறாமை, பூசல்கள் மிகுந்ததோர் துறை.
இதில் கருணாகரன் ஒரு அபூர்வமான விதிவிலக்கு.
ஒரு வெளியீட்டாளர் என்ற வகையில் அவரது பாத்திரம் மிகவும் பெறுமதியானது, போற்றுதற்குரியது.

பிறகு அமரதாஸ். அவரும் எல்லாவற்றிலும் இணைந்து நின்றவர். மற்றவர் மயூரதன் (குட்டி) அவர்தான் என்னை மல்லாவிக்கும் ஸ்கந்தபுரத்திற்கும் இடையில் காவித் திரிந்தவர். யசோவும் ஒரு தூதுவர்போல அச்சக வேலைகள் பற்றிய செய்திகளை இடைசுகம் கொண்டுவந்தவர். அவருக்கும், அட்டைப் படத்தை ஸ்கிரீன் பிறிண்ற் செய்த மாறன் பதிப்பகத்திற்கும், அச்சக மனேஜர் பாண்டியனாருக்கும் மற்றும் எல்லோருக்கும் எனது நன்றிகள்.
0

நிலாந்தன்
361, திருநகர்
மல்லாவி.
03-01-2002